கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பரவி வரும் நோய்

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

வாஸந்தி



இரண்டாயிரமாவது ஆண்டு முடிந்து இரண்டாயிரத்தி ஒன்று விடியும் நேரம். இந்த பூமியும்
பிரபஞ்சமும் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியிருப்பதும் மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருப்பதும் விஞ்ஞான ரீதியாக நமக்குத் தெரிந்திருந்தும் நாகரீக மனிதனின் சரித்திர கால அளவை அளக்கும் சௌகர்யம் முன்னிட்டு உலகம் முழுவதும் கிறித்துவுக்குமுன் , கிறித்துவுக்குப்பின் என்ற கால நிர்ணயத்தை ஏற்றுக்கொண்டு விட்டதால் இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டை உலகுக்குப் புதிய விடியலைத் தரும் வேளையாக எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தது நேற்று போல் இருக்கிறது. அதன் முதல் உதயத்தைப் பார்க்கும் எண்ணத்துடன் மேற்கு நாடுகளில் இருந்த பலர் பூமியின் கிழக்கின் கோடிக்குப் பயணித்துக் காத்திருந்தார்கள். அதற்காக ஓராண்டுக்கு முன்னதாக அந்த திக்கில் இருந்த சுற்றுலாத் தலங்களின் ஓட்டல்கள் புக்காகிவிட்டன. இந்தியாவிலேயே கோவா மாநிலத்து ஓட்டல்கள் அனைத்தும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளுக்காக புக் ஆகிவிட்டன. ஒரு யுகசந்தியில் நிகழும் அந்த உதயமே மானுடத்துக்கு நல்லதொரு மாற்றத்தைத் தோற்றுவிக்கும் என்ற மாயையில் உலகம் இருந்தது.
யுகசந்தி என்பது வெறும் ஐதீகம் என்பது நமக்கு மறந்து போவது விசித்திரம். பூமத்திய ரேகை, மகர ரேகை என்னும் ஐதீகங்கள் போல ஒரு ஆய்வுக்கணக்குக்காக ஏற்பட்ட கருத்தாக்கம். நமது புராணங்களின்படி ஒவ்வொரு யுகமும் பிரளயத்தில்தான் முடிந்திருக்கிறது. ஒரு வேளை 2004 இன் முடிவில் [டிசம்பர் 24] ஆயிரக்கணக்கான உயிரைக் காவுவாங்க வந்த சுனாமி அத்தகைய பிரளயமோ என்னவோ. 2005-ம் ஆண்டு பிறந்தபோது இந்தியாவில் முக்கியமாக தெற்கு ஆசியாவில் மக்களின் மனத்தில் பீதியும் சோகமுமே கப்பியிருந்தது. ஆனால் ஒவ்வொரு புதுவருஷமும் பிறக்கும்போது ஏதோ மாயக்கோலைத் தட்டி பிந்தைய ஆண்டு அனுபவித்த சோகங்களையும் மனிதன் செய்த அக்கிரமங்களையும் மறைத்துவிடும் அல்லது மன்னித்து விடிவை ஏற்படுத்தும் என்று நம்புவது தொடர்கிறது. ‘புது வருஷம் பிறக்கிற வேளை நல்ல வேளையா இருக்கட்டும் ‘ என்று என் பாட்டி பிரார்த்தித்தது நினைவுக்கு வருகிறது. நாம் இரண்டாயிரத்து ஒன்றின் விடியலை எதிர்நோக்கிக் காத்திருந்ததும் அத்தகைய பிரார்த்தனையுடன் தான்.
ஆனால் இந்தப் புதிய ஆயிரமாவது ஆண்டுத் துவக்கத்திலிருந்து பலவிதப் பிரளயங்கள் நம்மை மூழ்கடித்துவிடும்போல அச்சுறுத்துகின்றன. யுகத்தின் முடிவில் இருப்பது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இயற்கை விளைவிக்கும் சேதங்களை விடுங்கள். மனிதர்கள் என்று பெயர் கொண்ட அசுரர்களால் ஏற்படுத்தப்படும் பிரளயங்கள்தான் அதி பயங்கரம். நவீன அசுரர்கள். அதில் நீங்களும் நானும் அடக்கம். நம்மை அழிக்க எந்த ஆண்டவனும் வேலை மெனெக்கெட்டு அவதாரமெடுத்து வரப்போவதில்லை என்பதால் எத்தனை வேண்டுமானாலும் சுரணையற்று அக்கிரமம் செய்யலாம். காரணமும் காரியமும் ஒரு சுழற்சி என்று நமது வேதாந்தம் சொல்கிறது. அறிவியலும் சொல்வது. நமது புராணங்களும் பூடகமாக இதைத்தான் சொல்கின்றன. கதையை முடிக்கத் தெரியாத எழுத்தாளர், தனது கதாபாத்திரங்களைக் கடைசியில் சாகடிப்பதுபோல, தர்மத்தை ஸ்தாபிக்க கடவுள் பல அவதாரங்கள் எடுத்து
தீயவர்களை வதம் செய்தாலும் கடைசியில் எல்லா யுகங்களும் பிரளயம் வந்து அழிந்துபோயிருப்பதாகப் பௌராணிகள் சொல்கிறார்கள். இன்று புதிதாய் பிறந்தோம் என்கிற குதூகலத்துடன் புதிய யுகம் பிறக்கும். மீண்டும் அசுரர்கள் கை ஓங்கல்- மிண்டும் பகவான் அவதரித்தல் என்று அதே விதமான சுழர்ச்சி… ‘சம்பவாமி யுகே யுகே’ என்ற கண்ணனின் வார்த்தைகளை, உறுதி மொழியை, மெய்ப்பிக்க. புராணங்கள் நம்பிக்கை ஊட்டுபவை. என்ன அக்கிரமம் நடந்தாலும், நியாயம் என்பது கடைசி பட்சமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கிடைக்கும் என்று நாம் நம்புவதுபோல நல்லதையும் உண்மையையும் நிலை நாட்ட ஆண்டவன் நிச்சயம் ஒரு நடை பூமிக்கு நேரிடையாக வருவார் என்று புராணங்கள் உறுதி அளிக்கின்றன. இது கலியுகம் என்றாலும் பத்தாவது அவதாரமாக வருவார் என்று புராணங்களில் ஒரு வதந்தி இருக்கிறது. பயங்கர அசுரர்களை அழிக்கச் சடாரென்று கிடைத்த வாகனத்தில், அது பறவையோ மிருகமோ கடல் வாழ் ஆமையோ, வந்து இறங்கிக் கொண்டிருந்த ஆண்டவனுக்கு மிக நவீன வாகனங்கள் உடைய இந்த யுகத்தை நேரிடையாக விசிட் அளிக்க இன்னும் தைர்யம் வரவில்லை என்று தோன்றுகிறது. அல்லது இந்த அவதாரமே வேண்டாம் என்று கான்சல் பண்ணியிருக்கக் கூடும்.
அமெரிக்காவிலோ , கிழக்கு நாடுகளிலோ கால் வைக்க அவர் பயப்படுவது இருக்கட்டும், பாரதப் புண்ய பூமியில் ஒன்பது அவதாரங்கள் எடுத்தும் களைத்துப் போகாத ‘ஓங்கி உலகளந்த’ அந்தப் பெருமாள்
இன்றைய இந்தியாவின் எந்த மாநிலத்திலாவது தைர்யமாகக் கால் பதிப்பாரா என்பது சந்தேகம்.
புண்ய பூமி என்று நமது மூதாதையர்கள் பாரதத்தைப்பற்றி எதற்குப் பெருமை அடித்துக்கொண்டார்கள் என்று சுத்தமாகப் புரியவில்லை. நமது மூதாதையர்கள் செய்த புண்யத்தின் கர்ம பலனினால் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கும் நாடு என்பதால் கர்ம பூமி என்று வேறு பெயர் அதற்கு. இருப்பில் இருக்கும் பணத்தை எல்லாம் வரவே இல்லாமல் செலவழித்தால் போண்டி ஆவதுபோல இப்போது அந்த பழைய ஸ்டாக்
தீர்ந்து போய்விட்டதாக நினைக்கிறேன். இன்றைய கால கட்டத்தில் பாரதத்தின் எந்த மூலை முடுக்கும் பாதுகாப்பானதாகவோ எந்த மாநிலத்திலும் யோக்கியமான அரசுகள் நடப்பதற்கான அடையாளமோ இல்லை.தமிழ் நாட்டில் கடவுளுக்கே பாதுகாப்பு இல்லை. அவர் இருப்பதே பொய் என்று ஆகிவிட்டது. அதை மறுக்கமுடியாமல் போனால் ‘குடிகாரன்’ என்ற குற்றச்சாட்டில் கம்பி எண்ண வேண்டியிருக்கும். நாயன்மார்களும் ஆழ்வார்களும் வாழ்ந்த காலத்தில் ரிமோட்டைத் தட்டினதுபோல தரிசனம் தர முடிந்தது. பக்தனை இக்கட்டிலிருந்து மீட்க நரியைப் பரியாக்க முடிந்தது. பிட்டுக்கு மண் சுமந்து விளையாட்டு காட்ட முடிந்தது. இன்று மதுரையில் நடக்கும் ஆட்சி அவருக்குப் பரிச்சயமில்லாதது. பிரம்படி அவர்மீதுதான் விழும். இப்போது ஈசனே இக்கட்டில் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் தமிழ் நாட்டுக்கு நிச்சயம் வரமுடியாது. தவிர ‘அமைதிப் பூங்கா’ என்ற வர்ணனை வெறும் அலங்கார வார்த்தை, ஏதோ ஒரு முதலமைச்சர், தனக்குத் தானே தைர்யமளித்துக்கொள்ளச் சொன்ன வார்த்தை என்பது அவருக்கு நினைவு இருக்க வேண்டும். குண்டாயிசம் மிகுந்து விட்ட பூங்கா இப்போது. அரசியல் பகைமை கொலைகளிலும் கொலை முயற்சிகளிலும் அதிகரத்துவிட்ட அராஜக காலம் . எல்லா அரசியல் கட்சிகளும், முக்கியமாக ஆளும் கட்சி குண்டாயிசம் தான் தீர்வு என்ற முடிவுக்கு வந்திருப்பதால் நிர்வாகம் செயலிழந்து போயிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் என்றால் அனுபவப்பட்ட பாமரனுக்குக் கதி கலங்கும்போது யுகத்துக்கு ஒரு முறை விசிட் அடிக்க நினைக்கும் பகவான் எப்படித் தாங்குவார்?
அண்டைமாநிலமான கர்நாடகாவில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்றே புரியவில்லை. தலைமைப்
பீடத்துக்கான கட்சித் தலைவர்களின் போர் பாமர மக்களும் காரி உமிழும் நிலைக்குப் போனது. நியாயத்தையும் தர்மத்தையும் மதிக்காத தலைவர்கள் ஜோஸ்யர்களைத் தேடி அலைவதையும் அவர்கள் சொன்னார்கள் என்ற சாக்கில் கூட்டணிக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதும் கூட்டணி தோழர்களைக் கவிழ்ப்பதும் ஏய்ப்பதும் அசுரத்தனத்துடன் நடப்பது ஆண்டவனுக்கு அச்சத்தை அளித்திருக்கும். ஜனநாயகத்தைக் கண்டு மிரண்டிருக்கவேண்டும். மதசார்பு சார்புடைய கட்சி, மதசார்பற்ற கட்சி என்ற வார்த்தை ஜாலங்கள் குழப்பியிருக்கும். நல்ல வேளை இப்போது பெய்யோ பெய்யென்று மழை பெய்து விட்டதால் காவேரி நீருக்கான போர் ஆரம்பிக்கவில்லை. அதுவும் சேர்ந்தால் ஆளைவிடு என்று காணாமல் போவதைத்தவிர வேறு வழியில்லை.
கடவுளின் தேசம் என்று தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் கேரளத்தில் சிவப்பு பானர்கள் ஆளைத் திணர அடிக்கிறது. நாத்திக ஆட்சியில் உமக்கு என்ன வேலை என்கிறது. பதவி ஆசை அற்ற கட்சி ,ஊழலற்ற கட்சி என்று பீற்றிக் கொண்ட ஆளும் கட்சியில் பதவிப் போட்டிச் சண்டைகளும் ஊழல் புகார்களும் மலிந்துவிட்டன. கடவுளைக் காப்பவர்கள் என்ற அந்தஸ்தில் இருப்பவர்கள், குருவாயூரப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏக நிபந்தனை போடுகிறார்கள்.மார்புச் சீலைகூட போர்த்த பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்ட கேவல பாரம்பர்யத்தை மறந்து, பெண்கள் கோவிலுக்கு வரும்போது புடவைதான் கட்டவேண்டும் கேரள பாரம்பர்யத்துக்குப் பொருத்தமில்லாத சூடிதார் டிரெஸ் [இத்தனைக்கும் உடம்பை முழுவதும் மறைக்கும் உடுப்பு] அணிந்து வரக்கூடாது என்று சொல்கிறார்கள். கடவுள் இதற்காக வேலை மெனக்கெட்டு வந்து இந்த அபத்த நிபந்தனகளைத் தீர்க்க முடியாததால் உச்ச நீதி மன்றம் அது முட்டாள்தனம் என்று குட்டு வைக்க வேண்டியிருந்தது. ஒன்று மட்டும் நிச்சயம். உச்சநீதிமன்றம் கடவுளை சாப்பிட்டுவிட்டது. கடவுளை நம்பாதவர்களும் கடவுளுக்கு பயப்படாதவர்களும் உச்ச நீதி மன்றத்துக்கு இதுவரை பயந்து கொண்டிருக்கிறார்கள். அதன் ஆஞ்ஞைக்கு பயந்து உண்ணாவிருதங்கள் அவசரமாக நிறுத்தப் படுகின்றன. நிறுத்தப்பட்ட பஸ்கள் ஓடஆரம்பிக்கின்றன. நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள் என்று மூத்த அரசியல்வாதிகள் தப்பாமல் சொல்கிறார்கள். ஆனால் நேற்று முளைத்தவர்கள்
நீதிமன்றங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவையா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆந்திர மாநிலத்தில் இதுவரை நக்சலைட்டுகளின் தாக்குதல்களும் கொலைகளும் விவசாயிகள் தற்கொலைகளும் அதை சமாளிக்கத்தெரியாத அரசுகளும் தான் பிரசித்தம். இப்போது மதத்தின் பெயரில் விவஸ்தை இல்லாமல் இனப் படுகொலைகளில் இறங்கும் அல்கெய்தா தீவிரவாதக் குழுக்கள் மாற்றி மாற்றி பயங்கரவாதச் செயல்களினால் ஹைதராபாதை கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. தாக்குதல் வரும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கைக்குப் பிறகும் நமது அரசுகளால் தடுக்கமுடிவதில்லை. கடவுளின் பெயரில் நடக்கும் இந்த பயங்கரவாதத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று உணர்ந்திருக்கும் கடவுள் அங்கே கால் வைப்பாரா என்ன? குண்டை வைத்து அவரையே பஸ்மமாக்கும் சூழலில் மாட்டிக்கொள்ளும் அளவுக்கு அவர் அப்பாவி அல்ல.
குஜராத்தைப் போல ஒரு குற்ற உணர்வில்லாத மாநிலம் இருக்கமுடியாது. அல்கெய்தாவும் லஷ்கரி தொய்பாவும் ஒரு ஒட்டுமொத்த இனத்தின் அடையாளம் என்று வெறுப்பை வளர்த்து இந்து தர்மத்தைக் காக்கவந்த க்ருஷ்ணபரமாத்வாவாக ஆளுக்கு ஆள் கிளம்பி உசுப்பிவிட்ட இன வெறியின் காயங்கள் ஏழு ஜென்மங்களுக்கு ஆறாது. இருந்தும் அங்கு அதெல்லாம் புரளி என்கிற மெதப்புடன் பெரும்பானமை சமூகம் வாழ்கிறது. அங்கு நரேந்திர மோடியே கடவுள் என்பதால் நிஜக் கடவுளுக்கு இடமில்லை. அங்கு நடக்கவிருக்கும் தேர்தலைக் கண்காணிக்கக் கூட அவருக்கு அக்கறை இருக்காது.

ஒரிஸ்ஸாவில் மாநில அவையில் மக்கள் பிரதினிதிகள் தெருப்பிள்ளைகள் போடுவதைவிடக் கேவலமான
அடிதடியில் இறங்குகிறார்கள். ஈகோச் சண்டை, பதவிச் சண்டை, ஊழல் பணப் பங்கிற்கான சண்டை…
தாங்கள் எதற்காக தேர்தலில் ஜெயித்து வந்தோம் என்பது எந்த மாநிலத்துப் பிரதினிதிக்கும் நினைவில்லை. ஐந்து வருஷங்களுக்குள் எத்தனை பணம் பண்ணமுடியும் என்று கணக்கிட்டு வரும் தொழிலாகிப் போனது அரசியல் பணி. அதில் ஜாதி அரசியலும் வெறுப்பும் சேர்ந்தால் என்ன ஆகும்?
அஸ்ஸாமில் அத்தகைய பயங்கரம் தான் நடந்து அதிர்ச்சி அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஆதிவாசிகளும் இதர இனமக்களும் சில நூறு வருஷங்களாக மிக இணக்கமாக வாழ்ந்து வந்ததான மாயையில் இருந்துவந்தது அஸ்ஸாமிய சமூகம். இதுவரை ULFA என்ற மாணவர் போராட்டமாக ஆரம்பித்து இன்று ஒரு தீவிரவாத அமைப்பாக பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துகொண்டிருக்கும் குழுவைக்கண்டே அஸ்ஸாமிய மக்களுக்கு பயந்து பழக்கம். பாமரர்களுக்குள் மண்டிக்கிடக்கும் ஜாதி உணர்வு உசுப்பட்டு அவர்களது கோபங்களுக்கு வடிகால் கிடைக்கும் நேரம் வந்தது, ஆதிவாசிகளின் ரூபத்தில். எங்கோ கண்காணாத வனங்களில் வசித்து வந்த ஆதிவாசி பழங்குடிகளை ப்ரிட்டிஷ் காரர்கள் தான் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்து வந்தார்கள். அவர்கள் எல்லோரும் இன்று கூலிக்கு வேலை செய்பவர்கள். மற்ற ஜாதியினருடன் மோதாதவர்கள். குரல் இல்லாததாலேயே மோதல் இருக்கவில்லை. எஜமான் வேலையாள் உறவு அந்தஸ்துதான் இருவரிடையே. ஆதிவாசிகள் விழித்துக்கொள்ள ஆரம்பித்திருப்பது அவர்கள் ஷெடூல் குடிமக்களின் பிரிவில் தாங்களும் சேர்க்கப்படவேண்டும் அந்த அந்தஸ்தும் அதன் மூலம் சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்று அஸ்ஸாமின் தலை நகரான கௌவஹாத்தியில் ஒரு மாபெரும் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் ,அரசின் அனுமதியுடன். அத்தனை பெரிய ஊர்வலம் வரும் என்று தெரிந்தும் நான்கைந்து போலீஸ் காரர்களே[ கண்ணீர் புகைக்கு ஏற்பாடு இல்லை, தற்காப்பு கவசங்கள் இல்லை] இருந்தார்கள். திடீரென்று யாரோ கல்லை விட்டெறிய கலகம் ஆரம்பித்தது.
ஆதிவாசிகளுக்கு இத்தனைத் திமிரா என்று போகிறவன் வருபவன் எல்லாம் மூர்க்கத்தனமாக ஊர்வலத்தில் இருந்த பெண்களையும் ஆண்களையும் இழுத்து அடித்து நொறுக்கிவிட்டார்கள். ஒரு 16 வயதுப் பருவப் பெண் இழுக்கப்பட்டு துகிலுரிக்கப்பட்டு நிர்வாணமாக [ அவளது பிரப்புறுப்பில் ஒரு கிராதகன் காலால் உதைக்கிறான்] ஓடுவதை தொலைக்காட்சி சானல்கள் மாற்றி மாற்றி காண்பித்து அங்கலாய்க்கிறோம் என்ற சாக்கில் அடிபட்டவர்களை இன்னும் அதிகமாகக் கேவலப் படுத்தின. மக்களின் உள்ளார்ந்த ஜாதி வேறியும் கோபங்களும் சமயம் வாய்க்கும் போதெல்லாம் அசுரத்தனத்துடன் நமது நாட்டில் வெளிப்படுவது கண்டுப் பழகிப்போன நமக்கே அச்சத்தைத் தருகிறது. புராணகால அசுரர்களை மட்டுமே கண்டிருக்கும் ஆண்டவன் மிரண்டு போவார்.
சமதர்ம , சமச்சீர் சமுதாயத்தை உருவாக்குவதே தமது மதம் என்று முழங்கிவரும் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்து வந்த மேற்கு வங்கம் சீர்குலைந்து, தர்மம் நலிந்து நார் நாராகிப் போகும் என்று யார் நினைத்திருப்பார்கள்? அமெரிக்க சர்வாதிகாரத்தை எதிர்ப்பதே கொள்கையாகக் கொண்ட சிபிஎம்மின் வழித்தோன்றலான மேற்கு வஙக முதலமைச்சர், நந்திகிராமில் ஏழைகளின் நிலங்களை வாங்கி பன்னாடு நிற்வன தொழிலதிபர்கள் தொழில் நடத்த ஏற்பாடு செய்ய ஆரம்பிக்க, நந்திகிராமம் உலக வரை படத்தில் உலகமயமாக்கலுக்கு எதிரான ஒரு அடையாளமாகிப் போனது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மீறல் குழுவின் வெள்ளைக்கார உயர் மட்ட அதிகாரிகள் பிரச்சினையை ஆராய வரும்போது தங்களது நிலமும் வீடும் நாசமானதைச் சொல்லிச் சொல்லி அவர்களது தோளைக் கட்டிக்கொண்டு நமது வங்காள மூதாட்டிகள் அழுகிறார்கள். இந்தக் கடவுள்தான் தங்களைக் காப்பாற்றும் என்று நினைத்தவர்கள் போல. அவர்கள் மேல் தப்பில்லை. சில மாதங்களாக நடைபெரும் போராட்டத்தில் பல உயிர்கள் பலியாகியும் அவர்கள் வணங்கும் கடவுள்கள் சிபிஎம் தோழர்கள் கட்டவிழ்த்த வன்முறைக்கு பயந்து காணாமல் போய்விட்டன.
கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக ஒரு காலத்தில் இருந்துவந்த இடது சாரிகளின் அரசுகளே இந்த லட்சணத்தில் இருக்கும் போது மற்ற கட்சிகளைப் பற்றி என்ன சொல்வதற்கு இருக்கும்?
சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் நிறைவேறிவிட்ட கால கட்டத்தில் பொறுப்பற்ற ஜன நாயகத்தின் அடையாளமாக ஆட்சியாளர்களும் மக்களும் மாறிவிட்ட சூழலில் பாரத நாடு இருப்பது யாரையும் ஆயாசப்படுத்தும். படைத்தவன் ஒருவன் இருந்தால் அவனையும் தான்.
புராணங்களும் ஹேஷ்யங்களும் நமக்குத் தேவை இல்லை. நமது ஜன நாயகக் கடமைகளை பாமரர்களான நாம் மறக்காமல் இருந்தால் அரசியல்வாதிகளும் அடங்கிப் போவார்கள். மக்களே மகேசன்கள்.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

வாஸந்தி


சமீபத்தில் நான் சென்னையில் சந்தித்த ஒரு பிரபல ஆங்கில ஏட்டின் ஞாயிறுப் பதிப்பின் ஆசிரியர் பதவியில் இருக்கும் தோழி அலுப்பும் வெறுப்புமாகச் சொன்னார். ” நமது அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி நம்பமுடியாத அளவு விரிந்திருக்கிறது. நான் சில கிராமங்களுக்கு வேலை நிமித்தமாகப் போயிருந்தபோது நமது இளைய தலைமுறையினரின் ஆர்வத்துக்கும் தாகத்துக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் நமது அரசியல் வாதிகள் போடும் கோஷங்கள் இருப்பதைக் கவனித்தேன். யாருக்காக அவர்கள் அந்த கோஷங்கள் போடுகிறார்கள்? காலாவதியான, இன்றைய யதார்த்தத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சித்தாந்தங்களை, பழமைவாத கருத்துக்களை ஏன் தேவையற்ற
ஆக்ரோஷத்துடன் முழங்குகிறார்கள்?”
தோழியின் அங்கலாய்ப்பு அர்த்தமுள்ளது என்பதை என்னால் மறுக்கமுடியவில்லை. அவள் தன்னைக் கட்டுப் படுத்திக்கொள்ள இயலாமல் புலம்பித் தீர்த்தாள்.
‘இன்றைய தலைமுறை முன்னேறத் துடிக்கிறது. உலகமயமாக்கலுக்குப் பிறகு அதிகரித்துவிட்ட வாய்ப்புகளை உபயோகித்துக்கொள்ளும் அவசரத்தில் எல்லாரும் இருக்கிறார்கள். கிராமத்து இளைஞர்கள் கூட ஆங்கிலக் கல்வியும் கம்ப்யூட்டர் அறிவும் இன்றைய அவசியமான தேவை என்று உணர்ந்துகொண்டு செயல்படுகிற சமயத்தில் தனித் தமிழ் கோஷம் போடுவதிலும் கண்னகி சிலைபற்றின விவாதத்திலும் யாருக்கு அக்கறை இருக்கும்?’ என்பது தோழியின் கேள்வி. சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்துவதை விட்டு சித்தாந்த கோஷங்கள் யாருக்கு லாபமென்று போடப்படுகின்றன? யாருக்காக இந்த வேஷம்?

சாமான்ய மக்களுக்கும் நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமில்லாமல் போய் வெகு காலமாகிறது. கோஷங்களும் வேஷங்களும் இன்றைய அரசியலுக்குத் தேவையான கவசங்கள். அவர்களது இயலாமையை மறைத்துக்கொள்ªவும், தங்களது இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும் தேவைப்படும் சாகசங்கள். அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனைவிட தங்களது சுய நல அரசியலே முக்கியமாகிப் போனதாகத் தோன்றுகிறது. அவர்களை நாடாளுமன்றத்துக்கும் மாநில அவைக்கும் தேர்ந்தெடுத்து அனுப்பிய சாமான்ய மனிதனுக்கு அவர்கள் பேசும் அரசியல் விளங்கக் கூட இல்லை. விளங்கினாலும் அதைப் பற்றிக் கவலைப் படும் அளவுக்கும் அவனுடைய வாழ்வுடன் அது சம்பந்தப் பட்டதில்லை.
அரசியலில் சித்தாந்தங்கள் நீர்த்துப் போயும் வெகு காலமாயிற்று. நீர்த்துப் போவது தவறில்லை. காலம் மாறும் போது சித்தாந்தங்களும் மாறவேண்டியது அவசியம். ஆனால் வேறு ஒன்றும் உருப்படியாகச் செய்ய முடியாதபோதோ எதிர்கட்சியைத் தாக்கவேண்டிய கட்டாயத்தினாலோ திடீரென்று அவை ஆயுதங்களாக மாறும்போது சாமான்யன் திகைக்கிறான்.சமீப காலமாக ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு விஷயம் தலையெடுத்து சம்பந்தமில்லாத அவனை வம்புக்கு இழுத்துக் குழப்புகிறது.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு நமது தோழர்கள் தெரிவித்த தீவிர எதிர்ப்பில் நாடு கிடுகிடுத்துப் போனது.இன்னமும் அதன் அதிர்வு தொடர்கிறது. ருஷ்யாவும் சீனாவும் தீவிர கம்யூனிசவாதம் இன்றைய யதார்த்தத்துக்கு ஒத்து வராது என்ற முடிவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் நமது இடது சாரி கட்சிகள் மிகத் தீவிர கொள்கை வாதிகளாகத் தொடர்வதால் அவர்களை நம்பி அரசு நடத்தும் மத்தியில் உள்ள கூட்டணி அரசு வெல வெலத்துப் போனது. அணு சக்தி ஒப்பந்தத்தின் நுணுக்கம் எதுவும் எந்தக் கூட்டணி கட்சிக்கும் தெரிந்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அவர்களுக்குப் புரிந்தது ஒரே விஷயம் தான். இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டால், அரசு கவிழ்ந்து விடுமே? சண்டைபிடித்து பேரம் பேசி வாங்கிய மந்திரிப் பதவிகளும் அதனால் கிடைத்து வந்த இன்னபிற சௌகர்யங்களும் கை நழுவிப் போகுமே? மீண்டும் தேர்தல் வந்தால் இதே அளவு எண்ணிகையுடன் வெற்றிபெறுவது சாத்தியமில்லையே? ஆள் ஆளுக்கு சமாதானங்கள் சொல்ல ஆரம்பித்தது பெரிய கூத்து. ஆரம்பகட்டத்தில் கூட்டணியிலும் அமைச்சரவையிலும் பங்கு கொண்ட எல்லா கட்சிகளும் ஒப்பந்தத்தை ஆதரித்து வரவேற்றிருக்கின்றன. இடது சாரிகள் விலகுவோம் என்று எச்சரித்தவுடன் ‘எனக்கு முதலிலேயே இதில் சம்மதமில்லை’ என்கிறார் நமது முதல்வர். ‘ஒப்பந்தத்தை விட அரசு [நீடித்திருப்பது] முக்கியம்’ என்கிறார். மக்கள் மேல் மறுபடி ஒரு தேர்தலை சுமத்துவது நியாயமில்லை என்கிறார்கள் எல்லோரும் அப்போதுதான் மக்களின் நினைவு வந்ததுபோல. அவர்களது கவலைத் தங்களது பதவி நீடிப்புதானே தவிர மக்களைப் பற்றி அல்ல என்பது முட்டாளுக்குக் கூடத் தெரியும்.
இந்த ஒப்பந்தத்துக்காகப் பல மாதங்களாக உழைத்து தனது பெரிய சாதனையாக நினைத்த பிரதமர் மன்மோகன் சிங் முகத்தில் கரி பூசி நிற்கிறார். அவர் சராசரி அரசியல்வாதி இல்லை, கொஞ்சம் கொள்கை உள்ளவர் என்று நினைத்திருந்த என்னைப் போன்ற பலருக்கு அவர் கூனிக்குறுகித் தோல்வியை விழுங்கிக் கொண்டு பிரதமராகத் தொடர்வது மிகப் பெரிய ஏமாற்றம்தான். பதவி, நாற்காலி ஆசை யாரையும் விட்டுவைப்பதில்லை என்று சோர்வு ஏற்படுகிறது .தலைவர்கள் போடும் சண்டையையும் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள இவர்கள் பரிதவித்து தோப்புக்கரணமும் குட்டிக்கரணமும் போடும் பல்டிகளைக்கண்டு நாடும் மக்களும் வெறுத்துப் போனார்கள். அரசியல் தலைவர்களுக்கே விளங்காத அணு சக்தி ஒப்பந்தம் சாமான்யனுக்கு என்ன விளங்கும்? நாட்டின் நீண்ட கால எரிவாயு திட்டங்களுக்கு இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானது என்றும் அமெரிக்காவிற்கு சலாம் போடும் அளவுக்கு இந்தியா சிறிய நாடு அல்ல , தன்மானத்தை விட்டுக்கொடுக்க அது பலவீனமானதும் அல்ல என்ற பிரதமரின் வாதத்தை ஏற்க யாருக்கும் பொறுமை இல்லை. முதல் முறையாக பெரிய பலத்துடன் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கும் இடதுசாரிகளுக்கு இந்த சந்தர்பத்தைவிட்டால் சவால் விட வேறு தருணம் கிடைக்காது.
இதிலெல்லாம் சித்தாந்தங்களைவிட கட்சிகளின் ஈகோ பிரச்சினையும் சேருகிறது. அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக இருப்பது மத்திய அரசுக்கு ஆதரவு தரும் இடது சாரிகளுக்கு ,முக்கியமாக சிபிஎம்மின் தலைவர் பிரகாஷ் கராத்துக்கு பெரிய அவமானம். தனது கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்வது தேர்தலை சந்திப்பதைவிட அவருக்கு முக்கியமாகிவிட்டதாகத் தோன்றுகிறது. அதே ஈகோ பிரச்சினையில் தமிழக முதல்வரும் மாட்டிக்கொண்டார்.
அணு சக்தி விவகாரத்தில் மன்மோகன் சிங் திணறுவதற்கு முன்பு, சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் ரகளை ஆனதற்கு இதே காரணம். பல கோடி இந்துக்கள் வழிபடும் ராமரை கருணாநிதி உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார்! வீம்புக்கு என்னென்னவோ பேசி நம்பிக்கை உள்ள இந்துக்களை அவர் புண்படுத்தியதெல்லாம் ‘தனது சொல்லுக்கு மறு சொல்லா’ என்கிற எரிச்சலால் வந்த வினையாகத் தோன்றுகிறது. தேர்தலுக்கு நின்றபோது மக்களுக்குக் கொடுக்கப் பட்ட வாக்கைக் காப்பாற்றவேண்டும் என்கிற தீவிரத்தைவிட அது ஒரு மானப் பிரச்சினையாகிப் போனது. முதலமைச்சர் என்ற பதவியில் இருப்பவர் நிதானம் காக்கவேண்டும் என்பது மறந்துவிடும் அளவுக்கு. உச்ச நீதிமன்றம் வரை விவகாரம் போக, திட்டம் தடை பட்டுப் போனது எதிர்கட்சிகளுக்கு வெற்றி என்கிற எரிச்சல் அவரது கண்னை மறைத்திருக்கும். சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் பொருளியல் நிபுணர்களும் அந்த திட்டத்தின் லாப நஷ்டத்தைப் பற்றி எழுப்பும் கேள்விகளுக்கு இதுவரை சரியான விளக்கம் அளிக்கப் படவில்லை. உச்சகட்டமாக மத்திய அரசில் தாம் பங்கு கொண்டுள்ளதும், திட்டத்தை அமல் படுத்தும் அமைச்சர் தமது கட்சியைச் சேர்ந்தவர் என்ற நிலையிலும் அவலை நினைத்து உரலை இடித்த கதையாக உச்ச நீதிமன்ற தடையையும் மீறி உண்ணாவிருதம் என்ற பெயரில் தமிழகத்தில் பந்த் நடத்துவது சரியா என்ற கேள்வியைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கேட்கும் துணிச்சல் இல்லை. மக்கள் அவர்களுக்கு சம்பந்தமில்லா விஷயத்துக்காக அவர்களது விருப்பமில்லாமலே அவதிக்குள்ளானார்கள். ‘ஏன் இந்த உண்ணாவிருதம்’? ‘மக்களுக்கு சேது சமுத்திர திட்டம் முக்கியமானது என்று உணர்த்துவதற்காக’ என்கிறார்கள். எத்தனை கேலிக் கூத்து! 70 சதவிதம் சேது திட்டப் பணி முடிந்ததைப் பற்றி மக்களுக்கு ஒரு சதவிதம் கூடத் தெரியாது.

ஒரு வேடிக்கை என்னவென்றால் எதிர் கட்சிக்கும் தோழமைக்கட்சிகளும் இப்போது வித்தியாசம் இல்லை. எதிர்கட்சியைவிட அவர்களைக் கண்டுதான் ஆளும் கட்சி பயப்பட வேண்டியிருக்கிறது. சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பழகிப் போன கட்சிகள் கூட்டணியில் இருந்தபடியே தமக்கு சாதகமான தருணத்தைக் கணக்கிட்டு எதிர்ப்பைத் தெரிவிப்பதும் கூட்டணியை உடைப்பதாக அச்சுறுத்துவதும், அரசுகள் கவிழ்வதும் தன்னிச்சையாக நிகழ் கின்றன. நித்திய கண்டம் பூர்ணாயிசாக இருக்கும் அரசுகளுக்குத் தங்கள் அதிகாரத்தைக் கட்டிக் காப்பதிலும் தற்காப்பு வீம்புகளில் ஆழ்வதிலுமே கவனம் என்பதால் அரசு நிர்வாகம் என்பது ஏதோ உருட்டிவிட்ட கட்டையைப் போல் ஓடுகிறதே தவிர தீர்க்க தரிசனத்துடன் கூடிய பார்வை இல்லாததால் மக்களுக்கான ஆட்சியாகப் பரிணமிக்கும் வாய்ப்பு கிடையாது. அத்தனை அமற்களத்திலும் அசிங்கமாக வெளிப்படுவது ஒன்று- அப்பட்ட சுயநல அரசியல். நம்மைச் சுற்றி நடக்கும் அரசியல் கூத்துகள், அராஜகங்கள், பல இடங்களில், அரசு நிர்வாகமே போலீஸ் உதவியுடன் மூட்டிவிடும் பயங்கர கலவரங்கள் எல்லாம் சொல்வது அதுதான். நாம் வாக்களித்து அதிகாரம் கொடுத்து அவர்களை நாம் செல்வாக்கான ஆசனத்தில் அமர்த்தியதற்கு அவர்கள் செய்யும் கைம்மாறு அது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக ஆட்சி நடத்த வருபவர்கள் உரு மாறும் அவலம் அது. எதிர்கட்சி ஸ்தானத்தில் அமரும்போது ஆளும் கட்சியின் செயல் பாடுகளை மக்கள் விரோத அரசு என்று குற்றம்சாட்டும் கட்சிகள் பதவிக்கு வரும்போது அதே குற்றங்களைக் கூசாமல் செய்கின்றன. இந்தியா முழுவதுமே ஜன நாயகம் என்ற பெயரில் எல்லா அரசுகளுமே மக்கள் விரோத அரசியல் நடத்துவதாக எனக்குப் படுகிறது.
கர்நாடகத்தில் நடக்கும் கூத்து நமது அரசியல் கேடு கெட்டுப் போன அவலத்தின் உச்சம். கடந்த இருபது மாதங்களாக முன்னாள் பிரதமரும் ஜனதாதளம் [மதசார்பின்மை] கட்சியின் தலைவருமான தேவே கௌடாவின் மகன் குமாரசுவாமி முதல்வராகப் பணியாற்றினார். கூட்டணிகட்சியான பாஜகவுடன் ஆரம்பத்தில் செய்த ஒப்பந்ததின்படி அடுத்த இருபது மாதங்கள் பாஜகவின் கீழ் ஆட்சி அமையவேண்டும். இருபது மாதங்கள் பதவியை அனுபவித்த குமாரசுவாமிக்கு அதை இழக்கவேண்டிய தருணத்தில் மனசு வரவில்லை. ஏற்கனவே அவர் தன் தந்தைக்கு விருப்பமில்லாமல் அதிரடியாக காங்கிரெஸ்ஸ¤டன் இருந்த கூட்டணியை முறித்து பாஜகவுடன் அதிரடியாகக் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார். தேவே கௌடா அப்போது இனி மகனுடன் எனக்கு உறவு இல்லை என்று நாடகம் ஆடினார். இப்போது ஆட்சி மாற வேண்டிய தருணம் வந்த போது ஒரு பாஜக எம் எல் ஏ தன் மகன் மீது பழி சொன்னது தனது மனசைப் புண்படுத்திவிட்டது என்று கூப்பாடு போட்டார். இதற்கிடையில் கருணாநிதி ‘ராமர் என்பதே பொய்’ என்று டிவி காமிராவின் முன் சொன்னதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்காரர்கள் கர்நாடகாவுக்கு வரும் இரண்டு தமிழ்நாட்டு பஸ் களை எரித்து பெங்களூரில் வாழும் கருணாநிதியின் மகள் செல்வியின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தார்கள். குமாரசுவாமி கிடைத்தது சாக்கு என்று ‘ஆட்சியை வி.ஹி.ப.வின் கூட்டாளிகளான பாஜகவிடம் ஒப்படைத்தால் மக்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும் அதனால் கொடுக்கமுடியாது என்றும் அடம் பிடித்தார். இத்தனைக்கும் பாஜகவின் எண்ணிக்கைதான்[79] அதிகம் மன்றத்தில். ஜனதாதளம் [ம.சா] வெறும் 45தான். பாஜக தலைவர்கள் நடையாய் நடந்தார்கள். குமாரசாமி மசியாததால் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றது. அரசு விழுந்தது. தேர்தலை சந்திப்போம் என்று கௌடா முகாம் முழங்கியது. மாநில அவையைக் கலைத்து விடும்படி கவர்னருக்கு கௌடா கடிதம் எழுதிய பிறகு ஜனாதிபதி ஆட்சி வந்தது. ஆனால் அவை சஸ்பெண்ட் மட்டும் செய்யப்பட்டது. இந்த மாதிரி ஒரு சூழலுக்குக் காத்திருந்த இரண்டாம் எண்ணிக்கை கொண்ட காங்கிரெஸ் சுறுசுறுப்பானது. கௌடாவின் முடிவில் விருப்பமில்லாத ஜ.மா.ச . உறுபினர்கள் சிலரை ஆசைக்காட்டி தேர்தலில்லாமல் காங்கிரெஸ் கூட்டணி அரசு நிறுவப் பார்த்தது. இதை உணர்ந்துகொண்ட கௌடா முகாம் எங்கே கட்சியில் பிளவு வந்து தங்கள் செல்வாக்கு அடியோடு போய்விடுமோ என்று அலறி அடித்துக்கொண்டு வெட்கமில்லாமல் மிண்டும் பாஜகவிடம் சென்று அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாகச் சொன்னதும் ஒரே நாள் போதில் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. பெங்களூர் அரசியல் அல்லோலகல்லோலப் பட்டது. பத்திரிக்கை டிவி நிருபர்கள் சாப்பாடு தண்ணி தூக்கம் பாராமல் ராஜ் பவன் வாசலிலோ, தலைவர்களின் வீட்டு முன்போ தவமிருந்தார்கள்.
இத்தனை அமற்களத்திற்கு நடுவே பெங்களூர் மக்கள் அதில் கவனமில்லாமல் தங்கள் பணிக்காக ஓடிக்கொண்டிருந்தார்கள். கவனித்தவர்கள் வெறுத்துப் போனார்கள். தலைவர்களின் கூத்துக்கும் அவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. மக்களின் வரிப் பணத்தைத் துச்சமாக மதித்து தங்கள் ஈகோ பிரச்சினையால் தேர்தலுக்குத் தயாராகும் துணிச்சல் தலைவர்களுக்கு எப்படி வருகிறது? மானம் ரோசம் இல்லாமல் பேசுபவர்களை, வார்த்தைகளை மாற்றுபவர்களை நம்பி நாம் எப்படி ஆட்சியை ஒப்படைப்பது? தன்னலமே பெரிதாக இருக்கும் இவர்கள் மக்களுக்காக என்ன பணி செய்வார்கள்? இப்படி அரசியலைப் பந்தாடுபவர்களை அரசியலிலிருந்தே ஒதுக்கவேண்டாமா? ஆட்டத்தின் விதிகளைப் பின்பற்றாதவர்களை ஆட்டத்திலிருந்து விலக்குவதுபோல அரசியல் கட்சிகளுக்கும் சில விதிகள் வைக்கப் படவேண்டும் என்று தோன்றுகிறது. மக்கள் வெறுத்துப் போய்தான், எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால்தான் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகிறது. அப்படியும் கூட்டணி என்கிற பேரில் நடக்கும் அராஜகங்களும் ஸ்திரமின்மையால் நடக்கும் கூத்துக்களும் மக்களை மேலும் மேலும் தூர விலக்குகின்றன.
இதற்கு என்ன தான் தீர்வு? கல்வி ஒன்றே தீர்வு என்று முன்பு எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. கல்வி அறிவு அதிகப் பட்சம் இருக்கும் கேரளத்தில் நடக்கும் அரசியல் அபத்தங்களுக்குக் கணக்கில்லை. அரசியலுக்கு வருபவர்களுக்கும் கட்சி நடத்துவதற்கும் சில கடுமையான விதிகள் பின் பற்ற வேண்டிய அவசியம் ஏற்படவேண்டும். பணம் புரளும் தேர்தல் செலவுகள் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் தேவை. ஜன மயக்கு திட்டங்களும் இலவசங்களும் நிறுத்தப்பட சட்டம் தேவை. ஒவ்வொரு அரசும் மக்களின் நலனுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பிலும் அடிப்படை வசதிகளிலும் கவனம் செலுத்த காலக்கெடு இருக்கவேண்டும். இதற்கெல்லாம் சட்டம் இயற்றப் படவேண்டும்.
சட்டம் இயற்றும் அதிகாரமும் நாம் அனுப்பும் பிரதினிதிகளிடம்தான் இருக்கிறது. தங்களை இக்கட்டில் மாட்டவைக்கும் விதிகளைத் தாங்களே போடுவார்களா?
ராம ராமா. இது சேது பந்தம்கூட இல்லை. நாம் வெளியில் வரமுடியாத சக்கிரவியூகத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் அபிமன்யுகள்.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு!

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

வாஸந்தி



சமீப காலமாகத் தொலைக்காட்சி சானல்களில் அதிர்ச்சியும் வேதனையும் ஊட்டும் அந்த பிம்பங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. உலகம் முழுவதும் பார்வையாளர்களின் கவனத்தை பெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை தெரிவித்து தூதர்களை அனுப்புகிறது. இந்திய அரசு வாளாயிருக்கும் மர்மம் புரியவில்லை என்று மனித உரிமையில் அக்கறைக் கொண்டவர்கள் குரலெழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அசாதாரணமான காட்சிகள் அவை. ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று ஜபித்தபடி செங்காவி உடை அணிந்த அந்த எளிய புத்த பிட்சுக்கள் திருவோடை ஏந்தி பிட்சை எடுப்பார்கள். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மயன்மார் [பர்மா] நகர வீதிகளில் பர்மிய ராணுவ அரசுக்கு எதிராகப் போர்கொடி தூக்கிவருகிறார்கள். பல துறவிகள் நீங்கள் இடும் பிச்சை எங்களுக்குத் தேவை இல்லை என்பதுபோல பிச்சை ஏந்தும் பாத்திரத்தைக் கவிழ்த்துக் கொண்டு செல்கிறார்கள். மயன்மாரை 18 ஆண்டுகளாக ஆண்டு வரும் ராணுவ அரசு சமீபத்தில் எரிவாயு விலையை ஏற்றியதும் பொறுத்தது போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட சாமன்ய மக்களின் போராட்டத்தை புத்த துறவிகள் முன்னெடுத்துச் சென்றது அரசு எதிர் பாராத ஒன்று.
அதிர்ச்சியளிப்பதும்கூட.
மயன்மார் தீவிர பௌத்த நம்பிக்கை கொண்ட நாடு. மிலிடரி ஆட்சியாளர்களிடமிருந்தும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்தும் புத்த பிக்குகள் பிச்சை ஏற்க மறுப்பது முன்னவர்களை மதத்திலிருந்து, பர்மிய கலாச்சார ஆதார வேர்களிலிருந்து விலக்குவதுபோல. பிக்குகளின் இந்த ஒரு செயலே மயன்மாரில் வெடித்த போராட்டத்தின் தீவிரத்தின் அடையாளம் என்று மயன்மார் சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
மயன்மார் நாட்டில் ராணுவ வீரர்கள் இருக்கும் அளவுக்கு பிக்குகளும் இருக்கிறார்களாம். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர்களாகவும் இருப்பார்கள். ராணுவத்தில் சேருவதற்கும் புத்த விகாரத்தில் சேருவதற்கும் குடும்பத்தின் ஏழ்மை நிலையே காரணமாக இருக்கக்கூடும். சமீபத்தில் நான் கம்போடியாவில் ஒரு கோவிலில் மிக இளம் வயது புத்த பிக்குவை சந்தித்த போது அத்தகைய எண்ணம் ஏற்பட்டது. அந்த பிக்கு என்னை வெகு ஆர்வத்துடன் என்னைப் பற்றின விவரங்கள் கேட்டார். என் காமிராவை ஆர்வத்துடன் பார்த்தார். அவருடன் கூடப்பிறந்தவர் நிறைய என்றார். அப்பா ஏழை விவசாயி. புத்த பிக்கு ஆன பிறகே தம்மால் கல்வி கற்க முடிவதாகச் சொன்னார். சாப்பாட்டுக்கும் கவலை இல்லை. மயன் மாரிலும் அத்தகைய உந்துதலே இருக்கவேண்டும். ஆனால் கம்போடியாவைப் போல் இல்லாமல் பர்மிய புத்த துறவிகளின் செல்வாக்கு மிக அதிகமானது. மிலிடிரி மக்களை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி புரிந்தாலும் துறவிகளிடம்தான் தார்மீக அதிகாரம் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. மிக சாமான்ய வீரனுக்கும் மிக சக்தி வாய்ந்த ஜெனரலுக்கும் துறவிகளின் ஆன்மீக அங்கீகாரம் தேவைப்படுகிறது. பௌத்த மதத்தின் பெயராலேயே ஆட்சி செய்வதாக ராணுவ அரசு சொல்லிக்கொள்கிறது.
பிக்குகள் பிச்சை எடுப்பது ஒரு சடங்கு. பாமரனையும் ஆன்மீகத்தையும் – சாமான்ய புத்தனையும் பிக்குவையும் பிணைப்பது. ‘நீ அளிக்கும் பிச்சை வேண்டாம்’ என்று மறுப்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் பிணைப்பைத் துண்டிப்பதற்கு சமானம் என்கிறார் ஒரு மயன்மார் நிபுணர். ஆனால் அந்த ஆன்மீக பந்தத்தின் இடத்தில் ஒரு புதிய பந்தத்தை பிக்குகள் சாமான்ய மக்களுடன் ஏற்படுத்திக்கொண்டுவிட்டது தான் புதுமை. அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்துடன் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருப்பதிலிருந்து ராணுவ அரசின் அராஜகம் சர்வ தேச பார்வைக்கு வந்திருக்கிறது. பிக்குக்களிடையே ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு எனக்கு ஒரே காரணம்தான் புலப்படுகிறது. அவர்களெல்லோரும் இளைஞர்கள். இளைய தலைமுறையின் ஆதங்கங்களைப் புரிந்து கொண்டவர்கள். ஏழ்மை என்றா நிர்பந்தத்தால் ஆடையை மாற்றிக்கொண்டவர்கள். தலையை மழித்துக்கொண்டவர்கள். புத்தம் சரணம் கச்சாமி என்று சொல்வதனால் லௌகீக உலகத்தில் நடக்கும் அராஜகங்களைப் பொறுப்பது தர்மமமாகாது என்று உணர்பவர்கள்.
ஆகையால் சென்ற மாதம் முழுவதும் மயன்மாரின் இரு மிக சக்திவாய்ந்த அமைப்புகள் – பிக்குகளும் ராணுவமும் -எதிர் எதிராக போர் தொடுத்தன. இரு புறமும் தலா 400,000 பேர் இருந்ததாகச் செய்திகள் வருகின்றன. இரண்டு அணியும் இளைஞர் அணி என்பது வேடிக்கை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எதிரும் புதிருமாக இருந்திருக்கக் கூடும். மக்கள் மற்றும் ஆன்மீகத் துறை இரண்டும் எதிர்க்கையில் ராணுவ அரசு வன்முறைத் தாக்குதலில் இறங்கிற்று.
பர்மிய பிக்குகள் இதற்கு முன்பும் போராட்டம் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக. அதற்குப் பிறகு ஐம்பது ஆண்டுகால ராணுவ எதேச்சாதிகாரத்தை எதிர்த்து. ஆனால் வெகு காலத்துக்கு பிக்குகள் அரசியல் போராட்டங்களில் பங்கு கொள்ளாமல்தான் இருந்தார்கள். உண்மையில் 1988தில் நடந்த மாபெரும் மாணவர் எதிர்ப்பின்போது அவர்கள் பங்கு பெறவில்லை என்பதோடு அதற்குப் பின் வந்த தற்போதைய ராணுவ யண்டா[junta] பிக்குகளின் ஆதரவுடன் இருந்து வந்தது. பர்மாவில் ஆட்சியைப் பிடிக்கும் எல்லா ராணுவக் குழுவும் புத்த மதத்தோடு தம்மை ஐக்கியப் படுத்திக்கொள்ளத் தீவிர முயற்சி எடுக்கின்றன. கோவில்களைக்கட்டுவதிலும், மடங்களுக்கு பொருளாதார உதவி செய்வதிலும் கோவில் சடங்குகள் விழாக்களை ஆடம்பரமாகச் செய்வதிலும் தீவிரம் காட்டிவருகின்றன. அதனாலேயே பௌத்த அமைப்புகள் எல்லா அராஜகத்தையும் கண்டும் காணாமல் இருந்ததாகத் தோன்றுகிறது.
ஆனால் இத்தனை செய்தும் முழுமையான அதிகாரம் , அதாவது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரம் தமது வசம் இல்லை என்பது ராணுவ ஆட்சியாளர்களுக்குத் தெரியும். பலாத்காரத்தினாலேயே தங்களது செயல்களை நிறைவேற்றிவருகிறார்கள். நூற்றுக்கணக்கான போராளிகளையும் அரசியல் தலைவர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.ஜனநாயக ஆதரவாளரும் நோபல் சமாதான விருது பெற்ற
தீரப் பெண்மணியுமான ஆங் ஸான் ஸ¥ ஸீ யைப் பனிரெண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள் சிறை வைத்திருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வராத நிலையிலும் ஸான் ஸ¥ ஸீயிக்கு இருக்கும் இளைஞர்களின் மங்காத ஆதரவு அதிசயமானது. மக்களின் ஜனநாயக தாகத்தின் எடுத்துக்காட்டு அது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ராணுவ யண்டாவின் அடக்குமுறையால் அவர்களது எதிர்ப்பு இது நாள் வரையில் எந்த பலனையும் தரவில்லை. இப்பொழுது ஆன்மீகத் துறை எதிர்ப்பில் சேர்ந்து கொண்டது பெரிய திருப்பம் என்று சொல்லவேண்டும்.
இப்பவும் பிக்குகளும் மக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதற்கு இருபுறமும் உள்ள இளம் உள்ளங்கள் சேர்ந்ததே காரணம். பல ரகசிய சந்திப்புகளும் ஒத்த கருத்துகளும் சங்கமித்ததன் பரிமாணமாக வெடித்தது இந்த மிகத் துணிச்சலான போராட்டம். மூத்த வயதினர் பங்கு பெறவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். பல வருஷங்களாக ராணுவ ஆட்சியாளர்கள் மூத்த புத்த பிக்குகளுக்கு உயர் பதவிகளையும் அந்தஸ்தையும் தந்து கைக்குள் போட்டு வந்திருக்கிறார்கள்- இது இளைய தலைமுறை பிக்குகளைக் கோபப் படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளாமல்.
அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து ராணுவம் பௌத்த மடங்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது. பிக்குகள் மயன்மார் வீதிகளிலிருந்து மறைந்தார்கள். இந்தப் போராட்டத்தில் இருநூறு பேர் இறந்ததாகவும் 6000 பேர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் சொல்கின்றன. ஆனால் அரசோ பத்து பேர் இறந்ததாகச் சொல்கிறது. கலவரத்தை பற்றின செய்தியும் டிவி படச் சுருள்களும் பரவுகையில் உலகம் கவலைக் கொண்டது. ஐ.நா தூதுவர் இப்ராஹிம் கம்பாரி பர்மிய தலைவர்களுடன் பேசச் சென்றார். இப்போது நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது , சகஜ நிலை திரும்பிவிட்டது என்றார் மயன்மார் வெளிஉறவு அமைச்சர். நாங்களும் பொறுமையாகத் தான் இருந்தோம் , கலகக் காரர்களின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போகவே ராணுவம் துப்பாக்கிச் சூடு செய்யவேண்டி வந்தது என்றார். அந்தக் கலவரத்துக்குப்பின் இருப்பது வெளிநாட்டு சக்திகள் என்றார்.

மயன்மாரில் 18 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் குரல் அமுக்கப் பட்டு வருவதும் ராணுவத்தின் அராஜகம் நடப்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இந்தியா அதைக் கண்டும் காணாமல் இருக்கிறது. அதற்கு வியாபாரக் காரணம் முக்கியமானது. இரண்டாவது சீனாவின் செல்வாக்கு மயன்மாரில் அதிகரித்து வருவது. மயன்மாரில் மூக்கை நுழைக்கப் போக ஏற்கனவே அதிக சுமுக மில்லாத இந்திய சீன உறவு மோசமாகக் கூடும் என்று தயக்கம். அதனாலேயே அமெரிக்கா மயன்மாருக்கு எதிராக விதித்துள்ள வியாபாரத் தடைகளை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. நடந்த சம்பவங்களை விசாரிக்க விசாரணைக் கமிஷனை நியமிக்கும்படிமட்டும் மயன்மார் அரசுக்குச் சொல்லியிருக்கிறது !
இப்போது மயன்மாரின் கொந்தளித்த வீதிகள் அமைதி காக்கின்றன. ராணுவ பாதுகாப்புடன். ஆனால் இது நீரு பூத்த நெருப்பு என்பது எல்லாருக்கும் தெரியும்.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

வாஸந்தி


பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். மப்பும் மந்தாரமுமாய் வானம். சாரல் காற்று. கேரளத்தில் நிற்பது போன்ற பிரமை ஏற்படுகிறது எனக்கு. ஆனால் நான் நிற்பது அன்னிய மண்ணில்– கம்பூச்சியா என்று அழைக்கப்பட்ட கம்போடியா நாட்டின் சியம் ரீப் என்ற நகரத்திற்கு வந்திருக்கிறேன். இந்தியாவிலிருந்து கடல் கடந்து விமானத்தில் நான்கு மணி நேரம் பறந்து தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்குக்கு வந்து அங்கிருந்து வேறு விமானம் பிடித்து ஒரு மணி நேரப் பயணம். சியம் ரீப்பைத் தொட்ட உடனேயே பூர்வ ஜன்ம தொடர்பு அந்த மண்ணுடன் இருப்பது போலப் பட்டது.
அங்கு சென்றால் உங்களுக்கும் அந்த உணர்வு ஏற்படும். ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ப்ரும்மாண்ட கோவில் வளாகங்களும் அப்ஸரஸ்களின் சிலைகளும் பிராகாரச் சுவர்களில் விரியும் மகாபாரத ராமாயணக் காட்சிகளும் இவ்வளவு தூரம் பயணித்து இவை வந்தது எப்படி என்ற பிரமிப்பை ஏற்படுத்தும். பாற்கடலைக் கடைந்தபடி அசுரர்களும் தேவர்களும் தத்ரூபமாக எதிரில் நிற்க அன்னிய மண்ணென்ற உணர்வு அடியோடு மறையும். அங்கு திருவிழாக்கூட்டம் போலக் குழுமியிருக்கும் அமெரிக்க ஆஸ்திரேலிய ஜாப்பானிய டூரிஸ்ட்களுக்கு சுவரில் விரிந்திருக்கும் சிற்பக் காட்சிகளை கம்போடிய டூரிஸ்ட் கைடை நகர்த்திவிட்டு, [உங்களுக்கு ஓரளவு சம்ஸ்க்ரிதம் தெரிந்திருந்தால்] சரியான உச்சரிப்புடன் ஹிந்து புராண கதைகளை நேரிடை ஞ்யானத்துடன் விளக்கும் ஆர்வத் துடிப்பும் ஏற்படும்.
கோவில் வளாகங்களைச்சுற்றி கடலைப்போல் அகன்ற நீர் சூழ்ந்த மதகுகளும் அகழிகளும் சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திர ஏடுகளை எனக்கு நினைவு படுத்தி காரணமற்ற பெருமிதத்தைத் தந்தன. தஞ்சையில் பெரிய கோவிலை ராஜராஜ சோழன் கட்டிய கால கட்டத்திற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கூர்வாட் கோவிலை கம்போடிய மன்னன் – இரண்டாம் ஜெய வர்மன் கட்டஆரம்பித்துவிட்டதாகச் சரித்திரம். பெரிய சிவ பக்தன் அவன் என்கிறார்கள். அவனைத் தொடர்ந்து வந்த மன்னர்கள் அடுத்த நானூறு ஆண்டுகளுக்குக் கோவில் வளாகங்களை விரிவு படுத்திச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. நமது பல்லவ மன்னர்களின் பெயர்கள் போல அவர்களது பெயர் பட்டியல் அதிசய ஒற்றுமை கொண்டது. ஜெயவர்மன், யஷோவர்மன், ஹர்ஷவர்மன், ராஜேந்திர வர்மன், பரமேஷ்வர வர்மன் இத்தியாதி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு இந்து மதமே புத்த மதத்துக்கு இணையாக அங்கு கோலோச்சியதாகக் கம்போடிய சரித்திரம் சொல்கிறது. ஆனால் அங்கும் இந்து மதத்திற்கும் மஹாயான பௌத்தத்துக்கும் இடையே இடைவிடாமல் போட்டியும் சண்டையும் இருந்தன. சிவ பக்தன் வைத்த லிங்கங்கள் எல்லாம் அடுத்து வந்த பௌத்த உபாசகன் களைந்து விட்டு புத்தரின் சிலையை வைத்தான். மூலவர்தான் இடம் மாறினாரே தவிர கோவிலைச் சுற்றி ஓடும் ரேழிச் சுவர்களின் மஹாபாரத ராமாயணச் சிற்பங்களைச் சேதப் படுத்தவில்லை யாரும். அவை புராண தர்ம கதைகள் என்கிற காரணமாக இருக்கலாம். இப்போது முன்பு கோவிலில் வைக்கப்பட்டிருந்த லிங்கங்கள் எல்லாம் அங்கங்கே கண்டெடுக்கப்பட்டு அருங்காட்சி அகத்திற்குப் போய்விட்டன. இப்போது கம்போடிய மக்கள் வழி படுவது புத்த மதத்தைதான். வங்காளிகளிடையே ‘பர்மன்’ என்பது ஒரு ஜாதிப் பிரிவின் குறியீடு என்ற காரணத்தால் சமீபத்தில் ஒரு இந்திய ஆங்கில நாளேட்டில் ஒரு வங்காள எழுத்தாளர் அங்கூர் வாட் கோவிலைக் கட்டிய அரசனுக்கு வங்காள தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தார். எனக்கு என்னவோ தமிழ் நாட்டுத் தாக்கமே, முக்கியமாகப் பல்லவர்களின் தொடர்பே அங்கு இருந்திருக்க வேண்டும் என்று அழுத்தமாகத் தோன்றிற்று. இது எனது கற்பனை மிகுந்த ஊகம்தான்.

அங்கூர் வாட் என்ற அந்தப் புகழ் பெற்ற உலக அதிசயத்தைப் பார்க்க நானும் என் கணவரும்[இந்தியாவிலிருந்து] இளைய மகன் ஹரியும்[ அமெரிக்காவிலிருந்து] வந்திருக்கிறோம். சில வருஷங்களுக்குமுன் வரை அப்படி ஒரு கலைப் பொக்கிஷம் அங்கு இருப்பது வெளி உலகத்துக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல, கம்போடிய மக்களுக்கே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். நகரங்களை கடல் கொண்டு போனதையும் கோவில்கள் மண்ணில் புதைந்து போனதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். கம்போடியாவிலோ அடர்ந்த காடுகளின் மறைவில் பல நூற்றாண்டுகள் புதைந்து போயிருந்தது அங்கூர் வாட்டின் ப்ரும்மாண்ட கோவில் வளாகம். கம்போடியா ·ப்ரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தபோது ஒரு ·பிரெஞ்சு புதைபொருள் ஆய்வாளர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எடுத்த விடா முயற்சியில் எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டு 1907-ல் உலக மகா அதிசயக் கண்டு பிடிப்பாகப்
பிரகடனமாயிற்று. பல சதுர மைல் பரப்புள்ளதும் பல கோவில் கட்டிடங்களும் கொண்ட அகழி சூழ்ந்த அந்த வளாகம் எப்படி எவர் கண்ணிலும் படாத வகையில் அடர்ந்த காடுகளினால் மறைக்கப் பட்டது என்பது நம்பமுடியாத அற்புதமாக இருக்கிறது. அங்கூர் தோம் என்ற வளாகத்தில் [ஒன்றரை கி.மீ சுற்றளவு] பல கட்டிடங்களின் மேல் ராட்சஸ மரங்கள் அவற்றுக்குக் கவசம் விரித்ததுபோல ப்ரும்மாண்ட வேர்களைப் பரப்பி விரிந்திருக்கும் காட்சி ப்ரமிப்பை ஊட்டுவது. கம்போடிய சரித்திரம் பயங்கர திருப்பங்களையும் அன்னிய ஆக்கிரமிப்புகளையும் அக்கிரமமான துயரங்களையும் கொண்டது. அதனால் இயற்கையே இந்த அற்புத சிற்பக் கூடங்களை மிருக மனம் கொண்ட மனிதனின் பார்வையிலிருந்து மறைக்க எண்ணி பசுமைப் போர்வை போர்த்திற்றோ என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் வேர்களின் ஊடுருவலினால் பல கட்டிடங்கள் பாழாகிப் போயின என்று கட்டிட நிபுணர்கள் சொல்கிறார்கள். இருந்தும் சுற்றுச் சூழல் ஆர்வலரின் நிர்பந்தத்தால் பல மரங்கள் கவசம் போல் கட்டிடங்கள் மேல் படர்ந்திருப்பதை வெட்டாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். மலைப்பாம்புகள் சோம்பலுடன் படுத்திருப்பதுபோல அதற்கும் ஒரு அழகு இருக்கிறது. அமானுஷ்ய கரத்தின் சக்தியில் நம்பிக்கை உள்ள எனக்கு கம்போடிய மக்களுக்குத் தாங்கொணா துயரமளித்த வெறியாட்டம் மிக்க ஆட்சியாளர்களிடமிருந்து அந்தக் காடுகளே அங்கூர் வாட் என்ற அற்புதத்தைக் காப்பாற்றியதாகத் தோன்றுகிறது.
கண்டுபிடிக்கப்பட்டவுடனேயே அது விலை மதிப்பற்ற ஒரு மகத்தான கட்டிடக் கலைப் போக்கிஷம் என்பதையும் ஒரு மிக உன்னதப் பண்பாட்டின் சரித்திர ஆவணம் என்பதையும் அனைத்துலக கலாச்சார ஸ்தாபனங்கள் உணர்ந்துகொண்டன. அப்போது கம்போடியா ·ப்ரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது என்பது ஒரு வகையில் கம்போடியாவுக்கு வசதியாக இருந்தது. பாரீஸில் தலைமை அகம் கொண்ட கல்வி ,அறிவியல் மற்றும் கலாச்சார ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமான UNESCO உடனடியாக தனது பாதுகாப்பின் கீழ் அங்கூர் வாட் கோவில்களை ஸ்வீகரித்துக்கொண்டு அதன் புனரமைப்புக்கும் பராமரிப்புக்கும் திட்டம் வகுத்தது. இந்து மதம் சம்பந்தப்பட்ட புராதன கோவில்கள் என்பதால் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் ஒரு சில பகுதிகளுக்குக் கோரியது. புனரமைப்பு வேலை மிகக் கடுமையானதாக இருந்திருக்க வேண்டும். நம் ஊர் கோவில் சிலைகள் ஒரே கல்லில் செய்யப்படுவது போல் இங்கு இல்லை. ஒரே கல்லில் செய்வது சுலபம். அங்கூரில் அத்தகைய கல் இல்லை. ஒரே முகம் பல கல்அச்சுக்களால் ஆனது. சில அச்சுக்கள் இரண்டு அடி கூட இருக்கும். உதடுகள் புன்னகையில் விரிந்திருந்தால் அவற்றில் நான்கு பகுதி கொண்ட அச்சுகள் இருக்கும். அதில் சீராக அமைந்திருக்கும் உருவ அமைதி அற்புதமானது. பல நூற்றாண்டுகள் மனித பார்வையில் படாதிருந்து சிதில மடைந்திருக்கக் கூடிய சிற்பங்களை எப்படி சீரமைத்தார்கள் என்பது பிரமிப்பாக இருக்கிறது. அங்கூர் தோம் என்ற கோவில் ஐம்பத்தாறு ப்ரும்மாண்ட நான்முகங்கள் கோபுரங்கள் போல் நின்று நான்கு திசைகளைப் பார்ப்பதாக அமைந்திருப்பது. [அதைக்கட்டிய ஏழாம் ஜெயவர்மனின் அப்போதைய வயது 56 என்பதையும் அவன் ஆண்ட 56 மாகாணங்களையும் அந்தக் கோபுரங்கள் குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறது. ] மாறும் சூர்ய ஒளியில் அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்துவது. பல பெரிய கல் அச்சுக்களால் ஆன முகத்தில் இருக்கும் ஒழுங்கும் கலை நேர்த்தியும் , தவழும் சாந்தமும் அருள் சொறியும் புன்னகையும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. வர்ணிக்க இயலாதவை.

அங்கூர் வாட் [வாட் என்றால் கோவில்] கோவிலை சூரிய உதயத்தின் போது பார்த்தால் கொள்ளை அழகாக இருக்கும் என்றதால் ஐந்து மணிக்கு எழுந்து தயராகி அங்கு சென்ற போது எங்களை விட முன்னதாக நூற்றுக்கணக்கான டூரிஸ்டுகள் காமிரா சகிதமாய் நின்றிருந்தார்கள். ஆனால் எங்கள் அதிர்ஷ்டம் சூரியன் வெளியே வரமுடியாமல் மேகம் மறைத்திருந்தது. அந்த சாம்பல் பூத்த விடியலிலும் அங்கூர் வாட் அற்புதமாகக் காட்சி அளித்தது. ஒரு செயற்கை அல்லிப் பொய்கை ஒன்று ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதில் அங்கூர் வாட்டின் பிம்பம் படிவதை காமிரா வைத்திருந்தவர்கள் எல்லாரும் மாய்ந்து மாய்ந்து படம் எடுத்தோம்.
அந்த வளாகத்தில் ஆறு வாசக சாலைகள் இருந்திருக்கின்றன என்ற விவரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்வித்தரம் மிக உயர்வாக இருந்ததற்கான ஆதாரம். அந்தக் கட்டிடங்கள் இன்னமும் இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் சர்ப்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. பாற்கடல் கடைசல் என்பது ப்ரதானமான
குறியீடாகத் தெரிகிறது.
பன்டே ஸ்ரீ [ஸ்த்ரீகளின் தலைநகரம்] என்ற இளம் சிவப்புக்கல்லாலான ஒரு அழகிய கோவில் வித்தியாசமானது. இதன் முந்தைய பெயர் ‘திரு புவன மஹேஷ்வரன்’ கோவில். அது மற்ற கோவில்கள் போல அரசர்களால் கட்டப்பட்டது அல்ல. 5 ஆம் ஜெயவர்மன் என்ற அரசனின் குருவான ஜன வராஹன் என்ற ஒரு ப்ராம்மணரால் கி.பி.967 இல் கட்டப்பட்டது என்கிறார்கள். அந்த ஆசாமி தமிழ் நாட்டிலிருந்துச் சென்ற வராக இருக்கலாம்! தமிழ் நாட்டுக் கோவில் போல கோவிலின் கர்பக்கிரகத்துக்கு நேர் எதிரில் நந்தியின் சிலை இருக்கிறது. அடர்த்தியான மிக நுட்பமான சிற்பங்கள் இன்னமும் பாதுகாப்பாக இருக்கின்றன. ராமாயணத்திலிருந்து பல காட்சிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன அற்புதக் கலை அழகுடன்.
கம்போடிய கலைத்திறன் இத்தனை உன்னதத்தை எட்டியிருக்கவேண்டுமென்றால் கோவில் வளாகங்களை ச்சுற்றி மிக உயர்ந்த உள் கட்டமைப்பு கொண்ட நகரம் இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கல் கட்டிடங்கள் இறைவனுக்கு மட்டுமே என்ற இந்து மத ஐதீகத்தின் வழியை இங்கும் அரசர்கள் பின்பற்றியதால் மண்ணால் கட்டப்பட்ட அரசனின் அரண்மனை மற்றும் இதர கட்டிடங்கள் அழிந்து போயின என்று நம்பப் படுகிறது.
எந்தக் கோவில் வளாகத்தை விட்டு வெளியில் வந்தாலும் இந்தியாவில் பிச்சைக்காரர்களை சந்திப்போம். இங்கு பிச்சைக்காரர்களைக் காணவில்லை.இத்தனைக்கும் பொருளாதார ரீதியில் மிகவும் பிந்தங்கிய நாடு. சிறுமிகளும் சிறுவர்களும் அங்கூர் வாட்டின் புகைப்படங்களையோ அல்லது சிறிய கலைப்பொருள்களையோ கையில் விற்பனைக்கு வைத்து மழலை ஆங்கிலத்தில் கூவிக்கூவி அழைக்கிறார்கள்.ஒன் டாலர் ·பைவ் டாலர் என்று ராகம் போட்டபடி. அங்கு நேரிடையாக அமெரிக்க டாலரே கொடுக்கலாம். அவர்கள் முகத்தில் இருக்கும் பாசாங்கற்ற புன்னகையும் உற்சாகமும் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் வகை. பொதுவாகக் கம்போடிய மக்கள் மிக அமைதியான தோற்றம் கொண்டவர்கள். முகத்தில் நட்பு மிகுந்த புன்னகையும் இங்கிதமான பேச்சும் மிக இயல்பாக வெளிப்படுகிறது.டூரிஸத்தினால் சியம் ரீப் நகரம் மிகத் துப்புரவாக சாலைகள் மிக நேர்த்தியாக இருக்கின்றன. ஹோட்டல்களில் விருந்தோம்பலை உன்னத கலையாக பாவிக்கிறார்கள்.
அங்கூர் வாட் கண்டுபிடிப்பிற்குப் பின் கம்போடிய பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகிறது என்றாலும்–கடந்த இருபது ஆண்டுகளில் சியம் ரீப்பில் 100 ஹோட்டல்கள், ஆயிரம் விருந்தினர் விடுதிகள் வந்துவிட்டன; புதிதாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகின்றன– அவர்களது சரித்திரப் பின்புலத்தை எண்ணிப்பார்க்கும் போது இது மிகுந்த வியப்பைத்தரும் விஷயம். கலகக் காரர்களும் அராஜக அரசுகளும் பல்வேறு காலங்களில் புதைத்த நிலச் சுரங்க வெடிகளால் இப்பவும் தினமும் சராசரியாக மூன்று கம்போடியர்கள் சாவதாகச் சொல்லப் படுகிறது. அவர்களது சமீபத்திய வரலாறே நம்பமுடியாத வன்முறை மிகுந்தது.
கம்போடியாவின் ஆரம்பதோற்றத்தைப் பற்றின ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லப்படுகிறது. அது பிறந்ததே அந்த மண்னைச் சேர்ந்த இளவரசிக்கும் அங்கு நீர் வழியாக எதேச்சையாக வந்த கௌண்டின்யன் என்ற ஒரு இந்திய பிராம்மணனுக்கும் ஏற்பட்ட காதலால் என்கிறது புராணம். அவர்களது திருமணத்திற்கு அரசன் கொடுத்த வரதட்சணையே கம்புஜா என்ற நாடாக உருவானது. அன்றிலிருந்து இந்தியத் தொடர்பு ஆரம்பமானதாகச் சொல்கிறார்கள். கடல் வழி வர்த்தகத்தின் மூலமே இந்தியப் பண்பாடும் நாகரிகமும் ஹிந்து மதமும் மன்னன் அசோகனின் தூதர்களால் பௌத்தமும் பரவியிருக்கவேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். அங்கூர் காலம் என்று சொல்லப்படும் முதல் பதினான்கு நூற்றாண்டுக் காலகட்டமே கம்போடிய வரலாற்றின் மிக உன்னதமான காலம். அதற்குப்பின் பலவீனமான அரசர்களால் சரிய ஆரம்பித்தது. வியட்னாம் மற்றும் தாய்லாந்தினால் பல ஆண்டுகளுக்குத் தாக்கப்பட்டு கடைசியில் 1864-ல் ·ப்ரெஞ்சுக்காரர்களின் கட்டுக்குள் வந்தது. க்மெர் என்ற பெயர் கொண்ட கம்போடிய மக்களை அரச குடும்பமே பெயருக்குத் தலைமை தாங்கியது. 1952-ல் சிஹனூக் என்ற அரசன் நாட்டுக்கு சுதந்திரம் கோரியதில் 53-இல் விடுதலைக் கிடைத்தது. அரச பதவியைய்துறந்து சிஹனூக் ஜன நாயகத் தேர்தல் நடத்தி மாபெரும் வெற்றி பெற்று அடுத்த 15 ஆண்டுகளுக்குக் கம்போடிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றவரானார்.
அண்டை நாடுகளில் அமெரிக்க செல்வாக்கு அதிகரித்த நிலையில் சிஹனூக் அமெரிக்காவை சந்தேகித்தார். க்மெர் ரூஜ் என்ற வன்முறையையே ஆயுதமாகக் கொண்ட இடது சாரிகளுடன் இணக்கமானார். அவரது ஊக்குவிப்பினாலேயே க்மெர் ரூஜ் இயக்கம் வலுப்பெற்றது. சிஹனூக்கின் ஆட்சி ஊழல் மிகுந்த காரணத்தால் மக்களிடையே செல்வாக்கை இழந்தது. அமெரிக்க தாக்குதல் வியட்நாமில் ஆரம்பிக்க அங்கிருந்த கம்யூனிஸ்டுகள் கம்போடியாவில் ஒளிந்து கொள்ள சிஹனூக் சீனாவுக்குத் தப்பி ஓடினார். அமெரிக்க
குண்டு வீச்சு கம்போடியாவில் தொடர்ந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு ஏராளமான கம்போடியர்கள் மாண்டார்கள். இந்த கால கட்டத்தில் க்மெர் ரூஜ் இயக்கம் மிகுந்த பலம் பெற்றது. வியட்நாம் ரகசியமாக அதற்கு உதவியதாகச் சொல்கிறார்கள். வியட்நாமில் சந்தித்த தோல்வியினால் அமெரிக்கா பின்வாங்கியதும் கம்போடியா க்மெர் ரூஜின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அது ஆண்டது என்னவோ மூன்று ஆண்டுகள் எட்டு மாதம் இருப்பத்தி ஓரு நாட்கள் மட்டுமே. ஆனால் போல் பாட் என்ற தலைவனின் கீழ் அது நடத்திய பயங்கரம்
உலக சரித்திரத்தில் எங்கும் கண்டிராதது. க்மெர்கள் கொண்ட சொந்த இன மக்களையே க்மெர் ரூஜ் ராட்சஸ வெறியுடன் கொல்ல ஆரம்பித்தது. கம்யூனிஸ்ட் அல்லாதவர் என்று எல்லாரையும் சந்தேகித்து நாட்டை சுத்தப்படுத்தும் வெறியாட்டத்தை அவிழ்த்து விட்டது. முப்பது லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. பல லட்சம் பேர்கள் பஞ்சத்தாலும் வறுமையாலும் இறந்தார்கள்.
க்மெர் ரூஜை அடக்க வியட்நாம் படையெடுத்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கம்போடியா உள்நாட்டுப் போரில் சீரழிந்தது. க்மெர் ரூஜ் கடைசியில் வலுவிழந்து போல் பாட் தப்பி ஓடினான்.[ அவன்
சமீபத்தில் இயற்கையாக இறந்து போன செய்தி வந்தபோது யாரும் வருந்தவில்லை.] கம்போடியாவில் 1998டிலிருந்து ஜனநாயக ஆட்சி நடக்கிறது.
இப்படிப்பட்ட பயங்கர வரலாற்றைக் கொண்ட மக்களுக்கு அங்கூர் வாட் ஒரு வரப்ரசாதம் போல மிகப் பெரிய தெம்பளிப்பது. சுற்றிலும் நடந்து வந்த ரத்தகளறிகளுக்கு சாந்தம் தவழும் அங்கூர் சிலைகள் சாட்சியாக இருந்திருக்கின்றன.
அந்த நாட்டையும் நாட்டு மக்களையும் சிதறிவிடாமல் உயிர்ப்புடன் இன்று வைத்திருப்பது அந்த அற்புத கோவில் சிற்பங்களின் அமானுஷ்ய சக்திதான் என்று கம்போடிய மக்கள் நம்பினால் வியப்பில்லை.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 13 நம்பிக்கை எனும் நீர் குமிழ்

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

வாஸந்தி


ஒவ்வொரு முறையும் ஒரு மனிதன் ஒரு லட்சியத்துக்காக நிற்கும்போதோ, அல்லது மற்றவரை முன்னேற்ற உழைக்கும்போதோ, அல்லது அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பும்போதோ, நம்பிக்கை என்னும் சின்னஞ்சிறு நீர் குமிழை அனுப்புகின்றான்…பல்வேறு மையங்களில் உருவாகும் பல்லாயிரக்கணக்கான அத்தகைய சக்தி மிக்க குமிழ்கள் ஒரு மாபெரும் சுழலை உருவாக்கும்- சர்வாதிகாரச் சுவர்களைத் தகர்க்கும் வலிமைகொண்டதாக உருவாக்கும் –ராபர்ட் கென்னடி

தெம்பளிக்கும் வாசகங்கள்.பல தலைவர்கள் அறிவு ஜீவிகள் மத போதகர்கள் இத்தகைய சொற்களைக் காலங்காலமாகச் சொல்லிவருகிறார்கள். தங்களுக்குத் தாங்களே தெம்பளித்துக்கொள்ளச் சொல்லப்பட்ட வாக்கியங்களோ என்று எனக்குச் சந்தேகம் வருகிறது. முன்பு, அதாவது எனது இளம் பருவத்தில், இப்படிப்பட்டப் பொன்மொழிகளைப் படிக்கும்போதோ கேட்கும்போதோ எனக்கு மிகுந்த உத்வேகம் ஏற்படும். சில சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டுக் கண்களில் நீர் கூட வரும். ஒரு சில தனி மனிதர்களின் லட்சியங்களினால், உழைப்பினால் மற்றும் தியாகத்தினால் மானுடம் உய்த்தது தழைத்தது என்பதற்கான பல சான்றுகள் எல்லா மனித இனங்களின் இதிகாசங்களிலும் இருக்கின்றன. அவர்களில் பலர் ஸ்தாபனங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பத் தயங்காததாலேயே நல்ல மாற்றங்கள் வந்தன என்று அவை சொல்கின்றன. ஆனால் இவையெல்லாம் சாத்தியப்பட்ட காலம் வேறு என்று இப்போது எனக்கு சோர்வு ஏற்படுகிறது. அன்றைய உலகம் எளிய உலகம். கருப்பு வெள்ளை உலகம். ‘நீ நல்லவனா கெட்டவனா?’ என்ற கேள்விக்கு குழந்தைகள் படிக்கும் ·பேரி டேல் கதைகளில் வருவது போல பளிச்சென்ற சந்தேகமற்ற பதில் கிடைக்கும். கெட்டவன் மடிய வேண்டும். நல்லவர்கள் காதலன்/காதலியை மணந்து கொண்டு சந்தோஷமாக நீடூழி வாழ்வார்கள். அது தான் இயற்கையின் நியதி. இன்றைய உலகம் குரூர வண்ணங்கள் கொண்டது. வக்கிரமானது. அதன் இயக்கத்தில் ஆண்டாண்டு காலமாய் மனிதன் நம்பிவந்த நியதிகள் மாறும். நல்லவன் தண்டிக்கப்படலாம். கெட்டவன் நிச்சயமாக சந்தோஷமாக நீடூழி வாழ்வான். ஏனென்றால் அவனுக்கு வசதியான மார்க்கங்கள் ஏராளம். நேர்மையான அப்பாவி மனிதன் தான் பாதை தெரியாமல் திண்டாடுபவன். மன உளைச்சலில் பாதைப் பிசகிப் போனாலும் போவான்.
உலக சரித்திரத்தை மேலோட்டமாகப் புரட்டினாலும் சரி நமது பாரதப் புண்ய பூமியின் வரலாற்றை ஆராய்ந்தாலும் சரி, லட்சியமும் உழைப்பும் அநீதிக்குக் குரல் எழுப்புவதும் இன்றைய கால கட்டத்தில் ‘நம்பிக்கை எனும் நீர் குமிழை’ எழுப்ப வாய்ப்பு கிடைக்காமல், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் அமுக்கப்படுவதாக வலுவிழந்து போவதாக எனக்குக் கவலை ஏற்படுகிறது. தகவல் தொழில் நுட்பம் ஆச்சரியகரமான உன்னதத்தைத் தொட்டிருந்தும் அதனுடன் ஒட்டாமல் அல்லது அதிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் அமைப்புகள் இயங்குகின்றன. முன்பைவிட இப்போது ஆட்சி செய்பவர்களின் அதிகாரக் குவிப்பு, ஜனநாயக அமைப்பிலும் கூட மிக அச்சுறுத்தும் எல்லையைத் தொடும் செய்திகள் வருகின்றன. இதை எதிர்கொள்ள மக்கள் இரண்டு வெவ்வேறு வழிகளை மேற்கொள்ளுகிறாற்கள். ஒன்று மதம் என்ற பெயரிலோ மொழி அல்லது சுயாட்சி என்ற பெயரிலோ அல்லது எந்த குறிப்பிட்ட கொள்கையும் இல்லாமல் அமைப்பின் மேல் உள்ள தங்கள் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்த பயங்கரவாதத்தை ஆயுதமாக ஏற்று தங்களுக்கும் மற்றவர்களுக்கும் சேதத்தை விளைவிக்கிறார்கள். இவர்கள் பொறுமை அற்றவர்கள். அமைப்புகளின் ஜனநாயகத்தன்மையில் நம்பிக்கை செத்தவர்கள். துவக்கை எடுத்து பீதி எழுப்பி சாகத்துணிந்தவர்கள். இந்த வன்முறை அணுகுமுறை சாதகம் விளைவித்திருப்பதாகச் சரித்திரம் இல்லை. இன்னொன்று, ‘ராமனாண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன’என்ற வகை. அதிகார மையங்களுடன் மோதாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்கிற கட்சி. அல்லது அந்த மையங்கள் சொல்வதற்கு ஜால்ரா போட்டு தமது இருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் கட்சி. இத்தகைய போக்கு அப்பட்ட சுய நலப் போக்கு. நாளாவட்டத்தில் சமூகத்தின் தார்மீக வேர்களை அழிக்கும் சக்தி கொண்டதாகிவிடும்.

இந்த நிலை ஏன் வந்தது என்பது தான் கேள்வி.

மன்னராட்சிக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிராகப் பல நாடுகளில் மிக எளிய மக்களின் சீற்றத்தால் வெடித்த புரட்சிகள் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த சரித்திரம் அநேகம். எதிர்க்கவேண்டும் என்ற எண்ணம் மிக வலுவானதாகப் பாதிக்கப்பட்ட மக்களை ஆட்கொண்டதாலேயே அவை சாத்தியமாகியிருக்கவேண்டும். அதிகாரமும் செல்வமும் ஒரு குடும்பத்தின் அல்லது மிகச் சிலரின் கைவசம் இருந்த காரணத்தால் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களும், அதைத் தொடர்ந்த ஏழ்மையும் துயரமும் அவமானமும் அந்த எண்ணத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருந்தன. அதற்கு தீப்பொறி உந்துசக்தியாக அறிவாளிகள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் இருந்தார்கள். சொல்லுக்கு மகத்தான சக்தி இருந்தது அப்போது. உச்சரிக்கப்பட்டவுடன் மந்திரமாயிற்று. ரூஸோ என்ற அரசியல் தத்துவ ஞானி ‘மனிதன் சுதந்திரமாகப் பிறந்தான். இன்று விலங்குடன் வாழ்கிறான்” என்று எழுதினவுடன் ·பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது என்பார்கள். பதிநான்காம் லூயீ என்ற மாமன்னனை அரியணையிலிருந்து வீழ்த்தும் சக்தி கொண்டதாக. ஒவ்வொரு மகத்தான புரட்சிக்கும் பின்னால் மறைமுகமாகவேனும் எழுத்து உந்துசக்தியாக இருந்திருக்கிறது.
ஆனால் மிகப் பெரிய ஒட்டுமொத்த பாதிப்பு ஏற்படுத்தும், வாழ்வின் ஆதாரங்களைத்தகர்க்கும் அச்சுறுத்தல் இருந்தால் ஒழிய புரட்சி வெடிக்குமா என்பது சந்தேகம். இருக்க இடமும், உண்ண உணவும் இன்ன பிற சௌகர்யங்களும் கிடைத்திருக்கும் நிலையில் சாமான்ய மக்கள் சொரணை அற்றுப் போகிறார்கள். சீனாவில் சீன சமூகம் இன்று அப்படித்தான் இருக்கிறது. ஆட்சியாளர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு ஒன்றுதான். ராமனாண்டாலும் பெரு மகிழ்ச்சி இல்லை.ராவணாண்டாலும் துக்கமில்லை. லௌகீக உலகம் தரும் சுகங்களை சராசரி மனிதன் இழக்கத் தயாரில்லை. என் வீட்டுக்குள் நுழைந்து எனக்கு ஊறு விளைவிக்காத வரை எந்த அரசியல் வாதி என்ன ஊழல் செய்தால் என்ன. என் அண்டை
வீட்டுக்காரன், நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கினவன், ஊழல் செய்யாதவன், எனக்குத் தெரியும்– ஸ்தாபனத்திற்கு பலிகடாவாக்கப்பட்டாலும் நான் எதற்கு மூக்கை நுழைக்க வேண்டும்? வம்பை விலைக்கு வாங்க வேண்டும்? மூச்! ஒதுங்கி விடுவேன்.
இப்படிப்பட்டச் சூழலில் நேர்மையாக நடு நிலையாக எழுத நினைக்கும் பத்திரிக்கையாளரின் பாடு சிரமம். முதலாவது அநீதி என்று அவர்களுக்குப்படுகிற விஷயத்திற்காக ஏற்படும் அவர்களின் தார்மீகக் கோபம் புரிந்து கொள்ளப்படுவதில்லை. தொழில் ரீதியான கோபம் இல்லை அது. பத்திரிக்கை தர்மம் என்ற பிரக்ஞையினால் விளைந்த பொறுப்புள்ள சீற்றம்.
‘இனிமேல் அரசியல் கட்டுரைகள் எழுதாதீர்கள்’ என்று அண்மையில் ஒரு நெருங்கிய நண்பர் அன்புடன் கேட்டுக்கொண்டார்.இன்றைய அரசியலைக்கண்டு வெறுத்துப் போன ஆதங்கம் அவரது பேச்சில் தொனித்தது.
‘நீங்கள் காரசாரமாக என்ன எழுதினாலும் எந்த அரசியல் வாதியும் திருந்தப் போறதில்லே! நம்ம நாட்டு அரசியலும் உருப்படப் போறதில்லே! நீங்களும் நானும் ஏன் இவர்களைப்பற்றிப் பேசியும் எழுதியும் நேரத்தை வீணடிக்கவேண்டும்? நமக்கு அரசியலே வேண்டாம். உபயோகமான எத்தனையோ விஷயங்கள் உலகத்திலே இருக்கு.’
நண்பர் இதைச் சொல்ல சென்னையிலிருந்து நான் இப்பொழுது வசிக்கும் பெங்களூருக்கு
தொலைபேசியில் தொடர்புகொண்டார். நான் அந்த வாரம் எழுதிய பத்தியைப் படித்துவிட்டு மனிதர் துவண்டிருந்தார்.’இனிமேல் அரசியல் வேண்டாம்’ என்றதும் என்னுள் ஒரு மறை கழண்டதுபோல ஆடிப்போனேன். நீங்கள் இத்தனை நாட்களாக எழுதி என்ன சாதிக்க முடிந்தது என்ற அவரது அடுத்த கேள்வி என்னை நிலைகுலையவைத்தது. ‘எதுவும் இல்லை’ என்று ஒப்புக்கொண்டேன். ‘நிறைய விரோதிகளை சம்பாதித்ததைத் தவிர’ என்றேன். இடது சாரிகளைத் தவிர எல்லா கட்சித் தலைவர்களும்[சில நடிகர் ரசிகர் மன்றங்களும் அடக்கம்]என்னை அவர்களது எதிரியாகப் பார்க்கிறார்கள். என் கட்டுரையைப் படித்ததும் அவரவரது பாணியில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். அமைச்சர்களிடமிருந்து அரசு முத்திரையுடன் கடிதம் வரும்.நல்ல பரிச்சயமுள்ள தலைவர்கள் ·போனில் கூப்பிட்டு எப்படி இப்படி எழுதப் போச்சு என்பார்கள். சிலர் தங்கள் கட்சி நாளிதழில் கேலிச்சித்திரம் வரைவார்கள். கட்சி உறுப்பினரைக் கொண்டு கண்டனக் கடிதம் எழுதச் சொல்வார்கள். சிலர் பொது மேடைகளில் பயமுறுத்தியிருக்கிறார்கள். நடு இரவில் தொலை பேசியில் அழைத்து, தமிழ் நாட்டிலே காலை வெச்சிரு பார்ப்போம் என்று பயமுறுத்துகிறார்கள். இதெல்லாம் உங்களுக்குத் தேவையா என்கிறார் நண்பர். அரசியலையே தொடாதீர்கள் என்கிறார் அக்கறையுடன். பேனாவை மூடி வை என்கிறான் என் இளைய சகோதரன்.
அரசியலை நான் தொடாமல் இருந்தாலும் என் தனி நபர் வாழ்வுடன் அரசியல் பிணைந்திருக்கிறதே, அதிலிருந்து விடுபடுவது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை.அரசியல் சார்பில்லை என்ற நிலையிலும் அரசியல் தொடர்பற்ற வாழ்வு வாழ்வது சாத்தியமில்லை என்பது நமக்கெல்லாம் புரிவதில்லை. அரசியலின் சூட்சுமமே அதுதான்.

இதை அறிவார்த்தமாக முதலில் கோஷமெழுப்பிய பெருமை சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் பெண்ணியக்க வாதிகளைச் சேரும். ‘எங்களது பிரச்னைகள் தனி நபர் பிரச்னைகள் அல்ல. திட்டமிட்ட ஒடுக்குமுறை அரசியலால் விளைந்த
இனப் பிரச்னை. ‘The Personal is Political’ [ தி பர்ஸனல் இஸ் பொலிடிகல்],சொந்த விஷயம் என்று நாம் நினைத்ததெல்லாம் அரசியல் சார்ந்ததாயிற்று’ என்றார்கள். போருக்கு எதிராகவும்,ஸிவில் உரிமைக்காகவும்
குரலெழுப்பிய பல்வேறு பெண் குழுக்கள் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டன.பல்வேறு இனம் ,மொழி, வர்க்கம் , மதம் ,நாடு என்று வித்தியாசப்பட்டாலும், திருமணம், குழந்தை வளர்ப்பு, ஸெக்ஸ்,வேலை, கலாச்சாரம் ஆகிய நிலைகளில், அவர்களது பிரச்னைகள் பொதுவானவையாக இருப்பதையும் அவர்களது துன்பத்திற்கு அவர்கள் காரணமில்லை என்பதும், காரணம் வலுவான தந்தைவழி சமுதாய அமைப்பே என்பதையும் உணர்ந்தார்கள். எல்லாரும் பகிர்ந்துகொண்ட அனுபவங்களுக்குத் தீர்வு காண சேர்ந்து போராடுவது என்று முடிவெடுத்தார்கள்.

இந்த கோஷம் உலக சமூகங்களில் இருந்த எல்லாவித ஒடுக்குமுறைக்கும் பொருந்தியது.ஒடுக்கப் பட்ட எல்லா வர்கத்தினரும் , இனத்தவரும் துன்பப்பட்டது அவர்களது இயலாமையால் ,தகுதிக் குறைவால் அல்ல, ஸ்தாபனங்களின் திட்டமிட்ட அரசியலால் என்ற வாதம் வலுப்பெற்றது.

ஏழ்மையும் பசியும் தனி நபரின் தேர்வினால் அல்ல ,[அவர்களது தலை எழுத்தால் நிச்சயம் அல்ல] அவர்களது தேர்வுக்கு எதிராக இயங்கும் ஸ்தாபனங்களின் செயல்பாட்டினால் என்று சோஷலிஸ்டுகள் சொன்னார்கள். போரை எதிர்க்கும் இயக்கங்கள்
உலகில் மூளும் எல்லா [சென்ற நூற்றாண்டிலிருந்து] போர்களுக்கும் பொதுவான பூர்வாங்க ஆதாரமாக இருப்பது அமெரிக்க வெளி உறவுக் கொள்கை என்று விவரித்தார்கள். இன்றைய தனி நபர் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள், மனித உறவுகள், தனி நபரைப்பற்றின மதிப்பீடுகள் எல்லாமே ஜனித்த நேரத்திலிருந்து அரசியலுடன் பிணைக்கப் பட்டிருப்பவை . என் இனம் ,எனது ஜாதி, மொழி, வர்க்கம் எல்லாமே என்னைப் பற்றின மதிப்பீடுகளை நிர்ணயம் செய்கின்றன. எனது சொந்த வாழ்வில் நான் செய்யும் தேர்வுகள்,அவை அரசியல் சார்பற்றவை என்று நான் கருதினாலும், அரசியல் பரிமாணம் பெருகின்றன. பச்சை நிறப் புடவை அணிவதும், மஞ்சள் சால்வை போர்த்துவதும், டி.வி.சானல் பொறுக்குவதும், ஒரு எழுத்தாளரைப் பாராட்டுவதும், சினிமாவை விமர்சிப்பதும், முதலமைச்சரை பாராட்டுவதும் பாராட்டு விழாவுக்கு தாம்பாளம் சைஸில் அழைப்பிதழ் அச்சிடுவதும் தனி நபர் விருப்பம் மட்டுமல்ல, அரசியலும் கூட. இன்றைய அரசியலில் ஜால்ரா அடிப்பவனே அதுவும் சத்தமாக அடிப்பவனே கவனிக்கப் படுகிறான். விசுவாசி என்று போற்றப்படுகிறான். தற்சமய அரசாங்கத்திற்கு எவன் வேண்டாதவனோ அவன் எனக்கும் [ அவன் வெறும் புண்ணாக்காக இருந்தாலும்] வேண்டாதவன். அரசுத் தலைமை யாரைப் போற்றுகிறதோ அவரை நானும் போற்றுவேன். அது முதல்வரின் வீட்டு நாய்குட்டி கண்ணனாக இருந்தாலும். அரசின் சக்தி மகத்தானது. அதை உணராதவன் முட்டாள். என்னைப் பிடிக்காமல் போனால் தீவிரவாதி என்றோ , விதிகளை மீறீ வீடு கட்டினேன் என்றோ வரி செலுத்தவில்லை என்றோ கம்பி எண்ண வைக்கலாம். அப்படி உள்ளே தள்ளப் பட்ட எந்தப் பாமரனாவது வெளியே வந்த சரித்திரம் உண்டா? தவறு என்று உணர்ந்தவுடன் விடுவிக்க இது என்ன ஆஸ்திரேலிய அரசா?

இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு தில்லியில் சீக்கியருக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தின்போது, என் சீக்கிய சினேகிதி அதிர்ச்சியுடன் சொன்னாள். ‘என் வீட்டினுள் அரசியல் புகுந்துவிட்டது. நேற்று என் நண்பர்களாக இருந்தவர்கள் இன்று என்னை விரோதியாகப் பார்க்கிறார்கள்.’
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் எல்லோர் வீட்டிலும் புகுந்துவிட்டது. அதைத்தவிர்க்க முடியாததாலேயே அதனுடன் போராடியாகவேண்டும். அதற்கு மண்டியிடாமல். சாத்தியமா? எத்தனை பேருக்கு அதற்கான மனோதிடம் இருக்கும்? தில்லியில் இப்போது போலீஸ் கமிஷனர் பதவிக்கு உயர்த்தப்படவேண்டியிருந்த உயர் போலீஸ் அதிகாரி கிரன் பேடியை நான் நன்கு அறிவேன். நேர்மைக்கு உதாரணமாகத் திகழ்பவர். அவரது தாட்சண்யமற்ற போக்கினாலும் வெளிப்படையான பேச்சினாலும் அதிகார வர்க்கத்தில் தனியாக நின்றவர். அதற்காகவே அடிக்கடி போஸ்டிங்கில் பந்தாடப்பட்டார். ஆனால் எந்த போஸ்டிங்கிலும் அவர் தனது தனித்த ஆளுமையை நிரூபித்தார். திஹார் ஜெயிலுக்குப் பொறுப்பு வகித்த போது கைதிகளுக்கு யோகா கற்பித்துப் பல அசாதாரண மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதற்காக அவருக்கு உலகப் புகழ் பெற்ற மெகசேஸே விருது கிடைத்தது. ஆனால் அரசாங்கத்தை எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர். தப்பென்று பட்டதைக் கேள்வி கேட்கத் தயங்காதவர். ஆ, அதுதான் தப்பாகிவிட்டது. இப்போது தலைமைப் பதவி அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியது. அவரை ஓரங்கட்டிவிட்டு அவரைவிட இரண்டு ஆண்டு ஜூனியரை நியமித்திருக்கிறார்கள். அரசு எந்த காரணமும் சொல்லவில்லை. ஆனால் அவரது பேச்சு அரசாங்கத்துக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் வகை என்ற காரணமாக இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக அதி புத்திசாலிப் பெண்களைக்கண்டால் ஆண்வர்க்கம் ரசிக்காது.[ நான் ஆண் விரோதி அல்ல. இது உலகமெங்கிலும் இருக்கும் யதார்த்தம்] அவர்கள் கையில் அதிகாரத்தைக் கொடுக்கத் தயங்கும். அதிகார மையத்தைக் கேள்வி கேட்கும் தைர்யமும் இருக்கும் பெண்களை எந்த அமைப்பு ரசிக்கும்? இது திட்டமிட்ட அரசியல் இல்லாமல் வேறு என்ன?

‘Personal is political’ என்பதற்கு எதிர்வினையும் உண்டு. ஜனநாயகம் , சட்ட சாஸனம் என்கிற மகத்தான கருவிகள் நம் வசம் இருப்பது நினைவில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் போதும். அரசியல் சர்வாதிகார போக்கிற்கு எதிராக செய்யப்படும் மிகச் சில
தனி நபர் தேர்வுகளும் ஒட்டுமொத்த பரிமாணமாக மையம் கொள்ளும் வாய்ப்பு உண்டு. அதனாலேயே சில பத்திரிக்கையாளர்கள், ஆர்வலர்கள்,விளைவைப் பற்றி பயப்படாமல், தொடர்ந்து குரல் எழுப்புகிறார்கள். அரசு அதிகாரிகள் உண்மை பேசுகிறார்கள். சந்தேகமில்லை. அரசியல் பருவத்துக்குத் தகுந்தபடி, ‘செல்வாக்குள்ளவர்’களுக்கு ஏற்கும்படியாகப் பேசும் [politically correct] போக்கு அதிகரித்துவரும் காலகட்டத்தில், குரல் எழுப்புவர்கள் சிறுபான்மியனராக இருந்தாலும் அவர்கள் எழுப்பும் சிறு நீர் குமிழ்கள் எங்காவது மையம் கண்டு பெரும் சுழலாக உருவாகலாம்.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 12 கரும்புத் தோட்டத்திலே இந்தியர் அனுபவித்த கொடுமைகள்

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

வாஸந்தி



“நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?”

நான் அமர்ந்திருந்த இருக்கையின் இருபுறமும் கைகளை அழுந்தப் பிடித்தபடி ஏர் பாஸி·பிக் விமானப் பணிப்பெண் என் முகத்துக்கு எதிரே குனிந்து நின்றாள். மாநிறம். மையிட்ட வட்டப் பெரிய கரிய விழிகள். நான் ஆம் என்று தலையசைத்ததும் ” நான் ·பிஜி இந்தியன். பெயர் அனீதா” என்று கரம் நீட்டி கைகுலுக்கினாள். “இந்தியாவிலிருந்து வரும் இந்தியர்களைப் பார்க்கும்போது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கும். என் தாத்தா இந்தியாவிலிருந்து வந்தவர், வங்காளி என்று நினைக்கிறேன்” என்று வெள்ளையாகச் சிரித்தாள். சமயம் கிடைத்த போதெல்லாம் என் சீட்டைப் பிடித்தபடி தரையில் அமர்ந்து என்னைப் பற்றி ,என் பயணத்தைப் பற்றி இந்தியாவைப் பற்றிச் சின்னக்குழந்தையின் ஆர்வத்துடன் கேட்டாள்.
நான் சிட்னியைலிருந்து ·பிஜி தீவின் நாண்டி என்ற நகரத்துக்குப் பயணிக்குமுன் விமான நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு ·பீஜி இந்தியரை சந்தித்திருந்தேன். என்னை அழைத்திருந்த ‘சங்கம்’ என்ற அமைப்பின் அங்கத்தினர் அவர் என்று தெரிந்து கொண்டேன். எனக்கு அந்த அமைப்பைப்பற்றி எந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை. நான் பயணித்த விமானத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தி இடையில் என் இருக்கைக்கு வந்து சில விவரங்கள் சொன்னது சற்று தெளிவைத் தந்தது.
” ‘சங்கம்’ என்பது தமிழ்ச் சங்கம் இல்லை. தென்னிந்திய ஐக்கிய சன்மார்க்க சங்கம் என்று பெயர் கொண்ட தென்னிந்தியர்களின் அமைப்பு. தென்னிந்திய கலாச்சாரம் வட இந்திய கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டது , அது காப்பாற்றப்பட வேண்டும் என்று ஐம்பது [நான் 1986-ல் சென்றேன்] வருடங்களுக்குமுன் ஒரு தமிழருக்குத் தோன்றியதால் உருவாயிற்று. அதில் தென்னிந்தியர்மட்டும் உறுப்பினர்கள் என்றாலும் அதன் சலுகைகள் எல்லா ·பிஜி வாழ் இந்தியர்களுக்கும் உண்டு.”
அங்கு தென்னிந்தியர்களும் பேசும் மொழி ஹிந்தி என்று நான் அறிந்திருந்தேன். [அங்கு யாருக்கும் தமிழ் தெரியாது என்றும் எனக்கு ஆங்கிலமோ ஹிந்தியோ தெரிந்தால் மட்டுமே அனுப்பும்படியும் ICCR ருக்குத் தகவல் வந்திருந்தது] அதற்கான விளக்கத்தைக் கிருஷ்ணமூர்த்தி அளித்தார்.
“·பீஜி கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவின் பல பாகங்களிருந்து ஆண்களையும் பெண்களையும் கங்காணிகள் வலைவீசிப் பிடித்துக்கொண்டு போனார்கள். ·பீஜியில் ‘லைன்’ என்று சொல்லப்பட்ட வரிசை வரிசையான கூலிக்காரக் குடில்களில் சேர்த்து வைக்கப் பட்டார்கள். அதிகபட்சம் ஹிந்தி பேசுபவர் இருந்ததால் ஹிந்தி பொது மொழியாகிவிட்டது. தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளவேண்டிய கட்டாயத்தினாலும் ஹிந்தி பொது மொழியாயிற்று. ·பீஜி இந்தியரின் இன்றைய வளர்ச்சியில் ‘சங்கத்’திற்கு முக்கிய பங்கு உண்டு “என்றார் கிருஷ்ணமூர்த்தி. அந்தச் சரித்திரம் ஒரு சகாப்தம் போல என்முன் விரிந்தது.
அங்கு தோட்டத்தில் வேலை செய்ய வந்தவர்கள் ஆங்கிலேய கம்பெனிக்காரர்களுடன் ஐந்து வருட ஒப்பந்தத்தில் [அக்ரீமெண்டு] கையெழுத்திட்டு வந்தவர்கள். படிப்பறியா ஏழைகளுக்கு அதைப்பற்றி என்ன விளங்கியிருக்கும்? அதைக் கொச்சையாக ‘கிரிமிட்’ காலம் என்றார்கள். விருப்பமிருந்தால் தொடர்ந்து இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அங்கு வேலை செய்யலாம் என்றும் விருப்பமில்லாதவர்கள் திரும்ப இந்தியாவுக்குச் செல்லலாம், அதற்கு ஒரு வழி டிக்கெட் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டது. வெகு சிலரே திரும்பிச் செல்ல விரும்பினார்கள். அநேகமாக அனைவருமே அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்கள். வசதியான வாழ்வு கிடைத்துவிட்ட நினைப்பில் அல்ல. திரும்பிப் போனால் இந்தியாவில் அதைவிட மேலான வாழ்வு காத்திருக்காது; மாறாக சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டு வாழ வேண்டியிருக்கும் என்ற பயத்தினால். அவர்களில் பெரும்பான்மையோர் ஜாதிக்கொடுமைக்கு ஆளானவர்கள். அதிலிருந்து தப்பிக்கவே கப்பலில் கண்காணாதேசத்துக்குப் பயணித்தவர்கள். இப்போது ‘கடல் தாண்டிய’ பாவத்துக்கு வேறு ஆளாகியிருந்தார்கள். தவிர லைனில் வசிக்க வேண்டிய நிர்பந்தத்தில் ஜாதி விட்டு ஜாதி திருமணமும் கலப்பும் ஆகியிருந்தது. வந்த விகிதத்தில் ஆண்களைவிட பெண்கள் குறைவு என்பதால் பல ஆண்கள் ஒரு பெண்ணுடன் வாழ்ந்த அவலமும் உண்டு. இதனாலெல்லாம் கூச்சப்பட்டுக்கொண்டு தங்கிவிட்டவர்கள் தான் அதிகம். ·பிஜியிலேயே தங்கிவிடத் தீர்மானித்து அடுத்த ஐந்து ஆண்டுகளும் ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு ஆங்கிலக் கம்பெனி பத்து ஏக்கரா நிலம் கொடுத்தது. கிடைத்த நிலத்தில் கடுமையாக உழைத்து காசு பார்த்தவர்களின் சந்ததியினர் தான் இப்போது வழும் இந்தியர்கள்.
‘கிரிமிட்’ கால கட்டத்தில் இந்தியர்கள் ரொம்பக் கஷ்டப்பட்டார்கள் என்றார் கிருஷ்னமூர்த்தி. நாயைவிடக் கேவலமாக நடத்தப்பட்டார்கள். அவர்களுக்குப் பழக்கமில்லாத சீதோஷ்ணம்; பிரம்படியைத்தவிர வேறு விதமாக அவர்களுடன் பேசாத கம்பெனி முதலாளிகள், ராட்சசர்கள் போல் தோற்றமுள்ள [ ·பீஜி குடிமக்கள் சற்று ஆ·ப்ரிக்கர்கள் போன்ற தோற்றமுள்ள பாலினீஷிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்] உள்ளூர் வாசிகள்; உற்றார் உறவினர் என்ற பந்தமில்லா இந்திய லைன் வாழ்க்கை; இத்தகையச் சூழலில் வாழ்க்கை தார்மீக ரீதியிலும் மிக மோசமாகிப் போனது. அவர்களிடையே ஒரு மகானைப்போல குப்புசாமி என்று ஒரு தமிழர் இருந்தார். அவரும் அங்கு கூலி ஆளாகச் சென்றவர்தான். “சாது குப்புசாமி என்று அழைக்கப்பட்ட சாத்வீக குணம் கொண்ட குப்புசாமி அங்கு வந்து சீரழியும் தென்னிந்தியர்களைக் கண்டு கவலை கொண்டார். அவர்களுடைய சந்ததியினரின் எதிர்காலத்துக்கு ஏதேனும் வழி செய்யாவிட்டால் கலாச்சாரமும் அழிந்து எதிர்காலம் ஒரு நம்பிக்கையற்ற சூன்யமாகிப்போகும் என்று பயந்தார். கல்வி ஒன்றே அதற்கான மாற்று என்று அவர் ஒருத்தருக்கு மட்டுமே தோன்றியது. அவருடைய முயற்சியால் சில தென்னிந்தியர்கள் கூட்டு சேர்ந்து ‘சங்கம்’ ஜனித்தது. மாலை வேளைகளில் அவர்களுக்கு நினைவு இருந்தவகையில் ராமாயணமும் மகாபாரதக்கதைகளும் சொல்லப்பட்டன. கூலிப் பண்டாரங்கள் வாழ்ந்த பகுதிகளில் சின்னச் சின்ன பள்ளிகள் தோன்றின. அவர்களில் எழுதப் படிக்கத்தெரிந்தவர்கள் ஆர்வத்துடன் கல்வி பரப்பினார்கள். சில வருஷங்களில் இந்தியாவிலிருந்து ஒன்றிரண்டு ஆசிரியர்கள் வந்து போதித்தார்கள். குடிசைப்பள்ளிகள் கல் கட்டிடங்களுக்கு மாறின. ·பீஜி இந்தியர்களின் இன்றைய தார்மீக லௌகீக வளர்ச்சியில் எங்கள் சங்கத்திற்கு முக்கிய பொறுப்பு உண்டு.”
நான் ·பிஜித் தீவுகளுக்குச் சென்ற சமயத்தில் மொத்த ஜனத்தொகை ஏழு லட்சத்தைவிடக் குறைவு. அதில் 51 சதவிதம் இந்தியர்கள். அதாவது ·பிஜிக்களைவிட அதிகம். ·பிஜிக்களின் வாழ்க்கைத்தரத்தைவிட இந்தியர்களின் தரம் உயர்வாக இருந்தது, இந்தியர்கள் அதிக உழைப்பாளிகளாக ,படித்தவர்களாக இருந்ததால். கூலித்தொழிலாளர்களின் சந்ததிகளின் வாழ்க்கைத்தரம் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்று பெருமையுடன் ஒப்புக்கொண்ட இந்தியர்கள் அவர்களது முன்னோர்களின் விவேகமும் தொலை நோக்குமே அதற்குக் காரணம் என்று நன்றியுடன் சொன்னார்கள்.பாதி வயிறுகூட நிரம்பாத நாட்களில் தியாக உணர்வுடனும் கரிசனத்துடனும் தங்கள் சந்ததியினரின் எதிர்காலத்துக்குப் பாதை வகுப்பதில் அவர்கள் காட்டிய தீவிரம் பிரமிப்பை ஊட்டும் விஷயம் என்றார்கள். இப்போது சங்கம் இரண்டு பிரதான தீவுகளிலுமாக முன்னூறு பள்ளிகளை நடத்துவதாகத் தெரிவித்தார்கள்.
·பிஜி ,ஆங்கிலத்துடன் ஹிந்தியும் அங்கு ஆட்சி மொழி. தமிழ் கற்க விரும்புவர்கள் ஆரம்பப் பள்ளியில் கற்கலாம். தமிழில் ஆரம்பப் புத்தகங்கள் அதிகம் இல்லாததால் அதிலும் சிரமம் இருந்தது. தமிழ் நாடு அரசிடம் உதவி கோரி அலுத்துவிட்டது என்றார்கள். “தமிழ் நாட்டிலிருந்து இரண்டு எம்.எல்.ஏக்கள். வந்தார்கள் அவர்களிடமும் எங்கள் வேண்டுகோளைச் சொன்னோம்.நிறைய உறுதி மொழி அளித்துவிட்டுச் சென்றார்கள் ஆனால் எதுவும் செய்யவில்லை. இத்தனைக்கும் நாங்கள் இலவசமாகக் கேட்கவில்லை.”
நமது அரசியல் வாதிகளின் தகுதி அவர்களின் பேச்சு ஒன்றுமட்டுமே என்று ·பிஜி இந்தியர்களுக்குத் தெரிந்திராது. அத்தனை இக்கட்டிலும் தமிழ் வகுப்பு ஆரம்பப் பள்ளிகள் சிலவற்றில் நடந்தன. நான் சென்ற ஒரு பள்ளியில் சின்னஞ்சிறு பிள்ளைகள் ‘வாழ்க நிரந்திரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே’ என்று பாடுவதைக்கேட்டு என் கண்ணில் நீர் நிறைந்தது.
கூலி ஆட்களாய் வந்தவர்களில் யாரேனும் உயிருடன் இருந்தால் சந்திக்க ஆசைப்படுவதாக நான் சொன்னதன் பேரில் ஒரு மூதாட்டியிடம் அழைத்துச் சென்றார்கள். அதிசயமான ஞாபகசக்தி இருந்தது தொண்ணூறுகளில் இருந்த அந்தப் பெண்மணிக்கு. நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னதும் அவர் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது. அவரது பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது.[அதன் குறிப்பு இன்னும் பத்திரமாக என்னிடம் இருக்கிறது] ” என் பேர் ராம்பியாரி. பிறந்தது எந்த கிராமம்னு நினைவில்லே.ஒரு அண்ணனும் அக்காவும் இருந்தது நினைவிருக்கு. அப்பா செத்துப் போனார். அம்மாவுக்கு அதுக்கப்புறம் ரொமபக் கஷ்டம். அப்பாவுடைய அம்மா ரொம்பக் கொடுமைப் படுத்தினாங்கன்னு நினைக்கிறேன். ஒரு நாள் நா தெருவிலே விளையாடும்போது எங்கம்மா என்னை எங்கேயோ அழைச்சிட்டுப்போனாள். பிறகு கப்பல்லே ஆறு வாரம் பிரயாணம் செஞ்சோம். நா பயத்திலே வழி முழுக்க அழுதது நினைவிருக்கு.எனக்கு அப்ப ஏழு வயசு. ·பீஜியிலே கரும்புத்தோட்டத்திலெ வேலை செய்யப்போறோம்னு பேசிக்கிட்டாங்க. கப்பல் பேரு மல்தா-1. [ அரசாங்கக் குறிப்பில் மல்தா-1 1911-ல் ·பீஜிக்கு வந்ததாக பதிவாகியிருந்தது] என்னையும் வேலை செய்யச் சொல்வாங்களோன்னு பயந்து அம்மா எனக்கு நாலு வயசுன்னு கம்பெனி சர்தார்கிட்ட பொய் சொன்னாள். அம்மாவுடைய சம்பாத்தியம் சாப்பாட்டுக்குப் பத்தல்லே. இரண்டு வருஷம் கழிச்சு நானும் வயற்காட்டிலே வேலை செய்ய ஆரம்பிச்சேன். வேலை ரொம்பக் கஷ்டம். இந்திய சர்தாரே ஈவு இரக்கமில்லாமெ உதைப்பான். கேவலமாத் திட்டுவான். வெள்ளைக்கார சர்தார் அதுக்கும் மேலப் பாய்வான். கூலி ஆட்கள் சில சமயம் கொடுமைத் தாங்காமெ வேலை நிறுத்தம் செய்வாங்க. உதை வாங்கி ஜெயிலுக்குப் போவாங்க. நானும் அம்மாவும் வேலை நிறுத்தத்திலே கலந்துக்க மாட்டோம். வேலை செய்யும் போதே வயித்துக்குப் பத்தாது. வேலை நிறுத்தினா முழுப் பட்டினிதான்.”
கதைபோல தாம் பட்ட கஷ்டத்தைச் சொல்லும் அந்த மூதாட்டியைப் பார்த்து எனக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது. எல்லா அவமானத்தையும் எப்படித் தாங்கினார்கள் ? வாயே திறக்காமல், எதிர்ப்பு தெரிவிக்காமல்?
ராம்பியாரியின் கண்களில் ஒரு விஷமச்சிரிப்பு பொக்கைவாயுடன் மலர்ந்தது. ” ஒரு தடவை நானும் என் சினேகிதிகளும் ஒரு வெள்ளைக்கார சர்தாருக்கு செம அடி கொடுத்தோம். ஒரு நாள் நாங்கள் ஆற்றோரமாக நடந்துகிட்டிருந்தோம். அப்போ ஒரு பரங்கி வந்தான். எங்களைப் பார்த்து அசிங்கமாகப் பேசி ‘பிட்ச்’ அப்படின்னு இங்கிலீஷ்லெ திட்டினான். எனக்கு அதனுடைய அர்த்தம் தெரியல்லே. ஒருத்திக்கு தெரிந்திருந்தது.எங்களுக்கு அவ அர்த்தம் சொன்னதும் மகாக் கோபம் வந்தது. எல்லாரும் கையிலிருந்த தடியாலெ அவனை நன்றாய் அடித்து ஆற்றிலே தள்ளிட்டோம்.!”
நேற்று நடந்த விஷயம்போல் அதைச் சொல்லி கிழவி சிரித்தார்.
“தண்டனைக் கிடைக்கல்லியா உங்களுக்கு?”
” கிடைக்காமெ? ஏழு நாள் சிறையிலே அடைச்சாங்க. அம்மா திட்டினாள் என்னை. ஆனா எங்களுக்கு வருத்தமில்லே.”
‘க்ரிமிட்’ காலம் முடிந்ததும் நாகைய்யா என்ற தென்னிந்தியரை ராம்பியாரி திருமணம் செய்துகொண்டார். இப்போது பிள்ளைகள் பேரன்கள் மிக சௌகர்யமாக இருக்கிறார்கள்.
பல மின் உபகரணங்கள் கொண்ட பெரிய வீட்டில் உயர் ரக சோபாவில் அமர்ந்து பழைய கதைகளை அவர் அசைபோடும்போது நிஜமாகவே அது ஒரு கற்பனை உலகம்போல் தோன்றிற்று.

ஜாதிக் கொடுமையும் ஏழ்மையும் ஒரு தலைமுறையை பிறந்த மண்ணிலிருந்து கண் காணாத நரகத்திற்கு விரட்டக் காரணமாக இருந்ததென்றால் இந்தியர்களின் மரபணுக்களிலிருந்து விலக மறுக்கும் ஒற்றுமை இன்மையும் போட்டியும் பொறாமைக் குணமும் இன்றைய ·பீஜி வாழ் இந்தியர்களின் சரிவுக்குக் காரணமானது என்று சொல்லலாம். மேலோட்டமாக இந்தியர்கள் வெகு வசதியாக நிம்மதியாக வாழ்வதாகத் தோன்றினாலும் அங்கு ஒரு அரசியல் கொந்தளிப்பில் அவர்கள் சிக்கியிருந்தது பல அறிவு ஜீவிகளுடன் பேசியதில் தெரிந்தது. பூகோள சரித்திர ரீதியில் அது தவிர்க்க முடியாததாகப் பட்டது எனக்கு. ஆர்.டி.பட்டேல் என்ற மூத்த வழக்கறிஞரை சந்தித்த போது அது உறுதியாயிற்று. 1940-ல் ·பிஜிக்கு வந்த அவர் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த மக்கள் சரியான தொழில் சட்டங்கள் இல்லாததால் அவதிப்படுவதைக் கண்டு பல சட்ட மாற்றங்களைப் போராடி கொண்டுவந்தார். ‘இந்தியர்களின் உழைப்பால்தான் ·பீஜி இன்றைய நிலைக்கு வளர்ந்திருக்கிறது என்பது வெள்ளையரும் ·பீஜியரும் அறிந்த உண்மை. 64-ல் இந்தியர்கள் ·பெடரேஷன் பார்ட்டி என்று ஒரு கட்சியை ஆரம்பித்து சுதந்திரத்தைக்’ கோரினதாகப் பட்டேல் சொன்னபோது இது ·பீஜியரிடையே சந்தேகத்தை எழுப்பியிருக்காதா என்று நான் நினைத்தேன்.
அப்படித்தான் ஆனதாகப் பிறகு அறிந்தேன். ஜனத்தொகையில் இந்தியர்களின் சதவிதம் அதிகமாக இருந்ததால், தங்கள் மண்ணில் பிழைக்க வந்த அன்னியர்களின் கை ஓங்கிவிடும் என்று அவர்கள் பயந்ததில் ஆச்சர்யமில்லை. தங்களுக்கு சுதந்திரத்தில் ஆர்வமில்லை என்று சொல்ல பிரிடிஷ் அரசு அதை சாதகமாக்கிக் கொண்டது. இருந்தும் இந்தியக் கட்சி மிகத் தீவிரமாக முயன்றதால் 75ல் சுதந்திரம் வந்தது. ஆனால் அதன் விளைவு இந்தியர்களுக்கு பாதகமாக முடிந்தது. இந்தியர்களிடையே ஒற்றுமை இல்லாததால், வடக்கு தெற்கு என்று அவர்களிடையே புதிய பேதம் ஏற்பட்டுப் போனதால் , 51% இருந்தும் பலர் ·பீஜிக் கட்சிக்கு வாக்களித்ததில், தேர்தலில் இந்தியக்கட்சி தோற்று ·பிஜியரின் கட்சி ஆட்சிக்கு வந்தது. அது வந்ததும் தங்களுக்கு அச்சுறுத்தலாகப் போகக் கூடிய இந்தியர்களின் வாலை ஒட்ட நறுக்கும் பணி துவங்கிற்று. அதன் படி சட்டம் இயற்றப்படது. மொத்த நிலத்தில் 83% ·பீஜியருக்கே சொந்தம் 10% பிரிட்டிஷ் அரசுக்கு. 7% மட்டுமே சுதந்திர நிலம். அதில் வெகு சொற்பமே இந்தியர்கள் வம்சாவழியாக அனுபவிக்க இயலும். கல்வித் துறையில், வேலை வாய்ப்பில் எல்லாவற்றிலும் ·பீஜியருக்கே முன்னுரிமை என்று ஆகிவிட்டது. அன்றிலிருந்து இரு பிரிவினருக்கும் தீராத பகை நிலவி வருகிறது.
எதிர்காலம் ஒரு கேள்விக்குறி என்று ஆனதும் நிறைய குடும்பங்கள் ஆஸ்திரேலியாவுக்கும் நியூஜிலாந்துக்கும் குடிபெயர ஆரம்பித்து விட்டன. கல்வி பெருக்கத்தினால் குடும்பக்கட்டுப்பாட்டும் சேர்ந்து இந்திய ஜனத்தொகை விகித வசதியும் இனி இருக்காது என்று பட்டேல் வருந்தினார்.
·பீஜியரின் எதிர்வினைக்கு இந்தியர்களின் பேராசையே காரணம் என்று நான் நினைத்துக் கொண்டேன். குடிபுகுந்த வீட்டை சொந்தம் கொண்டாடுவதும் ஆள நினைப்பதும் நியாயமற்ற செயல். இந்தியக் கட்சி என்று தனிக் கட்சி ஆரம்பிக்காமல் ·பீஜியரையும் இங்கிதத்துடன் சேர்த்துக்கொண்டிருந்தால் பின்னால் நடந்த பல சங்கடங்களை ஒருவேளைத் தவிர்த்திருக்கலாம். எங்களால்தான் நீங்கள்
முன்னேறினீர்கள் என்று அடைக்கலம் தேடிவந்தவர்கள் சுட்டிக்காட்டுவதை [ அது உண்மையாக இருந்தாலும்] மண்ணின் மைந்தர்கள் தாங்க மாட்டார்கள். உலகத்து எல்லா மூலைகளிலும் இப்படிப்பட்ட உரசல்களினால் தான் சண்டை மூளுகிறது.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

வாஸந்தி


பொள்ளாச்சிக்கருகே ஆழியார் என்ற இடத்தில் வேதாத்ரி மகரிஷி என்று ஒரு சாமியார் இருந்தார். “வாழ்க வையகம், வாழ்க வளமுடன்” என்பதே அவரது தாரக மந்திரம். என் நாடு, எனது மொழி, எனது மதம் மற்றும் தேசியம் போன்ற
தீவிரப் பற்றுதல்களும் ஐதீகங்களும் மனிதர்களிடையே பிரிவினையை வளர்ப்பவை என்கிற மிக நவீன எண்ணங்களைக் கொண்டிருந்தார். உலக நாடுகள் உலக சமாதானத்துக்காக மிகத் தீவிரமாகப் போராடவில்லை என்கிற மிக ஆழமான மன வருத்தம் அவருக்கு இருந்தது. அதை மிக எளிமையான வாதத்தின்மூலம் விளக்குவார். இந்தப் புவியின் காற்றும் ஆகாசமும், நீரும் மண்ணும் அணுவிலகாமல் இசைந்து இணைந்திருக்கும் போது, அமெரிக்கனும் ஆ·ப்ரிக்கனும் இந்தியனும் சுவாசிக்கும் காற்று ஒன்றுதான். ஆகாசம் உலகமெங்கும் படர்ந்திருப்பது. மண்ணும் நீரும் திசை வேறானாலும் நிறம் ஒன்றுதான். ஊசியிலிருந்து உயிர் காக்கும் மருந்துகள் வரை மனித குலம் ஒன்றைச் சார்ந்து மற்றது இருக்கும்போது வேற்றுமையை வளர்ப்பது மடத்தனம் அல்லவா என்பார். ஒட்டு மொத்த உலகமும் மனிதகுலத்தின் சமாதானத்துக்காகப் பாடுபடவேண்டும் என்பார். எந்த பிராந்தியத்தில் சண்டை மூண்டாலும் அது அனைவரையும் தாக்கும் வல்லமை கொண்டது என்று உணர்ந்து கவலை பட்டார்.
ஆனால் மனிதன் தோன்றிய காலம் தொட்டு இப்புவியில் மனிதர்களிடையே தோன்றிய சச்சரவுகளுக்குக் காரணம் ஒன்றுதான். மற்றவனைவிட தான் உயர்ந்தவன், தான் சார்ந்த எல்லாமே உசத்தி என்ற ஈகோவே காரணம். தேசியம், மொழிப்பற்று அல்லது பெருமை, மதத்தீவிரம் -இவை எல்லாமே அந்த ஈகோவின் பரிணாமம் என்று நான் சொன்னால் பலர் சண்டைக்கு வருவார்கள். ஆனால் அதுதான் பல்வேறு வார்த்தைகளில் மத குருமார்களிலிருந்து சமூகவியலாளர்கள் வரை கூறிவரும் உண்மை. மனிதன் நாகரீகத்தில் உயர்ந்ததன் விளைவாக அவனது ஆற்றலினாலேயே உண்டான எண்ணப் பரிவர்த்தனைக்கான மொழியும், மனித மனத்தின் உன்னதத்தைப் பரைசாற்றிய கலாச்சாரமும், அன்பை போதித்த கடவுள்களும் மதங்களும் சுவர்களை எழுப்பி தீவுகளை நிர்மாணித்தன. பேராசைகளை, ஆக்கிரமிப்பு ஆவேசத்தைக் கிளறின. எல்லைத்தாண்டும் உரசல்களின் விளைவாகப் போர் மூண்டன.
மனிதன் மாறவும் இல்லை. வரலாற்றிலிருந்து கற்கவும் இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளாக இந்தப் புவியின் நாகரீகம் பண்பட்டுக் கனிந்த ஒன்றாக நாம் நினைத்தாலும் இன்னமும், இந்தக் கணினி யுகத்திலும் நாம் மதத்தின் பெயரில் , மொழியின் பெயரில் அல்லது நாகரீகத்தின் பெயரில் ஜனநாயகத்தின் பெயரில் போர் தொடுத்துக்கொண்டோ, வன்முறையில் ஈடுபட்டோ அல்லது அராஜகம் செய்து கொண்டோ இருக்கிறோம். எல்லைமீறுபவர்கள், அராஜகம் செய்பவர்கள் – அது தனி மனிதரோ, அமைப்போ -சொல்லும் செய்தி ஒன்றுதான்– நான் உன்னைவிட மேலானவன். உன்னைவிட சக்தி வாய்ந்தவன். நீதான் என் வழிக்கு வரவேண்டுமே தவிர நான் உன் வழிக்கு வரவேண்டிய அவசியமில்லை….
இன்று உலகை பீடித்திருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பின்னோடியாக இந்த எண்ணம்தான் இருப்பதாகத் தோன்றுகிறது. பல தலைமுறைகள் தொடர்ந்த வெள்ளையர்களின் சுரண்டலினால் இன்னமும் ஏழ்மையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகள் ; கொடுமை நிறைந்த வரலாற்று நினைவுகளை சுமந்து வாழும் அமெரிக்க கருப்பர்கள், நீதி என்ற பெயரில் உலகப் பொருளாதாரத்தைத் தன் கட்டுக்குள் வைக்க நினைக்கும் அமெரிக்க ஆணவம் ஆரம்பித்த நீடித்த போரில் சின்னாபின்னமாகிவரும் ஈராக் , மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பல காலமாக அதன் எண்ணை பலத்தைக்கைப்பற்றும் ஆசையில் நடந்து வரும் அமெரிக்க அரசியல் ஊடுருவல் ஆகியவற்றால் மிதமிஞ்சிய அமெரிக்க வெறுப்பை சுமந்து வளரும் உலகளாவிய இளம் இஸ்லாமியர்கள், மண்ணை இழந்து வாசலை இழந்து உலகமெங்கும் கூரையைத் தேடி அலையும் இலங்கைத் தமிழர்கள்….இவர்களது அனைவரின் சோகங்களுக்கும் பின்னணியில் இருப்பது ஒரு சில மதம் பிடித்தவர்களின் வெறி பிடித்த ஈகோவினால்தான். இன்றைய கால கட்டத்தில் உலகத்தில் யார் எந்த மூலையில் அராஜகம் செய்தாலும் பிட்டுக்கு மண் சுமந்த ஈசனின் மேல் பட்ட அடி எல்லா மானுடருக்கும் பட்டது போல நம் அனைவரையும் தாக்கும் வலு கொண்டதாக மாறும் சூழல் இன்று. திருவிளையாடல் புராணக்கதை நமது அரசியல் நிர்வாகங்களுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் தெரியாவிட்டாலும் சரித்திர விளைவுகள் தெரிந்திருக்கவேண்டும். அவர்கள் கண்களை மறைப்பது அவர்களுடைய ஈகோ இல்லாமல் வேறு என்ன?
முதலாம் உலகப் போர் மூளும் வரை சச்சரவுகளை ஓரளவுக்கு
தமது எல்லைகளுக்குள் நாடுகள் கட்டுப்படுத்தமுடிந்தது என்ற நினைப்பு இருந்தது. ஆனால் என்றோ அமெரிக்காவில் நடந்த கருப்பர் அடிமைச் சந்தையின் எதிரொலிகள் இப்பவும் உலக சரித்திரத்தை அலைக்கழிக்கின்றன. வெள்ளையர்கள் தங்களது பரந்துபட்ட சாம்ராஜ்யங்களில் வேலை செய்ய அடிமை நாட்டு ஏழைகளை நாடு கடத்தி அழைத்துச் சென்ற கூலி ஆட்களின் சந்ததிகள் அங்கங்கே அரசியல் கொந்தளிப்புகளில் சிக்கி இருக்கிறார்கள். இஸ்லாம் மதம் பிறந்து கிளை பரப்பி ஆக்கிரமித்து நாகரீகங்களை வளர்த்து எண்ணை பொருளாதாரத்தால் வளமை பெற்று மேற்கின் பார்வையை உறுத்த ஆரம்பித்ததின் விளைவுகள் அதி பயங்கர பரிணாமம் கொண்டுவிட்டன. இது கர்ம பூமி என்று சொல்வதற்கு இது தான் அர்த்தம் என்று நினைக்கிறேன். பழைய வினைகளிலிருந்து மனித குலம் தப்ப முடியாது. ஒரு தலைமுறையில் மனிதன் செய்யும் தவற்றின் விளைவை அடுத்த தலைமுறை அனுபவித்தாக வேண்டும். இது ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியின் சாபத்தினால் ஏற்படுவதல்ல. காரணங்களும் காரியங்களும் விஞ்ஞானபூர்வ சுழற்சி. இயற்கையின் இயல்பான, தர்க்க சாஸ்திரத்துக்கு உட்பட்ட விளைவு. அவை மனிதனின் செய்கையால் விளைவது என்பதால் நமது விதியை மாற்றிக்கொள்வது நமது விவேகத்தினாலேயே சாத்தியம்.
இது ஆன்மீகச் சொற்பொழிவு அல்ல ! யதார்த்தவாதம். உலகம் சுறுங்கி விட்ட நிலையில் உலகப் பிரஜைகளாகிவிட்டோம். நமது பொறுப்புகள் அதிகமாகிவிட்டன.
தலை நகரங்களின் / மாநிலங்களின் குணங்களும் மக்களின் ஆளுமைகளும் அரசுகளின் தொலை நோக்கற்ற பார்வையால் , விவேகமற்ற அணுகுமுறையால் மாறிவருவதை அதைப் பற்றின எனது கவலைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதுவும் ஒரு பறவைப் பார்வைதான். என்னுடைய நேரிடையான அனுபவத்தை வைத்து நான் கண்டதையும் கேட்டதையும் படித்ததையும் வைத்து ஏற்படுத்திக்கொண்ட ஒரு பத்திரிக்கையாளரின் பார்வை.
சிறு வயதிலிருந்து அதாவது பள்ளி நாட்களிலிருந்து, சரித்திரம் எனது விருப்பப் பாடமாக இருந்தது. நான் படித்த ஆங்கிலப் பள்ளியில் இந்திய வரலாற்றுப் பாடங்கள் தவிர இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வரலாற்றுப் பாடங்களும் இருந்தன. அந்தப் பாடங்கள் மிக சுவாரஸ்யமாக எழுதப் பட்டிருக்கும். இங்கிலாந்து வரலாறு என்னை அதிகமாகக் கவர்ந்தது. முக்கியமாக 13-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிக மோசமான அகங்காரம் மிக்க ஜான் என்ற அரசனை அரசவையின் பிரபுக்கள் பணிய வைத்து அவனது சர்வாதிகாரத்தை ஜனநாயக கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு இணங்கி துரக்கச் சம்மதித்து, ‘மாக்ன கார்ட்டா’ என்ற சாஸனத்தில் [கி.பி. 1215] கைய்யெழுத்திட வைத்த தகவல் எனக்குச் சிறு வயதில் பிரமிப்பை ஏற்படுத்திற்று. ஆனால் அவர்கள் சக்தி வாய்ந்த பிரபுக்கள். அரசன் கைய்யெழுத்திட்டதில்
அவர்களுக்குத்தான் ஆதாயமே தவிர சாமான்ய மக்களுக்கல்ல. இருந்தும் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் ராஜ குலத்தவர் என்று நம்பப்பட்டக் கால கட்டத்தில் மன்னனின் உரிமைகளுக்கு வரம்பு கட்ட முயன்று வெற்றியும் பெற்றது மாபெரும் சாதனையாகத் தோன்றிற்று. மாக்ன கார்ட்டா சாஸனமே பின்னால் வகுக்கப்பட்ட ப்ரிட்டிஷ் அரசியல் சாஸனத்துக்கு ஆதாரமாயிற்று. பாரம்பர்யமாக மன்னராட்சி கொண்ட இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளர்ச்சியும் அதன் முதிர்ச்சியும் மிக ஆச்சர்யமான சுவாரஸ்யமான வரலாறு. பல அதி புத்திசாலி ப்ரதமர்கள் அலங்கரித்த அவை அது. அவர்கள் வளர்த்த கண்யம் மிக்க ஆனால் கூர்மை மிக்க நாடாளுமன்ற மொழி மிகப் பிரசித்தம். அதைப் பற்றின புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. நான் அவற்றை மாய்ந்து மாய்ந்து படிப்பேன். ஜனநாயக மரபுகளை போற்றும் அவர்களது பண்பு என்னை ஆகர்ஷித்தது. சாஸரின் காலத்திலிரிந்து மலர்ந்து நிற்காமல் பூத்த அற்புத ஆங்கில இலக்கியங்கள் என்னைக் கொள்ளைக்கொண்டன. ஆங்கில புத்தகங்களின் அழகிய சித்திரங்களையும் இயற்கை எழிலின் வர்ணனைகளையும் படிக்கும் போது அங்கு நான் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் கூட எனது இளம் நெஞ்சில் சோர்வை ஏற்படுத்தும். அந்தப் பருவத்தில் பலருக்கு என்னைப் போன்று ஏக்கம் இருந்திருக்கும். ஆனால் பாரை ஆளும் பேராசையினால் விரிந்த பிரிடிஷ் சாம்ராஜ்யத்தில் பல நாடுகள் அடிமை ஆனதும் அது பல தலைமுறைகளுக்கு ஏற்படுத்திய சேதங்களும் காயங்களும் முற்றிலும் வேறு கதையென்பதும் அறிவு விசாலமாக விசாலமாகப் புரிந்தது.
மக்களுக்கு சம்பந்தமில்லாதது எதுவுமே இல்லை என்று எனக்கு உணர்த்தியவர் என்னுடைய தாத்தா. ‘நரிக்குக் கல்யாணம் நண்டுக்குப் ப்ராணாவஸ்தை’ என்று பழமொழி சொல்வார்கள். ப்ரிடிஷ் சாம்ராஜ்யம் விரிந்தபோது ப்ரிடிஷ்மக்களுக்கு அது மிகப் பெரிய பெருமிதம் அளிக்கும் விஷயமாக தங்களது பராக்ரமத்தின் அடையாளமாக இருந்தது. ஆனால் அடிமைப் பட்ட நாடுகளின் நிலை என்ன என்ற விவரம் அவர்களுக்குத் தெரிந்திராது. அதில் அக்கறையும் இருந்திராது. தாத்தா ஆங்கில ஆசிரியர்.
வர்ட்ஸ்வர்த், ஷெல்லீ ஆகியோரின் கவிதைகளைப் பரவசத்துடன் சொல்வார். அதே பரவசத்துடன் பாரதியின்
தேச பக்தி பாடல்களைப் பாடுவார். ‘ தண்ணிர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரை, கண்ணீரால் காத்தோம்” என்று சொல்லி கண்ணீர் வடிப்பார். அவர்தான் பாரதியின் ‘கரும்புத் தோட்டத்திலே’ பாடலை எனக்கு அறிமுகப் படுத்தி கண்காணாத ·பீஜித் தீவுகளுக்கு ஏழை இந்தியர்கள் அங்குக் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய கூலி ஆட்களாக அனுப்பப் பட்டதையும் அங்கு அவர்கள் படும் துயரத்தையும் சொன்னார்.
பாரதியின் பாடலின் பிம்பம் வெகு நாட்களுக்கு என்னைத் துன்புறுத்திற்று. ஆனால் பின்னாளில் நானே ·பீஜித் தீவுகளுக்குச் சென்று அங்கு வாழும் அக்கூலிகளின் சந்ததிகளைப் பார்ப்பேன் என்று நிச்சயம் நினைத்திருக்கவில்லை.
எண்பதுகளின் மத்தியில் ஒரு ரயில் பயணத்தின்போது தெனா·ப்ரிக்காவில் வசிக்கும் ஒரு இந்தியப் பெண்மணியை சந்தித்தேன். அவரது மூதாதையர் தமிழர் என்றும் , இப்பவும் பழைய தமிழ் மரபுகள் சடங்குகள் பின்பற்றினாலும் தமிழ் மொழி பேசத்தெரியாது என்றும் சொன்னார். அவரது நடை உடை பாவனைகள் என்னுள் ஒரு ஆர்வத்தைக் கிளப்பிற்று. நான் இந்திய வம்சாவளி என்று பெருமையுடன் சொன்னது பழைய சரித்திரத்தைப் புரட்டிப்பார்க்கத் தூண்டியது.
இந்தியாவிலிருந்து ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்த தென் ஆ·ப்ரிக்காவுக்கும் ·பீஜித் தீவுக்கும் இலங்கைக்கும் அங்கிருக்கும் தேயிலை மற்றும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய ப்ரிட்டிஷ் அரசுக்கு மலிவான கூலி ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதற்காக ஆட்களைத் திரட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் கங்காணிகள் நியமிக்கப் பட்டார்கள். அடிமைப்பட்ட இந்தியாவில் வறுமையில் வாடுபவருக்கா பஞ்சம்? வறுமையுடன் ஜாதிக்கொடுமையால் விளிம்பில் இருந்தவர் ஏராளம். கங்காணிகள் காட்டிய ஆசையில், பூகோள அறிவு சுத்தமாக இல்லாத நிலையில் இரு வேளை சாப்பாட்டுக்கும் கௌரவமான வாழ்வுக்கும் ஏங்கிய பல ஜீவன்கள் உடுத்தின உடையுடன் சென்னையிலிருந்தும் கல்கத்தாவிலிருந்தும் கிளம்பினார்கள். தென் ஆப்ரிக்காவும் ·பீஜித்தீவுகளும் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவை என்று அறியாத அப்பாவிகள். அநேகம் பேர் கப்பல் பயணம் தாங்காமல் உயிர் இழந்தார்கள். வேலை செய்யச் சென்ற முற்றிலும் புதிய இடம் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? வெள்ளைக்கார துரைகளிடம் மாட்டிக்கொண்டு அங்கு என்னவெல்லாம் அனுபவித்தார்கள்? அவர்களது சந்ததிகள் இப்போது எப்படி வாழ்கிறார்கள் ? எந்த அளவுக்கு அவர்களது இந்திய மரபணுக்கள் மிச்சமிருக்கின்றன ? — ஆகிய கேள்விகள் என்னுள் எழுந்தன. அப்படிப்பட்ட ஒரு ஆய்வை மேற்கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றிற்று.
இந்த என்னுடைய ஆர்வத்தை இந்தியக் கலாச்சார உறவுப் பரிவர்த்தனை கௌன்சிலுக்கு [ ஐ.ஸி.ஸி.ஆர்] ஒரு கடிதத்தின் மூலம் தெரிவித்து என் அனுபவங்களைப் புத்தகமாக எழுதும் ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்தேன். அடுத்த இரு மாதங்களில் எனக்குக் கடிதம் வந்தது. ·பீஜித் தீவுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு ‘லெக்சர் டூர் ‘ போகவிருப்பமா என்று. உங்களுக்கு ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றும் தகுதி இருந்தால் அனுப்புகிறோம் என்றது மடல். நான் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போனேன்.
என் பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்பியதும் இதைப்பற்றிச் சொன்னேன். ‘ எங்கே இருக்கு ·பீஜி? என்றார்கள். நான் விழித்தேன். சின்னவன் தனது அட்லாஸ் புத்தகத்தைக் கொண்டு வர எல்லோருமாகச் சேர்ந்து தேடினோம். கடைசியில் சிறு புள்ளிகள் போல் பஸி·பிக் மகா சமுத்திரத்தில் ஆஸ்திரேலியாவி ன் வட கிழக்கில் இருப்பதைக் கண்டுபிடித்தோம். இந்தியாவிலிருந்து மிகத் தொலைவு என்று புரிந்தது. அடேயப்பா இருநூறு ஆண்டுகளுக்குமுன் படிப்பறிவில்லாத ஏழை இந்தியர்கள் வசதி இல்லாத கப்பலில் எப்படிப் பயணித்திருப்பார்கள் என்று எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. அந்த இனம்புரியாத துணிச்சலுக்குப் பின்னணியில் அவர்களது வறுமையும் சமூக அந்தஸ்தும் எத்தனைக் கொடுமையாக இருந்திருக்கவேண்டும்
என்று துயரமேற்பட்டது.
·பீஜிக்குச் சென்றதும் அங்கு கேட்ட அவர்களது சரித்திரமும் அவர்களது சந்ததியர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் வரலாற்று ஏடுகள் சொல்லும் மிகப் பெரிய பாடமாக, அனுபவமாகத் தோன்றிற்று.


Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

வாஸந்தி



“இந்திரா காந்தி கொல்லப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லையா என்று கேட்கிறாய் ! இல்லவே இல்லை! என்ன நடக்கவேண்டுமோ அதுதான் நடந்தது.”
நான் எனது நாவலுக்காகக்[மௌனப்புயல்] கள ஆய்வு செய்யப் பஞ்சாபுக்குச் சென்ற போது நான் சந்தித்த அனைவரும் சொன்ன பதில் இது. இதைக் கேட்டு எனக்குத்தான் அதிர்ச்சி ஏற்பட்டது. படுகொலை நடந்து ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. ஆனால் அது யாருடைய நினைவிலும் பதிந்ததாகவோ, ஒரு அசம்பாவிதமாகப் பட்டதாகவோ தோன்றவில்லை. அம்ருத்ஸர் பொற்கோவில் வாசலில் பூ விற்ற படிப்பறிவில்லாத கிழவரிலிருந்து படித்த கல்லூரியாளர் வழக்கறிஞர்கள் பத்திரிக்கையாளர்கள் வரை இதையேதான் சொன்னார்கள்- ‘எது நடக்கவேண்டுமோ அதுதான் நடந்தது’ –“ஜோ ஹோனா , ஹோனாஸி.” அதாவது ஒட்டுமொத்த சமூகமும் அதை அங்கீகரித்தது. இது தில்லிவாழ் சீக்கியர்களின் மன நிலைக்கு வேறு பட்டிருந்தது. படுகொலையைப் பற்றி அவர்களுக்கு சங்கடம் இருந்தது. ‘இப்படி நடக்கும் என்று நாங்கள் பயந்தோம்’ என்று சிலர் சொன்னார்கள். ஆனால் அம்ருத்ஸரில் எல்லோரும் அதை ஒரு பெரிய விஷயமாகவே நினைக்கவில்லை. அதற்கு மாறாக பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்த ஆணவத்தை, அராஜகத்தை நேற்று நடந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவது போல ஆவேசத்துடன், ஆக்ரோஷத்துடன் பேசினார்கள். அது தெய்வ குற்றம் மட்டுமில்லை சீக்கிய சமூகத்துக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமானமாக எல்லோரும் நினைத்தது வெளிப்படையாகத் தெரிந்தது. தாங்கள் சிறுபான்மையினர் என்கிற நினைப்பு அவர்களை இப்போது அச்சுறுத்துவதாகப் பலர் சொன்னார்கள்.
நான் சென்ற இடமெல்லாம் அவர்கள் வெளிப்படுத்திய கோபம் என்னை தகித்தது. ஆரம்பத்தில் அது அதீதமானதாக அர்த்தமற்றதாகக் கூடத் தோன்றிற்று. ஆனால் அவர்களுடன் பேசப்பேச அவர்களது கோபத்தின் காரணமும் ‘சீக்கிய சைக்கீ’ என்று பெருமைபட்டுக்கொள்ளும் மனோபாவமும் புரிந்தன. அந்த மனோபாவத்திற்கு சீக்கியமதம் சமீபத்திய மதம் என்பதும் சிறுபான்மையினர் சமூகம் என்பதும் காரணமாக இருக்கலாம்.
நான் அந்தப் புகழ்பெற்ற பொற்கோவிலுக்குமுன் நின்றேன். அதன் பொற்கலசங்கள் காலை இளம் வெய்யிலில் தகதகத்தன.
“தலையைப் போர்த்திக்கொள்ளணும் மகளே!” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். பூ விற்று கொண்டிருந்த ஒரு கிழவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
நான் சட்டென்று புடவைத் தலைப்பால் தலையை மூடிக்கொண்டேன். வாயிலுக்குள் நுழைவதற்கு முன் கால்களைக் கழுவுவதற்குசெயற்கை நீரோடையும் கை கழுவ வாஷ்பேஸினும் இருந்தன. நான் கைகழுவும்போது கிழவர் தனது பஞ்சாபி கலந்த ஹிந்தியில் சொன்னார்.
“இங்கு பக்தர்கள் யாரும் இப்போது வருவதில்லை. வருபவர்கள் எல்லோரும் தமாஷ் பார்க்க வருபவர்கள். போ! நீயும் போய் எண்ணு, ராணுவம் போட்டிருக்கும் துப்பாக்கித் துளைகளை! அகால் தக்துக்கு நேர்ந்திருக்கும் கதியைப் போய் பார்!”
அவரது குரலில் தோய்ந்திருந்த துக்கமும் கோபமும் என்னை லேசாக உலுக்கிற்று. கோவில் வளாகத்தில் ராணுவ அதிகாரிகளோ போலீசோ இல்லை. ராணுவத் தாக்குதலில் சேதமான பகுதிகளைப் பழுது பார்க்க வந்த ஆட்கள் அதிகம் இருந்தார்கள். பூக்கடைக்காரக் கிழவர் சொன்னதுபோல சீக்கிய பக்தர்கள்கூட வேடிக்கைபார்க்க வந்தவர்கள் போல எனக்குப் பட்டது. சேதமான பகுதிகளையும் குண்டுபட்டு வடுக்கள் சுமந்த சுவர்களையும் தீவிரமாகப் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் காரமாகப் பேசியபடி நகர்ந்தார்கள். இடப்பக்கம் இருந்த வாசகசாலை தீக்கு இரையானதன் விளைவாகக் கரிந்து காணப்பட்டது. வலதுபுறம் மிக முக்கியப் புனிதப் பகுதியான அகால்தக்த் போரில் வீழ்ந்த பரிதாபத்துடன் காட்சி அளித்தது.
‘மக்களின் கோபம் இன்னும் குறையவில்லை போலிருக்கிறது’ என்றேன் நான் என்னுடன் எனக்கு உதவ வந்திருந்த நண்பர் பாட்டியாவிடம்.
” அது தீருகிற கோபமில்லை” என்றார் அவர் சாதாரணமாக.”இடிந்துவிட்ட அகால்தக்தைத் திருப்பிக் கட்டுவது அரசுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.ஆனால் சீக்குக்கும் ஹிந்துவுக்கும் இனிமேல் பாலம் கட்டுவது முடியாத காரியம்”.
” பிந்திரன்வாலே செய்தது குற்றமில்லையா? நம்பமுடையாத அளவுக்கு ஆயுதங்கள் சேர்த்து, பொற்கோவிலை ஒரு ஆயுதக்கிடங்கு போல உபயோகித்தானே? மதத்தை அரசியலாக்கினானே ?”
பாட்டியா சிரித்தார். “பிந்த்ரன்வாலே என்ன சொல்வான் தெரியுமா?’சீக்கியனுக்கு கிர்பாண்[பிச்சுவாகத்தி] வைத்துக் கொள்வது குலதர்மம். நான் பகைவர்களிடமிருந்து காத்துக் கொள்வதற்கு ஏ.கே.47 வைத்துக்கொள்கிறேன். அதனால் என்ன தப்பு?’ அவன் சொல்வதில் தப்பொன்றும் இல்லை என்று பாமரர்கள் நம்பினார்கள். புது மதத்திற்கு ரோஷம் அதிகம். பாதுகாப்பின்மை உணர்வும் அதிகம். அரசியலையும் அதையும் பிரிக்கமுடியாது. நான் ஒரு ஹிந்து பஞ்சாபி. எங்களுக்கும் சீக்கியர்களுக்கும் பாகிஸ்தான் பிரிவினையினால் ஏற்பட்ட துயரமும் நஷ்டமும் பொதுவானவை.இரண்டு இனங்களும் பேதமில்லாமல் உழைத்து பஞ்சாபை சுபிட்சமாக்க முப்பது வருஷங்கள் ஆயிற்று.. அதை தலைகீழாக மாற்ற இனவெறியர்களுக்கு மூன்று ஆண்டுகள் கூடத் தேவைப்படவில்லை. இப்போது இந்த ராணுவ படையெடுப்பு நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது.”
” அதற்குத்தான் இந்திரா காந்தியைக் கொன்று பழிவாங்கிவிட்டார்களே?”
” படுகொலைக்குப்பின் என்ன நடந்தது?” என்றார் பாட்டியா.
நான் வாயை மூடிக்கொண்டேன். தில்லி முழுவதும் தெரிந்த கரிய புகைத் தூண்களின் நினைவு
மீண்டும் ரத்த நாளங்களில் ஒரு அதிர்வை ஏற்படுத்திற்று.
” சீக்கியர்களைப் பொறுத்தவரை ப்ரதமரின் சாவு நடக்கவேண்டிய ஒன்று.”
தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தது இந்த விளக்கம். யாரோ பெரிய குரலில் கத்தினார்கள் .” அமர்ஷஹீத் பிந்த்ரன்வாலே ஜிந்தாபாத்! காலிஸ்தான் ஜிந்தாபாத்!”
அன்று மாலை பஞ்சாபின் மிகப் பிரபல நாடக ஆசிரியரும் இயக்குனருமான குருசரண் சிங்கைப் பார்க்கச் சென்றேன். நான் சென்றபோது அவரது நெடிய உருவம் வரவேற்பறை சோபாவில் படுத்திருந்தது. மதிய வெய்யிலுக்காக ஜன்னல் திரைச்சீலைகள் மூடப்பட்டிருந்தன. கண்களை ஒரு கருப்புத்துணியால் கட்டிப் படுத்திருந்தார் சிங்.
நான் வந்த அரவம் கேட்டு எழுந்தார். உள்ளே சென்று தேநீருக்குச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தார்.
“சொல், என்னிடமிருந்து என்ன தெரிந்துகொள்ள வந்தாய்?”
அவர் இடது சாரி முற்போக்குவாதி என்பதும் தனது நாடகங்கள் மூலம் பிந்த்ரன்வாலேயையும் மத்திய அரசையும் துணிச்சலாகத் தாக்கியவர் என்பதும் நான் அறிவேன்.
” உங்களது துணிச்சலான எதிர்ப்பு நாடகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று ஆரம்பித்தேன்.
” எதற்கும் அர்த்தமில்லாமல் போய்விட்டது மகளே!” என்றார் துயரத்துடன். ” எல்லாருமாகச் சேர்ந்து பஞ்சாபின் நாசத்துக்கு சீல் அடித்து விட்டார்கள். நான் இப்போது ஒரு உதவாக்கரையாக என்னை உணர்கிறேன். என் நாடகங்கள் பஞ்சாபின் தலையெழுத்தை மாற்றும் என்று கனாக்கண்டேன். அரசியல்வாதிகள் போடும் நாடகத்துக்குமுன் அவை எடுபடுமா? இத்தனை நாட்கள் மக்கள் அரசியல் நாடகத்தை வேடிக்கைதான்
பார்த்தார்கள். ராணுவப்ரவேசத்துக்குப்பின் இப்போது என்ன ஆகிவிட்டது பார். வேடிக்கை பார்த்தவர்கள் மேடையேறிவிட்டார்கள். கொட்டகையைக் கொளுத்தத்தயாராகிவிட்டார்கள்.”
குருசரண்சிங்கும் பிரதமரின் கொலையைப் பற்றி அலட்டாமல் சொன்னார். ” அது நடக்கும் என்பதை எல்லா முட்டாளும் இங்கு அறிவான். பொற்கோவில் ராணுவப் பிரவேசம் ஒரு பெரிய தவறு என்று நான்
சொன்னால் மத வெறியன் என்பார்கள். தேசதுரோகி என்பார்கள். உண்மையில் நான் தேசாபிமானத்தால் சொல்கிறேன் என்பது அவர்களுக்குப் புரியாது. ஜனாதிபதிக்கு- [ ஜெயில் சிங்] நரைத்த தாடிக்கு சாயம் பூசிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாரே , அந்தக் கிழவருக்குப் புரிந்திருக்கவேண்டும். அவர் ஏன் தடுக்கவில்லை? இப்போது ஏற்பட்டுவிட்ட ஹிந்து-சீக் பிளவு நிரந்தரமானதாகிப் போகும். சீக்கியனுக்கு மூளை இயங்கும் முன் ரத்தம் கொதிக்கும். அவனுடைய ரத்தம் அலாதியானதா என்று சிரிக்காதே. அவனுடைய மரபுதான் அதற்குக் காரணம். மத வெறி பிடித்துவிட்டால் யோசனைத் திறன் எங்கே இருக்கும்? சீக்கிய இனத்துக்கும் மதத்திற்கும் இந்துக்கள்னாலெ ஆபத்து என்று பிந்த்ரன்வாலே சொன்னபோது எல்லாரும் அதை நம்பிவிடவில்லை. கோவிலை ராணுவம் தாக்கினதும் கதை மாறிவிட்டது. அதனுடைய காரண காரியங்களை யாரும் ஆராய மாட்டார்கள். தங்கள் இனத்தையே தாக்கிவிட்டதாகத் தோணும். ஏன் அப்படி என்று நீ கேட்டால் அதற்கு பதில் கிடையாது.”
இடையில் எனக்குத் தேநீரும் சிற்றுண்டியும் கொடுத்து உபசரித்தவண்ணம் இருந்த குருசரண் ஆற்றாமையுடன் தலை அசைத்தார். “இது பஞ்சாபின் சோகம் மட்டுமில்லே மகளே. இந்தியச் சோகம். எல்லைப்புர மாநிலம் இது. மீண்டும் பிரிவினைவாத சக்திகள் தலையெடுக்கும் ஆபத்து இருக்கு. எல்லாவற்றையும்விடப் பெரிய சோகம் என்ன தெரியுமா? இந்த நிலை ஏற்படாமல் தடுத்திருக்கலாம்.”
ராணுவப் பிரவேசம் ஆனதுமே தில்லியில் சீக்கியர்கள் இதைச் சொன்னார்கள். மிக நவீன வசதிகள் கொண்ட இந்திய ராணுவத்திற்கும் உளவுத்துறைக்கும் ராணுவத்தை கோவிலுக்குள் அனுப்பாமலே பிந்த்ரன்வலேயையும் அவனது ஆட்களையும் வெளியேற்றியிருக்கமுடியாதா? நான் சில நாட்களுக்குப்பின் ராணுவப் படைத் தலைவராக இருந்த ஜெனரல் சுந்தர்ஜியைப் பேட்டி கண்டபோது இந்தக் கேள்வியைக் கேட்டேன். ராணுவத்திடம் அத்தகைய வசதி இருக்கவில்லை என்றார்.
ஆனால் விஷயம் அந்த அளவுக்கு வளர்ந்ததற்கு அரசியலே காரணம். பஞ்சாபில் அகாலிகளிடம் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடிப்பதற்காக காங்கிரெஸ் கட்சி பிந்த்ரன்வாலேயை வளர்த்தது. அவன் பகைவனாக மாறினபிறகு வெகு நாட்கள் வெளியில் தான் இருந்தான். அப்போது அவனை கைது செய்யாமல் பொற்கோவிலுக்குள் புகுந்ததும்
ராணுவத்தை அனுப்புவதில் ஒரு நோக்கம் இருந்தது. வெளியில் இருப்பவனை சிறைபிடித்தாலோ கொன்றாலோ அவனுக்குக் கதாநாயக அந்தஸ்து கிடைத்துவிடும். கோவிலின் புனிதத்தை தனது ஆயுதக்குவிப்பின் மூலம் மாசுபடுத்தினான் என்ற காரணத்துடன் தாக்கினால் மக்கள் ஏற்பார்கள் என்று தப்புக் கணக்கு போட்டது இந்திரா காந்தியின் அரசு. அவனை வெறுத்தவர்கள் கூட இப்போது அவனைத் தியாகி-‘ஷஹீத்’ என்றார்கள்.
விசாலமான தெருக்கள் கொண்ட சண்டீகர் நகரத்தில் ஷௌக்கீன் என்ற இளைஞனை சந்தித்தேன். அவன் ஒரு பத்திரிக்கையாளன். ஒரு கவிஞனும் கூட. மிகுந்த பதட்டத்தில் இருப்பவன் போல தொடர்ந்து சிகரெட் பிடித்தவண்ணம் இருந்தான். அவன் சீக்கியனா என்று தெரியவில்லை. குறுந்தாடியாக ட்ரிம் செய்து வைத்திருந்தான். அவன் இடதுசாரி கொள்கை உடையவன், பிந்த்ரன்வாலேயை எதிர்த்தவன் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவனது தங்கை புருஷன் சீக்கியன் . சுமித் சிங் என்று பெயர். ‘ப்ரீத் லடீ ‘ [நேசத்துக்காகப் போர்] என்ற பத்திரிக்கை நடத்திக்கொண்டிருந்தான். பிந்த்ரன்வாலேயின் போக்கை வன்மையாகக் கண்டித்து எழுதி வந்ததால் பிந்த்ரன்வாலேயின் ஆட்களால் கொலை செய்யப்பட்டான்.
ஷௌக்கீனின் கண்களைச் சுற்றி ஒரு கருவட்டம் இருந்தது, ஒரு நிரந்தர சோகத்தை சுமப்பதுபோல. ” நீங்கள் ஹிந்துவா? ” என்று தயக்கத்துடன் கேட்டேன்.”இந்த அநாகரீகக் கேள்விக்காக
மன்னியுங்கள்.”
“நாகரீகம் என்பது என்ன?” என்றான் ஷௌக்கீன் தீவிரமாக. “எனக்கு மறந்து போச்சு. உண்மையில் நீயும் ஒரு சீக்கியனா என்கிற பழிக்கும் கேள்வியைத்தான் எனக்குக் கேட்டுப் பழக்கம். எந்த லேபிலோடும் நான் பிறக்கவில்லை. நான் பிறந்ததும் எனது நாமகரணத்துக்கு என் அம்மா தான் நம்பும் குருத்வாராவுக்கு என்னை அழைத்துச் சென்றதற்கு நான் பொறுப்பில்லை. வேடிக்கை இல்லை? நாம் யாருமே நடக்கும் பல அபத்தங்களுக்குக் காரணமாக இல்லாமலிருந்தும் எத்தனைக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கு? எத்தனைக் காயங்களை ஏற்க வேண்டியிருக்கு?”
நான் யோசனையுடன் அவனைப் பார்த்தேன். அவனது காயங்கள் மிக ஆழமானதாக இருக்கும் என்று தோன்றிற்று.
“தெருவில் நடப்பவர்களைப் பாருங்கள். முன்பு இரண்டு சீக் நடந்தால் அவர்களுடன் ஒரு ஹிந்து நிச்சயம் இருப்பான். இப்போது நண்பர்களிடையே சுவர் எழும்பி விட்டது. வீட்டுக்குள் சுவர் எழும்பி விட்டது. எனது மனைவி சுமன் ஒரு ஹிந்து. எப்போது விவாவகரத்து ஆகும் என்று சொல்லமுடியாது.”
சிகரெட்டை மீண்டும் பற்றவைக்கையில் அவனுடைய விரல்கள் நடுங்கின.
“நான் மதச் சார்பில்லாதவன். ஆனால் இனச் சார்பில்லாதவன் என்று சொல்லமுடியாது. நான் பிந்த்ரன்வாலேயைக் கண்டித்தேன். ராணுவப் பிரவேசம் தவறானாலும் அதுதான் தர்க்கரீதியான விளைவு என்கிறேன். இந்திரா காந்தியின் படுகொலையும் தர்க்க ரீதியானது என்று சொல்கிறேன். இதெல்லாம் சுமனுக்கு முரணாகத் தோன்றுகிறது. அவள் சீக்கியர்களைத் தாக்கிப் பேசும்போது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வேடிக்கை இல்லை?”
ஜன்னலை இழுத்து மூடிக்கொண்டு அமர்ந்தவர்கள் வீடுகளில் எல்லாம் அரசியல் புகுந்து விட்டது என்றான் சற்று பொறுத்து. “நான் தில்லியில் உளவுத்துறையில் முக்கிய பதவியில் இருந்திருந்தால் பொற்கோவில் ராணுவப்பிரவேசம் ஆன கையுடன் பிரதமரின் சீக்கிய மெய்காப்பாளர்களை நீக்கியிருப்பேன். ராணுவம் போலீஸ் எல்லா வேலையிலிருந்தும். அப்படி முன் எச்சரிக்கை எடுக்காதது முட்டாள்தனம்.”
ஷௌக்கீனின் விவாகம் முறிந்ததா என்று எனக்குத் தெரியாது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவன் இறந்து விட்டதாக அறிந்தேன். கொலையோ தற்கொலையோ என்றார்கள்.
இந்திராகாந்தியைக் கொலை செய்தவர்களுக்குத் கொலை தண்டனைக் கிடைத்தது. ஆனால் கொலைக்குபின் பின் நடந்த இன வெறியாட்டத்துக்குக் காரணமான வர்களை தண்டிக்க அரசு எந்த அவசரமும் காட்டவில்லை. வெறியாட்டத்தில் பெற்றவர்களையும் உடன்பிறப்புகளையும் உடமைகளையும்
இழந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. சென்ற ஆண்டுதான் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டு பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிற்று. இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையே எழும்பிய சுவர் போய்விடவில்லை. இன்னமும் சங்கடத்துடன் நிற்கிறது.
சென்ற மாதம் நான் தில்லிக்குச் சென்றபோது பஞ்சாபின் பாட்டியாலா நகரத்தில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஒருவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது சீக்கிய இளைஞர்கள் இப்பவும் இந்தியாவில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதுவதாகவும் படிப்பு முடிந்ததும் வேலைபார்க்க வெளிநாடு போய்விட விரும்புவதாகவும் சொன்னார்.
மனிதர்களிடையே இன்று சுவர் எழும்புவது சுய நல அரசியலால்தான். சுவர்களுக்குள் உருவாகும் மௌனப்புயல்கள் ஒரு நாள் சீறிப்பாயும் போது மானுடத்தின் ஆளுமையையே மாற்றும். எல்லா மாநிலங்களின் சரித்திரமும் நமக்குச் சொல்லும் பாடம் அது. ஓட்டு வங்கி அரசியல் வாதிகள் தெரிந்து கொள்ள விரும்பாத பாடம்.
[தொடரும்]


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

வாஸந்தி


இந்தியாவின் பல மாநிலங்களைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தனித்தன்மையும் அழகும் கலாச்சாரப் பின்புலமும் இருப்பது கண்டு பரவசம் ஏற்படும். ஆனால் நான் இதுவரைப் பார்த்திருக்கும் மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம்தான் சொக்கவைக்கும் அழகு கொண்டதாக எனக்குப் படுகிறது. அதன் தண்ணென்ற சீதோஷணம் , மலைகள், மலர்கள் ஏரிகள் என்று எங்கு திரும்பினாலும் அபிரிமிதமான சௌந்தர்யம் மனத்தை அள்ளும். அந்த சௌந்தர்யப் பிரதேசத்து மக்களும் அதி சௌந்தர்யமானவர்கள்.
புல் கட்டை சுமந்து செல்லும் ஒரு நங்கையைப் பார்த்து நான் சொக்கிப் போனேன். பார்த்த ஆண்கள் மேலெல்லாம் மையல் கொண்டேன். பளீரென்ற ரோஜா நிறமும் தீர்க்கமான மூக்கும் விழியும் , இறைவன் வஞ்சனை இல்லாமல் இயற்கை அழகை அம்மண்ணுக்கு அள்ளிக் கொடுத்ததுபோல அங்கு வாழும் மக்களுக்கும்- ஏழை பணக்காரர் என்று பேதமில்லாமல் அள்ளிக் கொடுத்திருப்பது காஷ்மீரத்தில்தான். எல்லோர் முகத்திலும் தெய்வீக அருள் சுரப்பதாக எனக்குத் தோன்றிற்று. அந்த தெய்வீக அருளாலேயே பல ஆண்டுகளாக அரசியல் வாதிகள் ஆடிவரும் சொக்கட்டான் ஆட்டத்தில் ரணகளமாகிப் போன பூமியில் அவர்களால் தொடர்ந்து பொறுமை காக்கமுடிகிறது என்று நினைக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த காஷ்மிர் இன்னமும் கண்ணெதிரில் நிற்கிறது.
அழகிய தால் ஏரியின் முன் நின்றிருந்தேன். அங்கங்கே கரை ஓரங்களில் படகு வீடுகள். அந்த
வீடுகளில் வசிப்பது எத்தனை அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று நான் கற்பனையில் ஆழ்கிறேன். தில்லியில் நம் வீட்டில் இருக்கும் எந்த நவீன சௌகர்யமும் அங்கு இருக்காது என்று எனது கனவைக் கலைக்கிறார் என் கனவர் சுந்தரம். அங்கு அமர்ந்திருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் ஊழியர் அருணாச்சலம் என்ற தமிழர் எங்கள் பேச்சைக்கேட்டு சிரிக்கிறார்.
“உண்மைதாங்க.ரொம்பப் பணக்காரங்களுடைய படகு வீடுகள்ளெதான் எல்லா வசதிகளும் இருக்கும். ஆனா கோடை காலத்துலேதான் இருக்கமுடியும். குளிர்காலத்திலே ஏரி உறைஞ்சுடும். அப்ப ஜாகை மாத்தணும்.”
தால் ஏரியின் முன் தான் அவரது அலுவலகம். ” தினமும் ஏரியைப் பாத்துகிட்டு வேலை செய்யறது
எத்தனை அழகான அனுபவம்?” என்றேன் நான்.
” அதெல்லாம் இல்லீங்க” என்று மறுத்தார் அவர். ” த்¢னமும் பார்த்தா அலுத்துடும்.”
எனக்கு வேடிக்கையாக இருந்தது. இயற்கை எழில்கூட அலுக்குமா என்றிருந்தது. நான் பேசாமல் இருப்பது கண்டு அவர் தொடர்ந்தார். ” நா கிறுக்கன்னு நீங்க நினைப்பீங்க. இந்த ஏரியையே பாத்துக்கிட்டு இருந்தா பித்து புடிச்சமாரி ஆயிடுது. மூளை மந்தமாயிடுது. ”
‘ஸ்டார் கேசிங்’ என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. ஆகாசத்தையும் நட்சத்திரங்களையும் மணிக்கணக்கில் பார்த்தபடி உட்காருபவர்களுக்கு அப்படி ஆகும் என்பார்கள். இப்போது டிவி எதிரில் உட்காருபவர்களுக்கும் இப்படித்தான் ஆவதாகத் தோன்றுகிறது.
எனது பார்வைக்கு தால் ஏரி அற்புத அழகாக இருந்தது. டூரிஸ்ட்டுகள் ஏக உற்சாகத்துடன் அழகாக அலங்கரிக்கப்பட்ட படகுகளில் ஏரியைச் சுற்றியவண்னம் இருந்தார்கள். ஷிக்காரிகள் என்று அழைக்கப்பட்ட படகோட்டிகள் சிலர் காஷ்மீரி பாட்டைப் பாடியபடி படகைச் செலுத்தினார்கள். கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் நீரும் அதற்கப்பால் பைன் காடுகளும் பனி போர்த்திய இமயமலைச் சிகரங்களும்… ஏரிக்கரையோரம் வண்ன வண்ண மலர்களும்… சாதாரண அழகு இல்லை அது. சொர்க்க வாசல் அது. வெகு காலத்துக்கு ஹிந்தி படத்தயாரிப்பார்களுக்குத் தங்கள் படங்களில் காஷ்மீரில் ஒரு காதல் டூயட் காட்சி இடம்பெற்றால்தான் திருப்தியாக இருக்கும்… அதாவது பயங்கரவாதம் முளைக்கும் வரை…
சென்ற நூற்றாண்டின் எண்பதுகளில் காஷ்மிர் இப்போதைய பதற்றமில்லாமல் இருந்தது. பயங்கரவாதம் தலையெடுத்திருக்கவில்லை. ஆனால் பிரிவினைவாதக் குழுக்கள் நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டே, இந்திய-பாக் ப்ரிவினையின்போதே கிளம்பிவிட்டதால் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவு இறுக்கமாக இருப்பது இந்துக்களுடன் பேசும்போது தெரிந்தது. முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட காஷ்மிர் பிரதேசத்தை முன்பு இந்து ராஜாக்கள் ஆண்டுவந்தார்கள். அது முரண்பாடாகத் தோன்றாததற்குக் காரணம் இஸ்லாமிய மதம் அங்கு முகலாய ஆக்கிரமிப்பினால் பரவ வில்லை. சகிப்புத்தன்மையும் மென்மையும் கொண்ட சூ·பீ ஞானிகளின் நேசம் மிகுந்த உபதேசங்களால் மெல்ல மெல்ல நுழைந்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் மிக ஒற்றுமையாக வாழ்ந்த நிஜமான அற்புத காலம் இருந்தது. இந்தியா-பாக் பிரிவினையுடன் காஷ்மீரின் காற்றே மாறிவிட்டது. அதற்கு இரு தரப்பு அரசியல்வாதிகளின் செயல்பாடே காரணம். ஆனால் அவர்களது செயலுக்கு அரசியல் நிர்பந்தங்களும் காரணம்.

சற்றே சரித்திரத்தின் ஏடுகளைப் பின்னோக்கிப் பார்த்தால் காஷ்மீரின் இன்றைய குளறுபடிக்கான விவரம் விளங்கும். இந்தியா பாகிஸ்தான் பிரிவினை உறுதியாகிவிட்டபின் அதற்கான ஏற்பாடுகள்
நடக்கும்போது மன்னராட்சியின் கீழ் இருந்த மாநிலங்கள் தகராறு செய்ய ஆரம்பித்தன. ஜம்மு -காஷ்மிர் மாநிலம் தான் அதிக பட்ச சவாலாக இருந்தது. இந்திய துணைக்கண்டத்தின் மிகப் பெரிய ராஜ்யம் அதுதான். பூகோளரீதியாக இந்திய பாகிஸ்தானின் இரு எல்லைகளையும் தொட்டபடி இருந்தது. அதன் எல்லை திபெத் மற்றும் சீனாவின் சின்கியாங் மாகாணத்தையும் தொட்டது. ராஜா இந்துவானாலும் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள் என்பதும் மாநிலத்தின் போக்குவரத்து இணைப்புகள் பாகிஸ்தான் உருவாவதற்கு முந்தைய காலத்திலிருந்து அப்பிரதேசத்தின் ஊடாகச் செல்பவை என்பதும் அதன் நதிகள் அங்கே பாய்வதும் , காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதற்குப் போதுமான காரணங்களாக இருந்தன. காஷ்மிர் கைநழுவிப் போனால் இந்தியாவின் எல்லைப்பாதுகாப்பு மிகப் பெரிய ஆபத்தாகி விடும் என்று இந்திய அரசியல் தலைவர்கள் பயந்தார்கள். நல்ல வேளையாக , ஜின்னா ஆரம்பத்தில் முஸ்லிம் பெரும்பான்மைகொண்ட மாநிலங்களின் மன்னர்களே இந்தியாவுடன் இணைவதா பாகிஸ்தானுடன் இணைவதா என்று முடிவு செய்யட்டும் என்று சொல்லியிருந்தார். அவரது மனசில் இருந்த சமஸ்தானங்கள் இந்து மக்கள் தொகையும் முஸ்லிம் அரசரும் கொண்ட ஹைதராபாத், போபால், ஜூனாகாட் போன்றவை.
இந்திய சுதந்திர நாளாகக் குறிக்கப்பட்ட ஆகஸ்ட் 15க்கு முன்பாக ஆங்கிலேய அரசு காஷ்மிர் மகாராஜா ஹரி சிங்கிடம் பாகிஸ்தானுடன் இணைய விருப்பமா இந்தியாவுடன் இணைய விருப்பமா என்று திட்டவட்டமாக முடிவெடுக்கச்சொன்னது. காஷ்மிர் அரசியலில் அப்போது ஷேக் அப்துல்லா பிரபலமாகி வந்தார். நேஷனல் கான்பரென்ஸ் என்ற மத சார்பற்ற கட்சியை ஆரம்பித்து மக்கள் தலைவராக உருவாகி வந்தார். நேருவுக்கு நெருக்கமானவர். காங்ரெஸ் கட்சியுடன் இணக்கமாக இருந்தார். ஜின்னா அவருக்கு அழைப்பு விடுத்தபோது ஏற்கமறுத்து காஷ்மீர் இந்திய சாஸனத்தின் கீழ் இருப்பதே நன்மை தரும் என்ற தீவிரத்துடன் இருந்ததால் நேருவின் அபிமானத்தைப் பெற்றார். ஹரி சிங் இரண்டு நாடுகளுடனும் இணையாமல் காஷ்மிர் தனது ஆட்சியில் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். மன்னருக்கு எதிராக ஷேக் அப்துல்லா கோஷம் எழுப்பியதால் சிறையில் அடைக்கப்பட்டார். கடைசியில் இந்திய ஆங்கிலேய அரசுகளின் நிர்பந்தத்தினால் ஹரி சிங் தனது ஆசையைக் கைவிட்டு இந்தியாவுடன் இணைய சம்மதித்தார். அவரை ஆளுனராக்கி ஜனநாயக அரசு நிறுவப்பட்டது. மற்ற மாநிலங்களைவிட அதிக அதிகாரம் வழங்கும் சுயாட்சி முறை ஏற்கப்பட்டது.
குடியரசுப் பிரகடனம் ஆனபின் மன்னர்கள் ஜனநாயக அமைப்புக்கு அடிபணிய வேண்டிய நிலையில் காஷ்மீரில் இனப் பிரச்சினையும் ஆரம்பமயிற்று. ஜம்மு பகுதியில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். காஷ்மீரை ஒட்டிய லடாக்கில் பௌத்தர்கள். ஜவஹர்லால் நேரு காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய சொந்த சென்டிமென்டினாலேயே காஷ்மீரை இந்தியா விடாமல் பிடிவாதத்துடன் பற்றிக்கொண்டது என்று விமர்சகர்கள் சொல்வார்கள். ஆனால் பாரதத்தின் எல்லைப் பாதுகாப்பே முக்கிய காரணம். காஷ்மிர் மக்கள் யாருடன் தாங்கள் சேர வேண்டும் என்பதை சுய நிர்ணயம் செய்து கொள்ளட்டும் என்றார் ஜின்னா. அதற்கு நேரு சம்மதிக்கவில்லை. அன்றைய சூழலில் தேசிய உணர்வை விட மக்களுக்கு மத உணர்வு அதிக வலுவானதாகியிருக்கும் என்பதால் காஷ்மிர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைகிறோம் என்று சொல்லிவிடுவார்கள் என்று அவர் பயந்தார். காஷ்மிரின் ஒரு பகுதியைப் பாகிஸ்தான் ராணுவம் கைபற்றி தனது பிரதேசம் என்று சொன்னது. அதைப்பற்றி கேள்வி எழுப்பும்போதெல்லாம் பாகிஸ்தான் காஷ்மிர் மக்கள் சுயநிர்ணயம் செய்துகொள்ளட்டும் என்றது. இந்தியா செய்த மிகப் பெரிய தவறு- பிரச்சினையை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றதுதான். பிரச்சினைத் தீரவே தீராமல் வளர்ந்தது மட்டுமல்ல பாகிஸ்தானின் அயராத தூண்டுதலால் பிரிவினை வாதத்துக்கு அது அச்சாரமிட்டது. ஆயுதம் ஏந்திப் போராடத்துணிந்த மனநிலையில் இருந்த பிரிவினைவாத கோஷ்டிகள் பாகிஸ்தானிலிருந்து எல்லைதாண்டி வந்த பயங்கர வாதக் குழுக்களிடம் வகையாக சரண் புகுந்தன. பாகிஸ்தான் தொடர்ந்து பிரிவினைவாதக் குழுக்களுக்கு ஆதரவு தந்து ராணுவ பயிற்சியும் அளித்து வருவது வெட்ட வெளிச்சமாகியிருக்கும் உண்மை. இப்போது தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக , ஓரடி நகர்ந்தால் முழம் சறுக்கும் கதையாக உலைகளமாக இருக்கிறது காஷ்மீர். சம்பந்தப்பட்ட நாடுகளும் மக்களும் களைத்து விட்டார்கள்.
முன்னாள் ராஜா ஹரி சிங்கின் மகனும் முன்னாள் பட்டத்து இளவரசருமான டாக்டர் கரன் சிங்குடன் தில்லியில் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. ஆத்தர்ஸ் கில்ட் என்ற எழுத்தாளர் அமைப்பின் செயற்குழு கூட்டத்து உறுப்பினராக நான் இருந்தபோது கரன் சிங் அதன் தலைவராக இருந்தார். மாதம் ஒரு கூட்டம் தில்லியில் இருக்கும் அவரது இல்லத்தில் நடை பெறும். தப்பித் தவறி கூட அவர் காஷ்மிர் பிரச்சினையைப் பற்றி பேச விரும்பியதில்லை. மிகக் கசப்பான நினைவுகளாக அவை இருக்கும் என்று நான் நினைப்பேன். ஏராளமான இந்து குடும்பங்கள் அவர்களது நிலத்திலிருந்தும் வீடுகளிருந்து விரட்டப்பட்டு இந்தியாவின் பல இடங்களில் குடியேறியிருந்தார்கள். மத்திய காங்கிரெஸ் அரசால் எதுவும் செய்யமுடியவில்லை.
எங்கள் டாக்சியை ஓட்டி வந்தவர் ஒரு ஹிந்து என்று அறிந்து அவரிடம் நான் பேச்சுக் கொடுத்தேன்.ஆங்கிலமும் ஹிந்தியும் சரளமாகப் பேசினார். அவர் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ” நிலைமை இங்கு மிகவும் மோசம்” என்றார் அவர். “இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே தாலத்திலிருந்து சாப்பிட்ட காலம் முன்பு உண்டு. இப்போது இந்துக்களைப் போட்டியாளர்களாகப் பார்க்கிறார்கள். எத்தனை பெரிய படிப்பு படித்தாலும் இந்துக்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகிவிட்டது” என்றார். அவரது கண்களில் கவலையும் சோகமும் நிழலாடின. “இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிப்பேன் என்று தெரியவில்லை.”
நாங்கள் அங்கு சென்றபோது நேஷனல் கான்பரென்ஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. காஷ்மிர் சிங்கம் என்று புகழ் பெற்றிருந்த ஷேக் அப்துல்லா முதலமைச்சராக இருந்தார். அப்போது நோய்வாய்பட்டிருந்தார். அதற்கு முந்தைய மாதம்தான் அவரது மகன் ·பாரூக் அப்துல்லாவை தனது தேசிய கான்பரென்ஸ் கட்சிக்கு தலைவராக ஆக்கினார் பட்டம் சூட்டுவதுபோல. வாரிசு அரசியல் என்ற முணுமுணுப்பை பொருட்படுத்தாமல். எனது சுபாவமான பத்திரிக்கையாள அரசியல் ஆர்வம் காரணமாக யாரையாவது பேட்டி காணவேண்டும் என்று நினைத்தேன். அன்றைய கால கட்டத்தில் நான் மணியனின் ‘இதயம் பேசுகிறது’ இதழுக்காகத் தொடர்ச்சியாகப் பல பிரபலங்களை பேட்டிகண்டு
எழுதிக்கொண்டிருந்தேன். ஷேக் அப்துல்லா பேட்டி கொடுக்கும் உடல்நிலையில் இல்லை என்றார்கள். தமிழ் பத்திரிக்கைக்கு என்றதும் ·பாரூக் அப்துல்லா பேட்டி அளிக்க இசைந்தது எனக்கு வியப்பாக இருந்தது.ஆனால் அரைமணிநேரம் மட்டுமே பேசமுடியும் அன்று ஒரு உறவினரின் திருமணத்துக்குப் போகவேண்டியிருப்பதால் என்றார்கள்.
·பாரூக் அதிகம் வெளிநாட்டில் வாழ்ந்தவர். அவருக்கு வேர்ப் பற்று இருக்கமுடியாது , உருது மொழிகூட சரியாகப் பேச வராது என்று அவரது விமர்சகர்கள் அப்போது சொல்வார்கள். அவரது தாய் ஒரு ஆங்கிலேயர்.
குறித்த நேரத்திற்கு நான் அவர் வீட்டுக்குச் சென்றேன். வீடு வெளியிலிருந்து மிக அடக்கமாக இருந்தது. காஷ்மீருக்குப் பிரத்யேகமான குலுங்கும் பூந்தோட்டம். நான் உள்ளே நுழையும் அரவம் கேட்டே உள்கூடம் ஒன்றிலிருந்து அமர்க்கள உற்சாகத்துடன் குரல் கேட்டது . ” ஆயியே! தஷ்ரீ·ப் லாயியே!” என்று மிகுந்த மரியாதையுடன் வரவேற்பு. அழைத்துக்கொண்டே வெளியில் வந்தவரை நான் வியப்புடன் பார்த்தேன். நல்ல உயரம் . சிவந்த நிறம். ஆணழகன் இல்லை. ஆனால் ஒரு இளைஞனின் உற்சாகமும் சிநேகிதச் சிரிப்பும் மிகக் கவர்ச்சியாக இருந்தது. வெகு நாள் பழகிய நண்பரைப் போல வாருங்கள் வாஸந்திஜி என்று தோளை அணைத்து உள்ளே நடத்திச் சென்றார்.
உள்ளே அமர்ந்ததும் அவரது உபசாரத்தில் திக்குமுக்காடிப் போனேன்.நான் பத்திரிக்கையாளர் என்பதால் இப்படியோ என்று நினைத்தேன். ” இது எங்கள் காஷ்மீரக் கலாச்சாரம் ” என்று ஒரு தாம்பாளம்
நிறைய தின்பண்டங்களை என்முன்னால் அவரது உதவியாளர் வைத்து காஷ்மீரின் பிரசித்தமான ‘காவா’ தேநீரை நீட்டினார். ·பாரூக் பேச ஆரம்பித்ததும் அவர் பேச்சில் கில்லாடி என்று புரிந்தது. மிக அழகிய ஆங்கிலத்தில் உணர்ச்சி பொங்க நாடக பாணியில் பேசியது அசத்தலாக இருந்தது. தான் அந்த மண்ணின் மைந்தர் என்று நிரூபிக்கும் ஆர்வத்தில் இருந்தது தெரிந்தது. கட்சியின் பொதுக்குழுவை ஆலோசிக்காமல் ஷேக் அப்துல்லா தன் மகனுக்குத் தலைமைப் பதவி அளித்ததற்கு இன்னமும் விமர்சனங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. நான் அதைப் பற்றி அவரிடம் கேட்டேன். உடனே உணர்ச்சி வசப்பட்டவர் போல ·பாரூக் பேச ஆரம்பித்தார்.
“என்னை நம்புங்கள் வாஸந்தி, என் அப்பா நான் தான் அடுத்த தலைவர் என்று சொன்னதும் கதிகலங்கிப் போனேன். என்னால் அவரது வார்த்தைகளை நம்பமுடியவில்லை. நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை. பழமை வாய்ந்த ஹஜரத்பல் மசூதியில் நடந்த கூட்டம் அது. என்னைச் சுற்றிலும் ஏக மக்கள் . எனது கால் சராய்க்குள் கால்கள் வெட வெடவென்று நடுங்கின. நெற்றியிலிருந்து ஆறாய் வியர்வை வழிந்தது. என் தந்தை எனக்கு எந்த சலுகையையும் காட்டவில்லை. என் மீது பொறுப்பை ஏற்றி பரீட்சிப்பது புரிந்தது. ஏ அல்லா அதற்கு என்னை அருகதை ஆக்கு என்று நான் விம்மினேன்”.
·பாரூக்கின் பேச்சு எனக்கு ஒரு பக்கம் சிரிப்பைத் தந்தது. எத்தனை சாமர்த்தியம் என்று பிரமிப்பும் ஏற்பட்டது.
அதே வித உணர்ச்சிப்பெருக்குடன் அழகிய காஷ்மீர் எப்படி மத்திய காங்ரெஸ் அரசின் பிடிவாதக் கொள்கைகளினால் பந்தாடப் படுகிறது என்று அங்கலாய்த்தார். “மாநிலத்திலும் காங்ரெஸ் ஆட்சி இருந்தால் தான் நிதி உதவி கிடைக்கும். இங்கு நேஷனல் கான்பரென்ஸின் ஆட்சி என்பதால் நிதி உதவி கிடைப்பதில்லை. காஷ்மிரில் வளர்ச்சி எப்படி இருக்கும் ? டூரிஸம் ஒன்றை மட்டுமே நம்பவேண்டியிருக்கிறது. எங்கள் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் விற்றுக்கொண்டிருக்கிறோம். காஷ்மீருக்கு நேஷனல் கான்பரென்ஸ் என்ன செய்துவிட்டது என்று காங்க்ரெஸ் மூட்டிவிடுகிறது.”
“இந்து முஸ்லிம் பேதமில்லாமல் வாழ்ந்த மண் இது. இங்கு பேதம் ஏற்பட்டதென்றால் அதற்குப் அரசியல் தான் காரணம். அப்பட்ட சுயநல அரசியல். அதில் தடுமாறிப் போவது அப்பாவி மக்கள். இந்துவும் முஸ்லிமும் ஒரே ப்ளேட்டிலிருந்து சாப்பாட்டைப் பகிர்ந்து உண்பார்கள். அது உண்மையா இல்லையா என்று யாரை வேண்டுமானாலும் கேளுங்கள். எப்பவும் அப்படித்தான் வாழ எங்களுக்கு விருப்பம்.”

அவரது பேச்சை நிறுத்த முடியாது போலிருந்தது. அரை மணி நேரம் என்று சொன்னது இரண்டு மணி நேரத்துக்கு பேட்டி நீண்டது. ” வாருங்களேன் என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியின் திருமணத்துக்கு? ” என்று அழைத்தார் ·பாரூக். ” உங்களுக்குத் தனியாகச் சைவச்சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று உபசரித்தார்.
எனக்கு வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று விடை பெற்றேன்.
வெறும் வாய்ப்பந்தல் போடும் வீரர்களாக எல்லா அரசியல்வாதிகளும் ஆனதன் விளைவு என்ன என்ற
யோசனை என்னை காஷ்மீரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் வாட்டுகிறது.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 8 – அரசியல் எழுப்பிய புயலில் முகம் மாறியது தில்லி

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

வாஸந்தி


“ஒரு முக்கிய அறிவிப்பு” என்கிற ஒரு எதிர்பாராத ஊடுருவலைத் தொடர்ந்து என்னுடைய அன்றைய கருப்பு வெளுப்பு தொலைக்காட்சிப் பெட்டியில் திடுதிப்பென்று பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் முகம் தெரிந்தது. சுற்றி வளைத்துப் பேசாமல் மிதமிஞ்சிய சோக பாவத்துடன் வார்த்தைகள் ஹிந்தியில் வெளிப்பட்டன.
” ஹம் மஜ்பூர் ஹைன்”.
” நாம் நிர்பந்தத்தில் இருக்கிறோம். தேச விரோத சக்திகளை அடக்கியாகவேண்டிய நிர்பந்தம்”.
சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் சந்தித்திருந்த சவால்கள், வெற்றிகள், இழப்புகள், சோகங்கள் அனைத்தும் அந்தப் பெரிய சாகரக்கண்களில் புதையுண்டு இப்போது விவரிக்க இயலாத ஆற்றாமை தளும்பி நின்றது. முன்னறிவிப்பில்லாமல் நாட்டின் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை அறிவிக்கவேண்டுமானால் அது தலைபோகிற விஷயமாகத்தான் இருக்கும் என்று தில்லி வாழ் மக்களுக்கு நன்றாகத்தெரியும். முன்பு சற்றும் எதிர்பாராமல் வந்த இந்தியச் சீனப்போரின் போது இந்திய துருப்புகள் தோற்றுப் போன அதிர்ச்சி தாங்காமல் இப்படித்தான் வானொலியில் முக்கிய அறிவிப்பு என்ற அறிவிப்புக்குப்பின் நேரு நடுங்கும் குரலில் ” பொம்டில்லா விழுந்துவிட்டது” என்று சொன்னது எனக்கு
நினைவுக்கு வந்தது. துருப்புகள் பின்வாங்க நேர்ந்ததைவிட நண்பன் என்று நினைத்து உறவாடிய சீனா முதுகில் குத்திய அதிர்ச்சிதான் நேருவுக்குத் தாளமுடியாததாக இருந்திருக்கவேண்டும். இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பையே தனது அறியாமையால் பணயம் வைத்துவிட்ட குற்ற உணர்வு அவரை ஆயாசப்படுத்தி இருக்கவேண்டும். சீனப் போருக்குப்பின் நோயில் படுத்த நேரு அதிலிருந்து மீளவில்லை.
இப்போது இந்திரா காந்தியின் குரலிலும் நடுக்கம் தெரிந்தது. முகத்தில் சோகமோ கவலையோ பதட்டமோ அல்லது அவை எல்லாமான கலவையோ தெரிந்தது.
“நமக்கு வேறு வழியில்லை. மிகக் கனத்துப்போன இதயுத்துடன் இதைச் சொல்கிறேன்”. எதற்கு இந்த பீடிகை ? தயங்கியபடி வார்த்தைகள் வந்தனவே ஒழிய விஷயம் என்ன என்று தெளிவாகவில்லை. சொல்லவந்த வார்த்தைகளைச் சொல்ல பயந்ததுபோல, எதற்கோ நாட்டு மக்களைத் தயாரிப்பதுபோல அறிவிப்பு அத்துடன் நின்றது. அந்த காலகட்டத்தில்தான் பஞ்சாப் பிரச்சினை செய்தியில் உச்சகட்டத்தில் இருந்த காரணத்தால் அங்குதான் ஏதோ நிகழ்ந்திருக்கவேண்டும் என்று எல்லோரும் அனுமானித்தாலும் திடுக்கிடும்படியாக இருக்கும் என்று நினைக்கவில்லை. மறுநாள் நாளேடுகளில் “பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம்!” என்ற தலைப்பு அலறிற்று. தலைப்புச் செய்திக்குப்பின் அரசின் அறிவிப்பு.
“இந்திய நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கும் சக்திகள் அம்ருத ஸரஸ் பொற்கோவிலை ஆக்கிரமித்திர்ப்பதாலும் சரண் அடைய மறுப்பதாலும், ராணுவம் பொற்கோவிலுக்குள் அனுப்பப்பட்டிருக்கிறது.”
முகத்தில் அறைந்த சேதியாக இருந்தது அது. மிகப் புனித ஸ்தலமாக நம்பிக்கையில்லா சீக்கியனும் கருதும் பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைத்தது என்றால், அது எப்படிப்பட்ட நிர்பந்தமாக இருந்தாலும் அதை சீக்கிய சமூகம் எப்படி எதிர்கொள்ளும் என்று நினைத்துப் பார்க்கவே சங்கடமேற்பட்டது. ஒவ்வொரு சீக்கியனும் தான் அவமதிக்கப்பட்டதாகவே நினைப்பான். அந்தக் கோபம் எதில் கொண்டு முடியும் என்று சொல்வது கடினம். இதெல்லாம் அரசுக்குத் தெரிந்திராதா? நிச்சயம் தெரிந்துதான் இத்தகைய ‘தற்கொலை’ முடிவை எடுத்திருக்கவேண்டும். அதனால்தான், பின்னிப்பின்னி வார்த்தைகள் வந்தன– ‘ஹம் மஜ்பூர் ஹைன்!”
பஞ்சாபைப்பொறுத்தவரை பல பிரச்சினைகள் ஊதிப் பெரிதாக்கப்பட்டிருந்தன. பஞ்சாபின் பலம் மிக்க அகாலிதல கட்சி காங்கிரஸ்ஸின் எதிரி. அட்டகாசமான சில கோரிக்கைகளை மத்திய காங்கிரஸ் அரசின் முன்வைத்தது. எளிமையாக ஆரம்பித்த கோரிக்கைகளை வெறும் பேச்சு வார்த்தையால் தீர்வு காணமுடியாத அளவுக்கு இரு தரப்பும் ஈகோ பிரச்சினையில் சிக்கின.தவிர மதப் போர்வை போர்த்திய அகாலிதலத்தின் கோரிக்கைகள் ஹிந்து சமூகத்தை அச்சுறுத்திற்று.
எங்கள் கோரிக்கைகளை ஒத்துக்கொண்டால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்றார்கள் அகாலிகள் மெதப்பாக. நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கே நான் ஒப்புக்கொள்வேன் என்றார் இந்திரா காந்தி. இதற்கு இடையில் இந்திரா வேறு ஒன்றையும் செய்தார். அகாலிகளை அடக்கிவைக்க மாற்று ஒன்றைத் தேடினார். பிந்திரன்வாலே என்ற பெயர் தெரியாத ஒரு ஆளை உசுப்பிவிட்டு அகாலிகளுக்கு எதிராக
சீக்கிய மதத் தலைவன் என்ற போர்வை போர்த்தி பெரிய ஆளாக உருவாக்கினார்.வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையை விட மோசமாக, பிந்திரன் வாலே அதிகாரம் கிடைத்த போதையில் , மதம் பிடித்த
சீக்கிய மத வெறியனானான். ஆயுதம் தாங்கிய படைகள் சேகரித்தான். அப்பாவி ஹிந்துக்கள் சகட்டுமேனிக்கு கொல்லப்பட்டார்கள். கிராம மக்களை ஈர்க்கும் விதத்தில் மிகப் பிற்போக்குத்தனமான கொள்கைகளைப் பரப்பலானான். பிந்திரன்வாலேயின் பிரவேசம் பஞ்சாபின் துர்பாக்கியம் என்று எனது பல சீக்கிய நண்பர்கள் சொல்வார்கள். அவனை எதிர்த்த முற்போக்கு எண்ணம்கொண்ட சீக்கியர்களும் கொல்லப்பட்டார்கள்.பிந்த்ரன்வாலே சடுதியில் ஒரு பயங்கர அதிகார மைய்யமானான். காலிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும் என்று பிரிவினைவாத கோஷம் மீண்டும் தலைதூக்கும் நிலை ஏற்பட்டது.தான் உருவாக்கிய நபர் ·ப்ரான்கின்ஸ்டீன் பூதம்போல் மாறிப்போனதை எப்படி அடக்குவது என்று தெரியாமல் மத்திய அரசு விழித்தது. தான் கைது செய்யப்படலாம் என்று உணர்ந்து பிந்த்ரன்வாலே தனது ஆயுதங்கள், ஆயுதம் தாங்கிய ஆட்களுடன் பொற்கோவிலுக்குள் ஒளிந்து கொண்டான். ராணுவத்தைப் பொற்கோவிலுக்குள் அனுப்பவதைத்தவிர அவனை கைதுசெய்யும் வழி வேறு இல்லை என்ற முடிவுக்கு அரசு வரவேண்டிவந்தது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் பிந்திரன்வாலேயும் இன்னும் சிலரும் சுட்டுத்தள்ளப்பட்ட செய்தியும் அங்கு குவிக்கப்பட்டிருந்த பயங்கர ஆயுதங்க¨ளைப் பற்றின பட்டியலும் வந்தன. சீக்கியரல்லாதவர்கள், முக்கியமாக பஞ்சாபி ஹிந்துக்கள், பிந்திரன்வாலே ஒழிந்தான் என்று சமாதானப்பட்டுக்கொண்டார்கள். ஆனால் எதிர்பார்த்ததுபோல பஞ்சாபில் சீக்கியர்களுக்கு பிந்த்ரன்வாலேயின் மரணம் அவனைத் தியாகி ஆக்கியது.
‘ஷஹீத்’ என்ற புனித பட்டம் கிடைத்தது. அப்படி நினைக்காத அறிவுஜீவிகளும் ராணுவம் பொற்கோவிலுக்குள் நுழைந்ததை மன்னிக்க முடியாத கோபத்தில் இருந்தார்கள். என் சீக்கிய சினேகிதியின் மாமனார் அன்றிலிருந்து தலையைச்சுற்றி ஒரு கருப்புப் பட்டையைக் கட்டிக்கொண்டார் தமக்கு ஏற்பட்ட அவமானத்தின் சின்னமாக.
அடுத்து நகர்ந்த நான்கு மாதங்களில் ஒவ்வொரு சீக்கியனின் உள்ளத்திலும் ஒரு மௌனப்போராட்டம் நடந்திருக்கும் என்பதயோ பஞ்சாப் மாநிலத்தில் ஒரு மௌனப் புயல் உருவாகிக்கொண்டிருந்ததையும் வெளி உலகம் கவனிக்கவில்லை. உளவுத்துறைக்கு என்ன தகவல் கிட்டியிருந்தாலும் இந்திரா காந்தி அவர்களது எச்சரிக்கைகளைக் கேட்டுக்கொள்ளவில்லை. குண்டு துளைக்காத அங்கி அணிய மறுத்தார். தனது ப்ரத்தியேகப் பாதுகாப்புக்காக இருந்த இரு சீக்கியர்களை மாற்றவும் சம்மதிக்கவில்லை.
ஒரு நாள் காலை ஒன்பதேமுக்கால் மணிக்கு நண்பர் அவஸ்தியிடமிருந்து ·போன் வந்தது.
“போய்விட்டாள்”என்றார் சுறுக்கமாக ஹிந்தியில். ” அவளுடைய சீக்கிய செக்கூரிடி கார்ட்ஸ் சுட்டுத்தள்ளிவிட்டார்கள்.” எனக்கு அதிர்சியில் பேச்சு வரவில்லை. ஆனால் இது வினோதமாக எதிர்பார்க்கப்பட்ட அதிர்ச்சியாக இருந்தது. இந்திரா காந்தியின் தவறு எதுவாக இருந்தாலும் படுகொலை என்பது அநியாயமாகப் பட்டது.
பிரதமர் இறந்துபோன செய்தியை அரசாங்கபூர்வமாக அரசு மாலைவரை வெளியிடவில்லை. ஆல் இந்தியா ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் தாக்கப்பட்ட செய்தி மட்டுமே சுறுக்கமாக வந்தது, ஆல் இந்தியா மெடிகல் சயன்ஸ் மருத்துவமனையில் சிகிட்சைப்பெற்று வருவதாக. ஆனால் தில்லி முழுவதும் பிரதமரின் அந்தரங்க சீக்கிய பாதுகாவலரே அவரைச் சுட்டுவிட்டார்கள் என்ற செய்தி காட்டுத்தீயாகப் பரவிற்று. பள்ளிகளும் கல்லூரிகளும் பத்துமணிக்கு மூடப்பட்டு பிள்ளைகள் வீடு திரும்பிவிட்டார்கள். ‘சீக்கிய பாதுகாவலர்’ என்கிற விவரம் பாமரர்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று. மாடியிலிருந்து பார்த்தபோது அரசாங்க குவாட்டர்ஸ் பணியாட்கள் எல்லாம் கீழே சாலையில் நின்று காரமான வாதத்தில் ஆழ்ந்திருந்தது தெரிந்தது. என்னுடைய நேப்பாள வேலைக்காரனும் அவன் மனைவியும் சீக்கியர்களைத் திட்டினார்கள். உப்பிட்டவரையே கொல்லத்துணிகிறவன் எத்தனை நீசத்தனம் கொண்டவனாக இருக்கவேண்டும் ? பிந்திரன்வாலே எத்தனை அப்பாவி இந்துக்களைக் கொன்றான்? அவனை அரசு தாக்கினதற்கு நியாயமான காரணம் இருந்தது. அதற்காக நாட்டை ஆளுகிற பிரதமரை, ஒரு பெண்மணியைப் படுகொலை செய்வதா? ஒரு சீக்கியனையும் நம்பமுடியாது ! எல்லாரும் காலிஸ்தானிகள் . இந்திய பற்று இல்லாதவர்கள். இவர்களையெல்லாம் ராணுவத்திலும் போலீஸிலும் வைக்கக்கூடாது. ப்ரதமரின் அந்தரங்க பாதுகாவலராக சீக்கியனை வைத்திருக்கலாமா?
அனைவரும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார்கள். ராஜ விசுவாசிகள் மன்னனுக்கு ஏற்பட்டுவிட்ட விபத்தைக்கண்டு கலக்கமடைந்ததுபோல், மாய்ந்து போனது போல் தோன்றிற்று. தீக்குச்சியைக் கிழித்துப் போட்டால் நெருப்பாய் மாறுவார்கள் என்கிற உணர்வு நிலை அது என்று நான் கவலைப்பட்டேன். ஆனால் அதை ஆத்திரக்கார காங்கிரெஸ் கட்சிக்காரர்கள் அபாயகரமாக உபயோகித்துக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. கடையெல்லாம் மூடிவிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பில் வேலைக்காரனைக் கடைக்கு அனுப்பி நான்கு நாட்களுக்குத் தேவையான காயும் பழமும் ரொட்டியும் வாங்கி வரச் சொன்னேன். சட்டென்று நினைவு வந்தவளாக பக்கத்தில் இருந்த எனது சீக்கிய சிநேகிதியின் வீட்டிற்குச் சென்று வெளியில் எங்கும் போகாதீர்கள் என்று எச்சரித்து விட்டு அவர்களுக்கு முட்டையோ பாலோ எது வேண்டுமானலும் நான் அனுப்புகிறேன் என்று சொன்னேன். சிநேகிதி மிகுந்த கலக்கத்தில் இருந்தாள். நான் கிளம்பும் சமயத்தில் கவனித்தேன். அவளுடைய மாமனார் தனது கருப்புப் பட்டையை கழற்றிவிட்டிருந்தார். எனக்கு இனம்புரியாத சங்கடம் ஏற்பட்டது.
மாலை நான்கு மணிக்குள் நம்பமுடியாத செய்திகள் எனது பத்திரிக்கைத் துறை நண்பர்களிடமிருந்து வரத்துவங்கின. சீக்கியர்களுக்குச் சொந்தமான கடைகளை வாகனங்களை ஆட்டோக்க¨ளை குறிவைத்து ரவுடிக்கும்பல்கள் தாக்குவதாக , பெட்ரோல் ஊற்றி கொளுத்துவதாக… ஆட்டோக்கள் கடைகள் எரிவதைப் பார்த்ததாகப் பலர் சொன்னார்கள். அதைவிட பயங்கரங்கள் மறுநாள் நடந்தன. சீக்கிய இளைஞர்கள் முதியவர்கள் என்று யாரை வேண்டுமானாலும் வெளியில் இழுத்து பெட் ரோல் ஊற்றி ரவுடிக் கும்பல்கள் கொளுத்த ஆரம்பித்தன. போலீஸ் என்பது காணாமல் போயிற்று. அரசாங்கமே ஸ்தம்பித்துப் போனது போல்
இருந்தது. ரவுடிக்கும்பல்கள் எல்லாம் காங்கிரெஸ் கட்சிக் காரர்களால் அனுப்பப்பட்டவர்கள் என்றும் பல இடங்களில் முகம் அறிந்த காங்கிரெஸ் தலைவர்களே அவர்களை முடுக்கிவிடுவதில் ஈடுபட்டதைப் பார்த்தவர்கள் சொன்னார்கள். ஊரடங்கு சட்டம் ப்ரகடனப்படுத்தப்பட்டது. இந்திரா காந்தியின் உடல் மக்களின் பார்வைக்கு தீன்மூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்தது. அதைக்காண நடக்கும் தொலைவில் வசித்த மக்கள் மட்டுமே சென்றார்கள்.
நண்பர் அவஸ்தி கூப்பிட்டதால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அலுவலகக் கட்டிடத்துக்குச் சென்றேன். அவர் என்னை கட்டிடத்தின் உச்சிக்கு, 17ஆம் தளத்திற்கு அழைத்துச் சென்றார். பரந்த மொட்டைமாடியில் பலர் நின்று வெளியே தொலைவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பார்வையை சுழற்றிய நான் திடுக்கிட்டேன். தில்லி முழுவதிலும் ஏகமாகக் கரிய தூண்கள் எழும்பியிருந்தன. புகைத் தூண்கள். தில்லி மாநகரம்
எரிந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு பெண் அப்படியே தரையில் சாய்ந்து கட்டுப்படுத்தமுடியாமல் அழ ஆரம்பித்தாள். எனக்கு நாடி நரம்பெல்லாம் விதிர்த்துப் போயிற்று.
எத்தனை சீக்கியர்கள் இறந்தார்கள் எத்தனைபேர் விடும் வாசலும் இழந்தார்கள் என்கிற சரியான புள்ளிவிவரம் யாருக்கும் தெரியாது. சீக்கிய சமூகம் மிக கர்வம் பிடித்த சமூகம் அவர்க¨ளைக் கொஞ்சம் தட்டி வைத்தால்தான் அவர்கள் கொட்டம் அடங்கும் என்று பலர் பகிரங்கமாகப் பேசியதைக் கண்டு நான் அதிர்ந்தேன். மனித நேயம் மடிந்த நான்கு நாட்கள் என்று தலைப்பிட்டு அந்த நான்கு நாட்கள் நடந்த வெறியாட்டத்தை கல்கி பத்திரிக்கைக்கு எழுதினேன்.
அந்த இன வெறியாட்டம் என்னை உலுக்கிவிட்டது. இந்த வெறியும் கோபமும் எங்கிருந்து எதனால் ஜனிக்கிறது என்கிற கேள்வி விடாமல் துன்புறுத்திற்று. சக ப்ரஜைகள் என்கிற தெம்புடன் நேற்றுவரை வளைய வந்த சீக்கியர்கள் இன்று வேட்டையாடப்படும் அன்னியர்கள்போல் பயந்து போயிருந்தார்கள். ஒரே நாள் போதில் தாங்கள் வேண்டப்படாதவர்கள் ஆகிப்போனதைக்கண்டு காலுக்கடியில் இருந்த பூமி நழுவியதைப்போல மிரண்டு போயிருந்தார்கள். என்னுடைய சிநேகிதி என் கைகளைப்பிடித்துக் கொண்டு அழுதாள் .” எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை. இப்போது என் வாழ்வில் அரசியல் நுழைந்து விட்டது !”
அரசியல் எல்லோர் வீட்டுக்குள்ளும் நுழைந்து விட்டது. ‘நாம் – அவர்கள்’ என்று நடுவில் சுவர் எழுப்பிய அரசியல். சீக்கியர்களின் , ஹிந்து பஞ்சாபியரின் வீடுகளிலேயே சுவர் எழும்பியது பெரிய சோகம்.
ஹிந்து பாஞ்சாபியரின் குடும்பங்களில் ஒரு மரபு இருந்தது. தமிழ் நாட்டில் குழந்தை இல்லாதவர்கள் அல்லது இழந்தவர்கள் குழந்தை பிறந்தால் ‘பிச்சை’ என்று பெயர் வைக்கிறேன் என்று நேர்ந்துக்கொள்வதுபோல குழந்தை பிறந்தால் அவனை ‘கால்சாவுக்கு’– சீக்கிய மதத்திற்குக் கொடுக்கிறேன் என்று நேர்ந்துக் கொள்வார்கள். அந்த வகையில் ஹிந்து குடும்பங்களுக்குள்ளேயே சீக்கியர்கள் இருந்தார்கள். பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்த தருணத்திலேயே பிளவு ஏற்பட்டது. இப்போது இந்திரா காந்திப் படுகொலைக்குப்பின் நடந்த இனவெறி தாக்குதலினால் விரோதம் சேர்ந்துகொண்டது.
என்னைத் தூங்கவிடாமல் பலநாட்கள் அலைக்கழித்த இந்த சம்பவத்தை வைத்து ஒரு நாவல்
எழுதவேண்டும் என்று பட்டது. என் எண்ணத்தைக் கல்கி ஆசிரியர் ராஜேந்திரனுக்குத் தெரிவித்தபோது, மிக ஆர்வத்துடன் எழுத ஊக்குவித்தார். களப்பணிக்காகப் பஞ்சாபுக்குச் சென்றேன்.
அப்போதுதான் புரிந்தது பஞ்சாபின் தகிக்கும் கோபம்— தில்லியில் அமர்ந்தவர்களால் அதை உணர்ந்துகொள்ளமுடியாது என்று புரிந்தது.அரசியல் என்பது ஒரு கலாச்சாரத்தையே பொசுக்கும் என்று புரிந்தது.

[தொடரும்]


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 7 – தடம் புரண்ட தலை நகரம்

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

வாஸந்தி


தில்லி மாநகரம் ஒரு தலைநகரத்துக்குத் தேவையான எல்லா லட்சணங்களையும் கொண்டதாக எனக்குத் தோன்றும்.பல நாடுகளின் தலை நகரங்களைப் பார்க்கும் வாய்ப்பு-அதை அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம்- எனக்குக் கிட்டியிருக்கிறது. நமது தில்லி அந்த மாநகரங்களுக்குச் சற்றும் குறைந்தது அல்ல என்று நான் சொன்னால் அது வெறும் அலட்டல் பேச்சோ கண்மூடித்தனமான தேசப் பற்று என்றோ சொல்லமுடியாது. லுட்யான்’ஸ் தில்லி என்று செல்லமாக அழைக்கப்படும் ·பிரென்சுக் கட்டடக் கலைஞர் லுட்யான் வடிவமைத்த புது தில்லி மிக நேர்த்தியான சாலைகளும் கட்டிடங்களையும் கொண்டது. புது தில்லியைப் பொறுத்தவரை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு- வாஷிங்டன் போன்ற நகரத்தின் அதி நவீனமில்லாவிட்டாலும்- குறைவில்லை. அரசு நிர்வாகத்தின் தலை நகரம் என்ற கவனத்துடன் பல்வேறு அமைச்சகங்களின் துறை சார்ந்த அலுவலகங்கள் கலை அழகுடன் , பசுமையான வளாகங்களுடன் வடிவமைக்கப்பட்டவை. நடு நாயகமாக ஜனா¡திபதியின் மாளிகையும், அதற்கு முன்பு விரியும் ராஜபாட்டையும், மையத்தில் விஜய் சௌக்கமும், இரு புறம் கம்பீரமாக எழும்பி விரியும் நார்த் ப்ளாக் சவுத் ப்ளாக் என்கிற உள்துறை வெளித்துறை செயலகங்களும் தலைநகரத்துக்கான கம்பீரத்தைப் பரைசாற்றுபவை. குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தின் இறுதி நாள் சடங்கான பீட்டிங் தி ரிட்ரீ£ட் அன்று முப்படைகளின் கம்பீரமான பாண்ட் அணிவகுப்பும் இசையும் பொழுது சாயும் நேரத்தில் எழும்பும் மணி ஓசையும் விஜய் சௌக்கத்தின் கட்டிடங்கள் மந்திரக்கோல் பட்டதுபோல சரவிளக்குகளில் ஒளிர்வதும் கண்கொள்ளாக் காட்சி மட்டுமல்ல, அதை பார்க்கும் ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதத்தில் நெகிழவைக்கும் அற்புதம். பிராந்திய வேறுபாடுகள் கரைந்து நாம் எல்லோரும் இந்தியர் என்கிற உணர்வு மட்டுமே தலைதூக்கும் அற்புதம்.ஒரு தலைநகர் என்பதன் ஆளுமையின் லட்சணம் அது. அது ஒரு நாட்டின் அடையாளம் – அதற்கு பிராந்திய அடையாளம் அவசியமில்லை.
தில்லி வெறும் நவீன நகரம் அல்ல என்பதுதான் அதன் வசீகரம். பல நூற்றாண்டு வரலாறு கண்ட நகரம். மஹாபாரத காலத்து குரு§க்ஷத்திரத்தையும் முகலாய சாம்ராஜ்யங்கள் விரிந்து நலிந்ததையும், ஆங்கிலேய ஆட்சியின் உதயத்தயும் அஸ்தமனத்தையும் கண்ட பூமி அது. படையெடுத்தவர்கள் சுமந்து வந்த கலாச்சார சின்னங்களைப் பெருமையுடன் கட்டிடங்களிலும் கலைகளிலும் இலக்கியத்திலும் தாங்கி நிற்கும் மண். வெள்ளையனை வெளியேற்றிய சுதந்திர போராட்ட ஆவேசங்களை சுமந்த காற்று. நள்ளிரவில் நமது புகழ்பெற்ற சுதந்திரத்தைப் பெற்றதும் முகலாய மன்னர்களின் உன்னதத்தைப் பரைசாற்றும் அடையாளமான செங்கோட்டையில் தான் நமது சுதந்திர இந்தியக் கொடி ஏற்றப்பட்டது. இப்பவும் வருசா வருடம் சுதந்திர தினத்தன்று அங்குதான் கொடி ஏற்றப்படுகிறது. இந்த மண்தான் இந்திய -பாக் பிரிவினையின் போது ஏற்பட்ட படுகள ரணத்தின் ஆறாத புண்ணையும் சுமப்பது.
அரசு ஊழியர்களுக்குக் கட்டப்பட்ட குவார்ட்டர்ஸ்களும் பதவிக்குத் தகுந்தபடி விஸ்தாரமானவை. அதிர்ஷ்டமிருந்தால் பெரிய தோட்ட வசதியுடன் கீழ் வீடு கிடைக்கும். அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு,முக்கியமாக அவரது குடும்பத்தினருக்கு தில்லி மிக சௌகர்யமான இடம். பணியாளர்களுக்கும் ஜாகை தனியாக இருந்ததால் நாள் முழுவதும் நமது கூப்பிட்ட குரலுக்கு உதவ பணிப்பெண் வந்து நிற்கும் சௌகர்யம். சமையல் வேலையிலிருந்து துணிக்கு இஸ்திரி போடுவது வரை இலவசமாகக் கிடைக்கும்
வீட்டிற்காக செய்வார்கள். [இதனால் எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. என் புத்தகங்களைப் பதிப்பித்த ஒரு பதிப்பாளர் தில்லிக்கு வந்தபோது நாங்கள் இருந்த பெரிய வீட்டையும் ஆளையும் தேளையும் பார்த்துவிட்டுப் போனவர் எனக்கு ராயல்டி அனுப்புவதை நிறுத்திக் கொண்டார். ‘அந்தம்மா வசதியாத்தான் இருக்காங்க, அவங்களுக்கு எதுக்கு ராயல்டி’ என்றாராம் எனது ஞாபகப் படுத்தலைக் கண்டு!] என்ன ஜாதி என்று விசாரிக்காமல் திறமைக்கே வாய்ப்பு தரும் பள்ளிகள், கல்லூரிகள் – சாதாரணமாகப் படிப்புக்கு அதிக முக்கியத்துவமும் கவனமும் தரும் நடுத்தர வர்க அரசு அலுவலர் குடும்பங்களுக்குப் பெரிய ஆதாரங்கள். என்னுடைய மகன்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் தரம் மிக்க பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சீட் கிடைத்தது நாங்கள் தில்லியில் இருக்க நேர்ந்ததால் என்றால் மிகை இல்லை.

மத்திய அரசு நிர்வாகத்தின் மையம் அது என்பதால் இந்தியாவின் எல்லா மாநிலத்திலிருந்தும் இந்திய சட்ட சாஸனத்தில் இடம்பெற்ற அனைத்து மொழிகளின் பிரதினிதகளும் தில்லியில் சங்கமித்தார்கள். தேசிய மொழி இந்தி என்பதாலும் , வட இந்தியர்களின் மொழி / சந்தை மொழி அது என்பதாலும் தில்லி வாழ் மக்கள் எல்லோரும் இந்தி பேசுவது இயல்பானது. இந்தி ஒழிக என்று தமிழ் நாட்டில் கோஷம் போட்டவர்கள் தில்லி வந்ததும் ஹிந்தி கற்றார்கள், அன்றாட வாழ்வுக்கு அது அவசியமான மொழி என்பதால் மட்டுலில்லை, அடுத்த ப்ரமோஷன் கிடைக்க அதுதான் வழி என்று உணர்ந்து. என்னை சந்திக்க வந்த பல தமிழ் இளைஞர்கள்,தில்லியில் வேலை பார்க்க வந்தவர்கள், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் . ஹிந்தி தெரியாமல் தலைநகரத்தில் சிரமப்படுவது தமிழர்கள் மட்டுமே என்றார்கள் அதை சற்றும் எதிர்பார்த்திராதவர்கள் போல. உதாரணத்துக்கு மற்ற தென்னிந்தியர்களான கன்னடியரும் மலையாளிகளும் தெலுங்கரும் பள்ளியில் ஹிந்தி கற்றிருந்ததால் மற்ற வட இந்தியருடன் சுலபமாக கலந்துறவாட முடிந்தது. அதனால் வேலைபார்க்கும் இடங்களில் தமிழர்கள் சற்றுப் பின்தங்கநேரிடுவதாகச் சொன்னார்கள். தமிழ் நாடு ஹிந்தியை நிராகரித்ததால் தமிழ் சமூகத்துக்கு எந்த லாபமும் இல்லை
என்று தாம் அப்போது உணர்வதாகத் தெரிவித்தார்கள். தமிழ் அரசியல்வாதிகளுக்குச் சமூகத்தைப்பற்றின தொலைநோக்கு அக்கறை இல்லை என்றும் குறுகிய அரசியல் லாபத்திற்காகவே இளைஞர்களின் உணர்ச்சிகள் உசுப்பப்பட்டன என்றும் அபிப்பிராயப் படுவதாகச் சொன்னார்கள். தமிழ் நாடு தனித்தீவாக இந்திய அரசியல் அமைப்பில் இருக்க இயலாது என்பது அந்த உணர்ச்சி வேகத்தில் மாணவ சமூகம் உணரவில்லை என்று அங்கலாய்த்தார்கள்.
வரலாற்றை இப்போது புரட்டிப் பார்த்து தப்புசொல்வதில் ஏதும் அர்த்தமில்லைதான். அந்தக் கால கட்டத்தில் ஹிந்தி எதிர்ப்பு ஒரு தேவையான அரசியல் அஸ்திரமாகவோ, பிராந்திய உணர்வுகளை வலியுறுத்தும் சாதனமாகவோ பயன்பட்டது. அதன் பயனாக மத்திய அரசும் தனது வீம்பைத் தளர்த்தி அந்த உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்தது. இருந்தும் அந்த இளைஞர்களின் அங்கலாய்ப்பில் விஷயம் இருந்தது என்று நான் நினைத்தேன். அதை நான் ஜெயலலிதாவிடம் ஒரு முறை தில்லியில் சந்திக்கநேர்ந்தபோது தெரிவித்தேன். அதற்கு அவர் பதில் சொன்ன விதம் அவர் எதிர்காலத்தில் தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிப்பார் என்கிற எண்ணத்தை எனக்கு நிச்சயம் ஏற்படுத்தவில்லை!
அந்தக் கால கட்டத்தில் ஜெய லலிதா ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தார். பாராளுமன்றக் கூட்டத்தொடரின்போது தில்லியில் தமிழ் நாடு இல்லத்தில் தங்குவார். அவரைப் பற்றின ஒரு சுவாரஸ்யம் தில்லி பத்திரிக்கை உலகுக்கு இருந்தது. அவர் முன்னாள் நடிகை என்பதால் மட்டுமல்ல. அவரது
வசீகரத்தையும், ஆங்கிலத்தில் சரளமாகவும் நேர்த்தியாகவும் பேசும் அழகையும் பிரபல பத்திரிக்கையாளரும் அப்போது ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்த குஷ்வந்த் சிங் வெகுவாகப் புகழ்ந்திருந்தார். திராவிட அரசியல் உலகில் ஜெயலலிதா வித்யாசமானவர் என்பதை தில்லி பத்திரிக்கை மற்றும் அரசியல் வட்டாரம் சடுதியில் உணர்ந்து கொண்டது. திராவிடக்கட்சிகள் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழர்களைப் பற்றின பொதுவான அபிப்பிராயம் வட இந்தியர்கள் மத்தியில் இருந்தது. எப்போதுமே விந்திய
மலைக்குக்கீழ் வசிப்பவர்களைப் பொத்தாம் பொதுவாக மதராசி என்று அழைப்பதும் ‘மதராசி காலி’ [கருப்பு] என்பதும் சகஜமாக இருந்தது. ஹிந்தியை வெறுப்பவர்கள் , தமிழைத் தவிர வேறு மொழி – ஆங்கிலம் உட்படப் – பேசத்தெரியாதவர்கள் என்ற முடிவுக்கு இப்போது வந்திருந்தார்கள். தமிழ் நாட்டு திராவிடக் கட்சி உறுப்பினர்களும் அப்படிப்பட்ட எண்ணத்தை அநேகமாக உறுதிபடுத்தினார்கள். மதராசிகள் பார்க்க ஸ்மார்ட்டாக இருக்கமாட்டார்கள் , நன்றாக உடை உடுத்தத்தெரியாது என்கிற எண்ணமும் வட இந்தியர்களுக்கு , முக்கியமாக பஞ்சாபியருக்கு முன்பு இருந்தது. பலர் என் காதுபட சொல்வார்கள் – ‘அவள் கொஞ்சங்கூட ஒரு மதராசி போல இல்லை. படு ஸ்மார்ட்டாக இருக்கிறாள்!’ அப்படிப்பட்ட சூழலில் ஜெயலலிதா நுழைந்ததும் வட இந்திய ஆண்களின் கவனத்தை அவர் காந்தம் போல் ஈர்த்ததில் வியப்பில்லை. அவரது சிவந்த நிறம் எல்லாரையும் ஆகர்ஷித்தது. அவரது அலட்டலான பாவனைகளும் கண்சொடுக்காமல் பேசிய ஹிந்தியும் அதைவிட சரளமான ஆங்கிலமும் எல்லோரையும் அசத்திற்று. எல்லா பத்திரிக்கைகளும் அவரை பேட்டி காண ஆசைப்பட்டன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற தில்லியின் பிரபல ஆங்கில நாளேட்டின் பல ஹிந்தி பதிப்புகள் இருந்தன. அவற்றில் ‘காதம்பினி’ என்ற மாத இதழின் ஆசிரியர் ரஜேந்திர அவஸ்தி எனக்கு நெறுங்கிய நண்பர். ‘எனது பத்திரிக்கைக்காக நீ ஜெயலலிதாவை பேட்டி எடு’ என்றார்.
நான் தமிழ் நாடு இல்லத்தில் இருந்த ஜெயலலிதாவுடன் தொடர்பு கொண்டு காதம்பினி என்ற ஹிந்தி மாத இதழுக்காக பேட்டி காண விரும்புகிறேன் என்று ஆங்கிலத்தில் அவரிடம் பேசினேன். உடனடியாக நேரம் கொடுத்தார். இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அன்று அவரை சரளமாக அணுகமுடிந்தது. அவர் முதலமைச்சராகப் பதவி ஏற்றபிறகு அவர் யாருக்கும் லேசில் பேட்டி கொடுத்ததில்லை. நான் சென்னைக்கு இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியையாகப் பொறுப்பேற்று வந்தபின் அவரை பேட்டி காண ஒன்பது ஆண்டுகள் தலைகீழ் நின்றிருக்கிறேன். அவர் தரப்பிலிருந்து பதிலே வந்ததில்லை. அவராகவே ஒரு இரும்புத்திரையை தனக்கும் மீடியாவுக்கும் இடையே போட்டுக்கொண்டார். அது துளைக்கமுடியாத இரும்பு சுவராக இருந்தது. அவரது அந்தரங்க செயலர் யார் என்பதுகூட மூடுமந்திரமாக இருக்கும். தொடர்பு கொள்ளதரப்பட்ட தொலைபேசி எண் ஒலித்தபடி இருக்கும். ·பாக்ஸ் நம்பருக்கு உங்கள் கோரிக்கையைத் தெரிவியுங்கள் என்று சிலர் சொன்னதில் பல முறை அனுப்பி எந்தத் தகவலும் வராமல் ஜெயலலிதாவின் பார்வைக்குச் சென்றிருக்குமா என்று தெரியாமல் ஆயாசப்பட்டிருக்கிறேன். எந்த செயலரும் பேச பயப்படுவார்கள். அமைச்சர்களோ அதற்கு மேல் பயப்படுவார்கள். அது ஜனநாயகம் தானா என்று சோர்வு ஏற்படும். தன்னை அறியாமலே ஜெயலலிதா மீடியாவைத் தனது நிரந்தர விரோதியாக்கிக் கொண்டார்.மீடியாவின்மீது அவருக்கு சுத்தமாக நம்பிக்கையோ மதிப்போ இருக்கவில்லை. அதற்கு சொந்தமான வலுவான காரணங்கள் அவர் நடிகையாக இருந்தபோது ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் அவர் முதலமைச்சராகப் பதவி ஏற்றதும் அவரது நிலைமை வேறு என்பதை அவர் உணர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுலபமாக அணுகக் கூடிய தலைவரால்தான் மற்றவரின் நம்பிக்கையைப் பெற முடியும்.
மீடியா உள்பட.
தமிழ் நாடு இல்லத்தில் அவரது அறையில் நான் நுழைந்ததும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். ‘ ஓ, நீங்களா, காதம்பினி பத்திரிக்கைன்னு சொன்னதும் யாரோ வட இந்தியர் வராங்கன்னு நினைச்சேன்’ என்றார்.
பேட்டியைப் பதிவுசெய்ய நான் ஒரு டேப் ரெக்கார்டர் எடுத்துச் சென்றிருந்தேன். தன் பங்குக்கு அதைவிட ஒரு பெரிய கருவியை வைத்து அவரும் பேட்டியைப் பதிவு செய்துகொண்டது எனக்கு வியப்பை அளித்தது. அவர் பதிலளித்தவிதமும் வித்தியாசமாக இருந்தது. எம் ஜி ஆர், அவரது அரசியல், மதிய உணவு திட்டம் ஆகியவைப் பற்றி நான் கேள்வி கேட்டபோது பொது மேடையில் நின்று பாமர மக்களுக்கு
எடுத்துச் சொல்லும் பாணியில் பதில் சொன்னார். நான் மகா முட்டாளாகக் காட்சி அளித்திருக்கவேண்டும்.
கடைசியில் நான் மொழிப் பிரச்னைக்கு வந்தேன். ஹிந்தி தெரியாததால் தமிழர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவை எனக்குத் தெரிவித்ததைச் சொன்னேன். ஹிந்தி தெரிந்தால் வேலை வாய்ப்பிற்கு அதிக சௌகர்யம் என்றும் ஹிந்தி எதிர்ப்பு இப்போது யோசித்துப் பார்க்கும்போது தேவையற்ற ஒன்றாகவும் அவர்கள் கருதுவதாகச் சொன்னேன். ‘ஹிந்தி எனக்குத் தெரியுமே?’ என்றார். சட்டென்று அரசியல் ஞாபகம் வந்தவராய் ஹிந்தி எதிர்ப்பின் நியாயத்தை விளக்கினார். ஹிந்தியும் ஒரு மொழியா? அதற்குத் தமிழைப்போல இலக்கிய மரபும் பாரம்பர்யமும் உண்டா? போதிய சொற்கள் கூட அதில் இல்லை… மீண்டும் ஒரு மேடைப் பேச்சு.
இடையில் புகுந்து எதுவும் பேசவோ கேட்கவோ முடியவில்லை. நான் ஒன்றும் ஹிந்தி ஆதரவாளர் இல்லை. சமூக யதார்த்தத்தைப் பேசத் தான் முனைந்தேன். இன்றைய அரசியல் சூழல் தலைகீழாக மாறிவிட்டது. தமிழக அரசியல் வாதிகள் மத்திய மைய நீரோட்டத்தில் கலக்கும் தீவிரத்தில் இருக்கிறார்கள்.மொழி தெரிந்தவர்களைத் துணைக்குக் கூப்பிடுகிறார்கள். அவர்களது வாரிசுகள் தமிழைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்து ஹிந்தியும் ஆங்கிலமும் கற்பது எல்லாரும் அறிந்த ரகசியம்.
நான் வீட்டிற்குத் திரும்பியதும் இரவு ஜெயலலிதா எனக்கு ·போன் செய்தார்.
‘ஹிந்தி தெரிந்தால் வேலை கிடைக்கும் என்று சொன்னீர்களே?[ நான் அப்படிச் சொல்லவில்லை]
அப்படியானால் ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலை இல்லாத் திண்டாட்டமே இல்லையா?’ என்றார்.
எனக்கு அவரது வாதம் சிரிப்பைத் தந்தது. ” நான் சொன்னது வேறு. அதற்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?” என்றேன்.
” ப்ளீஸ், நான் சொன்னதை அப்படியே எழுதுங்கள்!” என்று டொக்கென்று ·போனை வைத்தார்.
அந்த பேட்டியை காதம்பினி வாசகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.
தில்லியின் சந்தை உலகம் அநேகமாக வட இந்தியர் ,முக்கியமாக பஞ்சாபிகளின் வசம் இருந்தது. பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள். அவர்கள் பெரும்பாலும் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது அகதிகளாக வந்தவர்கள். கடும் உழைப்பினாலும் விடாமுயற்சியாலும் துரிதமாக முன்னுக்கு வந்தவர்கள். பலர் பெரும் பணக்காரர்களானவர்கள். தில்லியின் புற நகரப்பகுதிகளில் ப்ரும்மாண்ட வீடுகளில் வசித்தார்கள். மிக நாசூக்கான நாகரீக வாழ்க்கை முறை கொண்டவர்கள். ஆடம்பரமான வீட்டலங்காரமும் மேற்கத்திய மேஜை உணவு பழக்கங்களும் உள்ளவர்கள். ஆனால் தங்களது மத உடை சம்பந்தமான விஷயங்களில் விட்டுக்கொடுக்காத பிடிவாதத்துடன் இருப்பார்கள். சீக்கியர்களின் சமூகம் மிகக் கட்டுக்கோப்பான சமூகம். எனது மூத்தமகன் ரவியின் சீக்கிய சினேகிதன் ஜஸ்வீந்தர் இடது சாரி கொள்கை உடையவன். இருந்தும் சிகையை வெட்டாமல் தாடி மழிக்காமல் இருப்பான்.
சீக்கிய சமூகம் தில்லி ஜனத்தொகையில் ஒரு சதவீதம் தான் என்றாலும் நகரத்தின் மிக முக்கியமான அங்கமாகிப் போயிருந்தார்கள். ராணுவத்திலும் போலீஸ் துறையிலும் கூட நிறைய இருந்தார்கள். எல்லோருடனும் மிக சினேகிதமாக இணக்கமாக இருப்பார்கள். சீக்கிய ஆண்கள் உலகத்து எல்லாப் பெண்களையும் காதலிப்பார்கள். எல்லா இனத்தவருக்கும் மிக நல்ல நண்பர்கள். மிக தாராள தயாள குணம் உள்ளவர்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு கால கட்டத்தில் சுவர் எழும்பும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. புவியை ஆள்பவர்கள்போல கர்வத்துடன் வளைய வந்தவர்கள் உயிர் பாதுகாப்பைத்தேடி ஓடும் நிலை வரும் என்று நிச்சயம் யாரும் நினைத்திருக்கவில்லை. அந்தச் சுவரும் பீதியும் அகம்பாவம் பிடித்த அரசியலால் எழும்பும் , தில்லியின் ஆளுமையே மாற்றும் , ஒரு கோர கொலையையும், படுகொலைகளையும் ஆறாத வடுக்களையும் ஏற்படுத்தும் என்று நிச்சயம் நினைக்கவில்லை.
ஒரு இரவு தொலைக்காட்சி பெட்டித் திரையில் இந்திரா காந்தியின் முகம் தோன்றியது. பிறகு அவர் சொன்ன வாக்கியம் கேட்டது. ” எங்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. நமது தேசத்தின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் சவால் ஏற்பட்டிருக்கிறது.”
அன்றுதான் எழும்பியது சுவர்.


Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

வாஸந்தி



உயரமான மலைப் பாதையில் சென்ற ஜீப்பிலிருந்து கீழே ஒரு மரங்களடர்ந்த சரிவைக் காட்டி, அங்குதான் இருக்கிறார் அந்த லேடி என்றார் டிரைவர் பஹதூர். கம்பளிச்சட்டையைக் கூலிக்குத் தைத்துக் கொடுக்கும் அந்தப் பெண்மணியைப் பற்றி பஹதூருக்கு உயர்ந்த அபிப்பிராயம் இருந்தது போல் பட்டது. சந்தைக்கடைகளில் பலர் தைத்துக்கொடுப்பவர்கள் இருந்தார்கள். தயாரித்த உடைகளும் விற்பனைக்கு இருந்தன. அவையெல்லாம் வேண்டாம் என்று பஹதூர் நிராகரித்திருந்தார்.ஒரு நல்ல இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன், வீட்டிலிருந்தபடி வியாபாரம் செய்யும் ஒரு மிகக் கண்யமான பெண்மணியை அறிமுகப்படுத்துகிறேன் என்ற விளக்கத்துடன் பஹதூர் சொன்னபோது எனக்கு எந்த ஆட்சேபமும் இருக்கவில்லை. அந்தப் பெண் ஒரு விதவை என்றும் அவளும் அவளுடைய ஒரே மகளும் அங்கு இருப்பதாகவும் சொன்னார்.
வால்பேரிக்காய் மரங்கள் அடர்ந்த தோப்பிற்குள் இருந்தது அந்த சிறிய வீடு. சீனப் பெண்போல் இருந்தார் அந்தப் பெண். இந்தியோ ஆங்கிலமோ சுத்தமாக வராத இக்கட்டிலும் நெருக்கமான சிநேகிதியைப்போல சிரித்து என் கைகளைப்பற்றி வரவேற்றார். என்னுடைய தேவைகளை பஹதூர் மீஜோ மொழியில் எடுத்துச் சொல்ல அவர் ஒரு வாரத்தில் அதாவது அடுத்த வெள்ளியன்று என்னுடைய ஆர்டரை நிச்சயம் முடித்துக் கொடுப்பதாகச் சொன்னார். நான் கிளம்பும் சமயத்தில் தேவதைப் போன்ற தோற்றப் பொலிவுடன் ஒரு மிக இளம் பெண் உள்ளே நுழைந்தாள். தனது மகள் என்று பெரியவள் அவளை அறிமுகப்படுத்தி ‘இருங்கள் கொஞ்சம் பேரிக்காய் பழங்களைப் பறித்துக் கொடுப்பாள்’ என்று சைகை காட்டியபோது நான் அந்தச் சின்னப் பெண்ணின் சொக்கவக்கும் அழகில் கிறங்கிப் போயிருந்தேன். சற்று நேரத்தில் அந்தப் பெண் சிரித்த முகத்துடன் ஒரு பெரிய பை நிறைய பழங்களைக் கொண்டுவந்து கொடுத்தாள். அவளுக்கு சுமாராக ஹிந்தி பேச வந்தது. தான் பள்ளியில் படிப்பதாகச் சொன்னாள். பதினைந்து வயதுதான் இருக்கும் என்று தோன்றிற்று. அன்று முழுவதும் நிலாபோன்ற அந்த முகம் என் நினைவில் நிழலாடி பரவசப்படுத்தியவண்ணம் இருந்தது.
அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் ஐஜலில் எதிர்பாராமல் நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்பில் நான் அவளையும் கம்பளிச் சொக்காயையும் மறந்தே போனேன். பழங்குடியினர் வாழும் இந்திய வட கிழக்குப் பகுதியில் அரசியல் பருவ நிலை சதா ஒரு புயல் வெடிக்கக் காத்திருப்பது போன்ற இறுக்கம் கொண்டது. அங்கிருக்கும் தட்ப வெப்பத்தை சரியாக உணராமல் மேம்போக்காகவோ அலட்சியமாகவோ பொறுப்பற்ற முறையில் [மீஜொ அல்லாத] தனி நபர்கள் நடந்து கொண்டாலும் அத்தருணங்களில் வெடிக்கும் அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்துவது மிகப் பெரிய நெருக்கடிகளை மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஏற்படுத்தக்கூடியவை. மத்திய அரசு அதை மிக நுட்பமாக ,கரிசனத்துடன் அணுக வில்லை என்றால் கலவரம் நிச்சயம். நீருபூத்த நெருப்பாய் கனன்றபடி இருக்கும் பிரிவினைவாதம் மீண்டும் தலையெடுக்கும். மேம்போக்குத்தனமும் அலட்சியமும் சமதரையில் வாழும்- தாங்களே நாகரிகமானவர்கள் என்று நினைக்கும்- மக்கள் அந்த மண்ணின் குடிமக்களைக் கேவலமாக,பிற்படுத்தப்பட்டவர்களாக நினைக்கும் அகம்பாவப் போக்கினால் வருவது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது நமது ரத்தத்தில் கலந்துபோன கலாச்சார ஆணவம். நிர்வாகத்தின் ரத்தத்திலும் கலந்திருப்பது. அங்கு நிகழும் எல்லா சச்சரவுகளுக்கும் கலவரத்துக்கும் மூல காரணம் இதுவாகவே தோன்றுகிறது. அப்பழங்குடியினரை மைய நீரோட்டத்தில் கலக்க விடாமல் தாங்களும் இந்தியர்கள் என்கிற உணர்வை ஏற்படுத்தவிடாமல் தடுக்கும் காரணியும் இதுதான். தாங்கள் வேறு என்று அவர்கள் உணர்ந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அருணாச்சலப் ப்ரதேசம் ,மீஜோராம் , மற்றும் நாகாலாந்து மக்களின் முக அமைப்பும் நிறமும் அப்பட்டமான மங்கோலிய பழங்குடியென்று பறை சாற்றுவது. அவர்களது வாழ்க்கை முறைக்கும் மற்ற இந்திய மக்களின் வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமில்லை. கிறுத்துவ பாதிரிமார்கள் சென்று சிலரை மதம் மாற்றியிருந்தாலும் அவர்களது பழைய கடவுள்கள் பழக்கவழக்கங்களை பெருமையுடன் பின்பற்றிவருகிறார்கள். அருணாச்சலப் ப்ரதேசத்தில் இந்திய நிர்வாகத்தைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் இலைமறை காய்மறையாக இந்து மதத்தை பரப்பப் பார்த்தபோது அதுவரை மிக சினேகிதமாக இருந்த அருணாச்சல மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மெல்ல மெல்ல அங்கிருந்த அமைதி கெட்டது. மீஜோராமைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அங்கு பல வருடங்களாகவே அதிருப்தி நிலவி வந்தது. அதற்கு முக்கிய காரணம் வெளியிலிருந்து சென்றவர்களின் இங்கிதமற்ற நடத்தைதான்.
அந்த ஞாயிறன்று அத்தகைய திமிரின் பரிமாணத்தை ஐஜல் உணர்ந்தது. சந்தை வீதிகளிலிருந்து சமையல்கார பாகிரத் செய்தி கொண்டுவந்தான். பஹதூர் என் கண்ணில் படாமல் இருக்க முயற்சிப்பது போல் இருந்தது. மீஜோக்கள் கிறுத்துவர்கள்.ஞாயிறன்று காலை தப்பாமல் சர்ச்சுக்குப் போவார்கள். சுமார் பதினோறு மணிக்குக் காட்டுத் தீயாய் செய்தி பரவியது. சர்ச்சிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு இளம் மீஜோ ஜோடிமீது ஒரு ஸி.ஆர்.பி.[மத்திய ரிசர்வ் போலீஸ்] ஜவான் தான் ஓட்டிக் கொண்டிருந்த வாகனத்தால் மோதியதால் இருவரம் தலத்திலேயே இறந்துபோனார்கள். பயந்த ஜவான் தப்பி ஓடிவிட்டான். செய்தி சொன்ன பாகீரத்தின் முகம் பீதியில் உறைந்திருந்தது. விஷயம் இன்னும் தீவிரம் என்று நான் உணர்ந்துகொண்டேன். மெல்ல பாகீரத் முழுசையும் சொன்னான். இளம் ஜோடி செல்கையில் இளம் பெண்ணின் மேல் பார்வை பட்டதும் ஜவான் வண்டியை சாலையில் மெல்ல நிறுத்தி அவளுடைய பிளவுசைப் பிடித்து மார்புப் பக்கம் இழுத்து வண்டிக்குள் ஏறு, ரம் கொடுக்கிறேன் சினிமாவுக்கு அழைத்துப் போகிறேன் என்று வம்பு செய்திருக்கிறான். பெண்ணுக்கும் அவளுடன் இருந்த ஆணுக்கும் மிகுந்த கோபம் வந்து அவனைத் திட்டியிருக்கிறார்கள். ஜவான் குடிபோதையில் இருந்திருக்கவேண்டும். கோபத்துடன் வண்டியைகிளப்பியிருக்கிறான். ஒழிந்தான் என்ற நிம்மதியுடன் இளம் ஜோடி சிரித்தபடி முன்னேறி நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஜவான் திடீரென்று மூர்க்கத்துடன் மலைப்பாதையில் ரிவர்ஸ் கியரில் வேகமாகப் பின்னோக்கி வந்திருக்கிறான். மீஜோ மலைப் பாதைகள் மிகக் குறுகலானவை. ஒரு பக்கம் செங்குத்தான மலைச் சுவர். மற்றொரு பக்கம் அதல பாதாளம். மிலிடரி வாகனத்திலிருந்து தப்பிக்க வழியில்லை. பாதாளத்தில் விழுந்து சாகவேண்டும் அல்லது மலைச் சுவரில் ஒட்டிக்கொண்டாலும் வாகனம் இடித்துச் சாகவேண்டும். அப்படித்தான் அவர்கள் பட்டபகலில் இடிபட்டு செத்தார்கள். இது போன்ற எதேச்சையான விபத்துகள் அங்கு நடப்பது சகஜம் என்றாலும் இது வேண்டுமென்று செய்த கொலை என்ற உண்மையும், இறந்தவர்கள் மீஜோ என்பதும் சாவுக்குக் காரணமானவன் சமதரையைச் சேர்ந்த மத்திய அரசின் ரிசர்வ் பிரிவைச் சேர்ந்த காவலன் என்பதும் அரசியல் பரிமாணம் பெற்றது. எந்த நிமிஷமும் மீஜோக் கலவரம் மூளலாம் என்று கவர்னர் நடுங்கிப் போனார். யாரும் யாருடனும் பேசவே பயந்தார்கள். சுந்தரத்துக்கு என்னுடன் பேசக்கூட நேரம் இருக்கவில்லை. மத்திய அரசு ஊழியர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு மீட்டிங் என்று கவர்னர் மாளிகையில் அடைந்துக் கிடந்தார்கள். கவர்னர் தனது தைர்யத்துக்காக எல்லாரையும் கூப்பிட்டுக்கொள்கிறார் என்று எனக்குத் தோன்றிற்று. நல்ல காலமாக தப்பி ஓடிய ஜவான் பிடிபட்டு அவனைஜெயிலில் அடைத்தார்கள். மீஜோத் தலைவர்கள் சமாதானப் படுத்தப் பட்டார்கள். பணம் நிச்சயம் கைமாறியிருக்கும். ஆனால் ஏற்கனவே வெளியிலிருந்து வருபவர்களை சந்தேகத்துடன் பார்க்கும் வழக்கம் கொண்ட மீஜோ பொதுமக்கள் இப்போது அதிகமாக விலகிப் போனதாகத் தோன்றிற்று. பத்து நாட்களுக்கு எந்த விருந்திற்குச் சென்றாலும் மீஜோ அல்லாதவர்கள் இதைப் பற்றியே பேசித் தீர்த்தார்கள். இந்திய-மீஜோ உறவில் பின்னடைவு ஏற்பட்டுப் போனதாக வெட்கப்பட்டார்கள்.கூடிய விரைவில் மாற்றல் கிடைத்து சமதரைக்குச் செல்வது நல்லது என்று அதிகாரிகளின் மனைவிகள் அபிப்பிராயப்பட்டார்கள். இந்த சந்தடியில் எனக்குக் கம்பளிச்சொக்காயைப் பற்றி மறந்தேபோனது. கொடுத்தனுப்புகிறேன் என்று சொன்ன அந்த மாதுவும் பேசாமல் இருந்துவிட்டதை பஹதூரைக்கூப்பிட்டு விசாரித்தேன். அவளை நீ பிறகு பார்க்கவில்லையா என்றேன். தினமும் பார்க்கிறேன் என்றான் பஹதூர். ‘இரண்டு நாளில் தந்துவிடுவாள்.’
‘ஒரு வாரத்தில் தருகிறேன் என்றாள். இரண்டுவாரம் ஆகிறது ஏன் என்று கேட்கவில்லையா?’
‘கேட்கவில்லை’.
“ஏன்?”
பஹதூர் சற்று பேசாமல் இருந்துவிட்டுச் சொன்னான்- “அந்த விபத்திலே இறந்தது அவளுடைய மகள் மேம்சாப்!”
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. தேவதைப் போன்ற அந்தப் பெண்ணா? இதுவரை பஹதூர் என்னிடம் அதைச் சொல்லவில்லை. பஹதூர் பிறப்பில் நேபாளியாக இருந்தாலும் பல ஆண்டுகளாக ஐஜலில் இருந்ததாலும் ஒரு மீஜோ பெண்ணை திருமணம் செய்திருந்ததாலும் உணர்வுரீதியாக மீஜோவாகியிருந்தான் என்று புரிந்தது. அவனைப் பொறுத்தவரை நான் அப்போது எதிரிகள் முகாமில் இருந்தேன். எனக்குக் காரணம் புரியாமல் கோபமும் துக்கம் ஏற்பட்டன. நான் மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்ப்பதை அவன் விரும்பவில்லை என்று எனக்குப் புரிந்தது. இருந்தும் பிடிவாதமாக அழைத்துப் போகச் சொன்னேன். அந்தப் பெண் மிகத் தயக்கத்துடன் வெளியே வந்தாள். நான் கண்ணீர்மல்க அவள் கைகளைப்பற்றி என் துக்கத்தை வெளிப்படுத்தினேன். அவளுக்கு அது வியப்பை அளித்திருக்கவேண்டும். இறுகிய முகம் தளர்ந்தது.என்னை அணைத்துக் கொண்டு சற்று நேரம் விசும்பினாள்.
ஒரு ஜவான் அப்படி நடந்து கொண்டதற்காக நான் வெட்கப்படுகிறேன் என்றேன். அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.
உள்ளே சென்று கம்பளிச் சொக்காய்களை எடுத்து வந்தாள்.
‘தாமதத்திற்கு மன்னியுங்கள்’ என்று சொன்னதாக பஹதூர் மொழிபெயர்த்தான்.
அவள் வீட்டிலிருந்து திரும்பும்போது பல்வேறுபட்ட உணர்வுகளும் சிந்தனைகளும் என்னைத் துன்புறுத்தின. எப்படிப்பட்ட சோகத்தில் அந்தப் பெண் எத்தனை நாகரிகத்துடன், கண்ணியம் இழக்காமல் இருந்தாள்! என்னைக்கண்டு வெறுப்படையவில்லை. பெண்ணின் மரணத்துக்குக் காரணமானவனை தூஷிக்கவில்லை. புலம்பவில்லை. பெரிய குரலிட்டு அழவில்லை. எனக்கும் அவளுக்கும் இருந்த உறவு வியாபார உறவு மட்டுமே என்பதுபோல டெலிவரி தாமதமானதற்கு மன்னிப்பு கேட்கிறாள். இவளது சமூகத்தை வெளியிலிருந்து வருபவர்கள் காட்டுமிராண்டிகள் என்கிறார்கள். பதிலடி கொடுக்க இயலாதவர்கள் என்கிற ஆணவ நினைப்பில் அவமானப் படுத்துகிறார்கள். அவர்களைத் தம்மைபோல ‘ நாகரீகமாக மாற்ற’ நினைக்கிறார்கள்.
பழங்குடியினரது பிரத்யேக கலாச்சாரம் வளம்மிக்கது, இயற்கையுடன் ஒன்றியது, மண்சார்ந்த ஞானம் கொண்டது என்று அறியாத ஞான சூன்யங்களே நம்மிடையே அதிகம். நம்முடைய வாழ்க்கை முறையை அவர்கள்மீது திணிக்கப் பார்க்கும் முயற்சியில்தான் நமது நிர்வாகம் தோற்று வருகிறது. எதிர்ப்பு முளைக்கும் போதெல்லாம் ராணுவ எண்ணிக்கையை அதிகரித்து நிரந்தர பகையை சம்பாதித்துக் கொள்கிறது. உலகத்தில் முளைக்கும் எல்லா சச்சரவுகளுக்கும் பகைக்கும் மூல காரணம் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரைவிட தாம் மேம்பட்டவர் என்று நினைப்பதால்தான் என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் அமார்த்தியா சென். எனது மொழி உயர்வானது, எனது மதம் உயர்ந்தது, எனது நிறம் உயர்ந்தது , எனது பாரம்பர்யம் மேன்மையானது என்ற நினைப்பே மற்றவரை அன்னியப்படுத்துகிறது. இந்த உயர்வைப் பற்றி நமக்குள் சந்தோஷப்படமுடியாது. மற்றவன் தாழ்ந்தவன் என்று மண்டையில் அடித்துச் சொன்னால்தான் நமக்குச் சமாதானம்.
அமெரிக்காவின் பழங்குடியரான சிவப்பிந்தியர்கள் அதிகம் வாழும் அரிஜோனாவிற்கு சென்றபோது அதன் தலைநகரான ·பீனிக்ஸில் நான் பார்த்த அவர்களது அருங்காட்சியகம் நினைவுக்கு வருகிறது. அமெரிக்க மண்ணின் ஒரிஜினல் மைந்தர்கள் அவர்கள். அவர்களது கலாச்சாரம் பல ஆயிரம் ஆண்டுப் பழமை கொண்டது என்கிறார்கள். நிச்சயமாகக் கலை நயம் மிக்க பாரம்பர்யம் என்பது அற்புத வண்ண ஓவியங்கள் கொண்ட சட்டிப்பானைகளும் காலங்காலமாக முடைந்து வரும் ஓலைக் கூடைகளும் சுவர் சித்திரங்களும் பாடல்களும் கவிதையாய் வெளிப்படும் நாடோடிக் கதைகளும் அத்தாட்சி. மிக வளமான கலாச்சாரம் கொண்ட அவர்களை வெளியிலிருந்து சூரையாட வந்த வெள்ளயர்கள் மற்றும் கிறுத்துவ பாதிரிமார்கள் காட்டுமிராண்டி என்று சொன்னார்கள். அவர்களது மண்ணைக் கவர்ந்து தங்கள் போக்கிற்குப் பணிய வைத்தார்கள். தாங்கள் மாற்றப் பட்டதையும் அதன் மூலம் தங்கள் வேர்கள் துண்டிக்கப்பட்டதையும்
கதைபோல சுவர் சித்திரங்களும் ஒலிநாடாவில் விவரங்களும் சோகம் இழையோட நம்முடன் கூடவே வருகின்றன. ” எங்கள் முடியை வெட்டினார்கள். கால் டிரௌசரை அணியச்சொன்னார்கள். எங்கள் முடியை தொலைத்தொம். உடுப்பைத் தொலைத்தோம். அந்த இரண்டு இழப்புடன் இந்தியர்கள் என்ற எங்கள் அடையாளம் போயிற்று. போர்டிங் பள்ளிகள் எங்களது கலாச்சார அடையாளங்களை அகற்றவே ஏற்படுத்தப்பட்டன.”
அவர்களால் அந்த அவமானத்தை லேசில் மறக்க முடியாது . அந்த அடையாளங்களை மீட்கும் பணியில் அவர்கள் இப்போது இருக்கிறார்கள். ஆனால் அவர்களது எண்ணிக்கை குறைந்து போனதாலும் பொதுவாக அமெரிக்க மக்களின் வாழ்க்கைத்தரம் சௌகர்யமானதாக இருப்பதாலும் பக்குவம் வந்திருக்கிறது. நாம் ஒருவரை ஒருவர் அரவணைத்துச் செல்ல வேண்டும் நாம் எல்லாம் வேறுபட்டு இருந்தாலும் என்கிற வாக்கியம் பளிச்சிடுகிறது.
நமது வடகிழக்குப் பகுதிகளில் அப்படிப்பட்ட பக்குவம் வருவதற்கு வெகுகாலம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. பக்குவம் வரவேண்டியது யாருக்கு என்பதுதான் கேள்வி.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 4- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

வாஸந்தி


அப்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த ஹேமா மாலினி, ரேகா மற்றும் ஸ்ரீதேவியே பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள். மும்பை அப்போது பம்பாயாக இருந்தது. அதன் புகழ்மிக்க மெஹ்பூப் ஸ்டூடியோவில் மாலை 4 மணிக்கு ஷ¥ட்டிங்கின் இடையில் ஸ்ரீதேவியை பேட்டி காணலாம் என்று சொன்னார்கள்.ஸ்ரீதேவி என்றதும் நானும் வரேன் என்று படையாகக் கிளம்பிய உறவுக்காரப் பையன்களை தடுத்துவிட்டுக் கிளம்புவதற்குள் தாவு தீர்ந்து விட்டது. பகைவனையும் வீழ்த்தும் அழகிய தொடைகள் கொண்டவர் என்ற புகழ் ஸ்ரீதேவிக்கு இருந்தது. ரேகாவைப்பார்க்கும்போதாவது கண்டிப்பா கூட்டிண்டு போணும் என்று பேரம் பேசினார்கள். அது நடக்க வாய்ப்பில்லை என்று அறிந்திருந்ததால் சரி என்று ஒப்புக்கொண்டேன். தினமும் காலையில் எழுந்ததும் வெங்கடேஷ சுப்ரபாதம் சொல்வதுபோல ரேகாவின் செயலருக்கு ·போன் செய்வதும் அவர் ரேகாவை கிறுக்கு பைத்தியம் என்று திட்டுவதும், ‘எனக்கே டைம் குடுக்கமாட்டா அவ;எப்ப வேற வேலைகிடைக்கும்னு காத்திண்டிருக்கேன், நன்னிகெட்ட ஜென்மம் இது’ என்று சொல்வதும் தமாஷாக இருக்கும். அந்தத் தமாஷ¤க்காகவே தினமும் அவருக்கு ஒரு ·போன் போடுவேன். ரேகா அவரைப் பணியிலிருந்து நீக்கி விட்டைருந்தார் என்றும் வேறு செயலர் நியமிக்கப்படவில்லை என்றும் பிறகு தெரிந்து கொண்டேன் . எனக்கு ரேகாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. அப்போது ரேகா முன்னணி நடிகை மட்டுமில்லை, புகழ் உச்சியில் இருந்த அமித்தாப் பச்சனுடன் தனக்கு நெறுக்கமான உறவு என்றும் அவர் தனது காதலர் என்றும்
பகிரங்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். திருமணமாகாமலே குழந்தை பெற்றுக்கொள்ள மிகவும் விருப்பம் என்று பேட்டிகளில் சொல்லிவந்தார். அந்தச் செயலரைப்போலவே பம்பாய் பத்திரிக்கையாளர் பலரும் அது ஒரு கிறுக்கு என்றார்கள். ஆனால் ரேகா என்றவுடன் பொதுவான பிரமிப்பு எல்லாருக்கும் இருந்தது. தமிழ் நாட்டிலிருந்து முதல் முதலில் பாலிவுட்டில் வேலைத் தேடி அவர் வந்தபோது, அவரது குண்டான உருவத்தையும்,[அவரது இடை 40 அங்குலம் என்று சொல்வார்கள்] உடல் கருமையையும் மோசமான ஹிந்தி உச்சரிப்பயும் கேலி செய்து எல்லோரும் ஒதுக்கினார்கள். பாலிவுட்டில் அவருக்கு இடமே இல்லை என்றார்கள். ஆச்சரியமாக அடுத்த பத்து ஆண்டுகளில் ரேகா தனது சுழியைத் தலைகீழாக மாற்றிக் கொண்டார். சுய முயற்சியால், சாமர்த்தியமான உழைப்பால். கடுமையாக உடற் பயிற்சி செய்து உடலை செதுக்கிய சிற்பம் போல் ஆக்கிகொண்டிருந்தார். ஐரோப்பிய, அமெரிக்க ஒப்பனை ரகஸ்யங்களைக்கற்று சொக்கவைக்கும் அழகியாகக் காட்சியளித்தார். அவரது கண்களும் அடர்த்தியான தலைமுடியும் பளபளத்த சருமமும் சராசரி இந்திய யுவதிகளின் ஏக்கமாக மாறின. ஹிந்தியை வட இந்தியர்கள் போல் சுத்தமான உச்சரிப்பில் பேசினார். மிக அமரிக்கையான் ஆழமான நடிப்பாற்றல் பெற்றார். இவை எல்லாவற்றையும் அவர் தன் சொந்த முயற்சியால் சாதித்திருந்தார் என்பது தான் எல்லோருடைய பிரமிப்புக்கும் காரணம். தடாலடியான மரபை எதிர்க்கும் அவரது பேச்சும் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாயின. ஆனால் அவரை பேட்டி காண்பது துர்லபம் என்று எனக்குப் புரிந்து போயிற்று.
மெஹ்பூப் ஸ்டூடியோ அத்தனைப் பழசாக, தூசும் சுன்னமிழந்த சுவர்களுமாக இருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் விட்டலாச்சரியார் படங்களில் வரும் மர்ம மாளிகைகள் போல ப்ரும்மாண்ட கூடங்களும் வாசலுக்குள் வாசலாக விரிந்து மாடிகளும் படிகளுமாக இருந்தது.நான் அங்கு போய் சேர்ந்தபோது ஸ்ரீதேவி ஒப்பனையில் இருப்பதாகவும் நான் அவரது அறைக்கு வரலாம் என்றும் சொன்னார்கள். ஸ்ரீதேவி என்னை வெகு மரியாதையுடன் உள்ளே வந்து அமரச்சொன்னார். அவர் அவ்வளவு அழகாக உயரமாக ஸ்லிம்மாக இருப்பார் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஸ்மார்ட்டாக இருப்பார் என்றும் நினைக்காதது எனது
தவறு. பொம்மை மாதிரி இருப்பார் அதிகம் பேசமாட்டார் என்று எங்கோ படித்திருந்தேன். அவரது தம்பியோ அல்லது வேறு நெறுங்கிய உறவினரோ , ஒரு இளைஞன் அவர் தெலுங்கில் சரமாரியாக தொடுத்த பணிகளுக்கும் கட்டளைகளுக்கும் மெல்லிய ஆமோதிக்கும் குரலில் பதில் சொன்னான். ஸ்ரீதேவியின் குரல் மென்மையாக ஆனால் கண்டிப்பாக இருந்தது. மிக நல்ல மானேஜர் போல் ஒரே சமயத்தில் பல விஷயங்களில் அவர் கவனம் செலுத்தியபடி இடையில் என்னுடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். சாதாரணமாக நடிகை என்றால் அவருக்கு உதவியாக அவருடைய அம்மாவோ அக்காவோ
அல்லது வேறு ஒரு முதிய மாதோ துணையாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஸ்ரீதேவிக்கு துணை யாரும் தேவைப் படவில்லை என்று தோன்றிற்று. அவர் ஒரு ராணியைப் போல கம்பீரமாகத் தோற்றமளித்தார். ஹீர் ராஞ்சா காதல் படச் சூட்டிங்கிற்காக அவர் அணிந்திருந்த உடையினால் எனக்கு அப்படித் தோன்றிற்றோ என்னவோ. ஆனால் அவர் பரபரவென்று சூட்டிங்கிற்குத் தாயாராகும் விதத்தில் ஒரு
ப்ரொ·பஷனலின் நேர்த்தியான திறமை இருந்தது. கீழ் தளத்தில் சூட்டிங்கிற்குக் கூப்பிட ஆள் வந்ததும் ‘ரெடி’ என்று புன்னகைத்து விநாடிபிசகாமல் கிளம்பி என்னைப் பார்த்து ,’நீங்களும் வாருங்கள். இடையில் ப்ரேக்கின் போது பேட்டியைத் தொடரலாம்’ என்றார். அவர் கீழே ஸ்பாட்டுக்குச் செல்லும் வழியில் நிறைய பேர் அவரைப் பார்க்கக் காத்திருந்தார்கள். சூட்டிங் ஆரம்பித்தது. கப்சிப்பென்று அமைதி அமர்ந்தது. சற்று முன் வரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதேவியின் முகம் காமிராவின் முன் அசாதாரண மாற்றம் கண்டது. சோகம் துக்கம் , உதடு துடிக்க இரண்டு வரி டயலாக். குபுக்கென்று கண்களில் நீர் வந்தது. நான் திகைத்துப் போனேன். அது எப்படி சாத்தியம்? நான் அவரைப்பற்றி சினிமா ரிப்போர்டர்கள் எழுதியதைப் படித்திருக்கிறேன்.
பொம்மைபோல இருக்கும் ஸ்ரீதேவி காமராவின்முன் நம்பமுடியாதபடிக்கு உயிர் பெறுவதை எல்லோரும் குறிப்பிடுவது மிகையானது என்று நினைத்திருந்தேன். ஆனால் அது வார்த்தைப் பிசகாத உண்மை என்று நேரில் கண்டேன். கட் கட் என்று ஷாட் முடிந்து இடைவெளிக்குப் பிறகும் மீண்டும் மீண்டும் அவரால் அந்த சோகத்துக்கும் கண்ணீருக்கும் தாவ முடிந்தது.அது கொஞ்சமும் செயற்கையாக இருக்கவில்லை. க்ளிஸ்ரின் கூட அவர் உபயோகிக்கவில்லை . பிறகு எதுவுமே நடக்காததுபோல் என்னுடன் வந்து அமர்ந்து
சிரித்துப்பேச முடிந்தது. என்னால் நம்பமுடியவில்லை. அது எப்படி சாத்தியம், உணர்வு ரீதியாக பாதிக்காதா என்று கேட்டேன். ‘எதற்கு பாதிக்கவேண்டும் , நடிப்பது எனது தொழில்’ என்றார் சாதாரணமாக. நான் நடிகை சாவித்திரியைப் பற்றி குறிப்பிட்டேன். பாச மலர் கடைசி சீன் சூட்டிங் முடிந்தபிறகு ஒரு வாரத்திற்கு மேல் அவர் உணர்வுரீதியாக பாதிக்கப்பட்டுப் படுத்திருந்ததாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
‘சாவித்ரி அம்மா மிகப் பெரிய நடிகை. எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் நடிப்பும் மற்ற தொழில் போலத்தான்னு நாம எடுத்துக்கல்லேன்னா ரொம்ப கஷ்டப் படுவோம் என்று நான் நினைக்கிறேன். ஒரே சமயத்திலே இரண்டு மூணு படம் சூட்டிங் செய்யவேண்டியிருக்கும். எல்லா பாத்திரங்களுடய உணர்வுச் சுமைகளையும் நாம தூக்கிக்கிட்டு படுக்கப் போனோம்னா நிம்மதியே போயிடும். இங்கிருந்து கிளம்பின உடனே நான் இந்த சூட்டிங்கைப் பத்தி மறந்துடுவேன்.’
தமிழ் சரளமாக வந்தாலும் ஆங்கிலத்தில் பேசுவது இன்னும் சரளம் என்று ஆங்கிலத்தில் பேசினார். சூட்டிங் யூனிட்டில் இருந்தவர்கள் சற்று எட்டி நின்று மிக மரியாதையுடனேயே அவரை நடத்தியதை கவனித்தேன். அவரது சுய நம்பிக்கையும் நிர்வாகத் திறமையுமே வட இந்தியாவில் அவரைக் கொடிகட்டிப் பறக்க வைத்ததாகத் தோன்றிற்று. அகில இந்தியப் புகழ் கிடைக்கும் என்று என்றாவது நினைத்திருந்தாரா? ‘இல்லை’ என்று அழகாகப் புன்னகைத்தார். ‘ ஆனா அது சுலபமாகக் கிடைக்கவில்லை. நிறைய உழைக்கணும். இருந்தும் இந்தப் புகழ் எல்லாமே சொற்ப காலத்துக்குதான்னும் நினைவிருக்கு. Enjoy while the going is good!” அந்த அழகிய தலைக்குள் விவேகமும் குடிகொண்டிருந்தது. ஹீர் ராஞ்சா படம் வெளி வந்ததும் மிகப் பெரிய ஹிட்டாயிற்று.
மெஹ்பூப் ஸ்டூடியோ பாழடைந்த கட்டிடமாகத் தெரிந்தாலும் மிக உயிர்ப்புடன் கூடிய ஒரு உலகம் அங்கு இயங்குவதை என்னால் உணரமுடிந்தது. பலதளங்களில் பலவிதமான செட்டுகள் தயார் நிலையில் இருந்தன. நூற்றுக்கணக்கான ஆட்கள் அங்குமிங்கும் நடந்தபடிஅல்லது ஓடியபடி ஏதோ பணியில் இருந்தார்கள். மும்பை நகர வளர்ச்சியுடன் மிக அழுத்தமாகப் பிணைந்திருந்த உலகம் அது. கள்ளக்கடத்தலும் நிழல் உலகமும் மும்பையின் அங்கமாகிப் போனது போல சினிமாவும் ஒரு அங்கம். இரண்டுமே மும்பையுடன் ஒட்டிய நிஜ உலகங்கள் – புற உலகம் அவற்றை நிழல்கள் என்று சொன்னாலும். அதனுடன் ஒட்டாத சாமான்ய பிரஜைகள் மும்பையின் ஓட்டத்துடன் ஓட்டமாக ஓடினார்கள். கள்ளக்கடத்தல் காரர்கள், நிழல் உலக தாதாக்கள் பட உலகத்துடன் தங்களை லாகவமாக இணைத்துக் கொண்டது மிக இயல்பாக நடந்தது. மும்பையின் வரலாற்றையே மாற்றியது.
இந்திய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மாற்றம் கண்டு தங்கக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் மும்பையின் நிழல் உலக வரலாற்றில் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று யாரும் ஊகித்திருக்கவில்லை. தங்கக் கடத்தலுக்கு இப்போது ஏதும் அர்த்தமில்லாமல் போனதால் கடத்தல் காரர்கள் பணம் பண்ண வேறு மார்க்கங்களைத் தேட ஆரம்பித்தார்கள். அந்த கால கட்டத்தில் தான் ஹாஜி மஸ்தானின் அடியாட்களாக முன்பு இருந்த தாவுத் இப்ரஹீம், சோட்டா ஷக்கீல்,சோட்டா ராஜன் போன்றோர் ‘தலை எடுக்க’ ஆரம்பித்தார்கள். பெருமளவில் நிலங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது அப்போதுதான். வழக்கம்போல் போதைபொருள் கடத்தல் தொடர்ந்தது.பாலிவுட்டின் ஷோலே போன்ற படங்கள் பெரும் வெற்றிப்படங்களாக வெளிவர ஆரம்பித்தபோது, படம் பண்ணுவது பெரும் செலவு கொண்டதாக மாறும் அறிகுறி தெரிந்ததும் நிழல் உலகம் கப்பென்று மும்பை பட உலகத்தைக்கவ்வியது.
நிழல் உலகம் பட உலகத்தின் ·பைனான்ஷியராக மாறியது. யார் தந்த பணமாக இருந்தால் என்ன என்று கண்ணைமூடிக்கொண்டு பாலிவுட் அந்த வலையில் சிக்கியது. நிழல் உலகத்தின் செயல்பாடுகள் நிழலின் தன்மை கொண்டதாக இருந்ததில் ,அவர்களுக்காக வேலை செய்தவர்கள் பினாமிகளாக இருந்ததில், நிஜமான தாதாக்களைக் கையும் களவுமாகப் பிடிக்கமுடியவில்லை. அவர்களைக் காட்டிக்கொடுக்கும் தைர்யம் அடியாட்களுக்கு இருக்காது. பின்னவர்களது ‘விசுவாசத்துக்காக’, தங்களுக்கு பதிலாக ஜெயில் வாசமும் உதையும் வாங்குவதற்காக அவர்களது குடும்பங்களை தாதாக்கள் நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். மும்பை போலீஸ¤க்கும் தாதாக்களுடன் ரகசிய புரிதல் இருந்ததால் தாதாக்கள் கௌரவப் போர்வை போர்த்திவளைய வந்தார்கள். அதனாலேயே நிழல் உலகத்துப் பணம் மட்டும்தான் நமக்கு தொடர்பு மற்றதில் நமக்கு சம்பந்தமில்லை என்ற சமாதானத்துடன் சினிமா இயக்குனர்களும் நடிகர்களும் வெகுளித்தனமாக இருந்ததில் வியப்பில்லை. துபாயில் சாம்ராஜ்யம் வைத்திருந்த தாவூத் அழைத்த விருந்துகளிலும் கேளிக்கைகளிலும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டார்கள். எப்படியாவது தங்கள் பணிக்குப் பணம் கிடைத்தால் போதும் என்ற
நிர்ப்பந்தத்தில் அவர்கள் இருந்திருக்கவேண்டும். அதற்கு எப்படிப்பட்ட ஆபத்தான விளைவுகள் இருக்கும் என்று கற்பனை செய்யக்கூட நேரமில்லாத ஓட்டத்தில் அவர்கள் இருந்திருக்கவேண்டும். நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், கதைப் போக்கை மாற்றுவதிலும் விநியோக உரிமையிலும் நிழல் உலகம் தலையிட ஆரம்பித்ததும் இணங்காவிட்டால் அச்சுறுத்தல் வருவதும் சில கொலைகள் கொலை முயற்சிகள் என்று ஆரம்பமானதும்தான் திடுக்கிட ஆரம்பித்து பாலிவுட். உண்மையில் நிழல் உலகம் வேறு தளத்திற்குத் தாவிக்கொண்டிருந்தது.
நிழல் உலகத்தில் அதுவரை தொழில் போட்டி இருந்ததே தவிர மதம் சம்பந்தமான வேற்றுமை இருக்கவில்லை. மதம் நுழையவும் அதன் வினையாக பயங்கர விளைவை ஏற்படுத்துவதற்குமான காரணிகளை மும்பை அரசியலே தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்தது. பம்பாயில் சினிமா உலகம், நிழல் உலக ங்களுக்கு சம்பந்த மில்லாத ஒரு அரசியல் இயக்கம் , தீவிர மண்ணின் மைந்தர் கோஷம் கொண்ட, இந்துத்வ போர்வை உடுத்திய சிவ சேனை இயக்கம் அதி வேகமாக வளர்ந்து வந்தது. தூங்கிக் கொண்டிருந்த புலி திடீரென்று விழித்தவுடன் தான் தேடிப் பிடித்து வைத்திருந்த இறை திருடு போனதாக உணர்ந்து சிலிர்த்துச் சீறுவதுபோல தென்னிந்தியர்களும் முக்கியமாகப் பெருவாரியாக டைப்பிஸ்டுகளாகவும் க்ளார்க்குகளாகவும் உள்ளே நுழைந்த தமிழர்கள் நகரத்தின் வெள்ளைக்காலர் உத்தியோகங்களையெல்லாம் கபளீகரம் செய்துவிட்டதைப் புலி, பால் தாக்கரே என்ற சிவசேனைப் புலி கண்டு அசூயைக்கொண்டது. ரியல் எஸ்டேட்டில் தாதாக்களின் ஆக்கிரமிப்பு அதிகரிக்க, நிலங்களையெல்லாம் முஸ்லிம்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்று ஆத்திரப்பட்டது. கர்ஜனையே தாக்கரேயின் அரசியல் வியூகம்–“தமிழர்களை விரட்டு! முஸ்லிம்களை விரட்டு பாகிஸ்தானுக்கு. Hang them! தூக்கிலிடு அவர்களை! வீர சிவாஜியின் மரபில் வந்தவன் நீ. வரலாற்றை மறக்காதே. முஸல்மான் நமது பரம்பரை வைரி…”

ஒரு தீப்பொறிக்காகக் காத்திருக்கிறார்கள் மும்பை மக்கள். சமன்பாடுகள் அற்ற பொருளாதார வளர்ச்சியில் மத்திய வர்க்கத்தில் இயலாமை ஏமாற்றம் ,போதாமை என்ற உணர்வுகள் கோபமாக உருவாகிக்கொண்டிருக்கிருக்கின்றன. சிவ சேனை மூலம் சுரணை மீண்டது போல மராட்டியர்கள் பிரிவினைவாதம் பேச ஆரம்பித்தார்கள். அதுவரை இல்லாத மத அடிப்படைவாதம் தலைதூக்கியது.
மதத்தை முன்னிறுத்திப் பிரிவினை பேசும் அரசியலை நிழல் உலகம் அதிகம் கண்டுகொள்ளாமல் இருந்தது. அரசியல்வாதிகளுக்கும் நிழல் உலகத்தின் உதவி தேவைப்பட்டது. ஆனால் மும்பையின் அசல் பிளவு மும்பைக்கு வடக்கே பல நூறு மைல்களுக்கப்பால் அயோத்தியில் டிசெம்பர்மாத குளிர் நாள் ஒன்றின் பகல் நேரத்தில் இந்து வெறிக்கும்பல் ஒன்று ஒரு மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியபோது,
மும்பை நிழல் உலகம் இந்து முஸ்லிம் என்று பிளவு பட்டது மட்டுமல்ல, சக்திவாய்ந்த முஸ்லிம் தாதாக்கள்
தங்கள் மதத்தின் ரட்சகர்களாக மாறினார்கள். சர்வதேச அளவில் இயங்கிய முஸ்லிம் மத அடிபடைவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஆயுதங்களானார்கள். மசூதி இடிப்பிற்குபின் மும்பையில் சிவ சேனையரால் தூண்டிவிடப்பட்ட இனக்கலவரத்துக்கு பதிலடியாக யாருமே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தாவூத் இப்ரஹாம் குழுவைச் சேர்ந்தவர்கள் மும்பைமுழுவதும் தொடர்குண்டுவெடிப்புகள் நடத்தி பயங்கரவாதத்தின் முதல் நேரிடை அனுபவத்தை மும்பைக்கு அளித்தார்கள்.
தொடர்குண்டு வெடிப்புக்குப் பின் நகரத்தின் வரலாறு மாறிவிட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். போலீஸ் நிரந்தர பழிக்குள்ளானது. முஸ்லிம் பிரஜைகள்
பாதுகாப்பற்றுப் போனதாக உணர ஆரம்பித்தது அப்போதுதான். புகழின் உச்சியில் இருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டைருப்பதாகக் கைதானதும் பாலிவுட்டைமட்டுமல்ல நாட்டையே உலுக்கியதும் அப்போதுதான். பலர் தேசத் துரோகிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டார்கள்.
தேசத் துரோகம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்கிற பூர்வாங்க விசாரணையில் நாம் ஈடுபடவேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் பல அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற பிரசங்கங்களும் முழக்கங்களும் செயல்பாடுகளும் தேச விரோதமானவை. அவர்களுக்குத் தொலைநோக்கு பார்வை இல்லாதது அவர்களைப் பொறுப்பற்ற பிரஜைகளாக ஆக்குவதாக நினைக்கிறேன். தேசத்துரோகம் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

வாஸந்தி


என் கணவர் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் ” எனக்கு மிஜோராமுக்கு மாற்றல் ஆகியிருக்கு. இன்னும் பத்து நாட்களில் நாம் அய்ஜலுக்குப் பயணமாக வேண்டும்” என்றார்.நான் விழித்தேன். ” மீஜோராம் எங்கே இருக்கு?” என்றேன். ” வட கிழக்கில். பர்மாவுக்கு மிக அருகில்” என்றார் சுருக்கமாக. அவருக்கே விவரமாக எதுவும் தெரியாது என்று நான் சந்தேகித்தேன். “மீஜோ நிழல் உலக பயங்கர வாதி லால் டெங்காவைப்பத்திக் கேள்விபட்டதில்லை ?” என்றார் மைய்யமாக.
கேள்விப்பட்டிருக்கிறேன் .ஆனால் விவரமாகத் தெரியாது. அவன் இந்திய அரசுக்கு எதிராகக் கொடிபிடித்து நிழல் உலக பயங்கரவாத இயக்கம் நடத்தும் தீவிரவாதி என்றும் போலீஸ் அவனுக்கு வலைவீசியதில் பிடிபடாமல் லண்டனுக்கு ஓடிவிட்டான் என்றும் நினைவு. பழங்குடியினர் வசிக்கும் அதிகம் வளர்ச்சி காணாத பிரதேசம் மீஜோராம் என்று என் கணவர் சொன்னார். அதுமட்டுமல்ல, போராளிகளின் தாக்குதலின் அபாயத்தால் Assam Rifles ராணுவத்தினரும் எல்லைப்பாதுகாப்புப்படை போலீஸ¤ம் அங்கு எப்பவும் தயார் நிலையில் இருக்கக் குழுமியைருப்பதாகவும் சில விவரமறிந்தவர்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.எனக்கு திக்கென்றிருந்தது. நாங்கள் அப்போது கல்கத்தாவில் இருந்தோம். மூத்த மகன் ரவி கல்கத்தாவின் பிரபலமான பள்ளியான புனித ஜேவியரில் படித்து வந்தான். மூன்றாம் வகுப்புதான் என்றாலும் அந்தப் பள்ளியில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு என்பதோடு பிள்ளை அங்கு படிக்கிறான் என்று சொல்வதே பெற்றோர்களுக்கு மகன் IAS முதல் ரான்க் வாங்கினான்னென்பதுபோல. இரண்டாவது மகன் ஹரி நான்கு மாதக்குழந்தை. அவ்வளவு நல்ல பள்ளியை விட்டு விட்டு சிறு குழந்தையுடன் அந்தக் கேள்விப்பட்டிராத வனாந்திரத்தில் எப்படி இருப்பது என்று நான் குழம்பிப் போனேன்.

அநேக இந்தியர்களுக்கு இப்பவும் இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதிகளைப்பற்றித் [NORTH EASTERN FRONTIER AREA சுறுக்கமாக NEFA] தெரியாது. அங்கு வசிக்கும் பலதரப்பட்ட பழங்குடி மக்களைப்பற்றி அவர்களது வண்ணம் மிகுந்த கலாச்சாரத்தைப்பற்றித் தெரிந்திராது. அவர்களது
அறிவீனத்துக்குக் காரணம் அவர்களது அக்கறை இன்மை என்று சொல்லமுடியாது.பொதுவாக நமது செய்தி ஊடகங்கள் ஆரம்ப காலத்திலிருந்து அந்தப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே காரணம். மைய நீரோட்டத்தைச் சேர்ந்த பகுதிகளே முக்கியத்துவம் கொண்டவையாக, நாகரீக வளர்ச்சி கொண்டவையாக இன்றும் கருதப்படும் மெத்தனபோக்கே இந்த இருட்டடிப்புக்குக் காரணம் என்று சொல்லவேண்டும்.
மீடியாவின் இந்தப் பார்வைக்கும் நமது அரசியல் அமைப்பின் அணுகுமுறைதான் பொறுப்பு.இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் இந்த வட கிழக்கு மாநிலங்கள் இரண்டாம் பட்சமாகவே கருதப்பட்டு வந்தன.
அஸ்ஸாம் மாநிலத்துக்கு வட கிழக்கிலும் தெற்கிலும் இருக்கும் அருணாசலப் ப்ரதேசம், நாகாலாந்து, மேகாலயா மற்றும் மீஜோராம் ஆகிய மாநிலங்கள் எல்லாம் கொத்தாக NEFA என்று அழைக்கப் பட்டன.
உண்மையில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பழங்குடி இனத்தவரையும் வித்தியாசமான கலாச்சாரத்தையும் கொண்டவை என்று மத்திய நிர்வாகத்தினர் அறியவில்லை. தங்கள் கலாச்சாரத்தைப்பற்றி அந்தந்த மக்களுக்குப் பெருமை உண்டு என்பதும் அது அவர்களது பிறப்புரிமை என்பதும் கூட அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. ஏனென்றால் பழங்குடியினரை நகர் புரத்தினர் ஜங்க்லீ – காட்டுமிராண்டிகள் – என்று குறிப்பிடும் போக்கு இன்றும்- அவையெல்லாம் தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபின்னும், இருக்கிறது.
கணவருடன் மீஜோராமுக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆனபின் அந்த மாநிலத்தைப் பற்றி ஏதேனும் விவரம் படிக்கக்கிடைக்குமா என்று நான் தேடியபோது ஒரு நண்பர் எனக்கு Verrier Elwin என்ற ஒரு ஆங்கிலேயர் எழுதியிருக்கும் மிகப் பிரபலமான – A philosophy for NEFA- என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார்.கிளம்புவதற்கு முன் அதைப் படிக்க நேரம் கிடைக்கவில்லை. கல்கத்தாவிலிருந்து அஸ்ஸாமிலிருக்கும் ஸில்ச்சர் என்ற இடத்திற்கு விமானத்தில் பயணம். அங்கிருந்து நெடுஞ்சாலை வழியாக அலுவலகம் அனுப்பியிருந்த ஜீப்பில் மலைப்பாதையில் மீஜோராமின் தலைநகரமான ஐஜலுக்குப் பயணமானோம்.அத்தனை செங்குத்தான மலைகளையும் ஒரு வழிப்பாதையையும் நான் அதுவரைப் பார்த்ததில்லை. சாலையின் ஒரு பக்கம் வானுயர்ந்த மலைமுகடு. மறுபக்கம் அதல பாதாளம். சறுக்கி விழுந்தால் பொறுக்கி எடுக்க ஒரு எலும்புத்துண்டு அகப்படாது. அப்படிப்பட்ட சூழலில் சாலையை ஒட்டினாற்போல் மூங்கில் கழிகளின் மேல் ஒரு அறை மட்டுமே கொண்ட சதுரமான வீடுகள் காட்சி அளித்தன. கம்பிகள் தடுப்புகள் ஏதுமற்ற திறந்த ஒரு ஜன்னல் போன்ற சதுர இடைவெளியில் மங்கோலிய முகத்துடன் சிவந்த நிறத்தில் பொம்மைபோன்ற ஒரு குழந்தையின் முகம் வெளி உலகத்தை எட்டிப்பார்த்தது. அது கீழே விழுந்தால் என்ன ஆவது என்று எனக்குப் பதைத்தது.”விழாது” என்று சிரித்தார் ஜீப் டிரைவர் பகதூர். ‘இங்கே மீஜோ குழந்தைகள் எல்லாம் பிஞ்சிலே பழுத்தவை’. ஐஜலை நெறுங்க நெறுங்க அதன் அசாதாரண இயற்கை எழில் என்னைப் பரவசப்படுத்தியது. கண்ணில் தென்பட்ட மீஜோ பெண்கள் மிக அழகாக இருந்தார்கள். வேஷ்டியைப்போல அழகிய வண்ணங்களுடன் கூடிய ‘போவான்’ என்ற கனமான கைத்தறி உடையை அணிந்திருந்தார்கள். எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தற்காலிக வீட்டில் இறக்கப்பட்டதும் தான் ஒரு முற்றிலும் புதிய சூழலுக்கு வந்திருப்பது எனக்குப் புரிந்தது. எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த அஸ்ஸாமிய குடும்பத்தினர் ‘இது சரியான பின் தங்கிய இடம் . நல்ல மருத்துவர் இல்லை. நல்ல பள்ளி இல்லை. மக்கள் சரியான காட்டுமிராண்டிகள். எதைச் சொன்னாலும் புரிந்து கொள்ளமாட்டார்கள் ‘ என்று எடுத்த எடுப்பிலேயே பயமுறுத்தினார்கள்.

என் கணவருக்கு அங்கு Principal Engineer என்ற பெரிய பதவி என்பதால் ஆள் உதவி நிறைய இருந்தது. சிவாஜி டில்லா என்ற மலைக் குன்றின் மேல் இருந்த ஒரு பழைய வீட்டை செப்பனிட்டு அங்கு செல்ல முடிவானது. அதை என் கணவர் ஒரு மிக அழகான வீடாக மாற்றி அமைத்தார். பணி முடிவதற்கு முன்பே அந்த வீட்டிற்குப் போனோம் . கட்டிட வேலைக்காக ஏழெட்டு மீஜோக்கள் தினமும் வருவார்கள். அவர்களை கவனிப்பது எனக்கு மிக சுவாரஸ்யமானதாக இருந்தது. சாவகாசமாக வருவார்கள். மேர்கத்திய உடை அணிந்திருப்பார்கள்.யாருக்கும் ஹிந்தியோ ஆங்கிலமோ வராது. எங்கள் வீட்டின் நடு முற்றம் பெரியதாக இருக்கும். அதில் வட்டமாக அமர்ந்து கூச்சமே இல்லாமல் பீடி புகைத்துக் கொண்டு சற்று நேரம் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் பேச்சும் முக பாவனைகளும் அங்க அசைவுகளும் கவனிக்க மிக சுவாரஸ்யமாக இருக்கும். ஏதோ புரியாத மொழியில் ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒன்றைப் பார்ப்பது போலத் தோன்றும். மீஜோ மொழிக்கு சொந்த லிபி கிடையாது. ரோமன் லிபியைத்தான் உபயோகித்தார்கள். பாதிரிமார்களின் கைங்கர்யம் அது.

இலக்கியம் வளராததாலேயே பேச்சு மொழி அப்படிப்பட்ட உத்வேகம் கொண்டதாகத் தோன்றிற்று. அவர்களுக்கு இயல்பாக நல்ல குரல் வளம் இருந்தது. தினமும் அதிகாலை யாரோ கிடார் இசைத்தபடி மிக அழகாகப் பாடுவது கேட்கும். எங்கள் படுக்கை அறையின் கீழ் மலை வளைவில் ஒரு இளைஞன் பாடிக்கொண்டிருப்பான். அநேக நிகழ்ச்சிகளிலும் நான் மீஜோக்கள் பாடுவதை கேட்டிருக்கிறேன். அருணாச்சல் ப்ரதேசத்திலும் கேட்டிருக்கிறேன். பழங்குடியினருக்கு இயல்பாகப் பாடும் அற்புத ஆற்றல் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
பணியாளர்கள் திடுதிப்பென்று டீ குடித்துவிட்டு வரப் போய்விடுவார்கள். பிறகு வர இரண்டு மணி நேரம் ஆகிவிடும். அவர்களை மேய்க்க பீஹாரைச் சேர்ந்த ஒரு மேஸ்த்ரி வருவார். ‘இவர்கள் இப்படித்தான் மேடம்’ என்று என்னிடம் ஹிந்தியில் அலுத்துக் கொள்வார். ‘வெறும் ஜங்கிலிகள். கோபித்துக்கொண்டாலும் இப்போது தகராறாகிவிடும். இவர்களிடம் வேலை வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மகா சோம்பேறிகள். கடைசியில் நமக்குக் கெட்ட பெயர்.’
எங்கே போகிறார்கள் எல்லாரும் என்று கேட்டேன். நாஷ்டா சாப்பிடப் போகிறார்கள் என்று பதில் வந்தது. மறு நாளிலிருந்து நான் நான்கு முழு நீள family size ரொட்டிகள் வாங்கி வைத்தேன். சமையல் கார பையன் பாகீரத்துக்கு மீஜோ மொழி தெரியும். ஒரு அடுக்கு நிறைய தேநீர் போட்டு ப்ரெட்டுடன் கொடுக்கச் சொன்னேன். பணியாளர்கள் இதை எதிர்பார்க்கவில்லை என்று தோன்றிற்று. ஆச்சரியமான மாறுதல் தெரிந்தது. உற்சாகமாக வேலை நடந்தது. எனக்குப் புரிகிறதா என்கிற கவலை இல்லாமல் என்னுடன் சிரித்துப் பேச ஆரம்பித்தார்கள்.
வர்க வித்தியாசம் துளியும் இல்லாத சமூகம் அது என்பது எனக்கு மிகுந்த வியப்பைத் தந்தது. ஒரு நாள் காலை வரவேற்பறையில் ஒரு மீஜோ சோபாவில் அமர்ந்திருந்தார். வந்திருப்பது யார் என்று பாகீரத்தைக் கேட்டேன். அவன் எட்டிப் பார்த்துவிட்டு, ‘ கக்கூஸ் கழுவ வந்திருப்பவர். நீங்கள் குளித்துக் கொண்டிருந்ததால் காத்திருக்கச் சொன்னேன்’ என்றான். மீஜோராமின் முதல்வர் அளிக்கும் விருந்திலும் முதலாளி பணியாளர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லாரும் ஒன்றாக உணவருந்துவதை மீஜோ அல்லாதவர்கள் வியப்புடன் குறிப்பிடுவார்கள்.

அங்கு பல வருஷங்கள் முன்பே கிறித்துவ பாதிரிகள் வந்து எல்லோரையும் கிறித்துவ மதத்திற்கு மாற்றியிருந்தார்கள். மதம்தான் மாறியிருந்ததே தவிர அவர்களது பழங்குடி வழக்கங்கள், சடங்குகள் மாறியிருக்கவில்லை.பைபில் சொல்லும் பத்து கட்டளைகளும் பாதிரிகள் போதிக்க மறந்துபோனதாகத் தோன்றிற்று. அவர்களது வாழ்க்கைமுறை அப்படிப்பட்ட சலுகைகள் கொண்டதாகக் கேள்விப்பட்டேன். கொலை கொள்ளை எல்லாமே மிக சகஜமாக ஏற்கப்பட்டது. காளாமுக கபாலிகள் போல முன்பு எதிரிகளின் மண்டை ஓடுகளை கழுத்தில் அணியும் பழக்கம் இருந்ததாகச் சொன்னார்கள். அவர்களது விருந்தோம்பல் மரபுப்படி விருந்தினருக்கு மனைவியை அளிப்பது தவரில்லை. அவர்களுக்கு மதுவும் மாமிசமும் இல்லாத சாப்பாடு ரசிக்காது. நானும் என் கணவரும் கொடுத்த விருந்துகளில் அவை இரண்டும் இராது என்பதால் அவர்கள் ஏதாவது சாக்கு சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் பொதுவாக சமதரையிலிருந்து [plains] வருபவர்களுடன் அவர்கள் பழகத் தயங்கினார்கள் என்பதை நான் பிறகு புரிந்து கொண்டேன்.வெளியிலிருந்து வருபவர்களை அவர்கள் ‘வாய்’ – வெளிநாட்டவர் என்று அழைத்தார்கள். அதாவது அவர்களுக்குத் தாங்களும் இந்தியர்கள் என்ற எண்ணமே இல்லை!

மலைச் சரிவில் தோட்டம் பூவும் கனிகளுமாக விரிந்தது. குழந்தையை மிக அக்கறையுடன் பார்த்துக்கொள்ளவும் சமையல் வேலை வீட்டு வேலை செய்யவும் நல்ல ஆட்கள் கிடைத்ததும் வெரியர் எல்வினின் புத்தகம் ‘ philosophy for NEFA’ NEFA வுக்கு ஒரு தத்துவம்- படிக்க நேரம் கிடைத்தது. அதைப் படிக்கப் படிக்க பல புதிய சாளரங்கள் திறந்த உற்சாகமும் பிரமிப்பும் எனக்கு ஏற்பட்டன. சாளரத்தின் ஊடாக எனக்குப் பரிச்சியமில்லாத முற்றிலும் புதிய ஒரு உலகம் அதன் பிறந்த மேனி அழகுடன் தெரிந்தது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அறிஞரான வெரியர் எல்வின் NEFA பழங்குடியினரைப் பற்றி மிக ஆழமான ஆய்வு செய்திருந்தார். ஜவஹர் லால் நேருவின் நெறுங்கிய நண்பர். நேருதான் வடகிழக்கு பிராந்திய மக்களின் தன்மையைப்பற்றியும் ஆளுமையையைப்பற்றியும் அவர்களது தேவையைப்பற்றியும் ஒரு ஆய்வறிக்கையை தமக்கு அளிக்குமாறு எல்வின்னைக் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நாகா மற்றும் மீஜோ மக்களிடமிருந்து எதிர்ப்புகள் அப்போதே உருவாகியிருந்தன. அந்த எதிர்ப்புக் கிளம்பியதற்கான காரணங்களை எல்வின் மிகத் துல்லியமாக ஆராய்ந்து சொல்கிறார். மிக அமைதியாக இருந்த ப்ரதேசங்கள், பழங்குடி மரபுப்படி வர்க பேதம் இல்லாமல் கிராம நிர்வாகம் செய்து வந்த இடங்கள் சமதரையிலிருந்து அனுப்பப்பட்ட அதிகாரிகள் அவர்களை ‘நாகரீகப்’ படுத்த முயன்ற இங்கிதமற்ற போக்கினால் துவேஷமும் பிரிவினை வாதமும் மிகுந்ததாகப் போனதை விவரிக்கிறார். வெளியிலிருந்து இந்தப்பகுதிகளை நிர்வகிக்க அனுப்பப்பட்ட அதிகாரிகள், பெரும்பாலும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள், இவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று ஓயாமல் திட்டினார்கள். அவர்களது மரபுகளைப் பழித்தார்கள். கற்பு என்கிற தீவிர பிடிமானம் இல்லாத சமூகம் என்கிற தைர்யத்தில் அதிகாரிகளும் ராணுவத்தினரும் மீஜோ பெண்களை ‘ரம் கொடுக்கிறேன், சினிமாவுக்கு அழைத்துப் போகிறேன்’ என்று ஆசை காட்டி உபயோகித்துக்கொண்டார்கள். ஐஜலில் மிலிடரி வளாகத்துள்தான் சினிமா கொட்டகை இருக்கும். ரம் என்பது தண்ணீர் பட்ட பாடு. மீஜோ பெண்கள் இவை இரண்டினாலும் கவரப்பட்டு சுலபமாகக் கிடைத்தார்கள். இது மீஜோ ஆண்களின் சுயகௌரவத்திற்கு மிகப் பெரிய அடியாக இருந்திருக்கவேண்டும். தீவிரமான விரோதத்திற்கும் எதிர்ப்பிற்கும் வித்திட்டிருக்க வேண்டும்.

தவிர அதிகாரிகள் ஊழல் மிக்கவர்களாக இருந்தார்கள். எல்லாவற்றிற்கும் லஞ்சம் வாங்கினார்கள்.மிஜோராம் வளர்வதற்கு பதில் அவர்கள் வளர்ந்தார்கள். நாங்கள் அங்கு சென்றபோது லஞ்சம் கொடுத்து எதையும் சாதித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் மீஜோக்கள் இருப்பது மாநில முதல்வரிலிருந்து கடைநிலை ஆள்வரை நம்பியது தெரிந்தது. மாநிலத்து அத்தனை அமைச்சர்களும், முதல்வர் உள்பட கட்டிட கன்டிராக்டர்களாகவும் இருந்தார்கள். என் கணவர் சுந்தரம் மாநிலத்தின் முதன்மை இஞ்சினியராக இருந்ததால் தினமும் ஒரு அமைச்சரிடமிருந்து ·போன் வரும் தனக்கு ஒரு திட்டத்தின் கான்டிராக்ட் கொடுக்கப்பட வேண்டுமென்று. உனக்கு எத்தனை லஞ்சம் வேண்டும் என்று வெளிப்படையாகக் கேட்பார்கள். லஞ்சம் வாங்காத சட்டப்படி வேலைபார்த்துப் பழக்கப்பட்ட சுந்தரத்தை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதனால் பின்னால் மிகப் பெரிய பிரச்சினை வந்தது.

குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. என் இளையமகனுக்குக் கம்பிளி சொக்காய் தேவைப்பட்டது. மீஜோ பெண்கள் இயந்திரத்தில் மிக அழகாக சொக்காய் தைய்ப்பார்கள். டிரைவர் தனக்கு ஒரு பெண்மணியைத் தெரியும் என்று என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் அந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்தேன். அந்த சந்திப்பிற்கு ஒரு தத்துவார்த்த விளக்கம் ஏற்படும் என்று அன்று சத்தியமாக நினைக்கவில்ல.
[தொடரும்]


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 3 : மஹாநகரத்தில் வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள்

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

வாஸந்தி


” நீ நல்லவனா கெட்டவனா?”
மழலைத் தமிழில் அந்தச் சிறுவன் கேட்பான். தனது ஆன்மாவே அந்தக் கேள்வியைக்கேட்டதுபோல்
கள்ளக் கடத்தல், கொலை என்று கண் சொடுக்காமல் செய்து வாழ்ந்திருந்த அந்த மனிதன் தடுமாறுவான்.
நெக்குருகிப் போன முகபாவத்துடன், ” தெரியல்லேப்பா, தெரியல்லே” என்பான். மணி ரத்னத்தின் நாயகன் படத்தின், மிக வலுவான காட்சி அது. சட்டத்தை மதிக்காமல் வாழ்ந்த ஒருத்தனின் செய்கையை கிட்டத்தட்ட மன்னிக்கும்,கதாபாத்திரத்திடம் அனுதாபத்தை ஏற்படுத்தும் காட்சி . துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் சாவான் என்பதற்கேற்ப அவன் பிறகு செத்தாலும் அந்தப் படம் சட்டத்தை மதிக்காதவனை ஹீரோ ஆக்கியது என்னவோ உண்மை. அப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கியதற்கு உணர்ச்சிமிகுந்த பாத்திரப்படைப்பும், வாழ்வில் திசைமாறிப் போகிறவர்கள் சந்தர்ப்பங்களின் கைதிகள் என்கிற செய்தியும்,பொதுவாழ்வில் அவன் போட்ட இரட்டை வேடமும் எல்லாவற்றிற்கும் மேலாகக் கமலஹாசனின் அற்புத நடிப்பும் ஒரு நிழல் உலக தாதாவை, சட்டத்தின் பிடியில் அகப்பட்ட ஒரு குற்றவாளியை, மன்னிக்கப் படவேண்டிய நபராக்கியது.அப்படிப்பட்டவர்களை அப்படிச் சித்தரிப்பது தார்மீகத்திற்கு எதிரானதில்லையா, சினிமாவின் தாக்கம் மிகத் தீவிரமானது என்பதால் இது பொறுப்பற்ற செயல் அல்லவா என்கிற கேள்வி கேட்கத் தோன்றாத வகையில் சிந்தையில் மயக்கமேற்படுத்திற்று.
அப்போது நான் தில்லியில் வசித்து வந்தேன். நாயகனைப் பார்த்தபோது படம் என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. அதுவரை அதுபோன்ற எல்லாவகையிலும் நேர்த்தியான தமிழ் படத்தை நான் பார்த்திருக்கவில்லை. இயக்கம், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு, கதை நகர்ந்த பாணி அனைத்திலும் அது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லாகப் பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு தில்லியில் நடந்த சர்வ தேச திரைப்படவிழாவில் அனைத்து வட இந்திய பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர்களால் நாயகன் பாராட்டப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான மிகச் சிறந்த பத்து படங்களுள் ஒன்றாகக் கணிக்கப்பட்டது. மணி ரத்தினம் அவரது டெக்னீக்கின் ஸ்டைலுக்காக நாடு போற்றும் இயக்குனரானார். அமெரிக்காவின் புகழ்பெற்ற தி டைம்ஸ் பத்திரிக்கை, சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த நூறு படங்களுள் நாயகனும் ஒன்று என்று சொன்னது.
பம்பாய் நிழல் உலகத்தின் தாதாக்களுள் ஒருவராகப் ‘புகழ்’பெற்றிருந்த, வர்தா பாய் என்று அழைக்கப்பட்ட தமிழர் வரதராஜ முதலியாரைப்பற்றின கதை அது [ முடிவு கற்பனையானது என்றாலும்]என்று சொல்லப்பட்டது. அன்றைய மும்பையில் கள்ளக்கடத்தல் மூலம் சாம்ராஜ்யம் எழுப்பியிருந்த ஹாஜி மஸ்தானும் தமிழர்தான். கடலூரைச் சேர்ந்தவர். மும்பையில் இருந்த எனது அண்ணனை சந்திக்க தில்லியிலிருந்து செல்லவிருந்தேன். அப்போது நான் இந்தியா டுடே தமிழ் இதழுக்கு அவ்வப்போது கட்டுரைகள் எழுதிவந்தேன். நான் மும்பைக்குச் செல்வதாக அலுவலகத்தில் சொன்ன போது சும்மா பொழுதைக்கழிக்காமல் ஏதாவது உருப்படியாக மும்பையைச் சார்ந்த கட்டுரைகள் எழுதேன் என்றார்கள். பத்திரிக்கையாளராக இருந்தால் இது சங்கடம் அல்ல, எங்கு சென்றாலும் கூடவே வரும் அரிப்பு.விடுமுறையைக் கழிக்கச் சென்றாலும் எழுத என்ன கிடைக்கும் என்று மனசு அலையும். யாரும் செய்யாததை நாம் செய்ய வேண்டும் என்று ஆவல் பிறக்கும். காஷ்மீருக்குச் சென்றபோது நான் இயற்கை அழகைப் பற்றி எழுதாமல் ·பாரூக் அப்துல்லாவை பேட்டி கண்டு எழுதினேன். மும்பை பயணம் என்றதும் எனக்கு மணிரத்னத்தின் நாயகன் படம் தான் நினைவுக்கு வந்தது. அப்போது வர்தா பாய் சென்னையில் நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டிருந்தார். ஹாஜி மஸ்தான் உயிருடன் இருந்தார். வரதராஜ முதலியாரின் வாரிசுகளையும் ஹாஜி மஸ்தானையும் பார்த்து விட்டு இன்றைய அவர்களது நிலையைப்பற்றி எழுதுகிறேன் என்றேன். தில்லி அலுவலகம் உற்சாகத்துடன் சரி என்றது. அத்துடன் ஸ்ரீதேவியையோ
ரேகாவையோ, அதிர்ஷ்டம் இருந்தால் [!] இருவரையுமோ பேட்டி காணலாம் என்று முடிவாயிற்று.
விடுமுறையைக் கழிக்க அண்ணன் வீட்டிற்குப் போகும் நினைவு முற்றிலும் விலகி பத்திரிக்கை பணிக்குச் செல்வதுபோல அன்றிலிருந்து
அதற்கான ஆயத்தங்களில் இறங்கினேன். நிழல் உலக தாதாக்களைப் பற்றி அதற்கு முன் பத்திரிக்கைகளில் வந்த கட்டுரைகளைப் படித்து அதை எழுதிய மும்பை பத்திரிக்கையாளர்களின் பெயர்களைக்குறித்துக்கொண்டேன்.மும்பைக்குச் சென்றதும் தான் என்னுடைய பணி அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை என்று உணர்ந்தேன். தாதாக்களைப்பற்றி விவரமறிந்த பத்திரிக்கையாளர்களை முதலில் சந்தித்தேன். சட்டப்படி நிழல் உலகக் குற்றவாளிகள் என்று இனம் காணப்பட்டாலும் அவர்கள் மக்களின் எதிரில் கௌரவப்போர்வை அணிந்து வருவதால் பத்திரிக்கையாளர்களைக் காண விரும்புவதில்லை என்றார்கள். இந்தியாவின் அன்றைய தங்கக் கட்டுப்பாட்டுக் கொள்கையினால் போதை பொருள் கடத்தலோடு,தங்கம் கடத்திவரும் வேலையில் நிழல் உலகம் அதிக லாபம் கண்டது. ரியல் எஸ்டேட்டிலும் பயங்கரமாக நுழைய ஆரம்பித்திருந்தது. ஹாஜி மஸ்தான் பொது மக்கள் முன் வேறு முகம் வைத்திருந்தார். சமூக சேவகராகக் கார்பொரேஷன் கௌன்ஸிலராக பொதுப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். வரதராஜ முதலியார் உயிருடன் இருந்த போது அவருக்கும் இரண்டு முகங்கள். மாதுங்கா மற்றும் தாராவி வாழ் தமிழர்களுக்கு அவர்தான் ரட்சகர். யாருக்கு எந்த குண்டர் குழுவிலிருந்து அச்சுறுத்தல் வந்தாலும், வாடகை அதிகம் கேட்டு வீட்டுச் சொந்தக்காரன் தொந்திரவு செய்தாலும் தமது குண்டர்களைவைத்து அவர்களை அப்புறப்படுத்தி பாதிக்கப்பட்டவரின் விசுவாசத்தை சம்பாதித்துக் கொள்வார். அது தவிர திருமணச் செலவுக்கு, மேல் படிப்பிற்கு என்று பல ஏழைத் தமிழர்களுக்கு உதவியிருக்கிறார். அந்த வட்டாரத்து மக்கள்
போலீஸைவிட வரத்பாயைத்தான் அதிகம் நம்பினார்கள். நிழல் உலகத்தில்[தங்கத்திலிருந்து போதைபொருள்வரை] கள்ளக் கடத்தலிலும் , அதிரடி ரியல் எஸ்டேட் விவகாரத்திலும் மற்ற தாதாக்களின் குண்டாயிசத்துக்குச் சற்றும் சளைக்காதவர்.ஒரு காலகட்டத்தில்,பம்பாயின் மிக சக்திவாய்ந்த நிழல் உலக தாதா முதலியார்தான். ஆனால் அவர் அதிகம் ஆசைப்பட்டார். அரசியல் தலைவனாக, மக்கள் தலைவனாகத் தன்னை உருவாக்கிகொள்ளும் பணியில் இறங்கினார். சிவ சேனை வளரும் சமயத்தில் அவர் அரசியல் செய்ய நினைத்ததுதான் அவரது செல்வாக்கு சரியக் காரணமாயிற்று. அவர் தமிழர் என்ற காரணத்தைச் சொல்லி விரோதம் வளர்க்கப்பட்டது. வாழவைத்த மண்ணை ஆளநினைக்கும் புல்லுருவி என்று ஓரங்கட்டப்பட்டார். அவரது உயிருக்கே அச்சுறுத்தல் வந்த நிலையில் சென்னைக்குக் குடிபெயர்ந்து தலைமறைவானர். முதலியாரின் மகன்கள் அவரது பாதையிலிருந்து முற்றிலும் விலகி ஏதோ பிசினெஸ் செய்வதாக அறிந்தேன். அவர்களது டெலிபோன் எண்ணை எப்படியோ கண்டுபிடித்து ஒரு வழியாகத் தொடர்பு கொண்டு வரதராஜ முதலியாரின் குடும்பத்தைப் பார்க்க விறும்புகிறேன் என்ற போது அவர்களது சம்மதத்தில் சந்தேகம் தொனித்தது. ஹாஜி மஸ்தானின் ·போன் கிடைக்கவே இல்லை. பழுது போல் தோன்றிற்று. முதலில் முதலியார் குடும்பத்தைப் பார்த்துவிடலாம் என்று அவர்கள் இருந்த மாதுங்காவுக்குச் சென்றேன். ஒரு சக்திவாய்ந்த முன்னாள் தாதாவின் வீடாக இருக்கவில்லை அது. எளிய ·ப்ளாட்டாக இருந்தது. அவருடைய மகன்கள் வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார்கள். மளிகைக்கடையோ புடவை வியாபாரமோ நடத்துபவர்கள்போல் இருந்தார்கள்.வீட்டில் நுழைந்ததும் கண்ணில் தென்பட்ட சுவர்களில் இருந்து முதலியார் வட்டக்குங்குமப் பொட்டும் மலர்ந்த சிரிப்புமாக என்னைப் பார்த்தார். அவரது பூஜை அறை என்று ஒரு அறையைக் காண்பித்தார்கள். இந்துக்கடவுள்கள் ஒருத்தர் பாக்கி இல்லாமல் மலர் மாலையும் சந்தன குங்குமமும் தரித்து சட்டங்களுள் வீற்றிருந்தன. ‘அப்பா ரொம்ப பூஜை செய்வாங்க’ என்றார் ஒரு மகன்.
‘மாதுங்கா விநாயக சதுர்த்தின்னா அப்பாதான் வட்டாரத்துக்கே செலவு செய்வாங்க.’ அவங்க உயிரோடு இருந்தப்ப, இந்த ரோடு அடைச்சு தினமும் அவங்களைப்பாக்க ஜனம் நிக்கும். வீட்டுக்குள்ளெ நுழையறதே கஷ்டம். யார் கஷ்டம்னு வந்து நின்னாலும் அவங்க கண் அசைச்சா போதும் தீர்ந்துடும்.’ அவங்களுடைய அசாத்ய செல்வாக்கைக் கண்டு பொறுக்காமெதான் கண்டமேனிக்கு அவரைப் பத்தி கதை திரிச்சிவிட்டாங்க. கள்ளக் கடத்தலா? சேச்சே, அதெல்லாம் கிடையவே கிடையாது. ரியல் எஸ்டேட் பிசினெஸ்தான். குண்டர்கள் படை வெச்சிருந்தாங்கன்னெல்லாம் சும்மாவானும் சொல்வானுக. நம்பாதீங்க. இப்படியெல்லாம் பேச்சுகிளம்பினதும்தான் அப்பா மனசொடிஞ்சு போனாங்க. அதுவே வியாதியாபோச்சு. தமிழ் நாட்டிலே சாகணும்னு விரும்பினாங்க. மெட் ராஸிலேதான் கடைசியிலே…”
தந்தை மேல் அசாத்திய பாசமுள்ள சாதுப் பையன்களாகத் தோன்றினார்கள். எங்கேயோ ஜனித்து மராட்டியத்தில் கால் பதித்து கிளைபரப்பி கிலியும் ஏற்படுத்திய அந்த மனிதன் ‘நல்லவனா கெட்டவனா’ என்கிற சந்தேகம் இவர்களுக்கும் தோன்றாமல் இருக்காது என்று நான் நினைத்துக் கொண்டேன்.
ஹாஜி மஸ்தானை பார்க்காவிட்டால் எனது கட்டுரை முழுமை பெறாது என்று எனக்கு இருந்தது.மஸ்தானைப் பார்க்கவேமுடியாது என்றார்கள் பத்திரிக்கை நண்பர்கள். மஸ்தானின் வீடு எங்கே என்று எனக்குத் தெரியும் why don’t you gate crash?’ என்றான் என்னைப் பார்க்க வந்திருந்த என் உறவுப்பையன் ஹரி. ‘இப்போது என்னோடு கிளம்புகிறாயா?’ என்றான்.
அப்போது மாலை 7 மணி. இருட்டிவிட்டது. ஆனால் அவனுடைய உற்சாகம் என்னைத் தொற்றிக்கொள்ள, கிளம்பினேன். ஹரி காரை மஸ்தானின் வீட்டிற்குச் சற்று எட்டி நிறுத்தினான். ‘ஒரு smugglerரின் வீட்டுக்கு முன்னாலெ யாராவது என் வண்டியைப் பார்த்தாங்கன்னா என் வேலை போயிடும்’ என்றான். நான் இறங்கி மஸ்தானின் வீட்டை நோக்கி நடந்தேன். அது ஒரு பெரிய பங்களா. ஷெஹ்னாய் வாத்தியமும் மக்கள் நடமாட்டமுமாக ஏதோ விசேஷம்போல் இருந்தது. வாசலில் இருந்த செக்யூரிட்டியிடம் நான் தில்லியிலிருந்து வந்திருக்கும் பத்திரிக்கையாளர், மஸ்தானைப் பார்க்கவேண்டும் என்றேன். மஸ்தான் இல்லை இங்கு என்றார் செக்யூரிட்டி. எனக்கு மிக ஏமாற்றமாக இருந்தது. எப்போது வருவார், அவரது மானேஜர் யாரையாவது பார்க்கலாமா என்ற கேள்விக்கெல்லாம் தெரியாது இல்லை என்று சொன்னபடி இருந்தார். கடைசியில் இந்தியா டுடே விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்து, இதை உள்ளே சென்று யாரிடமாவது காட்டுங்கள். எப்போது வரலாம் என்று சொல்லச் சொல்லுங்கள், எந்த நேரத்திலும் நான் வரத்தயார் என்று நைச்சியமாகப் பேசி அனுப்பினேன்.
சற்று பொறுத்து செக்யூரிட்டி வெளியில் வந்து, என்னுடன் உள்ளே வாருங்கள் என்றார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.
சலவைக்கல் பதித்த தரை பளபளத்தது. ஷெஹ்னாய் இசை பின்னணியில் மென்மையாக ஒலிக்க பெண்களும் குழந்தைகளும் பட்டுடையும் மல்லிகைப் பூவுமான அலங்காரத்தில் வளைய வந்துகொண்டிருந்தார்கள். சினிமா செட்டுக்குள் நுழைந்தது போல் இருந்தது எனக்கு. ரேழிகளும் நடைகளும் மிகுந்த ஒரு மர்ம் பங்களாபோல இருந்த அந்த மாளிகையின் பல வாசல்களைத் தாண்டி தனியாகப் பின்னால் கட்டப்பட்டு இருந்த ஒரு கட்டிடத்து கதவை லேசாகத் தட்டி உள்ளே செல்லும்படி சைகை காண்பித்தார் செக்யூரிட்டி. மஸ்தானின் உதவியாளரைப் பார்க்கவே இத்தனை ஜபர்தஸ்தா என்று வியந்துகொண்டே நான் உள்ளே நுழைந்தேன். ” நமஸ்தே!” என்று குரல் வந்த திசையில் பார்த்தேன். என் கண்களை நம்பமுடியவில்லை. ஹாஜி மஸ்தான் ஒரு கட்டிலில் சயனித்த நிலையில் அமர்ந்திருந்தார். இத்தனை சுலபமாக ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நிழல் உலக தாதாவாக இருந்த ஆளை என்னால் பார்க்கமுடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை.
” மன்னியுங்கள், என்னால் எழுந்து உங்களை வரவேற்க முடியவில்லை. இரண்டு நாட்களாக எனக்குக் காய்ச்சல்” என்றார் மஸ்தான் ஹிந்தியில்.
அவரது பேச்சும் பார்வையும் மிக சினேகிதமாகப் பாசாங்கு அற்றதாக இருந்தது எனக்கு அதிக வியப்பை அளித்தது.அவரைக் கதாப்பாத்திரமாகச் சித்தரித்து பல ஹிந்தி சினிமாக்கள் வந்திருக்கின்றன. அவற்றிற்கு சற்றும் சம்பந்தமில்லாதவராக நிஜ மஸ்தான் தெரிந்தார்.
நான் தமிழ் நாட்டைச் சேர்ந்தவள் என்றதும் கண்களில் மென்மை கூடியதாகத் தோன்றிற்று. தமிழில் பேசுவீர்களா என்றேன். தமிழ் மறந்து போச்சு என்றார் மெல்லிய புன்னகையுடன். ‘அம்மா உயிருடன் இருக்கிற வரையில் அவளுடன் பேசுவேன் .அவள் இறந்தபிறகு எனது மொழியும் போயிற்று.’
‘அம்மா எங்கே இருந்தார்?’
‘கடலூரில்’.
‘கடைசியாக எப்போது கடலூர் போனீர்கள்?’
‘ரொம்ப வருஷமாச்சு. இப்போ கனவு மாதிரி இருக்கு’.
‘இங்கே எப்படி வந்தீர்கள்?’
‘வேலை தேடிதான்.’
‘என்ன வேலை செய்தீர்கள்?’
‘கப்பல் துறையில் வேலை கிடைத்தது’.
கண்சொடுக்காமல் புன்னகை மாறாமல் அவர் பேசினார். நான் மெல்லக் கேட்டேன்.
‘கள்ளக்கடத்தல்தான் உங்களது முக்கிய தொழில் என்று சொல்கிறார்கள் !’
புன்னகையுடனே பதில் வந்தது. ‘ அதெல்லாம் சுத்த பக்வாஸ்[புரளி]. என்னுடைய விரோதிகள் சொல்வது. நான் ஏற்றுமதி இறக்குமதி பிசினெஸ் செய்து பணக்காரனானேன்.’
‘வர்தராஜ முதலியாரிடம் முதலில் சேர்ந்ததாகச் சொன்னார்கள்”
மஸ்தானின் முகபாவம் மாறவே இல்லை. ‘வரத் பாயை தெரியும். என் பிசினெஸ் வேற.’
‘இப்ப என்ன செய்கிறீர்கள்?’
‘இப்ப வெறும் சமூக சேவைதான்.சமூகம் நமக்குக் கொடுத்தை நாம திருப்பிக் கொடுக்கவேண்டாமா?’
மஸ்தான் தான் செய்யும் சேவைகளைப் பட்டியலிட்டுச் சொன்னார். கட்டில் காலில் பொறுத்தப்பட்டிருந்த பெல்லை அமுக்கி
ஆளைக்கூப்பிட்டு சில ஏடுகளைக் கொண்டு வரச் சொன்னார். ‘அப்படியே சகோதரிக்கு தேநீரும் கொண்டு வா. சகோதரி, தேநீர் அருந்துவீர்கள் தானே?’ என்றார் என்னைப் பார்த்து.
நான் அந்த நேரத்தில் தேநீர் அருந்தாது போனாலும் மஸ்தான் வீட்டு டீயை சாப்பிட்ட அனுபவம் இருக்கட்டுமே என்று சரி என்றேன்.
அப்போதுதான் அவர் அமர்ந்திருந்த தேக்கு மரக் கட்டிலுக்கு வெள்ளிக்கால்கள் என்பதை கவனித்தேன். அதன் உள்ளே தங்கக் கால்கள்
மறைந்திருந்தால் வியப்பதற்கில்லை. கள்ளக்கடத்தலில் அவர் கைதேர்ந்த கில்லாடி என்பதும் தொழிலில் எதிர்கொண்ட போட்டிகளை கொலை மிரட்டல் என்று சமாளித்தவர் என்பதும் எல்லாரும் அறிந்த உண்மையாக இருந்தாலும் தான் ஒரு பொறுப்புள்ள சட்டத்தை மதித்து வாழ்ந்துவரும் பிரஜையாக என்னிடம் காண்பித்துக்கொண்டு அதை அவரே ரசிப்பதாகவும் எனக்குப் பட்டது. பல பயங்கர ரௌடிகளை சந்தித்து அவர்களை பதம் பார்த்தவருக்கு நான் ஒரு சிறு கொசுவாகத் தோற்றமளித்திருக்கவேண்டும். உடனடியாக மிக அருமையான தேநீர் வந்தது.
நான் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டுக் கிளம்பி மீண்டும் அந்த மாளிகையின் முன்கட்டைத்தாண்டும்போது இரண்டு பகுதிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் முரண்பாடும் இல்லை என்று தோன்றிற்று. மும்பை நகரம் போல. பல முரண்களுடன் இசைந்து இயங்கும்
விசித்திர நகரம். அதன் முரண்களும் அவைப் பின்னிபிணைந்த வரலாறுமே சுவாரஸ்யம் மிகுந்த கதை.நிழல் உலகத்தைப் பற்றியும் சினிமா உலகத்தைப் பற்றியும் பேசும்போது அந்த வரலாற்றை அசைபோடாமல் இருக்கமுடியாது. தாதாக்களைவிட அதிக ஹோதாவில் இருக்கும் நடிக நடிகைகள். ரேகாவின் செகரட்டிரியைப் பலமுறை தொடர்புகொண்டபின் அவர் கடைசியில் வெடித்தார். ‘அது ஒரு பைத்தியம். லேசில் பேட்டி கொடுத்துடாது.!டைம் கொடுத்தாலும் அதை நம்பமுடியாது!’
எப்படியோ அன்றைய இன்னொரு முக்கிய தாரகை ஸ்ரீதேவியை மறு நாள் பார்க்க நேரம் கிடைத்தது. அவர் எப்படியோ என்று யோசனையாக இருந்தது.


Series Navigation

வாஸந்தி

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

வாஸந்தி


அமிருதா 2

காரணங்களும் காரியங்களும்

தமிழ் பேசாத மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு , அதாவது உணர்வுபூர்வமாக தமது மொழியுடன் தொடர்பு உள்ளவர்களுக்கு, எங்காவது தமிழ் ஓசைக் கேட்டால் அது எப்படிப்பட்டப் பரவசம் என்பது என்னைப்போல பெரும்பாலும் வெளி மாநிலங்களிலேயே வாழ நேர்ந்துவிட்டவர்களுக்குத் தான் புரியும். அதுவும் நம்மை அடையாளம் கண்டு ‘உங்களது சமீபத்திய கட்டுரையைப் படித்தேன்’ என்று வேறு ஒரு புதிய நபர் சொல்லிவிட்டால் கிறக்கமே ஏற்பட்டுவிடும்- ஏதோ அகண்ட உலகத்தின் விருதும் அங்கீகாரமும் கிடைத்ததுபோல.

விக்ரம் சந்திராவின் புத்தகவெளியீட்டில் உமாநாத் என்ற வேலூரைச் சேர்ந்த இளஞர் என்னருகில் வந்து என்னை அடையாளம் கண் டு கொண்டதைத் தெரிவித்துத் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது எனக்கு அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. உமாநாத் சொன்னபடிக்கு இரண்டு நாள் கழித்து என்னை வீட்டில் சந்திக்கவந்தார். உமாநாத் ஒரு ‘ ஸா·ப்ட் வேர் இஞ்சினியர்’. பெங்களூரில் இரண்டு ஆண்டுகளாக இருப்பதாகச் சொன்னார். தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்று பேச்சில் தெரிந்தது. தமிழில் உரைநடையில் கவிதை உணர்வுடன் கற்பனைக் காதலிக்கு/ தோழிக்குத் தனது லட்சியங்களை,எதிர்பார்ப்புகளை கடிதங்களாக எழுதி நூலாக வெளியிட்டிருக்கிறார். கனவு காணும் இளைஞர் என்று நான் நினைத்தேன். ஏதோ ஒரு தவிப்பில்இருப்பதாகத் தோன்றிற்று. ஒத்த கருத்தை உடைய நண்பர்கள் அவருக்குக் கிடைக்காததே அவருடைய பிரச்சினை என்று புரிந்தது.
மென்பொருள் கணினி உலகத்தில் யாருக்கும் மற்றவர்களுக்காக நேரம் இல்லை என்பது உண்மை. ‘எல்லாரும் மெஷினெப்போல ஆயிட்டாங்க’ என்றார் உமாநாத். அவருடன் இன்னும் மூன்று திருமணமாகாத தமிழ் இளைஞர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசிக்கிறார்கள். தினமும் ஹோட்டலில் சாப்பாடு. ஞாயிறுகளில் மட்டும் எல்லாருமாகச் சேர்ந்து சமைக்க முயற்சிப்பார்கள்.அதுவும் சில நாட்கள் உடல் அலுப்பினால் சரிவராது. ‘எங்களுக்கு ரிலாக்ஸ் செய்வது எப்படின்னே மறந்து போச்சு. ஆபீஸ் லீவுன்னா என்ன செய்யறதுன்னு பசங்க முழிக்கிறாங்க. எல்லாருக்கும் lap top’ தான் தோழன். அது மட்டும் இல்லேன்னா கை ஒடிஞ்ச மாதிரி ஆயிறும். வீட்டிலிருந்தாலும் ஆபீஸ் வேலை பாப்பம்’. அந்த,ச்சூழலில் யாரும் மென்பொருள் உலகத்தைத் தாண்டி எந்த புத்தகத்தையும் படிப்பதில்லை, வேறு ரசனைகளில் நாட்டமில்லை என்கிற ஆதங்கம் உமாநாத்தை வாட்டிற்று. பெங்களூரின் புகழ்பெற்ற மலர் பூங்காவான லால் பாக் எங்கிருக்கிறது என்று கூட அவர்களுக்குத் தெரியாது. காலையில் எட்டு மணிக்கு அலுவலகம் சென்றால் இரவு ஒன்பது பத்துமணி வரைக்கூட வேலை செய்கிறார்கள். தொழில் நுட்பத்தை அதிகரித்துக்கொள்ள என்னென்ன பரீட்சை எழுதவேண்டுமோ அத்தனைக்கும் அவர்கள் தயார். அதிகபட்சம் வேலை செய்தால் அந்த அளவுக்கு அடுத்த பிரமோஷன் உறுதி ஆகும். அல்லது இன்னும் பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். அவர்கள் எதிர்பார்த்து வந்ததை விட அதிக ஊதியம் கிடைப்பது அவர்களது ஆசையை விவஸ்தை இல்லாமல் தூண்டிவிடுகிறது.24 ,25 வயதுக்குள் 30,40 ஆயிரம் மாதச் சம்பளம் கிடைக்கிறது. ஸ்கூட்டருக்கு வக்கில்லாமல் வந்தவன், நான்கே மாதத்தில் கார் வாங்கிவிடுகிறான்.சொந்த ஊரில் யோசித்து யோசித்துச் செலவழித்தவன் இங்கு நூறு ரூபாயை ஒரு ரூபாய் போல் விட்டெரிகிறான். கடன் கொடுக்க நூறு வங்கிகள் வா வா என்று அழைப்பதால் கடன் எடுத்து 40 லட்சத்துக்கு பெங்களூரிலேயே ·ப்ளாட் வாங்கிவிடுகிறான். அவனது தாவலுக்கு எல்லையே இல்லாததுபோல் ஆகிவிட்டது. பெங்களூரின் ஆளுமை மாறுவதில் அவனுக்கு அக்கறை இல்லை. அதன் வளர்ச்சியை அவன் உபயோகித்துக் கொள்கிறான்.
சட்டென்று உமாநாத் கேட்டார்– ‘இங்கே இருக்கற லோக்கல் ஆளு, இதை எல்லாம் அவன் கண்முன்னால நடக்கறதைப் பாத்துக் கிட்டிருக்கான். அவன் இருந்த நிலையிலேயே இருக்க ,வெளியிலேந்து வந்த பொடியன்கள் கிடு கிடுன்னு வளந்துகிட்டே போறதைப் பார்க்கறான். அவனுக்கு வயிறு எரியுமா இல்லையா?’
இப்படி ஒரு software இஞ்சினியர் பேசி நான் கேட்டதில்லை.
‘நீங்கள்ளாம் படிச்சுட்டு வந்திருக்கீங்க, அதுக்குத் தகுந்தபடி வேலை கிடைக்கிறது. அதுக்கென்ன செய்யமுடியும்?’ என்றேன் நான்.
‘இவங்க அதைப்பத்தியெல்லாம் யோசிக்க மாட்டாங்க. அடேய், எந்த ஊரிலேந்தோ நம்ம ஊருக்கு வந்தவன், இங்க ஆளவந்தவன் கணக்கா டேராப் போடுறான், நம்ம நிலத்திலே சட்ட திட்டமா உக்காந்துட்டான்னுதான் நினைப்பாங்க. வெளியாள் வந்ததிலேந்து தன் நிம்மதி போச்சுன்னு நினைப்பான். காசை விட்டெரிய ஆளுங்க தயாராயிருக்கும்போது, விலை வாசி விஷம்போல ஏறுது. கறிகாய் விலை,
வீட்டு வாடகை எல்லாம் எக்கச்சக்கமாக எகிறிப்போச்சு.எங்க போனாலும் டிரா·பிக் நெரிசல். இந்த மாதிரி வேற எந்த ஊர்லேயும் நடக்கல்லே.”
உமாநாத்துக்குக் குற்ற உணர்வு இருப்பதுபோல் தோன்றிற்று. ஊர் மாறிப்போனதற்குத் தொழில் வளர்ச்சிதான் காரணம் வேலைக்கு வந்த இளைஞர்கள் இல்லை என்றாலும் கணினி யுகத்து இளைஞர்களின் தார்மீக அளவுகோல்கள் சரிந்து வருவது பற்றி அவர் கவலைப் பட்டதாகப் பட்டது. ‘பணம் பண்ணறதைத்தவிர வேற எந்த லட்சியமும் இல்லாதமாதிரி இருக்கு.ரசனை அழகியல் உணர்வு எல்லாம் செத்துட்டமாதிரி. ஏதோ ஒரு வெறியிலே சுத்திக்கிட்டிருக்காங்க. திடீர்னு இந்தக் software உலகம் கவிழ்ந்து போச்சுன்னா
என்ன ஆகும்?”
எனக்குச் சிரிப்பு வந்தது. இது அதீதமான கவலை என்று தோன்றிற்று. ‘Enjoy while the going is good’ என்பார்கள். வாழ்க்கை நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கேளிக்கைகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. முன்பு இந்திய சமூகத்தில் இல்லாத கருத்துச் சுதந்திரம் இளைய தலைமுறைக்கு இருக்கிறது. அத்தைகைய சூழலில் கெட்டசேதியே சொல்லும் ,நினைக்கும் திகில் ஜோதிடர்கள் போல, நவீன நாஸ்ட்ருடாமஸ்ஸாக இளைஞரான உமாநாத் ஆரூடம் சொல்வது எனக்கு வியப்பை அளித்தது.
‘என்ன வேணுமானாலும் நடக்கலாம்’ என்று உமாநாத் தொடர்ந்தார். ‘ பத்து வருஷத்துக்கு முந்தி இப்படி ஒரு மென்பொருள் புரட்சி நடக்கும்னு நாம கற்பனைகூட செய்திருக்கமுடியாது. அது மாதிரி ஒரு நாள் இது புஸ் வாணமாக வெடிச்சு நொறுங்கிப் போனாலும் போகலாம். அந்த மாதிரி ஒரு நிலைமைக்கும் நாம தயாரா இருக்கணும். பங்கு சந்தையிலே விளையாடறமாதிரிதான் இது.’
நான் சற்று நேரம் பேசவில்லை. உமாநாத்தின் பேச்சில் இருந்த கவலையும் பயமும் சற்று மிகையானவை, அவரது வயதுக்கு மீறியவை என்று அப்போது தோன்றினாலும், பிறகு அவரது வார்த்தைகளை அசைபோடுகையில் இத்தனைத் தீவிரமாக அவர் பேசுவதற்கு
அந்த உலகத்தைப் பற்றின நேரிடை அனுபவம் இருப்பதே காரணம் என்று புரிந்தது. மென்பொருள் தொழிலில் உள்ளவர்களுக்கு முப்பது வயதுக்குள் வரும் உடல் கோளாறுகளைப்பற்றி உமாநாத் கவலைப்பட்டார். மணிக்கணக்காகக் கணினியின் முன் உட்காருவதால் வரும் நரம்பு, முதுகெலும்பு உபாதையுடன் வேலை டென்ஷனினால் ரத்த அழுத்தம் தூக்கமின்மை , வேளைகெட்டவே¨ளைச் சாப்பாட்டினால் வயிற்று உபாதை ஆகிய தொல்லைகள் அதிகரித்து வருவதை பெங்களூரின் பல ஆங்கில நாளேடுகள் ஆய்வு செய்து விவரங்களை அளிக்கின்றன.
‘இது எங்க போய் முடியும்னு தெரியல்லே. கண்ணைமூடிக்கிட்டு இலக்கிலாமெ இளைய தலைமுறை போய்கிட்டிருக்கு.நம்மைச் சுத்தி எதிர்மறை உணர்வுகள் அதிகரிக்குது.”

உமாநாத் போல கரிசனப்படும் பத்து இளைஞர்கள் இருந்தால் ஒரு நகரத்துக்கு போதும் என்று நான் நினைத்துக்கொண்டேன். மென்பொருள் கணினி மையங்கள் பெருகும் சாத்தியங்கள் கொண்ட தமிழ் நாடும் வெகு விரைவில் கர்நாடகாவில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை அனுபவிக்க நேரும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு இப்போதிலிருந்தே முன்யோசனையுடன் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். நகரங்கள் நவீன உலகத்தின் மாற்றங்களுக்கு தம்மைத் தயார்படுத்திக்கொள்ள தொலைநோக்குடன் சரியாகத் திட்டமிடத் தவறுவதாலேயே வெறுப்பும் விரோதங்களும் வளர்கின்றன.
வளரும் நாடுகளும் நகரங்களும் உலகெங்கும் சந்திக்கும் சிக்கல் இது. எந்த அசாதாரண மாற்றமும் கலாச்சார வேர்கள் என்று நாம் நம்பும் ஆதாரங்களை அசைக்க வல்லது. நமது மண் நமது மொழி என்று நாம் பெருமையுடன் பாதுகாப்பதற்கு ஆபத்து என்கிற நினைப்பு மனிதன் நில ஆக்கிரமிப்பைத் தனது பிறப்புரிமையாக நினைக்க ஆரம்பித்த காலம் தொட்டு நம்மை அலைக்கழிப்பது. இதன் பொருட்டு நடந்திருக்கும் எத்தனைப் போர்கள் எத்தனை மரணங்கள் வரலாற்றின் ஏடுகளில் பதிவாகியிருக்கின்றன! ஆனால் விடுதலைப் போராட்ட காலத்தில் நாமெல்லோரும் இந்திய குடிமக்கள் என்று உணர்ச்சிவசப்பட்ட இந்தியர்கள், சுதந்திரம் வந்தபின் இது கன்னட நாடு ,இது மராட்டியம் இது தமிழ் நாடு என்று பிரித்துப் பேச ஆரம்பித்துவிட்டோம். நீருக்காகவும் மண்ணுக்காகவும் கலவரத்தில் ஈடுபடுவது சகஜமாகி வருகிறது.
காய்ந்த சருகுகள் தீப்பற்றுவதுபோல எது சாக்கு என்று பற்றிக்கொள்ள தெருமுனையில் கலவரம் தீவட்டி ஏந்தி காத்து நிற்கிறது. மொழிவாரியாக பூகோள எல்லைகள் வகுக்கப்பட்டதால் வந்த வினை என்று தோன்றுகிறது. அதனாலேயே நமது எல்லைக்குள் வந்த பிற மொழிக்காரன் நம்மைவிட வசதியாக வாழ்கிறான் என்றால் அதை நம்மால் சகித்துக்கொள்ளமுடியாமல் போகிறது.
கர்நாடகத்தில் ஏற்படும் கலவரங்களுக்கெல்லாம் இதுதான் அடிப்படைக்காரணமாகத் தோன்றுகிறது. மொழி அடிப்படைவாதம் கொஞ்சமும் இல்லாமல் இருந்த மாநிலத்தில் சில இலக்கியவாதிகளும் கலைஞர்களும் மொழி வெறியை அவ்வப்போது தூண்டிவிடுவது அவர்களது இயல்புக்கு விரோதமானதாக எனக்குப் படுகிறது. சந்தனக்கடத்தல் வீரப்பனின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு கன்னட நடிகர் ராஜ்குமார் பெங்களூர் வந்தபோது,இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியையாக சென்னையிலிருந்த என்னை தில்லி தலைமை அலுவலகம் பெங்களூருக்குச் சென்று விவரங்களை ஆங்கிலப் பதிப்பிற்கு எழுதும்படி கேட்டுக் கொண்டது. எனக்குக் கன்னடம் பேசவரும் என்பதால் ராஜ் குமாருடன் பிரத்யேக பேட்டி காண சௌகர்யமாக இருக்கும் என்றது. ராஜ்குமார் வந்து இறங்கிய ஜக்கூர் விமான தளத்தில் கூட்டம் முண்டிஅடித்தது. ராஜ் குமார் விமானதிலிருந்து இறங்கியதும்
தரையில் மண்டி இட்டு நிலத்தை முத்தமிட்டார். ‘ ஏ நன்ன கன்னட மாத்தே!’ [ எனது அருமை கன்னட தாயே!] என்று மண்ணை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டார். கன்னடக்காரர்களின் கூட்டம் அதைக்கண்டு நெகிழ்ந்து கண்ணீர் விட்டது. நாம் இருப்பது இந்திய மண் என்பதும் ,எல்லோரும் இந்தியர்கள் என்பதும் அடியோடு எல்லோரது பிரக்ஞையிலிருந்தும் விலகி, அந்நியனான தமிழனின் கூடாரத்தில் சிறைபட்டிருந்த ஒரு கன்னடியனின் விடுதலை போல பாவிக்கப்பட்ட அந்த காட்சி மிக அபத்தமாக எனக்குப் பட்டது. என்னுடைய உணர்வுகளுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத நிகழ்வாக , கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்திருந்த என்னை அது அந்நியப்படுத்தியது. ராஜ்குமார் அன்று அந்த வார்த்தைகளைச் சொல்லியிராவிட்டால் அவர் இறந்த அன்று கலவரத்தில் ஈடுபட்ட வெறியர்கள் தமிழ் எண்கொண்ட வாகனங்களை அடித்து நொறுக்கியிருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
மொத்தத்தில் சகிப்புத்தன்மை என்பது நமக்குப் போய்விட்டது.பன்முகக் கலச்சாரம் கொண்ட நாடு அதில் ஒற்றுமை கண்ட நாடு என்று நாம் பெருமை பட்டதெல்லாம் போய் அதுவே நமக்கு இப்போது சுமையாகப் போய்விட்டது. கன்னடப் படங்கள் ஓடாவிட்டாலும் அவர்கள் கல்விட்டெரிவது தமிழ் படங்கள் ஓடும் அரங்கங்களில். பெங்களூரில் கன்னடியர் சிறுபான்மையினர் என்பதும் தமிழும் ஹந்தியும் தெரிந்தவர்களே பெரும்பானோர் என்பதும் புரிந்துகொள்ளாமல் வரும் ஆத்திரம் அது. கன்னடியரே கன்னடப் படங்கள் பார்ப்பதில்லை என்றால் யாரைக் குறை சொல்லமுடியும்? மற்ற மொழி படங்களுக்குத் தடை விதிக்கவேண்டும் என்ற அபத்த கோஷங்களுக்குப் பின் இப்போது கன்னடப் படங்களுக்கு மட்டும் சலுகைக் கட்டண டிக்கெட் வசூலிக்கிறார்கள். இப்பவும் கூட்டம் ஹிந்திக்கும் தமிழுக்கும் தான் !
சகிப்புத்தன்மையின்மை என்பது எல்லாமாநிலங்களிலும் இருக்கிறது. தமிழ் நாட்டின் கலாச்சார பெருமைக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்தவர் பல வேற்று மொழிக்காரர்கள். கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான திருவைய்யாற்றில் வாழ்ந்த தியாகைய்யர் தெலுங்கர். தெலுங்கிலேயே கீர்த்தனைகள் செய்தாலும் தமிழ் நாட்டின் பாரம்பர்ய பொக்கிஷமாகவே அவைக் கருதப்பட்டு தமிழ் நாட்டு பாடகர்கள் பாடிவருகிறார்கள். வருஷா வருஷம் திருவையாறில் தியாகையரின் ஆராதனை நடக்கிறது. ஆராதனை நடக்கும்போது வருடந்தோரும் தப்பாமல் ஒரு சின்னக் கூட்டம் அங்கு வந்து தெலுங்கிற்கு எதிராகக் கோஷம் போடுகிறது. ஆனால் சங்கீதத்தை ரசிப்பவர்களுக்கு மொழி ஒரு தடையில்லை என்பதால் கலவரம் வெடிக்கவிடுவதில்லை.
தேசிய கீதமாக மிக எழுச்சியூட்டும் பாடலாக விடுதலைப் போராட்டத்தின் போது கருதப்பட்ட, பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதி நூற்றாண்டு காணும் வந்தே மாதரம் பாடல் சமீபத்தில் எத்தனைப் பெரிய சர்ச்சையாகிவிட்டது! நூற்றாண்டு தினமான செப்டம்பர் 7 அன்று எல்லா பள்ளிகளிலும் அது பாடப் படவேண்டும் என்று யோசனை இல்லாமல் இந்திய அரசின் கல்வித் துறை ஒரு ஜி.ஓ அனுப்ப அனர்த்தம் ஆயிற்று. இந்திய தேசத்தை ஒரு தாயின் வடிவத்தில், தேவியின் சொரூபமாகப் வந்தேமாதரம் பாடுவதால் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத, அல்லா ஒருவரே வணக்கத்திற்குரியவர் என்று நம்பும் முஸ்லிம் முல்லாக்கள் முஸ்லிம்கள் அதைப் பாடக்கூடாது என்று தடைவிதித்து ஆட்சேபித்ததில் சர்ச்சை வெடித்தது. பல முஸ்லிம் குழந்தைகள் அதை வெறும் தேசியகீதமாக நினைத்து அழகாகப் பள்ளிகளில் பாடுவதை சில தொலைக்காட்சி சானல்கள் படம்பிடித்துக் காண்பித்தன. தமிழர் ரெஹ்மானின் வந்தே மாதரம் பாடல் அடிக்கடி அன்று ஒளிபரப்பட்டது. அதைப் பார்த்தபோதெல்லாம் நெஞ்சு நிமிர்ந்து கண்கள் பனித்தன– காரணம் புரியாமல்.

[தொடரும்]


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி