This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue
ஹமீது ஜாஃபர்
மனிதர்களில் பெரும்பாலோர் நடுநிலை சிந்தனையாளர்களாக இருந்தாலும் ஒரு சிலரின் தடுமாற்ற சிந்தனையினால் ஏற்படும் தாக்கம் சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை முன்வைப்பதில் தவறு கிடையாது, அது அவரவரது கருத்து சுதந்திரம். ஆனால் தாம் சொல்வதுதான் சரியானது என்று வாதிடும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன. குறிப்பாக மத ரீதியாக முன்வைக்கப்படும் கருத்தாக்கம் உள ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் மிக பெரிய பாதிப்பை உருவாக்குகிறது.
இத்தகைய கருத்தாக்கங்களை உருவாக்குபவர்கள் இரண்டு வகையினர். முதல் வகையினர் தான் சார்ந்திருக்கும் மதம், சமூகத்தைப் பற்றிய தீவிர சிந்தை உள்ளவர்கள். மற்றொரு வகையினர் மற்ற மதம் சமுதாயத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள். இந்த இருவரும் தாங்கள் முன்வைக்கும் செய்தி சரியானதுதானா என்று சீர்தூக்கிப் பார்ப்பதே இல்லை. ஒரு விரல் முன்னுள்ளவனை சுட்டிக்காட்டும்போது மற்ற மூன்று விரல்கள் தன்னை சுட்டிக்காட்டுகின்றன என்று உணருவதுமில்லை. ஒருவர் மற்றவர்மீது சேற்றை வாரி பூசுவது மெகா சீரியல் மாதிரி நடந்துக்கொண்டே இருக்கிறது. நல்ல செய்தியைவிட கெட்ட செய்திக்கு வலிமை அதிகம். ஒரு துளி விஷம் போதும் ஒரு குடம் பாலை வீணாக்க என்ற உண்மை புதிதல்ல.
உலகில் எந்த குழந்தையும் முஸ்லிமாகவோ, கிறுஸ்துவமாகவோ, இந்துவாகவோ அல்லது வேறு எந்த மதத்தை சார்ந்ததாகவோ அல்லது நாத்திகனாகவோ பிறக்கவில்லை. அதற்கு மதம், சாதி, இனம், மொழி என்று எதுவுமே இல்லை. “எல்லா மகவுகளும் இயற்கைநெறியில்தான் பிறக்கின்றன” என்று நபி மொழி இருக்கிறதென்றால் குழந்தை, குழந்தையாகவே பிறக்கிறது என்றுதான்தான் பொருள் கொள்ளவேண்டும். அங்கே இஸ்லாத்தைப் புகுத்தினால் அது இஸ்லாத்தை கேவலப்படுத்துவதாக ஆகிவிடும்.
குழந்தை யார் வீட்டில் பிறந்தாலும் அது வளர்கிற சூழலைப் பொருத்தே மதம், மொழி, கலாச்சாரம் மாறுகிறது. மதப்பற்று மிக்க ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தை அதே மதப்பற்றுடன் வளரும் என்று சொல்லமுடியாது.
இங்கர்சால் கடவுள் நம்பிக்கையற்றவன், நாத்திகன். அவனது மகன் எதிர்பாரதவிதமாக மாடியிலிருந்து கீழே விழுவதைப் பார்த்த அவன், “கடவுளே என் மகனை காப்பாற்று” என்று தன்னை அறியாமலே கத்திவிட்டான். மயக்கம் தெளிந்த மகன் கேட்டான், “அப்பா, உனக்குதான் கடவுள் நம்பிக்கை கிடையாதே நான் விழும்போது “கடவுளே….” என்று ஏன் கத்தினாய்?” என்று. அதற்கு அவன், “மகனே! நான் வளர்ந்த விதம் அப்படி அதனால் கத்தினேன். ஆனால் நீ அப்படி கத்தமாட்டாய், நீ வளரும்விதம் வேறு” என்றானாம்.
பிறந்த குழந்தைக்கு அதன் தாய், பால்கொடுக்கும்போது சப்பி சூப்பி குடிக்கிறது, அந்த அறிவை கொடுத்தது யார்? தனக்கு விரும்பாத உணவைக் கொடுத்தால் வாயை மூடிக்கொள்கிறது. கட்டாயப்படுத்தி கொடுத்தால் துப்பிவிடுகிறது. துப்பவும் வாயை மூடிக்கொள்ளவும் யார் சொல்லிக்கொடுத்தது? அதற்கு விளக்கம்? பிறக்கும்போதே கொண்டுவந்த பழைய அறிவு.
மீன் குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் நீந்தும். வண்டு கூட்டைவிட்டு தத்தித் தத்தி வெளிவரும், வந்தவுடன் குப்பென்று முழுமையாக வளர்ச்சிப் பெற்ற வண்டுபோல் பறக்கும். அவைகளின் வாழ்க்கை முறை என்பது மிக மிக சாதாரணமானது. ஆனால் மனிதனுடைய நிலை அப்படியல்ல. அவனுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன, வாழ்க்கைமுறை கடுமையானது. அதனால் அவன் ஒவ்வொரு அசைவையும் படித்தாகவேண்டும். உட்காருவது முதல் எழுந்து நடக்கிற முறை வரை படிக்கவேண்டும்; ஏன் சுவாசிப்பது உள்பட படித்துக்கொள்ளவேண்டும் என்ற நிலை அங்கு இருக்கிறது. ஆகவே அங்கிருந்து வந்தவுடன் இந்த சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்கிறான். பார்ப்பதற்கு விழிகளை அசைத்து பயிற்சி எடுத்துக்கொள்கிறான்; நடப்பதற்கு கை கால்களை ஆட்டி வலுவேற்றிக்கொள்கிறான். அதில் மகிழ்ச்சி வரும்போது சிரிக்கிறான், அதிர்ச்சி வரும்போது அழுகிறான்.
சாதாரணமாக நடைமுறையில் இதை பார்க்கலாம், உறவினர் வீட்டிற்கோ அல்லது நண்பர்கள் வீட்டிற்கோ செல்கிறோம் அங்கு அறிமுகம் இல்லாத குழந்தையை தூக்கும்போது சில குழந்தை நம்மையே பார்க்கும், சில வீல் என்று கத்தும். அது ஏன்? பெரும்பாலும் காரணம் தெரியாது அல்லது அதை பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.
ஆனால் காரணம் இல்லாமலில்லை. நமது உலகத்தில் தராதரம், ஏற்றத்தாழ்வு, repelling force, attractive force இருக்கிற மாதிரி அவர்கள் உலகத்திலும் உண்டு. அந்த குழந்தை பார்க்கிறது, இவன் நம் இனத்தவன்தானா இல்லையா என்று. தன் இனத்தவன் என்றால் பார்த்துக்கொண்டே இருக்கும்; தன் இனத்தவனில்லை என்றால் முகத்தை திருப்பிக்கொள்ளும்; தன் பகைவன் என்றால் ‘வீ..ல்’லென்று கத்தும். அப்பொ குழந்தை என்பது நம்மிடமுள்ள அறிவைவிட மிகப்பெரிய அறிவை பெற்று வந்திருக்கிறது. இந்த உலகத்தினுடைய குளிர்ந்த காற்று பட்டவுடன் தான் பெற்றுவந்த அறிவை கொஞ்சங் கொஞ்சமாக மறக்கிறது. வளர வளர பெற்றோர் கொடுத்த அறிவு, ஆசிரியர் கொடுத்த அறிவு, சமுதாயம் கொடுத்த அறிவு, இன்னும் உலக அறிவு இப்படி பல அறிவுகள் உள்ளே புகுந்து பழய அறிவை மூடி மறைத்துவிடுகிறது. அது நீறு பூத்த நெருப்பாக ஆகிவிடுகிறது. உலக அறிவு அதிகமாக அதிகமாக தன்னிடம் ஓர் அறிவு இருப்பதையே மறந்துவிட்டு பெர்னாட்ஷா சொன்னது, ஷேக்ஸ்பியர் சொன்னது, இன்னும் யார் யாரோ சொன்னதையெல்லாம் உள்வாங்கி பெருமை பட்டுக்கொண்டிருக்கிறது.
இதை தெளிவாக உணர்ந்த ஞானிகள், தாம் பெற்ற உலக அறிவை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு நீறு பூத்திருந்த ‘அந்த’ அறிவை தோண்டி எடுத்தார்கள். அதில் தெளிவு இருப்பதை உணர்ந்தார்கள், அதில் மகிழ்ச்சி கண்டார்கள், மதங்களுக்கு அப்பால் நின்றார்கள், தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற ஆசை கொண்டார்கள், மக்களை நல்வழியில் நடத்திச் செல்ல முயன்றார்கள், அடுத்த சமுதாயம் எப்படி வாழவேண்டும், இன்னும் நூறு வருடங்களுக்கு பின்பு மக்களுக்கு என்ன தேவை இருக்கும் அதற்கு இப்போது என்ன செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். நமக்கு அது பைத்தியக்காரத்தனமாக தெரிந்தது. இன்றுள்ள அரிசி விலையைப் பற்றி நினைக்காமல் நாளை பெய்யும் மழை நீரை தேக்க திட்டம் தீட்டுகிறேனே என்று அவர்களை கல்லால் அடித்தோம். அவர்கள் விதி, அடிபட்டுக்கொண்டே வாழ்ந்து காட்டினார்கள். இன்றும் நாம் அவர்களை திட்டி தீர்த்துக்கொண்டுத்தானே இருக்கிறோம். அவர்களோடு அது நில்லாமல் அவர்களை நினைவு கூறுபவர்களையும் சேர்த்து வசை பாடுகிறோம்.
This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue
ப்ரியன்
தப்பு தப்பாய் தமிழ் வாசிக்க அறிவாய்! தாறுமாறாய் எழுதித்தந்தாலும் தலைவன் எனக்காக தரமானது என்பாய்! கவிதை புத்தகங்கள் காணோமென்று தேடினால் தலையணை அடியிலிருந்து எடுத்து நீட்டி இதனால் என்மேல் உங்கள் கவனம் குறைக்கின்றது என கோபித்துக்கொள்வாய்!
என்றுமில்லாமல் இன்று புது வெட்கம் காட்டி! பூமியை புரட்டிப்போடும் புன்னகை சிந்தி! நாணி கோணி சிரிப்பால் நனைந்து எனையும் நனைத்து தோள் சாய்ந்து கையில் தந்தாய்; படித்துவிட்டு சொன்னேன் அருமையான கவிதை படைத்தாய்!
சொல்லி முடிக்கும் கணம் பொக்கைவாய் திறந்து நம்மிருவர் முகம் நோக்கி முதல் புன்னகை உதிர்த்தது கையிலிருந்த கவிதை! நம் குழந்தை!
This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue
ஆபிதீன்
தம்பி அவசரமாய் பதட்டத்துடன் சைக்கிளில் வந்து, ‘புள்ளெ மெளத்தாப் பொய்டிச்சி ‘ என்று சொன்னபோது எனக்கு திகைப்பும் கடையில் வேலை பார்க்கும் சமதுவின் நாக்கின் பலம் பற்றி ஆச்சரியமும் பயமும் ஏற்பட்டது. கொஞ்ச நேரம் முன்புதான் நானும் ஹமீதும் நண்பன் ரஹீமைப் பார்த்துப் பேச கடைக்கு வந்தோம். அவன் இல்லை. நாகப்பட்டினத்திற்கு labour officer ஐ பார்க்கப் போனானாம். கொஞ்ச நேரத்தில் வந்து விடுவான் என்று சமது சொன்னார். உட்கார்ந்திருந்தோம். அப்போதுதான் சமது , வலது முழங்கை அருகே இடது கையை வைத்து இரண்டு தடவை தொட்டில்போல ஆட்டிக் காட்டி, ‘என்னாங்கனி..ஒண்ணுமே இன்னும் எனக்கு நீம்பரு வாங்கிக் கொடுக்கலே..அதுவும் கடாக்குட்டியெல்ல ஒம்ம வாப்பா தட்டி வுட்டிருக்காஹா! ‘ என்று கேட்டார். ‘ஓய்.. கொழந்தையோட நெலமை ரொம்ப ‘இதா ‘ இருக்குதுங்கனி.. நாப்பது வரைக்கும் அது இருந்துடட்டும்..ஒமக்கு சுதியா பாபாபாய் கடையிலெ நாலு கொத்துப் புறட்டா வாங்கித் தர்றேன் ‘ என்றேன். ‘சீ..சீ..அதெல்லாம் நல்லா பொழச்சுக்குங்கனி.. ‘ என்று ஆறுதலாய் அவர் குரல் நீளும்போதுதான் சேத்தான் வந்து குழந்தை இறந்து விட்டதை சொல்லி விட்டுப் போனான். ‘ஓய்..பாத்தியுமாங்கனி..இப்பத்தானே சொன்னீரு… ‘- என் குரல் கம்மியது. ‘சரி…நான் வர்றேன் ‘ என்று ஹமீதையும் இழுத்துக் கொண்டு அவசர அவசரமாய் வீட்டிற்கு கிளம்பினேன். ‘எங்கே போறீங்க இவ்வளோ அவசரமா ? என்று அப்போது கடைக்கு வந்த ரஃபியின் தம்பி கேட்டான். ஹமீது, ‘இல்லே..ஆபிதீன் வீட்டுலே புள்ள மெளத்தாப் பொய்டுச்சு..அதுதான் போறோம் ‘ என்றான். ‘அப்ப நான் நேத்தே ஸ்வீட் வாங்கியிருக்கனும் ஆபிதீன்ட்டெ.. ‘ என்றான் அவன். எனக்கு அளவு கடந்த கோபமும் வெறுப்பும் பொங்கியது. அவன் மேல். ஓங்கி ஒரு அறை விடலாமா என்று நினைத்தேன். ‘என்ன இவன் இப்படி பேசுறான்..! ‘ அவன் அண்ணன், நான், எங்களின் வித்தியாசமான- ஊரின் வெறுப்பைக் கொட்டிக் கொள்கிற- பேச்சு , நடவடிக்கை இவனுக்கு இந்த மாதிரி மெளத்தையெல்லாம் சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டு விடுகிற ஆட்களாய் பட்டிருக்கக் கூடும்.. இவன் என்னிடமிருந்து ஒரு சிரிப்பையும் எதிர்பார்ப்பவனாக தோன்றிற்று..! ‘சரி..விட்டுத் தொலை ‘ என்று நினைத்துக் கொண்டு கிளம்பினோம்.. ‘புள்ளெமேலே ஒங்களுக்கு ரொம்ப பாசமோ ? ‘ என்றான் மறுபடி. எனக்கு பயங்கரமான வெறி வந்தது. ‘ஓய்..போங்கனி..மூஞ்சியைப் பாரேன்..எந்த நேரத்துலெ எது பேசுறதுன்னே தெரியாதா ஒமக்கு ?.. ‘என்று ஹமீது அவனைத் திட்டிவிட்டு ‘சரி..வா.. ‘ என்று இழுத்துக் கொண்டு போனான். சாதிக்கின் முகம், தான் எதிர்பார்த்த ஹீரோ முகம் கிடைக்காததால் வாடிப் போனதுமாதிரி இருந்தது..
எனக்கு உம்மா கர்ப்பமாயிருக்கும் செய்தி 3 மாதத்திற்கு முன்புதான் தெரியும். சந்து வீட்டில் பேசிக் கொண்டிருக்கையில் சின்னமாமி , ‘ என்ன ஆபிதீன்..ஜாலிதான்..தங்கச்சியோ தம்பியோ வரப்போவுது ‘ என்று சொன்னார்கள். எனக்கு சட்டென்று உம்மாவின் நினைப்பு வரவில்லை. வருஷாவருஷம் தவறாமல் பெத்துப்போட்டு விடுகிற சின்னம்மாவின் ஞாபகம்தான் வந்தது. வாப்பா, இரண்டு மூன்று சபர் இந்த பதினோரு வருடங்களுக்கிடையில் வந்து ஏதும் புதிதாய் நடக்கவில்லை. அதனால் உம்மாதான் இப்போது என்பது சட்டென்று புரியவில்லை எனக்கு, மாமி உடைத்தார்கள் விஷயத்தை. எங்கள் குடும்பத்திலேயே இந்த ஜூலைஹா மாமி ஒரு ஆள்தான் நல்ல freeயாக எனிடம் பேசுவார்கள். ஒருநாள் சந்து வீட்டில் எல்லா பொம்பளைகளும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டு கனியாச்சி தன் ஐம்பது வயதிலும் அதுவும் உடம்பு சரியில்லாமல் ஊருக்கு வந்திருந்த மாப்பிள்ளை சையது நானாவை மயக்கி இரட்டைக் குழந்தையை பெற்றுப் போட்டது பற்றி உம்மா கேலி பண்ணிக் கொண்டிருக்கும்போது ஆச்சி சொன்னார்களாம் ‘ என்னட ஆளுக்கு இருக்கு இந்த வயசிலேயும்…ஆனா ‘ஜீனத் ‘தோட ‘குமர்ர ஹக்கு ‘க்குக்கு காலம் முடிஞ்சி போச்சு ‘..என்று… தாங்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பதாகவும் மற்றபடி ‘விஷயம் ‘ முடிந்துபோன மாதிரி இல்லையென்றும் வருகிற சபரில் மாப்பிள்ளை வரும்போது நிரூபிப்பதாகவும் உம்மா சொன்னர்களாம். ‘சவால் வுட்டுலெ உம்மா வவுத்துலெ வாங்கியிருக்காஹா இப்ப..! ‘ என்று மாமி சொன்னார்கள். ‘ஆனாலும் அல்லாட நாட்டத்தை யாராலெ மாத்த முடியும் ? சொல்லு.. நெனைச்சா குழந்தை பெத்துக்க முடியுமா ? இல்லே வவுத்துலெ வந்து கலைச்சே தீர்ரதுன்னு ஒத்தக் கால்லெ நின்னாலும் அதுக்கு போறதுக்கு எடம் இல்லாதப்ப பொய்டுமா ? இதல்லாம் யார்கிட்டெ இருக்கு ? சொல்லு. இப்ப இந்த ‘ஹனீஃப் ‘ஏ இருக்கான், இவன் வாணாண்டு எவ்வளவு மருந்து மாத்திரை!..ஆனா எல்லாத்தையும் முழுங்கிப்புட்டு எங்கேயோ ஒளிஞ்சி இருந்துட்டு வந்து இப்ப மேயிறானே..! ‘ என்றார்கள். எனக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை. ‘ஏற்கனவே நாங்க அஞ்சு பேரு இருக்கோம். மூத்தவன் எனக்கு இப்ப 23 வயசாவுது..கொஞ்சம் கட்டுமானமா இருந்திருக்கலாம்தான். அப்படியும் சொல்ல முடியாது. பதினோரு வருஷமா வாப்பா ஜாக்கிரதையாத்தான் இருந்திருக்காஹா..இப்ப என்னவோ…ம்…ஜாக்கிரதை ஜாக்கிரதைன்னு பெண்டாட்டி கூடப் படுக்காம போனா வேறயாருகூடத்தான் படுத்துக்குவாஹா ? எங்க கூடவா ?! சரிதான்..பெத்துப் போடட்டுமே ‘ என்றேன்.
இடையில் பெரியமாமி , வாப்பா போட்ட லெட்டருக்கு பதில் எழுத தாமதமாகிய போது வாப்பா மறு லெட்டர் உம்மாவிற்கு போட்டார்கள். ‘பொம்பளைப்பிள்ளை 5, 6 பெத்தா இப்படி கவைலை வந்து எழுதத் தோணாதுதான்..அதுதான் பாத்திமா ஜொஹரான் பதில் எழுதவில்லை போலும். சரி, நீங்களாவது இந்தத் தடவை ஆம்பிளைப்பிள்ளை பெற்று அதனிடம் கொடுக்கவும் ‘ என்று. வீட்டில் சிரித்தார்கள். ‘ஆம்புளைப் புள்ளைதான் பொறக்கும் ‘ என்று வீட்டில் பாட்டியா ஹைஜாம்மா, மாமி எல்லோரும் சொன்னார்கள். இவர்களுக்கு ஒரு கணக்கிருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தெருவில் அல்லது சொந்தக்காரர்களிடத்தில் பிறக்கிற பிள்ளைகள் ஆண் பெண் என்று அமைவதில் அந்தக் கணக்கின் விடை இருக்கும். எனக்கெல்லாம் இது ஒன்ரும் புரியாது. ஆனால் பல சமயங்களில் அவர்கள் சொன்னது பலித்திருக்கிறது.
நோக்காடு வந்த நாள்வரை இடையில் வேறு ஏதும் உம்மாவிற்கு அதிர்ச்சியான சம்பவங்கள் நிகழவில்லை- ஒன்றைத்தவிர. நானும் தம்பி சேத்தானும் கடைத்தெருவில் உட்கார்ந்திருக்கையில் இங்கே, வீட்டில் குடிகார பெரியாப்பா அம்மாவை அரிவாளால் வெட்டத் துரத்தியது. உம்மா ‘ஒத்தத் துப்பட்டி ‘யுடன் ஓடி சந்து வீட்டில் புகுந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சி நடந்து ஒரு மணி நேரம் கழித்தே எங்களுக்குத் தகவல் வந்தது…தம்பி ஆத்திரமாய் ‘அந்த கெழட்டு உம்மாலெ ஓக்கலுட கொதவளையெ பிடிச்சு நைச்சிட்டு வர்றேன் ‘ என்று வெறியோடு கிளம்பினான். அவனை சமாதானப்படுத்தி உட்காரவைத்துவிட்டு நான் வேகமாக கிளம்பி வந்தேன். இதற்குள் அவர் தெருவெல்லாம் சுத்தி ரகளை பண்ணிவிட்டு ஓய்ந்து போய் வீட்டுக்குள் புகுந்திருந்தார். சந்தில் எல்லா பொம்பளைகளும் பழைய வீட்டு வாசல் திண்ணையில் கூட்டமாய் உட்கார்ந்திருந்தார்கள். நான் வந்ததும் ‘இத இப்படியே சும்மா வுட்டுடாதே.. அந்த ஹயாத்தலிவானெ நாலு தட்டு தட்டிட்டு வந்தாத்தான் நீ ஆம்புளை..ஒரு சூலியை இபடித் தொரத்திட்டு வந்த அந்த கொல்லையிலெ போறவனை, அந்த குடிகார கழிச்சல்ல போறவனை…இப்படி சும்மா வுட்டுர்ரதா.. ? என்று ஆளுக்கு ஆள் கோபமாய் கத்தினார்கள். இவர் ஒவ்வொரு நாளைக்கும் வாஞ்சூரில் குடித்துவிட்டு வந்து வீட்டில் ரகளை வளர்த்துக் கத்த ஏதேனும் ஒரு அபத்தமான காரணம் இருக்கும். இவர் சபரிலிருந்து வந்து வீட்டிலிருக்கும் ஒரு மாதமும் வீட்டில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். செவுட்டுப் பெரியம்மாவிற்கு இவரின் காட்டுக் கத்தலைப் பற்றி துளி கூட அக்கறையில்லை. சிறு பிள்ளையில் காதில் வந்த நெருஞ்சி கட்டியைப் பாராட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள் என்று நான் நினைப்பதுண்டு. தன் மாப்பிள்ளையுடன் அறையில் சோழி விளையாடிக் கொண்டிருக்கும்போது தனது பேத்தனத்துடன் வீட்டு விஷயங்களையெல்லாம் சொல்ல , கத்தி ரகளை பண்ண எதிலும் ஒரு சான்ஸ் பார்க்கும் பெரியாப்பா அதில் தனக்குத் தேவையான points மட்டும் எடுத்துக் கொண்டு, அதை பூதகரமாக்கி, தைரியமாய்க் கத்த வாஞ்சூருக்குப் போய் குடித்துவிட்டு வந்து ரகளை பண்ணுவார். சொத்து விஷயமாய் என் வாப்பா ஏதோ மோசம் பண்ணி விட்டதாக தப்பாக நினைத்து எங்கள் குடும்பத்தில் வெறுப்பு பாராட்ட ஆரம்பித்தார். கடைசியில் எங்கள் குடும்பமும் மாட்டிக் கொண்டு விட்டது…! அறுத்துக் கிழிப்பார். எல்லாவற்றிலும் தப்பர்த்தம் காணுவார். வாசலில் சுவரோரமாய் நான் ஒண்ணுக்கு இருந்தால் அந்தப் பக்கம் வந்த அவரிடம் நான் வழித்துக் காண்பித்ததாக..இப்படி அமையும். அன்றைய காரணத்தை நடுவில் உட்கார்ந்திருந்த உம்மா அழுது கொண்டே சொன்னார்கள். அது நடந்த காலை நானும் ஹமீதும் கடைத்தெருவில் வந்து கொண்டிருக்கும்போது வாடா சுல்தானின் மகன் எப்போதும் போல குடித்து விட்டு உளறிக் கொண்டு போனான். அவனைப் பார்த்து ஒரு சொறிநாய் குரைத்தது…அவன் கோபமாய் அதனிடம், ‘வாணாம்..என்னைப் பத்தி உனக்கு தெரியாது..ஜாக்கிரதையா சிரி..இல்லே காலை எடுத்துடுவேன் ‘ என்று சொல்லி விட்டுப் போனான். இதை வீட்டில் உம்மா, மாமி எல்லோரிடமும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம். அவர் அப்போதே ‘என்னடா ஜாடை காட்டிப் பேசுறது..ங்காத்தால ‘ என்று கேட்டிருந்தால் நானும் தக்கவாறு கொடுத்திருக்கலாம்- பதிலையோ அடியையோ…பெரிய மனுஷர் பெரிய மனுஷர் என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாயிற்று..இப்போதெல்லாம் இவரின் ஆர்ப்பட்டத்தை சகிக்கவே முடியவில்லை. சின்னப் பிள்ளையாயிருக்கும்போது இவர் செம்பு, பானை என்று கைக்கு கிடைப்பதையெல்லாம் கத்திக் கொண்டே வீசி வீட்டுப் பொம்பளைகளை துரத்தியடிக்கும்போது, கூனிக்குறுகி ஏதச்சும் ஒரு கட்டிலுக்கடியில் பயந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன்.. ஆனால் இப்போது ? இவர் சொல்கிறபடி இவர் அந்தக் கால சம்ஸினாகவே இருக்கட்டும். செருப்பால் நான் ஒரு அடி அடித்து விட்டால் இந்தப் பெரிய மனிதனின் மானம் ரோஷம் எல்லாம் எந்தக் குப்பைத் தொட்டிக்குப் போகும் ? நாங்களும் எவ்வளவுதான் பொறுப்பது.. ? உம்மாவை வீட்டிற்குக் கூட்டி வந்தேன். இப்போது இவர் கத்தினால் ‘ரெண்டுல ஒண்ணு ‘ பார்த்து விடுவது என்ற முடிவோடு. தீர்மானமான முகத்தை, பேச்சைப் பார்த்தால் பெரியாப்பாவின் ரகளை தானாக ஒடுங்கி விடும்.. இவரை யாரும் எதிர்க்காததினாலேயே வெறும் அலட்டலில் இத்தனை காலத்தை பெரிய துணிச்சல்காரராய் கழித்திருக்கிறார். பெரியாப்பா ரூமில் அமுங்கிப் போயிருந்தார்.
கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டு வேலையில் உம்மாவின் பங்கு குறைந்து போயிற்று. தங்கச்சி எடுத்துக் கொண்டு விட்டாள். நான் பார்க்கும்போதெல்லாம் தாழ்வார நடு அறையில் உம்மா படுத்து ஓய்வெடுப்பது வழக்கமாயிற்று. ஒருநாள் காலை சந்து வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது ‘நேத்து ராத்திரி மச்சிக்கு ஒரு மாதிரியா வந்திச்சி..நேரம் வந்திரிச்சின்னு நெனச்சோம். பாரு..இதானே டயம்..ஆனால் அப்புறம் சரியாயிடுச்சி..எப்படியும் 7,8 நாளைக்குள்ள பெத்துடுவாஹா பாரேன், நான் சொல்றேண்டு ‘ என்று மாமி சொன்னார்கள். அப்புறம் வீட்டில் ‘கணக்குப்படி பார்த்தா இதுக்குள்ள பொறந்திருக்கனுமே..நாள் தள்ளிப் போவுதே.. ‘ என்று கவலைப் பட ஆரம்பித்தார்கள். நோன்பு மாதமும் நெருங்கி விட்டது. ஒரு செளகரியத்திற்காக, எனக்கு இந்த அல்லா, நோன்பு என்கிற வெளி விவகாரங்களில் நம்பிக்கையில்லையென்றாலும், நானும் நோன்பு பிடிக்க(!) ஆரம்பித்தேன். முக்கியமாய் நான் நிய்யத்து சொல்வதில்லை. ( ‘ஹூம்..ரமலான் மாசம்..தொழுவ வர்ரதில்லே.. திராவியாக்கு வர்ரதில்லே..நிய்யத்தும் சொல்றதில்லேங்குறே..அப்பொறம் என்னா நோன்பு பிடிக்கிறேன்னு சொல்றே.. ? கொஞ்ச நேரம் பட்டினி கிடக்குறேன்னு சொல்லு.. – கோபமாய் பள்ளி சாபு) வீட்டுப் பிள்ளைகள் அவ்வளவு பேரும் நோன்பு பிடிக்கையில் எனக்காக காலைப் பசியாறவும் மதியானம் சோறும் ஆக்கித் தர வேண்டும். தனியாக தொந்தரவு கொடுப்பானேன் என்றுதான் சேர்ந்து கொண்டேன். இது தவிர சஹர் நேரம் ரசிக்கத்தக்கதாயிருக்கும். இரவு 3, 3 /12 மணிக்கு விழித்து, எல்லோரும் சோறு உண்பதும் பின் மாலை 6 மணிக்கு தர்காவில் குண்டு போட்டதும் நோன்பு திறப்பதும் மிகவும் நன்றாக இருக்கும்.
பிறை பதினெட்டுக்கான சஹரை முடித்து விட்டு வெளியான்ஸில் வழக்கம்போல வந்து படுத்துக் கொண்டேன். இந்த சமயத்தில் தூக்கம் நன்றாக வரும். இடையில் ஏற்படுத்தப்பட்ட தடங்கலுக்கு பரிகாரமாய். வாசல் கதவை யாரோ தட்டினார்கள். முழிப்பு வந்து விட்டதெனக்கு. வீட்டிலிருந்து யாரேனும் வந்து திறப்பார்கள் என்று நாலைந்து தட்டு வரை பொறுத்தேன். அப்புறம் நானே எரிச்சலுடன் கதவைத் திறந்தேன். பங்களா வீட்டு மும்தாஜூம் ஷமீமும். ‘என்னா ஆச்சு ? ‘ என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘ம்..எல்லாம் நல்லாத்தான்….உள்ளே போங்க ‘ என்று சொல்லி விட்டு வந்து படுத்து விட்டேன். காலை கொல்லைக்கு முகம் கழுவும்போது எங்கள் பகுதியான வடக்குப் பக்க தாழ்வாரத்தில் வெள்ளைத்துணியால் மறப்பு கட்டப் பட்டிருந்தது..உம்மாவுக்கு நோக்காடு ஆரம்பிச்சிடுச்சு போலருக்கு ‘ என்று நினைத்துக் கொண்டேன். வழக்கமாய் மேற்குப்பக்க தாழ்வரத்தோடு இணைந்துள்ள கூடத்தில்தான் மறப்பு கட்டுவார்கள். பெரியாப்பாவின் விரோதம். ஆதலால் இடம் மாறியிருந்தது. உம்மாவை பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்தப் பொம்பளைகள் விட மாட்டார்கள். ஏதாச்சும் பிரசவ காரியங்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதென்ன பிரசவ காரியம் என்று புரியவில்லை. எங்கள் வீட்டில் ஆஸ்பத்திரிக்கெல்லாம் யாரும் போவதில்லை. வீட்டிலேயேதான் நாசுவத்தி வந்து எல்லாவற்றையும் சரியாக்கிக் கொடுத்து விடுவாள். அன்சாரி மாமா, முத்துக் காக்கா ஆகியோர் வீட்டில் பார்ப்பதையே விரும்பினார்கள். ‘எக்குத்தப்பா ஏதாச்சும் ஆயிட்டா நாகப்பட்டினம் கொண்டு போய்க்கலாம் ‘ என்பார்கள். பெரியாப்பாவின் இரண்டாவது மகள் காமிலாவிற்கு இந்த வீட்டில்தான் நடந்தது. மச்சான் படித்தவர். எவ்வளவோ தூரம் நாகப்பட்டினம் பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான் போகவேண்டுமென்று வாதாடினார். பொம்பளைகளிடமா முடியும் ? நாசுவத்தி ஹபீப்லாத்தாதான் கடைசியில் வீட்டுக்கு வந்தாள். இதனாலேயே மச்சான் கோபித்துக் கொண்டு பெண்டாட்டியுடன் தன் வீட்டுக்கு போய் விட்டார். வீட்டோடு இருக்கும் கோபம் இன்னும் தீரவில்லை.
மறப்பு உள்ளே பொம்பளைகள் ராஜ்ஜியமாக இருக்கும். சின்னப் பிள்ளைகள் மறப்பின் கீழுள்ள இடைவெளி மூலம் உள்ளே நடக்கும் ரகசியத்தை அறிய முயற்சிக்கும். தலையில் தட்டி அனுப்புவார்கள் பெண்கள். சில பெண்கள் ‘ உம்மாடி..பொறந்த எடத்தை பாக்கனும்டு ஆசைப்படுறான் பாவம்..டேய்…எல்லாமே ஹயாவுதாண்டா.. ‘ என்று வெடிப்பாய் பேசி அனுப்பும். பையன்கள் வெட்கத்துடன் ஓடி விடுவார்கள். நானும் சின்னப் பிள்ளையில் இப்படி மறப்பிற்குக் கீழ் பார்த்திருக்கிறேன். சுற்றிலும் பெண்கள் கூட்டம் உட்கார்ந்திருந்ததுதான் ஞாபகம் வருகிறது. அப்பொதெல்லாம் பிள்ளைகள் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வருவதாகத்தான் தீவிரமாய் நம்பிக்கை கொண்டிருந்தேன். நான்காவது படிக்கும்போது பக்கத்து பெஞ்ச் அப்துல்லா விஷயத்தைப் போட்டு உடைத்தான் என்றாலும் உம்மா வாப்பா விளையாட்டு என் வயது பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போதிலும் எனக்கு இதில் முழு நம்பிக்கையில்லை. இந்த அப்துல்லா அவன் நண்பர்கள்தான் இப்படிச் சொல்வார்கள். வீட்டில் கேட்டால் வயிற்றிலிருந்துதான் வந்தது என்று சத்தியம் பண்ணிச் சொல்வார்கள். நிறைய புரியாமலிருந்தது. P.U.C திருச்சியில் படிக்கும்போது நண்பனுடன் ஒரு படம் பார்த்தேன். அதில்தான் குழந்தை எப்படி வருகிறது என்று காண்பித்தார்கள். எனக்கு புரிந்து போயிற்று. ஆனால் முன்னாடியிருந்த ஒரு ஆர்வம் சப்பென்று போனது. வீட்டில் ‘புள்ளய எவ்வளவு செரமப்பட்டு பெக்குறொம் தெரியுமா ? ‘ மாமாவிடம் மாமி கொஞ்சலாய் கேட்கும்போது ‘ஆமா..தொட்டித் துணியை நல்லா கையால இறுக்கிப் புடிச்சிக்கிட்டு ‘யா முஹய்யத்தீன் ‘னு மூணு தடவை கத்தி ரெண்டு முக்கு முக்குறீங்க. பெரீய்ய இதா இது ?! ‘ என்று நக்கலான குரலில் சொல்வார். பொம்பளைகள் சிரிப்பார்கள். ஒரு தரம் தம்பி, வீட்டில் Deckல் Donna Summerஐ போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் செக்ஸியாக முனகுவதை குஷியாகக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு ‘என்னடாது புள்ள பெக்குறவ கத்துறமாதிரி கத்துறா.. நல்லாத்தான் பாட்டு கேக்குறே போ ‘ என்ற லாத்தாவின் குரல் சிரிப்பைக் கொடுத்தது.
அன்று நண்பன் ரஹீமின் கைலி கடையில் அவனுக்கு உதவியாய் நானும் ஹமீதும் பகல் ஒரு மணி வரை இருந்து விட்டு வந்து வெளியான்ஸில் படுத்து விட்டோம். மூன்று மணி இருக்கும். கார் வந்த சத்தம் கேட்டது. என்ன விஷயம் என்று எழுந்து போய் பார்த்தேன். கஷ்டமாக இருப்பதாகவும் இங்கே ஆஸ்பத்திருக்கு கூட்டிக் கொண்டு போவதாகவும் உம்மாவை மெள்ள அழைத்து வந்த மாமி சொன்னார்கள். கூட கனிமா, கலிமாபீவி, பாட்டி ஹைஜாம்மா வந்தார்கள். ‘இத முன்னாடியே பண்ணித் தொலைச்சா என்னா ? என்னா சொன்னாலும் கேக்க மாட்டிங்களே.. சரி, கொண்டு போங்க நான் இதொ வர்றேன் ‘ என்றேன். ‘புள்ளே இன்னும் ஒண்ணு ரெண்டு மணி நேரத்துலெ பொறந்துடும். நீ ஒரே தரியா நோன்பு தொறந்துட்டு வா ‘ என்றார்கள். அதுவும் சரியாகப்பட்டது. நல்லவேளை நாகூரில் பிரசவ ஆஸ்பத்திரி இருப்பது ஒரு அவசரத்திற்கு உதவுது என்று நினைத்தேன். பத்து பதினைந்து வருடமாய் இதோ வருது அதோ வருது என்று பல லட்சம் ரூபாய் ஒவ்வொரு தடவையும் வசூலாகி ஊர் பெரிய மனிதர்களின் வயிற்றுக்குப் போய் ஒரு மாதிரியாய் இப்போதுதான் கட்டி முடித்திருக்கிறார்கள். அப்போது..அடிக்கல் நாட்டும்போது ஒரு கழக அமைச்சர் பிரச ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டுவதால் வீட்டில் பெரியவர்கள் தைரியமாக ‘அடிக்கல் ‘ நாட்ட வேண்டாம் ‘ என்று பேசி பெரிய கரகோஷத்தை வாங்கியது இப்போதும் நினைவில் இருக்கிறது.
ஜமால் யூசுப்தான் இந்த ஆஸ்பத்திருக்கு தலைமை டாக்டர். நல்ல பேர் இவருக்கு. ‘ரொம்ப ஈஸியா வழுக்குண்டு இழுத்துப் போட்டுடுறாரு.. ‘ என்று. வழக்கம்போல நானும் ஹமீதும் நாலு மணிக்குமேல் எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தோம். High School விடும் நேரம். இந்தப் பக்கமாய் மிய்யான்தெருவிற்கு நாலைந்து அழகான பெண் பிள்ளைகள் போகும் புர்ஹா போட்டுக் கொண்டு. ஆளுக்கு இரண்டு பிடித்திருந்தோம். இன்னொன்று இருவருக்கும் பொதுவாகிற நடவடிக்கை. இதைத்தவிர வயதுக்கு வரும் தோதிலிருக்கிற குதிர் மாதிரி இருக்கிற (நாங்கள் இதை paint என்போம்) பெண்பிள்ளைகளுடன் ‘டா ‘ அடித்துக் கொண்டிருப்போம். எனக்கு இன்று மனது சரியில்லை. உம்மாவின் நினைப்பாகவே வந்தது. அந்தப் பெண்கள் ஒவ்வொருவராய் போனார்கள் துணைக்கு வரும் வேலைக்கார கிழவிகளுக்குத் தெரியாமல் நாசூக்காய் கை காட்டிவிட்டு. எப்போதும் போல நான் பதிலுக்கு கைகாட்டவில்லை. ஹமீதும்தான். இரண்டு நாள் முகத்தை ‘உர் ‘ர்ரென்று வைத்துக் கொண்டு போவார்கள். போகட்டும். வீட்டுச் சின்னப் பையன்களும் பெண்பிள்ளைகளும் ஆஸ்பத்திருக்கு ஓடி ஓடிப்போய் பார்த்து விட்டு வந்தார்கள். ஒரு பிள்ளை, ‘ரொம்ப வேகமா கத்துறாஹா உங்க உம்மா ‘ என்று சொல்லிவிட்டுப் போன போது எனக்கு மனதெல்லாம் வலித்தது. ‘ஏன் இப்படி ? நீயாகத்தானே வரவழைத்துக் கொண்டாய் ‘ என்று ஆத்திரப்பட்டேன். உம்மாவை நினைத்து பாவமாகவும் இருந்தது. ஆஸ்பத்திரிபோய் பார்த்துவிட்டு வருவோம் என்று கிளம்பினேன். ‘இதபாரு..இப்ப ஆறுமணியாவுது. ஒரே தரியா நோன்பு தொறந்துட்டுப் போவோம் ‘ என்றான் ஹமீது. சரியாக 6.10க்கு சின்னத்தம்பி நானா சைக்கிளில் வந்திறங்கினார்.. ‘என்னா தம்பி சேதி தெரியுமில்ல.. ? ஃபாருக் சொன்னானா ? ‘ என்றார். ‘உங்ககிட்டெ சொல்லிட்டு வரச்சொன்னேனே அவனெ..புள்ளெ பொறந்திடுச்சி ‘ என்று அவர் சொன்னதும் என் மனது சந்தோஷமானது. ‘என்ன பிள்ளை ‘ என்றேன் ஆவலுடன். அவர் பதில் சொல்லாமல் ‘பிரசவம் ரொம்ப கஸ்டமா பொய்டுச்சு தம்பி..நானும் சுல்தானும்தான் ஜமாலை வீட்டுலேர்ந்து இழுத்துக்கிட்டு ஆஸ்பத்திரி போனோம். சும்மா சொல்லக்கூடாது. அவரும் ரொம்ப செரமப்பட்டாரு..ஒரே கத்து..எங்களுக்கெல்லாம் ஒரு மாதிரியா ஆயிடிச்சி..நல்ல வேளையா அல்லாஹூத்தாலா எல்லாத்தையும் சரியாக்கிட்டான்..ஆம்புளைப்புள்ளைதான்..சந்தோஷம்தானே ? ‘ என்று சொல்லிவிட்டுப் போனார்… ஃபாருக், ‘இங்கேயா இருக்கிறீங்க நானா ? நான் கைலிக்கடையெல்லாம் தேடிட்டு வர்றேன்..ஆம்புளைப்புள்ளை பொறந்திடுச்சி..அழகாக்கிது..கலரு ஒங்கட மாதிரி வெள்ளை ‘ என்று அவசரமாக அவசரமாக சொல்லிவிட்டு சைக்கிளில் பறந்தான் எங்கேயோ.
நோன்பு திறந்துவிட்டு ஹமீதுக்கு ஏதோ வேலையிருந்தபடியால் நான் மட்டும் ஆஸ்பத்திரி போனேன். பிரசவ அறைக்கு வெளியே பெரியமாமி இன்னொரு நடுத்தர வயதுப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பிரசவத்தைப் பற்றித்தான் பேச்சு இருந்ததாகத் தெரிந்தது. ‘வா வாப்பா..வா.. பெரிய பாடாப் போய்டுச்சு போயேன்..உள்ளாக்க மச்சி இருக்கு. புள்ளையெப் பாத்துட்டு வந்துடு..ரொம்ப நேரம் இருந்தா நர்ஸ் கத்தித் தொலைவா ‘ என்றார்கள். உள்ளே போனேன். அறை ரொம்ப சுத்தமாக இருந்தது. ஒரு பெரிய விளக்கு மேலிருந்தது. மற்றபடி வேறு கருவிகள் ஏதுமில்லை. சிசேரியனாயிருந்தால் நாகப்பட்டினம் பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போவார்கள் போலும். ஒரு நீள கட்டிலில் உம்மா படுத்திருந்தார்கள். வயிறு பெருத்திருந்தது. இன்னொரு பொம்பளையுடன் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதைக் கம்மலான குரலில் சொலிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அது சரியாய் விளங்கவில்லை. அறையின் ஒரு மூலையில் உள்ள சின்ன நாற்காலியில் பாட்டி ஹைஜாம்மா அணைத்தாற்போல குழந்தையை ஒருமெத்தென்ற சின்ன துணிக்குவியலின் மேல் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பாட்டியா ஏதும் பேசவில்லை. அவர்களின் முகபாவமும் உதட்டைப் பிதுக்கி அவர்கள் தலையாட்டிய விதமும் பிரசவம் கஷ்டமாக இருந்ததைச் சொல்லிற்று. குழந்தை நல்ல சிவப்பாயிருந்தது. உரியக்கூடிய வெள்ளைத்தோல் போர்த்தியிருந்தது கொஞ்சம் அசிங்கமாகத்தான் பட்டது. ஆனால் முகம் நல்ல மாதிரியாக இருந்தது. எனக்கு, குழந்தை பிறந்த 10, 15 நாளைக்கு அதைப் பொதுவாகப் பார்க்கப் பிடிக்காது – அது கொழு கொழுவென்று அழகாய் இருந்தால் ஒழிய. அதன் பிறகு அந்தக் குழந்தையை நான்தான் தூக்கிவைத்துக் கொண்டாடுவேன். பொதுவாக எங்கள் குடும்பத்தில் குழந்தைகள் நல்ல கொழு மொழுவென்று பிறக்கும். தங்கச்சி, தம்பி எல்லாம் குழந்தையாய் இருந்தபோது இருந்த இருப்பு என் மனதில் நன்றாகப் பதிந்திருக்கிறது. வீட்டு போட்டோ ஆல்பமும் நன்றாக விளக்கும் இதை. எனக்கு நேர்த்தம்பியான சேத்தான் – சேத்தாப்பா என்று நாங்கள் செல்லமாய் கூப்பிடும் இப்றாஹிமை தூக்கி வைத்துக் கொள்ளவே ஒரு ஆள் அமர்த்தினார்களாம். அவ்வளவு குண்டாயிருப்பானாம். சொந்தக்கார கல்யாணம் ஒன்றிற்கு அவன் சிறு குழந்தையாயிருக்கும்போது காரில் சென்றபோது அவனைத் தூக்கிச் சென்ற மெளலானா இப்போதும் அவனைப் பார்த்துச் சொல்லுவார். ‘அல்லா வச்சு காப்பாத்த..ஒன்னய தூக்கி எனக்கு நெஞ்சு வலியே வந்திரிச்சிடா, நெசமா! ‘ என்று. ஆனால் மாமி வீட்டுக் குழந்தைகள் அவ்வளவும் படு ஒல்லியாய் இருக்கும். இந்தக் குழந்தை மாமி வீட்டுடையது போலிருந்தது. ஆனால் முகம் தங்கச்சி சல்மா சாயலில் இருந்தது. ‘சரி..நான் போய்ட்டு வர்றேன் ‘ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன் மாமியிடம். ‘எப்ப வூட்டுகு வருவாஹா ? ‘ என்றேன். ‘ஜமால்ட்டெ கேட்டுக்கிட்டுத்தான் மேக்கொண்டு பண்னனும்..நாள ராவக்கி வந்துக்கலாம் ‘ என்றார்கள்.
அடுத்த நாள் காலை ஆஸ்பத்திரி போனேன். ஒரு பெட்டில் உம்மா படுத்திருந்தார்கள். சுற்றி பொம்பளைகள். பக்கத்தாற்போல் ஒரு தொட்டிலில் குழந்தை படுத்திருந்தது. நேற்று இருந்ததை விட முகம் எனக்கு தெளிவாகப் பட்டது. நர்ஸ் வந்து குழந்தையைப் பார்த்தாள். ‘பாரு பீவி..கொழந்தெ நல்லா அதிர்ஷ்டக்காரனா வருவான் பாரேன், அடே..நல்லா அழுவுடா..அழுவு.. ‘ என்று காலில் ஒரு சுண்டு சுண்டிவிட்டுப் போனாள். குழந்தை வீலென்று அழுதான். மறுபடியும் நர்ஸ் கொஞ்ச நேரம் கழித்து வந்து ‘ஏன் பீவி..கொழந்தெ ரொம்ப பதரா ,ஒண்ணுமில்லாம இருக்கானே..மருந்து கிருந்து திண்டியா ? என்று கேட்டாள். ‘இல்லேமா..அதுல்லாம் திங்கலே.. ‘ என்று உம்மா மறுத்தார்கள். ‘இல்லே..நீ திண்டிருக்கே பீவி..இல்லேண்ணா இவ்வளவு weakகா இருக்க மாட்டேனே.. ‘ என்று சொல்லிவிட்டு மறுபடியும் குழந்தையின் காலில் சுண்டி அவன் வீலென்று அழுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டு போனாள். சுற்றிச் சுற்றி ‘கொழந்தெ நல்லாயிருக்கான் பீவி ‘ என்று சொல்லிய வண்ணம் திரும்ப திரும்ப வந்தாள். அப்புறம் நான் கடைக்கு வந்து விட்டேன். ஹமீதும் அங்கிருந்தான். மதியம் இரண்டு மணிக்கு சேச்சியின் மூத்தமகன் நாஸர் கடைக்கு வந்தான். ‘புள்ளையிட பாடு ரொம்ப கஷ்டமாப் பொய்டுச்சு நானா…ஆஸ்பத்திரி போயிருந்தேன்..மூச்சு விட புள்ளெ ரொம்ப செரமப்பட்டுச்சு..வலிப்பு வந்த மாதிரி கைகாலுல்லாம் இழுத்திச்சி. பொம்பளையெல்லாம் அழுவ ஆரம்பிச்சுட்டாஹா..ஜமால் வீட்டுக்குப் போய் அவசர அவசரமா அவரை கூட்டிக்கிட்டுப் போனேன். பார்த்தாரு.. ‘புள்ளைய அழுவ வுடாம வச்சுக்கனும் .ஒரு வாரத்துக்கு ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்..வூட்டுக்கு வந்து தெனமும் பாக்குறேண் ‘டு சொன்னாரு ‘ என்று சொல்லிவிட்டுப் போனான். நான்கு மணிக்கு நானும் ஹமீதும் ஆஸ்பத்திரி போனோம். நர்ஸ் பார்த்து அடையாளம் கண்டு கொண்டு சிரித்து அருகில் வந்தாள். ‘தம்பி..அம்மா வூட்டுக்குப் போய்டுச்சு..கொஞ்சம் ஜாக்கிரதைய்யா பார்த்துக்கச் சொல்லு கொழந்தெயெ.. ம் ? ‘ என்று சொன்னாள். வீட்டிற்கு வந்து நான் குழந்தையைப் பார்த்தேன். நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தது. முகத்தில் ஒரு அமைதி இருந்தது, கஷ்டப்பட்டுக் கிடைத்த ஒரு அமைதி போலிருந்தது.
அன்று சாயந்தரம் நோன்பு திறந்து விட்டு ஹமீதைக் கூட்டிக்கொண்டு மாமாவின் ரிகார்டிங் கடையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். கண்ணாடியில் பச்சை ரோஸ் என்று வர்ணங்களை அள்ளிக் கொட்டி தர்கா படம் வரைந்து கொடுக்கும் செல்லசாபு ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டு வந்தார். சண்முகம். இவர் சாபு கடையில் உட்கார்ந்திருப்பார். ஏன் என்றால் ஏன் என்கிற பழக்கம். அவ்வளவுதான். வாஞ்சூரில் வாத்தியாராய் இருந்துகொண்டே துணிப்பைகளும் தயாரித்துக் கொடுப்பார். எழுத்து மட்டும் இருந்தால் அவரே எழுதிவிடுவாராம். மூன்று வெவ்வேறு சாமி படமும் போட வேண்டும் என்பதால் வந்தாராம். நாளை சாயந்திரம் பணத்தோடு வருவதாகச் சொன்னார். பணம் நிச்சயாமய் வெகு குறைவாகத்தான் கொடுப்பார். மெட்ராஸ் ஆர்டருக்கு ஒரு emblem டிசைன் பண்ணிக் கொடுத்து 300 ருபாய் வாங்குவேன் சாதாரணமாய். ஆனால் இவர் மூன்று டிசைனுக்கும் சேர்த்தே முப்பது ரூபாய் கொடுப்பதே பெரிய பாடு. வழக்கமாய் இவருக்கு வரைந்து தரும் G.N.Arts கணேசனிடம் போகுமாறும் என்னால் இப்போது முடியாதென்றும் எவ்வளவோ மறுத்தேன். கணேசனோடு மனஸ்தாபமாம் இப்போது. ‘நீங்கதான் போட்டுத் தரனும்..சாபு உங்க ரூமை வந்து பாத்துட்டு அசந்து போய் வந்து என்னெட்ட சொன்னாரு. என்னென்னமோ அட்டகாசமா வரைஞ்சிருக்கிருக்கீங்களாமுல்ல ரூமெலெ ‘ என்றார். சாபுவின் நச்சரிப்பு தாங்காமல் நாளை காலை போட்டு விடுகிறேன். சாயந்திரம் வந்து எடுத்துக் கொள்ளுங்கள் ‘ என்றேன். தொந்தரவு பிடித்த வேலை. Butter paperல் Finishing ஆக பண்ணித் தொலையனும். அட்டையில் பண்ணுவதுபோல கடைசியில் white வைத்து பிசிரை சரிப்படுத்திவிட முடியாது இதில். ‘சரிதான்- போட்டுக் கொடேன். அவன் பணம் தராத மாதிரியே நெனச்சுக்க ‘ என்றான் ஹமீது.
Customers ஒவ்வொருவராய் வந்து இன்னின்ன பாட்டுகள் record பண்ணவேண்டுமென்று கேட்டார்கள். குறித்துக் கொண்டிருந்தேன். பொதுவாக நோன்புமாதத்தில் நாகூர் ஹனீஃபா பாட்டுள்ள கேஸட்டுகள் அதிகம் விற்பனையாகும். இந்தத் தடவை சற்று குறைவுதான். இன்று முக்கால்வாசி ஆர்டர்கள் ‘லாவரிஷ் ‘ (முக்கியமாக அமிதாப்பச்சன் பாட்டுக்கு) ‘அலைகள் ஓய்வதில்லை ‘ என்று கேட்டு வந்ததுதான். அப்போது கடைசித்தம்பி ஹாஜா குரங்குப்பெடலில் வேகமாய் சைக்கிளில் வந்தான். ‘நானா..புள்ளக்கி ஒரு மாதிரியா இக்கிது..டாக்டரை கூப்புடப்போறேன் ‘ என்று சொல்லிவிட்டு வேகமாய் போனான். கடைப்பையன் ஒருவனை டாக்டர் வீட்டுக்கு அவனும் போய் விஷயத்தைச் சொல்லிவிட்டு உடனே அன்சாரி வீட்டுக்கு வரச் சொல்லு என்று சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு விரைந்தேன். தாழ்வார அறையில் பாட்டி, இன்னாச்சி, மாமி, சின்னம்மா எல்லோரும் இருந்தார்கள். பெரியமாமியின் கையில் குழந்தை இருந்தது. உம்மா அதையே பார்த்தவண்ணம் பதைபதைத்து உட்கார்ந்திருந்தார்கள். சாதாரணமாய் குழந்தை ‘வீல்..வீல்.. ‘ என்று தொடர்ச்சியாய் அழாமல் ஏதோ ஒவ்வொரு சாட்டையடியின்போதும் ஒருவன் கத்துவது போல ‘அங்..அங்.. ‘ என்று விட்டுவிட்டு கத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவை கத்தி முடித்தபோதும் அந்த சிவந்த உடம்பில் கருமை ஓடிவந்து சூழ்ந்தது. ரத்தச் சிவப்பாயிருக்கும் குழந்தையின் உதடு கருத்துப் போனது. குச்சியாய் இருந்த கைகாலை இழுத்து இழுத்துக் கத்தியது..எனக்கு நெஞ்சில் ஒரு பந்து வந்து அடைத்தது.
மாமி தலையில் அடித்துக் கொண்டார்கள். ‘என்னதான் செய்றதுன்னு தெரியலையே..பெரிய பாவாமாவுலெ போய்டுச்சி..எரக்கமேயில்லாமயில்லெ அல்லா இப்படி வேதனை படுத்துறான். இதப் பாத்துக்கிட்டிக்கிறதுக்கு நாம ‘மெளத் ‘தாப் பொய்டலாம் போலருக்கே.. ‘ என்று. உம்மாவை பார்க்க பயமாக இருந்தது. வெறித்து குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அங்கு நிற்கவே எப்படியோ இருந்தது. வாசலுக்கு வந்து நின்று கொண்டேன். ஜமால் டாக்டர் சிறிது நேரத்தில் வந்து விட்டார். வீட்டில் நல்ல பழக்கம் உள்ளவர். நேரே அறைக்கு வந்து குழந்தையைப் பார்த்தார். இதற்குள் குழந்தை சற்று சுதாரிப்பாக ஆகியிருந்தது. அதன் அழுகையின் வேகம் மட்டுப்பட்டிருந்தது. ‘இதுக்கு என்னெத்த மருந்து கொடுக்குறது ? அழுவ வுடாம பாத்துக்குங்க..அதான் இதுக்கு பெரிய மருந்து இப்ப. கத்தும்போது இந்த மருந்தை அதுட வாயிலெ தொட்டு வைங்க. வேறொண்ணுமில்லை..ஒரு வாரத்துக்கு ரொம்ப ஜாக்கிரதையா இருங்க..அதுக்கு அப்புறம் நாப்பது முடியுறவரைக்கும் கொஞ்சம் கவனமா, அதுக்குப்புறம் புள்ளெ சரியாகிடும்..ஒரு வாரத்துக்கு அப்படித்தான். ‘ என்று சொல்லிவிட்டு ‘கெடு வைக்கிற மாதிரிலெ சொல்லிட்டுப் போறாஹா.. அழுவ வுடாம எப்படித்தான் புள்ளெயெ வச்சிக்கிறது.. ? ‘ என்று உள்ளே புலம்புவதை கேட்காதது போல் வெளியில் வந்தார். என்னிடம் ‘ஆங்கிலத்தில், ‘ஆபிதீன்..புள்ளையின் நிலைமை கவலை தரக் கூடியதுதான்..இதயத் துடிப்பு ரொம்ப குறைச்சலாயிருக்கு..Blue Baby..கவனமா அழவிடாமல் பார்த்துக்கச் சொல் ‘ என்று சொல்லிவிட்டுப் போனார். மறுபடியும் அறைக்குள் போனேன். குழந்தை இப்போது நல்லமாதிரி- கொஞ்சம் சிரித்த முகத்தோடு- இருப்பதாகத் தோணிற்று. ;கொஞ்ச நேரத்துலெ இப்படி திடார் திடார்னுட்டு வயித்துலெ தீயை வச்சிடுதே..என்ன பண்றதுண்ணு புரியலையே.. ‘ என்று அம்மா புலம்பிக்கொண்டே மாமியிடமிருந்து பால் கொடுக்க தூக்கிக் கொண்டார்கள். நான் வெளியான்ஸில் உட்கார்ந்தேன். குழந்தை அழுத அழுகை திரும்பித்திரும்பி காதில் ஒலித்த வண்ணம் இருந்தது. அதை அழுகை என்று சொல்ல முடியாது. உயிருக்குத் தவித்த தவிப்பு என்று சொல்லலாம்.
சின்னப்பிள்ளையில் எனக்கு ஓதிக் கொடுத்த சாபு என்னைப் பார்க்க வந்தார்கள். நோன்பு நாளையில் தெருப்பள்ளியில் திராவியா தொழுது கொடுக்க விஷேசமாய் ஊரிலிருந்து வந்து விட்டுப் போவார்கள். ஐந்தாறு நாட்களுக்கு முன்பு ஹமீது வீட்டு வாசலில் என்னைப்பார்த்து ‘ இன்னக்கி ‘பள்ளி ‘க்கு வந்துடு..நீ, ஹமீதுன்னு சேந்தாப்ப்ல நாலைன்சு பேரா வாங்க. ஆளுக்கு ரெண்டு முணு ஜூஜ்ஜூ ஓதுங்க வந்து ‘ என்றார்கள். நான் ஐந்தாவது படிக்கும்போதே அநேகமாய் சாபிடம் பள்ளிப் பாடங்கள் எல்லாவற்றையும்- பொதுவாக பள்ளிப் பிள்ளைகள் ஓதி கடைசியாய் முடிப்பதில்-ஓதி முடித்து விட்டேன். அதற்கப்புறம் பள்ளிப்பக்கமே காலை எடுத்து வைக்கவில்லை. நான் ஸ்கூலில் எட்டாவது படிக்கும்வரை எனக்கு நன்றாக ஓதத் தெரிந்திருந்தது. வீட்டில் நடக்கும் ஃபாத்திஹாக்களில் நானும் ஓதியிருக்கிறேன். அதற்கப்புறம் சின்னாப்பா கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெரியார் பக்தர் என்னிடம் என்னென்னவோ கேள்விகள் கேட்டு கடவுள், வழிபாடு எல்லாவற்றிலும் சந்தேகம் உண்டு பண்ண வைத்து விட்டார். அதற்கப்புறம் நிறைய புத்தகங்கள் அவர் வந்து கொடுக்க நான் அதையெல்லாம் படித்து ஒரு மாதிரியாய் ‘அல்லா கிடையாது ‘ என்று சொல்ல ஆரம்பித்து விட்டேன். பையன்கள் என்னை மாதிரியாய் ஒதுக்கி வைத்து விட்டார்கள். ஸ்கூலில் கலிஃபா சாரெல்லாம் என்னை ஜாடைமாடையாய் வெடைப்பார். பொதுவாக அவர் எல்லாப் பையன்களையும் ஒரு ஒரு காரணத்திற்காக வெடைப்பாரென்றாலும் (இதனாலேயே இரண்டு பெரிய பையன்களிடம் அறையே வாங்கியிருக்கிறார்) நான் படிப்பில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் ஆதலால் என்னை கேலி பண்ண இந்த விஷயம் ஒன்றுதான் மாட்டியது.. நான் ஏதேனும் கேள்வி கேட்டால் ‘அவர்ட்டெயெல்லாம் நாம எதுவும் பேசக் கூடாது. அவரு அல்லாவையே இல்லேன்னவரில்லே! ‘ என்று ஏக மரியாதையுடன் என்னை சொல்லி வெடைப்பார். பையன்கள் நக்கலாய் என்னைப் பார்த்து சிரிப்பார்கள். எனக்கு அப்படியே கலிஃபா சாரை ஓங்கி அறையலாமா என்று வரும். கண்ணில் வெறி மின்ன உட்கார்ந்திருப்பேன்.. அப்போது எல்லாம் ஓதுவது கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்திருந்தது. இப்போது இந்த 23 வயதில் சுத்தமாய் ஒரு வார்த்தைக்கூட எழுத்துக் கூட்டி ஓத முடியாது. சலவாத்து கலிமா என்று கொஞ்சம் கொஞ்சம் சிலது நினைப்பிலிருக்கிறது. ஆதலாம் ‘ஓதுறது மறந்து போய்டுச்சு சாபு ‘ என்றேன். தாடிசாபுக்கு (அவரை நாங்கள் அப்படித்தான் செல்லமாக கூப்புடுவோம்) தூக்கிவாரிப்போட்டது. ‘அபடியெல்லாம் சொல்லாத..அது எப்படி மறக்கும் ? ம் ? இன்னக்கி ராவு எப்படியும் பள்ளிக்கு வந்துடனும்… ‘ என்று சொல்லிவிட்டுப் போனார். அன்றைக்கு நாங்கள் போகவில்லை. இது விஷயமாய் ஏதேனும் கேட்டால் இப்போது தர்மசங்கடமாயிருக்குமே என்று நினைத்தேன். ஆனால் அவர் இது பற்றி கேட்க வரவில்லை என்று தெரிந்து விட்டது. ‘ஒஞ் சின்னாப்பா சொன்னாரு..இந்த மாதிரி , ஒனக்கு தம்பி பொறந்திருக்கான்னு. அதான் பாத்துட்டு போகலான்னு வந்தேன் ‘ என்றார். என்ன பேசுவதென்று தெரியாமல் சற்று நேரம் அவரையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். சாபுக்கு தாடிதான் நரைத்து விட்டதேயொழிய முக அழகு அப்படியே இருந்தது. அவர் பேசும்போது கண்ணில் ஏதோ மின்னும்..என்ன அடி வாங்கியிருக்கிறேன் இவரிடம்.! அப்பா….பள்ளிக்கு போகாவிட்டால் நாலைந்து பையன்களுடன் ‘குண்டாக்கட்டை ‘ அனுப்புவார். அதனுடன் பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலியை கழுத்தில் மாட்டிக்கொண்டு அந்த கனத்த கட்டையை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு போகும் சிரமத்தை விட அந்த அவமானம்தான் கொடுமையான விஷயம். பையன்கள் நாலைந்து நாள் உயிரெடுத்து விடுவார்கள் வெடைத்தே. எல்லோரும் மாட்டுவதுதான் பொதுவாக. பெண்பிள்ளைகளுக்கு பிரம்படி மட்டும்தான். எங்களுக்கெல்லாம் இரண்டும். இப்போது பள்ளியில் ஓதிக்கொடுப்பவர் பெண்பிள்ளையை மட்டும் அதன் மேல்தொடையில் அல்லது மார்பில் கிள்ளி கண்டிக்கிறார் என்று ஒரு செய்தி வந்து சங்கத்தில் அவரை கொஞ்சநாள் விலக்கி வைத்து மறுபடியும் சேர்த்தார்கள். ‘ம்…நீல்லாம் தொழுவுறதை வுட்டுட்டாப் போலத் தெரியுது..ம்.. ‘ என்று ஆரம்பித்து இஸ்லாத்தில் சேர்வதற்கு ஜனங்கள் எவ்வளவு துடிக்கிறார்கள் என்பதையும் எங்கெங்கே ஹரிஜனங்கள் கூட்டம் கூட்டமாய் மதம் மாறியிருக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கெல்லாம் முஸ்லீமாய் இருப்பவர்கள் எவ்வளவு தூரம் ஒரு நல்ல உதாரணமாய் இருக்க வேண்டுமென்றும் ‘லெக்சர் ‘ பண்ண ஆரம்பித்தார். ‘போச்சுடா ‘ என்று நினைத்துக் கொண்டு ‘நீங்க வந்திக்கிறதை வூட்டுலெ சொல்லிட்டு வந்துடுறேன் ‘ என்று எழுத்தேன். ‘அன்னைக்கே சொல்லலான்னு நெனச்சேன்..கைலியை கணுக்காலுக்கு மேலே கட்டு. என்ன இப்படி சீக்க சீக்க நீ, ஒன் ‘செட் ‘டெல்லாம் உடுத்துறீங்க ? தெருவுலெ இக்கிற அசிங்கத்தையெல்லாம் கூட்டுறதுக்கா ? அதுக்குத்தான் தோட்டி இருக்கிறானே.. ‘ – சாபு மறுபடியும் ஆரம்பித்தார்கள். இப்படியெல்லாம் அட்வைஸ் கொடுக்கிற , பள்ளியில் ஓதிக்கொடுக்கும் சாபு நிறைய பேர் ஊரிலுண்டு. ஒவ்வொருவரும் தான் சொல்வதற்கு முரணாய் நடத்தையில் (உதாரணமாய் ஒவ்வொருத்தரும் நிறைய பள்ளிப் பையன்களை கணக்கு பண்ணி வைத்திருப்பார்கள் – ‘குப்பி ‘ அடிக்க. நிறைய குப்பி கொடுக்கும் பையனை ‘குடுவை ‘ என்று அழைப்பார்கள்) இருப்பார்கள். ஆனால் இவர் ஒருத்தர்தான் எனக்குத் தெரிந்து தான் சொல்வதில் ஆழ்ந்த பிடிப்பும் நம்பிக்கையும் அதன்படி நடப்பவருமாயிருந்தார். அதனால் இவரிடம் எனக்கு மதிப்பிருந்தது. அதனால் பேசட்டும் என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் போய் தாடிசாபு வந்திருப்பதாகச் சொன்னேன். ‘நல்லதுதான்.. நோன்பு காசு குடுக்கச் சொல்லி வேற வாப்பா எழுதியிருந்தாஹா.. ‘ என்று உம்மா 25 ரூபாய் சுருக்குப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார்கள். மாமி, ‘ஏம்ப்பா..அப்படியே பேரு வச்சிடலாமே புள்ளக்கி ‘ என்று சொன்னார்கள். அதற்கு உம்மாவும் ‘ஆமாம் சாபு வந்ததோட அதையும் நெறவேத்திட்டுப் போவட்டும். சாபெ கூப்புடு ‘ என்றார்கள். நான் அறைக்குவந்து சாபுவிடம் பணத்தைக் கொடுத்தேன்- வாப்பா கொடுக்கச் சொல்லி எழுதியிருந்ததாக. அடுத்த வருடம் – நான் சாமத்தியம் பண்ணும்போது – இதைவிட நிறைய தருவதாகச் சொன்னேன். ‘அல்லா போதுமானவன் வாப்பா..நீ நல்லா சம்பாதிப்பே ‘ என்றார். பெயர் வைக்க உள்ளே அழைத்துப் போனேன். ‘வாங்க சாபு ‘ – எல்லோரும் இவரிடம் ஓதினவர்களாக இருந்ததால் சாபிற்கு வரவேற்பு பலமாக இருந்தது. ‘ஏம்ப்பா..என்னா பேரு வைக்கிறதுண்ணு நீனே சொல்லு..நாங்க வைக்கிற பேருலாம் ஒனக்கு நூதனாம தெரியும். நீனே நல்ல பேரா சொல்லு ‘ என்று மாமியும் உம்மாவும் சொன்னார்கள். உண்மைதான். எங்கள் குடும்பத்தில் அழகான பெயர் வைக்கும் பழக்கமே இல்லை. திருப்பி திருப்பி அப்துல் காதர் , முஸ்தபா, குலாம் தஸ்தகீர் என்று சொல்வதற்கு கொஞ்சமும் இனிமையேயில்லாத மாதிரிதான் வைப்பார்கள். நான் இதுபற்றி கேலி பண்ணி பேசுவதுண்டு. சின்னமாமா நிஜாம் ஒருத்தர்தான் தன் குழந்தைக்கு ‘ஹனீஃப் அக்தர் ‘ என்று இனிமையாய் பெயர் வைத்தார். நான் ரஹீமிடமிருக்கும் ஒரு பெயர்ப் புத்தகத்திலிருந்து பார்த்து ஒரு பெயரை தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். கேட்கனும் கேட்கனும் என்று நினைத்து மறந்தே விட்டேன். சட்டென்று அப்போது ஹமீதின் காலேஜ் நண்பன் நஜீமுல் ஆஸிஃப் பெயர் நினைவிற்கு வந்தது. சொல்ல்வதற்கு அழகாகவும் இருந்தது. இந்தப் பையரை வைக்கலாம் என்று சொன்னேன்… ‘ஆஸிஃப்… ம்… நல்லாத்தான் இக்கிது. மொதல்லெ கொஞ்சம் நெறடா இருக்கும் சொல்றதுக்கு ‘ என்று உம்மா சொன்னார்கள். தங்கச்சி சல்மா ‘நஜ்முல் ஆஸிஃப், நஜ்முல் ஆஸிஃப் ‘ என்று இரண்டு தடவை உச்சரித்துப் பார்த்துவிட்டு ‘நல்லாக்கிது நானா, பேரு ‘ என்றாள். பதிமுன்று வயதாகியும் இன்னும் அவளுக்கு மழலை இருந்தது. இதைச் சரியாகச் சொல்லிவிட்டாளே என்று எல்லோரும் அவளைக் கேலி பண்ணினார்கள். சாபுவும் சிரித்தார்.
எப்படி பெயர் வைப்பார்கள் என்பது சரியாக எனக்குத் தெரியாது. ரொம்ப நாளைக்கு முன் குழந்தைக்கு – அது எந்தக் குழந்தைக்கு என்று ஞாபகம் இல்லை – சாபு வந்து , வீட்டில் பெயர் வைத்தது ஞாபகம் இருக்கிறது. லேசாக, தேன் , பால் என்று கிண்ணத்திலிருந்ததைத் தொட்டு நாக்கில் வைத்தது ஞாபகம் இருக்கிறது… இப்போது கொஞ்சம் ஆர்வத்துடன் கவனித்தேன். சாபு குழந்தையின் வலது காதில் லேசாக ‘பாங்கு ‘ சொன்னார்கள். பின் அதன் இடது காதில் ‘இகாமத் ‘ சொன்னார்கள். அப்புறம் மூன்று கிண்ணங்களிலிருந்த தேன், பால், தண்ணீர் மூன்றையும் ஒரு விரலால் தொட்டு தொட்டு ‘நஜ்மூல் ஆஸிஃப் ‘ என்று சொல்லியபடி குழந்தையின் நாக்கில் தொட்டார். இப்படி மூன்று தடவை சாபு தொட்டுத் தொட்டு அதன் நாக்கில் நஜ்முல் ஆஸிஃப் என்று சொல்லியபடி தடவினார். அவர் நஜ்முல் ஆஸிஃப் என்று சொல்லும்போது சுற்றியுள்ளவர்களும் நஜ்முல் ஆஸிஃப் என்றார்கள். அப்புறம் அறையிலிருந்தவர்கள் ஒவ்வொருவரும் குழந்தையின் நாக்கில் அதன் பெயர் சொல்லி தேனையும் பாலையும் தண்ணீரையும் தொட்டு வைத்தார்கள். நானும் அப்படிப் பண்ணினேன். அது தன் நாக்கை உதட்டுப் பக்கம் கொண்டு வந்து சப்புப் கொட்டியது பார்க்க நன்றாக இருந்தது. குழந்தை பார்க்க நன்றாக இருந்தது அப்போது. கடைசியாய், சாபு ஃபாத்திஹா ஓதி முடித்ததும் வாப்பா அனுப்பியிருந்த ரொட்டி மிட்டாய் டின்னிலிருந்து நிறைய நிறைய எல்லோருக்கும் எடுத்துக் கொடுத்தார்கள் உம்மா. சாபு ‘பொய்ட்டு வரேம்மா ‘ என்று உம்மாவிடம் பணம் வாங்கிக் கொண்டு என்னிடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார். அன்று இரவு வாப்பாவிற்கு லெட்டர் எழுதினேன். குழந்தை பிறந்ததிலிருந்து வாப்பாவிற்கு எழுதிப் போடுமாறு நச்சரித்த பாட்டியவிடம் பெயர் வைத்த பிறகு சேர்ந்தாற்போல எழுதிவிடலாம் என்று சொல்லியிருந்தேன். எழுதி நாளை காலை எப்படியும் போஸ்ட் பண்ணி விடனும் என்று.. சந்தோஷமான செய்தி. தாங்கள் ஆசைப்பட்டபடி ஆண் குழந்தைதான். குழந்தை நன்றாக இருக்கிறது. உடம்புதான் பலவீனமாயிருக்கிறது. தேற்றி விடலாம்.. நஜ்முல் ஆஸிஃப் என்று அழகாய் பெயர் suggest பண்ணியது பற்றி நான் நியாயமாய் சந்தோஷப்படலாம்..என்று எழுதி பிற வீட்டு விஷயங்களையும் (குழந்தை பிறந்ததிலிருந்து கொஞ்சம் கூட எதிலும் பட்டுக் கொள்ளாமலிருக்கிற பெரியம்மா பற்றி மற்றும் இன்ன பிற) சேர்த்து எழுதினேன். கடைசியில் ஒரு பேச்சாளர் தன் கூட்டத்திற்கு வந்திருந்த , முன்னாலுள்ள குழந்தைகளை நோக்கி ‘ கடைக் குட்டியெல்லாம் கையைத் தூக்குங்க ‘ என்று சொன்னார்; கை தூக்கிய பிள்ளைகளிடம் ‘ஏங்கடா..அதை நீங்களே தீர்மானிச்சிட்டிங்களா ? ‘ என்று கேட்டார் என்று எழுதி அப்படியே விட்டு விட்டேன்..!
அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே குளித்துவிட்டு வாசலில் உட்கார்ந்து போர்டில் Butter Paperஐ பொருத்திவிட்டு அந்த மூன்று பைகளுக்கான டிசைனை போட ஆரம்பித்தேன். மூன்றையும் தெளிவாய் ஸ்கெட்ச் பண்ணிவிட்ட பிறகு முதல் பைக்கான டிசைனை Indian Inkல் தொட்டு போட ஆரம்பித்தேன். என்னமோ எனக்கு மனது சரியாக இல்லை, சரியாய் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் சங்கடப்பட்டேன். Brush ஒரே இடத்தில் நின்று காய்ந்து போனது அடிக்கடி. திடாரென்று வீட்டினுள்: ஏற்பட்ட பதட்டம் வாசலில் லேசாக எனக்குக் கேட்டது. பிள்ளைதான் காரணம் என்பது எனக்கு புரிந்து போயிற்று..மேலே வரைய முடியவில்லை. அறைக்குள் போர்டை கொண்டுபோய் வைத்து விட்டு நாற்காலியில் சாய்ந்தேன். ஹாஜா ஓடிவந்து ‘நானா…புள்ளக்கி மறுபடியும் மாதிரியா வருது ‘ என்று சொல்லிவிட்டு சந்து வீட்டில் சொல்லப் போனான். உள்ளே போய் குழந்தையை பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது தன் மூச்சுக்கு அழும் கண்றாவி அழுகையை என்னால் தாங்க இயலாது என்று உள்ளே போகவில்லை. சந்து வீட்டிலிருந்து ஜுலைஹா மாமி, இன்னாச்சி, ஹமீது, உம்மாத்தா எல்லோரும் உள்ளே போவது தெரிந்தது. இனி ஜமால் டாக்டரை நம்பி பிரயோசனமில்லை..புது பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கும் அந்த குழந்தை டாக்டரிடம்தான் காண்பிக்கனும் உடனே என்று நினைத்தேன். பாட்டியா ஹைஜம்மா கண் கலங்க , அழுகை வாயிலிருந்து வெடிக்கும் நிலையில் ‘வாப்பா..புள்ளைட ‘ஹாலு ‘ சரியாயில்லெ..புள்ளடாக்டரு வெங்கடசுப்ரமணியனை கூட்டி வா வுடனே.. ‘ என்று சொன்னார்கள். நான் வீட்டுள் போய் அறைக்கு வெளியே நின்று கொண்டு பிள்ளையுடன் மன்றாடிக் கொண்டிருந்த மாமியிடம் போய் வெங்கடசுப்ரமணியனை கூட்டிட்டு வந்துடுறேன் ‘ என்றேன். நான் பிள்ளையின் முகத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அதன் அவல அழுகையின் சத்தத்தை என்னால் கேட்காமல் இருக்க இயலவில்லை. காதில் வந்து ஓங்கி ஓங்கி அறைந்து மனதை ரணப்படுத்தியது.. ‘ அவரு இந்த நேரத்துலெ இருக்க மாட்டாருப்பா..ராவக்கி ராவக்கிதான் ஊருக்கு வருவாரு..ஃபோன் பண்ணி உடனே இங்கே வரச்சொல்லு ‘ என்றார்கள் மாமி. ‘ஃபோன் பண்ணி, அவரு எடுத்தாலும் அவருக்கிருக்கிற கூட்டத்தை வுட்டுட்டு இந்த நேரத்துல இங்கே வர்றது நிச்சயமில்லே மாமி…பேசாம, நாமே காரை எடுத்துக்கிட்டு நாகப்பட்டினம் போய் அவர்ட்ட காமிச்சிட்டு வந்துடலாம்..நான் போய் காரை எடுத்துட்டு வர்றேன் ‘ என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாய் மிதித்தேன். கடைத்தெரு வழியாக பஸ் ஸ்டாண்டை அடையலாம் என்று போனேன் வேகமாய். நெல்லுக்கடைத் தெருவிலிருந்து மெயின்ரோடில் ஏறும்போது எதிர்ப்பக்கம் ஸ்கூல் இருக்கிற தெருவிலிருந்து கூட்டமாய் மாடுகள் வந்தன. ஐந்தாறு நிமிடம் காத்திருக்க வேண்டியதாயிற்று..மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த பஸ்களும் நின்று விட்டன. எனக்கு இது அசம்பாவிதமாகப் பட்டது. எருமை மாடுகள் உண்டுபண்ணிய இந்த ஸ்தம்பித்த நிலையை குழந்தையோடு இணைத்து மனம் குழம்பிப் போனேன். கொஞ்ச நேரத்தில் வழி சரியாகியது. எந்த ஊரிலும் இல்லாத புதுமையாக எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்டில் 12 புத்தம்புது ‘T ‘ போர்டு வண்டிகள் நின்று கொண்டிருக்கும். ஆனால் அவ்வளவிலிருந்தும் சிங்கப்பூர் கடை வியாபாரி, புரோக்கர்களால் லைனுக்கு பறந்து விடும்.. ‘இப்ப கார் இருக்கனுமே..இல்லாட்டா என்னா பன்றது ? ஹமீதுட மாமா காரை சொல்லி எடுத்துக்கிட வேண்டியதுதான் ‘ என்று பேசிக் கொண்டே புது பஸ் ஸ்டாண்டை அடைந்தேன். நல்ல வேளையாக இரண்டு கார்கள் இருந்தன. மாமாவின் ரிகார்டிங் கடைக்கு வரும் கஸ்டமரான சூசை ஒரு காரின் டிரைவராக இருந்தது நல்லதாகப் போயிற்று. ‘என்ன நானா ? ‘ என்று அருகில் வந்தவனிடம் அவனை உடனே வீட்டுக்கு வருமாறும் ரொம்ப அவசரம் என்றும் சொன்னேன். ‘வீடு தெரியுமா ? ‘ என்று கேட்டு நான் விளக்க முயற்சித்தபோது ‘தெரியும்..தெரியும்..அன்சாரி வீடுதானே ? எலந்த மரத்தடி சந்து கிட்டெ ? சரி வுடனே வர்றேன் ‘ என்று காரை எடுத்துக் கொண்டு போனான். நான் சைக்கிளில் பின் தொடர்ந்தேன். நான் வீட்டை அடையும்போது காரில் பிள்ளையை வைத்துக் கொண்டு மாமியும் பக்கத்தில் இன்னாச்சியும் இருந்தார்கள். முன் சீட்டில் மச்சான் கலீல் இருந்தான். ஒரு ஆண்பிள்ளைத் துணை அவசியம்தான்… ‘டாக்டர் வீடு தெரியுமா நாகப்பட்டினத்திலெ ? ‘ என்று கேட்டதற்கு ‘ஓ..வெங்கட சுப்ரமணியந்தானே..அந்த அய்யன் வீட்டுக்கு எத்தனை கேசு கொண்டு போயிருக்கேன் ‘ என்று சூச்சை விரைவாக காரை எடுத்தான். வாசலில் நின்று கொண்டிருந்தேன். கார் போவதையும் அதில் எங்கள் வீட்டு ஆட்கள் இருப்பதையும் அப்போதுதான் தன் வீட்டு வாசலில் வந்து நின்ற ஹமீது பார்த்துவிட்டு என்னை நோக்கி வந்தான். அறைக்குள் போய் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். வாசலில் கார் வந்து நின்றது. பிள்ளையை அணைத்தபடி மாமி காரிலிருந்து இறங்கினார்கள். பிள்ளையின் முகம் தெளிவாக, அழகாக இருந்தது. மச்சான் கலீல் டிரைவரிடம் பணைத்தைக் கொடுத்து காரை அனுப்பிவிட்டு அருகே வந்தான். பிள்ளைக்கு டாக்டர் ஊசி போட்டதாகவும் மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்ததாகவும் சொன்னான். பஞ்சில் ஏதோ மருந்தை நனைத்து கொஞ்சம் கொஞ்சமாய் வாயில் வைத்தாராம். அழகாய் நாக்கால் நக்கியதாம். கொஞ்ச நேரத்தில் அழுகை நின்று விட்டதாம்.. வரும்போதே மருந்து மாத்திரையையும் வாங்கிட்டு வந்ததாகச் சொன்னான்.இரவு இங்கே வீட்டுக்கு வந்து டாக்டர் பார்ப்பதாகவும் சொன்னான். நான் உள்ளே போய் குழந்தையைப் பார்த்தேன். உம்மா குழந்தையை வைத்துக் கொண்டிருந்தார்கள். ‘என்னமோ மேஹம் வந்து சூந்திச்சுன்னு சொல்லுவாஹா..அப்படால, கத்தும்போது கருப்பு வந்துடுது மூஞ்சிலெ..இன்னும் முழுசா கருப்பு போவலையே..கைகாலுவெரலெலாம் அந்த கருப்பு இன்னும் ஒட்டிக்கிட்டிக்கிதே..ஒதடு என்னா செவப்பாயிருக்கும்! அந்த செவப்பு முழுக்க வரணும் அப்பத்தான்.. ‘ என்று மாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு நானும் ஹமீதும் மாமாவின் ரிகார்டிங் கடைக்கு வந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ( ‘அதெல்லாம் படிச்சஹ கேக்குற பாட்டு ‘ என்று English Songsஐ , அதை நாங்கள் கேட்பதை மாமா கேலி செய்தாலும் வருகிற Western Music உள்ள கேஸட்களை வாங்கி விடுவார்கள் எனக்காக. அதிர்ஷ்டவசமாய் அன்று John Lennon இருந்தது) எதிர்க் கடையில் இருந்த ஆரிஃப், ‘அட..ஏங்க என்னென்னவோ போட்டு அறுக்குறீங்க..நீங்க வந்தாலே பெரிய தொந்தரவு..அந்த அமிதாப் பச்சன் பாட்டைப் போடுங்களேன்.. ‘ என்று கேட்டதால் அந்தப் பாட்டை கடைத்தெரு அலறுகிற மாதிரி ஆம்ப்ளிஃபேரில் வேகமாய் Volumeஐ திருகிவிட்டு அவர் தலையாட்டி கும்மாளம் போடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே ரஹீமை பார்க்கலாமென்று கைலி கடைக்கு வந்தோம் நானும் ஹமீதும். ரஹீம் இல்லை. சமது மட்டும்தான் இருந்தார்…
வேகமாக வந்து கொண்டிருந்தோம் நானும் ஹமீதும். சின்னாப்பாவும் நாஸரும் அவர்கள் வீட்டிலிருந்து வெளியில் வந்தார்கள். நாஸரின் கையில் ஏழெட்டு கள்ளிப்பெட்டி பலகைகள் சின்ன சின்ன துண்டாயிருந்தன. ‘என்னாப்பா.. ?ஆமா, புள்ளெ மெளத்தாயிடிச்சி..ஹைர்..நீ வூட்டுக்குப் போ..நான் தார்காவிற்கு போய் ‘தாரோக்கா ‘ கிட்டெ எழுதிக் கொடுத்துட்டு குழிவெட்ட ஏற்பாடு பண்ணிப்புட்டு வர்றேன். நாஸர் நம்ம கடைப்பக்கம் இருக்கிற ஆசாரிட பொட்டி செச்சிட்டு வருவான். கலீல்ட்டெ மோதினாரெ கூட்டிட்டு வரச்சொன்னேன். அவரு வந்ததும் என்னான்னா சாமான் வாங்கனும்னு கேட்டு எழுதி கடைக்கு கொடுத்தனுப்பு..நாஸர் வரும்போது வாங்கிட்டு வந்துடுவான்..சரி போ.. ‘ என்று சொல்லிவிட்டுப் போனார், நாஸரும் கூடப் போனான். சின்னாப்பா வீட்டிற்கு பக்கத்தில் நாலைந்து வீடுகள் தள்ளிதான் ஹமீதின் வீடு. அவன் ‘நீ..போ..உம்மாகிட்டெ சொல்லிப்புட்டு வந்துடுறேன் ‘ என்று பிரிந்தான். நான் வீட்டிற்கு வந்தேன். வீட்டுத் திண்ணையிலும் எதிரே மொஹலார் வீட்டுத் திண்ணையிலும் பாய் விரிக்கப்பட்டு ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். வெள்ளைத் துப்பட்டியணிந்த பெண்கள் வீட்டுக்குள் போய்க் கொண்டிருந்தார்கள். கலீல் இருந்தான். ‘என்னா, காட்டுப்பள்ளிக்கு போனியா ? ‘ என்றேன். ‘ம்..கொஞ்ச நேரத்துலெ வர்ரேன்னு சொன்னாரு ‘ என்றான்.
தெருவில் போகிறவர்கள், வருபவர்கள் வீட்டு முன் உட்கார்ந்திருக்கும் கூட்டத்தை அதன் முகபாவத்தை கண்டு ‘யாரு ? ‘ என்று கேட்டுவிட்டு பதில் கிடைத்தும் கிடைக்காமலும் கொஞ்ச நேரம் உட்கர்ந்திருந்து விட்டுப் போனார்கள்.ஹமீது வந்து விட்டான்.. ‘நோன்பு தொறக்க எங்க வூட்டுக்கு வந்துடு..உம்மா கூப்புட்டாஹா ‘ என்றான். தலையாட்டினேன். ஊமையான ஒரு சொந்தக்கார பெரியவர் வாப்பாவிற்கு தந்தி அடிக்குமாறு சைகையால் நச்சரித்துக் கொண்டேயிருந்தார். ‘ஆமா அடிக்கனுந்தான்..ஒன் சின்னப்பாகிட்டெ கேட்டுக்க..அஹ தர்காலேந்து வரும்போது அடிச்சிட்டு வந்தாலும் வருவாஹா ‘ என்று ஹமீது சொன்னது சரியாகப் பட்டது. மோதினார் வந்தார். வீட்டினுள்ளேபோய் பார்த்துவிட்டு வந்தார். என்னென்ன சாமான் வாங்கனும் என்று அவரிடம் கேட்டேன். ‘ஒண்ணும் தேவையிலெ.பச்சைப் புள்ளதானே..ஒரு மீட்டர் வெள்ளைத்துணி வாங்கச் சொல்லுங்க. அது போதும். மத்ததை வூட்டுலேயே வாங்கிக்கலாம் ‘ என்றார். கலீல் வாங்கப் போனான். பக்கத்திலிருந்தவர் ‘நடுமருந்துகடை செட்டியார் கிட்டெ வெவெரமா இத்தனை வயசு புள்ளேன்னு சொல்லிட்டாப் போதும்; அவன் கிளீனா எல்லாத்தையும் கொடுத்துப் புடுவான் ‘ என்றார். மோதினார் வெளியே போய்விட்டு ஒரு கால் மணி நேரத்தில் வந்து விடுவதாக சொல்லிப்போனார். வீட்டினுள்ளே அறையில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த பெரியாப்பா வெளியில் புறப்பட்டுச் சென்றார். ‘மெளத் ‘தில் கலந்து கொள்வதை தவிர்க்கவே இப்படிச் செய்கிறார் என்று வெளிப்படையாய் தெரிந்தது.
நாஸர் மையத்துப் பெட்டியோடு வந்தான். வீட்டுத் திண்ணையில் சாத்திவிட்டு, ‘ வாப்பா – தர்ஹாக்கு போனஹ – இன்னும் வரலியா ? சரி போய் கூட்டிட்டு வரேன் ‘ என்று சொல்லிவிட்டுப் போனான். சிறிது நேரத்தில் தன் வாப்பாவுடன் வந்தான். ‘ஏன் சின்னப்பா, வாப்பாவுக்கு தந்தி கொடுத்திட்டிங்களா ? ‘ என்று கேட்டேன். ‘இவன் எவ்வளவு பெரிய மடையனாக இருக்கிறான்! ‘ என்பது போல லேசாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு ‘சேசே..தேவையில்லெ..லெட்டர் போட்டுக்கலாம் ‘ என்று சொன்னார். ‘மோதினாரு வந்தாரா ? ‘ என்று கேட்டார். தம்பி, ‘வந்துட்டு வெளியே போனாரு. கொஞ்ச நேரத்துலெ வந்துடுறேனாரு ‘ என்றான். ‘என்னாப்பா….புள்ளக்கி கசப்பு மாத்திட சொல்லக் கூடாதா ? நல்ல புள்ளையிலுவப்பா நீங்க.. ‘ என்று கடிந்து விட்டு திண்ணையில் வியர்வை துடைத்தபடி தாடியைச் சொறிந்து கொண்டே உட்கார்ந்தார். மோதினார் வந்தார். ‘என்ன காக்கா.. வந்த நீங்க அப்படியே புள்ளக்கி கசப்பு மாத்திட்டு போயிருக்கக்கூடாதா ? ‘ என்று சின்னாப்பா கேட்டதற்கு ‘அ…யாரும் சொல்லலியே எங்கிட்டே ‘ என்றார் அவர். ‘இதெல்லாம் இவனுவளுக்குத் தெரியாது..சின்னப் பயலுவதானே ‘ என்றார் சின்னப்பா. பக்கத்தில் உட்கார்ந்திருந்த நகுதா நானா , ‘ஏன்..வூட்டுலெ இக்கிற பொம்பளையிலுவ சொல்லி இக்கிலாமுல்லெ..சரி..இப்ப என்னா அதுக்கு ? காக்கா, போயி கசப்பு மாத்துங்க ‘ என்று சொன்னார். வேண்டியவர்கள் வீட்டுக்குள்ளே போனார்கள். எனக்கு உள்ளே போய் பிள்ளையைப் பார்க்க எப்படியோ இருந்தது. ஆனால் சிறிது நேரம் சென்றதும் என்னால் பொறுக்க முடியவில்லை. நடுக்கட்டு முனையில் உள்ளே முற்றத்தின் ஓரத்தில் கிழக்குத் தாழ்வாரத்தை ஒட்டி ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையைப் பார்ப்பதற்கு வாகாய் நின்று கொண்டேன். ஹமீதும் அருகில் இருந்தான். பெரியாப்பாவின் ஆறாவது பிள்ளை ஜமீல் ஒரு பெரிய வாளியிலிருந்து தண்ணீரை சொம்பில் மொண்டு சின்னாப்பாவின் கையில் கொடுக்க அவர் மோதினார் கையில் கொடுத்தார்.
‘அஸ்ஹது அல்லாயிலாஹா இல்லல்லாஹூ வ அஸ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லா ‘ என்று கலிமா சொல்லிய வண்ணம் குழந்தையின் உடலை சுத்தப் படுத்தினார். துடிப்பு இல்லாமல் கட்டையாய் பிளாஸ்டிக் பொம்மை போல, கருமையைப் பூசிக் கொண்ட அந்த சின்ன உடலைப் பார்த்து உள்கட்டில் இருந்தவர்கள் கண்கலங்கினார்கள். சின்னப் பிள்ளைகள் விக்கி விக்கி அழுதார்கள். மோதினார் ஒரு வெள்ளைத் துணியை நாலைந்து கிழி கிழித்து குழந்தையின் உடலைப் போர்த்தினார். நான் நடுக்கட்டு தாழ்வாரத்தில் உட்கார்ந்தேன். எல்லோரும் கசப்பு மாத்தி முடித்ததும் வெளியில் வந்தார்கள். நான் ஜமீலைப் பார்த்து ‘ஏண்டா இந்த நேரத்துலெ இங்கே வந்தே ? ஒன் வாப்பாவுக்கு நீ இதுல கலந்துகிட்டேன்னு தெரிஞ்சாக்கா பெரிய கலாட்டா பண்ணுவாருடா ‘ என்றேன். ‘சும்மாயிரிங்க நானா..இதுல கலந்துக்காம வேற எதுலெ கலந்துக்குறது ? அவர் ஏதாச்சும் பண்ணட்டும்..பாக்குறேன் ‘ என்று கோபப்பட்டான். வெளி வாசலில் வந்து உட்கார்ந்தோம். எதிர் வெயில் ஏறியிருந்தது திண்ணையில். அந்த வெப்பமும் புழுக்கமும் எரிச்சலைத் தந்தது. அங்கேயிருந்த கனத்துப் போன மெளனத்தை என்னால் தாங்கவே முடியவில்லை. ஹமீது கொஞ்சமும் பேசாமல் அருகில் அப்படியே உட்கார்ந்திருந்தான். வந்து உட்கார்ந்திருந்த, பஜாரில் கடை வைத்திருந்தவர்கள் ‘திடார்னு இப்படி ஒரு ரூலு போட்டு, ஒடவே முனிசிபாலிடி எடத்துலெ இக்கிற கடைபகுதியையெல்லாம் எடுக்கச் சொல்லி, ஒரேயடியா அதம் பண்ணுறானே ‘ என்று மெளனம் கலைத்தார்கள். கடையின் மேற்கூரை எந்த அளவு நீண்டிருக்க வேண்டும்; தனக்குத் தெரிந்த ஆஃபீஸர் இது விஷயமாய் என்ன சொன்னான்; கடைசியில் யானை முடுக்கு சந்துக்கும் ஒரு நேரம் வந்தது…கல்லெல்லாம் கொட்டியிருக்கிறான்… ஆனா அங்கே இருக்கிற இட்லி கடைகளுக்குத்தான் ஆபத்து.. ‘என்று பேச்சு நீண்டது. ‘என்னாயிருந்தாலும் நம்ம ஆளுன்னு ஒரு முஸ்லீமு மேலே இக்கிறதுனாலத்தானே வேலை இவ்வளவு ஜோரா நடக்குது…ஜாஃபர் ஷரீஃப் வந்தாரு..ரயில்வே ஸ்டேஷன்…ஆசுபத்திரி…இப்ப ரோட்டெல்லாம் அகலப்படுத்தி ஒரு டூரிஸ்ட் செண்டராவுல்ல இதை ஆக்கப் போறாராம்.. ‘ – நான் கவனித்துக் கொண்டிருந்தேன். ‘அப்படியே தர்காவுலெ நடக்குற அக்குரமத்தையும் கவனிச்சி ஏதாச்சும் பண்ணுனார்னா தேவலே..வேளாங்கண்ணி எல்லாம் எந்தமாதிரி ஜோரா ஆயிடுச்சு கோயில் காசுலெ ‘ என்றார் ஒருத்தர். ‘அ..சும்மாவா..கந்தூரிலெ பதினாலுநாளும் ஷரீபு இங்கேதானே சுத்திக்கிட்டிருந்தாரு… ஒரு காரியம் உடலையாமுல்லெ! உண்டியல் பிரிக்கும்போதெல்லாம் கூடத்தானே இருந்தாராம்…வெனைய வைப்பாரு பாருங்களேன்.. ‘ என்று ஒருவர் பதிலளித்தார். ‘ஹபம் உடனுமே..வாங்க ‘ என்று மோதினாரை அழைத்துக் கொண்டு சின்னாப்பா உள்ளே போனார். ‘இப்ப என்ன பண்ணுவாஹா ‘ என்றேன் ஹமீதிடம். ‘குளிப்பாட்டுவாஹா ‘ என்றான். ‘கசப்பு மாத்துறப்பதான் குளிப்பாட்டுனாஹலே ‘ என்று கேட்டேன். ‘இல்லேடா.. ‘மெளத் ‘தாப் போனபிறகு அசுத்தம் வெளியாகுமில்ல..அதெ சுத்தப் படுத்துறதுதான் கசப்பு மாத்துறது…ஆனா இப்ப வந்து கலிமா சொல்லி குளிப்பாட்டி குழந்தைக்கு ‘ஒலு ‘ எடுத்து ஒரு புது துணியை எடுத்து புள்ளையை போத்துவாங்க.. ‘கஃபன் ‘னா துணின்னு அர்த்தம் அரபிலே ‘ என்று விளக்கினான். நான் சற்றுநேரம் கழித்து உள்ளே போனேன். இதற்குள் ஹபம் விட்டு குழந்தையை தாழ்வாரத்தில் வைத்திருந்தார்கள்..இரண்டு ஊஞ்சல்களையும் எடுத்திருந்ததால் தாழ்வாரம் பெரிதாக இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருந்தேன்..லேசான அழுகை சுற்றிலும் கேட்டுக் கொண்டிருந்தது. பெரிய ஆளாயிருந்தால் அழுகை வீட்டில் பலமாக இருக்கும். இது சிறு பிள்ளைதானே..ஆனால் இதற்குத்தான் பலமாக அழவேண்டும் போலிருந்தது எனக்கு.. ‘ஆபாப்பா..ஆபாப்பா ‘ என்று ஒரு குழந்தை அழுத அழுகை கேட்டது. இவன் எங்கே வந்தான் ? எப்படி இவ்வளவு நேரம் சும்மா இருந்தான் என்று சுற்றிலும் கவனித்தேன். இன்னாச்சி மடியில் உட்கார்ந்திருந்தான் 2 வயது ஹனீஃப் அக்தர். என்னவோ விபரீதம் நடக்கிறதென்று அவனுக்குப் பட்டிருக்க வேண்டும்.. ‘ஆஹா பாப்பா ‘ என்று முன்னால் சொல்லிக் கொடுத்திருந்ததை ‘ஆபாப்பா ஆபாப்பா ‘ என்று சொல்லி அடம் பிடித்தான். ‘ஆஹா பாப்பா அல்லாட்ட பொய்டுச்சும்மா கண்ணு ‘ என்று இன்னாச்சி அழுது கொண்டே சொன்னபோது மற்ற பெண்களும் சற்று நேரம் வாய்விட்டு அழுதார்கள். ‘இவனெ யாரு இங்கே கொண்டு வந்தா ? பெரிய ‘அதாபு ‘லெ கொடுப்பான்..யாரையாச்சும் புடுச்சி சந்து வீட்டுக்கு அனுப்புங்க ‘ என்று கலீல் எரிச்சலுடன் சொன்னதும் தாழ்வாரத்தில் ஓரமாய் நின்று கொண்டிருந்த வேலைக்காரி ராக்காயி அவனைத் தூக்கிக் கொண்டு போனாள்..
தாழ்வாரம் முழுக்க வெள்ளைத் துப்பட்டியணிந்த அணிந்த பெண்கள். துக்கம், கனமான வெள்ளைப் புகையால் குழந்தையைச் சுற்றி சூழ்ந்த மாதிரி இருந்தது. சந்தனத்துகளில் மல்லிகைப் பூவெல்லாம் கலந்து ஒரு கரைசல் ஒரு கிண்ணத்தில் இருந்தது. அதை சொந்தக்காரர்கள் ஒவ்வொருவரும் எடுத்து பிள்ளையின் நெஞ்சில் வைத்தார்கள். நானும் வைத்தேன். வைக்கும்போது குழந்தையைப் பார்த்தேன். சாவின் கறுப்பை பூசிக்கொண்டிருந்தபோதும் அது அழகாக இருந்தது. எனது கண்கள் நிறைந்தன. வெளியில் வந்தேன்.
சின்னாப்பா தன் மகனைப் பார்த்து ‘குழி வெட்டியாச்சான்னு பாத்துட்டு வா ‘ என்று அனுப்பினார். அங்கே நின்றிருந்த சின்னத்தம்பி ஹாஜாவிடம் ‘இந்தாடா..உள்ளக்க போயி ரெண்டு குச்சி எடுத்துட்டு வா ‘ என்றார். ‘ஹபரு ‘க்குப் தலைப்பக்கத்திலும் கால்பக்கத்திலும் வைப்பதற்கு எனத் தெரிந்தது. ஹாஜா கொஞ்ச நேரத்தில் இரண்டு விளக்கு மாற்றுக் குச்சிகளோடு வந்தான். சின்னாப்பா சிரித்தார். ‘இதில்லேடா..போயி நல்ல உருண்டையா, கொஞ்சம் மொத்தமா…ரெண்டு சின்ன கட்டைடா… அட, கொல்லக்கிபோயி கொய்யாக்கொம்புலேந்து ரெண்டை ஒடையேன்..அதான் நல்லா மரம் ஏறுசியே ‘ என்றார். இந்தத் தடவை சரியாகத்தான் கொண்டு வந்தான். ‘இதையும் வானாண்டுடுவாஹலோ ‘ என்கிற சந்தேகப் பார்வையுடன் சின்னாப்பா கையில் கொடுத்தான். ‘அங்..இதேதான் ‘ என்றதும் ஓடிவிட்டான். ரொம்பநேரமாக இவன்தான் சைக்கிளில் அலைந்து கொண்டு இருக்கிறான் தைக்கால் தெரு, நூக்கடைத்தெரு என்று தெரிந்த வீட்டில் விஷயத்தைச் சொல்ல. குரங்குப் பெடலில் அவன் வேகமாக போவதைப் பார்க்கையில் பயமாயிருந்தது.
‘என்னாப்பா..அப்ப மையத்தெ எடுத்துடலாமுல்லெ ? ‘ என்று என்னிடம் கேட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல் சின்னாப்பா மோதினாருடன் உள்ளே போனார். எல்லோரும் உள்ளே போனார்கள். சற்று நேரத்தில் சின்னாப்பா தன் கைகளில் , குழந்தையுள்ள மையத்துப் பெட்டியை இரு கைகளில் ஏந்திப் பிடித்தபடி வெளியில் வந்தார். முன்னாள், மோதினார் ஏதோ சொல்லிக் கொண்டே போக எல்லோரும் கலிமா சொன்னார்கள். மோதினார் ஒவ்வொரு வாக்கியம் சொல்லும்போதும் ‘சஹாதா ‘ என்று முடியும். அவர் என்ன சொல்கிறார் என்பது நாலைந்து தடவை கேட்டபிறகு விளங்கிற்று..இதெல்லாம் எனக்கு மறந்து போயிருந்தது…இப்போது நினைவிற்கு வந்தது.. ‘காலு இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன் கலிமா சஹாதா ‘ – இதையேதான் அவர் திருப்பித் திருப்பிச் சொன்னார். பின்னால் போனவர்கள் அவர் ‘சஹாதா ‘ சொன்னதும் ‘அஸ்ஹது அல்லயிலாஹா இல்லல்லாஹூ வ அஸ்ஹது அன்னமுஹம்மதுர் ரசூலுல்லா ‘ என்றார்கள். மைய்யத்து ஊர்வலம் வேகமாகப் போனது. மோதினாரின் வேகத்திற்கு பின்னால் மைய்யத்துப் பெட்டியை தூக்கிக் கொண்டு போகிறவர்கள் ஓட வேண்டியிருந்தது. சிறு பிள்ளையாதலால் தனி ஒருவர்தான் அந்த சின்னப் பெட்டியை கைகளில் ஏந்திச் செல்வார். பெரிய ஆளாக இருந்தால் நிறையபேர் தோளில் தாங்குவார்கள். அப்போது கொஞ்சம் மெதுவாகத்தான் போக முடியும். ஊர்வலத்தில் நான் பின்தங்கி இருந்தேன். ஹமீது கூடவே வந்து கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் மச்சான் கலீல் அதற்கப்புறம் தெருப்பையன்கள் என்று மாறி மாறி வாங்கி தூக்கிச் சென்றார்கள். கடைத்தெருவில் நுழைந்தோம். டூரிஸ்ட் பஸ்ஸில் வந்த நாலைந்து ஹிந்துக் குடும்பம் ஊர்வலத்தை வியப்பாய் வேடிக்கை பார்த்தது. பீர் மண்டபத்திற்குப் பக்கத்திலிருக்கும் மண்டபத்தின் நடுவில் மைய்யத்துப் பெட்டி வைக்கப்பட்டது. மண்டபத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் நகர்ந்து போனார்கள். ஹமீதிடம் ‘ஜனாஸா தொழுகை இங்கேயா நடக்கும் ? பெரிய எஜமான் வாசலிலேயில்லெ ? ‘ என்று கேட்டேன். ‘இங்கேயும் நடக்கிறது வழக்கந்தான் ‘ என்றான். ‘ஒலு ‘ செய்யப்போயிருந்த சின்னாப்பா, மோதினார், தெருப்பையன் அஜ்மல் வந்தார்கள். சின்ன ஹொத்துவாப் பள்ளிக்கு அவர்கள் போயிருந்திருக்க வேண்டும் என்று பட்டது. மைய்யத்துப் பெட்டியை முன்வைத்து தொழுதார்கள். ‘மனாரா ‘வின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். தொழுகை முடிந்ததும் மோதினார் ‘ஃபாத்திஹா ‘ என்றார். நான் தொப்பி இல்லாமல் இருப்பது நிறையபேருக்கு உறுத்தியிருக்க வேண்டும். ஒரு மாதிரியாய் பார்த்தார்கள். ‘ஒரு மரியாதைக்கி கைநேஞ்சியாச்சும் தலையிலெ போட்டிருக்கனும்..சரி, சலாம் கொடுக்கும்போது ஹமீதுட கைநேஞ்சியை வாங்கிக்கலாம் ‘ என்று நினைத்தேன். மைய்யத்துப் பெட்டியை பெரிய மைய்யத்தாங் கொல்லைக்கு கொண்டு சென்றார்கள். சின்ன மையத்தங் கொல்லைக்கு இதுவரை நான் எந்த மெளத்துக்கும் போனதேயில்லை. எனக்குத் தெரிந்து பெரிய மையத்தாங்கொல்லையில்தான் நிறைய பேரை அடக்கம் பன்ணினார்கள். சின்ன மையத்தாங்கொல்லை எப்படியிருக்கும்..எப்படி குண்டு போடுவார்கள் என்று பார்ப்பதற்காகவே ஒரு தடவை கந்தூரியின்போது பெரிய மினாராவில் ஏறிப் பார்த்தேன்..
ஏழெட்டு வருடங்களுக்குப்புறம் இந்த மையத்தாங் கொல்லையில் நுழைகிறேன். எனக்கு இறப்பின் முழு அர்த்தமும் நன்றாகத் தெரிந்து எங்கள் வீட்டில் ஏற்பட்ட முதல் இழப்பு இது. மையத்தாங்கொல்லை அப்போது பார்த்தாற்போல்தான் இப்போதும் இருந்தது. புதிதாய் உருவாகியிருந்த ‘ஹபர் ‘கள்..தரைதரையோடு தரையாகிப் போனவைகள்..இன்னும் மேலே ஊற்றிய தண்ணீரின் ஈரம் காயாதது..வதங்கிப் போய்விட்டிருந்த பாய் போன்ற மாலைகள்..ஒவ்வொருவரும் கடற்கரைக்குப் போவதுபோல் இங்கேயும் வரவேண்டும் என்று நினைத்தேன். சொல்ல, எழுத முடியாத என்னென்னமோ நினைப்புகள் வந்தன அங்கு எனக்கு.சின்னப் பிள்ளைகள் அங்கங்கே கிடக்கும் எலும்புத் துண்டுகளை, மண்டை ஓடுகளை பார்த்து பயந்து என்னென்னமோ பேசிக் கொண்டார்கள். சற்று துணிச்சலான மன்சூர் எலும்பு இடத்தை காலால் நிமிண்டி பார்த்தான். இங்கே கல்கட்டிடம் எதற்கு என்று புரியவில்லை. கல்லால் நிறைய ஹபர்கள் கட்டப்பட்டிருந்தன. ஓரிரண்டு ஹபர்களைச் சுற்ரி இரும்பு கேட்டும் போடப் பட்டிருந்தது! ஹமீது, மையத்தாங்கொல்லையின் தென் கோடியில் புதிதாக 3 அடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்த ஒரு சலவைக்கல் ‘ஹபர் ‘ஐ உதட்டைப் பிதுக்கியபடி காண்பித்தான். ‘கொஞ்ச நாளைக்கு முன்னாலே ‘மெளத் ‘தாப் போனாரே..தர்கா கலிஃபா. அவரோடையா ? ‘ என்றேன். ‘இல்லே..இல்லே..அவரோடது அந்தப்பக்கத்திலெ இக்கிது…அந்தோல இக்கிதுல்லெ அதான்.. ‘ என்று ஒரு ஹபரை பக்கத்திலிருந்தவர் காண்பித்தார். ‘பரவாயில்லெ..இவராவது மெளத்தாப்போன பொறவும் பந்தா காமிக்காமெ போனாரே – தர்காவிலெ பெரிய ஆளாயிருந்தும்.. ‘ என்று நான் பேசும்போதே ‘உஹூங்..அவருக்குத்தான் இன்னும் நாற்பது முடியலியே..முடிஞ்சப்புறம் அந்த சலவெக்கல்லு ஹபரோட ரொம்ப அலஹா கட்டுவாஹா ‘ என்று இடைமறித்தார் அவர்.
குழந்தைக்க்காக வெட்டிய குழி வடக்கு தெற்காக இருந்தது. இடம் ஞாபகம் வைப்பதற்கு வசதியாக (ஹபரடி ஃபாத்திஹாவுக்கு) பக்கத்தில் ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது. மோதினார் ஃபாத்திஹா ஓதியபிறகு, சின்னாப்பா குழியில் நின்று கொண்டு பிள்ளையை வாங்கி ‘பிஸ்மில்லாஹி அலாமில்லதி ரசூலில்லாஹி ‘ என்று சொல்லியவண்ணம் குழியில் வைத்தார். தலை கிப்லா பக்கமாய் சாய்ந்திருந்தது. ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் மண் எடுத்துத் தந்தார்கள். அதை வாங்கிக் குழந்தையின் வலது கன்னத்தின் அடியில் வைத்தார் சின்னாப்பா. நானும் மண் கொடுத்தேன். முன்னொரு தடவை சின்னப்பட்டனார் சக்கரப்பாவின் மெளத்தின்போது – அப்போது நான் சின்னப்பிள்ளை – மண்ணை குழியில் நிற்பவரிடம் (அப்போதும் சின்னப்பாதான் நின்றிருந்தார் ) கொடுப்பதற்கு பதிலாக உடல் மேலேயே கொட்டியது ஞாபகம் வந்தது. நின்றவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ‘பரவாயில்லெ..சின்னப்பையன்தானே ‘ என்று சின்னாப்பா சொன்னார் அப்போது. எல்லோரும் மண் எடுத்துக் கொடுத்து முடித்து சின்னாப்பா அதை வாங்கி சற்று உருண்டையாக்கி குழந்தையின் வலது கன்னத்தின் அடியில் வைத்து விட்டு நிமிர்ந்தபோது ஒரு சின்ன கை ‘ம்..இந்தாங்க சின்னாப்பா ‘ என்று நீண்டது. கடைசித் தம்பி ஹாஜா. அழுது கொண்டே கொடுத்தான். அதையும் வாங்கி வைத்தார் சின்னாப்பா. கடைசியாய் குழந்தையின் முகத்தைப் பார்த்தேன். பிறந்த மூன்று நாளிலேயே ஒரு மிகப்பெரிய புதிரின் விடையைக் கண்டுவிட்ட சிரிப்பு உறைந்து போயிருந்தது முகத்தில் அழகாய்..ஹமீது என்னை தட்டி இழுத்து அணைத்துக் கொண்டான்.
பெட்டியை உடலின்மேல் கவிழ்த்தாற்போல் வைத்தார்கள். மோதினார் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் பெட்டி மேலே மண் தள்ளப் பட்டது. மிகச் சீக்கிரத்தில் ஒரு சின்ன ஹபர் உருவானது..தலைமாட்டிலும் கால்மாட்டிலும் இரு குச்சிகள் நடப்பட்டன. பாய் போன்ற மாலை ஹபரின் மேல் போர்த்தப் பட்டது. பின்பு மோதினார் ஓதிக் கொண்டே முன்று முறை தண்ணீர் ஊற்றினார். இவர் என்ன சொல்வார் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. அவருடைய கை ஹபரின் கீழ்ப்பக்கத்திலிருந்து புறப்பட்டு திரும்ப புறப்பட்ட இடத்திற்கு வரும்போது முதல் தடவை ‘யா அய்யத்து ஹன் நப்ஸூல் முத்துமாயின்னா ‘ என்றார். அடுத்த முறை ‘துர்ஜயீ இலா ரப்பிகீ ராலியத்தன் மர்லியா ‘ என்றார். கடைசி முறையின்போது ‘ஃபத்குலி ஃபி இபாதி வதுகுலி ஜன்னதி ‘ என்றார். தன்ணீர் ஊற்றிவிட்டு ‘ஃபாத்திஹா ‘ என்றதும் எல்லோரும் ஓதினார்கள். இந்த ஃபாத்திஹா எல்லாம் எனக்கு மறந்து போயிருந்தது. முணுமுணுத்தேன். ஆஸிஃபிற்கு அது கேட்டிருக்கும்… ‘தண்ணீர் ஊற்றியபிறகு மோதினார் உட்கார்ந்தல்லவா ஏதோ ஓதுவார் ? ‘ என்று பழைய நினைப்பில் ஹமீதிடம் கேட்டேன். ‘தல்கின் ‘ஆ ? அது பெரிய ஆளுக்குத்தான்…இது பாலிக் ஆவாத புள்ளெதானே.. ‘ என்று பக்கத்தில் வந்து கொண்டிருந்த சின்னாப்பா சொன்னார்.
தர்கா வாசலில் ஒரு ஃபாத்திஹா ஓதி முடித்ததும் விரைவாக வீட்டு வாசலையடைந்தோம். மைய்யத்து அடையாளைத்தைப் பார்த்து விட்டு வழியில் அவரவர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். வீட்டு வாசலில் ஒரு ஃபாத்திஹா ஓதி முடித்தார்கள். மாமா, சின்னாப்பா, நான், தம்பி, மச்சான் என்று தனித்தனியாய் பிரிந்து நின்றோம்.சலாம் கொடுக்க ஒவ்வொருவராக வந்தார்கள்….
(முற்றும்)
குறிப்பு : சாரு நிவேதிதாவுக்கு ஆபிதீன் எழுதிய நீண்ட கடிதங்களில் ஒன்று இது. edit செய்யப்படாமல் அப்படியே – ‘குழந்தை ‘ என்று பின்னர் ஆபிதீனால் பெயர் வைக்கப்பட்டு , – ‘யாத்ரா ‘ சிற்றிதழில் (இதழ் எண் 34/35/36) 1982-ம் ஆண்டு வெளிவந்தது. ‘ஆபிதீன் ‘ என்ற பெயரிலேயே அப்போது வந்ததை குறிப்பாகச் சொல்ல வேண்டும்!
Email : abedheen@yahoo.com
Web : http://abedheen.tripod.com/
அருஞ்சொற்பொருள்
மெளத் – இறப்பு
சபர் – வெளிநாடு போய் வருதல்
குமர்ரஹக்கு – கிண்டலாக ஆண்குறிக்கு சொல்வது
நோக்காடு – பிரசவ வலி
ஒத்தத்துப்பட்டி – துணையின்றி தனியாகப் போவது
ஹயாத் – வாழ்க்கை
சம்ஸின் – பயில்வான்
நிய்யத் – (நோன்பு பிடிப்பதற்காகச் சொல்லும்) வாய்மொழி உறுதி
திராவியா – நோன்பு காலத்தின் சிறப்புத் தொழுகை
சஹர்நேரம் – இரவு 1 மணியிலிருந்து பாங்கு சொல்லும் வரை உள்ள நேரம்
யான்ஸ் – அறை
மறப்பு – திரை
நாசுவத்தி – பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி
ஹயாவு – பெண்குறியை கிண்டலாகச் சொல்வது
லாத்தா – அக்கா
புர்ஹா – கன்னிப்பெண்கள் தங்களை மறைத்துக் கொள்ள அணியும் ஆடை
நானா – அண்ணன்
சாபு – இஸ்லாமியப் பாடங்களை சொல்லித் தருபவர்
ஜூஜ்ஜூ – அத்தியாயம்
வெடைத்தல் – கேலி பண்ணுதல்
குப்பி – தன் பால் சேர்க்கை
சாமத்தியம் – சம்பாத்தியம்
ஏசுதல் – திட்டுதல்
பாங்கு – நேரத்தை அறிவிப்பது
இகாமத் – கூட்டுத் தொழுகைக்கான அழைப்பு
ஹாலு – நிலைமை
ஹைர் – ‘நல்லதே நடக்கட்டும் ‘ எனப் பொருள்படும்.
மோதினார் – ஈமக்கிரியைகள் செய்பவர்
காக்கா – அண்ணன்
கலிமா – இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் முதன்மையானது
ஒலு – புனித சுத்திகரிப்பு
அதாபு – தொந்தரவு
ஹபர் – புதைத்த இடத்திற்கு மேலெழும்பும் மண்மேடு
மையத்து – இறந்த உடல்
ஜனாஸா தொழுகை – இறந்தவருக்காக தொழுவது
ஹொத்துவா – தொழுகை
கைநேஞ்சி – கைக்குட்டை
சலாம் கொடுத்தல் – அடக்கம் பண்ணிவிட்டு வந்தபிறகு இறந்தவருடைய வீட்டு வாசலில் சொந்தக்காரர்களிடத்தில் கையோடு கை சேர்த்து ‘சலவாத் ‘ சொல்லுதல் (சலவாத்- நபிகள் நாயகம் மீது புகழ் பாடுதல்)
தர்கா கலிஃபா – தர்காவில் நடக்கும் மதபூர்வமான சடங்குகளுக்குத் தலைமைஸ்தானம் வகிப்பவர்