விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு

This entry is part of 54 in the series 20090915_Issue

இரா.முருகன்


28 மே 1910 – சாதாரண வருஷம் வைகாசி 15 சனிக்கிழமை

அடியே லலிதாம்பிகே.

இந்தக் கடுதாசியின் ரெண்டாவது தாள் இது. நேற்றைக்கு எழுதின இதன் முதல் பக்கம் தொலைந்து போனது. வைப்பாட்டி வீட்டிற்குக் கிளம்பும் முன்னால் எழுதினது. காப்பிரிச்சி கூடப் படுத்து எழுந்து எழவெடுத்த மூலையில் எல்லாம் தேடியும் அதைக் காணலை. சுக்கிலத்தை அதில் துடைத்து வீசிவிட்டேனா என்று கூட நினைவில்லை. என்ன போச்சு? எப்படியும் நான் எழுதுகிற எதுவும் உன்னிடம் வந்து சேரப் போவதில்லை. நீ அதை யாரையாவது வாசிக்கச் செய்வித்து பதில் அனுப்பி விடுவாய் என்று நம்புவதை விட்டொழித்து எத்தனையோ நாளாகி விட்டது.

இப்போதெல்லாம் உனக்கு எழுதுகிறதாகப் பெயர் பண்ணி நானே எனக்குச் சொல்லிக் கொள்கிற சமாசாரமாகத்தான் இதையெல்லாம் எழுதி பத்திரமாக என் டிரங்குப் பெட்டிக்குள்ளேயே வைத்துக் கொள்கிறேன். நீ இருக்கியோ, செத்துப் போய் எரிச்ச இடத்தில் இன்னும் நூறு பொணம் நித்தியப்படிக்கு விழுந்து எரித்து எல்லோரும் சொர்க்கத்துக்குப் போனீர்களோ தெரியலை.

நீ அங்கே போயிருக்கும் பட்சத்தில் உன்னை இனி எப்போதும் நான் பார்க்கப் பொறதில்லை என்று தெரியும். நான் பண்ணுகிற மகாபாவத்துக்கு நரகம் தான் எனக்கு விதிக்கப்படும். அதெல்லாம் இருக்கோ என்னமோ. அப்படி இருந்தால் நானும் என் ஆசைக் கண்ணாட்டி இந்த வைப்பாட்டிப் பெண்ணாளும் அங்கே இன்னும் கொஞ்சம் சுகம் அனுபவித்துக் கொண்டிருப்போம். உன்னை யாராவது வேலையத்த குப்பன் பெண்டாள வந்து சேர்ந்து, இல்லை நீ எந்தப் பரதேசியையாவது மயக்கிப் போட்டு ஆணாண்டு சுகித்திருந்தால் நீயும் அந்த மயிராண்டி சிரவுதி பிரசவனத்தில் சொல்வானே ரவுராவாதி நரகமோ என்னமோ. அதே பாவக்குழியில் வந்து நாங்கள் கிரீடையில் இருக்கிறதை பக்கத்தில் இருந்து பார்த்து ஆனந்தப்படலாம். வந்துடு.

திருக்கழுக்குன்றம் தெலுங்கச்சி ரெட்டிய கன்யகை தானடி என் வைப்பாட்டி அடி நாசமாகப் போன லலிதாம்பிகே. தனபாரத்துக்கு ஏத்த மாதிரி உடம்பில் கொஞ்சம் சதைப் பிடிப்பும் உதட்டில் மயக்குகிற சிரிப்புமாக இங்கே அவள் எப்படியோ வந்து சேர்ந்து விட்டாள். அவளை நான் வலுக்கட்டாயமாக அனுபவிக்க பிரயத்தனம் செய்தபோது பாறையில் இருந்து சாடி உயிரை விட்டு என்னை காராகிருஹத்துக்கு அனுப்பிய மோகினி திரும்பி விட்டாள். பிசாசாக, மலையாள யட்சியாக இல்லை. உடம்பும் உயிரும் எல்லாத்துக்கும் மேல் சதா போகத்துக்கு ஏங்குகிற மனசுமாக என்னைத் தேடி இங்கே சமுத்திரம் தாண்டி வந்து விட்டாள் கேட்டியோடி. என் கல்யாணி வந்தாச்சு. நம்ப மாட்டே. ஆனாலும் எனக்கு நிஜம்.

அதெப்படி அதே பெயர், அதே கள்ளச் சிரிப்பு, நான் அன்றைக்கு திருக்கழுக்குன்றத்தில் அவளோடு செய்த சில்மிஷம் ஒன்றைக் கூட விடாமல் நினைவு படுத்திச் சொல்வது என்று அவள் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது கொஞ்ச நஞ்சமில்லை. இத்தனைக்கும் நான் பலாத்சங்கம செய்த ரெட்டிய கன்யகை கல்யாணி தெலுங்கச்சி. இந்தக் கல்யாணியோ தமிழ் மட்டும் தெரிஞ்ச குட்டி.

தெலுங்கச்சியை ரெண்டாம் கல்யாணம் செய்து கொள்ளக் கழுக்குன்றத்துக்குக் கூட்டி வந்தான் ஒரு கிழங்கன் என்று உனக்கு எதோ த்ரேதாயுக கடுதாசியில் சொன்னேனே ஞாபகம் இருக்கோ. அந்தக் கிழங்கன் போல இந்தக் கல்யாணிக்கும் சொத்தை சொள்ளையாக ஒரு புருஷன். கிழங்கன் கூட இல்லை. செனைப் பூனை மாதிரி பம்மிப் பம்மி நடக்கிற பயந்தாங்கொள்ளி. அவன் பெண்டாட்டியைத்தான் நான் படு சுவதந்திரமாக இந்த நாலைந்து வருஷமாக வைத்துக் கொண்டிருக்கிறேன். சூப்பரவைசர் உத்தியோகம் பார்க்கிற எனக்கு சலாம் போட்டுக் கும்பிட்டு விழுந்துதான் பெண்டாட்டியைக் கூட்டிக் கொடுத்திருக்கிறான் அந்தப் பேடி.

அதென்னமோ முதல் நாள் பார்த்ததுமே கல்யாணிக் குட்டி மனசில் ஜிவ்வென்று வந்து குந்தி விட்டாளடி லலிதாம்பிகே. புத்திக்குத் தெரிகிறது இவள் இல்லை நான் கழுக்குன்றத்தில் கார்த்திகை பட்சத்து நாயாகக் காமத்தோடு துரத்திப் போனவள் என்று. அடுத்தவன் பெண்டாட்டியை இச்சிக்கிறது தப்பு என்று அதுக்குத் தெரிகிறது. அதுக்கு இன்னமும் கூடத் தெரிகிறது ஒரே மாதிரி இருக்கப்பட்ட அதிரூபவதிகளான ரெண்டு பெண்களை சிநேகம் செய்து கொள்ள எனக்கு, எனக்கு மட்டும் அதிர்ஷ்டம் ஏற்பட்டிருக்கு என்று.

பழைய கதை எல்லாம் இவளுக்கு எப்படி தெரிந்தது என்று கேட்பதை கொஞ்சம் விட்டொழித்தால் ரமிக்கவும் அதில் லயிக்கவும் எந்தத் தடையும் இல்லை. புரியாத விஷயங்களைக் கேள்வி கேட்டு மடியில் வந்து விழுந்த சொர்க்கத்தை வேண்டாம் என்று தூக்கி அந்தாண்டை தூக்கிப் போட்டு விட்டு சத்தியத்தைத் தேடிப் போகிறதை மகான்கள் செய்து கொள்ளட்டும். எனக்கு இந்தப் பெண் கொடுக்கிற சுகமே ஏழேழு பிறவிக்கும் போதும். நீ என்ன சபித்தாலும் மசிரே போச்சு போடி.

நேத்து ராத்திரி ஏழு மணிக்கு வேலை முடிந்து வந்து காப்பிரிச்சி வைத்துக் கொடுத்த ஓட்சுக் கஞ்சி குடித்தேன். தொட்டுக் கொள்ள ஏதோ மீனை வறுத்து வைத்திருந்தாள் அந்தக் கறுப்பி. எல்லா சனியனும் இப்போ பழகி நான் அதை முள் எடுத்து விட்டு ரசித்துச் சாப்பிடவும் அனுபவப்பட்டு ஒரு ஜன்மம் கழிந்த மாதிரி ஆயிடுத்து போ. மகாலிங்கய்யன் போய் ஒழிந்தான். நீ உயிரோடு இருந்தால் அந்தக் கபோதிக்கு திவசம் கொடுக்க ஏற்பாடு செய். எள்ளுருண்டை சாப்பிட்ட வாயோடு சொர்க்கம் போகலாமாம். அலம்பக் கூட வேணாம்.

இப்போ நான் முழுக்க முழுக்க வரதராஜ ரெட்டியாகி விட்டேன். தெலுங்கில் தான் நினைக்கிறேன். சொப்பனத்தில் கூட கல்யாணியோடு தெலுங்கில் தான் கொஞ்சுகிறேன். இருட்டில் அவள் தமிழில் பேசி ராஜா, துரை, செல்லப்பா என்று ஏதேதோ பிதற்றி எனக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறாள். கெட்ட வார்த்தை எல்லாம் அவளைச் சொல்ல வைத்துக் கேட்கிற சுகத்துக்காக இன்னும் அவ்வப்போது தமிழ் தெரியாத தெலுங்கனாக நடித்துக் கொண்டுருந்தாலும் மனசில் ஓரத்தில் மகாலிங்கய்யன் பேசின பார்ப்பனக் கொச்சை உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

உனக்கு என்று சாக்கு வைத்து எழுதி நான் சாக்கிலும் கூடையிலும் வாரிச் சேர்க்கிற பாவத்தையும் சுகத்தையும் சொல்கிற இந்தக் கடுதாசி எழுத லிபியும் தமிழாகத்தான் இன்னும் இருக்கிறது. இனிமேல் தெலுங்கு எழுதக் கற்றுக் கொண்டு என்னத்தைக் கிழிக்கப் போகிறேன் சொல்லு. யாருக்கு எழுதணும்?

பாரேன், நேற்று ராத்திரி கஞ்சி குடித்ததில் ஆரம்பித்து விட்டு நான் வரதராஜ ரெட்டியின் பிரதாபத்தில் முழுகி விட்டேன். சுய பிரதாபம் தான். ஆனாலும் அவ்வப்போது இந்த ரெட்டியோ, செத்தொழிந்து போன அந்த மகாலிங்கய்யனோ நான் இல்லை என்று தோன்றுகிறது. பின்னே நான் யார்?

வேணாம். அதெல்லாம் சத்திய வேட்கை. தேடிப் போய் நேரத்தை வீணாக்காமல் கல்யாணியின் காலடியில் விழுந்து கிடக்கலாம். இல்லை, நாலு காசு வட்டிக்கு விட்டு வருமானம் தேடலாம். ரெண்டையும் சிரத்தையாகச் செய்து கொண்டிருக்கிறேன். பரம சௌக்கியமாக இருக்கேன். நீ எப்படி இருக்கே?

இப்போ நான் லயத்தில் இந்தக் கூலிக்காரக் கழுதைகளோடு இல்லை. சமுத்திரக் கரையிலிருந்து கொஞ்சம் தொலைவில் வீட்டு மனை வாங்கி அதில் ஒரு கல் கட்டிடம் எழுப்பி அங்கே தான் வாசம். தமிழன், தெலுங்கன் என்று வீட்டில் ஒன்றுக்கு ரெண்டு ஆசாமிகளை எடுபிடி உத்தியோகத்துக்கு நியமித்திருக்கிறேன். அப்புறம் இன்னொண்ணு, நான் சொன்னேனே, ஒரு காப்பிரிச்சி எனக்கு கஞ்சி காய்ச்சிக் கொடுத்தாள் என்று. அவளை போன வாரம் மோதிரம் மாற்றிக் கல்யாணம் செய்து கொண்டேன்.

நீ இதைப் படிக்காவிட்டாலும் மனதில் நினைப்பு தட்டியோ, உசிர் போய் சவமாகவோ, பிரேத ஆத்மாவாகவோ எங்கோ சுற்றி அலைந்து கொண்டோ என்னைச் சபிப்பது தெரிகிறது. என்ன செய்யட்டும் சொல்லு. காப்பிரிச்சி மடியில் காசையில்லையா முடிஞ்சு கொண்டு வந்தாள்.

கரும்புத் தோட்டம் வைச்சு அவள் வீட்டுக்காரன் சேர்த்து வைத்த பணம் அது எல்லாம். அவன் குழிக்குள் போனதும் தனியாக அலைபாய்ந்தவள் என் நோட்டத்தில் மாட்டினாள். அவள் தான் கல்யாணம் பற்றி பிரஸ்தாபித்தாள்.

நான் கல்யாணி சிநேகம் பற்றி ஆள் அடையாளம் தெரிவிக்காமல் சொன்னேன். அவள் உலக்கை மாதிரி பருத்த கையை மூணு வளைவாக வளைத்து அந்தக் குட்டியின் அங்க லட்சணம் காட்டி உன் கதையெல்லாம் தெரியுமே என்கிறது மாதிரி சிரித்தாள்.

நீ யாரோடு கூட படுத்தாலும் கவலை இல்லை. வீட்டில் என்னோடு இருக்கும்போது அதெல்லாம் நினைக்காமல் கிடந்தால் சரி.

அவளிடம் உன்னைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. எதுக்குச் சொல்லணும்? நீ மகாலிங்கய்யன் பாரியாள். அவன் போய்ச் சேர்ந்ததால் சரி போ என் வாயால் கையால் எதுக்கு உன் பொட்டை அழிக்கணும். சவுக்கியமாக இரு.

பாதிரி இல்லாமல், பூசாரி இல்லாமல் எங்கள் கல்யாணம் நடந்தது. கஷ்ட ஸ்திதியில் இருந்து என்னிடம் கடன் வாங்கி இப்போது கரும்பு அரவைத் தொழிலில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் நாலைந்து கருப்பன்களும், வழியோடு போன நம்ம ஊர்க்கார வேலையத்த சுப்பன்கள், சுப்பிகள் ஏழெட்டு பேரும் கூடி இருந்து கரகோஷம் செய்ய லோலாவோடு (என் காப்பிரிச்சி பெண்டாட்டி பெயர் அதுதான்) மோதிரம் மாற்றிக் கொண்டது போன ஞாயிற்றுக்கிழமை பகலில்.

எல்லாருக்குமாக நாகப்பட்டிணத் தமிழன் கடையில் சாப்பாடும் காப்பிரி கடையில் கள்ளும், கவிச்சியும் வாங்கி வைத்திருந்ததால் ஒருத்தரும் ஒரு துரும்பைக் கூட நகர்த்த அவசியமில்லாம விருந்து போட்டு அனுப்பினேன்.

ஞாயிறு ராத்திரி லோலாவை ஒரு மாதிரி திருப்திப்படுத்தி (ராட்சசி அவள், உடம்பே கணுக் கணுவாக வலிச்சுப் போனது) தூங்க வைத்து விட்டு கல்யாணியைத் தேடிப் போனேன். வழக்கம்போல் பக்கத்தில் சொங்கியாகத் தூங்கிக் கொண்டிருந்த அவள் வீட்டுக் காரனை எழுப்பி அந்தாண்டை வெளித் திண்ணயில் படுக்கச் சொல்லிவிட்டு நான் கதவை அடைத்துக் கொண்டு சாய்ந்து படுத்தேன்.

மிச்ச ராத்திரி முழுக்க கல்யாணி கூட இருந்து விட்டு பொழுது விடிந்ததும் தான் என் வீட்டுக்குப் போனேன். உடம்பு வலிக்கு ஒத்தடம் கொடுத்த இதம் அந்த சுகம்.

லோலா எழுந்திருந்து எனக்கு கருப்பாக ஒரு துளி தித்திப்பு கூட இல்லாமல் காப்பி கலந்து கொடுத்தாள். அவளுடைய பேரில் இருக்கப்பட்ட அரவை சாலையில் உண்டு பண்ணின சர்க்கரையைக் கேட்டு வாங்கி அதில் கலந்து குடித்தேன்.

அதை சுத்தம் செய்யாமல் சாப்பிடக் கூடாதாம். காப்பிரிச்சி சொன்னாள். என் உடம்புக்கு ஒண்ணும் ஆகாதுடி என்றேன்.

எனக்கு காப்பிரி பாஷையும் இப்போது அத்துப்படி லலிதாம்பிகே. அந்த ஜனத்துக்கும் நம்மை மாதிரி அனேகம் பாஷை உண்டு. லோலா பேசுகிறது இங்கே சாதாரணமாக மற்றக் காப்பிரிகளும் பேசுகிறது. என்னிடம் கடன் வாங்கி வட்டி கட்ட வாய்தா கேட்டு காலில் விழுந்து கெஞ்சும்போது அவன்களின் பாஷையில் என்னை தெய்வமே என்று தான் கூப்பிடுகிறார்கள். அதுவும் சுகமாகத்தான் இருக்கு கேட்க.

போன ஞாயிற்றுக் கிழமையில் இருந்து வாரம் முழுக்க வேலை. வீட்டை ஒழுங்கு படுத்துகிறதும், வட்டிக்கு கொடுக்கிற பணத்துக்கான கணக்குகளை சீர் பிரித்து சரி பார்ப்பதிலும் நேரம் கழிந்து போனது. நடுவில் ஒரு நாள் மதியத்துக்கு மேல் லோலாவோடு சாரட் வண்டியில் அவளுடைய கரும்பாலைக்குப் போய் வந்தேன். ரொம்பவே சின்ன ஆலை. நாலைந்து பேரே வேலை பார்க்கிற ஸ்தலம். தொழில் அபிவிருத்திக்கு இடம் இருக்கும்போது, ஆள்பலம், நிர்வாக சாமர்த்தியம் இல்லாது போனதால் அந்த இடம் மட்டும் நசித்த ஸ்திதியில் இருக்க, பக்கத்தில் மற்ற ஆலையெல்லாம் பெரிசு பெரிசாக கை கோர்த்து நர்த்தனமாடுகிற காப்பிரிச்சிகள் மாதிரி ஓங்கி உயர்ந்து நின்றன.

நம்மோட ஆலையையும் அதுபோல் ஆக்கிப் போடலாம் என்று லோலாவிடம் உத்திரவாதம் கொடுத்தேன். நானா அவளைப் பிடித்தேன்? அந்தக் களவாணிச்சி என்னை புருஷனாக வளைத்துப் போட்டது அவளுக்குப் படுக்கையில் சுகம் கொடுக்க மட்டும் இல்லை. சொத்தை நிர்வகிக்கிறதும் அதை விருத்தியாக்க ஓடியாடிப் பாடுபடுகிறதும் இந்த அடிமையின் வேலையில் அடக்கம், தெரியுமா?

சொன்னால் சிரிப்பாய். காப்பிரிச்சியோடு கிடக்கும்போதெல்லாம் நான் ஊரில் இருந்த காலத்தில் அரையில் பூசிக் கொண்ட தைலம் நினைவுக்கு வந்து விடுகிறது. அந்த வாடையே பிடிக்காமல் நீ என்னை விட்டு தூரமீனாளாக கிணற்றடியில் பழைய வஸ்திரத்தோடு ஒதுங்கி ஒரேயடியாக எங்கேயோ போய்ச் சேர்ந்தாய். அதை ரொம்ப அனுபவித்த கொருக்குப்பேட்டை பங்காரு தாசியும் அஸ்தி ஜ்வரம் கண்டு உசிரை விட்டது உனக்குத் தெரிந்ததுதானே. என்னமோ பங்காரு தாசி மாதிரி இந்தக் காப்பிரிச்சிக்கும் தைலவாடை ரொம்பவே பிடித்துப் போகும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கல்யாணி? அவளுக்காக நான் அத்தரும் ஜவ்வாதும் வெள்ளைக்காரன் இங்கிலாண்டில் உண்டாக்கிக் குப்பியில் அடைத்த பரிமளகந்த செண்டும் இல்லையோ வாங்கித் தருகிறேன். நானும் பூசிக் கொண்டு ஆலிங்கனம் செய்து கொள்கிறேன். இது நாசிக்கு சுகம், கேட்டுக்கோ.

வாரம் முழுக்க காப்பிரிச்சி காரியம் ராவும் பகலும் இருப்பதாலும், கையில் கொஞ்சம் போல ரெண்டு பேர்கிட்டேயும் காசு சேர்ந்திருந்ததாலும் நான் இங்கே வந்தது முதல் பார்த்து வந்த கரும்புத் தோட்ட ஹெட் சூபர்வைசர் உத்தியோகத்துக்கும் தலைமுழுகி விட்டேன். விடிகாலையில் எழுந்து தொப்பியையும் நிஜாரையும் மாட்டிக் கொண்டு ஓட வேண்டியதில்லை என்ற நிம்மதியே மனசில் பெரிசாக எழுந்து நிற்கிறது. விடிந்து வெகு நேரம் போய்த்தான் இப்போதெல்லாம் எழுந்திருக்கிறேன். அந்த நேரத்துக்கு தோட்ட வேலைக்கு எவனாவது தாமதமாக வந்து நின்றால் என் பிரம்பும் நாக்கும் விளாசி எடுத்து விடும். நாலு காசு பார்க்க சீமைக்கு வந்த அந்த ஜந்துக்களுக்கு அதெல்லாம் சரியான தண்டனைதான். நான் தனத்தைப் பார்த்தவன். இன்னும் ஆசை அடங்காமல் அனுபவித்துக் கொண்டிருப்பவன். கல்யாணி, காப்பிரிச்சி, காசு.

நேற்றைக்கு வெள்ளிக்கிழமை சாயங்காலம். லோலா மதியத்திலேயே அரிசிக் கள்ளு என்று எதோ பெயர் விளங்காத பானத்தை மூக்கு முட்டக் குடுத்து விட்டு சாயந்திரம் முழுக்க படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். நான் கணக்கு வழக்கு வேலையில் மூழ்கி திங்கள்கிழமை பொழுது விடிந்ததும் யாரைத் தேடிப் போய்க் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்துக் காசு பிடுங்க வேண்டும் என்று ஜாபிதா தயார் பண்ணிக் கொண்டிருந்தேன்.

சட்டென்று இந்தக் கல்யாண விஷயத்தை உன்கிட்டே சொல்லவில்லையே என்று ஞாபகம் வந்தது. சொன்னாலும் உனக்கு போய்ச் சேரப் போவதில்லை, போய்ச் சேர்ந்தாலும் இந்தத் தகவலால் உனக்குக் கால் காசு லாபமில்லை என்றெல்லாம் எனக்குத் தெரியும்தான். ஆனால் என்ன? கல்யாணம், சீமந்தம், வளைகாப்புக்கு பிள்ளையார் பெயருக்குப் பத்திரிகை எழுதி வைக்கிறதுபோல் உனக்குச் சொல்கிறதை இன்று நேற்றா, நான் காராகிருஹத்துக்குப் போன காலம் முதல் செய்து கொண்டு வந்திருக்கிறேன் இல்லையா? அதிலே ஒரு ஒரே ஒரு கடுதாசு, கடுதாசியில் ஒரு காகிதமாவது கிடைத்த சமாச்சாரம் எனக்குத் திரும்ப வந்திருந்தால் நான் இன்னேரம் சமுத்திரம் கடந்து போன காரியத்திலேயே கண்ணாக ஒழுக்க நெறியோடு இருந்திருப்பேனோ என்னமோ.

மசிப்புட்டியில் மசிக்கான மாத்திரை போட்டு தண்ணீர் விட்டுக் கரைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, கட்டைப் பேனாவை முக்கியெடுத்து ஒரு பக்கம் முழுக்க கல்யாணியோடு வைத்துக் கொண்ட பந்தம் பற்றி எழுதி, அவள் போதாமல் இங்கே இன்னொருத்தியையும் கூடச் சேர்த்துக் கொண்ட வைபவம் பற்றி எழுதப் பக்கத்தைத் திருப்பினேன்.

எழுதின பக்கத்தில் மை உலராமல் திருப்பின பக்கத்தில் எழுதக் கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. அங்கங்கே திட்டுத் திட்டாக பின்னாலும் அது புடைத்துக் கொண்டு விகல்பமாகத் தெரிந்தது. கல்யாணியும் காப்பிரிச்சியும் மாதிரி. என்ன சொல்லு, அந்த ரெண்டு பெண்டுகளும் உடம்பு சவுந்தர்யத்தில் ஒவ்வொரு ஜாதி புஷ்பம் போல். உன்னை அது போல எல்லாம் நினைச்சுப் பார்க்க முடியலேடியம்மா. மாச விலக்கு ஏற்பட்டு விலகிப்போய் கிணற்றடியில் பழைய வஸ்திரத்தோடு படுத்திருக்கிறவளாகத்தான் சதா நினைவுக்கு வருகிறாய்.

காப்பிரிச்சியும் கல்யாணியும் இல்லாமல் சுத்தபத்தமான ஒரு ஜீவிதம். அதெல்லாம் எனக்கு விதிக்கப்பட்டதில்லை. இந்தக் கறுப்பு தடிச்சி, அந்தக் கறுப்பு சுந்தரி. உலகம் இவர்களோடு தான் இனிமேல் கொண்டு. உடம்பு ஆசையும் காசு ஆசையும் மட்டும் பிரதானப்பட்ட உலகம். அங்கே இருந்து குரல் வருகிறது. வா, வந்து படு.

லோலா போதையில் என்னைப் பார்த்து சொன்னாள்.

ஓய் ரெட்டி. அந்தக் கணக்கெல்லாம் இருக்கட்டும். இங்கே கொஞ்சம் பக்கத்தில் வந்து படுத்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்து விட்டுப் போம்.

சாயந்திர நேரத்தில் இது வேணுமா என்று சலிப்போடு அவள் பக்கத்தில் போனபோது அவளே ஆரம்பித்து விட்டாள். சொன்னால் நம்ப மாட்டே. யாராவது அந்த நேரத்தில் அதுவும் பெண்பிள்ளை. சரி, இருக்கலாம். ஆனால் நடுவிலேயே தூங்க முடியுமா? காப்பிரிச்சி பாதி வார்த்தை சொன்னபடிக்கு உறங்கிப் போனாள்.

நான் பலகீனமாக உணர்ந்தபடி கட்டிலில் இருந்து இறங்கி எழுத்து மேஜை மேல் நான் எழுதி வைத்திருந்த கடுதாசியைப் பார்த்தேன். எங்கே தொலைந்தது அந்த ஒற்றைக் காகிதம் என்று தெரியவில்லை. சமுத்திரக் காற்றில் பறந்து போய் அலைக்கு நடுவிலே குதி போட்டுக் கொண்டு உன்னைத் தேடிப் போய்க் கொண்டிருக்கா? இல்லை, கக்கூசுக்குள் காப்பிரிச்சி துடைத்துப் போடத் தோதாகக் கிடக்கிறதா தெரியலை. அதைத் தேடிப் போக ஆயாசமாக இருந்தது.

மேல் கொண்டு கணக்கு வழக்கைப் பார்க்க முடியாத ரெண்டுங்கெட்டான் மன நிலையும், உடம்பில் பெரிசாக எழுந்த பசு தர்ம தாகமுமாக கொஞ்சம் சீக்கிரமே கல்யாணி வீட்டுக்குப் போய் விட்டேன். பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்த அவளுடைய புருஷனை எச்சில் தட்டோடு வாசலுக்கு விரட்டி விட்டு கதவைச் சார்த்தினேன். சோற்றையாவது அவன் வெளியே உட்கார்ந்து முழுசாக அனுபவிக்கட்டும்.

நான் முன்னிரவில் வெளியே வந்து என் சொந்தமான காப்பிரிச்சி வீட்டுக்குள் நுழையும்போது தான் வாசலில் பார்த்தேன். யாரோ உட்கார்ந்திருந்தார்கள்.

ஓய், மகாலிங்கய்யரே. சௌக்கியமா இருக்கீரா?

மலையாளத்துப் பார்ப்பான் இங்கே எங்கே வந்தான்?

(தொடரும்)

Series Navigation