மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 34

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

ஜோதிர்லதா கிரிஜா



துர்க்காவின் நெற்றியில் அடிபட்டு இலேசாக இரத்தம் கசியத் தொடங்கி யிருந்தது. மேடையில் தயாராக வைக்கப்பட்டிருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்த ஓர் இளைஞர் துர்க்காவின் நெற்றியைப் பஞ்சால் ஒற்றித் துடைத்து மருந்து ஒன்றைத் தடவி அதன் மீது பஞ்சை வைத்துக் கட்டுப் போட்டார். ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு துர்க்கா தொடர்ந்தார்:
“இதையே ஒரு பெண் சொன்னால் அவளை என்னதான் செய்ய மாட்டீர்கள் என்று நான் கேட்டதற்கு ஒரு சகோதரரிடமிருந்து எனக்கு உடனடியான பதில் கிடைத்துவிட்டது. .. .. .. பரவாயில்லை! பெண்ணாதரவு வழக்குகளை நாங்கள் கையில் எடுத்துகொள்ளும் ஒவ்வொரு முறையும் கொலை மிரட்டல் மொட்டைக் கடிதங்களும் தொலைபேசி மிரட்டல்களும் எங்களுக்கு வரத்தான் செய்கின்றன, அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சி நடுங்கியிருந்தால், பெண்களின் இவ்வியக்கம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. .. .. அடுத்த நபர் கேள்வி கேட்கலாம்.. .. “
“என்னுடைய சகோதரர் ஒருவரது இதயமற்ற, அறிவற்ற, பண்பற்ற, ஆத்திரச் செயலுக்காக முதலில் ஆண்களின் சார்பில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுகிறேன். .. ..” என்று ஓர் இளைஞர் தொடர, ஆண்களிடமிருந்தும் பெண்களடமிருந்தும் கைதட்டல் கிளம்பிற்று.
“நண்பர்களே! பெண்ணுரிமை பற்றிப் பெண்கள் பேசினால் ஆண்களுக்குக் கோபம் வருகிறது. ஆனால் அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிற ஆண்களோ மிகச் சிலரே. அப்படி யிருக்கையில் தங்கள் பிரச்னைகளைப்பற்றி அவர்கள்தானே பேசியாக வேண்டும்? அவர்கள்தானே போராட வேண்டும்? ஊருக்கு ஒரு பாரதியும், பேட்டைக்கு ஒரு பெரியாரும் தோன்றினாலும் நாம் மாறப் போவதில்லை என்றே தோன்றுகிறது. நாம் பெண்ணுரிமை பேசுகிறவர்கள் மீது கல்லெறியத்தான் தயாராக உள்ளோம். அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கவே முற்படுகிறோம். பெண்ணுரிமைக் குரலைப் பெண்கள் எழுப்பினால்தானே உங்களுக்கு எரிச்சல் வருகிறது? இதோ, இப்போது நான் எழுப்புகிறேன். கல்லெறிபவர்கள் எறிந்துகொள்ளுங்கள். நண்பர்களே! நாம் நியாயமாக நடந்து வந்திருந்தால், பெண்கள் ஏன் குரல் எழுப்ப வேண்டும் என்பதைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பார்க்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். காலஞ்சென்ற வ.ரா. அவர்களின் கூற்றை துர்க்கா அவர்கள் திருப்பிச் சொன்னதற்கே கல்லெறிகிற அளவுக்கு உங்களில் ஒருவருக்கு ஆத்திரம் வந்து விட்டது. தந்தை பெரியார் சொல்லியுள்ளதைக் கேட்டால் அந்த நண்பர் கத்தியை எடுத்துக்கொள்ளுவாரோ! சொல்லுகிறேன், கேளுங்கள். ‘பெண் ஏன் அடிமை ஆனாள்?’ என்கிற சிறு நூலில் தந்தை பெரியார் கூறுவதைக் கேளுங்கள். அதன் பத்தாம் அத்தியாயத்துக்கு, ‘பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ என்று மிகக் கடுமையான – அதிரடியான – ஒரு தலைப்பை அவர் கொடுத்துள்ளார்! அப்படியெல்லாம் கொடுமையாக நம் பெண்கள் சொல்லவில்லையே! .. .. .. ‘பிள்ளை பெறும் தொல்லை யிலிருந்து பெண்கள் அடியோடு ஒழிந்து போக வேண்டும்’ என்பது அவர் கருத்து. ‘இதைத் தவிர வேறு எதனாலும் ஆண்மை அழியாது என்பதோடு, பெண்களுக்கு விடுதலையும் இல்லை என்கிற முடிவு நமக்குக் கல் போல் உறுதியாக இருக்கின்றது. பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விருத்தியாகாது என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து நேர்ந்துவிடப் போகிறது? அல்லது, இந்த ‘தர்ம நியாயம்’ பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாகிவிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக்கொண்டு வந்துள்ள மானிட வர்க்கத்தால் ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குத் தெரியவில்லை.. .. ..’ என்கிறார் தந்தை பெரியார். ஆனால் இந்தப் பெண்ணுரிமைக்காரர்கள் இவ்வளவு கடுமையாய் ஆண்களைச் சாடவில்லை. இந்த இயக்கம் நல்ல ஆணுக்கு எதிரானது அன்று என்பதை நாம் உணரவேண்டும். பெண்களைத் தங்கள் இஷ்டம் போல் ஆட்டி அலைக்கழித்துக்கொண்டிருக்கும் ஆண்களின் அராஜகத்துக்கு மட்டுமே எதிரானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கஷ்டங்கள் நாளைக்கு நம் மகள்களுக்கு வரக்கூடாதல்லவா? அதையும் எண்ணிப் பார்க்கவேண்டும் .. .. ..”
துர்க்காவே அடுத்துப் பேசினார்: “ தந்தை பெரியார் பெண்ணுக்கு விடுதலை வேண்டுமானால் ஆண்களின் ஆண்மை அழியவேண்டும் என்றாரே அதில் நமக்குச் சம்மதமில்லை. ஆண்கள் மீது அவருக்கு அவ்வளவு ஆத்திரம். அது அவரது பெண்மைக்குணத்தைக் காட்டுகிறது. ஒரு பெண்ணின் நிலையில் தம்மை வைத்துப் பார்க்கத் தெரிந்த அவரது நேர்மையை மெய்ப்பிக்கிறது! .. .. ஆணும் பெண்ணும் குடும்பம் என்கிற வண்டியை இழுக்கின்ற இரண்டு மாடுகள். இரண்டு பேரும் ஒருவரோடொருவர் ஒத்துழைத்தால்தான் வண்டி குடை சாயாமல் ஓடும். மகாகவி பாரதியார் சொல்லுவதைக் கேளுங்கள் : ‘பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான் பேணுமாயின் பிறிதொரு தாழ்வில்லை’ என்கிறார். ‘விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பராம்’ என்கிறார்! ‘சாத்திரங்கள் பல பல கற்பராம், சவுகரியங்கள் பல பல செய்வராம், மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம், மூடக் கட்டுகள் யாவும் தவிர்ப்பராம்’ என்கிறார். இந்தச் சமுதாயத்தின் இரண்டு கண்கள் போன்றவர்கள் ஆணும் பெண்ணும். இரண்டு கண்களுமே சம அளவில் முக்கியமானவைதானே! .. .. ஆண்கள் பெரிய அளவில் முன்னேறியுள்ள இந்தக் காலத்தில், மனைவியை அடித்தல் எனும் காட்டுமிராண்டித்தனம் அயல் நாடுகளில் கூட – சுருக்கமாய்ச் சொன்னால், உலகம் முழுவதிலும் – நிலவுகிறது. அதிலும் குடித்துவிட்டு மனைவியை அடிக்கிற ஆண்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கிறது. காலங்காலமாக இத்தகைய அக்கிரமங்களைப் பொறுத்துக்கொண்டு வந்திருக்கும் பெண்கள் – கணவன் என்ன செய்தாலும் அவனே தெய்வம் என்று போதிக்கப்பட்டு, கல்வி மறுப்பால் சிந்தனை மழுங்கி, அதனை நம்பியும் வந்துள்ள பெண்கள் – மகாத்மா காந்தி, தந்தை பெரியார், பாரதியார் போன்றோரின் தூண்டுதலால் பொங்கி எழுந்து தங்கள் உரிமைகளுக்காகப் போர்க்கொடி உயர்த்தி யிருப்பது உங்களுக்கெல்லாம் ஏன் கடுப்பா யிருக்கிறது? .. .. .. கர்நாடகம், தமிழ் நாட்டில் குறிப்பாகச் செட்டிநாடு, ஆந்திரம் இன்னும் இதர மாநிலங்கள் சிலவற்றிலும் கொஞ்ச நாள் முன்பு வரை தேவதாசி முறை பழக்கத்தில் இருந்து வந்தது. ஏன்? இன்னமும் பல கிராமங்களில் அது இருந்துதான் வருகிறது. பெண் என்பவள் ஒரு நுகர்பொருள் என்கிற எண்ணம் கிட்டத்தட்ட எல்லா ஆண்களிடமும் இருக்கிறது. அவ்வெண்னத்தின் தீவிரம் வேண்டுமானால் ஆணுக்கு ஆண் பேதப்படலாம். அதிலும், இவ்விஷயத்தில், உயர் பதவிகளில் இருக்கும் பெரிய மனிஹர்கள் செய்கிற அட்டூழியங்கள் கணக்கிலடங்கா. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஜல்காங்வ் என்னும் இடத்தில் இரண்டு பிரபல அரசியல் கட்சியாளர்கள் நூற்றுக்கணக்கான அபலைப் பெண்களை வன்னுகர்வு செய்தார்கள். அது பற்றி வெளியே மூச்சும் விடக்கூடாதென்று அவர்கள் அச்சுறுத்தவும் பட்டார்கள். எனினும், விஷயம் வெளிக்கொண்டுவரப்பட்டு, அதன் விளைவாக இரண்டொருவர் ராஜிநாமாச் செய்தார்கள். ஆளுங் கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஆகிய இரு தரப்பினருமே குற்றவாளிகளா யிருந்ததால், அவ்வழக்கு இப்போது கிடப்பில் உள்ளது! சின்னஞ்சிறு பெண்களைக்கூட இந்த மிருகங்கள் விட்டுவைப்பதில்லை. மிக அண்மையில், வடக்கே உள்ள மாநில முதல்வர்களுள் ஒருவரின் பேரன் தன் ஐந்தாறு நண்பர்களுடன் ஓர் அயல்நாட்டுப் பெண்மணியை வம்புக்கு இழுத்ததை நாடே அறியும். கடைசியில், தன் கற்புக்குப் பங்கம் விளையவில்லை என்றும், வெறும் தொடுகைகளுடன் அவர்கள் நிறுத்திக்கொண்டதாகவம் அந்தப் பெண் கூறிய பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். கற்பழிப்பு நடக்கவில்லை என்பதாகவே இருந்தாலும் கூட, ஒரு பெண்னை – அதிலும் இந்திய ஆண்கள் நல்லவர்கள் என்று நம்பி வந்த ஓர் அயல்நாட்டுப் பெண்ணை – அவள் சம்மதமின்றித் தொடுவதோ, ஆடை அவிழ்ப்புச் செய்வதோ மட்டும் குற்றத்தோடு சேர்த்தி இல்லையா? இந்தக் குற்றவாளிகளுக்குத் தண்டனை தர வேண்டாமா? ‘இது ஒரு சிறு சம்பவம். இதற்காக நான் ரஜிநாமாச் செய்ய வேண்டியதில்லை’ என்றாரே அம் மாநிலத்து முதல்வர்! பாதிக்கப்ட்ட அந்தப் பெண் அவருடைய மனைவியாகவோ, மகளாகவோ இருந்திருந்தால் இப்படித்தான் அவர் சொல்லியிருப்பாரா? அது அவருக்கு அற்பச் சம்பவம் என்று தோன்றுமா, என்ன! .. .. 1992 ஆம் ஆண்டில் ஒரு பொதுக் கூட்டத்தின் போது ஒரு பிரபல பெண்மணியின் மார்பில் ஓர் அமைச்சர் கைவைத்து அழுத்தினார். அந்தப் பெண்மணி அது பற்றிச் செய்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏனெனில் மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருந்த கட்சியைச் சேர்ந்தவரல்லர் அந்த மந்திரி. இதற்கிடையே, மத்திய ஆளுங்கட்சி முதல்வர் ஒருவர் விமான தளத்தில் இதே பெண்ணிடம் அதே சேட்டையைச் செய்ய, இந்தத் தடவை அப் பெண்ணின் புகார் கண்டுகொள்ளப்படவில்லை! இத்தனைக்கும், இரண்டாவதாக அவளிடம் சேட்டை செய்தவரின் பரிந்துரையின் பேரில்தான் முதல் குற்றவாளியின் மீதான அவளது புகார் விசாரிக்கப்பட்டது! இவற்றை யெல்லாம் காணும் போது, நாம் வாழ்வது ஒரு ஜனநாயக நாட்டில்தானா எனும் சந்தேகமே வருகிறது. இப்போது நான் சொன்ன இரண்டாவதாய்ச் சேட்டை செய்த மாநில முதல்வர், ‘இதெல்லாம் ஆண்மைத்தனமான செயல். கண்டுகொண்டு பெரிதுபடுத்தக் கூடாது’ என்றாராம்! இதையே இவர் மனைவியிடமோ, மகளிடமோ ஒருவர் செய்துவிட்டு இப்படி ஒரு சமாதானத்தைச் சொன்னால் அதை ஏற்றுக்கொண்டு இவர் மவுனமா யிருந்துவிடுவாராமா! ‘பெரிய அரசியல் புள்ளிகளும், பதவியாளர்களும், காவல்துறையினரும்தான் இப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்றில்லை. மொத்தத்தில் ஆண்களுடைய இயல்பான நடவடிக்கையே அப்படித்தான் இருக்கிறது’ என்று ஒரு பிரபல ஆய்வாளர் அறிக்கை விட்டுள்ளார். சுருக்கமாய்ச் சொன்னால், பெண்களைக் காக்கவேண்டிய வேலிகளே பயிரை மேய்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்.. .. ..”
“ஆண்களைப் பற்றிய உங்கள் கணிப்பு ரொம்பவும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றா யிருக்கிறது, மேடம்!”
துர்க்கா புன்னகை செய்தார்: “இல்லை, சகோதரரே! இப்போது நான் சொல்லப் போகும் தகவன் உங்களுக்கு – ஏன்? இந்தியர்கள் அனைவருக்குமே – வெட்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவைச் சுற்றிப் பார்ப்பதற்காகப் பல வெளி நாடுகளிலிருந்தும் பயணிகள் வருகிறார்களல்லவா? அவர்களில் ஒரு பெண் பயணி இந்தியாவின் பிரபல ஆங்கில இதழில் தம் சுற்றுலா அனுபவங்களைப் பற்றி ஒரு கட்டுரையைப் பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருந்தார். நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல் தோன்றச் செய்யும் கட்டுரை அது. அதில் அவர் கூறுகிறார் – நாங்களும் எத்தனையோ நாடுகளுக்குப் போகிறோம். ஆனால் பெண்சீண்டல், அவர்கள் மீது வேண்டுமென்றே உராய்வது, இடிப்பது, தற்செயலாக நேர்ந்துவிட்டது போன்று மோதுவது போன்றவற்றை இந்திய ஆண்களின் அளவுக்குப் பிற நாட்டு ஆண்கள் செய்வதில்லை!’ என்று. .. .. .. எல்லா நாடுகளிலும் ஆண்களின் அடிப்படை மனப்பான்மை என்பது ஒன்றுதான். ஆனால் இந்தியாவின் ஆண்கள் பிற நாட்டவர்களைவிட மோசமாம். இந்தியாவில்தான் அவர்கள் அதிகத் தொல்லைகளுக்கு உட்படுகிறார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்னால், கேரவான் (Caravan) எனும் ஆங்கில இதழில் ஓர் அயல்நாட்டுப் பெண்மணி இதே கருத்தைத் தெரிவித்ததோடு, ‘இந்திய ஆண்கள் தங்கள் நாட்டுப் பெண்களிடமும் இப்படித்தான் செய்கிறார்கள். அதே சமயத்தில், வெளி நாட்டு வெள்ளைத்தோல் பெண்களை உரசினால் எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆவல் இந்தியர்களுக்கு!’ என்று சொல்லியுள்ளார். என்ன அசிங்கமிது! நாங்கள் குற்றம் சொன்னால், எங்களுக்குத் தகாத காழ்ப்பு என்பீர்கள். வெளி நாட்டுப் பெண்கள் நம்மூர் ஆண்களை வேலை மெனக்கெட்டு எதற்காக அப்படி விமர்சிக்க வேண்டுமாம்? எண்ணிப் பாருங்கள், சகோதரர்களே!”
“பெண்களில் சிலர் வெளிப்பாடாகவும் ஆபாசமாகவும் உடை யணிகிறார்களே! அது வீணான வம்புதானே?”
“உண்மைதான். அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், ஆண்கள் சீண்டுவது அப்படிப்பட்ட பெண்களை மட்டுந்தானா என்று ஒரே ஒரு நாள் சென்னைப் பேருந்து ஒன்றில் பயணம் செய்து பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்! பெண்கள் எல்லாரும் தேவதைகள் என்றோ பத்தரை மாற்றுத் தங்கங்கள் என்றோ நாங்கள் சொல்லவே இல்லை .. .. .. பெண்களும் ஆண்களைத் தவறுகளுக்குத் தூண்டக்கூடாதுதான். அது தங்களுக்குத்தான் ஆபத்தைத் தேடித் தரும் என்பதை யும் அவர்கள் உணர வேண்டும்.. .. .. பெண்கள் புத்திசாலித்தனத்துடன் நடந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும்.”
“பெண்களின் வேலைச் சுமை பற்றி ஆய்வு நடந்துள்ளதா?”
“ஓ. நடந்துள்ளது. நம் நாட்டில் மட்டுமின்றி, உலகத்து நாடுகள் பலவற்றிலும் ஆய்வுகள் நடந்துள்ளன. இந்த ஆய்வு வெளிப்படுத்தும் விஷயம் அனைத்து நாடுகளிலுமே கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆய்வுகளின் ஒரு முடிவு, பெண் ஆணைப்போல் இரண்டு மடங்கு வேலை செய்தாலும் அவளுக்கு ஆணின் கூலியை விடவும் குறைவாகவே தரப்படுகிறது என்பது! அது மட்டுமல்லாமல், வீட்டு வேலைகளையும் பெரும்பாலும் பெண்களே செய்வதாலும், குழந்தை வளர்ப்பிலும் ஆண்கள் தங்களால் முடியக்கூடியவற்றைக் கூடச் செய்யாம லிருப்பதாலும், எல்லா நாடுகளிலுமே பெண்கள் அதிகமாய் உழைத்து ஆரோக்கியக் குறைவுக்கு ஆளாகிறார்கள் என்பது இன்னொன்று. பெண்களைப் பெரிதும் போற்றுவதாய்ச் சொல்லிக்கொள்ளும் ரஷ்ய நாட்டிலும் கூட, அங்கு ஏற்படும் மணவிலக்குகளின் அறுபது விழுக்காடு பெண்களின் அதிகமான வேலைச் சுமையால் கணவன் மனைவியரிடையே விளையும் சண்டை-பூசல்களாலேயே ஏற்படுபவையாம்! இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? மனைவிக்கு அடுக்களையில் கூட மாட உதவி செய்யும் ஆண்கள் இருக்கவே செய்கிறார்கள். நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்களின் எண்ணிக்கை கால் விழுக்காடு கூட இருக்காது என்பதே கசப்பான உண்மை. .. .. அப்புறம் பெண் சிசுக்கொலைகள்.. . . .. நீங்களே அனைத்துப் பிரச்னைகளையும் ஏற்படுத்திவிட்டு, பெண்களால் பிரச்னை என்று சொல்லி அவளைக் கருவிலேயே அழிக்கிறீர்கள். பல ஆண்டுகள் கழித்து இதன் விளைவு என்னவாக இருக்கும்? பெண்களின் எண்ணிக்கை மளமள வென்று குறையும். இதன் விளைவுகள் பயங்ககரமானவையாக இருக்கும். பாலியல் கொடுமைகள், நோய்கள் போன்றவை மேலும் மிகும்.. .. .. பணியிடங்களிலேனும் பெண்களுக்குப் பாதுகாப்பு உண்டா? இல்லை. அலுவலக அதிகாரிகளே வாலாட்டுகிறவர்களாக இருக்கிறார்கள்.. .. .. அருமைச் சகோதரர்களே! வீட்டை விட்டுப் பல்வேறு கட்டாயங்களால் வெளியே வரத்தொடங்கியுள்ள பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க முயலுங்கள்.. .. .. முடியாவிட்டால், தொந்தரவு தராமலாவது இருங்கள்! .. .. .. இறுதியாக ஒன்று. சமுதாயம் சார்ந்த எந்த இயக்கமாக இருந்தாலும், ஆண், பெண் ஆகிய இரு பாலரும் இணைந்து அதில் ஈடுபட்டால்தான் அது வெற்றி பெற்றுப் பயனளிக்கும். எனவே, அருமைச் சகோதரர்களே! நீங்களும் நாளை பெண் குழந்தைகளுக்குத் தகப்பன்மார் ஆவீர்கள் என்பதை நினைத்துப் பார்த்து உங்கள் இளமைப் பருவத்திலிருந்தே பெண்களுக்கு ஆதரவு தரும் பணிகளில் ஈடுபடுங்கள். எங்கள் இயக்கத்தில் உங்களையும் இணத்துக்கொண்டு எங்களுக்கு உதவுங்கள். இவ்வியக்கத்தின் சாதனைகள் நாளை உங்கள் மகள்களுக்குப் பெரிதும் உதவும் .. .. மிக்க நன்றி.. .. “ – கட்டுப் போடப்பட்டிருந்த தன் நெற்றியைத் தொட்டவாறே துர்க்கா கைகூப்பிவிட்டு அமர்ந்தார்.
கூட்டத்தினர் பேரிரைச்சலாய்க் கைதட்டினார்கள். .. .. ..
.. .. .. .. இது வரையில் என் வரலாற்றை எழுதிக்கொண்டுவந்து கொடுத்த பக்கத்து வீட்டு முன்னாள் எழுத்தாளர் மாலதி, “இன்னிக்கு ராத்திரியே உக்காந்து படிச்சு முடிச்சுடுங்கோ, மேடம்.. .. நாளைக்கு ஒரு முக்கியமான விஷயமா உங்களை நான் பாக்கணும்.. .. ..” என்றாள்.
.. .. .. அன்றிரவே அதைப் படித்து முடித்தேன். காலையில் முதல் வேலையாக மாலதியைக் கூப்பிட்டு அனுப்பினேன்.
மாலதி உடனே வந்தாள்.
“மாலதி. உக்காரும்மா. நான் சொன்னதெல்லாம் சரியா வந்திருக்கு. .. .. ஆனா, ஒண்ணு சொன்னாக் கோவிச்சுக்க மாட்டியே?” என்றேன்.
“என்ன மேடம் நீங்க்? சும்மா சொல்லுங்க – எதுவானாலும்.. .. ..”
“அந்தக் கடைசி அத்தியாயம் ரொம்ப போர்னு வாசகர்கள் திட்டுவாங்க. ஒரே பிரசார மயமா யிருக்கும்மா.”
“இருக்கட்டுமே, மேடம். அது இல்லைன்னா, இந்தக் கதைக்கு ‘மறுபடியும் ஒரு மகா பாரதம்’ னு பேரு வெச்சதே அடிபட்டுப் போயிடும். பிடிக்காதவா அந்த அத்தியாயத்தைப் படிக்க வேண்டாமே!”
“அந்த விஷயங்களுக்காகத்தானேம்மா நாவலையே எழுதியிருக்கே? அப்புறம், பிடிக்காட்டா படிக்கவேண்டாம்னா அதெப்படி?”
“அப்ப அப்படியே இருக்கட்டும், மேடம். ஏற்கெனவே நாம சொல்லிட்டு வர்ற விஷயங்கள் பத்தித் தெரிஞ்சவங்கதானே அந்த அத்தியாயத்தால எரிச்சல் படுவாங்க? பட்டா படட்டும்! மத்தவங்க படிச்சுட்டு எரிச்சல் படுவாங்க! அவ்வளவுதானே?” என்று மாலதி வாய்விட்டுச் சிரித்தாள்.
“இருந்தாலும் பிரசார நெடி ரொம்பவே ஜாஸ்தியா யிருக்கும்மா.”
“எனக்கும் தெரியுது, மேடம். ஆனா தவிர்க்க முடியல்லே. முடியல்லேன்றதை விட, விரும்பல்லேங்கிறதுதான் சரியா யிருக்கும். ஒரு பொதுக் கூட்டம்னா அப்படித்தானே மேடம் எல்லரும் பேசுவாங்க? அதைத்தான் நான் எழுதி யிருக்கேன். இவளுக்கு வேற வேலை கிடையாதுன்னு எரிசால் பட்றவங்க படிக்க வேண்டாமே! கதையை மட்டும் படிக்கட்டுமே! இன்னும் சொல்லப் போனா எவ்வளவோ சுருக்கமாத்தான் பேசியிருக்காங்க என்னோட கதா பாத்திரங்கள் எல்லாருமே!”
எனக்குத் தாங்க முடியாத அளவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது: “சா¢யாப் போச்சு, போ! சரி, விடு. அது உன்னோட இஷ்டம். .. .. அது சரி. என்னமோ ஒரு முக்கியமான விஷயமா என்னைப் பாகாணும்னு சொன்னியே? என்ன அது?”
“ரொம்பவே ஆச்சரியமான விஷயம், மேடம்!”
“ உன்னை விட்டுட்டு ஓடிப்போன உன் புருஷன் திரும்பி வந்துட்டானாக்கும்!”
“.. .. .. என்னோட புருஷன் இல்லே, மேடம்!”
“பின்ன யாரோட புருஷன்?”
“.. .. .. உங்களோட புருஷன்! மிஸ்டர் சிவகுரு!”
என் கண்கள் விரிந்தது எனக்கே தெரிந்தது: “ என்ன சொல்றே, மாலதி?”
“ஆமா, மேடம். போன வாரம் நான் மதுரையிலே இருக்கிற எங்க சித்தி வீட்டுக்குப் போயிருந்தேனில்ல? அப்ப அவங்க வீட்டுக்கு மிஸ்டர் சிவகுரு வந்திருந்தாரு. பேச்சு வாக்கில அவரு உங்களோட ஹஸ்பண்ட்ங்கிற விஷயம் எனக்குத் தெரிஞ்சிடிச்சு.”
“சரி. இப்ப அதுக்கு என்ன?”
“அவர் இன்னைக்கு எங்க வீட்டுக்கு வறார். உங்க கிட்ட சொல்லி அவரோட பேத்திக்கு வேலைக்கோ இல்லாட்டி உங்க ஹோம் ஒண்ணுல இருக்கிறதுக்கோ ஏற்பாடு பண்ண முயற்சி செய்யிறதாச் சொல்லி யிருக்கேன். அவர் வந்ததும் அவரை இங்கே கூட்டிட்டு வருவேன், மேடம். உங்க கிட்ட முன் கூட்டியே அனுமதி கேக்காததுக்கு மன்னிச்சுக்குங்க. உங்களுக்கு ஒரு வியப்பை ஏற்படுத்தணும்னுதான்! உங்க சுயசரிதையோட கடைசி அத்தியாயமா அந்தச் சந்திப்பு நடக்கிறப்போ உங்க பேச்சு, பாவனைகள் இதெல்லாம் அமையட்டும். என்னோட அதிகப் பிரசங்கித்தனத்தை மன்னிச்சிடுக்ங்க, மேடம். கதை முடிவு ஒரு சுவாரசியத்தோட இருக்குமில்ல? அதுக்காகத்தான்! அது மட்டுமில்லே. யதார்த்தமாவும் இருக்கும்! என்ன, மேடம், சொல்றீங்க?” என்ற மாலதி புன்னகை புரிந்தாள். எனக்கும் சிரிப்பு வந்தது.
– தொடரும்
jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 31

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

ஜோதிர்லதா கிரிஜா


மறு நாள் மாலை ஆறு மணி யளவில் ஒரு பெண் பங்கஜத்தை ஸ்திரீ சேவா மண்டலியில் சந்திக்க வந்தாள்.

“என்னம்மா? என்ன சங்கதி? நீ யாரு?” என்று பங்கஜம் கேட்டதுதான் தாமதம், அவள் வாய்விட்டு அழத் தொடங்கினாள்.

“விஷயத்தைச் சொல்லிட்டு அழும்மா.”

“உங்களண்ட பியூனா வேலை செய்யிற மாயாண்டியோட பொஞ்சாதிம்மா, நானு.”

“அப்படியா? சரி, சொல்லு. என்ன விஷயம்? ஏதாவது குடும்பத்தகராறா?”

“ஆமாங்கம்மா. எங்களுக்கு அஞ்சு பசங்கம்மா. மூணு பொம்பளப் பிள்ளைங்க, ரெண்டு ஆம்பளப் பிள்ளைங்க. வீட்டுச் செலவுக்கு ஒரு காசு கூடத் தர்றதில்லீங்கம்மா எம்புருசன்.”

“என்ன பண்றான் எல்லாப் பணத்தையும்?”

“குடிக்கிறாரும்மா. நானும் இங்க வரவேணாம், வரவேணாம், அவரோட மருவாதியைக் கெடுக்க வேணாம்னு இத்தினி நாளும் பொறுமையா யிருந்தேம்மா. இனிமேப்பட்டுத் தாளாதுங்க. எம் பெரிய மக வயசுக்கு வந்துட்டா. அவளைக் கட்டிக் குடுக்க வேணாமாம்மா? நான் ஒண்டிக்காரி என்னங்கம்மா செய்யிறது? வர்ற மாசத்துலேர்ந்து அவரோட சம்பளப் பணத்தை ஏங்கிட்ட குடுத்துடுங்கம்மா. “

“சரி. நான் மாயாண்டி கிட்ட பேசறேன். ”

“பேசினா ஒண்ணும் பெரயோசனம் இல்லீங்கம்மா. உங்களாண்ட தலையத் தலைய ஆட்டிட்டு , அப்பால வீட்டுக்கு வந்து என்னைய அடிப்பாரு.”

“அடிக்க வேற செய்யறானா?”

“குடிகாரங்கள்ள பொஞ்சாதிய அடிக்காதவன் யாரும்மா? எங்க பேட்டையில இருக்கிற பொம்பளைங்கள்ள குடிகாரப் புருசன் கையால அடி வாங்காதவங்களே இல்லீங்கம்மா. நெதமும் குடி, நெதமும் அடி. அந்தப் பாளாப் போன குடியில அப்பிடி என்னதான் இருக்குதோ!”

“சரி, நான் மாயாண்டியோட பேசிட்டு, சம்பளப் பணத்துல பாதியை உங்கிட்ட குடுக்கிறதுக்கு அவன் கிட்ட சம்மதம் வாங்கறேன்.”

“அவரு சம்மதிக்காட்டி?”

“அவன் சம்மதிக்காட்டி என்னால எதுவும் பண்ண முடியாதும்மா. சட்டத்துல அதுக்கு எடமில்லே. ஆனாலும் மெரட்டிப் பாக்கறேன்.”

“இங்கிட்டு வந்து ஒங்களைப் பாத்ததுக்கும் சேத்து என்னைய அடிப்பாரும்மா.”

“அதுக்கும் சேத்தே மெரட்டி வெச்சு அனுப்பறேன். நீ மறுபடியும் ஒம் பொண்டாட்டி மேல கையை வெச்சதாத் தெரிஞ்சுது, போலீஸ்ல சொல்லி ஒன்னை அவங்க ஜெயில்ல போடும்படி பண்ணிடுவேன்னும் பயமுறுத்தி வெக்கிறேன். ராஸ்கல்! என்கிட்ட என்னவோ மகா யோக்கியன் மாதிரி கொழையறானே!”

“எம் புருசன் மட்டுமில்லீங்கம்மா. எங்க பேட்டையில உள்ள பொண்ணுங்க எல்லாருமே புருசங்க கிட்ட அன்னாடம் அடி வாங்கிச் சாகிறவங்கதாம்மா. எங்க பக்கத்து வீட்டு ஆளு கெட்ட சாராயம் குடிச்சுக் குடிச்சே செத்துப் போனாரு. அப்பிடியும் எவனுக்கும் புத்தி வரல்லீங்கம்மா. அந்த மனுசன் செத்த அதிர்ச்சியில இந்த மனுசனும் ரெண்டு நாளுக்குக் குடிக்காம இருந்தாரு. அம்புட்டுத்தேன். மறுபடியும் பளைய குருடி, கதவெத் தொறடி கதைதாங்க! .. .. அப்ப, நான் வரட்டும்மாம்மா? கொஞ்சம் தயவு பண்ணுங்கம்மா.”

கைகூப்பிய பின் மாயாண்டியின் மனைவி புறப்பட்டுப் போனாள்.

பங்கஜத்தின் அறையில் உடனிருந்த துர்க்கா, “பூரண மது விலக்கை ராஜாஜி அமல் பண்ணி யிருக்கார். அப்பிடி யிருந்தும் இதுகளுக்கு எங்கேருந்து கள்ளும் சாராயமும் கெடைக்கிறது? “ என்று முகஞ்சுளித்தாள்.

“திருட்டுத்தனமாக் காய்ச்சுவாளாயிருக்கும். அதுல சில சமயம் வெஷமும் கலந்துட்றது. ஒடம்புக்கு ஆகாத ஸ்பிரிட் (spirit) கள்ளாம் இருக்கே! குடிச்சுட்டுச் சாகறா. அப்பிடி என்னதான் மாயம் இருக்கோ அந்தக் குடியிலே! அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம். குழந்தை குட்டிகள் மேல பாசம் இருந்தா குடிக்கச் சொல்லுமோ? நாசமாப் போக! . . . ‘ராஜாஜி தான் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுங்கிறாப்ல சொல்லிட்டாரே – ‘கெட்ட சாராயத்தைக் குடிச்சுட்டுச் செத்தாலும் சாவேனே ஒழிய, குடிக்கிறதை நிறுத்த மாட்டேன்’னு சொல்ற முட்டாள்களுக்காக நாம பூரண மதுவிலக்குங்கிற நல்ல திட்டத்தைக் கைவிட வேண்டியதில்லே. குடிச்சுட்டுச் சாகறவா சாகட்டும்’ னே சொல்லிட்டாரே!”

“என்ன சட்டம் கொண்டு வந்து என்ன! என்ன திட்டம் கொண்டு வந்துதான் என்ன! இந்த முட்டாள் ஜனங்களைத் திருத்தவே முடியாது!”

“அதுக்காக நல்ல முயற்சிகளை நாம நிறுத்தலாமா? அது பாட்டுக்கு ஒரு பக்கம் நடந்துண்டிருக்க வேண்டியதுதான். தப்புப் பண்றவா அடியோட அதை நிறுத்திட்டு ஒரே நாள்லே நல்லவாளா மாறிட மாட்டாதான். ஆனா, அவாளோட எண்ணிக்கை ரொம்பவும் அதிகமாகாமயாவது இருக்குமோல்லியோ? குறைஞ்சபட்சம் அப்பிடி எதிர்பாத்துத்தான் நம்மள மாதிரி அசடுகள் இது மாதிரியான பிரசாரங்கள்ள ஈடுபட்றா. அது மட்டுமா? கொஞ்சங் கொஞ்சமாக் கொறையறதுக்கான சாத்தியமும் கூட இருக்குமே!”

“நீங்க சொல்றது கரெக்ட்.”

“கள்ளுக்கடை மறியல் பண்ணினாளே நம்ம பொண்ணுகள், இந்தப் பக்கம் அவா மறியல் பண்ணிட்டுப் போக வேண்டியதுதான், அந்தப் பக்கமா வந்து சிரிச்சுண்டே குடிச்சுட்டுப் போறதுகள்! மனுஷாளைக் கட்டாயப் படுத்தி எதையுமே பண்ண வைக்க முடியாது. அவா தானாத் திருந்தினாத்தான் உண்டு.”

“அது சரிம்மா. ஆனா, அதுக்கான பிரசாரங்களையும் நாம இடைவிடாம சென்சுண்டே இருக்கணுமில்லியா?”

“ஆமாமா.. .. .. கொஞ்ச நாளுக்கு முந்தி ஒரு பத்திரிகையில ஒரு புத்திசாலி எழுதியிருந்தான் – குடிக்கிறது தனி மனுஷ உரிமையாம்! எப்பிடி இருக்கு? அப்ப, காலம் முழுக்க பிரும்மச்சாரியா யிருந்துடணும்! ‘கல்யாணமும் பண்ணிப்பேன்; கொழந்தை குட்டிகளும் பெத்துப்பேன். ஆனா அவாளுக்குச் சோறு கூடப் போடாம எல்லாத்தையும் குடிச்சே கரைப்பேன்’கிறது என்ன நியாயம்?”

“ஒருத்தன் பிரும்மச்சாரியாவே இருந்தாலும் கூட, குடிச்சுட்டு தேமேன்னு தன்னோட ரூம் (room) லதான் விழுந்து கெடக்கணும். அப்பிடி அவன் நடந்துண்டான்னா, அது அவனோட தனிப்பட்ட உரிமைங்கிறதை நாம் ஒத்துக்கலாம். ஆனா, குடிச்சதும் கூர் மழுங்கிப் போயிட்றதே! குடி மயக்கத்துல அவன் பாட்டுக்கு அசலாத்துப் பொண்ணு கையைப் பிடிச்சு இழுத்தன்னா, அது அவனோட தனிமனுஷ உரிமைங்கிறதா ஒத்துக்க முடியுமா! ”

“ஆ.. .. ..மா! நீயும் நானும் இப்பிடி வாய் ஓயாம தர்க்கம் பண்ணி இந்தப் பிரச்னை தீரப் போறதாக்கும்! .. .. .. அப்புறம், இன்னொரு விஷயம் உங்கிட்ட கேக்கணும். மறந்தே போயிட்டேன்.”

“என்னம்மா?”

“இன்னைக்கு மத்தியானம் நம்ம கேர்டேக்கர் (caretaker) சிவமணியோட பொண்டாட்டியும் வந்திருந்தா என்னைப் பாக்கிறதுக்கு. அப்ப நீ சேத்துப்பட்டு ப்ராஞ்சுக்குப் போயிருந்தே. .. அவ சொன்ன விஷயம் ரொம்ப பயங்கரம்.”

“அப்படி என்னம்மா பயங்கரமான விஷயம்?”

“அவனுக்கும் கல்யாண வயசில ஒரு பொண்ணு இருக்கா. அந்தப் பொண்ணை அவன் யாருக்கோ வித்துட்டானாம் – முன்னூறு ரூவாக்கி!”

“அடப் பாவி! அவளுக்குத் தெரிஞ்சேவா பண்னியிருக்கான் இப்பிடி ஒரு காரியம்?”

“இல்லேல்லே. ரகசியமாத்தான் பண்ணியிருக்கான். ஆனா யார் மூலமாப் பண்ணினானோ அந்த ·ப்ரண்டோட பொஞ்சாதிக்கு அது தெரிய வந்து இவ கிட்ட வந்து விஷயத்தைச் சொல்லிட்டா ரகசியமா.”

“பெத்த பொண்ணை விக்கும்படியா அப்பிடி என்ன பணமொடையாம்? எவ்வளவுதான் பண நெருக்கடியா யிருக்கட்டுமே? அதுக்காக தான் பெத்த பொண்ணை எவனாவது விப்பானோ? நம்பவே முடியல்லியே!”

“வித்திருக்கானே! நம்பாம என்ன பண்றது?”

“அப்புறம்?”

“அப்புறமென்ன, அப்புறம்? அவ்வளவுதான்.. .. ..அந்தாளு வடக்கத்திக்காரனாம். பொண்ணைக் கூட்டிண்டு போயே போயிட்டான். கெழவன் வேற. ஹிந்தி பேசற சேட்டாம்.”

“சிவமணியோட பொண்டாட்டி போலீஸ்ல கம்ப்ளெய்ன் பண்ண நாம ஏற்பாடு பண்ணினா என்னம்மா?”

“கூடவே கூடாதுன்னு அழு அழுன்னு அழறாளே! சிவமணி அவளை அடிச்சே கொன்னுடுவானாம். கேர்டேக்கருக்கு நல்ல மொரட்டு ஆளா யிருந்தா நல்லதுன்னுதானே அவனைத் தேடிப் பிடிச்சு வேலைக்கு வெச்சோம்? அவன் ரிடைர் (retire) ஆறதுக்கு இன்னும் பத்து வருஷம் இருக்கே, துர்க்கா?”

“அவனை வேலையை விட்டு நிறுத்திடலாம்மா.”

“அதுவும் கூடாதாம், அவனோட பதிபக்திப் பொண்டாட்டிக்கு! ஆனா அவனைக் கூப்பிட்டு மெரட்டி மட்டும் வெக்கச் சொன்னா. ஏன்னா, அவளுக்கு இன்னொரு பொண்ணு இருக்காளாம்.”

“அப்ப மட்டும் அவன் அவளை அடிச்சுக்கொல்ல மாட்டானாமா?”

“அடிப்பான்தான். ஆனா போலீசுக்கு அவ போய்ச் சொன்னா இன்னும் மோசமான்னா அடிச்சுக் கொல்லுவான்? ஒண்ணு பண்ணலாம். அவனை மெரட்டலாம். அவன் பொண்டாட்டியை அடிச்சான்னா, நாமளே போலீசுக்குப் போவோம்னு சொல்லலாம். இல்லேன்னா, வேலையை விட்டு நிறுத்திடுவோம்னு சொல்லலாம். அந்தப் பொண்ணுக்கும் அப்பிடி ஒரு கதி வராம காப்பாத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கில்லையா? இப்பவே அவனைக் கூப்பிட்டு மெரட்டலாம்.”

“இப்ப அவன் இருக்க மாட்டாம்மா. வீட்டுக்குப் போயிருப்பான். அவனுக்குத் தெரியாம அவன் பொண்டாட்டி எப்பிடி வந்து உங்களைப் பாத்தா?”

“அவன் இன்னிக்குக் காலம்பர அரை நாள் லீவ் போட்டிருந்தான். அது தெரிஞ்சு வந்துட்டுப் போனா.”

“அன்னிக்கு ஒரு நாள் நாம பேசிண்ட மாதிரி, மகாபாரதக் காலமும், பழக்க வழக்கங்களும் இன்னும் மாறவே இல்லே. தாலி கட்டின பொண்டாட்டின்றவளை ஒரு அ·றிணைப் பண்டம் – சொந்தச் சொத்து – அவளை என்ன வேணாலும் பண்ணலாம் – யாருக்கும் தட்டிக் கேக்கற அதிகாரம் கெடையாது -அப்பிடின்னுதான் புருஷா நெனைக்கிறதாத் தோண்றது.”

“ம்! .. .. பாக்கலாம். சுதந்திரம் கூடிய சீக்கிரம் கிடைச்சுடும்னு பட்றது. அதுக்கு அப்புறம் காந்தி என்ன பதவியிலயா ஒக்காரப் போறார்? ஏற்கெனவே செஞ்சிண்டிருக்கிற சமுதாய சீர்திருத்த வேலைகளைத்தான் இன்னும் அதிக மும்முரமாத் தொடர்ந்து செய்வார். படிப்படியா, அப்ப, இந்தக் கேடுகள்ளாம் கொறையாதா என்ன? ஒரே யடியா மறையாட்டாலும், கொறையவாவது கொறையு மோல்லியோ?”

“பாக்காலாம்.. .. ..”

.. .. .. மறு நாளே மாயாண்டியைக் கூப்பிட்டு மிரட்டிய பங்கஜம் அவனது சம்பளத்தில் முக்கால் பங்கை அவன் மனைவியிடம் தானே கொடுத்துவிட அவனிடமிருந்து எழுத்து மூலமான ஒப்புதலைப் பெற்றுக்கொண்டாள்.

அடுத்து, கட்டடக் காப்பாளன் சிவமணியைக் கூப்பிட்டு அனுப்பிப் பேசினாள்: “சிவமணி! உன்னோட மூத்த மகளுக்கு என்ன வயசு ஆகுது?”

“பதி.. பதி.. பதினாலு வயசு ஆவுதும்மா.”

“பதினாலா? அப்ப உங்க வழக்கப்படி கலியாணம் பண்ணணுமில்ல?”

“ஆஆஆ.. .. ஆமாங்கம்மா.”

“சொந்தத்துலெ மொறை மாப்பிள்ளை யாராவது இருக்காங்களா?”

“இ இ இ.. .. .. இல்லீங்கம்மா.”

“எனக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கான். உங்க ஜாதிதான். ஆனாலும் படிச்சிருக்கான். பத்தாவது வரையில. நான் சொன்னா உம் பொண்ணைக் கலியாணம் பண்ணிக்கச் சம்மதிப்பான். என்ன சொல்றே?”

“.. .. மன்னிச்சுக்குங்கம்மா. எனக்கு சொல்றதுக்கே அசிங்கமா யிருக்கு. அது ஓடிப் போயிறுச்சு.”

“என்னது! ஓடிப் போயிறுச்சா! எப்போ?”

“முந்தாநேத்தும்மா. .. .. எ எ எ .. .. எவன் கூடவோ ஓடிப் போயிறுச்சு. கிரிச கெட்ட களுத.”

“யாரவன்?”

“எ எ எ .. ..எங்க பேட்டையில இருக்குற ஆளுதான்.”

“ அவனையும் காணோமா?”

“ஆமாம்மா.”

“அவன் பேரேன்ன? விலாசம் சொல்லு. மைனர்ப் பொண்ணைக் கடத்தக் கூடாதுன்னு சட்டம். மத்த விவரமெல்லாம் சொல்லு. நான் போலீஸ்ல சொல்லிக் கண்டுபிடிக்க ஏற்பாடு பண்றேன்.”

“வேணாங்க. அவனோட அப்பன்காரன் பெரிய ரவுடி. “

“சிவமணி! என்ன இதெல்லாம்? கதையா சொல்றே? நீயே உம் பொண்ணை அழைச்சுட்டுப் போயி வயசான எந்த வடக்கத்திக் காரனோடவோ சென்ட்ரல் ஸ்டேஷன்ல ரெயிலேத்தினதைப் பாத்ததுக்கு சாட்சியெல்லாம் இருக்கு. நம்ம ஹோம் ஆளுங்களே பாத்திருக்காங்க. உள்ளது உள்ளபடி சொல்றியா, இல்லே, நானே உம் பொண்ணைக் காணோம்னு புகார் குடுத்துட்டு, இப்ப நான் சொன்னதையெல்லாமும் போலீஸ்ல சொல்லவா?.. .. .. என்ன பேசாம இருக்கே? .. .. உம் பொஞ்சாதியை வரச் சொல்லு. நான் அவ கூடப் பேசணும். என்ன ஒண்ணுமே சொல்லாம இருக்கே? வாயில என்ன கொழக்கட்டையா அதக்கிண்டிருக்கே?”

“நானேதாம்மா ஒரு சேட்டோட அதை பம்பாய்க்கு அனுப்பி வெச்சேன்.”

“எதுக்கு? அந்தப் பொண்ணு அழுதுண்டே இருந்ததா வேற எனக்குத் தகவல். அவளோட உன்னையும் சேத்துப் பாத்ததால, எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுப் புகார் பண்ணணும்னு அதைக் கவனிச்ச ஆளுங்க நினைச்சிருக்காங்க. நீ இங்கே வேலை செய்யறது தெரிஞ்ச ஆளுங்களா அவங்க இருந்ததால தப்பிச்சே. இல்லாட்டி அப்பவே உன் கையில விலங்கு மாட்டும்படி ஆயிருக்கும். அது சரி, எதுக்கு அனுப்பினே?”

“அ அ அந்தாளோட பொஞ்சாதியாத்தான்.”

“அந்த சேட் வயசானவனாமே? தவிர, ஒழுங்கா மொறையாக் கல்யாணம் பண்ணி அனுப்பாம வெறுமன அனுப்பினா நாளைக்கு உம்பொண்ணோட கதி என்னவாகும்னு நெனைச்சுப் பாத்தியா?.. .. .. சிவமணி! தலை நிமிந்து என்னைப் பாரு. நீ பொய் சொல்றே.. .. .. எனக்கு என்ன தோணுதுன்னா, அந்த சேட் உனக்குப் பணம் குடுத்திருக்கான். நீ உன் மகளை அவனுக்குக் குடுத்துட்டே – அதாவது, வித்துட்டே.”

“இ இ இ…ல்லீங்க, சிஸ்டர்.. .. ..”

“நான் கண்டு பிடிச்சாச்சு, சிவமணி! உண்மையை நீயா ஒத்துக்கப் போறியா, இல்லியா? பொலீஸ் இதுல மூக்கை நொழைச்சாங்கன்னா உன்னோட கதி என்னவாகும்னு நெனைச்சுப் பாரு. அதனால, அந்த சேட்டோட விலாசத்தைக் குடு. நான் அவளைத் திருப்பிக் கூட்டிண்டு வர ஏற்பாடு பண்றேன்.. .. ..”

கடைசியில், அவன் சேட்டின் பம்பாய் முகவரியைச் சொல்ல, பங்கஜம் எழுதிவைத்துக்கொண்டாள்.

“சரி. நான் ஹிந்தியில ஒரு லெட்டர் எழுதி ஒரு ஆள் கிட்ட குடுத்து அனுப்பறேன். அவனுக்கு நிச்சியமா ஒரு ·போன் (phone) இருக்கும். அதுக்கு இடையில அதைக் கண்டுபிடிச்சு அந்த சேட்டொட நானே பேசறேன். . . . ஆமா? நீ பண்ணியிருக்கிற அக்கிரமம் உன் பொஞ்சாதிக்கு தெரியுமா?”

“தெரியாதுங்க. ஆனா என் செநேகிதன் ஒருத்தனுக்குத் தெரியும். அவன் தான் இதுக்கு ஏற்பாடு பண்ணினவன். வேற யாருக்கும் தெரியாதுங்க.”

“சரி, நீ போ. இனிமே இப்பிடி ஒரு காரியத்தைப் பண்ணாதே.”

சிவமணி தலையைக் குனிந்துகொண்டு வெளியேறினான்.

.. .. ..1946 ஆம் ஆண்டில், ஜனவரி 21 ஆம் நாளிலிருந்து 31 ஆம் நாள் வரை காந்தியடிகள் மதராசுக்கு வந்து தங்கிப் பல்வேறு சமுதாய நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அவற்றில் முக்கியமானவை தென் இந்திய ஹிந்துஸ்தானி பிரசார் சபாவின் வெள்ளி விழாவும், எழுத்தாளர்கள், ஓவியர்கள் ஆகியோரின் கூட்டமும்.

எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் தஙகள் படைப்புகளில் ஆபாசத்தையும் பாலுணர்வுத் தூண்டுதலையும் தவிர்க்குமாறு அவர் அறிவுரை கூறினார். ‘பெண்ணை வர்ணிக்கும் போது உங்கள் தாயை நினைத்துக்கொள்ளுங்கள். பாலுணர்வைத் தூண்டும் வண்ணமோ கொச்சையாகவோ ஒரு சொல் கூட உங்கள் எழுத்தில் வந்து விழாது. எழுத்தாளர்கள் தங்கள் எழுதுகோல்களின் மூலம் பெரும் சாதனைகளைப் புரிய முடியும். சமுதாயக் குறைபாடுகளை நீக்கும் திசையிலும், அநீதிகளைக் களையும் வழியிலும் உங்கள் எழுதுகோல்கள் நகரட்டும்’ என்று எழுத்தாளர்களைக் காந்தியடிகள் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பட்டணத்தை ஒரு கலக்குக் கலக்கிவிட்டு, மகாத்மா காந்தி புறப்பட்டுப் போனார்.

.. .. .. 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், பதினைந்தாம் நாள் விடியலில் -அதாவது சரியாக நள்ளிரவில் – இந்தியா – முஸ்லிம்கள் பெரும்பாலாக வாழ்ந்த பகுதிகளை அவர்களுக்குப் பாகிஸ்தான் எனும் பெயரில் காங்கிரஸ் இழக்கச் சம்மதித்த பின் – சுதந்தரம் அடைந்தது. அதற்கு அடுத்த ஆண்டில், மகாத்மா காந்தி ஓர் இந்து மத வெறியனால் சுடப்பட்டு இறந்தார். பாகிஸ்தான் எனும் பெயரில் தங்களுக்கென்று ஒரு தனி நாட்டுக்காகக் கலகம் செய்து வந்த முஸ்லிம்களைத் தம் செல்லப் பிள்ளைகளாய்க் கருதி மகாத்மா காந்தி அவர்களுக்கு அடி பணிந்தார் என்கிற எண்ணத்தால் சில தீவிர இந்துக்களிடம் விளைந்த ஆத்திரமே அதற்குக் காரணம். இந்தியாவின் பிரிவினைக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், பாகிஸ்தானை அடைந்தே தீரும் பிடிவாதத்தில் இருந்தவர்களின் வன்முறைச் செயல்களால் நாட்டில் இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பாருடையவும் இரத்த ஆறுகள் ஓடுவதோடு, எந்தத் தவறும் செய்யாத இரு தரப்புப் பெண்களும் வன்னுகர்வுக்கு ஆளாவார்கள், பிஞ்சுக் குழந்தைகளும், செயலற்ற முதியோர்களும் அல்லலுறுவார்கள் என்பதாலேயே, பிரிவினைக்குத் துளியும் விருப்பமற்ற நிலையிலும் அரை மனத்துடன் காந்தி அதை ஏற்க வேண்டியதாயிற்று என்பதை மத உணர்வுகள் அற்ற இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஆகிய இரு தரப்பாருமே எளிதில் புரிந்துகொண்டார்கள். காந்தி தாயுள்ளம் படைத்தவர். அவருக்குத் தம் பிள்ளைகளில் எவருமே இரத்தம் சிந்தக்கூடாது என்கிற உயர்ந்த உள்ளம். அதனால்தான் தமக்கே உடன்பாடில்லாத ஓர் ஏற்பாட்டுக்கு அவர் இணங்க வேண்டியதாயிற்று.

.. .. .. கொள்ளை யடித்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரனிடமிருந்து நாடு விடுபட்டுவிட்டதால், இனி நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடப் போகின்றனவென்று கனவு கண்டு கொண்டிருந்தவர்களின் வாய்களில் காலப்போக்கில் மண்தான் வந்து விழுந்தது. சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால், அயல் நாட்டுக் கொள்ளையர்களிடமிருந்து விடுபட்ட இந்தியா உள்ளூர்க் கொள்ளையரிடம் சிக்கியது.

பங்கஜம் போன்ற பெண்விடுதலை ஆர்வலர்கள் சுதந்திர இந்தியாவில் பெண்களின் நிலை இனிக் கண்டிப்பாக உயரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அந்த எதிர்பார்த்தலிலும் மண் விழுந்தது – பெண்களின் முன்னேற்றம் ஆமை வேகத்தில் அசைந்து நகர்ந்ததால்.

விடுதலைக்குப் பின் பங்கஜத்தின் சமுதாய சேவை மையங்களுடன் தொடர்பு கொண்டு சாமிநாதன் நடுத்தர வயது கடந்துவிட்ட நிலையில் தன்னளவில் கணிசமான சேவையைச் செய்யத் தொடங்கி யிருந்தார்.

சொந்தமாக ஒரு விழிப்பு உணர்வுப் பத்திரிகை தொடங்க வேண்டுமென்கிற ஆவல் ஏற்கெனவே அவருக்கு இருந்ததால், அந்தத் துறையில் பயிற்சி பெறும் நோக்கத்துடன் ஒரு நாளிதழில் அவர் வேலையில் சேர்ந்தார்.

நாள்கள் செல்லச்செல்ல, வெள்ளைக்காரர்களே உள்ளூர்க் கொள்ளக்காரர்களை விடவும் பரவாயில்லையோ எனும் எண்ணம் மக்கள் மனங்களில் உதிக்கும் வண்ணம் இந்திய அரசியல்வாதிகள் நடந்து கொள்ளலானார்கள். ஏனெனில் வெள்ளையர்களின் ஆட்சியின் போது லஞ்சம் எனும் பேய் இவ்வளவு மோசமாய் ஒரு போதும் தலை விரித்தாட வில்லை. தேசபக்தி நிறைந்த ஒரு பெரிய விடுதலைப் போராட்ட வீரர், “ . . . ‘வெள்ளைக்காரன் ஆட்சியே ஆயிரம் மடங்குகள் மேலாக இருந்தது ’ என்று பொதுமக்களில் பலர் பெருமூச்சுடன் பேசுவதைக் கேட்கிற போதெல்லாம் எனக்கு ஏற்படுகிற அவமானத்தில் பூமிக்கு அடியில் என்னைப் புதைத்துக்கொண்டுவிடலாம் போல் இருக்கிறது!” என்று பாராளுமன்றத்தில் பேசினார். (பேசியவர் – பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர், ஆச்சார்யா கிருபளானி; அப்போதைய ப்¢ரதமர் – ஜவாஹர்லால் நேரு)

.. .. .. ஆண்டுகள் உருண்டன. வரிசையாய்த் தேசபக்தர்கள் பிரதம மந்திரிப் பதவியில் அமர்ந்து நாட்டை யாண்ட போதிலும் – பெண்ணாதரவுச் சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும் – பெண்களின் முன்னேற்றம் என்பது கிராமங்களைப் பொறுத்த வரையில் கனவாகவே இருந்தது. பட்டணங்களில் உயர்குடிப் பெண்களும், நடுத்தர இனத்துப் பெண்களும் படித்துப் பட்டங்கள் பெற்றதும், சில உயர் பதவிகளில் அமர்ந்ததும், அரசியலில் ஈடுபட்டதும் இந்தியாவில் பெண்கள் பெரிய அளவில் முன்னேறி விட்டார்கள் என்கிற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இந்திய அரசைப் பொய்யானதொரு பெருமையில் ஆழ்த்தின. ‘இந்தியாவின் ஆன்மா அதன் ஏழு லட்சங்களுக்கும் அதிகமான கிராமங்களில்தான் இருக்கிறது, ஏழு நகரங்களில் அன்று’ என்று காந்தியடிகள் சொன்னதைக் கண்ணோட்டமாக வைத்துப் பார்த்தால், கிராமங்கள் முன்னேறாத நிலையில் – அது பெண் விடுதலையோ அல்லது வேறு எதுவோ- இந்தியா முன்னேறிவிட்டதாகப் பெருமைப்படுவது அபத்தம் என்றே சாமிநாதன் போன்றவர்கள் நினைத்தார்கள். ஏழைமை பெரும்பாலராக இருந்த நிலையில் ஒரு நாடு முன்னேறி விட்டதாக எவ்வாறு கருத முடியும் என்பதே பெரும்பான்மையினரா யிருந்த ஏழை மக்களின் பொருமலாக இருந்தது. (இன்னமும் இருக்கிறது.)

. . . பங்கஜத்துக்கு ரொம்ப வயதாகிவிட்டது. சாமிநாதனுக்கும்தன். எனவே எல்லாப் பொறுப்புகளும் துர்க்காவின் தலை மீது ஏறின. நம்பகமான உதவியாளர்களின் ஒத்துழைப்போடு துர்க்கா மாநிலந்தோறும் பெண்விடுதலை இயக்கங்களை நடத்தினாள். சென்னையில் அவள் நிறுவிய அகில இந்திய மகளிர் முன்னேற்ற மன்றம் கப்பும் கிளையுமாகப் பரவி எத்தனையோ பெண்களின் துயர் துடைத்துக் கொண்டிருந்த போதிலும், ஆண்களில் பெரும்பாலோர் நியாய உணர்வு கொள்ளத் தவறும் ஒரு சமுதாயத்தில் பெண்களின் இந்த இயக்கங்களால் விளையும் பயன் மிகக் குறைவே என்று துர்க்காவும் நினைக்கத் தலைப்பட்டாள்.

நூற்றோடு நூற்றொன்று என்றில்லாமல், சாமிநாதன் தொடங்கிய வார இதழ் இலட்சக் கணக்கில் விற்பனையாகா விட்டாலும், பரவலாக மக்களைச் சென்றடைந்த ஒன்றாயிற்று. மிகவும் அலோசித்ததன் பின்னர், சாமிநாதன் அதற்கு “மகாபாரதம்” என்று பெயர் சூட்டினார்.

துர்க்கா அதன் ஆசிரியர் ஆனாள். மற்ற புலனாய்வு இதழ்கள் பல்வேறு பரபரப்புச் செய்திகளை வெளியிட்ட நேரத்தில், “மகா பாரதம்” பெண்கள் பற்றிய செய்திகளுக்கு முதலிடம் கொடுத்தது. இருப்பினும் தாழ்த்தப் பட்டோர் பற்றிய பிற செய்திகளும் – ஆண்-பெண் பாகுபாடின்றி -அதில் வந்தன. அதன் பக்கங்களை ஒன்று விடாமல் படிக்கும் எவர்க்கும் நாட்டில் நல்லவர்களே அற்றுப் போனார்களோ என்கிற வேதனைதான் வரும். அத்தகைய மோசமான இன்னல்களுக்குப் பெண்கள் ஆட்பட்ட செய்திகள் அதில் நிறைய வந்தன. அந்த வேதனையின் மிகமோசமான அம்சம் பெண்களைப் பாதுகாக்க வேண்டியவர்களே அவர்களைத் துன்புறுத்தி இழிவும் செய்தனர் என்பதுதான்!

விசாரணை என்னும் பெயரால் ஆண் குற்றவாளிகளின் – அல்லது ஐயத்தின் பேரில் குற்றம் சுமத்தப்பட்ட ஆண்களின் – வீட்டுப் பெண்கள் தேவை சிறிதுமற்றுக் காவல் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு அங்கே கொடுமையாக நடத்தப் பெற்றனர். காவல் நிலையம் என்றாலே, கற்பழிப்பு ஞாபகம் வருகிற அளவுக்கு அதிர்ச்சியான செய்திகள் வெளிவரலாயின.

தொலைக்காட்சியில், ஒரு திடீர் நேர்முகப் பேட்டியின் போது, சென்னையின் காவல் துறை உயர் அதிகாரியை அவரது முகத்துக்கு நேராக அகில இந்திய மகளிர் முன்னேற்ற மன்றத்தின் தலைவி துர்க்கா கேட்ட “தர்மசங்கடக் கேள்விகள்” அவரை நெளிய வைத்தன. அந்தப் பேட்டி பார்வையாளர்க்கு ஒரு விருந்தாக அமைந்தது.

‘பெண்கள் காவல் நிலையத்துக்குப் போகத் தேவை இல்லை என்பதையும், விசாரணையை அந்தப் பெண்ணின் ஆண் உறவினர் முன்னிலையில் அவளது வீட்டில்தான் நடத்த வேண்டும் என்பதையும் பிரபல ஏடுகளில் விளம்பரங்களின் மூலமும், தொலைக்காட்சி, வானொலி போன்ற பிற ஊடகங்களின் மூலமும் காவல் துறை ஏன் பெண்களுக்குச் சொல்லிவைப்பதில்லை? இவ்வாறு செய்வதன் வாயிலாகக் காவல் நிலையக் கற்பழிப்புகளைத் தடுக்கலாமே! அபலைப் பெண்களைக் கூட்டி வந்து கற்பழிக்கிற அளவுக்குக் காவல் துறையினர் தரம் கெட்டுப் போனதேன்? பெண்களைக் காப்பாற்ற வேண்டியவர்களே இப்படிச் செய்வது பற்றிய செய்திகள் அடிக்கடி வருகின்றனவே? ஏனிப்படி? .. .. ..’ என்கிற, ஆணித்தரமான வினாக்களுக்குரிய திட்டவட்டமான பதில்களைச் சொல்ல முடியாமல் அந்த உயர் அதிகாரி திணறிப் போய் மென்று விழுங்கியது காவல் துறை மீதிருந்த தவற்றை மக்களுக்கு மேலும் தெளிவாக எடுத்துக்காட்டியது.

வரதட்சிணைச் சாவுகள் பற்றிய புகார்களைக் கொடுக்க வரும் தகப்பன்மார்களின் பல சமயங்களில் புகார்கள் ஏற்கப்பட்டுப் பதிவு செய்யப் படுவதில்லை எனும் பரவலான குற்றச்சாட்டுக்கு என்ன காரணம் என்கிற கேள்விக்கும் திருப்திகரமான பதிலை அவர் சொல்லவில்லை. இவையும், மக்களிடமிருந்து “மகா பாரத”த்துக்கு வந்துகொண்டிருந்த கடிதங்களும் பெண்களின் இயக்கம் வலுப்பெற்றுப் பெண்கள் மேலும் போராட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துபவையாகவே எப்போதும் இருக்கலாயின.

.. .. .. 1980 இல் பங்கஜமும், 1982 இல் சாமிநாதனும் காலமாயினர். இயக்கத்தினுடையவும், சமூக அமைப்புகளுடையவும் அனைத்துப் பொறுப்புகளும் இதன் விளைவாகத் துர்க்காவின் தோள்கள் மீது விழுந்தன.

இந்த நெடிய இடைக்காலத்தில், உற்சாகம் மிக்க பெண்மணிகள் பலர் பங்கஜம் தொடங்கிவைத்திருந்த மகளிர் மன்றத்தின் கிளைகளை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தினர். எனவே, அது நாடு தழுவிய ஓர் இயக்கமாக மலர்ந்தது. நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கூடத் தட்டிக் கேட்கிற வசதியை அதனால் அனைத்து இந்தியாவிலும் பெண்கள் பெற்றனர்.

துர்க்கா நடத்திக்கொண்டிருந்த இயக்கத் தொடர்பான பரபரப்பு நிகழ்ச்சிகள் அன்றாடம் நடந்த வண்ணமாக இருந்தனவே தவிர, மற்றப்படி அவளது சொந்த வாழ்க்கை எந்த மாற்றமோ பரபரப்போ இன்றி ஒரே சீரான லயத்தோடு ஓடிக்கொண்டிருந்தது. மறுமணம் பற்றி நினைக்காததாலும், குழந்தைகள் இல்லாமையாலும் தன் வாணாள் முழுவதையும் பெண்கள் முன்னேற்ற இயக்கத்துக்கு அவளால் அர்ப்பணிக்க முடிந்தது.

பிற புலனாய்வு இதழ்களிலும் சரி, அவள் நடத்திக்கொண்டிருந்த “மகா பாரத”த்திலும் சரி, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி வந்துகொண்டிருந்த செய்திகள் இதயம் உள்ளவர்களின் கண்களை நனைக்கக்கூடியவை. நாடு தழுவிய மகளிர் மன்றத்தின் வாயிலாக, அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் பலருக்கு நிவாரணம் பெற்றுத் தர முடிந்தது எனும் ஓர் ஆறுதல்தான் துர்க்காவுக்கு!

.. .. .. நாள்கள் பறந்துகொண்டிருந்தன.

1995 ஆம் ஆண்டில், ஜூன் மாதம் முதல் வாரத்தில், மகளிர் மன்றத்தின் மாநாட்டைச் சென்னையில் நடத்துவதென்று முடிவாகியது.

தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 30

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

ஜோதிர்லதா கிரிஜா


சிஸ்டர் முத்துலட்சுமி காலமாகிப் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தன. இந்தப் பத்தாண்டு இடைவெளியில் பங்கஜத்தின் வாழ்க்கையிலோ அல்லது துர்க்காவின் வாழ்க்கையிலோ குறிப்பிடத்தக்க மாறுதல்கள் விளைந்துவிடவில்லை. எனினும், பங்கஜத்தின் இடைவிடாத உழைப்பாலும், துர்க்காவின் ஒத்துழைப்பாலும் ஸ்திரீ சேவா மண்டலி பெரிதும் விரிவடைந்திருந்தது. பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகள் இரண்டும், தொழிற்கல்விக் கூடம் ஒன்றும் கடந்த ஐந்தாண்டுகளாக இயங்கிவந்தன. உணவு, உடை, உறைவிடம் ஆகிய தலையாய தேவைகளுக்காக ஆண்பாலரைச் சார்ந்து வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்திலிருந்து பெண்களை விடுவித்தலே அவர்களின் துயர் துடைக்கும் என்பதும், தங்களை அண்டி வாழ்ந்தாக வேண்டியவர்கள் என்பதாலேயே பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்கிற கேள்வி கேட்பாடற்ற அராஜக மனப்பான்மையைச் சிறிது சிறிதாகவேனும் ஆண்களிடமிருந்து அது அகற்றும் என்பதும் சிஸ்டர் முத்துலட்சுமியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வந்தது.

அதே நேரத்தில், பெண் விடுதலை என்பதன் பெயரால் பெண்கள் அசட்டுத்தனமான – தங்களுக்கு ஆபத்தைத் தரக்கூடிய – துணிச்சல்களில் ஈடுபடக்கூடாது என்பது அவரது கொள்கையா யிருந்தது. எந்தக் கூட்டததை அவர் நடத்தினாலும் சரி, பிற துறையினர் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கும் போதும் சரி அவர் தமது பேச்சிடையே இந்தக் கூற்றை வலியுறுத்தத் தவறியதே கிடையாது. பெண்களில் நிறையப் பேர் சட்டத் துறைக் கல்வியைப் பெற வேண்டும் என்பதும் அவரது விருப்பம். அவ்வாறு சட்டம் படித்துத் தேறியவர்களில் மாதருக்காக உழைக்கும் சேவை மனப்பான்மை கொண்டவர்களை வைத்து ஓர் அமைப்பை ஏற்படுத்திப் பெண் விடுதலைக்காகவும், அநீதிகளின் பிடியிலிருந்து பெண்களை விடுவிக்கவும், அக்கிரமங்கள் செய்யும் ஆண்களுக்குச் சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கித் தரவும் பாடுபட வேண்டும் என்பது அவரது குறிக்கோளா யிருந்து வந்தது. அதைப் பற்றி அவர் அடிக்கடி சொல்லி வந்ததால், பங்கஜத்தின் இடையறாத முயற்சியால் அப்படி ஓர் அமைப்பு உருவாகியது. அவ்வமைப்பில் எல்லாருமே வக்கீல்களாக இல்லாவிடினும், சட்டம் படித்த சிலருடன் பட்டதாரிப் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் அதில் இருந்தனர்.

சிஸ்டர் முத்துலட்சுமி மறைந்த பிறகுதான் பங்கஜத்தால் அப்படி ஓர் அமைப்பை உருவாக்க முடிந்தது. அவரது எண்ணம் செயல்படுத்தப்பட்ட போது அவர் இல்லாதது அவளுக்கு ஒரு குறைதான்.

மகாத்மா காந்தியின் அறைகூவலுக்கிணங்க, ஏராளமான உயர்குடிப் பெண்கள் நாட்டின் விடுதலைப் போராட்டக் களத்தில் குதித்துக் கைதாகி வந்தனர். படிப்பறிவு என்பது அறவே அற்ற கீழ் மட்டத்துப் பெண்களில் சிலரும் காந்தியடிகளின் அழைப்புக்குச் செவி சாய்த்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஈடுபட்டனர்!

ஒரு முறை அது பற்றிய பேச்சு வந்த போது, பங்கஜம், “பாத்தியா, துர்க்கா! எந்தக் குடும்பத்துல புருஷா, பொம்மனாட்டிகள் ரெண்டு பேருமே உயர் படிப்புப் படிக்கிறாளோ, அந்தக் குடும்பத்துல ஆண்கள் பெண்களை ரொம்பவும் அதிகாரமெல்லாம் பண்றதில்லே. அடக்கி வைக்கிறதுமில்லே. அதாவது, வேற வார்த்தைகள்லே சொல்லணும்னா, படிச்ச பெண்கள் ஆண்களோட அக்கிரமக் கட்டுப்பாடுகளுக்கு படிக்காத பெண்களைப் போல முன்ன மாதிரி அடங்கிப் போறதில்லேன்னு வெச்சுக்கயேன்!” என்று சிரித்தாள்.

ஸ்திரீ சேவா மண்டலியின் மூன்று கிளைகளிலும் சேர்ந்த ஆதரவற்ற பெண்களில் முக்கால்வாசிப் பேருக்கும் மேல் பாலிய மணம் செய்விக்கப்பட்டுப் பின் மிக இளம் கணவனின் மறைவால் விதவைகள் ஆன பெண் குழந்தைகள், கணவனால் கொடுமைப்படுத்தப் பட்டுத் தள்ளிவைக்கப்பட்டவர்கள் ஆகியோரே இருந்தனர். மீதிப் பேர்களில், வயதில் மூத்த கைம்பெண்கள், யாருமற்ற அநாதைகள், உடலில் ஊனமுள்ளவர்கள், சற்றே மனநிலை சரியில்லாதவர்கள் ஆகியோர் இருந்தனர்.

ஒரு நாள் அது பற்றிப் பேசிய போது, “துர்க்கா! இப்ப நான் இந்த மூணு மண்டலிகளுக்கும் தலைவி! நீ உப தலைவி! ஆனா, நாம ரெண்டு பேரும் இங்கே என்ன நெலைமையிலெ வந்து சேந்தோம்? நெனைச்சுப் பாத்தாலே ஆச்சரியமா யிருக்கில்லே? .. .. இங்க இருக்குற இன்மேட்ஸ் (inmates) இப்பல்லாம் நிறைய கைவேலை யெல்லாம் செஞ்சு பலவிதாமான பொருள்கள் தயாரிச்சுப் பணம் சம்பாதிச்சுக் குடுக்க முடியறது. அதனால, நம்ம ஆக்டிவிட்டீஸ் (activities) பெருகிண்டே போறது. ஆனா, பெண்களோட பிரச்னைகளுக்கு இது ஒரு நிரந்தரத் தீர்வு ஆகாது. இது மாதிரியான ஸ்திரீ சேவா மண்டலிகளுக்கு அவசியமே இல்லாத ஒரு நாடா நம்ம நாட்டை நாம உருவாக்கணும்! என்ன சொல்றே?”

துர்க்கா சிரித்தாள்: “இதெல்லாம் பேசறதுக்கும் கற்பனை பண்றதுக்கும் நன்னாத்தான் இருக்கு. ஆனா, சாத்தியமா? ஆம்பளைகள் மனசு மாறித் தப்பை உணர்ந்து திருந்தினாத்தானே அது நடக்கும்? அது இப்போதைக்கு நடக்கிற காரியம் இல்லையே!”

“அப்படிச் சொல்லிட முடியாது. புருஷாளை அவாளோட அப்பா-அம்மாக்கள் வளத்த விதம் அப்பிடி! அதனால சட்னு மாறிட மாட்டா. ஆனா, அடி மேல அடி அடிச்சா அம்மியும் நகருமே! இல்லியா? அந்த சத்தியபாமா இருக்காளே – நம்ம சேத்துப்பட்டு சேவா மண்டலியோட இன்சார்ஜ் (in-charge) – அவளோட அப்பா தன்னோட பொண்ணுக்குப் பிரச்னை வந்ததும்தான் யோசிக்க ஆரம்பிச்சார். அது மாதிரி யோசிக்கிற புருஷாளோட எண்ணிக்கை – அதாவது பொண் கொழந்தைகளுக்குத் தோப்பனார்மார்கள் – நிறைய அதிகரிச்சா, பொண்ணுகளை ஆண்கள் கொடுமைப்படுத்தற வழக்கம் கொஞ்சங் கொஞ்சமாவாவது கொறையும். .. .. முழுக்க முழுக்கப் போகும்னு இல்லாட்டாலும்!”

“காங்கிரஸ்ல பெரிய அளவில சேந்து பொம்மனாட்டிகள்ளாம் தேச விடுதலைப் போராட்டத்துல கலந்துக்கணும்னு காந்தி சொல்றாரே, அது சரின்னு நேக்குத் தோணல்லே.”

“எதை வச்சு அப்படிச் சொ§றே, துர்க்கா?”

“நேத்து சேத்துப்பட்டு ப்ரான்ச்சு (branch) க்கு நான் போயிருந்தப்ப ஒரு ஆள் அங்க வந்திருந்தான். தன்னோட தங்கையை அங்க சேக்கிறதுக்காக. அவன் சமீபத்துல தான் வேலூர் ஜெயில்லேர்ந்து விடுதலை யாகி வந்திருக்கான். அவன் சொல்றான் – ஜெயில்ல பொண்ணுகளைப் பல வழிகள்லேயும் போலீஸ்காரா உபத்திரவிக்கிறாளாம். ‘ரேப்’ (rape) உள்பட.. .. இதுக்கு என்ன சொல்றேள்?”

“இதெல்லாம் காந்திக்குத் தெரியாம இருக்குமா?”

“தெரிஞ்சிருக்காதுன்னு தான் நான் நெனைக்கறேன். அவர் காதுக்கு எட்டி யிருக்காது. அவரும்தான் அடிக்கடி ஜெயிலுக்குப் போறாரே! அவர் வெளியில வர்றச்சே, அது மாதிரிக் கொடுமைக்கு ஆளான பொண்ணுகள் அவருக்கு லெட்டர் எழுதத் துணிவாளா! இப்பிடி ஒரு அசிங்கம் தனக்கு நடந்துதுன்னு எந்தப் பொண்ணுதான் வெளியிலெ சொல்லுவா? அப்படி ரெண்டொருத்தர் துணிஞ்சு எழுதினாலும், அது மாதிரியான லெட்டர்ஸ் காந்தி கைக்குப் போகுமா? போலீஸ் தான் வழியிலேயே இண்டர்செப்ட் (intercept) பண்ணிடுவாளே ! அப்புறம், ஜெயில்ல பொம்மனாட்டிகளுக்கு நடக்கிற கொடுமை யெல்லாம் அவருக்கு எப்பிடித் தெரியப் போறது?”

“நீ சொல்றது சரிதான். இத்தனைக்கும் போலீஸ் டிபார்ட்மென்ட்ல (Police Department) ஆ·பீசர்ஸ் (Officers) தவிர மத்தவாலாம் இண்டியன்ஸ் (Indians) தான்!”

“இண்டியன்ஸாவது, ·பாரீனர்ஸாவது (foreigners) ! புருஷா எல்லாருமே பெரும்பாலும் ஒரே குட்டையில ஊறின மட்டைகள்தான்! நிராதரவா நிக்கற பொண்ணுகளைப் பாத்தா ஒடனே அவாளுக்கு வேட்டையாடணும்! அது புருஷாளோட பெறவிக்கொணம். அது என்னைக்குத்தான் மாறுமோ, தெரியல்லே! நம்மளோட சுயாட்சி வந்தாத்தான் அதெல்லாம் சாத்தியம் – ஓரளவுக்காவது!”

“சுதந்திரம் வந்த பிற்பாடு மட்டும் என்ன வாழப் போறதாம்! நம்ம தேசத்துப் பொண்ணுகள்ங்கிறதுக்காக நம்ம தேசத்துப் புருஷாள்ளாம் ஒழுங்காவும் பொண்ணுகளுக்கு நியாயம் கிடைக்கிறாப்லேயும் நடந்துப்பாங்கிறதை என்னால ஏத்துக்கவோ நம்பவோ முடியல்லே! அப்படி அவா நடந்திருந்தா, இது மாதிரி ஸ்திரீ சேவா மண்டலிகளுக்கு அவசியமே ஏற்படாதே! நம்ம பொம்மனாட்டிகள்ளாம் அநாவசியமா – ஏன்? அவசியமாக் கூடத்தான் – வெளியிலெ போகக்கூடாதுன்னு சட்டம் போட்டு வெச்சிருக்குறதே வெளிப் புருஷாள்கிட்டேர்ந்து அவாளைப் பாதுகாக்கிறதுக்காகத்தானோன்னுதான் தோண்றது1”

“நீ சொல்றது சரிதான், துர்க்கா. ஆழ்ந்து யோசிசுப் பாத்தோம்னா, பொம்மனாட்டிகளை நாசம் பண்றதும், அவா புடவையை உருவி அவாளை அவமானப் படுத்தறதும் மகாபாரத காலத்துலேர்ந்து நடந்துண்டிருக்கு! “

“கரெக்ட்! திரௌபதியை மானபங்கப் படுத்தறதுக்கு அந்தக் கட்டேல போற துச்சாதனன் , தான் வீட்டுக்கு விலக்கா யிருக்கிறதா அவ சொல்லியும், கெஞ்சியும் , கதறியும், கேக்காம ஏராளமான பேர் இருந்த சபைக்கு அவளைத் தர தரன்னு இழுத்துண்டு வந்து புடவையை உருவினானே, அவனென்ன வெள்ளைக்காரன் ஆண்டப்போ போலீஸ்காரனா யிருந்தவனா! இல்லியே!”

“அது மட்டுமா? பொண்டாட்டியைப் பணயம் வைக்கிற உரிமை தங்களுக்கு இருக்குன்னுல்லே புருஷா இன்னமும் நெனைக்கிறா? நேத்து பேப்பர் படிச்சியோ, துர்க்கா?”

“இல்லேம்மா. நேத்து நான் ரொம்ப பிஸி (busy). இன்னைத்ததைப் படிக்கிறப்போ அதையும் சேத்து இனிமேதன் படிக்கணும். ஏண்? நேத்தைய சுதேசமித்திரன்லே என்ன விசேஷம்?”

“கல்கத்தாவில ஒருத்தன் தன் பொண்டாட்டியை வித்து அந்தக் காசுல சீட்டாடி யிருக்கான். ஆக மொத்தம், மகாபாரதக் காலத்துலேர்ந்து மனுஷா இன்னும் எறங்கி வரல்லேன்னு தோண்றது.”

“கல்கத்தாவுக்குப் போயிட்டியேம்மா? இந்தப் பக்கத்துலே கூட – ஏன்? இந்தியாவோட எந்தப் பகுதியிலேயும் – பொண்டாட்டின்னாலே, மத்த ஸ்தாவர, ஜங்கம சொத்துகளாட்டமா அவளும் ஒரு சொத்து, அவளை என்ன வேணா பண்ணலாம் அப்படிங்கிற எண்ணந்தான் புருஷாளுக்கு இருக்கு! ஏதோ குறிப்பிட்ட சிலர் கிட்ட அப்படி ஒரு எண்ணம் இல்லாம இருக்கலாமே தவிர, அந்த மனப்பான்மை ரொம்பப் பேரு கிட்ட இருக்கத்தான் செய்யறது. ரெண்டு மாசத்துக்கு முந்தி மதுரையிலே ஒருத்தன் தான் கொடுக்க வேண்டிய கடனுக்குப் பதிலாக் கடன் பட்டவனுக்குத் தன் பொண்டாட்டியையே குடுத்துட்டான்! நீ பேப்பர்ல படிக்கல்லே?”

“படிச்சேன், படிச்சேன். அது மட்டுமா? கொஞ்ச நாளுக்கு அவளை எவன் கிட்டயாவது வாடகைக்கு விட்டு வெச்சுட்டு, அப்புறமாத் திருப்பி அழைச்சுக்குறது! அவளுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு, அவளுக்கு அது பிடிக்குமா, பிடிக்காதான்னு கேக்கணும்கிற எண்ணமே இல்லியே அவாளுக்கு! என்ன ஜென்மங்களோ!”

“அவ்வளவுக்குப் போவானேன்? பொண்ணுகளைக் கல்யாணம் பண்ணிக் குடுக்கிறப்ப, அதுல அவளுக்கு இஷ்டமா, பையனைப் பிடிச்சிருக்கான்னு கூட அவளைப் பெத்தவாளே ஒரு வார்த்தை கேக்கறதில்லியே! கொஞ்ச நாளுக்கு முந்தி ‘யங் இண்டியா’ பத்திரிகையில காந்தி எழுதி யிருந்தார் – வயசான கெழவன்களுக்கெல்லாம் சின்னச் சின்னப் பொண்ணுகளைக் கல்யாணம் பண்ணிக் குடுக்கிற கொடுமையைப் பத்தி. தள்ளிவிட்டாப் போறும்னு ஒரு அவசரம் பொண்ணைப் பெத்தவாளுக்கு.”

“அதுக்குப் பெத்தவாளை எப்பிடிக் கொறை சொல்ல முடியும்? நம்ம சமுதாய அமைப்பு அப்படி இருக்கு!”

“அப்பிடி ஒரு சமுதாய அமைப்பை ஏற்படுத்தினதும் நாமதானே! குறிப்பிட்ட ஒரு சமுதாய அமைப்பினால பொண்ணுகள் கண்ணீர் விட வேண்டி வருதுங்கிறப்போ, அதை மாத்தணும்கிற அறிவோ இரக்கமோ இருக்கவேண்டாமா மனுஷாளுக்கு?தனி மனுஷனோட விஷயத்துல இந்த அளவுக்குக் குறுக்கிட்ற தேசம் இந்த உலகத்துலேயே நம்ம தேசத்தைத் தவிர வேற எந்த தேசமும் இருக்காதுன்னு தோண்றது.”

“என்ன பண்றது? காலங்காலமா வழக்கத்துல இருந்துண்டிருக்கிற அமைப்பு. காந்தி மாதிரி சீர்திருத்தவாதிகளால கொஞ்சங் கொஞ்சமாத்தான் மாறணும். . .. மாறும்! .. .. .. ஆனா, பொண்ணுகள் விஷயத்துல புருஷாளோட துனை, ஆதரவு, ஒத்துழைப்பு இதெல்லாம் இருந்தாத்தான் அப்படி ஒரு மாறுதலைக் கொண்டுவர முடியும். அதைத்தான் காந்தி பண்ணிண்டிருக்கார். புருஷா திருந்தாத ஒரு தேசத்துல பொண்ணுகளைப் பாத்து நீ மாறணும்னு சொல்றதுல என்ன அர்த்தமிருக்கு? இவா மாறாம அவா மட்டும் மாறினா, அதனால எந்தப் பிரயோஜனமும் இல்லே. இன்னும் சொல்லப் போனால், அதனால பொண்ணுகளுக்குத் தொல்லைகள்தான் ஜாஸ்தியாகும்.”

“கரெக்ட்! யஷாளோட மனப்பான்மை மாறணும்னா, காந்தி மாதிரி சக்தியுள்ள மகாத்மாக்களோட பிரசாரத்துனாலதான் அது சாத்தியம். இந்த நாடு இருக்கிற சீரழிஞ்ச நெலமையைப் பாத்தா, ஒவ்வொரு ராஜதானிக்கும் ஒரு காந்தி பொறந்து வந்தாகணும்னுதான் தோண்றது!”

அப்போது இலேசாய்க் கதவு தட்டப்பட, “யெஸ்? கமின்!” என்றாள் பங்கஜம்.

வந்தவர் பணியாள் மாயாண்டி.

“என்னப்பா, மாயாண்டி?”

“யாரோ சாமிநாதன்னு ஒருத்தர் வந்திருக்காரும்மா. உங்களைப் பாக்காணுமாம். ரிசப்சன்லே குந்த வெச்சிருக்குறேன். இங்கிட்டுக் கூட்டியாரட்டா?”

துர்க்காவின் பார்வையைக் கணம் போல் சந்தித்த பின், “வரச்சொல்லு!” என்ற பங்கஜத்துக்குப் பதற்றமாகவும் படபடப்பாகவும் இருந்தது.

துர்க்கா எழுந்துகொண்டாள் “நான் அப்புறமா வறேன்.. ..”

“இல்லே, துர்க்கா. உக்காரு. தனியா அவரோட இருந்தா அழுதுடுவேன். அவரும் உணர்ச்சிவசப்படுவார். அப்புறம் ஒரு சீன் (scene) க்ரியேட் (create) ஆயிடும். பாக்காறவாளுக்கு, என்ன, ஏதுன்னு க்யூரியாசிட்டி (curiosity) வரும். நாங்க என்ன சின்னஞ்சிறிசுகளா – தனிமையில சந்திக்கிறதுக்கும் பக்கத்துல யாரும் இருக்கப் படாதுங்கிறதுக்கும்!”

“”என்? வயசாயிட்டா மட்டும் மனசு பொங்காதா!”

“இல்லே, துர்க்கா. ப்ளீஸ். உக்காரு.”

துர்க்கா உட்கார்ந்த நேரத்தில், கதவைத் திறந்துகொண்டு சாமிநாதன் உள்ளே வந்தான். அறையில் பங்கஜம் மட்டுமே இருப்பாள் என்றெண்ணியவன் போல் விரைவாக வந்தவன் துர்க்காவைக் கண்டதும் தனது விரைவைக் குறைத்துக்கொண்டது இருவருக்கும் புரிந்தது.

பங்கஜம் எழுந்து நின்று, “வாங்கோ. உக்காருங்கோ. நான் இங்கே இருக்கேன்னு எப்பிடித் தெரிஞ்சுது?” என்றாள். அவள் கண்களில் நீர் ததும்பி நின்றது.

சாமிநாதன் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

துர்க்கா எழுந்துகொண்டாள்: “நான் அப்புறமா வறேன்.”

“துர்க்கா! ப்ளீஸ், உக்காரு. உனக்குத் தெரியாம நாங்க என்ன ரகசியம் பேசப் போறோம்?”

“ரகசியம்னு பரிமாறிண்டாத்தானா? நீங்க பேசி முடிச்சுட்டு, அப்புறமா என்னைக் கூப்பிடுங்கோ. வறேன். வெளியில இருக்கேன்.” – துர்க்கா போய்விட்டாள்.

“சுதேசமித்திரன்லே ஸ்திரீ சேவா மண்டலி பத்தின ஆர்ட்டிகிளும் உன்னோட ·போட்டோவும் பாத்தேன். நீ இங்க எப்படி வந்து சேந்தே? இங்கிலீஷ்ல நீ பிரசங்கம் பண்ணினேன்னு வேற போட்டிருந்துது. எனக்கு ஒரே ஆச்சரியம்!”

“அதெல்லாம் அப்புறம். மொதல்லெ உங்களைப் பத்திச் சொல்லுங்கோ. நீங்க இத்தனை நாளும் எங்கே இருந்தேள், என்ன பண்ணினேள், நாம புரசைவாக்கத்துல இருந்தப்போ நீங்க அரெஸ்ட் ஆனேளே, அப்ப எத்தனை நாள் ஜெயில்லே இருந்தேள், எப்ப ரிலீஸ் ஆனேள், எல்லா விவரத்தையும் சொல்லுங்கோ.”

புரட்சி இயக்கங்கள் பல இடங்களிலும் ஓய்ந்து விட்டதால், தான் காங்கிரஸில் சேர்ந்துவிட்டது பற்றியும் அடிக்கடி சிறையில் அடைக்கப்பட்டதையும் அவன் தெரிவித்தான். விடுதலையாகி வெளியில் இருந்த இடைவெளிகளின் போதெல்லாம் அவளைத் தேடி யலைந்ததைப் பற்றிச் சொன்னான்.

சாமிநாதன் மிகச் சுருக்கமாய்ச் சில வாக்கியங்களில் தன்னைப் பற்றிச் சொல்லிமுடித்துவிட்டு, “பதஞ்சலி இப்ப எங்கே இருக்கான்? என்ன பண்ணிண்டிருக்கான்?” என்று ஆவலுடன் கேட்டான்.

கண்களைப் பொத்திக்கொண்டு அவள் அழத் தொடங்கியதுமே அவனுக்கு விஷயம் விளங்கிவிட்டது.

எழுந்து நின்று, மேசையைச் சுற்றிவந்து அவள் தோளில் தொட்டு, “என்ன ஆச்சு, பங்கஜம்? எப்போ? எப்பிடி?” என்றவன் கண் கலங்கிப்போய்ச் சட்டென்று விலகி மறுபடியும் தனது நாற்காலிக்குச் சென்று உட்கார்ந்தான்.

பங்கஜம் நடந்தவற்றை அவனுக்குச் சொன்னாள். சாமிநாதன் துடித்துப் போனான். அவன் உதடுகள் அவன் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் துடித்தன. தாசரதிக்குப் பிறந்த தன் மகள் கடவுளின் அருளால் தன்னிடம் வந்து சேர்ந்துள்ளது பற்றியும் பங்கஜம் அவனுக்குத் தெரிவித்தாள்.

“நீங்க இங்க வந்ததும் எழுந்து போனாளே, அவதான்.”

“அவளா! உன் சாயலா இருக்காளேன்னு அவளைப் பாத்ததுமே நெனைச்சேன். கூப்பிடு அவளை.”

பங்கஜம் எழுந்து சென்று, வெளியே மரத்தடியில் உட்கார்ந்திருந்த துர்க்காவை அழைக்க, அவள் வந்தாள்.

“வாம்மா! உக்காரு. பங்கஜம் எல்லாம் சொன்னா. ஏதோ எங்க பிள்ளை போயிட்டாலும், நீயாவது கிடைச்சியே எங்களுக்கு! அது பெரிய வரம்தான். நீ எனக்கும் டாட்டர் (daughter) தாம்மா!” என்று அவன் புன்னகை பூத்த தினுசில் அவனது ஆளுமை முழுவதும் வெளிப்பட்டதாய்த் துர்க்காவுக்குத் தோன்றியது. அவள் விழிகளில் நீர் மல்கிற்று. ‘இப்படியும் சில ஆண்கள் – தாசரதி மாதிரியான அரக்கர்களுக்கு நடுவில்! குப்பையிலே குருக்கத்தி மாதிரி!’

அவளும் பதிலுக்குப் புன்னகை செய்தபின், “ அம்மா உங்களைப் பத்தி எனக்கு நிறையச் சொல்லியிருக்கா. போன ஜென்மத்துப் பாவத்தால அம்மாவுக்கு மொதல்ல அந்த தாசரதி கிடைச்சார். புண்ணியத்தால நீங்க கிடைச்சேள்! .. .. ஆனா, இங்க யாருக்குமே நாங்க அம்மா-பொண்ணுங்கிற விஷயம் தெரியாது. சிஸ்டர் முத்துலட்சுமி அம்மாக்கு மட்டும் சொன்னோம்.. .. உங்களைப் பத்தியும் இங்கே யாருக்கும் தெரியவேண்டாம்.. .. இது என்னோட அபிப்பிராயம். ஆனா அம்மா என்ன சொல்றாளோ, அப்பிடி! இப்பவும் பங்கஜம் சிஸ்டர்னுதான் நான் அம்மாவைக் கூப்பிட்டிண்டிருக்கேன். நாங்க தனியா இருக்கிறப்போ அம்மான்னு ஆசை தீரக் கூப்பிடுவேன்! மத்தப்படி, எப்பவுமே அம்மான்னு கூப்பிட்றதுக்கு எனக்குக் குடுத்து வைக்கல்லே.”

“அது சரி, இந்தியாவுக்கு எப்ப சுதந்திரம் கிடைக்கும்?” என்றாள் பங்கஜம்.

“எதுவும் நிச்சியமாச் சொல்றதுக்கில்லே. சில சமயங்கள்ளே, கூடிய சீக்கிரம் கிடைச்சுடும்னு தோண்றது. வேற சில சமயங்கள்ளே, இன்னும் ஒரு நூறு வருஷத்துக்கு இழுத்தடிச்சாலும் இழுத்தடிக்கும்னும் தோண்றது. ஒண்ணுமே சொல்றமாதிரி இல்லே.”

“நாட்டுலே இருக்கிற மனுஷாளுக்கு சுதந்திரம் கிடைச்சாலும், வீட்டுலே இருக்கிற பொம்மனாட்டிகளுக் கென்னவோ அது கிடைக்கப் போறதில்லே!” என்றாள் துர்க்கா.

“அது தானாக் கிடைக்கும்னு பொண்ணுகள்ளாம் கையைக் கட்டிண்டு காத்துண்டிருந்தா, காலம் முழுக்கவும் காத்துண்டே இருக்க வேண்டியதுதான்! இப்ப பங்கஜம் இல்லே? அவ மாதிரி அதை நாமளேதான் எடுத்துக்கணும். புருஷாளுக்கெல்லாம், ‘இந்தா உன்னோட சுதந்திரம். எடுத்துக்கோ’ ன்னு யாரு தூக்கிக் குடுத்தாளாம்! அது எங்களோட பிறப்புரிமைன்னு சொல்லாம சொல்லிண்டு அவாளேதானே மனம் போன படியெல்லாம் நடந்துண்டு வறா! அதே மாதிரி, எல்லாப் பொண்ணுகளும் பண்ண வேண்டியதுதான்! அவா என்ன குடுக்கிறது, நீங்க என்ன வாங்கிக்கிறது! அது உங்களோடவும் பிறப்புரிமை! உங்களுக்குச் சொந்தமானதையே ‘இந்தா வெச்சுக்கோ’ ன்னு உங்ககிட்ட குடுக்கிறதுக்கு அவா யாரு? அவா யாருன்னு கேக்கறேன்! என்ன சொல்றே?” என்ற சாமிநாதன் துர்க்காவைப் பார்த்துச் சிரித்தான்.

“நீங்க சொல்றது ஒரு விதத்துல சரிதான்னாலும், முழுக்கவும் சரின்னு ஒத்துக்க முடியாது. இப்ப எங்கம்மாக்கு நீங்க கிடைச்ச மாதிரி, ஒரு நல்ல ஆம்பளையோட தயவும் ஒரு பொண்ணுக்குக் கிடைச்சாத்தான் அது சாத்தியம். அதாவது, நான் என்ன சொல்ல வறேன்னா, ‘பொண்ணுகளை நாம அநியாயமா அடிமைப்படுத்தி, அவாளோட அடிப்படை உரிமைகளையெல்லாம் பறிச்சு வெச்சிருக்கோம், அது தப்பு. அதனால அவாளை இனிமேயும் அடக்கி ஒடுக்கக்கூடாது’ங்கிற ஞானமும், நேர்மையும் புருஷாளுக்கு வரணும். அப்பதான், பொண்ணுகள் தங்களோட சுதந்திரத்தை நிலையாத் தக்க வெச்சிண்டு அனுபவிக்க முடியும்!”

“சரி. ஆனா, அதே சமயத்துலே, புருஷா தாங்களாவே மாறுவா, தப்பைப் புரிஞ்சுக்குவான்னெல்லாம் நம்பி அந்த நாளுக்காகக் காத்திண்டிருக்கப்படாது! ஆயிரக் கணக்கான வருஷங்களா மவுனக் கண்ணீர் வடிச்சிண்டு, தாங்கள்ளாம் அடிமைகளா யிருக்கோம்கிற உணர்வு கூட இல்லாம போயிட்ட அவாளை அடக்கி யாண்டுண்டிருக்கிற புருஷாளோட, பொண்ணுகள் சண்டை போட்டுப் போராடித்தான் அதைப் பிடுங்கிக்கணும்! இத்தனை காலமும் நீங்க பொறுமையா யிருந்து வந்திண்டிருக்கிறதை அவா கொஞ்சங்கூடப் புரிஞ்சுக்கவே இல்லியே! ‘பொறுமை என்னும் நகை யணிந்துகொண்டு வாழ வேண்டும் பெண்கள்’ னு பாட்டுன்னா எழுதிண்டிருக்கானுக! அந்தப் பாட்டு எப்ப ரேடியோவில வந்தாலும் நான் டக்னு அதை மூடிடுவேன்! என்ன நான் சொல்றது?”

“நீங்க சொல்றது சரிதான். நாங்க கூட அடிக்கடி இது பத்தி விவாதிக்கிறதுண்டு. ஆனா, ஆண்பிள்ளைகளோட ஒத்துழைப்போட கிடைக்கிற உரிமைகள்தான் நிலைச்சு நிக்கும். இல்லேன்னா, வீணாய்ப் பொண்ணூகள் மேல புருஷாளுக்கு வெறுப்பு வரலாம். .. .. சரி. காப்பி குடிக்கிறேளா?”

“குடிச்சாப் போச்சு!”

துர்க்கா எழுந்து போய்க் காப்பிக்குச் சொல்லிவிட்டு வந்தாள்.

“நமக்கு சுதந்திரம் கிடைச்ச பிற்பாடு ஒரு விழிப்பு உணர்ச்சிப் பத்திரிகை ஆரம்பிக்கணும்கிற எண்ணம் இருக்கு,” என்று சாமிநாதன் சொன்னதும், “நல்ல யோசனை! நாம எல்லாரும் சேந்தே அதைச் செய்யலாம்!” என்று பங்கஜம் ஆமோதித்தாள்.

காப்பி வந்ததும் மூவரும் மவுனமாய்ப் பருகினார்கள்.

குடித்து முடித்ததும், “பாத்தேளா, கேக்க மறந்தே போயிடுத்து. இப்ப நீங்க எங்க தங்கி யிருக்கேள்? சாப்பாட்டுக்கெல்லாம் என்ன செஞ்சேள், இப்ப என்ன செய்யறேள்?” என்று பங்கஜம் விசாரித்தாள்.

“அதை யெல்லாம் கேக்காதே. .. .. மூட்டை தூக்குறதுலேர்ந்து ட்யூஷன் (tuition) சொல்லிக் குடுக்கிறது வரைக்கும், எப்பெப்போ, எங்கெங்கே, என்னென்ன வேலை கிடைக்கிறதோ, அது எல்லாத்தையும் செஞ்சேன், செய்யறேன். எப்பிடியோ ஓடிண்டிருக்கு. பெரும்பாலும் தங்கறது ரெயில்வே ஸ்டேஷன்கள்ளே தான். கையில ஒரே ஒரு துணிப்பை! கொஞ்ச நாள் இப்பிடிக் கழியும். அதுக்குப் பிற்பாடு அரெஸ்ட் ஆயி, கொஞ்ச நாள் ஜெயில் வாசம். இதே கதைதான் – மாத்தி மாத்தி!”

“இப்ப எங்கே தங்கி யிருக்கேள்னு கேட்டேனே?”

“கேர் அவ் ரெயில்வே ப்ளேட்·பார்ம் (care of railway platform) . சில சமயம் சென் ட்ரல்ல, சில சமயம் எக்மோர்ல.. அப்புறம் சின்னச் சின்ன ஸ்டேஷன்கள்ளே! ஸோ (so), ‘அந்த’ ஸ்டேஷன்கள்ளே அடைபடாதபடி ‘இந்த’ ஸ்டேஷன்கள் காப்பாத்திண்டிருக்கு!”

“நீங்க என்னோட கெஸ்ட்டா (guest) இங்கே தங்கிக்கலாம். நோ ப்ராப்ளெம் (No problem). யாரும் எதுவும் சந்தேகப்படாதபடி உங்களுக்கு இங்கே ஒரு வேலையும் போட்டுக் குடுத்துட்றோம்.”

சாமிநாதன் சிரித்தான்

“அது முடியாது, பங்கஜம். 1942 லே, ஆகஸ்ட் புரட்சியப்போ, பண்ணின ரெயில் கொள்ளைக்காக நான் பயங்கரவாதிகளோட பட்டியல்லே வேற இருக்கேன். அதானாலதான் நான் தாடி மீசை யெல்லாம் வெச்சிண்டிருக்கேன். நான் இங்கே அடிக்கடி வந்து போயிண்டிருந்தாலே கூட, உனக்கு அதனால தொல்லைதான். அப்படி இருக்கிறப்போ, நிரந்தரமா இங்க தங்கறது சரிப்பட்டு வராது, பங்கஜம். எப்பவாவது வந்து பாத்துட்டுப் போறேன். சரியா? அப்ப நான் வரட்டுமா? “

சாமிநாதன் பங்கஜத்தின் கைபற்றிக் குலுக்கிவிட்டு, துர்க்காவை நோக்கித் தலை யசைத்த பின் நகரலானான். எழுந்து நின்றிருந்த இருவரும் அவன் முதுகுப்புறம் பார்த்தவாறு இருந்தார்கள். பங்கஜக்தின் விழிகள் நீரில் மூழ்கின. கண்ணீர் முத்துகள் ஒவ்வொன்றாக அவள் கண்களிலிருந்து உருண்டு விழலாயின. துர்க்கா ஆதரவுடன் அவளது இடுப்பை வளைத்துக்கொண்டு தானும் கண் கலங்கினாள்.

– தொடரும்

jothirigija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 29

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

ஜோதிர்லதா கிரிஜா


தாசரதியின் பார்வை பங்கஜத்தின் மீது படிந்திருக்கவில்லை. அவன் காந்தியடிகளைப் பார்த்தபடி இருந்தான். பங்கஜம் திக் திக் என்று அடித்துக்கொண்டிருந்த நெஞ்சுடன் அவனை மூன்று கணங்கள் போல் கவனித்தாள். அவன் அவள் புறம் திரும்பவே இல்லை. அவன் தன்னைப் பார்த்திருக்கவில்லை என்பது உறுதிப்பட, அவள் சட்டெனக் கழுத்தைத் திருப்பிப் புடைவையின் மேல் தலைப்பை இழுத்துத் தலை மீது முக்காடாய்ப் போட்டுப் பெருமளவு முகத்தை மறைத்துக்கொண்டாள். காந்தியடிகள் பேசியதில் எதுவும் அதன் பின் அவள் மூளையில் பதியல்லை. அவளருகே இருந்த துர்க்கா முக்காடிட்டுக்கொண்ட பங்கஜத்தின் திடீர்ச் செய்கையால் திகைத்து அவளை உற்று நோக்கினாள்.

இதற்குள் காந்தியடிகள் தமது பேச்சை முடித்துவிட்டிருந்தார். அவரிடம் சில பெண்கள் நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்க முனைந்தார்கள். கூட்டம் சளசளத்துக்கொண்டிருந்தது. பங்கஜம் தனக்கு அருகே இருந்த சிஸ்டர் முத்துலட்சுமியிடம், “சிஸ்டர்! அந்தாளு.. .. அதான் நான் சொல்லியிருக்கேனே, என்னோட ·பர்ஸ்ட் ஹஸ்பண்ட் (first husband) தாசரதி – அதோ பாருங்கோ – நீலச் சட்டை – இந்தக் கூட்டத்திலே நமக்குப் பின்னால நின்னுண்டிருக்கார். அவர் என்னைக் கவனிக்கல்லேன்னுதான் தோண்றது. அதான் முக்காடு போட்டுண்டுட்டேன். அவர் கண்ணுல பட்றதுக்கு முந்தி நாம இங்கேர்ந்து போயிட்டா நன்னாருக்கும், சிஸ்டர்!” என்று கிசுகிசுப்பாய்க் கூறியது மிக அண்மையில் நின்றிருந்த துர்க்காவின் செவிகளில் துல்லியமான தெளிவுடன் விழுந்து அவள் மயிர்க்கால்களைச் சிலுப்பிக் குத்திடச் செய்தது. பங்கஜம் தன்னிடம் கூறாமல் விட்டவை எல்லாம் அந்தக் கணத்தில் அவளுக்குச் சுருக்கமாய்ப் புரிந்துவிட்டன.

திரும்பி, தாசரதியைக் கவனித்த சிஸ்டர் முத்துலட்சுமி பங்கஜத்தின் வேண்டுகோளை உடனே ஏற்றார். அதற்கிணங்க, அவர் உடனே புறப்பட்டார். அவரது கையை நடுங்கிக்கொண்டிருந்த தன் விரல்களால் பற்றியபடி பங்கஜம் நகர, “வாங்க, போகலாம்!” என்ற சிஸ்டருக்குப் பின்னால் அவருடன் வந்திருந்தவர்களும் கிளம்பினார்கள்.

மோட்டார்காரில் ஏறி அமர்ந்த பங்கஜத்துக்கு அது கிளம்பிய பின்னரே சீராக மூச்சுவிட முடிந்தது.. .. ‘அம்மாடி! தப்பினேன்!’

“அவன் உன்னைப் பாக்கல்லேதானே? ஆர் யூ ஷ்யூர்? (Are you sure?)”

“ஐ’ம் ஷ்யூர் (I’m sure) , சிஸ்டர். இப்ப நாம திரும்பி நடந்தப்ப அவர் காந்தி கிட்ட ஆட்டோகிரா·ப் (autograph) வாங்கற கும்பல்லே இருந்தார். நம்ம பக்கம் தப்பித் தவறியும் கவனிக்கல்லே. அதனால, பாக்கல்லேன்னு நிச்சயமாத் தோண்றது. பாத்திருந்தா அந்தக் கூட்டத்திலே ரசாபாசமா எதுவும் பேசாட்டாலும், நம்ம பின்னாடியே தொரத்திண்டு வந்திருப்பாரில்லையா?”

ஏதோ சிக்கல் என்பதைப் புரிந்துகொண்ட மற்ற பெண்கள் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். துர்க்காவுக்குத்தான் படபடப்பா யிருந்தது. தன்னருகே அமர்ந்து கொண்டிருந்த பங்கஜத்தின் உடலை அதிகமாய் உராய்ந்தபடி உட்கார்ந்தாள். பங்கஜம் உடனே பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். துர்க்கா கவனியாதவள் போல் இருந்தாள். துர்க்காவின் அந்த உராய்வால் பங்கஜத்தின் உடல்¢ல் ஒரு சிலிர்ப்பு அவளது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பரவி ஓடியது.

ஒரு சொந்தத் தாய்க்கு ஈடான பாசத்துடன் தனக்காக எல்லாவற்றையும் துறந்த தன் வளர்ப்புத் தாய் காவேரியின் நினைப்பும் துர்க்காவுக்கு அப்போது வந்தது. . .. .. ‘நான் ஒரு வகையில் பாக்கியசாலிதான். எனக்கு இரண்டு அம்மாக்கள்! ’ என்று எண்ணிய அ வள் இதழ்க்கடையில் சின்னதாய் ஒரு சிரிப்புத் தோன்றியது.

“என்னடி, துர்க்கா, நீயே சிரிச்சுக்கறே?” என்று அவளுக்கு அருகே மறுபுறம் இருந்த பெண் கேட்க, “பொண்ணுகளோட நகை ஆசையைப் பத்தி காந்தி சொன்னதை நினைச்சுண்டேன்!” என்று பதில் சொல்லி அவள் சமாளித்தாள்.

“ஆட்டுக்கும் மாட்டுக்கும் நகை போட்டுப் பாருங்கோ, அப்ப புரியும் அது எவ்வளவு அசிங்கம் அப்படின்னு சொன்னாரே, அதை நெனைச்சா?”

“ஆமா.”

சிஸ்டர் தங்களுக்கு அருகே இருந்ததை மறந்துவிட்டவள் போல் ஒரு பெண் கட்டுப்பாடிழந்து குபீரென்று சிரித்தாள்.

“எதுக்குடி திடீர்னு சிரிப்பு?”

“இல்லே, ஒரு மனுஷக் கொரங்குக்குக் காதுல தோடு, லோலாக்கு, மூக்குல மூக்குத்தி, புல்லாக்கு, கழுத்துல காசுமாலை, நெத்திச்சுட்டி, வங்கி, வளையல் கொலுசு, ஒட்டியாணம்னு மனசுக்குள்ள மாட்டிப் பாத்தேன். அதான்!”

சிஸ்டர் முத்துலட்சுமி உட்பட அனைவரும் சிரித்தார்கள். துர்க்காவுக்கும் சிரிப்பு வந்தாலும், அவளது சிந்தனை எல்லாம் பங்கஜத்தை எப்போது தனியாகப் பார்த்துத் தான் அவளுடைய மகள் என்பதைச் சொல்லப் போகிறாள் என்கிற ஒரே எண்ணத்தால் பரபரப்பா யிருந்தது. தாங்கள் இருவரும் தாயும் மகளும் எனும் உண்மை தெரியாத போதிலும், இருவரும் ஒருவர்பால் ஒருவர் பெரிதும் ஈர்க்கப்பட்டு அன்பு செலுத்தி வருவதையும் இல்லத்தின் உறுப்பினர்கள் எல்லாருமே பங்கஜத்திடம் துர்க்காவைப் பற்றிப் பேசுகையில், ‘ஒங்களோட செல்லப் பொண்ணு’ என்று வேடிக்கையாய்க் குறிப்பிட்டு வருவதையும் எண்ணிப் பார்த்த துர்க்கா, இருவரும் உண்மையாகவே அப்படித்தான் என்பது தெரியவந்தால் எல்லாருக்கும் எப்படிப்பட்ட வியப்பு ஏற்படும் என்கிற நினைப்பால் தானும் வியப்படைந்தாள். அவளது கை தன்னையும் உணராது பங்கஜத்தின் தொடை மீது படர்ந்து அழுந்தியது. பங்கஜம் இரண்டாம் தடவையாகப் பக்கவாட்டில் தலை திருப்பித் துர்க்காவை வியப்புடன் கவனித்தாள்.

.. .. இல்லத்தை அடைந்த பின்னர், தமது அறையில் பங்கஜத்தை வரச்சொல்லி அவளைத் தனியாய்ச் சந்தித்த சிஸ்டர் முத்துலட்சுமி, “ஏன், பங்கஜம்! அந்த ஆளு காந்தியோட மீட்டிங்குக்கு வந்திருக்கானே! அப்படின்னா, அவன்கிட்ட மனமாற்றம் ஏற்பட்டிருக்கும்னு வச்சுக்கலாமா?” என்று கேட்டாள்.

“அதைப் பத்தி நேக்கென்ன வந்தது, சிஸ்டர்? என்னோட கொழந்தையை ஈவிரக்கமே இல்லாம கொன்னுட்டு, என்னையும் கொல்லணும்கிற வெறியோட இருந்த ஆளு அவர். இப்ப அவர் திருந்தி யிருந்தாலும் சரி , இனிமே திருந்தினாலும் சரி, அதுக்காக என் மனசு ஒண்ணும் அந்த மனுஷனுக்காக உருகப் போறதில்லே. என்னோட உண்மையான கணவர் சாமிநாதன்தான். . . ஆனா, சிஸ்டர், பகவானோட கிருபையால, அவரும் நானும் சந்திக்க வாய்ச்சா, என்னை இந்த ஹோம்லேர்ந்து போகச் சொல்லிடுவேளா?” என்று வினவிய பங்கஜம் கண் கலங்கினாள்.

“சீச்சீ! அசடு. கண்ணைத் தொடைச்சுக்கோ. நீயாவே அப்படி ஒரு முடிவு எடுத்தா நான் தடுக்க மாட்டேன். தடுக்கவும் கூடாது. ஆனா, எனக்குப் பின்னாடி இந்த ஹோம் உன்னோட மேனேஜ்மென்ட்டுக்குக் (management) கீழேதான் வரணும்கிறது என்னோட ஆசை. அதனாலதான் உன்னை ஒரு ஆல்ரவுண்டரா (all-rounder) ட்ரெய்ன் (train) பண்ணி யிருக்கேன். இந்த என்னோட சுயநலத்துனால, அந்த மிஸ்டர் சாமிநாதன் திரும்பி வந்து உன்னைக் கூட்டிண்டு போயிடக் கூடாதே, பகவானே, அப்படின்னுன்னா நான் வேண்டிண்டிருக்கேன்? உன்னை அனுப்பி வைக்கிறதா! நானா அதைச் செய்யவே மாட்டேன்! நெவெர் (never)!”

“அவர் திரும்பி வந்தாலும் கூட, நாம எடுத்துச் சொன்னாப் புரிஞ்சுகக் கூடியவர்தான், சிஸ்டர். நான் இங்கேயே இருந்துட்றேன். அவர் வந்து போயிண்டிருக்கட்டுமே. என்ன சொல்றேள்?”

சிஸ்டர் முத்துலட்சுமி மவுனமாக அவளைக் கணம் போல் ஏறிட்ட பின், “அப்படின்னா, அவரோட வாழ்க்கை நடத்தணும்கிற ஆசை நோக்கில்லையா, பங்கஜம்?” என்று கேட்டார்.

“.. .. .. அப்படின்னும் சொல்லிட முடியாது, சிஸ்டர். ஆனா, எல்லாத்தையும் நாம யோசிச்சுப் பாக்கணும், இல்லியா? அவர் விடுதலை இயக்கத்துல ஈடு பட்டிருக்கிற போராட்டக்காரர். திடீர் திடீர்னு ஜெயிலுக்குப் போகும்படி நேரும். மறுபடியும் நான் தனியாவேன். இந்த ரெண்டுங்கெட்டான் அக்கப் போரெல்லாம் என்னத்துக்கு, சிஸ்டர்?”

“நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதான்.. .. ..”

“தவிர, அவரும் புரிஞ்சுப்பார், நாங்க ஒண்ணு சேந்தா `எங்க ரெண்டு பேருக்குமே துன்பம்தான்கிறதை!”

.. .. .. சாப்பாட்டு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. துர்க்கா பங்கஜத்தைத் தனியாய்ப் பார்த்துப் பேசும் வாய்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தாள்.

.. .. .. “பங்கஜம் சிஸ்டர்! உங்களோட நான் கொஞ்சம் தனியாப் பேசணும்.”

“காந்தியைப் பாத்துட்டு வந்ததுலேர்ந்தே நீ எக்ஸைட்டெடாத் (excited) தெரியறே. என்னன்னு என்னால ஊகிக்க முடியல்லே. ஒருக்கா, காங்கிரஸ் கட்சியில சேரப் போறியா? அது பத்தி என் அபிப்பிராயத்தைக் கேக்கப் போறே. அதானே?”

“இல்லே, இது வேற விஷயம்.. .. ..”

“சரி, வா. அந்த மரத்தடிக்குப் போலாமா?”

“நாம வெளியில போனா நன்னாருக்கும்.”

“வெளியிலேயா!” என்று தயக்கமாய் வினவிய பங்கஜத்துக்குத் தாசரதி தற்செயலாய் அந்த இடத்துக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்னும் அச்சம் ஏற்பட்டது.

“வெளியிலே யெல்லாம் போகவேண்டாம், துர்க்கா. என்னோட ரூமுக்கே போயிடலாம். நேத்துலேர்ந்து சிஸ்டர்தான் நேக்குத் தனி ரூம் குடுத்திருக்காரே!”

“சரி.”

.. .. .. இருவரும் அறைக்குள் நுழைந்ததும், பங்கஜம் கதவைச் சாத்தினாள். துர்க்கா அவளது வியப்பை மிகச் செய்யும் வண்ணமாய்க் கதவுத் தாழ்ப்பாளைப் போட்டாள்.

இருவரும் உட்கார்ந்தார்கள்.

“சொல்லும்மா.”

“. . . உங்களுக்கு ரெண்டு ஹஸ்பண்ட்ஸா (husbands) ?”

“ஆமா. ஆனா அதுக்கென்ன இப்ப?”

“மொத ஆளு பேரு தாசரதியா?”

“ஆமா?”

“உங்க மாமனாரும் மாமியாரும் அந்த தாசரதியும் சேந்து வேலைக்காரி சின்னப்பொண்ணு கிட்ட மூணாவதாப் பொறந்த உங்க பொண் கொழந்தையை ஆத்து வெள்ளத்துல போட்டுடச் சொல்லித் தூக்கிக் குடுத்தது உங்களுக்குத் தெரியுமா?”

பங்கஜத்தின் விழிகள் அகன்றன.

“பிரசவத்துக்கு அப்புறம் நீங்க மயக்க மாயிட்டேள், இல்லியா?”

“ஆமா! ஆனா இதெல்லாம் நோக்கெப்படித் தெரியும்?”

“கொஞ்ச நாளுக்கு முந்தித் தெரிய வந்துது. கொழந்தை பொறந்ததும் அது செத்துப் போயிடுத்துன்னு உங்ககிட்ட சொன்னா, இல்லியா?”

“ஆமா?”

“அந்தக் கொழந்தை சாகல்லே.”

“.. .. .. ..?!”

“இன்னைத் தேதியிலே உசிரோடதான் இருக்கு அந்தப் பொண்ணு!”

பங்கஜம் எழுந்து நின்றுவிட்டாள். நடந்து அவளருகே வந்து சின்று, “என்ன சொல்றே, துர்க்கா? எங்க இருக்கா இப்ப அந்தப் பொண்ணு? நான் அவளைப் பாக்க முடியுமா? அவளுக்கு இதெல்லாம் தெரியுமா?”

“தெரியும். ஆனா, தன்னோட அம்மா யாருங்கிறதை இன்னிக்குத்தான் அவளால தெரிஞ்சுக்க முடிஞ்சுது. தாசரதிங்கிற அந்த ராட்சசனோட பேரை இன்னிக்குத்தான் அவளோட அம்மா வாயிலேர்ந்து வந்தப்ப, அவளால கேக்க முடிஞ்சுது!”

“என்னம்மா சொல்றே சீ? நான் கனவு கினவு காணலியே?”

“நேக்கும் அந்தச் சந்தேகம் வருதுதான். ஆனா நாம ரெண்டு பேருமே கனவு காணல்லே. அன்னைக்கு, உங்க ஹஸ்பண்ட் (husband) பேரு என்னன்னு நான் கேட்டப்ப, நீங்க சாமிநாதன்னு சொன்னேள். எங்கம்மா பேரு பங்கஜம்னு நேக்குத் தெரியும். ஆனா, அப்பா பேரு தாசரதின்னு தெரிய வந்திருந்ததால, நீங்க வேற யாரோ ஒரு பங்கஜம்னு நான் முடிவு பண்ண வேண்டியதாச்சு!”

பங்கஜம் கண்ணீருடன் துர்க்காவின் தோள்களைப் பற்ற, அவளும் அடக்க முடியாத கண்ணீருடன் எழுந்து நின்றாள். பங்கஜம் காணாதது கண்டவள் போன்று தன் மகளை அணைத்துத் தன்னோடு இறுக்கிக்கொண்டாள். அடுத்த கணத்தில், அங்கே, உலகத்து அன்புகளிலெல்லாம் மிகத் தூய்மையான அன்பின் சங்கமம் விளைந்து அந்த அறை கடவுள் என்று சொல்லப்படுகிற மகாசக்தியின் சந்நிதானம் போல் அமைதியில் ஆழ்ந்தது.

அழுகை நின்றதும், பங்கஜம், “துர்க்கா, துர்க்கா! என் கண்ணே! அதான் உன் மேல மட்டும் தனியா நேக்கு ஒரு பாசம் ஏற்பட்டிருந்திருக்கு! எப்படியோ. நாம ஒண்ணு சேந்துட்டோம். சிஸ்டரைத் தவிர வேற யாருக்கும் இது தெரியக்கூடது. ஏற்கெனவே எல்லாரும் உன்னை என்னோட செல்லப் பொண்ணுன்னு கேலி பண்ணிண்டிருக்கா. இப்ப வெளையாட்டுக்குத்தான் கேலி பண்ணிண்டிருக்கான்னாலும், இந்தப் புது உண்மை பரவித்துன்னா, ஏற்கெனவே தெரிஞ்சுண்டுதான் நான் உங்கிட்ட தனி அபிமானம் வெச்சிருந்ததா நெனைச்சுப்பா. நாளைக்கு நான் உன் விஷயத்துல நியாயமா ஏதாவது செஞ்சாக்கூட ஒரு அம்மாக்காரியோட பாரபட்சம்னு எம்மேல சந்தேகப் படுவா எல்லாரும். நேக்கும் பேரு கெட்டுடும். அதனால, இப்ப இது யாருக்குமே தெரியப்படாது – சிஸ்டரைத் தவர. என்ன?” என்றாள்.

கண்ணீர் நின்றதும் இருவரும் முகத்தைத் துடைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார்கள். . . .

பல்லாண்டுகள் கழித்து நேர்ந்த அவ் விணைப்பால் பங்கஜம் அதிக மகிழ்வுற்றாளா, இன்றேல் துர்க்கா அதிக மகிழ்வுற்றாளா என்று எடை போடுவது மிகக் கடினம்! எனினும், மொத்தத்தில், இருவரும் பரவசமுற்று மிதந்தார்கள் என்பதில் மிகையே இருக்க முடியாது!

மூடிய அறையினுள்ளே தாயும் மகளும் சொன்ன வியப்பான கதையைக் கேட்டுவிட்டு சிஸ்டர் முத்துலட்சுமி மகிழ்ந்து போனார்.

“உங்க ரெண்டு பேரையும் விட, நேக்குத்தான் இதிலே அதிகமான சந்தோஷம்னு தோண்றது. எப்படின்னா, நேக்கு வயசாயிண்டிருக்கு. என்னோட காலத்துக்குப் பிற்பாடு இந்த ஹோமை நடத்தி நிர்வகிக்கிறதுக்கு ஒரு நல்ல ஆளா அமையணுமேன்னு கவலைப் பட்டுண்டிருக்கேன். அந்தக் கவலையை, பங்கஜம், நீ எப்பவோ போக்கிட்டே. உனக்குப் பிற்பாடு யாருங்கிற கவலையும் இனிமே நான் பட வேண்டியதில்லே! ஆக, இந்த ஹோம் பன்னெடுங்காலம் வளரப்போறது! பகவானுடைய அனுக்கிரகம் மட்டும் அதுக்கு வேணும். .. .. ஆனா, பகவானுடைய அனுக்கிரகம் இந்த ஹோமுக்கு நிறையவே இருக்குன்னுதான் தோண்றது. இல்லேன்னா, நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்து சேந்திருப்பேளா!”

புன்னகை செய்த பங்கஜம், “ .. .. சிஸ்டர்! ஒரு வேண்டுகோள். எங்க நிஜமான உறவு யாருக்கும் தெரிய வேண்டாம். . .” என்று கேட்டுக்கொண்டு, அதற்கான காரணங்களையும் விளக்கியதும், சிஸ்டர் முத்துலட்சுமி அதற்கு ஒத்துக்கொண்டார்.

.. .. .. சிறையிலிருந்து வெளிவந்த சாமிநாதன் முதலில் சென்னைக்குத் தான் போனான். அவனுடைய நண்பர்களில் எவரும் கிடைக்கவில்லை. எல்லாருமே வெவ்வேறு சிறைகளில் இருந்தது மட்டும் தெரிய வந்தது. சாமிநாதனின் தண்டனைக் காலம் உண்மையில் முடிந்திருக்கவில்லை. சிறைக்காவலர் ஒருவரின் உதவியால் தப்பி அவன் வெளிவந்திருந்தான். தேடப்படுகிற கைதி என்கிற முறையில், கவனமாக நடமாட வேண்டிய இக்கட்டில் அவன் இருந்தான். எனவே, தாடி, நீண்ட தலைமுடி வளர்த்துத் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு சென்னைத் தெருக்களைச் சில நாள் சுற்றியும் பங்கஜத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அவன் மறுபடியும் தேசிய இயக்கத்தில் முனைப்பாக ஈடுபட்டான்.

தீவிரவாதம் பெருமளவுக்கு நீர்த்துப் போயிருந்ததாலும், இயக்கத் தலைவர்கள் இந்தியச் சிறைகளிலும், அந்தமான் சிறையிலும் அடைபட்டிருந்ததாலும், உறுப்பினர்களை வழிநடத்திச்செல்ல ஆற்றல் மிக்க தலைவர்கள் இல்லாததாலும், சாமிநாதன் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தான்.

.. .. .. தாசரதி ஒன்றும் பெரிதாக மனமாற்றம் அடைந்திருக்கவில்லை. இப்போதும் ஒரு திருமணத்துக்காகப் பட்டணத்துக்கு வந்திருந்த அவன் உறவினர் ஒருவர் கூப்பிட்டார் என்பதற்காகக் காந்தியைப் பார்க்க அவருடன் போனான் என்பதுதான் உண்மை. காந்தியின் அடுத்த கூட்டத்துக்கும் தாம் போகப் போவதாக அவர் தெரிவிக்க, காந்தியிடம் எந்தக் கவர்ச்சியையும் காணாத அவன் தான் அவசரமாக வேறிடத்துக்குப் போக வேண்டி யிருப்பதாய்ச் சொல்லிக் கழற்றிக்கொண்டான்.

.. .. .. தன்னுடையது போன்றே துர்க்காவின் மண வாழ்க்கையும் ஒரு வகையில் துயரம் நிறைந்ததா யிருந்தது பங்கஜத்தை வருத்திய போதிலும், ஆண்டவன் தங்களை ஒன்று சேர்த்துவைத்துவிட்ட மகிழ்ச்சியில் அவள் எதையும் பொருட்படுத்தாதிருக்க முற்பட்டாள்.

துர்க்காவைக் கடலிலிருந்து மீனவர்கள் மீட்ட பின்னர் அவள் தெரிவித்த வாழ்க்கை வரலாறு தான் என்றாலும், இப்போது அவள் தன் மகள் என்பதால், பங்கஜம் அதைப் பற்றி யோசிக்கலானாள்.

“உன் ஆம்படையான் ஒரு வேளை திருந்தியிருந்தா, மறுபடியும் அவன்கிட்ட போகலாம்கிறாப்ல ஒரு எண்ணாம் இருக்கா, துர்க்கா?” என்று அவள் மறு நாள் அவளைக் கேட்ட போது, “செத்தாலும் சாவேனே தவிர, மறுபடியும் அந்த மனுஷனோட வாழ மாட்டேன். இதே மாதிரி நான் நடந்திருந்தா – வேற எவனோடவாவது கும்மாளம் அடிச்சிருந்தா – அந்த மனுஷன் என்னை ஏத்துப்பானா?” என்று ஆத்திரமாக ஒருமைக்குத் தாவிய மகளைப் பங்கஜம் ஆதரவுடன் அணைத்துக்கொண்டாள். தனக்கு இருந்திராத – அல்லது தன்னை விடவும் அவளிடம் அதிக மிருந்த – தன்மானம் அவளை மகிழ்வுறச் செய்தது என்று கூடச் சொல்லலாம்.

.. .. .. அன்று காலையில் வந்த சுதேசமித்திரன் நாளிதழைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் சிஸ்டர் முத்துலட்சுமியின் கண்களில் அந்தச் செய்தி பட்டது.

‘நடுத்தர வயதுடைய ஒரு மனிதர் எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் தண்டவாளத்தைக் கடந்த போது, அவரது கால் தண்டவாளத்துக்கு அடியில் மாட்டிக்கொள்ள, டிரெயினில் அடிபட்டுத் தலை வேறு, முண்டம் வேறாய்ச் சிதறினார். அவரது சட்டைப் பையில் இருந்த கடிதம் ஒன்றிலிருந்து அவரது பெயர் தாசரதி என்பதும், அவர் சின்னக்குளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளன. மதறாஸ் உறவினரின் விலாசமும் இருந்தது. அவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.. .. ..’ – சிஸ்டர் முத்துலட்சுமி தாசரதியின் புகைப்படத்துடன் வெளியாகி யிருந்த அந்தச் செய்திப் பகுதியைக் கத்தரிக்கோலால் வெட்டி எடுத்துக் கிழித்துக் கசக்கிக் குப்பைகூடையில் போட்டார். ‘என்னதான் இருந்தாலும், கொஞ்ச நாள் அவனோட வாழ்ந்தவ பங்கஜம். அவ கண்ணுல இது பட வேண்டாமே!’ என்று அவரது வாய் முனகியது. சட்டென்று ஞாபகம் வந்தவராய், ‘அன்னைக்குப் பங்கஜத்தோட கொழந்தையைத் தண்டவாளத்துல போட்டுக் கொன்னவன்தானே இவன்! சரியான தீர்ப்புதான்!’ என்றும் அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார்.

jothigirija@vsnl.net.
தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 28

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பங்கஜம் வியப்புடன் துர்க்காவை ஏறிட்டாள் : “எதுக்கு எங்காத்துக்காரரோட பேரைக் கேட்டே?”

“சும்மாத்தான். ஒருக்கா, தெரிஞ்சவாளா யிருக்குமோன்னு பாக்கறதுக்கோசரந்தான்.”

“செங்கல்பாளையத்துல நோக்கு யாரையாவது தெரியுமா, என்ன?”

“இல்லே. தெரியாது. ஆனா, பக்கத்துப் பக்கத்து ஊரானதுனால, கேள்விப்பட்ட பேரா இருக்கலாமோங்கிறதுக்காகக் கேட்டேன். என்ன பேருன்னு சொன்னேள்? சாமிநாதன்னு தானே?”

“ஆமா. “

“அவருக்கு வேற ஏதாவது பேரும் உண்டா? .. .. அதாவது சில குடும்பங்கள்ளே ரெண்டு பேரு வைப்பா இல்லியா?”

“இல்லேம்மா.. .. முன்னே யெல்லாம் ஆத்துக்காரர் பேரைச் சொல்றதுக்கே வாய் வராது. பொம்மனாட்டிகள் புருஷா பேரைச் சொல்லப்படாதுன்னு வெச்சிருக்காளே! ஆனா, இப்ப – இங்கே வந்தாவுட்டு – அந்தக் கூச்சமெல்லாம் போயிடுத்து. அதுல எல்லாம் என்னம்மா இருக்கு?.. .. ஆமா? நீ எதுக்காக அவருக்கு இன்னொரு பேரு உண்டான்னு கேக்கறே?”

“விசேஷமான காரணம் ஒண்ணுமில்லே. இன்னொரு பேரு இருந்தா, அந்தப் பேருள்ளவா நான் கேள்விப்பட்ட ஆளா யிருக்குமோன்னு தெரிஞ்சுக்கிறதுக்காகத்தான்.”

அதன் பின்னர் இருவரும் தத்தம் அலுவலில் ஆழ்ந்தார்கள். கணவன் பெயரைக் கேட்டதும் அவளையும் அறியாமல் அவள் வாயில் எந்தத் தயக்கமும் இன்றி வந்த பெயர் சாமிநாதன் என்பது¡ன்! ‘இப்போதுதான் அறிமுகம் ஆன புதுப் பெண்ணிடம் போய், ‘எனக்கு இரண்டு கணவன்மார்கள். முதல் ஆள் பெயர் தாசரதி. அந்த மனிதன் என்னைத் துரத்தி விட்டதால், இரண்டாவதாகச் சாமிநாதன் என்பவரை மணந்துகொண்டேன்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்ன! அது பற்றி இவளுக்குத் தெரியவந்து அதற்குப் பிறகு கேட்டால் – அல்லது ஒரு நெருக்கம் விளைந்ததற்குப் பிறகு பேச்சுவாக்கில் – சொன்னால் போயிற்று. பெரிய சிதம்பர ரகசியம் பாழாய்ப் போகிறதா என்ன!’

சாமிநாதன் பற்றிய நினைவுகள் பங்கஜத்துள் மிகப் பெரிய அளவில் கிளர்ந்துகொண்டன. ‘எந்த ஜெயிலில் இருக்கிறாரோ? அல்லது விடுதலை யாகி வெளீயே வந்து என்னைத் தேடிக்கொண்டிருக்கிறாரோ! சேதுமாதவனை அவர் சந்திக்க வாய்த்தால் நான் இங்கே பத்திரமா யிருக்கும் விஷயம் அவருக்குத் தெரிய வரும். .. .. குழந்தை வளர்ந்திருப்பான் என்று எண்ணி அவனைப் பார்க்க எவ்வளவு ஆவலா யிருப்பார் அவர்! .. .. ..ஒரு வேளை நான் அவரை இரண்டாம் கணவராக ஏற்றது தப்போ? அதனால் தான் என் குழந்தையைப் பறித்து – அவரையும் என்னை விட்டுப் பிரித்து – பகவான் என்னைத் தண்டித்துவிட்டாரோ!” – பங்கஜம் முதன் முறையா யிவ்வாறு எண்ணிக் கண் கலங்கினாள்.

ஆனால், மறு கணமே சுதாரித்துக்கொண்டு, ‘அதெப்படித் தப்பாகும்? வரிசையாகப் பெண் பிறந்தது என்பதற்காக அவர் மட்டும் என்னை விரட்டியடித்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமா? மறு கல்¡ணத்தில் எனக்குப் பிள்ளைக் குழந்தை பிறந்ததே! வரிசையாகப் பெண் குழந்தைகளாகவே பெற்றது என் உடம்பு வாகு என்று அவர்கள் சொன்ன காரணத்தைப் பகவான் பொய்யாக்கினாரே! புருஷர்கள் மட்டும் என்ன வேண்டுமானாலும் பண்ணலாமா? எந்தச் சட்டத்தில் அப்படி எழுதி வைத்திருக்கிறதாம்? அப்படியே எழுதி வைத்திருந்தாலும், அது மாதிரியான சட்டங்களை யெல்லாம் புருஷர்கள்தானே எழுதிவைத்தார்கள்? வாய்க்கு வாய், சிஸ்டர் பொருமுவது போல், பெண்கள் சம்பந்தபட்ட விஷயங்களில் கூட, புருஷர்கள் வைத்ததுதானே சட்டமா யிருந்து வந்திருக்கிறது! இது எந்த ஊர் நியாயம்?’

.. .. .. மார்கரெட்டுடன் மோட்டார் சைக்கிளில் உற்சாகமாக வீடு திரும்பிய சிவகுரு வீட்டில் எங்கும் துர்க்காவைக் காணாமல் திகைத்துத் திகிலுற்றான். அவள் வெளியே எங்கும் போக மாட்டாள் என்பதால், முதலில் கொல்லைப் பக்கம் சென்று சுற்றிப் பார்த்தான். அன்று காலையிலிருந்தே அவர்கள் வீட்டுக் கொல்லைக் கிணற்றில் சில பணியாளர்கள் தூர் வாரிக்கொண்டிருந்ததால், கிணற்றில் அவள் விழுந்திருக்க மாட்டாள் என்றெண்ணிய சிவகுரு சஞ்சலத்தில் ஆழ்ந்தான்.

தூர் வாரிக்கொண்டிருந்தவர்களை அணுகி, “அம்மா வெளியே எங்கேயாவது போனாங்களா?” என்று விசாரித்த சிவகுருவுக்கு, “நாங்க கவனிக்கலீங்களே, சாமி!” என்கிற பதிலே கிடைத்தது. அவன் பெருங் குழப்பத்துக்கும் பதற்றத்துக்கும் ஆளானான்.

வீட்டினுள் சென்று, “மார்கரெட்! இன்னைக்கு நாம ஹொட்டேலுக்குத்தான் (hotel) போகணும். அவளைக் காணோம். எங்கே போய்த் தொலைஞ்சான்னு தெரியல்லே,” என்றவாறு அவன் வீட்டின் கதவுகளைப் பூட்டுவதற்குத் தயாரானான்.

“எனக்குப் பயமாயிருக்கு, சிவா!.. அவ உங்க மேல கோவிச்சுக்கிட்டு பீச் கீச்னு எங்கேயாச்சும் போய்க் கடல்ல விழுந்து.. ..”

“அவளாவது கடல்ல விழுந்து சாகறதாவது! சரியான பயந்தாங்கொள்ளி! அதுக்கெல்லாம் அவளுக்குத் தைரியம் கெடையாது!” என்று பதில் சொன்ன போதிலும், அவனுக்கு உள்ளூற உதைப்பாகத்தான் இருந்தது.

“அதனாலதான், நான் வீட்டுக்கெல்லாம் வந்து தங்க மாட்டேன்னு சொன்னேன். நீங்க கேக்கல்லே. எந்தப் பொண்ணும் இன்னொரு பொண்ணோட தன் புருசன் தன் கண் முன்னாலேயே கொட்டம் அடிக்கிறதைச் சகிச்சுக்க மாட்டா, சிவா! எத்தினி வாட்டி நான் காஷன் (caution) பண்ணினேன்? நீங்கதான் கேக்கல்லே. இப்ப பாருங்க.”

“போனாப் போகட்டும், விடு. நாம ஜாலியா யிருக்கலாம். சும்மா பயங் காட்றா! எங்க போயிடுவா, கழுதை? ஒரு வேளைச் சோத்துக்குக் கூட நாதி யத்தவ! வா, வா!” என்ற சிவகுரு வாசற்கதவைப் பூட்டிக்கொண்டு அவளுடன் தெருவில் இறங்கினான். இருப்பினும், அவனது இதயம் தடதடத்துக்கொண்டிருந்தது. தற்கொலை செய்துகொள்ளுகிற அளவுக்குப் போவாள் என்பதை அவன் மனம் நம்ப மறுத்துச் சமாதானமுற முயன்றது. ஆனால் தோல்வியே அடைந்தது.

“ஏங்க! போலீஸ்ல சொல்லுவீங்களா?”

“இல்லே, மார்கரெட். ‘ரெண்டு நாள் பாத்துட்டுத்தான் சொல்லுவேன்.”

“உடனே ஏன் கம்ப்ளெய்ன்ட் (complaint) குடுக்கல்லேன்னு அவங்க கேட்டா?”

“அவளுக்கு மனநிலை சரியில்லே, அப்பப்ப அப்பிடித்தான் போய்ச் சுத்திட்டு ரெண்டொரு நாள் கழிச்சுத் திரும்புவா, அது மாதிரி எங்கேயோ பொயிருக்கான்னு நெனைச்சுட்டதாச் சொல்லிச் சமாளிப்பேன்.”

“நம்புவாங்களா?”

“நம்பாம என்ன? எதிர் வீட்டுல, பக்கத்து வீட்டுல எல்லாம் கூட லேசா மனநிலை சரியில்லாதவ, கொஞ்சம் ஏடாகூடமா நடந்துக்குற மாதிரி தெரிஞ்சா கவனிச்சு எனக்கு ·போன் பண்ணுங்கன்னு சொல்லி வெச்சிருக்கேன். எப்பிடி என்னோட முன் ஜாக்கிரதை?”

“அப்ப, முழு நேரத்துக்கும் அவங்களுக்குத் தொணைக்கு இருக்குறாப்ல ஒரு வேலைக்காரியை வைக்க வேண்டியதுதானேன்னு அவங்க கேக்கலையா?”

“கேட்டாங்கதான்! அது ஊருக்குப் போயிருக்கிறதாவும், வர்றதுக்குக் கொஞ்ச நாளாகும்னும் சொன்னேன். அவ ஒருத்தியாலதான் இவளைச் சமாளிக்க முடியும்னும் சொல்லி வெச்சிருக்கேன்.”

“நீங்க பெரிய ஸ்கீமர்தான் (schemer)! ஆனா எதுக்கு முன்கூட்டியே அப்பிடிச் சொல்லி வெச்சீங்க? அவங்க இது மாதிரி ஓடிப் போவாங்கன்னு உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமா?”

“தெரியாதுதான். ஆனாலும், உன்னை இங்க கூட்டிண்டு வர்றப்போ அவ ஏடாகூடமா ஏதாவது பண்ணிட்டா நான் சமாளிக்கணுமில்லே? அதுக்குத்தான் .. .. ..ஆனா ஒண்ணு. நாம சாப்பிட்டு முடிச்சதும் நீ உன்னோட ரூமுக்குப் போயிடு. அதை இப்போதைக்குக் காலி பண்ண வேண்டாம்னு நான் சொன்ன யோசனை சரியாப் போச்சு, பாத்தியா! உன்னாலதான் அவ ஓடிட்டான்னோ, இல்லே, தற்கொலை பண்ணிண்டான்னோ யாரும் குத்தம் சுமத்தமாட்டாங்கல்ல?”

“அடியம்மா! படா க்ரிமினல் (criminal) மூளைதான் உங்களுக்கு!”

சிவகுரு அந்தப் பாராட்டுக்கு மகிழ்ந்து சிரித்தான்.

.. .. .. அன்று மாலை, மார்கரெட்டின் அறைக்கு அவளுடைய (உண்மைக்) காதலன் வில்லியம்ஸ் வந்தான்.

“சிவகுரு வீட்டுக்குத்தான் மொதல்ல ·போன் பண்ணினேன். வழக்கம் போல உன்னோட கசின்னு (cousin) சொன்னேன். நீ இங்க திரும்பிப் போயிட்டதாச் சொன்னான், அதான் வந்தேன். எல்லாம் ரெடி பண்ணிட்டியா?”

“பண்ணிட்டேன். இவ்வளவு க்விக்கா (quick) பண்ண முடியும்னு நான் கொஞ்சங்கூட நெனைக்கல்லே, வில்லியம்ஸ்! எனக்கு ரொம்ப வசதியா ட்யூப்ளிகேட் (duplicate) சாவிக்கொத்து ஸ்டீல் பீரோவுக்குப் பின்னாடியே ஒரு ஆணியில தொங்கிட்டிருந்திச்சு. அவனே ஒளறினான் அது ட்யூப்ளிகேட் சாவிக்கொத்துன்னு! நைஸா எடுத்தாந்துட்டேன்.”

“நாளைக்கு நீ அவனோட கம்பெனியில வேலை பண்றப்ப, பகல் நேரத்துலயே என்னோட வேலையை நான் அவன் வீட்டுக்குப் போய் முடிச்சிர்றேன்!”

“ரைட்! ஆனா, இன்னிக்கு அவன் வீட்டுக் கெணத்துல தூர் வாரிக்கிட்டிருந்தாங்க. இன்னியோட வேல முடிஞ்சுடும்னுதான் பேசிக்கிட்டாங்க. எதுக்கும் நீ வீட்டுக்குள்ள நொழையிறதுக்கு முன்னாடி, ஆளுங்க இருக்காங்களான்னு நல்லாப் பாத்துட்டு வீட்டுக்குள்ள போ. என்ன?”

“சரி, மார்கரெட்! தேங்க் யூ! “

“அப்புறம், வெளிக்கதவுப் பூட்டு வெறுமன அமுக்கினாலே பூட்டிக்கும். அதனால ட்யூப்ளிகேட்டுகளைப் (duplicate) பழையபடியே ஸ்டீல் பீரோவுக்குப் பின்னாடி ஆணியில தொங்கவிட்டுட்டு நீ வெளியே வந்து பூட்டை அமுக்கிப் பூட்டிடலாம்.”

“அப்ப ஈஸி! அப்படியே வாசலுக்குப் போய்க் கதவைப் பூட்ட முடியாத படிக்கு ஏதாச்சும் எடைஞ்சல் வந்திச்சுன்னாலும், அதைப் பத்தி எனக்கென்ன? நான் பாட்டுக்குப் பின் பக்கமாக் கம்பி நீட்டிடுவேன்!”

.. .. .. மறு நாளுக்கு மறு நாள் வந்த சுதேசமித்திரனில் சிவகுருவின் வீட்டில் சுமார் இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட செய்தியும், அவன் தன் மனைவியைச் சந்தேகிக்கிற செய்தியும் வெளியாகியிருந்தன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்திய மகிழ்ச்சியில் மார்கரெட்டும் வில்லியம்சும் ஆழ்ந்தனர்.

.. .. சிவகுருவுக்காகப் போலியாய்க் கண் கலங்கியதற்குப் பிறகு அன்று மாலை தன் அறைக்குத் திரும்பிய மார்கரெட்டுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. தவிடுக்கில் செருகப்பட்டிருந்த கடிதத்தில், “டார்லிங்! (Darling) இருபத்தையாயிரத்துக்கு நன்றி! என் (உண்மையான) காதலி ரோசியுடன் நான் இணைவதற்கு நீ எனக்குச் செய்த இந்தப் பேருதவியை நான் என்றும் மறக்கவே மாட்டேன்! வடக்கே சென்று குஷியாக வாழ்க்கையைத் தொடங்குவேன். மீண்டும் உனக்கு நன்றி!’ என்றிருந்த ஆங்கில வாசகம் மார்கரெட்டை மூர்ச்சையுறச் செய்தது. எடுக்கப் போகும் பணத்திலும் பிறவற்றிலும் ஆளுக்குப் பாதி என்பதுதான் அவர்கள் செய்து கொண்டிருந்த ஒப்பந்தம். வில்லியம்சுக்கு இன்னொரு காதலி இருக்கும் விஷயமே அவளுக்கு அப்போதுதான் தெரிந்தது!

.. .. .. “காந்தி பத்தொம்பதாம் தேதி மெட்றாசுக்கு வர்றராம். நம்ம ஸ்திரீ சேவா மண்டலிக்கும் கூப்பிடலாம்னு ரொம்ப முயற்சி பண்ணினேன். ஆனா ரொம்பவே டைட் ஷெட்யூலாம் (tight schedule). வர முடியாதுன்னுட்டார். இருந்தாலும் அவர் இருக்கிற எடத்துக்கு நாம வந்து பாக்கலாம்னு அனுமதி குடுத்திருக்காராம். பங்கஜம்! நீயும் என்னோட வறே தானே?” என்று சிஸ்டர் முத்துலட்சுமி வினவியதும் பங்கஜம் தலைகால் தெரியாத உற்சாகத்தில் ஆழ்ந்தாள்.

“கரும்பு தின்னக் கூலியா, சிஸ்டர்? காந்தியைப் பாக்கணும், பாக்கணும்னு நேக்கு எத்தனை நாளா ஆசை தெரியுமா? .. .. அவரோட நாம பேச முடியுமா, சிஸ்டர்?”

“அதுக்குத்தானே போறோம்? சும்மா வாயைப் பொளந்துண்டு நின்னுண்டு அவரைப் பாத்துட்டு வர்றதுக்கா! அதுக்கு வெறும் காந்தி படத்தைப் பாத்தாலே போறுமே?”

“அவரை என்ன கேக்கப் போறோம், சிஸ்டர்?”

“பொண்ணுகளோட பிரச்னைகள் பத்தித்தான். நமக்கு மத்ததைக் காட்டிலும் அதில தானே இன்டெரெஸ்ட் (interest)? அவரும் இந்தியாவுக்கு வந்த கொஞ்ச நாள்லேயே வரதட்சிணை எதிர்ப்பு, பால்ய விவாக எதிர்ப்பு, பெண் கல்வி, விதவைகள் மறுமண ஆதரவுன்னு ஆரம்பிச்சு ஏதேதோ பண்ணிண்டிருக்கார். ஆனா, காந்திக்கு எல்லாரும் கை தட்றாளே ஒழிய, அவர் சொன்னதை அவாவா வாழ்க்கையில எங்கே பண்றாளாம்?”

‘அவ்வளவு சீக்கிரமா மனுஷா மாறுவாளா, சிஸ்டர்? கொஞ்சங் கொஞ்சமாத்தான் மாறுவா’ என்று எண்ணினாலும், சிஸ்டர் தன்னை அதிகப் பிரசங்கி என்று நினைப்பாரோ என்பதால், தான் எண்ணியதை வெளிப்படுத்தப் பங்கஜம் விரும்பவில்லை.

அவரவர், ‘காந்தியிடம் அப்படிக் கேள்வி கேட்கவேண்டும், இப்படிக் கேள்வி கேட்கவேண்டும்’ என்று தத்தம் மனத்துள் ஒத்திகை செய்து பார்க்கத் தொடங்கினார்கள்.

.. .. ·பிப்ரவரி மாதம் 19 ஆம் நாளன்று மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தார். அவர் தங்கி யிருந்த இடத்துக்கு விஜயநகரம் மகாராணியார் வந்து பார்த்துச் சென்றார். கூட்டமான கூட்டம்.

சிஸ்டர் முத்துலட்சுமி பங்கஜம், துர்க்கா, மற்றும் இரண்டு பெண்கள் ஆகியோருடன் அவரைச் சந்தித்தார். துர்க்காவுக்கும் பங்கஜத்துக்கும் மற்ற எவரையும் காட்டிலும் அதிகப் பரபரப்பு அவரைப் பார்த்த போது ஏற்பட்டது. தங்கள் வாழ்க்கையைப் பற்றி மிகச் சுருக்கமாய் அவரிடம் சொல்லி அவர் என்ன சொல்லுகிறார் என்று தெரிந்துகொள்ள இருவருமே விரும்பினார்கள். கணவன் உயிருடன் இருக்கையில் இன்னொருவரோடு தான் வாழ்ந்ததைக் காந்தி அங்கீகரிப்பாரா என்பது பங்கஜத்தின் ஊகிக்கும் திறனுக்கு அப்பாற்பட்டதா யிருந்தது. எதிர்ப்பாய் ஏதேனும் சொல்லிவிட்டால் தன் மனம் அமைதி யிழந்து விடுமே என்பதால் முதலில் ம்¢குந்த ஆர்வத்தில் இருந்த அவள், பின்னர், அது பற்றிக் கேட்காதிருக்கத் தீர்மானித்தாள். துர்க்காவோ, பொறுமை காட்டாமல் அவள் கணவனை விட்டு வந்து விட்டது தப்பு, அகிம்சை வழியில் அவள் போராடி யிருந்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது அன்று அஞ்சி அது பற்றிப் பேசாதிருப்பதே நல்லது என்று ஆழ்ந்து யோசித்த பிறகு முடிவு செய்தாள். ஆனால் அவர்கள் பேச விரும்பி யிருந்தாலும், அது நிகழ்ந்திராது. ஏனெனில், அந்த அளவுக்குக் காந்திக்கு நேரமில்லை. மேலும், சொந்தப் பிரச்சினகள் பற்றிப் பேசுகிற அளவுக்கு அவர் தனியாகவும் இல்லை. எனவே, சிஸ்டர் முத்துலட்சுமி பொதுவாய்க் கேட்டவற்றுக்கு அவர் என்ன சொன்னார் என்பதை மட்டுமே செவியுற அவர்களால் முடிந்தது.

“வரதட்சிணை கேட்பவனை மணக்க மாட்டேன் என்று பெண்கள் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டும். அதுவும் இத் தீமையை ஒழிக்க ஒரு வழி!”

“அது சாத்தியமா, பாபுஜி? அந்த அளவுக்குத் துணிச்சலும் தன்னம்பிக்கையும் இருக்கிறபடியாகவா நாம் பெண் குழந்தைகளை வளர்க்கிறோம்? மீசை வளர்க்கும் ஆண்களே அம்மா மீதும், அப்பா மீதும் பழி போட்டுவிட்டு வரதட்சிணை விஷயத்தில் அக்கடா என்று ஒதுங்கியிருக்கும் இந்த நாட்டில், கோழைகளாகவும் அடிமைகளாகவும் ஆணுக்கு அடங்கியவளே பெண் என்கிற ரீதியில் இரண்டாம் தரக் குடிமகளாகவும் பெற்றோரால் வளர்க்கப்படுகிற பெண்ணிடத்தில் அந்த அளவுக்குத் துணிச்சலை எதிபார்ப்பது என்ன நியாயம், பாபுஜி?”

காந்தி பதில் சொல்லாமல் புன்னகை பூத்தார்.

“பாபுஜி! ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் நடந்தால், அவள் தகப்பன் ஓட்டாண்டியாக நேர்கிறது. பிள்ளையைப் பெற்றவர்கள் கொள்ளைக்காரர்களாக நடந்துகொள்ளுகிறார்கள். நாட்டில் எத்தனையோ வேறு பல பிரச்சினைகள் இருக்க, இது ஒரு பிரச்சினையா என்று கூடச் சிலர் அதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ளமல் பேசுகிறார்கள். பெண் என்பவள் ஒரு சுமையாய்க் கருதப்படுகிற அளவுக்குச் சமுதாயக் கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் இருப்பதால், பெற்றோர்கள் அவளை எவ்வளவு விரைவில் ‘தள்ளிவிட’ முடியுமோ, அவ்வளவு விரைவில் ‘தள்ளிவிட’வே அவசரப்படுகிறார்கள். பெண்ணைப் பெற்றவர்களின் இந்தப் பலவீனத்தைப் பிள்ளையைப் பெற்றவர்கள் காசாக்கப் பார்க்கிறார்கள்.”

“உண்மைதான், சகோதரி. அதற்கும் வழிகள் உள்ளன. பெற்றோர்கள் சமுதாயக் குற்றச்சாட்டுகளைப் பாராட்டாதிருக்கக் கற்கவேண்டும். தனி மனிதர்களை ரொம்பவும் துன்புறுத்தாதிருக்கும் அளவுக்குச் சமுதாயமும் உயரவேண்டும். இதன் சுருக்கம் என்னவென்றல், தனி மனிதர்கள் ஒட்டுமொத்தமாக மாறவேண்டும். அது உடனே நிகழ்வதென்பது சாத்தியமன்று. சிறுகச் சிறுகத்தான் மாறும். மனமாற்றம் கொள்ளுகிற தனிமனிதர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, அது சமுதாய மாற்றத்தில் முடியும். அதற்கு நாளாகும். என்ன செய்ய! .. .. அப்புறம்.. .. பெண்கள் நகையாசையைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துறக்கவேண்டும்! “

”உண்மைதான், பாபுஜி. ஆனால், அது ஒன்றுதான் அவர்களது சொத்து. அதுவும் கூடாதென்று சொல்லுகிறீர்களே!”

“அறவே கூடாதென்று நான் சொல்லவில்லை. ஏதோ கொஞ்சம் இருக்கட்டும். தேவையற்றுச் சுமக்காதீர்கள். அவற்றை யெல்லாம் எங்கள் காங்கிரஸ் இயக்கத்துக்கு நன்கொடையாய்க் கொடுத்துவிடுங்கள். ஆடுமாடுகளுக்கு நகை யணிவித்துப் பாருங்கள். அதன் அசிங்கம் புரியும்!”

அங்கிருந்த பெண்கள் அனைவருமே ஏதேனும் ஒரு நகையைக் கழற்றிக் கொடுத்தனர். காந்தி பொக்கைவாய்ச் சிரிப்புடன் ஆங்கிலத்தில் நன்றி கூறி அவற்றைப் பெற்றுக்கொண்டார்.

“அடுத்து, விதவைகளின் மறுமணம் பற்றிச் சொன்னீர்கள். விதவைகளாகும் தங்கள் பெண்களுக்கு மறுமணம் செய்விக்க முதலில் பெற்றோர்கள் பக்குவப்பட வேண்டும். அவர்களை ஏற்க, பிரும்மசாரிகளோ அல்லது மனைவியை இழந்த ஆண்களோ முன்வரவேண்டும். இது பற்றித் தற்சமயம் பிரசாரம் மட்டுமே செய்ய முடியும். யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. பிரசாரத்தின் மூலம் மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் மாற்ற முடியும். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். மறுமணம் செய்துகொள்ளுவது (செய்யத்தகாத) பாவம் என்பதாய்ப் பெண்கள் தாங்களாக நினைக்கவே யில்லை. அவ்வாறு அவர்களுக்குப் போதிக்கப்பட்டு வந்துள்ளது. அதனால், பெண்களும் இவ்விஷயத்தில் மனமாற்றமும் துணிவும் கொள்ளவேண்டும். .. .. குழந்தைத் திருமணத்துக்கும் நான் இப்போது சொன்னது பொருந்தும். வாழ்ந்த விதவைகளின் நிலையை விட, வாழவே செய்யாத குழந்தை விதவைகள் அதிகமான பரிதாபத்துக்கு உரியவர்கள் என்பது உங்களுக்கே தெரியும். நீங்கள் சொல்லுவது போல் ஆண்கள் மனம் மாறித் திருந்தினால்தான் இப்பிரச்சினைகள் தீரும். 1927 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், நான் மதறாசுக்கு வந்திருந்த போது, இது பற்றிப் பச்சையப்பா கல்லூரி மாணவர்களிடம் நெடிய பிரசங்கமே செய்தேன். இது போன்ற பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு ஏற்பட்டுவிடாது. மனிதர்களின் எண்ணம் சிறிது சிறிதாய்த்தான் மாறும். சமுதாயப் புரட்சி என்பது ஒரு நாளில் விளைவிக்கக்கூடியதன்று. என் சகோதரிகளே! இப்போது அதை நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். உங்களைப் போன்றவர்களும், என் எண்ணங்கள் நியாயமானவை என்று கருதும் நல்ல உள்ளம் படைத்த ஆண்களும் சேர்ந்து இன்னும் பெரிய அளவில் இடைவிடாது பிரசாரம் செய்தால், காலப்போக்கில் இது மறைந்து, பின்னர் ஒழியும். 1829 ஆம் ஆண்டு ‘சத்¢’ என்னும் உடன்கட்டை ஏறுதல் சட்டத்தின் மூலம் – அப்போதைய கவர்னர்-ஜெனரல் லார்ட் வில்லியம் பெண்ட்டிங்க் ( Lord William Bentinck) என்பவரால் – தடை செய்யப்பட்டது. ஆயினும் – நூறாண்டு கடந்தும் – அது முற்றாக ஒழியவில்லை. சமுதாயச் சீர்திருத்தங்கள் என்பவை அப்படித்தான். மெதுவாகவே அவை நிகழும். * ஆயிரக்கணக்கான ஆண்டுப் பழக்க வழக்கங்கள் மெல்ல மெல்லத்தான் மாறும். எல்லாருக்கும் புரிந்த அற்ப நியாயங்களைச் செயல்படுத்துவதற்குக் கூட மனிதனுக்குச் சில நூற்றண்டுகள் ஆகி விடுகின்றன. .. .. ..”

தன் முதுகில் திடீரென்று விளைந்த குறுகுறுப்பால் பங்கஜம் தன்னையும் அறியாமல் பின்னால் திரும்பிப் பார்த்தாள். பார்த்தவளின் இதயம் கணம் போல் துடிக்க மறந்து, பின்னர் தாளம் தப்பித் துடிக்கலாயிற்று.

கூட்டத்தோடு கூட்டமாக அவளுடைய முதல் கணவன் தாசரதி நின்றுகொண்டிருந்தான்!

* (ஆசிரியையின் பின் குறிப்பு :

ராஜஸ்தான் மாநிலத்தில் சதி ஆங்காங்கு இன்னமும் வழக்கத்தில் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் ரூப் கன்வார் எனும் இளம் கைம்பெண் அவள் கணவனோடு பலவந்தமாய் எரிக்கப்பட்ட நிகழ்ச்சி இந்தியாவின் பெண்ணுரிமை அமைப்புகளின் பலத்த கண்டனத்துக்கு ஆளாயிற்று. இது பற்றிக் காஞ்சி சங்கர மடாதிபதி ஜயேந்திர சரசுவதி சுவாமிகள், “ பலவந்தப் படுத்தக் கூடாது. ஆனால், கணவன் இறந்த பிறகு வாழ விரும்பாத ஒரு பெண் உடன்கட்டை ஏற அவளாகவே தீர்மானித்தால், அதைத் தடுக்கக் கூடாது!” என்று ‘திருவாய் மலர்ந்தருளினார்’ என்பது இங்கே நினைவுகூரத்தக்கது. தன் மனைவி தன் மரணத்துக்குப் பிறகு வேறு யாருக்கும் சொந்தமாகிவ்¢டக் கூடாது என்னும் தன் பொறாமையால் ‘சதி’ என்கிற அக்கிரமச் சடங்கை ஆண் ஏற்படுத்தினான் என்பதால் அது மனிதத்தனமே அற்றது – அரக்கத்தனமானது – எனவே அது இன்னமும் ஆங்காங்கு தொடர்வது நிறுத்தப்பட வேண்டிய ஒன்று என்றெல்லாம் அந்த “மனிதர்” (!?) சொல்லவே இல்லை என்பது நினைவில் கொள்ளத் தக்கது.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 27

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

ஜோதிர்லதா கிரிஜா


.. .. .. கணவரின் உயிர் பிரிந்த சில நாள்களுக்குள்ளேயே காவேரியின் உயிரும் பிரிந்துவிட்ட அதிசயம் பற்றி அந்த ஊர் வாய் ஓயாது பேசத் தொடங்கியது.

நொறுங்கிய உள்ளத்துடன் துர்க்கா கணவனோடு பட்டணத்துக்குப் புறப்பட்டுப் போனாள்.

பட்டணத்தில் சிவகுரு தன் கூட்டாளி நண்பர்களுடன் சேர்ந்து கண்ணாடிக் கடை நடத்தத் தொடங்கினான். அனைத்துக் கூட்டாளிகளிலும் அவனே அதிக முதல் போட்டவன் என்கிற காரணத்தால், தொழிற்சாலையின் முக்கிய முதலாளிக்குரிய தனி வசதிகள் அவனுக்குத் தரப்பட்டன. சுருக்கமாய்ச் சொன்னால், அவன்தான் தலைமையாளன். மற்ற பங்குதாரர்கள் அவன் கீழ் வேலை செய்பவர்கள் என்றே சொல்லிவிடலாம்.

சிவகுருவுக்கு மார்கரெட் என்கிற பெண் அவனின் வாய்மொழிக் கடிதங்களைச் சுருக்கெழுத்தில் எடுத்துத் தட்டெழுதுகின்ற பணியில் அமர்த்தப்பட்டாள். உதட்டு நுனி ஆங்கிலம், குலுக்கல், மினுக்கல், வெளிப்பாடான ஆடைகள், மிகையான ஒப்பனை, செயற்கைத்தனமான சிரிப்பு ஆகியவற்றால் தன்னைப் பேரழகியாய்க் காட்டிக்கொள்ள முயன்று அதில் வெற்றியும் பெற்ற மார்கரெட் ஒரே ஆண்டுக் காலத்துள் சிவகுருவின் இதயத்திலும் இடம் பிடித்தாள்.

சிவகுரு தன் தொழிற்சாலையே கதி யென்று நாளின் பெரும் பகுதியைக் கழிக்கலானான். அவன் மார்கரெட்டுக்கு வலை விரித்தானா, அல்லது அவள் சிவகுருவுக்கு வலை விரித்தாளா என்பதே புரியாத அளவில் இருவருமே ஒருவர்க்கு மற்றவர் வலை விரித்து அதில் சிக்கிக்கொள்ளவும் செய்தார்கள்.

சிவகுரு தன்னிடம் முன்பு போல் பழகாததைத் துர்க்கா உணரவே செய்தாள். ஒரு சராசரிக்கும் கீழான பெண்ணுக்குக் கூடப் புரிந்துவிடக் கூடிய விஷயம் அவளுக்குப் புரியாது போகுமா என்ன! பெண்ணுறவின்றி இருக்க முடியாத அவன் அவளை நாடாமலே பல நாள் தொடர்ந்து இருக்கத் தொடங்கியது அவளது ஊகத்தை உறுதிப்படுத்தியது.

அவள் தொலைபேசியில் அவனைக் கூப்பிட்ட போதெல்லாம் ஒரு பெண்ணே ஒலிவாங்கியை எடுத்துப் பேசிய போதே அவளுக்கு நெரடியது. நாள்கள் நகர நகர அவனது ஒட்டாமையும் விலகலும் அவளது ஐயத்தையும் ஊகத்தையும் மேலும் உறுதிப்படுத்தின. ஆனால் அது பற்றி அவனிடம் பேச அவளுக்கு அச்சமா யிருந்தது. எனினும் தனது ஊகம் சரிதானா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான வழிதான் அவளுக்குப் புலப்படவில்லை.

அதற்கெல்லாம் வேலை வைக்காமல், அவனே ஒரு நாள் அந்தப் பெண்ணை வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்துவிட்டான்.

“துர்க்கா! அவ என்னோட ஸ்டெனோ (steno). ஸ்டெனோன்னா தெரியுமா? நோக்கு எங்கே தெரியப் போறது? நான் சொல்ற கடுதாசிகளை யெல்லாம் ஷார்ட்ஹேண்ட்ல (sahorthand) எடுத்துண்டு அப்புறம் அதையெல்லாம் டைப் (type) அடிச்சுக்குடுப்பா. அவ பேரு மார்கரெட். நீ ·போன் பண்றப்பல்லாம் எடுத்து அவதான் பதில் சொல்லுவா. அவளுக்கு அம்மா, அப்பா இல்லே. வேற சொந்தக்காராளும் யாருமில்லே. அதனால, இனிமே அவ நம்மாத்துலதான் இருக்கப் போறா. ..என்னோடா மாடி ரூம்ல,” என்று கடுகளவு வெட்கமோ தயக்கமோ உறுத்தலோ இன்றி, அந்தப் பெண்ணைத் தன் மாடியறைக்கு அழைத்துப் போய் உட்காரச் சொல்லிவிட்டு இறங்கி வந்த சிவகுரு, ரொம்பவும் சாதாரணமாக, ‘அந்தப் புதுப் பேனாவை மாடி அறைப் பெட்டியில வெச்சிருக்கேன்’ என்று சொல்லுவதற்குரிய இயல்புடன் அவளுக்குச் சொன்ன போது அவள் திடுக்கிட்டும் திகைத்தும் போனாள்.

சில கணங்களுக்கு வாயிழந்து போனாலும், பின்னர் சமாளித்துக்கொண்டு, “வேற சொந்தக்காரா யாருமேவா இல்லே அவளுக்கு? உங்க கம்பெனியிலே வேலைக்கு வர்றதுக்கு முந்தி அவ எங்க இருந்தாளோ அங்க போய் இருந்துக்க வேண்டீதுதானே? வயசுப் பொண்ணை மாடி ரூம்ல கொண்டுவந்து வெச்சுண்டா நாலு பேர் உங்களைப் பத்தி அசிங்கமாப் பேசுவாளேன்னா?” என்று அவள் தன்னுள் கடலாய்ப் பொங்கிய ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு வினவியதும் அவன் சிரித்தான்.

“வெச்சுண்டாத்தானே அசிங்கமாப் பேசுவா? ரெண்டாவதாக் கல்யாணமே பண்ணிண்டுட்டா?”

சில நொடிகளுக்குப் பேச்சே வராமல் அதிர்ச்சியில் ஆழ்ந்த துர்க்கா, ஒரு வழியாகச் சமாளித்துக்கொண்டு, “ நான் உசிரோட இருக்கிறப்பவேயா?” என்றாள். அவளது குரல் அதைக் கட்டுப்படுத்த அவள் செய்த முயற்சியைக் கடந்து நடுங்கியது.

“அதுக்கோசரம் நான் உன்னைச் சாகடிக்கவா முடியும்! நீ பாட்டுக்குக் கீழே இருந்துட்டுப் போயேன். என்ன இருந்தாலும் நான் தாலிகட்டினவன். கடைசி வரைக்கும் நோக்குச் சாப்பாடு போட்டுக் காப்பாத்துவேன். அந்தக் கடமை நேக்கு இருக்கு. நான் ஒண்ணும் அயோக்கியனில்லே. அப்பிடி யெல்லாம் ஒன்னைக் கைவிடமாட்டேன்!”

“பொண்டாட்டிக்குச் சாப்பாடு மட்டும் போட்றதோட ஒரு புருஷனோட கடமை முடிஞ்சுட்றதா? ஒரு புருஷன் யோக்கியனா, அயோக்கியனான்னு சொல்றதுக்கு அது மட்டும் போறுமா?”

“என்னடி, வாய் ரொம்பத்தான் நீள்றது? அது கூடப் போனாப் போறதுன்னுட்டுத்தான். நான் நெனைச்சா ஒன்னைத் தொரத்தி யடிச்சுட முடியும்! தெரிஞ்சுக்கோ. இத பாருடி. ஒழுங்கா மொறையா நேக்கு அடங்கி நடக்கச் சம்மதம்னா, வேளா வேளைக்குச் சாப்பிட்டுண்டு இங்க இரு. அதுக்கு ஒத்துக்கல்லேன்னா இந்த க்ஷணமே கெளம்பு!”

துர்க்கா தன் கட்டுப்பாட்டை யிழந்து ஓங்கிய குரலெடுத்து அழத் தொடங்கினாள். அவன் பாய்ந்து நெருங்கி அவள் வாயைப் பொத்தினான். “ஏய்! அழுது ஆகாத்தியம் பண்ற வேலையெல்லாம் ஏங்கிட்ட வேணாம். தெரிஞ்சுதா? மார்கரெட்டுக்கு உன்னோட சமையல் ரொம்பப் பிடிக்கும். இன்னிக்கு நான் கம்பெனிக்குப் போகப் போறதில்லே. அதனால அழுது கிழுது ரகளை பண்ணாதே. வெங்காய சாம்பார், கத்திரிக்கா, முருங்கைக்கா, உருளைக்கெழங்கு இந்த மூணையும் போட்டு ஒரு புளிக்கறி பண்ணுவியே, அது, மைசூர் ரசம், கடலைப் பருப்புப் போட்டுப் பூசனிக்காக் கூட்டு, இஞ்சித் தொகையல், வெள்ளரிக்காப் பச்சிடி எல்லாம் பண்ணிடு. ஆங்! இன்னிக்கு அவ நம்மாத்துல தங்கப் போற மொத நாளு. அதனால சேமியா பாயசமும் பண்ணிடு. நான் அவளோட வெளீல போய்க் காயெல்லாம் வாங்கிண்டு வந்துட்றேன்.. .. ..”

ஐந்தே நிமிடங்களில் அவன் தயாராகி மாடிக்குப் போய் அந்த மார்கரெட்டைக் கூட்டிக்கொண்டு வந்தான். மறு நிமிடம் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டு வெளியே சென்றார்கள்.

துர்க்கா சுவர்க் கெடியாரத்தைப் பார்த்தாள். காலை மணி ஒன்பது. எவளோ ஒருத்தியைக் கூட்டிக்கொண்டு வந்து மாடியறையில் தங்க வைத்துவிட்டு, அவளைத் தான் இரண்டாம் மனைவியாக்கிக் கொள்ளப் போவதாய் அறிவித்தும்விட்டு, அவளுக்கும் சேர்த்துத் தன்னை அவன் சமைக்கச் சொன்னதை அவளால் துமியளவும் செரிக்கவே முடியவில்லை. அப்படி ஓர் அவமானம் நேர்வதற்கு முன்னால் தனக்குச் சாவு வராதா என்று அவளுக்கு இருந்தது.

மிகச் சில நிமிடங்களில் அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். அந்த முடிவு அவள் முகத்தில் ஓர் அமைதியையும், சிக்கலிலிருந்து விடுபடப்போவதற்கான நிம்மதியையும் உடனுக்குடனாய்த் தோற்றுவித்தது. அவள் கதவைச் சாத்திக்கொண்டு தெருவில் இறங்கித் திருவல்லிக்கேணிக் கடற்கரையை நோக்கி மிக விரைவாய் நடக்கத் தொடங்கினாள். தங்கள் வீடு கடற்கரைக்குப் பக்கத்தில் இருந்ததற்கு மகிழ்ச்சி யடைந்தாள்.

‘நல்ல காலம்! நேக்கு இன்னும் கொழந்தை உண்டாகல்லே! கொழந்தை இருந்தா, இப்பிடி ஒரு முடிவுக்கு வரவே முடியாது. நல்லதுதான் நேக்கு நடந்திருக்கு – ஒரு விதத்தில!’ – துர்க்கா கால்களை வீசி விரைந்தாள்.

அவள் கடற்கரையை அடைந்த போது அது மனித நடமாட்டமற்று இருந்தது. ஒன்பதே முக்கால் மணி நேர வெயில் பொழுதா யிருந்ததும் தனக்கு – யார் கண்ணிலும் படாமல் அதைச் செய்வதற்குரிய – நல்வாய்ப்புத்தான் என்று எண்ணி அவள் கசப்பாய்ச் சிரித்துக்கொண்டாள்

.. .. .. கண் விழித்துப் பார்த்த போது, துர்க்கா தான் ஒரு குடிசையில் இருந்ததையும் ஓர் அம்மாளும் ஓர் இளம் பெண்ணும் தான் படுத்திருந்த பாயின் அருகே கவலையாய் உட்கார்ந்து கொண்டிருந்ததையும் கண்டாள். கடலுக்குள் நடந்து சென்று, பின் அதனுள் மூழ்கியது வரையில் அவளுக்கு ஞாபக மிருந்தது. மூக்கினுள் நீர் புகுந்து மூச்சு முட்டியதும் ஞாபக மிருந்தது. ‘நான் இன்னும் ஒரு சில நிமிஷங்களில் சாகப் போகிறேன்’ என்று நினைத்துக்கொண்டதும் கூட ஞாபக மிருந்தது. ஆனால் அதன் பின் என்ன நடந்தது, தான் பிழைத்தது எவ்வாறு என்பதொன்றும் அவளுக்குத் தெரியவில்லை.

“இது எந்த எடம்? இங்க யாரு கொண்டு வந்தா என்னை? எதுக்கு என்னைக் காப்பாத்தினேள்?” என்று ஈனக் குரலில் வினவியபடி எழுந்து உட்கார முற்பட்ட அவளைத் தோள் பற்றி, படித்தவள் போல் தோன்றிய அந்தப் பெண்மணி படுக்க வைத்தாள்.

“உசிரை விட்டுட்டா எல்லாம் சரியாயிடுமா? என்ன கஷ்டம் வந்தாலும் தைரியாமா இருக்கணும்மா. அதுதான் புத்திசாலிப் பொண்ணுக்கு அழகு!”

“நான் புத்திசாலி இல்லேம்மா!”

“எல்லாரும் புத்திசாலிகள்தாம்மா! இந்தச் செம்படவாள்ளாம் உன்னைக் காப்பாத்தல்லேன்னா, என்ன கதி ஆகியிருக்கும்!”

அவள் காட்டிய திசையில் இருந்த சில மீனவர்களைத் துர்க்கா அப்போதுதான் கவனித்தாள் : “நேக்கு நல்ல கதிதான் கிடைச்சிருக்கும்!”

“அதெல்லாம் பேசாதே.. .. பக்கத்துலே எங்கேருந்தாவது காப்பியோ டீயோ வாங்கிண்டு வர முடியுமாப்பா?”

ஓர் ஆள் உடனே ஓடினார்.

“நீ யாரும்மா? நோக்கென்ன கஷ்டம்? உசிரை விட்டுடணும்னு தோண்ற அளவுக்கு உன்னை யாரு கொடுமைப் படுத்தினா?”

துர்க்கா எல்லாவற்றையும் சுருக்கமாய்த் தெரிவித்தாள்.

“சரி.. .. நல்ல வேளையா நான் இந்தப் பக்கமா என்னோட மோட்டார்கார்ல வந்தேன். நடந்தது தெரிஞ்சதும் என்ன, ஏதுன்னு விசாரிக்கிறதுக்காகக் காத்திண்டிருந்தேன்.. .. நான் இந்தப் பக்கம் தற்செயலா வந்தது உன்னோட அதிருஷ்டம்தாம்மா. உன்னோட நல்ல காலந்தான்.. .. நான் ஒரு அநாதை இல்லம் நடத்திண்டிருக்கேன். ஸ்திரீ சேவா மண்டலின்னு அதுக்குப் பேரு. கேள்விப்பட்டிருக்கியா?”

“மாதர் போதினி பத்திரிகையிலே அதைப் பத்திப் படிச்சிருக்கேம்மா. அப்படின்னா, நீங்கதான் அந்த சிஸ்டர் முத்துலட்சுமியா?”

“ஆமாம்மா. அது சரி, உனக்குப் படிக்கத் தெரியும் போலேருக்கே?”

“ஆமா. தமிழ் மட்டும் எழுதப் படிக்கத் தெரியும். கொஞ்சம் கணக்கு வழக்கும் தெரியும்.”

அப்போது ஓட்டலுக்குப் போயிருந்த மீனவர் ஒரு கோப்பையில் காப்பி கொண்டு வந்தார். அதை குடிக்க அவள் எழுந்து உட்கார்ந்தாள்.

அவள் குடித்து முடித்த பின், “இந்தாப்பா! இதை வெச்சுக்கோ!” என்று சிஸ்டர் முத்துலட்சுமி கொடுத்த ஐந்து ரூபாயை வாங்கிக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.

“ஒரு உசிரையே காப்பாத்தி யிருக்கியேப்பா! அஞ்சு ரூவாயை வாங்கிக்கக்கூடாதா?”

“இந்தம்மா உசிரோட வெலை வெறும் அஞ்சு ரூவாதானாம்மா? வேணாம். என் தங்கச்சியைக் கடல்லேருந்து காப்பாத்தினா நான் காசு வாங்குவேனாம்மா?” என்றார் அவர்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு முத்துலட்சுமி துர்க்காவைப் பார்த்துச் சொன்னார்: “இத பாரும்மா.. ..நீ என்னோட வந்துடு. எங்க ஹோம்ல இருந்துக்கோம்மா. படிப்பும் அஞ்சாறு கைத் தொழிலும் கத்துத் தர்றோம். .. இவாளுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லிட்டுக் கெளம்பு!”

துர்க்கா அவர்களைப் பார்த்துக் கைகூப்பி விடைபெற்றாள்.

.. .. .. “இவா பேரு பங்கஜம். இவாதான் இந்த ஸ்தாபனத்துக்கு நேக்கு அடுத்தபடியாத் தலைவியா யிருக்கப் போறவா. அந்த அளவுக்கு இந்த ஸ்திரீ சேவா மண்டலிக்காக சர்வசதா உழைச்சிண்டிருக்கா. ஆமா? உங்க ஊரு எதுன்னு சொன்னே?”

“சிலுக்குப்பட்டி, மாமி!” என்று துர்க்கா பதில் சொன்னாள்.

சிஸ்டர் முத்துலட்சுமி சிரிட்துவிட்டு, “ இவ்வளவு நேரமும் நீ என்னை ‘மாமி’னு கூப்பிட்டது தப்பில்லே. நான் மாமிதான். ஆனா, இங்க வந்து சேந்துட்ட பிற்பாடு நான் எல்லாருக்கும் சிஸ்டர்ம்மா! தெரிஞ்சுதா? சிஸ்டர்னா தெரியுமில்லியா?” என்றார்.

“தெரியும், மாமி .. .. இல்லேலே.. .. தெரியும் சிஸ்டர்! கூடப் பொறந்தவான்னு அர்த்தம்.”

“ஏம்மா, பங்கஜம்! சிலுக்குப்பட்டி, வத்தலப்பாளையம், செங்கல்பாளையம் இதெல்லாம் பக்கத்துப் பக்கத்து ஊர்கள்தானே?”

“ஆமா, சிஸ்டர்,” என்று பதிலிறுத்த பங்கஜம் ஆர்வத்துடன் துர்க்காவை நோக்கினாள். துர்க்காவும் அவளைப் பார்த்தாள். இருவரின் பார்வைகளும் சந்தித்துக்கொண்ட கணத்தில் அவை இரண்டறக் கலந்தன. பிரிந்து வெகு நாளான பின் சந்தித்துக்கொள்ளும் இருவரின் ஏக்கம் நீங்கிய மகிழ்ச்சி அந்தப் பார்வையில் வெளிப்பட்டதாக இருவருக்குமே தோன்றியது. சுருக்கமாய்ச் சொன்னால் அந்த நொடியில் இருவுருக்கும் ஒருவரை யருவர்க்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

“என்னமோ, தெரியல்லே. கொஞ்ச நாளா மதுரை ஜில்லாப் பக்கத்துப் பொண்கள் சிலர் இந்த ஹோம்ல வந்து சேந்திண்டிருக்கா. .. ..” என்று புன்னகை செய்த சிஸ்டர் முத்துலட்சுமி, “அந்தப் புதுப் பொண்ணு, சத்தியபாமா எப்பிடிப் படிக்கிறா? நன்னா பிக் அப் (pick up) பண்றாளா?” எண்று கேட்டார்.

“ரொம்ப நன்னாவே பண்ணிண்டிருக்கா, சிஸ்டர்.”

“அப்புறம், இன்னொண்ணு, துர்க்கா. இந்த ஹோம்ல ஜாதி வித்தியாச மெல்லாம் பாக்கக் கூடாது. தீண்டாமை துளிக்கூடக் கிடையாது. தீண்டாமைன்னா தெரியுமில்லையா?”

“தெரியும். பறையாளைத் தொடாம இருக்கிறதுக்குப் பேரு.”

“சரி. ஆனா, ‘பறையா’ங்கிற வார்த்தையைக் கூட நாம சொல்லக்கூடாது. மகாத்மா காந்தி அவாளுக்கு ‘ஹரிஜன்’னு பேரு வெச்சிருக்கார். தெரியுமில்லையா?”

“தெரியும், சிஸ்டர். ஹரியோட கொழந்தைகள்னு அதுக்கு அர்த்தம்.”

“பரவால்லியே! தெரிஞ்சு வெச்சிருக்கியே! ஆனா, அதுக்காக, இங்கே உள்ள அவாளை ஹரிஜன் அப்படின் னெல்லாம் சொல்லக்கூடாது. இங்கே இருக்கிறவா யாருக்குமே தங்களைப் பத்தின ஜாதி நெனைப்போ, மத்தவாளைப் பத்தின ஜாதி நெனைப்போ வரவே படாது. யாருமே மத்த யாரையும் பாத்து, ‘நீ என்ன ஜாதி?’ன்னு கேக்கவும் கூடாது. சுருக்கமாச் சொல்லணும்னா, ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ங்கிறது இங்கே இருக்கிறவா ஏத்துக்க வேண்டிய சட்டம். அதுக்கு நீயும் கட்டுப்பட்டாகணும்.”

“சரி, சிஸ்டர்.”

“அப்போ, பங்கஜம், இவளை நீ அழைச்சிண்டு போ!”

“வாம்மா!” என்ற பங்கஜம் துர்க்காவின் வலக்கையின் ஆள்காட்டி விரல் பற்றி அழைத்துப் போனாள். மிகச் சில நொடிகளில் கொஞ்சங்கொஞ்சமாய் – ஒவ்வொரு விரலாக – அவள் துர்க்காவின் முழுக் கையையும் பற்றிக் கோத்துக்கொண்டாள்.

சிஸ்டர் முத்துலட்சுமி, நடந்து சென்ற இருவரையும் பார்த்தபடி, ‘இவா ரெண்டு பேரோட ஒடம்பு வாகும் ஒரே மாதிரி இருக்கு. ஒரே ஒசரம். நடையில கூட ஒரு சாயல் தெரியறது. முக ஜாடையிலெ கூட ஒத்துமை இருக்கிற மாதிரி தெரியறது. இவா ரெண்டுபாரையும் ஒண்ணாச் சேத்துப் பாக்கற யாருக்குமே, இவா ஒண்ணு அம்மா-பொண்ணுன்னோ, இல்லேன்னா அக்கா-தங்கைன்னோ தோணும்!’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டார்.

.. .. தன் கை பற்றி அழைத்துச் சென்ற பங்கஜத்தை, “நீங்க இங்கே எத்தனை நாளா இருக்கேள், மாமி?” என்று துர்க்கா விசாரித்தாள்.

“கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா யிருக்கேம்மா.. .. என்னையும் நீ சிஸ்டர்னுதான் கூப்பிடணும்.. ..இங்கே எல்லாருமே ஒருத்தரை ஒருத்தர் சிஸ்டர்னுதான் சொல்றது. அதாவது அவாவா பேரோட சிஸ்டர்ங்கிறதையும் சேத்துச் சொல்லணும். இப்ப நீ என்னை ‘பங்கஜம் சிஸ்டர்’னு சொல்லணும்.”

“சரி.. ..”

“ஆமா? என்னை நோக்கு ஞாபகமில்லே?”

“எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு. ஆனா ஞாபகம் வரமாட்டேங்கிறது.”

“நன்னா ஞாபகப்படுத்திப் பாரு. உன் கல்யாணத்துக்குக் கூட நான் வந்திருக்கேன். ஆனா, பாவம், நீ எங்கே எங்களைக் கவனிச்சிருந்திருக்கப் போறே? உன் கல்யாணம் நிச்சியமானதும், ஒரு பத்து நாள் போல நாங்க நிறைய மாமிகள் உங்கத்துக்கு வந்து கல்யாண வேலைகள்ளாம் செஞ்சோம் – அப்பளம் இட்றது., பட்சணம் பண்றது இந்த மாதிரியான ஏகப்பட்ட வேலைகள். சிஸ்டர் முன்னால அதை யெல்லம் பத்திப் பேசிக் கெளற வேண்டாம்னுட்டுத்தான் நான் அப்ப எதுவும் பேசல்லே. ஆனா, சிஸ்டருக்குத் தெரியப்படாதுன் னெல்லாம் ஒண்ணுமில்லே. அப்புறமாச் சொல்லுவேன்.”

துர்க்கா தன் விழிகளை அகல விரித்தாள்: “ஆமா, மாமி! .. ஹி ஹி! இல்லேல்லே – பங்கஜம் சிஸ்டர்! ரொம்ப நாளாயிடுத்து இல்லியா? அதான் டக்னு நெனப்பு வரல்லே. இப்ப நீங்க சொன்னதும் ஞாபகம் வந்துடுத்து.”

“மொதல்லெ நேக்கும் ஒடனே அடையாளம் தெரிஞ்சுடல்லே. எங்கேயோ பாத்த மாதிரி மட்டுந்தான் இருந்துது. கொஞ்சங் கொஞ்சமாத்தான் ஞாபகம் வந்துது. .. தவிர, நான் உங்காத்துலே வேலை பண்ணினப்போ, நீ அடிக்கடி எங்கண்ணுல படல்லே. நாங்கல்லாம் வந்து கூட்றதுக்கு முந்தியே நீ உன் சிநேகிதிகளோட மாடிக்குப் போயிடுவே. சாப்பாடு, டி·பன், காப்பி எல்லாமே உங்களுக்காக மாடிக்குப் போயிடும். ஆனா, கல்யாணத்தன்னிக்கு நான் ஒன்னை நன்னாப் பாத்தேன். அன்னைக்குத்தான் நீ அதிகமா என் கண்ணுல பட்டேன்னு சொல்லலாம். ஊரே மெச்சும்படியா, ஒன்னோட கல்யாணந்தான் நாலு நாளும் என்னமா ஜாம் ஜாம்னு நடந்துது! .. ..ஆமா? .. .. கொழந்தைகள் ஏதானும் .. “

“இல்லே. அதனாலதான் தைரியமா உசிரை விட்டுடலாம்னு சமுத்திரத்துல எறங்கினேன். என்னோட துரதிருஷ்டம் செம்படவாள்லாம் என்னைக் காப்பாத்தித் தொலைச்சுட்டா!”

“அப்பிடி யெல்லாம் பேசப்படாது. உன்னை அவா தொலைக்கல்லே. பத்திரமா இங்கே வந்து சேர வழி பண்ணிட்டா!!”

அப்போது அந்தப் பக்கம் வந்த ஒரு பெண்மணி, “உங்க ரெண்டு பேரையும் சேந்தாப்ல பாத்தா, அம்மாவையும் பொண்ணையும் பாக்கற மாதிரி நிறைய ஜாடை இருக்குன்னு இப்பதான் சிஸ்டர் சொல்லிண்டிருந்தா!” என்று புன்னகை செய்துவிட்டு நகர்ந்தாள்.

பங்கஜம் துர்க்காவைப் பார்த்துச் சிரித்தாள்.

“இப்ப அவா சொன்னதுக்கு அப்புறம் நேக்கே நீ என்னோட ஜாடையில இருக்கிறமாதிரி தெரியறது!”

துர்க்காவும் பங்கஜத்தைக் கண் கொட்டாமல் பார்த்தாள். “ஆமா. அவா சொன்னது சரிதான். நேக்கு வயசானா நான் உங்க மாதிரிதான் மாறுவேன்னு தோண்றது!” என்று தானும் அவளுடன் சேர்ந்து சிரித்த துர்க்கா, சட்டென்று அவளது மூளை நரம்பொன்று அசைந்து கொடுக்க, “ஆமா? உங்க சொந்த ஊர் எது?” என்று பரபரப்புடன் வினவினாள். அவள் நெஞ்சுக் கூட்டுக்குள் விளைந்த படபடப்பு அவள் செவிகளுக்கே கேட்டது.

“செங்கல்பளையம்.”

“உங்க ஆத்துக்காரர் பேரு?” – துர்க்காவின் இதயத் துடிப்பின் ஒலி அதிகரித்துக்கொண்டே போயிற்று.

“மிஸ்டர் சாமிநாதன்!”

‘தாசரதி’ என்கிற பெயரை எதிர்பார்த்திருந்த துர்க்காவுக்கு அவளது பதிலைக் கேட்டதும் சப்பென்று ஆகிவிட்டது.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 26

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பங்கஜத்தின் விழிக் கூர்மையை எதிர்கொள்ள முடியாமல் ராகவன் தலையைத் தாழ்த்திக்கொண்டான்: “பங்கஜம்! உங்களை நான் தனியாப் பாக்கணும்னு சொன்னது என்னோட பிரச்னையைப் பத்திப் பேசறதுக்காக மட்டுமில்லேம்மா. அன்னிக்கு நான் பண்ணின பாவத்தோட பலனை இன்னிக்கு நான் அனுபவிக்கிறேன். தாசரதி ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லித் தன்னோட அப்பாவும் அம்மாவும் யோசனை சொன்னது பத்தி ஏங்கிட்ட சொன்னப்போ, ‘அப்படி யெல்லாம் பண்ணாதேடா. அது மகா பாவம்’ னு தான் நான் சொல்லி யிருந்திருக்கணும். தடுக்கப் பாத்திருந்திருக்கணும். அவன் என் பேச்சைக் கேட்டிருப்பானாங்கிறது வேற விஷயம். ஆனா அதுக்கு நான் தூண்டுகோல் போட்டேன். அது உங்களுக்குத் தெரியாது.”

பங்கஜம் சிரித்தபடி குறுக்கிட்டாள் :”இல்லே, தெரியும்! காப்பி எடுத்துண்டு வந்தப்ப என் காதுல நீங்க சொன்னதெல்லாம் விழுந்துது. என் பேரு அடிபடவே, நான் கதவுக்கு வெளியிலேயே நின்னுட்டேன். ‘அவளும் இதே ஆத்துல ஒரு ஓரமா யிருந்துட்டுப் போகட்டும்’ னேள்! அதுக்காக நான் உங்களுக்கு தேங்க்ஸ் தான் சொல்லணும்!”

‘ஒண்ணுக்கு ரெண்டா வெச்சிண்டு ஜமாய்!’ என்று தான் சிரித்ததும் ஞாபகத்துக்கு வர, ராகவனின் முகம் சிவந்து அவன் தலையும் தாழ்ந்த நிலையிலேயே இருந்தது. அவன் விழிகளில் நீர் படர்ந்தது.

“நீங்க வருத்தப்பட வேண்டாம். அப்ப உங்களுக்குச் சின்ன வயசு. அது மாதிரியான எண்ணம், பேச்சு, நடவடிக்கை இதெல்லாமே நாம வளந்த விதத்துல இருக்கிற தப்பு. குறைபாடு. உங்களைச் சொல்லிக் குத்தமில்லே. ‘அவளும் ஒரு ஓரமா யிருந்துட்டுப் போகட்டும்’ னு சொன்னேளே! அவர் கேட்டாரா? இல்லே தானே? அதனால நீங்க தப்பு யோசனை சொன்னதா நெனைச்சு வருத்தப்படாதங்கோ. அந்த யோசனையைக் கேக்காம அவர் என்னை வெர்ட்டியேன்னா விட்டுட்டார்? அதனால, எப்பவுமே செயல்பட்றவா மேலதான் முழுத் தப்பும்! அப்பா-அம்மா தப்பு யோசனை சொன்னா கேக்கறவாளுக்கு மதி எங்கே போச்சு? அவாவாளுக்குன்னு ஒரு மனச்சாட்சியும் சொந்த புத்தியும் இருக்கணுமா, இல்லியா?”

“இருக்கலாம். ஆனாலும், நல்லது சொல்ற ஒரு வழிகாட்டி நண்பனா நான் இருக்கல்லே. மொத்தத்துல ஒரு நல்ல மனுஷனா நான் நடந்துக்கல்லியேம்மா? அந்தப் பாவத்தோட பலன்தான் இப்ப என் பொண்ணு தனி மரமாயிட்டா. இப்ப பாருங்கோ, பொண்களை நாம எப்பிடி எல்லாம் கொடுமைப் படுத்தறோம்கிறதை மகாத்மா காந்தி தான் பேசற கூட்டங்கள்லே யெல்லாம் தவறாம எடுத்துச் சொல்றார். என்னை மாதிரியும் தாசரதி மாதிரியும் இருக்கிற புருஷ ஜென்மங்களைத் திருத்தப் பாக்கறார். ஆனா, நாங்க திருந்தற ஜாதியா! இன்னும் முன்னூறு நானூறு வருஷமானாலும் நாங்க திருந்துவோம்னு நேக்குத் தோணல்லே. .. .. .. அந்த அளவுக்கு எங்களுக்குள்ளே ஒரு திமிர் ஊறிப் போயிருக்கு. இப்ப என்னோட உதாரணத்தையே எடுத்துக்குங்கோ. நேக்குப் பொறந்த பொண்ணு கண்ணைக் கசக்கிண்டு வந்து நிக்கறச்சேதானே எங்களோட தப்புத் தெரியறது? ஒவ்வொரு ஆம்பளைக்கும் ஒரு பொண் கொழந்தையாவது பொறக்கணும். அப்பதான் `நியாயங்கள் புரியும். பொண்டாட்டின்னா ஒரு நியாயம், தான் பெத்த பொண்ணுன்னா வேற நியாயம்னுதானே நாங்க நடந்துக்கறோம்? “

பங்கஜம் சிரித்தாள்: “நியாயங்கள் புரியறதுக்கு ஒவ்வொரு ஆம்பளைக்கும் பொண் கொழந்தை பொறக்கணும்கிற அவசியமே இல்லே, மிஸ்டர் ராகவன்! இப்ப நம்ம காந்தியையே எடுத்துக்குங்கோ. அவருக்கென்ன, பொண் கொழந்தையா இருக்கு?”

ராகவன் தலை உயர்த்திப் பங்கஜத்தைப் பார்த்தான்.

“ரொம்ப சரி நீங்க சொல்றது! நியாய அநியாயங்களைப் புரிஞ்சுக்குறதுக்கு மனுஷத்தனம்தான் வேணும்! .. .. இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும். எப்பிடிச் சொல்றதுன்னே தெரியல்லே. தைரியம் வரமாட்டேங்கறது. ஆனாலும் சொல்லித்தான் ஆகணும்.. .. ..”

“எதுவானாலும் சொல்லுங்கோ, மிஸ்டர் ராகவன்! என் மனசு இப்ப விட்டேத்தியா யிருக்கு. நீங்க எது சொன்னாலும் அது என்னைப் பாதிக்காது.”

“இல்லேம்மா, பங்கஜம்! அது உங்களை ரொம்பவே பாதிக்கும். அதான் சொல்றதுக்குத் தயக்கமா யிருக்கு.”

“பரவால்லே, சொல்லுங்கோ. இந்த எண் சாண் ஒடம்புல ஏறாத அம்பில்லே. இப்ப நீங்க சொல்லப் போறதா என்னைப் பாதிக்கப் போறது?”

“.. ம்.. ம்ம்.. உங்களுக்கு ஒரு பிள்ளைக் கொழந்தை பொறந்ததில்லியா?”

பங்கஜத்தின் முகத்தில் துல்லியமான திடுக்கீடு தெரிந்தது. அவள் கண்கள் அகலமாயின. ‘உங்களுக்கு இதெல்லாம் எப்பிடித் தெரியும்?’ என்கிற கேள்வி அவள் பார்வையில் குதித்துக்கொண்டிருந்தது.

“இங்கே, பட்டணத்துல, சுப்ரமணியன்னு நேக்கு ஒரு சிநேகிதன் இருக்கான். அவனோட சிநேகிதன் சேதுமாதவன்கிறவன். அவன் மூலமாத் தனக்குத் தெரிய வந்ததை இவன் தற்செயலா ஏங்கிட்ட சொன்னான். நீங்க ஒண்ணும் தப்பா அவனைப் பத்தி நெனைக்க வேண்டாம். அவன் வம்புக்கு அலையறவனில்லே. பேச்சு வாக்கிலெ சொன்னதுதான்.”

“சேதுமாதவனை நேக்கு நன்னாத் தெரியும் அவர் வம்பு பேசக்கூடியவர் இல்லே. .. சொல்லுங்கோ.”

“எம் பொண்ணு வேற வாழாவெட்டியாத் திரும்பிட்டாளா? ஒரு நாள் தாசரதி கிட்ட, ‘பிள்ளைக் கொழந்தை பொறக்கல்லேங்கிறதுக்காகப் பங்கஜத்தைத் தள்ளி வெச்சியே, இப்ப அவ வேற ஒருத்தனோட பட்டணத்துல வாழ்ந்துண்டிருக்கா. அவளுக்கு ஒரு பிள்ளைக் கொழந்தையும் இருக்கு. அதனால கோளாறு உன் பக்கம் கூட இருக்கலாம்’னு அவனுக்கு எடுத்துச் சொன்னேன். அவன் உங்களோட விலாசம் கேட்டான். உங்களைச் சொல்லக்கூடாத வார்த்தை யெல்லாம் சொல்லித் திட்டித் தீத்தான். உங்களையும் உங்க கொழந்தையையும் கொன்னுடப் போறதாக் கத்தினான். நான் அவன்கிட்ட உங்களைப் பத்திச் சொன்னது அவன் தன்னோட தப்பை உணரணும்கிறதுக்காகவும், அது அவனை உறுத்தணும்கிறதுக்காகவும் மட்டும்தான். ஆனா, அவன் அதை எடுத்துண்டதோ வேற விதத்துல. இப்பிடி அவன் ஒரு முட்டாள்தனமான மொரடனா யிருப்பான்கிறதை நான் துளியும் எதிர்பாக்கல்லே. உங்க விலாசமெல்லாம் தெரியாதுன்னும், என் சிநேகிதன் மூலமாக் கண்டுபிடிக்க முடியும்னாலும் அதைக் கண்டுபிடிச்சுச் சொல்ல நான் தயாரா யில்லேன்னும் திட்டவட்டமாச் சொல்லிட்டேன். அவனோட எண்ணம் ரொம்ப ரொம்பத் தப்புன்னும் எவ்வளவோ எடுத்தும் சொன்னேன்.. .. .. அதுக்கு அப்புறம் நான் அவனைச் சந்திக்கவே இல்லே. .. ஆனா, ஒரு நாள் ஏதோ கல்யாணத்துக்காக மெட்ராஸ் எக்மோர்ல வந்து எறங்கினப்போ, நீங்களும் உங்களோட ஆத்துக்காரரும் கொழந்தையோட அதே ஸ்டேஷன்ல நின்னுண்டிருந்ததை அவன் பாத்திருக்கான்.. ..”

“அவர் என்னைக் கல்யாணம் பண்ணிண்டவர் இல்லே. நீங்க சொன்ன சேதுமாதவன்தான் அவர்.. .. ..அய்யோ! நேக்கு ஒடம்பெல்லாம் நடுங்கறது! .. .. அப்படின்னா, என்னோட கொழந்தையைக் கடத்திண்டு போய்க் கொன்னது அவரா?” – பங்கஜம் கணத்துள் கரைந்து அழலானாள்.

பங்கஜத்தின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியென வழிந்தது.

“அதான் நான் எடுத்த எடுப்பிலேயே சொன்னேன் – உங்களால தாங்கிக்க முடியாதுன்னு. .. என்ன செய்யறது? ஏன்தான் நான் அவன்கிட்ட உங்களுக்கு ஒரு பிள்ளைக் கொழந்தையும் இருக்குன்ற விவரத்தையெல்லாம் ஒளறித் தொலைச்சேனோ!”

பங்கஜம் கண்களைத் துடைத்துக்கொண்டாள்: “நீங்க என்ன பண்ணுவேள்? நீங்க சொன்னது ஒரு நல்ல நோக்கத்தோட. அவர் இந்த அளவுக்குப் போவார்னு நீங்க கண்டேளா என்ன?”

“ஆமாம்மா. நான் ஒண்ணு நெனைக்க, அது வேற மாதிரி முடிஞ்சுடுத்து. தாசரதி ஒரு அப்பாவிக் கொழந்தையைத் தூக்கிண்டு போய்க் கொல்ற அளவுக்குப் போவான்னு நான் கொஞ்சங்கூட எதிர்பாக்கல்லேம்மா. நெனைச்சாலே குலை நடுங்கறது. இப்பிடியும் ஒரு கிராதகனா! என்னால நம்பவே முடியல்லே. என்னை மன்னிச்சுடுங்கோ.. .. இப்ப நான் சொல்ல வந்தது என்னன்னா, அவன் உங்களையும் கண்டுபிடிச்சு.. .. ம்ம்.. ..”

“கொல்லப் போறாராமா? பகவானே! மனுஷா எவ்வளவு பொல்லாதவா! .. .. ஆனா அந்தக் குப்பையிலே குருக்கத்தி மாதிரி – நான் ஏற்கெனவே கல்யாணம் ஆனவங்கிறதைத் துளியும் சட்டை பண்ணாம – என்னை ஏத்துண்டாரே வத்தலப் பாளையம் தங்கம்மா மாமி பிள்ளை, அவாளைப் போலவும் நல்லவா இருக்கத்தான் செய்யறா! பகவான் ஒரு விதத்துல கெட்டது பண்ணினாலும் இன்னொரு விதத்துல நல்லது பண்ணி அதைச் சரிக்கட்டிட்றார்.. .. அப்படி நமக்கு வர்ற கெட்டது கூட நாம போன ஜென்மத்துல பண்ணின பாவத்தோட பலன்தானே? பகவானை எதுக்கு நோகணும்?”

“சரி, இப்ப அவர் எங்கே இருக்கார்? நீங்க ஏன் இங்க இருக்கேள்? சொல்லலாம்னா சொல்லுங்கோ. ஒரு கவலையிலதான் கேக்கறேன்.”

பங்கஜம் எல்லாவற்றையும் சுருக்கமாய்ச் சொல்லிவிட்டு, “போலீஸ்காரனைத் திருப்பி யடிச்சுக் காயப்படுத்திட்டதுனால, அதிக நாளுக்கு ஜெயில்ல போட்டுடுவான்னு சேதுமாதவன் சொன்னார். இப்ப அவரும் ஜெயில்ல இருக்கார். எந்த ஜெயில்ல ரெண்டு பேரும் இருக்கா – ஒரே ஜெயிலா, வேற வேறயான்னு கூட – நேக்குத் தெரியாது. அவர் ஜெயில்லேர்ந்து வெளியில வந்ததும் நான் இங்கே இருக்கேன்கிறதை அவருக்கு யார் சொல்லப்போறா? சேதுமாதவனை அவர் சந்திக்க வாய்க்கணுமே? சந்திச்சா தெரிஞ்சுக்கலாம்.. ..”

சட்டென்று இருவரிடையேயும் ஒரு மவுனம் விளைந்தது. ஆனால், ஒரு சில கணங்களுக்கு மேல் அதைத் தாங்க முடியாமல், ராகவன்தான் அதைக் கலைத்தான்: “பங்கஜம்! என் பொண்ணை நன்னா கவனிச்சுக்குங்கோ, அவ இங்கே பேயிங் இன்மேட்டாத்தான் (paying inmate) இருக்கப் போறா. இங்கே படிப்பு, கைத்தொழில் எல்லாமே சொல்லித் தருவாங்கிறது ஆறுதலான விஷயம். பொண்ணுகளுக்கு ரொம்ப அவசியமும் கூட. எனக்கும் சொத்து, சுகம்னு பெரிசாக் கெடையாது. இருந்த ஒரே வீட்டையும் இவ கல்யாணத்துக்காக வித்துட்டேன். கையில கொஞ்சம் பணம் வெச்சிண்டிருக்கேன். அதுவும் கரைஞ்சின்டே வருது. குந்தித் தின்னா, குன்றும் கரையுமில்லியா? என் காலத்துக்கு அப்புறம், இந்த ஹோம் (home) தான் அவளுக்குப் பாதுகாப்பு.. .. “ என்ற ராகவன் சட்டென்று குரல் தழுதழுக்கக் கண்ணீர் விட்டான்.

“அழாதங்கோ, மிஸ்டர் ராகவன்! நான் அவளைப் பாத்துக்கறேன்.. ..”

கண்களைத் துடைத்துக்கொண்ட ராகவன், “அப்ப, நான் கெளம்பட்டுமா? .. நீங்க எதுக்கும் ஜாக்கிரதையா யிருந்துக்குங்கோ.. .. வெளியிலே எங்கேயும் போகவே போகாதங்கோ, பங்கஜம்!” என்று எழுந்து நின்று கைகூப்பினான்.

“தேங்க்ஸ், மிஸ்டர் ராகவன். ஜக்கிரதையா யிருக்கேன். ஆனா நம்ம ஜாக்கிரதையையும் மீறி, விதின்னு ஒண்ணு இருக்கே? சாகிறதுக்கெல்லாம் நான் பயப்படல்லே. ஆனா, அதுக்கு முன்னாடி என்னை ஏத்துண்ட பெரிய மனுஷரை ஒரு தரமாவது சந்திக்கணும்னு ஆசை! பாக்கலாம். பகவான் என்ன நெனைச்சிண்டிருக்காரோ!”

“அவர் யாரு, என்ன, மத்த விவரமெல்லாம் சொன்னேள்னா, எந்த ஜெயில்ல இருக்கார்ங்கிறதைக் கண்டுபிடிக்க நானும் முயற்சி பண்றேன்.”

“அவர் பேரு சாமிநாதன். ஊரு வத்தலப்பாளயம்.”

“யாரு? பீ.ஏ. சாமிநாதனா!”

“ஆமா. அவரேதான். அவரை உங்களுக்குத் தெரியுமா?”

“ஓரளவு தெரியும். ஆனா தங்கம்மாங்கிறது அவனோட அம்மா பேருன்னெல்லாம் தெரியாது. நாங்க ரெண்டு பேரும் வத்தலப்பாளையம் ஹை ஸ்கூல்லதான் படிச்சோம். ஆனா பழக்கமெல்லாம் கெடையாது. ஏன்னா, நான் அவனுக்கு ரெண்டு வருஷம் சீனியர். .. அப்பவே காந்தி, காங்கிரஸ்னு பேசுவான். கதர்தான் உடுத்துவான். .. ரொம்ப சந்தோஷம்மா.. .. அப்ப நான் வரட்டுமா?”

ராகவன் மறுபடியும் கைகூப்பினான். இறுதியாகப் புறப்படுவதற்கு முன்னால், மகள் சத்தியபாமாவை அழைத்து அவளைப் பங்கஜத்தை வணங்கச் செய்தான். .. ..

‘காலம் மனிதர்களை எப்படி யெல்லாம் மாற்றுகிறது! சிலரைப் புடமிட்ட பொன்னாக்குகிறது. சிலரை மேலும் கெட்டவர்களாக்குகிறது. ராகவன் மாதிரியானவர்கள் பழுத்துக் கனிகிறார்கள். தாசரதி போன்றவர்கள் வெம்பி அழுகிப் போகிறார்கள்! . . .’

ராகவன் கிளறிவிட்டுவிட்ட ஞாபகங்களால், தண்டவாளத்தருகே சிதறுண்டு கிடந்த குழந்தை பதஞ்சலியின் குண்டு முகம் வழக்கத்தை விட இன்னும் அதிகமாய் நினைவைப் புரட்ட, பங்கஜம் கண் கலங்கினாள். நடந்தவற்றில் எதையும் அறியாமல் எங்கோ சிறையில் வாடும் சாமிநாதனைப் பற்றியும் அதிகமாய் எண்ணி அன்றிரவு முழுவதையும் அவள் உறங்காமல் கழித்தாள்.

.. .. கணவன் சிவகுருவுக்கும், அம்மா காவேரிக்கும் தெரியாமல் வள்ளியைச் சந்திக்கச் செல்லுவது துர்க்காவால் இயலவில்லை. .. எப்படியாவது அவளைச் சந்தித்துப் பேச அவாவினாலும், எப்படி என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை. பெண்கள் வெளியே போகும் வழக்கமே இல்லாத கிராமத்தில் எதற்கு என்றூ காரணம் சொல்லி வெளியே போவது! அவள் தவித்தபடி நேரத்தைக் கழிக்கலானாள். சாவு நேர்ந்த வீட்டார் கோவிலுக்குப் போக முடியாது என்பதால், அப்படி ஒரு பொய்ச் சாக்கில் வெளியே போக முடியாமல், அவள் தவியாய்த் தவிக்கலானாள். அடுத்த தடவை பட்டணத்திலிருந்து ஊருக்கு வரும்போது ஒரு வேளை அது முடியலாம் என்று அவள் நினைத்தாள். ஆனால் அதற்கு நெடுநாளாகும் என்பதால் அவளது குறுகுறுப்பு அதிகமாயிற்று.

.. .. அன்று மாலை அவளைப் பார்க்க அவள் தோழி நீலா வந்தாள். அப்போது சிவகுரு வீட்டில் இல்லை. நீலாவைப் பார்த்ததும் வத்தலப்பாளையத்துக்குப் போவதற்கான ஒரு யோசனை அவளுக்குத் தோன்றியது : “நீலா! வத்தலப் பாளையத்துக்குப் போய் ஒரு ஆளைப் பாக்கணும். ஆனா அது எங்காத்துல யாருக்கும் தெரியக்கூடாது. நீ அங்க ஏதோ அவசர வேலையாப் போகப் போறேன்னும், உன் கூட வர்றதுக்கு என்னைத் தொணைக்குக் கூப்பிட்டேன்னும் எங்கம்மா கிட்ட சொல்லப் போறேன். எதுக்காகங்கிறதை யெல்லாம் நீ கேக்கவே கூடாது. இந்த உதவியை நீ செய்வியா?”

“செய்யறேண்டி!” என்று நீலா அவளுக்கு உதவ முன்வந்தாள்.

“தேங்க்ஸ்டி, நீலா. ஆனா நாம போகப் போறது வத்தலப்பாளைய மாயிருந்தாலும், செங்கல்பாளையம்னுதான் எங்கம்மாகிட்ட சொல்லப்போறேன். சரியா?”

“சரிடி.”

செங்கல்பாளையத்துக்குச் சில தெரிந்தவர்கள் வீடுகளுக்குப் போய்வர துர்க்காவைத் தன்னோடு துணைக்கு அனுப்பி வைக்குமாறு நீலா வேண்ட, காவேரியும் அதற்குச் சம்மதித்தாள். எனினும், “உங்க ஆம்படையான் ஒண்ணும் சொல்ல மாட்டாரேடி?” என்றாள். சிவகுரு இரவு எட்டு மணிக்குத்தான் வருவதாக இருந்தான் என்று சொல்லிவிட்டு நீலாவுடன் துர்க்கா படபடத்த நெஞ்சுடன் புறப்பட்டுவிட்டாள்.

.. .. .. தன் குடிசை வாசலில் வந்து நின்ற துர்க்காவையும் இன்னோர் அய்யர் வீட்டுப் பெண்ணையும் பார்த்துவிட்டு வள்ளி வியப்புடன் எழுந்து வந்தாள். துர்க்கா இன்ன காரியமாக வந்திருந்தாள் என்று அவளுக்கு உடனே புரிந்துவிட்டது.

“வாங்கம்மா!”

“நான் ஒடனே கெளம்பணும், வள்ளி. இன்னைக்கு எங்க ஆத்துக்கு உன்னோட வந்திருந்தாளே சின்னப்பொண்ணுன்னு.. . அவ இங்கதானே இருக்கா?”

“இருக்காம்மா. கூப்பிடட்டுமா?”

“வேணாம், வள்ளி. நானே உள்ள போய் அவளோ¡ட பேசிக்கிறேன். கொஞ்சம் தனியாப் பாத்துப் பேசணும். .. .. நீலா! நீ கொஞ்சம் இங்கேயே இருடி. அஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன். தப்பா எடுத்துக்காதேடி.”

“நான் ஒண்ணும் எதுவும் நினைக்க மாட்டேன். போய்ப் பேசிட்டு வா.”

குடிசைக்குள் அப்போது சின்னப்பொண்ணு மட்டுமே இருந்ததால், துர்க்காவால் அவளுடன் தயக்கமின்றிப் பேச முடிந்தது.

“இன்னிக்கு வள்ளியோட எங்காத்துக்கு வந்து ஏதோ மோதரம் காட்டினியே, அவாளோட பொண்ணுதான் நான். அப்ப நான் பக்கத்து ரூம்ல இருந்தேன். அப்ப ‘நீ மேலே எதுவும் பேசவேண்டாம்’ னு எங்கம்மா நோக்கு ஜாடை காட்டினதை நான் கதவிடுக்கு வழியாப் பாத்தேன். இன்ன விஷயம்கிறதைச் சொன்னா நன்னாருக்கும். எங்கம்மாவையே அதைப் பத்திக் கேட்டேன். எதுவும் சொல்ல மாட்டேன்னுட்டா மொதல்லே. அப்புறம், வற்புறுத்தினாச் சொல்லிடுவான்னுதான் தோணித்து. ஆனா அது எங்கம்மாக்கு மனக்கஷ்டம் தரும்மோங்கிறதுனால, இப்ப ஓங்கிட்ட வந்திருக்கேன். ஆனா ஒண்ணு. நீ சொல்லப் போற ரகசியம் எதுவானாலும், அது நேக்குத் தெரிஞ்சுட்ட மாதிரி எங்கம்மா கிட்ட நான் காட்டிக்கவே மாட்டேன். சத்தியமா! அதனால நீ தயங்காம ஏங்கிட்ட அதைப் பத்திச் சொல்லலாம்.”

சின்னப்பொண்ணு அதன் பிறகு எல்லாவற்றையும் அவளுக்குச் சொன்னாள்.

“எல்லாத்தையும் சொன்ன நீ என்னை வெள்ளத்துல போடச் சொன்ன தாத்தாவும் பாட்டியும் எங்கப்பனும் யாருங்கிறதை இன்னும் சொல்லல்லே. “

“தெரிஞ்சு என்ன செய்யப் போறே, தாயி?”

“ஒண்ணும் செய்யப்போறதில்லே. ஆனா நான் யாருங்கிறது நேக்குத் தெரியவேண்டாமா?”

“நீ சாமி சத்தியமா அவங்களண்ட போயி எந்தத் தகராறும் பண்ணப்படாது. அதுக்கு ஒத்துக்கிட்டா சொல்லுவேன்.”

“பண்ணவே மாட்டேன், சின்னப்பொண்ணு! நான் இன்னார்ங்கிறது எங்க புக்காத்து மனுஷா யாருக்குமே தெரியக்கூடாது. தெரிஞ்சா, அதனால வேற புதுசா வம்பு வந்து சேருமோன்னோ? அதனால நான் அதைப் பத்தி மூச்சுக்கூட விடமாட்டேன். நான் யாருங்கிறது நேக்குத் தெரியணும்கிறதைத் தவிர வேற எந்த ஆசையும் நேக்கு இல்லே, சின்னப்பொண்ணு! என்னை நம்பு!”

“ .. சின்னக்கொளத்து அக்கிரகாரத்துலே, மொதத் தெருவிலே. எட்டாம் நம்பரு வீடும்மா. தாசரதின்னு அங்க இருக்காரு ஒருத்தரு. அவருதான் ஒன்னோட அப்பா. உங்கம்மா பேரு பங்கஜம். அவங்களுக்கு வரிசையாப் பொட்டப் பிள்ளைங்களாவே பொறந்திச்சுங்கிறதுக்காக, அப்பிடிப் பண்ணினாங்க. மொத ரெண்டு கொழந்தைங்களையும் கூட என்னத்தையோ குடுத்து அவங்க சாவடிச்சிருக்கணும்னு இப்ப தோணுது. மூணாவதாப் பொறந்த உன்னைய, உங்கம்மா பிள்ளைப்பேத்து மயக்கத்துல இருந்தப்ப, ஏங்கிட்ட குடுத்து ஆத்துல வீசச் சொன்னாங்க. தாயி! என்னைய மன்னிச்சுசிரும்மா. மகாலச்சுமி கணக்கா இப்ப வந்து ஏம்முன்னால நிக்கிற ஒன்னையா நான் ஆத்துல போட இருந்தேன்! .. ..” என்ற சின்னப்பொண்ணு கண் கலங்கினாள்.

துர்க்காவுக்குத் தலை சுழல்கிற உணர்ச்சி உண்டாயிற்று. சமாளித்துக்கொண்டு குடிசையை விட்டு வெளியே வந்தாள். தன்னை எதுவும் கேட்கக்கூடாது என்று அவள் சொல்லி வைத்திருந்ததற் கிணங்க, நீலா அவளிடம் ஏதும் கேட்காமல் மவுனமா யிருந்தாள். இருவரும் மிக விரைவாக வீடு திரும்பினார்கள். காவேரிக்கு ஊகமாய் எதுவும் தெரிந்துவிடலாகாது என்பதற்காகத் துர்க்கா தன் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டாள். சிவகுரு வீடு திரும்பி யிராததால், அவள் ஒரு நிம்மதிப் பெருமூச்சை உதிர்த்தாள். அவள் தன்னை அலைக்கழித்துக் கொண்டிருந்த நிம்மதிக்குறைவிலும் ஒரு நிம்மதியை அனுபவித்தவாறு சிந்தனையுடன் உள்ளே போனாள்.

காவேரி கூடத்தில் மல்லாந்து படுத்திருந்தாள். அவள் படுத்துக் “கிடந்த” நிலை இயல்பானதா யில்லை என்பது கண்டு துர்க்கா பதற்றத்துடன் அவளைத் தொட்டு அசைத்து, உலுப்பினாள். அவள் தலை தொய்ந்து சாய்ந்ததைக் கண்ணுற்றதும், “அம்மா!” என்று அந்தத் தெருவே கிடுகிடுக்குமளவுக்கான ஓலத்தை அவள் எழுப்பினாள்

.. .. .. அக்கம்பக்கத்தவர்கள் ஓடி வந்தார்கள். காவேரியின் மூச்சு நின்றிருந்ததைப் பெரியவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அழைத்து வரப்பட்ட மருத்துவரும் அதை உறுதி செய்தார்.

jothigiija@vsnl.net – தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 25

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

ஜோதிர்லதா கிரிஜா



அரையாய்ச் சாத்தியிருந்த கூடத்து அறையினுள் துர்க்கா தன் சாமான்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தது காவேரிக்குத் தெரியாது. அவள் பின்கட்டுக்குப் போயிருந்ததாக அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். இருப்பினும், தாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அவள் வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சத்தால்தான் விழிகளை மலர்த்தியும், உதடுகளுக்குக் குறுக்கே விரல் வைத்தும் எதுவும் பேசவேண்டாம் என்று அவள் சின்னக்கண்ணுவை எச்சரித்தாள். ஆனால், கதவிடுக்கின் வழியே துர்க்கா அதைக் கவனித்துவிட்டாள். அவளுள் சொல்லிமாளாத வியப்புப் பெருகியது.

‘ராத்திரி நேரம்’, ‘ஆற்றங்கரை’, ‘குழந்தையை வாங்கிக்கொண்டு போனது’, ‘அதற்கு விலை போல் மோதிரம் தந்தது’ ஆகிய தகவல்கள் ஏதோ மர்மத்தை உள்ளடக்கியவையாக அவளுக்குத் தோன்றின. ஒரு திகில் தன் தாயின் முகத்தில் வந்து உட்கார்ந்ததைக் கதவிடுக்கின் வழியே பார்த்து அவள் தெரிந்துகொண்டாள். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், ‘மேலே எதுவும் பேசாதே’ என்பது போல் காவேரி அந்தப் பெண்ணுக்குச் சாடை செய்ததுதான் அவளுக்குள் அளவிடமுடியாத ஆவலைக் கிளர்த்திவிட்டது.

‘இதற்கு என்ன அர்த்தம்? எந்தக் குழந்தை? அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் ஒரே குழந்தை என்றுதானே சொல்லி வந்திருக்கிறார்கள்? .. .. .. கண் அகற்றி, உதட்டில் விரல் வைத்து எச்சரிக்கிறாள் அம்மா என்றால், மேற்கொண்டு அவள் பேசக் கூடாது, அப்படிப் பேசினாலும் என் காதில் விழுந்துவிடக் கூடாது’ என்பதற்காகத் தானே? .. .. .. அவரோ கடைத் தெருவுக்குப் போயிருக்கிறார். வீட்டில் தற்போது இருப்பவர்கள் அம்மாவும் நானும் மட்டும்தானே? தன் மாப்பிள்ளைக்குத் தெரியக்கூடாத விஷயம் என்று மட்டும் அது இருக்க முடியாது. அது எனக்கே தெரிந்துவிடக் கூடாது அன்று அம்மா நினைக்கிறாள்! அப்படிப்பட்ட மர்மம் என்னவாக இருக்கும்? .. .. ..’ – இவ்வாறெல்லாம் அவள் எண்ணங்கள் ஓடின.

கதவிடுக்கின் வழியாக அவள் அந்தப் பெண்ணை நன்கு கவனித்து அவளது முகச்சாயலையும், தோற்றத்தையும் தன் உள்ளத்தில் பதியவைத்துக்கொண்டாள்.

இதற்குள் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்துவிட்டிருந்த வள்ளி, “இவ என்னோட அக்காதாம்மா. சின்னக்கண்ணுன்னு பேரு. சின்னக்கொளத்துல இருக்குது. அங்கே தாசரதின்னு ஒரு அய்யா வீட்டில வேலை செய்யுது. எம் மகளுக்குக் கலியாணம் நிச்சியமா யிருக்கு. .. .. சாவுக்கு வந்த எடத்துலேர்ந்து கெளம்புறப்ப, ‘போய்ட்டு வாரேன்’ னு சொல்லக்கூடாதும்பாங்க. ..” என்றவாறு சின்னக்கண்ணுவை நோக்கித் தலையசைத்தாள்.

இருவரும் கிளம்பினார்கள்.

“உம் மக கல்யாணத்துக்கு உதவி செய்யணும்னு அவர் இருந்தப்போ சொல்லிண்டே இருந்தார். இப்ப நாங்க ரொம்ப நொடிச்சுப் போய்ட்டோம். குடுக்கிறதுக்குப் பெரிசா எதுவும் இல்லே. இருந்தாலும், என்னால முடிஞ்சதைத் தறேன், வள்ளி. சந்தோஷமா வாங்கிண்டு போ!” என்ற காவேரி அடுக்களைக்குப் போய் அஞ்சறைப் பெட்டியிலிருந்து நூறு ரூபாய் எடுத்து வந்து அவளிடம் கொடுத்தாள்.

அவள் கொடுத்த பணத்தைத் தன் கண்களில் நன்றி தெரிய வாங்கிக்கொண்ட வள்ளி அடுத்த கணம் படியிறங்கி நடந்தாள். தன் தாய் அடுக்களைக்குப் போய்விட்டது தெரிந்த பின் துர்க்கா கூடத்துக்கு வந்தாள்.

பிறகு தண்ணீர் குடிக்க அடுக்களைக்குப் போனாள்.

“வள்ளி வந்திருந்தா – துக்கம் கேக்கறதுக்கோசரம்.. .. நீ எங்கே போயிருந்தே?” என்று காவேரி கேட்டதற்கு, “நான் பின் கட்டுக்குப் போயிருந்தேம்மா,” என்று பதிலிறுத்த துர்க்கா, காவேரி அறியாதபடி அவளைக் கூர்ந்து பார்த்தாள்.

காவேரியின் முகம் இருளடித்துக் கிடந்ததாய் அவளுக்குப் பட்டது. ஏதோ பழைய நினைவுகள் கிளறப் பெற்றதற்கான சிந்தனைக் கோடுகளுடன் அவள் முகம் காணப் பட்டதாய்த் துர்க்காவுக்குத் தோன்றியது.

“ஏம்மா ஒரு மாதிரி இருக்கே?”

“புதுசா ஒரு மாதிரியும் இல்லேம்மா. இனிமே என் மூஞ்சி எப்பவுமே இப்பிடித்தான் இருக்கும். பழைய களை வராதுடி, துர்க்கா!”

சின்னக்கண்ணுவுக்கும் அவளுக்கும் நடந்த உரையாடல் தன் காதில் விழுந்துவிட்டது பற்றி அம்மாவிடம் கேட்டுக் கிளறக்கூடாதென்றுதான் துர்க்கா முதலில் நினைத்திருந்தாள். தன் மகளுக்குக் கூடத் தெரியக் கூடாதென்ற காவேரியின் எண்ணத்தைக் கவுரவிக்கவும் அவள் விரும்பினாள்தான். ஆனால், அவளது இருண்ட முகத்தைப் பார்த்ததும், சட்டென்று எழுந்த ஓர் உந்துதலில் கேட்டுவிட்டாள்: “அந்தப் பொண்ணு என்னம்மா, ஏதோ ஆத்தங்கரை, இருட்டு நேரம், கொழந்தை அது இதுன்னு என்னென்னவோ சொன்னாளே, என்ன அது? நீ ஏன் ஜாடை காட்டித் தடுத்துட்டே? அப்ப நான் கூடத்து ரூம்லதான் இருந்தேன். பின்கட்டுல இருந்தேன்னு பொய் சொன்னேன். கதவிடுக்கு வழியாவும் கவனிச்சேன். அப்படி என்னம்மா ரகசியம்? எதுவானாலும் ஏங்கிட்ட சொல்லு. உன் மனசில இருக்கிற பாரம் குறையுமோன்னோ?”

காவேரி தலை உயர்த்தித் துர்க்காவைப் பார்த்தாள். அடுத்த நொடியில் அவள் விழிகள் நிறைந்துவிட்டன. அப்படியே தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து அழத் தொடங்கினாள்.

பதறிப் போன துர்க்கா, “என்னம்மா இது! எதுக்கு இப்பிடி அழறே? உன் மாப்பிள்ளை கடைக்குப் போயிருக்கார். திடீர்னு வந்து நாம பேசறதைக் கேட்டுட்டா – அது அவாளுக்குத் தெரியக்கூடாதுன்னா – வீண் வம்பு! நான் போய் முதல்ல வாசக் கதவைச் சாத்தித் தாப்பாப் போட்டுட்டு வறேன்.. .. ..” என்ற துர்க்கா எழுந்து சென்றாள்.

கதவைத் தாளிட்டுவிட்டு வந்த துர்க்கா காவேரி தரையில் விழுந்து கிடந்ததைப் பார்த்தாள். அவள் மயக்கமாகி யிருந்ததைப் புரிந்துகொண்டு முகத்தில் தண்ணீர் தெளித்து அவளைத் தன்னினைவுக்குத் துர்க்கா கொண்டுவந்ததும், “துர்க்கா! என்னன்னு சொல்றது, எப்பிடிச் சொல்றதுன்னே தெரியல்லே.. ..” என்று குழறிய பின் மறுபடியும் காவேரி அழலானாள்.

“அம்மா! நீ ஏற்கெனவே பெரிய துக்கத்துலே இருக்கே. அந்த விஷயத்தைச் சொல்றதுனால உன்னோட பாரம் கொறையுமோன்னுதான் என்னன்னு கேட்டேன். மத்தப்படி, உன்னோட ரகசியத்தைத் தெரிஞ்சுக்கணும்கிற ஆவலாதியினால இல்லே. அதைச் சொல்றதுனால உன்னோட துக்கம் ஜாஸ்திதான் ஆகும்னா நீ சொல்ல வேண்டாம்.”

”அப்படின்னு இல்லேம்மா, துர்க்கா. அதைத் தெரிஞ்சுக்கிறதுனால நோக்கு எந்த லாபமும் இல்லேங்கிறதுனாலதான் அதை இத்தனை நாளும் நாங்க – அதாவது உங்கப்பாவும் நானும் – மறைச்சு வெச்சோம். அது அப்படியே இருந்துட்டுப் போகட்டுமேம்மா? .. .. ஆனா, அதைத் தெரிஞ்சுண்டுதான் ஆகணும்னா, சொல்றேன். என்ன சொல்றே? நேக்கும் வயசாயிடுத்து. நான் இருக்கப் போறது இன்னும் கொஞ்ச நாள்.. ..”

“அப்படி யெல்லாம் பேசாதேம்மா.. ..”

“உள்ளதைத் தானே சொல்றேன்? .. .. நான் சொல்லாமயே இருந்துடலாந்தான். ஆனா, ‘இந்தம்மா எதையோ மறைச்சுட்டா – அது ஒருக்கா அவ சம்பந்தப்பட்ட அசிங்கமோ என்னமோ – அப்படின்னு நோக்கு ஒரு சந்தேகம் வந்துட்டா, அதை என்னால தாங்கிக்க முடியாதும்மா! ஆனா என் கவுரவப் பிரச்னை எதுவும் அந்த ரகசியத்துலே கெடையாதுன்னு மட்டும் என்னால சத்தியம் பண்ண முடியும். சூடம் கொளுத்தி உள்ளங்கையில வெச்சுண்டு வேணாலும் சத்தியம் பண்றேன்.. .. “

“வேணம்மா. அதைத் தெரிஞ்சுக்காட்டா என் மண்டை வெடிச்சுடும்கிறாப்ல நேக்கொண்ணும் ஆவலாதி இல்லேம்மா. அது ஏதோ அற்ப ரகசியம்னா அதை விட்டுடு. .. .. கொஞ்சமாக் காப்பி கலந்து குடுக்கறேம்மா. குடிச்சுட்டுப் படுத்துக்கோ. நான் என்னவானும் தப்பா உன்னப் பத்தி நெனைக்கிறேனோன்ற கற்பனையெல்லாம் நோக்கு வேணாம்மா.. ..” என்ற துர்க்கா காப்பி கலந்து எடுத்து வர எழுந்தாள்.

நில நிமிடங்களில் அவள் கொண்டுவந்த காப்பியைக் குடித்த காவேரி, “ஒண்ணு மட்டும் சொல்றேன், துர்க்கா! ஒரு தாயாருடைய எந்தக் கடமையிலேர்ந்தும் நான் தவறல்லே. உங்கப்பாவுக்கு மனசால கூட துரோகம் பண்ணாமதான் இருந்து வந்திருக்கேன்! அதை மட்டும் நீ நம்பினாப் போறும்!” என்றாள் குரல் உடைந்து.

“அம்மா! அதைப் பத்தி நாம இனிமே பேசவே வேண்டாம்மா. நேக்கு உம்மேல எந்த விதமான சந்தேகமும் வரவே இல்லே. விடு. அதை மறந்துடு. நானும் மறந்துட்றேன். சரியா?” என்று தாய்க்கு ஆறுதலாய்ப் பேசிவிட்டு எழுந்தாளானாலும், துர்க்காவின் உள்ளம் அமைதி யடையவில்லை. அந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் ஆவல் அவளை அந்தக் கணமே அரிக்கலாயிற்று. என்னென்னவோ கோணங்களில் யோசித்தும், என்னதான் நடந்திருக்கும் என்பதை அவளால் ஊகிக்கவோ தீர்மானிக்கவோ முடியவில்லை. எனினும் அதனைத் தான் அறிவது அம்மாவுக்கு அவமானத்தையோ, துயரத்தையோ ஏற்படுத்தக்கூடும் என்று மட்டும் அவளுக்கு நிச்சயமாய்த் தோன்றியது. அப்படியாயின், அம்மாவுக்குத் தெரியாமல் அந்த வள்ளியை எப்படியாவது தனியாய்ப் பார்த்துப் பேசி உண்மையை அறியவேண்டும் என்று அவள் முடிவு செய்துகொண்டாள். அதன் பிறகுதான் அவள் மனம் ஓரளவு சமாதான மடைந்தது. வாசற்கதவு தட்டப்பட, அவள் சிவகுருவுக்குக் கதவு திறக்க எழுந்து போனாள்.

சாப்பிட்டுவிட்டு அவன் மறுபடியும் வெளியே சென்றான். அதற்குப் பிறகு துர்க்காவும் காவேரியும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

“அம்மா!”

“சொல்லு.!”

“அவர் பட்டணத்துல பிசினெஸ் பண்றதுக்கான ஏற்பாடுகள்ளாம் தன்னோட சிநேகிதாள் மூலமாப் பண்ணியாச்சு. ஏதோ கண்ணாடித் தொழிற்சாலையாம்.”

“உங்காத்துக்காரரும் அவாளும் சேந்து கண்ணாடி தயாரிக்கப் போறாளாமா?”

“இல்லே. ஐரோப்பாவிலெ ஒரு நாடு. அதுக்கு பெல்ஜியம்னு பேராம். அங்கேர்ந்து பலவிதமான கண்ணாடிகள் தருவிச்சு வியாபாரம் பண்றதா இருக்கா. இங்கே சட்டம் மட்டும் பண்ணுவா. அப்புறம் வேணுங்கிற அளவுக்கு அறுத்துக் குடுப்பாளாம். மொகம் பாக்கற கண்ணாடி, பீரோக்களுக்கான கண்ணாடி, ஜன்னல்களுக்கான கண்ணாடி, பாட்டில்கள் ஜாடிகள் இதெல்லாம் பண்றது அந்த மாதிரி.. ..”

“என்னமோடியம்மா! சிநேகிதாள்னு இந்தக் காலத்துலே யாரையும் நம்பிடப்படாதுடியம்மா. ஜாக்கிரதையா யிருக்கச் சொல்லு உங்காத்துக்காரரை.. .. அப்புறம்?.. ..”

“உன்னையும் பட்டணத்துக்குக் கூட்டிண்டு போய்க் கூட வெச்சுக்கணும்னு நேக்கு இருக்கு. ஆனா.. .. அவர் அப்பப்போ பணம் அனுப்பினாப் போறும்கறார்ம்மா! எவ்வளவோ வாதாடிப் பாத்துட்டேன்.. .. என்னை மன்னிச்சுடும்மா! “ என்ற துர்க்கா அழத் தொடங்கினாள்.

“அசடு! அசடு! சாப்பாட்டுக் கலத்துக்கு எதிர்ல உக்காந்துண்டு எதுக்கு அழறே? அதான் பணம் அனுப்பலாம்னுட்டாரோன்னோ? அப்புறம் எதுக்குடி அழறே? சாப்பிட்றச்சே அழப்படாது.. .. ஸ்ஸ்ஸ்! கண்ணத் தொடைச்சுக்கோ!”

“நானே பிள்ளையாப் பொறந்திருந்தா கதையே வேற மாதிரி இருக்குமோன்னோ?”

“அதுக்கென்ன பண்ண முடியும், துர்க்கா? அழாதே. பணம் அனுப்பலாம்னு மாப்பிள்ளை சொன்னதே பெரிசுதான்.”

“என்னம்மா கல்யாணமும் கருமாதியும் வேண்டிக் கெடக்கு? இப்ப பாரு. என்னால எல்லாச் சொத்தையும் அப்பா விக்கும்படி ஆச்சு. உனக்குன்னு அப்பா வெச்சுட்டுப் போக ஆசைப்பட்ட வீட்டையும் எழுதி வாங்கிண்டு அதை அவர் வித்தும் ஆச்சு. “

“அதைப் பத்தி இப்ப என்னடி, துர்க்கா? சந்தோஷமாப் பட்ணத்துக்குப் போ. உங்க மாமியார் பிடுங்கல்லேர்ந்து தப்பிக்கப் போறதை நெனைச்சு நீ சந்தோஷமே பட்டுக்கலாம்.. .. மாப்பிள்ளையோட வியாபாரம் அமோகமா நடக்கட்டும். நிறையப் பணம் சேத்து வித்ததுக்கு மேலேயே வாங்கிட்டாப் போச்சு.”

“ஆ.. .. ..மா! வாங்கி நோக்குத்தான் குடுக்கப் போறாளாக்கும், உன்னோட மாப்பிள்ளை!”

“நேக்கென்னத்துக்குடி இனிமே வீடும் வாசலும்? நான் இருக்கப் போறது இன்னும் கொஞ்ச நாள்தான். உங்கப்பா போனதுக்கு அப்புறம் அரை உசிரு ஏற்கெனவே போயாச்சு.. .. ..” – காவேரி கண்ணீர் விடலானாள்.

“என்னம்மா இது? என்னை அழாதேன்னு சொல்லிட்டு நீ சோத்துக் கலத்துக்கு முன்னாடி உக்காந்துண்டு அழறே? நன்னாருக்கு, போ! நிறுத்தும்மா.”

இருவரும் கண்களைத்துடைத்துக்கொண்டு அதற்கு மேல் எதுவும் பேசாமல் ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள்.

.. .. .. ‘த மெட்றாஸ் ஸ்திரீ சேவா மண்டலி’ யின் தலைவி சிஸ்டர் முத்துலட்சுமியின் அறையில் அவருக்கு எதிரே தன் மகள் சத்தியபாமாவுடன் ராகவன் அமர்ந்துகொண்டிருந்தான்.

“யாருமே இல்லாத அநாதைகளுக்குத்தான் நாங்க இந்த ஹோம்லே சேத்துக்க ப்ரி·பெரென்ஸ் (preference) குடுக்கிறது. அதனால உங்க பொண்ணு மாதிரியானவா மாசாமாசம் பணம் குடுத்துடணும். அவாவா சக்திக்கு ஏத்தபடி நாங்க அந்தத் தொகையை நிர்ணயிப்போம். இங்க வந்து சேர்றவா யாராயிருந்தாலும் நாங்க அவாளுக்குப் படிப்பு, தொழில் கல்வி ரெண்டும் சொல்லிக் குடுக்கிறதுண்டு. தையல், எம்ப்ராய்டரி, நெசவு, காகிதக் கூடைகள் பண்றது, பொம்மைகள் பண்றது, ராட்டையில நூல் நூக்கறது இது மாதிரியான வேலைகள்.. .. எந்த ஒரு பொண்ணும் சுயமாச் சம்பாதிச்சு யாரோட தயவும் இல்லாம வாழணும்கிறது எங்களோட லட்சியம்! ஒண்ணு மாத்தி இன்னொண்ணுன்னு இங்கே வேலை செய்யறதுக்குத் தயாரா யிருக்கணும்.. .. இங்கே யாரும் சொகுசு கொண்டாட முடியாது.. .. ..”

அவர் பேசிக் கொண்டிருக்கையில் பங்கஜம் அங்கு வந்தாள். முதலில் அவள் ராகவனைக் கவனிக்கவில்லை. ஆனால் அவனது பார்வை அவள் அங்கு வந்து நின்ற கணத்திலேயே அவள் மீது பதிந்துவிட்டது. அவன் திகைத்துப் போனான்.

“இதோ, இவா கூட உங்க ஊர்ல வாக்கப்பட்டவாதான். எனக்கு அடுத்தபடியா இந்த ஹோமை நிர்வகிக்கக்கூடிய அளவுக்கு இப்ப திறமைசாலியாயிட்டா.. .. ப்ரைவேட்டா (private) பரீட்சை எழுதறதுக்கெல்லாம் கூட நாங்க ஏற்பாடு பண்றோம். இப்ப பங்கஜத்துக்கு – அதான் அவங்க பேரு – இங்கிலீஷ்ல வொர்க்கிங் நாலெட்ஜ் (working knowledge) இருக்கு! ஒவ்வொரு பரீட்சையாப் பாஸ் பண்ணிண்டு வரா!”

‘இவாளை நேக்குத் தெரியும்’ என்று சொல்லுவதா வேண்டாமா என்று ராகவன் திகைத்து முடிப்பதற்குள், “இவரை நேக்குத் தெரியும், சிஸ்டர்! .. .. சவுக்கியமா?” என்று அவனைப் பார்த்துப் பங்கஜம் புன்சிரிப்புடன் வினவினாள்.

ஓர் ஆணைப் பார்த்ததுமே தலை குனிந்து ஓடி ஒளிகிற பழைய பங்கஜமாக அவள் தற்போது இல்லை என்பதை ராகவன் புரிந்துகொண்டான் – புன்சிரிப்புடன் ‘சவுக்கியமா?’ என்று அவள் விசாரித்தது அவள் பிறந்து வளர்ந்த கிராம வழக்கத்துக்கு அதிகப்படியானதுதான் என்பதால்!

“நீநீ.. .. நீங்க எஎ.. .. எப்பிடி இஇ.. .. இருக்கேள்?”

“அதான் பாக்கறேளே?”

“நீங்க அனுமதிச்சா, அப்புறமா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”

“ஓ! பேசலாமே! அது சரி, இவ உங்க பொண்ணா?” என்று அவள் கேட்டதும் அவன் விழிகளில் நீர் திரையிட்டது. தலை யசைத்தான்.

“சரி. மத்தியானச் சாப்பட்டு இண்டர்வெல்லப்போ (interval) என்னைப் பார்க்கலாம் நீங்க – சிஸ்டர் மேடம் பெர்மிட் பண்ணினா.. ..”

“ தாராளமா!” என்று சிஸ்டர் முத்துலட்சுமி அனுமதி யளித்தார்.

“இப்ப நான் வந்த விஷயத்தை சொல்றேன், சிஸ்டர். உங்களைப் பாக்கிறதுக்காக ஒரு பொண்ணு – மெட்ராஸ்காரப் பொண்ணுதான் – வந்திருக்கா. இவர் கெளம்பிப் போனதும் அனுப்பலாமான்னு கேக்கறதுக்குத்தான் வந்தேன், சிஸ்டர்.”

“சரி, பங்கஜம்.. ..”

.. .. .. மகள் சத்தியபாமாவை அந்த இல்லத்தில் சேர்த்த பிறகு, வரவேற்புக் கூடத்தில் ராகவன் பங்கஜத்தைச் சந்தித்தான்.

“சத்தியபாமா! நீ இங்கேயே இப்பிடி உக்காந்திண்டிரு. நான் இவாளோட கொஞ்சம் பேசிட்டு வந்துட்றேன்.. ..” என்று அவன் தன் மகளிடம் சொன்னதன் குறிப்பறிந்து பங்கஜம் அந்தக் கூடத்தின் மறு ஓரத்துக்கு அவனை இட்டுச் சென்றாள்.

இருவரும் நாற்காலிகளில் அமர்ந்தார்கள். பங்கஜத்திட மிருந்து அவளது பழைய கூச்சம், மிரட்சி, தயக்கம் எல்லாம் காணாமற் போயிருந்ததை ராகவன் மனத்தில் வாங்கிக் கொண்டான். நடை, உடை மாறா விட்டாலும், பாவனை மாறி யிருந்ததைப் புரிந்துகொண்டான்.

“.. .. ..எல்லாம் கேள்விப்பட்டேன். உங்க தைரியத்தைப் பாராட்றேன். நானும் ஒரு காலத்துல பழமைவாதியாத்தான் இருந்தேன். பொண்ணுகளுக்கு எவ்வளவு அநியாயங்களை நாங்க பண்ணிண்டு வந்திண்டிருக்கோம்கிறதைப் பத்தின பிரக்ஞையே நேக்கு இல்லாமதான் இருந்துது. .. .. அந்தப் பிரக்ஞை நேக்கு எப்ப வந்துது, தெரியுமா” – இவ்வாறு கேட்டுவிட்டு ராகவன் கசப்பாய்ப் புன்னகை புரிந்தவாறு பங்கஜத்தைக் கண்களின் கலக்கத்துடன் ஏறிட்டான்.

பங்கஜம் ஒன்றும் சொல்லாமல் வியப்புடன் அவனைப் பார்த்தபடி இருந்தாள்.

அவன் தொடர்ந்தான்: “என்னோட சொந்தப் பொண்ணு வாழாவெட்டியா எங்கிட்ட வந்து சேந்ததுக்கு அப்புறந்தான் அந்தத் தப்பே நேக்குப் புரிஞ்சுது. என் பொண்ணுக்கு விவாகரத்து வாங்கித் தரணும், அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னெல்லாம் என் மனசு இப்ப துடிக்கிறது. ஆனா நம்ம தேசத்துல அதுக்கெல்லாம் வழியே இல்லே. கோர்ட்டுப் படி யேறித் தாலி கட்டினவனுக்கு எதிராக் கேஸ் போட்ட பொண்ணை யாரும் சீந்த மாட்டா! வெள்ளைக்காரன் சட்டம் போட்டாலும், நம்ம புருஷா அதையெல்லாம் ஒத்துக்கவே மாட்டா. நம்மள்ள எவன் ஒரு தரம் கல்யாணம் ஆனவளை ஏத்துக்க முன்வருவான்? அப்படியே எவனாவது வந்தாலும் அது அவளோட பணத்துக்காகத்தான் இருக்கும். இல்லேன்னா அழகுக்காக இருக்கும். அப்படியே கல்யாணம்னு பண்ணிண்டா¡லும், அவ இன்னொருத்தனோட வாழ்ந்த வாழ்க்கை பத்திக் கேட்டு அவளைக் கொடுமைப் படுத்த மாட்டான்கிற நிச்சியமும் இல்லே. இல்லியா?”

பங்கஜம் கண்ணிமைக்காது அவனைப் பார்த்தபடி இருந்தாள்.

– தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 24

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

ஜோதிர்லதா கிரிஜா


.. .. .. கழிவறையி லிருந்து திரும்பி வந்த பங்கஜத்தைக் கண்ணீருடன் எதிர்கொண்ட சேதுமாதவன் நடந்ததைச் சொன்னதும் அவள் பதறிப் போனாள். தலை சுழல்கிற மாதிரி இருந்தது. ஒரு பைத்தியக்காரியைப் போல் அங்கும் இங்கும் ஓடிக் குழந்தை பதஞ்சலியைத் தேடினாள். எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் விசாரித்தாள். ஒரு மணி நேரத்துக்கும் மேல் தேடிப் பயனற்றுப் போன பின், காவல் நிலையத்துக்குப் போய்க் குழந்தையின் அடையாளம், வயது, நிறம் , அணிந்திருந்த உடை போன்றவற்றைத் தெரிவித்து ஒரு புகாரை எழுதிக் கொடுத்தாள். அருவி போய் கொட்டியவாறே இருந்த கண்ணீரைத் துடைத்தவாறே அவன் சேதுமாதவனுடன் தாம்பரத்துக்குப் பயணமானாள்.

வண்டித் தொடர் கிளம்பிச் சிறிது தொலைவு சென்றபின், பக்கத்துத் தண்டவாளத்தருகே ஒரு சிறு கும்பல் கூடி யிருந்ததையும் துண்டிக்கப்பட்ட குழந்தை பதஞ்சலியின் தலை அதனருகே கிடந்ததையும் கண்டு, “அய்யோ! அதோ பாருங்கோ! எங்கொழந்தை!” என்று கதறியபடி சேதுமாதவனுக்குச் சேதியைச் சொன்னபின் பங்கஜம் மயக்கமானாள். .. ..

தாம்பரம் வந்தடைந்த பிறகு, சேதுமாதவன் அக்கம்பக்கத்து மனிதர்களின் உதவியோடு அவளை ஒரு குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஸ்திரீ சேவா மண்டலியை அடைந்தான்.

அந்த அமைப்பின் தலைவி ஒரு காங்கிரஸ்காரர் என்பதை அறிந்திருந்ததால், நடந்து முடிந்தவற்றில் எதையும் மறைக்காது சொன்ன பின், சேதுமாதவன், “இப்ப அவா மயக்கமாயிருக்கா. அப்படியே உங்க அசோசியேஷன் டாக்டர் கிட்ட காட்டிட்டு உங்க ஹோம்லேயும் சேத்துண்டேள்னா, நன்னாருக்கும். நான் ஒரு பிரும்மசாரியா யிருக்கிறதுனால, என்னோட இவாளைக் கூட்டிண்டு போகமுடியாது. .. .. இவாளுக்கு கார்டியன்னு யாரும் கிடையாது. அதனால, இவாளை நீங்க அநாதைன்னு குறிச்சிண்டாலும் சரி, அல்லது எம்பேரையும் விலாசத்தையும் குறிச்சிண்டாலும் சரி. “

“அநாதைன்னே போட்டுக்கறேன். எதுக்கும் உங்க விலாசத்தைக் குடுங்கோ. இன்னாரால சேர்க்கப்பட்டவாங்கிறதா மட்டும் குறிச்சுக்கறேன்,” என்று அம் மண்டலியின் தலைவி டாக்டர் முத்துலட்சுமி சொன்னார்.

“ரொம்ப தேங்க்ஸ், சிஸ்டர்! நான் எந்த நேரத்திலயும் கைது செய்யப்படலாம். அதனால, இவாளைக் கொண்டுவந்து இங்க சேத்துட்டு அப்புறம் நான் இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பாக்கல்லேன்னு – என்னால வர முடியாம போச்சுன்னா- தயவு பண்ணி நெனைச்சுடாதீங்கோ. அப்படி நான் இங்க வந்து எதுவும் விசாரிக்கல்லேன்னா, என்னைக் கைது பண்ணி ஜெயில்ல போட்டுட்டான்னு வெச்சுக்குங்கோ, ” என்று கூறிவிட்டுச் சேதுமாதவன் விடைபெற்றான்.

மயக்கம் தெளிந்ததும், பங்கஜம், “என் கொழந்தை எப்படி அவ்வளவு தூரம் தண்டவாளத்துக்குப் பக்கத்துல போச்சு? யாரு அதைத் துக்கிண்டு போனா? கொழந்தை ஒடம்புல பொட்டுத் தங்கம் கூட இருக்கல்லையே! .. .. சேதுமாதவன் சார் எங்கே? இப்ப நான் எங்கே இருக்கேன்?” என்று ஈனக்குரலில் வினவினாள்.

அவள் அதிர்ச்சியுற்றிருந்ததால், டாக்டர் அவள் உறங்குவதற்கு ஏதோ ஊசியைப் போட்டுவிட்டுப் போனார்.

.. .. .. மறுநாள் சேதுமாதவன் வந்து பார்த்த நேரத்திலும், மயக்க ஊசியின் விளைவாய்ப் பங்கஜம் நினைவற்றுத்தான் இருந்தாள். கொஞ்ச நேரம் இருந்து பார்த்த பின் அவன் புறப்பட்டுப் போனான். மறு நாளே அவன் கைது செய்யப்பட்டுவிட்டதால், அதன் பின் அவன் அங்கு வரவில்லை.

.. .. .. தாசரதி சென்னக்கு வந்ததே தன் நண்பன் ஒருவனுடைய தம்பியின் திருமணத்துக்கு வரும் சாக்கில்தான். அப்படியே, இரண்டு மூன்று நாள்கள் போல் பட்டணத்தில் சுற்றியவாறு பங்கஜம் தென்படுகிறாளா என்று பார்க்கும் ஆசை தான் அவனது வருகைக்கு முக்கியமான காரணம். ஆனால், நிலையத்தை விட்டு வெளியே போவதற்கும் முன்னாலேயே பங்கஜம் தன் குழந்தையும் கையுமாய் அவன் கண்களில் தென்பட்டுவிட்டாள்.

திருமணம் முடிந்து ஊர் திரும்பியதும், தாசரதி தன் நண்பன் ராகவனைச் சந்தித்துத் தனது பிரதாபத்தை அவனிடம் அளந்தான். பங்கஜத்தின் மேல் தப்பு இருந்ததால்தான், தன் பக்கத்திலிருந்து எம்முயற்சியும் இன்றியே அவளைக் குழந்தையுடன் காணும் வாய்ப்பைக் கடவுள் தனக்குக் கொடுத்தார் என்றும் பீற்றிகொண்டான். ரெயில் வந்துகொண்டிருந்த வேளையில் குழந்தையின் கால்களைத் தண்டவாளத்தோடு சேர்த்துப் பிணைத்துச் சாகடித்தும் விட்ட வீரச் செயலை அவன் அளந்த போது ராகவன் திடுக்கிட்டுப் போனான். பங்கஜம் சென்னையில் இருந்தது பற்றிய சேதியைத் தான் அவனிடம் கூறியிருந்திருக்கக் கூடாது என்றெண்ணி அவன் பெரிதும் வேதனப் பட்டான். தன்னைத் தானே நொந்துகொண்டான்.

.. .. .. யாருக்கு என்ன துன்பம் வந்தாலும் சரி, இன்பம் வந்தாலும் சரி, அவற்றால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து நின்று போவதோ அல்லது விரைந்து ஓடுவதோ தனக்கு அழகன்று என்பது போல் காலம் தனது சுழற்சியைத் தாளம் தப்பாமல் ஒரே கதியில் நிகழ்த்திக்கொண்டிருந்தது.

பங்கஜம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிர்ச்சியிலிருந்து மீண்டு தனது இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள்.

இடைவிடாது ஏதேனும் வேலையில் ஆழ்ந்து ஓடியாடிக்கொண்டிருப்பதன் வாயிலாகத்தான் தன் கவலைகளைத் தன்னால் ஓரளவுக்கேனும் மறக்க இயலும் என்பதைத் தன் அனுபவத்தின் மூலம் மிக விரைவிலேயே புரிந்துகொண்ட பங்கஜம் தான் தங்கியிருந்த அடைக்கல இல்லம் ஸ்திரீ சேவா மண்டலிக்காகத் தன்னாலான எல்லா உழைப்புகளையும் நல்கினாள். அவளது சுறுசுறுப்பையும், நன்றி உணர்ச்சியையும், சலியாத உழைப்பையும் கண்டு தலைவி முத்துலட்சுமி அவளிடம் தனி அன்பு பாராட்டத் தொடங்கினார்.

.. .. .. இதற்கிடையே, வத்தலப்பாளையத்தில் தேவராஜன் காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் நடந்த பாகப் பிரிவினையில் பிள்ளைகள் மூவருக்கும் தலைக்கு இரண்டிரண்டு வீடுகள் கிடைத்தன. மழை பெய்யாது இயற்கை தொடர்ந்து சதி செய்ததில், நிலங்கள் போதுமான மகசூலின்றிச் சாவியாகிப் போனதால், வேறு சில சொத்துகளை அவர் விற்றுவிட நேர்ந்தது. அவருடைய மூத்த மகனுக்கு ஏதோ புரியாத பெரிய நோய் வந்த வகையில், மதுரைக்கு அவனைக் கூட்டிச்சென்று மருத்துவம் பார்த்ததில் அவர் நிறையவே செலவு செய்யும்படி ஆயிற்று. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால், அவர் அனுபவித்து ஆண்டு கொண்டிருந்த நிலங்களின் பெரும் பகுதி தங்களுக்குச் சொந்தமானவை என்றும், அவருடைய தகப்பனார் செய்த மோசடியால் அவை தங்கள் கையை விட்டுப் போயின என்றும் வழக்குப் போட்டிருந்தவர்களின் பக்கம் வெற்றியாகி, நிலங்களில் பெரும்பகுதிகள் பறிபோயின. இவற்றால், தேவராஜனின் குடும்பம் பெரும் பணக்காரக் குடும்பம் என்னும் அந்தஸ்திலிருந்து பெரிதும் கீழே இறங்கிவிட்டது.

அதிலும், பாகப் பிரிவினைக்குப் பின்னர், மூன்று பிள்ளைகளின் சொத்துகளைத் தனித் தனியாக மதிப்பிடுகையில், அவர்களைக் காட்டிலும் அதிகப் பணம் படைத்தவர்கள் சிலர் அவ்வூரில் இருப்பதாக ஆகியது!

தேவராஜன் உயிரோ டிருந்த வரையில், அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வத்தலப்பாளையத்தில் இருந்தபடி விவசாயத்தைக் கவனித்துக்கொண்டிருந்த சிவகுரு இப்போது தனது வணிக ஆசையைச் செயல்படுத்துவதில் முனைப்பாக ஈடுபட்டான். எனவே துர்க்காவை அழைத்துக்கொண்டு சென்னைப் பட்டணத்துக்குப் புறப்பட அவன் ஆயத்தமானான். அவன் பெயருக்குத் துர்க்காவின் தகப்பனார் எழுதிக் கொடுத்திருந்த வீட்டையும் விற்றான். பார்த்துப் பார்த்துத் தம் தந்தை கட்டிய பெரிய வீட்டைத் தம் மாப்பிள்ளை விற்றுவிட்டதில் பத்மநாபனுக்குச் சொல்லி மாளாத வருத்தம்தான். அவரும் காவேரியும் சிலுக்குப்பட்டியிலேயே ஒரு சிறிய வாடகை வீட்டில் குடிபுக நேர்ந்தது. வீடு விற்கப்பட்ட அதிர்ச்சியிலும், தம் மனைவிக்கு எதுவுமே மிஞ்சவில்லை என்கிற ஏமாற்றத்தாலும் உள்ளம் உடைந்து போன பத்மநாபன் வாடகை வீட்டில் குடிபுகுந்த பின் ஒரே மாதத்துள் மாரடைப்பால் காலமானார்.

தன் அம்மா யாருமற்ற அநாதையாகி விட்டதைத் தாங்க முடியாத துர்க்கா அவளையும் பட்டணத்துக்குத் தங்களுடன் அழைத்துப் போகலாம் என்று வெளியிட்ட விருப்பத்துக்குச் சிவகுரு செவி சாய்க்கவில்லை. காவேரி கிராமத்திலேயே இருந்து கொள்ளட்டு மென்றும், மாதாமாதம் அவளுக்குத் தான் பணம் அனுப்புவதாகவும் சிவகுரு சொல்லிவிட்டான். கற்கோட்டை போலிருந்த பெரிய வீட்டை எழுதி வாங்கிக்கொண்டதோடு அதை விற்றும்விட்ட அவன் கண்டிப்பும் கறாருமாய் அவ்வாறு சொல்லிவிட்டது துர்க்காவுக்குத் தாங்க முடியாத ஆத்திரத்தை உண்டாக்கிற்று. ஆனால், அம்மா காவேரியைக் கட்டிக்கொண்டு அழுவது தவிர அவள் செய்யக்கூடியது வேறொன்றும் இல்லை!

கொஞ்ச நாள் கழிந்த பிறகு, சிவகுரு அவளை அழைத்துக்கொண்டு பட்டணத்துக்குப் புறப்படுவதற்கு முன்னால், கற்பனைக் கதைகளில் வருவது போன்ற அந்த விபரீதம் நிகழ்ந்தது.. .. ..

.. .. .. பங்கஜத்தின் குழந்தையைக் கொன்றுவிட்டு ஊருக்குத் திரும்பியிருந்த

தாசரதியின் மனம் ஒரு குரூரமான மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது. ‘சண்டாளி! தாலி கட்டின புருஷன் உயிருடன் இருக்கும் போதே இன்னொருவனுக்குத் தன்னைக் கொடுத்துப் பிள்ளையும் பெற்றுகொண்டவள்! இவளைப் போன்ற பெண்களால்தான் ஊரில் மழையே இல்லை!.. .. .. குழந்தையைப் பறிகொடுத்த வேதனை மட்டுமே அவளுக்குப் போதாது. அதைக் கொன்றவன் நான்தான் என்பது அவளுக்குத் தெரிந்தாகவேண்டும். .. .. தெரிந்தாலும், அவளால் என்னை என்ன செய்யமுடியும்? .. .. ஆனால், அவளது இருப்பிடம் தெரிந்தால்தானே அதை அவளுக்குத் தெரிவிக்க முடியும்? எனினும் விலாசம் தெரியவந்தாலும் கூட, அவளுக்குக் கடிதமெல்லாம் எழுதக் கூடாது. எழுதினால், மாட்டிக்கொள்ள நேரும். வாய் மொழியாகவோ, அல்லது வேறு வழியிலோதான் அவளுக்கு அதைத் தெரிவிக்கவேண்டும். .. .. நடத்தை கெட்ட தேவடியாள்! அவளுக்கு வேண்டும் நன்றாய்! பகவானே அவளை அப்படித் தண்டிக்க எண்ணி யிருக்கிறார்! இல்லாவிட்டால், எக்மோரில் கால் வைத்ததுமே அவள் என் கண்ணில் பட்டிருப்பாளா என்ன!’

அவள் தன் ‘கணவனுடன்’ எக்மோர் ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்ததை நினைத்த போது, ‘எங்கே போவதற்காக அவர்கள் அங்கு வந்திருப்பார்கள்? அவர்கள் போன இடத்தையும், விலாசத்தையும் எப்படிக் கண்டுபிடிப்பது? .. ..’ என்னும் கேள்விகள் அவனை அலைக்கழிக்கலாயின.

.. .. .. தனது “சாதனை” பற்றித் தாசரதி அடித்துக்கொண்ட பெருமை ராகவனை அயர்த்தி யிருந்தது. பங்கஜம் இருக்கும்போதே இன்னொருத்தியை மணந்து “ஜாலி”” யாக இருக்குமாறு அவனுக்கு யோசனை சொன்னவனேயானாலும், இன்று அவனுடைய மகள் “வாழாமல்” நின்ற நிலை அவன் எண்ணங்களைச் செம்மைப்படுத்தி யிருந்தது. ‘இன்று குழந்தையைக் கொல்லத் துணிந்தவன் நாளை பங்கஜத்தையே கொன்றாலும் கொல்லுவான். எனவே, பங்கஜத்தை எப்படியாவது கண்டுபிடித்து அவளை எச்சரித்தாக வேண்டும்’ என்று தீர்மானித்த அவன் தன் பட்டணத்து நண்பனுக்குக் கடிதம் எழுதினான். பேச்சுவாக்கில் அவன்தான் பங்கஜம் பற்றி ராகவனுக்குச் சொன்னவன்.

சேதுமாதவன் என்று தனக்கு ஒரு நண்பன் இருப்பதாகவும் அவன் தான் பங்கஜத்தைப் பற்றித் தனக்குச் சொன்னதாகவும் சுப்பிரமணியம் எனும் அந்த நண்பன் அவனுக்குச் சொல்லி யிருந்தான். பங்கஜத்தின் சொந்த ஊரின் பெயர், அவள் கணவனால் தள்ளிவைக்கப்பட்டவள் ஆகிய விவரங்களுடன், அவளை மணந்துகொண்டிருக்கும் தற்போதைய கணவன் சாமிநாதன் வத்தலப்பாளையத்தைச் சேர்ந்தவன் எனும் விவரத்தையும் அவன் சொன்னதால்தான் அவள் தாசரதியின் மனைவி பங்கஜம்தான் என்பதை ராகவனால் ஊகிக்க முடிந்திருந்தது. எனவே, அவன் மூலம் அவளது தற்போதைய இருப்பிடம் தெரிந்தால் அவன் உதவியாலோ – அல்லது அந்தச் சேதுமாதவன் உதவியாலோ – அவளை எச்சரித்து வைக்கத் தோதா யிருக்குமே என்று அவன் நினைத்தான்.

அவனுக்கு மனைவி இல்லை. எனவே, தனக்குப் பிறகு தன் மகளுக்கு யார் துணையாக இருந்து பாதுகாப்புக் கொடுப்பார்கள் என்கிற கவலை அவனை அரிக்கத் தொடங்கி யிருந்தது.

சென்னையில், அபலைப் பெண்களுக்காக ‘சிஸ்டர்’ முத்துலட்சுமி என்பவரால் நடத்தப்பட்டு வந்த அடைக்கல அமைப்பைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்தான். அதைப் பற்றிய விவரங்களையும் அவன் விசாரித்தறிய விரும்பினான். அதைப் பற்றி விசாரித்துத் தான் எழுதும் கடிதத்தில் நாசூக்காகப் பங்கஜம் பற்றியும் விசாரித்துத் தெரிந்துகொள்ள அவன் முடிவுசெய்தான்.

மறு வாரமே அந்த நண்பனிடமிருந்து பதில் வந்துவிட்டது. பணக்காரக் குடும்பத்துப் பெண்ணா யிருப்பினும், ஆதரவற்றவளா யிருந்தால் சேர்த்துக் கொள்ளுவார்க ளென்றும், ஆனால் பணம் கட்ட வேண்டியது வருமென்றும், அவரவர் வசதிக்கேற்பக் கட்டணத் தொகை இருக்குமென்றும் , யாருமற்ற அநாதைகளாக இருப்பின், எந்த நிபந்தனையுமின்றி – ஒரு பைசாக் கட்டணம் கூட இல்லாமல்- சேர்த்துக்கொண்டு பராமரிப்பார்கள் என்றும் அவன் தன் கடிதத்தில் ஸ்திரீ சேவா மண்டலி பற்றி எழுதி யிருந்தான். பங்கஜம் எனும் அந்தப் பெண் தன் குடியிருப்பைக் காலி செய்துவிட்டு வேறு எங்கோ சென்று விட்டதாகவும், நண்பன் சேதுமாதவனை வெள்ளைக்காரர்களுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்காகப் போலீசில் பிடித்துக்கொண்டு போய்விட்டதால் அவளைப் பற்றித் தெரிவிக்கக்கூடியவர்கள் வேறு யாருமில்லை என்றும் அவன் தெரிவித்திருந்தான்.

சிஸ்டர் முத்துலட்சுமிக்கு எழுதிக்கேட்டு, அவரிடமிருந்து பதில் வந்ததும் ராகவன் தன் மகள் சத்தியபாமாவை அழைத்துக்கொண்டு சென்னைப் பட்டணத்துக்குப் பயணமானான்.

.. .. .. ஊரிலிருந்து வந்திருந்த சின்னக்கண்ணுவை உடனழைத்துக்கொண்டு வள்ளி தன் “மைத்துனர்” பத்மநாபனின் மரணத்துக்குத் துக்கம் விசாரிப்பதற்காக அன்று செங்கல் பாளையத்துக்குப் புறப்பட்டாள். ‘துக்கம் கேக்குறதுக்குப் போறப்ப ஏங்கூட ஒரு தொணை யிருந்தா நல்லாருக்கும், சின்னக்கண்ணு! நீயும் ஏங்கூட வா,” என்று வள்ளி அவளையும் கூட்டிக்கொண்டாள்.

துர்க்காவுக்குத் திருமணம் ஆனதன் பிறகு வள்ளி பத்மநாபனின் வீட்டுக்குப் போவதைக் குறைத்துக் கொண்டிருந்தாள். அவளுடன் தாங்கள் இன்னமும் போக்குவரத்து வைத்துக்கொண்டிருப்பதாய்த் தெரிந்தால், சம்பந்தி வீட்டார் அதை ஆட்சேபிப்பதோடு, அதைச் சாக்கிட்டுத் தொல்லையும் தருவார்கள் என்று பத்மநாபனும் காவேரியும் அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியிருந்ததால், அவள் இருட்டிய பிறகே எப்போதேனும் சென்று கைச் செலவுக்குப் பணம் பெறுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தாள்.

பத்மநாபன் காலமாகிவிட்ட செய்தி யார் வாயிலாகவோதான் அவளுக்குத் தெரிய வந்திருந்தது. சேதி தெரிந்ததும் அவள் புறப்பட்டுவிட்டாள். அவர்கள் வீட்டிலிருந்து இனித் தனக்குப் பண உதவி ஏதும் கிடைக்காது என்று அவளுக்குத் தோன்றியது. துர்க்காவுக்குக் கலியாணம் ஆன பிற்பாடு அவர்கள் அவளுக்குக் கொடுத்துவந்த தொகையைக் குறைத்து விட்டார்கள். சம்பந்திமார்கள் பணம்பிடுங்கிகளா யிருந்ததால், வள்ளியோடு தன் அண்ணா வைத்திருந்த தொடர்பைச் சாக்கிட்டு வேறு எக்கச்சக்கமாய்ப் பணம் வாங்கிக்கொண்டு விட்டதாகவும், எல்லாவற்றையும் விற்க வேண்டிய நிலைக்குத் தாம் ஆளாகி விட்டிருந்ததாகவும் பத்மநாபன் ஏற்கெனவே அவளுக்குச் சொல்லி யிருந்தார்.

வள்ளியின் மகளுக்குத் திருமணம் நிச்சயமாகி யிருந்தது. அதற்காகத்தான் சின்னக்கண்ணு வந்திருந்தாள். திருமணம் இன்னும் மிகச் சில நாளில் நடப்பதற் கிருந்தது. அந்த இடைவெளியில் வள்ளியுடன் தங்கித் திருமணம் முடிகிற வரையில் அவளுக்கு ஒத்தாசையா யிருக்கும் பொருட்டே அவள் வந்திருந்தாள்.

பத்மநாபன் வீட்டுக்குப் போகிற வழியில் ஒரு நகைக் கடை இருந்தது. அதைப் பார்த்ததும், “வள்ளி! அந்த நகைக்கடையில என்னோட மோதிரத்துக்குப் பாலீஸ் போட்டுக்கிறலாம், வாரியா?” என்று சின்னக்கண்ணு சொல்ல, வள்ளியும் அவளும் அந்நகைக் கடைக்குள் போனார்கள்.

வேலை முடிந்ததும் பத்மநாபனின் வீட்டுக்குப் போனார்கள்.

.. .. .. . “அய்யோ! சாமி! போய்ட்டீகளா?” என்று அழத் தொடங்கிய வள்ளி அந்த வீட்டுக் கூடத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். சின்னக்கண்ணு அவளுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள். வள்ளியின் குரல் கேட்டு அடுக்களையிலிருந்து கூடத்துக்கு வந்த காவேரியைக் கண்டதும், சின்னக்கண்ணு வியப்பின் விளிம்புக்கே போனாள்.

“அம்மா! அன்னைக்கு ராவுல ஆத்தங்கரையில வந்து கொளந்தையை வாங்கிட்டுப் போனீங்களே, நெனப்பு இருக்கா?” என்று சின்னக்கண்ணு தன் வியப்பைக் கணமும் தாமதிக்காமல் இயல்பாய் ஓங்கிவிட்ட குரலில் வெளிப்படுத்தினாள்.

அப்போதுதான் சின்னக்கண்ணுவைச் சரியாய்க் கவனித்த காவேரிக்குப் படபடவென்று வந்தது. எச்சில் விழுங்கினாள். வாயில் விரல் வைத்துக் கண்களை மலர்த்தி, “மேலே எதுவும் பேசாதே,” என்று காவேரி சின்னக்கண்ணுவை எச்சரித்தாள்.

வள்ளி அழுவதை நிறுத்தி யிருந்தாள். அவளுக்குப் புரிந்துவிட்டது – அவர்களுடைய மகளாக வளர்ந்து திருமணமும் செய்விக்கப்பட்ட துர்க்காதான் அந்தக் குழந்தை என்பது!

“இத பாருங்கம்மா! அன்னைக்கி ராவுல நீங்க குடுத்த மோதிரம். இப்பதான் பாலீஸ் போட்டேன். வள்ளியோட மகளுக்குக் கலியாணம் நிச்சியமா யிருக்கு. அதுக்குக் குடுக்கிறதுக்குத்தான் எடுத்தாந்தேன். .. ..” என்று மிக மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, மடித் தலைப்பில் முடிந்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து அவளிடம் சின்னக்கண்ணு நீட்டினாள். அதை வாங்கிப் பார்த்த காவேரி “கே.பி.” (K.P.) எனும் ஆங்கில எழுத்துகள் அதில் மின்னியதைப் பார்த்துவிட்டு முகம் வெளிறியவளாய் அதை அவளிடம் திருப்பிக் கொடுத்தாள்.

கூடத்து அறைக்கதவு ஒருக்களித்துச் சாத்தப் பட்டிருந்தாலும், அதனுள்ளிருந்த துர்க்கா கூடத்தில் நடந்ததை யெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 23

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பத்மநாபன் கேட்ட கேள்வியில் தொனித்த கிண்டலைப் புரிந்துகொள்ளாத தேவராஜன், “என்ன சொல்றேள், பத்மநாபன்?” என்றார் விழிகள் விரிய.

“தயவு பண்ணி நான் பேசப்போறதை நீங்க தப்பா எடுத்துக்கப்படாது.”

“இல்லே. சொல்லுங்கோ.”

“பொண்களோட கல்யாண வயசைக் கொறைஞ்ச பட்சம் பதினெட்டுன்னாவது ஆக்கணும்னு காந்தி சொல்லிண்டிருக்காரோன்னோ? அதை நீங்க ஒங்க மாட்டும்பொண்ணு விஷயத்துலே ரொம்பவே சரியா அனுசரிக்கிறேள் போலேருக்கு!”

“என்ன சொல்றேள் நீங்க?” என்று ஒன்றும் புரியாதவர் போன்று அவர் கேட்டாலும், அவரது முகம் சிறுத்து விட்டதிலிருந்து அவர் விஷயத்தைப் புரிந்துகொண்டே கேட்டது பத்மநாபனுக்குப் புரிந்துபோயிற்று.

“நீங்கல்லாம் பெரிய மனுஷா. நான் ஒரு சாமானியன். இவன் வந்து இப்பிடிப் பேசறானேன்னு நீங்க கோவிச்சுக்கக்கூடாது. ஆத்துல இருக்கிற படிக்காத பொம்மனாட்டிகள் கொஞ்சம் முன்ன பின்ன அல்பத்தனமா நடந்துண்டாலும், படிச்ச புருஷா, நாம தான் அவாளுக்கு நியாயத்தை எடுத்துச் சொல்லணும். அதை விட்டுட்டு நாமளும் கண்டுங்காணாதவா மாதிரி யாருக்கு வந்த விருந்தோன்னு பட்டுக்காம இருக்கிறது நியாயமா, சார்? நீங்களே சொல்லுங்கோ. பொம்மனாட்டிகள் சுபாவமாப் பொறாமை பிடிச்சவா. தான் பெத்த பிள்ளையை எவளோ ஒருத்தி புதுசா வந்து உக்காந்துண்டு சொந்தங் கொண்டாட்றாளேன்னு அவாளுக்கு ஒரு வயித்தெரிச்சல் வந்துட்றது. அதே மாதிரிதான் அவாளும் இன்னொருத்தியோட பிள்ளையை அபகரிச்சவாங்கிறதை படிச்சவா – நாம – எடுத்துச் சொல்ல வேண்டாமா?”

பத்மநாபன் தம்முள் பொங்கிய சினத்தை அடக்கிக்கொண்டு – ஆனால் அழுத்தந்திருத்தமான தோரணையுடன் துளியும் தயக்கமில்லாது – பேசியது தேவராஜனின் வாயை அடைத்துவிட்டது. ‘என்ன, ஏது’ என்று நடிப்பாய்க் கேட்பதற்கும் அவரால் முடியவில்லை. அப்படி அவர் கேட்டாலும், அது வெறும் நடிப்பு என்பதைச் சுட்டிக்காட்டும் வண்ணமான இன்னுமொரு கேலிச் சிரிப்பு அவர் முகத்தில் தவழும் என்பதால் அவர் விஷயத்தைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாய்த் தலைகுனிந்தார்.

பெரும் பணமும் செல்வாக்கும் உள்ள தம்மைத் தம் சம்பந்தி – அதிலும் பெண்ணைக் கொடுத்திருப்பவன் – அவ்வாறு கேட்டது தம்மைச் சிறுமைப்படுத்தும் விஷயமாய்த் தோன்றினாலும், காந்தியின் பெயரை அவர் சொன்னது அவரை நாவிழக்கச் செய்துவிட்டது.

தலையை உயர்த்தாமலே, “துர்க்கா உங்ககிட்ட சொன்னாளா?” என்றார்.

“அவளா எங்கே, சார், சொன்னா? பாவம், கொழந்தை அவ! என் பொண்டாட்டி அவளைத் தூண்டித்துருவி இல்லாத பொல்லாத கேள்வியெல்லாம் கேட்டதுக்கு அப்புறந்தானே அவ எல்லாத்தையும் சொன்னா? கொஞ்சம் பாத்துக்குங்கோ, சம்பந்தி சார். நீங்களும் ரெண்டு பொண்ணைப் பெத்த்¢ருக்கேள். பொண்ணைப் பெத்தவா குடும்பத்தோடதான் சம்பந்தம் வெச்சுக்கணும்கிறதுக்காகவும் நாங்க உங்காத்துல எங்க பொண்ணைக் குடுத்தோம்! பொண்ணைப் பெத்தவாளுக்குத்தானே பொண்களோட அருமை தெரியும்? அதனாலதான்! சாந்தி முகூர்த்தம்கிற கொண்டாட்டத்தை வெளிப்படையா உங்காத்துல தடுக்கலையே தவிர, அன்னைக்கு எதுவும் நடந்துடக் கூடாதுன்னு உங்க பிள்ளைக்குக் கண்டிப்பாச் சொல்லி வெச்சுட்டேள் போலேருக்கு! அது பத்தி நாங்க கேட்டா, அப்புறம் உங்க ஆத்துக்காரி எங்க பொண்ணைப் படுத்தினா என்ன பண்றதுன்னு பயம் எங்களுக்கு. அதான் இத்தனை நாளும் வாயை மூடிண்டிருந்தோம். அருமையும் பெருமையுமா வளந்தவ துர்க்கா. எளைச்சுப் போயிட்டா. ஆத்துல வேலையும் ஜாஸ்தி போலேருக்கு. கொஞ்சம் உங்க பொண்ணாட்டமா நெனைச்சுக்குங்கோ சார். நீங்க நன்னாருப்பேள்!. ..” என்று தழுதழுத்த பத்மநாபன் தேவராஜனின் கைகளைப் பற்றித் தம் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

“நான் பேசினது எதுவும் உங்க ஆத்துக்காரிக்குத் தெரியாம இருக்கிறது நல்லது. நீங்களாவே பாத்து ஏதாவது பண்ணுங்கோ. உங்க பிள்ளையும்தானே இதுல சம்பந்தப்பட்டிருக்கார்? கல்யாணம் பண்ணியும் பிரும்மசாரியா உங்க பிள்ளையும் வாழணுமா? நாமெல்லாம் அந்த வயசைத் தாண்டி வந்தவாதானே?”

“சரி, சரி. கண்ணைத் துடைச்சுக்கும். யாராவது வந்துடப் போறா. இனிமே நான் கவனிச்சுக்கறேன். கண்டிப்பா நானே அவ கிட்ட பேசறேன். .. .. மோர் குடிக்கிறேளா?”

“இல்லே, வேண்டாம். .. .. துர்க்காவுக்கோ மாப்பிள்ளைக்கோகூட நான் பேசினது தெரியவேண்டாம்.”

தந்தையின் குரல் கேட்டு, அடுக்களையிலிருந்து அங்கு வந்த துர்க்கா, “வாங்கோப்பா. இப்பதான் வந்தேளா?” என்றாள்.

“ஆமாம்மா. இந்தா. இந்தப் பழத்தையெல்லாம் உள்ள கொண்டுபோய் உங்க மாமியார்கிட்ட குடு.”

“அவா வெளியிலே போயிருக்காப்பா. வந்ததும் குடுக்கறேன். “

“அம்மா, துர்க்கா! உங்கப்பாவுக்கு மோர் கொண்டுவந்து குடும்மா.”

“சரி, மாமா.”

அதன் பின்னர் மறுப்பேதும் சொல்லாது, துர்க்கா கொண்டுவந்து கொடுத்த மோரைக் குடித்துவிட்டு அவர் புறப்பட்டார்.

.. .. .. அன்றிரவு பார்வதியைத் தேவராஜன் மொட்டை மாடிக்கு அழைத்துக்கொண்டு போய் அவளுடன் உட்கார்ந்து நிறையப் பேசினார். ரொம்பவும் எடுத்துச் சொன்னார்:

“இது அநியாயம்டி, பார்வதி! எங்கம்மாவும் உன்னைப் படுத்தியிருக்காதான். நான் இல்லேங்கல்லே. ஆனா உன்னாட்டமாவா பண்ணினா? அந்த அளவுக்கா போனா? நோக்குப் பதினஞ்சு வயசிலேயே கொழந்தை பொறந்தாச்சு. அதை நெனைச்சுப் பாரு, பார்வதி! சின்னஞ்சிறிசுகளைப் பிரிச்சு வைக்கிறது மகா பாவம்டி, பார்வதி! வேண்டாம். இது மாதிரியான பாவாங்கள்ளாம் நம்மைப் பல ஜென்மங்களுக்கும் தொடரும் – நம்ம நெழலாட்டமா.”

பார்வதி சில கணங்களுக்குப் பதில் சொல்லாதிருந்தாள். பிறகு, “சரி. ஆனா ஒண்ணு. அவாளுக்குக் கோட்டையாட்டமா ஒரு வீடு இருக்கோன்னோ? அதை நம்ம சிவகுரு பேர்ல எழுதிவைக்கச் சொல்லுங்கோ!” என்றாள்.

“அது அவாளோட பரம்பரைச் சொத்துன்னு நெனைக்கறேன், பார்வதி. அப்படியெல்லாம் எழுதிவைக்க முடியாது.”

“எல்லாம் நான் விசாரிச்சாச்சு. அதை விக்கற பாத்தியதை கூட அவருக்கு இருக்காம். அதனால உயில் எழுதவும் முடியும். எதுக்கும் கேளுங்கோ.”

“.. .. கேக்கறேன். ஆனா அதுக்காக நீ சிறிசுகளைப் பிரிச்சு வைக்காதே. அதையும் இதையும் சம்பந்தப்படுத்தாதே. வீட்டை எழுதி வாங்கறதைப் பத்தி நான் அப்புறம் சாவகாசமா அவர் கிட்ட பேசறேன்.”

“சரி. .. .. ..”

அன்றிரவு, “துர்க்கா! நீ இன்னையிலேர்ந்து மாடி ரூமுக்குப் போய்ப் படுத்துக்கோ. ஆனா, காலங்கார்த்தால அஞ்சு மணிக்கெல்லாம் டாண்ணு முழிச்சிண்டு கீழே எறங்கி வந்துடணும்! ராத்திரி பதினொரு மணிக்குத்தான் நீ மாடிக்குப் போணும். கீழே எல்லாரும் தூங்கினதுக்கு அப்புறமா! என்ன, புரிஞ்சுதா?” என்ற பார்வதி இப்படி இரண்டு நிபந்தனைகளையும் சேர்த்தாள்.

ஒரு வாரம் கழித்து, மனைவிக்கு வாக்களித்தபடி, தேவராஜன் பத்மநாபனைத் தம் வீட்டுக்கு வரவழைத்து வீட்டைச் சிவகுருவுக்கு அவர் எழுதித்தர வேண்டியது பற்றிப் பேசினார். சுற்றி வளைக்காமல் – துளியும் வெட்கமோ, உறுத்தலோ இல்லாமல் – அவர் நேரடியாகவே அப்படி உடனே பேச்செடுத்தது கண்டு பத்மநாபன் வாயடைத்துப் போய்விட்டார்.

“எதுக்கும் என் சகதர்மிணியைக் கலந்து ஒரு வார்த்தை பேசிட்டு.. .. ..”

“நீர் யாரோட வேணாலும் கலந்து பேசிக்கும்! ஆனா, ‘சரி’ ங்கிற பதில்தான் நேக்கு வேணும்.”

“எங்களுக்கு இருக்கிறதே அந்த வீடு ஒண்ணுதான். மத்த எல்லாத்தையும் வித்தாச்சு. இதையும் மாப்பிள்ளை பேர்ல எழுதி வெச்சுட்டா, அப்புறம் எங்களுக்குன்னு எதுவுமே இருக்காது.. .. ..”

“பொண்ணைப் பெத்தா அப்படித்தான்காணும்! நானும் கூட என்னோட ரெண்டு பொண்ணுகளுக்கும் அமோகமாத்தான் செஞ்சேன். இன்னமும் ஏங்கிட்டேர்ந்து சம்பந்திகள் பிடுங்கிண்டேதான் இருக்கா. அதுக்கு என்ன பண்றது? தவிர உம்ம பொண்ணோட வாழ்க்கை இந்தாத்துல சந்தோஷமாக் கழியணும்னா நீர் அதுக்கு ஒத்துண்டுதான் ஆகணும், ஓய்!”

“ .. .. .. மாப்பிள்ளை ஏதோ பிசினெஸ் பண்ண ஆசைப்பட்றதா நீங்க சொன்ன ஞாபகம்.. .. ..”

“ஆமா. சொன்னேன்தான். ஆனா, அதெல்லாம் கூடாதுன்னுட்டேன். ஊரோட இருந்துண்டு வெவசாயத்தைக் கவனின்னுட்டேன். .. ஏதோ படிச்சுப் பட்டம் வாங்கணும்னான். அவனோட ஆசையைக் கெடுப்பானேன்னு சம்மதிச்சுப் படிக்க வெச்சேன். மூணு பிள்ளைகளுக்கும் பாகம் பிரிச்சுக் குடுத்தாச்சுன்னா என்ன மிஞ்சப் போறது? ஆளுக்கு ரெண்டு வீடு; கொஞ்சம் நெலம்.. .. .. அவ்வளவுதானே? மொத்தமா எல்லாமே ஏங்கிட்ட இருக்கிறவரைக்கும் பணக்காரன்னு பேருதான் பெத்த பேரு. “

“சரி. ஆத்துக்காரியைக் கேட்டுட்டு நாளைக்கோ இல்லேன்னா, நாளைநீக்கியோ வந்து சொன்றேன்.”

“நீர் சொல்லப் போற பதில் எங்களுக்குச் சாதகமாத்தான் இருக்கணும். அதை மட்டும் நெனப்பு வெச்சுக்கும்.”

“ச.. .. ரி.. “

பத்மநாபன் இடிந்து போய் வீடு திரும்பினார். சங்கதியை அவர் சொன்னதும், காவேரி கல்லாய் உட்கார்ந்து போனாள்.

.. .. .. சாமிநாதன் இல்லாத வாழ்க்கை பங்கஜத்துக்குக் கசந்து வழிந்தது. இருபத்துநான்கு மணி நேரமும் அவளுக்கு அவனது நினைப்புத்தான். தென்றலைப் போல் தன் வாழ்க்கையில் சற்றும் எதிர்பாராது வந்து குளிர்வித்த அவன் இனித் தன்னோடு இருக்கும்படியான நிலையே திரும்பிவராமலும் கூடப் போய்விடுமோ என்கிற அச்சத்தால் அவள் உருகத் தொடங்கினாள். அளவிடற்கரிய அவளது துன்பத்தில் அவளுக்கு ஆறுதல் அளித்த ஒரே விஷயம் குழந்தை பதஞ்சலிதான்.

தூங்க முடிந்த நேரம் மிகவும் குறைவாகிவிட்டதால் பங்கஜம் எக்கச்சக்கமாக இராட்டையில் நூல் நூற்றாள். நூற்றபடியே இடைவிடாது அவள் மனம் சாமிநாதனின் வருகைக்காகக் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தது. சாமிநாதனின் நண்பர்கள் உடன்பிறந்த சகோதரர்களைப் போல் அவ்வப்போது வந்து விசாரித்துத் தங்களால் இயன்ற உதவிகளை யெல்லாம் அவளுக்குச் செய்துவிட்டுப் போனார்கள். வருகிற போதெல்லாம் சாமிநாதனின் அச்சு இயந்திரப் பங்குத் தொகையைச் சேகரிக்க முயன்று வருவதாகவும், முழுத்தொகையும் சேர்ந்ததும் அதை அவளிடம் தருவதாகவும், ஒரு வங்கியில் அவள் பெயரில் அதைப் போட்டு வைக்க ஏற்பாடு பண்ணுவதாகவும் வாக்களித்தபடி இருந்தார்கள்.

ஒரு நாள் சேதுமாதவன் என்கிற (சாமிநாதனின்) நண்பன் அவளைச் சந்தித்து அதிர்ச்சியான அந்தச் சேதியை அவளுக்குச் சொன்னான். அவளுக்குச் சேரவேண்டிய தொகையுடனும், எல்லா நண்பர்களுடையவும் தனிப்பட்ட நன்கொடையான ஐந்நூறு ரூபாயுடனும் சசிதரன் என்பவன் அவளைச் சந்திக்கத் தன் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது, போலீசாரின் சந்தேகப் பட்டியலில் அவன் இருந்ததால் அவன் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும், அந்தப் பணத்தைப் போலீசார் கைப்பற்றிவிட்டதாகவும் அவன் தெரிவித்த போது அவளைச் சொல்லிமுடியாத ஏமாற்றம் சூழ்ந்துகொண்டது.

அவன் அவளிடம் அது பற்றிப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அந்தச் சின்னஞ்சிறிய வாடகை வீட்டின் சொந்தக்காரர் அங்கு வந்தார்.

“உங்களைக் கையும் மெய்யுமாப் பிடிக்கணும்கிறதுக்காகத் தான் நான் இப்ப வந்தேன்!” என்று அவர் தொடங்கியதன் அடிப்படை பங்கஜத்தின் ஊகிக்கும் திறனுக்கு அப்பாற்பட்டதா யிருந்தது. ஆனால், சேதுமாதவனோ வேறு மாதிரி ஊகித்தான். வெள்ளைக்கார அரசாங்கத்துக்கு எதிரான தீவிரவாதக் கும்பலோடு அவன் தொடர்பு வைத்திருப்பதாய் ஏற்கெனவே சந்தேகித்துக் கொண்டிருந்த அந்த மனிதர் அன்று கையும் மெய்யுமாகத் தன்னைப் பிடித்துவிட்டதாய்ச் சொன்னார் என்பதாக!

ஆனால், “என்ன சொல்றீங்க நீங்க?” என்று பங்கஜம் அப்பாவித்தனமாய் வினவியதும், “என்னம்மா, ஒண்ணும் தெரியாத பாதிரி கேக்கறேள்? உங்களைப் பத்தி நேக்கு அப்பப்போ புகார் வந்துண்டிருக்கு – புருஷன் இல்லாம தனியா இருக்கிற உங்களைத் தேடிண்டு கண்டவாளும் இங்கே வறான்னு. .. .. இது கவுரவமான எடம். தெரிஞ்சுதா? நீங்க ஒடனே காலி பண்ணிடணும். இன்னிக்குத் தேதி இருபத்தஞ்சு ஆறது. முப்பதாந்தேதிக்குள்ள .. ..” என்றவரை அடங்கா ஆத்திரத்துடன் சேதுமாதவன் இடைமறித்தான்.

“சார்! அப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசாதேள். நாங்க கண்ணியமானவா. மிஸ்டர் சாமிநாதனோட சிநேகிதாள். அவர் ஜெயில்ல இருக்கிறதால அப்பப்ப வந்து சில உதவிகளைச் செஞ்சுட்டுப் போறோம். இந்தம்மாவை நாங்க ஒரு தங்கை மாதிரி எண்ணிண்டிருக்கோம். எங்களை எவ்வளவு கேவலமா வேணும்னாலும் பேசுங்கோ. இவாளை அப்படியெல்லாம் பேசாதேள். நாக்கு அழுகிப் போயிடும்!” என்றான் ஆவேசமாக.

“ஊர்ல வம்பு பேசற மாதிரி எதுவுமே இல்லேன்னே வெச்சிண்டாலும், சாமிநாதன் காங்கிரஸ்காரன்கிற ஒண்ணுக்காகவே நான் இந்தப் பொண்ணை வீட்டை விட்டு வெளியேத்தலாம். தெரியுமோல்லியோ? வெள்ளைக்காரனோட விரோதிகளோட சம்பந்தம் வெச்சிண்டிருக்கிறவாளுக்கு என் வீட்டை வாடகைக்கு விட்டா, நேக்கும் தொல்லைதான். .. .. எது எப்படி வேணா இருக்கட்டும். வர்ற ஒண்ணாந்தேதி இந்த வீடு காலியா யிருக்கணும். அவ்வளவுதான்!” என்று திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டு அந்த மனிதர் வெளியேறினார்.

“மனுஷா ரொம்ப மோசமானவா, சிஸ்டர். அழாதேள்! கண்ணைத் தொடச்சுக்குங்கோ. .. .. ஆங்! உங்க பிரச்னை தீர்றதுக்கு ஒரு வழி யிருக்கு. ஸ்திரீ சேவா மண்டலின்னு – அநாதை ஆசிரமம் மாதிரி – ஒரு சங்கம் இருக்கும்மா. சிஸ்டர் முத்துலட்சுமிங்கிறவர் அதை ஏற்படுத்தி நடத்தறார். இப்பவே கூட நாம அங்கே போலாம். இந்த மாசம் முடியறதுக்கு இன்னும் அஞ்சே நாள்தான் தானே இருக்கு? இன்னும் கைது ஆகாம மிஞ்சி யிருக்கிறவா நாங்க ரெண்டே பேருதான் . இப்ப கெளம்பி வரமுடியுமா, சிஸ்டர்?”

“கெளம்பறேன். .. ஆமா? அவருக்கு எத்தனை நாள் தண்டனைன்னு தெரிஞ்சுதா?”

“மறியல் செஞ்சப்ப முட்டியில அடிச்ச போலீஸ்காரனை சாமிநாதன் திருப்பி அடிச்சுட்டான். அவனோட லாட்டியைப் பிடுங்கி அதனாலேயே அடிச்சுட்டானாம். அதனால, மத்தவாளுக்குக் குடுக்கிறதைவிட அதிகமான தண்டனை சாமிநாதனுக்குக் குடுப்பான்னு நெனைக்கிறோம். ஒரு மூணு வருஷமவது ஜெயில்ல வெச்சுட்டுத்தான் விடுவான்னு நெனைக்கறேன்.”

“நான் இன்ன எடத்துல இருக்கேன்கிறதை அவர் ஜெயிலைவிட்டு வெளியே வந்ததும் அவர் கிட்ட சொல்லுங்கோ.”

“கண்டிப்பா, சிஸ்டர்!” என்ற சேதுமாதவன் தனக்குள் கசப்பாய்ச் சிரித்துக்கொண்டிருந்தான். அவர்களது அச்சு இயந்திரத்தை அதற்கு முந்திய நாள்தான் போலீஸ் பறிமுதல் செய்து அந்த அலுவலகத்துக்கு முத்திரை (seal) வைத்துச் சென்றிருந்தது. அதன் உரிமையாளர்களைத் தேடிக்கொண்டிருந்தது. சேதியைச் சொல்லுவதற்காக அவன் வந்திருந்தான். இனித் தங்கள் உதவி அவளுக்குக் கிடைக்காது என்பதையும் தெரிவிப்பதற்காக!

.. .. ..ஸ்திரீ சேவா மண்டலி இருந்த தாம்பரம் செல்லுவதற்கு ரெயில்வண்டி பிடிப்பதற்காகப் பங்கஜமும் சேதுமாதவனும் எக்மோர் (எழும்பூர்) இரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தபோது வேறொரு மேடையில் நின்ற வண்டித்தொடரிலிருந்து தாசரதி இறங்கினான். நிலையத்திலிருந்து வேளியேறுகையில் பிறிதொரு மேடையில் நின்றுகொண்டிருந்த பங்கஜத்தையும் சேதுமாதவனையும் பார்த்தான். எல்லாவற்றுக்கும் மேலாக அவள் கையில் இருந்த குழந்தை அவன் கண்களை அதிகம் உறுத்தியது. ‘என்ன துணிச்சல்! .. .. கொழந்தையும் கையுமா நிக்கறாளே கள்ளப்புருஷனோட! ஆளு அழகாத்தான் இருக்கான். அதான் ஓடிப்போய்ப் பிள்ளை பெத்துன்டிருக்கா. எங்கேயோ ஊருக்குப் போறா போலிருக்கு. இவளை இப்ப தவற விட்டுட்டா அப்புறம் பிடிக்க முடியாம போயிடலாம் .. .. இப்பவே ஏதாவது செய்ய முடியறதான்னு பாக்கணும்.. ..’ – தாசரதி தன் தோளில் தொங்கிக்கொண்டிருந்த துண்டை எடுத்து அதைத் தன் தலையின் மீது முக்காடாய்ப் போட்டுக்கொண்டான். அவர்கள் நின்றுகொண்டிருந்த மேடையை அடைந்த அவன் ஓர் ஒரமாக நின்றுகொண்டான்.

பங்கஜம் ஏதோ சொல்லியபின், தன் குழந்தையைக் ‘கள்ளப் புருஷ’னிடம் கொடுத்துவிட்டு நகர்வதை அவன் கவனித்தான். ‘கொழந்தைக்கு ரெண்டு வயசு இருக்கும் போல இருக்கே?’ – தாசரதி மெதுவாக அவள் ‘கள்ளப் புருஷ’னுக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டான். கையில் பங்கஜத்தின் பெட்டியும் பையும் இருந்ததால், சேதுமாதவன் பதஞ்சலியை ஓர் ஒரமரக நிற்கவைத்துவிட்டு, சரியாக ஒரே தப்படி தாண்டி இருந்த பத்திரிகைக்கடையை நெருங்கிய கணத்தில் தாசரதி மின்னல் விரைவுடன் செயல்பட்டான். சேதுமாதவன் தலை திருப்பிய ஒரே கணத்துள், அந்தக் குழந்தையைத் தூக்கித் தோள்மீது சாய்த்துக்கொண்டான். ஞாபகமாய் அதன் வாயைப் பொத்தினான். பிறகு ஓட்டம் பிடித்தான். நிலையத்தில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அவரவர் தத்தம் ஜோலிகளில் மும்முரமாக இருந்தனர்.

கடையில் பத்திரிகை வாங்கிய பிறகு தலை திருப்பிய சேதுமாதவன் திகைத்துத் திடுக்கிட்டான். பதஞ்சலி காணப்படவில்லை. பக்கத்தில் எங்கேனும் நகர்ந்து சென்றிருக்கக்கூடும் என்றெண்ணிப் பதற்றத்துடன் இங்குமங்குமாக ஒடிப் போய்த் தேடிப் பார்த்தான். பத்திரிகை வாங்கப் பிடித்த இரண்டே நிமிடங்களில் – அதிலும் அந்தக் கடை வாசலில் தனக்குப் பின்னால் மிக அருகே நின்றுகொண்டிருந்த – அவன் எங்கும் காணாமல் போய்விட வாய்ப்பில்லை என்றெண்ணி நம்பிக்கையோடு சுற்றிச் சுற்றி வந்தான். பதஞ்சலி கிடைக்கவில்லை. கைப்பெட்டியையும் பையையும் கீழே வைத்துவிட்டுக் குழந்தையைத் துக்கிக்கொள்ளாத தன் மடமையை நொந்துகொண்டான். கழிவறையிலுருந்து பங்கஜம் திரும்பியதும் அவளுக்குத் தான் என்ன சொல்லப் போகிறான் எனும் கிலியில் அவனுக்கு இதயம் படபடத்தது

.. .. .. குழந்தையுடன் விரைந்து வெளியேறிய தாசரதி சற்றுத் தொலைவு நடந்த பிறகு, குறுக்கு வழியில் தண்டவாளத்தை அடைந்து அதன் வழியே விரைவாகச் சென்றான். சற்றுத் தொலைவில் வண்டித்தொடர் ஒன்று வந்துகொண்டிருந்த தட தட வென்னும் ஓசை கேட்கத் தொடங்கியது. அவனது எண்ணத்துக்குத் தோதாக அக்கம்பக்கத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. தண்டவளத்தில் குழந்தையை நிற்கவைத்து அதன் கால்களைத் தண்டவாளத்துடன் சேர்த்துத் துண்டால் கட்டி இணைத்த பிறகு அவன் ஓடத் தொடங்கினான்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பொல பொலவென்று உதிர்ந்த பங்கஜத்தின் கண்ணீரைப் பார்த்ததும் சாமிநாதனின் நண்பர்கள் பதறிப்போனார்கள்.

“பயப்படாதங்கோ, மிஸஸ் சாமிநாதன்! உங்க பங்குக்கு உண்டான அச்சடிக்கிற மெஷினோட விலையை நாங்க உங்ககிட்ட குடுத்துட்றோம். அதுக்கு ஒரு மாசமாவது ஆகும். அதுவரையில உங்க செலவுக்கு இதை வெச்சுக்குங்கோ,’ என்று அவர்களில் ஒருவன் கொஞ்சம் பணத்தை எடுத்து நீட்டியவாறு சொல்ல, “வேண்டாம். ஏங்கிட்ட இப்ப சத்திக்குக் கொஞ்சம் பணம் இருக்கு,” என்று அவள் வலுவாக மறுத்தாள். ஆனால், அங்கிருந்த மேசை மீது சில ஐந்து ரூபாய்த் தாள்களை அவர்கள் வைத்துச் சென்றனர் .

.. .. .. சின்னக்குளத்தில் தாசரதியின் வாழ்க்கை பல ஏமாற்றங்களுடன் கழிந்துகொண்டிருந்தது. அவனுக்கு வாய்த்த இரண்டாம் மனைவி வாயாடியாக இருந்தாள். அந்தக் காலத்தில் மாமியாரின் படுத்தல் பரவலாக நடந்துகொண்டிருந்த போதிலும், அவர்கள் வீட்டைப் பொறுத்த வரையில் அந்த வாயாடி மருமகள் கல்யாணியின் கைதான் ஓங்கி யிருந்தது. கொஞ்சம் ஏமாந்தால் மாமியாரை நோக்கிக் கை ஓங்கக் கூடியவளாகத்தான் அவள் இருந்தாள்! அதனால், தாசரதியின் வாழ்க்கை நரகமாயிற்று. அடிக்கடி தன் முதல் மனைவி பங்கஜத்தைப் பற்றி அவன் நினைக்கலானான். ‘எவ்வளவு நல்லவள் பங்கஜம்! எவ்வளவு சாது! என் பேச்சுக்கும், அம்மாவின் பேச்சுக்கும் மறு பேச்சுப் பேசாதவள். அதனால் என் வாழ்க்கை அமைதியாகக் கழிந்துகொண்டிருந்தது. ரொம்பவுமே பணக்கார இடத்துப் பெண்ணாய்த் தேடி அம்மாவும் அப்பாவும் என் தலையில் கட்டியதில் என் வாழ்க்கை கொடு நரகமாகத்தான் போயிற்று. .. .. ஒரு நடை செங்கல்பாளையத்துக்குப் போய்ப் பங்கஜத்தைப் பார்த்தால் தான் என்ன? வாராவாரம் அம்மா அப்பாவுக்குத்தெரியாமல் போக்குவரத்து வைத்துக்கொள்ளலாமே! நான் அவளுக்குத் தாலி கட்டினவன். என்னைத் தள்ளிவிடுவாளா என்ன! இத்தனை நாளும் இந்த எண்ணம் எப்படி எனக்கு வராமல் போயிற்று? எவ்வளவு அழகு பங்கஜம்தான்! என்ன செழுமையான உடம்பு! அடியம்மா! கிள்ளக் கூடச் சதை யில்லாத உடம்பு இந்தக் கல்யாணிக்கு. ராகவனின் யோசனைப் படி முரண்டு பிடிக்காமல் என்னோடு என் முதல் பெண்டாட்டியும் வாழ்வதற்கு ஒப்புக்கொள்ளுகிற பெண்ணுக்குத்தான் நான் தாலி கட்டுவேன் என்று சொல்லி அதைச் சாதித்திருந்திருக்க வேண்டும் நான்! .. .. ..’

ஒரு ஞாயிறன்று தாசரதி செங்கல்பாளையத்துக்குப் போனான்.

.. .. ..சாவதற்கு முன்னால் தன்னினைவு அரையா யிருந்த நிலையில் தங்கம்மா பலமணி நேரம் தொடர்ந்து பிதற்றியதிலிருந்து சாமிநாதன் பங்கஜத்தோடு சென்னைப் பட்டணத்தில் குடித்தனம் வைத்திருந்ததும், அவள் உண்டாகி யிருந்ததும் அந்த ஊர்க்காரர்களுக்குத் தெரிந்து போய்விட்டன. அந்தப் பிதற்றல் நின்ற ஒரு கணத்தில் தான் தங்கம்மா தன் பிள்ளை தனக்குக் கொள்ளி போடக்கூடாதென்று சொல்லி அவனது விலாசத்தைத் தெரிவிக்கவும் மறுத்திருந்தாள். செங்கல்பாளை யத்து மனிதர்கள் சிலரைச் சந்தித்து மேற்படி விவரங்களைத் தெரிந்துகொண்ட தாசரதியின் இரத்தம் கொதித்தது. ‘என்ன நெஞ்சழுத்தம்! எவ்வளவு திமிர்! நான் ஒருவன் உயிரோ டிருக்கும்போது இன்னொருவனிடம் தாலி வாங்கியிருக்கிறாளே! ஒருகால், தாலி கட்டிக்கொள்ளாமல் ‘வைப்பாட்டி’ யாக வாழ்ந்துகொண்டிருக்கிறாளோ என்னவோ? என்ன அக்கிரமம் இது! சாது போல் நடந்துகொண்டதெல்லாம் வெறும் நடிப்புத்தான்! என்ன வேஷதாரி! எப்பேர்ப்பட்ட அக்கிரமக்காரி அவள் தான்! சுருக்கமாய்ச் சொன்னால் ஒரு விபசாரி! பட்டணத்துக்குப் போய் அவள் இருக்குமிடத்தை எப்படியாவது கண்டுபிடித்து அவள் கழுத்தை நெரித்தாலும் தப்பில்லை! உண்டாகி வேறு இருக்கிறாளாமே! என்ன அசிங்கமிது! எவ்வளவு கேவலமானவள்! நல்ல குலஸ்திரீயா அவள்? பிடாரி! பரத்தை! அவள் குழந்தையையும் சேர்த்துக் கொன்றாலும் பரவாயில்லை! .. .. ..’ – இப்படி யெல்லாம் யோசித்தவாறு செங்கல்பாளையத்தில் சிலரை நாசூக்காக விசாரித்துப் பார்த்தும் அவளது சென்னை விலாசத்தை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொதித்த உள்ளத்தோடு அவன் சின்னக்குளத்துக்குத் திரும்பி வந்த பின் சில நாள் கழித்து, அவன் நண்பன் ராகவன் வந்து சேர்ந்தான். கடந்த வாரத்தில் ஒரு நாள் தான் செங்கல்பாளையத்துக்குப் போயிருந்ததையும் அங்கே பங்கஜத்தைப் பற்றித் தான் கேள்விப்பட்டதையும் அவன் தாசரதிக்குச் சொன்ன போது அவன் ஒரு புதுச் செய்தியைக் கேட்பவன் போல் நடித்தவாறு கேட்டுக்கொண்டான். ஏற்கெனவே அது தனக்குத் தெரிந்திருந்ததைச் சொல்லிக்கொள்ள அவனுக்கு அவமானமா யிருந்தது.

“அவ மட்டும் என் கையிலே மாட்டினா.. .. .. அப்படியே அவ கழுத்தை நெரிச்சுக் கொன்னுடுவேன்!” என்றும் பற்களைக் கடித்துக்கொண்டு உறுமினான்.

“வேணாண்டா, தாசரதி! அது மாதிரியான ஆத்திரத்துக் கெல்லாம் மனசுல எடம் குடுக்காதே. நான் ஒண்ணு சொன்னாக் கோவிச்சுக்க மாட்டியே?”

“என்ன?”

“உன் மொதப் பொண்டாட்டியும் ஒரு ஓரமா ஒங்காத்துலேயே இருந்துட்டுப் போட்டும்னு நான் யோசனை சொன்னேன். நீ கேக்கல்லே.”

“அம்மா அப்பா ஒத்துக்கல்லே. அந்தப் பொண்ணாத்துலேயும் ஒத்துக்கல்லே. .. .. .. இப்ப நீ என்ன சொல்ல வறே? அது ‘பாவம்’கிறயா?”

“நீ பண்ணினது பாவமோ இல்லியோ, ஆனா, நீ ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கப் போறதை ஏங்கிட்ட சொன்னப்போ, வேணாண்டான்னு உனக்குப் புத்திமதி சொல்லாத பாவத்தை நான் பண்ணி யிருக்கேன்!”

“ .. .. .. .. .. ..”

“அது மட்டுமா? உங்கம்மா அப்பா யோசனைக்கு நானும் தூப தீபம் காட்டினேன். ‘சில பொண்ணுகள் அப்படித்தாண்டா – பொண்ணுகளாவே பெத்துண்டிருப்பா. அப்புறம் நோக்குப் பிள்ளைக் கொழந்தையே இல்லாம போயிடப் போறது! உங்கம்மா சொல்றது சரிதாண்டா. ஒண்ணுக்கு ரெண்டா வெச்சுண்டு ஜமாய்’ னு உன்னைத் தூண்டி வேற விட்டேனோல்லியோ? அந்தப் பாவம் இப்ப என்னைப் படுத்திண்டிருக்கு!”

“என்ன சொல்றே நீ?”

“எந்தக் கொறையும் இல்லாத எம் பொண்ணைத் தொரத்தியடிச்சுட்டாண்டா என்னோட மாப்பிள்ளை. என்னோட ஒரே பொண்ணுடா அவ. நோக்குத்தான் தெரியுமே?”

“ஏன்? எதுக்காக?”

“காரணம் எதுவுமே சொல்லாம ரெண்டாங் கல்யாணம் பண்ணிண்டுட்டான். வரதட்சிணை, சீர்வரிசை இதுகளுக்கு ரெண்டாந்தடவை ஆசைப்பட்டு அப்படிப் பண்ணினானோ என்னவோ! தள்ளி வெச்ச காரணத்தை எங்கே சொன்னான் அந்தப் படுபாவி! .. .. போய்ச் சத்தம் போட்டேன். அதுக்கு அப்புறந்தான் சொல்றான் -கல்யாணம் ஆயி ரெண்டு வருஷம் ஆயிடுத்தாம். ஆனா, கொழந்தை இல்லியாம்! சின்ன வயசுதானே? பொறக்காதா என்ன? என்ன அநியாயக்காரன், பாரு! .. .. உன்னைத் தூண்டி விட்ட பாவத்துக்கான தண்டனையை இப்ப அனுபவிக்கிறேன்!”

“இதெல்லாம் அறிவுகெட்ட பேச்சு ! பாவமாவது, புண்ணியமாவது! எது ஒண்ணும் அவாவா தலை யெழுத்துபடிதான் நடக்கும்! .. .. நான் அவளைச் சும்மா விடப் போறதில்லே.”

“வேணாம், தாசரதி! சொன்னாக்கேளு! அவளை நீ நியாயமா நடத்தல்லே. .. .. நான் இன்னொண்ணு கூடக் கேள்விப்பட்டேன்.”

“என்ன?”

“விவரமெல்லாம் நான் உன்கிட்ட சொல்றதாயில்லே. ஆனா விஷயத்தை மட்டும் சொல்றேன். உம் பொண்டாட்டி பங்கஜத்துக்குப் பிள்ளைக் கொழந்தை பொறந்திருக்கு. இதுக்கு என்ன சொல்லப் போறே?”

உட்கார்ந்திருந்த தாசரதி எழுந்து நின்றுவிட்டான். அவன் விழிகள் சிவந்து மேலுதடு துடித்தது.

“என்ன சொல்றே? நோக்கெப்படித் தெரியும்? நீயே பாத்தியா?”

“இல்லே. கேள்விப்பட்டேன். என்னோட மெட்றாஸ் சிநேகிதன் ஒருத்தன் சொன்னான். பேச்சுவாக்கிலே தெரிய வந்தது.”

“யாரு? அவனோட விலாசம் தெரியுமா?”

“பங்கஜம் இருக்கிற விலாசத்தை அவன் மூலமா என்னால கண்டுபிடிக்க முடியும். ஆனா நான் நோக்கு அந்த விஷயத்துல உதவி பண்றதா யில்லே! என்னை மன்னிச்சுடு. நான் பங்கஜம் விஷயத்துல பண்ணின ஒரு தப்புப் போறும். இன்னும் ஒரு பாவத்தைப் பண்றதுக்கு நான் தயாராயில்லே. நான் உன்னை விட வயசில பெரியவன். நான் சொல்றதைக் கேளு, தாசரதி!“

“உன்னோட உபதேசத்தை யெல்லாம் நிறுத்து. என்னவோ ரொம்பவும்தான் பிகு பண்றே. நானே கண்டுபிடிச்சுக்கறேன். அவளைக் கொல்லாட்டாலும், தேவடியாத்தனமா அவ பெத்து வெச்சிருக்காளே, அந்தக் கொழந்தையையாவது சாகடிச்சாத்தான் என் மனசு சமாதானமாகும்!” “வேணாண்டா, தாசரதி! அப்படி யெல்லாம் பண்ணிடாதே. நீ ஏற்கெனவே பண்ணி யிருக்கிற பாவமே அடுத்த ஜென்மத்துக்குப் போறும். இன்னும் வேற புதுசாப் பாவத்தைச் சேத்துக்காதே!”

“பாவமாவது, மண்ணாங்கட்டியாவது! தாலி கட்டின புருஷன் உயிரோட இருக்கிறச்சே, இன்னொருத்தனுக்குப் பிள்ளை பெத்திருக்கிற அவதான் துரோகி! என்னமோ பேச வந்துட்டான் பெரிசா!”

“அப்ப, நீ பண்ணினது மட்டும் சரியா?”

“நானு அவளும் ஒண்ணா? நான் ஆம்பளை ஜென்மம்! எத்தனை வேணாலும் கட்டுவேன், இல்லே, வெச்சுப்பேன்!”

ராகவன் சில விநாடிகளுக்கு மவுனமா யிருந்த பிறகு ஒரு பெருமூச்சுடன் எழுந்துகொண்டான்: “பங்கஜத்துக்குப் பிள்ளைக் கொழந்தை பொறக்காதது உன்னோட கொறையினால கூட இருக்கலாமோன்னு நீ யோசிச்சுப் பாக்கணும்கிறதுக்காகத்தான் நான் அந்த விஷயத்தைச் சொன்னேன். நீ என்னடான்னா, ‘அந்தக் கொழந்தையையே கொல்றேன் பாரு’ ங்கறே. இது அடுக்காது, தாசரதி. நல்லதில்லே. சரி. நான் கெளம்பறேன். கடைசியா ஒண்ணு சொல்றேன். கேட்டுக்கோ. பங்கஜம் பண்ணினது தப்புன்னே வெச்சுண்டாலும், அதுக்குக் காரணமே நீ பண்ணின அக்கிரமந்தான்கிறதை மறந்துடாதே!”

“என்னது!”

ராகவன் பதில் சொல்லாமல் அவனை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் பாத்த்துவிட்டு விரைவாக வெளியேறினான்.

.. .. .. உரிய நேரம் வந்ததும், பத்மநாபனும் காவேரியும் துர்க்காவை இதற்கிடையே அவளது புக்ககத்தில் கொண்டுவந்து விட்டிருந்தனர்.

அதற்கு முன்னர், ஆடிப் பண்டிகை, ஆறாம் மாதம், தலை தீபாவளி என்கிற சில ‘சாக்குகள்’ வாயிலாகப் பார்வதியும் தேவராஜனும் சேர்ந்து பத்மநாபனின் குடும்பத்தைக் கசக்கிப் பிழிந்துவிட்டனர். பத்மநாபன் தம் சொத்துகளில் சிலவற்றை அதனால் விற்க நேர்ந்தது. காவேரி அணிந்திருந்த வைரத்தோடு, வைர மூக்குத்தி ஆகியவை உட்பட. ஒவ்வொரு முறை சீர்ப்பட்டியலைச் சொன்ன போதும், பத்மநாபனின் மூத்த சகோதரர் தெற்குத் தெரு வள்ளியை ‘வைத்துக்’ கொண்டிருந்தது பற்றியும், அதனால் தங்கள் குடும்ப கவுரவத்துக்கு இழுக்கு நேர்ந்துள்ளது பற்றியும் சொல்லிச் சொல்லிக் காட்டி அவர்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டார்கள்.

.. .. .. புகுந்த வீட்டில் துர்க்காவின் வாழ்க்கை நல்லபடியாக அமையவில்லை. தேவராஜனும் பார்வதியும் சமயம் கிடைத்த போதெல்லாம் பத்மநாபனின் குடும்பக் “களங்கம்” பற்றிப் பேசி, துர்க்காவுக்கு எதுவும் முழுவதுமாய்ப் புரியாத நிலையிலும் அவள் மனத்தைப் புண்படுத்தத் தவறவில்லை. பார்வதி வாய்ச்சொல்லோடு நில்லாமல் கன்னத்தில் இடிக்கவும், அவள் கன்னத்தைப் பிடித்துக் கரைக்கவும் தவறவில்லை. ‘உன்னை யாருடி மாட்டுப் பொண்ணா ஏத்துப்பா! நாங்க இளிச்ச வாய்! ஏத்துண்டோம்’ என்று அடிக்கடி பழித்து, ‘உழக்கு இரத்தம் வருமோ’ என்று அவள் பயப்படும்படியாக அவள் உச்சந்தலையில் நறுக்கென்று குட்ட வேறு செய்தாள்.

சாந்தி முகூர்த்தம் ஆன மறு நாளிலிருந்து துர்க்கா சிவகுருவுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள முடியாதவாறு பார்வதி பார்த்துக்கொண்டாள். அது தெரிந்தும், எந்தக் குறுகுறுப்போ, குற்ற உணர்வோ இல்லாதவராய்த் தேவராஜன் ‘சிவனே’ என்று இருந்துகொண்டிருந்தார். சாந்தி முகூர்த்தத்தைக் கூட முடிந்தால் தடுத்திருப்பார்கள்தான். ஆனால், அது ஒரு சடங்காய்க் கொண்டாடப்படும் வழக்கத்தின் காரணமாய், அவ்வளவு வெளிப்படையாய் அவர்களால் செயல்பட முடியவில்லை.

சிவகுருவும் கல்லூரிப் படிப்பைத் தொடர மதுரைக்குப் போய்விட்டதால் விடுமுறை நாள்களில் மட்டுந்தான் வத்தலப்பாளையத்துக்கு அவனால் வர முடிந்தது. அவ்வாறு அவன் வந்த நாள்களில் பார்வதி அவர்கள் தொடர்புகொள்ள முடியாதவாறு உஷாராய்ப் பாதுகாத்தாள்.

இளம் மனைவியோடு கழிக்கப் போகும் மகிழ்ச்சியான பொ¡ழுதுகளுக்கு ஆசைப்பட்டு மதுரையிலிருந்து வந்து சென்ற சிவகுருவுக்கு ஒவ்வொரு தடவையும் ஏமாற்றந்தான் .. .. ..

.. .. .. “ஏன்னா! இந்தக் கூத்தைக் கேட்டேளா?”

“என்ன, காவேரி? என்ன ஆச்சு?”

“நம்ம துர்க்காவை அவ மாமியார் மாப்பிள்ளையோட படுக்க விட்றதில்லையாமே?”

“என்னது! இதென்ன கூத்து?”

“ஆமான்னா. இன்னைக்கு ஜாடையா அவளைக் கேட்டேன். சொன்னா. ராட்சசி! பொண்டாட்டியோட படுக்கப்படாதுன்னு நினைக்கிறவ பிள்ளைக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைக்கணும்?”

சற்று யோசித்த பிறகு பத்மநாபன் சொன்னார்: “இத பாரு, காவேரி. இதை நாம பெரிசுபடுத்தக்கூடாது. எப்படியும் ஒரு நாள் இந்தப் பிரச்னைக்கு முடிவு ஏற்படும். அது வரைக்கும் கொழந்தைகள் பொறுமையாக் காத்துண்டிருக்க வேண்டியதுதான். வேற வழி இல்லே. விஷயம் தெரிஞ்சதாவே நாம காட்டிக்கப்படாது.”

“நிரந்தரமா அப்படியே இருந்துடாதேன்னா? அதான் பயமாயிருக்கு.”

“அப்படின்னா, அவாளோட மத்தப் பிள்ளைகளுக்கெல்லாம் இத்தனை கொழந்தைகள் பொறந்திருக்குமா?”

“நீங்க சொல்றது சரிதான். .. .. ரெண்டாவது, நம்ம மாப்பிள்ளையும் கொஞ்சம் பெரியவனானா தானே பிரச்னையைச் சமாளிச்சுப்பாந்தான்! .. .. அப்புறம் இன்னொண்ணு.”

“என்ன?”

“துர்க்காவை ரொம்ப வேலை வாங்கறாளாம். தலைக்குத் தலை எல்லாரும், இதைச் செய், அதை செய்ன்னு ஒரு எடுபிடி ஆளை ஏவற மாத்¢ரி ஏவி வேலை வாங்கிப் படுத்தறாளாம். சின்னப் பொண்ணாச்சே! ஒடம்புல சக்தி இருக்க வேண்டாமான்னா?” – சொல்லும் போதே காவாரிக்குக் கண்கள் கலங்கின.

“அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? தெரிஞ்சதாவே காட்டிக்கப்படாது. அப்புறம் நம்ம கொழந்தையை இன்னும் அதிகமாக் கொடுமைப்படுத்துவா.”

“அவளோட மச்சினன் மாருக்குத் தலா ரெண்டு கைக்கொழந்தைகள் இருக்கு. அந்த நாலையும் இவதான் பாத்துக்கணுமாம்..”

“ஏதோ, சின்னக் கொழந்தைகளோட அவளோட பொழுது நன்னாக் கழியறதோன்னோ? விடு.”

“நாலும் ஒரு வயசு, ரெண்டு வயசு, மூணு வயசு, நாலு வயசுன்னு இருக்கிற ரெண்டுங்கெட்டான் கொழந்தைகள். கட்டி மேய்க்கிறதுன்னா சும்மாவா? பிள்ளை எடுத்துப் பொழைக்கிறதைக் காட்டிலும் பிச்சை எடுத்துப் பொழைக்கலாம்னு சொல்லுவான்னா பெரியவா. சின்னக் கொழந்தைகளை – அதுலேயும் ரெண்டுங்கெட்டான்களை – அதுகள் கீழே விழாதபடி கவனமாப் பாத்துக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”

“என்னத்தைப் பண்றது, காவேரி? நாம தலையிட்டா, அப்புறம் துர்க்காவுக்குத்தான் இன்னும் கஷ்டம். பொறந்தாத்துல போய்ப் புகார் பண்ணினியான்னு அவளைப் பிலு பிலுன்னு பிடிச்சுக்குவா. அப்புறம் அவளுக்கு இன்னும் அதிகக் கொடுமைதான் நடக்கும்.”

“எவ்வளவு அருமையா வளத்தோம்! சாணி மொதக்கொண்டு தட்ட வைக்கிறாளாம் கொழந்தையை! கிராதகி! தெனமும் அத்தனாம் பெரிய வீட்டை இவதான் பெருக்கி மொழுகணுமாம். வேலைக்காரி மொழுகினா ஆசாரக் கொறைச்சலாம். .. .. மாசத்துல அந்த மூணு நாளும் நொந்து போன பழைய சாதத்தைப் போட்றாளாம். நீர்த்த மோர்தான் விடுவாளாம். இத்தனைக்கும் ஆத்துல ஒரு பசுமாடு, ஒரு எருமை மாடுன்னு இருக்கு! தொட்டுக்குறதுக்கு வெறும் உப்பு நார்த்தங்காயாம்! துர்க்கா சாப்பிட முடியாம அதை அப்படியே தூக்கி கொல்லைக் கதவைத் தொறந்து சாக்கடையில கொட்டிடுவாளாம். அந்த மூணு நாளும் கொலைப் பட்டினிதானாம்.” – காவேரி அழத் தொடங்கினாள்.

“எங்கம்மா கூட உன்னைக் கொஞ்சம் படுத்தியிருக்கா. மாமியார்னா மாட்டுப்பொண்ணைப் படுத்தணும்னு அவாளுக்கு சாஸ்திரம் போல இருக்`கு!” என்று பத்மநாபன் அசம்பாவிதமாய்ச் சிரிக்க, காவேரிக்குள் அடங்காச் சினம் மூண்டது.

“சிரிக்காதங்கோன்னா, சிரிக்காதங்கோ! ‘கொஞ்சம்’ படுத்தினான்னு சொல்லாதங்கோ. ‘கொஞ்ச நஞ்சமாவா படுத்தி யிருக்கா’ ன்னு கேளுங்கோ. .”

“பொதுவாப் பிள்ளையைப் பெத்த மாமியார்க்காரிகள் எல்லாருமே அப்படித்தான் இருக்கா. ஏன்னே தெரியல்லே.”

“அவாளை அவாளோட மாமியார்கள் படுத்தினதுக்கு, தங்களோட மாட்டுப்பொண்களைப் படுத்தி வஞ்சம் தீத்துக்கறா போலேருக்கு!”

“இருக்கலாம். ஆனா அந்தக் கொடுமை எப்ப , எப்படி, யாரால தொடங்கித்துன்னு தெரியலியே?”

“அதொண்ணும் இப்ப தெரியவேண்டாம். நம்ம கொழந்தையை அவா படுத்தாம இருக்கிறதுக்கு நாம ஏதாவது செஞ்சே ஆகணும்னா! அதுக்கு வழி பாருங்கோ மொதல்ல.”

“இன்னும் என்னத்தைடி செய்யறதாம்? நம்ம சொத்துகள் எல்லாத்தையுமே கிட்டத்தட்ட வித்துக் குடுத்து அவாளைத் திருப்தி பண்ணியாச்சு. இந்த வீடு ஒண்ணும் கொஞ்சம் நஞ்செய் நெலமும் தான் மிஞ்சி யிருக்கு. இன்னும் பிரசவம், அது, இதுன்னு செலவுகள் வந்தா எப்பிடித்தான் சமாளிக்கப் போறதோ! பேராசை பிடிச்சவாளைத் திருப்திப்படுத்தவே முடியாது, காவேரி!”

இப்படி ஒரு விவாதம் அடிக்கடி அவர்களிடையே நிகழலாயிற்று.

நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. ஒரு வழியாய்க் கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு, சிவகுரு கிராமத்தோடு வந்திருக்கத் தொடங்கினான்.

துர்க்காவுக்கும் இதற்கிடையே விவரங்கள் புரியத்தொடங்கியிருந்தன. எனினும் சிவகுரு தொடைநடுங்கியா யிருந்ததால், துர்க்காவைப் பார்வதி தன்னருகே படுக்கவைத்துக்கொள்ளுகிற வழக்கம் தொடரலாயிற்று.

ஒருநாள் பொறுமை யிழந்த பத்மநாபன் அதற்கு ஒரு முடிவு கட்டும் நோக்கத்துடன் வத்தலப்பாளையத்துக்குப் போய்த் தேவராஜனைக் கண்டார்.

பொதுவாய்ப் பேசிய சற்று நேரங்கழித்து, “ .. .. நீங்க நெஜமாவே மகாத்மாகாந்தியோட பக்தர்தானா?” என்று அவர் தேவராஜனைக் கிண்டலாக நோக்கியவாறு வினவினார்.
– தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 21

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

ஜோதிர்லதா கிரிஜா


சென்னையில் குடித்தனம் நடத்தத் தொடங்கிய பின் ஓர் ஆண்டு வரையில் அதன் விளைவு ஏதுமற்றிருந்த பிறகு, பங்கஜம் கருத்தரித்தாள். இந்த இடைக்காலத்தில் சாமிநாதன் இரு முறை ஊருக்குப் போய்த் தாயைப் பார்த்துவிட்டு

வந்திருந்தான். முதல் தடவை பங்கஜம் பற்றிப் பேச்சு வந்த போது, அப்பாவையும் இழந்து அநாதையாகிவிட்ட நிலையில் அவள் எங்கேயாவது சென்று உயிரை விட்டிருக்க வேண்டும் என்று ஊரில் ஒரு வதந்தி நிலவுவதாகத் தங்கம்மா அவனிடம் கூறினாள். அவன் மெல்லப் பேச்சை மாற்றினான். எனினும், தான் எந்த எதிரொலியும் காட்டாதது தங்கம்மாவை வியப்பில் ஆழ்த்திவிட்டது புரிந்தது. எனவே, ஒப்புக்காக, ‘பாவம் அந்தப் பொண்ணு’ என்ரு சொல்லி வைத்தான்.

தேச விடுதலைப் போராட்டத் தீவிரவாதக் கும்பலில் ஒருவனா யிருந்ததால், சாமிநாதன் அடிக்கடி சென்னையைவிட்டு அயலூர்களுக்குச் செல்லும்படி நேர்ந்தது. முக்கியமாய்ப் பாண்டிச்சேரிப் பக்கம் அடிக்கடி போவான். அப்போதெல்லாம் பங்கஜம் தனியா யிருக்க நேர்ந்தது. பட்டணத்துக்கு வந்த பிறகு, சாமிநாதனின் பயிற்சி முறைகளால் அவளுக்குத் துணிவும் தன்னம்பிக்கை யும் பெரிய அளவில் ஏற்பட்டிருந்தன. முன்பு போலின்றிப் பிழையற்ற தமிழில் விரைவாக எழுத அவள் கற்றுக்கொண்டுவிட்டாள். இன்னும் சில நாள்களில் ஆங்கிலத்திலும் அவளைக் குறைந்த பட்சத் தேர்ச்சியேனும் உள்ளவளாக ஆக்கிவிடவேண்டும் என்பது அவனது குறிக்கோளா யிருந்தது.

‘இங்கிலீஷ் படிச்சு நான் பெரிசா என்ன குப்பைகொட்டப் போறேன்?’ என்று அவள் சொல்லிச் சிரித்ததை அவன் வலுவாக மறுத்துவிட்டான். ‘இத பாரு, பங்கஜம்! நம்ம தேசம் பல விதத்துலேயும் மாறப் போறது. இப்பவே மாற ஆரம்பிச்சாச்சு. அதுக்கான அறிகுறிகள்ளாம் அங்கங்கே தெரியத் தொடங்கி யிருக்கு. ஒரு சமயம் நான் கடையத்துக்குப் போயிருந்தப்போ, அங்கே சுப்ரமணிய பாரதின்னு ஒரு பெரிய தேசபக்தரைத் தற்செயலாச் சந்திச்சேன். நிறைய தேசபக்திப் பாட்டுகள் எழுதி யிருக்கார். நம்ம தேசம் விடுதலையே அடைஞ்சுட்டதாக் கற்பனை பண்ணி அதுக்கான பாடல்களையும் எழுதியிருக்கார். பொண்ணுகளைப் பத்தி, அவா அடிமைகளா யிருக்கிறதைப் பத்தி – அவாளுக்குத் தனிச் சட்டங்கள் போட்டு ஆம்பளைகள் அவாளுக்கு அநியாயம் பண்ணி வெச்சிருக்கிறதைப் பத்தி, அவா இனிமே தைரியமா ஆம்பளைகளை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் பத்தி, அவா கல்வியறிவு பெற வேண்டிய அவசியம் பத்தி யெல்லாம் என்னமாப் பேசறார் மனுஷன்! நம்ம தேசம், நம்ம மனுஷா, நம்ம தேசத்துப் பொண்ணுகளோட நெலைமை – சுருக்கமாச் சொல்லணும்னா ஒரு சமுதாய அக்கறை – நேக்கு வந்ததே அவரோட பாட்டையும் பேச்சையும் கேட்டதுனாலதான். காந்திக்கும் அப்படி ஒரு சிந்தனை உண்டுதான். நான் இல்லேங்கல்லே. ஆனா பாரதியார் என்னை ரொம்பவே பாதிச்சுட்டார். .. .. பெண் விடுதலை, அது இதுன்னு பெரிய லட்சியவாதியாட்டமா மனசுக்குள்ள மட்டும் ஒரு மனுஷன் இருந்தாப் போறுமா, பங்கஜம்? என்னோட பொண்டாட்டியை நான் ஒரு கட்டுப்பெட்டியா வெச்சுட்டு, ஊர்ல இருக்கிற பொம்மனாட்டிகள் மேல ரொம்பவும்தான் அக்கறை மாதிரிப் பேசினா அது நியாயமா? நீயே சொல்லு. ஆணும் பெண்ணும் ஒரு சமுதாயத்தோட ரெண்டு கண்களாட்டாமான்னு சுப்ரமணிய பாரதியார் சொல்லியிருக்கார். ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம், பூணு நல்லறத்தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய் சிவசக்தியாம், நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், ஞான நல்லறம், வீர சுதந்திரம், பேணும் நற்குடிப் பெண்ணின் குணங்களாம், பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ?’ அப்படினு பாடியிருக்கார்! ‘

‘நாணம்கிறது பொண்ணுகளுக்குக் கண்டிப்பா யிருக்கணும்னா! அச்சமும் இருக்கணும்!’

‘நாணம்னு அவர் சொன்னது நீ நினைக்கிறபடியான நாணமில்லே, பங்கஜம்! பெண்களோ, ஆண்களோ எதுக்கு வெக்கப்படணுமோ அதுக்கு வெக்கப்பட்டா போறும். .. .. இப்ப உன்னையே எடுத்துக்கோ. ரொம்பவும் அஞ்சி யிருந்தியானா, நீ என்னோட கெளம்பி வரச் சம்மதிச்சிருந்திருக்கவே மாட்டே! இல்லியா? நமக்கு நியாயமாக் கிடைக்க வேண்டியதுக்குப் போராட்றதுக்கு அச்சமோ, கூச்சமோ வரவே கூடாது!”’

‘இப்ப நீங்க சொல்ற வியாக்கியானம் வேணாச் சரியா யிருக்கலாம். ஆனா, வெக்கம்கிறது பொண்ணுகளுக்கு இருக்கணும்னா! இல்லேன்னா, அவாளுக்குத்தான் கெடுதல். ஆம்பளைகள் அவாளை இன்னும் நன்னாவே வேட்டை யாடிடுவா! ஆணும் பொண்ணும் சமம்கிறதை நான் ஒத்துக்க மாட்டேன். தங்களிட்ட சரீர பலம் அதிகமாயிருக்குன்றதால, புருஷா பொண்ணுகளை அநியாயமா அடக்கி யாளவோ அக்கிரமங்கள் பண்ணவோ கூடாதுன்னு வேணாச் சொல்லுங்கோ. இவா கிட்ட சிலது இருக்கு. அவா கிட்ட சிலது இருக்கு. ஒருத்தர் கிட்ட இல்லாததை மத்தவா இட்டு நிரப்பி, ஈடு செய்யறா. அப்படித்தான் நேக்குத் தோண்றது!’

சாமிநாதன் சிரித்துக் கைதட்டினான்: ‘அட! நன்னாத்தான் பிரசங்கம் பண்றே! நிறையப் படிச்சிருந்தா என்னை வித்து வெல்லம் வாங்கித் தின்னுடுவே போலேருக்கே!’

‘யோசிக்கிறதுக்குப் படிச்சிருக்கணுமா என்ன! எங்களோட யோசனைகளையெல்லாம் நாங்க வாய்விட்டு வெளியில சொல்லிக்கிறதில்லே. ஏன்னா, எதுவும் எடுபடாதுன்னு எங்களுக்குத் தெரியும். அதை வெச்சு எங்களுக்கு யோசிக்கவே தெரியாதுன்னுட்றதா என்ன?’

‘அட!’ என்று சாமிநாதன் உண்மையாகவே தன் வியப்பை வெளிப்படுத்தினான்:

‘கிட்டத்தட்ட அதையே தான் நானும் சொல்றேன், பங்கஜம்! பொண்ணுகள்ளாம் படிச்சா நிச்சியமா இன்னும் அதிகமாவே யோசிப்பா. யோசனைகளை வெளியிட்றதுக்கு உண்டான தைரியமும் அவாளுக்கு வரும். அது வந்தாத்தான் நல்லது. இல்லேன்னா, இன்னும் பல நூறு வருஷங்களுக்குப் பொண்ணுகளுக்கு விமோசனமே இல்லே! இப்ப பாரு. நீ தைரியமா என்னோட கெளம்பி வந்தே. உன்னை மாதிரி எல்லாப் பொண்ணுகளும் துணிஞ்சா, அவா ஒரு மூலையில உக்காந்துண்டு மூக்கைச் சிந்திண்டிருக்க வேண்டாம், பாரு! பொண்டாட்டி செத்தா அந்தப் புருஷன் மறு வருஷமே புது மாப்பிள்ளை. ஆனா, பொண்ணு? இதென்ன நியாயம்? இப்ப உன்னோட விஷயத்தையே எடுத்துக்கோ. வரிசையாப் பொண்ணாவே பொறந்துதுன்னு உன்னை அவன் தள்ளி வெச்சான். அது பொண்ணோட ஒடம்பு வாகா, இல்லே, புருஷனோட ஒடம்பு வாகான்னு யாருக்குத் தெரியும்? .. .. .. அது இருக்கட்டும், நீ எப்ப என்னை அப்பாவாக்கப் போறே?”

பங்கஜத்தின் முகம் அவள் பெயருக்கேற்பத் தாமரை போன்றே சிவந்து மலர்ந்து போயிற்று.: ‘இன்னும் எட்டே மாசத்துலே!’

.. .. .. சாமிநாதன் முகமலர்ச்சியுடன் இவ்வுரையாடலை யெல்லாம் ரெயில் பெட்டியில் பயணம் செய்தபடி நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘அம்மாவுக்கு இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியா யிருக்கும்! ’

பங்கஜத்தையும் தன்னுடன் அழைத்துச் செல்ல அவன் பெரிதும் அவாவினான். ஆனால், அவள் அதற்கு இணங்கவே யில்லை. எவ்வளவோ வாதாடிப் பார்த்தும், அவள் கொஞ்சங்கூட மசியவில்லை. உண்மையில், அவனுக்கே அந்தத் துணிச்சல் முழுமையாக வரவில்லை. பயந்து நடுங்கிக்கொண்டேதான் பயணம் செய்துகொண்டிருந்தான். ஓர் ஆண்பிள்ளையாகிய தன்னிடம் கூட இல்லாத துணிச்சலைப் பட்டிக்காட்டுப் பெண்ணான பங்கஜத்திடம் எப்படி எதிர்பார்க்க முடியும் என்றெணிப் பெருமூச்சுவிட்டான். அம்மாவைச் சமாதானப் படுத்தவோ சமாளிக்கவோ தன்னால் முடியுமா என்கிற ஐயத்தில் அவன் கலங்கித்தான் போயிருந்தான்.

.. .. .. போய்ச் சேர்ந்த அன்றே பிற்பகலில் சாமிநாதன் பேச்சைத் தொடங்கினான்: “அம்மா! உங்கிட்ட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும். அதைக் கேட்டுட்டு நீ பதறக்கூடாது. ஏன்னா, கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்.”

தங்கம்மா விரிந்த விழிகளால் அவனை ஏறிட்டாள்: “என்னடா சொல்ப்போறே? கல்யாணம் வேண்டாம், காட்சி வேண்டாம்னு சொல்லிண்டு நீ தனிமரமா நின்னுண்டிருக்கியே அந்த அதிர்ச்சியையும் மனக்கஷ்டத்தையும் விடவா பெரிய அதிர்ச்சி இன்னொண்ணு இருக்கப் போறது?”

“இஇஇ.. .. ..இல்லேம்மா.. .. இது ரொம்பவே அதிர்ச்சியான விஷயம்.. .. “

“சொல்லு.”

“ .. .. .. .. .”

“சொல்லுடா!”

“.. .. அம்மா! நீயும் இந்த ஊர்க்காராளும் நினைச்சிண்டிருக்கிற மாதிரி, பங்கஜம் கொளம், குட்டை எதிலேயும் விழிந்து உசிரை விடல்லே.”

தங்கம்மாவின் முகத்தில் ஒரு வெண்மை கணத்துள் பரவியது. பயங்கரமான – தன்னால் சற்றும் செரித்துக்கொள்ள முடியாத – அந்த உண்மையைச் சரியாகவே ஊகித்துவிட்ட பொருள் ததும்பிய பார்வையை அவன் மீது பதித்தபடி, அவள், “அப்பிடின்னா?” என்றாள்.

“பங்கஜம் என்கூடத்தான் இருந்திண்டிருக்காம்மா!”

“என்னது! உங்கூட இருக்காளா! என்னடா சொல்றே நீ? அப்படின்னா, அவளை நீ வெச்.. .. வெ.ச்சிண்டா இருக்கே?”

சாமிநாதனுக்கு முகம் சிவப்பேறிப் போயிற்று. அவன் தலை தாழ்ந்தது. ஆனால், மறு நொடியே சமாளித்துக்கொண்டு, தலை உயர்த்தி நேராகத் தங்கம்மாவை நோக்கினான்: “அப்படியெல்லாம் அசிங்கமாப் பேசாதேம்மா. அவளுக்கு நான் முறையாத் தாலிகட்டி யிருக்கேன். இப்ப அவன் என் பொண்டாட்டி.”

தங்கம்மாவின் கண்கள் உடனேயே நிறைந்து அவற்றின் விளிபுகளைத் தாண்டிக் கண்ணீர் பெருகி வழியலாயிற்று.

“அம்மா! இப்ப என்ன நடந்துடுத்து?”

“ இன்னும் என்னடா நடக்கணும்? நம்ம ஜாதியென்ன? குலமென்ன? கோத்திரமென்ன? பழக்கவழக்கமென்ன? இப்படி ஒரு தகாத காரியம் பண்ணிட்டு வந்து அதைப் பத்தின கூச்சமே இல்லாம என் எதிர்ல நின்னுண்டு அதை உன் வாயாலெயே சொல்லவேற செய்யறியே! தூ! நோக்கு வெக்கமாயில்லே? அன்னிக்கு அந்தத் தடிச் சிறுக்கியை நீ நம்மாத்துல வேலைக்கு வெச்சுக்கலாம்னு சொன்னப்பவே நேக்கு லேசா நெருடித்து. என்ன சொக்குப் பொடி போட்டாளோ அந்தச் சிறுக்கி!”

“அம்மா! இத பாரு. அவ நிரபராதி. அவளை எதுவும் குத்தம் சொல்லாதே. அவ மாட்டவே மாட்டேன்னுதான் சொன்னா. நான் தான் அவளைக் கட்டாயப் படுத்தினேன்.”

“கட்டயப்படுத்தினா விழுந்துடணுமா? நல்ல பொம்மனாட்டிகள் அப்படி விழமாட்டாடா. அவ துக்கிரி ஜென்மம். ஓடுகாலி.”

“சரி. விடு. இந்த அளவுக்கு அவளை வெறுக்குற உங்கிட்ட இனிமே நேக்கென்ன வேலை? நான் போறேன்.. .. அவ பிள்ளை உண்டாயிருக்கா. உங்கிட்ட கொண்டுவந்து விடலாம்னு நெனச்சேன்.. .. ஆனா நீ என்னடான்னா .. ..”

“அந்தக் கண்றாவி வேற வந்துடுத்தா! ராம, ராமா! அவ இந்தாத்து வாசப்படி கூட மிதிக்க விடமாட்டேண்டா. தெரிஞ்சுதா? என் பேச்சை மீறி அவளை நீ கூட்டிண்டு கீட்டிண்டு வந்து நின்னியோ.. .. .. நான் நம்மாத்து உத்தரத்துல தொங்கிடுவேன்! இது சத்தியம்!”

அவன் திகைத்துப் போய் நின்றான்.

‘நீ இப்படி ஒரு அவலக்காரியம் பண்ணினதுக்கு, பேசாம பிரும்மசாரியாவே இருந்திருக்கலாம்டா. கண்றாவி!”

“சரிம்மா. நமக்குள்ள எதுக்கு வீண் தர்க்கம்? நான் கெளம்பறேன்.. .. ஒண்ணு மட்டும் சொல்லிட்டுப் போறேன், கேட்டுக்கோ. பிள்ளைகளோட சந்தோஷந்தான் தன்னோட சந்தோஷம்னு நினைக்கிறவதான் நிஜமான அம்மா. மத்தவாள்ளாம் சும்மா!”

“அப்படியே வெச்சுக்கோடா. உன்கிட்ட செர்ட்டிபிகேட் வாங்கறதுக்காக நான் கண்ட கழிசடைகளையும் வீட்டுக்குள்ள விட முடியாது. அன்பில்லாத அம்மாவாவே நான் இருந்துட்டுப் போறேன்.. .. என்னோட அன்பைப் பத்திப் பேசறதுக்கு நோக்கென்ன தகுதிடா இருக்கு? உன் பாஷையிலேயே நானும் பேசலாமோல்லியோ? அம்மா மனசு கோணாம நடக்கிறவன் தான் நிஜமான பிள்ளை, மத்ததெல்லாம் சள்ளைன்னு!…. போடா! போ! என்னமோ பேச வந்துட்டான், பெரிசா!”

அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கவும் பிடிக்காதவள் போல் தங்கம்மா விருட்டென்று அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.

சாமிநாதன் மனம் வெறுத்துப் போய் உடனேயே புறப்பட்டுவிட்டான்.

.. .. .. “பங்கஜம்! நீ சொன்னது சரிதான். அம்மா நம்ம வழிக்கு வரவே மாட்டா. அவாளை மசியவைக்கவே முடியாது. ஒரு வேளா நம்ம ஊர்ப்பக்கமே நாம பல காலம் தலை காட்டாமயே இருந்தா, அது சாத்தியப் படுமோ என்னமோ!”

“நேக்கு நம்பிக்கை இல்லேன்னா.. .. ஆறு மாசத்துக்கு ஒரு தரம் போய் 1500 ரூவா அம்மாகிட்டேர்ந்து வாங்கிண்டு வந்திண்டிருந்தேளே? இனிமே அது கிடைக்காது. இல்லியா?”

“ஆமா. கிடைக்காது. தவிர பணம் தான்னு எந்த மூஞ்சியெ வெச்சிண்டு நான் போய் அவா முன்னாடி நிக்கறது? .. .. நல்ல வேளையா நான் ஏதோ கொஞ்சம் சேத்து வெச்சிருந்ததால இத்தனை நாளும் வண்டி ஓடித்து. இனிமே கஷ்டந்தான். பாக்கலாம். அச்சா·பீஸ்லெ இன்னும் கொஞ்சம் அதிகமா வேலை பண்ணணும்னு நினைக்கறேன்.. ..”

“கொழந்தை வேற வரப் போறதேன்னா?”

சாமிநாதன் உடனே பதில் சொல்லவில்லை.

சற்றுப் பொறுத்து, “பங்கஜம்! நாம ரெண்டு பேரும் இனிமே நிறைய நூல் நூக்கலாம். அதுல கொஞ்சம் வருமானம் வரும். இத்தனை நாளும் கூட அதைச் செஞ்சிருக்கலாம். ஏனோ தோணாம போயிடுத்து. ஒரு ராட்டை வாங்கிடறேன். என்ன சொல்றே?” என்றான் முகமலர்ச்சியோடு.

“அதுல என்னன்னா பெரிசா வருமானம் வந்துடப் போறது?”

“அப்பிடி இல்லே, பங்கஜம். ஒண்ணுமில்லாததுக்கு ஏதோ ஒண்ணு. கொஞ்ச நளுக்கு முந்தி யங் இண்டியா பத்திரிகையில நம்ம ராஜகோபாலாச்சாரி இது பத்தி எழுதியிருந்தார். “ராட்டையில நூல் நூக்கறதுல வர சம்பாத்தியம் ரொம்ப சொற்பம்னு சிலர் சொல்றா. அப்படி கிடையாது’ ன்னு தொடங்கி, அவர் அது பத்தி விவரமாவே எழுதியிருக்கார். சேலம் ஜில்லாவில சங்கரகிரின்ற ஊர்ல ரெயில்வே தொழிலாளிகள் ஒரு நாளுக்கு, ஆம்பளையா யிருந்தா நாலனா, பொம்மனாட்டியா யிருந்தா ரெண்டணான்னு கூலி வாங்கறாளாம். ஆத்துலேர்ந்து கெளம்பற நேரம், சாப்பாட்டு இடைவேளை, வேலை செய்யற மொத்த நேரம், ரெயில்வே ஸ்டேஷன்லேர்ந்து ஆத்துக்குப் போற நேரம் எல்லாமாச் சேத்து மொத்தம் பன்னண்டு மணி யாறதாம். இந்தப் பன்னண்டு மணி நேரத்துல அவா மொத்தம் நாலணாதான் சம்பாதிக்கிறா. அத்தோட ஒப்பிட்டோம்னா, ராட்டையில சிட்டம் சிட்டமா நூல் நூத்து நாம் சம்பாதிக்கிறது அதுல முக்கால்வாசிக்கும் மேலேன்னு கணக்குப் போட்டுப் பாத்துச் சொல்றார். அதுல இன்னொரு லாபம் வேற இருக்கு. நாம வெளியில எல்லாம் போகாம, வெயில், மழைன்னு அலையாம, ஆத்து வேலையப் பாத்துண்டே, அப்பப்போ ஓய்வெடுத்துண்டே நூல் நூக்கற வேலையை நம்ம இஷ்டப்படி, வசதிப்படி செய்யலாம். ஏழைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்னே அவர் எழுதி யிருக்கார், பங்கஜம்.”

மறு நாளே இருவரும் நூல் நூற்கத் தொடங்கினார்கள் ஏதோ கொஞ்சம் சம்பாதிக்க முடிந்தது.

.. .. .. ஒரு தரம் பாப்பாரப்பட்டி பாரதமாதா சங்கம் நடத்திய கூட்டத்தின்போது போலீசிடம் மாட்டிக்கொள்ள இருந்த சாமிநாதன் தெய்வாதீனமாய்த் தப்பி வந்து சேர்ந்தான். அந்த நாளிலிருந்து அவன் தேச விடுதலைப் போராட்டத்திலிருந்து அறவே விலகிவிட வேண்டும் என்று பங்கஜம் அவனை நச்சரித்து வற்புறத்தலானாள்.

“பயப்படாதே, பங்கஜம்! அப்படி நேக்கு ஏதாவது ஆயிட்டா, என்னோட சிநேகிதாள்ளாம் இருக்கா. அவா உன்னைக் கைவிட்டுட மாட்டா. நான் சொல்லி வெச்சிருக்கேன். நாங்க வெச்சிருக்கிற அச்சு யந்திரம் நாங்க எல்லாருமே சேந்து மொதல் போட்டு வாங்கினது. எனக்கு ஏதாவது ஆச்சுன்னு வெச்சுக்கோ, அப்போ.. .. ..”

“வேண்டாம், வேண்டாம். சொல்லாதங்கோ. அதுக்கு மேல எதுவும் சொல்லாதங்கோ. நிறுத்துங்கோ!” – பங்கஜம் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு கண் கலங்கினாள்.

“அட, இரு, பங்கஜம். நான் பேசி முடிச்சுடறேன். தடுக்காம, தயவு செஞ்சு முழுக்கவும் கேட்டுக்கோ. எனக்கு ஏதாவது ஆச்சுன்னாலும், எங்கம்மா சொத்துல உனக்கு ஒரு சல்லிக்காசு கூடக் கெடைக்காது. சட்டம் அப்படி. சொத்துகள்ளேர்ந்து வர்ற வருமானம் மட்டும்தான் எங்கம்மாவுக்குச் சொந்தம். அவாளால எதையும் வித்துப் பணம் பண்ண முடியாது. என் காலத்துக்கு அப்புறம் எல்லாத்தையும் எவனாவது தாயாதிக்காரன்தான் அடிச்சுண்டு போவான்.”

சட்ட அறிவு இல்லாத பங்கஜம் கேள்விக்குறி தோன்ற அவனைப் பார்த்தாள்.

“ஆமா, பங்கஜம். ஏன்னா, நீ சட்டப்படி என்னோட பொண்டாட்டி இல்லே! அதுலேயும் வேற ஒருத்தருக்கு வாழ்க்கைப்பட்டவ. புருஷனையும் இழக்காதவ. அதாவது சட்டம் உன்னை என்னோட பொண்டாட்டின்னு ஒத்துக்காது.”

“இதை யெல்லாம் நீங்க சொல்லி வைக்கிறது நல்லதுதான். ஆனா, அப்பிடி யெல்லாம் எதுவும் நடக்காது. பகவான் அந்த அளவுக்கு நேக்குக் கஷ்டம் குடுக்க மாட்டார். வேணது ஏற்கெனவே சோதிச்சாச்சு!”

.. .. .. ஆனால், பங்கஜத்தின் நம்பிக்கை பொய்த்துத்தான் போயிற்று.

உரிய நாளில் பிறந்த ஆண் குழந்தைக்குப் பதஞ்சலி என்று பெயரிட்டார்கள். .. .. அதன் இரண்டாம் பிறந்த நாளன்று, சாமிநாதனும் அவன் நண்பர்களும் சென்னையில், சைனாபஜாரில், ஓர் அந்நியத் துணிக்கடைக்கு முன்னால் மறியல் செய்த போது போலீசார் சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப் பிரயோகம் செய்தார்கள்.

சாமிநாதன் கைது செய்யப்பட்டான். தப்பி வந்த அவனுடைய நண்பர்கள் சேதியைச் சொன்ன போது பங்கஜம் நடுநடுங்கிப் போய்விட்டாள். அவள் பயப்பட வேண்டாமென்றும், அவள் செலவுகளைத் தாங்கள் ஏற்பதாகவும் அந்த நண்பர்கள் அவளுக்கு ஆறுதலாய்ப் பேசினாலும், பங்கஜத்துக்கு நிம்மதியோ அமைதியோ ஏற்படவில்லை.

அந்தக் கும்பலில் சாமிநாதனைத் தவர மற்ற எல்லாருமே கலியாணம் ஆகாதவர்களா யிருந்தார்கள். ‘இது மாதிரி போராட்டத்துல ஈடுபட்றவங்கல்லாம் கலியாணம் கட்டக்கூடாதுடா. இப்ப பாரு. பாவம், அவங்க! வாழ்க்கையிலே ஏதாச்சும் ஒண்ணுக்குத்தாண்டா ஆசைப்படணும். நாம கூட அவங்களுக்கு நிரந்தரமான துணை இல்லே. நம்மளையும் எப்ப வேணக் கண்டுபிடிச்சுக் கைதும் பண்ணிடுவாங்க. அப்பால அவங்க கதி?’ என்று சாமிநாதன்பால் அதிருப்தியோடு அவர்களில் ஒருவன் முணுமுணுத்தது பங்கஜத்தின் செவிகளில் விழுந்து அவளைக் கலக்கமுறச் செய்தது. ‘அப்படி ஏதாவது ஆகிவிட்டால், குழந்தையை வைத்துக்கொண்டு நான் எப்படிக் காலத்தை ஓட்டுவேன்?’ என்கிற கவலை அவளை அன்றே அரிக்கத் தொடங்கிவிட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட ‘அரசாங்கக்’ கைதிகளைப் போய்ப் பார்க்க எல்லாருக்குமே தயக்கமாக இருந்தது. ஏனெனில் அவர்களையும் அரசுக்கு எதிரான நாசவேலைக்காரர்களாகவோ, விடுதலைப் போராட்ட இயக்கம் சார்ந்த காங்கிரஸ்கார்களாகவோ போலீஸ் கருதியது. சென்டிரல் ஜெயிலில் இருக்கும் சாமிநாதனைப் போய்ப் பார்ப்பது அவளுக்கு ஆபத்தையே தரும் என்று அவனுடைய நண்பர்கள் அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியிருந்தார்கள்.

எனவே, இனி அவன் விடுதலையாகி வெளியே வரும் நாள் வரையில் தாங்கள் சந்திப்பது சாத்தியமில்லை என்னும் கண்கூடான நிலை பங்கஜத்தின் துயரத்தை மேலும் அதிக மாக்கியது.

சாமிநாதன் ஏற்கெனவே கேட்டுக்கொண்டிருந்தபடி, வத்தலப்பாளையத்துக்குப் போய்வந்த அவனுடைய நண்பன் ஒருவன் மிக மோசமான செய்தியோடு பங்கஜத்தைச் சந்தித்தான். (அங்கு போவதற்கு முன் அவன் அவளிடம் தகவல் தெரிவித்திருக்கவில்லை.)

“உங்கள்லே யாருமே அவரை ஜெயில்ல போய்ப் பார்க்கிறதில்லியே? வத்தலப்பாளையத்துக்குப் போகச்சொல்லி அவர்கிட்டேர்ந்து எப்படி உங்களுக்குச் சேதி வந்துது?’ என்று அவள் வினவியபோது, “ அது அவன் ஜெயிலுக்குப் போறதுக்கும் முன்னாடியே எங்ககிட்ட சொல்லி வெச்சிருந்ததுதான்.. ..” என்று அவன் விளக்கினான்.

“சரி, சொல்லுங்கோ. எங்க மாமியாரைப் பாத்தேளா?”

“அவங்க உசிரோட இல்லேம்மா. செத்துப் போய் மூணு மாசமாச்சு. சாமிநாதனுக்குத் தகவல் சொல்லக் கூடாதுன்னும், அவன் தனக்குக் கொள்ளி வைக்கக் கூடாதுன்னும் சாகிறதுக்கு முந்தி சொல்லிட்டாங்களாம். அதனால எவனோ தாயாதிக்காரன் தான் கொள்ளி வெச்சிருக்கான். அவங்க சொத்தெல்லாம் அந்த ஆளுக்குத்தானாம்.”

காலடி நிலம் நழுவுவது போல் பங்கஜம் உணர்ந்து பொத்தென்று சுவர்ப்பக்கம் சாய்ந்து உட்கார்ந்து போனாள். கரகரவென்று கண்ணீர் பெருகிற்று.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

ஜோதிர்லதா கிரிஜா


தங்கம்மாவின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த பிறகான இந்தச் சில நாளில், சாமிநாதனுடன் எதுவும் பேசாவிட்டாலும் அவனது நடமாட்டம், பூஜையறையில் அமர்ந்துகொண்டு அவன் இரைந்த குரலில் இராகம் போட்டுச் சொன்ன சுலோகங்கள், தேவாரம், திருவாசகம், சாப்பாடு பரிமாறுகையில் நிகழ்ந்த அவசியமான சொற்பரிமாற்றம் ஆகியவை அவளுள் அவன் மீது ஒரு பாதிப்பை விளைவித்திருந்தன. அடிக்கடி அவன் அவள் கனவில் வந்தான். கனவின் போது அவளுடன் ஏதும் பேசாவிட்டாலும், அவளைப் பார்த்து அன்பாகச் சிரித்தான். அவன் விழிகளில் தெறித்த அன்பின் பாதிப்பால் அவள் உறக்கம் கலைந்து அடிக்கடி எழுவது வழக்கமாகிவிட்டது. ‘இது பாவம். தகாத எண்ணங்களின் விளைவு. என்னையும் மீறி என்னை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் நினைப்பின் தாக்கம். இது கூடாது’ என்கிற சுயக்கடிதலையும் கடந்து அது அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஒரு தரம், ‘இந்தச் சாமிநாதன் எனக்குத் தாலி கட்டி யிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!’ என்னும் “பாவம்” நிறைந்த கற்பனையும் அவளுக்கு வரத்தான் செய்தது! ‘கணவனின் உறவை இழந்து வாழும் நீயும் ஒரு கைம்பெண் போன்றவள்தான். உன்பாலும் என் உள்ளம் உருகவே செய்யும்’ என்று அவன் காந்தியின் அந்தக் கட்டுரைகளைக் கொடுத்துத் தனக்கு உணர்த்த முயன்றதோடு கடிதம் வேறு எழுதி யிருந்தது அவளுள் அளவு கடந்த நடுக்கத்தை விளைவித்தது. அவள் பதறிய நெஞ்சுடன் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினாள்:

‘அன்புள்ள பங்கஜம்!

நான் இந்தக் கடிதத்தை எழுதுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையானால், என்னை மன்னித்து விடுங்கள். முதலில் தயவு பண்ணி இதைப் பொறுமையாகப் படித்து முடியுங்கள். அதற்குப் இறகு உங்கள் தீர்ப்பு எதுவானாலும் அதை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். என் அம்மாவிடம் என்னைக் காட்டிக் கொடுத்தாலும் சரி. அல்லது ஊர்க்காரர்களிtaம் தெரிவித்து என்னை அவமானப்படுத்தினாலும் சரி. உங்கள் மீது என் உள்ளத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் அன்பால் நான் எதையும் தாங்கிக்கொள்ளுவேன்.

கிட்படத்தட்ட, பதினொரு வருஷங்களாகப் புருஷனை விட்டுப் பிரிந்திருக்கிறீர்கள். இனி அந்த மனிதன் உங்களைச் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை. உங்களுக்கோ வயது இருபத்தொன்பதுதான் ஆகிறது. வெளியே போய் வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலை. பக்கவாதத்தால் ஒருமுறை உங்கள் தகப்பனார் படுத்த படுக்கையாக இருந்து குணமானவர் என்று அறிகிறேன். வேலை செய்கிற இடங்களில் நாகலிங்கத்தைப் போன்ற ஆண்களே அதிகம். அவன் விதி விலக்கு என்கிற எண்ணம் ஒரு போதும் உங்களுக்கு வேண்டாம். சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு பெண்ணை நாசப்படுத்தப் பார்க்கும் கும்பலே இந்த உலகத்தில் அதிகம். இதை எண்ணிப் பார்த்தால், நம் சாஸ்திர சம்பிரதாயங்கள் மீது உங்களுக்கு மரியாதையே வராது. அவற்றை மீறுகிற தைரியம்தான் வரும்!

இந்த ஊரில் இருந்துகொண்டு நீங்கள் வதைபட வேண்டிய அவசிய மில்லை. நீங்கள் சம்மதித்தால், நான் உங்களைப் பட்டணத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் விடுவேன். அங்கே போய் நாம் கல்யாணம் செய்துகொண்டு கவுரவமாக வாழலாம். கல்யாணம் ஆகி, புருஷனும் உயிருடன் இருக்கின்ற ஒரு பெண்ணுக்கு இப்படி யெல்லாம் எழுதிகிறானே, இவனுக்கு என்ன தைரியம் என்று தப்பாக எண்ண வேண்டாம். இத்தனை நாளும் நான் கல்யாணமே செய்துகொள்ளக் கூடாது என்று இருந்தவன்தான். உங்களைப் பார்த்த நிமிஷத்திலிருந்து என் மனம் மாறிவிட்டது. உங்களை எண்ணி என் மனம் எந்த அளவுக்கு உருகுகிறது என்பதையோ உங்களை யடைய என் மனம் எப்படித் தவியாய்த் தவிக்கிறது என்பதையோ விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்ல. நான் உங்களை ஒரு போதும் கைவிட மாட்டேன். உங்களுக்கு விருப்பம் மிருந்தால் சொல்லுங்கள். அதன் பிறகு நாம் ஆக வேண்டியதைப் பற்றி யோசிக்கலாம்.

உங்கள் அப்பாவை எண்ணிக் கவலைப்பட வேண்டாம். அவர்களெல்லாம் வாழ்ந்து முடித்துவிட்டு வாழ்வின் வெளிவாசலில் நின்றுகொண்டிருப்பவர்கள். வாழ்வை இழந்து நிற்கும் உங்களுக்கு ஒருவன் அளிக்க முன்வரும் வசந்தத்துக்குக் குறுக்கே நிற்கும் உரிமை அவர்களுக்கு இல்லை. ஊரில் ஒரு வேளை ஊகிப்பார்கள். என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் சம்மதித்தாலொழிய, நான் உங்களை அழைத்துக்கொண்டு பட்டணத்துக்குப் போவதாக யாரிடமும் சொல்லவே மாட்டேன். யார் கண்ணிலாவது பட்டு, விஷயம் மற்றவர்க்குத் தெரியவந்தால், அது வேறு விஷயம்.

என்ன சொல்லுகிறீர்கள்? நம் ஜாதியிலும் குலத்திலும் இல்லாத ஒன்றை இவன் தயக்கமே இல்லாமல் செய்யத் துடிக்கிறானே என்று என் மீது அருவருப்பு அடையாதீர்கள். என் அன்பு உயர்ந்தது. எனக்கு வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அதாவது உங்கள் உறவு. ஆனால், உங்களை அழைத்துப் போனதன் பிறகும், நீங்கள் சம்மதித்தாலல்லாது, என் விரல் கூட உங்கள் மேல் படாது. மிகவும் கவனமாக இருப்பேன். முப்பது வயது கடந்தும் பிரும்மசாரியாக இருக்கும் எனக்கு இது ஒரு பொருட்டே இல்லை. ஆதரவான பதில் தேவை. இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாளில் நான் புறப்படுகிறேன். நான் மட்டும் தனியாகப் போகப் போகிறேனா, அல்லது உங்களுடன் போகப் போகிறேனா என்பது உங்கள் பதில் பார்த்து நிச்சயம் செய்ய வேண்டிய விஷயம். இதன் கீழேயே உங்கள் பதிலை – அது எதுவானாலும் – எழுதுங்கள்.

உங்கள் அன்புள்ள,

சாமிநாதன்.

பங்கஜத்தின் படபடப்பு விநாடிக்கு விநாடி அதிகரித்துக்கொண்டிருந்தது. மூச்சு வாங்கியது. முகத்திலும் கழுத்திலும் வேர்வை அரும்பத் தொடங்கியது. நோட்டுப் பத்தகத்தைப் பற்றி யிருந்த விரல்கள் வெடவெடவென்று ஆடின. அவள் விழிகள் அவளையும் அறியாது சாமிநாதனின் அறைப் பக்கம் பார்த்தன.

அவள் பதில் எழுதுவதற்குத் தோதாக ஒரு பென்சில் நூலில் கோக்கப்பட்டு, நோட்டுப்புத்தகத்தின் நடுவில் இணைக்கப்பட்டிருந்தது.

தன்னைப் பற்றிய உணர்ச்சிகள் சார்ந்த வியப்புடன் பங்கஜம் ஏற்கெனவே திகிலும் திகைப்புமாகத்தான் இருந்து வந்தாள். ‘அப்படி ஓர் எண்ணம் வருவது பாவமானது’ என்று தன்னைத் தானே அவள் கடிந்துகொண்டிருந்த நிலையில் அது ஒன்றும் பாவமான காரியமன்று என்கிற நம்பிக்கையை அந்தக் கடிதம் அவளுள் விதைத்தது.

‘என்னதான் எனக்கு ஆர்வம் இருந்தாலும், உடனே பதில் எழுதிவிடக்கூடிய விஷயமா இது? நான் யோசிக்க வேண்டாமா? .. .. .. இவர் சொல்லுவது மாதிரி எனக்கு நல்லது செய்யாத ஓர் ஏற்பாட்டுக்கு – இன்னும் சொல்லப் போனால் நிச்சயமாய்த் தீமை செய்யப் போகிற ஓர் ஏற்பாட்டுக்கு – அதுதான் மரபு என்கிற ஒரே காரணத்துக்காக – சாஸ்திரம் பெண்ணுக்கு அந்த உரிமையைக் கொடுக்கவில்லை என்பதற்காக- நான் ஏன் என் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்ள வேண்டும்? .. .. ..’

சாமிநாதன் மெதுவாகத் தன்னறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். முதலில் தாயின் புறம் நோக்கி அவள் குறட்டை விட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த பின், பங்கஜத்தின் புறம் நோக்கிப் புன்னகை செய்தான். பங்கஜம் எழுந்து நின்றாள். அவன் அவளைத் தாண்டிக்கொண்டு, சமையற்கட்டுக்குத் தண்ணீர் குடிக்கப் போவது போல் நடந்தான்.

அவளை நெருங்கிய கணத்தில், “மெதுவா பதில் சொன்னாப் போறும்,” என்றான். அப்போது அவன் அவளைப் பார்த்த பார்வையும், பார்த்த கண்களிலிருந்து சிந்திய கரையற்ற காதலும் பங்கஜத்¨தை என்னவோ செய்தன. உடலையும் உயிரையும் கடந்து ஆன்மாவைத் தழுவிக் கரைகிற மட்டற்ற அன்பு அது என்பதை அவள் புரிந்துகொண்டாள். பசிக்கிற விழிகளையே தன் கணவனிடம் பார்த்துப் பழகி யிருந்த அவளுக்கு அந்தப் பார்வை ஒரு புது அனுபவமாக இருந்தது. அவள் சிலிர்த்துப் போனாள். அவள் விழிகளில் உடனடியாக மெல்லிய நீர்ப்படலம் பரவியது. அதைக் கவனித்த சாமிநாதனின் முகத்தில் சிறு கீற்றாய்ப் புன்னகை தோன்றியது.

‘இவளுக்கு என் மீது கோபமோ அருவருப்போ இல்லை! இவள் என் வழிக்கு வரக் கூடியவள்தான்!’ என்னும் நம்பிக்கையை அவள் கண்களின் கலக்கம் அவனுள் தோற்றுவித்தது. அவன் திரும்பித் தன் தாயின் குறட்டை யொலியைக் கேட்ட பின், “பயப்படாதீங்கோ, பங்கஜம்! இதைப் பத்தி உடனே உங்களால முடிவெடுக்க முடியாதுன்னு நேக்கு நன்னாத் தெரியும். டைம் எடுத்துக்குங்கோ. ஆனா, நான் இன்னும் பத்தே நாள்ல கெளம்பணும். எங்கம்மாவை நம்ப முடியாது. நான் மெட்றஸ்க்குப் போனதும் உங்கள வேலையை விட்டு நிறுத்தினாலும் நிறுத்திடுவா. எங்கம்மா அப்ப்டிப் பண்ணிட்டா அப்புறம் நாம சந்திச்சுப் பேசிக்கவே முடியாம போயிடும்.. .. ..” என்றான், மிக மெல்லிய குரலில்.

வாய் பேசிக்கொந்திருக்க, அவன் பார்வை குறட்டைவிட்டுக் கொண்டிருந்த தங்கம்மாவின் மீதே பதிந்திருந்தது.

“நோட்டு இந்த மேசை டிராயர்ல இருக்கட்டும். அம்மா தூங்கறப்ப உங்க பதிலை எழுதிக் குடுத்துடுங்கோ. ஏன்னா, உக்காந்து பேசறதுக்கும் கொள்றதுக்கும் நமக்கு சந்தர்ப்பம் கெடைக்கும்னு தோணல்லே.”

அவன் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கிக் கூடத்து மேசை இழுப்பறைக்குள் வைத்தான். பிறகு, சமையற்கட்டுக்குச் சென்று தண்ணீர் குடித்த பின் தன் அன்பையெல்லாம் கொட்டி அவளைப் பார்த்துவிட்டுத் தன்னறைக்குள் புகுந்துகொண்டான்.

பங்கஜத்தின் செஞ்சுத் துடிப்பின் ஒலி எகிறிக்கொண்டே போயிற்று.. .. எழுந்து போய்க் காப்பிக்கு அடுப்பை மூட்டிவிட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தாள். நெடுநாளக உறங்கிக்கொண்டிருந்த தனது பெண்மை உசுப்பப்பட்டு விட்டதாக மிக உறுதியாக உணர்ந்து அதிர்ந்து போனாள். ‘சாமிநாதன் நல்லவர். என்னைப் பட்டணத்துக்குக் கூட்டிக்கொண்டு போய் ஒழுங்காய்க் கல்யாணம் செய்துகொண்டுதான் குடித்தனம் வைப்பார். சகுந்தலையைத் துஷ்யந்தன் கைவிட்டது மாதிரி இவர் என்னைக் கைவிடமாட்டார்!.. .. ..’

இரவெல்லாம் கண்கொட்டாமல் விழித்திருந்து யோசிதத பின் விடிந்த மறு நாள் பங்கஜம் அதே நோட்டுப் புத்தகத்தில் சாமிநாதனுக்குப் பதில் எழுதினாள் – தனது கொச்சையான நடையில்.

‘உங்க்ளை என்ம்னன்னு சொல்லி எழுதறதுன்னே தெரியல்லே. அதனால மொட்டையா ஆரம்பிக்கிறேன். உங்களோட பட்டணத்துகு வர்றதுக்கு நான் சம்மதிக்கிறேன். நேத்தெல்லாம் தூங்காம யோசிச்சுட்டு இந்த முடிவுக்கு வந்திருக்கேன். யோசிச்சுப் பாத்தா, சாஸ்திரம் பொண்களுக்கு ரொம்பவே அநியாயம் பண்ணி இருக்குன்னுதான் தோண்றது. நேக்கு உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு. ஆனா, எங்கப்பாவை நெனச்சாத்தான் பாவமா யிருக்கு. நான் இப்படிப் பண்ணிட்டது ஒரு ஊகமாப் புரிஞ்சுட்டா, நிச்சியம் அவர் தூக்குப் போட்டுண்டுடுவார். அப்படி ஏதாவது ஆச்சுன்னா பகவான் என்னை மன்னிக்கவே மாட்டார். இருந்தாலும் நான் உங்க கூட வறேன். மத்த வெவரமெல்லாம் அப்புறமா நேக்குச் சொல்லுங்கோ.. .. ..’

மேற்கண்டபடி எழுதி மேசை இழுப்பறையினுள் தான் வைத்துவிட்டதை ஒரு கண்ணசைப்பின் வாயிலாக ஒரு வாய்ப்பான கணத்தில் அவள் அவனுக்குத் தெரிவிக்க, அவனும் அதை எடுத்துக்கொண்டான்.

கதவைத் தாழிட்டுக்கொண்டு பங்கஜத்தின் கடிதத்தைப் படித்த அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ‘காந்தி சொல்லுவது போல் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ரொம்பவும் பெரிய வித்தியாச மெல்லாம் இல்லை. அவர்களது காதல் அதிக அளவில் ஆன்மாவோ¡டும் மனசோடும் சம்பந்தப் பட்டது என்பதைத் தவிர! உடலார்ந்த விஷயத்திலும் ஆண்களைவிடவும் சற்றே தீவிரம் குறைவு என்பதையும் தவிர! .. .. .. பஞ்சாட்சரம் அய்யரை நினைத்தால் எனக்கே பாவமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கு என்ன செய்ய? பட்டணத்துக்குப் போன பிறகு அவருக்குப் பணம் அனுப்பலாமா? ஆனால், விஷயத்தை நானே தபால் ஆ·பீஸ் மூலமாய்த் தம்பட்டம் அடிப்பதாக இருக்குமே. .. .. எனக்கு அது பற்றிய பயம் இல்லாவிட்டாலும், பங்கஜம் சம்மதிக்க வேண்டுமே? அவள் சம்மதித்தால் அப்படிச் செய்யலாம். .. ..’ – இப்படி யெல்லாம் யோசித்துக்கொண்டே சாமிநாதன் அவள் எழுதியிருந்த தாளைத் தனியாய்க் கிழித்துத் தன் பெட்டியின் அடியில் பத்திரப்படுத்தினான்.

ஆனால், அதற்கெல்லாம் தேவையே இல்லாத படி, மறுநாளே அதிகாலையில் திடீரென்று பக்கத்து வீட்டுப் பாகீரதியை அழைத்து, நெஞ்சுவலி என்று ஜாடை காட்டிய பஞ்சாட்சரம் மிகச் சில நொடிகளில் தலையைத் தொங்கப் போட்டுவிட்டார் ..

மகளின் நடத்தை சார்ந்த அவமானம் அவருக்கு வரக்கூடாது என்பதாலோ, அல்லது பங்கஜத்துக்கும் தனக்கும் குற்ற உணர்வு வரக்கூடாது என்பதற்காகவோ, ஆன்டவனாய்ப் பார்த்து அவரை அழைத்துக்கொண்டு விட்டதாகத்தான் சாமிநாதனுக்குத் தோன்றியது. தங்கம்மாவின் முழு மனத்துடனான ஆதரவும் இணக்கமும் கிடைக்காவிட்டாலும், சாமிநாதனே அவளது மறுதலிப்பைப் பொருட்படுத்தாமல் அவருடைய ஈமச்சடங்குச் செலவுகளை ஏற்றான். யாரோ ஒரு தாயாதிக்காரன் கொள்ளி வைக்க அவரது வாழ்க்கை முடிந்து போனது.

பத்து நாள்களில் கிளம்ப இருந்த சாமிநாதன் மேலும் ஒரு வாரத்துக்குத் தன் புறப்பாட்டை ஒத்திப்போட்டான். பங்கஜத்தோடு பேசி முடிக்க வேண்டியவை நிறைய இருந்தன. வியந்து கேள்வி கேட்ட தங்கம்மாவிடம் தன் நண்பனிட மிருந்து இன்னும் தகவல் வரவில்லைஎன்று காரணம் சொன்னான்.

பதின்மூன்றாம் நாள் காரியம் ஆனதும் பங்கஜம் சமையல் வேலைக்குத் திரும்பினாள். இதற்கிடையே அவளுக்கு உதவும் சாக்கில் செங்கல்பாளையத்துக்குப் போய் வந்து கொண்டிருந்த சாமிநாதன் தோதான நேரங்களில் அவளுடன் பேசித் தெரிவித்த திட்டத்தை அவள் ஏற்றுக்கொண்டாள். தன் அப்பாவைத் துன்புறுத்தும் சாத்தியம் இனிக் கிடையாது என்பதால், தனது மறுவாழ்வை அமைத்துக் கொள்ளுவதில் அவளுக்கிருந்த கொஞ்ச நஞ்சத் தயக்கமும் அறவே நீங்கியது. இருந்தாலும், ‘அப்பா! உங்களுக்குப் பிடிக்காததைச் செய்யறதுக்காக என்னை மன்னிச்சுடுங்கோ’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

‘நாம ரெண்டு பேரும் ஒரே நாள்ள காணாமப் போறதுக்குப் பதிலா நான் முதல்ல திண்டுக்கல்லுக்குப் போய் ரெயில்வே ஸ்டேஷன்ல காத்திண்டிருக்கேன். நான் கெளம்பின மத்தாநாள் அம்மா குளிக்கப் போறப்ப நீங்க கெளம்பி நேரா திண்டுக்கல்லுக்குப் பஸ்ல வந்துடுங்கோ. ரெயில்வே ஸ்டேஷனுக்கு யாரைக்கேட்டாலும் வழி சொல்லுவா. அங்க நான் காத்திண்டிருப்பேன். அடுத்த ரெயில்ல ஏறி மெட்றாஸ் போயிடலாம், ‘ என்று அவன் சொல்லி யிருந்தான்.

தான் கொஞ்சமும் நினைத்துப் பாராத ஒரு திருப்பம் தன் வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டிருந்த ஆச்சரியம், அதைத் தொடர்ந்த மனங்கொள்ளா மகிழ்ச்சி ஆகியவை மட்டுமே இப்போது பங்கஜத்தின் உள்ளத்தை நிறைத்திருந்தன. குற்ற உணர்வு காணாமல் போயிருந்தது !

.. .. .. எல்லாம் திட்டமிட்டபடியே நடந்தன. மதராஸ் புரசைவாக்கம் ‘தானா’ தெருவில் சாமிநாதனும் பங்கஜமும் ஒரு சிறிய வீட்டில் குடிபுகுந்தார்கள். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வண்டியில் ஏறி யமர்ந்த பிறகுதான் அவன் அவளை “நீ” என்று ஒருமையில் விளிக்கலானான்.

“அப்பா செத்துப் போய் நிறைய நாள் ஆகல்லே. அதனால இன்னைக்கு நம்ம வாழ்க்கையில மொத நாளானாலும் அதுக்காகப் பாயசம் கீயசம் வெச்சுடாதே!” என்ற அவனைக் காதல், பரிவு, மரியாதை, நன்றி ஆகிய பல்வேறு உணர்ச்சிக் குவியலால் கண்களில் நீர் சோர அவள் பார்த்தாள்.

சில நாள் ஆனதும், ஒரு நாள், “பங்கஜம்! நான் ஏற்கெனவே சொன்னபடி நீ மனப் பூர்வமா இணங்கினாலொழிய நான் உன்னைத் தொடமாட்டேன்!” என்ற சாமிநாதனை அவள் வெட்கத்துடன் ஏறிட்டாள்.

உண்மையிலேயே தொட நினைக்காதவன் அந்தப் பேச்சையே எடுத்திருக்கப் போவதில்லை என்பது புரிய, ‘மறுத்துடாதே, பங்கஜம்!’ என்கிற கெஞ்சுதலே அச் சொற்களில் வெளிப்பட்டதாகவும் புரிந்துகொண்ட பங்கஜம், “ஒரு காயிதம் தறேளா?” என்றால் முகத்துச் சிவப்புடன்.

“எழுதிக் காமிக்கப் போறியா என்ன?””

அவன் கொடுத்த வெள்ளைத் தாளில், “எனக்குக் கொழந்தை வேணுமே!” என்று எழுதி அவனிடம் நீட்டிவிட்டு அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

அட்டகாசமாய்ச் சிரித்த அவன், “தேங்க்ஸ், ரொம்ப தேங்க்ஸ்!” என்றான்.

.. .. .. மறு நாள் அவன் அவளிடம் அதுகாறும் தான் கூறாதிருந்த சில விஷயங்களைச் சொன்னான்.: “பங்கஜம்! நான் இங்க அச்சாபீஸ் வெச்சிருக்கிறதென்னவோ உண்மைதான். ஆனா அதை நாங்க நாலஞ்சு பேர் கூட்டாச் சேந்துதான் வெச்சிருக்கோம். அப்பப்ப கல்யாணக் கடுதாசி, பெருக்கல் வாய்ப்பாடு இதை யெல்லாம் அச்சடிச்சாலும் எங்களோட முக்கியமான காரியம் வெள்ளைக்காரனுக்கு எதரான நோட்டீஸ்களை அச்சடிக்கிறதுதான்!”

“அய்யோ! மாட்டிண்டுட்டேள்னா?”

“ஏதோ இது வரையில தப்பிச்சிண்டு வறோம்.. .. சுப்ரமணிய சிவா தெரியுமா?”

“கேள்விப்பட்டிருக்கேன். வத்தலக்குண்டுக்காரர்தானே?”

“ஆமா. ஆனா அவர் இப்ப உசிரோட இல்லே. அவர் நடத்திண்டிருந்த பாரதமாதா ஆசிரமத்துல நானும் ஒரு மெம்பர். நாங்கள்ளாம் எப்பவும் பிரும்மசாரிகளாவே இருக்கணும்கிறது விதி.. அதாவது ரூல். அதும்படிதான் நான் இருந்தேன். இப்ப அவரும் போயாச்சு. உன்னை நான் சந்திக்காம இருந்திருந்தா ஒரு வேளை கல்யாணம்கிற விலங்கை மாட்டிண்டிருந்திருக்க மாட்டேன்!”

“என்னது! விலங்கா! என்னை அடைஞ்சதுக்கு அப்புறம் அது விலங்காத் தெரியறதாக்கும்! சாமர்த்தியக்காரர்தான் நீங்க!”

“சேச்சே! சும்மா, வெளையாட்டுக்கு.”

“புரியறது, புரியறது!”

“அப்புறம், இன்னொரு முக்கியமான விஷயம்.”

“சொல்லுங்கோ.”

“எங்களுக்கு ஊர்ல நிறைய நெலம் இருக்கு; ரெண்டு வீடு இருக்கு.”

“தெரியும்.”

“சுதந்திரப் போராட்டத்துல நான் இருக்கிறதால, நாளைக்கு நேக்கு ஏதானும் ஆச்சுன்னா.. ..”

“அய்யோ!”

“ஒரு பேச்சுக்குச் சொல்றேன். எதையும் எதிர்கொள்ள நாம தாயாரா யிருக்கணுமோல்லியோ? அதான் சொல்றேன்.. .. ஏதாவது ஆச்சுன்னா, எங்கம்மாவோட தயவு நோக்கு வேண்டியிருக்கும். அதனால ஒரு ரெண்டு மாசம் கழிச்சு நீயும் நானும் ஊருக்குப் போய் அம்மாவைப் பாக்கணும்.”

“அய்யோ! பழைய தாலியைக் கழட்டி எறிஞ்சுட்டு, உங்க கையால இன்னொண்ணு கட்டிண்டதை யெல்லாம் அவா ஒத்துப்பாளா? நேக்கு பயம்மா யிருக்கு. அவாளை நிமிந்தே என்னால பாக்க முடியாதுன்னா! அவா மூஞ்சியிலயே என்னால முழிக்க முடியாது!”

“முழிச்சுத்தான் ஆகணும். எல்லாச் சொத்தும் அம்மா பேர்லதான் இருக்கு. அவா காலத்துக்கு அப்புறந்தான் எனக்குன்னு எங்கப்பா எழுதி வெச்சிருக்கார். உண்மையிலே, அப்பப்போ ஊருக்கு நான் போறதெல்லாம் என் செலவுக்கு அம்மாகிட்டேர்ந்து பணம் வாங்கிண்டு வர்றதுக்கோசரந்தான். உன் மனசில தைரியம் வந்ததுக்கு அப்புறம் போய்க்கலாம். ஆனா போய்த்தான் ஆகணும். வேற வழியே இல்லே.”

“சுதந்திரப் போராட்டத்துலேர்ந்து விலகிண்டு நீங்க வேற ஏதாவது வேலை பண்ணலாமே?”

சாமிநாதன் சிரித்தான்: “எங்கம்மா மாதிரி நீயும் ஆரம்பிக்காதே, பங்கஜம்! இந்த உயிர் என் ஒடம்புல இருக்கிற வரைக்கும் நான் அதுலதான் இருப்பேன். .. அதுக்காக நீ பயப்படாதே. உன் வாழ்க்கைக்கு ஒரு வழி பண்ணி வெச்சிடுவேன். உன் வருங்கலாம் பிரச்னை யில்லாம கழியறதுக்குண்டான எல்லா ஏற்பாட்டையும் பண்ணிவைப்பேன். கவலைப்படாதே!”

பங்கஜம் திகிலுடன் அவனைப் பார்த்துவிட்டுத் தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். அவளது அடி மனத்தில் ஓர் அச்சம் ஏற்பட்டு அவளது வயிற்றைக் கலக்கியது.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 19

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

ஜோதிர்லதா கிரிஜா


தன் வருங்காலச் சம்பந்தியம்மாள் பார்வதியுடன் பேசிவிட்டு அவர்களது வில்வண்டியிலேயே காவேரி வீடு திரும்பிய போது அப்பளம் இட்டு முடித்திருந்த மாமிகள் காத்துக்கொண்டிருந்தார்கள். வீடு திரும்பி யிருந்த பத்மநாபன் வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தார். மாமிகளுக்கு முன்னால் எதுவும் கேட்க விரும்பாத அவர் அன்றைக் கூலியைப் பெற்றுக்கொண்டு எல்லாரும் புறப்பட்டுப் போனதும் அடக்க முடியாத ஆவலுடன் காவேரியை நெருங்கினார்.

துர்க்கா மாடியறையில் தன் தோழிகளோடு பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்தாள்.

“என்ன, காவேரி? எதுக்கு வரச் சொல்லி யிருந்தா?”

“எல்லாம் அந்த வள்ளி வெவகாரந்தான். அது எப்பிடியோ அவாளுக்குத் தெரிஞ்சு போயிடுத்துன்னா. நீங்க அவருக்கு மட்டுந்தான் தெரியும், அந்த மாமிக்குத் தெரியாதுன்னு சொல்லி யிருந்தேள். இப்ப அவாளுக்கும் தெரிஞ்சுடுத்து.”

“சரி. என்னதான் சொன்னா? கல்யாணம் நடக்குமோன்னோ? அதில ஒண்ணும் சிக்கல் வராதே?”

“இல்லே. கால்ல விழாத கொறையா அழுதுட்டு வந்திருக்கேன். ‘மறைச்சுட்டேள், அது, இது’ன்னு குத்தம் சாட்டிப் பேசினா. அப்ப என்னையும் அறியாம என் வாயில நெஜம் வந்துடுத்து.”

“என்னன்னு?”

“நீங்க ஏற்கெனவே சம்பந்தி பிராமணன் கிட்ட அதைச் சொல்லிட்டேள்னும், அதனால வரதட்சிணைப் பணத்தை ஏத்திக் குடுக்கிறதா யிருக்கோம்கிறதையும்.”

“பரவால்லே. போனாப் போறது. நமக்கெல்லாம் பொய் சொல்லிப் பழக்கமில்லே. அதான் வாயில நெஜம் வந்துடுத்து. விடு. இப்ப, அவா ரெண்டு பேரும் முட்டிக்கட்டும். வேற ஏதும் ஆட்சேபிக்கல்லையே? சரின்னுட்டாதானே?”

“சரின்னுட்டா.. .. .. ஆனா, கொஞ்சம் மனத்தாங்கல்தான் அந்த அம்மாளுக்கு. சம்பந்தி பிராமணன் கிட்டேர்ந்து நடந்ததைத் தெரிஞ்சுண்டுட்டான்னுதான் நேக்குத் தோணித்து.”

“இருக்கும். தெரியாத மாதரி பேச்சை ஆரம்பிச்சு இன்னும் அத்தைக் கொண்டா இத்தைக் கொண்டான்னு ஏத்திண்டே போகலாமோன்னோ? அதுக்குத்தான்.”

“ஆனா இப்ப ஏங்கிட்ட அதைப் பத்தி எதுவும் பேசல்லே. பின்னாடி ஏதானும் வெஷமம் பண்றதா யிருக்காளோ என்னமோ!”

“எல்லாம் துர்க்காவோட தலை யெழுத்தைப் பொறுத்ததா யிருக்கும். வேற என்னத்தைச் சொல்றது? கல்யாணத்தை நிறுத்தறேன் பேர்வழின்னு ஆரம்பிக்காம இந்த மட்டும் சம்மதிச்சிருக்காளே! இப்போதைக்கு அது போறும்.”

“இருந்தாலும், கழுத்துல தாலி ஏர்ற வரைக்கும் நமக்குத் திக்கு திக்குனுதான் இருக்கப் போறது!”

“அது சரி. ஈஸ்வரோ ரக்ஷது!”

.. .. .. கடைசியில் ஒரு வழியாகத் துர்க்காவின் கழுத்தில் தாலி ஏறிவிட்டது. வரதட்சிணைத் தொகையை மேலும் ஐயாயிரம் ஏற்றியதால், பத்மநாபன் தாம் எண்ணியபடி குடியானவ மக்களுக்குச் சாப்பாடு போட முடியாமல் போனாலும், ஊர் மெச்சுகிற விதமாகவே துர்க்காவின் திருமணம் நடந்தேறியது.

சம்பந்தியம்மாள் அவ்வப் போது ஏதேனும் ரகளைக்கு ஆயத்தம் செய்வது போல் தோன்றிய போதெல்லாம் பெரிதும் தணிந்து போய், எப்படியோ அவளைக் காவேரி சமாளித்தாள். ‘அது நொட்டை; இது நொள்ளை’ என்று அவள் குறை கண்ட போதெல்லாம், ‘அதுக்கென்ன? இன்னொண்ணு நல்லதா உங்க மனசுக்குப் பிடிச்ச மாதிரி பண்ணிட்றோம்’ என்று காவேரி சிரித்துக்கொண்டே பதிலிறுத்து அவளது வாயை அடைத்தாள். இவை யாவும் தெரிந்தும், ஏதும் அறியாதவர் போன்று தேவராஜய்யர் காந்தி எங்கெங்கே என்னென்ன பேசினார் என்பதைச் சுதேசமித்திரனில் படித்துத் தெரிந்துகொள்ளுவதிலும், அவரைப் பற்றி மற்றவர்களுடன் ‘வாய்ச் சவுடால்’ அடிப்பதிலும் பொழுது போக்கிக்கொண்டிருந்தார்.

திருமணத்தின் அர்த்தங்களும் உட்கிடைகளும் முழுவதுமாய்ப் புரியாவிட்டாலும், ‘ஏண்டி, நீலா! நேக்குப் பயம்.. ..மாயிருக்குடி! கலியாணம் ஆனா வயிறு பெரிசாயிடுமாமே? கொழந்தை பொறக்குமாமே? அப்படியாடி?’ என்று துர்க்கா தன் ‘சற்றே விவரம் தெரிந்த’ தோழியிடம் விசாரித்தாள்.

எல்லாருமே அவளைக் கொண்டாடியும், உச்சி முகர்ந்தும், வாழ்த்தியும், பரிசுகள் அளித்தும் அவளுக்கு நல்லதுதான் நடந்துகொண்டிருந்தது எனும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அவளுள் விதைத்தார்கள். தோழிகள் நீலாவும், வைதேகியும் துர்க்காவுக்கு நடந்துகொண்டிருந்த உபசாரங்களைப் பார்த்ததும் தங்களுக்கு எப்போது கலியாணம் நடக்கும் என்று ஏங்கத் தலைப்பட்டார்கள்.

‘மாப்பிள்ளை’ சிவகுருவை அவளுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஒரு விளையாட்டுத் தோழன் மாதிரி அவன் அவளைக் கவர்ந்தான்.

.. .. .. “அம்மாடி! ஒரு வழியாக் கல்யாணம் முடிஞ்சுடுத்து. நான் கொஞ்சம் பயந்துண்டுதான் இருந்தேன். பார்வதி மாமி கடேசி நிமிசத்துல ஏதானும் கலாட்டாப் பண்ணிக் கல்யாணத்தை நிறுத்திப்பிடுவாளோன்னு உள்ளூற நேக்கு நெஞ்சு படக் படக்னு அடிச்சிண்டே இருந்துது. அடிமடியில சர்வ சதா நெருப்பைக் கட்டிண் டிருக்கிறாப்லதான் இருந்துது. .. ..” என்றவாறு, தான், தன் கணவர், துர்க்கா ஆகியோர் மட்டும் வீட்டில் இருக்கத் தொடங்கிய முதல் நாளே காவேரி ஆயாசத்துடன் கால் நீட்டிப் படுத்துப் பெருமூச்சுவிட்டாள்.

“அப்பிடியெல்லாந்தான் எதுவும் விபரீதமா நடக்கல்லையே! விடு. ஆனா ஒண்ணு, காவேரி. நம்ம மாப்பிள்ளை துர்க்காவுக்கு ஏத்த ஜோடி. நல்ல லட்சணம். இல்லையா?”

“ஆமா. எல்லாருமே சொன்னா நல்ல ஜோடிப் பொருத்தம்னு! கண்ணு படாம இருக்கணும்.”

“கண்ணும் படாது, மூக்கும் படாது.”

பதினைந்து நாள்கள் போல் காவேரியின் வீட்டில் சாப்பிட்ட நல்ல சாப்பாடு பங்கஜத்தின் ஆரோக்கியத்தில் மெருகூட்டி யிருந்தது. வறுமை அவளது அழகையும் பொலிவையும் பாதித்திருக்க்வில்லை தானென்றாலும், சத்தான சாப்பாடு அந்தப் பொலிவை அதிகப்படுத்தி யிருந்தது.

.. .. .. ஒரு பையில் தன் துணிகளுடன் வத்தலப்பாளையம் தங்கம்மாவின் வீட்டை யடைந்து பங்கஜம் வெளிப்புறம் இலேசாய்த் தட்டி, “மாமி!” என்று குரல் கொடுத்த போது சாமிநாதன் தான் கதவைத் திறந்தான்.

கதவுக்கு அப்பால் நின்றிருந்த பங்கஜத்தைப் பார்த்ததும் சாமிநாதன் பிரமித்துப் போனான். சற்றே பூசினாற்போலச் சதை கூடியிருந்த ஆரோக்கியத்தால் அவள் தக தக வென்று ஒளிர்ந்துகொண்டிருந்தாள். அவள் உடனேயே தன் விழிகளைத் தாழ்த்திக்கொண்டதும்தான், அவளைத் தான் அப்படி ஆழமாகப் பார்த்திருக்கக்கூடாது என்பது அவனுக்கு உறைத்தது.

சுதாரித்துக்கொண்டு, “வாங்கோ, வாங்கோ!” என்ற அவன், “அம்மா, அம்மா! அவா வந்திருக்காம்மா.. .. ..” என்று உள்பக்கம் பார்த்துக் குரல் கொடுத்துவிட்டு இரேழியை ஒட்டி யமைந்திருந்த தன் அறைக்குள் புகுந்துகொண்டான். அவனது நெஞ்சுக் கூட்டினுள் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. தனக்குத்தான் அப்படி யெல்லாம் நேர்ந்து கொண்டிருந்தது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஏற்கவும் இயலவில்லை. பங்கஜத்தைக் காட்டிலும் அழகிகளை அவன் பார்த்திருந்தான். பட்டணத்தில் இல்லாத அழகிகளா! அதிலும், அவர்கள் ‘பவுடர் என்ன! ஸ்நோ என்ன!’ என்று தங்கள் அழகை மிகைப்படுத்திக் காட்டுபவர்கள். அப்படி யெல்லாம் ஒப்பனை செய்துகொண்டால், இந்தப் பங்கஜம் அவர்களைத் தூக்கிச் சாப்பிட்டு விடுவாள்! ஆனாலும் என்னை அவள் பால் ஈர்ப்பது அவளது வெளி யழகு மட்டுந்தானா? .. .. ..இல்லை, இல்லை! வெளியழகின் பங்கும் உண்டுதா னென்றாலும், அவள் கண்களில் சுடர் விடும் அந்த உள்ளழகுதான் என்னை இந்தப் பாடு படுத்துகிறது! நல்லவர்களுக்கே உரிய அகத்தழகு அவள் முகத்தில் பளீரிடுகிறது. .. .. பிரும்மசரியமாவது, மண்ணாங்கட்டியாவது! பத்து வருஷங்களுக்கும் மேலாகப் புருஷனை விட்டு வாழ்ந்து வரும் அவளுக்குப் புருஷனின் முகம் கூட மறந்தே பொயிருக்கும். ஒரு பெண்ணை அநியாயமாக விலக்கி வைத்துவிட்டு அவன் இன்னொருத்தியோடு வாழும் போது, இவள் மட்டும் காலமெல்லாம் தனியாக இப்படி வாழவேண்டும் என்பது என்ன நியாயம்? .. .. .. காந்திக்கு இதைப் பற்றிக் கடிதம் எழுதிக் கேட்டாலென்ன? .. .. ஏன்? எதற்காகக் கேட்கவேண்டும்? நான் நினைப்பது தவறில்லை என்று என் மனசு சொல்லும் போது காந்தியை எதற்குக் கேட்பது? .. .. நானென்ன, இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? ஏதோ அந்தப் பங்கஜம் சம்மதித்துவிட்டது போலவும், அங்கீகாரத்துக்காக நான் காந்தியை அணுகுவது போலவும், இதென்ன மயக்கமான கற்பனை! .. .. அம்மா ஒருகாலும் இந்த நினைப்பைக்கூடத் தாங்க மாட்டாள்.. .. .. ஏன்? பங்கஜமும் தான்! ஆனால், பங்கஜம் எனக்குச் சம்மதிக்காவிட்டால், அது இயல்பானதாக இருக்காது. காலங்காலமாகப் பெண்களின் மேல் திணிக்கப்பட்டு வந்துள்ள கட்டாய நெரிமுறைகளின் தாக்கமும், சமுதாயத்துக்குப் பயந்து சாகிற பேடித்தனமும், சொந்தக் கால்களில் நிற்க முடியாமையால் விளையும் நிராதரவான நிலை விளைவிக்கும் பீதியும்தான் அதற்கான காரணங்களாக இருக்கும். தவிர, பெண் குழந்தைகளையே வரிசையாகப் பெற்றாள் என்பதற்காக உறவையே முறித்துவிட்ட கணவன் மீது ஒரு பெண்ணுக்கு என்ன அன்பு இருக்க முடியும்? அப்படி இருப்பதாக ஒரு பெண் சொன்னால், அது வெறும் பொய்தான்! அவள்மீது திணிக்கப்பட்டு வந்துள்ள – சமுதாயம் பற்றிய மிதமிஞ்சிய அச்சத்தால் விளைந்த – செயற்கைத்தனமான “பதி பக்தி” யாகத்தான் இருக்கும்! தங்களுக்கு இயல்பான எண்ணங்களைக் கூட – அவை தவறானவை என்கிற போதனையால்தான் – கொத்தடிமைகளாக இருந்து வரும் பெண்கள் வெளியிடுவதில்லை. அதை ஒப்புக் கொள்ளுவதற்கும் அவர்களுக்கு அச்சம். தயக்கம். சமுதாயம் – முக்கியமாய் அதன் உறுப்பினர்களா யிருக்கும் ஒரு பெண்ணின் பெற்றோர் உட்பட – அவளை ஏசிச் சாடி அவளது நிம்மதியைக் குலைப்பதோடு, ஆணைச்சார்ந்து பிழைப்பவளாக அவளை வைத்துள்ளதுதான் இந்தக் கோளாறுகளுக்கெல்லாம் அடிப்படையான காரணம். அந்தக் காலத்தில் அப்பா தனக்குச் செய்த கொடுமைகளுக்காக என் அம்மாவே அவர் காலமான பிறகும் கூட எப்படியெல்லாம் அவரைத் திட்டித் தீர்த்திருக்கிறாள்! செத்துப் போனவர்களைப் பற்றி இழிவாய்ப் பேசக்கூடாது எனும் மரபு சார்ந்த வழக்கம் கூட அம்மாவிடம் எடுபடவில்லையே! .. .. .. பங்கஜத்தை மிக, மிக மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும்தான் வழிக்குக் கொண்டுவர வேண்டும். அவசரமே கூடாது. அப்படி அவளை என் வழிக்குக் கொண்டுவர முடிந்தால், அதன் பிறகு அவளை அழைத்துக்கொண்டு நான் மெட்றாசுக்குப் போய்விட வேண்டும். .. .. அம்மாவுக்குக் கூடச் சொல்லக் கூடாது. அவளுக்கு வாழ்வு தரவும், நான் அவளை யடையவும் அதுதான் வழி.. .. ..’ – தன் எண்ணங்கள் ஓடின ஓட்டம் கண்டு அவனுள் தன்னைப் பற்றிய திகைப்பு உண்டாயிற்று. அவன் மேசை மீது தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.

“ வாம்மா, வா!” என்று பங்கஜத்தைப் புன்சிரிப்புடன் வரவேற்ற தங்கம்மா அவளை உள்ளெ அழைத்துப் போனாள்.

பங்கஜத்துக்கு இலேசாய் வேர்த்துக் கொண்டிருந்தது. தங்கம்மாவை நோக்கிப் பதிலுக்குக் கூடப் புன்னகை புரியாமால் அவளுக்குப் பின்னால் உள்ளே சென்றாள்.

“என்னமோ மாதிரி இருக்கியே? உடம்பு கிடம்பு சரியில்லையாம்மா?”

“இல்லியே, மாமி? எப்பவும் போலத்தான் இருக்கேன். காலம்பற லேசாத் தலையை வலிச்சுது. அதுவா யிருக்கலாம்,” என்றபடி உள்ளெ போன பங்கஜம் கிணற்றடிக்குப் போய்க் கால்களைக் கழுவிக்கொண்ட பின் உள்ளே வந்து தங்கம்மாவிடம் அன்றைச் சமையலுக்கான குறிப்புகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டாள். பிறகு, காப்பி போட முற்பட்டாள்.

காப்பி தயாரானதும், “சாமிநாதன் – என்னோட பிள்ளை பேரு சாமிநாதன் – அவனோட ரூம்ல இருக்கான். நீயே கொண்டு போய்க் காப்பியைக் குடுத்துட்றியா?” என்ற தங்கம்மாவிடம், “ இல்லே, மாமி. நீங்களே கொண்டுபோய்க் குடுத்துடுங்கோ!” என்று தான் சொன்ன பதிலால் தங்கம்மா மாமியின் முகத்தில் இலேசாய்ப் புன்சிரிப்புத் தோன்றியதாகப் பங்கஜத்துக்குத் தோன்றியது. ‘இந்தப் பொண்ணு அசட்டுப் பிசட்டுன்னெல்லாம் நடந்துக்கக் கூடியவ இல்லே! அடக்காமானவ’ என்கிற திருப்திப் புன்சிரிப்பு அது என்று கூடப் பங்கஜத்துக்குத் தோன்றியது. ‘இவ என் பிள்ளையை ஒண்ணும் பண்ணிட மாட்டா’ என்கிற பொருளும் அதில் ததும்பியதாக எண்ணிய பின், ‘அடச் சீ ! என்ன இது! நான் என்னென்னவோ யோசிக்கிறேனே? நேக்குப் பயித்தியந்தான் பிடிக்கப் போறது போலிருக்கு!’ என்றும் அவள் எண்ணினாள். எனினும், ‘இல்லை, இல்லை! என் உள்ளுணர்வு தப்பானதே இல்லை. நான் எப்படிப்பட்டவள் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்காகத் தங்கம்மா மாமி எனக்கு வைத்த சோதனை அது!’ என்றே கடைசியில் அவள் முடிவு செய்தாள். அது உண்மையில் சோதனை யெனில், தான் ஜெயித்துவிட்ட மகிழ்ச்சியும் அவளுள் கிளர்ந்தது.

.. .. .. “என்னம்மா, இது? எப்பவுமே ஒரு சாம்பார், கூட்டு, இல்லேன்னா ரசம், கறின்னுதானே பண்ணுவே? அந்தப் பொண்ணு வந்ததுலேர்ந்து தெனமும் சாம்பார், ரசம், கறி, கூட்டுன்னு வெளுத்து வாங்கறியே?” என்று ஒரு வாரத்துக்குப் பிறகு ஒரு நாள் பங்கஜம் அறியாமல் அவன் கேட்ட போது, “சம்பளம் குடுக்கப் போறோம். செய்யட்டுமேடா? வக்கணையா உக்காந்துண்டு அவளும்தானே எல்லாத்தையும் சாப்பிட்றா? வந்ததுக்கு இப்ப ஒடம்பு இன்னும் நன்னாத் தேறி யிருக்கா!” என்றாள் தங்கம்மா.

ஒரு நாள் பங்கஜம் இருவரையும் உட்கார்த்தி உணவு பரிமாறிக்கொண்டிருந்த போது, “உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?’ என்று சாமிநாதன் நேருக்கு நேராக அவளைப் பார்த்து விசாரித்தான். ‘வேண்டாம்’, ‘போறும்’ , ‘கொஞ்சமாப் போடுங்கோ’ ஆகிய சொற்களைத் தவிர வேறெந்தச் சொற்பரிமாற்றமும் அதுவரை அவளுடன் செய்தறியாத சாமிநாதன் பங்கஜத்தை அவ்வாறு வினவியது தங்கம்மாவின் புருவத்தை உயர்த்தியது.

“தமிழ் எழுதுவேன், படிப்பேன். அப்பாதான் கத்துக் குடுத்தா, ” என்று பங்கஜம் அவன் முகத்தைப் பாராமலே பதில் சொன்னாள். ஏனெனில் தங்கம்மாவின் பார்வை குறுகுறுவென்று தன் மீது பதிந்திருந்ததைத் தலையைத் திருப்பாமலே அவளால் தெரிந்துகொள்ள முடிந்தது.

“காந்தியோட கட்டுரைகள் சிலது இருக்கு. நானே இங்கிலீஷ்லேர்ந்து தமிழ்ப் படுத்தினது. மெட்றாஸ் போனதும் அச்சுக்குக் குடுப்பேன். மத்தியானம் உங்க சமையல்கட்டு வேலையெல்லாம் முடிஞ்சதும் படிச்சுப் பாருங்கோ.” – அவனும் தன் பார்வையை அகற்றிக்கொண்டு இலையைப் பார்த்துக்கொண்டே பேசினான்.

“சரி.”

“எங்கம்மாவுக்கு எழுதப் படிக்கக் கத்துக் குடுக்கணும்னுட்டு நேக்கு ரொம்பவே ஆசை. ஆனா அம்மா பிடிவாதமா மாட்டவே மாட்டேன்னுட்டா.”

“ஆமாண்டா. வேற வேலை இல்லே. இத்தனை வயசுக்கு மேல கத்துண்டு நான் என்ன சாதிக்கப் போறேனாம்?”

.. .. .. அன்றே, பிற்பகலில், அவன் கூடத்து ஊஞ்சலில் ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, அடுக்களையில் வேலையாக இருந்த அவள் பக்கம் பார்த்து, “நான் சொன்னேனே, காந்தியோட எழுத்துகள், அதெல்லாம் இருக்கிற நோட்புக்கை ஊஞ்சல்ல வெச்சிருக்கேன். படியுங்கோ!” என்று தங்கம்மாவின் முன்னிலையில் இரைந்த குரலில் அறிவித்துவிட்டுத் தன்னறைக்குள் புகுந்து சாமிநாதன் கதவைச் சாத்திக்கொண்டான்.

தன் மகன் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டிருந்ததாலோ, அல்லது பிரும்மசரிய விரதம் என்று சொல்லிக்கொண்டு திருமணம் செய்துகொள்ள மறுத்துவருபவன் என்பதாலோ, கிராமத்து வழக்கத்தை மீறிய அவனது செயல் தங்கம்மாவுக்குத் தப்பாகப் படவில்லை. அவளது சந்தேகமெல்லாம் – அதுவும் மிகவும் கொஞ்சமாய் – அந்தப் பெண் பங்கஜத்தின் மேல்தான்! கணவனை விட்டுப் பிரிந்திருந்த அவள் தன் மகனை மயக்கிவிடாதிருக்க வேண்டுமே என்பது பற்றித்தான்!

.. .. ..பிற்பகலில் தங்கம்மா குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் பங்கஜம் சாமிநாதன் கொடுத்திருந்த நோட்டுப் புத்தகத்தைப் படித்தாள்.

‘யங் இண்டியா – ‘வெட்கக்கேடான இளைஞர்கள்’ எனும் தலைப்பில் காந்தி எழுதியுள்ளது:

ஓர் இளைஞன் இருபதாயிரம் வரதட்சிணை கேட்டுப் பெற்றதாக ஐதராபாத்திலிருந்து எனக்கு ஒருவர் எழுதியுள்ளார். அசிங்கம் பிடித்த இவ்வழக்கத்துக்கு எதிராகப் பொதுஜன அபிப்பிராயத்தை நாம் உருவாக்க வேண்டும். வசரதட்சிணை வாங்கித் தங்கள் விரல்களை மாசுபடுத்திக்கொள்ளும் இளைஞர்களை மக்கள் ஒதுக்கிவைக்க வேண்டும்.. .. .. ‘திருமணம் இன்றிச் செத்து மடிந்தாலும் மடிவேனே யல்லாது, வரதட்சிணை கேட்பவனை ஒரு போதும் மணக்கமாட்டேன்’ எனும் வைராக்கியம் ஒவ்வொரு பெண்ணுக்கும் வரவேண்டும். .. .. வரதட்சிணை கேட்பதன் மூலம் இளைஞர்கள் தங்கள் கல்வியையும் தங்களையும் அவமானப்படுத்திக் கொள்ளுகின்றனர். .. .. ’ – ஒரு பெரிய கட்டுரையின் மேற்கண்ட இவ்வாக்கியங்கள் அவனால் அடிக்கோடிடப்பட்டிருந்தன. .. .. அடுத்து, குழந்தைத் திருமணம் பற்றியது. .. .. வயதுக்கு வரும் முன்னரே கணவனை இழந்த சிறு குழந்தைப் பெண்களுக்குக்கூட மறுமணம் மறுக்கப்படுவதன் கொடுமை பற்றிய ஒரு கட்டுரை .. .. .. துன்புறும் பெண்கள் மீது மிகவும் பரிவு உள்ளவன் என்பதாய்த் தன்னை அவளுக்குத் தெரிவிக்கிற முயற்சியே அவனது அந்த நடவடிக்கை என்பது தெற்றெனப் புடிய, அவளுள் சன்னமாய் ஓர் அதிர்வு ஏற்பட்டது.

பத்துப் பக்கங்கள் தாண்டிய பிறகு, ‘அன்புள்ள பங்கஜம்’ என்று ஒரு கடிதம் தொடங்கப் பட்டிருந்தது. அவளுள் ஏற்கெனவே விளைந்த்¢ருந்த சன்னமான அதிர்வு தீவிரம் கொண்டது. அவள் விழிகள் தங்கம்மாவின் புறம் நோக்கின.

அவள் குறட்டைவிட்டவாறு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 18

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

ஜோதிர்லதா கிரிஜா


‘அவங்களையும்தான்’ என்று பதில் சொன்ன சின்னக்கண்ணுவை வள்ளி வியப்பாகப் பார்த்தாள்.

“அதெப்படீடி அம்புட்டு நிச்சியமாச் சொல்றே? அவங்களுக்கும் தனியா ஏதானும் அடையாளம் இருக்குதா?” என்று அவள் ஆவலுடன் விசாரித்தாள்.

“அவங்க நல்ல செவப்புன்னு சொல்ல முடியாது. பொது நெறந்தான். அவங்களுக்கும் பெரிய நெத்தி. சுருள் சுருளா முடி. அய்யா எம்புட்டுக்கு எம்புட்டு ஒசரமோ, அம்புட்டுக்கு அம்புட்டு அவங்க படு குள்ளம். குண்டு. மூக்குச் சப்பையா யிருக்கும். சின்னக்கண்ணு. ஆனா, அளகாயில்லாட்டியும், களையா யிருப்பாங்க. அவங்க மொகமும் என் கண்ணு முன்னாலவே நிக்கிது. அப்படியாக்கொந்த மொகம். அதையும் கண்டுக்குறது சொலபந்தான்.”

“சரி, சொல்லு. அப்பால?’

“அப்பால என்ன. அப்பால? அம்புட்டுத்தான்.”

“அது சரி, அது யாரு வீட்டுக் கொளந்தைன்னு அவங்க ரெண்டு பேரும் ஓங்கிட்ட கேக்கல்லியா?”

“கேக்காம இருப்பாங்களா? கேட்டாங்க. மொதக்கா, நான் ‘அவங்க யாரா யிருந்தா என்ன, சாமி’ ன்னுதான் சொன்னேன். ஆனா அவங்க விடல்லே. திருப்பித் திருப்பிக் கேட்டாங்க. ‘அம்மா! இது யாரு வீட்டுக் கொளந்தைங்கிறது எங்களுக்குத் தெரிஞ்சிருக்கிறதுதான் நல்லது. நாங்க செத்தாலும் உன்னயக் காட்டிக் குடுக்கப் போறதில்லே. இருந்தாலும், தெரிஞ்சு வச்சுக்குறதுதான் சரி. பின்னாடி ஒரு காலத்துல அதுக்கு அவசியம் ஏற்பட்டா உபயோகமா யிருக்கும்’ னாங்க. சரிதான்னு நானும் உண்மையைச் சொல்லிட்டேன். பொறந்த நாளும் நேரமும் தெரியுமான்னு கேட்டாங்க. ‘நேத்துப் பொறந்திச்சு. ராத்திரி பத்து மணிக்குப் பொறந்ததாப் பேசிக்கிட்டாங்க’ ன்னு சொன்னேன். அப்பால ரெண்டு பேரும் கொளந்தையோட போயிட்டாங்க. அந்தக் கொளந்தை குடுத்து வெச்ச கொளந்தை. இப்ப கலியாணம் காச்சி ஆயி, நல்ல எடத்துல வாக்கப்பட்டிருக்கும்!”

“அவங்க ரெண்டு பேரும் எந்த ஊர்க்காரங்கன்னு கேட்டியா?”

“.. .. எந்த ஊருன்னு தெரியல்லே. ஆனா, அவங்க இன்னும் ஒரு வெசயம் பேசிக்கிட்டாங்க. ‘இப்ப இந்தக் கொளந்தையும் கையுமா நம்ம ஊருக்குப் போனா ஊர்லே இல்லாத பொல்லாத கேள்வி எல்லாம் கேப்பாங்களே?’ ன்னிச்சு அந்தம்மா. அதுக்கு அந்தய்யா, ‘ இப்ப நாம நேரா திண்டுக்கல்லுக்குப் போறோம். அங்கிட்டு நீ ஒங்கப்பா அம்மாவோட இரு. நான் நம்ம ஊருக்குப் போயிர்றேன். ஒரு பத்து மாசம் களிச்சு நம்மூருக்குப் போயிரலாம். இது ஒனக்குப் பொறந்ததுன்னு சொல்லிரலாம்’ அப்படின்னாரு.”

“அதுக்கு அப்பால, அவங்க உன் கண்ணுக்குத் தட்டுப்படவே இல்லியா?”

“இல்லே, வள்ளி.”

“என்னமோ கதை கேக்குறாப்ல இல்ல இருக்குது!”

“இன்னைக்கு அதைப் பத்தி ஓங்கிட்ட சொல்லிடணும்னு ஏன் எனக்குத் தோணிச்சோ, தெரியல்லே.”

“அது, வேற ஒண்ணுமில்லே, சின்னக்கண்ணு. நான் தாசரதி அய்யாவோட பொஞ்சாதியைப் பாத்துப் பேசினது பத்தி ஓங்கிட்ட சொன்னேனில்ல? அதான்.”

இருவரும் குடிசைக்குத் திரும்பினார்கள். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி யென்றாலும், அது சின்னக்கண்ணுவைப் பெரும் பாரமாக அதுகாறும் அழுத்திக்கொண்டுதான் இருந்தது. நடந்ததை யெல்லாம் வள்ளியிடம் சொன்ன பிற்பாடு, அதை இறக்கிவைத்தது போன்ற நிம்மதியில் அவள் ஆழ்ந்தாள்.

.. .. .. இன்னும் இரண்டே வாரங்களில் நடப்பதற் கிருந்த திருமணத்துக்கான முன்னேற்பாடுகளால், பத்மநாபனின் வீடு திமிலோகப் பட்டுக்கொண்டிருந்தது. வீட்டுக் கூடத்தில் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை நீட்டி யமர்ந்து அப்பளம் இட்டுக் கொண்டிருந்தவர்களில் பங்கஜமும் ஒருத்தி. பெண்களின் அந்தக் கும்பலில் அவள் ஒருத்திதான் வயதில் சின்னவள்.

“சின்னஞ் சிறுசுடியம்மா நீ! இன்னும் எத்தனையோ நாளைக் கழிச்சாகணும். தீப்பந்தமும் கையுமா நீ தெருவிலே ஓடினேன்னு தெரிஞ்சதும், நடந்தது இன்னதுங்கிறதைப் புரிஞ்சுண்டு அந்தக் கடங்காரன் மேல மனசுக்குள்ள காறித் துப்பாதவாளே இல்லே. எந்த இடத்துல வேலைக்குப் போனாலும் சர்வ ஜாக்கிரதையா இருடியம்மா. பச்சைக் கிளியாட்டமா இருக்கே. என்ன வயசாறது நோக்கு?”

“இருபத்தொம்பது முடிஞ்சுடுத்து, மாமி.”

“இருபத்தொம்பதா! பாத்தா இருபத்திரண்டு வயசாட்டமாத் தெரியறே! ஜாக்கிரதை! இந்த லோகத்துல யாரையுமே நம்பப் படாதுடியம்மா! எம் மச்சினம் பொண்ணு ஒருத்தி இருக்கா. சின்ன வயசிலயே என்னாட்டமா அறுத்துப் போயிட்டவ. மாமனாராத்துலேயே இருந்துட்டா. மாமியார் கிடையாது. அந்த மாமனார்க் கடங்காரன், ‘மாட்டுப் பொண்ணு என்னோட சொந்தப் பொண்ணு மாதிரியாக்கும்!’ னு சொல்லி ஆத்தோட இருத்திண்டுட்டு ஒரு நாள் ஆத்துல வேற யாரும் இல்லாதப்ப அவளைக் கெடுத்துட்டான். அதுக்கும் வயத்துல வந்துடுத்து. என்னன்னு சொல்லிக்கும்? வெக்கக்கேடு! அந்த மாமனார்க் கடங்காரனே கர்ப்பத்தைக் கலைக்கிறதுக்குன்னு சொல்லி எத்தையோ அவளுக்குச் சாப்பிடக் குடுத்திருக்கான். அது அரளி விதையை அரைச்சுக் கலக்கினதுன்னு தெரியாம அந்தப் பொண்ணும் குடிச்சுட்டு – பாவம் – கடோஷில செத்தே போயிடுத்து. அதை இப்ப நெனைச்சாலும் வயித்தை என்னவோ பண்றது. இருபத்தஞ்சே வயசு!”

“அதான் காந்தி தலை தலையா அடிச்சுக்கறாராமே? கம்மனாட்டிகளுக் கெல்லாம் மறுகல்யாணம் பண்ணி வைக்கணும்னு?”

“நடக்கிற கதையாப் பேசட்டும் அந்த மகானுபாவன்! வெள்ளைக்காரன்கிட்டேர்ந்து தேசத்தைப் பிடுங்கிச் சுதந்திரம் வாங்கிக் குடுக்கிறதோட நிறுத்திக்கட்டும் அந்தப் பிராமணன்!”

“அவரொண்ணும் பிராமணன் இல்லே! குஜராத்துல ‘பனியா’ ன்னு சொல்லுவா அவாளை!”

“பின்ன பூணூல் போட்டுண்டிருக்காப்ல ஒரு ·போட்டோவில பாத்த ஞாபகம் இருக்கே?”

“நம்மூர்ல செட்டியார்கள், தச்சர்கள், தட்டார்கள்லாம் கூடத்தான் பூணூல் போட்டுக்கறா. அதே மாதிரிதான் காந்தியும்! அவரும் வைசியாள் ஜாதியைச் சேந்தவர். எங்காத்துக்காரர் அன்னைக்கு யாரோடவோ பேசிண்டிருந்தப்ப காதுல விழுந்துது.”

“அதெல்லாம் கிடக்கட்டும். அந்த மனுஷன் எதுக்கு நீங்க சொல்றாப்ல நம்ம சம்பிரதாயங்கள்லே யெல்லாம் மூக்கை நொழைக்கணும்? சுதந்திரம் வாங்கிக் குடுத்தமாம், போனமாம்னு அத்தோட நிறுத்திக்க வேண்டியதுதானே?”

“நன்னாச் சொன்னேள், மாமி! தாலியறுத்தவாளுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணி வைக்கிறதெல்லாம் நம்ம ஊர்கள்லே நடக்கிற காரியமா! நம்ம சாஸ்திர சம்பிரதாயங்கள்லே யெல்லாம் எதுக்கு இவர் தலை யிடணும்? கேக்கறேன்!”

“ஏம்மாமி தலையிடக் கூடாது? அவர் சொல்றதுல என்ன தப்புன்றேள்? ஏம்மாமி! உங்க நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கோ – ஆம்படையான் செத்துப் போன கையோட ஆசைகளும் செத்துட்றதா என்ன?”

“என்னடி இது நீ – அசிங்கமால்லாம் பேசிண்டு! நன்னாருக்கு, போ. நாக்குல பல்லப் போட்டு இதென்ன பேச்சுன்னு பேசறே? .. .. நீ சொல்றது நெஜம்னாலும், அதுக்கோசரம் நம்ம ஆசார அனுஷ்டானங்களை யெல்லாம் விட்டுட முடியுமா என்ன! தாலியறுத்த பொம்மனாட்டிக்காவது, மறு கல்யாணமாவது! விடிஞ்சுது, போ!”

“நான் என்ன சொல்றேன்னா, தாலியறுத்தவளை பொண்டாட்டி செத்துப்போன ஒருத்தன் கூடக் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா யிருக்க மாட்டான்கிறதுதான் நெஜம்! அவா வெதவாளா இருந்தாலும் புதுசு புதுசாத்தான் பொண்கள் வேணும் அவாளுக்கு!”

“இதென்னடியம்மா புது வார்த்தை சொல்றே – வெதவான்னு!”

“பின்னே, புருஷாளுக்குத் தாலியா கட்றேள் – அவாளையும் ‘தாலி யறுத்தவன்’ னு சொல்றதுக்கு?”

“நீங்க சொல்றது நெஜந்தான், மாமி. புருஷா அரதப் பழசானவாளா யிருந்தாலும், படு கெழமா யிருந்தாலும், அவாளுக்குப் பொண்கள் புதுசு புதுசாத்தான் வேணும் – யாரும் தொட்டிருக்காத புதுப் பொண்ணுகள்!”

“நன்னாச் சொன்னேள், மாமி! அவாளுக்கு ஒரு நியாயம், நமக்குன்னா வேற நியாயம்! அதைத்தான் காந்தி தட்டிக் கேக்கறார். நீங்க என்னடான்னா அவரைத் தப்பு சொல்றேள்!”

“சரி. காந்தி சொல்றபடி கேட்டுத் தாலியறுத்த பொண்ணுகளைக் கல்யாணம் பண்ணிக்க சில புருஷா தயாரா யிருக்கான்னே ஒரு பேச்சுக்கு வெச்சுப்போம். அவாளோட பிரச்னை இப்ப சத்திக்கு இல்லாட்டாலும், இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு சரியாயிடும்னும் வெச்சுப்போம். ஆனா, இப்ப பங்கஜம் மாதிரி இருக்கிற பொண்களுக்கு என்ன வழி? சுமங்கலியும் இல்லே, அமங்கலியும் இல்லேன்னு ரெண்டாங்கெட்டானா நிக்கறவாளுக்கு உங்க காந்தி என்ன வழி வெச்சிருக்கார்? நேக்குத் தெரிஞ்சு எத்தனையோ வாழா வெட்டிப் பொண்கள் கிராமங்கள்ளே நிறைய பேரு இருக்கா. அவாளைக் கரை யேத்தறதுக்கு என்ன வழி சொல்றார் உங்க காந்தி?”

“ .. .. ‘எங்க’ காந்தி என்ன மாமி வந்தது, ‘எங்க’ காந்தி? அவர் இந்த தேசத்துக்கே பொதுவான பெரிய மனுஷர். எங்க சித்தப்பாவோ பெரியப்பாவோ இல்லே.”

“கோவிச்சுக்காதேள், மாமி! சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன்.”

“காந்தி சொல்ற தெல்லாம் மீட்டிங் போட்டுப் பிரசங்கம் பண்றதுக்கும், கேட்டுட்டுக் கை தட்றதுக்கும்தான் லாயக்கு! நான் சொல்றேனேன்னு பாருங்கோ! இன்னும் நூறு வருஷம் ஆனாலும் நம்ம புருஷா மாறப் போறதில்லே. அவாளுக்குன்னா மட்டும் சட்டமும் நியாயமும் தனிதான்! ஏதோ, அங்கேயும் இங்கேயுமா ரெண்டொருத்தர் மாறுவாளே தவிர, இதெல்லாம் போகாத ஊருக்கு வழி தேட்ற அசட்டுத்தனந்தான்!”

“காந்தி பங்களூர்ப் பக்கம் வந்திருக்காராமே? இந்தப் பக்கம் கூட கூடிய சீக்கிரம் வந்தாலும் வருவார்னு எங்காத்துக்காரர் சொல்றார்.”

“இந்தப் பக்கம் வந்தாலும், மதுரை, திண்டுக்கல், திருச்சினாப்பள்ளின்னு வருவாரே தவிர, நம்மூருக்கெல்லாம் எங்க வரப்போறார்?”

“அப்படிச் சொல்லிட முடியாது. திண்டுக்கல்லுக்கு வந்தாலும் வருவர். அப்படி வந்தார்னா, அவரைப் போய்த் தரிசிக்கணும்னுட்டு எங்காத்துக்காரருக்கு ஆசையான ஆசை! போனாலும் போவர்.”

“.. .. ‘தரிசிக்கணும்’ கறேள்? அவரென்ன, கடவுளா?”

“எங்காத்துக்காரருக்கு அவர் கடவுளே தாண்டியம்மா! நியாயங்களை யெல்லாம் அழுத்தந்திருத்தமாப் பேசறாரோன்னோ, அதான்!”

“.. .. ‘பறையா’ளை யெல்லாம் கோவிலுக்குள்ள விடணும்கறாரே, அந்த நியாயத்தைச் சொல்றேளா?”

“ என்னா, மாமி, கிண்டலாக் கேக்கறேள்? அவாள்ளாம் என்ன பாவம் பண்ணினா- கோவிலுக்குள்ள வரக் கூடாதுன்றதுக்கு?”

“காலங்காலமா அப்படித்தான் நடந்திண்டிருக்கு. இவரெதுக்கு இதிலே யெல்லாம் மூக்கை நொழைக்கணும்?”

“காலங் காலாமா ஒரு தப்பு நடந்திண்டுருக்குன்றதாலேயே, அதை எப்பவுமே செஞ்சிண்டிருக்கணுமா என்ன! ரொம்ப அழகுதான்!”

“அப்ப? நீ காந்தி கட்சியா?”

“சொன்னாலும், சொல்லாட்டாலும்.”

“அப்படின்னா, ஒம் பிள்ளைக்கு ஒரு தீண்டத்தகாத பொண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணி வைப்பியா?”

“ரொம்ப நன்னாருக்கே நீங்க பேசறது! காந்தியைப் பிடிக்கும்கிறதுக்கோசரம் அந்த அளவுக்குப் போயிட முடியுமா? மொதல்ல, கோவிலுக்குள்ள கூட அவாளை விட்ற வழியைக் காணல்லே. கல்யாணம் வரைக்கும் போயிட்டேளே! ஒண்ணுமில்லே. ஒரு சேரிப் பொண்ணை நான் எங்காத்துலே வேலைக்கு வெச்சுண்டாலே, நீங்கல்லாம் சேந்து என்னை ஜாதிப் பிரஷ்டம் பண்ணிப்பிடுவேளா இல்லியா? மாட்டுப் பொண்ணா ஆக்கிண்டா அவ்வளவுதான்! கொன்னே போட்டுட மாட்டேளா!”

“நாம இப்படி அவாளை ஒதுக்கி வைக்கிறதுனாலதான் அவாள்லே நிறையப் பேரு கிறிஸ்துவாளா மாறிண்டு வர்றா.”

“மாறிண்டு போகட்டுமே! அவாளுக்கு மரியாதையும் சோறும் கிடைக்கிற மதத்துக்கு அவா போறா. அதுல நமக்கென்ன நஷ்டம்?”

“அதென்ன அப்படிக் கேட்டுட்டேள்? நம்ம மதத்துக்கு அது ஒரு நஷ்டந்தானே? “

“நம்ம மதத்துக்காரா எண்ணிக்கை கொறையக் கூடாதுன்னா, அப்ப அவாளையும் காந்தி சொல்றாப்ல கோவிலுக்குள்ள விடுங்கோ!”

“நீங்க சொல்றது சரிதான், மாமி. கோவிலுக்குள்ள கூட விட மாட்டோம்; ஆனா அவா மதமும் மாறக் கூடாதுன்னு நாம சொல்றது அயோக்கியத்தனந்தான்.”

“காந்தி பிரசங்கம் பண்ண வர்ற மீட்டிங்ல யெல்லாம் லட்சக் கணக்குல ஜனங்கள் கூட்றாளாமே?”

“ஆமா, மாமி. எங்காத்து மாமா ஒரு தரம் பூனாவிலே காந்தி நடத்தின மீட்டிங்குக்குப் போயிருந்தாராம். அடியம்மா! கூட்டமான கூட்டமாம்! பொம்மனாட்டிகள் கூட்டமும் அலை மோதித்தாம். சொன்னார்.”

“.. .. ‘சுதந்திரப் போராட்டத்தை நடத்தறதுக்குப் பணம் வேணும். அதானால உங்க வீட்டுப் பெரியவா கிட்ட அனுமதி வாங்கிண்டு உங்க நகைகளைக் கழட்டிக் குடுங்கோ’ ன்னு சொல்றாராம். பொண்கள்ளாம் அந்த எடத்துலயே காதுல, மூக்குல, கையில, கால்ல இருக்கிறதை யெல்லாம் கழட்டிக் குடுத்துட்றாளாமே! என் கொழுந்தன் கூட கதை கதையாச் சொன்னான். போன மாசம் வடக்கே போயிருந்தான்.”

“காந்தி எல்லாரையும் மயக்கித்தான் வெச்சிருக்கார்னு தோண்றது. ஆனா, அவர் சொல்ற ஒண்ணை இன்னும் பல வருஷங்களுக்கு நம்ம மனுஷா கேக்கவே போறதில்லே.”

“ என்னது?”

“அதான் – இந்த வரதட்சினை விஷயம்! ஏழைகளாத்துப் பொண்ணுகள்ளாம் காலாகாலத்துல கல்யாணம் ஆகாம நிக்கத் தொடங்கி யிருக்குகள். எங்க தெருவிலேயே பெரியவளான பொண்ணுகள் தடித் தடியா ஏழெட்டு இருக்கு.”

“ஆயிரக் கணக்குல கொண்டான்னா ஏழைகள் பணத்துக்கு எங்க போவா?”

“அதுக்கென்ன பண்றது? கடனோ ஒடனோ வாங்கி எப்பிடியாவது சமாளிச்சுத் தள்ளிவிட வேண்டீதுதான்.”

“உங்களுக்கென்ன, மாமி? நீங்க பேசுவேள். பேச மாட்டேளா பின்ன? எல்லாம் பிள்ளைகளாப் பெத்திருக்கேள்.”

“பிள்ளைகளாப் பெத்து வெச்சிருக்கிறவா மனசில நியாயம் இருந்தா, வரடட்சிணை வாங்காம பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணலாமே?”

“என்னடி, கிண்டலா பண்றே? ஜாதி வித்தியாசமெல்லாம் பாக்கக் கூடாதுன்னு கூடத்தான் காந்தி சொல்றார். அப்ப, கீழ் ஜாதிக்கார மாப்பிள்ளையாத் தேட வேண்டீதுதானே? அப்ப, வரதட்சிணை தர வேண்டாமே?”

பேச்சின் போக்குத் தடிப்பதைக் கண்ட காவேரி, “வேற ஏதாவது பேசுங்கோ, மாமி! வேண்டாத வாக்குவாதமெல்லாம் நமக்கு என்னத்துக்கு? அப்புறம் வார்த்தை தடிச்சுச் சன்டை கிண்டை வந்துடப் போறது உங்களுக்குள்ள! கெழட்டுத் தவளைக்கு நாட்டு வளப்பம் என்னத்துக்காம்? விடுங்கோ. நாம பாட்டுக்கு நாம உண்டாம், நம்ம வேலை உண்டாம்னு இருக்கிறதை விட்டுட்டு, என்னத்துக்கு இந்த அக்கப் போர்ப் பேச்செல்லாம்? காந்தியும் வெள்ளைக்காரனும் என்னவோ பண்ணிண்டு போகட்டும். அதுக்காக நாம வந்த எடத்துல முட்டி மோதிக்க வேண்டாம். மட மடன்னு வேலை நடக்கட்டும்!” என்றாள்.

“நீங்க சொல்றதுதான் சரி, காவேரி மாமி! பருவதத்தைப் பாருங்கோ! கோவிச்சுண்டுட்டான்னு தோண்றது. கோவத்துல உருண்டையை அழுத்தின அழுத்துல அது பலகையோட ஈஷிண்டுடுத்து! “ என்று ஒருத்தி சொல்ல எல்லாருமே சிரித்தார்கள் – பருவதம் உட்பட.

“மொதல்ல அப்பளாத்து மாவு நசுங்கும். அதுக்கப்பறம் மனுஷா! அவாவா கையில அப்பளக் கொழவி வேற வெச்சிண்டிருக்கேள்! ஜாக்கிரதை!” என்று காவேரி விளையாட்டாக எச்சரிக்க, மறுபடியும் அங்கு சிரிப்பலைகள் புறப்பட்டன.

இந்த உரையாடல்களைக் கவனித்தாலும், அவற்றில் அவ்வளவாக ஒட்டாமலும், ஈடுபடாமலும் பங்கஜம் தன் வேலையே கண்ணாக இருந்தாள். எனினும், அவள் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்தவாறாகத்தான் இருந்தன. ‘ஆனா, இப்ப பங்கஜம் மாதரி இருக்கிற பொண்ணுகளுக்கு என்ன வழி? சுமங்கலியு மில்லே, அமங்கலியு மில்லேன்னு ரெண்டாங்கெட்டானா நிக்கற வாளுக்கு உங்க காந்தி என்ன வழி வெச்சிருக்கார்?’ என்று ஓர் அம்மாள் கூறிய சொற்களைச் சுற்றியே அவள் சிந்தனை வட்டமடித்துக் கொண்டிருந்தது. சட்டென்று அவள் மனக்கண் முன்பு சாமிநாதனின் கனிவான முகம் பளிச்செனத் தோன்றி அவளைத் துணுக்குறச் செய்தது. அப்பளக் குழவியைப் பற்றி யிருந்த அவள் கைகள் வேர்க்கலாயின.

‘அய்யோ! நான் என்ன அவரைப் பற்றி நினைக்கிறேன்? இந்தப் பேச்சின் போது எனக்கு அவரைப் பற்றிய ஞாபகம் வர வேண்டிய அவசியம் என்ன? என் பிரச்னைக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அய்யோ! கடவுளே! என் மனத்தில் என்னையும் அறியாமல் – என்னையும் மீறி – ஒரு கள்ளம் புகுந்திருக்கிறது. அதனால்தான் அவரது முகம் என் நினைவில் தோன்றுகிறது. கடவுளே! என்னை எந்தச் சிக்கலிலும் மாட்டிவைத்துவிடாமல் நீதான் காப்பாற்ற வேண்டும்.. ..’

“என்னது! நாம இவ்வளவு பேச்சுப் பேசி யிருக்கோம்? பங்கஜம் மட்டும் வாயே தொறக்கல்லையே?”

“அவ எப்பிடித் தொறப்பாளாம்? நீங்க பாட்டுக்கு அவ மனசு புண் பட்ற மாதிரி தொசுக்னு என்னத்தையோ சொல்லிப்பிட்டேள்! அவ ஞாபக மெல்லாம் எங்கேயோ போயிடுத்து.”

“என்னை மன்னிச்சுக்கோடியம்மா, பங்கஜம்!”

“சேச்சே. அதெல்லாம் ஒண்ணு மில்லே, மாமி. பெரிய பெரிய வார்த்தை யெல்லாம் சொல்லாதங்கோ!”

“நீங்க வேற. இப்ப நாம ஞாபகப் படுத்தினதுனாலதான் பங்கஜத்தோட நெனப்பு எங்கேயோ போச்சா என்ன? பாவம், கொழந்தை! சர்வசதா அந்தக் கடன்காரனைப் பத்தித்தானே யோசிச்சிண்டிருப்பா அவ? என்னமோடியம்மா. பொம்மனாட்டி ஜென்மமே எடுக்கப்படாது.”

பங்கஜம் தலை குனிந்தவாறு அப்பளக் குழவியை உருட்டிக் கொண்டிருந்தாள். கைகள் இயங்கிக்கொண்டிருக்க, மனமென்னவோ சாமிநாதன் பற்றிய நினைப்பிலிருந்து விடுபடாதிருந்தது. தனது வருங்கால வாழ்க்கை நன்றாக அமைய அவன் ஏதோ ஒரு வகையில் காரணமாகப் போகிறான் என்று உள்ளுணர்வாக அவளுக்குத் தோன்றியது. ‘எப்படி? அவரைப் போய்ப் பார்த்துப் பேசி, என்னை அவருடன் சேர்த்து வைப்பாரோ? சே! நான் ஏன் இப்படி யெல்லாம் நினைக்கிறேன்? என் மேல் அந்த அளவுக்கு அக்கறை கொள்ள அவருக்கென் ன தலையெழுத்து?’

அப்போது அந்த வீட்டுக்கு ஓர் ஆள் வந்தார். அந்த நேரத்தில் பத்மநாபன் வெளியே ஏதோ வேலையாகப் போயிருந்ததால், என்ன, ஏது என்று விசாரிப்பதற்காகக் காவேரி வாசலுக்குப் போனாள்.

“அம்மா! இது பத்மநாப அய்யர் வீடுதானே?” என்று வினவிய அவர் வேலையாளைப் போலத் தெரிந்தார்

“ஆமா. நீ யாரு?”

“ நான் தேவராசய்யர் வீட்டு வேலையாளுங்க. அய்யாவோட சம்சாரந்தான் என்னய இங்கிட்டு அனுப்பினாங்க. என் பேரு பெரியசாமி. நீங்க .. ..”

“நான் கல்யாணப் பொண்ணுக்கு அம்மா.”

“ஆங்! உங்களத்தான் ஒடனே இட்டாரச் சொன்னாங்க. வண்டியோட என்னய அனுப்பி வெச்சிருக்காங்க அந்தம்மா.”

“எங்க வீட்டு அய்யாவையா, என்னையா? யாரைக் கூட்டிண்டு வரச் சொன்னா?”

“கலியாணப் பொண்ணோட அம்மாவை இட்டான்னுதான் சொன்னாங்க.”

காவேரிக்கு எதனாலோ அந்த அழைப்பு விபரீதமாய்ப் பட்டது. அவள் திகைப்பும் திகிலுமாய் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கணம் போல் நின்றாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 16

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

ஜோதிர்லதா கிரிஜா


செங்கல்பாளையம் போய்த் திரும்பிய அன்று முழுவதும் சாமிநாதனுக்குத் தூக்கம் வரவில்லை. இப்படியும் அப்படியுமாய்ப் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தான். கதவு திறந்த பங்ககஜத்தின் நெருக்கத்தில் பார்த்த முகம் அவன் மனக்கண்ணைவிட்டு மறையவில்லை. தனக்கு என்ன நேர்ந்து கொண்டிருந்தது என்று அவன் திகைத்தான். அது வரையில் அவன் எந்தப் பெண்ணையும் பார்த்து, ‘இவள் அழகி’ என்று நினைத்ததில்லை. எனவே, சபலம் என்கிற சொல்லுக்கே அவனது அகராதியில் இடம் கிடையாது. அவனுடைய பெரியப்பாவும் சித்தப்பாவும் துறவறம் பூண்டு முப்பது வயதுக்கும் முன்னாலேயே இமயமலைப் பக்கம் போய்விட்டவர்கள். அதற்குப் பிறகு அவர்களைப் பற்றிய தகவலே வந்ததில்லை. அவனது பாரம்பரியத்துக்குரிய அந்தத் துறவுகொள்ளும் மனப்பான்மை அவனுக்கும் வாலிப வயதிலேயே ஏற்பட்டுவிட்டிருந்தது. அதனால்தான், அவன் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ன பரமஹம்சர் போன்ற மகான்களின் நூல்களை வாசிப்பதிலும், யோகாசனப் பயிற்சியிலும் ஈடுபட்டுத் துறவறமே தன் குறிக்கோள் என்று உறுதியா யிருந்தான்.

சிறு வயதிலேயே பிரும்மசரியத்தில் ஆர்வம் கொண்டுவிட முடிந்த தான் தூய்மையின் இலக்கணம் என்பதாய் அவனுக்குள் ஓர் இறுமாப்பும் இருந்தது. ‘அப்படியானால் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் தூய்மையற்றவர்களா என்ன ?’ என்று தன்னைத்தானே கேட்டு அவன் சிரித்துக்கொள்ளவும் தவறியதில்லை. தன் எண்ணம் சரியானால் தானும் சேற்றில் உற்பத்தியானவன்தானே என்கிற நியாயமான கேள்வியும் அவன் மனத்தில் எழுவதுண்டு. எனவே, ‘இது ஒரு மனப் போக்கு. இதில் “தூய்மை”, “தூய்மை யின்மை” என்கிற பேச்சுக்கே இடமில்லை’ என்று அவன் இறுதியாக முடிவுசெய்தான்! எது எப்படி யானாலும், பிரும்மசரிய ஆர்வம் தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவனாய்க் காட்டியதாய் அவன் அதுகாறும் கொண்டிருந்த செருக்கில் பங்கஜம் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாள் என்பதே கண்கூடான உண்மை!

பங்கஜம் தன் துறவு மனப்பான்மையைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுவிட்டதை எண்ணி எண்ணி அவன் பிரமித்துக்கொண்டிருந்தான். தனக்கு இப்படி ஒரு சரிவா என்று வியப்பு ஏற்பட்டாலும், அது பற்றிய ஏமாற்றமோ குற்ற உணர்வோ அவனுக்கு ஏற்படவில்லை. மணமான அவளைத் தான் அடைவது என்பது குதிரைக்கொம்பு என்பது நன்றாய்த் தெரிந்திருந்தாலும், அவள் கிடைக்காவிட்டாலும், அவளது நினைவில் வாழ்ந்துவிட அவன் தயாரா யிருந்தான். அவன் அம்மாவுக்கும் பிறர்க்கும் அவன் பிரும்மசாரியாகத்தான் தோன்றப் போகிறான். ஆனால், மனத்தளவில் அவன் பங்கஜத்தோடு வாழ்வதை யாரால் கண்டுபிடிக்க முடியப்போகிறது ? அவளோடு அவன் மானசிகக் குடும்பம் நடத்துவதை யார்தான் தடுக்க முடியும் ?

இப்படியெல்லாம் அவன் குருட்டு யோசனைகள் செய்தாலும், துளியும் பழக்கமே இல்லாத ஒரு பெண்ணிடம் சிக்கித் தன் மனம் இந்தப் பாடு பட்டது அவனுள் அளவுகடந்த திகைப்பையும் தன் உள்மனம் பற்றிய அதிர்ச்சியையும் இடைவிடாது அவனிடம் தோற்றுவித்தவாறா யிருந்தது. ‘இதன் பெயர்தான் விட்ட குறை, தொட்டகுறை என்பதா ? எனக்கென்ன கிறுக்கா பிடித்துவிட்டது ? கணவனால் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் ஒரு மணமான பெண்ணுக்காக மனத்தை அலைய விடுவது அசட்டுத்தனத்தின் உச்சமல்லவா! கனவில் மட்டுமே அவளுக்குத் தன்னால் தாலிகட்ட முடியும் என்னும் கண்கூடான நிலை அவனுக்கு அவ்வப்போது ஒரு தன்னிரக்கத்தையும் சுயவெறுப்பையும் கூட ஏற்படுத்தத் தவறவில்லை.

அவனது அறிவு என்னென்னமோ சொல்லி அவனை மாற்ற முயன்ற போதிலும், அவன் மனமென்னவோ தெறிகெட்டுத்தான் ஓடிக்கொண்டிருந்தது. அதன் தாக்கம்தான் அவன் அடுத்த நாளே செங்கல்பாளையம் போனது.

‘அந்தப் பெண்ணை’ வேலைக்கு வைத்துக்கொள்ளுவது பற்றித் தங்கம்மாவிடம் பேச்செடுப்பதற்குரிய துணிச்சல் உடனே அவனுக்கு வரவில்லை. குற்றமுள்ள நெஞ்சாதலின், வெறும் இரக்கத்தால் மட்டுமே தான் அப்படி ஒரு யோசனையைச் சொல்லுவதாய்த் தன் அம்மா நம்புவாளா என்கிற தயக்கமும் அவநம்பிக்கையும் அவனுக்கு இருந்தன. பகத்து வீட்டுப் பொறுக்கியின் கண்களில் அவள் மறுபடியும் பட்டு அதனால் ஆபத்துக்கு அவள் ஆளாகக்கூடாது என்பதன் பொருட்டே வாடகை வீட்டுக்காரர்களைத் தங்களது தற்போதைய வீட்டில் குடியிருக்கச் செய்துவிட்டு, தாங்கள் அவர்களது வீட்டில் குடியேறலாம் என்று சொல்லுகிற அளவுக்கு வெறும் மனிதாபிமானத்தாலோ அல்லது இரக்கத்தாலோ மட்டும் ஒருவன் நடவடிக்கை மேற்கொள்ளுவானா என்று தங்கம்மா திகைக்கவோ அல்லது சந்தேகப்படவோ மாட்டாள் என்று நிச்சயமாக அவனால் நம்பமுடியவில்லை.

தங்கம்மாவிடம் அது பற்றிப் பேசும் நேரத்தை அவன் தேர்ந்தெடுப்பதற்குள் செங்கல்பாளையத்திலிருந்து பாகீரதி மாமி வந்து அவன் ஜோசியர் வீட்டுக்கு வந்து போனது பற்றிய சேதியை அவளிடம் போட்டு உடைத்துவிட்டாள்.

பாகீரதி போன பிறகு, தங்கம்மா, “என்னடா, இது ? அங்க எதுக்குப் போனே ? எங்கிட்ட ஏன் சொல்லல்லே ?” என்று அவனை ஆழமாகப் பரர்த்தவாறு வினவினாள்.

துணிச்சலுடன் தாயை ஏறிடுவது எனும் முடிவுக்கு அதற்குள் சாமிநாதன் வந்து விட்டிருந்தான்.

‘சமயம் பாத்துச் சொல்லலாம்னு இருந்தேம்மா.’

‘இதுல என்னடா இருக்கு சமயம் பாத்துச் சொல்றதுக்கு ? எதுக்கு அவாத்துக்குப் போயிருந்தே நீ ? ஏன் என்கிட்ட முன்கூட்டி ஒரு வார்த்தை சொல்லல்லே ?”

‘அம்மா! அந்தப் பொண்ணை நீ நம்மாத்துல நோாக்கு உதவியா வெச்சுக்கோம்மா. அதுல அவளுக்குச் சம்மதம் இருக்கான்றது தெரியாம எப்படி அப்படி ஒரு யோசனையை உங்கிட்ட சொல்றது ? அதான் அவாளுக்கு முடியுமா, முடியாதான்றதை மொதல்ல கேட்டுத் தெரிஞ்சுண்டதுக்கு அப்புறம் உங்கிட்ட பேசலாம்னு இருந்தேன். வேற ஒரு காரணமும் இல்லே.’

‘சரி. அப்படியே இருக்கட்டும். செங்கல்பாளையத்துலேர்ந்து திரும்பிவந்த கையோட நீ அங்க போயிருந்ததைப் பத்தி எங்கிட்ட சொல்ல வேண்டியதுதானே ? அந்த பாகீரதி மாமி வந்து சொல்லித்தானே விஷயம் தெரிஞ்சுது ? அது சரி, என்ன சொன்னா அவ ?’

‘என்னது! என்ன சொன்னா ‘அவ’ளா! சரியாப் போச்சு, போ. அவளை யெல்லாம் பத்துப் பேசற ஆளா நான் ? அவளோட அப்பா – அந்த ஜோசியர் கிட்டதான் பேசினேன். அப்பாவும் பொண்ணுமா அவாத்து சமையல்கட்டுலெ தனியாக் கலந்து பேசிட்டு சரின்னிருக்கா. ஆனா, உன்கிட்ட நான் இன்னும் அதைப் பத்திப் பேசல்லேங்கிறதை அவர் கிட்ட சொல்லிட்டேன். ‘

‘அப்ப, அப்பாவும் பொண்ணும் குண்டு தைரியந்தான். பக்கத்து வீட்டுலயே தன் கிட்ட மே¢ாசமா நடக்கப் பாத்த ஒருத்தன் இருக்கிறப்போ, தைரியமா இங்க வந்து வேலை செய்யறேனிருக்காளே!” – இவ்வாறு கூறிய போது தங்கம்மாவின் குரலில் ஓர் ஏளனம் ஊடாடியது.

‘இல்லேம்மா. ஒடனேயே முடியாதுன்னு சொல்லிட்டா. அப்புறம், நான் தான் அதுக்கு ஒரு யோசனை சொன்னேன்.’

‘என்ன யோசனை ?’

‘வாடகைக்கு விட்டிருக்கிற நம்மளோட இன்னொரு விட்டுக்கு நாம குடி போயிடலாம்மா. அங்க குடியிருக்கிறவா இந்தாத்துக்கு வந்துடட்டும். அப்ப, அந்தப் பொண்ணு இந்த அளவுக்குப் பயப்பட வேண்டாமோல்லியோ ?” – இவ்வாறு கேட்டுவிட்டு அவன் துணிச்சலுடனும், தன் பார்வையில் எந்தக் கள்ளமும் தெரிந்துவ்ிடாத கவனத்துடனும் தங்கம்மாவை நேரடியாகப் பார்த்தான்.

அப்போது தங்கம்மாவின் விழிகள் அவனை ஏதேதோ கேள்விகள் கேட்டு விரிந்தன.

‘இத பாருடா. மொதல்ல – ஆள் வெச்சுக்குற அளவுக்கு என் ஒடம்புல பலம் வத்திப் போயிடல்லே. ரெண்டாவது – அவா மேல இரக்கம்னா அஞ்சோ பத்தோ தர்மம் பண்ணிட்டு வெலகிடணும். கஷ்டப் பட்றவாளைப் பாத்து இந்த அளவுக்கு உருகுறது அசட்டுத்தனம். கஷ்டப்பட்றவா எத்தனையோ பேரு இருக்கா லோகத்துல. அவாளையெல்லாம் கூப்பிட்டு இங்க குடி வைக்க, நம்மாத்தைச் சத்திரமா மாத்துவியா என்ன!’ – தங்கம்மாவின் கேலி அவனைத் தாக்கியது.

‘அப்படி இல்லேம்மா. அந்தப் பொண்ணு என் கண் முன்னால அந்த ராஸ்கல் ஆத்துலேர்ந்து தப்பி ஓடினதைப் பாத்ததுதான் அதுக்குக் காரணம். நீ சொல்றாப்ல, எல்லாரையுமா நாம காப்பாத்த முடியும் ? நேரடியாப் பாத்துட்டதால வந்த ஒரு எண்ணம். அவ்வளவுதான்!’

‘இருக்கட்டும். ஆனா, அதுக்காக வீடு மாத்தற அளவுக்கா போவா ? நன்னாருக்குடா. யாராவது கேட்டா சிரிப்பா!’

‘ஏம்மா, ‘அந்த வீடு கோவிலுக்குப் பக்கத்துல இருக்கு. அங்க போயிடலாம்’னு நீயே எத்தனை தரம் சொல்லி யிருக்கே ? நானும் சரின்னுதானே சொல்லிண்டிருந்தேன் ? என்னமோ அதுக்கு வேளை வரல்லே. இப்ப வந்திருக்குன்னு வெச்சுக்கயேன்.’

தங்கம்மா அயர்ந்து போனாள். ‘துளியும் அறிமுகமே இல்லாத ஒரு பெண்ணின் மேல் ஒருவனுக்கு இந்த அளவுக்கு உதவுகிற எண்ணம் வருமா!’ என்று அவள் மலைத்தது மறுபடியும் அகன்ற அவள் விழிகளில் அவனுக்குப் புலப்பட்டது. அதே சமயத்தில் தன் மகன் மீது அவளுக்கு அவநம்பிக்கை ஏதுமில்லை என்பதையும் அவளது பார்வை புலப்படுத்தியதாக அவன் நினைத்தான். அந்தப் பெண்ணின் மீது தனக்குத் திடாரென்று ஒரு பற்றுதல் – காதல் – ஏற்ட்டிருந்ததை அவனால் தங்கம்மாவிடம் வெளிப்படுத்தவே இயலாது. அது ஓர் ஊமை கண்ட கனவாய்த்தா னிருக்கப் போகிறது.

இப்படி யெல்லாம் நிதரிசனங்களை அவன் மனம் அலசினாலும், தன் மனம் அவளது உறவை – அண்மையை – நாடிய உண்மையிலிருந்து அவனால் நழுவமுடியவில்லை. அந்த மகிழ்ச்சியாவது தனக்குக் கிட்டட்டுமே – அவளை அடிக்கடி பார்க்கிற மகிழ்ச்சி – அவளது அண்மை தனக்கு விளைவிக்கக்கூடிய சிலிர்ப்பு- ஆகியவையேனும் தனக்கு மிஞ்சட்டுமே என்று அவன் நினைத்தான். கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனாய்த் தன்னை மாற்றும் அளவுக்குத் தான் காதல் வசப்படுவான் என்பது அவனது கற்பனைக்கும் அப்பாற்பட்ட விஷயமாகவே இருந்தாலும், அதன் உண்மை அவனை அயர்த்தவே செய்தது.

‘என்னம்மா ? பதிலே சொல்லாம இருக்கே ? நோக்கு இஷ்டமில்லேன்னா மனசு விட்டுச் சொல்லிடு. அந்தப் பொண்ணுக்கும் அவ அப்பாவுக்கும் நான் வேற ஏதானும் ஏற்பாடு பண்ணிக் குடுக்கறேன்.’

‘வேற என்ன ஏற்பாடுடா பண்ணுவே ?’

‘மெட்றாஸ்ல என்னோட அச்சாபீஸ் இருக்கோல்லியோ ? அதுல அவளை வேலைக்கு அமர்த்துவேன். அச்சுக் கோக்கற வேலை பண்ணலாமே ? தமிழும் இருக்கே ? அவ அப்பா அங்கேயே புரோாகிதம், ஜோசியம்னு வண்டியை ஓட்டிட முடியுமே ?’

‘அப்ப – பட்டணத்துக்கே அவாளைக் கூட்டிண்டு போய் வீடு அமத்திக் குடுப்பியா என்ன!’

‘ஆமாம்மா. அதே தான் ! நேக்கென்னமோ அந்தப் பொண்ணு கொள்ளிக்கட்டையும் கையுமா தன்னைப் பத்தின பிரக்ஞை கூட இல்லாதவ மாதிரி ஓடினதைப் பாத்ததுலேர்ந்து மனசே சரியாயில்லே. நம்ம தேசத்துல இது மாதிரி எத்தனை பொண்ணுகள் கஷ்டப்பட்றா, தெரியுமாம்மா நோக்கு ?’

சாமிநாதனின் குரல் கொஞ்சங் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே போயிற்று. அப்படி ஒரு சுருதி ஏற்றத்தோடு அவன் பேசினான் என்றால், அவன் வெளிப்படுத்துகிற எண்ணத்தை மாற்றிக்கொள்ள மாட்டான் என்பதை அனுபவத்தின் வாயிலாகத் தெரிந்து வைத்திருந்த தங்கம்மாவின் அதிர்ச்சி அதன் உச்சத்துக்குப் போயிற்று. ஒரு வகையில் அவனது உடம்போடு பிறந்த இரக்க சுபாவம் அவளுக்குத் தெரிந்த ஒன்று தான் என்றாலும், அவன் மிகையாய்ச் செயல்பட எண்ணியதாய் அவளுக்குத் தோன்றியது. அதற்கான அடிப்படை என்னவா யிருக்கும் என்கிற புதிருக்கு ஒரே ஒரு பதில்தான் இருக்க முடியும் என்றும் அவளுக்குப் பட்டது. எனினும், இப்படி யெல்லாம் அவன் எண்ணப்போக்கை அலசிய நேரத்தில், பிரும்மசரிய விரதம் பூண்டு முப்பது வயது வரையில் திருமணம் செய்துகொள்ள மறுத்துத் தாக்குப் பிடித்துள்ள மகனைச் சந்தேகிக்கவும் அவளால் இயலவில்லை. தவிரவும், கணவன் உயிருடன் இருக்கின்ற நிலையில், மணமான ஒருத்தியின்பால் அவன் மனம் அப்படி ஒரு “தகாத” நோக்கத்தை ஒருபோதும் கொள்ளாது என்று அவள் உறுதியாக நம்பினாள். அதே நேரத்தில், பஞ்சும் நெருப்பும் பற்றிய உதாரணமே அவளுக்கு நினைப்பு வந்ததால், நடைமுறைத்தனமாகவும் அவளால் யோசிக்காதிருக்க முடியவில்லை.

எனவே, பட்டணத்துக்கு அவன் அவர்களை அழைத்துப் போய்க் குடிவைப்பதைக் காட்டிலும், தன் கண்காணிப்பின் கீழ் அவர்கள் இருப்பது நல்லதென்று அவள் நினைத்தாள்.

‘சரிடாப்பா. உன்னிஷ்டம்!’ என்று அவள் கடைசியில் இறங்கி வர வேண்டியதாயிற்று.

தங்கம்மாவுக்கும் தனக்குகிடையே நடந்த அந்தச் சொல்லாடல் பற்றி அசை போட்டுக்கொண்டிருந்தவனுக்கு முன்னால் வந்து நின்ற அவள், “ நாம குடி வெச்சிருக்கிறவா கிட்ட போய் விஷயத்தைச் சொல்லிட்டு வந்துடு. நம்ம வண்டியிலேயே வேணும்னாலும் அவா தன்னாத்து சாமான்கள் சிலதை எடுத்துண்டு வந்து இப்ப சத்தியா கூடத்துல வைக்கட்டும். அந்த வீடு காலியானதுக்கு அப்புறமா நாம காலி பண்ணலாம். சரியா ?” என்றாள்.

“சரிம்மா!” என்ற சாமிநாதனின் கண்களில் தாயின் பால் பரிவும் நன்றியும் தெரிந்தன. தனது பட்டணத்து அச்சாபீசில் அந்தப் பெண்ணுக்கு வேலை போட்டுத் தர இருப்பதாகத் தான் மட்டும் சொல்லி யிருந்திராவிட்டால், தங்கம்மா தன் வழிக்கு வந்திருக்கவே மாட்டாள் என்றெண்ணி அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

“அந்தப் பொண்ணு இங்க வந்து வேலையில சேர்ற வரைக்கும் நீயா யார் கிட்டவும் அதைப் பத்திப் பேசவேண்டாம்மா. அந்த விஷயம் நாகலிங்கத்தோட காதுக்கு எட்டிடக் கூடாது. அதுக்குத்தான் சொல்றேன்.”

“சரிடா.”

“அது ச ரி, அந்தப் போண்ணு பேரென்ன ? நோக்குத் தெரியுமா ?”

“பாகீரதி மாமி பேச்சுவாக்குல பங்கஜம்னு சொன்னா.”

“சரி. அப்ப நான் இன்னைக்கு சாயங்காலம் செங்கல்பாளையத்துக்குப் போய் அவா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துட்றேன். இப்ப, மொதல்ல நம்ம வாடகைவீட்டுக்காரா கிட்ட சொல்லிட்றேன்.”

“சரி.”

தங்கம்மா சமையற்கட்டுக்குப் போய்த் தன் வேலையில் ஆழ்ந்தாள். அப்படியே சிந்தனையிலும் ஆழ்ந்தாள்: ‘அந்தப் பொண்ணு தாலியறுத்தவாளயிருந்தா, நான் பயப்பட்றதுக்கு ஒரு நியாயமிருக்கும். இவன் பாட்டுக்குக் காந்தி சொல்றார்னுட்டு விதவாவிவாகம் பண்ணிக்கிறேன்னு ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பான். ஆனா அதுவோ இல்லே. அவளோட ஆம்படையான் உசிரோட இருக்கிறதால அந்தப் பேச்சே வராது. .. .. அந்தப் பொண்ணோட அப்பாவும் ஜோசியர் பரம்பரை. ரொம்ப வைதீகம். புரோகிதம் வேற பண்ணின பூர்வீகம். அவர் வளத்த பொண்ணும் வைதீகமாத்தான் இருப்பா! அதனால தப்புத் தண்டா எதுவும் நடக்கிறதுக்கு சாத்தியமே கிடையாது!.. .. ..’

.. .. .. கதவைத் திறந்த பங்கஜத்தின் பார்வையுடன் சாமிநாதனின் பார்வை இரண்டறக் கலந்து அவளை ஒரு தடுமாற்றத்தில் ஆழ்த்தியது. அவள் ஒன்றுமே சொல்லாமலும், புன்னகை கூடப் புரியாமலும், பார்வையை அகற்றிக்கொண்டு, “அப்பா! அப்பா!” என்று கூப்பிட்டுக்கொண்டு ஓடாத குறையாக உள்ளே போனாள்.

பஞ்சாட்சரம் வாசலுக்கு வந்து அவனை வரவேற்று உள்ளே அழைத்துக்கொண்டு போனார். அவனை உட்காரப் பணித்துத் தாமும் உட்கார்ந்துகொண்ட பின், “சொல்லுங்கோ!” என்று அவனை நோக்கிப் புன்னகை செய்தார்.

“என்னது நீங்க ? நான் சொல்லியும் கேக்காம, ‘நீங்க’ ங்கறேள் ?”

“வயசுல சின்னவரா யிருந்தாலும் எங்களுக்குப் படியளக்கப் போறவரில்லியா நீங்க ? அதுக்குண்டான மரியாதையோடதான் நான் பேசணும்! தயவு பண்ணி இந்த விஷயத்துல என்னை வற்புறுத்தாதீங்கோ.”

“ சரி. அப்புறம் உங்க இஷ்டம்.. .. .. எங்கம்மா சரின்னுட்டா. இன்னும் அஞ்சாறு நாளுக்குள்ள நீங்க உங்க பொண்ணைக் கூட்டிண்டு வந்து எங்காத்துல விடலாம். என்னிக்கு வரலாம்கிறதை நான் வந்து சொல்றேன். சரியா ? அக்கிரகாரத்துல சந்நிதித் தெருன்னு இருக்கு. கோவிலுக்கு எதித்தாப்ல. அதுல ஒம்பதாம் நம்பர் வீடு.”

பஞ்சாட்சரம் கண்கலங்கிக் கைகூப்பினார்: “ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு! இந்தக்காலத்துல இப்படி யாரு ஏழைகளுக்கு உதவறதுக்கு இருக்கா ? .. .. ஆனா, ஒரு சின்ன இது.. ..”

“சொல்லுங்கோ.”

“சிலுக்குப் பட்டியில பத்மநாபய்யர்னுட்டு ஒருத்தர். அவர் பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு. உங்க ஊர் தேவரஜய்யர் பிள்ளைக்குத்தான் குடுக்கறா. கல்யாணம் முடியற வரைக்கும் எம்பொண்ணு அவாத்துக்கு வேலை செய்யப்போறா. அதுக்கு அப்புறம் உங்காத்துக்கு வருவா. ஆட்சேபணை ஒண்ணுமில்லியே உங்களுக்கு ?”

“ஆட்சேபணையே இல்லே. சவுகரியம் போல வரட்டும். தேவராஜய்யர் எங்களுக்குப் பழக்கமானவர்தான். பெரிய குடும்பம். மூத்த பிள்ளைகள், மாட்டுப் பொண்ணுகள் எல்லாருமா ஒண்ணா யிருந்துண்டிருக்கா. .. .. நான் இன்னும் ஒரு மாசம் போல இருப்பேன். அதுக்கு அப்புறம் மெட்றாஸ் போயிடுவேன். அஞ்சாறு மாசம் கழிச்சுத்தான் அடுத்த விசிட். .. அப்ப, நான் வரட்டுமா ?”

“இருங்கோ. ஒரு வாய்க் காப்பியாவது குடிச்சுட்டுத்தான் போணும்.”

“இல்லேல்லே. நன் கெளம்பறேன்.. .. இந்தாங்கோ. இதை எடுத்துக்குங்கோ.”

சாமிநாதன் கொய்யாப் பழங்களும் மாதுளம் பழங்களும் நிறைந்த துணிப் பையை அவரிடம் கொடுத்தான்.

“எதுக்கு இதெல்லாம் ? ஏற்கெனவே ஒரு பை நிறைய குடுத்திருக்கேள்.”

“இருக்கட்டும். அப்ப நான் வரட்டுமா ?”

அவன் எழுந்தான். அவரும் எழுந்தார். அப்போது திடாரென்று வீசிய காற்றில் அடுக்களைக் கதவு அசைய, அதன் அருகே நின்றிருந்த பங்கஜம் அவனுக்குத் தென்பட்டாள். பஞ்சாட்சரம் முதுகு காட்டி நின்றதால், அவன் துணிவோடு அவள் புறம் பார்த்தான். அவன் விழிகளைச் சந்தித்த பின், அவள் சட்டென்று மிக விரைவாக நகர்ந்துகொண்டாள். அது வரையில், அவள் கதவுக்குப் பின்னால்தான் நின்றிருந்திருக்க வேண்டும் என்று சன்ன்மாக ஒரு நம்பிக்கை சாமிநாதனுள் கிளர்ந்தது.

“அப்பா!”

“என்னம்மா ?”

“பாகீரதி மாமிக்கு இந்த விஷயம் இப்ப தெரியலாமா கூடாதான்னு எதுக்கும் கேட்டு வெச்சுக்குங்கோ.”

“தாராளமாச் சொல்லிக்குங்கோ. எதுக்கு வீண் ஒளிவுமறைவு ?” – அவன் நேரடியாகவே பதில் சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே புறப்பட்டான்.

.. .. .. மறு நாள் பத்மநாபய்யர் வீட்டுக்குப் பாகீரதி மாமியுடன் பங்கஜம் போய்க்கொண்டிருந்த போது, வழியில் வள்ளி எதிர்ப்பட்டாள். ‘இவளை எங்கோ பார்த்தாற்போல் இருக்கிறதே ?’ என்று பங்கஜம் யோசித்தாள்.

– தொடரும்

jothuigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பாகீரதி நல்லவள்தான். இருந்தாலும், படிப்பறிவற்ற கிராமத்துப் பெண்களுக்கே உரிய வம்பு வளர்த்தல் எனும் இயல்புக்கு அவள் விதிவிலக்காக இல்லை. இப்போது கூட அவள் ஏற்பாடு செய்துகொடுத்த வேலை என்பதனால்தான் பங்கஜம் காமாட்சியின் கணவனால் தனக்கு நேர விருந்தது பற்றிச் சொன்னாளே தவிர, மற்றப்படி அவள் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அன்று. தான் உள்ளது உள்ளபடியே சொன்னவற்றை யெல்லாம் பாகீரதி அப்படியே நம்பி யிருப்பாள் என்கிற நம்பிக்கை பங்கஜத்துக்கு இல்லைதான். ‘சொன்னதே இவ்வளவென்றால், இவள் சொல்லாமல் விட்டது இன்னும் எவ்வளவோ!’ என்கிற சராசரி எண்ணத்துக்குத்தான் இடம் கொடுத்து அவள் தன் கற்பனையை ஓடவிடுவாள் என்பது அவள் அறியாததன்று.

சாமிநாதனின் வருகையைப் பொறுத்தமட்டில், பஞ்சாட்சரம் சொல்லி வைத்திருந்தபடியே அதைப் பற்றித் தானாக அவளிடம் தெரிவிக்காதிருப்பதுதான் நல்லதென்று அவள் எண்ணி யிருந்தாள். ஆனால், பாகீரதியின் பார்வையில் அவன் பட்டிருக்கக்கூடுமோ என்கிற ஐயமோ, ஒருகால் அவளுக்கு அவனைத் தெரிந்திருக்கலாமோ என்கிற எண்ணமோ பங்கஜத்துக்கு ஏற்பட்டிருக்கவில்லை.

எனினும் பங்கஜம் திகைத்ததெல்லம் கணப் பொழுத்துக்குத்தான். உடனேயே சமாளித்துக்கொண்டுவிட்டாள்:

“அவர் காமாட்சி மாமியாத்துக்குப் பக்கத்தாத்துலயா இருக்கார் ? நேக்குத் தெரியாது,மாமி. ஜோசியம் பாக்கறதுக்காக அப்பாகிட்ட வந்தார்.”

“என்னவாம் ? எதுக்கு ஜோசியம் ?”

“நேக்குத் தெரியாது, மாமி. நான் கவனிக்கல்லே. அப்பாவும் எதுவும் சொல்லல்லே. உங்களுக்கு அவாளைத் தெரியுமா – வந்தவரோட அம்மா-அப்பாவைச் சொல்றேன்.”

“அவனுக்கு அப்பா இல்லே. அம்மா மட்டும்தான் இருக்கா. கொஞ்சம் செயலுள்ள குடும்பம். மெட்றாஸ்க்குப் போய் பீ.ஏ. படிச்சுப் பட்டம் வாங்கினான். அதனால, வத்தலப் பாளையத்துல அவனுக்கு பீ.ஏ. சாமிநாதன்னு பேரு. தடியாட்டமா முப்பது வயசு ஆறது. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னுட்டான். அதுல அவனோட அம்மாக்காரிக்கு வருத்தமான வருத்தம். அவனோட அம்மா இருக்கிற வரைக்கும் வந்து போயிண்டிருப்பன். அதுக்கு அப்புறம் சாமியாராப் போயிடுவன்னு நெனைக்கிறேன். தங்கம்மாவுக்கு ஒரே கவலை.”

“தங்கம்மாங்கிறது அவரோட அம்மாவா ?”

“ஆமா. நிறைய சொத்து சுகம் இருக்கு. எல்லாத்தையும் தாயாதிக்காரன் கொண்டு போயிடப் போறானேன்னு தங்கம்மாவுக்கு மனசு கெடந்து அடிச்சுக்குறது. அவளோட நச்சரிப்புத் தாங்க முடியாமயே அந்தப் பிள்ளையாண்டான் வருஷத்துக்கு ஆறேழு மாசம் மெட்றாஸ், பாண்டிச்சேரின்னு போயிட்றான். அங்க என்னமோ அச்சாபீஸ் நடத்தறானாம்.”

பங்கஜம் தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டாள். சில விநாடிகளுக்கு இருவரிடையேயும் மவுனம் விளைந்தது.

அதைப் பாகீரதி கலைத்தாள். “வேற ஏதாவுது நல்ல எடமாத் தெரிய வந்தா நோக்குச் சொல்றேன். பங்கஜம்!.. .. வத்தலப்பாளையத்துல தேவரரஜ அய்யர்னு ஒரு பெரிய பணக்காரர் இருக்கார். அவாத்துல இருக்குற சமையல்கார மாமிக்கு ரொம்பவே வயசாயிடுத்து. அதனால நோக்கு அங்க வேலை கெடைக்குமாங்கிறதப் பத்தி மொள்ள அளப்பறிஞ்சு பாக்கறேன்.”

“சரி, மாமி. அப்ப நான் வரட்டுமா ?”

“இரு. குங்குமம் தறேன். இட்டுண்டு போ.”

குங்குமத்தை இட்டுக்கொண்டு பங்கஜம் புறப்பட்டாள்.

.. .. .. பஞ்சாட்சரத்திடம் பாகீரதியுடன் நடந்த உரையாடல் பற்றிச் சொன்ன பங்கஜம், “உங்ககிட்ட ஜோசியம் கேக்க அந்த மனுஷன் வந்துட்டுப் போனதாச் சொல்லி யிருக்கேன்ப்பா. ஞாபகமா நீங்களும் அப்படியே சொல்லுங்கோ,” என்று முடிவாக எச்சரித்தாள்.

“சரிம்மா. ஆனா அந்தப் பிள்ளை இன்னும் ஒரு வாரம் கழிச்சு உன்னை வேலைக்கு வரச் சொல்றதுக்காக இங்க வந்தா, அப்ப விஷயம் வெளியாயிடுமே ?”

“அதைப் பத்தி இப்ப என்னப்பா ?அப்படி அங்க வேலைக்குப் போகும்படி ஆச்சுன்னா, இன்னிக்கு அவர் இங்க வந்தப்போ பேச்சுவாக்கில நீங்க என்னைப் பத்தி அவர் கிட்ட சொன்னதா யிருக்கட்டுமே ? அதை மனசில வெச்சிண்டு என்னை வேலைக்குக் கூப்பிட அப்புறமா அவர் வந்ததா அப்ப சொல்லிண்டாப் போச்சு.”

“உண்மையைச் சொல்லிடலாந்தான். ஆனா அவன் இன்னும் தன்னோட அம்மா கிட்டவே விஷயத்தைச் சொல்லல்லேங்கறான். பாகீரதி மாமியோ அடிக்கடி வத்தலப் பாளையத்துக்குப் போறவ. இவ பாட்டுக்கு அவரோட அம்மாகிட்ட என்னத்தையானும் கேட்டுத் தொலைச்சா என்ன செய்யறது ? அதனால நீ சொல்றதுதான் சரி. இப்போதைக்குச் சொல்ல வேண்டாம்.”

“பாகீரதி மாமி சொன்ன அந்த வத்தலப்பாளையம் தேவராஜய்யர் இருக்காரே, அவாத்துல வேலை கெடைச்சா நன்னாருக்கும்.”

“ஆமாம்மா. அது பத்திரமான எடமா யிருக்கும்னு தோண்றது.”

‘ஆண்பிள்ளைகள் இருக்கிற இடம் பெண்களுக்குப் பத்திரமானதா யிருக்காது. அவர்கள் மனங்களுக்குள் புகுந்தா பார்க்க முடியும் ? பாகீரதி மாமியும் அப்படித்தானே சொன்னாள் ?’ – இவ்வாறு பங்கஜத்தின் சிந்தனை ஓடியது. ஆனால், அவள் பஞ்சாட்சரத்திடம் அதைச் சொல்லவில்லை.

.. .. .. இரண்டு நாள்கள் கழித்து, பாகீரதி பங்கஜத்தின் வீட்டுக்கு வந்தாள்.

“வாங்கோ மாமி. உக்காருங்கோ.”

உட்கார்ந்துகொண்ட பாகீரதி, “இன்னிக்கு வத்தலப்பாளையம் போயிருந்தேன். தேவராஜய்யர் ஆத்துக்கும் போய் நைஸா அளப்பறிஞ்சேன். அந்தச் சமையல்கார மாமியோட தங்கையே இருக்காளாம். இப்ப இருக்கிற மாமி ரொம்ப வருஷமா இருக்கிறதால அவளை நிறுத்துறதுக்கு அவாளுக்குக் கஷ்டமா யிருக்காம். அதனால், அவளோட தங்கைக்காரியையும் ரெண்டாவது ஆளா வெச்சுண்டுடப் போறாளாம். அதனால, என்னோட எண்ணம் தப்பாப் போயிடுத்து.”

“அதைப்பத்த்ி என்ன, மாமி ?”

“அதை விடு. இப்ப நான் சொல்ல வந்தது வேற விஷயம். .. அந்த தேவராஜய்யரோட பிள்ளைக்குப் பொண்ணு குடுத்துச் சம்பந்தம் பண்ணிக்கப் போறவா சிலுக்குப்பட்டிக்காராளாம்.”

“நம்மூர்லேர்ந்து வத்தலப்பாளையத்துக்குப் போற வழியில குறுக்காப் போனா வரும்னு சொல்லுவாளே, அந்தச் சிலுக்குப் பட்டியத்தானே சொல்றேள் ?”

“ஆமா. அதேதான். அந்த ஊர்ல இருக்குற பத்மநாபய்யர்ங்கிறவரோட பொண்ணைத்தான் தேவராஜய்யரோட பிள்ளைக்குக் குடுக்கிறதா யிருக்கா. தேவரஜய்யர் அளவுக்கு இல்லாட்டாலும், அவாளும் பணக்காராதானாம். நாலு நாள் கல்யாணம். பட்சணம்பாடியெல்லாம் பண்றதுக்கு ஆள்கள் தேவைப்பட்றாளாம். தெனமும் காலம்பர பத்து மணிக்குப் போய்ச் சேந்தா, சாயங்காலம் ஒரு நாலு மணி வரைக்கும் அப்பளம் இட்றது, மாவு சலிக்கிறது, லட்டுப் பிடிக்கிறது அது இதுன்னு அவா சொல்ற வேலைகளைப் பண்ணிட்டுக் கெளம்பி வந்துடலாம். சிலுக்குப் பட்டியும் மூணுகல் தொலவுதான். அது குறுக்கால போற ஊர். அவ்வளவுதான். உன்னை அமத்தி விடலாம்னு. மாமா அனுப்பினா நானும் போறதா யிருக்கேன். வந்து வேலை பண்ற பொம்மனாட்டிகளுக் கெல்லாம் பொடவை, ரவிக்கை வெச்சுக் குடுப்பாளாம். அவாத்துலேயே சாப்பாடு, டிஃபன், காப்பி எல்லாம். அது தவிர கையில வேற காசும் குடுக்கறாளாம். என்ன சொல்றே ?”

“என்னிக்கு மாமி கல்யாணம் ?”

“இன்னும் பதினஞ்சு நாள் இருக்கு. நாளைக்கே நீயும் நானுமாச் சிலுக்குப் பட்டிக்குப் போய்ப் பாக்கலாம். ஒம்பது மணிக்கெல்லாம் ரெடியா யிரு. என்ன ?”

“சரி, மாமி.”

“ஏன் ஒரு மாதிரி விட்டேத்தியா பதில் சொல்றே ?”

பங்கஜம் தலையைக் குலுக்கிக்கொண்டாள். உண்மைதான். அவள் அந்த நேரத்தில் சாமிநாதனைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள். ஐந்தாறு நாளில் வருவதாய்ச் சொல்லி யிருந்த அவன் தேவராஜய்யர் அகத்து வேலையைத் தான் ஏற்றுக்கொண்ட பிறகு வந்து நின்றால் என்ன செய்வது என்கிற யோசனைதான். அது தன் குரலில் தெரிந்ததைப் பாகீரதி மாமி கண்டுபிடித்துவிட்டது அவளை வியப்பில் ஆழ்த்தியது. ‘பாகீரதி மாமி பலே மாமிதான்!’

“விட்டேத்தியான்னெல்லாம் ஒண்ணுமில்லே, மாமி. அந்தக் காமாட்சியாத்துக்கு வேலைக்குப் போன ஞாபகம் வந்துடுத்து. வேற ஒண்ணுமில்லே.”

“அதையே நெனைச்சு மனசைப்போட்டு உழப்பிண்டிருக்காதே. இப்ப நாம போகப் போற எடம் கலகலன்னு இருக்கும். அஞ்சாறு பொம்மனாட்டிகள் வந்து வேலை செய்யப்போறா. வேலையை என்னிக்கு ஆரம்பிக்கப் போறாங்கிறது தெரியாட்டாலும், மொதல்ல போய் எடம் பிடிச்சுண்டுடலாம்.”

“சரி, மாமி. உங்களுக்கு நல்ல மனசு.”

“அதெல்லம் ஒண்ணுமில்லே. நான் வரட்டுமா ? அப்பா ஒடம்பு எப்பிடி இருக்கு ?”

“நன்னாயிடுத்து, மாமி.”

“அப்புறம், இன்னொண்ணு சொல்ல விட்டுப் போயிடுத்து.”

“என்னது, மாமி ?”

“வத்தலப்பாளையத்துக்குப் போயிருந்தேனா ? அப்படியே கமாட்சியாத்துக்கும் போனேன்.”

“அய்யய்யோ!”

“ஒண்ணும் தெரியாதவ மாதிரி போனேன். காமாட்சி என்னோட சண்டை பிடிச்சா.”

“அவ எதுக்கு உங்களோட சண்டை போடணும் ?”

“சின்னப் பொண்ணா வேலைக்குக் கூட்டிண்டு வந்து விட்டுட்டேனாம்!”

“நான் ஒண்ணும் சின்னப் பொண்ணு இல்லே, மாமி. நேக்கு இருபத்தொம்பது வயசு ஆச்சு. அது சரி. அந்தக் காமாட்சியும்தானே என்னைப் பாத்தா ? நான் சின்னவங்கிறது அவளோட அபிப்பிராயமா யிருந்தா வேண்டாம்னு சொல்லி யிருக்க வேண்டியதுதானே ? எதுக்கு வீணா உங்களைக் குத்தம் சொல்லணும் ?”

“தென்ன மரத்துல தேள் கொட்ட, பன மரத்துல நெறி ஏறின கதைதான்! ஆத்துக்காரன் மேல இருக்கிற கோவத்தை அவ எம்மேல காட்டினா! நான் சும்மாருப்பேனா ? நன்னா விடுவிடுன்னு விட்டுட்டுத்தான் வந்தேன். ‘உன் ஆம்படையான் கிரிசை கெட்டுப்போய் அவ கிட்ட அசட்டுப் பிசட்டுனு பேசினானாமே ? நீ வேற அசந்து தூங்கிண்டிருந்ததால அவளை நாசம் பண்ணப் பாத்திருக்கான். அவ கொள்ளிக்கட்டையைக் கையில எடுத்திருக்கா, பாதுகாப்புக்காக. அதைக் கீழ போட மறந்து போய்க் கையில பிடிச்சுண்டே தெருவில கொஞ்ச தூரம் ஓடியிருக்கா. எல்லாரும் பாத்திருக்காளே! ஊகிக்க மாட்டாளா என்ன ? இனிமே ஜென்மத்துக்கும் நோக்கு நான் ஆள் அனுப்ப மாட்டேண்டியம்மா! வயசான பொம்மனாட்டியாவே இருந்தாலும் உன் ஆம்படையான் அசடு வழிய மாட்டான்னு என்ன நிச்சியம் ? பொடவையைப் பாத்தாலே வெறி வர்றவனா உன் ஆம்படையான் இருந்தா அதுக்கு நான் செய்ய முடியும் ?’னு நன்னா டோஸ் விட்டுட்டுத்தான் கெளம்பினேன். அப்புறம் பக்கத்தாத்துக்குப் போனேன்.”

“யாரு ? தங்கம்மா மாமின்னு சொன்னேளே அவாத்துக்கா ?” என்று கேட்ட பங்கஜம் தன் முகத்தில் எதையும் காட்டாதிருந்தாள்.

“ஆமா. அவளையும் நேக்கு ரொம்ப வருஷமாத் தெரியுமே! அதான் சொன்னேனே! பாத்து ரொம்ப நாளாச்சேன்னு போனேன். அவளோட பிள்ளையும் இருந்தான்.. .. ..”

‘.. .. .. ‘அவளோட பிள்ளையும் இருந்தான்’ என்று தன்னிடம் இந்த மாமி சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன ? அவர் எதற்காக இங்கே வந்தார் என்பது தெரிந்துவிட்டதோ ?’

பங்கஜம் ஆர்வம் காட்டாத முகத்துடன் பாகீரதியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நீ கொள்ளிக்கட்டையும் கையுமா அவாத்துக் கொல்லைக் கதவைத் தொறந்துண்டு ஓடினதை அவன் தன்னாத்து மொட்டை மாடியிலேர்ந்து பாத்திருக்கான். தங்கம்மா கிட்டவும் ஒடனே சொல்லியிருக்கான்.”

“அப்படியா ? ஆனா அவர் எங்காத்துக்கு வந்தப்போ நான் அடுக்குள்ள இருந்தேன். என்னை அவர் பாத்திருக்க மாட்டார்னு நெனைக்கறேன். அதனால ஜோசியர் பஞ்சாட்சரத்தோட பொண்ணுதான் அதுன்னு அவருக்குத் தெரிஞ்சிருக்காதோ என்னவோ!”

“இல்லேல்லே. நீ யாருன்னு அவனுக்குத் தெரிஞ்சுதான் இருக்கு. ஏன்னா, நீ கொள்ளிக்கட்டையோட ஓடினது பத்தித் தங்கம்மா கிட்ட அவன் சொன்னதுமே ஜோசியர் பஞ்சாட்சரத்தோட பொண்ணுன்னு அவ சொல்லிட்டாளாமே அவன்கிட்ட ?”

“ஓகோ! அப்படியா ? ஆனா அதைப் பத்தி அவர் எங்கப்பா கிட்ட எதுவும் சொல்லியிருக்க மாட்டார்னுதான் நெனைக்கறேன். அது ஒரு சங்கடமான விஷயம் இல்லியா ? எங்கப்பாவும் அவர் சொன்னதாச் சொல்லல்லே.”

பங்கஜம் எதையோ தன்னிடமிருந்து மறைப்பதாய்ப் பாகீரதிக்குத் தோன்றியது. எனினும் மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனாள்.

தங்கம்மா கூட எதையோ தன்னிடமிருந்து மறைத்ததாகப் பாகீரதிக்குப் பட்டது. என்னவா யிருக்கு மென்பதைத்தான் அவளால் ஊகிக்க முடியவிலை. தங்கம்மாவுடனான தனது உரையாடலை அசைபோட்டபடி அவள் தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தாள்.

அவள் போன போது தங்கம்மா கொடியில் புடைவை உலர்த்திக்கொண்டிருந்தாள். பொதுவான பேச்சுக்குப் பிறகு பாகீரதி விஷயத்துக்குப் போனாள்.

“உங்க பிள்ளை நேத்து செங்கல்பாளையத்துக்கு வந்திருந்தான்.”

“செங்கல்பாளையத்துக்கா ? எங்க பாத்தேள் அவனை ?”

“எங்காத்துக்குப் பக்கத்தாத்துலதான். ஜோசியர் பஞ்சாட்சரத்தைப் பாக்க வந்திருந்தான். கல்யாணம் ஏதானும் கூடி வருதா என்ன ?”

பாகீரதி இவ்வாறு கேட்தும், தங்கம்மாவின் முகத்தில் இருள் பரவியது.

‘ஓ! அதுவா! நான் தான் அவனை ஜோசியரைப் பாத்துட்டுவான்னு அனுப்பினேன். நேக்கு வர வர ஒடம்பு தள்ளவே யில்லே. கொஞ்ச நாளா துர் சொப்பனமா வந்திண்டிருக்கு. ஏதானும் பரிகாரம் பண்ணணுமான்னு கேட்டுத் தெரிஞ்டுண்டு வர்றதுக்கோசரம்தான் அனுப்பினேன்.’

தன் பிள்ளை செங்கல்பாளையத்துக்குப் போனதே தங்கம்மாவுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும், தன்னிடமிருந்து சேதியை வாங்கிய பின் எதையோ சொல்லிச் சமாளிக்கிறாள் என்றும் அவளுக்குத் தோன்றியது. பங்கஜமும் தன்னிடம் முழு உண்மையையும் சொல்லவில்லை என்று அவளுக்குப் பட்டதால், அவனது செங்கல்பாளைய வருகையில் ஏதோ விஷயம் இருக்கவேண்டும் என்று அவள் நினைத்தாள். ‘சரக்கு மலிஞ்சா, தானே கடைக்கு வந்துட்டுப் போறது!’ என்று நினைத்துவிட்டு அவள் தெருவில் வேடிக்கை பார்க்கலானாள்.

.. .. .. மறு நாள் வத்தலப் பாளையத்தில் தனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது பற்றி அறியாத பங்கஜம் பஞ்சாட்சரம் வீடு திரும்பியதும் பாகீரதியுடன் நிகழ்ந்த உரையாடல் பற்றி அவரிடம் தெரிவித்தாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

ஜோதிர்லதா கிரிஜா


சாமிநாதன் மறுபடியும் உட்கார்ந்தான். பஞ்சாட்சரம் எழுந்து சமையற்கட்டுக்குப் போனார். அப்பா எழுந்ததைக் கண்டதுமே, பங்கஜம் கதவு மறைவிலிருந்து நகர்ந்துகொண்டாள். ஏதோ பாத்திரங்களை அடுக்குவது போன்ற பாசாங்கில் ஈடுபட்டாள்.

“பங்கஜம்!”

“என்னப்பா ?”

“அந்தப் பிள்ளை சொன்னதெல்லாம் காதுல விழுந்துதா ?” என்று அவர் தம் குரலைத் தாழ்த்திக்கொண்டு வினவினார்.

“விழந்துதுப்பா!”

“அவரோாட அம்மா ஒத்துண்டா நீ வேணா அவாத்துக்கு வேலைக்குப் போறியாம்மா ? முடியுமா ?”

தனக்குச் சம்மதமெனில் அப்பாவுக்கும் அப்படியே என்பதை அவரது கேள்வியிலிருந்து புரிந்துகொண்ட பங்கஜம், “அது முடியும், இது முடியாதுன்னெல்லாம் சொல்றதுக்கு நமக்கெல்லாம் வக்கு இருக்காப்பா ?” என்றாள்.

“அது சரி. ஆனா அப்படி அவரோட அம்மா சம்மதிச்சா நோக்குப் போறதுக்கு இஷ்டமா ? ஏன்னா, அந்தக் கட்டேல போறவன் இருக்குற ஊரா யிருக்கேங்கிறதுனால கேக்கறேன்.”

“அடுத்தடுத்த வீடுன்னா பயமாத்தான் இருக்கும். ஆனா, அவர்தான் வேற வீட்டுக்குப் போறதாச் சொல்றாரேப்பா ? ஆனா நான் அவன் கண்ணுல படாம இருக்கணுமேன்னு மட்டுந்தான் கவலையா யிருக்கு.”

அவள் சன்னமாய்த்தான் பேசினா ளென்றாலும், அவள் சொன்னவை சாமிநாதனின் செவிகளில் விழுந்தன. அவன் கூடத்தில் இருந்தபடியே, “அதைப் பத்திக் கவலைப்பட வேண்டாம்னு அவா கிட்ட சொல்லுங்கோ, மாமா. அவா எங்காத்தோடவே இருக்கட்டும். இங்கேர்ந்து அங்கேயும், அங்கேர்ந்து இங்கேயும்னு தினமும் வேலைக்கு வந்து போய் அலைஞ்சாத்தானே வம்பு ? நீங்க அப்பப்ப எங்காத்துக்கு வந்து அவாளைப் பாத்துட்டுப் போலாம். தினமும் வேணாலும் வாங்கோ. அது உங்களால முடியும்னா!” என்று இரைந்த குரலில் பதில் சொன்னான்.

“என்ன சொல்றே, பங்கஜம் ?”

“நன்னா யோசிச்சுட்டுத்தாம்ப்பா இதுக்கு பதில் சொல்லணும். ஆனா இது ஒரு நல்ல சந்தர்ப்பம்தான். இதை நழுவவிட்றதும் புத்திசாலித்தனமாத் தெரியல்லே. அப்புறம், வேற யாராவது வேலையைத் தட்டிண்டு போயிடுவா.”

“வேற யாரும் தட்டிண்டு போகமாட்டா. நீங்க எவ்வளவு டைம் வேணும்னாலும் எடுத்துக்குங்கோ. என்னிக்கு வரச் சொல்றேளோ அன்னிக்கு வந்து பாக்கறேன். அதுக்குள்ள எங்கம்மாவோட சம்மதத்தையும் வாங்கிட்றேன்.” – சாமிநாதன் இரைந்து பதிலிறுத்தான்.

“ஒத்துக்கலாம்னுதான் தோண்றதும்மா. எவ்வளவு டைம் வேணும் யோசிக்கிறதுக்கு ?”

“உங்களுக்குச் சரின்னு தோணித்துன்னா நேக்கும் சம்மதந்தாம்ப்பா. அப்புறமா உங்களோட கலந்து பேசிட்டுப் பதில் சொல்லலாமேன்னு நினைச்சேம்ப்பா. அதனாலதான் டைம் கேட்டேன். மத்தப்படி நேக்கு எந்த ஆட்சேபணையும் இல்லே”

“அப்ப சரின்னு சொல்லிடட்டுமாம்மா ?”

“சொல்லிடுங்கோப்பா.”

பஞ்சாட்சரம் கூடத்துக்குப் போய்ச் சாமிநாதனின் எதிரில் உட்கார்ந்தார்: “அவ சரின்னுட்டா. உங்க காதுல விழுந்திருக்குமே ?. .. அதனால, நீங்க உங்கம்மாவைக் கேட்டுட்டு, வீடு மாத்தறதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டு, தகவல் சொல்லுங்கோ. நீங்களே வந்து சொல்றேளா, இல்லேன்னா நான் வரட்டுமா – நீங்க என்னிக்கு வரச்சொல்றேளோ அன்னிக்கு ?”

“நீங்க சிரமப்பட வேண்டாம், மாமா. நானே வந்து சொல்றேன். அதுக்கு ஒரு அஞ்சாறு நாளாகலாம். வாடகை வீட்டுல இருக்கிறவாளை எங்க வீட்டுக்கு மாத்தணும். நாங்க அங்க போகணும் இல்லியா ?”

“ரொம்ப, ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு. ஒரு வாய்க் காப்பி குடிச்சுட்டுப் போங்களேன்.. .. அம்மா, பங்கஜம்!”

எழ முயன்ற அவரைத் தோள் தொட்டு அமர்த்திய சாமிநாதன், “இப்பதான் ஒரு சிநேகிதன் ஆத்துல குடிச்சேன். அதனால வேணாம். தப்பா எடுத்துக்காதங்கோ. .. .. இந்தாங்கோ! இதை வாங்கிக்குங்கோ!” என்ற சாமிநாதன் தான் கொண்டுவந்திருந்த துணிப்பையை அவரிடம் நீட்டினான். அதில் வாழைப் பழங்களும் மாம்பழங்களும் இருந்தன.

“எதுக்கு இதெல்லாம் ?”

“சாப்பிட்றதுக்குத்தான்!.. .. சரி. அப்ப நான் வரட்டுமா ?”

பையை வாங்கிக்கொண்ட பஞ்சாட்சரம், “ஒரு நிமிஷம். பையைக் காலி பண்ணிக் குடுத்துட்றேனே ?” என்றார்.

“வேண்டாம். சாதாரணத் துணிப்பை தானே ?” என்ற சாமிநாதன் எழுந்து நின்று கை கூப்பிப் புன்னகை செய்து விடை பெறுவதற்கு அடையாளமாய்த் தலை யசைத்துப் புறப்பட்டான். அவர் அவனுக்குப் பின்னாலேயே வாசல் வரை சென்றார்.

கால்களில் செருப்புகளை அணிந்தவாறு, “அப்ப, நான் ஒரு அஞ்சாறு நாள் கழிச்சு வறேன். சரியா ?” என்று திரும்பவும் கும்பிட்ட பின் சாமிநாதன் வீட்டினுள் பார்வையைச் செலுத்திப் பங்கஜத்தைப் பார்க்கும் ஆவலைப் பெரும்பாடு பட்டு அடக்கிய வண்ணம் தெருவில் இறங்கி நடந்தான். தெருத் திருப்பத்தில் அவனது தலை மறைகிற வரையில் பார்த்துக்கொண்டிருந்த பிறகு பஞ்சாட்சரம் உள்ளே போனார்.

“பங்கஜம்! பங்கஜம்!”

“இதோ வந்துட்டேம்ப்பா!”

அவள் அவருக்கு முன்னால் வந்து நின்றாள்.

“நாம சொப்பனம் ஒண்ணும் காணலியே ? ஒரே ஆச்சரியமா யிருக்கு! கதைகள்ள கூட இப்படி நடக்குமான்னு தெரியல்ல.”

பங்கஜம் புன்னகை செய்தாள். மகளின் முகத்தில் ஒரு தெளிவு, ஒரு நிம்மதி, ஒரு மகிழ்ச்சி எல்லாம் வந்து அமர்ந்துகொண்டு விட்டதாக அவருக்குத் தோன்றியது.

“ஏம்மா! இந்தப் பையனை இதுக்கு முன்னால நீ பாத்திருக்கியா ?”

“இல்லேப்பா. காமாட்சி யாத்துக்கு வேலைக்குப் போனதுக்கு அப்புறம் கூட இந்த ரெண்டு நாள்ல அவர் என் கண்ணுல படவே இல்லேப்பா. .. .. ஆனாலும், சின்னதா ஒரு நெருடல்ப்பா.”

“என்னம்மா ?”

“அவருக்கு ஏம்ப்பா நம்ம மேல இப்படி ஒரு அக்கறை ?”

“எனக்கும் அந்த நெருடல் வரத்தாம்மா செஞ்சுது. ஆனா அவனே சொல்லிட்டானே ? அவன் ஒரு காந்தி பக்தன், பிரும்மசரிய விரதம் பூண்டவன் அப்படின்னெல்லாம். நமக்கு அவன் மேல சந்தேகம் வந்துடுமோங்கிறதுக்காகவே மன்சு விட்டு அவன் தன்னைப் பத்திச் சொல்லிண்டான்னு நெனைக்கறேன். அவன் சொன்னது உன்னோட காதுலயும் விழுந்ததில்லியா ?”

“ஆமாம்ப்பா. காதுல விழுந்தது. குப்பையில குருக்கத்தி முளைச்சாப்ல இவரை மாதிரியும் மனுஷா இருக்கா!”

“இதுல சூது எதுவும் இருக்காதேம்மா ?”

பங்கஜத்துக்குச் சிரிப்பு வந்தது: “மனுஷா நல்லது பண்ண நெனைச்சாலும் அவா மேல இல்லாத பொல்லாத சந்தேகமெல்லாம் வருது, பாத்தேளா ? நேக்கென்னவோ மோசமா எதுவும் தோணல்லே. நல்லவர்னுதான் தோண்றது. “

“நேக்கும் அப்படித்தான் தோண்றது. பாக்கலாம். ஈஸ்வரோ ரட்சது! ஆனா நீயும்தான் கேட்டே – அவருக்கென்ன நம்ம மேல அப்படி ஒரு அக்கறைன்னு!”

“தப்புதான்!.. .. அங்கேயும் போய் இருந்து பாக்கறேன். சரிப்பட்டு வரல்லேன்னா விட்டுட்டாப் போச்சு. அவ்வளவுதானே ?”

“ஆமாமா.. .. அது சரி, காமாட்சி யாத்துல நடந்ததை நீ இன்னும் பாகீரதி மாமி கிட்ட சொல்லல்லேல்ல ?”

“இல்லேப்பா. “

“சொல்லிடு. அந்த மாமிதானே உன்னை அவாத்துல வேலைக்கு அமத்திவிட்டா ? அப்புறம், தப்பா எடுத்துக்கப் போறா.”

“ இப்பவே போய்ச் சொல்லிட்றேம்ப்பா,” என்ற பங்கஜம் கிளம்பினாள்.

“பங்கஜம்! ஒரு நிமிஷம்.”

அவள் திரும்பி, “என்னப்பா ?” என்றாள்.

“சித்த முந்தி அந்தப் பக்கத்தாத்துப் பிள்ளையாண்டான் நம்மாத்துக்கு வந்து பேசினதைப் பத்தி யெல்லாம் இப்ப அதுவும் அந்த மாமிகிட்ட சொல்லவேண்டாம்.”

“சரிப்பா. நானும் அப்படித்தான் நெனைச்சேன்.”

“சரி. போயிட்டு வா.”

அவள் போனாள். பாகீரதி இரேழியிலேயெ எதிர்ப்பட்டாள்.

“வா, வா. நானே வரணும்னு இருந்தேன். மத்தியானமே வந்துட்டே போலிருக்கே ?”

“ஆமா, மாமி. ஒரு அசம்பாவிதம். ஆனா எசகு பிசகா ஒண்ணும் நடக்கல்லே. நடக்கறதுக்கு முந்தி நான் தப்பிச்சிண்டு ஓடி வந்துட்டேன்.”

“என்னடி பொண்ணே சொல்றே ? உங்காத்துலெ உன் கொரலைக் கேட்டதும், அப்பாக்கு ஒடம்பு சரியில்லேங்கிறதுக்கோசரம் ரெண்டு மூணு நாளுக்கு சீக்கிரமா ஆத்துக்குப் போகணும்னு கேட்டுண்டு வந்துட்டியோன்னுன்னா நெனச்சேன் ? என்னமோ அசம்பாவிதம், அது, இதுங்கறியே! என்ன நடந்தது ?” என்று விழிகளை மலர்த்தி வினவிய பாகீரதி, “வா, வா. உள்ள போய் உக்கந்துண்டு பேசலாம்,” என்று உள்ளே செல்ல, பங்கஜம் அவளைப் பின்தொடர்ந்தாள்.

“உக்காரு.”

இருவரும் உட்கார்ந்தார்கள்.

“சொல்லு. என்ன நடந்தது ?”

“.. .. காமாட்சியோட ஆத்துக்காரர் சரியில்லே, மாமி.”

“அய்யய்யோ! அப்படின்னா ?”

“இன்னிக்குக் காலம்பர நான் அவாத்துக்குப் போனப்போ காமாட்சியும் அவ கொழந்தையும் அசந்து தூங்கிண்டிருந்தா. அப்பவே நேக்கு ஏதோ நெரடித்து. அவனையும் காணோம். ஆத்துல சந்தடியே இல்லே. நான் அடுக்குளுக்குள்ள போய்க் காப்பிக்கு அடுப்பு மூட்டி ஜலத்தையும் கொதிக்க வெச்சேன். கொஞ்சங் கழிச்சு அந்தக் கட்டேல போறவன் அடுக்குள் வாசலை மறைக்கிற மாதிரி வந்து நின்னான். அது வரைக்கும் மாடியில இருந்திருக்கான் போலேருக்கு. நேக்கு அவன் சிரிச்ச தோரணையைப் பாத்ததுமே சொரேர்னுது.”

“அட கண்ராவியே! கையைக் கிய்யைப் பிடிச்சு இழுத்தானா ?”

“அவனோட நோக்கம் அதுதான். ‘பயப்படாதே, பங்கஜம் – இவன் தான் நேக்குப் பேரு வெச்சவன் மாதிரிக் கூப்பிட்றான் மாமின்னா ?- நான் ஒண்ணும் மொரடன் இல்லே.. .. நீ மனசோட சம்மதிச்சா ஒரு பூவைக் கையாள்ற மாதிரி உன்னைக் கையாளுவேன். வா, மொட்டை மாடி ரூமுக்குப் போயிடலாம். காமாட்சி இப்போதைகு முழிச்சுக்க மாட்டா’ அப்படின்னான்.”

“அட, படு பாவி! சண்டாளா! அவன் நாசமாப் போக!”

“.. .. ‘அதனால பயப்படாம வா. புருஷனை விட்டுட்டு எத்தனை நாளாச்சு! ஏங்கிப் போயிருப்பேல்லே ?’ அப்படின்னான். “

“கட்டேல போக அவன்!”

“அவ்வளவு பச்சையா அவன் பேசினதை என்னால தாங்கவே முடியல்லே, மாமி. கை, காலெல்லாம் கழண்டுண்டு விட்டுப் போன மாதிரி ஆயிடுத்து. மனசு தடக் தடக்னு அடிச்சுக்க ஆரம்பிச்சுடுத்து. கூச்சல் போட்டு அக்கம்பக்கத்து மனுஷாளைக் கூட்டணும் போல இருந்துது. ஆனா கொரலே எழும்பல்லே. சுபாவத்துலெ நான் பயந்தாங்கொள்ளியா யிருந்தாலும், அவன் கிட்டேர்ந்து எப்படியாவது தப்பிச்சுடணும்குற வெறி எங்கிட்ட அதிகமா யிருந்ததால, திடார்னு என் மனசில ஒரு தந்திரம் தோணித்து.”

இவ்வாறு சொல்லி நிறுத்திய பங்கஜத்தின் முகத்தில் ஒரு சிறுநகை தோன்றியது.

“சொல்லு, சொல்லு! அப்புறம் ? என்ன தந்திரம் பண்ணி அந்த நாசகாரன் கிட்டேர்ந்து தப்பிச்சே ? தப்பிச்சுட்டே தானே ?”

“கடவுள் கிருபையால தப்பிச்சுட்டேன்தான்! இல்லேன்னா, இந்த நேரம் எங்கப்பா எங்காத்துக் கெணத்துல மிதக்கிற என்னோட பொணத்தைப் பாத்து வாயிலயும் வயித்துலயும் அடிச்சு, அழுதுண்டுன்னா இருப்பா ?”

“சரி. சொல்லு. என்ன தந்திரம் பண்ணித் தப்பிச்சே ?”

“.. .. அவன்கிட்டேர்ந்து தப்பினாப் போறும்கிற ஒண்ணுதான் அப்ப என் மனசில இருந்துது. அதனால நான் நடந்துண்டதை நெனைச்சா நேக்கே என் மேல அருவருப்பாயிருக்கு. ஆனாலும் அப்படிப் பண்றதைத் தவிர வேற வழியே தெரியல்ல நேக்கு.. .. வெக்கப்பட்ற மாதிரி லேசாச் சிரிச்சுட்டு, ‘மாடியில எல்லாம் வேண்டாம். யார் கண்ணுலயாவது பட்டுடும்’ அப்படின்னேன். .. நேக்கு இஷ்டம்கிறதா அந்த மண்டூகம் நம்பிட்டான். அடுக்குள் வாசப்படியைத் தாண்டிக் கூடத்துக்குப் போய்க் காமாட்சியோட படுக்கைக்குப் பக்கத்துல நின்னான். அவளை உலுக்கிப் பாத்து நன்னாத் தூங்கிண்டிருந்தாளான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக இருக்கலாம். அவன் அப்பால போன அந்த ஒரு நிமிஷத்தை நான் பிரயோஜனப் படுத்திண்டேன், மாமி. கிட்ட வந்தான்னா எதுக்கும் இருக்கட்டும்னு அடுப்பில தகதகன்னு எரிஞ்சிண்டிருந்த கொள்ளிக்கட்டையைக் கையில எடுத்துண்டேன். அந்த அடுக்குள்ளுக்குப் பக்கவாட்டுல ஒரு கதவு இருக்கு. உங்களுக்குத்தான் தெரியுமே ? அந்த வாசல் வழியா எடுத்தேன் ஓட்டம்! அவன் திரும்பிப் பாக்கறதுக்குள்ள கொல்லைக் கதவைத் தொறந்துண்டு தெருவுக்குப் போயிட்டேன்னாப் பாத்துக்குங்களேன்! தெருவுக்கு வந்ததுமே அந்தக் கொள்ளிக்கட்டையைத் தூக்கி எறியணும்கிற பிரக்ஞை கூட நேக்கு வரல்லே. அதைக் கையில ஒசத்திப் பிடிச்சுண்டே ஒரு பைத்தியக்காரியாட்டமா ஒரு ஓட்டம் ஓடியிருக்கேன் பாருங்கோ, மாமி, அந்தக் கோலத்துல யாரு என்னைப் பாத்திருந்தாலும் என்னைக் கிறுக்கச்சின்னுதான் நெனைச்சிருப்பா. அப்படி ஒரு ஓட்டம்! ரொம்ப தூரம் வந்ததுக்கு அப்புறந்தான் – எதிர்ல வந்தவாள்ளாம் என்னை உத்து உத்துப் பாத்து ஏதோ பேசிண்டது மண்டையில உறைச்சதும்தான் – அதை வீசித் தெருவோரமாப் போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சேன்!.. .. அதை இப்ப நெனைச்சாலும் சர்வாங்கமும் நடுங்கறது!.. .. ..” – மூச்சுவிடாமல் சொல்லிமுடித்துவிட்டுப் பங்கஜம் முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு அழலானாள்.

“நீ சொன்னதைக் கேட்டதும் நேக்கே ஒடம்பெல்லாம் நடுங்கறதுடியம்மா! இப்ப எதுக்கு அழறே ? அதான் தெய்வாதீனமாத் தப்பிச்சுண்டு வந்துட்டியே! விட்டுத்தள்ளு. ஒரு கெட்ட சொப்பனம்னு நெனைச்சு மறக்கறதுக்குப் பாரு.. .. .. அந்தக் கட்டேல போற கடன்காரன் இப்படி ஒரு அடுமாளின்னு தெரிஞ்சிருந்தா அங்க உன்னை வேலைக்குச் சேத்துவிட்டிருப்பேனா ?”

‘அய்யோ, மாமி! நீங்க என்ன பண்ணுவேள் ? உங்க மேல எந்தத் தப்பும் இல்லே, மாமி. மனுஷா மனசுக்குள்ள பூந்தா பாக்க முடியும் ? நீங்க செஞ்சதென்னமோ ஒரு நல்ல எண்ணத்தோடதான். இப்பிடி யெல்லாம் அந்தக் கொடும்பாவி நடந்துப்பான்னு நீங்க கண்டேளா என்ன ? “ – பாகீரதிக்குப் பதில் சொல்லுவதற்காக அழுகையை நிறுத்தி யிருந்த பங்கஜம் மறுபடியும் உடைந்து அழத் தொடங்கினாள்.

“அழாதேடியம்மா, அழாதே. அதான் தப்பிச்சுட்டியே!”

“ஆனா – ஒரு தேவ.. .. வேண்டாம் அந்த வார்த்தை – அவனுக்கு இணங்கப் போறவ மாதிரி நான் சிரிச்சு நடிச்சது என்னைக் கொல்றது, மாமி! அது பொய்யாத்தான்னாலும், நெனைச்சுப் பாக்கறச்சே எவ்வளவு அருவருப்பா யிருக்கு! எவ்வளவு அவமானமா யிருக்கு! .. .. லோகத்துல பொண்ணாவே பொறக்கப்படாது, மாமி! பொறந்து, கல்யாணமும் பண்ணிண்டா, ஆம்படையானோட வாழணும். இப்பிடி வாழாவெட்டியாப் பெத்தவா கிட்டவே திரும்பி வந்து அவாளுக்கு உபத்திரவம் தரக்கூடாது, மாமி. அதுலேயும், ஏழைக் குடும்பத்துல பொறக்கவே படாது, மாமி.”

“கண்ணைத் தொடச்சுக்கோடியம்மா. வெளக்கு வெக்கற நேரத்துல சுமங்கலிகள் இப்படிப் பொங்கிப் பொங்கி அழப்படாது.”

“சுமங்கலி!” என்று கேலியாய்ச் சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரித்த பங்கஜம் கண்களைப் புடைவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.

“ஆம்படையானோட வாழறவளுக்குப் பேருதான், மாமி, சுமங்கலி. ஆம்படையான் உசிரோட இருந்தாலே அவ சுமங்கலின்னு ஆயிடுமா ?”

இவ்வாறு கேட்டுப் புன்னகை செய்த பங்கஜத்தைப் பாகீரதி வியப்பாகப் பார்த்தாள்.

“அப்படித்தாண்டியம்மா சொல்றது! ஆம்படையான் உசிரோட இருந்தாப் போறும். அவன் இருக்கிற எடம் கூடத் தெரிய வேண்டாம். அவ சுமங்கலிதான்! அது மட்டுமில்லே. பிரிஞ்ச ஆம்படையான் செத்துப் போயிட்டதாத் தகவல் வர்ற வரைக்கும் அவ சுமங்கலிதான்! அப்படித்தான் காலம் காலமா நடந்துண்டிருக்கு.”

“என்னமோ, மாமி. இதெல்லாம் வேடிக்கையா யிருக்கு. ‘நீ வேண்டாம்’னு ஒருத்தன் வெரட்டியடிச்சுட்டதுக்கு அப்புறமும் அவன் கட்டின தாலிக்கு மதிப்புக் குடுத்து அதைக் கழட்டாம பொண்ணுகள் ஆயுசு முழுக்க வாழணும்கிறதெல்லாம் நேக்கு அபத்தமாத் தோண்றது!”

“சொன்னா, நீ நம்ப மாட்டேடி, பங்கஜம்! என்னோட ஒண்ணுவிட்ட நாத்தனார் ஒருத்தி இருக்கா. கொஞ்சம் படிச்சவ. பட்டணத்துல இருக்கா. அவளுக்குக் கொழந்தையே பொறக்கல்லேன்னு அவ ஆம்படையான் அவளைத் தள்ளி வெச்சுட்டான். அவ என்ன செஞ்சா தெரியுமோ ? தாலியைக் கழட்டித் தங்கத்தை அழிச்சு ஒரு மோதரம் பண்ணிப் போட்டுண்டுட்டா! அந்த மஞ்சக் கயித்தைச் சாக்கடையிலெ வீசி எறிஞ்சுட்டா! இந்தப் புருஷா பண்ற அட்டூழியங்களை நெனைச்சா சில சமயம் அப்பிடித்தான் ஒரு கோவம் வருது. திருமாங்கல்யம் ரொம்பப் பவித்திரம்தான்! ஆனா, அதைக் கட்டினவன் அதோட பவித்திரத்துக்கு மதிப்புக் குடுக்காதப்ப நாம மட்டும் குடுக்கணும்கிறது என்ன நியாயம்’ னு கேட்டா என்னோட அந்த நாத்தனார். என்னமோடியம்மா, தப்போ சரியோ, நமக்கெல்லாம் அந்த அளவுக்குத் தைரியம் வரவே வராது.”

சில நொடிகள் போல் இருவரும் மவுனமா யிருந்தார்கள்.

பின்னர், பாகீரதி, சட்டென்று நினைவுக்கு வந்தவளுக்குரிய முக மாற்றத்துடன், “ஆமா ? கொஞ்ச நேரத்துக்கு முந்தி உங்காத்துக்கு வந்துட்டுப் போனானே ஒரு பிள்ளையாண்டான் – அதான் அந்தக் காமாட்சியாத்துக்குப் பக்கத்தாத்துப் பிள்ளையாண்டான் – தங்கம்மா மாமி பிள்ளை – அவன் எதுக்கு வந்தான் ?” என்று ஆவலுடன் வினவினாள்.

இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத பங்கஜம் அதிர்ந்து போனாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 13

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

ஜோதிர்லதா கிரிஜா


ஜோசியர் பஞ்சாட்சரத்தின் வீடு என்று சொல்லிச் சிவராமன் காட்டிய அந்தச்சிறு வீடு தன்னுள் அப்படி ஒரு படபடப்பை உண்டாக்குவானேன் என்று எண்ணித் தன்னைப்பற்றிய வியப்பில் சாமிநாதன் மூழ்கிப்போனான். தனக்கு ஏதோ ஆகிக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. தனது கட்டுப்பாடு, கொள்கை ஆகியவற்றுக்கு அப்பால் ஏதோ ஒரு சக்தி தன்னை ஆட்டிவைப்பதாக உணர்ந்து அவன் உள்ளுக்குள் சற்றே நடுங்கலானான். ‘செலுத்தப்படுவது போல் நான் இயங்கத் தொடங்கியுள்ள இந்த நிலை என்னை எங்கே கொண்டுசெல்லப் போகிறதோ, தெரியவில்லையே! எனக்கு என்ன ஆயிற்று ? நான் ஏன் இப்படி நடந்துகொள்ளுகிறேன் ? அந்தப் பெண் கணவனால் தள்ளிவைக்கப்பட்டிருப்பவள் என்பது தெரிந்தும்- அவளுடன் என்னால் பழகமுடியாது என்பதும் திட்டவட்டமாய்த் தெரிந்தும்- அவளைப் பார்க்கும் பொருட்டு, ஜோசியம் பார்க்க வந்தவன் போன்று, அவளது ஊருக்கு நான் வேலைமெனக்கெட்டு வந்திருப்பதன் உட்கிடைதான் என்ன ? என் பிரும்மசரிய மெல்லாம் என்ன வாயிற்று ? கணம் போல் முகம் பார்த்த ஒரு பெண்ணின் மேல் இப்படி ஒரு காதல் வருமா ? மனத்தைப் பைத்தியாமாய்க் கிறங்க அடிக்கிற – அவள் முகத்தைத் தவிர வேறெதுவுமே மனத் திரையில் தோன்றாத அளவுக்கான – உன்மத்தம் ஒருவனை ஆட்டிப்படைக்குமா! அதிலும், அது கூடாக்காதல்- கைகூடாக் காதலும் கூட -என்பது தெரிந்த பின்னரும் மனம் இப்படிப் பித்தாகிப் போகுமா! கட்டுக்கு அடங்காமல் அலைபாயுமா ?‘

“என்னடா யோசிக்கிறே ?.. .. அது சரி. யாருக்கு என்ன பிரச்னை ? எதுக்கு ஜோசியம் பாக்கப் போறேன்றதை நான் தெரிஞ்சுக்கலாமா ?”

“நேக்குத் தெரிஞ்ச மெட்றாஸ் ஃப்ரண்ட் ஒருத்தனுக்காக வந்தேண்டா. “

“மெட்றாஸ்ல இல்லாத ஜோசியராடா இந்தக் குக்கிராமத்துல ?”

“அப்படின்னுட்டு இல்லே. இவர்கிட்டவும் கேட்டுப் பாக்கலாமேன்னு ஒரு அஞ்ஞானம் -எனக்கில்லே- அவனுக்கு. தட்ட முடியல்லே. அதான். .. அப்ப, நான் வரட்டுமா ? ரொம்ப தேங்க்ஸ்டா நோக்கு!”

சாமிநாதன் கழற்றிக்கொள்ள விரும்பியது புரிய, “ரைட். அப்புறம் பாப்போம். ஆனா, நீ பொய் சொல்றேன்னு தோண்றது. உன் விஷயமா ஏதோ கேக்கறதுக்கோசரம்தான் வந்திருக்கேன்னு நான் நெனைக்கறேன்!” என்று சிவராமன் சிரித்தான்.

“இதுல என்னடா பொய் வேண்டிக்கிடக்கு ? .. அப்ப நான் வரட்டுமா ?”

“சரி.. ..”

சிவராமன் தன் வீடு நோக்கிச் செல்ல, சாமிநாதன் அந்தச் சின்ன வீட்டை நோக்கிக் கால்களை எட்டிப் போட்டான்.

வீட்டு வாசலில் ஒரு கணம் தயங்கி நின்ற பின், தாழிடப் பட்டிருந்த கதவில் மெதுவாய்த் தட்டினான்.

“யாரு ?” என்ற பெண்ணின் இனிய குரலும் சன்னமான தப்படி யோசையும் இன்னிசையாய் அவன் செவிகளுள் புகுந்தன. அவனுக்கு நெஞ்சு அடித்துக்கொண்டது. அழகிய அந்த முகத்தையும், அதில் மிதக்கும் சோகமான பெரிய விழிகளையும் தரிசிக்கப் போகும் ஆவலில் நெஞ்சம் துடிக்க அவன் தன் விழிகளை மலர்த்திக்கொண்டு கதவையே பார்த்தான்.

வந்து கதவு திறந்தவள் அந்தப் பெண்தான். இருவர் பார்வைகளும் கலந்தன. தனக்குத் தெரிந்த ஒருத்தியைப் பார்ப்பது போன்ற ஓர் ஆழத்துடன் புலப்பட்ட அந்தப் பார்வையைக் கணம் போல் எதிர்கொண்டபின் அவள் சட்டென்று உள்ளே போனாள்.

“அப்பா! யாரோ வந்திருக்கா. போய்ப் பாருங்கோ!” என்று அவள் அவசரமாய்ச் சொன்னது அவன் காதுகளில் விழுந்தது.

சில நொடிகளுக்கெல்லாம் பஞ்சாட்சரம் மெல்ல நடந்து வந்தார்.

“யாருப்பா நீ ?”

“நேக்குப் பக்கத்து ஊர்தான். வத்தலப்பாளையம்.”

“அப்படியா ? என்ன விஷயமா வந்திருக்கே ? “

“உள்ள போய்ப் பேசலாமா ?”

“எதானும் அந்தரங்கமான விஷயமா ?”

“அப்படின்னு இல்லே.. .. இருந்தாலும்.. ..”

“சரி, சரி. வா, வா. “

செருப்புகளை உதறி நீக்கி வாசலில் போட்ட பின் அவன் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே போனான்.

“உக்காருப்பா.”

கதவிடுக்கு வழியாய்ப் பங்கஜம் கவனித்தாள்.

“அதோ, அந்த ஓலைத் தடுக்கை எடுத்துப் போட்டுண்டு உக்காருப்பா.”

“தடுக்கெல்லாம் வேண்டாம், மாமா. நான் இப்பிடி தரையிலயே உக்காந்துக்கறேன். வெறுந்தரையே நன்னாத்தான் இருக்கு.”

“சரி. சொல்லுப்பா. ஜாதகம் ஏதாவது பாத்துச் சொல்லணுமா ?”

“அதொண்ணுமில்லே, மாமா. இது வேற விஷயம்.”

“வேற விஷயமா ? அப்படின்னா ?”

காமாட்சியின் அகமுடையானிடம் அகப்படாமல் பங்கஜம் தப்பி ஓடி வந்த விஷயம்தான் பஞ்சாட்சரத்துக்கு உடனே ஞாபகம் வந்தது.

“நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்கல்லேன்னாத்தான் என்னால அந்தப் பேச்சையே எடுக்க முடியும், மாமா.”

“என்ன சொல்றேப்பா நீ ? புதிர் போட்ற மாதிரிப் பேசினா எப்படிப் புரிஞ்சுக்குறது ? விண்டு பேசுப்பா.”

“பேசத்தான் போறேன். ஆனா நீங்க தப்பா எடுத்துக்காம இருக்கணுமேன்னு நேக்கு பயமாயிருக்கு, மாமா.”

‘இது நிச்சயமாப் பங்கஜத்துக்கு இன்னிக்குக் காலங்கார்த்தால நடந்தது பத்தின விஷயந்தான்! ஆனா, இவன் யாரு ? அதுல, என்னைப் பாத்துப் பேசறதுக்கு என்ன இருக்க முடியும் ? ஒருக்கா, இவன்தான் அந்தக் காமாட்சியோட ஆம்படையானோ ? ‘பங்கஜம் தப்பாப் புரிஞ்சுண்டு ஓடி வந்துட்டா. அப்படி யெல்லாம் ஒண்ணுமில்லே’ன்னு சொல்லி மறுபடியும் வேலைக்கு வரச் சொல்லிக் கூப்பிட்றதுக்கோசரம் வந்திருக்கானோ ? . .. ஆனா, பங்கஜம், ‘யாரோ வந்திருக்கா’ ன்னு சொன்னாளே ? ஒருக்கா, வந்தவனை அவ சரியாக் கவனிக்கல்லையோ ?’

அவரது பார்வை அவரையும் அறியாமல் அடுக்களைப் பக்கம் சென்றது: “சட்னு விஷயத்தைச் சொல்லுப்பா. இப்பிடி பூடகமாவே எவ்வளவு நேரம்தான் பேசிண்டிருக்கப் போறே ?”

இரன்டே விநாடிப் பொழுது தயங்கியபின் சாமிநாதன் தொண்டையைச் செருமினான்: “இன்னிக்கு உங்க பொண்ணு அந்த நாகலிங்கம் கிட்டேருந்து தப்பிச்சுண்டு கொள்ளிக்கட்டையும் கையுமா ஓடினதை நான் பக்கத்தாத்து மொட்டை மாடியிலேர்ந்து பாத்தேன்.. .. “

பஞ்சாட்சரத்தின் விழிகள் விரிந்துகொண்டன.

“ஆனா, நான் பாத்தது உங்க பொண்ணுக்குத் தெரியாது. உங்க பொண்ணோட வாழ்க்கையைப் பத்தின விஷய மெல்லாம் கேள்விப்பட்டேன். உங்க குடும்பத்துக்கு என்னாலான உதவியைச் செய்யணும்னு தோணித்து. அதான் வந்திருக்கேன். நம்ம நெலமையாவது பரவாயில்லே. நம்மள விடவும் கீழ் மட்டத்துல இருக்காளே, அவாளோட நெலமை இன்னும் மோசம். நம்ம ஜாதிக்காராளுக்காவது ஒண்டிக்கிறதுக்குக் காரை வீடு மாதிரி ஏதோ ஒண்ணு இருக்கு. ஆனா குப்பத்து ஜனங்களுக்கெல்லாம் -குறிப்பா பொண்களுக்கு – எந்தப் பாதுகாப்பும் இல்லே. தட்டிக்கதவுதான். மேல் கூரை வெறும் தென்னங்கீத்துதான். ஆம்படையானோ, மத்தப் புருஷாளோ குடிசையில இல்லாத நேரம் பாத்து எவன் வேணா, எப்ப வேணா உள்ள பூந்து பொம்மனாட்டிகள் கிட்ட தப்பா நடந்துட முடியும். அவா நெலமை அவ்வளவு மோசம். அவா இனத்துப் பொண்களுக்கெல்லாம் தெனமும் இந்தக் கொடுமை நடந்துண்டிருக்கு. எக்ஸ்ட்ரீமா (extremely) .. .. அதாவது.. ..”

“புரியறது. நான் மெட்ரிக் வரை படிச்சவன். ஆனா பரீட்சை எழுத முடியல்ல. .. நீங்க முழுக்க முழுக்க இங்கிலீஷ்லயே பேசினாலும் புரிஞ்சுப்பேன்!”

புன்னகை செய்தபின் சாமிநாதன் தொடர்ந்தான்: “திடார்னு என்னை என்னத்துக்கு ‘நீங்க’ ன்னு மரியாதையாப் பேசறேள் ? ‘நீ’ ன்னே பேசலாம். நேக்கு முப்பது வயசுதான் ஆறது. பை த வே (By the way) குப்பத்துப் பொண்களுக்கு நடக்கிற அநியாயம் வாய்விட்டுச் சொல்ல முடியாதது. இது மாதிரி விஷயங்கள்லாம் பத்திரிகைகள்ள வர்றதில்லே.”

“ஆமாமா. வெளியில தெரிய வந்தாத்தானே பத்திரிகைக்காரனும் போடுவான் ? இப்பல்லாம் ஹிண்டு பேப்பர்லயும் சுதேசமித்திரன்லேயும்தான் நம்ம காங்கிரஸ் பத்தின சேதிகளும், காந்தி பத்தின சேதிகளும் நிறைய வருது.”

“ஆமாமா. .. .. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. .. நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்கல்லேன்னா – உங்க பொண்ணுக்கு என்னால ஒதவி பண்ண முடியும். இப்பிடிக் கண்ட எடத்துக்கும் வேலைக்குப் போய் வயித்துல நெருப்பைக் கட்டிண்டு அலைய வேண்டாம்.”

“நீங்க என்ன சொல்ல வறேள் ? உங்களால என்ன ஒதவி செய்ய முடியும் ? அது சரி, நீங்க என்ன பண்ணிண்டிருக்கேள் ? வெவசாயமா ?”

“ஆமா. வெவசாயந்தான். நேக்கு அப்பா கிடையாது. என்னோட சின்ன வயசிலயே தவறிப் போயிட்டார். அம்மா இருக்கா. நான் பீ.ஏ. பாஸ் பண்ணியிருக்கேன். அதனால நேக்கு வத்தலப்பாளையத்துலெ பீ.ஏ. சாமிநாதன்னே பேரு. வத்தலப் பாளையத்துல வேற யாரும் படிச்சுப் பட்டம் வாங்கல்லே. அதனாலதான் நேக்கு அப்படி ஒரு பேரு. .. .. நான் அப்பப்ப அசலூர்களுக்குப் போயிடுவேன். ஆத்துல தங்கறது வருஷத்துக்கு அஞ்சாாறு மாசந்தான். நேக்கு இன்னும் கல்யாணம் ஆகல்லே.”

“என்னது! கல்யாணம் ஆகல்லியா! முப்பது வயசுங்கறேள் ?”

“ஆமா. அதாவது, நான் கல்யாணம் பண்ணிக்கல்லே. பிரும்மசாரியாவே வாணாள் முழுக்க இருந்துடணும்னு ஒரு விரதம் வெச்சிண்டிருக்கேன். “

பஞ்சாட்சரம் வாய்விட்டுச் சிரித்தார்: “உங்களுக்கு இருக்கிற ஞானம் எங்களுக் கெல்லாம் இருந்திருந்தா, இப்படி அவதிப்படும்படி ஆயிருக்காது.”

சாமிநாதனும் புன்னகை செய்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தான்: “எங்கம்மா கெட்டிக்காரி. அதனால வெவசாயத்தை ஆள் வெச்சுத் தானே சமாளிக்கிறா. எங்க பெரியம்மா பிள்ளை ஒருத்தன் இருக்கான். அவன் எங்கம்மாவுக்குக் கொஞ்சம் ஒத்தாசையா யிருந்துண்டிருக்கான்.”

“அது சரி.. அஞ்சாறு மாசந்தான் ஊர்ல இருப்பேன்கறேள் ? அப்படின்னா.. ..”

“அடிக்கடி மெட்றாஸ், பாண்டிச்சேரின்னு போயிடுவேன்.”

“அந்த ஊர்கள்ளே ஏதானும் பிசினிஸ் கிசினெஸ்னு.. ..”

“ஆமா. அச்சாஃபீஸ்கள் நடத்தறேன் – ரெண்டு ஊர்கள்லேயும்.”

“இங்கயே பக்கத்துல மதுரை, திண்டுக்கல்னு எங்கேயாவது நடத்தலாமே ? அடிக்கடி வரலாம். ரெயில் செலவும் கம்மி.”

“எங்கம்மாவும் அதையேதான் சொல்றா. ஆனா, அதென்னமோ மெட்றாஸ் மேல ஒரு மோகம். அங்க ஒரு தரம் போனேன். தற்செயலா ஒரு சிநேகிதனோட கூட்டுச் சேந்துண்டு ப்ரெஸ்ஸை ஆரம்பிச்சேன். நன்னா ஓடத் தொடங்கிடுத்து. அதை விட்டுட்டுப் புதுசா வேற ஒண்ணை இந்தப் பக்கத்துல ஆரம்பிக்கிறதுக்கு மனசு வரமாட்டேங்கறது. ஆனா, அதான் அப்பப்ப வறேனே- அம்மாவைப் பாத்துட்டு அவாளோட இருந்துட்டும் போறதுக்கு ?”

“.. .. இன்னும் நீங்க விஷயத்தைச் சொல்லவே இல்லே. ஏதோ எம்பொண்ணுக்கு ஒதவி பண்ண முடியும்னேள். என்ன மாதிரியான ஒதவிங்கிறதைச் சொல்லவே இல்லே இன்னும்!”

“சொல்றேன், சொல்றேன்.. .. உங்க பொண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா ? எது வரைக்கும் படிச்சிருக்கா ? என்ன வயசு ஆறதுஅவாளுக்கு ?”

“பொண் கொழந்தைகளை நாம எங்கே படிக்க வெக்கறோம் ? கல்விக்கடவுளே ஒரு ஸ்திரீதான் அப்படி இப்படின்னு சொல்றோமே ஒழிய, அவாளை அடுப்படியில போட்டுத்தானே பொசுக்கறோம் ? ஆனா எம் பொண்ணுக்குத் தமிழ் நன்னாவே வாசிக்கக் கத்துக் குடுத்திருக்கேன். எழுதறதுதான் கொஞ்சம் ஸ்லோ! (slow) ஏ.பி.சி.டி. அல்ஃபபெட்ஸ் (ABCD alphabets) தெரியும். கேட், மேட், ரேட் னு (cat, mat, rat) ஏதோ கொஞ்சம் வோார்ட்ஸ் (words) தெரியும். அவசியமான சில இங்கிலீஷ் வாக்கியங்களும் சொல்லிக் குடுத்திருக்கேன். ஆனா இங்கிலீஷைத் தமிழை விடவும் ரொம்ப மெதுவா எழுதுவா! அப்புறம் ஒரு வீட்டை நிர்வாகம் பண்ற அளவுக்குக் கணக்கு வழக்குகள் தெரியும். கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்னு. ஏன் ? எதுக்குக் கேக்கறேள் ? மெட்றாஸ்ல உங்க ப்ரெஸ்ல கம்பாசிட்டர் (compositor) வேலை குடுக்கலாம்னா ?”

“இல்லேல்லே. மெட்றாஸ்க்கெல்லாம் நீங்க வரமாட்டேள்னு நேக்குத் தெரியும். அங்கேயெல்லாம் செலவு அதிகமா யிருக்கும். சமாளிக்கிறது ரொம்பக் கஷ்டம். ஆனா, சமாளிச்சுப்பேள்னு தோணினா நீங்க ரெண்டு பேரும் பேஷா மெட்றஸ்க்கு வரலாம்!”

“அதான் நீங்களே சொல்லிட்டேளே – சமாளிக்கிறது கஷ்டம்னு! ஆனா நீங்க வேற ஏதோ ஐடியாவோடதானே வந்திருக்கேள் ? அதைச் சொல்லுங்கோ.”

“எங்கம்மாவுக்கு வயசாயிண்டிருக்கு. முன்ன மாதிரியான ஆரோக்கியம் இப்பல்லாம் இல்லே. ஆத்துல அவாளுக்கு ஒத்தாசையா சமையலுக்கு ஆள் போடாலாம்னு என்னோட எண்ணம்.”

கதவிடுக்கு வழியாகப் பார்த்துக்கொண்டும் இருவரும் பேசியதைக் கேட்டுக்கொண்டும் இருந்த பங்கஜத்துக்கு நெஞ்சு அடித்துக்கொள்ளத் தொடங்கியது. ‘அய்யோ! அந்த நாகலிங்கக் கட்டேல போறவன் ஆத்துக்கு அடுத்தாகம் (அடுத்த அகம்) கறாரே! அங்கேயா வேலைக்குப் போறது ? வேண்டவே வேண்டாம்.. .. ஜென்மத்துக்கும் வேண்டாம்.. ..கை நிறைய சம்பளம்னாலும் வேண்டாம்.. ..’

அவள் நினைத்ததையே பஞ்சாட்சரமும் சொன்னார்: “அய்யய்யோ! அந்தப் போக்கிரியோட ஆத்துக்கு அடுத்தாகம்கறேளே! அங்க எம்பொண்ணு வேலைக்கு வர்றது சரியா யிருக்காதேப்பா ? எம்பொண்ணு மேல வன்மம் வெச்சிண்டு காத்துண்டுன்னா கெடப்பான் அந்த அயோக்கியன் ?”

அவனது பார்வை கதவுப் பக்கம் கணம் போல் வந்து பின் நகர்ந்ததைப் பங்கஜம் கவனித்தாள். அவன் கதவுப்பக்கம் திரும்பிய போதுதான் அவன் முகம் அவள் பார்வைக்கு நேரெதிராய்த் தெரிந்தது. அது வரையில் அவனது பக்கவாட்டு முகத் தோற்றமே தெரிந்துகொண்டிருந்தது. அவனுடைய பெரிய விழிகள் கருமை கொண்டிருந்ததையும் மூக்கு எடுப்பாக இருந்ததையும் அவள் கவனித்தாள். மாநிறந்தான். ஆனாலும் ஆரோக்கியமாகத் தெரிந்தான். கிராப்புத் தலை சுருள் சுருளாய், அடர்த்தியாய் இருந்தது. முகவாயின் முடிவில் ஒரு சின்ன வெட்டு இருந்தது. உதடுகள் சிவப்பா யிருந்தன. மொத்தத்தில் விவேகானந்தரின் முகம் அவளுக்கு ஞாபகம் வந்தது: ‘என்ன இது! நேக்கு என்ன ஆச்சு ? நான் ஏன் இப்படி அவரை அணுஅணுவாப் பாக்கறேன் ? சே! தப்பில்லையோ இது ?’ – பங்கஜம் கண நேரம் தன் பார்வையை அகற்றினாலும், மறுபடியும் கதவிடுக்கு வழியே அது பயணம் செய்தது. அவள் எண்ணங்களும் மறுபடியும் கிளர்ந்தன.

‘நல்ல லட்சணமான முகம். கொணமும் நன்னாத்தான் இருக்கும்னு முகத்தைப் பார்க்கிறச்சயே தெரியறது.. .. அய்யோ ! மறுபடியும் இப்படி யோசிக்கிறதே மனசு ? தப்பில்லையோ ? நான் கல்யாணம் ஆனவ. இப்பிடி அசல் புருஷனைப் பாத்து, ‘இவன் அழகா யிருக்கான்னு நினைக்கிறது அபசாரமில்லையோ ? பகவானே! என்னை மன்னிச்சுடு!’ – பங்கஜம் கதவுக்குப் பின்புறத்திலிருந்து வலுக்கட்டாயாமாய்த் தன்னை நகர்த்திக்கொண்டாள்.

“எங்களுக்கு வத்தலப் பாளையத்துலயே இன்னொரு வீடு இருக்கு. அதை நாங்க வாடகைக்கு விட்டிருக்கோம். அந்த வீட்டுக்கு நாங்க மாறிண்டா, அந்த ராஸ்கல் கிட்டேர்ந்து விலகி யிருக்க முடியும். நாங்க ரெண்டு பேர்தானே ? அதனால, சாமான்கள் அதிகம் கிடையாது. எல்லாத்தையும் ஒரே கட்டை வண்டியில ரெண்டே நடையில கொண்டுபோயிடலாம். ஒண்ணும் சிரமம் இல்லே.”

பஞ்சாட்சரத்தின் விழிகள் பெரிதாயின. அவரால் நம்பமுடியவில்லை.

“உங்கம்மா இதுக்கெல்லாம் சரின்னுட்டாளா ?”

சாமிநாதன் இரைந்து சிரித்தான். அப்போது தற்செயலாய்த் தன்னையும் மீறிக் கதவிடுக்கு வழியாய்ப் பார்த்த பங்கஜத்தால், ‘எவ்வளவு அழகான பல்வரிசை!’ என்று நினைக்காம லிருக்க முடியவில்லை. மறுபடியும் அவளுக்குத் தன் மீது எரிச்சல் வந்தது. தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டாள்.

“எங்கம்மா கிட்ட அதைப்பத்தி இன்னும் நான் பேசல்லே. இனிமேதான் பேசணும். மொதல்ல உங்க அபிப்பிராயம், செளகரியம் ரெண்டையும் தெரிஞ்சுக்கணு மில்லியா ? அதுக்குத்தான் இப்ப வந்திருக்கேன்.”

வியப்பினூடே பஞ்சாட்சரத்துக்குச் சின்னதாய் ஒரு கலக்கம் வந்தது. ‘முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுக்காக இந்தப் பிள்ளை இந்த அளவுக்கு உருகுவானேன் ? மெனக்கெடுவானேன் ?’

“மாமா! நேக்கு எந்த உள் நோக்கமும் கிடையாது. ஒரு ஏழைப் பொண்ணு என் கண் முன்னால தன்னைக் காப்பாத்திக்கிறதுக்கோசரம் எரிஞ்சிண்டிருந்த வெறகோட தெருவில ஓடினதை என்னால தாங்க முடியல்லே.. .. அது மட்டுந்தான் காரணம். ஏதோ நான் என்னைப் பத்திப் பீத்திக்கிறதா நீங்க நினைச்சுக்கக் கூடாது. நான் காந்தி பக்தன். பெண்கள் மேல அவர் கொண்டிருக்குற பரிவு இவ்வளவு அவ்வளவு இல்லே. உங்களுக்கே தெரியும். அதை வெளிப்படுத்தி அவரே ஆசிரியரா யிருக்குற யங் இண்டியா (Young India) பத்திரிகையில நிறைய ஆர்ட்டிகிள்ஸ் (articles) எழுதி யிருக்கார். இன்னமும் எழுதிண்டிருக்கார். அதையெல்லாம் வாசிச்சதோட விளைவுதான் இந்த என்னோட கரிசனம். மத்தப்படி எதுவும் தப்பா நினைச்சுடக் கூடாது. வேற எத்தனையோ ஏழைப் பொண்கள் இருக்கிறச்சே உங்க பொண்ணு மேல ஏன் இவ்வளவு கரிசனம்னு உங்களுக்குக் கேக்கத் தோணலாம்.. .. அதுக்குக் காரணம் என் கண்ணால அவாளோட கஷ்டத்தை நான் பாத்ததுதான். மத்தவாளைத் தேடிண்டு போய் நான் ஒதவி செய்ய முடியாதில்லையா ?”

பஞ்சாட்சரம் மவுனமாக இருந்தார்.

“எதுக்கும் நீங்க உங்க பொண்ணை ஒரு வார்த்தை கேட்டுடுங்கோ. கேட்டுட்டே பதில் சொல்லுங்கோ. நான் ஒரு அரை மணி கழிச்சு மறுபடியும் வறேன்.”

எழுந்த அவனை அவர் கையமர்த்தினார்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 12

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

ஜோதிர்லதா கிரிஜா


தன்னை மறந்த நிலையில் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்த பங்கஜத்துக்கு அந்தக் காலை மந்த வெயில் நேரத்தில் வேர்த்துக்கொண்டிருந்தது. தன் கையில் கொள்ளிக்கட்டை இருந்ததும், அதிலிருந்து தீப்பொறிகள் பறந்துகொண்டிருந்ததும் அவள் உணர்வில் உறைக்கவே யில்லை! எதிர்ப்பட்ட மனிதர்களின் முகங்களும் அவளது மூளையில் பதியவே இல்லை. ஆனால் அவள் ஓடத் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கழித்து எதிர்ப்பட்ட வயதான ஒரு மனிதர், “அய்யோ! அந்தப் பெண்ணுக்குப் பைத்தியமா!” என்று தம்மை மறந்து கூவியதும்தான் அவளுக்குக் கொஞ்சம் நிதானம் வந்தது.

அவள் நின்றாள். தன் வலக்கையில் இருந்த கொள்ளிக்கட்டை அப்போதுதான் அவள் மூளையில் உறைத்தது. அவளுள் அவமானமும் வெட்கமும் பெருகின. அவள் சுற்றுமுற்றும் கவனித்தாள். தனக்குப் பின்னால் நின்றுகொண்டு சிலர் தன்னைக் காட்டி ஏதோ தமக்குள் பேசிக்கொண்டிருந்ததும் கூட அதன் பிறகுதான் அவளுள் பதிந்தன. அந்தக் கொள்ளிக்கட்டையைத் தெரு மண்ணில் குத்தித் தட்டி நெருப்பை யணைத்த பின் அதை ஓர் ஒரமாய்த் தூக்கிப் போட்டுவிட்டுத் தனது நடையைத் தொடர்ந்தாள். இப்போது அவளது நடையின் விரைவு குறைந்திருந்தது.

‘அடியம்மா! எப்பேர்ப்பட்ட ஆபத்திலிருந்தும் அசம்பாவிதத்திலிருந்தும் இன்றைக்கு நான் தப்பி வந்திருக்கிறேன்! என்னால் தப்ப முடியாமல் போய், அவனும் என்னிடம் தப்பாக நடந்து அதன் விளைவும் என் வயிற்றில் தோன்றி விட்டிருந்தால் நான் என்ன கதியாவேன்! அப்பா தூக்குப் போட்டுக்கொண்டு செத்துப் போவார். நானும் உசிரை எப்படியாவது விட்டிருப்பேன். . .. கடன்காரன்! ஏழேழு ஜென்மத்துக்கும் அவன் சாக்கடைப் புழுவாய்ப் பிறப்பான்.. .. சண்டாளப் பாவி! எடுத்த எடுப்பிலேயே அவன் சுயரூபம் தெரிந்து போனதும் நல்லதுக்குத்தான். இல்லாவிட்டால், நல்லவன் போல் நடித்து நயவஞ்சகமாய் நாடகம் போட்டு என்னை ஏமாற்றி யிருப்பான். தப்பினேன்!.. ..’

வத்தலப்பாளையத்துக்கும் செங்கல்பாளையத்துக்குமிடையே கொாஞ்சத்தொலைவே இருந்த போதிலும், வழியில் இடைப்பட்டி என்கிற குக்கிராமமும் இருந்ததால், வழியெங்கும் மனிதர்கள் எதிர்ப்பட்டவாறா யிருந்தார்கள். அவள் அதிகாலை வேளையில் பக்கத்து ஊருக்குச் சென்று வேலை செய்ய இணங்கியதே இடையிலும் ஓர் ஊர் இருந்ததும் எப்போதும் மூன்று சிற்றூர்களுக் கிடையேயும் ஆள் நடமாட்டம் உண்டென்பதை அவள் அறிந்திருந்ததும் தான். வழி எங்கணும் வயல்காடுகள் இருந்தன. குடியானவர்களும் அவர்களின் குடும்பத்துப் பெண்களும் மரங்களின் நிழல்களில் தென்பட்டவண்ணம் இருந்தனர்.

‘தாங்கள் உண்டு தங்கள் சோலி உண்டு’ என்றிருக்கும் அந்த ஏழை மனிதர்களைப் பார்த்த போது, ‘எவ்வளவு நல்லவர்கள் இந்த மனிதர்கள்! அந்தப் படித்த குரங்கு நாகலிங்கத்தை இவர்களின் கால்களில் கட்டி அடிக்கவேண்டும்!’ என்று பங்கஜத்துக்குத் தோன்றியது.

‘அப்பாவுக்கு என்னவென்று சொல்ல ?.. .. நடந்ததைச் சொல்லித்தானாக வேண்டும். பாகீரதி மாமிக்கும் கூடச் சொல்லித்தானாக வேண்டும். கண், காது, மூக்கு வைத்து மிகையான சேதியை அவள் பரப்பக்கூடும்தான். ஆனால் அதற்கு என்ன செய்ய முடியும் ? அவன் என்னைத் தொடுவதற்கு முன்னால் நான் தப்பிவிட்டதைப் பாகீரதி மாமி நம்ப வேண்டுமே ?… .. எப்படியானாலும், ஏதோ ஒரு விதத்தில் நான் அபவாதத்துக்கு ஆளாகத்தான் போகிறேன். பகவானே! இது என்ன சோதனை! ஏழைகளுக்கு ஏன் இப்படி யெல்லாம் கஷ்டம் கொடுக்கிறாய் ? அதிலும் யாருக்கும் எந்தக் கெடுதியும் செய்யாதவர்களுக்கு ? இது நியாயமா ? .. ..’

ஒரு மணி நேர நடைக்குப் பின் பங்கஜம் தன் வீட்டை யடைந்தாள். திண்ணையில் உட்கார்ந்து விசிறிக் காம்பால் முதுகு சொறிந்துகொண்டிருந்த பஞ்சாட்சரம் போன சுருக்கில் மகள் திரும்பிவிட்டதைப் பார்த்து வியப்புற்றார். ஏதோ விபரீதம் என்று அவருக்குத் தோன்றிவிட்டது.

வீட்டுக்குள் விடுவிடுவென்று சென்ற அவளைப் பின் தொடர்ந்த அவர், “என்னம்மா ? அதுக்குள்ள வந்துட்டே ?” என்றார்.

“வாசல் கதவைச் சாத்திட்டு வாங்கோப்பா,” என்ற அவள் அவர் அவ்வாறே செய்துவிட்டு வந்ததும் அந்தச் சிறிய கூடத்தில் உட்கார்ந்து அழத் தொடங்கினாள்.

பஞ்சாட்சரம் பதறிப்போனார். நடக்கக்கூடாதது என்னவோ நடந்துவிட்டிருந்திருக்க வேன்டும் என்று நினைத்தார். இன்னதென்று ஊகிக்க முடியாவிட்டாலும், பங்கஜம் பொங்கிப் பொங்கி அழுததால் விபரீதமான விஷயமாய்த்தான் இருக்க வேண்டும் என்கிற அளவுக்குப் புரிந்துகொண்டு அவளுக்கு எதிரே உட்கார்ந்தார்.

“என்னம்மா நடந்தது ? எதுக்கு இப்பிடி அழறே ? சொல்லிட்டு அழு, பங்கஜம். நீ இப்பிடி விக்கி விக்கி அழறதைப் பாத்தா என்னை என்னமோ பண்றதும்மா!”

பங்கஜம் புடைவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டபின், தரையில் விழிகளைப் பதித்தவாறே சொன்னாள்: “அந்தக் காமாட்சியோட ஆம்படையான் சரி யில்லேப்பா. அதான் கெளம்பி வந்துட்டேன்.”

அவர் திகிலடைந்து போய் அவளை அகலமாய் ஏறிட்டார்.

“என்னம்மா சொல்றே ? ஏதானும் எக்குத் தப்பா நடந்துண்டானா ? விபரீதாமா ஒண்ணுமில்லியே ?”

“தப்பா நடந்துக்கப் பாத்தாம்ப்பா. நல்ல வேளை! பகவான் என் பக்கம் இருந்தார். என்கிட்ட இல்லாத துணிச்சலையும் அந்த நேரத்துல நேக்குக் குடுத்தார். சமயோசிதமா நடந்து தப்பிக்கிற வழியையும் பகவான்தான் நேக்குக் காட்டினார். அதனாலதான் அவன்கிட்ட மாட்டிக்காம தப்பிச்சிண்டு வந்துட்டேன்,” என்ற பங்கஜம் நடந்தது நடந்தபடி அவருக்குச் சொன்னாள்.

“அந்த இக்கட்டான நேரத்துல அவனை முறைச்சுக்காம செளஜன்யமாப் பேசித்தான் அவன்கிட்டேர்ந்து தப்பணும்னு நோக்குத் தோணியிருக்கே! எல்லாம் பகவானோட அனுக்கிரகம்தன்!”

“ஆமாம்ப்பா. நேக்கு எப்பிடி அப்பிடி ஒரு யோசனை தோணித்துன்னே தெரியல்லே. ஆனா, அந்தக் கடன்காரன் கிட்ட சிரிச்சு நடிச்சதை நெனைச்சா என் மேலேயே நேக்கு அருவருப்பா யிருக்குப்பா.”

“முள்ளை முள்ளாலதானேம்மா எடுத்தாகணும் ? இனிமே நீ எங்கேயும் வேலைக்குப் போகவேண்டாம். ஆத்தோடவே இரு. என்னால என்ன கொண்டுவர முடியறதோ அதை வெச்சிண்டு கால் வயிறோ அரை வயிறோ சாப்பிட்டுண்டு சிவனேன்னு கெடக்கலாம். மனுஷாளுக்கு மானம்தாம்மா பெரிசு. அதுலயும் பொம்மனாட்டிக்கு. அசம்பாவிதமா ஏதானும் நடந்துட்டா, அது அவளை வாணாள் முழுக்க உறுத்திப்பிடும்மா. நாங்க, புருஷா, அப்பிடி இல்லே. .. .. ம்! ஒரு கொழந்தையாவது தக்கி யிருக்கப்படாதோ நோக்கு ? மூணையும் வாரிண்டு போயிட்டானே பகவான்!”

“நடக்கிறதெல்லாம் நல்லதுக்குத் தாம்ப்பா. அப்படித்தான் எல்லாத்தையும் எடுத்துக்கணும்னு நீங்கதானே சொல்லுவேள் ? நம்ம இல்லாத்தனத்துல கொழந்தையை வேற எப்படிப்பா சோறு போட்டு வளக்க முடியும் ? அதையும் பட்டினி போட வேண்டி யிருக்கேன்ற உறுத்தல் தான் மிஞ்சும்!”

“நீ சொல்றதும் வாஸ்தவந்தான். ஏதோ, தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சேன்னு நாம சந்தோஷந்தான் பட்டுக்கணும்!”

“ஆமாம்ப்பா.”

சற்று நேரம் போல் இருவருக்குமிடையே மவுனம் நிலவியது.

ஒரு பெருமூச்சால் அதைக் கலைத்த பஞ்சாட்சரம், “சரி. எழுந்து போய்க் காப்பியாவது ஒரு வாய் சாப்பிடு. போம்மா!” என்றார்.

“ஆகட்டும்ப்பா. நீங்களும் ஒரு வாய் சாப்பிடுங்கோ.” – பங்கஜம் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்.

காப்பியைக் குடித்த பின், கொஞ்ச நேரம் கழித்து, பஞ்சாட்சரம் வாசலுக்குப் போய்த் திண்ணையில் உட்கார்ந்தார். மகளுக்கு முன்னால் அவர் அடக்கிவைத்திருந்த கண்ணீர் இப்போது திமிறிக்கொண்டு புறப்பட்டது. ‘சே! லோகம் ஏன் இப்பிடிக் கெட்டுப் போயிடுத்து ? அசல் பொம்மனாட்டிகளைத் தாயாவும் ஒடன்பொறப்பாவும் நெனைக்கிற மனுஷா கொறைஞ்சுன்டே வராளே ? என்ன மனுஷா! ஏன் இப்பிடிக் கார்த்திகை மாசத்து நாயா அலையறா ? மேலாக்கு வெலகாம இழுத்துப் போத்திண்டு அடக்க ஒடுக்கமா யிருக்குற பொண்ணுகளுக்கே இந்த நெலமைன்னா, கொஞ்சம் முன்ன பின்ன இருக்குறதுகளோட கதி என்ன ? அதுலயும் நிராதரவான ஏழைப் பொண்ணுகளா வேற இருந்துட்டா, தட்டிக் கேக்குறதுக்கு நாதி யில்லேங்குற திமிர்ல, இந்த நாய்கள் இன்னும் அதிகக் கொழுப்புப் பிடிச்சுன்னா அலையும்கள் போலிருக்கு ? அட, பகவானே! இதைப் போய் யார் கிட்டவும் சொல்லவும் முடியாது. அவன் நாசமே பண்ணியிருப்பான்னுல்ல பேச ஆரம்பிப்பா வம்பு பிடிச்ச மனுஷா ?’

அப்போது எதிர்வீட்டுப் பையன் அங்கு வந்து அவரது சிந்தனைக்குத் தற்காலிக முற்றுப் புள்ளி வைத்தான்: “மாமா! இந்தாங்கோ. எங்கப்பா படிச்சாச்சு. அதனால உங்ககிட்ட குடுக்கச் சொன்னா. நீங்க படிச்சு முடிச்சதும் கொண்டுவந்து குடுக்கச் சொன்னா,” என்று அன்றைய சுதேசமித்திரனை அவரிடம் கொடுத்துச் சென்றான்.

பஞ்சாட்சரம் ஆவலுடன் அந்த நாளிதழை வாங்கிப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார். அதைப் படிப்பதில் கொஞ்ச நேரத்தைக் கழித்த பின், மகளின் அழைப்புக் குரல் கேட்டு உள்ளே போனார்.

“இந்தாங்கோப்பா, இன்னும் ஒரு அரை தம்ளர் காப்பி.”

“என்னம்மா, இது ? குடிச்சுக் கொஞ்ச நேரந்தானே ஆச்சு ? அதுக்குள்ளயா ?” என்று வாய் வினவினாலும் ஆவலுடன் அதை வாங்கிக்கொண்டு பஞ்சாட்சரம் பலகையில் அமர்ந்தார்.

“என்னமோ இன்னும் கொஞ்சம் குடிச்சாத் தேவலை போல இருந்தது. அதான்.”

“ .. .. .. காந்தி இப்ப பங்களூருக்கு வந்திருக்காராம்.”

பங்கஜம் தலையை மட்டும் ஆட்டிவிட்டுத் தன் காப்பியைப் பருகலானாள்.

“திரும்பிப் போறச்சே அப்படியே நம்ம பக்கமும் வருவார்னு நெனைக்கறேன்.”

பங்கஜம் காப்பியைக் குடித்தபடி வியப்புடன் அவரைப் பார்த்தாள். காந்தியைப் பற்றி அவர் அடிக்கடி பேசியது ஏற்கெனவே ஒரு வியப்பை அவளுள் ஏற்படுத்தி யிருந்தது.

“ஏம்ப்பா! காந்தி என்ன சங்கராச்சாரியார், ராமலிங்க அடிகள் மாதிரி பெரிய ஆளா ? அடிக்கடி அவரைப் பத்திப் பரவசமாப் பேசறாளே எல்லாரும் ?”

“ஆமாம்மா. அவாளை யெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுடுவார் போலேருக்கு இந்த காந்தி! எதிர்ல வந்த புலையனைத் தள்ளிப் போன்னு ஆதி சங்கரர் சொன்னப்போ, ‘உயிரைத்தள்ளிப் போகச் சொல்றியா, ஒடம்பைத் தள்ளிப் போகச் சொல்றியா, இல்லேன்னா ஆத்மாவைத் தள்ளிப் போகச் சொல்றியா’ அப்படின்னு கேட்டு, அவரை அசத்தி, அவரோட அஞ்ஞானத்தைப் போக்கினாரே அந்த சாட்சாத் பரமேஸ்வரன், அவரோட மறு அவதாரம் மாதிரி இப்ப வந்திருக்கார்ம்மா, காந்தி! அவாளை யெல்லாம் தீண்டத்தகாதவான்னு ஒதுக்கிவைக்கக் கூடாது, கோவிலுக்குள்ள விடணும், கொளம் குட்டைகளை அவாளும் நம்ம மாதிரியே உபயோகப் படுத்த விடணும்னெல்லாம் கூட்டங்கள்ள பிரசங்கம் பண்ணிண்டும், பத்திரிகைகள்ள எழுதிண்டும் வரார். இன்னிக்கு சுதேசமித்திரன்ல கூடப் போட்டிருக்கு!”

“அதெல்லாம் நடக்குமாப்பா ? காந்தி சொல்றதெல்லாம் சரிங்கறேளாப்பா ?”

“பின்ன ? .. .. ஆனா. நான் இப்பிடி ஒரு அபிப்பிராயம் உள்ளவன்னு தெரிஞ்சாலே போறும், அக்கிரகாரத்துக்காரா ஒண்ணு கூடித் தீர்மானம் போட்டு என்னை ஜாதிப் பிரஷ்டம் பண்ணிடுவா அடுத்த நிமிஷமே! நம்ம வேத சாஸ்திரங்களை ஒழுங்காப் படிச்சவா தீண்டமைங்கிறதா ஒண்ணு இருக்கணும்கிறதை ஒத்துக்கவே மாட்டா. ஏத்துக்கவும் மாட்டாம்மா. “

“பின்ன, சாஸ்திரத்துல அப்படிச் சொல்லியிருக்கு, இப்படிச் சொல்லியிருக்குன்னு பீத்திண்டாப்ல ஆச்சா ? நெஜ வாழ்க்கையில அதை எல்லாம் நாம கடைப் பிடிக்கிறோமாங்கிறதை வெச்சுத்தானே நாம அதைப் பத்திப் பெருமைப் பட்டுப் பீத்திக்கமுடியும் ?”

வாயைத் துடைத்துக்கொண்டே காப்பித் தம்ளரைக் கீழே வைத்த பஞ்சாட்சரம், “ரொம்ப சரியாச் சொன்னேம்மா! அதையேதான் அம்பேத்கர்ங்கிற அவாளோட தலைவரும் கேக்கறார்.”

“எவாளோட தலைவர்ப்பா ? அம்பேத்கர்ங்கிறது யாரு ? நான் கேள்விப்பட்டதே இல்லியே ?”

பஞ்சாட்சரத்துக்குச் சிரிப்பு வந்தது. “பத்திரிகை படிக்கிறவாளுக்குத்தானே அதெல்லாம் தெரியும் ? நாம ‘பறையாள்’னு -அதாவது பறை அடிக்கிறவாளானதால அவாளுக்கு அப்படிப் பேரு- நாம தொடக்கூடதவான்னு சொல்லி ஒதுக்கி வெச்சிருக்குற பாவப்பட்ட ஜனங்களைக் காந்தி ஹரிஜன்னு சொல்றார். அதாவது ‘கடவுளுக்குப் பிடிச்ச மனுஷா’ன்னு அதுக்கு அர்த்தம். அவா பட்ற துன்பங்களைக் கண்டு பொங்கிப் போய், அவாளுக்காகச் சண்டை போட்டு உரிமைகளை வாங்கிக் குடுக்கிறதுக்கோசரம் இந்த அம்பேத்கர் மெனக்கெட்டுண்டிருக்கார். ஏன்னா, ஒரு ஹரிஜனக் குடும்பத்துல பொறந்ததால ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கார் அந்த மனுஷர். ஆனாலும் பாரு, அவரைப் படிக்க வெச்சு ஆளாக்கினவர் ஒரு பிராமணர்தான்!”

“அப்ப, நீங்க சொல்ற மாதிரி நம்ம சாஸ்திரங்களை ஒழுங்காப் படிச்சுப் புரிஞ்சுண்டவரா யிருக்கணும் அந்தப் பிராமணர்!”

“ஆமாமா. .. .. தான் பொறந்த ஜாதிக்காராள்ளாம் இனித் துன்பப்படக் கூடாதுங்கிறதுக்கோசரம் அவர் அவாளுக்காகப் போராடிண்டிருக்கார். ‘பறையாளும் இந்துக்கள்தானே ? இந்துக் கோவில்களுக்குள்ள நுழையவிடாம அவாளைத் தடுக்கறேளே, நியாயமா’ ன்னு கேக்கறார். இப்பிடி நம்ம மதக் காராளையெல்லாம் நாமளே தொடக்கூடாதவான்னு பிரஷ்டம் பண்ணி வெச்சா அவாள்ளாம் கிறிஸ்தவாளாயிடுவா! இல்லியா ?”

“ஆனா ஆகட்டுமேப்பா! அதுல என்ன வந்தது ? எங்க அவாளுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கறதோ அங்க அவா போறா. போகட்டுமே ? கிறிஸ்தவாளா மாறினா, அவாளுக்குச் சாப்பாடு, துணிமணி, படிப்பு இதெல்லாம் கிறிஸ்துவ மத குருமார்கள் தராளாமே ?”

“ஆமாம்மா. அது ஒரு வித லஞ்சம்தானே ?”

“நான் ஒத்துக்க மாட்டேன். அப்படியே, அதை லஞ்சம்னே வெச்சுண்டாலும், அதை அவா வாங்கிக்கிறதுல என்ன தப்பு இருக்கு ? நாம அவாளைக் கோவிலுக்குள்ள விடமாட்டோம், தொடக்கூட மாட்டோம். தப்பித் தவறித் தொட்டுட்டாலோ, பட்டுட்டாலோ தீட்டுன்னு சொல்லிண்டு ஆத்துல முங்குவோம். இல்லேன்னா, ஆத்துக்கு வந்ததும் குளிப்போம்! இதுமாதிரியான அவமானங்களை யெல்லாம் செய்யாத ஒரு மதத்துக்கு அவா மாறிக்கிறதுல என்ன தப்பு இருக்காம் ? தவிர, ஏழைகளுக்குச் சோறு கண்ட எடம் தானே சொர்க்கலோகம் ? சோறும் மரியாதையும் கிடைக்கிற மதத்துக்கு அவா போறா! என்ன சொல்றேள் ?”

பஞ்சாட்சரம் அளவுகடந்த திகைப்புடன் மகளை வெறித்து நோக்கினார். பங்கஜம் அந்த அளவுக்குப் பேசியது அவரை அயர்த்தியது.

“ஒரு விதத்துல, நீ சொல்றது வாஸ்தவந்தாம்மா.”

“ஒரு விதத்துல இல்லேப்பா – பல விதத்துலேயும்! இப்ப நம்மளையே எடுத்துக்குங்கோ. உங்களுக்கு வயசாயிடுத்து. உழைச்சுச் சம்பாதிக்க முடியல்லே. அலைஞ்சு திரிஞ்சு அஞ்சும் பத்துமாக் கொண்டுவறேள். நானும் கொஞ்சம் சம்பாத்ிச்சு உங்க சொமையைக் கொறைக்கலாம்னு கெளம்பிப் போன கதைதான் ரெண்டாவது நாள்லயே சிரிப்பாச் சிரிச்சுடுத்தே ! என்னை மாதிரி சின்னவாளுக்குப் பாதுகாப்பும் இல்லே. அதனால நாம கூடக் கிறிஸ்தவாளா மாறிக்கலாம். ஒண்ணும் தப்பே இல்லேன்னுதான் தோண்றது!”

“சிவ சிவா! அப்படியெல்லாம் வாயில வந்ததைப் பேசாதேம்மா. நம்ம மதத்தோட அருமையும் பெருமையும் தெரியாதவாதாம்மா வேற மதத்துக்கு மாறுவா. இன்னும் சொல்லப் போனா, நம்ம மதம் ஒரு மதமே இல்லேம்மா. அது ஒரு தர்மம். ஒரு நெறி. மனுஷாளுக்கு வழி காட்ற ஒரு மார்க்கம். ஒரு வாழ்க்கை முறை. யாரு இந்த தர்மத்தை ஸ்தாபிச்சா, எப்ப அது ஏற்பட்டுதுங்கிற எதுவுமே யாருக்குமே தெரியாதும்மா. அதை ‘மதம்’கிற பேராலேயே அழைச்சாலும், அதுதாம்மா உலகத்துலயே ஆதிமதம். இன்னொண்ணு. எந்த மதமுமே மனுஷாளைக் கெட்டவாளா யிருங்கோன்னு சொல்லவே இல்லே. நல்லவாளா யிருங்கோன்னுதான் படிச்சுப் படிச்சு எல்லா மதங்களும் சொல்றது. நாம அதைக் கேக்காததோ, தப்பாப் புரிஞ்சுக்குறதோ நாம செய்யற தப்பும்மா. அது அந்த மதத்தோட தப்பில்லே.”

“ .. .. ‘என் மதத்தும்மேல நான் வெச்சிருக்குற பிரியம் என்னைப் பட்டினி போட்றது. தள்ளி வேற வைக்கிறது. எந்த மதத்துக்காரா மனுஷத்தனத்தோட நேக்குச் சோறு போட்றாளோ அந்த மதத்துக்கு மாறிக்கலாம்’ அப்படின்னு சிலர் நினைச்சா அதைத் தப்புன்னு எப்படிப்பா சொல்லுவேள் ?”

பஞ்சாட்சரம் மிகவும் திடுக்கிட்டுப் போனார். ‘பங்கஜமா இப்படி வாதிடுகிறாள் ? இப்படி எல்லாம் வாதாட இவள் எங்கே கற்றாள் ?’ என்று அவருக்குள் வியப்பான வியப்புப் பரவியது. அவர் தம் திடுக்கீட்டிலிருந்து உடனே விடுபட முடியாமல் சில நொடிகளுக்கு வாய் மூடிப்போனார். அவர் வாய்மூடிப் போனமைக்கு அவளது அதிரடிப் பேச்சு விளைவித்த வியப்பு மட்டுமே காரணமன்று. அவள் எழுப்பிய கேள்விகளுக்கு அவரால் உரிய பதிலைச் சொல்ல முடியாமற் போனதும் கூடத்தான்!

“என்னம்மா இது! என்னென்னமோ சொல்றே ? அவாவா மதத்துலதாம்மா அவாவா இருக்கணும். நீ இப்படி யெல்லாம் தர்க்கம் பண்றதைக் கேட்டா நேக்கு பயமா யிருக்கும்மா!”

பங்கஜம் கலீர் என்று சத்தம் போட்டுச் சிரித்தாள். “நீங்க வேற! அப்படி யெல்லாம் எதுவும் பண்ணிட மாட்டேம்ப்ப்ா. உங்களுக்கு என்னால ஏற்பட்ட கவலைகள் போறும். இதுக்கு வேற நீங்க கவலைப் படாதங்கோ. நானாவது வேற மதத்துக்குப் போறதாவது! என்னோட சாமிகள் எப்பவுமே சிவன், விஷ்ணு, பார்வதி, லக்ஷ்மி, முருகன், ராமன், கிருஷ்ணன் இவாள்ளாம்தான்! பிள்ளையாரை விட்டுட்டேனே! .. .. அது இருக்கட்டும், பாகீரதி மாமி கேட்டா என்னன்னு சொல்லட்டும் ?”

“உள்ளது உள்ளபடியே சொல்லிடு. கூட்டவும் வேண்டாம், கொறைக்கவும் வேண்டாம்.”

“அந்த மாமி கண், காது, மூக்குன்னு சேத்துண்டு என்னத்தையாவது வேற மாதிரிப் பரப்பினான்னா ?”

“அதுக்கு நாம என்ன பண்ண முடியும் ? அவா வாய்க்குப் பூட்டா போடமுடியும் ?”

“சரிப்பா. அப்ப நான் சமையக்கட்டுக்குப் போய் என் வேலையைப் பாக்கறேன்,” என்றவாறு பங்கஜம் காப்பித் தம்ளர்களுடன் எழுந்து அடுக்களைக்குப் போனாள்.

கைகள் வேலை செய்துகொண்டிருந்தனவே ஒழிய, என்ன முயன்றும் அன்று காலை காமாட்சியின் வீட்டில் நடந்ததையே அவள் மனம் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது.

அப்படி ஒரு சமயோசித அறிவுடன் நடந்துகொண்டு தப்ப முடிந்ததை எண்ணிப் பார்த்த அவளுள் தன்னைப் பற்றிய வியப்புப் பெருகியது. அவளால் துளியும் நம்ப முடியவில்லை. அவனுக்கு அனுசரணையாய்ப் பேசுபவள் போல் தான் நடித்துச் சிரித்ததை எண்ணி அவளுள் மறுபடியும் அருவருப்புக் கிளர்ந்தது.

.. .. .. “வாப்பா, பீ.ஏ. சாமிநாதா! “ என்று சிரித்தபடி சிவராமன் சாமிநாதனை வரவேற்றான்.

“எப்படிப்பா இருக்கே ? இன்னும் தனி மரந்தானா ? “ என்றவாறு தான் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு அவனையும் அமரப் பணித்த சிவராமன், “ஏய்! இங்க கொஞ்சம் வந்துட்டுப் போடி!” என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான்.

“அதென்ன பொண்டாட்டியை ‘ஏய்’னு மாடு மேய்க்கிறவன் மாதிரி கூப்பிட்றே ? பேரைத்தான் சொல்லிக் கூப்பிட்றது! “டா” வேற போட்றே ?”

“நீ ஒரு கல்யாணத்தைப் பண்ணிண்டுட்டு அதைச் செய்டா! நேக்கு இப்படியே பழக்கமாயிடுத்து.”

அவன் மனைவி சங்கரி, “என்னன்னா!” என்று தலையை மட்டும் கதவுக்கு வெளியே நீட்டியபடி குரல் கொடுத்தாள்.

“ரெண்டு காப்பி கொண்டா. “

“சரி.”

இருவரும் பேசத் தொடங்கினார்கள். இருவரும் வத்தலப்பாளையம் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாய்ப் படித்தவர்கள். எப்போதாவது சந்தித்துக்கொள்ளுவார்கள். ஆனால், தற்செயலாய்ச் சந்தித்துக்கொண்டதுண்டே தவிர, ஒருவருடைய வீட்டுக்கு மற்றவர் வந்து அளவளவுவது கிடையாது. எனவே, சாமிநாதன் ஏதோ ஒரு நோக்கத்துடன் வந்திருப்பதாகச் சிவராமனுக்குத் தோன்றியது.

காப்பியைக் குடித்து முடித்ததும், சாமிநாதன், “கொஞ்சம் வெளியே போய் நடந்துண்டே பேசலாமா, சிவராமா ?” என்றான்.

“ஓ. அதுக்கென்ன ?” என்ற சிவராமன் சங்கரியிடம் சொல்லிக்கொண்டு நண்பனுடன் படியிறங்கினான்.

“ஏதானும் அந்தரங்கமான பேச்சாடா ?”

“அய்யே! நீ வேற. அந்தரங்கமும் இல்லே, ஒரு மண்ணும் இல்லே. பாத்து ரொம்ப நாளாச்சேன்னு வந்தேன். .. .. இந்த ஊர்ல பஞ்சாட்சரம்னு ஒரு ஜோசியர் இருக்காரில்ல ?”

“ஆமா ? அதுக்கென்ன ? ஜோசியம் பாக்கறதுக்கா ? நோக்கு அதுல யெல்லாம் நம்பிகை இருக்கா என்ன ?”

“ஏன் இல்லாம ? அதுக்குத்தான் வந்தேன். அப்படியே உன்னையும் பாத்துட்டுப் போலாமேன்னு வந்தேன். இனிமேதான் அவர் வீட்டுக்குப் போகணும்.. .. அவர் வீடு எங்க இருக்கு ?”

“இதே தெருதான். அதோ, அந்தச் சின்ன வீடு.”

சாமிநாதன் படபடப்பாக உணர்ந்தான்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 11

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

ஜோதிர்லதா கிரிஜா


இரண்டிரண்டு படிகாளய்த் தாவித் தாவி மாடியிலிருந்து கீழே இறங்கிய சாமிநாதன் அவசர நடையில் வாசலுக்குப் போய் நின்றான். தெருத் திருப்பத்தில் அந்தப் பெண் தன் கையில் பிடித்திருந்த எரியும் கொள்ளிக்கட்டையுடன் ஓடிக்கொண்டிருந்ததை அவன் கண்டான். கொள்ளிக்கட்டையைக் கீழே வீசிப் போடாமல் அவள் இன்னமும் அதைப் பிடித்தவாறு ஓடிக்கொண்டிருந்ததிலிருந்து அவளது பதற்றம் துளியும் குறைந்திருக்கவில்லை என்பதை அவன் புரிந்துகொண்டான். அந்தக் காலை வேளையில் தெருவில் சென்றுகொண்டிருந்த சிலர் வியந்து நின்றனர்.

பக்கத்து வீட்டு நாகலிங்கமும் வாசலுக்கு வந்து நின்று கவனித்ததையும் அவன் பார்த்தான். தற்செயலாய்த் தலை திருப்பிய அவனது முகத்தில் தன்னைக் கண்டதால் விளைந்த அசட்டுக்களையையும் கவனிக்கச் சாமிநாதன் தவறவில்லை. கணத்துக்கும் குறைவான நேரத்துள் அவன் தன் பார்வையை அகற்றிக்கொண்டதையும் கண்டு அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

நாகலிங்கத்தைப் பற்றி அவன் ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தான். அதனால்தான், இன்னது நடந்திருக்கும் என்பதை ஊகிப்பது அவனுக்குச் சாத்தியமாக இருந்தது. ஆனால், சாமிநாதன் தன் வீட்டுக்குள் திரும்பிச் செல்லாமல் தெருக்கோடிப் பக்கம் பார்த்துக்கொண்டே நின்றான்.

ஒரே இணைப்புச் சுவரைக்கொண்ட பக்கத்து வீடாதலால், அவனுக்கும் நாகலிங்கத்துக்குமிடையே மிகக் குறுகிய இடைவெளியே இருந்தது.

பங்கஜம் தன் பார்வையிலிருந்து மறைந்ததும், “யாரு, சார், அந்தப் பொண்ணு ?” என்று நாகலிங்கத்தின் புறம் பார்த்து மிக இயல்பாக அவன் விசாரித்தான்.

அந்தக் கணத்தில் தன் வீட்டுக்குள் போகத் திரும்பியிருந்த அவன், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து, “கொள்ளிக்கட்டையும் கையுமா ஓடிண்டிருந்தாளே, அவளைத்தானே சொல்றேள் ?” என்று வலியத் தோற்றுவித்துக்கொண்ட புன்சிரிப்புடன் வினவினான்.

“ஆமா. அந்தப் பொண்ணைப் பத்தித்தான் கேக்கறேன். உங்காத்துக் கொல்லைக்கதவைத் தொறந்துண்டு ஓடினதை எங்காத்து மொட்டை மாடியிலேலர்ந்து பாத்ததாலதான் உங்களைக் கேக்கறேன், சார்!”

“எங்காத்துக்குப் புதுசா சமையல் வேலைக்கு வந்திருக்குற பொண்ணு, சார். நேத்துத்தான் வேலைக்கு வந்தா. நேத்தே கூடப் பாதியில போயிட்டா. இன்னைக்குக் காப்பி அடுப்பு மூட்டினவ திடார்னு கொள்ளிக்கட்டையை எடுத்துண்டு ஓட்றா! எங்களுக்கு ஒண்ணுமே புரியல்லே. பைத்தியம்னு தோண்றது. நன்னா விசாரிக்காம வேளைக்கு வெச்சுட்டோம்.”

“யாரு அந்தப் பொண்ணு ? இந்த ஊர்ப் பொண்ணாத் தெரியல்லியே ?”

“நீங்க பாத்தேளா அவளை ?” என்று கேட்ட நாகலிங்கத்துக்குக் கடுப்பாக இருந்தது. ‘கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லே. காலம் முழுக்கப் பிரும்மச்சாரியாவே இருந்துடப் போறேன்னு சொல்லிண்டு ஊர்ல இருக்கிற பொண்ணுகளை யெல்லாம் யாராருன்னு நன்னாப் பாத்து வெச்சிருக்கானே! இல்லேன்னா, அவ இந்த ஊர்ப் பொண்ணு இல்லேன்னு இவனுக்கு எப்படித் தெரியும் ?’

“ஆமா. பக்கத்து ஊர்ப் பொண்ணு.”

“பக்கத்து ஊர்னா ?”

“செங்கல்பாளையம்,” என்று பதில் சொல்லிவிட்டு, மேற்கொண்டு பேச்சைத் தவிர்க்க விரும்பியவனைப் போல், நாகலிங்கம் அவசர நடையில் வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டதைக் கண்டு சாமிநாதன் தன்னுள் சிரித்துக்கொண்டான். பின்னர், மொட்டைமாடிக்குப் போய் மறுபடியும் புத்தகமும் கையுமாய் உலாவத் தொடங்கினான்.

படிப்பில் கவனம் செல்ல மறுத்தது. ‘என்ன அழகு அந்தப் பொண்ணு! யாராயிருக்கும் ?’

சாமிநாதனுக்குப் பெண்களைக் கூர்ந்து பார்த்து அவர்களது அழகை ரசிக்கிற பழக்க மெல்லாம் கிடையாது. நாகலிங்கம் சற்று முன்னர் அவனைப் பற்றிக் கேவலமாக நினைத்துத் தனக்குள் விமர்சித்தமைக்கு மாறாக அவன் துப்புரவானவன்தான். உண்மையிலேயே திருமணத்தில் நாட்டம் இல்லாதவன்தான். பிரும்மச்சரிய விரதம் பூண்டவன்தான். ஆனால் பக்கத்து வீட்டுக் கொல்லைக் கதவை நோக்கிக் கையில் கொள்ளிக்கட்டையோடு ஓடி அதைத் திறந்த அவளை அவன் தற்செயலாய்க் கவனிக்க நேர்ந்தது. கதவின் தாழ்ப்பாள் உயரே இருந்ததால் அதைத் திறக்க அவள் தன் முகத்தை உயர்த்தியதுதான் அந்த வாய்ப்பை அவனுக்கு அளித்தது.

அந்த முகம் என்ன காரணத்தாலோ அவனுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. கண்டதும் காதல் என்பது போன்ற எந்த எண்ணமும் அவனுக்கு வரவில்லைதான். ஆனால் அவளது மேலெழுந்தவாரியான முகத்தழகைக் கடந்த ஓர் ஆன்மீக அழகு- அகத்தின் அழகு- தன் மனத்தில் பதிந்து தன்னை ஈர்த்ததை மட்டும் அவனால் மறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஒரு மாதிரியாய்ப் புல்லரித்தது. ‘சேச்சே!’ என்று சொல்லிக்கொண்டான். அந்தச் சொல் தன் வாயில் வந்தது ஏன் என்று அடுத்த கணமே கேள்வி எழுப்பிக்கொண்ட அவன் எச்சில் விழுங்கினான். ‘என்னதான் பிரும்மசரிய விரதம் என்று பூண்டிருந்தாலும், அழகை ஆராதிக்கிற ரசனைதான்’ என்று தனக்குத் தானே விளக்கம் கொடுத்துச் சமாதானமுற்றான்.

அவள் கொள்ளிக்கட்டையும் கையுமாய் ஓடத் தொடங்கியது பற்றிய வியப்பில் அவன் இருந்தபோது, இரண்டே நிமிடங்களுக்குள் நாகலிங்கம் ஓட்டமாக ஓடிக் கொல்லைப்புறத்துக்கு வந்து, திறந்துகிடந்த கதவை நெருங்கி வெளியே எட்டிப் பார்த்ததைக் கவனித்ததும் அவனுக்கு எல்லாமே புரிந்து போயிற்று. ‘யார் அவள் ? இருபத்தைந்து வயதுக்கு மேல் இருக்காது என்று தோன்றுகிறது. என்ன குடும்பக் கஷ்டமோ! அதனால் வேலைக்கு வந்தவளாய்த்தான் இருக்க வேண்டும். ‘ – சட்டென்று அவனது சிந்தனை நின்றது.

செங்கல்பாளையத்தில் அவனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனைப் பார்க்கிற சாக்கில் அங்கே போய் அவள் யார் என்பதை நாசூக்காய் விசாரித்து அறிந்து கொள்ள அவன் அவாவினான். தன் எண்ணங்கள் ஓடிய விரைவைக்கண்டு அவனுக்கே தன் மீது வியப்பு ஏற்பட்டது. ‘அவள் யாராயிருந்தால் என்ன ? அதைக் கண்டுபிடித்து ஆகப் போவதென்ன ? நானோ பிரும்மச்சரிய விரதம் பூண்டிருப்பவன். அர்த்தமே இல்லை!’ – இப்படி எண்ணித் தன் மனக்குதிரைக்கு லகான் போட அவன் முற்பட்டாலும் அது அடங்க மறுத்தது.

அவனுடைய அம்மா குளித்துக்கொண்டிருந்தான். ஒருகால் தன் அம்மா அவளைப் பார்த்திருக்கக்கூடும் என்று அவன் எண்ணினான். குளித்து விட்டு அம்மா வந்ததும் அது பற்றிக் கேட்கவேண்டும் என்று நினைத்தான். கையில் பற்றியிருந்த புத்தகத்தில் கவனம் செல்லாமல் அவன் யோசித்தபடியே நடந்தான்.

‘நாகலிங்கத்தின் மனைவிக்கு அவன் அந்தப் பெண்ணிடம் தப்பாக நடந்துகொள்ள முயன்றது தெரிந்திருக்குமா ?’ – அவனது பார்வை நாகலிங்கத்தின் வீட்டுக் கொல்லைப்பக்கம் கவனித்தது. இப்போது கொல்லைக்கதவு சாத்தித் தாழிடப்பட்டிருந்தது. அந்த வீட்டில் எப்போதும் கேட்கும் குழந்தைச் சத்தம் கேட்கவில்லை. அவன் மனைவி விழித்துக் கொண்டிருந்ததற்கான எந்த அரவமும் கேட்கவில்லை. சாதாரணமாக அவளது குரல் மொட்டை மாடியில் கேட்கும். அவள் முடக்கு வாதத்தால் குறைந்தபட்ச உடல் அசைவுகளுடன், படுத்த படுக்கையில் இருப்பவள் என்பதைத் தன் அம்மா மூலம் அவன் அறிந்திருந்தான். இன்று வீடே அமைதியில் ஆழ்ந்திருந்த விநோதம் ஏதோ நடந்திருக்கிறது என்று அவனை ஊகிக்க வைத்தது. என்னவென்பதுதான் புரியவில்லை. அவன் மனைவியும் குழந்தையும் அமைதிப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பது மட்டும் புரிந்தாது. ‘அந்த வீட்டுக்குள் ஓர் அறையில் இருவரையும் அவன் ஒருகால் அடைத்து வைத்திருந்திருப்பானோ ? வாயில் துணியைச் சுருட்டி அடைத்துக் காமாட்சி குரலெழுப்ப் முடியாதபடிப் பண்ணிவிட்டிருந்திருப்பானோ ? .. .. சே! இதென்ன வீண் ஆராய்ச்சி ? யாரோ எப்படியோ தொலையட்டும்!.. ..’

இனித் தன்னால் படிப்பதில் ஆழமுடியாது என்பது திட்டவட்டமாய்த் தெரிந்து போனதில், சாமிநாதன் அதிருப்தியுடன் படியிறங்கினான். குளித்து முடித்து வெளிவந்திருந்த அவன் அம்மா தங்கம்மா ஏதோ சுலோகத்தை முணுமுணுத்தவாறு அடுப்புப் பற்ற்வைத்துக்கொண்டிருந்தாள்.

புத்தகத்தை அலமாரிக்குள் வைத்துவிட்டு அவன் மெதுவாகச் சமையலறைக்குள் எட்டிப் பார்த்தான்.

“என்ன, சாமிநாதா ? காப்பிதானே ? இதோ ஆயிடுத்து. பத்தே நிமிஷம்!.. ..”என்றவாறு தங்கம்மா அவனது காலடியோசை கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

“அதுக்கில்லேம்மா.. .. ஆமா ? நாகலிங்கத்தாத்துக்குப் புதுசா ஒரு சமையல்காரப் பொண்ணு வந்திருக்காளா என்ன ?”

சாமிநாதன் இப்படியெல்லாம் பேசக் கூடியவன் அல்லன் என்பதால் தங்கம்மா வியப்புடன் அவனை ஏறிட்டாள்.

“ஆமா. நேத்துலேர்ந்து வேலைக்கு வந்திண்டிருக்கா. ஏன் ? அவளுக்கு என்ன ?” என்று வினவிய தங்கம்மாவின் பார்வை அவன் மீது ஆழமாய்ப் படிந்தது.

பின்னர், அவனிடமிருந்து பதில் வருமுன், “பாவம்! சின்ன வயசிலேயே அவளோட ஆம்படையான் அவளைத் தள்ளிவெச்சுட்டானாம்!” என்றாள் அவசரமாக.

சாமிநாதன் கணம் போல் தயங்கினான். தான் கண்டதையும், தனது ஊகத்தையும் தாயிடம் சொல்லலாமா வேண்டாமா என்றுதான். ஆனால், தெருவில் நடந்துகொண்டிருந்த சிலரே அந்தப் பெண் கொள்ளிக்கட்டையைப் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கையில், தானும் அப்படி அவளைப் பார்த்ததை அம்மாவிடம் தெரிவிப்பதில் எந்தத் தவறுமில்லை என்று அவன் உடனே முடிவுசெய்தான். தன் அம்மாவால் மட்டுமே அந்தச் செய்தி ஊரில் பரவப் போவதில்லை என்று தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டபின் உண்மையைச் சொல்லிவிட்டான்.

“அட கஷ்டகாலாமே! அந்த நாகலிங்கக் கட்டேல போறவன் பார்வையே சரியில்லே. வயசான பொம்மனாட்டிகளைக்கூட விட்டுவைக்காத பார்வை அவனுக்கு. பொண்டாட்டி நடமாடிண்டிருந்தப்பவே அவனுக்கு நடத்தை சரியில்லே. இப்ப கேக்கணுமா ? அதான் அந்தப் பொண்ணுகிட்ட வாலாட்டிப் பாத்திருக்கான். செங்கல்பாளையத்துப் பொண்ணு அது. அவ அப்பா ஜோசியராம். இருந்த ஒரே வீட்டையும் அவ கல்யாணத்துக்கோசரம் வித்துட்டு இப்ப நடுத் தெருவில நிக்கறார் பொண்ணோட. அம்மா கிடையாது. யாரோ ஒரு செட்டியார்- அந்த வீட்டை வாங்கினவர்- அவாளை வெரட்டாம அதுலயே அவா குடியிருந்துக்கச் சம்மதிச்சிருக்காராம். .. ..”

“இதெல்லாம் நோக்கு எப்படித் தெரியும் ?”

“நேத்து காமாட்சியைப் பாக்கப் போனேன். அப்ப சொன்னா.”

‘அடியம்மா! இந்தப் பொம்மனாட்டிகளுக்கு வேற வேலையே கிடையாது. அல்லு அசல் மனுஷா தும்மினாக்கூட, என்ன, ஏதுன்னு விசாரிக்கிற வம்பு! எழுதப் படிக்கத் தெரிஞ்சா அக்கடான்னு உக்காந்துண்டு ஒரு புஸ்தகத்தையோ பத்திரிகையையோ வாசிக்கத் தோணும். கல்வியோட அவதாரமே சரஸ்வதிதேவின்னு சொல்லிண்டு ஏன் தான் இந்த தேசம் பொண்ணுகளைப் படிக்கக் கூடாதுன்னும் சொல்லிண்டு கிடக்கோ ? அதனாலதான் காந்தி தலைதலையா அடிச்சுக்கறார். யங் இண்டியாவில பக்கம் பக்கமா எழுதறார்.. ..’

“என்னடா யோசனை ?”

“வேற ஒண்ணுமில்லேம்மா. படிக்கத் தெரிஞ்சா இந்தப் பொம்மனாட்டிகள் அவா பாட்டை அவாளே பாத்துப்பாளோல்லியோ ?”

“என்னடா சொல்றே ? புரியல்லே.”

“வெள்ளக்காரா தேசத்துல யெல்லாம் பொண்ணுகள் படிச்சுட்டு வேலைக்கெல்லாம் போறாளாம். அதை நெனைச்சுண்டேன்.. .. ஆமா ? அந்தப் பொண்ணு கொஞ்சமவது படிச்சிருக்காளாமா ?”

“அதை யாரு கண்டா ? விசாரிச்சாத் தெரியும்.. .. ஆமா ? நீ என்ன இவ்வளவு கவலைப் பட்றே அந்தப் பொண்ணப்பத்தி ? விட்டா, அவ படிக்காதவன்னு தெரிஞ்சா, நீயே கூப்பிட்டு அவளுக்குப் படிப்புச் சொல்லிக் குடுப்பே போலிருக்கே ?” என்று சிரித்து விட்டு, காப்பிவடிகட்டியில் பொடியைப் போட்ட தங்கம்மா கொதிக்கிற நீரை அதில் ஊற்றினாள்.

அவன் முகம் சிவந்தது: “என்னம்மா நீ ? அதெல்லாம் இந்தக் குக்கிராமத்துல நடக்குற காரியமா ? புருஷன் வேற தள்ளி வெச்சிருக்கான்கறே. செங்கல்பாளைத்துல பொறந்து வளந்தவளா யிருந்தா அவ எங்கே படிச்சிருக்கப் போறா ? படிச்சிருந்தா ஒரு டாச்சர், நர்ஸ்னு ட்ரெய்னிங் எடுத்துண்டுட்டு வேலைக்குப் போலாம். அது அவாளுக்கு ஒரு பாதுகாப்புத்தானே ?”

“என்னடா பெரிய பாதுகாப்பு ? இப்ப பாரு. சமையல் வேலைக்கு வந்த எடத்துல அந்தக் கட்டேல போறவன் அவ கையைப் பிடிச்சு இழுத்திருக்கான். அதே மாதிரி வெளியில போய் வேலை பாக்கற எடங்கள்ள இருக்குற புருஷா பொம்மனாட்டிகள் கையைப் பிடிச்சு இழுக்க மாட்டாங்கிறது என்ன நிச்சியம் ?”

பொங்கிய பாலை அடுப்பிலிருந்து இறக்கியபடியே தங்கம்மா இவ்வாறு கேட்டதும், “ நீ கேக்கற கேள்வி நியாயமானதுதான். ஆனா, அம்மா, நேர்ல இருந்து பாத்த மாதிரி ‘கையப் பிடிச்சு இழுத்தான்’ னெல்லாம் சொல்லாதே. நீயும் கண்ணால பாக்கல்லே. நானும் பாக்கல்லே. ஒரு ஊகமாக் கூட இப்படியெல்லாம் பேசக்கூடாது!”

“சரிதாண்டா. சும்மாரு. ஊர்ல இருக்கிறவாளுக் கெல்லாம் பரிஞ்சுண்டு வந்துடுவன். அவன் ஏதோ தப்பா நடந்திருக்கக்கொண்டுதானே அந்தப் பொண்ணு கொல்லை வழியாக் கொள்ளிக் கட்டையோட ஓடியிருக்கா ?”

“ரைட்டும்மா. ஆனா, அதுக்காகக் கையைப் பிடிச்சு இழுத்தான் னெல்லாம் சொல்லிட முடியாதும்மா. அவன் வாய் வார்த்தையா ஏதாவது அசிங்கமாப் பேசியிருந்தாலே கூட, அவனோட அடுக்க நடவடிக்கையைத் தடுத்துட்டுத் தானும் தப்பறதுக்காக அந்தப் பொண்ணு ஓடியிருக்கலாமில்லையா ? என்ன நடந்ததுங்கிறது அதுல சம்பந்தப்பட்ட அந்த ரெண்டு பேருக்கு மட்டுந்தான் தெரியும். நாம பாட்டுக்கு இஷ்டத்துக்குக் கற்பனை பண்ணிக்கப்படாது!”

“சரிதாண்டா. இந்தா. காப்பியை எடுத்துக்கோ!” என்ற தங்கம்மா திகைப்பில் ஆழ்ந்தாள். சாமிநாதன் பட்டணத்துக்குப் போய் பீ.ஏ. (B.A.) பட்டம் பெற்றுவிட்டு வந்தாலும் சர்க்கார் உத்தியோகம் எதிலும் அமராமல் வெட்டியாய்க் காலம் கழித்துக்கொண்டிருக்கிறான் என்கிற மனக்குறை அவளுக்கு மிக நிறைய இருந்தது. அதையும் விட, தான் கலியாணமே செய்துகொள்ளாமல் ஆயுள் முழுவதும் பிரும்மசாரியா யிருக்கப் போவதாய் அவன் சொல்லிக்கொண்டிருந்ததோ அதையும் காட்டிலும் அதிக வருத்தத்தில் அவளை ஆழ்த்தி யிருந்தது. பெண் என்கிற சொல்லை உச்சரிக்கக் கூடத் தயங்குபவன் போல் அதுகாறும் நடந்துவந்துள்ள சாமிநாதன் முன்பின் தான் அறியாத ஒருத்தியைப் பற்றிப் பேசியதும் கவலைப்பட்டதும் அவளை வியப்பில் ஆழ்த்திவிட்டன.

‘வருகிற தை மாதத்தில் இவனுக்கு முப்பது வயது முடிந்துவிடும். எனக்கோ இவனை விட்டால் வேறு யாருமே இல்லை. ஒரே பிள்ளையா யிருந்தும் இப்படி பிரும்மசரியம், மகாத்மா காந்தி, தேசவிடுதலை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அவ்வப்போது அசலூர்களுக்குப் போய் மாதக்கணக்கில் தங்கிவிட்டுவரும் இவனை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எப்போது அசலூருக்குப் போய்விட்டு வந்தாலும், ஒரு பை நிறைய ஏதேதோ புஸ்தகங்களைக் கொண்டுவந்து அலமாரியில் அடுக்குகிறான். என்ன புஸ்தகங்களோ, என்ன இழவோ! யாருக்குத் தெரிகிறது ? யோகாசனப் படங்கள் போட்ட ஒரே ஒரு புஸ்தகத்தை மட்டும்தான் அது இன்னதென்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மற்றவை எல்லாமே இங்கிலீஷ். தமிழில் இருந்தால் மட்டும் தெரியப் போகிறதா என்ன! என் பேரை எழுதுவதற்கு மட்டும்தான் சொல்லிக் கொடுத்தார்கள். வேறென்ன தெரியும் எனக்கு ? அசலூர்களிலிருந்து இவன் எழுதிகிற தமிழ்க் கடிதங்களைக் கூட நான் எதிர் அகத்துச் சுப்புணியைக் கூப்பிட்டுப் படிக்கச் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டி யிருக்கிறது. அதைப் பார்க்கையில், தமிழாவது பொம்மனாட்டிகளுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்றுதான் தோன்றுகிறது.. .. போனதரம் பட்டணத்திலிருந்து வந்தபோது கூட எனக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தருகிறேன் என்று ஒற்றைக் காலில் நின்றான். நான் தான் முடியாதென்று சொல்லிவிட்டேன். ஐம்பது வயசுக்கு அப்புறம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டு நான் என்ன கிழிக்கப் போகிறேன் ?.. .. ..”

காப்பியைக் குடித்துக்கொண்டே அம்மாவும் பிள்ளையும் மவுனமாக இருந்தார்கள்.

அப்போது, பக்கத்து வீட்டிலிருந்து அந்தப் பெருங்குரல் எழுந்து அவர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது.

“காமாட்சியோட கொரல் மாதிரி இல்லே ?” என்று சாமிநாதன் கேட்டதும், தங்கம்மா மீதிக் காப்பியை அப்படியே வைத்துவிட்டுக் கொல்லைப் பக்கம் ஓடினாள்.

“போய் நின்னு ஒட்டுக் கேக்கல்லேன்னா நோக்கு மண்டை வெடிச்சுடுமே!” என்று சாமிநாதன் வாய்விட்டுச் சிரித்தபடி காப்பித் தம்ளரைத் தொட்டிமுற்றத்தில் போட்டான்.

சற்றுப் பொறுத்துத் திரும்பிய தங்கம்மா, “காமாட்சிதான்! ஆம்படையானோட சண்டை போட்றா. தெரிஞ்சுடுத்து போல இருக்கு விஷயம்! உருப்படியா ஒண்ணும் காதுல விழல்லே. ஆனா, ‘நீங்க ஏதோ தப்பா நடந்திருக்கேள்’னு அவ கத்தினது மட்டும் தெளிவாக் காதுல விழுந்தது. ஏன்னா, அதை மட்டும் காமாட்சி ரொம்பவே கூச்சல் போட்டுப் பேசினா!” என்று சாமிநாதனிடம் தெரிவித்தாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 10

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

ஜோதிர்லதா கிரிஜா


ரங்கநாத சாஸ்திரிகள் சொல்லியிருந்த நல்ல நேரத்தில் பத்மநாபன் தேவராஜனின் வீட்டை யடைந்தார். அவர் சென்ற நேரத்தில் தேவராஜன் வாசல் திண்ணையை ஒட்டினாற்போலிருந்த தமது அறையில் உட்கார்ந்து சுதேசமித்திரன் படித்துக்கொண்டிருந்தார்.

செருப்புகளை வாசலுக்கு வெளியே உதறிவிட்டு, பத்மநாபன் தொண்டையைச் செருமினார். தேவராஜன் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துவிட்டு, “யாரு ?” என்றவாறு எழுந்துவந்தார்.

“சிலுக்குப் பட்டியிலேர்ந்து வறேன். என் பேரு பத்மநாபன். ரங்கநாத சாஸ்திரிகள் சொல்லியிருப்பாரே ?” என்றபடி தயக்கமாய் நின்ற பத்மநாபனை நோக்கிப் புன்னகை செய்த தேவரஜான், “அடேடே! நீங்கதானா அது ? வாங்கோ, வாங்கோ! உங்களை நான் ஒரு தரம் கோவில் திருவிழாவில பாத்திருக்கேன். உள்ள வாங்கோ.. ..”

சிரிப்புடன் தேவராஜனைப் பிந்தொடர்ந்து பத்மநாபன் அவருடன் வீட்டுக்குள் சென்றார். பெரிய பணாக்காரரா யிருந்தும் தேவராஜன் கச்சலா யிருந்ததைக் கவனித்த பத்மநாபன் வியப்படைந்தார். பணக்காரச் செழுமை இல்லைதான். ஆனால் அவரது நடையில் ஒரு கம்பீரமும், ‘எனக்கு நிகர் யார் ?’ என்று வினவும் ஒரு தோரணையும் தென்பட்டன. உடம்பு கச்சலா யிருந்தாலும், முகத்தில் பணக்காரக் களை தெரியவே செய்தது. ஒரு மினுமினுப்பும் தெரிந்தது. ‘பணக்காரர்களுக்கே உரிய மினுமினுப்பு’ என்று பத்மநாபன் தமக்குள் எண்ணிக்கொண்டார். அவரளவுக் கில்லாவிட்டாலும், ஓரளவு பணக்காரரேயான தன் முகமும் அப்படித்தான் பளபளக்கிறதோ என்னவோ என்று தமக்குள் எண்ணி அவர் நகைத்துக்கொண்டார்.

“உக்காருங்கோ!”

தேவராஜன் உட்கார்ந்த பிறகு, அவரும் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். சில நொடிகளுக்கு இருவரும் எதுவும் பேசவில்லை. அத்தனை பெரிய வீடு ஆரவாரமின்றி அமைதியா யிருந்ததைப் பத்மநாபன் கவனித்தார்.

அவர் எண்ணங்களை ஊகித்தவர் போல், “என் மூத்த பிள்ளை வயக்காட்டுக்குப் போயிருக்கான். ரெண்டாவது பிள்ளை அசலூருக்குப் போயிருக்கான். என்னோட பொண்ணுகள் ரெண்டுக்கும் கல்யாணமாயி, ஒருத்தி தஞ்சாவூர்லயும், இன்னொருத்தி நெல்லூர்லயும் இருக்கா. ஆத்துல, இப்ப சத்தியா- அதாவது நீங்க வந்திருக்கிற இந்த நிமிஷத்துல- எங்காத்துக்காரியும் நானும் மட்டுந்தான் இருக்கோம். . .. .. பார்வதி! பார்வதி! ஒரு நிமிஷம் இப்படி வந்துட்டுப் போ!” என்ற தேவராஜன் கழுத்தைத் திருப்பி உள்ளே பார்த்தார்.

அடுத்த நிமிடம் அவருடைய மனைவி பார்வதி அங்கு வந்து நின்றாள். அவள் தேவராஜனுக்கு நேரெதிரா யிருந்தாள். மூக்கிலும், காதுகளிலும் வைரங்கள் டாலடித்தன. கழுத்தில் எக்கச்சக்கமாய்ச் சங்கிலிகள் அணிந்திருந்தாள். கைகளில் பொடியும் தடியுமாய் ஏழெட்டு வளையல்கள் அணிந்திருந்தாள். பெரிய குங்குமப் பொட்டு அவளது சின்ன நெற்றிக்குப் பொருந்தவில்லை என்று சொல்லமுடியவில்லை. ஏனெனில் முகம் முறம் போல் அகலமா யிருந்தது. எடுப்பான மூக்கும், பெரிய கண்களுமாகப் பார்ப்பவரை அயர்த்துகிற தோற்றத்தைப் பார்வதி கொண்டிருந்தாள்.

“நமஸ்காரம்மா! இந்தாங்கோ!” என்றவாறு எழுந்து நின்று வணக்கம் தெரிவித்த பத்மநாபன் உடனெடுத்து வந்திருந்த பழப்பையை அங்கே இருந்த குட்டை மேசை மீது வைத்தார்.

“எதுக்கு இதெல்லாம் ?”

“இருக்கட்டும். பெரிய மனுஷாளைப் பாக்க வரப்போ, வெறுங்கையோட வரலாமா ? அதுக்காகத்தான்னு வெச்சுக்குங்களேன்!”

“நேத்து நீங்க சொன்னேளே- ரங்கநாத சாஸ்திரிகள் சொன்னார்னு- அவர்தானே ?”

“ஆமா. அவரேதான். சிலுக்குப்பட்டியிலேர்ந்து வந்திருக்கார்.. .. சொல்லுங்கோ பத்மநாபன் சார்! உங்களுக்கு ஒரே பொண்ணுன்னு சொன்னார் சாஸ்திரிகள்.”

“ஆமா, சார். நேக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டுந்தான். உங்க பணங்காசோட ஒப்பிட்டா, நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லே. இருந்தாலும், அதுக்குன்னு நான் ஏப்பை சாப்பையுமில்லே. ஜாதகம் திவ்யமாப் பொருந்தி யிருகுன்னு சாஸ்திரிகள் சொன்னார். எல்லாப் பொருத்தங்களும் நன்னா அமையறதுங்கிறது அபூர்வமாச்சே! அதான் நேக்கு ஒரு பேராசை- உங்களோட எப்படியாவது சம்பந்தம் பண்ணிண்டுடணும்னு- நான் அதுக்குத் தகுதி யில்லாதவனா யிருந்தாலும்!”

பார்வதி, “இதுல தகுதி என்ன வந்தது தகுதி ? நீங்க எந்த அளவுக்குச் செய்வேள்னு சொல்லுங்கோ. எங்களுக்குத் தோதுபட்டா மேற்கொண்டு பேசுவோம். இல்லேன்னா விட்டுட்டுப் போறோம். அவ்வளவுதானே ? .. ..ஏன்னா ?” என்றாள் இடைமறித்து.

“ஆமாமா.. .. நீங்க சொல்லுங்கோ, பத்மநாபன் சார்!”

“நீங்கதான் சொல்லணும். என்னென்ன எதிர்பார்க்கறேள்ங்கிறதை யெல்லாம் சொல்லுங்கோ. என்னோட சக்திக்கு உட்பட்டதா யிருந்தா மேற்கொண்டு பேசுவோம்.”

பார்வதியும் தேவராஜனும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“நீதான் சொல்லேன், பார்வதி!”

பார்வதி தொண்டையைக் கனைத்துக்கொண்டாள்: “வரதட்சிணை பத்தாயிரம் குடுத்துடுங்கோ. அம்பது சவரன் நகை போட்டுடுங்கோ. காதுக்கும் மூக்குக்கும் வைரம் போட்டுடுங்கோ. எங்க குடும்பத்துல வைரத்தோடுதான் போட்டுக்குறது! காசு மாலை கண்டிப்பா வேணும்.”

“அது.. .. நீங்க சொன்ன அம்பது பவுனுக்குள்ளதானே ?”

“ஆமாமா. அதுக்குள்ளதான். ஆனா, அம்பது சவரனுக்கும் மேல அதிகப்படியாக் காசுமாலை போட்டேள்னா நாங்க வேணாம்னா சொல்லப் போறோம் ? எல்லாத்தையும் வெச்சிண்டு உங்க பொண்ணுதானே ஆளப்போறா ? உங்களுக்கு இருக்கிறதும் ஒரே பொண்ணுதானே ?”

“ஆமாம்மா. ஒரே பொண்ணுதான். அதனாலதான், அவ கண் கலங்காம இருக்கக் கூடிய நல்ல எடமாப் பாத்துக் குடுக்கணும்னுட்டு ஆசை. நீங்க இப்ப சொன்னதை யெல்லாம் எங்களால செய்ய முடியும்மா.”

“மத்தப்படி, மேற்கொண்டு வழக்கமாச் செய்யற சீர்செனத்திகள்தான், உங்களுக்குத் தெரியாதா என்ன ? கல்யாணத்தை நாலு நாளுக்கு நன்னா, நிறக்கப் பண்ண்ணும். எங்க வழியில் சொந்தக்காரா ஜாஸ்தி.”

“எத்தனை பேர் வேணும்னாலும் வரட்டும்மா. நான் சிலுக்குபட்டி ஜனங்கள் முழுக்கவும் கூப்பிட்டுச் சாப்பாடு போடலாம்னு இருக்கேன். “

“ரொம்ப சந்தோஷம்.. நான் வரட்டுமா ? உள்ள கைக்காரியமா யிருக்கேன்.. .. .. நீங்க பேசி முடியுங்கோன்னா!”

“சரிம்மா, செய்யுங்கோ.. .. பொண்ணை என்னிக்குப் பாக்க வறேள் ?”

“அதெல்லாம் அவர் தீர்மானிப்பர். நான் வறேன்.”

பத்மநாபன் தலை யசைக்க, அவள் அசைந்து அசைந்து உள்ளே போனாள். நடையிலேயே ஒரு பணக்கார மிடுக்குத் தெரிந்தது. அவளை ஒரு நல்ல பெண்மணியாகப் பத்மநாபனால் கணிக்க முடியவில்லை. எனினும் அக்கம்பக்கத்தில் விசாரிக்கவேண்டும் என்று தமக்குள் எண்ணிக்கொண்டார். ‘வேறு யாரை விசாரிப்பது ? அந்த ரங்கநாத சாஸ்திரிகளைத்தான். அவர் பொய் கிய் சொல்லாமல் இருக்கவேண்டும். என்ன விசாரித்தாலும் கொண்டாலும், துர்க்காவுடைய தலையிலே பிரம்மா என்ன எழுதியிருக்கிறானோ, அதன்படிதான் நடக்கும். பார்க்கலாம். பையன் பட்டணத்தில் ஏதோ பிசினெஸ் பண்ணப் போறதாய்ச் சொன்னாரே சாஸ்திரிகள் ? அப்படி யானால், அவன் மெட்றாசுக்குப் போய்விடக்கூடும். பெரியவர்கள் இருவரும் இந்தக் கிராமத்தை விட்டு வெளியே போகமாட்டார்கள். அப்படி நேர்ந்தால், துர்க்கா அதிருஷ்டக்காரிதான். பக்கத்திலேயே இருந்தால்தானே மாமியர்-நாத்தனார் படுத்தல் எல்லாம் ?’

பத்மநாபன் தம் சிந்தனையிலிருந்து விடுபட்டுத் தொண்டையைக் கனைத்தபோது, தேவராஜன் அவரைப் பார்த்தார்.

“என்னிக்குப் பொண் பாக்க வறேள்னு அப்புறமாத் தகவல் சொல்லியனுப்புங்கோ. எம் பொண்ணைப் பத்தி நானே பீத்திக்கப்படாது. பொண்ணு பேரு துர்க்கா. அதான் ஜாதகத்துல பாத்திருப்பேளே ? ரதின்னா ரதியேதான்.”

“எம்பிள்ளையும் மன்மதன்தான்காணும்! என்னைக்கொண்டிருந்தா அப்படி இருக்க மாட்டான். என் சகதர்மிணியைக் கொண்டிருக்கான். அதான்!” என்று கூறிய தேவராஜன் சத்தமாய்ச் சிரித்தார்.

“சேச்சே! நீங்க மட்டுமென்ன ? லட்சணமாத்தான் இருக்கேள்!.. .. அப்ப நான் வரட்டுமா ? அவா கிட்ட சொல்லிடுங்கோ.”

“ஒரு நிமிஷம் உக்காருங்கோ. உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கணும்.”

தேவராஜன் இவ்வாறு சொன்னதைக் காட்டிலும், அப்படிச் சொன்னபோது அவர் குரலில் ஒலித்த தோரணை பத்மநாபனைத் திகைப்படையச் செய்தது. அவர் விழிகளை மலர்த்தி, ‘என்ன ?’ என்பது போல அவரை ஏறிட்டார்.

“சம்பந்தம் பண்ணிக்கிறவாளுக்கு மத்தியிலே எந்த ரகசியமும் இருக்கப்படாதில்லையா ? அதாவது நாம ஒருத்தருக்கொருத்தர் உண்மையா நடந்துக்கணுமில்லையா ?”

பத்மநாபன் எச்சில் விழுங்கினார். தேவராஜன் எதைப் பற்றிக் கேட்கப் போகிறார் என்பது உள்ளுணர்வாய் அவருக்குப் புலப்பட்டுவிட்டதால், அவர் விழிகளில் ஒரு கலக்கம் உடனே வந்து உட்கார்ந்துகொண்டது.

சட்டென்று தம் குரலைத் தாழ்த்திக்கொண்டு, “இப்ப நாம பேசப் போறது என் சகதர்மிணிக்குத் தெரிய வேண்டாம். தெரிஞ்சா அவ இந்தச் சம்பந்தமே வேண்டாம்னுடுவா. . .. .. “ என்ற தேவராஜன், “பார்வதி!.. நான் இப்பிடி கொஞ்சம் இவரோட வேளியில போயிட்டு ஒரு அரை மணியில வந்துட்றேன், ” என்றவாறு எழுந்துகொள்ள, பத்மநாபனும் எழுந்துகொண்டார்.

“சரின்னா! .. ..பெரியசாமி! ஏ, பெரியசாமி! அய்யா வெளியில போறராம். வாசக்கதவைச் சாத்தித் தாப்பாப் போடு.”

தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெரியசாமி ஓடி வந்தார்.

அடுத்த நிமிடம் இருவரும் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. எனினும் தேவராஜன் சிறிது நேரம் மவுனமாகவே நடந்தார்.

ஒரு நிமிடத்துக்குப் பிறகு, “சொல்லுங்கோ, சார். தயங்காதங்கோ. எதுவானாலும் பரவாயில்லே. மனசு விட்டுக் கேளுங்கோ. கடவுள் அனுக்கிரகம் இருந்து, நாம சம்பந்தமும் பண்ணிண்டதுக்கு அப்புறம் நமக்குள்ள மனஸ்தாபம் வரக்கூடாது. ஆரம்பத்துலேயே எதுவானாலும் பேசிப்பிட்றது நல்லது. அதனால தயங்காததங்கோ, சார்!” என்று பத்மநாபன் அவரைத் தூண்டினார்.

“என்னோட அபிப்பிராயமும் அதுவேதாங்காணும். அதனாலதான் அந்தப் பேச்சையே எடுத்தேன். எனக்கு எப்பவுமே பளிச்னு பேசித்தான் பழக்கம்.. .. உங்களுக்கு ஒரு அண்ணாவோ தம்பியோ இருந்தாராமே ? அவர் ஒரு சேரிப் பொண்ணை வெச்சிண்டிருந்தாராமே ? நிஜந்தானா ?”

“நிநிநி.. .. நிஜந்தான், சார்! நானே உங்ககிட்ட சொல்லணும்னுதான் இருந்தேன். பொண்ணை நீங்க பாத்துப் பிடிச்சுப் போயிடுத்துன்னா, அதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்னு இருந்தேன். இப்பவே எதுக்கு அதைப் பத்திப் பேசணும்னுதான் சொல்லல்லே. மத்தப்படி அதை உங்க கிட்டேர்ந்து மறைக்கணும்கிற எண்ணமெல்லாம் லவலேசமும் இல்லே நேக்கு!”

“சரி, சொல்லும். என்ன விவகாரம் அது ?”

“அதான் நீங்களே சொல்லிட்டேளே ? அதுதான். இந்த ஊர்த் தெக்குத் தெருவிலதான் அந்தப் பொம்மனாட்டி இருக்கா. அவளுக்குப் பதிமூணோ பதிநாலோ வயசுல ஒர் போண்ணும் இருக்குன்னு கேள்வி. இது கொஞ்சம் ரசாபாசமான விஷயந்தான். ஆனா நீங்க பெரிசுபடுத்தாம எங்க சம்பந்தத்தை ஏத்துக்கணும்.”

“என் சகதர்மிணிக்குத் தெரியவந்தா உங்க சம்பந்தமே வேண்டாம்னுடுவா, ஓய்! அதனால, அவ காதுக்கு இதை எட்டவிடக்கூடாது. அரசல் புரசலா ஏதாவது தெரியவந்து அவளாவே அதைப்பத்திக் கேட்டாலும், ‘அப்படியெல்லாம் எதுவும் கிடையாது’ ன்னுதான் சொல்றதா யிருக்கேன்.. .. ஆனா, அதுக்குப் பர்த்தியா, வரதட்சிணையில ஒரு அஞ்சாயிரம் ஏத்திக் குடுத்துடும்!”

ஏற்கெனவே சொல்லப்பட்ட பத்தாயிரமே பத்மநாபனுக்குக் கையைக் கடிக்கிற பெருந்தொகைதான். சுமாரான பரப்பில் நாலு வீடுகள் வாங்கக்கூடிய தொகை. கையிருப்பு முழுவதையும் சுரண்டினால்தான் அதுவே ‘இழுத்துக்கொள் பறித்துக்கொள்’ என்கிற நிலையில் சாத்தியம் என்பதால் அவர் மேலும் ஐயாயிரம் கேட்டது அவருள் ஒரு மலைப்பைத் தோற்றுவித்தது. ‘ஊர் முழுக்கச் சாப்பாடு போட்டுப் புண்ணியம் தேடுகிற எண்ணத்தைக் கைவிட்டால், கொஞ்சம் சமாளிக்கலாம் என்று தோன்ற, பத்மநாபன், வலியத் தோற்றுவித்துகொண்ட உவகையுடன், “சரி. அப்படியே செய்துட்டாப் போச்சு. கொஞ்சம் சிரமந்தான். இருந்தாலும் என்ன பண்றது ?” என்றார்.

“இதை பத்திப் பேசணும்னுதான் வெளியிலெ கூட்டிண்டு வந்தேன்.”

“சரி, சார். அப்ப நான் வரட்டுமா ? .. .. பொண்பாக்க என்னிக்கி வரணும்கிறதை சாஸ்திரிகள் கிட்ட நான் சொல்லியனுப்பட்டுமா, இல்லே, நீங்களே சொல்லி அனுப்பறேளா ?”

“நானே சொல்லியனுப்பறேன்,” என்று தேவராஜன் கூற, பத்மநாபன் கைகூப்பி விடை பெற்றார்.

.. .. .. அந்த அடுக்களைக்கு இரண்டு வாசல்கள் இருந்தன. ஒன்று கூடத்துப் பக்கம் பார்த்த வாசல். அங்குதான் காமாட்சி படுத்துக்கொண்டிருந்தாள். இன்னொரு வாசல் கொல்லைப்பக்கத்திலிருந்து உள்ளே நுழைந்ததும் வருகிற பின்புறத் தாழ்வாரத்தில் திறக்கக்கூடிய பக்கவாட்டுக் கதவுடன் இருந்தது.

நாகலிங்கம் கட்டில் பக்கம் திரும்பியது அவள் இன்னும் நன்றாய்த் தூங்கிகொண்டிருக்கிறாளா என்பதைப் பார்க்கத்தான் என்று பங்கஜம் ஊகித்தாள். முன்ஜாக்கிரதையோடு அவன் அவளுக்குத் தூக்கமாத்திரை கொடுத்திருந்தாலும், அவள் தூக்கம் இன்னும் கலையவில்லை என்பதை மேலும் உறுதிப் படுத்திக்கொள்ளத்தான் அவன் கட்டிலின் பக்கம் கவனித்தான் என்பதும் அவளுக்கு புரிந்தது. அது மட்டுமின்றி, அவன் அடுக்களையை விட்டு அகன்று கூடத்துப் பக்கம் போகவும் செய்தான். காமாட்சியை அசைத்துப் பார்ப்பதற்காக இருக்கலாம் என்றும் அவளுக்குத் தோன்றியது. இந்த நல்வாய்ப்பை அவள் எதிர்பார்க்கத்தான் இல்லை.

அவன் கட்டிலின் புறமாய்த் தன் தலையைத் திருப்பியதுமே, அவள் தனது திடார்த் திட்டத்தில் பாதியைச் செயல்படுத்திவிட்டாள். அதாவது, அடுப்பில் செருகி யிருந்த- தகதகவென்று கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த- பெரிய கொள்ளிக்கட்டையை அவள் தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டாள். அவன் தனக்குப் பக்கத்தில் வரும் போது, கூடியவரை குறி பார்த்து, அதனால் அவன் கண்களுள் ஒன்றின் மேல் குத்திவிட வேண்டும் என்பதே அவள் திட்டம். அவன் அடுக்களை வாசலை விட்டு நகர்ந்ததோடல்லாமல், நான்கைந்து தப்படிகள் வைத்து நகர்ந்து கட்டில் பக்கம் போனதால், அவளுக்கு மேலும் அதிக அவகாசம் கிடைத்துவிட்டது.

அவன் திரும்பும் முன், பங்கஜம் கொள்ளிக்கட்டையுடன் பக்கவாட்டுக் கதவின் வழியாகக் கொல்லைப் பக்கத்தையடைந்து பின் பக்கமாய்த் தெருவுக்கு மிக விரைவாக ஓடினாள். தன்னைக் காத்துக்கொள்ளும் அதீதமான தன்னுணர்வுடன் இருந்த அவள் வேறு எதைப் பற்றிய உணர்வும் அற்றவளாய், அந்த நேரத்தில் இருந்ததால்- இன்னது செய்கிறாள் என்னும் பிரக்ஞை யிழந்தவளாக- எரிகிற கொள்ளிக்கட்டையை ஒரு கையில் பற்றிக்கொண்டு தெருவில் ஓடலானாள்.

காமாட்சியைத் தொட்டு அசைத்துப் பார்த்த பிறகு அடுக்களைக்குத் திரும்பிய நாகலிங்கம் அதனுள் பங்கஜம் இல்லை என்பதைக் கண்டான். சமையலறையின் பக்கவாட்டுக் கதவும் திறந்து கிடந்ததைக் கவனித்ததும் அவனுக்கு விஷயம் விளங்கிவிட்டது. அவன் ஓடோடிப் போய்க் கொல்லைப்பக்கத் தெருவில் பார்த்தான்.

கையில் பிடித்துக்கொண்டிருந்த கொள்ளிக் கட்டையுடன் பங்கஜம் ஓடிக்கொண்டிருந்தது தெரிந்ததும் அவனுக்குச் சப்பென்று ஆகியது. மனத்தில் சொல்ல முடியாத ஏமாற்றமும் சினமும் பொாங்கி எழுந்தன. அவன் பற்களைக் கடித்துக்கொண்டே கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே வந்தான்.

‘இனிமேல் அவள் வேலைக்கு வரமாட்டாள். எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்தைக் கோட்டைவிட்டுவிட்டேன்! என்ன அழகு அவள்தான்! என்ன செழுமை! உறவுகொண்டாலும் இது போன்றவளுடனல்லவா கொள்ளவேண்டும்! இந்தக் காமாட்சியும் இருக்கிறாளே – எலும்புக்கூட்டுக்குப் புடைவை கட்டினமாதிரி! எல்லாம் போயிற்று. பத்து ரூபாய் வேறு நஷ்டம்! நான் கண்ட பலன் அது மட்டுந்தான்!’

.. .. .. பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் நடை போட்டபடி ஆங்கிலப் புதினம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்த பீ.ஏ. சாமிநாதன் கொள்ளிக்கட்டையும் கையுமாக ஒரு பெண் நாகலிங்கத்தின் வீட்டுக் கொல்லைக் கதவைத் திறந்துகொண்டு தெருவில் தலை தெறிக்கிறாப்போல் ஓடியதையும், சற்றுப் பொறுத்து நாகலிங்கம் அவசரமாய் ஓடிவந்து தெருப்பக்கம் பார்த்ததையும், இடுப்பில் இரு கைகளையும் ஊன்றிக்கொண்டு தோள்கள் ஏறிச் சரியப் பெருமூச்சுவிட்டதையும், அப்போது அவன் முகத்தில் ததும்பிய ஆங்காரத்தையும் கவனித்து இன்னது நடந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொண்டான். ‘யார் அந்த அழகான பெண் ? விசாரிக்கவேண்டும்!’

பீ.ஏ. சாமிநாதன் புத்தகத்தை வைத்துவிட்டுக் கீழே இறங்கினான்.

—-

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 9

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

ஜோதிர்லதா கிரிஜா


ரங்கநாத சாஸ்திரியின் பூசிமெழுகினாற்போன்ற பேச்சு தேவராஜனைப் புருவம் உயர்த்த வைத்தது.

“நீர் என்ன சொல்றீர், சாஸ்திரிகளே ? வரதட்சிணைப் பணத்தை ஏத்திட்டாப் பாராட்ட வேண்டாத கொறைன்னா, அதுக்கு என்ன அர்த்தம் ? அந்தப் பொண்ணுகிட்ட ஏதாவது ஒச்சம், ஊனம்னு இருக்கா, என்ன ?” என்றார், தம் விழிகள் விரிய.

“அதெல்லாமில்லே. பொண்ணு, கிளின்னா, கிளி. சும்மாச் சொல்லப்படாது. நல்ல நெறம். ரம்பை மாதிரி அழகு. நன்னாப் பாடுவ. சிலுக்குப்பட்டியில ஒவ்வொரு நவராத்திரியப்பவும் அவளைக்கூப்பிட்டுப் பாடச் சொல்லாத வீடே இல்லேன்னு சொல்லலாம். அப்ப்டி ஒரு கொரல். எல்லாம் கேள்வ்ி ஞானம்தான். அந்தப் பட்டிக்கட்டுல பாட்டுக் கத்துகுடுக்கிற பாகவதாளுக்கெல்லாம் எங்க போறது ?”

“சரி, சரி. விஷயத்தைப் பளிச்னு சொல்லும்.”

“அந்தப் பொண்ணுகிட்டவோ அவளைப் பெத்தவா கிட்டவோ எந்த ஒச்சமும் கிடையாது, ஊனமும் கிடையாது. நான் சொல்ல வந்தது அவா குடும்பத்துல இருக்கிற ஒரு கறை பத்தி. , .. ..”

“என்னது! கறையா ?”

“ஆமா. பத்மநாபனுக்கு அண்ணா ஒருத்தான் இருந்தான். கேசவன்னு பேரு. .. ..”

“அவருக்கு என்ன ?”

“அவனைத் தெரியுமா உமக்கு ?”

“ஓய், சாஸ்திரிகளே! நேக்கு யாரையும் தெரியாதுங்காணும். சட்டுப்புட்டுனு சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லும். அவருக்கும் இந்தச் சம்பந்தத்துக்கும் என்ன சம்பந்தம் ?”

“அவன் இப்ப உசிரோட இல்லே. தவறிப்போய்க் கொஞ்ச நாளாச்சு அவனுக்கு இந்த ஊர்ல ஒரு அருவருப்பான தொடர்பு இருக்கு.”

“இதே ஊர்லயா ? அதாவது, வத்தலப்பாளையத்துல ?”

“ஆமா.”

“அருவருப்பான தொடர்புன்னா ?”

“இந்த ஊர்த் தெக்குத் தெருவில ஒரு கொசவனோட பொண்ணை அவன் வெச்சிண்டிருந்தான். அரசல் புரசலா விஷயம் சிலுக்குப்பட்டியில இருக்கிற எல்லாருக்குமே தெரியும்னு சொல்லலாம்.”

“அவரோட அண்ணா கல்யாணம் ஆனவரா ?”

“இல்லே. அதான் வேடிக்கையே. சின்ன வயசுல அந்தக் குட்டியோட ஏற்பட்ட பழக்கம். கடேசி வரைக்கும் அந்தக் குட்டி வீட்டுக்குப் போய் வந்துண்டு இருந்தான். அவன் வேற யாரயும் கல்யாண்மே பண்ணிக்கல்லே. அவளோடவே ஆயுசு முழுக்கவும் வாழ்ந்து செத்தான்.”

“அது சரி. அந்தப் பத்மநாபன் தன் அண்ணாவோட போக்குவரத்து வெச்சிண்டிருந்தாரா ?”

“இல்லேல்லே. நம்ம அக்கிரகாரத்து வழக்கப்படி அவரோட பத்மநாபன் எந்தப் போக்குவரத்தும் வெசுக்கல்லே. தண்ணி தெளிச்சு விட்டுட்டார்னே சொல்லலாம். இருந்தாலும் ஒரு ‘சூத்திர’ப்பொண்ணோட அவரோட தமையன் சம்பந்தம் வெச்சுண்டிருந்தார்ங்கிறது மானக்கேடான விஷயம்தானே ? விஷயம் தெரிய வந்தா யாரும் அவரோட சம்பந்தம் வெச்சுக்க மாட்டாளோன்னோ ?”

“சரி, சரி. இந்த விஷயம் இப்ப சத்தியா உமக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்ச சங்கதியா யிருக்கட்டும். எம் பொண்டாட்டி காதுக்கெல்லாம் போகவேண்டாம். தெரிஞ்சுதா ? அது போகட்டும், அந்தப் பத்மநாப அய்யர் செல்வாக்கெல்லாம் எப்படி ? அதாவது என்ன தேறும் அவருக்கு ?”

“நம்மாத்தோட சம்பந்தம் வெச்சுக்கிற அளவுக்குப் பணங்காசு இருக்கு அவருக்கு. உங்க அளவுக்குச் சொத்து, சுகமில்லாட்டாலும், ச்ிலுக்குப்பட்டியில அவர்தான் பெரிய புள்ளி. நான் சொல்லித்தான் அவர் இங்க வரார்.”

‘அப்ப. தொடையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிவிட்றதுல நீர் தேர்ந்த ஆசாமின்னு சொல்லும்!”

“ஹிஹி! .. .. அதெல்லாம் ஒண்ணுமில்லே சிவகுருவோட ஜாதகத்தைக் குடுத்தவன் நான்தான்.. நாளைக்கு நான் எதையோ மறைச்சுட்டதா நீர் நினைக்கப்படாதோன்னோ ? அதுக்காகத்தான் உண்மையைச் சொல்லிவைக்கிறேன்.”

“ரொம்ப சரி. ஆனா, இதெல்லம் நேக்கு ஒரு பொருட்டே இல்லே. என்னோட சகதர்மிணிதான் ஏதானும் சொல்லுவா. அதனாலதான் அவளுக்குத் தெரிய வேண்டாங்கறேன். .. .. நிறையச் செய்யக் கூடியவர்தானே ?”

“செய்வா. இல்லென்னா உங்க பிள்ளை ஜாதகத்தை நான் அவாளுக்கு சிபாரிசு செய்வேனா ? அவர்தான் சம்பந்த்ம் பேச வருவாரா ? ஏன்னா, உங்க அந்தஸ்து பத்தி நான் அவருக்கு நன்னாவே சொல்லியிருக்கேன். உங்களுக்கு பெரிய மனசு. அதான், இவ்வளவு பெரிய கறையைக் கொறையா நினைக்காம பெருந்தன்மையா இருக்க நினைக்கிறேள்.”

“அவரோட அண்ணா பண்ணின தப்புக்கு -அது தப்புன்னே வெச்சுண்டாலும்- அவரெப்படிப் பொறுப்பாவார், சாஸ்திரிகளே! என்னைப் பொறுத்தவரை, அந்தப் பத்மநாப அய்யரே தப்புப் பண்ணினவரா யிருந்தாலும் கூட, அதுக்காக நான் அவரோட பொண்ணை வேண்டாம்னு சொல்ல மாட்டேன். மகாத்மா காந்தி நம்ம கோவில்களை யெல்லாம் தீண்டத்தகாதவாளுக்குத் தொறந்து விடணும்னு சொல்லிண்டிருக்கார். அப்படி இருக்கிறச்சே இதைப் போய்ப் பெரிசுபடுத்தலாமா, ஓய் ?”

‘மகாத்மா காந்தி வரதட்சிணை வாங்கறது அசிங்கம்னு கூடத்தான் பிரசாரம் பண்ணிண்டிருக்கார்! அதுக்காக, இவர் வாங்கப்போறதில்லையா என்ன ?.. .. அப்படின்னா, இவர் வரதட்சிணைன்னு ஒரு தொகையைக் கேட்டு வாங்கமாட்டாரோ ? அப்ப, என்னோட பொண்ணையே இங்க தள்ளி விடலாம் போல இருக்கே ? .. .. ஆனா, நிறையச் செய்வாரான்னு விசாரிக்கிறாரே! சரி. எதுக்கும் நைஸாப் பேச்சுக் குடுத்துப் பாக்கறேன். .. ..’

‘ஹி..ஹி..ஹி! நீர் உண்மையிலேயே பெரிய மனுஷர்தான்காணும்! நான் கூட நேத்து சுதேசமித்திரன்ல பாத்தேன்.. .. நீங்க தப்பா எடுத்துக்கல்லேன்னா.. ..”

“சொல்லும்.”

“காந்தி வந்து.. வந்து.. வரதட்சிணை யெல்லாம் கூட வாங்கப்படாதுன்னு பிரசாரம் பண்ணிண்டிருக்கார், இல்லையா ? அப்படின்னா, நீங்க வரதட்சிணை வாங்கறதா இல்லியா ?.. .. ஒரு ‘இது’க்குத்தான் கேக்கறேன். நீங்க தப்பா எடுத்துக்கப்படாதுன்னு அதான் மொதல்லயே கேட்டுண்டுட்டேன்.”

தேவராஜனின் முகம் சிறுத்துவிட்டதைக் கவனித்த ரங்கநாத சாஸ்திரிகளுக்கு இலேசாய் அச்சம் ஏர்பட்டது. மிரட்சியோடு அவரை ஏறிட்டார்.

“இல்லேங்காணும். அந்த அளவுக்கெல்லாம் போக முடியாது. நடைமுறைன்னு ஒண்ணு இருக்கோல்லியோ ? எங்க அந்தஸ்துக்கு ஏத்தபடிதான் நாங்களும் நடந்துக்க முடியும். இல்லேன்னா, இளிச்சவாய்னு நெனைச்சு எங்க தலையிலெ மொளகா யரைச்சுடுவா! காந்தி சொல்றார்ங்கிறதுக்காக அன்னாடங்காய்ச்சிகளோ டெல்லாம் சம்பந்தம் வெச்சுக்க முடியுமா என்ன!”

ரங்கநாத சாஸ்திரிகளின் உற்சாகம் அது தோன்றிய விதமாகவே கணத்துள் மாயமாய் மறைந்தது. “ஆமாமா. நியாயந்தான். காந்திக்கு என்ன! போகாத ஊருக்கு வழி சொல்ற கதையா என்னத்தையானும் பெனாத்திண்டு கிடப்பார்! அவர் சொல்ற எல்லாத்தையும் நாம கேக்கணும்னுட்டு ஒண்ணுமில்லே. தாலியறுத்த பொண்ணுகளுக் கெல்லாம் மறுகல்யாணம் பண்ணிவைக்கணும் னெல்லாம் கண்டமேனிக்குப் பிரசாரம் பண்ணிண்டிருக்கார். சொல்றதுக்கே நாக்குக் கூசறது. கேக்கறதுக்கும் நாராசமா யிருக்கு! இந்த தேசத்தை உருப்படி யில்லாம பண்ற்துக்கோசரந்தான் வேலை மெனக்கெட்டு அந்த மகானுபாவன் தென்னாப்ரிக்காலேர்ந்து கெளம்பி வந்திருக்கார்னு தோண்றது. எல்லாம் நம்ம தேசத்தோட துர்ப்பாக்கியம்! கலி முத்திண்டிருக்கோன்னோ ? இனிமே அது மாதிரியான கண்ராவிகள்ளாம் நிறையவே நடக்கும்!”

“இத பாரும், சாஸ்திரிகளே. அவர் மகாத்மா. அவரைப் பத்தி என் காதுபட தூஷணையா எதுவும் சொல்லாதேயும். என்னால தாங்கிக்க முடியாது. அவர் சொல்றதெல்லாம் நியாயம்தான். ஆனா எல்லாத்தையும் கொண்டுசெலுத்தறது இப்போைதைகு சாத்தியம் இல்லே. மெதுவா, பொறுமையா, ஒண்ணொண்ணாத்தான் செயலுக்குக் கொண்டுவரணும். வரதட்சிணை வேண்டாம்னு நான் சொல்லிடுவேன். ஆனா என் சகதர்மிணி கேப்பாளாங்காணும் ? அதுக்கு அப்புறம் குடும்பத்துல நிம்மதி இருக்குமா ? தவிர, எம் பிள்ளை பட்ணத்துக்குப் போய் ஏதோ பெரிசா பிசினஸ் பண்ணணும்னு சொல்லிண்டிருக்கான். காந்தி சொல்றார்ங்கிறதுக்காக ஒரு பிச்சைக்காரக் குடும்பத்தோட நான் சம்பந்தம் பண்ணிக்க முடியுமா ?’

“கரெக்டு, கரெக்டு.. .. ..”

‘பொண்ணாத்துக்காரா கிட்ட ஆயிரக் கணக்குல பணம் பிடுங்கித்தான் இவன் பிள்ளை பிசினெஸ் பண்ணணுமாக்கும்! அதான் இவன்கிட்டவே கொட்டிக்கெடக்கே! மனுஷாளுக்குப் பேராசை! தனக்கு வசதியாயிருக்கிறதை மட்டும் காந்தி சொல்றார்ங்கிறதுக்காக ஏத்துப்பார் போலேருக்கு! ஜாதியில நம்பிக்கை இல்லாதவர் மாதிரி நடிச்சுண்டு, தீண்டத்தகாதவாளை யெல்லாம் கோவிலுக்குள்ள விடணும்னு சொல்ற மனுஷன் பேசாம ஒரு சேரியிலேர்ந்து மாட்டுப்பொண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டியதுதானே! எல்லாருமே பெரிய ஆள்கள்தான்.. .. ..’

“லெளகீக விஷயங்கள் பத்திச் சொன்னீர்தானே ?”

“நிறையச் செய்ய வேண்டியிருக்கும்னு ஒரு கோடி காமிச்சேன். அவர் நேர்ல வரச்சே நீங்களே விவரமாப் பேசிடுங்கோ!”

“சரி. நானே சொல்லிக்கிறேன்.”

“அப்ப, நான் கெளம்பட்டுமா ?’’

“ஒரு நிமிஷம் இருங்கோ!”

தேவராஜன் தாமே எழுந்து உள்ளே போய் ஒரு தம்ளரில் மோர் எடுத்துவந்து சாஸ்திரிகளிடம் கொடுத்தார். அதைக் குடித்துவிட்டு மலர்ச்சியாய்ப் புன்னகை செய்த ரங்கநாத சாஸ்திரிகள், “இந்த வெய்யிலுக்கு மோர்தான் எவ்வளவு எதமாயிருக்கு! ரொம்ப தேங்க்ஸ். .. .. சரி. நான் கெளம்பறேன்,” என்றவாறு கையை ஊன்றிக்கொண்டு எழுந்த அவரைக் கையமர்த்திய தேவராஜன் தமது இடுப்பின் வேட்டி மடிப்பிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து அவரிடம் நீட்டினார்.

சாஸ்திரிகள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டாாலும், அவரது முகத்தில் சிரிப்பில்லை என்பதைக் கவனித்த தேவராஜன், ‘இந்தாரும். இதையும் வெச்சுக்கும், கல்யாணம் முடியட்டும். அப்புறம் இன்னும் தறேன்.. .. ..” என்று இன்னொரு பத்து ரூபாய்த் தாளை நீட்டினார்.

அதையும் பெற்றுக் கொண்டபின்னர் சாஸ்திரிகளின் முகத்தில் இலேசாய்ப் புன்சிரிப்புத் தோன்றியது. “எத்தனை நாளத்துப் பழக்கம் நமக்குள்ள ? பணமா பெரிசு ? சரி, தேவராஜய்யர். நான் அப்புற்மா ஒரு நாள் வந்து பாக்கறேன். என்ன ?” என்றவாறு கிளம்பிச் சென்றார்.

.. .. .. கண்களுக்குத் தெரிந்த வரையில் நாகலிங்கத்தின் நடமாட்டம் தெரியாததால், அவன் எங்கேனும் வெளியே போயிருக்கக்கூடும் என்றுதான் பங்கஜம் நினைத்தாள். எனினும் அடுக்களைக்குள் முழுவதுமாக நுழைவதற்கு முன்னால் உள்ளே எட்டிப் பார்த்துப் பார்வையால் நன்கு துழாவினாள். பாயும் புலியாய் அவன் கதவின் மூலையில் பதுங்கி யிருப்பானோ என்னும் ஐயத்தில் கதவை இலேசாய் அசைத்துப் பார்த்து அவன் அங்கு இல்லை என்பது தெரிந்ததும், ‘அம்மாடி!’ என்று வாய்விட்டே முனகிய பின்னர் உள்ளே போய் அடுப்பைப் பற்ற வைத்தாள்.

காமாட்சி இன்னும் தூங்கிக்கொண்டிருந்தது அவளுள் ஒரு வியப்பை ஏற்படுத்தியது. காப்பிப்பொடி போட்டு வடிகட்டுகிற வெள்ளைத் துணி அதற்குரிய சாயத்துடன் அகப்பைத் தூக்கியில் தொங்கிக்கொண்டிருந்தது. அதை எடுத்து நீவிய பின், உயரமான பாத்திரத்தில் அதைச் சற்றே செருக்ினாள். அதன் குழிவில் காப்பிப் பொடியைப் போட்டபின் அடுக்களையைவிட்டு வெளியே வந்து சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டாள்.

எந்த அடிப்படையும் இன்றி அவள் நெஞ்சுக்கூட்டுக்குள் இதயம் தடதடத்தது. வீட்டில் நிலவிய அந்த அமைதி நல்லதுக்கில்லை என்று எதனாலோ அவளுக்குத் தோன்றியது. அவளது பீதி விநாடிக்கு விநாடி அதிகரித்துக்கொண்டே போயிற்று.

‘பட்டினி கிடந்து செத்தாலும் சாகலாமே தவிர, இது மாதிரி வெறி பிடித்த ஆண்பிள்ளை இருக்கிற வீட்டில் வேலைக்கு வந்துவிட்டு, சதா சர்வதா மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டது மாதிரி கிலியடித்துப் போய் ஒவ்வொரு நாளையும் எண்ணி எண்ணி நகர்த்திக்கொண்டிருக்க முடியாது. பெண்டாட்டிக்காரி படுத்த படுக்கையாக இல்லாது நன்றாய் நடமாடிக்கொண்டிருக்கிற வீடாய்ப் பார்த்துத்தான் வேலையில் அமர வேண்டும்.. .. ஆனால், வீட்டுப் பெண்பிள்ளை ஆரோக்கியமாக நடமாடிக்கொண்டிருக்கிற வீட்டில் சமையல்காரியை ஏன் வைக்கப் போகிறார்கள் ? .. .. அந்தக் கடன்காரன் கொடுத்த முன்பணத்தைக் கழித்துவிட்டு வேலையிலிருந்து நின்றுவிட வேண்டும். இது போல் தினமும் என்னால் செத்து பிழைத்துக்கொண்டிருக்க முடியாது!.. .. ‘

கூடத்துக் கெடியாரம் ‘டங் டங்’ என்று ஏழு முறை அடித்த மணியோசை அவளது கிலியை மேலும் அதிகப்படுத்தியது.

வால்கிண்ணத்தில் வைத்திருந்த தண்ணீர் இன்னும் நன்றாய்க் கொதிக்கத் தொடங்கவில்லை. இன்னும் சில விநாடிகளில் தளதளவென்று கொதிக்க ஆரம்பித்துவிடும். அவள் விறகுகளைச் சரியாக அடுக்கித் தீயைப் பெரிதாக எரியவிட முற்பட்ட கணத்தில், பின்னால் காலடியோசை கேட்டது. அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

அடுக்களை வாயிலை மறைத்துக்கொண்டு நாகலிங்கம் நின்றுகொண்டிருந்தான். ‘கடைசிக் காலடியோசை மட்டுமே கேட்டது என்றால் அவன் கவனமாய்ப் பூனை போல் நடந்து வந்திருக்கிறான் என்றுதான் அர்த்தம். இவனது நோக்கமும் கெட்டதுதான் என்றும் அர்த்தம். அயல் பொம்மனாட்டி வேலை செய்கிற போது அடுக்களை வாயில் முழுக்கவும் அடைத்துக்கொண்டு ஒருவன் நிற்கிறான் என்றால் அவன் நல்லவன் அல்லன் என்றும்தான் அர்த்தம். கண்ணியமான ஆண்பிள்ளை எவனும் அப்படிச் செய்யமாட்டான். அதிலும் முகத்தில் எதற்கு இப்படி ஒரு சிரிப்பு ? கண்களில் விஷமும் விஷமமும் சொட்டிக்கொண்டிருக்கின்றன. பார்வை அலைகிற தினுசில் துளியும் கண்ணியமே இல்லை. இந்த அதிகாலை நேரத்தில் இப்படி இளித்துகொண்டு வந்து நிற்கிறான் என்றால், அதற்கு இவனுடைய வெட்கங்கெட்ட தனம் மட்டுமே காரணமாயிருக்க முடியாது.. .. ..’

இப்படி எல்லாம் கணத்துக்கும் குறைவான நேரத்துள் யோசித்து முடித்த பங்கஜத்தின் பார்வை வாசலை அடைத்துக்கொண்டு அவன் நின்ற போதிலும், அவனது தோளுக்கு உயரே இருந்த இடுக்கின் வழியே வாசற்பக்கம் சென்றது. வாசல்கதவு சாத்தித்தான் இருந்தது. அவள் நுழைந்த போதும் அது சாத்தித்தான் இருந்தது. ஆனால் அதைத் தாழிடாமல் வெறுமே சாத்திவிட்டுத்தான் உள்ளே வந்தாள். அது அப்படியே இருந்ததா அல்லது அவனால் தாழிடப்பட்டுவிட்டதா என்பதை அவளால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.

“என்ன பாக்கறே ? வாசல் கதவை நன்னாத் தாப்பாப் போட்டுட்டேன்.!”

மிக மெதுவாய் அவன் இப்படிச் சொன்ன சொற்களில் ததும்பிய விரசம் அவளது முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்தது. அவளது தொண்டைக் குமிழ் ஏறி இறங்கியது. நா வறண்டது. கண்களில் பாம்பை மிக அருகில் பார்த்தாற்போன்ற பீதி வந்து அமர்ந்துகொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இந்தக் காமாட்ச ி ஏன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாள் ?’ எனும் வியப்பு அதிகமாயிருந்தது. ‘செத்துக் கித்துப் போய் விட்டாளா என்ன ? இல்லாவிட்டால், இவ்வளவு தைரியமாக இந்தப் பொறுக்கி ராஸ்கல் இங்கே வந்து வழியை அடைத்துக்கொண்டும் பல்லைக் காட்டிக்கொண்டும் நிற்பானா ?’

முந்திய நாள் அவள் வேலைக்கு வந்த போது குளித்து முடித்துவிட்டிருந்த காமாட்சி இன்று தூங்கிக்கொண்டிருந்தது இயல்பானதாய் அவளுக்குத் தெரியவில்லை. ‘இவன் என்னமோ பண்ணி யிருக்கிறான் அவளை! .. .. .. ஆனால் திடாரென்று முளைத்தவன் மாதிரி வந்து நிற்கும் இவன் இது வரையில் எங்கே பதுங்கியிருந்தான் ?’

“பயப்படாதே, பங்கஜம்! நான் முரடன் இல்லே. நீ முழு மனசோட இணங்கினா ஒரு பூவைக் கையாள்ற மாதிரி உன்னைக் கையாளுவேன். இத்தனை நேரமும் இவன் எங்கெ இருந்தான்னு தானே யோசிக்கிறே ? மொட்டை மாடியில இருந்தேன். நீ வந்தது தெரிஞ்சதும் கீழே எறங்கி வந்தேன். வா. மாடியில எனக்கு ஒரு ரூம் இருக்கு. அங்க போயிடலாம்.. .. காமாட்சி இப்போதைக்கு முழிச்சுக்க மாட்டா. அவளுக்கும் கொழந்தைக்கும் தூக்கமருந்து குடுத்திருக்கேன். அதனால பயப்படாம வா. புருஷனை விட்டு வந்து எத்தானை நாளாச்சு! ஏங்கிப் போயிருப்பேல்லே ?”

பங்கஜத்தின் அருவருப்பு, ஆத்திரம் ஆகிய உணர்ச்சிகள் அவற்றின் உச்சத்துக்குப் போயின. ‘அடப்பாவி! நாசகாரா! நீ நன்னாருப்பியா ? இப்ப நான் குய்யோ முறையோன்னு கத்திக் கூச்சல் போட்டு ஊரைக் கூட்டினா உன் கதி என்ன வாகும் ?’- இப்படி யெல்லாம் கத்த நினைத்தாலும் பங்கஜத்தால் தன் உதடுகளைக்கூடப் பிரிக்க முடியவில்லை.

பங்கஜம் இயல்பாய்த் துணிச்சல்காரி யல்லள்தான். அவள் வளர்க்கப்பட்டதும் ஒரு கோழையாகத்தான். ஆனால் அவளது அச்சத்தை மீறி ஒரு திடார்த் துணிச்சல் அந்தக் கணத்தில் அவளை உடனே ஆட்கொண்டது. ‘இவன் மகா முரடன். ஆஜானுபாகு. படு பொறுக்கி. இவனோடு போராடித் தப்புவது என்பது முடியாமல் போகலாம். எனவே தந்திரமாக ஏதாவது செய்துதான் இவனை வெல்லவேண்டும்.. ..’

வெட்கப் படுபவள் போல் தன் இமைகளைச் சற்றே தாழ்த்திய பின், மறுபடி விழிகளை மலர்த்திக்கொண்டு, “மாடியில எல்லாம் வேண்டாம். யார் கண்ணுலயாவது பட்டுடும்!” என்றாள்.

அவன் மகிழ்ச்சியுடன் சிரித்தபடி காமாட்சியின் படுக்கைப் பக்கம் பார்க்கத் தன் தலையைத் திருப்பிய கணத்தில், தனது திடார்த் திட்டத்தைப் பங்கஜம் செயல்படுத்தினாள். கண நேரமே யென்றாலும், மிக விரைவாய் இயங்கியதால், அதை அவளால் செயல்படுத்த முடிந்தது. அவளுக்கே தன்னை எண்ணி வியப்பாக இருந்தது.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அவள் கணவன் தாசரதி சின்னக்குளத்தில் மதுரை மீனாட்சி பாடசாலையில் ஆசிரியராக இருந்தான். கல்வி கற்பிப்பதோடு மட்டுமின்றி மாணவர்களிடம் நல்லொழுக்கத்தையும் விதைக்க வேண்டியவன் நியாயம் தெரியாதவனாக இருக்க முடியாது. பெண் குழந்தைகளை வரிசையாகப் பெற்றாள் என்கிற ஒரே காரணத்துக்காக அவளைத் தள்ளி வைத்துவிட்டு இன்னொருத்திக்குத் தாலி கட்டுவது மிகப் பெரிய அநியாயம் என்பது ஒரு பள்ளி ஆசிரியருக்குத் தெரியாவிட்டால் வேறு யாருக்குத் தெரியும் ?

அவனது கொடுமையை நினைக்க நினைக்க, இப்போதும் கூடப் பங்கஜத்துக்கு ஆத்திரத்தைக் காட்டிலும் வியப்பே அதிக அளவில் ஏற்பட்டது. துணிப்பையும் கையுமாக ஒரு நாள் பிற்பகலில் தனியாக வந்து நின்று, ‘அப்பா!’ என்கிற ஒற்றைச் சொல்லுக்குப் பிறகு வேறு எதுவுமே சொல்லாது தரையில் விழுந்து மடங்கிக் கதறத் தொடங்கிய அவளைப் பார்த்து அவள் அப்பா பதறிய பதற்றம் இப்போது நினைத்துப் பார்த்த போதும் அவளை என்னவோ செய்தது.

முதலில் அவரது பார்வை அவளது நெற்றியில் தான் விழுந்தது.

‘என்னம்மா, கொழந்தே ? மாப்பிள்ளை நன்னாருக்கார்தானே ? எதுக்கு இப்படிப் பொங்கிப் பொங்கி அழறே ? என்ன ஆச்சு ? ஏன் தனியாப் பொறப்பட்டு வந்திருக்கே ? அழறதை நிறுத்திட்டுச் சொல்லும்மா.’

அவளால் உடனே அழுகையை நிறுத்த முடியவில்லை. சில நொடிகளுக்கு அழுது மாய்ந்த பிறகு, எழுந்து உட்கார்ந்தாள். ‘உங்க மாப்பிள்ளைக்கு ஒரு கேடுமில்லேப்பா. நன்னா குந்துக்கல்லாத்தான் இருக்கார். வந்திருக்கிற கேடெல்லாம் நேக்கும் உங்களுக்கும்தான்!’

‘என்னம்மா சொல்றே ?’

‘உங்க மாப்பிள்ளை ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கப் போறாராம்ப்பா.’

‘என்னது! ரெண்டாங்கல்யாணமா! அடி செருப்பால. எதுக்காம் கேடு ? கிளியாட்டமா அழகும், சாவித்திரியாட்டமா கொணமும் இருக்கிற நீ உசிரோட இருக்கறச்சே இன்னொரு கல்யாணமா!’

‘ஆமாம்ப்பா. நான் வரிசையா மூணும் பொண் கொழந்தைகளாவே பெத்துப் போட்டேனாம். அவா வம்சம் வெளங்கற மாதிரிப் பிள்ளைக் கொழந்தை பெத்துத் தரல்லியாம். நேக்குப் பொறக்கவும் பொறக்காதாம். என்னோட வயிறு வாசி அப்படியாம். அதனால அவருக்கு ரெண்டாங் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாளாம்ப்பா.’

‘அட, பாவிகளா! நான் போய் நறுக்னு நாலு வார்த்தை சொல்லிட்டு வறேன். இன்னிக்கே, இந்த நிமிஷமே கெளம்பறேன்.’

‘வேணாம்ப்பா. போய் அவமானப் பட்டுண்டு வந்து நிக்காதங்கோ. காசைச் செலவழிச்சுண்டு நீங்க போறதுதான் மிச்சமா யிருக்கும். பலன் ஒண்ணும் ஏற்படப் போறதில்லே. அவா முடிவு பண்ணியாச்சு. அதை மாத்தவே முடியாது. அவாளோட வாக்குவாதம் பண்றதும் சரி, குட்டிச் சொவர்ல முட்டிக்கிறதும் சரி, ரெண்டும் ஒண்ணுதான்.’

‘உன்னை இப்படி வெரட்றதுக்கு மாப்பிள்ளைக்கு எப்படிம்மா மனசு வந்தது ?

நம்பவே முடியல்லியேம்மா!’

‘உங்க மாப்பிள்ளை, போனாப் போறதுன்னுட்டு, நானும் அவாத்துலயே ஒரு ஓரமா இருந்துக்கலாம்னார். எவ்வளவு கருணை, பாருங்கோ. ஆனா மாமினார் அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னுட்டா. தவிர, நேக்கும் பிச்சைக்காரியாட்டமா அந்தாத்துல ஒண்டிண்டு இருக்கிறதுக்குச் சம்மதமில்லே.’

‘உங்க மாமனார் என்ன சொன்னார் ?’

‘அவரும் அதே குட்டையில ஊறின மட்டைதான். உங்க அருமந்த மாப்பிள்ளை சொல்றார்- நானும் அங்கே இருந்தா வீட்டு வேலயில எங்க மாமியார்க்கு ஒத்தாசையா யிருப்பேனாம். ஆக மொத்தம் ஒரு வேலைக்காரி ஸ்தானத்துல இருந்துட்டுப் போகட்டும்கறார்! அவாத்துல நான் எதுக்குப்பா வேலை செய்யணும் ? அந்த வேலையை வேற யாராத்துலயாவது செஞ்சு என் வயித்தைக் கழுவிண்டுட்டுப் போறேன்! இல்லியா ?’

பஞ்சாட்சரம் மேல்துண்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு தோள்கள் குலுங்க விம்மினார்.

‘அழாதங்கோப்பா. எது ஒண்ணும் அவாவா தலை எழுத்துப்படிதான் நடக்கும்னு நீங்கதானேப்பா சொல்லுவேள் ? ஏம்ப்பா ? நீங்களே ஒரு ஜோசியர். கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுண்டுதானே நேக்கு ஜாதகம் பாத்தேள் ? கடேசில இப்ப என்ன ஆச்சு ? என்னமோ அமோகமா வாழ்வேன்னு சொல்லித்தே உங்க ஜோசியம் ?’

‘ஜோசியம் பொய்யில்லேம்மா. மாப்பிள்ளையோட பொறந்த நேரத்தை அவா தப்பாக் குறிசிருந்திருக்கலாம். சரி விடு. இப்ப அதைப் பத்தி என்ன ?.. ..அப்போ, அவாளைப் பாத்துப் பேசிப் பிரயோஜனம் இல்லேங்கறே ?’

‘ஆமாம்ப்பா. போய் அவமானப் பட்டுண்டு வந்து நிக்காதங்கோ. நம்ம கவுரவத்தை நாம காப்பாத்திக்கணுமோல்லியோ ? என்னோட கண்ணீருக்கு மனசு எளகாத கல்நெஞ்சுக்காரா உங்க பேச்சையா மதிக்கப் போறா ? விடுங்கோ.’

பஞ்சாட்சரம் ஒரு சோதிடர். அந்த ஊரில் மட்டுமின்றி, அக்கம்பக்கத்துக் கிராமங்களுக்கும் சென்று சோதிடம் பார்த்துச் சொல்லிச் சம்பாதிப்பவர். அதனின்று கிடைத்த மிகச் சொற்ப வருவாயில், இழுத்துக்கொள், பறித்துக்கொள் என்று எப்படியோ உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தார். இப்போது மகளின் வருகையால்- இனி நிரந்தரமாக அவரோடு அவள் இருக்கப் போகும் சாத்தியக்கூற்றால்- அவரது சுமை இரு மடங்காகிவிட்டது.

பங்கஜம் தன் அப்பாவிடம் வந்து சேர்ந்தது 1920 ஆம் ஆண்டில். அப்போது அவளுக்கு இருபத்திரண்டு வயதுதான். ‘அழகும் இளமையும் நிறைந்த மகளை எப்படிக் கட்டிக் காக்கப் போகிறோம்’ எனும் திகில் உடனே பஞ்சாட்சரத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது.

‘சரிம்மா. உன் தலையெழுத்துப்படி நடக்கட்டும். நான் அவாளைச் சந்திக்கிறது வீண்கிறது உன்னோட அபிப்பிராயம்னா, நான் அங்க போகல்லே. .. ..ஆனா.. .. அங்க இருந்த வரைக்கும் மாப்பிள்ளையும் அவாளும் உன்னை சந்தோஷமா வெச்சிண்டிருந்தாளாம்மா ? இல்லே, கொடுமைப் படுத்தினாளா ?”

பங்கஜத்துக்குச் சிரிப்புத்தான் வந்தது. வரிசையாகப் பெண்குழந்தைகளைப் பெற்றாள் என்பதற்காகப் பிள்ளைக்கு மற்றுமொரு திருமணம் செய்துவைக்க முற்படுவோர் எவ்வாறு முதல் மருமகளை அன்பாக நடத்தி யிருந்திருக்க முடியும் என்கிற சாதாரண ஊகம் கூடவா இந்த அப்பாவுக்கு இல்லாமல் போய்விட்டது என்றெண்ணித்தான்!

‘அதைப் பத்தி இப்ப என்னப்பா ? அதைத் தெரிஞ்சுண்டு என்ன பண்ணப் போறேள் ? இருபத்துநாலு மணி நேரமும் சரீரப்பாடுதான். அவாத்துல ரெண்டு பசுமாடு இருக்கு. மூணாவதா நான் ஒரு பசுமாடு. ஆத்துல மாடு இருந்தா எவ்வளவு வேலைகள் இருக்கும்! தெரியுமோல்லியோ ? சாணி உருண்டை பிடிக்கிறது, வரட்டி தட்றது எல்லாமே நாந்தான். நல்ல வேளை. பால் கறக்குறதுக்கு மட்டும் ஒரு ஆள் வருவான். சுருக்கமாச் சொல்லணும்னா, சாணி தட்றதுலேர்ந்து போளி தட்ற வரைக்கும் நாந்தான்! பம்பரமாச் சுத்தினேன். என்னத்தைக் கண்டேன் ? கடேசில, இப்படி வாழாவெட்டியா உங்க கிட்ட வந்து சேந்திருக்கேன். உங்க உயிரை வாங்கறதுக்கு!”

‘அப்படி யெல்லாம் சொல்லாதேம்மா, என் தங்கமே! ஏதோ உருப்படியா உன்னைத் திருப்பி யனுப்பிவெச்சாளே, அந்த மட்டுக்கும் க்ஷேமம்! அதுக்கு அவாளுக்கு நான் வந்தனம்தான் சொல்லணும்.’

‘நான் ரெண்டு மூணு ஆங்கள்லே (அகங்களில்) வேலை செஞ்சு சம்பாதிச்சா உங்க சொமை கொஞ்சம் கொறையுமேப்பா. செய்யட்டுமா ?’

அந்த வேதனையான நேரத்திலும் பஞ்சட்சரம் குபீரென்று சிரித்தார்: ‘என்னது! நீ வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கிறதா! சரியாப் போச்சு, போ. இந்த ஊர் அக்கிரகாரத்தைப் பத்தி நோக்குத் தெரியாதா என்ன! உன் எதிர்லயே இல்லாதது பொல்லாத தெல்லாம் பேசுவா. சிலர் உன்னையே நேரடியாக் கேள்விகள் கேட்டு உன்னைச் சங்கடப் படுத்துற அளவுக்கே போவா. உன்னோட வருத்தத்தை அதெல்லாம் இன்னும் ஜாஸ்திதான் பண்ணும். அணைஞ்சிண்டிருக்கிற நெருப்புச் சாம்பலைக் கெளறி மறுபடியும் எரிய விட்டது மாதிரி ஆயிடும். நான் இன்னும் அதிகப்படியா ஏதாவது வேலை பண்றேம்மா. பாக்கலாம். நீ உள்ள போய் ஏதாவது டிஃபன் பண்ணு. அரிசி உப்புமாவுக்கு உடைச்சு வெச்சிருக்கேன். மிளகு, சீரகம், நெய் எல்லாமே தோதாயிருக்கு. போய் உப்புமா பண்ணு. உன் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு!’

பங்கஜம் கண்களைத் துடைத்துக்கொண்டு பின்கட்டுக்குப் போய் முகம் கழுவிய பின் அடுக்களைக்குள் நுழைந்தாள்.

.. .. தாசரதி இரண்டாம் கலியாணம் செய்துகொண்ட செய்தி சரியாக இரண்டு மாதங்கள் கழித்துத் தெரியவந்தது. சின்னக்குளத்துக்கு ஏதோ வேலையாய்ப் போயிருந்த உள்ளூர்க்காரர் ஒருவர் கொண்டுவந்த சேதி. எதிர்பார்த்த செய்திதானென்றாலும், அதன் நிதரிசனம் பங்கஜத்தை அழச்செய்தது. தாசரதி தன்னோடு எப்படி, எப்படியெல்லாம் உறவுகொண்டு பழகினானோ அப்படியெல்லாம் அந்த இரண்டாமவளோடு பழகுவான் எனும் உண்மை அவளைச் சுட்டுப் பொசுக்கியது. அவளால் தாங்கவே முடியவில்லை.

அந்தச் செய்தி முதலில் பஞ்சாட்சரத்துக்குத்தான் தெரியவந்தது. பங்கஜத்திடம் அதை வாய்விட்டுச் சொல்லத் துணிச்சல் வராமல் அவர் அதை ஒத்திப் போட்டுக்கொண்டிருந்தார். ஆனால், அது வேறொரு பெண்மணியின் வாயிலாக அவளுக்கு வந்து சேர்ந்துவிட்டது.

பஞ்சாட்சரம் தமது வருவாயில் ஏதோ கொஞ்சம் சேமித்து வைத்திருந்தார். அதெல்லாம் பங்கஜம் அவரிடம் அதிகப்படியான சுமையாக வந்து சேர்ந்ததன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்க் கரையத் தொடங்கிவிட்டது. அதனால், மேலும் ஏதாவது வேலை செய்து சாம்பாதித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு அவர் ஆளானர். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உடனே அவருக்குத் தோன்றியது திவசச் சாப்பாடு சாப்பிடும் பிராமணனாக இனிப் போக வேண்டும் என்பதுதான். திவசங்கள் அடிக்கடி நடக்கும் சடங்கன்றெனினும், ஏதோ வாய்ப்புக் கிடைக்கிற நாள்களில் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக் கொள்ளலாமே என்று எண்ணி அப்படி ஒரு முடிவுக்கு அவர் வந்தார். அக்கம்பக்கத்துக் கிராமங்களுக்கும் போக முடிவு செய்ததால், வாய்ப்புகள் கொஞ்சம் அதிகமாகவே கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை கொண்டார்.

பங்கஜத்தைப் பொறுத்தவரை அவர் அவளை வேளியே எந்த வேலைக்கும் அனுப்பத் தயாராக இல்லை. வீட்டில் இருந்தவாறே என்ன செய்து அவளைச் சம்பாதிக்க வைக்கலாம் என்று அவர் யோசிக்கத் தலைப்பட்டார். இது மாதிரியான வீடுகளில்- தள்ளிவைக்கப்பட்டவளோ, ‘தாலியறுத்தவ’ளோ- பெண்கள் அப்பளம், வடகம் இட்டு விற்பதுதான் பொதுவான வழக்கம். ஆனால், செங்கல்பாளையத்தில் ஏற்கெனவே ஓர் அம்மாள் அந்தத் தொழிலைச் செய்துகொண்டிருந்ததால், அவளுக்குப் போட்டியாகத் தங்களால் அதே தொழிலைச் செய்து குப்பைகொட்ட முடியாது என்பதைப் பஞ்சாட்சரம் உணர்ந்திருந்தார். எனவே, வேறு என்ன தொழில் செய்யலாம் என்பது பற்றியே எப்போதும் யோசிததபடி அவர் இருந்தார்.

நாங்கு மாதங்களுக்குப் பிறகு, உருப்படியான ஒரு யோசனை பங்கஜத்துக்குத்தான் வந்தது.

‘அப்பா! நாம ஆத்துல இருந்தபடியே பஜ்ஜி, பக்கோடா, வடை இந்த மாதிரி ஏதாவது பண்ணி வியாபாரம் பண்ணினா என்ன ?’

‘செய்யலாம். நானும் அதைப் பத்தி யோசிச்சேன். ஆனா, இது கிராமாந்தரம். எல்லாராத்துலேயும் பொம்மனாட்டிகள் இட்லி, தோசை, வடை, பஜ்ஜின்னு ஏதாவது டிஃபன் பண்ணிடுவாளே தினத்துக்கும் ? அப்புறம் நாம பண்றதை யாரு வாங்கிக்கப்போறா ? யாரும் சீந்த மாட்டாளேம்மா ?’

பங்கஜம் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டுச் சொன்னாள்: ‘அதுக்கு ஒரு வழி இருக்குப்பா. இந்த ஊர் சினிமாக் கொட்டகைக்குக் கொண்டுபோய் வித்துப் பாக்கலாம்.’

‘நீ அங்கே யெல்லாம் போகப்படாதும்மா. நிறையப் பொறுக்கிப் பசங்க இருப்பா. ஏதானும் வாய்க்கு வந்ததைப் பேசுவானுக. நான் வேணாப் போறேம்மா.’

‘சரிப்பா.’

அவர்களது சிற்றுண்டித் தொழில் அப்படித்தான் தொடங்கியது. கொஞ்ச காலத்துக்கு ஓரளவு வெற்றிகரமாகவே அந்தத் தொழில் நடந்தது எனலாம். ஆனால், சில நாள் கழித்து, அருகிலேயே ஒரு புது ஓட்டல் வந்துவிட, இவர்களது சிற்றுண்டி வியாபாரம் படுத்துவிட்டது. அதை நிறுத்தும்படி ஆகிவிட்டது.

அதன் பிறகு கொஞ்ச காலத்துக்கு அவள் மறுபடியும் பஞ்சாட்சரத்துக்குப் பிரச்சினை யானாள்.

போனால் போகிறது என்று விட்டு விட்டாளோ, இல்லாவிட்டால், தோன்றாததால் விட்டு விட்டாளோ தெரியவில்லை, பங்கஜத்தின் மாமியார் அவள் நகைகளைப் பறித்துக்கொண்டு விட்டிருக்கவில்லை. அவற்றைப் பஞ்சாட்சரம் விற்றுக் காசாக்கிக் கொண்டுவந்தார்.

‘தாலி மட்டும் அப்படியே கழுத்தில இருக்கட்டும்மா. இத்தனூண்டுத் தங்கம்தானே தாலியில கோத்துப் போட்டுண்டிருக்கே ? அதைத் தாலிக்கயித்திலேருந்து எடுக்கவேண்டாம்.’

‘அவரே நேக்கு இல்லேனு ஆயிட்டதுக்கு அப்புறம், அவர் கட்டின தாலி மட்டும் என் கழுத்துல எதுக்குப்பா இருக்கணும் ?’

‘அடியம்மாடி! அப்படி யெல்லாம் அபசாரமாப் பேசாதேம்மா. என்ன இருந்தாலும், உன்னைத் தொட்டுத் தாலி கட்டின புருஷன் இல்லியா ? அப்படி யெல்லாம் அவமரியாதையாப் பேசப்படாதும்மா.’

‘அந்த மனுஷன் மேல நேக்கு மரியாதையே வரமாட்டேன்கிறதேப்பா ? எங்கிட்ட இயற்கையா இல்லாத ஒண்ணை எப்படி வரவழைச்சுக்கறதாம் ?’

அவரால் பதில் சொல்ல முடியாத போதிலும், ‘ அப்படியெல்லாம் அதிகப் பிரசங்கித்தனமாப் பேசாதேம்மா. அது நோக்கு நல்லதில்லே. போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினியோ, இந்த ஜென்மத்துல இப்படி வாழாவெட்டியா வந்து நிக்கறே. இன்னும் கொஞ்சம் பாவத்தைச் சேத்துக்காதே!’ என்றார் கடுமையாக.

தான் அவரிடம் வந்து சேர்ந்ததிலிருந்து அவர் தன்னைக் கடிந்து ஒரு சொல் கூடச் சொன்னதில்லை என்பதால் பங்கஜம் அவரது குரலில் ஒலித்த கடுமையையும், தனக்கு அறவே பிடிக்காத உபதேசமொழிகளையும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. இருந்தாலும், குரலை உயர்த்திக்கூடத் தன்னுடன் பேசும் வழக்கமில்லாத அவர் கடுமையாகச் சொன்ன சொற்களால் அவள் மனசு கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.

முழுப்பட்டினி, அரைப்பட்டினி, வறுமை என்று நாள்கள் நகரத் தொடங்கின. எத்தனையோ ஏழைகளைப்போல் அவர்களும் வாழ்ந்தார்கள். நாள்கள் எப்படி ஓடின என்பது தெரியாமலேயே, சில ஆண்டுகள் கடந்துவிட்டன.

பங்கஜத்தின் கணவனது இரண்டாம் திருமணம் பற்றிய செய்தியைக் கொண்டுவந்த அதே மனிதர் மூலம் அவன் மனைவி இன்னமும் கருத்தரிக்கவில்லை என்கிற சேதியும் அவர்களுக்குத் தெரியவந்தது. அதைக் கேள்விப்பட்டதும், பங்கஜத்துக்குக் குரூரமான ஒரு மனநிறைவு ஏற்பட்டது. ‘வேணும் நன்னா! ஒரு அப்பாவிப் பொண்ணோட மனசை நோகடிச்சு துரோகம் செஞ்சது வீணாப் போகுமா என்ன! இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் அவருக்குப் புத்திர பாக்கியமே இருக்காது!‘ என்று பற்களைக் கடித்தபடி சபித்தாள்!

‘ரெண்டாவது பொண்டாட்டிக்கும் கொழந்தை பொறக்கல்லேன்றதுக்காக, மூணாவதா ஒரு கல்யாணத்தை என்னோட மாமனார்-மாமியார் அந்த மனுஷனுக்குப் பண்ணிவைப்பாளோ என்னமோ! ஒவ்வொரு பொண்ணா ருசி பார்க்குற ஆசையில இந்த ஆம்பளை ஜென்மங்களும் அம்மாவுக்குத் தலையாட்றதுகளே!’

பழைய நினைவுகளை அசை போட்டு முடித்த பங்கஜம் அப்படியே சாப்பாட்டையும் முடித்துவிட்டுக் கூடத்துக்கு வந்தாள். பஞ்சாட்சரம் சன்னமாய்க் குறட்டை விட்டவாறு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். கள்ளமற்ற அவரது முகத்தில் ஆழ்ந்த அந்த உறக்கத்தையும் கடந்து கவலைக் கோடுகள் தெரிந்ததைப் பார்த்து அவள் உருகிப் போனாள்.

கடந்த ஓராண்டுக் காலமாகவே பஞ்சாட்சரத்துக்கு உடம்பில் அதற்கு முன்னர் இருந்திராத ஓய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ‘பிச்சை’ என்று சொல்லிக் கேட்டு வாங்காத குறையாக அக்கிரகாரத்து மனிதர்களிடமெல்லாம் ஒன்றுக்கும் இரண்டுக்கும் கையேந்தி எப்படியோ காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அதனால்தான் பாகீரதியின் உதவியால் பக்கத்து ஊரில் கிடைத்த சமையல் வேலையைப் பங்கஜம் மிகவும் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொண்டு ஏற்றாள். நாகலிங்கம் மட்டும் அசடு வழியாதவனாக இருந்தால்- தன் அசட்டுத்தனத்தை வெறும் பார்வை, பேச்சு ஆகியவற்றோடு மட்டும் நிறுத்திக்கொள்ளுபவனாக இருந்தால்- அவையும் ஆத்திரமும் எரிச்சலும் ஊட்டும் செயல்களேயானாலும்- தொடுகை என்பது தவிர்க்கப்படுகிற வரை அவற்றைப் பொறுத்துக்கொண்டு விதியே என்று காலந்தள்ள அவள் தயாராக இருந்தாள். ஆனால், அவனைப் பார்த்தால் அப்ப்டி நிறுத்திக்கொள்ளக் கூடியவனாக அவளுக்குத் தெரியவில்லை.

அவள் வேலையில் அமர்ந்த முதல் நாளே தன் விகாரங்களை வெட்கமற்று வெளிப்படுத்துகிறவன், போகப் போக என்னதான் செய்யத் துணியமாட்டான் எனும் அச்சமே அவளுக்கு ஏற்பட்டது. எனினும், தன் கணவன் எப்பேர்ப்பட்டவன் என்பதைக் காமாட்சி நன்றாகவே தெரிந்துவைத்துக் கொண்டிருந்ததும் புலப்பட்டதால், அந்த அச்சத்தினூடே அவளுக்குச் சற்று நிம்மதியும் உண்டாயிற்று. சமையலறையையே கண்கொட்டாது பார்த்தவாறு அதன் கதவுக்குச் சற்றே தள்ளிப் படுத்திருக்கும் காமாட்சி தனக்கு ஓர் அரண்தான் என்று நினைத்து அவள் தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

தன்னைப் பொறுத்தவரையில், தற்செயலாகவும் கூட, காமம் ததும்பும் அவன் விழிகளைச் சந்தித்துவிடக்கூடாது என்று அவள் கவலைப்பட்டாள். அவனது பார்வை இரையின் மீது பாயத் தயாராக உள்ள புலியையே அவளுக்கு நினைவூட்டியது. தக்க நேரத்துக்குக் காத்துக்கிடக்கும் பசித்த புலி அவன். அவளும் ஒரு பெண்புலியாக ஆனாலல்லாது, அவனிடமிருந்து தான் தப்புவது கடினம் என்று அவளுக்குத் தெளிவாய்த் தெரிந்தது. அது முடியுமா ? அவளுக்குத் தெரியவில்லை. அவளிடமிருந்து பெருமூச்சொன்று சீறிப் பாய்ந்தது.

அவள் ஒரு புடைவைக் கிழிசலை எடுத்துத் தரையில் விரித்துக்கொண்டு அதில் முடங்கிப் படுத்துக் கண்ணயர முயன்றாள். ஆனால் தூக்கம் வருவேனா என்றது. மறக்க எவ்வளவு முயன்றாலும், நாகலிங்கத்தின் அழுக்குப் பார்வைதான் அவள் மனத்திரையில் மறுபடி மறுபடி நிழலாடிக்கொண்டிருந்தது. தான் அஞ்சியது மறு நாளே நிகழவிருந்தது தெரியாமல் அவள் மன அமைதிக்காக விநாயகர் அகவலை முனகலாய்ச் சொல்லத் தொடங்கினாள்.

அன்றிரவே பஞ்சாட்சரத்துக்கு உடம்பு பெருமளவு சரியாய்ப் போய்விட்டது. தலைக்காயம் மட்டும் இலேசாக வலிஹ்துக்கொண்டிருந்தது. அது மெதுவாகத்தான் ஆறும் என்பதால், அவள் கவலைப்படத் தேவையில்லை என்று கூறி, அவர் அவளை வேலைக்குப் போகப் பணித்தார்.

.. .. .. பங்கஜம் அந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தபோது அது அமைதியில் ஆழ்ந்திருந்தது. தாழிடப்படாமல் சாத்திவைக்கப்பட்டிருந்த கதவைத் தள்ளித் திறந்துகொண்டு அவள் உள்ளே சென்றாள். காமாட்சியும் அவள் குழந்தையும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். நாகலிங்கமும் தென்படவில்லை. கழிவறையும் த்ிறந்து கிடந்தது. உள்ளுணர்வாய்த் தன்னுள் பரவிய அச்சத்துடன் அவள் அடுக்களைக்குள் நுழைந்தாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

ஜோதிர்லதா கிரிஜா


தாசரதி சொன்ன பதிலும், அப்போது அவன் முகத்தில் மிக இயல்பாகத் தோன்றிய உற்சாக எதிர்பார்த்தல் கலந்த மகிழ்ச்சியும் இன்றளவும் பங்கஜத்தைத் துடிதுடிக்கச்செய்து அணுஅணுவாய்க் கொன்றுகொண்டிருக்கும் ஏமாற்றங்கள்.

‘என்னன்னா! சிரிச்சுண்டே சொல்றேள் ? இன்னொருத்தியைப் பண்ணிக்க மாட்டேள்தானே ?’ -இவ்வாறு கேட்டபோதே அவள் குரல் தடுமாறியது. துயரம் தொண்டையை அடைத்தது.

‘பங்கஜம்! எதுக்குடி இப்ப அழுகை ? நீயே யோசிச்சுப் பாரு. என்னோட வம்சம் விளங்க ஒரு பிள்ளைக் கொழந்தையாவது- எங்கம்மா ஆசைப்பட்றாப்ல- வேண்டாமா ? உன் வயித்து ராசி- இது வரையில பொறந்த எல்லாமே பொண்ணாவே இருந்துடுத்து. நல்ல வேளை! எல்லாமே போய்ச் சேந்துடுத்துகள்!.. ..”

‘அய்யோ! உங்க வாயால அப்படிச் சொல்லாதங்கோன்னா. பத்து மாசம் அதுகளைச் சொமந்தேன். ஒடம்பு நோக ஆசையாப் பெத்து எடுத்த தாய் நான். என் காது படவே இப்பிடிப் பேசறேளே! அதுகள் செத்துப் போயிட்டதுக்கு சந்தோஷம் வேற பட்றேளே! நியாயமா ?’

‘சரி. தப்புதான். அதை விடு. வரிசையாப் பொண்ணாவே பெத்துண்டிருக்கியே ? அதுக்கு என்ன சொல்றே ?’

‘அது நம்ம கையிலயா இருக்கு ? எல்லாம் கடவுளோட செயல். பொண்ணாவோ பிள்ளையாவோ பெத்துக்கிறது என்ன, பொம்மனாட்டிகள், எங்க கையிலயான்னா இருக்கு ?’

‘பண்றதையும் பண்ணிட்டுக் கடவுள் மேல ஏண்டி பழி போட்றே ? உன்னோட ஒடம்பு வாகு அப்படி. அதுக்காக நான் பிள்ளைக் கொழந்தை இல்லாமயே காலத்தை ஓட்டிட முடியுமா ? என்னோட வம்சம் வெளங்க வேண்டாமா என்ன ? அதுக்குத்தான் அம்மாவும் அப்பாவும் சொல்ற வழி இது!’

‘அப்படின்னா அதுக்கு ஒத்துண்டுட்டேளா ?’ -பங்கஜம் உடைந்து போய் அழலானாள்.

‘ஏண்டி அழுது மாஞ்சு போறே ? நான் என்னிக்கோ ஒத்துண்டாச்சு. உன்கிட்ட சொல்றதுக்குத்தான் கொஞ்சம் தயங்கிண்டிருந்தேன். இன்னைக்கு நீயாவே அந்தப் பேச்சை எடுத்தே. சொல்லிட்டேன். இத பாரு. இந்த அழுது ஆகாத்தியம் பண்ணி நீலிக் கண்ணீர் வடிக்கிற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே. என்ன, தெரிஞ்சுதா ? நேக்குப் பிள்ளைக் கொழந்தை வேணும். ஆஊன்னு இப்ப என்னத்துக்கு அழறே ? உலகத்துல எந்த ஆம்பளை பிள்ளைக் கொழந்தைக்கு ஆசைப்பட்டு ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கல்லே ? உன்னை உங்கப்பா கிட்ட கொண்டுபோய் ரெண்டொரு மாசத்துல விட்டுடுவேன். இனிமே நீ அங்கதான் இருக்கணும். தெரிஞ்சுதா ?’

பங்கஜத்தால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவன் குரலில் வெளிப்பட்ட அழுத்தமும் சொற்களில் தெறித்த வெறுப்பும் அவளைத் தள்ளிவைக்கத் தான் போகிறான் என்பதைத் திட்டவட்டமாக அவளுக்கு அறிவுறுத்தின. அன்றிரவு முழுவதும் அவள் இமைகொட்டவில்லை.

ஒரு மணிக்கு அவன் எழுந்து அவளை எழுப்பினான். தூங்காமல் ஒருக்களித்துப் படுத்திருந்த பங்கஜம் அவனது நோக்கம் புரிந்து திரும்பினாள். அவளுக்குத் தாங்க முடியாத அருவருப்பு ஏற்பட்டது. அவனது கையை வலுவாக விலக்கினாள். அவன் முரட்டுத்தனமாக அவளைக் கையாண்டு சிரித்தான்.

‘இப்படியெல்லாம் முரண்டு பிடிச்சா நோக்குத்தான் நஷ்டம்! இன்னும் ரெண்டே மாசத்துல நேக்குக் கல்யாணம். அது வரையில முடிஞ்ச வரைக்கும் அனுபவிச்சுக்கோடி, முட்டாளே!’ என்றானே.

தனது வலுவின்மை, செயலின்மை, கோழைத்தனம் ஆகியவற்றின் மேல் அந்த நேரத்தில் அவளுக்கு வந்த வருத்தம் சொற்களின் விவரித்தலுக்கு அப்பாற்பட்டது. அந்த வருத்தத்தினூடே, ‘ஒருவேளை இங்கேருந்து போறச்சே நேக்குப் பிள்ளை உண்டானா, அந்த ஆறுதலாவது கிட்டுமே!’ என்னும் எண்ணமும் அவளுக்கு வந்தது.

மறுநாள் அவள் மாமனார், மாமியார் ஆகிய இருவரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனார்கள். வழக்கம் போல் அவளைக் கூப்பிடவில்லை. மீனாட்சியம்மனின் அருட்பார்வை தங்கள் மருமகளின் மீது பட்டுவிடக் கூடாது என விரும்பினார்கள் போலும் என்றுதான் அவளுக்குத் தோன்றியது.’அட, மூடங்களா! மீனாட்சி அந்தக் கோவில்ல மட்டுந்தான் இருக்காளா என்ன ? ஆத்துல இருந்த படியே அவளை என்னால வேண்டிக்க முடியாதா ?’ என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

அவர்கள் கோவிலுக்குப் போன நேரத்தில் தாசரதி தனது அறையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். அவர்கள் போய் அரை மணி கழித்துத் தாசரதியின் நண்பன் ஒருவன் அவர்கள் வீட்டுக்கு வந்தான். அவனை அவள் அதற்கு முன்னால் இரண்டு` தடவைகள் பார்த்திருந்தாள். அவள் உள்ளே போய்த் தாசரதியை எழுப்பினாள். அவள் எழுந்து சென்று ராகவன் எனும் அந்த நண்பனை வரவேற்றுத் தனது அறைக்கு இட்டுச் சென்று உட்காரச் செய்தான். பிறகு இருவரும் பேசத் தொடங்கினார்கள்.

‘பங்கஜம்! ரெண்டு கப் காப்பி கொண்டா.’

அவள் பத்து நிமிடங்கள் கழித்துக் காப்பித் தம்ளர்களுடன் அவனது அறையை நெருங்கிய போது தாசரதி தன் இரண்டாம் திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். அவள் உள்ளே போகாமல் நின்று ஒற்றுக்கேட்டாள்.

‘என்னடா! மூணு கொழந்தைகளும் செத்துப் போயிடுத்தே ? ரொம்ப வருத்தமா யிருக்கு. இப்ப மறுபடியும் ஏதானும் விசேஷம் உண்டா ?’

‘இல்லேடா, ராகவா. வரிசையாப் பொண்ணாப் பொறந்துண்டிருக்குறதால அம்மாவும் அப்பாவும் ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றா என்னை! அவளுக்குப் பொண்ணாவே பெத்துத் தள்ற வயித்துவாகுங்கறா!’

“சில பொண்ணுகள் அப்படித்தாண்டா. அப்புறம் நோக்குப் பிள்ளைக் கொழந்தையே இல்லாம போயிடப் போறது. அவா சொல்றது சரின்னுதான் நேக்கும் தோண்றது. ஒண்ணுக்கு ரெண்டா வெச்சிண்டு ஜமாய்!’ – அந்த நண்பனின் குரலில் விரசம் வழிந்தது.

‘அது நடக்காதுடா, ராகவா. அவளைத் தள்ளித்தான் வைக்கவேண்டி வரும். அம்மா-அப்பா ஒத்துக்க மாட்டா.’

‘டேய்! நான் சொல்றதைக் கேளு. அப்படிச் செஞ்சா அதுல நோக்கு ஒரு லாபம் இருக்குடா. சிநேகிதனோட பொண்டாட்டி அழகைப் புகழ்ந்து பேசறது தர்மம் இல்லேதான். இருந்தாலும் சொல்றேன். உன் பொண்டாட்டி பயங்கர அழகுடா. அவளை விட்டுடாதே. அடுத்து வரப் போறவ எப்படி இருப்பாளோ ? இவ பாட்டுக்கு உங்க ஆத்துலேயே ஒரு ஓரமா யிருந்துட்டுப் போகட்டுமே! உங்கம்மாவுக்கு ஆத்துக் காரியத்துல ஒத்தாசையாவும் இருப்பா. அவளுக்குச் சோறு போட்ற புண்ணியம் உனக்குக் கிடைக்கும். உன்னை அவளும் அவ அப்பாவும் ரொம்பவும் சபிக்க மாட்டா. அவளுக்கும் தான் வாழாவெட்டி யாயிடல்லேன்னு ஒரு திருப்தி இருக்கும். இல்லியா ? என்ன சொல்றே ? யோசிச்சுப் பாரு.’

‘நீ சொல்றது ரொம்பவே நல்ல யோசனைதான். அப்படியே செஞ்சுடலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.’

‘ஆமா ? போன வாரம் கிளப்புக்கு வறேன்னுட்டு நீ ஏன் வரவே யில்லே ?’

அவர்களது பேச்சு இலக்கு மாறிய பின் இரண்டு நிமிடங்கள் கழித்து அவள் அவனது அறைக்குள் நுழைந்து காப்பியை மேசை மீது வைத்துவிட்டு வெளியேறினாள்.

அடுக்களைக்குப் போய் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அவள் இதயம் சிதற அழத் தொடங்கினாள். ஒருகால் தன்னையும் இருத்திக்கொள்ள அவர்கள் முற்படுவார்களோ எனும் எண்ணம் வந்த போது அவளுள் பொறுத்துக்கொள்ள முடியாத அருவருப்பு விளைந்தது. இன்னொருத்தியோடு கணவனைப் பங்கு போட்டுக்கொண்டு வாழ்வதை விட எங்கேயாவது விழுந்து அல்லது விஷம் எதையாவது குடித்து ஒரேயடியாய் உயிரையே விட்டுவிடலாம் என்று அவளுக்குத் தோன்றியது.

‘கடவுளே! எல்லாக் கொழந்தைகளையும் பொண்ணாவே பெத்துக்குற மாதிரியான உடல்வாகை நேக்கு ஏன் குடுத்தே ? .. .. இவாளுக்கும்தான் கொஞ்சம் பொறுமை வேண்டாமா ? ஒரு வேளை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுப் பொறக்குற கொழந்தை பிள்ளையா யிருக்குமோ என்னமோ! நேக்கென்ன வயசாயிடுத்தா ? கொஞ்ச நாள் காத்திண்டிருக்கப் படாதா ?.. .. அப்பாக்கு இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியா யிருக்கும்! இருந்த ஒரே வீட்டையும் குமரேசன் செட்டியாருக்கு என் கல்யாணச் செலவுக்காக விக்கும்படி ஆச்சு. செட்டியார் நல்லவர். அதனால அதுலேயே ரொம்பவே குறைச்சலான வாடகைக்கு அப்பா காலம் முடியற வரைக்கும் இருந்துக்கலாம்னுட்டார். எவ்வளவு நல்ல மனசு இருந்தா செட்டியார் மாமா அப்படி ஒரு தாராளத்தோட நடந்திருப்பார்! கடவுள் எப்பவும் தாங்க முடியாத கஷ்டத்தைக் குடுத்துட மாட்டார். நடு நடுவில இது மாதிரி நல்லதுகளையும்தான் செய்வார்! அதை நினைச்சுத் திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான் புத்திசாலித்தனம். சும்மா அழுதா ஒடம்புதான் கெட்டுப் போகும்.. .. ..’

ராகவன் கொஞ்ச நேரம் கழித்துக் கிளம்பிப் போன பிறகு தாசரதி அவளை யழைத்தான்.

‘இத பாரு, பங்கஜம்! என்னோட கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் இந்த ஆத்துலேயே இருந்துக்கலாம். நான் அம்மா கிட்ட சொல்லிப் பாக்கறேன். உங்கப்பாவுக்கும் வயசாயிடுத்து. அவருக்கு நீ ஒரு சுமையா இருக்க வேண்டாம்.’

இவ்வாறு சொன்ன போது அவனது பார்வை- ஏதோ அப்போதுதான் முதன் முறையாக அவளை ஆராய்பவனுடையது போன்று- குறுகுறுவென்று தன் மீது படிந்ததை உணர்ந்து அவளுக்கு அளவுகடந்த வெறுப்பு ஏற்பட்டது. அந்த ராகவனின் மதிப்பீட்டால் அவன் தன் அழகை ஆராய்கிறான் என்பது புரிய, கெட்டது சொல்லிக் கொடுக்க வந்த அந்த நண்பன், ‘அடேய்! பெண் பாவம் பொல்லாதுடா. அப்படியெல்லாம் பண்ணாதே. இன்னொருத்திக்கு மட்டும் பிள்ளைக் கொழந்தை பொறக்கும்கிறது என்ன நிச்சயம் ? அவளுக்கு எதுவும் பொறக்காமலேயே கூடப் போகலாமோல்லியோ ? அப்படி ஆனா மூணாவதா ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிப்பியா ? வேண்டாண்டா. அது தப்பு’ என்று நியாயத்தை எடுத்துச் சொல்லி யிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அவள் நினைத்தாள். நண்பன் அப்படிச் சொல்லி யிருந்தால், அதை அவன் கேட்பானா இல்லையா என்பது வேறு விஷயமாக இருப்பினும் கூட!

‘என்ன, பேசாம இருக்கே ?’

‘எல்லாம் என்னைக் கேட்டுத் தான் செய்யறேளாக்கும்! நேக்குப் பிடிக்கிறது பிடிக்காததுன்னு பாத்தா, நீங்க நேக்கு துரோகம் பண்ணாம இருக்கிறதைத்தான் நான் விரும்புவேன். எல்லாத்தையும் தீர்மானிக்கப் போறது உங்கம்மா. கேக்கப் போறது நீங்க. நடுவில இதென்ன நாடகமும் வேஷமும் வேண்டிக்கிடகு ?’

‘ஏண்டி! எதித்தா பேசறே ? அம்புட்டுக்கு ஆயிடுத்தா ?’ என்று அவளை நோக்கிக் கையை ஓங்கியபடி எழுந்தவன், ஏனோ அவளை அடிக்காமல் விட்டான்.

‘நோக்கு வாய்டி. அதான் பகவான் இப்படிப் பொட்டைகளாப் பெத்துப் போட்ற வயித்தைக் குடுத்துட்டான். இல்லேன்னா பொறந்த மூணுல ஒண்ணாவது பிள்ளைக் கொழந்தையா யிருக்காதா என்ன ?’

அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தலையைக் குனிந்து உதடுகளை உள்மடித்து அதை அடக்க முயன்று தோற்றாள்.

‘இத பாருடி. அம்மா கிட்ட கேளு- நானும் ஒரு ஓரமா இந்தாத்துலேயே இருந்துக்கறேன்னு சொல்லிப் பாரு. நானும் சொல்றேன்.’

அவள் பதிலேதும் சொல்லாமல் காப்பித் தம்ளர்களை எடுத்துக்கொண்டு தன் வேலையைப் பார்க்கப் போனாள். .. .. ..

கோவிலிலிருந்து திரும்பி வந்ததும் மாமியார் மெதுவாக ‘அந்தப் பேச்சை’ எடுத்தாள். மங்காத சித்திரமாய் அந்தக் காட்சி பங்கஜத்தின் மனத் திரையில் பதிந்திருந்தது. அவள் அடுக்களையில் பால் காய்ச்சிக்கொண்டிருந்தாள். கூடத்தில் மாமனார் ஊஞ்சலில் உட்கார்ந்து மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார். மாமியார் சற்றுத் தள்ளித் தரையில் சுவரோரமாய்ச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டிருந்தாள். தாசரதி தன் அப்பாவுக்கு அருகே ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தான்.

‘இத பாருடி, பங்கஜம்! நாங்க மூணு பேரும் சேந்து ஒரு தீர்மானம் பண்ணியிருக்கோம்.’

‘என்னம்மா ?’ என்றபடி அவள் கூடத்துக்குச் சென்றாள்.

‘உன்னோட வயிறு பொண் கொழந்தைகளாவே பெத்துப் போட்ற வயிறா யிருக்கு. எங்க வம்சம் விளங்குறதுக்குப் பிள்ளைக் கொழந்தை வேணுமோன்னோ ? அதனால தாசரதிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவைக்கிறதுன்னு தீர்மானம் பண்ணி யிருக்கோம். அவனும் சரின்னுட்டான். அதனால நீ நாளைக்கே உங்க ஊரைப் பாக்கப் போய்ச் சேரு.’

பங்கஜம் பதிலே சொல்லாமல் இருந்தாள். அவள் எதுவும் பேசப் போவதில்லை என்பதாகச் சில நொடிகள் காத்திருந்த பின் ஊகித்த தாசரதி, ‘அம்மா!’ என்றான் குழைந்த குரலில்.

‘என்னடா ?’

‘அவ பாட்டுக்கு இந்தாத்துலேயே ஒரு மூலையில இருந்துட்டுப் போட்டுமேம்மா ?’

‘அது சரிப்பட்டு வராதுடா.’

‘ஏம்மா சரிப்பட்டு வராதுங்கறே ? ஆத்துக் காரியங்கள்ளே நோக்குக் கூடமாட ஒத்தாசையா யிருப்பாளேம்மா ?’

‘அதுக்குத்தான் இன்னொருத்தி வராளேடா ? இவளுக்கு வேற சோறு போடணுமா நாம ?’

‘அப்படி இல்லேம்மா. அது நமக்கும் லாபந்தானேம்மா ? பொண்பாவமும் வராதில்ல ?’

‘எதுடா பொண்பாவம் ? பொண்ணு பொண்ணாப் பெத்துத் தள்றவளைப் பின்ன வேற என்ன செய்யறதாம் ? ஊர்ல ஒலகத்துல செய்யாத பாவத்தையா நாம பண்ணப் போறோம் ? இது ஒண்ணும் பாவமே இல்லே. நியாயமான முடிவுதான்.’

‘ரெண்டு பொண்டாட்டிகள் ஒரே ஆத்துல இருந்தா அது குடுமிப்பிடிச் சண்டையிலதாண்டா முடியும். ரெண்டாவது, அந்த இன்னொருத்தியும் இவ இங்க இருக்கிறதுக்குச் சம்மதிக்கணுமோன்னோ ?’ என்று மாமனார் குறுக்கிட்டார்.

‘உங்கப்பா சொல்றதுதாண்டா சரி. இவளைக் கொண்டு போய் அவ அப்பா கிட்ட விட்டுடலாம்.’

‘நாம என்ன கொண்டுபோய் விட்றது ? வண்டியில ஏத்திவிட்டா தானே போய்க்கிறா! அவ ஊரென்ன டில்லியா, பம்பாயா கொண்டுபோய் விட்றதுக்கு ?’ என்று மாமனார் மறுபடியும் இடைமறித்தார்.

‘சரிப்பா. உங்க ரெண்டு பேரோடவும் இஷ்டம். நீங்க சொல்றாப்ல, அந்தப் பொண்ணும் அவா மனுஷாளும் சம்மதிக்கணுமே ?’

அன்றிரவு அழுதது போல் பங்கஜம் அதற்கு முன்னாலும் அழுததில்லை, பின்னாலும் அழுததில்லை. தன் வயிற்றில் மூன்று குழந்தைகள் உற்பத்தியாவதற்குக் காரணனாக இருந்த கணவனுக்குத் தன் மேல் அன்பு என்பது கொஞ்சமும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டதன் விளைவான அழுகை! ‘ஆணும் பெண்ணும் சேர்ந்து தான் குழந்தைகளை உற்பத்தி செய்கிறார்கள். பெண் இன்றி ஆணால் அது இயலாது, ஆணின்றிப் பெண்ணால் அது இயலாது என்கிற கண்கூடான நிலையில், உற்பத்தியாவது ஆணானாலும், பெண்ணானாலும் அதை வமிசவிருத்தியின் அடையாளமாய்க் கொள்ள வேண்டியதுதானே நியாயம் ? ஆண்தான் வமிச விருத்திக்கு அவசியம் என்பது என்ன நியயம் ? ஆண் குழந்தையைப் பெற்றுத் தராதவள் மனைவியாக இருப்பதற்குத் தகுதியற்றவள் என்பது எவ்வாறு சரியாகும் ? கடவுளே! நான் ஏன் தான் பிறந்தேனோ ? எதற்காக எனக்கு இப்படி ஒரு தண்டனை ? போன ஜென்மத்தில் நான் ஓர் ஆணாக இருந்து ஒரு பெண்ணின் வயிற்றெரிச்சலை இப்படி யெல்லாம் செய்து கொட்டிக்கொண்டிருந்திருப்பேனோ ? அப்படித்தான் இருக்க வேண்டும். பாவம், அப்பா! இந்த அதிர்ச்சியை எப்படித்தான் தாங்கப் போகிறரோ!’

‘அம்மா!’

‘என்னடா ?’

‘ஒருவேளை அந்தப் பொண்ணாத்துல இவளும் இங்க இருக்கிறதுக்குச் சரின்னுட்டா, வெச்சுண்டுடலாமா ?’

மாமியார் தாசரதியை முறைத்தாள்: ‘அதெல்லாம் சரியா வராதுடா. முட்டாள்தனமாப் பேசிண்டிருக்காதே. இவளை விட அழகா ரதி மாதிரி ஒரு பொண்ணை நோக்குப் பாக்கறேன்’

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கப் பார்த்த மகனின் ஆசையைப் புரிந்துகொண்டு மாமியார்க்காரி பதில் சொல்லிவிட்டாள்.

பங்கஜம் எனும் ஒரு பெண்- தாசரதியின் மனைவி- மிக அருகே அங்கு இருப்பதைப் பற்றிய உணர்வே இல்லாதவர்கள் மாதிரி- அல்லது அவளுக்கு உணர்ச்சி ஏதும் இருக்காது- அல்லது இருக்கலாகாது- என நினைத்தவர்கள் போன்று -அவர்கள் அவ்வளவு வெளிப்படையாய், ஏதோ, ‘இன்னிக்கு என்ன சமையல் பண்ணலாம் ?’ எனும் அற்ப விஷயத்தை விவாதிப்பது போல்- சர்வ சாதாரணமாய் உரையாடியது அவளுள் சகிக்க முடியாத ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘சே! என்ன மனிதர்கள்! முதலில் மனிதர்களா இவர்கள் ? இவர்கள் வீட்டில் பெண் குழந்தை இல்லை. அதுதான் இப்படி இன்னொரு பெண்ணுக்குக் கூசாது தீங்கிழைக்கிறார்கள். .. .. ஆனால், அப்படியும் சொல்லிவிட முடியாது. கெட்டவர்கள் எந்த நிலையிலும் கெட்டவர்களே. அதற்கு இந்த மாமியார் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவளே ஒரு பெண்தானே! இன்னொரு பெண்ணின் உணர்ச்சிகள் புரியாதவளாக இவள் இருப்பாளா என்ன ? எனவே, பெண் குழந்தை ஒன்றுக்கு இவள் தாயாக இல்லாததற்கும் இவளது கல்நெஞ்சத்துக்கும் சம்பந்தமில்லை. இவள் கெட்டவள். அவ்வளவுதான்! கெட்டவர்கள் எந்த நிலையிலும் கெட்டவர்களே.. .. ..’

‘என்னடி, பங்கஜம்! நாங்க பேசினதையெல்லாம் கேட்டுண்டிருந்தியோல்லியோ ? உன்னோட பொடவை, துணிமணியெல்லாம் எடுத்து ஒரு பையில வெச்சுக்கோ. இன்னும் ரெண்டே நாள்ள கெளம்பணும்.’

பொங்கிவந்த கண்ணீருடன் அவள் உதடுகள் துடிக்கத் தலை திருப்பி அவர்கள் புறம் நோக்கிய போது, அவள் விழிகளை எதிர்கொள்ள முடியாமல், மூவரும் மூன்று திசைகளில் பார்த்தார்கள்.

பங்கஜம் மறு நாளுக்கு மறு நாள் சின்னக்குளத்திலிருந்து புறப்பட்டுத் தன் ஏழைத் தகப்பனாரிடம் வந்து சேர்ந்தது இப்படித்தான்.

.. .. .. பழைய நினைவுகளில் மூழ்கியபடி அவள் சிந்திய கண்ணீர் மணிகள் உதிர்ந்து அவளது சாப்பாட்டுத் தட்டில் விழுந்து சிதறின.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பங்கஜத்தின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல், பாகீரதி மாமி சில நொடிகள் வரை தொண்டைக் குமிழ் ஏறி இறங்க மவுனமாக இருந்த பிறகு, “உங்கப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லே, பங்கஜம். வாசல் திண்ணையில உக்காந்திண்டிருந்தவர் மயக்கமாயித் திடார்னு உருண்டு விழுந்திருக்கார். மண்டையில அடி.. .. நீ ஒண்ணும் பயப்பட வேண்டாம். பொன்னுச்சாமி வைத்தியர் உடனே வந்து பாத்து தலைக் காயத்துக்கு ஏதோ பச்சிலையெல்லாம் வெச்சுக் கட்டியிருக்கார். ரத்தம் வர்றது நின்னுடுத்து. ஆனா கொஞ்சம் பினாத்திண்டிருக்கார். அதான் சேதியைச் சொல்லி உன்னைக் கையோட கூட்டிண்டு போலாம்னு ஓட்டமும் நடையுமா வந்தேண்டியம்மா!” என்று கூறிப் புடைவை முன்றானையால் முகத்து வேர்வையை ஒற்றித் துடைத்துக்கொண்டாள்.

“அவா ரெண்டு பேருக்கும் இப்பதான் சாதம் போட ஆரம்பிச்சேன், மாமி! ஒரே நிமிஷம். சொல்லிட்டு வந்துட்றேன். இல்லேன்னா போட்டு முடிச்சுட்டே வறேனே ? பாதி போட்டுண்டிருக்கிறச்சே எப்படிப் புறப்பட்றது ? .. உள்ள வந்து உக்காருங்கோ, மாமி!” என்ற பங்கஜம் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உள்ளே விரைந்தாள்.

பாகீரதி மாமி உள்ளே வராமல் திண்ணையிலேயே உட்கார்ந்தாள்.

நாகலிங்கம், “யாரு வந்தது ?” என்றான்.

“பாகீரதி மாமி. என்னை இந்தாத்துல வேலைக்கு அமர்த்தி விட்டாளே, அந்த மாமி.”

“என்னவாம் ?” என்றாள் காமாட்சி.

“எங்கப்பாக்கு திடார்னு மயக்கம் போட்டுடுத்தாம். திண்ணையிலேர்ந்து உருண்டு விழுந்துட்டாராம். பினாத்திண்டிருக்காராம். அதான் கூப்பிட வந்திருக்கா.”

“அழாதீங்கோ, அழாதீங்கோ. நீங்க ஒடனே கெளம்புங்கோ, சொல்றேன். மோரை மட்டும் எடுத்து எதிர்ல வெச்சுட்டு நீங்க போயிட்டு வாங்கோ. அப்பா முக்கியம். அவரை மொதல்ல கவனியுங்கோ. என் அதிருஷ்டம் அவ்வளவுதான்.. .. மறுபடியும் நான்தான் இன்னும் கொஞ்ச நாளுக்குச் சமைக்கணும்னு விதிச்சிருக்கு!”

பங்கஜம், மோர்க்கிண்ணம், சாதம் ஆகியவற்றை எடுத்து வந்து அவர்களுக்கு முன்னால் வைத்த பின், “ நான் வரட்டுமா ? அப்பாக்குப் பெரிசா ஒண்ணும் இல்லேன்னா நாளைக்கு வேலைக்கு வந்துடுவேன். மன்னிச்சுக்குங்கோம்மா. மொத நாளே இந்த மாதிரி ஆயிடுத்து. எல்லாம் என்னோட ராசி!” என்றாள் கண்களைத் துடைத்தவாறு.

“உங்க அப்பாக்கு ஒண்ணும் இருக்காது. மாமி ஒரு பயத்துல வந்து கூப்பிட்றா. கவலைப்படாம போயிட்டு வாங்கோ. இருங்கோ. ஒரே நிமிஷம்.”

நாகலிங்கம் தன் பாதிச் சாப்பாட்டில் எழுந்து போய்க் கைகழுவிக்கொண்டு திரும்பிவந்து கூடத்து அலமாரியிலிருந்து கைப்பையை எடுத்து அதனின்று ஒரு பத்து ரூபாய்த் தாளை உருவிப் பங்கஜத்தை நோக்கி நீட்டினான்: “இந்தாங்கோ. இதை அவசரச் செலவுக்கு வெச்சுக்குங்கோ. அப்புறம் சம்பளத்துல கழிச்சுக்கலாம்.”

பங்கஜம் தயக்கத்துடன் காமாட்சியின் பக்கம் பார்த்தாள்.

“வாங்கிக்கோம்மா.”

அவள் அதை வாங்கிக்கொண்டாள். அவன் விரல்கள் அவளுடையவற்றுடன் அழுத்தமாக உரசின. வேண்டுமென்றெ செய்தது என்பது புரிந்தும், எதையும் புரிந்தகொண்ட அடையாளம் தன் முகத்தில் சிறிதுமின்றி அதைப் பெற்றுக்கொண்டபின் பங்கஜம் நன்றிக் கண்ணீருடன் வெளியேறினாள்.

வழியெல்லாம் பாகீரதி மாமி அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு வந்தாள். எதிர்வீட்டுப் பையனை அவள் அப்பாவுக்குத் துணையாக அவள் வீட்டில் தங்கவைத்திருப்பதாவும், கவலைப்பட எதுவும் இல்லை என்று வைத்தியர் சொல்லி யிருப்பதாகவும், தான்தான் ஒரு முன் ஜாக்கிரதைக்காக வந்ததாகவும் அவள் சொல்லிக்கொண்டு போனதை அப்படி எடுத்துக்கொள்ளப் பங்கஜத்தால் முடியவில்லை. துரதிருஷ்டம் தன்னைத் துரத்துவதாகத்தான் அவளுக்குத் தோன்றியது.

“மாமி! எங்கப்பாவுக்கு ஏதாவது ஆயிட்டா நான் என்ன பண்ணுவேன் ? வேற யாரு இருக்கா நேக்கு ?”

“அப்படி எல்லாம் எதுவும் ஆகாதுடி, பங்கஜம்! தைரியமாயிரு. அப்படி ஏதோ ஆயிடுத்துன்னு வெச்சுக்கோ. சுண்ணாம்புன்னு சொன்னாலே வாய் வெந்துடாது. ஒரு பேச்சுக்குத்தான் சொல்றேன். அப்படி ஏதாவதுன்னா நீ எங்காத்துக்கு வந்து இருந்துடு. கூழோ கஞ்சியோ ரெண்டு பேரும் பங்கு போட்டுண்டு குடிச்சுக்கலாம். எங்காத்து மாமாவும் இருக்கிறதால மூணு பேருன்னு சொல்லணும். நான் பாட்டுக்கு ரெண்டு பேர்ங்கறேனே! எங்களுக்கென்ன, கொழந்தையா, குட்டியா ? ஓட்டல்ல அவர் பாட்டை அவர் பாத்துண்டுடறார். சம்பளத்தை அப்படியே எங்கிட்ட குடுத்துடுவார். ராத்திரி மட்டுந்தான் அவருக்கு ஆத்துல சாப்பாடு. காலம்பரச் சாப்பாடு, மத்தியானச் சாப்பாடு, சாயங்கால டிஃபன் எல்லாமே அவருக்கு ஓட்டல்லதானே ? அப்ப நீயும் நானும் மட்டுந்தானே ? எல்லாம் பாத்துக்கலாம்.. .. ஆனா உங்கப்பாக்கு விபரீதமா எதுவும் இருக்காதும்மா. அழாதே.”

வேர்க்க விறுவிறுக்க இருவரும் அந்தச் சின்ன வீட்டுக்குள் நுழைந்தபோது துணைக்கு இருக்க வைக்கப்பட்டிருந்த எதிர்வீட்டுப் பையனோடு பக்கத்து வீட்டு ராவுஜி மாமாவும் கூட அங்கே இருந்தார். பாயில் படுத்துக்கொண்டிருந்த பஞ்சாட்சரத்தின் உடம்பிலிருந்து கசிந்த வேர்வையில் அவரது மேல்துண்டு நனைந்திருந்தது.

“அப்பா!”

பஞ்சாட்சரம் கன்விழித்துப் பார்த்தார்: “வந்துட்டியாம்மா ? இன்னைக்குப் பாத்துத்தான் நேக்கு இப்படி மயக்கமும் இன்னொண்ணும் வரணுமா ? அவாத்துல ஒண்ணும் சொல்லல்லியா ?”

“இல்லேப்பா. என்னை ஒடனே அனுப்பி வெச்சுட்டா. நீங்க இப்ப எப்படிப்பா இருக்கேள் ? என்ன பண்றது இப்ப ? ஏன் க்ஷீணமாப் பேசறேள் ? கொரலே கெணத்துக்குள்ளேருந்து வராப்ல இருக்கே ? உங்களுக்குச் சமைச்சு வெச்சிருந்தேனே ? அதைச் சாப்பிட்டேளா, இல்லேன்னா பட்டினியா யிருந்துட்டேளா ?”

“சாப்பிட்டேம்மா. ஆனா எல்லாத்தையும் வாந்தி எடுத்துட்டேன். வயசாச்சு. சந்தோஷமாவும் இல்லே. நோயில விழறதுக்கு ஒரு மனுஷனுக்கு வேற என்னம்மா வேணும் ? இனிமே அவ்வளவுதான்!”

“அப்படியெல்லாம் சொல்லாதங்கோப்பா. நேக்கும் உங்களை விட்டா வேற யாருப்பா இருக்கா ? .. .. ராவுஜி மாமா! வைத்தியர் என்ன சொன்னார் ?”

“பலஹீனமா யிருக்கார்ங்கறார். நன்னா சாப்பிடணுமாம். கவலைப்படக் கூடாதாம்,” என்று ராவுஜி மாமா பதில் சொல்லிவிட்டு விட்டத்தை வெறித்தார்.

பஞ்சாட்சரம் பலவீனமாய்ச் சிரித்தார்: “ரெண்டுமே முடியாத காரியம். கனவில கூட அது நடக்காதுங்காணும்!”

“என்னமோம்மா! பகவான் ஏழைகளுக்குத்தான் மேல மேல கஷ்டம் குடுக்கறார். .. ..ம்!” என்று நெட்டுயிர்த்த பாகீரதி மாமி, “அப்ப நான் வரட்டுமா ? பாதிச் சமையல்ல அடுப்பை அணைச்சுட்டுக் கெளம்பினேன்.. .. ஆமா ? நீ சாப்பிட்டிருக்க மாட்டியே ?”

“இல்லே, மாமி. அவாளுக்குப் போட்டுட்டுத்தானே நான் சாப்பிட முடியும் ? ஆனா, அவாத்துல நல்ல காப்பியா ஒரு தம்ளர் குடிச்சேன். அது தாங்கும் பன்னண்டு மணி வரைக்கும். ரெண்டு வேளைக்கும் எங்கப்பாக்குச் சமையல் பண்ணி வெச்சிருக்கேனோல்லியோ ? அதை நாங்க ரெண்டு பேருமா கொஞ்ச நேரம் கழிச்சுச் சாப்பிட்டுக்கறோம்.”

“அப்ப, நான் வரட்டுமா ? . .. கவலைப்படாம இருங்கோ, மாமா. கவலைதான் உங்களை இப்படிப் படுத்தறது. கவலைப்பட்டு என்ன லாபம் ? எது நடக்கணும்னு விதிச்சிருக்கோ, அது நடந்தே தீரும். கவலைப் பட்றதால நடக்கப்போறது மாறிடுமா, இல்லே, நின்னுடுமா ? ரெண்டுமே இல்லே. நீங்க கவலைப்பட்டா, அப்புறம் பங்கஜமும் கவலைப்படுவா. ரெண்டு பேரோட ஒடம்பும் கெட்டுப் போறதுதான் மிஞ்சும்.”

“எல்லாம் தெரிஞ்சுதாம்மா இருக்கு நேக்கும். ஆனா, மனசில இருக்கிற கவலைகளைக் கட்டுப்படுத்த முடியல்லியே! ?” என்று பஞ்சாட்சரம் மறுபடியும் ஒரு தரம் பலவீனமாய்ச் சிரித்தார்.

பாகீரதி மாமி இதற்குப் பதில் எதுவும் சொல்லாமல், பங்கஜத்தை நோக்கித் தலையசைத்துவிட்டுப் புறப்பட்டுப் போனாள். ராவுஜி மாமாவும் எதிர்வீட்டுப் பையனும் கூட விடை பெற்றுக்கொண்டார்கள்.

எல்லாரும் போனதும், பஞ்சாட்சரத்துக்கு அருகே வந்து உட்கார்ந்துகொண்ட பங்கஜம், “இப்ப எப்படிப்பா இருக்கு ?” என்றாள். தொண்டையில் ஏதோ கெட்டியாக அடைத்துக்கொள்ள, அவள் கண்கள் நீரில் மிதந்தன.

“சீ ! அசடு, அசடு. இப்ப என்ன ஆயிடுத்துன்னு அழறே ? போது போக்கத்தவ அந்த பாகீரதி. அநாவசியமா பயந்து போய் அங்க வந்து உன்னைக் கெளப்பிண்டு வந்துட்டா. வெயில் ஆகல்லே. நேக்கு வேற ஒண்ணுமில்லே. அறுபது வயசு ஆயிடுத்தோல்லியோ ? இனிமே அப்படித்தான். ஒடம்பு எப்பவுமே ஒரே மாதிரி இருக்குமா ? நேக்கென்ன பால்யமா ?”

“பொன்னுச்சாமி வைத்தியர் மருந்து, மாத்திரை ஏதாவது குடுத்துட்டுப் போனாராப்பா ?”

“ஆமா. குடுத்தார். தலைமாட்டிலயே வெச்சிருக்கேன், பாரு. மூணு நாள்ள சரியாயிடும்னிருக்கார். நன்னா சாப்பிடணுமாம். சத்தான சாப்பாடு!” என்று கூறிவிட்டு மறுபடியும் சிரித்தார்.

நான்கு நாள்களாக அவர் ஒரு வேளைதான் சாப்பிட்டார் என்பது அந்நேரத்தில் மிக அதிகமாக நினைவுக்கு வர, அவள் கண்கள் மறுபடியும் குபுக்கென்று கண்ணீரால் நிறைந்து போயின. அவளும் கூட ஒரு வேளைதான் சாப்பிட்டாள். ‘ஆனா நான் சின்னவ. இன்னும் முப்பது வயசு கூட நிரம்பாதவ. அவருக்கோ அறுபது வயசு ஆயிடுத்து! என்னைப் போல ரெண்டு மடங்கு வயசு. தாங்குமா என்ன ?’

“அப்பா! அவாத்துல பத்து ரூவா முன்பணம் குடுத்தாப்பா.”

“அப்படின்னா நல்லவாளாத்தான் இருக்கணும்.”

அவள் பதில் சொல்லாதிருந்தாள்.

“என்னம்மா, பேசாம இருக்கே ? நல்லவாதானே ?”

“அதெப்படிப்பா சொல்லமுடியும் ? அவா மனசுக்குள்ள பூந்தா பாக்க முடியும் ?”

“பூந்து பாக்க முடியாதுதான். ஆனா பத்து ரூவாயைத் தூக்கிக் குடுத்திருக்காளே! அதை வெச்சு சொன்னேன்.”

“அப்படியெல்லாம் எதுவும் சொல்லிட முடியாதுப்பா.”

அவர் வியப்புடன் மகளைக் கூர்ந்து பார்த்தார்.

மிகுந்த அறிவுக்கூர்மை படைத்த பஞ்சாட்சரம் ஏதாவது ஊகித்துவிடப் போகிறாரே எனும் அச்சத்தில், “நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேம்ப்பா. நல்ல மனுஷாளாத்தான் தெரியறா. இன்னும் முழு விவரங்களும் போகப் போகத் தெரியும். .. .. இப்ப சாப்பிட்றேளாப்பா ? ஒரு கும்பாவில கொஞ்சமா ரசம் சாதம் கரைச்சு எடுத்துண்டு வரட்டுமா ?”

“எடுத்துண்டு வா. நீயும் அப்படியே உக்காந்து சாப்பிடும்மா. வேகற வெய்யில்ல வேகுவேகுன்னு நடந்து வந்திருக்கே. நேக்கு இப்ப சரியாப் போயிடுத்தும்மா. நீ பாட்டுக்கு நாளைக்கு வேலைக்கு அவாத்துக்குப் போலாம். வேலையில சேந்த மத்தா நாளே போகாம இருக்காதே. அப்புறம் வேற யாராவது அதைப் பறிச்சுண்டுடப் போறா.”

“சரிப்பா!” என்ற பங்கஜம் சாதம் எடுத்துவர அடுக்களைக்குப் போனாள்.

ரசம் சாதம் கரைத்தபடியே அவள் நாகலிங்கத்தைப் பற்றிய எண்ணங்களில் ஈடுபட்டாள். அவன் ஒரு பெண்பித்துப் பிடித்தவன் என்பது அவன் நெற்றியில் எழுதி ஒட்டப்படாத குறைதான் என்று அவளுக்குத் தோன்றியது. பகல் நேரம் மட்டுந்தான் வேலை செய்யப் போகிறாள்; காமாட்சி எப்போதும் கண்காணித்தபடி இருக்கத்தான் போகிறாள் என்றாலும், அவனது பார்வையில் நிறைந்திருந்த நஞ்சு நினைவுக்கு வந்து அவளைத் திடுக்குறச் செய்தது. ‘இப்படிப்பட்ட கயவர்கள் எப்படியாவது – அது பகலோ, இரவோ – தங்களுக்கு வாய்ப்பான நேரத்தை ஏற்படுத்திக்கொள்ளுவதில் வல்லவர்களாக இருப்பார்கள்’ என்று அவளுக்குத் தோன்றியது.

‘நான் ஒரு மகாபாவி! மூணு கொழந்தைகள் பொறந்துதே ? ஒண்ணாவது தக்கி யிருக்கப்படாதா ? இப்ப அது என்னோட வாழ்க்கையில ஒரு ஆறுதலா யிருக்குமோல்லியோ ?.. .. ஆனா ஒரு விதத்துல மூணும் செத்துப் போனதே நல்லதுக்குத்தான். மூணும் பொண்களான்னா பொறந்து தொலைச்சுதுகள்! புருஷனும் தள்ளி வெச்சுட்ட நெலமையில பொண் கொழந்தை ஒண்ணே ஒண்ணு தக்கி யிருந்தாலும் கூட அதை வெச்சிண்டு நான் எப்படிச் சமாளிக்க முடியும் ? அதுக்கும் சோறு போடணுமே ? கல்யாணம், காட்சின்னும் பண்ண வேண்டி வருமே ? அதுக்கெல்லாம் காசுக்கும் பணத்துக்கும் எங்கே போறது ? அந்தக் கொழந்தைகள்ளாம் புண்ணியம் பண்ணின கொழந்தைகள். அதான் பகவான் பிஞ்சிலயே பறிச்சுக் கூட்டிண்டுட்டார்! ஏதோ முந்தின ஜென்மத்துக் கடனைக் கழிக்கிறதுக்காக என் வயித்துல வந்து பொறந்ததுகள் போலேருக்கு!.. ..’

“அப்பா! தூங்கிட்டேளா ?”

“இல்லேம்மா. சும்மாத்தான் கண்ண மூடிண்டு படுத்திண்டிருக்கேன். ராத்திரியிலயே நேக்குத் தூக்கம் வர்றதில்லே. பகல்லயாவது, தூங்கறதாவது!”

“நான் வேணா மெதுவாப் பிடிச்சுத் தூக்கி உக்காத்தட்டுமாப்பா ?”

“வேணாம்மா. அந்த அளவுக்கு மோசமால்லே. நானே எழுந்து உக்கார்றேன்.”

மெதுவாக எழுந்து உட்கார்ந்த அவர் கையில் ரசஞ்சாதக் கரைசல் நிறைந்த தம்ளரைக் கொடுத்த பங்கஜம், “நீங்க குடிச்சதுக்கு அப்புறம் நான் சாப்பிடறேம்ப்பா. நேக்குப் பசியே இல்லே. இருந்தாலும் உங்க திருப்திக்காகச் சாப்பிட்றேங்கறேன்!” என்றபடி அவருக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டாள்.

அவர் அதைப் பருகினார். மேலும் ஒரு தம்ளரும் கேட்டு வாங்கி ஆவலுடன் பருகினார். முகத்தில் ஒரு நிறைவு தெரிந்தது. அதைப் பார்த்த பங்கஜமும் மன நிறைவுற்றாள்.

வெந்நீர் குடித்ததும், பஞ்சாட்சரம் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு, “போம்மா! நீயும் போய் ஒரு வாய் சாப்பிட்டுடு,” என்றவாறு உண்ட களைப்போடு கண்களை மூடிக்கொண்டு ஒரு குட்டித் தூக்கத்துக்கு ஆயத்தமானார்.

அடுக்களைக்குச் சென்று தட்டை வைத்துக்கொண்டு உட்கார்ந்த பங்கஜம் சாப்பிட்டவாறே தன் வாழ்க்கை நிகழ்ச்சிகளை அசைபோடத் தொடங்கினாள்.

1898 ஆம் ஆண்டில் அவள் பிறந்தாள். 1910 இல் அவளுக்குத் திருமணம் நடந்தது. அதாவது, அவளது பன்னிரண்டாம் வயதில். மாப்பிள்ளைக்கு வயது பதினான்கு. பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். மதுரையில். அப்போது அவளுக்கு அம்மா இருந்தாள். அவள் பெரியவள் ஆனதும் ஒரு நல்ல நாளில் அவளை அவள் அப்பாவும் அம்மாவும் அழைத்துச் சென்று சம்பந்திமார் கேட்ட சீர்வரிசைகளோடு விட்டுவிட்டு வந்தார்கள். அப்போது பஞ்சாட்சரம் இந்த அளவுக்கு ஏழையாக இல்லை. ஏதோ கொஞ்சம் செயல் உள்ளவராகத்தான் இருந்தார். அவளுக்கு முதல் குழந்தை அவளது பதினாறாம் வயதில் பிறந்தபோது, அவள் அம்மா உயிருடன் இல்லை. கடுமையான மஞ்சள் காமாலை நோயில் அவளது மூன்றாம் மாதத்திலேயே இறந்துபோனாள். எனவே அவளது பிள்ளைப் பேறுகள் யாவும் மமியார் வீட்டில்தான் கொடுமையான சுடுசொற்களுடனும், சொல்லிக்காட்டுதல்களுடனும் நடந்தன. முதல் பெண் குழந்தை பிறந்த பின் மூன்று நாள்களுக்கு மேல் உயிருடன் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த இரண்டாம் பெண் குழந்தையும் மூன்று நாள்களுக்கு மேல் தக்கவில்லை. மூன்றாம் பெண் குழந்தையோ அவள் அதன் முகத்தைப் பார்ப்பதற்கும் முன்னாலேயே மரித்துவிட்டது. அவள் தன்னினைவு அற்றுக் கிடந்ததால், குழந்தையை அவள் பார்க்கவும் கொடுத்துவைக்கவில்லை. இரண்டு நாள்களுக்குப் பிறகு அவள் தன்னுணர்வு பெற்றுக் குழந்தையைப் பார்க்க அவாவிய போது, பிறந்த ஒரு மணிப் பொழுதுக்குள் அது இறந்துவிட்டதாய் அறிந்து அளவுகடந்த துயருற்றாள்.

இரண்டிரண்டு ஆண்டுகள் இடைவெளியில் பிறந்த மூன்று குழந்தைகளுமே பெண்கள் என்பது பற்றி அவள் மாமியார் அதன் பின்னர் அடிக்கடி குத்திக் காட்டலானாள்.

‘சில பேரோட வயித்து வாகு- பொண் கொழந்தைகளாவேதான் பொறக்கும். நல்ல வேளை! மூணும் செத்து ஒழிஞ்சுதுகள்! இனிமே இவளுக்குப் பிள்ளைக் கொழந்தை பொறக்கும்னு நேக்குத் தோணலை. நம்மாத்து வம்சம் வெளங்கணும்னா, ஒரு பிள்ளைக் கொழந்தையாவது பொறக்க வேண்டாமா ? தினத்துக்கும் நேக்கு இதைப் பத்தின கவலைதான். என்ன செய்யறதுன்னே தெரியல்லே,’ என்று ஒரு நாள் அவளுடைய மாமியார் அவள் மாமனாரிடம் அலுத்துக்கொண்டபோது, அவர் தம் குரலைத் தாழ்த்திக்கொண்டு, ‘இதுக்குப் போய் எதுக்குடி கவலைப்பட்றே ? பேசாம தாசரதிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவைக்க வேண்டியதுதானே ? அன்னிக்கே சொன்னேனோல்லியோ ? இன்னொரு வரதட்சிணை, சீர் செனத்தி எல்லாமும் கிடைக்குமே!’ என்று திருவாய் மலர்ந்தருளினார். தற்செயலாக அவள் கூடத்தில் துணி உலர்த்திக்கொண்டிருந்ததால் -அறையின் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு இருவரும் பேசியதால்- அவர்களின் பேச்சை அவள் கேட்க நேர்ந்தது. அந்தக் கணத்தில் அவளுள் பொங்கிய ஆத்திரமும் ஏமாற்றமும் இன்றளவும் அவளுக்கு ஞாபகமிருந்தன.

அன்றிரவு அவள் தன் கணவனிடம் அது பற்றிச் சொன்னபோது- “ஏன்னா! என்னை விட்டுட்டு இன்னொருத்திக்கு மறுபடியும் தாலி கட்டுவேளா ?’ என்று பரிதாபமாக அவள் கண்ணீருடன் வினவியபோது- அவன் சிரித்த சிரிப்பு இப்போது அவள் செவிகளில் ஒலித்தது.

‘அப்பா ரெண்டு மாசமாவே சொல்லிண்டிருக்கா. நானும் உங்கிட்ட சொல்லணும்னுதான் இருந்தேன். நீயே கேட்டுட்டே!’ என்றான் தாசரதி!

-தொடரும்

jothigirija@vsnl.net

மறுபடியும் ஒரு மகாபாரதம்

ஜோதிர்லதா கிரிஜா

அத்தியாயம் – 7

தாசரதி சொன்ன பதிலும், அப்போது அவன் முகத்தில் மிக இயல்பாகத் தோன்றிய உற்சாக எதிர்பார்த்தல் கலந்த மகிழ்ச்சியும் இன்றளவும் பங்கஜத்தைத் துடிதுடிக்கச்செய்து அணுஅணுவாய்க் கொன்றுகொண்டிருக்கும் ஏமாற்றங்கள்.

‘என்னன்னா! சிரிச்சுண்டே சொல்றேள் ? இன்னொருத்தியைப் பண்ணிக்க மாட்டேள்தானே ?’ -இவ்வாறு கேட்டபோதே அவள் குரல் தடுமாறியது. துயரம் தொண்டையை அடைத்தது.

‘பங்கஜம்! எதுக்குடி இப்ப அழுகை ? நீயே யோசிச்சுப் பாரு. என்னோட வம்சம் விளங்க ஒரு பிள்ளைக் கொழந்தையாவது- எங்கம்மா ஆசைப்பட்றாப்ல- வேண்டாமா ? உன் வயித்து ராசி- இது வரையில பொறந்த எல்லாமே பொண்ணாவே இருந்துடுத்து. நல்ல வேளை! எல்லாமே போய்ச் சேந்துடுத்துகள்!.. ..”

‘அய்யோ! உங்க வாயால அப்படிச் சொல்லாதங்கோன்னா. பத்து மாசம் அதுகளைச் சொமந்தேன். ஒடம்பு நோக ஆசையாப் பெத்து எடுத்த தாய் நான். என் காது படவே இப்பிடிப் பேசறேளே! அதுகள் செத்துப் போயிட்டதுக்கு சந்தோஷம் வேற பட்றேளே! நியாயமா ?’

‘சரி. தப்புதான். அதை விடு. வரிசையாப் பொண்ணாவே பெத்துண்டிருக்கியே ? அதுக்கு என்ன சொல்றே ?’

‘அது நம்ம கையிலயா இருக்கு ? எல்லாம் கடவுளோட செயல். பொண்ணாவோ பிள்ளையாவோ பெத்துக்கிறது என்ன, பொம்மனாட்டிகள், எங்க கையிலயான்னா இருக்கு ?’

‘பண்றதையும் பண்ணிட்டுக் கடவுள் மேல ஏண்டி பழி போட்றே ? உன்னோட ஒடம்பு வாகு அப்படி. அதுக்காக நான் பிள்ளைக் கொழந்தை இல்லாமயே காலத்தை ஓட்டிட முடியுமா ? என்னோட வம்சம் வெளங்க வேண்டாமா என்ன ? அதுக்குத்தான் அம்மாவும் அப்பாவும் சொல்ற வழி இது!’

‘அப்படின்னா அதுக்கு ஒத்துண்டுட்டேளா ?’ -பங்கஜம் உடைந்து போய் அழலானாள்.

‘ஏண்டி அழுது மாஞ்சு போறே ? நான் என்னிக்கோ ஒத்துண்டாச்சு. உன்கிட்ட சொல்றதுக்குத்தான் கொஞ்சம் தயங்கிண்டிருந்தேன். இன்னைக்கு நீயாவே அந்தப் பேச்சை எடுத்தே. சொல்லிட்டேன். இத பாரு. இந்த அழுது ஆகாத்தியம் பண்ணி நீலிக் கண்ணீர் வடிக்கிற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே. என்ன, தெரிஞ்சுதா ? நேக்குப் பிள்ளைக் கொழந்தை வேணும். ஆஊன்னு இப்ப என்னத்துக்கு அழறே ? உலகத்துல எந்த ஆம்பளை பிள்ளைக் கொழந்தைக்கு ஆசைப்பட்டு ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கல்லே ? உன்னை உங்கப்பா கிட்ட கொண்டுபோய் ரெண்டொரு மாசத்துல விட்டுடுவேன். இனிமே நீ அங்கதான் இருக்கணும். தெரிஞ்சுதா ?’

பங்கஜத்தால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவன் குரலில் வெளிப்பட்ட அழுத்தமும் சொற்களில் தெறித்த வெறுப்பும் அவளைத் தள்ளிவைக்கத் தான் போகிறான் என்பதைத் திட்டவட்டமாக அவளுக்கு அறிவுறுத்தின. அன்றிரவு முழுவதும் அவள் இமைகொட்டவில்லை.

ஒரு மணிக்கு அவன் எழுந்து அவளை எழுப்பினான். தூங்காமல் ஒருக்களித்துப் படுத்திருந்த பங்கஜம் அவனது நோக்கம் புரிந்து திரும்பினாள். அவளுக்குத் தாங்க முடியாத அருவருப்பு ஏற்பட்டது. அவனது கையை வலுவாக விலக்கினாள். அவன் முரட்டுத்தனமாக அவளைக் கையாண்டு சிரித்தான்.

‘இப்படியெல்லாம் முரண்டு பிடிச்சா நோக்குத்தான் நஷ்டம்! இன்னும் ரெண்டே மாசத்துல நேக்குக் கல்யாணம். அது வரையில முடிஞ்ச வரைக்கும் அனுபவிச்சுக்கோடி, முட்டாளே!’ என்றானே.

தனது வலுவின்மை, செயலின்மை, கோழைத்தனம் ஆகியவற்றின் மேல் அந்த நேரத்தில் அவளுக்கு வந்த வருத்தம் சொற்களின் விவரித்தலுக்கு அப்பாற்பட்டது. அந்த வருத்தத்தினூடே, ‘ஒருவேளை இங்கேருந்து போறச்சே நேக்குப் பிள்ளை உண்டானா, அந்த ஆறுதலாவது கிட்டுமே!’ என்னும் எண்ணமும் அவளுக்கு வந்தது.

மறுநாள் அவள் மாமனார், மாமியார் ஆகிய இருவரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனார்கள். வழக்கம் போல் அவளைக் கூப்பிடவில்லை. மீனாட்சியம்மனின் அருட்பார்வை தங்கள் மருமகளின் மீது பட்டுவிடக் கூடாது என விரும்பினார்கள் போலும் என்றுதான் அவளுக்குத் தோன்றியது.’அட, மூடங்களா! மீனாட்சி அந்தக் கோவில்ல மட்டுந்தான் இருக்காளா என்ன ? ஆத்துல இருந்த படியே அவளை என்னால வேண்டிக்க முடியாதா ?’ என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

அவர்கள் கோவிலுக்குப் போன நேரத்தில் தாசரதி தனது அறையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். அவர்கள் போய் அரை மணி கழித்துத் தாசரதியின் நண்பன் ஒருவன் அவர்கள் வீட்டுக்கு வந்தான். அவனை அவள் அதற்கு முன்னால் இரண்டு` தடவைகள் பார்த்திருந்தாள். அவள் உள்ளே போய்த் தாசரதியை எழுப்பினாள். அவள் எழுந்து சென்று ராகவன் எனும் அந்த நண்பனை வரவேற்றுத் தனது அறைக்கு இட்டுச் சென்று உட்காரச் செய்தான். பிறகு இருவரும் பேசத் தொடங்கினார்கள்.

‘பங்கஜம்! ரெண்டு கப் காப்பி கொண்டா.’

அவள் பத்து நிமிடங்கள் கழித்துக் காப்பித் தம்ளர்களுடன் அவனது அறையை நெருங்கிய போது தாசரதி தன் இரண்டாம் திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். அவள் உள்ளே போகாமல் நின்று ஒற்றுக்கேட்டாள்.

‘என்னடா! மூணு கொழந்தைகளும் செத்துப் போயிடுத்தே ? ரொம்ப வருத்தமா யிருக்கு. இப்ப மறுபடியும் ஏதானும் விசேஷம் உண்டா ?’

‘இல்லேடா, ராகவா. வரிசையாப் பொண்ணாப் பொறந்துண்டிருக்குறதால அம்மாவும் அப்பாவும் ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றா என்னை! அவளுக்குப் பொண்ணாவே பெத்துத் தள்ற வயித்துவாகுங்கறா!’

“சில பொண்ணுகள் அப்படித்தாண்டா. அப்புறம் நோக்குப் பிள்ளைக் கொழந்தையே இல்லாம போயிடப் போறது. அவா சொல்றது சரின்னுதான் நேக்கும் தோண்றது. ஒண்ணுக்கு ரெண்டா வெச்சிண்டு ஜமாய்!’ – அந்த நண்பனின் குரலில் விரசம் வழிந்தது.

‘அது நடக்காதுடா, ராகவா. அவளைத் தள்ளித்தான் வைக்கவேண்டி வரும். அம்மா-அப்பா ஒத்துக்க மாட்டா.’

‘டேய்! நான் சொல்றதைக் கேளு. அப்படிச் செஞ்சா அதுல நோக்கு ஒரு லாபம் இருக்குடா. சிநேகிதனோட பொண்டாட்டி அழகைப் புகழ்ந்து பேசறது தர்மம் இல்லேதான். இருந்தாலும் சொல்றேன். உன் பொண்டாட்டி பயங்கர அழகுடா. அவளை விட்டுடாதே. அடுத்து வரப் போறவ எப்படி இருப்பாளோ ? இவ பாட்டுக்கு உங்க ஆத்துலேயே ஒரு ஓரமா யிருந்துட்டுப் போகட்டுமே! உங்கம்மாவுக்கு ஆத்துக் காரியத்துல ஒத்தாசையாவும் இருப்பா. அவளுக்குச் சோறு போட்ற புண்ணியம் உனக்குக் கிடைக்கும். உன்னை அவளும் அவ அப்பாவும் ரொம்பவும் சபிக்க மாட்டா. அவளுக்கும் தான் வாழாவெட்டி யாயிடல்லேன்னு ஒரு திருப்தி இருக்கும். இல்லியா ? என்ன சொல்றே ? யோசிச்சுப் பாரு.’

‘நீ சொல்றது ரொம்பவே நல்ல யோசனைதான். அப்படியே செஞ்சுடலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.’

‘ஆமா ? போன வாரம் கிளப்புக்கு வறேன்னுட்டு நீ ஏன் வரவே யில்லே ?’

அவர்களது பேச்சு இலக்கு மாறிய பின் இரண்டு நிமிடங்கள் கழித்து அவள் அவனது அறைக்குள் நுழைந்து காப்பியை மேசை மீது வைத்துவிட்டு வெளியேறினாள்.

அடுக்களைக்குப் போய் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அவள் இதயம் சிதற அழத் தொடங்கினாள். ஒருகால் தன்னையும் இருத்திக்கொள்ள அவர்கள் முற்படுவார்களோ எனும் எண்ணம் வந்த போது அவளுள் பொறுத்துக்கொள்ள முடியாத அருவருப்பு விளைந்தது. இன்னொருத்தியோடு கணவனைப் பங்கு போட்டுக்கொண்டு வாழ்வதை விட எங்கேயாவது விழுந்து அல்லது விஷம் எதையாவது குடித்து ஒரேயடியாய் உயிரையே விட்டுவிடலாம் என்று அவளுக்குத் தோன்றியது.

‘கடவுளே! எல்லாக் கொழந்தைகளையும் பொண்ணாவே பெத்துக்குற மாதிரியான உடல்வாகை நேக்கு ஏன் குடுத்தே ? .. .. இவாளுக்கும்தான் கொஞ்சம் பொறுமை வேண்டாமா ? ஒரு வேளை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுப் பொறக்குற கொழந்தை பிள்ளையா யிருக்குமோ என்னமோ! நேக்கென்ன வயசாயிடுத்தா ? கொஞ்ச நாள் காத்திண்டிருக்கப் படாதா ?.. .. அப்பாக்கு இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியா யிருக்கும்! இருந்த ஒரே வீட்டையும் குமரேசன் செட்டியாருக்கு என் கல்யாணச் செலவுக்காக விக்கும்படி ஆச்சு. செட்டியார் நல்லவர். அதனால அதுலேயே ரொம்பவே குறைச்சலான வாடகைக்கு அப்பா காலம் முடியற வரைக்கும் இருந்துக்கலாம்னுட்டார். எவ்வளவு நல்ல மனசு இருந்தா செட்டியார் மாமா அப்படி ஒரு தாராளத்தோட நடந்திருப்பார்! கடவுள் எப்பவும் தாங்க முடியாத கஷ்டத்தைக் குடுத்துட மாட்டார். நடு நடுவில இது மாதிரி நல்லதுகளையும்தான் செய்வார்! அதை நினைச்சுத் திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான் புத்திசாலித்தனம். சும்மா அழுதா ஒடம்புதான் கெட்டுப் போகும்.. .. ..’

ராகவன் கொஞ்ச நேரம் கழித்துக் கிளம்பிப் போன பிறகு தாசரதி அவளை யழைத்தான்.

‘இத பாரு, பங்கஜம்! என்னோட கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் இந்த ஆத்துலேயே இருந்துக்கலாம். நான் அம்மா கிட்ட சொல்லிப் பாக்கறேன். உங்கப்பாவுக்கும் வயசாயிடுத்து. அவருக்கு நீ ஒரு சுமையா இருக்க வேண்டாம்.’

இவ்வாறு சொன்ன போது அவனது பார்வை- ஏதோ அப்போதுதான் முதன் முறையாக அவளை ஆராய்பவனுடையது போன்று- குறுகுறுவென்று தன் மீது படிந்ததை உணர்ந்து அவளுக்கு அளவுகடந்த வெறுப்பு ஏற்பட்டது. அந்த ராகவனின் மதிப்பீட்டால் அவன் தன் அழகை ஆராய்கிறான் என்பது புரிய, கெட்டது சொல்லிக் கொடுக்க வந்த அந்த நண்பன், ‘அடேய்! பெண் பாவம் பொல்லாதுடா. அப்படியெல்லாம் பண்ணாதே. இன்னொருத்திக்கு மட்டும் பிள்ளைக் கொழந்தை பொறக்கும்கிறது என்ன நிச்சயம் ? அவளுக்கு எதுவும் பொறக்காமலேயே கூடப் போகலாமோல்லியோ ? அப்படி ஆனா மூணாவதா ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிப்பியா ? வேண்டாண்டா. அது தப்பு’ என்று நியாயத்தை எடுத்துச் சொல்லி யிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அவள் நினைத்தாள். நண்பன் அப்படிச் சொல்லி யிருந்தால், அதை அவன் கேட்பானா இல்லையா என்பது வேறு விஷயமாக இருப்பினும் கூட!

‘என்ன, பேசாம இருக்கே ?’

‘எல்லாம் என்னைக் கேட்டுத் தான் செய்யறேளாக்கும்! நேக்குப் பிடிக்கிறது பிடிக்காததுன்னு பாத்தா, நீங்க நேக்கு துரோகம் பண்ணாம இருக்கிறதைத்தான் நான் விரும்புவேன். எல்லாத்தையும் தீர்மானிக்கப் போறது உங்கம்மா. கேக்கப் போறது நீங்க. நடுவில இதென்ன நாடகமும் வேஷமும் வேண்டிக்கிடகு ?’

‘ஏண்டி! எதித்தா பேசறே ? அம்புட்டுக்கு ஆயிடுத்தா ?’ என்று அவளை நோக்கிக் கையை ஓங்கியபடி எழுந்தவன், ஏனோ அவளை அடிக்காமல் விட்டான்.

‘நோக்கு வாய்டி. அதான் பகவான் இப்படிப் பொட்டைகளாப் பெத்துப் போட்ற வயித்தைக் குடுத்துட்டான். இல்லேன்னா பொறந்த மூணுல ஒண்ணாவது பிள்ளைக் கொழந்தையா யிருக்காதா என்ன ?’

அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தலையைக் குனிந்து உதடுகளை உள்மடித்து அதை அடக்க முயன்று தோற்றாள்.

‘இத பாருடி. அம்மா கிட்ட கேளு- நானும் ஒரு ஓரமா இந்தாத்துலேயே இருந்துக்கறேன்னு சொல்லிப் பாரு. நானும் சொல்றேன்.’

அவள் பதிலேதும் சொல்லாமல் காப்பித் தம்ளர்களை எடுத்துக்கொண்டு தன் வேலையைப் பார்க்கப் போனாள். .. .. ..

கோவிலிலிருந்து திரும்பி வந்ததும் மாமியார் மெதுவாக ‘அந்தப் பேச்சை’ எடுத்தாள். மங்காத சித்திரமாய் அந்தக் காட்சி பங்கஜத்தின் மனத் திரையில் பதிந்திருந்தது. அவள் அடுக்களையில் பால் காய்ச்சிக்கொண்டிருந்தாள். கூடத்தில் மாமனார் ஊஞ்சலில் உட்கார்ந்து மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார். மாமியார் சற்றுத் தள்ளித் தரையில் சுவரோரமாய்ச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டிருந்தாள். தாசரதி தன் அப்பாவுக்கு அருகே ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தான்.

‘இத பாருடி, பங்கஜம்! நாங்க மூணு பேரும் சேந்து ஒரு தீர்மானம் பண்ணியிருக்கோம்.’

‘என்னம்மா ?’ என்றபடி அவள் கூடத்துக்குச் சென்றாள்.

‘உன்னோட வயிறு பொண் கொழந்தைகளாவே பெத்துப் போட்ற வயிறா யிருக்கு. எங்க வம்சம் விளங்குறதுக்குப் பிள்ளைக் கொழந்தை வேணுமோன்னோ ? அதனால தாசரதிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவைக்கிறதுன்னு தீர்மானம் பண்ணி யிருக்கோம். அவனும் சரின்னுட்டான். அதனால நீ நாளைக்கே உங்க ஊரைப் பாக்கப் போய்ச் சேரு.’

பங்கஜம் பதிலே சொல்லாமல் இருந்தாள். அவள் எதுவும் பேசப் போவதில்லை என்பதாகச் சில நொடிகள் காத்திருந்த பின் ஊகித்த தாசரதி, ‘அம்மா!’ என்றான் குழைந்த குரலில்.

‘என்னடா ?’

‘அவ பாட்டுக்கு இந்தாத்துலேயே ஒரு மூலையில இருந்துட்டுப் போட்டுமேம்மா ?’

‘அது சரிப்பட்டு வராதுடா.’

‘ஏம்மா சரிப்பட்டு வராதுங்கறே ? ஆத்துக் காரியங்கள்ளே நோக்குக் கூடமாட ஒத்தாசையா யிருப்பாளேம்மா ?’

‘அதுக்குத்தான் இன்னொருத்தி வராளேடா ? இவளுக்கு வேற சோறு போடணுமா நாம ?’

‘அப்படி இல்லேம்மா. அது நமக்கும் லாபந்தானேம்மா ? பொண்பாவமும் வராதில்ல ?’

‘எதுடா பொண்பாவம் ? பொண்ணு பொண்ணாப் பெத்துத் தள்றவளைப் பின்ன வேற என்ன செய்யறதாம் ? ஊர்ல ஒலகத்துல செய்யாத பாவத்தையா நாம பண்ணப் போறோம் ? இது ஒண்ணும் பாவமே இல்லே. நியாயமான முடிவுதான்.’

‘ரெண்டு பொண்டாட்டிகள் ஒரே ஆத்துல இருந்தா அது குடுமிப்பிடிச் சண்டையிலதாண்டா முடியும். ரெண்டாவது, அந்த இன்னொருத்தியும் இவ இங்க இருக்கிறதுக்குச் சம்மதிக்கணுமோன்னோ ?’ என்று மாமனார் குறுக்கிட்டார்.

‘உங்கப்பா சொல்றதுதாண்டா சரி. இவளைக் கொண்டு போய் அவ அப்பா கிட்ட விட்டுடலாம்.’

‘நாம என்ன கொண்டுபோய் விட்றது ? வண்டியில ஏத்திவிட்டா தானே போய்க்கிறா! அவ ஊரென்ன டில்லியா, பம்பாயா கொண்டுபோய் விட்றதுக்கு ?’ என்று மாமனார் மறுபடியும் இடைமறித்தார்.

‘சரிப்பா. உங்க ரெண்டு பேரோடவும் இஷ்டம். நீங்க சொல்றாப்ல, அந்தப் பொண்ணும் அவா மனுஷாளும் சம்மதிக்கணுமே ?’

அன்றிரவு அழுதது போல் பங்கஜம் அதற்கு முன்னாலும் அழுததில்லை, பின்னாலும் அழுததில்லை. தன் வயிற்றில் மூன்று குழந்தைகள் உற்பத்தியாவதற்குக் காரணனாக இருந்த கணவனுக்குத் தன் மேல் அன்பு என்பது கொஞ்சமும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டதன் விளைவான அழுகை! ‘ஆணும் பெண்ணும் சேர்ந்து தான் குழந்தைகளை உற்பத்தி செய்கிறார்கள். பெண் இன்றி ஆணால் அது இயலாது, ஆணின்றிப் பெண்ணால் அது இயலாது என்கிற கண்கூடான நிலையில், உற்பத்தியாவது ஆணானாலும், பெண்ணானாலும் அதை வமிசவிருத்தியின் அடையாளமாய்க் கொள்ள வேண்டியதுதானே நியாயம் ? ஆண்தான் வமிச விருத்திக்கு அவசியம் என்பது என்ன நியயம் ? ஆண் குழந்தையைப் பெற்றுத் தராதவள் மனைவியாக இருப்பதற்குத் தகுதியற்றவள் என்பது எவ்வாறு சரியாகும் ? கடவுளே! நான் ஏன் தான் பிறந்தேனோ ? எதற்காக எனக்கு இப்படி ஒரு தண்டனை ? போன ஜென்மத்தில் நான் ஓர் ஆணாக இருந்து ஒரு பெண்ணின் வயிற்றெரிச்சலை இப்படி யெல்லாம் செய்து கொட்டிக்கொண்டிருந்திருப்பேனோ ? அப்படித்தான் இருக்க வேண்டும். பாவம், அப்பா! இந்த அதிர்ச்சியை எப்படித்தான் தாங்கப் போகிறரோ!’

‘அம்மா!’

‘என்னடா ?’

‘ஒருவேளை அந்தப் பொண்ணாத்துல இவளும் இங்க இருக்கிறதுக்குச் சரின்னுட்டா, வெச்சுண்டுடலாமா ?’

மாமியார் தாசரதியை முறைத்தாள்: ‘அதெல்லாம் சரியா வராதுடா. முட்டாள்தனமாப் பேசிண்டிருக்காதே. இவளை விட அழகா ரதி மாதிரி ஒரு பொண்ணை நோக்குப் பாக்கறேன்’

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கப் பார்த்த மகனின் ஆசையைப் புரிந்துகொண்டு மாமியார்க்காரி பதில் சொல்லிவிட்டாள்.

பங்கஜம் எனும் ஒரு பெண்- தாசரதியின் மனைவி- மிக அருகே அங்கு இருப்பதைப் பற்றிய உணர்வே இல்லாதவர்கள் மாதிரி- அல்லது அவளுக்கு உணர்ச்சி ஏதும் இருக்காது- அல்லது இருக்கலாகாது- என நினைத்தவர்கள் போன்று -அவர்கள் அவ்வளவு வெளிப்படையாய், ஏதோ, ‘இன்னிக்கு என்ன சமையல் பண்ணலாம் ?’ எனும் அற்ப விஷயத்தை விவாதிப்பது போல்- சர்வ சாதாரணமாய் உரையாடியது அவளுள் சகிக்க முடியாத ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘சே! என்ன மனிதர்கள்! முதலில் மனிதர்களா இவர்கள் ? இவர்கள் வீட்டில் பெண் குழந்தை இல்லை. அதுதான் இப்படி இன்னொரு பெண்ணுக்குக் கூசாது தீங்கிழைக்கிறார்கள். .. .. ஆனால், அப்படியும் சொல்லிவிட முடியாது. கெட்டவர்கள் எந்த நிலையிலும் கெட்டவர்களே. அதற்கு இந்த மாமியார் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவளே ஒரு பெண்தானே! இன்னொரு பெண்ணின் உணர்ச்சிகள் புரியாதவளாக இவள் இருப்பாளா என்ன ? எனவே, பெண் குழந்தை ஒன்றுக்கு இவள் தாயாக இல்லாததற்கும் இவளது கல்நெஞ்சத்துக்கும் சம்பந்தமில்லை. இவள் கெட்டவள். அவ்வளவுதான்! கெட்டவர்கள் எந்த நிலையிலும் கெட்டவர்களே.. .. ..’

‘என்னடி, பங்கஜம்! நாங்க பேசினதையெல்லாம் கேட்டுண்டிருந்தியோல்லியோ ? உன்னோட பொடவை, துணிமணியெல்லாம் எடுத்து ஒரு பையில வெச்சுக்கோ. இன்னும் ரெண்டே நாள்ள கெளம்பணும்.’

பொங்கிவந்த கண்ணீருடன் அவள் உதடுகள் துடிக்கத் தலை திருப்பி அவர்கள் புறம் நோக்கிய போது, அவள் விழிகளை எதிர்கொள்ள முடியாமல், மூவரும் மூன்று திசைகளில் பார்த்தார்கள்.

பங்கஜம் மறு நாளுக்கு மறு நாள் சின்னக்குளத்திலிருந்து புறப்பட்டுத் தன் ஏழைத் தகப்பனாரிடம் வந்து சேர்ந்தது இப்படித்தான்.

.. .. .. பழைய நினைவுகளில் மூழ்கியபடி அவள் சிந்திய கண்ணீர் மணிகள் உதிர்ந்து அவளது சாப்பாட்டுத் தட்டில் விழுந்து சிதறின.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அவள் முதுகில் விளைந்த குறுகுறுப்பின் விளைவுதான் சமையற்கட்டில் வேலையாக இருந்த பங்கஜம் தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தது. காமாட்சியின் கணவன் ஏற்கெனவே தன் மீது தன் ஆழமான பார்வையைக் குறைந்த பட்சம் பத்து நொடிகளேனும் செலுத்தி இருந்திருக்க வேண்டும் என்பதும், அதன் விளைவே தன் முதுகுக் குறுகுறுப்பும், தான் சட்டெனத் திரும்பிப் பார்த்ததும் என்பவையும் பங்கஜத்துக்குப் புரிந்தன. தனது உள்ளுணர்வின் மீது அவளுக்கு என்றுமே அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அவனது பார்வையின் ஆழம் மட்டுமின்றி, அதிலிருந்து தெறித்துச் சிதறிய மற்றும் ஒன்றும் அவளுள் ஒரு திகிலைக் கிளர்த்தின

‘மூணு கொழந்தை பெத்தவ நான்! ஒரு ஆம்பளை இப்படிப் பார்க்கிற பார்வைக்கு என்ன அர்த்தம்னு நேக்குத் தெரியல்லேன்னா வேற யாருக்குத் தெரியும் ? இன்னும் சொல்லப் போனா இதைப் புரிஞ்சுக்கிறதுக்கு ஒரு பொண்ணு பிள்ளை பெத்திருக்கணும்கிற அவசியமே இல்லே. இந்த அறிவெல்லாம்தான் பொண்ணாப் படைச்சவாளுக்குக் கடவுள் குடுத்திருக்கிற வெகுமானம். கடவுளே! ஆறு மாசமாப் படுத்த படுக்கையா இருக்கிற பொண்ணோட புருஷன் “அது” க்கு எப்படிப் பேயா அலைவான்கிறதும் நேக்குத் தெரியும். நல்லவா எத்தனையோ பேரு விதியேன்னு பொறுத்துப்பா. ஆனா இவனைப் பாத்தா அப்படித் தெரியல்லே. கடவுளே! இந்த ஆத்துலே நேக்கு எந்தக் கெடுதியும் நேராம நீதான் காப்பாத்தணும். என்ன பாவம் பண்ணி மூணு கொழந்தைகளைப் பறி குடுத்துட்டுப் புருஷன்காரனும் இல்லாம நிக்கறேனோ! இந்தக் கொடுமை வேற நேக்கு வேண்டாம்.. .. பாகீரதி மாமி கிட்ட ஜாடையாச் சொல்லி வேற ஏதானும் எடம் தெரிஞ்சா விசாரிக்கச் சொல்லலாம்னு பாத்தா அதுவும் சரியாத் தெரியல்லே. அந்த மாமி உடனே, ‘காமாட்சியோட ஆத்துக்காரன் உன் கையைப் பிடிச்சு இழுத்துட்டானா ?’ன்னு கேப்பா. அது மட்டுமா ? ஏதோ நடந்திருக்கணும். இவ மறைக்கிறா’ அப்படின்னு அசிங்கமாவும் வேற ஊகிக்கத் தொடங்குவா. சரியான வம்புக்கார மாமி. தன் ஊகத்தை ஆத்துக்காம் போய்ப் பரப்ப வேறன்னா செய்வா!.. .. அதனால பொறுத்திருந்துதான் பாக்கணும்.. ..!’

வேலையில் சேர்ந்த முதல் நாளே- அதிலும் ஒரு மணிப் பொழுது கழிவதற்கும் முன்பாகவே- தான் இப்படியெல்லாம் யோசிக்க வேண்டிவந்த நிலை அவளைக் கவலையில் ஆழ்த்தியது. ‘என்ன செய்யறது ? ஏழைக் குடும்பத்துல பொறந்தாச்சு. பொண்ணாவும் பொறந்தாசே! இதைவிட நல்ல வாழ்வு கிடைச்சுடுமா என்ன ?’

பொங்குவதற்கு இருந்த பாலை- தன்னுணர்வு வந்து- புடைவைத் தலைப்பால் கீழே இறக்கிவைத்த பங்கஜம், ‘நல்ல வேளை! மொத நாளே பாலைப் பொங்க விடாம இருந்தேனே! அதுவும் கடவுளோட அனுக்கிரகம்தான். இல்லேன்னா, அச்சானியம்னு சொல்லி என்னை இன்னைக்கே அந்தக் காமாட்சி கழுத்தைப் பிடிச்சு வெளியில தள்ளினாலும் தள்ளியிருப்பா,’ என்று எண்ணித் தன் துரதிருஷ்டத்திலும் இருந்த ஓர் அதிருஷ்டத்துக்காகக் கொஞ்சம் மகிழ்ச்சியடைந்தாள்.

ஒருகால், காமாட்சியின் வீட்டிலிருந்து நின்றுகொள்ளும் கட்டாயம் நேர்ந்தால் தனது வருங்காலம் என்னவாகும் எனும் கேள்வியை அவள் தன்னுள் எழுப்பிக்கொண்டபோது அவளுக்குத் திக்கென்றது. செங்கல்பாளையத்தில் எதிர்ச்சாரியில் நான்கு வீடுகள் தள்ளிக் குடியிருந்த தெலுங்குக் குடும்பம் பற்றிய ஞாபகம் அவளையும் மீறி அவளுக்கு வந்தது.

அந்தப் பெண் வந்தனாவும் அப்படித்தான். தலைதீபாவளிச் சீர் சரியாகச் செய்யவில்லை என்பதற்காகக் கணவனால் தள்ளிவைக்கப்பட்டு விட்டாள். அவள்தான் எவ்வளவு அழகான பெண்! இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். பங்கஜத்தைப் போன்றே அவளுக்கும் ஓர் அப்பா இருந்தார். தள்ளாத வயது. இவளுக்காவது அம்மா இல்லை. அவளுக்கு அம்மாவும் இருந்தாள். இரண்டு பேரும் தள்ளாதவர்களாக இருந்ததால், எந்த வேலையும் செய்து சம்பாதிக்க முடியாத நிலை. வந்தனா -படிக்காத பெண்- இவளைப் போல் எடுபிடி வேலைக்குத்தான் போனாள். சென்ற இடங்களிலெல்லாம் அவளுக்குத் தொந்தரவுதான் ஏற்பட்டது. அவளது அழகே அவளுக்கு எமனாயிருந்தது.

அவள் வேலை செய்த ஒரு வீட்டின் எசமானனே அவளை ‘நாசம்’ செய்ததால், பிள்ளை உண்டாகி, எதையோ சாப்பிட்டு அதை அழித்துக் கொண்டதாய் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஊர் முழுக்க வம்பு. இரண்டு வீடுகளில் இப்படி ஆயிற்றாம். அதனால் ஏற்பட்ட கசப்பிலும், மரத்துப் போய்விட்ட மனநிலையிலும் அவளே ஒரு பலகை மாட்டித் தொங்கவிடாத குறையாகத் தன் வீட்டை “அந்த இடமாக” ஆக்கிக்கொண்டாளாம். இன்றைக்கும் அவர்கள் வீட்டுக் கொல்லைப் புற வழியாக இரவு பதினொரு மணிக்குப் பிறகு பலதரப்பட்ட ஆண்கள் வந்து போவதாய்ச் சொல்லுவார்கள். உண்மையில் அவளையும் அவள் பெற்றோரையும் அந்த அக்கிரகாரம் ஜாதிப் பிரஷ்டம் எனும் தண்டனையால் விலக்கி வைத்திருந்தது.

‘ரெண்டு தரம் எவனுகளுக்கோ கர்ப்பம் சுமந்தாச்சு. இனிமேயும் போற எடங்கள்ளே யெல்லாம் தொல்லைதான். இதுக்கு மேல என்னடி இருக்கு ?’ என்று தாயே மகளை அப்படி ஓர் இழிதொழிலைச் செய்யத் தூண்டிவிட்டதாகவும் கூட ஊரில் ஒரு பேச்சு அடிபட்டுக்கொண்டிருந்தது. வந்தனாவின் அப்பா வாசல் திண்ணையே கதியாய்க் கிடந்தார். தாயின் ஒத்தாசையுடன் மகள் அப்படி ஒரு தொழிலைச் செய்துகொண்டிருந்தது அவருக்கு வெகு நாள் வரையில் தெரியவில்லையாம்.

பிறகு ஒருநாள் எப்படியோ அவருக்கு விஷயம் தெரிந்து போய்விட்டதாம். அவ்வளவுதான்! ‘அட, சண்டாளிகளா! இப்படி ஒரு பாவத் தொழிலைப் பண்ணியா நேக்குச் சோறு போட்டுண்டிருந்தேள் ?’ என்றவர் அப்படியே சாய்ந்தவர் சாய்ந்தவர்தானாம். அதன் பிறகு அவர் கண்விழித்துப் பார்க்கவே இல்லையாம்.

இதைப் பற்றிய ஞாபகங்கள் பங்கஜத்தின் மனத்தில் அவளையும் அறியாது எழுந்தன. அவளுக்குத் திடுக்கென்றது. ‘கடவுளே! அப்படி யெல்லாம் ஒரு சோதனையான வாழ்க்கையை நேக்குக் குடுத்துடாதே. அதை விட நான் எங்கேயாவது கெணத்துலயோ கொளத்துலயோ விழுந்து உசிரை விட்டுடுவேன்!’

“என்னம்மா! காப்பி ரெடியா ?” எனும் கட்டைக்குரல் அவளை இவ்வுலக நினைவுக்குக் கொண்டுவர, அவள் திடுக்கிட்டுத் தலைதிருப்பினாள். காமாட்சி தன் கட்டிலுக்குத் திரும்பி யிருந்தாள். அவன் சமையலறை வாசற்படியில் நின்றுகொண்டிருந்தான்.

“இதோ. கலந்து எடுத்துண்டு வறேன். நீங்க திரும்பி வர்றதுக்காகக் காத்திண்டிருந்தேன்!” என்ற பங்கஜம் காப்பியைக் கலக்க முற்பட்டாள்.

“நீங்க இங்க வாங்கோன்னா! அவ எதிர்ல போய் நிக்காதங்கோ. புதுசா வேலைக்கு வந்தவாளுக்கு அப்புறம் கையும் ஓடாது, காலும் ஓடாது!” என்று காமாட்சி குரல் கொடுத்த பிறகு அவன் கூடத்துக்குப் போனான். அவளுக்கு அப்பாடா என்றிருந்தது. உண்மையில் அவளுக்குக் கை,கால்களில் சின்னதாய் ஒரு நடுக்கம் ஏற்பட்டிருந்தது. ஆறடி உயரத்துக்கு நின்ற அவ்னது ஆஜானுபாகுத் தோற்றமும், அவன் அடுக்களை வாசலை அடைத்துக்கொண்டு, கால்களைப் பரப்பி நின்ற நிலையும் -முக்கியமாய் அவன் கண்களில் தெரிந்த மொழியும், அந்தக் கண்கள் அவள் உடல் மீது தகாத முறையில் படிந்திருந்த விதமும் தான்- அதற்குக் காரணங்கள். ஒரு வழியாய்க் காப்பியைக் கலந்து இரண்டு தம்ளர்களில் வட்டைகளுடன் எடுத்துக்கொண்டு அவள் கூடத்துக்குப் போனான்.

முதலில் காமாட்சிக்குக் காப்பியைக் கொடுத்தாள். அங்கே குட்டையான மேசையோ, முக்காலியோ எதுவும் தென்படவில்லை. காமாட்சியின் கணவனின் கையில் காப்பியைக் கொடுக்க அவள் விரும்பவில்லை. எனவே தரையில் வட்டையையும் தம்ளரையும் வைத்துவிட்டுத் திரும்பினாள். அவன் கையை நீட்டிக்கொண்டிருந்ததைக் கவனியாதவள் போல் அவள் அப்பால் போகத் திரும்பினாள்.

“என்னது! கையில குடுக்காம தரையில் வைக்கிறேள் ? எடுத்துக் கையில குடுங்கோ!”

நல்ல வேளையாகக் காமாட்சி இடைமறித்தாள்: “சிலர் அசல் புருஷா கையில எதையும் தரமாட்டான்னா! ஒரு கூச்சம் இருக்குமோல்லியோ ? நீங்களே எடுத்துக்குங்கோ”

கணம் போல் திகைத்து நின்ற பின், ‘அதுதான் சாக்கு’ என்று, பங்கஜம் அடுக்களைக்குள் புகுந்துகொண்டாள். காமாட்சி தன் கணவன் மேல் ‘தன்னுரிமை’ கொண்டாடுபவள் என்பது அவனை, ‘அவ எதிர்ல போய் நிக்காதங்கோ. புதுசா வேலைக்கு வந்தவாளுக்கு அப்புறம் கையும் ஓடாது, காலும் ஓடாது’ என்று சொன்னதிலிருந்து ஏற்கெனவே அவளுக்குப் புரிந்திருக்க, இப்போது அந்தப் புரிதல் இன்னும் வலுப்பெற்றது. கணவனின் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லாதவள்- அல்லது அவளது நம்பிக்கைக்கு உகந்தவனாக அவன் இருப்பதில்லை- என்கிற உண்மையும் அவளுக்குப் புரிந்து போயிற்று. எனவே, காமாட்சி அவனிடமிருந்தான தனது பாதுகாப்புக்குக் கட்டாயம் உத்தரவாதம் அளிப்பாள் எனும் நம்பிக்கையும் நிம்மதியும் அவளுக்கு ஏற்பட்டன. எனினும், எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும் எனும் அச்சமும் அவளுக்கு வந்தது.

பங்கஜம் அடுக்களைத் தொட்டிமுற்றத்துக்கு அருகே நின்று தானும் காப்பி குடித்தாள். ‘நல்ல காப்பி குடித்து எத்தனை நாளாயிற்று!’ என்று தனக்குள் திருப்தியுற்றாள்.

“காமாட்சி! அவாளுக்கு எல்லாம் விவரமாச் சொல்லி யிருக்கியோல்லியோ ?”

“எதை பத்தின்னா ?”

“பத்து மணிக்கு நான் சாப்பிட்டுட்டுக் கெளம்பிடுவேன்னு ?”

“சொல்லி யிருக்கேன்.. .. இத பாரு, பங்கஜம்! ரசம், கொழம்புன்னு ரெண்டும் பண்ணவேண்டாம். ஏதாவது ஒண்ணு பண்ணினாப் போறும். கூட, ஒரு கறியோ, கூட்டோ பண்ணிடு. சாதாரணச் சமையல்தான். ஒண்ணும் கஷ்டமே இல்லே.. ..”

“சரி, மா.. சரி!”

“என்ன சமையல் பண்றதாயிருக்கே ?”

“நீங்க எப்படிச் சொல்றேளோ, அப்படி.”

“தக்காளி ரசம் பண்ணி உருளைக்கிழங்குக் காரக்கறி பண்ணிடு. அப்பளம் பொரிச்சுடு.”

“சரி.”

“எந்தெந்த சாமான் எதெதுல இருக்குன்னு அவாளுக்குத் தெரியவேண்டாமா ?”

“எல்லாம் அவளே பாத்துப்பா.”

“எதுக்கும் நானே சொல்லிட்றேன். தேட்றதுல நேரம் வீண்தானே ஆகும் ?”

அவன் சட்டென்று அடுக்களைக்குள் வந்துவிட்டான். உள்ளே வந்த பிறகு வேட்டியைத் துக்கிக் கட்டிக்கொண்டான். பெண்களுக்கு எதிரில் வேட்டியை இறக்கிக்கொள்ளும் ஆடவர்களைத்தான் அவள் அறிந்திருந்தாள். தழையத் தழைய இருந்த வேட்டியைத் தொடைக்கு மேல் உயர்த்திக் கட்டிக்கொண்டு- ஆனால் காமாட்சியின் பார்வையில் படாதபடி ஒதுக்கமாய்- அவன் நின்றது பங்கஜத்தின் மனத்தில் அச்சத்தையும் அருவருப்பையும் கிளர்த்தியது.

“நான் மொதல்ல எல்லாத்தையும் தொறந்து காட்றேன்.”

அவள் துணுக்குற்று, நெஞ்சு அடித்துக்கொள்ள நகர்ந்து, கூடத்தில் படுத்தபடி அடுக்களைப் பக்கமே பார்த்துக்கொண்டிருந்த காமாட்சியின் பார்வைக்குத் தான் தென்படும்படி நுழைவாயில் பக்கமாக நின்றுகொண்டாள்

“இதோ, இதுல துவரம் பருப்பு இருக்கு. இதுல கடலைப் பருப்பு. இதுல பயத்தம் பருப்பு. இது தட்டைப்பயறு.. .. ஏண்டி, காமாட்சி! கறிவடாம் தீந்து போச்சுன்னு நினைக்கறேன். நாலஞ்சுதான் இருக்கு டப்பாவில. துடைச்சு வைக்க வேண்டாம்னு கொஞ்சம் மிச்சம் வெச்சேன். இப்ப வெயில் காயறது. இதுதான் வடாம் எட்ற சீசன்.. .. கொஞ்சம் வடாம் இட்டு வெச்சுடுங்கோ. என்ன ?”

பங்கஜம், ஈனக் குரலில், “சரி,” என்றாள்.

“நம்மாத்து மொட்டை மாடியிலேயே எடலாம். உளுத்தம் பருப்பு இதோ இந்த டப்பாவில இருக்கு, பாருங்கோ. ஒண்ணரை வீசை இருக்கு. நேத்துதான் வாங்கிண்டு வந்தேன். ரெண்டு ஒழக்கு நனைச்சேள்னா சரியாயிருக்கும்.. மத்தப்படி அஞ்சரைப் பெட்டியில கடுகு, மெளகு, சீரகம், வெந்தயம் இதெல்லாம் போட்டு வெச்சிருக்கேன்.. இவ படுத்துண்டதிலேர்ந்து நாந்தான் இந்தாத்து நளன்! நானே சமைச்சு சமைச்சுச் சாப்பிட்டுண்டு இருந்ததுல நாக்கே செத்துப் போயிடுத்து. நீங்க எப்படி ? நன்னாச் சமைப்பேள்தானே ? நான் ரொம்பப் பசியோட இருக்கேன்! இவ படுகிடையா விழுந்த அன்னிக்கு ஆரம்பிச்ச பசி!”

கடைசி வாக்கியத்தை மட்டும் அவன் தன் குரலைத் தணித்துக்கொண்டு சொன்னதில் துல்லியமான விரசம் தெறித்தது.

பங்கஜம் எச்சில் விழுங்கினாள்: ‘கடங்காரா! கட்டேல போக! எச்சல் நாயே! பொண்டாட்டி ஆறு மாசம் படுத்துட்டா இப்பிடியா லோலோன்னு அலைவா மனுஷா! புருஷா படுத்துட்டா பொம்மனாட்டிகள்ளாம் இப்பிடியா அலையறா ? சீ! இந்தாத்துலேர்ந்து உருப்படியா மீளுவேனோ நான் ? கடவுளே! காப்பாத்து!’

“நீங்க இங்க வாங்கோன்னா. எல்லாம் அவ பாத்துப்பா..”

“முக்கியமானதை விட்டுட்டேனே. அரிசி மட்டும் கூடத்துல நெல்லுக் குலுக்கையில இருக்கு. சின்னக் குலுக்கை. அப்பப்ப ஒரு வாரத்துக்கு வேண்டியதை எடுத்து அதோ அந்தத் தகர டின்ல வெச்சுண்டுட்டா நல்லது. இப்ப சத்தியா டின்லதான் போட்டு வெச்சிருக்கேன். இட்லிக்குப் புழுங்கலரிசி அதோ அந்தத் தவலையில் இருக்கு. ரைட், நான் வறேன்.”

‘ரைட்டா ? நீ “ராங்”டா! நீ வரவே வேண்டாண்டா, ராஸ்கல்! போய்த்தொலை.’

“சரி” எனும் ஒற்றைச் சொல் ஈனக்குரலில் பங்கஜத்திடமிருந்து உதிர்ந்தது.

காமாட்சியின் பார்வையில் படுவதற்கு முன்னால் வேட்டியைத் தழைத்துக் கணுக்கால் வரை தொங்கவிட்டுக்கொண்டான். அவன் வெளியேற மிகவும் அப்பால் நகர்ந்து வழி விட்ட பங்கஜம் ஓரத்து விழிகளால் கூடத்துப் பக்கம் கவனித்தாள். காமாட்சியின் முகம் சிடுசிடுவென்று இருந்தது தெரிந்தது. ஒரு வகையில் பங்கஜத்துக்கு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ‘நாளைக்கு ஏதாவது தப்புத் தண்டா நடந்தாலும்- என்னோட ஜாக்கிரதையை மீறி ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும்-ஆனா, நடக்க விடக்கூடாது- இவ என்னைச் சந்தேகப்படமாட்டா! அது போறுமே! ஆம்படையானோட லட்சணம் நன்னாவே தெரிஞ்சிருக்கு இவளுக்கு!’

சமையல் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்துவிட்டது.. அப்பளம் தேங்காய் எண்ணெய்யில் பொரிந்துகொண்டிருந்த வாசனையிலிருந்து அது முடிந்து விட்டதைப் புரிந்துகொண்ட நாகலிங்கம், திண்ணையில் இருந்தபடியே, “என்ன! சாப்பிட வரலாமா ?” என்று கூவினான்.

“வரலாம்னு சொல்றேளா ?” என்று பங்கஜம் காமாட்சியைக் கேட்டாள்.

“வரலான்னா! வாங்கோ.”

பங்கஜம் அடுப்பை அணைத்தாள்.

“பங்கஜம்! இப்படி, கூடத்துலேயே எலையைப் போட்டுடு.”

பங்கஜம், ‘நல்லவேளை. அடுக்களையிலேயே வந்து அது உக்காருமோன்னு பயந்து செத்துண்டு இருந்தேன்,’ என்றெண்ணியவளாய், அவசரமாய் இரண்டு இலைகளை எடுத்துவந்து போட்டாள்.

“என்னை மெதுவாப் பிடிச்சுப் பலகையில உக்கார வெச்சுடு.”

“சரி!”

காமாட்சி உட்கார்ந்த நேரத்தில் நாகலிங்கம் வந்தான்.

“இதென்ன, புதுசா கூடத்தில நேக்கும் சேத்து எலை போட்டிருக்கு ?”

“நாந்தான் கூடத்துல போடு, அடுக்களையில வேண்டாம்னேன். அங்கே எங்கே தாராளமா எடமிருக்கு ?”

“என்ன, காமாட்சி இது! நான் சாப்பிட்டுண்டு இருக்கச்சே யாராவது வருவா.”

“போது போனா போது விடிஞ்சா யாராவது வந்துண்டுதானே இருக்கா!!” என்று, ‘இதென்ன பொய் ?’ என்கிற நக்கல் தொனிக்கப் பதிலிறுத்த காமாட்சி, “எல்லாம் இங்கேயே சாப்பிடலாம். கூடத்துக்கும் அடுக்களைக்குமா நடந்து பரிமாறிண்டிருக்க வேண்டாம். அப்படி யாராவது வந்தா திண்ணையில உக்காந்துக்கறா. அவ்வளவுதானே ?”

பங்கஜம் பரிமாறத் தொடங்கினாள். ஓரத்து விழிகளால் நாகலிங்கத்தின் முகக் கடுப்பைக் கவனித்தாள். இருவரும் தனித் தனியாகத்தான் சாப்பிடுவது வழக்கம் என்பதையும், இன்று அவனுக்கு அவள் தனியாகப் பரிமாறுவதைத் தவிர்க்கும் பொருட்டே அவளும் அவனுடன் சாப்பிட உட்கார்ந்துவிட்டாள் என்பதையும் புரிந்துகொண்ட பங்கஜம் மனத்துள் சிரித்துக்கொண்டாள்.

‘இப்படிப்பட்ட ஆம்படையானை ஆத்துல வேணாக் கட்டிக் காப்பாத்தலாம். “வெளியில’” போனா இவளால எப்படிக் கண்டுபிடிக்க முடியும் ? இல்லே, கண்டே பிடிச்சாலும், என்ன செய்ய முடியும் ?’

நாகலிங்கம் தன் முகக் கடுப்பை மறைத்துக்கொள்ளாமலே இலை முன் அமர்ந்தான். இலையில் முதலில் விழுந்த உருளைக் கிழங்குக் கறியிலிருந்து ஒரு துண்டத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, “பிரமாதம்!” என்றான்.

பங்கஜம் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சட்டெனத் தலையைக் குனிந்துகொண்டு உள்ளே போனாள்.

“சித்த சும்மாருங்களேன். அவ ரொம்பக் கூச்சப்பட்றா. அசல் புருஷா புகழ்ந்தா சில பொம்மனாட்டிகளுக்குப் பிடிக்காது !”

“இதென்னடி வம்பாயிருக்கு ? சமையல் நன்னாருந்தாக் கூட ஒரு நல்ல வார்த்தை சொல்லக் கூடாதா ? அது ஒரு தப்பா ?”

“பெரிய தப்புன்னுட்டு இல்லேன்னா. அசலாத்துப் புருஷா புகழ்ந்தா ஒரு பொண்ணுக்கு- அதுலயும் இப்படி ஆயிட்டவளுக்கு- ஒரு கூச்சம் வருமோன்னோ ?”

“நீ வேற. நான் ஏதோ அவளோட தமையன் மாதிரிப் பேசினா, அதைக் கூடத் தப்புங்கறே!”

“சரி, சரி.”

அப்போது வாசல் கதவை யாரோ தட்ட, பங்கஜம் குரல் கொடுத்தபடி எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். வெளியே இருளடித்த முகத்துடன் பாகீரதி மாமி நின்றுகொண்டிருந்தாள்.

“என்ன, மாமி ? இப்படி வெய்யில்ல வந்திருக்கேள் ?” என்று கேட்ட பங்கஜம் அவள் வந்திருந்தது தனக்கான ஏதோ அவசரச் சேதியுடன்தான் என்பதைப் புரிந்துகொண்டு விழிகள் விரிய நின்று போனாள்.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 4

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பத்மநாபனும் காவேரியும் அன்றிரவு முழுவதையும் கிட்டத்தட்ட உறங்காமலே கழித்தார்கள் என்று சொல்லலாம். அப்போதுஅவர்களிடையே நடந்த உரையாடல்கள் வத்தலப்பாளையத்துக்குப் போய்ச் சம்பந்தம் பேசிவிட்டு வந்து விட்டாற்போலவும், எல்லாம் கூடி வந்து விட்டாற்போலவும், திருமணநாள் குறிக்கவேண்டியதுதான் பாக்கி என்பது போலவும் ஒரு மாயத்தைத் தோற்றுவித்துக்கொண்டிருந்தன. எல்லாம் முடிவாகிவிட்டது மாதிரிப் பேசிக்கொண்டிருந்தாலும், இடையிடையே, ‘என்னமோ எல்லாம் முடிவாயிட்ட மாதிரித் திட்டம் போட்டுண்டு இருக்கோமேன்னா ? அந்தப் பிராமணன் சம்மதிக்கணுமே ? அதுக்கு அப்புறந்தானே இந்தப் பேச்செல்லாம் ?’ என்று காவேரியும், ‘எள்ளுப் பிராமணன்* கதை மாதிரி அசட்டுப் பிசட்டுன்னு பேசிண்டிருக்கோம்! இன்னும் அவாளைப் போய்ப் பார்க்கவே இல்லே. அதுக்குள்ள கணக்கு, வழக்கு, சீர் செனத்தின்னு பினாத்திண்டு கிடக்கோமே!’ என்று அவரும் அவ்வப்போது மாற்றி மாற்றிச் சொல்லிக் கொள்ளவும் தவறவில்லை.

“ஏன்னா! ரொம்பப் பணக்காரான்னா எக்கச்சக்கமாக் கேப்பாளோ ?”

“கேக்கத்தான் செய்வா. அதுலயும் நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணுங்கிறதுனால, மத்தவா கிட்ட கேக்கிறதை விட நெறையவே கேட்டாலும் கேப்பா. ஆசை யாரை விட்டுது ? எது எப்படி யானாலும், இந்த இடம் ரொம்ப நல்ல இடம்டி காவேரி. அந்த தேவராஜ அய்யர் தான தர்மமெல்லாம் பண்றவர்னு கேள்விப்பட்டிருக்கேன். தானதர்மம் பண்ற மனசு இருக்கணும்னா அவா நல்லவாளாத்தானே இருக்கணும் ? மனுஷத்தனம் நிறையவே இருக்கும் அவா கிட்ட. இல்லியா ?”

“ஆமாமா. நீங்க சொல்றது சரியாத்தான் இருக்கும். ஆனா ஒண்ணு. கல்யாணத்துலேயே எல்லாப் பணத்தையும் வேட்டு விட்டுடக் கூடாதுன்னா! கல்யாணத்தோட போயிடுமா ? அப்புறம், ஆடி, ஆறாம் மாசம், தலை தீபாவளி, லொட்டு லொசுக்குன்னு இன்னும் எத்தனையோ இருக்கே! அதுக் கெல்லாமும் ஒதுக்கி வெச்சுட்டு பாக்கியைத்தான் கல்யாணத்துல செலவழிக்கணும். என்ன நான் சொல்றது ?”

“நீ சொல்றது ரொம்ப சரி. நானே அப்படித்தான் நினைச்சுண்டிருக்கேண்டி, காவேரி. எடுத்த எடுப்பிலேயே தாம்தூம்னு எல்லாத்தையும் செலவழிச்சுடக்கூடாது.”

“ஆமா ? அவா எவ்வளவு பணக்காரான்னு உத்தேசமா ஏதாவது தெரியுமோ உங்களுக்கு ?”

“நான் கேள்விப்பட்ட வரையிலே வத்தலப்பாளையத்துலே அவர்தான் பெரிய பணக்காரர். அஞ்சாறு சொந்த வீடுகள் இருக்காம் அவருக்கு. எல்லாம் பெரிய பெரிய வீடுகள். நன்செய், புன்செய்னு ஏகப்பட்ட நெலம் வேற இருக்காம். நிறைய ரொக்கச் சேமிப்பும் இருக்குன்னு கேள்வி.”

“அப்ப, இந்த இடம் திகைஞ்சுதுன்னா, நம்ம துர்க்கா அதிருஷ்டக்காரிதான்.”

“ஆமா. வேற யாரும் போய்க் கேக்கறதுக்கு முன்னால நாம முந்திக்கணும். அதான் நாளைக்கே கெளம்பலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. .. அது சரி, துர்க்காவுக்குத் தெரியுமா இந்த விஷயம் ?”

“லேசாச் சொல்லி வெச்சிருக்கேன். பக்கத்து ஊருக்கு நீங்க அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க நாளைக்குப் போறதா இருக்கேள்னு மட்டும் சொன்னேன். யாரு, என்னங்கிறதெல்லாம் அவளுக்குத் தெரியாது.”

“அவ பொல்லாதவடி, காவேரி. சாஸ்திரிகள் சொன்னதை யெல்லாம் கவனிச்சுக் கேட்டுண்டிருந்திருப்ப.”

“ஆமாமா. பொல்லாதவதான்! வள்ளியைப் பத்தி அவளுக்கு ஏதோ குறுகுறுப்புன்னு தோண்றது.”

“ஏன் ? ஏதானும் கேட்டாளா என்ன ?”

“ஆமா”.

“என்கிட்ட கூட ஏதோ கேக்க ஆரம்பிச்சா. நாந்தான் ஒரு அதட்டல் போட்டு கேக்கவே விடாம பண்ணிட்டேன். அது சரி, என்ன கேட்டா வள்ளியைப் பத்தி ?”

“ .. .. ‘அந்த வள்ளி எதுக்கும்மா நம்மாத்துக்கு வந்து வந்து பணம் வாங்கிண்டு போறா ? அவதான் இங்க வேலை கூடச் செய்யறதில்லையே ? அவளுக்கு நாம எதுக்குப் பணம் குடுக்கணும் ?’ அப்படினு கேட்டா.”

“அதுக்கு நீ என்ன சொன்னே ?”

“ .. .. ‘ரொம்ப நாளுக்குமுந்தி, உங்க பாட்டி காலத்துல அவ இந்தாத்துல வேலை செஞ்சவ. நான் வந்தப்புறம் வேலைக்காரியை நிறுத்திட்டா உங்க பாட்டி. எப்பவோ வேலை செஞ்சதை வச்சுண்டு இப்படி அடிக்கடி வந்து தொந்தரவு பண்றா’ அப்படின்னேன். ‘எப்பவோ வேலை செஞ்சதுக்கு இப்ப எதுக்கு நாம பணம் தரணும் ?’னு கேட்டா. ‘உங்கப்பாவைப் போய்க் கேட்டுக்கோ’ன்னுட்டேன். உங்க கிட்ட எதுவும் கேக்கல்லியே ?”

“இல்லே. கேக்கல்லே.”

“அப்புறம் இன்னொண்ணு. நம்ம கிட்ட நகைகளுக்குப் பஞ்சமே இல்லேன்னா. அந்தக் காலத்து நகைகள். எல்லாமே கெழங்கு கெழங்கா இருக்கு. நெத்திச் சுட்டியிலேர்ந்து கால் கொலுசு வரைக்கும் சகலமும் இருக்கு. காசு மாலை இருக்கு, ஒட்டியாணம் கூட இருக்கு.”

“ஆனா, எல்லாத்தையும் குடுத்துடக் கூடாதுடி, காவேரி. உனக்குன்னு கொஞ்சம் வெச்சுக்கணும் நீ!”

“அதெப்படி வெச்சுக்க முடியும் ? கழுத்துல ஒரு சங்கிலி, கையில நாலு வளையல்னு கொஞ்சமாத்தான் வெச்சுக்க முடியும். எல்லா வித நகைகளும் நாம போடணும்னு அவா எதிர்பாப்பாளேன்னா ? அப்ப குடுத்துத்தானே ஆகணும் ?”

“உன்னோடதுகளை அழிச்சுப் புதுசாப் பண்ண வேண்டி வருமோல்லியோ ? அப்ப எடை குறைச்சலாப் பண்ணிட்டாத் தீந்துது.”

“நகைகள்ளாம் எவ்வளவு எடையில இருக்கணும்னு அவாளே கண்டிஷன் போடுவாளோ என்னமோ!”

“பாக்கலாம். மொத்தம் இத்தனை பவுன்னுதானே சொல்லுவா ? அதுக்கு ஏத்த மாதிரி நாம பண்ணிட்டாப் போச்சு.”

“என்னோட நகைகள்ளாமே மொத்தமும் அம்பது பவுன்தான் தேறும். எழுபது எம்பதுன்னு கேட்டா ?’

“அப்ப யோசிக்கலாம்.”

“ஏன்னா~! நமக்குச் சொந்த மனுஷா அவ்வளவாக் கிடையாது. அதனால அவாத்துக் கூட்டந்தான் இருக்கும்.”

“நம்ம ஊர் அக்கிரகாரத்துக் கூட்டத்தை விட்டுட்டியே ?”

“அக்கிரகாரத்துக் கூட்டம் மட்டுந்தானா ? இந்த ஊர் முழுக்கவும் சாப்பாடு போட வேண்டாமா ?”

“ஆமாமா. போடத்தான் வேணும். அய்யர் வீட்டுக் கல்யாணம்னுட்டு எல்லாப் பசங்களும் நாக்கைத் தீட்டிண்டு காத்துண்டுன்னா இருப்பா! அவாளை ஏமாத்தலாமா ? பாவம். ஏழை ஜனங்கள். அதுகளுக்குச் சாப்பாடு போட்டா நமக்கும் புண்ணியந்தானேடி, காவேரி ? சின்னஊ ர்தானே ? மிஞ்சி மிஞ்சிப் போனா எரநூறு குடும்பங்கள் இருக்கும். சாப்பிட்டுட்டுப் போகட்டும்டி, காவேரி.”

“தாராளமா! நான் ஒண்ணும் வேணாங்கல்லியே!”

“அப்புறம் துர்க்காக் குட்டிக்கு கல்யாணம்னா என்ன, ஏதுங்கிற விவரமெல்லாம் நாசூக்காச் சொல்லிவை. அக்கம் பக்கத்துல யார் கூடவும் நாம அவளைப் பழக விட்றதில்லே. பொத்திப் பொத்தியே வளத்துட்டோம். மத்தப் பொண்ணுகளோட சகவாசமும் அவ்வளவா இல்லே.”

“ஏன் இல்லாம ? இவ வெளியில போகல்லேங்கிறதுனால சகவாசம் இல்லேன்னு ஆயிடுமா ? அதான் இவளைத் தேடிண்டு வருதுகளே குட்டிகள் ?”

“அப்படியா ?”

“ஆமா. ராமசுப்பையர் பொண்ணு நீலா வறா. அப்புறம் சேஷாத்திரி அய்யங்காரோட பொண்ணு வைதேகி வறா. ரெண்டும் இவளை விட ஒரு வயசு பெரிசுகள். மூணும் உக்காந்துண்டு கூடிக் கூடிப் பேசறதுகளே! ஒண்ணுக்கொண்ணு எல்லாம் பேசிக்கும்களாயிருக்கும்!”

“எதுக்கும் நீயும் லேசாச் சொல்லி வை. அப்புறம், உன்னாட்டமா நிரட்சரகுட்சியா இருந்து அந்தப் பையனை படுத்தி வைக்கப்போறா!”

“சரி, சரி. இப்ப எதுக்கு அதெல்லாம் ?”

பத்மநாபன் சத்தம் போட்டுச் சிரித்தார்.

‘நடு ராத்திரி பன்னண்டு மணி ஆறது. இத்தருவாயில எதுக்கு இப்படி அவுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறேள் ? போறும் பேசினது. காலம்பர சீக்கிரம் எழுந்திருக்கணும். அடைமாவு மீந்திருக்கு. அதுல உப்புமாக் கிளறிக் குடுத்துட்றேன். நீங்க சாப்பிட்டுட்டு எட்டு மணி வாக்கில கெளம்பினா சரியா யிருக்கும்.”

“சரி. வெங்காயம் போட்டுப் பண்ணு. அப்பதான் புளிப்பு அடங்கும். நேத்து மாவாச்சே ?”

“நாக்கும் மூக்கும் நாலு முழம் உங்களுக்கு. துர்க்காவும் உங்க மாதிரியே இருக்கா. அதுக்காகவே அவ வாக்கப்பட்ற எடம் பெரிய எடமா யிருக்கணும்னு நேக்குக் கவலை. நன்னா சாப்பிடலாமோல்லியோ ?”

“சாப்பாடும் முக்கியந்தான். ஆனா அது ஒண்ணு கிடைச்சாப் போறுமா என்ன! தாலி கட்டின புருஷன் அனுசரணையா யிருக்கணும். மாமியார்க்காரி படுத்தாதவாளா யிருக்கணும். இதெல்லாமும் சரியா அமைஞ்சாத்தான் அது நல்ல வாழ்க்கைன்னு சொல்ல முடியும். வெறுமனே நாலு வேளையும் மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டா மட்டும் போாறுமா! மத்ததெல்லாமும் சரியா அமையல்லேன்னா, பஞ்சபட்ச பரமான்னம் கூட வேம்பாக் கசக்குமேடி, காவேரி ?”

“நீங்க சொல்றது வாஸ்தவந்தான்னா! சாாப்பாடு, துணிமணி, நகைநட்டு இதெல்லாம் அன்பான புருஷனுக்கு அப்புறந்தான்!”

“அந்த விஷயத்துல நீ அதிருஷ்டக்காரிதாண்டி, காவேரி. அன்பான புருஷன்!”

“அதை நான்னா சொல்லணும் ? நீங்களே பீத்திக்காதங்கோ!”

“நீ சொல்ல மாட்டேன்றியே! அதான் நானே சொல்லிக்கிறேன்!”

“நீங்க வேணா அன்பான புருஷன்னு சொல்லிக்கலாம். ஆனா உங்கம்மா இருந்தாளே! அடியம்மா! ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்குப் போறுண்டியம்மா. நான் இப்படிச் சொல்றது பாவமா யிருக்கலாம். ஆனாலும் உண்மை அதுதான். உங்கம்மா போய்ச் சேந்ததுக்கு அப்புறந்தான் நேக்கு விடுதலை!”

பத்மநாபன் பதில் சொல்லாமல் இருந்தார். திருமணம் ஆன புதிதில் மருமகளைத் தனக்குப் பக்கத்தில் படுக்கவைத்துக்கொண்டவள் தன் அம்மா என்பதுதான் மற்ற யாவற்றுக்கும் முன்னால் அவருக்கு ஞாபகம் வந்தது. உண்மையைச் சொல்லப் போனால், காவேரியைக் காட்டிலும் அவர்தானே அதற்காக அவளை அதிக அளவில் வெறுத்தார்!

‘என்ன பொம்மனாட்டி ஜென்மங்களோப்பா! பத்து மாசம் சுமந்ததையும், உடம்பு நோகப் பெத்ததையும் சொல்லிச் சொல்லிக் காட்டியே கொழந்தைகளை வளைச்சுப் போட்ற ஜாதி!’ என்று அவருக்கு அந்த நேரத்தில் நினைக்கத் தோன்றியது. ‘மிருகங்கள் கூடத்தான் பெத்துப் போட்றதுகள். இப்படியா அதுகள்ளாம் குட்டிகளோட வாழ்க்கையை நாசமாக்குறதுகள்! கொழந்தைகள்னாலே, அடிமைகள்னு நினைக்கிற அப்பா-அம்மாக்கள்! நல்ல வேளை. காவேரியும் அப்படி இல்லே. நானும் அப்படி இல்லே.. ..’ இப்படி நினைத்ததும் அவருக்கு நெஞ்சில் சுருக்கென்று சின்னதாய் ஓர் உறுத்தல் விளைந்தது. தலையைக் குலுக்கிச் சமாளித்துக்கொண்டு, தமது சிந்தனையை வேறு புறம் நகர்த்தினார்.

“நாளைக்கு தேவராஜ அய்யராத்துக்குப் போறப்போ என்ன கொண்டு போகட்டும் ?” என்று ஒரு நிமிட இடைவெளிக்கு பிறகு அவர் வினவியதை அவர் பேச்சை மாற்றுவதாகப் பொருள் செய்துகொண்ட காவேரி, “என்ன இருந்தாலும் அவா உங்கம்மா ! செத்துப் போயிட்டவா வேற! அவாளைப் பத்தி இப்படித் துடுக்குத்தனமா நான் பேசி யிருக்கப் படாது,” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லே. நான் ஒண்ணும் தப்பா எடுத்துக்கல்லே. மனுஷா செத்துப் போயிட்டதால அவா பண்ணின தப்பெல்லாம் இல்லேன்னு ஆயிடுமா! .. .. அது போகட்டும், அவாத்துக்கு என்ன வாங்கிண்டு போறது ?”

“வழக்கமா எடுத்துண்டு போற வாழைப் பழந்தான். ஆனா இப்ப மாம்பழக் காலமாயிருக்கிறதால, மாம்பழமும் வாங்கிண்டு போலாம்.”

“வாழைப் பழம் மட்டும்தான் நேக்குத் தோணித்து. மாம்பழம் தோணவே இல்லே, பாரேன். ரெண்டுமே வாங்கிண்டு போறேன்.”

“சரி. தூங்குங்கோ. நானும் தலையைச் சாய்க்கிறேன்.”

இரண்டு நிமிடங்களுக் கெல்லாம் இருவரும் மாற்றி மாற்றி விட்ட குறட்டையொலி அந்தக் கூடத்தை நிறைத்தது.

.. .. .. பங்கஜம் தூங்காமல் தன் கிழிந்து போன பாயில் புரண்டுகொண்டிருந்தாள். பஞ்சாட்சரம் லொக்கு லொக்கென்று இருமிக்கொண்டிருந்த ஓசை இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது. அவள் தூங்காமல் இருந்ததற்கு அது மட்டுமே காரணமன்று. மறு நாள் வத்தலப்பாளையத்துக்கு அவள் போக வேண்டியது இருந்தது. செங்கல் பாளையத்திலிருந்து வத்தலப்பாளையம் இரண்டு கல் தொலைவில் இருந்தது. காலை எட்டு மணி அளவில் அவள் அங்கு இருக்கவேண்டும். பக்கத்து வீட்டுப் பாகீரதி மாமி சொல்லித்தான் அந்த இடத்தில் அவளை மறுநாள் சமையல் வேலைக்கு வரச் சொல்லி இருந்தார்கள். சாப்பாடு போட்டு ஏதோ கொஞ்சம் சம்பளமும் கொடுப்பதாகச் சொல்லி யிருந்தார்கள். எவ்வளவு என்பதை அவர்கள் சொல்லவில்லை என்பது பங்கஜத்தை உறுத்தியது. நேர்மையான மனிதர்களாக இருந்தால், இன்ன சம்பளம் என்பதைச் சொல்லி இருக்க மாட்டார்களா என்று தோன்றியது. புருஷனும் பெண்டாட்டியும் ஒரே ஒரு நான்கு வயதுக் குழந்தையுமாய் மூன்றே பேர்கள் அடங்கிய குடும்பம் என்று பாகீரதி மாமி சொல்லி யிருந்தாள். அதற்கு முந்திய நாள்தான் அவளை அந்த வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் இடத்தை மாமி காட்டி யிருந்தாள். அவள் போன நேரத்தில் புருஷன்காரன் இல்லை. படுத்த படுக்கையில் அந்தப் பெண்தான் இருந்தாள். நான்கு வயதுப் பிள்ளை கூடத்தில் தனியாக உட்கார்ந்துகொண்டு தனக்குத் தானே பேசியபடி ஒரு பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தது.

‘நேக்கு முடக்குவாதம்மா. இன்னும் கொஞ்ச நாளாகும் நான் எழுந்து நடமாட்றதுக்கு. ஒரு வருஷமாகுமோ, இல்லே, ரெண்டு வருஷமாகுமோ, அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். அது வரையில நீ இங்க சமையல் வேலை பண்ணலாம். நான் எழுந்து நடமாடத் தொடங்கிட்டா உன்னை நிறுத்திடுவோம். இப்பவே சொல்லிட்றேன். அப்புறம் வேலையை விட்டு திடார்னு நிறுத்திட்டதா உனக்கு எங்க மேல மனத்தாங்கல் வரக்கூடாதில்லியா ? அதான் இப்பவே சொல்றேன். கை,கால் அலம்பிக்கிறதுக் கெல்லாம் என்னைக் கையைப் பிடிச்சுக் கூட்டிண்டு போனணும். எங்க ஆத்துக்காரர் ஆத்துல இருக்கிறப்ப, அவர் பாத்துப்பார். அவர் ஆத்துல இல்லாத நேரங்கள்ள நீதான் கூட்டிண்டு போகவேண்டி யிருக்கும். அதையும் இப்பவே சொல்லிட்றேன்,’என்று காமாட்சி எனும் அந்தப் பெண் திக்கித் திக்கிப் பேசினாள். கச்சலாக இருந்தாள். உடம்பில் கிள்ளி எடுக்கவும் சதையே இல்லை. முகத்தில் விழிகள்தான் பெரியவையாக இருந்தன. அவளைப் பார்க்கவே பங்கஜத்துக்குப் பாவமாக இருந்தது

“அதைப் பத்தி என்னம்மா ? உடம்பு சரி யில்லாதவாளுக்கு உதவி பண்ணினாப் புண்ணியந்தானே ? .. .. அப்புறம் சம்பளம் எவ்வளவுன்னு.. ..’

‘குறைச்செல்லாம் குடுத்து ஏமாத்த மாட்டார்ம்மா எங்காத்துக்காரர். ஏதோ பாத்துக் குடுப்பார். நீ எந்த அளவுக்குச் செய்யறேங்கிறதைப் பொறுத்துத் தருவார். எவ்வளவுங்கிறதை நேக்கே அவர் சொல்லல்லே!’

பாகீரதி, ‘ஒத்துக்கோம்மா, இந்தப் பட்டிக் காட்டில சமையலுக்கு ஆள் வெச்சுக்கிறவாளே கிடையாது. ஏதோ உன்னோட நல்ல காலம் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. ஒத்துக்கோ. உன் ஒருத்தியோட வயித்துப்பாட்டுக்கு ஆச்சே! அதைப் பாரும்மா, மொதல்ல. அப்புறம் உங்கப்பாவைப் பத்தி யோசிக்கலாம்,’ என்று அவளைத் தூண்டினாள்.

‘சரி, மாமி.’

‘நான் ஒண்ணும் மாமி இல்லே. உன்னை விடவும் சின்னவளாத்தான் இருப்பேன்.’

‘ஆனாலும் பேரு சொல்லி எப்படிக் கூப்பிட முடியும் ? நான் வெறும் சமையல்காரி. நீங்க எனக்குச் சம்பளம் குடுக்கிறவாளாச்சே ?’

‘சரி. எப்படியோ கூப்பிடு. ஆனா நிமிஷத்துக்கு நிமிஷம் மாமி மாமிங்காதே! என்ன, தெரிஞ்சுதா ? அதுலயும் எங்காத்துக்காரர் முன்னால- முக்கியமா’

‘சரி, மா.. .. சரி!’

‘பாகீரதி மாமி எல்லாம் சொன்னா. உங்காத்துக்காரர் உன்னைத் தள்ளி வெச்சுட்டாராமே! பொறந்த கொழந்தைகளும் தவறிப் போயிடுத்துன்னு சொன்னா.’

‘ஆமா.’

‘எங்காத்துக்காரர் காலம்பர பத்து மணிக்குச் சாப்பிட்டுட்டுக் கெளம்பிப் போனார்னா, மத்தியானம் மூணு மணிக்குத்தான் திரும்புவார். அப்புறம் கூட்டாளிகளோட உக்காந்துண்டு திண்ணையில சீட்டாடுவார். காசு வெச்செல்லாம் இல்லே. சும்மா பொழுது போக்காத்தான். உண்மையைச் சொல்லிட்றேனே. என் கொழந்தை கொஞ்சம் வாலு. துறுதுறுன்னு இருப்பான். அப்படி இப்படித் திரும்புறதுக்குள்ள எதையானும் கொட்டிக் கவுத்து வெஷமம் பண்ணிடுவான். அவனைச் சமாளிக்கிறதுக்குத்தான் முக்கியமா உன்னை வெச்சிருக்கோம்னு நெனச்சுக்கயேன். மத்தப்படி இங்கே வெட்டி முறிக்கிற மாதிரியான வேலை ஒண்ணும் அவ்வளவா இருக்காது.’

‘வேலை இருந்தாத்தான் என்ன ? செய்யறதுக்குத்தானே வந்திருக்கேன் ?’

இரவெல்லாம் தங்களுக்குள் நடந்த உரையாடல் பற்றியே நினைத்துக்கொண்டிருந்த பின் பங்கஜம் பன்னிரண்டு மணிக்குப் பிறகு உறங்கிப் போனாள்.

.. .. .. அவள் அந்த வீட்டுக்குள் நுழைந்த போது காலை மணி ஏழரை. பங்கஜம் காமாட்சியிடமிருந்து குறிப்புகள் பெற்றுக் காப்பி போட முற்பட்டாள். அவள் கணவன் கொல்லைப் புறத்தில் இருந்தது தெரிந்தது. சிறிது நேரங்கழித்து அவன் ஏதோ பாட்டைச் சீழ்க்கை யடித்துக்கொண்டு கூடத்துக்கு வந்தான்.

“கொல்லைப் பக்கம் போகணும். கூட்டிண்டு போறேளா ?” என்று காமாட்சி கேட்டதும், அவன் பதில் சொல்லாமல் ‘ம்’ கொட்டியதும் பங்கஜத்தின் செவிகளில் விழுந்தன.

அவள் கழுத்தைத் திருப்பிப் பார்த்த போது, அவன் அவளைத் தாங்கினாற்போல் பிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தது தெரிந்தது. அவனது ஆழமான பார்வை தன் மீது படிந்திருந்ததைக் கண்டதும் அவள் சட்டென்று தன் விழிகளை நகர்த்திக்கொண்டாள்.

* எள்ளுப் பிராமணன் கதை: திவசம் நடந்த ஒரு வீட்டில் அதை நடத்திவைத்த பிராமணர் சாப்பாட்டுக்குப் பிறகு அவ்வீட்டுத் திண்ணையில் சிரமபரிகாரம் செய்யப் படுத்தார். அப்போது திவசத்துக்கு உபயோகித்த சில எள்மணிகள் அவர் மீது ஒட்டியிருந்தன. அவற்றை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அவர் கற்பனையில் ஆழ்ந்தார்: ‘இந்த அஞ்சாறு எள்ளை வெதைச்சா எள்ளுச் செடி முளைக்கும். அப்புறம் அந்தச் செடிகள் பெரிசானாவிட்டு, அதோட விதைகளை மறுபடியும் வெதைச்சா இன்னும் நிறைய செடிகள் வளரும். அப்புறமென்ன ? நான் பெரிய எள்ளுத் தோட்டத்துக்கே சொந்தக் காரனாயிடுவேன். அதுக்கு அப்புறம் ஒரு எண்ணெய் வாணியனாவும் ஆயிடுவேன். பெரிய பணக்காரனாயிட்டதுக்கு அப்புறமும் இப்பிடி திவசச் சாப்பாட்டுக்காக வீடு வீடா அலைய வேண்டாமே! ஆத்துலயே சொகுசா உக்காந்துண்டு நன்னா நாலு வேளையும் சாப்பிடலாமே! ராத்திரியானா பஞ்சு மெத்தையில இன்னும் சொகுசாப் பொரளலாமே! ஆனந்தமா நித்திரை வருமே!’ -இப்படி நினைத்தவாறு தான் படுத்துக்கொண்டிருந்த திண்னையையே மெத்தையாகப் பாவித்துப் புரண்ட பிராமணர் உருண்டு பொத்தென்று தரையில் விழுந்து மண்டையை உடைத்துக்கொண்டாராம்.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

ஜோதிர்லதா கிரிஜா


“அம்மா! சாஸ்திரி மாமாக்கு கூஜாவில தீர்த்தம் தறியா ?” என்றவாறு வந்து நின்ற துர்க்காவைப் பார்த்துச் சிரித்த காவேரி, “ஆயுசு நூறு சாஸ்திரிகளுக்கு. இந்தா,” என்று கூஜாவில் குளிர்ந்த நீரும் தம்ளரும் கொடுத்தனுப்பிய பிறகு, கதவிடுக்கு வழியே எட்டிப் பார்த்தாள் புன்னகையுடன்.

கூஜாவை எடுத்துப் போய்த் துர்க்கா வைத்ததுமே, “நீ போய் உங்கம்மாக்கு அடுக்களையிலே ஏதாவது ஒத்தாசை பண்ணு, போ!” என்று பத்மநாபன் சொன்னது கேட்டதும் காவேரியின் முகத்துப் புன்னகை அகலமாயிற்று.

அடுக்களைக்கு வந்த துர்க்காவிடம், “நீ இனிமே அம்மாக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணணும்டி, துர்க்கா. நாளைக்கு உன்னோட புக்காத்து மனுஷா, ‘பொண்ணை வளத்திருக்கா, பாரு, தடித்தாண்டவராயி மாதிரி’ அப்படின்னு என்னைப் பத்திப் பேசப்படாது. வா, வா. மூணு வாழைக்காயை எடுத்துத் தோல் சீவு, பாப்போம்!” என்ற அம்மாவைப் பார்த்துத் துர்க்காவுக்குச் சிரிப்பு வந்தது. ‘ஏதொ எனக்குக் கல்யாணம் நிச்சியமே ஆயிட்ட மாதிரி பேசறாளே இந்த அம்மா!’

“அருவாமணையை முதல்ல அலம்பிக்கோ.”

“சரிம்மா.. .. அய்யோ!”

“என்னடி ? விரல்ல கிரல்ல வெட்டிண்டுட்டியா ?”

“ஆமாம்மா.”

“மாமியாராத்துல போய் இப்படி விரலை வெட்டிண்டா என்ன சொல்லுவா, தெரியுமோல்லியோ ? வேலையிலேர்ந்து தப்பிக்கிறதுக்காக விரலை வேணும்னே வெட்ட்ண்டுட்டேம்பாடி.”

துர்க்காவை உட்காரப் பணித்துக் காயத்துக்கு மருந்து போட்டபின், காவேரி தானே காயைத் தோல்சீவலானாள். காய்களின் மீது ஒட்ட வைத்திருந்த ரிப்பனை இழுப்பது மாதிரி அம்மா பரபரவென்று தோலை நீள நீளமாய் நீக்கியது துர்க்காவை அயர்த்தியது.

“சாம்பாருக்குப் போட்ற காயை நீள நீளமாத்தானே நறுக்கணும் ?”

“பரவால்லே. சமத்துதான்!”

“அதான் சாம்பார் அடிக்கடி பண்றியே! இது கூடத் தெரியாதாக்கும்!”

அப்போது, “காவேரி! மோர் ஒரு தம்ளர் எடுத்துண்டு வா,” என்று பத்மநாபனின் குரல் இரைந்து ஒலிக்க, காவேரி சற்றுப் பொறுத்து மோரை எடுத்துக்கொண்டு போய், சாஸ்திரிகளுக்கு முன்னால் முக்காலியில் வைத்துவிட்டு, “துர்க்காவுக்கு ஒரு நல்ல வரனாப் பாத்துச் சொல்லுங்களேன்!” என்றாள்.

மோரை எடுத்து வாய் வாயாகப் பருகி முடித்துவிட்டு வாயைத் துடைத்துக்கொண்ட அவர், “நான் வந்ததே அதுக்குத்தானேம்மா ? வத்தலப் பாளையத்துல ஒரு நல்ல வரன் இருக்கு. பையன் அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்துல ஒம்பதாவது படிச்சிண்டிருக்கான். பதினஞ்சு வயசு ஆறது. பணக்காரக் குடும்பம். எக்கச்சக்கமான சொத்து, சுகம். பையன் வேலைக்குப் போக வேண்டிய அவசியமே இல்லாத குடும்பம். ஆனா, அவனென்னவோ மெட்றாசுக்குப் போய் பிசினஸ் பண்ணணும்கிற ஐடியாவில இருக்கானாம்.. ..”

“பக்கத்து ஊராயிருக்கு. நல்ல சம்பந்தம்கறேள். அப்பப்ப கொழந்தையைப் போய்ப் பாத்துக்கலாம். ரொம்பச் செய்யணும்னு எதிர்பார்ப்பாளோ ?”

“பின்னே ? அந்தப் பையனுக்கு நீ, நான்னு ஏகப்போட்டி. ஆனா, என்னோட ப்ரிஃபரன்ஸ் நம்மாத்துக் குட்டிக்குத்தான் – அதாவது முக்கியத்துவம்.. .. நான் கொஞ்சம் படிச்சிருக்கேன். பத்மநாபன் அளவுக்கு இல்லே. ஏதோ ஒம்பதாவது வரையில படிச்சிருக்கேன். அதான் அப்பப்ப இங்கிலீஷ் வார்த்தை வந்துட்றது!” என்று கூறிவிட்டு, காவேரியைப் பார்த்துப் பெருமையாய்ச் சிரித்தார்.

பத்மநாபன் சிரித்துக்கொண்டார். ரங்கநாத சாஸ்திரிகள் தமக்கும் இங்கிலீஷ் கொஞ்சம் தெரியும் என்பதைக் காட்டிக்கொள்ளுவதற்காக அவ்வப்போது அம்மொழிச் சொற்களை உதிர்ப்பார். சில நேரங்களில் முழு வாக்கியங்களையே -அபத்தமான இலக்கணத்துடன்- பேசிவிடுவார். இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த வெள்ளைக்காரனின் மொழியில் பேசுவது கவுரவம் என்கிற எண்ணமுடையவர்.

“ஜாதகம் பொருந்தணுமே ?”

“ஜாதகம் பொருந்தாம நான் இங்க வந்திருப்பேனா ? ‘மேட் டு ஈச் அதர்’ னு இங்கிலீஷ்ல சொல்லுவாளொல்லியோ ? அந்த அளவுக்குப் பொருந்தியிருக்கு.”

“ஓ! மேட் ஃபார் ஈச் அதர் (made for each other) ங்கிற அளவுக்குப் பொருந்தியிருக்குன்னா உடனே போய்ப் பாத்துட்டு வர வேண்டியதுதான்!” என்ற பத்மநாபன் ‘ஃபார்’ (for) என்பதற்குப் பதிலாய் ‘டு’ (to) எனச் சாஸ்திரிகள் செய்த தப்பான சொல்லை நாசூக்காய்த் திருத்திய பின், “நீங்களே ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்லுங்களேன்,” என்றார்.

“நாளைக்கே போலாம் நீங்க. காலம்பர ஒம்பது மணிக்கெல்லாம் போயிடுங்கோ. குட்டியோட ஜாதகத்தையும் எடுத்துண்டு போங்கோ. பொருந்தி யிருக்குன்னு நான் சொன்னதாச் சொல்லுங்கோ. எம் மேல அவாளுக்கு ரொம்பவே ரெஸ்பெக்ட்! வத்தலப்பாளையம் அக்கிரகாரம் தெரியுமோல்லியோ ?”

“பேஷாத் தெரியும்,” என்ற பத்மநாபன் இடுப்பிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து அவரிடம் நீட்ட, அவர் அதைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

“அப்ப நான் வரட்டுமா, பத்மநாபா ? அம்மா, கொழந்தே! வறேன். இனிமே உன்னை நால் கொழந்தேன்னு கூப்பிடக் கூடாது. உன்னோட கொழந்தைக்குக் கல்யாணம் பண்ணப் போறே சீக்கிரமே!”

காவேரிக்குச் சிரிப்பு வந்தது. ரங்கநாத சாஸ்திரிகள் தமது இடக்கையைத் தரையில் ஊன்றி, “அப்பனே, ஷண்முகா, நமச்சிவாயம், அம்மா, காமாட்சி!” என்று முனகியபடி மெதுவாக எழுந்துகொண்டார்.

அவர் போன பிறகு பத்மநாபன் உள்ளே வந்தார்.

“நாளைக்கே வத்தலப்பாளையம் போகணும், காவேரி. பெரிய இடம்கறார் சாஸ்திரிகள். என்ன கேப்பாளோ, என்னமோ ?”

“நல்ல இடம்கிறப்ப, எப்படியாவது செஞ்சுட வேண்டியதுதான். என்னோட நகைகள் அம்பது பவுன் தேறும். கடனோ உடனோ வாங்கி நடத்த வேண்டியதுதான்.”

“ஜமாய்ச்சுடலாண்டி, காவேரி!”

“கையிலே எவ்வளவு ரொக்கம் வெச்சிண்ட்ருக்கேள்னா ?”

“அதை யெல்லாம் பத்தி நோக்கென்னடி கவலை, காவேரி ? எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ போய் உம்பொண்ணைக் கவனி. சமையல் பண்ணக் கத்துக்குடு. வாய்க்கு வழங்கச் சமைக்கிற பொண்டாட்டியைத்தான் புருஷாளுக்குப் பிடிக்கும்.”

“அதான் உங்களுக்கு என்னைப் பிடிக்கிறதா ?”

“அப்படின்னு நான் சொன்னேனா ?”

“அய்யோ! அப்படின்னா, நான் நன்னாச் சமைக்கல்லேன்றேளா ?”

“பரவால்லே. புத்திசாலிதான். புரிஞ்சுக்கறியே!”

“அம்மா! அம்மா! கறி தீயறது. சீக்கிரம் வா. என்னால கிளற முடியல்லே. கை சுட்றது.”

“இதுதான் நன்னாச் சமைக்கிற லட்சணமாக்கும்!” என்று சிரித்த பத்மநாபனுக்குப் பதில் சொல்லாமல் காவேரி அடுக்களைக்கு விரைந்தாள்.

அப்போது வாசற்பக்கம் நிழலாடியது.

“யாரு ?” என்றார் பத்மநாபன்.

“நாந்தேன். வள்ளி, சாமி.”

பத்மநாபன் சட்டென்று எழுந்துகொண்டார். இதற்குள் சமையலறையிலிருந்து காவேரியும் எட்டிப் பார்த்தாள். வந்திருந்தது ஒரு பெண்பிள்ளை என்பது தெரிந்ததே ஒழிய இன்னாரென்று தெளிவாய்த் தெரியவில்லை. எனவே அவள் வெளியே வந்தாள்.

மிக விரைந்த நடையில் இரேழியை யடைந்த பத்மநாபன், “என்னம்மா இது ? போன மாசந்தானே வந்து பணம் வாங்கிண்டு போனே ? அடிக்கடி வந்தா எப்படிம்மா ? இது நோக்கே நியாயமா யிருக்கா ?” என்று அடிக்குரலில் அந்தப் பெண்பிள்ளையை அதட்டாத குறையாகப் பற்களைக் கடித்தவாறு வினவியவாறே பின்னால் திரும்பிப் பார்த்தார்.

இதற்குள் காவேரி அங்கு வந்துவிட்டாள்.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 1

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

ஜோதிர்லதா கிரிஜா


ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு கதை இருக்கிறதாமே ? அதாவது அவனது சொந்தக் கதை. இவ்வாறு ஒரு பிரபல எழுத்தாளர் சொன்னது இந்த நேரத்தில் எனக்கு மிகவும் அதிகமாகவே நினைவுக்கு வருகிறது. சொல்லிக்கொள்ளக்கூடிய எண்ணங்கள், நிகழ்வுகள், சொல்லக்கூடாத எண்ணங்கள், நிகழ்வுகள் இவற்றை யெல்லாம் ஒவ்வொரு மனிதனும் ஒரு தன்வரலாற்றின் வடிவிலோ அல்லது வேறு ஒருவர் சொல்லுவது போன்ற வடிவிலோ எழுதினால், அது நிச்சயகாக ஒரு சுவையான நெடுங்கதையாக அமையத்தான் செய்யும்.

இப்படி நினைத்துப் பார்த்த போது என்னுடைய கதையையேதான் எழுதினால் என்ன என்கிற எண்ணம் வந்தது. நம் நாட்டில் தன் வரலாறு எழுதுவதற்கான முழுத் தகுதியும் படைத்திருந்த ஒரே மனிதர் மகாத்மா காந்திதான்! பொய்களைச் சொல்லியும், உண்மைகளை மறைத்தும் தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ளாதவர். எனினும் இந்தக் கதையில் நான் பொய் எதையும் சொல்லப் போவதில்லை. பிறரைப் புண்படுத்தாமல் எந்தெந்த உண்மைகளைச் சொல்ல முடியுமோ அவற்றை மட்டுமே இதில் சொல்ல எண்ணம்.

பிறர் என்று நான் குறிப்பிடுவது என் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டவர்களை மட்டுமன்று. மொத்தத்தில் தாங்க முடியாத துன்பங்களைத் தாண்டிவந்தவள் என்கிற முறையில் நான் கூறப் போகும் சில உண்மைகள் அவை போன்ற துன்பங்களை இன்றளவும் பிறர்க்கு இழைத்துக் கொண்டிருக்கும் ஆண்-பெண்களை யெல்லாம் புண்படுத்தக்கூடும்தான்! ஆனால் அதற்கு நான் என்ன செய்வதாம் ?

சரி. இந்தப் புலப்பத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளூகிறேன். எனக்கு எண்பத்தெட்டு வயது ஆகிவிட்டது. அதாவது, நான் பிறந்த ஆண்டு 1916. ‘அய்யே! அப்படியானால் இது ஒரு கிழவியின் கதை!’ என்று யாரும் சுவாரசியம் இழக்க வேண்டாம். ஏனெனில், இப்போதைய கிழவியாகிய நான் ஒரு காலத்து இள மங்கை என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். நான் சொல்லச் சொல்ல இந்தக் கதையை எழுதப் போவதும் ஓர் இள மங்கைதான். தவிர, எனது கதை நான் பிறந்த பிறகு எனக்கு நினைவு தெரியத் தொடங்கியதுமே ஆரம்பித்து விடுவதால், இந்தக் காலத்து வாசகர்கள் எதிர்பார்க்கும் காதல், காமம், கோபம், எதிர்பாராத திருப்பங்கள், சண்டைகள், துயரங்கள், போராட்டங்கள் எல்லாமே இந்தக் கதையில் உண்டு. எனவே, ஒரு கிழவியின் கதையில் என்ன இருக்கப் போகிறது என்று யாரும் என்னை ஓரங்கட்ட வேண்டாமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

. . . பக்கத்து வீட்டுப் பெண் மாலதி. திருமணம் ஆனவள். ஒரு பெண்ணும், ஓர் ஆணுமாய் இரண்டே குழந்தைகள். பெண்தான் மூத்தவள். எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். ஆண் குழந்தை நான்காம் வகுப்பில் இருக்கிறான். இன்றைய எனது அந்தஸ்து, சமுதாய நிலை ஆகியவற்றின் தாக்கத்தால் சில தடவைகள் ஏதேதோ காரியங்களுக்காக அவள் என் வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துப் பேசுவதுண்டு. அந்தச் சிறு பழக்கந்தான். ஏதோ ஒரு சமயம் ஒரு பெண்ணின் பிரச்சினை சம்பந்தமாய் அவள் அந்தப் பெண்ணுடன் என்னைப் பார்த்த போது, என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அவர்களுடன் நான் பகிர்ந்துகொள்ள நேர்ந்தது. அந்தப் பெண்ணுக்குத் தன்னம்பிக்கை யூட்டுவதற்காக நான் சொன்னது. அதற்குப் பிறகும் இரண்டொரு நிகழ்வுகளின் பகிர்தலுக்குப் பிறகுதான் மாலதி, “மேடம்! நீங்க ஏன் உங்க சுயசரிதையை எழுதக் கூடாது ? அந்தக் காலத்துலேயே ரொம்ப தைரியமா நடந்திருக்கீங்க. நீங்க சொன்ன சில விஷயங்கள்லேருந்து உங்கம்மா உங்களை விடவும் துணிசல்காரங்கன்னு தோணுது. உங்க வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிறதால இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு நிறைய விஷயங்கள், பாடங்கள் தெரியவரும். துணிச்சல், தன்னம்பிக்கை இவையெல்லாமும் வரும். இந்தக் காலத்துப் பெண்கள் அனுபவிக்கத் தொடங்கி யிருக்கிற சுதந்திரங்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் அந்தக் காலத்துப் பெண்கள் கொடுக்க நேர்ந்த விலைகள் பற்றியும் தெரியும். என்ன சொல்றீங்க ?” என்றாள்.

அந்தக் கணத்தில்தான் என் கதையை எழுதும் எண்ணம் என்னுள் கிளர்ந்தது. நான் வியப்போடு அவளைப் பார்த்தேன். அதுகாறும் அப்படி ஓர் எண்ணம் எனக்கு வராதது பற்றிய வியப்பும் அடைந்தேன்.

“சுயசரிதையை எழுதுற அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆள்ங்கிற எண்ணம் எனக்கு இல்லைன்னாலும், எங்கம்மாவுடைய வாழ்க்கை என்னுடையதைக் காட்டிலும் அதிகச் சோதனைகளும் சுவாரசியங்களும் நிறைஞ்சதுங்கிறதுனால, என்னோட கதையை எழுதுற சாக்கில அவங்களைப் பத்தியும் நிறையவே சொல்லாலாமேங்கிறதுனால, எழுதினா என்னன்னு நீ சொன்னதைக் கேட்டதும் எனக்கே தோண்றது. ஆனா, அதுக்கு எனக்கு ஒரு ஆள் வேணும். ஒண்ணு, நான் சொல்லச் சொல்ல எழுதணும். இல்லேன்னா, நன் என் கதையை அப்பப்ப சொல்றதைக் கண்ணு, காது, மூக்கெல்லாம் வச்சு சுவாரசியமா எழுதத் தெரிஞ்ச யாரோட உதவியாவது எனக்கு வேணும். . .”

நான் முடிப்பதற்குள் மாலதி குறுக்கிட்டாள் : “ உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம், மேடம். ஏன்னா, நானே எழுதுவேன். ஒரு காலத்துல நான் எழுத்தாளரா இருந்தவதான். கல்யாணத்துக்கு முந்தி சில கதைகள் எழுதி யிருக்கேன். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் சரிப்பட்டு வரல்லே. நிறுத்திட்டேன்.. .. ..”

“என்ன! சரிப்பட்டு வரல்லியா ? அப்படின்னா ? .. .. என்னம்மா பதில் சொல்லாம இருக்கே ? உங்க வீட்டுக்காரருக்குப் பிடிக்கல்லியா ?”

மாலதி சிரித்தாள். சிரிப்பில் கசப்புத் தெறித்தது: “அதேதான்! கரெக்டா ஊகிச்சுட்டேள். கல்யாணத்துக்கு அப்புறம் வரதட்சிணை எதிர்ப்புக் கதை ஒண்ணு எழுதி அது பத்திரிகையில வந்துடுத்து. அதுக்கு முன்னாடி நான் எழுதினது சாதாரணக் குடும்பக் கதைகள். ஆனா இந்தக் கதை எழுதினதும்தான் அவருக்குக் கடுமையான கோபம் வந்துடுத்து. ஏன்னா, அவரும் வரதட்சிணை வாங்கினவர். ‘இனிமே பேனாவைத் தொடு சொல்றேன். உன் கையையே அடுப்புக்குள்ள சொருகிடுவேன்!’ அப்படின்னாரு. அதான்!”

“அவர்தான் இப்ப இல்லியே உன்னைக் கட்டுப் படுத்துறதுக்கு ? இப்ப எழுதலாமில்ல ?”

“என்னமோ தெரியல்ல, மேடம். அதுக்கு அப்புறம் எனக்கு ஆர்வமே இல்லாம போயிடிச்சு.. .. ஆனா உங்க கதையை எழுதுற சாக்கில அதைப் புதுப்பிச்சுக்கலாமேன்னு ஒரு ஆசை இப்ப திடார்னு வந்திருக்கு. அதான் கேட்டேன்.”

“சரி. முதல்ல நான் உனக்குச் சுருக்கமா என் கதையை எழுதிக் குடுத்துட்றேன். ஆனா அதைச் சுய சரிதையா எழுத வேண்டாம்மா. ஒரு நாவல் வடிவத்துல மாத்தி எழுதிடு. ஒரு நாவலுக்கு உண்டான -அதிகம் பொய் கலக்காத -சுவாரசியங்களைச் சேர்த்து எழுது. நீதான் எழுத்தாளராச்சே! உனக்குச் சொல்லித் தரணுமா ?”

கொஞ்ச நேர விவாதத்துக்குப் பிறகு தன்னிலையில் எழுதுவதை விடவும் படர்க்கையில் எழுதுவதுதான் சரியாக இருக்கும் என்கிற முடிவுக்கு இருவரும் வந்தோம்.

இனி நீங்கள் படிக்கப் போவது அவள் எழுதிய கதையைத்தான்!

.. .. .. .. .. ..

அது ஒரு பட்டிக்காடு. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது மூதுரை. ஆனால் பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நானறிந்த வரையில் யாரும் சொன்னதாய்த் தெரியவில்லை. அதனாலோ என்னவோ, அந்தச் சின்ன ஊரில் கோவில் இருந்ததே ஒழுய, பள்ளிக்கூடம் இல்லை. வெறும் திண்ணைப் பள்ளிக் கூடந்தான் இருந்தது. அதிலும் அக்கிரகாரத்துக் குழந்தைகள் மட்டுமே படித்தார்கள். குழந்தைகள் என்றால், ஆண் குழந்தைகள். ஐந்தாம் வகுப்பு வரை அதில் படித்துவிட்டு, ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கப் பக்கத்து ஊருக்குப் போகவேண்டும். அந்த ஊர் மூன்று கல் தொலைவில் இருந்தது. பெண் குழந்தைகளுக்குப் படிப்புத் தேவை யில்லை என்பதே எல்லாருடையவும் ஒருமித்த கருத்தாக இருந்தது

அருமையும் ஆசையுமாய்த் துர்க்காவை வளர்த்து வந்தாலும், பத்மநாபனும் காவேரியும் பொதுவான இந்த விதிக்கு விலக்காக இல்லை. எனவே, பத்மநாபன் அவளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே படிப்புச் சொல்லிக் கொடுத்தார். படிப்பு என்றால், சரித்திரம், பூகோளம், ஆங்கிலம் என்றெல்லாம் இல்லை. தமிழ் எழுதப் படிக்கவும், கணக்குப் போடவும்தான். ஏதோ தபாலில் வரும் கடிதங்களைப் படிப்பதற்கும், பால்-தயிர்க் கணக்கு எழுதுவதற்கும் தெரிந்தால் போதும் என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. இவ்வாறான விதிவிலக்குகள் கூட, பெரும்பாலும் பிராமணக் குடும்பங்களில் மட்டுமே இருந்தனர்.

துர்க்கா கணக்குப் போடுவதில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். தமது பள்ளிப் பருவத்தில் ஒரு கணக்கைப் போடத் தாம் எடுத்துக்கொண்ட நேரத்தில் பாதியைக்கூட துர்க்கா எடுத்துக்கொள்ளாதது பத்மநாபனை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு நாள் தன் மனைவியைக் கூவி யழைத்த அவர், “அடியே, காவேரி! நம்ம பொண்ணு கணக்குல மகா கெட்டிக்காரியா யிருக்கா. படிக்க வெச்சா பெரிய கணக்கு மேதையா வருவான்னு தோண்றது. ஒரு கணக்காவது தப்பாப் போடணுமே!.. .. இவளைப் பக்கத்து ஊருக்கு அனுப்பிப் படிக்க வெச்சா என்னா ?” என்றார், ஆர்வமாக.

துர்க்காவின் கெட்டிக்காரத்தனம் காவேரிக்கு உவகையாகத்தான் இருந்தது. ஆனால், அதற்காக ஊர் உலகத்தில் இல்லாத வழக்கமாக அவளால் துர்க்காவைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப் படிக்க வைப்பது பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

“என்னன்னா சொல்றேள் ? படிக்க வைக்கிறதா! நன்னாருக்கு, போங்கோ. நம்ம ஜாதி வழக்கப்படி பெரியவளாகிறதுக்கு முந்தி மூணு முடிச்சுப் போட்டுத் தள்ளிவிடப் பாருங்கோ. அப்புறம் நாலு பேர் நாலு விதமாப் பேசுவா நம்மைப் பத்தி. என்னத்துக்குன்னா வீண் வம்பு ?” என்றாள் காவேரி, கவலையுடன்.

“அப்படின்னா சொல்றே ? என்னடி காவேரி இது ? எவ்வளவு கெட்டிகாரியா இருக்கா, தெரியுமா ? நீயோ படிக்காத தற்குறி. உங்கிட்டப் போய் இவளைப் பத்திப் பேசறதுல அர்த்தமே இல்லே. ஆனாலும் சொல்லாம இருக்க முடியல்லே. இவளோட அருமை நோக்குத் தெரியல்லே.”

“தெரியாம இல்லேன்னா. நீங்க சொல்றதும் பெருமைப் பட்டுக்குறதும் நேக்கும் சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா பொண் கொழந்தையாச்சேன்னா ? காலாகாலத்துல கல்யாணத்தைப் பணி அனுப்ப வேண்டியதுதானே நம்மளோட கடமை ? இவளே பிள்ளைக் கொழந்தையா இருந்தா நான் ஒண்ணும் தடுக்கப் போறதில்லே.”

“நீ என்னடி தடுக்கிறது ? அப்படியே தடுத்தாத்தான் என்ன ? நான் கேட்டுடவா போறேன் ? தவிரவும் இப்படி ஒரு ஆட்சேபணை உன் வாயிலேருந்து வரவா போறது ? பெருமையில அப்படியே பூரிச்சுப் போய் ஆசையாத் தூக்கி முத்தம் கொடுத்திருப்பே. பொண்ணாப் பொறந்து தொலைச்சுட்டாளே இவ!”

“அதேதான்னா! படிக்க வெச்சா நம்மளை இந்த ஊர்க்காரா உண்டு இல்லைன்னு ஆக்கிப்பிடுவா. சொப்பனத்துல கூட அப்படி எல்லாம் நினைக்காதங்கோ. பெரியவளாகிறதுக்கு முந்தி கல்யாணம் பண்ண முடியல்லேன்னா வாயில வந்ததைப் பேசுற ஊர் இது. இப்ப மாதிரியே ஆத்துலயே உக்கார வெச்சு ஏதோ கொஞ்சம் எழுதப் படிக்கக் கத்துக் குடுங்கோ, போறும். நீங்கதான் மெட்றிகுலேஷன் வரைக்கும் படிச்சிருக்கேளேன்னா ?”

“பட்டணத்துல யெல்லாம் இப்ப பொண் கொழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப் படிக்கவைக்கிறா, காவேரி. நோக்குத் தெரியுமா ? வடக்கே ஒரு பொண்ணு டாக்டருக்குட்ப் படிக்கிறதுக்காக அமெரிக்காவுக்குப் போயிருக்காளாம். பேப்பர்ல எல்லாம் கூட வந்தது.”

“அவாள்ளாம் ரொம்ப, ரொம்பப் பெரிய பணக்காராளா யிருப்பா. பணக்காரா என்ன செஞ்சாலும் யாரும் குத்தம் சொல்ல மாட்டா. ஆனா நாம அந்த அளவுக்குப் பணக்காரா இல்லியே! அதனால அவளைப் படிக்க வைக்கிறதைப் பத்தின பேச்சையே மறந்துடுங்கோ.. .. அது சரி, வயக்காட்டுக்குப் போனேளே, நாத்தெல்லாம் நன்னா வந்திருக்கா ?”

“ம்.. ..ம்..” என்ற பத்மநாபன் சிந்தனையில் ஆழ்ந்தார். காவேரி பேச்சை மாற்றியது சின்னதாய் அவரும் ஒரு சினத்தைக் கிளர்த்தியது. ‘எவ்வளவு கெட்டிக்காரக் கொழந்தை துர்க்கா! அவளைப் படிக்க வைக்கப் படாதுங்கறாளே ? .. ஆனா, அவ சொல்றது வாஸ்தவந்தான். பக்கத்து ஊருக்கு ஒரு நாளைப் போல நடந்து போகணூம். எங்கிட்ட என்ன வில்வண்டியா இருக்கு, கூட்டிண்டு போய்க் கொண்டு விட்றதுக்கும், திரும்ப அழைச்சிண்டு வுர்றதுக்கும் ? நான் கூட்டிண்டு போய்க் கொழந்தையை விட்டுட்டு சாயந்தரம் திருப்பிக் கூட்டிண்டு வரலாந்தான்னாலும், இவளுக்குத் துணையாப் படிக்கிறதுக்குப் பள்ளிக்கூடத்துல ஒரு பொண் கொழந்தையாவது இருக்கவேண்டாமா ? அப்படி யாரு தன்னோட பொண் கொழந்தையைப் படிக்க வைக்கிறதுக்கு இந்த ஊர்ல தயாரா யிருக்கப் போறா ? அதனால காவேரி சொல்றாப்ல அதை பத்தி சொப்பனம் கூடக் காணக்கூடாதுதான்!’ என்று எண்ணியவாறு பத்மநாபன் நீளமாய் ஒரு பெருமூச்சை உதிர்த்தபடி துர்க்காவை ஆசையுடன் நோக்கினார்.

“அம்மா, கொழந்தே! நோக்குப் பள்ளிக்கூடத்துல சேரணும்னு ஆசை இருக்காம்மா ?”

“கணக்குப் போட்றதுன்னா நேக்கு ரொம்ப ஆசையா இருக்குப்பா! நாளெல்லாம் கணக்குப் போட்டுண்டே இருக்கச் சொன்னாக் கூட, போட்டுண்டே இருப்பேம்ப்பா.”

அவளது ஆர்வம் புரிய, அவர் சட்டென்று தமது பார்வையை அப்பால் நகர்த்திக்கொண்டார். அவர் ஏதாவது சொல்லுவார் என்று எதிர்பார்த்தவள் போன்று வைத்த விழிகளை வாங்காமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்த துர்க்கா, அவர் ஒன்றும் கூறாதிருக்கவே, அம்மாவின் பேச்சுத்தான் எடுபடப் போகிறது என்பகைப் புரிந்துகொண்டு முகம் சாம்பினாள்.

“அப்பா!”

“என்னம்மா ?”

“என்னைப் பள்ளிக்கூடத்துல சேர்த்துடுங்கோப்பா!”

“அதெல்லாம் நடக்காத காரியம்மா, கொழந்தே. ஏதோ கடுதாசி வந்தா படிக்கிற அளவுக்கும், ஆத்துல கணக்குவழக்கைப் பார்க்கிற அளவுக்கும்தாம்மா நோக்கு நான் சொல்லிக் குடுக்க முடியும். உங்கம்மா நீ படிக்கிறதைத் தடுக்கிறதா நினைக்காதேம்மா. அவ சொல்றது நூத்துக்கு நூறு சரிம்மா, கொழந்தே!”

அப்போது வாசற்பக்கம் நிழல் தெரிய, பத்மநாபன் தலை உயர்த்திப் பார்த்தார். ரங்கநாத சாஸ்திரி வந்துகொண்டிருந்தார்.

“வாங்கோ, வாங்கோ! உக்காருங்கோ!.. ..”

“என்ன! பொண்ணுக்குப் படிப்புச் சொல்லிக் குடுக்கிறீராக்கும்! ஜமாயும்!” என்றவாறு துண்டால் தரையைத் தட்டிவிட்டு ரங்கநாத சாஸ்திரி உட்கார்ந்துகொண்டார்.

“ஆமா. என்னதான் பொண் கொழந்தைதானேன்னாலும், ஆத்தை நிர்வாகம் பண்ற அளவுக்கானும் எழுத்து வாசனை இருக்கணுமோன்னோ ?”

“ஆமாமா. நல்லதுதான்.”

“ஏதானும் விசேஷம் உண்டாங்காணும் ? சும்மா வர மாட்டாரே ?”

“சரியாச் சொன்னேள்! காரியமாத்தான் வந்திருக்கேன்.”. .. அம்மா, கொழந்தே! ஒரு கூஜாவில தீர்த்தமும் தம்ளரும் எடுத்துண்டு வா, பாப்போம்!”

துர்க்காவை அவர் விரட்டினார் என்பது புரிந்ததும், என்ன விஷயத்துக்காக என்பது புரியாமல் பத்மநாபன் அவரை ஏறிட்டார்.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா