கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்

This entry is part of 45 in the series 20071108_Issue

வாஸந்திஉயரமான மலைப் பாதையில் சென்ற ஜீப்பிலிருந்து கீழே ஒரு மரங்களடர்ந்த சரிவைக் காட்டி, அங்குதான் இருக்கிறார் அந்த லேடி என்றார் டிரைவர் பஹதூர். கம்பளிச்சட்டையைக் கூலிக்குத் தைத்துக் கொடுக்கும் அந்தப் பெண்மணியைப் பற்றி பஹதூருக்கு உயர்ந்த அபிப்பிராயம் இருந்தது போல் பட்டது. சந்தைக்கடைகளில் பலர் தைத்துக்கொடுப்பவர்கள் இருந்தார்கள். தயாரித்த உடைகளும் விற்பனைக்கு இருந்தன. அவையெல்லாம் வேண்டாம் என்று பஹதூர் நிராகரித்திருந்தார்.ஒரு நல்ல இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன், வீட்டிலிருந்தபடி வியாபாரம் செய்யும் ஒரு மிகக் கண்யமான பெண்மணியை அறிமுகப்படுத்துகிறேன் என்ற விளக்கத்துடன் பஹதூர் சொன்னபோது எனக்கு எந்த ஆட்சேபமும் இருக்கவில்லை. அந்தப் பெண் ஒரு விதவை என்றும் அவளும் அவளுடைய ஒரே மகளும் அங்கு இருப்பதாகவும் சொன்னார்.
வால்பேரிக்காய் மரங்கள் அடர்ந்த தோப்பிற்குள் இருந்தது அந்த சிறிய வீடு. சீனப் பெண்போல் இருந்தார் அந்தப் பெண். இந்தியோ ஆங்கிலமோ சுத்தமாக வராத இக்கட்டிலும் நெருக்கமான சிநேகிதியைப்போல சிரித்து என் கைகளைப்பற்றி வரவேற்றார். என்னுடைய தேவைகளை பஹதூர் மீஜோ மொழியில் எடுத்துச் சொல்ல அவர் ஒரு வாரத்தில் அதாவது அடுத்த வெள்ளியன்று என்னுடைய ஆர்டரை நிச்சயம் முடித்துக் கொடுப்பதாகச் சொன்னார். நான் கிளம்பும் சமயத்தில் தேவதைப் போன்ற தோற்றப் பொலிவுடன் ஒரு மிக இளம் பெண் உள்ளே நுழைந்தாள். தனது மகள் என்று பெரியவள் அவளை அறிமுகப்படுத்தி ‘இருங்கள் கொஞ்சம் பேரிக்காய் பழங்களைப் பறித்துக் கொடுப்பாள்’ என்று சைகை காட்டியபோது நான் அந்தச் சின்னப் பெண்ணின் சொக்கவக்கும் அழகில் கிறங்கிப் போயிருந்தேன். சற்று நேரத்தில் அந்தப் பெண் சிரித்த முகத்துடன் ஒரு பெரிய பை நிறைய பழங்களைக் கொண்டுவந்து கொடுத்தாள். அவளுக்கு சுமாராக ஹிந்தி பேச வந்தது. தான் பள்ளியில் படிப்பதாகச் சொன்னாள். பதினைந்து வயதுதான் இருக்கும் என்று தோன்றிற்று. அன்று முழுவதும் நிலாபோன்ற அந்த முகம் என் நினைவில் நிழலாடி பரவசப்படுத்தியவண்ணம் இருந்தது.
அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் ஐஜலில் எதிர்பாராமல் நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்பில் நான் அவளையும் கம்பளிச் சொக்காயையும் மறந்தே போனேன். பழங்குடியினர் வாழும் இந்திய வட கிழக்குப் பகுதியில் அரசியல் பருவ நிலை சதா ஒரு புயல் வெடிக்கக் காத்திருப்பது போன்ற இறுக்கம் கொண்டது. அங்கிருக்கும் தட்ப வெப்பத்தை சரியாக உணராமல் மேம்போக்காகவோ அலட்சியமாகவோ பொறுப்பற்ற முறையில் [மீஜொ அல்லாத] தனி நபர்கள் நடந்து கொண்டாலும் அத்தருணங்களில் வெடிக்கும் அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்துவது மிகப் பெரிய நெருக்கடிகளை மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஏற்படுத்தக்கூடியவை. மத்திய அரசு அதை மிக நுட்பமாக ,கரிசனத்துடன் அணுக வில்லை என்றால் கலவரம் நிச்சயம். நீருபூத்த நெருப்பாய் கனன்றபடி இருக்கும் பிரிவினைவாதம் மீண்டும் தலையெடுக்கும். மேம்போக்குத்தனமும் அலட்சியமும் சமதரையில் வாழும்- தாங்களே நாகரிகமானவர்கள் என்று நினைக்கும்- மக்கள் அந்த மண்ணின் குடிமக்களைக் கேவலமாக,பிற்படுத்தப்பட்டவர்களாக நினைக்கும் அகம்பாவப் போக்கினால் வருவது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது நமது ரத்தத்தில் கலந்துபோன கலாச்சார ஆணவம். நிர்வாகத்தின் ரத்தத்திலும் கலந்திருப்பது. அங்கு நிகழும் எல்லா சச்சரவுகளுக்கும் கலவரத்துக்கும் மூல காரணம் இதுவாகவே தோன்றுகிறது. அப்பழங்குடியினரை மைய நீரோட்டத்தில் கலக்க விடாமல் தாங்களும் இந்தியர்கள் என்கிற உணர்வை ஏற்படுத்தவிடாமல் தடுக்கும் காரணியும் இதுதான். தாங்கள் வேறு என்று அவர்கள் உணர்ந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அருணாச்சலப் ப்ரதேசம் ,மீஜோராம் , மற்றும் நாகாலாந்து மக்களின் முக அமைப்பும் நிறமும் அப்பட்டமான மங்கோலிய பழங்குடியென்று பறை சாற்றுவது. அவர்களது வாழ்க்கை முறைக்கும் மற்ற இந்திய மக்களின் வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமில்லை. கிறுத்துவ பாதிரிமார்கள் சென்று சிலரை மதம் மாற்றியிருந்தாலும் அவர்களது பழைய கடவுள்கள் பழக்கவழக்கங்களை பெருமையுடன் பின்பற்றிவருகிறார்கள். அருணாச்சலப் ப்ரதேசத்தில் இந்திய நிர்வாகத்தைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் இலைமறை காய்மறையாக இந்து மதத்தை பரப்பப் பார்த்தபோது அதுவரை மிக சினேகிதமாக இருந்த அருணாச்சல மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மெல்ல மெல்ல அங்கிருந்த அமைதி கெட்டது. மீஜோராமைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அங்கு பல வருடங்களாகவே அதிருப்தி நிலவி வந்தது. அதற்கு முக்கிய காரணம் வெளியிலிருந்து சென்றவர்களின் இங்கிதமற்ற நடத்தைதான்.
அந்த ஞாயிறன்று அத்தகைய திமிரின் பரிமாணத்தை ஐஜல் உணர்ந்தது. சந்தை வீதிகளிலிருந்து சமையல்கார பாகிரத் செய்தி கொண்டுவந்தான். பஹதூர் என் கண்ணில் படாமல் இருக்க முயற்சிப்பது போல் இருந்தது. மீஜோக்கள் கிறுத்துவர்கள்.ஞாயிறன்று காலை தப்பாமல் சர்ச்சுக்குப் போவார்கள். சுமார் பதினோறு மணிக்குக் காட்டுத் தீயாய் செய்தி பரவியது. சர்ச்சிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு இளம் மீஜோ ஜோடிமீது ஒரு ஸி.ஆர்.பி.[மத்திய ரிசர்வ் போலீஸ்] ஜவான் தான் ஓட்டிக் கொண்டிருந்த வாகனத்தால் மோதியதால் இருவரம் தலத்திலேயே இறந்துபோனார்கள். பயந்த ஜவான் தப்பி ஓடிவிட்டான். செய்தி சொன்ன பாகீரத்தின் முகம் பீதியில் உறைந்திருந்தது. விஷயம் இன்னும் தீவிரம் என்று நான் உணர்ந்துகொண்டேன். மெல்ல பாகீரத் முழுசையும் சொன்னான். இளம் ஜோடி செல்கையில் இளம் பெண்ணின் மேல் பார்வை பட்டதும் ஜவான் வண்டியை சாலையில் மெல்ல நிறுத்தி அவளுடைய பிளவுசைப் பிடித்து மார்புப் பக்கம் இழுத்து வண்டிக்குள் ஏறு, ரம் கொடுக்கிறேன் சினிமாவுக்கு அழைத்துப் போகிறேன் என்று வம்பு செய்திருக்கிறான். பெண்ணுக்கும் அவளுடன் இருந்த ஆணுக்கும் மிகுந்த கோபம் வந்து அவனைத் திட்டியிருக்கிறார்கள். ஜவான் குடிபோதையில் இருந்திருக்கவேண்டும். கோபத்துடன் வண்டியைகிளப்பியிருக்கிறான். ஒழிந்தான் என்ற நிம்மதியுடன் இளம் ஜோடி சிரித்தபடி முன்னேறி நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஜவான் திடீரென்று மூர்க்கத்துடன் மலைப்பாதையில் ரிவர்ஸ் கியரில் வேகமாகப் பின்னோக்கி வந்திருக்கிறான். மீஜோ மலைப் பாதைகள் மிகக் குறுகலானவை. ஒரு பக்கம் செங்குத்தான மலைச் சுவர். மற்றொரு பக்கம் அதல பாதாளம். மிலிடரி வாகனத்திலிருந்து தப்பிக்க வழியில்லை. பாதாளத்தில் விழுந்து சாகவேண்டும் அல்லது மலைச் சுவரில் ஒட்டிக்கொண்டாலும் வாகனம் இடித்துச் சாகவேண்டும். அப்படித்தான் அவர்கள் பட்டபகலில் இடிபட்டு செத்தார்கள். இது போன்ற எதேச்சையான விபத்துகள் அங்கு நடப்பது சகஜம் என்றாலும் இது வேண்டுமென்று செய்த கொலை என்ற உண்மையும், இறந்தவர்கள் மீஜோ என்பதும் சாவுக்குக் காரணமானவன் சமதரையைச் சேர்ந்த மத்திய அரசின் ரிசர்வ் பிரிவைச் சேர்ந்த காவலன் என்பதும் அரசியல் பரிமாணம் பெற்றது. எந்த நிமிஷமும் மீஜோக் கலவரம் மூளலாம் என்று கவர்னர் நடுங்கிப் போனார். யாரும் யாருடனும் பேசவே பயந்தார்கள். சுந்தரத்துக்கு என்னுடன் பேசக்கூட நேரம் இருக்கவில்லை. மத்திய அரசு ஊழியர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு மீட்டிங் என்று கவர்னர் மாளிகையில் அடைந்துக் கிடந்தார்கள். கவர்னர் தனது தைர்யத்துக்காக எல்லாரையும் கூப்பிட்டுக்கொள்கிறார் என்று எனக்குத் தோன்றிற்று. நல்ல காலமாக தப்பி ஓடிய ஜவான் பிடிபட்டு அவனைஜெயிலில் அடைத்தார்கள். மீஜோத் தலைவர்கள் சமாதானப் படுத்தப் பட்டார்கள். பணம் நிச்சயம் கைமாறியிருக்கும். ஆனால் ஏற்கனவே வெளியிலிருந்து வருபவர்களை சந்தேகத்துடன் பார்க்கும் வழக்கம் கொண்ட மீஜோ பொதுமக்கள் இப்போது அதிகமாக விலகிப் போனதாகத் தோன்றிற்று. பத்து நாட்களுக்கு எந்த விருந்திற்குச் சென்றாலும் மீஜோ அல்லாதவர்கள் இதைப் பற்றியே பேசித் தீர்த்தார்கள். இந்திய-மீஜோ உறவில் பின்னடைவு ஏற்பட்டுப் போனதாக வெட்கப்பட்டார்கள்.கூடிய விரைவில் மாற்றல் கிடைத்து சமதரைக்குச் செல்வது நல்லது என்று அதிகாரிகளின் மனைவிகள் அபிப்பிராயப்பட்டார்கள். இந்த சந்தடியில் எனக்குக் கம்பளிச்சொக்காயைப் பற்றி மறந்தேபோனது. கொடுத்தனுப்புகிறேன் என்று சொன்ன அந்த மாதுவும் பேசாமல் இருந்துவிட்டதை பஹதூரைக்கூப்பிட்டு விசாரித்தேன். அவளை நீ பிறகு பார்க்கவில்லையா என்றேன். தினமும் பார்க்கிறேன் என்றான் பஹதூர். ‘இரண்டு நாளில் தந்துவிடுவாள்.’
‘ஒரு வாரத்தில் தருகிறேன் என்றாள். இரண்டுவாரம் ஆகிறது ஏன் என்று கேட்கவில்லையா?’
‘கேட்கவில்லை’.
“ஏன்?”
பஹதூர் சற்று பேசாமல் இருந்துவிட்டுச் சொன்னான்- “அந்த விபத்திலே இறந்தது அவளுடைய மகள் மேம்சாப்!”
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. தேவதைப் போன்ற அந்தப் பெண்ணா? இதுவரை பஹதூர் என்னிடம் அதைச் சொல்லவில்லை. பஹதூர் பிறப்பில் நேபாளியாக இருந்தாலும் பல ஆண்டுகளாக ஐஜலில் இருந்ததாலும் ஒரு மீஜோ பெண்ணை திருமணம் செய்திருந்ததாலும் உணர்வுரீதியாக மீஜோவாகியிருந்தான் என்று புரிந்தது. அவனைப் பொறுத்தவரை நான் அப்போது எதிரிகள் முகாமில் இருந்தேன். எனக்குக் காரணம் புரியாமல் கோபமும் துக்கம் ஏற்பட்டன. நான் மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்ப்பதை அவன் விரும்பவில்லை என்று எனக்குப் புரிந்தது. இருந்தும் பிடிவாதமாக அழைத்துப் போகச் சொன்னேன். அந்தப் பெண் மிகத் தயக்கத்துடன் வெளியே வந்தாள். நான் கண்ணீர்மல்க அவள் கைகளைப்பற்றி என் துக்கத்தை வெளிப்படுத்தினேன். அவளுக்கு அது வியப்பை அளித்திருக்கவேண்டும். இறுகிய முகம் தளர்ந்தது.என்னை அணைத்துக் கொண்டு சற்று நேரம் விசும்பினாள்.
ஒரு ஜவான் அப்படி நடந்து கொண்டதற்காக நான் வெட்கப்படுகிறேன் என்றேன். அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.
உள்ளே சென்று கம்பளிச் சொக்காய்களை எடுத்து வந்தாள்.
‘தாமதத்திற்கு மன்னியுங்கள்’ என்று சொன்னதாக பஹதூர் மொழிபெயர்த்தான்.
அவள் வீட்டிலிருந்து திரும்பும்போது பல்வேறுபட்ட உணர்வுகளும் சிந்தனைகளும் என்னைத் துன்புறுத்தின. எப்படிப்பட்ட சோகத்தில் அந்தப் பெண் எத்தனை நாகரிகத்துடன், கண்ணியம் இழக்காமல் இருந்தாள்! என்னைக்கண்டு வெறுப்படையவில்லை. பெண்ணின் மரணத்துக்குக் காரணமானவனை தூஷிக்கவில்லை. புலம்பவில்லை. பெரிய குரலிட்டு அழவில்லை. எனக்கும் அவளுக்கும் இருந்த உறவு வியாபார உறவு மட்டுமே என்பதுபோல டெலிவரி தாமதமானதற்கு மன்னிப்பு கேட்கிறாள். இவளது சமூகத்தை வெளியிலிருந்து வருபவர்கள் காட்டுமிராண்டிகள் என்கிறார்கள். பதிலடி கொடுக்க இயலாதவர்கள் என்கிற ஆணவ நினைப்பில் அவமானப் படுத்துகிறார்கள். அவர்களைத் தம்மைபோல ‘ நாகரீகமாக மாற்ற’ நினைக்கிறார்கள்.
பழங்குடியினரது பிரத்யேக கலாச்சாரம் வளம்மிக்கது, இயற்கையுடன் ஒன்றியது, மண்சார்ந்த ஞானம் கொண்டது என்று அறியாத ஞான சூன்யங்களே நம்மிடையே அதிகம். நம்முடைய வாழ்க்கை முறையை அவர்கள்மீது திணிக்கப் பார்க்கும் முயற்சியில்தான் நமது நிர்வாகம் தோற்று வருகிறது. எதிர்ப்பு முளைக்கும் போதெல்லாம் ராணுவ எண்ணிக்கையை அதிகரித்து நிரந்தர பகையை சம்பாதித்துக் கொள்கிறது. உலகத்தில் முளைக்கும் எல்லா சச்சரவுகளுக்கும் பகைக்கும் மூல காரணம் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரைவிட தாம் மேம்பட்டவர் என்று நினைப்பதால்தான் என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் அமார்த்தியா சென். எனது மொழி உயர்வானது, எனது மதம் உயர்ந்தது, எனது நிறம் உயர்ந்தது , எனது பாரம்பர்யம் மேன்மையானது என்ற நினைப்பே மற்றவரை அன்னியப்படுத்துகிறது. இந்த உயர்வைப் பற்றி நமக்குள் சந்தோஷப்படமுடியாது. மற்றவன் தாழ்ந்தவன் என்று மண்டையில் அடித்துச் சொன்னால்தான் நமக்குச் சமாதானம்.
அமெரிக்காவின் பழங்குடியரான சிவப்பிந்தியர்கள் அதிகம் வாழும் அரிஜோனாவிற்கு சென்றபோது அதன் தலைநகரான ·பீனிக்ஸில் நான் பார்த்த அவர்களது அருங்காட்சியகம் நினைவுக்கு வருகிறது. அமெரிக்க மண்ணின் ஒரிஜினல் மைந்தர்கள் அவர்கள். அவர்களது கலாச்சாரம் பல ஆயிரம் ஆண்டுப் பழமை கொண்டது என்கிறார்கள். நிச்சயமாகக் கலை நயம் மிக்க பாரம்பர்யம் என்பது அற்புத வண்ண ஓவியங்கள் கொண்ட சட்டிப்பானைகளும் காலங்காலமாக முடைந்து வரும் ஓலைக் கூடைகளும் சுவர் சித்திரங்களும் பாடல்களும் கவிதையாய் வெளிப்படும் நாடோடிக் கதைகளும் அத்தாட்சி. மிக வளமான கலாச்சாரம் கொண்ட அவர்களை வெளியிலிருந்து சூரையாட வந்த வெள்ளயர்கள் மற்றும் கிறுத்துவ பாதிரிமார்கள் காட்டுமிராண்டி என்று சொன்னார்கள். அவர்களது மண்ணைக் கவர்ந்து தங்கள் போக்கிற்குப் பணிய வைத்தார்கள். தாங்கள் மாற்றப் பட்டதையும் அதன் மூலம் தங்கள் வேர்கள் துண்டிக்கப்பட்டதையும்
கதைபோல சுவர் சித்திரங்களும் ஒலிநாடாவில் விவரங்களும் சோகம் இழையோட நம்முடன் கூடவே வருகின்றன. ” எங்கள் முடியை வெட்டினார்கள். கால் டிரௌசரை அணியச்சொன்னார்கள். எங்கள் முடியை தொலைத்தொம். உடுப்பைத் தொலைத்தோம். அந்த இரண்டு இழப்புடன் இந்தியர்கள் என்ற எங்கள் அடையாளம் போயிற்று. போர்டிங் பள்ளிகள் எங்களது கலாச்சார அடையாளங்களை அகற்றவே ஏற்படுத்தப்பட்டன.”
அவர்களால் அந்த அவமானத்தை லேசில் மறக்க முடியாது . அந்த அடையாளங்களை மீட்கும் பணியில் அவர்கள் இப்போது இருக்கிறார்கள். ஆனால் அவர்களது எண்ணிக்கை குறைந்து போனதாலும் பொதுவாக அமெரிக்க மக்களின் வாழ்க்கைத்தரம் சௌகர்யமானதாக இருப்பதாலும் பக்குவம் வந்திருக்கிறது. நாம் ஒருவரை ஒருவர் அரவணைத்துச் செல்ல வேண்டும் நாம் எல்லாம் வேறுபட்டு இருந்தாலும் என்கிற வாக்கியம் பளிச்சிடுகிறது.
நமது வடகிழக்குப் பகுதிகளில் அப்படிப்பட்ட பக்குவம் வருவதற்கு வெகுகாலம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. பக்குவம் வரவேண்டியது யாருக்கு என்பதுதான் கேள்வி.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation