மூன்று கவிதைகள்

This entry is part 3 of 3 in the series 19991128_Issue

பாவண்ணன்1. வாடகை வீட்டில் வளர்த்த மரம்

விட்டுச் சென்றதும் குடிவைத்துக் கொள்ள
ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்
நாள்கடந்து போவதை ஞாபகமுட்டுகிறீர்கள்

அன்புக்குரிய உரிமையாளரே
பெட்டிகள் படுக்கை மின்விசிறி
தொலைக்காட்சி அடுப்பு எரிவாயு
முட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம்
வாடகை வண்டி வந்ததும்
ஏற்றிக் கொண்டு கிளம்புகிறோம்

கொண்டுசெல்ல முடியாத சொத்தாக
பின்புறத்தில் நிற்கிறது ஒருமரம்
எங்களை நினைவூட்டினாலும்
எங்களைப் போலிருக்காது அது
குழாயில் தண்ணீரை ஏன் நிறுத்தினீர்கள்
என்று ஒருபோதும் கேட்காது
மின்சார நேரத்தைக் கூட்டச்சொல்லி
முற்றத்தை மறித்துக் குழையாது
மழை புயல் கஷடங்களை முன்வைத்து
பழுது பார்க்கவும் வேண்டாது
நேருக்குநேர் பார்த்தாலும்
எவ்வித சங்கடமும் தராது

வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்
மரத்துக்காவது கருணை காட்டுங்கள்


2. அப்பாவிச் சாட்சியின் கேள்விகள்

நெல்லும் கரும்பும் விளைந்த வயலில்
அடுக்கு மாளிகையின் அஸதிவாரப் பள்ளத்தை
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்
எந்திரமாய் இயங்கும்
பெண்களின் கைகளில்
மண்சட்டிகள் மாறிக் கரையேறுகின்றன
ஆண்கள் உயர்த்தும் கடப்பாறைகள்
பூமியின் மார்பைக் குத்திக் கிழிக்கின்றன

வேகத்தைக் கண்டு வியப்பில் கண்மலர
வேடிக்கை பார்க்கிறான் ஒரு சிறுவன்
பச்சை வயல்களை ஏன் அழிக்கிறீர்கள்
என்று அவன் கேட்கவில்லை
நெல் இல்லாமல் இருப்பது எப்படி
என்று அவன் கேட்கவில்லை
இந்த உலகம் இருக்குமோ
என்றும் அவன் கேட்கவில்லை
இனி தும்பிகளை எங்கே போய்த்தேடுவேன்
என்றும் அவன் கேட்கவில்லை

இன்று அவன் ஒரு அப்பாவிச் சிறுவன்
மோசடிக் கும்பலின் நாசகாரியம்
முடிவுற்ற பின்னாலாவது
இக்கேள்விகளை முன்வைக்கக் கூடும் அவன்
அப்போது உலகம் தரும் பதில் என்ன ?


3. ஒரு சதியாலோசனை

தோப்பென விரிந்த இடத்தில்
வீடுகளின் தொகுப்பு இப்போது
எஞ்சிய மரமொன்றின் கிளையொன்றில்
தொங்கிக் கொண்டிருந்தது தேன்கூடு
நாடோடியின் முதுகில் தொங்கும்
சாக்கு முட்டையின் தோற்றம்
ஒரு வால் சிறுவனின் துடுக்குப் பார்வையில்
எப்படியோ பட்டுவிட்டது அது
அடுத்த நொடியே செய்தி பரவ
அணிதிரண்டெழுந்தது ஆட்கூட்டம்
உப்பிய அதன் தோற்றத்தைக் கண்டு
அறுந்து நிலத்தில் விழுவது போன்ற
அதன் கோலத்தைக் கண்டு
கூட்டம் சற்றே பின்வாங்கியது
மனிதனின் காவலை மீறி
இயற்கை செய்த சதி என்றார்கள்
பிள்ளைகளை ஓரமாய் இழுத்து
எச்சரிக்கை செய்தாள் ஒருகிழவி
தேனீக்கள் கொட்டினால்
என்னென்ன ஆகுமென்று விவரித்தார் இன்னொருவர்
அதைக் கலைப்பதற்காகவே ஜென்மம் எடுத்ததுபோல்
ஆவேசத்தில் துடித்தது ஒரு வாலிபம்
அதுபாட்டுக்கு அது
நமது பாட்டுக்கு நாம்
அப்படியே இருப்போமே என்றேன் நான்
அனுபவித்தவனுக்குத்தான் வலி தெரியும் என
ஆர்ப்பரத்தது ஒரு தொண்டை
நம் இடத்தில் அதற்கென்ன வேலை என
நாக்கு வறளக் கத்தியது
அதற்குரிய இடத்தில்தான் நாம் இருக்கிறோம்
என்று முணுமுணுத்தேன் நான்
கொஞ்சநேரம் சும்மா இருடா என்று
உடனடியாக என் வாய் முடப்பட்டது
குறவன் முலம் கூட்டை அழிக்கலாம்
தேனும் கிடைக்கும் என்றாள் நடுவயசுக்காரி
அந்த யோசனை அப்படியே ஏற்கப்பட்டது
அமாவாசைக்கு முன் அழிப்பது நல்லதென்றார்கள்
இப்போதே குறவனிடம் சொல்லி வைக்கலாம் என்றார்கள்
மனிதர்கள் தீட்டும் சதியை
தேனீக்களுக்குத் தெரிவிக்கும் வழிதெரியாமல்
திகைத்து நின்றேன் நான்

***

Thinnai, 1999, November 28

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< தாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி

{ Comments are closed }