நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 44

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்

-திருவள்ளுவர்

கடந்த ஒரு மாதகாலமாகவே புதுச்சேரி பட்டணம் மினுக்கிக் கொண்டிருக்கிறது, விசேடகால செறுக்கேறி, ஒய்யாரத்துடன் பொழுதை நகர்த்துகிறது. பிரெஞ்சு முடியாட்சியின் கீழ்வந்த கிழக்கிந்தியக் கும்பெனியின் குவர்னர் வீட்டுக் கல்யாணத்தினாலேற்பட்ட களை.

கோட்டையும், வெள்ளையர் குடியிருப்பும் திருவிழாக்கோலம் பூண்டு ஒருகிழமை ஆகப்போகிறது. பிரெஞ்சு கிழக்கிந்தியக் கும்பெனிக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளும், ஊழியர்களும், சொல்தாக்களும், இந்தியச் சிப்பாய்களும், தமிழர்களில் பெரியமனிதர்களும் வேறுவேலைகளில்லாமல் நாள் முச்சூடும் கோட்டையைச் சுற்றிவந்தார்கள்.

மேளவாத்தியம், தீவட்டி, வாணவேடிக்கை அமர்க்களத்துடன் ஆள்சுமை போட்டுவித்துக்கொண்டு, புதுச்சேரி பட்டணத்து தமிழரிலே பெரிய மனுஷர்களான கனகராய முதலியார், ஆனந்தரங்கபிள்ளை, கும்பெனிவர்த்தகம் சேஷாசல செட்டியார், குண்டூர் ரவணப்பசெட்டியார், சலத்து வெங்கடாசலசெட்டியார், சவுளிக்கடைகாரர், ஆகியோர் வளவுகளிலிருந்தும், கும்பெனியோடு அன்யோன்யமாகவிருந்த டக்கே சாயபு, சந்தாசாயபு மகன், படே சாயபு ஆகிய துலுக்க ராசாக்களிடமிருந்தும், அவரவர் வசதிக்கேற்பவும், கும்பெனியிடம் எதிர்பார்க்கின்ற சலுகைகளுக்கும் செளகரியங்களுக்கும் ஏற்ப, வரிசைகள் வெகுமானங்களென்ற பெயரிலே: பொன், வெள்ளி ஆபரணங்கள், பட்டு சுருட்டிகள், சர்க்கரை, கற்கண்டு, திராட்ஷைப்பழம், வாதாம்காய், சாதிக்காய், சப்பாத்தி, லவங்கம், பழவகைகள், அரிசி, பருப்பு, ஆடு, கோழி என சகலமானதும் ஊர்கோலமாகக் குவர்னர் வீட்டிற்குப் போனது.*

பகலில் வெகுமான, வரிசை ஊர்கோலங்களையும், இரவில் நான்காம் சாமம்வரை சாவடிசந்திகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாரை தப்பட்டை, தவில் நாயணத்தோடு நடந்த தாசிகள் ஆட்டத்தையும் விழித்திருந்து பார்த்த குடியானவர்கள், நித்திரை மறந்து இருந்தார்கள்.

நேற்றைய தினம் கல்யானம். வீதி முழுக்க நாணற் புற்கள் தெளித்திருந்தார்கள். காலமே கோவிலுக்குச் சென்று மோதிரம் மாற்றிக்கொண்டபோது, பீரங்கியை மிதமில்லாமல் சுட்டார்கள். முன்னிரவுக்கு கம்பவாணங்கள் நட்டு, வானவேடிக்கை நடந்தது. விருந்திற்குப் பிறகு, விடியவிடிய ஆடிக்களைத்தார்கள். இன்றைய தினம் மத்தியானம் மறுபடிம் வெள்ைளைக்காரர் சகலமான பேருக்கும் விருந்து கொடுத்து, முன்னிரவில் நேற்றுபோலவே வாணவேடிக்கை. பின்னிரவுக்கு, ‘பால் ‘(Bal) நடனம் ஏற்பாடாகி இருக்கிறது.

கோட்டைக்கும் குவர்னர் வீட்டிற்குமாக நீட்டிப் போட்டிருந்த பந்தல், குவர்னர் வீட்டெதிரில் விசாலமான கொட்டகைப்பந்தலாய் முடிந்திருக்கிறது. நீட்டியபந்தலுடைய உள்விதானம் தடித்த வெண்ணிற வில்லூர்தி பட்டினால் மூடப்பட்டிருக்கிறது. அதற்கு அழகுசேர்க்கின்றவகையில், அடுக்குத் தீபங்கள், கிளை விளக்குகள். மையத்தில் நடைபாதை அமைத்து, அளவாய்ப் பாரசீகத்து இரத்தினம் கம்பளம் விரித்திருக்கிறது. கொட்டகைப்பந்தல் இன்றைக்கு குவர்னர் துய்ப்ளெக்ஸ் குமாரத்திகளின் திருமணத்தையொட்டி பால் (Bal)நடன அரங்கமாக அவதாரமெடுத்திருக்கிறது. வீட்டையொட்டி இசைவாத்தியங்களுக்காக ஒரு மேடை. விருந்தினர்களின் தாகவிடாயைத் தவிர்ப்பதற்காக சகவிதமான சீமைச் சாராயங்களும் நொறுக்குத் தீனியுமாக மறைவாய் ஒருபகுதி. கொட்டகையின் முகப்பில் மஞ்சள் வண்ணச் சீலைகள் காற்றில் அலைஅலையாயசைந்து ஜாலவித்தைகள் செய்ய, அவைகளுக்கு அழகூட்ட வெள்ளிவண்ணப்பூக்கள். இசைவாத்தியங்களுக்கான மேடையும் அவ்வாறே அலங்கரிக்கபட்டிருக்கிறது. கொட்டகையின் ஓரத்தடுப்புகளும், தட்டிகளுங்கூட அலங்காரத்திலிருந்து தப்பவில்லை. கொட்டகையின் உள்விதானத்தினை பிரான்சு நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த பின்னல் வேலைப்பாடுகள் கொண்ட மெல்லிய மஸ்லின் துணிகளையும், இந்துதேசத்து ஊதாவண்ணப் பட்டினையும் கொண்டு சிங்காரித்திருந்தார்கள். இதுபோதாதென்று சோபைகூட்ட தமிழர்கள் வழக்கபடி தோரணங்கள், மாவிலைகள். பந்தலையொட்டி கூண்டுகட்டித் தொங்கவிடப்பட்ட விளக்குகளும், உட்பகுதியிலிருந்த எண்ணற்ற மெழுகுவர்த்திகளும் உமிழுகின்ற ஒளி. இந்து தேசத்துச் சந்தணமும், ஜவ்வாதும், சாராய நெடியுடன் கலந்து, பழக்கமற்ற நாசிகளைச் சிரமப்படுத்துகின்றன.

கிலாவ்சனும் (Clavecin)** வயலினும் இணைந்து எழுப்பிய இசை பந்தலெங்கும் நிரம்பி வழிகிறது. அவ்விசைக்கேற்ப, ஆணும்பெண்ணுமாக, துரைத்தனக்காரர்களும் துரைசானியார்களும் அணைத்தவண்னம் கால்களைக் முன்னும் பின்னுமாக அசைத்து தளுக்காக நடனமிடுகிறார்கள். பறங்கியர் நடனக்கும்பலில் பிரெஞ்சு கிழக்கிந்திய கும்பெனியின் திரெக்தர்கள், ஆலோசகர்கள், வியாரிகள், குமாஸ்தாக்கள், லியோத்தனான், சூ லியோத்தனான் அவர்களது பெண்ஜாதிகள் எனவிருந்தக்கூட்டத்தில், பெர்னார் குளோதானும் இருந்தான். விருந்துக்கென்ற விசேட ஆடைகள் பட்டு சாட்டான், வெல்வெட்டென்று தயாரிக்கபட்டிருந்தன. பறங்கிப் பெண்கள் இன்றைக்கு அவற்றால் கூடுதலாக ஜொலிக்கிறார்கள். விலங்குகள், பறவைகள், மனிதர்களின் தோற்றமுள்ள பொய்முகங்கள், பால் நடனத்திற்கெனப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டவை அவர்கள் அடையாளத்தை மறைத்திருந்தது. இப்பொய்த்தோற்றம், எல்லைமீறுகின்ற தைரியத்தினை அவர்களுக்குக் கொடுத்திருந்தது. சிலர் பால்நடனத்திலுள்ள உண்மையான விருப்பத்தின்பேரில் ஆட, வேறுசிலர் பால்நடனத்தை காரணமாகக் கொண்டு, கண்ணிற்படுகின்ற ஆணிடமோ பெண்ணிடமோ தாபத்தை ஓர் அளவுடன் கையாளுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் கணவர்மாரையோ, மனைவிமாரையோ சுலபமாய் ஏமாற்றிவிட்டு மறைவிடங்களைத்தேடி ஒதுங்குகின்றார்கள்

பெர்னார் குளோதன் ஆடிமுடித்தக் களைப்பில், ஓர் இருக்கைத் தேடி அமர்ந்தான். நேற்றய இரவும் விருந்து நடனமென்று கலந்துகொள்ளவே உடம்புக்கு முடியாமல் இருக்கிறான். காலையிலிருந்து மறுபடியும் அந்தக் குரல் கேட்கிறது. காலையில் உறக்கத்தினின்று விழிக்கும்போதே மண்டைக்குள் பார்த்திபேந்திரன்.பார்த்திபேந்திரன் எனக் கூவி அழைக்க ஆரம்பித்தாயிற்று. சுற்றிச்சுற்றி வருகிறது, தொட்டு விளையாடுகிறது. ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறது, திடாரென்று காணாமற் போகிறது. இவன் தொலைந்ததென்று நிம்மதியாய் சாய்வு நாற்காலியில் அமர, திடாரென்று இவனைப்பிடித்து உலுக்குகிறது. இந்த விளையாட்டிற்கு மத்தியிலும் உறங்கி இருக்கிறான். இவனது ஊழியர்கள் எல்லோருக்கும் கடந்த இருவாரங்களாக ஓய்வு. துபாஷ் பலராம்பிள்ளை திருவண்ணாமலைவரை இவனிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு போயிருக்கிறார். மாறன் உடன்பிறந்தவளுக்குக்கான கல்யாண முஸ்தீபுகளில் இருக்கிறான்.

இன்றைய தின இரவு நடனத்திற்கு வராமல் இருந்துவிடலாமா என்று கூட நினைத்தான். நேற்று பின்னிரவு களைத்து புறப்பட்டபோது மதாம் குவர்னர், இரவு விருந்திலும் நடனத்திலும் அவசியம் கலந்துகொள்ளவேணுமென வற்புறுத்தியிருந்தாள். ஆச்சரியமான பெண்மணி. ஒரு மாதத்திற்கு முன்பு குவர்னர் மதாமைச் சந்தித்திருந்தது நினைவுக்கு வந்தது. குவர்னர் அழைத்திருந்ததாகச் சிப்பாயொருவன் இவன்வீட்டிற்கு வந்து சொல்ல, வந்திருந்தான். அழைத்திருந்தது என்னவோ மதாம் ழான்ன்***. இவனை உள்ளே வரச்சொல்லி ஷேம இலாபங்கைளை விசாரித்தவள், கிழக்கிந்திய கும்பெனியில் பெர்னார்குளோதனுக்கு நல்ல எதிர்காலமிருப்பதாகவும், அதனை ஒரு இந்து தேசத்துப் பெண்ணை கல்யானம் பண்ணிக்கொண்டு கெடுத்துக்கொள்ளவேணாமே என்கிறாள். சம்மதிசொன்னால், தன்னுடைய இளையகுமாரத்தியை இவனுக்குக் கல்யாணம் கட்டுகிறேன் என்றவள், அவ்வாறில்லையெனில், எவளாவது ஒரு கிறித்துவ மங்கைகைக்கு மோதிரம் அணிவிக்கவேண்டுமேயன்றி ஒரு காப்ரி பெண்ணுக்கு அல்ல, என்பதாக அவள் கூறிமுடித்தபோது அதிலிருப்பது அக்கறையா, எச்சரிக்கையா என்பதை இவனால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை.

பின்முதுகில் தோளருகே வலி கண்டது. இந்தக்கூட்டத்தில் கப்பித்தேன் தெலாமரும், அவனது இந்திய மனைவியும் இருப்பார்களா ? என யோசிக்க ஆரம்பித்தான். தோளிலிருந்த வலி மெல்ல தலைக்குள் பயணிப்பதைப் போன்று உணருகிறான். எதிரே அமர்ந்திருந்த இருவர் சாராயமும் நொறுக்குத் தீனியுமாக இருக்கின்றார்கள். அதிலிருந்த ஒருவன் தூரத்தில் நடனாமடிய ஒரு ஜோடியைக் குறிவைத்துப் பேசினான்.

‘அவள் யாரென்று தெரிகிறதா ? ‘

‘ஆடைக்குள்ள டாம்பீகத்தையும், கவர்ச்சியையும் பார்க்கின்றபோது அவள் நிச்சயம் மதாம் துய்ப்ளெக்ஸாகவோ, அல்லது குவர்னருக்கு இரண்டாமிடத்திலிருக்கும் பிரபு லெகு என்பவரின் பாரியாளாக இருக்கவேணும் ‘

‘சரியாகவேச் சொல்லுகிறாய். அப்பெண்மணி குவர்னரின் பாரியாள், மதாம் ழான்ன். அவளை அணைத்துக்கொண்டு ஆடுபவன் பிரபு லெகு. ‘

‘அதிலென்ன தவறு ? ‘

‘அந்தப் பெண்மணியை அறிந்தவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள். ‘

‘ஏன் ? ‘

‘இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே துய்ப்ளெக்ஸ், கும்பெனியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு முதன் முறையாகப் புதுச்சேரிக்கு வந்திருந்த நேரம், ஒருமுறை, பூர்போன் தீவுவரைப் போகவேண்டியிருந்தது. அங்கே பழைய குவர்னரான துலிவியே (Dulivier)வைச் சந்தித்திருக்கிறான். வாலிபன் துய்ப்ளெக்ஸின் கெட்டிக்காரத்தனத்தின்மீது பிரியப்பட்டு, அவர் 400 பகோடாக்களைக்(Pagodes)**** கொடுத்திருக்கிறார். திரும்பி வந்த துப்ளெக்ஸ், அவரைவிட வயது மூத்த, ழாக் வேன்சான் என்பவரோடு சினேகிதமானார். இருவரும் சேர்ந்து வியாபாரம்பண்ணுவதென முடிவெடுத்தார்கள். துலிவியே கொடுத்த பணத்தில் 300 பகோடாக்களை இவரது பங்காக முதலீடுசெய்து வங்காளத்திலிருந்து பட்டும், பிரெஞ்சுத் தீவிலும், பூர்போன் தீவிலும் நிலபுலங்களும் வாங்குவதென இருவரும் தீர்மானித்தார்கள் ‘ #

‘என்னப்பா நீ மதாம் துய்ப்ளெக்ஸ் கதையைச் சொல்வாயென்று நினைத்தால், மிஸியே துய்ப்ளெக்ஸ் குறித்து பேசுகிறாய் ? ‘

‘அவசரப்படாதே, இப்படி நான் சுற்றிவளைத்து மூக்கைத் தொடுவதற்குக் காரணமிருக்கிறது ‘

‘சரி சரி மேலே சொல்லு.. ‘

‘இந்த வியாபாரக் கூட்டணியில், ழாக் வேன்சான் விலகிக்கொள்ள, அவரது இடத்தில் அப்ஸரஸ் மாதிரியாகவிருந்த அவரது இளம்மனைவி சேர்ந்துகொள்ளுகிறாள். தற்செயலாக அந்தக்கூட்டணியில், அந்த சமயம் ‘லெ பொந்திஷெரி ‘ கப்பலின் கப்பித்தேனாகவிருந்த லாபூர்தொனே சேர்ந்துகொள்ள, பணத்திலும் பதவியிலும் மோகங்கொண்டிருந்த ஒரு மூவர் கூட்டணியாக அவதாரமெடுத்தது. எல்லா தில்லுமுல்லுகளும் செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். அப்போதே துய்ப்ளெக்ஸ் மீது, கும்பெனி செலவிலே வருமானத்தைப் பெருக்கிக் கொண்டதாகக், குமாஸ்தா ஒருவன் குற்றம்சாட்டினான். பாரீசிலிருந்த கும்பெனி தலைமை அலுவலகம், இந்தக் குற்றச் சாட்டில் உண்மையில்லையென்று நிராகரித்துவிட்டது. 1731ம் ஆண்டில் சந்திரநாகூர் குவர்னராகத் துய்ப்ளெக்ஸ் நியமனம் செய்யப்பட, புதுச்சேரியில் சம்பாதித்து வைத்த சொத்துக்களையும் நண்பர்கைளையும், குறிப்பா ழாக் வேன்சானின் இளம் மனைவியையும் பிரிவதற்கு, அவர் நிறையவே மனவேதனைப்பட்டார்.#

‘பிறகென்ன நடந்தது.. ‘

‘அவர்களுக்கிடையேயான பிரிவு இரண்டு ஆண்டுகளே நீடித்ததென்று சொல்லவேணும். துய்ப்ளெக்ஸ்க்கும் இப்படியானவொரு புத்திசாலிப் பெண்மணியின் உறவைத் துண்டித்துக்கொள்ள விருப்பமில்லை. இங்கே இவளும் துய்ப்ளெக்ஸ் மீதான பிரீதியில், தன்வயதுபோன புருஷனை இழுத்துக்கொண்டு, சந்திர நாகூர்ப் போய்ச் சேர்ந்தாள். என்ன நடந்ததோ, ஒருநாள் திடாரென்று புருஷன்காரன் இறந்துபோனான். அதன் பிறகு இரண்டாண்டுகள் காத்திருந்து அந்த இளம்பெண்ணும், துய்ப்ளெக்ஸும் திருமணம் செய்துகொண்டார்கள். அந்தச் சாகஸக்காரி வேறு யாருமல்ல, சாட்ஷாத் ழான்ன் தான் அவள். போனவருடம் ஜனவரி மாதம் பிரெஞ்சு கிழக்கிந்திய கும்பெனியின் பிரதான தளபதியாகவும், புதுச்சேரி நிர்வாகசபையின் அதிபதியாகவும், நியமனம்பெற்ற துய்ப்ளெக்ஸ் சந்திரநாகூரிலிருந்து கப்பலில் வந்திறங்கியபோது, இவர்கள் இருவரையும், புதுச்சேரி கும்பெனியே அதிசயத்துடன் பார்த்தது.# பதினோறு பிள்ளைகள் பெற்றவள்போலவா அவள் உடம்பிருந்தது அடடா…

‘மெதுவாய்ப் பேசு.. எதிரே இருப்பவன் கவனம் நம்மிடம் உள்ளதுபோல தெரிகிறது.. ‘

கூட்டாளியின் எச்சரிக்கை, அவனைப் பயமுறுத்தி இருக்கவேண்டும். குரலைத் தாழ்த்திப் பேசுகிறான்.

‘இவர்கள் புதுச்சேரி பட்டணம் வந்த நாளிலிருந்து வந்து குவியும் வெகுமானங்களைப் பார்த்தீரா ? கும்பெனிக்கு வருமானம் உண்டோ இல்லையோ, இவர்களது வருமானத்திற்காக எல்லா உபாயங்கைளையும் இந்தப் பெண்மணி கையாளுகிறாள் ரங்கப்பிள்ளையின் வார்த்தை ஜாலங்கள், இவளிடமாத்திரம் எடுபடவில்லை என்பதை அறிவீரா. அந்தரங்கமாக இவளொரு அரசாங்கமல்லவோ நடத்துகிறாள். அதற்கு மிஸியே லெகு, பிரான்சுவா ரெமி, பெத்ரோ கனகராய முதலியென ஒரு கூட்டமே அவள் பக்கம் இருக்கிறது. ‘

‘இப்போதென்ன சொல்ல வருகிறீர் ?

‘நாளைக்கே குவர்னருக்கு இரண்டாமிடத்திலிருக்கும் மிஸியே லெகு முதலிடத்திற்கு வர சாத்தியமென்றால், இந்தப்பெண்மணி குவர்னர் துய்ப்ெளெக்ஸை உதறிவிட்டுப் போனாலும் ஆச்சரியமில்லை என்கிறேன். ‘

எதிரே இருந்த நபர்கள் பேசிமுடிக்கவும், பெர்னார் குளோதனின் தலைவலி தன்வேலையைக் காட்டத் தொடங்கியது. தன் குடியிருப்பிற்குத் திரும்பலாமென்று நினைத்தான்.

‘பார்த்திபேந்திரா.. !

மறுபடியும் அக்குரல், பெண்குரல். குவர்னர் பாரியாள் ழானின் குரலைப் போன்று இருக்கிறது. மற்றொரு சமயம் தெய்வானையின் குரலின் சாயல். இரண்டுமே கற்பனையாகவிருக்கலாம். சிறிது நாழிகைக்கு முன்னாலே, இருமனிதர்களின் உரையாடலை, கேட்க நேர்ந்ததாலே மதாம் ழானென்றும், எந்த நேரமும் தெய்வானையின் நினைப்பிலிருப்பதாலே தெய்வானையின் குரலென்றும் வீணாகக் கற்பனைசெய்துகொள்ளுகின்றேனோ. நான்கு திசைகளிலும் திரும்பிப்பார்க்கிறான். வந்திருந்த விருந்தினர்கள், தங்கள்பாட்டுக்கு இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இசைத்துக்கொண்டிருந்த கிளாவ்சனும், வயலினும் சங்கீதத்தை மிக உச்சத்திற்கு அழைத்துச் சென்று அமைதியாகின்றன. பிராவோ! உட்கர்ந்திருந்தவர்களும், மேடைக்குப் பின்னெ சாராயத்தில் மூழ்கி இருந்தவர்களும் கைக்கொட்டி மெச்சுகிறார்கள். இசைக் கலைஞர்கள் தங்கள் வாத்தியக்கருவிகளை அருகே வைத்துவட்டு, அவ்வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்கின்ற வகையில் மார்பிற்குக் குறுக்காக முழங்கையினை மடித்து மூன்றுமுறை குனிந்து நிமிருகின்றார்கள். சிலர் மதுப்பரிமாறுகின்ற இடம் நோக்கி ஒதுங்குகின்றார்கள். சிலர் உரத்து சிரிக்கின்றார்கள். சற்று முன்னாலே, இவனுக்கெதிரே இருந்த மேசைகளில் உட்கார்ந்திருந்த இரண்டுபேரையும் காணவில்லை.

பார்த்திபேந்திரா..!

இம்முறை குரல் இவனருகிலேயே கேட்கிறது. இவனது தலைக்குள்ளே இருந்து கொண்டு குடைச்சல் கொடுக்கிறது. காதில் நீர் வடிவதுபோன்ற பிரமை. விரல் விட்டுக் காதினைக் குடைந்துகொள்கிறான். அதற்கெனவே காத்திருந்ததுபோல மீண்டும் மீண்டும் பார்த்திபேந்திரா பார்த்திபேந்திராவென எச்சிலொழுக உச்சரிக்கப்பட, தனது காதினை மடித்துத் தேய்த்துக்கொண்டு எழுந்து நடந்தவன், மீண்டும் அமருகிறான்.

இந்து தேசத்துப் பெண்களுக்கேயுரிய வளைக்கரங்களிரண்டு அவன் கழுத்தைப் பிணைந்துகொண்டு, கூந்தல் மணத்தினை இவன் நாசியில் அலையலையாய் இறக்கிய வண்ணம் மீண்டும் மீண்டும் ‘பார்த்திபேந்திரா!.. பார்த்திபேந்திரா! ‘ என்கிறது.

திடுக்குற்றுத் திரும்புகிறான். குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்ற சிவந்த, ஈர அதரங்கள். ரோஜா மொக்காய் நாசி. அதனிருபுறமும் சிறிய மல்லிகை மொட்டாய் மூக்குத்தி, நெற்றியின் மத்தியில் பவளச் சிவப்பில் ஒருபொட்டு. இமைக்க மறந்த மையிட்ட சோகக் கண்கள், கண்ணீர்த் துளிகள் மையிற் கலந்து யோசித்து சிவந்திருந்தக் கன்னக் கதுப்பில் இறங்க அதனைத் துடைக்க மனமின்றி.. அவள்…தெய்வானை.

குரலுக்குரியவள் ஆரென்று மிகச் சுலபமாய் புரிந்துபோகிறது. ஆர்வத்தால், தெய்வானை! நீயா எப்படி ? எப்படி.. எப்படி.. இங்கே ? எனக் கேட்டு நிமிர்ந்தவனை, எழுப்பினாள். எழுந்தான், நடந்தாள். நடந்தான்.

வீதியை அடைத்துக்கொண்டு, இவனையொத்த வயதுடையவன். பெண்மை முகம். வேட்டியைப் பின்புறம் வாங்கி, இடுப்பிற் சொருகி இருந்தான். தலையை முன்புறம் சிரைத்து, பின்புறமிருந்த அடர்த்தியான முடியைக் குடுமியாக்கியிருந்தான். நெற்றியிலும், ரோமமற்றுத் தரிசாய்க் கிடந்த மேலுடல் முழுவதிலும் விபூதிப் பூச்சு. அர்ச்சகன் தோற்றம். குளவிக் கண்கள். கக்கிய பார்வையில் விஷத்தின் நெடி.

‘பார்த்திபேந்திரா வேணாமடா. என்னைச் சங்கடபடுத்துவதில் உனக்கென்னடா சந்தோஷம் ‘, இவனைத் தடுத்து நிறுத்திய அர்ச்சகனிடமிருந்து கெஞ்சலாய் வெளிப்பட்ட குரல் சில நாழிகைகளில் தடிக்கிறது. பின்னர் குதிரை கனைப்பதுபோலச் சிரிக்கிறது. அர்ச்சகனிடமிருந்து உயிர்பிழைக்கவேணும் என்பதுபோலத் தெய்வானை வேகமாய் ஓடுகிறாள். ஓடியவள் மறைந்துபோகிறாள். அவளைத் தொடர்ந்து ஓடிக் களைத்து போகிறான்.

தூரத்திற் கோபுரம் தெரிகிறது.. ஓடுகிறான், அகன்றவீதியில் ஒதுங்கிய அந்த வீடு. பெரிய வீடு. விழல் வேய்ந்த கூரை, மண்சுவர். சுவரெங்கும் வெண்புள்ளிகள் அவற்றைச் சுற்றி எழுதப்பட்ட கோட்டோவியங்கள். இடை இடையே கோழியைப்போல, மயிலைப்போலச் சித்திரங்கள். மத்தியில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தடித்த ஒற்றைக் கதவு. அக்கதவு குறைந்த அளவே திறந்திருக்க அதனை அடைத்துக் கொண்டு மீண்டும்… தெய்வானை

ஒற்றைகதவினை வேகமாய்த் தள்ளிகொண்டு உள்ளே ஓடுகிறான்.

வீட்டினுள்ளே மயன் சிரத்தையுடன் உருவாக்கியதுபோன்றொருக் கட்டில், பஞ்சணை, அதில்சாய்ந்தவண்ணம் தேவதையொத்த பெண்:சுற்றிலும் வண்ணவண்ண உடையில் இளம்பெண்கள் வாத்தியங்களை இசைக்கிறார்கள். மஞ்சத்தில் சாய்ந்திருந்த பெண்ணின் வனப்பில் லயித்து, மெல்ல அவளை நெருங்கிய மாத்திரத்தில், வாத்தியமிசைத்த பெண்கள் மறைந்துபோகிறார்கள். இப்போது, அவனும் அவளும். அவள் இடையிருந்த பட்டுப்பாவாடையின் நாடா இவன் விரல்பட்டதும், தெறித்து அவிழ்கிறது. அவளது உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்க, காத்திருந்த மார்புக் கச்சை தளர்ந்து நழுவுகிறது. இடையில் இவை எதற்கென்று நினைத்தோ என்னவொ, மார்பிலிருந்த முத்தாரமும், கழுத்து அட்டிகையும், கவனமாய் அவளால் கழட்டப்படுகிறது. கழட்டியகைகள் இவனைச் சுட்டுகின்றன. இவனுக்குப் புரிந்ததன் அடையாளமாக, இவன் தன்னுடைய காற்சராயையும், மேற் சட்டையையும் அவசரமாய்க் களைந்தெறிகிறான். பின்னர் மன்மதக்கலையில் தேர்ந்தவன்போலே நிதானத்துடன் அவளைத் தழுவுகிறான். அத்தழுவலுக்கு ஒத்திசைந்து இருவரிடத்தும், உடற் சீவன்கள் உயிர்ப்புடன் ஓட்டமெடுக்கின்றன. அவள் இடை திடாரென எழுந்து துவள்கிறது. இவன் சோர்ந்து விழுகிறான்.

மாறன், பெர்னார்குளோதனை அவசரமாக பார்க்கவேணுமென அன்றிரவு நான்காம் சாமத்தின்போது கோட்டைக்குள் நுழைந்தபோது, நடனமாடிவிட்டு, உடைமாற்றுவதற்காகத் தனது அறைக்குத் திரும்பியிருந்த மதாம் ழான்னிடம், எவனோ ஒரு பறங்கியன் தவறாக நடந்துகொள்ள முயன்றானாம், அவனை சொல்தாக்கள் கைதுபண்ணியிருக்கிறார்கள் என தமிழர் இருவர் பேசிக்கொண்டு செல்வதைக் கேட்கிறான். விழாப்பந்தலின் வெளியே பறங்கியர் கூட்டமாய் நின்றிருந்தனர். கும்பெனி சொல்தாக்களோடு பிரான்சுவா ரெமி, மமதையாய்ச் சிரித்துக்கொண்டு நிற்கிறான். கூட்டத்தில் தன்னை ஒளித்துக்கொண்டு, மாறன் எட்டிப்பார்க்க, அங்கே பெர்னார்குளோதன் பேச்சுமூச்சில்லாமல் கிடக்கிறான்.

/தொடரும்/

* ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

** Clavecin – பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை பியானோவின் இடத்தைப் பிடித்திருந்த இசை பெட்டி.

*** Jean(M), Jeanne(F)

****அக்கால இந்தியாவில் புழக்கத்திலிருந்த தங்க நாணயம்

# Dupleix: Une ambitieuse politique – Rose vincent

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 43

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


The wheel of the good Law moves swiftly on.

It grinds by night and day. The worthless husks it drives

from out the golden grain, the refuse from the flour.

The hand of Karma guides the wheel ;

the revolutions mark the beating of the Karmic heart.

-H. P. Blavatsky

—-

நண்பனே! உன்னை நல்வினை செய்யவொட்டாது தடுக்கும் தடைகளான, பாசத்திலொன்றுதான் ஆணவம். ஆணவம் என்பது அசுத்தம், சிறுமை, அஞ்ஞானம் எனப் பொருள்படும். ஆணவம் அநேக சக்திகளுடையது. உயிர்கள்தோறும் செம்பில் களிம்புபோல் சேர்ந்திருப்பது. உயிர்களின் அறிவை மறைத்து, அஞ்ஞானத்தைப் புகட்டுவது. இறைவனை உணரவொட்டாமல் தடுப்பது. ஆக நான் விடுதலைப்பெற ஆணவமலத்தை உதறுதல் அவசியம்.

எப்போதாவது அலுத்திருக்கும்போது, என்னிடம் வருகிறாய். நீ இளைப்பாறி எழுந்திருக்கின்றபோது, நான் உனக்கென்றே பிரத்தியேகமாகத் தயாரித்த உள்மனப்பிரசங்கங்களுக்கு புலன்களை அடைத்துவிடுகிறாய். எப்போது கதவுகள் திறக்கப்படுமோ அப்போதுதான் எனக்கும் விடுதலைப்யென்பதை உணர்ந்து என்னிடம் இரக்கம் காட்டுவாயா ? என் வீடுபேறுக்கு உன் ஒத்துழைப்பு வேண்டுமடா.. செய்வாயா ?

—-

இருபதாம் நூற்றாண்டு….

வேலுவும் பெர்னாரும் வரவேற்பறையில், ஓலைவாசிப்பில் மூழ்கியிருக்கிறார்கள். பெர்னாரின் பிரான்சுநாட்டு நண்பன் ரிஷார் வெகுதூரம் பிரயாணம் செய்து வந்திருந்தவன் களைப்பில் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறான். அவன் விடுகின்ற குறட்டையொலி சாத்தியிருந்த கதவினையும் கடந்து கேட்கிறது.

வரவேற்பறை, குடியிருக்கும் மனிதர்களின் மரபு சார்ந்த பண்பாட்டினைக் கட்டியப்படுத்தும் களம். அவர்களின் மனம், மொழிகளில் உள்ள வண்ணங்களை அறிய உதவும் குறியீடு. பெர்னார் ஃபோந்த்தெனுடைய வரவேற்பறையில் நமது கவனம்படிய இன்றைக்கு, ஒருசந்தர்ப்பம், ஏற்பட்டிருக்கிறது. இதுவரை, அவனது அவசரக் காரியங்களோடு, அல்லது பிரச்சினைகளோடு தொடர்ந்து பயணிக்கவேண்டிய கட்டாயம் நமக்கிருந்திருக்கிறது.

மாசுமறுவற்று வெள்ளைவெளேர் என்றிருந்த சுவர்களிற் பட்டுத் தெறித்த, மின்சார விளக்கின் மென்மையான ஒளி அறைமுழுக்கப் பரவியிருக்கிறது. வலப்புறச் சுவற்றின் மத்தியில் ஓவியர் வான்காக்கின் ‘இளநங்கை ‘ ஓவியத்தின் நகல், மத்தியிலிருந்த சுவற்றில், அவரது மற்றொரு ஓவியமான ‘மழை ‘யின் நகல். இடப்புறமிருந்த சுவரொட்டி இருந்த புத்தக அலமாரியில், பெர்னாரோடு பணிபுரியும் இந்தியவியல் நண்பர்களின் சிபாரிசில் வாங்கியிருந்த தமிழிலக்கிய நூல்கள், இவனுக்குப் படித்த பிரெஞ்சு எழுத்தாளர்களான கியோம் அப்போலினெர், லூயி அரகோன், பல்ஸாக், மொரீஸ் ப்ளான்ஷோ. புத்தக அலமாரியை ஒட்டியிருந்த காற்றுவாரியின் கதவுகள் திறந்திருந்தும், ஒதுக்கப்படாத பிரெஞ்சுத் திரைசீலைகள் ஒளியை வடிகட்டி அனுப்பிக்கொண்டிருக்கின்றன. வரவேற்பறையின் மத்தியில் பிரம்பு இருக்கைகள். இடையிலிருந்த சிறிய மேசையில், கடந்த வாரத்திய லிபரேஷன் இதழ்.

‘சார் டா.. ‘ – பணியாள் மணி ஆவிபறக்க மூன்று கோப்பைகளில் டா கொண்டுவந்திருந்தான்.

‘சரி வைத்துவிட்டுப்போ. ‘ என்ற பெர்னார், மூன்றவதாக இருந்த கோப்பையைப் பார்த்து, இது யாருக்கென்றான். ‘ரிஷாருக்கென்றால் வேண்டாம். அவனைத் தூங்கவிடு. இப்போதைக்கு எழுப்பாதே ‘யென்றான்.

வேலுவோடு பழக ஆரம்பித்ததும், அதிகமாகப் புதுச்சேரி நகரில் வலம் வர ஆரம்பித்ததும், பெர்னாருக்குப் பால் கலந்த டா மீது பிரியத்தை ஏற்படுத்தியிருந்தது. பால் கலந்து குடித்தாலும், தனது குடியிருப்பிலிருக்கும்போது சீனாவிற் கிடைக்கும் பச்சைத் தேயிலைத்தூளான ‘ச்சே ‘(Tche) தவிர வேறொன்றை உபயோகிப்பதில்லை. நண்பர்களிருவரும் சூடாக இருந்த டாயை ருசித்துக் குடித்து முடித்தார்கள்.

‘வேலு இந்தக்கட்டில் இதுவரை பதினோரு படிகள் படிச்சிருக்கிற. இன்னும் எத்தனை இருக்கிறது ? ‘

‘இந்தக் கட்டில் உள்லதென்னவோ பன்னிரண்டு ஓலைநறுக்குகள். இதுவரை பதினொன்று படித்திருக்கிறோம். இன்னமொன்று பாக்கியிருக்கிறது. படித்தவரையில் உனக்குப் புரிகின்றதா ? ‘

‘மணிப்பிரவாள நடைபோல இருப்பதால், புரிந்துகொள்வதில் சிரமமிருக்கின்றது. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பில் நாம் காண்கின்ற தமிழ் நடை. புரியாதச் சொற்களைக் குறித்துவைத்திருக்கிறேன். இரண்டொருமுறை மறுபடியும் படித்துப் பார்க்கணும். சரி சரி பன்னிரண்டாவது ஓலைப்படியை படித்து முடிச்சுடு. ‘

அருகிலிருந்த மண்குடுவையிலிருந்து தண்ணீரை ஊற்றிக்குடித்துவிட்டு வேலு, முதற்கட்டில் எஞ்சியிருந்த ஓலைநறுக்கை வாசிக்க ஆரம்பித்தான்.

ஓலை -12

‘வாணியின் வார்த்தைப் பாட்டைவைத்துப் பார்க்கிறபோது, இவர்கள் மூவருமே மதுரை நாயக்கர் வம்சத்தின் அரசுரிமைக்கு நடக்கும் சதியில் சிக்கியிருக்கிறார்களென அறியலாச்சுது. வாணியின் தாயாரான குமுதவல்லிக்குத் தன் அருமைப் புத்ரியை மதுரைக்கு ராணியாக ஆக்கிப்பார்க்கவேணுமென்கிற அபிலாஷையிருக்கிறது. நான் வாணியண்டை, அதுவெல்லாம் நடவாத காரியம் என்பதாகச் சொல்லிப்போட்டேன். உண்மையில் அந்தக் கூட்டத்திற்கு நல்லெண்ணம் இருக்குமெனில், கைலாசத்திற்கு முடி சூட்டிப்பார்ப்பார்களா ? என்றும் கேட்டுப்போட்டேன். நானும் வாணியும் அவர்கள் வீட்டுத் தோட்ட வெளியில் பேசியதைத் தேவராசன் ஒட்டுக்கேட்டிருக்கிறான். அவனைத் துரத்திச் சென்றதில் பிரயோசனமில்லை. வாணிமேற்கூட எனக்குச் சந்தேகம் இருக்கிறது, ஒருவேளை அவனது நிர்பந்தத்தாற்றான், அவர்கள்வீட்டு கிணறுவரைக் கூட்டிச் சென்று என்னிடம் பேசியதோ ? இருக்காது. அவ்வாறெனில், வாணி என்னிடம் இயல்பாக வார்த்தையாடியிருக்கமுடியாது. ‘

பன்னிரண்டாவது படியைப்ப் படித்து நிமிர்ந்த வேலு, பெர்னார் பதிலுக்காகக் காத்திருந்தான். பெர்னாரும் அவனை புரிந்துகொண்டு வாய்திறந்தான்:

‘இவ்வோலைக்கும், மற்ற ஓலைகளுக்கும் தொடர்பில்லாமலிருக்கின்றது. பதினோறாவது ஓலையை நீ படித்தபோது, வாணியைச் சந்திக்காமற் புறப்படுவதால் ஏற்பட்ட மாறனின் வருத்தத்தைத் தெரிந்துகொண்டோம். ஆனால் இந்த ஒலை நறுக்கின்படி, வைத்தியர் வீட்டிலிருந்து புறப்பட்டவன், பிறகு வாணியைச் சந்திருக்க வேண்டும். ஆக இதற்கிடையிலுள்ள ஓலைகள் தவறியிருக்கின்றன. அதனாலென்ன, வாணி மாறனிடம் என்ன சொல்லியிருப்பாள் என்பதையும் நம்மால் ஓரளவு யூகிக்க முடியும். ‘

‘உண்மை. இவ்வோலை, நூல்கயிற்றோடு இல்லாமல் தனியாக இருந்ததென்பதால் சில ஓலைப்படிகள் தவறியிருக்கத்தான் வேண்டும். படித்தவரை, ஓலைச்சுவடிகளைப் புரிந்துகொள்வதில் நமக்கு அதிகக் குழப்பமேதுமில்லை. நீ என்ன நினைக்கிற ? ‘

‘ஏற்கனவே சொன்னதுபோல வார்த்தைகளைப் புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தபோதிலும் அதிலிருக்கும் பொதுவான செய்தியை ஓரளவு விளங்கிக்கொள்கிறேன். மதிய உணவிற்கு முன்பாக இரண்டாவது கட்டிலிருக்கும் ஓலைசுவடிகளையும் படித்து விடலாமே ? ஏற்கனவே ஒருமுறை படித்தவன் என்பதால், திரும்பப்படிப்பதற்கு உனக்கு அயற்சியாக இல்லையா ? ‘

‘அப்படியெல்லாம் இல்லை. சொல்லப்போனால் ஒவ்வொரு ஓலைநறுக்கையும் வாசிக்கின்றபோதும், இப்போதுதான் முதன்முறையாகப் வாசிக்கின்ற உணர்வு. படிக்கட்டுமா ?. ‘

இரண்டாவது கட்டிலிருந்த ஓலைசுவடிகளைப் பிரித்து முதல் நறுக்கை வாசித்தான்:

ஓலை -1

பிரத்தியேகமான மாறன் தினப்படி சேதிகுறிப்பு: ருத்ரோத்காரி(1743ம்) வருடம் ஆனி(சூன்)மாதம் 27ந்தேதி வியாழக்கிழமை:

இன்றைக்குக் காலமே பெர்னார்குளோதனை சந்திப்பதென்றும், வைத்தியர் வளவிற்குப் போய்வந்த சங்கதிகளை மேலெழுந்தவாரியாகத் தெரிவிக்கவேணுமென்றும் தீர்மானித்துப் புறப்பட்டுப் போனேன். தமிழர் குடியிருப்பின் எல்லையிலிருந்த வேதபுரீஸ்வரர் கோவிலைத் தாண்டி கிழக்கிலிருக்கும் வெள்ளைக்காரர் குடியிருப்பிற்குள் நுழைந்தபோது, நேற்றுப் பெய்திருந்த கோடைமழையினால் பெரியவாய்க்காலில் தண்ணீர் நிரம்பி ஓடுகிறது. குவர்னர் துரை அவர்களின் குமாரத்தி இரண்டுபேருக்கு ஆடிமாதத்தில் கலியாணமென்று பேச்சென்பதால், கோட்டைக்கு வெளியே புதுச்சேரி பட்டணத்தின் பெரிய மனிதர்களின் பல்லக்குகள் தெரிகின்றன. கிறித்துவர்களுக்கு ஆடிமாதத்தில் கலியாணஞ்செய்யலாம் போலிருக்கிறது. பிறகு எப்போதும்போல சிப்பாய்கள், தளவாய் நடமாட்டம். சென்னைபட்டணம் திசையிலிருந்து வந்த தபால்காரன், கோட்டைவாயிலில் நுழைகிறச்சே, அதென்ன பிரான்சுவா ரெமியானவன், சொல்தாக்களுடன் வாயில்மட்டாய்வந்து இவனைக் கட்டிக்கொண்டு சம்பாஷிக்கிறான். காவலர்களும் அவனை சோதனைபோடாமல் உள்ளே அனுப்புகிறார்கள்.

ஓலை -2

பெர்னார்குளோதன் வீட்டிலே, – வீதியை ஒட்டியிருந்த கதவுக்குப் பின்புறம், வெளியில் வேப்பமரத்து அடியிலே நாற்காலில் அமர்ந்திருந்தான், எதிரே பாங்குபேரிலே துபாஷி பலராம்பிள்ளையும், சன்னாசியும் உட்கார்ந்திருந்தார்கள். பெர்னார் குளோதன் கொஞ்சநாட்களாக சுகவீனமாய் இருப்பதாக அறிகிறேன். எவரோ, பெர்னார்மீது ஏவலிட்டிருக்கிறார்களென்றும், அதனை எடுப்பதற்கென்று ஒரு மந்திரவாதியை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தூபாஷ் சொல்லச்சே, துரை கலகலவென்று சிரிக்கிறான். அவனுக்கதில் நம்பிக்கையில்லையென தெரிகிறது. கும்பெனி தொக்தரிடம் வைத்தியம் பார்த்துக்கொள்வதாகச் சொல்லுகிறான். சித்தெநாழி இஷ்டலாபங்கள் பேசியிருந்த பிற்பாடு, பெர்னார் என்னிடம், கள்ளிப்பெட்டி ஓலை நறுக்கினைத் துபாஷ் பலராம்பிள்ளைத் தமிழ்ப்படுத்தின விபரமென்று ஓலைப்படியொன்றினைக் என்னைப் படிக்கச் சொல்லுகிறான். அதைப்படித்துப் பார்க்குமிடத்தில் அதிலே எழுதியிருந்த வயணம் என்னவென்றால்

ஓலை – 3

ஸ்ரீ ராமஜெயம் வைத்தீஸ்வரன்கோவில் நாடிஜோதிடரும், ஜோதிடவல்லவராகிய ஆ.பா.ரா. ஜலகண்டேசுவர குருக்களின் அபிமான புத்திரர் சிதம்பரக் குருக்களால் எழுதப்பட்ட திருச்சினாப்பள்ளி ஸ்ரீ தேவயானி ஜன்ம பத்ரிகா..

ஜனனீ ஜன்ம செளக்யானாம்…. லிக்யதே ஜன்ம பத்ரிகா..ஸ்வஸ்த்தி ஸ்ரீ நிகழும் கலியுகாதி சகாப்தம், தமிழ் பிலவங்க வருஷம் வைகாசி மாதம் எட்டாந்தேதி வியாழக்கிழமை பூர்வபட்ஷம்….இத்யாதிகூடிய சுபயோக சுபதினத்தில், ஜெனனகாலம் காலை 9மணிக்கு. சூரிய உதயாதி நாழிகை 7வினாடி 5க்கு ஸ்ரீ காலத்தில்….கடக லக்கினத்தில் மகாராஜஸ்ரீ விஜயரங்க சொக்கநாதர் நாயக்கர் அவர்கள் பார்யாள் செளபாக்கியவதி காமாட்சி அம்மாளுக்கு, புத்திரி சுபஜெனனம்.

ஓலை -4

வாசித்த மாத்திரம், இவ்வோலை தெய்வானையின் சாதகக் குறிப்பென்று உணரமுடிந்தது. நான் ஏற்கனவே வைத்தியர் மூலம் அறிந்திருந்த கபுறு. பெர்னார் குளோதைனையும், துபாஷ் பலராம்பிள்ளையையும் இந்தச் சேதி அறிந்து தடுமாறிப்போயிருந்தார்கள். குளோதன் என்னிடம், ‘துபாஷ் பலராமப்பிள்ளை இவ்வோலை தெய்வானையின் சாதகக்குறிப்பின் முதற் படியென்று சொல்லுகிறார்,. இதனை எழுதிய ஜோதிடரைச் சந்திப்போமென்றால் தெய்வானைப் பற்றிய விபரங்கள் பூரணமாய்த் தெரியவருமென்கிறார் ‘, என்றான். அதுவன்றி, தெய்வானையின் பிறப்புப்பற்றி அறிய, இவனுக்குச் சிந்தையில் ஒருபக்கம் வியாக்கூலமும், மறுபக்கம் சந்தோஷமும் உள்ளதென்கிறான். அதுவிபரம் தெளிவாய்ச் சொல்லுபடி கேட்கவும், அரசகுடும்பத்தைச் சேர்ந்த தேவயானியை, அன்னியர் மணமுடிப்பதென்பது இந்து தேசத்தில் சுலபத்தில் நடக்கிற காரியமல்லவென்பதால் வியாக்கூலமென்றும், அவள் அரசகுலத்தவள் என்று ஊர்ஜிதமானபடியாலே, வெள்ளைக்கார சனங்கள் தெய்வானையைக் கல்யாணம் செய்ய தடைசொல்லமாட்டார்களென்பதால் சந்தோஷமும் உள்ளதென்றான். சொன்னவன், ‘ வாணியண்டை, சென்றவன் என்ன சங்கதிகள் கொண்டுவந்தாயென்று என்றென்னைக் கேட்டமாத்திரத்தில்,

ஓலை -5

அவனுக்கான சந்தோஷமும், வியாகூலமும் எனக்கும் உண்டென சொல்லவந்தவன், சொல்லவில்லை. வாணியின் தகப்பனும், தேவயானியின் தகப்பனும் ஒருவன் என்கிற சங்கதியை அந்தரங்கமாக மறைத்துப்போட்டு, தொண்டமாநத்தப்பெண்மணி உண்மையில் வாணியின் தாயார் என்பதைமாத்திரம் சொல்லவேண்டியதாகிவிட்டது. வாணிக்கும், தெய்வானை எனவழைக்கப்படும் தேவயானிக்குமுள்ள உருவவொற்றுமைக்கு பதிலை எதிர்பார்த்த பெர்னார் குளோதனுக்கு என்னுடைய தகவல் ஏமாற்றத்தைத் தந்திருக்கவேணும். பிறகவன் விருப்பபடி, குவர்னர் துரையின் குமாரத்திகள் கலியாணம் முடிந்தமாத்திரத்தில், துபாஷுடன் இருவருமாக வைத்தீஸ்வரன்கோவில் ஊருக்குச் சென்று ஜோதிடர் சிதம்பரக்குருக்களை சந்திப்பதென முடிவுபண்ணிணோம்.

ஓலை -6

அதற்கப்புறம், துபாஷ் பலராம்பிள்ளை ஒற்றனான சன்னாசி சொன்ன சேதி, ஆற்காடு துலுக்கருக்கு எதிராகவும், பிராஞ்சு கும்பெனி அரசாங்கத்திற்கு எதிராகவும் அரியாங்குப்பம் ஆறுவளவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அண்டைக்கிராமத்து நாட்டாமைகளோடு, வேலாயுதமுதலியார், சபாபதிப்படையாட்சி, பிரான்சுவாரெமியின் ஆள் தேவராசன் ஆகியோரைக்கண்டதாகவும், அவர்கள் பேச்சு மதுரை நாயக்கர் வம்சம், திருச்சினாப்பாள்ளி அரசியல் என்பதாகவும். அவ்வாறு சொன்னவன், இந்தக் கூட்டத்தின் சகல காரியங்களுக்கும் காரணமானவன் சொக்கேசன் என்கிற துறவிச் சாமியும், அவனது உள்மனதாக இருக்கிற முருகப்பிள்ளையும் என்கிறான். இந்தவிடத்தில், வைத்தியர் தெரிவித்த சேதிகளுக்கும், சன்னாசி சொல்கிற மனிதர்களுக்கும் சம்பந்தமிருக்கவேணுமென்று தெரிவித்து, இவர்களால் தெய்வானையின் உயிருக்கு ஏதேனும் ஆபத்துவரலாமென்கிறேன். என்னத்தைத்தொட்டு ? என்று பெர்னார்குளோதன் கேட்கிறான். அது சமாச்சாரம் பிற்பாடு சொல்லுவேன். நாம் சொக்கேசனைக் கண்கானித்தால் நிறையச் சங்கதிகள் தெரியவரும் என்பதாய்ச் சொல்லிப்போட்டேன்….

.

ஓலை -7

….அதனாலென்ன துறவி சொக்கேசனைத் ஆரென்று உளவுசொல்ல சன்னாசியை அனுப்பிவைப்போமென துபாஷ் சொல்லிப்போட, அவனும் சம்மதிசொன்னான். இந்த நேரத்தில் காலமே கோட்டையில் வழுதாவூர் வாசலில் வைத்து பிரான்சுவா ரெமியைக் கண்ட வயணத்தையும், கும்பெனியில் அவனுக்குள்ள கீர்த்தியையும் பிரஸ்தாபித்தேன். பலராமபிள்ளைக் குறுக்கிட்டு, பிரான்சுவா ரெமி கும்பெனி தளாவாயாக இருக்கின்றானோ இல்லையோ தினப்படி குவர்னரைச் சுற்றி நடக்கிற வயணங்களைத் தெரிவிப்பது, ரங்கப்பிள்ளை மதிரியான மனுஷர்கள் மீது கோள்மூட்டுவதான காரியங்களைக் குவர்னர் பாரியாளிடம் பிசகாமல் செய்கிறான். அதெதனாலெனில்

ஓலை -8

குவர்னரது பாரியாள் ழான், போர்த்துகீசிய -இந்தியப்பெற்றோர்களுக்குப் பிறந்தவள். பிரான்சுவாரெமியும் இவளைப்போலவே இந்தியப் பெண்மணிக்கும் போர்த்துகீசியனுக்கும் பிறந்த தெவடியாள் மகன். இதனாலன்றோ அவர்களுக்குள் அதிகப் பட்ஷமிருக்கின்றது, பெத்ரோ கனகராயமுதலியாரிடம் அவள் காட்டுகின்ற பட்ஷத்துக்கும் அதுவேதான் காரணமென்கிறார் இவரது வார்த்தைகளைக்கேட்டு பெர்னார் குளோதன் தான் அறியாதது எதுவுமில்லை என்பதுபோல இருக்கிறான். அந்த சமயத்திலே குவர்னர் வீட்டிலிருந்து வந்திருந்த சிப்பாயொருவன் பெர்னார் குளோதனைக் குவர்னர் தனது கபினேக்கு உடனே வரவேணுமென்று சொன்னதாகத் தெரிவித்துபோட்டுச் சென்றான். அரைமணித் தியாலத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லிச் குவர்னர் அனுப்பியிருந்த பல்லக்கில் புறப்பட்டுப்போன பெர்னார் குளோதன் சாயங்காலம் ஆறுமணிவரை, திரும்பவில்லை. என் உடன் பிறந்தாள் கல்யாண செலவுக்கென்று இருநூறு வராகன் பெர்னார் குளோதனைக் கேட்கவேணுமென்று நினைத்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பலாச்சுது.

/தொடரும்/

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி

மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை

மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்

ஊத்தைச் சடலம் விட்டே என் கண்ணம்மா உன் பாதஞ்சேரேனோ!

– அழுகுணிச் சித்தர்

—-

நண்பா!.. பிறப்பும் அதனால் வரும் இறப்பும் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பிறப்பும் இறப்பும் இல்லாத ஆன்மா தன் உண்மை இயல்பை அறியும்போது மரண பயம் அற்றுப்போகும். இதனைத்தான் ஆன்ம விடுதலையென வேதங்கள் கூறுகின்றன. ஆன்மாவான நான் அழிவில்லாதவன். ஐம்பூத சேர்க்கையாலான உன் பருவுடல் மட்டுமே அழிகிறது. உன் வினைப்பயனுக்கேற்ப நான் வேறோர் உடலைத் தேடவேண்டியிருக்கிறது. நின் ஆசைகளும், அவற்றின் விளைவுகளான வினைகளும் அற்றுவிடுமாயின் உடல் விட்டு உடல் என்று நான் ஓடத்தேவையில்லை

—-

இருபதாம் நூற்றாண்டு…

இந்தமுறை பெர்னார் கனவில் போர்க்களம் வந்தது. அவனைச் சுற்றிலும் அமளி துமளி. மனித உயிர்களின் அவலக்குரல்கள். ஆனைகளின் பிளிறல். குதிரைகளின் கனைப்பு. களமெங்கும் முனைமுறிந்த வேல்கள், உடைந்த வாள்கள். மனித உடல்கள். இவனும் இவனைச் சார்ந்தவர்களும் உக்கிரம் கொண்டவர்களாய் முன்னேறுகிறார்கள். இவனது கூரிய வாள் எதிர்ப்பட்ட மனிதர்களின் மார்பிலும், தோளிலும் ஆழப்பதிந்து, எழுந்து ஆவேசத்துடன் சுழலுகிறது. பூமியெங்கும் புதிய இரத்தம். இவனைப்போலவே, இவனது போர்வாளுக்கும் உன்மத்தம் பிடித்திருக்கவேண்டும். உடல்களை வீழ்த்திய வேகத்தில், நிணமும் ரத்தமுமாக வெளிப்படுகின்றது. எதிரிகள் பீதியில் இறைந்து ஓடுகிறார்கள். இவன் தரப்பு மனிதர்கள் வெற்றி, வெற்றியென முழக்கமிடுகிறார்கள். இவனுடல் முழுக்க, வெட்டுண்டதால் ஏற்பட்டக் காயங்கள், அவற்றிலிருந்து பீறிடும் ரத்தம். இதுவரையில் இல்லாத அயற்சி உடலில் பரவுகிறது. தனது குதிரையைத் தேடிய கண்களில் பூச்சிகள் மின்னுகின்றன. எஞ்சியிருந்த இவனது படைவீரர்களைப் பார்க்கிறான். இவனைப் புரிந்து கொண்டிருக்கவேண்டும். யானையொன்றினைக் கொண்டு வருகிறார்கள். பாகன் தனது கையிலுள்ள அங்குசத்தால் காதருகே குத்துகிறான். யானை தனது முன்னங்காலை உயர்த்தி வளைத்து இவன் ஏறுவதற்கு ஒத்தாசை புரிகிறது. இடது காலைப் பதித்து பாய்ந்து, பாகன் ஒதுங்கி வழிவிட கழுத்து பின்னர் முதுகென்று இருக்கை கிடைக்கிறது. குதிரைகள் சூழ ஆனை புறப்படுகின்றது. இவன் மனதுக்குள் முன் எப்போதும் காணாத உற்சாகம்.

விழித்துக்கொண்டவன், சன்னலருகே நின்று கிழக்கு திசையில் கடற்கரையைப் பார்க்கிறான். பொழுது பலபலவென்று விடிந்துக்கொண்டிருந்தது. சாம்பலும் வெண்மையும் கலந்த அடிவானம். அதில் முதுகைத் தேய்த்துக் கொண்டு இரண்டொரு பறவைகள். வங்காள விரிகுடா ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாகத் தனது நீலச்சேலையின் மடியில் கட்டிவைத்திருந்த மல்லிகைப் பூக்களை, நில அரிப்பைத் தடுக்கவென்று கரையில் போட்டிருந்த கருங்கற்களில் கொட்ட அவை சிதறி விழுகின்றன. தலையை இருசடைகளாகப் பின்னி மஸ்லின் தலைபாகைக்குள் பத்திரப்டுத்தியும், மார்புப் புறாக்களை காட்டன் சட்டையில் பதுக்கியும், தொடைதெரிய காட்டன் கால்சட்டையும், நேரிட்ட பார்வையுமாய் சைக்கிளில் செல்லும் துலக்கிய பித்தளைபாத்திரமொத்த அரவிந்தர் ஆஸ்ரமப் பெண்கள். மருத்துவர் ஆலோசனைக்காக, மரணத்திற்குப் பயந்து, நடை பழகும் தொப்பை ஆசாமிகள். சற்று இடவெளிவிட்டு, மூச்சிறைக்க நடக்கும் அவர்களது இரட்டைநாடி மனைவிமார்கள். எப்போதும்போல எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துகொண்டு பிணி, மூப்பு, மரணபயமற்ற காந்தி சிலை.

இரவு முழுக்க பெர்னார் தூங்கவில்லை. போதாதற்கு வழக்கம்போல, இவனுக்கென்று வருகின்ற கனவுகள் வேறு. மனிதன் தூங்காமலிருக்க காரணங்களுக்கா பஞ்சம். காதல்,கடன்,பசி,பணம்,மூப்பு,நோய்,பயம்,பேரிழப்பு,பெருமகிழ்ச்சி என வரிசையாயிருக்கின்றன. இவற்றுள் எது, இரவு தான் தூங்காமல் விழித்திருந்ததற்குப் பொருத்தமாயிருக்குமென பெர்னார் யோசித்துக் கொண்டிருக்கிறான்.

முதற்காரணமாக: வெகு நாட்களுக்குப் பிறகு வேலுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்ததைச் சொல்லவேண்டும். வேம்புலி நாயக்கரைத் தேடி அலைந்தற்கான பலன் நேற்றுத்தான் கைகூடிற்று என்றான். கிடைத்த செய்தியினால் மனம் பரபரப்பு அடைந்திருந்தது. உடனே வரமுடியுமா ? என்று ஆர்வமாய்க் கேட்டான். மன்னிப்புக் கேட்டுக்கொண்ட வேலு, இன்றைக்கு பெர்னாரைச் சந்திப்பதாக உறுதி அளித்துள்ளான். தன் மூதாதையருள் ஒருவனான பெர்னார் குளோதனின் முடிவினை அறிய ஏதேனும் ஒரு முனைகிடைத்தால் கூட போதும், சிக்கல் அவிழ்ந்துவிடும். அந்தச் சிக்கலின் மறுமுனையில் நிற்பது அவனாகக்கூட இருக்கலாம்.

இரண்டாவது காரணத்தினை, முக்கியத்துவம் பெற்றதில்லையென்றுதான் சொல்ல வேண்டும். இருந்தபோதிலும் அவன் மனதில், சந்தோஷத்துடன் கூடிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. பிரான்சிலிருந்து அவனது பள்ளி நண்பன் ரிஷார் ழான்-தெனி, புதுச்சேரிக்கு வருகிறேன் என்பதாக இன்றைய தினத்தைக் குறிப்பிட்டு, சில நாட்களுக்கு முன்பாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். பெர்னாரோடு லிசே(Lycee – உயர்நிலைப்பள்ளி)வரை ஒன்றாகப் படித்தவன். பிறகு மருத்துவம் படித்து, பிரச்சினைகளுள்ள நாடுகளில் மருத்துவசேவையில் ஈடுபட்டிருக்கும் பிரெஞ்சு நாட்டின் உலக அமைப்பொன்றில் இணைந்து ஆசிய ஆப்ரிக்க நாடுகளெனச் சுற்றிக்கொண்டிருப்பவன். இறுதியாக ஆப்கானிஸ்தானில் இருந்தவன், கடந்த சிலமாதங்களாகத் தாய்நாட்டில் இருந்துவிட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானம் திரும்புகிறான். இதற்கிடையில் தென்னிந்தியாவைச் சுற்றிப் பார்க்க விருப்பப்பட்டு இந்தியா வருகிறான்.

இரவுகளில் தூக்கமின்றி, விடிந்தபிறகு மீண்டும் கட்டிலில் விழுந்து தூங்குவதென்கின்ற தனது சமீபகால வழக்கபடி, பெர்னார் குட்டித் தூக்கம் போட்டுவிட்டு மறுபடியும் விழித்திருந்தபோது, திறந்திருந்த சன்னல்வழியே சூரியனின்பிரகாசமான கதிர்கள் நீண்டு இவனைச் சீண்டிக்கொண்டிருந்தன. அவற்றில் அடர்த்தியாய் குதித்தும், பறந்தும், சுழலுகின்ற தூசிப்படலம். கண்களில் வளையம் விழுந்து, இரப்பைமடல்கள் கீழே இறங்கியிருந்தன. தலை விண்விண்னென்று வலித்தது. டாய்லட்டுக்குள் நுழைந்து கண்ணாடியைப் பார்த்தான். கண்களிரண்டும் நன்கு சிவந்திருந்தன. வைத்திருந்த பன்னீரில் இரண்டிரண்டு சொட்டுகள் விட்டான். மெளத் வாஷ்கொண்டு வாயைக் கொப்பளித்தான். முகத்தைக் குளிர்ந்த நீரில் நனைத்துக் கழுவினான். துவாலையால் அழுந்தத் முகத்தைத் துடைத்துக் கொள்ள, முகம் தெளிவுக்கு வந்தது. சமயலறைக்குள் நுழைந்து பால் கலவாத கறுப்புக் காப்பியை, சர்க்கரை சேர்க்காமல் கோப்பையை நிரப்பிக்கொண்டு திரும்பினான். மெல்ல உறிஞ்ச, சூடு நாக்கைப் பதம் பார்த்துவிட்டது. காத்திருந்து சற்றே ஆறியபதத்தில் குடித்து முடிக்க உடலுக்குத் தெம்பு கிடைத்தது. காட்டனில் அரைக்கால் சட்டையும், மேற் சட்டையும் அவசரமாக அணிந்து தெற்குத் திசையில் இருந்த பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் திசையில் நடக்க தலைக்கு மேலே இந்தியச் சூரியன் காலையிலேயே உக்கிரமாகக் காய்ந்தது.

இன்ஸ்டிடாயூட்டில் நுழைந்தவன் நேராக இந்தியவியற் பகுதிக்குச் சென்றான். அங்கிருந்தவர்களிடம் எவரேனும் தேடிவந்தால் நூலகத்திற்கு அனுப்பிவைக்கவும் எனக்கூறிவிட்டு நூலகத்தில் நுழைந்தபோது மணி காலை ஒன்பதரை ஆகியிருந்தது. பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு, புதுச்சேரியிலிருந்து வெளிவரும் த்ரே-யூனியோன்(Trait -d ‘Union) என்கிற மாத இதழை கையில் எடுத்துக்கொண்டு படிப்பகப்பகுதியில் வந்தமர்ந்தான். வாசிப்பில் கவனம் செல்லவில்லை. நான்கு இந்தியர்களும், இரு ஐரோப்பியப் பெண்களும் தங்கள் மேசையில் புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டு குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள். கண்ணாடிவழியே கடலையும், கடற்கரையையும் பார்த்தான். நீலக்கடல் வெள்ளிக்காசுகளை பரப்பிக்கொண்டு ஜொலிக்கிறது. இரண்டொரு இயந்திரப்படகுகள் வேகமாய்ச் செல்ல, ஒரு சில கட்டுமரங்கள் காட்சிக்குட்பட்டதைபோல அலையின் தாலாட்டில் மெல்ல அசைகின்றன.

‘சார் உங்களைத்தேடிக்கொண்டு ஒருவர் வந்திருக்கிறார். ‘- நூலகர் இவன் காதருகே முனுமுனுக்கிறார்.

‘வேலுவாக இருக்குமோ ? ‘ என்று பெர்னார் திரும்பினான். வந்திருந்தவன் ரிஷார். அவனது நண்பன். எழுந்துசென்று நட்புமுறையில் அணைத்துக்கொள்ள, பிரெஞ்சு முறைப்படி இருவரும் கன்னங்களில் முத்தமிட்டுக்கொண்டார்கள்.

‘ச வா (Ca Va -எப்படி இருக்கிறாய்) ? ‘ – பெர்னார்

‘உய்.. ழெ வே பியன் ஏ துவா ?(Oui.. Je vais bien, et toi ? – ம்.. நல்லா இருக்கேன். நீ ? ‘)- ரிஷார்

‘கொம் துய் பெ லெ கோன்ஸ்தாத்தெ, சே லாந்து. ஒன் நெ பெ பா ஃபேர் ஓத்ர்மான் (Comme tu peux le constater, c ‘est l ‘Inde. On ne peut pas faire autrement. ‘ – எப்படித் தெரியுது ? இது இந்தியா. இங்கே வேறமாதிரி இருக்க முடியாது.) -பெர்னார்

‘ஆ! தூழூர் லெ மேம், தெசிதாம்மான் துய் ந பா சான்ழே..(Ah! toujours le meme, decidement tu n ‘as pas change- ஆ! அப்படியே இருக்கிற. நீ மாறவே இல்லை)-ரிஷார்

நெ ராக்கோந்த் பா தெ சொத்தீஸ். அலோன்சீ.(Ne racontes pas de sottises. Allons -y) எதையாவது உளறிக்கொண்டிறாதே. போகலாம்) – பெர்னார்.

பெர்னார் இன்ஸ்டிடியூட்டில், தன் சக நண்பர்களிடம் சொல்லிவிட்டு, சென்-லூயி (Saint-Louis) வாயில் வழியாகத் தன் நண்பனை அழைத்துக்கொண்டு சாலையில் இறங்கி நடந்தான். சிறிது தூரம் நடந்திருப்பார்கள். இளநீர் விற்கும் பெண்ணொருத்தி, ‘இள நீர் வேண்டுமா ? ‘ என்று கேட்டு ஓடிவந்தாள். ‘சரி. இரண்டு வெட்டும்மா.. ‘ என்ற பெர்னார் ஃபோந்த்தனின் தமிழைக்கேட்ட சந்தோஷத்தில், ஆளுக்கொரு இளநீரைச்சீவி ஸ்ட்ரா போட்டுக் கொடுத்தாள். இருவரும் குடித்து முடிக்க, பத்துரூபாய் நோட்டுக் கைமாறியது. அவள் சந்தோஷமாக வாங்கிக்கொண்டாள். இருவரும் தொடர்ந்து நடந்தார்கள்.

நண்பர்கள் இருவரும், குடியிருப்புக்குத் திரும்பியபொழுது காலை மணி பதினொன்று. ரிஷார் அவசரமாய் ஒரு குளியல் போட்டுவிட்டு, மாற்றாடை அணிந்துகொண்டு வந்தமர்ந்தான். நல்ல பசியோடு இருந்திருக்கவேண்டும், பெர்னார் தயாரித்த ஆம்லெட்டை அவசர அவசரமாகத் தக்காளி சாஸ், ரொட்டியுடன் சாப்பிட்டு முடித்தான்.

இருவரும் அருகிலிருந்த சோபாவில் பேச உட்கார்ந்தார்கள்.

‘பிரயாணமெல்லாம் எப்படி இருந்தது ? ‘

‘பிரச்சினைகள் இல்லை. செளகரியமாக இருந்தது ‘

‘என்ன திட்டங்கள் வச்ச்சிருக்க.. எங்கெங்கே போகப் போற. ? ‘

‘இன்றைக்கு, பயணக்களைப்பு தீர நன்றாகத் தூங்கணும். நாளைக்கும் ஓய்வுதான். நேரமிருந்தால், அரவிந்தர் சமாதியை பார்க்கலாம். நாளை மறு நாள் கிளம்பறேன். தமிழ்நாடு டூரீஸத்தில் ஏற்பாடு செஞ்சிருக்கேன். முதலில் சென்னை அங்கிருந்து காஞ்சீபுரம், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி. பிறகு கேரளாவில் ஒரு வாரம். திருச்சூர்ல ஆயூர்வேத வைத்தியம் குறித்த சில தகவல்கள் தெரிஞ்சுக்கணும். அங்கிருந்து மறுபடி புதுச்சேரி பிறகு சென்னை, நியூடில்லி, கராச்சி, ஆப்கானிஸ்தான். ‘

பணியாள் மணி, மார்க்கெட்டிலிருந்து திரும்பியிருந்தான்.

‘என்ன மணி, என்ன வாங்கி வந்த ? ‘

‘ஆட்டிறைச்சி, தக்காளி, உருளைக்கிழங்கு, முட்டை ‘

‘சரி.. சரி.. உள்ளே கொண்டுபோய் வச்சுட்டு, கொஞ்சம் வெளியே போய்ப் பார். வேலு வந்தால், உடனே அழைத்துவா. ‘

‘சரி சார்.. ‘ என்று வெளியே போனவன், போனவேகத்தில் திரும்பிவந்தான்.

‘சார்.. வேலு வறார்.. ‘

‘அவரை உள்ளே அனுப்பு. நீ தெருக்கதவை சாத்திவிட்டு, உள்ளேவந்து சமையல் வேலையைச் சீக்கிரம் பார். வேண்டுமானால் ஹாட் -பிரெட் கடைக்குச் சென்று, ரொட்டிகள் வாங்கிவா. ‘

‘போன் ழூர் ‘ வேலு உள்ளே வந்தான்.

‘வா வேலு. உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். இப்படி உட்கார். அப்படியே என் பள்ளித் தோழனை அறிமுகப்படுத்துகிறேன், பேரு ரிஷார், பிரான்சிலிருந்து வந்திருக்கான், டாக்டர். தென்னிந்தியாவைப் பார்க்கணுமாம். உன்னை ரிஷாருக்கு அறிமுகபடுத்த வேண்டாமா ? ரிஷார், இவன் என்னுடைய இந்திய நண்பன், பேரு வேலு. ‘

வேலுவும், ரிஷாரும் கைகுலுக்கிக் கொண்டார்கள்.

‘எங்கே ? வேலு கொண்டுவந்தாயா ? ‘

வேலு தான் கொண்டுவந்த துணிப்பையிலிருந்து மூன்று ஓலைச்சுவடிக் கட்டுகளை எடுத்து, எதிரே இருந்த மேசைமீது வைத்தான்.

/தொடரும்/

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 38

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


La terre ouvre son sein, du ventre des tombeaux

Naissent des enterres les visages nouveaux:

Du pr, du bois, du champ, presque de toutes places

Sortent les corps nouveaux et les nouvelles faces.

(Les Tragiques) – Agrippa d ‘AUBiGNE –

பிரெஞ்சுத்தீவு இழப்புகளை அலட்சியம் செய்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடலும், கரிசல் மண்ணும், வனமும், வானமும், விதிக்கபட்ட வரலாற்றை வேடிக்கைப்பார்த்துக்கொண்டு சாட்சிகளாக நிற்கின்றன. எண்பத்து நான்குலட்சம் பிறப்பு பேதங்களில்: நீலவேணி, கமலம், காத்தமுத்து, போல்பிரபு, மற்றும் முகமற்ற அடிமை உயிர்களின் முகவரி எங்கேயென்று இயற்கைமாத்திரமே அறிந்திருக்கின்றது. மனித உடம்பு மாயையினின்று தோன்றியதென்பதை, பஞ்சபூதங்களும் படித்திருக்கின்றன. அவற்றுக்கு தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரமாகிய எழுவகைப் பிறப்பும், அவற்றின் இழப்பும் ஒன்றுதான். அதனாற்றான் கல் நெஞ்சத்துடன் எதற்கும் இரங்காமல் காலத்தோடு இணைந்து பயனிக்க முடிகின்றது. மனித உயிர்கள் அப்படியல்ல. அவர்களின் அழுகையும் சிரிப்பும், சுயநலங்கள் சார்ந்தவை. தம் மனதிற்கு ஏற்படும் இலாப நட்டங்களைப் பொருத்தவை. தங்கள் சீவனுக்குக் கிடைத்த அதிகப்படியான ஆயுளை, இழந்த உயிரோடு ஒப்பிட்டுத் தொடர்ச்சியாக அவரவர் உறவின் தன்மையைப் பொருத்து, காலத்தைத் தீர்மானித்து வருந்துவதும், பின்னர் மறந்துபோவதும் அவர்களுக்குக் கை வந்த கலை.

காத்தமுத்து, கமலம், நீலவேணி, போல்பண்ணையில் கொலையுண்ட அடிமைகளின் உயிர் இழப்பு குறித்து ஒப்பாரிவைப்பதற்கு மட்டுமல்ல முனுமுனுக்கக் கூட உறவுகள் இல்லை. மாறாக போல்பிரபுவின் கொலைச்செய்தி தீவு வாசிகளை ஸ்தம்பிக்கச் செய்திருந்தது. பண்ணை முதலாளிகள் மிஸியே தெலாகுருவா தலைமையில் குவர்னரைக் காண கும்பெனி அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள். போல் அஞ்ஞெல் கொலைக்குக் காரணமான மரூன்களையும், பண்ணையிலிருந்து தப்பிய அடிமைகளையும், கும்பெனிப் பிடித்து; தயவு தாட்சண்யம் பார்க்காமல் தூக்கிலிடுவது அவசியம் என்று வற்புறுத்திவிட்டுப் போனார்கள் இப்பண்ணை முதலாளிகளே ஒரு வருடத்திற்கு முன்னார் மரூன்களை அடக்குவதற்கு, இவர்களைக் கொண்ட புதிய படையை (la milice),*1 குவர்னர் அறிவித்தபோது ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள். இன்றைக்கு கும்பெனி நிருவாகத்தின் நடவடிக்கைகள் போதாதென்று புலம்பிவிட்டுப் போகின்றார்கள். லாபூர் தொனே தன் சினத்தினை அடக்கிக்கொண்டு அவர்கள் முறைபாட்டை பொறுமையாகக் கேட்டு, தக்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில், வந்தவர்கள் சமாதானம் அடைந்தார்கள்.

போல் அஞ்ஞெலின் திடார் இறப்பு கும்பெனி நிருவாகத்திற்கு விடப்பட்ட சவால். குவர்னர் தன் நண்பர் இறப்பைச் சொந்த இழப்பாகக் கருதினார். ஐந்து வருடத்திற்கு முன்னால் மூன்றுமாத இடைவெளியில் மனைவியையும், இரு பிள்ளைகளையும் இழந்தபோதுகூட லாபூர்தொனே இடிந்துபோகவில்லை. மனைவி பிள்ளைகளின் இழப்பு இயற்கையாய் நிகழ்ந்தது, மற்றவர்கள் இவரைத் தேடி வந்து ஆறுதல் கூறினார்கள். போல் அஞ்ஞெலின் இழப்பு நிருவாகத்தோடு சம்பந்தபட்டது. குவர்னர் பதவியைக் கேலிக்குரியதாக்கியிருந்தது. பறங்கியர்களின் குடியேற்றத்தை ஊக்கப்படுத்த, கும்பெனி நிருவாகம் முயற்சிகள் மேற்கொள்கின்ற நேரத்திலே அந்த முயற்சியை அதைரியப் படுத்துகின்ற வகையில் சம்பவம் நடந்துவிட்டது. இதுவன்றி குவர்னர் லாபூர்தொனேவிடத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுவதை வழக்கமாகக்கொண்ட பிரெஞ்சு முடியாட்சி, பிரெத்தாஞ்ன்(Bretagne) பகுதியில் ஓரளவு செல்வாக்குள்ள போல்பிரபுவின் இறப்பையும், அவனது மகனின் இறப்பையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. கிழக்கிந்திய கும்பெனியின் மஸ்கரேஞ் நிருவாகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த அப கீர்த்தியை உடனடியாகக் களையவேண்டுமென குவர்னர் தீர்மானித்தார். இதுவும் தவிர மரூன்கள் பிரச்சினை கும்பெனிக்குத் தீராத தலைவலியாக இருந்துகொண்டிருக்கிறது.

பூர்போன் நிர்வாகி மிஸியே லெமெரி துய்மோன்*க்குக் கடிதம் போனது. மரூன்களை வேட்டையாடுவதற்கு கிறேயோல் இளைஞர் பட்டாளம் ஒன்றினைப் பிரெஞ்சு தீவுக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறுக் கேட்டுகொண்டார். கும்பெனி சொல்தாக்களுடன் கிறேயோல் இளைஞர் பட்டாளம் இணைந்துகொள்ள, இரவுபகலாக வேட்டையாடியதில் பண்ணையிலிருந்துத் தப்பிச் சென்ற நான்கு அடிமைகள் மாத்திரமே சிக்கியிருந்தார்கள். பிடிபட்ட மரூன்களால், அனாக்கோ எங்கு சென்றிருப்பான் என்பதனைச் சொல்ல முடியவில்ல. அனாக்கோ பிடிபடாமற் தப்பித்துச் சென்றது ஒரு வகையில் குவர்னருக்கு ஏமாற்றமென்றுதான் சொல்லவேணும். அவன் மடகாஸ்கருக்குச் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கும்பெனி சந்தேகித்தது. பிடிபட்ட நான்கு அடிமைகளும், போல் பிரபுவின் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டார்கள்.

நீலவேணியின் எதிர்பாராத முடிவு தீவுவாசிகளை குறிப்பாக மலபாரிகளிடையே அதிர்ச்சியை உண்டாக்கியிருந்தபோதிலும், சில கிழமைககளில் பெரும்பாலோர் மறந்து விட்டனர் என்றுதான் சொல்லவேணும். கைலாசம் நீலவேணியை மறந்திருந்தான், அவ்வாறே சில்விக்கும் நீலவேணியைக் குறித்து பெரிய அபிப்ராயங்கள் ஏதுமில்லை என்பதால் மறப்பது சாத்தியமாயிற்று. காமாட்சி அம்மாள் மறந்துவிட்டார். விசாலாட்சி அம்மாள் மறந்துவிட்டாள், நாயக்கர் மறந்துவிட்டார். தெய்வானைகூட ஓரிரு மாதங்களுக்குப்பிறகோ, வருடங்களுக்குப் பிறகோ நீலவேணியை மறந்துபோகலாம். நீலவேணியைச் சத்தியமாக நேசித்த பொன்னப்ப ஆசாரி குறித்து சரியானத் தகவல்களில்லை. ஒரு சிலர் நீலவேணியை எரித்தவிடத்தி அவனைப் பார்த்தாகச் சொல்லுகிறார்கள். மற்றவர்கள் எலுமிச்சை நதியோரம் கண்டதாகச் சொல்லுகிறார்கள். வேறு சிலர், மேற்குக் கடற்கரையில் இரவு நேரங்களில் ‘நீலவேணி.. நீலவேணி ‘யென்று ஒலிக்கின்ற குரல் அவனுடையதாகத்தான் இருக்கவேணுமென்று நம்புகிறார்கள்.

காமாட்சி அம்மாளுடைய கபானில் சீனுவாச நாயக்கர், அவரது பெண்ஜாதி விசாலாட்சி அம்மாள், தெய்வானை, கைலாசம், சில்வி கூடியிருந்தார்கள். அமைதியாக உட்கார்ந்திருவர்களிடையே ஒருவித இறுக்கம் தெரிந்தது. காலையில், காமாட்சி அம்மாளின் யோசனையின்படி நாயக்கர், குவர்னர் லாபூர்தொனேவைச் சந்தித்துவிட்டு வந்திருந்தார். குவர்னர், இரண்டொரு நாட்களில் புதுச்சேரிக்கு பாய்விரித்து புறப்படவிருக்கும் கும்பெனி கப்பலொன்றில் இவர்களது பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்தார். புதுச்சேரியிலும், கடலூரிலும் காமாட்சிஅம்மாளின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவுள்ள மனிதர்களுக்குக் கைப்பட கடுதாசி கொடுப்பதாகவும் கூறியிருந்தார். தீவில் ஏற்பட்ட சமீபத்திய பிரச்சினைகளுக்கிடையிலும், குவர்னர் தங்கள் நலனில் அக்கறை கொண்டிருப்பதை நாயக்கர் வாயால் அறிய காமாட்சி அம்மாளுக்குப் பரம திருப்தி. ஆனால் தீவினைவிட்டுப் பிரியப்போகிறோம் என்பதான செய்தியைப், பிள்ளைகளிடத்தில் எப்படிச் சொல்வது என்பதில் தயக்கமிருக்கிறது. இம்மாதிரியான நேரத்தில் நாயக்கர் உடனிருந்தால் உதவியாய் இருக்குமென நினைத்து காலங்காத்தாலே கபானுக்கு வரவேணுமென்று சொல்லியிருந்தாள். நாய்க்கரும் காமாட்சி அம்மாளின் வார்த்தைப் பாட்டின்படி தமது பாரியாளுடன் வந்திருந்தார். இருக்கின்ற சூழ்நிலையை இலகுவாக்க வேணுமென்கிற எண்ணத்துடன், மடியிலிருந்த சுருக்குப் பையிற்கிடந்த காய்ந்துபோன வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவி, குதப்பியபடிப் பேசத் தொடங்கினார்.

‘தம்பிரான் இப்படிச் செய்வானென்று நான் நினைக்கவில்லை அம்மா! அவன் மாத்திரம் தக்க சமயத்தில் நம்மிடம் தகவல் தெரிவித்திருந்தால் பேதைபெண்ணைக் காப்பாற்றி இருக்க முடியும். எனக்கென்னவோ நடந்தது அனைத்தும் சூதாகத் தெரிகிறது. போல் பிரபு, தம்மகன் செய்த பாதகத்தை அப்பாவி காத்தமுத்து மீது சுமத்தியிருக்கவேணும். ‘

‘அண்ணா! கோழி போனதும் அல்லாமல், குரலும் போனது என்பது போல யாரை நிந்தித்து என்ன பயன். அந்தப் பெண்ணுக்கு அப்படியான விதி இருந்திருக்கின்றது, அதன்படி நடந்திருக்கின்றது. போல்பிரபுவுக்கும், அவன் மகனுக்கும், நமை ஆளும் ஈசன் அதற்கான தண்டனையை காலம் கடத்தாமல் வழங்கிப்போட்டான். தம்பிரான் உத்தமன் என்று நம்பினோம். அவன் பொய்யன் என்றால், கடவுள் அவனையும் தண்டிப்பார். நீங்கள் வியாகூலமில்லாமல் இருக்கவேணும். ‘

‘என்னமோ அம்மா.. உடற்புண்ணுக்கு மருந்துண்டு, மனப்புண்ணுக்கு மருந்துவேணாமா ? இப்படியான புலம்பல்கள் ஒருவகையில் அதற்கான களிம்பென்றுதான் சொல்ல வேணும். ‘

‘மனப்புண்ணுக்கு மருந்தென்று, ஆகாததைச் சொல்கின்றீர்களே. இது புண்ணை ஆற்றுவதற்குப்பதிலாகக் கிளறிக்கொண்டுதானே இருக்கும். தேவாரம், திருவாசகமென்று வாசித்துப்பாருங்கள். மனப்புண்ணுக்குமட்டுமல்ல உடற்வலிக்கும் அதனிடம் மகத்துவம் உண்டு. ‘

‘வாஸ்த்துவம் அம்மா.. எல்லாம் அவன் செயல், எனநினைத்து வாழப் பழகினோமென்றால், மனதிற்கும் நிம்மதி, உடலுக்கும் நிம்மதி. கைலாசம்… உன்னிடந்தான் கேட்கிறேன். நாம் அனைவரும் புதுச்சேரிக்குச் செல்லத் தீர்மானித்திருப்பது குறித்து உனது அபிப்ராயமென்ன ? ‘

‘நாம் என்றால் ? ‘

‘நீ, தெய்வானை, காமாட்சி அம்மாள் பிறகு நான் என் பெண்ஜாதி ‘

‘என் சம்மதமில்லாமலா ? ‘

‘கைலாசம் என்ன சொல்கிறாய் ? உன் சம்மததத்தை எதற்காகப் பெறவேண்டும் ? ‘

‘அம்மா! உங்களுக்குப் புதுச்சேரி செல்லவேணுமென்கிற எண்ணமிருப்பின் என் சம்மதம் பெறவேணுமென்கிற அவசியமேதுமில்லை. அது உங்கள் விருப்பம். அவ்வாறே தெய்வானை, என்ன முடிவு செய்துள்ளாள் என்பதை அறிந்துகொள்ள அக்கறையுண்டே ஒழிய எனக்கதை தெரிந்துகொள்வதில் அவசியம் ஏதுமில்லை. ஆனால் நான் உங்களுடன் புறப்பட்டு வரவேணுமெனில் என்னுடைய சம்மதத்தை அறிந்திருக்கவேணும். ‘

‘கைலாசம், நீயா என்னிடம் எதிர்வார்த்தையாடுகிறாய் ?. தாய் தன் மகனுக்குச் செய்யும் காரியங்களுக்கு மகனிடம் சம்மதம் பெறவேணுமா ? தன் மகனுக்கு எதைச் செய்யவேணும் அல்லது வேணாமென்பது தாய்க்குத் தெரியாதா என்ன ? ‘

‘அம்மா..நான் இல்லையென்று சொல்லவில்லை. சிறுவயதென்பது அறியாமைக்கு அருகிலிருக்கும் வயது மட்டுமல்ல, எதிர்க்கும் திறனற்ற வயதென்றும் சொல்லவேணும். அது கொடுத்த செளகரியத்தில், உங்களுக்குப் பிடித்ததையெல்லாம் எனக்குப்பிடித்ததென்று செய்தீர்கள். பசித்திருக்குமென்று சோறூட்டியதும், தூங்கு என்று தாலாட்டுப்பாடியதும், நள்ளிரவில் கப்பலேறியதும் உங்கள் விருப்பங்களன்றி எனதல்ல. இப்போது நான் வளர்ந்திருக்கிறேன். பிள்ளைகள் சுயபுத்தியோடு செயற்பட ஆரம்பிக்கின்ற மண்ணே சொந்த மண். என் மனதிற்கு உகந்ததைத் தீர்மானிக்கின்ற அறிவும் என்னிடம் உள்ளது. உங்கட் கையைப் பிடித்துக்கொண்டு கப்பலேறும் வயதல்ல இப்போது. ‘

‘…. ‘

‘இந்து தேசத்தோடு, உங்களுக்குள்ள பந்தம் நிஜத்தோடு சம்பந்தபட்டது. புலம்பெயர்ந்தவாழ்க்கை உங்களுக்கு அன்னியமாகத் தெரிவதில் ஆச்சரியங்களில்லை. ஆனால் பால்ய வயதில் நான் கண்டிருந்த இந்துதேசம் நிழல்களானவை, உறக்கத்தில் வருகின்ற கனவுகளைப்போல, விடிந்தால் எனக்குச் சொந்தமில்லாது போகிறது. ‘

‘கைலாசம், இந்த முடிவினை நாங்கள் எதற்காக எடுத்திருக்கிறோம் என்பதனை அறிந்தபிறகு உனது சம்மதத்தை சொல்லலாமில்லியா ? ‘

‘காரணம் எதுவாயினும், என்னால் புதுச்சேரிக்கு உங்களோடு வரமுடியாதென்பதே உண்மை. ‘

‘தம்பீ.. முதலில் நாங்கள் சொல்வதை முழுவதுமாக வாங்கிக்கொள். அவசரம் வேணாம், ஆற அமர யோசித்துக் கூறு. காமாட்சி அம்மாள்.. நான் சொல்வது சரிதானே ? ‘

‘உங்கள் வார்த்தைப்படி ஆகட்டும். ‘ என்று காமாட்சி அம்மாள் தெரிவிக்க, நாயக்கர் பின் வாசலுக்குச் சென்று குதப்பியிருந்த வெற்றிலையைத் துப்பிவிட்டு அமர்ந்தார். இவர் சொல்லப்போவதை எதிர்பார்த்து கைலாசம், தெய்வானை சில்வி மூவரும் காத்திருந்தார்கள்.

‘கைலாசம், இது தெய்வானையைக் குறித்த உண்மைகளென்றாலும் நீயும் சம்பந்தப்பட்டிருக்கிறாய் என்பதால், அறியத்தான் வேணும். இதோ உன்னருகில் இருக்கிற தெய்வானையின் உண்மையானபெயர் ஸ்ரீ தேவயானி. மதுரை திருமலை நாயக்கர் வம்சத்தின் தற்போதைய முறையான வாரிசு. இரண்டாம் சொக்கநாதர் எனவழைக்கப்பட்ட ஸ்ரீ விஜயரங்க சொக்கநாதர்*2காமாட்சி அம்மாள் தம்பதிகளின் திருக்குமாரத்தி. அரசரின் மூத்த மனைவியான மீனாட்சி அம்மாளுக்கும், காமாட்சி அம்மாளுக்கும் இருந்த குடும்பப் பகையின் காரணமாக, குழைந்தைப் பேறு இல்லாத தம் மூத்தமனைவிக்கு தெரிவிக்கக்கூடாதென தேவயானியின் பிறப்புகுறித்த உண்மையை அரசர் ரகசியமாக வைத்திருந்தார். துரதிஷ்டவசமாக அரசர் தம் இளம் வயதில் இறந்துபோக, மீனாட்சி*2 பட்டத்திற்கு வந்தார். பட்டத்திற்கு வந்த ராணி மீனாட்சி*, திருமலை நாயக்கரின் இளையசகோதரர் குமரமுத்து நாயக்கரின் வழிவந்த பங்காருதிருமலை நாயக்கரின் மகன் விஜயகுமாரனை சுவீகாரம் செய்துகொண்டார். காமாட்சி அம்மாளுக்குப் பிறந்திருந்த தேவயானி அரசகுல வாரிசு என்கிற உண்மை தெரியவந்தபோது, மீனாட்சிக்குக் கசந்தது. தேவயானியை கொல்வதற்கு ஆட்களை ஏவினாள். திருச்சிராபள்ளி அரசாங்கத்தில் உத்தியோகத்திலிருந்த நான் ஐந்துவயது குழந்தை தேவயானியையும், தாய் காமாட்சி அம்மாைளையும் காப்பாற்ற தீர்மானித்தேன். நள்ளிரவில், ஒரு வண்டிபிடித்து புதுச்சேரியில் வைத்தியராகவிருந்த உன் தாய்மாமன் வசம் சிலகாலம் காமாட்சி அம்மாளும் தேவயானியும் கடவுள் கிருபையால் நான்கு ஆண்டுகாலம் ஆபத்தின்றி இருந்தார்கள். தாய்மாமன் வீட்டில் வளர்ந்துவந்த நீ காமாட்சி அம்மாள் பிள்ளையாகிப்போனதும் அங்கேதான். ஆற்காட்டு நவாபுக்கு புதுச்சேரி கும்பெனி அரசாங்கம் வேண்டியவர்கள் என்பதாலும், சிறுமி தேவயானிக்கு, இரண்டாம் சொக்கநாதர் தாயாதிகளால் ஆபத்துவருகிறதென்றும் சொல்லக்கேட்டு, லாபூர்தொனேயுடன் வியாபாரம் செய்துவந்த கடலூர் ஆங்கிலேயன் ஒருவன் அவர்கள் கப்பலில் இங்கே அனுப்பிவைத்தான். இந்த நேரத்திற்றான், ராணி மீனாட்சியினுடைய சுவீகார புத்திரனின் தந்தை பங்காருதிருமலை நாயக்கன், தளவாய் வெங்கடாச்சார்யாவோடு சேர்ந்துகொண்டு நடத்திய சதியினை, ஆற்காடு நவாப் மருமகன் சந்தாசாகிப் தனக்குச் சாதகமாக உபயோகபடுத்திக்கொண்டு ராணி மீனாட்சியை சிறையில் வைக்க, அது தற்கொலையில் முடிந்தது. பங்காரு திருமலையும் கொல்லபட்டான். அவனது புத்திரனும், ராணி மீனாட்சியால் வாரிசென்ற அறிவிக்கப்பட்ட விஜயகுமாரனும் சிவகங்கையில் மறைந்து வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. தளவாய் வெங்கடாச்சார்யா இப்போதைக்கு, விஜயகுமாரனோடு இருப்பதாகக் கேள்வி. புதுச்சேரியிலும்திருச்சியிலிருந்த சந்தாசாகிப் இப்போது மராத்தியர்களால் சிறைபிடிக்கபட்டிருக்க, மதுரை நிர்வாகம் மராத்தியர் வசம்.. புதுச்சேரி குவர்னர் ஆற்காட்டு இஸ்லாமியருக்கு ஆதரவென்றாலும், அங்கேயும் குழப்பம். லாபூர்தொனே யோசனைப்படி ஆங்கிலேயரின் உதவியுடன், மதுரை அரசாங்கத்தை மீட்பது உத்தமம். -நாயக்கர். ‘

‘நாயக்கரே!.. நான் தெய்வானையின் உடன் பிறந்தவனல்ல என்பது எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் மனதிற்பதிந்துள்ளது. அதனை உங்கள் பேச்சு உறுதிபடுத்துகின்றது. நீங்கள் சொல்லுகின்ற செய்திப்படி, நான் அன்னியன் என்பது மட்டும் புரிகிறது. அதற்கான காரணங்கள் எதுவாயினும் எனக்கவை வேண்டாம். இந்துதேசத்திற்கு நான் திரும்புவதில்லை என்பது ஏற்கனவே தீர்மானித்தாயிற்று. என்னை ஆதரித்த இப்புலம்பெயர்ந்த மண்ணுக்கு விசுவாசமாயிருப்பதும், பேதமற்ற இம்மக்களின் பிரியத்திற்கு எற்றவனாயிருப்பதும், என்னை சந்தோஷப்படுத்துகிறது. தெய்வானை இந்து தேசத்திற்குத் திரும்ப வேண்டுமென்பதற்குள்ள காரணங்களே, என்னை இங்கே இருக்கவும் வற்புறுத்துகின்றன. சில்வியை மணந்துகொண்டு, தீவிலேயே இருப்பதென்ற முடிவிலிருக்கிறேன். தாங்களும், அம்மாவும் என்னை ஆசீர்வதிக்கவேணும். ‘ தன் மனத்திலிருப்பதை சுருக்கமாகத் தெரிவித்த கைலாசத்தின் கண்கள் கலங்கியிருந்தன.

‘கைலாசம், உன் மாமன் புதுச்சேரியிலிருக்கும் வைத்தியர் சபாபதி படையாட்சிக்கு என்ன பதில் சொல்வேன். அவர் உனது தாய்க்கு என்ன மறுமொழி சொல்வார். அங்கே உன்னுடைய உடன் பிறந்தவள் ஒருவள் இருக்கின்றாளே.. ‘

‘அம்மா!.. இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். சற்றுமுன்னர், நமது நாயக்கர் இந்து தேசம் என்று குறிப்பட எனக்கேதும் தோன்றாததுபோன்றே, நீங்கள் புதிதாக சொந்தமென்று அறிமுகப்படுத்துகின்ற இவர்களால் எனக்கேதும் தோன்றவில்லை. புலம் பெயர்ந்தவனுக்கும், வளர்ப்பு மகனுக்கும் வித்தியாசங்களேதுமில்லை. எங்கே அன்பும், ஆதரவும் கிடைக்கிறதோ, அங்கே மட்டுமே இயல்பாய் முளைவிட்டு ஜீவிக்க முடியும். இந்த மண் எனது பூமி, நீங்கள் எனது அன்னை, தெய்வானை எனது சகோதரி. வேறு சங்கதிகள் வேணாம். ‘

கைலாசத்தின் வார்த்தையிலிருந்த உறுதியை நினைத்து, நாயக்கரும் அவரது பெண்ஜாதியும் நெகிழ்ந்துபோனார்கள். விசிம்பி அழத்தொடங்கிய தெய்வானையை காமாட்சி அம்மாள் தோளில் வாங்கிக் கொண்டாள். சில்வி கைலாசத்தின் முடிவை ஏற்கனவே அறிந்திருந்தவள் என்றபோதிலும், அங்கிருந்த மற்றவர்களின் துயரம் இவளையும் தொட்டிருந்தது. உரிமையாய் காமாட்சி அம்மாளின் மற்றொரு தோளில் தலைவைத்து விம்மினாள்.

/தொடரும்/

*1 La Bourdonnais – PH. Haudrere

*2.History of the Nayaks of Madura – R Sathyanatha Aiyar

தமிழகம் – புதுவை வரலாறும் பண்பாடும் – சு. தில்லைவனம்

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 34

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


பேரமர்க் கண்ணி இருந்த ஊரே

நெடுஞ்சேண் ஆரிடை யதுவே; நெஞ்சே

ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து

ஓர் ஏர் உழவன் போலப்

பெருவிதுப்பு உற்றன்றால்; நோகோ யானே.

– (குறுந்தொகை -131). ஓரேருழவனார்

புதுச்சேரிப் பட்டணம் முழுக்க காலமே ஒன்பது மணியிலிருந்தே கூச்சலும் குழப்பமுமாகக் கிடக்கிறது

சூரியன் உதிச்சதிலிருந்துதே கும்பெனி சொல்தாக்கள் பண்ண வேண்டிய முஸ்தீபுகளைப் பண்ணுவித்து, கோட்டைவாசல்களச் சாத்திவிட்டார்கள். கோட்டைக்கு வெளியே பட்டணத்தை சுற்றியிருந்த முத்தாலுப் பேட்டை, வழுதாவூர் வாசலுக்கு எதிரே இருக்கப்பட்ட பேட்டை, வில்லியனூர் வாசலுக்கு எதிரே இருக்கப்பட்ட பேட்டைகளிலிருந்து குடிகள் தங்கள்தங்கள் வளவுகளில் காணாமற்போயிருந்த மக்களைத் தேடிப் புலம்பியபடியும், அங்கலாய்த்தும் அந்தந்தக் கோட்டைவாசல்களிற் காத்துக் கிடக்கின்றார்கள். கோட்டைக் காவலர்கள் பறங்கியர்களென்றால் அனுமதிக்கிறதும், தமிழரென்றால் துரத்துவதுமாக இருக்கிறார்கள்.

தமிழர் குடியிருப்புப் பகுதியிலிருந்த நடுத்தெருவிலிருந்த, அவ்வீட்டின் கதவினை உடைத்துக்கொண்டு சொல்தாக்களும், சிப்பாய்களும் நுழையக் காலமே பத்துமணி ஆகியிருந்தது. வீட்டிலிருந்த சனங்களில் துபாஷ், மாறன் வகையறாக்களைத் தவிர்த்து பெரும்பாலானவர்கள், பேச்சு மூச்சில்லாமல் பிராண அவஸ்தை கண்டிருந்தார்கள். சிப்பாய்களை விட்டு, எழுப்பிப் பார்த்தார்கள். இவர்கள் எழுப்பி நிறுத்தியவுடன், மீண்டும் சுரணையற்று விழுகின்றார்கள். அவர்களை ஆட்கள் தூக்கிவந்து வெளியில் போட்டார்கள். சுக்கினைச் சுட்டு புகையுடன் மூக்கில் பிடித்தார்கள். உள்கட்டிலும் சிலர் அடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததாக விழித்திருந்தவன் ஒருவன் சொல்ல, அங்கேயும்போய்க் கதவை உடைத்து ஆண்களும் பெண்களுமாக முப்பதுபேரை மீட்டிருந்தார்கள்.

நடக்கின்ற காரியங்களைத் துபாஷ் கனகராயமுதலி, ஆனந்தரங்கப்பிள்ளை, சேஷாசலச்செட்டி மேற்பார்வையிட்டபடி, உத்தரவுகள் பிறபித்துக் கொண்டிருந்தனர். மீட்கப்பட்ட மனிதர்களுக்கிடையே, துபாஷ் பலராம் பிள்ளையை அவர்கள் மூவரும் எதிர்பார்க்கவில்லை. சோர்ந்து மெல்ல நடந்துவரும் துபாஷ் பலராம் பிள்ளை, அவர்களுக்கு அதிசயமாகத் தெரிந்தார்.

‘நீர் எப்படி இங்கே வந்தீர் ? மஸ்கரேஜ்ன்னுக்கு களவாய்ப் போனால் பணம் செலவிருக்காது, என்பதால் இம்மாதிரியான முடிவினை எடுத்தீரோ ? ‘, சுங்கு சேஷாசலச் செட்டி, கேலிபேசிவிட்டு சிரிக்கிறார்.

‘பகடி பண்ணுகிறீரா ?.சுங்குச் செட்டிதான் என்னை இங்கே அனுப்பிவைத்தவன், என்பதாகக் குவர்னரிடம் பிராது கொடுக்க வேணும். அதற்காகக் குவர்னரைப் பேட்டிகாண்பது இன்றைக்கு முடியுமாவெனப் பெரிய துபாஷைக் கேட்கப்போகிறேன் ‘ என எரிச்சலுடன் வந்து விழுந்த பலராம்பிள்ளையின் பதிலைக்கேட்டு, செட்டிக்கு வெலவெலத்துவிட்டது.

‘பல்ராம் பிள்ளை!.. மோசம்பண்ணி ஆட்களைக் கடத்துவதற்கு ஏற்பாடு செய்த பரமானந்தன் என்பவனையும், இவ்விடத்துக்குக் காவலாய் நின்ற அவனது ஆட்கள் இருவரையும் கோட்டைக் கச்சோத்திலே போட்டிருக்கிறோம். இவர்களோடு சம்பந்தப்பட்டிருந்த ‘சூதே ‘ எனப் பேர்கொண்ட பறங்கியனையும் பிடித்து வைத்திருக்கிறோம். அவனைக் குவர்னர் கபினேக்கு அழைத்துப் போயுள்ளார்கள். நீர் குவர்னர் கபினேவுக்கு மதியத்துக்கு மேலே சுமார் நான்கு மணிக்கு வருவீரென்றால் பிராது கொடுக்கலாம். இது குறித்த மேல் விபரங்களின் தேவையிருப்பதால், உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் எங்களுக்கு உதவியாயிருக்கும்.. ‘

‘இன்றே வரவேணுமா ? இப்போதைய சூழ்நிலையில் என் சரீரம் ஒத்தாசை செய்யுமாவெனத் தெரியாது ? ‘- பலராம் பிள்ளை.

‘பலராம் பிள்ளை, நீர் வீட்டுக்குச் சென்று மனைவி மக்களைப் பார்ப்பது அவசியம். கொஞ்சம் ஓய்வெடுக்கவும் வேணும். நீர் வேளையாய்ப் போய்ச்சேரும். உமக்காகக் குவர்னரிடம் நான் பேசுவேன் ‘- என்ற ஆனந்தரங்கம் பிள்ளையின் வார்த்தை பலராம்பிள்ளைக்கு இதமாக இருந்தது.

பிள்ளை இதுபோன்ற நேரங்களில், எவ்விதம் நடந்துகொள்ளவேணுமென்ற சூட்சுமம் அறிந்தவர். அவர் வார்த்தைக்களை, அளவாய் நிதானித்து உபயோகிப்பார். இராமர் பாணம்போல, வளைந்தோ நெளிந்தோ பயணித்து, குறி தப்பாது நினைப்பதைக் கொண்டுவந்து சேர்த்திடும். அவரது வெற்றி இம்மாதியான அணுகுமுறைகளினால் மாத்திரமே சித்தியாகியிருப்பதென்பது ஊரறிந்த ரகசியம்.

‘ ‘ரங்கப்பன், பலராம்பிள்ளை அவனது சாதிக்காரன் என்பதாற்றானே வக்காலத்து வாங்குகிறான்..எல்லாம் இந்தத் துரைத்தனத்தார் கொடுக்கிற இடம். என்ன வசியமருந்து வைத்திருப்பானோ, குவர்னர்மார்களைச் சுலபமாய் வளைத்துப் போடுகிறான். இது விபரம், துரைசானி அம்மாள் – மதாம் ழானிடம் பேசவேண்டும். அவளுக்குள்ள இந்து சனங்கள் மீதான துவேஷத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேணும். மதியத்திற்குமேலே அவளைப் பார்க்கப் போகும்போது, தட்டானிடம் அவளுக்காகச் செய்யச் சொல்லியிருந்த ஒரு ஜோடி தங்கத்தினாலான மாட்டலை அவசியம் கொண்டுபோகவேணும் ‘ – என்பதான சிந்தனையிலிருந்த கனகராயமுதலியின் கவனத்தை, இந்திய சிப்பாய் ஒருவன் கலைத்தான்.

‘ஐயா! மீட்கப்பட்ட சனங்களை என்ன செய்வது ? ‘

‘முடிந்தவர்களை அவர்களது வீட்டிற்கு அனுப்பிப்போடு. முடியாதவர்களை சாவடி மணியக்காரனிடம் சேர்ப்பித்துப்போடு. நடந்த வயணங்களைக் கூறிச் சுத்துபட்டிலிருக்கிற பேட்டைகள், கிராமங்களில் தண்டோராப் போடச் சொல்லு. ‘

‘உத்தரவு ஐயா ‘ என்ற இந்திய சிப்பாய் வேகமாய் ஓடினான். சில நாழிகைகளில், அவ்விடத்திலிருந்து, ரங்கப் பிள்ளை, கனகராயமுதலி, சுங்கு செட்டி முதலானோர் பல்லக்குகளில் புறப்பட்டுச் சென்றார்கள்.

‘மிஸியே துபாஷ்..! எங்களுக்கு உத்தரவுக் கொடுக்கவேணும் வளவிற்குத் திரும்பிப் போஜனம் முடித்துவிட்டு, வாணியண்டை போகணும். இப்போது கிளம்பினாலே போய்ச்சேர எனக்கு ஒருமணி நேரத்திற்கு மேலே பிடிக்கும். வில்லியனூர் சாவடியண்டை கட்டியிருந்த எனது குதிரைக்கு என்னகதி ஆச்சுதோ, என்கின்ற கிலேசம் வேறு. சாவடிக் காவலனைக் கேட்கவேணும்.. உத்தரவுவாங்கிக்கிறேன் ‘- கடகடவென்று மாறன் வார்த்தைகளைக் கொட்டிவிட்டுப் புறப்படத் தயாராகவிருந்தான்.

‘மாறன், உம் மனதுபோற் செய்யும். நான் மதியத்துக்கு மேலே பெர்னார் குளோதனைச் சந்தித்து, நடந்த வர்த்தமானங்களைத் தெரிவிக்கிறேன். வாணியைச் சந்தித்து விட்டு வந்து சேரு. சன்னாசியிடமும் நமக்குத் தெரிந்துகொள்ளவேண்டிய சங்கதிகளிருக்கும். இதுவயணம், விபரமாக உட்கார்ந்து பேசுவோம். சன்னாசியை அழைத்துக்கொண்டு நான் புறப்படுகிறேன். ‘ – துபாஷ் பலராம்பிள்ளை.

பலராம்பிள்ளையும், சன்னாசியும் தெற்கே புறப்பட்டுச் சென்றார்கள். மாறனும், நொண்டிக் கிராமணியும் மேற்குதிசைக்காய்ப் புறப்பட்டுச் சென்றார்கள்

பின்னேரம். மாலை நான்குமணி. பெர்னார் குளோதன் சுரத்துடன் படுத்திருந்தான். விளையாட்டைப்போல நான்கு கிழமைகளுக்குமேல் ஆகிவிட்டன. பிரெஞ்சுத் தீவீன் குவர்னர் லாபூர்தொனே கேட்டிருந்தவண்ணம் ஆட்களை அனுப்ப, புதுச்சேரி கும்பெனி நிருவாகம் கோன்செல் கூடி முடிவெடித்திருந்தார்கள். புதுச்சேரி குவர்னர் துய்ப்ளெக்ஸ், தம்மகள்களுக்கு அடுத்தமாதம் கல்யாணம் நடக்க இருப்பதாகவும், அதுபரியந்தம் இருந்துபோகவேணுமென்றும் கேட்டுக்கொண்டார். கிடைத்த கால அவகாசம், தெய்வானை குறித்த புதிர்களுக்கு விடைகாண உதவுமென்று பெர்னார்குளோதன் நம்பினான். துபாஷ் பலராம்பிள்ளையையும், மாறனும் இப்படி எந்தத் சேதியுமில்லாமல், காணாமற் போயிருந்ததை நினைக்க மனதிற் கலவரம் சேர்ந்துகொண்டது.

பணிப்பெண்ணிடம், பலராம்பிள்ளை வீட்டிலிருந்து, ஏதேனும் தகவல் வந்தால் உடனே தெரிவிக்கவேணும், என்று சொல்லியிருந்தான்.

இவனைச் சுற்றிலும் ஏதோ அசாதாரண காரியங்கள், சில கிழமைகளாக நடந்துவருகின்றன. இவற்றுக்கெல்லாம் தெய்வானையை தொடர்புப்படுத்திக் குழம்ப வேண்டியிருக்கிறது. மர்மமாய் ஒலிக்கின்ற குரல் சொல்வதுபோல, தெய்வானைதான் தேவயானியா. அப்படியானால் தேவயானிக்கும் தெய்வானைக்கும் உள்ள உறவென்ன. தெய்வானையிடமிருந்து எம்மக்கள்தான் என்னைப் பிரிக்கமுயல்கின்றார்கள் என்று நினைத்ததுபோக, வேறுசிலரும் இப்படி மந்திர தந்திர உபாயங்களால் என்னை அச்சுறுத்துவதன் காரணமென்ன. உண்மையில் தெய்வானை யார் ? துபாஷ் வந்தாரென்றால் விடை கிடைக்கும். இவனறிந்த வகையில், சில நேரங்களில் தென்றலாகவும், சில நேரங்களில் புயலாகவும் இருந்திருக்கின்றாள். புதுச்சேரிக்குப் புறப்படுவதற்கு முந்தைய தினம், அவளைச் சந்திக்கச் சென்றதும், ந்டந்த சம்பாஷனையும், கண்முன்னே விரிந்தது:

எலுமிச்சை நதியொட்டிய சிறு சிறு குன்றுகள் உயர்ந்தும் தாழ்ந்தும் நெருக்கமாக உள்ள இடம், மத்தியில் சுணை, குன்றுகளின் இடைவெளியிற் கிடந்த நிலத்தில் விசிறி வாழைகள் அடர்த்தியாய் மண்டிக்கிடக்கும். இங்கேதான் பெர்னார் குளோதனும், தெய்வானையும் தங்கள் மனத்திலுள்ள பிரியங்களைப் பங்கிட்டுக் கொள்ள வழக்கமாகச் சந்திக்கும் இடம்.

பெர்னார் குளோதன் குதிரையை, குன்றுகளுக்கிடையில் மறைவாக நிறுத்தி இறங்கிக்கொண்டான். அது பசும்புற்களை ஆர்வத்தோடு மேயத்தொடங்கியது. இவன் சுணையிருக்கின்ற திசைக்காய் நடந்து சென்றான். தெய்வானையும் நீலவேணியும் கலகலவென்று சிரித்துக்கொண்டிருந்தார்கள். பின்புறம் நின்று தொண்டையைச் செருமினான். பெண்களிருவரும் திடுக்கிட்டு எழுந்து நின்றார்கள். தெய்வானை, பெர்னார் குளோதனைப் பார்க்க விருப்பமற்றவள் என்பதுபோலத் தலையைக் திருப்பிக் கொண்டாள்.

‘காதலித்தவன் கண்காணாதத் தேசத்துக்குப் புறப்பட இருக்கின்றான் என்கின்ற வருத்தமேதும் இருப்பதாகக் தெரியவில்லையே ? ‘ -பெர்னார்குளோதன்

‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா ? என்பதுபோல இருப்பதைப் பாருங்கள். சற்றுமுன்னால் போல்பிரபுவின் மகனை விரட்டி அடித்ததைப் பார்க்க நேர்ந்தால் நீங்களே கூட இவளிடம் தள்ளி நின்றே காதல் செய்யவேணுமாயிருக்கும். ‘ – நீலவேணி.

‘என்ன நட,ந்தது ? அந்தத் தடியன் உங்களிடம் மறுபடியும் வாலாட்டினானா ? ‘ -பெர்னார்குளோதன்

‘இந்த முறை ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்கமாட்டான். எப்படியோ, வேட்டை நாய் மோப்பம் பிடித்து இவ்விடம் குதிரைபோட்டுக்கொண்டு வந்துவிட்டது. எங்களிடம் பல்லை இளித்துக்கொண்டு, பெர்னார் குளோதன் புதுச்சேரிப் பட்டணம் புறப்படுகின்றானாமே, அவன் வருகின்றவரை உங்களுக்குத் தீனிபோடுவது யார் ? பொன்னப்ப ஆசாரியா ? உங்களுக்கு ஆட்ஷேபனையேதுமில்லையென்றால், எங்கள் கொட்டடியில் இடமிருக்கிறது. நீங்கள் பார்த்திராத கட்டில்களெள்லாம் உண்டு, சுகமாகப் படுக்க வைப்பேன். இதுபோன்ற இடங்களுக்கு அவசியமிருக்காது, என்றல்லவோ உளறினான் ‘ – நீலவேணி.

‘பிறகு ? ‘

‘தெய்வானையின் கோபத்தை முகத்திலிருந்து சுலபமாக அறியமுடியாது. அவள் அமைதியாகப் போல்பிரபுவின் மகனிடம், ‘கொஞ்சம் குதிரையிலிருந்து இறங்க முடியுமா ? ‘, என்றாள். எனக்கென்னவோ விபரீதம் நடக்கவிருக்கிறது என்பது புரிந்தது. அந்தக் கோமாளி உண்மையை விளங்கிக்கொள்ளாமல், குதிரையிலிருந்து கீழே குதித்து, ‘அப்போ சம்மதமா ‘ என்கிறான். இவள் அவனிடம் அமைதியாக, ‘அதற்கு முன் நீ ஆணா பெண்ணா என்பதை நாங்கள் அறியவேண்டும் ‘, என்கிறாள். அவனுக்குக் கொஞ்சம் புத்தியில் உறைத்திருக்கவேண்டும். அச்சத்தோடு, ‘என்ன சொல்லுகிறாய் ‘, என்கிறான். இவள், ‘பயப்படாதே இன்றைக்கு, நாங்கள் எதுவும் செய்வதாக இல்லை, ஆனால் அதற்கு முன் உம்முடைய பண்ணையில் குதிரைக்குக் கொடுக்கின்ற புல்லையும், கொள்ளையும் ஒரு மண்டலம் தின்றுவிட்டு வரவேணும். அதுவரை எங்களைத் திரும்பிப் பார்க்காமல் ஓடு என்றாள். அவன் பயந்துபோய் தனது குதிரையில் ஏறமுயற்சித்தான். இவளோ, ‘கூடாது. நாங்கள் நீ ஆணா பெண்ணா என்று தீர்மானிக்கும்வரை இதுபோன்ற ஆசைகளை மூட்டைக் கட்டிவைக்கவேணும். குதிரைபோகட்டும் விடு, என்றவள் குதிரையின் அடிவயிற்றில் காலால் எத்த, அது ஓட்டம் பிடித்தது. குதிரை ஓடி மறையட்டுமெனக் காத்திருந்து, பின்னர் அவனையும் ‘ஓடு ‘, என்றாள். அவனும் ஜன்னி கண்டவன் போல விழுந்து அடித்துக்கொண்டு ஓடிப்போனான். இவ்வளவையும் நடத்திவிட்டு, உங்கள் முன் பேசினால் முத்து உதிர்ந்துவிடுமென்பதுபோல நிற்கிறாள் பாருங்கள். சரி சரி.. உங்கள் இருவருக்கும் இடையில் நானெதற்கு ? புறப்படுகிறேன். ‘, என்றவள் வெட்கப்பட்டு நிற்கும் தெய்வானையிடம், ‘அடியே வெட்கத்தை கொஞ்சம் மிச்சம் வைத்துக்கொள். அவர் புதுச்சேரியிலிருந்து திரும்புகின்ற அன்றைக்கும் தேவைப்படும். வரட்டுமா ?. என்றாள். மீண்டும் பெர்னார் குளோதனிடம், ‘துரை!..,என் தோழி அல்லும் பகலும் உங்களைத்தான் மனதிற் கொண்டிருக்கிருக்கிறாள், மறந்திடவேணாம். ‘ என்றவள் குரல் உடைந்து தழுதழுத்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு, காதலர் இருவரையும் தனிமையில் இருக்கவிட்டு, வேகமாய்ச் சென்று மறைந்தாள்.

பெர்னார் குளோதன் மனம் நெகிழ்ந்து போனது. கொஞ்ச நேரத்திற்கு முன்புவரை கலகலவெனச் சிரித்திருந்த தெய்வானையின் கண்களில் நீர்கோர்த்திருக்கக் கண்டான்.

‘அன்பே, தெய்வானை. அருகில் வா. நாளை புதுச்சேரிக்குக் பயணப்படவிருப்பதை உன்னிடம் சொல்லிக் கொண்டுபோகவே வந்தேன். ‘ மெல்ல அவளை நெருங்கி, இரு கைகளாலும் தோளைத் தொட்டு, அவளது தலையை இழுத்து, இவனது மார்பில் வாங்கிகொண்டான். இச்செயலுக்கெனவே காத்திருந்தவள்போல இவன் மார்பில் விழுந்த மறுகணம், விம்மி விம்மி தொடர்ச்சியாக அழுகிறாள். பெர்னார் குளோதனும் அழுதான், ஆண்மகன் என்பதால் அளவோடு, ஊமையாக, அவைளை அதைரியப்படுத்தகூடாது என்று எண்ணியவனாய் தன் துயரத்தைக் மறைக்க முயற்சித்தான்..

‘பெண்ணே.. ஆகவேண்டிய காரியங்களை விரைவாக முடித்துக்கொண்டு ஓடோடி வருவேன். உன் அண்ணன் என்னிடம் ஒப்புவித்துள்ள கள்ளிப்பெட்டியில் ஒளிந்துள்ள ரகசியத்தை அறியவேணுமில்லையா ? அதுவரை நீ பொறுமை காக்கவேணும். ‘

‘பிரபு.. நான் உங்களிடம் ஏற்கனவே பலமுறைச் சொன்னதுதான். எனக்கு என் பிறப்பு எப்படிப்பட்டதென்பது முக்கியமல்ல. நம்மிருவர் குறித்த பிரக்ஞை முக்கியம். ஜென்மஜென்மாய் நாம் வாழ்ந்திருக்கிறோம், வாழப்போகிறோம். நமது காதல் இவ்வுலகத்திற்கானதல்ல, அண்டசராசரத்திற்கும் பொருந்தக்கூடியது. பிறவிகள் தோறும் தொடர்ந்துவருவது. நம்மை சுற்றியுள்ள கிரகங்கள் இடம் மாறலாம், யுகங்கள் மாறலாம், நீரும் நிலமும் இடம் பெயரலாம். காலங்களின் அளவீடு மாறலாம். நாம் மாறாதவர்கள், சிரஞ்சீவிகள். நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பிலும், உமது ஜீவனும், எனது ஜீவனும் ஒன்றையொன்று கவ்விக் கிடக்க வேண்டுமென்பது விதி. நேற்று நம்மிருவருக்கும் வெவ்வேறு சரீரம், வெவ்வேறு நாமங்கள். இன்றைக்கு உம்முடைய பெயர் பெர்னார் குளோதன், அடியேன் தெய்வானை. இப்பிறவியின் பயனைப் புரிந்தே இருக்கிறேன். எனினும் கடற்செலவென்றால் கவலை கொள்ளாமலிருக்க முடியுமா ? ‘

‘தெய்வானை. கவலை வேண்டாம்.. இனம், மதம் மொழி, தேசமென்று பிரிந்திருக்கும் நம்மை ஒன்றிணைத்த சக்தி எதுவென்று நினைக்கிறாய். நம் இருவருக்கும் உகந்த நீலகடலன்றோ. நீலக்கடலே நினத்தாற்கூட நம் சரீரத்தை அழிக்கலாம், ஆத்மாவை அழித்துவிடமுடியாது. நம்மிடமிருப்பது உடல்களின் இச்சையல்ல. உயிர்களின் இச்சை அதற்கு அழிவேது. நான் புதுச்சேரி சென்று விரைவிற் திரும்புவேன். மனத்தில் சஞ்சலமின்றி இரு. ‘

‘பிரபு, பிரெஞ்சு தேசத்திலிருந்த உம்மையும், இந்து தேசத்திலிருந்த என்னையும் இணைக்கக் காரணமாயிருந்த நீலக்கடல் ஒருபோதும் நம் பிரிவுக்குக் காரணமாக இருக்க முடியாது. தாங்கள் தீவிற்குத் திரும்பும்வரை, நீலக்கடலருகே காத்திருப்பேன். மேற்கு திசையில் முழங்கும் கடலோசை உங்களுக்கும் கேட்குமென்று நினைக்கிறேன். நீங்கள் திரும்பும்வரை என் இதயத்தில் இடைவிடாது முழங்கும், அவ்வோசையே என்னுயிரின் அமுது. நீலக்கடல் மூலம் நானனுப்பும் காதல்மடல்களுக்கு மறுகரையில் காத்திருந்து பதிலெழுதவேணும். செய்வீர்களா. ? ‘

‘மிஸியே.! ‘ பெர்னார் குளோதனின் நினைவுகளைப் பணிப்பெண் துண்டித்தாள்.

‘உய்…(ம்..) ‘

‘துபாஷ் வருகிறார் என்று நினைக்கிறேன். ‘

‘அப்படியா.!. மேலே அனுப்பிவை. ‘

மாலை, சூரியன் அஸ்தமிக்க ஒரு சாமம் இருக்கிறச்சே, கோட்டைக்குள் கூடலூர் வாசலுக்கருகிலிருந்த பெர்னார் குளோதன் ஜாகைக்கு துபாஷ் பலராம்பிள்ளை திரும்பியிருந்தார். கதவிற் பதித்திருந்த கைப்பிடி வளையத்தினை இருமுறை தட்டினார். வழக்கத்தினை விட அதிக நேரம் எடுத்தது. மீண்டும் இரண்டுமுறை தட்ட, பணிப்பெண் ஓடிவருவது கேட்டது. சிலநொடிகளில் கதவு திறக்கப்பட்டது. ஓடிவந்ததன் காரணமாக அவளுக்கு வியர்த்திருந்தது.

‘ஏன் என்ன நடக்கிறது ? எதற்காக இவ்வளவு நேரம் எடுத்துகொண்டாய் ? ‘

‘காலையில் வழக்கம்போல அவருக்குக் கஃபே கொண்டுபோனேன். பல முறை எழுப்பியும் மூச்சுப் பேச்சிலாமல் இருக்கவே, நான் ரொம்பவும் பயந்துதான் போனேன் உடல்வேறு அனலாகக் கொதிக்கிறது. என்ன செய்வது என யோசித்து வைத்தியருக்கு ஆளனுப்பினேன். ‘

‘வைத்தியர் வந்தாரா ?

‘வந்தார். நாடிபிடித்துபார்த்தார். அஞ்சும்படியாக ஏதுமில்லை. கபத்துடன் சுரமிருக்கின்றது என்றும் நன்னாரி வேர்ச் சூரணம் திரிகடியளவு கொடுத்துவரச் சுரம் மட்டுப்படும் என்றும் சொன்னார். ‘

‘இப்போது பரவாயில்லையா ? ‘

‘தேவலாம். சுரத்தின் உக்கிரம் தணிந்திருக்கிறது. ‘

‘எங்கே ? இன்னும் படுக்கையிற்றான் இருக்கிறாரா ‘

‘ஆமாம். ஆனால் விழித்திருக்கிறார். உங்களைப் பலமுறை கேட்டார். ஐயா வந்தவுடன் கெதியாய் மேலே வரச் சொல்லியிருந்தார் ‘

‘அப்படியா ? ‘ என்றவர் அப்பெண்ணை, ஒதுக்கிவிட்டு, விடுவிடுவெனப் படிகளிலேறி, பெர்னார் குளோதன் அறையில் நின்றார். அவன் இவரை எதிர்பார்த்துக்காத்திருந்ததுபோல தலையை உயர்த்தினான்: ‘வந்துவிட்டார்களா ? ‘

‘சில எதிர்பாராத பிரச்சினைகளைச் சந்திக்கவேண்டியிருந்தது; ‘

‘உங்களுக்குமா ? ‘

‘கேள்வியின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை ‘

பெர்னார் குளியலறையில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், கேட்ட அமானுஷ்யமான குரலையும் ஆதியோடந்தாமாகக் கூறினான்.

‘குட்டிச் சாத்தான்களின் இம்மாதிரியான விளையாட்டுகளை தடுப்பதற்கான உபாயங்களை, மந்திரவாதிகளிடந்தான் கேழ்க்கவேணும். விசாரித்துப்பார்க்கிறேன். எங்களுக்கு நேர்ந்ததும், உங்களிடம் நடத்தப்பட்ட அசாதரண விளையாட்டுகளுக்கும் தெய்வானை மட்டுமே காரணமாயிருக்கவேணும். அது உண்மையென்றால் தெய்வானையின் விஷயத்தில் நாம் அவிழ்க்கவேண்டிய மர்ம முடிச்சுகள் .ஏராளமாக உள்ளன. அதுவரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேணும். வைத்தியர் இல்லம்வரை சென்றுவருவதாக, மாறன் புறப்பட்டு வில்லியனூர்வரை போயிருக்கிறான். அவன் வரட்டுமென்று யோசிப்போம். கூடிய சீக்கிரம் எல்லாம் சுபமாய் முடியும்.. ‘

‘தெலுங்கில் எழுதியிருந்த ஓலை நறுக்கு என்ன ஆயிற்று ? ஏதேனும் மேலதிகத் தகவல்கள் கிடைத்ததா ? ‘

‘அதற்காகவென்று முருங்கப்பாக்கம் போனவன் ஆட்கடத்தற்காரர்களிடம் அகப்பட்டுக் கொண்டேன். என்னைக் கொண்டுபோய்ச் சண்டாளர்கள் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தார்கள். அந்த வீட்டில்தான் மாறனும், நமக்காக வேலாயுதமுதலியாரை வேவுபார்க்க அமர்த்தப்பட்ட சன்னாசியும் அடைக்கப்பட்டுக் கிடந்தார்கள். கெட்ட நேரத்திலும் ஓரளவிற்கு நல்ல நேரம் போலிருக்கிறது. கும்பெனி அரசாங்கம் அந்தக்கூட்டத்தைப் பிடிச்சுப்போட்டுது. ‘

‘ஆச்சரியமாக இருக்கிறது. என்ன நடந்தது ? விபரமாய்ச் சொல்லும் ‘.

‘கடந்த சிலவருடங்களாகவே ஆடுகோழி களவுபோவதுபோல மனிதர்களும் களவுபோனார்கள். தங்கள் சொந்தபந்தத்தைத் தொலைத்துவிட்டு, கஷ்ட சீவனஞ்செய்யும் மக்கள் கடவுளை நிந்தித்துக்கொண்டு பொழுது சாய்ந்தால் அழுவதும், விடிந்தால் விதியை நொந்துகொண்டு வயிற்றுப் பாட்டுக்கு நாயாய் ஓடிப் பிழைப்பதுமாக இருந்தவர்கள் வயிற்றில் பால் வார்த்ததுபோல அந்த சேதிவந்தது. வெகுநாட்களாய் ஆட்களைக் கடத்தும் கூட்டத்தை, நேற்று கும்பெனி கூண்டோடு பிடித்துப்போட்டது. இந்தக்கூட்டத்தைச் சேர்ந்த பரமானந்தன் என்பவனுக்கு கை கால்களில், விலங்கிட்டு கோட்டையிலே போட்டு விசாரிக்க, சண்டாளன் எல்லாவற்றையும் ஆதியோடந்தமாகச் சொல்லிப் போட்டான். அவன் வார்த்தையின்படி சூதே என்கின்ற பறங்கியன் இவன் மூலமாக ஆட்களை நியமித்து, அவர்களைப் புதுச்சேரி தெருக்களில் சுற்றிவரச்செய்து, கை விலைக்குச் சிலரையும், மற்றவர்களை மோசம் பண்ணியும் அழைத்துபோயிருக்கிறார்கள். மோசம் பண்ணுவதென்றால் சிலருக்கு சுண்ணாம்பிலே மருந்து கலந்துகொடுத்தும், சிலருக்கு மைச்சிமிழ் வைத்தும் கூட்டிப்போவது. இப்படிக் கூட்டிச் சென்றவர்களை ஆங்காங்கே கிராமங்களில் இருக்கின்ற இவர்களுடைய வீடுகளில் வைத்திருப்பார்கள்.பிறகு அவர்கள் ஒர் இராத்திரியிலே படகின் பேரிலே ஏற்றி அரியாங்குப்பத்திலிருக்கிற வளவு ஒன்றில் இறக்கிவிடுவார்கள். அவ்விடத்திலே மொட்டை அடித்துக் கறுப்புப் புடவைகளைக் கொடுத்து, ஒரு காலிலே விலங்கு வளையம்போட்டு, சூதன் வீட்டிலே அடைத்துவைப்பார்கள். கப்பல் போகச்சே கப்பலில் ஏற்றி அனுப்பிவிடுவார்களாம் ‘

‘பிடிபட்டகைதிகள் என்னவானார்கள் ? ‘

‘உங்களுக்குச் சூதே என்பவன் பிரான்சுவாரெமியின் ஆளென்று தெரியும். என்ன நடந்ததோ ? ரெமியின்பேரில் எந்தக் குற்றச் சாட்டும் சுமத்தப்படவில்லை. எதிர்பார்த்ததுபோலவே, சூதேவை மாத்திரம், உத்தியோகத்தை வாங்கிப்போட்டு, அவனுக்கு எஜமானனாயிருக்கிற குவர்னர் துரை அவர்களை அழைத்து, அவனுடைய கணக்குவழக்கெல்லாம் ஒப்புக் கொள்ளச் சொல்லி அதற்கு வேறொருத்தனை நியமித்துள்ளார்களாம். பரமானந்தனை மாத்திரம் தண்டித்திருக்கிறார்கள். தேவராசன் தப்பித்துவிட்டானென்று பேச்சு. எய்தவர்களைவிட்டு, அம்புகளுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.

‘ஓலை நறுக்கு விஷயம் என்ன ஆயிற்று ? அதைக் கவந்த்திற் கொள்வீர் ? ‘

‘மறக்கவில்ல. முருங்கப்பாக்கம் வீரா நாய்க்கன் என்பவன், நாளைக்காலை என் வீட்டிற்கு வருவதற்கு சம்மதித்திருக்கிறான்.ரவன் வந்து போனபின், ஓலைநறுக்கின் முழுவிபரத்துடன் வருகிறேன்.. இதற்குள் மாறனும் வில்லியனூரிலிருந்து வந்துவிடுவான். அதுவரை நீங்கள் மனக்கிலேசமின்றி நன்கு ஓய்வெடுக்கலாம். ‘

/தொடரும்/

Na.Krishna@wanadoo.fr

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 31

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


All spirits tend towards perfection, and are furnished by God with the means of advancement through the trials of corporeal life; but the divine justice compels them to accomplish in new existences, that which they have not been able to do, or to complete, in a previous trial.

-Allan Kardec

இருபதாம் நூற்றாண்டு….

‘ப்பா என்ன வெய்யில்! இப்படி கொளுத்துதே! வெயில் சுளீரென்று முகத்தில் அறைந்தது.

குப்பென்று மூத்திரவாடை, குறுக்கும் நெடுக்குமாக தொலைத்துவிட்டு ஓடும் மனிதர்கள், சகட்டுமேனிக்கு பஸ் ஹாரனை ஒலித்து, பயணிகள் சிதறு தேங்காய்களாகத் தெறித்து விழுவதை ரசிக்கும் ஓட்டுனர்கள். சோர்ந்திருந்த பழைய ஜோடிகள், உற்சாகத்துடன் வலம்வரும் புதிய ஜோடிகள். கோபத்துடனோ சந்தோஷத்துடனோ தாய்வீட்டிற்குச் செல்லும் பெண்கள். கல்யாணத்திற்குப் போகின்றவர்கள், முடிந்து வருகின்றவர்கள். இழவுவீடு செல்லும் உறவுகள்.காரியம் முடித்து திரும்புகின்றவர்கள். ஆண்கள் பெண்கள், குழந்தைகள் முதியவர்கள், விற்பவர்கள் வாங்குபவர்கள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், பழங்கள்; இடையில் வேலு.

பாகூர் வழியாகப் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த கடலூர் பஸ், பயணிகளைப் பிதுக்கித் தள்ளியது. முண்டியடித்து, கூட்டத்திற் புகுந்து வெளியே வந்தபோது சட்டை கசங்கிக் கிடந்தது. அருகிலிருக்கும் டிரை கிளீனிங் செண்டரில் கொடுத்து அயன்பண்ணிப் போட்டபிறகுதான் மற்ற வேலைகளை கவனிக்கணுமென வேலு தீர்மானித்தான்.

இவனைத் தள்ளிக்கொண்டு ஒருவன் அவசரமாக ஓடினான். அறிஞர் அண்ணா புத்தகத்தினைத் தீவிரமாய் வாசித்தவாறிருக்க, சக பயணிகளிடமிருந்து முடிந்த மட்டும் மறைத்துக்கொண்டதாக பாவலா செய்து ஒண்ணுக்குப் போனான். படுத்துக்கிடந்த மாடொன்று திடுமென்று எழுந்து நின்றது. அவசரமாய் முடித்து, உதறிக் கொண்டு திரும்பிவனின் கன்னத்தில் பளீரென அறைவிழுந்தது. விட்டவன் நம் வேலு, தன் மனதிற்குள். கழுத்துப் பட்டை கசகசவென்று வேர்வையில் நனைந்திருந்தது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தான். குறுக்காய் மடித்துக் கழுத்தில் செருகினான். வேலுவை உரசிக்கொண்டு இருமாடுகள் நடந்து சென்று தள்ளியிருந்த குப்பைத் தொட்டியில் தலையைத் துழாவிக் கொண்டிருந்தன. கோணியுடன் ஓடிவந்த காக்காய் மனிதன், மாடுகளை ஓட்ட முயன்று, முடியாமல் தொடர்ந்து அடுத்தத் தொட்டியைத் தேடி ஓடினான்.

எல்லோரிடத்திலும் தேடல். நேரான பாதையில் அல்லது குறுக்காக அல்லது சுற்றிவந்து முடிந்தவரை இன்றே அல்லது நாளை அல்லது நாளை மறுநாள் அல்லது எதிர்காலத்தில் ஒரு புள்ளியில் எதனையோ எவரையோ சந்தித்தாகவேண்டும். சந்தித்தபிறகு மறுபடியும் தேடல். மறுபடியும் நேராய், மறுபடியும் குறுக்கு வழியில் அல்லது சுற்றிக்கொண்டு பயணம்..பயணம் முடிவற்ற பயணம். மதவாதிகளைக் கேட்டால் கர்மா, பிறப்பென்று நியாயப்படுத்துவார்கள். இவனது மார்க்ஸிய தோழர்கள் ‘தேவை ‘ ‘அளிப்பு ‘ என்பார்கள். ஏதோவொரு விதி, எல்லாவற்றிற்கும் பொருந்துகிறது.

பிரெஞ்சு நண்பன் மையப்புள்ளியில் இவனைக் கரகரவென்று சுற்றிநிறுத்துகிறான். சுற்றுகின்றவரை தெளிவின்மை. மயக்கம் தீர்ந்தபிறகு, இவன் முகவரி என்ன என்பது தெளிவாகிறது. இவனுக்கு வறுமையை நியாயப்படுத்தும் காரணங்கள் புரிகின்றன; ஊகங்கள் புரியமறுக்கின்றன.

இப்பல்லாம் பெர்னார்ஃபோந்தேன் அடிக்கடி மறுபிறவி குறித்து நிறைய பேசறான். அவனோடச் சேர்த்து இவனையும் குழப்பிடறான். பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்பதெல்லாம் ஒரு சிறிய கூட்டத்திற்கானவை. இவனைப்போல கோடானு கோடிகளுக்கல்ல என்பதை புரிந்தும் இப்படி அலைவது சிநேகிதனுக்காக.

அவனை மறுத்துப் பேசுவதே இவனுக்கு வாடிக்கை ஆயிட்டுது. அவன் உண்டுண்ணு ஒன்றைச் சொன்னா, இவன் இல்லைன்னு சொல்லியாகணும். இல்லைன்னா சுவாரசியமில்லை, இருதுருவப் பிடிப்புகள் இரண்டு பேர்கிட்டேயும் நிறைய இருக்குது, தெளிவாகவும் இருக்குது. அதனால கயிற்றை அதிகம் முறுக்காமல் கவனமா இருக்கமுடியுது. இரவு பகல், ஆண் பெண், பிறப்பு இறப்பு, இன்பம் துன்பம், ஆண்டான் அடிமை, செல்வம் வறுமை, வரிசையில் உண்டு இல்லையும் இவ்வுலகத்தை நடத்திச்செல்லுகின்றன. பெர்னார்ஃபோந்தேன் நம்புகிறான், இவனும் நம்புகிறான்.

வேம்புலி நாயக்கர் மருமகளைச் சந்தித்தாகவேண்டும். அவளோட அப்பன் ரொம்பக் காலத்துக்கு முன்ன, பெர்னார் குடும்பத்துக்கு எழுதிய கடிதத்திற்குக் காரணமான ஓலை நறுக்குகள் பத்தி விசாரிக்கணும். ‘ஓலை நறுக்குகளை எப்பாடுபட்டாவது கொண்டுவந்திடறேன் கவலைப் படாதேண்ணு ‘ பெர்னார்கிட்ட வாக்குக் கொடுத்து ஒரு மாதத்துக்குமேல ஆகுது. நண்பனிடம் கொடுத்த வார்த்தைக்காக, இவனும் வேம்புலி நாயக்கர் மருமகளைத் தேடி ஒன்றிரண்டு நாட்கள் அலைந்ததும் உண்மை. வேம்புலி நாய்க்கர்காலமானபிறகு சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் எட்டாம் நாள், முப்பது, கசப்பு தலைண்னு இவனுக்கு ஆர்வமில்லாத சடங்குகள், சம்பிரதாயங்கள் வரிசையாக இருந்தன. உறவுகளுக்கு மத்தியில் இறந்தமனிதரது மருமகளைச் சந்திப்பதும் சரியென்று தோன்றலை. அவளது வீடுவரைச் சென்று திரும்பி இருக்கிறான்.

டிரைகிளீனிங் செண்டரில் கொடுத்துக் கசங்கியிருந்த சட்டையை அயன்பண்ணக் கொடுத்து வாங்கி அணிந்தான். பக்கத்திலிருந்த சைக்கிள் ஸ்டோரில், வாடகைக்கு ஒரு சைக்கிள் எடுத்துக்கொண்டான்.

இந்தமுறை சங்கரதாஸ் தெருவைக் கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. சொல்லப்போனால் கடந்த இரண்டுமாதங்களில் மனதிற் தெளிவாகப் பதிந்திருந்தது. கண்களை மூடினால் சிற்றோடு வேய்ந்த தாழ்ந்த கூரையும், இடது புறமிருந்த ஒட்டுத் திண்ணையும், வாசலும் வலது புறமிருந்த பெரிய திண்ணையும் அதனை மறைத்துக் கட்டியிருக்கும் பெரிய தென்னங்கீற்றுத் தட்டியும், ஈமொய்க்கும் சாக்கடையும், பெரிய வாணலியில், எண்ணெய் காய பஜ்ஜியோ வடையோ சுட்டு அலுமினிய தட்டிலிடும் தொப்பை ஆசாமியும் வந்து போகின்றார்கள்.

—-

நண்பனே! உமதுடல், முற்பிறவியின் நல்வினை தீவினைகளுக்கான இன்பதுன்பங்களை அனுபவித்தற்கேற்றவைகையிற் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவாயா ?

உயிர்கள் அஃரிணை உயர்திணை உடம்புகளுடன் எண்ணிறந்த போகங்களைப் புசிக்கின்றன. புசிக்குங்காலத்தும் புண்ணிய பாவங்களை மீண்டும் ஈட்டுகின்றன. அதனால் பிறத்தல் இறத்தல் மீண்டும் மீண்டும் உண்டாகிறது. இருவினை ஒப்பும், மலபரிபாகமும் வந்த இடத்து அருளால் தனக்குள்ளே சிவஞானம் விளங்கும்.

ஆனால் அதுவரை நீ பிறந்து.. இறந்து.. பிறந்து..இறந்து..

—-

இவன் போய் நின்றபோது, வேம்புலிநாய்க்கர் மருமகள் ரிக்ஷாகார நாகப்பனுடன் சண்டை பிடித்திருந்தாள். ரிக்ஷாவில் பிரசவ வேதனையில் ஒரு பெண். சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டுக் காத்திருந்தான்.

‘இதுவரைக்கும் அட்வான்ஸ் அட்வான்ஸ்னு நானூறுக்கு மேல வாங்கிட்ட. மாசத்துல பாதி நாள் குடிச்சிட்டு, ஒழுங்கா வரமாட்டறே. உனக்காக காத்திருந்திட்டு பிள்ளைகளுக்கு வேற ரிக்ஷா தேடறது எனக்கு வாடிக்கையாப் போச்சு. ‘

‘இல்லைம்மா இனிமே அப்படி நடக்காது. இவ ராத்திரியிலேயிருந்து வயித்துவலிண்ணு துடிச்சிக்கிட்டிருக்கா. இப்பவோ எப்பவோண்ணு இருக்குது. கவர்மெண்ட் ஆஸ்பத்திரிண்ணாலும் அம்பதோ நூறோ செலவில்லாமல் நடக்காதும்மா. இனி அட்வான்ஸ்ன்னு வந்து நிண்ணா, ஏண்டா நாயே, எங்கே வந்தேண்ணு கேளு. ‘ தலையைச் சொறிந்துகொண்டு நிற்கிறான். ரிக்ஷாவிலிருந்த பெண், பிரசவவலியிலும் முகத்தைச் சுளித்துக்கொண்டு, ஜாடையாக, காசு கைமாறுகின்றதாவெனக் கவனித்துக்கொண்டிருக்கிறாள்.

‘நீங்க.. ‘

‘நான் இரண்டுமாசத்துக்கு முன்னாலெ உங்க வீட்டுக்கு ஒரு சிநேகிதனோடு வந்திருக்கேன். ‘

‘எங்க மாமா செத்த அன்னைக்கு, ஒரு வெள்ளைக்காரனோட வந்திருந்தீங்க இல்லை ? ‘

‘அம்மா, என்ன அனுப்பிவுடுங்கம்மா ‘ மீண்டும் ரிக்ஷாக்காரர் தலையைச் சொறிந்துகொண்டு நிற்கிறார்.

‘நீங்கள் அவரைக் கவனியுங்கள். பிறகு பேசுவோம். ‘

‘கொஞ்சம் பொறுங்க! இவனை அனுப்பிட்டு வந்துடறேன் ‘- ஜாகெட்டுக்குள் துழாவி, ஒரு கறுப்பு நிற பர்ஸை எடுத்து ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறாள். பணத்தைப் பார்த்தமாத்திரத்தில் ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்த பெண் எழுந்து உட்காருகிறாள்.

‘அம்மா வரேம்மா! ஐயா வரேன்ய்யா!.. ரிக்ஷாக்கார நாகப்பன் சந்தோஷத்துடன் வண்டியை உருட்டிக்கொண்டு ஓடுகிறார்.

‘வாங்க! உள்ளே போய் பேசலாம். ‘ என்று கூறி பெண்மணியைத் தொடர்ந்து உள்ளே நுழைகிறான்.

‘உட்காருங்க! ஒரு நிமிஷம் வந்திடறேன் ‘ நடுவாசலை ஒட்டியிருந்த தாழ்வாரத்தில் போட்டிருந்த சோபாவைக் காட்டினாள்.

இவன் உட்கார்ந்து காத்திருந்தான். காத்திருந்த நேரத்தில் கண்கள் வீட்டை மேய்ந்தன.உள்ளே டெலிவிஷன் திரையில் மன்மதராசா. ஏகத்திற்கு குதிபோடுகிறது. அருகே குத்திவைக்கபட்ட லேமினேட் செய்யப்பட்ட கலர் போட்டோவில் கோட்டு, டை, பிரெஞ்சுக்காரர்களின் ஸ்பெஷாலிட்டியான கெப்பி தொப்பியுடன் கறுப்புத் தமிழர். இவன் தலைக்கு எதிரே சுவற்றில், இவனைப் பார்த்து இயற்கையாகச் சிரிக்கும் பிள்ளைகளின் போட்டோ அருகிலேயே அந்தக்கால நடிகையொருத்தியின் தோற்றத்துடன் ஒரு பெண். அநேகமாக வேம்புலிநாயக்கர் மருமகளாக இருக்கலாம்.

கூடத்தின் மத்தியில் வேம்புலிநாயக்கர், நெற்றியில் சந்தணப்பொட்டு உதிர்ந்த குங்குமம், தலையில் பல்பு, பிளாஸ்டிக் மாலையென அலங்காரத்துடன் கலர் போட்டோவில், கூப்பிட்டால் எழுந்துவந்துவிடுவார் என்கிறதுபோல நாற்காலியில் பட்டும்படாமல் உட்கார்ந்திருந்தார். கீழே இருந்த மாடத்தில் மேலே புகைபடிந்தும், கீழே எண்ணெய் வடிந்துகொண்டும் இருந்தது.

ஒட்டணை துடைக்கபடாத சீலிங்பேன் ஒன்று, பூட்டிய நாளிலிருந்தே ஓடிக்கொண்டிருக்கிறதோ என்கின்ற இவனது சந்தேகத்தை உறுதிபடுத்துவதுபோல, டரடரவென்று சுழன்றுகொண்டிருக்கிறது. தெரிந்த அறைகளின் கதவுகளை மறைத்துக் கொண்டு பிரான்சுநாட்டுத் திரைச்சீலைகள். மொசேக் தரையில் திட்டுத்திட்டாய்க் கறைகள்.

‘என்ன குடிக்கிறீங்க ? காபி, டா, கொக்கா, பீர்.. என்ன வேணும் சொல்லுங்க. ‘

‘என்ன ஓட்டல்ல விசாரிக்கிற மாதிரி கேட்கறீங்க ? என்ன இருக்குதோ கொண்டுவாங்க. ? ‘

‘உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க ? வீட்டில எல்லாம் இருக்குது. ‘

‘காப்பி போதும். ‘

‘ஒரு நிமிஷம். ‘ என்று சொல்லிவிட்டுப் போனவள் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காப்பியைக் கோப்பையில் கலந்து கொண்டுவந்து இவனெதிரே இருந்த டாப்பாயில் வைத்துவிட்டு, இவனுக்கு நேரெதிரே போட்டிருந்த, ஒற்றை ஆள் சோபாவில் வசதியாய் உட்கார்ந்துகொண்டாள்.

‘நன்றி ‘, எனச் சொல்லிவிட்டுக் கோப்பையை எடுத்து வாயில்வைத்துகொண்டு அவளைப் பார்க்கிறான். முழங்கைவரை வளையல்கள். கழுத்தில் கல்வைத்த பெரிய டாலர் சங்கிலி. இடதுகை மோதிரவிரலில், பிரெஞ்சுக் கொடிபோட்ட மோதிரம். சிவப்பு பார்டர்கொண்ட கிரே கலர் ஷிஃபான் சாரி. இடுப்பிற்கும் மேலே, தடித்த சதையில் வழிந்து கிடக்கும் வயிற்றை இரண்டாவது முறையாகப் பார்க்கப் பயந்து மேலே நகர்ந்தான். டிரான்ஸ்பெரண்ட் சில்க் பிளவுசை அதிகமாக கீழிறக்கி, மார்பின் எல்லைகளைக் கவனமாய் வெளிப்படுத்தியிருந்தாள். தடித்த உதடுகளில் கருநீலத்திற் சிவப்புச் சாயம். பெரிய மூக்கு, மூக்குவரை இறங்கியிருந்த கண்கள். முதற் தடவை பார்த்தக் கொண்டை. உள்ளே போனவள் பர்ஃபூயூமை அதிகமாகத் தன் மீது தெளித்துத் திரும்பியிருக்கவேண்டும். மூக்கை அடைத்தது. காப்பியைக் ருசித்து குடிக்க இயலாமல் கப்பை மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்தான். அவள் இவன் பேசட்டுமென காத்திருப்பதுபோல, மெல்ல சிரித்தாள்.

‘சூரைத்தேங்கா அடிறா அடிறா…சூரியனைப் புடிறா புடிறா.. ‘

‘டெலிவிஷன் வால்யூமை குறைக்க முடியுமா ? ‘

‘கொஞ்சம் இருங்கள், இதோ வந்துவிடுகிறேனெனப் போனவள் டெலிவிஷனை நிறுத்திவிட்டு வந்தாள்.

‘சொல்லுங்கள் என்ன வேணும் ? ‘

‘இது என்னோட பிரெஞ்சுச் சிநேகிதன் சம்பந்தபட்ட விஷயம். உங்க மாமனார்கிட்டயும் இதைபற்றி அன்றைக்குப் பேசியிருக்கோம் ‘

‘அதான் எனக்கு ஆச்சரியமாயிருக்குது. செத்துபோன என்மாமனார் உங்ககிட்டப் பேசினாரிண்ணீங்க. என்னால நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை. ஆனால் உங்ககிட்ட அன்றைக்கு கை நீட்டிப் பணம் வாங்கியிருக்கார். பின்னாடி அவர்கையில ரூபாய் நோட்டிருந்ததைப் பிணத்தை குளிப்பாட்டும்போது பார்த்து, பிடியைத் தளர்த்தி எடுத்தோம். அதை வாங்கிட்டுப் போக வந்தீங்களா ? ‘

‘நீங்க தவறா நினைச்சீட்டாங்க. இல்லை அதற்காக வரலை. தவிர அன்றைக்கு உங்க மாமனார் எப்போது இறந்திருப்பார் என்பதும் இப்போது பிரச்சினையில்லை. எங்களுக்கு முக்கியமா ஒன்று தெரிஞ்சாகணும். ரொம்ப காலத்துக்கு முன்னாடி உங்க தகப்பனார், பிரான்சில் உள்ள என் சினேகிதன் குடும்பத்துக்கு ஒரு கடிதம் போட்டிருக்கிறார். அக்கடிதத்திலே பெர்னார் குளோதன் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்ட ஓலை நறுக்குகள் அவரிடம் இருப்பதாக சொல்லியிருக்கிறார். ‘

‘பெர்னார்குளோதன் யாரு ? ‘

‘என் நண்பன் பெர்னார் ஃபோந்தேனுடைய கொள்ளுத்தாத்தாண்ணு ஒரு செளகரியத்துக்காக வச்சிக்கலாம் தப்பில்லை. அவர் துய்மா காலத்திலேயும், பின்னாடி துய்ப்ளெக்ஸ் காலத்திலேயும் இங்கே இருந்திருக்கார். ‘

‘துய்ப்ளெக்ஸ் கேள்விப்பட்டிருக்கேன், துய்மாவெல்லாம் தெரியாது. சரி அந்தக் கடிதாசியை எங்கப்பா போட்டிருப்பார்னு எப்படி சொல்றீங்க. ‘

‘மறுபடியும் உங்க செத்துப்போன மாமனாரத்தான் நான் கூப்பிட்டாகணும். அவர்தான் உங்கப்பா எழுதினார்னு உறுதியாகச் சொன்னவர் ‘

‘அப்படியா ? எனக்குக் குழப்பமா இருக்குதுங்க. அதற்கு நான் என்ன செய்யணும். ‘

‘நீங்க ஒத்தாசை செஞ்சா முயற்சி பண்ணிப் பார்க்கலாம். ‘

‘எப்படி ? ‘

‘அதாவது உங்க அப்பா இறந்ததுக்கப்புறம் வீட்டையொழிச்சு, எடுத்துக் கொண்டுவந்த பொருட்களையெல்லாம் என்ன செஞ்சீங்க ? ‘

‘அவர் கண்டதை மூட்டைக் கட்டிவச்சிருப்பார். அதனால பலதைக் குப்பையிலே போட்டு எரிச்சுட்டோம். ஆனால் சிலதை புதுப்பாக்கதுல எங்க ஊரு திண்ணை வாத்தியார் கிஷ்டப் பிள்ளையிடம் கொடுத்துவச்சிருந்தார். அவரைக் கேட்டால் தெரியும். ‘

‘என்ன பேரு சொன்னீங்க ? ‘

‘புதுப்பாக்கம் கிஷ்டப்பிள்ளை. எங்க அப்பாவுடைய பால்ய சிநேகிதர். ‘

‘நிச்சயமா அவர்கிட்டேதான் இருக்கணும். இந்தப் பேரை உங்க மாமனார் வாயாலும் கேட்டிருக்கோம். அவர்தான் உங்கப்பாவிடம் பெர்னார் குடும்பத்துக்குக் கடிதம் எழுதுண்ணு யோசனை கொடுத்திருக்கிறார். ‘

‘அப்படியா ? அவரை வேண்டுமானாப் போய்ப் பார்க்கறீங்களா. இப்பவும் கிராமத்திலதான் இருக்கிறார். ஆனால் கிழவி ஒரு மாதிரி. யாரையும் சுலபத்துல கிட்டச்சேர்க்காது. ‘

‘நீங்க உதவி பண்ண முடியுமா ?. உங்க கிராமத்துக்குக் கிட்டத்துல போவீங்களா ? ‘

‘நானா ? அங்கே எங்களுக்கு இருந்ததையெல்லாம் விற்றுட்டு வந்தாச்சே. எங்க சொந்தபந்தத்துக்கு நல்லது கெட்டது நடந்தா அந்தப் பக்கம் போவேன். மற்றப்படி அங்கே தலைவச்சுப் படுக்கிறதில்லை. ‘

‘அப்படான்னா நாம மூவரும் காரெடுத்துக்கொண்டு மதியம் போய் வந்திடலாமா ? ‘

‘திடாரென்று எப்படி ? ஒண்ணு செய்யலாம். அடுத்த ஞாயிற்றுக் கிழமை கிராமத்துக்குப் போகலாம். கிஷ்டபிள்ளை பேரன் இங்கேதான் கிட்டத்துல ஒரு ஸ்கூல்ல படிக்கிறான். அவனிடம் தகவல் சொல்லி அனுப்பிடறேன். ‘

‘நீங்க இவ்வளவு ஒத்தாசை செய்வீங்கண்ணு நான் நினைக்கல. என்னோட சினேகிதன் கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவான் ‘.

‘பதிலுக்கு நீங்க எனக்கொரு ஒத்தாசை செய்யணுமே. ‘ கண்களை அகலத் திறந்து விழுங்கிவிடுவதுபோலக் கேட்டபோது, வேலு தடுமாறினான்.

‘என்ன சொல்லுங்க. அவசியம் செய்யறேன் ‘

‘பயப்படாதீங்க உங்களை வேறேதும் செய்யச் சொல்லை. நீங்கதான் பார்த்தீங்களே. ரிக்ஷாகாரர் பொண்டாட்டியை பிரசவத்துக்குப் பெரிய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போயிருக்கார். கோலேழ் கல்வேயில் படிக்கிற பசங்களை அழைச்சுகிட்டு வரணும். நான் இனி ரிக்ஷா பார்த்து அனுப்பறது சிரமம். உங்க கூட பேசிகிட்டு இருந்ததில நேரம் போனது தெரியலை. சித்தே உங்க சைக்கிள்ல அழைச்சிட்டு வந்திடுங்கிளேன். ‘

‘எங்கூட உங்க பசங்க வருவாங்களா ? ஸ்கூல்லதான் அனுப்புவாங்களா ? ‘;

‘நான் போன் போட்டு ஸ்கூல்ல சொல்லிடறேன். நீங்கப் பயப்படாதீங்க! ‘ என்றவள் பார்த்த பார்வை வேலுவை பயமுறுத்தத்தான் செய்தது.

/தொடரும்/

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா .

(-மூதுரை) -ஒளவையார்.

இரவு நான்காம் ஜாமத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானா உயிர்கள் மட்டுமல்ல, இரவுகூட ஓய்வெடுக்கின்ற நேரம். ஆழமான புன்னகையை முகத்திற் கண்டதையொாத்த சுக்கிலபட்ஷ நிலவு. பிறை நிலவில் உட்காரமுயன்று ஒதுங்கிப்போகும் இலவம்பஞ்சு மேகம். இருட்டில் கறைபடிந்ததுபோல நிலவொளி திட்டுத்திட்டாய்க் கிடக்கிறது. நட்சத்திரங்கள் தைத்த வெல்வெட்டு இருட்டு அடிவானம். கோடைமழையில் குளிர்ந்திருந்தது பூமி. இரவுக்கெனப் படைக்கப்பட்ட உயிர்கள் எழுப்புகிற ‘உம் ‘ ஓசை. உற்றுக்கேட்டு ஓசையைப்பகுத்தால், இந்த உம்மிலும், ஓங்காரத்தின் உள்ளடக்கமுண்டு.

புதரிலிருந்து வெளிப்பட்டுப் பாதையில் நின்ற குள்ளநரியொன்று, நடுநிசியில் தனித்து ஒலித்த குதிரையின் குளம்படி கேட்டு மீண்டும் புதருக்குத் திரும்புகிறது. வயல் எலியொன்றை வாய்கொள்ளக் கவ்வித் திரும்பிய ஆந்தை, குதிரையுடைய கனைப்பின் அதிர்ச்சியில் இரையை நழுவவிட்டு ஏமாற்றத்துடன் பொந்திற்குத் திரும்பி எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. பகல் முழுதும் காத்திருந்து, காக்கைக் கூட்டினிற் புகுந்த நாகத்திற்குக் காதில் குதிரையின் குளம்படி இடியாய் விழுந்திருக்கவேண்டும், மரத்தினடியில் சுருண்டு விழுகிறது. பாதையின் குறுக்கே தாழ்வாக இருகண்கள் தனியே நிற்பதைப்போன்றத் தோற்றம். குதிரையின் கால்கள் நெருங்க, அவை ஓடி மறைகின்றன. அது காட்டுப் பூனையாக இருக்கலாம். ஒன்றையொன்று துரத்திக்கொண்டு பரபரவென்ற ஓசையெழுப்பி ஓடும் உடும்புகள், அடுத்துச் சில நாழிகைகளில் போன இடம் தெரியவில்லை. புற்றிலிருந்து அடை அடையாய் ஈசல் பறப்பதும், தங்கள் இறக்கைகள் உதிர மண்ணில் விழுவதுமாக இருக்கின்றன. அவற்றைத் தேடி உண்பதற்காக இரட்டை நாக்குடன் அலையும் பாம்புகள், அழுங்குகள்.

இருபுறமும் உயர்ந்த பனைமரங்கள், தொடர்ச்சியாய் நிற்க, இடையில் வண்டித்தடமொத்த பாட்டை. அதிலொரு தடத்தைக் தேர்வுசெய்து, மாறனது குதிரை வில்லியனூர் திசைக்காய் ஓடிக் கொண்டிருக்கிறது. குதிரையில் நமக்கு வேண்டிய மாறன். மாறன் முதுகினை ஒட்டிக்கொண்டிருப்பவன், சன்னாசி. துபாஷ் பலராம்பிள்ளையின் நம்பிக்கைக்குரிய ஒற்றன். இரவு நேரமென்பதாலும், மாறனை ஒட்டி உட்கார்ந்திருப்பதாலும், நாம் அவனை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கின்றது. ஆனால் காதுகளிரண்டிலும் இருக்கின்ற கடுக்கனும், கொத்தமல்லிக் கத்தைக் குடுமியும், கழுத்திற் கிடந்த சிவப்பு உருமாலை, முண்டாசாகவும் ஞாபகப்படுத்தினோமென்றால், இவன் கடந்த மூன்று நாட்களாக வேலாயுத முதலியாரை வேவுபார்த்துவருபவன் என்பதை நாம் அறிவோம்.

கடந்த அரைமணிநேரமாகக் குதிரையை விரட்டிக்கொண்டு வந்திருந்ததால், இனி எவரும் இந்த அகாலநேரத்திற் தங்களைத் துரத்திவர வாய்ப்பில்லை என்கின்ற முடிவுக்கு மாறன் வந்திருந்தான். குதிரையில் கடிவாளத்தினைச் சற்று இழுத்துப் பிடித்து பின்னர் பிடியைத் தளர்த்தினான். குதிரை நின்று மெதுவாக ஓடியது.

‘மாறன் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம். ? ‘ சன்னாசி.

‘வில்லியனூர்த் திசைக்காய் என்று நினைக்கிறேன். அங்கே பார்த்தாயா ? தீப்பந்தத்துடன் வேடர்கள் புற்றீசல் பிடிக்கின்றார்கள். அவர்கைளைக் கேட்போமென்றால் தெளிவான பதில் கிடைக்கும். ‘

மாறன் முடிக்கவும், வேடர்களை அவர்களை நெருங்கியிருந்தார்கள். நள்ளிரவில் குதிரையுடன், இரு மனிதர்களை எதிர்பார்க்கவில்லை என்பது அவர்கள் முகத்தில் தெரிந்தது.

‘ஆரப்பா அது ? இந்தப் பாட்டை வில்லியனூர் போகுமா ?

‘ஆமுங்க.. நேரே போனால், கள்ளுக்கடையும். அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் சாவடியும் வரும். ‘

‘நன்றிடாப்பா ‘ என்று, அவர்களிடம் சொல்லிக்கொண்டு, மாறனும் சன்னாசியும் தொடர்ந்து சென்றார்கள்.

‘மாறன் அபிஷேகப்பாக்கத்தில் எம்மை விட்டுவிட்டுப் போவீரா ? என் குடும்பத்தவரைப்பார்த்து மூன்று நாட்களுக்குமேலாகின்றன. நான் நாளைக்குச் சாயங்காலம் முதல்ஜாமம் முடியும் நேரத்தில் ஐயாவைப் பார்க்க வருவதாகச் சொல்லிப்போடும்.

‘வாஸ்தவம். நீர் சொல்லுவதும் ஒருவிதத்தில் நல்ல யோசனைதான். நானும் வில்லியனூரில் வைத்தியரில்லம்வரை செல்லவேணும். வாணியண்டை சிலவிபரங்களை அறியவேணும். அப்படியில்லையெனில் எனது தொண்டைமானத்தம் பயணத்திற்கு அர்த்தமில்லாமற் போய்விடும். எமது பேரிலே பெர்னார் குளோதன் அபரிதமான பிரீதிகொண்டிருக்கிறான். அவனது மனதினைச் நோகடிக்க விருப்பமில்லை. ஆனால் இப்படியான இரவில், துலுக்கப் படைகளால் ஆங்காங்கே தொந்தரை இருக்கின்ற நேரத்தில், தொடர்ந்து பயணம் செய்வது அவசியமாவெனவும் யோசிக்கவேணும். வில்லியனூர் சாவடிக் காவலரைக் கேட்டு, இரவை சாவடித் திண்ணையில் கழித்துவிட்டு, அதிகாலையில், சூரியோதயத்திற்குப் பிறகு இரண்டு மூன்று நாழிகைக்குள் புறப்பட்டோமெனில் அபிஷேகப்பாக்கம் போய்ச்சேரலாம். வழியில் வில்லியனூரில் வைத்தியரில்லத்தில் ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துவிட்டுப் புதுச்சேரி போய்ச்சேருவேன். மாலை நீர் புறப்பட்டு பெர்னார்குளோதன் இல்லம் வந்துவிடும். என்ன சொல்கிறீிர் ? ‘

குதிரை இருவரையும் சுமந்துகொண்டு கள்ளுக்கடை வாசலை அடைந்திருந்தது உள்ளே எரிந்துகொண்டிருந்த விளக்கும், உரையாடல்களின் கதம்ப ஒலியும் உள்ளே மனிதர்கள் இருப்பதைச் சொன்னது.

கள்ளுக்கடையைப் பார்த்ததும், சன்னாசியின் நாக்கு ஊறியது.

‘மாறன்! நீர் சொல்வதும் ஒருவகையில் சரியே. அபிஷேப்பாக்கத்திற்கு நாளைக்குக் காத்தாலே போய்க்கொள்ளலாம். நான் சரியாகச் சாப்பிட்டு மூன்று நாட்களுக்கு மேலாகிறது. உடலசதி வேறு. கடையுள்ளே ஆட்கள் அரவம் கேட்கிறது. உள்ளே சென்று வரலாமே ?. அங்கே ஏதேனும் தீனியும் கிடைக்கலாம். ‘

‘உமக்கு இருக்கின்ற இந்தச் சபலம் வேவு பார்க்கின்ற மனிதர்களுக்கானதல்லவே. கவனமாயிரும். சரி சரி.. இந்த நேரத்தில் அங்கே என்ன கிடைக்கும். சட்டிகளையெல்லாம் துடைத்து வைத்திருப்பார்களே. போய்ப் பார்க்கலாம். இதனை நடத்துபவன் எமக்குத் தெரிந்தவன் – நொண்டிகிராமணி. ‘

சாவடி எதிரேயிருந்த பூவரச மரத்தடியில் குதிரை நிறுத்தியபோதுதான். அங்கு வேறு இரண்டு குதிரைகள் வேரில் பிணைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான். அதிலொன்று முதல் ஜாமத்தில் அரியாங்குப்பம் ஆற்றினை ஒட்டிய வளவெதிரேக் கண்டதை ஒத்திருந்தது. அருகிற் சென்று பார்த்தான். மரத்தினடியில் அடர்ந்திருந்த இருட்டில் குதிரையினை அடையாளம் காண்பதென்பது இயலாதென்ற முடிவுக்கு வந்தான். தவிரச் சற்று முன்புவரை இல்லாத பசிமயக்கம் சன்னாசியின் பேச்சால் இவனிடமும் ஏற்பட்டிருக்கக் கண்கள் சோர்ந்திருந்தன. மாறன் முன்னே செல்ல, சன்னாசி பின்தொடர இருவருமாகக் கள்ளுக்கடையில் நுழைந்தார்கள்.

கள்ளுப்பானையிற் குனிந்துகொண்டிருந்த நொண்டிக் கிராமணி ஆள் அரவம் கேட்க வாசலைப் பார்த்தான்.

நொண்டிக்கிராமணி எனவழைக்கபடும் சுப்பு கிராமணிக்கும் பூர்வீகம் மாறனைப்போலவே முத்திரைப்பாைளையம். இவனைப் போல விவசாயக் குடும்பம் அல்ல. மரம் ஏறிக் கள்ளிறக்கும் குடும்பம். மாறனின் தகப்பனாருக்கு ‘ஒருமரத்து கள் ‘ தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். எப்போதாவது இவர்கள் வீட்டில் ஆப்பம் போட்டாலோ, சாற்சோறு என்றாலோ சுப்பு கிராமணி வீட்டிலிருந்தே, கள்ளும், சாறும் வந்துவிடும். மாங்காயென்றும், தேங்காயென்றும், அவர்கள் வீட்டிற்குச் தவறாமல் பதிலுக்கு இவர்கள் வீட்டிலிருந்து, போய்ச் சேரும். கும்பெனி அரசாங்கம், கள் வியாபாரத்தையும், சாராய வியாபாரத்தையும் புதுச்சேரி மண்ணில் தடைசெய்திருந்தபோது., மாறன் குடும்பம், தானியம் தவிசென்று கொடுத்துக் அவனதுக் குடும்பத்தை கஷ்ட ஜீவிதத்திலிருந்து காப்பாற்றி இருந்தது. கும்பெனி மறுபடியும் புதுச்சேரி மண்ணில் கள், சாராயம் விற்கலாமெனத் தமுக்கடிக்கப்போக, சுப்புகிராமணி வீட்டில் நிலைமைத் தற்சமயம் சீரடைந்துள்ளது.

‘என்னடாப்பா மாறன். இந்த அகாலவேளையில் வில்வநல்லூர் வந்த சேதியென்ன ? தாசி அபரஞ்சிதத்தைத் தேடி வந்தவனோ ? ‘

‘உமது புத்திக்கு வேறு காரணங்கள் தோன்றாதோ ? இதுபோன்ற வில்லங்கத்தனமான கதைகள் பேசுவதை நீர் எப்போதுதான் நிறுத்துவீரோ ? அது சரி இந்த நேரத்தில் காவிளக்கு ஏற்றிக்கொண்டு வியாபாரம் செய்வது கும்பெனிக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் தெரியுமோ ? ‘

‘ஆக்கினையும் அபராதமும் உண்டென்று அறிந்துதானிருக்கிறேன். இராத்திரி பத்துமணிக்குமேல் ஒருத்தரும் வெளியே புறப்படலாகெதென்றும், அப்படி புறப்பட்டால் அவர்களைச் சாவடியில் வைத்து தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுமென்றுகூடத்தான் தண்டோரா போட்டுள்ளார்கள். சித்தே முன்னே இவர்கள் வந்து கடை திறக்கவேணுமாய் சண்டித்தனம் பண்ணினால் என்னைப் போன்ற பயந்தகுடிகள் பணிந்துதானே போகவேணும். ‘

‘ஆரடா இவன் ஒப்பாரி வைக்கிறவன் ‘ அவர்களை வெளியிலே நிறுத்திப் படலைப் போடு. ‘ கலயத்தை உறிஞ்சிகொண்டிருந்தவன் நொண்டி கிராமணியைப் பார்த்துக் கூச்சலிட்டான்.

‘மாமா.. ஆரவர்கள் ? – கண்கள் செருகியநிலையில் எழுந்து நின்ற மற்றவன் இவர்கள் திசையில் கை நீட்டிவிட்டு, மீண்டும் அங்கிருந்த விசுப்பலகையில் விழுந்தான்.

‘மாறன் கொஞ்சம் இப்படிக்காய் வரவேணும்.. ‘ ?

‘ஏன் என்ன செய்தி ? ‘

‘இவர்கள் இரண்டுபேரும், அரியாங்குப்பத்தில் முன்னிரவு நடந்த கூட்டத்திற்குக் காவலிருந்தவர்களாய் இருக்கவேணும். ‘

‘அப்படியா ? நல்லவேளை குடிமயக்கம் அவர்கள் கண்ணை மறைத்திருக்கவேணும். சுப்பு!.. தட்டியின் பின்புறம் போகலாமா ? ஏதாவது மிச்சசொச்சம் இருக்கிறதா. ?

‘இல்லாமலென்ன ? கள் கொஞ்சம் அதிகமாய் புளித்திருக்கும். பக்கத்தீனியாக என் பெண்ஜாதி, எனக்கென்று கொடுத்துவிட்ட வறுத்த குரவை மீன் துண்டங்கள் உள்ளன. நீங்கள் உள்ளே போங்கள். இந்தத் தடியர்களை அனுப்பிவிட்டு வருகிறேன் ‘, என்றவன் போன வேகத்தில் திரும்பி வந்தான்.

‘ஏன் என்ன விஷயம் ? ‘

‘அவர்களிருவரும் பிணம்போலக் கிடக்கிறார்கள். இனி என்ன நடந்தாலும் அவர்கள் எழுந்திருக்கமாட்டார்கள் போலிருக்கிறது. நீங்கள் வாருங்கள். ‘

‘இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் எங்கே இருந்து வருகிறீர்கள் ? ‘

‘அது ரகசியம், உமக்கு அவசியமற்றது ? ‘

‘ஏன் தாசி வீட்டிற்குப் போய்வருகின்றீர்களோ ?

‘என்ன சுப்பு, உனக்கு மறுபடியும் புத்தி ஏனிப்படி போகின்றது. உன்னிடம் சொல்லவேண்டிய நேரம் வரும், சொல்கிறேன். ‘

‘இல்லையென்றால் வாணியைச் சந்தித்துவிட்டு வருகிறாயா. சாயங்காலம் தேள்க்கடிக்காக ஒருவன் வைத்தியர் சபாபதி படையாட்சியைத் தேடிக்கொண்டு போயிருக்கிறான். அவரில்லையாம். அவரது புத்ரி, வாணிதான் சிகிச்சைச் செய்து அனுப்பியிருக்கிறாள் ‘

‘அப்படியா ? ‘

‘ஆக நீ அங்கும் போகவில்லை ? ‘

‘சுப்பு, நாங்கள் முதலிற் பசிக்கு ஏதேனும் பரிகாரம் பண்ணவேணும். முடிந்தால் உதவி செய். முடியாதென்றால் சொல்லிவிடு, சாவடித் திண்ணைக்கு நாங்கள் திரும்புவோம். துண்டை விரித்துத் தூங்குவோம். ‘

‘பசி வந்திட பத்தும் பறந்திடுமெனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். நொண்டிக் கிராமணியும் அதில் அடக்கமென்று எவரும் சொன்னதில்லை. ‘

‘உண்மையில், இங்கு வரும்வரை எனக்குப் பசியில்லை. இவருக்காகத்தான் இங்கே நுழைந்தேன். நண்பர் நிலை எமக்குத் தெரியாது ஆனாலினிச் சற்றுத் தாமதித்தாலும், உன்னையே எடுத்து விழுங்கிவிடுவேன். காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்றால், எதையாவது எங்களுக்குக் உடனே கொடுத்தாகவேண்டும். ‘

‘வேணாண்டாப்பா. உனக்கேதும் கால் கட்டில்லை. என் நிலைமை வேறு.. என்னை நம்பி மூன்று சீவன்களிருக்குது. ஆளை விடு. புதுச்சேரி கெட்டுக் கிடக்கிறதே என்று கேட்டேன். ஆண்பிள்ளையானாலும் இந்த அகால நேரத்தில் வெளியேச் சென்று வம்பை விலைகொடுத்து வாங்குவானேன் ? ஆனானப் பட்ட கனகராய முதலியாருக்கு நேர்ந்தது மறந்து போச்சுதா. எவனோவொரு சாயபுவைக்கண்டு

பேசி வரச்சே, நாற்பது ஐம்பது குதிரைக்காரர்கள் அவரை வழிமறிச்சதும், இவர் நாவெழாமல் மூத்திரம்போய், அலங்கோலப்பட்டதும் ஊரறிஞ்ச சேதியாச்சுதே. அவரைக் காப்பாற்ற கும்பெனி இருக்குது. நீ பார்க்கும் உத்தியோகத்தால் அப்படி முடியுமா ? சரி சரி உள்ளே போங்கள் ‘..

நொண்டிக் கிராமணி, தட்டியின் பின்னாலிருந்த மற்றொரு காவிளக்கை ஏற்றினான். அங்கிருந்த பானையிலிருந்து ஆளுக்கொரு கலயம் புளித்தக் கள்ளை ஊற்றிக்கொடுத்தான். மீசை நனைய நனைய மாறனும் சன்னாசியும் அடுத்தடுத்த மிடறுகளாகக் கலையத்தை முழுவதுமாகக் குடித்து முடித்தார்கள். இடைக்கிடை ஆளுக்கொன்றாய் குரவைமீன் துண்டை முள்நீக்கி மிளகாய்ச் சாந்துடன் உள்ளே தள்ளினார்கள். புளித்தக் கள்ளுக்குப் பொருத்தமாக தூக்கலான காரம். சுகமாகவிருந்தது. இருவர் நாக்கும் மேலும் கீழுமாக உதடுகளில் விளையாடிவிட்டுக் காத்திருந்தன. இருவர் கண்களும் நொண்டிக் கிராமணித் திசைக்காய் சுழன்று நின்றன. புரிந்தவனாய் இருவரது கலயத்தையும் மறுமுறையும் நிரப்பி நீட்டினான். மூண்றாவது கலயம் கைமாறியபோது இருவருமே அவற்றைத் தவறவிட்டனர். மயங்கி விழுந்து குறட்டைவிட்டவர்களை,

கீற்றோலைகளில் கிடத்திவிட்டு, காவிளக்குகள் இரண்டையும் நொண்டிக்கிராமணி அணைத்தான். துண்டை விரித்துப் படுத்தான்.

மறுநாட்காலை சூரியன் உதித்த இருநாழிகைகளில் மாறனுக்கு விழிப்பு வந்தபோது, இருண்ட கிடங்கொன்றில் அடைபட்டுக் கிடக்கிறான்.. உத்திரத்தில் துறிஞ்சல்கள், இரண்டொரு எலிகளின் சுதந்திர நடமாட்டம். கழிவுகளின் வாடை..

இங்கே எப்படி வந்தான் ? நேற்றிரவு என்ன நடந்தது ? வலதுபுறம், சன்னாசியும் நொண்டிக்கிராமணியும் அருகருகே கிடக்கின்றார்கள். தான் காண்பது கனவோ என்று சந்தேகம் வந்தது. அவர்களைத் தொட்டு எழுப்பிப் பார்த்தான். இப்போதைக்கு நித்திரை கலைந்து எழுந்திருப்பதாகத் தெரியவில்லை.

அவர்களருகே நாமம் இட்டிருந்த ஈர்க்குச்சி வைணவன் சிகையை பிரித்து குடுமியாக்கிவிட்டு இவனையேப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனருகே, பானை வயிறும் முனகலுமாக ஒருபெண்மணி, இரண்டு சிறுவர்கள், நான்கைந்து இளைஞர்கள். வைணவன் ஏதோ வாயசைத்து சொல்ல முயன்று, சோர்வுற்று தரையில் விழுகிறான்.

உத்திரத்திலிருந்து சொட்டும் திரவத்தினைத் துடைக்கவேண்டுமென நினைத்து, கையைக் கொண்டுபோக எத்தனித்தபோது, பின்புறம் அவை பிணைக்கபட்டிருக்கிறதென்பதை உணருகிறான். தலையை உயர்த்தி மேலே பார்க்கிறான். எதையோ விழுங்கி ஊர்வதற்குமுடியாமல் ஒட்டிக்கிடக்கும் பெரியபல்லி. கண்களை மூடி மூடித் திறந்து எந்த நேரத்திலும் உம்மீது விழுந்துவைப்பேன் என மாறனை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

‘இங்கிருந்து நாம் தப்பித்தாக வேண்டும் ‘, மாறனுக்கு இடதுபுறமிருந்து ஒருகுரல். பழகிய குரல். அவசரமாய்த் திரும்பிப் பார்க்கிறான் அங்கே, துபாஷ் பலராம்பிள்ளை.

அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

/தொடரும்/

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 26

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


For the soul there is neither birth nor death at any time. He has not come into being, does not come into being, and will not come into being. He is unborn, eternal, ever-existing, and primeval He is not slain when the body is slain.

– Bhagavad-gita 2.20

இருபதாம் நூற்றாண்டு…

கெட்ட சொப்பனம் கண்டால் கடவுளைத் தியானித்து நித்திரைகொள்ளவேண்டுமென ரங்கப் பிள்ளைத் தெருவில் கண்டு பேசிய ஹுக்கா புகைக்கும் சாமியார் தெரிவித்திருந்தார்.

பெர்னார் காண்கின்ற கனவுகள் கெட்டதா நல்லதா ? வகைப்படுத்தத் தெரியாது குழம்பினான். நல்லதோ கெட்டதோ, கனவுகளின் அலைக்கழிப்பிலிருந்து தன்னை விடுவித்தாகவேண்டும்.

பிரிட்ஜைத் திறந்து போத்தலில் ஊற்றி வைத்திருந்த குளிர்ந்த இளநீரை வயிறுமுட்டக் குடித்தான். கையிற் கட்டியிருந்த வாட்சைப் பார்த்துக்கொண்டான் மணி அதிகாலை நான்கென்றது. கனவு எப்போது வந்தது- எப்போது முடிந்தது என்று யோசித்துப் பார்த்தான். சரியாகக் கணிக்க முடியவில்லை. ஹூக்கா சாமியார், அதிகாலை 1.30 மணியிலிருந்து 3.30 மணிக்குள் கண்ட கனவென்றால் பத்துத் தினங்களில் பலிக்குமென்று சொன்னதாய் நினைவு. கடந்த சில மாதங்களாய் இவனுக்கென்று வருகின்ற கனவுகளுக்குக் குறைச்சலில்லை. இதுவரை அவைகள் பலிக்கவில்லை என்பதுதான் உண்மை.

படிகளைப் பிடித்து மொட்டை மாடிக்கு வந்தான். ரம்மியமான இருட்டு. சிலுசிலுவென்ற குளிர்ந்த காற்று. கடல் ஹோவென்று இரைந்து கொண்டிருக்கிறது. சூழலுக்குப் பொருந்தாமல், அபத்தமாகக் காரொன்று ‘உர் ‘ரென்று ஓடி மறைந்தது. கால்களைத் தார்ச்சாலையில் சோம்பலாய்ப் பதித்து நடக்கும் கறவை மாடொன்று, அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வாயில் பீடியும், கக்கத்திற் குவளையுமாய் பால்காரன். நிற்கின்ற மரங்கள் இருட்டைத் தலையில் வைத்திருந்தன. இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைக் கண்டதும் கனவில் கண்ட மல்லிகைப் பூக்கள் ஞாபகத்திற்கு வந்தன. வேறு என்னவெல்லாம் கனவில் வந்தன ? அரண்மனை, குதிரைகள், மல்லிகைக் கொடி, சந்தணம் ஜவ்வாது இறுதியாக எப்போதும்போல வாழ்வின் விளிம்பில் நிற்கின்ற ஒரு பெண். இவைகளைச் சுபத்தில் சேர்ப்பதா அசுபத்தில் சேர்ப்பதா வென்ற குழப்பம்.

கனவுகள் எதனைச் சொல்கின்றன ? ஏன் சொல்கின்றன ?

ஆழ்ந்த உறக்கத்தில் துல்லியமாகத் திரைக்கதை அமைத்து, பின் புலங்களை நிர்மாணித்து, அளவான ஒளியை ஏற்பாடுசெய்து, பொருத்தமான நிழல்களைத் தேர்வு செய்து, அவற்றை உயிர்ப்பிக்கும் பிரம்மன் யார் ? மேடையேற்றப்படும் கனவுகள் நடந்ததா ? நடக்கவிருப்பதா ? இதன் பின்னே இருப்பதென்ன ? எதற்காக ?

கனவுகள் என்பது கடந்தகாலத்தின் மறுவாசிப்பா ? எதிர்காலத்தைப்பற்றிய ஆரூடமா ?

காலங்காலமாய்க் கனவுகள் தொடர்ச்சியாய்ப் பேசப்பட்டு வருகின்றன. பைபிளில், வேதங்களில், இலக்கியங்களில், வரலாறுகளில். கனவுகள் சொல்லபட்டிருக்கின்றன. அலெக்ஸாண்டருக்கு ஏற்பட்ட கனவு, முதல் வரலாற்றாசிரியன் எரோதோத்துடைய கனவு, புனித அகஸ்டானுடைய கனவு, சீசருக்கேற்பட்ட கனவு, அவனுக்கு முன்னர் ரோமைச் சேர்ந்த ஹனிபாலுக்கு நேர்ந்த கனவு, டாந்த்துடைய பேயாத்ரீஸ் இறப்பு குறித்த கனவு, வைரக்கல்லாக அன்னா கிரிகோரிவ்னாவைக் கனவில் கண்டு காத்திருந்த தொாஸ்த்தொவ்ஸ்கியின் கனவு, ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமாய் உபயோகம் கண்டிருக்கிறது. காதலர்களைச் சேர்த்துவைக்க, மத நம்பிக்கைகளைப் பேச, செங்கோல்களைப் புகழ, குற்றவாளிகளுக்குத் தீர்ப்பெழுத, கொடுங்கோலர்கள் என்றால் நினைத்ததைச் சாதிக்க..

கீழைநாட்டு சித்தாந்தகளும் சரி மேற்கத்தியர்களின் ஞானமும் சரி ஒரு விடயத்தில் ஒன்று சேருகிறார்கள். இருவருக்குமே கனவென்பது அறியப் படவேண்டிய ஓர் உண்மை. அவ்வுண்மை, பெர்னார் ஃபோந்தேனுக்கு நடக்கவிருப்பதாகவோ, அவனது முப்பாட்டன் பெர்னார் குளோதனுக்கு நடந்ததாகவோ அல்லது இவர்களோடு தொடர்பில்லாத மூன்றாவது ஒருவனின் கடந்தவையோ, கடக்கவிருப்பவைேயோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

பெர்னார் ஃபோந்த்தெனைச் சாட்சியாக வைத்துக்கொண்டு காட்சிகளை விவரித்து, புலன்கள் படுகின்ற அவஸ்தைகளிற் சந்தோஷங் காணுகின்ற துக்கிரி குணம் கனவுகளுக்கு இருக்கின்றது.

—-

நண்பனே!.. சூட்ஷம சரீரம் கனவு காணும் சரீரம் என்பதனை அறிவாயா ? பாரமற்ற உடல் எங்கும் பயணித்துத் திரும்பும். சூட்ஷம உடல் ஸ்தூல உடலை இயக்குகின்றது. கனவில் ஸ்தூல உடலின் துணை சூட்ஷம உடலுக்கு வேண்டியதில்லை. சூக்கும உடலின் துணையின்றி கனவு காண முடியாது.

ஐம்புலனும் உணர்வற்றுக் கிடக்கும்பொழுது சூட்ஷம உடல் தொழிற்படுகின்றது. உள்ளுடம்பை அழிக்க முடியாது. அகால மரணம் அல்லது துர் மரணம் அடைந்தோர் சூட்ஷம சரீரத்தைக் கொண்டு ஆயுள் வரையறுக்கபட்ட காலம் வரும்வரை பலவித இன்னல்கைளை ிஅடைந்தே திரிவதென்பது விதி.

பரமாத்மா நியமிப்பது; ஜீவாத்மா அந்த நியமத்திற்கு உட்பட்டது. முண்டகோபநிஷத், ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் இரண்டு பறவைகளுக்கு ஒப்பிடுகின்றது. ‘அசுவத்தம் என்ற மரத்தில் அழகான இரண்டு பறவைகள் இணையாகவும் நட்புரிமையுடனும் வசிக்கின்றன. ஒன்று அதிலுள்ள கனிகளை உண்ணும். மற்றொன்று உண்ணாமல் சாட்ஷிமாத்திரமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கும். ‘ என்கிறது.

—-

‘அகன்றவீதி… ஒதுங்கிய அந்த வீடு. பெரிய வீடு. விழல் வேய்ந்த கூரை, மண்சுவர். சுவரெங்கும் வெண்புள்ளிகள் அவற்றைச் சுற்றி எழுதப்பட்ட கோட்டோவியங்கள். இடை இடையே கோழியைப்போல, மயிலைப்போல சித்திரங்கள். மத்தியில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தடித்த ஒற்றைக் கதவு. அக்கதவு குறைந்த அளவே திறந்திருக்க அதனை அடைத்துக் கொண்டு மீண்டும்… அவள்.

முகம் மட்டுமே தெரிகிறது. ஒருக்களித்த தலை, குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்ற சிவந்த, ஈர அதரங்கள். ரோஜா மொக்காய் நாசி. அதனிருபுறமும் சிறிய மல்லிகை மொட்டாய் மூக்குத்தி, நெற்றியின் மத்தியில் பவளச் சிவப்பில் ஒருபொட்டு. இமைக்க மறந்த மையிட்ட சோகக் கண்கள், கண்ணீர்த் துளிகள் மையிற் கலந்து யோசித்து சிவந்திருந்த கன்னக் கதுப்பில் இறங்க அதனைத் துடைக்க மனமின்றி வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அல்லது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்… ‘

திரும்பத் திரும்பக் கனவில் வருகின்ற பெண்தான். இந்தமுறை அவளின் பின்புலம் வேறு,

இம்முறை பார்வையை நிறுத்திய தூரத்தில் மதிற் சுவர். அளவாய்க் காவி வண்ணத்தில் தடித்தக் கோடுகள். சுவர் முழுக்க அடர்த்தியாய்ப் படர்ந்திருக்கும் மல்லிகைக் கொடிகள். இடையிடையே மலர்ந்த, மலருகின்ற, மலரவிருக்கின்ற மல்லிகைப் பூக்கள். மரமல்லிகை, நந்தியாவட்டை, செண்பகமரங்கள் ஆங்காங்கே நிமிர்ந்து நிற்க, மத்தியில் ஒரு குளம்.

குளத்தின் பாசிபடர்ந்த படிகளில், அல்லிக்கும் தாமரைக்கும் போட்டியாக முகத்தை நிறுத்தி, தண்ணீரிற் கால்களை நனைத்தவாறு அப்பெண் உட்கார்ந்திருக்கிறாள். கால்களை குளத்திலிருந்த அயிரை மீன்கள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன.

புகை படிந்த ஓவியத்தையொத்த மெலிந்த பெண்தேவதை. செவ்வலரி ஓடிய கண்கள் அழுதழுது மேலும் சிவந்திருக்கின்றன. தாரைதாரையாகக் கண்ணீர் பெருகுகிறது. வடித்த கண்ணீரை வாங்கிக் கொள்வதால் குளத்து நீர்மட்டம் கிடுகிடுவென்று உயருகின்றது. நுங்கும் நுரையுமாக ஒவ்வொரு படிகளாக மேலேறி வருகின்றது. பீதியில் இவனுடல் நடுங்குகிறது. நீரின் பெருக்கம் எந்தநேரத்திலும் இவளை மூழ்கடித்துவிடலாம் என்கிறபயத்தில், பாய்ந்து அவளிடம் ஓடுகிறான். நெருங்கி நின்று கைகளை நீட்டுகிறான். பிரளயமுற்றது போல பொங்குகின்ற கண்ணீரைத் தன்மேலாடையைக் கழற்றி, ஊற்றின் இடம்பார்த்து அடைத்துப் பார்க்கிறான். நீட்டிய கைகள் அவளது உடலை ஊடுறவி மறுபுறம் வெளிப்படுகின்றன. அவள் சிந்துகின்ற கண்ணீரினைத் துடைக்கின்ற வகையில் விரல்களைக் கொண்டு போகிறான். ஏதும் நிகழவில்லை. அவளது விரல்கள், இவனது எண்ணத்தை அறிந்து செயற்படுவதுபோல இயல்பாய்ப் புடைவைத் தலைப்பைக் கொண்டு சென்று கண்களைத் துடைத்து கொள்கின்றன.

குளத்திலிருந்த பார்வை இவனது திசைக்காய்த் திரும்புகிறது. தன்னைத்தான் அப்பெண் பார்க்கிறாள் என்று நினைத்தான். அப்படியேதுமில்லை. புதியவனொருவன் இவனிருப்பைக் கண்டுகொள்ளாமல் அப்பெண்ணை நோக்கிச் செல்கிறான்.

இவனையொத்த வயதுடையவன். பெண்மை முகம். வேட்டியைப் பின்புறம் வாங்கி, இடுப்பிற் சொருகி இருந்தான். தலையை முன்புறம் சிரைத்து, பின்புறமிருந்த அடர்த்தியான முடியைக் குடுமியாக்கியிருந்தான். நெற்றியிலும், ரோமமற்றுத் தரிசாய்க் கிடந்த மேலுடல் முழுவதிலும் விபூதிப் பூச்சு. அர்ச்சகன் தோற்றம். குளவிக் கண்கள். கக்கிய பார்வைகளில் விஷத்தின் நெடி.

அழுது கொண்டிருக்கும் பெண்ணெதிரே நிற்கிறான். அவள் தலைகுனிந்து இப்போது முகத்தை வேறு திசைக்குத் திருப்பிக் கொண்டிருக்கிறாள். ஏதோ கூறுகிறான். செய்தியை வாங்கிக் கொண்டவள் உடலில், தீயினைத் தொட்டப் பதட்டம். முன்னிலும் அதிகமாக விம்மி அழுகிறாள்.

இவனது நிழல் அவளை நெருங்கித் தோளைத் தொடுகிறது. அவள் உடலில் மாற்றமேதுமில்லை, இவனுக்கு சிலிர்க்கிறது. அந்தப் பெண்ணிடம் பேசவேண்டுமென்று உள்ளம் தவிக்கிறது. அவளது தலையில் விழுந்து கிடந்த பவள மல்லிகைகளில் ஒன்றினையெடுத்து அவள் காதினை மெல்ல வருடுகிறான்.

‘பெண்ணே.. என்னைப்பார். நான் இங்கேதான் இருக்கிறேன். ‘

‘… ‘

‘உன்னெதிரேலேயே இருக்கிறேன். அவன் உன்னிடம் என்ன சொல்கிறான். ஏதேனும் பொய்களை உரைக்கின்றானா கதைக்கின்றானா ? பேதைப் பெண்ணே!.. அவனை நம்பாதே! எனக்கு ஒன்றும் நேரவில்லை. இதோ எலும்பும் தசையுமாக எழுந்து வந்திருக்கிறேன் பார். ‘

‘… ‘

‘போர்க் களத்தில் இறந்துவிட்டேன் என்றா பொய்யுரைக்கிறான்.. ‘குரோதமும் சிறுமைக் குணமும் கொண்டவன். ஏமாற்று பேர்வழி. ஏதோ சோடனைக் கதைகள் கூறுகிறான். அவனை நம்பி மோசம் போகாதே ‘

‘…. ‘

‘நீ என்னிடம் கொண்ட காதல் பெரிது. அக்காதலனுக்காக உயிர்விடத்துணிந்த உன் உறுதியும் பெரிது. நெய்யுண்ணாமல், எள்விழுதும் புளியும் கூட்டி வேளைக்கீரை சேர்த்து, உப்பிடாதச் சோற்றையுண்டு, உடலை வதைத்துக் கொள்கிறாயாமே. போர்க்களத்திலிருந்து நேரடியாக உன் முகத்தைக் காண்வேண்டுமென்று ஓடோடி வந்திருக்கிறேன். என்னிடம் வார்த்தையாட மாட்டாயா ? ‘

இவன் பேசுவதைக் கேட்டதுபோலத் தெரியவில்லை. மனத்திலிருந்த எதிர்பார்ப்புகள், அப்பெண்ணினால் ஒவ்வொன்றாகத் தட்டிவிடப்படுகின்றன. அடுத்தடுத்து உடைந்து சிதறுகின்றன. அவற்றின் சிதறலுகேற்ப, உயிரைச் சுற்றி ஒட்டியிருந்த உடற்கூடு இயல்பாய், ஒவ்வொன்றாய் இவனிடமிருந்து உரிந்து விலகுகிறது. நிர்வாண நிலையில் ஆத்மா. பிரகாசத்துடன் அக்கினிக் குஞ்சாய் ஒளிர்கிறது. ஆனந்தம். பிரவாகமெடுத்து வழிகிறது.

அர்ச்சகன் அவள் தோள் தொட்டு உரிமையாய் எழுப்புகிறான். பாம்பினை மிதித்துவிட்டவள்போல, பதறிக்கொண்டு எழுந்திருக்கிறாள். சற்றுமுன்னர்தான் நீராடியிருக்கவேண்டும். அடர்ந்தக் கூந்தல் படர்ந்து விசிறித் திரும்புகிறது. ஈரக்கூந்தலின் நீர்த்துளிகள் இவன் முகத்திற் பட்டு தெறிக்கின்றன.

அர்ச்சகனை விலக்கிக்கொண்டு குளத்துப் படிகளை இரண்டிரண்டாகத் தாவி மேலே வருகிறாள். ஈரப்புடவை காற்றுக்கும் காலுக்குகுமான பயணத்திற் களைப்புண்டு தலையிலடித்துக்கொள்கிறது. அவள் பின்னே அர்ச்சகனும் சம வீச்சில் காலடிகளை இட்டு மேலே வருகிறான். எதிர்பாராதவிதமாக பாசி படர்ந்திருந்த படியொன்று வழுக்கியதில், கால் இடறி, குளத்தின் திசைக்காய் உருண்டு செல்கிறான். பார்த்துக்கொண்டிருக்கும் இவன் குரூரமாய் சிரிக்கிறான். அர்ச்சகன் புண்ணியம் செய்திருக்க வேண்டும். குளத்தில் விழவிருந்தவன், தப்பித்து, இவர்களின் திசைக்காய் வருகிறான்.

இப்போது வேறு காட்சி. பெண், அர்ச்சகன் மூவருமாக, மதிற் சுவரொட்டிய தெற்குக் திட்டிவாசல் வழியாக கோபுரத்தின் பிரகாரத்திற்குள் நுழைகிறார்கள். அவள் உடலைச் சுற்றியிருந்த ஆடையிலிருந்து நீர் இன்னமும் சொட்டிக்கொண்டிருக்கிறது. அவள் பாதம்பட்டு நிலம் வேர்த்த இடத்தினை, இவன் பாதங்கள் கண்டுணர்ந்து முன்னேறுகின்றன. கொடி மரத்தினருகே நின்று, உச்சியிலிருந்த சிங்கத்தை வணங்கி முன்னேறுகிறாள். கர்ப்பக் கிரகம் பூட்டியுள்ளது. மூல விக்கிரகத்தை வெளியிலிருந்தே விழுந்து வணங்குகிறாள். பிரகாரத்தை முன்றுமுறைச் சுற்றி வந்து பிரதட்ஷணம் செய்கிறாள்.

முகம் கறுத்திருக்கிறது. பெண்ணின் நடையில் வேகம். கோபுரத்தை நோக்கியபடி விடுவிடென்று நடக்கிறாள். அர்ச்சகன் அவைளைக் கடந்து சென்று குறுக்காக நிற்கிறான். ஒதுங்கிச் செல்ல முயல்பவளின் கையினைப் பிடித்து… முட்டாள் என்ன செய்கிறான் ?. இவனது உடல் துடிக்கின்றது. அர்ச்சகனிடமிருந்து அவளைக் காப்பற்றியாகவேண்டும். எட்டி அவனைப் பிடித்து, பலங்கொண்டமட்டும், வலது கையின் முஷ்டியை அவன் முகத்தில் ஆக்ரோஷமாக இறக்குகிறான். அவனது கால்களுக்கிடையில், இடது காலால் எட்டி உதைத்து விலகி நிற்கிறான்.

அர்ச்சகன் மீது தாக்குதல் நடத்திய இவனுக்கு வலிக்கிறது, தக்குதலுக்குள்ளான அர்ச்சகன் அமைதியாகவிருக்கிறான். பெண் அமைதியாகக் கோபுரத்தை நோக்கி முன்னேறுகிறாள். மாடத்திலிருந்து புறாக்கள் அச்சத்துடன் கும்பலாக இறக்கைகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு வட திசைக்காய் பறக்கின்றன. அவளைத் தொடர்ந்து சென்ற அச்சத்துடன் தயங்கி நின்றவன், யோசித்துபின்னே ஓடுகிறான்.

பிரமாண்டமான கோபுரத்தில் ஒவ்வொரு மாடத்திலும் ஏறி நின்று, கீழ் நோக்கி ஒரு திடமான வெறித்த பார்வை. இறுதியாகவிருந்த மாடத்திற்கு வந்திருந்தாள். எதிரே பிரமாண்டமாய் சற்றுமுன்னர் கண்ட குளம். இவனுக்கு நடக்கவிருக்கும் விபரீதம் புரிகிறது. வேண்டாமென இவனெழுப்பிய குரலனைத்தும் இவனிடமே திரும்ப வந்து விழுகின்றன. இந்த முறை அவளிடம் தயக்கம் தெரிந்தது. ஏதோ யோசிக்கிறாள். அருகிலிருந்த அர்ச்சகனிடம் விவாதிக்கிறாள். கோவில் விமான திசைக்காய், கும்பிட்டுவிட்டு இறங்க முயற்சிக்கிறாள்.

என்ன நடக்கிறது ? இந்த அர்ச்சகன் வழி மறித்து என்ன செய்கிறான் ?. அவள் கன்னங்களில் ஏன் திரும்பத் திரும்ப அறைகிறான். அவனை உதறிவிட்டு இறங்க முயற்சித்து திரும்பியவளை பின்புறம் கைவைத்து.. அடப்பாவி…அநியாயமாக ஒரு பெண்ணை குளத்தில் தள்ளுகிறானே!

‘ஏய் நிறுத்து, நிறுத்து.. ‘

இவன் நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, ஏற்கனவே பலமுறை அவன் கண்ட காட்சி..மீண்டும் அங்கே நடத்திக்காட்டப்படுகிறது.. அம்பு தைத்த புறாவாகத், தலைகீழாகக், காற்றைக் கிழித்துக்கொண்டு அப்பெண் நீரில் விழுகிறாள். .

/தொடரும்/

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-25

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


….

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி

முட்டை கொண்டு வற்புலம் சேரும்

சிறுநுண் எறும்பின் சில் ஒழுக்(கு)ஏய்ப்பச்

சோறுடைக் கையர் வீறுவீ(று) இயங்கும்

இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்

மற்றும் மற்றும் வினவுவதும், தெற்றெனப்

பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே. (புறம் -143 – கிள்ளிவளவன்)

முதற்கோழி கூவியிருந்தது. ஊருக்கு மேற்காலே மன்னாதன் மகன் கோவிந்தன் நாயனத்தை ஊத ஆரம்பித்துவிட்டான். ஹேய்.. ஹேய் என்று மாடுகளை எவரோ ஓட்டிச் செல்லும் சத்தம். அறுவடைசெய்த கையோடு தாளடி உழவுக்கோ அல்லது களத்துமேட்டில் கிடக்கும் நெற்கட்டுகளின் பிணைக்காகவோ இருக்கலாம். கள்ளிறக்குவதற்காக, தீட்டிய அரிவாளும் குடுவையுமாக,. சோலை கிராமணி அதிகாலையிலேயே வெற்றிலை எச்சிலைத் துப்பிக்கொண்டு கனைப்புடன் செல்கிறார். சந்தியிலுள்ள, கிணற்று உருளையில் தாம்புக்கயிறுகள் இழுபடுகின்றன, பெண்கள் தண்ணீர் சேந்துகிறார்கள்.

பூங்காவனத்திற்கு ராத்திரி முழுக்க வலிகண்டிருந்தது.

அவள்மாமன் நடேசன் காலமேயே ரெட்டியார் பண்ணைக்குப் புறப்பட்டுப் போயிருந்தான். வாசற்புறம் கூடைபோட்டுக் கவிழ்த்து வைத்திருந்த கருஞ்சேவலின் முதற் ‘கொக்கரக்கோ ‘வைக் கேட்டமாத்திரத்திலே நித்திரை தெளிந்திருந்தாள்.

நேற்றுத் சின்னத்தாயி ‘பொழைப்புக்குப் போகவேணாமே ‘ என்று புத்தி சொல்லியிருந்தாள். அழுதாளும் பிள்ளை அவதானே பெத்தாகவேணும் என்கிற வசனம், பூங்காவனத்தின் சீவனத்துக்கும் பொருந்தும். என்ன பண்ணட்டும், கர்ப்பிணியென்றாலும் உழைச்சாகவேணும்.. வயிறு இருக்கிறது. குஞ்சும் குளவானுமாக நான்கு பிள்ளைகள். கூடவே இவளோடு பிறப்பெடுத்த தரித்திரமும் இருக்கிறது.

காவிளக்கை ஏற்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அடிவயிற்றில் மீண்டும் வலி. பற்களைக் கடித்துக் கொண்டு, கைகளிரண்டையும் தரையில் ஊன்றி எழுந்தாள். பத்துநாளா வயிற்றில் கிடக்கும் சிசு பாடாய்ப் படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் ராத்திரியான அம்மிக்கல்லை விழுங்கியதுபோல வலி வந்திடும். காசாம்பு, கஸ்தூரி, பார்வதி அலமேலுண்ணு பெண்டுகளுக்கு குறைவில்லை, கூடிவிடுவார்கள். கிழவி சின்னத்தாயி பழம் புடவை, முத்துக்கொட்டை எண்னெய், மஞ்சப் பொடி, அறுகம்புல், வேப்பிலை, கருக்கரிவாள் சகிதம் வந்துப்போடுவாள். மள மளவென்று ஆக வேண்டிய வேலைகளைப் பார்ப்பாள். காத்திருப்பார்கள். சூழ்நிலையை இலகுவாக்க அவரவர் பிள்ளைபெத்த வயணங்களில் ஆரம்பித்து, புருஷமார்களின் படுக்கைச் சிலுமிஷங்கள்வரை விலாவாரியாகக் கதைப்பார்கள்..

நேற்று ராத்திரியும் காத்திருந்தார்கள். வயிற்றைத் தள்ளிக்கொண்டு பூங்காவனம் இருப்பதற்கு நடேசன் செய்த வித்தைகளைக் கற்பனை செய்து பேச, இவளுக்குக் கூச்சமாகத்தான் இருக்க நேர்ந்தது. வலியையும் மறந்து சிரித்திருந்தாள். எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. வயிற்றிலிருந்து மண்ணில் விழமாட்டேனென சிசு அடம் பிடிக்கிறது.

இப்போதைக்கு வலி கொஞ்சம் குறைந்திருக்கிறது. மெள்ள எழுந்து எரவாணத்தில் செருகியிருந்த மத்தை எடுத்துக்கொண்டு, இந்தக் களேபரத்திற்கிடையிலும் நேற்று இராத்திரி புரைகுத்தி உறியில் வைத்திருந்த தயிர்க்குடத்தை மெல்ல இறக்கி, அடியில் பிரிமணையிட்டு தரையில் சாய்த்து, அருகில் தடுக்கினைப்போட்டு ஒருக்களித்து உட்க்கார்ந்தாள். உழக்குகளையெடுத்து தயிரை அவற்றில் ஊற்றிவைத்தாள். மிச்சமிருந்த தயிரில் மத்து விழுந்து ‘சலக் சலக் ‘கென்று புரண்டது.

அரைமணி நேரத்தில புறப்பட்டாகவேணும். புதுச்சேரி பார்ப்பாரத் தெருவிலும், செட்டித் தெருவிலும் சூரியன் தலைக்குமேலே வருவதற்குள்ளே குடத்திலிருக்கின்ற பண்டத்தை முடிந்தவரைக்கும் விற்றுப்போடணும். விற்று முடித்து, செம்படவர் குப்பத்திற்குச் சென்று அயளை மீன் வாங்கிவரவேணும். குடிசையிலே ஒரு மாகாணி அரிசி இல்லை, வரும் வழியிலே மூக்கனிடம் அரிசி வாங்கவேணும். குழம்பு கூட்ட செலவு வாங்கவேணும். இராத்திரி சாப்பாட்டுக்கு அயளை மீன்குழம்பு வேணுமென்று, நடேசன் நிர்த்தாட்சண்யமாகச் சொல்லிப்போட்டான். பானையில் இருந்த புளித்தகூழைக் கொஞ்சம் மோர் விட்டுக் கரைத்ததில் இன்னும் புளிப்பாகவிருந்தது. கண்ணை மூடிகொண்டு குடித்துவிட்டு எழுந்தாள். வலியைத் தூக்கி உடைப்பில் போடென்று முனகியவளாய்க் கொடியிற் கிடந்த புடவையை உருவி அவசரமாய்ச் சுற்றிக்கொண்டாள். கெட்ட வாடை அடித்தது. ‘ஏரியில் கொண்டுபோய், சனங்கள் இல்லாத நேரம்பார்த்துக் கசக்கிவரவேணும் ‘, நினைத்துக்கொண்டாள்.

மோர்க்குடத்தை வைக்கோலிட்ட கூடையில் பத்திரமாக எடுத்து வைத்தாள். சுற்றிலும் தயிருள்ள உழக்குகளை அடுக்கினாள். புடவை முந்தானையைச் சுருட்டி சும்மாடாகத் தலையிலிட்டுக், குடிசைக்கு வெளியே குடத்தைக் கொண்டுவந்து தலையில் வைக்கவும், இவளோடு புதுச்சேரிவரை சென்று மோர் கூவி விற்கும் மற்ற பெண்கள் தயாராகவிருந்தார்கள். மூன்றுகல் நடந்து புதுச்சேரிக்குவரச், சூரியன் பிராஞ்சுமார் கோட்டைக்கு மேலே திகுதிகுவெனக் காய்ந்துகொண்டிருந்தான். ஆளாளுக்கு ஒரு தெருவை எடுத்துக்கொண்டு கூவிச்சென்றார்கள். இன்றைக்குப் பூங்காவனத்திற்குக் கிடைத்தது நடுத்தெரு.

அபிஷேகப்பாக்கம், வெங்கிடபதி ரெட்டியார், சந்திரமதி தம்பதிக்கு ஸ்ரீமன் நாராயணன் கடாட்ஷத்தால், ஆண்மகவு பிறந்து, ஐந்துவருடம் முடிந்து ஆறாவது வருடம் துவங்கியிருக்கிறது.

பிறந்தது முதல் ரெட்டியாரின் வாரிசு பாற்சோறினைக் காட்டிலும், சூரணத்தினை உண்டே ஊர்கண்படும் அளவிற்கு வளர்ந்திருந்தான். வெங்கிடபதி ரெட்டியார் சீமந்த புத்திரனுக்கு விமரிசையாய்ப் பிறந்தநாட் கொண்டாடத் தீர்மானித்து, சகல ஏற்பாடுகளும் பண்ணியிருந்தார்.

வீட்டில் அதிகாலையிலேயே மேளச்சத்தம் ஒலிக்க, பீப்பீயென்று நாயனமும் சேர்ந்து கொண்டது. ரெட்டியார் காலமே சிங்கர் கோவில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து தரிசனம் பண்ணிக்கொண்டு வந்திருந்தார். உள்ளூர் மாரியம்மனுக்கு, பழனிப்பண்டாரத்திடம் சொல்லி பொங்கலிடச் செய்தார்.

சீமந்தபுத்திரனுக்கு ஸ்நானம் செய்வித்து, சிக்கெடுத்துத் தலைவாரி, பட்டுடுத்தி, தட்டார் வைத்து வீட்டில் செய்வித்த ஆபரணங்களைப் பூட்டி, ஊஞ்சலில் உட்காரவைத்துத் தம்பதிகள் அழகு பார்த்தார்கள். வெள்ளிக்கிண்ணத்தில் வைத்து நெய்கலந்த பருப்புச் சோறு ஊட்டினார்கள்.

ஏழைபாழைகளுக்குக் கூழ் ஊற்றினார்கள். பெரிய மனுஷர்களை வீட்டுக்கழைத்து நுங்கு, இளநீர், மோர், பானகம் கொடுத்துத் தாகசாந்தி செய்வித்தார்கள். மதியத்திற்குப் போஜனம் பண்ணுவித்தார்கள். கையீரம் காய்வதற்கு முன்பாகக் கொழுந்து வெற்றிலையும், களிப்பாக்கும் செரிமானத்திற்குக் கொடுத்துவிட்டார்கள். அவரவர் தகுதிக்கு வெகுமானம் செய்தார்கள். ஐயருக்கு ஜரிகைவேட்டி மேல் உத்தரீயம், உறவுமனிதர்களுக்கும், ஊர்ப் பெரியமனுஷர்களுக்கும் பட்டு சகலாத்து, பெண்டுகளுக்கு பட்டுப் புடவையென சகலமும் செய்வித்தார்கள்.

வீடு முழுக்கப் பெண்டுகள் பட்டுப் புடைவைகளிற் சலசலத்தார்கள். மல்லிகையும் சாமந்தியும் தலையிலிருந்து உதிர நடந்தார்கள். ஆண்கள் தூணிற் சாய்ந்து உட்கார்ந்து, நரம்பெடுத்து வெற்றிலைப் போட்டார்கள். முடிந்தவர்கள் வெளியிற் சென்றும், முடியாதவர்கள் சம்புடத்திலும் எச்சிற் துப்பினார்கள். வயிறு சரியில்லாத ஆண்கள் செம்புத் தண்ணீரும், அவிழ்த்த கோமணமுமாக தோட்டக்கால் பக்கம் ஒதுங்கினார்கள். விழாவெடுத்த வகையில் வீடுமுழுக்க சந்தணமும், பன்னீரும், சந்தோஷமும் நிறைந்து கிடக்கிறது.

உண்ட மயக்கத்தில் ரெட்டியாரும், அவரது தர்ம பத்தினியும், கொஞ்சம் கண்ணயர்ந்தது வாஸ்த்தவம். எழுந்திருந்தபோது பிள்ளை எங்கு போனானென்று தெரியவில்லை. கூடத்தைப் பார்த்தார்கள், வாசலுக்கு ஓடினார்கள், அறைஅறையாக அலசினார்கள். பின்கட்டில் தேடினார்கள். பயத்தோடு பின்வாசலிலிருந்த கிணற்றை எட்டிப் பார்த்தார்கள். அங்கே அண்டாக்கைளையும், தவலைகளையும் அடுப்பிலிட்ட கரிபோக துலக்கிக் கொண்டிருந்த ஆட்களைக் கேட்டார்கள் தொழுவத்தில் நின்றிருந்த ஆள்- அமாவாசையைக் கேட்டார்கள். எங்கு தேடியும் கிடைத்தானில்லை. எவரிடமும் பதிலில்லை. கண்ணுக்குள் பொத்திப்பொத்தி வளர்த்தபிள்ளை கானாமற் போயிருந்தான். எல்லாம் தலைகீழாய்ப்போனது. ஆளாளுக்கு அங்கலாய்த்தார்கள். ரெட்டியார் ஒரு பக்கம், ரெட்டியார் பெண்ஜாதி மறுபக்கமென மூர்ச்சையாகிவிழ, விசிறிய உறவுகள் கைநோவு கண்டார்கள்.

அன்றைக்குச் சாயங்காலம், ரெட்டியாருடைய ஏகவாரிசைக் கடத்திச் சென்ற அபிஷேகப்பாக்கம் குடியானவன், பிள்ளையின் கைகள் மற்றும் கழுத்திலிருந்தவற்ைறைக் கழட்டிய பின்னர், சிறுவனை புதுச்சேரி நடுத்தெருவில் ஒரு வீட்டில் விற்றதிற் கிடைத்த பணத்திற்கு, வரகும் கேழ்வரகும் வாங்கிவந்திருந்தான்.

வரதன் நேற்றைக்கு முன் தினம் திருவந்திபுரத்திலிருந்து புறப்பட்டுப் புதுச்சேரிக்கு வந்திருந்தான்.

கத்தரிவெயில் கடுமையாகத்தானிருக்கிறது. உடல் வியர்வையில் நனைவதும் வீசுகின்ற கடற்காற்றால் உலர்வதுமாகவிருக்க, மணக்க ஆரம்பித்துவிட்டது. உஷ்ணத்தினால் மூத்திரம் செவசெவவென்று போயிற்று.

வரதராஜ பெருமாள் திருக்குளத்தில் உடல்வலிதீரக் குளித்தான். குளித்து முடித்துப் படிகளில் ஏற, உடல்வெப்பம் பொங்கியபாலில் தண்ணீர் விட்டதுபோலே தணிந்திருந்தது. உடலிளுள்ள ஈரம் வடியட்டுமெனக் காத்திருந்தான். பிருஷ்டம்வரை தொங்கிய கேசத்தைப் பிடியில் அடக்கிக் குடுமியாக்கினான். வேட்டியை உதறி காற்றில் சடசடவென உலறவிட்டு இடுப்பிற் கட்டிக்கொண்டான். உத்தரீயத்தை விரித்து, எலும்புகள் தூக்கலாகத் தெரிந்த மார்பை மறைத்துக்கொண்டான். இவனுக்கு ரொம்ப இஷ்டமென்று, ஆம்பிடையாள் கோதை கொடுத்துவிட்ட புளியோதரையை வயிறு நிறையச் சாப்பிட்டுத் தீர்த்தம் குடித்தான்.

வரதன் புதுச்சேரிக்குப் புலம்பெயர்ந்துவர, இவனை விடமாட்டேனென்று பிடித்திருந்த தரித்திரமே காரணம். மகாமேருவை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடந்து அமுதமெடுக்க உதவிய நாராயணன், ஆழ்வார்களை சிலாகிக்கும் நம்ம தென்கலை வைணவனைக் கைமாத்து, கடன் என்று, பொழுதுக்கும் கஷ்ட சீவனமாய் வாழவேணுமாய்த் திட்டம்பண்ணிப்போட்டான். திருவந்திபுரம் மடத்து நிருவாகம் கைகளை விரிச்சுட்டுது. பரந்தாமனை நம்புவதைவிட பறங்கியரை நம்பினால், பூலோக ஷேமத்திற்கு விக்கினமில்லையெனத் தீர்மானித்து வரதன் புதுச்சேரிக்குப் புறப்பட்டு வந்திருக்கிறான்.

புதுச்சேரி கத்திரி வெயிலிலும் பிரகாசமாய் ஜொலிக்கிறது. பறங்கியர் சொல்தாக்களும் உள்ளூர் சிப்பாய்களும் அவ்வப்போது சாலைகளில் கைவீசி நடப்பதை அதிசயமாகப் பார்க்கிறான். வயிறு பெருத்த கனவான்களைப் பல்லக்குகளில் சுமந்தவாறு லொங்கு லொங்குவென்று ஓடும் மனித விலங்குகளைப் பார்க்கிறான். புடவைச் சிப்பங்களைக் கைவண்டியில் அடுக்கிக்கொண்டு கோட்டை திசைக்காய் இழுத்துச் செல்பவர்களைப் பார்க்கிறான். நவதானிய மூட்டைகளைச் சுமந்து செல்லும் மனிதர்களைப் பார்க்கிறான். பெரும்பாலான மனிதர்கள் காலில் கஞ்சியை வடித்துக்கொண்டவர்களாக ஓடுகிறார்கள். வயிற்றுக்காக ஓடுபவர்கள். இப்படியான உத்தியோகம் நிரந்தரமாகக் கிடைக்கும் பட்ஷத்தில் இவன் கூட ஓடுவான்.

‘ஐயரே ஊருக்குப் புதுசா ? ‘

கேட்டவனைப் பார்த்தான். அவனது உடையும் பார்வையும், கோட்டையில் நல்ல உத்தியோகத்தில் இருப்பதாய்ச் சொல்லிக்கொண்டன. அவனுக்குப் மறுமொழி சொல்ல நினைத்து ‘ஆமாம் ‘ என்பதைப்போன்று தலையை மேலும்கீழும் இருமுறை அசைத்தான்.

‘ஒரு உத்தியோகம் இருக்கிறது செய்வீரா ? அர்ச்சகர் வேலையோ, புரோகிதமோ அல்ல. வேறு வேலைகள். உமக்கு விருப்பமெனில், கோவிலொன்றுக்கு அர்ச்சகராகவும் வாய்ப்புண்டு. என்ன சொல்கிறீர் ‘

இப்படியானதொரு அதிர்ஷ்டம் தேடிவந்து கதவைத் தட்டுமென வரதன் எதிர்பார்க்கவில்லை. சந்தோஷமாய் தலையாட்டினான். கேட்பதற்குத் தயக்கமாகவிருந்தது. எனினும் கேட்டான்.

‘எங்கே வேலை ? ‘

‘பிரெஞ்சுத் தீவுக்குப் போகவேணும். ஐந்து வருட ஒப்பந்தம். ஒரு நாைளைக்குப் பத்து வராகன்வரை சம்பாத்தியம் உண்டு.. விருப்பமில்லையெனில் திரும்பவும் நமது தேசத்திற்கு வரலாம். விருப்பமெனில் அங்கேயே தங்கிக்கொள்ளலாம். உமது குடும்பத்தையும் கும்பெனி செலவில் அழைத்துக் கொள்ளலாம். சம்மதம்தானே ? ‘

‘என் தோப்பனாருக்கும், ஆம்படையாளுக்கும் சேதிசொல்லவேணும். ‘

‘அதனைக்குறித்து நீர் கவலைப் படாதேயும். நாங்கள் அதற்கு உத்தரவாதம். இப்போதைக்கு என்பின்னால் வாரும் ‘

சற்றுமுன்புவரை கண்டிருந்த விசனம் நொடியில் மறைந்து போனது. பூசாரியைத் தொடரும் ஆட்டுக்குட்டியைபோல, கனஜோராக வரதன் அவன்பின்னே சென்றான். சிப்பாய் அவனை, புதுச்சேரியின் வடக்கேயிருந்த நடுத்தெருவைச் சேர்ந்த வீடொன்றுக்கு அழைத்துச் சென்றான்.

ஒரு சாதாரண ஓட்டு வீடு. பின்புறம் சிறியதாய் ஒரு கிடங்கு. கிடங்கின் வாயிலிலிருந்த காவலாளி ஒருவன் வந்தவனை புரிந்து கொண்டு பூட்டைத் திறந்து, உள்ளே அழைத்துச் சென்றான்.

கிட்டங்கி இருட்டிக் கிடந்தது. இடையில் ஒரு மேசைபோட்டு அதில் பிரான்சுவாரெமியும், வேலாயுத முதலியாரும் உட்கார்ந்திருக்க அருகில் தேவராசன் நின்று கொண்டிருக்கிறான். அச்சிறிய கிட்டங்கி முழுக்க அடைத்துக்கொண்டு ஆண்களும், பெண்களும், சிறுவர்களுமாக குத்துக்காலிட்டக் கூட்டம். வெளுத்த முகங்கள், வற்றிய உடல்கள். துர்நாற்றம்.

அம்மனிதர்களைப் பார்த்த மாத்திரத்தில் வரதன் மெத்தவே பயந்து போனான். அவர்களில் சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஓரு சில வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

‘அழைத்து வந்தவன் வரதனைக் கொண்டுபோய் பிரான்சுவா ரெமியின் முன்னால் நிறுத்தினான். என்ன பேரு ? ‘

பிரான்சுவா ரெமி பேசிய தமிழை, வரதனால் சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. குழப்பத்துடன் நின்றிருந்தான்.

‘பேர் தானே கேட்கிறான் சொல்லேன் ‘ தேவராசன் வரதனின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான்.

வரதனின் தோப்பனார் இதுவரை கைநீட்டி அடித்ததில்லை. வலித்தது. கண்கள் கலங்கிவிட்டன. திருவந்திபுரத்திலிருந்து, புதுச்சேரிக்குச் சுபவேலையிற்தான் புறப்படிருந்தான். சகுனங்கள்கூட நன்றாகவிருந்தன. யோசித்ததில்,. விதி அவனைத் தவறான திசையில் செலுத்துகிறது என்பது மட்டும் புரிந்தது

‘வரத தேசிகாச்சாரி ‘ என்று இவன் சொல்ல பிரான்சுவா ரெமி காதில் வாங்கியவனாகத் தெரியவில்லை.

‘இது ரொம்ப நீளம். வேண்டாம் தீவுல உம்முடைய பேரு ‘வரத்தா ‘ சரிதானே ? ‘ என்றான்.

ஏதோவொன்றில் எதனையோ எழுதி இவனிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டான். அருகிலிருந்த தேவராசனைக் காட்டிப் பேசினான்.

‘இவன் உமக்குக் கப்பலேறும் நாள் அன்றைக்கு இருபது வராகன் கொடுப்பான். அப்பணத்தில் நீர் அவனுக்கு ஐந்து பவுணைத் திருப்பிக் கொடுக்கவேணும். மற்றவர்களும் அந்தப்படிக்குத்தான் இசைந்துள்ளார்கள். ‘

பிரான்சுவா ரெமி, அடுத்துக் கூறியதெதுவும் வரதன் காதில் விழவில்லை. கன்னத்தைப் பிடித்துக்கொண்டு ‘நாராயணா ‘ வெனத் தரையில் உட்கார்ந்தான். இவனுக்கருகில் மோர்க்குடத்தோடு பூங்காவனமும், அபிஷேகப்பாக்கத்து வெங்கிடபதி ரெட்டியாரின் ஏகப்புத்திரனான ஐந்து வயதுச் சிறுவனும் அழுது ஓய்ந்து, உட்கார்ந்திருந்தார்கள்.

/தொடரும்/

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘வரமளித்த யாமழிப்பது முறையன்று வரத்தால்

பெருமை பெற்றுள சூரனை அடுவது பிறர்க்கும்

அரிதெனப் பரன் உன்னியே தன்னுருவாகும்

ஒரு மகற்கொடு முடித்தும் என்றுன்னினான் உளத்தில் ‘

-கச்சியப்ப சிவாச்சாரியார் (கந்த புராணம்)

பகல் முழுவதும் கந்தகபூமியாகப் பூமி கொதித்துக்கிடந்தாலும் இரவில் விடாது பெய்திருந்த மழையால் பூமி குளிர்ந்திருந்தது.

வெண்மையான மேகங்கள் ஈரப்பதத்துடன் அலைந்தன. அவை தொட்ட வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு மலைத்தொடர்கள் நனைந்திருந்தன, அவற்றின் சிகரங்களான பூஸ், போத், கறுப்பாற்றுக் குன்று, மூங்கிற் குன்று, மூன்று முலைகள், மெய்க்காப்பாளன் குன்று, நனைந்திருந்தன.

காடு நனைந்திருந்தது; காட்டிலுள்ள கருவேலன், தேவதாரு, புன்னை, மா, வேம்பு, வாதுமை, கொய்யா, பலா, பேரிச்சை புளியமரங்கள் நனைந்திருந்தன. அவற்றிலிருந்த கூடுகள் நனைந்திருந்தன; கூட்டிலுள்ள கழுகுகள், வெண்நாரைகள், காகங்கள், குயில்கள், மைனாக்கள், புறாக்கள் நனைந்திருந்தன.

தென்கிழக்கு மலைத்தொடர் திசைக்காய் வெளிப்பட்டிருந்த சூரியன் கூட நனைந்திருந்தான். உலர்ந்து வெளிர் நீலத்திற்குத் திரும்பியிருந்த வானங்கூட நனைந்திருக்க வேண்டும். புனல் கண்ட குதூகலந்தில், சாரலுடன் விழுந்து நுரைத்தெழும் பாலாய், வெண்பனியைத் தூவியெழுகின்ற அருவிகள், ஓடைகள், சிற்றாறுகள் நெளிந்தும் நனைத்தும் ஓடுகின்றன.

தோப்பும், புதரும், மரஞ் செடி கொடிகளும் மழையில் நனைந்து நனைந்து பச்சையோ பச்சை. ஈர பூமியெங்கும் வண்ணம் தெளித்து, இறைந்தும் நனைந்தும் கிடக்கும் மலர்கள், அவற்றின் ஈர நறுமணம். ஆடவர்களின் மெல்லிய தீண்டலுக்கு, உடற்சிலிர்க்கும் இளம் பெண்களைப்போல காற்றுத் தீண்டலில், மரங்கள் மெல்ல தலைசாய்த்து, சலசலவென்று நீரினை இறைத்து நாணும் அழகோ அழகு. தீவெங்கும் ஈரவாடை.

பிரெஞ்சுத் தீவில், இன்றைக்குத் தைப்பூசக் காவடி.விழா.* அருவி நீரில் குளித்துவிட்டு ஈரவேட்டியுடன் உலாவரும் ஆண்கள், சொட்டச் சொட்ட ஈரச் சேலையில் கதைக்கும் பெண்கள். குங்மம் மஞ்சளும் ஊர்வலமாக புறப்பட்டிருக்கின்றது. ஊர்வலத்தின் முன்வரிசையில் நாமறிந்த பிரெஞ்சுத் தீவு தமிழர்கள். காமாட்சி அம்மாள், சீனுவாச நாயக்கர், அருணாசலத் தம்பிரான், வேலுப்பிள்ளை, சுப்பு முதலியார், செல்லமுத்துச் செட்டியார். ஆண்கள் மேலாடையின்றி, ஈர ஜரிகை வேட்டியை இடையில் நிறுத்தி, மஞ்சளில் நனைத்தத் துண்டை இறுக அதன்மீது முடிபோட்டிருந்தார்கள். இவர்களுக்கிடையில் தலையிற் பாற்குடங்களும், தோள்களில் காவடிகளுமாக மஞ்சள் ஆடையில் ஆண்களும் பெண்களுமாக பக்தர்கள். கடந்த சில கிழமைகளாகவே, காவடிகள் மும்முரமாகத் தயாரிக்கபட்டிருந்தன. மூங்கிலை வளைத்து, தென்னைக் குருத்தோலையில் அலங்கரித்து, மயிலிறகு, எலுமிச்சைப் பழங்கள் செருகி, குஞ்சம் சேர்த்து, ஓசையெழுப்பும் மணிகள் கட்டிய பால், பன்னீர், மலர்கள், இளநீர், வண்ணத்துணிகளென வகைவகையாய்க் காவடிகள். ஈரபூமி, காய்கின்ற சூரியனால் கடுமையாகியிருந்தது. காவடி சுமப்பவர்களும், பாற்குடம் சுமப்பவர்களும் கால்களை நிலத்திற் பதிக்கச் சிரமப்படுவதை அறிந்த உறவுகள், பாதங்களில் குளிர்ந்த நீரை குடங்களிற் கொண்டுவந்து ஊற்றுகிறார்கள். மேளங்களின் முழக்கத்திற்கேற்ப காவடி ஆட்டத்துடன் ஊர்வலம் தொடருகிறது.

சீனுவாச நாய்க்கரும், தம்பிரானும், வேலுப்பிள்ளையும், ஏற்கனவே கொண்டாடி வருகின்ற தீமிதி விழாவோடு, இனித் தீவில் காவடி விழாவையும் கொண்டாடுவதென தீர்மானம் செய்திருந்தார்கள். வந்த நாட்டில், சொந்த நாட்டு விமர்சிகை இல்லயென்றாலும், அவர்கள் உள்ளத்திற்குப் பண்டிகை நாட்களில் அளவிட முடியா மகிழ்ச்சி கிடைத்து விடுகின்றது. அடையாளத் தழும்பை வருடிப் பார்த்து ஆறுதல் சொல்லிக்கொள்ள முடிகிறது. சந்தோஷமாய் அழமுடிகிறது.

பண்டிகை நாட்கள் புலம் பெயர்ந்த தமிழர்களை மகிழ்விக்கின்ற நாட்கள். பத்து நாட்களுக்கு முன்னால் மெய்காப்பாளன் குன்றத்தில்** திருவிழாவுக்கான ‘வேல் ‘ பொறித்த கொடி தேவதாரு மரத்தில் ஏற்றப்பட்டிருந்தது. பண்டிகை நாட்களில் தமிழர்கள், உடலையும் உள்ளத்தையும், தூய்மையாக வைத்திருப்பார்கள். வேலவன் பக்தியில் சிரத்தையுடன் இருக்கவேண்டி, கொடியேற்ற நாள் முதல் தங்கள் கைகளில் மஞ்சள்நூலினை காப்பாக அணிந்து கொள்வதும், காலையில் நீராடித் தோய்த்துலர்ந்த ஆடைகட்டி, இரவினில் கும்பங்களில் முருகனை வழிபட்டு, வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து, உபவாசமிருந்து எடுக்கும் விழா.

சிறியதேரைச் சுற்றி ஒரு கும்பல். நடு நாயகனாக, கன்னத்திலும் முதுகிலும் அலகுகள் குத்திக்கொண்டு அத்தேரை இழுத்து வருபவன் பொன்னப்ப ஆசாரி. ஒரு கைத்தறித் துண்டை அவன் இடையில் கொடுத்து, அவன் நடையைத் தாமதப்படுத்தும் வகையில் இறுகப் பிடித்துக் கொண்டு கைலாசம், அருகே சில்வி, தெய்வானை, நீலவேணி. பிறகு உங்களுக்கு ஞாபகமிருக்குமானால் எட்டியான், அஞ்சலை, பிச்சையும் கூட கூட்டத்தில் நடந்து வந்தார்கள். இவர்கைளைத் தவிர நாம் அறியாத மொக்கா, பாம்ப்ளுமூஸ், ரிவியர் தபோரென எங்கெல்லாம் தீவில் தமிழர்களின் குடியிருப்புகள் உண்டோ அங்கிருந்தெல்லாம் தமிழ்ச் சனங்கள் வந்திருந்தார்கள். ஊர்வலம் தென்கிழக்காகச் சென்று சிறிதுநேரத்தில் மெய்க்காப்பாளன் மலை அடிவாரத்தை அடைந்துவிடும். அடிவாரத்தில் குவர்னர் மேன்மை பொருந்திய லாபூர்தொனே, கும்பெனியின் முக்கிய காரியஸ்தர்கள், பண்னை முதலாளிகள் காத்திருப்பார்கள். அவர்களை முக்கிஸ்தர்கள் வரவேற்று மலைமேலே அழைத்துச் செல்வார்கள். தம்பிரான் காவடிச் சிந்துகளைக் உரத்துப் பாட காவடிகளும் பாற் குடங்களும், தமிழ்ச் சனங்களும், கிறேயோல் மக்களும் தொடர்ந்து குன்றில் ஏறுவார்கள்.

‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! ‘ ‘கந்தனுக்கு அரோகரா! ‘ ‘வேலனுக்கு அரோகரா! ‘ தீவெங்கும் ஒலிக்கிறது. ஊர்வலத்தில் வருகின்ற தமிழர்களின் உணர்ச்சிக் குரல்கள் மலைகளில் விழுந்து திரும்புகின்றன..

தெய்வானையும், நீலவேணியும் ஊர்வலத்தின் மையப்புள்ளியில் இருந்தார்கள். இருவரது கூந்தலுமே அதிகாலைக் குளியலைக் கண்டதற்கு அடையாளமாக முதுகிற் பரத்தி நுனியில் கொட்டைப்பாக்கொத்த முடிச்சினைக் கண்டிருந்தது. நெற்றிச் சுட்டியும், ஒட்டியாணமும், தோடும், முத்துவளையும், புல்லாக்கும், சீனத்துப் பட்டுச் சிவப்பு சீலையில், அளவாய் மஞ்சள் பூசிய முகத்துடன் அடக்கமாய்த் தெய்வானை. அதற்கு நேர்மாறாக, கொட்டும் சிரிப்பும், குறுகுறுபார்வையும், எளிய ஆடை அலங்காரத்துடன், கன்றுக் குட்டியின் குணத்துடன் நீலவேணி.

தோழியின் கண்கள் தேரிழுக்கும் காதலன் பொன்னப்ப ஆசாரியின் முதுகை மேய்கின்றன. தெய்வானையோ தன் காதலன் பெர்னார் குளோதன் நினைவுகளிற் புதுச்சேரிவரை பயணித்து பெருமூச்சு விடுகிறாள். தோழியர் இருவருமே இப்படியான விழா ஒன்றில் வைத்தே, தங்கள் தங்கள் மனதில் உள்ள காதற் புதையலைக் கண்டெடுத்திருந்தார்கள். தங்களுக்கு ஏற்பட்ட கடற்கரை அனுபவங்களை நினைத்தமாத்திரத்தில் உள்ளம் இனிக்கவும், உடலைப் பரவசப்படுத்தவும் செய்கின்ற மாயத்திற்கு என்ன பேர் சூட்டுவதென்று தோழியர் இருவரும் மயங்கித் தவிக்க, இப்படியான தைப்பூசக் காவடி விழா நாளொன்று, கட்டடழகுக் காைளையர் இருவரை அவர்கள் முன்னால் நிறுத்திக் காதல் என்றது.

ஊர்வலம் குன்றின் அடிவாரத்தில் இருந்த போ பஸ்ஸேன் குளத்தை அடைந்திருந்தது..

சில ஆண்டுகளுக்கு முன்பு, இக்குளத்தருகே குதிரையில் ஆரோகணித்திருந்த வாலிபன் பெர்னாரைக் கண்டு மெய்மறந்து நின்றதும், தோழி நீலவேணியின் கேள்விகளை உதாசீனம் செய்து, மெல்ல ஊர்வலத்திலிருந்து ஒதுங்கி நின்றதும், நினைவில் இனித்தன. கப்பற் கட்டுமிடத்தில் பெர்னார் குளோதனால் காப்பாற்றப்பட்ட நாள்முதல், அவனது உடற் தீண்டலால் இவளுற்ற காய்ச்சலுக்கான மருந்து அவனிடம் இருக்கவேணுமென்ற எண்ணத்தில், பெண்ணுக்குரிய நாணமின்றி தேடிச் சென்றிருக்கிறாள்.

அன்றைக்கும் இப்படித்தான் ஊர்வலம் முடித்துக் கூட்டம் காவடிகளோடு மலையேறத் தொடங்கிவிட்டது. குளத்தருகே, இவள் சற்று முன்பு கண்ட சிவத்த வாலிபனைக் காணாமல் மனம் தவிக்கிறது. சுற்றும் முற்றும் பார்க்கிறாள். தெரிந்தவர் எவரும் கண்ணிற்படவில்ல என்கிற தைரியத்தில், குளத்தருகேயிருந்த மூங்கிற் புதர்களைக் கடந்து, அடர்த்தியாகவிருந்த விசிறிவாழைகளிடத்தில் வந்துநின்றாள். வலப்புறமிருந்த செண்பக மரத்தடியில் பெர்னார் குளோதன் குதிரை. அவனும் அருகில் நிற்பதாக நினத்தமாத்திரத்தில், சுரம் கண்டவள்போலானாள். வாய் உலர்ந்து போகிறது. வாழைஇலைகளை கிழிப்பதும், கிழித்தத் துண்டுகளை தூக்கி எறிவதுமானக் காரியத்தைத் திரும்பத் திரும்பச் செய்கிறாள். பெர்னார்குளோதன் குதிரை, செண்பக மரத்தில் தலையை உரசப்போக, பூக்கள் உதிருகின்றன. அருகில் இரு கால்கள். சந்தணக் கால்கள். தொடர்ந்து பார்வையை மேலே கொண்டு…இல்லை விலக்கிக்கொள்கிறாள். என்ன நேர்ந்ததோ பேதைப்பெண்னுக்கு, இரு கரங்கங்களிலும் முகத்தைப் புதைக்கிறாள். விரல்களினூடே பார்வை வழிந்து, அவன் முகத்தைக் காணவெனச் சிறுக்கி கள்ளத்தனம் செய்கிறாள். ம்.. ஏதோவொன்று தடுக்கிறது. வெட்கம் மேலிட்டவளாய் திரும்பி நிற்கிறாள்.

தோளினை ஒட்டி மென்மையாய் ஓர் உஷ்ணமூச்சுப் பரவி, இவள் உடலைத் தொட்டு விளையாடுகிறது. இல்லை இனிமையாய் மீட்டுகிறது. அப்படி இல்லை, இவளது பவள வாயைத் திறக்கச் செய்து, அமிர்தத்தை ஆசை ஆசையாக ஊட்டுகின்றது. உடல் முழுக்க குலுங்கின மாதிரி பிரமை. குழப்பம். கங்கைக்காகத் தவமிருந்த பகீரதனா ? அசட்டுக் குந்தியின் மந்திர உச்சாடனத்திற்கு மதிப்பளித்துத் தன்னை ஆட்கொள்ளவந்த சூரியனா ? ஏன் எதற்கென கேள்விகள் வேண்டாக் கங்கையின் காதற் சக்கரவர்த்தி சந்தணுவா ? யார் இந்த மாயவன் ?

திரும்புகிறாள். தலையை நிமிர்த்த அச்சமும் நாணமும் கூட்டணிவைத்துக்கொண்டு இவளைத் தடுக்கின்றது. மெள்ள அவனை நோக்கி நடக்கிறாள். இவளது மெல்லிய பாதத்தின் வலி தாங்கமுடியாது ஈரபுற்கள் அழுவதைப்போலப் போல தண்ணீர் தெறிக்கின்றது. இவளை எதிர்பார்த்து காத்துநிற்கும் உடல் – தீண்டல்- வாசம், அதனைத் தொடர்ந்து மென்மையானதொரு அனுபவம்,. ஏற்கனவே அறிந்த பரவசம். அன்னை காமாட்சி அம்மாளிடமோ, சகோதரன் கைலாசத்திடமோ, தோழி நீலவேணியின் அண்மையிலோ காணாதது. குளிர் நீரில் முங்கியெழும் சுகம். காத்திருக்கும் மீன் குஞ்சுகள் உடலெங்கும் விளையாடி கிளர்ச்சியூட்டுகின்றன.

‘பெண்ணே..! ‘ கள்ளன். அவனுடய குரல்தான்.

‘ம்… ‘

‘எங்கே உன் விழிகளை உயர்த்தி, என்னை ஒரு முறை பார் ‘

‘எதற்காம் ? ‘

‘என்னிடம் என்ன கேள்வி ? உன் இதயத்தைக் கேள். விடைகிடைக்கும். ‘

வெட்கத்தால் முகம் சிவக்கிறாள் பெர்னார் குளோதன் அவளது முகவாய் தொட்டு மெல்ல உயர்த்துகிறான். தன் விரல்பட்டுக் கன்றியிருக்கும் முகவாயில் முத்தமிட்டவாறே, மெல்ல அவளது பவள இதழ்கள் நோக்கிப் பயணிக்கிறான். அவளது வலக்கரம் நந்தியாகப் பிரவேசிக்கிறது. அவனது செய்கையைத் தவிர்க்கிறாள். இருகலாச்சாரத்திற்கும் இடையில் ஏற்பட்ட போட்டியில் இந்தமுறை வென்றதென்னவோ தமிழச்சி.

முதன் முைறையாக நெருக்கத்திற் பார்க்கிறாள். அவன் நீல விழிகளும், கூரிய மூக்கும், உதட்டில் அரும்பாய் நின்ற மீசையும், மோகன முறுவலும், காதுவரை இறங்கியிருந்த கன்னமீசையும் அலை அலையாய் அவள் மனதில் இறங்கிக் கொண்டிருக்கின்றன. உள் மனத்தில் கற்பனையாய் ஆவணப் படுத்தியிருந்த ஆடவன் இவனேயென்று உறுதியாகிறது. உரிமையாய்த் தாமரை சூரியனைப் பார்க்கிறது.

‘உன் பெயரைச் சொல்லமாட்டாயா ? ‘

‘நீர் யார் ? எதற்காகச் சொல்லவேணும் ? ‘

‘நானா ? உனது ஏழு பிறப்பிற்கும் ஏஜமான். உனக்கான அடிமை ஓலை என்னிடம் இருக்கிறது ‘

‘அப்படியானால், எனது பேர் உங்களுக்குத் தெரிந்திருக்க வேணுமே. அடிமை ஓலையை முறையாக வாசித்துவிட்டல்லவா வந்திருக்க வேணும். ‘

‘உத்தமமான பேச்சு. நான் புறப்படுகிறேன் ‘

‘எங்கே ? ‘

‘உங்கள் முருகனுக்கு அபிஷேக ஆராதனைக்கும் அன்னதானத்திற்கும் ஆள் குறைகிறதாம். ஒத்தாசை செய்வதாய் உத்தேசம். ‘

‘உண்மையிலேயே போகிறதாக உத்தேசமா ? ‘

‘பின்னே ? யாருக்கு எனது சேவை வேணுமாயிருக்கிறதோ, அங்கே போவதுதானே முறை. ? ‘

‘நல்லது பிரபு. புறப்படுங்கள். ‘ நிர்த்தாட்சண்யமாகக் கூறிவிட்டு, அவனுக்கு முன்பாகப் புறப்பட நினைத்தவளின் முன்னால் போய் நிற்கிறான்.

அவளது கைகளை மெல்லப் பற்றி, முகத்தை நிமிர்த்தினான். மூடிக்கிடக்கும் இமைகள், மொழுமொழுவென்று கன்னங்கள், ஈரமான உதடுகள். நெளி நெளியாய் மணக்குங் கூந்தல். தாபத்துடன் உதடுகளில் அழுந்த முத்தமிட்டு நிமிர்கிறான். முத்தமிடுகின்றவரை, காத்திருந்தவள்போல அவனிடமிருந்து விடுபட்டாள். முகம் சிவந்துவிட்டது. கண்கள் குளமாகின. உடலெங்கும் ஊமைப் பரவசம்.

‘பெண்ணே! மனத்திலிருப்பதை ஒளிக்காமல் சொல். என் மீது பிரேமை கொண்டிருப்பது நிஜம்தானே ? ‘

இவள் தலையை மெல்ல உயர்த்திக் கீழிறக்குகிறாள். அவளது சம்மதம் இவனைச் சந்தோஷப்படுத்தியிருக்கவேண்டும். முன்னிலும் ஆவலாய், அவளது கைகளைப் பற்றி தனது மார்போடு அணைக்க முற்படுகிறான்.தெய்வானை விடுபட்டு ஓடுகிறாள். கலவென்று சிரிக்கிறாள்.

‘தெய்வானை..! என்னடி விஷயம் ? இப்படிக் கலகலவென்று சிரிப்பதன் அர்த்தமென்ன ? பெர்னார் நினைவா ? கூடியிருக்கும் சனங்கள் உன்னைக் கவனிப்பதை அறிவாயா ? ‘

‘தோழியின் குரல், தெய்வானையின் நினைவுகளைத் துரத்திவிட்டது. தன் மனதை தோழி படித்துவிட்டாளென்றபடியால் வெட்கம். ‘போடி உனக்கு என்னிடம் எப்போதும் கேலிப்பேச்சுதான் ‘ ‘ பொய்க்கோபம் காட்டினாள்…

காவடிகளும், பக்தர்களும், மெய்க்காப்பாளன் குன்றினை அடைய, ‘அரோகரா ‘ கோஷம் உயர்ந்து ஒலிக்கின்றது. கோவில் அடிவாரத்தில் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த குவர்னர் வந்திருந்தார், கூடவே அவரது ஆலோசகர்கள், கும்பெனி முக்கிய காரியஸ்தர்கள், சில பண்ணை முதலாளிகள், துரைசாணிமார்கள் என வந்திருந்தார்கள். சிலர் பல்லக்குகளிலும், சிலர் குதிரைகளிலும் வந்ததற்கு அடையாளமாக, பல்லக்குகளும், பல்லக்குத் தூக்கிகளும், அவர்களுக்கான பறங்கிய வீரர்களும், கறுப்பின வேலையாட்களுடன் காத்திருந்தனர். கறுப்பர்களின் தோளில் ஏறிவந்திருந்த ஒரு சில பறங்கியர் இன்னுங்கூட தோளைவிட்டு இறங்காமல், ஊர்வலத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். சற்றுத் தள்ளிக் கூட்டங் கூட்டமாக பிரெஞ்சு கிறேயோல் பேசுகின்ற மல்காஷ் மக்கள், மொஸாம்பிக் மக்கள்.

சீனுவாச நாயக்கரும், அருணாசலத் தம்பிரானும் பூரண கும்ப மரியாதையுடன் குவர்னருக்கு வரவேற்பு அளித்தார்கள்..மற்ற துரைமார்களுக்கு வந்தனம் சொன்னார்கள்.

சுமார் ஐம்பதுபேர் நிற்கக்கூடிய தட்டை பந்தல் போட்டிருந்தது. தமிழ்ச் சனங்களும், முக்கியஸ்தர்களும் கூடுகிறார்கள். காவடிகள் இறக்கபட்டன. பாற்குடங்கள் இறக்கப்பட்டு, சுயம்புவாய் நின்ற முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மீண்டும் மீண்டும் ‘அரோகரா! அரோகரா! ‘ என்ற குரல்கள்.

பார்த்திருந்த பறங்கியர் கூட்டம் சிரிக்கிறது.

குவர்னர் துரையின் அருகிலிருந்த பாதிரியார் தமிழர்களின் செய்கையை கண்டு முகம் சுளிக்கிறார். பக்கத்திலிருந்த குவர்னரிடம்,

‘நமது தேசத்திலிருந்து இவ்வளவு தூரம் வந்திருப்பது எதற்காகவென்று கும்பெனி அறியவேணும். உங்களுக்கு வியாபாரம் நோக்கமெனில், எமக்கு இந்த ஆத்துமாக்களைக் கர்த்தரிடம் சேர்ப்பிக்க வேண்டியது கடமையாகிறது. இந்த காப்பிலிகளை இப்படியே விட்டால், மொத்தத் தீவையும் மூடர்களாய் மாற்றிப்போடுவார்கள். ‘

குவர்னர் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார்.

அவரருகே நின்றிருந்த வீல்பாகு துரை, ‘சிலையை ஊர்கோலமாக எடுத்துவருவதும், அதன் முன்னால். கூச்சலிட்டு ஆடுவதும் காட்டுமிராண்டித்தனம். உடனடியாகக் கும்பெனி இந்த விடயத்தில் தலையிட்டு ஏதாகிலும் செய்தாகவேணும். ‘ வழக்கம்போல வீல்பாகுதுரை விழாவுக்கு வந்திருப்பவர்களை அலட்சியம் செய்தவனாய்ச் சொல்கிறான்..

கும்பலில் திடாரென்று அலறல். ஒரு குரல் வீறிட்டு ஒலித்தது.

‘ஆ.. ஆய்…. ‘

எட்டியான் மனைவி அஞ்சலைக்கு ஆவேசம் வந்திருந்தது. துடிக்கிறாள், எம்பிக் குதிக்கிறாள். முழிகளிரண்டும் வேகமாய்ச் சுழல்கின்றன. நாக்குத் துருத்திக்கொண்டிருந்தது. சுற்றிலுமிருந்த சனங்கள் ‘அரோகரா ‘ கோஷத்தை இம்முறை மிகவும் உரத்து எழுப்புகிறார்கள். வீல்பாகுதுரை மூச்சுபேச்சில்லாமல் நின்றான். பாதியாரும், குவர்னரும் ஆவலாய் என்ன நடக்கிறதெனப் பார்த்தார்கள்; தெய்வானையும், நீலவேணியும் அச்சத்துடன் ஒதுங்கி நின்றார்கள்.

சற்று துணிச்சலான ஆசாமி ஒரு துண்டைச் இரு முனைகளையும் பிடித்துக்கொண்டு சில வினாடிகள் சில நொடிகள் சுழற்றி அது இறுக்க நிலையை அடைந்ததும் வில்லாய் வளைத்து எறிந்து, அப்பெண்மணியை தனது பிடிக்குள் கொண்டுவருகிறார். கூட்டம் மொத்தமும் வாயடைத்து நிற்கிறது.

தம்பிரான் விபூதித் தட்டும் குங்குமத்துடனும் முன்னால் வந்து நிற்கிறார். அஞ்சலையின் பார்வை நிலைகுத்தி நிற்பது எதிரே நிற்கும் அருணாசலத் தம்பிரானையா அல்லது அவரது முதுகுக்காய் நிக்கும் வீல்பாகு துரையையா என்பதைக் கூட்டம் விளங்கிக் கொள்ளவில்லை.

‘அடேய் சொக்கேசா என்னைத் தெரியுதா! பஞ்சம் பிழைக்கவந்த இடத்துல உனக்கேனடா இந்த நீச புத்தி ? ‘

‘முருகா..! என்னப்பா சொல்ற ? ஒன்றும் விளங்கலியே ‘ ‘- தம்பிரான் பக்கத்தில் நின்ற சுப்பு முதலியார், துண்டை இடுப்பிற் கட்டிக்கொண்டு பணிவாய்க் கேட்கிறார்.

‘நான் முருகனில்லை, தேவயானி. சொக்கேசனைச் சம்ஹாரம் செய்ய வந்திருக்கேன். ‘ தம்பிரானைக் குறிவைத்து வார்த்தைகள் வந்து விழுகின்றன. விபூதியை தலையில் வீசியடித்து, நெற்றியிலிட்ட தம்பிரான், ‘தேவயானி ‘ பெயரைக் கேட்டுக் அதிர்ந்ததைக் கைலாசம் அவதானிக்க முடிந்தது. தம்பிரானைத்தவிர கூட்டத்திலிருந்த நம்மால் அறியப்பட்டக் குவர்னர், காமாட்சி அம்மாள், சீனுவாசநாயக்கருங்கூட அதிர்ச்சியுற்றிருந்தார்கள்.

/ தொடரும்/

*காளியம்மனுக்கும், மாரியம்மனுக்கும், திரெளபதை அம்மனுக்கும் தீ மிதிக்கின்ற விழா 1772ம் ஆண்டிலும், காவடி விழாவினை 1852ம் ஆண்டிலிருந்தும் தொடங்கப்பட்டதாககச் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. .(Page 157-158 Les Tamouls a Ile Maurice – Ramoo Sooriamoorthy). ஆயினும் பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கும்பெனி நிர்வாகம், குடியேற்றவாசிகளின் மதவிடயங்களில் தலையிடாததும், தமிழர்கள் தங்கள் வழிபாட்டுமுறைகளில் காட்டிய ஆர்வமும் ஆரம்ப முதலே தீமிதி, மற்றும் காவடி விழாக்களை நடத்தியிருக்கலாம் என்கின்ற யூகத்தில் எழுதபட்டது.

** La montagne de Corps de Garde

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -22

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


….

PARTOUT OU VOUS IREZ, FROIDS, IMPORTANTS ET FOURBES,

VOUS PORTEREZ LE TROUBLE.

Les Oracles -Alfred de VIGNY

நாள் விழித்துக்கொண்டது. காலைச் சூரியன் மரங்களுக்குக் கொடுத்ததுபோக எஞ்சிய ஒளியை மண்ணுக்கும் தயவுபண்ணியிருந்தான்.

காத்தமுத்துவை எறும்புகள் மொய்த்திருந்தன. மண்ணிற் கிடந்தற்கு அடையாளமாக உடல் முழுவதும் அடையடையாய் நெருஞ்சி முற்கள் தைத்திருந்தன. கசையடிப் புண்கள் கருஞ்சிவப்பிற் கனிந்து, அவற்றின் கொப்புளங்களில் நீர்வடிகின்றது. அவற்றைச் சீண்டி வேதனைப் படுத்தும் ஈக்களை விரட்டி அலுத்துபோனான். எழுந்து நிற்க முயற்சிக்கிறான், நின்றான். விழுந்தான். இயற்கை உபாதை, உடலைச் சீண்டுகிறது. சுதந்திரமாய் மலசலம் போகவேணும் போலிருக்கின்றது. போகிறான்.

இனி, அவன் எவருக்கும் அடிமை இல்லை. கையிற் பிரம்பும், சிவந்தக் கண்களுமாய் குதிரையிற் வலம்வருகின்ற பறங்கியர்கள் இங்கில்லை. கசையும், கெட்ட வசவுகளுமாய், அடிமைகளைப் பிழியப் பழகிய கறுப்பு கங்காணிகள் இங்கில்லை. தங்கள் கள்ள புருஷனைப் பல்லக்கில் சுமந்துவரப் பணிக்கின்ற துரைசாணி அம்மாக்கள் இங்கில்லை. மிசியேக்கள் இல்லை, மதாம்கள் இல்லை,.எஜமான்கள் இல்லை, எஜமானிகள் இல்லை. ஐயாமார்களோ, ஆண்டைமார்களோ இல்லை, இல்லை.

அதோ சலசலவென்று ஓடிக்கொண்டிருக்கிறதே, அந்த ஆற்றினைப்போல நிற்காமல் காட்டின் அடுத்தமுனைவரை இவன் இப்போது ஓடலாம். கேட்பாரில்லை. இவனைச் சந்தோஷபடுத்தவென்று ஒரு குரங்கும் அணிலும் அவ்விடம் கட்டுப்பாடின்றி ஓடிவிளையாடுகின்றனவே, அவற்றைப் போலவும் ஓடலாம், தடுப்பாரில்லை.

சொந்தத் தேசத்தில் பார்த்திராத விசித்திரமான மரமொன்றில், தவிட்டுப் புறாவொன்று கிளைகிளையாய்ப் பறந்துசென்று உட்காருவதும் எழுந்திருப்பதுமாய் வேடிக்கைக் காட்டுகிறது. அதனைத் தலைசாய்த்துப் பார்த்துவிட்டு இளம் பச்சைக்கிளியொன்று இறக்கைகளை உதறுகின்றது. கறுமைநிற இறகுகள் கொண்ட வெண்குருவியொன்று, பப்பாளிமரத்தின் கனிகளைக்கொத்தி அலகிலெடுத்து மிகத்தாழ்வாகப் பறந்து பின்னர் மேலேபோகிறது.

கைகளையும், கால்கைளையும், கங்காணியின் அனுமதியின்றிச் சுதந்திரமாய் இனி அசைக்கமுடியும் என்பதை நினைக்கச் சந்தோஷம். மெல்ல அடியெடுத்து, தன் வலி மறந்து ஓடிப் பார்க்கிறான். தலையில் இடித்த கிளையை உடைத்து அலட்சியமாகத் தூக்கி எறிகிறான். காய்ந்து

கிடந்த தேங்காயொன்றை எட்டி உதைக்கிறான். காற்றுச் சுழன்று சுதந்திரமாய் வீசுகிறது. காம்புகளோடு சிவப்பும், ஊதாவுமாய் மலர்கள் சுதந்திரமாகத் தலைகுனிந்து நிமிர்கின்றன. ஆவலாய்ப் பறந்துவரும் வண்டுகள் அம்மலர்களில் அமர்ந்து, வயிறுமுட்டத் தேன்குடிக்க, இவனுக்கும் பசி. வரப்பு நண்டுகளைப் பிடித்து வீரம்மா வைக்கும் சாறும், நத்தை கறியும், ஞாபகத்தில்வர, எச்சில் ஊறுகிறது. அருகிலிருந்த ஈச்சங்கன்றைப் பலங்கொண்டமட்டும் ஆட்டிப் பிடுங்குகிறான். அவற்றைப் பிய்த்துபோட்டு குருத்தினைத் தின்று, தண்ணீர் குடிக்கிறான்.

திடாரென்று பயம் வந்துவிட்டது. வேட்டை நாய்களும், கறுப்பர்களும், வெள்ளை சிப்பாய்களுமாக துரத்தி வரும் மனுஷர்களிடம் இவன் எப்படி தப்பப் போகிறான் என்கின்ற பயம். கறுப்பர்களால் பண்னைகளிலிருந்து தப்பவும், காட்டில் மறைந்துவாழவும் முடியும். அவர்கள் பிடிபடாமலிருந்தால் அடுத்துள்ள தீவுகளுக்குத் தப்பித்துப் போவதும் நடக்கலாம். தன்னாலப்படிக் காட்டில் மறைந்து வாழ முடியுமோ ? விழஜந்துக்களிடமிருந்து தப்பிக்க வேணும். விலங்குகளிடமிருந்து தப்பிக்க வேணும். நரமாமிசம் சாப்பிடுகின்ற கறுப்பர்களிடமிருந்துத் தப்பிக்கவேணும். அப்படிய தப்பிக்க முடிந்தால், காட்டில் கிடைப்பதை உண்டு உயிர்வாழத் தெரியவேணும். எத்தனை நாட்களுக்கு, எத்தனை மாதங்களுக்கு, எத்தனை வருஷத்துக்கு ? முடியுமா ? ஏதோவொரு வேகத்தில் கசையடிகளுக்குப் பயந்து காட்டுக்குள் புகுந்தாகிவிட்டது. இனி எங்கே போவது ? எப்படிப் போவது ? இவன் பண்ணையிலிருந்து தப்பியவொரு அடிமை. இனி தீவுடைய சட்ட திட்டத்தின்படி, இவனுக்கு மரூனென்கிற பேரு. பிடிபட்டானென்றால், இரண்டு காதினையும் அறுத்து, கொட்டடியில் அடைத்துக் கஞ்சி தண்ணி காட்டாமே, உசுரிருந்தால் மீண்டும் நாள் முழுக்கக் கரும்புவெட்டவும், கசையடிகளுக்கும் பழகிக்கச் சொல்வார்கள்.

சாமி கண்ணைத் தொறக்கணும். ‘அஞ்சு வருஷம், தீவுல காலந்தள்ள முடிஞ்சா பணம் பவுஷோட நாடு திரும்பலாம்னு ‘ புதுச்சேரியிலவச்சு, தேவராசன் சொன்னவன். கிட்டங்கிச் சுவற்றில் இவன் கிழித்திருந்தக் கோடுகள் பிரகாரம், இரண்டு அஞ்சு வருசம் வந்துபோச்சுது. இவனுக்கு முன்னாலே தீவுக்குவந்ததாகக் கேள்விபட்டிருந்த கொத்தனார் சின்னப்பனோ, தச்சுவேலைசெய்யும் ஆசாரி முருகேசனையோ இதுவரைக்கும் பார்த்ததில்லை. தன்பெண்பிள்ளையைத்தொலைத்துப்போட்டு சதா சிந்தியமூக்கும் அழுத கண்ணீருமா இருந்த ஸ்த்ரீயையும் மற்ற புதுச்சேரி சனங்களையும்கூட முதல் நாள் பண்ணையில் வைத்துக்கண்டதுதான், அதற்கப்புறம் பார்க்கமுடியாமற் போச்சுது. தீவுக்குக் களவாய் அழைத்துவந்தவர்களைக் கடேசிவரைக்கும் திருப்பி அனுப்ப மாட்டார்களாம். இன்னும் கொஞ்ச காலம் தலையெழுத்தேன்னு பண்ணையிலேயே கிடந்திருக்கலாம். எப்பேர்பட்ட காரியம் பண்ணிப்போட்டேன். கோவிந்தா….! இனிப் பெண்டாட்டிப் பிள்ளைகளைப் பார்க்கவே முடியாதோ ?

கீச்சு.. கீச்சென்ற சத்தம். பெரியமரமொன்றில் ஒரு குருவிக்குடும்பம். தாய்க்குருவி கொடுக்கின்ற இரைக்காகப் போட்டிபோடும் குஞ்சுக் குருவிகள். அலகினைத் பிளந்து அவைகளிடும் குரல் இவனுக்காய் இருக்குமோ ? தாய்க் குருவி வீரம்மாவென்றும் ? குஞ்சுகள் பிள்ளைகளென்றும் நினைப்புவந்து நெஞ்சை அடைக்குது. தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். வீரம்மாவையும் பிள்ளைகளையும் பார்க்கவேணும். புதுச்சேரி தேசத்துக்கு திரும்பவும் போகவேணும். பாகூருக்குத் திரும்பியாகணும். அங்கே சூரியன் காலமே செவசெவண்ணு புறப்பட்டு வருவான். சாயங்காலமும் அப்படித்தான். சேரிக்குளத்துத் தண்ணி கலங்கியிருந்தாலும் குடிச்சா பனஞ்சாறு. பாகூர் தணிகாசல கிராமணி இறக்கற கள், எப்பேர்பட்ட உடல் வலின்னாலும் ஷணத்தில் வாங்கிப்போடும். தன் சாதிசனமெல்லாம் அங்கேயே கிடக்கிலையா ? இவனுக்கேன் புத்தி இப்படி கெட்டுப்போச்சுது. எல்லாத்தையும் ஒதுக்கிட்டு, பொண்டாட்டி புள்ளைங்களோடு புதுச்சேரியிலே பொழைச்சிக் கிடந்திருக்கலாம். எதுக்காக வரவேணும் ?

அப்போதுதான் அவனைக் கவனித்தான். பார்த்தவிதத்தில் பண்ணையில் இவனைமேய்த்த கங்காணி கறுப்பனாகவிருக்குமோவென சந்தேகம். இல்லை இவன் இதுவரை பார்த்திராத ஒருவன், அந்நியன். கண்டமாத்திரத்தில் சாவு நெருங்கிவிட்டதாய் நினைத்து ஓட முயற்சித்தான். ஓடினான். இவனைத் தொடர்ந்து அவன் ஓடிவருவதன் அறிகுறியாக, நெருக்கத்திற் காலடிச் சத்தம். பண்ணையிலிருந்து தப்பி ஓடிவந்தவன், நேற்றுமுழுவதும் ஓடியிருக்கிறான், அந்த அலுப்பு காத்தமுத்துவை அதிகதூரம் ஓடச் செய்யாமற் தடுக்கிறது. ஓடிவந்த கறுப்பன் இவன் கையை இறுகப் பிடித்துக்கொண்டான். இனி அவனிடமிருந்து தப்புவது கஷ்டமென்று புரிந்துபோகின்றது. திரும்பிப்பார்க்கிறான். கங்காணி அல்ல. வேறு எவனோ ? இப்போதைக்கு இவனால் ஆபத்தேதும் நேர்ந்துவிடாது என்பதை நிச்சயபடுத்திக்கொண்ட திருப்தியில் அவன் இழுத்தப்போக்கிலே, இவனும் ஓடினான். குறுகிய ஒற்றையடிப்பாதை நெளிந்து நெளிந்து ஓடியது. பாதை சிலவிடங்களில் மளுக்கென்று முறிந்து போனது. அவ்வாறான இடங்களில் கறுப்பன், அங்குள்ள செடிகளின் வாசத்தை முகர்ந்து அதன் பின்புறம் மறைந்துகிடக்கும் பாதையைக் கண்டுபிடித்து மீண்டும் ஓடுகிறான். விதிப்படி ஆகட்டுமென காத்தமுத்துவும் அவன்பின்னே ஓடுகிறான்.

வானமேறி வைகுந்தம் போவதற்கு வசதியாக வளர்ந்த மரங்கள். அடர்த்தியாய்ச் செடிகொடிகள், புதர்கள். அருகில் நமது செவிகளை அதிகம் உறுத்தாமல் விழுகின்ற அருவி. அங்குமிங்குமாக வானத்தைக் கிள்ளியெடுத்தத் துண்டுகளாகச் சிதறிக்கிடக்கும் நீர் நிலைகள். இவற்றுக்கிடையில் ரகசியமாய் பதுங்கிக்கிடந்தது அவ்விடம்.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கடற்கொள்ளைக்காரர்களின் புழக்கத்திலிருந்த மறைவிடம். பகல் இருட்டுக்கென்று முந்தானை விரித்திருக்குமிடம். இருட்டுபோதாதென்று, பாதுகாப்பாக அவ்விடத்தை, வயிற்றில் கட்டிக்கொண்டு, இலைதழைகளின் பராமரிப்பில் சுருண்டு கிடக்கும் ஆழமானதொரு பள்ளம். ஏணியின் உதவியோடு, பள்ளத்திற் கிடக்கும் பாம்புகளையும் விஷ ஜந்துக்களையும் வெல்வதற்கு தைரியமிருக்கின்ற எதிரிகள் வலதுகாலை தாராளமாக எடுத்துவைக்கலாம்.

அருணாசலத் தம்பிரான் காலமே புறப்பட்டு வந்திருந்தார். ஏற்கனவே பலமுறை தொரை போல் அஞ்ஞெலை இங்கேவைத்து சந்தித்திருக்கிறார். இவர் வந்து அரைமணித் தியானமிருக்கலாம். தொரை எப்போதும் சொன்னபிரகாரம் வந்திடுவான்.

அவ்விடத்துக் காட்சிகள், அவர்மனதிற்குச் சங்கடத்தை உண்டுபண்ணுகின்றன. பண்ணைகளிலிருந்து தப்பியோடிவந்த மரூன்கள் எனப்படும் அடிமைகளும், மதகாஸ்கர், மொசாம்பிக் பகுதிகளிருந்து வியாபாரத்திற்கெனக் கள்ளத்தனமாய் கொண்டுவரப்பட்டிருந்த கறுப்பரின அடிமைகளும் கைகால்கள் விலங்கிடப்பட்டு அடைபட்டுக் கிடக்கின்றனர். இரவோடு இரவாக நடுக்கடல்வரை படகிலும், பிற்பாடு வாணிபக் கப்பல்களிற் கள்ளத்தனமாகவும் கொண்டு செல்லப்பட்டு, அநேகமாய்த் தென்அமெரிக்கப் பண்ணைகளுக்கு விற்கப்பட இருப்பவர்கள். உணவின்றி கிடப்பதன் அடையாளமாக எலும்புக் கூடுகளின் இயக்கத்தில், தம்பிரான் திரும்பும் திசைதோறும் மொய்க்கும் கண்கள். அவையளித்த பீதியில், ‘சிவசிவா ‘ என்று முனகியவாறு முகத்தைத் திருப்ப, இவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வீல்பாகு துரை போல் அஞ்ஞேல் முன்னும் பின்னும் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன், வந்து சேர்ந்தான்.

தம்பிரான், நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்.

‘தம்பிரான் மன்னிக்கவேணும். நேற்று தெலாக்குருவா பண்ணையிலிருந்து புதுச்சேரி அடிமை ஒருவன் தப்பியோடியிருக்கிறான். அவனைச் தேடிப்பிடிப்பத்தற்கு எமதுபண்ணை குதிரைவீரர்களை உதவிக்குக் கேட்டிருந்தார்கள். அவர்களை அவ்விடம் அனுப்பிவிட்டு வருவதற்கு நேரமாகிவிட்டது. நீர் இவ்விடம் வந்துவெகுநேரமாகிறதோ ? ‘

துரைக்கு ஒருவன் நாற்காலி இட்டான். தம்பிரான் கீழேக்கிடந்தக் கோரைத் தடுக்கினை இழுத்துப்போட்டுச் சம்மணமிட்டு வசதியாக

உட்கார்ந்துகொண்டார்.

‘அப்படிச் சொல்ல வேண்டாமே. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள துரைமார்கள் நீங்கள். உங்களைப் போன்ற எசாமனர்கள் தயவில் ஜீவிக்கவேணுமாய் எங்கள் தலையில் எழுதியிருக்கிறது. அடிமைகள் வியாபாரம் நல்லபடியாய் நடக்க வேணும். நீர் எம்பெருமான் கிருபையினால் குபேரனைப் போல வாழபோகிறீர் பாரும். இது சத்தியம். நீர் ஷேமமாய் வாழ்ந்தால்தானே, எங்களைப் போன்றவர்கள் கடவுள் அனுக்கிரகத்தால் நாலு பணம் பார்க்கமுடியும். ‘

‘மெர்சி(நன்றி) தம்பிரான். வழக்கம்போல பணத்தில் குறியாயிருக்கிறீர். மொக்காவில் தரிசாகக் கிடக்கும் காணிகளை மலபார்களுக்குக் கொடுக்கவேண்டும் என்பதாய்க் கும்பெனியில் பேச்சு. இயேசுவை விசுவாசிக்கும் மலபார்களுக்கு அத்தகு சலுகைகளை செய்விக்க வேணுமென்று எங்கள் கிறித்துவ குருமார்கள் யோசனை சொலிகிறார்கள். எப்படியும் கும்பெனிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்குக் காணிகள் வழங்கப்படுமென தெரிகிறது. நான் குவர்னரிடம் முறையிட்டு உம்மை அந்தப் பட்டியலில் சேர்ப்பிக்கிறேன். இனி இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாக அழைத்துவரும் ஒவ்வொரு அடிமைக்கும் உமக்குப் பிரத்தியேகமாக இருபது பவுண் கொடுக்க ஏற்பாடு செய்வேன். ‘

‘இங்குள்ள அடிமைகளை தொரை எவ்விடம் அனுப்புகிறீர் ? ‘

‘இவர்கள் தொர்த்துய்கா (Tortuga) தீவுக்கு அனுப்பப் படவேண்டியவர்கள். அங்கிருந்து தென் அமெரிக்காவிலுள்ள ஸ்பானிய பண்ணை முதலாளிகளுக்கு அனுப்பப்படவேணும். இங்கேயுள்ள தேவைகளுக்கும் அடிமைகள் காணாது. எங்கள் சனங்களும், கும்பெனியை நம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லையென தீர்மானித்துள்ளார்கள். ஆக அடிமைவியாபாரம் தற்சமயம் நல்ல எதிர்காலம் உள்ளது. உமக்குப் புதுச்சேரியிலிருந்து ஏதேனும் தகவல் வந்ததா ? ‘

‘துரை ஷமிக்கவேணும். தைமாசம் வரவேண்டிய புதுச்சேரிச் சரக்குக்கப்பல்கள் நெசவுத் துணிகள் காணாமல் தவக்கப்படுது. ஆனாலும் என் சினேகிதர் புதுச்சேரி வேலாயுத முதலியார், கும்பெனி எசமானரான பிரான்சுவா ரெமியின் வளவில் ஒரு சில கட்டுமஸ்தான ஆட்கைளையும், பெண்டுகளையும் கொண்டுபோய் அடைத்து வைத்திருப்பதாக கடேசியாக வந்த கப்பல்மூலம் கடுதாசி கொடுத்துவிட்டிருந்தார். அதனைத் தங்கள் சமூகம் அடிமை ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதுவன்றி வேறு தகவல்கள் எம்மிடமில்லை. ‘

‘தம்பிரான் தீவில் நடப்பதெல்லாம் நீ அறிந்ததுதானே. இங்கே பண்ணை வேலைகளுக்குப் போதிய அடிமைகள் இல்லை. இருக்கின்ற அடிமைகளை கும்பெனிக்குத் தேவையான காலங்களில் கொடுத்துதவுமாறு தீவு நிர்வாகம் வற்புறுத்துகின்றது. ஆகவே களவாய் நமக்கு அடிமைகள் அவசரமாக வேண்டும். ‘

‘…. ‘

‘முக்கியமானதொன்றையும் சொல்ல வேணும். ‘

‘கேழ்க்கச் சித்தாயிருக்கிறேன். ‘

‘தற்சமயம் உங்கள் சனங்களில், கைத்திறனுள்ளவ்ர்களுக்கு இங்கே நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. உள்ளூர் கறுப்பர்கள் அநேகவிசை மற்ற அடிமைகளை¢ வெட்டிச் சாய்ப்பதும், சில்லறைச் சாமான்களைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவதுமாய் இருக்கின்றபடியால் கடந்த சில வருடங்களாகத் தீவில் மரூன்கள் பிரச்சினை விபரீதமாகிப் போச்சுது. உங்கள் சனங்களால் அப்படியானப் பிரச்சினையில்லை. அதுவன்றிஉங்கள் மக்களுக்கு எஜமான விசுவாசம் இரத்தத்திலே ஊறி இருக்கவேணும், சுலபமாய் அடங்கிக்கிடக்கின்றார்கள். இந்த விசுவாசத்திற்கு கைலாசம்மாதிரியான மனுஷர்களால் விக்கினம் நேராம பார்த்துக்கொள்ளவேணும். அவனது விடயம் என்னவாயிற்று ? அவனைக் கொன்றுபோடுவது அவசியமெனச் சொல்லியிருந்தேனே ? ‘

‘கைலாசத்தைக் கொல்லவேண்டி எமது ஆட்கள் இருவரை ஏற்பாடு செய்துள்ளேன். நீங்கள் சமுசயப்பட வேணாம். நல்ல சேதி வந்தவுடன் நானே நேரில் உமது பண்னைக்கு வந்து தெரிவிப்பேன். ‘

‘எம்முடைய பண்ணைக்கருகே நீர் வராதேயும். எனது ஆள் ஒருவனை மொக்காவுக்கு அனுப்பித் தகவல் தெரிந்துகொள்வேன். ‘

‘துரை..! நீங்கள் கைலாசம்குறித்தான கிலேசத்தை விடவேணும். அந்தக் குடும்பமே நிர்மூலமாக்கப்படவேணுமென நாள் குறித்துப்போட்டோம். ‘

‘காமாட்சி அம்மாள் குடும்பத்தின் மீது உங்களுக்கென்ன அப்பேர்ப்பட்ட வஞ்சம். ‘

‘அந்த ஸ்திரீ காமாட்சி அம்மாள் தமிழ்த்தேசத்திலே, ராசகுடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதாகப் பேச்சு. அவளது ஏகப் புத்ரி தெய்வானை ராசகுடும்பத்தின் வாரிசென்றும் சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரமும் அவர்களிடத்திலே இருந்திருக்கிறது. எங்கள் சினேகிதர்கள் காமாட்சியம்மாள் புத்ரி அரசபதவியை ஏற்பதைத் தடுக்கவேணுமென்பதில் உறுதியாய் உள்ளார்கள். ‘

‘நீர் ஏற்கனவே ஒருமுறை இதுபற்றி கூறியிருக்கிறீர். ஆனால் ஏதோ ரகசியமிருக்குமென்று சந்தேகப்பட்டப் பெட்டியைத்தான் உமது ஆட்கள் கோட்டைவிட்டுவிட்டார்களே ? ‘

‘உண்மைதானுங்கோ. எனது யூகம் சரியாகவிருக்கும் பட்சத்தில், நான் தேடிக்கொண்டிருந்தப் பெட்டி தற்சமயம் நமது மற்றொரு எதிரியான பெர்னார் குளோதன் வசமிருக்கவேணும். ஆகவே எனது புதுச்சேரி சினேகிதர்களுக்கு இது விபரமாக எச்சரித்துக் கடுதாசி எழுதிப்போட்டேன். ‘

‘அப்படியே புதுச்சேரி மண்ணிலேயே அவனுக்குக் கல்லறையும் ஏற்பாடு செய்யுமாறு உங்கள் ஆட்களிடம் கூறிவையும். இங்கே போர்லூயியில் உள்ள லாஸாரிஸ்துகளுக்கு* அவனது நடவடிக்கைகள் மீது கிஞ்சித்தும் விருப்பமில்லை. என்னுடைய மகளை அவன் கல்யாணம் கட்டியிருக்கலாம். விருப்பமில்லையேல், எங்கள் நாட்டிலிருந்து ஒரு ஸ்த்ரீயை அழைத்துவந்து கல்யாணம் செய்துகொள்ளவேணும். அவ்வாறில்லாமல் உங்களின ஸ்த்ரீயை கல்யாணம் செய்துக்கொள்வேன் என்பது நியாயம் அல்லவே. தெய்வானையின் சகோதரன் கைலாசமும், நான் முடித்து வைக்கிறேனென வார்த்தையாடி திரிகிறானாமே ? உம்மோட சனங்களுக்குப் புத்தி எவ்விடம் போச்சுது. காமாட்சி அம்மாளிடம் இந்த விடயங்கள் குறித்து நீங்கள் பேசவேண்டாமோ ? ‘.

‘அந்தத் ஸ்த்ரீயானவள், சீனுவாச நாயக்கர் வார்த்தையன்றி, மற்றவர்களின் வார்த்தையை பொருட்டாக மதியாதவள். குவர்னரையும் நைச்சியம்

பண்ணிவச்சிருக்கிறாள். இந்து தேசத்து சனங்கள், நாய்க்கருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் அடங்கிக் கிடப்பது கும்பெனிக்கு நல்லதல்லவென்று, தொரை நாசுக்காய் குவர்னரண்டை போட்டுவைக்கவேணும். பிழைக்கவந்த இடத்தில் எசமானர்களுக்கு விசுவாசமாய் இருக்கவேணுமென்று இந்தச் சண்டாளர்களுக்குத் தெரியாமல் இருப்பது கும்பெனியின் மரியாதைக்கு அபகீர்த்தி அல்லவோ ?. ‘

காவலரிருவர் காத்தமுத்துவையும், கறுப்பனையும் உரையாடிக்கொண்டிருந்த தம்பிரான் போல் அஞ்ஞெல் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றனர்..

‘மிஸியே!..இவர்கள், சந்தேகப்படும் வகையில் நம் வளவுக்கருகே நின்று கொண்டிருந்தார்கள். இவ்விருவரையும் கொன்றுபோட்டிருப்போம். இந்தக் கறுப்பன் நமது தம்பிரானைத் தெரியுமென்று சொல்லிக்கொள்கிறான் ‘

‘தம்பிரான் யார் இவன் ? எப்படி இவ்விடம் வந்தான். இந்தவிடம் உம்மைத் தவிர வேறு எவருக்கும் தெரியவரக்கூடாதென்று எச்சரித்திருந்தது மறந்து போச்சுதா ? ‘

‘துரை மன்னிக்கவேணும். இதோ நிற்கும் கறுப்பன் நமக்கு வேண்டியவன், பேர் அனாக்கோ. கைலாசத்தைக் கொல்வதற்கு எம்மால் ஏற்பாடு செய்யபட்டவன். மற்றவனை இப்போதுதான் பார்க்கிறேன். தோற்றத்தை வைத்துப் பார்த்தால், மலாபாரியாக இருக்கவேணும். ‘

‘தம்பிரான் எவராக இருப்பினும், இவ்விடத்தின் ரகசியம் தெரிந்தவர்களை நான் வெளியே செல்ல அனுமதிக்கமுடியாது. இவர்களை தூக்கிலிடுவதைத் தவிர வேறுமார்க்கமில்லை ‘

‘வேணுமானால் மலபாரியைக் கொன்று போடலாம். கறுப்பன் அனாக்கோ நமக்கு உதவுபவன், அவனுக்கு நான் ஜவாப்தாரி. ‘

‘உமது விருப்பபடிச் செய்யும் ‘

‘அனாக்கோ! கைலாசம் என்னவானான் ?, இவன் யார் ? ‘

‘மிஸியே..! மன்னிக்கவேணும். முட்டாள் லூதர் செத குளறுபடியால் இம்முறையும் அவன் தப்பித்துவிட்டான். எனக்கு வேறொரு சந்தர்ப்பம் கொடுங்கள். அவன் சிரஸோடு வருகிறேன். இல்லாதுபோனால் உங்கள் கையாலேயே அடிமையை வெட்டிப்போடுங்கள் ‘

‘லூதர் என்பவன் இப்போது எங்கே ‘ ?

‘அவன் கடற்கரையில் எங்கள் கிறேயோல் மக்களிடம் பிடிபட்டுவிட்டான். ‘

‘நமது ரகசியங்கள் எல்லாம் சில்விக்கும், பின்னர் கைலாசத்திற்கும் தெரிந்திருக்குமோ ? ‘

‘அப்படியானப் பாதகங்கள் ஏதும் நடக்காது. முட்டாள் லூதர் பலமுறைத் தங்களைச் சந்திக்கவேணுமாய் பிரயாசைப் படுத்தினான். நான் அதற்கு இணங்காமற் போனது நல்லதாய்ப் போச்சுது ‘

‘எனக்கு வியப்பாயுள்ளது. இக்கறுப்பன் தீவுவாசிதானே. உங்கள் மொழியில் வார்த்தையாடுவதெப்படி ? ‘

‘துரை, இவனது தகப்பனொரு மலபாரி என்கிறான். தமிழனாம். ‘

‘அப்படியா ? ‘ என்று வியந்த போல் அஞ்ஞேல், கறுப்பன் அனாக்கோவையே பார்த்துக் கொண்டிருந்தான். இவனது முகம் பல வருடங்களுக்கு முன், எங்கோ வைத்துக் கண்டிருந்த முகம்போல் தெரிந்தது. எப்போது ? எவ்விடமென்று ஞாபகமில்லை ? ‘ இப்போதைக்கு இவனைக் கொல்லக் கூடாது என்று தீர்மானித்தான்.

‘தம்பிரான் உங்கள் வார்த்தைப்படியே ஆகட்டும். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் நீர்தான் பொறுப்பு ‘ நான் புறப்படவேணும். இந்த மலபாரியைத் தற்போதைக்கு இங்கேயே அடைத்துப்போடுவேம். இவன் நேற்று தெலகுருவா பண்னையில் தப்பிய மரூனாக இருக்கவேண்டும். மற்ற அடிமைகளோடு இவனையும் விலங்கிட்டு வைக்க, எமது ஆட்களுக்கு உத்தரவிட்டுச் செல்கிறேன். கறுப்பனை வேணுமானால் நீர் உடன் அழைத்துச் செல்லும். ‘

‘துரை மன்னிக்கவேணும். இந்த மலபாரிக்கும் நான் பொறுப்பு. தற்சமயம் எனக்கு லூதரிடத்திற்கு வேறொரு ஆள் தேவைப்படுது. பொறுத்திருந்து சரிபட்டுவரவில்லையென்றால், தூக்கிலிடுவோம்.

‘ஏதோ செய்யும். கவனத்திற்கொள்ளும், தவறு ஏதேனும் நடப்பின் உம்முடைய உயிருக்கு பிறகென்னால் உத்தரவாதம் கொடுக்கமுடியாது ‘

போல் அஞ்ஞெல் புறப்பட்டுச் சென்றான்.

‘வெள்ளைப் பன்றியே, உன் ஈரலை ருசிபார்க்கவே என் சீவன் காத்துக்கிடக்குது ‘ புறப்பட்டுச் சென்ற போல் துரையைப் பார்த்தவண்ணம் கறுப்பன் அனாக்கோ முணுமுணுக்க, பயந்துபோன காத்தமுத்து அவன் வாயை அடைத்தான். தம்பிரான் அதிர்ச்சியில் நின்றார்.

/தொடரும்/

*Lazaristes – தீவின் மதகுருமார்கள்

.

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-20

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கண்டதனைக் கண்டு கலக்கம் தவிரெனவே

விண்ட பெருமானையும்நான் மேவுவனோ பைங்கிளியே

– தாயுமானவர்

பெர்னார் குளோதனுக்கு ஒன்றுக்குப்பின்னொன்றாய் இந்திய தேசத்தில் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாய் இருந்தன.

துபாஷ் பலராம்பிள்ளை கள்ளிப் பெட்டியிலிருந்த மோதிரம், ஓலை நறுக்குக் குறித்ததான விபரங்களை அறிவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்ததோடு, பெர்னார் குளோதன் ஆக்ஞைப்படி, சன்னாசி என்பவனை, வேலாயுத முதலியாரைக் கண்காணிக்கவும், ஒற்றறிந்து செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கவும் ஒழுங்கு செய்திருந்தார்.

அடுத்துக் கவனிக்கவேண்டியிருந்த அலுவல், வாணியைப் பார்க்கவென்று வைத்தியரில்லம் தேடிவரும் தொண்டைமான்நத்தம் பெண்மணி காமாட்சி அம்மாளின் பின்புலத்தை அறிவது.

வைத்தியர் இல்லத்தில் வைத்து சந்தித்த வாணியானவள் தெய்வானையின் தோற்றத்திலிருப்பதென்பது வீணானக் கற்பனையெனக் கொண்டாலும், இப்பெண் வாணியைச் சந்திக்க, தொண்டைமான் நத்தத்திலிருந்து காமாட்சிஅம்மாள் என்றொரு பெண்மணி வந்துபோவதாகச் சொல்லப்பட்டது ஆச்சரியமாகவிருந்தது. சந்தேகமில்லாமல் தெய்வானையின் தாயாரான காமாட்சி அம்மாளின் பெயரிலே இங்கே உலாவருபவள் பொய்யான நபராகவே இருக்கவேண்டும். தெய்வானையின் தாயாரை பெர்னார்குளோதன் நன்கு அறிந்தவன் என்ற வகையில் எளிதாக இம் முடிவுக்கு வந்தான். அப்படியானால், அப்பெண்மணி யார் ? அவளது உண்மையான பேரென்ன ? பொய்யான பேரில் வைத்தியரில்லம் வந்துபோகவேண்டிய நிர்ப்பந்தமென்ன ? இவையெல்லாம் வைத்தியருக்குத் தெரிந்திருக்குமா ? தெரியுமெனில் வாணியண்டை மறைக்கும் இரகசியமென்ன ?

பிரெஞ்சுத் தீவிலுள்ள காமாட்சி அம்மாள் – கைலாசம் – தெய்வானைக் குடும்பத்திற்கும்; புதுச்சேரியை சேர்ந்த வாணிக்கும் எதோவொரு வகையிற் சம்பந்தமிருக்குமென்பதில் பெர்னார் குளோதன் உறுதியாகவிருந்தான். மாறனின் யூகங்களை அவனது மனம் உதாசீனபடுத்தியது. தொண்டைமான் நத்தம்வரை மாறன் சென்றுவருவது அவசியமென்று திட்டம் செய்திருந்தான்..

பெர்னார் குளோதனண்டை சேவகம் செய்யவந்த சில நாட்களிலேயே, அவன் தன்னிடம் எஜமான் என்கின்ற நினைப்பின்றி, சிநேகிதன் ஸ்தானத்தில் பழகுவதை சிந்தையில் நிறுத்தி மாறன் சந்தோஷப்பட்டிருக்கிறான். ஆகவே பெர்னார் குளோதனின் உத்தரவை மறுக்கும் வகையறியாது சம்மதித்து, தொண்டைமான் நத்தத்திற்கு பிற்பகல் இரண்டு மணியளவில் குதிரை போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டான்.

‘பெர்னார் குளோதன் எண்ணப்பாட்டை ருசுப்பிக்கும் வகையில் வாணியண்டை உறவாடிப்போகும் பெண்மணி தன்னைக் காமாட்சியென்று அழைத்துக்கொள்வதன் முகாந்திரமென்ன ? ‘ என்றிவனும் பலவாறாக யோசித்துப் பார்க்கிறான்.

இது சம்பந்தமாக, மாறன் வாணியை விசாரித்ததில், அவளுடைய மனவிசாரத்தையும் அறியமுடிந்தது. பெர்னார்குளோதன், தெய்வானைக்கும் வாணிக்குமுள்ள உருவ ஒற்றுமையையை கண்டு வியந்த நாள்முதல், அவளுக்கும் தூக்கமில்லாமல் போய்விட்டதாம்.

கும்பகோணம் மகாமகத்திற்குச் சென்றிருந்த வைத்தியர் சபாபதி படையாட்சி, காமாட்சி அம்மாள் என்கின்ற சந்தேகப் பெண்மணியை முதன் முறையாக தனது இல்லத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்.. அதுமுதற்கொண்டு, வாரத்திற்கு ஒருமுறையேனும் வைத்தியர் இல்லத்திற்கு, அப்பெண்மணி வருகிறாளென வாணி தெரிவித்திருந்தாள்.. அதுவன்றி, வைத்தியர் இல்லத்திற்கு அப்பெண்மணி வருகின்றபொழுது, பலகார பட்சணங்கள் கொண்டுவருவதும், இவளை உட்காரவைத்து வெகுபிரியமாய் நெய்பூசி, அழுந்தவாரி சைடையிற் தாழம்பூத் தைத்து, குஞ்சம்வைத்துச் செவ்வந்தியும், மரிக்கொழுந்துஞ் சூடி, முத்தும், வைரமும், மரகதமும், புஷ்பராகமுமாக, வளை, புல்லாக்கு, கொலுசு, மாட்டல், கம்மல், சுட்டி, திருகுப்பூவெனச், சிங்காரித்து, சர்வ அலங்கார பூஷிதையாகக் கண்டுச் சந்தோஷப்படுவதென்பது வாடிக்கையாய் நடப்பபதென்றும் சொல்கிறாள். சிலவிசை அவளது சீராட்டு அதிகபட்ஷமென்று இவள் கருதவேண்டியிருந்திருக்கிறது..

கடந்த சில மாதங்களாக, மாறனிடம் வாணி பிரேமைக் கொண்டிருப்பதை யூகித்த நாள்முதல் அவள் போக்கில் மாறுதலைக் காண்முடிகின்றது. ‘அற்ப மானுடர்க்கு வாழ்க்கைப் பட ‘ அவள் பிறந்தவளல்லவென்று என்று அடிக்கடி புலம்பி வருகிறாள். வாணியும் அப்பெண்மணியிடம் அவளது நடவடிக்கைகளில் கோபமுற்று ‘இவ்வாறெல்லாம் புலம்புவதென்றால் இங்கே வரக்கூடாது ‘ என்பதாகவும் ஏசிப்போட்டாள். கூட்டிக் கழித்துப்பார்த்ததில் பெர்னாருடைய சந்தேகத்திலே, வாணிக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருந்தாள்.

மாறன், தொடைமான் நத்தம் புறப்பட்ட மாத்திரத்தில், எப்போதும்போல தகப்பன் வழிக் கிழவி புலம்பித் தீர்த்தாள்: ‘ஊரு கெட்டுப்போச்சுது. நாலாதிசைகளிலும் துலுக்கமார் தொந்தரை கூடிப்போச்சுதென ஊர்பேசுது. எவ்விடம் சென்றாலும், போனோம் வந்தோமெனச் சடுதியில் வரவேணும், என்பதனை மறக்காதேயும் ‘ என்று எச்சரித்துப் போட்டாள்.

அவள் புலம்பலில் நியாயமிருந்தது. மாராத்தியர்கள் செய்த அட்டூழியங்கள்போக, இப்போதெல்லாம் நவாப்பினுடைய குதிரை ஆட்கள் அங்காங்கே சனங்களுக்குக்குக் கொடுக்கின்ற இம்சைகள் குறித்து, கும்பெனிக்குத் தினப்படிக்குப் பிராதுகள் வருகின்றன.

துலுக்கர்கள் தயவாலே பிரெஞ்சு கும்பெனி, புதுச்சேரியில் காலூன்ற முடிந்ததென்கின்ற பிரதான காரணத்தால், கும்பெனி நிருவாகம் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

வடக்கே மொகலாயப் பேரரசுக்குச் சிம்மசொப்பனமாகவிருந்த மராத்தியர்கள், தக்காணத்திலும் அவ்வப்போது படையெடுத்துத் தங்கள் வன்மையை நிலைநாட்ட முயற்சித்ததும், குறிப்பாக 1740ல் ராகோஜி போன்ஸ்லே என்கின்ற மராத்திய தளபதி வருடத்திற்கு 5000 ரூபாய் கேட்டுக் கும்பெனியை அச்சுறுத்திய சம்பவம் பிரெஞ்சுக்காரர்கள் எளிதாக மறக்கக் கூடியதல்ல. ஆகவே அவர்களுக்கு எதிரிகளாகவிருந்த துலுக்கரை இவர்கள் ஆதரித்தார்கள். அதுவன்றி ஆங்கிலேயருக்கெதிராக கும்பெனியை இந்திய மண்ணில் வளர்த்தாகவேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த பிரெஞ்சுக்காரர்கள், கர்நாடக ராச்சியங்களுடன் பகைவேணாமென்று தீர்மானித்திருந்தார்கள்.

மாறனிடம், கும்பெனியின் பறங்கியர் பிரிவுச் சிப்பாய் ஒருவன் சொல்லியிருந்த நியாயங்களும் ஓரளவு யோசிக்கவேண்டிய விஷயம். அதாவது தங்கள் சொந்தச் செளவுகரியத்துக்காக, கைகட்டிச் சேவகம் செய்யக் காத்திருந்த மேற்சாதி இந்துக்கள், ஏழை சனங்கள் கஷ்டங்களை அலட்சிய செய்வதும், மாடு தின்னும் புலையர்களென குடியானவர்களில் ஒரு சாராரையும், அக்காரணத்தினாலேயே பறங்கியர்களையும், தீண்டத் தகாதவர்களாக நடத்துவதும்கூட, கும்பெனியைத் துலுக்கர்களிடம் நெருங்கியிருக்க உதவியதாகச் சொல்லப்டுகின்றது.

ஒரு விஷயம்மாத்திரம் மாறனது புத்திக்கு விளங்கவில்லை. சாதியின் பெயரால், தமது சனங்களாச்சுதே என்கின்ற எண்ணமின்றி கீழேயுள்ள சனங்களை அதிகாரம் பண்ணுவதும், ஒரு சிலரை மேலானவர்களாகக் கருதி தலையில் வைத்துக் கொண்டாடுவதையும் பார்க்கையில், இங்குள்ள சனங்களின் துர்ப்பாக்கிய வாழ்வுக்குப் பறஙியர்களைவிட நமது சனங்களே மூலமென்று நினைத்தான். சொந்த சனங்களை சண்டாளர்கள் என்றும், புலையர்கள் என்றும் தூஷணமாய் நடத்தும் இவர்கள் பறங்கியர்களுக்கு அடங்கி, தண்டனிட்டுக்கிடப்பதை எண்ணிப்பார்க்கச் சிரிப்புவருகின்றது. துபாஷ் கனகராய முதலியாரும், ஆனந்த ரங்கபிள்ளையும், சுங்கு சேஷாசலச் செட்டியும், திருக்காமய்யரும் மற்றுமுள்ள மேற்சாதிக் கனவான்களும் துரைமார்களிடமும் கைகட்டி வாய்புதைத்து தங்கள் அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒருவர் மீது ஒருவர் நிந்தனைசொல்லிக்கொண்டு நெடுஞ்சாண் கிடையாக விழுந்துகிடப்பதைப் பலமுறை கண்டிருக்கிறான். பறங்கியர் பெண்டுகள் கேட்டுக்கொண்டால், அட்டியின்றிக் கால்பிடிக்கவும், விரல்களை நீவிவிடவும் இந்த மனுஷர்கள் காத்திருக்கிறார்கள் என்பதையும் இவன் அறிவான்.

மேற்கே சூரியன் நேரெதிரே காய்ந்து, உடலைத் தீய்த்துக் கொண்டிருந்தான். வெப்பம் பொறுக்காத பறவைகளும், விலங்குகளும் அடங்கிக் கிடந்தன. காற்றுகூட வீசுவதற்குத் திராணியற்றுச் சோர்ந்து கிடக்கிறது. புண்ணியவசமாக காற்றடித்தாலும், மண்ணை வாரிவந்து கண்களில் நிரப்பியச் சந்தோஷத்துடன் காணாமற் போய்விடுகின்றது.

ஏற்றபாட்டொன்று காதில்விழ, மாறன் கவனத்தைக் கலைத்திருந்தது. தொண்டைமாநத்தம் கிராமத்தை நெருங்கியிருந்தான். காலையிலேயே புறப்பட்டுவந்திருந்தால் சடுதியில் புதுச்சேரிக்குத் திரும்பியிருக்கலாம்.

வெக்கையில் குதிரையும் களைத்திருக்க, அதனுடைய கடைவாயில் ஒழுகும் எச்சிலுடன் இவனைத் திரும்பிப் பார்க்கின்றது. தான் மட்டுமல்ல, குதிரையும் தாகவிடாயில் தவிப்பதை மாறன் நொடியில் புரிந்துகொண்டான். குதிரையை இழுத்துப்பிடித்து நிறுத்தியவன், குதித்திறங்கினான். இவன் முன்னே செல்ல குதிரை பின் தொடர்ந்தது.

மழைக்காலத்தில் சிற்றாறுகளால் நிரம்பி பிற்பாடு சாகுபடிக்கு உதவும் உசுடு ஏரி இந்த வருடம் முன்னதாகவே வற்றிவிட்டது. வழக்கம்போலக் குடியானவர்கள் பாசனத்திற்கு ஏற்றம் மற்றும் ஏறுகவலைகளைப் உபயோகப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள்.

ஏற்றமிறைக்கும் இடத்தை மாறனும் குதிரையும் நெருங்கியிருந்தார்கள். என்ன மாயம் நிகழ்ந்ததோ, ‘சில் ‘லென்று காற்று, காமவயப்பட்டப் பெண்ணைபோல அவனை அணைத்துக்கொள்கிறது. குதிரை, வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் தலையை இறக்கி, குளிர்ந்தநீரைப் பருகிய வேகத்தில், பிடரியைச் சிலிர்த்துகொண்டது. துலாவில் இரண்டு மனிதர்கள். கிணற்றின் சால் பிடிக்க ஒருவன். துலா முனையில் பாரம்வைத்து கட்டியிருக்கிறது. மறுமுனையில் மூங்கிற கம்பு. கம்பின் அடிப்பாகத்தில் ஓரளவு கணிசமாகத் தண்ணீர் கொள்ளும் அரைக்கோள வடிவ சால். கிணற்றுப் பிடிமானத்தில் நிற்பவன் மூங்கிற்கம்பிலுள்ள சாலை, தனது இருகால்களுக்குகிடையில் கீழிறக்கித் தண்ணீரைச் சேந்த, அதேவேளை துலாவில் நிற்கும் ஆட்கள், அதிலுள்ள படிகளைப் பாவித்துக் கீழ் முனைக்கு வருகின்றார்கள். கிணற்றில் முங்கிய தண்ணீருடன் சால் மேலெழும்ப இவர்கள் மீண்டும் படிகளைப் பாவித்து துலாவின் பாரமுள்ள முனைக்காய் எதிர்த் திசையில் பயணிக்கிறார்கள்

….

தேரு வேணாமிண்ணு

தேடியுன்னை வாரான்

பட்டம் வேணாமிண்ணு

பரதன் தேடிவாரான்

பாவி பெத்தபுள்ளை

பதறியோடி வாறான்

இருபதோட வொண்ணு

இறங்கிவாடா ராமா..

சால் கிணற்றங்கரையில் நிறுத்தப்பட்டது. துலாவிருந்த மனிதர்களிருவரும் அதனையொட்டிப் பாதுகாப்புக்காக நடப்பட்டிருந்த படலைப் பிடித்துக்கொண்டு இறங்கியிருந்தார்கள். சால் பிடித்து நீரரிறைத்தவன் கிணற்றிலிருந்து மேலே வந்திருந்தான். மூவரும் முகத்தை அலம்பிக் கைகால் கழுவினார்கள். துண்டால் அழுந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டிருந்தவர்கள் குதிரையுடன் நெருங்கும் மாறனைப் பார்த்து ஒதுங்கி நின்றார்கள்.

‘என்னண்ணே கதிர் முற்றவில்லையே ? இன்னும் இரண்டு தண்ணியாவது இறைக்க வேண்டிவருமோ ? ‘

‘ஆமாம் தம்பி, இன்னும் ரெண்டு தண்ணியாவுது வேணும். தூத்தலில்லாமல், பூமி காய்ந்து கிடக்குது. வெள்ளி முளைக்க ஏத்தம் பிடித்தோம். கால்காணிதான் பாசனந்தான் முடிஞ்சுது. ‘

‘பிற்பாடு ஏன் நிறுத்திப்புட்டாங்க ? பொழுது சாயவில்லையே. அரைக்கிணறு தண்ணிவேறு அப்படியே கிடக்குதே ? ‘

‘ஊருல ஏதோ களேபரம் நடக்கிறது. துலாவிலிருந்து பார்த்தோம். கொஞ்ச நாட்களாக, அருகாமையிலே டேராபோட்டிருக்கும் சாயபு படைகள் பண்ணுகின்ற அநியாய அக்குறும்புகளில் சனங்கள் நொந்து கிடக்கிறோம். மராட்டியர்களைவிட இவர்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றார்கள். ஒரு கிழமையா வீட்டிலே அடைந்துக் கிடந்தோம். தண்ணீரில்லாமல் பயிர் காய்கிறதேவென்று இன்றைக்கு ஏற்றம் பிடித்தோம். குடியானவங்க கஷ்டம் யாருக்குப் புரியப்போகுது. நீங்கள் எங்கே இந்தப்பக்கம் ? எங்க ஊருக்கு போகோணுமா ?

‘அங்கேதான் போகவேணும். காமாட்சி அம்மாள்னு ஒரு பெண்மணியைப் பார்க்கவேணும். ‘

‘அப்படி எவரும் எங்க ஊருலே இருப்பதாகத் தெரியவில்லையே ‘.

‘முப்பது முப்பத்தைந்து வயதிருக்கலாம். மாநிறம். நல்லா இலட்சணமா இருப்பாங்க. கும்பகோணமோ, அல்லது அதுபக்கத்திலே இருக்கிற வேறு ஏதேனும் சொந்த ஊராகவிருக்கலாம். கிட்டத்திலே தொண்டமாநத்தம் வந்திருக்கவேணும். ‘

‘நீங்கள் சொல்லுவது, புதுச்சேரியி கோன்சல்ல உத்தியோகம்பண்ணுகிற தேவராசன் அத்தைக்காரியாக இருக்கவேணும். அப்பெண்மணியுடையப் பேரு எங்களுக்குச் சரியாத் தெரியவில்லை. கீழண்டை வீதியில் கடேசியாக வேப்பமரமுள்ள வீடொன்று வரும், கல்வீடு. அங்கே போய் விசாரித்து பாருங்க தம்பீ. நீங்க போகின்றவேளை¢ ஊருல நெலமைத சரியில்லை. நாங்களும் எங்க பொண்டு புள்ளைகளுக்கும் என்ன ஆச்சோண்ணு கஸ்தியிலே இருக்கிறோம் ‘.

ஏற்றம் இறைத்தவர்களின் முகத்திலிருந்த வியாகூலம் புரிந்தது. அவர்களிடம் சொல்லிக்கொண்டு, வந்த பாதையைப் பிடித்து தொண்டமாநத்தம் திசை நோக்கிக் குதிரையைச் செலுத்தினான். அவர்கள் குறிப்பிட்டது, இவன் தேடிவந்த காமாட்சி அம்மாளாகவே

இருக்கவேண்டுமென்கின்ற முடிவுக்கு வந்தான். ஆனால் அப்பெண்மணி தேவராசனுக்கு உறவுக்காரியாகவிருப்பது, புதிதாய்ச் சேர்ந்துள்ள மர்மம். தாகவிடாய் நீங்கியிருந்த குதிரை இவனை புரிந்துகொண்டு நிதானமாய் ஓடியது.

கடவுள்மார்களின் கிருபையைப் புரிந்துகொள்வதென்பது சாதாரண சனங்களுக்கு சிரமம்.

தொண்டமாநத்தம் ஆதிகேசவலு ரெட்டியாருக்கு, நஞ்சை, புஞ்சைனு ஏராளமா சொத்திருக்கு. அது தவிர அவரோட தமக்கை, தான் வாழப்போன இடத்தில் புருஷனைப் பறிகொடுந்துப்போட்டு, அந்தக் குடும்பத்திற்கும் வாரிசில்லாமற்போகவே, ஏகப்பட்ட ஆஸ்திகளோடு வந்திருக்கிறாள். தீட்ஷதை வாங்கியவள் அவள். பொழுதுக்கும் போஜனங்கொள்ளாமல், துளசி தீர்த்தம் போதுமென சேர்த்துவைத்த சொத்தும் கடன் பத்திரங்களாவும், கிரையப் பத்திரங்களாகவும் இருக்கின்றன. ஆனால் ரெட்டியாரோட பெண்சாதிக்கு இதுநாள்வரை வயிற்றில் புழுவோ பூச்சியோ இல்லை. ரெட்டியாரும் அவரது பாரியாளும் பிள்ளைவரம் கேட்டு திருவந்திபுரம், திருப்பதியென ஷேத்ராடானம் செய்கின்றார்கள். வாழை இலையில் நெய்யொழுகச் சாப்பிட்டுவிட்டு வரப்பு வெளிகளில் குடைபிடித்து, வீட்டுத் திண்ணையில் வெற்றிலைச் செல்லத்துடன் ஒதுங்கும் ரெட்டியார், ஓய்ந்த நேரங்களில் உள்ளே தமது பாரியாளையும் கொஞ்சம் எட்டிப் பார்த்திருக்கலாம்.

இப்படித்தான் வேணுக்கவுண்டருக்கும் ஏரி தலைமாட்டிலேயே அயன் நஞ்சை. கட்டைவிரலாற் கீறியே பாசனத்தை முடித்துப்போடலாம். போததற்கு தெற்கே தென்னதோப்பு, வடக்கே வாழத்தோப்புண்ணு லட்சுமி கடாட்ஷம் வேறே. ஆனாலும், அவருக்கு வேப்பிலைக் கொழுந்தா பிறந்திருந்த வாரிசுக்குப் பேச்சு வரலை. காரைக்கால்வரைக்குஞ் சென்று மாங்கணித் திருவிழாவிலே, ஒரு வண்டி மாம்பழத்தை கொள்ளைவிட்டுட்டு வந்திருக்கார். ஈஸ்வரன் கடாட்ஷம் வேணும்.

ஆதிகேசவலு ரெட்டியாருக்கும், வேணுக் கவுண்டருக்கும் இளப்பமில்லைண்ணு வரம் வாங்கியிருப்பவர், கேசவப் பிள்ளை. வெள்ளாடு, செம்மறி ஆடு, பசும்மாடுகள்னு கோமாதாவின் அருள் குறையின்றிருக்கிறது. நிலபுலங்களுக்கும் பஞ்சமில்லை. புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை கைதூக்கிவிட, லேவாதேவியிலும் பணம்பார்க்கிறார். ஏடுள்ளத் தயிரும், புளிக் குழம்புமாய் பழைய சோற்றில் சிரமபரிஹாரம்முடித்து, வில்லியனூர் கொழுந்து வெற்றிலையை ஒரு முறைக்கு இருமுறையாய்த் துடைத்து நரம்பெடுத்து வாயில்மென்று, துணைக்குப் பன்னீர் புகையிலையைச் சேர்த்துக்கொள்வார். இருக்கின்றசொத்துக்கு, பாண்டுரங்கன் என்கின்ற பேரில் ஒரு மகன், தாயாரம்மாள் பேரில் ஒரு மகள். அவரைப் பெற்றவள், வாரிசுகள் எண்ணிக்கைப் போதாதென்று பிள்ளையிடம் நாள்தோறும் பாடம் படிக்கிறாள். பெருமாள் கிருபை வேணும்..

இவர்களிடத்திலே அண்டிப்பிழைக்கின்ற, சேரியிலே இருக்கின்ற சின்னான், இருசான் வகையறாக்களுக்கு, மற்ற செல்வங்களில் குறையிருந்தாலும், புத்ரபாக்கியம் தாரளமாக இருக்கத்தான் செய்யுது. இப்புத்திர பாக்கிய தயவில், ஏதோ கால்வயிறு, அரைவயிறு கஞ்சியை ஆண்டைகளிடம் குடிக்கவும் முடியுது.

இந்தச் சனங்களிடம் குறைவின்றி இருக்கின்ற புத்திரபாக்கியத்திற்கும் அவ்வப்போது விக்கினம் நேர்ந்துவிடும். வைசூரி, காலராவென்றுவர, வகைக்கொன்றாய் பிள்ளைகளை வாரிக்கொடுக்கவேணும். அதுவன்றி, அவ்வப்போது வழிப்பயணம் போகின்ற கர்நாடகப் படைகள், தயை தாட்சயண்ணியமின்றி ஏழைகுடியானவர்களின் கால்நடைகளையும் தானிய தவிசுகளையும் கொள்ளை அடித்து, நாசம் செய்யவும், விளையாட்டாய் அவர்கள் நடத்துகின்ற மனித வேட்டைக்கும் இவர்கள்தான் கிடைத்திருப்பார்கள். ‘சண்டாளப் பயல்களே! போன பொறப்பிலே நீங்க செஞ்சதுக்கான பாவத்தை இப்போது நீங்கள் அனுபவிக்கிறீர்கள். ‘ என ஊரிலுள்ள பெரியசாதி சனங்கள் சொல்ல, இவர்கள் ‘சாமி சொன்னா சரியாகத்தானிருக்கும் ‘ என பலிபீடத்தில் நின்று, பூசாரியின் மஞ்சட் தண்ணீர் தெளித்த ஆடுகளாய்த் தலையாட்டுவார்கள்.

மாறனின் குதிரை ஊரை நெருங்கியிருந்தபோது வடக்கில் கும்பலாய் கிடந்த சம்புவேய்ந்த வீடுகளும் பனையோலைக் குடிசைகளும் எரிந்துக் கொண்டிருக்க, சிலர் கிடைத்த பாண்டங்களில் குளம் குட்டைகளிலிருந்து தண்ணீர் சேந்தி நெருப்பினை அணைக்க முயற்சிக்கிறார்கள். தைமாதமென்பதால், குளம் குட்டைகளும் சேற்றுக் குழம்பாய் கிடந்தன. ‘எம்பிள்ளை ‘, ‘எம்பொண்ணு ‘ எங்குழந்தை ‘ என்கின்ற கூச்சல்கள் ஒரு பக்கம். தீயில் வெந்திருந்த மனித உயிர்களின் ‘அய்யோ அய்யோ ‘ வென்ற ஓலங்கள் மறுபக்கம், கருகிக் கடக்கும் கால் நடைகள், கொள்ளை அடித்து எடுத்துச் சென்றதுபோக இறைந்து கிடக்கும் தானியங்களென எப்போதும்போல இந்திய வரலாற்றில் ஏழைசனங்கள் மாத்திரமே பரிதவித்துக் கொண்டிருந்தனர்.

மாறனின் குதிரையைக்கண்டு, சற்று நேரத்திற்கு முன்னால் அட்டூழியம் செய்தத் குதிரை வீரர்களில் ஒருவனெனன தவறாக நினைத்த ஒருசிலர் ஓடி ஒளிந்து கொண்டனர். குதிரையைலிருந்து இறங்கிச் சென்று, ஏழைச்சனங்களுக்கு சிறிது நேரம் ஓடி ஓடி உதவி செய்தான்.

காமாட்சி அம்மாளைத் தேடிவந்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது. குதிரையைக் கீழண்டை வீதிக்குத் திருப்பினான். இதுமாதிரியான நேரங்களில், மனம் விபரீதங்களைக் கற்பனை செய்துகொள்ளும். அம்மாதிரியான கற்பனை ஏற்படுத்திய அச்சத்துடன் குதிரையை மெதுவாகச் செலுத்தினான். விழல் வேய்ந்திருந்த சில குடியானவர்களின் வீடுகள் சேதமடைந்திருந்திப்பினும், சன்று முன்னே வடக்கில் கண்ட சேதங்களில்லை. ஆதிகேசவலு ரெட்டியார்வீடு, வேணுக்கவுண்டர்வீடு, கேசவப் பிள்ளைவீடு வரிசயாகவிருந்த கல்வீடுகள் செங்கல்லுக்கு விக்கினமில்லாமல் அலட்சிமாய் நின்றிருந்தன. கடைசியாக அந்த வீடு. ஏற்றமிறைத்தவர்கள் அடையாளம் சொல்லியிருந்த வேப்ப மரம் தெரிந்தது.

குதிரையிலிருந்து இறங்கிக் கொண்டான். அங்கேயிருந்த வேப்பமரத்தினடியில் வேறொருக் குதிரை. இவனது குதிரையைக் கொண்டு சென்று அதனருகிலே வேப்பமரத்தில் பிணைத்துவிட்டு, வீட்டின் வாயிலை அடைந்தான். தெருக்கதவு தாழ்ப்பாள் போட்டிருக்கிறது. உள்ளே ஒரு ஆணும் பெண்ணும் விவாதித்துக் கொண்டிருப்பதன் அறிகுறியாக மூடியக் கதவிலிருந்து கலவையாய்க் குரல்கள்:

‘என் மகளையும், மகனையும் என்னிடமே சேர்ப்பித்துவிடுங்கள். உங்களுக்குப் புண்ணியமாய் போகட்டும் ‘

‘அத்தை. இன்னும் கொஞ்சநாள் பொறுக்கவேணும். வலியவரும் சீதேவியை வேணாமென்று சொல்லாதீர்கள். வெண்னெய் திரண்டுவர நேரத்துலே தாழியை உடைச்சுப் போடாதே ‘

சிறிது நேரம் யோசித்துக் காத்திருந்தான். ஆணின் குரல் சிறிது சிறிதாய் உயர்ந்து கொண்டிருக்கிறது. உரையாடும் பெண்மணியின் குரலிலும் அதற்கீடான வேகம்.

‘இப்போது உங்கள் கூச்சலை நிறுத்தவேணும். கேட்கப்போகிறீர்களா இல்லையா ? ‘

மூன்றாவதாக ஒரு பெண்ணிண் குரல். மாறன் கேட்டுப்பழகிய குரல். தவில் வாசிப்பிற்கும், நாகஸ்வரத்திற்குமிடையில், பொற்தாளவோசை.

வாணிக்குச் சொந்தமான குரல். ஆச்சரியம். ஆர்வ மிகுதியாற் தெருக்கதவினைக் ‘தட தட ‘ வெனத் தட்டினான். உள்ளே கேட்டக் கூச்சல் இப்போது ஓய்ந்திருந்தது. மானொன்று இவன் திசைக்காய் ஓடி வருவதாகப் பிரமை. கதவுத் திறக்கப்பட, வாணி மாறனைக் கண்ட மாத்திரத்தில் திகைத்து போய் நிற்கிறாள். ஓடிவந்த வேகத்தினை ஒப்புதல் செய்கின்ற வகையில் மார்புகள் எழுந்தடங்கின்றன. இமைகள் படபடக்கின்றன. கழுத்தொட்டிய முகவாயிலும், இமையோரங்களிலும், கன்னக் கதுப்புகளில் ஒரு சிலவிடங்களிலும் புறப்பட்ட வேர்வை முத்துக்களை, அவள் சேலைத்தலைப்பால் ஒத்தியெடுக்க முனைந்தபோது, கச்சையணியா மார்புகள் முகங்காட்டி மறைய இவன் கண்கள்யாவசரகதியிற் தழுவி மீள்கிறது. அவள் இதழ்கள், மெளனமாய் எதையோ சொல்ல முயல்கின்றன. அவளைக் கண்ட மாத்திரத்தில் ஏற்பட்ட மயக்கத்தினால் விளங்கிக்கொள்ளத் தடுமாறுகிறான். எதையோ சொல்லவேண்டுமென்று நினைத்து இவன் உதடுகளும் பிரிகின்றன. அவனது உதுடுகளுக்குக் குறுக்காக அவளது கீரைத் தண்டு விரலொன்று உட்கார்ந்து கொள்கிறது.

‘உஸ்ஸ்.. அமைதி.. ‘ முதலில் முனுமுனுத்தவள் அவளே.

‘வாணி.. இங்கே எப்படி ? ‘ இவனும் மயக்கதிலிருந்து மீண்டிருந்தான்.

‘தயவு செய்து போய் விடுங்கள்.. எல்லாவறையும் பிறகு சொல்கிறேன் ‘

‘வாணி..! உனக்கேதும் நேர்ந்து விடக்கூடாது ‘

‘ எனக்கு எதுவும் நேர்ந்துவிடாது. ஆண்களைவிட இக்கட்டான நேரத்தில் எப்படி மீண்டுவருவதென்பது பெண்கள் மெத்தவே அறிந்திருக்கிறார்கள். உங்களதுத் தற்போதைய பிரவேசம் சிக்கலைக் கூட்ட உதவுமேயன்றி குறைக்க உதவாது. இப்போதைக்குத் தயவுசெய்து புறப்படவேணும். பிறகு விளக்கமாகச் சொல்வேன். ‘

அவள் நிதானித்துக் குரலைத் தாழ்த்தி சொன்னவார்த்தைகளில், புத்தி சாதுர்யம் நிறைய இருந்தது. அவளிடம் இவனுக்கு ஓர் இறுமாப்பு கலந்த சந்தோஷம்.

குதிரைக் கட்டியிருந்த இடத்துக்குத் தயக்கத்துடனே திரும்பினான். திரும்பவும் அவ்வீட்டைத் திரும்பிப்பார்த்தபொழுது, தெருக் கதவு மீண்டும் அடைத்திருந்தது.

குதிரையை அவிழ்த்து, அங்கபடியில் இடதுகால்வைத்து குதிரைமீது ஆரோகணித்தான். கிழக்குத் திசைக்காய் குதிரையைச் செலுத்தினான். புறப்பட்ட சில நாழிகைகளில் புச்சேரிக்குச் செல்லும் தடத்தைப் பிடித்திருந்தான். சிறிதுதூரம் பயணித்திருப்பான், ‘அடடா அவ்வீட்டிலிருந்த ஆண் யாரென கேட்கத் தவறிவிட்டோமே ‘ என்றெண்ணியவன், குதிரையை இழுத்துப் பிடித்தான். ஆலமரமொன்று விழுதுகளோடுப் பார்க்க பைராகித் தோற்றத்துடன் நின்றிருந்தது கண்டு இறங்கிக் கொண்டான். காத்திருந்தான்.

அவன் நம்பிக்கை வீண்போகவில்லை, இவனிருந்தத் திசைக்காய், குதிரையொன்று வேகமாய் வந்துகொண்டிருக்கிறது.

/தொடரும்/

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 19

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


Lifette quitte la plaine,

Mon perdi bonher a moue ;

Gie a moin femble fontaine,

Dipi mon pas mire, toue.

La jour quand mon coupe canne,

Mon fonge zamour a moue;

La nuit quand mon dans cabane,

Dans dromi mon quimbe toue

– Duvivier de la Mahautiere

ம்.ம்ம்…ம்..ம்ம்ம் ம் எக்காளம் முழங்குகின்றது பப்பரபர…பரபர..பரபர பறைகள் ஒலிக்கின்றன. டட்டங்.டட்டங். ம்..ம் .டட்டங் டட்டங்ம்.ம். பம்பைகளும், உடுக்கைகளும் சிலிர்த்துகொண்டு உறுமுகின்றன. காற்று, வெளி, ஆகாயம், பூமி, எப்பக்கம் பார்த்தாலும் வெள்ளை வெள்ளையாய்ப் பூதகணங்கள்.பேய்கள், பிசாசுகள், இரத்தக் காட்டேரிகள். நிணமும் இரத்தமும் எதிர்பார்த்து ஆட்டம்போடுகின்றன. துர்த்தேவதைகள் தங்கள் பெரியகண்களை விரித்து, தொங்கும் நாக்குடன் சிதறவிருக்கும் தலைகளுக்காக இடம்வலமாக அடவு பிடித்து முன்னேறி ஆரவாரம் செய்கின்றார்கள்.

வரிசைவரிசையாய் உயிரொட்டியிருக்கும் மானுடர்களின் கைகளையும் கால்களையும் இரும்புச்சங்கிலிகளிற் பிணைத்து, கறுப்பு நிற ராட்ஷஸ மனிதர்கள் இழுத்துவருகின்றார்கள். அடிமைகள் உடல் முழுக்க, ஒழுங்கற்ற இரத்தச் சுவடுகள்.. ஏற்கனவே அகழ்ந்திருந்த பள்ளங்களில் அவசரகதியில் அவர்கள் இறக்கப்பட, மண்ணிட்டு நிரப்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இப்போது தலைகள் குப்புறக் கவிழ்த்தத் தோண்டியாய், வரிசைவரிசையாய் மண்ணில் முளைத்திருக்கின்றன.

அண்டையில் தெரிந்த தலை தெய்வானையுடையது, பிறகு நீலவேணியுடையது. அடுத்து சில்வி, அதற்கடுத்து காமாட்சி அம்மாள், மசேரி, சில்வியின் சகோதரன் லூதர், தகப்பன் குரூபா, பொன்னப்ப ஆசாரி, சீனுவாசநாயக்கர்…இவனறிந்த மனிதர்கள், இவனறிந்த தலைகள்…

இதுவரையில் பார்த்திராத வெள்ளைக்குதிரைகள் நான்கு கால்களையும் ஏககாலத்தில் எழுப்பிப் பாய்ந்துவருகின்றன. கால்கள் மணலிற் பதிந்து எழுவதால், காற்றில் மண் வாரி இறைக்கப்படுகின்றது. எதிர்த் திசையில் தேவேந்திரனின் வெள்ளை ஆனையான ஐராவதமாகவிருக்கவேண்டும்., தும்பிக்கையை உயர்த்தி, வாயைமுடிந்தமட்டும் திறந்து, பிளிறிக்கொண்டு ஓடிவருகின்றது.

டமடமடமடம…

ஏக காலத்தில் தலைகள் சிதறுகின்றன. நரிகளும், நாய்களும் ஊளையிட்டுக்கொண்டு…நெருங்க, துர்த்தேவதைகள், பூதகணங்களின் துணைகொண்டு அவற்றை உ.. ஊ வென்று விரட்டுகின்றார்கள்..

கைலாசம் பதறிக் கொண்டு எழுந்தான்.

முதுகுப் புறத்தினை மணலிற் பரத்தி, கைகளை முடிந்தமட்டும் விரித்து, எண்ணங்களை அதன்போக்கிலே அைலையவிட்டு, மனச்சுமையோடு உறங்கிப் போனதில் விபரீத காட்சிகள். விழித்துக்கொண்டபோது உடல் வற்றலாகிக் கிடக்கின்றது. உடல் திகுதிகுவென்று எரிகிறது. வாய் வறண்டு, நாவில் வெண்பூஞ்சனமிட்டு கொழகொழவென்றிருக்கிறது. எதிரே கடலலைகளின் இரைச்சல். வாடைக்காற்று. திறந்த கண்களில், காத்திருந்த இருட்டு இடம்பிடித்து வழிகின்றது.

கைலாசம் எவ்விடத்திலிருக்கிறான் ? எப்படி அவ்விடம் வந்துசேர்ந்தான் என்பதனையும் யோசித்துப் பார்க்கிறான்.. காலையில் குவர்னர் காரியாலயத்தில் நடந்தகாட்சிகள் கண்முன்னே விரிகின்றன. விரிந்தமாத்திரத்தில், மனம் பாறையாய் கனக்கின்றது. மார்பைப் பிளந்து

தீக்குழம்பைக் கொட்டியிருந்தார்கள். அது தேகமுச்சூடும் பரவியதில் இவனெரிந்து கொண்டிருக்கிறான்.

கடலலைகள், வாடைக்காற்று, காதிலொலிக்கின்ற கடற் பட்சிகளின் கீச்சுகீச்சு அனைத்திற்கும் உள்ள சுதந்திரம் இவனைப்போன்ற சனங்களுக்கு மறுக்கப்படும் முகாந்திரந்தான் என்ன ? யோசிக்க.. யோசிக்க மனதில் வியாகுலம்.

நினைவுகூர்ந்து பார்த்ததில், சிறுபிராயத்தில் இதுமாதிரியான சம்பவங்களுக்குச் சாட்சியாக இருந்திருக்கிறான். இவன் சிந்தனையில் விரிந்த பூமியிலேகூட, இப்படியானப் பேதங்களைச் சந்தித்திருக்கிறான்.

உச்சிவேளையில் குளத்திலாடிவிட்டு, நுணாமரத்துக் கிளியும் கொடுக்காப்புளிப் பழமுமாக, மாடுமேய்க்கும் பையனோடு வீட்டிற்குத் திரும்பும்வேளை, வீட்டுப் பெரியவர் பையனை, மணலில் வெகுநேரம் முழங்காலிடச் செய்ததும், அச்சம்பவத்திற்குப் பிற்பாடு, கைலாசத்தை அவனிடம் அண்டவிடாமல் எச்சரித்துப் போட்டதும் ஞாபகத்தில் இருக்கின்றன. இவனுக்குச் சோறும்கறியும் கையொழுகும் கவளங்களாகக் கிடைக்க, மாடுமேய்க்குஞ் சிறுவன் மட்டையேந்தி, குத்துக்காலிட்டு, அரை வயிற்றோடு எழுந்து போயிருக்கின்றானே!….இவற்றுக்கான காரணத்தினைக் கேழ்க்கவேண்டுமென்று எண்ணி, காத்திருந்த ஒரு ராத்திரிதான் அவசர அவசரமாக காமாட்சி அம்மாள் முன்னே போக, தெய்வானையைக் கைப்பிடித்துகொண்டு, தோணியில் நடுக்கடல்வரை பயணித்து, பின்னர் கப்பலேறியது.

சமீபகாலமாகக் காமாட்சி தன்னுடைய தாயாக இருக்க முடியாது, என்கின்ற நினைப்பு அடிக்கடி இவனிடம் தோன்றிக் குழப்புகிறது. மிகவும் புத்திக் கலக்கத்தை ஏற்படுத்தும் இவ்வெண்ணமே தொந்தரையானதென ஒதுக்க நினைத்தான்.

முதன்முதலாக தெய்வானையையும் காமாட்சி அம்மாளையும் இந்தியாவில் இவனிருந்த வீட்டின் கூடத்துத் தாழ்வாரத்தில் வைத்து, நிழலாகத் தூக்கக்கலக்கத்தில் கண்டது, பசுமையாக மனதிலிருக்கிறது.

கைலாசம் அன்றைய இராத்திரியும் வழக்கம்போல படுக்கையில் மூத்திரம் போயிருந்தவன், விழித்திருந்தான். மெல்லியகுரலில் குசுகுசுவென்ற பேச்சு. கொஞ்சமாகக் கூன்போட்டிருந்த முதியவர் ஒருவர், ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியோடும், சிறுமியோடும் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். பெண்மணியின் கையில் துணிச் சிப்பமொன்று. வந்த மனிதர்மாத்திரமே நிறுத்தாமல் பேசிக்கொண்டுபோனார். அடுத்த சில நாழிகைகளில்வந்த மனிதர் புறபட்டுச்செல்ல, வீட்டுப் பெரியவர், புதியபெண்மணி, சிறுமி சகிதமாக, உக்கிராண அறை திசைக்காய்ச் செல்கின்றார்கள்.

மறுநாட்காலை மலம்கழித்துமுடித்த அவசரத்தில், கால் கழுவத் தண்ணீர் கேட்டு அம்மணமாக, நிற்கிறான். வீட்டிற்குப் புதியதாய் வந்த பெண்மணி வீட்டின் பின்புற வாயிற்படியின் கதவைத் திறந்துகொண்டு எட்டிப்பார்க்கிறார். அவரது முதுகுப் பின்னாலே பதுங்கியவளாக இரவு கண்டிருந்த சிறுமி. இவன் வெட்கப்பட்டு வீட்டின் பின்புறமிருந்த ஆடாதோடை வேலியிற் பதுங்கிக் கொண்டான்.

வீட்டிற்கு வந்திருந்த முதல்நாள் காலமே மண்சட்டியில் மோர்விட்டுக் கரைத்து காமாட்சி அம்மாள் இட்ட கம்மங்கூழ் அமுதமாகத்தானே இன்றுவரை இனிக்கின்றது.

‘கூச்சப்படாமல் சாப்பிடு ‘.. காமாட்சி அம்மாள் இவனிடம் பேசிய முதல் வார்த்தை.

காலையில் இவனிருந்த கோலத்தை நினைக்க, இவனுக்குக் கூச்சம் வரத்தான் செய்யுது. தலையைக் குனிந்துகொண்டே சாப்பிட்டு முடிக்கிறான். எழுந்தபோது, பெரியவர் எதிரே நிற்கிறார், அருகிலேயே இவன் இதுவரை அம்மாவென்று அழைத்துவந்த பெரியவர் பெண்சாதி.

‘கைலாசம் இந்த அம்மாள் உன்னுடைய தாயாராகவேணும். இச்சிறுமியானவள் உனக்குத் தங்கை. இனிமேல் நம்மோடு இருப்பார்கள் ‘..

முதன்முறையாக அவனது தாயாரென தெரியப்படுத்தபட்ட காமாட்சி அம்மாளைத் தலையை உயர்த்திப் பார்க்கிறான். கிராமத்து மந்தைவெளியிற் கண்டிருந்த எல்லையம்மன் வெள்ளைச் சேலையணிந்து நிற்பதான வடிவம். அருகிலேயே விரலைச் சூப்பிக்கொண்டு, விளக்கிவைத்துத்

தீபமேற்றிய குத்துவிளக்குப் பிரகாசத்துடன் தெய்வானை.

‘இவ்வளவு நாட்களாக, உங்களை அம்மா அப்பாவென்று அழைத்துக்கொண்டிருக்கின்றேனே ? ‘ என்கின்ற இவன் பார்வைக் கேள்வியின் நியாயத்தைப் பெரியவர் புரிந்துகொண்டிருக்கவேணும்.

‘சமுசயப்படவேணாம். எப்போதும்போல நாங்களும் உனக்கு தகப்பன் தாயார்தான். ‘

‘அவன் தகப்பனாரை உரித்துவைத்திருக்கிறான் ‘ வாஞ்சையாய் காமாட்சி அம்மாள் இவனை அருகில் அழைத்து உச்சி மோந்தபோது, சிகையில் ஊடுறுவிய உஷ்ணமூச்சு, இன்றைக்கும் கதகதப்புடன் பரவுகிறது.

ஒருசில நாட்களிலேயே காமாட்சி அம்மாளைத் தாயாகவும், தெய்வானையைத் தங்கையாகவும், கைலாசத்தின் பால்யவயது சுலபமாக ஒப்புக்கொண்டது.

அடுத்த சிலகிழமைகளிலேயே:

கைலாசமும், தெய்வானையும் காமாட்சியின் மடியில் உட்கார போட்டிப் போட்டுக்கொண்டார்கள்.சந்திரன் தெரிந்த இரவுகளில், காமாட்சி அம்மாளின் இடுப்பிற் சிரமத்துடன் உட்கார்ந்து, பிள்ளைகள் இருவரும் பாற்சோறு உண்டார்கள். இராமாயண பாரதக்கதைகளோடு, சில இரவுகளில் வேதாளக் கதைகளையும்கேட்டு காமாட்சி அம்மாளின் மடியிற் தூங்கிப் போனார்கள்.

சித்திரைவெயிலில், பிள்ளைகள் இருவரும் நாவற் பழம் தேடிச் சென்றார்கள். பொறுக்கியெடுத்து ஊதித் தின்றார்கள் ஈச்சம்பழம் பறித்து பங்கு போட்டுக்கொண்டார்கள். ஐப்பசி, கார்த்திகை மழையில் நனைந்து ஏரியில் வெள்ளம்வருவதைப் பார்க்க ஓடினார்கள். ஓடைத்தண்ணீரில் சேரிச் சிறுவர்கள் மீன் பிடிப்பதை தோளில் கைபோட்டு வேடிக்கைப் பார்த்தார்கள். சின்னதாய்ப் பள்ளம் செய்து, தண்ணீர்விட்டு அவர்கள்கொடுத்த உயிர் மீன்கள் நீந்தும் அழகைக் கைத்தட்டி ரசித்தார்கள்.

அவ்வீட்டில் இருந்தவரை, அதிகம் வெளியில்வராமல் வீட்டிலேயே அடங்கிக் கிடந்த காமாட்சி அம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு வலம்வரப்பழகி, ஒரு ராத்திரி துணிமூட்டையுடன் மூவருமாக பல்லக்கில் பயணித்து, தோணியிலேறி, கப்பலில் யாத்திரை செய்து….

டமடம.. டமடம டமடம….

கிறேயோல் மக்களின் றபாணம்.. கடலைகளின் இரைச்சல், உப்பங்காற்று, இருட்டு.. வரிசைக் கிரமமாக இவனுக்குள் பிரவேசிக்க, சில்வியின் ஞாபகம் சேர்ந்துகொள்கின்றது. மெல்ல எழுந்து நடக்கவாரம்பித்தான்.

இவன் மனதிலுள்ள மொத்தத்தையுந் துடைத்துவிட்டுச் சில்வி உட்கார்ந்து கொள்கிறாள். சில்வியின் தோளில் முகம்புதைக்க வேண்டும். இன்றைக்குக்காலமே நடந்ததை, அவளிடம் சொல்லவேண்டும், இதயமும் உடலும் ஒரு சேரத் துடிக்கின்றது….

பண்ணைத் துரைமார்கள், காலைமே கூட்டம்முடிந்து, குவர்னரோடு அமர்ந்து விருந்தினை முடித்துச்செல்ல மதியம் வெகு நேரமாகிவிட்டது. கூட்டம் நடந்த திடலியே கைலாசத்தை நிற்கவைத்திருந்ததைக் குறித்து, அங்கிருந்த எவரும் கவனத்திற் கொண்டதாகக் காணோம். பறங்கியர்கள் உணவு மேசைகளில் உட்கார்ந்தால், சடுதியில் எழுந்திருக்க மாட்டார்கள்.

சங்கிலித் தொடராகப் பேச்சு..பேச்சு. வழக்கம்போலக் குவர்னர் லாபூர்தொனே தீவில் குறுகியகாலத்தில் செய்த சாதனைகைளை அவரது காதுபுளிக்கப் புகழ்ந்தார்கள். பிறகு பேச்சு, மன்னர் – பதினைந்தாம் லூயி பக்கம் திரும்பியது, பிறகு புதுச்சேரி கவர்னர் துப்ளெக்ஸ், பிறகு கிறித்துவ குருமார்களின் ஆலோசனையின்பிறகாரம் மலபார்களை மதம்மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்றபடிக்கு ஏதேதோ பேசிவிட்டு, கடைசியில் மேசையில் மிச்சமிருந்த மதுவைக் குறித்து, வார்த்தையாட, இவன் பொறுமை இழந்திருந்தான்.

‘குவர்னர்பெருமான் ஷமிக்கவேணும். என்னை அவசரநிமித்தமாய் அழைத்த சேதியென்ன ? ‘. இவனது கேள்வி அவர்களிடையேயான உரையாடலை அறுத்துக்கொண்டு விழுகிறது.

அடுத்தகணம், வாக்கியங்கள் முற்றுப்பெறாமல் காற்றில் வெற்றிடத்தில் நிற்கின்றன. வார்த்தைகள் விழுங்கப்படுகின்றன. வாய்வரைச்சென்ற மது கோப்பைகள் இடையில் நிறுத்தப்பட்டு, தீனிமேசைக்குத் திரும்புகின்றன. முட்கரண்டிகளும் கத்திகளும் ஓய்வு கொண்டன. தட்டுகள் அருகே வைத்திருந்த புதுச்சேரி இறக்குமதிக் கைக் குட்டைகள், உண்டவாயை ஒத்தியெடுக்கின்றன. துரைமார்களின் பெண்சாதிகள், கைலாசத்தின் குரலில் அசம்பாவிதம் கற்பித்துக்கொண்டு, அஞ்சியவர்களாய்த் தங்கள்தங்கள் புருஷன்மார்களின் கைகளைப் பிடித்துக்கொள்கிறார்கள்.

குவர்னருக்கும் அவன் வார்த்தை கோபமூட்டியிருக்கவேண்டும்..

‘உமக்கு ஏதேனும் அவசர காரியங்கள் இருக்கின்றதோ ? ‘ கோபத்தை ஒளித்துக்கொண்டு அமைதியாகக் கேட்கிறார்.

‘அவன் தங்கையைப் பெர்னார்குளோதனிடம் அழைத்துப் போகவேண்டியிருக்கும். பெர்னார் புதுச்சேரிக்குப் செலவுமேற்கொண்டுள்ளான்தானே ? பிறகு வேறு எவருக்காகப் பிரயாசைப்படுகிறான் ? ‘ வழக்கம்போல ‘லா வீல்பாகு ‘வில் பண்ணை வைத்திருக்கும் வெள்ளைப்பன்றி ‘போல் அஞ்ஞெல் ‘ தன்குணத்தின்படி உளறுகிறான்.

இவன் புறப்பட்டபோது, தாயார் காமாட்சி அம்மாள் செய்திருந்த எச்சரிக்கை ஞாபகத்திலிருந்தபோதிலும், அமைதிகாக்க இயலவில்லை.

போல் அஞ்ஞெல் கூறிய விஷ வார்த்தைகள் அவனைச் சீண்டிப் பார்க்கின்றன..

‘பிரபு.. நான் பேசுகையில் வலிய என் விஷயத்தில் வீல்பாகு துரை குறுக்கீடு செய்கிறார். அவரை என் விடயத்திற் தலையிடவேணாமென்று மேன்மைதங்கிய குவர்னர் திட்டம் செய்யவேணும். எதுவென்றாலும் குவர்னர் அவர்களிடம் பதிலுரைக்க அடிமை சித்தமாயிருக்கிறேன். ‘

மறுபடியும், போல் அஞ்ஞெல் பேசுவதற்கு வாய்திறக்கிறான். குவர்னர் வேண்டாம் என்பதாகச் சைகை செய்கிறார்.

‘கைலாசம்..! தீவில் உள்ள சனங்கள் பிரான்சு முடியாட்சிக்கு ஊழியம்பண்ண கடமைப்பட்டவர்கள். அம்மக்களின் வாழ்க்கைக்கு பங்கம் நேர்ந்துவிடக்கூடாது. தீவின் சுபிட்சத்திற்கு இரவு பகலாய் நாமனைவரும் உழைப்பதும் நீ அறிவாய். இப்படியான வேளையில், சாயந்தர வேளைகளில் கிறேயோல் மக்களிடம் நமது பண்ணை முதலாளிகள் குறித்து அவதூறு சொல்வதாகவும், தூஷணம் பேசுவதாகவும் கும்பெனிக்குச் செய்திகள் வருகின்றன. அந்த முகாந்தரம் குறித்து விசாரிக்கவே நாம் அழைத்தோம். குற்றம் ருசுவானால் தண்டிக்கப்படுவாய் என்பது தெரியாதா ? ‘

‘பிரபு..! குற்றம் ருசுவாகும் பட்சத்தில், தண்டனை எதுவாயினும் ஏற்பதற்கு சித்தமாயிருக்கிறேன். துரைமார்களில் சிலர் எங்கள் குடும்பத்தின்மீது ஏதோ வன்மங்கொண்டு முறையிட்டிருக்கவேணும். நீங்கள் அதனை நம்பாதேயுங்கள். தீரவிசாரியுங்கள் ‘

‘போகட்டும்.. கும்பெனிக்கு நீ விசுவாசமாகவிருப்பது உண்மையானால், இனியாகிலும் இப்படியான முறைப்பாடுகள் வாராமல் பார்த்துக்கொள்ளவேணும். ஜாக்கிரதை, இப்போதைக்குப் நீ போகலாம். ‘ என குவர்னர், வழக்கம்போல ஆளும் வெள்ளயர்களை நியாயவான்களாகவும், கறுப்பர்களும், மலபார்களும் குற்றவாளிகளாகவும் பார்க்கின்ற மனத்துடன் எச்சரித்து அனுப்பியிருந்தார்.

கடலைகளின் முழக்கம் தொடர்ந்துவர. உலர்ந்த ஈரக்காற்றுடன், உப்பின் மணமும் கவிச்சியும் சேர்ந்த காற்றினை வாங்கிக்கொண்டு நடக்கிறான். கடலாமைகள் சோம்பேறித் தனத்துடன் மண்ணைப் பறித்து முட்டையிட்டுவிட்டு நகர்வதைக் கவனித்துக் காத்திருந்த நரிகள் சந்தோஷத்துடன் குறிவைத்து ஓடிவருகின்றன..அவைகளை அசட்டை செய்தவண்ணம் முன்னேறுகிறான்.

டமடமடம.. டமடமடம..

கைலாசம் கிறேயோல் மக்களின் குடிசைகளை நெருங்கியிருந்தான்.

தீப்பெட்டிகளாய் கபான்கள் எனப்படும் அவர்களது குடிசைகள். கறுப்பின மக்கள் வட்டமாகக் குழுமியிருக்க, மத்தியில் மரக்கிளைகளும், மிலாறுகளும் தீயில் சடசடவென எரிந்து கொண்டிருக்கின்றன. அத்தீக்கிடையிலே, தீயெட்டும் உயரத்தில், சீவிய மரக்கொம்பில் சொருகப்பட்டிருந்தக் காட்டுப்பன்றியொன்று வாட்டப்படுகிறது.. இடைக்கிடை,விலங்கின் கொழுப்புருகித் திரவ நிலையிற் கனலைத் தீண்ட, கோபமுற்று முன்னிலும் வேகமாகத் தீ, காட்டுபன்றியைச் சூழ்ந்து கொள்கிறது. ராட்சத உடலுடன் நீண்ட கால்சராயுடன் கறுப்பு மனிதர்கள். அவர்களில் இருவர் றபாணம் என்கின்ற தீவின மக்களின் பறையொன்றை வாசிக்கின்றார்கள். அருகிலேயே ஒருவன் வியர்க்க வியர்க்க, கழுத்து நரம்புகள் புடைக்கப் கிறேயோல் மொழியில் பாடிக்கொண்டிருக்கிறான்:

கருணைக் கடலே ஆண்டவனே

காட்டுவாயா என் தேசத்தை…

கண்ணுகெட்டாத் தேசத்தை

காணுமாசையில் சோர்ந்து நிதம்

ஆழ்கடல் தவிக்கும் கறுப்பரின

அபயக் குரலும்கேட்பதுண்டோ ?

கடவுளே! கருணைக்கடவுளே!

கடவுளே! கருணைக்கடவுளே!

ஓ..ஓ..*

கிறேயோல் மக்களின் ஆட்டமும் பாட்டும் இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு எதிரொலிக்கிறது..

டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்..டுட்டுட்டு டுடும்.டுட்டுட்டு டுடும்..டும்டும்டும்டும்டும்டும்டும்டும்….

முழங்கால்களுக்கு மேலே ஒரு ஆடையும், மார்பு மறைக்கும் முண்டுமாக இருந்த பெண்களிற் சிலர் அவ்விசைக்கேற்ப அக்கூட்டதிற்கெதிரே ஆடுகின்றார்கள். கால்களை மாற்றிமாற்றி முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் றபாணாத்தின், டுட்டுட்டு டுடும் டுட்டுட்டு டுடும் வாசிப்பிற்கேற்ப பொருத்தமாய் அடவுபிடிக்கின்றார்கள். இடைச் செருகல்களாக இடுப்பையும், மார்பையும் சீராகக் குலுக்க, டமடமடம…. என றபாணம் சிலிர்த்துக்கொண்டு முழங்குகிறது. பெண்களின் இளமார்பில் தவித்துக்கொண்டிருந்த முண்டு, அவிழ்த்துத் தெறிக்கிறது. அவர்களின் இளமைப்பருவத்துக் கறுத்த உடல், தீயொளியில் பளப்பதைப் பார்த்ததில், ஆண்களின் மனம் கலைந்திருக்கிறது. ஆடிக்களித்து சோர்ந்து உட்காரும் பெண்களுக்கு மாற்றாக, உட்கார்ந்திருக்கும் பெண்கள் எழுந்திருந்து ஆட்டத்தினைத் தொடர மீண்டும். டமடமடமடம..

ஆட்டம் முடித்த பெண்கள் தங்கள் மார்பு முண்டுகளைப் பொறுக்கிக்கொண்டு, அவர்களுக்கு விருப்பமான ஆண்களுடன் உரசிக்கொண்டு உட்கார, காமத்தீயின் ஜுவாலை பொறுக்க முடியாத ஆண்கள், அவர்களை இழுத்துக்கொண்டு இருட்டில் ஒதுங்குகின்றார்கள். அவர்கள் பின்னே ஓட முயற்சித்த சிறுவர்களை, பெரியவர்கள் சிரித்தவாறு தடுத்து நிறுத்துகின்றனர்.. ஒரு சில ஜோடிகள் பொறுமை இழந்து அங்கேயே கட்டித்தழுவிக் கொள்கின்றன.

கூட்டத்தில் உட்கார்ந்திருந்த சில்விக்கு கைலாசத்தின் எதிர்பாராத வருகை ஆச்சரிய மூட்டியிருக்கவேண்டும். எதிர்கொண்டு ஓடிவருகிறாள். இறுகத் தழுவிக் கொள்கிறாள். மனிதர்களற்ற இடமாக தேர்வுசெய்து இருட்டில் ஒதுங்குகிறார்கள். கைலாசத்தின் உடலொட்டிய மணல், அவளது கறுத்தத் தேகத்தில் ஆங்காங்கே ஒட்டமுயன்று உதிர்ந்து விழுகின்றன. இவனது மார்புக் காம்பில் சில்வியின் பற்கள் ஆழமாய்ப் பதிந்து இறக்கிய போதையில், அவளை மெல்ல தன்னிடமிருந்துப் பிரிக்கமுயன்று தோற்று, அவ்விளையாட்டைத் தொடர்ந்து அனுமதிக்கிறான். மனதிற்கும் உடலிற்கும் ஒருசேரச் சுகம்கிடைத்த சந்தோஷத்தினைப் பெருக்கிக்கொள்ளும் வித்தையில் இருவருமே திணறுகிறார்கள்.

கைலாசத்தின் பரந்த மார்பிலிருந்து விடுபட்ட சில்வியின் கண்கள் எதிற் திசையைக் கவனிக்கின்றன.. இருட்டில் ஒருஜோடி கண்கள்.

முதலில் பிரமையாகவிருக்குமோ அவளது மனம் நினைத்தது. ஆனால் அக்கண்கள் மெல்ல இவர்களை நெருங்கிருந்தது. மணலிற் தன்கையை அளைய கல்லொன்று கிடைக்கிறது. ஜோடிக் கண்களைக் குறிவைத்துக் கல்லை எறிகிறாள்.

அவ்வுருவம் ‘ஐயோ ‘வென தலையைப் பிடித்துக்கொண்டு விழ., நடந்தது என்னவென்று அப்போதுதான் உணர்ந்திருந்தான். இருவரும் விலகி யெழுந்தனர். குரல்கேட்டு, ஆட்டத்தை நிறுத்திவிட்டு இவர்களது திசைக்காய் இரண்டொருவர் தீப்பந்தங்களுடன், ஓடிவருகின்றனர்.

திடாரென்று ‘பிடியுங்கள் அவனை ‘ என எதிர்த் திசையில் மற்றவர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்கள் கூச்சலிடுந் திசையிலிருந்து, மற்றுமொருவன் கிழக்காக ஓடி இருட்டில் மறைவதைக் கண்டார்கள்

கல்லடிபட்டட வேதனையில் முனகிக் கொண்டிருந்வனை, சில்வியும், கைலாசமும் மற்றவர்களும் நெருங்கியிருந்தார்கள். ஒருவன் தீவட்டியை விழுந்து கிடந்தவனின் முகத்தருகே நீட்ட, இடதுகரத்தை, தலையில் இரத்தம் சொட்டுமிடத்திற், அழுத்திப் பிடித்திருந்தான். வலது கையில் ஈட்டி.

‘யார் ? ‘ ‘யார் ? ‘ சுற்றிலும் குரல்கள்.

‘லூதர், சில்வியின் தமையன் ‘ என பதில் வந்தது.

/தொடரும்/

*Monsieur Bon Dieu, toi bien gentil

Ramenez moi dans mon pays

Et viens Bon Dieu, vine au secours

Moi pas pouvoir nager toujours

Pays trop loin pour arriver

Et pauvre negre tout fatigue

Monsieur Bon Dieu !

Monsieur Bon Dieu !

Oh !Oh !Oh ! -Le grand voyage du pauvre negre

Germaine Sablon – Orchestre Wal-Berg – Texte d ‘Edith Piaf

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-17

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


Save yourselves from depot wallahs

it is not a service but pure deception

They take you overseas

They are not colonies but jails

– A phamphlet distributed in India (at the end of 19th century)

அடர்ந்திருந்த மரங்களுக்குட் புகுந்து ஓடினான்.

ஓட ஓட விருத்தியாய், முன்பொருமுறை மார்கழிமாசத்திலே மேற்காலே கண்ட வால்முளைத்த நட்சத்திரம் மாதிரி அடர்த்தியானமரங்கள், முட்புதர்கள், மூங்கிறபுதர்களென இவனுக்குமுன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன..

இப்படி ஓடுவதென்பது அவனுக்குப் புதிதல்ல. வெறும்வயிற்றோடு ஓடுவதால், பார்வைபடுமிடங்களில் பூச்சிகள் பறக்கின்றன. வியர்வையில்

நனைந்த உடல். சோர்வு தட்டுகிறது. முடிந்தவரை ஓடவேணும். பண்ணை ஆட்களிடம் பிடிபடாமல் ஓடவேணும். மூத்திரம் பெய்து முடித்த பத்தாவது நாழிகையில், கங்காணி கறுப்பன் இவனில்லாததைக் கவனித்திருப்பான். நாய்களும், பண்ணை ஆட்களும், குதிரை வீரர்களும் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்துவிட்டுக் காடுகளை நோக்கியே ஓடிவருவார்கள். இப்போதைக்கு ஓடவேணும். குறியில்லாமல் ஓடுகிறான். எங்கே ? எவ்விடத்திற்கு ? யோசிக்கும் நேரமா இது ? சாவு நெருங்கும்வரை ஓடவேணும். சித்திரைவதைகளைச் சந்திக்காமல் செத்துப்போகவேணும். இப்போதைக்கு அவனது புத்தி ஓடச் சொல்லிவற்புறுத்துகிறது. கால்கள் பின்புறம் இடிபட, தலைதெறிக்க ஓடுகிறான். பெரிய வேரொன்று, பூமியிலிருந்து நன்கு பெயர்ந்து குறுக்காக நீண்டிருக்கிறது. காத்தமுத்துமேல், அதற்கு என்ன வன்மமோ, வேகமாய்ப் பதிந்த கால்களை இடறுகிறது, அடுத்தகணம் இடப்புறம் அடர்ந்திருந்த முட்புதரில் தலைகுப்புற, விழுந்திருந்தான்.

சாவு நிர்பாக்கியமாய் சம்பவிக்கவேண்டுமென்று அவன் மனது கேழ்க்கிறது. ஆனால் அதற்கான தைரியம் காணாமலிருந்தான்..

சாவு எந்தப்படிக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்: விழிகள் பிதுங்க, நாக்கைத் தொங்கவிட்டு, கழுத்து புடைக்க, தாம்புக் கயிற்றில் புளியமரத்தில் ஈமொய்க்கத் தொங்கிய வீராச்சாமியும், ஒர் உச்சிவேளையில் மூன்றுமுலை மலையின் அடிவாரத்திலிருந்த நீர்ப்படுகையில் குதித்து நான்கு நாட்களுக்குப் பிறகு வெளுத்து உப்புசம்கண்டு மிதந்த கதிரேசனும், ஞாபகத்தில் வந்துபோனார்கள்..

ஏன் ?துரைத்தனம் பண்ணிய கறுப்பனை, கரும்பு வெட்டும் சூரிக்கத்தியால் சாய்த்துப்போட்டு, தப்பித்து ஓடி, பிடிப்பட்ட மரூன் மஸெரியின் முடிவுகூட ஒரு வகையிலே, தற்கொலை என்றுதான் கொள்ளவேணும்..

காத்தமுத்துக்கு எப்போது தீவுக்கு வந்தோமென்று ஞாபகமில்லை. ஆனால் வந்த வயணமும் அனுபவமும் மனதுல கல்லுல செதுக்கினமாதிரிக் கிடக்கிறது.

காற்றுமழையின் காரணமாக, துறைபிடிக்க முடியாமல் இவன் வந்த கப்பல், நாலஞ்சு நாள் தாமதிச்சு நங்கூரம் போட்டிருந்தார்கள். கப்பல்கள் பாயெடுக்கும்போதும், துறைபிடிக்கும்போதும் குண்டுகள் போடுவார்களெனக் கிராமத்தில்வைத்துக் கேட்டிருக்கிறான். புதுச்சேரியில் இவனது கப்பல் பாயெடுத்தபோது குண்டுபோட்டிருக்கலாம்.. இவனையும் மற்றவர்களையும் சரக்குக்கட்டுகளோடு ஏற்றியிருந்ததால் குண்டுபோட்டது கேட்கவில்லை.

கடல் சீர்பட்டபிறகு, புதுச்சேரியி கண்ட சலங்குமாதிரியான படகொன்றில், இவனையும் சேர்த்து, பத்துநபர்களை முன்னே தள்ளி… ‘வீத்.. வீத் ‘ (சீக்கிரம்.. சீக்கிரம்..)என்று கூச்சலிட்டுக் கொண்டுபோய் கடற்கரை ஐய்யாமாரிடம் சேர்த்துபோட்டார்கள்.

காத்தமுத்துவும் மற்றவர்களும் ஒன்றைரைமாத கடல்யாத்திரையில் ஆரோக்கியத்தைத் தொலைத்திருந்தார்கள். எலிப்புழுக்கை மிதந்த சோற்றுக்கஞ்சியைக் குடிக்காமல் பாதி நாட்கள் குலைப் பட்டினிக் கிடந்திருக்கிறான். மற்றவர்களின் நிலமையையும் அந்தப்படிக்கென்றுதான் சொல்லவேணும். கடலலைகளின் இரைச்சலும், பூதாகாரமாய் நின்றிருந்த மலைகளும், நிழலாய் அடர்ந்திருந்த மரங்களும் கொண்டிருந்த காட்டேரித்தனமான இருட்டு அவனை மிகவும் பயமுறுத்திப் போட்டதென்றே சொல்லவேணும்.

அங்கிருந்து, இராத்திரியோடு ராத்திரியாக ஒரு மாட்டுவண்டியில் இவர்களை வாரிப்போட்டுக்கொண்டு வரும்வழியில், இவனோடு வண்டியிலேற்றப்பட்ட ஒரு பெண்மணி மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு, ‘எம்மவளைக் காணோம், எம்மவளைக் காணோம், வண்டியை நிறுத்தவேணும் சாமி.. தயவுபண்ணவேணும் சாமி என்று ஒப்பாரிவைக்கிறாள். வண்டியோட்டியும், வண்டியிலிருந்த இரண்டு கறுப்புமனிதர்களும்

நிர்ச்சிந்தையாய் இருக்கின்றார்கள். காத்தமுத்துக்கு மட்டும் மனத்திற்குள் அவளது வியாகூலம் தொற்றிக்கொள்கிறது. ஒரு கட்டத்தில் அப்பெண்மணி வண்டியினின்று குதிக்க எத்தனித்தபோது, இவந்தான் அவளைத் தடுத்தான். வண்டியோட்டி, ‘உமதுபெண் கப்பலியே இருக்கவேணும், கரைவரை வந்திருந்தால் நமது வண்டியில் வந்திருக்கவேணுமென ‘ வார்த்தைபாடு சொன்னபோதும் அவள் புலம்பல் ஓயவில்லை. வழிமுழுக்க அழுது கொண்டிருந்தாள்.

வண்டியில், நான்குகல் கிழக்காக காட்டுப் பாதையைக் கடந்து, ஒரு கொட்டடியை அடைந்தார்கள். பாகூர்ல உடையார் வீட்டுத் தொழுவத்தைவிட பெரியதாய் இருந்தக் கொட்டடி.

அர்த்தராத்திரியைக் கலைக்கின்ற வகையில் இரட்டைக்கதவுகள் ஊளையிட்டுக்கொண்டு திறந்துகொள்ள அதனுள்ளே தள்ளிப்போட்டு,

மீண்டும் ‘வீத்..வீத் ‘ என கூச்சலிடும் முரட்டு மனிதர்கள். கருப்பஞ் சோலைகளும் கோரைப்புற்களும் இறைந்துகிடந்தன. திடாரென்று லாந்தர் விளக்கொன்றினைப் பிடித்தவனின் சிவந்த கண்கள். கொட்டடி முழுக்கப் பொதிகள், சிப்பங்கள்.. இவர்களைக் கண்ட மாத்திரத்தில் பொதிகளும் சிப்பங்களும் சனங்கள் சலகருமாக, குஞ்சு குளவான்களுடன் எழுந்து உட்காருகிறார்கள். கிழிந்த ஆடைகள், அழுக்கு முகங்கள்,

பீளைவழியும் கண்கள், எச்சிலொழுகிய வாய்கள்; ஊத்தை மனிதர்களாய் இவனது தமிழினம்.

லாந்தல் பிடித்தவன் மீண்டும் இவனுக்குப் புரியாத தொரைத்தனத்தார் பாஷையில் என்னவோ சொல்கிறான். இரு கைகளைத் தட்டி என்னவோ புரியவைக்கிறான். பழைய உயிர்கள் வந்த உயிர்களைப் பார்க்கின்றன. காத்தமுத்துவும்,,பெண்மணியும், மற்றவர்களும் அவர்களை நெருங்குகிறார்கள். இனி, இரு தரப்பினரும், ஒருவர் மற்றொருவருக்குத் தாய் தகப்பன், பந்து சனங்கள், தம்பி, தமையன், உடன்பிறந்தார் என்று விளங்கிக் கொண்டான்.

இவனது விதி, கூடவே வந்திருக்கவேணும் என்று புரிந்தது. எப்படி எப்போது தூங்கிப்போனான் என்று தெரியாது. பயணக்காலமும், பயணம் செய்த வகையும், அடிச்சுப் போட்ட களைப்பில் குறட்டைவிட்டுத் தூங்கிப் போனான்.

அதிகாலையிலே காத்தமுத்துவும், பெண்மணியும் மற்றவர்களும் எழுப்பப்பட்டார்கள்.

அதற்கப்புறம் பக்கத்திலேயே, கரும்புப் பண்ணையிலே வேலையென்று அழைத்துச் செல்கிறார்கள். நாலுமுழவேட்டியை அவிழ்த்துவிட்டு அவர்கள் கொடுத்த நீலநிற நீண்ட காற்சராயைப் போட்டுக்கொண்டு பாதங்களில் துணியைச் சுற்றிக்கொண்டு, கரும்புகளை வெட்ட ஆரம்பித்தபோது, சுலபமாகத்தானிருந்தது. ஆனால் சுணங்காமல் தொடர்ந்து வெட்டவேண்டும் என்றொருவன் காட்டுக் கூச்சலிட்டபோது இடுப்பிலும், தோளிலும் விண் விண்ணென்ற வலி. நிமிர்ந்தான். முதுகில் சுளீரெனச் சாட்டையடி. வலி பொறுக்கமுடியாமல் கீழேவிழுந்தவனை, எழுந்திருக்க வைத்து, கறுப்புக் கங்காணி மீண்டும் சாட்டையைச் சொடுக்கினான். பக்கத்திலிருந்தவர்கள் எதுவுமே நடாவாததுபோல் கரும்பு வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்த பறங்கியன் சிரிக்கிறான். கருப்பங்கழிகளை பிடித்து ஓய்ந்திருந்த இடதுகை எரிந்தது. உள்ளங்கையைப் பார்க்கிறான். கரும்பின் அடிக்கட்டைச் சோலைகளும், கணுக்களும் கிழித்ததில் தசைப் பிசிறுகளுடன் இரத்த வரிகளை இட்டிருக்கின்றன. மீண்டும் முதுகில் சுளீரென்று அடி. இம்முறை சில்லென்று ஆரம்பித்து,பிறகு உஷ்ணத்துடன் திரவம் பரவுகிறது. முதுகிலும் இரத்தமாக இருக்கலாம்

சொந்த மண்ணுல, தன்னோட கிராமத்துல, உடையார் ஆண்டை எப்போதும் இப்படி அடிச்சதில்லை. அடிக்கின்ற இடங்கள்ல சில நேரங்கள்ல வீங்கியிருக்கு. மஞ்சளை இழைச்சு, வீரம்மா பத்து போட்டா, மறுநாள் காணாமப் போயிடும். ஆனால் இங்கே சாட்டையில் அடிவாங்குவதுபோல இரண்டொரு முறைவாங்கியதாகவும் ஞாபகம்.

முதல் முறை ஒரு சித்திரையில, பதினெட்டாம் போர் தெருக்கூத்தை விடிய விடிய பார்த்துட்டு, குடிசையிலே கொஞ்சம் கூடுதலாகத் தூங்கப்போக, வீட்டெதிரே இருந்த தென்னை மரத்துல கட்டி வச்சு உடையார் அடிச்சதா ஞாபகம். இரண்டாவது முறை, மூத்த மவன் ஏகாம்பரம் சரீர சொஸ்தமிலாமல் பிராண அவஸ்தை கண்டு, மல ஜலம் படுக்கையிற் போக, உள்ளூர் வைத்தியர் ஐயா, ‘கோழி கொண்டுவந்து சுத்தியும், சோறு சுத்திப்போட்டும் கழிப்பு கழிக்கிறதென்று சொல்லி, ஒரு கவுளி வெத்திலையும் அரை பலம் பாக்கும், ஒத்தை பணமும் ‘ கொண்டுவாடான்னு சொன்னபோது, ஆபத்துக்குப் பாவமில்லைண்ணு உடையார் ஆண்டையிடம் சொல்லாம பக்கத்துப் பண்ணைக்கு, ‘அண்டை ‘ வெட்டப் போயிருந்தான்.. பொழுதுசாஞ்சதும், கூலியாகக் கிடைத்த கேழ்வரகைத் தலையிற் கட்டியிருந்த கைத்தறிதுண்டில் முடிந்துகொண்டு, வழியிலிருந்த கள்ளுக்கடையில் இரண்டு மொந்தைக் கள்ளைக் குடித்த தெம்போடு குடிசைக்குத் திரும்பினால், ‘ ‘ பெரிய ஆண்டை, உன்னை உடனே வரச்சொன்னாருன்னு ‘ ‘ வீரம்மா, புகையிலைச் சாற்றைத் துப்பியபடி சொல்கிறாள். பண்ணையார் வீட்டுக்குக் கோமணத்தோட ஓடிய அன்றைக்கும் இப்படித்தான் அடிபட்டிருக்கான்.

கண்காணாத தேசத்துல இருந்த, அவனது பெண்ஜாதி வீரம்மா ஞாபகத்திற்குவந்தாள். புதுச்சேரி வெள்ளைக்காரன்கிட்ட பஞ்சத்திற்கு விற்றிருந்த, பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தார்கள். தான் ‘படியாளாக ‘விருந்த, கம்பத்துக்காரர் உடையார் ஞாபகத்திற்கு வந்தார். அவர் சகதர்மிணி மனோரஞ்சிதம் அம்மாள் ஞாபகத்திற்குவந்தாள். கடைசியாக சேரியின் கோடியிலிருக்கும் சிவந்த முகமும், பெரிய கண்களும், தலையில் பத்துத்தலை நாகத்தை குடையாகவும் கொண்ட, மஞ்சள் துணியை உடலின் குறுக்காகப் போட்டிருந்த மாரியாத்தாள் ஞாபகத்திற்கு வந்தாள். திரும்பவும் அவர்களையெல்லாம் பார்ப்போமா ? என்று நினைத்து அழுதான். அழுகிறான்.. .

‘தீீவில் சாதியில்லை, எஜமான், பண்ணையாள்னு பாகுபாடு கிடையாது. இந்த ஊர்லதான் வேதத்துல விழுந்தவங்ககூட வித்தியாசங் காட்டறாங்க. அங்கபோனா எல்லோரும் சமமாம், வயிற்றுக்குச் சாப்பாடு, கட்டிக்கத் துணி எல்லாத்தையும் குடுத்து கவுர்தையாய் நடத்தறாங்களாம் ‘, தொரைமாருங்கக் கிட்ட சேவகம் பண்ணும் தேவராசன் சொன்னா சத்தியவாக்காதான் இருக்கும்னு மனசு சொல்லுது. கூரைவாரையில் ஒட்டியிருந்த கெவுளி ‘நச் நச் ‘ன்னு நாக்கை அண்ணத்திற் தட்டி ஆமாம் போட்டுச்சுது..

ஆனால் வீரம்மாவுக்கு விருப்பமில்லை. அவள் யோசனையைக் கேட்டு, கூழோ கஞ்சியோ ஊத்தறதைக் குடிச்சிட்டு தொழுவ சாணியும், ஏரும் கலப்பையுமா அவனுடைய முப்பாட்டன் வழியில் உடையார் ஆண்டை காலில் விழுந்து கிடந்திருக்கலாம். ஆடிமாசத்துல உள்ளூர் மாரியம்மனுக்குக் கூழு, புதுச்சேரி மாசிமகம், மயிலத்துல பங்குனி உத்திரம்னு வருஷம் ஓடியிருக்கும். வந்திருக்க வேண்டாம். வரும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டுப்போச்சுது.

காத்தமுத்துக்கு பூர்வீகம், புதுச்சேரிக்கிட்ட பத்து பதினைஞ்சு கல் தள்ளியுள்ள பாகூர். தலைமுறை தலைமுறையா உடையார் வீீட்டுல சேவகம்.

வெள்ளி முளைக்கும் வேளையில், மற்ற சேரிவாசிகளைப் போலவே புருஷனும் பொண்டாட்டியும் கம்பத்து வேலைக்கு வந்தாகணும். காத்தமுத்து தும்பை அவிழ்த்து மாடுகளை இடம்மாற்றிக் கட்டிவிட்டு, உடையார் வீட்டு நஞ்செய்க்கோ புஞ்செய்க்கோ காத்திருக்கின்ற வேலைக்குப் பேகவேணும். பெண்ஜாதி வீரம்மா, சாணி நிலைகளைக் கூடையில் வாரிக்கொண்டுபோய், குப்பையில் சேர்த்துவிட்டு, மாட்டுமூத்திரமும், சாணமும் கலந்த புழுதியைப் பெருக்க ஆரம்பித்து விடுவாள். நெய் மணக்கச் சோறும் கறியுமா, போஜனம் முடித்த வாழை இலைகளைப் பின்வாசல் வழியாக வெளியே எறிந்து ஓய்வெடுக்கும் நேரங்களில், உடையார் சம்சாரம் மனோரஞ்சிதம் அம்மாளுக்கு, வீரம்மா ஞாபகம் வந்தால் குடத்தில் எஞ்சியிருக்கும் கம்பங் கூழையோ, கேழ்வரகுக் கூழையோ காந்தலுடன் கொண்டுவந்து, பனைமட்டையில் ஊற்றுவாள். மிச்சமிருப்பதை காத்தமுத்துக்கான பல்லாவில் ஊற்ற, வீரம்மாள் ஓட்டமும் நடையுமாக தலைச்சும்மாடில் கொண்டுவந்து, இவன் வரப்பில் உட்கார்ந்து கொண்டு பசியாறும் அழகை, கட்டெறும்புக் கடிகளுடன் பக்கத்திலிருந்து ரசிப்பாள்.

பால் பிடிக்காத கதிர்மாதிரி காத்தமுத்து வெளுக்க ஆரம்பிச்சான். வழக்கம்போல உள்ளூர் வைத்தியர், வேப்பிலையால மந்திரிச்சுட்டு, விளக்கு வச்சுப் பார்த்ததில, ‘உருமத்துல கன்னிமார் அறைஞ்சிருக்கிறா, பொங்கவச்சி கழிப்பு எடுக்கணும், வெடைகோழி காவு கொடுக்கவேணும். ‘.என்று சொல்லிப்போட்டு தட்சணை கேட்கிறார்.

காத்தமுத்துவ அறைஞ்சிருப்பது, கன்னிமார் சாமி இல்லை மனோரஞ்சிதம் சாமின்னு வீரம்மாவுக்குந் தெரியும், சேரிக்குந் தெரியும், உள்ளூர் சாமியாடி வைத்தியனுக்குந் தெரியும். அவன் பிழைக்க வேணாமா ?

மனோரஞ்சிதம்அம்மாளுடன் காத்தமுத்து சந்தைக்கும், புதுச்சேரி, கூடலூர், வில்லியனூரென அவள் போகவேண்டுமென்று நினைக்கின்ற ஊர்களுக்கும் வில் வண்டியைக் கட்டிக் கொண்டு போய்வருபவன் என்பது ஊரறிந்த சேதி. வண்டியை வழியில் நிறுத்தி பசியாற உட்கார்ந்த வேளைகளில், அந்த அம்மாள், காத்தமுத்துவை அழைத்துச் சோற்றுருண்டைகளை உருட்டிப் போட்டு உரச ஆரம்பித்தாள். அவளுக்கு நெய்ச்சோறு கண்ட உடம்பு.. இருட்டு நேரங்களில் ஓடைவெளி, வைக்கோல் போர், மாட்டுத் தொழுவம் எனஇருவரும் ஒதுங்கியது போக, உடையார் இல்லாத நேரங்களில் சகல சம்பிரமத்துடன் எதிர்கொண்டு, கூடத்தில் அழைத்து பாயையும் விரிப்பாள். மனோரஞ்சிதம் அம்மாள் உடலுக்கு இட்டதைவிட வயிற்றுக்கு இட்டது ருசியாகவிருக்க, காத்தமுத்து வயிற்றுப் பசி தீர்ந்த பிறகாலே, மனோரஞ்சிதம் உடலைக் கூடுதலாவே மேய ஆரம்பித்தான்.

இந்த விவகாரம் சேரியில் புகைய ஆரம்பிக்க, வீரம்மாளுக்குப் பீதி கண்டது.

‘வேணாம் சாமி.. நமக்கு ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு. அவ ஏதோ குண்டி கொழுத்து அலையறான்னா, நீயும் கார்த்திகை மாசத்து நாய்மாதிரி நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு போற.. நாைளைக்கு அந்தாளுக்குச் தெரிஞ்சா வகுந்துடுவான். பெரிய குடும்பத்துக்காரனெல்லாம் ஒண்ணா சேந்துடுவாங்க. புதுச்சேரி தொரமாருங்க கோன்சேல் ஆக்கினை வயணம், சனங்கள் பார்க்க தூக்கில் போடுவார்கள். நான் ரெண்டு புள்ளைகைளை வச்சிட்டு என்ன செய்வேன். வேணும்னா நாம்ப புதுச்சேரிக்குப்போய், தொரைமாருங்கக் கிட்டச் சேர்ந்து பொழைச்சிகலாம்யா ‘…

வீரம்மாள் புலம்பலில் நியாயம் இருந்தது. ஆனாலும், தினைச் சோறும், புளிக்குழம்பும், மனோரஞ்சிதம் அம்மாளின் மீசைமுளைத்த கருஞ்சிவப்பு உதடுகளும், வீரம்மாளுக்கில்லாத மார்பும், பெரிய இடுப்பும் அவன் மனதிற் பாரதக் கூத்தில் பார்த்த, சந்தனு மகாராஜா, செம்படவப் பெண்ணிடம் கொண்டிருந்த பிரேமையை ஏற்படுத்தலாச்சுது..

இந்தக் கூத்தெல்லாம் ஒரு பங்குனி மாசத்திலே முடிவுக்கு வந்தததென்று சொல்லவேணும்.

பக்கத்து ஊருலே அங்காளம்மன் திருவிழா. அன்றைக்குப் பார்வதி, வல்லாள கண்டிக்குப் பிரசவம் பார்க்கிறேனென்று, காளியா அவதாரமெடுத்து வல்லாள கண்டியின் வயிற்றைக் கிழித்து அரக்கர்குல வாரிசைக் கொன்று, குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டுக்கொண்டு முறமெடுத்து ஆடிவருவருவாள். கிராமவாசிகள், காளியாகவும், காட்டேரிகளாவும் பம்பைக்கும், பறைக்கும் உடன் ஆடிவருவார்கள். உடையாருடைய கிழக்குவெளிக் கார்த்திகைசம்பா நெல் அறுவடைமுடிந்து கட்டுகளாகக் களத்துமேட்டில் கிடக்கிறது.

‘கோட்டை அழிப்பைப் பார்த்துட்டுச் சடுதியிற் திரும்பலாம் ‘ என்ற எண்ணத்திற் கிளம்பியவனை, தோட்டக்கால் பக்கம் தடுத்து நிறுத்தியவள், மனோரஞ்சிதம் அம்மாளின் எடுபிடி, அம்புஜம். ‘அம்மா வரச்சொன்னாங்க ‘ என்று ஒரு வார்த்தையில் ஆக்ஞை பண்ணிப்போட்டு, மறைந்து போனாள்..

மனோரஞ்சிதம் அம்மாளைத் தேடிப்போனவனுக்கு, உடையார் வாங்கிவந்திருந்த காரைக்கால் அல்வாவும், அவள் கைப்படச் செய்த எண்ணை பணியாரமும் கிடைத்தது. ஆசைநாயகன் தின்று முடிக்கவேண்டுமென காத்திருந்ததுபோல, மனோரஞ்சிதம் அவசரப்பட்டாள். இவனது எண்ணமெல்லாம் முறமெடுத்து ஆடும் காளிமீதும், களத்துமேட்டில் உள்ள கட்டுப்போரிலும் கிடந்தது. ஆர்வமில்லாமலே தழுவினான். சில நாழிகைகள் கடந்திருக்கும். இவர்கள் சேர்ந்திருந்த அறையின் கதவு, எட்டி உதைக்கப்பட, படாரென்று திறந்துகொள்கிறது. நிலைப்படியை அடைத்தவாறு வேட்டியை மடித்துக்கொண்டு உடையார்.

‘ எச்சில் நாயே.. ‘ என்பதைத் தொடந்து என்னென்னவோ வசவுகள்.. அவரைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு ஓடியவன்.. புதுச்சேரியில் விடிவதற்கு ஒரு சாமமிருக்கையில், சாவடித் தெருவிலிருந்த தேவராசன் இல்லத்தைக் கண்டுபிடித்துக் காலில் விழுந்தான்.

நடந்த வர்த்தமானங்களை முழுவதுமாகத் தேவராசனிடம் தெரிவித்து, ‘அண்ணே.. நான் எங்கனா கண்காணாத தேசத்துக்குப் போகவேணும். நீர் தயவுபண்ணித் தீரவேண்டும் ‘ என்று மிகுதியும் வருந்திக்கொண்டு சொன்ன விதத்திலே, தேவராசன் அனுகூலம் செய்வானென்று காத்தமுத்து மெத்தவும் நம்பிக்கைவைத்தான்.

‘ நாளைக் காலமே.. பாகூர் உடையார் புதுச்சேரியிலதான் நிற்பார். அவருக்கிங்கு பெத்ரோ கனகராய முதலியார், ஆனந்தரங்கப்பிள்ளை, சுங்கு சேஷாசல செட்டியென இன்னும்பல வேண்டப்பட்ட பெரிய மனுஷர்கள் உண்டு.. உன்னை ஏதாவொரு கோட்டைவாயில்ல தூக்கிலிட்டாலும் ஆச்சரியமில்லை. இந்த இக்கட்டுலேயிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அடுத்தகிழமை கப்பல் ஏறவேணும். ஆனால் அடுத்த வாரக் கப்பலுக்கு ஆட்கள் இருக்கிறாங்க. உன்னை ஏத்த முடியுமென்று நான் நம்பவில்லை. ‘

‘அப்படிச் சொல்லவேணாம் சாமி. காலத்துக்கும் உனக்கு அடிமையாக் கிடப்பேன். எப்பாடுபட்டாவது ஏத்திடவேணும். ‘

‘நீ ஒரு மாசத்திற்கு முன்னே சொன்னால் ஒரு பிரயாசையுமில்லை. இப்போது எனக்கு ரொம்ப பிரயாசை இருக்கிறது. உனக்குக் கிடைக்கும் இருபது வராகனில் என்பங்காகப் பத்து வராகன் கணக்குத் தீர்த்தால், உன்னை மஸ்கரேஞ்ஞுக்கு (Mascareignes) போகின்றக் கப்பலில் ஏற்பாடு பண்ணலாம் ‘

‘நீங்க பிரயாசைப்பட நன்றி நான் மறக்கிறதில்லை. அதறிந்து நடந்து கொள்வேன் ‘ என்று உபசாரமாய்க் காத்தமுத்து சொல்லிப்போட அன்றிரவே ஒரு துரைமார் வீட்டுல கொண்டுபோய் தேவராசன் சேர்த்தான். அங்கு ஒருவாரம் இவனை வேறு சிலரோடு அடைத்துவைத்து, ஒரு நாள் ராத்திரி, இரண்டு சாமத்திற்குப் பிறகு, சலங்கில் இவர்களை ஏற்றிக்கொண்டுபோய், புடவைக் கட்டுகள் ஏற்றின கப்பலில் அடைத்து, அங்கிருந்து மாஹே சென்று மிளகு ஏத்திக்கொண்டு சீமைக்குச் செல்லும் வழியில், இவர்களைப் பிரெஞ்சுத் தீவில் இறக்கிச் சென்றார்கள்.

இங்கே, வந்ததிலிருந்து காலையிலிருந்து மாலைவரை நின்றால், உட்கார்ந்தால், வேலையில் சுணக்கமென்றால் முதுகில் சுளீர் சுளீரென சாட்டை அடிகள் விழ அவற்றைத் தாங்குவதற்கு இனியும் அவனுடலிற்குத் தெம்பில்லை. ஒரு முறை உடையார் உழவுமாடுகளை, பக்கத்துப் பண்ணை நைனார், விளைச்சலை நாசம்பண்ணிப்போட்டதாகக் பிணையில்கட்டி அடிக்க, அவரைக் காத்தமுத்து தூஷணமாகப் பேசிபோட்டான். உடையார், நைனாரிடம் இவன் சார்பில், சமாதான வார்த்தை சொல்லப்போச்சுது..

இவனருகில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்த மற்ற ஆட்களுக்குச் சாட்டை அடிகள் பழகியிருந்தன. அவர்கள் வேக வேகமாகக் கருமினைக் வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு இடுப்பில் முள் குத்துவதுபோல வலியெடுக்கத் தொடங்கி,, முதுகுத்தண்டில் சிவ்வென்று மேல் நோக்கி நகர்ந்து முதுகு முழுக்கப் பரவியிருந்தது. உட்கார்ந்து விட்டான். பார்த்துவிட்ட கறுப்பன் – கங்காணி ஓடிவந்தான்.

சாட்டையைச் சுளீரென சொடுக்கினான். கயிற்றில் நுணியில் இறுக்கியிருந்த தோற் பின்னல் இவனது முதுகுப்பரப்பில் முடிந்தவரை ஓடி மீண்டது. சுருண்டுவிழுந்தான்.

‘ஏய் மலபார்.. மற்றவர்கள் ஒரு நாள் செய்யும் வேலைக்கு நீ இரண்டு நாள் எடுத்துக் கொள்ளுகிறாய், இப்படியே போனால். இந்தவாரத்திற்கு கூலி கிடையாது. தவிர நீ பட்டினி கிடந்து சாகவேண்டியதுத்தான் ‘.

கறுப்பன் கங்காணிக்கு, தமிழர்களைப் பறங்கியர்களைப் போலவே மலபார்கள் என்றே அழைத்துப் பழகியிருந்தான். காத்தமுத்துக்கு அவன்பாத்தாளை கேவலபடுத்திப் பேசவேண்டும் போல இருந்தது. முணுமுணுத்தான்.

‘என்ன யோசனை ? நான் மறுபடியும் வந்து பார்க்கும்போது இந்தப் பகுதி முழுவதையும் நீ வெட்டியிருக்கவேணும் ‘. வளர்ந்து வீழ்ந்துக்கிடந்த கரும்புகளைக் காட்டிவிட்டு ஓடினான்.

அவன் ஓடுவது, எதற்காகவென்று காத்தமுத்து அறிவான். மற்ற அடிமைகளும் அறிவார்கள். மூத்திரம் வரும்போதெல்லாம் இப்படித்தான் பதறிக்கொண்டு ஓடுவான். தீட்டுப்பட்டபெண்ணிடம் படுத்து அவதிப்படுவதாகப் பண்ணை முழுக்கப்பேச்சு. மூத்திரம்பேய கணக்க நேரம் எடுத்துக்கெள்வான். அவனுக்குச் சுலபத்தில் மூத்திரம் வராது, என்று சொல்ல கேட்டிருக்கிறான். காத்தமுத்து இதற்காத்தான் காத்திருந்தான். அவன் மறையும்வரைக் காத்திருந்தான். பாவாடைராயன், அங்காளம்மா, மாரியாத்தா, காத்தவராயனென கிராமத்தில் அவன் நெருங்கி பொங்கவைக்க முடிஞ்ச சாமிகளை நேர்ந்துகொண்டான். மேலே கழுகொன்று பறந்து கொண்டிருக்கிறது.

வெட்டப்படாத கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்தான், மேற்கு திசையைக் குறிவத்து ஓடினான். முதுகைக், காய்ந்திருந்த கருப்பங்கழிகள் கிழிக்கத் தொடங்கின. சாட்டை அடிகளுக்கு இது தேவலாம் என்றிருந்தது. ஓடிமுடிக்க இடப்புறம் மரங்கள் அடர்ந்திருந்தன. நிம்மதியாய் நின்று மூச்சுவாங்கிக்கொண்டான். அடர்ந்திருந்த மரங்களுக்குட் புகுந்து ஓடினான். ஓட ஓட விருத்தியாய், முன்பொருமுறை மார்கழிமாசத்திலே மேற்காலே கண்ட வால்முளைத்த நட்சத்திரம் மாதிரி அடர்த்தியானமரங்கள், முட் புதர்கள் மூங்கிறபுதர்கள் என இவனுக்குமுன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன..

/தொடரும்/

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘What do you know about your past, and how far back is your origin ? What do you know about where you came from, where have you been, and where are you heading ? ‘

– Teaching 232:12 The Book of The True Life (The Third Testament)

இருபதாம் நூற்றாண்டு….

—-

நண்பனே!…ஆணவமலம் நிறைந்தோ அல்லது முதிர்ந்தோ இருக்கும் ஓர் உயிர் ஒருபோதும் முக்தி பெறாது. அம்முனைப்பு நீங்கவேண்டும், முற்றிலும் ஒடுங்கவேண்டும். ஆணவமலம் நிலை நிற்கும் காலம்வரை அது பிறந்து இறந்து, பிறந்து இறந்து, பேதைமையுற்றுத் தவிக்கும். ஆதலால் அம்முனைப்பினை அழித்தாலன்றி பிணி, மூப்பு சாக்காடொழிவது நடவாது. ஆணவமலத்தைப் போக்கும் ஆற்றலுடையவன் இறைவன். அவனொருவனே உன் ஸ்தூல உடம்பைப் போக்கி ஆணவமலம் நீங்கின ஆத்மாவைத் தன்னோடு சேர்த்துகொள்பவன்.

—-

வீட்டெதிரே, சாக்கடை சுத்தம் செய்து குவித்து வைத்திருந்த மண், நீர் வடிந்து உலர்ந்து கிடந்தது. அதனையொட்டி இறால் கோதுகள் பரவிக் கிடக்க, அவற்றின்மீது ஈமொய்த்துக் கிடந்தது. இரண்டடி தள்ளி, அடுப்பு வைத்து மீன் துண்டுகளை மாவில் நனைத்து, வாணலியிற் கொதிக்கின்ற எண்ணையிற் போட்டுக் காத்திருந்து, சல்லிக் கரண்டியால் அவற்றையெடுத்து எண்ணை வடியட்டுமென மீண்டும் காத்திருந்து பக்கத்திலிருந்த பெரிய அலுமினியத் தட்டிலிடும் தொப்பை ஆசாமி. வழியை அடைத்துக் கொண்டு, பிரெஞ்சுக் கொடியுடன் கண்ட அரதப் பழசான ராலே சைக்கிள். நண்பர்கள் இருவரும் தயங்கி நின்றார்கள்

‘என்னோட சைக்கிள்தான். நவுத்தி வச்சிட்டு உள்ள வாங்க ‘ – கிழவர்.

வேலுவும், பெர்னாரும் அடைத்துக்கொண்டு நின்ற, கொசு மொய்க்கும் சாக்கடை நீரைக் கவனமாய்க் கடந்து வாசற்படிக்கு வந்தார்கள்.

‘பெரியவரே.. எங்கே இன்னொருமுறை சொல்லுங்க ‘ – வேலு.

‘எதைச் சொல்லணும் ?.. நீங்க சித்தமுன்ன, வேம்புலி நாய்க்கனைத் தேடி வந்ததாச் சொன்னீங்க. நானதற்கு, நாந்தான் நீங்க தேடிவந்த வேம்புலி நாய்க்கன்னு சொன்னேன். ‘- கிணற்றுக்குள் இருந்து பேசுவதான குரலில், வேம்புலி நாய்க்கர்.

‘இவரு நம்ம சினேகிதர். பிரான்சுல இருந்து நம்ம ஊருக்கு கிட்டத்துல வந்தவர். நம்ம நாட்டு இலக்கியங்கள்ல ஆர்வம். ஆனா உங்களைத் தேடி வந்ததற்கு வேறுகாரணங்கள் இருக்கு ‘ வேலு.

வேலு சொன்னதைக் கிழவர், தலையை இடதுபுறம் முன்னோக்கித் திருப்பி, வலது காதில் பின்புறம் உள்ளங்கையைக் குவித்து முற்றிலுமாக வாங்கிக் கொண்டார்.

ஏகத்துக்கு இருமினார். இருமி வாயிற் கொண்டுவந்த சளியை பக்கத்தில் மணலிட்டிருந்த டால்டா டிண்ணில் துப்பிவிட்டு நிமிர்ந்தார். எதையோ சொல்ல வேண்டுமென்று நினைத்து வாயைத் திறந்தவர்.. மீண்டும் இருமினார்.. இருமினார்.. கண்கள் செருகிக்கொள்ள, மார்புக்கூடு மேலும் கீழும் இயங்க, சுவாசத்தில் சீழ்க்கைச் சத்தம் சேர்ந்துகொள்கிறது. இடது கரத்தால், பக்கத்திற் கிடந்த பாட்டிலைத் திறந்து, எஞ்சியிருந்த சாராயத்தைக் குடித்து சகஜ நிலைக்குத் திரும்புகிறார். வலது கரத்தை அலையவிட்டுத் தள்ளிக் கிடந்த, அழுக்குத் தலையணையைக் தலைக்குக் கொண்டுவந்து, கால்களைப் பரப்பிக் குத்துகாலிட்டுச் சாய்ந்தார். கால்களுக்கிடையில் பூசணிப்பழமாய் பெருத்திருந்த விதை. பெர்னாரும் வேலுவும் பரிதாபமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

‘எங்களால நம்ப முடியலைங்க ‘- மீண்டும் வேலு.

‘நான் இருமலோடு போராடறதையா.. அப்படித்தான். மொளவுத் தூள் போட்டு சாராயம் குடிச்சிருக்கன். எல்லாக் கபமும் தம்பாட்டுக்கு சொல்லாமற் கொள்ளாமல் போயிடும் ‘- வேம்புலி நாய்க்கர்.

‘அதில்லைங்க, நீங்கதான் வேம்புலி நாய்க்கர்னு சொன்னதும் எங்களுக்கு ஆச்சரியமா போச்சி. ‘ – வேலு.

‘நம்பிக்கை இல்லாமலா என்னைத் தேடிக்கிட்டு வந்தீங்க.. ? ‘

‘ஒரு வகையில அப்படித்தான். ‘ – வேலு.

‘ஏண்டா தம்பி ? உனக்கு எந்த ஊரு ? என்ன பேரு ? ‘

‘கூடப்பாக்கம். எம்பேரு வேலு. இவரு பேரு பெர்னார். பெர்னார் ஃபோந்தேன் ‘

‘என்ன பேரு சொன்ன ? பெர்னாரா ? ‘

‘பெர்னார் ‘ங்கிற பேரு ஞாபகத்தில இருக்கா ? அப்படி இருந்தா, நாங்க அதிஷ்டசாலீங்க ‘

‘ம்.. என்ன சொல்றது. இருக்குன்னு சொல்லவா இல்லைன்னு சொல்லவா.. முதல்ல ரொம்ப நாழியா நிக்கறீங்க. நிண்ணு பேசவேண்டிய விஷயமில்ல.. இது. திண்ணையிலே குந்துங்க. பேசுவோம். ‘

பெர்னாரும், வேலுவும் கிழவரின் எதிரேயிருந்த ஒட்டுத்திண்ணையில் உட்கார்ந்தார்கள்.

‘சிறிக்கி… குலுக்கிக்கொண்டு சினிமாவுக்குப் போயிருக்கிறா.. இருந்தாலாச்சும் காப்பித்தண்ணி போடச் சொல்லலாம் ‘

கிழவர் அவர் வீட்டைச் சேர்ந்த பெண்பிள்ளையைத் திட்டுகிறார் என்பது மட்டும் புரிந்தது. அமைதியாகவிருந்தார்கள்.

‘யாரென்று கேட்கவில்லையே ? எம்மருமகளச் சொல்றன். ‘

‘எம்பையன் பிரெஞ்சு ராணுவத்துல கப்ரோல் ஷேஃப் ஆகவிருந்தவன். ரெத்ரெத் ஆகவேண்டிய சமயத்துல கொசோவோ சண்டையில அநியாயமாப் போயிட்டான்.

‘பெரியவரே.. நீங்க 1943ம் ஆண்டுவாக்கில சரியான முகவரியில்லாம, பெர்னார்னு, பிரெத்தாஞ், பிரான்சுண்ணு சொல்லி கடிதம் போட்டிருக்கீங்க. நம்ம ஊரா இருந்தா, போட்ட உங்களுக்கே திரும்பிவந்திருக்காது. எப்படியோ, நீங்க எழுதிய கடிதம் அவங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்குது. பெர்னார் குளோதன் பற்றிய தகவல்கள் உங்கக்கிட்ட இருக்கிறதா எழுதியிருக்கீங்க ‘..

‘கடிதமா ? நானா ? ‘. இருமிக்கொண்டே கிழவர் சிரிக்கிறார்.

‘என்ன பெரியவரே ? சிரிக்கிறீங்க. இப்பதான், சித்த முன்ன ‘பெர்னார் ‘ங்கிற பேரை தெரிஞ்சமாதிரி காட்டிக்கினிங்க. உங்க பேரு வேம்புலி நாய்க்கர் மாதிரியும் எங்களை நம்பவைச்சு உள்ளே கூப்பிட்டாங்க. இப்போ சிரிச்சா என்ன அர்த்தம். ‘

‘நான் இல்லைண்ணு சொல்லலை. இரண்டுமே உண்மை. பிறந்ததிலிருந்து எம்பேரு வேம்புலி தான், அதற்கப்புறம் கல்யாணம், பிள்ளைகள்னு சேர்ந்துபோக எங்க சாதிப்பட்டத்தையும் ஒட்டவச்சுகிட்டேன். ஆக வேம்புலி நாய்க்கன் நாந்தான். இதுல சந்தேகம் வேண்டாம். அப்புறம் நீங்க சொல்ற பெர்னார் குறித்தும் காதில வாங்கியிருக்கேன் ‘.

சொல்லி முடிக்கக் காத்திருந்ததுபோல இருமல் பற்றிக் கொண்டது. விலாப்புடைக்க இருமினார். கண்களில் நீர் கோர்க்க, வேட்டி முனையாற் துடைத்துக் கொண்டார்.

சாலையில் ஓடிக்கொண்டிருந்த நாயொன்று நின்று, இவர்கள் திசையில் குரைக்கிறது. கிழவர் தன் பார்வையை நாயிடமிருந்து விலக்கி வேறு திசையிற் குறிவைத்து வெறித்துப் பார்க்கிறார். சிறிது நேரம் பார்த்துக்கொண்டவர் மீண்டும் இவர்கள் திசைக்குத் திரும்பினார். நாய் தொடர்ந்து கிழவரை நோக்கிக் குரைக்கிறது.

வேலு திண்ணையிலிருந்து இறங்கி நாயைத் துரத்தியவன், மீண்டும் பெர்னார் அருகில் அமர்ந்தான்.

‘அவிசாரிக்குப் பொறந்தது எங்க போச்சுன்னு தெரியலை ‘ தனக்குத் தானே கூறிக்கொண்டவர், மீண்டும் இவர்களை நேரிட்டுப் பார்த்தார். ‘யாரைச் சொல்றேன்னு கேக்கமாட்டாங்களா ? ‘

‘நாங்க என்னன்னு கேக்கிறது. நீங்களே சொல்லுங்க.. ‘-வேலு.

‘எதிர்த்தாப்புல, நாகப்பன்னு நம்ம வீட்டுக்கு ரிக்ஷா ஓட்டுறவன் இருப்பான். நான் கூப்பிடும்போது ஓடிவருவான். எங்கே போய்த் தொலைஞ்சானோ ? ‘

‘இப்ப அவனெதற்கு ? ‘ – வேலு.

‘வாய் கொஞ்சம் நமநமங்கிது. இருமல் தொந்தரவு வேற. நீங்கதான் பார்க்கறீங்களே. ‘

‘இப்ப என்ன வேணும் உங்களுக்கு ? ‘

‘எனக்கு இருந்தாப்பல கபம்கட்டிக்கொண்டு தொல்லை கொடுக்கும். மார் முழுக்கச் சளி. வயசாச்சில்ல. நெஞ்சை நனைச்சா சரியாகும். மீண்டும் இருமினார். நீர்க்காவியேறிய வேட்டியின் இடுப்பையொட்டியிருந்த மடியை அவிழ்த்து ஒரு சுருட்டை எடுத்து பற்றவைத்தார்.

‘சுருட்டும் தீர்ந்துபோச்சு. அந்தக்காலத்திலிருந்து எனக்குக், கரும்பு மார்க் சுருட்டு, கந்தன் டாக்கீஸ் சந்திலிருக்கிற சாராயக்கடைச் சரக்கு. தொடர்ந்து கொஞ்சம் ரசஞ்சோறு, வஞ்சிரம் கருவாடு இருந்தா போதும். நிம்மதியா கட்டைய நீட்டிடுவேன். அடுத்த ஆவணிவந்தா எண்பதெட்டு வயசு. ‘ எச்சில் தெறிக்கப் பேசினார். ‘

‘பெரியவரே!.. கவலையை விடுங்க. எங்கிட்ட சொல்லீட்டாங்க இல்லை. கரும்பு மார்க் சுருட்டுக்கும், நீங்கள் கேட்ட சாராயத்துக்கும் ஏற்பாடு செய்யறோம். இப்ப எங்களுக்குச் சில உண்மைகள் தெரிஞ்சாகணும். ‘ இம்முறை கிழவரிடம் பேசியவன் பெர்னார்.

‘மிஸியே! ஐம்பது வருஷத்துக்கு முந்தைய விஷயத்துல நீங்க ஆர்வம் காட்டுவதைப்பார்க்கும்போது, ஏதோ விஷயமிருக்கணும். எம்மருமக இப்பல்லாம் என்னை இன்னாண்ணு கேக்கறதில்லை. கையில காசிருந்தா யோசனை பண்ணாம கொடுங்க. நீங்க என்னைத் தேடிவந்ததில லாபமிருக்குது. ‘

பெர்னார் பார்த்துக்கொண்டிருக்க, வேலு தன் சட்டைப் பையிலிருந்து இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுக்களைக் கிழவரிடம் நீட்டினான்.

‘பெரியவரே!.. இப்போதைக்கு இதைப் பிடியுங்க. நீங்க சொல்லப் போற விஷயத்தவச்சுதான், நாங்க மத்ததைப் பத்தி யோசிக்கணும். ‘

‘வேம்புலி நாய்க்கர் நாந்தான். அதிலே உங்களுக்குச் சந்தேகம்வேண்டாம். ஆனா ஏதோ கடிதம்னு சொல்லறீங்களே, அந்தக் கடிதத்தை நான் எழுதலை. ‘

வேலு உடன் எழுந்துகொண்டான்.

‘பெரியவரே!.. எங்களை நீ இளிச்சவாயர்கள்னு நினைச்சுகிட்டுக் கதை சொல்ல வறீயா ? சத்தியம் பண்ணு. நாங்க தேடிவந்த வேம்புலி நாய்க்கன் நீங்க இல்லைதானே ? ‘

‘வேலு.. அவசரப்படாதே. பெரியவரே.. என்ன குழப்பறீங்க ? ‘ -பெர்னார்

‘கூடப்பாக்கத்துத் தம்பி! என்ன நீ இப்படி அவசரப்படற. மிஸியே.. எவ்வளவு பொறுமையா இருக்காரு பாரு.. ‘

‘சரி சரி..!பெரியவரே சொல்லுங்க. எங்க பொறுமையைச் சோதிக்காதீங்க. நாங்க உத்தரவாதங்கொடுத்த மத்ததும் உங்களுக்கு வேணும்னா.. சீக்கிரம் சொல்லியாகனும். இல்லை எனக்கெதுவும் வேண்டாம்னு சொல்லுங்க.. நாங்க புறப்படறோம்.. ‘

‘இப்படி அவசரப்பட்டா எப்படி ? என் கையைப் பாருங்க ‘

உலர்ந்து, சுருங்கியிருந்த வலது முழங்கையின் உட் பகுதியில் வேம்புலி நாய்க்கர் எனப் பச்சைக் குத்தியிருந்தார்.

‘…. ‘

‘தம்பி..! நீங்கதான் என்னைத் தேடிவந்தீங்க. வேம்புலி நாய்க்கன்.. இருக்கானான்னு கேட்டாங்க. இங்கே முழுசா நானொருத்தன் இருக்கும்போது, இல்லைன்னா சொல்ல முடியும் ‘

வேலுவுக்கு பொறுக்கவில்லை. எழுந்திருக்க முயற்சித்தான். அவனை பக்கத்திலிருந்த பெர்னார் அமைதிப்படுத்தினான்.

தெருநாய் மீண்டும் திரும்பிவந்திருந்தது.

‘பெரியவரே! ஏற்கனவே உங்கக்கிட்ட சொன்னதுபோல, ரொம்பக்காலத்துக்கு முன்னாடி வேம்புலி நாய்க்கர்னு ஒருத்தர் கையொப்பம் வைத்திருக்கிறார். அவருக்கு என் முன்னோர்களில் ஒருவரான பெர்னார் குளோதன் பற்றிய ரகசியங்கள் தெரியும்னு அதில சொல்லியிருக்கிறார். ‘ கூறிமுடித்த பெர்னார் தன் முதுகுப் பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த கடிதத்தைக் கிழவரிடம் நீட்டினான்.

‘கடிதத்தை நான் படித்து என்ன ஆகப் போகிறது. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஓரளவு ஞாபகத்திற்கு வருகிறது. ‘

‘என்ன ஞாபகத்திற்கு வருகிறது ? ‘ – வேலு

‘அந்தக் கடிதத்தை என் கூட்டாளி துரைக்கண்ணுதான் எழுதியிருக்கணும். ‘

‘எங்களை இன்னும் குழப்பறீங்க.. ‘

துரைக்கண்ணுக்குச் சொந்த ஊரு, இங்கிருந்து மயிலம் பக்கத்துல இருக்கிற புதுப்பாக்கம். பல வருஷங்களுக்கு முன்னாடி, புதுச்சேரியில ராஜா பண்டிகை. அரசாங்கம் கோலாகலமா விழாவை ஏற்பாடு செஞ்சிருந்தது. பாதுகாப்புக்கு இருந்த சிப்பாய்கள்ல நானும் ஒருத்தன். துரைக்கண்ணு குடும்பத்தோட வந்திருந்தான். சறுக்கு மரத்துல ஏறி கட்டியிருந்த பரிசு முடிச்சைச் சுலபமா அவிழ்த்துவிட்டுக் கீழே இறங்கியவன், என்னிடம் வந்தான். தயங்கித் தயங்கி, என்னிடம் நெருங்கித் தலையைத் சொறிந்து கொண்டு நின்றான்.

‘என்ன விஷயம் ? இப்படித் தலையை சொறிந்துகொண்டு நிற்கிறாய் ?னு ‘ கேட்கிறேன்.

‘உன்னைப் பார்த்தா புதுச்சேரி ஆளாத் தெரியலை. யூனியன்* ஆளு மாதிரி இருக்க. நீங்கல்லாம் மாசிமகத்துக்குத்தான் இந்தப்பக்கம் வருவீங்க. ராஜா பண்டிகைக்குப் புதுச்சேரிப்பக்கம் வரமாட்டாங்களேன்னு ‘ கேட்டேன்

‘இல்லைண்ணே பிரெஞ்சு ராஜாங்கத்துக்கொரு கடுதாசி போடணும். வெள்ளைக்காருங்க பாஷையில எழுதணும் ‘னான்.

‘என்ன விஷயமா எழுதப்போற, அவங்க ராஜாங்கத்துல புதுச்சேரியை விட்டுப் போகும்போது உங்கிட்ட கொடுத்துட்டுப் போகச்சொல்லப் போறியா ?ன்னு ‘ கேட்கறேன்.

‘என்னண்ணே.. நீங்கவேற பகிடி பண்ணிகிட்டு. எங்கவூரு துரோபதையம்மன் மேல ஆணையாச் சொல்றேன். என்னை நம்புங்க ‘ங்கிறான்.

‘சரி என்ன கேட்டு எழுதப்போற ‘ன்னு நான் கேட்கிறேன்.

‘எழுதறதால என்ன லாபம்னு தெரியலை. எங்கவீட்டுப் பரணையை ஒழிச்சப்போ, நெறைய ஓலை நறுக்குகள் கெடைச்சுது. எல்லாத்திலும் ‘பெர்னார் ‘னு ஒரு பறங்கியரை பத்தி நாள் தவறாம அவரோட சினேகிதர் ஒருத்தர் எழுதியிருக்கார். படிச்ச்சுப்பார்த்த, எங்க ஊரு திண்ணை வாத்தியார் கிஷ்டப் பிள்ளை, ‘சுவாரஸ்யமாயிருக்குது, அந்த பெர்னார் யாருண்ணு கேட்டு அவங்களுக்கு அனுப்பிவச்சா நிச்சயம் உபயோகபடும்ணு, உனக்கும் ஏதாவது நல்லது நடக்கும்னு சொன்னர் ‘, அப்படான்னு சொன்னான் ‘.

தெருநாய் மீண்டும் கிழவரை முறைத்துக்கொண்டு உர்ரெங்கிறது.

‘அதுசரி பெரியவரே.. துரைக்கண்ணுதான் அந்தக் கடிதத்தை எழுதினார்னு நீங்க சொல்றீங்க. எதற்காக உங்க பேருல எங்களுக்கு எழுதணும். ‘ -பெர்னார்.

‘ராஜா பண்டிகைக்குப் பிறகு, தவறாம புதுச்சேரி வரும்போதெல்லாம், கிராமத்திலிருந்து வெள்ளரிப்பழம், வாழைக்காய், பூசனிக்காய்னு அந்தந்த பருவத்துக்குத் தகுந்தமாதிரிச் சுமந்துகிட்டுவருவான். ஒரு நாள் கப்பலேறிப் பிரான்சுக்குப் போகப்போறேன்னான். ‘ …

கிழவருக்கு மூச்சிரைத்தது. வேலுவிடம் சைகையிற்காட்டப் புரிந்துகொண்டு பக்கத்திலிருந்த செம்பிலிருந்து தண்ணீரை அதிற் கவிழ்த்துவைப்பட்டிருந்த தம்ளரில் கொஞ்சமாக ஊற்றிக் கொடுத்தான். குடித்து முடிக்கச் சிறிது நேரம் பிடித்தது. வாயில் எச்சிலும் தண்ணீருமாகவொழுக வேட்டி முனையாற் துடைத்துக் கொண்டு இவர்களைப் பார்த்தார். சிறிது நேரம் அமைதியாகவிருந்தார். ஒரு இளைஞன் மோட்டார் சைக்கிளில் வேகமாய்ச் செல்ல, தூவென்று காறி உமிழ்ந்தார். ‘அவன் ஆத்தா அப்பா சம்பாதிச்சுவச்சா, அதுல வாண வேடிக்கைக் காட்டற பயலா இருக்கும் ‘.. ஆக்ரோஷமாய் வார்த்தைகள் வந்தன.

‘அவன் கிடக்கிறான். நீங்க சொல்லுங்க ‘- வேலு.

‘ எங்கே விட்டேன்.. .ஆமாம் ஒரு நாள் கப்பலேறிப் பிரான்சுக்கு போப்போறேன்னான். ஒருவாரத்திற்கு முன்னர்தான் லண்டனிலிருந்துகொண்டு வானொலியில், ஜெர்மானியர்களுக்கு எதிராகப் பிரெஞ்சுமக்களை உற்சாகப்படுத்த தெகோல்**பேசப்போக, ரெண்டாவது உலகசண்டையிற் கலந்துகொள்ள நிறைய கஷ்ட ஜீவனத்திலிருந்த புதுச்சேரிவாசிகள் கப்பலேறினார்கள். நானும் போகவேண்டியது. என் பொண்டாட்டி போகக்கூடாதுன்னு ஒப்பாரிவைக்க நான் போகலை. ஆனா அவனைத் தடுக்க அப்படியாரும் இல்லைங்கிறதால, கப்பலேறிட்டான். ‘

‘அவரெப்போ வேம்புலி நாயக்கரா மாறினார் ‘- பெர்னார்.

‘கப்பலேறுவதற்கு முன்னால, பிறந்த பதிவு தேவைப்பட்டது. நாந்தான் அவனிடம் என்னோட பிறந்த பதிவு கொடுத்துவிட்டேன். பிரெஞ்சு அரசாங்கத்துக்கு அவனோடபேரு, அன்றையிலிருந்து வேம்புலி. அவனும் என்னைபோல நாய்க்கன் என்பதால பேருக்கப்புறம் நாய்க்கரைச் சேர்த்துக்கிட்டான். அதற்கப்புறம் எப்போ சீமையிலிருந்து வந்தாலும் புதுச்சேரியில என் வீட்டுலதான் வந்து தங்குவான். எப்போதாவது சொந்த ஊருக்குப் போய்விட்டுவருவான். நான் சுத்தமா பெர்னார் விஷயத்தை மறந்துட்டேன். அவன் கடிதம் போட்டதோ கொண்டதோ எதுவுமே எனக்குத்தெரியாது. ‘

உர்ரென்றிருந்த நாயோடு, இப்போது மற்றுமொரு நாய் சேர்ந்திருந்தது.

‘அப்ப உங்க நண்பர் துரைக்கண்ணுவைத்தான் நாங்க மேற்கொண்டு பாக்கணும் ‘- வேலு.

‘ஆனால் நீங்க அவனை இப்போ பார்க்க முடியாது ‘

‘ஏன் ‘ ?

‘இந்தோ – சீனா சண்டையில***, ஹோசிமின் படைகளால பிரெஞ்சுப்படைக்குப் பெரிய சேதம்ன்னு உங்களுக்குத் தெரியுமே. வியட்னாம் காடுகள்ல செத்துப்போனவங்கள்ல இவனும் ஒருத்தன். ‘

‘அவரது குடும்பத்துல யாரும் இல்லையா ? அவர்களுக்கு பெர்னார் குறித்த ஓலைச்சுவடிகள்பற்றிய தகவல்கள் தெரிஞ்சிருக்குமா ‘

‘அவன் பொண்டாட்டிகூடச் சமீபத்துல செத்துப்போயிட்டா. கிராமத்துல இருந்த காடுகரம்பு, நிலபொலம் எல்லாத்தையும் வித்துட்டு, புதுச்சேரிக்கே வந்திட்டாங்க. துரைக்கண்ணுக்கு ஒரே பெண்ணு. ஆனா அவ மேனா மினுக்கி… நல்லா உடுத்திக்கொண்டு, தினமும் சினிமாகொட்டகைக்கு போறைத் தவிர ஒரு எழவும் தெரியாது. ‘

‘அவங்க எங்க இருக்காங்க ?. அட்ரஸ் கொடுங்க மத்தததை நாங்க பார்த்துக்கறோம் ‘

‘வர நேரந்தான்.. ‘

‘என்ன சொல்றீங்க ? ‘

‘எம்மருமகளத்தான் சொல்றேன். எம்பையனும் பிரான்சுக்கு போகணும்னு ஆசைப்பட, இந்தச் சிறிக்கியைக்கட்டிவைத்தேன். நீங்கதான் பார்க்கறீங்களே.. நானிங்கே உயிர் ஊசலாடிக்கொண்டுகிடக்க, அவ ஊர் மேயப் போயிட்டா. ‘

நாய்கள் மறுமடியும் உக்கிரமாகக் குலைக்க ஆரம்பித்திருந்தன. வேலு அவைகளைத் துரத்த முயற்சிக்கிறான். சைக்கிள் ரிக்ஷாவொன்று வந்து நிற்க, நாய்கள் ஓட்டம் பிடிக்கின்றன..

வந்திறங்கியவளுக்கு இரட்டை நாடி உடம்பு. திரட்சியான மார்பு. மையப்பிய கண்கள். உதட்டுச் சாயத்தில் சிவந்திருந்த தடித்த உதடுகள், கழுத்துச் சதையிற் புதைந்திருந்த தலை, தலைப்பாரத்திற்கு இணையாகக் கொண்டை. இவர்களை யார் ? என்பதுபோலப் பார்த்தாள்.

கிழவர் அமைதியாகக் கிடந்தார். கிழவர் தலையை இவர்களுக்கு எதிர்த் திசையிற் திருப்பி இருந்தார். வேலுவுக்கு அவர் பின் தலையிலிருந்து கண்கள் வெளிப்பட்டு உளவு பார்ப்பதாகப் பட்டது.

‘நீங்க யாரு ‘ ?

‘உங்க மாமனாரைப் பார்க்க வந்தோம். பேசினோம். ‘ -வேலு

‘என்ன ? என் மாமனாரைப் பார்க்க வந்தீங்களா ?, சரி. ஆனா பேசினேன்னு சொல்றீங்க. ‘

‘ஏன் ‘- பெர்னார்.

‘அவர் இறந்து அரைமணியாவுதே. ரிக்ஷாகாரர் நாகபப்பனைப் பார்த்துக்கச் சொல்லிட்டு, பெரிய பாப்பார தெருவரைக்கும் சித்தப்பா வீட்டுக்கு சேதிசொல்லிட்டுவரலாம்னு போயிருந்தேன். ரிக்ஷாகாரரை அனுப்பலாம்னா, சித்தப்பாவோட புது அட்ரஸ் தெரியாது.. எங்கே போனாரு அந்த ஆளு ? மறுபடியும் கள்ளுகடைக்குப் போயிட்டாரா ?.. ‘ என்று வந்த பெண்மணி கேட்க, நண்பர்களிருவரும் முகம் வெளுத்து நின்றார்கள்.

/தொடரும்/

* ஆங்கிலேயர் நிருவாகத்திலிருந்த இந்தியப்பகுதி

** Charles DeGaulle (1890 -1970) பிரான்சின் முதல் அதிபர்.

*** La Guerre Indo-Chine (1946 -1950)

—-

Series Navigation

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்

சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு

ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்

பாலனுமாவர் பராநந்தி ஆணையே

– திருமூலர் (திருமந்திரம்)

தை மாதம். பெளர்ணமி சந்திரன் கிழக்கிலுமில்லாமல், மேற்கிலுமில்லாமல் வானில் கிடக்கிறான். வெள்ளிநிலவின் கீழ் அழகும் அமைதியும் போகத்திலிருந்தன. அருகிலிருந்த பனந்தோப்பிலிருந்து ‘குக்கூ ‘வென்று மெல்ல எழுந்த குயிலோசை கொஞ்ச கொஞ்சமாய் உயர்ந்து, பரவி அப்பிரதேசமெங்கும் நிறைந்து திடுமென்று அறுபட்டு அமைதி அச்சம்.. அமைதி அச்சம் அமைதி அச்…. தெற்கில் கீழ்வானில், சந்திரன் ஒளியிற் சவமாய்க் கிடந்தவொரு நட்சத்திரம் திடாரென்று இடம் பெயர்கின்றது. கண் சிமிட்டும் நேரம், பிரகாசமாய் ஒளிர்ந்து, வடக்குத் திசைக்காய் வானவெளியில் ஜிவ்வென்று பிரயாணம் செய்து அடுத்த கணம் காாணமற்போகிறது. மீண்டும் மயான அமைதி. இதைப் பார்க்கின்ற நமக்கு, முதுகுத் தண்டினைப் பயமுறுத்தும் சிலிர்ப்பென்று சொல்லலாமோ ? சொல்லலாம். கூடுதலாக நடுங்கவைக்குங் குளிர்.

விடிவதற்கு இரண்டு சாமம் இருக்கிறது..கள்ளர்களுக்கும், காரியங்களில் அழுக்கினைக் கொண்டவர்களுக்கும் உகந்த நேரம்.

பைராகித் தோற்றம். அரையிலிருந்த நனைந்த நாலுமுழவேட்டி காற்றில் உலர ஆரம்பித்திருந்தது. சடைவிழுந்து அசைவற்றுக் கிடந்த தலைமுடி. குளவிகளாய் நிலவொளியில் மின்னும் கண்கள்.

ஆற்றுத் திசையை நோக்கி அந்த நேரத்தில் அவர்(ன்) தனியே நடந்து கொண்டிருந்தார்(ன்). பாதங்களைக் கவனிக்க நேர்ந்தால் நீங்கள் மூர்ச்சையாகக்கூடும். அவை பூமியில் பதிவதாகச் சொல்லமுடியாது. பறப்பதாய்ச் சொல்லவேண்டும்.

அர்த்தசாமத்திலிருந்து முற்றிலும் விலகாத இரவு. ஊசிகளாய்க் குத்துகின்ற பனி, பகல்வெப்பத்தை முற்றிலுமாகத் தணித்து சீதளபூமியாக ஆக்கியிருந்தது. சாலையோரப் பூவரசமர இலைகளிலிருந்து எப்போதாவது சொட்டுகின்ற பனிநீர், மண்ணிற் கிடந்த பழுத்த இலைகள் மீது விழுந்து இரவின் நிம்மதியைக் குலைத்துக் கொண்டிருக்கிறது.

தெற்கில் வரிசையாய் வளர்ந்திருந்த பனைமரங்களைக் குறிவைத்து நடந்தார்(ன்).

சுவற்றுக்கோழியின் ஓசையோ, பெண்ணை ஆற்றினையொட்டிய தோப்பிலிருந்து இடைக்கிடை எழுகின்ற குயிலோசையோ, ஆந்தையின் அலறலோ அவர(ன)து கவனத்தினைத் தீண்டக் காணோம். பெண்ணை ஆற்றங்கரையினை இப்போது அடைந்திருந்தார்(ன்).

ஆறு உயிர்ப்பின்றிக் கிடக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடிப் பிடித்து விளையாடும் நீர்த்தாரைகள். முழு நிலவின் ஒளியில், பனியில் நனைந்திருந்த வெள்ளிப்பொடிகளாக மணற்துகள்கள்.. ஈரமணலில் கட்டுவிரியன் ஒன்று புரண்டுபுரண்டு, சட்டையை உரிக்கிறது. எச்சமிட்டுக்கொண்டு நகரும் நத்தைகள். அவற்றை அவசர அவசரமாய் ஓடும் சதையுமாய் மென்று விழுங்கும் குள்ளநரி. குதித்தோடும் குழிமுயல்கள். அவற்றைச் துரத்தித் செல்லும் உடும்பு. கரையை ஒட்டிய நாணற் புதர்களிலிருந்து மகிழம்பூ வாசம். சாரைப்பாம்பும் நல்லபாம்புமோ அல்லது சாரைப்பாம்பும் கொம்பேறிமூக்கனோ கூடுவதாற் பிறப்பதென நம்பப்படும் வாசம். நமதுடல் நடுங்க, குப்பென்று நாசிகளை அடைக்கின்ற வகையிற் வீசும் தாழம்பூவின் மணம்….

வறட்டுக்குளிரில், இப்போது பிறந்த மேனியாய்த் தோற்றம். உருவத்திற்குப் பொருந்தாத சிறிய தலை. முகத்திற்பாதியைத் தாடிக்கும் மீசைக்கும் தாரைவார்த்ததுபோக, எஞ்சிய பகுதிகளில்: அடர்ந்த புருவங்களினின்று வெளிப்பட்டிருந்தச் சிவந்த பெரியகண்கள். ஒட்டிய கன்னம். பெரிய மூக்கு. எலும்புக்கூட்டில் மெழுகிய பொலிவற்ற உடல். சுவாசிப்பின்போது எழுந்தடங்கும் மார்பெலும்பு. உடனசையும் உலர்ந்து சூம்பியகைகள். உளுத்த மூங்கிலொத்த நீண்ட கால்கள். இடைவிடாமல் கீழ்த்தாடை பக்கவாட்டில் அசைத்துகொண்டிருக்க, நாக்கு அபினுருண்டையை உருட்டி விளையாடுகிறது.

கிழக்கு நோக்கிப் பத்மாசனமிட்டு உட்கார்ந்தார்(ன்). சுக்கிரனை நினைத்தார்(ன்).

சுக்கிரன் பிருகுவின் புதல்வன். காதலின் பிரதிநிதி. கற்பனையின் பிரதி. களிப்பூட்டுபவன். மணமும் அவன். மலரும் அவன். மங்கை அவன். அன்பு அவன். ஆசையும் அவனே. கண்களைப் பிரதிபலிப்பான். ஜனன உறுப்புகளைக் காப்பவன். சிற்றின்பத்தை நுகரவைப்பவன். ஒரு பெண்ணின் இளம் வயதில் யோகமுள்ள சுக்கிரனின் அருள் கிட்டுமானால் அவள் ஒளிர்வாள். ஓர் ஆணின் வாலிபப்பருவத்தில் சுக்கிரனின் ஆட்சி நடந்தால், அவன் கவர்ச்சியால் எல்லா இன்பங்கைளையும் நுகர்வான். ஆடவருக்குப் பெண்டிரின் கூட்டுறவை அளிப்பான். காதலிலே வெற்றி தருவான். ராஜஸ குணத்தோன். சுக்கிரனின் யோகபலம் இருந்தால், அவனை அழைக்கமுடியுமானால், உடலை வருத்தினால் எல்லா இன்பங்களும் தேடி வரும். சுக்கிரன் உடலில் வீரியம். பஞ்சபூதங்களில் நீர். வெள்ளியும் இவனே! வைரமும் இவனே!

ஹேமகுந்த ம்ருணாலாபம் தைத்யானும் ப்ரமம் குரும்

ஸர்வ ஸாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாய!

பனி முல்லை, தாமரைபோன்ற வெண்மையான நிறமுடையவன். அசுரர்களின் குரு. எல்லா சாஸ்திரங்களையும் உரைப்பவனவன், பிருகுவின் புதல்வன், அந்தச் சுக்கிரனை வணங்குகிறேன். வணங்கினார்(ன்).

வாயில் அதக்கிக்கொண்டிருந்த அபினைத் துப்பிவிட்டுப், பரவிக் கிடக்கும் ஈரமான ஆற்றுமணலில் கால்கள் புதைய நடந்தார்(ன்). விழுகின்ற பனியோடு, காற்றும் கலந்து ஹோவென்று இரைச்சலுடன் இவனை அல்லது இவரை தீண்டிக் கடக்கின்றது.

ஆற்றைக் கடந்து வடதிசைக்கு வந்திருந்தார்(ன்). தனித்துக் கரையில்நின்ற வேப்பமரம், பேய்பிடித்த பெண்போலக் காற்றில் அசைந்து சூழலை அசாதரணப்படுத்திக்கொண்டிருந்தது.

வேப்ப மரத்தைப் பைராகி அடைந்திருந்தார்(ன்). இவரு(னு)க்காகக் காத்திருப்பதுபோல பசுஞ் சாணியிற் பரப்பிய சிறிய மேடை. செம்மண் சாயத்தில் கோலம். செப்புத் தகட்டில் ஓம், க்ரீம், ஐயும், கிலியும், சவ்வும், டவ்வும் எழுதப்பட்ட மகா யந்திரம். அந்த மகா யந்திரத்தைச் சுற்றி ஆவாரம்பூ, எருக்கம்பூ, பட்டிப்பூ போன்ற மலர்வகைகள் இறைந்து கிடந்தன.

மீண்டும் பத்மாசனமிட்டு உட்கார்ந்தார்(ன்). தியானத்தில் ஆழ்ந்து தன்னைச் சுருக்கினார்(ன்). மூச்சை அடக்கினார்(ன்). உதடுகள் இறந்தவர்களை அழைக்கும் அமிர்த சஞ்சீவி மந்திரத்தை உச்சரித்தன.

சித்தம் சிறிது சிறிதாக சிற்றின்பப் போகத்திற்குச் சித்தமாகிறது. அவ(ர்)ன் மனத்திலிருந்த பெண்ணை எண்ணி சிறிதுசிறிதாகத் தனது உடலை அணுத் துகள்களாகமாற்றிப் பிரபஞ்சத்துடன் கலக்கிறான்.

உடல் சிதறிப்போகிறது.. ஆத்ம சொரூபமாய் யோக நிலையினின்று விலகியெழுந்தார்(ன்). எதிர்பார்த்து நின்றா(ர்)ன்.

வடமேற்கு திசையிலிருந்து அவள் வருகிறாள். நெருங்கநெருங்க மல்லிகையும் முல்லையும் கலந்த மணம். இலவம்பஞ்சைத் திரட்டி விதைநீக்கிச் செய்த உடல். கால்களென்றேதுமில்லை ஆனாலும் நடையில் நளினம் – நடையில் நளினம் ஆனாலும் நடுக்கம் – நடுக்கம் ஆனாலும் இவரை(னை)நோக்கி ஈர்க்கப்பட்டு வருகிறாள். அந்நடைக்கேற்ப பெரிய இடையின் பின்புறத்தில் வலமும் இடமுமாக புரளும் நீண்ட சடை.. கொழுந்துட்டெரியும் தீயையும் குளிரவைக்கும் முகம் – ஆனாலும் பைராகியின் ஆத்மசொரூபம் தேடுகின்ற மோகன முறுவல் அங்கில்ல