Frontend – Backend

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

மாது


நான் சார்ந்த கணினித் துறையில் front-end back-end என இரு வகைகள் உண்டு. HTML, JavaScript, Macromedia போன்ற தொழில் நுட்பங்களைக் கொண்டு வலைத் தளங்களின் முகப்புப் பகுதியை வடிவமைப்பதை front-end programmming என்று கூறலாம். Java, C++ போன்ற மொழிகளைக் கொண்டும் Object Oriented Programming (OOP) போன்ற நுட்பங்களைக் கொண்டும் தொழில் கூறுகளை வடிவமைப்பதும் back- end programming என்று கூறலாம்.

Back-end ல் வேலை செய்பவர்கள் front-endல் வேலை செய்பவர்களை சற்று இளக்காரமாகப் பார்ப்பார்கள். தங்களால்தான் கம்பெனியே இயங்கிக் கொண்டிருப்பதாக நினைப்பு. ஏதாவது பார்ட்டியில் பார்க்க நேர்ந்தால் சிறிது நேரம் மற்ற விஷயங்களைப் பற்றி பேசிவிட்டு ஜாவா, சி.ப்ளஸ்.ப்ளஸ், ஆரக்கிள் என்று தாவி விடுவார்கள். அப்போது ஒரு அப்பாவி அங்கு வருவார். அவரைப் பார்த்து ‘நீங்க எதுல வேல செய்யறீங்க ? ‘ என்ற கேள்வி. அப்பாவி ‘HTML, JavaScript ‘ என்பார். ‘ஓ…அப்படியா (மனதிற்குள் ‘நீசனே ‘) ‘ என்ற பதிலுடன் தங்கள் பேச்சைத் தொடருவார்கள்.

சில நாட்களுக்கு முன் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு தலைமை கன்ஸல்ட்டண்ட்டாகச் சென்றேன். ஏற்கனவே அங்கிருந்த நிரலாளர்களுக்குத் தலைமைத் தாங்கும் வேலை. ஒரு நாள் மதிய உணவின் போது என் குழுவுடன் பேசிக் கொண்டிருந்தேன். என் குழுவின் உறுப்பினரான ஜார்ஜ் என்பவர் எங்களுடன் வர இயலவில்லை. ஜார்ஜ்ஜும் வெளியே இருந்து வந்த ஒரு கன்ஸல்ட்டண்ட். பேச்சு ஜார்ஜ் பக்கம் திரும்பியது. ‘ஜார்ஜ் ஜாவா மற்றும் ஆப்ஜெக்ட் ஒரியண்டட் ப்ரோகிராமிங்கில் பிஸ்தா ‘ என்றார் ஒருவர். மேலும் ஜார்ஜ் என் துறை சார்ந்த ஒரு பத்திரிக்கையில் OOP பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியிருப்பதாகவும் கூறினார்கள்.

ஜார்ஜ் எங்கள் குழுவில் HTML கொண்டு வலை பின்னுபவர். அன்று ஜார்ஜ்ஜுடன் தனியாக பேசும் வாய்ப்பு கிடைத்தது. ‘என்ன ஜார்ஜ் நீங்கள் OOP இல் குருவாமே… ‘ என்று இழுத்தேன். ஜார்ஜ் ‘….இப்போது வாழ்க்கையை ஓட்டுவதற்கு நான் HTMLலில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது (I ‘ve to do HTML for a living) ‘ என்றார். புரிந்தது. அமெரிக்க பொருளாதாரத்தில் சரிவு. இரண்டு குழந்தைகள். வீடு. மாதா மாதம் அடைமானத் தொகையை கட்டாவிட்டால் ஜப்தியாக வாய்ப்பு. இப்போதைக்கு HTML கை கொடுக்கிறது.

***

சில நாட்களுக்கு முன்னர், சிற்றிதழில் எழுதிக் கொண்டிருக்கும் ஒருவர் ஒரு பிரபல வார இதழில் எழுதியதற்காக ஒரு குழுமத்தில் சிறு சல சலப்பு ஏற்பட்டது. எழுதியவரும் அதற்காக வருத்தப் படும் தொனியில் ஒரு கடிதம் வடித்தார். அந்தச் சல சலப்புதான் இக்கட்டுரைக்கு காரணம்.

சிற்றிதழ் X பேரிதழ் பூசல் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. சிற்றிதழ்களுக்கு எழுதுபவர்கள் பிரபல இதழ்களுக்கு எழுதலாமா ? அப்படி எழுதுவதினால் அவர்கள் சோரம் போகிறார்களா ? பேரிதழ்களில் நல்லிலக்கியத்திற்குச் சாத்தியம் இருக்கிறதா ? – போன்ற கேள்விகள் கேட்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. பதில்களுக்கும், சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. இது முடியாத விவாதம்.

என்னைப் பொறுத்த வரை – நல்ல எழுத்து சிற்றிதழ் பேரிதழ்களை தாண்டி நிற்கிறது. கடலை மடித்த (பேரிதழ்) காகிதத்தில் நல்ல கவிதையைப் பார்த்திருக்கிறேன். தேடிச் சென்று வாங்கிய சிற்றிதழில் குப்பையைக் கண்டிருக்கிறேன். எழுத்து எதில் வருகிறது என்பது கணக்கு இல்லை. எப்படி இருக்கிறது என்பதுதான் கணக்கு.

எழுத்தாளர்களை நான் மூன்று வகைகளாகப் பிரிக்கிறேன்:

முதல் வகை: எழுத்தே என் தவம், நான் சிற்றிதழ்களில்தான் எழுதுவேன், என் எழுத்தை மையமாகக் கொண்டு என் வேலையை அமைத்துக் கொள்வேன். பணம் வருகிறதா இல்லையா என் குடும்பம் பட்டினியால் வாடுகிறதா என்பது பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. என் தவத்தின் குறுக்கே எதையும் வர விடமாட்டேன் என்ற வைராக்கியத்துடன் இருப்பவர்கள். அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இரண்டாம் வகை: பொருளாதாரத்தின் நடு/மேல் தட்டுகளில் இருந்து கொண்டு, வாழ்க்கைக்கு தேவையான வசதிகளைப் பெற்று நுன் கலைகளில் திளைத்துக் கொண்டிருப்பவர்கள். தங்கள் வேலை நேரம் போக மீதமுள்ள நேரங்களில் இலக்கியத்திற்கு செலவிடுகிறார்கள். சிலர் நல்ல இலக்கியங்களை படிக்கிறார்கள் / படைக்கிறார்கள். தங்கள் அலுவல்களையும் நேரத்தையும் எவ்வாறு முறையாக வகைப்படுத்தி இலக்கியத்திற்கு நேரம் செலவிடலாம் என்பதை நன்கறிந்தவர்கள் இவர்கள்.

மூன்றாம் வகை: பொருளாதாரத்தின் கீழ் தட்டிலிருந்து மேலே வர முன்னுக்கு வர முயல்பவர்கள். நல்ல இலக்கியங்களில் நாட்டம் உண்டு, நல்ல வாழ்க்கையிலும் நாட்டம் உண்டு, நல்ல இலக்கியங்களை படைக்கும் திறமையும் உண்டு. தான் முன்னேறி, தன்னைச் சார்ந்தவர்களையும் பேண வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள். இவர்கள் சிற்றிதழ்களிலும் எழுதுவார்கள் பேரிதழ்களிலும் எழுதுவார்கள். நல்ல கவிதை படைப்பார்கள், நடிகையின் இடுப்பழகையும் வருணிப்பார்கள். வாழ்க்கையின் தேவைகளுக்காக சில சமரசங்களை செய்து கொள்ள தயங்காதவர்கள். இவர்களைப் இக்கட்டுரையின் முதல் பகுதியில் உள்ள ஜார்ஜ்ஜுடன் ஒப்பிடலாம்.

மூன்றாம் வகையினருக்கு சில விசேட வார்த்தைகள். ஏ.ஸி அறையின் குளிரில், கஜல் பின்னனியில், ஜானி வாக்கரை சூப்பிக் கொண்டு, வறுத்த முந்திரியை கொறித்துக் கொண்டு ‘Oh…Did he write for viktan ?! ‘ என்று கிண்டலடிக்கும் போலிகளின் வார்த்தைகளை விட உங்கள் மனைவியின் மகிழ்ச்சியான கண்களுக்கு மதிப்பு மிக மிக அதிகம்.

நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்களாகவும் இருங்கள். எதில் வேண்டுமானாலும் எழுதுங்கள். உங்களது நல்ல எழுத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டு கொண்டு விடுவோம். குப்பைகளை ஒதுக்கித் தள்ளி விடுவோம். அந்த வேலையை வாசகர்களாகிய எங்களிடம் விட்டு விடுங்கள்.

****

tamilmaadhoo@yahoo.com

Series Navigation

மாது

மாது