திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -7)

This entry is part of 44 in the series 20040115_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-

மூன்றாம் பகுதி – தொடர்ச்சி

—-

தனுவுக்கு ஓய்வுநேரம் என்பது கூட அங்கே மறுக்கப் பட்டது. பெரிய புண்ணியவான் போல மதியச் சாப்பாட்டுக்குப் பொட்டலம்

வரவழைத்துத் தந்து விடுகிறார் முதலாளி. இவன் வெளியே என்று சாப்பிடப் போனால் வர ஆகும் தாமதம்… அதுவரை அச்சகம் நிர்வகிக்க ஆளின்றி மெளனமாய் மூடப்பட்ட-நிலை எய்திவிடும். அந்நேரம் வரும் அச்சு-வாய்ப்புகள் இழக்கப்பட்டு விடும் என அவர்கணக்கை அவன் அறிவான்.

வேலை சற்று நெகிழ்ந்த காலங்களில்தான் அவர்கள் /ஒண்ணு முதல் ரெண்டுவரை/ பொட்டலம் பிரித்துச் சாப்பிட்டபின் பேச, சற்று ஆசுவாசமாய்ச் சிரிக்க முடியும். அப்போதுங்கூட அவசர அச்சக வேலை என்று சாப்பாடு பிந்திப் போகக் கூடும்.

காசு காசு என்று அலைந்து அவர் முகமே சதா இறுகிக் கிடந்தது. சிடுசிடுப்பான முகம். அதிகார பாவனையுடனான வார்த்தை யெடுப்புகள். உலகம் என்பது துட்டுநாணயத்தில் இருப்பதான அவரது நம்பிக்கை அவனுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது… துட்டு நாணயம் என்பது மூன்றாவது பரிமாணம் குறுகிய வஸ்து. உலகமோ முப்பரிமாண பிரம்மாண்டம் அல்லவா ?!…

ஆகவேதான்… இதை உணராததால்தான்… சதா திருப்தியற்று மனஉளைச்சலும் அலைச்சலுமாய் இருந்தார். வெளியே கிளம்பும்போது வண்டியில் பெட்ரோல் இல்லை என்றால்கூட அவரால் தாள முடியவில்லை. நேற்றே அவரேதான் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். மறந்தது அவர்தான்… இதற்கு அவர் யாரைக் குறை சொல்ல முடியும் ? இதில் ரெளத்திரப்பட உள்ச்சூடேற என்ன அவசியம். பிரச்னையை மெளனமாய்ச் சந்திக்க வேண்டியதுதான்…

இப்படி உழன்று கொண்டிருப்பதால்தான் முதலாளிகளுக்குப் புதுப்புது வியாதிகள் அறிமுகம் ஆகின்றன போலும்! இரத்த அழுத்தம், இதயநோய், சர்க்கரை நோய்…

வெயில் வெளியே படுபோடு போடுகிறது. ரிக்ஷாவின் டங்டங்கென்ற இரும்புச் சத்த அழைப்பு கேட்டு தனு எழுந்து உடம்பை நீட்டி வெளியே எட்டிப் பார்த்தான். வடிவேலு காகித ரீம் கொண்டு வந்திருந்தான். கூட அவற்றை இறக்கி வைக்க ஆள் கூப்பிடுகிறான். அவனும் மிஷின்மேன் ரவியுமாய்ப் போய் பண்டில் – bundle – இறக்குகிறார்கள். வடிவேலு அஜித் ரசிகன். ரவி விஜய் ரசிகன். இருவரும் சுவாரஸ்யமாய் எதிர்க்கட்சி கட்டி வார்த்தையில் ஊடல் செய்து கொள்வார்கள். காலகாலத்துக்கும் இந்த ரசிக ஊடல் ஓயாது என்றிருந்தது. சிவாஜி எம்ஜியார் ஒரு காலம் என்றால்… ரஜினி கமல் என்று பிறகு வந்தது… இப்போது அரும்புமீசையளவில் புதிய ரசிகமோதல் அலை… மாதவன்- அஜித்- பிரபுதேவா- விஜய் – யார் ரெண்டுபேர் முன்னணியில் கட்சி-அரசியல் என சினிமா-அரசியல் உலா வருவார்கள்… இன்னும் உருவலுப் பெறவில்லை.

‘இன்னா ரவி ஒரு டா கீ கவனிப்பில்லையா ? ‘ என்கிறான் வடிவேலு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே. ‘என்னாத்த… நீ வெளிய இறங்கினாக் காசு. வெயிலுக்கு மழைக்கு அதிகப்படி வருமானம். தினத்துட்டு பார்ட்டி… நாங்க மாசத்துட்டுக் காரங்கல்லப்பா… நீதான் வாங்கித் தரணும் ‘ என்கிறான் ரவி.

‘உங்க தலைவர்படம் ஊத்திக்கிச்சு போலுக்கே… ‘

‘எவஞ் சொன்னது. அட போப்பா… நம்ப சிட்டிய வெச்சி கணக்கு சொல்லப்டாது. சி சென்டர்ல ‘டாக் ‘ நல்லாயிருக்கு. படமே சி படம்தானே ? ‘ பெரிய திரைப்பட நிபுணன் போல வடிவேலு பாவனை கொண்டாடியதும் அலசியதும் ஆங்கிலம் தொட்டுக் கொள்வதும் தனுவுக்குச் சிரிப்பை வரவழைத்தது.

கடினமான உடல் உழைப்பு கழிந்த நாட்களின் மீதிப் பொழுதுகளில் அவர்கள் சாராயக் கடைகளையும் திரைப்பட வளாகங்களையும் மன ஒத்தடங்களுக்கான ஆசுவாச ஒதுங்கிடமாக உணர்கிறர்கள். இவர்கள் பார்வையில் இவர்களின் பாத்திரத்தையே இலட்சிய அவதாரமாக்கிக் காட்டும் திரைப்படப் போலியுலகம் அவர்களை எப்படி ஈர்த்து விடுகிறது…

Other Gods – என்கிறாள் அமெரிக்க நாவலாசிரியை பேர்ல் எஸ். பக். உண்மையான நாயக நாயகிகளை வெகுஜனங்கள் ஏனோ ஆர்வப்பட்டு வரவேற்பதில்லை. சற்று மிகைப்படுத்தப்பட்ட பாவனைகளையே அவர்கள் வழிபட பாராட்ட விரும்புகிறார்கள்.

விளையாட்டாய்ப் பேசினாப்போல இருந்தாலும் ரவியும் வடிவேலுமாய் எதிர்க்கடையில் டா அருந்தியாகிறது. துட்டுச்செலவு யாரிதாய் அமைந்தால் என்ன ? ஒருநாள் இவன்- ஒருநாள் அவன்… என்கிற நடைமுறை சகஜம் அது.

நான் முதலாளியும் அல்ல. தொழிலாளியும் அல்ல. ரெண்டுங் கெட்ட ஜாதி… ஆகவே இருவருக்கும் வேண்டாதவன்! ஒதுக்கப் படுகிறவனாகிறேன். இருபாலருமே என்னை நம்பியும் என்னை சந்தேகித்தும் அல்லவா இயங்குகிறார்கள்…

நான் இருதலைக் கொள்ளி எறும்பு என மாட்டிக் கொண்டவன். நின்றபடி அச்சடிக்கிற ரவி. நாற்காலியில் அமர்ந்தபடி துட்டெண்ணுகிற முதலாளி… நான் நாற்காலியில் என்றாலும் மாசக்கூலிக்கு மாரடிக்கிறேன்.

பெரியவர் ஒருவர் உள்ளே வருகிறார். குடையடியிலேயே வெயிலைத் தாக்கு பிடிக்க முடியாமல் பஞ்சராகிய வெடித்த மூச்சுகளுடன் நுழைந்து, அவனைப் பார்த்ததுமே ‘முதலாளி இல்லியா ? ‘ என விசாரிக்கிறார்… என்னவோ முதலாளி பஞ்சர் போடப் போகிறாப்போல.

‘சொல்லுங்க… ‘

‘புத்தகம் ஒண்ணு அடிக்கணும்… ‘

‘என்ன புத்தகம் ? ‘

‘பக்தி ‘

அப்டிப் போட்டுத் தாக்கு… தாத்தோவ். நல்ல போணியாகிற சரக்குதான். நாட்களின் நெருக்கடியில் இன்றைய சூழலில் அதிகப்படி விற்பனை பக்திப் புத்தகங்களுக்குதான். பிரச்னைகளின் உக்கிரப் பிடியில் கெடுபிடியில்… மூத்த ஜனங்கள் மிரண்டிருக்கிறார்கள்…

கிரெடிட் கார்டுக் கடன்கள் பயமுறுத்துகின்றன. குடும்பத்தின் அன்றாடப் பாடுகள் திகிலுாட்டுகின்றன. குழந்தைகளை ஏராளமாய்த் துட்டு கட்டி படிக்க வைத்தாலும் வேலை கிடைப்பதாய் இல்லை. அவர்கள் எதிர்காலம் பயமுறுத்துகிறது. வீட்டில் இருக்கிற இளமை… தறிகெட்டு, நம்பிக்கை அடிபட்டு, மனச்சிதைவுக்கு ஆளாகக் கூடும். தவறான வழிகளில் போகக் கூடும். நடத்தை திரிந்துபோகக் கூடும்… என அவர்களுக்குக் கலவரமாய் இருக்கிறது.

இந்நிலையில் எல்லா சஞ்சிகைகளுமே பக்தியில் கவனம் செலுத்துவதும், புத்தாண்டு பலன்கள் பரிகாரங்களுடன்… என இணைப்புகள் வெளியிடுவதும் இன்றைய காலகட்டமாய் இருக்கிறது. புத்தாண்டு யாருக்குமே நல்லாண்டாக அமையாதா என்ன ? எல்லா ராசிகளுக்குமே… பரிகாரம் என்று போடுகிறார்களே ?

‘உள்ள வாங்க… ‘ என்கிறான். தன் எதிர் இடத்தில் மடக்கு-நாற்காலியை எடுத்துவந்து விரித்து அவர் உட்கார போடுகிறான்.

‘என்ன புத்தகம்ங்க… ‘

‘ஸ்ரீ அரவிந்த அன்னை பத்தி… ‘ என்கிறார் பெரியவர்

—-

/தொ ட ரு ம்/

sankarfam@vsnl.net

Series Navigation