வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரங்கள்

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

க.ராஜம்ரஞ்சனி



‘நாமெல்லாம் வானத்தில் இருந்து விழுந்த நட்சத்திரங்கள்’ வானத்தை நோக்கியவாறே பவானி அக்கா சொன்னபோது முதலில் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாயிருந்தது. பவானி அக்கா ஆறாம் வகுப்பு வரைதான் படிப்பு. ஆனால் சில சமயங்களில் அறிவார்ந்த சிந்தனை தாங்கிய கருத்துகளைச் சாதாரண வார்த்தைகளால் வெளிப்படுத்துவார். முதலில் எனது புரிந்துணர்வைத் தொட அக்கருத்துகள் கஷ்டப்பட்டாலும் பிறகொரு சமயம் தெளிவைப் பிறப்பித்து என்னுள் மறுமலர்ச்சியை உண்டாக்கிவிடும். அப்போதெல்லாம் அக்காவின் யதார்த்த நிலையில் உண்டாகும் ஆழமான சொற்களை நினைத்து வியந்துள்ளேன். பலமுறை எனக்கு இதில் அனுபவம். பவானி அக்கா குணா அண்ணனைத் திருமணம் செய்து ஐந்து வருடங்களுக்கு முன் என் பக்கத்து வீட்டில் குடியேறினார். எனக்கும் அவருக்கும் எட்டு வருட வயது வித்தியாசம். அக்கா எனக் கூப்பிட்டாலும் ஆரூயிர் தோழியுடனான ஆழமான நட்பு எங்களுள் வேரூன்றியிருந்தது. தமிழ், குடும்பம், அரசியல், இயற்கை, சமையல், சினிமா என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வோம். என்னைப்போல அக்காவுக்கும் முடிவினைத் தொடாமல் நீண்டு கொண்டிருக்கும் தொடர் நாடகங்கள் பிடிக்காது. தினமும் நானும் அக்காவும் பார்த்துப் பேசுவது தவறியதே கிடையாது. அக்காவும் அண்ணனும் ஜோகூரிலுள்ள அவர்களின் குடும்பத்தைப் பார்க்க செல்லும்பொழுது மட்டும் எங்கள் சந்திப்பும் பேச்சும் தடைப்படும்.
குழந்தை பாக்கியம் கிடைக்காமல் அக்கா வருந்திப் பல சமயம் பார்த்துள்ளேன். பக்கத்திலிருந்த மாரியம்மன் கோயிலில் பேச்சியம்மனைச் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் தவறாமல் குழந்தை வரத்துக்காக வேண்டி வந்தார். குணா அண்ணன் அக்காவைக் குறை கூறியதே கிடையாது. இருவருக்கும் எந்தவொரு குறையும் இல்லையென்றும் ஆனாலும் பிள்ளை பெற கொஞ்ச நாள் எடுக்கக்கூடும் என்றது மருத்துவ சோதனை. சுற்றியிருந்தோரின் பேச்சு குறிப்பாக பெண்களின் பேச்சுக்களே அக்காவை நோகடித்தன என்பது எனக்குத் தெரிந்த உண்மை. பெண்களே இன்னொரு பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ள முடியாத இயலாமையை எண்ணி என்னுள் கோபம் எழுந்தாலும் அவர்களின் அறியாமையை எனக்கு அக்காதான் எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தார். அவர்கள் மேல் அக்கா கோபப்படாமல் எப்படி இருக்க முடிகின்றது என்ற என் உள்ளுணர்வு அக்காவின்மீது நான் வைத்திருந்த மரியாதையைப் பல்மடங்கு அதிகரித்தது.
*******
‘நீங்க சொன்னது உண்மைக்கா. நாமெல்லாம் வானத்தில இருந்து விழுந்த நட்சத்திரங்க’
சப்பாத்தி செய்ய மாவைப் பிசைந்து கொண்டிருந்த அக்கா மெலிதாக புன்னகைத்தாள்.
‘இன்னிக்கு காலையில நியூஸ் பேப்பர் வாங்க கடைக்கு போயிட்டு வந்து காடியை ஸ்டார்ட் பண்ணும்போது காடி ஸ்டார்ட் ஆகல. பேட்டரி போச்சுக்கா. ஒரு லேடி எனக்கு ஹெல்ப் பண்ணனாங்க. அவங்க வீடு பக்கம். அவங்க கணவரை வர சொல்லி காடி பேட்டரி ஜம்ப் பண்ண வேண்டியதா போச்சு. அதுக்குப்பறம் ஆபிஸ் போனேன். நல்ல வேள, மீட்டிங் ஆரம்பிக்கறத்துக்குள்ள போய் சேந்துட்டேன். முன்ன பின்ன தெரியாதவங்க. கடவுள் மாதிரி அவங்களா வந்து உதவி செஞ்சது ரொம்ப ஆச்சர்யமா போச்சுக்கா. இந்த உலகத்துல இன்னும் கொஞ்ச பேர் அவங்களோட குணத்தால நட்சத்திரமா மின்றதா தோணுதுக்கா’
‘இவங்க மாதிரி ஆளுங்க மின்ற நட்சத்திரங்கதான்’ அக்கா என் கூற்றை உறுதிபடுத்தியது மனதிற்கு இதமாயிருந்தது. பாசத்துடன் வளர்த்த பெற்றோர், கல்வியை என்னுள் விதைத்த ஆசான்கள், மேற்படிப்பைத் தொடர ஊக்கம் தந்த மாமா, தைரியத்தை ஊட்டும் சிற்றப்பா, சோர்வுற்றிருக்கும் தருணங்களில் அன்புடன் அணைத்து ஆதரவு தரும் தோழி வய் யான், அச்சத்தைப் போக்கி துணிவுடன் செயல்பட உதவிய பாரதியார், அஹிம்சை என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை உணர்த்திய காந்தியடிகள், என் அருகே எப்போதிருக்கும் ‘வெங்கடாஜலபதி’ என என் வானில் மின்னுகின்ற நட்சத்திரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். என் வானில் இன்னும் நட்சத்திரங்கள் பெருக வேண்டும் என அக்கணமே கடவுளை வேண்டிக்கொண்டேன். நான் மின்னுகின்ற நட்சத்திரமா என்பது எனக்கே தெரியாது, மற்றவர்களின் பார்வைக்கு மட்டுமே அறியப் படுகின்ற பிரகாச ஒளிவட்டம் அது. என்னுடைய பிரகாசம் குறையாமல் இருக்க மறுபடியும் கடவுளை வேண்டிக்கொண்டேன். வானத்திலிருக்கும் நட்சரத்திரங்கள் பூமியை நோக்கும்போது நாமெல்லாம் நட்சத்திரங்களாய் காட்சியளிப்பதை மனக்கண்ணில் நிறுத்திப் பார்த்தேன்.
*******
‘அக்கா, நாமெல்லாம் வானத்தில இருந்து விழுந்த நட்சத்திரங்க. ஆனா விழுந்த எல்லா நட்சத்திரங்களும் மின்றதில்ல’ வெறுப்புடன் வந்து தெறித்தன வார்த்தைகள்.
‘ஏன் ரஞ்சனி? கோபமா இருக்கற மாதிரி தெரியுது?’ என்றும் அவர் உதட்டிலிருந்து மறையாத புன்னகையுடனே என்னைப் பார்த்தார். என் பேச்சிலிருந்தே அக்கா என் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருந்தார்.
‘அக்கா, கொஞ்ச பேரு நடந்துக்கற விதம் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு. நம்ப மத்தவங்களுக்கு எந்த கெடுதியும் நெனக்கிறதில்ல. மத்தவங்க ஏன் நமக்கு தொந்தரவு தராங்க? நாளைக்கு நாம இருக்கறது கூட உறுதியில்ல. அப்பறம் ஏன் போட்டி, பொறாமை, வஞ்சனை? இதால என்ன கெடைக்க போவுது? அப்பப்பா. என்ன மனுசாளுங்களோ?’ சலித்துக்கொண்டே ஜன்னலோரம் நின்று கொண்டு வீட்டின் முன்புறமாய் இருந்த விளையாட்டுத் திடலைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பதின்ம வயது பையன்கள் காற்ப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
‘எல்லாரும் நம்ம மாதிரி இருக்க மாட்டாங்க ரஞ்சனி. இப்பதான உனக்கு உலகம் தெரிய ஆரம்பிச்சிருக்கு. மொதல்ல கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். போக போக தெரிஞ்சுக்குவ. கொஞ்ச பேரு மட்டும்தான் மின்ற நட்சத்திரங்க. ஒரே குடும்பமா இருந்தாலும்கூட எல்லா நட்சத்திரமும் ஒரே மாதிரி மின்றதில்ல’ என் அருகில் வந்து தோளை வருடிய வண்ணம் அக்கா நின்றுக்கொண்டார்.
அந்தச் சமயத்தில் என் எதிர்த்த வீட்டு ராமன் அங்கிள் திடலருகே நடந்து செல்வது தெரிந்தது. ‘கொஞ்ச பேரு என்னடான்னா பணம் பணம்னு பண வெறி பிடிச்சி அலயறாங்க. பணம் முக்கியந்தான். அதுக்குனு குணத்த மறந்துட்டு அதையெ வெறியா இருந்தா… அதனால கூட மின்றதில்ல’ நானே எனக்குள் முனகிக் கொண்டேன். அக்கா காதில் விழுந்திருக்கும். எட்டி ஜன்னலின் வழி ராமன் அங்கிள் நடந்து போவதைப் பார்த்ததும் விளங்கிக் கொண்டவராய் அமைதியாய் மீண்டும் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
*******
‘அக்கா, நீங்க வீடு மாற போறதா அம்மா சொன்னாங்க. உண்மையாவா?’ அம்மா சற்று முன்பு கூறியவுடனே அக்காவைத் தேடி வந்து விட்டேன்.
‘ஆமாம் ரஞ்சனி.’
‘ஏன்க்கா? நீங்க இங்க இல்லனா எனக்கு ரொம்ப கவலையாயிருக்கும்கா’ அதற்கு மேல் சொல்ல இயலாமல் துக்கம் தொண்டையை நிரப்பிவிட்டிருந்தது. என் கண்கள் கலங்கியதைப் பார்த்த அக்காவின் கண்களும் கலங்கின.
‘எனக்கும் அப்படிதான் இருக்கும் ரஞ்சனி. நான் தெனமும் உனக்கு போன் பண்ணி பேசறேன். இல்லனா எனக்கு நிம்மதியா இருக்காது. ரஞ்சனி, உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ஆனா உங்கிட்ட நான் சொல்ற விஷயம் வேற யாருக்கும் தெரியகூடாது. உங்க வீட்டுல கூட யாருகிட்டயும் சொல்லிறாத. உங்கிட்ட சொல்லாம இருக்க மனசு கேட்கல’
‘சொல்லுங்கக்கா’ அக்கா ஏதோ முக்கியமாய் சொல்ல எண்ணுவதை அவரின் பேசும் தொனி காட்டியது.
‘நாங்க குழந்தைய தத்தெடுத்து வளக்க போறோம். குழந்தை எங்க குழந்தையா வளரணும்னு ஆசைபடறோம். அந்த குழந்தைக்கோ மத்தவங்களுக்கோ நாங்க தத்தெடுத்தது தெரிய கூடாது. அதனாலதான் இடம் மாற வேண்டி இருக்கு. ப்ளிஸ் யாருகிட்டயும் சொல்லிடாத ரஞ்சனி’ கையைப் பிடித்துக் கொண்டார்.
‘இல்லக்கா. சொல்ல மாட்டேன்’
அக்கா எல்லா நட்சத்திரங்களையும் விட பிரகாசமான நட்சத்திரமாய் மின்னினார்.
க.ராஜம்ரஞ்சனி
மலேசியா
ktrajamranjini@yahoo.co.in

Series Navigation

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா