அப்பாஸின் நான்கு கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

அப்பாஸ் (தொகுப்பு பாவண்ணன்)


1. நாளை

எப்படி வேண்டுமானாலும்
நீ அவைகளைப் பிடித்துக்கொள்
உனது பிஞ்சு விரல்களில்
அவை படபடப்பதே இல்லை
பயமேதும் ஏல்லாமல்
அவை உன் தலையிலும்
முதுகிலும் அமர்ந்து கொள்வதும்
பின்பு அவைகளை
நீ பிடிப்பதும்
விட்டு விடுவதும்
கைகொட்டி சிரிப்பதும்
புரண்டு விழுந்து எழுந்து
ஜன்னல் கம்பிகளின் ஒளியளில்
நீ
அவைகளை விரட்டித் திரிவதும்
பயமேதும் இல்லாத உனது விளையாட்டு
வண்ணத்துப்பூச்சியே
நாைளுயும் வா

2. குறிப்பு

அவள் விசாரித்துக்கொண்டே இருக்கிறாள்
தன் ஞாபகக்குறிப்புகளை
நீ எங்கே போனாய்
என்ன பேசிக்கொண்டிருக்கிறாய்
யார் அது
ஏன் தாமதம்
இரவு அமைதியாய் இருக்கிறது
பறவைகள் துாங்குகின்றன
அவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்
அவள் ஞாபகத்தில்
கொத்தப்படாத ஒரு பூ
பூத்திருக்கிறது அவனுள்

3. கோடுகள்

நான் இல்லாத வேளை
நீ என்ன செய்துகொண்டிருந்தாய்
என் மகளே
வயலின் இசைத்துக்கொண்டு
தொலைபேசியில் உன் நண்பர்களோடு
அறையினுள்
அல்லது
உனது விரல்களில் வழியும்
வர்ணங்களின் கோடுகளோடு
அப்படியேதான்
நான் இல்லாத வேளையில்
என்ன செய்துகொண்டிருக்கிறாயோ
அதுவே அதுவே
உனது வேளை
என் மகளே

4. நண்பகல்

என்னைக் கேட்காமலேயே
எனது அறையினுள் வந்துவிடுகிறது
சப்தமற்ற
இந்த நண்பகல்
பின் மதிய வேளையில்
வெளியேறும் பொழுதும்
என்னிடத்தில்
சொல்லிக்கொள்வதே இல்லை
கேட்காமலும் சொல்லிக்கொள்ளாமலும்
வரும்போகும்
நண்பகலைக்காண
நீயும் ஒருமுறை
வா
எனது மகளே

அச்சாக்கம் :paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்