மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

என். விநாயக முருகன்


யாரும் எழுதிவிடலாம்
————————————–
யாரும் எழுதிவிடலாம்.

கொஞ்சம் சிகரெட்.
கொஞ்சம் தேனீர்.

கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் பணம்

கொஞ்சம் தனிமை
கொஞ்சம் வறுமை

கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் நெருப்பு

கொஞ்சம் காமம்
கொஞ்சம் ஞானம்

கொஞ்சம் வாழ்க்கை
கொஞ்சம் மரணம்

அப்படியே
கொஞ்சம் கவிதையும்
கிடைத்துவிட்டால்
யாரும் எழுதிவிடலாம்.
ந‌ல்ல கவிதையை

சந்திப்புகள்
——————
எப்போதும்
சந்திக்க விரும்புகின்ற
நபர்களை பொறுத்தே
நீளுகின்றன
எல்லாச் சாலைகளும்

சந்திப்புகளுக்கான
காரணங்களை பொறுத்தே
சுவாரஸ்யமாகின்றன
எல்லா சந்திப்புகளும்

திரும்பி வரும்
சாலைகள் எங்கும்
சிதறியோடுகின்றன
எல்லா சந்திப்புகளும்
எப்போதும்

எதிர்பாராதது
———————
என் கவிதையை
ரசித்தவர்.
அதன் படிமத்தை
விமர்சித்தார்.
சொற்களின் ஆழத்தில்
உறங்கும் மௌனத்தில்
மூழ்கினார்.
இந்த இடத்தில்
இந்த வார்த்தை தேவையில்லை
அன்பாக சுட்டிக்காட்டினார்.

இறுதியில் கேட்டது
நானே எதிர்பாராதது
ஆமா.. ஒரு கவிதைக்கு
எவ்வளவு கிடைக்கும்?


navina14@hotmail.com

Series Navigation

என். விநாயக முருகன்

என். விநாயக முருகன்

மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

விஜய்கங்கா


1) பாகை 360

வேட்டைக் கணை
கண்டு மீள்கணத்தில்
வேற்றிசை திறம்பிடும்
பட்சிகளின் பயண வரிசை

நகர கோலாலம் இறங்கும்
இரவின் நுனியில்
கோரகம் புரிகிறது
செங்கோகயம் குளத்தினின்றும்

மேற்பாதை சூரியன்
செங்கடலில் குளித்தெழுந்திட
தெற்கே
சண்டு நிறைந்த தெம்பலில்
வெந்நாரை துயில் கலைவதால்
அயிர்த்து விரைகிறது ஒரயிலை

புள்ளிபோல் தோன்றி
புழுதியாய் கிளம்புகிறது
சாலைகளில் வரத்து

நின்ற பாகை தொடங்கி
சுழலும் காட்சிகள்
முற்றிடும்
அம்முதற்பாககையில்
வந்தயரும் பார்வையோ
வேண்டுகிறது ஒரு வேகத்தடையினை

***

2) கரங்கள்

எம் கரங்கள் வேற்று
நிறமுடையவைதான்

இளஞ்சிவப்பாய் இலகுவாய்
இல்லாம்ற் இறுகி
கன்றி விரல்கள் வடிவங்கள் இழந்து
நகங்கள் உடைந்து தேய்ந்து
உறுதியுடன் செயல்படும்
திறத்தை அறிந்தவை
இல்லாமை கண்டு அஞ்சாதவை

எதிர்பதற்காய் ஓங்குபவை அல்ல
அணைப்பதற்காய் அவா உறுபவை
உயர்வதற்காய் செயல்படுபவை

தினமும் உம்முன் நீட்டப்படுகின்றன
உங்கள் நேசங்களுடன் கைகோர்க்க
உம்மையும் சேர்ந்து அரவணைக்க

***

3) ஒலி வெளி காட்சி

இசையாக வடிந்திடினும்
வசையாக மீச்சுடினும்
ஒலியோடு இணைந்து
வளியோடு அடர்ந்து திரிந்து
நீரிலியில் சிதறி உடைந்து
எதிரொலிகளில் சப்தங்கள் திரிந்து
எதிர்ப்படும் ஒலி வாங்கிகளில் விரிந்து பரந்து
செல்லுமிடம் அடையும் பொழுது

வார்த்தைகள் ஏனோ வித்தைகளாய்
பல நிறங்கள் தோய்ந்து
முதற் அர்த்தம் இழந்து
வெறும் சொற்களாகி விடுகின்றன
சொல்லும் பொருளும்
ஏற்கும் மனமும்
சுருங்கி விடும் தருணங்களில்

***

4) ஏதாயினும்

விகலை, கலை
இன்னும் எட்டாத
துண் அலகுகளாய்
பகுக்கப்பட்டிருப்பினும்

பகுதிகள் இணைந்தும்
நேரே
குறுக்கே
நடுவே ஓடி
அச்சமோ
தீர்க்க்கமோ
மத்தியமோ
அசாத்திய வடிவாய்
வார்க்கப்பட்டிருக்கிறது பூமி

இந்த பார்வை
இந்த கேள்வி
இந்த உணர்வு

புலன்கள் ஐந்தும் பெற்று
சிந்தனை ஆற்றலில்
படைப்பின் சிகரமாய்
மனித இனம்!

இன்னும் தேவை என்ன
அழகியல் யாவும்
வசப்பட்ட பின்னும்
அதனையும் கடந்த
பெருஞ்சக்தியின் தேடல்
எதுவோ..? ஏனோ?

***

cv_ganga@yahoo.com

Series Navigation

விஜய்கங்கா

விஜய்கங்கா

மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

நட்சத்ரவாசி


1
இன்றைய தினம்
நேற்றைய தினத்தின்
தொடர்ச்சியாகவே இருக்கிறது
பிறிதொரு தினமும்
அப்படித்தான்
உறங்கிய போதும்
உறங்காத போதும்
சூரியனும் இருந்தது
நிலவும் இருந்தது
சிலர் சொல்லிக் கொள்கிறார்கள்
ஒரு தினம் வரும்
பிறிதொரு தினம் இல்லா
முடிந்த தினம்
இப்படியாக தான் தினங்கள்
போய்கொண்டிருக்கிறது.

2
உன்முகம் மறைய
லிப்ட் அடைத்து
கொண்டாலும்
லிப்ட் திறக்கும் போது
வேறோர் முகம்
நிச்சயமிருக்கும்
உன்முகத்துக்கும்
வேறோர் முகத்துக்கும்
மின்னற் பொழுதே
தூரம்.

3
அவன் கவனமாக
கூர்தீட்டிய
கத்தியால்
முகத்தை மழிக்கிறான்
கத்தி வைத்திருக்கும்
அவனை குறித்து
கவனமற்றிருக்க
ஏதேனும் சில
சிந்தனைகள்
உண்டுதானே
நம்மில் பலருக்கும்

mujeebu2000@yahoo.co.in

Series Navigation

நட்சத்ரவாசி

நட்சத்ரவாசி

மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

சேவியர்


அலாவுதீன் விளக்கு

0

என்னிடமிருக்கிறது
ஒரு விளக்கு.

அலாவுதீன்
தவறவிட்டதாய் இருக்கலாம்
அல்லது
வேண்டுமென்றே
விட்டெறிந்ததாய் இருக்கலாம்.

அது
தானாகவே வந்து
என்
மனசைத் தேய்க்கிறது.

வாசலுக்கு வெளியே
போட்டால் கூட
சிரித்துக் கொண்டே
என்
படுக்கையறைக்குள்
புகுந்து விடுகிறது.

அதுவாகவே வந்து
என்
உதடுகளில் உட்கார்கிறது
அப்போது
உள்ளத்தில்
கனவு மழை பொழிகிறது.

நான்
ஏதேனும் கேட்டால் சிரிக்கிறது
அதற்குத் தேவையானதை
நான் தான்
தரவேண்டுமாம்.
நகைக்கிறது.

இப்போதெல்லாம்
அதன் கட்டளையில்லாமல்
எனக்கு
பொழுதுகள் விடிவதில்லை.
அப்படி விடிந்தாலும்
நானாகவே போய்
அதை
உசுப்பி எழுப்பி பேசவிடுகிறேன்.

இந்த
அதிசய விளக்கைப் பற்றி
நண்பனிடம்
விளக்கப் போனேன்.

அவன்
கல்பனாவைக் காதலிக்கையில்
அவன் வீட்டிலும்
ஒன்று இருந்ததாம்.

கண்டெடுத்ததும்
எறிந்து விட வேண்டுமாம்,
பழகிவிட்டால்
விலகிப் போகாதாம்
சோர்ந்து போயிருந்தவன் சொன்னான்.

0
—-

பிரியமூட்டி வளர்க்கிறேன்

0

உனக்குத் தருவதற்கென்றே
வளர்த்து வருகிறேன்.

எங்கே சென்றாலும்
காலைச்
சுற்றிச் சுற்றி வந்து
முதுகு தேய்க்கும்
வெல்வெட்
நாய்க்குட்டியாகவோ,

புரண்டு படுக்கும் போதும்
கூடவே புரண்டு படுத்து
என்
போர்வைக்குள்ளேயே
மெல்லமாய்ப் பிராண்டும்
செல்ல
பூனைக்குட்டியாகவோ,
அதை நினைத்துக் கொள்ளலாம்.

உன்னைப் பற்றிய
கனவுகளைக்
கவளம் கவளமாய்த் தின்று
உன்
அழகு குடித்து
வளர்ந்து கிடக்கிறது அது.

நீ
புறக்கணிப்பாயோ
இல்லை
நீயும் ஒன்றை
அப்படியே வளர்க்கிறாயோ ?
தெரியவில்லை.

ஆனாலும்
கைகளில்
ஏந்திப் பார்க்காமல்
இருந்து விடாதே
பிரியமூட்டி பிரியமூட்டி
வளர்த்த இதயம் அது.

0
—-

மரண பயம்

0

கழுத்தளவு
மண்ணில் புதைத்து,
தலையைக் கல்லால் எறிந்து
கொல்லல்,

பொது இடங்களில்
அங்கங்களை வெட்டி
உயிரை
துண்டாக்குதல்

தலையில் சுடுதல்
தூக்கில் இடுதல்,
கழுத்தை வெட்டல்,

மின்சாரத்தால் சாகடித்தல்
நீரில் மூழ்கடித்தல்
நெருப்பில் சுட்டெரித்தல்

வாயு அறையில்
அடைத்தழித்தல்,
சிலுவையில்
அறைந்தழித்தல்…

மரண தண்டனைகளை
வரலாறு
இப்படியெல்லாம்
பதிவு செய்திருக்கிறது.

இருந்தாலும்
விளைந்து கொண்டே இருக்கின்றன
குற்றங்கள்.

0
—-
Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

நட்சத்ரன்


1.புதிரொலி

மிகவும் வினோதமாயிருக்கிறது
எங்கிருந்தோ வருமிந்த
அநாதி ஒலி

அவ்வொலியுள்
தெளிவான சொல்லேதும்
ஒளிந்திருக்கவில்லை

ஆயினும் அதனுள்
ஏதோவோர் அர்த்தம்
இருப்பதாய்ப்படுகிறது

இந்த ஒலிக்கு
என்னபேர் வைப்பது

இது
முனகலா கத்தலா

இசையா கூக்குரலா

கொடுவலியின் ஒலிவடிவா

இன்பப் பிதற்றலா

அடர்கசப்பின் வெளிப்பாடா

அதிருசிப்பின் துள்ளலா

பறவையொன்றின் கூவலா

பூச்சியொன்றின் அனர்த்தலா

வானப்பரப்பில்
தானாய்ப்பிறந்த
ஆதிமூலம் இதுவோ

அர்த்தமேதுமற்று
சுயம்பாய்
என் உள்ளும் வெளியுமாய் பிரவகிக்கும்
இப்புதிரொலி
முளைத்துத் துளிர்த்துப் பூத்து மலர்கிறது என்னுள்
பெயரில்லாததொரு
விருட்சமாய்.

2.கதைசொல்லி விருட்சம்

தத்தம் கிளையசைத்து
வான்பரப்பில் கதைசொல்லும்
விருட்சங்கள்

விருட்சத்தின் கதைகளை
வாய்பிளந்துகேட்கும்
அகண்டாகார அண்டம்

அநாதிகாலமாய்
பரவெளியில் சிதறிக்கிடக்கும்
விருட்சங்களின் கதைகள்
எண்ணற்ற ரகசியங்களோடு

அக்கதைகளில்
பேரொளியின்
அதீத தாண்டவம்
நிழலோடு நிகழும்

அக்கதைகளில்
பூக்களின் வாசம்
மகரந்தக்கதப்போடு வீசும்

அக்கதைகளினூடாய்
புல்லினங்களின்
அதீதபாடல் கேட்கும்

அக்கதைகளினூடாய்
கொடுவிலங்குகளின் ஸப்தம்
இரைந்துகேட்கும்

……………..
……………..

விருட்சங்களின் கதைகள்
முடிவதேயில்லை
காலத்தின் எந்தப்புள்ளியிலும்

விருட்சங்கள் வாழ்கின்றன

உங்களுக்கான
கதைகளுக்காய்

எனக்கான
கதைகளுக்காய்

விலங்கினங்களுக்கானதும்
புல்லினங்களுக்கானதுமான
கதைகளுக்காய்

வாருங்கள் அமர்வோம்
ஓர் அடர்விருட்ச நிழலில்
காலம்முழுக்க
கதைகேட்டிருக்க.

3.இருட்குகை வாழ்க்கை (நெடுங்கவிதை)

அகண்டுநீண்ட
பேரிருட்குகையுள்
ஜீவிக்கிறானவன்

அவன் தன்
கண்ணொளியிழந்து
வெகுகாலமாயிற்று

தன் சொந்தக்குரலையும்
காலத்தின் அகண்டவெளியில்
தொலைத்துவிட்டு
பூச்சிகளின் குரலில்
அனர்த்தித்திரிகிறான்

கால்களோ சிறகுகளோ
அவனுக்கில்லை:
வெறும் சதைப்பிண்டமாய்
ஊரித்திரிகிறானவன்
சொதசொதப்பான குகைச்சேற்றில்

கருநாகம் தேள்
விஷவண்டுகள் சூழ
இருக்குதவன் இருப்பு

கோட்டானும் ஆந்தையும்
கூக்குரலிட்டுலவும்
இக்குகையுள்
எல்லா மிருகமும்
இரைதேடி அலையும்

குருதிப்பசியோடு
கொக்கரித்தாடும் பிசாசங்களின்
நாட்டிய அரங்கம்
இக்குகை

குகையிருள் சுவாசித்து
குகையிருளுண்டு
குழம்பித்திரிகிறனவன்

பின்
ஒளிகாணா குகைச்சுவரில்
ஒட்டியூர்ந்து
நகரத்தொடங்குகிறான்

கருத்துக்கிடக்கும்
விஷநீரில்
விழுந்தெழுந்து
நிகழ்கிறதவன் நகர்வு
ஒளியின் வெம்மையை
துய்த்திடும் முனைப்பில்

விஷ ஜந்துக்கு
இரையாகிடாமல்
பதுங்கிப்பதுங்கி நகர்கிறான்
குகைவாயில் நோக்கி

குகைவாயிலில்
அவனுக்கு
கூரிய கண்ணொளிகிட்டும்:
பின்பு அவன்
எல்லையில்லா ஒளிவெளியுள்
நீந்தித்திரிவான்

குகைவாயிலில் அவனுக்கு
எல்லா அவயவமும்
மீண்டும் முளைக்கும்:
பின்பு அவன்
அண்டம் குலுங்க
ஆனந்த நடமிடுவான்

குகைவாயிலில் அவனுக்கு
வலிய சிறகுகள் வளரும்:
பின்பு அவன்
மயக்கும் பெருவெளியில்
இலக்கற்றுப் பறப்பான்

குகைவாயிலில்
அவன் தன் இழந்தகுரலை
மீட்டெடுத்து
விதவித ராகங்களில்
பாடித்திரிவான்

ஆதலின்..
அதீத கவனத்துடன்
மெதுமெதுவாய் நகர்கிறானவன்

காலத்தின்
பேரிருட்குகையும்
தன் நீளம்சுருக்கி
நகர்த்தித்தள்ளுதவனை
ஒளிவெளி நோக்கி.
——————————————————-

Series Navigation

நட்சத்ரன்

நட்சத்ரன்

மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

பா.ஸ்ரீராம் மயிலாடுதுறை


எதிர்பார்த்து….

காதல் கொண்டதால்
காணாமல் போனது வாழ்க்கை
காணாமல் போனதால்
தோணாமல் போனது
உயிரின் மதிப்பு…

நடைப்பிணமாக நானிருக்க
நலமாக நீ…
இரு இரு
நீயாவது நிம்மதியாய் இரு…

ஆனால்
உன் இதயத்தின் ஓரத்தில்
ஈரம் ஒட்டிக் கொண்டிருந்தால்
என் நினைவு உன்னில்
எள்ளலவாவது இருக்கும்.

கொஞ்சி மகிழ்ந்த காலங்கள்
கண்ணில் தெரிகிறது….
கெஞ்சி விழுந்த நேரங்கள்
நெருப்பாய் சுடுகிறது.

உன்னை
மறப்பது என்பது
மனதார கூட முடியாது
என் மனம்
ஆற போவதும் கிடையாது…
இருப்பினும்
நலமோடு நீ வாழ்க…

கடந்த காலத்தை சுமந்து
நிகழ்காலத்தில் நெடுத்தெருவில்
வருங்காலத்தைப் பற்றி கனவு காணாமல்
சாகப்போகும் தருணத்தை எதிர்பார்த்து…


வறண்ட உள்ளம்…

காவிரிப் போல்
வறண்டுப் போய்
என் உள்ளம்…
(நீ)ீராக வராததனால்…

பாலைவனமாக மாற
எனக்கு சம்மதம்
நிலவாக நீ வந்தால்…


என்னவளே…

பார்த்த பார்வையிலே
பாதி உயிர் எடுத்து விட்டாய்

பூத்த புன்னகையில்
புதுக்கவிதையாக்கிவிடாய்…

அடியே உந்தன்
மடியில் விழுந்தேன்…
நொடியில் எந்தன்
பெயரை மறந்தேன்…

உன்

உதட்டின் ஓர
மச்சம் என்னை…
உசுப்பி விட்டு சிரிக்கிறதே…உன்னை

தலையை உசத்தி பார்த்தாலே
ஏனோ நெஞ்சம் பதைபதைகிறதே…

Series Navigation

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

பாரதிராமன்



அதிகப்பிரசங்கம்

எனக்கு இவ்வாறு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்

அம்மாவும் கடவுள்
அப்பாவும் கடவுள்
ஆசான் கடவுள்
அதிதியும் கடவுள்

இருந்தபோது அவ்ர்கள் எல்லோரும்
சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள்
ஒருவர்பின் ஒருவராய்
எல்லாக் கடவுள்களும்
ஒருநாள் செத்துப்போனார்கள்

இருந்தாலும்
மீண்டும் மீண்டும் அவர்கள்
தோன்றிக்கொண்டேயிருந்தார்கள்
சண்டை போட்டுக்கொண்டு
செத்து மடிவதற்கு

தோற்றமும் சண்டையும் சாவும்
இறப்பதேயில்லை
கடவுளைப்போல

நீங்களும்
உங்கள் பிள்ளைகளுக்கு
இதையே சொல்லிக்கொடுங்கள்


காரணகாாியங்கள்

உாிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது கோழி
பாம்பு விழுங்கிய முட்டையிலிருந்து வந்த கோழி
கீாி கடித்துக் குதறிய பாம்பு
பாப்பாத்தி கொன்றுபோட்ட கீாி
உற்றுப்பார்க்காத பாப்பாத்தி
உறக்கம் கலைந்த குழந்தை
உயிர்த்துச் சிாித்துக் கிடக்கிறது

கணித்துக்கொண்டிருக்கிறது காலம்
கவலையற்றதாய் தன்பாட்டுக்கு
ஏனென்று கேளாமல் எதையும்.


விசித்திரக்காதல்களும் காதல் விசித்திரங்களும்.

அவளை அவன் காதலித்தான்
அவள் வேறு ஒருத்தனையும் காதலித்தாள்
***** **** ****
அவள் காதலித்தது போதும் என்றாள்
அவனும் போதுமே என்றான்
இருவருக்கும் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது-
வெவ்வேறு இடங்களில்
**** **** ****
இனி எத்ற்குக் காதல்
என்ற முடிவுக்கு அவன் வந்திருந்தான்
சாவதற்கு வேறு வழிகள் அவனுக்குப் புலப்பட்டுவிட்டன.
**** **** *****
கடைசியில் கதாநாயகி வில்லனை மணந்தாள்
கதாநாயகன் முதலில் வில்லனுக்கு நன்றி கூறினான்
**** **** *****
காதலன் கைவிட்டான்
கல்யாணம் நின்றுபோனது
காதலன் கை கொடுத்தான்
கல்யாணம் நடந்துபோனது
காதலன் கை சோர்ந்தான்
கல்யாணம் ஓய்ந்துபோனது
**** ****** *****

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.

மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

இராம.கி.



தன்னேர்ச்சி

ஆறொழுங்கை வளைச்சாலை;
அதனிடையே இருவழியும்
தாறுமாறாய்த் துரப்புநிலை;
தடுப்பெனவே கயிறுகட்டிக்
கூறுபோட்டும், கயிறொதுக்கிக்
குனிந்துசெல்லும் குடிமக்கள்;
ஏறுகொண்டு வாரோதோ
எங்கிருந்தோ தன்னேர்ச்சி ?

உந்துபல விதவிதமாய்;
ஒவ்வொன்றும் தனிக்கதியே;
விந்துவதும் முந்துவதும்,
வீள்வெடித்துப் பம்புவதும்,
சந்தினிடை முண்டியெழ
சடுசடுத்து ஏகுவதும்,
வெந்துவர எத்தனிப்பின்
வெருவாதோ தன்னேர்ச்சி ?

நாலுவழிச் சந்திப்பு;
நல்வழிக்கு செய்கைஒளி;
ஏலுதற்குப் பச்சைவிளக்
கேகிடுமுன் முடுக்குவதும்
ஓலமிடப் போகுவதும்,
உள்நுழைந்து சாலுவதும்,
கோலமிடப் போகிவரின்
கூடாதோ தன்னேர்ச்சி ?

எம்மூரின் சாலைகளுள்,
என்றேனும் எம்மக்கள்,
கும்மிவிடும் போதுகளில்,
கொள்ளுவரோ சாலைவிதி ?
தம்வீட்டின் குப்பைகளை
தம்சாலை நெடுகேனும்
எம்பியெறிந் தேகுவதால்,
எண்ணுவரோ தம்பொறுப்பை ?


நீச்சல்

‘டேய், குதிரா, ஒண்ணும் ஆகாது;
பொட்டப் புள்ளேயாட்டம் பயந்தா, எப்படி ?
சோமு இருக்கான்லே, பார்த்துக்குவான்.
ஊமுன்னு இழுத்து, மூச்சைப் புடிச்சுக்க;
தண்ணியை மட்டும் குடிச்சுராதே, என்ன ? ‘

தாவி, முழுங்கி, தன்கரத்தை மேல்தூக்கி,
ஆவி, அரற்றி, அப்படியே நீர்குடிச்சு,
வெடவெடத்துப் படபடத்து, வெப்பமெலாம் உள்ளேற்றி,

இன்னும் கீழேயா ? எத்தனைதான் ஆழமிது ?
கண்ணுக்குத் தெரியாமக் கடலாட்டம் கம்மாயா ?

கண்முன்னே கணநேரம் காட்டும் ஒரு பளிச்சீடு
‘கண்டனூருச் செல்லாத்தா, காப்பாத்திக் கொடுத்துரும்மா!
வையைக்கரை கம்மாயின் வனமெங்கும் சுற்றிவந்து,
ஆவியாய் நான் அலைஞ்சு, அடுத்திருக்கப் பிறந்தேனோ ?
மானோடும், மந்தோடும் மஞ்சுநிற மயிலோடும்,
கானோடும் பன்றியொடும் காட்டு முயலோடும்
நான் அலையக் காத்திருந்து, நல்லவிதம் ஆவேனோ ?
மரத்தில் இருப்பேனா ? மண்ணில் இருப்பேனா ?
கால் தரையில் பாவிடுமா ? பாவாமல் காலிடுமா ?
என்னுடைய முடிவெளுப்பா ? எங்கெங்கும் ஆழ்கருப்பா ?
சண்டவளி ஆவேனா ? சாமியாடித் திரிவேனா ?
பண்டாரம் ஆவேனா ? பட்டையொடு உருத்தாக்கம் ? ‘

மங்கிக் கலங்கி மருண்டு உழந்திருந்து
தொங்கித் தவித்துத் துவளுகின்றது உள்நினைவு

‘டேய் கிட்டு ‘,
கன்னத்தையும் தலையையும்
யாரோ தட்ட,
மெல்லக் கண்விழிக்கிறேன்.
சுற்றும் பலபேர்கள்;
சோமு, அருண், மாணிக்கம்,

வாயிருந்தும் மூக்கிருந்தும் வழிந்தோடும் புளிவீச்சம்;
காயழுகும் படிகிடந்து கண்மலங்கப் பார்க்கின்றேன்.

திரள்மீசை; கொண்டைமுடி; தேர்ந்தே அறிந்தமுகம்;

எங்கள் வீட்டுச் சமையற் காரர்,
சாமியாடி நாராயண அய்யா;

‘ஏண்டா டேய், படவா, யாரைக் கேட்டு
கம்மாய்க்குள்ளே குதிச்சே;
குரல் கேட்டு நான் வரலைன்னா
என்ன ஆயிருக்கும் ?
வா, உங்க அய்யாகிட்டே சொல்லிடுறேன். ‘

எல்லாம் முடிஞ்சு எங்களய்யா முன்னாடி
நின்னு தலைகுனிஞ்சு நேர்ந்துகொண்ட பேச்சாலே,
கண்ணு கலங்கி கதிகுலுங்கிப் போனகதை
சென்மம் முழுதுக்கும் சேர்த்துவச்ச சொத்தாகும்;

நாற்பத்தைந் தாண்டாச்சு; நானின்றும் கேட்பதுவோ

‘நீச்சல் ‘னா என்னாங்க ? ‘


ஐந்திணைக் காட்சிகள்

ooooo

கோடு போட்டமாதிரிச் சாலைகள் போறதுக்கு,
இது என்ன பாலையா ?
‘மருதங்காணும், மருதம்;
பொன்னு வெளையுற மருதம் ‘;
வயலும் வயல் சார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீரா ?
கும்மோணத்திலேர்ந்து மாயவரம் போறதுன்னா,
அப்படியும் இப்படியும் ஆறுமாதிரி வளைஞ்சுதான் ஓடும்;
ஆற அமர வேடிக்கை பார்த்துக்கிணு போகும்;.
அங்கே பார்த்தீரா, ஓய் ?
இறவையைப் போட்டுட்டு குத்தாலம் மாதிரி
தண்ணிக்கடியிலே தொட்டிலே குளிக்குறான்,
இதுதான்யா மருதம்!

ooooo

அலையடிச்சு உப்புக்காத்துலே மணல் திரைக்க,
இது என்ன நெய்தலா ?
‘பாலைய்யா, பாலை;
பொட்டக் காட்டுப் பாலை ‘;
முல்லையும் குறிஞ்சியும் திரிஞ்சுன்னு கேள்விப் பட்டிருக்கீயளா ?
மதுரைலேர்ந்து தூத்துக்குடி போறதுன்னா,
இப்படித்தான் காட்சி திரிஞ்சு போயிட்டே இருக்கும்;
பனை, வேலிக்கருவை, புளி, கள்ளி, ஆடாதொடை;
அங்கே பார்த்தீங்களா,வே ?
வேகாத வெய்யில்லே பதநீரு, நீர்மோரோட
வெள்ளரிப்பிஞ்சையும் நுங்கையும் கூடைலெ விக்கிறான்,
இதுதான்வே பாலை!.

ooooo

வேங்கையும் கடம்பும் பூச்சொரிஞ்சு தடம்போட,
இது என்ன முல்லையா ?
நெய்தல் ஓய், நெய்தல்;
நீலப்பூ நெறஞ்ச நெய்தல்
கடலும் கடல்சார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீரா ?
பிச்சாவரத்துலேப் படகு எடுத்துப் போனீருன்னா,
உப்பங்கழியிலே போயிட்டே இருக்கலாம்;
புன்னை விழுது, இறாலு வலை, செங்கால் நாரை
அங்கே பார்த்தீரா, ஓய்,
நாட்டுத் துமுக்குச் சத்தம் டொக்குன்னு கேக்குது;
கொக்கைச் சுட்டு டப்புன்னு விழுத்தாட்டுறான்,
இதாரும் நெய்தல்

ooooo

மஞ்சு தழுவ நெஞ்சடைக்கப் பச்சை போர்த்திப் படங்காட்ட
இது என்ன குறிஞ்சியா ?
முல்லைய்யா, முல்லை;
மோகமுள்ள முல்லை;
காடும் காடுசார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கியளா ?
முண்டந்துறை பாவநாசம் போற வழியிலே,
அடர்த்தியாப் பேரு தெரியாத மரங்கள்,
புலி, மான், முயல், காட்டுப் பன்னி,
அந்தத் தடத்தைப் பார்த்தியளா,
நேத்து இந்தப் பக்கம் புலி நடமாட்டம்
இருந்துருக்கோணும்; வாசனை தெரியேல்லை!
இதுதான்வே முல்லை.

ooooo

வைக்கலை அசைபோட்டு, எருமையாட்டம் சோம்பேறியாத் திரிய
இது என்ன மருதமா ?
குறிஞ்சிங்க, சாமி குறிஞ்சி
கோடைக்குச் சொகமான குறிஞ்சி;
மலையும் மலைசார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா ?
நிலக்கோட்டைலேர்ந்து கோடைக்கானல் அம்புட்டுக்கும்,
மரமும், வெளியும், தடமும், தேன்கூடும்;
பச்சப்பசேல்னு, நடுவிலே அமைதியாப் பாறை,
அந்தப் பச்சை மலை பார்த்தீங்களா ?
வளைஞ்சு, வளைஞ்சு மானம் வரைக்கும்,
இந்த வருசம் டாண்ணு நீலமாப் பூத்துரும்;
இதுதாங்க குறிஞ்சி

***

poo@giasmd01.vsnl.net.in

Series Navigation

இராம.கி.

இராம.கி.

மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

சேவியர்


மிச்சமிருப்பவை

கொதிக்கக் கொதிக்கக் கொட்டும்
சூரிய பானத்தை
நிலாக் கோப்பை
குளிர வைத்துப் பரிமாறும்.
நிலவும் சூரியனும் இன்னும்
அயல் தேசக் காப்புரிமைக்குள்
அடைக்கப்படவில்லை.

தொட்டு விட இயலாத
தூரப் புள்ளிகளை
பூமி
நட்சத்திரமென்று பெயரிட்டு
உலகுக்கெல்லாம் உரிமையாக்கும்.

மிதக்கும் கட்டிடங்கள்
இப்போதைக்கு
சாத்தியமில்லாமல் போனதால்
தூரவானம் இன்னும்
கம்பி வேலிகளுக்குள் கட்டப்படவில்லை.

துருவப் பனி எப்போதும்
தீர்ந்து போகாது என்பதால்
யாரும்
வெட்டி எடுத்துச் செல்வதில்
வெட்டுக் குத்து நடப்பதில்லை.

இன்னும்
காற்றுக்கு வரி கட்டும்
காலம் வரவில்லை.

ஆற்றுக்குள் மணலெடுத்தால்
ஊற்றெடுக்கும் பிரச்சனைகள்.
பாலைவனத்தில்
மணல் திருடினால்
யாரும்
பொருட்படுத்துவதில்லை.

மேகத்தைப் பிரிந்து
தாய் வீடு திரும்பும்
மழைப்பெண்ணுக்கு
வானத்தில் வரப்புகள் இல்லை.

கீழே விழுந்தபின் தான்
அவை
அரசாங்க அணைக்கட்டுகளில்.

விதிமுறைகள்
பூமியில் வித்தியாசமானவை.

இழுத்துப் பிடித்து
அமுக்க முடியாததெல்லாம்
பொதுவுடமை.

விரட்டி விரட்டி
வால் தொட முடிந்ததெல்லாம்
தனியுடமை !

0


மனித இலைகள்

0

தனிமையில் நிற்கிறது
அந்த
ஒற்றை மரம்.

பனிக்காலத்துக்கு முந்திய
ஓர் இரவுப் பொழுது
ஆக்ரோஷமாய் அடித்த
திகில்க் காற்றில்
கொலையாகி விட்டன இலைகள்.

விழுந்து விட்ட
இலைகளில் சில
இன்னும் மர இடுக்குகளில்
மரண வலியில்.

இன்னும் சில
மரத்தில்
காலைக் கட்டிக் கொண்டு
மரணித்துப் போய்விட்டன.

இலைக் கூடுகள்
கண்முன்னால் கலைவதைக் கண்டு
மெளன அஞ்சலியில்
மூழ்கிக் கிடக்கிறது மரம்.

வீழ்ந்து விட்ட இலைகள்
வேருக்கு உரமாகி
மேலேறி வரக் கூடும்.
இல்லையேல்
கூட்டப்பட்டு
எங்கேனும் கொட்டபடலாம்.

நாளையும்
மரத்தில் இலைகள் முளைக்கும்.
புத்தம் புதிய இலைகள்.

மழலை இலைகளின்
இடை வருடலால்
மரம் மகிழக் கூடும்.
பழைய இலைகள் குறித்த
கவலைகளைக் கிளைகள்
குறித்து வைக்கவும் மறக்கக் கூடும்.

வீழ்ந்து போன இலைகளின்
தடயங்களும் மறந்தபின்
அடுத்த தலைமுறை
விடைபெறும். அதே அழுகையுடன்.

0


இரண்டடி தூரத்தில் வெற்றி

0

வெற்றி என்பது
பதக்கங்களை பெறுவதிலில்லை
அதை நோக்கிய
பயணத்தில் இருக்கிறது.

அங்கீகாரங்களே
வெற்றிகளென்று நாம் தான்
அர்த்தமில்லாமல்
அரற்றிக் கொண்டிருக்கிறோம்.

சில
பல்கலைக் கழகப்
பட்டங்களிலில்லை
வெற்றியின் சுவடுகள்,
அவை
சென்ற வகுப்பறையில்
தின்ற பாடங்களில் இருக்கின்றன.

மைல் கல் என்பது
ஊரை அடைந்ததற்கான
உத்தரவாதம் தான்.
அதுவே ஊர் இல்லை.

கடைசி வினாடியில்
கை நீட்டியவன்
நீச்சலில் முதலிடம் வரலாம்,
ஆனால்
நீந்தினேன் என்பதே
நிஜமான வெற்றி.

வெற்றி என்பது
கோப்பைகளைப் பெறுவதில் இல்லை.
கோப்பைகளைப்
பெறுவது மட்டுமே வெற்றியல்ல
என்பதைக்
கண்டு கொள்வதில்.

0

Xavier_Dasaian@efunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

கோமதி நடராஜன்


ஹே ராம்!

ஜனவரி முப்பதாம் நாள்,
ஜனங்கள் கேட்டனர், ‘ஹே ராம்! ‘,
அதை,அண்ணல் மட்டும்
சொல்லவில்லை.
தப்பான இதயத்தைத்
துளைத்தோமே,
என்றுணர்ந்தத்
தோட்டாக்களும்,
சேர்ந்தே அலறின,
‘ஹே ராம் ‘ஹே ராம்!ஹே ராம். ‘
——————————–

களிறின் காலில் கயிறு.

——————–
பாரதி, ‘காலனே வாடா!உன்னைக்,
காலால் மிதிக்கிறேன் ‘என்றான்.
காலனோ,
கவியின் காலுக்கு,
எட்டாத உயரத்தில்,
களிறின் காலில்
மறைந்து கொண்டான்.
கச்சிதமாய்க் காரியத்தை
முடித்துக் கொண்டான்.

இன்னொரு பிறவி.

—————
இறைவா!
எனக்கு, இன்னொரு பிறவி,
உண்டென்றால்,
அடுத்தவர், இன்னல் தீர்க்கும்,
அன்னை தெரசாவாக,
என்னைப் படைப்பாயெனில்
ஏற்றுக் கொள்கிறேன்.
மாறாக, இப்பிறவி போல்,
‘நான், என் வீடு,
என் குடும்பம் ‘என்று
அற்பப் புழுவாகத்தான்,
அடுத்த பிறவியிலும்,நான்
நெளிவேன் என்றால்,
ஏர்க்கால் பட்டு,
நசுங்கி மடியும்
மண்புழுவாகவே,
என்னைப்
படைத்து விடு.
சொற்ப நிமிடம் நெளிந்தாலும்
மண்ணுக்கு உரமூட்டி வாழ்ந்தேன் என்ற,
புண்ணியமாவது மிஞ்சும்.
**
ngomathi@rediff.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 19 in the series 20010618_Issue

பாரதிராமன்



புதிது

மணம் புதிது
மலர் புதிது என்பதால்

உடல் புதிது
உயிர் புதிது என்பதால்

காமம் புதிது
காதல் புதிது என்பதால்

கவிதை புதிது
கருத்து புதிது என்பதால்

வெற்றி புதிது
வினை புதிது என்பதால்

புதிதுதான் புதிதாக்கும் என்றாலும்
பழையதும் புதியதுதான்
பழையதே முன்னர் புதிதாக இருந்ததால்
புதியதும் நாளை பழையதாகும் என்பதாலும்


அதுவும் சாி

அவரும் அவரது மனைவியும் செய்வதையே
நீங்களும் உங்களது மனைவியும் செய்வதாய்
என்னிடமும் என் மனைவியிடமும் கூறுவது சாி.

நானும் என் மனைவியும் செய்யாமலிருப்பதைப்போலவே
நீங்களும் உங்கள் மனைவியும் செய்யாதிருந்தால்
அவரும் அவரது மனைவியும் தொடர்ந்து செய்யாதிருப்பார்கள்
என்று நானும் என் மனைவியும் கூறுவதும் சாி.

அது மட்டுமல்ல,
நான் புறம் கூறுதல் பற்றிச் சொல்லவந்ததை
நீங்கள் வரதட்சணை வாங்குதல் பற்றி என்று
வை(த்)து(க்) கொண்டாலும் சாி,
இரவல் கேட்பது பற்றி என்று
இருத்திக்கொண்டாலும் சாி.


இரவு விருந்து

மஞ்சள் பத்திாிக்கைகள்
பச்சைப் பேச்சுக்கள்

நீலப் படங்கள்
சிவப்பு விளக்குகள்

கறுப்பு உள்ளங்கள்
வெள்ளைப் பூச்சுகள்

இரவு விருந்துக்கான
வண்ணப் படையல்கள்!

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.

மூன்று கவிதைகள்

This entry is part 3 of 3 in the series 19991128_Issue

பாவண்ணன்



1. வாடகை வீட்டில் வளர்த்த மரம்

விட்டுச் சென்றதும் குடிவைத்துக் கொள்ள
ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்
நாள்கடந்து போவதை ஞாபகமுட்டுகிறீர்கள்

அன்புக்குரிய உரிமையாளரே
பெட்டிகள் படுக்கை மின்விசிறி
தொலைக்காட்சி அடுப்பு எரிவாயு
முட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம்
வாடகை வண்டி வந்ததும்
ஏற்றிக் கொண்டு கிளம்புகிறோம்

கொண்டுசெல்ல முடியாத சொத்தாக
பின்புறத்தில் நிற்கிறது ஒருமரம்
எங்களை நினைவூட்டினாலும்
எங்களைப் போலிருக்காது அது
குழாயில் தண்ணீரை ஏன் நிறுத்தினீர்கள்
என்று ஒருபோதும் கேட்காது
மின்சார நேரத்தைக் கூட்டச்சொல்லி
முற்றத்தை மறித்துக் குழையாது
மழை புயல் கஷடங்களை முன்வைத்து
பழுது பார்க்கவும் வேண்டாது
நேருக்குநேர் பார்த்தாலும்
எவ்வித சங்கடமும் தராது

வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்
மரத்துக்காவது கருணை காட்டுங்கள்


2. அப்பாவிச் சாட்சியின் கேள்விகள்

நெல்லும் கரும்பும் விளைந்த வயலில்
அடுக்கு மாளிகையின் அஸதிவாரப் பள்ளத்தை
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்
எந்திரமாய் இயங்கும்
பெண்களின் கைகளில்
மண்சட்டிகள் மாறிக் கரையேறுகின்றன
ஆண்கள் உயர்த்தும் கடப்பாறைகள்
பூமியின் மார்பைக் குத்திக் கிழிக்கின்றன

வேகத்தைக் கண்டு வியப்பில் கண்மலர
வேடிக்கை பார்க்கிறான் ஒரு சிறுவன்
பச்சை வயல்களை ஏன் அழிக்கிறீர்கள்
என்று அவன் கேட்கவில்லை
நெல் இல்லாமல் இருப்பது எப்படி
என்று அவன் கேட்கவில்லை
இந்த உலகம் இருக்குமோ
என்றும் அவன் கேட்கவில்லை
இனி தும்பிகளை எங்கே போய்த்தேடுவேன்
என்றும் அவன் கேட்கவில்லை

இன்று அவன் ஒரு அப்பாவிச் சிறுவன்
மோசடிக் கும்பலின் நாசகாரியம்
முடிவுற்ற பின்னாலாவது
இக்கேள்விகளை முன்வைக்கக் கூடும் அவன்
அப்போது உலகம் தரும் பதில் என்ன ?


3. ஒரு சதியாலோசனை

தோப்பென விரிந்த இடத்தில்
வீடுகளின் தொகுப்பு இப்போது
எஞ்சிய மரமொன்றின் கிளையொன்றில்
தொங்கிக் கொண்டிருந்தது தேன்கூடு
நாடோடியின் முதுகில் தொங்கும்
சாக்கு முட்டையின் தோற்றம்
ஒரு வால் சிறுவனின் துடுக்குப் பார்வையில்
எப்படியோ பட்டுவிட்டது அது
அடுத்த நொடியே செய்தி பரவ
அணிதிரண்டெழுந்தது ஆட்கூட்டம்
உப்பிய அதன் தோற்றத்தைக் கண்டு
அறுந்து நிலத்தில் விழுவது போன்ற
அதன் கோலத்தைக் கண்டு
கூட்டம் சற்றே பின்வாங்கியது
மனிதனின் காவலை மீறி
இயற்கை செய்த சதி என்றார்கள்
பிள்ளைகளை ஓரமாய் இழுத்து
எச்சரிக்கை செய்தாள் ஒருகிழவி
தேனீக்கள் கொட்டினால்
என்னென்ன ஆகுமென்று விவரித்தார் இன்னொருவர்
அதைக் கலைப்பதற்காகவே ஜென்மம் எடுத்ததுபோல்
ஆவேசத்தில் துடித்தது ஒரு வாலிபம்
அதுபாட்டுக்கு அது
நமது பாட்டுக்கு நாம்
அப்படியே இருப்போமே என்றேன் நான்
அனுபவித்தவனுக்குத்தான் வலி தெரியும் என
ஆர்ப்பரத்தது ஒரு தொண்டை
நம் இடத்தில் அதற்கென்ன வேலை என
நாக்கு வறளக் கத்தியது
அதற்குரிய இடத்தில்தான் நாம் இருக்கிறோம்
என்று முணுமுணுத்தேன் நான்
கொஞ்சநேரம் சும்மா இருடா என்று
உடனடியாக என் வாய் முடப்பட்டது
குறவன் முலம் கூட்டை அழிக்கலாம்
தேனும் கிடைக்கும் என்றாள் நடுவயசுக்காரி
அந்த யோசனை அப்படியே ஏற்கப்பட்டது
அமாவாசைக்கு முன் அழிப்பது நல்லதென்றார்கள்
இப்போதே குறவனிடம் சொல்லி வைக்கலாம் என்றார்கள்
மனிதர்கள் தீட்டும் சதியை
தேனீக்களுக்குத் தெரிவிக்கும் வழிதெரியாமல்
திகைத்து நின்றேன் நான்

***

Thinnai, 1999, November 28

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< தாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி

பாவண்ணன்

பாவண்ணன்