நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 12

This entry is part of 47 in the series 20040325_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘ ET BRUSQUEMENT, D ‘UN COUP DE SA NAGEOIRE EN FEU,

IL FAIT, PAR LE CRISTAL MORNE, IMMOBILE ET BLEU,

COURIR UN FRISSON D ‘OR, DE NACRE ET D ‘EMERAUDE

– Les Trophees, JOSE MARIA DE HEREDIA

ஏ! மேகமே எங்கள் பெண்ணின் கவலை படர்ந்த முகத்தோடு உனக்கென்ன ஒத்திகைவேண்டிக்கிடக்கிறது ? தள்ளிப் போய்விடு. ஏ கதிரவனே! அவள் மனவெப்புக்கு மருந்திட முயலும் நேரத்திலா, உன்பங்கிற்கு அவளை அனலிலிடுகிறாய். ஏ குழலிசைக்குந் தென்றலே! அவள் முகந்தொட்டு இமைகளுக்கிடையே இடம் தேடமுயற்சித்துக் காதற் கனவுகளைக் கலைத்துவிடாதே. சலசலத்து சலங்கையொலி எழுப்பிக்கொண்டு நிற்காமல் ஓடுகின்ற தண்ணீீரே! எங்கள் தெய்வானையின் எண்ணச் சங்கமத்தில் விழுவது வேறுநினைவுகள், உனக்கங்கே இடமில்லை. காதலிற் களிக்கும் ஜோடி மைனாக்களே! வேறிடம் அறியமாட்டார்களா ? எங்கள் பெண்ணின் மனதை நோகச் செய்வதில் என்ன மகிழ்ச்சியோ ? இயற்கை அதீத அக்கறையோடு தெய்வானை மடியிலிறுத்திக்கொண்டு தன் சொந்தங்களிடம் அந்தரங்க உரையாடலை நடத்திக்கொண்டிருக்கிறது.

மேற்கில் சூரியன் அந்தி நேரமாயினும் தன் உக்கிரத்தைக் குறைத்துக்கொள்ளாமல், அடர்த்தியான மரங்களுக்கிடையில் அவ்வப்போது மறைவதும் மீள்வதுமாகவிருக்கிறான். தெற்கிலிருந்து வீசுகின்ற வெப்பக்காற்று ‘அபாந்தொன்னே ‘ ஆற்று நீரில் விழுந்தெழுந்து தெய்வானையைத் தொட்டுச் சென்ற மகிழ்ச்சியில் மெல்ல குதித்தோடுகின்றது. கிழக்கில் மேகங்கள் சூல் கொண்ட பெண்ணைப்போல மைவண்ணப் பளபளப்புடன் கிடக்க, மேற்கிலோ பிரசவித்த பெண்ணைப்போலச் சோர்ந்துகிடக்கிறது. ஆற்று நீரின் கலவென்ற சிரிப்பு குளிர்காற்றோடு கலந்து தேவகானமாய் தெய்வானையின் உடலிற்கலந்து தாலாட்டுகிறது. தன்துணையுடன் கொஞ்சிப்பேசும் மைனாவின் மொழிகள், இவள் நெஞ்சத்தில் விழுந்து காதற் கனவுகளுக்குச் சிறகுபூட்டுகின்றன. குளிர்வாடையிற் தடுமாறும் பேடைக்குயிலோசை இவள் மனதுக்கு இதமாகவிருக்கிறது.

அவள் கண்ணெதிரிலேயே அபாந்தொன்னே ஆற்றின் மறுகரையிலிருந்து ஒரு புள்ளியிற் பொய்யாய், அருவமாய்த் தொடங்கிப் பின்னர் ஆதி அந்தமற்ற ஜீவனாய் மண்ணுக்கும் விண்ணுக்குமாக – உலக இளமைக்கு உதாரண புருஷனாக, பேராண்மைக்கு இலக்கணமாக, மாயவனாக நெருங்கி நிற்கிறான். அமிர்தத் தடாகம், மாதவிப் பந்தல், அகிற் புகையின் சோம்பல் இயக்கம், அன்றிற் பறவைகளின் கீசுகீசு, குத்து விளக்கெரிய, கோட்டுக்காற் கட்டின் மேல், மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி, கொத்தலர் பூங்குழல் தெய்வானையின் கொங்கைமேல் வாய்வைக்க மெல்லக் குனிகிறான். காதல் அக்கினியில் தோய்ந்த பெர்னாரின் உதடுகளிட்ட உணர்ச்சித் தானத்தை, சிந்தாமல் சிதறாமல் தன்மலரிதழ்விரித்து ஏற்கிறாள். கண்களைப் பொத்திக்கொள்ள கைகள் போக, கால்கள் தடுமாறுகின்றன.. கருங்கற்பாறையிலிருந்து உடல் நழுவுகிறது. வாழை இலைகள் வணங்கிப் பாய்விரிக்க, நாடகம் தொடருகிறது. கனவின் உச்சத்தில் பிதற்றுகிறாள் பெர்னார்.. பெர்னார்.

தெய்வானையும் நீலவேணியும் தங்கள் கபான்களிலிருந்து வெகுதூரம் வந்திருந்தார்கள். எப்போதாவது இப்படி அரிதாக நேரங்கிடைக்கும். அப்படிக்கிடைக்கின்ற நேரத்தில் காட்டிற்குள் பிரவேசித்து விடுவார்கள். காட்டிற் கிடைக்கின்ற காட்சிகளில் மனத்தை இழந்து பகல்முழுவதும் ஆடிக்களித்து, பெற்றோர்களின் கோபத்தினைத் தவிர்க்கவேண்டி அந்தி சாயும் நேரத்திற்கு முன்பாகத் திரும்பிவிடுவார்கள். இந்தியாவில் அடர்ந்த காடொன்றினைத் தோழியர் இருவருமே கண்டதில்லை. வானத்தைச் சீண்டும் வகையில் உயர்ந்தும் அடர்ந்துமிருந்த மரங்கள், ஓயாமல் குரலெழுப்பும் பறவைகள், கொட்டுகின்ற அருவிகள், சலசலக்கும் ஓடைகள் ஆகியவற்றை இதிகாசங்களின் ஆரண்யகாண்டங்களிற் சொல்லக் கேட்டதுண்டு. ஆதவன் வெளிச்சமற்ற பிரெஞ்சுத் தீவின் காடுகளில் பச்சைப் பசேலென்ற அழகின் வெளிச்சம். தெய்வானை, தீவுக்கு புலம்பெயர்ந்து வந்தபுதிதில் கண்கள் முழுக்க வியப்பினைத் தேக்கிக்கொண்டு வலம் வந்திருக்கிறாள். தீவெங்கிலும் கருங்கற்கள், பாறைகள், குன்றுகள், மலைகள் இடைக்கிடை அடர்ந்து கிடக்கும் புதர்கள், மரங்கள், ஆழமற்ற நீர்த்திட்டுகள், ஆரவாரமற்ற நீர்வீழ்ச்சிகள், நதிகள் அவை கடலோடுகலக்குமிடங்கள், அவசர அவசரமாகப் பெய்துவிட்டு அடங்கிப்போகும் மழை, தொடர்ந்து வீசும் சீதளக் காற்று, மூடு பனியோடுகூடிய மலைச் சிகரங்கள்; எங்கிருந்தோ பறந்துவந்து காதருகே ஒலியெழுப்பிவிட்டு ஓடி மறையும் பறவைகளின் பிரியமான விளையாட்டு அனைத்துமே தெய்வானைக்குப் புதிது. கடந்த சிலமாதங்களாக, குறிப்பாக நீலவேணியுடன் கைகோர்த்துப் பழகியபிறகு, எதுவுமே புதியதல்ல என்றாகியிருந்தது.

அதோ..நீலவேணி எப்போதும்போல கிளைகளையொதுக்கிக்கொண்டு ஒருமுறை பார்த்த சாரைப்பாம்பு ஊர்வதுபோல துரிதகதியில் முன்னால் நடக்கிறாள். கேட்கின்ற கடலிரைச்சலைக் கொண்டு இருவரும் மேற்கு கடற்கரையை நெருங்கி இருப்பது தெளிவாயிற்று. சரிவில் குவர்னரின் அலுவலகமும், கிட்டங்கிகளும், கப்பற்கட்டுந் தளமும், ஆயுதக் கிடங்குகளும், நிறுத்தப்பட்டிருந்த பாய்மரக்கப்பலொன்றும் இவர்கள் இருந்தவிடத்திலிருந்து துல்லியமாகத் தெரிந்தன. தோழியரிருவரும் கப்பற்கட்டுமிடத்தையும், கடற்கரையையும் கண்டுபோவதென இன்றைக்குப் புறப்பட்டு வந்திருக்கிறார்கள். முன்னாற் சென்றுகொண்டிருந்த நீலவேணி இவள் கண்களிலிருந்து மறைந்துவிட்டிருந்தாள். அவளுக்கு இணையாக இவளால் நடக்க முடியவில்லை. தெய்வானைக்கு கோபம்வந்தது. ஒவ்வொரு முறையும் இப்படித்தான். இவளைத் தவிக்கவிட்டு மறைந்துவிடுவாள். காடுகளில் மரூன்களும்( Maroons – கரும்புப் பண்ணைகளிலிருந்து தப்பித்து ஓடும் அடிமைஊழியர்கள்), மடகாஸ்கர் தீவைச்சேர்ந்த கடற்கொள்ளைக்காரர்களும், வழிதவறும் மனிதர்களை மடகாஸ்கருக்குக் கடத்திச் சென்று அடிமைகளாக விற்கின்றார்களெனக் கேள்விபட்டதுவேறு தெய்வானையை இப்போது பயமுறுத்தியது.

‘ஏய் நீலவேணி நில்லடி.. ‘ இவள் கூப்பிட்டது அவள் காதில் விழுந்திருக்குமாவெனத் தெரியவில்லை. நீலவேணியை நினைக்கவும் தெய்வானைக்குப் பிரம்மிப்பாகவிருந்தது. அவளது வளர்த்தி இவளை ஆச்சரியப்படவைத்தது.

முதன் முறையாக நீலவேணியை, சீனுவாச நாயக்கர் விசாலாட்சி. தம்பதியினரின் கபானிற் சந்திக்க நேர்ந்தது ஆறுமாதத்திற்கு முன்பு, தைப் பொங்கல் அன்று. நான்குபுறமும் கருங்கற் சுவர்களும் மேலே கருப்பஞ்சோலைகளும், தீவின் பனையோலைகளும் வேயப்பட்டிருந்த கூரையின் ஓட்டைகளுக்கிடையே சூரிய ஒளி ஊடுருவி விளக்கொளியைத் தவிர்த்திருந்த கபான். இருந்தபோதிலும் பெட்ரோல் விளக்கொன்று ஏற்றபட்டு, சுவரையொட்டி வைக்கப்பட்டிருந்தது. கபானுக்குள் நுழைந்த காமாட்சி அம்மாளையும், தெய்வானையையும் ஆரத் தழுவி, விசாலாட்சிஅம்மாள் பாய்விரித்து வரவேற்றாள். கும்பெனி விநியோகம் செய்யும் பழுத்த அரிசியைக் கருப்பஞ்சாற்றில் பொங்கியிருந்தார்கள். தட்டங்களிற் பரிமாறப்பட, சாப்பிட்டுக்கொண்டே, தீவில் தமிழர்கள் கொண்டாடவிருந்த தைப்பூசக்காவடி குறித்துச் சிறிது நேரம் பேசினார்கள். குவர்னர்ரை யும், சில முக்கிய பண்ணை முதலாளிகளையும் அழைப்பதென்றும் தீர்மானிக்கபட்டது.

முக்கிய சங்கதிகளைச் பேசிமுடித்தபிறகு, சீனுவாச நாயக்கர் உட்பக்கம் திரும்பி ‘அம்மா நீலவேணி! ‘ எனக் குரல் கொடுத்தார். அழைத்த குரலுக்குத் தாமதமில்லாமல் அவள் வந்தாள். சாயம்வெளுத்த பாவாடை சட்டைக்குள் சோர்ந்திருந்த உடல், அழுது சிவந்திருந்த கண்கள், சிக்கலாய்க் கிடந்த தலைமுடியிலிருந்து, சின்னதாய் முதுகில் இறங்கியிருந்த சடை. கழுத்தையொட்டி பாசிமணியிலொரு சரடு, பொரிந்திருந்த உதடுகள், உள்ளடங்கிய கண்கள். இருந்தபோதிலும் எதிரிலிருப்பவர்கள் அவளை வாஞ்சையாய் அணைத்துக்கொள்ளக்கூடும்., முகத்தில் அப்படியொரு களை.

‘வாம்மா! பக்கத்தில் வா! நாங்கள் அன்னியர்கள் அல்ல. இப்படி உட்கார் ‘ காமாட்சி அம்மாள் நீலவேணியென அழைக்கப்பட்ட அப்பெண்ணைப் பக்கத்தில் உட்கார்வைத்துகொண்டாள்.

‘இவளை இரண்டு நாட்களுக்கு முன்னர் பயணிகள் கிட்டங்கியிற் சந்திக்க நேர்ந்தது. சந்திர நாகூரிலிருந்து வந்துள்ள ‘மரி ழோசெஃப் ‘ கப்பலிற் புதுச்சேரியிருந்து புறப்பட்டு வந்திருக்கிறாள். புதுச்சேரியில் இவளோடு சேர்ந்து முப்பது நபர்கள் பயணித்ததில் இருபத்திரண்டுபேர் தீவிற்கு மீண்டிருக்கிறார்கள் ஆண்களும், பெண்களும், குழைத்தைகளுமாக எட்டுபேர் வழியில் சுரமும், வாந்திபேதியும்வந்து இறந்துபோக வழக்கம்போல உடல்களைக் கடலில் எறிந்திருக்கிறார்கள். இறந்துபோனவர்களில் இவளது பெற்றோர்களும் இருந்திருக்கலாம். சரியான தகவல்களில்லை. இப்போதெல்லாம் ஒவ்வொருமுறையும் கப்பல்களில் ஒப்பந்த மனிதர்களை அழைத்துவருவது ஒருபுறமிருக்க, நமது அப்பாவி மக்களை ஏமாற்றிக் கள்ளத்தனமாக அழைத்துவருவதும் நடக்கிறது. ‘

‘ சத்தியம் நாயக்கரே….வர வர என்னென்னவோ கேள்விப்படுகிறேன். நம் கண்ணெதிரிலே, நம் மக்கள் இங்கே அவதிப்படுவதுகண்டு மனம் பதைக்கிறது. பறங்கியர்களை நம்பமுடியாதுபோலிருக்கிறது. என்னென்னவோ ஆசை வார்த்தைகள் சொல்லி அழைத்துவந்து இங்கே அடிமை வாழ்க்கையில் தள்ளுவதை எப்படி சகிப்பது ? என் பிள்ளைகளுடன் திரும்பவும் நமது தாய்நாட்டிற்கு மீள்வேனா என்கின்ற அச்சம்.. ‘

‘ கடவுள் கிருபையால் எல்லாம் சுபமாய் நடக்கும் தவிரவும் குவர்னர் அருள் சம்பூரணமாய் நமக்கு இருக்குறச்சே தீமைகளேதும் அண்டாது ‘

‘ ஏதோ உங்கள் வாக்குப் பலிதமாகட்டும். இந்தப் பெண்ணைப் பற்றி ஏதோ வார்த்தையாடினீர்களே ? ‘

‘ஆமாம். வழக்கம்போல, பயணிகள் கிடங்கிற்கு, குவர்னரில் முதன்மை ஆலோசகர் திதியே(Didier).வோடு சென்றிருந்தேன். கும்பெனிக்கான ஆட்களை எடுத்துக்கொண்டதுபோக மீதமுள்ள ஆட்களைப் பண்ணை முதலாளிகள் பங்கிட்டுக் கொள்வதற்காக தங்களது ‘அடிமைகட் தேவை விண்ணப்பத்துடன் வந்திருந்தார்கள். உடலாரோக்கியமுள்ள ஆட்களைக் கொண்டுசெல்வதற்காக அவர்களுக்குள் போட்டாபோட்டி.. இவள் ஒருமூலையில் பராக்குப் பார்த்துக்கொண்டு சோகத்துடன் நிற்கவும் மனதுக்கு வியாகூலமாச்சுது. விசாரித்தவகையில், அவளது தாய் தந்தையர் சடலங்களைக் கடலிலெறிந்ததைப் பார்க்க அவளுக்கு மனசு ரொம்ப விசாராமாச்சுதென்று, பறங்கிபேட்டையான் ஒருவன் கூறினான். பித்துப்பிடித்தவளாக இருந்தவளை பிரெஞ்சு கனவான்களுக்கு அழைத்துபோக இஷ்டமில்லை. போல் அஞ்ஞெல் மகன் ஃபிரான்சிஸ், தனது பண்ணைக்குக் கூட்டிபோகிறேனென அவளது கரத்தைபிடித்து இழுத்தான். இவள் முரண்டு பிடிக்கவும், எங்களை வைத்துக் கொண்டு எட்டி உதைக்கிறான். பாவிப்பெண் துடித்துச் சுருண்டுவிழுந்ததைக் காண நேர்ந்தது. பாதகன் இவளைப் பண்ணைக்குக் கூட்டிச்சென்றால், என்னென்ன கொடுமைகள் நடக்குமோ என்று யோசித்து, நமது இடத்தில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறேன். குறைநாட்களும் நல்லபடியாய் போய்ச் சேரவேணும். ‘

‘குவர்னரின் ஆலோசகர் திதியே மறுவார்த்தையேதும் சொன்னாரா ? ‘

‘உள்ளது. காமாந்தகன் ஃபிரான்சிஸோடு சேர்ந்துகொண்டு அவனது பண்ணைக்கு இவளை அனுப்புவதில் மும்முரமாகவிருந்தார். எம்பெருமான் கோவிந்தன் கடாட்சத்தால், தக்கசமயத்தில் குவர்னர் வரவும் எல்லாம் சுபமாய் முடியலாச்சுது.

‘தெய்வானை என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் ? இப்படி நடந்தால், எப்போதைக்கு நாம் கடற்கரைக்குச் சென்று மீள்வதாம் ? ‘

‘நீலவேணி நில்லடி.. கருங்கற் கட்டிடங்கள் தெரிகிறதே. கொஞ்சத் தூரந்தானே. மெதுவாகப் போகக்கூடாதா ? ‘

‘அம்மணீ அப்படியே ஆகட்டும். இன்றிரவு கறுப்பர்களின் கபான்களில் தங்கிவிட்டு நாளைக்காலை நமதிருப்பிடம் திரும்புவோம்.. தீயில் வதக்கிய காட்டுப்பன்றி இரவு உணவாகக் கிடைக்கும்; ருசிபார்க்கலாம் ‘

‘அய்யய்யோ.. ‘ இவளுக்குக் குமட்டியது.. ‘அவர்களிடமா ? அவர்கள் மனிதர்களைக் கூடத் தீயில் வதக்கிச் சாப்பிடுவார்களாமே ? தப்பிவரும் மரூன்களை (கரும்புப் பண்ணைகளிலிருந்து தப்பும் அடிமைகள்) அவர்கள் பிடித்துத்தின்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் ‘

‘எனக்குத் தெரியாதடி. இப்போதைக்கு நீ வேகமாக நடந்தால் பொழுது இருட்டுவதற்குள் நமது கபானுக்குத் திரும்பலாம். ‘

இருவரும் இறங்கி மணலில் நடந்து வலப்புறத்தில் நெருக்கமாகவிருந்த கும்பெனிக் கட்டிடங்களின் எல்லைகளில் இருந்தார்கள்.

அங்கே சிறுபணிகளில் ஈடுபட்டிருந்த கிறேயோல் பெண்கள் இவர்களைப் பார்த்தவுடன் சினத்தோடு மண்ணைவாரித் தூற்றினார்கள். ‘

‘ என்னடி தெய்வானை ? ஏன் இப்படி ? நாம் என்ன குற்றம் இவர்களுக்கு இழைத்தோம் ‘.

‘எனக்கு முன்னதாக தீவிற்கு வந்தவள். இங்கே நடக்கும் வர்த்தமானங்களை நான் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்கள் நம்மவர்கள எதிரிகளாக நினைக்கிறார்கள். ‘

‘ஏன் ? ‘

‘ஏன், முதலில் நமது நிறம். பிறகு நம்மிற் பலர் அடிமைகளாக இருந்தாலும், பண்ணைகளிலும், கட்டுமானப்பணிகளிலும் நமது ஆட்களுக்குக் கும்பெனி கொடுக்கும் முக்கியத்துவம். தவிர முன்பெல்லாம் வெள்ளையர்கள் இருட்டானால் இவர்களைத் தேடிவந்துவிடுவார்களாம். இப்போது அவர்களின் கவனமெல்லாம் இந்தியப் பெண்டுகள் மீது. ‘

‘ஏதேது இவ்வளவு விஷயங்களையும் அறிந்துவைத்துக்கொண்டு…பெரியவர்கள் முன்னிலையில் அப்பிராணியாய் நடந்துகொள்கிறாய். சாமர்த்தியக்காரியடி நீ ‘

இருவரும் உரையாடியவாறு கும்பெனிக் கட்டிடங்களை நெருங்கியிருந்தார்கள்.

வலப்புறம் இரண்டடுக்கில் ஒரு பெரிய மருத்துவமனை. அருகிலேயே கடற்பயணத் தொழில் சம்பந்தபட்ட பணிமனைகள், கும்பெனியின் நிர்வாகக் கட்டிடம் கடற்கரையைப் பார்த்தாவாறிருந்தது. அங்கிருந்து இரண்டு சாலைகள் தீவை நோக்கிச் சென்றன. கப்பற்கட்டுமிடத்தில் வேலைகள் துரிதமாய் நடந்துகொண்டிருந்தன. புதுச்சேரித் தச்சர்கள் பர்மாவிலிருந்து இறக்கப்பட்ட தேக்குமரங்களையும், உள்ளூர் புன்னை மரங்களையும் இழைத்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். தேக்கு மரங்கள் மேல்வேலைக்கும், பாய்மரத் தூண்களுக்கும் உபயோகிக்கப்பட்டன, புன்னைமரப் பலகைகள் கப்பலின் அடிப்பாகத்திற்கு உதவிக்கொண்டிருந்தன. .அருகில் சந்திரநாகூரிலிருந்தும், மலபாரிலிருந்தும் அழைத்துவரப்பட்டிருந்த லஸ்கர் (Lascar) எனவழைக்கப்படும் படகுகட்டும் இந்தியத்தொழிலாளர்கள் பலகை இணைப்பு (Charpente) வேலையிலீடுபட்டிருந்தார்கள். தீவின் கவர்னர் பிரான்சிலிருந்து தருவித்திருந்த லொரியான்பகுதி மத்தலோக்கள் வடிவமைக்கவும், மேற்பார்வைசெய்யவும் காரியஸ்தர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

இப்படியொரு கப்பலை, பெண்களிருவரும் இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில்லை.

‘அம்மாடியோவ் மிகப் பெரிசு, பாய்களைக் கட்டினா நம்முடைய வில்வநல்லூர் தேருபோல இருக்குமோ! ‘ தெய்வானை வியந்தாள்.

கேட்டுக்கொண்டிருந்த லஸ்கர்களில் வாலிபனொருவனுக்கு, கவனம் வந்திருந்த பெண்கள் பக்கம் திரும்பியது. ‘ இருக்கலாம். 350 டொண்ணோ பிடிக்கும். யேன்ஸ்யூலேர் (Insulaire)ன்னு பெயர் சூட்டியிருக்கிறார்கள் ‘

‘அப்படியா! அதோ முகத்துவாரத்துக்கருகில் புதியதாகத் தெரியும் கப்பலுக்கு என்ன பேர் ?

‘அக்கப்பலுக்கு ‘கிறேயோல் ‘ என்று பெயர்.. போர் லூயியில் (Port Louis) உருவான முதல் பாய்மரக்கப்பல். நீ இங்கே வந்து கரைக்குச் அழகு சேர்த்திருப்பதுபோல, அது கடல் நீருக்கு அழகுச் சேர்த்திருக்க்கிறது. ‘

உரையாடலின்போக்கை உணர்ந்த நீலவேணி அப்போதுதான் அவ்வாலிபனைக் கவனித்தாள். கடந்த சில நொடிகளாக அவள் உரையாடிக்கொண்டிருந்தது ஓர் அந்நியன்; இளைஞன். அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது. தெய்வாவானையின் பின்னே ஒளிந்துகொண்டாள்.

‘ஐயா உங்கள் விளக்கத்திற்கு நன்றி. வேலையைக் கவனியுங்கள். உங்களை மேய்க்கின்ற பறங்கியன் நம்மை நோக்கி வருகிறான். ‘ தெய்வானை.

‘ பெண்ணே! என்னுடைய பேர்; பொன்னன். உன்னுடைய தோழியின் பேரென்ன ? ‘

நீலவேணி தன் தோழியின் முதுகினையொட்டி நின்றவள், வெடுக்கென்று முகத்தைக் காட்டினாள், ‘ஏதேது, அனுமதித்தால் எங்கள் பூர்வீகத்தையே கேட்பீர் போலிருக்கிறதே ? தெய்வானை நீ கிளம்பு. பொழுதுக்குள் வீடு திரும்பவேண்டும். ‘

‘பொன்னன் வேலையில் கவனமிருக்கட்டும். இந்தப் பெண்கள் இங்கே எப்படி வந்தார்கள் ? ‘ நெருங்கியிருந்த பறங்கியன் கேட்டான் ‘

‘நடக்கின்ற பணிகளை வேடிக்கை பார்க்க வந்திருக்கவேணும் ‘.

‘சரி சரி நடவுங்கள் இங்கே நிற்கவேண்டாம். பார்ப்பதென்றால் தள்ளி நின்று பாருங்கள். வேலைக்கு இடையூறு கூடாது. ‘ பறங்கியன்

‘உங்கள் தோழியின் பேரைகேட்டேனே ? ‘ தெய்வானையிடம் முறையிட்டான் ‘ மீண்டும் அந்த அவ்வாலிபன்.

‘என்னடி சொல்லவா ? ‘

‘பறங்கியன் முறைக்கிறான். இன்றைக்கு இவருக்கு முழுமையான ஊதியம் கிடைக்கப்போவதில்லை. நீ கிளம்பு ‘

நீலவேணி தெய்வானையை இழுத்துக்கொண்டு நடந்தாள்.

‘என்னங்க பேர் கேட்டேனே ‘ ?

‘என்னுடைய பேரா ? வில்வநல்லூர் கோகிலாம்பிகா ‘. கலகலவென்று சிரித்துக்கொண்டே தோழியை இழுத்துக்கொண்டு நீலவேணி ஓடினாள்.

பிரான்சிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வருகின்ற கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சுவதற்கும், பழுது பார்ப்பதற்கும், கப்பற்கட்டுவதற்கும் வசதியாக கடல் நீர் திறக்கபட்டு ஒரு வாய்க்காலாக தளம் நீண்டிருந்தது. அகன்ற ஆழமான அவ்வாய்க்காலில் சிறியதும் பெரியதுமாக படகுகள் கரையையொட்டி நிறுத்தபட்டுர்ந்தன. கால்வாயில் அலைகளாலும் நீரோட்டங்களாலும் கொண்டுவந்து நிரப்பப்படும் மணலை ஓர் அகழ்வாரியால் தூர்வாரிக்கொண்டிருந்தார்கள். நீலவேணியும் தெய்வானையும் அதனைவேடிக்கைப் பார்த்தவாறு நீர்க்கரையையொட்டி சிறிது நேரம் நின்றிருப்பார்கள். திடாரென்று மண் சரிய ஆரம்பித்தது. தன்பக்கத்தில் நின்றிருந்த தெய்வானையைக் காணாது திகைத்த நீலவேணி, மண்ணோடு கால்வாயில் சரிந்துகொண்டிருந்த தோழியைக் கண்டதும் பதறிவிட்டாள்.

‘ஐயோ ஒடிவாருங்களேன்… காப்பாற்றுங்களேன்.. ‘

எல்லோரும் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். சற்றுமுன் கண்ட வாலிபன் பொன்னனைக் அக்கூட்டத்தில் காணவில்லை. எங்கே போய்த் தொலைந்தான். இவள் நின்றிருந்த திசையிலிருந்து, மாலை நேர சூரிய ஒளியால் மற்றவர்களைக் காண்பதில் சிரமமிருந்தது. பொன்னன் இருந்திருந்தால் இவள் குரலைக் கேட்டு உதவிக்கு வந்திருப்பான். நடப்பதைக் கண்ணுற்ற ஓரிருபறங்கியர்கள் சிரிக்க, மற்ற இந்தியர்கள் பரிதாபமாகக் கைகளைப் பிசைந்துகொண்டிருந்தார்கள். அவர்களை மேற்பார்வையிடுகின்ற வெள்ளையன் முகத்தைச் சுருக்கிக்கொண்டு இந்தியர்களை முறைத்தான்.

‘ ‘ஆகட்டும், ம்…உங்கள் வேலையைப் பாருங்கள் ‘ என்று கர்ஜித்த அவன் அதிகாரக்குரலுக்கு அஞ்சி வேலைகள் தொடர்ந்தன. தளவாடங்களை மாடுகள் பூட்டியவண்டியொன்றில் ஏற்றிக்கொண்டிருந்த வயதுமுதிர்ந்த ஆப்ரிக்கரொருவர் நீலவேணியின் அபயக்குரல் கேட்டு ஓடோடிவந்தார். சரிந்துச் செல்லும் தெய்வானையைத் தூக்கிவிடுவதற்காக முடிந்தமட்டும் குனிந்துபார்த்தார். ஓடிவந்த பறங்கியன் அவர்முதுகில் சாட்டையைச் சொடுக்கினான். சுளீரென்று அவர்மேல் விழுந்த அடிகண்டு நீலவேணியின் உடல் நடுங்கியது.

நீலவேணிக்குப் பயம் சேர்ந்துகொண்டது. செய்வதறியாது திகைத்தாள். இன்னும் ஒருசில நாழிகைகளில் தெய்வானை இவள் கண்ணெதிரேயே சமாதி ஆகிவிடக்கூடிய அபாயம்.. மண்டியிட்டு தலையிலடித்துக்கொண்டு அழுதாள்..

எங்கிருந்தோ அவன் ஓடிவந்தான், அவன் சற்றுமுன்பு கதைத்த பொன்னன் அல்ல. பறங்கியன். இளைஞன். அவனது நீண்ட வலதுகரம் சரிந்து கொண்டிருந்த பெண்ணை தடுத்துநிறுத்த, பின்னர் இருகரத்தையும் தோளின்கீீழ்க் கொடுத்து தூக்க, அடுத்தகணம் தெய்வானையைத் தன் பரந்தமார்பில் சுமந்தவாறு பொத்தென்று கரையில்விழுந்தான். நீலவேணி அதிர்ச்சியிற் சிலையாகி நின்றாள்

/தொடரும்/

Series Navigation