அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினொன்று

This entry is part of 37 in the series 20030619_Issue

இரா முருகன்


11

ஒரு கையில் வெள்ளிக் கும்பாவும் மற்றதில் சீரகம் சேர்த்துக் காய்ச்சி ஆற வைத்த வென்னீர்ச் செம்புமாக உச்சி வெய்யில் இறங்கிக் கொண்டிருக்கும்போது சுப்பம்மா மாடிப்படி ஏறினாள்.

கதவைத் தட்ட வேண்டாம். ஒருக்களித்துத் திறந்து தான் இருக்கிறது.

இல்லாவிட்டால் கொண்டு வந்ததைத் தரையில் வெய்யில் பட வைத்துவிட்டு கதவை மெல்லவோ பலமாகவோ தட்ட வேண்டி வரும். சாத வாசனைக்கு காகம் எல்லாம் பக்கத்தில் இறங்கி வந்து அதன் பாஷையில் எனக்கும் கொஞ்சம் கொடேண்டி கிழவி என்று கேட்கும்.

குழந்தை சாப்பிட்டது போக மிச்சம் இருந்தா உங்களுக்குத்தான்.

சுப்பம்மா சொல்லும்போது அவை எவ்வி ஆகாயத்தில் பறந்தபடி சிரிக்கும்.

குழந்தையா ? நாலு தலைமுறைக்கு மூத்தவளையே கிரீடைக்குக் கூப்பிட்டவன் ஆச்சே. எதுக்கும் உன் அரைக்கட்டிலே மடிசாரை இறுக்கிக்கோ.

நாசமாப் போவேள் நீங்கள்ளாம்.

சுப்பம்மா வையும்போது மூத்தகுடிப் பெண்கள் அவள் குரலில் ஏறி அதை வேறே மாதிரி மாற்றிச் சொல்லிச் சிரிப்பார்கள். கூடவே சுப்பம்மா கையைக் காலைப் பிடித்து இழுப்பார்கள்.

வேண்டாம். அங்கே போகாதே.

சுப்பம்மாளுக்கு ஒரு மணிக்கூறாவது நிம்மதியாக நித்திரை போக வேண்டும். இருண்ட இந்த வாசலுக்கு வந்ததற்கு அதுவும் ஒரு காரணம்.

அவாள்லாம் போயாச்சா ?

உள்ளே நுழைந்தபோது அவசரமாக விசாரிக்கும் குரல் எதிர்கொண்டது அவளை.

யாரைச் சொல்றே ? அண்டை அயல்லே இருந்து வந்தவாளா இல்லே அல்லூர் மனுஷாளா ?

யாரைக் குறித்து எழுந்த கேள்வி என்று சுப்பம்மாவுக்குத் தெரியும். என்றாலும் ஏதாவது சம்பாஷிக்க வேண்டும்.

நான் உன் சத்ரு இல்லை. பிரியம் வைத்திருக்கிற உறவுக்காரக் கிழவி.

திரும்பத் திரும்ப இதை நிரூபிக்க வேண்டி வந்ததில் அவளுக்கு வருத்தமில்லை.

அவாள்ளாம் போயாச்சான்னு கேட்டேன்.

கொஞ்சம் ஓங்கி ஒலித்த குரல் இருட்டில் புறப்பட்ட இடம் தெரியாமல் சுப்பம்மா தடுமாறினாள். குரலோடு சேர்ந்து சன்னமாக இழைந்து வந்த சங்கீதம் காதுக்கு சுகமாக இருந்தாலும் என்னமோ பயமுறுத்தியது. அவளைப் போன்ற நித்திய சுமங்கலி காதில் படக் கூடாத சாவோலம் அது.

நான் அண்டை அயல் பொண்டுகளைப் பத்திக் கேட்கலை. அவாவா வருவா. முழங்காலை மடிச்சு வச்சுண்டு இலையப் பார்க்கக் குனிஞ்சு இருந்து சாப்பிடுவா. மஞ்சளும் குங்குமமும் வஸ்திரமும் வாங்கித் தாலிச் சரட்டைக் கண்ணில் ஒத்திண்டு கையிலே நாலு ஆமைவடையும் போளியும் வாழை இலையில் பொதிஞ்சு எடுத்துண்டு ஆத்துலே குழந்தைகளுக்குக் கொடுக்கறதுக்காகக் கொண்டு போவா. ஷேமமாகப் போகட்டும். ஆமவடை சாப்பிட வம்சம் விருத்தி பண்ணட்டும். இந்த சாமிநாத சிரவுதிகளோட ஆசீர்வாதம். தேவிடியா சிரவுதிகளோட அனுக்ரஹம்.

சாமிநாதன் பலமாகச் சிரிக்கிறான். புரையேறுகிறது அவனுக்கு. அதோடு தொடர்கிறான்.

மேலே இருந்து இறங்கி வந்த பெண்டுகளுக்கு என் நமஸ்காரம். அவாளைக் கண்டாத்தான் நடுக்கமா இருக்கு. பரதேவதைகளே என்னை இம்சிக்காமே அந்தண்டை விலகி இருந்து இந்தக் கிழவி வாய்லே ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போய் சவுக்கியமா இருங்கோ.

சிரிப்பு உச்சத்துக்குப் போனது இப்போது.

சாமிநாதன் இங்கேதான் பக்கத்தில் எங்கேயோ உட்கார்ந்தபடி சுப்பம்மாவைக் கவனித்துக் கொண்டே இருக்கிறான். சிரிக்கிறான். பயப்படுகிறான்.

இறங்கி வந்தவா எல்லாம் விசேஷம் முடிஞ்சதுமே போயாச்சே.

சுப்பம்மாக் கிழவியும் ரொம்ப முயற்சி செய்து கொஞ்சம் போல் சிரித்துக் கொண்டே சொன்னாள். கையில் வைத்திருந்த கும்பாவும் செம்பும் கை தவறித் தரையில் விழுந்து விடலாம் என்று தோன்றியது. அதை ஒரு ஓரமாக வைத்து விட்டுப் பேசினால் தேவலை.

நீ பொய் சொல்றேடி தேவிடிக் கிழவி. அவா உன்னோட வந்து அந்த வாசலுக்கு வெளியிலே தான் நிக்கறா இப்போ. எனக்கு எல்லாம் தெரியும்.

சாமிநாதன் பெரிதாக எதையோ கண்டுபிடித்தது போல் சிரித்தான்.

நிக்கட்டுமே யாரும். உனக்கு என்ன கவலை ? பாட்டியைத் தேவிடிச்சி அப்பிடான்னு சொல்லாதேடா குழந்தை. உன் நாக்குலே எந்த துர்த்தேவதையோ ஏறி இருக்கா. இல்லாட்டி இந்த மாதிரி வார்த்தை சொல்லப்பட்டவனா நீ ?

சுப்பம்மா இருட்டில் உத்தேசமாகப் பார்த்து எதிர்க் குரல் கொடுக்கிறாள்.

ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் பிரி முறுக்கிக் கொண்டு வசவு மழை பொழிகிறதும் அப்புறம் பாட்டியம்மா என்று பிரியமாக இழைகிறதும் – எல்லாம் சாமிநாதன் தான். அவளுக்குப் பழகியதுதான் எல்லாமே.

அரைஞாண் கொடியும் தரையை நனைக்கும் மூத்திரமுமாக ஓடி வந்தவனை ஈரத்தோடு இடுப்பில் தூக்கிக் கொண்டு ஊர் எல்லாம் அலைந்து இருக்கிறாள். அந்த வாத்சல்யம் எப்போதும் சாமிநாதனுக்கு உண்டு. ஷண நேரம் அலைபாய்ந்து நாக்கூசத் திட்டினாலும் கடைசியில் வழிக்கு வருவது அவன் தான்.

பகல்லே இறங்கி வந்தவ இம்சையே தாளலே. உடம்பைப் படுத்தி எடுத்திடறா விதவிதமாப் படுக்கச் சொல்லி. நாக்குலே இன்னொருத்தியா ? சாமிநாத சிரவுதி நாக்கிலே எந்த முண்டையும் உக்காந்து பிருஷ்டத்தைத் தேய்க்க வேணாம்.

கலகலவென்று சிரிக்கும் சாமா. அந்தச் சிரிப்பு மாத்திரம் அப்படியே இருக்கிறது.

சாமா, நீ நேத்தும் முந்தாநாளும் முழுக்கச் சாப்பிடலேன்னாளே உங்கம்மா ? ஏண்டா குழந்தை ? கொலைப் பட்டினியாக் கிடந்தா உடம்பு என்னாறது ?

சுப்பம்மா விசாரிக்கிறாள்.

இருட்டு கண்ணுக்குப் பழகிக் கொண்டிருக்கிறது.

ஜன்னல் திறந்திருந்தால் வெளிச்சம் வரும். ஆனால் அதற்குக் கொடுப்பினை இல்லை. இங்கே வெளிச்சம் விலக்கப்பட்ட விஷயம்.

சுப்பம்மாவுக்குத் தெரியும். சதா அவள் நாவில் வந்து குடியேறி வார்த்தையாடும் மூத்த குடிப் பெண்டுகள் தலைக்குள் சம்மட்டியால் அறைகிறது போல் மாறி மாறிச் சொல்லிப் போகிறார்கள்.

அவர்கள் எங்கே போனாலும் கூடவே வருகிறார்கள். சதா சுமங்கலி என்பது சமயத்தில் அலுப்புத் தட்டும் உத்தியோகமாகப் போய்க் கொண்டிருக்கிறது சுப்பம்மாவுக்கு.

பல் விளக்கும்போதும் குளிக்கும்போதும் வஸ்திரம் உடுத்தும்போதும் வெந்ததும் வேகாததுமாகச் சாப்பிடும்போதெல்லாம் வந்தால் சரிதான்.

தூரம் நின்று போய் எத்தனையோ வருஷம் கழித்தும் அவளை அவ்வப்போது உதிரம் கழிக்க வைக்கிறார்கள். அறுபது வயதில் யார் யாருக்கோ தூரத்துணியை இடுப்பில் கட்டித் துவைத்து நாலு பேர் கண்ணில் படாமல் காயப்போட வேண்டி இருக்கிறது.

இருந்தாற்போல் இருந்து தாம்பூலம் மெல்லச் சொல்கிறார்கள். கண்ணுக்கு மை அப்பிக் கொள்ளச் சொல்கிறார்கள். தளர்ந்து சுருங்கித் தொங்கும் ஸ்தனங்களைத் தூக்கி நிறுத்தி பிருஷ்டம் குலுங்கி நடக்க வைக்கிறார்கள்.

நாலு பேர் இருக்கும் சபையில் வாயில் வெறும் பாட்டாக வந்தாலும் தனியாக இருக்கும்போது அவள் அவர்களிடத்தில் படும்பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

சுப்பம்மாவை நிழல் போல் தொடரும் அவர்கள் சாமிநாதன் இருக்கும் இந்த அறைக்குள் மட்டும் தான் வருவதில்லை. இங்கே அவள் போவது தெரிந்தாலே வாசல் படிவரை வந்து கையைப் பிடித்து இழுக்கிறார்கள். காலைத் தடுமாறச் செய்கிறார்கள். மீறி உள்ளே போனால், கையைப் பிசைந்தபடி வாசலிலேயே சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.

சுற்றட்டும். சுப்பம்மாவுக்குக் கொஞ்சம் கண்ணயர வேண்டும். கொஞ்ச நேரம் அவளாக இருக்க வேண்டும். இங்கே காற்றில்லாமல் புழுங்கினாலும், எத்தனை இருட்டாக இருந்தாலும் சரி.

சாமிநாதன் அவள் தூக்கி வளர்த்த குழந்தை. அவளை ஒன்றும் செய்ய மாட்டான். அவள் சொன்னால் கேட்பான். பிரியமாகப் பேசுவான்.

நேத்து முழுக்கச் சாப்பாடு கொண்டு போய் வாசல்லே வச்சாலும் எடுத்துச் சாப்பிடவே மாட்டேங்கறான். நீங்களாவது கொண்டு போய்க் கொடுத்துப் பாருங்களேன் அத்தை.

சுப்பிரமணிய அய்யரின் வீட்டுக்காரி கல்யாணியம்மாள் சொன்னபோது சுப்பம்மாவுக்கு தேகம் பதறியது.

இங்கே கீழ்த் தளத்தில் வந்தவர்கள், போனவர்கள், ஸ்திரமாக இருக்கப்பட்டவர்கள் என்று எல்லோரும் மூணு வேளை வட்டித்து வக்கணையாகச் சாப்பிட்டு அது ஜீரணமாக இஞ்சி வெள்ளமும் சுக்கு வென்னீரும் ராத்திரி பனங் கல்கண்டு போட்டுச் சுண்டக் காய்ச்சிய பாலுமாக ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்க, இந்த கிரஹத்து மூத்த புத்திரன் இப்படி இருட்டில் ஒடுங்கிப் பசியும் பட்டினியுமாக உட்கார்ந்தபடி.

ஐயோ என் குழந்தைக்கா இந்த அவஸ்தை. ஏண்டி கல்லூ எனக்குச் சொல்லலை இதை மின்னாடியே. நீ போய்க் கொஞ்சம் சாதத்தை ரசத்திலே குழைச்சுக் கொண்டா. ஈயச் சொம்புலே நிறைய கொட்டு ரசம் பாக்கி இருக்கு பார். தெளிவா எடு. வண்டல் வேண்டாம். நான் அவனுக்கு கையைக் காலைப் பிடிச்சாவது ஊட்டிட்டு வரேன்.

சுப்பம்மா மாடிப்படி ஏறியபோது உள்ளபடிக்கே மனம் சாமாவுக்காக மருகியது. அவனுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி ஆகிப் போகிறது.

சாமாவைப் பசியாற வைத்துவிட்டு ஓரமாகப் படுத்துக் கண்ணை அயர்ந்தால் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் விச்ராந்தியாகக் கொஞ்சம் தூங்கி ஓய்வெடுக்கலாம்.

இருட்டு முழுக்கப் பழகி இப்போது அறை புலப்பட்டது சுப்பம்மாவுக்கு.

நாய்க்குடையைப் பக்கவாட்டில் கவிழ்த்து வைத்தது போல் ஒரு பெட்டி. அது ஒரு மர மேசையில் சட்டமாக உட்கார்ந்து கொண்டு சங்கீதம் பொழிந்து கொண்டிருக்கிறது.

பக்கத்தில் கயற்றுக் கட்டிலில் இடுப்பில் தட்டுச் சுற்று வேஷ்டியும், காடாக வளர்ந்த தலைமுடியும் தாடி மீசையுமாகச் சாமிநாதன். விலா எலும்புகள் குத்திட்டு நிற்க அவன் சுப்பம்மாவை உட்காரச் சொல்லிக் கையைக் காட்டுகிறான்.

முன்னூறு நானூறு வருஷம் பிற்பட்டவர்கள் இந்த அறைக்குள் வந்து இவனோடு சம்பாஷணை நடத்துவதும் இந்த இருட்டிலும் புழுக்கத்திலும் தானா ?

சுப்பம்மாக் கிழவி நினைத்தது புரிந்ததுபோல் சாமிநாதன் சிரிக்கிறான்.

அவாள்ளாம் வரபோது இந்த இடம் தானே சுத்தமாயிடும். வெளிச்சமும் காத்தும் நிரம்பி வழியும்.

புரிந்து கொண்டதாகச் சுப்பம்மா தலையசைத்தாள்.

சாப்பிடுடா கண்ணா. கொட்டு ரசத்துலே கொஞ்சம் போல் சாதம் பிசைஞ்சு ஒரு முட்டை பசுநெய் விட்டு மணக்க மணக்க எடுத்துண்டு வந்தேன். உனக்கோசரம் தான்.

எனக்கு என்னத்துக்கு நெய்யும் ஒண்ணும் பாட்டி ? குருவாயூர்லே என் குழந்தைக்கு அன்னப் பிரசன்னமா நெய்ச் சோறு ஊட்டறதுக்குப் போறபோது நானும் ஒரு வாய் சாப்பிட்டுக்கறேன்.

சாமா சித்தம் குழம்பிப் பேச ஆரம்பித்து விட்டான்.

இது அழுகையில் போய் முடியும் கடைசியில். இரண்டு மூன்று முறை இப்படி ஆகி, கையில் கொண்டு போன தட்டு கொண்டு போனபடிக்கே திரும்ப வேண்டிப் போனது சுப்பம்மாவுக்கு. நிமிஷ நேரம் கண்ணயரவும் முடியாமல் போன வேதனையோடு வெளியே வரும்போது மூத்தகுடிப் பெண்டுகள் வழக்கத்தை விட உற்சாகமாகத் திரும்ப மேலே ஏறிக் கொண்டார்கள் அப்போது எல்லாம்.

சாமா. நடந்ததையே நினைச்சுண்டு இருக்காம ஒரு வாய் சாப்பிடு. நீ புதுசா என்னமோ சங்கீதம் எல்லாம் வாங்கி இருக்கியாமே ? எனக்கும் அதெல்லாம் கேக்கறதுக்குக் கொடு. பாட்டிக்குத் திரேகம் தளர்ந்துண்டு வருதுடா குழந்தை. கொஞ்சம் சிரம பரிகாரம் செஞ்சுண்டு கிளம்பறேன். உனக்கு ஆட்சேபணை இல்லியே ?

பேஷா இரு பாட்டி. இது தெரியுமா ? அபிசீனியாவிலே சாவுச் சடங்குலே பாடற பாட்டு.

சாமா உற்சாகத்தோடு எழுந்து போய்ப் பழுக்காத் தட்டை எடுத்து வருகிறான்.

பேச்சு மாறிய உற்சாகத்தில் ரசம் சாதத்தில் ஒரு உருண்டை அவன் வாயில் போடுகிறாள் சுப்பம்மாக் கிழவி.

அபிசீனியா என்றால் என்னவாக இருக்கும் ? எதுவாக வேணுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். மனுஷாள் பிறந்து ஜீவித்து மரிக்கிற இன்னொரு ஸ்தலம். அபிசீனியாவில் நித்திய சுமங்கலிகள் இருப்பார்களா ? எழுபது வயதில் தூரம் குளிப்பார்களா அந்த ஸ்திரிகள் ?

பின் மதியக் காற்றில் ஜன்னல் பாதி திறக்க உள்ளே உரிமையோடு நுழைந்தது குளிர்ச்சியான காற்று.

பாட்டி, உனக்குத் தெரியுமா ? ஆதியிலே சாவைப் பார்த்துப் பயந்திருக்கா. இப்போவானா ரொம்பவே பயப்படறாங்கறியா. அதைவிடக் கம்மிதான் முன்னாலே. சாவுச் சடங்கு தான் மனுஷன் ஏற்படுத்தின முதல் சமஷ்டி நடவடிக்கை. செத்தவாளை மத்தவா சாப்பிட்டுடுவா. தீர்ந்தது பிரச்சனை. மலையாளக் கரையிலே தோட்டத்துக்குள்ளேயே வச்சுப் பொணத்தை எரிச்சு, எரிச்ச எடத்துலே பலா மரம் நடுவா. பழம் பழுத்து வந்தா வீட்டோட உக்கார்ந்து சாப்பிடுவா. செத்தவா தேகத்தைச் சாப்பிடறதுலே இருந்து வந்த வழக்கமாக்கும் இது. துண்டுக்காரங்கள் சொல்லிப் போன சமாச்சாரம். இந்த இங்கிலீஷ் புத்தகத்திலே போட்டு இருக்கு. படிச்சு அர்த்தம் சொல்லட்டுமா ?

எனக்கு எதுக்குடா குழந்தை அதெல்லாம். நீ நன்னா சாப்பிட்டு நன்னா உடுத்தி நல்ல தேக ஆரோக்யத்தோட இருந்தா அதுவே எதேஷ்டம். இந்தா இந்தத்

தீர்த்தத்தை ஒரு வாய் எடுத்துக் கொப்பளிச்சுட்டு வந்து கொஞ்சம் குடி. கட்டில்லே தாச்சுக்கோ. நன்னா ஜிலுஜிலுன்னு காத்து வரது பாரு.

சாமிநாதன் கும்பாவில் இருந்த ரசம் சாதம் முழுவதையும் சாப்பிட்டு விட்டான்.

இன்னும் கொஞ்சம் பிசைந்து எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது சுப்பம்மாவுக்கு.

பழுக்காத் தட்டு சுழன்று கொண்டிருக்க, தரையில் படுத்து நித்திரை போனாள் அவள்.

அவள் ஒரு கனவு கண்டாள்.

சின்னதாக ஒரு கிராமம். வரண்டு கிடக்கிறது பூமியெல்லாம். கிராமமே வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது. தேனீக் கூடும் பாம்புப் புற்றுமாக ஊருக்கு வெளியே ஏதோ கோவில்.

உள்ளே ஆணும் பெண்ணுமாக இரண்டு பேர் ஒடுங்கிப் போய் நின்று கொண்டிருக்கிறார்கள். ரொம்பச் சின்ன வயசு ரெண்டு பேருக்கும்.

பீற்றல் உடுப்பும் முகத்தில் வாரக் கணக்கில் சாப்பிடாத பசியால் வந்த அசதியுமாக நின்ற அவர்கள் பக்கத்தில் சிறகடித்துப் பறந்து, கோயில் சுவரில் மோதாமல் லாவகமாகத் திரும்பி உத்தரத்தில் தொங்கிய வெளவால்கள் நீங்களுமா போறீங்க என்று விசாரிக்கின்றன.

மாம்ச போஜனம் பண்ணப் பழகி இருந்தால் இதுகளையாவது பிடிச்சுச் சுட்டுத் திங்கலாம்.

மூக்கும் முழியுமாக இருக்கும் அந்தப் பெண்ணுக்கு பதினைந்து வயது கூடத் திகையாது.

மாம்ச போஜனம் பண்றவாளும் வெளவால் எல்லாம் சாப்பிடறதில்லே. காடை, கெளதாரி இப்படித்தான்.

பதில் சொன்னவன் அவளை விட நாலைந்து வயது பெரியவனாக இருப்பான். குழந்தைத்தனம் போகாத முகம் அவனுக்கும்.

அதுகூட கிடைக்காமத்தானே மத்தவா எல்லாம் ஊரோட பஞ்சம் பிழைக்கப் போனது ?

அந்தப் பெண் சொல்கிறாள்.

வங்காளத்துலே பிராமணாளும் மத்ச்யம் சாப்பிடுவாளாம்.

அவன் அவளுக்கு மூத்த சகோதரனாக இருக்க வேண்டும். அந்தக் கோவிலில் பூஜை வைக்கிற கவுரதையான உத்தியோகம் வாய்க்கப் பட்டவன் போல்

சுவாதீனமாக விக்கிரகங்கள் பக்கத்தில் போய் நின்று எண்ணெய் வரண்ட ஒரு பந்தத்தை ஒரு வினாடி ஏற்றிக் காட்டுகிறான்.

நமஸ்காரம் பண்ணிக்கோ . இனிமே எப்ப வரப்போறோமோ இங்கே திரும்பியும்.

அவன் சொல்லும்போதே அழுது விடுகிறான். அந்தப் பெண்ணுக்கும் அழுகை முட்டிக் கொண்டு வருகிறது.

அம்மா போயாச்சு. அண்ணாவும் போய்ட்டான். நானும் நீயும் தான் பாக்கி. நமக்கும் போற நேரம் வந்துடுத்தோ என்னமோ.

அந்தப் பெண் கோயில் முன்னால் உட்கார்ந்து விம்முகிறாள். அவள் தலையை ஒட்டிப் பறக்கும் வெளவால் வெளிச்சம் முகத்தில் சட்டென்று பட்டதால் நிலை தடுமாறி அவள் மடியிலேயே விழுகிறது.

அது உயிரை விட்டு விடுகிறது அந்த க்ஷணமே.

அவள் அருவருப்புக் காட்டாமல் அதை எடுத்து வீசுகிறாள். பாளம் பாளமாக வெடித்த மண் தரையில் விழுந்து இறக்கை விரித்துக் கிடக்கிற வெளவால் சட்டென்று எழுந்து பல்லைப் பிளந்து சுப்பம்மாக் கிழவியின் மார்க் கூட்டில் புகுந்து கொள்கிறது.

அது அவளுடைய முலைகளை வருடுகிறது. சுப்பம்மா கவனித்துக் கொண்டிருக்கும்போதே அவள் ஸ்தனங்கள் திரும்ப வனப்பும் வலிமையுமாகத் திரள்கின்றன. அரைக்கட்டு அகண்டு போய் யோனி விரிகிறது.

வெளவால் அவள் இடுப்புக்குக் கீழே இறங்கி ஊர்கிறது.

நான் நான் தாண்டி சுப்பம்மா. வந்துட்டேன். கோசாயி ஆனது போறும்னு கிளம்பிட்டேன். இது என்ன ஈரம் ?

தூரமா இருக்கேன். மூத்த குடியாள் யாரோ கொடம் கொடமாக் கொட்ட வைக்கறா.

நான் தான் வந்துட்டேனே. அவாளை எல்லாம் போகச் சொல்லிடறேன். நிக்க வைச்சுடலாம் இதையும் சீக்கிரமே. தூரமீனாவானா என்ன ? ஸ்திரி தானே ? எனக்குப் பாத்யப்பட்ட ஸ்திரி. படுத்துக்கோ. கச்சை அவிழ்த்து விடட்டுமா ? ஜிலுஜிலுன்னு காத்தாட இருக்கலாம்.

சுப்பம்மா வேண்டாம் வேண்டாம் என்கிறபடி புரள்கிறாள். வாயில் எல்லா வசவும் பாட்டாகத் தெரிக்கிறது.

அந்தப் பெண் கோயில் வாசல் படியில் இருந்து எழுந்து வந்து சுப்பம்மாவின் யோனியில் பலமாக மிதிக்கிறாள்.

கெழட்டுச் சிறுக்கி. இங்கே எதுக்கு வந்து விரிச்சுண்டு கிடக்கே ? சாமாவும் நானும் விளையாடணும். எழுந்து போடி புழுத்த நாயே.

இருட்டில் உடுப்பைக் களைந்து விட்டு நிற்கிற சாமா ஒரு பார்வைக்கு சுப்பம்மா வீட்டுக்காரன் போல் தெரிகிறான். இல்லை அவன் தானோ இவன் ? அப்ப இடுப்பிலே குடையற இந்த வெளவால் தலை ?

சுப்பம்மா. ஓடி வந்துடு வெளியே. பிரம்ம ராட்சசியாயிட்டா குருக்கள் பொண்ணு. அவன் பீஜத்தைப் பாரு. விரைச்சுண்டு வரது. சம்போக வாடை இன்னும் கொஞ்ச நேரத்துலே பகல் காத்தோட கலந்து இந்த இடம் முழுக்கப் படிஞ்சு உன்னை மூச்சு முட்ட வைக்கும். வெளவாலை எடுத்து வீசிட்டு வெளியிலே வா. நலுங்குப் பாட்டு புதுசா சொல்லித் தரோம்.

வெளியே இருந்து மூத்த குடிப் பெண்கள் கூப்பிடுகிறார்கள் சுப்பம்மாவை.

(தொடரும்)

eramurug@yahoo.com

Series Navigation