நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16

This entry is part of 52 in the series 20040422_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘What do you know about your past, and how far back is your origin ? What do you know about where you came from, where have you been, and where are you heading ? ‘

– Teaching 232:12 The Book of The True Life (The Third Testament)

இருபதாம் நூற்றாண்டு….

—-

நண்பனே!…ஆணவமலம் நிறைந்தோ அல்லது முதிர்ந்தோ இருக்கும் ஓர் உயிர் ஒருபோதும் முக்தி பெறாது. அம்முனைப்பு நீங்கவேண்டும், முற்றிலும் ஒடுங்கவேண்டும். ஆணவமலம் நிலை நிற்கும் காலம்வரை அது பிறந்து இறந்து, பிறந்து இறந்து, பேதைமையுற்றுத் தவிக்கும். ஆதலால் அம்முனைப்பினை அழித்தாலன்றி பிணி, மூப்பு சாக்காடொழிவது நடவாது. ஆணவமலத்தைப் போக்கும் ஆற்றலுடையவன் இறைவன். அவனொருவனே உன் ஸ்தூல உடம்பைப் போக்கி ஆணவமலம் நீங்கின ஆத்மாவைத் தன்னோடு சேர்த்துகொள்பவன்.

—-

வீட்டெதிரே, சாக்கடை சுத்தம் செய்து குவித்து வைத்திருந்த மண், நீர் வடிந்து உலர்ந்து கிடந்தது. அதனையொட்டி இறால் கோதுகள் பரவிக் கிடக்க, அவற்றின்மீது ஈமொய்த்துக் கிடந்தது. இரண்டடி தள்ளி, அடுப்பு வைத்து மீன் துண்டுகளை மாவில் நனைத்து, வாணலியிற் கொதிக்கின்ற எண்ணையிற் போட்டுக் காத்திருந்து, சல்லிக் கரண்டியால் அவற்றையெடுத்து எண்ணை வடியட்டுமென மீண்டும் காத்திருந்து பக்கத்திலிருந்த பெரிய அலுமினியத் தட்டிலிடும் தொப்பை ஆசாமி. வழியை அடைத்துக் கொண்டு, பிரெஞ்சுக் கொடியுடன் கண்ட அரதப் பழசான ராலே சைக்கிள். நண்பர்கள் இருவரும் தயங்கி நின்றார்கள்

‘என்னோட சைக்கிள்தான். நவுத்தி வச்சிட்டு உள்ள வாங்க ‘ – கிழவர்.

வேலுவும், பெர்னாரும் அடைத்துக்கொண்டு நின்ற, கொசு மொய்க்கும் சாக்கடை நீரைக் கவனமாய்க் கடந்து வாசற்படிக்கு வந்தார்கள்.

‘பெரியவரே.. எங்கே இன்னொருமுறை சொல்லுங்க ‘ – வேலு.

‘எதைச் சொல்லணும் ?.. நீங்க சித்தமுன்ன, வேம்புலி நாய்க்கனைத் தேடி வந்ததாச் சொன்னீங்க. நானதற்கு, நாந்தான் நீங்க தேடிவந்த வேம்புலி நாய்க்கன்னு சொன்னேன். ‘- கிணற்றுக்குள் இருந்து பேசுவதான குரலில், வேம்புலி நாய்க்கர்.

‘இவரு நம்ம சினேகிதர். பிரான்சுல இருந்து நம்ம ஊருக்கு கிட்டத்துல வந்தவர். நம்ம நாட்டு இலக்கியங்கள்ல ஆர்வம். ஆனா உங்களைத் தேடி வந்ததற்கு வேறுகாரணங்கள் இருக்கு ‘ வேலு.

வேலு சொன்னதைக் கிழவர், தலையை இடதுபுறம் முன்னோக்கித் திருப்பி, வலது காதில் பின்புறம் உள்ளங்கையைக் குவித்து முற்றிலுமாக வாங்கிக் கொண்டார்.

ஏகத்துக்கு இருமினார். இருமி வாயிற் கொண்டுவந்த சளியை பக்கத்தில் மணலிட்டிருந்த டால்டா டிண்ணில் துப்பிவிட்டு நிமிர்ந்தார். எதையோ சொல்ல வேண்டுமென்று நினைத்து வாயைத் திறந்தவர்.. மீண்டும் இருமினார்.. இருமினார்.. கண்கள் செருகிக்கொள்ள, மார்புக்கூடு மேலும் கீழும் இயங்க, சுவாசத்தில் சீழ்க்கைச் சத்தம் சேர்ந்துகொள்கிறது. இடது கரத்தால், பக்கத்திற் கிடந்த பாட்டிலைத் திறந்து, எஞ்சியிருந்த சாராயத்தைக் குடித்து சகஜ நிலைக்குத் திரும்புகிறார். வலது கரத்தை அலையவிட்டுத் தள்ளிக் கிடந்த, அழுக்குத் தலையணையைக் தலைக்குக் கொண்டுவந்து, கால்களைப் பரப்பிக் குத்துகாலிட்டுச் சாய்ந்தார். கால்களுக்கிடையில் பூசணிப்பழமாய் பெருத்திருந்த விதை. பெர்னாரும் வேலுவும் பரிதாபமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

‘எங்களால நம்ப முடியலைங்க ‘- மீண்டும் வேலு.

‘நான் இருமலோடு போராடறதையா.. அப்படித்தான். மொளவுத் தூள் போட்டு சாராயம் குடிச்சிருக்கன். எல்லாக் கபமும் தம்பாட்டுக்கு சொல்லாமற் கொள்ளாமல் போயிடும் ‘- வேம்புலி நாய்க்கர்.

‘அதில்லைங்க, நீங்கதான் வேம்புலி நாய்க்கர்னு சொன்னதும் எங்களுக்கு ஆச்சரியமா போச்சி. ‘ – வேலு.

‘நம்பிக்கை இல்லாமலா என்னைத் தேடிக்கிட்டு வந்தீங்க.. ? ‘

‘ஒரு வகையில அப்படித்தான். ‘ – வேலு.

‘ஏண்டா தம்பி ? உனக்கு எந்த ஊரு ? என்ன பேரு ? ‘

‘கூடப்பாக்கம். எம்பேரு வேலு. இவரு பேரு பெர்னார். பெர்னார் ஃபோந்தேன் ‘

‘என்ன பேரு சொன்ன ? பெர்னாரா ? ‘

‘பெர்னார் ‘ங்கிற பேரு ஞாபகத்தில இருக்கா ? அப்படி இருந்தா, நாங்க அதிஷ்டசாலீங்க ‘

‘ம்.. என்ன சொல்றது. இருக்குன்னு சொல்லவா இல்லைன்னு சொல்லவா.. முதல்ல ரொம்ப நாழியா நிக்கறீங்க. நிண்ணு பேசவேண்டிய விஷயமில்ல.. இது. திண்ணையிலே குந்துங்க. பேசுவோம். ‘

பெர்னாரும், வேலுவும் கிழவரின் எதிரேயிருந்த ஒட்டுத்திண்ணையில் உட்கார்ந்தார்கள்.

‘சிறிக்கி… குலுக்கிக்கொண்டு சினிமாவுக்குப் போயிருக்கிறா.. இருந்தாலாச்சும் காப்பித்தண்ணி போடச் சொல்லலாம் ‘

கிழவர் அவர் வீட்டைச் சேர்ந்த பெண்பிள்ளையைத் திட்டுகிறார் என்பது மட்டும் புரிந்தது. அமைதியாகவிருந்தார்கள்.

‘யாரென்று கேட்கவில்லையே ? எம்மருமகளச் சொல்றன். ‘

‘எம்பையன் பிரெஞ்சு ராணுவத்துல கப்ரோல் ஷேஃப் ஆகவிருந்தவன். ரெத்ரெத் ஆகவேண்டிய சமயத்துல கொசோவோ சண்டையில அநியாயமாப் போயிட்டான்.

‘பெரியவரே.. நீங்க 1943ம் ஆண்டுவாக்கில சரியான முகவரியில்லாம, பெர்னார்னு, பிரெத்தாஞ், பிரான்சுண்ணு சொல்லி கடிதம் போட்டிருக்கீங்க. நம்ம ஊரா இருந்தா, போட்ட உங்களுக்கே திரும்பிவந்திருக்காது. எப்படியோ, நீங்க எழுதிய கடிதம் அவங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்குது. பெர்னார் குளோதன் பற்றிய தகவல்கள் உங்கக்கிட்ட இருக்கிறதா எழுதியிருக்கீங்க ‘..

‘கடிதமா ? நானா ? ‘. இருமிக்கொண்டே கிழவர் சிரிக்கிறார்.

‘என்ன பெரியவரே ? சிரிக்கிறீங்க. இப்பதான், சித்த முன்ன ‘பெர்னார் ‘ங்கிற பேரை தெரிஞ்சமாதிரி காட்டிக்கினிங்க. உங்க பேரு வேம்புலி நாய்க்கர் மாதிரியும் எங்களை நம்பவைச்சு உள்ளே கூப்பிட்டாங்க. இப்போ சிரிச்சா என்ன அர்த்தம். ‘

‘நான் இல்லைண்ணு சொல்லலை. இரண்டுமே உண்மை. பிறந்ததிலிருந்து எம்பேரு வேம்புலி தான், அதற்கப்புறம் கல்யாணம், பிள்ளைகள்னு சேர்ந்துபோக எங்க சாதிப்பட்டத்தையும் ஒட்டவச்சுகிட்டேன். ஆக வேம்புலி நாய்க்கன் நாந்தான். இதுல சந்தேகம் வேண்டாம். அப்புறம் நீங்க சொல்ற பெர்னார் குறித்தும் காதில வாங்கியிருக்கேன் ‘.

சொல்லி முடிக்கக் காத்திருந்ததுபோல இருமல் பற்றிக் கொண்டது. விலாப்புடைக்க இருமினார். கண்களில் நீர் கோர்க்க, வேட்டி முனையாற் துடைத்துக் கொண்டார்.

சாலையில் ஓடிக்கொண்டிருந்த நாயொன்று நின்று, இவர்கள் திசையில் குரைக்கிறது. கிழவர் தன் பார்வையை நாயிடமிருந்து விலக்கி வேறு திசையிற் குறிவைத்து வெறித்துப் பார்க்கிறார். சிறிது நேரம் பார்த்துக்கொண்டவர் மீண்டும் இவர்கள் திசைக்குத் திரும்பினார். நாய் தொடர்ந்து கிழவரை நோக்கிக் குரைக்கிறது.

வேலு திண்ணையிலிருந்து இறங்கி நாயைத் துரத்தியவன், மீண்டும் பெர்னார் அருகில் அமர்ந்தான்.

‘அவிசாரிக்குப் பொறந்தது எங்க போச்சுன்னு தெரியலை ‘ தனக்குத் தானே கூறிக்கொண்டவர், மீண்டும் இவர்களை நேரிட்டுப் பார்த்தார். ‘யாரைச் சொல்றேன்னு கேக்கமாட்டாங்களா ? ‘

‘நாங்க என்னன்னு கேக்கிறது. நீங்களே சொல்லுங்க.. ‘-வேலு.

‘எதிர்த்தாப்புல, நாகப்பன்னு நம்ம வீட்டுக்கு ரிக்ஷா ஓட்டுறவன் இருப்பான். நான் கூப்பிடும்போது ஓடிவருவான். எங்கே போய்த் தொலைஞ்சானோ ? ‘

‘இப்ப அவனெதற்கு ? ‘ – வேலு.

‘வாய் கொஞ்சம் நமநமங்கிது. இருமல் தொந்தரவு வேற. நீங்கதான் பார்க்கறீங்களே. ‘

‘இப்ப என்ன வேணும் உங்களுக்கு ? ‘

‘எனக்கு இருந்தாப்பல கபம்கட்டிக்கொண்டு தொல்லை கொடுக்கும். மார் முழுக்கச் சளி. வயசாச்சில்ல. நெஞ்சை நனைச்சா சரியாகும். மீண்டும் இருமினார். நீர்க்காவியேறிய வேட்டியின் இடுப்பையொட்டியிருந்த மடியை அவிழ்த்து ஒரு சுருட்டை எடுத்து பற்றவைத்தார்.

‘சுருட்டும் தீர்ந்துபோச்சு. அந்தக்காலத்திலிருந்து எனக்குக், கரும்பு மார்க் சுருட்டு, கந்தன் டாக்கீஸ் சந்திலிருக்கிற சாராயக்கடைச் சரக்கு. தொடர்ந்து கொஞ்சம் ரசஞ்சோறு, வஞ்சிரம் கருவாடு இருந்தா போதும். நிம்மதியா கட்டைய நீட்டிடுவேன். அடுத்த ஆவணிவந்தா எண்பதெட்டு வயசு. ‘ எச்சில் தெறிக்கப் பேசினார். ‘

‘பெரியவரே!.. கவலையை விடுங்க. எங்கிட்ட சொல்லீட்டாங்க இல்லை. கரும்பு மார்க் சுருட்டுக்கும், நீங்கள் கேட்ட சாராயத்துக்கும் ஏற்பாடு செய்யறோம். இப்ப எங்களுக்குச் சில உண்மைகள் தெரிஞ்சாகணும். ‘ இம்முறை கிழவரிடம் பேசியவன் பெர்னார்.

‘மிஸியே! ஐம்பது வருஷத்துக்கு முந்தைய விஷயத்துல நீங்க ஆர்வம் காட்டுவதைப்பார்க்கும்போது, ஏதோ விஷயமிருக்கணும். எம்மருமக இப்பல்லாம் என்னை இன்னாண்ணு கேக்கறதில்லை. கையில காசிருந்தா யோசனை பண்ணாம கொடுங்க. நீங்க என்னைத் தேடிவந்ததில லாபமிருக்குது. ‘

பெர்னார் பார்த்துக்கொண்டிருக்க, வேலு தன் சட்டைப் பையிலிருந்து இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுக்களைக் கிழவரிடம் நீட்டினான்.

‘பெரியவரே!.. இப்போதைக்கு இதைப் பிடியுங்க. நீங்க சொல்லப் போற விஷயத்தவச்சுதான், நாங்க மத்ததைப் பத்தி யோசிக்கணும். ‘

‘வேம்புலி நாய்க்கர் நாந்தான். அதிலே உங்களுக்குச் சந்தேகம்வேண்டாம். ஆனா ஏதோ கடிதம்னு சொல்லறீங்களே, அந்தக் கடிதத்தை நான் எழுதலை. ‘

வேலு உடன் எழுந்துகொண்டான்.

‘பெரியவரே!.. எங்களை நீ இளிச்சவாயர்கள்னு நினைச்சுகிட்டுக் கதை சொல்ல வறீயா ? சத்தியம் பண்ணு. நாங்க தேடிவந்த வேம்புலி நாய்க்கன் நீங்க இல்லைதானே ? ‘

‘வேலு.. அவசரப்படாதே. பெரியவரே.. என்ன குழப்பறீங்க ? ‘ -பெர்னார்

‘கூடப்பாக்கத்துத் தம்பி! என்ன நீ இப்படி அவசரப்படற. மிஸியே.. எவ்வளவு பொறுமையா இருக்காரு பாரு.. ‘

‘சரி சரி..!பெரியவரே சொல்லுங்க. எங்க பொறுமையைச் சோதிக்காதீங்க. நாங்க உத்தரவாதங்கொடுத்த மத்ததும் உங்களுக்கு வேணும்னா.. சீக்கிரம் சொல்லியாகனும். இல்லை எனக்கெதுவும் வேண்டாம்னு சொல்லுங்க.. நாங்க புறப்படறோம்.. ‘

‘இப்படி அவசரப்பட்டா எப்படி ? என் கையைப் பாருங்க ‘

உலர்ந்து, சுருங்கியிருந்த வலது முழங்கையின் உட் பகுதியில் வேம்புலி நாய்க்கர் எனப் பச்சைக் குத்தியிருந்தார்.

‘…. ‘

‘தம்பி..! நீங்கதான் என்னைத் தேடிவந்தீங்க. வேம்புலி நாய்க்கன்.. இருக்கானான்னு கேட்டாங்க. இங்கே முழுசா நானொருத்தன் இருக்கும்போது, இல்லைன்னா சொல்ல முடியும் ‘

வேலுவுக்கு பொறுக்கவில்லை. எழுந்திருக்க முயற்சித்தான். அவனை பக்கத்திலிருந்த பெர்னார் அமைதிப்படுத்தினான்.

தெருநாய் மீண்டும் திரும்பிவந்திருந்தது.

‘பெரியவரே! ஏற்கனவே உங்கக்கிட்ட சொன்னதுபோல, ரொம்பக்காலத்துக்கு முன்னாடி வேம்புலி நாய்க்கர்னு ஒருத்தர் கையொப்பம் வைத்திருக்கிறார். அவருக்கு என் முன்னோர்களில் ஒருவரான பெர்னார் குளோதன் பற்றிய ரகசியங்கள் தெரியும்னு அதில சொல்லியிருக்கிறார். ‘ கூறிமுடித்த பெர்னார் தன் முதுகுப் பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த கடிதத்தைக் கிழவரிடம் நீட்டினான்.

‘கடிதத்தை நான் படித்து என்ன ஆகப் போகிறது. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஓரளவு ஞாபகத்திற்கு வருகிறது. ‘

‘என்ன ஞாபகத்திற்கு வருகிறது ? ‘ – வேலு

‘அந்தக் கடிதத்தை என் கூட்டாளி துரைக்கண்ணுதான் எழுதியிருக்கணும். ‘

‘எங்களை இன்னும் குழப்பறீங்க.. ‘

துரைக்கண்ணுக்குச் சொந்த ஊரு, இங்கிருந்து மயிலம் பக்கத்துல இருக்கிற புதுப்பாக்கம். பல வருஷங்களுக்கு முன்னாடி, புதுச்சேரியில ராஜா பண்டிகை. அரசாங்கம் கோலாகலமா விழாவை ஏற்பாடு செஞ்சிருந்தது. பாதுகாப்புக்கு இருந்த சிப்பாய்கள்ல நானும் ஒருத்தன். துரைக்கண்ணு குடும்பத்தோட வந்திருந்தான். சறுக்கு மரத்துல ஏறி கட்டியிருந்த பரிசு முடிச்சைச் சுலபமா அவிழ்த்துவிட்டுக் கீழே இறங்கியவன், என்னிடம் வந்தான். தயங்கித் தயங்கி, என்னிடம் நெருங்கித் தலையைத் சொறிந்து கொண்டு நின்றான்.

‘என்ன விஷயம் ? இப்படித் தலையை சொறிந்துகொண்டு நிற்கிறாய் ?னு ‘ கேட்கிறேன்.

‘உன்னைப் பார்த்தா புதுச்சேரி ஆளாத் தெரியலை. யூனியன்* ஆளு மாதிரி இருக்க. நீங்கல்லாம் மாசிமகத்துக்குத்தான் இந்தப்பக்கம் வருவீங்க. ராஜா பண்டிகைக்குப் புதுச்சேரிப்பக்கம் வரமாட்டாங்களேன்னு ‘ கேட்டேன்

‘இல்லைண்ணே பிரெஞ்சு ராஜாங்கத்துக்கொரு கடுதாசி போடணும். வெள்ளைக்காருங்க பாஷையில எழுதணும் ‘னான்.

‘என்ன விஷயமா எழுதப்போற, அவங்க ராஜாங்கத்துல புதுச்சேரியை விட்டுப் போகும்போது உங்கிட்ட கொடுத்துட்டுப் போகச்சொல்லப் போறியா ?ன்னு ‘ கேட்கறேன்.

‘என்னண்ணே.. நீங்கவேற பகிடி பண்ணிகிட்டு. எங்கவூரு துரோபதையம்மன் மேல ஆணையாச் சொல்றேன். என்னை நம்புங்க ‘ங்கிறான்.

‘சரி என்ன கேட்டு எழுதப்போற ‘ன்னு நான் கேட்கிறேன்.

‘எழுதறதால என்ன லாபம்னு தெரியலை. எங்கவீட்டுப் பரணையை ஒழிச்சப்போ, நெறைய ஓலை நறுக்குகள் கெடைச்சுது. எல்லாத்திலும் ‘பெர்னார் ‘னு ஒரு பறங்கியரை பத்தி நாள் தவறாம அவரோட சினேகிதர் ஒருத்தர் எழுதியிருக்கார். படிச்ச்சுப்பார்த்த, எங்க ஊரு திண்ணை வாத்தியார் கிஷ்டப் பிள்ளை, ‘சுவாரஸ்யமாயிருக்குது, அந்த பெர்னார் யாருண்ணு கேட்டு அவங்களுக்கு அனுப்பிவச்சா நிச்சயம் உபயோகபடும்ணு, உனக்கும் ஏதாவது நல்லது நடக்கும்னு சொன்னர் ‘, அப்படான்னு சொன்னான் ‘.

தெருநாய் மீண்டும் கிழவரை முறைத்துக்கொண்டு உர்ரெங்கிறது.

‘அதுசரி பெரியவரே.. துரைக்கண்ணுதான் அந்தக் கடிதத்தை எழுதினார்னு நீங்க சொல்றீங்க. எதற்காக உங்க பேருல எங்களுக்கு எழுதணும். ‘ -பெர்னார்.

‘ராஜா பண்டிகைக்குப் பிறகு, தவறாம புதுச்சேரி வரும்போதெல்லாம், கிராமத்திலிருந்து வெள்ளரிப்பழம், வாழைக்காய், பூசனிக்காய்னு அந்தந்த பருவத்துக்குத் தகுந்தமாதிரிச் சுமந்துகிட்டுவருவான். ஒரு நாள் கப்பலேறிப் பிரான்சுக்குப் போகப்போறேன்னான். ‘ …

கிழவருக்கு மூச்சிரைத்தது. வேலுவிடம் சைகையிற்காட்டப் புரிந்துகொண்டு பக்கத்திலிருந்த செம்பிலிருந்து தண்ணீரை அதிற் கவிழ்த்துவைப்பட்டிருந்த தம்ளரில் கொஞ்சமாக ஊற்றிக் கொடுத்தான். குடித்து முடிக்கச் சிறிது நேரம் பிடித்தது. வாயில் எச்சிலும் தண்ணீருமாகவொழுக வேட்டி முனையாற் துடைத்துக் கொண்டு இவர்களைப் பார்த்தார். சிறிது நேரம் அமைதியாகவிருந்தார். ஒரு இளைஞன் மோட்டார் சைக்கிளில் வேகமாய்ச் செல்ல, தூவென்று காறி உமிழ்ந்தார். ‘அவன் ஆத்தா அப்பா சம்பாதிச்சுவச்சா, அதுல வாண வேடிக்கைக் காட்டற பயலா இருக்கும் ‘.. ஆக்ரோஷமாய் வார்த்தைகள் வந்தன.

‘அவன் கிடக்கிறான். நீங்க சொல்லுங்க ‘- வேலு.

‘ எங்கே விட்டேன்.. .ஆமாம் ஒரு நாள் கப்பலேறிப் பிரான்சுக்கு போப்போறேன்னான். ஒருவாரத்திற்கு முன்னர்தான் லண்டனிலிருந்துகொண்டு வானொலியில், ஜெர்மானியர்களுக்கு எதிராகப் பிரெஞ்சுமக்களை உற்சாகப்படுத்த தெகோல்**பேசப்போக, ரெண்டாவது உலகசண்டையிற் கலந்துகொள்ள நிறைய கஷ்ட ஜீவனத்திலிருந்த புதுச்சேரிவாசிகள் கப்பலேறினார்கள். நானும் போகவேண்டியது. என் பொண்டாட்டி போகக்கூடாதுன்னு ஒப்பாரிவைக்க நான் போகலை. ஆனா அவனைத் தடுக்க அப்படியாரும் இல்லைங்கிறதால, கப்பலேறிட்டான். ‘

‘அவரெப்போ வேம்புலி நாயக்கரா மாறினார் ‘- பெர்னார்.

‘கப்பலேறுவதற்கு முன்னால, பிறந்த பதிவு தேவைப்பட்டது. நாந்தான் அவனிடம் என்னோட பிறந்த பதிவு கொடுத்துவிட்டேன். பிரெஞ்சு அரசாங்கத்துக்கு அவனோடபேரு, அன்றையிலிருந்து வேம்புலி. அவனும் என்னைபோல நாய்க்கன் என்பதால பேருக்கப்புறம் நாய்க்கரைச் சேர்த்துக்கிட்டான். அதற்கப்புறம் எப்போ சீமையிலிருந்து வந்தாலும் புதுச்சேரியில என் வீட்டுலதான் வந்து தங்குவான். எப்போதாவது சொந்த ஊருக்குப் போய்விட்டுவருவான். நான் சுத்தமா பெர்னார் விஷயத்தை மறந்துட்டேன். அவன் கடிதம் போட்டதோ கொண்டதோ எதுவுமே எனக்குத்தெரியாது. ‘

உர்ரென்றிருந்த நாயோடு, இப்போது மற்றுமொரு நாய் சேர்ந்திருந்தது.

‘அப்ப உங்க நண்பர் துரைக்கண்ணுவைத்தான் நாங்க மேற்கொண்டு பாக்கணும் ‘- வேலு.

‘ஆனால் நீங்க அவனை இப்போ பார்க்க முடியாது ‘

‘ஏன் ‘ ?

‘இந்தோ – சீனா சண்டையில***, ஹோசிமின் படைகளால பிரெஞ்சுப்படைக்குப் பெரிய சேதம்ன்னு உங்களுக்குத் தெரியுமே. வியட்னாம் காடுகள்ல செத்துப்போனவங்கள்ல இவனும் ஒருத்தன். ‘

‘அவரது குடும்பத்துல யாரும் இல்லையா ? அவர்களுக்கு பெர்னார் குறித்த ஓலைச்சுவடிகள்பற்றிய தகவல்கள் தெரிஞ்சிருக்குமா ‘

‘அவன் பொண்டாட்டிகூடச் சமீபத்துல செத்துப்போயிட்டா. கிராமத்துல இருந்த காடுகரம்பு, நிலபொலம் எல்லாத்தையும் வித்துட்டு, புதுச்சேரிக்கே வந்திட்டாங்க. துரைக்கண்ணுக்கு ஒரே பெண்ணு. ஆனா அவ மேனா மினுக்கி… நல்லா உடுத்திக்கொண்டு, தினமும் சினிமாகொட்டகைக்கு போறைத் தவிர ஒரு எழவும் தெரியாது. ‘

‘அவங்க எங்க இருக்காங்க ?. அட்ரஸ் கொடுங்க மத்தததை நாங்க பார்த்துக்கறோம் ‘

‘வர நேரந்தான்.. ‘

‘என்ன சொல்றீங்க ? ‘

‘எம்மருமகளத்தான் சொல்றேன். எம்பையனும் பிரான்சுக்கு போகணும்னு ஆசைப்பட, இந்தச் சிறிக்கியைக்கட்டிவைத்தேன். நீங்கதான் பார்க்கறீங்களே.. நானிங்கே உயிர் ஊசலாடிக்கொண்டுகிடக்க, அவ ஊர் மேயப் போயிட்டா. ‘

நாய்கள் மறுமடியும் உக்கிரமாகக் குலைக்க ஆரம்பித்திருந்தன. வேலு அவைகளைத் துரத்த முயற்சிக்கிறான். சைக்கிள் ரிக்ஷாவொன்று வந்து நிற்க, நாய்கள் ஓட்டம் பிடிக்கின்றன..

வந்திறங்கியவளுக்கு இரட்டை நாடி உடம்பு. திரட்சியான மார்பு. மையப்பிய கண்கள். உதட்டுச் சாயத்தில் சிவந்திருந்த தடித்த உதடுகள், கழுத்துச் சதையிற் புதைந்திருந்த தலை, தலைப்பாரத்திற்கு இணையாகக் கொண்டை. இவர்களை யார் ? என்பதுபோலப் பார்த்தாள்.

கிழவர் அமைதியாகக் கிடந்தார். கிழவர் தலையை இவர்களுக்கு எதிர்த் திசையிற் திருப்பி இருந்தார். வேலுவுக்கு அவர் பின் தலையிலிருந்து கண்கள் வெளிப்பட்டு உளவு பார்ப்பதாகப் பட்டது.

‘நீங்க யாரு ‘ ?

‘உங்க மாமனாரைப் பார்க்க வந்தோம். பேசினோம். ‘ -வேலு

‘என்ன ? என் மாமனாரைப் பார்க்க வந்தீங்களா ?, சரி. ஆனா பேசினேன்னு சொல்றீங்க. ‘

‘ஏன் ‘- பெர்னார்.

‘அவர் இறந்து அரைமணியாவுதே. ரிக்ஷாகாரர் நாகபப்பனைப் பார்த்துக்கச் சொல்லிட்டு, பெரிய பாப்பார தெருவரைக்கும் சித்தப்பா வீட்டுக்கு சேதிசொல்லிட்டுவரலாம்னு போயிருந்தேன். ரிக்ஷாகாரரை அனுப்பலாம்னா, சித்தப்பாவோட புது அட்ரஸ் தெரியாது.. எங்கே போனாரு அந்த ஆளு ? மறுபடியும் கள்ளுகடைக்குப் போயிட்டாரா ?.. ‘ என்று வந்த பெண்மணி கேட்க, நண்பர்களிருவரும் முகம் வெளுத்து நின்றார்கள்.

/தொடரும்/

* ஆங்கிலேயர் நிருவாகத்திலிருந்த இந்தியப்பகுதி

** Charles DeGaulle (1890 -1970) பிரான்சின் முதல் அதிபர்.

*** La Guerre Indo-Chine (1946 -1950)

—-

Series Navigation