விஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்பது

This entry is part of 37 in the series 20080925_Issue

இரா.முருகன்குளித்துவிட்டு தலையைத் துவட்டியபடி தரையில் வந்து உட்கார்ந்தான் வேதையன்.

அண்ணாவுக்கு இலையைப் போட்டு பரசேஷணம் செய்ய ஜலம் எடுத்து வையடா.

துளு பிராமணன் உக்கிராணத்தைப் பார்த்து உரக்கச் சொல்லிவிட்டு உடனடியாகத் திருத்திக்கொண்டான்.

இலையைப் போட்டு சூடா ரெண்டு கரண்டி உப்பிட்டு விளம்பு. ரவா கேசரியும் வரட்டும் கூடவே. அண்ணா, காப்பி ஒரு வாய் எடுக்கச் சொல்லவா? கள்ளுச் சொட்டாட்டம் ரம்யமா இருக்கும் இந்த இடத்திலே.

காப்பி எல்லாம் வேதையனுக்குப் பழக்கமில்லை. ஜான் கிட்டாவய்யனின் சாப்பாட்டுக் கடையில் அது பரபரப்பாக விற்றழிந்தாலும் வீட்டில் காப்பியும் தேத்தண்ணீரும் படியேறாமல் ஜாக்கிரதையாக இருந்தான் கிட்டாவய்யன்.

உள்ளே இருந்து வந்த பரிசாரகன் நீளமாக ஒரு பச்சை வாழை இலையை விரித்து வேதையன் தண்ணீர் தெளிக்கக் காத்திருந்தான். அவன் சும்மா இருக்கவே பரிசாரகனே பக்கத்துக் குவளையில் இருந்து தண்ணீர் எடுத்து அந்த இலையை ஆசிர்வதிக்கிறதுபோல் விசிறினான். ஆவி பறக்க உப்பிட்டுவை அதில் பரிமாறி ஒரு கரண்டி காய்கறிக் குழம்பையும் கூடவே விட்டான் அடுத்து. வெல்லம் கரைத்து சேர்த்து அசட்டுத் திதிப்பாக இருந்த குழம்பு அது.

அவல் கேசரியா ரவா கேசரியா?

அவன் கேட்க ரெண்டுமே வேணாம் என்றான் வேதையன். கன்னடத்துக்காரர்கள் ராத்திரி படுக்கப் போவதே விடிந்த பிறகு ரவா கேசரி சாப்பிடத்தான் என்று தோன்றியது. இப்படி உடம்பில், ரத்தத்தில் தசையில் ஏகப்பட்ட சர்க்கரையை ஏற்றிக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு என்று எல்லா தேசத்து வைத்தியர்களும் ஏகோபித்துச் சொல்கிறார்கள். இவர்கள் யாரும் கேட்பதில்லை.

விடிய ஒரு நாழிகை இருக்க கிண்டி எடுத்து வச்சுட்டேன். இன்னொரு தடவை கிண்டணும் போல் தெரியறது. இலை இலையா வார்த்து கையே நோவெடுக்கறது.

பரிசாரகன் தன் சாமர்த்தியத்தைத் தானே அதிசயித்துக் கொண்டு அப்பால் போக, வேதையனுக்கு நேரே கிழக்கே பார்த்து உட்கார்ந்து உப்பிட்டு சாப்பிட ஆரம்பித்த ஒரு நோஞ்சான் திடீரென்று பெருங்கூச்சலாக ஒச்சை எழுப்பினான். அவன் பூணூல் இல்லாத வேதையனின் வெற்று மாரைப் பார்த்தபடி இருந்தான்.

இதென்ன இந்த மனுஷ்யர் பிராமணர் இல்லை போல இருக்கே. நாலு வர்ணமும் கூடி இருந்து போஜனம் கழிக்கும் ஸ்தலமா இது? ஓய் மனுஷா இந்த நபரை வெளியே நீர் அனுப்பாத பட்சத்தில் ஒரு கவளம் உப்பிட்டு கூட எனக்குத் தொண்டையில் இறங்காது. நான் பட்டினி கிடக்கிற பாவம் உமக்குச் சேரும்.

அந்த சோனியான மனிதன் தன் சாப்பாட்டில் நரகலை யாரோ கலந்த மாதிரி பதற்றத்தோடு இரைந்தான். வேதையனுக்கு இதெல்லாம் அனந்தையிலும் கண்ணூரிலும் பார்த்து அனுபவித்துப் பழகிய சங்கதி. பட்டன்மாரும் நம்பூத்ரிகளும் அவ்வப்போது தாண்டிக் குதிக்கிறது வழக்கம்தான். நாக்கை நொட்டை விட்டுக் கொண்டு ஜான் கிட்டாவய்யன் சாப்பாட்டுக் கடையில் படி ஏறுகிறபோதோ அவனிடம் ரகசியமாக வட்டிக்கு காசு கடன் வாங்கிப் போகும்போதோ இதொண்ணும் அவர்களுக்கு சவுகரியமாக நினைவு வராமல் ஒழிந்துவிடும்.

ஓய், ஓய், என் சஞ்சியைக் கொஞ்சம் எடுத்து வாரும்.

வேதையன் அதிகாரமாக விடுதிக்காரனிடம் சொன்னான். அவன் ஓட்ட ஓட்டமாக வேதையன் காபந்து செய்யக் கொடுத்து வைத்த தோல் சஞ்சியோடு வந்து சேர்ந்தான். அதை வேதையன் பக்கத்தில் பிரியத்தோடு நிலத்தில் வைத்தான். சஞ்சி சரிந்து விழவே சுவரோடு அதைச் சார்த்தி வைத்தான் விடுதிக்காரன். வந்திக்கப்பட வேண்டிய தெய்வரூபம் போல் வெகு மரியாதையாக நடந்தேறிய காரியம் அது.

வேதையன் உப்பிட்டுவை மென்றபடியே சஞ்சியைத் திரும்பத் தரையில் கவிழ்த்து சக்கரமும் ராணி தலைப் பவுன் காசுமாக ஒரு பக்கமாகக் குவித்தான். அதை இடது கையால் எண்ணி வலது பக்கம் நகர்த்தினான். அப்போதும் அவன் வாய் ஆகாரத்தை மென்றபடிதான் இருந்தது.

நான் இதோ இந்த க்ஷணமே இடத்தை ஒழிச்சுப் போறேன் ஐயா. குளிக்க வெள்ளம், இப்ப இந்த பிராதல், ஒரு மணிக்கூர் என் சஞ்சியைப் பார்த்துண்டதுக்கான கூலி, எல்லாம் மொத்தமா எவ்வளவு ஆச்சு, சொல்லும். விட்டெறியக் காசு உண்டு.

ஐயோ, நீர் ஏன் ஸ்வாமி ஸ்தலம் ஒழிக்கணும்?

விடுதிக்காரன் அதிகார பாவனையோடு கூச்சல் போட்ட நோஞ்சான் எதிரில், இலையில் பாதம் பட்டு சவிட்டுகிற நெருக்கத்தில் நின்றான். அவனுடைய முன் குடுமியைப் பற்றி இழுக்கத் தோதாக கையை நீட்டிக்கொண்டு இரைந்தான்.

ஓய் ஸ்வாமின், இஷ்டம் இருந்தால் வாயையும் பின்னாலேயும் பொத்திக் கொண்டு போட்டதைச் சாப்பிட்டு இடத்தை ஒழித்துப் போம். இல்லையோ, எச்சில் கையை உம்முடைய அழுக்கு சோமனில் துடைத்துக் கொண்டு இப்படியே அந்தாண்டை ஓடும். நீர் கொடுக்க வேண்டிய நாலு சல்லியை பொணம் தூக்குறவனுக்கு தருமம் வார்த்ததாக கணக்கு எழுதிக்கறேன். காலை நேரத்திலே வழக்கு வம்பு என்று என் நேரத்தைப் பாழடிக்கவே வந்து சேர்ந்தீரா? வீட்டு ஸ்திரி பிரஷ்டையான கோபத்தை எல்லாம் இங்கே வந்து கொட்டி ஏனய்யா எழவெடுக்கிறீர்? பெரிய மர உலக்கையாகக் கிடைத்தால் சேர்த்துப் பிடித்துக்கொண்டு படுத்து சுகியும், போம்.

அந்த ஒல்லியான கிரகஸ்தன் அரண்டு போய் விடுதிக்காரனைப் பார்த்தான்.

கலிகாலம். கலிகாலம்.

கிரகஸ்தன் இதைச் சொன்னபடிக்கு இலையோடு சாப்பாட்டை சுருட்டிப் பிடித்து எடுத்துக் கொண்டு வெளியே போனான்.

இலையை வச்சுட்டுப் போமய்யா.

விடுதிக்காரன் ஓசையிட ஆரம்பித்து சட்டென்று அதை நிறுத்தி உரக்க சிரித்தான். வேதையனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

அந்த சிரிப்பு மாறாமல் அவன் அலேயோசிசு கோவிலுக்கு வரும்போது கூடவே துளு பிராமணனும் ஒட்டிக் கொண்டான்.

ஓய், இது உம் போன்றவர்கள் படியேறும் அம்பலம் இல்லையே. இங்கே என்னோடு வந்து என்ன செய்யப் போகிறீர்?

துளு பிராமணன் மௌனமாகக் குடுமியை அவிழ்த்து தழைய விட்டான். மந்திரம் முணுமுணுத்து தெய்வத்திடமோ பித்ருக்களிடமோ மன்னிப்பு கேட்டபடி பூணூலை அவிழ்த்து எடுத்தான். அதைச் சுருட்டி இடுப்பில் செருகிக் கொண்டு, வாங்கோ அண்ணா, நானும் இங்கே தொழலாம் இப்போ என்றான்.

பணி தீராத அம்பலமாக இருந்தது அந்த இடம். தச்சு ஆசாரிகள் ஒரு பக்கத்தில் இழைப்புளியை வைத்து இழைத்து இழைத்து கதவும் ஜன்னலும் வைத்துக் கொண்டிருந்தார்கள். தனியாக நாலு சுவர் எழுப்பி நின்ற பின்கட்டில், மங்கலாபுரத்து ஓடு வேய்ந்து சூடு அடங்க தண்ணீரை விசிறித் தெளித்துக் கொண்டு சில பணிக்காரர்கள் கண்ணில் பட்டார்கள். கவனமாக சுண்ணாம்பு குழைத்துக் கொண்டிருந்த இரண்டு பேர் வாயில் அடக்கியிருந்த புகையிலையோ எதுவோ கன்னத்தில் கோடு போட்டு வழிந்திருந்தது. இந்த மாதிரி இடத்தில் எல்லாம் சாதாரணமாகத் தட்டுப்படும் கூச்சலும் குழப்பமும் இல்லாமல் ஒரே நிதானத்தோடு அதே நேரத்தில் ஓசை எழுப்பாமல் வேலை நடந்து கொண்டிருந்தது. சத்தம் எழுப்பி லண்டன் பட்டணத்தில் மகாராணியின் உறக்கத்தைக் கெடுக்காமல் அதி ஜாக்கிரதையாக ஓசைப்படாமல் கோவில் கட்டி முடிக்கச் சொல்லி உத்தரவு வந்து அதை சகலரும் நடப்பாக்குவதாக வேதையனுக்குத் தோன்றியது. ஓடும் பலகையுமாக அடுக்கி வைத்த குவியலுக்கு நடுவே கல்படி ஏறி அவன் உள்ளே நுழைந்தபோது நடுநாயகமாக பெரிய பிரார்த்தனை மண்டபம் தயாராகிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

அண்ணா, மேலே பாருங்கோ.

துளுவன் கூரையை நோக்கிக் கைகாட்டினான். வேதையன் அங்கே நோக்க, அணி அணியாக சித்திரங்கள். மண்டபச் சுவர் முழுக்கவும் கூட அதே மாதிரி எல்லா வர்ணமும் கனிந்து அழகழகான சித்திரங்கள் வரிசையாக எழுந்து நின்றன. வேதாகமத்தில் இருந்து ஒவ்வொரு காட்சியாக எடுத்து சிரத்தையோடு அங்கே தத்ரூபமான படமாக எழுதியிருந்தார்கள். கிறிஸ்து மகரிஷி கன்றுகாலிகள் அடைத்த கொட்டிலில் அவதாரம் செய்வது, மற்ற ரிஷிகள் துருவ நட்சத்திரம் வழிகாட்ட அவரை தரிசிக்கப் போவது, ஆட்டுக் குட்டியைக் கையில் வைத்தபடி அந்த மகரிஷி மந்தையை ஓட்டிப் போவது என்று பலவாறு இருந்த அதில் நட்ட கண்ணை எடுக்க மனசே இல்லை வேதையனுக்கு. இவற்றைப் பார்த்தபடிக்கே இன்று முழுசும் நேரம் கழித்துவிட்டு விடிந்து ஊருக்குப் போய்விடலாம் என்று கூடத் தோன்றியது. கொல்லூருக்குப் போகாவிட்டால் என்ன குடி முழுகி விடும்?

அப்படி நினைக்காதேடா குழந்தே. நீ போயே ஆகணும், காத்திண்டிருக்கான்.

காதில் அந்தப் பெண் குரல் திரும்ப ஒலித்தது. யாரென்று தெரியவில்லை. மனசை வெல்லமும் தேனும் விட்டுக் கரைத்து பிரியத்தோடு இண்டு இடுக்கு விடாமல் நிரம்பி வழியும் வாத்சல்யம். அம்மாவா அது? அம்மா முகத்தை நினைவு படுத்திப் பார்த்துத் தோற்றுப் போனான் வேதையன். அவளை அப்பன் ஒரு சித்திரமாக எழுதி வைக்க ஏற்பாடு செய்யாமல் போய்விட்டானே என்று வருத்தமாக இருந்தது.

ஈசான மூலையில் சாரம் கட்டி கீழே ரெண்டு கறுப்பர்கள் நீலமும் பச்சையுமாக வர்ணப் பொடியைக் குழைத்த தாம்பாளங்களோடு மேலே பார்த்தபடி இருந்தார்கள். சாரத்தின் மேலே கெச்சலாக வெளுத்த கத்தனார் துரை ஒருத்தர் கையில் தூரிகையோடு நின்று கொண்டிருந்தார். அரக்கு நிறத்தில் கழுத்திலிருந்து கால் வரைக்கும் மூடிய வஸ்திரம் தரித்த துரைத்தனத்து புரோகிதர் அவர்.

அவர் ஒரு வினாடி கீழே பார்த்து கறுப்பர்களிடம் ஏதோ சொன்னார். புரிந்து கொண்டதாகத் தலையசைத்து அவர்கள் ரெண்டு பேரும் வேதையனையும் கூட நின்ற துளு பிராமணனையும் மிரட்டுகிற தோரணையில் பார்த்தார்கள்.

சுவரண்டை என்னத்துக்கு சாட்டமா நிற்கறீர்? அது இன்னும் காயலை. உங்க உடம்பு அழுக்கு ஒட்டி அசுத்தமானா, கத்தனாரச்சன் மேலே இருந்தே சாபம் போடுவார். ஜாக்கிரதை. அவிசுவாசியாப் பிறக்க வேண்டி வரும்.

வேதையன் அந்தக் கறுப்பர்களை கொஞ்சம் விநோதமாகப் பார்த்தான். வேதத்தில் ஏறின தீண்டல்காரர்கள். கோட்டயத்திலும் எரணாகுளத்திலும் நம்பூத்ரியும் நாயரும் மட்டும் இல்லை, வேதத்திலே ஏறின மற்ற ஜாதிஜனம் எல்லாம் இவர்களைப் பக்கத்தில் அண்ட விடுவதில்லை.. பாதிரி ஞாயிற்றுக் கிழமை பூசை வைக்கிறபோது கூட இவர்கள் எல்லாம் பின்னால் தரையில் காலை மடக்கி உட்கார வேண்டும். மற்றவர்கள் மரத்தில் செய்து வரிசையாகக் கிடத்திய ஆசனத்தில் இருந்து பிரசங்கம் கேட்பார்கள். திருப்பலி முடிந்து காசு போடாமல் நழுவும் போது கூட மேலே இடிக்காமல் ஜாக்கிரதை காட்டுவார்கள் அவர்கள்.

இங்கே விஷயம் வேறே மாதிரி போலிருக்கிறது. அவர்கள் யாராக வேணுமானாலும் இருக்கட்டும். பாதிரி துரையின் பரிபூரண அனுக்ரஹத்துக்குப் பாத்திரமானவர்கள். வேதையன் விலகி நிற்காவிட்டால் சிறைச்சாலையில் அடைத்துப் போட இங்கிலீஷில் உத்தரவு எழுதி எடுத்துக் கொண்டு ராஜாங்க சிப்பாய்கள் சட்டமாக வந்து நிற்கக் கூடும்.

வெளிச்செண்ணெய் புரட்டிய துளு பிராமணனுடைய பின்னந்தலை சுவரில் படுவதற்கு முன்னால் அவசரமாக அவன் தோளைப் பிடித்து முன்னால் இழுத்தபடி வேதையன் அந்த இடத்திலிருந்து நகர்ந்தான். வெய்யில் உறைக்க ஆரம்பிக்கும் முன்வாசலில் நின்று உள்ளே பார்க்கும் போது கூரையில் வெள்ளைக்கார கத்தனார் இன்னும் வரைந்து கொண்டிருக்கும் சித்திரம் கண்ணில் பட்டது.

கிறிஸ்து நாதர் சிலுவை சுமந்து நிற்கிறார். வலது மார்பில் ஆறாம் திருமுறிவு தெளிவாகத் தெரிய உடல் முழுக்க ரணம். கிறிஸ்துநாதரின் சிரசை படச் சட்டகத்துக்கு வெளியே கற்பனையில் உருவகித்துக் கொள்ள விட்டிருந்தாலும் வேதையனுக்கு அந்த முகம் தெளிவாக மனதில் பிரத்யட்சமானது. கூடவே சிலுவை பாதி நீண்டு சுவரில் இருந்து பக்கவாட்டில் நீளக் கிளம்பி கண்ணில் இடிக்க வருகிற மாதிரி அசலாக எழுதிக் கொண்டிருக்கிறார் இந்தப் புரோகிதர்.

வெள்ளைக்கார தேசம். ஏதோ இத்தளி, அத்தளின்னு பேர் சொல்வாளாமே அங்கே போய் இப்படி படம் எழுதப் படிச்சுட்டு வந்திருக்கார் இந்த ஸ்வாமி. பிரம்மச்சரியத்தோட தேஜஸை அவர் முகத்திலே கண்டீரோ அண்ணா?

துளுவன் கிசுகிசுப்பதாக நினைத்துக் கொண்டூ பேசியது அந்த மண்டபச் சுவரில் கூரையில் மோதி எதிரொலிக்க, துரை சாரத்தின் மேல் இருந்து இன்னொரு தடவை கறுப்பர்களிடம் மெல்லிசான குரலில் ஏதோ சொன்னார்.

ஓய் மனுஷ்யா, சொன்னால் கேட்கவே மாட்டீரா? வேலைக்கு இடைஞ்சலாக இங்கே ஏன் நின்று கஷ்டப் படுத்துகிறீர்? இந்த சத்தத்தில் வீடு வைப்புப் பணிக்காரனும், தச்சனும் கூட பணியெடுக்க முடியாதே. துரை எப்படி எடுத்த புண்ணிய காரியத்தை கிரமமாக முடித்து விட்டுக் கீழே இறங்க முடியும்?

கறுப்பர்களில் ஒருத்தன் துளு பிராமணன் பக்கத்தில் நின்று காதுப் பக்கம் கிசுகிசுவென்று சொன்னான். அவன் குரல் அடக்கமாக இருந்தாலும் கண் என்னமோ வேதையனை எரித்து விடுவது போல் பார்த்தது. வேதையன் தான் இந்த கோளாறுக்கெல்லாம் காரணம் என்று குற்றம் சாட்டுகிற பார்வை அது.

இது ஏதடா வந்த இடத்தில் இப்படி வம்பும் வழக்குமாக? சாப்பிடுகிற இடத்தில் ஒரு தேசல் மனுஷ்யன் சண்டை கிளப்பினால், இங்கே ஒரு கத்தனார் சாரத்தில் இருந்தபடிக்கு வேதையனை கலகக்காரனாக பார்க்கிறார்.

வேதையன் முழுக் கோவிலையும் பார்த்து முடிக்காமல் அவசரமாக வெளியே கிளம்பினான். போகிற போக்கில் அவன் எதேச்சையாக இன்னொரு தடவை உள்ளே பார்க்க, கூரையில் கருப்பு எழுதியிருந்த இடத்தில் ஓரமாக ஒரு சக்கரத்தை வரைந்து கொண்டிருந்தார் பாதிரி. கிறிஸ்துவின் சிலுவைப்பாட்டில் காளைவண்டிச் சக்கரம் எங்கே வந்தது என்று வேதையனுக்கு புரியவில்லை. இத்தாலி தேசத்தில் அவர்கள் பாஷையில் எழுதி அச்சுப்போட்டு பாராயணம் செய்யும் வேதாகமத்தில் இதெல்லாம் வருகிறதோ என்னமோ? மொழி எதுவாக இருந்தால் என்ன, வேதாகமம் ஒன்றுதானே? கிறிஸ்து காலத்தில் காளை வண்டிகள் இருந்திருக்குமா?

வேணாம் அந்த மாதிரியான யோசனைகள். கிறிஸ்துநாதரில் அடங்கினாலும் இன்னொரு ஜன்மம் இவன் அவிசுவாசியாக பிறக்க அந்த வெளுத்த பாதிரி சாபம் கொடுக்கக் கூடியவர். சுவிசேஷத்தில் மறுஜன்மம் விஷயமாகவும் அவர் நூதனமாக எழுதிச் சேர்த்திருக்கலாம். அதற்கு சகல அதிகாரமும் கொடுத்தல்லவோ கப்பலேற்றி இங்கே அனுப்பி சாரத்தில் நிற்க வைத்திருக்கிறார்கள்.

அவன் பார்த்தபடியே நகர, துரை கூரையில் வரைந்த சக்கரம் சுழல ஆரம்பித்தது. கருப்பு வர்ணம் அப்பி உண்டாக்கிய இருட்டின் நடுவில் இருந்து அது மெல்ல கடகடத்து ஆடி அசைந்தபடி வெளியே வர, வண்டி மாடுகள் அடுத்து தட்டுப்பட்டன. கழுத்தில் மணிகள் தளர்வாக அசைய அவை ஊர்ந்து கொண்டிருந்தன. வண்டியை யாரும் ஓட்டுவதாகத் தெரியவில்லை. ஆனாலும் அது முன்னால் சீராக நகர்ந்தபடி இருந்தது. மேலேயிருந்து இருட்டு மெல்ல கீழே இறங்கி, வேதையனைச் சூழ்ந்தது. வண்டிச் சக்கரத்தின் அச்சாணி மட்டும் கடகடக்கிற சத்தம். பிறுபிறுவென்று ஒரு லாந்தர் வெளிச்சம் இருளைக் கூட்டிப் பெருக்கி பூதமாக்கிக் காட்டியது. சமுத்திரக் கரையில் இருந்து புறப்பட்ட மீன்வாடை கொண்ட காற்று சுழன்றடித்தது. வேதையனுக்கு மூச்சு முட்டியது.

பயப்படாதே குழந்தே. இன்னிக்கு ராத்திரி சீக்கிரமா நித்திரை போய் எழுந்து விடிகாலையிலே கொல்லூர் புறப்படு. சத்திரக்காரன் வெண்டைக்காயும் கத்தரிக்காயும் வெல்லம் கரைச்சு விட்டு வதக்கி துவையல் பண்ணி வச்சிருக்கான். சாதம் சரியா வேகலை. கொஞ்சமா சாப்பிடு. ராத்திரி உப்பிட்டு பண்ணித்தரச் சொல்லு. கோதுமை ரவை வயத்தைக் கெடுக்காது. மறக்காம சம்பாரம் குத்திக்கோ. சுடுசாதத்திலே இல்லே. கொஞ்சம் ஆறினதுக்கு அப்புறம். யாத்திரையிலே வர்ற க்ஷீணம் எல்லாம் மாறும்.

அந்தப் பெண்குரல ஆதரவாக ஒலித்தது.

நீங்க யாரு? எங்கே இருக்கீங்க?

வேதையனுக்கு உரக்கக் கத்த வேண்டும் போல் இருந்தது.

நானா? ஒரு சின்ன ஸ்தாலி சொம்பில் ரெண்டு எலும்பும் ஒரு பிடி சாம்பலுமா கிடக்கேன். என் பிள்ளை, நாட்டுப்பொண்ணு, பேத்தி எல்லாரும் என்கூட வரா. கொல்லூர் போயிண்டு இருக்கோம். எப்பப் போய்ச் சேருவோம்னு தெரியலை. போவோமான்னும் புரியலை. நான் பாட்டுக்கு பேசிண்டே இருப்பேன். அதையெல்லாம் லட்சியம் பண்ணாம நீ கிளம்புடா குழந்தே.

அண்ணா, சாப்பிட்டு முடிச்சு கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிக்குங்கோ. சாயந்திரம் ஒரு நடை மங்கலாதேவி க்ஷேத்ரம் போய் வந்து நித்திரை போய்ட்டு விடிகாலையிலே கொல்லூர் கிளம்பிடலாம். நாளைக்கு விஷு ஆச்சே? வேதத்துலே ஏறினாலும் விஷு விட்டுப் போகுமா என்ன?

துளுவன் விசாரித்தான். வெய்யில் வெளியே கண்ணைக் குத்தியது. வேதையன் மனதில் காளைவண்டிச் சக்கரம் நீலமும் சிவப்புமான வர்ணத்தில் சுழன்றபடி இருந்தது.

(தொடரும்)

Series Navigation