தமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

முனைவர்அ.குணசேகரன்,


முனைவர்அ.குணசேகரன்,
தமிழ்இணைப்பேராசிரியர்,

இயற்கையின் எழிலையும் அதன் பயன்களையும் மிகுதியாகவே பேசும் தமிழிலக்கியங்கள், அவ்வியற்கையில் ஏற்பட்ட சீரழிவுகள், சிக்கல்கள் குறித்தும் பேசியுள்ளன. அவற்றுள்ளும் தற்கால மாந்தவாழ்வியலை மிக விரிவாகவே பேசும் புதின இலக்கியங்கள் தமிழகத்தில் நிலவுகிற, நிலவிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளன. இப்பணி தமிழ்ப்புதின உலகில் 1927 வாக்கிலேயே மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கா.சி. வேங்கடரமணியின் முதல் நாவலான முருகன் ஓர் உழவன் (1928) தமிழில் வெளிவருவதற்கு முன்னர் ஓராண்டு முன்பாகவே ‘Murugan – The Tiller’ எனும் பெயரில் ‘A novel of Indian Rural life’என்ற குறிப்புடன் ஆங்கிலப் பதிப்பாக வெளிவந்தது. இந்நாவல் கிராமச் சமுதாயத்தின் சிறப்புப் பொருந்திய தன்மைகள் பற்றிப் பலபட பதிவு செய்துள்ளது. கூடவே படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் உயர் பதவிகளை நாடி நகரங்களை நோக்கி வெளியேறுவதைப் பெரிதும் கைவிட வேண்டும் என்று கோருவதுடன் அனைவரையும் கிராமச் சமுதாயத்திற்காகப் பாடுபட வேண்டும் என வற்புறுத்தியும் உள்ளது. அவருடைய தேசபக்தன் கந்தன் எனும் புதினத்திலும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குடியிருப்பு, சுற்றுப்புறம் இவற்றில் தூய்மையைப் பேண வலியுறுத்துவதோடு பொது நூலகம், பொது மருத்துவமனை, கல்வி, வேளாண்மை போன்ற கிராம முன்னேற்றத் திட்டங்களை இயல்பாகத் தம் புதினங்களில் இடம்பெறச் செய்தவர் கா.சி. வேங்கடரமணி. அவரைத் தொடர்ந்து வந்த பலரிடம் இத்தகையப் பொது நோக்கிலான படைப்பாக்க முயற்சிகள் அருகியே காணப்பட்டன. பெரிதும் விடுதலைப் போராட்ட பங்கெடுப்புகள் தனிமனித நிலைப்பாடுகள், குடும்பம் சார்ந்த நிகழ்வுகள் முரண்பாடுகள் சிக்கல்கள் போன்றவற்றைச் சித்தரிக்கும் வகையில் புதினங்கள் வெளிவந்த அளவிற்குச் சுற்றுச்சூழல், குறித்த புரிதல்களோடு கூடிய அளவில் இல்லை. இதைக் குறையென்று கூற முடியாதெனினும் அது குறித்த தேவை உணர்தல் இல்லாமல் போயிருந்தமையையே இது காட்டுகிறது. மேலும் சுற்றுச்சூழல் தொடர்பான சிந்தனைகள் அத்துறை சார்ந்தவர்களுக்கே உரியன என்பது போல பார்க்கப்பட்டதும் ஒரு காரணமாகும்.
சுற்றுச்சூழல் தொடர்பான புரிதல் இல்லாமலிருந்தும் அறுபதுகளுக்குப் பிறகான புதினங்களில் இத்தகைய பார்வைகள் இயல்பாகவே இடம்பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்குண்டான காரணங்களாக வேளாண்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், பேரழிவுகள் போன்றவற்றைச் சுட்டலாம். இவை இயல்பாகவே மனிதனைச் சுற்றுச் சூழல் தொடர்பாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய நிலைக்கு உள்ளாக்கின. அப்போக்குகள் சில புதினங்களில் தவிர்க்கவியலாமல் வெளிப்படவும் செய்தன. அந்த வகையில் சுற்றுச் சூழல் குறித்த ஆவண முயற்சிகளைத் தம் படைப்புகளில் மேற்கொண்டவர்களாக, சா. கந்தசாமி, பூமணி, சோ. தருமன், சி.ஆர். இரவீந்திரன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்களாக விளங்குகின்றனர். அவர்களுடைய அத்தகைய ஆக்கங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
சா. கந்தசாமியின் ‘சாயாவனம்’ சுற்றுச் சூழல் சிக்கல்களை முதன்மைப்படுத்தும் புதின வரிசையில் முதன்மையானதாக விளங்குகிறது. இப்புதினம் ஒரு தனிமனிதனின் துணிவையும், அவனுடைய சாதனை படைக்க விழையும் மனநிலையையும் சித்தரித்துள்ளது என்பன போன்ற கருத்தாக்கங்கள் திறனாய்வாளர்களால் முன் வைக்கப்பட்டுள்ளன. ஒரு நோக்கில் சரி என்றாலுங் கூட அதன் முழுமையான கதைப்போக்கை அறியும் போது அது சுற்றுச்சூழல் தொடர்பான சிக்கல்களை வெளிப்படுத்தி நிற்பதை அறிய முடியும்.
பொதுவாக இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு என்பது இயற்கை மாறுபாடுகள் காரணமாக நிகழுகின்ற இயல்பான பேரழிவுகள் மட்டுமின்றி மனிதர்களின் முரண்பட்ட செயல்களால் நிகழுகின்ற பேரழிப்புகளால் நிகழ்ந்த மாற்றங்களைப் பதிவு செய்துள்ள புதின வரிசையில் சாயாவனம் முன்வரிசையில் நிற்கிறது.
வேளாண்துறையில் இயற்கைப் பாதிப்பின் காரணமாக நிகழ்ந்த சீர்குலைவுகள் ஒருபுறமிருக்க, பெருகி வரும் அறிவியல் நிலைப்பட்ட காரணிகளாலும் தொழில் மயக் காரணிகளாலும் பல்வேறு சீர்குலைவுகள் நேர்ந்துள்ளன. தமிழகத்தில் நிலவுடைமைச் சீரழிவை வேறொரு வகையில் தனதாக்கிக் கொண்ட உடைமையாளர்கள் இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு,தமிழகத்தின் நிலவளம் மற்றும் இயற்கை வளங்களின் மீது நவீனத் தொழில் நுட்பத்தின் துணையோடு ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இத்தகைய ஆதிக்கங்களால் விவசாயம் நலிவுற்றதோடு வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நிலைகளிலும் சொல்லொணாப் பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாகப் பழகிவந்த உணவு முறைகளில் கூட, குறிப்பிடத் தகுந்த பாதிப்புகள் நேர்ந்தன. இவற்றைச் சாயாவனம் கதைப்போக்கின் வழி அறிந்துகொள்ள இயலும்.
சிதம்பரம் என்ற இளைஞன் சிங்கப்பூரிலிருந்து தன் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தான். அவனுடைய சொந்த ஊரில் அவனுக்கென்று சொத்தோ உறவோ எதுவும் இல்லாததால் தன் தாய்வழி உறவுடையோர் வாழுகின்ற சாயாவனத்துக்கு வந்து குடியேறி வாழத் தொடங்கினான். தன்னிடம் குவிந்து கிடந்த அந்நிய முதலை எவ்வாறு பயன்படுத்துவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தவன், அப்பகுதியிலுள்ள விளைநிலங்கள் மரங்களடர்ந்த காடுகளைக் கொண்ட நிலங்கள் இவற்றைக் விலைக்கு வாங்கித் தனதாக்கிக் கொண்டு குடியேறிய ஊரில் குறிப்பிடத் தகுந்த ஒருவனாக மாறினான்.
“மனக்குடி வாய்க்காலைத் தாண்டிட்டா அப்புறம்
உங்க தோட்டாந்தான். ஆமாம் தோட்டத்தில்
என்ன போடுறதா தம்பிக்கு உத்தேசம்”
(சாயாவனம் : 39)
என்று அவனுடைய மாமா சிவனாண்டித் தேவர் கேட்க,
“ஆலை வைக்கலாம்னு உத்தேசங்க மாமா”
என்ன தம்பி வேடிக்கைப் பண்ணுறீங்களா? அடே
அப்பா! எம்மாம் காடு, வனம் மாதிரி
மனுசன் அழிக்க முடியுமா? அழிக்க முடியும்னு
நினைப்புத்தான் தோணுமா?
“நான் சீக்கிரத்தில் அழிச்சுடுவங்க மாமா”.
என்று கூறி, சிவனாண்டித் தேவர் எவ்வளவோ வேண்டிக் கொண்ட பின்னரும் விடாப்பிடியாக ஆலையமைக்கும் எண்ணத்தில் உறுதியாக நின்று நிறைவேற்றவும் செய்தான்.
“பூவரசு மரத்தை மூடி மறைத்துக் கொண்டு கோவைக் கொடி தாழப்படர்ந்ததிருந்தது. அநேகமாகப் பூவரசு மரமே தெரியவில்லை. வெள்ளைப் பூக்களுக்கு இடையில் கருஞ்சிவப்பாக அணில் கொய்த பழங்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மேலே இன்னும் போகப் போகப் பலவிதமான கொடிகள் நெட்டிலிங்க மரத்தில் கொடி உச்சி வரையில் சென்றிருந்தது” (ப.43).
என்று ஆசிரியரால் வருணிக்கப்படும் வளமும் அழகும் பொருந்திய அந்த இயற்கையை, மனித சமுதாயத்தின் தவிர்க்க முடியாத அன்றாடத் தேவைகளில் ஒன்றான புளி தரும் மரங்களைத் தன்னுடைய கூர்த்த அறிவுத் திறன்களையும் நுட்பங்களையும் பயன்படுத்தி அழித்தொழித்தான். எவ்வித ஆயுதங்களுமற்ற இயற்கையுடனான போராட்டத்தில் சிதம்பரம் வெற்றிப்பெற்று அவன் விரும்பியவாறு சர்க்கரை ஆலை ஒன்றை நிறுவுகிறான். புதிய வடிவான அத்தொழிலின் வருகை பலரின் மகிழ்ச்சியான கவனத்தைப் பெற்றாலும் நாளடைவில் அதன் தாக்கத்தால் எத்தகைய பேரழிவு நேர்ந்தது என்பதை அவர்கள் உணரத் தொடங்கினர்.
இதனை ஆசிரியர் விரிவாகக் கொண்டு செல்லவில்லை என்றாலும் கதையில் ஒரு சிறு மாந்தராக இடம்பெறும் வயதான மூதாட்டியின், “அதான் எல்லாத்தியும் கருக்கிட்டியே” (சா.,ப.204) என்னும் கூற்றின் வழிக் குறிப்பாகப் பதிவு செய்துள்ளார்.
ஊருக்குள் சர்க்கரை ஆலை வருவதனால் கரும்பு சாகுபடி, ஆலைக்கட்டுமானப் பணி என இவற்றால் தொழில் வாய்ப்புகளை எதிர்நோக்கி, அதனை வரவேற்றாலும் அதன் வருகையால் நேர்ந்த பேரழிப்பு ஈடுசெய்ய முடியாததாகவே இருந்தது. ஒவ்வொன்றாக அழித்தால் கால இழப்பு ஏற்படும் என்று கருதி ஒட்டு மொத்தமாகத் தீயிட்டுக் கொளுத்தி அழித்த முறை, நவீனத் தொழில் மயத்தின் மீது அவன் கொண்ட பேராவல், அவனை ஈவிரக்கமின்றி எந்தளவிற்கு இட்டுச் செல்கிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது.
“இயற்கைத் தாவரங்களின் உயிரினத் தொகுப்பு காடுகள். இவை புவியியலின் உயிர்த்தொகுதியில் 90 விழுக்காடு பரப்பில் 40 விழுக்காடு இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் மொத்தப் பரப்பில் சுமார் 23 விழுக்காடு நிலப்பரப்பில் வனங்கள் காணப்படுகின்றன. இவை அழகான, பொருளாதார மற்றும் உயிரின மதிப்புக் கொண்ட இயற்கை வளங்களாகும். இவை மனித சமுதாயத்திற்குப் பல நேரடிப் பயனையும் சில மறைமுகப் பயனையும் அளிக்கின்றன” (சு.சூ.க., ப.20). என்றெல்லாம் அறிஞர்கள் விழிப்புணர்ச்சிகளை வழங்கி வந்தாலும் சிதம்பரம் போன்ற மாந்தர்களால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இந்தியாவில் 1930 களின் இறுதியில் 33 விழுக்காடாக இருந்த வனங்களின் பரப்பு 23 விழுக்காடாகக் குறைந்துவிட்டது” (சு.சூ.க., ப.21) என்பர். அப்படியான அழிப்புகள் பற்றிய இலக்கியச் சித்தரிப்புகளில் ஒன்றாகத்தான் சிதம்பரத்தால் அழிக்கப்பட்ட சாயாவனப் பகுதியையும் பார்க்க முடிகிறது. கதையென்றாலும் தொடர்ச்சியாக நடந்தேறிய சமூக நடப்பு.
வளர்ச்சி என்பது சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் நிகழவேண்டுமேயன்றி அழிப்பதாக அமையக்கூடாது. அதே போன்று அதிக உற்பத்தி என்பது சுற்றுச் சூழலுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படுத்தி விடுவதாக இருந்துவிடக்கூடாது என்பர். சிதம்பரத்தின் செயல் இதற்கெல்லாம் நேர்மாறானது. அவனுடைய இலக்கும் அவனிடம் மிகுந்திருந்த அந்நிய முதலும் சொந்த மண்ணின் வளங்கள் அழிக்கப்படுகின்றனவே என்ற உணர்வு இற்றுப் போகச் செய்து, அவனை அறியாமலே மக்கள் நலனுக்கெதிராக அவன் செயற்படக் காரணிகளாக அமைந்தன. பல நேரங்களில் கற்றறிந்த, நவீனத் தொழில்நுட்பத் திறன் வாய்ந்தோர்களின் செயல்கள் இயற்கைக்கு எதிராகத் திரும்புவது இப்படித்தான். தமிழகமெங்கும் வளம் பொருந்திய நில வளமும் வன வளமும் அழிக்கப்பட்டு ஆலைகள் நிறுவப்பட்ட விதமும் அதனால் எத்தகைய சீரழிவுகள் நேர்ந்துள்ளன என்பதும் இப்புதின வழி வெளிப்படுகின்றன.
நவீனத் தொழில்நுட்பங்களின் வரவால் மனிதனுக்குச் சவாலாக விளங்கும் இயற்கையில் ஏற்படும் மாறுபாடுகளின் காரணமாக மனித சமுதாயம் எதிர்கொள்ளும் அடுத்தடுத்த பேரழிவுகளையும் தமிழ்ப்புதினப் பரப்பில் காண முடியும். குறிப்பாக, உலகின் இன்றியமையாத்தேவையான மழை பொய்த்துவிட்டாலும், தேவைக்கதிகமாகப் பெய்தாலும் சமூகம் பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது. இந்த இருநிலைகளையும் பூமணியின் ‘நைவேத்தியம்’ என்ற புதினத்திலும் சோ. தருமனின் ‘தூர்வை’ என்ற புதினத்திலும் காணலாம்.
மழை இன்மையால் விவசாயம் பாதிக்கப்பட்டு விளைநிலங்கள் வளங்குன்றிப் போனதன் காரணமாக உணவுப் பஞ்சம் ஏற்பட்டதால், விவசாயக் கூலிகளாக இருப்பவர்களோடு பெரிய நிலவுடைமையாளர்கள் கூட இந்தப் பாதிப்பை எதிர்கொள்ள இயலாமல் துன்புற்ற நிலையைச், சித்திரம்பட்டி என்னும் கிராமத்தைக் களமாகக் கொண்டு பூமணி படைத்துள்ள புதினம்தான் நைவேத்தியம்.
இந்த ஊரில் உள்ள விளைநிலங்கள் யாவும் பெரும் நிலவுடைமையாளர்களாக விளங்கிய பார்ப்பணர்களுக்குச் சொந்ததமானவை. தம் நிலங்களைத் தம்மிடம் பணி செய்து வந்த விவசாயக் கூலிகளின் பொறுப்பில் விட்டு அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு வாழ்நாளைக் கழித்து வந்தனர். தொடர்ச்சியாக இரண்டு மூன்று ஆண்டுகளாக மழை இல்லாதால் விவசாயம் நலிவுற்றது. உழைப்போரின் பாடே சிக்கலுக்குரியதாக இருந்தமையால் முறையாக வந்துசேர வேண்டிய பொறுப்பு நெல் கிடைக்கவில்லை. ஊரே வறுமையில் உழன்றது. ஒரு கட்டத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் பலர் அங்கிருந்து பிழைப்புத் தேடி வெவ்வேறு ஊர்களுக்கும் நகரங்களுக்கும் இடம் பெயர்ந்தனர். பல குடும்பங்கள் உருத்திரிந்து சிதைந்து போயின. ஊர்ப்பற்று மிகுதியாக உடைய சிலர் அங்கேயே வாழ்நாள் வரை இருந்துவிடுவது என்றிருந்தனர். ஆயினும் அவர்களுடைய வயிறு பெரும்பாடாய்ப் படுத்தியது. சாதிப் பெருமைகளையெல்லாம் கூடப் புறந்தள்ளிவிட்டு விவசாயக் கூலிகளிடமே கடன் வாங்கியதும், அவர்கள் வீட்டுத்தோட்டத்தில் வாழைக்காய் முதலியன திருடி மாட்டிக்கொண்டு அவமானப்படும் நிலைக்கு ஆளானதும் சமூகம் கண்டிராதவை. எனவே, ஓர் இயற்கைப் பாதிப்பினால் மனித சமுதாயம் எத்தகையப்பாதிப்புகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நைவேத்தியத்தின் வழி அறியலாம்.
மழைநீரைத் தேக்கி வைக்கும் போதிய விழிப்புணர்வும் வாய்ப்பு வசதியும் இன்மையால், பெருமழையின் காரணமாக இருக்கின்ற கண்மாய்கள் உடைப்பெடுத்து, அதனால் விவசாயம் நலிவுற்று மக்கட் சமுதாயம் இன்னலுற்றதைச் சோ. தருமன் நெல்லை வட்டாரத்தைச் சேர்ந்த உருளைக்குடி என்னும் கிராமத்தைக் களமாகக் கொண்டு தூர்வை என்னும் புதினத்தில் படைத்துள்ளார்.
கண்மாய்க்குள் நிறைந்திருக்கும் தண்ணீரைப் பார்த்து இந்த ஆண்டுபாட்டுக்குக் கவலை இல்லை, நெல் விளைந்துவிடும் என்று மக்கள் நினைத்திருப்பார்கள். திடீரென்று கரை உடைந்து கண்மாய்த் தண்ணீர் முழுவதும் வெளியேறிப் போய்விடும். விவசாயம் படுத்துவிடும் தமிழகத்துக் கிராமங்கள் தோறும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின்மையால் விவசாயம் எவ்வாறு சீர்கெட்டு அழிந்ததோ அதுபோல உருளைக்குடியிலும் நடந்ததை இந்தப்புதினம் பலபட சித்தரித்துக்காட்டுகிறது.
சுற்றுச் சூழல் குறித்த சிந்தனைகள், அணைகளில் நீர்த்தேக்கு முறைகள் பற்றிய அறிவு என அனைத்தும் அறிந்தவர் நிரம்பிய நாடாக இது விளங்கினும் வீணே மழைநீரை வெளியேற விடாமல் பாதுகாப்பதற்குரிய ஆக்கப்பூர்வ முயற்சிகள் இன்மையால் தமிழகம் தொடர்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தப்போக்கை உணர்த்தும் சான்றாகத்தான் உருளைக்குடி கிராமமும் அங்குள்ள மக்கள் நிலையும் விளங்குகின்றன.
நீர்ப்பாதுகாப்பு இன்மையாலும் அதனால் விவசாயத்தில் பெரும் இழப்புகளைச் சந்திப்பதனாலும் அவற்றை நம்பி வாடும் மக்கள் வாழ்தல் பற்றிய நம்பிக்கையற்றுப் போய் சொந்த நாட்டுக்குள்ளேயே வாழ வழியற்ற அகதிகளாக மாறிப்போகக் கூடிய நிலை ஏற்பட்டது. இந்தநிலையை வெளிக்கொணர்ந்திருப்பதன் மூலம் சுற்றுச் சூழல் சீர்கேட்டின் பிடியில் சிக்கித் திணரும் போக்கு அறிய உதவும் சூழலியல் படைப்பாக இதைக் கொள்ளலாம். அம்மக்கள் ஊரைவிட்டு வெளியேறி புதிய, நகர்மயச் சூழலுக்குள் சிக்கித் தவிக்கும் விதமும், தீப்பெட்டித் தொழில் போன்றவற்றில் விவசாயிகளின் வாரிசுகள் ஈடுபடுத்தப்பட்டு அங்கு அவர்கள் படும் துயரங்களும் தொடர்பாதிப்புகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. சுற்றுச் சூழல் புரிதல் இன்மையால் ஏற்படும் தொடர்ச்சியான சமூகப் பாதிப்புகளைப் புரிந்துகொள்ள இப்புதினமும் துணை நிற்கிறது.
தமிழ்ப் புதினங்கள் சுற்றுச் சூழல் பற்றிய புரிதல்களோடு பதிவு செய்யப்படவில்லையெனினும் கிராமிய வாழ்வியலைச் சித்தரிக்கும்போது அவற்றினின்றும் பிரிக்க முடியாதவையாகச் சுற்றுச்சூழல் தொடர்பான பதிவுகள் இடம்பெற்றுவிடுகின்றன. மேலும் புதினங்களில் தீர்வுகளாக எதையும் நேரடியாகக் காணமுடியாது என்றாலும் இப்படியான பதிவுகளைக் கூர்ந்து நோக்கும் போது இத்தகைய சீர்கேடுகளைக் களைவதற்கான தீர்வுகள் தானே தோன்றும். மேலே சுட்டிய புதினங்களும் தீர்வுகளை நோக்கி மக்களைப் பயணப்படுத்தும் பாங்கிலேயே உள்ளன.

Series Navigation

முனைவர்அ.குணசேகரன்,

முனைவர்அ.குணசேகரன்,