சி. ஜெயபாரதன், கனடா
புனித நிலவே ! நீ சாட்சியாய் நில் எனக்கு !
மனிதரின் புரட்சியில் வெறுப்பான
நினைவுகளே மேலெழும் !
(தளபதி ஆண்டனியைப் புறக்கணித்த தற்கு)
மடத்தனமாய் எனோபர்பஸ் நேரே நின்முன்
மனம் வருந்து கின்றான் ! … (எனோபர்பஸ்)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
மனச் சோர்வின் எதேச்சைக் காதலியே !
நச்சிரவின் ஈரம் பொழியட்டும் என்மேல் !
விருப்பத்துக் கெதிராகப்
புரட்சி செய்திடும் வாழ்வு !
வருத்துவ தில்லை அது ! தீப்பொறி யான
கொடூரத் தவறுகள் முன்னே
எறிந்திடு என் னிதயத்தை !
நொருங்கிடும் அது தூளாய்த்
துயரில் காய்ந்து போய் விட்டால் !
பாழான எண்ணம் அனைத்தையும்
மீளாமல் தடுத்திடும் ! அந்தோ ஆண்டனி !
புறக்கணிக்கும் தலைவ னென,
ஓடுகாலி நானென
முதலிடத்தில் என்னைப்
பதிவு செய்யட்டும் உலகம் !
ஓ ஆண்டனி ! ஓ ஆண்டனி ! … (எனோபர்பஸ்)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
இந்தப் போக்கிரி எகிப்தியன் எனக்கு
இழைத்து விட்டான் துரோகம் !
எனது கடற்படை அணியும்
அடி பணியும் தோற்றுப் போய் !
குடித்துக் கும்மாளம் அடித்துக் கூடி
தொப்பியைத் தூக்கி மேலெறிந்து வெற்றி
ஆரவாரம் எழுந்திடும் ஆங்கே !
மும்முறை மாறிய வேசி ! உன் மீதுதான்
வெம்போர் புரியும் என்னிதயம் !
வெளியே அனைவரும் ஒழிவீர் !
ஓடிப் போவீர். .. (ஆண்டனி)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்
ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)
கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 6
ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.
எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். அவனைக் கைது செய்ய அக்டேவியஸ் எகிப்துக்குத் துரத்திச் செல்கிறான்.
++++++++++++++++++
கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 6
நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியா அரண்மனையில் ஆண்டனியின் மாளிகை. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, புதிய தளபதி ஸ்காரஸ், ஈராஸ், கிளியோபாத்ரா, பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
காட்சி அமைப்பு: இரண்டாவது தளப்போரில் வெற்றி பெற்ற ஆண்டனியை அக்டேவியஸ் மீண்டும் கடற் போருக்கு அழைக்கிறான். ஆண்டனி வருத்தமோடு கடற்போருக்குத் தயாராகிறான்.
ஆண்டனி [சினத்துடன்] சிறுவன் அக்டேவியஸ் மறுபடிப் போருக்கு அழைக்கிறான் ! மூடன் ! முரடன் ! மூர்க்கன் ! நேற்று நான் கொடுத்த அடியில் பீறிட்ட குருதிகூட இன்னும் காயவில்லை ! போருக்கு மீண்டும் வருகிறான் பொடியன் ! அதுவும் கடற்போருக்கு ! முதல் முறியடிப்பில் மூழ்கிப் போன என் கப்பல்கள் மூச்சிழந்து கடலுக்குள் துருப்பிடித்துக் கிடக்கின்றன ! உடைந்து முடங்கிப் போன கப்பல்களை துறைமுகத்தில் செப்பமிட நேரமில்லை, கப்பல் துறை நிபுணரில்லை ! எப்படிக் கடற்போரில் இறங்குவது ? ஸ்காரஸ் நீ சொல் ! எத்தனை மணிநேரத்தில் கப்பலைச் செப்பமிடலாம் ? பராமரிப்புக் குழுவில் இன்னும் எத்தனை பேர் கைவசம் உள்ளார் ?
ஸ்கார்ஸ்: ஆண்டனி ! எத்தனை மணிநேரத்தில் என்று கேட்காதீர், எத்தனை நாட்களில் என்றால் நான் பதில் சொல்ல முடியும். பராமரிப்புத் துறையாளரில் பாதிப் பேர் எனாபர்பஸ் நீங்கிய போது கூடச் சென்று அக்டேவியஸ் படையில் சேர்ந்து கொண்டார் ! அவருக்கு நாமளித்த ஊதியப் பணம் போதாதாம் ! இப்போது நம் கைவசம் உள்ள பராமரிப்பாளர் ஐம்பது அல்லது அறுபது பேர்தான் ! முடங்கிக் கிடக்கும் படகுகளை ஒரு வாரத்தில் செம்மைப் படுத்தலாம் ! கடற்கரையில் தொய்ந்து கிடக்கும் கப்பல்களைச் சீர்ப்படுத்த பல மாதங்கள் ஆகலாம் !
ஆண்டனி: அதை நான் ஏற்க முடியாது, வாரங்களும் மாதங்களும், நாட்களாய் குறைய என்ன வழிகள் உள்ளன ? அதைக் கூறு. பராமரிப்புப் பணிகளுக்கு எகிப்தியர் உதவியை நாடிப் பயன்படுத்திக் கொள் !
[கிளியோபாத்ரா சேடிகள், பாதுகாவலருடன் நுழைகிறாள்]
கிளியோபாத்ரா: [புன்னகையுடன்] ஆண்டனி, கவலை வேண்டாம். என்னிடம் 75 படகுகளும், 25 கப்பல்களும் எஞ்சி உள்ளன ! கடற்படை வீரர்கள் பத்தாயிரம் பேர் இருக்கிறார், அவர்களில் ஐநூறு பேர் பராமரிப்பு வேலை செய்யத் தகுதி யுள்ளவர்.
ஆண்டனி: [கனிவுடன்] நல்ல நேரத்தில் வந்தாய் கிளியோபாத்ரா ! கடற் போருக்கு நான் தாயாராக இருக்கிறேன். உன் உதவி எனக்குத் தேவை, கடற் போருக்குத் தேவை. [ஆங்காரமாக] நீரிலும் போரிடுவேன் ! நெருப்பிலும் போர் புரிவேன் ! முடிந்தால் நீல வானிலும் போரிடுவேன் ! [ஸ்காரஸைப் பார்த்து] நாம் குன்றின் சிகரத்தில் உள்ளோம், அது தளப்போருக்கு மட்டும் தகுந்தது ! கடற்போருக்குத் தகாதது ! முதலில் நமது கப்பல்கள் தயாராக வேண்டும் ! பிறகு கூடாரங்கள் துறைமுகத்தின் அருகே அமைக்கப் பட வேண்டும். அக்டேவியஸ் படையினர் என்ன செய்கிறார் என்று முன்கூட்டி நமது ஒற்றர் குழு உளவித் தகவல் அனுப்ப வேண்டும். முதலில் அவரை மாறு வேடத்தில் அனுப்பு.
ஸ்காரஸ்: அப்படியே செய்கிறேன் ஆண்டனி ! மகாராணி ! உங்கள் கடற்போர்த் தளபதியை அழைத்து என்னைக் காணும்படி ஏற்பாடு கொடுங்கள்.
கிளியோபாத்ரா: உடனே செய்கிறேன். [பெல்லோடோரஸைப் பார்த்து] பெல்லோடோரஸ் ! நமது கடற்படைத் தளபதியை என்னிடம் அழைத்து வா
[அருகில் நிற்கும் பெல்லோடோரஸை அனுப்பிப் பின்னால் கிளியோபாத்ராவும் வெளியே செல்கிறாள் ]
ஸ்காரஸ்: ஆண்டனி ! மகாராணி முன்னால் பேச முடியவில்லை என்னால் ! கிளியோபாத்ராவின் படகுகளில் புறாக்கள் கூடுகட்டி உள்ளன. கப்பல்களின் திசை திருப்பிகள் துருப்பிடித்துப் போயுள்ளன. கப்பலோட்ட அடிமைப் படையினர் மட்டும் ஆயிரக் கணக்கில் உள்ளார் ! கடற்தகுதி பெற்ற கப்பல்கள்தான் எகிப்தில் அதிகமாக இல்லை ! அக்டேவியஸின் பயங்கர ரோமானியக் கப்பல்கள் முன்பு, எகிப்தின் கப்பல்கள் எதிர்த்து மிதக்க முடியாது.
ஆண்டனி: அப்படியா ? அந்த போக்கிரி எகிப்தியன் கிளியோபாத்ராவின் கடற்படைத் தளபதி எனக்குத் துரோகம் செய்து விட்டான். முதல் போரில் என்னை வஞ்சித்து விட்டான். பகைவர் வெற்றி பெற அவருக்குப் பாதை காட்டினான். நமது கப்பல்கள் முன்னேறிச் செல்ல முடியாது முடக்கி மூழ்கிப் போக வழி வகுத்தான். அவன் கிளியோபாத்ரா சொற்படிக் கேட்பவன். உன்னுடன் ஒத்துப் போரிடுபவன் என்று மட்டும் எண்ணாதே ! [கடுஞ் சினத்துடன்] கிளியோபாத்ரா முதற் கடற்போரில் என்னை நடுக்கடலில் விட்டுவிட்டு ஓடிப் போனவள் ! மும்முறை வேசி அவள் ! முதற் கணவன் தம்பி டாலமி ! இரண்டாம் கணவர் ஜூலியஸ் சீஸர். மூன்றாவது பதி முதுகெலும்பு ஒடிந்த ஆண்டனி ! அடுத்து அவள் கண்ணோட்டம் அக்டேவியஸ் மீதுள்ளது ! அதனால்தான் நான் தோற்றுப் போனாதாய் எண்ணி என்னைப் போர்க்களத்தில் விட்டுவிட்டு ஓடிப் போய் விட்டாள் ! யாரையும் நான் நம்ப முடியவில்லை ! ராணி உட்பட எகிப்த் நாட்டவர் அனைவரும் வஞ்சகர் ! அவளது வலையில் அடைபட்டுப் போனவன் அப்பாவி ஆண்டனி !
ஸ்காரஸ்: தளபதி இந்த இக்கட்டு நிலைமையிலிருந்து எப்படித் தப்புவது என்று நாம் முதலில் திட்ட மிடுவோம். இல்லாவிட்டால் நாமெல்லாரும் அக்டேவியஸால் கொல்லப் படுவோம்.
ஆண்டனி: அதிர்ஷ்டம் ஆண்டனியை விட்டுப் போய் நாட்கள் ஆகிவிட்டன. மரணத்தின் நிழல் என்னைத் தொடர ஆரம்பித்து விட்டது. நான் எனது நிழலை அழிக்க முனைகிறேன். நான் அழிந்த பின் அது என்னைத் தொடராது ! என்மீது கிளியோபாத்ராவுக்கு நம்பிக்கை போய்விட்டது. நானினி வெல்ல மாட்டேன் என்றவள் உள்ளத்திலே வேரூன்றி விட்டது. அவர் பார்வை எல்லாம் இப்போது அக்டேவியஸ் மீது விழுந்து விட்டது. நான் எப்போது வீழ்ந்து மடிவேன் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள்.
[அப்போது கிளியோபாத்ரா பெல்லோடோரஸ், கடற்படைத் தளபதி சூழ வருகிறாள்]
கிளியோபாத்ரா: [ஆச்சரியமாக ஆண்டனியை நோக்கி] ஏன் என்னினிய நேசர் ஆண்டனி ஒரு மாதிரி பேசுகிறார் ? என்ன நிகழ்ந்து விட்டது இப்போது ? ஈதோ என் கடற்படைத் தளபதி ! உங்கள் போர்த் திட்டத்தை அவரிடம் விளக்கிக் கூறுங்கள்.
ஆண்டனி: [சற்று கடுமையாக] கிளியோபாத்ரா ! உன்னினிய நேசன் நானில்லை ! அந்தக் காலம் போய்விட்டது. உனக்கொரு புது நேசன் உன்னை ஆட்கொள்ளக் காத்திருக்கிறான். என் வாழ்வு சீஸர் போல் முடியப் போகிறது. கண்ணே கிளியோபாத்ரா ! என்னுயிரைப் போக்க அக்டேவியஸ் தன் வாளைக் கூர்மைப் படுத்திக் கொண்டிருக்கிறான். என் கதை முடியும் ! உன் கதை தொடரும் ! கவலைப் படாதே ! உன்னை மீண்டும் எகிப்த் ராணியாக்கி முடி சூட்டி வைப்பான் அக்டேவியஸ் ! உன் காதல் வரிகளை இனி நீ அவனுக்குப் பாடிப் பரவசப்படுத்து ! ஒழிந்து போ கிளியோபாத்ரா ! நானினி உன் நேசனில்லை ! மோசடியில் மூழ்கி வரும் மூடன் நான் ! நீயோ உன் கடற்படையோ இனி என்னைப் பாதுகாக்க முடியாது. போ கிளியோபாத்ரா போ ! என் முன் நிற்காதே ! [கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான்]
கிளியோபாத்ரா: [மனம் நொந்து] ஏனிப்படி என்னை அவமானப் படுத்துகிறீர் ஆண்டனி ! இனிதாகப் பேசும் உங்கள் நாக்கு இன்று நஞ்சாகக் கொட்டுகிறதே ஏன் ? ஏன் ? ஏன் ? அப்பாவி ராணியைத் தப்பாகப் பேச எப்படித் துணிந்தீர் ? அத்தனை கீழாகப் பேச நான் என்ன தவறிழைத்தேன் ஆண்டனி ? என்னை ஏன் வெறுக்கிறீர் ? உங்களைத் தவிர எவரையும் நான் மனதில் நினைத்ததில்லை ! அக்டேவியஸ் உங்களுக்கு மட்டும் பகைவன் அல்லன். எனக்கும் பகைவனே ! அந்தப் பொடியனையா நான் நேசிப்பேன் ?
[கிளியோபாத்ரா அழுகிறாள்]
(தொடரும்)
*********************
Based on The Plays:
1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]
2. William Shakespeare’s Julius Caesar [Play-2]
3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]
4. Britannica Concise Encyclopedia [2003]
5. Encyclopedia Britannica [1978 & 1981]
6. Life of Antony By: Plutarch
7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.
8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia
9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]
10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]
11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 20, 2007)]
- ரஜினியின் “சிவாஜி”யின் வசூல் சாதனை – திரைப்படத்தின் சாதனையா? – ஏ.வி.எம்.நிறுவனத்தின் வியாபார உத்தியின் சாதனையா?
- இலக்கிய வட்டம், ஹாங்காங்
- சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ? மனிதர் கடைப்பிடிக்கக் கூடிய ஐம்பது முறைகள் -1
- நான்…….?
- கடிதம்
- மனவெளி கலையாற்றுக் குழு – 14 ம் அரங்காடல்
- மெய் எழுத்து வெளியீடு
- கடிதம்
- மலர் மன்னனின் …..மனவெளிக்கு!
- குணவதிமைந்தனின் ‘புதுச்சேரியில் பாரதி’ குறும்பட வெளியீட்டு விழா
- மலேசியக் கவிஞர் இளம்வழுதியின் புதிய நூற்றாண்டுத் தமிழர் நூல் வெளியீடு
- இசைக்கவிதைப் போட்டிக்கு நடுவர் ரமணன் கருத்துக்கள்
- ‘கதைச்சொல்லி’யும், கதையும்
- விழலுக்கு நீர் பாய்ச்சி ஓய்ந்து போனவர்களின் மூதுரை ! – சால் ஒன்று.
- லாகவமா? லாவகமா?
- காலம் மட்டுமே அறியும் ரகசியம்
- காதல் – King Arthur – கார்ல் ஜுங்
- சிவாஜி முதல் சிவாஜி வரை
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – இசைக்கவிதைப் பிரிவு
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 6
- கனகமணி!
- தீபச்செல்வன் கவிதைகள்
- அன்னையின் வீடு
- புரிந்து செய்!!
- நித்திரை யோகம்/மலம்கொண்ட உடல்
- ஒரு சொல்.. தேடி..
- காதல் நாற்பது (26) தோழமை தேடிய உள்ளொளி !
- கோவிலில் எம்மதத்தார்
- தமிழர் நீதி
- ஷா ஆலம் முகாமின் ஆவிகள்
- “கிராமம்”
- தொடர் நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்!
- கால நதிக்கரையில்……(நாவல்)-11
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 15