பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>

This entry is part of 35 in the series 20090926_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


வறுமையில் பிறந்தவள் நீ
பெரு நாட்டின்
தென்னகத்தில் உன் குடிசை !
கரடு முரடான
குளிர்ந்து போன
பூகம்ப மேடு பள்ளம் அது !
வரப் பிரசாதமாய்
வந்தவை நமக்கு
தடுக்கி விழும் தெய்வங்கள்
மடிந்த பிறகு !
வாழ்க்கைக் கலைப்பாடம்
வடித்தது
களி மண்ணிலே !

++++++++++

கருமைக் களிமண்ணில்
உருவான
சிறு குதிரை நீ !
அருமைக் காதலியே !
கருஞ் சகதி முத்த மிட்ட
களிமண்
நாய்க் குட்டி நீ !
வீதிகள் வழியே பறந்த
வைகறை
மெல்லொளிப் புறா !
உண்டியல் கும்பாவில் கண்ணீர்
மண்டியது உன்
இளமை வறுமையில் !

+++++++++++

சின்னப் பெண்ணே !
நின் வறுமை வாழ்வை
உன் நெஞ்சுக் குள்ளே
ஒளித்து வைத்தாய் !
உன் பாதங்கள்
பாறைகளைக் கூராக்க
உதவும் !
உந்தன் வாய்
உணவும் இனிப்பும்
சுவைக் காதது
எப்போதும் !

++++++++++++

வறுமைத் தென்னகத்தில்
பிறந்தவள் நீ !
என் ஆத்மா வளர்ந்தது
அங்குதான் !
உயர் மேட்டில்
ஆடை துவைப்பாள்
உன் அன்னை
இன்னும்
என் தாயோடு !
ஆதலால்
நானுன்னைத் தேர்ந்தெடுத்தேன்
பேணும்
துணைவியாய் !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 21, 2009)]

Series Navigation