சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி பாகம்:3)

This entry is part of 28 in the series 20050506_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘கடவுளின் பெயரால் நான் சொல்கிறேன்! நமது உன்னத பிரபுவின் ஆலோசனை உனது அறிவை விட உயர்ந்தது; மக்களுக்கு மிகவும் பாதுகாப்பளிப்பது. என்னை நீ ஏமாற்ற நினைத்தாய்! இறுதியில் ஏமாற்றப் பட்டவன் நீ! நான் உனக்கு அனுப்பும் படை உதவி போல், எந்த பிரென்ச் இராணுவ ஜெனரலுக்கும் இதுவரைக் கிடைத்த தில்லை. ஏனென்றால் என் உதவிகள் யாவும் கடவுளின் மூலமாக வருகின்றன. ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

ஜோன் ஆஃப் ஆர்க்கின் பிறப்பு, இளவயதுச் சூழ்நிலை, மதக்கல்வி, இளமை, பெண்மை, படிப்பின்மை, பட்ட இடையூறுகள் ஆகியவற்றை ஆழ்ந்து நோக்க வேண்டும். அபாரப் போர்த் திறமையைக் கைக்கொண்டு போர்க்களத்தில் படைகளைச் செலுத்தி வெற்றிபெற அவள் பயன்படுத்திக் கொண்டது, நீதி மன்றத்தில் தனியாக நின்று ஆணாதிக்கத்தை எதிர்த்து அவள் வாதாடியது போன்ற தீரச் செயல்களைச் சீர்தூக்கிப் பார்த்தால், அவளைப் போன்ற மிக உன்னத பெண்ணினப் பிறவி இதுவரை உலகில் படைக்கப் படவில்லை!

அமெரிக்க எழுத்தாள மேதை: மார்க் டிவைன் (1835-1910)

கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையைச் சூனியக்காரி என்று ஆங்கில ஆணாதிக்க வர்க்கம் குற்றம் சாற்றி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்த ஒன்று. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன் பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு, சிறுவயதிலேயே கடவுளால் ஏவப் பட்டவள். கல்வி கற்காத கிராமத்து நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த்துறைச் சூழ்ச்சியும், மக்களை முன்னடத்திச் சென்று அவளது குறிக்கோளான பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலி, தெளஃபின் சார்லஸ் மன்னனாக மகுடம் சூட உதவியது. ஆயினும் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் போர்ச் சூழ்ச்சிக்கு மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

இரண்டாம் காட்சி

காலம்: கி.பி.1429

இடம்: சின்னானில் உள்ள தெளஃபின் மன்னரின் கோட்டை (King Dauphin ‘s Castle in Chinon)

நேரம்: காலை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

1. தெளஃபின் மன்னர் 26 வயது. [Dauphin (King Charles VII)]

2. ஆர்ச்பிஷப் பாதிரியார், 50 வயது, ரைம்ஸ் பகுதியை சேர்ந்தவர். [The Archbishop of Reims]

3. சாம்பர்லைன் பிரபு [The Lord Chamberlain, De La Tremouille] 45 வயது.

4. புளுபியர்டு என்று அழைக்கப்படுல் கில்லெஸ் திரைஸ் [Gilles De Rais] 25 வயது.

5. போர் வெறியர் காப்டன் லாஹயர்.

6. ஜோன் ஆஃப் ஆர்க், பெளலிஞ்சி ஆகிய தூதுவர்.

7. மகாராணி, அரண்மனைத் தோழியர், படைக் காவலர், பணியாட்கள்.

அரங்க அமைப்பு: சின்னான் கோட்டை அரண்மனையில் தெளஃபின் அரசர் தனது தனி மாளிகையில் ஓய்வாக இருக்கிறார். ஆர்ச்பிஷப்பும், சாம்பர்லைன் பிரபுவும் மன்னரைக் காண வெளி மாளிகையில் காத்திருக்கிறார்கள். ஆங்காரத் தோற்றத்தில் ஆர்ச்பிஷப் இங்குமங்கும் நரம்புத் துடிப்போடு நடந்து கொண்டிருக்கிறார். நாற்காலியில் சாம்பர்லைன் கர்வமாய் அவரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.

சாம்பர்லைன்: [பொறுமை இழந்து ஆவேசத்துடன் எழுந்து] ஏன் நமது பொறுமையைச் சோதிக்கிறார், மன்னர் ? அவருக்கு ஏதேனும் பிசாசு பிடித்து விட்டதா ? எத்தனை நேரம் இப்படிக் காத்துக் கிடப்பது ? நாமென்ன கற்சிலையா ? வரவர மன்னர் நம்மை மதிப்பதே இல்லை! மதித்திருந்தால் இப்படி நம்மை மணிக்கணக்கில் காக்க வைப்பாரா ? மன்னருக்கு என்ன மமதை ? என்ன செருக்கு ?

ஆர்ச்பிஷப்: ரோமன் காத்திலிக் பாதிரிகளின் அதிபதி, நான்! சின்னான் நகர் மரியாதைக்குரிய மதச் சின்னம் நான்! மதாதிபதித் திலகன் நான்! மன்னர் கற்றுக் கொள்ளாத பாடங்களில் இது ஒன்று! ரோமானிய மதத் தளபதிக்கு முதலில் மதிப்பளி என்று யார் அவரது கழுத்தில் மணிகட்ட முடியும் ? சிறு வயது முதலே இறுமாப்பும், ஏளனப் புத்தியும் இவருக்கு உண்டு! துள்ளித் திரிகின்ற காலத்திலே யார் அவரது துடுக்கை அடக்கி ஒழுக்கத்தை பழக்கப் படுத்தினார் ? மதாதிபதிகளிடம் பணிவில்லாத மன்னனுக்குப் பண்பு இனிமேலா உண்டாகப் போகிறது ? பெரியவாளைத் தெரிந்து கொண்டும் வீணாய் இப்படிக் காக்க வைப்பது, அரச சம்பிரதாயம் அல்லவா ? இப்படி நம்மை அவமதிப்பது அரசனின் சிறப்புரிமையா ? அல்லது பிறப்புரிமையா ?

சாம்பர்லைன்: அரசனின் இறப்புரிமையாக எனக்குத் தெரிகிறது! அழிவு வரும் பின்னே! அகங்காரம் வரும் முன்னே! உங்களுக்குத் தெரியுமா, அரசர் எவ்வளவு பணம் என்னிடம் கடன் வாங்கி யிருக்கிறார் என்று ? வாங்கிய கடனை இன்னும் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதும், உங்களுக்குத் தெரியமா ?

ஆர்ச்பிஷப்: ஓ! உங்கள் கதை அப்படியா ? இப்போது எனக்கு தெரிகிறது, உங்களைக் காக்க வைப்பதின் காரணம்! மக்கள் கட்டும் வரிப்பண வருவாய் எல்லாம் பிரிட்டாஷ்காரனுக்குப் போகிறது! பாவம், ஏழை மன்னர் என்ன கூழையாக குடிப்பார் ? உங்களைப் போன்ற செல்வந்தரை நாடித்தான் அரசர் வாழ முடியும்! கடனை மறந்து விடுங்கள்! இந்தப் பிறவில் கிடைக்காது! பொம்மை ராஜா உண்மை ராஜாவாகப் போவதில்லை! நிம்மதியாக இருங்கள்! நாமிருவரும் ஒரே படகில்தான் போகிறோம்! [காதில் மெதுவாக] மன்னர் என்னிடமும் கடன் வாங்கி இருக்கிறார்! கவலைப் படாதீர்கள்! எனக்கும் என்பணம் கிடைக்காது.

சாம்பர்லைன்: எப்படி நிம்மதியாக இருப்பேன் சொல்லுங்கள் ? எனக்கு இராப்பகலாகத் தூக்கம் கிடையாது! நான் கொடுத்த தொகை கொஞ்சமல்ல, அஞ்சாமல் இருக்க! போனவாரம் மட்டும் தந்தது, இருபத்தி ஏழாயிரம் பிராங்க்! இதுவரைக் கொடுத்தது மொத்தம், எழுபத்தி ஏழாயிரம் பிராங்க்! நெருப்புப் பற்றி எரியும் நெஞ்சில் நிம்மதி எங்கே ? கடன் கொடுத்தார் நெஞ்சம் போல், கடன் பட்டார் நெஞ்சம் துடிப்பதில்லை!

ஆர்ச்பிஷப்: உங்களைப் போன்ற செல்வந்தர் இவ்விதம் நன்கொடை அளிக்கா விட்டால், மன்னர் கதி என்னாவது ? அரசரும் இல்லாவிட்டால், ஆளும் பரம்பரையே அழிந்து விடாதா ? அரசருக்கு உண்டியும் உயிரும் அளிக்கும் உங்களுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும்!

சாம்பர்லைன்: எனக்கு மோட்சம் கிடைத்தாலும் சரி, கிடைக்கா விட்டாலும் சரி, கடனைத் தராத மன்னர் நரகத்திற்குப் போக வேண்டும் என்று சாபம் போடுங்கள்!

ஆர்ச்பிஷப்: (தயக்கமுடன்) மன்னருக்கு நான் சாபமிட முடியாது! உங்களுக்கு மோட்ச புரியில் ஓரிடம் ஒதுக்க வேண்டிக் கொள்ள முடியும்! … ஆமாம் இத்தனை பணமும் எங்கேதான் போகிறது ? … மன்னர் ஒரு புதிய ஆடை அணிந்ததை நான் பார்த்ததில்லை! மாளிகையில் மதாதிபதிகளுக்கு ஒரு விருந்து அளித்ததை நான் கேள்விப் பட்டதில்லை! ஆனாலும் அவரைப் பார்த்தால் சிக்கன மன்னராகவும் தெரியவில்லையே!

சாம்பர்லைன்: பணத்தை விழுங்குவது அவரல்ல! அவரது ஆடம்பர அன்னையும், பிரிட்டிஷ் அரசனை மணந்திருக்கும் அவரது அழகிய தங்கையும் சரியான பணம் தின்னிகள்! [அப்போது ஒரு காவலர் வருகிறார்] …. யார் வருகிறார் பாருங்கள் ? … மன்னரா ?

காவலர்: மன்னர், இல்லை பிரபு! வருபவர் திருவாளர் கில்லெஸ் திரைஸ்.

சாம்பர்லைன்: வாலிபர் புளுபியர்டு [கில்லெஸ் திரைஸ்] வருவதை ஏன் அறிவிக்கிறாய் ?

காவலர்: கில்லெஸ் கூட காப்டன் லாஹயரும் வேகமாக வருகிறார்! ஏதோ முக்கியமாக நடந்திருக்கிறது! அவர்கள் வேக நடையைப் பார்த்தால் பயமாக இருக்கிறது!

[கில்லெஸ் விரைவாக உள்ளே நுழைந்து, ஆர்ச்பிஷப்பை அணுகுகிறார். காவலர் வெளியேறுகிறார்]

கில்லெஸ் (புளுபியர்டு): வந்தனம் பாதிரியாரே! பணியைச் சிரமேற் கொண்டு உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான செம்மறி ஆடு நான்! … காப்டன் லாஹயருக்கு என்ன ஆனது, தெரியுங்களா ?

சாம்பர்லைன்: யாரையாவது வழக்கப்படிக் கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பார்! வாரி வழங்கும் அவரது அசிங்கமான வாயைக் கட்டுபவர் இந்த ஊரில் யாரும் கிடையாது!

கில்லெஸ்: அது அந்தக் காலம் ஸார்! இப்போது காப்டன் லாஹயர் வாயிக்குக் கட்டுப் போட்டவர் ஒரு சாதாரண படையாளி!

லாஹயர்: நல்ல வேடிக்கை! என் வாயிக்குப் பூட்டுப் போட்டவர், சாதாரணப் படையாளி இல்லை! படையாளிபோல் உடையணிந்த ஒரு பெண் தேவதை!

ஆர்ச்பிஷப், சாம்பர்லைன், கில்லெஸ்: (மூவரும் ஒருங்கே) தேவதை…! என்ன தேவதையா ? உன் வாயைக் கட்டியது ஒரு பெண் தேவதையா ?

லாஹயர்: ஆம்! அவள் ஒரு தேவதையே! லொர்ரேன் நகரிலிருந்து, அரை டஜன் படை வீரர்களுடன் தனியாக அஞ்சாமல் வனாந்திரம் வழியாக வந்திருக்கிறாள்! பர்கண்டியைத் தாண்டிக் கொலைகாரர், கொள்ளைக்காரர் கூடப் போரிட்டு உயிர்தப்பி, மன்னரைக் காண வந்திருக்கிறாள். அவளுடன் வரும் பாலி என்னும் பெளலிஞ்சியை எனக்குத் தெரியும். மிகவும் பண்புள்ளர்! பாலியே சொல்கிறார், அவள் ஒரு தேவதை என்று! அவர் கூறினால் அது உண்மை யாகத்தான் இருக்க வேண்டும். பெண்ணென்று தெரியாமல் நடுவீதியில் நான் அசிங்கமாகப் பேசிச் சண்டை யிட்டது தப்பு! இனி அப்படிப் பேசினால், என் வாய் வெந்து போகும்!

[அப்போது காவலன் ஒருவன் வந்து மன்னர் வரப் போவதை அறிவிக்கிறான்.]

காவலன்: வருகிறார்! வருகிறார்! மேன்மை தங்கிய நமது மன்னர் வருகிறார்.

[எல்லாரும் பேச்சை ஒடுக்கி நிமிர்ந்து நிற்கிறார்கள். அமர்ந்துள்ளவர்கள் எழுந்து நிற்கிறார்கள். அவையில் முழு அமைதி நிலவுகிறது. தெளஃபின் மன்னர் (சார்லஸ் VII), கையில் ஓர் அறிக்கைத் தாளை ஏந்திக் கொண்டு அரசவை அரங்கினுள் நுழைகிறார். அதிக உயரமும், குள்ளமும் இல்லாது சற்று மெலிந்த உடம்பு. தந்தை மகுடம் சூட்டிய அரசனாக வாழ்ந்து மாண்டு போனபின், வெறும் பெயரில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பட்டம் சூடாத மன்னனாய்க் காலந் தள்ளி வருபவர். தாடி மயிரைச் சரிவர நீக்காமல், பழைய அரச உடையில் ஆர்ச்பிஷப்பின் அருகே கேலிப் புன்னகையுடன் வந்து நிற்கிறார். மன்னர் என்னும் பளிச்செனக் கவராத கோழைத் தோற்றம் கொண்டவர். நோக்கினால் அறிவுள்ள பார்வையோ அல்லது மூடத்தனமான பார்வையோ தெரியவில்லை.]

சார்ல்ஸ் மன்னர் (தெளஃபின்): (கேலி நகைப்புடன் ஆர்ச்பிஷப்பை நோக்கி) காப்டன் ராபர்ட், வெளகோலர் கோட்டையிலிருத்து எனக்கு என்ன அனுப்பியுள்ளார் தெரியுமா ?

ஆர்ச்பிஷப்: [வெறுப்புடன்] உங்கள் புதிய விளையாட்டுப் பொருள்களில் எனக்கு விருப்பம் கிடையாது!

சார்லஸ் மன்னர்: [சினத்துடன்] இது விளையாட்டுப் பண்டமில்லை! .. சரி! உங்களுக்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும், நான் இனி மேற்கொண்டு செய்ய வேண்டியதைச் சொல்கிறேன்.

ஆர்ச்பிஷப்: [சற்று தணிந்து] மேன்மை மிகு மன்னர் நான் சொன்னதை எல்லாம் குற்றமாக எடுத்துக் கொள்கிறார்!

சார்லஸ் மன்னர்: மிக்க நன்றி. உடனே நீங்கள் எனக்குப் பெரிய சொற்பொழிவைத் தயாரிக்க வேண்டாம்.

சாம்பர்லைன்: [சற்றுக் கடுமையாக] ஏன் இத்தனை தாமதம் ? உள்ளே என்ன செய்து கொண்டிருந்தீர் ? நான் காத்திருப்பது தெரிந்துதான் ஒளிந்து கொண்டாரா ?

சார்லஸ் மன்னர்: [மீறிய தொனியில்] நான் என்ன செய்தேன் என்று உங்களுக்கு சொல்லத் தேவை யில்லை. தேவை இல்லாத வேலைகளில் மூக்கை விடாதீர்.

சாம்பர்லைன்: பணம் தேவைப்படும் போது மட்டும், நான் தேவைப்படும்! பணம் என்றைக்காவது தேவையில்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம்! இப்போது உங்களுக்கும், காப்டன் ராபர்ட்டுக்கும் இடையே என்ன தகவல் போக்குவரத்து நடக்கிறது என்பது எனக்குத் தெரிய வேண்டும்! … [படக்கென்று மன்னர் கையில் இருக்கும் அறிக்கைத் தாளைப் பிடுங்கி வாசிக்கிறார்.]

சார்லஸ் மன்னர்: [அதிர்ச்சி அடைந்து, தணிவான குரலில்] என்னை இவ்விதம் அவமானப் படுத்துவது நான் உங்களிடம் கடன்பட்டதால், இல்லையா ? என்ன வேண்டுமானாலும் நீங்கள் பேசுவது, நான் எதிர்த்துச் சண்டை போடச் சக்தி அற்றவன் என்பதால், இல்லையா ? என்னுடம்பு இரத்தக் குழல்களில், அரச பரம்பரைக் குருதி ஓடுகிறது என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும்.

ஆர்ச்பிஷப்: [கேலியாக] மேன்மை மிகு மன்னரே! போதும் பீற்றிக் கொள்வது! உங்கள் இரத்தக் குழல்களில் அரச பரம்பரைக் குருதி ஓடுவது கூட இப்போது ஐயப்பாட்டில் உள்ளது! யாரும் உங்களை மாமேதை ஐந்தாம் சார்லஸ் வேந்தரின் பேரன் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியாது!

சார்லஸ் மன்னர்: [கோபத்துடன்] என் பாட்டனாரைப் பற்றி யாரும் பறைசாற்ற நான் கேட்கப் போவதில்லை! அவர் மாவேந்தர்! மாமேதை! மாவீரர்! உண்மைதான்! ஐந்து பரம்பரைகளுக்கு உரிய அபாரத் திறனை ஒரே பிறப்பில் பயன்படுத்தி, என்னைப் போன்றவனை ஏழையாக்கி, மூடனாக்கி விட்டுப் போய்விட்டார்! இப்போது உங்களைப் போன்றவரால் இகழப்பட்டும், மிரட்டப்பட்டும் அவமதிக்கப் படுகிறேன்!

ஆர்ச்பிஷப்: [வெறுப்புடன்] மனதைக் கட்டுப் படுத்துங்கள் மன்னரே! இந்த வெடிப்புச் சீறல்கள் உங்கள் தகுதி நிலைக்கு ஏற்றதாகத் தெரியவில்லை!

சார்லஸ் மன்னர்: [ஆத்திரமாக] அடுத்தொரு சொற்பொழிவா ? மிக்க நன்றி பாதிரியாரே! உங்கள் நிலை எத்தகைய ஏளன நிலையில் உள்ளது, தெரியுமா ? ரைம்ஸ் பகுதியின் ஆர்ச்பிஷப்பாக நீங்கள் பீடத்தில் இருந்தாலும், உங்களைத் தேடி தேவதைகளோ, புனித அணங்குகளோ யாரும் வருவதில்லை!

ஆர்ச்பிஷப்: [வெகு ஆங்காரமாய்] என்ன சொன்னீர் மன்னரே ?

சார்லஸ் மன்னர்: [சாம்பர்லைனைச் சுட்டிக் காட்டி] அதோ! அந்த வீறாப்புக்காரரைக் கேளுங்கள்!

சாம்பர்லைன்: [சினம் மிகுந்து] வாயை மூடுங்கள் மன்னரே! நான் சொல்வது கேட்கிறதா ?

சார்லஸ் மன்னர்: [கேலியாக] நன்றாகவே கேட்கிறது! கூச்சலிடத் தேவையில்லை. நான் மூடனாகத் தோன்றினாலும், செவிடன் இல்லை! உமது சிம்மக் குரல் கோட்டை முழுவதும் கேட்கிறது! எனக்காக அந்த ஆங்கிலேயர் மீது பாய்ந்து, இப்படி மிரட்டி நீங்கள் ஏன் அடித்து விரட்டக் கூடாது ?

சாம்பர்லைன்: [கைமுட்டியை ஓங்கிக் கொண்டு] …. சின்ன வயது மன்னனான உங்களை ….!

சார்லஸ் மன்னர்: [கூர்ந்து நோக்கி] கையை உயர்த்தாதீர் என்முன்! அது ராஜ துரோகம்! தண்டிப்பட வேண்டிய குற்றம் அது!

காப்டன் லாஹயர்: [சாந்தமுடன்] டியூக் ஸார்! அமைதி! அமைதி! ஆத்திரம் கொள்ளாதீர்.

ஆர்ச்பிஷப்: [பெருந்தன்மையாக] சாம்பர்லைன் ஸார்! இந்த தர்க்கம் போதும்! இதனால் எப்பயனும் விளையாது! தயது செய்து நமக்குள் சிறிது ஒழுக்கம் தேவை! கட்டுப்பாடு வேண்டும்! நாம் காட்டு மிராண்டியாய் மாறக் கூடாது! [மன்னரை நோக்கி] உங்களுக்குச் சொல்கிறேன்! இந்த நாட்டைக் கட்டுப் படுத்தி ஆள முடியாமல் போனாலும், ஓரளவு உங்களையாவது கட்டுப் படுத்தலாம் அல்லவா ?

சார்லஸ் மன்னர்: [கேலியாக] அடுத்தொரு சொற்பொழிவா ? மிக்க நன்றி!

சாம்பர்லைன்: [ஆத்திரமுடன் அறிக்கைத் தாளை ஆர்ச்பிஷப் கையில் திணித்து] இந்த அருவருப்பான கடிதத்தைப் பாருங்கள்! கோழி கிறுக்கியது போல் எழுதிய இந்த எழுத்துக்களை என்னால் படிக்க முடிய வில்லை! இரத்தக் கொதிப்பை அது என் மூளைக்கு ஏற்றுகிறது! என்ன தலை எழுத்தோ தெரியவில்லை!

சார்லஸ் மன்னர்: [ஆர்ச்பிஷப் அருகில் நடந்து] வயதான டியூக்குக்கு கண் தெரியவில்லை! கொடுங்கள் நானே வாசித்துக் காட்டுகிறேன்! என்னால் அந்த எழுத்துக்களைப் படிக்க முடியும்.

சாம்பர்லைன்: [கேலியாக] ஆமாம்! உங்களுக்குப் படிப்பதைத் தவிர வேறென்ன தெரியும் ? நீங்கள் வாசிக்க வேண்டாம். [ஆர்ச்பிஷப்பை நோக்கி] அந்தக் கோணல் எழுத்துக்களை நீங்கள் வாசிக்க முடியுமா ?

ஆர்ச்பிஷப்: [அறிக்கைத் தாளைக் கூர்ந்து பார்த்து] வேடிக்கையாக இருக்கிறதே! அறிவுள்ள காப்டன் ராபர்ட்டிடமிருந்து இப்படி மூடத்தனமான ஒரு கடிதத்தை நான் எதிர்பார்க்க வில்லை! கிராமத்துக் கிறுக்கி ஒருத்தியை ராபர்ட் அனுப்பி வைத்திருக்கிறார்! எப்படி இருக்கிறது இந்த வேடிக்கை ? புத்தி உள்ளவன் பைத்தியகாரியை அனுப்புவானா ? முத்திப் போன புத்திக் கோளாறு ராபர்ட்டுக்கா அல்லது அந்த படிப்பற்ற பட்டிக்காட்டுக்கா என்பதை நான் முதலில் அறிய வேண்டும் ?

சார்லஸ் மன்னர்: [சட்டெனக் குறுக்கிட்டு] இல்லை! அவள் பைத்திய மில்லை! ராபர்ட்டும் பைத்திய மில்லை! காப்டன் என்னைச் சந்திக்க அறிவோடுதான் ஒரு புனித மாதை அனுப்பியுள்ளார். ஒரு தேவதை அவள்! என்னைக் காண வருகிறாள், அவள்! மன்னனைக் காண வருகிறாள் அவள்! உங்களைக் காண வரவில்லை, தெரிகிறதா ? புனித மானிடராகிய ஆர்ச்பிஷப்பைக் காண வரவில்லை, அவள்! வருகிறாள், வருகிறாள், என்னை மட்டும் காண! அரச இரத்தம் ஓடும் மன்னரை அவள் ஒருத்திக்கு மட்டும் தெரிகிறது.

ஆர்ச்பிஷப்: [செருக்குடன்] ஆனால் மன்னரே! எச்சரிக்கை செய்கிறேன், நான்! அந்தக் கிறுக்கி உங்களைக் காண நீங்கள் அனுமதி தரக் கூடாது!

சார்லஸ் மன்னர்: [பொறுமை இழந்து, பிடிவாதமாக] நான் மன்னன்! நான் அனுமதிப்பேன்! நீங்கள் யார் என்னைத் தடுக்க ? என் தாய் தடுத்தாலும், நான் அவளை அனுமதிப்பேன்! நீங்கள் ஏன் அவளை இப்படி அவமதிக்க வேண்டும் ?

சாம்பர்லைன்: [கோபத்துடன்] எவளோ ஒரு குடிசைக்காரி! பிரெஞ்ச் நாட்டின் மன்னர் இந்த பெண்ணைப் பார்க்கலாமா ? உங்கள் உன்னத மேல்நிலை என்ன ? அவளின் தாழ்ந்த கீழ்நிலை என்ன ?

கில்லெஸ்: [கேலிப் புன்னகையுடன்] கோமாளித்தனமாக உள்ளது! உங்கள் பாட்டனார் ஐந்தாம் சார்லஸ் இருந்தால், இதைப் பார்த்து என்ன சொல்வார் ?

சார்லஸ் மன்னர்: [சட்டெனக் குறுக்கிட்டு] புளுபியர்டு! உன் அறியாமை நன்றாகவே தெரிகிறது. என் பாட்டனார் அரசவையில் ஒரு புனிதமாது இருந்தாள் என்பது உனக்குத் தெரியாது. அவள் கடவுளைத் துதித்து, பாட்டனார் அறிய வேண்டிய அனைத்தையும் அப்படியே சொல்லி விடுவாளாம்! என் தந்தையார் ஆறாம் சார்லஸ் அவையில் இரட்டைப் புனித மங்கையர் இருந்தனர்! ஒருத்தி பெயர், மேரி திமைலி. அடுத்தவள் பெயர், காஸ்குவே தி ஆவிங்டன். அது எங்கள் சம்பிரதாயம். நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கப் போவதில்லை. என்னவையில் நானும் ஒரு புனித நங்கை ஒருத்தியை வைத்துக் கொள்வேன்! அவளைத்தான் காப்டன் ராபர்ட் கண்டுபிடித்து என்னிடம் இப்போது அனுப்பியுள்ளார்.

ஆர்ச்பிஷப்: [ஆவேசமுடன்] அந்தச் சிறுக்கி ஒரு புனித மாதா ? அவள் கீழ்க்குடி இனத்தவள்! மன்னர் வரவேற்கத் தக்க மதிப்புடைய மங்கையா அவள் ? அவள் பெண்ணே இல்லை! அவள் பெண்டிர் உடையைக் கூட உடுத்துவ தில்லையாம்! இப்படி எழுதி யிருக்கிறார், காப்டன் ராபர்ட்! படைவீரர் உடை அணிந்து குதிரையில் ஏறிக் கொண்டு ஊரெல்லாம் சுற்றிவரும் ஏதோ ஒரு நாடோடி! அந்த நாடோடி நங்கையை நாடாளும் மன்னர் முன்னின்று வரவேற்பதா ? வேடிக்கையாக இருக்கிறது, உங்கள் பிடிவாதம்!

(இரண்டாம் காட்சி தொடர்ச்சி அடுத்த வாரத் திண்ணையில்)

****

தகவல்:

1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)

2. Saint Joan of Arc By: Mark Twain

3. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)

4. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)

5. Britannica Concise Encyclopedia (2003)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan May 2, 2005]

Series Navigation