வாப்பாக்காக…

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

அ.முஹம்மது இஸ்மாயில்


1.

தாஹாவின் வாப்பா தஸ்தகீரை நீங்கள் கவுண்டமணி என்று சொன்னால் தாஹாவை செந்தில் என்று தான் கூற வேண்டும், அந்த அளவுக்கு வாப்பாவிடம் அவன் அடி உதை வாங்கி இருக்கிறான். தஸ்தகீர் ஊரில் சொந்தமாக மளிகை கடை வைத்து வாழ்க்கையில் கஷ்டப்பட்டு ஓரளவு முன்னேறி வந்தவர். தஸ்தகீருக்கும் சபூராவுக்கும் பிறந்த ஒரே பிள்ளை தான் தாஹா. தாஹா குடும்ப சூழ்நிலைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல், சேர்வார் சரியில்லாமல் பொறுப்பற்று சுற்றி திரிபவன். தாஹாவை படிக்க அனுப்பிய போது பள்ளி பாடத்தை தவிர மற்ற பாடங்களை கற்று தேர்ந்தான். இரண்டாவது படிக்கும் போதே புகை பிடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொண்டு விட்டான். மதுரஸாவுக்கு ஓத அனுப்பிய போது ஓதாமல் ஊர் சுற்றி திரிந்தான். படிப்பு நேரம் முடிந்ததும் கடையில் வந்து வியாபாரத்தை கற்றுக் கொள்ள தஸ்தகீர் சொன்னார், கடையை அப்படியே போட்டு விட்டு எதிர் கடையில இருந்துக் கொண்டு வருகிற வாடிக்கையாளர்களிடம் வேறு கடையில போய் ஜாமான் வாங்கிக்குங்க, இல்லைன்னா வாப்பா வந்தவொன்னே வாங்க என்பான். தாஹா நன்றாக சாப்பிடுவான். ஊரில் இரண்டு கல்யாணத்திற்கு ஒரே நாளில் அழைப்பு வந்தால், காதர் வூட்டுல பிரியாணி, காசிம் வூட்டுல அஞ்சு கறி சோறு முதல்ல காசிம் வூட்டுக்கு போய் அஞ்சு கறி சோறை சாப்டுட்டு அப்புறமா காதர் வூட்டுக்கு போய் பிரியாணி சாப்டுவோங்கணி பிரியாணியை மொதல்ல சாப்டா தவுட்டிடும் என்று சொல்லி இரண்டு வீட்டு கல்யாணத்துக்கும் சென்று ஒரு பிடி பிடிப்பான். அவனுக்கு தெரிந்து அழைப்பு வந்த எந்த கல்யாண சாப்பாட்டையும் விட்டதே இல்லை. காதர் மெய்தீன் கடை கொத்து புரோட்டா என்றால் அவனுக்கு உயிர் கொண்டா கொண்டா என்று கேட்டு வாங்கி சாப்பிடுவான் அதுவும் டபுள் பேடா போடுங்க நானா என்று கடைகாரரிடம் சொல்வான். பால்கோவா, தம்ரோட், அல்வான்னு எல்லா இனிப்பு வகைகளையும் பத்து பத்து ரூவாய்க்கு ரஹீம் பாய் ஸ்வீட் ஸ்டால்ல வாங்கி ஒன்னா கலந்து பிரட்டி கூட்டாளி மாரோடு மஃரிப் நேரத்தில சாப்புடுறது தான் எனக்கு ரொம்ப புடிக்கும் என்பான்.

மதுரஸாவில் ஓத போன போது தாஹாவுடன் ஓத சேர்ந்த எல்லா பிள்ளைகளும் 1ஜுஜ் குரான் முடித்து 5ஜுஜ் குரான் முடித்து 30ஜுஜ் குரான் முடித்து மெளலுது என்று ஓதிக் கொண்டிருக்கும் போது இவன் மட்டும் 1ஜுஜ் குரானில் அல்ஹம்து சூரா கூட தாண்ட மாட்டான். ஒரு நாள் ஓதி கொடுக்கிற சாபு அல்ஹம்து சூரா ஓத எடுத்து கொடுத்து 3 நாட்களுக்குள் பாடம் சொல்லியாக வேண்டும் என்றார். தாஹா பக்கத்தில் உள்ள அஷ்ரபிடம் உடனே 30 நாளானுலும் எனக்கு பாடம் ஏறாது என்றான். 3 நாள் கெடு முடிந்தது. பாடம் சரியாக சொல்லவில்லை. சாபு, அவன் கழுத்தில், கையில் சங்கிலியை வைத்து கட்டி சிலேட்டில் 3 நாளாக பாடம் சொல்ல வில்லை என்று எழுதி தாஹாவின் கழுத்தில் தொங்க விட்டார். இப்படியே எல்லா தெருவிற்கும் போய் காட்டிட்டு வா என்று அனுப்பினார். ஆனால் தாஹாவோ இந்த தண்டனையால் பாதிக்கப் பட்டவனாக தெரியவில்லை. தெருவில் அவனை பார்க்காமல் போனவர்களிடம் கூட இவனே கூப்பிட்டு, காக்கா.. எங்க வாப்பா எனக்கு சுன்னத் பண்ணப்ப ஊர்வலம் உட சொன்னேன் அஹ உடலை அதனால சாபு இப்ப எனக்கு ஊர்வலம் உடுராஹா என்றான் மகா கிராதகன். பயணத்திலிருந்து வந்த தாஹாவின் முஹல்லா வாசி சிராஜ் அவனை பார்த்து விட்டு என்னங்கணி இது என்றார். தாஹா, அதிருக்கட்டும் நானா நீங்க எப்ப பயணத்துலேருந்து வந்தீங்க என்றான், சிராஜ், நான்.. ரெண்டு மூணு நாளாச்சு என்றார். தாஹா உடனே இல்லை நானா ரெண்டும் மூணும் அஞ்சு என்றான். சிராஜ் கடுப்பாகி உன்னும் திருந்தலையா.. நீம்பர்ல்லாம்.. என்று முணுமுணுத்தார். தாஹா அதற்கெல்லாம் கவலைப்பட்டவானக தெரியவில்லை. அன்றிலிருந்து அவன் மதுரஸா படிப்பு பாதியில் நின்றது தான் மீதம்.

ஒரு முறை தாஹா பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் கமல்ஹாசன்(கமல் ரசிகன்) படம் பார்க்க அந்த ஊரில் உள்ள ஒரே ஒரு சினிமா கொட்டகையான ஆண்டவர் தியேட்டருக்கு சென்றான். சினிமா கொட்டகைக்கு எதிரே தான் அஞ்சல் அலுவலகமும் உள்ளது. எதிரே அஞ்சல் அலுவலகத்துக்கு ஒரு வேலையாக வந்த அவனது மாமா முஸ்தபா தாஹாவை பார்த்து விட நேராக தஸ்தகீரிடம் சென்றார், அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான் என்றார். தஸ்தகீர், அலைக்கும் ஸலாம் என்னா சேதி விஷயம் இல்லாம்ம இங்கே வர மாட்டாயமே என்றார். முஸ்தபா, சேதி இருக்கு மச்சான், நம்ம தாஹா எத்தனாவது படிக்கிறான் சொல்லுங்க என்றார். தஸ்தகீர், ஏன் இப்ப திடார்னு, 12வது படிக்கிறான் இப்ப என்னா அதுக்கு என்றார். முஸ்தபா, அவன் ஸ்கூல் போஸ்ட் ஆபிஸுக்கு எதிர்க்க தானே இருக்கு என்றார். தஸ்தகீர், தாஹாவை எங்கே பாத்தீயும் என்று ஓரளவு விளங்கிக் கொண்டு கேட்டார். முஸ்தபா, அவன் 12வது படிக்கிறான்னு நீங்க நினைச்சுகிட்டு இருக்கிங்க மச்சான்.. ஆனா அவன் படிக்க போவாம 12 மணி ஆட்டம்.. சினிமா கொட்டாய்ல படம் பார்க்க போயிருக்கான், இத சொல்ல தான் வந்தேன் சரி.. சரி வந்த வேலை முடிஞ்சிடுச்சு நா வர்ரேன் அஸ்ஸலாமு அலைக்கும் என்று புறப்பட்டார். புறப்படும் போது, சொல்ல மறந்துட்டேனே படம் பேரு பேர் சொல்லும் பிள்ளையாம் பொருத்தமான பேரில்ல மச்சான் என்றார். தாஹாவை பற்றி பேசுவது என்றால் எல்லோருக்கும் கொஞ்சம் இளக்காரம் தான் போலும். தஸ்தகீர் சைக்கிளை எடுத்தார். பள்ளிகூடம் சென்று விசாரித்தார், பள்ளி ஆசிரியர் ஹக் என்பவர், தாஹா இப்பல்லாம் ஸ்கூலுக்கே வர்ரதில்லை கொஞ்சம் கண்டிச்சு வைங்க பரிட்சை நெருங்குது என்றார். தஸ்தகீர் கடும் சினத்துடன் சினிமா கொட்டகை வந்து உள்ளே நுழைந்து தாஹாவை தேடினார். தாஹாவின் நண்பன் அஷ்ரப் தஸ்தகீரை பார்த்து விட்டு தாஹாவிடம், ஓய் உங்க வாப்பாங்கண்ணி என்று கத்த திரும்பி பார்த்த தாஹா இவர் எப்படிங்கண்ணி இங்கே வந்தாரு தெரிஞ்சுச்சு நான் மெளத் தான் என்று பதறினான். தாஹா தப்பித்தோம் பிழைத்தோம் என்று பக்கத்து கதவு வழியாக குனிந்தவாறே வெளியேறினான், அவனை விட உயரமான சுவர் ஒன்று தடையாக இருந்தது கை எட்டவில்லை ஓடி வந்து குத்ித்து சுவரை எட்டி விட்டான், அப்பாடா என்று ஏறி எதிர் பக்கம் குதிக்க முயன்ற போது தஸ்தகீர் காலை பிடித்து விட்டார் தாஹா வாப்பா என்று அலறி வாப்பா மேலேயே விழுந்து விட்டான். தஸ்தகீர் தாஹாவை வீட்டுக்கு இழுத்து வந்து அடி, உதை என்று தர்மத்துக்கு வாரி வழங்கினார். படிக்க அனுப்பினேன், ஓத அனுப்பினேன், கடையில வியாபாரம் கத்து கொடுத்தேன் எதுக்கும் உருப்படலை இனிமே எதுக்கும் என்க்ிட்டே வந்து நிக்க கூடாது என்றார். அன்றிலிருந்து படிப்பும் பாதியில் நின்றது.

தாஹாவின் உம்மா சபூரா பெயருக்கு ஏற்றார் போல் சபூராக தான் இருப்பார். தாஹாவிடம் கோபப்பட்டதே கிடையாது. ஒரு முறை தாஹா வீட்டிலேயே சிகரெட் பிடிப்பதை சபூரா பார்த்து விட்டார். தாஹா தயங்கிய படி தன் உம்மாவை பார்த்ததற்கு சபூரா வாப்பா பார்த்துட போறாஹா என்றார். தாஹா கெட்டு போனதற்கு அவனது தாயார் ஒரே பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்த்தது தான் காரணம். மேற்கூறிய இந்த கருத்தை நான் சொல்லவில்லை தஸ்தகீர் தான் அடிக்கடி சொல்வார். தாஹாவும் எனக்கு எங்க ம்மா இருக்காஹா எனக்கு கவலையே இல்லை என்று அடிக்கடி சொல்வான். தஸ்தகீர் எப்பொழுதும் தாஹாவை திட்டிக் கொண்டே தான் இருப்பார், படிப்பும் இல்லை ஓதுவையும் இல்லை ஒவ்வொரு வீட்டிலயும் புள்ளைல்வோ ஓதுது, படிக்குது அந்த கெளஸ் சேட் வூட்டு புள்ளைய பாரு.. ஜப்பார் மரைக்கார்ட பேரன பாரு பரிச்சையில மொத மார்க் வாங்கியிருக்கானாம் என்றெல்லாம் கூறி தாஹாவுக்கு எரிச்சலை உண்டாக்குவார், ஆனால் வாப்பாவின் எந்த ஏச்சும் ம்மாவின் எந்த செல்லமும் அவனை திருத்த முடியவில்லை. அவன் அவனது போக்கிலேயே நிலைத்து நின்றான்.

2.

தாஹாவின் உம்மா சபூரா தனது கணவர் தஸ்தகீரிடம் என்னங்க.. அவனை நான் சொல்லி நம்ம கடைக்கு வரச் சொல்றேன், அவனை ஒண்ணும் சொல்லாம சேர்த்துக்குங்களேன் என்றார். தஸ்தகீரோ, இதை அவனையே கேக்க சொல்லு என்றார். சபூராவுக்கு இருப்பு கொள்ளவில்லை நீங்க மொதல்ல சொல்லுங்க அவனை எதுவும் சொல்லாமல் சேர்த்துக்குவீங்களா என்றார். சபூராவுக்கு தன் ஆசை மகனை தன் கோபக்கார கணவர் ஏதேனும் சொல்லி விடுவாரோ என்ற கவலை. தஸ்தகீரோ நாளைக்கு கேக்க சொல்லு பார்க்கலாங்குறேன்ல என்று கோபப்பட்டார். சபூரா, உங்களுக்கு எப்போதுமே அவன் மேலே கோபம் தான், எறிஞ்சு விழுறது, கொஞ்சம் கூட அவன் கிட்டே பாசமோ பிரியமோ கிடையாது என்றார். தஸ்தகீர், அப்படி தான் வச்சுக்கேயேன், ஒன் புள்ளை ஒழுங்கா வரணும்னு தான் நான் இதையெல்லாம் பண்றேன், ஒனக்கு இதெல்லாம் சொன்னாலும் புரியாது என்றார். சபூரா விடுவதாக இல்லை, அதுக்காக ஒரு வார்த்தை கூடவா நல்லவிதமா பேசக்கூடாது, ஒரு நல்ல நாள் பெருநாளன்னைக்கி கூட.. என்று ஏதோ சொல்லி முடிக்குமுன் தஸ்தகீர் அவனை பத்தி இதுக்கு மேலே எதுவும் பேச வேண்டாம் என்று சத்தம் போட்டார்.

சபூரா, தாஹாவிடம் வந்தார் என்னடா சாப்டாயா என்று கரிசனமாக கேட்டார். தாஹா, சாய்ந்தரம் கோலா மீன் விப்பா.. எனக்கு வாங்கி ஆக்கி கொடேன் என்றான். சபூரா, நீ என்ன கேக்குறீயோ அதெல்லாம் ஆக்கி தர்ரேன் ஆனால் நீ நான் சொல்ற ஒண்ணை கேப்பியா என்றார். தாஹா என்ன அது முதல்ல சொல்லு என்றான். சபூரா, நீ சொல்லு முதல்ல நான் சொல்றதை செய்வீயா என்றார். தாஹா, நீ என்ன சொல்வேன்னு எனக்கு தெரியும் வாப்பாட கடைக்கு போ சொல்வே எனக்கா தெரியாது என்றான். சபூரா, ஆமாண்டா வாப்பா உன்னை சேர்த்துக்கறேன், அவனையே வந்து கேக்க சொல்லுன்னு சொன்னாஹாடா, நீ எனக்காக வாப்பாகிட்டே போய் வாப்பா என்னை மன்னிச்சுடுங்க இனிமே நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன், உங்க சொல் பேச்சு கேப்பேன், கடையில ஒழுங்கா இருப்பேன்னு கேக்கணும் அவ்வளவு தான் கேப்பியா ஒன் உம்மாவுக்காக என்றார். தாஹா, நான் அப்படில்லாம் கேக்க மாட்டேன், வேண்னா ஒனக்காக கடைக்கு வரவான்னு கேக்குறேன் என்றான். சபூரா, சரி.. சரி.. எப்படியோ ஆனால் ஒழுங்கா கேளு.. என்னா ? என்றார். தாஹா, அதெல்லாம் நான் கேக்குறேன், நீ அந்த கோலா மீனை மறந்துடாதே என்றான். சபூராவுக்கு இருக்கும் ஒரே கவலை என்னவென்றால் தன் செல்ல பிள்ளையை யாரும் எதுவும் சொல்லி விடக் கூடாது என்பது தான். அதற்கு தோதாக யாராவது எதையாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். சபூரா இப்பொழுதெல்லாம் தனது அண்ணன் முஸ்தபாவிடம் பேசுவது கூட கிடையாது. காரணம் என்ன என்றால் முஸ்தபா தாஹா பள்ளிக்கூடம் போகாமல் படம் பார்க்க போனதை தன்னிடம் வந்து கூறாமல் ஏன் தனது கணவரிடம் போய் சொன்னார் என்பதால் தான். ஆனால் தன் மகன் தாஹா என்றாவது ஒரு நாள் அவனது தந்தை பாராட்டும்படி நடந்துக் கொள்வான் என்று நம்ப்ினார், அந்த எண்ணம் ந்ிறைவேற வேண்டி நேர்ச்சையும் செய்து வந்தார்.

அடுத்த நாள் காலை தாஹா தனது வாப்பாவின் மளிகை கடைக்கு சென்றான், வாப்பாவிடம், வாப்பா.. ம்மா என்னை கடைல இக்க சொன்னிச்சு என்றான். வாப்பா பதில் பேசாமல் கல்லா பெட்டியில் காசை எண்ணிக் கொண்டிருந்தார். தாஹா கொஞ்ச நேரம் நின்று பார்த்தான், வாப்பா நான் இக்கவா ? போவா ? என்றான். தஸ்தகீர் தனது தலையை நிமிர்த்தி உள்ளே போ என்று மட்டும் சொன்னார். கடையில் ஒரு வாடிக்கையாளர் வந்து சீனி அரை கிலோ என்றார். கடையில் வேலை பார்க்கும் பையன் அப்துல்லாஹ் எழுந்து சீனியை நிலுவையில் அளந்தார். அந்த வாடிக்கையாளர் அப்பொழுது தான் தாஹாவை கவனித்தார், அடடே தாஹாவா என்னாங்கணி புதுசா இருக்கு கடைல.. இன்னைக்கி மழை பைத் ஓதாமலேயே மழை வந்துடும் போலருக்கே என்று சொல்ல தாஹா தனது வாப்பாவை நோக்க தஸ்தகீர் தாஹாவை நோக்க கடை பையன் அப்துல்லாஹ் சிரித்தே விட்டான். அந்த வாடிக்கையாளர் போகும் போது சும்மா போகாமல் ஓய் நம்ம ஊர்ல கமல் படம் எடுத்திருக்காங்கணி படம் பேரு தெரியுமா உயர்ந்த உள்ளம், கொடி ஒட்ட போலை என்று சொல்லி விட்டு போனான். அப்துல்லாஹ்வால் சிரிப்பை அடக்கி வைக்க முடியலை, கடையை விட்டு வெளியே ஓடி விட்டான் சிரிப்பதற்கு.

தாஹா எட்டரை மணிக்கு கடைக்கு வந்தவன் தான் மணி பத்தரையாகியும் ஒரு வேலையும் பார்க்காமல் சாமான்கள் மடித்து கொடுக்க வைத்திருக்கும் தாளில் சினிமா செய்திகளை எல்லாம் படித்தான். எல்லாம் படித்து முடித்தவுடன் வேறு செய்திகள் படிக்க ஏதுமில்லாததால் வயிறு பசிக்க ஆரம்பித்து விட்டது, வாப்பாவிடம் வந்து வாப்பா மணி கடையில போய் தேத்தணி வாங்கிட்டு வரவா என்றான். தஸ்தகீருக்கு கோபம் தலைக்கேறியது, ஏண்டா காலைலேருந்து ஒரு வேலைக்கு அசையலை தேத்தணி கேக்குதா உனக்கு ஏன் வடையும் கட்டி சட்டினியும் சேர்த்து வாங்கிட்டு வாயேன் படவா.. உன்னை கடையில வச்சிருந்தா ஒரே வாரத்தில கடையை இழுத்து மூட வேண்டியது தான்.. போய் உட்காருடா இன்னைக்கு நீ பட்டினி தான்.. அதையும் பார்க்கலாம் என்றார். தாஹா மறு பேச்சு பேசாமல் போய் உட்கார்ந்தான். கொஞ்ச நேரம் கழித்தது, தஸ்தகீருக்கே பசிக்க ஆரம்பித்து விட்டதோ அல்லது தன் பிள்ளை பசி தாங்க மாட்டான் என்று நினைத்தாரோ என்னவோ தெரியாது.. தாஹாவை கூப்பிட்டார் சரி.. சரி போய் தேத்தணி வாங்கிட்டு வா என்று காசு கொடுத்தார். தாஹா தூக்கு சட்டியை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக கடையை விட்டு வெளியேறினான், பாதி தூரம் போனவுடன் ஏதோ நினைவு வந்தவனாக த்ிரும்பி வந்து வாப்பாவை கூப்பிட்டான், வாப்பா.. அப்படியே வடையும் கட்டி சட்டினியும் வாங்கிட்டு வரவா என்றான். தஸ்தகீர் கடுப்பாகி கச்சடா பயலே அதெல்லாம் ஒண்ணும் கடையாது போய்ட்டு சீக்கிரம் வரலே இங்கேயே கொத்தி கொர்பான் கொடுத்துடுவேன் படவா என்று கத்தினார்.

ஒரு வாரம் நகர்ந்தது.. கொஞ்சம் கொஞ்சமாக தாஹா வேலை செய்ய ஆரம்பித்தான். அவன் வேலையில் வேகம் இருந்தது, அளவு சரியாக அளப்பான், காசு கணக்கு வேகமாக பார்த்து விடுவான். அவன் திறமை இல்லாதவன் இல்லை இன்னும் சொல்லப் போனால் திறமை இல்லாதவன் எவனுமே இந்த உலகில் இல்லை எல்லோருக்கும் ஏதேனும் திறமை கண்டிப்பாக இருக்கும் அந்த திறமையை வெளியே கொண்டு வரத் தெரியாதவர்களும் தனது திறமையை என்னவென்றே அறியாதவர்களும் தான் நம்மிடையே இருக்கிறார்கள். தஸ்தகீர் சபூராவிடம் தாஹாவை கடைக்கு அனுப்பிடு என்று சொல்லும் போது சபூராவுக்கு ஏக சந்தோஷம், இப்பல்லாம் நீங்க அவனை ஒண்ணுமே சொல்றதில்லை என்று சொல்லி சொல்லி பூரித்து போவார்.

இப்படியாக நல்ல பேர் வாங்கி ஒழுங்காக திருந்திவிடுவான் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் போது தாஹாவை ஏன் தஸ்தகீர் திடாரென்று கடையில இனிமே இவன் வேலை செய்யக் கூடாது என்று சொல்ல வேண்டும். அப்படி தாஹா செய்த தவறு தான் என்ன ? எல்லோரையும் போல் எனக்கும் தெரிந்துக் கொள்ள ஆவலாய் இருந்தது, இதோ தஸ்தகீர் தாஹாவை திட்டிக் கொண்டு இருக்கிறார், ஒட்டுக் கேட்டால் விளங்கி விடும் என்று நினைக்கிறேன் வாருங்கள் ஒட்டு கேட்போம். தஸ்தகீர், வேலைல வேகம் இருந்தா மட்டும் பத்தாது, விவேகம் வேணும். சபூரா கேட்டார், அப்படி என்ன தான் அவன் செஞ்சுட்டான் என்று. தாஹா குறுக்கிட்டான் ஒண்ணுமில்லைம்மா, கடனுக்கு ஜாமான் கொடுத்தேன் அதுக்கு போய் திட்டுறாஹா நம்ம ஊருல கடன் கொடுக்காம வியாபாரம் பண்ண முடிய்மாம்மா நீயே நியாயத்தை சொல்லு என்றான். தஸ்தகீர், வாயை மூடுடா, கடையில நான் இல்லைன்னா கல்லா பெட்டிலேந்து காசெடுத்து கூட்டாளி மாரெல்லாம் சேர்த்துகிட்டு ஆட்டுக்கால் சூப்பும், பாயாவும், பராட்டா உருண்டையும், காண்டா பொறியலும் அது இதுன்னு எடுத்து சாப்டு கூத்தடிச்சுருக்கான் நானே பத்து காசை எடுக்குறதாயிருந்தாலும் பத்து தடவை யோசனை பண்ணி தான் எடுப்பேன், அது மட்டுமா உள்ளூர் காரனுக்கே ஆளை பார்த்து தான் கடன் கொடுக்கணும் ஜியாரத்துக்கு வந்த வெளியூர் காரனுக்கே கடனை வார்ி வழங்கி இக்கிறான், அவனுக்கு வியாபாரம் தெரியல என்று தன் மனைவி பககம் திரும்பி நீ சொன்னேன்னு தான் சேர்த்து கிட்டேன் இப்ப முதலுக்கே நஷ்டம் வந்துடும் போலருக்கு என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கிய போது தாஹா குறுக்கிட்டு அப்படி நஷ்டமாயிருந்தா என் சம்பளத்துல கழிச்சுக்குங்க.. என்று தடாலடியாக சொன்னான். தஸ்தகீர் கோபம் தலைக்கேற அடி செருப்பால என்றார். தாஹா பின்னங்கால் பிடரியிலடிக்க விழுந்தடித்துக் கொண்டு தெரு வாசல் பக்கம் ஓடினான்.

3.

அஷ்ரபிடம் தாஹா கேட்டான் நெசமாவாங்கணி சொல்றீயும் என்று. அஷ்ரப் சொன்னான் நெசமாங்கணி, நீம்பர் என்னா.. நம்பலையா ?, எண்பதாயிரம் தான் செலவு சவுதிக்கு ஏத்துறார்ங்கணி என்று. தாஹா, ஓய் ஏமாத்திட போறான்வோங்கணி அப்புறம் எங்க வாப்பா என்னை கபன் கட்டி மைத்தாங்கொல்லைல படுக்க வச்சுடுவாஹா என்றான். அஷ்ரப், ஏத்துறது யாரு தெரியும்ல டிராவல்ஸ் முஜம்மில்ங்கணி அவர் ஏமாத்தமாட்டார் ஹஜ்ஜெல்லாம் செஞ்சிருக்கார் தெரியும்ல என்றான். தாஹா, அதுல தாங்கணி எனக்கு சந்தேகமே அவர் ஹஜ்ஜூக்கே போவாமெ பம்பாய் வரைக்கும் போய்ட்டு வந்துட்டார்ன்னு ஊர்ல ஒரு பேச்சு இருக்கு தெரியும்ல என்றான். அஷ்ரப், அதெல்லாம் அவருக்கும் அல்லாவுக்கும் உள்ளது நம்ம ஹாஜியை, தம்பிதுரையை எல்லாம் அவர் தான் ஏத்துனார் இன்னைக்கு அவன்வோ ம்மா வாப்பாக்கு காசு அனுப்புறான்வோ இப்ப என்னடான்னா அஹ ம்மா அவனுக்கு பொண்ணு பேசுறாஹா உம்பருக்கு இதெல்லாம் வெளங்காதுங்கணி.. என்றான். தாஹா, சரிங்கணி நான் ம்மாட்ட சொல்லி வாப்பாட்ட கேக்க சொல்றேன் என்றான். விடைபெற்றார்கள் இருவரும்.

தாஹா தனது உம்மாவிடம் மெதுவாக ஆரம்பித்தான், ம்மா ஒண்ணு சொல்றேன் வாப்பாட்ட சொல்லணும் வாப்பா ஏசாம நீ தான் பார்த்துக்கணும் என்றான். சபூரா, என்ன சொல்லு என்றார். தாஹா, இல்லம்மா நம்ம ஜெஹபர் காக்கா மவன் தம்பிதுரை இருக்கான்ல அவனுக்கு பொண்ணு பாக்குறாஹலாம் என்றான். சபூரா, நம்ம தம்பிதுரைக்கா நல்ல சேதி தான் போன வாரம் கூட அஹ ம்மாவை தர்ஹால பார்த்தேனே சொல்லவே இல்லையே.. அவன் பயணத்துலய்ல இருக்கான் ஆமா பொண்ணு யாராம் ? பேசியாச்சாமாம்.. என்றார். தாஹா, அதையேன்மா கேக்குறே அவனுக்கு ஏகப்பட்ட கிராக்கி நீ வேற என்றான். சபூரா, அது சரி.. இப்ப நீ என்ன வாப்பா கிட்டே சொல்ல சொன்னே உனக்கும் பொண்ணு பார்க்க சொல்லவா என்றார். தாஹா, அட நீ ஒண்ணும்மா கல்யாணம்லாம் இல்ல.. தம்பிதுரை மாதிரி நானும் பயணம் போலாம்னு ஆசைப்படறேன் என்றான். அவ்வளவு தான் தாயின் இதயத்துடிப்பே நின்று விடும் போலிருந்தது, வாப்பா என்னத்தே சொல்றது, நான் என் புள்ளைய விட்டுட்டு இருக்க முடியாது என்றார். தாஹா, ம்மா என்னம்மா நீ.. போம்மா.. நீ வாப்பாட்ட கேக்கலைன்னா நான் சாப்டவே மாட்டேன் என்றான். சபூரா மறுக்க தாஹா கட்டாயப்படுத்த கடைசியாக ஒரு வழியாக சம்மதித்தார். சபூராவிடம் பேசி சம்மதம் வாங்குவதில் தாஹா கெட்டிக்காரன். சின்ன வயதிலிருந்தே அப்படித்தான் சாப்ட மாட்டேன்னு சொல்லிட்டா போதும் அந்த தாயுள்ளம் உயிரையும் கொடுக்க தயாராகி விடும்.

தஸ்தகீர் கடையை சாத்திவிட்டு வரும் வரை சபூராவும் தாஹாவும் காத்திருந்தார்கள். தஸ்தகீர் கலைத்து போய் வந்தார். முகம், கை ,கால் கழுவி தொழுகிற பாய் எடு என்று சபூராவிடம் சொன்னார். சபூரா, ஏங்க பள்ளிக்கு போவலையா என்றார். தஸ்தகீர், இல்லை இல்லை இஷா ஜமாத்தோட தான் தொழுதேன், கடையில வேலையிருந்ததால வித்ரு தொழுவாம போயிட்டேன் அதான் இப்ப தொழுதுடலாம்னு என்றார். தொழுது முடித்தார். தொழுகிற பாயை மடித்துக் கொண்டே சாப்பாடு எடுத்து வச்சாச்சா என்ன பசியாற ? என்றார். சபூரா, சப்பாத்தி சுட்டிருக்கு எறைச்சி ஆனம் இருக்கு வேற ஏதாவது வேணுமா ? என்றார். தஸ்தகீர், அதெல்லாம் ஒண்ணும் வேணாம் என்று சாப்பிட அமர்ந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே சபூரா கேட்டார், ஏங்க நான் ஒண்ணு சொன்னா ஏச மாட்டாங்களே என்றார். தஸ்தகீர் விளங்கிக் கொண்டார், ஒன் புள்ளைக்கு இப்ப என்னா வேணுமா ? என்றார். சபூரா, தம்பிதுரை எல்லாம் பயணம் போன மாதிரி இவனும் பயணம் போவணும்னு ஆசைப்படறான் நீங்க என்ன சொல்றீங்கண்ணு என்று இழுத்தார். தஸ்தகீர், இவன்லாம் வெளிநாட்டுக்கு போனால் ஒரு வாரத்துல திரும்ப வந்துடுவான் புள்ள.. எழுதி வேணாலும் வச்சுக்க என்று கோபமாக இறைச்சியை கடிக்கிறேன் என்று வாயை கடித்துக் கொண்டார், ஆ என்று துடிக்க சபூரா, ஆவு கெச்சேனோ, இது என்னம்மா இது மெதுவா சாப்ட மாட்டாஹா நல்ல அழகு ரொம்ப வலிக்குதா என்றார். தஸ்தகீர், அதெல்லாம் இல்லை சும்மா இரு.. சரி யார் ஏஜண்ட் என்றார் வாயை ஊதிக் கொண்டே. சபூரா யாரோ சொன்னானே தம்பி.. தாஹா.. யாரது பயணம் ஏத்துறேன்னு சொன்னது வாப்பா கேக்குறாஹா பாரு.. ஓடிவா என்று தாஹாவை அழைத்தார். தாஹா அமைதியாக ஆனால் ஒரு வித படப்படப்போடு வந்து உங்களுக்கு தெரியும் வாப்பா டிராவல்ஸ் வச்சிருக்கார்ல முஜம்மில் அவர் தான் வாப்பா என்றான். தஸ்தகீர், சரி என்ன வேலை, எவ்வளவு செலவாவும் ஒழுங்கா விசாரிச்சீயா ? என்றார். எல்லாம் சேர்த்து ஒரு லச்சரூவா கிட்டே வரும் வாப்பா வேலை வந்து என்னன்னு சரியா தெரியலை ஆனால் நல்ல வேலைன்னு தான் இவன் சொல்றான் என்றான். தஸ்தகீர், எவன் சொல்றான் என்று கேட்டார். தாஹா, நம்ம அஷ்ரப் தான் சொல்றான் என்றான். தஸ்தகீர், ம்..ம்.. சரியான ஆளு தான் சொல்லியிருக்கு.. சரி நான் விசாரிச்சு பார்க்கிறேன் என்றார்.

தஸ்தகீர் டிராவல்ஸ் சென்று முஜம்மிலை சந்தித்தார். விபரமாக விசாரித்தார். வீட்டுக்கு வந்து சபூராவிடம் ஒரு லட்ச ரூவா கையில் இல்லை என்றார். சபூராவோ நான் என் நகையை தர்ரேன் அத வித்துடலாம் எம் புள்ள போனான்னா எனக்கு வாங்கிட்டு வந்து கொடுப்பான். தஸ்தகீர், என்னம்மோ பண்ணு.. பாதியில வந்து நிக்க போறான் அப்ப பேசிக்கிறேன் ஒன்னை என்று சொன்னார். சபூரா கோபமாக கொஞ்சம் நல்ல வார்த்தை தான் பேசுனா என்னவாம் என்றார். தஸ்தகீர், ஒன் புள்ள எனக்கு ஒன்னும் செய்ய வேண்டியதில்ல உனக்கு ஏதாவது செஞ்சான்னா அதுவே போதும் என்றார். சபூரா, புள்ள வாங்கிட்டு வரும் போது வாணான்னா சொல்லிடுவீங்க.. நானும் பார்க்கறேன் என்றார்.

எல்லா காரியங்களும் இனிதாக நடைபெற்றன. முதலில் கடவுச்சீட்டு வந்தது, பிறகு சவுதிக்கு வேலைக்கு வர அனுமதி விசா கிடைத்தது. பயண நாள் நெருங்க நெருங்க சபூராவுக்கு தான் ரொம்ப கலக்கமாக இருந்தது. எம் புள்ள அங்கே என்ன சாப்டுவானோ யார் அவனை கவனிச்சுக்குவாஹலோ என்றெல்லாம் எண்ணி இவர் சரியாக சாப்பிடுவதில்லை, தன் உடல் நலத்தை ஒழுங்காக கவனிக்கவில்லை. எதிர்பார்த்த பயண நாளும் வந்தது. சபூரா சரியான அழுகை, தம்பி பார்த்துக்க வாப்பா என்று துக்கம் தொண்டையை அடைக்க பேசினார். தஸ்தகீர் தன் பிள்ளையை பிரியும் வருத்தம் உள்ளுக்குள் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் எல்லாம் பத்தரமா வைச்சுக்க ம்மா தேடுவாஹா வாரத்துக்கு ஒரு தடவை அஹலுக்கு போன் பேசிடு என்றார். தாஹா எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமாக தலையை ஆட்டினான். சபூரா, தர்ஹாக்கு செத்த போயிட்டு வந்துடும்மா என்றார். தாஹா நான் இப்ப தான்மா போய் ஜியாரத் பண்ணிட்டு வர்ரேன் என்றான். வந்த சொந்தங்களில் ஒருவர் அப்ப சரி கிளம்பலாமா, மெட்ராஸ்க்கு கூட யார் போறது என்றார். சபூரா, யாரையும் தான் வர வேண்டாம்னு சொல்லிட்டானே அஷ்ரப் அப்புறம் யாரோ கூட்டாளி தான் வர்ராறாம் என்றார். தாஹாவிடம் அப்ப எல்லாரும் இருங்க நான் போய்ட்டு வர்ரேன் என்று சொல்ல சொல்லியிருந்தார்கள் அழுகையில் தாஹாவுக்கு வார்த்தை வரவில்லை ம்மா வர்ரேன்மா என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் கிளம்பினான்.

வீடே ஓய்ந்து போன மாதிரி இருந்தது. சபூரா அழுது புலம்பினார், எம்மவன் இல்லாம வூடே நல்லா இல்லையே என்ன சாப்டுறானோ என்று. தேடி அழுது இரவு முழுக்க தூங்காமல் அவர் கண்களெல்லாம் இரத்த வங்கியாகி இருந்தது. ஒரே பிள்ளை இது நாள் வரை பிரிந்ததே இல்லை முதல் முறையாக பிரிந்திருக்கிறார். துக்கம் தாங்க வில்லை. தஸ்தகீரும் தாஹா இல்லாமல் கவலை தேய்ந்த முகத்துடன் தான் இருந்தார். அவரும் சரியாக சாப்பிடுவதில்லை. வேலை விட்டு வந்ததும் போன் வந்ததா என்று தாஹா பற்றி தான் முதலில் விசாரிப்பார். சபூரா, போய் சேர்ந்தப்போ பண்ணினது தான் நமக்கு எங்க இருக்கான்னு நம்பர் தெரிஞ்சாலும் ஒரு போன் போட்டு கேக்கலாம் என்பார். ஒரு தொலைபேசி அழைப்பு வர வேண்டியது தான், எம்மவண்ட போனா இருக்குமோ என்பார். அன்று ஒரு முறை தொலைபேசி அழைத்த போதும் அப்படி தான் சொன்னார், ஓடி போய் எடுத்து அலோ தாஹாவா என்றார், மறுமுனையில் தாஹா ஆமாம்மா நான் தான் என்றான். சபூரா, என்ன வாப்பா நல்லா இருக்கியா ? சாப்டியா ? வேலைலாம் எப்படி இருக்கு ? தங்குற எடம் வசதியா இருக்கா ? சொல்லுமா எதுவுமே பேச மாட்டேங்கிறீயே என்றார். தாஹா கேட்டான், ம்மா வேலை புடிக்கலை நான் ஊரோடு வந்துடவா ? என்று.

4.

சரியாக பயணம் போய் ஒரு மாதம் தான் ஆனது ஊர் வந்து இறங்கி விட்டான் தாஹா. வீடே களேபரம் ஆனது. தஸ்தகீர் கத்தி தீர்த்து விட்டார், இந்த தெம்மாட்டுக்கு எதுவுமே லாயக்கில்லை வாழ்க்கையில உருப்படவே போறதில்லை இவனை நம்பி எஹ ம்மா நகையெல்லாம் வித்து மவன் கொண்டு வருவாரு மவன் கொண்டு வருவாருன்னு பெரிய பெருமையா ஊரெல்லாம் சொல்லிட்டுருந்தாஹா மவன் வந்திருக்கார் கொண்டு போன சாமான்வலையும் தொழைச்சுட்டு என்றவாறு புலம்பி தீர்த்தார். தாஹா நான் என்னா செய்வேன் கண்ணை கட்டி காட்டுல உட்ட மாதுரி இருந்துச்சு, ஒட்டகத்தை மேய்க்கணுமாம் யார் மேய்ப்பா என்றான். தஸ்தகீர் கத்தினார் ஏன் மேய்க்க வேண்டியது தானே நா உன்னை மேய்க்கலை என்று. தாஹா, அப்ப நீங்க அந்த வேலைக்கு போனீங்கண்ணா ஈஸியா இருக்கும் என்றான். தஸ்தகீர் கோபமாக கச்சடா பயலே.. என்று கூறி உட்டாரு பாருங்க ஒரு அறை.. அப்பா.. சரியான அறை.. தாஹாவுக்கே தலையெல்லாம் சுற்றியது. சபூரா பதறினார், அல்லா அல்லா அவன் ம்மாட்ட வந்திருக்கான் அவனை ஒண்ணும் செய்யாதீங்க.. என்னை சொல்லுங்க எதாயிருந்தாலும் எம்மேல தான் தப்பு என்றார். தாஹா கண்ணத்தில் கை வைத்துக் கொண்டே நான் இனிமே இங்கே வரவே மாட்டேன் என்று வாசல் பக்கம் போனான். தஸ்தகீர் கோபமாக, போடா இனிமே இங்கே வந்தே போலீஸ்ல புடிச்சு கொடுத்துடுவேன் என்றார். சபூரா அழுது நெற்றியில் அடித்துக் கொண்டே எஜமானே கெளது நாயகமே அவன் போறானே யாராவது தடுங்களேன், என்னட வாப்பா.. ம்மாவ உட்டுட்டு போவாதேம்மா என்றார். தாஹா வாசல் தாண்டி வெளியே போனான் எதுவுமே காதில் போட்டுக் கொள்ளாமல்.

தாஹா வீட்டுக்கே வரவில்லை தர்ஹாவிலேயே தங்கி விட்டான். சபூரா போய் அழுது பார்த்தார், கெஞ்சி பார்த்தார். எதற்கும் பிடிவாதமாக வரமாட்டேன் என்றே கூறினான். சபூரா தஸ்தகீருடன் சரியாக பேசுவது கிடையாது. வியாபார நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த சபூராவின் நானா முஸ்தபா விஷயம் கேள்விப்பட்டதும் நேராக தங்கை வீட்டுக்கு தான் போனார். சபூரா பழைய சண்டையை எல்லாம் மறந்து முஸ்தபாவிடம் நீதான் நானா அவண்ட்ட எப்படியாவது சமாதானம் பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் என்றார். முஸ்தபா சபூராவிடம் நீ எதுக்கும் கவலைப் படாதே எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் என்று கிளம்பினார். முஸ்தபா இப்பொழுது தாஹாவை தேடி தர்ஹாவுக்கு தான் செல்கிறார், வாருங்கள் நாமும் அவருடன் செல்வோம். தாஹா புஸ்தகம் விற்கும் கடையில் கல்லா பெட்டி அருகே உட்கார்ந்து ஹஜ்ரத் மெளலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் பாகவி அவர்கள் எழுதிய இறை வணக்கம் என்ற நூலை படித்துக் கொண்டிருந்தான். முஸ்தபாவை பார்த்ததும் வாங்க மாமா எப்ப வந்தீங்க.. தேத்தணி குடிக்கிறீங்களா என்றான். முஸ்தபா, அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நீ இந்த கடையில தான் இருக்கீயா ? என்று விசாரித்தார். தாஹா, ஆமா மாமா, ஏன் மாமா கேக்குறீங்க.. ? என்றான். முஸ்தபா, ஒங் கூட தனியா பேசணும் என்றார். தாஹா, இப்ப லுஹருக்கு பாங்கு சொல்லுவாஹா மாமா தொழுதுட்டு பேசலாமே என்றான். முஸ்தபா ஆச்சர்யப்பட்டு இப்ப நீ தொழுவுறீயா ? என்றார். தாஹா ஆமா மாமா தொழுவுறது தொழுவறோம் ஒழுங்கா தொழுவுவோம்னு ஹஜ்ரத் எழுதிய இறை வணக்கம் படிக்கிறேன், அதே மாதிரி தொழுவ முயற்சி எடுத்துகிட்டிருக்கேன் என்றான். முஸ்தபா, ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.. என்று ஏதோ சொல்ல ஆரம்பித்த போது ஹனிபா நானா பாங்கு சொன்னார்கள். இருவரும் சேர்ந்து சின்ன குத்பா பள்ளியில் லுஹர் தொழுகையை முடித்தார்கள். எல்லாம் முடிந்ததும் முஸ்தபா தாஹாவிடம், தாஹா நான் சொல்றதை கவனமா கேளு.. இந்த தர்ஹால எஜமாண்ட வாசல்ல வச்சு சொல்றேன்.. அல்லாவுக்கு உன் தொழுகையோட விருப்பமான விஷயத்தை ஒன் கிட்டே சொல்லவா என்றார், தாஹா ஏதும் சொல்லாமல் கேட்டான் ஒன் ம்மாட கல்பை குளிர வைக்கிறது தான் அது, ஒம் ம்மா எங்கிட்டே ஒனக்காக இது நாள் வரைக்கும் பேசலை அது ஏன்னு ஒனக்கு நல்லாவே தெரியும் ஆனா இன்னக்கி பேசுனாஹா அதுவும் ஒனக்காக தான்பா நீ நினைச்சுகிட்டு இருக்கே ஒன் வாப்பாக்கு ஒன் மேல புரியமே இல்லன்னு அப்படியில்லை மளிகை கடை வச்சிருக்காறே கடைக்கு தாஹா மளிகை கடைன்னு யாரு பேரு வச்சா தெரியும்ல ஒன் வாப்பா தான் ஒன் ம்மா சொல்லி தான் வச்சாஹான்னு நீ நினைபே அது தான் இல்லை எனக்கு தெரியும் நீ பயணம் போறேன்னு ஒன் வாப்பாகிட்டே சொன்னதும் சந்தோஷப்பட்டு எம் பையன் பெரியா ஆளா வந்துடுவான்னு பூரிச்சு போய் தன் புள்ள நல்லா இருக்கணும்னு சோத்து சீட்டு ஒவ்வொரு நாளைக்கு ஒரு மிஸ்கீனுக்கு கொடுத்துட்டு வந்தது ஒன் வாப்பா தாண்டா அப்பேர்பட்ட வாப்பாவை நீ கோச்சுக்குறே வீட்டுக்கு போ மாட்டேங்குறே நீ செய்றது கொஞ்சம் கூட சரியில்ல இது அல்லாவுக்கே பொறுக்காது அவ்வளவு தான் நான் சொல்லிட்டேன் என்று முடித்தார். தாஹா அழுது கொண்டே எனக்கு விளங்கிடுச்சு மாமா இனிமே நான் ம்மா வாப்பாட்டையே போயிடறேன் அஹலை விட்டு எங்கேயும் போ மாட்டேன் என்றான். முஸ்தபா, இப்பவே கடையில போய் சொல்லிட்டு உன்னை வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு தான் நான் வீட்டுக்கு போவணும். இருவரும் கடையில் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தார்கள். சபூரா துடித்து போய் விட்டார் தன் புள்ளையை கட்டிகிட்டு அழுது, எஜமானே எம் புள்ளைய எங்கிட்டேயே கொண்டு வந்து சேர்த்துட்டாங்க என்று புலம்பினார். சந்தோஷ மழை செந்தூரம் பாடியது. அந்த நேரத்தில் அந்த இடி போன்ற செய்தி வரும் என்று நான் உள்பட யாருமே எதிர்பார்க்க வில்லை. அது என்ன செய்தி ?

சரி அதிருக்கட்டும்.. தஸ்தகீர் எங்கே ? இதையே தான் நானும் கேட்கிறேன், தஸ்தகீர் மனமுடைந்து போய் இருக்க அவரின் நண்பர் ஹாஜா என்பாரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஊரில் வசித்து வந்த ஒரு இறை நல்லடியாரை சந்திக்க அழைத்து சென்றார். இப்பொழுது அந்த நல்லடியாரின் இல்லத்தில் அவர்களின் அருகில் தான் அமர்ந்து இருக்கிறார் தஸ்தகீர். எல்லா விபரங்களையும் கேட்டறிந்து விட்டு அவர்கள், தஸ்தகீரிடம் கேட்டார்கள், குரான் ஷரீபில் யூசுப் நபியுடைய வரலாற்றை அழகான வரலாறுன்னும் படிப்பினை இருக்கும்னு அல்லா சொல்றான் அதுல யூசுப் நபி மேல பொறாமைப் பட்டு அஹல்ட சகோதரர்கள்லாம் கிணத்துல தள்ளி விட திட்டம் போடுவாஹல்வோ அப்ப இஸ்ராயீல்ங்குற யாகூப் நபிட்ட போய் எங்களோட யூசுப் நபியை அனுப்புங்கன்னு கேக்கும் போது யாகூப் நபி சொல்வாஹா நீங்க யூசுபை விட்டுட்டு தனியா இருக்கும் போது அவரை ஓநாய் கடிச்சு திண்ணுடுமோன்னு நான் பயப்படுறேன்பாஹா சகோதரர்களெல்லாம் சமாதனம் சொல்லி கூட்டிட்டு போய் கிணத்துல யூசுப் நபியை தள்ளி வுட்டுட்டு யாகூப் நபிட்ட வந்து ஓநாய் கடிச்சுடுச்சுன்னு சொல்வாஹா இந்த வரலாறை குரான் ஷரீப்ல படிச்சிருக்கீங்களா என்று விசாரித்தார்கள். தஸ்தகீர், படிச்சிருக்கேன் உஸ்தாத் என்று பவ்யமாக சொன்னார். அந்த நல்லடியார் தொடர்ந்தார்கள், அந்த சம்பவத்த பத்தி நாயகம்(ஸல்) அவங்க சொல்லும் போது யாகூப் நபி மாதிரி நீங்களே உங்க புள்ளக்கி கெட்ட விஷயங்களை கத்துக் கொடுத்துடாதீங்கன்னாஹா அது தான் உங்களுக்கு நான் சொல்ற சேதி என்று சொல்லி விட்டு சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்கள், உங்க புள்ளய ஸ்கூலுக்கு போவாம சினிமா கொட்டாய்க்கு போனேன்னு போறதுக்கு முன்னாடியே ஏசி அப்படி போறதுக்கு கத்துக் கொடுக்க கூடாது. பயணம் போனே ஒரே வாரத்தில திரும்பி வந்துடுவேன்னெல்லாம் சொல்ல கூடாது. எனக்கு என்னமோ இனிமே உங்க புள்ளை ஒழுங்கா இருப்பாருண்ணுதான் தெரியுது. அப்படி நீங்க அவருக்கு மறுபடி ஏதாவது ஒரு பொறுப்பை ஒப்படைச்சீங்கண்ணா நல்ல வார்த்தைங்க சொல்லுங்க.. என்று அறிவுரைகள் கூறினார்கள். தஸ்தகீரின் மனது அந்த அறிவுரைகளை முன்னுரையாக வைத்துக் கொண்டு தெளிவுரை எழுதியது. அந்த சாலிஹான நல்லடியாரிடம் இருந்து உத்திரவு வாங்கிக் கொண்டார்கள். தஸ்தகீர் அந்த நல்லடியாரிடம் அழைத்து வந்ததற்காக ஹாஜாவுக்கு நன்றி கூறினார். நேராக கடைக்கு வந்தார். லுஹருக்கு ஹனிபா நானா பாங்கு சொன்னார்கள். கடையில் கூட்டம் இருந்தது. கடையிலேயே தொழுதார். தொழுது விட்டு சிறிது நேரம் கடையில் கணக்கு பார்த்து விட்டு கடையை சாத்தலாமா என்று அப்துல்லாவை கேட்டார், சாவியை எடுத்து விட்டு கடை சாமான்களை உள்ளே எடுத்து அடுக்கி விட்டு அடைப்பு பலகையை இழுப்பதற்காக கையை மேலே நீட்டினார் நெஞ்சு வலித்திருக்க வேண்டும் ஆ என்று கத்தியவாறு நெஞ்சை பிடித்துக் கொண்டே சரிந்தார். அப்துல்லா, மா..மா.. என்று கத்தினான்.

5.

அந்த அதிர்ச்சியான இடி போன்ற செய்தியை அப்துல்லா ஓடி வந்து சொன்னதும் வீடு இரண்டு பட்டது. அந்த ஊரில் உள்ள அலிகான் டாக்டரிடம் காட்டியதற்கு பக்கத்து டவுனில் உள்ள டாக்டர் அனீஸிடம் காட்ட சொன்னார். நல்ல வேலையாக எதிரே இரும்பு கடை வைத்திருந்த சஹாபுதீன் காரை உடனடியாக ஏற்பாடு செய்து பக்கத்து ஊருக்கு மருத்தவரிடம் அழைத்துச் சென்றார். டாக்டர் அனீஸ் உடன் வந்து கவனித்தார் சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்ததாக சொன்னார். சபூரா, தாஹா, முஸ்தபா எல்லோரும் விசாரித்து கண்ணீரும் கம்பலையுமாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். சஹாபுதீனிடம் சபூரா எஹ எங்கே தம்பி என்று கேட்டார். சஹாபுதீன், டாக்டர் பார்த்துக்குட்டிருக்கார்ம்மா ஒண்ணும் பயப்பட வேண்டியதில்லை என்றார். சபூரா, டாக்டர் என்ன தம்பி சொன்னார் என்று கேட்டார். சஹாபுதீன், சரியான நேரத்தில கொண்டு வந்து சேர்த்ததா சொன்னார் என்று கூறினார். முஸ்தபா குறுக்கிட்டு தம்பி நீங்க மட்டும் இல்லைன்னா என்று ஏதோ சொல்ல நினைத்த போது அதெல்லாம் உடுங்க மாமா, கவலைப்பட வேண்டியதில்லை அல்லாட உதவியால பெரியோர்கள்ட துவா பரக்கத்துனால ஒரு கொறையும் வராது. நான் கடையை அப்படியே போட்டுட்டு வந்துட்டேன் வாப்பா வேற ஊர்ல இல்லை நான் புறப்படறேன் தப்பா நினைச்சுக்காதீங்க.. அழுது கொண்டிருந்த தாஹாவிடம் கவலைப்படாதேப்பா.. இங்கேயே ம்மா கிட்டே இருந்துக்க நான் வரவா என்றார். சபூரா, ரொம்ப உதவி தம்பி.. என்றார். சஹாப்தீன், அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா.. நான் வர்ரேன்மா, எதாவது வேணுன்னா சொல்லுங்க.. என்று முஸ்தபா பக்கம் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் என்று புறப்பட்டார். புறப்பட்டதும் முஸ்தபா சஹாப்தீனைப் பற்றி நல்ல புள்ள நல்லா இருக்கட்டும் என்றார்.

ஒரு வாரம் கழிந்தது இதய நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் தஸ்தகீருக்கு மூக்கு வழியாக தான் உணவு சென்றது. பேச முடியாது. ஆனால் நன்றாக தேரி வருவதாக டாக்டர் அனீஸ் சொன்னார். தாஹா சோகமே உருவாக அழுது கொண்டிருந்தான். முஸ்தபா வந்து அவனை தேற்றினார், நீ தான்ப்பா உம்மாக்கு தைரியம் சொல்லணும் நீயே இப்படி அழுதுகிட்டு உட்கார்ந்துகிட்டா எப்படி ? நீ தான் எல்லாத்தையும் கவனிச்சுக்கணும் கடையை கூட நீ போய் தொறந்து வியாபாரம் பண்ணலாம் என்றார். தாஹா, மாமா.. என்ன சொல்றீங்க.. வாப்பாக்கு இப்படி இருக்கும் போது.. என்றான். முஸ்தபா மறுத்தார், என்ன இப்படி இருக்கும் போது.. எல்லாம் நல்லா தான் இக்குது என்று சொல்லவும் அங்கு வந்திருந்த அப்துல்லாவும் சேர்ந்து கொண்டு ஆமா தாஹா நானா.. நம்ம கடையில நிறைய ஆர்டரும் வந்திருக்கு ஒண்ணு ரெண்டு கல்யாண ஆர்டரும் இருக்கு எல்லாட்தையும் மாமா நோட்டுல எழுதி வைச்சிருக்காஹா தாஹா நானா, நாம போய் கடைய தொறந்துடுவோம் என்றான். முஸ்தபா சொன்னார் நான் இப்ப போன் பண்ணி உங்க மாமிய பஸ் புடிச்சு உடனே வர சொல்றேன் இப்ப கட்டி சோறு கட்டிகிட்டு வர்ரதுக்கு தான் இருக்காஹா வந்தா ம்மாகிட்டே இருப்பாஹா நீ போய் கடையில இரு என்றார். தாஹா சபூராவிடம் வந்து விஷயத்தை சொல்லி விட்டு கடையை திறக்க அப்துல்லாவுடன் ஊருக்கு புறப்பட்டான்.

கடையை திறந்து ஆர்டரை படித்தான், அப்துல்லா.. நாளைக்கு முப்பது கிலோ அரிசி பட்டுவாடா பண்ணணும் போலிருக்கே இப்ப கைவசம் எவ்வளவு இருக்கு வர வேண்டிய சரக்கு எவ்வளவு.. இப்படியாக தனது வேலையில் மும்முரமானான். சைக்கில் எடுத்து கொண்டு அரிசி மண்டிக்கு சென்றான். சைக்கிலிலேயே மூட்டையை கட்டி எடுத்து வந்தான். வியர்வை சிந்தினான். கடும் உழைப்பை கொடுத்தான். தனது தந்தையின் கடின உழைப்பை எண்ணி வியந்தான். தொழுது வாப்பாவுக்காக எல்லாம் வல்ல அல்லாவிடம் துவா கேட்டான். தர்காவுக்கு சென்று ஜியாரத் செய்து பெரியோர்களது பரக்கத்தையும் நாடினான். அன்று அந்த ஊர் தியேட்டரில் உன்னால் முடியும் தம்பி தினசரி மூன்று காட்சிகள் படம் ஓடுவதாக விளம்பரம் சொல்லியது ரொம்ப பொருத்தமாக இருந்தது. இடையிடையே டாக்டர் அனீஸ் மருத்துவமனைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தந்தையின் நிலைமையை கேட்டறிந்தான்.

நாட்கள் உருண்டோடியது. தஸ்தகீர் ஓரளவு குணமடைந்திருந்தார். பேசவும் செய்தார். சபூராவை அழைத்தார். சபூரா அழுது கொண்டே எஜமான் காப்பாத்துனாஹா உங்கள நம்ம நேரா இங்கேந்து வீட்டுக்கு போவலை தர்ஹால வாலைல தான் தங்க போறோம் என்றார். தஸ்தகீர் தாஹா வீட்டுக்கு வந்துட்டானா ? எப்படி இருக்கான் என்றார். சபூரா உளம் மகிழ்ந்து தாஹா அப்பவே வந்துட்டான் நல்லா இருக்கான் கடைய அவனும் அப்துல்லாவுமா சேர்ந்து தான் கவனிச்சுக்குறாஹா இப்ப தான் போன் பண்ணி உங்கள கேட்டான் புள்ள என்று அழுதார். தஸ்தகீருக்கு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. சபூரா துடைத்து விட்டார். தஸ்தகீர் சொன்னார், நான் தாஹாவ இப்பவே பாக்கணும் போல இருக்கு என்று.

தாஹாவிடம் போனில் சொல்லப்பட்டது, வாப்பா என்ன பாக்கணுங்கறாஹலா என்று பதறிப் போய் உடனே புறப்பட்டான். தஸ்தகீர் தாஹாவை பற்றியே அதிகம் விசாரித்தார், சொல்லியாச்சா.. சொல்லியாச்சா.. வந்துகிட்டிருக்கானாம்மா.. ஏன் இன்னும் வரலை.. பஸ் லேட்டா இருக்குமோ என்னவோ.. இவையெல்லாம் அவர் தேடி புலம்பியவை தான்.

தாஹா அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான், சபூரா இந்தோ வந்துட்டானே என்று தன் கணவரிடம் கூறி விட்டு வாப்பா தேடுறாஹலே என்று தாஹாவிடம் சொன்னார். தாஹா மெதுவாக உள்ளே நுழைந்தான். தஸ்தகீர் தாஹா என்று தான் கூறினார் தாஹா சத்தம் போட்டு அழுது விட்டான், வாப்பா என்னை மன்னிச்சுடுங்க வாப்பா.. இனிமே உங்க சொல் பேச்சு தான் கேப்பேன் இனிமே கடைய விட்டு எங்கேயும் போ மாட்டேன் வாப்பா என்று கதறினான். சபூரா, என்னட சீதேவி என்று தாஹா நெற்றியில் முத்தமிட்டு ராவும் பகலும் தூங்கலை எம்புள்ள வாப்பாக்காக என்றார். தஸ்தகீர் கட என்று கடையை பற்றி விசாரித்தார். தாஹா அழுது கொண்டே சொன்னான், வாப்பா இப்ப தான் வாப்பா எனக்கு தெரியுது நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டுகுட்டு இருக்கீங்கண்ணு கடய எப்படி கஷ்டப்பட்டு நடத்திட்டு வர்ரீங்கண்ணு இப்ப தான் வாப்பா தெரியுது இத்தனை நாள் நான் தெரியாமலே இருந்துட்டேன் வாப்பா.. என்றான். தஸ்தகீர் சொன்னார் நீ தான் இனிமே கடைக்கு முதலாளி ஒன் கீழே கட வந்ததும் கட எப்படி மேலே போவ போவுது பாறேன் என்று அவர் சொன்ன போது அந்த வார்த்தையில் புது தெம்பும் புது நம்பிக்கையும் இருந்ததாகவே எனக்கு பட்டது. உங்க கூட பேசிக்கிட்டு இத மறந்துட்டேன் பாருங்க.. அட ஒண்ணுமில்லங்க.. அரை கிலோ அரிசி, பருப்பு எல்லாம் வாங்கணும் நான் இப்ப தாஹா மளிகை கடைக்கு தான் போகும் போது வாங்கிட்டு போவணும். அப்ப வர்ரேன். பாப்போம். அஸ்ஸலாமு அலைக்கும்..

அ.முஹம்மது இஸ்மாயில்

—-

dul_fiqar@yahoo.com.sg

Series Navigation