சி. ஜெயபாரதன், கனடா
சாம்பலாகிப் போனபின், உடல்
சற்றேனும் வருமா ?
தேம்பி அழுதாலும், உயிர்
திரும்பித்தான் வருமா ?
வீம்புகள் பிடித்தாலும், ஜோன்
மீண்டுமுயிர் பெறுவாளா ?
‘கடவுளின் கனல்சக்தி இயற்கையான ஆன்மாவுடன் பின்னிக் கொள்ள மாந்தரின் தியாகத்தை உட்கொண்டு, அண்டவெளி ஒளியாய் அதை மாற்றித் தூய்மைப் படுத்துகிறது! நம் அனைவரையும் கனல்சக்தி மாற்றிப் பாசத் தணலாய்ப் பிணைக்கிறது! கடவுளை மூலக்கனல் சக்தியாய் அறிந்து கொள்பவர் ஆசீர்வதிக்கப் படுவர். ‘
ஆன்டிரு முரே [Andrew Murray]
கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையை மதத்துரோகி என்று ஆங்கில ஆதிக்க வர்க்கம் குற்றம் சுமத்தி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன், சிறு வயதிலேயே பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு கடவுளால் ஏவப் பட்டதாகக் கருதிப் போராடியவள். கல்வி கற்காத பட்டி நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலிப் பிரெஞ்ச் மன்னர் ஏழாம் சார்லஸ் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சிகளுக்குப் போதிய படையினரை உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!
****
இதுவரை நிகழ்ந்தது: ஜோன் ஆஃப் ஆர்க் போரை முன்னடத்திச் செல்ல, பிரெஞ்ச் படையினர் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை முதலில் கைப்பற்றினார்கள். போர்க் களத்தில் ஜோன் படுகாய முற்றாள். ஆவேசமாக ஜோன் ஆணையில் போரிட்ட பிரெஞ்ச் படையினர், ஆர்லியன்ஸ் கோட்டையை மீட்டனர்! ரைம்ஸ் தேவாலய அரங்கத்தில் மங்கல வாத்தியக் கருவிகள் முழங்க, பணிமங்கை ஜோன் முன்னிற்க, பாதிரியார்களும், அரசவை உறுப்பினர்களும் சூழ சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். ஆங்கிலக் கார்டினல் ஜான் போயர், ஆங்கிலச் செல்வந்தக் கோமகனார் மற்றும் கிறித்துவத் திருச்சபை மேல்வர்க்கப் பாதிரியார் பீட்டர் கெளஸான் மூவரும் ஆங்கிலப் படையின் முதல் தோல்வியையும், பிரெஞ்ச் மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாவையும் கேள்வியுற்று அவமானப்பட்டு, ஜோனைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். ஆர்லியன்ஸ் கோட்டையை ஆக்கிரமித்த பிறகு மற்ற சில இடங்களையும் கைப்பற்றி, ஜோன் பாரிஸைப் பிடிக்கத் திட்டமிடுகிறாள்.
ஆனால் அடுத்து வரப்போகும் போர்களில் சார்லஸ் மன்னருக்குச் சிறிதுகூட விருப்பம் இல்லை. தொடர்ந்து ஜோனுக்குப் படை அனுப்பவும் மன்னர் உடன்படவில்லை. அவளைப் பின்பற்றும் சிறு படையுடன் ஜோன் தனியாகச் சென்றால், பகைவர் கையில் சிக்கிக் கொள்வாள் என்று பலர் அவளைத் தடுக்கின்றனர். ஆயினும் ஜோன் தன்னைச் சூழ்ந்த சிறு படையுடன் போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிஸைத் தாக்கச் சென்ற ஜோனின் படை தோல்வியுற்றுப் பின்வாங்கியது! வசந்த காலத்தில் காம்பைன் பகுதியை நோக்கி ஜோன் மீளும் போது, அது பர்கண்டி டியூக் (பிரெஞ்ச்) கைவசம் இருந்தது. அப்போது சிறு படையுடன் நெருங்கிய ஜோனைத் தனிப்படுத்திப் பர்கண்டி பகைவர் (பிரெஞ்ச்) பிடித்துப் பியூரிவாயர் [Beaurevoir] சிறையில் இட்டனர்! பணமுடிப்பைப் பெற்று பர்கண்டி அதிகாரிகள் ஜோனை ஆங்கில நண்பர்களுக்கு விற்கிறார்கள். ஜோன் விலங்கிடப் பட்டு ரோவன் [Rouen] சிறையில் ஆங்கில மூர்க்கரிடம் சித்திரவதை செய்யப் படுகிறாள். விசாரணை நடத்திய வழக்கு மன்றம் கடைசியில் தண்டனை வழங்கி, ஆங்கிலக் காவலர் எரிப்புப் பீடத்துக்கு ஜோனை இழுத்துச் செல்கிறார்கள். ஆணாதிக்க உலகம் 19 வயது (மே மாதம் 30, 1431) அபலைப் பெண்ணை உயிரோடு எரித்து வேடிக்கை பார்க்கிறது!
ஏழாம் காட்சி (பாகம்-6)
[ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து]
காலம்: ஜோன் எரிந்து 25 ஆண்டுகள் (1456 ஜூன் மாதக் வேனிற் காலம்)
இடம்: அரண்மனையில் அரசரின் படுக்கை அறை.
நேரம்: பகல் வேளை
நாடகத்தில் பங்கு கொள்வோர்:
1. பிரெஞ்ச் மன்னன் சார்லஸ் [வயது: 51]
2. சகோதரர் மார்டின் லாட்வெனு
3. ஜோன் ஆஃப் ஆர்க் [அசரீரிக் குரலில்]
4. பிரெஞ்ச் மேல்நிலைப் பாதிரி கெளஸான் [அசரீரிக் குரலில்]
5. பிரெஞ்ச் போர்த் தளபதி ஜாக் துனாய்ஸ் [அசரீரிக் குரலில்]
அரங்க அமைப்பு: சார்லஸ் மன்னன் படுக்கையில் தூக்கம் வராது ஏக்கமுடன் தலையைச் சொரிந்து கொண்டு மிரள மிரள விழித்துக் கொண்டு கையில் புத்தகம் ஒன்றை ஏந்திப் படித்தும், படிக்காமலும் பரபரப்புடன் காணப்படுகிறார். அலங்காரம் செய்யப்பட்ட அறையில் கவர்ச்சியான ஓவியங்கள் காண்போர் கவனத்தை ஈர்க்கின்றன. படுக்கை அருகில் இருக்கும் கன்னி மேரியின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஒன்று எரிந்து கொண்டுள்ளது. வயதான சகோதரர் மார்டின் லாட்வெனு, 25 ஆண்டுகளுக்கு முன் ஜோன் ரோவென் நகரில் எரியும் போது காட்டிய சிலுவைக் கம்பை ஏந்திக் கொண்டு உள்ளே நுழைகிறார். சார்லஸ் மன்னன் அவர் வருகையை எதிர்பார்க்க வில்லை. படுக்கையில் அமர்ந்திருக்கும் சார்லஸ் பயந்துபோய்ப் புத்தகத்தை விட்டெறிந்து, சட்டெனக் குதித்தெழுகிறார். யாரென்று அறிந்த பின் சார்லஸ் லாட்வெனுவுடன் உரையாடுகிறார். அப்போது ஜோன் ஆஃப் ஆர்க்கின் அசரீரிக் குரல் கேட்டு, சார்லஸ் மன்னர் திகைப்படைகிறார். அவளுடன் உரையாடிக் கொண்டியுள்ள போது, காலம் சென்ற கெளஸான் பாதிரியின் குரலும் பிறகு கேட்கிறது. அடுத்து பிரெஞ்ச் போர்த் தளபதி துனாய்ஸ் குரலும் காதில் படுகிறது.
அவர்கள் உரையாடல் நடக்கையில், படைவீரன் ஒருவன் உள்ளே நுழைகிறான். பிறகு ஆங்கிலப் பாதிரி, வழக்கறிஞர், வார்விக் கோமகன் அனைவரும் வருகிறார்கள்.
ஜோன்: ஆலயத் திருவாளர் கெளஸான் அவர்களே! சிலுவை என்பது ஏசுநாதரின் சின்னம்! ஆலயத்தில் உள்ளதுதான் சிலுவை என்பது உங்கள் நியதி! நான் அப்படி நினைக்கவில்லை! சுள்ளிக் குச்சிகளைச் சிலுவையாகக் கட்டினாலும், அதுவும் சிலுவைதான். இடுகாடுகளில் ஏழை எளியவர் புதைக்கப் பட்டால், இரண்டு குச்சிகளைக் கட்டிச் சிலுவையாக ஊன்றுகிறார். விலைமிக்க ஆலயச் சிலுவைக்கு எழை எளியவர் எங்கே போவார் ? எது சிலுவை, எது சிலுவை யில்லை என்பது மாந்தர் தம் மன உணர்ச்சியைச் சார்ந்தது!
[கதவு திறக்கிறது. தலைநரைத்து வெண்தாடியுடன் கூன் விழுந்த கார்டினல், ஆங்கிலப் பாதிரி ஒருவர் வருகிறார்.]
ஆங்கிலப் பாதிரி: என்னை மன்னித்திடுங்கள். முன்னறிவிப் பில்லாமல், அனுமதி யில்லாமல் நான் நுழைகிறேன். வின்செஸ்டர் கோமகனாரின் கார்டினல் பாதிரி நான், பெயர்: ஜான் தி ஸ்டொகும்பர் (John De Stogumber). [சற்று நிறுத்தி] … என்ன சொன்னீர் ? …. எனக்குக் காது சரியாகக் கேட்காது. நான் அரைச் செவிடன். கண்களும் பார்வை மங்கிப் போய்விட்டன! அத்துடன் என் மன நிலமையும் சரியில்லை. சற்று உரத்துப் பேசுங்கள். அப்போதுதான் எனக்குக் கேட்கும். … எனக்கு வயதாகி விட்டது. ஆயினும் எனக்குப் பெரிய இடத்து உறவுகள் உண்டு. ஆங்கில அதிகார வர்க்கத்தார் அனைவரும் எனக்கு அறிமுகமானவர். நான் கண்ணைக் காட்டினால் போதும், முன்னே வந்து நிற்பவர்! முழங்காலிட்டுக் கீழ்ப் படிவர்!
ஜோன்: [சிரித்துக் கொண்டு] ஓர் அபலைக் கன்னிப் பெண்ணை இழுத்துக் கொண்டுபோய், தீக்கம்ப மேடையில் ஏற்றித் தீமூட்டிய ஆங்கிலப் பாதிரியா ? வணக்கம் தேவ தூதரே! கூன் விழுந்து குப்புற விழப்போகும் நீங்கள், கைத்தடி யில்லாமல் வந்ததின் காரணம் என்னவோ ?
ஆங்கிலப் பாதிரி: நான் அந்த அபலைப் பெண்ணைத் தேடித்தான் பிசாசாய் அலைகிறேன்! அவளிடம் நான் மண்டி யிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். எங்கே யிருக்கிறாளோ நானறியேன்! ஒரு காலத்தில் கனிவு மிகுந்த பரிவுப் பாதிரியாகக் காலம் தள்ளியவன் நான்! கடைசிக் காலத்தில் புத்தி தடுமாறிப் பழிவாங்கும் ஆங்காரப் பாதிரியாக மனமாறி விட்டேன்! மனம் மாறியது மட்டு மில்லாமல் குணம்மாறிப் பாபச் செயல்களில் பங்கெடுத்துப் பரவசப் பட்டேன்! பாபத்தில் ஈடுபட்டுப் பாமர மங்கையைத் தீயில் சுட்டெறிக்க ஆசை கொண்டேன். ஆசை கொண்டு அதை நிறைவேற்றி ஆனந்தம் கொண்டேன். ஆனால் அப்பாபச் செயல்களுக்கு இப்போது நாம் கண்ணீர் வடிக்கிறேன். ஆசை வெற்றி பெற்றாலும், பெண்பாபம் என்னைச் சுற்றிச் சுற்றி சவுக்கால் அடிக்கிறது! அந்த வேதனை தாங்காமல், நானிப்படி நாயாய், ஊர் ஊராய் அலைகிறேன்!
ஜோன்: அதற்கு இப்போது ஏன் கண்ணீர் விட வேண்டும் ? சாம்பலாகிப் போனவளுக்காக தேம்பி வேதனைப் படுவதில் என்ன பயன் ? கண்கள் கொட்டுவது புறத்தே வரும் முதலைக் கண்ணீரா ? அல்லது ஆத்மாவின் கருவிலிருந்து வரும் அகக் கண்ணீரா ?
ஆங்கிலப் பாதிரி: பெண்ணே! என் கண்களில் கண்ணீர் வராது. அப்படி வந்தால் அது மெய்யான கண்ணீரே! அது முதலைக் கண்ணீரில்லை! பழையப் பரிவுப் பாதிரியின் கனிவுக் கண்ணீர்! நான் மெய்யாகக் கொடூரமானவன் அல்லன்.
துனாய்ஸ்: உம்மை யார் கொடூரப் பாதிரி என்று சொன்னவன் ?
ஆங்கிலப் பாதிரி: சொன்னவன் வேறு யாருமில்லை, நான்தான்! என்னை நானே குற்றம் சாட்டிக் கொண்டேன்! பாபக் கொடூரம் செய்தவன் நான். செய்யத் தகாத தீமை செய்தவன் நான்! ஏசுப் பெருமானைச் சிலுவையில் கிடத்தி ஆணி அடித்தது போன்ற ஓர் மாபெரும் பாபம் செய்தவன் நான்! ஆராய்ந்து பார்த்தால் அதை விடக் கொடிய பாதகம் புரிந்தேன். உயிரோடு ஓரிளம் பெண்ணைத் தீயிட்டுக் கொளுத்தி வரலாற்றில் முதற் பெயர் எடுத்தேன். பயங்கர மரணம்! மிக மிகப் பயங்கர மரணம்! ஆனால் அதுவரை மிருகமாக இருந்த நான் பிறகு திருந்தி மனிதனாகி விட்டேன்.
சார்லஸ்: ஜான்! நீவீர் தகனம் செய்த ஜோன் பணிமங்கை எனக்கு மகுடம் சூட்டியவள்! மீண்டும் என்னை மன்னன் ஆக்கியவள் ஜோன். அதோ, உமது கண்முன்பாக நிற்கிறாள். உமது கண்களில் கண்ணீர் இன்னுமிருந்தால், அவள் காலடியில் கொட்டிக் கழுவுங்கள்! வீணாக எங்கள் பாதங்களில் சிந்த வேண்டாம்! அந்தக் கண்ணீர்த் துளிகளாவது அவளது பாதங்களில் பட்டுப் புனிதம் பெறட்டும்!
ஆங்கிலப் பாதிரி: யார் ? ஜோன் என்னருகில் நிற்கிறாளா ? மங்கிப் போகும் என் கண்களில் தென்பட வில்லையே! ஜோன் எங்கே ? பணி மங்கை எங்கே ? [தடுமாறி எல்லாத் திசையிலும் நோக்குகிறார்]
துனாய்ஸ்: [பாதிரியின் கையைப் பிடித்து நடத்திச் செல்கிறார்] உம்முடன் பேசிக் கொண்டிருந்த ஜோன் இதோ இங்கு நிற்கிறார்! மன்னரால் தளபதியாக நியமனமாகி, முன்னால் நின்று போரை நடத்திய தீர மங்கை ஜோன்!
ஆங்கிலப் பாதிரி: [கண்ணீர் பொங்கிவர, மண்டி யிட்டு] பணி மங்கையே! என் பாபக் கண்ணீர்களால் உன் பாதங்களைத் தூய்மைப் படுத்துகிறேன். நானுக்குச் செய்த கொடுமைக்கு என்னை மன்னிப்பாயா ? மன்னித்தேன் என்று ஒரு வார்த்தை சொல்வாயா ? நிற்காமல் பொழியும் என் கண்ணீர் மழையை நிறுத்த மாட்டாயா ?
ஜோன்: தேவ தூதரே! உங்களை மன்னிப்பது கடவுள். நான் படிப்பற்றவள்! அதற்குத் தகுதி யற்றவள்! நான் பட்டிக்காட்டுப் பெண்! தீர்ப்பளிக்கவோ அல்லது பாபத்தைத் தீர்க்கவோ எந்தத் தகுதியு மில்லை எனக்கு! நீங்கள் பண்ணிய பாபங்களுக்குக் கடவுளிடம் சொல்லி மன்றாடிக் கேளுங்கள்.
ஆங்கிலப் பாதிரி: ஜோன், நீ முதலில் மன்னித்தால்தான், கடவுள் என்னைப் பிறகு மன்னிப்பார். நீயே புறக்கணித்தால், அவர் ஏன் என்னை மன்னிக்கிறார் ?
கெளஸான்: எங்கெங்கு போனாலும், ஜோனைப் பற்றித்தான் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார். பணி மங்கை ஜோன் புனித மாதாய் மாறிவிட்டாள். புனித அணங்காய் வணங்கப் படுகிறாள். அவளை உயிரோடு எரிக்கக் காரணமாய் இருந்த தேவாலயத் தூதர்தான் புனித நிலையிலிருந்து மனித நிலைக்குத் தணிந்து விட்டார்.
[அப்போது வார்விக் கோமகனார் உள்ளே நுழைகிறார்]
வார்விக் கோமகனார்: [புன்னகையுடன்] ஜோன் தீக்கிரை யானதற்குத் தேவாலய தூதர் காரண கர்த்தா அல்லர். அரசியல் சூதாட்டத்தில் பகடையாக உருட்டப் பட்டு, அவள் பலியாக்கப் பட்டவள்! அவளைச் சாம்பலாக்கியது ஆங்கில வர்க்கமன்று! பிரெஞ்ச் பர்கண்டி மூர்க்கர் அல்லர்! ரோவான் திருச்சபைத் தேவர் அல்லர்! ரோமாபுரி போப்பாண்டவர் அல்லர்! பிரான்ஸில் பட்டம் சூடிய சார்லஸ் மன்னர் அல்லர்!
சார்லஸ் மன்னன்: முதலில் நீங்கள் யார் என்று அறிமுகம் செய்திடுவீர்! பிறகு ஜோனைச் சாம்பலாக்கியவர் யாரென்று யாமறிய வேண்டும். ஆங்கிலேயர் அல்லர், பிரெஞ்சுக்காரர் அல்லர்! தேவாலயத் தூதர் அல்லர்! சார்லஸ் மன்னர் அல்லர்! பின்னர் யார்தான் காரணம் என்று சொல்ல வருகிறீர் ?
கோமகனார்: நான்தான் ஆங்கில வார்விக்கின் ஏர்ல், ரிச்சர்டு தி பியூசாம்ப் [Earl of Warwick, Richard De Beauchamp]. நான் சொல்ல வருவது, ஜோனை எரிக்கக் காரணமானவர் ஒருவர் மட்டும் அல்லர்! அனைத்து நபர்களும் ஒவ்வொரு வழியில் அவளைப் பற்றி நசுக்கக் காத்திருந்தனர்! பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர், திருச்சபைத் தூதர் அனைவரும் பங்கேற்று, ஜோன் பணி மங்கையைச் சுட்டெரித்தோம்!
சார்லஸ் மன்னர்: ஆனால் ஜோனை எரித்ததற்கு நானென்ன செய்தேன், கோமகனாரே! என்னையும் ஏன் உமது குழுவில் செர்க்கிறீர் ?
கோமகனார்: தப்பி ஓட நினைக்காதீர், மன்னரே! உங்கள் தலையில் மகுடம் ஏறிய பின், உங்கள் சிரசு கனத்துப் போய் உப்பியதை மறந்து விட்டார்களா ? வாக்களித்தபடி ஜோன் கேட்ட படை வீரரை அனுப்பாது, துனாய்ஸ் உதவி யின்றி அவளைத் தனியாகக் கைவிட்ட நீங்கள்தான் முதல் குற்றவாளி! அப்போது பிடிபட்ட ஜோனைக் காப்பாற்றக் கூட வராது பதுங்கி ஒளிந்து கொண்ட வேந்தர் அல்லவா நீங்கள் ?
சார்லஸ் மன்னர்: கோமகனாரே! நிறுத்தும் உமது பேச்சை! ஜோனை நீர் தான் கம்பத்தில் ஏற்றித்
தீவைத்த தீரர் என்பதை வரலாறு மறக்காது!
கோமகனார்: ஆனால் நான்தான் ஜோன் புனித அணங்காக மாறுவதற்குக் காரண கர்த்தா! நீவீர் மகுடம் சூட ஜோன் எப்படிக் காரண கர்த்தாவோ அதுபோல் ஜோன் புனித மாதாக வர நான்தான் வழி வகுத்தவன்! முக்கிய மனிதன்! நீவீர் ஜோனுக்குக் கடமைப் பட்டவர்! ஜோன் எனக்குக் கடமைப் பட்டவள்!
ஜோன்: நான் யாருக்கும் கடமைப் பட்டவளில்லை! கடவுள் ஒருவருக்கே நான் என்றும், என்றென்றும் கடமைப் பட்டவள்! புனித மாதென்று யாரெனக்கு மகுடம் சூடினார் ? நான் புனித அணங்கில்லை! பட்டி மங்கையான, படிப்பறி வில்லாத நான் எப்படி புனித அணங்கு காதிரைன் அருகிலும், மார்கரெட் பக்கத்திலும் புனித மாதென்று சொல்லி அமர முடியும் ? கற்பனை செய்து கூடப் பார்க்க முடிய வில்லை, என்னால்!
[அப்போது கோமாளித் தனமாக உடை அணிந்து கொண்டு புன்னகையோடு ஒருவர் நுழைகிறார்]
துனாய்ஸ்: உமது உடை, நடை எல்லாமே உம்மை நாடகமாடி போல் காட்டுகிறது! நீவீர் யார் ? எதற்காக வந்திருக்கிறாய் ?
புதிய நபர்: நண்பர்களே! நான் கோமாளி அல்லன்! நாடகமாடியும் அல்லன்! நீதிமன்றத்தில் வேலை செய்யும் ஓர் ஊழியன் நான்! நான் வந்த காரணத்தைச் சொல்கிறேன். முக்கிய அறிவிப்பைப் பறைசாட்ட நான் வந்திருக்கிறேன். உம்முடன் விளையாட வரவில்லை! கவனமாய்க் கேளுங்கள். [பையிலிருந்து ஒரு தாளை எடுத்து வாசிக்கத் துவங்கிறான்] ஆர்லின்ஸ் நகரப் பாதிரியார் நீதி மன்றத்தைக் கூட்டுகிறார்! ஏனென்று கேட்கிறீர்களா ? ஜோன் ஆஃப் ஆர்க் எனப்படும் பணி மங்கை வழக்கை மீண்டும் விவாதிக்க அந்த நீதி மன்றம் ஏற்பாடாகி வருகிறது!
ஜோன்: அடடா! ஆர்லின்ஸ் பொதுமக்கள் என்னை இன்னும் நினைவில் வத்திருக்கிறாரா ? ஆச்சரியமாக உள்ளதே! இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பிறகு என் வழக்கை மீண்டும் திறந்து, சாம்பலாய்ப் போன என்னை உயிர்ப்பிக்கப் போகிறாரா ? அல்லது என்னைப் பழிசுமத்தித் தண்டித்துத் தீயில் தள்ளிவிட்டுச் செத்துப் போனவரைக் குற்றவாளி யாக்கி, என்னைப்போல் தீயில் எரிக்கப் போகிறாரா ?
(தொடரும்) [ஏழாம் காட்சி பாகம்-7 அடுத்த வாரத் திண்ணையில்]
****
தகவல்:
1. Saint Joan, A Play By: George Bernard Shaw, Penguin Plays (1971)
2. Saint Joan of Arc By: Mark Twain
3. Personal Recollections of Joan of Arc By: Mark Twain
4. The Creativity of Joan of Arc By: Christopher Russell (1997).
5. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)
6. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)
7. The New Book of Knowledge By: Grolier International (1984)
8. Britannica Concise Encyclopedia (2003)
9. English Poem, ‘Warrior Woman ‘ By: Maria Jastrzebska (Poland English Poetess)
10 The Visionary of Joan of Arc, The Story of Saint Joan (French Web Sites)
11 The Maid of Orleans A Play By: Friedrich von Schiller
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan November 28, 2005]
- திரைப்படம்:சாபமும், அபயமும்
- S ஷங்கரநாராயணனின் உரை
- குறும்பட நாட்கள் அழைப்பிதழ்
- கண்ணகி கற்பு / செருப்பும் துடைப்பக்கட்டையு ம் = நம் கலாச்சாரம்
- இம்மொபைல் ஆக்கும் மொபைல்!
- காபி
- ‘அடியோர் பாங்கினும்.. .. ‘
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VIII
- 42
- விம்பத்தின் இரு விழாக்கள் : எழுத்தாளர் சந்திப்பும் குறுந்திரைப்பட விழாவும்
- தனுஷ்கோடி ராமசாமி
- நான் கண்ட சிஷெல்ஸ் – 1. பயணம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-6)
- பெண்கள் சந்திப்புமலர் 2004 ஒரு பார்வை
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை ஆக்கங்களில் கணித விதிப்பாடுகள் -8
- மழை
- தேவதை உறக்கம்
- கீதாஞ்சலி (51) உன் காதல் என் மீது ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 67 – அப்பூதி அடிகள் நாயனார் புராணம் தொடர்ச்சி
- யார் அனாதை
- அயோத்திதாசர் ஈ. வே.ரா நிலைப்பாடு: சிவக்குமார் எதிர்வினையின் தூண்டுதலால் எழும் சில சிந்தனைகள்
- குழப்பமேதும் இல்லை
- கருணாநிதி கிளம்பிட்டார்யா… கிளம்பிட்டார்யா…
- தமிழக தத்துவங்களின் பன்முகம்