நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 44

This entry is part of 55 in the series 20041104_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்

-திருவள்ளுவர்

கடந்த ஒரு மாதகாலமாகவே புதுச்சேரி பட்டணம் மினுக்கிக் கொண்டிருக்கிறது, விசேடகால செறுக்கேறி, ஒய்யாரத்துடன் பொழுதை நகர்த்துகிறது. பிரெஞ்சு முடியாட்சியின் கீழ்வந்த கிழக்கிந்தியக் கும்பெனியின் குவர்னர் வீட்டுக் கல்யாணத்தினாலேற்பட்ட களை.

கோட்டையும், வெள்ளையர் குடியிருப்பும் திருவிழாக்கோலம் பூண்டு ஒருகிழமை ஆகப்போகிறது. பிரெஞ்சு கிழக்கிந்தியக் கும்பெனிக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளும், ஊழியர்களும், சொல்தாக்களும், இந்தியச் சிப்பாய்களும், தமிழர்களில் பெரியமனிதர்களும் வேறுவேலைகளில்லாமல் நாள் முச்சூடும் கோட்டையைச் சுற்றிவந்தார்கள்.

மேளவாத்தியம், தீவட்டி, வாணவேடிக்கை அமர்க்களத்துடன் ஆள்சுமை போட்டுவித்துக்கொண்டு, புதுச்சேரி பட்டணத்து தமிழரிலே பெரிய மனுஷர்களான கனகராய முதலியார், ஆனந்தரங்கபிள்ளை, கும்பெனிவர்த்தகம் சேஷாசல செட்டியார், குண்டூர் ரவணப்பசெட்டியார், சலத்து வெங்கடாசலசெட்டியார், சவுளிக்கடைகாரர், ஆகியோர் வளவுகளிலிருந்தும், கும்பெனியோடு அன்யோன்யமாகவிருந்த டக்கே சாயபு, சந்தாசாயபு மகன், படே சாயபு ஆகிய துலுக்க ராசாக்களிடமிருந்தும், அவரவர் வசதிக்கேற்பவும், கும்பெனியிடம் எதிர்பார்க்கின்ற சலுகைகளுக்கும் செளகரியங்களுக்கும் ஏற்ப, வரிசைகள் வெகுமானங்களென்ற பெயரிலே: பொன், வெள்ளி ஆபரணங்கள், பட்டு சுருட்டிகள், சர்க்கரை, கற்கண்டு, திராட்ஷைப்பழம், வாதாம்காய், சாதிக்காய், சப்பாத்தி, லவங்கம், பழவகைகள், அரிசி, பருப்பு, ஆடு, கோழி என சகலமானதும் ஊர்கோலமாகக் குவர்னர் வீட்டிற்குப் போனது.*

பகலில் வெகுமான, வரிசை ஊர்கோலங்களையும், இரவில் நான்காம் சாமம்வரை சாவடிசந்திகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாரை தப்பட்டை, தவில் நாயணத்தோடு நடந்த தாசிகள் ஆட்டத்தையும் விழித்திருந்து பார்த்த குடியானவர்கள், நித்திரை மறந்து இருந்தார்கள்.

நேற்றைய தினம் கல்யானம். வீதி முழுக்க நாணற் புற்கள் தெளித்திருந்தார்கள். காலமே கோவிலுக்குச் சென்று மோதிரம் மாற்றிக்கொண்டபோது, பீரங்கியை மிதமில்லாமல் சுட்டார்கள். முன்னிரவுக்கு கம்பவாணங்கள் நட்டு, வானவேடிக்கை நடந்தது. விருந்திற்குப் பிறகு, விடியவிடிய ஆடிக்களைத்தார்கள். இன்றைய தினம் மத்தியானம் மறுபடிம் வெள்ைளைக்காரர் சகலமான பேருக்கும் விருந்து கொடுத்து, முன்னிரவில் நேற்றுபோலவே வாணவேடிக்கை. பின்னிரவுக்கு, ‘பால் ‘(Bal) நடனம் ஏற்பாடாகி இருக்கிறது.

கோட்டைக்கும் குவர்னர் வீட்டிற்குமாக நீட்டிப் போட்டிருந்த பந்தல், குவர்னர் வீட்டெதிரில் விசாலமான கொட்டகைப்பந்தலாய் முடிந்திருக்கிறது. நீட்டியபந்தலுடைய உள்விதானம் தடித்த வெண்ணிற வில்லூர்தி பட்டினால் மூடப்பட்டிருக்கிறது. அதற்கு அழகுசேர்க்கின்றவகையில், அடுக்குத் தீபங்கள், கிளை விளக்குகள். மையத்தில் நடைபாதை அமைத்து, அளவாய்ப் பாரசீகத்து இரத்தினம் கம்பளம் விரித்திருக்கிறது. கொட்டகைப்பந்தல் இன்றைக்கு குவர்னர் துய்ப்ளெக்ஸ் குமாரத்திகளின் திருமணத்தையொட்டி பால் (Bal)நடன அரங்கமாக அவதாரமெடுத்திருக்கிறது. வீட்டையொட்டி இசைவாத்தியங்களுக்காக ஒரு மேடை. விருந்தினர்களின் தாகவிடாயைத் தவிர்ப்பதற்காக சகவிதமான சீமைச் சாராயங்களும் நொறுக்குத் தீனியுமாக மறைவாய் ஒருபகுதி. கொட்டகையின் முகப்பில் மஞ்சள் வண்ணச் சீலைகள் காற்றில் அலைஅலையாயசைந்து ஜாலவித்தைகள் செய்ய, அவைகளுக்கு அழகூட்ட வெள்ளிவண்ணப்பூக்கள். இசைவாத்தியங்களுக்கான மேடையும் அவ்வாறே அலங்கரிக்கபட்டிருக்கிறது. கொட்டகையின் ஓரத்தடுப்புகளும், தட்டிகளுங்கூட அலங்காரத்திலிருந்து தப்பவில்லை. கொட்டகையின் உள்விதானத்தினை பிரான்சு நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த பின்னல் வேலைப்பாடுகள் கொண்ட மெல்லிய மஸ்லின் துணிகளையும், இந்துதேசத்து ஊதாவண்ணப் பட்டினையும் கொண்டு சிங்காரித்திருந்தார்கள். இதுபோதாதென்று சோபைகூட்ட தமிழர்கள் வழக்கபடி தோரணங்கள், மாவிலைகள். பந்தலையொட்டி கூண்டுகட்டித் தொங்கவிடப்பட்ட விளக்குகளும், உட்பகுதியிலிருந்த எண்ணற்ற மெழுகுவர்த்திகளும் உமிழுகின்ற ஒளி. இந்து தேசத்துச் சந்தணமும், ஜவ்வாதும், சாராய நெடியுடன் கலந்து, பழக்கமற்ற நாசிகளைச் சிரமப்படுத்துகின்றன.

கிலாவ்சனும் (Clavecin)** வயலினும் இணைந்து எழுப்பிய இசை பந்தலெங்கும் நிரம்பி வழிகிறது. அவ்விசைக்கேற்ப, ஆணும்பெண்ணுமாக, துரைத்தனக்காரர்களும் துரைசானியார்களும் அணைத்தவண்னம் கால்களைக் முன்னும் பின்னுமாக அசைத்து தளுக்காக நடனமிடுகிறார்கள். பறங்கியர் நடனக்கும்பலில் பிரெஞ்சு கிழக்கிந்திய கும்பெனியின் திரெக்தர்கள், ஆலோசகர்கள், வியாரிகள், குமாஸ்தாக்கள், லியோத்தனான், சூ லியோத்தனான் அவர்களது பெண்ஜாதிகள் எனவிருந்தக்கூட்டத்தில், பெர்னார் குளோதானும் இருந்தான். விருந்துக்கென்ற விசேட ஆடைகள் பட்டு சாட்டான், வெல்வெட்டென்று தயாரிக்கபட்டிருந்தன. பறங்கிப் பெண்கள் இன்றைக்கு அவற்றால் கூடுதலாக ஜொலிக்கிறார்கள். விலங்குகள், பறவைகள், மனிதர்களின் தோற்றமுள்ள பொய்முகங்கள், பால் நடனத்திற்கெனப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டவை அவர்கள் அடையாளத்தை மறைத்திருந்தது. இப்பொய்த்தோற்றம், எல்லைமீறுகின்ற தைரியத்தினை அவர்களுக்குக் கொடுத்திருந்தது. சிலர் பால்நடனத்திலுள்ள உண்மையான விருப்பத்தின்பேரில் ஆட, வேறுசிலர் பால்நடனத்தை காரணமாகக் கொண்டு, கண்ணிற்படுகின்ற ஆணிடமோ பெண்ணிடமோ தாபத்தை ஓர் அளவுடன் கையாளுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் கணவர்மாரையோ, மனைவிமாரையோ சுலபமாய் ஏமாற்றிவிட்டு மறைவிடங்களைத்தேடி ஒதுங்குகின்றார்கள்

பெர்னார் குளோதன் ஆடிமுடித்தக் களைப்பில், ஓர் இருக்கைத் தேடி அமர்ந்தான். நேற்றய இரவும் விருந்து நடனமென்று கலந்துகொள்ளவே உடம்புக்கு முடியாமல் இருக்கிறான். காலையிலிருந்து மறுபடியும் அந்தக் குரல் கேட்கிறது. காலையில் உறக்கத்தினின்று விழிக்கும்போதே மண்டைக்குள் பார்த்திபேந்திரன்.பார்த்திபேந்திரன் எனக் கூவி அழைக்க ஆரம்பித்தாயிற்று. சுற்றிச்சுற்றி வருகிறது, தொட்டு விளையாடுகிறது. ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறது, திடாரென்று காணாமற் போகிறது. இவன் தொலைந்ததென்று நிம்மதியாய் சாய்வு நாற்காலியில் அமர, திடாரென்று இவனைப்பிடித்து உலுக்குகிறது. இந்த விளையாட்டிற்கு மத்தியிலும் உறங்கி இருக்கிறான். இவனது ஊழியர்கள் எல்லோருக்கும் கடந்த இருவாரங்களாக ஓய்வு. துபாஷ் பலராம்பிள்ளை திருவண்ணாமலைவரை இவனிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு போயிருக்கிறார். மாறன் உடன்பிறந்தவளுக்குக்கான கல்யாண முஸ்தீபுகளில் இருக்கிறான்.

இன்றைய தின இரவு நடனத்திற்கு வராமல் இருந்துவிடலாமா என்று கூட நினைத்தான். நேற்று பின்னிரவு களைத்து புறப்பட்டபோது மதாம் குவர்னர், இரவு விருந்திலும் நடனத்திலும் அவசியம் கலந்துகொள்ளவேணுமென வற்புறுத்தியிருந்தாள். ஆச்சரியமான பெண்மணி. ஒரு மாதத்திற்கு முன்பு குவர்னர் மதாமைச் சந்தித்திருந்தது நினைவுக்கு வந்தது. குவர்னர் அழைத்திருந்ததாகச் சிப்பாயொருவன் இவன்வீட்டிற்கு வந்து சொல்ல, வந்திருந்தான். அழைத்திருந்தது என்னவோ மதாம் ழான்ன்***. இவனை உள்ளே வரச்சொல்லி ஷேம இலாபங்கைளை விசாரித்தவள், கிழக்கிந்திய கும்பெனியில் பெர்னார்குளோதனுக்கு நல்ல எதிர்காலமிருப்பதாகவும், அதனை ஒரு இந்து தேசத்துப் பெண்ணை கல்யானம் பண்ணிக்கொண்டு கெடுத்துக்கொள்ளவேணாமே என்கிறாள். சம்மதிசொன்னால், தன்னுடைய இளையகுமாரத்தியை இவனுக்குக் கல்யாணம் கட்டுகிறேன் என்றவள், அவ்வாறில்லையெனில், எவளாவது ஒரு கிறித்துவ மங்கைகைக்கு மோதிரம் அணிவிக்கவேண்டுமேயன்றி ஒரு காப்ரி பெண்ணுக்கு அல்ல, என்பதாக அவள் கூறிமுடித்தபோது அதிலிருப்பது அக்கறையா, எச்சரிக்கையா என்பதை இவனால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை.

பின்முதுகில் தோளருகே வலி கண்டது. இந்தக்கூட்டத்தில் கப்பித்தேன் தெலாமரும், அவனது இந்திய மனைவியும் இருப்பார்களா ? என யோசிக்க ஆரம்பித்தான். தோளிலிருந்த வலி மெல்ல தலைக்குள் பயணிப்பதைப் போன்று உணருகிறான். எதிரே அமர்ந்திருந்த இருவர் சாராயமும் நொறுக்குத் தீனியுமாக இருக்கின்றார்கள். அதிலிருந்த ஒருவன் தூரத்தில் நடனாமடிய ஒரு ஜோடியைக் குறிவைத்துப் பேசினான்.

‘அவள் யாரென்று தெரிகிறதா ? ‘

‘ஆடைக்குள்ள டாம்பீகத்தையும், கவர்ச்சியையும் பார்க்கின்றபோது அவள் நிச்சயம் மதாம் துய்ப்ளெக்ஸாகவோ, அல்லது குவர்னருக்கு இரண்டாமிடத்திலிருக்கும் பிரபு லெகு என்பவரின் பாரியாளாக இருக்கவேணும் ‘

‘சரியாகவேச் சொல்லுகிறாய். அப்பெண்மணி குவர்னரின் பாரியாள், மதாம் ழான்ன். அவளை அணைத்துக்கொண்டு ஆடுபவன் பிரபு லெகு. ‘

‘அதிலென்ன தவறு ? ‘

‘அந்தப் பெண்மணியை அறிந்தவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள். ‘

‘ஏன் ? ‘

‘இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே துய்ப்ளெக்ஸ், கும்பெனியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு முதன் முறையாகப் புதுச்சேரிக்கு வந்திருந்த நேரம், ஒருமுறை, பூர்போன் தீவுவரைப் போகவேண்டியிருந்தது. அங்கே பழைய குவர்னரான துலிவியே (Dulivier)வைச் சந்தித்திருக்கிறான். வாலிபன் துய்ப்ளெக்ஸின் கெட்டிக்காரத்தனத்தின்மீது பிரியப்பட்டு, அவர் 400 பகோடாக்களைக்(Pagodes)**** கொடுத்திருக்கிறார். திரும்பி வந்த துப்ளெக்ஸ், அவரைவிட வயது மூத்த, ழாக் வேன்சான் என்பவரோடு சினேகிதமானார். இருவரும் சேர்ந்து வியாபாரம்பண்ணுவதென முடிவெடுத்தார்கள். துலிவியே கொடுத்த பணத்தில் 300 பகோடாக்களை இவரது பங்காக முதலீடுசெய்து வங்காளத்திலிருந்து பட்டும், பிரெஞ்சுத் தீவிலும், பூர்போன் தீவிலும் நிலபுலங்களும் வாங்குவதென இருவரும் தீர்மானித்தார்கள் ‘ #

‘என்னப்பா நீ மதாம் துய்ப்ளெக்ஸ் கதையைச் சொல்வாயென்று நினைத்தால், மிஸியே துய்ப்ளெக்ஸ் குறித்து பேசுகிறாய் ? ‘

‘அவசரப்படாதே, இப்படி நான் சுற்றிவளைத்து மூக்கைத் தொடுவதற்குக் காரணமிருக்கிறது ‘

‘சரி சரி மேலே சொல்லு.. ‘

‘இந்த வியாபாரக் கூட்டணியில், ழாக் வேன்சான் விலகிக்கொள்ள, அவரது இடத்தில் அப்ஸரஸ் மாதிரியாகவிருந்த அவரது இளம்மனைவி சேர்ந்துகொள்ளுகிறாள். தற்செயலாக அந்தக்கூட்டணியில், அந்த சமயம் ‘லெ பொந்திஷெரி ‘ கப்பலின் கப்பித்தேனாகவிருந்த லாபூர்தொனே சேர்ந்துகொள்ள, பணத்திலும் பதவியிலும் மோகங்கொண்டிருந்த ஒரு மூவர் கூட்டணியாக அவதாரமெடுத்தது. எல்லா தில்லுமுல்லுகளும் செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். அப்போதே துய்ப்ளெக்ஸ் மீது, கும்பெனி செலவிலே வருமானத்தைப் பெருக்கிக் கொண்டதாகக், குமாஸ்தா ஒருவன் குற்றம்சாட்டினான். பாரீசிலிருந்த கும்பெனி தலைமை அலுவலகம், இந்தக் குற்றச் சாட்டில் உண்மையில்லையென்று நிராகரித்துவிட்டது. 1731ம் ஆண்டில் சந்திரநாகூர் குவர்னராகத் துய்ப்ளெக்ஸ் நியமனம் செய்யப்பட, புதுச்சேரியில் சம்பாதித்து வைத்த சொத்துக்களையும் நண்பர்கைளையும், குறிப்பா ழாக் வேன்சானின் இளம் மனைவியையும் பிரிவதற்கு, அவர் நிறையவே மனவேதனைப்பட்டார்.#

‘பிறகென்ன நடந்தது.. ‘

‘அவர்களுக்கிடையேயான பிரிவு இரண்டு ஆண்டுகளே நீடித்ததென்று சொல்லவேணும். துய்ப்ளெக்ஸ்க்கும் இப்படியானவொரு புத்திசாலிப் பெண்மணியின் உறவைத் துண்டித்துக்கொள்ள விருப்பமில்லை. இங்கே இவளும் துய்ப்ளெக்ஸ் மீதான பிரீதியில், தன்வயதுபோன புருஷனை இழுத்துக்கொண்டு, சந்திர நாகூர்ப் போய்ச் சேர்ந்தாள். என்ன நடந்ததோ, ஒருநாள் திடாரென்று புருஷன்காரன் இறந்துபோனான். அதன் பிறகு இரண்டாண்டுகள் காத்திருந்து அந்த இளம்பெண்ணும், துய்ப்ளெக்ஸும் திருமணம் செய்துகொண்டார்கள். அந்தச் சாகஸக்காரி வேறு யாருமல்ல, சாட்ஷாத் ழான்ன் தான் அவள். போனவருடம் ஜனவரி மாதம் பிரெஞ்சு கிழக்கிந்திய கும்பெனியின் பிரதான தளபதியாகவும், புதுச்சேரி நிர்வாகசபையின் அதிபதியாகவும், நியமனம்பெற்ற துய்ப்ளெக்ஸ் சந்திரநாகூரிலிருந்து கப்பலில் வந்திறங்கியபோது, இவர்கள் இருவரையும், புதுச்சேரி கும்பெனியே அதிசயத்துடன் பார்த்தது.# பதினோறு பிள்ளைகள் பெற்றவள்போலவா அவள் உடம்பிருந்தது அடடா…

‘மெதுவாய்ப் பேசு.. எதிரே இருப்பவன் கவனம் நம்மிடம் உள்ளதுபோல தெரிகிறது.. ‘

கூட்டாளியின் எச்சரிக்கை, அவனைப் பயமுறுத்தி இருக்கவேண்டும். குரலைத் தாழ்த்திப் பேசுகிறான்.

‘இவர்கள் புதுச்சேரி பட்டணம் வந்த நாளிலிருந்து வந்து குவியும் வெகுமானங்களைப் பார்த்தீரா ? கும்பெனிக்கு வருமானம் உண்டோ இல்லையோ, இவர்களது வருமானத்திற்காக எல்லா உபாயங்கைளையும் இந்தப் பெண்மணி கையாளுகிறாள் ரங்கப்பிள்ளையின் வார்த்தை ஜாலங்கள், இவளிடமாத்திரம் எடுபடவில்லை என்பதை அறிவீரா. அந்தரங்கமாக இவளொரு அரசாங்கமல்லவோ நடத்துகிறாள். அதற்கு மிஸியே லெகு, பிரான்சுவா ரெமி, பெத்ரோ கனகராய முதலியென ஒரு கூட்டமே அவள் பக்கம் இருக்கிறது. ‘

‘இப்போதென்ன சொல்ல வருகிறீர் ?

‘நாளைக்கே குவர்னருக்கு இரண்டாமிடத்திலிருக்கும் மிஸியே லெகு முதலிடத்திற்கு வர சாத்தியமென்றால், இந்தப்பெண்மணி குவர்னர் துய்ப்ெளெக்ஸை உதறிவிட்டுப் போனாலும் ஆச்சரியமில்லை என்கிறேன். ‘

எதிரே இருந்த நபர்கள் பேசிமுடிக்கவும், பெர்னார் குளோதனின் தலைவலி தன்வேலையைக் காட்டத் தொடங்கியது. தன் குடியிருப்பிற்குத் திரும்பலாமென்று நினைத்தான்.

‘பார்த்திபேந்திரா.. !

மறுபடியும் அக்குரல், பெண்குரல். குவர்னர் பாரியாள் ழானின் குரலைப் போன்று இருக்கிறது. மற்றொரு சமயம் தெய்வானையின் குரலின் சாயல். இரண்டுமே கற்பனையாகவிருக்கலாம். சிறிது நாழிகைக்கு முன்னாலே, இருமனிதர்களின் உரையாடலை, கேட்க நேர்ந்ததாலே மதாம் ழானென்றும், எந்த நேரமும் தெய்வானையின் நினைப்பிலிருப்பதாலே தெய்வானையின் குரலென்றும் வீணாகக் கற்பனைசெய்துகொள்ளுகின்றேனோ. நான்கு திசைகளிலும் திரும்பிப்பார்க்கிறான். வந்திருந்த விருந்தினர்கள், தங்கள்பாட்டுக்கு இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இசைத்துக்கொண்டிருந்த கிளாவ்சனும், வயலினும் சங்கீதத்தை மிக உச்சத்திற்கு அழைத்துச் சென்று அமைதியாகின்றன. பிராவோ! உட்கர்ந்திருந்தவர்களும், மேடைக்குப் பின்னெ சாராயத்தில் மூழ்கி இருந்தவர்களும் கைக்கொட்டி மெச்சுகிறார்கள். இசைக் கலைஞர்கள் தங்கள் வாத்தியக்கருவிகளை அருகே வைத்துவட்டு, அவ்வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்கின்ற வகையில் மார்பிற்குக் குறுக்காக முழங்கையினை மடித்து மூன்றுமுறை குனிந்து நிமிருகின்றார்கள். சிலர் மதுப்பரிமாறுகின்ற இடம் நோக்கி ஒதுங்குகின்றார்கள். சிலர் உரத்து சிரிக்கின்றார்கள். சற்று முன்னாலே, இவனுக்கெதிரே இருந்த மேசைகளில் உட்கார்ந்திருந்த இரண்டுபேரையும் காணவில்லை.

பார்த்திபேந்திரா..!

இம்முறை குரல் இவனருகிலேயே கேட்கிறது. இவனது தலைக்குள்ளே இருந்து கொண்டு குடைச்சல் கொடுக்கிறது. காதில் நீர் வடிவதுபோன்ற பிரமை. விரல் விட்டுக் காதினைக் குடைந்துகொள்கிறான். அதற்கெனவே காத்திருந்ததுபோல மீண்டும் மீண்டும் பார்த்திபேந்திரா பார்த்திபேந்திராவென எச்சிலொழுக உச்சரிக்கப்பட, தனது காதினை மடித்துத் தேய்த்துக்கொண்டு எழுந்து நடந்தவன், மீண்டும் அமருகிறான்.

இந்து தேசத்துப் பெண்களுக்கேயுரிய வளைக்கரங்களிரண்டு அவன் கழுத்தைப் பிணைந்துகொண்டு, கூந்தல் மணத்தினை இவன் நாசியில் அலையலையாய் இறக்கிய வண்ணம் மீண்டும் மீண்டும் ‘பார்த்திபேந்திரா!.. பார்த்திபேந்திரா! ‘ என்கிறது.

திடுக்குற்றுத் திரும்புகிறான். குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்ற சிவந்த, ஈர அதரங்கள். ரோஜா மொக்காய் நாசி. அதனிருபுறமும் சிறிய மல்லிகை மொட்டாய் மூக்குத்தி, நெற்றியின் மத்தியில் பவளச் சிவப்பில் ஒருபொட்டு. இமைக்க மறந்த மையிட்ட சோகக் கண்கள், கண்ணீர்த் துளிகள் மையிற் கலந்து யோசித்து சிவந்திருந்தக் கன்னக் கதுப்பில் இறங்க அதனைத் துடைக்க மனமின்றி.. அவள்…தெய்வானை.

குரலுக்குரியவள் ஆரென்று மிகச் சுலபமாய் புரிந்துபோகிறது. ஆர்வத்தால், தெய்வானை! நீயா எப்படி ? எப்படி.. எப்படி.. இங்கே ? எனக் கேட்டு நிமிர்ந்தவனை, எழுப்பினாள். எழுந்தான், நடந்தாள். நடந்தான்.

வீதியை அடைத்துக்கொண்டு, இவனையொத்த வயதுடையவன். பெண்மை முகம். வேட்டியைப் பின்புறம் வாங்கி, இடுப்பிற் சொருகி இருந்தான். தலையை முன்புறம் சிரைத்து, பின்புறமிருந்த அடர்த்தியான முடியைக் குடுமியாக்கியிருந்தான். நெற்றியிலும், ரோமமற்றுத் தரிசாய்க் கிடந்த மேலுடல் முழுவதிலும் விபூதிப் பூச்சு. அர்ச்சகன் தோற்றம். குளவிக் கண்கள். கக்கிய பார்வையில் விஷத்தின் நெடி.

‘பார்த்திபேந்திரா வேணாமடா. என்னைச் சங்கடபடுத்துவதில் உனக்கென்னடா சந்தோஷம் ‘, இவனைத் தடுத்து நிறுத்திய அர்ச்சகனிடமிருந்து கெஞ்சலாய் வெளிப்பட்ட குரல் சில நாழிகைகளில் தடிக்கிறது. பின்னர் குதிரை கனைப்பதுபோலச் சிரிக்கிறது. அர்ச்சகனிடமிருந்து உயிர்பிழைக்கவேணும் என்பதுபோலத் தெய்வானை வேகமாய் ஓடுகிறாள். ஓடியவள் மறைந்துபோகிறாள். அவளைத் தொடர்ந்து ஓடிக் களைத்து போகிறான்.

தூரத்திற் கோபுரம் தெரிகிறது.. ஓடுகிறான், அகன்றவீதியில் ஒதுங்கிய அந்த வீடு. பெரிய வீடு. விழல் வேய்ந்த கூரை, மண்சுவர். சுவரெங்கும் வெண்புள்ளிகள் அவற்றைச் சுற்றி எழுதப்பட்ட கோட்டோவியங்கள். இடை இடையே கோழியைப்போல, மயிலைப்போலச் சித்திரங்கள். மத்தியில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தடித்த ஒற்றைக் கதவு. அக்கதவு குறைந்த அளவே திறந்திருக்க அதனை அடைத்துக் கொண்டு மீண்டும்… தெய்வானை

ஒற்றைகதவினை வேகமாய்த் தள்ளிகொண்டு உள்ளே ஓடுகிறான்.

வீட்டினுள்ளே மயன் சிரத்தையுடன் உருவாக்கியதுபோன்றொருக் கட்டில், பஞ்சணை, அதில்சாய்ந்தவண்ணம் தேவதையொத்த பெண்:சுற்றிலும் வண்ணவண்ண உடையில் இளம்பெண்கள் வாத்தியங்களை இசைக்கிறார்கள். மஞ்சத்தில் சாய்ந்திருந்த பெண்ணின் வனப்பில் லயித்து, மெல்ல அவளை நெருங்கிய மாத்திரத்தில், வாத்தியமிசைத்த பெண்கள் மறைந்துபோகிறார்கள். இப்போது, அவனும் அவளும். அவள் இடையிருந்த பட்டுப்பாவாடையின் நாடா இவன் விரல்பட்டதும், தெறித்து அவிழ்கிறது. அவளது உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்க, காத்திருந்த மார்புக் கச்சை தளர்ந்து நழுவுகிறது. இடையில் இவை எதற்கென்று நினைத்தோ என்னவொ, மார்பிலிருந்த முத்தாரமும், கழுத்து அட்டிகையும், கவனமாய் அவளால் கழட்டப்படுகிறது. கழட்டியகைகள் இவனைச் சுட்டுகின்றன. இவனுக்குப் புரிந்ததன் அடையாளமாக, இவன் தன்னுடைய காற்சராயையும், மேற் சட்டையையும் அவசரமாய்க் களைந்தெறிகிறான். பின்னர் மன்மதக்கலையில் தேர்ந்தவன்போலே நிதானத்துடன் அவளைத் தழுவுகிறான். அத்தழுவலுக்கு ஒத்திசைந்து இருவரிடத்தும், உடற் சீவன்கள் உயிர்ப்புடன் ஓட்டமெடுக்கின்றன. அவள் இடை திடாரென எழுந்து துவள்கிறது. இவன் சோர்ந்து விழுகிறான்.

மாறன், பெர்னார்குளோதனை அவசரமாக பார்க்கவேணுமென அன்றிரவு நான்காம் சாமத்தின்போது கோட்டைக்குள் நுழைந்தபோது, நடனமாடிவிட்டு, உடைமாற்றுவதற்காகத் தனது அறைக்குத் திரும்பியிருந்த மதாம் ழான்னிடம், எவனோ ஒரு பறங்கியன் தவறாக நடந்துகொள்ள முயன்றானாம், அவனை சொல்தாக்கள் கைதுபண்ணியிருக்கிறார்கள் என தமிழர் இருவர் பேசிக்கொண்டு செல்வதைக் கேட்கிறான். விழாப்பந்தலின் வெளியே பறங்கியர் கூட்டமாய் நின்றிருந்தனர். கும்பெனி சொல்தாக்களோடு பிரான்சுவா ரெமி, மமதையாய்ச் சிரித்துக்கொண்டு நிற்கிறான். கூட்டத்தில் தன்னை ஒளித்துக்கொண்டு, மாறன் எட்டிப்பார்க்க, அங்கே பெர்னார்குளோதன் பேச்சுமூச்சில்லாமல் கிடக்கிறான்.

/தொடரும்/

* ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

** Clavecin – பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை பியானோவின் இடத்தைப் பிடித்திருந்த இசை பெட்டி.

*** Jean(M), Jeanne(F)

****அக்கால இந்தியாவில் புழக்கத்திலிருந்த தங்க நாணயம்

# Dupleix: Une ambitieuse politique – Rose vincent

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation