மக்கள்தெய்வங்களின் கதைகள்-6 -பிச்சைக்காலன் கதை

This entry is part of 46 in the series 20041021_Issue

அ கா பெருமாள்


7. பிச்சைக்காலன் கதை

காஞ்சி நகரில் படைத்தலைவானாக சமர்த்தன் என்ற மறத்தலைவன் இருந்தான் . அவன் நாட்டில் பிச்சை என்ற மறத்தி வாழ்ந்தாள். மிகச்சிறந்த அழகி அவள். அவளது அழகைக் கண்ட மாடப்பன் என்ற மறவன் ஆசைகொண்டு மாலையிட இசைந்தான். திருமணம் நடந்தது. மாடப்பன் அவளை மணந்து ஊற்றுமலைக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் அஙகு மகிழ்வாக வாழும் நாளிலே பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு அரிதிப்பிள்ளை எனப் பெயரிட்டனர். பிச்சை அம்மாளுக்கு இன்னொரு ஆண் குழந்தையும் வேண்டும் என்ற ஆசை. அதற்காக மாடப்பன் தவம் இருந்தான்.

அவளது பெருந்தவத்திற்கு இறைவன் இரங்கவில்லை. அவள் குமரிப்பதியில் நீராடி இறைவனை வேண்டிப் பார்ப்போம் என்று முடிவு செய்து தென்குமரிக்குச் சென்றான். அம்மனை வணங்கிவிட்டு தக்கலை வழி திருவனந்தபுரம் வந்தாள். கோயில் செல்லும் வழியில் வழியில் குறமகள் ஒருத்தி பிச்சை அம்மாளைக் கண்டு குறி சொன்னாள். அவள் உனக்கு ஒரு மகன் பிறப்பான் அவனுக்குத் தென்காசி வன்னியப்பன் பெயரை வைப்பாய். அவன் வீரமானவனாகவும் புகழ்மிக்கவனாகவும் இருப்பான் என்றாள்.

நாட்கள் பல சென்றன. மாதம் 10 கழிந்தது. நிறைமாத கர்ப்பிணி பிச்சையம்மாள் ஆண் மகவு ஒன்றைப் பெற்றாள். அழகிய குழவியைக் கண்ட தோழிகள் குரவை இட்டனர். மகிழ்ந்தனர். குழந்தைக்குச் செய்யவேண்டிய கிரியைகளைச் செய்தனர். தென்காசி வன்னியப்பன் நினைவாக

குழந்தைக்குப் பிச்சைக்காலன் என்று பெயரிட்டனர்.

அரிதிப் பிள்ளையும் பிச்சைக்காலனும் அழகொளிர வளர்த்தனர். அவனது பிறந்த நாள் விழாவிற்கு எல்லா மறவர்களையும் அழைத்து மாடப்பன் அறுசுவை உண்டி படைத்தான். அன்று மறவர்கள் ‘ ‘நாம் நாளை எல்லோரும் நிரை மறிக்கப் போவோம் ‘ ‘ என்றனர். [மறவர்கள் கூட்டமாகச் சென்று பிறரது கால்நடைகளை கவர்ந்துவருதல் ஒரு சடங்கு. அதற்குரிய பிணைத்தொகையைப் பெற்றுக் கொண்டு கால்நடைகளைத் திருப்பித்தருவார்கள். சங்க காலத்தில் இது ஆநிரைகவர்தல் என்று அழைக்கப்பட்டது] மறுநாள் மாடப்பன் தலைமையில் பலவகை ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மறவர்கள் நிரை மறிக்கப் போனார்கள்.. ஆனால் கால்நடைகளுக்கு உரிமை உடைய தோட்டிகளோ பெருந்திரளாக வந்து மாடப்பனைக் கொன்றுவிட்டார்கள். மற்றவர்களும் அவர்களைக் கண்டு அஞ்சி திரும்பிவிட்டனர்.

இந்தச் செய்தியை அறிந்தாள் பிச்சைக்காலம்மை. மனம் உடைந்து ஒப்பாரிவைத்து அழுதாள். கணவனை இழந்தபிறகு என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ஊர்விட்டு புறப்பட்டாள். களைப்புடன் நடந்தாள். பெரியாற்றைக் கடந்து நடந்தாள்.

பசித்தபோது வழியில் உள்ள ஊர்களில் பிச்சை எடுத்தாள். தோட்டங்களிலும் சாலையோரங்களிலும் வளர்ந்துகிடக்கும் அறக்கீரையைப் பறித்து உப்பில்லாமல் அவித்துத் தின்றாள். மகன் பிச்சைக்காலன் ‘ அம்மா பசிக்கிறதே ‘ பசி என்று அழுதான். அவள் ‘ மகனே நாஞ்சில் நாடு செல்வோம். அது வளம் மிக்க மண். அங்கே போநால் உன் பசி ஆறும் அமைதியாக இரு ‘ என்றாள்.

நடந்து நடந்து பல இடங்களைக் கடந்து கோட்டாற்றுக்கு [நாகர்கோவில் ] வந்தாள். அங்கு நிலப்பாறை பணிக்கர் என்பவரிடம் சென்று ‘பணிக்கரே கணவனை இழந்தவள். குழந்தைகளுடன் அனாதையாக இங்கு வந்திருக்கிறேன். எனக்கு வாழ வழி காட்டும். பலநாள்ப் பசியால் தவிக்கிறேன் ‘ என்றாள்.

பணிக்கர் ‘ நான் ஒன்றும் செய்ய முடியாது. சூரநகரில் சேனைக்குட்டி நாடார் என்பவர் இருக்கிறார். மிகுந்த செல்வாக்குடையவர். அவரிடம் சென்றால் உனக்கு வாழ வழி காட்டுவார் ‘ என்றார்.

பிச்சையம்மாளும் பல ஊர்களைக் கடந்து சூரநகர் வந்தாள். அங்கே வாழ்ந்த நிலக்கிழாரான சீரங்கம் சேனைக்குட்டி நாடாரைக் கண்டாள். தன் வரலாற்றை எடுத்துரைத்தாள். நாடாருக்கு அவள் மீது இரக்கம் பிறந்தது. ‘ எனக்குப் பிள்ளை இல்லை. அந்தக் குறையைக் போக்க நீ வந்தாய். கவலை விடுக ‘ என்றார். அவர்களுக்கு இருக்க இடம் கொடுத்தார். நல்ல ஆடை கொடுத்தார். தன் தோப்பு துரவுகளைக் கட்டிக் காப்பாற்ற உதவுங்கள் என்றார் . அவர்களும் அவருக்கு உதவுவதற்காக அவரது வீட்டின் அருகே குடியமர்ந்தனர்.

பிச்சைக்காலனுக்கு வயது 12 ஆனது. சேனைக்குட்டிநாடாரின் தோப்பையும் வயலையும் வீட்டைஉம் கவனிக்கும் பொறுப்பை அவனே செய்தான். வேலைக்காரர்களை அடித்து வேலை வாங்கினான். மாடம்பிமார்களுக்குத் தப்பாமல் விருந்து வைத்தான். எல்லாம் அவனது கட்டுப்பாட்டில் இருந்தது. அனைவரும் அவனை அஞ்சினார்கள்.

சேனைக்குட்டி நாடாரிடம் பண்ணையாட்கள் சென்று ‘ ‘ ஐயா எங்கள் குறைகளைக கேளுங்கள் . எங்களுக்கு பசி பொறுக்கவில்லை. புதிய மறவன் எங்களைக் கொல்லுகிறான். நல்ல தீனி தருவதில்லை. மாட்டை அடிப்பதுபோல அடிக்கிறான். ‘ ‘ என்றனர். அவர் மனதில் பிச்சைக்காலனைப்பற்றி தவறான எண்ணம் ஓரளவு உண்டாயிற்று. ஆனால் பிச்சைக்காலன் பண்ணை ஆட்களை வைத்து வயலைப் பயிரிட்டுச் செழிக்க வைத்திருந்தான்.லாகவே அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவரது ஊழியர்கள் அனைவரும் பிச்சைக்காலனை வெறுத்து தருணம் பார்த்து இருந்தனர்.

இந்நிலையில் ஒருநாள் வயலில் நல்ல பாம்பு வந்தது. அதைக்கண்ட பிச்சைக்காலன் ‘ ‘ இது கெட்ட சகுனமல்லவா, இதனால் நமக்கு எதேனும் கெடுதி வருமோ ‘ ‘ எனக் கவலையுற்றான்.

அவ்வூரைச் சேர்ந்த கள்ளச்சிலம்பன் என்ற நாடான் எப்படியாவது பிச்சைக்காலனை அழிக்க வழி பார்த்தான். காரணம் அவன் அனைவரையும் சுரண்டி வாழ்பவன். அவனுக்குப் பிச்சைக்காலன் வந்தபிறகு வருமானம் குறைந்தது. இந்தநிலையில் வயல் நல்ல விளைந்து, பயிர் அறுவடை ஆகும் நேரமும் வந்தது. அவ்வூரைச்சேர்ந்த காவேரி என்பவளிடம் பிச்சைக்காலன் ‘நாடாரை வயலின் செழிப்பை வந்து பார்க்கச் சொல் ‘ என்று ஓலை எழுதினான். அவரும் வந்தார்.

கதிர் விளைந்து நின்றதனால் பிச்சைக்காலன் இரவு காவலுக்குச் சென்று வருகிறேன் என்று கூறிப் புறப்பட்டான். மேலே துப்பட்டா போட்டுக்கொண்டான். கருமறத்தி அவனுக்குக் கோழிக்கறி வைத்துக் கொடுத்தாள்.

கள்ளச்சிலம்பனோ அவனை அழிக்க தன் கூட்டாளிகளுடன் சிந்தித்தான். அவர்கள் காவேரி நாடாத்திக்கும் பிச்சைக்காலனுக்கும் தொடர்பு உண்டு என்று கூறி சண்டை மூட்டிவிடுவதே நல்லவழி என்று முடிவு கட்டினர். அதற்கு ஆதாரமாக பிச்சைக்காலன் எழுதிய கடிதத்தை சாட்சியாக்கினார்கள்.

எல்லோருமாகக் கூடி சேனை குட்டி நாடார் வாழ்ந்த புளிக்குளத்துக்குச் சென்றனர். சேனைகுட்டி நாடாரைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதனர். நாடார் அவர்களைப் பார்த்து ‘ ‘ நடந்ததென்ன பிச்சைக்காலனுக்கு ஆபத்தா ? சொல்லுங்கள் ‘ ‘ என்றான். அவர்கள் ‘ ‘எப்படிச் சொல்லுவோம். நாக்கே கூசுகிறதே. ஐயோ நம் நாடாத்தி பிச்சைக்காலனுக்கு கோழிக்கறி கொடுத்தாள். அதன்பின் இருவரும் கூடியிருந்தனர். மகிழ்ந்தனர். வேறு என்னவெல்லாமோ செய்தனர் ‘ ‘ என்றனர்.

அதைக்கேட்ட நாடார் கொதித்தெழுந்தார். ‘ குலமுறை தவறிய மறவனைச் சும்மா விடக்கூடாது. இப்பொழுதே அவனைக் கட்டிப்பிடித்து இழுத்து வாருங்கள் ‘ ‘ என்றார்.

அவர்களும் உற்சாகமாக ‘ ‘சரி என்று கூறி விடை பெற்றனர். அவர்கள நேராகப் பிச்சைக்காலனிடம் சென்று ‘ ‘ உன்னை நாடார் அழைக்கிறார் ‘ என கூறினர். அவனும் எங்கே அவர் என்ற கேட்காது அவர்கள் பின் சென்றான்.

சாயக்காரர் மடத்தில் நாடார் இருந்தார். அவர் அருகே சென்றான் பிச்சைக்காலன். அப்போது கள்ளச்சிலம்பன் ஓடிவந்து பிச்சைக்காலனைக் கட்டினான். பிச்சைக்காலன் திகைத்தான். ‘ ‘ இந்த நடு இரவில் என்னை ஏன் கட்டுகிறீர்கள் ? என்ன ஆயிற்று ? நான் என்ன தவறு செய்தேன் ? ‘ என்றான்.

அவர்கள் அவனை கட்டிவைத்து அடித்தார்கள் ‘ ‘ என்னைக் காப்பாற்ற யாரும் இல்லையா ? இங்கே நியாயம் பேச யாருமில்லையா ‘ ‘ என்று பிச்சைக்காலன் கதறினான் . ஆனால் அவர்கள் அவனைக் கட்டி இழுத்துச் சென்றனர். ஊருக்கு வெளியே ஒரு குளத்தின் கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே வைத்து அவனை அரிவாளால் அவனை வெட்டினர். தூரத்தில் ஒரு பனை ஏறி அவனைவெட்டுவதையெல்லாம் பனையிலிருந்தபடி பார்த்தான்.

வெட்டுப்பட்டு விழுந்த பிச்சைக்காலன் ரத்தம் வழிய அலறியபடி அங்கே இருந்த அய்யனார் கோவிலில் வந்து விழுந்தான். அய்யனாரை அவ்ணங்கி ‘ ‘ எனக்கு நீதி கிடைக்கவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு நியாயம் செய்ய நீயே துணை ‘ ‘ என்று அழுதான். அவனுடைய குரல்கேட்டு அய்யனார் கண்திறந்தார். ‘ ‘நீ அழாதே. நான் நியாயம் அறிந்தவன். உனக்கு என்ன வேண்டும் ? ‘ என்று கேட்டார்

பிச்சைக்காலன் அய்யனாரிடம் வரிசையாய் வரங்கள் கேட்டான். ரத்தஆறு வடிய நின்ற அவனுக்கு அய்யனார் வரங்கள் கொடுத்தார். அவ்வரங்களின் உதவியால் பிச்சைக்காலன் ஆவியாக மாறி ஊருக்குத் திரும்பினான். தன்னை சதிசெய்து கொன்றவர்களை தேடித்தேடிப் பழி வாங்கினான். அவர்களுடைய குலங்கள் அஞ்சி நடுங்கின. பனைமீதிருந்த பனையேறி எல்லா தகவலையும் சொன்னான். அதைக்கேட்ட உறவினர்கள் பிச்சைக்காலனை அங்கே நடுகல்லாக நாட்டி தெய்வமாக வணங்கினார்கள். பலி தந்து அவனை ஆறுதல்கொள்ளச் செய்தார்கள். அடங்கிய பிச்சைக்காலன் அவ்வூரிலேயே தெய்வமாக அமர்ந்து அவர்களுக்கு அருள்பாலித்தான்

—-

Series Navigation