பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 12

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


பசுமை அரசியல் என்பது நீதி,சமத்துவம் என்பவற்றிலிருந்து பிரிக்கமுடியாத ஒன்று என்பது இன்று தெளிவான ஒன்று.எனவே பசுமை அரசியலை மரம் நடுதல், ஆறுகளை சுத்தப்படுத்துதல், தெருக்களை சுத்தமாக வைத்திருப்பது என சுருக்க முடியாது.நீதி,சமத்துவம் என்பதை உலக அளவிலும் பசுமை அரசியல் வலியுறுத்துகிறது.எனவேதான் பூமியின் நண்பர்கள், பசுமை அமைதி போன்ற அமைப்புகள் வளர்ச்சியுறும் நாடுகளின் தேவைகள் குறித்தும் அக்கறை கொள்கின்றன.சர்வ தேச சூழல் ஒப்பந்தங்கள் வளர்ச்சியுறும் நாடுகளின் பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகளை கணக்கில் கொள்ள வேண்டும், உலகமயமாதலின் விளைவாக சூழல் சீர் கேடுவதை தடுக்க சர்வ தேச சூழல் ஒப்பந்தங்கள் உலக வணிக அமைப்பின் விதிகளுக்கு கீழ்பட்டவை அல்ல என்பதை அனைத்து நாடுகளும் ஏற்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை அவை முன்வைத்துள்ளன. இது தவிர அவை உலக பொருளாதாரம் குறித்தும் விமர்சனம் முன்வைக்கின்றன. அதே சமயம் சூழல்பாதுகாப்பு அமைப்புகள்/இயக்கங்கள் சர்வதேச வணிகம்- உலகமயமாதல்-சூழல் குறித்து ஒரே கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. வட அமெரிக்க சுதந்திர வர்த்தக அமைப்பு உருவாவது குறித்து அமெரிக்கா-கனாடாவில் உள்ள அமைப்புகள்/இயக்கங்கள் பொதுவான அக்கறையிருந்தாலும், கருத்து வேறுபாடுகள் காரணமாக மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்தன.உலகமயமாதல் சுழல்பாதுகாப்பு இயக்கங்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது.

மனித செயல்பாடுகளால் சூழல் சுழற்ச்சி அமைப்புகளில் மாற்றம் ஏற்படுகிறது.இதன் விளைவுகள் குறித்து அறிவியலால் முழுமையாக அறுதியிட்டுக் கூறமுடியாது. உதாரணமாக உலக தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்து இரு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஒரு சிலர் இப்போதுள்ள தகவல்கள், மாதிரிகள், கோட்பாடுகள் மனிதச்செயல்பாடுகள் பெரும் தாக்கத்தை உண்டாக்குகின்றன, இதன் விளைவாக தட்பவெப்ப மாற்றம் ஏற்படுகிறது என்பது ஏற்க இயலாத ஒன்று என்கின்றனர்(1).வேறு சிலர்

இதனை மறுக்கின்றனர்,

‘Our observational records and models are far from perfect, and it may take decades to make them sufficiently

conclusive to convince everyone.By then the deed will have been done.As we continue to ignore or debate the issue, the question we must ask ourselves grows evermore urgent : How much risk do we want to take before slowing down the expriment human beings are performing on the planet ‘(2).

இவ்வாறு ஒரு முக்கியமான பிரச்சினயில் கருத்து வேறுபாடு காரணமாக கயோட்டா ஒப்பந்தம் போன்றவை முழுமையாக நிறைவேற்றப்படாத நிலை உள்ளது. UNEP நிதிப்பற்றாக்குறை இருப்பினும் சிறப்பாக செயல்பட முயல்கிறது.உலக சூழல் நிறுவனம்(WORLD ENVIRONMENT ORGANISATION) தேவை என சிலர் வலியிறுத்திவருகினறனர். ஆனால் ஐ.நா அமைப்பே பலமிழந்துள்ள நிலையில் இத்தகைய ஒரு அமைப்பு நிறுவப்பட சாத்தியக்கூறுகள் குறைவு. தீர்க்கப்படாத இன்னொரு விஷயம் – சர்வதேச சூழல் ஒப்பந்த விதிகளும், உலக வர்த்தக அமைப்பின் விதிகளும் மாறுபடும் போது, எவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும், எது முன்னுரிமை பெறும். இது குறித்த விவாதங்கள் முன்னேற்றமின்றி தேக்க நிலையில் உள்ளன.

இப்படி பல உதாரணங்கள் தரலாம்.பசுமை அரசியல்,பசுமைக் கண்ணோட்டம் என்று நாம் பேசும்போது இவை பற்றி பேசுவது தவிர்க்க இயலாத ஒன்று. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை இருந்தாலும் கூட மாறுபடும் மதிப்பீடுகள்,முன்னுரிமைகள், கருத்தியல்கள் காரணமாக செயல்பாடுகளில் முட்டுக்கட்டை உள்ளது.உதாரணமாக பசுமைஇல்ல வாயுக்களின் அளவைக் குறைப்பது என்பது அமெரிக்க வாழ்நெறிக்கு (lifestyle) எதிரானது எனப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. சமீப காலம் வரை global warming பொய் என்ற வாதிடும்,பிரச்சாரம் செய்யும் ஒரு அமைப்பிற்கு போக்குவர்த்து,எரி சக்தித்துறையில் உள்ள பல அமெரிக்க நிறுவனங்கள் நிதி உதவி செய்தன, தற்போது ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஆதரவை விலக்கிகொண்டுவிட்டன.இன்றும் சில நிறுவனங்கள் இந்நிலைப்பாட்டினையே முன்வைக்கின்றன.

எனவே பசுமை அரசியல்,பசுமைக் கண்ணோட்டங்கள் மேற்பார்வைக்கு எளியவை போல் தோன்றினாலும், உண்மை வேறு.இக்கட்டுரை தொடரில் ஒரு சிலவற்றை மட்டும் கோடிட்டுக் காட்டியுள்ளேன். இத்தொடர் இத்துடன் நிறைவு பெற்றாலும் பசுமை அரசியல்,சுற்றுச்சூழல் பிரச்சினககள்,பசுமைக் கண்ணோட்டங்கள் குறித்து திண்ணையில் எழுதுவேன்.இவை குறித்து நான் ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன், எழுதியும் வருகிறேன்.மேல் விபரம் வேண்டுமெனில் என்னைத் தொடர்பு கொள்ளவும். DOWN TO EARTH, ECONOMIC&POLITICAL WEEKLY, SANCTUARY ASIA ஆகியவை நான் சிபாரிசு செய்யும் சில வெளியீடுகள்.

(1)Global Warming-Rushing to Judgement-Jack M Hollander-The Wilson Quarterly-Spring 2003

(2)Global Warming-Exprimenting With the Earth-V.Ramanathan,T.P.Barnett-The Wilson Quarterly-Spring 2003

ravisrinivas@rediffmail.com

Series Navigation

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


இந்த சட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு உருவானது.பல் எதிப்பியக்கங்கள் உருவாயின. ஆனால் அரசு அவற்றை அடக்கியது. தொடர்ந்து காடுகளை ஏகாதிப்பத்தியத்தின் நலனுக்காக பயன்படுத்தியது. இதனால் விவசாயிகள்,காடுகளை சார்ந்து வாழ்வோர் பாதிக்கப்பட்டனர். மேலும் காடுகள் மூலம் அரசிற்கு கிடைக்கும் வருவாய் பெருகியது. ஒரு புறம் பாரம்பரிய வேட்டைக் குழுக்கள் வேட்டையாடுவது தடுக்கப்பட்டது.ஆனால் ஆங்கிலேயர், சமஸ்தான ராஜாக்கள் தடையின்றி வேட்டையாடினர். காடுகளை அழித்து பயிரிடுவது, பின் அப்பகுதியை அப்படியே விட்டுவிட்டு வேறோரு பகுதியை அழித்து பயிரிடுவது போன்ற பாரம்பரிய முறைகள் தடை செய்யப்பட்டன. கைவினைஞர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதும் அரசின் விதிமுறைகளால் தடைப்பட்டன.இவ்வாறு காலனிய ஏகாதிபத்தியம் இந்தியக்காடுகளுக்கும், மக்களுக்கும் நிலவிய உறவினை மாற்றி அமைத்து, காடுகள் அரசின் முழுச் சொத்து என்பதை நடைமுறைப்படுத்தியது.

காடுகள் குறித்த அன்றைய விவாதங்க்ள், போராட்டங்களை சுட்டிக்காட்டும் காட்கில், குஹா, 1947 க்குப் பின்னரும் கூட காடுகள் குறித்த் கொள்கை அரசுமைய வாதமாகவே உள்ளது.இதனால் அரசும்,அரசின் தொழில் கொள்கையால் பயன்பெரும் தொழிற்ச்சாலை முதலாளிகளுமே பயன் பெறுகின்றனர் என்பதினை ஆதாரங்களுடன் காட்டுகின்றனர். உதாரணமாக மூங்கில் கைவினைஞர்களுக்கு மிக அதிக விலையுலும், தொழிற்சாலைகளுக்கு மிகக் குறைந்த விலையிலும் விற்கப்படுகிறது. மூலவளங்களை பயன்படுத்தும் தொழிற்துறைக்கு பல சலுகைகள், தங்கள் சிறு தேவைகளுக்காக காடுகளை பயன்படுத்துவோருக்கு சலுகைக்கள் இல்லை.மாறாக அவர்கள் காட்டு நிர்வாகத்தினால் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.

இந்த இரு நூல்களிலும் காட்கில்,குஹா இவ்வாறு சூழல் பிரச்சினைகளை சமூக அமைப்பு,அரசு, தொழில்மயமாதல் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தியே ஆராய்ந்துள்ளனர். 1947 க்குப்பின் அரசின் கொள்கைகள் மூலம் பாரம்பரியத் தொழில் முனைவோர், பழங்குடியினர் வாழ்வுரிமைகளுக்கு எதிராக உள்ளது என்பதையும் இவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

பசுமைப்பார்வை என்பது நீதி,சமத்துவம்,மனித உரிமைகள் என்பனவற்றையும் உள்ளக்கிய ஒன்றாக இருக்க வேண்டும்.காடுகளின் அழிவை வெறும் இயற்கை சார்ந்த பிரச்சினையாகக் காணக்கூடாது. காடுகளின் நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்ப்பு அவசியம்.தொழில்மயமாதல் என்பது மூலவளங்களை மானியமாத் தருவது என்ற அடிப்டையில் இருக்ககூடாது- இது போன்ற பல கருத்துகளுடன், தீர்வுகளையும் இவர்கள் முன்வைக்கின்றனர். அஷிஸ் கோத்தாரி, (அமரர்) அனில் அகர்வால், சரத குல்கர்னி போன்ற பலரின் கருத்துக்கள் இவர்களின் கருத்துக்களுடன் ஒத்தவை. காந்திய சிந்தனையின் தாக்கத்தினை இவற்றில் காணலாம். இந்தியாவில் மக்களின் வாழ்வுரிமை என்பதை தேசிய நலன் என்ற பெயரில் பலியிட முடியாது என்பதே இவர்களின் நிலைப்பாடு.

அடுத்த பகுதியுடன் நிறைவுறும்

ravisrinivas@rediffmail.com

Series Navigation

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


காடுகள் குறித்த விவாத்ததில் மூன்று நிலைப்பாடுகள் காணப்பட்டன.காடுகள் அரசின் முழு உடைமை,அவற்றின் மீதான அதன் ஆதிக்கம் முழுமையானது, இதற்கு மாறாக உள்ள சலுகைகள்,விதிமுறைகள், நடைமுறையில் உள்ள உரிமைகள் விலக்கப்பட வேண்டும் என்று சிலர் வாதிட்டனர்.இன்னொரு பிரிவினர் முக்கியமான,மதிப்புமிக்க காடுகளின் மீதான கட்டுபாடு அரசின் வசம் இருக்கட்டும், பிற காடுகள் பழங்குடியினர்,சமூகங்கள் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்றனர்.வேறு சிலர் காடுகள் மீதான பாரம்பரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், அரசு இதில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது என்றனர்.அரசின் முழு உரிமையை ஆதரித்தோர் பயிரடப்படும் தனியார் நிலம் தவிர பிற நிலங்கள், காடுகள் அரசின் முழு உடமை, எனவே அரசு தரும் சலுககைகளாகவே பாரம்பரிய உரிமைகளை கருத வேண்டும்.அதைத் தருவதும், எவற்றை தருவது என்பதையும் தீர்மானிக்க வேண்டியது அரசுதான் என்றனர்.ஆனால் அப்போதிருந்த மதராஸ் அரசு இந்த வாதத்தை ஏற்க வில்லை.அவை சலுகைகள் அல்ல, உரிமைகள் என்றும்,காடுகள் பொதுச்சொத்து என்றே மதராஸ் ராஜதானியின் பல பகுதிகளில் கருதப்படுவதாகவும்,நடைமுறையில் உள்ள இந்த உரிமைகள் ஏற்கபடவேண்டும் எனவே அரசின் முழு உடமையாளராக அரசு இருக்க வேண்டியத்தில்லை என்று வாதிட்டது. பிராண்டிஸ் கிட்டதட்ட இந்த நிலைப்பாட்டினையே ஆதரித்தார்.பிராண்டிஸ் இதில் ஐரோப்பா/இங்கிலாந்தில் உள்ள நடைமுறையை இந்தியாவிலும் அமுலாக்கலாம்,எனவே காடுகள் மீதான அரசின் உரிமை,கட்டுப்பாடு பாரம்பரிய உரிமைகளை அங்கீகரித்து, சமூகங்களுக்கு நிர்வகிக்க உள்ள உரிமையை ஏற்பதாக இருக்க வேண்டும் என்றார்.ஆனால் அரசின் முழு உரிமை என வாதிட்ட பாடென் பெளல் இந்தியா காலனிய நாடு என்பதால் இங்கிலாந்தில் உள்ளதை இங்கும் அமுல் செய்யத்தேவையில்லை என்றார்.இந்த உரிமைகள் அரசின் மரத்தேவைகளுக்கு எதிரானவை, அரசின் முழுக்கட்டுபாட்டில் காடுகள் இருந்தால்தான் அரசு தன் தேவைகளுக்கு காடுகளை தடையேதுமின்றி பயன்படுத்த முடியும் என நம்பினார்.1874 ல் நடந்த மாநாட்டில் பிராண்டிஸ் கருத்திற்கு ஆதரவு குறைவாகவே இருந்தது.பெரும்பாலோர் அரசின் கட்டுப்பாடு,உரிமை குறித்த அவரது கருத்தினை நிராகரித்தனர்.அப்போதிருந்த விவசாயத்துறை செயலாளர் பெளல் கருத்தினையே பிரதிபலித்தார், ஆனால் மதராஸ் அரசு காடுகளில் அரசின் தலையீடு மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்று வாதிட்டது. பிராண்டிஸ் இந்த இரு முற்றிலும் எதிரான நிலைகளுக்கிடையே இடைப்பட்ட ஒரு நிலைய எடுத்த்தார்.அரசு காடுகள்,தனியார் காடுகள்,கிராமங்கள்,சமூகங்களின் காடுகள் என மூன்று வகைக்காடுகள் இருக்கட்டும்.அரசு தன் தேவைக்காக பெரிய பரப்பிலான காடுகளை மட்டும் எடுத்துக் கொள்ளட்டும்,பிறவற்றில் அதன் தலையீடு தேவையில்லை என்றார். ஆனால் இந்த சர்ச்சையில் அவரது நிலைப்பாடும்,மதராஸ் அரசின் நிலைப்பாடும் கடும் விமர்சனத்திற்குள்ளாயின. விவசாயத்துறை செயலாளர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். எனவே 1878 இயற்றப்பட்ட சட்டம் காடுகள் குறித்து ஒரு பெருமாறுதலைக் கொண்டுவந்தது.

இதன்படி மூன்று வகைக்காடுகள் ஏற்படுத்த்ப்பட்டன. ரிசர்வ் காடுகள் – இவற்றில் அரசின் கட்டுப்பாடு முழுமையானது,இவை முழுதும் அரசின் உடமை, இவற்றின் பயன் குறித்து அரசுதான் முடிவெடுக்கும்.இக்காடுகளில் தனியார் உரிமைகள்/சலுகைகள் கிடையாது.அப்படி இருந்தவையும் பிற பகுதிகளுக்கு மாற்றப்பட்டன.பாதுகாக்கப்பட்ட காடுகள்-இவற்றில் பிற(ர்) உரிமைகள் பதிவு செய்யப்பட்டாலும், ஏற்கப்படவிலலை.இக்காடுகளில் அரசு தன் தேவையைப் பொறுத்து பிற பயன்பாடுகளை(உ-ம் விறகு/சுள்ளி பொருக்குதல்,கால்ந்டை மேய்ப்பு) தடை செய்ய முடியும்.இக்காடுகளில் எவற்றை வளர்ப்பது என்பதும், எப்போது மரங்களை வெட்டுவது என்பதும் அரசின் உரிமைகள்.கிராமக் காடுகள் என்ற பிரிவினை ஏற்படுத்த சட்டம் வழிவகுத்தாலும், பல பகுதிகளில் அவை ஏற்படுத்த்ப்படவில்லை. இதன் விளைவாக இரண்டு வகைக் காடுகள் அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தன.காடுகள் அரசுடைமையாயின. அரசு தன் கட்டுப்பாட்டினை விரிவாக்க பாதுகாக்கப்பட்ட காடுகளையும் ரிசர்வ் காடுகள் என அறிவித்த்து.இதன் விளைவாக அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள ரிசர்வ் காடுகளின் பரப்பு அதிகரித்தது. 1878ல் அரசுக்காடுளின் பரப்பளவு 14000 சதுரமைல்கள், 1890 ல் ரிசர்வ் காடுகள் 56000 சதுரமைல்,பாதுகாக்கப்பட்ட காடுகள் 20,000 சதுரமைல், 1900 ல் ரிசர்வ் காடுகள் 81,400 சதுரமைல்கள், பாதுகாக்கப்பட்ட காடுகள் 3300 சதுரமைல் மட்டுமே.

இந்த சட்டத்தின் விளைவாக பல மாறுதல் ஏற்பட்டன.காடுகள் குறித்த் நிர்வாகம் அரசு வசம் வந்தபின் ‘விஞ்ஞான ‘ ரீதியான காட்டு நிர்வாகம் குறித்து அரசு கவனம் செலுத்தியது.

தொடரும்

Series Navigation

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 9

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


பிரிட்டனின் தேவைகளுக்காக ஐயர்லாந்து,வட கிழக்கு அமெரிக்கா உட்பட பல பகுதிகளிலிருந்த காடுகள் அழிக்கப்பட்டன.இரும்பு உற்பத்தி, கப்பல் கட்டுதல், ராணுவத்திற்கான கப்பல் கட்டுதல் போன்றவற்றிக்கு தொடர்ந்து மரப்பொருட்கள் தேவைப்பட்டது. எனவே இங்கிலாந்தில் உள்ள காடுகள் பயன்படுத்த்ப்பட்ட பின் புதிய காலனிகளிலிருந்து மரப் பொருட்களை தருவிப்பது ஊக்குவிக்கப்பட்டது.பிரிட்டனுக்காக சூரத்திலும்,மலபார் பகுதியிலும் கப்பல்கள் கட்டப்பட்டன, தேக்கு அப்போதைய மெட்ராஸ் ராஜதானி, பர்மா பகுதிகளிலிருந்து பெறப்பட்டது. மாராத்தாக்களை வீழ்த்திய பின்னர் மேற்க்கு இந்தியப்பகுதியிலிருந்த காடுகளும் கிழக்கிந்திய கம்பெனிவசமாயின.காடுகளை அழித்து விவசாய நிலங்களாக மாற்றுவது ஆதரிக்கப்பட்டது. நில வரி பெறவும், விவசாயத்தினை ஊக்குவிக்கவும் இவ்வாறு செய்யப்பட்து. ஆனால் ரயில்வே பாதைகள் கட்டுதல் துவங்கிய பின் காடுகளின் அழிப்பு புதிய உச்சதை எட்டியது.காடுகள் தேவைக்கு அதிகமாகவே அழிக்கப்பட்டன.

கர்வால்,குமாஒன் (இமாலய மலைப்பகுதிகள்) பகுதிகளில் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டன, தேவைக்கு அதிகமாக வெட்டப்பட்ட மரங்கள் அப்படியே விடப்பட்டன. ரயில்வேக்கு தேவையான கரியும் காடுகளிலிருந்தே பெற்ப்பட்டது. நிலக்கரி சுரங்கங்கள் பெருமளவில் தோண்டப்பட்டு, நிலக்கரியே பிரதானமான எரிபொருளாகும் வரை காடுகள் இதற்காகவும் அழிக்கப்பட்டன. இருப்புபாதைகள் அமைக்க தேவையான மரக்கட்டைகளும் காடுகளை அழித்தே பெறப்பட்டன. 1860 ல் இருப்புபாதையின் நீளம் 1349 கிமீ, இது 1910 ல் 51658 கிமீ .இதிலிருந்து காடுகளின் அழிவு குறித்து நாம் புரிந்துகொள்ள முடியும். இருப்புபாதை அமைக்க பொருத்தமான மரவகைகள் தவிர பிற மரவகைகளும் பயன்படுத்த்ப்பட்டன. காடுகள் இப்படி பொறுப்பற்ற முறையில் அழிக்கப்படுவதால் அவை முற்றிலுமாக விரைவில் அழிந்துவிடும் என்று எச்சரிக்கப்படும் அளவிற்கு காடுகள் அழிக்கப்பட்டன.இருப்புபாதை அமைப்பதற்காக வடமேற்கு இமாலயப் பகுதிகளிலிருந்த தியோதர் மரக்காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டன.இவ்வாறு இந்தியாவின் பலபகுதிகளிலும், பர்மாவிலும் காடுகள் நிர்மூலமாக்கப்பட்டன.

1864ல் காடுகளுக்கென ஒரு துறை ஆரம்பிக்கப்பட்டது.அப்போது ஐரோப்பாவில் காடுகள் நிர்வாகத்தில் ஜெர்மனி முதலிடத்திலிருந்தது. எனவே டைரிஷ் பிராண்டிஸ் என்ற ஜெர்மானியர் இத்துறையின் முதல் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். காடுகள் இவ்வாறு அழிக்கப்பட்டாலும், பல பகுதிகளில் காடுகள் உழவர்கள், பழங்குடியினருது கட்டுப்பாட்டில் இருந்தது. காடுகளின் மீதான அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும்,காடுகளை நிர்வகிக்கவும் 1865 ல் இந்திய காடுகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், 1878ல் இன்னொரு விரிவான சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் நிறைவேற்றப்படுமுன் ஒரு பெரியளவிலான விவாதமே நடந்தது. காடுகளின் நிர்வாகம், காடுகளின் மீதான பாரம்பரிய உரிமமைகள் உட்பட பல அம்சங்கள் இவ்விவாதத்தில் இடம் பெற்றன. கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு பின் காடுகளும்,அரசும் குறித்த விவாதத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் மூலத்தை இதில்

காணலாம்.

1865 சட்டம், இருப்பில் உள்ள உரிமைகள் பாதிக்காதபடி, காடுகளை உடனடியாக அரசு தன்வசம் மேற்கொள்ள இயற்றப்பட்டது.இதன் முக்கிய காரணம் ரயில்வேயின் தேவைக்காக காடுகளை அரசு குறிப்பிட்டு தன்வசமாக்கிக்கொள்ள உதவவே இது கொண்டுவரப்பட்டது. இதன் பின் 1869 ல் ஒரு சட்ட முன் வடிவு பிராண்டிஸால் முன்வைக்கப்பட்டது. 1874ல் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் 1865ல் இயற்றப்பட்ட சட்டம் விரிவாக ஆராய்ப்பட்டது.பின் 1875 ல் சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு 1878ல் புதிய சட்டம் இயற்றப்பட்டது.

(வெள்ளைக்காரன் கதை என்ற நாட்டுப்புற பாடலிலும் கப்பல் கட்ட உதவும் மரங்கள் பற்றி குறிப்புகள் உள்ளன என்று நினைக்கிறேன்.கைவசம் அதன் பிரதி இல்லாததால் இது பற்றி அதிகத் தகவல்கள் தரமுடியவில்லை)

(தொடரும்)

ravisrinivas@rediffmail.com

Series Navigation

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 8

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


காட்கில்,குஹா சாதிய அமைப்பு இந்து மதம் தனக்கு எதிரான குழுக்களை, இங்கு குழுக்கள் என்பது பல்வகை உற்பத்தி நிலையில் உள்ள, சூழலை பல வகையில் பயன்படுத்தும் குழுக்கள் என்ற அர்த்ததில் உள்வாங்க சாதிய அமைப்பினைப் பயன்படுத்திக் கொண்டது, அதன் மூலம் காடுகளில் வாழும் குழுக்களும், நிலையான் விவசாயத்தில் ஈடுபடும் குழுக்களும் தத்தமமுக்குரிய பகுதிகளில் மூலவளங்களை பயன்படுத்தி வர முடிந்தது.ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் சாதியஅமைப்பு முழுமையான இனஅழிப்பாக இல்லாததால் வேடுவர்,சேகரிப்போர் தங்கள் இருத்தலை உறுதி செய்து கொள்ள முடிந்தது. மேலும் ஒரு சில பகுதிகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டதால் மூல வளங்கள் பகிர்வு என்பது பெரும் சண்டைகளுக்கு காரணமாக இல்லை. இங்கு சாதி என்பது சூழல், மூலவளங்கள் பகிர்வு ஆகியவை குறித்த ஒரு ஒழுங்கமைப்பாகவும் காட்டப்படுகிறது. இந்த விளக்கம் எளிதாகத தோன்றினாலும் இது சாதிய எற்றத்தாழ்வினை விளக்க போதுமானதாக இல்லை. உதாரணமாக விவசாயம் செய்வோர் சாதிய அமைப்பில் அறிவுசார் தொழில் செய்தோரை விட கீழான நிலையிலே இருந்தனர்.அதே சமயம் அதிகாரத்தினை கைப்பற்றியோர் தங்களை சத்திரியர் என்று அறிவித்துக் கொண்டு அதற்கான ‘வரலாறு ‘ களை ஆதாரமாகக் காட்டியதும் நடந்துள்ளது. மேலும் இந்து மதம் அரசு ஆதரவுடன சைன,பெளத்த மதங்களை எதிர்த்து அழிக்க முனைந்தது. உள்வாங்கல் என்பதை விட எதிர்த்து ஒழிப்பதே முக்கியமான உத்தியாக கையாளப்பட்டுள்ளது. எனவே உள்வாங்கல் என்பதே ஒரு வன்முறை உத்திதான். காட்கில்,குஹா மட்டுமே இப்படி வாதிட்டார்கள் என்று கருத வேண்டாம். 2001/2002 ? ல் EPW ல் ஒரு கட்டுரை – சாதியையும், சூழலையும் தொடர்பு படுத்தி ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.

ஆனால் இந்தியாவில் காலனியாட்சி பலம் பெறும் வகையில் சாதிய அடிப்படையிலான சமூக அமைப்பிலும், அதில் நிலவிய மூலவளப்பகிர்வு முறையிலும் பெரிய மாற்றங்கள் இல்லை.முகலாயரின் நீண்ட கால ஆட்சியாலும் இது பாதிக்கப்படவில்லை. எனவே அரசுகள் மாறினாலும் சமூக அமைப்பின் அடித்தளம் அப்படியே நீடித்து என்றே சொல்லலாம். ஆனால் காலனியாதிக்கம் இந்தியாவில் நிலைகொண்ட போது ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின் தாக்கங்கள் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தத துவங்கின. முன் எப்போதும் இல்லாத வகையில் மூல வளங்களை பயன்படுத்த முடிந்த்து, நீண்ட தொலைவிற்கு மூலப்பொருட்கள், உற்பத்திப்பொருட்களை எடுத்துச் செல்வது சாத்தியமானது. ஐரோப்பாவில் தனிஉடமை முறை வலுப்பெற்றது. பொதுவில் இருந்த நிலங்கள், வளங்கள் நிலச்சுவான்தார்,அரசு வசமாயிற்று(ENCLOSURE OF THE COMMONS). சந்தையே முக்கியமான உறவுமுறையாக மாறியது. தொழிற் புரட்சிக்கு தேவையான தொழிலாளி வர்க்கம் இப்படிபட்ட ஒரு சமூக மாறுதல் மூலமே உருவாக்கப்பட்டது. எனவே காடுகள் ஆவிகள்/வணக்ததிற்குரிய சக்திகள் வசிக்கும் பகுதிகளாக கருதப்பட்ட நிலை மாறி மூல வளங்களுக்கான பகுதிகளாக காணப்பட்டன, மூலவளங்களின் உபயோகம்/பயன்படுத்தல் மீதான தடைகள், குறிப்பாக பண்பாட்டு ரீதியான கட்டுப்பாடுகள் வலுவிழந்தன. இதன் விளைவாக வணிக உபயோகமே முக்கியத்துவம் பெற்றது, சமூகங்களின் தற்சார்பு தேவைகளை மையமாகக் கொண்ட உற்பத்தி முறைகள், உறவுகள் பலமிழந்தன. ஐரோப்பாவில் நடந்த இம்மாற்றங்களின் தொடர்ச்சியாக இந்தியாவிலும் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

காலனியத்தின் சூழல்தாக்கங்கள் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள் குறித்தும் காட்கில்,குஹா குறிப்பிடுகின்றனர். காலனியம் என்பது வெறும் பண்பாட்டு அழிவினை மட்டும் நிகழ்த்தவில்லை.உலக அளவில் சூழலில் பெறும் மாறுதல்களைக் கொண்டுவந்தது. அடிமை வணிகம், உலகளாவிய சந்தை,கடல்வணிகம் குறித்த போர்கள், என பல வழிகளில் காலனியாதிக்கம் தன்னை விரிவுபடுத்திக்கொண்டது. அதன் காலடிக்சுவடுகள் பதிந்த இடங்களில் சூழ்ல் அழிவும் தொடர்ந்தது. அதன் தாக்கதினை அமெரிக்காவில் துவங்கி, நீலகிரிமலைப்பகுதிகள் வரை பல பகுதிகளில் காணலாம். எனவே சூழல் வரலாறு என்பதை பிற வரலாற்று சான்றுகளுடன் சேர்த்து படித்தால் மனித வரலாறும்,இயற்கையின் வரலாறும் பிண்ணிப்பிணைந்துள்ளதை காணமுடியும். மனிதனின் துயரமும்,இயற்கையின் துயரமும் இணைந்தே காணப்பட வேண்டும்.

1492 ல் கொலம்பஸ் அமெரிக்காவை ‘கண்டுபிடித்தார் ‘. அதன்பின் ஐநூறு ஆண்டுகளாகிய பின்னும் காலனியத்தின் தாக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. 1992 நிகழில் எழுதிய கட்டுரைகளில் அமெரிக்காவில்(வட,தென்) காலனியாதிக்கத்தின் சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்து எழுதியிருக்கிறேன். காலனியாதிக்கம் உலகெங்கும் ஒரே மாதிரியான விளைவினையே ஏற்படுத்தியுள்ளது. அதனை உலாகாளாவிய மூலவளச்சுரண்டல் முறை எனலாம். GLOBAL ENCLOSURE OF COMMONS என்பது இன்னும் பொருத்தமான பெயர். உலகெங்கும் ஒரே சூழல் பயன்படுத்தும்/சுரண்டும் முறையினை உருவாக்கிய காலனியாத்திக்கத்தின் தேவைகளுக்காக இந்தியக் காடுகள் மாற்றப்படுவதே இந்தியாவில் சூழல் மீதான அதன் முதல் போர்.

(தொடரும்)

ravisrinivas@rediffmail.com

Series Navigation

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 7

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


குஹா,காட்கில் இந்தியாவின் சூழல் வரலாறு குறித்து எழுதியுள்ள நூலில் மூலவளங்களின் பயன்படுத்து முறை என்பதை உற்பத்தி முறை என்பதுடன் இணைத்து காண்பதன் மூலம் காலந்தோறும் சமூகம் இயற்கையை எப்படி அணுகியுள்ளது, பயன்படுத்தியுள்ளது என்ற அடிப்படையில் ஒரு வரலாற்றுப் பார்வையை தர முடியும் என்று குறிப்பிடுகிறார்கள். தொழில்நுட்பம்,உற்பத்தி உறவு முறை, சமூக அமைப்பு,குடும்ப அமைப்பு,சொத்துரிமை அமைப்பு ஒருபுறமும், மனித இயற்கை உறவினை மதிப்பிடுகிற,நியாயப்படுத்துகின்ற நம்பிக்கை அமைப்புகள் இரண்டும் இயற்கை மனித உறவை பல்வேறு காலகட்டங்களில் புரிந்து கொள்ள உதவும் என்றும்,சமூகத்தில் ஏற்படும் மோதல்கள், மூலவளங்களின் பயன்படுத்து முறை இரண்டிற்கும் உள்ள தொடர்பை ஆராய்வது அவசியம் எனவும் கருதுகிறார்கள்.

நான்கு மூலவளங்களின் பயன்படுத்து முறைகளை வரலாற்றில் நாம் காணமுடியும் என்று கருதும் அவர்கள் ஒவ்வொரு முறைக்கும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளதை ஆராய்கிறார்கள்.(காண்க அட்டவணை 1) சேகரிப்பு(இடம் மாறும் விவசாயமும் உள்ளடக்கியது), நாடோடி மேய்ப்பு,நிலையான வேளாண்மை, தொழில்மயமாதல் என்ற இந்த நான்கு முறைகள்.ஆனால் இவை நான்கும் ஒரு பகுதியில்/நாட்டில் ஒரே சமயத்தில் நிலவுவதும் உண்டு என்பதினை தெளிவாக குறிப்பிடுகிறார்கள். இந்த அடிப்படையில் ஒவ்வொரு

கால கட்டத்திலும் மனித இயற்கை உறவுகள் மாறி வந்துள்ளன. உதாரணமாக சேகரிப்பு முறை பிரதானமாக இருந்த காலகட்டத்தில் இயற்கை வழிபாடு என்பது மூலவளங்களின் உபயோகம் மீதான கட்டுப்பாடுகள் என்பதுடன் தொடர்புடையது, இந்த கட்டுப்பாடுகள் நீண்ட கால கண்ணோட்டத்தில் மூலவளங்கள் கிடைக்க வேண்டும் என்ற தேவையை கருதி உருவாக்கப்பட்டிருக்கலாம்.இவற்றை சில எளிய விதிகள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.ஆனால் காலப்போக்கில் மூலவளங்களை குறைவாக பயன்படுத்துவது கூட பெரும் மாறுதல்களை கொண்டுவரக்கூடும். உதாரணமாக புது மூலவளப்பகுதியை முதன் முதலில் பயன்படுத்தும் போது பெருமளவில் மாறுதல்கள் நிகழ சில செயல்கள் (உ-ம்) தீயிட்டு காட்டு பகுதியை புல்வெளியாக மாற்றுவது) காரணமாக அமைந்துவிடும்.

ஆனால் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்ப்ட விவசாயுமும்,தொழில்மயமாதலும் காரணம்.விவசாய சமூகம்இந்தியாவில் வேட்டையாடும்,சேகரிப்பு சமூகங்களுடன் மோதல்களில் ஈடுபட்டது, இதற்கான சான்றுகளை இதிகாசங்களில் காணலாம். ஜாதிய அமைப்பு உருவாக்கம் என்பது குறித்து அவர்கள் முன்வைக்கும் விளக்கம்

வித்தியாசமானது, சர்ச்சைக்குரியதும் கூட.

அட்டவணை 1

ஆற்றல் மூலவளம் பொருட்கள் அளவு மூலவளபயன்பாடு பகுதி அளவு மூலவளம் பெறப்படும் பகுதி அளவு சமுக அளவு
சேகரிப்பு மனித உடல்,விறகு கல் குறைவு சிறியது-ஆயிரம் சதுர கீமீ (சில ஆயிரம் மக்கள்)
நாடோடி மேய்ப்பு மனித,விலங்கு, விறகு போன்றவை கல்,தாவர, விலங்கு, மிக அதிகமில்லை பெருமளவு பல்லாயிரம் மக்கள்
விவசாயம் மேற்கூறியவை,நிலக்கரி, தண்ணீர் கல்,தாவர,விலங்கு உலோகம், மிக அதிகமில்லை, பெருமளவு பயன்பாட்டில் ஏற்றத்தாழ்வு பல்லாயிரம்-லட்சம்
தொழில்மயம் பெட்ரோலியம்,அணு உலோகம், ஆற்றல்,நீர்மின் சக்தி உலோகம் செயற்கை பொருட்கள் மிக மிக அதிகம் உலகளாவியது லட்ச/கோடி

(தொடரும்)

ravisrinivas@rediffmail.com

Series Navigation

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 6

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


குஹாவும்,காட்கிலும் Ecology and Equity in India என்ற நூலையும் எழுதியுள்ளனர்.இவர்கள் எழுதிய இந்த இரண்டு நூல்களும் இந்தியாவின் சூழல் வரலாறு,வளர்ச்சி குறித்து ஒரு ஒட்டுமொத்தமான புரிதலைத் தருகின்றன.

இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் அதனைப் பற்றி எழுதுகிறேன்.

மலேசிய பிரதமர் மஹாத்தியார் பின் முகமதிற்கு கடிதம் எழுதிய ஒரு பள்ளிச்சிறுவன் தான் மழைக்காடுகளில் உள்ள விலங்குகளை, தான் பெரியவனான பிறகு ஆய்வு செய்ய விரும்புவதாகவும், ஆனால் அவை அழிக்கப்பட்டால் காடுகளும் இரா, பல லட்சக்கணக்கான விலங்குகளும் இரா , ஒரு தனி நபர், மரத்தொழில் அதிபர் இன்னொரு மில்லியன் பவுண்டுகள் அல்லது அதிகமாக பெற இவ்வாறு செய்வது நியாயமா என்று எழுதினான். அதற்கு பதில் அளித்த அவர் பிரிட்டனின் ஊரக பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றி விட்டு காடுகள் வளர்க்கலாம், அவற்றை கரடிகள்,ஒநாய்கள் கொண்டு நிரப்பலாம் என்றும், உன்னை இவ்வாறு எழுதவைத்த பெரியவர்கள் ஆணவம் கொள்ள வேண்டாம், ஒரு நாட்டை எப்படி சிறப்பாக நிர்வகிப்பது என்பது அவர்களுக்கு மட்டும் தெரியும் என எண்ண வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

இதில் பிரச்சினையை பள்ளி சிறுவன் அணுகிய விததிற்கும்,பிரதமர் அணுகிய விததிற்கும் உள்ள முரண் வெளிப்படை.அவர் நாங்கள் காடுகளை அழிக்க வேண்டாம் என்று நீங்கள், அதாவது, வளர்ச்சியுற்ற நாடுகள் விரும்பினால் எங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பிற்கு நஷ்டஈடு தர வேண்டும் என்றார். மேலும் பேனான் பழங்குடி மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கவேண்டும் என்பது எங்கள் கொள்கை, அவர்கள் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கவும், மானுடவியலாளர்கள் ஆய்வு செய்யவும் பயன்படவேண்டியதில்லை. என்றார்.மேலும் ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டு பழங்குடியினரிடம் நிலங்களை ஒப்படைக்கும் போது, நாங்களும் பேனான் பழங்குடி இனத்தவரிடம் காடுகளை திருப்பிக்கொடுப்போம் என்றார்.

இங்கு பிரச்சினையை தங்கள் கோணத்தில் மட்டும் இரு தரப்பினரும் பார்க்கும் போது இன்னொரு தரப்பின் நியாயம் பற்றி அக்கரை கொள்ளப்படுவதில்லை. மழைக்காடுகள் மனிதகுலத்தின் பொக்கிஷம் என்பது நிராகரிக்கபட்டு வளர்ச்சியுற்ற – வளர்ச்சியடையும் நாடுகளின் அரசியலுக்கான இன்னொரு பிரச்சினையாக மாற்றப்படுகிறது. மலேசிய பிரதமர் எடுத்த நிலைப்பாடினை ஒத்த நிலைபாட்டினை இந்தியாவில் பலர் முன்வைக்கின்றனர்.பழங்குடியினர் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும், முன்னேற்றம் என்பது அவர்களை எட்ட வேண்டுமெனில் அவர்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட வேண்டும் என்ற வாதமும் புதிதல்ல.

எனவே திட்டங்கள் வெறும் செலவு-பயன் கணக்கீட்டின் அடிப்படையில் நியாப்படுத்தப்படுகின்றன. ஆனால் இதில் உள்ள பல சிக்கல்கள் விவாதிக்கப்படுவதில்லை. உதாரணமாக பல பெரிய அணைக்கட்டுத் திட்டங்களில் மறு வாழ்வு/புனர் நிர்மாணம் குறித்து ஒரு முழுமையான மதிப்பீடு இல்லை. எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படும், அவர்களுக்கான மாற்று நிலம், நஷ்ட ஈடு போன்றவை குறைவாக மதிப்பிடப்படுகின்றன.அது போல் மூழ்கும்/அழியும் காடுகள், நிலப்பகுதியின் மதிப்பு என்ன என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை (அ) மிக குறைவாக மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் திட்டம் பொருளாதார ரீதியாக ஏற்கத் தக்கது என்று ‘நிறுவப்படுகிறது ‘. இந்தியாவில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டப்பின் செய்யப்பட்ட ஆய்வுகள் ஆரம்ப கட்டத்தில் முன்வைக்கப்பட்ட அனுமானங்கள் தவறு என்பது மட்டுமின்றி, செலவிற்கு ஏற்ப பலன்கள் இல்லை என்பதை காட்டியுள்ளன. ஆனால் இன்றும் பெரியத் திட்டங்கள் வளர்ச்சி என்ற ஒரே காரணத்திற்காக நியாப்படுத்தபடுகின்றன.

இந்த சிக்கல் இந்திய அரசு முதலீடு செய்யும் திட்டங்களில் மட்டுமல்ல, உலக வங்கி, வெளிநாட்டு அமைப்புகள் முதலீடு செய்யும் திட்டங்களிலும் உள்ளன. இதற்கு காரணம் வெறும் பொருளாதர கண்ணோட்டம் மட்டுமல்ல, வளர்ச்சி-முன்னேற்றம் குறித்த பார்வையுமாகும். உதாரணமாக கால்நடை மேய்க்கும் நாடோடிகள் திட்டங்களால் பாதிக்கப்படுவது குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. ஆனால் இந்தியாவில் இப்படி பல சமூகங்கள் இப்படி பாதிக்கபடுவது தொடர்ந்து நிகழும் அவலம்.

சான்றுகள்

Michael R.Dove Academic Relations of Production and CBA, Economic and Political Weekly May 26, 2001 ( www.epw.org.in)

Michael R.Dove Local Dimensions of ‘Global ‘ Environmental Debates : Six Case Studies in A.Kalland, G.Person (Eds) Environmental Movements in Asia, Curzon Press, 1998

Minoti Chakravarti-Kaul Dam a River Why Damn a People – Alpjan Jan-March 2002 (on marginilised pastrolists in Siwalik and Himalayan regions of Punjab and Himachal Pradesh)

Dimitris Stevis, Whose Ecological Justice Strategies Vol 13 No 1 2000 ல் எழுதுகிறார்

‘Problems and solutions are intimately related and it is often the case that problems are framed in ways that fit already adopted solutions.(For instance, economistic cost-benefit accounting leads us into economistic visions of nature). Thus problems/solutions are subject to the same framing processes while their temporal sequence is not as clear-cut ‘

தொடரும்

ravisrinivas@rediffmail.com

Series Navigation

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


1970- களில்தான் சூழல்வரலாறு ஒரு தனித்துறையாக உருவானது.இயற்கைக்கும், மனிதசமூகதிற்கும் இடையே நிலவிய உறவை வரலாற்று ரீதியாக ஆயும் இத்துறையில் இந்திய சமூக அறிவியலாளர்கள் குறிப்பிட்த்தகுந்த பல ஆய்வுகளை செய்துள்ளனர். 1970 களில் அமெரிக்காவில் டொனால்ட் ஒர்ஸ்டர் dust bowl பற்றிய ஆய்வு,காலனியாதிக்கம் உலக அளவில் கொண்டுவந்த மாற்றங்கள் பல புதிய கோணங்களில் இயற்கையின் வரலாறும்,மானுடகுலத்தின் வரலாறும் பிணைந்துள்ளதை விளக்கின.உதாரணமாக தொழிற்புரட்சிக்கு முன்னர் வணிகம் என்ற பெயரில் தென் அமெரிக்காவில் காடுகள் அழிக்கப்பட்டு வணிக பயிர்களான புகையிலை,கரும்பு,பருத்தி போன்றவை பெருமளவில் அறிமுகப்ப்டுத்தப்பட்டன. இதற்கான உழைப்பிற்காக அடிமைகள் வணிகமும் நடைபெற்றது. காலனியாதிக்கம் அறிமுகம் செய்த பயிர்கள்,விலங்குகளும் பல்கி பெருகின. இவற்றின் விளைவாக உலகாளவிய அளவில் இயற்கை மாறுதலுக்குட்படுத்தப்பட்டது. காலனியாதிக்கம் என்பது இயற்கை மீதான ஆதிக்கமாகவும் இருந்தது.

இந்தியாவில் சூழல்வரலாறு குறித்து பலர் ஆய்ந்துள்ளனர். 1980களில் ராமச்சந்திர குஹா இப்போது உத்ரான்சல் மாநிலம் என்றழைக்கப்படும் பகுதியில் காடுகள்-காலனி ஆட்சி-மக்கள் உறவினை சூழல்வரலாறு கண்ணோட்டத்தில் ஆய்ந்தார். காலனி ஆட்சி காடுகள் குறித்து பல விதிகளை விதித்து, காடுகள் அரசின் உடமை என்ற வகையில் சட்டமியற்றியது. ரயில்வே பாதைகள் அமைக்க போன்ற பல காரணங்களுக்காக பெருமளவில் காடுகள் அழிக்கப்ட்டன, காலனியாதிக்கதிற்கத்தின் தேவைகளுக்காக காடுகள் மாற்றியமைக்கபட்டன. இது தவிர காடுகள் குறித்த நிர்வாகம் மக்கள் காடுகளை பயன்படுத்துவதை பல விதங்களில் கட்டுப்படுத்தியது. குஹா தன் ஆய்வுகளை முன் வைத்த போது காடுகள் குறித்த சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல இயக்கங்களால் முன்வைக்கப்பட்டது. சிப்கோ இயக்கத்தின் புகழ் சர்வதேச அளவில் பரவியது. அரசின் சட்டங்கள், காலனியாதிக்கம் மக்கள்-காடுகள் குறித்த காலனியாதிக்க பார்வையின் அடிப்படையில் 1947க்கு பின்னரும் இருப்பதையும், வனவிலங்கு காப்பகங்கள் என்ற பெயரில் மக்கள் காடுகளில் வசிப்பது தடை செய்யப்படுவது,சில பகுதிகளில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது போன்றவை குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்தன. SUBALTERN STUDIES வரலாற்று ஆய்வில் புதிய வாசல்களை திறந்து விட்டது. இத்தகைய பல காரணங்களால் சூழல்வரலாறுபுதிய கவனம் பெற்றது. மாதவ் காட்கில்,குஹா எழுதிய THIS FISSURED LAND என்ற நூல் இந்தியாவின் சூழல்வரலாறு குறித்த சமூகம்-வளர்ச்சி-சூழல்வரலாறு குறித்து ஒரு விவாததிற்கு அடிகோலியது. ஜாதிய அமைப்பினை சூழல்ரீதியாக இது நியாப்படுத்துகிறது என்ற விமர்சனம் எழுந்தது.அடுத்த பதிப்பில் தங்கள் பார்வையினை இவர்கள் தெளிவுபடுத்தினர்.

மகேஷ் ரங்கராஜன்,ரவி ராஜன்,சத்தியஜித் சிங், நந்தினி சுந்தர், அமிதா பவிஸ்கார், சிவராம கிருஷ்ணன், ஹரிப்பிரியா ரங்கன்,அகிலேஷ்வர் பதக் என்று ஒரு நீண்ட பட்டியல் தரக்கூடியளவிற்கு 20 ஆண்டுகளில் பல ஆய்வாளர்கள் இத்துறையில் முக்கியமான ஆய்வுகளை செய்துள்ளனர்.அமிதா நர்மதை திட்டம் குறித்த எதிர்ப்பியக்கத்தையும், சத்தியஜித் சிங் பெரும் அணைக்கட்டுக்கள் குறித்தும் ஆய்ந்தனர். பல ஆய்வுகள் காடுகள்-பழங்குடிகள் குறித்து செய்யப்பட்டன. இவை பல பகுதிகளில் காலனியாதிக்கம்-அரசு இயற்கை-சமூகம் குறித்த உறவுகளில் எற்படுத்திய பாதிப்புகளை ஆய்ந்தன. அப்பகுதி வரலாறுகளையும் புரிந்து கொள்ள இவை உதவுவதுடன், ஒட்டுமொத்தமாக காலனியாதிக்கம் குறித்த ஆய்வுகள் காணத்தவறிய குறிப்பான அம்சங்களை விளக்கின.

இதன் விளைவாக இயற்கைக்கும், மனிதசமூகதிற்கும் நிலவிய/நிலவும் உறவு குறித்த புரிதல் வளப்பட்டதுடன், காடுகள் குறித்த அரசின் கண்ணோட்டதிலும் மாறுதல் ஏறப்ட்டது. உதாரணமாக சிறு வனப்பொருட்களை பழங்குடிகள் பயன்படுத்துவது பல பகுதிகளில் அனுமதிக்கப்பட்டது. காட்டுப்பகுதிகள் மக்கள் ஒத்துழைப்புடன் மட்டுமே சிறப்பாக நிர்வகிக்பட முடியும் என்பது ஒரளவேனும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

சூழல்வரலாறு,சூழல்அரசியல் இரண்டும் தொடர்புடையவை.ஒன்றின் ஆய்வுகள் இன்னொன்றை வளப்படுத்தும் என்ற அளவில் உள்ளன. அதே சமயம் சூழல்வரலாற்று ஆய்வாளர்களிடயே உள்ள பார்வை வேறுபாடுகளையும் நாம் கவனிக்க வேண்டும். உதாரணமாக ஹரிப்பிரியா ரங்கன் குஹாவின் விளக்கங்களிலிருந்து மாறுபடும் பார்வைகளை முன்வைத்துள்ளார்.

krsriniv@indiana.edu

Series Navigation

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


ரேய்மாண்ட் வில்லியம்ஸ்.ஜேம்ஸ் ஸ்காட், கிராம்சி,E.P.தாம்சன் ஆகியோர் முன்வைத்த கருத்துக்கள் 1980களில் கவனம் பெற்றன.ஜேம்ஸ் ஸ்காட் எழுதிய Weapons of the Weak என்ற நூலும்,எதிர்ப்பினைக் குறித்த அவரது கருத்துக்களும் புதிய திசைகளைக் காட்டின. நான்சி பெலுசொ இந்தோனேசிய அரசிற்கும்,காடுகளில் வாழும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களை தாம்சன்,ஸ்காட் முன்வைத்த கருத்துக்களை பயன்ப்டுத்தி காடுகள் குறித்த மோதலில் உள்ள சொல்லாடல்களையும் ஆராய்ந்தார்.மைக்கேல் வாட்ஸ் தெற்கு நைஜீரியாவில் ஓகோனி இன மக்களுக்கும், அரசு,பெட்ரோலிய நிறுவனகளுக்கும் இடையே நிலவிய முரண்பாடுகளை விவரித்தார்.அவர்கள் இயக்கமாக செயல்பட ஓகோனி என்ற ஒன்றுபட்ட அரசியல் அடையாளத்தினை கட்டமைக்க தேவை ஏற்பட்டது.அவர்கள் பெட்ரோலியத்தினை நேசிக்கவில்லை, ஏனெனில், அவர்களைப் பொருத்தவரை அது அந்நியமான ஒன்று- அது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பெரிய பலன் தரவில்லை.மாறாக அதனால் ஏற்ப்ட்ட பல பாதகமான விளைவுகளை அவர்கள் எதிர்கொண்டனர்.

ஆனால் வெனுசுவேலாவில் பெட்ரோலிய என்பது, வெறும் மூலவளமாக மட்டும் காணப்ப்டவில்லை.மாறாக தேசிய அரசியலில் அது குறிப்பிடத்தக்க ஒன்றாக மாறியது.மூலவளம் அரசு வசம் இருக்கும் போது அதை சுற்றி எழும் அரசியல்-சமூக உறவினைப் புரிந்து கொள்ள இத்தகய ஆய்வுகள் உதவுகின்ற .எதிர்சொல்லாடல்கள் குறித்தும் ஆராயப்பட்டது.இந்தோனேசியாவில் காடுகளின் அழிவு குறித்து சர்வதேச அமைப்புக்கள், அரசு ஆகியவை முன் வைத்த கருத்துக்கள் சமுகத்தில் உள்ள பல பிரிவுகளுக்கும், காடுகளில் வசிப்போருக்கும்,அரசிற்கும் உள்ள உறவில் உள்ள சமச்சீரற்ற தன்மையயை மறைத்து, காடுகள் அழிய காடுகளில் வசிப்போரே காரணம் என்ற ரீதியில் இருந்த போது, இதை ஆராய்ந்த மிக்கேல் டொவ் பிரச்சினை எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்தார்.

உலக அளவில் இயற்கைபாதுகாப்பு என்ற பெயரில் தீட்டப்படும் திட்டங்களுக்கும், அவற்றின் தாக்கங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. முற்போக்கானவை/பசுமைக்கண்ணோட்டமுள்ளவை என்று கருதத்ப்படும் திட்டங்கள் தவறான புரிதல்கள், பிரச்சினையினை சரியாக அணுகாமல் முன்மாதிரிகளின் அடிப்படையில் திட்டமிடுவது போன்ற குறைபாடுகள் காரணமாக தோல்வியுறுவதையும், பாதகமான விளைவுகளை ஏற்ப்டுத்துவதையும் பல ஆய்வுகள் காட்டின.மக்கள் புரிதலும், நிபுணர்கள் புரிதலும் முரண்ப்ட்டன.

இது தவிர சூழலியல் கோட்பாடுகள் அனைத்து நாடுகளில் ஒரே மாதிரியாக பொருந்தகூடியவையா என்ற கேள்வியும் எழுந்தது. உதாரணமாக காடுகள்-மனிதர்களுக்கிடையேயான அமெரிக்கா சூழல் ஆய்வாளர்கள்/அமைப்புகள் இந்தியாவிற்கு பொருந்துமா, அமெரிக்காவில் அமுல் செய்யப்பட்ட, WILDERNESS என்ற பெயரில் காடு/வனப்பகுதிகளில் மனிதர் வசிக்கக் கூடாது என்ற நிலைப்பாடு சரியானதா என்ற கேள்வியும் எழுந்து. இந்தியாவில் இது பெரிய சர்ச்சையாக மாறியது. இதற்கு இன்னொரு காரணம் ENVIRONMENTAL HISTOTY என்ற ஆய்வுத்துறையில் செய்யப்ப்ட்ட ஆய்வுகள். இவை பல அனுமாங்களை கேள்விக்குள்ளாக்கின.

1,Closing The ‘Great Divide ‘ : New Social Theory on Society and Nature – Michael Goldman,

Rachel Shurman Annual Review of Sociology 2000

2,Nature as artifice and artifact by Michael Watts in Remaking Reality (Ed) B.Barun,N.Castree

1998

தொடரும்

ravisrinivas@rediffmail.com

Series Navigation

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 3

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


சூழலரசியல் (political ecology) என்ற ஆய்வுத்துறை சமூகம் இயற்கை/சூழல் உறவுகளை ஆய்கிறது, குறிப்பாக இயற்கை/சூழல் பயன்படுத்தபடுவதற்கும்,சமூகத்தின் பல பிரிவினர்,அமைப்புகளுக்கும் உள்ள உறவினை ஆராய்கிறது. பண்பாட்டு சூழலியல் என்ற ஆய்வுத்துறையில் சமூகங்கள்,இயற்கை,ஆற்றல் பயன்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கோள்ளப்பட்டன. ஆனால் இவை அரசியல் பரிமாணத்தினை, இங்கு அரசியல் என்பதை பரந்த பொருளில் பயன்படுத்துகிறோம், கணக்கில் கொள்ளவில்லை என்று கருதப்பட்டதால் சூழலரசியல் எனற பெயரில் சில ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை முன் வைத்தனர்.

1972ல் எரிக் ஓல்ப் எழுதிய Ownership and political ecology என்ற கட்டுரையில் சூழலரசியல் என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன்னோடியாக பார்த் 1956ல் பாகிஸ்தானில் உள்ள மலைப்பகுதிகள், குறுகிய வெளிகளில் வசிக்கும் மூன்று இனக்குழுக்கள,சூழல்,சமூக உறவுகள் செய்த ஆய்வினைக் கூறலாம். அவர் நிலையான விவசாயம் செய்யும் பதான்கள்,விவசாயமும் கால்நடை மேய்ப்பும் செய்யும் கோஹிஸ்டானிகள், நாடோடிகளாக கால்நடை மேய்க்கும் குஜார்கள் ஆகிய மூன்று சமூகங்கள் எப்படி இயற்கையை பயன்படுத்துகின்றன என்பதை ஆய்ந்தார்.

1970 களில் மக்கள் தொகைப்பெருக்கம் ஒரு பூதாகரமான பிர்ச்சினையாக சித்திரக்கப்பட்டு , சூழல்சீர்கேட்டிற்கு முக்கியமான காரணம் என வாதிட்டப்ட்ட போது பல ஆயவாள்ர்கள் சூழலரசியல் அணுகுமுறை மூலம் அவற்றை எதிர் கொண்டனர்.பால் எஹ்ரில்ச்,ஹார்டின் போன்றோர் நவமால்துசிய கண்ணோட்டத்தில் மக்கள் தொகைப்பெருக்கம் காரணமாக எதிர்காலத்தில் மூல வளங்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் வாதிட்டனர்.இதில் ஹார்டின் எழுதிய THE TRAGEDY OF THE COMMONS என்ற கட்டுரை பெரும் தாக்கதினை ஏற்படுத்தியது(1).சூழலரசியல் கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை ஆய்வு செய்தவர்கள் சூழ்ல் சீர்கேட்டின் அரசியல் பொருளாதார பரிமாணங்களை முன் வைத்தனர்.காடுகளின் அழிவு,மண் அரிப்பு/வளம் குன்றுதல் உட்பட பல பிரச்சினைகளை ஆய்ந்து பல நாடுகளில் மூலவளம் குறித்து அரசிற்கும், மக்களுக்கும் உள்ள முரண்பாடுகளின் காரணங்களை சுட்டிக்காட்டி மக்கள் தொகைப்பெருக்கம் என்பது மட்டுமே காரணம் அல்ல, என்றதுடன் மூலவளங்களை பயன்ப்டுத்துவதில் உள்ள சமச்சீரற்ற உறவுகளை புறக்கணிக்கமுடியாது என்றனர்.

உதாரணமாக காடுகள் அழியககாரணமாக தொழில்கொள்கைகள்/ஏற்றுமதிக்கான விதிகள் காரணமாக உள்ளன என்று நிறுவினர்.இவர்களில் பலர் மார்க்சிய கோட்பாடுகளைப் பயன்ப்டுத்தினாலும், அவை பிற அணுகுமுறைகள்/கோட்பாடுகளை நிராகரிக்கவில்லை.

1970 களில் பெரும் செல்வாக்குடன் விளங்கிய உற்பத்திமுறை கோட்பாடு, உலக-அமைப்பு கோட்பாடு,சார்நிலைக் கோட்பாடு ஆகியவையும் இவர்களால் பயன்படுத்த்ப்பட்டன.இவர்கள் உலக முதலாளித்துவம்,அரசு,மூல வளங்களின் பயன்பாடு குறித்து ஆய்நதனர்.ஆனால் இத்தகைய ஆய்வுகள் விரிவாக செய்யப்பட்டு,செழுமையான பார்வைகளை முன்வைத்தாலும் இவை கோட்பாட்டு ரீதியாக பல விமர்சங்களுக்கு உள்ளாயின. உதாரணமாக பல ஆய்வாளர்கள் அரசை மூலதன உரிமையாளர்களின் நலம் பேணும் அமைப்பு என்ற அனுமானத்தில் ஆய்ந்த போது அரசு குறித்த பிற பரிமாணங்கள் போதிய கவனம் பெறவில்லை.

அவ்வாறே இவர்கள் உள்ளூர் பரிமாணங்களுக்கு போதிய முக்கியத்துவம் தரவில்லை,எதிர்ப்பு/எதிர்வினைகளை அவற்றுக்குரிய முக்கியத்துவம் கொடுத்து ஆராயவில்லை என்ற விமர்சமும் எழுந்தது.இதன் விளைவாக1980களில் செய்யபட்ட ஆய்வுகள் இந்த குறைகளை களைய முற்பட்டனர்.நிர்ணயவாத நவமார்க்சிய அணுகுமுறைகளுக்கு மாற்றாக பிற அணுகுமுறைகள் கையாளப்ப்ட்டன.அன்றாட எதிர்ப்புகள், அரசின் தன்னாட்சி பண்பு,சமூக இயக்கங்களின் பங்கு போன்றவை ஆராய்ப்பட்டன.பின் அமைப்பியல்வாத கோட்பாடுகள், பெண்ணிய கோட்பாடுகள் போன்றவை பயன்படுத்தப்ட்டன.

அறிவு-அதிகாரம் இவற்றிகிடையான தொடர்பும், சூழல் கோட்பாடுகளை அனைத்து நாடுகளுக்கும் பொதுவானவை என்று பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகள் – இவையும் ஆராயப்ப்டடன.இவ்வாறு கடந்த 30 ஆண்டுகளில் சூழல் பிரச்சினைகள் குறித்த புரிதலில் ஒரு பெரும் மாற்றத்தினை சூழலரசியல் கொண்டுவந்துள்ளது.

(1) இது குறித்து விரிவாக பின்னர்.பொது மூலவளங்கள் குறித்து இன்று ஆய்பவர்கள் ஹார்டின் கட்டுரையின் பலவீனங்களை அறிவார்கள்.இது குறித்தும்,பொது மூலவளங்கள் குறித்த ஆய்வுகள் குறித்த ஒரு

புரிதலுக்கும் Privatizing Nature (Ed)Michael Goldman ஐ காண்க.

தொடரும்

ravisrinivas@rediffmail.com

Series Navigation

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 1

This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


இந்திய அளவில் மட்டுமல்ல , உலக அளவில் கவனத்தை பெற்றவை அமைதிப் பள்ளத்தாக்கு மின் திட்டத்திற்கு எதிரான போராட்டமும், அதில் கேரள சஸ்த்ர ஸாகித்ய பரிஷ்த் (KSSP) வகித்த முக்கியாமான பங்கும்.1970 களின் இறுதியில்,1980 களின் துவக்கத்தில் இத்திட்டம் வளர்ச்சி, சுற்றுச்சூழல் குறித்து பல விவாதங்களை கிளப்பியது. வளர்ச்சிதான் முக்கியம் , அபூர்வமான தாவர,மிருக வகைகள் காணப்படும் காட்டுப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கயியலாது என்றால் ,நாம் வளர்ச்சியைத்தான் தெரிவு செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. மனிதத்தேவைகளா (அ) குரங்கின் வாழ்வா என்ற ரீதியில் கேள்வி எழுப்பட்டது.கேரள சஸ்த்ர ஸாகித்ய பரிஷ்த் இதனை சரியான முறையில் அணுகி, அமைதிப் பள்ளத்தாக்கை பலி கொடுத்துதான் வளர்ச்சி என்பது தவறு , மின் தேவைகளுக்காக ஒரு சூழல் அமைப்பு (ECOSYSTEM), அதுவும் பேணி பாதுகாக்கப் பட வேண்டிய அமைதிப் பள்ளத்தாக்கு வளர்ச்சி என்ற பெயரில் அழிய விட மாட்டோம் என்று வாதிட்டது.இதனை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து சென்றது.சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்தது.மேலும் இதைக் கைவிடக்கோரி பல சுற்றுச்சூழல் அமைப்புகள் மைய அரசை வலியுறுத்தின. இந்திரா காந்தி இதை ஆராயுமாறு ஒரு குழு அமைத்தார்.அது திட்டம் கைவிடப்பலாம் என்று கூறி சுற்றுச்சூழல் இயக்கங்கள்,ஆர்வலர்கள் கோரிக்கை நியாமானது என்பதை உறுதி செய்தது.M.G.K.MENON தலைமையில் இருந்த அக்குழுவில் விஞ்ஞானிகளும் இருந்ததனர்.1947 க்குப்பின் இந்தியாவில் ஒரு திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற காரணத்திறகாக கைவிடப்பட்டது அதுவே முதல் முறை என்று கூறலாம். ஆனால் 2001ல் இத்திட்டத்தை மீண்டும் பரீசிலனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு, பலத்த எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டது.கேரளாவில் GWALIOR RAYON தொழிற்சாலையால் ஏற்ப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக ஒரு பெரிய போராட்டம் பல ஆண்டுகள் நடத்த்பபடவேண்டிய நிலை ஏற்பட்டது.இது தவிர பல எதிர்ப்பு இயக்கங்கள் (உ-ம் பூயம்குட்டி மின் திட்டம் ) நடந்துள்ளன.

கேரள சஸ்த்ர ஸாகித்ய பரிஷ்த் அறிவியிலைப் பரப்பும் இயக்கம் மட்டும் அல்ல, SCIENCE FOR SOCIAL REVOLUTION என்ற நோக்கில் பல பிரச்சினைகளை அணுகி பணியாற்றி வருகிறது. கேரள சஸ்த்ர ஸாகித்ய பரிஷ்த் குறித்து சூரியமூர்த்தி, சக்காரியா ஒரு புத்தகம் எழுதியுள்ளனர்(1).பல கட்டுரைகளும் வெளியாகி உள்ளன. கேரள சஸ்த்ர ஸாகித்ய பரிஷ்த் ALL INDIA PEOPLES SCIENCE NETWORK என்ற கூட்டமைப்பில் இடம் பெற்றுளளது. தமிழகத்தில் மக்கள் அறிவியல் இயக்கம் ஒன்றை உருவாக்க முயற்சி

மேற்கொள்ளபட்டது.ஒரு புத்தகம் – மக்கள் அறிவியல் மட்டும் வெளியானது.DELHI SCIENCE FORUM, TAMIL NADU SCIENCE FORUM போன்று பல அமைப்புகள் கேரள சஸ்த்ர ஸாகித்ய பரிஷ்த் போல் பல பணிகளை செய்து வருகின்றன இவற்றின் பணி மருத்துவம், கல்வி, ஆற்றல் (energy) என்று பலவகையில் விரிந்துள்ளது. பாரம்பரிய அறிவியல் தொழில்நுட்பம் குறித்தும் இவை அக்கரை கொண்டுள்ளன. இவை இடதுசாரி/முற்போக்கு இயக்கன்கள் என்று அடையாளம் காணப்படுபவை.அணு ஆயுத எதிர்ப்பினை முன்வைப்பவை. DELHI SCIENCE FORUM, NATIONAL WORKING GROUP ON PATENT LAWS போன்றவற்றுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளது. Bharat Gyan Vigyan Samiti (BGVS) எனற அமைப்பும் இது போல் பல பணிகளில் ஈடுப்பட்டுள்ளது.TAMIL NADU SCIENCE FORUM ஆரோக்கிய இயக்கம் என்ற இயக்கத்தின் மூலம் தகவல்சேகரிப்பு,ஆலோசனை தருவது போன்ற செயல்களில் ஈடுபட்டள்ளது.நீர் வள மேம்பாடு,வளம் குன்றா வேளாண்மை, போன்றவையும் இதன் செயல்பாடுகளில் கவனம் பெறுகின்றன.மாணவர்களிடம் அறிவியலை கற்பிப்பிதில் பல புதிய முயற்சிகளை மேற்கோண்டு அதில் வெற்றி கண்ட ஏகலைவா என்று அறியப்பட்ட HOSHNAGABAD SCIENCE TEACHING PROGRAM. இது இன்று அரசின் உதவி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளது. அறிவியல்,சமுக அறிவியல் ஆகியவற்றை தாய் மொழியில் புதிய முறைகளில் கற்பிப்பிதில் முன்னோடி என்று பாரடட்பட்ட HOSHNAGABAD SCIENCE TEACHING PROGRAM முற்போக்கு சிந்தனை கொணட சில ஆரவலர்கள், பல்கலைக் கழக மாணவர்கள்,ஆசியர்கள் முயற்சியால் உருவானது, அறிவியலை தாய் மொழியில் கற்பிப்பது என்பது மட்டுமன்றி, அதனை அன்றாட வாழ்விலும் பொருத்திப் பார்ப்பது,தாங்கள் வாழும் பகுதி குறித்து அறிவது,தாய் மொழியில் எழுதுவது என மாணவர்களிடம் அறிவியல் கல்வியை விரிவாக்கியது.தம் படைப்பாற்றலை வெளிப்படுத்த மாணவர்கள் பத்திரிகைகள் நடத்தினர்.இத்திட்டம் மதிப்பீடு செய்யபட்டு இதனை விரிபடுத்துதல் நல்லது என்று பரிந்துரை செய்யப்ட்டது.ஆனால் இன்று …. ?

இது போல் பல இயக்கங்கள்,முயற்ச்சிகள் குறித்து கூறலாம். தமிழில் நான் அறிந்தவரையில் விசை போன்ற வெளீயிடுகள், SOUTH VISION BOOKS, பூவுலகின் நண்பர்கள்,PEACE TRUST போன்றவை இத்தகைய இயக்கங்களின் செயல்பாடுகள்/அக்கரைகள் குறித்து ஆர்வம் காட்டி வந்துள்ளன.நிகழ் வளர்ச்சி, சுற்றுச்சூழல் குறித்து பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. தலித் முரசில் எஸ்.வி.ராஜதுரை,அ.மார்க்ஸ் , சுற்றுச்சூழல்.தலித் கண்ணோட்டம் குறித்து விவாதித்துள்ளனர்.அ.மார்க்ஸ் கெயில் ஒம்வெட்டின் கருத்துகளுடன் பெருமளவு ஒத்து போவதாக தோன்றுகிறது. எஸ்.வி.ராஜதுரை கெயில் ஒம்வெட்டின் கருத்துகளுடன் வேறுபடும் காரண்ங்கள் முக்கியமானவை.உலகமயமாதலும்,தலித்களும் என்ற புத்தகத்தில் உள்ள அவரது கருத்துக்கள்,தலித் முரசில் அவர் எழுதியுள்ளவை கவனத்திற்குரியவை.ஒம்வெட் கருத்துகள் குறித்து எனக்கு விமரசனம் உண்டு, குறிப்பாக வேளாண்மையில் உயிரியல் தொழில் நுட்பம் குறித்து.(2) உயிரியல் தொழில் நுட்பம்,உலகமயமாதல் ஆகியவற்றை அவர் வரவேற்கிறார். தலித்கள்,விவசாயிகள் இவற்றால் பலன் பெறமுடியும் என்று நம்புகிறார்.சரத் ஜோஷி ஆரம்பித்த விவசாயிகள் இயக்கத்தின் நிலைபாடும் இதுதான். கடந்த ஆண்டு இரு பல்கலைகழகங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் (அவரும்,நானும் கலந்து கொண்ட) என் கருத்துகளை முன் வைத்து, அவரது கருத்துகளை நான் ஏன் ஏற்க இயலாது என்பதை விளக்கினேன். (கெயில் ஒம்வெட்டின் பல கட்டுரைகளை www.ambedkar.org ல் காணலாம். கெயில் ஒம்வெட்டின் கருத்துகளைக் குறித்து அஷிஸ் கோத்தாரியின் விரிவான விமர்சனம் ஒன்றை www.narmda.org ல் காணலாம்). அஷிஸ் கோத்தாரியின் கருத்துக்கள் பெருமளவிற்கு எனக்கு உடன்பாடனவை.ஒம்வெட் அரசு விவசாயிகள் உலக சந்தையை பயன்படுத்தி முன்னேற தடையாக உள்ளது, சுதந்திர வர்த்தகம் நடைமுறையில் இருந்தால் நம் விவசாயிகளால் சந்தை தரும் வாய்ப்புகளை பயன் படுத்தமுடியும் என்று கருதுகிறார். அவ்வாறே வேளாண்மையில் உயிரியல் தொழில் நுட்பம் குறித்த தெரிவு விவசாயிகள் முடிவெடுக்க வேண்டிய ஒன்று, இதில் அரசு பெருமளவில் விலகி இருக்க வேண்டும். ஒரு தொழில் நுட்பம் பொருத்தமானது இல்லை என்றால் அவர்கள் நிராகரிப்பர். எனவே வேளாண்மையில் உயிரியல் தொழில் நுட்பம் தேவையா என்பதை அவர்கள் தீர்மானிக்கட்டும். வந்தனா சிவா போன்றார் அவரது பார்வையில் eco-romantics. அரசுதான் தடைக்கல், சந்தையும், தொழில் நுட்பமும் முன்னேற்றதிற்கான வாய்ப்புகள் என்று வாதிடும் கெயில் விவசாய இடுபொருட்களின் உற்பத்தி, வினியோகம் பந்நாட்டு நிறுவனன்கள் இருப்பது குறித்து அதிகம் கவலை கொள்வதில்லை.எனவே மொன்சாண்டொவின் விதைமலட்டுத் தொழில்நுட்பம் (TERMINATOR) கூட அவரது பார்வையில் மோசமான ஒன்றல்ல.(3) அவர் இவ்வாறு கருத ஒரு காரணம் ஒட்டு வீரிய விதைகளை பயன்படுத்தும் விவசாயிகள் அடுத்த முறை பயிரிட விதைகளை வான்குவது இன்று நடைமுறையில் உள்ள ஒன்று.இது தவிர பல இடுபொருட்களுக்கு விவசாயிகள் சந்தையையே சார்ந்து உள்ளனர்.ஆனால் இத்தொழில்நுட்பத்தில் உள்ள அரசியல் பற்றி அறிந்தவர்கள் தொழில்நுட்பத்தை வெறும் தொழில்நுட்பமாக மட்டும் காண்பதில்லை.(4).

(1)Science for Social Revolution : Achievements and Dilemmas of a Development Movement – the Kerala Sastra Sahitya Parishad, by Mathew Zachariah and R. Sooryamoorthy (1994, London ; Atlantic Highlands, NJ : Zed ) .

(2) இது குறித்து நிகழில் முன்பு எழுதியுள்ளேன்..இந்தியாவில் Bt Cotton குறித்து

Environmental Politics ல் வெளியாகியுள்ள கட்டுரையில் சில கருத்துகளை முன் வைத்துள்ளேன்.

Bt Cotton in India: Economic Factors versus Environmental Concerns Issue Environmental Politics Vol 11.No 2,

2002.

வளர்முக நாடுகளில் வேளாண்மையில் உயிரியல் தொழில் நுட்பம் குறித்த ஓர் விவாதம்

Stone, Glenn Davis 2002 Both Sides Now: Fallacies in the Genetic-Modification Wars,Implications for Developing Countries, and Anthropological Perspectives. Current Anthropology 43(5):611-630 ல் உள்ளது.

(3) also known as Genetic Use Restriction Technology (GURT).வேளாண்மையில் இதன் சாதகமான,பாதகமான

பாதிப்புகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக விவாதம் நடைபெறுகிறது.www.etcgroup.org ஐ காண்க.

கீழ்கண்டவற்றிலும் இது குறித்து கட்டுரைகள் உள்ளன (அ) விரிவான அலசல் உள்ளது (இது ஒரு முழுமையான பட்டியல் அல்லJournal களில் வெளியாகியுள்ள கட்டுரைகள் பல.கட்டுரையின் நீளம் கருதி அவற்றை குறிப்பிடவில்லை. இத் தொழில்நுட்பம் பற்றி விரிவாக எழுதும் போது இவையும் நூல்/சான்று குறிப்பில் இடம் பெறும்).

Biotechnology,Agriculture,and the Developing World (ed) Timothy Swanson,Edward Elgar Publishing 2002

Redesigning Life (Ed) Brian Tokar, Zed Books 2001

Science,Seeds and Cyborgs Finn Bowring, Verso 2003

(4)உ-ம் Lewontin, R.C., and Berlan, J. The Political Economy of Agricultural Research: The Case of Hybrid Corn in Carroll, Ronald, C., Vandermeer, John H., and Rossett, Peter, Agroecology, McGraw-Hill Publishing Co 1990 ?

(தொடரும் )

ravisrinivas@rediffmail.com

Series Navigation