மூன்று கவிதைகள்

This entry is part of 32 in the series 20030710_Issue

பாரதிராமன்அதிகப்பிரசங்கம்

எனக்கு இவ்வாறு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்

அம்மாவும் கடவுள்
அப்பாவும் கடவுள்
ஆசான் கடவுள்
அதிதியும் கடவுள்

இருந்தபோது அவ்ர்கள் எல்லோரும்
சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள்
ஒருவர்பின் ஒருவராய்
எல்லாக் கடவுள்களும்
ஒருநாள் செத்துப்போனார்கள்

இருந்தாலும்
மீண்டும் மீண்டும் அவர்கள்
தோன்றிக்கொண்டேயிருந்தார்கள்
சண்டை போட்டுக்கொண்டு
செத்து மடிவதற்கு

தோற்றமும் சண்டையும் சாவும்
இறப்பதேயில்லை
கடவுளைப்போல

நீங்களும்
உங்கள் பிள்ளைகளுக்கு
இதையே சொல்லிக்கொடுங்கள்


காரணகாாியங்கள்

உாிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது கோழி
பாம்பு விழுங்கிய முட்டையிலிருந்து வந்த கோழி
கீாி கடித்துக் குதறிய பாம்பு
பாப்பாத்தி கொன்றுபோட்ட கீாி
உற்றுப்பார்க்காத பாப்பாத்தி
உறக்கம் கலைந்த குழந்தை
உயிர்த்துச் சிாித்துக் கிடக்கிறது

கணித்துக்கொண்டிருக்கிறது காலம்
கவலையற்றதாய் தன்பாட்டுக்கு
ஏனென்று கேளாமல் எதையும்.


விசித்திரக்காதல்களும் காதல் விசித்திரங்களும்.

அவளை அவன் காதலித்தான்
அவள் வேறு ஒருத்தனையும் காதலித்தாள்
***** **** ****
அவள் காதலித்தது போதும் என்றாள்
அவனும் போதுமே என்றான்
இருவருக்கும் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது-
வெவ்வேறு இடங்களில்
**** **** ****
இனி எத்ற்குக் காதல்
என்ற முடிவுக்கு அவன் வந்திருந்தான்
சாவதற்கு வேறு வழிகள் அவனுக்குப் புலப்பட்டுவிட்டன.
**** **** *****
கடைசியில் கதாநாயகி வில்லனை மணந்தாள்
கதாநாயகன் முதலில் வில்லனுக்கு நன்றி கூறினான்
**** **** *****
காதலன் கைவிட்டான்
கல்யாணம் நின்றுபோனது
காதலன் கை கொடுத்தான்
கல்யாணம் நடந்துபோனது
காதலன் கை சோர்ந்தான்
கல்யாணம் ஓய்ந்துபோனது
**** ****** *****

Series Navigation