திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


பகுதி பதிமுன்று – தொ ட ர் ச் சி (முடிவுப் பகுதி)

—-

சிறிய ஊரே அது. அடடா என்ன சுத்தம். சென்னை போல அத்தனை அசுத்தமாகாமல் காற்றே மிச்சமிருந்தது. போக்குவரத்துப் போலிஸ்காரர்களும் அவர்களது புது மோஸ்தர் தொப்பியுமே வேடிக்கையாய் இருந்தன. பிளாட்பார பெல்ட் வியாபாரி அடுக்கி வைத்தது போல நீளநீளமான வீதிகள். அவற்றின் பிரஞ்சுப் பெயர்கள் வாயில் நுழையவேயில்லை. ஜனங்கள் எப்படி இந்த வீதிகளை ஞாபகம் வைத்துக் கொள்கிறார்களோ என்றிருந்தது.

இதையெல்லாம் தமிழ்ப் பெயராக மாற்றி எந்த அரசியல் கட்சியும் ஓட்டுக்கு இதுவரை முயலவில்லை என்பதே ஆச்சரியம். தமிழ்நாட்டில் வீதிக்குப் பெயர் வைப்பது – எந்த ஜாதிக்காரனுக்காவது வாய்க்கரிசி போடணும்னா ஆளுங்கட்சி சட்டுனு அவன் பெயரை ஒரு வீதிக்கு வெச்சிரும். இல்லாட்டி அந்தாளுக்கு நடுத்தெருவில் இந்த நுாத்தியெட்டு டிகிரி வெயில்ல சாகுடான்றாப்ல சிலை வெச்சி விட்ரும். அதைவிடப் பெரிய எடுப்புன்னா அவங்க ஆட்களா இருக்கிற மாவட்டத்தை ரெண்டாப் பிரிச்சி அவங்களுக்கு உள்வசதி எதாவது பண்ணிக்கங்கப்பான்னு – வீட்டுக்குள்ள ஏ/சி பண்றதில்லையா… அதைப்போல தாராளம் பண்ணி விட்டுர்றதுதான்.

அதுக்காக பாண்டி அரசியல் பத்தி ரொம்ப உத்தமமா நினைக்கண்டாம். முதலமைச்சர் ஆனபிறகும் எம்மெல்ஏ ஆகத் தொகுதி கிடைக்காமல் ஒரு சார்வாள் திண்டாடல்லியா ?

போய் இறங்கியதும் பஸ்நிலையத்தில் இருந்து நாதன் சாரைக் கூப்பிட்டான். ‘ ‘அங்கியே இருப்பா. வந்திட்டேன் ‘ ‘ என்று வந்து விட்டார் அவர். அந்த வயதிலும் அவர் காட்டிய உற்சாகம் … நட்பின் அழகான அம்சம் அல்லவா.

ஒரு பழைய வண்டி டிவியெஸ் சாம்ப் வைத்திருந்தார். தடாலடியாய் அதில் வந்து இறங்கினார் மனுசன். வெள்ளை ஜிப்பா வெள்ளை வேட்டி. முகத்தில் வெள்ளை முள்ளிட்ட ரெண்டுநாள்த் தாடி. பட்டையான கருப்புக் கண்ணாடி… அதன்மேல் தனியே கூலிங்கிளாஸ் நீலக்கலரில் பொருத்திக் கொண்டிருந்தார். இப்பல்லாம் அதும் மாதிரி வழக்கம் ஒழிஞ்சிட்டது. ஆடோமேடிக் கண்ணாடிகள்… வெயிலேற தானே நிறம் மாறிக்கும். இரவானால் வெள்ளையா ஆயிக்கும்… என்கிற அளவில் வந்தாச்சி.

பச்சோந்தி மாடல்.

‘ ‘சொன்னபடி eastcoast வண்டி பிடிச்சியாய்யா. அதான் சர்ர்ருனு வந்துருவான்… ‘ ‘ என்றார் அவர். வந்த வேகத்தின் அலுப்பு தெரியாத வேகமான பேச்சு.

‘ ‘ஆமா சார் ‘ ‘ என்கிறான் புன்னகையுடன். தலைக்கு மேலே வெயில் படுபோடு போடுகிறது. இந்த வயதில் இந்தப் பெரியவர் வெயிலைப் பொருட்படுத்தாமல் டூவீலரில் வந்து இறங்கி அதே உற்சாகத்தில் பேசுகிறார்- நட்புதான் வாழ்வில் எத்தனை நல்ல விஷயம்.

நாதன் கையை ஜிப்ப்ாவுக்குள் செலுத்திக் கொண்டார். அக்குள்ப் பக்கம் சொறிகிறார் என நினைத்தான். பூநுாலை வாகுசெய்து கொள்கிறார். பொம்பளையாட்கள் புடவை முந்தானையைச் செருகிக் கொள்வார்கள். தோள்ப் பக்கம் ‘ஊக்கு ‘ போட்டுக் கொள்வார்கள். இவர்கள் இந்த பூநுால் இறக்கத்துக்கு எதும் அட்ஜெஸ்ட்மென்ட் இன்னும் கண்டுபிடிக்கவில்லை போல.

‘ ‘சார் குளிர்பானம் எதாவது சாப்பிடறீங்களா ? ‘ ‘ என்றான் கரிசனத்துடன்.

‘ ‘ஏ அப்பா… எங்க ஊர்ல வந்து என்னையே உபசரிக்கிறியா ? ‘ ‘ என்று சிரித்தார் நாதன். ‘ ‘உனக்கு வேணுமா சொல்லு ‘ ‘ என்றவர் அவன் மறுக்கு முன் ‘ ‘வா செவ்விளநி சாப்டு. பாண்டிச்சேரி இளநி தனி ருசி ‘ ‘ என்று முன்னே செல்கிறார்.

—-

உணர்வுகளின் சூட்சுமங்களைச் சின்ன வயசில் இருந்தே தீட்டிக் கொண்டவன் அவன். அன்னையின் ஆசிரம வளாகம் அருகில் வருகிற போதே கவிந்த பூ வாசனை அவனை உள்-உசுப்பல் உசுப்பி விட்டது. விமான நிலையத்தில் வெளிவந்த ஜோரில் டாக்சி டிரைவர்கள் வந்து அப்புவதைப் போல. வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு வந்தார் நாதன்.

அவருடன் வர உற்சாகத்துக்குக் குறைவில்லை. எல்லாம் ஏற்கனவே அறிமுகப் பட்டாப்போலவே… அவனுக்கு நெருங்கிய வளாகம் போலவே தோன்றியது. என்ன உணர்வு இது- மனசில் ஒரு புதிய இடத்தின் கவர்ச்சித் தித்திப்பு, ஆனந்தத் திகைப்பு தட்டவேயில்லை. முன்பரிச்சயப் பட்ட இந்த பாவனை ஆச்சரியம். வேடிக்கை. இம்முறை நாதன் சாரிடமே வயது வித்தியாசமில்லாத விகல்பமில்லாத நட்பு… சட்டென்று திரும்ப மின்சாரம் வந்தாப் போலவும், பாட்டு விட்ட இடத்தில் இருந்து ஒலிபெருக்கியில் தொடர்ந்தாப் போலவும்…

பெண்கள் வரிசையாய் நின்றும் அமர்ந்தும் பூ விற்றுக் கொண்டிருக்கிறார்கள். நாதன் சார் பூ வாங்க முன்னே செல்கிறார். இந்த வயசிலும் என்ன வேகமான நடை. சோம்பேறித்தனம் வந்து விடக்கூடாது எனப் பிடிவாதமாய் இருக்கிறாப் போல இருக்கிறது அவரைப் பார்க்க.

‘ ‘எப்டி யிருக்கே சுடர் ?… ‘ ‘ என்று கேட்டபடி கையை நீட்டுகிறார் அவர். சட்டென்று அந்தப் பெயர் அவனுள் விளக்கேற்றியது- புரைக்கேறினாப்போல உள்ளே ஒரு திடுக். அவளை ரெண்டாம் முறை பார்க்கச் சொன்னது அந்த எச்சரிக்கை.

எளிமையான பெண். கழுத்தில் தாலி அடையாளம் இல்லை… என்பதை உடனே உள்மனம் குறித்துக் கொண்டதே… ஏன் அப்படி முதல் விதை விழ வேண்டும். தனக்குள் ஒரு உற்சாக அலை குளுமை பரத்துகிறது. அதற்குமாய் ஒருபடி மேலே அவள் தந்த அந்த வண்ணப் பூக்கள். அப்படி மலர்களை அவன் அதுவரை பார்த்ததேயில்லை. வெளியே நீலமும் உள்ப் பக்கமாய் சற்று வெள்ளைப் பரவல். இரண்டு தாமரை மொக்குகள். மஞ்சளோ மஞ்சளாய் ஒரு கொத்து… அந்தக் கலவை அற்புதமாய் இருந்தது. கையில் குளுமைதட்ட அவன் விருப்பமுடன் பெற்றுக் கொண்டான்.

மனசில் அந்த சிவகுமார் – முதலாளி பையன்… ஒரு பெண் ஒரு ஆணுக்குப் பூ கொடுத்தால் அது காதல்தான்… என்கிறான். உள்ளெலாம் சிரிக்கிறது இவனுக்கு. சற்று கூச்சமாய் இருந்தாலும் சமாளித்துக் கொண்டு அவளை தலைமுதல் கால்வரை பார்க்கிறான். சுடர் – என்கிறது மனசு ஒற்றைச் சொல்.

என் மனம் இருண்டு கிடக்கிறது சுடர்…

நாதன் சாரைக் கையமர்த்தி விட்டு அவர் வாங்கிக் கொண்ட பூவுக்கும் அவனே பணந் தருகிறான். பார்வையை ஏனோ பிட்டுக்கொள்ள வகையில்லாமல் போனது. இப்படி எந்தவோர் பெண்ணையும் இதுவரை நிதானித்து… அளவெடுக்கிறாப் போல அவன் பார்த்ததேயில்லை.

அந்தப் பார்வையின் குறுகுறு உடுருவல் தாளாமல் சற்று – ஆனால் தைரியமான புன்னகையுடன் அவள் நாதன் சாரைப் பார்த்து ‘ ‘வீட்டுக்கு விருந்தாளியா ஐயா ‘ ‘ என்கிறாள்.

‘ ‘ஆமாம்மா ‘ ‘

‘ ‘சாரும் எழுத்தாளரா ? ‘ ‘

‘ ‘என்ன பதில்யா சொல்றது ? ‘ ‘ என்று சிரிக்கிறார் நாதன்.

‘ ‘முதல்கதை சரியா வரல்ல… பாதியெழுதி கிழிச்சிப் போடறாப்ல ஆயிட்டது… ‘ ‘ என்கிறான் யோசனையாய்.

‘ ‘ரெண்டாவது கதை எழுத வேண்டிதானே ? ‘ ‘ என்றாள் சுடர். நாதன் சாரின் பரிச்சயப்பட்ட பாவனை இருக்கிறது அவள் பேச்சில்.

‘ ‘எழுதப் போறேன் ‘ ‘ என்றான் தனக்கே பதில் சொல்கிறாப் போல.

—-

உள்ளேயோ வேறு மாதிரி அனுபவம் தந்தது. அட இது எனக்கு கண்ணுக்குப் புதிய வளாகம்… என்றாலும் முன்னோர் வழி எனக்கு பாத்யதைப்பட்ட இடம்… என்கிறாப்போல அந்தப் பழகிய உணர்வு தொடர்ந்தே அவனில் இருந்தது. தன்னைப் போல மனம் அமைதி காத்தது. ஆ நான் தன்னியல்பாய் அமைதியானவன். விஷயம் அதுதான். வளாகத்துப் பேரமைதி… அதை நோக்கி நான் பயணிப்பது… மகன் அப்பாவை நோக்கிப் போகிறதைப் போல. அன்னையை நோக்கிப் போகிறதைப் போல.

சக்கரம் வண்டியுடன் பொருந்துகிறாப் போல…

அடாடா அடாடா… அதோ அன்னை ஒரு வெள்ளொளி போல அங்கே பீடத்தில் சயனித்திருக்கிறதை அவனால் பார்க்க… ஆமாம் பார்க்க முடிகிறது. திகைப்பாய் இருந்தது அந்தக் கணம். இது சாத்தியமா ? அன்னையையா ? நானா ? பார்க்கிறேனா ? சட்டென்று கரங் குவிகிறது. மனசில் பேரலையாய் ஒரு பால்வெள்ளை உய்யென எழும்பி அன்னையின் அந்த எல்லைவரை தொட்டாப்போல பொங்கி வழிந்து இறங்குகிறது. எப்பெரும் நிகழ்வு அது. ஆகாவென்றிருந்த கணம்- அட யார் நம்புவார்கள் இதை. வெகு சாமானியன் நான். சாதாரணன்… அன்னையின் வளாகத்திற்கு முற்றிலும் புதியவன். அன்னை பற்றிய படிப்பு நுகர்வு சிறிதுமற்றவன். அன்னை எனக்கு தரிசனப் பட்டாள் என்றால் முதற்கண் என் பேற்றை என்னென்பது… மெல்ல அந்த பீடத்தை நெருங்கினான். வந்தேன் அன்னையே என்கிறது மனசு. ஆ- அதில்லை. என்னை அழைத்துக் கொண்டாய் அன்னையே. அதை உறுதி செய்கிறாய் அன்னையே… உன் தரிசனம் தந்தாய். என் உயிருக்கே ஊட்டம் தந்தாய். இனி இந்த உயிர் உள்ளவரை இந்தக் காட்சியம்சம் என் மனசில் அழியாது. மலர்களை அன்னையின் பீடத்தில் சமர்ப்பிக்கிறான். இந்தக் கணம் இவ்வாறு அமையக் கடவது என்று முன்பே தீர்மானிக்கப் பட்ட உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. நான் முன்பே இங்கே பலமுறை வந்திருக்கிறேன். அன்னையை வணங்கி யிருக்கிறேன். நடமாடி யிருக்கிறேன் இந்த வளாகத்தில். ஆ- நான் அன்னையின் ஒரு பகுதி. காலடி பட்ட மலர். இந்தக் கணத்துக்கும் இனிவரும் கணங்களுக்கும் மனம் தன்னைப்போல உள்ளே காத்துக் கிடந்திருக்கிறது. இந்த சந்திப்பு நிகழாமல் என் வாழ்க்கை முடிவு பெற்றிருக்க முடியாது.

பிரமிப்பே இல்லை. ஆச்சரியமே யில்லை. வந்து சேர வேண்டிய இடம் இது. வந்து சேர்ந்து விட்டேன்… என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது திரும்பத் திரும்ப.

பிறர் பீடத்தைச் சுற்றிவந்து வணங்க வழிவிட்டு கிளைபிரிந்து தனியே வந்து அமர்கிறான்.

மூச்சு திகைக்கிறது தலை தன்னைப்போலத் தாழ்ந்து கண்கள் மூடிக் கொள்கின்றன. மனம் எழுச்சி கண்டுவிட்டது. ஆசுவாசப்பட வேண்டியிருக்கிறது. உணர்வுகளின் அந்த ஆட்டத்தில் உடம்பெல்லாம் என்னவோ செய்கிறது… இதுதான் பரவசமா தெரியாது. அவன் சிறியவன். அவன் ஆன்மிகவாதியும் அல்ல. இப்படி உணர்வுகளுக்கு அவன் அன்னையால் தேர்வு செய்யப் பட்டிருக்கிறான் என்பது தவிர தனக்கான தகுதியாக இந்த தரிசனம் காட்சிப் பதிவு அமைய நியாயம் கிடையாது. தர்க்கம் கிடையாது.

நேரப் பதிவும் அற்றுப் போனது. காலமற்ற வெளி அது. மனிதக் கற்பனை அற்ற வெளி. அப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு மனதை ஏமாற்றிக் கொள்ள முடியாது. விழிகளைக் கனவில் போலத் திறக்கிறான். நாதன் சாரைப் பார்த்துத் தலையாட்டுகிறான்.

‘ ‘சார்… நம்புகிறீர்களா ? நான் அன்னையை பீட சயனக் கோலத்தில் பார்த்தேன்… ‘ ‘

‘ ‘ஆகா ‘ ‘வெனத் தழுவிக் கொள்கிறார். ‘ ‘வெகு அபூர்வமான சிலருக்கு மட்டும் அது சாத்தியப் பட்டிருக்கிறது ‘ ‘ என்று நெகிழ அவன் கையைப் பிடித்துக் கொள்கிறார்.

—-

/தொ ட ரு ம்/

/14/

சிறியதாய் இருந்தாலும் நாதன் சார் அழகாய்க் கட்டியிருந்தார் வீட்டை. உள்ளறையில் பெரிய அன்னை படம். வீட்டுக்கே பளீரென தனி எடுப்பைத் தந்தது படம். ஆசிரமத்து மாதக்காலண்டர் வேறு. அன்னையின் குறும்பான சிரிப்புடன். அவரது பூ தேவைகளுக்கு சுடர் வாடிக்கையாகப் பூ தருகிறாள். நாகலிங்க மலர், தாமரை மொக்குகள், ரோஜா என்று விதவிதமான மலர்களை வித்தியாசமான அலங்கார வரிசையில் தட்டுகளில் அன்னைமுன் படைப்பது தனி உற்சாகம் அளித்தது பார்க்கவே. அன்னைமுன் அமர்ந்து கண்குவித்து மனதுள் பார்வையைக் குவிக்க சராசரி ஜனங்களுக்கு ஒரு பற்றுக்கோடு தேவைப் படவே செய்கிறது. கொழுகொம்பைச் சுற்றி கொடி படர்கிறதைப் போல.

தியானம் அல்லது மனதைக் குவித்தல் கடும் பயிற்சி. உள்நோக்கி தன்னை அளவெடுத்தல். மனசு அப்படி நினைவுக் கட்டளைக்குள் சிக்கிவிடுமா என்ன ? அப்போதுதான் மனம் அலைய ஏங்கும். கட்டுப்பாடுகள் உடனே அவற்றைத் தகர்த்தெறிய உள்ளாவேசம் தருகின்றன!… என்றான நிலையில் சுய கட்டுப்பாடுகள் மேலும் கடினமாகிறது.

இப்படி நிலைகளில் மனசை ஒழுங்குபடுத்த ஒருநிலைப் படுத்த அன்னை கண்ட வழி… பூ அலங்காரத்தின் முன்… அன்னை முன் அமர்ந்து அன்னையை தியானம் செய் – தனியறை தன்னறையில் அமர்ந்த தியானம் வெளியே உலவித் துழாவி சமையலறை வாசனையையோ, வெளியே மாம்பழேம்… என வியாபாரியின் ஒலியையோ நோக்கி கவனம் சிதறடிக்குமாயின்… புலன்கள் கைமீறி நாய்க்குட்டியாய், பிடிவாதக் குழந்தையாய் வெளியே ஓடுமானால்… அதை அதன் ருசி அடிப்படையிலேயே கட்டுப்படுத்த நெறிப்படுத்த சித்தம் கொண்டனர் அன்னை.

அந்தப் பூ வாசனை. ஏற்றிய ஊதுபத்தியின் நல்வாசனை என தியான உட்கவனத்தை சிதறடிக்காமல் பேண அவரால் முடிந்தது. வெளி வளாகத்து ஓசைகள் அப்போது நல்லோசைகளாக, எரிச்சல் தராமல், நம்மை மேலும் தொந்தரவு செய்யாமல் பதிவு பெறுகின்றன. மனம் தனக்கான பிரத்யேக வளாகங்களில், அது தியானிக்கிறவரின் சுய பிரச்னைகளைத் தீர்மானித்து… முடிவுகள் எடுக்கிற கட்டங்களாகக் கூட இருக்கலாம்… அதை நோக்கி மனத் தோணியைச் செலுத்த தற்போது மேலும் இலகுவாகி விடுகிறது.

கூட்டுதியானப் பயிற்சியில் அன்னைசார்ந்த அரவிந்தர் சார்ந்த சிறு சுலோகங்களும் அன்னை இசைத்த இசையும் கூட எத்தனை மகத்தான மாற்றங்களை, பேருதவிகளை மனசில் நிகழ்த்துகின்றன. ஒலியலைகளை எழுப்பி பின் அமைதியை மனதுக்குத் தருதல்…

சார் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார். தனுஷ்கோடி வாசல் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது சுடர் – பூ விற்பனை முடித்து வருகிறாள் போலும் – வீதியில் வந்தாள். ஒருவித மனக் குறுகுறுப்புடன் அவன் வீட்டில் இருக்கிறானோ என அவளே எதிர்பார்ப்பது போலவே பட்டது அவனுக்கு.

வாசலிலேயே அவனைப் பார்த்ததும் அவளுக்கு ஒரு ‘பிடிபட்ட ‘ வெட்கம் வந்தது. அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது. சட்டென்று எழுந்து ‘ ‘உள்ளே வாங்க சுடர் ‘ ‘ என்று கதவைத் திறக்கிறான். அவசரப்பட்டு, அவள் போய்விடுவாளோ என்கிற பயத்துடன் வந்தாப் போலிருக்கிறது எழுந்து அவன் வந்த வேகம்… அதை ரசித்தாள்.

காலம் மெல்ல கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளால் அவர்களை கிட்ட நெருக்கும் அழகான கணங்கள்.

பெண்களுக்கு – எந்த வயதானாலும் – தாங்கள் அழகாய் இருப்பதான பிரமை உண்டு… என அறிவான். முதல் வசீகர வசனத்தை அவன் அவள்மீது பூவென எறிகிறான்.

‘ ‘சுடர் நீங்க அழகா இருக்கீங்க… ‘ ‘

‘ ‘இதைச் சொல்லத்தான் கூப்டாங்களா ? ‘ ‘ என்று கலகலப்பாய்ச் சிரித்தாள். அவள் மனம் ஏற்கனவே மிதக்க ஆரம்பித்து விட்டது. அவனுக்கும் அப்படியே- என்றாலும் பேச்சு என்பதே – உரையாடல் என்பதே சிரிக்க ஒரு சாக்கு… என்றான நிலை அது. மனம் கொண்டாடும் உன்மத்த நிலை.

‘ ‘உட்காருங்க சுடர்… ‘ ‘

‘ ‘சொந்த வீடு மாதிரி உபசரிச்சாறது… ‘ ‘ அவள் கண்ணில் அந்த மீன் எகிறல்… கனவெடுப்பு அவனுக்குச் சிரிப்பாய்ப் படுகிறது. பிடித்த ஆண் என்றானால் ஒரு பெண்ணுக்கும் – அப்படியே பெண்ணானால் அருகிருக்கும் ஆணுக்குமான நெருக்க உணர்வு – உள்-உருக்கம்… கும்மாளியிடுகிறது…

மனதுள் திருவிழா! கூத்துக்கு முன் தண்டோரா இசை போல…

இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் நம்ம ஸ்ரீ அன்னை வளாகத்தில் சுடருக்கும் தனுஷ்கோடிக்கும் காதல்! தண்டக்கு தண்டக்கு தண்டக்கு….

கிட்டத்தில் மேலும் அழகாய் இருந்தாள். அல்லது அவனுக்கு அப்படித் தோணியதோ… அன்னைக்கே வெளிச்சம். மனசில் ஊற்று திறந்து கொண்டது. வெகுகாலம் கழித்து குளுமையாய் ஒரு நீர் பொங்கி அவனுள் சிதறியடிக்கிறது. யானை வெளிப்பக்கம் தன்மேல் நீரையிறைத்துக் கொள்ளும் இப்படி. இது மனசுக்குள்…

‘ ‘என்ன இன்டர்வியூவா ? ‘ ‘ என்றாள். அவளுக்கே ஆச்சரியம் தான் தைரியமாய்ப் பேசுவது. அவனோடு பேசுவது அவளுக்குப் பிடித்திருக்கிறது. பெண்ணை பெண்மையை மதிக்கத் தெரிந்தவன் அல்லவா ? சுருளான கேசம் முன்நெற்றியில் கொடுக்காப்புளியென காற்றில் அலைந்தது. சற்று அதிகப்படியான எண்ணெய் தடவியிருந்தான். பளபளத்துக் கிடந்தது தலைமுடி. சார் வீட்டில் திரும்பத் தலைசீவி பெளடர் போட்டிருந்தான்…

நான் வருவேன் என எதிர்பார்த்திருந்தான் போலும், சந்திக்க வேணும் என்றிருந்தான் போலும்… பக்கத்துத் தெருவுக்கு அவளைத் தேடி விசாலம் மாமி வீட்டுக்கே அவனும் நாதன் சாரும் வந்திருக்கக் கூடும்…

அட வெயில் அதிகம் என்று ஒரு பெளடர் அடிப்பு அடித்திருக்கிறான். அதற்கு இத்தனை யூகங்களா என தனக்குள் சிரித்துக் கொள்கிறாள். அவளுக்கே அந்தக் கணங்கள் கிறுகிறுப்பாய் இருக்கின்றன. யார் இவன்… இவன் பின்னணி என்ன… எந்தப் பின்னணியும் இன்றியே மனம் அவனைச் சுற்றிப் படர்கிறதே என அவளுக்கு வியப்பாய் இருக்கிறது. மனம் அதை விரும்புகிறதே அதைச் சொல்.

‘ ‘உட்காருங்க சுடர் ‘ ‘

‘ ‘பரவால்லங்க நான் நின்னுக்கறேன் ‘ ‘

‘ ‘என்பேர் தனுஷ்கோடி ‘ ‘

‘ ‘சார் சொன்னார்… ‘ ‘ என்றாள் புன்னகையுடன்.

‘ ‘சார் வேறென்ன சொன்னார் ? ‘ ‘

‘ ‘வேறெதுவும் சொல்லவில்லை ‘ ‘ என்கிறாள். ‘ ‘விசாரணைக் கமிஷன் போலக் கேள்வி கேட்கிறீர்கள்… ‘ ‘

‘ ‘சாரி ‘ ‘ என்றான்.

‘ ‘பரவாயில்லை- முன்னறிமுகம் இல்லாவிட்டால் முதல் உரையாடல் சற்று வளவளப்பாகவே தோணும்… ‘ ‘

‘ ‘நீங்க நல்லாப் பேசறீங்க. நல்லாப் புரிஞ்சுக்கறீங்க… ‘ ‘ என்றான் அவளை உள்ளே கிளுகிளுக்கச் செய்கிற காய்-நகர்த்தலுடன். ‘ ‘நான் ஒரு அச்சகத்தில் வேலை பார்க்கிறேன்… ‘ ‘

‘ ‘தெரியும்… ‘ ‘

‘ ‘சார் சொன்னாரா ? ‘ ‘

‘ ‘இல்லை- என் ஞான திருஷ்டி கொண்டு கண்டுபிடித்தேன் ‘ ‘ என்றாள் தைரியமாய். அவளது நையாண்டி அவனைத் திகைக்கடிக்கிறது. என்னமாய் மடக்குகிறாள்.

‘ ‘சார் இன்னும் என்னென்ன சொல்லவில்லை என்னைப் பற்றி… ‘ ‘ என்று அப்பாவி பாவனைக்குத் தன்னை அவள்முன் சமர்ப்பித்துக் கொண்டான். அவளிடம் ‘பிடிபட ‘ அவனுக்குப் பிடித்திருந்தது.

அவள் அதற்கு பதில் சொல்லவில்லை. சற்று அமைதியாய் இருந்தார்கள் ரெண்டு பேரும். தொடர்ந்து உதைபந்தை அளைவது போல வாயில் வார்த்தைகளை மெல்வதும் கேள்விகளை எறிவதும் சகஜப் பட்டிருந்தது. சட்டெனக் கவிந்த மெளனம் திகைப்பை எற்படுத்தியது.

‘ ‘வாழ்க்கை பெரும் துயரக்கடல்… ‘ ‘ என்றாள் இகழ்ச்சியாய்.

‘ ‘நாம் நினைத்தால் அதை இலகுவாக்கிக் கொள்ள முடியும்… ‘ ‘ என்கிறான் எதிர்பார்ப்பான ஆதங்கத்துடன். நாதன் சார் உன்னைப் பற்றிச் சொன்னார் பெண்ணே. நானும் பெரிய அளவில் அடிபட்டவன்தான்… என ஒர் அழுகையுடன் பேச வந்தது அவனுக்கு. சட்டென இருவர் மனசிலும் மேகம் சூழ்ந்தாற் போலிருந்தது. ஆனால் விரைந்து தெளிந்தாள் அவள். துணிச்சலாய் அவனை நோக்கி பிறகு பேசினாள் அவள் இப்படி-

‘ ‘நாம் நினைத்தால்… என்றால் ‘நாம் ? ‘ ‘

என்ன தைரியமான வார்த்தையெடுப்பு. அவன் திண்டாடிப் போனான். வெறும் பூ விற்பனைப் பெண்ணா இவள். சுடர் நீ இருக்க வேண்டிய இடமா இது…

ஒரு சவால் போல அந்த உரையாடலை அவன் வளர்த்த விரும்பினான்.

‘ ‘நாம் என்றால் துயரக்கடலாய் வாழ்க்கையை நினைக்கிற அனைவரும்… இப்போதைக்கு ‘நாம் ‘ என்பது நீங்கள் ‘ ‘ என்றான்.

‘ ‘இப்போதைக்கு நாம் என்பது நான் – சரி. நாளைக்கு ? ‘ ‘ என அவள் அடுத்த கணையை அவன் மீது எறிந்தாள். அயர்ந்து போனான். அட ஆடவா… நான் பெண். என்னை நீ விரும்பினால் உன் கூட்டை விட்டு வா. உடைத்துச் சொல் தனுஷ்கோடி. சவால்!

அது ஊடலின் உன்மத்த நிலை. அவள் துாண்டிலில் நானாவது சிக்குவதாவது…

‘ ‘சரி. ஒத்துக் கொள்கிறேன். வாழ்க்கை என்பது எனக்குமே துயரக்கடல் ‘ ‘ என்றான். பிறகு ஒரு லகரியுடன் அவனே அவளுக்குப் பிடி கொடுத்தான். ‘ ‘நேற்றுவரை… ‘ ‘

‘ ‘சரி. நாளை நமக்கானது என நம்புவோம்… ‘ ‘ என்றாள் அவள். குரலில் கனவு இறங்கி யிருந்தது. அவன் விளையாட்டு திடாரென அவளால் தாள முடியாது போனது. கனவு நுால் அறுபட்டது. அழுகை வருகிறாப் போல ஒரு மயக்கம். பெருமூச்சு விட்டாள். பேசேன் அப்பா… பெண்மை தன்னை உன்முன் அர்ப்பணித்துக் கொள்ளத் திணறுவதை நீ அறிய மாட்டாதவனா ? சூட்சுமந் தெரியாதவனா ?

‘ ‘நாளை நமக்கானது- சரி. யார் நாம் ? ‘ ‘ என அவன் அவளை ஊக்குவிக்க முயன்றான்.

‘ ‘புண்பட்ட எல்லாரும்… ‘ ‘ என அவள் பெருமூச்சு விட்டாள்.

‘ ‘நான் ரொம்பக் கஷ்டப்பட்டு விட்டேன் சுடர். என் வாழ்க்கை… நான் பிறந்த கணத்தில் இருந்தே இருண்டது… ‘ ‘

அவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.

‘ ‘இரவில் பிறந்த குழந்தையா நீங்கள் ? ‘ ‘ என்றாள் அவள் சிரிக்காமல். என்ன நுணுக்கமான நகைச்சுவை அது. அவன் அயர்ந்தான்.

‘ ‘தெரியாது ‘ ‘ என்றான் அவன். ‘ ‘நான் பிறந்த வேளை எனக்குத் தெரியாது ‘ ‘ என்றான். சற்று மெளனத்துக்குப் பின் ‘ ‘என் அப்பா அம்மா யார் என்றே எனக்குத் தெரியாது… ‘ ‘ என்றான் கசப்புடன். எழுந்து இங்குமங்குமாக நடக்க ஆரம்பித்தான்.

அவனது உள்ளாவேசம் பார்த்து அவள் மெளனம் காத்தாள். பேசட்டும். பேசி யடங்கட்டும்… நல்லதுதான்.

‘ ‘நான் உருவானதே என் தாய்க்கும் தந்தைக்கும் இடைஞ்சலான ஓர் அம்சமாகி விட்டது என யூகிக்கிறேன். ‘ ‘

—-

/தொ ட ரு ம்/

பதினான்காம் பகுதி – தொ ட ர் ச் சி

—-

தாம்பிரவருணிக் கரையின் ஒரு சிற்றுார் அது. மணல்மேடு. ஊர் ஞாபகமே அழிந்து விட்டது இந்நாட்களில். அவனே… அவன் பெயரே அழிந்த ஊரின் பெயர்… தனுஷ்கோடி அல்லவா ?

தர்மாஸ்பத்திரி வளாகத்துக் குப்பைத் தொட்டியில் ஆயா அவனைக் கண்டுபிடித்தாள். தாயாரம்மா… அவன் அந்த தர்மாஸ்பத்திரியில்தான் பிறந்திருக்க வேண்டும். அவள் அந்த ஆஸ்பத்திரியில் ஆயா. வாராவாரம் பணிநேரம் மாறும். வார்டு மாறும். பிரசவ வார்டில் அவள் இல்லை அந்த வாரம்.

அதிகாலை வேலைக்கு வந்து கொண்டிருக்கிறாள் தாயாரம்மா. குழந்தையின் அழுகுரல் அவளைத் துாக்கிவாரிப் போட வைக்கிறது. பிறந்த சில மணி நேரங்களே ஆன சிசு. எச்சில் இலைகளுடன் அதை வீச எப்படி அந்தப் பெத்த பாதகத்திக்கு மனசு வந்தது ? குழந்தையே காதலனின் எச்சில் என நினைத்தாளா ? இத்தனை வெறுப்பு கொண்டவள் அதை ஏன் ‘பெத்துக் ‘ கொள்ள வேண்டும். கருவிலேயே அழித்துக் கொண்டிருக்கலாம். ஆ… பெண்கள் ஆண்களை நம்புகிறார்கள். வயிற்றில் கரு… அவனை ஒருநேரம் இல்லா விட்டால் ஒரு நேரம் மனம் இளகச் செய்யும் எனக் காத்திருந்தாளா பாதகத்தி தெரியவில்லை…

பெத்தவள் அவள். அவள் தவறு செய்தவள். தண்டனை அந்தக் குழந்தைக்கு. ஆயுள் தண்டனை. தாயாரம்மாவுக்கு மனம் கசிந்தது. அவளுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள். மூணும் பெண். இது ஆண் – ஒரு ஆண்குழந்தையைக் கூட தொட்டியில் வீசுவார்களா என்று ஆயாவுக்குத் திகைப்பு…

ஆஸ்பத்திரிக் குப்பைத் தொட்டி. காலி மருந்து பாட்டில்கள். ஊசிகள். இட்லி பார்சல் எடுத்து வந்த எச்சில் இலைகள். உணவுத் துணுக்குகள். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம்… எறும்பு மொய்க்கக் கிடந்தது தொட்டி… மிச்ச உணவைத் தேடி எதும் நாய் உள்ளே பாய்ந்திருந்தால் குழந்தை அப்பவே செத்திருக்கும்.

‘ ‘ஐயோ ‘ ‘ என்றாள் சுடர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு.

‘ ‘நான் செத்திருக்கலாம்… ‘ ‘ என்கிறான் தனுஷ்கோடி இகழ்ச்சியாய்.

‘ ‘சற்று முன் எனக்கு நம்பிக்கை யூட்டியவரா நீங்கள் ? ‘ ‘ என்றாள் அவள்.

‘ ‘ஊட்டிவிட நீங்கள் குழந்தையா என்ன ? ‘ ‘ என அவன் சிரித்தான். அவன் முகமே வியர்த்து சோர்ந்து போயிருந்தது.

அவன் சிரித்தது அவளுக்குப் பிடித்திருந்தது.

‘ ‘சரி… நீங்களே குழந்தையாய் இருங்கள். உங்கள் கதையைச் சொல்லுங்கள்… அதற்குமுன் ஒரு சிறு நகைச்சுவை… இப்போது தாங்குவீர்களா ? ‘ ‘

‘ ‘பரவாயில்லை சொல்லுங்கள்… ‘ ‘

‘ ‘உங்க ஊர்ல பெரிய மனுஷங்க யாராவது பொறந்திருக்காங்களா ?-ன்னானாம் ஒருத்தன். அதுக்கு அடுத்தவன் பதில் சொன்னான்- இல்லிங்க… பொறந்தது எல்லாமே குழந்தைங்கதான்! ‘ ‘

—-

மூணு பெண் குழந்தைகள். கணவனை இழந்து அதன் அடிப்படையில் பெற்ற வேலை. ஆனால் தாயாரம்மா பிள்ளையை அப்படியே விட்டுவிடவில்லை. ஆஸ்பத்திரி பொதுவார்டில் கிடைக்கிற பாலும் ரொட்டியும் தந்து அந்த ஆஸ்பத்திரியிலேயே அவனை வளர்த்தாள். வரும் நோயாளிகள் விரும்பித் தரும் உணவுகள். அவர்களுக்கான சிறு வேலைகள் செய்தான் தனுஷ்கோடி.

இந்தப் பெயர் எப்படி அமைந்தது என்றே தெரியாது. யார் வைத்தது தெரியாது. யாரோ ஒரு முதியவர் இரக்கப் பட்டு அவனை குருபரர் மடத்தில் ஆண்டிகளோடு ஆண்டியாய் வளர வைத்தார் பின்னால். குருகுலம் போன்ற வாழ்க்கை. உப்பு சப்பில்லாத உணவு. ஒரு நாளைக்கு ஒரே வேளை உணவு. காலையில் எதுவுமே சாப்பிடாமல் பள்ளிக்கூடம் போக வேண்டும். மதியச் சாப்பாடுக்கு – அந்த ருசி-சிறிதும்-அற்ற சாப்பாட்டுக்கு ஓடோடி வர வேண்டும். இளமையில் வறுமை கொடிது கொடிது…

‘ ‘எதுவரை படித்திருக்கிறீர்கள்… ‘ ‘

‘ ‘மடத்துப் பள்ளிக் கூடம்… எசெல்ஸி. அந்தப் படிப்பே கனவு போலிருக்கிறது. ‘ ‘

‘ ‘ஏன் பாடம்லாம் மறந்திட்டதா ? ‘ ‘ என அவள் அவனைச் சிரிக்க வைக்க முயல்கிறாள்.

‘ ‘பாடங்கள் அல்ல- அவை காயங்கள் அல்லவா ‘ ‘

‘ ‘அடடா ‘ ‘ என்கிறாள் சுடர். ‘ ‘நீங்கள் அவற்றை மறந்துவிட வேணும். இன்று புதிதாய்ப் பிறந்ததாக வாழ்வதே முறை… ‘ ‘

‘ ‘நான் இன்று புதிதாய்ப் பிறந்தேன் குப்பைத் தொட்டியில்… என் கதை… மன்னிக்கவும்… நான் உங்களைத் துன்பப் படுத்துகிறேனில்லை ? ‘ ‘ என்கிறான் பதறி.

‘ ‘பரவாயில்லை ‘ ‘ என்றாள் அவள். ‘ ‘என் துயரம் பெரியதென நினைத்திருந்தேன்… நீங்களோ இள வயதிலேயே புயலில் சிக்கி யிருக்கிறீர்கள் பாவம்… ‘ ‘

‘ ‘பார்த்தால் சாது போலிருக்கிறீர்கள். நல்ல பேச்செடுப்பும் சாதுர்யமும் உங்களிடம் காண்கிறேன். பாராட்டுக்கள் ‘ ‘ என்கிறான்.

‘ ‘பாராட்டுக்கள் எனக்கல்ல. என் தந்தைக்கு… கோவிலில் ஓதுவார் அவர்… வீட்டிலுங்கூட மொட்டை மாடியில் அவர் மடியில் படுத்துக் கொண்டு நான் தேவாரம் கேட்டிருக்கிறேன்… அப்பா இறந்து விட்டார். பிறகு…. ஆ – உலகமே இருண்டு விட்டது எனக்கு… ‘ ‘

‘ ‘அவர் சந்திவேளையில் இறந்தாரா ? ‘ ‘ என்றான் அவள் பாணியில்.

அவள் சிரிக்காமல் அவனைப் பார்த்தாள்-

‘ ‘நாம் ஏன் இவ்வளவு ஆவேசத்துடன் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொள்ள வேணும் ? ‘ ‘

‘ ‘தேவையில்லைதான்… இன்னும் காலம் மிச்சம் இருக்கிறது… நிறைய… ‘ ‘

‘ ‘வாழ்க்கையும் மிச்சமிருக்கிறது… நிறைய… ‘ ‘ என்றான் பிறகு ‘ ‘நமக்கு… ‘ ‘ என்றான். பிறகு சற்று சிரித்து ‘ ‘நமக்கு… என்றால் நாம் இருவருக்கும் ‘ ‘ என்றான். பிறகு நம்பிக்கையுடன் ‘ ‘பெண்ணே நான் உன்னை விரும்புகிறேன் ‘ ‘ என்றான்.

‘ ‘பழைய கதைகளை நாம் மறந்து விடலாம். அவை திரும்பத் திரும்ப அழுகையை உள்ளே நிரப்புவதாய் இருக்கும்… ‘ ‘

‘ ‘நோ மோர் தத்துவம் ‘ ‘ எனச் சிரித்தான் அவன்.

‘ ‘சரி ‘ ‘ என அவள் ஒத்துக் கொண்டாள்.

‘ ‘சுடர்… நீ என்னை விரும்புகிறாயா ? ‘ ‘ என்றான் தனுஷ்கோடி.

‘ ‘நீங்கள் அழகாக உளருகிறீர்கள் ‘ ‘ என்றாள் அவள்.

‘ ‘நீ அழகாக இருப்பதால் உளருகிறேன் ‘ ‘ என்றான் போதையுடன்.

‘ ‘இதற்குமேல் என்னால் தாங்க முடியாது ‘ ‘ என்கிறாள் அவள்.

‘ ‘நான் அவ்வளவு கனமா ? ‘ என்கிறான் அவன் விடாமல்.

‘ ‘முற்றும் ‘ ‘

‘ ‘இல்லை… ஒரு ஜோக்… உன்னால் சிரிக்காமல் இருக்க முடியாது ‘ ‘

‘ ‘சொல்லுங்கள் ‘ ‘

‘ ‘நர்ஸ் சொல்கிறாள் நோயாளியிடம்- நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிப் போறீங்க. உடம்பை நல்லாப் பாத்துக்கங்க… அவன் சொன்னான்- சரிம்மா காட்டு! ‘ ‘

/மு டி கி ற து/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


பகுதி பதிமூன்று – தொ ட ர் ச் சி

—-

நாட்கள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன. அச்சகத்தில் விடுப்பு கிடைக்கிற வழியாய் இல்லை. அவனுக்கு வருத்தமாய் இருந்தது. தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததால் அன்னையின் வளாகத்தில் தன்னை… தன் மனதை முடிந்த வெறுமையில் நிறுத்திக் கொண்டு புதிய காற்றை நிரப்பிக் கொள்கிற நிலையில் கவனக் குவிப்புடன் காத்து நிற்கிற அந்த உணர்வுக்கு மனசு ஏங்க ஆரம்பித்ததை உணர்ந்தான்.

அச்சகத்தில் அவனுக்கு நேர் எதிர்ச்சுவரில் அன்னையின் – பகவான் ஸ்ரீ அரவிந்தரின் படங்கள். தனித் தெம்பைத் தந்தன அவை. தான் தனியே இல்லை என்கிற உணர்வு மனிதனுக்கு எத்தனை ஆறுதலாய் இருக்கிறது. நான் தனியே இல்லை என்கிற உணர்வு வாழ்வின் நம்பிக்கையை வளர்த்துமாயின், அதைப் பரிமாறுவதும் நல்லம்சம்தானே ?… ஒரு புன்னகையுடன் அது எத்தனை எளிமையாய்ச் சாத்தியப் படுகிறது… சக மனிதனை, நீ தனியே இல்லை என ஒரு புன்னகை சொல்லி விடுகிறது அல்லவா ?

நாம் தனியே இல்லை… உனக்கு நான் துணை. அவ்வண்ணமே எனக்கு நீ துணை.

அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அன்னை கண்ட எளிய வழி… கூட்டுப் பிரார்த்தனை!

போக்குவரத்து நெரிசலில், கூட்டம் கூடும் இடங்களில் அமைதியுறாத மனம்… கூட வருகிற நபரை- சக மனிதனைக் கண்டு கொள்ளாத மனம்… ஆனால் அன்னையின் வளாகத்தில் முறைப்படுத்தப் பட்ட அமைதியில் எத்தனை அழகாகப் பயிற்சி பெறுகிறது.

அன்னையின் திருச் சந்நிதியில் ஜாதி- மொழி- இன- மத- நாடு அளவில் கூட மாறுபட்ட… ஆனால் மனிதர்கள் மத்தியில் மனதை ஒன்று குவித்தல் என்பது அன்னையால் நடைமுறைப் படுத்தப் படுகிறது. தானும் பங்குபெற உள்ளார்வம் பெருகிக் கொண்டே வந்தது அவனில். சந்தர்ப்பத்துக்குத் தவிக்க ஆரம்பித்தது மனசு.

எந்த மதம் சார்ந்தும்- இசம் சார்ந்தும் இயங்காத ஸ்ரீ அரவிந்தரின் – அன்னையின் அணுகுமுறைகள்… வாழ்வுக்கே புதிய உந்துதலும் விளக்கமும் தந்தன. புதிய அர்த்த அழுத்த வீர்யங்களை அறிமுகப் படுத்தின. அதை உணர்ந்த கணம் அதன் ஈர்ப்புசக்தியோ அபாரமாய் இருந்தது.

—-

விரைவில் அந்த வாய்ப்பு வந்தது!

சில விஷயங்களை விளங்கிக் கொள்ள வாய்க்கிறதே யில்லை. கடையை மூடுகிற ஓர் இரவில், தன் தனிமையில் ஒரு வேடிக்கை போல அவன் அந்தப் படத்தை வணங்கினான். அவனுக்கே ஆச்சரியம்- அவன் இதுவரை எந்த உருவப்படத்தையும் வணங்க முன்வந்ததே யில்லை. கோவிலுக்குப் போனாலுங் கூட விக்கிரக ஆராதனை என்கிற அளவில் அவன் பரவச அனுபவம் கண்டவன் அல்ல. எனக்கு இதைத் தா… அதைச் செய்வி… என வேண்டிக் கொண்டவனும் அல்ல.

என்னவோ மனம் ஒரு வேண்டுகோள் போல அந்தப் படத்தின் முன் தன்னை நிறுத்திக் கொள்கிறது- அன்னை என்னை அழைத்துக் கொள். நான் உன்னைச் சந்திக்க வேணும். உன் வளாகத்தில் என்னை நிறுத்திக் கொள்ள வேணும். உன் காற்றை நான் சுவாசிக்க வேணும்…. அன்னை என்னை அழைத்துக் கொள்.

—-

சாவியைத் தர மாடியேறிப் போனான் அவன். முதலாளி தாயுமானவன் என்னவோ எழுத்து மும்முரமாய் இருக்கிறார். விஷயமே தெரியாது அவனுக்கு. அவனைப் பார்த்ததும் ‘ ‘ஏ வா… ‘ ‘ என்று சிரித்தார். அவனுக்கே ஆச்சரியம் அவரது சிரிப்பு.

அவரது மகன் சிவகுமார். பஜார்ப் பக்கம் டூ-வீலர் பழுது பார்க்கும் கடை போட்டிருக்கிறான். எப்போதும் தலை நிமிர்கையில் சற்று விலுக்கென நிமிர்வான்- நடிகன் அர்ஜுன்போல அவன் இருப்பதாக நண்பர்கள் கதை கட்டிவிட அதை அப்படியே நம்பி, அர்ஜுன் மாதிரியே வசனம் பேசுவதைப் போலப் பேசுவான்.

அர்ஜுனைவிட இவன் நெட்டை… இருந்தாலும் அவனே மாதிரி கூனி நடப்பான். உதட்டு மீசை நடுப்புறம் அர்ஜுனுக்கு முடியிராது. இவனும் அதேபாணியில் முடியெடுக்கச் சொல்லி சலுானில் வெறுப்பேத்துவான்.

‘ ‘என்ன முதலாளி ரொம்ப சந்தோசமா இருக்கீங்க ? ‘ ‘ என்கிறான் தனுஷ்கோடி.

‘ ‘பிள்ளைக்குக் கல்யாணம்டா… ‘ ‘ என்கிறார் தாயுமானவன்.

‘ ‘ரொம்ப சந்தோசம் முதலாளி… பொண்ணு உள்ளூரா அசலுாரா ? ‘ ‘

‘ ‘என்னத்த அசலுாரு… உள்ளூர்த்தான். பக்கத்துத் தெரு. லவ்வு கிவ்வுன்றான். என்னடா இதுன்னா… என்னென்னவோ வசனம் பேசறான்… ‘ ‘ என்றார் தாயுமானவன்.

எந்த அர்ஜுன் படத்து வசனமோ, என்று தனுஷ்கோடி நினைத்துக் கொண்டான்.

கல்யாணப் பத்திரிகையின் எழுத்துப் பிரதியை அவனிடம் நீட்டுகிறார் முதலாளி. ‘ ‘காலைல சரவணன் வந்தா dtp-க்குக் குடுத்துரு. இந்த மொகரைக் கட்டைக்கு அவளையும் அவனையும் கல்யாணப் பத்திரிகைல ஃபோட்டோ போடணுமாம்… ‘ ‘

‘ ‘போடுங்க முதலாளி. அவங்க நண்பர்கள்லாம் ஒரு பத்து போஸ்டர் பெரிய போஸ்டர் அடிச்சித் தெருவுல ஒட்டுவாங்களே… அதில்லையா ? ‘ ‘ என்றான் சிரிக்காமல்.

‘ ‘அந்தக் கண்றாவி வேற உண்டு. தப்புந் தவறுமா எழுதி… போஸ்டர் எழுதக் குடுத்திருக்கான்… மொத வரி என்ன தெரியும்ல ? உடல் மண்ணுக்கு உயிர் அர்ஜுனுக்கு… ‘ ‘

‘ ‘அப்ப அந்தப் பெண்ணுக்கு எதைக் குடுக்கப் போறான் மொதலாளி… ‘ ‘

‘ ‘தெர்ல ‘ ‘ என்று சிரித்தார் முதலாளி.

தெருவில் போஸ்டர்- அதும் தன் பெயரைப் பெரிதாய் எழுதி அச்சடித்துப் பார்ப்பதில் சென்னை நகரவாசிகளுக்குப் பெரும் ஆவேசம். எவனாவது செத்துட்டாக்கூட கண்நீர் அன்சளி – ஓவராக் கண்ணீர் விட்டா சளி பிடிச்சிக்கும்லய்யா… சுவரொட்டி அடிச்சிர்றாங்க. அதில் பெரிசாய்ப் பேர் தன் பெயரைப் போட்டுக் கொள்கிற அவசரத்தில்… அஸ்வத்தாமா செத்தான் என்று சத்தமாய்ப் போரில் பிரகடனம் பண்ணி விட்டு, சின்னதாய் யானை… என முடித்தாற் போல பாரதக்கதை உண்டே… அந்த ரேன்ஜில் திரு அன்பரசன் அவர்கள் என்று போட்டு கீழே அவர்களது தாயார் மரகதம் அம்மாள் மரணம்… என சுவரொட்டி. ஊர்ல பாதிப்பேர் அன்பரசன் செத்திட்டதா நினைச்சிட்டான்யா பாவம்! காலம் அப்டிக் கெடக்கு.

எடேய் சிவா… உடல் மண்ணுக்கு உயிர் அர்ஜுனுக்குன்றியே… உன் வருங்காலப் பெண்டாட்டி உடல் அர்ஜுனுக்குன்னு போஸ்டர் அடிச்சாள்னா நீ தாங்குவியாடா மாப்ளே ? பதறிற மாட்டே ?… என நினைத்துச் சிரித்துக் கொண்டான் தனுஷ்கோடி.

சிவகுமார் கல்யாணம் என்று வீடே அல்லோல கல்லோலப் படுகிறது. நண்பர்கள் தண்ணியடிச்சிட்டு ஒருவித கிறுகிறுப்புடன் அலைகிறார்கள்.

ஆ… அதைச் சொல். தனுஷ்கோடிக்கு எதிர்பாராமல் ரெண்டு நாள் விடுப்பு கிடைத்தது.

உயிர் முதலாளிக்கு… என்று அவன் போஸ்டர் அடிக்காமலேயே எடுத்துக் கொண்டவர் தாயுமானவன். அவர் உயிரைத் திருப்பித் தந்தது அருமையான விஷயமாச்சே!

அவன் நினைத்துக் கொண்டான்- அன்னையை வேண்டிக் கொண்ட முகூர்த்தமா இது ? ஆச்சர்யமாய் இருந்தது.

பாண்டிச்சேரி வருவதாக நாதன் சாரிடம் தொலைபேசியில் பேசினான். இப்போதுதான் தமிழ்நாட்டுக்குள் ஐந்நுாறு கிலோமீட்டர் அளவில் 95 போட்டுப் பேசலாம் அல்லவா ? முதலாளி தொலைபேசியிலேயே அவர் அசந்த நேரம் பேசினான். 95413 ….

‘ ‘வாய்யா வா வா… ‘ ‘ என்றார் நாறும்பூநாதன் உற்சாகமாய். ‘ ‘அன்னை உன்னைக் கூப்பிடறாய்யா ‘ ‘ என்றார். ‘ ‘அன்னையை நம்புய்யா. அப்பறம் உன் வாழ்வின் மாறுதல்களைப் பார்… ‘ ‘ என்றார்.

தொலைபேசியை வைத்து விட்டுத் தலை நிமிர்ந்தால் அன்னையின் படம். அவனைப் பார்த்துச் சிறு சிரிப்புடன் அவனை வரவேற்பதாக பிரமை தட்டியது. மனசுக்கு… சிறகு விரிக்கிற கற்பனைகள் வேண்டித்தான் இருக்கிறது.

அவனுக்கே தோன்றியது, எப்படி தெரியாது. அன்னை வளாகத்தில் ஒரு புதிய அனுபவம் காத்திருக்கிறது….

—-

/தொ ட ரு ம்/

sankarfam@vsnl.net

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/13/

தனுஷ்கோடிக்கு நாதன் சாரைச் சந்தித்தது பெரும்பொழுது என்றுதான் பட்டது.

சற்று பெரியவர் என்பதை… முதிய தலைமுறைக்காரர் எனவும் அதனாலேயே அவரை முதல்-மதிப்பீட்டிலேயே அலட்சியப் படுத்தவும் நினைத்தது எத்தனை அறிவீனம் என தனக்குள் தானே வெட்கப் பட்டான். மனிதர்களை அவர்களது இயல்பு வட்டத்தில்… அவரவரை மதித்து பரிச்சயம் கொள்வது கூட நல்ல குணாம்சம்தான். இளமையின் சுயதினவெடுப்பில் இப்படி விஷயங்கள் உறைக்கிறதே யில்லை. நிறைய இசாதிபதிகள்… தத்துவவாதிகளும் இதைக் கண்டு கொள்கிறதே யில்லை. தன் கருத்தை நிருவுதல் சரி… அதை நிர்ப்பந்திக்கிற ஜோரில் அதைப் பற்றி அழுத்தமாய்ப் பேசுதல் என்பதுகூட சரி… ஆனால் பிறர் கருத்தை அலட்சியப் படுத்திப் பேசுதல் என்பது அத்தனை முறையல்ல. அதனால் என்ன பயன் விளைந்துவிடப் போகிறது… இப்படி விஷயங்களை யாரிடம் நீங்கள் உங்கள்-கருத்து சார்ந்த உள்ளழுத்தத்துடன் பேசப் போகிறீர்கள்… எதிரணியில் நம்பிக்கை யுள்ளவரிடம்தானே ? எதிரணியை உதைபந்து போல ‘பா ‘வித்துப் பேச ஆரம்பித்தால் அவர் எப்படி நம்மை கவனிப்பார்… என அவர் சிந்திக்கிறதே யில்லை. பிறகு எப்படி அவரால் தன் கருத்தை வெற்றிகரமாய் நிருவ முடியும் ?… அல்லவா ?

ஒரு கருத்தில் நம்பிக்கையுள்ளவர் அதன்பால் ஆழங்காற்பட்ட பரிச்சயம் செய்துகொள்ள விரும்பியவராய் இருக்கிறார். அதில் அவர் அப்படி கால அளவில், சுயதேர்வு அடிப்படையில் தமது அறிவை விருத்தி செய்திருக்கவும் கூடும்… என்பதெல்லாம் நாம் புரிந்து கொண்டு அவரை அணுக வேணாமா ?

நமது வளாகத்து சிந்தனைகளைத் திணிக்கிற ஆவேசத்தில் பிற வளாகங்களை தரிசிக்க நாம் தவறியவர் ஆகிறோம். மட்டுமல்ல- நாம் கற்றுக்கொள்ளத் தவறியவராக ஆகவும்… ஒரு அழகிய சந்தர்ப்பத்தை நழுவ விடவும் வாய்ப்பு வந்து விடுகிறதே…

அரவிந்தர் சூர்ய ஒளி என்றால், அன்னையை சந்திரப் பிரகாசமாய்ச் சொல்வது சிறிய உவமை எனலாம். இது அதன் வீர்ய அளவு அல்ல- வெளியீட்டு அளவு. அரவிந்தர் வானம் என்றால், அன்னை வானத்து மழை. மானுடப் பறவை. பூமியை நேசித்து உயரப் பறந்து பூமியை ஆராய்ந்த பறவை அல்லவா அவர்.

வாழ்வின் அடுத்த கட்டம் பற்றி, சமூகத்தின் அடுத்த வளர்ச்சி பற்றி அரவிந்தர் கனவு கண்டவர். அன்னையோ நிகழ் சமூகத்தின் வழி மேன்மையை… அபிவிருத்தியை நிருவ வந்தவராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். பகவான் ஸ்ரீ அரவிந்தரின் சமூகச் செயல்வீரராக அவர் விளங்குகிறார். தமது கனவுகளின் முதல் நனவுரு என பகவான் அன்னையைக் கண்டு கொண்டது அவரது வாழ்வின் தனிச் சிறப்பு அம்சம் அல்லவா ?

The philosopher and his Prophet.

அரவிந்தரின் சிந்தனைகளும் கவிதைத் தெறிப்பான குதிரை-நனவோட்டமும் உடைத்து- ஓடுபிரித்துச் சுவைப்பது சாதாரண ஜனங்களுக்கு அத்தனை சுலபமல்ல. அவரது சொற்சுருக்கம் அபாரமானது. வெளியீட்டு வீர்யமோ அடேயப்பா… அதைப் புகட்டுகிற அளவில்… மிக மிக எளிய நிலையில்… வாழ்வுத் தடாகத்தில் குளிரக் குளிரக் குளிக்கிறதைப் போல அனுபவிக்க வழிமுறைகள்… நடைமுறைகள் கண்டவர் அன்னை அல்லவா ?

மலர்கள் இயற்கையின் கனவு. அதன்வழி தத்துவார்த்த ரீதியாய் உலகை ஊடுருவுதல் எத்தனை அற்புதமான வழிமுறை. எத்தனை எளிய அணுகுமுறை… ஆச்சர்யமாய் இருந்தது அவனுக்கு.

சடங்குகளைப் புறக்கணிக்கச் சொல்கிறார் அன்னை. புதிய சடங்குகளை நாம் அர்த்தப் படுத்திக் கொள்கிற அளவில் அவர் முன்வைக்கிறார். பழைய சடங்குகள் காலரீதியான அர்த்தவீர்யத்தை இழந்தபின் அவற்றை கல்யாணகோட் போல வெறும் நினைவம்சம் என வீட்டில் வைத்திருப்பதில் அர்த்தம் என்ன ? இன்றைய வளர்ச்சி நிலையில் நம் உடம்புக்குப் பொருந்தா உடைகள் அவை அல்லவா ?

புதிய கனவுகளை சடங்குகளை நமக்கு நிகழ்கால அளவில் அர்த்தம் புரிகிற அளவில் வைத்துக் கொள்வதே நல்லது. மனிதனைக் கொண்டாடுதல், மனிதன் தன்னைக் கொண்டாடிக் கொள்ளுதல், வீட்டிலான சிறு திருவிழா அனுபவங்கள், வைபவங்கள், கூடிக் கலத்தல்… களித்தல் எல்லாமும் மனிதனுக்கு வேண்டியிருக்கவே செய்கிறது. அதை சற்று முறைப்படுத்தி வாழ்வினை வெற்றிப் பாதையில் செலுத்த, உன் உள்-ஆவேசத்தைக் கிளர்ச்சியுறச் செய்ய அன்னை நெறிமுறைகள் காண்கிறார்.

எத்தனை வயதானால் என்ன ? பிறந்த நாளைச் சிறப்பாக மதிக்கிறார் அன்னை. மதிக்க வேண்டும் என்கிறார். அதற்கான அவரது விளக்கம்… தனுஷ்கோடி அயர்ந்து போனான்.

பிறந்தநாள் என்பதென்ன ? இந்த உடல் காற்றையும் சூரிய ஒளியையும் அனுபவிக்கத் துவங்கிய நாள் அல்லவா ? மெல்ல தாமே இவ்வுலக வாழ்க்கைக்கு அந்த உடல், அந்த அறிவு, அந்த ஆன்மா தன்னைத் தயார் செய்துகொண்ட நாள் அது. முழுக்க தன்னை முன்னிறுத்தி வாழ்வின் சவால்களை நடைமுறைகளை அறிய மூளை இயங்க ஆரம்பித்த நாள்… அதைப் போற்றுவது, அதில் இருந்து வாழ்க்கை அடுத்த சுற்றுக்கு வருகிறதாக ஒரு மனம் உணர்வது… சுயமான எத்தனை சுகமான உணர்வு… நம்பிக்கையை வளர்க்கிற, இதமான பக்குவமான அனுபவம்!

அன்னைக்கு வணக்கம்.

மூன்று மாதத்தில் அந்த சிசு இவ்வுலக நியதிகளில் தன்னியல்பாய்ப் பிடிகொள்ள ஆரம்பிக்கிறது. கண்கள் எதையும் குறிப்பாகப் பார்க்காமல் பார்வை நிலைகொள்ளாமல் இருந்த நிலை மாறி, பார்வை நிலைத்து தம்மைச் சுற்றியுள்ள உறவினரை, குறிப்பாக அம்மாவை அது ‘தானே ‘ அடையாளங் கண்டுகொண்டு சிரிக்க ஆரம்பிக்கிறது. கண்களால் வெளிச்சத்தை உணர ஆரம்பித்து விடுகிறது. சூடு- வெப்பக் கதகதப்பு போன்ற உணர்வுகளை உணர ஆரம்பிக்கிற வளர்ச்சி நிலை அது. தன் அறிவைத் தானே பயன்படுத்த ஆரம்பிக்கிற பருவம். கைகால்களை தன் குரலை அது அடையாளங் கண்டு கொள்கிற நிலை… தன் இயக்கங்களைப் புரிந்து இயங்குகிற நிலை… வாழ்வின் துவக்கத்தில் அது எப்பெரும் மகிழ்ச்சித் தடாகம் என அமைந்து விடுகிறது அந்த சிசுவுக்கு. அதன் கண்களில்தாம் எப்பெரும் ஒளி. உடம்பெங்கும் எத்தனை பூரிப்பு. சிரிப்பு. கெக் கெக்.. என்கிற சிரிப்பும், மெல்ல அது தன் குரலை சிறகு விரிச்சாப் போல வெளியே நீட்டுகிறதும் அதற்கும் – அதன் உறவினர்க்கும் பரவச அனுபவங்கள் அல்லவா ?

அறிவு மெல்ல தீட்சண்யப் பட்டு வருகிற இந்த காலங்களைப் பதிவு செய்து கொண்டால், தன்னை உற்று கவனித்தால் வருடத்தின் சில கட்டங்களில் தமது அறிவைப் பயன்படுத்தும் ஆவேசம் தன்னில் உற்றெடுப்பதை ஒருவர் கண்டுகொண்டு – எத்தனை வயதானால் என்ன ? – ஒவ்வோர் ஆண்டும் வெற்றி வாய்ப்புகளுக்கு முயல அறிவைப் பயன்படுத்தும் சரியான தருணத்தை அவரவர் நிர்ணயம் செய்து கொள்ள முடியும்… என்பது அன்னையின் கணிப்பு… வழிகாட்டுதல்.

ஒரு பிரத்யேக சுயபயிற்சியில் இந்தப் பழக்கத்தை அறிவின் வாள்வீச்சை வெற்றியை நோக்கி இயக்க… வாய்ப்புகளை நம் வசப்படுத்த நாமே வருட முழுமைக்கும் காலப்போக்கில்… வயது வளர வளர சீரமைத்துக் கொள்ள என்ன தடை ?

தானே தன்னைப் பார்த்து… தன்னை விருத்தி செய்துகொள்ளுதல் என்கிற ஸ்ரீ அரவிந்தரின் கனவினையும், அதை நடைமுறைப் படுத்தும் அளவில் அன்னையின் வழிகாட்டுதலையும் இந்த ஒரு வாழ்வம்சம் வழியேகூடப் புரிந்து கொள்ள முடியும்…

பிறந்தநாளைத் தாமே தம்-சிறப்பாக உணர்தல்… அதை அன்னை சிறப்பு வாழ்த்து அட்டைகள் மூலம் போஷித்து வளர்த்தல்… அடாடா வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளுதல் என்கிற விஷயமே எத்தனை உற்சாகமான அனுபவம். நற்சிந்தனை, இனியவை கூறல், வாழ்த்திக் கொள்ளுதல்… அன்றாடம் கடைப்பிடித்தல் எத்தனை ஆரோக்கியமான விஷயம்!

அன்னையின் வளாகத்தில் சற்று நின்று வணங்க வேண்டும் போலிருந்தது தனுஷ்கோடிக்கு.

—-

/தொ ட ரு ம்/

sankarfam@vsnl.net

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -15)

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/8/

பறவை உயர்திணை. மனிதர் அஃறிணை.

மனிதர் பறவைகளைச் சுட்டு வீழ்த்துவதில் கண்ணுங் கருத்துமாய்த் திரிகிறார்களே…

ராபின் பறவைகள் அழிந்தே போயினவே…

பறவை

அலைகிறது

மரத்தைத் தேடி.

சற்று அழகானதோர் இளம் பெண்ணுக்கு தனியே வாழ இங்கே எத்தனை நெருக்கடிகள்… நெருப்புக் கடிகள்… அவள் சூடுகள் கண்ட பூனை.

அவள் சுடர். அவளை அணைக்க முயன்ற ஆண்கள் எனும் வேட்டைநாய் வெறிக் கூட்டம்.

சுடரே சுட்டெரிக்கப் பட்ட கதை சோகக்கதை.

திசையெங்கிலும் அவள் வழிமறிக்கப் பட்டிருந்தாள்… வேலிகள் பாதுகாப்புக்காக அல்ல. அவள் வெளியேறி விடக்கூடாது என்பதாய் அமைந்த நிலை.

சற்று அழுவாள். துயர் உதறி திரும்பி எழுவாள். அவள் எழுந்து கொண்டாக வேண்டியிருந்தது.

தசையினைத் தீ சுடினும் இனி அழக்கூடாது என உறுதியெடுத்த கணம் உலகம் வேறு மாதிரியாய்த் தோணியது… அழுவதாவது… அழுகை பலவீனப் படுத்தி விடுகிறது ஆளை.

தற்செயலாகச் சாப்பிட ஒதுங்கிய ஒரு ஹோட்டலில் தற்செயலாக அவள் கவனித்தாள். அங்கே அனைவரும் பெண்கள். நிர்வாகம் முதல் சமையலறையிலும் பரிமாறவும் எல்லாருமே பெண்கள். ஆச்சரியமாய் இருந்தது. அவள் இதுவரை கண்டிராத விஷயம் இது. வாழ்க்கை பெரும் மிரட்டல் மிரட்டுகையில் ஆண்கள் ஹோட்டல் எடுபிடியாகி விடுகிறார்கள். சாப்பாடு… குறிப்பாக தங்குமிடம் சேர்ந்து சொற்ப சம்பளமும் தருகிற வசதி ஹோட்டல்களுக்கே உண்டு. இந்த அமைப்பு ஒரு பெண்ணுக்கு தனியே திகைக்கிற ஆணைவிட பெண்ணுக்கு… எத்தனை பெரிய பாதுகாப்பான விஷயம்.

‘நானும் இங்கே வேலைக்கு வந்து விடலாமா ? ‘ என்று கேட்டாள் சுடர். கல்லாவில் அமர்ந்திருந்த வயதான அம்மையார் வரியோடிய கண்ணில் சிரிப்புடன் அவளைப் பார்த்தாள்.

‘வீட்ல கோவிச்சுக்கிட்டு வந்திட்டியாம்மா ? ‘

‘இல்லை ‘ எனத் தலையாட்டினாள் சுடர். ‘நான் ஓர் அநாதை ‘ என்கிறாள்.

‘அடடா… ‘ என்று அந்த அம்மாள் வருத்தப் பட்டது எத்தனை பஞ்சொத்தடமாய் இருக்கிறது. அவளையிட்டு வருத்தப்படவும் நாட்டில் சிலர் இருக்கிறார்கள்…

‘இங்கே எல்லார் பின்னணியிலும் பெரும் சோக சம்பவங்கள் குவிந்து கிடக்கின்றன… என்னிடம் உட்பட… ‘ என்கிறார் பெரியம்மா.

‘உன் பெயரென்ன ? ‘ என்று கேட்கிறார்.

‘சுடர்… சுடர்மணி ‘

‘இப்போதிருந்து நீ வேலைக்குச் சேர்ந்தாற் போல… ‘

சுடருக்கு நம்பவே முடியவில்லை. வாழ்க்கை இத்தனை சுலபமான அளவில் பாதுகாப்பு பெறும் என அவள் எதிர்பார்க்கவேயில்லை….

இது ஆண்களின் உலகம் அல்லவா ? ஆணாதிக்க உலகம் அல்லவா… இங்கே பெண்கள் ஆண்களின் சொத்து எனவும் வேட்டைப்பிராணி எனவும் ஆகிப் போன நிலையில் இவர்கள் எப்படிச் சமாளித்துக் கொள்கிறார்கள் ?

அந்த உணவு விடுதி பெண்கள் காவல் நிலையத்தின் அருகில் அமைந்திருப்பதை கவனித்தாள் அவள். நல்ல விஷயம் அது. தவிரவும் இந்த முயற்சியை ஊக்குவித்ததே ஒரு ஐபியெஸ் பெண்போலிஸ் அதிகாரி எனவும் அறிந்தாள்… அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

காலப்போக்கில் – பெண்களும் வேலைக்குப் போகிற தற்கால நடைமுறையில் இப்படி முழுதும்-பெண்களே என்றான அலுவலகங்களும் சகஜமாகி விடும், சமூகப் பாதுகாப்பு அவர்களுக்கும் கிடைத்துவிடும் என நம்பிக்கை வந்தது அவளுக்கு.

வெகுகாலங் கழித்து அன்று நிம்மதியாய் உறக்கம் வந்தது.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/7/

உடல் அலுத்துத் துாங்கவும், காலை வெளிச்சம் கண்ணைக் குத்த எழுந்து கொள்வதும் வாடிக்கை என ஆகிவிட்டது. அம்பிகா இருந்த காலங்கள் விடியல்-சுகம் கண்ட காலங்கள். அதிகாலைப் பனிக்குளிர் அழகு. தனுஷ்கோடிக்கு அவை கிராமத்தை உள்ளத்தில் அமர்த்தி விடுகின்றன. மரவட்டையாய் ரயில்ப்பூச்சியாய்ச் சுருண்டு கிடக்கிற நியதிகள் முதல்மணி அடித்து ரெண்டாம் மணி அடித்தாற்போல… சற்று சோம்பல் முறித்து விட்டு எழுந்து கொள்கின்றன… ஆலங்குச்சியோ வேலங்குச்சியோ சாறு இறங்க இறங்க பல்தேய்ப்பது ஓர் அனுபவம்… நீரே அற்றுப் போனது நகர வாழ்க்கை.

முதல் மணி ரெண்டாம் மணி என்றெல்லாமில்லை. எடுத்த ஜோரில் ஓட்டம். நீராவி ரயில் அல்ல… மின்சார ரயில். நுால்-பாவுக்குள் பாவுக்கட்டை கொடுத்து நெசவுசெய்கிறாப் போல அதன் தடக் தடக் தடதடப்பு. ரயில் ஊரை இந்தக் கோடிமுதல் அந்தக் கோடிவரை பிணைப்பது நெசவு இயந்திரம் அடிப்பதுபோலவே அவனுக்குப் படுகிறது. மனசில் கவிதைகளைச் சிந்திக்கொண்டே அலுவலகம் வரை செல்வது அவனுக்கு வழக்கமாகி விட்டது. அறுவடைக்குப் பின் நெல்மணிகளைச் சிந்திக்கொண்டே வீடுதிரும்பும் மாட்டுவண்டி அவன்… அந்த நெல்மணிகளுக்கு எங்கிருந்தெல்லாமோ குருவிகள் சேரும். தவிட்டுக்குருவி. கரிக்குருவி. மைனா. புறாக்கள் பக் பக் என்கிற வித்தியாசாமான ஒலியுடன் உத்திர அரங்கில் குடியிருக்கும். வீடே இயற்கையின் சப்த ஆளுமையில் மற்றபடியான மெளனத்தில் இருந்தது. நகரத்தில் மனிதர்கள் பேசுவதும் இயற்கை ஸ்தம்பித்துக் கிடப்பதுமாகி விட்டது… சொன்னானே உதயகண்ணன்-

பறவை

அலைகிறது

மரத்தைத் தேடி

நம்மூர்க் குயில் போலவே, ராபின் பறவைகள்… புழுக்களை நம்பி வாழ்கிற ராபின் பறவைகள்… தாவரங்களைப் பாதுகாக்கிற நடவடிக்கையில் உரங்கள் பூச்சிமருந்துகள் அடித்து அடித்து… புழுக்களை அழித்ததில் ராபின் பறவைகளை ஒட்டுமொத்தமாக இழந்தோம்… தனுஷ்கோடி கேள்விப் பட்டிருக்கிறான்.

தான் மாத்திரமே வாழ்கிற ஆவேசம் கொண்ட மனிதன்.

பறவை உயர்திணை. மனிதன் அஃறிணை.

சுயநல ஆவேசம். அடடா… அதன் வழிப்பட்ட தலைகுப்புற விழும் ஏமாற்றங்கள். அதை சகிக்க முடியாத மனிதர்கள்…

இவள்… அம்பிகா தற்கொலை செய்து கொண்டாள். அவளிடம் சில கனவுகள் இருந்தன. கனவுகள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி விடுகின்றன என்பது நிஜம். அடுத்த அடி வைப்பதற்கு முன் அதற்கும் அதற்கும் அடுத்த அடி… மேற்படிகளுக்கு ஏற தாவியேற ஆசைப்பட்ட போது பட்டது அடி. காயம்.

காயங்கள்.

கனவுகள், இலட்சியமாய் வேர்ப்பூண்டாய்த் திரளவேணாமோ ? அவளது ஆசைகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை தனுஷ்கோடியால்.

கைக்கு அடக்கமான அளவில் கைப்பணத்தில் செலவுகளைக் கட்டுப்படுத்தி திட்டமிட அவளுக்கு வரவேயில்லை. அப்படி வாழ வேண்டியிருக்கிறதில் ஏனோ அவள் ஆயாசப் பட்டாள்… அவளை எப்படி பூமிக்குக் கொணர என்று தனு திகைத்தான். சற்று அசைத்தாலும் காற்று அவளது காகிதப் பட்டத்தைக் கிழித்துவிடும் போலிருந்தது. அவனது ஜாக்கிரதை உத்திகள் பலனளிக்கவில்லை. அவன் இன்னும் சற்று அதிகம் சம்பாதித்திருக்கலாம். இன்னும் சற்று சந்தோஷமாய் அவளை வைத்துக் கொண்டிருந்திருக்கலாம். அவளை இன்னும் விசாலமாய் ஆராதித்து, கொண்டாடி… அவள் அழகைப் புகழ்ந்து… அவள் காலடியில் கிடந்திருக்கலாம்.

கணந்தோறும் கவிதைகளை உள்ளே நிரப்பிக் கொள்கிற அவன். ஏமாற்றங்களை நிரப்பிக் கொள்கிற அவள். உலகம் அவளுக்கு சோக கோளமாய் கோரமாய்க் காணக் கிட்டியது. சந்தோஷம் என்பது துள்ளியும் எட்டாப் பழம் அங்கே…

சாயந்தரம் நான் சினிமாப் போகணும்- என்பாள் அம்பிகா.

துட்டு ? – என்கிறான் அவன் மெலிதான புன்னகையுடன்.

வேணும் – என்கிறாள் ஒற்றை வார்த்தையில். இல்லையே… எனச் சொல்ல வருத்தமாய் இருக்கிறது அவனுக்கு.

வேணும். படம் இன்று கடைசி. வியாழக் கிழமை. நாளை வெள்ளிக்குப் படம் மாத்திருவான்.

காசில்லையே – எனும்போது அழுகை வந்தது அவனுக்கு. அறிவான குழந்தை அவன். அறிவு-எளிமை கொண்ட உக்கிரகாளி அவள்!

எப்ப பாரு… காசில்லையே – அவள் அந்தக் கடைசி வார்த்தையை இகழ்ச்சிக் குறிப்புடன், அதே அவன் குரலில் கையை சற்று பாவனைகள் செய்து எரிச்சலை வெளிப்படுத்தினாள். ஆத்திரமாய் வந்தது அவளுக்கு.

நான் வரேன்னு சிநேகிதிகளுக்கு வாக்கு கொடுத்திட்டேன். பாக்கியராஜ் படம். ஒரே தமாசா இருக்கும்…

அவனுக்கு அழுகை வந்தது. அதை அவள் சட்டை செய்யவில்லை. அவனை ஈரமற்றுப் பார்த்தாள். சாப்பிடாமல் கூட இருக்கலாம். அவளுக்கு ஆசைப்பட்ட பொருள் வேண்டும். உடனே… தக்கணமே கையில் அகப்பட வேண்டும்.

சண்டை. சண்டைகள்.

பக்கத்து வீட்டுக்காரியை விட நான் பணக்காரி என்ற அம்சம் வேண்டும் அவளுக்கு. சற்று உசரமானவள் நான்… என்னருகே குட்டையானவள் வேண்டும்.. குட்ட அவளுக்கு பக்கத்தில் ஆள் வேண்டும். குட்ட அல்ல- தேளாய்க் கொட்ட!

Just too much is enough, என்பார்கள்.

ஒரு நேர்கோட்டை அழிக்காமல் அதைச் சின்னதாக்குவது எப்படி ?… பக்கத்தில் பெரிய கோடு போடு என்பார் பாலசந்தர்… இரு கோடுகள் படத்தில். அவளோ பக்கத்தில் சின்னக் கோடு இருக்க விரும்பினாள்.

போர். கோபம் வந்தால் நீங்கள் என அவனை விளித்தல் நீயாகி விடும். அவனுக்கு வாழ்வே நரகமாகிப் போகும். திகைப்பாய் இருக்கும்.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


ஆறாம் பகுதி – தொடரச்சி

தன் புகழ்ச்சியும் தன் வியத்தல் சார்ந்த மிதத்தல் பார்ட்டிகள் தவிர, இதுசார்ந்த உள்க்கலவரம் சுமந்து திரிகிற எழுத்தாளர்கள் உளர். அவர்கள் வேறு ஜாதி. சில வெளிநாட்டுக்காரர்களைக் கூட வெச்சிக்கிறதுதான். பெரிய நடிகர் கட்அவ்ட்டோடு புகைப்படம் எடுத்துக்கிர்றதுல ஒரு கிக் இல்லியா ? அதைப்போல. அவாள்கிட்ட வந்து யாராவது இலக்கியம் பத்திப் பேச்சு எடுக்கணுங்கறதில்லை… அடுத்தாள் இலக்கிய கர்த்தான்னு இவனுக்கு மோப்பம் கிடைச்சாலே போதும்… உனக்கு இந்த எழுத்தாளனைத் தெரியுமான்னு பேரே வாயில் நுழையாத வெளிநாட்டு ஆசாமியைப் பத்தி ஆரம்பிச்சிருவார்கள்… வெளிநாட்டு சாப்பாட்டை எப்பிடிச் சாப்பிட என்று கையில் ஸ்பூனும் கையுமா திகைக்கிறாப்ல ஆயிப் போகும். இல்லன்னு நீ சொல்லி, அவன் காதாறக் கேக்கணும். அவன் பேசணும். நீ படிச்சிருக்கேன்னு பதில் ஆராம்பிச்சா… ஆசாமி விட்ரும் ஜுட். ஏன்னா அவனே படிச்சிருக்க மாட்டான்!

இலக்கிய தீபாவளியில் வேடிக்கைகளுக்குப் பஞ்சமேயில்லை. சில ஆள் எழுத ஆரம்பிக்கு முன்னமே தானே தலைல அட்சதை போட்டுண்டேதான் இலக்கிய-திவசம் ஆரம்பிப்பான். இலக்கியத்தில் இதுவரை செய்யாத புதுமை- புது உத்தி… இலக்கியத்தை நையப் புடைக்கிற புது சுத்தி அது. அட உனக்குப் புதுசு மாப்ள. வாசிக்கிறவனுக்குக் கொட்டாவி வருதே.

அன்னிக்கு ஒரு பெண் எழுத்தாளர் வந்திருந்தாள். நவீன படைப்ப்ாளியாம் அவள். அவளே சொன்னதுதான். தனுவுக்கு அவளைத் தெரியாது. தனிப் பத்திரிகை பெண்களுக்கென அவள் குடிசைத் தொழில் போல ஆரம்பித்திருக்கலாம்… பெண்ணுரிமை என ஆவேசம் கண்ட பார்ட்டி. தன்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் பிழை திருத்தணும் என்று சொன்னாள். கதை ஒரு பெண் வயசுக்கு வந்த நிகழ்ச்சிகளை விலாவாரியாய்… உபாதைவாரியாய்ன்னு வெய்யி… விவரித்த கதை. அச்சில் அரசல் புரசலாய்ப் படித்திருந்தான்.

‘என்னங்க கதை இது ? ‘ – என்றான். ‘ஏன் ? ‘ என்றாள் கொந்தளித்து. பயமாயிட்டது- கடைசியில் பார்த்தால் விவகாரம் வேறு- அவளே அதன் ஆசிரியை. ஹா தமிழின் ஆகச் சிறந்த படைப்பைத் தந்திட்டு வந்து அமைதியா உக்காந்திருக்கம். ஒரு பிரஸ் மேற்பார்வை – அதும் ஆம்பளை… ஓசி டா, எச்சி டா பார்ட்டி… கேள்வி கேக்கறதா ?…

இலக்கிய (முடி)சிலிர்ப்புகள்!

பெண்கள் தங்கள் சமாச்சாரங்களைத் தாமே எழுத முன்வருகிற ‘இலக்கியத் திட்டத்தில் ‘ அவள் இயங்குகிறாள். பெண்ணிலைவாத நல்லாத்மா. வாழ்க. இப்படி ஆட்கள் ஆணாதிக்க சமுதாயத்தை எதிர்த்துக் குரலெடுக்கிறதாய்த் தாங்கள் நம்பிக்கை கொண்டிருக்க, நீ எழுது கண்ணம்மா. நாங்க ரசிக்கிறோம்… என ஆணாதிக்கவாதிகள் ஊக்கி உசுப்பி விட்டாகிறது. பெண் – வீடுன்ற அமைப்பை விட்டு அவளாகவே வெளிய வந்திட்டா இன்னும் நல்லதுதானே ? ‘வசதி ‘தானேய்யா!

வரதட்சிணை தராதோர் சங்கம்னு ஆரம்பிச்சிரேய்யா ? எத்தனை மெம்பர்ஸ் இருக்காங்க-ன்னானாம்…

இப்போதைக்கு நானும் என் அஞ்சி பொண்ணும்… என்றானாம் இவன்.

– அந்தக் கதையாட்டம் இருக்கே ?

சிலாளுகளுக்கு இடங் கிடைச்சாப் போதும்… கூட வார ஆளுகள்லாம் மட்டக்குதிரைன்னு அட்டகாசப் பேயாட்டம் எடுக்கிறதில் தனி உற்சாகம். நம்ப ‘ஷ ‘ மாதிரின்னு சொல்லலாம். தலையெழுத்துடா. இதும்பேரு இலக்கிய உலகமாடா. அவனவனுக்குத் தெரிஞ்சதை அமைதியா வந்தமா எழுதினமா போனமான்னு இருக்கலாம்…

தமிழில் இலக்கியம் வளரவில்லை-ன்னு விமரிசகன் ஆவேசமாத் திட்டியாறது. அது ஒரு ஃபேஷன். அவாள் அறியாத இலக்கிய உலகமான்னு உள்சிலிர்ப்புதான். வேறென்ன ? கேட்டா… இலக்கியவாதிக்கு இந்த உள்க் கொம்பு அவசியம்டா. அவன்தான் எழுத்தாளன். அட அது அவனது வாக்கிங் ஸ்டிக் போல. அதைத் தட்டி விட்றாதீங்கப்பா. அவன் வாழ்றதே அந்த பிரமைலதான்னு சமாதானம் பண்றாங்க. இவன் நடையைவிட வாக்கிங் ஸ்டிக்கை நம்பினா என்ன செய்யிறது. இலக்கிய சப்பாணிகள்!

நல்லிலக்கியம் வார்த்தை அலைகளை விட மெளனத்தைச் சுமந்ததாய் இருக்கிறது. புயல் அல்ல அது. தென்றல்… வரும்… தலைகோதும். மெளனத் தாலாட்டு. தாயின் உச்சிமுகர்தல். பிரியத்தைப் பகிரும். புரட்சிதாய்யா… என்றாலும் அது அமைதியாய்ப் பரிமாறப்படும் ஆந்திரச் சமையல் காரக் குழம்பு. எதிரணியையும் புன்னகையுடன் சமாளிப்புத் திறனுடன் அமைதியாக அணுகுகிற வல்லமை கொண்டது அப்பெரும் படைபபுகள். தன் சிலாகித்தல் அதில் இராது. தளர்வான ஆதரவான புன்னகை. பிற வளாகங்களை மதிக்கிற சுய துணிச்சல். எடுத்தெறிந்து பேசுகிற பாவனை அற்ற எளிமை. பிறர் குரலை மதிக்கிற விமானதளம் அமைத்துத் தருகிற விவாததளம் அது அல்லவா ? அது பேய்போல புளிய மரம் தேடி அலையாது. வாசகனை பேய்பிடித்தாப் போல பாவித்து அவன் உச்சிமயிரைப் பிடித்து ஆட்டாது. வார்த்தைகளைச் சுமந்து திரியாது. வாசகனைச் சுமக்கச் சொல்லி கட்டாயப் படுத்தாது. சிக்கல்களையும் சுத்திகரிக்கப்பட்ட எளிமையுடன் அது சீட்டாட்டத்தில் வெற்றி பெற்ற எளிமையுடன்- சீட்டைக் கவிழ்த்து விட்டுப் புன்னகைக்கும்.

பன்னீர்ப் புகையிலையை கோலியாய் உள்ளொதுக்கிப் புன்னகைக்கிற ஜாம்பவான் தாத்தா.

அவனுக்கு அந்தப் பெரியவர் ஞாபகம் வந்தது. உனக்கு அரவிந்தரைத் தெரியாது… ஸ்ரீ அன்னை பற்றித் தெரியாது… அவர் குரலின் சிறு வருத்தம் அவனைச் சட்டென்று தீண்டியது. மிக அடக்கத்துடன், நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் – என்றான்.

பொதுவாக இப்படி சமாச்சாரங்களை சற்று உள்ஹாஸ்ய வேடிக்கையான மந்தகாசத்துடன் – படைப்பு மாதிரிகளில் எதிர் இருக்கே… இது ஒரு மாமிச அம்சம்! – என்று எள்ளலுடன் தனு அணுகுவது உண்டுதான்.

எப்படியோ அவனுக்கு அவரைப் பிடித்திருந்தது.

– சார் புனைப்பெயரில் எழுதறீங்களா ?

– தைரியமா, சொந்தப் பெயரிலேயே எழுதறேன்… என்கிறார் அவர்.

—-

/தொ ட ரு ம்

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/6/

அவை வெறும் அச்சு யந்திரங்கள் தாமே… கொடுத்ததைப் பேசாமல் அவை பதிக்கின்றன. கல்யாணப் பத்திரிகை அடிச்ச மையைக் கழுவி விட்டு இழவு அறிவிப்பை அடிக்கச் சொன்னாலும் அழாத மெளனத்துடன் அவை அடிக்கின்றன… உண்மைகளைப் பொய்களை அடிக்கின்றன…

காகிதத்தில் என்ன இருக்கிறது

காகிதம்

– என்கிறார் நகுலன். பரவலாய்க் கேலியாடப்பட்ட கில்லியாடப்பட்ட கவிதை இது. ரொம்பநாள் தனுவுக்கும் அந்தக் கவிதை வேடிக்கையாகத்தான் இருந்தது. இந்தக் கவிஞர்கள் அப்படி விவரம் அற்றவர்களும் அல்ல… A rose is a rose is a rose – என ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறான் அவன். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகு என்கிறானாம், என ஒரு விளக்கம் தருகிறார்கள் அதற்கு. நம்ப சினிமாக்கார ஆசாமி ஒருவர் கூட – வாலியா கண்ணதாசனா தெரியவில்லை… இதற்குமேலே இலக்கியத்தில் வார்த்தையேது சொல்ல!… என்பாரல்லவா ?

அச்சக வேலைக்கு வந்த ஒரு பொழுதில் நகுலனின் அந்தக் கவிதை உள்விழிப்பு தந்தது. சில ஹைகூ கவிதைகள் அந்தக் கணம் உயிரற்றுத் தெரிந்தாலும் வேறொரு கணத்தில் பளீரென்று முழு வீர்யத்துடன் மனசுக்குள் தாமரை விரிக்கும். அது போன்றதொர் சிலிர்ப்பு தட்டியது நகுலன் கவிதையில்.

காகிதத்தில் என்ன இருக்கிறது

காகிதம்

காகிதம் என்பதென்ன ? ஓர் சிந்தனா ஊடகம் தானே ? பிற ஊடகங்களைப் போலத்தானே அது ? மனிதனுக்கு சேதி சொல்கிற ஊடகந்தானே ? – என நினைத்திருந்தான்.

இல்லை என்கிறார் நகுலன். பிற ஊடகங்களைப் போலில்லை அது, என்கிறார் என்பது புரிந்தது. பிற ஊடகத்தில் இல்லாத தனித்தன்மை இந்த ஊடகத்தில்… காகிதத்தில்… அவர் நினைவில் தட்டியிருக்க வேண்டும் என்றாகிறது… கண்ணாடியை எடுத்துக் கொள். நம் பிம்பம் காட்டுகிறது நாம் எதிரே நிற்கிறபோது. நாம் எதிரே நில்லாவிட்டாலும் வேறெதையாவது காட்டிக் கொண்டேதானே இருக்கிறது ?… நீரை எடுத்துக் கொள். நம் நிழலைக் காட்டும். நாம் பார்க்காதபோதும் எதையாவது பிம்பமாய்ச் சுமந்து கொண்டேயிருக்கிறது. அப்படிப்பட்ட ஊடகம் அல்ல இது… காகிதம்! அது நாம் எழுதினால் நம் எண்ணத்தைக் காட்டுகிறது. எழுதாதபோது ? ஆ! அது எதையும் காட்டுவதேயில்லை. வெற்றுக் காகிதம்! எத்தனை நுட்பமான வேறுபாட்டை நகுலன் கண்டு கொண்டிருக்கிறார்!

காகிதத்தில் என்ன இருக்கிறது

காகிதம்

வெல்டன் நகுலன்-

மொட்டைமாடியில் காற்று சுகமாய் இருந்தது. பகலில் படைபடைக்கிற வெயிலில் புழுக்கமான அறைக்குள் திணறித் தவித்து மாலை ஆறு ஆறரை என்று வெளியே வருகையில் பள்ளிக்கூடம் விட்ட குழந்தையின் தனி ஆனந்தம் கிடைத்தது அவனுக்கு. ஊரெல்லைகள் தாண்டி பஸ்ஸேறி ரயிலேறி வீடுவர ஊரடங்கும். எத்தனை நேரங் கழித்து வந்தாலும் குளித்து விடுகிறான் அவன். வரும் வழியில் கையேந்திபவனில் சிற்றுணவு. அவன் இரவுப்பாடு அதுதான். இட்லி. முட்டைபரோட்டா… அல்லது ஆம்லெட்.

வெப்பந் தணிவிக்க சிறிது நிழல் கண்ட மாடி அது. தரையெல்லாம் துாசியும் சருகுகளும் முள்ளம்பன்றி மாதிரியாய் மயிர்சிலிர்த்த பூக்களும் சிந்திக் கிடக்கும். ஆனால் இம்மரங்கள் இரவில் அடர்த்தியாய் மூச்சு விடுகின்றன. அடியில் அவனுக்கு இரவில் சிறிது சிரமமாகவே இருக்கிறது. திணறலாகவே உணர வைக்கிறது. தரையும் பெருக்கிக் கொடுத்ததில் ஓரமாகப் பெருங் கூளம். வீட்டுக்கார அம்மாள் மாடியிலேயே அதை தீக்குச்சி கொளுத்திப் பற்ற வைத்து இரவு முழுக்க அதன் நாற்ற வீர்யத்தை அவன் நாசிக்கு ஏற்றி விடும். இருமல் இருமலாக வரும்…

வேறெதாவது யோசி. நகர வாழ்வில் அடிக்கடி தானறியாத இந்த எரிச்சல் வந்து கொண்டே யிருக்கிறது. எதையாவது தனி மனிதன் இழந்து கொண்டே யிருப்பதான பிரமை நகர வாழ்வின் ஓர் அம்சமாகவே ஆகிப்போனது.

எழுத்துகளில் எத்தனை விதம் என்பது போலவே எழுத்தாளர்களிலும் ஆயிரம் வகை… ஒவ்வொருவரும் ஒரு வித சுவாரஸ்யம். பிரமை சுமந்து வருகிறவர்கள்… தலை கனத்து அமர இலக்கியவாதி என எதிரே வந்து அமர்கிறவர்கள். தலை கலைந்து கிடக்கும். வேண்டாவெறுப்பு போல புகை பிடிப்பார்கள். பேச உள்ளூற ஆசையும் கிறுக்குத் தனமான ஆவேசமும்… ஆனாலும் அலட்சிய பாவனை காட்டும் நடிப்பும் கொண்டவர்கள். சிலர் பேச அத்தனை ஆர்வப் படுவார்கள். பிழை திருத்தியபடியே தான் எழுதியிருக்கிற அந்தப் புத்தகத்தை வியந்துகொண்டே… விடாமல் பேசிக் கொண்டே போவார்கள். மிகப் பெரும் சமூக நிகழ்வை நிகழ்த்தி விட்ட பரவசம் அவர்கள் முகமெல்லாம் வழிந்து வியர்வையோடு சிதறும். சொந்தத் துட்டு போட்டு புத்தகம் வெளியிட வரும் எழுத்தாளர்கள் இதில் கணிசமாய் அடக்கம். வீட்டில்… போன புத்தகமே விற்காமல் கட்டுக்கட்டாய் மொட்டைமாடி மழைத் தண்ணீரென தேங்கிக் கிடக்கும். புதிதாய் வேறு இந்தப் புத்தகம்… எங்கே வைக்க என்று பெரியவர்களும்… இவர் பெரிய வயதுக்காரர் எனில் மனைவியும் ரகளை செய்திருப்பார்கள். அதனாலேயே இவரை இவர் எழுத்தை சபிப்பார்கள். அதுசார்ந்து இவருக்கே சிறு உள்த்திகில் உண்டுதான்… இருந்தாலும் எழுதி… அதை அச்சில் பார்ப்பது… தனி உற்சாகம்தான்.

சினிமா ரசிகர் மன்ற ஆத்மாக்கள் நாடகம் போடுகிறாப்போல இலக்கிய ஆசாமிகள் சிறு பத்திரிகை துவங்குவதையும் – website ?! – வேடிக்கை பார்க்கலாம். கையெழுத்திதழ் நடத்தி ஆவேசம் அதிகமாகி, துாக்கம் கெட்டு… தட்டச்சு – ஜெராக்ஸ் இதழ் – பிறகு ‘இயேசு வருகிறார் ‘ வகையறாவில் அச்சிட்ட சிறு கவிதைத் துக்கடா பிரசுரம். இன்லண்டியில் சிலாள் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று மார்ஜின் எல்லாம் எழுதுவான். திருவிழாக் கால ஊரணிக்கரை காலைப் பதித்து மிதிக்க முடியாத அளவு சிக்கலாகிக் கிடக்கும்- அதுபோல.,, இந்த சிறு கவிதை அச்சு இதழ்க்காரர்களும் துட்டுக்கு அழுதபடி எடுத்து அடைக்க அடைக்க கவிதை வெளியிட்டு பொதுக்கூட்டங்களில் வருகிற ஆட்களுக்கு விநியோகிப்பார்கள்… கோவிலில் திருநீறு கட்ட சில புண்ணியாத்மாக்கள் காகிதம் வழங்குவதைப் போல.

அடுத்து தங்கள் அளவில் நிகழ்த்துகிற /புரட்சி ?/ கூட்டம் பற்றிய அறிவிப்பு நோட்டிஸ் வேறு இலக்கியக் கூட்டங்களில் விநியோகம் நடக்கும். இந்தக் கூட்ட ஆரம்பத்தில் சமோசா சாப்பிட்ட ஒருவன் நன்றி- என வாங்கிக் கொண்டு நோட்டிசில் எண்ணெய்க் கையைத் துடைத்தான் பார் அன்றைக்கு. ரசாபாசம் ஆயிட்டது. அங்கேயே புரட்சி வெடித்தது.

சிலாள்களுக்கு எழுத வராது. ஆனால் புத்தகம் போட்டு மேடை ஏற்ப்ாடு செய்து வேண்டியாளைக் கூப்பிட்டுப் பேசச்சொல்லி, புல்லரிக்கக் கேட்கும். எழுத்தில் பேரைப் பார்க்கிறது ஒரு ருசி. அதைப் பாராட்டச் சொல்லிக் கேட்பது அதைவிட ருசி. அதையாவது வாழ விடறானுகளா ? இலக்கிய சாம்ராட் என்று தன்மிதப்பில் திரிகிற எவனாவது அன்றைக்குப் பேச அழைக்கப் பட்டிருந்தால் படைப்பாளி செத்தான். மேடையேறியவனுக்கு கொம்பு சிலுப்பிக்கும்- ஏண்டா டேய் இதெல்லாம் புத்தகமாடா.. ஏண்டா இதெல்லாம் இலக்கியமாடா… எனக் காய்ச்சி எடுத்து விடும் மேடையிலேயே. புத்தகம் போட்டவனின் அடியாள் ஒருத்தன் கீழயிருந்து எந்திரிச்சி ஏண்டா டேய் நீ இலக்கியவாதியாடா, இலக்கிய வாந்திடா… என ஆரம்பித்து விடும். புத்தகம் போட்டவன் வெலவெலத்துப் போவான். உண்மையில் மேடையில் பேசுகிறவனுக்கும் கீழேயிருந்து எதிர்க்க எழுந்தாளுக்கும் வேறெதோ பகை. தீ பத்திக் கிட்டது, தீர்த்துக் கிட்டது இந்தக் கூட்டத்தில்…

அடிதடி ரேன்ஜில் கூட இயங்குகிறார்கள். அதில் ஒரு பெருமை. இலக்கியத்தைக் காப்பாத்தறாங்களாம்ல ? இலக்கியத்திற்காக தன்னுயிரையும் கொடுப்பாங்க போலுக்கு!… தமிழ்க் கோஷ்டிகளில் தமாசுக்குப் பஞ்சமில்லை. கூட்டத்தில் பேசுகிறவனோ, கேட்பாளியோ நல்ல குடியில் வந்து… வேட்டி நழுவிவிழ விழக் கட்டிக்கொள்ளத் திணறியபடி ஹ்ரும் ஹ்ரும் என்று செருமி உருமி உட்கார்ந்திருக்கும். கூட்டம் போட்டவனுக்கு- நெருப்பு வைத்தும் வெடிக்காத வெடியாகத் தோணும் இந்தப் பார்ட்டி. சுவாரஸ்யமெல்லாங் கிடையாது. சைக்கிளில் தாண்டிப் போலாமா நின்னு போவமான்னு குழம்பறான்ல ரோட்டில்… அவன் நிலைமை போன்றது இது. உள் ஏற்பாட்டில் அந்தக் குடிகார சிந்தனையாளரை அப்புறப் படுத்த சகல சமாதான முயற்சிகளும் நடக்க ஆரம்பிக்க… மேடையில் என்னவோ பேசுவார்கள்…. கீழே அதைவிட தனி நாடகம். அதன் கிளைமாக்ஸை நோக்கில்ல போயிட்டிருக்கு… கேட்கிறவனுக்கு மேடையில் அல்ல- இந்த ஹ்ரும் பார்ட்டி எழுந்து வெளியேறச் சம்மதிக்குமா மாட்டாதா என்று சுவாரஸ்ய-மையம் மாறிரும்.

அச்சிட வரும் புத்தகங்களும் பலதரப் பட்டவை. வரவர மஞ்சப் புத்தகத்துக்கும் நவீன-இலக்கியப் புத்தகத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிட்டது. அட மஞ்சளே மேல்ங்கறாப்லல்லாம் வந்திட்டதய்யா. சமூகக் கலவரம் நிகழ்த்தி மனித உள் வக்கிரங்களை வெளிச்சம் போட்ட துணிச்சலான எழுத்துன்றாங்களே இதை… யாரு சொல்றது- அவங்களேதான். படம் வேறு… சாக்குப்பைக்குள் குவிந்து கிடக்கிற பல்வேறு ஐட்டங்கள் போல… கோணமாணலா வரைஞ்சா மாடர்ன் ஆர்ட் – நவீன ஓவியம். அதும் சேர்த்து வெளியிடணும் – அதான் நவீன கவிதைப் புத்தகம்… படம் இல்லாமப் புத்தகம் போட மாட்டாங்களாப்பா. இதென்ன ரெண்டாங் கிளாஸ் ஒண்ணாங் கிளாஸ் /அணில்- ஆடு- இலை- ஈக்கள்/… புத்தகமா ? அதை இலக்கியக் கூட்டத்துக்கு ஓசி தந்துவிட்டு அவசியம் வாசிச்சிட்டு உங்க ஒப்பீனியன் எழுதணும்னு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார்கள். அடேய் நீ ராஜாடா. யார் ஒப்பீனியன் உனக்கு வேணும் ? இலக்கியத்தில் சாதிச்ச ஆளுகள் யாரும் இப்டி துன்னீருக் காகிதம் விநியோகம் பண்ணியதாக தனு அறிந்ததில்லை.

ஒரு ஆறுதலுக்கு அடுத்த சந்திப்பில் அல்லது தொலைபேசியில் பரவால்ல- என்று ஊக்கம் தந்தால் எத்தனை உற்சாகக் கொந்தளிப்பாகி விடுகிறார்கள்… ‘சார் அந்த மூணாவது கவிதை- மனசு… அட்டகாசமா வந்திருக்குல்ல ? ‘ என்று சுயசிலாகிப்புடன் கண்ணெல்லாம் கனவுசிவக்க நிற்கிறார்கள்… தனுவுக்கு ஒரு ஜோக் ஞாபகம் வந்தது.

கணவன் மனைவி இடையே ஓர் உரையாடல்-

ஏங்க எனக்கு இந்த ஜிமிக்கி நல்லாயிருக்கா ?

ம், என்கிறான் கணவன்.

அவ அவனை ஹிண்டு படிக்க விடறாப்ல இல்லை.

ஏங்க எனக்கு இந்தப் புடவை எடுப்பா இருக்கா ?

ம்… ஹ்ரும்- என்கிறான் அந்த மகாத்மா.

ஏங்க நான் எது கட்டினாலும் அளஹ்ஹா இருக்கில்ல…

கண்ணாடியைக் கழற்றியபடி அவன் -ஓ எஸ்…

அவள் வெட்கத்தில் சுருண்டு மோவாயைப் பின்தள்ளிய பூரிப்புடன், போங்க நீங்க என்னை ரொம்பப் புகழ்றீங்க. எனக்கு என்னமோ போலருக்கு… என்றாளாம்.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


ஐந்தாம் பகுதி – தொடரச்சி

—-

பார்க்க வயோதிகர் என்றாலும் பெரியவரிடம் உற்சாகத்துக்குக் குறைவில்லை. வெயிலின் கடுமைக்கு குடை விரித்து வந்தவர் இத்தனை அமைதியும் உற்சாகமும் பட, மனம் விரியப் பேசியது அழகாய், அவனுக்கு வேண்டியதாய் இருந்தது.

அங்கே பலவித வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்… அச்சு இயந்திரம் வெள்ளையைக் கருப்பாக்கி அச்சு-எச்சமிட்ட முத்தமிட்ட காகிதங்களை வெளியே எறியும். தங்கள் குழந்தைகளை யானையில் ஏற்றி அழகு பார்க்கிறதைப் போன்றதே அது.

எழுத்து என்பதே மானுடத்தின் தினவு… அல்லது கனவு… என நினைத்துக் கொண்டான் தனு.

‘சார் என்ன சாப்பிடறீங்க காபியா டாயா ? ‘ என்கிறான். புதிதாய் வரும் வாடிக்கையாளர் தரம் பார்த்து சிறு உபசரிப்புகளுக்கு முதலாளியின் முன்-அனுமதி பெற்றிருந்தான். அப்படியே தானும் ஒரு பானம் அருந்திக் கொள்ளலாம்!

‘நான் சாப்பிட அல்ல- சாப்பிடக் கொடுக்க வந்தவன் அப்பா ‘ என்கிறார் அவர்.

‘புரியவில்லை… ‘

‘நான் எழுத்தாளன்… ‘

‘நல்லது. வாழ்த்துக்கள் சார் ‘ என்றான் தனு. சட்டென்று முன்நோக்கிச் சரிந்து கைநீட்டி அவரோடு கைகுலுக்கினான். அவரைச் சந்திக்க மகிழ்ச்சியாய் இருந்தது. எப்போதாவது இப்படி எழுத்தாளர்களும் அச்சகத்துக்கு வருகிறார்கள். வெறும் பிழைதிருத்தும் பிழைப்பாளிகளையும், பதிப்பாள ஓநாய்களையும் பார்ப்பதைவிட எழுத்தாளர்களோடு உரையாடுவது உற்சாகமான அனுபவம்தான்.

காகிதக்குப்பை நடுவே… கரிக்காட்டில் வைரம் கிடைத்தாற்போல!

‘எழுத்தாளர்கள்… அறிவுப்பசி தீர்க்கும் அமுதசுரபிகள் ‘ என்கிறான் சற்று அலட்டலாய். பகிரப் பகிர உள்நிறையும் அட்சய பாத்திரங்கள் அவர்கள்.

‘சரி ‘ என அவர் புன்னகைத்தார். ‘தம்பி நீயும் எழுத்தாளனா ? ‘

‘அத்தனை தைரியமாய் என்னை அறிமுகப் படுத்திக் கொள்ள மாட்டேன். நான் முயற்சித்தேன். அவற்றை வெளியிடத் தருமுன்… சில நல்ல நுால்களைப் படித்துத்தொலைத்து விட்டேன்! ‘

‘படித்து… தொலைத்துவிட்டாய் அல்லவா… பின் என்ன ? ‘ என்று பெரியவர் புன்னகைக்கிறார்.

‘மேலும் உன்னைச் சீராக வடிவமைத்துக் கொள்ள அவை கட்டாயம் உதவும் அல்லவா ? எழுதவும் வெளியிடவும் நீ அவசரப் படாததை நான் வரவேற்கிறேன்… ‘

‘சக எழுத்தாளராக… உங்களுக்குப் போட்டியாக வராததில் நிம்மதியாகப் பேசுகிறாற் போலிருக்கிறது உங்கள் பேச்சு… ‘ எனக் கேலி பேசினான் தனு.

‘ஆ… அப்படியல்ல. எழுத்தின் அற்புதமான பகுதி அதுதான்… இங்கே யாரும்… எந்த எழுத்தாளனும் அடுத்த எழுத்தாளனுக்குப் போட்டி அல்ல. அவரவர் அனுபவம்… அவரவர் எழுத்துக்கள்.. என பரந்து விரிந்த தளம் அது. உலகம் கட்டுப்பாடற்ற காட்டு மரம். அதன் வேறு பகுதிகளில் கிளைகளில் நீங்கள் கனி பறிக்கிறவர்களாக அமைகிறீர்கள்… ‘

‘தேநீர் ஆறுகிறது. எடுத்துக் கொள்ளுங்கள்… ஆறிய தேநீர் கழுநீர் போலிருக்கும். சூடே அதன் சுவை… ‘ என்கிறான் புன்னகையுடன். எழுத்தாளர்களிடம் சகஜமாக உரையாடுகையில் வயது வித்தியாசம் தெரிகிறதேயில்லை.

இள வயது முதலே தானே தன்னை வளர்த்துக் கொண்ட அளவில்… சுற்றிலும் கவனவாட்டத்தில் அவதானிப்பது இயல்பான விஷயமாய் அவன் அறிவுப்பதிவு இருந்தது. எக்காலத்திலும் துயர் உதறித் துள்ளியெழ அவனுக்கு முடிந்தது. வாழ்க்கை அபத்தங்கள் அல்ல. சில ஆயத்தங்கள். தன்னைச் சுமந்து ஒவ்வொருவனும் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதன் பிரத்யேக அர்த்தங்களை அவரவர் வழிப்படி புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது…

வாழ்க்கை தன்னளவில் சற்று அகலவாக்கில்… பரந்துபட்ட அளவில் புரிந்துகொள்ளப் பட வேண்டிய விஷயம். தன் சுற்றுச் சூழல் அளவில் அதைச் சிமிழுக்குள் உள்வாங்கிக் கொண்டு கலவரப்பட அவன் தயாராய் இல்லை.

மனம் என்பதே இயற்கையின் விதை. உள்ளுறங்கிக் கொண்டே இருப்பதாய்த் தோற்றம் காட்டினாலும் பெரும் விருட்சங்களை அது ஒளித்து வைத்திருக்கிறது. அதில் ஏறிக் கனிபறிக்க வேண்டியது நம் வேலை. விதைகளை வளர விட வேண்டும். நம் வேலை அதுதான்!

நீ வாழ விரும்புகிற வாழ்க்கை நோக்கி நகர்வது நம் பொறுப்பாகிறது. நதிவளைந்து… நில எல்லைகளை அனுசரித்து… ஆனால் தன் பயணத்தைத் தொடர்கிறது அல்லவா ? நான் மானுடத்து நதி.

தனு எழுத ஆசை கண்டவன். எப்படியோ அது அவனில் சிறு குறுகுறுப்பாய் தன் முதல் விதையிலையை வெளியே நீட்டித் தளிர் அசைத்தது. ஆ… ஒய்வு கிடைத்த போதெல்லாம் அவன் உற்ற துணையெனச் சரணடைந்த சிறு நுாலகம். விதவிதமான சுவாரஸ்யமான ஆழமான சிந்தனைகளைக் கொண்ட வாசிப்புத் தலம். வாசனைத் தைலம்…

பல்வேறு ருசிகொண்ட நுால்களை அடக்கிக் கிடந்தது நுாலகம். அறிவுப் பொருட்காட்சி போல. அறிவுமகா சமுத்திரம்.

புத்தகங்கள்… அறிவின் எக்ஸ்-ரே படங்கள் அல்லவா ?

‘தேநீர் எனக்குத் தேனியின் சுறுசுறுப்பைத் தருகிறது… ‘ என்றார் பெரியவர் அலங்காரமாய். ‘நன்றி ‘ என்கிறார் சிறிது தாமதித்து.

‘சார் சொல்-அலங்காரப் பிரியரோ ? ‘ என்றான் தனு.

‘அப்படியல்ல… சில சமயம் அதுவும் வேண்டித்தான் இருக்கிறது… வாசகனை சிந்தனை இறுக்கத்தில் இருந்து இறக்க, சற்று கட்டுத் தளர்த்த… ‘ என்றவர் புன்னகைத்தார். ‘விமானத்தில் ஏறும்போதும் இறங்கும் போதும் பெல்ட் அணிகிறோம்… பிறகு நெகிழ விட்டுக் கொள்ளலாம்! ‘ அவர் குரலில் குறும்பு கொப்பளிக்கிறது.

இந்த எழுத்தாளர்கள் பேச ஆள் கிடைத்தால்… அதுகூட அல்ல- கேட்க… புரிந்துகொள்கிற அளவில் சரியான நபர் கிடைத்தால் எத்தனை உற்சாகம் பெற்று விடுகிறார்கள்.

‘இத்தனை நம்பிக்கைப் படவும், சுவைபடவும் பேசுகிற நீங்கள் பக்திப் புத்தகம் எழுதுகிறவர் என அறிமுகம் ஆகிறீர்கள்… ஆச்சரியம் ‘ என்றவன், சற்றே தயங்கிய துணிச்சலுடன் ‘சார் துட்டுக்கு மண் சுமக்கிறவரோ ? ‘ எனக் கேலி செய்கிறான்.

‘உனக்கு அரவிந்தர் பற்றியும் அன்னை பற்றியும் தெரியவில்லையே… வருத்தமாய் இருக்கிறது ‘ என்றார் பெரியவர்.

அவர் முகத்தைப் பார்த்தான் அவன். சட்டென அவரது முகத்தின் குழந்தைத்தனமான வருத்தம்… இருள்சூழல் அவனைத் தொட்டது. அவன் அவரைக் கையழுத்தினான்.

‘நல்லது- நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ‘ என்றான்.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/5/

ஆண்பால் பெண் பால் … காமத்துப் பால்!

மானுடத்து மழைத்துளி உள்ளுக்குள் குளிர்விக்க வல்லது. உயிர்க்குலை உச்சியை சிலிர்க்க வைக்க வேண்டியிருக்கிறது. வாழ்க்கை சார்ந்த அழகுகள் வசப்பட இம்மாதிரி விஷயங்கள்… புலன்உணவு- புலால் உணவு தேவைப்படத்தானே செய்கிறது…

தனுஷ்கோடிக்கு சில இரவுகள் உறங்கக் கொள்ளவில்லை. உடம்பு அலுத்துக் கிடக்கிறது. அந்நேரம் மனநாயை அவிழ்த்து விட்டுவிடுதல் சகஜம்தான். என்றாலும் சற்று தள்ளிவரை அலைந்துவிட்டு சிறுவட்டப் பாதையில் திரும்பித் திரும்பி ஓயாமல் அது அலைவதாய் இருக்கிறது. ஏன் அப்படி அலைகிறது அது… யாருக்குத் தெரியும்… அதற்கே தெரியாது என்றுதான் தோணுகிறது. சும்மா முகர்ந்து கொண்டே யிருத்தல்… என அதன் பிறவியம்சம். அதை மாற்ற முடியாது. சராசரிகளிடம் அதை மாற்றிக்கொள்ளப் பிடிவாதம் பிடிப்பதும் நல்லதல்ல- அல்லவா ?

காதல். வாலிபம் ஆடுகிற வாலிபால்.

மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை துற- என்கிறார்கள் பெரியாம்பளைகள். அறிவுரைங்களா இது ? சாபம்!

அதைவிட வாழ்க்கையைத் துற-ன்னிருங்கப்பா. சிம்ப்பிள்!

அறத்துப்பால் பொருட்பால் கண்ட வள்ளுவர் இன்பத்துப்பால் பற்றியும் எடுத்துரைத்தல் காண்க. மனுசன் துள்ளி விளையாண்டுட்டான்யா… ஊடல் பற்றி வள்ளுவர் சொல்லணும்… நாம கேட்கணும். மனுசனை கலாட்டாப் பண்ணிப்பிடறாரு. கருத்து அம்சம் தவிர… வள்ளுவத்தில் நாடக அம்சமா மனசை பம்பரக்குத்து போல அந்தாக்ல அபீட் எடுத்துப்பிடறாரு.

அம்பிகாவுடனான இனிய தனிமையான தருணங்கள்…

மொட்டைமாடி அப்போதெல்லாம் அவ்வப்போது குப்பை நீக்கப்பட்டு அம்சமாய் இருக்கும். தரையையே கூட அவ்வப்போது கழுவி விட்டு விடுவாள். கனவுலக வாழ்க்கைபோல இருந்தது நிஜமே. எல்லாம் போச்சேய்யா… கைவிட்டுக் கைநழுவிப் போச்சே…

நல்லவள்தான். எளிமையானவள். மடிப்பூனை. யாராவது தடவிக் குடுத்திட்டே இருக்கணும். சொகுசுக்காரி. என்பதாலேயே தனிமையான தருணங்கள் இனித்துக் கிடந்தன. அதற்கு அவன் தவித்துக் கிடந்தான். அவற்றுக்குக் காத்திருப்பது பெரும் சுவாரஸ்யமாய் இருந்தது.

அவளுடன் தனு வாழ்ந்த வாழ்க்கை ஒட்டுமொத்தமாய் என்று பார்த்தால் இனிமையானது அல்ல. கல்லும் மண்ணுமான கடினப்பாதை. முட்புதர். வறண்ட வெளி நடைப்பயணம். அதை குறுக்குப் பாதை எனக் கடந்து போயிட்டால்… மெய்ன் ரஸ்தாவை எட்ட… நல்ல குளிரான மரவெளி. சைக்கிள்ல போனா சுகமோ சுகம். பாட்டெடுக்கும் தன்னைப் போல. விசிலடிக்கத் தோணும்… சிவாஜி பாடினாம் பார்… வந்தநாள் முதல் இந்தநாள் வரை வானம் மாறவில்லை… எதித்தாப்ல ஆம்பளை குறுக்க வந்தா சைக்கிள்மணி அடி. பொம்பளையாள் வந்தா ? மணி நீ அடிக்கண்டாம். தானே அடிக்கும் மாப்ளைக்கு!

இரவின் வெறுத்துப்போன மாடியுலாத்தலுக்கு ஒரு நகைச்சுவை நினைவில் தட்டுகிறது.

மாப்ளை, ஒரு அனாசின் மாத்திரை. அதை கர்ப்பத்தடை மாத்திரையா பயன்படுத்த ஏலுமா ?

ஏன் மாப்ளை முடியாது ? அனாசின் மாத்திரையை முட்டிகளுக்கு நடுவுல வெச்சிக்கிடணும். ராத்திரிப்பூரா கீழ விழாமப் பாத்துக்கணும். அவ்ளதான்!

டிங் டாங் பெல். புஸ்ஸீ இஸ் இன் தி வெல்…

எல்கேஜி பாட்டாய்யா ? பெரியாள்ப் பாட்டு!

மொட்டைமாடி வெளி. நிலவொளி நீலவொளி சேத்துக்க. ஒரு காத்து அந்தாக்ல கையத் துாக்கச் சொல்லும். ஓரு ஆழ்ந்த சுவாசத்துக்கு நல்வாசனைகள் எட்டும். வெளி வாசனை. மானுடத்து வாசனை.

அட கனவின் உட்பூ விரியலாச்சு. கிறங்கடிக்கிற வாசனையாச்சே. மனுசாளைப் போட்டுத் தாக்கிப்பிடும்… தாக்கறதுன்னா என்ன… ஒரு தாலாட்டு. சிருங்காரக் கோலாட்ட கும்மாளம்.

ஓடுதய்யா உள்ளே ஒரு ரஜபுதன லம்பாடிப் பாடல். /ஜிங்குடக்கு… டக்குடிங்டிங்./ /ஜிங்குடக்கு… டக்குடிங்டிங்/… உள்த்தோணி மல்லாந்து வானத்தைப் பார்த்து பிரமித்து வாயைப் பொளந்துருமே.

காலமே காற்றை நிறுத்திக் கைகட்டிக் கொண்டதங்கே.

மன்மத மாகாவியம் கேளுங்கோ மகாஜனங்களே.

பெண்களை ஆண்களும் ஆண்களைப் பெண்களும் அழகெனக் கண்டுகொண்ட அற்புதவேளை பற்றி அறியக் கேளுங்கள்.

ஒரு ஆம்பளை இப்பிடி இனித்துக் கிடந்த வேளையில் கேட்டான் ஒரு சந்தேகம்- பெண்களின் கூந்தல் மணம் இயற்கையா செயற்கையா ?

அட உன் மனசின் மணமப்பா அது. உன் மணம். உனக்கு மட்டுமே தெரிந்த உன் சம்சார சமாச்சாரம் மாப்ளை. அதே மணம் எனக்கு ஒத்துக்காது! தெரியவுந் தெரியாது!

காதல் வேளையின் உன்மத்த உச்சத்தில் தலகாணிகளும் தலகாணிகளும் நேரமேற ஏற கிட்டே கிட்டே வந்து குசுகுசுவென்று சிரிப்பாச் சிரிச்சி ரகசியம் பேசுகின்றன…

பகலில் மனுசாள் கல்யாணம். இரவில் தலகாணிக்கும் தலகாணிக்கும் திருமணம்.

இடதுபக்கத் தலகாணியான நான் வலதுபக்கத் தலகாணியான உன்னை இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியேன் என உறுதி கூறுகிறேன்.

ஆமென்-

யானும் அவ்வண்ணமே…

ஆமென்-

ரொம்ப நெருக்கம். எது யார் தலகாணின்னே தெரியாதபடி ஒரு குழப்படி. குளறுபடி. அலங்கார வேளை. இவாள் தலகாணியை அவாள் மாத்திக் கிட்ட மாதிரி பொறண்டு படுக்கறதும் உண்டு. இன்னும் சொகுசுப் பார்ட்டிங்க என்ன செய்யும் ?

தலகாணிக்கு மேல தலகாணி – ரெட்டைத் தலகாணியடுக்குதான் போங்க.

பெண் தன் வெட்கத்தை விரும்பியே தொலைத்த வேளை. வளையலை வெறுத்த வேளை! சத்தம் வெறுத்த வேளை.

குடுத்தாய்யா ஒரு முத்தம். வெளியீரம். உள்ளே பத்தி எரியுதே- அதெப்படி ?

மூடிய போர்வைக்குள் ஒரு முத்துக் குளியல். முத்த சாம்ராஜ்யம் அது.

வெறும் உணர்ச்சிகளின் அலையெடுப்புன்னு சொல்லிற முடியாது அதை. மூளையின் நரம்புகளையே வீணைத் தந்தியா மீட்டும் விநோத வேளை அது.

பொழுது சூடேறினா ? மழை வரணும். இது விதி. அதை மாத்த ஆராலும் ஏலாது.

அட ஒரு பெண்சென்மம் நகை விரும்பாத, உடையும் விரும்பாத வேளை உண்டா ? உண்டே… எனக் கெக்கெலி காட்டி ஆனந்தச் சிரிப்பு கொண்டாடியது வானம்.

இது நிஜமா… நினைவுதானா… எனக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்கள்.

முடிவுக்கு வர முடியல்லியே சாமிகளா…

கிள்ளல் வலிக்கவே இல்லை!

கிள்ளல் அல்ல அது- கிளுகிளுப்பு.

முடிவு தெரிஞ்சி என்னாப்போவுது… விட்டுத் தள்ளு என மூளையை மூலைக்கு ஒதுக்கிவிட்டு… அவர்கள் நெருக்கங் காட்டினார்கள்.

வெளிக்கிளம்பி இரையெடுத்த மானுடம் சிறையைத் தேர்ந்து சிருங்காரமாய் ஒடுங்கிக் கொள்கிறதே.

இலைவிரித்து விருந்தளிக்கிற விஷயம் அல்ல. தலையையே கனவு விருந்துக்கு இலையாய் விரித்தாள் அவள்.

இரவு நாடகம். கதை திரைக்கதை வசனம் இயக்கம்- தனு அம்பிகா.

பார்வையாளர்கள் அனுமதி இல்லை.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/4/

அழுது, உள்ளே கலங்கித் தெளிந்தாள் அவள். கண்ணீர் புனிதமானது. உள்ப் புண்ணை அழுகை ஆற்றவல்லது. உள்க்காயங்களை அது விரைந்து ஆற்றுகிறது. இடுக்கண் வருங்கால் வாய்விட்டு அழுக. அழுகை- கிணறைக் கலக்கித் துாரெடுப்பதைப் போன்றதே அது.

அவள் புதுசாய் வாழ்க்கை வாழ விரும்பினாள். வாழ்க்கைக் கணக்கை புதுசாய்த் துவக்குகிற பாவனையில் அமைத்துக் கொள்ள விரும்பினாள். அவள் முட்டாள் அல்ல. அப்பா அவளை அப்படி வளர்க்கவில்லை. தமிழ்த் தாகம் கொண்ட வம்சம் அது. வெறும் துட்டுக்கு ஈஸ்வர சன்னிதியில் பாட்டெடுத்த தலைமுறையா அது ? வாழ்க்கை இன்னும் மிச்சம் இருக்கிறது. ஏராளமாய் இருக்கிறது. எக்காலத்திலும் வாழ்க்கை என்கிற பேரனுபவம் முடிகிறதே யில்லை. தீர்ந்து தீய்ந்து போவதே இல்லை. உயிர் உள்ளவரை அனுபவம் ஓயுமோ ?

ஆ- சாவு! சரி- அதேகூட, எப்பேர்ப்பட்ட அனுபவம். கண்டவர் விண்டிலர் என்கிறதான மகானுபவம் அது அல்லவா ? வாய்த்தால் அது நல்ல விஷயமாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சுகம் ஓர் அனுபவம் எனில் துன்பம் வேறு வகையில்… அதுவும் ஓர் அனுபவம். சுகம் என்றால் என்ன எனக் கற்றுத் தர துன்பம் உலகத்துக்கு வேணாமா என்ன ? சாவு எனினும் ஒதுக்குதல் கோழைத்தனமானது… வரும்போது வரட்டும். வராமல் தீராது என்கிற அளவில்… அதற்கு முன்னான பிற அனுபவங்களை ருசிக்கலாம்.

நாளிது வரை- அடடா- வாழ்க்கைப் போக்கோடு அல்லவா அவள் சிக்கி யிருந்தாள். கிடைத்த வாய்ப்புகளில்… போதும் என்கிற அளவில் பணிந்து ஏற்றுக் கொண்டிருந்தாள். அப்படி ஏற்றுக் கொள்கிறவர்களுக்கானது அல்ல இவ்வுலகும் அதன் பேரனுபவங்களும். அவர்களால் எந்நிலையிலும் இவ்வுலகை எடைபோட புரிந்து கொள்ள முடிந்ததே யில்லை. எத்தனை அசடாக வாழ்ந்து விட்டாயடி பெண்ணே… சரி பரவாயில்லை. இனியும் தாமதித்தல் வேணாம். களை பழைய நினைவுகளை. நீ மானுடப் பொன்பிள்ளை. சுடர். துாண்டப்பட்ட சுடரொளி. பிறர் விழி சுட்டும் சுடர்.

மாசிலாமணியுடனான பணிந்த வாழ்க்கை… பெற்றுக் கொண்ட அடிகள். அப்போதுகூட சீற்றம் காட்டாமல் விழுந்து கிடந்தாள் அவன் காலடியில்- பணிந்து கிடந்தாள். எத்தனை தவறு. அவன் தானாகவே ஒதுங்கிக் கொண்டான். நல்லதுதான். தினப்படி வருகிறதும் அவள் உழைப்பைச் சுரண்டுகிறதும்… நடுத்தெருவில் கத்துகிறதும்… எத்தனை வசைச் சொற்கள். அவன் ஒரு வசைச்சொல் அகராதியாய் இருந்தான்… வசைபட வாழ்தலும் வதைபட வீழ்தலும் உனக்குத் தேவையா என்ன ?

தமிழ்ப் புலவர் பட்டத்துக்கு ஆசைப்பட்டவளிடம் வசைச்சொல் பாடம் நடத்தினான் அவன். ஆ- அவனை விடு. அவள் பணிந்தாளே… அடிமையாகி பணிந்து பாதமேந்திக் கிடந்தாளே பாதகத்தி… மோதி மிதித்து முகத்தில் தீ உமிழ்ந்திருக்க வேணாமா ? திசையற்று விட்டதாய், திகைத்து நின்று விட்டாய்.

திசைகளைத் தொலைத்து விட்டதாய் நினைத்து அவள்… தானே அல்லவா தொலைந்து போனாள்.

எட்டு திசையும் தொலைந்தாலும் எழுந்து கொள்ள இடம் உண்டு. மேலே வானம்- திசை ஒன்பது. கீழே பூமி. பத்தாவது திசை… இருக்கிறது அல்லவா ? விரல்களை மூலதனமாக்க… விளைநிலம் ஒத்துழைக்கும். விழிகளை விரியத் திற- வானமும் வளைந்து வரும்.

உன்னிடம் உள்ளன ஆயிரம் சாவிகள். பிரச்னைகள் பூட்டு போல. பொருத்திப் பார்க்காமல் முயற்சியே செய்யாமல் மூளியாய் இருத்தல் மதியீனம். மதியெனும் கோலெடுத்து வாழ்க்கைப் படகைச் செலுத்து. நல்வாழ்த்துக்கள்.

கண்ணாடியில் பார். உன் எதிரே நிற்கிறாளே சிரித்தபடி அந்தப் பெண். அவளிருப்பாள் உனக்குத் துணை. உலகம் அழகானது. பெரியது. மகாக் கதவுகள் கொண்டது அது. ஆனால் அவை விரியத் திறந்து கிடக்கின்றன. பிரச்னை நீ கண்ணை மூடிக் கொண்டிருப்பதே… விழிகள் மதகுகளைப் போல.

எழுந்துகொண்டு கண்ணாடியில் பார்க்கிறாள் அவள். அது யாரது ? அழுதபடி… யாரடி நீ ? அவள் அந்தப் பெண்ணைப் பார்த்துச் சிரித்தாள். வா பெண்ணே. உனக்கு நல்லதோர் வாழ்க்கை காத்திருக்கிறது. வா போகலாம். நல்வாழ்த்துக்கள்.

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிதல் நன்றோ ?

கண்ணைத் துடைத்துக் கொண்டது பிம்பம்.

வா என்னோடு.

அவள் கண்ணாடியில் இருந்து இறங்கி இவள்பின்னே… பணிந்த நாயாய்க் கூட வந்தாள்.

நேற்றுவரை நீ, சுடர் என்ற பெயரிலும் இருளாய் இருந்தாய். இன்றுமுதல் வெளிச்சமாகிறாய்.

பிம்பம் சிரித்தது.

சரி பரவாயில்லை. இதோ இந்த இரவு அவள் அவளுக்குத் திரும்பக் கிடைத்த இரவு. பகலில் காணாமல் போனவள்… இருளில் திரும்ப வந்தாள்… தன்னைச் சுற்றி வெளிச்சமாய்… வெளிச்சம் பரப்பியபடி வந்தாள். கருப்பு முட்டையை உடைத்துக் கொண்டு வெளிவந்த வெள்ளைக் குஞ்சு. வெளிச்சக் குளுவான்.

அவள் பார்வைக்கு நழுவித் தனிவழிப் போன மாசிலாமணி. ஒருவகையில் அவன் அவளது முன்னடையாளம். சரி- தொலைகிறான்- வழிகாட்டி!

சிமிழுடைத்த சூரியன்!

கீழ்த்திசை பாடியது வாழ்த்திசை…

—-

ரயில் தாலாட்டியது அவளை. ரயில் அநாதைகளின் தொட்டில்.

கையில் இருந்த சிறு துட்டில் அவள் ரயில் ஏறியிருந்தாள். சிறு தேவைகள் இருந்தன. உள்மூச்சு திணறுந் தோறும் ஓய்வு கொள்வாள். கிளம்புவாள். தெரிந்த வியாபாரம் பூ வியாபாரம். பூக்கட்டும் தொழில். உதிரிப் பூக்களை ஒன்று திரட்டி நாரில் தொடுத்தல்… தன் வாழ்க்கையைத் தானே திரட்டி, கட்டமைத்துக் கொள்வதாய், சீரமைத்துக் கொள்வதாய் அது அமைகிறது. காற்று ஒரு கதவைச் சார்த்திக் கொண்டு உள்நுழைந்து… ஆனால் இன்னொரு கதவைத் திறந்து கொண்டு வெளியேறியது.

இடைப்பாடுகள் இடர்ப்பாடுகள் பொருட்டே அல்ல. காயங்கள்… ஆ- சைக்கிள் கற்றுக் கொள்கையில் பட்டுக் கொள்வதில்லையா ? அதுபோலத்தானே ?

அவளைத் தீண்ட வந்த மனிதமிருகக் கரங்கள். கோரைப்பற்களை அற்பமாக, கோரைப்புற்களாக உதறி வெளியேறினாள். பெண்ணை வெற்றுடம்புகளாகப் பார்க்கும் சதைகுத்திப் பறவைகளை… மானுடக் கழுகுகளை… ஆண்களை அவள் ஏராளம் சந்திக்க நேர்ந்தது. பலியாகவும் நேர்ந்தது. அவற்றை உதறி மறந்து துள்ளியெழ வேண்டியிருந்தது.

அழுகையும் காலமுமே அவளது மருந்துகள்-

—-

பாண்டிச்சேரி எப்படி வந்தாளோ ? அழகான ஊர். தெளிவான

வீதியமைப்பு. விதிகளை அறிந்த அமைதியான மனிதர்கள். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம். அதன் வாயிலில் பூக்களுடன் அவள் காத்திருந்தாள். சற்றே ஈரப்படுத்தப்பட்ட பூக்கள். அன்னையின் பாதங்களுக்கான மலர்கள் அவை. விதவிதமான மலர்கள். எட்டு திசையில் இருந்தும் வந்திருந்தன அவை. கனவுகளுக்கு விருந்து. மனக் காயங்களுக்கு மருந்து… எந்த வெயிலும் தெரியாதபடி முதல் கட்ட அளவில் அவளுக்கே அவை குளுமை தந்தன. தீயினால் புண் சுடும்… பூவினால் அவள் குளுமை கண்டாள்.

வெளிச்சம் தீண்டாத அதிகாலையிலேயே அந்த வளாகம் இயங்க ஆரம்பித்து விடுகிறது. ஊரெல்லை தாண்டி மாநிலம் தாண்டி நாடும் தாண்டி வருகிறார்கள் மக்கள். அன்னையின் சிறப்பு வழிபாடு நாட்களில் அவளது வியாபாரமும் அமோகம். அந்த ஜனக்கூட்டம் பார்க்கவே அவளுக்கு அத்தனை சந்தோஷம்.

தினப்படி வருமானத்துக்குப் பஞ்சமில்லை. துன்பம் என்பதைப் பஞ்சென உணர்ந்த மனசின் மாற்றம்… மனம் மிதந்தது. அம்மனின் வாயிலில் அவளே ஒரு பெரிய பூவானாள்.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -7)

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-

மூன்றாம் பகுதி – தொடர்ச்சி

—-

தனுவுக்கு ஓய்வுநேரம் என்பது கூட அங்கே மறுக்கப் பட்டது. பெரிய புண்ணியவான் போல மதியச் சாப்பாட்டுக்குப் பொட்டலம்

வரவழைத்துத் தந்து விடுகிறார் முதலாளி. இவன் வெளியே என்று சாப்பிடப் போனால் வர ஆகும் தாமதம்… அதுவரை அச்சகம் நிர்வகிக்க ஆளின்றி மெளனமாய் மூடப்பட்ட-நிலை எய்திவிடும். அந்நேரம் வரும் அச்சு-வாய்ப்புகள் இழக்கப்பட்டு விடும் என அவர்கணக்கை அவன் அறிவான்.

வேலை சற்று நெகிழ்ந்த காலங்களில்தான் அவர்கள் /ஒண்ணு முதல் ரெண்டுவரை/ பொட்டலம் பிரித்துச் சாப்பிட்டபின் பேச, சற்று ஆசுவாசமாய்ச் சிரிக்க முடியும். அப்போதுங்கூட அவசர அச்சக வேலை என்று சாப்பாடு பிந்திப் போகக் கூடும்.

காசு காசு என்று அலைந்து அவர் முகமே சதா இறுகிக் கிடந்தது. சிடுசிடுப்பான முகம். அதிகார பாவனையுடனான வார்த்தை யெடுப்புகள். உலகம் என்பது துட்டுநாணயத்தில் இருப்பதான அவரது நம்பிக்கை அவனுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது… துட்டு நாணயம் என்பது மூன்றாவது பரிமாணம் குறுகிய வஸ்து. உலகமோ முப்பரிமாண பிரம்மாண்டம் அல்லவா ?!…

ஆகவேதான்… இதை உணராததால்தான்… சதா திருப்தியற்று மனஉளைச்சலும் அலைச்சலுமாய் இருந்தார். வெளியே கிளம்பும்போது வண்டியில் பெட்ரோல் இல்லை என்றால்கூட அவரால் தாள முடியவில்லை. நேற்றே அவரேதான் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். மறந்தது அவர்தான்… இதற்கு அவர் யாரைக் குறை சொல்ல முடியும் ? இதில் ரெளத்திரப்பட உள்ச்சூடேற என்ன அவசியம். பிரச்னையை மெளனமாய்ச் சந்திக்க வேண்டியதுதான்…

இப்படி உழன்று கொண்டிருப்பதால்தான் முதலாளிகளுக்குப் புதுப்புது வியாதிகள் அறிமுகம் ஆகின்றன போலும்! இரத்த அழுத்தம், இதயநோய், சர்க்கரை நோய்…

வெயில் வெளியே படுபோடு போடுகிறது. ரிக்ஷாவின் டங்டங்கென்ற இரும்புச் சத்த அழைப்பு கேட்டு தனு எழுந்து உடம்பை நீட்டி வெளியே எட்டிப் பார்த்தான். வடிவேலு காகித ரீம் கொண்டு வந்திருந்தான். கூட அவற்றை இறக்கி வைக்க ஆள் கூப்பிடுகிறான். அவனும் மிஷின்மேன் ரவியுமாய்ப் போய் பண்டில் – bundle – இறக்குகிறார்கள். வடிவேலு அஜித் ரசிகன். ரவி விஜய் ரசிகன். இருவரும் சுவாரஸ்யமாய் எதிர்க்கட்சி கட்டி வார்த்தையில் ஊடல் செய்து கொள்வார்கள். காலகாலத்துக்கும் இந்த ரசிக ஊடல் ஓயாது என்றிருந்தது. சிவாஜி எம்ஜியார் ஒரு காலம் என்றால்… ரஜினி கமல் என்று பிறகு வந்தது… இப்போது அரும்புமீசையளவில் புதிய ரசிகமோதல் அலை… மாதவன்- அஜித்- பிரபுதேவா- விஜய் – யார் ரெண்டுபேர் முன்னணியில் கட்சி-அரசியல் என சினிமா-அரசியல் உலா வருவார்கள்… இன்னும் உருவலுப் பெறவில்லை.

‘இன்னா ரவி ஒரு டா கீ கவனிப்பில்லையா ? ‘ என்கிறான் வடிவேலு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே. ‘என்னாத்த… நீ வெளிய இறங்கினாக் காசு. வெயிலுக்கு மழைக்கு அதிகப்படி வருமானம். தினத்துட்டு பார்ட்டி… நாங்க மாசத்துட்டுக் காரங்கல்லப்பா… நீதான் வாங்கித் தரணும் ‘ என்கிறான் ரவி.

‘உங்க தலைவர்படம் ஊத்திக்கிச்சு போலுக்கே… ‘

‘எவஞ் சொன்னது. அட போப்பா… நம்ப சிட்டிய வெச்சி கணக்கு சொல்லப்டாது. சி சென்டர்ல ‘டாக் ‘ நல்லாயிருக்கு. படமே சி படம்தானே ? ‘ பெரிய திரைப்பட நிபுணன் போல வடிவேலு பாவனை கொண்டாடியதும் அலசியதும் ஆங்கிலம் தொட்டுக் கொள்வதும் தனுவுக்குச் சிரிப்பை வரவழைத்தது.

கடினமான உடல் உழைப்பு கழிந்த நாட்களின் மீதிப் பொழுதுகளில் அவர்கள் சாராயக் கடைகளையும் திரைப்பட வளாகங்களையும் மன ஒத்தடங்களுக்கான ஆசுவாச ஒதுங்கிடமாக உணர்கிறர்கள். இவர்கள் பார்வையில் இவர்களின் பாத்திரத்தையே இலட்சிய அவதாரமாக்கிக் காட்டும் திரைப்படப் போலியுலகம் அவர்களை எப்படி ஈர்த்து விடுகிறது…

Other Gods – என்கிறாள் அமெரிக்க நாவலாசிரியை பேர்ல் எஸ். பக். உண்மையான நாயக நாயகிகளை வெகுஜனங்கள் ஏனோ ஆர்வப்பட்டு வரவேற்பதில்லை. சற்று மிகைப்படுத்தப்பட்ட பாவனைகளையே அவர்கள் வழிபட பாராட்ட விரும்புகிறார்கள்.

விளையாட்டாய்ப் பேசினாப்போல இருந்தாலும் ரவியும் வடிவேலுமாய் எதிர்க்கடையில் டா அருந்தியாகிறது. துட்டுச்செலவு யாரிதாய் அமைந்தால் என்ன ? ஒருநாள் இவன்- ஒருநாள் அவன்… என்கிற நடைமுறை சகஜம் அது.

நான் முதலாளியும் அல்ல. தொழிலாளியும் அல்ல. ரெண்டுங் கெட்ட ஜாதி… ஆகவே இருவருக்கும் வேண்டாதவன்! ஒதுக்கப் படுகிறவனாகிறேன். இருபாலருமே என்னை நம்பியும் என்னை சந்தேகித்தும் அல்லவா இயங்குகிறார்கள்…

நான் இருதலைக் கொள்ளி எறும்பு என மாட்டிக் கொண்டவன். நின்றபடி அச்சடிக்கிற ரவி. நாற்காலியில் அமர்ந்தபடி துட்டெண்ணுகிற முதலாளி… நான் நாற்காலியில் என்றாலும் மாசக்கூலிக்கு மாரடிக்கிறேன்.

பெரியவர் ஒருவர் உள்ளே வருகிறார். குடையடியிலேயே வெயிலைத் தாக்கு பிடிக்க முடியாமல் பஞ்சராகிய வெடித்த மூச்சுகளுடன் நுழைந்து, அவனைப் பார்த்ததுமே ‘முதலாளி இல்லியா ? ‘ என விசாரிக்கிறார்… என்னவோ முதலாளி பஞ்சர் போடப் போகிறாப்போல.

‘சொல்லுங்க… ‘

‘புத்தகம் ஒண்ணு அடிக்கணும்… ‘

‘என்ன புத்தகம் ? ‘

‘பக்தி ‘

அப்டிப் போட்டுத் தாக்கு… தாத்தோவ். நல்ல போணியாகிற சரக்குதான். நாட்களின் நெருக்கடியில் இன்றைய சூழலில் அதிகப்படி விற்பனை பக்திப் புத்தகங்களுக்குதான். பிரச்னைகளின் உக்கிரப் பிடியில் கெடுபிடியில்… மூத்த ஜனங்கள் மிரண்டிருக்கிறார்கள்…

கிரெடிட் கார்டுக் கடன்கள் பயமுறுத்துகின்றன. குடும்பத்தின் அன்றாடப் பாடுகள் திகிலுாட்டுகின்றன. குழந்தைகளை ஏராளமாய்த் துட்டு கட்டி படிக்க வைத்தாலும் வேலை கிடைப்பதாய் இல்லை. அவர்கள் எதிர்காலம் பயமுறுத்துகிறது. வீட்டில் இருக்கிற இளமை… தறிகெட்டு, நம்பிக்கை அடிபட்டு, மனச்சிதைவுக்கு ஆளாகக் கூடும். தவறான வழிகளில் போகக் கூடும். நடத்தை திரிந்துபோகக் கூடும்… என அவர்களுக்குக் கலவரமாய் இருக்கிறது.

இந்நிலையில் எல்லா சஞ்சிகைகளுமே பக்தியில் கவனம் செலுத்துவதும், புத்தாண்டு பலன்கள் பரிகாரங்களுடன்… என இணைப்புகள் வெளியிடுவதும் இன்றைய காலகட்டமாய் இருக்கிறது. புத்தாண்டு யாருக்குமே நல்லாண்டாக அமையாதா என்ன ? எல்லா ராசிகளுக்குமே… பரிகாரம் என்று போடுகிறார்களே ?

‘உள்ள வாங்க… ‘ என்கிறான். தன் எதிர் இடத்தில் மடக்கு-நாற்காலியை எடுத்துவந்து விரித்து அவர் உட்கார போடுகிறான்.

‘என்ன புத்தகம்ங்க… ‘

‘ஸ்ரீ அரவிந்த அன்னை பத்தி… ‘ என்கிறார் பெரியவர்

—-

/தொ ட ரு ம்/

sankarfam@vsnl.net

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/3/

‘காலை மிதிச்சிட்டுப் போறயேய்யா… ‘ எனத் திட்டியபடி தனுவைச் சண்டைக்கு அழைத்தவனை சட்டை செய்ய நேரமில்லை. அவன் திடாரென நின்று, தன்னைக் காலைமிதித்த தனுவைக் கண்டு பிடிக்குமுன் பின்னாடி ஓட்டநடையில் வந்த இன்னொருவன் அவன் காலை மிதித்து விட்டான்.

‘கூமுட்டை நடுரோட்டுல திடார்னு நின்னுட்டா எப்டி ? லுாஸா நீ ? ‘ என்று இப்போது… திட்டியவன் திட்டு வாங்கிக் கொள்கிறான்.

மகா ஜனங்களின் நடைமுறைகள் வேடிக்கையாய் இருக்கின்றன. சிறு விஷயத்துக்கும் ஆவேசப் படுகிறார்கள். பெரிய விஷயம் என்றால்… ஜாக்கிரதையாய்ப் பக்கம் பார்த்துக் கொண்டு குரல் எடுக்கிறார்கள்… உள்ப்பயத்துடன். எதிராளி ஏப்ப சாப்பையா இருந்தாதான் அதுவும். அவனும் ஒருமாதிரி மீசை கீசை வைத்து நக்கீரன் கோபால் அளவு எடுப்பா இருந்தா பார்ட்டி கப் சிப். கவட்டைக்குள் வால்கொடுத்து பெட்டைநாய் ரேன்ஜில் பம்மிரும்.

ரயில் நிலையப் பரபரப்பைத் தாண்டி சாலைப் பரபரப்பு. பிறகு நிற்காத பஸ். புதுக்காதலி போலத் தள்ளி நின்ற பஸ்.

பாதையோர வியாபாரிகள்… திடாரென அடிபட்டாற் போல கூக்குரலிட்டு வியாபாரப் பொருளைக் கூவி விற்கிறார்கள். பிச்சைக்காரர்களே மும்முரப்படும் வேளை. இதில் கண் தெரியாத இசைக்கலைஞன் இருந்த நிழலை ஆக்கிரமித்து பாட்டெடுக்கிறான் அவன் ஒரு பக்கம்… கூடவே ஆர்மோனியம் அவன் குரலோடு உடன்கட்டை ஏறுகிறது. நர்ஸ் வேலைக்குப் பொம்பளையாள் என்பது போல, கண்தெரியாத பிளாட்பார இசைக்கலைஞர்களுக்கு ஆர்மோனியத்தோடு கல்யாணஜோடி சேர பழைய பாடல்களே உதவுகின்றன. அறுபதாங் கல்யாணம்…

பின்னென்ன, கண் தெரியாத பாடகன் ஆர்மோனியத்தை வைத்துக் கொண்டு /காதல் ப்ஸ்…சாஸே சாப்பிடு ‘பிஸ்சா ‘வே/ என்றா பாட முடியும் ?

மனிதரே திகைக்கும் இந்தப் போக்குவரத்து நெருக்கடியில் தெருநாயொன்று – என்னாடி அவசரம் உனக்கு ? – சர்ர்ரென ஒரே வேகத்தில்… அத்தனை போக்குவரத்தும் கீச்சிட்டு ஸ்தம்பிக்க கம்பீரமாய், முதல்-அந்தஸ்து அரசியல்வாதி எனக் கடந்து ஓடுகிறது. இப்படி போக்குவரத்தை நிறுத்தணும்னா… ஒண்ணு- அரசியல்வாதியா இருக்கணும். இல்லை தெருநாயா இருக்கணும். அல்லது செத்துப்போன ஏழையா பாடை-ஊர்வலம் வரணும்.

அன்னிக்கு ஒரு வேடிக்கை- ஒரே நேரத்தில் ஓட்டுகேட்டு அரசியல் பிரமுகர்- அவன் பின்னாடி பிளாட்பாரத்தில் செத்த ஒருத்தன்- அந்த ஊர்வலத்துடன், செத்தவனின் வளர்ப்புநாய் மூணுமாய் வந்ததே பார்க்கணும்.

முன்குனிந்து வணங்கிய அரசியல்வாதியைப் பார்த்து… காத்திருந்த ஸ்கூட்டர்காரர் ‘அட ஓட்டு கிடக்குது. நீ சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணு. நாங்க ஆபிஸ் போகணும் ‘ என்கிறார். ஆனால் பிணஊர்வலப் பார்ட்டியைப் பார்த்து இவரே கும்பிட்டு, ‘சீக்கிரம் போங்க… ‘ என்கிறார் பவ்யமாய். இதுல மாட்னது தெருநாய்தான்னு வை. கூட்ட ஆத்திரத்தில் எவனோ அதை நச்சென்று கல்லால் அடிக்கிறான். வாள்வாளென்று ஓடுகிறது அது. நல்லவேளை ரகளையாகவில்லை.

போக்குவரத்தை ஊடறுத்து ஓடும் தெருநாயாய் தனு தன்னை உணர்ந்தான்.

வீட்டோடு அச்சகம் போட்டிருந்தார் முதலாளி. தொலைபேசிகூட மாடிக்கும் கீழுக்குமான இணைப்புதான். நேரப்படி அல்லது அவசரப்படி திறக்க அவருக்கு முடியும்… மாடிக்கும் கீழுக்குமான ஒரே கதவு. அச்சகம் எப்பவுமே திறந்திருக்கிற பாவனை தந்தது. மாடிப்படிக்குக் கீழே முக்கோணக் காலியிடத்தில், அச்சிட வந்த, அச்சிட்ட காகிதங்கள் ஆக்கிரமித்துக் கிடக்கும்.

உள் சிறு அறைகளில் காற்றே திணறும். மனுசன் மூச்சு விடுவதில் சிரமம் அதிகம். எப்போதும் விளக்கு இல்லாமல் முடியாது. தலைக்குமேல் ரயில்பெட்டியில் போல கருத்த ஒரு முச்சிறகு மின்விசிறி. ராட்சஸச் சிலந்தி. சிறகு முளைத்த சிலந்தி அது.

கடகடவென்று அதன் ஓயாத இரைச்சல். காதுக் குடைச்சல். இந்தச் சத்தம் போதாது என உள்ளே அச்சுயந்திர ஒலி. தடக் தடக் வேகமெடுப்பு.

அந்த முச்சிறகுக் கரும் சிலந்தியும் அச்சியந்திர தண்டவாள அதிர்வொலியும் ரயில் பெட்டிக்குள் இருப்பதான மயக்கம் தருகின்றன.

இதன் நடுவே ஒரு நாற்காலி-மேஜைக்குள் திணிக்கப் பட்ட அவன். விபத்தான காருக்குள் போல அவன்… சிக்கிக் கொண்ட பாவனையில் உட்கார்ந்திருப்பான். கூப்பிட்ட அழைப்புக்கு சட்டென்று எழுந்துகொள்ள முடியாது. மேஜை நாற்காலி இடுக்கு முடுக்கு. தொலைபேசி வயர். காகிதத்தைப் பரப்பி விரித்து வாசிக்கத் தோதாய் மடிக்கு உயரமாய் அட்டை. அதை எடுத்து ஓரத்தில் சாய்த்து வைத்து விட்டு ஏறத்தாழ மரத்துப்போன காலை நகர்த்தி வெளிவர வேண்டும். அதற்குள் கூப்பிட்டவரே பொறுமை யிழந்துவிடக் கூடும்.

பெயர் பிழைதிருத்துபவன். அச்சகத்தின் நிர்வாகம் அவன் கையில் இருக்கிறது… துட்டு நிர்வாகம் தவிர. தொலைபேசி அவசரங்கள், அச்சக நித்தியப்படி நியதிகள், நீத்தார் அறிவிப்பு என அவசர கேஸ்கள் – ஆங்கிலத்தில் late ஆனவரை தமிழில் அவசரமாய் அறிவிக்கிறார்கள்!… ஆட்டோ காணவில்லை… அவசரப் பரபரப்புகள் எல்லாம் மேற்பார்வை பார்க்க வேண்டியிருக்கிறது. புது பார்ட்டி வந்தால் மாடி வீட்டில் இருந்து முதலாளியை அவன் வரவழைப்பான். நாற்காலிக்குப் பின்னே அழைப்புமணி… மாடியில் ஒலிக்கிறாப் போல அமைத்திருக்கிறது.

ஒரு சந்தோஷம். அலுவலகங்களில் அதிகாரிகள் அழைப்பு மணியை அடித்து கீழ்ப்பணியாளரைக் கூப்பிடுவார்கள். இங்கே உல்ட்டா- அவன் அழைக்க, வருகிறார் முதலாளி.

‘டாய் முதலாளி சார்வாளுக்கு ஒரு ஸ்பெசல் சாதா பார்சேல்… ‘ எனக் கத்துவதாய் மனசுக்குள் வேடிக்கை…

அச்சகத்தில் உட்கார முடியாத அளவு அனல். மாடியில் சட்டையைக் கழற்றி விட்டு ஈசிசேரில் சாய்ந்தபடி காற்றுத் தேவைக்கு அக்குள் வியர்வை ஆற மின்விசிறிக்குக் கையைத் துாக்கிக் காட்டியபடி அவர்பாடு அமர்க்களம்தான். யானை தும்பிக்கை துாக்கி சோற்றுக் கவளத்துக்கு வாய் காட்டும் இப்படி!… கீழே இறங்கி வந்து உட்கார்ந்தால் வந்திருக்கிற பார்ட்டியோடு பேசுமுன்பே அவருக்கு இருப்பு கொள்ளாமல் தவிப்பாய் இருக்கும். பின்மண்டையில் ஃபேன் காற்று சிக்கெடுக்கும். சலுானில் போல பின் மண்டையில் குறுகுறுக்கும் காற்று- ஆனால் முன்நெற்றியில் வியர்வை வழியும். அவர்கள் பேசி முடிக்கும்வரை வியாபாரம் படியும் வரை அவன் வெளியே நின்றிருக்க வேண்டும். போய் மிஷினில் அச்சு-மை சீராய்ப் பதிவு காண்கிறதா எனச் சரிபார்ப்பான். வெளிபைன்டர் வந்து அச்சிட்ட காகிதங்களை எடுத்துப் போக உதவுவது போன்ற உபரி வேலைகள் செய்வான்.

‘என்னய்யா இப்டி லேட்டா வந்தா எப்பிடி ? ‘ என்று வழக்கமான சீற்றத்துடன் சபித்துக் கொண்டார் முதலாளி. இந்த நேரத்துக்கு வரவே அவன்பட்ட பாடுகளை அவனே அறிவான். முதலாளிகள் தொழிலாளிகள் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாதது ஒருபுறம். அவர்களது திறமையையே சட்டைசெய்யாத பாவனையில் நடந்து கொள்வது அவனால் தாளவொண்ணாதிருந்தது. இவர் தரும் சொற்ப சம்பளத்துக்கு எவன் நிலைப்பான் இங்கே. பைன்டர்களும் மிஷின்மேன்களும் கையச்சு கோர்ப்பவர்களும்… யாருமே எந்த அச்சகத்திலுமே நிலைக்காமல் இடம்விட்டு இடம் மாறிக்கொண்டே யிருக்கிறார்கள். முதலாளிகளின் வாய்க்கொழுப்பு, தகாத நடத்தை, தொழிலாளிகளின் அவசரப் பொருளாதார நெருக்கடிகளில் முதலாளியின் ஒத்துழையாமை எனப் பல காரணங்கள்…

/தொ ட ரு ம்/

sankarfam@vsnl.net

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


இரண்டாம் பகுதி – தொடர்ச்சி

—-

பின்னாட்களில் சுடர் விவேகமாய் பஜார்ப்பக்கம் பெஞ்சுபோட்டு பூக்கடை போட்டாள். மலர்களை விலையெடுத்து சுடர் வீட்டுக்கு வாங்கி வருவாள். வீட்டில் வைத்து அவளும் அம்மாவுமாய், நனைத்த நாரில் தொடுப்பார்கள். நேரே பஜாரில் அவளே தொடுத்துக் கொள்ளலாம் என்றாலும் சுடருக்கு சிறு அளவிலேனும் ஒத்தாசை செய்ய அம்மா தவித்தாள். ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி அமர்ந்தபடி முன்கொட்டிய பூ குவியலில் இருந்து மொட்டு மொட்டாய் நாரில் சேர்த்து முடிபோடும் அம்மாவின் துரித விரல்களை இன்னும் ஞாபகம் இருக்கிறது. எப்போ பேசினாலும் அம்மா பேச்சில் கவிதை அலங்காரம் இருந்தது ஆச்சரியம்… இந்த முடிச்சை நீ போடற. எவன் உன் கழுத்தில் முடிச்சு போடறானோ ?… என அலுத்துக் கொள்ளும் அம்மா. குள்ளக் கத்தரிக்காய்ச் சிற்றுடம்பு அப்பாவுக்கு எப்படி இந்த மகாசரீர அம்மா அமைந்தாள் தெரியவில்லை. அதை நினைக்க சுடருக்கு எப்போதுமே வெளிப்படையாகவே புன்னகை வரும். ஒருவேளை கல்யாண சமயத்தில் அம்மா ஒல்லியாய் இருந்திருக்கலாம்… என நினைத்து மேலும் சிரித்துக் கொள்வாள்.

‘ ‘ஆமாம். அது நிஜந்தான். அப்ப நான் ஒல்லியா இருந்தேன். ஆனா உங்கப்பா செம குண்டு ‘ ‘ என்றாள் அம்மா.

உதைபந்தளவில் பாதியளவுக்கு பூக்கட்டியதும் சுடர் கடைக்குக் கிளம்பி விடுவாள். அலுமினியத் தட்டில் ஈரத் துண்டில் பரப்பி பூவெடுத்து வருவாள். மீதியை வியாபாரத்தை கவனித்தபடியே கட்டிக் கொண்டிருப்பாள். பூ கேட்டு கைகள் நீள நீள வியாபாரம் சூடுபிடிக்கும். அல்லது குளுமை தட்டும்… நீளும் கையில் ஆயிரம் விதம். நல்லகை. பணிந்து வாங்கும் கை. அவளைத் தீண்டும் ருசிகொண்ட நாகக்கை…

நீளும் கையின் தன்மை பொறுத்தே அந்தப் பூக்களும் எட்டிச் சேரும் இடங்களும் அமைகின்றன. கோவிலை எட்டுகிற, மனைவிகளை எட்டுகிற, விபச்சாரிகளை எட்டுகிற, பிணத்தை எட்டுகிற மலர்கள்.

விசேஷ நாட்களில் அந்த பெஞ்சு பிரத்யேகமான அதிகப்படியான மலர்வகைகளை ஏந்திச் சிரித்தன. நாகலிங்கப் பூ. தாமரை. காலை நேரங்களிலோவெனில் ரோஜா. கனகாம்பரம். டிசம்பர். அதையிட்டே பூப்பந்துகளும் வெள்ளை, மஞ்சள். கதம்பச் சரம் எனக் கலவை கொள்ளும்…

அம்மா இறந்து போனது. இரவில் காலித்தட்டுடன் அவள் வீட்டுக்கு வந்தால் வீடு விளக்கேற்றப் படாமல் கிடந்ததைப் பார்க்கவே உள்ளே ரயில் தள்ளாட ஆரம்பித்து விட்டது. அடாடா என்று நடை விரைந்தது… இரு அறைகளுக்கு நடுவே அம்மா கிடக்கிறாள். கடைசி கட்ட தாகத்தில், தண்ணீர் குடிக்க, தானே எழுந்துகொள்ள என போராடி யிருப்பாள் போலும். சுடர் அரிக்கன் விளக்கை ஏற்றிக்கொண்டு கிட்டேபோய்க் குனிந்து பார்த்தாள். கண்கள் வெறித்திருந்தன. உயிர் கண்வழியே வெளியேறும் என்கிறார்கள்… என நினைத்துக் கொண்டாள்.

ராத்திரி தனியே அம்மாவுடன் கழிக்க முதன் முதலாக பயமாய் இருந்தது. அம்மாவிடம் நிறைய பேசும்-சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தன. அம்மா எதாவது பேசேன்… என அந்த உடம்பைப் பார்த்தாள். கண் வெறித்துக் கிடந்தன அவை. கதைகளை வெளியேற்றிய பார்வை. அந்தக் கண்களை மூடினாள்.

இரவுக் காவலாய் கூட குளத்துசாமி. அவர்கள் விடியக் காத்திருந்தார்கள்.

பிறகு-

தாமரை பறித்து வருகிற மாசிலாமணியோடு சிநேகங் கண்டது. டப்பாக்கட்டு லுங்கி. தலையில் சுற்றிய துண்டு. பல்குத்தியபடியே பேசுவான். என்ன பழக்கம் இது என்றிருக்கும். மாடுகளில் பால்கறந்து கோவாப்ரேடிவ் சொசைட்டியில் ஊற்றுவான். அதிகாலை வெளிச்சக் கிரணம் புறப்படுமுன் கிளம்பி விடுவான். பாத்திரத்தில் நுரைக்க நுரைக்க காலைகள் விடியும் அவனுக்கு…

நல்ல டியெம்மெஸ் குரல் அவனுக்கு. பால் போணியில் தானே தட்டிக் கொள்வான். தன்னுற்சாகத்துக்குக் குறைவில்லை. குளித்தபடி திடாரெனப் பாட ஆரம்பிப்பான். வீட்டு டிரான்சிஸ்டரில் பாட்டு கேட்பான். நிகழ்ச்சி முடிய, அதை அணைத்த பின்னும் அவன் மனசில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. பாட்டை… முதல் வரியை அல்ல… நடுவில் இருந்து எடுப்பான்….

மேடையில் பாட அவனுக்கு ரொம்ப ஆசை. ஆனால் மைக்கில் அவன் குரல் எடுபடவில்லை. விநோதமாய் ஒரு கீச்சொலி பிசிறு தட்டியது. அத்தோடு நமக்கு இது லாயக் படாது என்று விட்டு விட்டான்.

தனித்த ஒரு பொழுதில் இரவில் அவன் சைக்கிளில் அவர்கள் வீடு திரும்புகையில் அவன் தந்த முத்தத்தில் முகஞ் சுளித்தாள். – குடிக்கிறான்… எதிர்பார்க்கவே இல்லை!

குடி அவளுக்குப் புதியது. ‘எய்யா குடிப்பியா ? ‘ என்றாள் பயந்து. அதுநாள்வரை வெற்றிலை போடுகிற அளவிலேயே அவனை அறிந்திருந்தாள். விகாரமாய்ச் சிரிக்கிறான் மாசிலாமணி. ‘வேணாய்யா. நல்ல நல்ல பூ கொண்டு வரே நீ. பூத்தரம் தெரிஞ்ச மனுசன் நீ. நீ குடிக்கலாமா ? உனக்கு நல்ல வாசனைக்கும் கெட்ட வாசனைக்கும் தரம் பிரிக்கத் தெரியண்டாமா ? ‘ – என்றாள்.

‘நிறுத்திர்றேண்டி என் கண்மணி ‘ என்று கொஞ்சினான். அவளுக்கு மிதக்கிறாப் போல இருந்தது. சொன்னபடி சுத்தபத்தமாய் ஆளே மாறிவிட்டான். ஒரு மாதம் அப்படியே இருந்த மாதிரித்தான் இருந்தது. தன்-சிறப்பாய்க் கண்ட கணங்கள் அவை. சைக்கிளில் அவனுடன் ரெண்டாவது ஆட்டம் சினிமா போய்வருவது வரை சகஜப்பட்டாள் அவள். வீடுவரை கொண்டு விடுவான். போய்விடுவான். பெருமையாய் இருக்கும்.

பக்கத்துவீட்டு கோவிந்தம்மா அவர்களிடையேயான வயசு வித்தியாசம் பற்றிக் குரல் எடுத்தபோது அவள் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. கழுத்தில் சிறு மஞ்சக் கயிறு என்றாலும் அது தரும் சமூகப் பாதுகாப்பு அலாதியானது…

கோவில் கல்யாணம். அப்பா இல்லாததில் பெரிதும் விசனமாய் இருந்தது. அப்பா இருந்திருந்தால் தமிழ் படித்து பெரிய அளவில் ஓரியன்டல் கோர்ஸ் முடித்து புலவர் பட்டம் வாங்கி பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை என எங்காவது ஒதுங்கிக் கொள்ளலாம் என்று கண்ட கனவு நனவாகி யிருக்கும்… சரி அதைப் பற்றி என்ன ?… அவள் வாழ்க்கையோ – உலகம் தாண்டி உலகம் – எனக் கடப்பதாகத் தோற்றம் தருவதாய் இருந்தது. சிலரது பிறப்பம்சம் அப்படி. என்ன செய்ய ?

மாசிலாமணி கையெழுத்துப் போடவே திண்டாடிப் போனான். கடைசி எழுத்து ணி போடுமுன் கை இழுத்துக் கொண்டு போனது எங்கோ. அவனே தன் வாழ்க்கையை காற்றில் இழுத்துப் போகிற உதிர்ந்த இலையெனவே கண்டான். நித்தியப்படி என அவளது வருமானம் என்ற கணக்கில் குடும்பம் ஓடியபோது அவன் நித்தியப்படி என்று பூவெடுக்கப் போவதே கூட நாளாவட்டத்தில் குறைந்தடங்கிப் போனது.

துாக்கம் துாக்கம் என சோம்பல் ஆட்டுவிக்க, காலைகளில் எழும்ப முடியாமல் கிடந்தான் அவன். அவள் எழுப்ப எழுப்ப அவன் காலாவட்டத்தில் எரிச்சல் கொள்வதும், அவள் வியாபாரத்துக்கு நேரமாகி விட்ட பதட்டத்துடன் தட்டிக் கதவைச் சார்த்தி விட்டு ஓடுவதுமாய் இருந்த காலங்கள்.

மீண்டும் அவன் குடிக்க ஆரம்பித்திருந்தான். வேலை என வெளியிறங்குவதை சம்பாதிப்பதை அடியோடு நிறுத்தி யிருந்தான், ஷோக் செய்து கொண்டு சைக்கிளில் கிளம்புகிறானே யொழிய எங்கே போகிறான் வருகிறான் எதுவுமே கலந்து கொள்கிறா னில்லை.

சண்டைகள்-

அவனிடம் வாங்கிய முதல் அடி. அப்பா நல்லவேளை இதையெல்லாம் பார்க்க உயிருடன் இல்லை. இருந்தால் எப்படி துடித்துப் போயிருப்பார்.

சீட்டாட்டப் பழக்கம் வேறு வந்திருந்தது. குடிக்க- புகையிலை வெத்திலை என்று குஷால் பண்ண- பிறகு இப்போது சீட்டாட… பணம் அவனுக்குத் தேவைப்பட்டுக் கொண்டே யிருந்தது. விவரங்கள் புரிந்தபோது… பறித்த தாமரை என அவளே அவனிடம் மாட்டிக் கொண்டதை உணர்ந்தாள். கொடிபோலும் அவள் கால்களைச் சுற்றிப் படர்ந்து வளைத்துக் கிடந்தன தடைகள். காலம் அவளையே வெற்றிலை என வாய்க்குள் சுருட்டி ஒதுக்கிக் கொண்டாற் போலிருந்தது. மயக்கமாய் இருந்தது.

அவன் அவளைத் துட்டு கேட்டு அடிக்க ஆரம்பித்தான்.

அடிகள் சகஜமாக ஆரம்பித்தன.

மூர்க்கமாக ரம்பித்தன.

பிடிவாதத்தோடு மறுத்து அவள் பஜார்ப்பக்கம் கடைக்கு வந்தால் கடைக்கே வந்தான். குடித்துத் தள்ளாடி வந்து தொந்தரவு தர ஆரம்பித்தான். பெருங் குரலெடுத்து நச்சரித்து சச்சரவுகள். வாயில் இன்ன வசை என்றில்லை…

தேவாரங் கேட்ட அவளது காதுகள் திகைத்தன…

அது நல்ல சேதியா கெட்ட சேதியா தெரியவில்லை. திடாரென்று அவனைக் காணவில்லை.

அவள் முடிந்த எல்லைவரை வரை தேடிப் பார்த்தாள். நாட்களில் அவனைப் பற்றி துப்பு கிடைத்தது.

எல்லைக்கல் தாண்டி வேறொரு சுந்தரியுடன் சினிமாத் தியேட்டரில் அவனைப் பார்த்ததாய்ப் பேச்சு வந்து சேர்ந்தது- எஜமானில்லாமல் காட்டில் இருந்து வந்து சேர்ந்த குதிரை. காற்றோடு வந்து சேர்ந்த செய்திக் குதிரை.

மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு அழத்தான் முடிந்தது.

அப்பாவை நினைத்தபடி அழுதாள். அம்மாவை மனசாரக் கட்டிக் கொண்டு அழுதாள். போய்ப் பார்ப்பமா என்றுகூடத் தோணியது. பார்த்து ?… என வழி மறித்து மேல்க் கேள்வி போட்டது யோசனை. திரும்ப துட்டு கேட்டு நெருக்குவான். வாங்கிக் கொண்டு எல்லை தாண்டுவான்… அடிப்பான். அவனை அவள் அறிவாள்.

ஆண்கள்!…

பெண்களை எத்தனை சுலபமாக அவர்கள் வீழ்த்தி விடுகிறார்கள். கண்ணைத் துடைத்துக் கொண்டபோது சிறு தெளிவு வந்திருந்தது.

துாங்க ஆரம்பித்தாள்.

காலை விடியல் அவளுக்கு வேறு மாதிரியாய் இருந்தது. வேறு உலகத்துக்கு அவளை அழைத்து வந்திருந்தது அது.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -4)

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/2/

அப்பா நல்லடக்கம் செய்யப்பட்ட போது சுடரின் படிப்பில் மண் விழுந்தது.

படிக்கிறதில்தான் சின்ன வயசில் இருந்தே எத்தனை ஆசை அவளுக்கு. அதைவிட அவள் படிக்கிறதில் அவள் அப்பா காட்டிய ஆர்வம்… அவருக்கு ஒரே குழந்தை. பெண் குழந்தை. சுடர்க்கொடி.

குழந்தை… அதும் ஒரே குழந்தை… பெண் குழந்தை என்ற அளவில் அம்மாவுக்கு சிறு வருத்தம் உண்டுதான். அவள் காலம் வேறு. அப்பா அதைப் பாராட்டவில்லை என்பது பெருமையான விசயம். ‘ ‘ஆணானா என்ன பெண்ணானா என்ன காமாட்சி ? ‘ ‘ என்று அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தபடி இவளைத் தலையைத் தடவித் தருகிறார் அப்பா. இப்பவும் பதிவாய் அந்தக் காட்சி இதோ உள்ளே கிடக்கிறது.

அவரது குள்ள உடம்பு. உத்திராட்சம் கட்டிய கண்டம். நரை ஊடாடிக் கிடக்கிற ஒட்டக் கத்தரித்த தலைக் கிராப்பு. கருப்பு பிரேம் வட்டக் கண்ணாடி. விபூதி பூசி மணத்துக் கிடக்கிற உடம்பு. பழுப்பு வேஷ்டி. ஜிப்பாபாணிச் சட்டை. அதன் இருபக்க முட்டுக்கள் கண்ட சட்டையோடு தைக்காத தனிப் பித்தான்கள். மூக்குப்பொடி டப்பி. பளபளத்த பொலிவுடன் வெற்றிலைப் பெட்டி. தோளில் எவ்வெப்போதுமாய்க் கிடக்கிற சளி-அவசரத்துக்கான ஈரிழை குத்தாலத்துண்டு. இடுப்பு முடியில் சுருக்குப் போட்ட விபூதிப் பை. அதனுள்ளிருந்து எடுத்துத் தரும் சில்லறை நாணயங்கள். அப்பாவை மறக்க முடியுமா ?

மல்லாக்கப் படுத்து, பெருங் குறட்டையுடன்… மார்புமேல் கைகிடக்கத் துாங்கும் அப்பா.

அப்பா மாலைகளில் ஊர்க்கோவில் சிவன் சன்னிதியில் தேவார திருப்பதிகங்கள் ஓதுவார். சந்திகால பூஜைநேரம் காண்டாமணி அடிப்பதையும், பதிகம் ஒதுவதையும் அவர் தம் பெருமையாய்க் கண்டவர். கணீரென்ற காண்டாமணி நாக்கு உள்ளறைக்குழியை மோதிய விண்ண்ணென்ற வெங்கல அதிர்வு. அதே சுருதிபோல் அப்பா மனசெல்லாம் புல்லரிக்கப் பதிக எடுப்பு எடுப்பார். என்ன கூட்டம் கூடியிருக்கும் சந்திகால பூஜைக்கு. திரை விழுந்தாலும் அலங்காரபூஷிதனாய் லிங்கமூர்த்தியை தரிசிக்கக் காத்திருக்கும் ஜனங்கள். குளத்துசாமி தீவட்டி துாக்கித் தயாராய் நிற்கிறதும், சட்டென்று திரையொதுக்குகிறதும் பரவசம். எதோ அபூர்வமான விசயம் போல உள்ளே திகட்டுவது நித்தியப்படி வாடிக்கை. சட்டென விழித்த மணியொலி. அதன் அதிர்வான சிறிய மெளனம். சிறிய அவரது மனங்குவிப்பு. கண்மூடிய பிரார்த்தனை. சட்டென பறவைபோல் சாரீர அலையெடுப்பு… பாடல் முடிய மீண்டும் காண்டாமணிவிழிப்போடு விதவிதமான தீபாராதனைகள். ஒளியடுக்குகள். ஒளியை அடுக்கிப் பார்க்க நினைத்த மனிதர்கள் ஆச்சரியம் அல்லவா ?… கொடியில் பூத்த பூ போல… தட்டடுக்குகளில் பூத்துச் சிரிக்கிறது வெளிச்சம். நிறைவுக் கட்டத்தில் பெருந்தட்டு. நுாற்றெட்டு ஜோதியாராதனை… நிமிர்த்திப் பிடித்த நவீன சாண்டிலியர் வெளிச்சம் போல… காலத்துக்கே பிரகாசம் பாய்ச்சிய கவிதைக் கணங்கள். ஒவ்வொரு தீபாராதனை மாறும்போதும் அப்பாவின் கையியக்கம் மேலும் வேகம் பெறும். ஒலி உக்கிரப்படும்.

குளத்துசாமி ஏற்றித் தரத்தர பட்டர் கையில் ஏந்தி மூர்த்திக்கும் பிராகாரச் சுற்றடுக்கு சந்நிதிகளிலும் காட்டுவார். பார்க்க சாதாரண விசயம்போல் தெரியும். ஒரு கை மணியசைக்க ஒருகை அசங்காமல் கற்பூரங் காட்டணும்வே. நாம செஞ்சா… மணியடிச்ச வாகில் கற்பூரத்தட்டும் ஆடும். இல்லாட்டி அசைக்காமக் கற்பூரங் காட்டலாம். மணியசைக்க வராது…

கற்பூர ஆரத்தி மாத்திரம் சந்நிதிப் பிரசாதமென பட்டர் வெளியே எடுத்து வர அதைக் கண்ணொற்றிக் கொள்ள மோதும் திரள். குங்கும விபூதி பகிர்ந்து வழங்கும் பட்டரின் விரல்-வேகஇயக்கம். கற்பூரத்தட்டில் விழும் நாணயங்களை ஒதுக்கி ஒதுக்கி விபூதி வழங்குவார் பட்டர்.

உலகம் அழகாய் இருந்தது அப்போது. அந்தக் காலங்கள்… கிராமத்து மாலைகள் அழிந்துபட்டன. கிராமமே மாறிவிட்டது. மேளகாரனே சந்திபூஜைக்கு வாசிக்க குடித்துவிட்டு வருகிற தலைகீழ் மாற்றம். சிவதாணு இறந்து போனார். அவரது அந்திம கிரியையே பொதுக்காரியமாகி விட்டதே… ஊர்க்காரர்களே உறவுக்காரர்கள் என்ற நிலை.

அம்மா வாதஉடம்புக்காரி. முட்டிவீக்கம். சட்டென எழுந்து கொள்ளக்கூட முடியாது. தாட்டிக உடம்பு. சிவதாணு நாலுகடை பஜார்க் கடைகளில் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டார். கோவில் நெல்லளப்பு கண்ட வம்சம். ஆண் வாரிசு இல்லாமல் போனதே… என்ன செய்ய ?

அப்பாவை நல்லடக்கம் செய்தபோது அந்தக் குளத்துசாமி மாத்திரம் அழுதான். பட்டர் வரவில்லை. யாருக்கும் அவர்கள் காத்திருக்க வேண்டி யிருக்கவில்லை. ஒரு தம்பி அவருக்கு. வேலுமணி என்று பேர். அப்பா சொல்லக் கேள்விப் பட்டிருந்தாள். எங்கிருக்கிறாரோ இப்போது… ரொம்பக் காலமாகவே அவர்கள் பற்றித் தகவல் தெரியாது.

துட்டு புரளாத உறவுகளை யாரும் பெரிதாய்ப் பாராட்ட மாட்டார்கள்… என்று புரிந்தது அவளுக்கு. வீட்டிலும் மயானத்திலும் காற்றுங் கூட சிணுங்காத நிதானப் போக்கில் இருந்தது. வேறு யாரும் அழவில்லை. சுடருக்கும் அம்மாவுக்கும் அழுகையை விட திகைப்பு அதிகமாய் இருந்தது.

அம்மாவுக்கு ஆஸ்த்துமா கண்டது. அது வேறு-

ஆனால் மத்த குமருகளோடு மல்லிகைப் பாத்திகளில் முன்குனிந்து கோது பறித்து பின்துாளியில் சேகரிக்க சுடருக்கு சுவாரஸ்யமாய் இருந்தது. முன் குனிய கும்மென்று செடி மணத்தது. சமையலறையில் ஆவி பறக்க மணக்கும் சாம்பார் போல… அது வெப்ப வாசனை. இது வெயில் தெரியாத குளுமைவியூகம் அல்லவா.

சிறுசிறு பாம்புமுக அரும்புகள். வெளிச்சம் வெளிர்வாங்க உள்சிலிர்த்து அவை விரிந்தன. மொட்டுகளை முட்டித் தள்ளி இயற்கை திறந்து சிரித்தாப் போல. மொட்டின் வாய் திறந்த இயற்கையின் சிரிப்பு வெடிப்பு…

மொட்டுத் திறந்த இயற்கையின் சிரிப்பு. இறகு விரிப்பு போல… பாவாடை குடைவிரிய வட்டச் சுற்று சுற்றியமரும் பெண்குட்டி. பூச்சிகள் என்ன மனுஷாளையே ஈர்க்கும் வாசனைச் சிதறல்…

பாத்திகளுக்குள் நுழைகையில் கனமற்றிருக்கும் துாளி வெளியேறுகையில் பூபாரத்துக்குத் தள்ளாடும். நடை மாறிப் போகும். அவளுக்கே தன் புதுநடையில் சிரிப்பு வரும்…

அப்போதெல்லாம் எடுத்ததெற்கெல்லாம் சிரிப்பு வரும். உற்சாகமாய் இருக்கும். மனம் மிதந்து காற்றில் வெளியே பட்டம் என திரிந்த காலங்கள் எங்கே ? எப்போது அந்தப் பட்டங்கள் வாலறுந்து கண்ணில் விலகி காணாமல் போயின…

திரிந்த பால்…

இழப்புகள் நிர்ப்பந்திக்கப் படும் அன்றாடத்தின் கொடுங்கோலாட்சி.

/தொ ட ரு ம்/

——–

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


முதல் பகுதி – தொடர்ச்சி

—-

முற்றிலும் புதிய நாளொன்றின் துவக்கம். விளையாட்டுப்போல இருந்த வெளிச்சம் சட்டென்று வாத்தியார் கோபப்பட்டாப் போல கடுமையாகி விட்டது. வெளிச்சம் பாதி எட்டிப் பார்க்கு முன்னமேயே ஜனங்களில் பாதிப்பேர் அந்த நாளுக்கான உழைப்புக்குத் தயாராகி விடுகிறார்கள். ஒவ்வொருத்தரும் தொலைதுாரப் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. ரயில்ல விபத்தான உடல்போல அவர்களது அலுவலகம் ஒரு மூலைன்னா வீடு இன்னொரு மூலை. நெடும்பயண பஸ். அல்லது ரயில். பொங்கி வழிகிற கூட்டம். முடிச்சாய் வெளிப்பிதுங்கும் கூட்டம். பாதி பஸ் அநேக நிறுத்தங்களில் நிற்பதேயில்லை. தோள்ல அடிபட்ட ஜவான்போல ஏற்கனவே பஸ் சாச்சபோக்கில் போகுது. இன்னும் ஆள் ஏறினாத் தாளாதுன்னு டிரைவருக்கு பயம். இறங்க வேண்டிய ஆளுகளையெல்லாம் பஸ் நிறுத்தம்னு இல்லாமல் முன்ன பின்ன இறக்கி விட்டாவுது… அடிறா விசிலை கண்டக்டர். டபுள் விசில் அடி. ஒருபக்கம் றெக்கை முளைத்த பறவையாய் பஸ்… திரும்பக் கிளம்புகிறது.

தனுஷ்கோடிக்கு நகரம் பழகி யிருந்தது இந்நாட்களில். சாக்கடைக்கு ஏது போக்கிடம்னாப்ல… வேற வழியில்லையப்பா. நல்லவனையும் அட்டூழியங்கள் பண்ண, நிம்மதியைக் குலையடிக்கிற கதறச் செய்கிற கெடுபிடி செய்கிற அன்றாடம். இங்கே நல்லவனாக யாரும் வாழவே முடியாது. பார்க்க ஷோக்கா இருப்பான். கூட பஸ்ல வந்தபடியே தன்மையாப் பேசுவான். இறங்கும்போது நம்ம பர்சடிச்சிருப்பான் திருட்டு நாய். ஆளும் உடையும் ஜம்னு இருக்கும். வாயைத் திறந்தால் அத்தனை கெட்ட வார்த்தையும் வரிசை போட்டுக்கிட்டு வந்து விழும். அன்னிக்கு பஸ்ல ஒருத்தன் தத்துவ எடுப்பு எடுத்தான். கூட்டத்ல பெரியாள்னு காட்டிக்கறதுல மனுச மக்களுக்குத்தான் எத்தனை ஆசை- வள்ளுவர் என்ன சொல்லீர்க்காரு தெரிமா ?…ன்னாம்பாரு. தனுஷ்கோடியே அசந்திட்டான். அடேய் இவனுக்கு வள்ளுவர் தெரியுமான்னு பாத்தான். என்ன சொல்றான் அதையும் கேப்பமே- ‘ ‘தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே… ஙொம்மாள நாவினால் சுட்ட வடு ‘ ‘ன்னிருக்கார் வள்ளுவர் அப்டின்னான். வள்ளுவர் எப்ப ஙொம்மாளன்னு எழுதினார். அவரும் மயிலாப்பூர்ல பொறந்ததா ஒரு ஐதிகம் உண்டு. ஒருவேளை எழுதீர்ப்பாரோன்னு இவனுக்கே சந்தேகம் யிட்டது…

ரயில்க் கூட்டம். பைத்துட்டு பறிபோயிருமோன்னு அவனவனுக்கு உள்ப்பரபரப்பு. உள்ளே தடக்தடக்னு இன்னொரு ரயில் இதயரயில் படபடக்குது. ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் உள்க்கூட்டம் நெகிழ்ந்து மழைத் தண்ணிக்குத் தெருவில் வகிடெடுத்து விட்டாப்ல கலையுது. சிலாளுகள் வெளிய போற கூட்டத்தை கவனிக்காமல் எந்த சீட் காலியாவுது பாஞ்சி அடுத்தாளை மிதிச்சிநவட்டிட்டாவது போயி உக்காறலாம்னு நோட்டம் பாத்திட்டிருக்கான். அறிவிக்கப் படாத மியூசிகல் சேர் போட்டி. அப்ப பாட்டு ? அதான் வர்றானுகளே பார்வையத்த கபோதிங்க. அவன் ஐடியாவைப் பார் – தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்-னு நேரத்துக்கேத்தாப்ல எடுத்து விடறான். தருமமும் ஹெல்மெட்டும் ஒண்ணா ?

எத்தனை சீக்கிரம் கிளம்பினாலும் நினைத்த நேரம் அச்சகம் வந்து சேர்றது நம்ம கைல இல்ல. திடுதிப்னு யாராவது குடிமகனுக்கு வாழ்க்கைய முடிச்சிக்கிர்ற ஆவேசம் வந்துருது. நேரா உடனே ரயில் முன்னாடி விழுந்துர்றான். ரயில் கடவுள்- இவன் ஆசிர்வாதம் வாங்க வந்தவன்… நான் செத்துப்போறேன் ஷாமியோவ். ஆசிர்வாதம் பண்ணுங்க…

அட முந்திய ரயில்லியோ அடுத்த ரயில்லியோ விழப்டாதான்னுதான் அவனவனுக்கு உடன்-தோணும் எரிச்சல். செத்தவனைப் பத்தி இரக்கமோ ஆர்வமோ காட்டாத மானுடம். கிழவி நெஞ்சுக்கூடாட்டம் உலர்ந்த… வத்திப்போன மானுடம். அரசியல்ல ஒரு வசனம்- நுாறாள் செத்தா துக்கம். யிரம் பேர் செத்தா செய்தி- அவ்ளதான். துாக்கிப் போட்டு எரி. அடுத்த ஜோலியப் பார்.

சில நாட்கள் முகூர்த்த நாட்கள். கல்யாணம் கல்யாணம்னு நிறைய கல்யாணம் நாட்ல விழுந்தடிச்சிப் பண்றா மாதிரி… ஒரேநாளில் அநேகம்பேர் ரயிலில் விழுந்து சாக முடிவெடுத்திர்றாங்க… வாழ்க்கை அத்தனை வெறுமையால்ல ஆயிப் போச்சு. பாவம் ஜனங்கள்.

அம்பிகா. பாதகத்தி அவளும் இப்பிடித்தான் ஒருநாள் தற்கொலை செய்து கொண்டாள். அவன் மனைவி. வழக்கமான சண்டை என்றுதான் நினைத்தான். சண்டைநேரத்தில் அவள் காட்டும் உக்கிரம் பொறுமையின்மை வேசம் அவனுக்கு எப்போதுமே திகைப்பாய் இருக்கும். ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்க அந்த நெஞ்சுக்கூட்டின் விரிசலை அவள் மூச்சிறைப்பைப் பார்க்க… பதில் சொல்லவே யோசனையாகிப் போகும். உணர்வு கட்டுமீறிப் போச்சா, அட பாதகத்தி தவறி விழுந்திட்டாளா தெரியவில்லை. தடக்கென்று ரயில் மேலே ஏறிய அந்தக் கணம் அவளுக்கு எப்படி யிருந்திருக்கும் ?

சிலபேர் காத்திருந்து, ரயில்வர சட்டுனுப் பாஞ்சிர்றாங்க. அட பாவிமக்கா ரயிலுக்குக் காத்திருக்கத் தெரிஞ்ச நாய்க்கு வெற்றிக்குக் காத்திருக்கப் பொறுமை இல்லை!… உயிர் பட்டணத்தில் அத்தனை மலிவாகி விட்டது. அவனுக்கு அத்தனை அலுப்பாய் இருந்தது. வீட்டில் அவள் இல்லாத வெறுமை இந்நாட்களில் பழகி விட்டது. நகரத்தில் இழப்புகள் சகஜம். இது நகரம். தற்கொலைகள்… அட கொலைகளே சகஜம். கால் சவரன் நகைக்காக காதையே அறுக்கிறான்யா பாவிகள். குழந்தைக் காதை.

தனியா வந்த ஆளை பைக்கில் வருகிறவன் கத்திகாட்டி மடக்கி பைத்துட்டைப் பறிச்சிக்கிட்டு பறந்து விடுகிறார்கள். எல்லாம் விநாடி நேரத்தில் மாயாஜாலம்போல் நிகழ்ந்து விடுகிறது. ‘ ‘ஐய… என்ன சார் ஆச்சி ? ‘ ‘ என்று ஓடிவந்தான் தனுஷ்கோடி. கத்தியைக் காட்டி கழுத்தில் கிடந்த மைனர்செயினை அவரிடம் பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள். இன்னமும் பயம் விலகாத பதட்டத்துடன் அவர் விவரிக்கிறார். இவன் கூட நின்ன ஆள் கதையை சுவாரஸ்யமாக் கேட்டுட்டு… ‘ ‘உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சு சார். அதும் இந்த ஏரியா ரொம்ப மோசம். அடிக்கடி வழிப்பறி நடக்குது. எதுக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளெயின்ட் குடுத்து வைங்க ‘ ‘ன்றான். பறி கொடுத்த ஆள் பதில் சொன்னானே பாக்கணும். ‘ ‘அட நானே ஏட்டுதாய்யா ‘ ‘.

நாட்ல வேற எவன் மைனர் செய்ன் போடறான் ?

வழக்கம்போல நேரமாகி விட்டது. ஜனங்கள் ரயிலில் இருந்து குதித்தாப்போல இறங்கி அடுத்த பஸ் பிடிக்க ஓடுகிறார்கள். தனுஷ்கோடியும் இதுக்குமேல் இன்னொரு பஸ்ஸெடுத்து அச்சகம் போக வேண்டும்.

பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒரு இலக்கிய வஸ்தாதின் நாவல் ஒன்று அச்சாகிக் கொண்டிருந்தது. என்னவோ மேஜிகல்-ரியலிசம்ன்றான். தமிழ் காணாத வெளிநாட்டு உத்தின்னு வாலிபவட்டத்தில் சிலிர்த்திட்டு அலையறான்கள். ராமாயணம் சொல்லாத மேஜிகல்ரியலிசமாய்யா ? பாட்டான் பூட்டன் இருட்டையும் காட்டையும் பத்திச் சொல்லாத கதையா ? சீசன் திரும்ப வந்தாப்ல அதையே… அதும் வெளிநாட்டைப் பார்த்துக் கையில் எடுத்துக்கிட்டு… நவீன உத்தின்னு மிரட்ட முயற்சி.

நம்ப ஐட்டங்களையே விலைக்கு வாங்கி வெளிநாட்டு மோஸ்தரில் உறைபோட்டு விக்கிற நவீன பொருளாதார மேலைநாட்டு உத்தி. வியாபார உத்தி போல இருக்குடா இதுவும். சிலது அப்பா அம்மா சொன்னாக் கேக்காது. ஒத்துக்காது… அதையே எதிர்வீட்டு அங்க்கிள் ஆன்ட்டி சொன்னா அதான் ரைட்டுன்னு மயக்கம். கண் சொருகல்.

அவனுக்குக் காலையில் கண்ட அந்த மோகினிப்பிசாசுக் கனவு ஞாபகம் வந்தது. பொம்பளையாள்த் தவிப்பும் துட்டாசையும் மனுசாளை எப்பிடியெல்லாம் பாடாப் படுத்தது. எத்தனை உள்க் கற்பனைகளை சிலிர்ப்புகளை ஆலாபனையெடுப்பு எடுக்க வைக்குது… என்றிருந்தது.

அவனுக்கான பஸ் வந்தது. சற்று தள்ளி தோள்சாய நின்றது. கூட்டத்தில் மண்டையால் முட்டி ஏறிக்கொண்டான்.

/தொ ட ரு ம்/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/1/

அது கனவா நினைவா புரியவில்லை. அது அவன் அறிந்த இடமாகவும் அறியாத இடமாகவும் மனசில் தட்டுகிறது. எங்கே அங்கே அவன் வந்தான் ? என்ன வேலை.. அந்த இருளில் அவன் எதைநோக்கிப் போகிறான் ? கால்கள் தாமாக இயங்குவதாய் சிறு பிரமை. அல்லது மொத்தக் காட்சியுமே பிரமையோ ?

குளிரான இருள் இதமாய்த்தான் இருக்கிறது. வண்டிகட்டிக்கொண்டு ஊரோடு ஊர்கடந்து போகிறாப்போல. தடக் புடக் தள்ளாட்டம். தளர்ந்த நடைதான். வீட்டைவிட்ட நடையா வீட்டைப் பார்க்க நடையா ?… எதற்கு யோசிக்கணும். போடா மாப்ள என்கிற மனசு. உற்சாகப் பாட்டெடுப்பு உள்ளே மெளனமோதல் மோதுகிறது. ஒலியில்லாத… வார்த்தையுமே யில்லாத மோதல். என்ன உலகம் இது ? அவன் கண்டிராத புது உலகமா இருக்கேய்யா ? வானமும் இல்லாத பூமியும் இல்லாத இப்பிடியோர் இடம் உண்டா என்ன ?

இருட்டு. இருட்டுக்குள் அவன். கொழுக்கட்டை போலவா ? கருப்பு கொழுக்கட்டை.. மண்புழுபோல அவன் இருட்டைக் குடைந்துகொண்டு போகிறான். என்னென்னமோ புது வாசனை. புதுப்புது உருவத்தை விருப்பப்படி வரைஞ்சிக்கோன்னு… முதுகில் ஏற்றிக் கொள்ள இருட்டுயானை குனிஞ்சி நிற்கிறது அவன் முன்னாடி. மகனே உன் சாமர்த்தியம். வரைஞ்சிக்கோ… என வகுப்பறைக் கரும்பலகையாய் இராத்திரி.

திடாரென அந்த அந்தகாரத்தில் ஒருவெளிச்சம். டார்ச் அடிச்சாப்ல. சட்டுனு வெலவெலத்து அப்டியே நின்னுட்டான். கூடவே ஒரு சிறு சிரிப்பு. அசரீரிச் சிரிப்பு. என்ன வெளிச்சம் அது. கண்ணை ஒரு வெளீர் வெட்டு வெட்டிச்சே. எங்கேர்ந்து சிரிப்பு. மீண்டும் மெளனம் தண்ணில கட்டின பாசியாய் மூடிட்டது. திரும்ப இருட்டு. அந்தச் சிரிப்பை நினைச்சித்தான் பாக்க முடிஞ்சது. நினைவினைக் கூட்டிக் குவிச்சிக்கிட்டான். அந்த சத்தத்தை மோட்டார்போட்டு பம்புல தண்ணியேத்தினாப்ல மூளைல ஏத்திப் பாத்தான். ஆமடா அது ஒரு பொம்பளையாள் சிரிப்புடா. என்ன வசீகரமான சிரிப்பு. என்னமோ வெளிச்சந் தட்டிச்சே. அதோட ஒரு சிரிப்பு. அப்றம் பாத்தா… ரெண்டையுமே காணல.

லெசான உதறல். வெளிய குளிர் சாஸ்தியாயிட்டதா பயம் சாஸ்தியா ? அட ரெண்டுஞ் சேந்துதான். நடை நின்னு போச்சில்ல தன்னால. இப்டி மேல மேல போகப்டாது. டேஞ்சர்.

அவன் நிற்க முடிவெடுத்த கணம் திரும்ப அந்த மின்னல் வெட்டு. வெளிச்சப் பொட்டு. ஒற்றை நரைமுடியாட்டம் கதிர்வீச்சு. கண்ணே கூசுது. அவன் எதிர்பார்த்தான். அப்டியே கேட்டது- அந்தச் சிரிப்பு. பொம்பளையாள்த்தான். யாரோ சிரிக்கறங்கடோய். சிரிப்பே அத்தனை அழகுன்னா ஆள் எப்பிடியோ ? குரல் கேட்குது. ஆள்த் தெரியல்ல. மனசில் ஒரு திடுக். இந்த ராத்திரில இந்த நடுவாந்தரத்தில பொம்பளையாளுக்கு என்ன வேலை ?

எவளாச்சும் கிறுக்குச் சனியனா யிருக்குமா ? அட முள்ளுக்காட்டுப் பக்கம் ஒதுங்க கிதுங்க வந்தாளா வயத்துவலிக்காரி ? சரி அப்டின்னா முனகல் சத்தம் கேட்டா அது சரி. சிரிப்பு ? அப்பறம் அவன் கண்ணுல வெட்டிச்சே அந்த மினுமினுப்பு ?

ஹா இது… இது மோகினிப் பிசாசுல்லா… என நினைக்கத் துாக்கிவாரிப் போட்டுது. கால் வெடவெடங்குது. குப்புனு அந்தாக்ல முள்ளுச்செடியில் விழுந்தாப்ல அப்பிச்சிப் பார் வியர்வை. சரி ஓடிறலாம்னா… பெரிய சண்டியராட்டம் மனசு மறிச்சது. எலேய் ம்பளையாடா நீ ? நெஞ்சுக்கூட்டுல மயிர்கெடக்கிற ஆம்பிளையா ?

மிரளாதே எதைக் கண்டாலும். சிரிப்புமில்லை சுண்ணாம்புமில்லை அது உன் கற்பனை. பொம்பளை வாசனை கேட்குதப்போவ் உனக்கு. அதான் விசயம். பொம்பளை சிரிச்சா, கிட்டவந்து அப்டி நெஞ்சோட சாச்சிக்கிட்டே மேலயும் கீழயும் அவ தடவிக்குடுத்தா வேணான்னா கெடக்கு ? எந்த ஆம்பளை வேணான்னுவான். அவனவன் தவிக்கிறான்யா அதுக்காக. பொம்பளைருசி தெரியாத மனுசாள் உண்டா ? அட கெடைக்காதவன்தான் ஏங்குறான்னு பாத்தா கெடைச்சவன் அதைவிடத் துடிக்கிறானப்பா…

இரு. இரு. மின்னல் போல் ஒரு அடி. கண்ல தட்டிச்சில்ல அது என்ன ? பயப்படாம யோசி. தரையில் என்னவோ கெடந்திருக்கணும். எதோ ஒரு திசையில் இருந்து ஒரு ஒற்றைக் கோணத்தில் வந்த வெளிச்சம் தரையில் கிடந்த ஜாமானில் பட்டு பெரும் பிரதிபலிப்பா கண்ணை அடிச்சிட்டதப்பா. கண்ணாடிச் சில்லு காலைக் குத்தினாப்ல வெளிச்சக் கிரணம் கண்ணையேல்ல முள்ளாக் குத்திட்டது. சில சமயம் புருவக்காட்டில் தனிமயிர் ஒற்றைமயிர் மாத்திரம் கரப்பான்பூச்சிக்குப் போல வளந்து நெளியும்ல அதைப்போல. வெளிச்சமுள். குபீர்னு வளர்ந்திட்டது. கண்குத்திப் பாம்பு மாதிரி… எதிலிருந்தோ வெளிச்சம் முட்டித் திரும்பி… போலிஸ்காரன் மறிச்சி போக்குவரத்தைத் திருப்பி விட்டாப்ல வழி திரும்பிட்டது ஒளி. அதான் விசயம். அதுக்குப்போயி மக்கா மிரண்டுட்டியே ஒரு நிமிசம். சிரிப்பு வந்தது. அந்த முகூர்த்தத்தில் அந்தக் கோட்டுப்பாதையில் கண்ணில் அறைந்த கதிர்… கால் தாண்டுகையில் நுால் பிசகி பார்வையை விட்டு விலகிட்டது. சமாச்சாரம் அவ்ளதான். சூப்பர்!

அந்தப் பொருள் ஒரு துட்டு-நாணயமாய் இருக்கலாம். எவனோ பாக்கெட் கிழிஞ்சபய போட்டுட்டுப் போயிருக்கலாம். எத்தனை தரம் துட்டெடுத்திருக்கிறான் தரைலேர்ந்து… தனுஷ்கோடிக்கு உற்சாகம் மீண்டது. அட கோட்டிக்கார கேணயா, மொதல்ல உன் சட்டைப்பை கிழிஞ்சிருக்கா பார்… தொட்டுப் பார்த்தா பையே கிடையாது சட்டையில்.

தனுஷ்கோடி சற்று திரும்பி வந்து பார்க்கிறான். தரையில் தேடிய சிற்றுலா. தானியம் காயப்போட்டுப் பரசி விட்டாப்ல ஒரு நடை இங்கிட்டும் அங்கிட்டுமா. அட திரும்பவும் க்ளுக்கென்ற சிரிப்பு. ஒரே துள்ளலில் உள்நரம்பு சிலிர்த்தது. எவளோ பார்க்கிறாள். வேடிக்கை பார்த்துச் சிரிக்கிறாள். ‘ ‘யாரது ? ‘ ‘ என்று கத்த நினைத்தான் தனுஷ்கோடி. சத்தம் வரவேயில்லை. கீச்சென்று கார் பிரேக்கடிச்சாப்ல வேறென்னவோ சத்தம் வாய்லேர்ந்து. பயமில்லைன்னு சொன்னாப்ல ஆச்சா ? உயிர்க்குலை வேம்பு-உச்சிபோல காத்துக்கு நடுங்குதேய்யா. உள் உறுப்புங்கல்லாம் அந்தாக்ல கீழயும் மேலயுமா கழண்டு கலகலத்துப் போச்சு. மூத்திரம் வேற ஒரு சொட்டு கொட்டிட்டது. அடிவயித்துக் குளிர். நுரையீரல் வலிக்கிறது. உள்ளே குளிர். வெளியே வியர்வை… என்ன விநோதக் கலவை. ஓடிர்லாமா ?… என நினைத்த கணம்

ஆகா அந்த கண்ணைக் குத்தும் வெளிச்சம். அந்தத் தரை பின்னே இல்லை. அவன் முன்னே அதோ அங்கே. சட்டுனு ஒரு கண்குத்து. அப்றம் இருள். தனுஷ்கோடிக்கு அந்த விளையாட்டின் சுவாரஸ்யம் தாளவில்லை. அப்டியே நின்னு சரியான கோணத்தில் அந்த வெளிச்ச வெட்டை திரும்ப கண்வரை கொணர முயற்சி செய்தான். கழுத்தை இப்படி அப்படி ஆட்டி வளைச்சி இருட்டில் துழாவ… க்ளுக்கென மறுபடி அசரீரி சிரித்தது.

‘ ‘எவடி அவ ? ‘ ‘ என்றான் சற்று அதட்டலாய். குரல் கொஞ்சம் தேறி பதப்பட்டு வந்தது. ஏட்டி எளவெடுத்த சிறுக்கி… என்கிட்ட மாட்டினே இடுப்பக் கழட்டிருவேன். நான் ஆம்பிள்ளைச் சிங்கம்.

சிங்கமாவது சிங்கிணியாவது போடாங்… நடுராத்திரில கண்ட சத்தத்துக்கு ஆரு மோரு-ன்னு கத்தி வெலவெலத்துக்கிட்டுக் கெடக்க. உனக்கு வீரப் பிரதாபம் வேற. தரைல கெடக்க வஸ்து என்னன்னு தெரியல. அதைக் கண்டுபிடிக்க முடியல்ல. தொடைதட்டி வீரத்துள்ளல். தொடைதட்டியாடா நீ… முட்டிதட்டிக் கழுதை. எலேய் வீர மஹாப் புருஷா, ஒரு தெருநாய் வந்தா உன்னால எதித்து நிக்கத் திராணி உண்டா ?

சற்று தள்ளி தரையில் அதே அந்த வெளிச்சம். அது நாணயம் அல்ல. பளிங்கு. ஒரு மைக்கா போல…. காக்காப்பொன் போல… கண்ணாடிச்சில்லு போல… விசயம் துப்புரவா விளங்கிட்டது. அது மோகினிப் பிசாசின் வேலைதான். தரையில் பளிங்கைக் காட்டிக் காட்டி சைகாட்டி மெதுவா அதை நகர்த்தி நகர்த்தி அவனைக் கூட அழைத்துப் போகிறது மோகினிப் பிசாசு. என்ன வசீகரச் சிரிப்பு.

அந்தாக்ல எபவ்ட்-டர்ன்… ஒற்றை ஓட்டத்தில் வீட்டைப் பார்க்கப் பர்றந்தன கால்கள்… என்ற அளவில் கனவு கலைந்து முழிப்பு வந்து விட்டது. வெளியே வெளிச்சம். கண்ணைக் குத்திக் கிழிக்கும் வெளிச்சம். கண்கள் சிவந்து எரிந்தன.

– தானறியாத உடலசதி. மன இரைச்சல். ஆளை அயர்த்திக் குழப்பியிருக்கலாம். வேலைக்கு நேரமாகி விட்டது. இனி குளிக்கவும் நேரங் கிடையாது. நகரத்தில் நேரம் இருந்தாலும் பாதிநாள் குளிக்கத் தண்ணி கிடையாதுன்னு விட்டுர்றதுதான்னு வெய்யி… தனுஷ்கோடி அவசரமாய்ப் படுக்கையில் இருந்து எழுந்துகொண்டான்.

/தொ ட ரு ம்/

—-

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்