தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
Lincoln Memorial
Washington D.C.
( Last Image 10)
ஓ காப்டன் ! என் காப்டன் !
ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் !
கப்பல் தளங்கள் தப்பின புயற்காலத்தில் !
தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு !
அருகில் துறைமுகம், ஆலய மணி கேட்கும் !
வெற்றி விழாக் கொண் டாடுவர் மக்கள் !
ஓ நெஞ்சே ! நெஞ்சே ! நெஞ்சே !
ஓடுது செந்நிற இரத்தத் துளிகள் !
கப்பல் தளத்தில் சில்லிட்டுக் கிடக்குது
காப்டனின் செத்த உடல் சாய்ந்து !
வால்ட் விட்மன் (Walt Whitman) (1819-1892)
(புல்லின் இலைகள்)
+++++++++++++
புயல் அடித்தது இரவிலே !
ரோஜா இழக்கும் தன் பெருமை !
மழைத்துளி பொழியும் !
வேனிற் காலப் பரிதியின்
ஒளிச்சுடர் மங்கும் !
பனித்துளி கழுவின மலர்க் குமிழை !
நன்றியும் புகழ்ச்சியும்
நம் குருதியில் கலந்திடும்
நறுமண ரோஜா மலராய் !
ஜான் டிரிங்க்வாட்டர், நாடக ஆசிரியர்
+++++++
Fig. 1
Ford Theatre Washington D.C.
“நான் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவன் அல்லன் ! புனிதக் கடவுளே எனக்குதவி செய் ! என் வாழ்வும், வளமும் ஆத்மாவும் தென்னவர்க்கே உரியது ! இந்த தேசம் வெள்ளைக்காரருக்காக உண்டாக்கப் பட்டது, கறுப்பனுக்காக இல்லை ! ஆ·பிரிக்கன் அடிமைத்தனத்தை நமது உன்னத வேளாண்மைக்காரர் அரசியல் கோட்பாட்டுக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அது கடவுள் தன்னருமைத் தேசத்துக்கு அளித்த மாபெரும் கொடைகளில் ஒன்றாகக் கருதுவேன்.”
ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) (1864)
“யாங்க்கி ஏதேட்சை அதிகாரத்தில் இனங்கள் கலப்பாகி வெள்ளை அமெரிக்கா மானமிழந்து மூழ்கிப் போவதை விட லிங்கன் செத்து ஒழிவது மேலானது ! நமது இன்னல்கள் எல்லாவற்றுக்கும் காரணமானர் அவர்தான் ! கடவுள் அவரைத் தண்டிக்கவே என்னைக் கருவியாக்கி யுள்ளார்.”
ஜான் வில்கிஸ் பூத்.
+++++++++++
Fig. 2
Lincoln Private Box
உள்நாட்டுப் போரில் வெற்றி
காட்சி -6
(இறுதிக் காட்சி)
(ஏப்ரல் 14 1865)
(மூலத்திலிருந்து மாற்றி எழுதப்பட்டது)
பங்கெடுப்போர் : ஆப்ரஹாம் லிங்கன், எட்வின் ஸ்டான்டன் (Secretary of War), மேரி லிங்கன், மிஸ் கிளாரா ஹாரிஸ், மேஜர் ஹென்றி ராத்போன், ஜான் வில்கிஸ் பூத்.
இடம் : ·போர்டு தியேட்டர், வாஷிங்டன் D.C.
இப்போதைய காட்சி: ·போர்டு நாடக அரங்கில் உயர் மட்டத்தில் இருக்கும் பால்கனிப் பெட்டி அறைகள். ஒன்றில் ஆப்ரஹாம் லிங்கனும் மிஸிஸ் லிங்கனும் அமரப் போகிறார். எட்வின் ஸ்டான்டன் மற்றும் மிஸ் கிளாரா ஹாரிஸ், ஹென்றி ராத்போன் அதே பெட்டி அறையில் இருக்கிறார். சுமார் 1000 பேர் நாடகக் கொட்டகையில் அமர்ந்து நாடகம் பார்க்கிறார்கள். நடக்கும் நாடகம் : நமது அமெரிக்கப் பங்காளி (Our American Cousin). நாடகம் நடக்க ஆரம்பித்து விட்டது.
நேரம்: இரவு வேளை. (8:15 PM)
Fig. 3
Lincoln Assassination
In His Private Box
தியேட்டர்
நாடக மேடையில் நிஜ நாடகம் !
மிஸ் கிளாரா ஹாரிஸ்: இன்று புனித வெள்ளிக்கிழமை (Good Friday). ஏசு நாதரைச் சிலுவையில் அறைந்த நாள் ! பிரசிடென்ட் லிங்கன் இன்று நாடகம் பார்க்க வருவதாகக் கேள்விப் பட்டேன். நாடகம் ஆரம்பித்து விட்டது ! இன்னும் அவர் ஏன் வரவில்லை ! நாடக அரங்கில் இன்று கூட்டம் அதிகம் !
ஹென்றி ராத்போன்: ஆமாம் ! போர் முடிந்து விட்டது ! பொழுது போக்கத் திரளாக மக்கள் வந்ததில் ஆச்சரிய மில்லை ! ஏன் தாமதம் தெரியவில்லை ! நிச்சயம் இன்று நாடகம் பார்க்க வருவதாக லிங்கன் என்னிடம் சொன்னார்.
(அப்போது கீழ்த் தளத்தில் தொப்பியால் முகத்தை மறைத்துக் கொண்டு ஒருவன் அங்கும் இங்கும் அலைகிறான். அவன் ஜான் வில்கிஸ் பூத் எனப்படும் நாடக நடிகன். பெண்டிரை மயக்கும் வசீகர குணம் பெற்றவன்)
ஜான் வில்கிஸ் பூத்: (கடுகடு முகத்துடன்) இன்றே இறுதிக் காட்சி ! அது எனக்குத் தெரியும் !
Fig. 3A
Booth Running away after
Assassinating
Lincoln
நாடக பணியாளி: (சிரித்துக் கொண்டு) நீ நடிகன். உனக்கு டிக்கட் தேவையில்லை ! நீ எங்கும் போகலாம். ஆமாம் உனக்கென்ன தெரியும் ?
வில்கிஸ் பூத்: இன்று லிங்கன் நாடக பார்க்க இங்கு வருகிறார் என்று காலையில் கேள்விப் பாட்டேன் ! வெற்றி பெற்ற அவருக்கு நேராக நானொரு வெகுமதி கொடுக்கப் போகிறேன் ! இந்த தினத்துக்காக நான் வெகு நாட்கள் காத்திருந்தேன்.
நாடக பணியாளி: நீ அதிஷ்டசாலி ! நேராகப் பார்க்கும் யோகம் யாருக்குக் கிடைக்கும் ? ஆமாம் என்ன வெகுமதி அளிக்கப் போகிறாய் ?
வில்கிஸ் பூத்: அது ரகசியம் ! அவரது இடம் எதுவெனத் தெரியுமா ?
நாடகப் பணியாளி: (மேல் மட்ட பால்கனிப் பெட்டியைக் காட்டி) அதோ அந்த அலங்கார முதல் பெட்டிதான் பிரசிடென்டுக்காக சுத்தமாக்கப் பட்டுள்ளது. அமெரிக்கக் கொடியும் தொங்குகிறது பார் !
வில்கிஸ் பூத்: நன்றி ! நான் போகிறேன் ! என் வேலை இன்று முடிந்தாக வேண்டும் ! இந்த வாய்ப்பு இனி கிடைக்கா தெனக்கு ! (திடீரெனக் கூட்டத்தில் புகுந்து மறைகிறான்)
Fig. 4
Lincoln on Death Bed
(April 14, 1865)
(கூட்டத்தில் திடீரெனப் பரபரப்பு ! ஒருத்தி “அதோ பிரசிடென்ட் லிங்கன்” என்று எழுந்து கத்துகிறாள். நாடக அரங்குக்குள் மேரி லிங்கனுடன் காவலர் சூழ ஆப்ரஹாம் லிங்கன் வருகிறார். எல்லாம் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். சிலர் “நீடு வாழ்க லிங்கன்” என்று கூட்டத்தில் கத்துகிறார் ! “ஒழியப் போகிறாய் நீ” என்று வில்கிஸ் பூத் முணு முணுக்கிறான். கூட்டத்தில் பாராட்டு ஆரவாரம் பன்மடங்கு பெருகுகிறது)
ஆப்ரஹாம் லிங்கன்: (படிமேல் நின்று கொண்டு, பரவசமாய்) என்னருமை அமெரிக்க மக்களே ! உங்கள் பரிவான பாராட்டு என்¨னைப் பரவசப் படுத்துகிறது ! உங்கள் பாசம் என் நெஞ்சில் ஆழ்ந்து பதிகிறது ! இருள் மண்டிய நான்கு கடுமையான ஆண்டுகள் போராடி நாம் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். ஜெனரல் ராபர்ட் லீ நமது ஜெனரல் யுலிஸிஸ் கிராண்டிடம் சரணடைந்து இன்று நான்காம் நாள் ! இன்னும் ஒரே ஒரு தளத்தில் சிறு போர் நடந்து வருகிறது. ! அதுவும் சீக்கிரம் நிற்கும் நிச்சயம் ! நமக்கு முழு வெற்றி கிடைப்பது நிச்சயம் ! (மக்களின் ஆரவாரக் கைதட்டல்). பல்லாயிரக் கணக்கான போர் வீரர்களைப் பலி கொடுத்துப் பிரிந்த மாநிலங்களை மீண்டும் இணைத்தோம் ! தென்னவர் நமக்குப் பகைவர் அல்லர் ! சண்டை செய்தாலும் நமக்கவர் சகோதரர்கள் ! (மக்களின் ஆரவாரக் கைதட்டல்). இந்த நேரம் நான் சொல்ல வேண்டியது அதிகமில்லை ! நாட்டின் கொந்தளிப்பை யெல்லாம் நான் கட்டுப்படுத்தி விட்டேன் என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது ! கொந்தளிப்புகள்தான் இப்போது என்னைக் கட்டுப்பாடு செய்கின்றன ! அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் கண்முன் வரும்போது நான் ஒரே நம்பிக்கையில் நிமிர்ந்து நிற்கிறேன் ! நாம் நமது அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றி விட்டோம் ! அந்தக் குறிக்கோளில் எனக்கு அசையாத நம்பிக்கை ! மேலும் ஒரு மாபெரும் மனிதத் தவறை நமது மாநிலங்களில் நீக்கப் போகிறோம் ! (மக்களின் பலத்த ஆரவாரக் கைதட்டல்). அந்த மகத்தான பணிக்கு என்னை பங்கேற்க வைத்த கடவுளுக்கு நான் பல்லாயிரம் முறை நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். (மக்களின் பலத்த ஆரவாரக் கைதட்டல்).
(நடந்து கொண்டிக்கும் நாடக அரங்கத்தில் உள்ள நடிகரும் நாடக உரையாடலை நிறுத்தி லிங்கன் பேருரைக் கேட்டுக் கைதட்டுகிறார். நாடகம் முடியும் தருவாய். “இதுதான் கடைசி காட்சி” என்று ஓர் அறிவிப்பு மேடையில் கேட்கிறது ! ஆப்ரஹான் லிங்கனும் மேரி லிங்கனும் காவலர் சூழப் படியேறித் தமது பால்கனியில் அமர்கிறார். கடைசிக் காட்சி துவங்கிறது. சில நிமிடங்கள் கழித்து ஒரு காவலன் கழிப்பறைக்குச் செல்வதைக் கவனிக்கிறான் வில்கிஸ் பூத். அடுத்த காவலனிடம் தன் பெயர் அறிவிப்பு வில்லையைக் காட்டி, பிரசிடெண்ட் தன்னைக் காண வரச் சொன்னதாகப் பொய் சொல்லிச் சட்டென லிங்கன் இருக்கும் பெட்டிக்குள் நுழைகிறான். துப்பாக்கியை விரைவாக எடுத்து லிங்கனைக் குறிவைத்துத் தலையில் சுடுகிறான். லிங்கன் சத்தமின்றி முன்னே கவிழ்ந்து விழுகிறார். குருதி குப்பெனச் சிந்துகிறது ! மேரி லிங்கன் கணவர் முன் மண்டி யிட்டு அழுகிறார். வில்கிஸ் பூத் பெட்டியிருந்து முன்னே தாவி நாடக மேடையில் குதித்து காலில் காயப் பட்டு நொண்டி நொண்டி திரைக்குப் பின்னால் ஓடுகிறான். நாடக நடிகர்கள் ஒன்றும் புரியாது விழிக்கிறார் !)
Fig. 5
Lincoln Casket
கூட்டத்தில் ஒருவர்: (துப்பாக்கிச் சத்தம் கேட்டு) லிங்கன் சுடப்பட்டார் ! அதோ கொலைகாரன் ! பிடியுங்கள் ! பிடியுங்கள் ! கொல்லுங்கள் அவனை அதோ ஓடுகிறான் !
(கீழே மக்கள் பீதி அடைந்து ஓடுகிறார் ! சிலர் வில்கிஸ் பூத்தை விரட்டிக் கொண்டு ஓடுகிறார்.
நாடகம் தடைப்பட்டு நடிகரும் பயந்து ஓடுகிறார். நாடக அரங்கில் பெரும் கொந்தளிப்பு)
மிஸ் கிளாரா: டாக்டர் இருந்தால் வாருங்கள் பால்கனிக்கு ! (இரண்டு டாக்டர்கள் மேலே ஓடி வருகிறார்.) பிரசிடெண்டைக் காப்பாற்றுங்கள் ! (லிங்கன் பேச்சு மூச்சில்லாமல் தரையில் கிடக்கிறார் ! ஒருவர் தலையணை ஒன்றைக் குருதி சிந்தும் கழுத்தடியில் வைக்கிறார். குருதி பொங்கி ஓடுகிறது.)
கூட்டத்தில் பலர்: தூக்கில் இடுங்கள் துரோகியை ! கொளுத்துங்கள் தியேட்டரை ! எரியட்டும் நாடகக் கொட்டம் !
எட்வின் ஸ்டான்டன்: (கண்ணீர் பொங்க) மகத்தான கீர்த்தி பெற்றார் ! புவிக்குள்ளே முதன்மை யுற்றார் ! பணியை முடித்ததும் பாரை விட்டு நீங்குகிறார் ! விடை பெறாமல் விடை பெறுகிறார் !
(மேரி லிங்கன் கதறிக் கதறி அழுகிறார்.)
++++++++++++++++++++
Fig. 6
Jon Wilkes Booth & His Pistol
His Escape Route
முடிவுரை:
ஆப்ரஹாம் லிங்கன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர். அவரது காலத்தில் அமெரிக்காவின் தென்புறத்து மாநிலங்களில் செல்வந்தர் நில புலங்களில் அடிமைகளாய்ப் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் (நீக்ரோ) நசுக்கப்பட்டுச் சமத்துவ நிலை அடையாது இன்னலுற்று வந்தார். அவரது அடிமை வாழ்வை ஒழித்திடக் கொதித்தெழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போரில் இறங்கி (American Civil War) சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டிய தாயிற்று.
வடபுறத்து மாநிலங்களும் தென்புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் இருபுறத்திலும் அநேகர் காயமுற்றுச் செத்து மடிந்தாலும், முடிவில் ஆப்ரஹாம் லிங்கனின் வடபுறத்து மாந்தரே வெற்றி பெற்றனர். பிரிந்து போன வடக்குத் தெற்கு மாநிலங்களை மீண்டும் ஒன்று சேர்த்து அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றிய பெருமை ஆப்ரஹாம் லிங்கனுக்கே சார்ந்தது. அத்துடன் அடிமை வாழ்வொழித்த அத்தகைய மகத்தான போராட்டத்தில் வெற்றி பெற்ற ஐந்து நாட்களில் வாஷிங்டன் தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது தென்மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் இரண்டாம் முறை ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் சுடப்பட்டு அமரரானார்.
Fig. 7
Lincoln Body at the
White House
ஆப்ரஹாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார். அவரது தாயார் நான்சி ஹாங்க்ஸ், லிங்கன் ஒன்பது வயதாகும் போது காலமாகி விட்டார். தச்சு மரவேலை செய்த தந்தையார் தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றாந் தாய் லிங்கனைப் பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். தனது 23 ஆவது வயதில் முதன்முதல் ஆப்ரஹாம் லிங்கன் “பிளாக் காக் போரில்” (Black Hawk War) கலந்து காப்டனாகப் பணியாற்றியது அவருக்குப் புதியதோர் பாதையைக் காட்டியது.
1834 இல் ஆப்ரஹாம் லிங்கன் இல்லினாய்ஸ் மாநில மக்கள் மன்றத்தில் கீழ் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் அரசாங்கப் பணியில் வேலை செய்தார். லிங்கன் தனது 33 ஆவது வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) என்னும் மாதை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. 1847 -1849 ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தவணைப் பணிபுரிந்தார்.
Fig. 8
Lincoln Funeral Procession
1860 இல் ரிப்பபிலிகன் நியமிப்பாளியாகி ஜனாதிபதித் தேர்வில் வெற்றி பெற்று 1861 மார்ச்சில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். லிங்கன் பதவி ஏற்புக்குச் சில மாதங்கள் முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து (Union) தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் ஏழு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றன ! அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது !
அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”
Fig. 9
Lincoln Sculpture
At South Dakota
1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். உள்நாட்டுப் போரால் 630,000 பேர் இருபுறமும் பலியானார் என்று அறியப்படுகிறது. அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த நான்காம் நாள், ஆப்ரஹாம் லிங்கன் வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத்தால் (John Wilkes Booth) சுடப்பட்டு அடுத்த நாள் மரித்தார். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !
++++++++++++
பின்னுரை:
ஆப்ரஹாம் லிங்கன் புனித வெள்ளிக் கிழமை (ஏப்ரல் 13, 1865) ·போர்டு தியேட்டரில் இரவில் சுடப்பட்டு மறுநாள் காலை 7:22 மணிக்குக் காலமானார். பிறகு லிங்கனின் சடலம் பெட்டியில் இடப்பட்டு பல இடங்களுக்கு இரயில் பயணத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. சென்ற இட மெல்லாம் அமெரிக்க மக்கள் திரள் திரளாய் வந்து கண்ணீர் சிந்தி வருந்தினார். மே 4, 1865 ஸ்பிரிங் ·பீல்டு, இல்லினாய்ஸ், ஓக் ரிட்ஜ் அடக்கத் தளத்தில் லிங்கன் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கொலைகாரன் வில்கிஸ் பூத் தேடப்பட்டு ஏப்ரல் 26 1865 ஆம் தேதி காவலரால் சுட்டுக் கொல்லப் பட்டான். மற்றும் கொலைச் சதியில் பங்கெடுத்த நால்வருக்கு விசாரணை நடந்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
(நாடகம் முற்றிற்று)
***************************
தகவல்
Based on The Play :
Abraham Lincoln – Play By : British Playwright John Drinkwater (1882), School Edition
The Copp Clark Company Ltd, Toronto, Canada (1927)
1. Biography of Abraham Lincoln (www.whitehouse.gov/history/presidents/al16.html
2. Chambers Encyclopedia (1968 Edition)
3. Encyclopaedia Britannica (1973 Edition)
4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)
5. Britannica Concise Encyclopedia (2003 Edition)
6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)
6 (a) The Great Quotations Compiled By : George Seldes (1967)
7. The Wordsworth Dictionary of Quotations (1997)
8 The Life of Abraham Lincoln By Stefan Lorant. (1961)
9. Lincoln The Unknown By Dale Carnegie (1959)
10. Great Issues in American History – From the Revolution to the Civil War (1765-1865) By Richard Hofstadter (1958).
11. Abraham Lincoln -The Prairie Years & The War Years By Carl Sandburg -One Volume Edition (1954)
12 The Emergence of Lincoln – Prologue to Civil War (1859-1861) By Allan Nevins (1950)
13. Abraham Lincoln -The Man Behind the Myths By : Stephen B. Oates (1985)
14. The American Civil War – A History By : Mark Saunders (1993)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 15, 2009)]
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நாசா செவ்வாய்க் கோள் காலநிலை அறியும் விண்ணுளவித் தேர்ந்தெடுப்பு !(கட்டுரை 56 பாகம் -3)
- படைப்பாளுமைகள் சி. மணி, அப்பாஸ் நினைவு
- அசோகமித்திரன் 77: தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -32 << காதல் ஊடல்கள் ! >>
- தழும்பு வலிக்கிறது
- தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று தான், தை ஒன்றாக இருக்கமுடியாது என்று திரு இரா.குரு.ராகவேந்திரன்
- நாகூர் – ஒரு வேடிக்கை உலகம்
- சங்கச் சுரங்கம் – 10 : பெரும்பாணாற்றுப் படை
- அழகியநெருடல்
- ஒத்திவைக்கப்பட்ட சப்தங்கள்….
- எதைச் சொல்வீர்கள்?…
- தொலைந்த செடிகளின் புன்னகை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> கவிதை -5 பாகம் -2
- நிழற்படங்கள்
- பாடுக மனமே
- நரகம்
- தேடும் என் தோழா
- நினைவுகளின் தடத்தில் – (29)
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்
- காதலைத் தேடும் பெண்
- சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 2
- சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 1
- காட்சி
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்று
- எதிர்வீட்டு தேவதை
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -6 (இறுதிக் காட்சி)