தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part of 41 in the series 20110220_Issue

தேனம்மை லஷ்மணன்


1.சார்பு நிலை..
**********************

சிரசு பலவானாலும்
அங்குசமற்ற மூளைகளோடு..

வெட்ட வெட்ட மகிஷாய்
கிளைக்கும் தலைகளோடு..

நாலாவதைக் கிள்ளி
எறிந்தாலும் எள்ளலோடு..

வடக்கில் தலைவைத்து
வெட்டி ஒட்டிய முகத்தோடு

கண்ணாடியைக் காணும்வரை
பூனையின் சாயலோடு..

உற்ற இன்ன பிற
அசட்டுத்தனங்களோடு..

விளம்புதல்கள் முடித்து
உருமாற்றங்களோடு..

சார்பற்றதும் தெறிக்கிறது.
சிறுத்தையின் உறுமல்களோடு..

====================================

2. மண் சட்டிகளும்..ஆடுகளும்..
*******************************************

இக்கரையில் நான் மண்சட்டிகளுடனும்..
அக்கரையில் நீ உன் ஆடுகளோடும்..
அவரவர் சந்தைக்கு..

என் பின் கொசுவச் சேலை படபடக்க..
தார்பாய்ச்சிய வேட்டி.,
துரட்டியுடன் நீ..

கெண்டை கெளுத்தி.,
வாவல்., வவ்வா., சிறா
சிணுங்கித் திரிய..

அவரவர் பாரங்களை அப்படியே விட்டு
மெல்ல இறங்கி உன் மேல் துண்டால்
வீசிப் பிடித்தோம்..மீன் தின்னும் ஆசையில்..

சுழல் போல் காட்டாறு கணுக்காலிலிருந்து
முழங்காலேறி., பேய் போல ஆளடித்து
தலை சுழற்றி மூச்சு முட்ட..

அடித்துப் பிடித்து அவரவர் கரை சேர்ந்தோம்..
என் சுருக்குப் பை உன் கையிலும்.,
உன் மேல்துண்டு என் கையிலும் பிடித்து.

என் சுருக்குப் பை உன் துரட்டியிலும்,
உன் மேல் துண்டு என் சும்மாடாய்.,
திரும்ப அவரவர் சந்தைக்கு..

இருந்தபடி இருந்தன
மண்சட்டிகளும் ஆடுகளும்..
மீன்கள் மட்டும் கையெட்டாமலே..

வெடவெடத்த பாதங்களின் பின்னே
தவழ்ந்து வந்து கொண்டிருந்தது..
ஈர சாட்சியாய் தண்ணீர். ..

Series Navigation