இரண்டு கவிதைகள்

This entry is part of 42 in the series 20030626_Issue

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி


1. ஒரு கடத்தல் கதை

முதன் முதலில்
இந்த ஆற்றைக் கடந்தபோது
அம்மாவின் இடுப்பில் இருந்தேன்

புத்தகப் பையோடு
கால்சட்டையையும்
தலையில் சுமந்தவாறு
நடந்து கடந்திருக்கிறேன்

நீர்ப்பெருக்கில்
இளமை முறுக்கில்
நண்பர்சூழ
நீந்திக்கடந்திருக்கிறேன்

மணல் ஓடிய ஆற்றில்
பாதுகை இல்லாத
இரு அழகான பாதங்களை
சுமந்து கடந்திருக்கிறேன்

அக்கரை நாணல் புதரில்
அழகிய பாதங்களை
முத்தமிட்ட பிறகு
என்ன நடந்தது என்பதை
இருவர் மட்டுமே
அறிந்திருந்தோம் –
ஊரார் அறியும் வரை.

அழகிய பாதங்களுக்குச்
சொந்தக்காரி
இப்போது என் அம்மாவைப்போல்
ஆற்றைக் கடக்கிறாள்
என்னைப்போல் ஒருவனை
இடுப்பில் சுமந்து.

2. தொலைந்தது

தேடினாலும் கிடைக்காது
தொலைந்து போனது
பூமியைவிடப் பெரியது

புதைந்து போயிருக்கலாம்
தோண்டினாலும்
எடுக்கமுடியாது
புதைந்து போனது
பூமியைவிடப் பெரியது

gk_aazhi@rediffmail.com

Series Navigation