• Home »
  • கதைகள் »
  • உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)

This entry is part of 39 in the series 20080612_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


“பிறருக்கு உரிமை அளிக்கத் தயாராக இல்லாதவர் எவரும் சுதந்திரம் அடையத் தகுதி பெறாதவர். நமது சக்தியை வீணான வாய்ப்பேச்சிலும் குறை காணுவதிலும் விரையமாக்காது, நாமெல்லாம் அமைதியாக ஆண்மையுடன் பணிபுரியச் செல்வோம். பிரபஞ்சத்தில் எந்த ஆற்றலும் தானடையத் தகுதியுள்ள யார் ஒருவரையும் அதிலிருந்து தடுத்து நிறுத்த முடியாதென நான் உறுதியாக நம்புகிறேன். நமது கடந்த காலம் உன்னதமாக இருந்தாலும், நான் வரப்போகும் ஒளிமயமான எதிர்காலத்தைத்தான் உண்மையாக நம்புகிறேன் ! இறைவன் நம்மைத் தூயவராகவும், பொறுமை உள்ளவராகவும், விடாமுயற்சி கொண்டவராகவும் ஆக்குவாராக.

தொன்னூறு சதவீத மூர்க்க மனிதர் மாண்டு போகிறார் ! மனித நேயம் கொண்டவரைத் தவிர வேறெவரும் நீண்ட காலம் வாழ்ந்திலர். எனது அருமைச் சிறுவர்களே ! எளியவர் மீது பரிவு காட்டுவீர் ! அறியாமையில் இருப்போர் மீது இரக்கம் காட்டுவீர் ! காலடியில் மிதிக்கப்படுவோர் மீது கனிவு கொள்வீர் ! . . . அஞ்சாதீர் ! செல்வச் சேமிப்பு உமக்கு மதிப்பு அளிக்காது ! பேரும், புகழும், பெருங் கல்விப் பட்டமும் உமக்கு மதிப்பு அளிக்காது. மாந்தர் மீது நீ கொள்ளும் அன்பே மதிப்பு அளிக்க வல்லது. உமது நேர்மைப் பண்பாடுதான் துன்பதைக் கடந்து செல்ல வழி காட்டுவது.

கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

சொத்தும் இல்லற வாழ்க்கையும் :

. . . . புரட்சிவாதிகள் அவற்றைப் பற்றி (சொத்தையும், இல்லறத்தையும்) மிகவும் பீற்றிக் கொள்வார் ! சமூகம் சொத்தை அழிக்காவிடில் சொத்துப் பிரச்சனை சமூகத்தை அழித்துவிடும் என்பதை எடுத்துக் காட்டுவது எளிது ! மேலும் பேரரசுகள் அனைத்தையும் சொத்துப் பிரச்சனைகளே சிதைத்துள்ளன என்பதிலும் ஐயமிருப்பதில்லை. . . . .

. . . . ஓர் உன்னத மனிதன் உருவாக வேண்டுமானால், ஆண் ஒருவன் விருப்பத்தாலும் மனத் தேர்வாலும் சேர்ந்து ஒரு பெண்ணுக்குத்தான் பிறக்க வேண்டும். . . . இல்லற ஒப்பந்த மோதிர அடிமைகள் படும் துன்பங்களைக் கண்டு பொதுநபரால் அவர் இருவரும் எள்ளி நகையாடப் படுவர் ! மனித இனத்தின் முக்கியக் குறிக்கோள் உன்னத மனிதர் உருவாக்கம் என்பது பூரணமாக உணரப்படும் போது அந்தக் கேலி நகைப்புகள் புறக்கணிக்கப்படும்.

. . . . ஆடுகளை இரைச்சிக்காகக் கொழுக்க வைப்பது, நாய்களுக்கு ஓட்டப் பந்தயப் பயிற்சி கொடுப்பது, சேவல்களைக் கோழிச் சண்டைக்கு வளர்ப்பது போல், மனிதரைச் சிறப்புப் பண்பாட்டுக்காகச் செம்மைப் படுத்துவது வீணான முயற்சி என்று எண்ணப் படலாம். மனிதருள்ளே இருக்கும் முக்கிய மெய்ப்பாடு நமக்குப் புலப்படாத ஒன்றாகவும், அவனுடைய உடம்பு பாகத்தைச் சேர்ந்ததாயும் உள்ளது ! நமது இருதயப் பம்பு (Heart Pump) உடம்பில் இரத்த ஓட்டம் இயக்கி வருவதை நாம் பெரும்பாலும் உணராமல் இருக்கிறோம். அந்த ஓட்டத்தைப் புறக்கணித்தால் நாம் இறந்து போய் விடுவோம். உன்னத மனிதனை உருவாக்கும் பெற்றோர், அவனை இனப்பெருக்கம் செய்யும் பயிற்சியாளர் (Breeders) இருவருக்குமே “மெய்யுணர்வில்லா சுயப்பண்பு உயர்ச்சி” (Superiority in the unconscious Self) வழி காட்ட வேண்டும்.”

பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)

****************

உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)

அங்கம் : 3 பாகம் : 11
(சுருக்கப் பட்டது)

நடிகர்கள்:

1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.

2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.

3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.

4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)

5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி

6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –

7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்

8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்

9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.

10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)

11 வேலைக்காரி மேரி (Parlormaid)

**************

(அங்கம் : 3 பாகம் : 11)
(சுருக்கப் பட்டது)

கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)

(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆனி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.

இளமாது: மிஸ்டர் தாஞ் சுவான் ! பெண்ணை வழிபட்டு விரட்டிச் செல்லும் நீவீர் என்னைக் கண்டதும் ஏன் ஓடினீர் ?

தாஞ் சுவான்: உன் கவர்ச்சியில் சிக்கிக் கொண்டு தவிக்கக் கூடாதே என்றுதான் ! உன்னை விட்டு நான் ஓடினாலும் நீ என் கண்ணை விட்டு மறையவில்லை ! ஆனாலும் உன்னைக் கண்டால் கால்கள் ஏனோ தாமாகவே ஓட்டம் பிடிக்கின்றன !

இளமாது: தெளிவோடுதான் பேசுகிறீரா ? உம்மை ஓட விடாமல் நான்தான் கயிற்றில் கட்டிப் போட்டிருக்கிறேன் ! மற்றவரிடம் நீவீர் குழைவது போல் என்னுடன் நடமாடுவது சற்று கடினம் தான் ! ஆடவர் இல்லப் பொறுப்புகளைப் புறக்கணித்துச் சென்றால், அவரை இழுத்து வந்து தோள்மீது அவற்றை ஏற்ற வேண்டும் ! நீவீர் இசைத் தேவதைகளை மணந்து கொள்ள விழைகிறீர் ! உன்னத ஓவியக்கலை, காவியக் கவிதையை உரிமை கொள்ள விரும்புகிறீர் ! அவை உமக்குக் கிடைக்கா ! ஏனெனில் அப்படி எதுவும் உண்மையாக இல்லை ! உமக்கு உடலும் உதிரமும் போதா என்றால் அவை இல்லாமலே நீவீர் தனித்து வாழ வேண்டும் ! அவ்வளவுதான் ! மாதர் யாவரும் இல்லறத்தில் உடலும் உதிரமும் உள்ள கணவருடன் வாழத்தான் வேண்டும். சில சமயங்களில் அவை சிறுத்தும் போகலாம். உடலும், உதிரமும் உள்ள மனைவிகளுடன் வாழக் கணவருக்குச் சகிப்புத் தன்மை வேண்டும் ! நான் சொல்வது உங்கள் யாருக்கும் பிடிக்காது.

தாஞ் சுவான்: என் அருமை மாதே ! எனது கோட்பாடுகளை காதல் மோகத்துக்கு (Romance) எதிராகச் சொல்லி விட்டாய். அதனால்தான் நான் காதல் மயவாதியை விலக்கி விட்டு கலைத்துவ வாதியை நாடினேன். என் கண் நோக்கையும் செவிக் கூர்மையும் செம்மைப் படுத்தியவன் கலைஞனே ! ஆனால் அவனது அழகு வழிபாடு, இன்ப வேட்டை, பெண் உயர்வெண்ணம் (Woman Idealizing) அனைத்தும் வாழ்க்கை சித்தாந்தம் போல் பாராட்டத் தகுந்தவை அல்ல. அதைக் கேட்ட காதல் மோகி என்னை வாழத் தகுதி இல்லாதவன் (Philistine) என்று முத்திரை குத்திப் போய் விட்டான்.

இளமாது: குறைகள் இருந்தாலும் மாதர் கூட உமக்குச் சிறிது அறிவு புகட்டியிருக்கிறார் என்பது என் கருத்து.

தாஞ் சுவான்: சிறிது அறிவா ? இல்லை இல்லை ! நிரம்பப் புகட்டியுள்ளார் பெண்டிர். மற்றவர் கூறியதை எனக்குத் தெளிவாக விளக்கியவர் பெண்களே. . . . அந்தக் கணம்வரை நான்தான் பீடத்தின் கோமான் என்பதை மறக்கவில்லை ! சிந்தனை ஏனென்று காட்டி எனக்கு அங்கீரம் அளிக்காமல் நான் எந்த முன்னடியும் வைக்கவில்லை ! நானொருக் காரணிப் பிராணி ! ஓர் உன்னத சிந்தனைவாதி ! ஒரு மூட வேதாந்தியிடம் சொன்னேன் : “நான் சிந்திப்பவன். அதனால் நான் நானாக இருக்கிறேன்,” என்று. ஆனால் ஒரு மாதுதான் இப்படி என்னைத் திசை திருப்பியவள் : “நான் நானாக இருப்பதால் நான் சிந்தனைவாதியாக இருக்கிறேன்.”

முதியவர்: இது வரட்டு வேதாந்தம் ! மேல்நிலைச் சித்தாந்தம் (Metaphysics) ! நீவீர் பீடத்தை விட்டுக் கீழே இறங்கி வந்து தரைமீது நின்று உமது வீர தீரப் பெண் வேட்கைப் கதைகளைப் பேசினால், சற்று கேட்கலாம்.

தாஞ் சுவான்: உமக்குத் தெரியுமா இது ? பெண்ணின் முகத்தை நேருக்கு நேராக நோக்கி நின்றால் எனது மூளையின் ஒவ்வோர் நரம்பும் சொல்லும் : “பெண்ணை விலக்கி உன்னைக் காத்திடு.” எனது நெறிப்பாடு வெறுக்கும் : “பெண்ணா ? வேண்டாம்.” எனது உள்ளுணர்வு சொல்லும் : “மாதா ? வேதனை.” பெண்டிர் மீது எனக்குண்டு பரிவு ! அனுதாபம் ! பரிதாபம் ! பெண்ணிட மிருந்து பிழைத்துக் கொள்ள நானொரு வழி கண்டுபிடித்து வரும் போது, விதி என்னைப் பெண்ணொருத்தி அணைப்பிலே தள்ளியது, கடற்பறவை வாயில் ஒரு மீனைத் தூக்கி வீசியதைப் போல !

இளமாது: (கடகடவெனச் சிரித்து) மிஸ்டர் தாஞ் சுவான் ! வேடிக்கையாகப் பேசுகிறீர் ! கடற்பறவை யார் ? மீன் என்பது யார் ? பெண்ணை ஆணாதிக்கம் ஆட்டிப் படைத்தாலும், ஆண்வர்க்கம் எல்லாம் பெண்ணின் கவர்ச்சிக்கு அடிமைதான் ! அதை உமது கூற்று நன்றாகவே முரசடிக்கிறது !

சாத்தான்: மாதரால் உமக்கு என்ன இழப்பு ஏற்பட்டது ? என்ன இழந்தாலும் பெண்ணோடு வாழ்ந்த வாழ்வு உமக்குப் பூரணத்தையும் பூரிப்பையும் அளிக்க வில்லையா ?

தாஞ் சுவான்: பூரித்தது உண்மை, ஆனால் ஞானத்தோடு இல்லை ! அந்தக் கணம் என்னை நானாக்கியது ! பெண்மை புகுந்து என்னை ஆணாக்கியது ! இனவிருத்திச் சக்தி (Life Force) எத்தகைய வலுக் கொண்டது என்பதை உணர்ந்தேன் ! எத்தகைய எதிர்ப்பும் அதற்கு முன் வலுவற்றுப் போவதை உணர்ந்தேன் ! கவனக் கண்காணிப்பு, கவனத் தேர்ந்தெடுப்பு, நேர்மை, மனித மதிப்பு, கற்பு
ஆகியவற்றை உரைப்பது எத்தகைய உன்னதமானது என்பது விளங்கியது !

இளமாது: கற்பை எதிர்த்துப் பேசும் எந்தக் கடுமை வாசகமும் என்னை இழிவு படுத்துவதாகும்.

தாஞ் சுவான்: மாதே ! நான் கற்பை எதிர்த்துப் பேச வில்லை. பத்துப் பிள்ளைகள் பெற்று ஒரு கணவனுக்கு மனைவியாய் வாழ்ந்து புறக்கணிக்கப் பட்டால் நீ என்ன செய்திருப்பாய் ?

இளமாது: என்ன செய்திருப்பேன் நான் ? பத்துக் கணவரை மணந்து பிள்ளையே இல்லாமல் இருந்திருப்பேன் ! அப்படித்தான் பூமியில் இனவிருத்தி இடத்தை நான் பூர்த்தி செய்திருப்பேன் ! பெண்டிர் இனவிருத்திக்கு மட்டும் பிறந்தவர் அல்லர் !

முதியவர்: மெச்சுகிறேன் மேடம் ! சரியான பதில் ! தாஞ் சுவானை அப்படித்தான் தாக்கிப் பேச வேண்டும் ! தாஞ் சுவானின் இனவிருத்திக் கோட்பாடுக்கு நல்ல உதை கொடுத்தாய் நீ !

தாஞ் சுவான்: அதில் எனக்கு வேறுபாடு உண்டு. காதலோ, கற்போ அல்லது இல்லற நிலைப்போ
பற்றி நான் பேச வரவில்லை. நீ பத்துக் கணவருடன் வாழ்ந்து பத்துக் குழந்தைகள் பெற்று இந்தப் பூமியை நிரப்பினால் நானதைப் பெரும் பயனாக வரவேற்பேன். மாதருக்கு உரிமை கொடுத்தால் இரண்டு முறை என்ன, மூன்று முறை கூட மணந்து கொள்ளத் தயங்கா திருப்பார் ! அவ்விதம் மூன்று முறைச் செய்த திருமணங்களில் பனிரெண்டு பிள்ளைகள் பெற்றால் இந்தச் சமூகம் கண்டிக்காமல் அவரை ஏற்றுக் கொள்ளும் ! சட்ட முரணாய்ப் பிறந்த கள்ளப் பிள்ளைக்கு இல்லாத பொதுமக்கள் வரவேற்பு, மூன்று திருமணங்களில் பனிரெண்டு பிள்ளைகள் பெற்ற தாயிக்குக் கிடைக்கும் ! அதில் ஐயமில்லை !

(தொடரும்)

***************************

தகவல்

Based on The Play

“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)

1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)

2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)

3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973

4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 10, 2008)]

Series Navigation