நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4) (Based on Oscar Wilde ‘s Play Salome)

This entry is part of 28 in the series 20060106_Issue

சி. ஜெயபாரதன், கனடா


‘வாழ்க்கையில் புரியும் அறநெறிப் பணிகள் யாவும், பரிவு உணர்ச்சியற்ற மாந்தருக்கு மூடச் செயல்களாகத் தோன்றும்! ஆனால் அது மிகச் சிறிய எதிர்க் கருத்து! சிலுவையில் அறையப் பட்டவரை விட, அவ்விதம் ஆணியடித்தவர் மீது நான் மிகவும் கவலைப் படுகிறேன். ‘

டேவிட் பார்க்கின்ஸ் கைச்சுவடி (மார்ச் 4, 1934)

‘நீதி வழங்கும் நாள் வரும்போது, பீடத்தின் மேலிருந்து ஒருவரின் பாபச் செயல்கள் யாவும் உரக்க வாசிக்கப் படும் என்று மாந்தர் உரை நிகழ்த்துவதைக் கேட்டிருக்கிறேன்! அவ்விதம் பலமாகக் கத்தி ஒருவரின் பாபத்தை உலகுக்கு வெளியிடுபவர் தேவலோக விசாரணை வழக்காளி அல்லர்! ஆனால் பாபிகளின் அந்தரங்க ஆத்மாவே அவருக்கு அறிவுரை புகட்டும் என்பதை நான் தெளிவாக நம்புகிறேன்! ‘

‘கடந்து போன வாழ்க்கையை ஒருவர் மீண்டும் வாழ நினைப்பது மாபெரும் தவறு! குதிரை திசைபோக்குக் கயிறைப் பிடித்துக் கொண்டு ஒருவர் குதிரையைப் பின்புறம் நோக்கிச் செலுத்திச் சவாரி செய்ய முடியாது! ‘

டேவிட் பார்க்கின்ஸ்.

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.

****

ஸாலமி: [ஆர்வமுடன்] நான் பார்த்ததே யில்லை அந்தப் போதகரை! காண வேண்டும் அந்த ஞானியை!

யார் போய் அவரை மாடிக்கு அழைத்து வர முடியும் ?

ஸிரியா வாலிபன்: வேண்டாம் ஸாலமி! வேண்டாம்! புனித நீராட்டி ஜானை நீ கண்ணால் காணக் கூடாது! பாபம் செய்தாவள் நீ! உனக்குப் புனித நீராட்டம் தேவை யில்லை! பாபம் செய்தவர்தான் அவரைப் பார்க்க வேண்டும்! அவர் கரத்தால் புனித நீராட வேண்டுவோர், அவரைக் காணலாம்! நீ விரும்பினாலும், அவர் புனித நீரூற்ற மறுத்து உன்னைப் புறக்கணிப்பார்! நீ பார்த்தால், உன்னைப் பாபங்கள் தீண்டிவிடும்! அவர் கண்பட்டால் நீயும் பாபம் செய்யத் துணிவாய்! அவரை நீ தேடிச் செல்லாதே!

ஸாலமி: நானவர் முகத்தைக் காண வேண்டும்! அவர் வாலிபரா அல்லது ஏரோத் போல் வயோதிகாரா என்று அறிய வேண்டும்! அவர் ஓர் அழகான ஆடவரா என்று காண ஆவல் உள்ளது! திருமணமாகி அவருக்கோர் மனைவி யிருந்தால், அவர் திருமுகத்தைப் பார்க்க மாட்டேன்!

[கீழே சிறையிலிருந்து மீண்டும் ஜொஹானன் குரல் உரக்கக் கேட்கிறது]

ஜொஹானன்: [பலத்த குரலில்] அறிவு கெட்ட மாதே! இது துரோகம்! கட்டிய கணவனின் கழுத்தை நெரித்து விட்டு, மாற்றான் மார்பில் தலை வைக்கும் உனக்கு எப்படித் தூக்கம் வருகிறது ? துரோகிகளே! உங்கள் கை அளிக்கும் உணவைத் தொடமாட்டேன்! உங்கள் கை ஊற்றும் நீரை அருந்த மாட்டேன்! எனக்கும் பெரியவர் இங்கே வரப் போகிறார். உங்களைத் தராசில் வைத்து நிறுக்கப் போகிறார் அவர்! பாவிகளே! புனித நீராட்டுவதற்குப் பதிலாக உம்மைத் தீயால் குளிப்பாட்டப் போகிறார்! அவர் முன்னே வராதீர்! அவர் வருவதற்கு முன்பே துரோகிகளே, எங்காவது ஓடிப் போவீர்!

ஸாலமி: [ஐயத்துடன், பரபரப்புற்று] யாரைத் திட்டுகிறார் போதகர் ? கட்டிய கணவரின் கழுத்தை நெரித்தவள், யாரவள் ? மாற்றான் மார்பில் தலை வைத்துக் கிடப்பவள், யாரவள் ? ஓ! என் அன்னையைத் திட்டுவது போல் தெரிகிறது! நியாய மற்ற பழிகளை என் அன்னை மீது போடுகிறார்! என் தந்தையின் கழுத்தை என் தாய் நெரிக்க வில்லை! அபாண்டப் பழி அது! என் தாயை ஏனவர் வெறுக்கிறார் ? சொல்லால் அடித்து என் தாயை ஏன் கொல்லாமல் கொல்கிறார்!

இரண்டாம் காவலன்: உண்மைதான் இளவரசி! போதகர் பழியை மகாராணி மீது போடுவது தவறு! நியாய மற்றது! உங்கள் தந்தை கழுத்தை நெரித்துக் கொன்றவன் ஓர் வன்முறைக் கருப்பன்!

ஸாலமி: கிரேக்க, ரோமானியர், யூதர், எகிப்திய விருந்தினர் முன்பாக, என் தாய் மீது பழிசுமத்தி இழிவு படுத்துவது நியாமா ?

[அப்போது அரண்மனைச் சேவகன் வந்து, ஒருவன் ஸாலமியை வணங்குகிறான்]

அரண்மனைக் காவலன்: இளவரசி! தங்களை ஆடலரங்கு வரும்படி மன்னர் வேண்டிக் கொள்கிறார்.

ஸிரியா வாலிபன்: இளவரசி! போதீர் அங்கே என்று வேண்டுகிறேன்! ஆடலரசி ஆடும் அரங்க மில்லை அது! ஆடு மாடுகள் ஆடும் வன அரங்கு! போதீர் அங்கே! போனால் ஆபத்து நேருமென்று தோன்றுகிறது எனக்கு!

ஸாலமி: [சேவகனைப் பார்த்து] நான் வர விரும்ப வில்லை என்று மன்னருக்கு எடுத்துச் சொல்! போ! நானங்கு வரப் போவதில்லை! [சேவகன் திரும்பிச் செல்கிறான்] போதகர் கூன் விழுந்த வயோதிகரா ? அல்லது நெஞ்சம் நிமிர்ந்த வாலிபரா ? உடல் உறுதி பெற்ற மனிதரா ?

இரண்டாம் காவலன்: ஜொஹானன் முதுகு வளைந்த வயோதிகர் அல்லர்! தலை நரைத்துத் தள்ளாடும் கிழவர் அல்லர்! ஆம், ஆம் அவர் ஓர் வாலிபர்தான்! உடல் உறுதி மட்டுமில்லை, மன உறுதியும் பெற்றவர்! அவர் மண்டைக்குள்ளே ஓர் அரிய அறிவுக் களஞ்சியம் உள்ளது! பாபிகளைப் பம்பரமாக ஆட்டிப் பாபங்களை நீக்குபவர்! அவரது ஊசிக் கண்கள் யாருடைய உள்ளத்தையும் ஊருறுவி, உண்மைகளைக் குத்தூசி போல் இழுத்து வரும் கூர்மை கொண்டவை!

ஸாலமி: வாலிபர் என்றால் அந்தப் போதகரைப் பார்க்க விரும்புகிறேன்.

ஸிரியா வாலிபன்: இளவரசி! போதகரா ? அல்லது வேந்தரா ? யாரைப் பார்ப்பது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். சிறையில் கிடப்பது செம்மறி ஆடு! ஆனால் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆள்வது சிங்கம்! இந்த இரண்டில் எது பாதுகாப்பானது என்று நான் சொல்கிறேன். ஆட்டோடு நரகத்தில் அடைபடுவதை விட சிங்கத்துடன் சொர்க்கத்தில் வாழ்வது மேல்! சிங்கம் உங்களுடைய எழிலை ஆராதனை செய்கிறது! ஆடு உங்கள் பாவங்களைக் கணக்கெடுத்து, தீக்குளிக்க வைத்து விடும்! போதகரைக் காண வேண்டாம் இளவரசி! காலை வாரி விழ வைப்பவர் போதகர்! அழைப்பை ஏற்றுக் கொண்டு ஏரோத் மன்னரை நாடுங்கள்! உங்கள் காலில் பூக்களை இட்ட்டு பூஜிப்பவர் ஏரோத் மன்னர்!

ஜொஹானன்: [உரத்த குரலில்] நெறி கெட்ட மாந்தரே! கூத்தடிக்க வேண்டாம்! கும்மாளம் போட வேண்டாம்! குடியும், கொண்டாட்டமும் வேண்டாம்! உங்களை அடித்தவன் கோல் உடைந்து விட்டது! பாம்பு வயிற்றில் பிறந்த பூரான்கள், பறவை யினத்தைக் கொத்திக் தின்னப் போகின்றன! குடித்த வெறியில் மனமாறி அடுத்தவன் மனைவிமேல் காமப்படும் அறிவிலிகளே! உங்களுக்கு அறிவு புகட்ட அதோ வருகிறார் ஒரு மகாத்மா! உங்கள் பாவக் குருதியால் அவர் கால்களைக் கழுவிப் புனிதம் பெறச் செல்லுவீர்!

ஸாலமி: [மனம் மகிழ்ந்து] என்ன புனிதமான போதனை! என் தாயை அவர் வெறுத்தாலும், பிறரை அவர் நேசிக்கிறார். அந்தப் போதகரை நான் நிச்சயம் காண வேண்டும்! [முதற் காவலனைப் பார்த்து] அழைத்து வா அந்த மகாத்மாவை! கண்குளிரக் காண வேண்டும் அந்த கண்ணியவானை!

முதற் காவலன்: [மிகுந்த பயத்துடன்] இளவரசி! அப்படிச் செய்தால், ஏரோத் மன்னர் என் தலையை வாளால் அறுத்து விடுவார்! யாரும் போதகருடன் பேசக் கூடாது, யாரும் அவரைத் தொடக் கூடாது என்பது அரசரின் ஆணை! அதை மீறச் சொல்ல வேண்டாம், இளவரசி! [ஸாலமி காலில் விழுகிறான்] என்னை மன்னித்து விடுங்கள்.

ஸிரியா வாலிபன்: இளவரசி! மன்னர் உத்தரவை மதிக்கும்படி வேண்டுகிறேன். அவரது அழைப்பை ஏற்று விருந்து மாளிகைக்குப் போவதுதான் நல்லது! மன்னர் கட்டளையை மதித்து, போதகரைப் பாராது மிகவும் நல்லது! அரசரது கோபத்திலிருந்து நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம்!

ஸாலமி: அரசருக்குப் பயந்தவர் நீவீர்! எனக்குப் பயம் கிடையாது! [இரண்டாம் காவலனைப் பார்த்து] நீ போ! நீ போய் அந்த போதகரை அழைத்துவா!

இரண்டாம் காவலன்: [மண்டியிட்டு] இளவரசி! காலில் விழுந்து வேண்டுகிறேன். என்னால் அதைச் செய்ய முடியாது! நாங்கள் உயிரோடும், உடலோடும் வீடு திரும்ப வேண்டும்!

ஸாலமி: [படியில் பாதி தூரம் இறங்கி, குனிந்து சிறைையைக் கண்ணோட்ட மிட்டு] எத்தகைய இருட்டுச் சிறையாக உள்ளது ? அனுதாபப் படுகிறேன்! இந்தக் கருங்குகையில் மிருகம் கூட வாழாது! போதகரை இந்தப் புதைப்பு பூமியிலா அடைப்பது ? [காவலனைப் பார்த்து] உன் செவியில் விழுகிறதா ? போதகரை அந்த குகையிலிருந்து வெளியே அழைத்து வா. அவர் இன்னும் உயிரோடு உள்ளாரா என்று பார்க்க வேண்டும்! அவரது கண்கள் இன்னும் குருடாகாமல் உள்ளனவா என்று காண வேண்டும்! அவரது உடம்பு எலும்புக் கூடாக நடமாடி வருகிறதா வென்று நோக்க வேண்டும்!

முதற் காவலன்: இளவரசி! போதகரை அழைத்து வந்தால், எங்கள் தலையற்ற முண்டம்தான் இன்று வீடு திரும்பும்! உத்தரவின்றி தனியே நாங்கள் செய்யும் பணி யில்லை இது! அரசர் ஆணையை நாங்கள் மீற முடியாது! மீறவும் கூடாது. சிறைக் கதவைத் திறக்க அனுமதி அளிப்பவர் அரசர். அவரைத் தயவு பண்ணிக் கேளுங்கள்! எங்கள் அற்ப உயிர் உங்கள் கையில் உள்ளது! எங்கள் அற்ப உயிருக்கு சொற்ப ஆயுளைத் தராதீர்!

ஸாலமி: [ஸிரியா வாலிபனைக் கனிவுடன் பார்த்து] வாலிபனே! என்னை மகிழ்விக்க நீ வீணை மீட்கிறாய். உன் வீணையின் கானம் ஒளிந்திருக்கும் என் பெண்மையை வெளிப்படுத்தி விட்டது! என் கண்கள் மறுபடியும் காதலனைத் தேடுகின்றன! என்னை மகிழ்விக்கப் போதகரை அழைத்து வருவாயா ? உனதினிய வீணை வெள்ளம் காய்ந்து போவதற்குள், அந்த மகாத்மாவை அழைத்து வருவாயா ? எனது காந்த விழிகளுக்கு நீ காத்திருப்பது எனக்குத் தெரியாம லில்லை! எனக்காக அதைச் செய்வாயா ? என் அன்னை போதருக்கு அஞ்சுகிறாள்! என் சித்தப்பா போதகரைக் கண்டு நடுங்கிறார்! அவரைப் போல் நீயும் போதகருக்குப் பயப்படுகிறாயா ? என்னைக் காதலிப்பவன், என்னை வேண்டுபவன் ஒரு வீரனாகத்தான் இருப்பான்! நீ ஒரு மாவீரன் அல்லவா! நீயுமா அரசருக்கு அஞ்சுகிறாய் ? நான் உன்னருகில் உள்ள போது நீ யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை! உன் தலைக்குக் கத்தி வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்! போதகரை அழைத்து வரச் செல்வாயா ?

ஏரோதியாசின் காவலன்: [நடுங்கிக் கொண்டு] அந்தோ! வேண்டாம் இளவரசி! போதகரை அழைத்து வந்தால், பேராபத்து நிகழக் போவதாய்த் தோன்றுது எனக்கு!

ஸிரியா வாலிபன்: அரசருக்கு அஞ்ச வில்லை இளவரசி! நான் யாருக்கும் அஞ்சாதவன்! ஆனால் இளவரசிக்கு அஞ்சுகிறேன் நான்! அவளது சுடர்விழிகள் பட்டால் சுடப்பட்டு விழும் ஓர் ஆண் பறவை நான்! அந்தச் சிறைக் கதவை யாரும் திறக்கக் கூடாது என்பது ஏரோதின் கட்டளை! மன்னருக்கு அஞ்சா விட்டாலும், மன்னரின் ஆணைக்குக் கட்டுப் படுபவன் நான்!

ஸாலமி: மன்னருக்கு அஞ்சாத வாலிபனே! என்னை மகிழ்விக்க நீயிதைச் செய்ய வேண்டும்! நீ மெய்யாக என்னை நேசித்தால் நீயிதைச் செய்ய வேண்டும்! உனக்கு என் வெகுமதி கிடைக்கும்! என்ன வெகுமதி அளிப்பேன் என்பதை நாளை உன்னைத் தனியே சந்திக்கும் போது சொல்வேன்! அங்காடி வழியே மாலையில் நான் போகும் போது, வழி நெடுவே பூக்களை சிந்திச் செல்வேன், உனக்காக! என்னிருப்பிடம் அறிந்து என்னைச் சந்திக்க வா! மறக்காமல் வா, நாளை மாலை!

ஸிரியா வாலிபன்: இளவரசி! நானிதைச் செய்ய மாட்டேன்! செய்ய மாட்டேன்! செய்ய மாட்டேன்! ஆனால் உங்களைத் தனியே சந்திக்க ஆவல்! போதகரை அழைத்து வராவிட்டால், என்னைச் சந்திக்க விரும்புவீரா ?

ஸாலமி: [அழுத்தமாக] வேலை முதலில், கூலி பின்னால்! பணியை மறுத்தால் கூலியும் நிறுத்தப்படும்! [கனிவுடன்] மன்னருக்கு அஞ்சாத நீ ஒருவன்தான் ஆணையை மீறி அப்பணியைச் செய்ய முடியும் எனக்கு! நிச்சயம் நீ எனக்குச் செய்வாய் என்பதை நான் அறிவேன். நாளை நான் தூக்கு ரதத்தில் முகத்திரை யிட்டுச் செல்லும் போது, நீ உன் வீட்டு வாசல் முன் நில்! நான் முகத்திரை நீக்கி உன்னைப் பார்த்துப் புன்னகை செய்வேன்! பார்! என்னைப் பார்! வாலிபனே! உன்னைப் பார்க்கும் என்னைப் பார்! என் காந்த விழிகளைப் பார்த்துச் சொல்! நீ எனக்காகச் செய்வாய் என்று உன்னிதயம் சொல்கிறது! நீ என் வேண்டுதலை மறுக்கக் கூடாது என்று உன்மனம் எதிர்க்கிறது மெய்யாக!

ஸிரியா வாலிபன்: [தாளில் எழுதிக் கையெழுத்திட்டு, மூன்றாம் காவலனிடம்] போ! வாயில் காப்போனிடம் காட்டிப் போதகரை மேல் மாடிக்கு அழைத்து வா! மாண்புமிகு இளவரசி மன்றாடி வேண்டுகிறார்! வேறு யாரிடமும் இதைக் காட்டாதே! சீக்கிரம் போ! யாருக்கும் தெரியாமல் அழைத்து வா! இளவரசியின் விருப்பத்தை நிறைவெற்ற வேண்டும்.

ஸாலமி: [புன்னகையுடன் ஓடிப் போய்க் கனிவுடன் வாலிபன் கண்ணத்தில் முத்தமிட்டு] நீதான் என் உண்மைக் காதலன்! உயிருக்கு அஞ்சாதவன்! மன்னருக்கு அஞ்சாதவன்! மாவீரன்! நீ என் கனவுகளில் வந்து எனக்கின்பம் அளிப்பாய்! உன் பெயர் என்ன, வாலிபனே! உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன்.

ஸிரியா வாலிபன்: [பூரிப்படைந்து, கண்ணத்தைத் தடவி] வெகுமதி இப்போதே கிடைத்து விட்டது! ஸாலமி நேசிக்கிறாள் என்னை! என் பெயரைக் கேட்கிறாள்! சொல்கிறேன், என் பெயர் நாராபாத்! நாராபாத் ஸாலமியின் காதலன்! நினைக்கும் போதே நெஞ்சில் தேன் ஊறுகிறது! யாரும் இதுவரை என்னை முத்தமிட்ட தில்லை! ஸாலமி! உனக்காக நான் எதையும் செய்வேன்! என் உயிரையும் உனக்காகக் கொடுக்கத் தயார்!

ஏரோதியாஸின் காவலன்: காரிருள் மேகம் கப்பி வெண்ணிலவு கருநிலவாய்ப் போனது! ஏதோ ஓர் அபாயம் நேரப் போவது எனக்குத் தெரிகிறது! பொன்னிலவு என் கண்களுக்குப் புண்ணிலவாய்த் தோன்றுகிறது!

வாலிபன் நாராபாத்: அப்படியில்லை நண்பனே! முகத்திரை யிட்ட வெண்ணிலவு திரைநீக்கி என்னை முத்த மிடுகிறது! மேகத்தில் மறைந்தாலும், பொன்னிலவின் ஒளித்திரட்சி குறைவ தில்லை!

[ஜொஹானன் கைவிலங்கு, கால்விலங்கு போடப்பட்டு மாடி மீது மெதுவாய் ஏறி நடந்து வருகிறார். ஸாலமி பார்த்ததும் திடுக்கிட்டுப் பின்வாங்குகிறாள்.]

ஸாலமி: [பயந்து பரிவுடன்] போதகரே! இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்து விட்டார்! காரிருட் சிறையில் மூடிய உங்கள் கண்களுக்கு ஒளியேறட்டும்! முடமாய்ப் போன உங்கள் கால்கள் விடுதலை பூமியில் நடமாடட்டும்! குடிப்பதற்கு ஏதாவது பானம் வேண்டுமா ? உண்பதற்கு ஏதாவது உணவு வேண்டுமா ? கேளுங்கள்.

ஜொஹானன்: [பரிவோடு ஸாலமியைப் பார்த்து] அன்பைப் பொழியும் மங்கையே! எனக்கு தற்போது வேண்டியது, உண்டி யில்லை! நான் வேண்டுவது விடுதலை! செய்ய வேண்டிய அருட் பணிகள் அநேகம் உள்ளன! உன் தந்தை என்னைப் பிடித்து ஏனோ சிறையில் தள்ளி யிருக்கிறார்! தூய நீரருந்தி நீண்ட நாட்கள் ஆகின்றன! ஒரு குடம் நீரைக் கொண்டு வா! குடித்தது போக எஞ்சியதை நான் என் தலையில் ஊற்றிப் புனித நீராட வேண்டும்! குளத்தில் நான் குளித்துப் பல நாட்கள் ஆகி விட்டன! யாரும் மாளிகையில் என்னுடன் இப்படிப் பரிவுடன் பேசியதில்லை! கருங்குகையில் அடைபட்ட இந்த மனிதனை ஏனம்மா அழைத்து வந்தாய் ? உன் தந்தையின் பகைவனை ஏனம்மா இப்படி வரவேற்கிறாய் ? உன்னருமைத் தாய் வெறுக்கும் ஒரு வழிப்போக்கன் மீது ஏனம்மா உனக்குப் பரிவும், பாசமும் உண்டாகிறது ?

(தொடரும்)

[காட்சி-1, பாகம்-5 அடுத்த வாரத் திண்ணையில்]

****

தகவல்:

1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York

2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)

3. The Desire of Ages By: Ellen G. White

4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)

5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)

6. The New Testament & Psalms, Placed By the Gideons.

7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)

8. Encyclopaedia of Britannica [1978]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan January, 4 2006]

Series Navigation