எழுத்துக்கலைபற்றி இவர்கள் 40. சாலை இளந்திரையன்

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

வே.சபாநாயகம்



1. சிறுகதையைப் பொறுத்தவரையில், சொல்லுதற்கு ஒரு செய்தி இருந்தால் மட்டும் போதாது; அதைச் சுவைபடச் சொல்லும் திறமையும் இருக்க வேண்டும்.

2. பல நிகழ்ச்சிகளை வளர்த்துச் செல்வது சிறுகதையின் இயல்பன்று. குறிப்பிட்ட ஒரு சூழ்நிலை, ஒரு சிறிய கருத்துடன் இணைத்துப் பின்னப்படும் நிகழ்ச்சி இயக்கமே சிறுகதை. அதேபோல் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி மூலம் ஒன்று அல்லது சில பாத்திரங்களின் முக்கிய பண்பைச் சுட்டிக் காட்டி விட்டு விடுதலே சிறந்த சிறுகதை.

3. கதையின் தலைப்பு, கதையின் உள்ளீட்டை ஒருவாறு சுருக்கித் தருவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு சிறிய அளவான எண்ணம் படிப்போர் மனதில் எழுந்து, கதையைப் படிக்கத் தூண்டும்.

4. கதையின் இலக்கியப் பண்புக்கும் அதன் தொடக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. கதையின் தொடக்கம் படிப்போரின் உள்ளத்தைக் கதையின்பால் கவர்ந்து இழுப்பதோடு சிறந்த சிந்தனை ஆற்றலையும் தோற்றுவிக்கிறது. நன்றாகத்
தொடங்கப்பட்ட கதை ஆசிரியனுக்குப் பாதி வெற்றியைத் தேடித் தந்துவிடுகிறது.

5. சிறுகதையின் இறுதிப் பகுதியில், கதையின் உச்சநிலை பொதிந்த முடிவு அமைகிறது.உச்சநிலை என்பது கதையின் உள்ளீடு முழுவிளக்கம் பெற்று முடியும் இடம். உச்சநிலைதான் கதையின் மிகப் பெரிய கவர்ச்சிப் புள்ளி. அதற்கு முன் உள்ள பகுதி
எல்லாம் படிப்போரின் உள்ளக் கவர்ச்சியை வளர்த்து வருகின்றன; உச்சநிலையில்அக்கவர்ச்சி வளர்ச்சி பெற்று முடிகிறது.

6. கதையின் முடிவு இன்பியலாகவும் இருக்கலாம், துன்பியலாகவும் இருக்கலாம்; கதையில் அது வரும் இடம் உச்சநிலையோடு இணைந்தும் இருக்கலாம். அதற்குப் பிற்பட்டும் இருக்கலாம். ஆனால் அது படிப்போரின் உள்ளத்தை முற்றும் கவர்ந்து அதன் வழியிலே இழுத்துக் கொண்டு போய்ச் சிந்திக்கச் செய்யும் பேராற்றலைப் பெற்றிருக்க வேண்டும்.

7. இறுதியாக, சிறுகதையின் நடை அதன் பாத்திரங்களின் இயல்புக்கேற்ப அமைய வேண்டும். சாதாரணப் பொது மக்களில் ஒருவனும், இலக்கியம் கற்ற பேராசிரியர் ஒருவரும் ஒரே நடையில் பேசினால் படிப்போரின் உள்ளத்தில் கதையும் அது சொல்லும்
கருத்தும் பதிய இயலாது. வேறுபட்ட நிலையும், இயல்பும் உடைய பாத்திரங்கள் வெவ்வேறு நடையில் பேச வேண்டும். பாத்திரத்தின் இயல்பும் அதன் வளர்ச்சியும் பெரிதும் அதன் பேச்சைப் பொறுத்தது அல்லவா?

—– 0 —–

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள்:39. ராஜாஜி.

This entry is part [part not set] of 21 in the series 20090122_Issue

வே.சபாநாயகம்


1. சிறுகதை வாமனாவதாரத்தைப் போன்ற கலை உருவம். நல்ல சிறுகதைக்கு
அடையாளம் ஒன்றே: அதைப் படித்து நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும்.

2. நாவல், குறுநாவல், சிறுகதை எதுவானாலும் எழுதும்போது, எழுத்தாளர்கள் தங்களது
படைப்பில் அழுத்தமான ‘மாரல்’ என்ற ஒன்று இருக்கும் விதத்தில் எழுத வேண்டும்.
‘மாரல்’ இல்லாமல் எழுதுவது கதையே இல்லை. அவர்கள் அப்படி எழுதுவதைவிட
எழுதாமல் இருப்பதே சிறந்தது.

3. சிறுகதை என்பபது பெருங்கதையை உடைத்தெடுத்த சிறிய துண்டு அல்ல. அது தனிப் பண்பும் முழுமையும் கொண்ட ஒரு இலக்கிய அமைப்பு. சிறிய அமைப்புக் குள்ளேயே அதற்குப் பிரத்தியேகமான ஒரு ஜீவன் உண்டு. ஒரே ஒரு நெருக்கடியை
மையமாக வைத்து அதைச் சுற்றிப் புனையப்படும் இலக்கியம் சிறுகதை. ஒரு குறிப்பிட்ட கருத்ததை அது பளிச்சென்று விளக்கும். இம்மாதிரியான சிறுகதைப் பாணியில்
உபநிஷங்களிலே ஆங்காங்கு காணலாம்.

(மேலும் வரும்)

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள் -38 மாக்சிம் கார்க்கி.

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

வே.சபாநாயகம்



1. கலைஞன் என்பவன் தன் நாட்டின், தன்னுடைய சமுதாயத்தின் செவியாக,
கண்ணாக, நெஞ்சமாக விளங்குபவன். தான் வாழும் காலத்தின் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்தான் கலைஞன்.

2. எழுதத் தொடங்குபவர்களுக்கு இலக்கிய வரலாறு பற்றிய பரிச்சயம் இருக்க
வேண்டும்; எந்தக் கலையானாலும் அதன் வரலாற்றினையும் அதன் வளர்ச்சியினையும் அறிந்திருக்க வேண்டும்.

3. எந்த நூலானாலும் நேர்மையுடனும், மக்கள் மீதான நேசத்துடனும், நல்லெண்ணத் துடனும் எழுதப்படுமானால் அது பாராட்டினைப் பெறும்.

4. மனதின் தவறான புரிதலுடனும், தவறான மனஎழுச்சியுடனும் அமைந்தாலும்
எந்தவிதமான அறிவும் உபயோகமானதுதான்.

(மேலும் வரும்)

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 37 கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

வே.சபாநாயகம்



1. ஒரு கதையின் வெற்றிக்கு முக்கியமான அம்சம் ஒன்றுண்டு. ஒவ்வொரு முக்கியமான பாத்திரத்தின் மீதும், ஏதேனும் ஒரு கட்டத்திலாவது, கதை கேட்போருக்கு அனுதாபம் ஏற்படவேண்டும் என்பது நல்ல கதையின் கட்டுக்கோப்பின் முக்கிய அம்சம்.

2. உனக்கென – உன்னுடையது எனத்தக்க ஒரு தனித்தன்மை இருக்குமானால் அதை எழுது. அப்படி ஒன்றும் இல்லையானால் அதை நீ பெற்றாக வேண்டும். திறமை என்பது மிகுந்த பொறுமையின் விளைவு. நீ எழுத மேற்கொண்ட பொருளைப்பற்றி ஆழ்ந்து அதிக நேரம் எண்ணிப்பார். அதன் பின்பு வேறெவரும் கண்டுணராததை – வெளியிலே சொல்லாததைப் பற்றி எழுது. எதிலுமே ஆய்ந்து பாராத – அகழ்ந்து காணாத பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. காரணம், யாராவது கண்டு எண்ணியதை நம் நினைவிலே கொண்டுதான் எதையுமே பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். மிகமிக அற்பமான பொருள் எனப்படுவதில்கூட நமக்குத் தெரியாதது ஒன்று இருக்கத்தான் செய்யும். நாம் அதனைக் கண்டு பிடிக்கவேண்டும். எரியும் தீப்பிழம்பையோ, எதிரே
நிற்கும் பசுமரத்தையோ வருணிக்க முற்படும்போது அந்தப் பிழம்பும் மரமும் எவருக்குமே சொல்லாத புதுக்கருத்தை – விளக்கத்தை நமக்குத் தரும் வரை அவற்றின் முன்பு நாம் நிற்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் நாம் ‘நம்முடையது’ என்று ஒன்றைத் தரும் நிலைமையை அடைய முடியும்.

3. கடையொன்றின் முன்புறத்திலே உட்கார்ந்திருக்கும் ஒரு வணிகனை யும், புகைபிடித்தபடி நிற்கும் வாயில் காவலன் ஒருவனையும், ஒரு குதிரை லாயத்தையும் பார்ப்பதாக நினைத்துக் கொள். ஒரு திறமை மிக்க ஓவியன் வணிகனையும், வாயிற்காப்போனை யும் நம் கண்முன் காட்டுவது போல் வருணிக்க வேண்டும். அவர்களது உள்ளப் போக்கு களையும் எழுத்திலே வடிக்க வேண்டும். அதுமட்டுமல்ல அவ்விருவரை யும் வேறு பல வணிகர்களுக்கும், காவலாளிகளுக்கும் இடையில் கூட கண்டுபிடிக்கும் அளவுக்கு உன்னுடைய படைப்பு இருக்க வேண்டும்; அதைப் போல வண்டியிழுக்கும் அந்த ஒரு குதிரையை முன்னும் பின்னும் ஐம்பது குதிரைகள் நிற்கும்போது கூட பிரித்துணரக்கூடிய வகையில் ஒரு வார்த்தையாலே இலக்கணம் வகுத்து எழுது.

4. ஒரு நாவலுக்கு உரிய ஒரு நல்ல விஷயம் எடுத்த எடுப்பிலேயே மொத்தமாகவும், ஒரே உந்தலிலும் வருகிறதோ அதுதான் தாய்க்கருத்து. அதிலிருந்துதான் மற்ற எல்லாம் பெருக்கெடுத்து வழிகின்றன. இதையோ அதையோ ஏதாவது எழுதிவிட அவ்வளவு சுதந்திரம் யாருக்கும் கிடையாது. ஒருவன் தன் விஷயத்தை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கி றான் என்பதல்ல. இதைத்தான் பொதுமக்களும் விமர்சகர்களும் அறிந்து கொள்வதில்லை. விஷயத்துக்கும் ஆசிரியரது சுபாவத்துக்கும் இடையே ஏற்படுகிற ஒருமைப்பாட்டைப் பொறுத்துத்தான் இருக்கிறது பெரும் படைப்புகளின் வெற்றிரகசியம்.

(இன்னும் வரும்)

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 36 ச.து.சு.யோகி

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

வே.சபாநாயகம்



1. வெறும் பேனா மட்டும் பேசினால் போதாது. ஒருவனுடய உள்ளம், உயிர் யாவும் பேனா முனையில் வந்து கூத்தாடினால், அப்பொழுது அவ்வார்த்தைகளுக்கு உள்ள வீரியத்தை யாதொன்றாலும் அசைக்க முடியாது.

2. வாழ்க்கையின் பலவிதமான ரகங்களும் கலைஞனுக்குத் தலைகீழ்ப்பாடமாகத் தெரிய வேண்டும். அப்போதுதான் அவனுக்கு வாழ்க்கையின் பூர்ணத்வம் விளங்கும். ஆனால் அந்த ரகங்களைக் கற்பனை செய்து, கலையோ கவிதையோ சிருஷ்டிக்க வேண்டும்.

3. வெறுமனே ஏதோ எழுதித் தொலைக்க வேண்டுமே என்று எழுதுவதில் பயனில்லை. உண்மையான இலக்கியம் உள்ளத்தின் அடியிலிருந்து அறிவின் போர்வையோடு வெளிக் கொட்ட வேண்டும்.

4. வாள் ஜடசக்தியின் அறிகுறி. பேனாவோ உயிர்சக்தியின் உண்மை வீறு. வாள் பெரும்பாலும் பெரிய பெரிய நாகரீகத்தினை உடைத்துத் தள்ள மட்டுமே பயன்படும். பேனா என்பது தன் பழைய நாகரீகத்தை உடைப்பதென்றாலும் சரி, புது நாகரீகத்தை சிருஷ்டிப்பதாயினும் சரி, எதுவானாலும் செய்ய வல்லது. பல்லவர்களின் ஆட்சியின் கீழ் பதுங்கிக் கிடந்த தமிழர்களை ஒரேயொரு நூற்றாண்டுக்குள், கம்பனது ராமாயணம்
தட்டி எழுப்பி தலைநிமிரச் செய்துவிட்டது. அமெரிக்காவின் அடிமை வர்த்தகத்தை ஒழிப்பதற்கு ‘அங்கிள்ஸ் டாம்ஸ் கேபின்’ எனும் ஒரே நாவல்தான் விதைபோட்டது. ஜெர்மானிய தத்துவ சாஸ்திரி நெயட்சின் நெருப்பு வார்த்தைகளே சென்ற மகாயுத்தத் திற்கு அடிகோலியது என்று கூறலாம்.

5. கலைஞர்களெல்லாம் பேனா பிடித்தவர்கள். ஆனால் பேனா பிடித்தவர் களெல்லாம் கலைஞர்கள் அல்ல.

(இன்னும் வரும்)
E-mail:
Blog :

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 35 தாலமி.

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

வே.சபாநாயகம்



1. வேறு வார்த்தைகளில் வெளியிட முடியாத ஒன்றை’ சொல்ல முடியாத ஒன்றைச் சொல்லத்தான் எழுத்தாளன் ஒரு சிறுகதையை எழுதுகிறான். அவனிடத்து ஒரு வாசகன், ”இதன் பொருள் என்ன?” என்று விளக்கம் கேட்டால், ஒன்று அவன் எழுத்தாளனது திறமைக்குறைவை அல்லது வாசகர்களது வளர்ச்சியின்மையைக் குறிக்கும்.

2. தந்தி மூலம் வரும் செய்திகள் பல நம்மை அதிர வைக்கின்றன; அல்லது பேரானந்தத்தில் ஆழ்த்துகின்றன. சிறுகதைகள் தந்தி மூலம ்வரும் செய்திகள். சொற்செட்டும், பொரூளட்செட்டும்் சிறுகதையின் இன்றியமையாத இலக்கியப் பண்புகள்.

3. ”அவன் கண்கள் நெருப்புப்போல் சிவந்தன,” என்று எழுதுவதைக் காட்டிலும், நெருப்புப்போல் கண்கள் சிவந்துவிட்ட ஒருவன் சொல்லும், சொல்லத்தடுமாறும், சொல்லத்தவறிவிட்ட சொற்களை, அல்லது செய்யும், செய்ய நினைக்கும் செயல்களை உணர்த்துவதே, சிறுகதைப்பாங்கு. சிறந்த இலக்கியத்தில் உள்ளமும், உளநிலையும் சொல்லிலும், செயலிலும் பிடிபடுகின்றன.

4. சிறுகதை ஒரு நோக்குடன் அமைய வேண்டும். அது ஆசிரியனின் நோக்காவோ கதையில் வரும் ஒரு பாத்திரத்தின் நோக்காவோ இருக்கலாம். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை எழுத்தாளன் செய்யக்கூடாது.

5. ஏனையக் கலைகளைப்்பொல்வே, அறிவுணர்வாலொ அல்லது சிந்தனை உணர்வாலோ தொடப்படாதொன்றத் தொடுவது சிறுகதை. அது எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதில்லை. தீ்ர்ப்பது அதன் நோக்கமோ, ஆளுகையோ அல்ல. ஜோசப் கார்நாடின் ”இளமைய”யோ , கார்க்கியின் ”ஏதாவது ஒன்று செய்வதற்காக”வோ , ஹெமிங்வேயின் ”கொலைகாரர்”களோ , ஷெர்வுட் ஆண்டர்சனின் ”காட்டிலோ ஒரு சா”வ’ோ , எந்தப் பிரச்சினையத் தீர்க்கிறது?

6. துணிந்த சிறுகதை எழுத்தாளன், ஆஸ்்கார் ஒயில்டுவின் ”்எல்லாக் கலையும் பயனற்றது”, என்ற முடிவை ஏற்றுக் கொண்டு எழுதவேண்டும்.

7. சிறந்த சிறுகதைகளை எழுதுவதோ, , படிபதோ பொழுதுபோக்கல்ல. இரண்டுமே மனிதத்துவம் நிறைந்த செயல்கள்.

(இன்னும் வரும்)

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 34. பிரபஞ்சன்

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

வே.சபாநாயகம்



1. சிறுகதை என்பது குளத்தில் விழுந்த கல். அமைதியைக் குலைத்துக்கொண்டு ‘களக்’ என்கிற சிறு சப்தத்துடன், தண்ணீர்ப் பரப்பைப் பொத்துக்கொண்டு, அதற்குள் நுழைந்து, சலனங்களை ஏற்படுத்துகிற முயற்சி. வாழ்வின் ஒற்றைச் சலனத்தின் படப்பிடிப்பு. மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களின் ஒற்றைச் சித்தரிப்பு. ஒரு சிறு நிகழ்ச்சி, சிறுகதைக்குப் போதுமானது.

2. திட்டவட்டமாகப் பக்கக் கணக்கில் சிறுகதையை அடக்க முடியாது. புதுமைப் பித்தனின் ‘பொன்னகரம்’ இரண்டு பக்கங்களில் அமைந்த கதை. ‘சாப விமோசனம்’, ‘சிற்பியின் நரகம்’ ஆகிய கதைகள் பத்துப் பக்கங்களுக்கு மேலாகப் போகும். ஆகவே, பக்கங்களை வைத்துக் கணக்கிடலாகாது. உள்ளடக்கக் குணாம்சங்களை வைத்தே தீர்மானிக்கப்படும்.

3. ஒரு நாவல், சொல்ல வந்த விஷயங்களின் அல்லது விஷயத்தின் சகல பரிமாணங் களையும், சரித்திர, பொருளதார, மனோபாவ பரிமாணங்கள் அத்தனையையும் உள்ளடக்கி விவரிப்பது. சிறுகதைக்கு அத்தனை பரிமாணம் தேவையில்லை. விவரணங்களும் தேவையில்லை. ஒரு சிறு சம்பவமும், அதன் தன்மையைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு விவரிப்பும் போதும். ஒன்றிரண்டு மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் எவ்வாறு அதை எதிர்கொண்டு, எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பது ஒரு சிறுகதைக்குப் போதும். இன்னும் சொன்னால், அந்தப் பிரச்சினையை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதேகூடப் போதுமானது.

4. சிறுகதை குறியை நோக்கி, ஒரு துப்பாக்கித் தோட்டா மாதிரி பயணம் செய்யும் தன்மையது. பள்ளிக்கூடப் பையன் மாதிரி பராக்குப் பார்க்கக்கூடாது. சிறுகதை ஆசிரியன், கண்பட்டை போட்ட குதிரை மாதிரி, மற்றதைப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாதவன். அவன் இலட்சியம் அவன் சொல்லத் தேர்ந்த விஷயம்!

5. சிறுகதைக்குரிய கருவை எங்கிருந்தும் பெறலாம். அது எங்கும் காற்றுப்போலவும், ஓளி போலவும் நிறைந்திருக்கிறது. பார்ப்பதற்குக் கண்களையும், உணருவதற்கு மனத்தையும் இயக்குவதொன்றே கருவைப் பெறும் வழி. உங்களுக்கு நேரும் அனுபவமே உங்களுக்குக் ‘கரு’ ஆகுமே!

6. சிறுகதை எந்த விஷயத்தையும் தொடலாம். வானமும், அதற்குக் கீழே இருக்கிற அனைத்தையும் அது தொடும். ஆனால், தொடும் விஷயம் நீங்கள் நன்கு அறிந்ததாய் இருக்க வேண்டும். விமானப் பயணம் செய்யாத எழுத்தாளன், விமானப் பயணம்செய்யும் தன் பாத்திரத்தின்அனுபவத்தைச் சரியாகச் சொல்ல முடியாது.

7. சிறுகதைகளில் சம்பவ ஓர்மை அவசியம். ஒரு நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிக்கு வழியமைத்து சொல்ல வந்த விஷயத்துக்கு இசைவாக இருத்தல் முக்கியம். கதை இறுக்கம் கொண்டு இலங்குவது நல்லது.

8. முதல் வாக்கியத்தில் கதை தொடங்கியிருக்க வேண்டும். கதை நேரான தளத்தில் மளமளவென்று நடக்க வேண்டும். தயக்கம் கூடாது. சொல்ல வந்த விஷயந்தான் தீர்மானம் ஆகிவிட்டதே அப்புறம் ஏன் தயக்கம்?

(இன்னும் வரும்)

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 33. அனுராதா ரமணன்

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

வே.சபாநாயகம்



1. சிறுகதை என்பது சின்னப் போர்ஷனில், சாமர்த்தியமாய்க் குடியிருப்பதற்குச் சமம். நாவல் என்பது பெரிய பங்களாவில் வசிப்பதற்கு ஒப்பாகும்.

2. முதலில், எழுதவேண்டும் என்று ஆசையுள்ளவர் தினமும் இரவு படுக்கப் போகும்முன் டயரியில் அன்றையச் சம்பவங்களைச் சுவைபட எழுத முயலுங்கள். தவிர கதைக்
கருக்களைக் குறித்து வைத்துக்கொள்ள ஒரு நோட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

3. கதையைப் பொறுத்தவரை நல்ல கருதான் அதன் ஜீவநாடி. ஒரு தொழிலுக்கு மூலப்பொருள் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் கதைக்குக் கரு.

4. கதையின் கரு, ஏதோ ஒரு கால கட்டத்தில் நடந்த அல்லது நடக்கிற ஒரு சம்பவமாக இருக்க வேண்டும். சொல்ல வந்ததை சுவைகுன்றாமல் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். முடிவு படீரென்று பொட்டிலடித்தாற்போல இருக்க வேண்டும்.

5. ஒரு நாளைக்குப் பத்துப் பக்கங்கள் நாம் எழுதுகிறோம் என்றால், ஒரு நாளைக்குக் குறைந்தது நூறு பக்கங்களாவது படிக்க வேண்டும். கையில் கிடைக்கிற புத்தகங்களை எல்லாம் படியுங்கள். நம்மைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்த எழுத்தாளர்கள் படைப்புகளைப் படிப்பதனால், அவர்களது அனுபவங்களை மட்டுமின்றி உழைப்பையும் புரிந்து கொள்ள முடிகிறது.

6. ஒரு நல்ல சிறுகதையைப் படித்தால், படிப்பவரின் நெஞ்சில் சுமார் இரண்டு நாட்களுக்காவது அதன் பாதிப்பு இருக்க வேண்டும்.

7. ஆரம்ப வரி – வாசகரைப் படிக்கத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தால்தான் முழுக்கதையையும் படிக்க வேண்டும் என்கிற உற்சாகம் கிளம்பும்.

8. முகத்துக்குப் பவுடர் பூசுவதும், பொட்டு வைப்பதும் ஓரளவுக்குப் புத்துணர்ச்சியையும்,
இயல்பான களையையும் தோற்றுவிக்கும். அது போலத்தான் வருணனையும்.

9. சிறுகதைக்கு வருணனை அவசியம்தான். அதைவிடவும் சம்பவத்துக்கு நாம் தரும்
முக்கியத்துவம் அவசியம்.

10. சிறுகதை தரம் மிகுந்ததாக இருக்கிறதா, எழுத்தில் இலக்கண இலக்கியம் உண்டா என்று துருவித் துருவிப் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் எழுதவே முடியாது.

(இன்னும் வரும்)

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

வே.சபாநாயகம்



1. சிறுகதையொன்றின் தரத்துக்கு ஒரு சிறிய பரிசோதனை. கதை வாசகர்களின் மனத்தைக் கவ்விக்கொள்கிறதா, அட்டை மாதிரி? அதை வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடிகிறதில்லை, வைத்துவிட்டாலும் மறக்கமுடிகிறதில்லை, என்று வாசகனை அப்படி ஆட்டி வைக்கிறதா? இந்தக்கதைக்குப் படம் எதற்கு விளம்பரம் எதற்கு என்று தோன்றுகிறதா? அப்பப்பா வாழ்கையில் அற்புதம் இத்தனையா என்று வியக்க வைக்கிறதா? அணுவை அண்டமாகவும், அண்டத்தை அணுவாகவும் மாற்றுகிறதா? கண்ணீர் விடவேண்டிய கட்டத்தில் ஆனந்த சிலிர்ப்பையும் மகிழ்ச்சியின் சிகரத்தில் கண்ணீரையும் தருகிறதா? சிறிய ஒரு விஷயம் பெரியதொரு உண்மையாகி விடுகிறதா? அப்படியானால் அடுத்தபடியான ஆராய்ச்சிக்கு அந்தச் சிறுகதை தகுதி பெற்றுவிட்டது.

2. இலக்கிய ஆசிரியனின் “டெக்னிக்”, விமர்சனத்துக்குப் பாத்திரமாகிறது. கதை மட்டில்
“சப்”பென்று தூங்கிவழிந்து கொண்டிருந்தால் “டெக்னிக்”கின் புதுமை யாரைக் கவரப்போகிறது? சமையல் நன்றாயிருக்கலாம், உப்பு மட்டும் இல்லாவிட்டால்? டெலிவிஷனில் புதுமை இருக்கிறது. “டெக்னிக்” ஒன்றும் மட்டமில்லை. ஆனால் பொய்ச் சிரிப்புக் காட்டும் அந்த முகத்தை எத்தனை நாள் சகித்துக் கொள்கிறது? சில வேளைகளில் ‘பொய்க்கால்” குதிரை ஆடுகிற சிறுவன் போடுகிற போடு எப்படி இருக்கிறது? அவன் உற்சாகமும்., பெருமிதமும் நம்மையுமல்லவா பிடித்துக்கொள்கிறது?
அவன் “டெக்னிக்” மிகப்பழையது. உற்சாகமோ மிகமிகப் புதியது!

3. சிறுகதை ஆசிரியன் வாசகனின் ஒரு தோழன் மாதிரி. சில வேளைகளில் அந்தத் தோழமை அற்புதமாகி விடுகிறது. வாழ்க்கைச் சகதியின் நடுவில் நின்றுகொண்டே, காணாதனவெல்லாம் காட்டி, தெம்பையும் உற்சாகத்தையும் தருகிறான்.ஆனால் சில வேளைகளில், ஊட்டி என்றும் கொடைக்கானல் என்றும் அழைத்துப் போனாலும் அங்கேயும் நம்மை “போர்” அடிக்கிறான். கொட்டாவி விட்டுக்கொண்டு காசு செலவழித்த உணர்ச்சியோடு திரும்புகிறோம். இப்பேர்ப்பட்ட தோழமை என்றும் வேண்டாம்! ‘போர்” அடிக்கிற சிறுகதை உங்களுக்கு வேண்டாம்! அதைக் கீழே வைத்துவிடுங்கள்!

(இன்னும் வரும்)

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 31 பேராசிரியர் கல்கி

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

வே.சபாநாயகம்



1. சிறுகதை என்ற உடனேயே அதில் ஒரு கதை இருக்க வேண்டும், அது சின்னதாகவுமிருக்க வேண்டும் என்று ஏற்படுகிறது.

கதை என்றால் என்ன? ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தனாம் என்று பாட்டி சொன்ன உடனேயே ‘உம், அப்புறம்’ என்று குழந்தைக்குக் கேட்கத் தோன்றுகிற தல்லவா? இம்மாதிரி ‘அப்புறம் என்ன?’ என்று தெரிந்து கொள்வதில் நமக்கு ஆவலைக் கிளப்பக்கூடிய முறையில், ஏதாவது நடந்த சம்பவத்தையோ அல்லது நடக்காத சம்பவத்தையோ சொன்னால், அதுதான் கதை. சரி, சிறுகதை என்றால் எவ்வளவு சின்னதாக இருக்க வேண்டும்? அது அந்தக் கதையின் போக்கையே பொறுத்தது.
சிறுகதையின் முக்கியமான அம்சம் அதில் ஒரு பிரதான சம்பவம்தான் இருக்க வேண்டும். அந்த சம்பவத்தை வெறும் வளத்தல் இல்லாமல் வேறு சம்பந்தமற்ற விஷயங்களுக்குப் போகாமல் நேரே நெடுகச் சொல்லிக்கொண்டு போனால், அது நாலு வரியிலிருந்தாலும் சிறுகதைதான். நாற்பது பக்கங்கள் வந்தாலும் சிறுகதைதான்.

2. பொழுதுபோக்கிற்காகப் படிப்பதுடன் பயனுக்காகவும் படிக்க வேண்டும். படித்த
பயன் எழுத்தில் தெரியவேண்டும். எதையும் எதிர் பார்த்தால்தான் துல்லியமாக இருக்கும். எழுத எழுதத்தான் சிந்தனை தெளிவடையும்.

3. பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும், சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டத்தைப் பற்றியும் என்னதான் கண்ணீரில் பேனாவைத் துவைத்துக் கொண்டு எழுதினாலும் அந்தக் கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை இலக்கணங்களும் இருக்கலாம்; உள்ளத்தை ஊடுருவித் தைக்கும்படியாக இதயம் ஒன்றிய ஈடுபாடு இருப்பதில்லை.

4. எதை எழுதினாலும் அதை நாலு பேர் போற்றவாவது வேண்டும் அல்லது தூற்றவாவது வேண்டும். இரண்டுமில்லை என்றால் எழுதுவதைவிட எழுதாமல் இருந்து விடலாம்.

(இன்னும் வரும்)

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

வே.சபாநாயகம்


1. சிறுகதை ஒரு இலக்கிய வடிவம். அது ஒரு அனுபவந்தான். ஆனால் புலன்களின் நுகர்ச்சி அனுபவம் அல்ல. அதற்கும் அப்பால் மனத்தினால், உணர்ச்சியிலே அடையப் பெறும் அனுபவம்.

2. கதை என்று பொதுவாகச் சொன்னால் அதில் எல்லாக் கதைகளும் அடங்கிவிடும். சிறுகதை என்று சொன்னால் அதில் குறிப்பிட்ட இலக்கணங்கள் கொண்ட கதைகள் மட்டும்தான் அடங்க முடியும். அதாவது சிறுகதைக்கு ஒரு இலக்கணம் உண்டு.

3. சிறுகதைக்குத் தாய்ச்சரக்கு மனிதமனம் அல்லது உண்மை தான். மனிதமனப் போக்குகள் அவற்றிற்கு ஆதாரமான உள்ளத்து உணர்ச்சிகள் இவற்றை மின்வெட்டுக்கள்போல எடுத்துக்காட்டுவதுதான் சிறுகதை.

4. கடல் போன்ற வாழ்க்கையில் ஒரு தனிமனித நிலையை, மனப்போக்கை ஒரு உணர்ச்சிவேகத்தை, அழகாக எடுத்துக்காடுவதுதான் சிறுகதை. நமது வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளில் அவரவர் மனப்போக்குக்கு ஏற்ப சிக்கி, உழன்று, அந்த நெருக்கடி ஓட்டத்தில் ஒரு சிறு நிகழ்ச்சியில் நம் கவனத்தை ஊன்றி வைத்து, அதன் காரண – காரிய தொடர்புகளை அலசிப் பார்த்து அடையும் அனுபவத்தை, பக்குவமாக, தேவையற்ற விவரங்களை வடிகட்டி ஒதுக்கிவிட்டு, சுண்டவைத்த கஷாயம்போல, சாரத்தை சுவையாகவும், கவர்ச்சிகரமாகவும் கொடுப்பதுதான் சிறுகதை.

5. ஒரு நல்ல உயர்ந்த சிறுகதையைப் படித்ததும் படிப்பவர் உள்ளம் உயர வேண்டும்.

6. மனிதனது வாழ்வில் பிறப்பும், வாழ்வும், இறப்பும் அவனைக் கட்டுப்படுத்தி விடுகின்றன. அந்தக் கட்டுப்பாட்டை மீற, அவன் செய்யும் முயற்சிக¨ளையும், போராட்டங்களையும் அவற்றில் அவன் அடையும் வெற்றி தோல்விகளையும் எடுத்துகாட்ட முயல்வதுதான் சிறுகதை.

7. ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது லட்சியத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டாலும் அந்தக் கொள்கையிலும் லட்சியத்திலும் உண்மையின் பலம் இருக்க வேண்டும்.

8. சிறுகதையில் தொட்டுக் காட்டப்படும் மனநிலை குறுகிய, தற்காலிகமான தடைகளால் ஏற்படும் அனுபவங்களாக இருக்கக் கூடாது.

9. சமூக அநீதிகளை எதிர்த்து, திமிறி எழுந்து நியாயம் கிடைக்கச் செய்யக்கூடியதான மனோபாவம் வெளிப்படுத்தும் சிறுகதைகள் அமைக்கப்பட வேண்டும்.

10. சிறுகதைகளுக்குச் சுருக்கம் எழுத முடியாது, எழுதக் கூடாது. சிறுகதையில் ஒரு வரி விட்டுச் சொன்னால் கூட அதன் அழகு மூளியாகிவிடும். அது ஒரு வார்ப்பு.

(இன்னும் வரும்)

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 28 மாப்பசான்

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

வே.சபாநாயகம்


1. உலகத்துப் பொருள்களை நேர் நின்று நீயே பார். உனக்குப் புதிதாக ஏதாவது தோன்றலாம். பழைய உவமைகளும் கருத்துக்களுமே அதிலிருந்து உதிக்க வேண்டு மென்பதில்லை. உன் அனுபவம் எவ்வளவோ சொல்லிக் கொடுக்கும். ஒவ்வொரு பொருளிலும் எப்போதும் ரகசியம் பதுங்கிக் கிடக்கிறது.

2. மக்கள் கூட்டம் பலசுவைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு. அவர்கள் நம்மை வேண்டிக் கேட்பவை இப்படி இருக்கின்றன:

“எனக்கு ஆறுதல் கொடு”
“என்னை மகிழ்ச்சிப்படுத்து”
“சோகத்தின் பிடியில் என்னைச் சிக்கவிடு”
“என் நெஞ்ச உணர்ச்சியைத் தொடு”
“என்னைக் கனவுலகத்திலே மிதக்க விடு”
“என்னக் கெக்கலி கொட்டிச் சிரிக்க வை”
“என்னை அச்சுறுத்து”
“என்னை அழ வை”
“என்னைச் சிந்திக்க வை”.

3. இவற்றைத் தவிர ஏதோ மிகச் சிலர் இன்னொன்றைக் கூறுகிறார்கள்: “கலைஞனே! உனக்குப் பிடித்த முறையிலே – உன் உணர்ச்சி வெள்ளத்திற்கு இயைந்த வகையிலே எதையாவது நல்லதைக் கொடு” என்பதுதான். கலைஞன் இதற்கான முயற்சியிலே ஈடுபடுகிறான்; வெற்றி பெறுகிறான்; அல்லது தோற்றுத் தொலைகிறான்.

4. சிறுகதை என்பது ஒரு கெட்டுப் போன கலைக்குழந்தை.

(இன்னும் வரும்)

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 26 ரா.ஸ்ரீ.தேசிகன்

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

வே.சபாநாயகம்



1. சிறுகதை ஒரு குறுகிய நாவலில்லை. அநேக பாத்திரங்களையும் அநேக சம்பவங் களையும் சித்தரிக்கவேண்டி இருப்பதால் ஒரு நாவலுக்கு அகன்ற சித்திரக்கிழி வேண்டும். ஒரு நிகழ்ச்சிதான் சிறுகதைக்குள்ள வட்டம். அவ்வட்டத்துக்குள் எவ்வளவு அலங்காரம் செய்யலாமோ அவ்வளவு அலங்காரம் செய்யலாம். ஒரு நாவலில் கூட்டலாம்; கழிக்கலாம்; ஆனால் கதாபாவம் கெட்டுப் போவதில்லை. ஒரு கதையில் ஒரு பதத்தை எடுத்தாலும் கதை பழுதுபட்டுப் போய்விடும்.

2. நாடகத்தைப் போலவே சிறுகதையிலும் ஒவ்வொரு பதத்திற்கும் ஒரு பயன் இருக்க வேண்டும். வார்த்தைகளில் சிக்கனம் வேண்டும். வர்ணனைக்காக வர்ணனையும், ஹாஸ்யத் திற்காக ஹாஸ்யமும் சிறுகதையில் இடம்பெற முடியாது. ஹாஸ்யமான விஷயம் கதைப் போக்கின் ரசத்தை அதிகப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதை அடியோடு தள்ளிவிடவேண்டும்.

3. கதையின் முடிவில் எழும் நாதத்திற்குக் கதை முழுதுமே எதிரொலி கொடுக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் அனந்தமான தந்திகள் அடங்கிய வாழ்க்கை வீணையில் ஒரு தந்தியைப் பேச வைப்பதுதான் சிறுகதை.

4. கதைக்கும் கவிதைக்கும் அதிக வித்தியாசமில்லை. சிறுகதைச் சைத்ரீகனைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அவன் ஒரு கவி என்பது புலனாகும். கவியுள்ளம் படைத்தவன்தான் சரியான கதை எழுத முடியும். அகத்துறைக்கான ஒரு நிலையை (lyric) அடைந்து விடுகிறது உண்மையான சிறுகதை. ‘அகத்துறைப்பா’வைப் போலவே சிறுகதையிலும் தெளிவாக உணர்ச்சி பொங்க வருணிக்கப்படும் ஓர் அனுபவத்தை மாற்றக்கூடிய அல்லது குழப்பக்கூடிய வேறு எந்த அம்சமும் இருக்க இடமில்லை.

5. நாவலை ஒரு வாழ்க்கைச் சித்திரமென்று மொழியலாம். வாழ்க்கையில் எவைகளைப் பார்க்கிறோம்? பிறப்பு, வளர்ப்பு, இவைகளைப்பற்றி சர்ச்சை செய்கிற மக்களின் பேச்சு, மக்களின் குணங்களுக்கேற்ற செயல்கள், மக்களின் போராட்டங்கள், உணர்ச்சிவேகங்கள், சிரிப்பு, அழுகை, உயர்ந்த லட்சியங்கள், அவைகளின், சிதைவு, வெற்றி, ஏமாற்றம், நல்லது, தீமை, மழை, வெயில், குளிர், வெப்பம், புயல், அமைதி – இவை அனைத்தையும் வாழ்க்கையின் விரிந்த காட்சியில் நோக்குகின்றோம்.

6. நாவல் வாழ்க்கையின் ஒரு விமர்சனமாய் இருக்கலாம், அல்லது வியாக்கியானமாய் இருக்கலாம். நாவலுக்குப் பொருள் வாழ்க்கை என்பதில் ஐயமில்லை. ஆதலால் எடுத்துக் கொண்ட விஷயம் எல்லா உள்ளங்களுக்கும் பொதுவானதாயும், உணர்ச்சி பாய்கின்ற ஆழ்ந்த உள்ளத்தைத் தொடுவதுமாயும் இருக்க வேண்டும். வெறும் கதைதானே என்ற எண்ணத்தில் எதையும் அதில் புகுத்திவிடலாம் என்ற தவறான எண்ணம் முளைக்கக் கூடாது. நாம் பார்த்த விஷயம், நாம் நுகர்ந்த அனுபவம், நாம் அகமனத்தின் ஆழத்தில் உணர்ந்த வாழ்க்கையின் உணர்ச்சிகள் இவைகளுக்கு உருக்கொடுக்க வேண்டும்.

7. முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் கதை. கதை, சொல்லத் தகுந்த கதைதானா? இது தீர்மானமாகுமானால், அதை அழகுபெறப் புனைகின்றோமா? – என்ற கேள்வி பிறக்கும். கதாபாத்திரங்கள் செவ்வனே படைக்கப்படுகின்றனவா? எடுத்துக்கொண்ட விஷயத்துக்கேற்றவாறு கதையின் அம்சங்கள், தொடர்புடையனவாய் அமைந்திருக்கின் றனவா? – என்றெல்லாம் பார்க்க வேண்டும்.

8. ஒரு நாவலில் மிகவும் முக்கியமாகக் கருதக்கூடியது கதாபாத்திரங்கள். நிதம் நம் முன் நடமாடும் பாத்திரங்களின் சித்திரங்களை அமைப்பீர்களா? அல்லது தைரியமாய் அமானுஷ்யமான பாத்திரங்களைச் சமைப்பீர்களா? விசித்திர உருவங்களைப் படைப்பீர்களா? எதைச் செய்வீர்களோ தெரியாது. புத்தகத்தை மூடினதும் கதையின் நிகழ்ச்சிகள் மறந்து போனலும், அமைக்கப்பட்ட பாத்திரங்கள் நம்முள் நடமாட வேண்டும்.

9. ஓர் ஆசிரியனுக்கு வாழ்க்கையைப்பற்றி தனித்த ஒரு தத்துவம் இருக்க வேண்டும். தன்னுடைய வாழ்க்கைத் தத்துவமான ஓர் உயர் குன்றின்மீது இத்தனையும் நோக்க வேண்டும். இப்படி நோக்கினால் நாவலுக்கே ஒரு தனிச்சிறப்பு ஏற்படும். உதாரணமாக:
ஹார்டி இரக்கமற்ற ஒரு குருட்டுச்சக்தி உலகத்தை ஆட்டிப் படைக்கிறது என்ற மூல
தத்துவத்தை அடிப்படையாக வைத்துக் கதைகளை அமைத்துக் கொண்டேபோகிறார். அவர் கருத்தை ஆமோதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அக்கருத்து படைக்கப்படுகிற நாவலுக்கு ஒரு மூலசக்தியாய் நின்றுகொண்டு மற்ற அம்சங்களுக்கு ஓர் உயிர் அளிக்கிறது என்ற உண்மையை ஒருவராலும் மறுக்க முடியாது.

10. நாவல் எந்த அனுபவத்தையும் சித்தரிக்கும். அதற்கு விலக்கான அனுபவமே ஒன்று மில்லை. உதாரணமாக: அறிவைப்பற்றிய (intellect) நாவல்கள் போதும் அது வாழ்க்கையைக் குலைத்துவிடும்; உண்மையான உணர்ச்சிக்குத்தான் (instinct) நாம் வணக்கம் செய்யவேண்டும் என்ற அடிப்படையான தத்துவத்தைக் காட்டப் பல நாவல் களைப் புனைந்து தந்திருக்கிறார் டி.ஹெச்.லாரன்ஸ் என்பதை நாம் நன்கறிவோம்.

(இன்னும் வரும்)


Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம்

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

வே.சபாநாயகம்



1. எந்தக்காரியம் சித்தி அடைய வேண்டுமானாலும் அதற்குத் தவம் செய்ய வேண்டும். அந்தத் தபஸ் எழுத்துக்கும் வேண்டும்.

2. நிரந்தரமான பிரச்சினைகள், நிரந்தரமான போராட்டங்கள் இவைகளை ஊடுருவிப்
பார்ப்பதே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி, சிறுகதையாயினும் சரி இவைகளை விஸ்தரிக்கும்போது உயர்ந்த இலக்கியமாகி விடுகிறது.

3. உணர்ச்சி முக்கியம். மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவைகளைக் கடந்து மனித ஹிருதயத்தின் ஆழத்தைக் கண்டு, அந்த அனுபவத்தைப்
பிறருக்குப் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை.

4. இவ்வுலகில் எதிரிடையான எவ்வளவோ பொருள்களும் குணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நன்மை இருக்கிறது. கூடவே தீமையும் இருக்கிறது. அழகு இருக்கிறது. அதனுடனேயே அருவருப்பான விஷயமும் இருக்கிறது. கருணை இருக்கிறது. கொடுமையும் இருக்கிறது….இவற்றில் எழுத்தாளன், எப்படி எந்தெந்த அளவுக்கு, எந்தெந்த விஷயங்களைப் பொறுக்கி எடுத்துத் தன் சிருஷ்டித் தொழிலை செய்ய வேண்டியது? என்ன அளவுகோல்? எப்படி எடைபோட்டு விஷயங்களை எடுத்துக் கொள்வது? எந்தச் சல்லடைமூலம் தனக்கு வேண்டிய சாமான்களை சலித்து எடுப்பது?
……..எழுத்தாளன் நல்லதோர் எண்ணத்தில், மனதைத் தூய்மைப்படுத்தும் சிந்தனையில், உள்ளத்தை உயர்த்தக்கூடிய அனுபவத்தில் நிலைத்து நிற்குமேயானால் அப்போது எழுத்தின் தன்மையும் தானே சிறந்தோங்கி விளங்குகிறது.

5. எழுத்து என்பதே சத்தியம்(truth), சுந்தரம்(beauty), சிவம்(goodness) இவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். இவையே உலகை இயக்குபவை. எழுத்திலே இவற்றையே பிரதிபலிக்க வேண்டும். தவிர ஒரு அடிப்படையான குறிக்கோளும் வேண்டும். அடிப்படையான லட்சியத்துடன் எழுதும், எழுதப்படும் எதிலுமே இவை மூன்றும் பிரதிபலிக்காமலிராது.

( இன்னும் வரும் )

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 23 ‘அகஸ்தியன்’

This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

வே.சபாநாயகம்



( பி.எஸ்.ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட ‘அகஸ்தியன்’, எண்பதுகளில் பிரபலமாய்ப் பேசப்பட்ட
நகைச்சுவை எழுத்தாளர். ‘கடுகு’ என்ற புனைபெயரிலும் நிறைய ‘குமுதம்’, ‘தினமணி கதிர்’,
‘கல்கி’ பத்திரிகைகளில் எழுதியவர்.)

1. நகைச்சுவை எழுதுவதும் ஜோக் எழுதுவதும் வெவ்வேறு. நகைச்சுவை கதை, கட்டுரையில் தனியாக ஜோக்
என்று இருக்காது; இருக்க வேண்டிய அவசிய மில்லை. கட்டுரையில் வரும் கதாபாத்திரங்கள், அவர்கள்
குணபேதங்கள், பெயர்கள், சம்பாஷணைகள், நிகழ்ச்சிகள் இவைகளில் நகைச்சுவை இழையோட வேண்டும்.
ஒட்டு மொத்தமாக நகைச்சுவை உணர்வைப் படிப்போர் மனத்தில் எழுப்ப இவை உதவும்.

2. பெரும்பாலான நகைச்சுவைக் கதைகள் நடுத்தர வர்க்கத்தைச் சுற்றி அமைவதைக் கவனியுங்கள். அப்படி
இருந்தால்தான் வாசகரும் ஏதோ தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சியாகக் கருதுவார்கள். இதன்
காரணமாகக் கதையை அவர்கள் ஒருபடி அதிகமாகவே ரசிக்க முடியும்.

3. எழுதுவது என்பது மிக எளிய விஷயம். ஆனால் எழுதத் தொடங்குமுன் நிறைய மனத்தில் அசை
போடவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நிறைய யோசனை செய்து மனத்திலேயே கதையை உருவாக்குகிறோமோ,
அவ்வளவுக்கவ்வளவு சுலபம் அதைக் காகிதத்தில் எழுதிவிடுவது.

4. கதை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு – ஏன் கதையைவிட அதிகம் என்றுகூடச் சொல்லலாம் –
முக்கியமானது நடை, கதை சொல்லும் விதம், நிகழ்ச்சிகளை அமைக்கும் விதம், சம்பாஷணைகளைச்
சரளமாகவும் இயற்கையாகவும் அமைக்கும் விதம், சுவையாக முடிக்கும் விதம் – எல்லாம் முக்கியமானவை.

5. நகைச்சுவை எழுதும்போது, சிலேடைகளைப் பொருத்தமாகச் சேர்க்கலாம். பேச்சுத் தமிழில் மட்டும்
சில சிலேடைகளைச் சேர்க்க முடியும். அவற்றை எழுத்தில் கொண்டுவர முயலாதீர்கள்.

6. அதீதமும் நகைச்சுவையில் ஒரு முக்கிய அம்சம். இப்படி நடக்கவே முடியாது என்று உங்களுக்குத்
தெரியும். இருந்தாலும் இத்தகைய நகைச்சுவை ரசிக்கப்படும்.

7. நகைச்சுவைக் கதைகளில் கேரக்டரை உருவாக்குவதில் மிக்க கவனம் வேண்டும். சற்று
வித்தியாசமான, கோணங்கியான, கொனஷ்டையான, வக்கிரமான, ஓரளவு மிகைப்படுத்தப்பட்ட கேரக்டர்களாக இருப்பது
நலம். எப்படி இருப்பினும், அவை கல்லில் செதுக்கிய மாதிரி தீர்மானமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு கேரக்டர்தான். அதை நாம் விவரிக்கும் விதத்தில் இருக்கிறது கதையின் வெற்றியும்
தோல்வியும்.

(இன்னும் வரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 24 ந.பிச்சமூர்த்தி.

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

வே.சபாநாயகம்


1. கற்பனை என்பது என்ன? இல்லாத தொன்றை உருவாக்குவதும் இருப்பதற்குப் புதிய பொருள் கூட்டுவதும் கற்பனையின் செயல். கருத்துக்கு வளர்ச்சியும், உருவமும் கொடுக்கும் சமாதானம்தான் கற்பனை. உலகத்தை மனோமயமாகப் பார்ப்பதுதான் கற்பனையின் முதல் வேலை – முழு வேலையும்கூட. வாழ்வை விவரிக்கும் சக்தி கற்பனை.
பலவாகத் தோன்றுவதை ஒருமைப் படுத்துவது ம் கற்பனைதான். கற்பனையின் துணைகொண்டெழுவது இலக்கியம்.

2. இலக்கியம் தோன்றுவதற்கு எந்த அளவு கற்பனை தேவையோ அந்த அளவு வாழ்வும் தேவைப்படும். உலகத்தில், வாழ்வில் நடப்பவற்றை எல்லாம் இலக்கிய கர்த்தரின் மனது பதிவு செய்து கொண்டே இருக்கிறது. இப் பதிவுகளைத்தான் கற்பனை பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளுகிறது. தள்ளுவதைத் தள்ளி வேண்டியவற்றைச் சேர்த்து, இலக்கிய சிருஷ்டியை உருவாக்குகிறது. அதனால்தான் வாழ்வுக்குப் போட்டியான உலகமாக அது அமைகிறது – திரிசங்குவின் உலகத்தைப் போல.

3. இலக்கியமென்பது ஒரு சிலருக்காக அல்ல. எல்லோருக்கும்தான் என்னும் அடிப்படை ஒப்புக் கொள்ளப்படுமானால் இலக்கிய நடையைப்பற்றி அதிக விவாதத்துக்கு இடமில்லை. சாதாரன ஜனங்களுக்கு இலக்கியத்தின் மூலம், இன்பத்தையும் புது திருஷ்டியையும் உண்டாக்க விரும்பும் இலக்கியகர்த்தன் நடைமுறை பாஷையைப் புறக்கணிக்க முடியாத். புறக்கணித்தால் தன் நோக்கத்தில் வெற்றிகாண இயலாது.

4. பாம்பு அடிக்கடிசட்டை உரித்துக் கொள்வதுபோல எழுத்தாளன் – தன்னைப் புதிசுபடுத்திக் கொள்ள வேண்டும்.

5. எனக்கு எப்போதும் உனர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாம் இடந்தான்.

6. தன்னை அறியப் பல வழியுண்டு. எழுத்தும் ஒரு வழி.

7. எழுத்தின் மூலமாக வாழ்க்கையைப் போட்டோ பிடிப்பது முடியாத காரியம். எழுத்தாளனுடைய மனமென்னும் மஞ்சள் நீர் பட்டால் சம்பவத்தின் கோலம் புதுமையாய் மாறிவிடும்.

8. இலக்கியத்தைப் பிரசாரம் ஆக்க முயண்றாலும், பிரசாரத்தை இலக்கியமாக்க முயன்றாலும், ‘விதைக்கும் ஆகாமல் கறிக்கும் உதாமல் போவது’ என்பார்களே, அதைப் போன்ற நிலையைத்தான் தமிழ் இலக்கியம் அடையும்…..வாழ்வின் கோட்பாடுகளை மறக்கும் இலக்கியத்துக்கு – மறுக்கும் சிருஷ்டித்திறனுக்கு அமரத்துவம் கிட்டுவது சந்தேகமே….

(இன்னும் வரும்)


.

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

வே.சபாநாயகம்



1. தம்பி, உள்ளத்தில் உண்மை இருந்தால், கையில் எழுதுகோலை எடுத்துக் கொள், எழுது.

2. கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம் ஒரு பத்திரிகை விஷயம் எது எழுதினாலும்,
வார்த்தை, சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.

3. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல், தனக்கும் அதிகம் பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும், சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது, வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது, ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் பழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும்.

4. சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும். முன் யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்து விட்டால் பின்பு சங்கடமில்லை. ஆரம்பத்திலே, மனதிலே கட்டி முடித்த வசனங்களையே எழுதுவது நன்று.

5. உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால், கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டி மாடு போல ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது.

6. வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்க வேண்டும். இவற்றுள் ஒழுக்கமானது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை.

7. நமது தற்கால வசன நடையில் சரியான ஓட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்தில் தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ்நடை எழுதும்.

(இன்னும் வரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

வே.சபாநாயகம்



1. நல்ல கலை வெளிப்பாடு, மனிதன் மீது அக்கறை மனிதனின் தவிர்க்கக்கூடிய மற்றும் தவிர்க்க இயலாத தவிப்புகளையும் பிரதிபலித்தே ஆகவேண்டும்’

2. ஒவ்வொரு கணமும் அனைத்து மனிதர்களுக்கும் ஏராளமான அனுபவங்க¨ளைத் தந்து விட்டுத்தான் போகிறது. ஆனால், இவற்றில் மிக மிகச் சிறிய பகுதியே மனம் கவனம் கொள்கிறது. இந்தக் கவனத்தை விசாலப் படுத்துதல் ஒரு சிறுகதாசிரியனுக்கு
மிகவும் அவசியம்.

3. ஒரு சிறுகதையில் உரையாடல் பகுதி எவ்வளவு இருக்க வேண்டும்? முதலில் கதையில் எப்பகுதி உரையாடல் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்? இது மிகத் தேர்ந்த எழுத்தாளர்களிடையே கூடக் குழப்பம் ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. சிறுகதையில் வசனத்தை விரயம் செய்வது கதையில் மிகுந்த சேதத்தை விளைவிக்கக் கூடியது.

4. நல்ல சிறுகதை ஆசிரியனுக்குப்பேச்சு வழக்கு உரையாடலை எந்த அளவுக்கு ஒரு படைப்பில் பயன்படுத்தினால் எதார்த்தச் சித்தரிப்பும் குறைவு படாமல் கதையும் வாசகருக்குப் பூரணமாகப் புரிவதாகவும் அமையும் என்ற பாகுபாடு தெரிய வேண்டும்.

5. கதைக்குச் சம்பந்தம் இருந்தாலும் இல்லாது போனாலும் தனக்குத் தெரிந்தது அனைத்தையும் ஒரு படைப்பில் புகுத்தி விடுவது நல்ல சிறுகதையை அமைக்காது. ஒரு நல்ல சிறுகதையில் அதிலுள்ள பேச்சு வழக்கோ தகவல்களோ தனித்து நிற்காமல் கதைப் போக்கோடு இணைந்து இருக்கும்படிச் செய்வதுதான் பக்குவமான
படைப்பாற்றலுக்கு அடையாளம்.

6. சிறுகதைக்குரிய தொழில் நுட்பங்களை ஒருவர் அறிந்து கொள்வதில் தவறில்லை. அது அவருடய மனித இன அக்கறையோடு இணைகையில் சிறந்த சிறுகதைகளுகு வழி செய்கிறது. இந்த அக்கறை இல்லையெனின், தொழில் நுணுக்கத் தேர்ச்சி முறையான அமைப்பு உள்ள கதையை படைக்க உதவும். ஆனால், அந்தப் படைப்பில் ஜீவன் இருக்காது.

(இன்னும் வரும்)


Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 15 – ஜெயமோகன்

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

வே.சபாநாயகம்



1. சிறுகதை என்பது ஒரு அசைவை மட்டுமே பதிவு செய்யும் காமிரா ஷாட் போல. ஒரே ஒரு அசைவுக்குள் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் ஒரு அசைவு மட்டுமே.

2. நாவல் என்பது எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டக் கூடிய காமிரா ஷாட்.

3. சிறுகதைக்கு கட்டுக் கோப்பு இருக்க வேண்டும் என்பது அதன் செவ்வியல் விதி. அதை மாற்ற முயன்று எழுதப்பட்ட சிறுகதைகளில் கலைவெற்றிகள் பல உண்டு ஆனால் அவை மெல்ல மெல்ல சிறுகதையின் வடிவத்தை இல்லாமல் ஆக்கி விட்டன.

3. சிறுகதையின் மௌனம் அது முடிந்த பிறகு உள்ளது.

4. நாவலின் மௌனம் அது விடும் இடைவெளிகளில் உண்டு. நிகழ்வுகள், சித்தரிப்புகள் நடுவே இடைவெளி.

5. கவிதையின் மௌனம் அதன் சொற்களுக்கும் படிமங்களுக்கும் இடையே ஆன இடைவெளியில் உள்ளது. இடைவெளி என்பது வாசகன் தன் கற்பனை மூலம் நிரப்பிக்கி கொள்ள வேண்டிய ஒன்று.

6. நாவல் ஒருமை கொள்ள முடியாது. ஏனென்றால் அது தன் பேசு பொருளை ‘முழுமையாக’ சொல்லிவிட வேண்டு மன்று முனைகிறது. அந்த எண்ணத்தை நம்மில் ஏற்படுத்துகிறது.

7. இலக்கண ரீதியாக நோக்கினால் ஒரு நாவலுக்கு சிறுகதையின் கூர்மை வந்துவிட்டதென்றாலே அது குறுநாவல் தான்.

8 .நாவலுக்கு உச்ச கட்டம் இருக்கலாம். ஆனால் இறுதி முடிச்சு இருக்குமென்றால் அதற்காகவே அதன் உடல் முழுக்க உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படியானால் அதன் உடலுக்குள் வாசக இடைவெளி நிகழ முடியாது. ஆகவே முடிவில் திருப்பங் கொள்ளும் நாவல்கள் சிறப்பாக அமைவதில்லை.

E mail ID : < v.sabanayagam@gmail.com >

Website: < http://www.ninaivu.blogspot.com >

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள்…………14 அ.ச.ஞானசம்பந்தன்

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

வே.சபாநாயகம்


1. ஒரு சிறுகதை நம் மனதில் தங்க வேண்டுமானால் இரண்டே வழிகள்தான் உண்டு. அதில் ஒப்பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும். இன்றேல் அதில் வரும் பாத்திரங்கள் நாம் மதித்து விரும்பும் ஒப்பற்ற பண்பு ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

2. ஆழமான உணர்ச்சியை வெளியிடுவதிலும் அதையும் சுருங்கச் சொல்லிப் பதிய வைப்பதிலும் சிறுகதை கவிதையை அடுத்து நிற்கிறது.

3. கதை உயிர் பெறுவது நிகழ்ச்சிகளால் அன்று ! அவற்றைக் கூறும் ஆசிரியன் பயன்படுத்தும் கற்பனைத் திறமும் கூறும் திறமுமே கதைக்கு உயிர் தருகின்றன. அவன் பொறுக்கிய நிகழ்ச்சிகள் கூறப்படும் முறையில் இருந்தே கதையின் உயர்வும் தாழ்வும் விளங்கும்.

4. ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சி சிறுகதையில் இருக்கக் கூடாது என்பதன்று. ஆனால், இரண்டு நிகழ்ச்சிகள் இருப்பின் அவற்றின் தொடர்பு நன்கு அமைக்கப் படல் வேண்டும். படிப்பவர் கவனம் இரண்டிலும் பட்டுத் தெறித்து விடாதபடி நிகழ்ச்சிகள் அமைக்கப்படல் சிறந்தமுறை. நிகழ்ச்சிகள அதிகப்படினும் ஒரு நடு நிகழ்ச்சி இருக்க, அதன் கிளைகளாக ஏனையவை அமைதல் நன்று.

5. சிறுகதைகளில் காணப்பெறும் நிகழ்ச்சி அன்றாடம் நாம் காணும் ஒன்றாகவே இருக்கலாம். ஆனால், வாழ்க்கைச் சூழலில் பட்டுக் ‘கருமமே கண்ணாயினார்’ என்று திரியும் நமக்கு அது பெரிதாகப் படுவதில்லை. ஆனால், தக்க சூழ்நிலையில் அதே நிகழ்ச்சி சிறுகதையில் இடம் பெறின் நம்மைக் கவர்ந்து விடுகிறது.

6. சிறுகதை எல்லைக்குள் அடங்கும் நிகழ்ச்சி வேண்டும். அந்நிகழ்ச்சியும் பூரணமாக அமைய வேண்டும். இனி அது வளர்க்கப்பட இயலாது; மேலும் வளர்த்துச் சென்றால் பயன் ஒன்றுமில்லை என்று கூறத் தக்க நிலையில் அது முழுவதாக அமைந்திருத்தல் வேண்டும். இம் முழுத்தன்மை கதையின் எல்லைக்குள் அமைந்து விட்டால் அன்றிச் சிறப்பில்லை.

7. சிறுகதை எந்த ஒன்றைப் பற்றி விவரிக்க எழுந்ததோ அது தவிர ஏனையவற்றில் நம் கவனத்தை ஈர்த்தல் கூடாது. குறிக்கோளிலும் அடைவிக்கும் பயனிலும் ஒருமைத் தன்மை இருப்பதே சிறுகதையின் சிறப்புக்கு அடையாளம்.

8. எங்கே ஒரு சொல்லானது கற்பனையைத் தூண்டும் சக்தியோடு காணப்படு கிறதோ, எங்கே ஒரு சொல் ஒரு சம்பவத்தை அல்லது படத்தை அப்படியே நினைவிற்குக் கொண்டு வருகிறதோ, எங்கே ஒரு சொல் கற்பனைச் சக்திக்கு விருந்தளிக்கிறதோ, அங்கே, அந்தச் சொல் தோன்றும் இடத்திலே, நாம் கவிதையைக் காண்கிறோம்.

(இன்னும் வரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள்………..(10) த.ஜெயகாந்தன்

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

வே.சபாநாயகம்



1. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்குப் பகைப்புலனாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே. சமுதாயத்தின் தனிப்பட்ட முறையில் தீவிர சுயஉணர்வு (இண்டென்ஸ் ஸெல்·ப்பீலிங்) இல்லை என்பேன். ஆனால் எழுத்தாளனுக்கு இது இன்றியமையாதது. அவனுடைய படைப்புகளில் சமுதாய நோக்கமே முதலிடம் பெறவேண்டும். உருவம், உத்தி முதலிய நுணுக்கங்கள் உள்ளடக்கத்தைப் பொறுத்தே அமைகின்றன. சமுதாயத்தின் வாழ்க்கைமுறையினால், ஏற்றத்தாழ்வுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி எழுதுவது அவசியம் என்பேன்.

2. சும்மாவானும் ‘கிளி ‘கீகீ’ என்று கத்தியது, நதி சலலத்து ஓடிக்கொண்டிருந்தது, காற்று மந்தஹாசமாக வீசிக் கொண்டிருந்தது’ என்று எழுதிக் கதை பண்ணிக் கொண்டிருப்பதைவிட, எங்கெங்கே இதயங்கள் எப்படி எப்படியெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது என்று எடுத்துக் காட்டி, நமது சமூகத்தின் பெரிய பீடங்களை அச்சுறுத்தி எச்சரிக்கவேண்டுவது இக்கால இலக்கியத்தின் தவிர்க்கவொண்ணாத கடமையாகும்.

3. வாழ்க்கை என்பது காதல் மட்டுமே அல்ல; ஏனென்றால் இங்கு நம்மில் பலர் வாழவே இல்லை. காதலென்பது நமது இளைஞர்களைப் பொறுத்தவரை வெறும் மனப் பிரமைதான். சமூகத்தில் ‘வாழாதவர்களி’ன் வாழ்வுக்கு இலக்கியத்தில்கூட இடமே இல்லை. காதலித்தவர்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் காதலிக்க முடியாதவனைப் பற்றி யார் எழுதுவது? பூர்ண சந்திரனைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் அமாவாசை இருளில் அக்கம்பக்கத்தாருக்குத் தெரியாமல் சோரம்போகும் கைம்பெண்களைப் பற்றி யார் எழுதுவது?

4. கவிமனம் கொண்டவனுக்கு வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் கவிதை தென்படும். அதுபோலவே, நீண்ட நெடிய இவ்வாழ்க்கைக்காதை சிறுகதை மனம் கொண்டவனுக்கு கதைகதைகளாய்ப் பூத்துச் சொரியும். காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்.

5. ஓர் ஒலி, ஒரு சொல், யாரோ யாரிடமோ எதற்கோ சொன்ன அசரீரி போன்றதொரு வாக்கு, வேகமாய்ப் போகிற ஒரு வாகனத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிற போது, ஒரு நொடியில் கண்ணில் பட்டு மறைந்த காட்சி இவையாவும் ஒரு கவியின் உள்ளத்தில் பட்டுப் பிரதிபலிப்பதால் ஏற்படும் ஒரு வடிவமே நவீனகாலச் சிறுகதை ஆயிற்று; ஆகிவிடமுடியும்.

6. ஒரு நல்ல நோக்கமில்லாமல் எந்த நல்ல கலை வடிவமும் வர முடியாது. சிறுகதை எழுதவேண்டும் என்ற ஆசையினால் எழுதப்படுவது சிறுகதை ஆகாது. வடிவ அமைப்பில் அது சிறுகதை என்று என்னதான் எழுதுபவனாலும், பத்திரிகைக்கார னாலும் நிறுவப்படினும், அது திரும்பவும் படிக்கத்தக்க சிறப்புடைய சிறுகதை ஆகாது. ஏன்? அதில் ஒரு நன்னோக்கமில்லை. அதன் நோக்கமே அது அதுவாக இருப்பது என்று அமைந்துவிட்டால், அது செயல் திறனற்ற சிறுகதையின் சிதைந்த வடிவமாகவே எஞ்சி நிற்கும்.

7. ‘காட்டும் வையப் பொருள்களில் உண்மை கண்டு’ சேர்க்கும் சாத்திரம் சிறுகதை ஆகும். இதில் கற்பனைக்கு இடமே இல்லை. வாழ்க்கை காட்டுவதைக் கொண்டு நாம் காட்ட விரும்புவதை அதன் முலமே உணர்த்துகின்ற ஒரு முயற்சியே என் அனுபவத்தில் சிறுகதைக்கு ஆதாரம் ஆகும்.

8. சிறுகதைக்கு அடிப்படையும், கருவும், வித்தும் ஒரு கருத்தே அகும். அந்தக் கருத்து எழுதுபவனின் மனத்தில் எவ்வளவு ஆழமாக கூர்மையாகப் பதிந்து, பாதித்து அவனை அலைக்கழிக்கிறதோ அந்த அளவு அந்தச் சிறுகதையும் ஆழமானதாய், கூர்மையாய்ப் படிப்பவர் நெஞ்சத்தில்- எப்படி எழுதுபவனின் நெஞ்சத்தில் எழுந்து அலைக்கழித்ததோ, அதனினும் ஆயிரம் மடங்கு அதிகமான அலைகளையும் பாதிப்புகளையும் – ஏற்படுத்தி அந்த மூலக் கருத்தை முழுமையாகப் பதிய வைத்து விடும்.

9. ஒரு சிறுகதை சிறந்ததாயின் அதைப் படித்தவர் வாழ்நாள் முழுதும் அந்தச் சிறுகதையை மறத்தல் ஏலாது. எழுதியவனின் பெயர்கூட மறந்துவிடும்; கதையில் வரும் பாத்திரங்கள் பெயர்கூட நினைவில் நிற்காமல் போய்விடும். ஆனால், அது சொல்ல வந்த கருத்தை இலக்கிய வாசகரின் இதயத்திலும் இலக்கியத்தின் சரித்திரத்திலும் நிரந்தரமாய்ப் பதித்துவிடும்.

10.சிறந்த சிறுகதைகளையும் இலக்கியங்களையும் பயில்வதன் நோக்கம் தாமும் அது மாதிரிச் சிறுகதைகளை எழுத வேண்டும் என்பதாக அமைந்து விடலாகாது.
அந்தச் சிறந்த சிறுகதையாசிரியர்களின் நோக்கமும் அதுவல்ல. அக்கதைகளைப் பயில்வதன் மூலம் வாசகர்களின் – அதாவது மக்களின் – அறிவும் மனமும் உயர்ந்து சிறக்கவேண்டும் என்பதே ஆகும்.

11. சிறுகதை என்பது சிறிய, குறுகிய சின்ன உள்ளங்களிலிருந்து உருவாக முடியாது. கதை எழுதுவதற்கு அறிவும், அனுபவமும், மனிதர்கள்பால் அன்பும் எந்த ஒரு மகா ஞானிக்கும் இணையாக எந்த ஒரு சாதாரண மனிதனுக்கு அமைந்து விடுகிறதோ அவன் ஒரு நல்ல சிறுகதையை எழுதிவிட முடியும்.

12. ‘பொழுது போக்குக்காக இலக்கியம்’ என்கிற வாதம் மிகவும் பொல்லாதது. பொழுது போக்குக்காக, காதல் என்ற பெயரில் ஆண்-பெண் உறவு உறவு கொள்ளுகிற போக்கு எப்படிஒருவனை அல்லது ஒருத்தியை ஒழுக்க வீழ்ச்சியில் கொண்டுபோய் விடுமோ அதே போன்ற வீழ்ச்சியில் இந்தப் ‘பொழுது போக்குக்காக இலக்கியம்’ என்கிற வாதம், கொண்டுபோய் விட்டுவிடும்.

(இன்னும் வரும்)
E mail ID : < v.sabanayagam@gmail.com >

Series Navigation

எழுத்துக்கலைபற்றி இவர்கள்………(9) – இந்திராபார்த்தசாரதி.

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

வே.சபாநாயகம்



1. ஒரு நல்ல சிறுகதையை எழுதுவது எப்படி என்பதற்கு ‘யூரிடைன்யனாவ்’ என்ற ரஷ்ய எழுத்தாளர் ‘கோடுகள் போடாத நீண்ட வெள்ளைத் தாளில் எழுதாதீர்கள். வடிவத்தில் மிகச் சிறிய குறிப்புப் புத்தகத்தில் எழுதுங்கள்’ என்று யோசனை சொல்கிறார். மாப்பசானின் சிறுகதைகள் காகிதப் பற்றாக்குறை காலத்தில் எழுதப் பட்ட காரணத்தால்தான் சிறப்பாக இருக்கின்றன என்று ஒரு விமர்சகர் சொல்கிறார்.

2. ஒருவன் வாசகன்மீது நம்பிக்கை வைக்காமல் தனக்குத்தானே சமுதாயத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் உரக்கச் சிந்தித்துக் கொண்டிருந்தானானால் அது இலக்கியமன்று.

3.செயலூக்கத்துக்கு உதவி செய்யாமல் வெறும் ஏமாற்றத்தை மட்டும் சொல்லிச் செல்லும் கதைகள் எனக்கு உடன்பாடன்று. சமூகச் சிந்தனையில் ஆக்கபூர்வமான மாற்றங்களை விளைவிக்க முற்படாத ஏமாற்றங்கள் இலக்கியமாவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

4. ஒரு நல்ல சிறுகதை, எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே நிகழ்கிற உரையாடலாக இருக்க வேண்டும். வாசகன் அக்கதையைப் படித்து முடித்த பிறகு
அவன் சிந்தனையைத் தூண்டும் முறையில், அதன் கருத்து எல்லை அதிகரித்துக் கொண்டு போதல் அவசியம். ஒரு பிரச்சினையை மையமாக வைத்துக் கொண்டு எழுதப்படும் கதைகளுக்குத்தாம் இந்த ஆற்றல் உண்டு. பிரச்சினையை நேரடியாகச் சுட்டிக்காட்டுவது தினசரிப்பத்திரிகைகளின் வேலை. இலக்கியத்தின் பரிபாஷையா கிய அழகுணர்ச்சியோடு பிரச்சினையைச் சொல்வதுதான் ஒரு சிறந்த படைப்பாளி யின் திறமை.

5. ஒரு கதை தன் உள்ளடக்க வலுவிலேயே ஒரு பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த வேண்டுமே தவிர, அக்கதையை எழுதுகிறவனுடைய இலக்கியப் புறம்பான கட்சி அல்லது குழுச்சார்பினால் விளைகின்ற உரத்த குரலினால் அல்ல. உரத்த குரல் இடைச்செருகலாய் ஒலித்துவிடக்கூடிய வாய்ப்புண்டு. வெறும் ஏமாற்றத்தையும், விரக்தியையும், தோல்விமனப்பான்மையையும் இலக்கியமாக்கி விடக்கூடாது.

6. ஒரு எழுத்தாளன் எழுத முனையும் போது தன்னை நேரடியாகப் பாதித்த விஷயங்கநளை எழுதுகிறான். அவன் எந்த அளவு பாதிக்கப் பட்டிருக்கிறான் என்பதை அவனது கல்வி, வளர்ந்த சூழ்நிலை, பண்பாட்டுச்சூழல், மனப்பரிமாணம் ஆகியவைகளே முடிவு செய்கின்றன. அவன் எப்படி உருவாகி இருக்கிறானோ அந்த அளவிலிருந்து பிரதிபலிப்பு செய்கிறான். தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.
வெளிப்படுத்திக் கொள்கிறபோது அது பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயமாகிறது. பகிர்ந்துகொள்ளல் வருகிறபோதே வடிவம் வந்து விடுகிறது. உரையாடல் தேவையாகிறது. அது தனிமொழியாக இருக்க முடியாது.

7. புரியாமல் எழுதுவதை ஒரு ஸ்டைல் என்று கொள்ளமுடியாது. ”பத்து பேருக்கு மேல் புரிந்து கொண்டால் அது எழுத்தே இல்லை” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ‘ஆயிரம் பேருக்கு மேல் தனது பத்திரிகையை படித்தால் நிறுத்தி விடுவேன்’ என்று யாரோ சொன்னாராம். ஒரு கஷ்டமான விஷயத்தைச் சுலபமாகச் சொல்ல முடியாதா? பெட்ரண்ட் ரஸ்ஸலைப் படித்தால் சாதாரண மனிதன் கூட புரிந்து கொள்ளலாம். அறிவிலே தெளிவு உள்ளவர்கள் எந்த விஷயத்தையும் எளிமையாகச் சொல்ல முடியும். அது இல்லாதவர்கள் குழப்புகிறார்கள்.

8. இலக்கியம் இலக்கியத்துக்காக, கலை கலைக்காக என்பதெல்லாம் பித்தலாட்டம். பழைய காலச் சிந்தனை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் Walter parter ஆரம்பித்தான் Art for art sake என்று. தூய இலக்கியம் என்ற ஒன்று கிடையாது. அடுத்த வீட்டுக்காரனைப்பற்றி நான் எழுதும்போதே அது ஒரு சமூகச் செயலாகிவிடுகிறது.

(இன்னும் வரும்)


E mail ID : < v.sabanayagam@gmail.com >

Website: < http://www.ninaivu.blogspot.com >

Series Navigation