நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கோலித் திகழ்கிற(கு) ஒன்றின் ஒடுக்கிப் பெடைக் குருகு

பாலித் திரும்பனி பார்ப்பொடு சேவல் பயிலஇரவின்

மாலித் தனையறி யாமறை யோன்உறை அம்பலமே

போலித் திருநுத லாட்(கு)என்ன தாங்கொல்என் போதரவே.

-(திருக்கோவையார்)- மாணிக்கவாசகர்

தொண்டை மண்டலத்தில் கடந்த சில தினங்களாக விடாமற் பெய்த மழையின் காரணமாக ஆறுகளும், ஓடைகளும் கரை புரள்கின்றன. ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் தளும்புகின்றன. நீர்வாழ்த் தாவரங்கள்: ஆம்பல், அல்லி, தாமரை, ஆகாயத்தாமரை, கோரை, சம்பங்கோரை தண்ணீரில் மூழ்கி தலை நிமிரமுடியாமல் சோம்பிக் கிடக்கின்றன. காடு, புதரென்று வழித்தடங்களைக் கண்டிருந்த புதுவெள்ளம் கலைத்த கூடுகள், உயிரிழந்த புள்ளினங்கள், அடை அடையாய்க் கட்டெறும்புகள், நச்சுப் பாம்புகள், நச்சில்லாத பாம்புகள் எனச் சுமந்து வழியெங்கும் அவற்றை சிந்தியவண்ணம் பள்ளம் கண்ட இடங்களில் பாய்ந்தோடுகிறது. உயிர்பிழைக்கும் ஆர்வத்தில் ஒருசில, அவற்றுள் எழுந்து ஊர்கின்றன. நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கிடையிலும், வெற்றிலைக் கொடிக்கால்களுக்கிடையிலும், தண்ணீர் வடிந்த இடங்களில் வெள்ளத்தில் தப்பிய வரால், குரவை, கெழுத்தி, கெண்டை மீன்கள் வால் சிலுப்பி நகருகின்றன.

காஞ்சிமாநகரம், அந்தி வெயிலென்கிற அரைத்த மஞ்சளை குழைத்து அங்கமெங்கும் பூசிக்கொள்வதும், கார்கால மழையில் அவ்வப்போது அலசிக்கொள்வதுமாக இருக்க, ஆகாயம் தாங்கமாட்டாமல் உருமுகிறது. தொழுவத்தில் அடைத்துக்கிடந்த மாடுகளைக் காலாறட்டுமென்று அவிழ்த்துவிட்டிருந்தார்கள். அவைகளைப் பொழுது சாய்வதற்குள் கொண்டுவந்துசேர்க்க வேண்டுமென்கிற பிடிப்போடு கால்களை தரையிற் பாவாமற் சம்பங்கூடையுடன் ஓடும் குடிகள். வலக்கையில் கரப்பும், இடுப்பில் கட்டிய ஓலைப்பறியுமாகக் குடிசைக்குத் திரும்பும் தலைப்பாகை ஆசாமிகள். நெற்கதிர் பால்பிடிக்கும் நேரத்தில் வெள்ளத்தில் கிடக்கிறதே என்கிற கவலையுடன் வளவைவிட்டு அவ்வப்போது வெளியேவந்து ஆகாயத்தைப் பார்த்து அங்கலாய்த்த விவசாயிகள் வீட்டிற்குத் திரும்பி, நச நசவென்றிருந்த மண்தரையில் கவனத்துடன் நடந்து சென்று கயிற்றுக்கட்டிலில் அமர்ந்தார்கள். அமர்ந்தவர்கள் அவலையும் வறுத்த கொள்ளையும் வாய்கொள்ள மெல்லும்போதுதான், கொடுத்துவிட்ட பெண்டாட்டின் வாடைக்காற்று தேவை புரிந்திருக்கவேண்டும், அவசரமாய்க் கைப்பிடித்து கட்டிலிற் கிடத்தினார்கள்.

பார்த்திபேந்திரன் போர்க்களத்திலிருந்து திரும்பியிருந்தான். மனதில் மகிழ்ச்சி மழைக்கால மேகம்போல அடர்த்தியாய்க் குவிந்திருக்கிறது. சம்புவரையர்கள், விஜயநகரப்படையிடம் இவ்வளவு மோசமாகத் தோற்பார்களென்று நினைத்தவனில்லை. தோல்வியுற்ற இராசநாராயணச் சம்புவரையன் உத்திரமேரூருக்கருகேயுள்ள அஞ்சினான் புகலிடத்தில் ஒளிந்திருப்பதாகப் பேச்சு. அவனைத் தேடிப்பிடித்துக் கொல்லவேண்டும். தொண்டைமண்டலம் தற்போதைக்கு விஜயநகர பேரரசு வசமென்றாலும் கூடிய சீக்கிரம் பார்த்திபேந்திரன் ஆளுகைக்கு உட்படவிருக்கிறது. சுபயோக சுபதினத்தில் காஞ்சியில் மகுடாபிஷேகத்திற்கு ஏற்பாடுசெய்யவேண்டும். அமைச்சர், தளபதி, மண்டல அதிகாரிகள், கவிஞர் பெருமக்கள் சூழ அரசாட்சி செய்யப்போகிறான். நந்திக்கொடி சுமந்த புரவிகள் நான்கு திசைகளிலும் பயணிக்கவுள்ளன. கலைஞர்கள் ஆதரிக்கப்படவிருக்கிறார்கள். பாறைகளில் உளிகள் ஒலிக்கவுள்ளன, குகைக்கோவில்கள் குடையப்படவேண்டியிருக்கின்றன. ‘மகாராசன், மகாராசாதிராசன், தருமமகாராசன் ‘ என ஏதாவது ஒரு பெயரில் இவ்வுலகம் புகழவிருக்கின்றது. வீரமும் சமயமும், நீதியும் கலையும், பல்லவர்குல அடையாளமல்லவா ? பிசகாமல் மெய்ப்பிக்கவேண்டும். மறவாமல், குமரகோட்டத்திற்கு இறையிலியாக சில சிற்றூர்களையாவது எழுதி வைக்கவேண்டும். தேவயானியின் தந்தை கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு உகந்த தலமாயிற்றே.

தேவயானி.. தேவயானியை நினத்தமாத்திரத்தில் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்துவிடுகிறான். இருட்டில் நின்றாற் கூட வெளிச்சமிடும் முகமும், கோபத்திற் கூட குதூகலிக்கத் தெரிந்த அஞ்சனவிழிகளும் அதன் வீர்யமும், ஈரம் மினுக்கும் குங்குமச் சிமிழ் அதரங்களும் அவை பிரிந்தால் சொரியும் வார்த்தை பூக்களும், இளம் சிவப்பு கன்னமும், அளகபாரத்தில் அடங்கிக் கிடக்கும் காதுமடல்களும், ஆட்டமிடும் தொங்கட்டான்களும், அளவாய் நிலத்திற் பதியும் பொன்னிறப் பாதங்களும், அப்பாதம் பட்ட மகிழ்ச்சியிற் சிலிர்த்துக்கொள்ளும் பூமியும் அடடா, மறக்கக்கூடியதா ? போர்க்களத்தில் வேல்களைக் கண்டபோது அவள் விழிகளல்லவா ஞாபகத்தில் வந்தன. போரிலே வாள் சுழற்றியபோது தேவயானியின் கருவிழிகளும் அல்லவா உடன் சுழன்றன. என் சிம்மாசனத்துக்கென பிறந்த ராணி, பார்த்திபேந்திரனின் பட்டமகிஷி. ‘எங்கே இருக்கிறாய் தேவயானி ? உன்னைக் காணவேண்டுமென்ற ஆவலில் போர்க்கள இரத்தவாடையோடு புறப்பட்டு வந்திருக்கிறேன் ‘. பார்த்திபேந்திரன் நனவுலகத்திற்கு திரும்பியபோது, சிவாச்சாரியார் குடிலுக்கு நேரெதிரே நின்றிருந்தான். அவன் மனதில் அங்குலம் அங்குலமாய் தேவயானியைபோலவே பதிந்துவிட்ட குடில், பழகிவிட்ட குடில்:விழல் வேய்ந்த கூரை, மண்சுவர். சுவரெங்கும் வெண்புள்ளிகள், அவற்றைச் சுற்றி எழுதப்பட்ட கோட்டோவியங்கள். இடை இடையே கோழியைப்போல, மயிலைப்போல சித்திரங்கள். மத்தியில் சிற்ப வேலைபாடுகள் நிறைந்த தடித்த ஒற்றைக் கதவு, நடை, தாழ்வாரம், பந்தலிட்ட உள்வாசல், அடுப்பங்கரை, புறவாசல், தோட்டம், கேணி தேவயானியின் மூச்சு படிந்த இடங்களெல்லாம் மனதிற் பதிந்துள்ளன. விதியால், காலத்தால் சிதைவுறாத வண்ணக்குழம்பு கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. வெள்ளமோ தீயோ விழுங்க முடியாதது. மகா சங்காரத்தினாற்கூட அழிக்கவியலாதது.

கச்சியப்பர் சிவாச்சாரியார் இல்லத்திற்குள் நுழைந்தான். வீடு இயக்கமின்றி ஊமையாகக் கிடந்தது. கூடத்து ஊஞ்சல்கூட சிவாச்சாரியாரின்றி, அசையாமல் நேராய் நிற்கிறது, இவனை வெறித்துப் பார்க்கிறது. உள்வாசல்வரை வந்து உலாவுகின்ற புறாக்கள் இல்லை. புறவாசலண்டை கேட்கின்ற மயில்களின் அகவுகள் இல்லை. தோட்டத்துக் கிணற்றுச் சுவரில் குருவிகள் அல்லது மைனாக்களின் கீச் கீச்சோ, மணிபுறாக்களின் டுர் டுர்ரோ இல்லை. வண்டுகளின் ரீங்காரமற்ற மலர்கள், தோட்டத்தில் கவனிப்பாரற்று வாடிக்கொண்டிருக்கின்றன. புயற்காற்றில் ஒடிந்து விழுந்திருந்த கிளைகளும், கொம்புகளும் அகற்றப்படாமல் கிடக்கின்றன. எங்கே போயிருப்பாள் ? என்று மனதைக் கேட்க, தடாகம் என்று பதில் வந்தது.

தேவயானி ஆடைகளைந்து சற்று முன்புதான் நீராடியிருக்கவேண்டும். கூந்தலில் நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. மஞ்சள் ஆடை தரித்திருக்கிறாள். பாசிபடர்ந்த படித்துறையில், அல்லிக்கும் தாமரைக்கும் போட்டியாக முகத்தை நிறுத்தி, தண்ணீரிற் கால்களை நனைத்தவாறு உட்கார்ந்திருக்கிறாள். கால்களை குளத்திலிருந்த அயிரை மீன்கள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. மிகவும் மெலிந்திருந்தாள், நேற்றைய தேவயானி அல்ல. ஆனாலும், மாசு மருவற்ற பெண்தேவதைகளுக்கே உரிய வடிவு. உலகத்தை வளைத்துபோடும் வசீகரம். யாழ் மீட்டும் கை, விருந்தோம்பும் கை, விளையாடும் கை, இவனது அத்துமீறல்களை விலக்கும் கையென்று இவளுக்கும் நான்கு கைகள் உண்டு. அல்லியும், மல்லிகையும் அடக்கமாய் கூந்தலில் அமர்ந்திருக்கக் கண்டால், சந்திரகலையை சிரோபூஷணமாகத் தரித்தவளென்று சொல்ல முடியும். உன்னத தனபாரங்களும், குங்குமத்தின் காந்தி போன்ற சிவந்த திருமேனியும், கரும்பாலாகிய வில்லும், பாசமும், அங்குசமும், மலர் பாணமும் கொண்டு இவனை வதைசெய்யும், மகாதேவி.

புகை படிந்த ஓவியத்தையொத்து இன்றைக்கு, அவன் பெண்தேவதை. செவ்வலரி ஓடிய கண்கள் அழுதழுது மேலும் சிவந்திருக்கின்றன. தாரைதாரையாகக் கண்ணீர் வடிக்கிறாள். பெய்த மழையின் காரணமாக தளும்பிக்கொண்டிருக்கிற தடாகம் அப்பெண் வடிக்கும் கண்ணீரால் வழிந்தோடுமோ என்று அஞ்சி நிற்கிறான். நீரின் பெருக்கம் எந்தநேரத்திலும் அவளை மூழ்கடித்துவிடலாம் என்கிறபயத்தில், பாய்ந்து அவளிடம் ஓடுகிறான். நெருங்கி நின்று கைகளை நீட்டுகிறான். பிரவாகமாகப் பெருக்கெடுத்து வருகிற கண்ணீரைத் தன்மேலாடையைக் கழற்றி, ஊற்றின் இடம்பார்த்து அடைத்துப் பார்க்கிறான். நீட்டிய கைகள் அவளது உடலை ஊடுருவி மறுபுறம் வெளிப்படுகின்றன. அவளை நெருங்கித் தோளைத் தொடுகிறான். அவள் உடலில் மாற்றமேதுமில்லை, இவனுக்கு சிலிர்க்கிறது. அந்தப் பெண்ணிடம் பேசவேண்டுமென்று உள்ளம் தவிக்கிறது. அவளது தலையிற் கிடந்த பவள மல்லிகைகளில் ஒன்றினையெடுத்து அவள் காதினை மெல்ல வருடுகிறான். அவள் சிந்துகின்ற கண்ணீரினைத் துடைக்கின்ற வகையில் விரல்களைக் கொண்டு போகிறான். ஏதும் நிகழவில்லை. அவளது விரல்கள், இவனது எண்ணத்தை அறிந்து செயற்படுவதுபோல இயல்பாய்ப் புடைவைத் தலைப்பைக் கொண்டு சென்று கண்களைத் துடைத்து கொள்கின்றன.

படித்துறையில் அமர்ந்திருந்த தேவயானியின் பார்வை இவனது திசைக்காய்த் திரும்புகிறது. அவள் நோக்குவது, தன்னைத்தான் என்று நினைத்தான். அப்படியேதுமில்லை. வருபவன் சொக்கேசன். பார்த்திபேந்திரனைக் கடந்து, தேவயானியை நெருங்குகிறான். அழுதவண்னமிருக்கும் தேவயானியின் எதிரே நிற்கிறான், கபடமாய்ச் சிரிக்கிறான். சொக்கேசனைத் தவிர்க்க நினைத்தவள்போல முகத்தை திருப்பிக் கொண்டாள்.

‘தேவயானி…பார்த்திபேந்திரன் இனி உன்னைத் தேடி வரபோவதில்லை ‘

தேவயானி பதட்டத்துடன் திரும்புகிறாள். சுட்டெரிக்கும் பார்வை, நாசி துடிக்கிறது, கண்கள் படபடக்கின்றன, உதடுகள் துடிக்கின்றன. மார்பு விம்மித் தணிகின்றது.

‘பார்த்திபேந்திரன் போரில் இறந்துவிட்டதாக அறிந்தேன். சம்புவரையர்கள் போரில் தோற்றதும், நாயக்கர்கள் போரில் வென்றிருப்பதும் எப்படி உண்மையோ, அப்படியே நாயக்கர் உதவிக்குச் சென்ற பல்லவரையன் மாண்டிருக்கிறான் என்பதும் உண்மை. எனக்கு வந்திருக்கும் செய்திகள் அதை ஊர்ஜிதம் செய்கின்றன. ‘

சொக்கேசன் நிதானமாகச் சொல்லுகிறான். அவ்வார்த்தைகளைக் கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்தவள் விம்மி அழுகிறாள்.

‘தேவயானி!..அவன் வெற்றியுடன் திரும்பவேண்டும் என்பதற்குத்தானே, கருமாறிப் பாய்வதென்று சங்கல்பம் எடுத்தாய். பலித்ததா ? உனது வேண்டுதல் முறையற்றதென்று இப்போதாவது புரிந்ததா ? நன்கு யோசித்து பார். வீணில் உயிரை மாய்த்துக்கொள்ளாதெ. இல்லற தர்மத்தினை மீறுவது சரியல்ல. நீயும் நானும் கணவன் மனைவியாக வாழ்ந்து ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இனியேனும் தெளிவாக இரு. புத்தியைச் சிதறவிடாதே. எழுந்திரு, வளவிற்குத் திரும்புவோம். ‘ -சொக்கேசன்

‘போர்க் களத்தில் இறந்துவிட்டேன் என்றா பொய்யுரைக்கிறான்.. ‘குரோதமும் சிறுமைக் குணமும் கொண்டவன். ஏமாற்று பேர்வழி. ஏதோ சோடனைக் கதைகள் கூறுகிறான். அவனை நம்பி மோசம் போகாதே. எனக்கு ஒன்றும் நேரவில்லை. நீ என்னிடம் கொண்ட காதல் பெரிது. அக்காதலனுக்காக உயிர்விடத்துணிந்த உன் உறுதியும் பெரிது. நெய்யுண்ணாமல், எள்விழுதும் புளியும் கூட்டி வேளைக்கீரை சேர்த்து, உப்பிடாத சோற்றையுண்டு, உடலை வதைத்துக் கொள்கிறாயாமே. போர்க்களத்திலிருந்து நேரடியாக உன் முகத்தைக் காண்வேண்டுமென்று ஓடோடி வந்திருக்கிறேன். என்னிடம் வார்த்தையாட மாட்டாயா ? ‘ இம்முறை பார்த்திபேந்திரன் அவள் அண்டையில் இருந்துகொண்டு புலம்புகிறான்.

சொக்கேசன் அவள் தோள் தொட்டு உரிமையாய் எழுப்புகிறான். பாம்பினை மிதித்துவிட்டவள்போல, பதறிக்கொண்டு எழுந்திருக்கிறாள். சற்றுமுன்னர் நீராடிய அடர்ந்தக் கூந்தல் படர்ந்து விசிறித் திரும்புகிறது. ஈரக்கூந்தலின் நீர்த்துளிகள் இவன் முகத்திற் பட்டுத் தெறிக்கின்றன. அர்ச்சகனை விலக்கிக்கொண்டு குளத்துப் படிகளை இரண்டிரண்டாகத் தாவி மேலே வருகிறாள். ஈரப்புடவை காற்றுக்கும் காலுக்குமான பயணத்திற் களைப்புண்டு தலையிலடித்துக்கொள்கிறது. அவள் பின்னே அர்ச்சகனும், வேகமாய் நடந்து மேலே வருகிறான். எதிர்பாராதவிதமாக பாசி படர்ந்திருந்த படியொன்று வழுக்கியதில், கால் இடறி, குளத்தின் திசைக்காய் உருண்டு செல்கிறான். அக்காட்சியைக் காண பார்த்திபேந்திரனுக்குச் நகைப்பு வருகிறது. அர்ச்சகன் புண்ணியம் செய்திருக்க வேண்டும். குளத்தில் விழவிருந்தவன், நிதானித்துக்கொண்டு எழுந்து, இவர்களின் திசைக்காய் ஓடி வருகிறான்.

தேவயானி பார்த்திபேந்திரனைக் கடந்து, காமாட்சி அம்மன் கோபுர திசைக்காய் நடக்கிறாள். அவள் பின்னே சொக்கேசனும், பார்த்திபேந்திரனும் ஓடவேண்டியிருக்கிறது. கோவில் மதிற் சுவரொட்டிய கிழக்கு வாசல் வழியாக கோபுரத்தின் பிரகாரத்திற்குள் நுழைகிறார்கள். அவள் உடலைச் சுற்றியிருந்த ஆடையிலிருந்து நீர் இன்னமும் சொட்டிக்கொண்டிருக்கிறது. அவள் பாதம்பட்டு நிலம் வேர்த்த இடத்தினை, இவன் பாதங்கள் கண்டுணர்ந்து முன்னேறுகின்றன. கொடி மரத்தினருகே நின்று, உச்சியிலிருந்த சிங்கத்தை வணங்கி முன்னேறுகிறாள். கர்ப்பக் கிரகம் பூட்டியுள்ளது. மூல விக்கிரகத்தை வெளியிலிருந்தே விழுந்து வணங்குகிறாள். பிரகாரத்தை முன்றுமுறை சுற்றிவந்து பிரதட்ஷணம் செய்கிறாள்.

தெய்வானையின் மஞ்சள் முகம் கறுத்திருக்கிறது. அவளது நடையில் முன்பைவிட வேகம். தெற்கு கோபுரத்தை நோக்கியபடி விடுவிடென்று நடக்கிறாள். சொக்கேசன் அவைளைக் கடந்து சென்று குறுக்காக நிற்கிறான். ஒதுங்கிச் செல்ல முயல்பவளின் கையினைப் பிடித்தான்.

‘பைத்தியக்காரி! இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. என் வார்த்தைகள் சராசரிப் புருஷனின் வார்தைகள் அல்ல. வேதம் படித்தவன் வார்த்தைகள். என்னைச் சபிக்க வைத்துவிடாதே! துர் மரணத்தைத் தேடிக்கொண்டு உன் ஆத்மாவை அலையவிடாதே. ‘

‘சுவாமி! என்னை மன்னியுங்கள். விவரம் புரியாத வயதிலே நடந்த இரண்டு பொம்மைகள் கல்யானத்தை ஞாபகபடுத்திக்கொண்டு அல்லலுறவேண்டாம். என்னை மனப்பூர்வமாய் ஆசீர்வதியுங்கள். அடுத்துவரும் பிறவியிலேனும் எனக்கவர் வாய்க்கவேண்டுமென்று, உங்கட் திருவாயிலிருந்து வார்த்தைவர வேண்டும். ‘

‘சண்டாளி, மறுபடியும் உன் பேய்க்குணத்தைக் காட்டுகிறாய் பார்த்தாயா ? எக்கேடாவது கெட்டுப்போ. உன்னைத் திருத்திக்கொள்வதில்லையென்று முடிவெடுத்தபிறகு, நான் என்ன செய்ய. ஆனால் ஒரு வார்த்தை, எத்தனை ஜென்மமெடுத்தாலும் பார்த்திபேந்திரன் ஒருக்காலும் உனக்கு மணாளனாக வாய்க்கப்போவதில்லை. ‘

‘முட்டாள் என்ன செய்கிறான் ? ‘, பார்த்திபேந்திரன் உடல் துடிக்கின்றது. சொக்கேசனிடமிருந்து அவளைக் காப்பற்றியாகவேண்டும். எட்டி அவனைப் பிடித்து, பலங்கொண்டமட்டும், வலது கையின் முஷ்டியை அவன் முகத்தில் ஆக்ரோஷமாக இறக்குகிறான். அவனது கால்களுக்கிடையில், இடது காலால் எட்டி உதைத்து விலகி நிற்கிறான். அர்ச்சகன் மீது தாக்குதல் நடத்திய இவனுக்கு வலிக்கிறது, தக்குதலுக்குள்ளான அர்ச்சகன் அமைதியாகவிருக்கிறான்.

தேவயானி தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறியாதவள்போல அமைதியாகக் கோபுரத்தை நோக்கி முன்னேறுகிறாள். மாடத்திலிருந்து புறாக்கள், இவளின் திடார்பிரவேசத்திற்கு அஞ்சி கும்பலாக இறக்கைகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு வட திசைக்காய் பறக்கின்றன. பிரமாண்டமான கோபுரத்தில் ஒவ்வொரு மாடத்திலும் ஏறி நின்று, கீழ் நோக்கி வெறித்துப் பார்க்கிறாள். இறுதியாக ஐந்தாவது மாடத்திற்குத் வந்திருந்தாள். எதிரே பிரமாண்டமாய் சக்கர தீர்த்தம். பார்த்திபேந்திரனுக்கு நடக்கவிருக்கும் விபரீதம் புரிகிறது. வேண்டாமென இவனெழுப்பிய குரல்கள் அதலபாதாளத்தில் விழுகின்ற கற்களாய் ஓசையின்றி அடங்குகின்றன. சக்கரத் தீர்த்தத்திலிருந்த தேவயானியின் பார்வை சொக்கேசன் பக்கமாகத் திரும்புகின்றது.

‘சுவாமி. உண்மையைச் சொல்லுங்கள். அவர் போரில் இறந்திருப்பார் என்பதை என் மனம் நம்ப மறுக்கிறது. ஒருவேளை அவர் எனக்களித்த வாக்குப்படி திரும்பவும் வருவாரா ? திரும்பவும் வருவாரென்றால், என் இறப்பு சரியான தீர்வாகுமா ? திசைதெரியாமல் என் புத்தி தடுமாறுகிறது. குழப்ப வெள்ளத்தில் தத்தளிக்கிறேன். ஏதாவது வழி சொல்லுங்களேன். ‘

‘தேவயானி! எத்தனைமுறை சொன்னாலும், இதுதான் பதில். பார்த்திபேந்திரன் வரப்போவதில்லை. உன் தந்தையும் குருவுமாக இருந்த கச்சியப்பருக்கு இழைத்தத் துரோகத்திற்கான தண்டனையை அவன் அனுபவித்தே ஆகவேண்டும். உயிர்பிழைப்பது எனக்காகவென்றால், சொல். இருவருமாய் உன் தந்தையின் ஆசியுடன் இல்லறம் தொடங்குவோம். ஆனால் மரணம் உன்னை எதிர்பார்த்து காத்திருப்பதும், நீயோ நானோ அதனை தடுத்து நிறுத்திவிடமுடியாதென்பதும், உண்மை. ‘

தேவயானி யோசிக்கிறாள். கோவில் விமான திசைக்காய், கும்பிட்டுவிட்டு இறங்க முயற்சிக்கிறாள். சொக்கேசன் வழி மறிக்கிறான்

‘இந்த அர்ச்சகன் வழி மறித்து என்ன செய்கிறான் ?. அவள் கன்னங்களில் ஏன் திரும்பத் திரும்ப அறைகிறான். அவனை உதறிவிட்டு இறங்க முயற்சித்து திரும்பியவளை, பின்புறம் கைவைத்து.. அடப்பாவி…அநியாயமாக அவளை! ஏய் நிறுத்து, நிறுத்து.. ‘

சொக்கேசன் தன் வலிமையை முழுவதுமாகப் பிரயோகித்து, இவனது அமுதத்தை, கற்கண்டை, நற்கனியை, தேவயானி என்ற பேர்படைத்த தேவதையைத் தள்ளிவிடுவதைப் பார்த்திபேந்திரன் நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான். காற்றைக் கிழித்துக்கொண்டு, கர்ப்பக்கிரக சிலையொன்று சோகம் கவிந்த முகமும், திறந்த விழிகளுமாகத் தலை குப்புற விழ, நீர் அய்யோவென்று அணைத்துக்கொள்கிறது.

பார்த்திபேந்திரன் பதறினான், அழுதான், அரற்றினான். ஆதரவாய் அவன் தோளில் ஒரு கை விழுந்தது. எதிரே தோழன் பேசும் பெருமாள்.

‘நீயா ? முந்தைய நாள் போரில் இறந்தவன் அல்லவா ? ‘

‘அதானாற்றான் உன்னுடன் உரையாடமுடிகிறது. ‘

‘நீ சொல்வதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ‘

‘சொக்கேசன் தேவயானியிடம் கூறியது பொய்யல்ல, போரில் நீயும் இறந்து போனதென்பது உண்மைதான். ‘

/தொடரும்/

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தில் அழுத்தி

இருவினையின் தன்மைகளுக்கு ஈடான யாக்கை

– சிவப்பிரகாசம்

பெர்னார் குளோதனும், அவன் சிநேகிதன் மாறனும் குதிரை போட்டுக்கொண்டு நேற்றைய தினம் அதிகாலையிலேயே, கப்பித்தேன் தெக்யுபிளான் யோசனை பேரிலே புறப்பட்டு வந்திருந்தார்கள். வைத்தீஸ்வரன்கோவிற் பயணத்திற்கு முன்பாக காரைக்கால பட்டிணத்தின் நிர்வாகி மிஸியே பெஃபுரியேவிடம், கும்பெனித் திட்டத்தின்படி உத்தரவு வாங்கிக்கொண்டே குளோதன் புறப்பட்டிருந்தான். சினேகிதர்களின் குதிரைகள் இரண்டும் சீராய் ஓடிக்கொண்டிருக்கின்றன. வழி நெடுகிலும் கோடைகாலத்தினை சிங்காரித்து கொலுபொம்மையாய், காவிரி தஞ்சைப் பகுதியை அமர்த்தியிருந்தது. புதுச்சேரியில் தெரியும் வெக்கை இங்கில்லை. உச்சி வெயில் நேரத்திலும் உடற் தாகத்தை தீர்க்கின்ற வகையில் சிலுசிலுவென்ற காற்று. வயல்களில் நிறைந்திருந்த நெற்கதிர்களின் சலசலப்பில் எழுந்த நீலாம்பரி, இதமாக காற்றுடன் கலந்து வெளியை நிறைக்கிறது. அவ்விசைக்கு ஒத்த தாளமாக பாதையிற்போகும் குதிரைகளின் குளம்படிகள். இயற்கையின் தயவால் நடக்கும் இசைக்கச்சேரியினைக் கைத்தட்டி ரசிக்கும் விதத்தில், குதிரைகளின் குளம்படிச் சத்தங்கேட்டு படபடவென்று இறக்கைதட்டி எழுவதும் அமர்வதுமாயிருக்கிற உள்ளான்கள்,கொக்குகள்.

குளோதன் மிகவும் பலவீனமாக இருந்தான். உடல், உள்ளம் இரண்டிற்கும், அயற்சி கண்டிருக்கிறது. தேவயானியை மறக்கமுடிந்தால், அடுத்த சில நாழிகைகளில், இவனது விதி திருப்பி எழுதப்படுமென்கிறார்கள். இந்துக்கள் நியாயப்படி, எழுதின விதியை மாற்றமுடியாதென்பதுதானே உண்மை. இவனைச் சுற்றியுள்ளவர்கள் முடியுமென்கிறார்களே: பிரெஞ்சுத்தீவு குவர்னர் லாபூர்தொனே, லஸாரிஸ்து குருமார்கள், பிரபு போல்அஞ்ஞெல், காமாட்சி அம்மாள், புதுச்சேரி குவர்னர் பெண்ஜாதி மதாம் ழான்ன் துய்ப்ளெக்ஸ், கப்பித்தென் தெலாமர், பிறகு கடந்த சில மாதங்களாக பார்த்திபேந்திரன் என்கின்ற பெயர் சூட்டி அழைக்கும் மனக்குரலென்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான ஆயுதத்தை ஏந்திக்கொண்டு வெருட்டுகிறார்கள். இவர்கள் எல்லோரும் நான் தேவயானியை மணக்கக்கூடாதென்பதிற்தான் குறியாய் இருந்திருந்திருக்கிறார்கள். குளோதனுக்கு ஏற்பட்ட காதல் பிரெஞ்சுத் தீவில் கபானில் வாழ்ந்த தெய்வானைமீதன்றி, மாளிகையிற் பிறந்த தேவயானி மீதானதல்ல என்பதை இக்கூட்டதிற்கு எப்படிப் புரியவைப்பதெனத் திகைத்திருந்தவேளை, அதற்கு அவசியமில்லையென்றாகிவிட்டது. தெய்வானையையும் என்னையும் இணைப்பதென்று இந்துதேசத்தவர் நம்புவதைப்போலே விதி தீர்மானித்திருக்க, மானிட சக்தியால் ஆகப்போவதென்ன ? என்று தனக்குத் தானே பெர்னார் குளோதன் பேசிக்கொள்கிறான்.

காமாட்சி அம்மாள் இறந்துபோனச் சேதி குளோதனுக்கு மிகவும் மனவருத்ததை அளித்ததென்றே சொல்லவேணும். எப்பேர்ப்பட்ட பெண்மணி, திடாரென்று இந்தத் தேசத்திற்கு வந்து இறக்கும்படி ஆகிவிட்டதே. இந்த நேரத்தில், தெய்வானைக்கு ஆறுதலாகச் சிலவார்த்தைகள் சொல்லியாகவேணுமே. தெய்வானை, பிரெஞ்சுத் தீவுக்குக் குளோதனுடன் புறப்படத் தீர்மானித்து கிழவர் நாயக்கரை வற்புறுத்தியாகவும், அம்மனிதரும் அவளை அழைத்துக்கொண்டு காரைக்கால் வரவிருப்பதாகவும் மாறன் சொல்லுகிறான். இப்படியான நேரத்திலே, கும்பெனியின் ஆக்கினைக்கு மாறாக தெய்வானையைத் தேடி திருச்சினாப்பளிக்குச் செல்லவேணாமேயென்றும் எச்சரிக்கிறான்.

தெய்வானையை நினைத்த மாத்திரத்தில், மனச்சோர்வுகள் உலர்ந்து போகின்றன. நாடி நரம்புகளில்,இரத்த நாளங்களில், நகக் கணுக்களில், மயிற்கால்களில், மன வெளிகளில் சந்தோஷ பூக்கள் இதழ் விரிக்கின்றன. மகிழ்ச்சி அருவியாய் சிரசில் விழுந்து, சலசலவென்று பரவி மனதையும் உடலையும் ஒருசேர நனைக்கிறது. அவளைப் பார்த்தது, நினைத்தது, பிரேமைகொண்டது, வார்த்தையாடியது, தொட்டது, தள்ளி நின்றது, பிரிவால் வருந்துவது அனைத்துமே இவனுக்குப் பழகியவை. இப்பிறவியிலல்ல, ஏற்கனவே ஒருமுறை இக்காரியங்களைத் ஒத்திகைப் பார்த்திருக்கிறான். எப்போது ? எப்படி ? ஒருவேளை அமானுஷ்யக் குரல் பேரிட்டழைக்கும் பார்த்திபேந்திரன்… ? அப்படியென்றால் தேவயானி ? தமிழர்கள் நம்புகின்ற நாடி ஜோதிடத்தில் ஏதேனும் விடைகிடக்குமா ?

மாமரங்களுக்கும் பலாமரங்களுக்குமிடையில், இருந்த சிதம்பர குருக்கள் வீட்டை குடியானவச் சிறுவன் ஒருவன் அடையாளம் காட்டினான். வீட்டெதிரே ஜோஸ்யர் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தது கண்டு, ஆச்சரியம் அடைந்தார்கள். குளோதனும் மாறனும் குதிரையிலிருந்து இறங்கிய மாத்திரத்தில், ‘உங்களுக்காகத்தான் காத்திருந்தேன் ‘ என்கிறார். நண்பர்கள் இருவருக்கும் பறுபடியும் வியப்பு. குதிரைகளை அருகிலிருந்த மரங்களில் பிணைத்தவர்கள், சோதிடர் வழிகாட்டப் பின் தொடர்ந்தார்கள்.

வீட்டு வாசலில் இருந்த மாக்கோலத்தை மொய்த்துக்கொண்டிருந்த சிற்றெறும்புகளை மிதித்துவிடாமல் ஜோஸ்யர் நுழைய, இவர்களும் அவ்வாறே செய்தார்கள். வீட்டில் நுழைந்ததுமே, பசுஞ்சாணத்தில் மெழுகியிருந்த தரையும் சுவர்களும் ஆங்காங்கே ஈரம் உலராமலிருக்க, சாணத்தின் மணத்துடன் சாம்பிராணிப் புகையும் கூடமெங்கும் வியாபித்திருந்தது. இவர்கள் இருவருக்கும் ஜோஸியருக்கும் இடையில் தெரிந்த சுவருக்குக் கீழே அமைந்திருந்த சிறிய மேடையில் செப்புச் சிலைவடிவில் அம்பிகை, மஞ்சள் குங்கும அலங்காரத்தில் ஜொலிக்கிறாள். இரு புறமும் குத்துவிளக்குகளின் பஞ்சமுகத்திலிட்டிருந்த திரிகள் நெய்யினை ஒளியாய் மாற்றி உமிழ்ந்துகொண்டிருக்கின்றன.

‘உட்காருங்கோ..! புதுசேரியிலிருந்து எப்போது புறப்பட்டிருந்தீர்கள் ? ‘

‘இல்லை நாங்கள் காரைக்கால் பட்டிணத்திலிருந்து வருகிறோம், நேற்றுப் புறப்பட்டோம். திருநள்ளார் வழியாகப் பேராளத்திற்கு வந்து அங்கே சத்திரமொன்றில் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு, பின்னர் இரவை மயிலாடுதுரையில் கழித்துவிட்டுக் காலையில் புறப்பட்டு வந்தோம். ‘

ஜோஸ்யர் கோரைப்பாயொன்றினை விரித்துப் போட மாறன் சப்பணமிட்டு உட்கார்ந்தான். பெர்னார் குளோதன் உட்காருவதற்குச் சிரமப்படுவதாகத் தெரிந்தது.

‘பொறுங்கள், உங்களுக்குச் செளகரியமாகத் தவிசு ஒன்று கொண்டு வருகிறேன். ‘ ஜோஸ்யர் உள்ளே நுழைந்து மொட்டை நாற்காலியொன்றை கொண்டுவர பெர்னார் குளோதன் அதிலமர்ந்து கொண்டான்.

‘என் வீட்டைக் கண்டுபிடித்ததில் சிரமங்கள் உண்டோ ? ‘

‘ஏதுமில்லை. சிதம்பரம் குருக்கள் என்று சொன்னமாத்திரத்தில், எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. வழியைச் சரியாய் சொன்னார்கள். ‘

‘உண்மைதான், எனது தகப்பனார் ஜலகண்டேஸ்வரர் காலத்திலிருந்தே, அம்பாள் கிருபையால் நாங்கள் சொல்கின்ற நிமித்தங்கள் பலிப்பதால், அரசகுடும்பங்கள், பிரபுக்கள், பிரதானிகள், பெரிய குடும்பங்களென யாராவது ஓரிருவர் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். நீங்கள் வந்த காரியமென்ன ? ‘

‘ஜோசியரே! அதையும் தங்கள் சோதிடத்தாலே சொல்ல முடியாதா ?. சித்த முன்னாலே, நாங்கள் உங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றபோது, நாங்களிருவரும் உங்களைத் தேடி வருவோமென்பதை முன் கூட்டியே அறிந்திருப்பவர் என்ற வகையில் வார்த்தை வந்ததே ‘

‘சத்தியம். சில தினங்களுக்கு முன்பு, மதுரை நாயக்கர் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் திருச்சினாப்பள்ளியிலிருந்து வந்திருந்தார், அந்தப் பெண்ணின் சோதிடத்தைப் பார்த்துச் சென்றார். அப்பெண்ணுக்கு மதுரை திருச்சி அரியணைக்கு வாய்ப்புண்டா ? கலியாணம் ஆகுமா ? ஆகுமென்றால் அவளது மணாளன் யார் ? அவளது எதிர்கால விதிப்பயன் என்னவென எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு புறப்பட்டிருந்தார். அன்றிலிருந்து, அவளுக்குப் பாத்தியதை ஆன நீங்களும் என்னைத் தேடிவருவீர்களென்பதை நான் அறிந்திருந்தேன். ‘

‘நீங்கள் சோதிடம் பார்த்தது எந்தப்பெண்ணுக்கு என்று அறியலாமா. அவளது பெயரையும், சோதிடத்தின் விபரங்களையும் எங்களிடத்தில் கூறுவீர்களா ? ‘

‘ஷமிக்கவேணும். அந்தப் பெண்ணின் சாதகப்பலனை உங்களிடம் பிரஸ்தாபிப்பது, சோதிட தர்மமாகாது. தவிரவும் அப்பெண் அரசகுடும்பத்தைச் சார்ந்தவள். உங்களுக்குப் பார்க்கவேணுமென்றால் சொல்லுங்கள் ‘

‘ஜோஸ்யரே.. நீங்கள் குறிப்பிடுகின்ற பெண்ணும், நாங்கள் தகவலறியவேண்டுமென்று வந்த பெண்ணும் ஒருத்தியே. அவளது ஜாதகக் குறிப்புள்ள ஓலையையே நாங்கள் கொண்டு வந்தோம். அவளது பிறப்புகுறித்த பூர்வோத்திரம் ஏற்கனவே எங்களிடமுள்ள ஓலையில் எழுதியுள்ளது.

இந்து தேசத்தில் அப்பெண்ணுக்குள்ள அரசியல் பிரச்சினைகளையும் தற்போது நிலவும் அரசியல் சூழலைவைத்து ஓரளவு எங்களால் ஊகிக்க முடிகிறது. இருந்தபோதிலும் விதிப்பலனொன்று இருக்கிறது அல்லவா. வருங்காலத்தினை அதுவல்லவோ தீர்மானிக்கிறது. அதனை அறியவேண்டியே எங்களுக்காக இக்கட்டான நேரத்திலும், இத்தனை கல் குதிரைபோட்டுக்கொண்டுவந்தோம். சொல்லுங்கள் அப்பெண்ணுக்குக் கன்னிகழியுமா ? கன்னிகழியுமென்றால் அவளை மணப்பவன், அவளது விருப்பத்திற்குரிய மணாளனா ? ‘-வேலு

‘என் யூகம் சரியென்றால், திருச்சினாப்பள்ளியிலிருந்து வந்திருந்த பெரியவர் சொன்னதைப்போன்று, இப்பிரபுவைத்தான் அப்பெண் மனதிற் வரித்திருக்கவேணும். அப்படியேயென்றாலும் பெண்ணின் சாதகக் குறிப்பை அந்நிய மனுஷாளிடம் பிரஸ்தாபிப்பது நியாயமாகாதென்று ஏற்கனவே சொல்லிப்போட்டேன். வேணுமானால் ஒன்றைச் செய்யலாம். பிரபுவிற்கு ஏதேனும் சாதகக் குறிப்பு இருக்குமானால் கொடுங்கள், பார்த்து ஆரூடம் சொல்கிறேன். ‘

‘நல்ல யோசனைதான். சாதகக் குறிப்பென்று கைவசமில்லை. ஆனால் அவரது ஜனன நேரம், காலம், இடம், பெற்றோர்கள் விபரங்களைச் சொல்ல முடியுமென்றால், அதன்பேரிலே கணிக்கலாமில்லையா ? ‘

‘உடனே முடியாது. ஓரிரு தினங்கள் கழித்து வந்தீர்களென்றால், பிரபுவின் சாதகப் குறிப்பு அதற்குள் தயாராகிவிடும், பிறகு மற்றதைச் சொல்லமுடியும். ‘

‘நாடி சோதிடங்கூட, நீங்கள் பார்ப்பதுண்டு என்று கேள்விபட்டோமே ‘

‘வாஸ்த்தவம். நாடி ஜோதிடமெனில் இன்றைய தினமே பேஷாகப் பார்த்துச் சொல்ல முடியும். ஆனால் அதற்கும் உங்களுக்கு பிராப்தம் இருக்கவேணும், உங்கள் ஓலை என்னிடம் இருக்கும் பட்ஷத்தில் இன்றைக்கேகூட படிக்கலாம். உங்கள் ஓலை என்னிடம் இல்லாத பட்ஷத்தில் பலாபலன்களை வாசிக்க மாதங்களென்ன, வருடங்கள்கூட ஆகலாம். முதலில் பிரபுவின் வலதுகை கட்டைவிரல் ரேகையைப் பதிவுசெய்துகொண்டு அவரதுத் ஓலையை தேடவேணும். ‘ என்ற ஜோஸ்யர், ஓர் ஓலை நறுக்கையும், கறுப்பு மையினையும் கொண்டு வந்து, பெர்னார் குளோதனின் ரேகையை ஒற்றி எடுத்தார். ‘பிரபுவின் ரேகை ‘இருசுழி வட்ட ரேகையில் அடங்கும். ‘ நான் இதற்கான கட்டினைத் தேடிபிடித்து எடுத்து வருகிறேன், நீங்கள் அதுவரை திண்ணையில் காத்திருக்கவேணும் ‘, என்றவர் உள்ளே சென்றார். இரண்டுமணி நேரம் கழித்து அவர்களை உள்ளே அழைத்த சோதிடர் கையில், கிட்டத்தட்ட ஓரடி நீளமும், ஒன்றரை அங்குல அகலமும் உள்ள பனையோலைச் சுவடிகள். நண்பர்களை அவரெதிரேயிருந்த பீடத்தில் அமருமாறு சைகைக் காட்டினார்.

‘தம்பி, பிரபுவைக் கையைக் கன்னத்தில் வைக்கவேண்டாமென்று சொல்லு. நேராய் உட்கார்ந்து நான் வாசித்து கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ‘ஆம் ‘ அல்லது இல்லையென்று, அவர் பதில் சொல்லவேணும். தமிழ் தெரியாதென்றால், நீர்தான் துரைக்கு, அவரது பாஷையில் புரியவைத்து பதிலை வாங்கவேணும். ‘ என்றார்.

மாறன் பெர்னார் குளோதனைப்பார்க்க, சம்மதமென்ற பொருளில் அவன் தலையாட்டினான். அம்பாளையும், அருகிலிருந்த அகத்திய முனியையும் வணங்கிய சோதிடர் ஒவ்வொரு கட்டையும் மெளனமாய் வாசித்த பின் கேட்க ஆரம்பித்தார்.

‘உங்கள் பெயர் ‘க ‘கரம் ‘வ ‘கரத்தில் ஆரம்பிக்கிறதா, தங்கள் தாயார் பெயர் ஐந்தெழுத்து கொண்டதா, தங்கள் தகப்பனார் உயிருடன் இருக்கின்றாரா என்று கேட்கவும், பெர்னார் உடனுக்குடன் இல்லையென்று தலையாட்டுகிறான். ஜோசியர் வேறொரு கட்டை எடுத்துகொண்டு அதேமாதிரி கேட்டுக்கொண்டேவந்தார். அக்கட்டுகள் முடிந்தவுடன் வேறு சில ஓலைச்சுவடிக் கட்டுகளைத் தேடி எடுத்துவந்தார். இந்தமுறை ஒரு கட்டில் நான்கைந்து ஓலைகளுக்குப் பிறகு சாதகரின் தாயார் பெயர் எலீஸா அல்லது எலிசபெத்; தந்தையார் பெயர் லூயி; பிறந்தது சார்வரி வருடம், சித்திரை மாதம், சோமவாரம், மேஷராசி என ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லிக்கொண்டுபோக பெர்னார் ஆம் ஆம் என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ‘இருபந்தைந்து வயதில், ஜாதகர் தனது வருங்காலத்தை அறிவேண்டு மென்பதைவிட தனது பூர்வோத்திரத்தையும் அறியவேணுமென்ற ஆவலில் வந்திருக்கிறார் அப்படித்தானே ‘ எனக் கேள்வி கேட்டுவிட்டு சோதிடர் சினேகிதர்களை நேராய்ப் பார்த்தார். பெர்னார் குளோதன் தலை அசைக்கவும், சோதிடர் கையிலிருக்கும் ஓலையை வாசிப்பதாய்ப் பாவனை செய்தவண்ணம் கடகடவென்று சொல்லிக்கொண்டு போகிறார்:

‘கேளடா ஒருவன்தன் கட்டைவிரல்ரேகை இருசுழி வட்டரேகை இரண்டுபுள்ளி கலந்து காணின், இவன் பூர்வஜென்ம பாவ புண்ணியத்தின் பயனாக ஜனனம் கண்டது சார்வரி ஆண்டு, சித்திரை மாதம், இருபாணொன்று சோமவாரத்தில், மேஷ ராசியில் சுக்ரதிசையில் பிறந்து, சூரிய திசையில் வளர்ந்து, சந்திர திசையில் செழித்து, செவ்வாய் திசையில் பரிவர்த்தனை அரசயோகம் வைத்துப் படைக்கப்பட்டு பிறந்தவன். இவன் கையில் தாரத ரேகை செடிரேகை வைத்தபடி குளோதன் நாமம் தரித்து ஸ்த்ரீ தோஷம் வைத்துப் படைக்கப் பட்டவன். தென் கிழக்குத் தென் மேற்கு மூலையை ஒட்டி ஜாதககாரனுக்கு யோகம் தர வந்தவள்தான் ஆயினும், வடமேற்குத் திசையில் வந்த பெண்ணால் பெரும் விபரீத ராஜயோகம் தர காத்துள்ளது. அவள் முன் ஜென்மத்தில் இவன் கிடைக்காமல் துர்மரணம் வேண்டிப்பெற்றவள். அவளது பர்த்தா இவனைத்தேடி இறப்பொழித்து அலைந்துகொண்டிருக்கிறான். இவன் உத்தமனே ஆயினும், கிரக நிலையைக் காணுங்கால், சூரியன் புதனுடன் சேர்ந்து அமர, மதி மேஷத்தில் நிற்க, நாலில் குரு இருப்பது உகந்த நேரமல்ல. இவன் கல்வி, கலை ஞானம், பலமொழி ஞானம், இலக்க வித்தை, வியாபாரவித்தை, வாயினால் பிழைத்தல், கடல் தாண்டிய பயணம், பெண்களை கவரவல்ல உல்லாச சல்லாப கேளிக்கையில் கவனம். ஏற்றுமதி இறக்குமதி, கம்பெனியின் கெளரவமான உத்தியோகமும் செய்து பிழைக்க எதிர்நோக்கியுள்ள காலத்தில், ஏழைச்சனங்கள் மீது பரிவு, இந்துதேச மனுஷர்கள் மீது அபேட்ஷம், கோயில் குருமார்களிடத்தில் அக்

கறை, எஜமான விசுவாசம், சினேகிதர்கள் மீது பிரியமென சிறக்கவிதி. இவனுள் சீதளசார்பு ரோகம்., சிரசில் வடு. திட்டமிட்டு எதையும் செய்ய வல்லவன் முற்பிறவியின் குரு சாபத்தாலும், கர்ம வினைகள்காரணமாகவும் இவன் சரீரத்திற்கு மாத்திரமின்றி, இவனது ஆத்மாவிற்கும் தொல்லைகள் தொடரவேணும். இருபத்தைந்துவயதில் பெண்ணால் வம்பு, பகை வழக்கு விசாரணை, கச்சோத்து அவமானமென்கிற நிலை ஆரம்பித்து விதி மாறி இவன் தடுமாற ஆரம்பித்திருக்கிறான்.

முன் ஜென்மத்தில் ராஜாக்கள் வம்சத்தில் பிறந்து ….

/தொடரும்/

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 48

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இக்காயம் நீங்கி இனியொரு காயத்திற்

புக்குப் பிறவாமல் போம்வழீ நாடுமின்

எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்

றக்கால முன்ன அருள்பெற லாமே.

– (திருமந்திரம்) -திருமூலர்

….

நண்பனே! நான் நிரந்தரமானவன், எனினும் தனித்துச் செயல்படுவதில்லை. எனது காரியம் நிறைவேற, உனது நட்பு அவசியமாகிறது. வண்ணப் பாத்திரத்தில் நிரப்பப்படும் நீரானது பாத்திரத்தின் வண்ணத்தைப் பிரதிபலிப்பதில்லையா ? நானும் அவ்வப்போது உன் வடிவ குணத்திற்கேற்ப வினையாற்றுகிறேன். உன்னைவைத்தே என் விருப்பங்களை நிறைவேற்றவும், எனது காரியங்களை செயல்படுத்தவும் வேண்டும். உனது ஆயுள்பரியந்தம் உன்னுடன் ஜீவிக்கிறேன். நீ சீர்கேடு அடைவதற்கு முன் எனது விருப்பங்களை பூர்த்திசெய்தல் வேண்டும். நீ எனக்கு ஒத்துழைக்க மறுக்கும் நிலையில், உன்னைவிட்டு நீங்கி, என் காரியம் தொடர வேறு உடலை தேடவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படுகிறது. இப்பிறவியிலேனும் எனது விருப்பங்கள் சித்தியாகவேண்டும். அதுவன்றி மீண்டும் மீண்டும் புது உடல், புதிய எண்ணம், புதிய விருப்பமெனில் நான் விடுதலை பெறுவது எக்காலம் ?

….

இருபதாம் நூற்றாண்டு…

டிரைவர், புகையைக் கடைசியாய் ஒருமுறை இழுத்தவன், விரல்களுக்கிடையில் மிச்சமிருந்த சிகரட் துண்டினை, வீதியில் எறிந்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தான். நேரெதிரே லாமினெட் செய்து நிறுத்தியிருந்த திருப்பதி வெங்கிடாஜலபதியின் தலையில் மல்லிகைச் சரத்தை அவசரமாய் வைத்து, உபசாரமாக இரண்டு ஊதுவத்திகளைச் செருகினான். தீக்குச்சி உரசலில் அவையிரண்டையும் பற்றவைத்து, புகை எழும்பக் காத்திருந்து நாசூக்காய் ஒரு கும்பிடுபோட்டான். சாவியைச் செருகித் திருப்ப எஞ்சின், அந்நியமனிதனைக் கண்ட நாய்போல உர்ரென்கிறது. காரெங்கும் அடர்த்தியாய்ப் பரவிய மணம், பெர்னாரின் நாசிகளை அடைக்கிறது. இவனுக்குப் பிடிக்காத மல்லிகைப் பூ, ஊதுவத்தி மணம். டிரைவர், இவனது காலையைக் கசப்பில் ஆரம்பித்துவைப்பானென எதிர்பார்க்கவில்லை. நண்பன் வேலுவோ சற்று முன் வாங்கிய காலைத் தமிழ்த் தினசரியைத் தீவிரமாக வாசித்துக்கொண்டிக்கிறான்.

கடலூர்த் திசைக்காய்க் கார் திரும்பி, சீரான வேகத்தில் செல்கிறது. இறக்கியிருந்த கண்ணாடியின் காரணமாக குளிர்ந்த காற்று, சடசடவெனக் காருக்குள் நுழைந்து பயணிப்பவர்களைச் சீண்டிப்பார்க்க்கிறது. காரில் அசாத்திய மெளனம். பொறுமை இழந்த பெர்னார், தன் கைப்பையைத் திறந்து பிரெஞ்சு வாரஇதழொன்றில் மூழ்கினான். வீராம்பட்டினத்திற்கருகே வளைவில் டிரைவர் வேகத்தின் அளவைக்குறைக்காமல் காரைச் செலுத்தியது கண்டு, ‘தம்பி மெதுவாய் போ! அவசரமில்லை ‘ என எச்சரித்துவிட்டு, தொடர்ந்து இதழைப் புரட்ட ஆரம்பித்தான்.

‘என்ன சார் வைத்தீஸ்வரன் கோவில் புறப்பட்டிருக்கீங்க ? நாடி ஜோதிடமா ? ‘ வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் கேள்விகேட்டுவிட்டு, இவர்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான். காரின் பின்னிருக்கையில் உட்கார்ந்திருந்த நண்பர்களின் மெளனத்தைத் தனது பேச்சுக்கு அளிக்கப்பட்ட அனுமதியாக நினைத்து, தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.

‘அப்படி இல்லைன்னா செவ்வாய்க் கிழமைங்கிறதாலே, தோஷ நிவர்த்தி செய்யப்போறீங்களா ? வைத்தீஸ்வரன் கோவில் அங்காரகனுக்கு செவ்வாய் கிழமைகளில் அர்ச்சனை செய்தால், நம்மைப் பிடித்துள்ள தோஷங்கள், பீடைகள் நீங்கும்னு சொல்றாங்க, சார். அங்காரகனே வைத்தீஸ்வரன் கோவிலிலுள்ள சித்தாமிர்த தீர்த்தத்துல மூழ்கித்தான் தனது தொழுநோயைக் குணப்படுத்திக்கொண்டதாக ஐதீகம்.. இத்தீர்த்தம் மனிதனுக்கு ஏற்படுகிற நாலாயிரத்தி நானூற்றி சொச்ச நோய்களையும் குணப்படுத்துமாம். ‘

‘தம்பி எங்களிடம் உள்ள நோய், அந்த லிஸ்ட்ல இருக்குதாண்ணு தெரியலை. நேரம் கிடைக்கும்போது சொல்லு, நாங்கஅதைக் கேட்டுத் தெரிஞ்சுக்கறோம். இப்போதைக்கு கவனமாகக் காரைப் பார்த்து ஓட்டு, ‘வேலு குறுக்கிட்டுப் பேசவும், டிரைவர் அமைதியானதைத் தொடர்ந்து, வேலு தினசரியை விரித்து வாசிப்பைத் தொடர்ந்தான்.

பாதிரியார் எரிப்பு: 18 பேர் மீது குற்றப்பத்திரிகை: சி.பி.ஐ.தாக்கல்

‘புவனேசுவரம், ஜூன்.23-(1999):ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஸ்டெயின்ஸ் என்பவரும் அவரது 2 மகன்களும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் அல்லவா ? இந்தச் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி தாராசிங் உட்பட 18 பேர் மீது சி.பி.ஐ. நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தனி நீதிபதி பி.பாசுதேவ் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது. சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ள 18 பேரில் 9 பேர் மட்டுமே கைதாகிக் காவலில் உள்ளனர். தாராசிங் உட்பட மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். 18 பேர் மீதும் 6 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. ‘

சர்வதேச ஆதரவு பெருகுகிறது: கார்கில் பிரச்சினை, இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆதரவு – பாகிஸ்தான் படைகள் வெளியேற எச்சரிக்கை.

‘புதுடெல்லி, ஜூன் 23-(1999): காஷ்மீர் மாநிலம் கார்கில் உட்பட பல பகுதிகளில் பாக். ஊடுருவற்காரர்களை எதிர்த்து இந்திய ராணுவம் போராடி வருகிறது அல்லவா ? அதில் இந்தியாவுக்கு சர்வதேச அளவில்ஆதரவு பெருகி வருகிறது. ரஷியா, அமெரிக்கா, ஜெர்மனி உட்பட பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா கூடப் பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை. இந்தியாவுக்குச் சீனா மறைமுக ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து நாடும் கார்கில் பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து…. ‘

கார் வேகம்பிடித்திருந்தன் விளைவாக, எதிர்க்காற்று முன்னைவிட வேகமாக உள்ளே நுழைந்து வேலு விரித்து வாசித்த தினசரியின் பக்கத்தைப் படபடவென மோதுகிறது. உட்கார்ந்திருந்த நண்பர்கள் இருவரது கேசத்தையும் கலைத்து விளையாட ஆரம்பித்தது. நிமிர்ந்த வேலுவின் கண்களில், ஈரக்காற்றினால் நீர்கோர்த்திருப்பது தெரிந்தது. கையிலிருந்த கைக்குட்டையின் முனையை இரு கண்களிலும் மாற்றி மாற்றி ஒற்றி எடுத்தான்.

‘டிரைவர் தம்பி கதவின் கண்ணாடியை ஏத்து. காத்து மோசமா அடிக்குது பாரு ‘ டிரைவர், வேலு எப்போது வாய் திறப்பான் என்று காத்திருந்திருக்கவேண்டும்.

‘சார் பேப்பர்ல இன்னா நியூஸ். நம்ம ஊருல எம்.பி எலெக்ஷன்ல இந்த முறை யாரு ஜெயிப்பாங்கண்ணு நினைக்கிறீங்க ? ‘

‘பேப்பர்ல அதைப் பத்தி எதுவுமில்ல. நீதான் சொல்லேன். என்ன நினைக்கிற ? ‘

‘சார் பாண்டிச்சேரியைப் பொறுத்த அளவில பா.ம.கவுக்கு வாய்ப்பு இருக்கிறமாதிரித் தெரியலை. பக்கத்துல இருக்கிற தமிழ்நாடு மாவட்டங்களான கடலூர் விழுப்புரம் பகுதிகளில் வேண்டுமானா அவர்களுக்குச் செல்வாக்கு இருக்கலாம். இங்கே அவர்களால ஒண்ணும் செய்ய முடியாது. அதில்லாம, பா.ம.க. வேட்பாளர் ராமதாஸ், புதுச்சேரி அரசியலுக்குப் புதுசு. காங்கிரஸ் வேட்பாளர் பரூக் பழம்தின்னு கொட்டைபோட்டவர். அப்புறம் த.மா.க. வேட்பாளாரா ஹோம் மினிஸ்டராகவிருந்த கண்ணன் நிக்கிறாரு. போட்டி என்னவோ கடுமையாகத்தான் இருக்கணும். ஆனால் பரூக் தான் வருவார்னு சொல்றாங்க.. ‘

‘அப்படியா ?.. இருக்கலாம். ‘

‘என்ன சார் ? உங்க மனசிலே என்ன இருக்குது சொல்லுங்களேன். ‘

‘நான் என்னப்பா சொல்லப்போறேன். நீ தான் எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டியே ? ‘

‘சார் கிண்டல் பண்ணாதீங்க. அவரென்ன சார், பேசாம வராரு. உங்ககூடச் சரியாகப் பேசலை மாதிரித் தெரியுதே. எத்தனைவருஷமா நம்ம ஊருல இருக்கிறாரு ? தமிழ் ஏதாச்சும் கொஞ்சம் வருமா ? ‘

‘கொஞ்சமா இல்லை, நிறைய வரும். நம்மைவிட நல்ல தமிழ்ல பேசுவாரு. எதையோ ரொம்ப ஆர்வத்துடன் படித்துக்கொண்டு வறாரு. இல்லைன்னா நம்மால பதில் சொல்லி மாளாது. எட்டுமணிக்குக் கிளம்பினோம். ஒன்பது ஒன்பதரைக்கெல்லாம் போயிடலாமா ? ‘

‘எங்கசார் ? ‘

‘என்னப்பா கிண்டலா. நாம எங்கே போறோம்னு நினைக்கிற ‘

‘வைத்தீஸ்வரன்கோவிலுக்கு ‘.

‘பிறகெதற்கு குதர்க்கமான கேள்வி ? ‘

‘ தப்பா நினைச்சுக்காதீங்க சார். இந்த ரூட்டைப்பத்தி உங்களுக்குத் தெரியாதா ? ஒன்பது, ஒன்பதரைக்குத்தான் சிதம்பரமே போக முடியும். பிறகு அங்கிருந்து, சீர்காழி பதினெட்டு கி.மீ, சீர்காழியிலிருந்து வைத்தீஸ்வரன்கோவில் ஆறு அல்லது ஏழு கி.மீட்டர் இருக்கும். எப்படியும் பத்தரை பதினொண்ணு ஆயிடும் சார். ‘

‘சரி சரி கொஞ்சம் வேகமாப் போ. ‘ என்ற வேலுவின் கவனம் வாசித்துக் கொண்டிருக்கும் நண்பன் பெர்னார் பக்கம் திரும்பியது.

பெர்னார் டிரைவருக்கும் வேலுவுக்கும் இடையில் நடந்த காதில் வாங்கியவனாகத் தெரியவில்லை. வேலு உதட்டைப் பிதுக்கித் தோளைக் குலுக்கினான்; தமிழ்தினசரி செய்தியை விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தான். அடுத்தடுத்து கார்கில் போர், 13வது இந்திய மக்களவைத்தேர்தல் சம்பந்தமாக அரசியல் வாதிகளின் கூச்சல் எனவிருக்க, நான்காக மடித்துத் தூக்கி எறிகிறான். இம்முறை பெர்னார் கவனம் இவன்பக்கம் திரும்பியிருக்கிறது. தலையை அசைத்து, மெல்ல பெர்னார் சிரிக்கிறான்.

‘என்ன சிரிக்கிற ? ‘-வேலு.

‘இல்லை கொஞ்ச நாளா எனக்கொரு சந்தேகம், உன்னிடமிருந்த காம்ரேட் தோழரை எங்க ஒளிச்சுவச்சிருக்கிற. வாய்திறந்தாலே உழைக்கும் வர்க்கம், முதலாளிகள், ஸ்டாலின், நம்பூதிரி, ஜீவா, வ. சுப்பையாண்ணு பேசறவன் நீ. என்ன ஆச்சு ? சித்தாந்தம் அழுக்காப் போச்சுதுண்ணு சலவைக்குப் போட்டிருக்கிறாயா ? அதிலும் இப்போதெல்லாம் வேம்புலிநாயக்கரின் விதவை மருமகள் வீட்டிற்தான் உன்னை பார்க்க முடிவதாக வேலையாள் மணி சொல்கிறானே! உண்மையா ? ‘

‘நீ ஏதாச்சும் கற்பனை பண்ணிக்காதே. ஆனா நீ சொல்லவந்ததில உண்மை இல்லாமலுமில்லே. வயதுபோன விதவைப்பெண்களானாலும் பரவாயில்லைண்ணு, கல்யாணம் கட்டிகிறதுக்கு புதுச்சேரியில ஒரு கூட்டமே காத்திருக்குது. இவர்கள் அப்படியான பெண்களைக் கல்யாணம் செய்வதில் சீர்திருத்த நோக்கமேதுமில்லை. ஐரோப்பிய நாடுகளுக்குப் போனா தங்கள் வறுமைையை மட்டுப்படுத்தலாமென்கிற தந்திரம். பிரெஞ்சுக் குடியுரிமையுள்ள விதவைப் பெண்களில் சிலர் இதற்காக பணங்கூட வாங்குகிறார்கள். உங்கள் நாட்டிற்குப் போனதும், அனுமதியோ, குடியுரிமையோ சம்பந்தபட்ட நபருக்குக் கிடைத்ததும் அந்த நபரை விவாகரத்து செய்துவிட்டு, புதுச்சேரி திரும்பிவிடுவாள். சம்பந்தப்பட்ட இருவருமே இதில் லாபம் பார்க்கிறார்கள். ஆனா வேம்புலி நாயக்கர் வீட்டில் நான் பழியாய் கிடப்பதற்கான காரணம், உனக்குத் தெரிந்ததுதான். அவளது உறவினர் புதுப்பாக்கம் கிருஷ்ணப்பிள்ளை என்பவர் வீட்டுப் பரணிலிருந்துதான், உன் பூட்டன் பெர்னார் குளோதன் சிநேகிதன், மாறனது தினக்குறிப்பு ஓலைகள் கிடைத்தன. அந்த மனிதரிடம், பெர்னார் குளோதன் இறந்த விபர ஓலை நறுக்குகள் கிடைக்குமாவென்று தேடச் சொல்லியிருந்தேன். அப்படி ஏதேனும் கிடைக்குமென்கிற நப்பாசையில், அப்பெண்மணியின் வீட்டிற்கு அடிக்கடி போகவேண்டியிருக்கிறது. ‘

‘வருத்தப்படாதே. உன்னை பரிபூரணமா நம்பறேன். அதுசரி, என்னுடைய மற்றொரு கேள்விக்குப் பதிலில்லையே. காம்ரேட் வேலு எங்கே ஒளிந்துகொண்டார், என்று கேட்டேனே. ‘

‘காம்ரேட் வேலு எங்கேயும் ஒளிந்துகொள்ளவில்லை. அவனிடமுள்ள கம்யூனிஸ சித்தாந்தத்திற்கும் எந்த விக்கினமுமில்லை. இரத்தத்தில ஊறினது, அதெல்லாம் சுலபத்துல போயிடாது. முதலளித்துவம் இருக்கும்வரை, பொதுவுடமையும் இருக்கும். அதுவுந்தவிர வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிற ஆன்மீகவாதியாகவிருந்தாலும் சரி, சோஷலிஸத்தில் நம்பிக்கைக் கொண்ட அரசியல்வாதியும் சரி, தனது அறிவு பாமரனுக்கும் போய்ச் சேரணும் என்று சிந்திக்கிற அறிவுஜீவியும் சரி எனக்குப் பொதுவுடமைவாதிகளே. இந்த ஒரு வேலுவை நம்பிக் கம்யூனிஸம் ஜீவிக்கலை. வர்க்கபேதத்திற்குப் பலியாகும் ஒவ்வொரு உயிரையும் நம்புகிறது. உயர்வையும் தாழ்வையும் சமப்படுத்தணும்னு நினைக்கிற உள்ளங்கள் அனைத்துமே எங்கள் இனந்தான். கிழக்கு ஐரொப்பிய நாடுகளிலும், சோவியத் யூனியனிலும், இருந்த கம்யூனிசம், அமெரிக்கக் குதிரையின் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்திருந்தவரை எல்லாம் ஒழுங்காக இருந்தது. இன்றைக்கு என்ன நடக்கிறது ? குதிரை கட்டுப்பாடற்றுத் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனை நம்பி சவாரி செய்யும் உலகத்தை குப்புற கவிழ்ப்பதற்கு முன்பு, கம்யூனிஸம் மறுபடியும் விழித்துகொள்ளணும். அது சரி நீ அப்படி என்னத்தை அந்தப் பிரெஞ்சு இதழ்ல படிக்கிற ? ‘

‘எழுத்தாளர் தஸ்தாய்வ்ஸ்கியைத் தெரியுமா ? ‘

‘சொல்லு.. என்ன சேதி ? ‘

‘அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவம்.. ‘

‘சுத்திவளைக்காமா, என்ன படிச்சங்கிறதைச் சொல்லு. எனக்கதில் சுவாரஸ்யம் இருக்குதா, இல்லையாங்கிறதைப் பிறகு சொல்றேன் ‘

‘1866ம் ஆண்டு நவம்பர் 8ந்தேதி. அலுவலகத்தில், எழுத்தாளர் தஸ்தாய்வ்ஸ்கி, புதிதாக சுருக்கெழுத்தாளர் பதவியில் தான் அமர்த்தியிருக்கும், அன்னா கிரிகொரிவ்னா என்ற பெண்ணிடம் தனது புதிய படைப்பினைக் குறித்துப் பேசவந்திருக்கிறார். அன்னாவின் ஒத்துழைப்பில் வந்திருந்த இதற்கு முந்தையநாவல் நல்ல வறவேற்பினைப் பெற்றிருந்தது. தஸ்தாய்வ்ஸ்கிக்கும் அன்னாவுக்கும் அன்றைய தினம் நடந்த உரையாடலை, ஒரு வார்த்தைவிடாமல் பின்னர் அப்பெண்மணி தனது நினைவுக் குறிப்பில் எழுதவேண்டியிருந்திருக்கிறது. அந்த உரையாடலும், அந்த உரையாடலுக்குக் காரணமான கனவும் அப்பெண்மணியின் வாழ்க்கையில் முக்கியமானது.

‘எப்படி ? ‘

அன்னா தன் நினைவுக் குறிப்பில் எழுதியுள்ளபடி அன்றைக்கு எழுத்தாளர் தஸ்தாய்வ்ஸ்கி மிகவும் மகிழ்ச்சியுடன், உள்ளே வந்திருக்கிறார். இதற்குமுன் அன்னா, தனது எழுத்தாளர் எஜமானரின் முகத்தில் அப்படியொரு சந்தோஷத்தைப் பார்த்ததில்லை. அன்னா இதுவரை, எழுத்தாளரிடம் தெரிந்துகொண்டதெல்லாம், அவரது கடந்த கால வாழ்க்கை எவ்வளவு துயரமானது என்பதைத்தான். அநேக நாட்கள், தனது வாழ்க்கையிலேற்பட்ட இன்னல்களை, இப்பெண்ணிடம் எழுத்தாளர் பகிர்ந்துகொண்டு ஆறுதலடைந்திருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக அன்றைய தினம் ‘ஒரு சந்தோஷச் செய்தியைச் சொல்லப்போகிறேன் ‘ என்றுகூற, அந்தப்பெண்ணும், ‘உங்களை மகிழ்ச்சியிலாழ்த்த அப்படியென்ன விநோதம் நடந்தது ‘, எனக் கேட்கிறாள். அவர், ‘இரவு ஒரு நல்ல கனவு கண்டேன். ‘ என்று சொல்லவும், அன்னாவுக்கு அவரது பதில் வேடிக்கையாக இருந்தது. ‘இதற்காகவா, அவ்வளவு சந்தோஷம்! ‘ என்று கேலி செய்கிறாள்.*

‘அன்னா சிரித்ததில் நியாயமிருக்கிறது. நான்கூட, உன்னுடைய கனவுகளைக் கேட்டுக் கிண்டல் செய்திருக்கிறேனே. சரி மேலே சொல்லு, அவளது சிரிப்புக்கு அவரது பதிலென்ன ? ‘ -வேலு.

‘எழுத்தாளர் பதிலை அப்படியே வாசிக்கிறேன் கவனி, இனிமேல் தான் சுவாரஸ்யமே உள்ளது.:

‘சிரிக்காதே. தயவுசெய்து நான் சொல்லவருவதை முழுமையாக் கேள் அன்னா! எனது கனவுகள் தீர்க்க தரிசனங்கள் என்பதால் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் நான். உதாரணமாக என் இறந்துபோன சகோதரன் மிஷாவோ அல்லது என் தகப்பனாரோ கனவில் வந்தால், எனக்கேதோ கெட்டது நடக்கவிருக்கிறது என்பதாய்ப் பொருள். ‘ – தஸ்தாய்வ்ஸ்கி

‘அதிருக்கட்டும்.. நீங்கள் கண்ட கனவினைச் சொல்லுங்கள்.. ‘ -அன்னா

‘அந்தப் பெட்டியைப் பார். எனது சைபீரிய நண்பன் சொக்கான் வலிக்கனோவ் கொடுத்த பரிசு. என் வரையில் அது மிகவும் முக்கியமானது. எனது கையெழுத்துப் பிரதிகள், முக்கிய கடிதங்கள், அரிதான நினைவுப்பொருட்கள் ஆகியவற்றை அதில்தான் வைத்திருப்பேன். இரவு கண்டிருந்த கனவில், அப்பெட்டியில் எதனையோ தேடுகிறேன். தேடும்பொழுது, ஒரு பொருள் கண்களை கூசச்செய்வதுபோன்று ஒளியை உமிழ்ந்துகொண்டு தாட்களுக்கிடையில் உருண்டோடிக் கண்ணாமூச்சி ஆடுகிறது. ஆர்வத்தில் எல்லாவற்றையும் வெளியே எடுத்துப்போட்டு என்னவென்று பார்த்தால், மிகச்சிறிய வைரக்கல். ‘- எழுத்தாளர்.

‘அதை என்ன செஞ்சீங்க. ‘-அன்னா

‘ஞாபகத்தில் உள்ள கனவு அவ்வளவுதான். அதற்கப்புறம் என்ன நடந்ததுண்ணு நினைவில் இல்லை. அந்த வைரக்கல்லுக்கும் என்ன நேர்ந்திருக்கும்ணு, தெரியலை. அதனாலென்ன, இக்கனவு என்னைப் பரவசப்படுத்தியிருக்கிறது ‘ -எழுத்தாளர்.

பெர்னார் ஃபோந்த்தேன் படித்து முடித்துவிட்டு வேலுவைப் பார்த்தான். வேலு குழப்பத்துடன் பார்க்கிறான்.

‘எனக்கெதுவும் புரியலை ‘ -வேலு

‘உன்னைப் போலத்தான் தஸ்தாய்வ்ஸ்கீயின் செயலாளர் அன்னாவும் தனக்கேதும் விளங்கவில்லையெனவும், தான் கனவுகளை நம்புவதில்லையென்றும் சொல்லிவிட்டாள். அன்றையதினச் சந்தோஷத்திற்குக் காரணமான கனவினைச் சொல்லிமுடித்த எழுத்தாளர், தான் எழுதவிருக்கும் புதிய படைப்பின் கதைக்கருவை அன்னாவிடம் சொல்லுகிறார். வயதான மனிதரொருவர், இளவயதுப் பெண்ணொருத்தியை நேசிப்பதாகக் கதை. கதையின் கருவைச் சொல்லிவிட்டு அன்னாவிடம் ‘வயதில் மூத்த அம்மனிதரை உண்மையாக நேசிக்க, ஓர் இளம்பெண்ணால் முடியுமென நீ நினைக்கிறாயா ? அவளை நீயாகப் பாவித்து எனக்குப் பதில் சொல், என்னை மணக்க விருப்பமா ?வென்று நான் கேட்கும் பட்ஷத்தில் உனது பதில் என்னவாகவிருக்கும் ? ‘ என்று கேட்கிறார்*.

‘அவளது பதிலென்ன ? ‘-வேலு

‘அன்னாவுக்கு தஸ்த்தாய்வ்ஸ்கியின் கேள்வியின் பொருள் புரிந்துவிட்டது. தயக்கமின்றி ‘நானானால், பூரண சம்மதமென்பேன் ‘ எனத் தனது இணக்கத்தைத் தெரிவிக்கிறாள். அவள் எழுத்தாளரை மணக்க சம்மதம் தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, அலுவலகத்திலிருந்து புறப்படவிருந்தசமயம் எழுத்தாளர் அப்பெண்ணிடம், ‘அன்னா கிரிகொரிவ்னா!.. கனவில் கண்ட வைரக்கல் எங்கேயென கண்டுபிடித்துவிட்டேன் ‘, என்கிறார். அவள், ‘எப்படி ? ஒருவேளை நீங்கள் கண்ட கனவின் கடைசிப்பகுதியை ஞாபகத்திற்கு வந்துவிட்டதா ? ‘ என்று கேட்கிறாள். அதற்கவர், ‘கனவின் முடிவு ஞாபகத்திற்கு வரவில்லை, ஆனால் என் வாழ்நாள் முழுவதும் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டிய வைரக் கல் எதுவென்று கண்டுபிடித்துவிட்டேன். ‘ என்கிறார்.*

‘இதன் மூலம் எனக்கு என்ன சொல்ல வற ? ‘

இந்தக் கனவு பிராய்டின் முடிவோட ஒத்துப்போகிறது என்கிறேன். எழுத்தாளர் தஸ்தாய்வ்ஸ்கிக்குத் தனது செயலாளர், அன்னா கிரிகொரிவ்னாவிடம் தனக்கேற்பட்ட காதலினைப் பூர்த்திசெய்துகொள்வதற்கான சாத்தியங்கள் குறைவு என்று நம்பியதால்தான், அப்பெண்ணை கனவில் வைரக்கல்லாக எழுத்தாளர் கண்டிருக்கிறார். பின்னர் அவர் அன்னாவை மணந்துகொண்டது வேறு விஷயம். ஆனால் அன்னா சம்மதம் தெரிவித்த அந்த நிமிடம் வரை, அதுவொரு நிறைவேற்றிக்கொள்ளாத விருப்பமாகவே எழுத்தாளருக்கு இருந்திருக்கிறது. அதுவே அவரது கனவுக்கான காரணம். ‘

‘ஆக உன் கனவுகளும், நிறைவேறாத ஆசை காரணமாகவே உனக்கு ஏற்படுகின்றன என்கிறாய், அப்படித்தானே ? ‘

‘அப்படித்தான்.. பிராய்டு சொல்லுவதுபோல, கனவுகள், நம் அடிமனதில் இருக்கிற நிறைவேறாத விருப்பங்கள். பாலுணர்வு, வஞ்சம், மூர்க்கம், மரணம் ஆகியவை அதன் குணாதிசயங்கள். மேற்கத்திய சித்தாந்தத்தின்படி கனவுகளைக்கூட, காண்கிற மனிதனின் புறவுலகு சார்ந்ததென்று நம்பலாம். நானதில் அகவுலகம் குறித்துப் பேசும் இந்திய சித்தாந்தத்தின் மையமான ஆத்மாவையும் பொருத்திப் பார்க்கிறேன், அவ்வளவுதான். ஆசைகளும் அவற்றின் வினைகளும் அற்றுப் போகாதவரை ஆன்மா உடல் விட்டு உடல் ஓடுகிறதென வேதங்கள் சொல்கின்றன. இந்த ஆன்மாவிடம் அதன் நிறைவேறாத விருப்பங்களும் ஒட்டிக்கொண்டு பயணிப்பதாக ஏன் கொள்ளமுடியாதென்று கேட்கிறேன். கனவில் வெளிப்படுகின்ற நிறைவேறாத விருப்பங்கள், நமது முந்தைய பிறவிக்கும் சொந்தமாக இருக்கலாமில்லையா ? ‘

‘எனது பதில் முரணாகவிருக்கும், கோபம் வராதென்றால் சொல்வேன். ‘

‘எனது நம்பிக்கையில் தெளிவாக இருக்கின்ற இச்சமயம் உனது பதிலேதும் வேண்டாம். எனது நம்பிக்கைக்கு, ஒரு வேளை நான் தேடி வந்திருக்கிற நாடி ஜோதிடம் துணைபுரியலாம். ‘

‘சார் வைத்தீஸ்வரன் கோவில் வந்திருக்கிறோம். இது சுவாமி சன்னதி வீதி. எங்கே காரை நிறுத்தட்டும் ‘

‘எங்கேயாவது, ஒருபக்கமா நிறுத்தப்பா ? ‘

கார் நின்றதும் நண்பர்கள் இருவரும் இறங்கிக்கொள்கின்றார்கள். காரருகே ஓடிவந்த இளைஞன், ‘ சார்.. இன்றைக்கு, செவ்வாய்க்கிழமை, அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதென்பது விசேஷம். ஏற்பாடு செய்யட்டுமா ? ‘ என்கிறான்.

‘வேண்டாம்பா பிறகு வந்து பார்க்கிறோம். நல்லதா ஒரு நாடி நிலயமிருந்தாச் சொல்லு. -வேலு

‘சார் எதிரில் தெரிவது ஜலகண்டேசுவரர் நாடி நிலயம்- அங்கேவேணா விசாரிக்கட்டுமா ? ‘ -டிரைவர்

‘என்ன பேரு சொன்ன ? ஜலகண்டேசுவரரா ? வேலு! மாறன் ஓலையில்கூட அப்படியொரு பேரு வருதே. விசாரிச்சுப்பாறேன்.. ‘ -பெர்னார்

நாடி நிலையத்திலிருந்து ஓடிவந்த நபர், ‘புதுச்சேரியிலிருந்து வறீங்களா ? உங்களைத்தான் இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் ‘ எனச் சொன்னவர் சொன்ன வேகத்தில் திரும்பி நடக்க, நண்பர்களிருவரும். அவரைப் பின் தொடர்ந்தனர்.

/தொடரும்/

*Les grands reves de l ‘Histoire – Helene Renard & Isabelle Garnier

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘முன்னை வந்தனர் எல்லாம் முடிந்தனர்

பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம் ‘

– (திருமந்திரம்) – திருமூலர்

புலர்ந்தும் புலராமலும் இருக்கின்ற அதிகாலை. உடலைச் சங்கடப்படுத்தாமல் ஊடுருவி, உள்ளத்தை மென்மையாய் வருடிக்கொண்டிருக்கும் இதமான காற்று. கரையொட்டாயிருந்த நாணற் புதர்களில் சிக்குண்டு மீண்டும் ‘களுக் ‘கென்று, ஓடும் நீரில் குதிக்கும், நீர்வாழினங்கள். உடலிருந்து விடுபட்ட சீவாத்மாக்களைப்போல, கூண்டிலிருந்து விடுபட்ட புள்ளினங்கள் சில நாழிகைநேரம் வெட்டவெளியில் திசையற்று பறப்பதும், பின்னர் திசையொன்றை தேர்வுசெய்து சிவ்வென்று பாய்வதுமாயிருக்கின்றன. மாறாக தான்போகுமிடம் எதுவென்றறிந்த களிப்பில், காவிரி சுழித்தும், குதித்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.

சனங்களின் சுவாசங்கூட அறிந்திராத, அடர்ந்த மரங்களுக்கிடையில் வெண்மணல் செறிவுடன் கிடக்கும் நதிக்கரை. கரையில் நாணற்புற்கள் பரப்பி அதன்மீது புலித்தோல் விரித்து இடதுபாதத்தை வலது தொடையிலும், வலது பாதத்தை இடது தொடையிலும் வைத்து, முழங்காற்பகுதி தரையில் படுமாறும் கைகளைத் தளர்த்தி முழங்கால்மீது வைத்து நேராக நிமிர்ந்து பத்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். உடலில் அசைவில்லை, நெளிவில்லை. பூமியில் முளைவிட்டு நெடுநெடுவென்று வளர்ந்த கொடிமரத்தின் விறைப்பு அவரது சரீரத்திற் தெரிகிறது. இடது நாசியை வலது கைவிரல்களால் அடைத்து, வலது நாசிவழியாகக் காற்றை மிச்சம்வைக்காமல் வெளியேவிட்டுக் காற்றுப்பையை வெற்றிடமாக்குகிறார். பின்பு, இடது கைவிரல்களால் வலது நாசியை அடைத்துக்கொண்டு இடது நாசி வழியாகக் காற்றைக் உள்ளிழுத்து அறுபத்து நான்கு நொடி அளவு காத்திருந்து மீண்டும் சீராக வெளியேற்றுகிறார். இச்செயலை ஒருமுறை ‘கும்பகம் ‘ என்ற பெயரிட்டுச் சொன்னதாய் நினைவு. கடந்த சில மாதங்களாக, காவிரி நதிக்கரையையொட்டி அதிகாலையில் சிவலிங்க வழிபாடும், காலையிலும் மாலையிலும் அவர் பிராணாயாமம் பழகுவதையும் தேவராசன் அவதானித்து வந்திருக்கிறான்.

தேவராசனை, இன்றைக்கு இவ்விடம் அழைத்துவந்தவர் முருகப்பிள்ளை. அதிகாலையென்றபோதும், அவனுடல் வேர்த்திருக்கிறது. மிகவும் களைத்திருந்தான். நடப்பதனைத்தும் சில மாதங்களாக அவனது எண்ணத்திற்கு மாறாக நடக்கின்றது. நேற்றுவரை தனது கூட்டாளியாகவிருந்த பிரான்சுவா ரெமி, இவனை நட்டாற்றில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பானென நினைத்தானில்லை. பிரெஞ்சுதீவுக்கு ஆள் கடத்தின விவகாரத்தில், பரமானந்தனையும், இவனையும் குற்றவாளிகளாக்கிப்போட்டு, பிரான்சுவா ரெமியும், சூதேயும் கும்பெனியில் எந்த விக்கினமுமில்லாமல் உத்தியோகம் பார்க்கிறார்கள். லாபூர்தொனேயின் கையாளான வேலாயுதமுதலியுந்தானே எப்போதும்போல கோட்டைவரை அலங்காரமாக பல்லக்கில் போகிறார். இவனொத்த சாமான்யசனங்களுக்கே கோன்செல் விசாரணையும், கோட்டைக் கச்சோத்தும், சாவடி முச்சந்திகளில் கசையடியும், காதறுப்பும் போலிருக்கிறது. வாணியும் அவள் தாயார் குமுதவல்லியும் திருச்சினாப்பள்ளிக்கு வந்திருப்பதாகச் சொல்ல இங்கே வந்து அவர்களைத் தேடி அலைந்ததுதான் மிச்சம். தன் மனச்சுமையை துறவி சாமியாரிடம் கொட்டி ஆறுதல் பெறவேணுமென நினைத்த மாத்திரத்தில், இவனெதிரே முருகப்பிள்ளை நிற்கிறார். துறவிச்சாமி அழைத்துவரச் சொன்னதாகத் தெரிவிக்கிறார். இவனை காலங்கார்த்தாலே ஒதுக்குபுறமான காவிரியின் நதிக்கரையில் விட்டுவிட்டு, அவசரமாய் சிவகங்கை போகவேணுமென்று புறப்பட்டுப்போனார். எதிரே தியானத்தில் துறவி சொக்கேசன். இந்தச் சாமியையைக்கூட விளங்கிக் கொள்வதென்பது கடினமாகவிருக்கிறது. வாணிக்குத் திருச்சினாபள்ளி ராச்சியத்தினைக் கையளிப்பேன் என்கிற வார்த்தைப்பாட்டைக் காப்பாற்றவேணுமென்கிற எண்ணமேதும், இந்தத் துறவியிடம் இல்லை. பின்னெதற்காக சத்திரத்தில் படுத்திருந்தவனை, இந்த அதிகாலை நேரத்தில் எழுப்பிக் கூட்டிவர முருகப்பிள்ளையை அனுப்ப வேணும் ?

உண்மையில் யாரிவர் ? கர்னாடக தேசமெங்கும் இந்து ராச்சியங்களை ஏற்படுத்தவேணுமென்று சொப்பனங் காணும், மதுரை நாயக்கர்களின் ராஜ குருவா ? எதிர்கால நிகழ்ச்சியையும், தொலைக்காட்சியையும் காணும் ஆற்றல்பெற்ற இருடியா ? அல்லாதுபோனால் சுடுகாடுகளுக்கு இரவுநேரங்களிற் சென்று பிணங்களைத் தின்றுவருவதாக உலவிவரும் தன்னைப் பற்றிய கட்டுகதைகளைப் பொருட்படுத்தாமல், ‘நித்தியவியாபக சைதன்னியமே ஆத்மா ‘ எனப்போதிக்கின்ற ஜடாமுடி தரித்த கபாலிக விரதரா ? சொக்கேசனா, தளவாய் வெங்கடாச்சாரியா ? யார் ?

‘தேவராசா.. தளவாயென்பதும், துறவியென்பதும் சராசரி மனிதர்களுக்காக நானணிந்துள்ள வஸ்திரம். அரவம் சட்டையை உரிப்பதுபோன்று, எந்த நேரத்திலும் அவிழ்த்துப்போடலாம். உண்மையில், நானொரு தாந்திரீவாதி. இளமையும் எழிலும்கொண்ட பெண்ணிடம் முத்திபெறமுடியும் என நம்புகிறவன். வனத்திலிருந்து கடுந்தவமியற்றுவதைவிட, இளம்பெண்ணின் கடிதடத்திலிருந்து பேரின்பத்திற்குப் போகும் வழியை உணரக்கூடிய நாயகன் நாயகி மார்க்கத்து யோகி. என்னை யாரென்று தெரிந்துகொள்ளவேணுமா ? எனது ரிஷிமூலம் அறியப்படவேணுமா ? ‘

பிராணாயாமத்தினை முடித்து எழுந்துவந்திருந்த சொக்கேசன் கேள்விகளைத் தொடுத்துகொண்டு எதிரே நிற்கிறார். கறுத்திருந்த முகமும், சிவந்து அக்கினிச் சுவாலையையுடன் தகித்துக் கொண்டிருக்கும் கண்களையும் கண்டமாத்திரத்தில், தேவராசன் வெட்டுண்டமரம்போல அவர் பாதங்களில் விழுந்தான்.

‘சாமி, இந்தப் பாவியை மன்னித்துத் தயவு பண்னவேணும், தங்கள் மகிமையை அறிந்திருந்தும் தப்பான எண்ணங்களை மனதில் ஓடவிட்டேன். ‘

‘பயப்படாதே!… மனுஷர்களுக்குச் சகலத்தையையும் அறியவேணுமென்கிற ஆவலிருக்கும் என்பது அறிந்ததுதானே. எமக்கிதுவரை விசுவாசமிக்க ஊழியனாய் இருந்திருக்கும் உன்னிடம் இனி நடக்கவிருக்கும் வினைப்பயனைச் சொல்லவேணுமென்றே அழைத்திருந்தேன். சில சங்கதிகளை உனக்கு விளங்கப்படுத்தவேணும். முதலாவதாக உம்முடைய தகப்பனின் உடன்பிறந்தாள் குமுதவல்லியின் புத்ரி வாணிமீது நீ கொண்டிருக்கும் பிரேமை மீதானது. அதனை நீ விட்டுவிடவேணும். அந்தப் பெண்ணுக்கு ராச்சியபரிபாலனம் பண்ணவேணும் என்கிற எண்ணம் கிஞ்சித்தும் இல்லையென்று, தன் நெருங்கிய பந்துக்களிடம் பிரஸ்தாபித்திருக்கிறாள். இந்த விஷயத்தில் உண்மையான வாரிசாகவிருக்கின்ற அவளது தமக்கையைப் போலவே ராச்சிய அபிலாஷைகளை வெறுத்தொதுக்குகின்ற மனப்பான்மையில் இருப்பதை எமது ஆட்கள் மூலம் அறிந்தோம்.. இனியும் வாணியையும் அவளது தாயார் குமுதவல்லியையும் நீ நம்பியிருப்பதில் பிரயோசனம் ஏதுமில்லை. தாயும் மகளும், ஓரிருகிழமைகளில் கோயில்பணியில் ஈடுபாடுகொண்டு, குடந்தை கும்பேஸ்வரர் கோவிலுக்குத் தங்களை அடிமைகளாக ஒப்படைத்துக்கொள்ள இருக்கிறார்கள். இப்படித்தான் நடக்கவேணுமாய் தீர்மானித்திருக்கிறபொழுது நம்மால் ஆவதென்ன ?

‘வாணிக்குத் தமக்கையொருத்தி இருக்கின்றாளா ? ‘

‘ஆமாம் ஒன்றுவிட்ட சகோதரி. நீயும் அறிந்ததவள்தான். வாணியின் தகப்பனான விசயரங்க சொக்கநாதனுக்கும் காமாட்சி அம்மாளுக்கும் பிறந்து, பிரெஞ்சுத் தீவில் தஞ்சம் புகுந்து இன்றைக்குத் திரும்பவும் திருச்சினாப்பள்ளிக்குத் தன் தாயாருடனும், கணக்கன் சீனுவாச நாயக்கனுடனும் வந்திருப்பவள் – நாமறிந்த பெண்- தேவயானி ‘

‘தேவயானிக்கும் திருச்சினாப்பள்ளி அரசுரிமைகோர விருப்பமில்லையென்று சொல்கிறீர்கள். திருச்சினாப்பள்ளி அரசாங்கமும், மராத்தியர்களிடமிருந்து திரும்பவும் துலுக்கர்வசம் வந்திருக்கிறது. இனி சிவகங்கையில் பதுங்கிவாழும் பங்காருதிருமலையின் வாரிசுகளுக்கு எதிரி நவாப் ஆசப் ஜாவா ? அவன் வசந்தானே திருச்சினாப்பள்ளி தற்சமயம் இருக்கிறது. உண்மையில் தளவாய் வெங்கடாச்சாரியான நீங்கள் அவர்களுக்கு என்ன செய்வதாய் உத்தேசம் ? ‘

‘தேவராசா! பங்காரு திருமலையின் வாரிசுகளுக்கு, தளவாய் வெங்கடாச்சாரியின் கடமைகள் இனி பாத்தியதையில்லை. அதனை முருகப்பிள்ளைவசம் கையளித்துவிட்டேன், இனி அவன்பாடு. எனக்கிப்போது, அதிமுக்கியமாய் கவனிக்கவேண்டிய காரியமொன்றிருக்கிறது. இவ்வுலக மரத்திலிருந்து என்னுயிர்க்கனி விழுகின்ற நேரமும் வந்துவிட்டதை அறியவந்ததால் செய்யவேண்டியது. உனக்கதனை தெரிவிக்கவேணுமென்று காத்திருந்தேன். எனது பிறப்பின் நோக்கம் முடிவுக்கு வர இருக்கிறது. இரண்டொரு நாட்களில் கபாலத்திலுள்ள ‘பிரம்ம ரந்திர ‘ வாயில் மூலமாக, யோக முயற்சியால் ஆன்மாவை வெளியேற்றவேணும். ‘

‘சாமி ‘… முன்னால் நடந்து கொண்டிருந்த துறவி சொக்கேசனை மெளனமாய்ப் பின் தொடர்ந்தான். இருவருக்குமிடையில், உலர்ந்த வெண்மணலில் புதைந்தெழுந்த பாதங்களின் ஓசைமாத்திரம் தனித்து ஒலிக்கின்றது. தேவராசன் நிமிர்ந்து பார்த்தபோது அவர்முதுகில் வியர்வை முத்துகள், உடைந்து வடிகின்றன, அவற்றிலிருந்து ஒருவிதமான பன்னீர் மணம். மெளனம் கலைந்து, அடங்கியத் தொனியில் பேசுகிறார்.

‘தேவராசா..என் கடந்தகால வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்களும், ஏக்கங்களும் சித்தத்தில் பதிந்து கிடக்கிறன. அவ்வுணர்வுகள், அதிர்வுகளை எழுப்புகின்றன. பற்றுக்களின் தாக்கங்களால் அதிர்கின்றன. புறப்பொருள்களும், நிகழ்வுகளும், அகவுணர்வுகளும் சித்தத்தில் அதிர்வை ஏற்படுத்துவதும், சித்தம் அவற்றை அறிவதும் அவறிதற்கேற்பச் செயற்படுவதுமாக ஒரு தொடரியக்கம் நடந்தவண்ணமிருக்கிறது. அதிர்வேயில்லாத சமநிலைக்கு வர இயலாமல் களைத்து போனேன். அதிர்வுகளற்ற சித்தத்தை அடையமுடியாமலேயே ஆன்மா நீங்கிவிடுமோ என்கிற அச்சம் சில நாட்களாய் எனது மன உளைச்சலைக் கூட்டியிருக்கிறது. முப்பத்தாறு தத்துவங்களின் விரிவாகக்கிடக்கும் மாயா உலத்திலிருந்து விடுபட்டு உண்மையான சிவபோகத்துள் ஆன்மா அழுந்திடவேணுமென்று கனவுகண்டேன். மரணத்தைக் கண்டு அச்சமில்லை. முக்தியை பெறமுயன்ற என் வழிமுறையில் எங்கே பங்கம் நேர்ந்தது ? எதனால் நேர்ந்தது என்பதை அறியாமலேயே உயிர் நீங்கிவிடுமென்கிற அச்சம். சாம்பலும் சடையும், காவியும் தாழ்வடமும், கிரியையும் யோகமும், அகத்தில் எந்தமாற்றத்தையும் மூன்று நூற்றாண்டுகளாக கொண்டுவராததால் ஏற்பட்ட ஆன்மாவின் கவலை. எண்வகைச் சித்துகள் கைவரப்பெற்றும் நிறைவு காணாமல், அலைகின்றேன். தேகத்தை காயகற்பங்களால் திடமாக செய்து கொண்டவன், சித்தத்தை, சித்திசெய்துகொள்ளத் தவறிப்போனதால் ஏற்பட்ட வியாகூலம்.

‘காய கற்பமா ? ‘

‘ஆமாம். என் உடம்பை வளர்த்து அதன் மூலம் உயிரை வளர்க்கும் உபாயம். மூலிகைகளும், மூப்புச் சத்துக்களும் முறையோடு செய்த அமிழ்தம். அதனைப் பாகம் தவறாது புசித்துவந்தால் எப்போதும் மூப்பு அண்டாமல் செய்துகொள்ளலாம். கற்பங்களில் பலவகைகள் உண்டு. அவற்றை முழுவதுமாக உட்கொள்ள முடியாது, சிறிது சிறிதாகத்தான் புசித்து காயசித்தி பெறமுடியும். ‘

‘உங்கள் சித்தத்தை சித்தி செய்ய இயலாமற்போனதற்குத் தேவயானி ஏதோவொரு வகையிற் காரணமாக இருக்கலாமா ? ‘

‘சத்தியம். மூன்று நூற்றாண்டுகளாக இவ்வான்மா விடுதலைப் பெற வேணுமென்று காத்திருக்கிறது. உலகியலில் இருந்துகொண்டு இறைவனை நினைத்து அறவாழ்க்கை வாழ நினைத்த ஆத்திகனைப் திசை திருப்பி அல்லலுற வைத்தவள் தேவயானி. நான் பூரணத்தை, அதாவது முழுமையான ஆன்மப்பலனை உலகியல் வாழ்விற்கு உட்பட்ட அறம் பொருள் இன்பத்தின் வழியில் அடைய நினைத்தேன். அதனைச் செய்யவிடாமல் தடுத்தவள் இந்தப் பாதகி. தேவயானி வேறுயாருமல்ல, முற்பிறவியில், அக்கினிச் சாட்சியாக என்னைக் கைப்பிடித்த ஓர் அர்ச்சகர் பெண், நாசக்காரி. எனது ஆன்மாவைப் பாவத்தில் தள்ளியவள். இன்னொருவனைப் பர்த்தாவாக வரித்துக்கொண்டு பதிவிரதா தர்மத்தை துவம்சம் செய்தவள். அறியாமையினால், துர்மரணத்தினை வரவழைத்துப் பிறவியின் கர்மாவை உணராமல் என்னிடமிருந்து அவள் விலகிச் செல்ல நினைக்கிறாள். தூல உடம்பை விட்டு நீங்கிய, அவளது உயிரானது மீண்டும் மண்ணுலகில் வினைக்கு ஈடான பருவுடம்பு பெற்றுச் சனனமெடுக்கின்ற பிறவிகள் தோறும், அவளது வருகையை எதிர்பார்த்து, நான் காத்திருக்கிறேன் என்பதையும், அவளை விடாமல் நான் துரத்துகிறேன் என்பதையும் உணராத பேதைப் பெண். ‘

‘அப்படியானால் பிரெஞ்சுத் தீவில், அருணாசலத் தம்பிரான் என்பதாய்ச் சொல்லப்பட்டது ‘

‘நானே. அதுவும் எனது சித்துகளில் ஒன்று. ககனக் குளிகையினை வாயில் அடக்கிக்கொண்டு, தேவயானியின் மீதிருக்கும் ப்ரீதியால் இந்து மகா சமுத்திரத்தை எத்துணை முறை பறந்து கடந்திருப்பேன் தெரியுமா ? ‘

‘நீங்கள் சாகாக் கலையில் தேர்ந்தவர் என்றார்களே ?

‘ம்..மரணத்தைத் தவிர்க்க முடியாது, தள்ளிப்போடலாம். அப்படித்தான் தள்ளிப்போட்டு, ஒரு நாள் இரு நாளல்ல, முன்னூறு ஆண்டுகளாக அப்பெண்ணுக்காக காத்திருந்திருந்தேன். என்றாவது எனது ஸ்தூலவுடல் அவளது ஸ்தூலவுடலை ஸ்பர்சிக்கும் என்கிற நம்பிக்கையில் காத்திருந்தேன். அதற்கான காலமும் நேரமும் கூடிவிட்டது. அவளைக் கூடும் நாள் வந்திருக்கிறது. அந்நாள் கதிரவன் ஒளிபடக் காரிருள் மறைவதைப்போல எனது அறியாமை மெய்ஞ்ஞானசுடரில் அழிந்துபோகும் நாள். பிராகிருதிக்கும் புருஷனுக்குமிடையே எழும் உறவில் இருமைநிலை அறுந்து இருவரும் ஒன்றாய்க் கலந்து பேரின்பம் காணும் நாள். என் ஆன்மப் பயணத்தின் இறுதிகட்டத்திற்கு வந்திருக்கிறேன். ‘

‘சாமி…! ‘

‘தேவராசன்.! அவள் எனக்காகக் காரைக்கால் பட்டணத்தில் காத்திருக்கிறாள். ரக்தாஷி வருஷம், வைகாசிமாதம் 31ம் நாள் செவ்வாய்க்கிழமை பெளர்ணமி தினத்தில் இரவு இரண்டாம் சாமத்தில், தேவயானியின் பருவுடம்போடு, இந்தத் தாந்திரீக யோகி சம்போகிப்பதென்று நாள் குறித்தாகிவிட்டது. ‘,

கர்ணகடூரமாக குரலில் சொல்லி நிறுத்திய துறவி சொக்கேசன், ஹஹ்ஹா வென்கிற அமானுஷ்யமான சிரிப்புடன், கண்கள் மின்ன தாண்டவமாடுகிறார். தேவராசன் ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

/தொடரும்/

* இப்பகுதியை எழுத உதவிய நூல்கள்:

அ. சித்தர் தத்துவம் – Dr. க. நாராயணன்

ஆ. பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும் – ஸ்ரீ தேவநாத சுவாமிகள்

இ. மரணத்தின் பின் மனிதர் நிலை – மறைமலையடிகள்

ஈ. சித்தர்களின் சாகாக்கலை- சி.எஸ் முருகேசன்

உ. Tantra – Daniel Odier

ஊ. La Reincanation J.H. Brennan

எ. Nos vies anterieurs – Joant Grant et Denys Kelsey

*

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 42

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கொன்ஊர் துஞ்சினும் யாம்துஞ் சலமே;

எமில் அயலது ஏழில் உம்பர்

மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி

அணிமிகுமென் கொம்பு ஊழ்த்த

மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே..

– (குறுந்தொகை -138) கொல்லன் அழிசி

இரவு மூன்றாம் சாமம், தேய்பிறைக் காலம். சங்குவண்ண நிலா, காற்றில் அலையும் பஞ்சுப் பொதிகளாய் மேகங்கள், கிழக்கில் அலைபாயும் மின்னற்கொடிகள். ஈரப்பதத்துடனான மேல்காற்றில்: தூரத்தில்தெரிந்த மாந்தோப்பிலிருந்து மாங்கனிகளின் மணம், அருகில்தெரிந்த ஆட்டுப்பட்டியின் மொச்சை, புழுதி வாசம். தட்டானும், ஈசல்களும், தங்கள் ஆயுளளவு தெரியாமல் போடுகின்ற ஆட்டம். சோம்பேறித்தனதுடன் தலையசைக்கும் மரங்கள். படபடவென்று சிறகினை அடித்து அவசரமாய்ப் பறக்கும் கூகை. கோடை மழைக்கான ஏக்கத்துடன் பூமி.

மாறன் வைத்தியர் வளவிலிருந்து வெளிப்பட்டிருந்தான். சடுதியாய் வீடுபோய்ச் சேரவேணும். வாணியைப்பார்க்க நேராததால் மனதிற் பெருங்குறை.. வைத்தியர் வளவிற்கு வந்தபொழுதெல்லாம், வாணியைச் சந்தித்திருக்கிறான். வாணியைக் காணவேணுமென்கிற சிந்தையுடனேயே அநேகவிசை வைத்தியரில்லத்திற்கு வந்திருக்கிறான். இன்றைக்கு மாத்திரம், இப்படியாச்சுது. ஆனாலின்று வாணியைப் பார்க்கவேணுமென்கிற ஆர்வத்தைக்காட்டிலும், அவளது பூர்வோத்திரத்தை அறியவேணுமென்பது பிரதானமாகவிருக்க, அதற்கென்றே வந்திருந்தான், ஆனால் வாணியிடமிருந்த பிரியத்தில், புறப்பட்டுப் போவதற்கு முன்னாலே சந்திக்காமல் போகிறதில்லை என்பதாய்த் திட்டம்பண்ணியிருந்தான். வைத்தியரிடம், இரவு வெகுநாழி வார்த்தையாடியதில் நேரம் சுறுக்காய்ப் போனது. இரண்டாஞ் சாமம் முடிந்துவிட்டிருந்தது. இந்தநேரத்தில், அவளைச் சந்திப்பது உசிதமாகப் படவில்லை.

வாணியின் பிறப்பில், இவ்வளவு மர்மங்கள் இருக்குமென்று மாறன் நினைத்தவனில்லை. பறங்கி நண்பன் பெர்னார்குளோதன், வாணியை முதன் முதலாக அவளது வீட்டிற் கண்டு, ‘தெய்வானை ‘! எனவழைத்ததும், பின்னை பிரெஞ்சுத்தீவு தெய்வானைக்கும், வில்லியனூர் வாணிக்கும், இரத்தசம்பந்தமிருக்கவேணுமென்று தன்னிடம் அவன் பேசியதையும் ஞாபகம் பண்ணினான்.. வைத்தியர் கொஞ்ச நேரத்திற்குமுன்னாலே சொன்ன சேதிகள்யாவும் பெர்னார்குளோதனின் தீர்மானத்திற்கு ஒத்துபோகின்றன.

வாணியும், தெய்வானையும் தாசி குமுதவல்லிக்கும், காமாட்சி அம்மாளுக்கும் பிறந்தவர்களென்றாலும், இருவருக்குமே தகப்பன், இரண்டாம் சொக்கநாதன் எனவழைக்கப்பட்ட மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் விஜயரங்க சொக்கநாதன் நாயக்கன், என்றாகிறது. வைத்தியர் சொல்கின்ற வர்த்தமானங்களை வைத்துப் பார்க்கும்போது, வாணிக்குத் தன் தகப்பன் ஆரென்கிற உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது என்பதாய்க் கொண்டாலும், அவளுக்குத் தொண்டைமாநத்தம் கிராமத்திலிருந்து தன்னை பார்க்க வருகின்ற பெண்மணி, ‘காமாட்சியம்மாள் அல்ல, தன்தாய் குமுதவல்லி ‘ என்கிற உண்மை தெரிந்தே இருக்கவேணும். அப்படியிருக்கெச்சே பின்னெதற்காக என்னிடம், ‘கும்பகோணம் மகாமகத்திற்குச் சென்றிருந்த வைத்தியர், காமாட்சி அம்மாள் என்கின்ற சந்தேகப் பெண்மணியை முதன்முறையாக தனது இல்லத்திற்கு அழைத்து வந்திருந்தார் ‘ என ஆரம்பத்தில் வாணி பொய்சொல்லவேணும்.

தொண்டைமாநத்தத்திற்குச் சென்றபோது, தேவராசன் இல்லத்தில் காதில் விழுந்த உரையாடலை வரிசையாய் மனதிற் கொண்டுவந்தான்:

‘என் மகளையும், மகனையும் என்னிடமே சேர்ப்பித்துவிடுங்கள். உங்களுக்குப் புண்ணியமாய் போகட்டும் ‘, வாணியின் தாயான குமுதவல்லியின் புலம்பல்.

‘அத்தை. இன்னும் கொஞ்சநாள் பொறுக்கவேணும். வலியவரும் சீதேவியை வேணாமென்று சொல்லாதே. வெண்னெய் திரண்டுவர நேரத்துலே தாழியை உடைச்சுப் போடாதே ‘ – சொன்னவன் தேவராசன்

சிறிது நேர இடைவெளிக்குப்பிறகு, ‘இப்போது உங்கள் கூச்சலை நிறுத்தவேணும். நான் சொல்வதைக் கேட்கப்போகிறீர்களா ? இல்லையா ? ‘ -வாணி.

ஆக இவர்களின் பின்னே ஒரு கூட்டத்தின் அச்சுறுத்தல் இருக்கிறது. புதுச்சேரி பட்டணத்தில் நடக்கும் தப்பான காரியங்களில் பங்கெடுக்கும் தேவராசன், இவர்கள் விஷயத்திலும் தலைகாட்டுகிறான். ஆட்கடத்தும் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களே, இங்கும் சம்பந்தவட்டவர்களா ? அல்லது இவர்கள் வேறா ? தேவராசன் திரைக்கு வெளியே இயங்குபவன், அவன் கருவி மட்டுமே. அவனுக்குப் பின்னே திரைமறைவில் இருக்கும் கர்த்தாக்கள் அல்லது கர்த்தா ஆர் ? எதற்காக அவர்கள் குமுதவல்லியை, காமாட்சி அம்மாளாக முன் வைக்கவேணும். அப்படி முன் வைப்பதால் அவர்களுக்குள்ள செளகரியங்கள் என்ன ? சாதிக்க நினைப்பது என்ன ? பிரெஞ்சுத் தீவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ள நாயக்கர் சந்தேகித்ததுபோல, மதுரை நாயக்கர் ராச்சிய உரிமையிலிருந்து தெய்வானையை அப்புறப்படுத்த நடத்தப்படும் சதியோ ? இந்தச் சதிக்குப்பின்னே..இருப்பவர்கள் மதுரை நாயக்கர் அரசுரிமைக்குப் பாத்தியதை உள்ளவர்களோ ? தொண்டைமாநத்தத்தில் தேவராசன் இல்லத்தில் வாணி, கடைசியாய் என்னிடம், ‘இப்போதைக்குத் தயவுசெய்து புறப்படவேணும். பிறகு விளக்கமாகச் சொல்வேன். ‘ எனக்கூறியதன் அர்த்தமென்ன. ஒருவேளை வைத்தியரைச் சந்திக்காமல் வாணியைச் சந்தித்திருந்தால் இது விபரம் தெரிந்திருக்குமோ ? எனப் பலவாறாகத் தனக்குள் வினாக்களை எழுப்ப, அவை பதில்களின்றி, சிக்கலிட்டுக்கொண்டு மனதில் முடிச்சுகளாய் நிறைந்தன.

மாறன் கிச்சிலிமரத்தை நெருங்கியிருந்தான். கட்டியிருந்த குதிரையை அவிழ்க்க ஆரம்பித்தான்.

‘மாறன் நில்லுங்கள்! ‘

ஒரு பெண்குரல், வாணியின் குரல். இடப்புறமிருந்த கிச்சலிமரத்தின் பின்புறமிருந்து வந்தது. குரலைத் தொடர்ந்து இருபெண்கள், ஒருவர் பின் ஒருவராக இருட்டிலிருந்து வெளிப்பட்டார்கள். ஆச்சரியமாயிருந்தது. இந்த நேரத்தில், அவளில்லத்திற்கு வெளியே, நம்புவதற்குச் சிரமமாக இருந்தது. அப்படியும் இருக்கமுடியுமா ? குழப்பமும் அதன்பின்னே குளிர்ச்சியாய் சந்தோஷமும், மனதில் இறங்கியது.

‘வாணி!நீயா ? நான் ஏதேனும் கனவுலகில் இல்லையே ? ‘

‘இல்லை. நிஜவுலகிற்தானிருக்கின்றீர்கள். ‘

‘அதற்கில்லை. உன்னைப்பற்றிய சிந்தனையில் இருக்கின்றவேளையில், இப்படி திடாரென்று என்முன்னே வந்துநின்றால், நான் என்னவென்று நினைத்துக்கொள்கிறது ? நீங்களிருவரும் மோகினிப்பிசாசாக இருக்குமோவென்று நினைத்தேன். அது சரி இந்தப் பிள்ளைப்பூச்சியை மடியிற்கட்டிக்கொண்டு எங்கே புறப்பட்டுப்போட்டாய் ? ‘

‘என் சேடிப்பெண் கமலத்தை வம்புக்கிழுக்கவில்லையென்றால், உங்களுக்குத் தூக்கம் பிடிக்காதே ‘

‘அம்மா! கள்வர்களுக்குக் காவலர்களைக் கண்டால் எரிச்சல் வரத்தானே செய்யும் ‘-வாணி

‘ஆக.. உன் எசமானியும் நீயும், நான் கள்ளனென்று முடிவுபண்ணிப் போட்டார்கள். ‘

‘அவள் சரியாய்த்தான் சொல்லியிருக்கவேணும். பின்னே! சொல்லிக்கொள்ளாமல் இருட்டில் நழுவுகின்ற மனிதர்களை என்ன பேரிட்டு அழைப்பதாம். ‘ -வாணி

‘கள்ளனுக்குரிய தொழில் தர்மமும், உம்மிடத்தில் இல்லை. எப்படி ஜீவிதம் பண்ணப்போகிறீர் ‘ -சேடிப்பெண்

‘எனக்கு விளங்கவில்லை ? ‘

‘பொன்னும் பொருளுமிருந்தும், திருடுமெத்தனமின்றி ஒரு கள்ளன் புறப்பட்டால், பரிதாபப் படாமலிருக்க முடியுமா ?

‘நான் திருடுவதற்குத் தயார். உங்களில் ஆர் பொன் ? ஆர் பொருள் ? என்று சொல்லுங்கள். வரிசைப்படுத்தித் திருடுகிறேன் ‘

‘புத்தியிலே கொஞ்சம் விஷமிருக்கிறது. சரியான பச்சிலைக் கொடுத்து முறிக்கவேணுமம்மா! இவரிடம் ஜாக்கிரதையாய்ப் பழகுங்கள். நான் புறப்படறேன். எனக்கு நித்திரைகொள்ளணும். ‘

‘பேசாமடந்தையாக இருந்தவள் நீ! இப்போதெல்லாம் நன்கு வார்த்தையாடுகிறாய். எசமானியம்மாவின் கூண்டுக்கிளியிடம் அப்பியாசம் பண்ணியதா ? ‘ அவர்களிருவரையும் தனியேவிட்டு வளவிற்குத் திரும்ப எத்தனித்த சேடிப்பெண்ணிடம் மாறன் கேட்டான்.

‘உஸ்! மெதுவாய்ப் பேசுங்கள். அப்பா காதில் விழப்போகிறது. அநேகமாக அவர் நித்திரைக்கொண்டிருக்கமாட்டார். ஆமாம்! என்ன இது ? இப்படிச் சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டுவிட்டார்களே ? அப்பாவிடம் வார்த்தையாடிவிட்டு, நீங்கள் கீழே இறங்கி வரும்வரை நான் நித்திரைகொள்ளாமல் விழித்திருப்பேனென உங்களுக்குத் தோன்றவில்லையா ? ‘

‘தோன்றாமலா ? இரவாயிற்றே எனத் தவிர்த்தேன் ? ‘

‘பொய் சொல்லாதீர்கள். உங்களிடம் நிறைய பேசவேண்டியிருக்கிறது ‘

‘எனக்குந்தான். ‘

‘குதிரையைக் கட்டிவிட்டு என் பின்னால் வாருங்கள்.. ‘ சொன்னவள், மாறன் தனது குதிரையை மரத்தில் கட்டும்வரை காத்திருந்தாள். அவன் கட்டிமுடித்ததும் மீண்டும் இருவருமாக வளவிற்குள் நுழைந்தார்கள்.

இருவரும் முன்வாசல், நடை இரண்டையும் கடந்து தாழ்வாரத்தை அடைய, விழித்துக்கொண்டு, ‘மாறன் மாறன் ‘ என கிரீச்சிட்ட கிளியைத் தனது வலக்கரத்தால் கூண்டினைத் தட்டி வாணி அடக்கினாள். கிளியும் தன் எஜமானியின் கட்டளைக்குப் பணிந்து, தலையை வளைத்துத் தோளில் நிறுத்தி மெளனமானது. வலப்புறமாய்த் தாழ்வாரத்தில் நித்திரைகொண்டிருந்த சேடிப்பெண் கமலம், ‘அம்மா! நீங்களா ‘ என்றவாளாக எழுந்து உட்கார்ந்தாள். ‘கமலம் நான்தான். நீ உறங்கு. ‘ என்ற வாணியின் குரல் அவளைச் சமாதானப் படுத்தியிருக்கவேண்டும். மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தாள்.

வாணியும் மாறனும் முற்றத்தைக் கடந்து பின்வாசல் வழியாக, வீட்டின் பின்புறம் பரந்து கிடந்த தோட்டத்தை அடைந்திருந்தார்கள். முருங்கை, எலுமிச்சை, மா, தென்னை என எதிர்ப்பட்டவற்றைக் கடக்க, அடர்த்தியாய் வாழைமரங்கள், அவற்றுக்கருகே பெரிய கிணறொன்று இருந்தது. கிணறொட்டி போடப்பட்டிருந்த கல்லில் இருவருமாய் அமர்ந்தார்கள். கீழ்வான மின்னல் இப்போது ஓய்ந்துவிட்டது. மேகங்கள் மெலிந்திருக்க, அமரபட்ஷ நிலவு தனித்திருக்கிறது. சிலுசிலுவென்று வீசியக் காற்றிலிருந்த ஈரலிப்பு, எங்கோ மழைபெய்திருக்கவேணுமென்று சொல்கிறது.

இருவருக்கிடையிலும் ஊமைநாடகம் உருப்பெற்றிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்னால்வரை வாணியிடமிருந்த தைரியம் ஒளிந்துகொண்டது. மங்கை பிராயத்து பாலுணர்ச்சிகள், பெண்புறாவை வாடைக்குளிரிலிட்டு வருத்தின. ஆண்புறாவின் சாடைக்குக் காத்திராமல், பிரீதியுடன் வேகமாய் மார்பிற் சாய்ந்தாள். சில நொடிகள் அமைதியாகவிருந்தவன், இறுக அணைத்து அவள் தலையில் எச்சில் படிய முத்தமிட்டான். இவனது இச்செயலுக்காகவே காத்திருந்ததுபோல வாணி விசும்பினாள்.

‘வாணி! ‘

‘ம்.. ‘

‘என்னால் நம்ப முடியவில்லை. நீயா அழுகிறாய் ? இப்போது என்ன நேர்ந்துவிட்டது ? ‘

‘எனக்குப் பயமாயிருக்கிறது… ‘

‘பைத்தியக்காரி! எதற்கு பயம் ? ‘

‘அப்பா என்னைக் குறித்த சேதிகளைச் சொன்னாரில்லையா ? ‘

‘சொன்னார். நீ ராஜவம்சத்தைத் சேர்ந்தவளென்றும் ,உனக்கொரு சகோதரியும், சகோதரன் ஒருவனும் பிராஞ்சுத் தீவிலிருப்பதாகவும் சொன்னார் ‘

‘என் சகோதரனும், நானும் தாசி குலத்தவர்கள் என்று சொல்லவில்லையா ? ‘

‘அதனாலென்ன ? மனிதர்களை, குணத்தைமாத்திரமே பார்த்து மரியாதை செய்யவேண்டுமேயன்றி, அவர்களின் குலத்தைப் பார்த்து அல்ல. சேற்றில் முளைத்திருந்தாலும், எனக்கு நீ செந்தாமரைதான். அதுவன்றி, உன் பாட்டி பவளமல்லியும், தாயார் குமுதவல்லியும் உயர்குலத்துப் பெண்மணிகளைப் போலல்லவா வாழ்ந்திருக்கிறார்கள். உன்னை நான் வெறுத்தொதுக்குவேன் என்கிற அச்சமிருந்தால், அதனைத் தவிர்த்துவிடு. பின்னையும், அரசகுலத்துப் பெண்ணென்பதால் என்னை நீ, ஒதுக்கிவிடும் அபாயமும் இருக்கிறது. ‘

‘அந்த அபாயத்தை மனதிற் கருதியே சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டார்களோ ? ‘

‘அப்படியல்ல இரவில், இரண்டு சாமத்திற்குமேல், உயர்குல அந்நியபெண்களை, ஆடவர் சந்திப்பது நியாயமல்லவே ‘ என மாறன் கூறியமாத்திரத்தில், வாணி வெடுக்கென்று அவனிடமிருந்து பிரிந்து எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

இவன் எழுந்து அவள் பின்னே ஓடவேண்டியிருந்தது.

‘வாணி…! நில்..! ஏதேனும் தப்பாய்ச் சொல்லிவிட்டேனோ ?..ம்.. என்ன சொன்னேன் ‘உயர் குல அந்நியப்பெண்களை இரவில் சந்திப்பது நியாமல்லவென்று ‘ சொன்னேன். அடடா…. இப்போது புரிகிறது, அதற்குள் இப்படியொரு அனர்த்தமிருக்குமென எனது புத்திக்கு உறைக்கவில்லை. நில்! ‘ எட்டி, அவள் கையைப் பிடித்தவன் மறுபடியும் அழைத்துவந்தான். இருவரும் கிணற்றுக்கட்டில் இம்முறை உட்கார்ந்தார்கள். வாணி பேசாமலிருந்தாள்.

‘வாணி! வீணாய் எதையாவது கற்பிதம் செய்துகொண்டு, வருந்துவது சரியல்ல. சரி வைத்தியரிடம் கேட்கவேணுமாய் நினைத்து கேட்காத சந்தேகம் ஒன்றுண்டு, சொல்..! உன் தாய் குமுதவல்லி, எதற்காகத் தன்னைக் காமாட்சிஅம்மாள் என்று கூறித் திரியவேணும் ? ‘

‘அவ்வாறாகச் சொல்லிக்கொண்டுத் திரியவேணுமென்கிற எண்ணமேதும் அம்மாவுக்கில்லை. அவரிடம் அவ்வாறு சொல்லவேணுமாய் நிர்ப்பந்தித்திருக்கிறார்கள். அவ்வாறு சொல்லாதுபோனால், மகன் கைலாசத்திற்கும், மகள் வாணிக்கும் ஆபத்து நேருமென்று பயமுறுத்தியிருக்கிறார்கள். அதுவன்றி எனக்கு நாயக்கர் அரசுரிமையை மீட்டுத் தரவிருப்பதாகச் சொல்லி அம்மாவின் மனதைக் கரைத்திருக்கிறார்கள். இதனை அம்மா மட்டுமல்ல அந்தக் கூட்டத்தில் எடுபிடியாக இருக்கும் என் மாமன்மகன் தேவராசனும் நம்புகிறான். அவனுக்கு நான் மதுரை ராணி ஆகணுமாம், அவன் ராஜாவாகணுமாம்… ‘

‘ஆக நடப்பதெல்லாம் வைத்தியர் உட்பட உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. உன் அன்னை, ஒத்துழைக்காவிடில் அவள் பிள்ளைகள் உயிருக்கு ஆபத்தேற்படும் என்பதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் இந்தக் கூட்டத்திடம் வைத்தியருக்குள்ள தொடர்பு என்ன ? எதற்காக அவர் பயப்படவேணும். ‘

‘அவர் கைலாசத்தைத் தன் சொந்தமகனாகப் பாவித்து வைத்திருந்தவர். எனக்கு ஈடாக அவன் மீதும் பாசமுள்ளவர். நாங்கள் இவர்களோடு ஒத்துழைக்காவிடில் தீவில் அவன் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமென மிரட்டிப் பணியவைத்துள்ளார்கள். நீங்கள் தொண்டமாநத்தம் வந்திருந்த அன்றைக்கு, அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கென்றே அப்பா அரியாங்குப்பம் சென்றிருந்தார். தேவராசன்கூட தாங்கள் தொண்டைமாநத்தம் வந்து திரும்பிய சில நாழிகைகளில் அரியாங்குப்பம் புறப்பட்டுப் போனான். ‘

‘வாஸ்த்துவம். தேவராசனை அன்றைக்கு அரியாங்குப்பம்வரைத் தொடர்ந்து சென்றேன். எதிர்பாராதவிதமாக எங்களுக்கு வேண்டிய வேறொரு நபர், அக்கூட்டத்தின் நடவடிக்கைகளை அறிவதற்காகக் கலந்துகொண்டார். அவரிடமிருந்து முழுச் சேதிகளும் தெரிந்துகொள்ள சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆனாலும் ஒன்றைமட்டும் உறுதியாக என்னாற் சொல்ல முடியும். அவர்கள் உன் தாயாரைக் காமாட்சியம்மாளாக முன்வைப்பது, உன்னைத் தெய்வானையாக பிரகடனபடுத்தும் முயற்சி. அப்படியெனில் உண்மையான தெய்வானைக்கு ஆபத்து ஏற்படுத்தும் முயற்சி. மதுரை நாயக்கர் அரசுரிமைக்கென்று ஏதோ சதித்திட்டம் இருக்கவேணும். இத்திட்டம், பிரெஞ்சுத் தீவுக்குப் போவதற்குமுன்னாலே சீனுவாசநாயக்கருக்கு ஏற்பட்ட அச்சத்தை நியாயப்படுத்துகிறது. ஆனால் நாயக்கருக்குக் கொடுத்துள்ள வார்த்தைப்பாட்டிற்கு மாறாக, வைத்தியர் சபாதிபடையாட்சி, அவர்கள் நடத்தும் சதி ஆலோசனைகளிலும் கலந்துகொள்வதென்றால்.. எனக்கு வியப்பை அளிக்கிறது ‘

‘…. ‘

‘வாணி!.. ஒன்றைத் தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். உன் தாயார் குமுதவல்லியை யோசிக்கச் சொல். உண்மையில் அந்தக் கூட்டத்திற்கு நல்லெண்ணம் இருக்குமானால், இரண்டாம் சொக்கநாத நாயக்கரின் மணப்புற*மகனான கைலாசத்திற்கு முடி சூட்டிப்பார்ப்பார்களா ? என்று கேட்கச் சொல். ‘ என்றவன் அடர்த்தியாய் இருந்த வாழைகளுக்கிடையில் அசைகின்ற ஆணுருவத்தைப் பார்த்துவிட்டு, இவளுக்குச் சைகை செய்து காண்பித்தான். பார்த்தமாத்திரத்தில் அவள் எழுந்துகொண்டாள். அங்கே நின்றிருந்த உருவமும் இதைக் கவனித்திருக்கவேணும், மெல்லப் பின்வாங்கியது. கைலாசம் ஓட ஆரம்பிக்க, இப்போது அந்த ஆள் தோட்டத்திலிருந்த தட்டியைத் திறந்துகொண்டு வேகமாய் ஓடினான். அவன்பின்னே கைலாசமும் ஓடினான். வாணியின் இதயம் வேகமாய் துடித்து, அவள் கெண்டைக்காற் சதைகள்வரை பீதியை இறக்கியிருந்தது.

/தொடரும்/

*திருமண உறவு பட்டத்துராணியன்றி வேறுபெண்களுக்குப் பிறக்கும் மகன்

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


DANS LES CAVEAUX D ‘ ‘INSONDABLE TRISTESSE

OU LE DESTIN M ‘A DEJA RELEGUE;

OU JAMAIS N ‘ENTRE UN RAYON ROSE ET GAI;

OU SEUL AVEC LA NUIT, MAUSSADE HOTESSE….

– Charles BAUDELAIRE

இரவு நலிந்த உயிர்களுக்கான சோதனைக்காலம். சபிக்கப்பட்ட மனிதர்களின் வேதனைகள், பகல்களில் உடலோடு சம்பந்தப்பட்டவை, இரவுகளில் உயிரோடு சம்பந்தப்பட்டவை. இரவு என்றவுடன், இருள், நிசப்தம், கலக்கம், அச்சம், இழப்பென்று, மனதிற் தோன்றுவதெல்லாம் எதிர்மறைச் சங்கதிகள். விடிகின்றபொழுது, நம்மில் அநேகருக்கு முந்தைய இரவின் தொடர்ச்சியாக நேருகின்ற சங்கடமும், சஞ்சலமும் ஆயுள் பரியந்தம் தொடர்கின்றது, அதற்குப் பிறகு அனேக இரவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு முடியாமலேயே நீள்கிறது, பகல்கூட இருண்டுவிடுகிறது. இரவைச் சொல்வதால், பகல்நேரங்களில் அனர்த்தங்கள் இல்லை என்று ஆகிவிடுமா என்ன ? ஆனால் இவ்வனர்த்தங்களுக்கு, இரவுநேரங்களில் இருக்கின்ற வீரியமும் பலமும், அதிகம். இரவு என்பதே அழிவுகளுக்கான பரணியா ? நம்பிக்கைகளுக்கான சமாதியா ?.

பிரெஞ்சுத் தீவில் இருள் மண்டிக் கிடந்தது. சூரியன் மேற்கில், படுக்கையிலிருந்தான்.

பகல் நேரத்தில் சுற்றித்திரிந்த பறவைகளும், விலங்குகளும் தங்கள் கூட்டிற்கும், இருப்பிடங்களுக்கும் திரும்பியிருந்தன. அவைகளின் அடிமனதிலும் தங்கள் எதிரிகள் குறித்ததான அச்சம் இருக்கவேண்டும். கண்கள் மூடியிருக்க, ஆபத்தை அடையாளம் காணும் எச்சரிக்கை அவற்றின் உடல்களில் இருந்தது.

எந்தநேரத்திலும், மரூன்களில் எவரேனும் பண்ணைகளில் அத்துமீறி நுழைந்து, கபான்களைக் கொளுத்தலாம், தங்களை வெட்டிப்போடவோ அல்லது உயிரோடு எரிக்கவோ செய்யலாம். தங்கள் பெண்களைத் தூக்கிச்செல்லலாம், என்கின்ற அச்சத்தின் காரணமாக, நம்பிக்கைக்குரிய அடிமைகள்- இருட்டும்வரை பண்ணையில் உழைத்த அலுப்போடு திரும்பியவர்கள் – அவசரமாக உண்டு, அவசரமாய் உடல் உறவுகொள்ளுகின்றார்கள்.

ஒப்பந்தக் கூலிகளென்றபோதிலும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்ற தமிழர்களான தச்சர்கள், கம்மாளர்கள், கொல்லத்துக்காரர்கள், கும்பெனி நிர்வாகத்திலிருந்த ஊழியர்கள் பொதுவாகவே குடிசைக்குத் திரும்ப இரவு முதற் சாமம் முடிந்துவிடும். இரவு உணவிற்குப் பிறகு உழைத்த களைப்பில், பெரும்பாலான மலபாரிகள் குறட்டைவிட்டுக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள்.

நாயக்கர் தம்பதிகள் கடந்த அரைமணித் தியாலமாகத் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கு போனாலும், அந்திசாயும் நேரத்திற்கு முன்பாக, கபானில் இருப்பதை வழக்கப்படுத்தியிருந்த வளர்ப்புமகள் நீலவேணியை எதிர்பார்த்துக் அவர்கள் கண்கள் பூத்துவிட்டன. நாயக்கர் மனைவி குரலெடுத்த அழ இவர் தலையில் கைவைத்துக் கொண்டிருக்கிறார்.

களஞ்சியத்தில் பொன்னிருந்தும்

கழுத்து நிறையலையே!

விளைஞ்ச கதிரிருந்தும்

வீடுவந்து சேரலையே!

நாயக்கர் தம்பதிகள் தீவுக்குத் தேசாந்திரம் வந்த கதைக்கு, கண், காது, மூக்கு எல்லாமுண்டு. நிலம் நீச்சென்று கெளரதையாய் வாழ்ந்தவருக்கு சோதனை தவமாத் தவங்கிடந்து பெற்றெடுத்த சீமந்தப் புத்திரனிடமிருந்து வந்தது. காடு, கரம்பைகளைக் கூத்திக்கும் குடிக்குமாக பங்குபோட்டுக் கொடுத்தவன், அண்டா குண்டாவையும் விட்டு வைக்கவில்லை. அடகுவைக்கக் கொண்டுபோனான். கண்ணுக்கெதிரே பிள்ளை, இப்படிக் குட்டிச்சுவராய் சீரழிந்து நிற்பதைக் கண்டு புருஷனுக்கும் பெண்ஜாதிக்கும் கண்களில் குருதியே சுரந்தது. தலைகுனிந்து வாழலாச்சுது. நாயக்கரிடம் தொழில் இருந்தது. கருங்கற்கற்களை அளவாய் உடைத்து, அடுக்கிச் சுவர் எழுப்பினால், நூல் பிடித்தது போலவிருக்கும். கைகள் பிசகியதில்லை. பிரெஞ்சுத் தீவுக்குப் போனால் பிழைக்கலாமென ஊர் மக்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. காமாட்சி அம்மாள் தீவுக்குப் பிள்ளைகளோடு புறப்பட, அக்குடும்பத்தோடுகொண்டிருந்த உறவு காரணமாகத் தீவுக்கு இவர்களும் வர நேர்ந்தது.

தீவுக்கு வந்தபின்னரும், பிள்ளைப்பாசம் விடமாட்டேன் என்கிறது. ஆனாலும், நாயக்கர் அதன் வாடையினைப் பிறர் அறியாமல் பொத்தி பொத்தி வைத்திருந்தார். கண்கள் கலங்குகின்றபோது, பாரியாள் விசாலாட்சி அறியாமல் தோளில் கிடக்கும் ஈர இழைத் துண்டினால், ஒத்திக்கொள்வார். நாயக்கர் விளையாட்டு விசாலாட்சிக்குத் தெரியாதா என்ன. அவள் தம்பாட்டுக்கு, இவர் வேலைக்குப் போகும்மட்டும் காத்திருந்து, நாள் முழுக்க மூக்கைச் சிந்திக்கொண்டு தண்ணிவென்னி யில்லாமல் சுருண்டு கிடப்பாள்.

நீலவேணி, குடிசைக்குள் அழைத்துவந்தபோது, சந்தோஷம் கூடவே வந்திருந்தது.. தம்பதிகளின் தீவு வாழ்க்கைக்கு அர்த்தம் விளங்கயிருந்தது. தாயை இழந்து தவித்த பெண் நீலவேணியைத் துறைமுகத்தில்வைத்துக் கண்டதும், கபானுக்கு அழைத்துவந்ததும், அதன்பின் தாங்களே அவளுக்குத் தந்தையும் தாயுமாய் மாறிப்போனதும், ஈசன் செயலன்றி வேறல்ல என்பதில் தம்பதிகள் உறுதியாக இருந்தார்கள்.

நீலவேணி துடுக்கான பெண், வெட்டொன்று துண்டு ரெண்டு எனபதான பேச்சு. எவர் மனதையும் நோகச் செய்யாத கிண்டலும், கேளிக்கையும், சுற்றியிருக்கும் மனிதர்களிடமும் சுலபாய்த் தொற்றிக்கொள்ளும். எள் என்றால் எண்ணெய் என்று நிற்பவள். அரிசிகளைந்துகொண்டிருப்பாள், அடுத்த சிலநாழிகைகளில் விறகொடித்து வருவாள். ஆற்றங்கரையில் தண்ணீர் சேந்துவாள், அடுத்தகணம் அக்கறையாய் நாயக்கரிடம், ‘இந்தாருங்களப்பா சுக்குத் தண்ணீர் என்பாள். ‘ அம்மா விசாலாட்சிக்கு, வேணாமென மறுத்தாலும், விடாப்பிடியாக கால்களைப் பிடித்துவிடுவாள், தூக்கமின்றி விசிறிக்கொண்டிருக்கும் நாயக்கருக்குத் திருவாசகம் படிக்க உட்கார்ந்துவிடுவாள்.

கடந்த சிலமாதங்களாக நாயக்கருக்கு பம்ப்ள்மூஸ் பிரதேசத்தில் தேவாலயக் கட்டிடப் பணி.. வேலை முடிந்து போர்லூயி பிரதேசத்திலிருக்கும், மலபாரிகள் குடியிருப்புக்கு வந்துசேர, மிகவும் தாமதமாகிப் போகிறது. இன்றைக்கும் அப்படித்தான் வந்திருந்தார். கபானுக்கு வெளியே குடத்திலிருந்த தண்ணீரைச் சேந்தி, கால்களைக் கழுவுகின்றபோதே, பெண்சாதி விசாலாட்சியின் பதட்டத்தினைக் கவனித்தார். கபானுக்குள் நுழைந்ததுதான் தாமதம்., அவள் வெடித்துக் கொண்டு அழுதாள். நீலவேணி வீட்டிற்க்குத் திரும்பாதாதை, உடைந்தவார்த்தைகளில் அழுகைக்கிடையிற் சொல்லிமுடித்தாள். காத்திருந்தார்கள், அரை மணிநேரமாயிற்று, ஒருமணி நேரமாயிற்று. அக்கம் பக்கமிருக்குமிருக்கும் கபான்களில் காவிளக்குகள் அணைக்கபட்டன. சில குடும்பங்கள் நித்திரைக்கு ஆயத்தப்பட்டார்கள். இரவு மூன்றாம் சாமத்தை நெருங்கிக் கொண்டிருந்தது, நீலவேணி கபானுக்குத் திரும்பவில்லை. நாயக்கர் மனத்தில் பயம் தொற்றிக்கொண்டது.

காமாட்சி அம்மாளைத் தேடி ஓடினார். அங்கே, கைலாசம் ஒருபக்கம் தெய்வானை ஒருபக்கம், காமாட்சி அம்மாள் ஒருபக்கமென ஆளாளுக்கு முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டிருந்தனர். பார்த்தமாத்திரத்தில் அவர்களுக்கிடையேயும் என்னவோ நடந்திருக்கிறது என்பதை ஊகித்தார்.

‘தெய்வானை! என்ன நடந்தது ? கைலாசம் நீயாவது சொல்லப்பா ? நீலவேணி வீடு திரும்பாததன் காரணம் தெரியுமா ? ‘ நாயக்கர் கேட்கிறார்.

‘இதென்ன நெஞ்சில் நெருப்பைக் கொட்டுகிறீர். நான் இவனிடம் கள்ளிப் பெட்டிச் சமாசாரத்தினை என்னிடம் மறைத்த முகாந்திரத்தையல்லவா விசாரித்துக்கொண்டிருந்தேன். என்ன நடந்தது ? நீலவேணி கபானுக்கு இன்னும் திரும்பவில்லையா ? வயசு வந்தப் பெண் ஆயிற்றே. ஈஸ்வரா!.. இது என்ன சோதனை ? ‘ -காமாட்சி அம்மாள்.

‘நாயக்கர் மாமா! நாங்களிருவரும் ஒன்றாகத் தானே, கடற்கரையிலிருந்து திரும்பினோம். அவள் எலுமிச்சை நதிக்கரைவரை சென்றுவிட்டு கபானுக்குத் திரும்புவதாக என்னிடம் சொல்லிச் சென்றாளே ? ‘

காமாட்சி அம்மாள் பதறிக்கொண்டு கபானுக்கு வெளியே ஓடினார். ‘கைலாசம் ஓடு..! அக்கம்பக்கத்திலிருக்கிற நமது ஆட்களை எழுப்பு. மதுரை, பாவாடை, நாராயணசாமி கொஞ்சம் எழுந்துவாங்கோ! ‘

காமாட்சியின் குரல்கேட்டுக் கபான்களின் தட்டிக்கதவுகள் திறந்துகொண்டன. கும்பல் சேர்ந்தது. ஆளாளுக்கு ஒரு திசையை வரித்துக்கொண்டு ஓடினார்கள். எட்டியான் எலுமிச்சை நதித் திசைக்காய் ஓடினான். கைலாசம் கடற்கரைத் திசைக்காய் ஓடினான். இதுபோன்ற நேரங்களில் சில்வியின் ஒத்தாசை அவசியம் என நினைத்தான்.

கைலாசம் புறப்பட்ட சில நாழிகைகளில், தெய்வானை ஓடிவந்தாள்.

‘அண்ணா! நில்லுங்கள். லஸ்கர் குடியிருப்பிற்குச் சென்று பொன்னப்ப ஆசாரியை விசாரியுங்கள். அவரை பார்க்கவேணுமென்றே எலுமிச்சை நதித் திசைக்காய் சாயந்திரம் நீலவேணி சென்றாள். பொன்னப்ப ஆசாரி தப்பான மனிதரல்ல. எனக்கென்னவோ பிரான்சிஸ் அஞ்ஞேலை நினைத்துத்தான் கொஞ்சம் அச்சம். ‘

‘தெய்வானை! உன்மீது, அம்மா அதிகமாகப் பிரியம் வைத்து கெடுத்துவிட்டார்கள். இந்தப் பிரச்சினைகள் ஓயட்டும் என் கோபத்தைக் காட்டுகிறேன். போல்பிரபுவின் மகன் பிரான்சிஸ் ஓர் அயோக்கியனாயிற்றே. அவனிடத்தில் உங்களுக்கென்ன வம்பு. ‘

‘அதைச் சொல்ல இதுவா நேரம். நீங்கள் பொன்னப்ப ஆசாரியையும், சில்வியையும் அழைத்துக்கொண்டு எதற்கும் போல்பண்ணைவரை போய்வருவது உத்தமம். கால தாமதம் செய்யவேணாம். ‘

கைலாசம் மேற்கே இறங்கி ஓடுவதைக் கவனித்துவிட்டு, தெய்வானை கபானுக்குத் திரும்பினாள். நீலவேணியைத் தேடிப்போனவர்கள்போக, காத்திருந்த சனங்கள், கதைகளைச் சொன்னார்கள். ஒரு சிலர் பொன்னப்ப ஆசாரியோடு நீலவேணியைப் பலமுறை பார்த்ததாக சத்தியம் செய்தார்கள். சிலர் மரூன்களிடம் பிடிபட்டிருக்கலாம் என்று அபிராயப்பட்டார்கள். சிலர் மனித மாமிசம் சாப்பிடும் கறுப்பர்களிடம் அகப்பட்டிருக்கலாமென உச்சுக் கொட்டினார்கள். காட்டு மிருகங்கள் மனிதர்களை அடித்து இழுத்துப் போனதை தான் கண்ணால் பலமுறைப் பார்த்திருப்பதாக ஒருவன் துண்டைப் போட்டுத் தாண்டினான்.

கேட்ட நாயக்கருக்கு துக்கம் பீரிட்டுக்கொண்டு வெளிப்பட்டது.

‘ஈஸ்வரா இது என்னடா சோதனை!. இப்படி வாரிக்கொடுக்கவா அந்தப் பெண்ணை எங்களிடம் சேர்ப்பித்தாய்! துண்டை வாயில் அடைத்துக்கொண்டு குமுறிக் குமுறி அழுதார். விசாலாட்சி அழுதாள். தம்பதிகளைத் தேற்றும் வகை தெரியாது காமாட்சி அம்மாள் அழுதாள். கூட்டம் முழுக்க அழுதது.

போல்பிரபுவின் பண்ணை. குதிரைகள் அடைத்துவைத்திருந்த கொட்டடி. கோரைப் புற்களைத் தெளித்து காத்தமுத்துப் படுத்திருந்தான். குதிரைகளின் சாணமும், மூத்திரமும் கலந்து மணந்தது. கொசுக்களின் கடி. சாயந்திரம் தம்பிரான் புறப்பட்டுப்போனதிலிருந்து, கொட்டடி வேலைகள் நித்திரை கொள்ளும்வரை அவனுக்கெனக் காத்திருந்தன.

பண்ணையிலிருந்த கறுப்பன் ஒருவன், குதிரைலாயத்தில் செய்யவேண்டிய வேலைகளைச் சமிக்ஞையில் காட்டப் புரிந்துகொண்டு செயல்பட்டான். மூத்திரமும் சாணமுமாக சொதசொதவென்றிருந்த கோரைப்புற்களை அகற்றினான். ஒவ்வொரு குதிரையாய் அவிழ்த்துச்சென்று சுனைநீரில் தேய்த்துக் கழுவினான். மார்பளவு தண்ணீரில் குதிரைகளை நடக்கச் செய்தான். ஒரு பாக்கு மட்டையைக்கொண்டு குதிரையின் உடலில் ஒட்டியிருந்த நீரினை வழித்தெடுத்தான். கொட்டடிக்குக் கொண்டுவந்தான். குதிரைக்கு வேண்டிய வைக்கோலும், மரத்தொட்டியில் தீனியும் வைத்துமுடிக்க, கமலா கிண்ணியொன்றில் கோதுமைக் கஞ்சி கொண்டுவந்திருந்தாள். அவளை மறுபடியும் பார்க்க நேர்ந்ததில் அலுப்பனைத்தும் நொடியிற் பறந்துபோயிற்று. ஆகாரமிட்டுவிட்டுச் சென்றவளை, ‘கமலா..! ‘வென்று மனதிலேற்பட்டக் கிளர்ச்சியுடன், இவன்அழைத்ததை அவள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

அயர்ந்து தூங்கியவன், அர்த்தராத்தியில் விழித்துக்கொண்டான். அவன் முகத்தில் நெருக்கமாக உஷ்ண மூச்சு. இருளில், மையில் நனைத்த மற்றொரு முகம். பிரமையோ ?, கைகளை மார்புக்குக்கு நேராய் கொண்டுவந்தான். மனித உடல், பெண்ணுடல். மோகினிப் பிசாசோ ? திடுக்கிட்டு எழுந்தான். கமலம்.

‘நீயா ? ‘

‘உஸ். ‘. அவன் வாயைப் பொத்தினாள். ‘என் பின்னால் வா ‘. சொன்னவள்பின்னே, வேறு வார்த்தையேதுமின்றி நடந்தான். இருவரும் போல்பிரபுவுடைய வில்லாவின் பின்புறம் இருந்த வராண்டாவை அடைந்தார்கள். இடதுபுறத்திலிருந்த மரப்படிகளை உபயோகித்து மேலே வந்தார்கள். தளங்களின் நடக்கின்றபோது மரப்பலகைகள் கிரீச்சிடும் ஓசைக்குப் பயந்து மெல்ல நடந்தார்கள். இருளில், அவள் நடந்து சென்றவிதம், அவ்வீட்டின் கட்டமைப்பினை நன்கு அறிந்தவள் என்பதை உணர்த்தியது. சிறிது நேரத்தில் இடப்புறத்திலிருந்த சிறிய கதவினைத் திறந்து காத்தமுத்துவை உள்ளே வாங்கிக்கொண்டாள். தாழ்ப்பாைளைப் போட்டாள். உள்ளிருந்த மெழுவர்த்தியைக் கொளுத்தினாள். சிறிய அறை, அடைத்துக்கொண்டு தட்டுமுட்டு சாமான்கள்.

மெழுகுவர்த்தியின் மங்கலான ஒளியில் பளபளக்கும் அவளது கன்னங்கள். மார்புகள், விம்முவதும் தணிவதுமாகவிருக்கின்றன. கண்களைப் பார்க்க, உடையார் பெண்ஜாதி, சிறுக்கி மனோரஞ்சிதம் ஞாபகத்திற்கு வருகிறாள். இவனுக்கு அவளது தேவையென்ன என்பது விளங்கிப்போனது. தோளில் ஆர்வத்தோடு கைகளைப் போடுகிறான். அனுமதித்தவள், இருகைகளினாலும் முகத்தினைப் புதைத்துக்கொண்டாள். இதற்கெனவே காத்திருந்ததுபோல மார்பை மறைத்திருந்த சேலை நழுவுகிறது. விறைத்திருந்த முலைக் காம்புகளில் பசியோடிருந்த குழந்தையின்வேகத்தோடு செயல்பட்டான். உடலின் கீழ்ப்பகுதியில் நாபிக்குக் கீழே விரல்களைக் கொண்டுபோய் சுற்றியிருந்த புடவையை அவசர அவசரமாகக் களைந்து, எறிகிறான். அவளது வலதுகை அவனது இடையிலிருந்தத் துண்டினை வேகமாய்க் களைந்து, கீழே பயணிக்கிறது.. அவனுக்குப் பித்தம் உச்சத்திலிருந்தது. ஆவேசத்துடன் வாரி அணைத்துக்கொண்டான். இருவரது கால்களிலும் உதைபட்டதில் பாத்திரங்கள் உருண்டன..

இவர்களிருந்த அறைக்கதவின் பின்புறம், தளத்தின் நடைபாதையில் எவரோ தடதவென்று ஓடிவரும் சத்தம்., தாழ்ப்பாளிட்ட கதவருகே வந்ததும் நின்றது.. சுவசத்தின் தன்மையும், ஓடிவந்த காலடி ஓசைகளின் மென்மையும் அவள் பெண்ணென்று அனுமானம் செய்விக்கிறது. அடுத்த சில நொடிகளில், சற்று அழுத்தமான ஆனால் தடுமாறிக்கொண்டு முன்னேறும் ஓர் ஆணின் காலடிகள்.

காத்தமுத்துவும், கமலாவும் அவசரகதியில் தங்கள் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள். கலக்கமும், குழப்பமும் சேர்ந்துகொள்ளக் காத்திருந்தார்கள். கதவருகே நிற்கும் பெண்ணிடமிருந்து, இந்த முறை விசும்பி அழும் குரல்.

‘துரை.. வேணாம் ஐயா, கையெடுத்து கும்பிடறேன்! …என்னை விட்டுடுங்கய்யா. இந்தச் சித்திரைவதையை என்னாலத் தாங்கமுடியலையா.! .என்னைக் .கொண்ணுப்போட்டுடுங்கோ… ‘

‘அம்மா..! வேணாம்மா.. என்னை அடிக்காதேம்மா. நான் இனிமேல் மரத்திலெல்லாம் ஏறமாட்டேம்மா ‘- கமலா, இந்து தேசத்திலே, தனது குடிசையிலே, கேட்டுப்பழகிய நீலவேணியின் குரல்.

‘நீலவேணி..! ‘ கமலம் வெறிபிடித்தவள் போல கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்தாள். காத்தமுத்துவும் அவள் பின்னே வெளிப்பட்டு நின்றான்.

நீலவேணி – தீவிற்கு வந்த முதல்நாளிலிருந்து தேடிக்கொண்டிருக்கிற கமலாவின் அருமை மகள் நிர்வாணமாக நிற்கிறாள். தொடைகளின் இருபுறமும் இரத்தம் வடிகின்றது. சிதைந்திருக்கும் மார்புகள், உடலெங்கும் சிராய்ப்புகள், இரத்த விளாறுகள். எதிரே பிரான்சிஸ், போல்பிரபுவின் மகன், நிர்வாணத்துடன் அருவருப்பாய் பல்லை இளித்துக்கொண்டு, இவர்களிருவரும் பார்த்துக்கொண்டிருக்க, நீலவேணியின் மீதுபாய்கிறான். அவள் தலை ‘நச் ‘ என்று சுவற்றில் மோத, கீழே விழுந்து மூர்ச்சை ஆகிறாள். அவள்மீது படிந்து, தன்னுடல் அவஸ்தையை வெளிபடுத்தியவனாய், ஒரு மிருகத்தைப்போல இயங்குகிறான்.

கமலம் ஆவேசம் கொண்டவளாய், அவன் மீது பாய்ந்து பிறாண்டினாள். பலம் கொண்டமட்டும் முயன்று அவனை நீலவேணியிடமிருந்து பிரிக்கமுயன்றாள். அவன் இவளுடலைக் குறிவைத்துத் திரும்புகிறான். பட்டினிகிடந்த நடந்த நாய் மாமிசத்தைக் கவ்விப் பிடிப்பதுபோல, இவளது மார்பைக் கவ்வுகிறான். காத்தமுத்து, பின்புறம் தட்டுமுட்டு சாமன்கள் கிடந்த அறைக்குள் நுழைந்தவன், கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு கோடரியோடு வெளிப்பட்டான். பிரான்சிஸ்சுவின் பிடறியில் ஓங்கி அடித்தான். மண்டை உடைந்து மூளை தெறித்துவிழ, இரத்தம் பீச்சியடிக்கிறது. கமலம் இறந்தவனைப் புரட்டிப்போட்டுவிட்டு எழுந்திருக்கமுயற்சிக்கிறாள். காத்தமுத்து அதிர்ச்சியில் உறைந்துபோகிறான்.. கோடறி கைகளிலிருந்து நழுவுகிறது.

திபுதிபுவென மனிதர்கள் ஓடிவரும் சத்தம். மரப்படிகளேறி மேலே வருகின்றார்கள். பண்ணைக்காவலர்கள் சூழ வந்து, மெழுகுவர்த்தீயுடன் போல் பிரபு.

/தொடரும்/

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 30

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்

பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடுங்

கோலொன்று பற்றினாற் கூடாப் பறவைகள்

மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.

(திருமந்திரம்) -திருமூலர்

ஆரவாரமாய்க் கதம்பக் குரல்கள் எழுப்பிய சந்தடியில் பெர்னார்குளோதன் விழித்துக்கொண்டான். கண்மடல்களுக்குள் மணலைவாரி வீசியதுபோன்று ஒரே எரிச்சல். உடலில் களைப்புத் தெரிகிறது. நேற்று பின்னிரவுவரை தமது தேசத்து நண்பர்களோடு, இரவைக் கழித்திருந்தான். இன்னும் சிறிது நேரமாகிலும் நித்திரை கொள்ள வேண்டுமென்று நினைத்தான். கண்கள் மூட மறுத்தன.

‘மிஸியே (ஐயா)!. ‘..

‘உய்.(ம்..). ‘

‘கபே… ‘

கறுத்து மெலிந்திருந்த உடல். பிஞ்சு மார்பை முடிந்த மட்டும் சீலையால் மறைக்க முயற்சித்து, வெண்ணிறத்தில் சிவப்புச் சித்திரங்கள் தீட்டியிருந்த சீனப்பீங்கான் தட்டு. அதற்குப் பொருத்தமாக பீங்கான் குவளை, சிறிய பீங்கான் கிண்ணி – மொக்கா கபே- பாற்குவளை- சீனி, கூடவே கோட்டையிலிருந்து பறங்கியர்களுக்கு வினியோகம் செய்யப்படும் பொன்னிறக் கோதுமை ரொட்டி. பணிவாக, அவற்றை நீட்டிய பெண்ணின் கைகள் மெல்ல நடுங்கின. அவற்றை வாங்கி பக்கத்திலிருந்த மேசையில் வைத்துவிட்டு சப்பாத்தை அணிந்து, கபேக் குவளையைக் கையில் பிடித்துக்கொண்டு, உப்பரிகையின் மேற்குத் திசைக்காய்ச் சென்று எட்டிப்பார்த்தான்.

கோட்டையின், கூடலூர் வாசற் திசையிலிருந்து ஊர்வலம் வருகிறது. இவன் ஜாகை வழியாகத்தான் அவர்கள் போகவேண்டும். இவனுக்குத் தெரிந்த மிஸியே துய்லொரானும் துபாஷ் கனகராய முதலியாரும் அருகருகே சம்பாஷித்துக்கொண்டு முன்னால் போய்க்கொண்டிருக்கிறார்கள். அறுபது பல்லக்குகள், இருபது முப்பது குதிரைகள். சொல்தாக்கள், கொம்பு, தமுக்கு மேளதாளமென்று சகல சம்பிரமத்துடன் போகிறார்கள். திருச்சிராப்பள்ளி அருகில் பாளையம் இறங்கியுள்ள நிசாமிடமிருந்து வெகுமானம் வருவதாக நேற்றுக் கோட்டையில் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது.

ஓர் அரபிக்குதிரையில் வெகுமானம் போய்க்கொண்டிருந்தது. குதிரையில் ஆரோகணித்து துய்ப்ளெக்ஸ் அதிகாலை வெக்கையில், இரத்தம் சுண்டியிருந்தார். முகத்தில் சொல்லவொண்ணா சந்தோஷம். நேற்றைக்கு அவர் இந்த மன நிலையில் இல்லை. நேற்று, சிவப்பு ஒயினைக் குடித்த வேகத்தில், ‘ழான் எல்லாம் உன்னுடைய கருணை, நீ மட்டும் இல்லையென்றால் நானொரு பூஜ்யம் ‘ என மதுபோதையில் பல்லை இளித்துக்கொண்டு தனது மதாமிடம் அவர் பேசியதை நினைவுபடுத்திக்கொண்டான். குவர்னர், ‘எல்லாம் மதாம் ழான் தனது சீமாட்டியாய் வந்த நேரம் ‘, என அடிக்கடி சொல்லிக்கொள்வதன் அர்த்தம் ஊர்வலத்தைப் பார்க்கையில் விளங்குகிறது. ஆற்காட்டுத் துலுக்கர், அப்பாவி மக்களிடம் கொள்ளயடித்தப் பணத்தில் தங்கம், வைரம், முத்து, புஷ்பராகமென தங்கள் தங்கள் பேகம்களை அந்தப்புரத்தில் வரிசையில் நிறுத்தி, அலங்கரித்ததுபோக, மிச்சமிருப்பதை அவ்வப்போது ஆனை, குதிரையில் ஏற்றிக்கொண்டு குவர்னருக்கு வெகுமானம் என்ற பேரிலே தானம் கொடுப்பதும், முதுகு சொறிந்துவிட்டுப் போவதுமாக இருப்பது, துய்மா குவர்னர் உத்தியோகத்தில் இருந்த காலத்திலேயே ஆரம்பிச்ச சடங்கு. பிரெஞ்சுத்தீவு குவர்னர் லாபூர்தொனே, அடிக்கடி சொல்லுவதுபோல வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும் செய்யும் மாயம்.

கடந்த சில நாட்களாக தனக்கு வேண்டியவர்களைச் சந்திக்க முடியாமல் பெர்னார்குளோதன் சோர்ந்திருந்தான். கள்ளிப்பெட்டியிலிருந்த ஓலை நறுக்கினை எடுத்துக் கொண்டு சென்ற துபாஷ், தொண்டைமாநத்தம்வரை போய்வருகிறேன் என்று சென்ற மாறன், இரண்டுபேர் குறித்தும் தகவல்கள் இல்லை. சுகவீனமென்றால் இவனுக்குச் செய்தி வந்திருக்கும். குவர்னரிடமோ, கும்பெனி அதிகாரிகளிடமோ இதுபற்றி பிரஸ்தாபிப்பதில்லை என்கின்ற முடிவுக்கு வந்திருந்தான். தனிமை, தெய்வானை நினைவுகளில் தள்ளிவிடுகின்றது. தேவையற்ற கற்பனைகளை வளர்த்துக்கொண்டு, கிலேசப்படுகின்றது.

நேற்றுக் காலை வெள்ளையர்கள் குடியிருப்புக்கு அருகிலிருந்த பிள்ளையார் கோவிலுக்குச் சென்றிருந்தான். கோவிற் குருக்கள், ‘காண்டாமணியொன்றினை கோவிலுக்கு உபயம் செய்யுங்கள், விக்கினங்கள் நீங்கும், ஷேமமாய் இருப்பீர்கள். ‘ என்று கூறிய வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருக்கின்றன. துபாஷ் பலராம்பிள்ளையிடம் இது விபரம் பேசவேண்டும், அவர்தான் புதுச்சேரி கம்மாளர்களோடு பரிச்சயம் உடையவர் என்பதாகத் தீர்மானம் செய்தான்.

பிறகு காலையில் பத்துமணிக்குமேலே, கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான். ‘லெ பொந்திஷேரி ‘ கப்பலுடைய கப்பித்தேன் (Capitain -Captain) தெலாமரை பார்த்து கணகாலம் ஆகியிருந்தது. முடியுமானால் குவர்னரையும் சந்திக்கவேணும். பிரெஞ்சுத்தீவு குவர்னர் லாபூர்தொனே கொடுத்துவிட்ட கடிதத்திற்கு கோன்சேல் (Conseil -Counsil -ஆலோசனைக்குழு) கூடியெடுத்த முடிவு என்னவென்று தெரிந்து கொள்ளவேணும். கடிதத்தில், கூடுதலாக புதுச்சேரியிலிருந்து கைவினைஞர்கள் வேணுமெனக்கேட்டு லாபூர்தொனே எழுதியிருந்தார். இபோதிருக்கின்ற அரசியற் சூழ்நிலையில், குவர்னர் துய்ப்ளெக்ஸ்க்கு, மஸ்கரேஜ்ன் கும்பெனி அரசாங்கத்தின் உதவி எந்த நேரமும் தேவைப்படும். ஆகவே பிரெஞ்சுத் தீவின் குவர்னருக்கு வேண்டிய மனிதர்களை அனுப்பித்தான் ஆகவேணும் என்கின்ற பலவாறான எண்ணங்களுடனே சென்றான்.

தெலாமருடைய ஜாகையின் வெளியிலிருந்த மணியின் கயிற்றினை இழுத்து அசைத்தான். அதனுடைய நாக்கு இரண்டுமுறை அடித்துவிட்டு ஓய்ந்தது. கதவைத் திறந்தவள் ஒரு இந்தியப்பெண்மணி. அகலமான முகம், திரிந்த பாலின் நிறம், தட்டையான முகம். படியவாரிய தலை. முன்வகிட்டில் அடர்ந்த வண்ணத்தில் குங்குமம். மெல்லிய உதடுகள். காவிக்கறையுடனான வெண்ணிற பருத்திச் சேலை. இடையில் ஒரு பருத்தித்துணியைக் கட்டிருந்தாள். தென்னிந்தியப் பெண்மணியாக இருக்கமுடியாது. குழப்பதுடன் வனங்கினான். அவளும் பதிலுக்கு வணங்கினாள்.

‘தெலாமரை பார்க்கவேணும். ‘

‘வாங்கோ வாங்கோ.. உள்ளே வாங்கோ! நாற்காலியில் உட்காருங்கோ. துவாலத்தில் (Toilet) இருக்கிறார். வந்துவிடுவார். ‘ எதிரிலிருந்த அறைக்குப் போனவள் மீண்டும் வெளிப்பட்டு, ஒரு பெரிய மீனுடன் வலதுபுறமிருந்த குசினிக்குள்(Cuisine- Kitchen -சமையலறை) மறைந்துகொண்டாள்.

பெர்னார் குளோதன், அங்கிருந்த நாற்காலியொன்றைத் தேர்வு செய்து உட்கார்ந்தான். சுவர் முழுக்க கடல் சம்பந்தபட்டப் பொருட்கள் மற்றும் ஓவியங்கள்.

‘கோடைகாலத்திற்கு இந்துக்கள் தேசம் சரிப்படாது. என்னவோ வந்துவிட்டோம். காலையிலிருந்து இரண்டாவது முறையாகத் தொட்டியில் தண்ணீரை நிரப்பி, கிடந்துவிட்டு வருகிறேன். நேற்று கும்பெனியின் குதிரையொன்று காலொடிந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததை, துப்பாக்கியால் சுட்டுப்போட்டார்கள். மாமிசத்தை, விருப்பமான கும்பெனி அதிகாரிகள் பங்குபோட்டுக்கொண்டார்கள். நானொரு பங்கினை எடுத்து வைத்திருந்தேன். இந்திய மசாலாவைத் தடவிச் சாப்பிடலாம் என்று தீர்மானித்திருந்தேன். இவள் வழக்கம்போல, பரதவர் பகுதிக்கு ஆட்களை அனுப்பி மீன் வாங்கிவந்திருக்கிறாள். சரி சரி என்ன குடிக்கிறாய் ? ‘

‘ குடிப்பது இருக்கட்டும். இந்தபெண்மணி யார் ? ‘

‘இவளா.. சந்திரநாகூர். பார்வதிண்ணு பேரு, இறந்த கணவனை எரிச்சபோது, இவளது சொந்தக்காரகள், அவனுடனே இவளும் செத்தாகணும்னு வற்புறுத்தினார்கள். இங்கிலீஷ் கிழக்கிந்திய கும்பெனிக்காரன் ஒருத்தன் ரெத்ரெத் (Retraite -Retirement) நேரத்துல காப்பாற்றிருக்கிறான். இளவயசுல பெண்மணியை என்ன செய்யணும்னு தெரியாம கிளப்புக்கும் விருந்துக்குமா அலைஞ்சிட்டு பிரிட்டனுக்குக் கப்பலேறியபோது, இவளுக்கென இருபது ஆயிரம் பவுணும், ஒரு பங்களாவையும், நான்கைந்து அடிமைகளையும் கொடுத்துப்போட்டுப் போயிருந்தான். சந்திர நாகூருக்குக் போகும்போதெல்லாம் சந்திச்சிருக்கேன். கிழவன் நகக்குறிகளில்லாமல் காதல் பண்ணியிருக்கிறான்னு புரிஞ்சுது. அழைச்சு வந்துபோட்டேன். ‘

பெர்னார்குளோதனை, அவனது பேச்சு எரிச்சலூட்டியது. அதனை விழுங்கிக்கொண்டு வலிய சிரிப்பொன்றினை உதிர்த்தான்.

‘குவர்னரை பார்க்கணும்னு கிளம்பியிருந்தேன். ‘

‘என்ன சேதி ? ‘

‘நீ அறிந்ததுதானே ? அங்கே லாபூர்தொனே தனது கடிதத்திற்கு என்ன நேர்ந்திருக்குமோவெனக் காத்திருக்கிறார். இங்கே கோன்செல் மனிதர்கள் என்ன முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ‘

‘பெர்னார்! ஒன்றை நீ தெளிவாப் புரிந்துகொள்ளவேணும். உன்னுடைய வேலை லாபூர்தொனேவின் கடிதத்தை இவர்களிடம் சேர்ப்பிப்பது. அதற்கு என்னப் பதில் கிடைக்கின்றதோ அதை வாங்கிக்கொண்டு போய்ச்சேரு. நீ மஸ்கரேஞ் கும்பெனிக்கு ஊழியம் செய்கின்றவகையில், ஓரளவிற்கு விசுவாசங்காட்டு. வீணாய் உன்னுடைய பிரச்சினைகளாக நினைத்துக்கொண்டு அக்கறை காட்டாதே. கும்பெனியின் குவர்னர்கள் எல்லோருமே தங்கள் கோந்த்தில் (Compte – account – பேரேட்டில்) எவ்வளவு சேர்ந்திருக்கின்றது என்று பார்த்து, காய் நகர்த்துபவர்கள். அவர்களுக்கிடையில் நீ சிக்கிக்கொள்ளாதே. ‘

‘உண்மைதான்.. ‘

‘தீவிலிருந்து வந்த நாள் முதல் உன்னைச் சந்திக்கவேணுமென்று நினைத்து முடியாமற் போய்விட்டது. பிரெஞ்சுத் தீவு குவர்னருக்கும், துய்ப்ளெக்சுக்கும்

இடையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. போதாக்குறைக்கு, மதாம் துய்ப்ளெக்ஸ் வேறு தூபம் போட்டுக்கொண்டு திரிகிறாள். இவர்களுக்கு நீ ஒற்று வேலைகள் பார்க்க வந்தவனோ என்கின்ற சந்தேகங்கள் உண்டு. அதாவது இங்கிருந்து கொண்டு, துய்ப்ளெக்சின் ஏனைய விவகாரங்களை சேகரித்துக் கொண்டு போகவந்தாயோ என்பதான சமுசயங்கள் உண்டு. எதற்கும் எச்ச்ரிக்கையாக இருக்கவேணும். அநாவசியமாக அவர்கள் விடயங்களில் மூக்கை நுழைக்காதே. ‘

‘வாஸ்தவம். நீ சொல்கின்ற எதையும் அலட்சியப் படுத்திவிட முடியாது. புறப்படுவோமா ? ‘

‘எங்கே ? ‘

‘குவர்னர் அலுவலகத்துக்கு. ‘

‘இந்த நேரத்திலா ? வங்காளி பீவிகள் மீன்சமைப்பதில் தேர்ந்தவர்கள். இன்றைக்குக் குடிக்கவேண்டிய சாராயப் போத்தல் வேறு திறக்கப்படாமலிருக்கின்றது. ‘

‘எழுந்திரு, குவர்னர் மாளிகையில் உனக்கு வேண்டியது கிடைக்கும். ‘

‘முன்றாவதாக ஒன்று இருக்கின்றது. அதனைக் குவர்னரிடம் கேட்கமுடியாது. ‘

‘எது ? ‘

‘இந்திய பீவியை, பகல்நேர ஆலிங்கனம் செய்வதற்கான அனுமதி. ‘

‘எழுந்திரு! எதையாவது உளறிக்கொண்டிறாதே. ஆடையை மாற்றிக்கொண்டு கிளம்பிவா. ‘

அடுத்து அரைமணி தியானத்தில், இருவரும் குவர்னர் கபினெ(Cabinet)க்குள் இருந்தார்கள். அருகில் துபாஷ் கனகராய முதலியாரும், ஆனந்தரங்கப் பிள்ளையும் நின்றுகொண்டிருக்க மிஸியே துய்லொரான் எதிரே அமர்ந்திருந்தார்.

பெர்னார் குளோதனும், கப்பித்தேன் தெலாமரும் உள்ளே நுழைந்ததும், கும்பெனி தொப்பாஸ் (Topas)* ஒருவன், இரு நாற்காலிகளைப் போட்டுவிட்டு அகன்றான்.

கப்பித்தேன் தெலாமர் முகக்குறையை விளங்கிக் கொண்டவர்போல, ஆனந்தரங்கப்பிள்ளை வாய் திறந்தார்.

‘என்னவெல்லாமோ நடக்குது. அவ்ரில் (Avril -April) மாசத்துல நெப்த்யூன் (Neptune) கப்பல் மாஹே(Mahe)யிலிருந்து மொக்கா போறச்சே, கள்ள கப்பல்காரர்கள்(கடற்கொள்ளைகாரர்கள்) தாக்கினதையும், அந்த வழியாக வந்த போர்ச்சுகீசியர்கள் அவர்களிடமிருந்து கப்பலை மீட்டு மங்களூருக்கு கொண்டுபோனதையும் கும்பெனிக்கு எழுதியிருந்தார்கள். இப்போது அந்தக் கப்பலில், புதுச்சேரியிலிருந்து பிரெஞ்சுத் தீவுக்குக் கும்பெனிக்குத் தெரியாமல் கடத்தப்படுகின்ற மனிதர்களும் இருப்பதாகக் காகிதம் வந்தது. ‘

‘கூடிய சீக்கிரம் அந்தக் கூட்டத்தைப் பிடித்து கெவுனிக்கு வெளியே தூக்கில் போடுவோம். தூபாஷ் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். குடியானவர்களையும் மற்றவர்களையும் எச்சரிக்கைபண்ணி கறுப்பர் குடியிருப்புப் பகுதிகளில் தண்டோரா போட ஏற்பாடு செய்யுங்கள் ‘

சாராயங் குடித்து சிவந்திருந்த குவர்னரின் கண்கள் மேலும் சிவப்பாயின. அப்போது இந்திய சிப்பாய் ஒருவன் சலாம் அடித்து நின்றான்.

துபாஷ் கனகராயமுதலியார், அவனிடம், ‘கோபால நாராயணய்யர் கிடைத்தாரா ? ‘ என்றார்.

‘மரிகிஷ்ணாபுரத்திலே தந்தையும் மகனும் பதுங்கியிருந்தார்கள். கிராணஸ்நானம் பண்ன வெளியே வந்தவர்களை மடக்கி பிடித்தோம். மல்லுகட்டின சிரேஷ்டபுத்திரனைக் காயபடுத்திப்போட்டோம். தகப்பன் கோபால நாராயணய்யரைப் பிடித்துக் கட்டிக்கொண்டு வந்தோம். ‘ -சிப்பாய்

‘அவரைக் கொண்டுபோய் முத்தையாப்பிள்ளை வளவில் காவல் பண்ணி வைத்திருங்கள் ‘ என்பதாகக் குவர்னர் ஆணை பிறப்பித்துவிட்டு, எதிரே நின்ற கவனான்களைப் பார்த்தார்.

அவர்கள் இதற்குச் சம்மதம் என்பதுபோல தலையை ஆட்டுவித்தார்கள். பெர்னார் குளோதனுக்கும், தெலாமருக்கும் விளக்கம் அளிப்பதுபோல குவர்னர் தொடர்ந்து பேசினார்.

‘இந்த கோபால நாராயணய்யன் என்பவன் சுங்கு ஷேசாசல செட்டிக்குக் கடன் கொடுக்கவேண்டும். பலதாவாக்கள் கூறிவிட்டு களவாய்வாழ ஓடித்திரிகிறான் என்பதாக இவ்விடம் பிராது வந்தது. ரங்கப்பன் யோசனையின்பேரில் மாஹே துலுக்கர் மூலம் தந்தையையும் மகனையும் பிடித்துவர ஏற்பாடு செய்தோம். ‘

மீண்டும் அங்கே அமைதி நிலவியது. ஆனந்தரங்கப் பிள்ளையும், கனகராயரும் ஒருவர்பின் ஒருவராகப் புறப்பட்டுச் சென்றார்கள். பிரெஞ்சுத் தீவு குவர்னரின் கடிதத்திற்குக் கோன்சேல் கூடி என்ன முடிவெடுத்தது என்று கேட்க நினைத்து, இருந்த நிலவரத்தைக் கருதி இப்போது வேண்டாமென பெர்னார்குளோதன் முடிவுக்கு வந்தான்.

குவர்னர் துப்ளெக்ஸ், மிசியே துய்லொரான், கப்பித்தேன் தெலாமர், பெர்னார் குளோதன் நால்வரும் குவர்னர் கபினேக்கு அருகிலிருந்த தீனி மேசைக்குத் திரும்பினார்கள். அங்கே சீமைச்சாராயமும், மதுக் குப்பிகளும், துணைக்கு பிரான்சிலிருந்து தருவிக்கப்பட்ட .சொஸ்ஸிஸோன் செக் (பன்றி இறைச்சி வத்தல்), குவர்னர் மாளிகை குசினியர் தயாரித்த பெத்திஃபூர், கனப்பே (Petit Fours, Canapes -இறைச்சி, மீன் துண்டு அலங்கரித்த சிறிய ரொட்டிகள்) ஆகியவை இருந்தன. வயிறுமுட்டக் குடித்தார்கள் உரையாடிமுடித்தபோது கப்புசென் தேவாலய மணி பன்னிரண்டுமுறை அடித்து ஓய்ந்தது.

‘மிஸியே… ‘

திடுக்கிட்டவனாய் பெர்னார் குளோதன் நேற்றைய நினைவுகளிருந்து மீண்டிருந்தான். எதிரே பணிப்பெண்.

‘நீங்கள் இன்னும் ‘பெத்தி தெழனே ‘ (Petit dejeuner -காலை உணவு)வை முடிக்கவில்லை போலிருக்கிறது. ‘

‘ஆமாம். எனக்குப் பசியில்லை. உனக்கு ஏதேனும் வேலையிருந்தால் புறப்பட்டுப் போயேன். இன்றைக்கு சமையல் எதுவும் செய்யாதே. நான் தனியே இருக்கவேணும். ‘

அவனது வார்த்தைகளில் இருந்த கடுமையைப் புரிந்துகொண்டு அவள் அவ்விடமிருந்து அகன்றாள்.

உடம்பு அனலாய்க் கொதித்தது. நேற்று தெலாமர் குறிப்பிட்டதுபோல தொட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு அமிழ்ந்துக் கிடக்கலாமென நினைத்தான். திரும்பினான். எங்கிருந்தோ கல்லொன்று, திடுமென்று இவனுக்கருகில் தளத்தில் விழுந்தது. ஆச்சரியாகவிருந்தது. எங்கிருந்துவந்து விழுந்திருக்கவேனும் என யோசித்தவனாய், நான்கு திசைகளிலும் எட்டிப் பார்த்தான். மேற்குப் புறத்திலிருந்த சாலை, ஊர்வலம் முடிந்து வெறிச்சோடிக் கிடந்தது. மற்ற திசைகளில் மரங்கள் செடி கொடிகள், ஆள் அரவமேதுமில்லை.

உள்ளே நுழைந்து கீழறங்கித் தென்புறமிருந்த தண்ணீர்த் தொட்டியை நிரப்பினான். .நீரைத் தொட்டுப்பார்த்தான், உடலுக்கு இதமாக தண்ணென்று இருந்தது. வெளியிற் சென்று கதவை அடைத்துவிட்டு உள்ளே நுழைந்து ஆடைகளைக் களைந்தான். நிர்வாணமாக நின்றான்.

திடாரென்று சித்திரை வெயிலுக்குச் சம்பந்தமில்லாத உடலை நடுங்கவைக்கின்ற வகையிற் குளிர்ந்தகாற்று வீசியது.

முக்காலி ஒன்றைத் தொட்டியின் அருகேயிட்டு, தொட்டியினுள் முதலில் வலதுகாலையும் அடுத்து இடதுகாலையும் ஒவ்வொன்றாக இறக்கித் தண்ணீரில் மெல்லப் பின்புறம் சரிந்தான். அடுத்தக் கணம் அலறி அடித்துகொண்டு எழுந்தோடிவந்தான். உடல் ரத்தச் சிவப்பாக மாறி இருந்தது. சற்று முன்புவரை குளிர்ந்திருந்த தண்ணீர் சளசளவென்று தொட்டியில் கொதித்துக்கொண்டிருக்கிறது.

அவசரமாய், தேங்காய்ப்பூத் துவாலையை உடலிற் சுற்றினான். இவனது கையில் உஷ்ணம் பரவ கையை உதறினான். துண்டின் முனை எரிந்து கொண்டிருக்கிறது. துண்டை உதறித் தண்ணீரில் எறிந்துவிட்டு மனதைத் திடப்படுத்திக்கொண்டு ஆடையேதும் அணியாமலேயே அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். இவன் பார்வைக்காகவே காத்திருந்ததுபோல மேசைமீதிருந்த கள்ளிப் பெட்டி மெல்ல எழுந்து, இவனது தலைக்குமேலே, மெல்ல மெல்ல அசைந்துகொண்டு, நீட்டுகின்ற இவனது கைகளுக்குப் பிடிபடாமல் காற்றில் மிதக்கிறது.

ஆவேசத்துடன் எட்டிப் பிடிக்கிறான். கைக்குக் கிடைத்ததை மார்பில் அணைத்துக் கொள்கிறான். இதற்கெனவே காத்திருந்ததுபோல, இவனது பீஜங்களை ஒருகை பலங்கொண்டு நசித்தது. வலி பொறுக்கமாட்டாமல், முகதெரியாத எதிரியை எட்டி உதைத்தான். உதறிக்கொண்டு எழுந்தான்.

ஹஹ்ஹஹ்ஹாவென்று ஓர் அமானுஷ்ய ஆண்குரல். அக்குரல் தேய்ந்து, சில நாழிகைகளில் மணியோசைபோல அடங்கிப்போகிறது. மறுபடியும், அக்குரலே தேம்பித் தேம்பி அழுகிறது – திடாரென்று நிசப்தம்.

‘பார்த்திபேந்திரா வேணாண்டா. என்னைச் சங்கடபடுத்துவதில் உன்னக்கென்னடா சந்தோஷம். சொன்னால் கேழ்க்கவேணும். எனக்கும் தேவயானிக்கும் நடந்த திருமணம் தேவாலயத்தின் சட்டத் திட்டங்களுக்கமைய வார்த்தைப்பாடு கூறி, மோதிரம் மாற்றி, வேதபுத்தகம் சாட்சியாக நடந்ததல்ல. குருகுலவாசம் முடித்து, என் குரு கச்சியப்பர் அனுமதி பெற்று, பெரியோர்களால் நிச்சயிக்கபட்டு, சங்கற்பம், புண்யாகம், பஞ்சகவ்வியம், ரட்ஷாபந்தனம், அங்குரார்ப்பணம், கும்பபூஜை அக்கினிகாரியம், மூர்த்தி பூஜை, தானம் முதலியன முறையுடன் கண்ட திருமணம். முப்பத்துமுக்கோடி தேவர்கள் வாழ்த்த தேவயானியைக் கைப்பிடிச்சிருக்கேன். சண்டாளா, அவளை மீண்டும் என்னிடமிருந்து அபகரிச்சிடாதேடா. ‘

‘ நீ..யார் ? ‘

‘நான் ஆர் என்பது முக்கியமல்ல. இனியாகிலும் நீ புத்தியோடு நடந்துகொள்ளவேணும். நடப்பாயா ? ‘

ஜன்னல்கள் தாமாகவே திறந்து மூடுகின்றன. திரைத்துணிகள் காற்றில் படபடக்கின்றன.

/தொடரும்/

*ஐரோப்பியரைபோல நடை உடைகளில் இருக்கும் இந்திய கத்தோலிக்கர்

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘….ELLE ETAT FORT DESHABILLEE

ET DE GRANDS ARBRES INDISCRETS

AUX VITRES JETAIENT LEUR FEUILLEE

MALINEMENT, TOUT PRES, TOUT PRES. ‘

– Arthur Rimbaud

காற்றுச் சுழன்றுசுழன்று அடித்துக் கொண்டிருந்தது. மரங்கள் உக்கிரம்வந்து ஆடிக்கொண்டிருந்தன. மூங்கிற்புதர்களில் மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து எழுப்புவது ஓசையல்ல, பிடாரிகளின் ஓலம். தொலைதூரத்தில் கீழ்வானத்தில் வெட்டும் மின்னற்கீற்றுகள். அவற்றின் ஒளியில் சரசரவென ஓடி மறையும் பாம்புகள். மலைகளிரண்டு ஒன்றோடொன்று மோதித்தெறிக்கும் வகையில், மின்னலைத் தொடர்ந்த இஇடியோசை. இடிக்குப் பலியாகி மளமளவென்று எங்கோ முறியும் கிளைகள், சாயும் மரங்கள். தப்பிப் பிழைத்து ஓடுகின்ற நரிகள், அவற்றின் ஊளைகள். அக்காட்சியைப் பார்த்து மிரளும் ஆந்தைகள், அவற்றின் அலறல்கள்.

சில்வியின் உடல் வெடவெடத்தது. இதுபோன்ற இரவுகள் அவளுக்குப் புதியதல்ல. காட்டுப் பன்றிகளையும், முயல்களையும், தப்பிக் கரையொதுங்கும் கடலாமைகளையும், சில சமயங்களில் இவளது விருப்பத்திற்குமாறாக, கொளுத்திய பந்தங்களை நோக்கிப் பாயும் பெருமீன்களை வெட்டிப் பிடிப்பதற்கும், போர்த்துகீசியர்கள் காலத்திலேயே முற்றிலுமாக வேட்டையாடப் பட்டு அழிந்துபோன தொதோ(Dodo) பறவைகள் இரவுநேரத்தில் வலம்வருவதாக உலவும் கதைகளை நம்பிக்கொண்டு அவற்றைத்தேடி அலையவும் சில்வியாவின் தந்தை ‘குரூபா ‘; இதுபோன்ற இரவுகளையே தேர்ந்தெடுப்பான். இவளது சகோதரன் லூதர், எப்போதும் கபானில் தங்குவதில்லை. கறுப்புநதியை ஒட்டியக் கரும்புப் பண்ணையில் சிலகாலம் அடிமையாகவிருந்தவன், பண்ணை முதலாளி ‘லொரான்ஸ் அர்த்துய்ர் ‘ ஐத் தாக்கிவிட்டுக் காட்டில் புகுந்துகொண்டான். எப்போதும் குடித்துக் கொண்டிருப்பான். எனவே சில்விக்குக் காடுகளில் இரவு நேரங்களில் தந்தையுடன் அலைவதென்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது; ஆனால் இன்றைய இரவு அப்படிப்பட்டதல்ல.

வித்தியாசமான இரவு. கைலாசத்தோடு அநேக பகற்பொழுதுகளில் அருகருகே உட்கார்ந்து, கொட்டுகின்ற அருவிகளின் சாரலில், சூரிய ஒளியை மறுத்துநிற்கும் அடர்ந்த மரங்களின் நிழலில் இனிக்க இனிக்கப் பேசியிருக்கிறாள். அவன் பேசுகின்ற அழகை, அரை மயக்கத்தோடு அவதானித்திருக்கின்றாள். அப்போதெல்லாம் தோன்றாத, உடலிற் பரவாத, நெஞ்சில் ஊறாத தாபம் இன்றைக்கு, இந்த இரவில், இந்தக் கணத்தில் அவனது அண்மையில் ஏற்பட்டிருக்கிறது. இருட்டின் கோர விளையாட்டினால் ஏற்பட்ட அவளது அச்சத்தைத் தணிக்கும் வகையில் கைலாசம், அவனது ஆண்மை. அருகில் சில்வியா இவளது பெண்மை. இடிக்கும் மின்னலுக்குப் பதிலளிக்கும்வகையில் இருவரும் அணைத்தவாறிருந்தனர். அறிவும், உணர்ச்சியும் மல்யுத்தம் நடத்தின. சில நேரங்களில் உணர்ச்சி மிகச் சுலபமாய் வென்றுவிடும்.. இங்கேயும் அதுதான் நடந்ததது. யாார் முதலில் அணைத்தது என்ற கேள்விக்கு இடமில்லை. இருட்டும் தனிமையும் இருவரையும் ஒருவராக்கியிருந்தது, உமையொருபாகனாய் வடிவெடுத்திருந்தனர். மோகத்தின் வசப்பட்டுப் பளபளத்த அவளது கறுத்த உடல், இவனது இந்திரியங்களை இயக்கவாரம்பித்திருந்து சில நொடிகள் கழிந்திருந்தன. இருவரது கைகளும் கால்களும், அவைகளின் எதிர்த் திசைகளில், இன்ப மூலங்களைத் தேடியலைந்தன. தழுவலில் இவளது கறுத்த பெரிய முலைகள் அவனது பரந்த மார்பில் இறங்க முயற்சித்து முகம் தாழ்ந்தன. அவனது எச்சிலூறிய அதரங்களில் இவளது பெரிய அதரங்கள் பற்களோடு பதிந்திருக்க, இருவருமே இமைகள்மூடி மயக்கத்திலிருந்தனர். நட்சத்திர ஒளியில், கைலாசத்தின் நீண்ட கரங்களின் முரட்டுத்தனமான இறுக்கத்தினை இவளது உடலிற் தாபத்துடனும், மனத்தில் ஏக்கமுமாக சுகத்தின் பிரவாகத்தில் மூழ்கி அனுமதிக்கிறாள். அவளது ஆடையை அவன் விரல்கள் மெல்லக் களைய முயற்சித்தபோது மயக்கத்திலிருந்த பெண்மை விழித்துக் கொண்டது.

‘கைலாசம் வேண்டாம். உங்கள் ஊர்ப் பெண்கைளைப் பற்றியும், கற்புக்குக் கொடுக்கும் மரியாதைப்பற்றியும் தெய்வானை நிறைய சொல்லியிருக்கிறாள்.. உன் அம்மாவின் எதிர்பார்ப்பிற்குரிய பெண்ணாக நான் நடந்துகொள்ளவேணும்… ‘

‘உள்ளது.. மெல்ல வார்த்தையாடு. நீ சொல்வது நிஜமானப் பேச்சு. வந்த காரியம் மறந்தாகிவிட்டது. என்மனசு சஞ்சலமுற்றுவிட்டது. என்னை மன்னிக்கவேணும் சில்வி ‘ இருவரும் விலகிக்கொண்டார்கள்.

‘போகட்டும்.. உன்னை நிந்திப்பதற்கில்லை. இந்தபடிக்காய் நடந்து கொண்டதற்கு இருவருமே பொறுப்பு. வார்த்தையாடலுக்கு நேரமில்லை சற்றுநேரத்திற்கு முன்னாலே, இருவர் நம்மைப் பின் தொடர்வதாகத் தோன்றியதே அது உண்மையா ? இல்லைப் பிரமையா ? ‘

‘ இதுவரை பிரமையில்லை என்றே நினைக்கிறேன். என் உள்மனது அதனை மறுக்கிறது. இன்னும் சற்று நேரம் பொறுத்திருந்து ஆர் என்று

பார்ப்போம். ‘

ஒரு பெரிய மின்னலொன்று அடிவானில் தோன்றிக் கீழ் நோக்கி இறங்கியது.

‘கைலாசம் என்னால் எதையும் பார்க்க இயலவில்லை. அனைத்துமே இருட்டாக இருக்கின்றது. என் கண்பார்வை போய்விட்டதா ? ‘

‘பைத்தியக்காரி..! எதையாவது உளறாதே! மின்னலைப்பார்த்ததால் வந்த கோளாறு. ஏற்கனவே இருட்டைத் தவிர இங்கே வேறென்ன தெரிகிறது. மறுபடியும் விழிகளிரண்டையும் சிறிதுநேரம் மூடி மீண்டும் திற, எல்லாம் பிரவேசமாகும் ‘

அவன் கட்டளைக்குப் பணிந்து, சில்வி அவ்வாறே செய்தாள்.

‘ ரொம்ப சரி. நான் என்னவோ ஏதோவென்று பயந்துவிட்டேன். அதோ….! ஒன்றையொன்று பின்னியிருக்கும் தென்னைகளை இங்கிருந்து பார்க்க முடிகின்றது. துர்க்கைக்கல், இங்கிருந்து பார்ப்பதற்கு இருட்டை விலக்கிக்கொண்டு எழுந்து நிற்பது தெரிகிறது. வா பக்கத்திற் போகலாம். ‘ அவனது கையினைப் பற்றிக் கொண்டு எழுந்து நின்றாள்.

இருவரும் எழுந்து நிற்பதற்குக் காத்திருந்ததுபோல, அவர்கள் நின்ற இடத்துக்கு நேரெதிரே இருவர் வந்து நின்றனர். அவர்களின் கறுத்த உருவமும் தலையொட்டிச் சுருண்டிருந்த கேசமும் அவர்கள் ஆப்ரிக்கர்கள் என்பதனை வலியுறுத்தின. முதலாவதாக நின்றிருந்தவனின் குரலைக் கேட்டதும் சில்விக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர வந்தன. அவளது சகோதரன் லூதர் அவன். இரண்டாவது மனிதனை யாரென்று அவளுக்குத் தெரியாது. அந்தக் குரல் ஏற்கனவே அவளுக்குப் பரிச்சயமானது. லூதர் இரவு நேரங்களில் தங்களுடைய கபானுக்கு நேரம் கழித்து வரும்போதெல்லாம் அவனைத் துரத்திவந்து வெளியில் நின்றவாறே அவனை அழைக்கும் குரல். அந்த நேரத்திலெல்லாம் சில்வியின் தந்தை குருபா ஆவேசமுற்றிருக்கிறார். அவனது சகவாசம் வேண்டாமென எச்சரித்திருக்கிறார். அவன் மதிப்பதில்லை. குடிபோதையிற் கண்டதை உளறிவிட்டு அந்தக் குரலுக்குரியவனோடு ஓடி இருட்டில் மறைந்து விடுவான். இருவரும் இப்படித் தங்களைத் துரத்திக்கொண்டு வருவார்களெனச் சில்வி எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை, வேறு காரனத்தை முன்னிட்டு இங்கே வந்திருப்பார்களா என்ற ஐயமும் அவளிடம் எழாமலில்லை.

புதிய மனிதர்கள் இருவரும் ஆப்ரிக்க மொழிகலந்த பிரஞ்சில் பேசினர். கைலாசத்துக்குச் சரியாக விளங்கவில்லையெனினும், சில்விக்கு விளங்கியது. அவர்கள் பேசுவது கிறேயொல் மொழி. அவர்கள் வீட்டில் பேசுகின்ற மொழி. அவர்கள் பேசப்பேச இவள் மொழிபெயர்த்தாள்.

லூதர்தான் முதலாவதாகப் பேசினான்.

‘இப்போது மிஸியேவுக்கு (ஐயாவுக்கு) என்ன பதில் தெரிவிப்பது. ஒவ்வொரு நாளும் அவர்கைளைப் பின் தொடர்ந்து, இன்றைக்கு முக்கியமான தருணத்தில் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும்படி ஆகி விட்டதே! ‘

‘ என்னைக் குற்றம் சொல்லாதே! எதனையும் உருப்படியாகச் செய்யாதவன் நீ.. நேற்றும் அப்படித்தான் அந்த அம்மாவிடம் கொஞ்சம் மிரட்டி உண்மையை வரவழைத்திருக்கலாம். இப்போது இது மாதரியானதொரு இருட்டில் அவர்கைளைப் பின் தொடர்ந்து சங்கடப்பட வேண்டியதில்லை. அதனை விடுத்து எதையெதையோ உருட்டி அங்கே தேடவாரம்பிக்க, அந்த அம்மா கபானுக்குள் நுழைந்துவிட்டது. ‘

‘ நீ மட்டுமென்ன ? யோக்கியமா ? அந்த அம்மாவை இப்படித் தாக்கியிருக்கவேண்டாம். முதலுக்கே மோசம் வந்திருக்கும். அந்த அம்மா மட்டுமே உண்மையான ரகசியங்கைளை அறிந்தவர். அவர்களுக்கேதேனும் நடந்திருந்தால் மிஸியே நம்மைக் கொன்றே போட்டிருப்பார். ‘

‘ சரி.. சரி இருவரும் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் பொழுது விடிந்துவிடும். பயல் கைலாசமும், சில்வியும் எங்கே போய்த் தொலைந்தார்கள். அவர்களிருவரும் நாம் தேடுவதைத்தான் தேடிவந்திருக்கிறார்கள். அதிக தூரங்கூடப் போயிருக்க வாய்ப்பு இல்லை. என்ன செய்யலாம் ‘

‘அதுதான் ஆச்சரியமாகவுள்ளது. எப்படி இருவரும் மாயமாய் மறைந்தார்கள் ? அந்தப் பயல் கைலாசத்துக்குக்கு ஏதேனும் மாய வித்தைகள் தெரியுமோ ? ‘

‘இருக்கலாம். இந்தியர்கள் மாயவித்தைகள் அறிந்தவர்கள். நம்முடைய ஆப்ரிக்க இனத்தைப் போன்றே அவர்களுக்கும் வசியம், பில்லி சூனியம், மாரணம் (மந்திரத்தாற் கொல்லுதல்), வூடு (Voodoo), பலிகள் போன்றவற்றில் கை தேர்ந்தவர்கள். நம்முடைய எஜமானரும் மாயவித்தைகள் தெரிந்தவர் என்பதை என் இஇரண்டு கண்களால் பார்த்திருக்கிறேன் ‘

‘அப்படியா! எனக்கும் நம்முடைய மிஸியேவை பார்க்கவேண்டுமென்கின்ற வெகு நாட்களாக ஆசை. எப்போது அழைத்துப் போவாய் ? ‘

‘ அதற்குக் காலம்வரும். அழைத்துப் போகிறேன். இப்போது வேண்டாம். ஐயாவும் அதனை இப்போதைய சூழலில் விரும்பமாட்டார். சரி சரி இங்கே வெட்டியாய்ப் பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டு மீண்டும், போர் லூயிக்குத் திரும்புவோம். காமாட்சி அம்மாளுடைய கபானுக்குச் சென்று காத்திருப்போம்.. எப்படியும் உனது தங்கையும், கைலாசமும் திரும்பியாகவேண்டும். என்ன நடக்கின்றது ? பார்ப்போம் ‘.

அவ்விருவரும் வடக்குத் திசைநோக்கி எட்டி நடந்து மீண்டும் காட்டுக்குள் புகுந்தனர்.

அவர்கள் போகவும் மேகத்தைக் கலைத்துக்கொண்டு நிலா வெளிப்பட்டது. காற்று முற்றிலுமாக அடங்கியிருந்தது. வானம் தூறல் வானமாக மாறியிருந்தது. இஇந்துமகா சமுத்திரத்தின் இரைச்சலும், ஆப்பிரிக்கமக்கள்வசிக்கும் பகுதியிலிருந்து பாட்டும் ஆட்டமும் கேட்டது. றபாணம், மற்றும் போபரை* வேகமாக அடித்துக்கொண்டு அதனிசைக்கேற்ப ஆடிக்கொண்டிருந்தனர். பறங்கியரின் கரும்புப் பண்ணைகளில் வேலைசெய்பவர்கள் தங்கள் உடல் வலியை மறக்க இரவு நேரங்களில் இம்மாதிரி குடித்தும் பாடியாடி மகிழ்வது வழக்கம்.

கைலாசத்திற்கும், சில்விக்கும் மனதிற் தைரியம் ஏற்பட்டது.. கைலாசம் மெல்லச் சில்வியின் தோளைப்பற்றி அழைத்தான்.

‘வா.. இனிப் பயமில்லை. துர்க்கைப் பீடம் அருகிற்தானுள்ளது. அம்மா குறிப்பிட்ட இடம், துர்க்கைப் பீடத்திற்கருகில் , சற்றுமுன்னர் நீ சுட்டிக்காட்டிய இரண்டுதென்னைகள் பின்னியுள்ள இடம்…. ‘

அவன் முன்னே செல்ல, அவனையொட்டியே சில்வியும் சென்றாள்.

மெள்ள இருவரும் துர்க்கைப் பீடத்தருகே நெருங்கி நின்றார்கள், பிணைந்துள்ள இரு தென்னைகளையொட்டிப் பார்வையைக் கொண்டுபோனார்கள். பெரிய பள்ளமொன்று வெட்டப்பட்டிருந்தது. பள்ளம்முழுக்க மழைநீர். பலநாட்களுக்கு முன்னதாகவே கள்ளிப்பெட்டி வேறொருவர் கைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பது தெளிவாயிற்று.. சில்விக்கு ஏமாற்றாமாகவிருந்தது. கைலாசம் முகத்தில் எந்த வெளிப்பாடுமில்லை.

‘கைலாசம்.. உங்கள் அம்மாவிற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள். இந்தப் படுபாவிகளும் எதற்காக நம்மைப் பின்தொடர்ந்துவந்தார்கள் எனத் தெரியவில்லையே ? என் தந்தை சொன்னது சரியாகிவிட்டது. என் சகோதரன் ஏதோ தகாதசெயலில் ஈடுபட்டிருக்கின்றான் என்பது நிச்சயம். தவிர உங்கள் அன்னைக்கு எதிராகவென்றால், என் தந்தையின் கோபம் அவன்மீது மேலும்கூடுமே தவிர, ஒருக்காலும் குறையாது. எனது மனதிற்குக்கூட சங்கடமாகவுள்ளது. உங்கள் அன்னைக்குத் தெரியவந்தால் எங்கள் குடும்பத்தைப் பற்றிய அவரது அபிப்ராயம் சிதைந்துவிடுமோ ? நம்மிரு குடும்பங்களுக்கிடையில் பகைவந்து சேருமோவென்று, மிகவும் அச்சமாகவுள்ளது. ‘

‘ என் அன்னையின் குணவிசேடங்களை அறிந்துமா இப்படியான முடிவுக்குவந்தாய். உன் மீதும், உன் குடும்பத்தார் மீதும் என் அன்னைக்கு அளவுகடந்த பிரியமும் உள்ளது. அந்தப் பிரியத்திற்கும், நம்பிக்கைக்கும் பங்கமெதுவும் ஏற்பட்டுவிடாது. வீணாக அஞ்சவேண்டாம். வா சீக்கிரம் கபானுக்குத் திரும்புவோம். அன்னையும், என் தங்கை தெய்வானையும் நமக்காகக் காத்திருப்பார்கள். ‘ சில்வியை அழைத்துக் கொண்டு மேற்குத்திசையை நோக்கி நடந்தான்.

கைலாசமும் சில்வியும் கபானை அடைந்தபோது விளக்கேற்றிவைத்துக்கொண்டு பின்னிரவிலும் தூங்காமல், காமாட்சி அம்மாளும் தெய்வானையும் .இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

காமாட்சி அம்மாவின் பார்வை கைலாசத்தின் கைகளில் விழுந்தது..

‘என்ன நேர்ந்தது மகனே ? பெட்டியைக் கொண்டுவரவில்லையா ? ‘

‘ அம்மா.. உள்ளே சென்று பேசுவோமே. இந்த அகாலநேரத்தில் இப்படி வெளியே நின்று நாம் வார்த்தையாடுவது நல்லதல்ல. ‘

நால்வரும் உள்ளே நுழைந்து மணையிட்டு அமர்ந்தார்கள்.

‘ அம்மா யாரோ நமக்கு முன்னதாக அப்பெட்டியைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ‘

‘ என்ன சொல்கின்றாய். இங்கேயும் நமக்கு எதிரிகளா ? ஈஸ்வரா! கடவுளே என்ன சோதனையிது. ? இனி யாரிடம் முறையிடுவேன் ? ‘

‘அம்மா. கஸ்தியேதும்வேண்டாம். எல்லாம் நல்லதுக்கே என்று நினை. எந்த ஆபத்தும் நம்மை அண்டாது ‘

‘ எனக்கு ஆபத்தென்றால் வருத்தப்பட என்ன இருக்கிறது. என் கண்மணிகள் உங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது ‘

‘அம்மா.. இப்படித் தொடர்ந்து எங்களுக்குத் தெரியாமல் ஏதோ ரகசியத்தினை மறைத்துவைத்து எவ்வளவு நாைளைக்குத் துன்புறப் போகிறாய் ? எங்களிடம் உண்மையைச் சொன்னாலென்ன ? நானும் தெய்வானையும் சின்னைப் பிள்ளைகளா ? எதனையும் சந்திக்கின்ற உடல் வலிமையும் மனவலிமையும் எங்களுக்கு உள்ளது என்பதை நீ உணரமறுக்கிறாய். ‘

‘ உண்மை மகனே. உங்களிடம் ஆரமம்பத்திலேயே சொல்லியிருக்கலாம். ஆனால் உன் தந்தை அதற்கான காலம் வரும் அப்போது சொல் என்றார். நம் குடும்பத்து ரகசியத்தை அறிந்த இன்னொரு நபர் நம்மோடு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டுத் தீவுக்கு வந்தவர் இங்கிருக்கிறார். அவரது ஒப்புதலில்லாமல் அந்த ரகசியத்தை சொல்லிவிடக்கூடாது. அவர் வரட்டும். அவரது அனுமதி பெற்று அனைத்தையும் ஆதியோடந்தமாகச் சொல்கிறேன். அதுவரை நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். குறிப்பாகத் தெய்வானையின் மீதொரு கண் வைத்திரு. குழந்தாய் சில்வி உன்னுடைய தயவும் எங்களுக்கு நிறைய வேண்டும் ‘ என்ற காமாட்சி அம்மாளின் கைகளைப்பற்றி சில்வி கண்களில் ஒத்திக் கொண்டாள்.

திடாரென வெளியே கூச்சல் கேட்டது. இரண்டொரு கறுப்பர்கள் முன்னே ஓட அவர்களைத் துரத்திக் கொண்டு குதிரைகள். ‘ ‘ போல் ‘ கரும்புப் பண்ணையிற் குழப்பமாம். அங்கிருந்த கறுப்பு அடிமைகளிற் சிலரை வெட்டிப்போட்டுவிட்டு மற்ற அடிமைகள் தப்பித்திருக்கின்றார்கள் ‘, என்ற செய்தி பரவியது. நாளை நடக்கவிருப்தை நினைத்து போர் லூயி (Port Louis) கறுப்பின மக்களுக்கு மட்டுமல்ல இந்தியமக்களுக்கும் தூக்கம் போயிற்று.

/தொடரும்/

*the bobre, the ravane, the maravane and the triangle. New ingenuous instruments never heard before. The bobre is a long wooden bow kept arched over a large gourd-like, rough skinned, hollow fruit (the calebasse) by a vegetal string, this being hit by a stout wooden rod. Its mournful twang has however, sadly, been lost over the years and it is no longer part of a sega music team. The ravane is a hide, pulled taught over a wooden circular frame. Tightened even more to a vibrant limit over a fire-wood flame, and sometimes ringed with bells, it is at the heart of the sega ‘s beat.

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் -4

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


TA CHAIR ETAIT PAREILLE A CELLE DES COCOS,

LES MARCHANDS TE PORTAIENT DES PAGNES COULEUR D ‘AIR

ET DES MOUCHOIR DE TETE A CARREAUX JAUNE-CLAIR,

LABOURDONNAIS SIGNAIT DES PAPIERS D ‘AMIRAUX

– FRANCIS JAMMES

காமாட்சி அம்மாளிடம் அத்தீவு அப்படியொரு பிரியத்தைக் கொண்டிருந்தது. தீவிலிருந்த சுமார் முன்னூறு இஇந்தியக் குடும்பங்களுக்கு காமாட்சி; வாழும் பெண்தெய்வம். கடந்த நான்கு ஆண்டுகளாக கைலாசத்திற்கும், தெய்வானைக்கும் மட்டுமல்ல பிரெஞ்சுத் தீவிற்கே அன்னையாக; வழிபாட்டுக்குகுரியவளானாள். ‘காமாட்சி அம்மா! என் குழைந்தைக்கு, மார்முழுக்கச் சளி, மூச்சுவிடத் திணறுகிறது ‘. ‘காமாட்சி அம்மா! மல்காஷ் ஆட்கள் எதனையோ கொடுத்தார்களென்று குடித்துவிட்டு இரண்டு நாட்களாகப் போதை தெளியாமலிருக்கிறார் ‘. ‘காமாட்சி அம்மா! புரட்டாசி மாதம், கோவிந்தனுக்கும் பொங்கலிடவேணும், நீங்கள்தான் நடத்தி வைக்க வரவேணும். ‘ ‘காமாட்சி அம்மா! நம்ம விருத்தாசலம் காட்டிற்குள் முயலைத் துரத்திக் கொண்டு போனவன் ஏதோ விஷஜந்து கடித்து உயிர் போய்விட்டது.. அந்திமக் கிரியைகள் செய்யவேணும். எப்படிச் செய்வது என்பதில் பாவாடைச் செட்டிக்கும், நாராயணசாமிப் பிள்ளைக்கும் தர்க்கமிருக்கிறது.. நீங்கள் அவ்விடம்வந்து எது சரி என்பதைச் சொல்லிப் போகவேணும் ‘. இப்படித் தீவின் நல்லவை தீயவைகளை நடத்திவைப்பதற்காக காமாட்சி அம்மாள் அத்தியாவசியமாகிவிட்ட உயிர்.. வெள்ளையர் பண்ணைகளில் அடிமைகளாக, அதிகாலையிலிருந்து இரவுவரை உழைக்கும் கறுப்பின மக்களுக்கும், இந்தியரகளுக்கும்கூடத் தங்கள் பறங்கி எஜமானர்களிடம் படுகின்ற கஷ்டங்களைத் தெரிவிக்கக் காமாட்சி அம்மாளிடம் வருவதுண்டு. காமாட்சியம்மாளிடம் பறங்கியர்கள் இறங்கிவந்ததற்குக் காரணமில்லாமலில்லை. இந்தியர்களைத் தங்கள் விருப்பம்போல ஆட்டுவிக்க அவர்களுக்கும் காமாட்சியம்மாளின் தயவு வேண்டியிருந்தது. அனைத்துத் தரப்பு மக்களையும் தனது குணத்தால் ஈர்த்திருப்பது நியாயமென்றாலும். அவரது உருவமும் அதற்கு உகந்ததாக இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். சொல்லப்போனால் இதுவே பிரதானமான காரணம். செந்தாமரையொத்த அடக்கமான நிறம், ஒற்றை நாடி, தெளிவும் சாந்தமும் இணைந்த முகம். முன்னால் நிற்பவரை முழுவதுமாக வாசிக்கும் கண்கள், சீரான நாசி. நெற்றியில் துலங்கும் திருநீறு; முடிந்தபோதெல்லாம் ‘ஈஸ்வரா ‘ என உச்சரிக்கும் உதடுகள், தினந்தோறும் கசக்கிக் கட்டும் தூயவெண்ணிறச் சேலையென நடமாடிவந்தவர் தீவிலிருந்த புதுச்சேரி தமிழர்களுக்கான குலதேவதை.

எல்லையில் குறுகியும், மக்களெண்ணிக்கையில் குறைந்துமிருந்தத் தீவில் எந்தச் செய்தியும் சீக்கிரம் பரவிவிடும். நல்லதோ கெட்டதோ பறங்கியர், கிறேயோல், தமிழர்களென கூடிவிடுவார்கள். அடுத்துவரும் நாட்களில் இது போன்ற செய்திகளை, சாலைகளிலோ, கரும்புப் பண்ணைகளிலோ, மரக்கலங்கள் கட்டுகின்றயிடத்திலோ, ராணுவத்திற்கான கசெர்ன்கள் அல்லது வெள்ளையர்களூக்கான ‘வில்லாக்களை எழுப்பிக்கொண்டோ ‘ வெள்ளையரல்லாத மற்றமக்கள் விவாதித்தபடியே, உழைத்துக் கொண்டிருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்களே அத்தீவிவின் ஆரம்பகால தமிழர்களுக்கு உழைத்த நேரம்போக உட்கார்ந்து பேச உதவியது. மயக்கத்திலிருந்த காமாட்சியைச் சுற்றிப் பயத்துடனும் கவலையுடனும் முகங்கள். கறுப்பு, பழுப்பு முகங்கள் கபானின் உள்ளேயும், வெளியேயும் இறைந்து கிடந்தன. கபானுக்கு வெளியே கவர்னருக்கு வேண்டப்பட்டவரான மிஸியே குரோ, கரும்புப் பண்ணை வைத்திருக்கும் மிஷல் தெலகுருவா, மதாம் தூர், பிரான்சிலிருந்து சமீபத்தில் தீவிற்குச் செல்வம்சேர்க்க வந்திருக்கும் தவீது ஆகியோரை முக்கியமானவர்களாகக் கொள்ளலாம்..

காமாட்சி அம்மாளைச் சீனுவாசநாயக்கர் மனைவி, விசாலாட்சி மடியிலிருத்தியிருந்தாள். அருணாசலத் தம்பிரான் காமாட்சியம்மாவின் வலதுதுகரத்தைப் பற்றி நாடிபார்த்து நிம்மதியாய்ப் பெருமூச்சுவிட்டார். சற்றுத் தள்ளி வரிசையாக உட்கார்ந்திருந்த சீனுவாசநாயக்கர், வேலுப்பிள்ளை, சுப்பு முதலியார், செல்லமுத்து செட்டியாரென அனவருக்கும் இப்போது தெம்பு வந்திருந்தது. கபாானுக்கு வெளியே வாயிலுக்கருகில், ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த முனுசாமி, எட்டியான், அஞ்சலை, பிச்சைக்கும் காமாட்சியம்மாவின் உயிருக்கு ஆபத்தில்லை என்றசெய்தி பரவச் சற்று முன்னர்வரை சோகத்தைச் சுமந்திிருந்த முகங்களில் மீண்டும் சந்தோஷம். தெய்வானையைத் தாங்கியிருந்த அவள் தோழி, கறுப்பினப் பெண் சில்வியா, மெல்ல தோளினைத் தட்டி விடயத்தைச் சொல்லத் தெய்வானை, கலங்கியைருந்த கண்களைத் துடைத்துக்கொண்டு அடுப்படிக்குச் சென்று, வந்திருந்த அனைவருக்கும் வெல்லப் பானகம் ஏற்பாடு செய்தாள். கடந்த இரண்டு மணிநேரமாகத் தன்நினைவிற்கு வந்த தெய்வங்களையெல்லாம் பிரார்த்தித்துக்கொண்டிருந்த கைலாசத்திற்கும், தனது அன்னைக்கு எந்தத்தீங்கும் ஏற்படவில்லையென அறி,ய மகிழ்ச்சி.. அருணாசலத் தம்பிரான் காமாட்சியம்மாளின் விழிகளின் கண்ணிரப்பைகளை, விரல்களால் மெல்ல மேலே உயர்த்திப் பார்த்தார். தலைலிருந்த காயத்தினை வெந்நீர் கொண்டுவரச் செய்து சுத்தமான துணியால் அழுந்தத் துடைத்து

பச்சிலை வைத்துக் கட்டினார்.

‘தெய்வானை..! அம்மாவிற்குக் ஒரு தாக செம்பில் பானகம் கொடு ‘ என்று கட்டளை பிறப்பித்துவிட்டுத், தம்பிரான் தனது சுருக்குப் பையிருந்து கொஞ்சம் திருநீறு எடுத்தவர் கணீரென்று சுற்றிலுமுள்ளவர்களை மறந்து,

நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி நடுவாய் உலக நாடாய வடி

செறிகதிரும் திங்களுமாய் நின்றாடி தீத்திரளாய் உள்ளே திகழ்ந்தவடி

மறுமதியை மாசு கழுவுமடி மந்திரமும் தந்திரமும் ஆயவடி

செறிகெடில் நாடர் பெருமானடி திருவீரட்டானத்தெஞ் செல்வனடி ‘

தேவாரப் பதிகத்தை இனிய குரலெடுத்துப் பாடிமுடித்து, திருநீறைக் கைலாசத்திடம் கொடுத்து காமாட்சி அம்மாளின் நெற்றியில் பூசச்செய்தார்.. வெளியே காமாட்சியம்மாள் உடல் நலன் தேறிவிட்டது எனவடிமைகள் சொல்லக் கேட்டு பல்லக்கில் புறப்படவிருந்த பறங்கியர்களுக்கு தெம்பு வந்தது. தம்பிரானின் தேவாரப்பதிகத்தைக் கேட்டு காபானுக்குள்ளிருந்தக் கூட்டம் சூழல் மறந்து ‘ஆஹா ‘ வென்றது. எல்லோருடையக் கண்களும் நனைந்திருந்தன. கபானுக்கு வெளியே மலர்ந்திருந்த முல்லையும் மல்லிகையுங்கூட இசையில் மயங்கிப் பூக்கைளைச் சொரிய, குருத்துவாழைகள் அவற்ைறைக் குனிந்து வாங்கிக் கொண்டன.

காமாட்சியம்மாள் மெல்ல கண்விழித்தார். தன்னருகே கூடியுள்ளவர்களைக் கண்டு நிலைமையை ஓரளவு ஊகிக்கமுடிந்தது. ஏதோ பேசமுற்பட்டபோது, தம்பிரான் ‘இப்போதெதுவும் வேண்டாம்!.. பிறகு பேசலாம் என்பதாக, கையசைக்க, காமாட்சியம்மாளுக்குப் புரிந்திருக்கவேண்டும், அமைதியானார்.

‘தெய்வானை, உங்கள் காபானுக்குள் வருவது எங்களுக்கெல்லாம் தெய்வ சந்நிதிக்குள் நுழைவதுபோல.இன்றைக்குத் தம்பிரானின் பாடலும் சேர்ந்துகொள்ள, தில்லையம்பலத்தில் நாங்கள் இருப்பதாக நினைவு. முற்றிலுமாக இருட்டுவதற்குள் அவரவர் இருப்பிடத்திற்குப் போய்ச் சேரவேணும். எங்களுக்கு விடை கொடம்மா ‘ சீனுவாசநாயக்கர்தான் முதலில் வார்த்தையாடிவர்.

‘ எல்லோரும் கொஞ்சம் பானகமாவது பருகிவிட்டுப் போகலாம். பசும்பால் கூடவைத்திருக்கிறேன். ‘ – மெல்லிய குரலில் தெய்வானை.

‘நன்றியம்மா. பக்கத்திற்தானே இருக்கிறோம் ? அம்மாவும் எழுந்து நடக்கட்டும். இப்போதைக்கு அவர்களுக்கு ஓய்வு தேவை. அப்படித்தானே தம்பிரான் ? ‘ தான் சொல்வது சரிதான் என்பதுபோல தம்பிரான் பக்கம் நாயக்கர் திரும்பிப்பார்த்தார்.

வைத்தியர் அருணாசலத் தம்பிரான் மெல்லச் சிரித்தார். ‘நாயக்கர்! உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு ஏது ? நீங்கள் சொன்னால் எதுவும் சரியாகத்தானிருக்கும். அப்படியே ஆகட்டும் ‘ என்றார்.

நாயக்கர்களும், மற்றவர்களும் விடை பெற்றுக்கொண்டு ஒருவர்பின் ஒருவராகப் புறப்பட்டுச் சென்றார்கள். இறுதியாக நின்றவர் அருணாசலத்தம்பிரான். தெய்வானையிடம்,

‘தெய்வானை.. அம்மாவுக்கு சுடச்சுடக் கஞ்சி கொடு. தெம்பு கிடைக்கும். சிறிது நாட்கள் ஓய்வெடுக்கட்டும். நான் நாளை ‘மொகா ‘ வரை போகவேண்டும்; நம்ம சடையன் மகள் ‘பூபடைந்து ‘ விட்டாள்.. அம்மாவும் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. இதுபோல ஆகிவிட்டது. நான் நாைளைக்கு மறுநாள் வந்துபார்க்கிறேன். கைலாசம் நாளைக்கு நீயும் கட்டுமானவேலையெதற்கும் போகாமல் கபானிலிருந்து அம்மாவைப் பார்த்துக்கொள். எப்படியும் இன்றிரவு மிஸியே குரோமூலம் குவர்னருக்கும் செய்தி எட்டிடும். ‘

‘தங்கள் விருப்பப்படியே நடக்கிறேன் ஐயா ‘ எனப் பதிலிறுத்தான் இளைஞன் கைலாசம்.

தம்பிரான் புறப்படுவதற்கெனவே காத்திருந்ததுபோலக் காமாட்சியம்மாள் விழித்துக் கொண்டாள். ‘கைலாசம், தெய்வானை என் செல்வங்களே உங்களுக்கொன்றும் ஆகவில்லையே. அருகில்வந்த கைலாசத்தையும் தெய்வானையையும் அவேசத்தோடு இறுகவணைத்துக் கொண்டாள்..

‘அங்கே யார் ? சில்வி நீயா ? இப்படி அருகில் வாம்மா. உன்னைப் பார்த்து இரண்டு கிழமையிருக்குமே. ? உன் பெற்றோர்கள் அந்த ரெனோ தடியனிடந்தான் வேலையிலிருக்கின்றார்களா ? ‘

சில்வியாவும் இப்போது காமாட்சி அம்மாளிடம் நெருங்கி நின்றாள்.

‘அம்மா.. இப்போதைக்கு உங்களுடைய நலமே முக்கியம். உங்களுக்கு ஓய்வு தேவையென வைத்தியர் தம்பிரான் சொல்லியிருக்கிறார். ‘ எனச் சில்வியா பதிலிறுக்க, தெய்வானையும் கைலாசமும் ஆமாம் என்று தலையசைத்தனர்.

‘இல்லைப் பிள்ளைகளே. நீங்கள் உடனே ஒரு காரியஞ் செய்யவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நமக்கு ஆபத்தென என்மனம் அஞ்சுகின்றது. எந்த ஆபத்து உங்களை நெருங்கக் கூடாதென இத்தீவிற்கு வந்தோமோ, இப்போது நடந்துவிடுமென்கிற அச்சம். இவ்வளவு நாட்களாக இங்குள்ள இந்தியர்கள் அனைவரும் நமது நம்பிக்கைக்கு உரியவர்கள் என நம்பினேன். இன்றைக்கு என்மீது நடந்த தாக்குதல் அதனைப் பொய்யாக்கிவிட்டது. ‘ஈஸ்வரா! நாங்கள் யாருக்கு என்ன தீங்கிழைத்தோம் ? ஏனிப்படிச் சோதனை செய்கிறாய். ? ‘

‘அம்மா..! நீங்கள் இவ்வளவு கவலையை மனதிற் புதைத்துக் கொண்டுதான் இத்தனை நாட்களாக வாழ்ந்து வந்தீர்களா ? நாங்கள் என்ன சின்னக்குழைந்தைகளா. எதையும் தாங்குகின்ற எதிர்க்கின்ற வாலிபப் பிராயத்திலிருக்கிறோம். இப்போதாவது உங்களது மனச் சுமையை இறக்கிவையம்மா ‘ – கைலாசம்.

‘ இல்லை மகனே. அதற்கு முன்னதாகவொரு காரியம் உடனடியாக நடந்தாக வேண்டும். ‘

‘ என்ன செய்ய வேண்டும் ? அம்மா! ‘

‘ பாம்ப்ளுமூஸ் அருகேயுள்ள பெரியமூங்கிற்காடுவரை சென்றாக வேண்டும். அங்குள்ள துர்க்கை பீடத்தருகே, வலது புறத்தில் இரண்டு தென்னைகள் ஒன்றையொன்று பின்னியிருக்கும். அதன்கீழே இரண்டு அல்லது மூன்றடி தோண்டினால் ஒரு சிறிய கள்ளிப்பெட்டி கிடைக்கும் அதனை உடனே கொண்டுவந்துவிடுங்கள்

‘ என்னம்மா ? இந்தநேரத்திலா ?

‘ ஆமாம் இந்தநேரத்தில்தான். இப்போதே புறப்பட்டாகவேண்டும். ஏன் பயமாகவிருக்கிறதா ? நீ ஆண்மகன்தானே ?. ‘

‘அம்மா.. ‘

‘ போடா போ சொன்னதைச் செய்.. அதுவரை எந்த ஆகாரமும் எனக்கிறங்காது ‘

‘கைலாஸ்..! நானழைத்துப் போகிறேன் வாருங்கள். ‘ சில்வி அவனது தோளைத் தொட்டு அழைத்தாள்.

‘அண்ணா..! நான்.. ‘

‘இல்லை தெய்வானை நீ அம்மாவுக்குத் துணையாகக் கபானில் இரு, நாங்களிருவரும் போய் வருகிறோம் ‘.

கைலாசமும் சில்வியும் கபானைவிட்டு இறங்கி, இன்னும் முழுச்சாலையாகப் பரிணமிக்காத பாதையில் நடக்கவாரம்பித்தார்கள். நட்சத்திரங்கள் இல்லாத கும்மிருட்டு. தீவில், நல்லபகல் நேரத்திலேயே சரைளைக் கற்களில் இடிபட்டு நடக்கவேண்டும். தொட்டால் ஒட்டிக் கொள்ளுமிருட்டில், கபான்களை பின்னேதள்ளி பாம்ப்ள்மூஸ் செல்லும் கரடுமுரடான பாதையில் நடப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. சில்வியா முன் செல்லக் கைலாசம் பின்னே நடந்தான். காற்றில் மரங்கள் கூடுதலாகவே அசைந்து அச்சமூட்டின. எங்கேயோவொரு ஆந்தை அலறிவிட்டுச் சடசடவென இறக்கையடித்து எழுந்து பறக்கின்ற சப்தத்தைக் கேட்டு, இருவருமே தயங்கி நின்றனர். துர்க்கைபீடமிருக்கும் பெரிய மூங்கிற்காடு திசையில்- பாதையைய விட்டு இறங்கிக் கற்றாழை, கோரைப்புற்கள், பனை வடலிகள் எனவொதுங்கி, அரைமைல் தூரம் ஒற்றைத் தடத்தில் நடந்தனர். இதற்குள், இருவருக்குமே இருட்டுப் பழகிவிட்டிருந்தது. சுமார் பத்தடி தூரத்தில் துர்க்கைப் பீடந்தெரிய மனதைத் திடப்படுத்திக்கொண்டு இருவரும் நடந்தனர். இப்போது கைலாசத்தை முன்னே செல்ல அனுமதித்துச் சில்வி பின் தொடர்ந்தாள்.

சில அடிகள் எடுத்துவைத்திருப்பார்கள். திடாரென்று ஓர் அந்நியமணம், சில்வியின் நாசி மடல்களைத் தீண்டியது. சில்வியின் மனது, வரவிருக்கும் ஆபத்தை எச்சரித்தது. முன்னே செல்லும் கைலாசத்தின் வலது கையினைத் தொட்டிழுத்தாள். அவளின் எச்சரிக்கையைப் புரிந்து.கொள்ளவியலாத கைலாசம், வாய் திறந்து காரணம் கேட்பதற்குள் முந்திகொண்டாள். அவன் உதடுகளின் பிளவுகளுக்கிடையில் தனது ஆள்காட்டி விரலை அழுந்தப் பதித்தாள்

‘உஸ். .. கைலாஸ் நம்மை யாரோ பின் தொடருகின்றார்கள். அமைதியாக இரு. ‘

‘எப்படிச் சொல்கிறாய் ? ‘

‘ எங்களால் அறியமுடியும். காற்றில் வாசம் பிடித்தே மனிதர்களா மிருகங்களா என்பதை எங்களால் உணர முடியும். என்பதை நீ அறிந்தவன் தானே ? ‘

உண்மைதான். மோப்ப மூலம் என்ன விலங்குகள் எங்கே இருக்கின்றன என்பதைக்கூடத் தெளிவாக சில்வி சொல்லிவிடுவாள் என்பதைக் கைலாசம் அறிவான்.

‘இப்போது என்ன செய்யலாம் ? ‘

‘ அதோ அங்கே.. அந்தப் புதரின் பின்னே தற்போதைக்குப் பதுங்கிக்கொள்ளுவோம் ‘

இருவரும் புதரின்பின்னே மெல்லநடந்து ஒளிந்துகொண்டனர்.. இவர்கள் பதுங்கியிருந்தப் புதரினை நோக்கி இப்போது காலடிகள். சில்வியின் இதயம் அதிவேகமாக இயங்கியது. வீசுகின்ற குளிர்காற்றால், உடல் நடுக்கம் கண்டது. அவளை அமைதிப்படுத்துகின்றவகையில், கைலாசம் அருகிலிழுத்து அணைத்துக்கொண்டான். உடலையொட்டியும் மனதை ஒட்டாமலும் காத்திருந்தனர்…

/தொடரும்/

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் – (தொடர்) -அத்தியாயம் -2

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


Tes pieds sont aussi fins que tes mains, et ta hanche

Est large a faire envie a la plus belle blanche;

A l ‘artiste pensif ton corps est doux et cher;

Tes grands yeux de velours sont plus noirs que ta chair.

…………………………………………………………(A une Malabaraise) -Baudelaire

உலகவரைபடத்தில் 20.5 ‘ தெற்கு அட்சரேகைக்கும் 57.33 ‘ கிழக்குத் தீர்க்கரேகைக்கும் இடையில் அந்த முத்து. கடகரேகையை நெருங்கிக் கிடக்கும் இந்தியப் பெருங்கடலின் அழகு முத்து. நீரிடையே பேசும் நிலத்துண்டு. மும்பையிலிருந்து 4800 கி.மீ. அல்லது பாரீஸிலிருந்து 9426 கி.மீ அல்லது சிட்னியிலிருந்து 9114 கி.மீ பயணத்தில் நம்மை மயக்கும் இயற்கைத் தேவதை.

பத்தாம் நூற்றாண்டில் அராபியர்கள் அம்முத்தைக் கண்டெடுத்து ஆச்சரியத்தில் மூழ்கிச் சூட்டிய பெயர் ‘டினா அரோபி (Dina Arobi). கி.பி 1500ல் போர்த்துக்கீசியர்கள் சூட்டிய பெயர் அன்னத் தீவு( Ilha do Cirne). கி.பி 1598ல் டச்சுக்காரர்கள் தங்கள் இளவரசர் நினைவாக ‘மொரீஸ் ‘ எனப் பெயர் வைக்க கி.பி 1715ல் வந்திருந்த பிரெஞ்சுக்காரர்கள் வைத்த பெயரோ பிரெஞ்சுத் தீவு(Ile de France). இந்திய வணிகத்திற்குத் தீவின் அவசியத்தை உணர்ந்த ஆங்கிலேயர்கள் கி.பி 1810ல் பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த தீவினைக் கைப்பற்றி மீண்டும் சூட்டிய பெயர் மொரீஷியஸ்….ஆப்பிரிக்கர், இந்தியர், சீனர், ஐரோப்பியர் சேர்ந்து வாழும் ஒரு பெரிய வீடு. கூட்டுக்குடும்பம். இன்றைக்கும் இந்தியப் பெருங்கடலில் எழுந்துநிற்கும் இவ்வுயிர்ப் பிரதேசத்தை ஊட்டிவளர்த்து, கட்டியெழுப்பிக் கரைந்துபோன தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்.. அவர்தம் கைத்திறனில் பிறந்த சாலைகளும், சோலைகளும், கூடங்களும், கோபுரங்களும் அப்புலம்பெயர்ந்த மக்களின் புகழ்பாடுபவை. சொந்தமண்ணைப் பிரிந்து, வந்தமண்ணின் வாழ்க்கையை அங்கீகரித்த அந்த மனிதர்களின் சுகங்கள் அனைத்துமே சோகங்களால் எழுதப்பட்டவை….பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழனின் உதிர இலக்கியம் உயர்ந்தது;

பதினெட்டாம் நூற்றாண்டு……

இந்தியப் பெருங்கடலின் தொப்புளாக அந்தத் தீவு- மொரீஷியஸ் தீவு. சுற்றிலும் மலைத் தொடர்கள், அவற்றைத் தழுவிப் பிரிய மனமில்லாமல் சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்..வடமேற்கில் கடல் – நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இஇஇறங்கிவரும் நிலம் – நெய்தல் நிலம் -. பெயர் போர் லூயி (Port Louis). நீலக்கடல் அலைகளின் நிறுத்தாத நடனம். நட்டுவாங்கமாக கிறீச்சிடும் கடல் நாரைகள், கரையும் நீர்க்காகங்கள். இடைக்கிடையே கரையின் திசையிற் பாய்ந்து மீண்டும், புறப்பட்ட இடத்தினை ஞாபகத்தில் வைத்துத் திரும்புகின்ற அவற்றின் தீராத விளையாட்டு. தெளிந்த கடல் நீரில், தெரிந்த இருட்டு படலம். அவற்றில் வெள்ளியும் தங்கமுமாய் உயிர்பெற்று அலைகின்ற மீன்படலம். வெள்ளியைப் பொடிசெய்து கரையெங்கும் பரப்பியதுபோன்று கடலோர மணல். முடிந்தமட்டும் அவற்றைக் கொள்ளை அடித்துக் கடலிற் சேர்ப்பதில் கவனமாயிருக்கும் அலைகள்.. அலைகளின் பிடியிலிருந்து தப்பித்து மணற் பறித்து முகம் புதைக்கும் இல்லி நண்டுகள், மென்சிவப்புக் கடலோர நண்டுகள். நீரும் காற்றுக் குமிழ்களுமாய் வெடித்து அடங்கும் அவற்றின் சுவாசம். மேற்கே தன் கதிர்களை, அடர்ந்திருந்த வேம்பு, மா, இலவு, வாதுமை, புன்னை, மூங்கில் அடர்ந்த மரங்களுக்கிடையே நிறுத்தித் தன்னை அடையாளப் படுத்தியவாறு வீடு திரும்பிகொண்டிருக்கும் சூரியன். தெளிந்த வானத்தில் திடுமென்று கருத்த மேகம். மலைப்பகுதிகளிலிருந்து எப்போதும் போல சிலுசிலுவென்ற சீதளக் காற்று, இகபர இன்பங்களை செய்தியாகச் சொல்லும் இயற்கையின் மடல்.

அவள் தெய்வானை, இளம் பழுப்புச் சருமம் – கரிய நீண்ட ஒற்றைப் பின்னல். முன் எழுந்த அளவான மூக்கு. மை பூசிய கரிய விழி.. அடர்த்தியான புருவங்கள் – வழுவழுப்பும் நேர்த்தியும் நெருங்கியிருக்கும் கன்னக் கதுப்புகள் – அவற்றில் பருவத்தின் நுண்ணிய மணிகள். ஈரப்பதமின்றி உலர்ந்திருந்த அதரங்கள் விரித்த பவழச் செவ்வாய். யோசித்துப் படைத்திருந்த அளவான நெற்றி. கடலலைகளின் தொடர்த் தழுவலில் கூடுதலாக வெளுத்துப் பூத்திருக்கும் பாதம். .நனைந்த கால்களில் சுழித்துக் கொண்டு பூனை ரோமங்கள். .அவ்வப்போது அலைச்சாரல்களில் நனைந்து நீர் சொட்டும் கூந்தல், மூக்கு, முகவாய், முலைக்காம்புகள். சுதந்திரமாகவிருந்த தோள்களில் வியர்வை உலர்ந்த உப்புத் தேமல்கள். உடலையொட்டிய திருபுவனம் ஈர நூற்சேலை. அழகி- தமிழச்சி…

.

காத்திருக்கிறாள். கடலையொட்டிக் காத்திருக்கிறாள். காத்திருப்பது என்பது கடந்த ஒருமாதமாக அவள் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம். எப்போது வேண்டுமானாலும் வருவாள். மணிக்கணக்கில், சில நாட்களில் காலையிலிருந்து மாலைவரை காத்திருப்பாள். துறைமுகத்தில் வேலைசெய்துவிட்டுத் திரும்புகின்ற கறுப்பின மக்களுக்கு அவள் காத்திருப்பும், கேள்விகளும் பழகிவிட்டவை. இரவுநேரத்தில் அவர்களது கபான்களில் பாடும் கிறெயோல் பாடல்களிற்கூட அவள் இடம் பெறுகிறாள். அவள் கவனம் முழுவதும் கடற்கரையின் இடது பக்கமிருக்கும் லெ மோர்ன் டெ லா தெக்கூவர்த்து மலையை ஒட்டியே இருக்கும், தீவுக்குள் நுழையும் எந்தக் கப்பலாகவிருந்தாலும், அதன் மூக்கைக்காட்டித் தொடர்ந்து வெளிப்படும் மலை அது.

அவள் அவனுக்காகக் காத்திருக்கவில்லை, தனக்காகக் காத்திருக்கிறாள். அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக்கொண்டிருக்கிறாள். தனியொருவளாக தொப்புட் கொடியைக் கைககளிற் பற்றித் தேடிக் கொண்டிருக்கிறாள். இந்த மண், காற்று, ஆகாயமென அனைத்திலும் நுண்துகள்களாக ஒட்டி, விரட்ட விரட்ட, எழுந்து மீண்டும் படிந்து தன் வேரினைத்தேடிக் களைத்துப் போகிறாள். காலடியிற் கடலலைகள், திருமுடியிற் கதிரவனின் கதிர்களெனத் திரும்புகின்ற பக்கமெல்லாம் மலைத்தொடர்களின் மெளன ஓங்காரம். அவ்வோங்கார ஓசையின் நாதமாக, அலைகளூடே பயணித்து மீள்கிறாள். மலைமுலைகளை மறைத்து அழகூட்டும் மஸ்லின் மேகங்கள், அவற்றைத் தழுவும் மரகதப் பசுமையிற் கச்சைகள். கச்சையைக் கண்களால் உரிந்து, காதற்தாபத்துடன்கூடி, கழிவுகளிற் தன் முகம் தேடுகிறாள். மலைகளின் சிகரங்களில், ஊற்றெடுத்து உருண்டுவிழும் நீரருவிகளில் நீந்திக்களைத்து அதன் சங்கமச் சேற்றில் மிதக்கும் பவழப்படிமங்களில் தேடுகிறாள். சிவப்புப் புல்புல் -பச்சைக் கிளிகள்-புள்ளிகளிட்ட புறாக்கள்- துள்ளிப் பறக்கும் மைனாக்கள். அவற்றின் இதயத்தை வருடும் இயற்யைின் ஒட்டுமொத்த நாதவோசை.- முடிவற்ற சங்கீதம். அந்திநேர சுரங்களுக்காகவே காத்திருந்து, வானவில் இழைத்த வண்ணத்தடத்தில் மெல்லடிவைத்து பயணிக்கிறாள். என்றேனும் ஒருநாள் இந்தியப்பெருங்கடலில் அவன் முகம் காட்டக்கூடும் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறாள். கண்ணுக்கெட்டிய வானமும், கடலும் மென்மையான நீலத்தில் உறவு கொண்டாட, கண்ணுக்கெட்டா வானமும் கடலும் அடர்ந்த நீலத்தில் அமைதியாகக் கிடந்தது. அந்த அமைதிக்குப் பின்னேதான் அவன் ஒளிந்து கொண்டிருக்கிறான். இந்தக் காட்சியும் காத்திருப்பும் கடந்த சிலநாட்களாக அவளது வாழ்க்கையாகிவிட்டது. போர் லூயி துறைமுகத்திலிருந்து இந்தியத் தீபகற்ப திசை நோக்கிப் பயணிக்கவிருக்கும் பிரெஞ்சு கிழக்கிந்தியகம்பெனியின் வணிகக் கப்பல்களில் ஏதாவதொன்றில் தொற்றிக்கொண்டு, அவனைத் தேடி ஓடலாம் என்கின்ற உந்துதலுங்கூட அவளிடம் இப்போது குறைந்து சோர்ந்திருக்கிறது. என்றாவது மீளுவான் என்கின்ற நம்பிக்கையில் வழக்கம்போல நீண்ட ஆழமான பெருமூச்சு. கண்களை மெல்ல மூடி அவன் சம்பந்தப்பட்ட நினைவுத் தோணியில் ஆனந்தமாகப் பயணித்தாள்……

‘தெய்வானை.. தெய்வானை.. ‘ அழைப்பது பெர்னார் போலவிருந்தது. நினைவைக் கலைத்துவிட்டுச் சந்தோஷமாகத் திரும்பியபொழுது முழங்காற் சாராயும் ஓலைத் தொப்பியுமாக கைலாசம் நின்றுகொண்டிருந்தான். இ

‘ ம் ‘ புறப்படு தெய்வானை, அம்மா உனக்காகக் காலையிலிருந்து காத்திருக்கிறாங்க…

‘இல்லை அண்ணா. நீங்கள் போங்கள் அவர் எப்படியும் வந்திடுவார். அவரில்லாமல் திரும்ப மாட்டேன். ‘

‘கப்பல் புதுச்சேரியையே அடைந்ததோ என்னவோ ? அதற்குள் நாமுள்ள தீவுக்கு மீண்டும் எதிர்பார்க்கிறாய். நம்புகின்ற வகையிற் செயல்படு. வானம்வேறு இருண்டுகொண்டு வருகிறது. மழையும் காற்றும் வருவதற்கான அறிகுறி. உடனே கிளம்பு ‘ மறுத்த தெய்வானை என்ன நினைத்தாளோ, சகோதரனின் வலதுகரத்தை அன்பாகப் பற்றினான்.

அவன் கூறி முடிக்கவில்லை. தெற்கே மரங்களுக்கிடையில் நீண்டு உடைந்து அடுத்தடுத்து எழுந்து மறைந்தன ஒளிக் கீற்றுகளாய் மின்னல்கள். அதனைத் தொடர்ந்து ஒரு சில விநாடிகளில் இடியுடன் கூடிய மழை சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. இருவருமே ஓடினர். தங்கையின் உடற்பலவீனத்தைப் புரிந்து மெதுவாகவே ஓடினான் சரிவுகளில் சற்று வேகமாகவும், சம நிலங்களில் நிதானமாகவும், செங்குத்தான பகுதிகளில் சிரமத்துடனும் கடக்கவேண்டியிருந்தது. மழையின் வேகம் கூடியிருந்தது. கடல் அலைகள் உயர்ந்து உடைந்தன. மரங்கள், குறிப்பாக தென்னைகள் வைளைந்து, தென்னையோலைகள் கழுத்தைவிட்டு உயர்ந்த கேசம்போலக் காற்றில் உயர்ந்து மீண்டும் திரும்பின..

தெய்வானை, ‘எங்கேயாவது நின்றுபோகலாமே ‘ என்கின்ற தன் எண்ணத்தைச் சகோதரனிடம் வெளியிட்டாள்.

‘அண்ணா என்னால் தொடர்ந்து ஓட முடியாது. கொஞ்சம் காத்திருப்போம் மழை விடட்டும். ‘ அங்கே தென்னை மரங்கள் வரிசையாக இருக்கின்றனவே. அங்கே சென்று நிற்கலாமா ? ‘

‘ வேண்டாம் அங்கே வேண்டாம். இந்த நேரத்தில் அவற்றின் காய்களோ, மட்டைகளோ தலையில் விழலாம். அதோ வாதுமை மரங்கள் நிற்கின்றன பார். அங்கே வேண்டுமென்றால் போகலாம் ‘

இருவரும் அருகே தெரிந்த வாதுமை மரங்களின் அடியில் போய் நின்றார்கள்; பக்கத்திலே, எங்கேயோ இடிவிழுந்து மூங்கிற் காடுகள் சட சடவெனப் பற்றி எறிவதும் அவற்றுக்கிடையேயிருந்து தப்பும் விலங்குகளின் அபயக் குரல்களும் அடை மழையின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டுக் கேட்கின்றன. மழையில் நனைந்திருந்த இருவரது உடல்களும் தேவையின்றி நடுங்கின..

‘கிழக்கே பார். அடிவானம் கூடுதலாகக் கறுத்துக் கொண்டு வருகிறது. காற்றின் வேகம் குறையவில்லை. முந்தைக்கு இப்போது அதிகமாகவிருக்கிறது.. அநேகமாகப் புயல்கூட வீசலாம். ‘ கைலாசம் வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு, தங்கையின் இடதுகையை ஆறுதலாகத் தனது இடது கரத்தில் வசப்படுத்திக் கொண்டு பேசினான்.

‘பறங்கியர்களுக்குப் பிரச்சினையில்லை. நம்மவர்களுக்கும், கறுப்பர்களுக்கும்ந்தான் பிரச்சினை. நம்முடைய தேசத்து விழல் வேய்ந்த குடிசைகளே பரவாயில்லை. இலைகளையும் தழைகளையுமிட்ட கபான்களில் எத்தனை நாைளைக்கு இப்படி வாழ்க்கையை ஓட்டுவது ? எப்படியாவது கவர்னர் சமூகம் சென்று நாம் விண்ணப்பிக்கலாம். மீண்டும் புதுச்சேரிக்கே திரும்பவேண்டும் அண்ணா. அது முடியுமா ?. நமக்காக பயணம் மேற்கொண்டுள்ள பெர்னாரிடமிருந்து தகவல்கள்பெற எவ்வளவு நாட்கள் ஆகுமோ ? எனக்குப் பயமாக இருக்கிரது அண்ணா ‘

‘ புதுச்சேரிக்குத் திரும்புவது சுலபத்தில் இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கையென அம்மா அடிக்கடி நம்மிடம் சொல்வாறே ? மறந்துவிட்டாயா ? பெர்னார் மீது எனக்கு அளவுகடந்த நம்பிக்கை இருக்கிறது. உரிய தகவல்களோடு தீவுக்குக் கூவருவார். காத்திருப்போம். அம்மா தினந்தோறும் வணங்கும் சர்வேஸ்வரன், புதுவை வேதபுரீஸ்வரர் தயவு வேண்டும். எனக்கும் நம்முடைய மண்ணை மீண்டும் மிதிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. சரி புறப்படு. மழை கொஞ்சம் விட்டிருக்கிறது. ‘

இருவரும் வடகிழக்காகச் சென்ற செங்குத்தான பாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.

‘ என் பின்னே வா. விஷமுட்கள் நிறைய இருக்கின்றன ‘

அண்ணன் கைலாசத்தின் வார்த்தைகளை ஏற்று, தெய்வானை பின்தொடர்ந்தாள். கைலாசம் வேகமாக நடக்கப் பழகியவன். அவள் அப்படியல்ல. சிறிது தூரம் நடந்திருப்பார்கள்.

‘அம்மா ‘ வலது காற்பாதத்தினைத் தூக்கியவாறு ஒற்றைக் காலில் நிற்க முயற்சிசெய்தவளை ஓடிச்சென்று தாங்கிக் கொண்டான். அவன் தோள்களை அழுந்தப்பற்றிக் கொண்டு வலதுகால் பாதத்தை முடிந்தமட்டும் திருப்ப முயன்றாள். குதிகாலில் முள்தைத்தவிடத்தில் நீலம் பாரித்திருந்தது. தனது ஆட்காட்டி விரலால் மெதுவாகத் தடவினான். முள் இருப்பதன் அடையாளமாக நெருடியது. வரிசையாக நின்றிருந்த தென்னைமரங்களின் திசைக்குச் சென்று, கீழே கிடந்த ஒரு தென்னை ஓலையிலிருந்து ஈர்க்கினை எடுத்து இரண்டாக உடைத்து அவளது பாதத்தில் முள் தைத்தவிடத்தில் மடித்துப் பொருத்தி, முள்ளைப் பிடுங்கி எறிந்தான். இரத்தம் முத்தாக எட்டிப் பார்த்து யோசித்துப் பின்னர் கசியத் தொடங்கியது. அருகிலிருந்த புதர்களிலிருந்து நாயுருவியைக் கொண்டுவந்து கசக்கி அதன் சாற்றினை முள்தைத்தவிடத்தில் விட்டு இலைகளாற் சூடுபறக்கத் தேய்த்தான். அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அண்ணனின் சிசுருட்ஷைகளை ஏற்றுக் கொண்டாள். ‘கொஞ்ச நேரம் இவ்வலி நீடிக்கும். பிறகு சரியாகிவிடும் ‘ என்ற. கைலாசத்தின் ஆறுதல் வார்த்தைகளையேற்று அவன் முன்னே நடக்க இவள்

வலதுகாலைப் பிடித்தவாறு நிதானித்து நடந்தாள்.

குறைந்தது இன்னும் இரண்டு கல் தூரமாகினும் அடர்ந்த மரங்களுக்கிடையே நடந்தாக வேண்டும். மழை இப்போது முற்றிலுமாக குறைந்திருந்தது. வானம் நீலப்படிகமாக எப்போதும்போலத் தெளிவான நிலைக்கு மீண்டிருந்தது. மரங்களின் கிளை மற்றும் இலைகளிலிருந்து மழைத்துளிகள் சீராகச் சருகுகளில் சொட்டிக்கொண்டிருந்தன. நிலம் சிலவிடங்களில் நீர்த்தாரைகளுக்கு வழிவிட்டு இறுகிக்கிடந்தது.

சிற்றோடைகளாகவும் மெல்லிய அருவியாகவும் ஆங்காங்கே மழைநீர்கள் அவதாரமெடுத்திருந்தன. அவ்வோடைகளில் நீர்தவழ்ந்து நிலத்தை அரித்து எழுந்த இடங்களில் சிறிய கெண்டைமீன்கள். கூடுதலாக நீர்தேங்கியிருந்த சிலவிடங்களில் பச்சைத் தவளைகள், மண்டூகங்களின் கர்ண கடூரமான சப்தம் . இரை கிடைத்த ஆர்வத்தில் அவற்றை நோக்கி ஊர்ந்துவரும் பாம்புகள். இடையிடையே பொன்வண்டுகளின் ரீங்காரம். பழகிய தடமென்றாலும் தெய்வானைக்குள் பயம் புகுந்துகொண்டது.

‘ அண்ணா சற்று வேகமாகப் போ. இருள் கவிழ்வதற்குள் காட்டைக் கடந்துவிடவேண்டும். எனக்கு மிகவும் அச்சமாகவுள்ளது. ‘

‘ பயம் வேண்டாம். ‘நீண்ட மலையின் ‘(Montagne Longue) வடக்கு திசையின் அடிவாரத்திலேதானிருக்கிறோம். இன்னும் சிறிதுதூரந்தான். ‘

புதுவெள்ளக் களிப்பில் தூரத்தில் துள்ளிப்பாயும் ‘கல்பாஸ் நதியின் ‘(River des Calebasses) ஆரவார ஓசையைக் காதில் வாங்கியவாறு இருவரும் அத்திசைநோக்கி நடக்கவாரம்பித்தார்கள். சகோதரன் வார்த்தைகள் அவளுக்கு நம்பிக்கையூட்டியிருக்கவேண்டும். பயத்தினை உதறிவிட்டு, அவன் பின்னே நடக்கவாரம்பித்தாள். கதிரவன், நாளைமுடித்ததன் அடையாளமாக மேற்கில்தெரிந்த மலைகளின் பின்னே கதவடைத்துக் கொண்டிருந்தான். கடிக்கும் அட்டைகளையும் தெள்ளுப்பூச்சிகளையும் ஒதுக்கிவிட்டுத் தாழ்ந்த கிளைகளின் மோதல்களிற் தப்புவித்து, அபாந்தொன்னே (River l ‘abondonnais) ஆற்றினையொட்டியிருந்த சமதளத்தை இருவரும் அடைந்திருந்தார்கள்.

ஒழுங்கற்ற சாலைகளில், காளான்களென இந்தியத் தமிழர்களுக்கெனவும், மலபார் மக்களுக்கெனவும் உருவாக்கப்பட்டிருந்த கபான்கள் எனப்படும் குடியிருப்புகள். மரப்பலகைகளால் உருவாக்கபட்டு கூரைகளில் இலை, தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்களின் கூடுகள். கூரைகளிருந்து வரும் அரிசிச்சோறும், குழம்பின் மணமும் இவர்களின் நாசியை மட்டுமல்ல மனத்திற்கும் சந்தோஷத்தைக் கொண்டுவந்திருந்தது.

தங்கள் குடியிருப்பைக் கண்ட ஆனந்தத்தில் ஓட்டமும் நடையுமாக விரைந்துவந்தார்கள். கதவு திறந்திருந்தது. வீட்டிலிருந்த தட்டுமுட்டுச் சாமான்கள் இறைந்து கிட,ந்தன. இவர்களின் அன்னை காமாட்சி மூர்ச்சையாகிக் கிடந்தாள். அவள் தலையிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது….

/தொடரும்/

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா