நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)

This entry is part of 35 in the series 20060127_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘இந்த உலகிலே இரண்டு விதமானத் துன்பமய விளைவுகள் மட்டுமே நிகழ்கின்றன! ஒன்று: இச்சைவுடன் வேண்டிச் செல்வது ஒருவனுக்குக் கிடைக்காமல் போவது! மற்றொன்று: இச்சையுடன் தேடிச் செல்வது, ஒருவனுக்குக் கிடைத்து விடுவது. ‘

‘நம்மில் பலர் கழிவோடையில் மூழ்கிக் கிடக்கிறோம்! ஆனால் நம்மில் சிலர் மட்டும் வானை நோக்கி விண்மீன்களைப் பார்க்கிறோம். ‘

‘முதியோரானதும் எல்லாவற்றையும் நம்புகிறார்! மத்திம வயதில் ஒவ்வொன்றையும் சந்தேகிக்கிறார்! வாலிப வயதில் அனைத்தையும் அறிய முனைகிறார். ‘

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

உன் தொட்டி நீரை நீ மட்டும் குடி! ஊறுகின்ற

உன் கிணற்று நீரை நீ மட்டும் அருந்து!

பொங்கி வழிந்துன் ஊற்றுகள் தெருவில் ஓடினால்,

பொதுப் பாதையில் கரை புரண்டோ டினால்,

அதுவும் உனக்கே உரியதா கட்டும்! அந்நீரை

வேற்றானுடன் பகிர்ந்து கொள்ளுதல் தவறு!

உன் புனித ஊற்றுநீர் ஆசிகள் பெறட்டும்!

உன்னரும் மனையாள் உனக்கு மட்டும் உரியவள்!

அன்புக் குரிய உன் எழில் மனையாளின்

பொன்னுடல் உனக்கு மட்டும் சொந்தம்!

வஞ்சக மங்கையர் வசீகர உடல் தேடித்

தஞ்சம் அடைதல் தவறு! தவறு!

பைபிள் பழமொழியிலிருந்து

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன! மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது. ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்! சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது. போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.

****

இரண்டாம் காவலன்: பாருங்கள், ஸிரியா வாலிபன், அப்பாவி தன்னையே குத்திக் கொண்டான்! பாவம், ஸாலமி மீது காதல் கொண்டவன் மாண்டு விட்டான்! பொங்கி எழுகிறது குருதி! மாண்டது ஸாலமியின் காதலன் மட்டு மில்லை! மாண்டது மன்னரின் காப்டன்! சமீபத்தில்தான் அவனை ஏரோத் மன்னர் காப்டனாய் நியமித்தார்! ஆறாய் ஓடும் குருதியைக் கண்டால் மயக்கம் வருகிறது எனக்கு!

ஜொஹானன்: [அலறிக் கொண்டு, கீழே வாலிபன் பக்கத்தில் அமர்ந்து] அடிப் பாபி மகளே! உன்மேல் உயிரை வைத்திருக்கும் உன்னருமைக் காதலனைக் கொன்று விட்டாயே! உன் பரம்பரை அனைத்தும் பாபப் பிறவிகளா ? உங்கள் பரம்பரை நிழல் படும் இடமெல்லாம் பாபத்தின் கறைகள்தானா ? அவனிட்ட எச்சரிக்கை எல்லாம் உன் செவியில் படவில்லையா ? கடைசியில் மரண தேவனின் நிழல் உன் காதலன் மீதா விழவேண்டும் ? பாபத்தைச் செய்த பாவையே, உன் பரம்பரைக்கே பாபத் தீர்ப்பு கிடைக்குமா ? பாபத்தைச் சுமக்கும் உன்தாய், ஒரு பாபப் பிறவியைத்தான் பெற்றிருக்கிறாள்!

[ஸாலமி சற்று கவலையுடன் வாலிபனை உற்று நோக்குகிறாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகுகிறது]

ஸாலமி: [வருத்தமுடன் வாலிபன் அருகில் குனிந்து] ஆம் வாலிபன் என்னைக் காதலித்தான்! அது உண்மைக் காதல்தான்! ஆனால் வாலிபன் சாவுக்கு என்னைக் காரணம் காட்டாதீர்! என் மீது பழியைப் போடாதீர்! என்மேல் காதல் கொண்ட வாலிபனுக்காக என் கண்கள் கண்ணீரை வடிக்கின்றன! அவன் உடம்பிலிருந்து குருதி வெளியேறும் போது, என்னுடலில் குருதி கொதிக்கத்தான் செய்கிறது! எனக்காக அவன் உயிரை ஏன் போக்கிக் கொள்ள வேண்டும் ? [ஜொஹானனைப் பார்த்து] நான் ஒருவனைத்தான் நேசிக்க வேண்டுமா ? அதுவும் அவனை மட்டும்தான் நான் காதலிக்க வேண்டுமா ? என் மனம் மாறும் போது என் காதற் கண்கள் வேறொருவன் மீது பாய்கின்றன! என்னால் அதைத் தடுக்க முடியவில்லை! வாலிபன் அதை தடுக்க முனைந்தான்! அவன் உயிரை அழித்துக் கொண்டாலும், என் மனம் ஏனோ மாறவில்லை! போதகரே! உங்கள் மீது எனக்குப் பரிவும், பாசமும், பற்றும் எப்படியோ உண்டாகி விட்டது! வாலிபனுக்கு அது ஏனோ பிடிக்க வில்லை! நானதற்கு என்ன செய்வேன் ? நான் ஒருவனை விரும்புவதும், அவனை அடுத்த வினாடி வெறுப்பதும் என்னுரிமை! சிறிது நேரத்துக்கு முன்பு, வாலிபனைக் காதலித்தேன்! அக்காதல் அத்தமனம் விட்டது! பொழுது புலர்வதுபோல் எனது புதிய காதல் உதயமாகி விட்டது! ஆனால் நானிப்போது விரும்புவது உங்களைத்தான்! உங்கள் ஒருவரைத்தான்! [எழுகிறாள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] நானிங்கு அடுத்து விடப் போகும் கண்ணீர் உங்களுக்குத்தான்!

ஜொஹானன்: [எழுந்து நின்று] துரோகி ஏரோதியாஸின் புதல்வியே! உன் கண்ணீர்க் கணைகளை என் மீது ஏவி விடாமல், உன் கைவசமே வைத்துக்கொள்! என்ன நடந்து விட்டது என்று உனக்குப் புரிய வில்லையா ? உன் மனம் எங்கோ மேகத்தில் மிதந்து கொண்டிருக்கிறது! அது அறுந்து அடுத்து யார் மீது விழப் போகிறதோ ? நான் சொன்னது நினைவில் இருக்கிறதா ? அரண்மனையில் மரண முரசம் அடிப்பது என் காதில் விழுந்த தென்று கூறினேன்! ஆனால் அது உன் காதில் விழவில்லை! மரண தேவன் நிழல் மாடிக்கு வந்துவிட்டது என்று எச்சரித்தேன்! அதுவும் உனக்குப் புரியவில்லை! மரண தேவன் ஓருயிரைப் பிடித்த பின்பும், மாடியை விட்டு ஏனோ அவனது நிழல் இன்னும் போகவில்லை!

ஸாலமி: போதகரே! மரண தேவனுக்கு நான் அஞ்ச வில்லை! யாருக்கும் நானொரு வஞ்சகம் செய்ய வில்லை! என் மீது உங்கள் சாபம் விழ வேண்டாம்! உமது புனித உதடுகள் என் அதரங்களை ஈர்க்கின்றன! அவற்றை முத்தமிட எனக்கு அனுமதி கிடைக்குமா ?

ஜொஹானன்: வஞ்சகி வயிற்றில் உதித்த மகளே! தள்ளி நில்! உன்னைப் பாபத்திலிருந்து விடுவிப்பவன் நான் அல்லன்! உத்தமர் அவரைத் தவிர உன்னைக் காப்பவர் யாருமில்லை! போ! என் பின்னால் வராமல் அவரைத் தேடிப் போ! காலிலீயிக்குப் போகும் படகில் அவர் ஏறி உள்ளார். சீடரும் அவருடன் செல்கிறார். கடல் கரைக்குச் சென்று நீ மண்டியிட்டு, அவர் பெயரை உச்சரித்து அன்புடன் விளித்திடு! அழைப்பவரிடம் வருபவர் அவர். உன்னை நோக்கி வரும் போது, உன் சிரம் தாழ்த்திப் பாப மன்னிப்புக் கேள்!

ஸாலமி: போதகரே! நானென்ன பாபம் செய்தேன், புனிதரிடம் மன்னிப்புக் கேட்க ? உங்களை நான் நேசிக்கிறேன்! அது ஓர் பாபமா ? சொல்லுங்கள், அது ஓர் குற்றமா ? ஸாலமியை ஏற்றுக் கொள்வீர்! [அருகில் செல்கிறாள்]. என்னைப் பாருங்கள்! என் அழகைப் பாருங்கள்! உங்கள் வாலிபத்தை வீணாக்கலாமா ?

ஜொஹானன்: வாலிபப் பெண்ணே! பொய்யான வாசகத்தை என்னிடம் பேசாதே! உன் நேசம் பொல்லாதது! உன் பாசம் வில்லங்க மானது! போதகனை நேசிக்க உனக்குத் தகுதி யில்லை! என் தேகத்தை நீ நேசிக்கிறாய்! தேய்ந்து மூப்புறு மிந்த உடலை நீ மோகிக்கிறாய்! இல்லற வாழ்வில் பந்தமற்ற நான் ஒரு பரதேசி! அவன் மேல் பாசமும், பற்றும் வைப்பது பாபச் செயல்! அந்த உத்தமர்தான் உன் மனதைச் சுத்தம் செய்பவர்!

ஸாலமி: ஸாலமி என்று என்னை ஆசைடன் அழைத்தால் என்ன ? வாலிபப் பெண்ணே என்று விளிப்பது மனப் புண்ணை உண்டாக்குகிறது! ஜொஹானன், ஏற்றுக் கொள்வீர் என்னை! என்னை ஏற்றுக் கொண்டால், உமக்கு விடுதலை கிடைக்க நான் வழி செய்வேன்! சிறைக்குள் விலங்கைப் போல் செத்துப் போக வேண்டாம்!

ஜொஹானன்: பாபப் பெண்ணே! தூரச் செல்! எனக்குக் குடும்ப வாழ்க்கையும் ஒரு சிறைதான்! சின்னச் சிறையை விட்டுப் பெரிய சிறையில் என்னைத் தள்ளுகிறாய்! உன் பெயரை என்னாவால் உச்சரிக்க மாட்டேன்! என் பெயரை நீயும் உரைக்கத் தகுதியற்றவள்! என்னை விடுவிக்க உன்னால் முடியாது! எனக்கு விடுதலை அளிக்கும் வேந்தன் மேல் உலகில் உள்ளான்! அவன் ஒருவனே விடுதலை தர வல்லவன்! பாபப் பட்ட அன்னை வயிற்றுப் பெண்ணே, என் கோபத்தைக் கிளறி விடாதே! இங்கு நான் இனியும் நிற்கக் கூடாது! நான் கீழே போகிறேன்! [ஜொஹானன் கீழே படிகளில் இறங்க முனைகிறார்]

ஸாலமி: நான் முத்தமிடத் தகுதியற்றவள் என்றா என்னை ஒதுக்கிச் செய்கிறீர்! ஒரு முத்தம் அளித்து விட்டுப் போவீர், போதகரே! [ஜொஹானன் முன் சென்று கைகளை நீட்டித் தடுக்கிறாள்]

[ஸாலமியின் கைகளை ஒதுக்கிக் கொண்டு, ஜொஹானன் படிகளில் கீழிறங்கிச் சிறைக்குள் நுழைகிறார். காவலர் அவரை பின் தொடர்ந்து, கைவிலங்கு, கால் விலங்கிட்டுக் கதவைப் பூட்டுகிறார்]

முதற் காவலன்: [மரணமடைந்த வாலிபனைப் பார்த்து] வாலிபன் உடலைத் தூக்கிப் போக வேண்டும். ஏரோத் மன்னருக்குத் தெரிந்தால் ஆபத்து! செத்த உடலைப் பார்த்தால் மன்னர் சீற்ற மடைவார்! சீக்கிரம் உடலைத் தூக்கி அப்புறப் படுத்த வேண்டும். அல்லது எங்காவது முதலில் மறைக்க வேண்டும்.

ஏறோதியாஸின் காவலன்: [மனம் வருந்தி] ஸிரியா வாலிபன் எனக்குச் சகோதரனைப் போன்றவன்! சொல்லப் போனால் சகோதரனை விட பாச பந்தம் உடையவன். மாலை வேளைகளில் ஆற்றோரமாய் பலமுறை உலாவி வந்திருக்கிறோம். அவனது குரல் இனியது, புல்லாங்குழல் போல.

இரண்டாம் காவலன்: ஆம், நீ சொல்வது சரிதான். உடலை எங்காவது மறைக்க வேண்டும். ஏரோத் மன்னர் கண்ணிலும் படக் கூடாது! மரணச் செய்தி மன்னர் காதிலும் விழக் கூடாது!

முதற் காவலன்: மேல் மாடிக்கு ஏரோத் மன்னர் வர மாட்டார். வந்தாலும் அவர் கண்ணில் படாமல் உடலை மாடியிலே மறைக்கலாம்! ஆனால் குருதிக் கறையை எப்படித் துடைப்பது ? காய்ந்து போகும் சிவப்புக் கறையை முதலில் கழுவ வேண்டும்.

இரண்டாம் காவலன்: [மெதுவான குரலில்] எதுவும் பேசாதே! அதோ ஏரோத் மன்னரும், அரசியும் மேல் மாடிக்கு வருகிறார்கள்! சும்மா வெறும் துணியைப் போட்டு முகத்தை முதலில் மூடு.

மூன்றாம் காவலன்: [விரைப்பாக நின்று அறிவிக்கிறான்] மாண்புமிகு மன்னர் வருகிறார்! மாண்புமிகு அரசியும் வருகிறார்! ஒதுங்கி ஓரத்தில் நில்லுங்கள்.

[ஏரோத், ஏரோதியாஸ் மாடிக்கு வருகிறார்கள். அனைவரும் எழுந்து நின்று தலை தாழ்த்தி வணங்குகிறார். ஸாலமி ஓரத்தில் ஒதுங்கித் தம்பதிகளை பார்த்தும், பார்க்காமலும் முகத்தை திருப்பி வேறு திசையில் நோக்குகிறாள்]

ஏரோத்: [அங்கு மிங்கும் நோக்கி] எங்கே ஸாலமி ? மேல் மாடிக்கு ஏறி வந்தவள் எங்கே போய்விட்டாள் ?

நடன மாளிகைக்கு வரும்படி நான் சொல்லி யிருந்தேனே! [அவளைக் கண்டு] ஏரோதியாஸ்! அதோ பார்! அங்கே யிருக்கிறாள், ஸாலமி!

ஏரோதியாஸ்: [சற்று கோபத்துடன்] ஸாலமி ஏன் தேட வேண்டும் ? என் மகள் மீது உமது கண்கள் விழக் கூடாது! அவள் உங்களுக்கும் மகளைப் போன்றவள்! எப்போதும் அவளை நீங்கள் நோக்கும் பார்வை எனக்குப் பிடிக்கவில்லை! உங்கள் மோகக் கண்கள் அவள் மீது பட வேண்டாம்.

ஏரோத்: ஸாலமி உனக்குப் புதல்வி! எனக்குப் பிறந்தவள் இல்லை! அவளைப் போல் ஓர் அழகுத் தேவதையைப் பெற்ற உனக்கு என் வெகுமதி உண்டு.

ஏரோதியாஸ்: வெகுமதி வாங்கிக் கொண்டு என் பெண்ணை உமக்கு விற்பதா ? கேவலமாக யிருக்கிறது! என்னை ஏமாற்றியது போல் என் மகளையும் ஏமாற்றிவிட வேண்டாம்! உமது கண்களில் காம இமைகள் நடன மிடுகின்றன! உம்மிடமிருந்து ஸாலமியை எப்படிக் காப்பது என்று தெரியவில்லை எனக்கு.

ஏரோத்: அஞ்சாதே! உன் மகளுக்கு எந்த விபத்தும் நேராது! அவளது நளின நடனத்தைக் காண விரும்புகிறேன். வேறெதற்கும் நானவளைத் தேடவில்லை. ரோமாபுரி விருந்தினருக்கு ஸாலமியின் நளின நடனத்தைக் காட்ட விரும்புகிறேன்! .. அதோ நிலவைப் பார்! நிலவைப் பார்த்தால் ஓர் விபரீதக் காட்சி தெரிகிறது! அப்படி உனக்குத் தெரியவில்லையா ? காதலனைத் தேடி அலையும், ஒரு கன்னியைப் போல் உலவுகிறது, நிலவு! ஆடை அணியாமல் அமண நிலையில், உலா வருகிறது நிலா! நிர்வாண நிலவுக்கு உடை அணிய, முகில் துணியைக் கொண்டு நெருங்குகிறது. ஆனால் நிலவு உடை அணியாமல் நகர்ந்து கொண்டே செல்கிறது. குடிகாரி போல் மேக மண்டலத்தில் தடுமாறுகிறது நிலவு! காதலனைக் கவர நிலவு தன்னுடலைக் காட்டி வருவது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா ?

ஏரோதியாஸ்: அப்படித் தெரிய வில்லை எனக்கு! நிலவு நிலவாக உலவுகிறது! நிலவு குடிகாரி போல் தெரியவில்லை! குடிகாரர் போல் உளறுபவர் நீங்கள் ஒருவர்தான்! நிர்வாண வடிவில் இருப்பது நிலவில்லை! அமணமா யிருப்பது உங்கள் உள்ளம்! உங்கள் கண்கள் நிர்வாணத்தைத் தேடி அலைகின்றன! வாருங்கள் கீழே போவோம்! இங்கு வேலை எதுவுமில்லை நமக்கு!

ஏரோத்: நீ கீழே போ! நானிங்கு இளந் தென்றலை நுகர வேண்டும். கீழே மாளிகை சூடேறி விட்டது! சூட்டைத் தாங்க முடியவில்லை என்னால்! புதிய ஒயினைச் சுவைக்க வேண்டும். புதிய ஸிஸிலி ஒயினை, ஸீஸரின் பிரதான அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். ஸாலமி அவர் முன்பாக நடனமாடி அவரைப் பூரிக்கச் செய்ய வேண்டும்.

ஏரோதியாஸ்: உங்களைப் பூரிக்கச் செய்ய வேண்டும். எனக்கு நன்றாகத் தெரியும், நீங்கள் ஏனிங்கு தங்க நினைப்பது என்று. ஸீஸரின் அதிகாரிகளை மயங்க வைத்து ஏதோ பெற முயற்சி செய்கிறீர். ஸாலமியைப் பகடைக் காயாக உருட்டி, அவரைச் சூதாட்டத்தில் வெல்ல நினைக்கிறீர்!

ஏரோத்: வேண்டாம், கீழே போகாதே, வா! என்னருகில் வந்து நில்! அப்போதுதான் ஸாலமி நம் பக்கத்தில் வருவாள்! பொங்கி வரும் பெரு நிலவு போல, பூரித்த அவள் மேனியைக் கண்டு வீனஸ் அணங்கு கூட மோகிப்பாள்! அழகுப் போட்டியிட வெட்கப் படுவாள்! [நடக்கும் போது செங்குருதியில் கால் வழுக்கி] என்ன ? இங்கே செங்குருதி ஆறாய் ஓடி யிருக்கிறது ? அது ஒரு கெட்ட சகுனம் அல்லவா ? இது மானிடக் குருதியா ? அல்லது விலங்கின் குருதியா ? …. [சற்று உற்று நோக்கி] ஆ! ஈதென்ன உடல் ? குத்துப் பட்டுக் கிடக்கிறதே ? செத்த உடலா என் காலடியில் ? [காவலரைப் பார்த்து] செத்துக் கிடப்பவன் யார் ? மகத்தான விருந்தினர் முன்பு இப்படி ஒரு மரணக் காட்சியா ? யாரிவன் ? [காவலரைப் பார்த்து] முகத்துணியை நீக்கு! யாரென்று நான் பார்க்க வேண்டும்!

முதற் காவலன்: [முன் வந்து வணங்கி] மாண்புமிகு மன்னரே! நமது காப்டன்! ஸிரியா வாலிபன்! மூன்று நாட்களுக்கு முன்பு தாங்கள் காப்டனாய் நியமித்த மாவீரன், நாராபாத்!

ஏரோத்: அவனைக் குத்திக் கொல்லக் கட்டளை யிட்டதாக நினைவில்லை எனக்கு!

இரண்டாம் காவலன்: மாண்புமிகு மன்னரே! தன் கத்தியால் தானே தன்னைத் குத்திக் கொண்டார்! யாரும் நம் காப்டனைக் கொல்ல வில்லை!

ஏரோத்: என்ன காரணம் ? எதற்காகத் தன்னையே குத்திக் கொண்டான் ? வியப்பாக யிருக்கிறது! நமது காவலருக்குக் காப்பாளியான காப்டன், மரணம் அடையக் காரண மிருக்க வேண்டும்! ஏன் குத்திக் கொண்டான் ? நடந்ததை நான் அறிய வேண்டும்!

இரண்டாம் காவலன்: மாண்புமிகு மன்னரே! காரணம் எங்களுக்குத் தெரியாது. தன் கையால் குத்திக் கொண்டதை மட்டும் நாங்கள் பார்த்தோம். காரணம் அறியோம்!

ஏரோத்: ஆச்சரியமாய் இருக்கிறதே! உங்களுக்குத் தெரியாதா ? அப்படியானால் யாருக்குத்தான் தெரியும் ?

முதற் காவலன்: போதகர், ஜொஹானனுக்குத் தெரியும்!

ஏரோத்: என்ன போதகரா ? கீழே இருட்டுச் சிறையில் விலங்கிடப் பட்டுக் கண்கள் அவிந்த போன அப்பாவிப் போதகரா ? அவருக்கு எப்படித் தெரியும் ? நிச்சயமாக அவர் காரணமாக யிருக்க மாட்டார்!

முதற் காவலன்: சிறிது நேரத்துக்கு முன்பு, போதகர் மாடிக்கு அழைத்து வரப்பட்டார்! ஸிரியா வாலிபன் மரண மடைந்ததை நேராகப் பார்த்தவர் அவர்! பார்த்து வேதனைப் பட்டவர் அவர்! அவர் ஒருவருக்குத்தான் காரணம் தெரியும்!

ஏரோத்: [ஆத்திரமுற்று, ஆவேசமாய்] என்ன ? என்னைக் குழப்புகிறீர்! போதகரை மேல் மாடிக்கு யார் இழுத்து வந்தது ? எனக்குத் தெரியாமல், என் கட்டளை யின்றிப் போதகரை அழைத்து வந்தவன் யார் ? யார் அந்த மூர்க்கன் ? சொல்லுங்கள், அவனைக் குத்திக் கொல்கிறேன், என் வாளால்! [வாளை உருவுகிறார்]

[அத்தனைக் காவலரும் அஞ்சி நடுங்கிறார்கள். ஸாலமி ஏரோதை கடைக்கண்ணால் நோக்குகிறாள்.]

(தொடரும்)

[காட்சி-1, பாகம்-8 அடுத்த வாரத் திண்ணையில்]

****

தகவல்:

1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York

2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)

3. The Desire of Ages By: Ellen G. White

4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)

5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)

6. The New Testament & Psalms, Placed By the Gideons.

7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)

8. Encyclopaedia of Britannica [1978]

9. Student Bible, The New International Version (2002)

10 The Artist ‘s Way (A Spiritual Path to Higher Creativity) By: Julia Cameron (1992)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan January, 24 2006]

Series Navigation