பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 20

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்



திண்ணை.காம்’ இணைய இதழில் ‘நகைச்சுவையும் வித்தியாசமானவையும்’ பகுதியில் பிரசுரிக்க

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 20

சாய் (என்கிற) பேப்பர்பாய்

டேக் 20
‘சைடு ரீல்கள்’ !

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், ‘ விரைவில் வருகிறாள் ரிவால்வர் ரீட்டா ‘ ; ‘ உங்கள் அபிமான திரையரங்கில் எதிர் பாருங்கள் மாய மோதிரம்’ என்றெல்லாம் சினிமா கொட்டகைகளில் டிரெய்லர் காண்பிப்பார்கள். மெயின் பிக்சருக்கு இடையில் இண்டர்வெலில் கலர் சோடா, பட்டாணிச் சுண்டல்களுக்கு போட்டியாக இந்த சைடு ரீல்களும் சுவாரஸ்யமாகவே இருக்கும்.

திராவிட இயக்கமோ அல்லது தேசிய இயக்கமோ, எதாவது ஒரு இயக்கத்தை திரையில் தங்களின் ‘விசிட்டிங் கார்டு’ ஆக காண்பித்துக் கொள்வது கல்லா பெட்டிக்கு safety என்கிற கெட்டிக்காரக் கணக்கோ அல்லது இயல்பான அபிமானமோ எதுவோ பாலிடிக்ஸ் ஊறிப் போயிருந்த தமிழ் பயாஸ்கோப்பில், இதுவரை நாம் பார்த்த மெயின் கலைஞர்களுக்கு இடையில் கட்சி காலட்சேபம் நடத்திய மற்ற சிலரும் உண்டு. சுவாரஸ்யமான சில சைடுரீல்களை பற்றி கொஞ்சம் பார்ப்போம்:

ரவிச்சந்திரன்

தமிழ் சினிமாவில் ஜேம்ஸ்பாண்டு பாணி ‘டுமீல் டுமீல்’ படங்களும் – அரசியலில் திமுகவும் இளைஞர்களை காந்தமென ஈர்த்திருந்த 1960களின் மத்தியில் அறிமுகமான நடிகர்கள் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் ஆகியோரை இந்த வரிசையில் முக்கியமாக குறிப்பிட வேண்டும். எம்ஜிஆர்- சிவாஜிக்கு அடுத்த தலைமுறை இளம் இரட்டையர்களான இவர்களில் திமுக கலரை வெளிப்படையாகக் காண்பித்துக் கொண்ட ரவிச்சந்திரன், முதலில்:

1964ல் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவிச்சந்திரன். வசீகர முகம். சண்டைக்காட்சிகளில் சுறுசுறுப்பு. நடனக் காட்சிகளில் துடிப்பு. ரவிக்கு ‘சின்ன வாத்தியார்’ என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது (பெரிய வாத்தியார் ? = வேறு யார் ! எம்ஜிஆர் தான்) . கிடைத்தப் பட்டப் பெயருக்கு ஏற்றார்போல் ரவியும் தன்னை திமுக அபிமானியாக காண்பித்துக் கொண்டார். 1967ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது ரவி, திமுகவுக்காக ஒரு சில ஊர்களில் நேரடியாக பிரச்சாரமும் செய்தார். சந்தர்ப்பம் கிடைத்த போது சில படங்களில் ‘அண்ணா பக்தி’ப் பாடல்களையும் பாடினார், ‘பெரிய வாத்தியார்’ பாணியில்.
” நமது அரசு ; நமது நாடு;
நமது வாழ்வு என்பதெது ?
நமது தலைவன்; நல்ல அறிஞன்
ஏற்றுக் கொண்ட பதவியது.
அன்னைத் தமிழின் அருந்தவப் பிள்ளை
அண்ணன் போலே பிறந்தவரில்லை
அடங்கி நடப்போம் அவனது சொல்லை.
மதியும் நிதியும் பொருந்திய மேதை
மன்னன் செல்வது தருமத்தின் பாதை
காண்பதெல்லாம் புதுமை
என்றும் வேண்டும் அவனது தலைமை;
கடலின் அலைகள் அவன் புகழ் பாடும்
காற்றும் வந்தே மாலைகள் போடும்…”

– இது, 1967ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று அறிஞர் அண்ணா முதலமைச்சரான சூட்டோடு சூடாக 1968ல் வெளியான ‘பணக்காரப் பிள்ளை’ படத்தில் டி.எம்.சவுந்திரராஜனின் குரலுக்கு ரவி வாயசைத்தப் பாடல். அண்ணா, முதலமைச்சராக பதவியேற்கும் காட்சிகளெல்லாம் இடையில் படத் துணுக்குகளாகக் காண்பிக்கப்பட்டு தியேட்டர்களில் கரை வேட்டிகளின் கைத்தட்டலை சம்பாதித்தப் பாடலும் கூட.
…………………………………………..

அண்ணா முதலமைச்சரான சந்தோஷத்தை அதே ஆண்டு – 1968ல் வெளியான ‘ நாலும் தெரிந்தவன்’ படத்தில் ” நரி ஒன்று சிரிக்கின்றது…” எனத் தொடங்கும் பாடலிலும் பூடகமாக குறிப்பிட்டும் பகிர்ந்துக் கொண்டார் ரவி. அந்த வரிகள் :

” நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால்
நாடே திரண்டு வரும்….”

——————————–

அதே படத்தில், ஒரு காட்சியில் நடிகர் மனோகர் கதாபாத்திரமும் கதாநாயகன் ரவிச்சந்திரனும் பேசும் ஒரு டயலாக்:
மனோகர் : ” அரசியலில் ஆர்வம் அதிகமுண்டோ?”
ரவி : ” அப்படியில்லை. அறிஞரின் கருத்துகளை ஆர்வத்துடன் படிப்பதுண்டு.”
————————————-
இதுவும் ‘நாலும் தெரிந்தவன்’ படம் தான். ” எங்க மாமா செல்ல மாமா…” என்ற தொடக்கத்துடன் பாடலொன்று வரும். அதில்,
” பொறுமையிலே காந்தியைப் போலே
கடமையிலே நேருவைப் போலே
பண்பினிலே அண்ணாவைப் போலே…”

– என்று குழந்தைகளுக்கு அட்வைஸ் செய்வதைப் போல ரவி பாட, திரையில் குளோசப்புக்கு வரும் அறிஞர்அண்ணாவின் போட்டோ.
———————————–
ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்து 1968ல் வெளியாகி சக்கைப் போடு போட்ட படத்தின் பெயரே ‘மூன்றெழுத்து’. ( இப்படத்தின் மையக் கருவே ஒரு புதையல் இருக்குமிடத்துக்கான வரைபடத்தின் ரகசிய குறியீடாக மூன்று எழுத்துகளைத் கதாபாத்திரங்கள் தேடுவது தான். அந்த மூன்றெழுத்துகளோ ‘தி..மு..க..’. ஆனால் படத்தில் அது ‘திமுக’ அல்ல; ‘கமுதி’ என்கிற ஊர் பெயராக சொல்லப்படுவது வேறு விஷயம்.)

திமுகவுக்காக அந்நேரம் எம்ஜிஆர், பொன் வைத்துக் கொண்டிருந்த வேளையில் தன் பங்கிற்கு பூவையாவது வைத்து திருப்திப்பட்டுக் கொண்டார் ‘சின்ன வாத்தியார்’. அத்தோடு சரி. பூவைப் போலவே பயாஸ்கோப்பில் ரவியின் பாலிடிக்ஸ்சும் தற்காலிகமானதாகவே ஆகிப் போனது.

*************************************

ஜெய்சங்கர்

ரவிச்சந்திரனுக்கு ஓராண்டு ஜூனியர் ஜெய்சங்கர். 1965ல் ‘இரவும் பகலும்’ மூலம் அறிமுகமானார். வந்த வேகத்திலேயே ரவிக்கு நேரடித் தொழில் போட்டியாளரானார் ‘ தென்னகத்து ஜேம்ஸ்பாண்டு’. ஆனால் அரசியல் விஷயத்தில் முன்னவர் போல கலரை பட்டவர்த்தனமாக காண்பித்துக் கொள்ளவில்லை இவர். அதேசமயம், திராவிட இயக்க அபிமானமுள்ள இயக்குனர் அல்லது தயாரிப்பாளர்களின் கைக்கருவியாக திரையில் இருக்கவும் தயங்கியதில்லை ஜெய்.

1967ல் சட்டசபைத் தேர்தலில் திமுக வென்று அண்ணா முதலமைச்சராவதற்கு முன் அதே ஆண்டு வெளியான ‘சபாஷ் தம்பி’ என்ற படத்தில் ஒரு பாடலில் ஜெய்சங்கருக்கு திமுக கலர் பட்டையாகப் பூசப்பட்டது. ஜெய் உருவில் டி.எம்.எஸ். குரலில் அறிஞர் அண்ணா, தனது கட்சித் தொண்டர்களுக்கு ஊக்கமூட்டி தேர்தலுக்கு அவர்களைத் ஆயத்தப்படுத்துவதாக அர்த்தம் கொள்ளத்தக்க கணீர் பாடல் அது. அண்ணா அன்புடன் எழுத்திலும் சொற்பொழிவிலும் தனது கட்சியினரை பாராட்டும் ‘சபாஷ் தம்பி..’ என்ற விளித்தலுடன், சும்மா கணீரென Echo Effectல் ஆரம்பமாகும் பாடல் :
” சபாஷ் தம்பி..சபாஷ் தம்பி
உன் செய்கையைப் போற்றுகிறேன் – நீ
ஒருவன் மட்டும் துணையாயிருந்தால்
உலகை மாற்றுகிறேன்.
தேறுதல் சொல்லத் தேவையில்லை- உனக்கு
ஆறுதல் சொல்லத் தேவையில்லை.- நல்ல
மாறுதல் வேண்டி நீ செய்யும்
சேவையைப் போலொரு சேவையில்லை.
காலம் வந்தது பொறு தம்பி – நீ
கவலைப் படாமல் இரு தம்பி.
காத்திருந்தாலென்ன தம்பி – உன்னை
காப்பாற்றிடுவேன் தம்பி.
கொடியவர் தம்மை எதிர்க்கையிலே
குறுக்கே வரலாம் பெரும் புயலே
வருவது வரட்டும் தம்பி – நான்
வந்து காட்டுறேன் பார் தம்பி ”

– தனக்கு உதவப் போய் வில்லனிடம் சிக்கிக் கொண்ட சிறுவனை காப்பாற்ற போகும் வழியில் கதாநாயகன் பாடுவதாக மேலெழுந்தவாரியாக சாதாரணமாகத் தெரிந்தாலும் இப்பாடல் உள்ளுக்குள் எத்தனை சங்கதிகளை பொத்தி வைத்துள்ளது பாருங்கள்..! சினிமாவை திராவிட இயக்கம் கையாண்ட லாவகம் இருக்கிறதே, அது சாமானியப்பட்டதில்லை. உலகளவில் அரசியல் இயக்கங்கள் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டிய ஆச்சரியமே!!
——————————-

பொதுவாக, எம்ஜிஆருக்கும் ஜெய்சங்கருக்கும் அவ்வளவாக சுமூக உறவு இருந்ததில்லை என்ற ஒரு பேச்சு கோலிவுட்டில் உலாவியதுண்டு. அதன் நம்பகத்தன்மை பற்றிய அகழ்வாய்வு இப்போது தேவையில்லை. ஆனால், அவ்வாறு சொல்லப்பட்ட ஜெய்சங்கரோ, 1967 சட்டசபைத் தேர்தலுக்கு முன் அண்ணாவுக்காக குரல் கொடுத்த வேலையை , பத்தாண்டுகள் கழித்து 77 தேர்தலுக்கு முன் எம்ஜிஆருக்காக செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.

எம்ஜிஆர் முதலமைச்சராக வர வேண்டுமென வெளிப்படையாகவே விருப்பம் தெரிவிக்கும் பாடல் ஒன்றுக்கு உற்சாகத்துடன் வாயசைத்தார் படத்தின் கதாநாயகன் ஜெய்.

” ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா..
நீ நாடாள வரவேண்டும் ராமச்சந்திரா
தருமம் ஜெயிக்குமென சொன்னவனே ராமச்சந்திரா.
ஒரு தவறும் புரியாமல்
பதவி விட்டு சென்றாய் – பொருந்தாத
பரதர்களிடம் கொடுத்துச் சென்றாய்.
சூரிய வம்சத்தில் வந்தவன் நீயே
வாரி வாரி தந்தவனும் நீயே.
சத்தியத் தாய் பெற்றெடுத்த பிள்ளையல்லவா – நீ
சத்தியத்தின் வழி நிற்பவன் அல்லவா.
மாதம் மும்மாரி பொழிய வேண்டும் ராமச்சந்திரா – அதற்கு
நீ வரவேண்டும்- வழி செய்ய வேண்டும் ராமச்சந்திரா ”

– தேர்தலில் ஜெயித்து எம்ஜிஆர் முதன்முறையாக ஆட்சியை பிடிப்பதற்கு முந்தைய ஆண்டு அதாவது 1976ல் வெளியான ‘ பணக்காரப் பெண்’ என்ற படத்தில் இடம் பெற்றது தான் மேற்படி பாடல். 1977 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் ஒலிபரப்புமளவுக்கு ‘அரசியல் பிராண்டு’ பெற்றிருந்தது இப்பாடல்.
————————————-

அதே படம் தான். கதாநாயகன் ஜெய்சங்கருக்கும், அவரது தாயார் கதாபாத்திரத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல் காட்சி:
ஜெய் : ” பொது கணக்குன்னா கேள்வி கேக்க தான் செய்வாங்க.”
தாயார் : ” கேக்கரது சுலபம்டா. நிர்வாகம் பண்ணினா தான் அதோட கஷ்ட நஷ்டம் தெரியும் ”
ஜெய்: ” பார்த்துகிட்டே இரு. நாங்க நிர்வாகம் செய்யற காலம் வரத்தான் போகுது ”

————————–

பின்னர் இதே ஜெய்சங்கர் தான், எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்ததும் அவரை கடுமையாக எதிர்த்த கலைஞர் மு.கருணாநிதியின் கைக்கருவியாகவும் ஆனார். 1972ல் மகன் முத்துவை களமிறக்கி வெற்றி காணாத மு.க., 1977க்கு பிறகு எம்ஜிஆருக்கு எதிராக கொம்பு சீவி இறக்கி விட்டது ஜெய்சங்கரையே.

மு.க.வின் கைவண்ணத்தில் உருவான ‘வண்டிக்காரன் மகன்’ (கதை மட்டும் அறிஞர் அண்ணா) மற்றும் ‘ஆடுபாம்பே’ ஆகிய படங்களை இதற்கு சரியான உதாரணங்களாக சொல்லலாம். வசனங்களும், பாடல்களும் நெருப்பை கக்கின. சாம்பிளுக்கு பாடல்களை பார்ப்போம்:

” உழைக்கும் இனமே; உடன்பிறப்பே
என்னோடு வாருங்களேன்
பசுவின் உருவில் ஊரில் உலவும்
புலியை காட்டுறேன், பாருங்களேன்.
மனிதரில் சிலபேர் புனிதரைப் போலே
இருப்பார் புவி மேலே;
மான்களின் கண்களை மயங்கிட வைக்கும்
கானல் நீர் போலே.
ஏட்டைப் புரட்டி சுயநலக்காரனை
கேட்பேன், நானொரு கேள்வி – அவன்
பூட்டை திறந்து காட்டுவதற்கு
என்னிடம் உள்ளது சாவி!
ஏய்ப்பவன் தன்னை மேய்ப்பவன் என்று
எண்ணியிருக்கும் ஆடு- நல்ல
ஆறறிவுள்ள மனிதரும்
அது போலிருந்தால் சிரிக்கும் நாடு.
மின்மினிப்பூச்சி வெளிச்சத்தினாலே
இருட்டில் பாதை தெரியாது.
மின்னுவதாலே உப்புக்கல் தான்
வைரம் போலாகாது.
சிங்கக் கூட்டம் தூங்கியிருந்தால்
சிறுநரி ஆட்டும் வாலை
அதன் தூக்கம் கலைந்தால், நடப்பது என்ன?
சரித்திரம் சொல்லும் நாளை ! ”

– ( ‘ வண்டிக்காரன் மகன் ‘ – 1978 )

———————————————

” ஒரு தவறும் செஞ்சறியா உத்தமரை மத்தவரை
கொத்திப் பழி வாங்க வந்த குட்டிப் பாம்பே – உன்
கொட்டத்தை நான் அடக்கப் போறேன்
முகமூடியை நான் கிழிக்கப் போறேன் கெட்டப் பாம்பே !
பாம்பே… நீ ஆடு பாம்பே;
ஆடும் வரை ஆடு பாம்பே.
பல வேஷம் போட்டு வந்த குட்டிப் பாம்பே !
அதிகாரம் கொண்ட பாம்பே
அகங்காரம் நிறைஞ்ச பாம்பே
கீழிறங்கி வா..வா..கெட்டப் பாம்பே.
கூழுக்கும் வேலையின்றி
குடிலுக்கும் ஓலையின்றி
ஏழைங்க துடிக்கையிலே
பாலுண்டு நீ இன்று – பழமென்று உண்டு
பத்திரமாய் நடிக்கிறியே !
பீடத்தில் ஏறிக் கொண்டு
பிடிவாதம் பண்ணிக் கொண்டு
ஆட்டங்கள் போடாதே.
வேஷமும் கலையுற நேரம் நெருங்குது
வேதனைத் தீயில் விலங்குகள் நொறுங்குது
நாசமும் மோசமும் நாளைக்கு முடியுது நச்சுப் பாம்பே…”

– ‘ஆடுபாம்பே’ (1979).

————————————————
ஜெய், இப்படி ‘வாய்ஸ்’ கொடுத்தது கூட கொஞ்ச காலம் தான். பூசப்பட்ட அரசியல் கலரையும் சீக்கிரமே கழுவி துடைத்து விட்டு ஒரு கட்டத்தில் சில படங்களில் வில்லனாகவும் அதைத் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் நடித்து சில ஆண்டுகளுக்கு முன் காலமானார் ‘ மக்கள் கலைஞர் ‘ .

************************************

சோ

சிறந்த நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பிரபல பத்திரிகையாளராகவும் அரசியல் விமர்சகராகவும் தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் ‘சோ’ ராமசாமி. சினிமாவில் அவர் வாயைத் திறந்தாலே அரசியல் நையாண்டிகளாக சகட்டுமேனிக்கு வந்து விழுந்தன. அடிப்படையில் காமராஜர் அபிமானியாக அறியப்பட்ட சோ, சினிமாவில் திராவிடக் கட்சிகளையும், இந்திராகாந்தி இருக்கும் வரை அவரையும் விமர்சித்தார் தனக்கே உரிய பாணியில்.

தமிழ் டாக்கியில் முழுக்க முழுக்க அரசியல் நையாண்டியுடன் வெளியான முதலாவது முழு நீளத் திரைப்படம் ‘முகமது பின் துக்ளக்’ தான். சோவின் கதை, வசனம், இயக்கம், நடிப்பில் உருவான படம். 1971ல் ரிலீஸாகி பெரும் பரபரப்பை உண்டாக்கிய படம். மேலோட்டமாக அனைத்துக் கட்சியினரையும் கிண்டலடிப்பதாக தென்பட்டாலும், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியையும், முதலமைச்சர் மு.க.,வையும் குறி வைத்து எடுக்கப்பட்டதாக அர்த்தம் கொள்ளப்பட்டு கழகக் கண்மணிகளுக்கும், இண்டிகேட்டார்களுக்கும் ரத்தக் கொதிப்பை எகிற விட்ட படம். மாநில சுயாட்சி, தேசிய மொழி, ரூபாய்க்கு மூன்று படி அரிசி போன்ற அம்சங்களை கடுமையாகக் கிண்டலடித்தும் கிளி ஜோசியக்காரியாக இருந்து துணைப் பிரதமராகி தில்லுமுல்லு செய்யும் மனோரமா கதாபாத்திரத்தை பாப் ஹேர்ஸ்டைல் தலையும் ‘காந்திமதி’ என்ற பெயருமாக காண்பித்து கலக்கியிருப்பார் சோ.

சிவாஜி கதாநாயகனாக நடித்து 1974ல் வெளியான ‘தங்கப்பதக்கம்’ படத்தில் கரகரத்த குரல்; தெருவைப் பெருக்கும் தோள் துண்டு; சுத்தி நான்கைந்து கைத்தடிகள் சகிதம் ‘மாவட்டம்’ ஆக தி.இ. கெட்டப்பில் வந்து “ஒரு ரூபாய்க்கு 3 கிளிகள்” தருவதாக லூட்டி அடிக்கும் சோ…மறக்க முடியாதவர்.

திரையில் சோ, ஏவியிருக்கும் அரசியல் நையாண்டி அஸ்திரங்களை பட்டியலிட்ட புறப்பட்டால் அது சிந்துபாத் கதை கணக்காய் நீண்டு போகும்.

**********************************

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் முக்கிய வசனகர்த்தா – கம்- இயக்குநர்கள் வரிசையில் ஒருவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கதர் கட்சி அபிமானி. சிவாஜி குரூப் என்று அறியப்பட்டவர். எம்ஜிஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காதவர். திராவிட இயக்கத்தின் மீது தனக்கிருந்த கோபத்தை தனது படங்கள் சிலவற்றில் பதிவு செய்துள்ளார் இந்த ‘இயக்குநர் திலகம்’.

1972ல் அப்போதைய திமுக ஆட்சியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதை விமர்சித்து, தனது கதை வசனம் இயக்கத்தில் வெளி வந்த ‘குறத்திமகன்’ (1972) படத்தில் ஒரு பாடலில் குத்தி காட்டியிருப்பார் கே.எஸ்.ஜி. ” சேத்துப்பட்டு நாத்துப்பட்டு…” எனத் தொடங்கும் அப்பாடலில்,
” முன்னாடி இருந்தவங்க மூடியிருந்தாங்க;
பின்னாடி வந்தவங்க தொறந்துபுட்டாங்க;
அப்புறம் எப்படி முன்னேற்றமுங்க? ”

———————————-

இதை விட, 1973ல் வெளியான , நத்தையில் முத்து’ படத்தில் ஒரு பாடலில் ‘அட்டாக்’ சற்று கூர்மையாகவே இருந்தது. கதாநாயகனும் நாயகியும் குழுவினரோடு ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டே பாடுவதாக அமைந்த
அப்பாடல்:
” ஆடு ராட்டே.. நீ ஆடு ராட்டே !
சிந்திக்க தெரியாத மனிதரெல்லாம் – நாட்டை
சீர்திருத்த வந்தாரென ஆடு ராட்டே.
சந்திக்கு சந்தி நின்று பேசுவோரால் – தேசம்
சந்தி சிரித்து நிற்குதென ஆடு ராட்டே.
பூப்பந்தல் போலிருந்த வாழ்க்கை நலத்தை – சிலரது
வாய்ப் பந்தல் சாய்த்ததென ஆடு ராட்டே.
தாய் பிள்ளை போலிருந்தோரை – கட்சி
நோய் வந்து கலைத்ததென்று ஆடு ராட்டே.
மாறுதல் வேண்டுமென மக்கள் நினைத்தால்- அதற்கு
தேர்தல் உண்டென்று ஆடு ராட்டே.
தேர்தல் புரியாமல் தேர்ந்தெடுத்தால் – இனி
தேறுதல் இல்லையென ஆடு ராட்டே.
ஆறுதல் இல்லையென ஆடு ராட்டே ! ”

********************************

விஜயகுமார்

இப்போது படங்களில் கஞ்சி விறைப்பில் முழங்கையை தாண்டிய சட்டையும் வேட்டியுமாக ஊர் பெரிய மனுஷன், நாட்டாமை வேடங்களுக்கு ஏக குத்தகைக்காரராக வரும் நடிகர் விஜயகுமாரும் ஒரு காலத்தில் பயாஸ்கோப்பில் பாலிடிக்ஸை லேசாக தொட்டுப் பார்த்து கையை இழுத்துக் கொண்டவர் தான். 1973ல் பொண்ணுக்கு தங்க மனசு’ படத்தின் மூலம் அறிமுகமான விஜயகுமார், பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதிமுக கொடியை தனது கையில் பச்சைக் குத்திக் கொள்ளுமளவுக்கு அக்கட்சியின் தீவிர அபிமானியாக அடையாளம் காண்பித்துக் கொண்டவர். 1978ல் வெளியான, ‘மாங்குடி மைனர்’ படத்தில் கழுத்தில் எம்ஜிஆர் படம் பொறித்த டாலர், கையில் அதிமுக கொடியுடன் அறிஞர் அண்ணா சிலையைப் பார்த்து,
” அண்ணா – நீங்க நினைச்சபடி நடந்திருக்கு
புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு ” – என்று பாடியவர் இந்த விஜயகுமார்.

*********************************

விஜயகாந்த்

1979ம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் மிகச் சிறிய ரோலில் அறிமுகமானவர் விஜயகாந்த். ஆரம்பத்தில் சில படங்களில் சிவந்த கண்களும் சிவப்பு சட்டையுமாக ” எரிமலை எப்படி பொறுக்கும் ; நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ?” ( ‘சிவப்பு மல்லி’ – 1981) என்று கேட்டு கம்யூனிசம் பேசினார். ‘சாதிக்கொரு நீதி’, அலைஓசை’ போன்ற படங்களில் கறுப்புச் சட்டைக்காரராக பேசினார். எம்ஜிஆர் ரசிகராகவும் அதே சமயம் கலைஞர் கருணாநிதியின் தீவிர அபிமானியாகவும் ஒரு காலகட்டம் வரை தன்னை வெளிப்படுத்தி வந்தார் ‘ புரட்சிக் கலைஞர் ‘.

சினிமாவில் எம்ஜிஆர் பாணியில் அதே போன்ற Target Audience’ உருவாக்கி கொண்டார். கடந்த 2006ல் துணிந்து ‘தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்’ என்ற தனிக்கட்சியை துவக்கி அதே வேகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலையும் சந்தித்தார் ‘கேப்டன்’. தேர்தலில் ஏறக்குறைய 10 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகளை பெற்று திமுக, அதிமுகவுக்கு மாற்றான கட்சியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தே.மு.தி.க. இனி வரும் தனது படங்களில் ‘சிவப்பு எம்ஜிஆர்’ பாணியில் கட்சி பிரச்சாரத்தை தீவிரமாக்குவார் இந்த ‘கருப்பு எம்ஜிஆர்’ என எதிர்பார்க்கலாம்.

**********************************************

நிற்க. மேற்படி பட்டியலுக்கு உட்படாமல் ,

திரையில், ஒரு குறிப்பிட்ட கட்சியின் பிரசங்கியாக காண்பித்துக் கொள்வதை விட தனிப்பட்ட முறையில் அக் கட்சிக்காரராக தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தி செயலாற்றி வருபவர்கள் :-

‘எம்ஜிஆர் நினைப்பிலோ’ அல்லது தங்களது கதாநாயக மார்க்கெட்டின் ஆயுளைக் கணக்கிட்டோ அரசியல் கட்சியை துவக்கி விட்டு பின்னர் தாக்கு பிடிக்க முடியாமல் மூடு விழா நடத்தியவர்கள் – விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் முக்கிக் கொண்டிருப்பவர்கள் – இனி புதியதாக ஆரம்பிக்கப் போகிறவர்கள்:-

தங்களது புதுப்படம் ரிலீஸ் சமயத்தில் மட்டும் ‘வாய்ஸ்’ கொடுத்து விட்டு, பின்னர் தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொள்பவர்கள் :-

– என்று தனி Trackம் தமிழ் டாக்கியில் உண்டு.

******************

ஞாபக மேட்டில் ஏறி நின்று பார்த்த போது எனக்குத் தென்பட்ட காலடிச் சுவடுகளின் தொகுப்பே இத் தொடர். இதில் போட்டுள்ளப் பட்டியலில் எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ சில, பல விடுபட்டிருக்கலாம். கோலிவுட் என்பது ‘வருங்கால முதலமைச்சர்’ கனவுகளை பதியன் போட்டு வளர்க்கும் நர்ஸரி கார்டன் என ஆகி விட்டுள்ள நிலையில், இத்தொடர் முழுமை பெற்றதென முடிவுக்கு வந்து மங்களம் பாடி ‘முற்றும்’ போட்டு முடித்து வைக்க என்னாலும் முடியாது ; ஏன், உங்களாலும் தான் ! எனவே,

(சுபம்)
(வணக்கம்)


vee.raj@rediffmail.com

……………………………

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 19

This entry is part [part not set] of 31 in the series 20070524_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


டேக் 19

முழுக்கு !

2-10-1975 அன்று பெருந்தலைவர் காமராஜர் திடீரென மரணமடைந்தார். நாடே கலங்கிப் போனது. அத்துடன் சிவாஜியின் பிரச்சாரத்தின் மைய அச்சும் முறிந்தது. இலக்கை இழந்து விக்கித்து போய் நின்றது.

காமராஜரின் திடீர் மறைவைத் தொடர்ந்து கலகலத்துப் போய் கடைசியில் கட்சியைப் போலவே இந்திராவின் இறுகியப் பிடிக்குள் சிவாஜியின் பாலிடிக்ஸ்சும் ஐக்கியமாகிப் போனது.

திமுகவை கழற்றி விட்டு விட்டு அதிமுக பக்கம் தாவி 1977 மார்ச்சில் நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலை இந்திரா சந்தித்ததில் இருந்து சிவாஜியின் பாலிடிக்ஸ்சுக்கும் சவலைத் தட்டத் தொடங்கியது. தொடர்ந்து மாறி மாறி திராவிடக் கட்சிகளின் தோளை தமிழக காங்கிரஸ் தொத்திக் கொண்ட போதெல்லாம், அதற்கேற்ப ஆடும் ‘ரிக்கார்டு டான்ஸ்’ போலானது சிவாஜியின் பிரச்சார நிலைமை.

சினிமாவில் தொழில் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எந்த எம்ஜிஆருக்கு எதிரானதொரு தோற்றத்தை அதுநாள் வரை பராமரித்து தனது ரசிகர்களை திருப்திப்படுத்தி வந்தாரோ அந்த எம்ஜிஆர் , 1977 மார்ச் தேர்தலில் திடீரென சிவாஜிக்கு ‘உடன்பிறவாச் சகோதரர்’ ஆனார். அடுத்து மூன்றே மாதங்களில் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கூட்டணி உடைந்து காங்கிரஸ் தனியே நின்றபோது ‘ சகோதரர் ‘ மீண்டும் சத்ருவாகிப் போனார். 1980ல் கொஞ்ச காலத்திற்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ‘உற்ற நண்பர்’ ஆக இருந்தார். திரும்பவும் 1984ல் ‘இரட்டை இலை’யில் தன்னை ஒரு இலையாக வர்ணித்துக் கொண்டு பிரச்சாரம் செய்யவும் சங்கோஜப்படவில்லை சிம்மக்குரல். (இன்னொரு இலை எம்ஜிஆராம்!)

நடுவில், எப்போதாவது தனித்து தேர்தலில் நின்று பார்க்கும் சபலம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும்போது அதற்கேற்ப, மாஜி / வருங்கால நண்பர்களை திட்டி, காங்கிரசுக்கு ஓட்டு கேட்கவும் தயாராகவே இருந்தார் சிவாஜிகணேசன்.
” ஞானத்தோடு வாழுவோம் ; நிதானத்தோடு வாழுவோம்
மாபெரும் தலைவர் சொன்ன மானத்தோடு வாழுவோம்
பஞ்சம் போக்க பாடுவோம்; லஞ்சம் நீக்கக் கூடுவோம்
பழைய பாதை தனை மாற்றி புதிய பாதை காணுவோம்
நாணயங்கள் பெருகவே நல்லவர்கள் வருகவே
நாட்டு மக்கள் நல்லவர்க்கு வாக்குச் சீட்டுத் தருகவே.
காலமாற்றம் காட்டுவோம்; கயவர் தம்மைப் பூட்டுவோம்
கள்ளச் சந்தைப் பேர்வழிக்கு கைவிலங்கு மாட்டுவோம்
ஊரை ஏய்க்கும் மனிதரே…..”

1977ல் வெளியான ‘அவன் ஒரு சரித்திரம்’ படத்தில் வரும் ” நாளை என்ன நாளை…” எனத் தொடங்கும் இப்பாடலில் காங்கிரசுக்கு ஓட்டு கேட்டார் கணேசன்.

இப்படியாக, மரத்துக்கு மரம் தாவி வந்த கட்சியின் நிலைப்பாட்டை அனுசரித்து வளைந்து நெளிந்து சிவாஜியின் பிரச்சாரமும் நம்பகத்தன்மையையும் வீரியத்தையும் இழந்தது. ஒருகட்டத்தில் திரையில், தனது உள்ளங்கையை (காங்கிரசின் தேர்தல் சின்னமான ‘கை’யை பிரபலப்படுத்துகிறாராம் !) குளோசப்பில் காண்பிப்பதும், ‘அம்மாவே’; ‘அன்னையே’ (இந்திராகாந்தியை மறைமுகமாக குறிப்பிடுவதாம்) என்று
நீட்டி முழக்கி விளிப்பதுமாக அது சுருங்கியும் விட்டது.

*********************
பொதுவாக, எம்ஜிஆருக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தையும்- பேரும் புகழையும் பெற்றிருந்தும் கூட திமுகவில் எம்ஜிஆருக்குக் அளிக்கப்பட்ட அந்தஸ்து, காங்கிரசில் சிவாஜிக்கு கொடுக்கப்படவில்லை. மக்கள் திலகத்துக்கு அறிஞர் அண்ணாவிடம் கிடைத்த ஊக்குவிப்பும் அரவணைப்பும், நடிகர் திலகத்துக்கு காமராஜரிடம் கிடைக்கவில்லை என்பதே நிஜம். ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மீது சிவாஜி காண்பித்து வந்த அபிமானத்துக்கும் விசுவாசத்துக்கும் உழைப்புக்கும் உரிய அங்கீகாரம் அவருக்கு காங்கிரஸில் காமராஜர் காலத்தில் இருந்தே கடைசி வரை கிடைக்கவே இல்லை. (1980களில் ஒரே ஒரு முறை சிவாஜியை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியதோடு ‘பதில் மரியாதை’யை காங்கிரஸ் தலைமை முடித்துக் கொண்டது ! ).

இந்திராகாந்தி காலத்தை தொடர்ந்து ராஜீவ் காலத்திலும் இந்த உதாசீனம், அதிகமாகவே சிவாஜி, 1988ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். அப்போது, எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்திருந்த அதிமுகவில், ஜானகி எம்ஜிஆரின் அணியுடன் கூட்டணி வைத்து 1989ல் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சிவாஜியின் கட்சி படுதோல்வி கண்டது. சிவாஜியே கூட திருவையாறு தொகுதியில் ஏறக்குறைய 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோற்றுப் போனார். முன்னதாக, கட்சியின் கொள்கைப் பிரகடனத் திரைப்படமாகக் கூறி சிவாஜி தயாரித்து நடித்த ‘என் தமிழ் என் மக்கள்’ என்ற படத்துக்கும் (1988) இதே கதி தான்.

பின்னர், கட்சியை கலைத்து விட்டு 1990களின் துவக்கத்தில் ஜனதாதளம் கட்சியில் சேர்ந்து அதன் தமிழக தலைவராக சில காலம் இருந்தும் பார்த்தார். சூதும் சூட்சமும் நிறைந்த அரசியல் தனக்கு ஒத்துவராது என தாமதமாக புரிந்துக் கொண்டு, கடைசியில் அரசியலுக்கே பெரிய கும்பிடும் போட்டு விட்டார் ‘செவாலியே’. முதுகில் சுமந்திருந்த வேதாளத்தை கீழே இறக்கி விட்டு நிம்மதி கொண்டார்.

அரசியலில் விட்டதை சினிமாவில் பிடித்தார். ஜெயித்தார். சாதித்தார். தனது கன்னக் கதுப்புகளையும் கைவிரல் நகங்களையும் கூட கதாபாத்திரத்திற்கேற்ப நடிக்க வைக்கத் தெரிந்த அந்த மகா நடிகனை கலை கடைசி வரை கைவிடவேயில்லை. ‘ நடிப்புலகச் சக்ரவர்த்தி ‘ என்ற உயர் அங்கீகாரத்தை கல்வெட்டாய் தமிழ் சினிமா உலகில் பொறித்து விட்டு, 21-7-2001 அன்று மண்ணுலகை விட்டு பறந்து விட்டது அந்த கலைக்குயில்.

(வளரும்)

அடுத்து: ‘ சைடு ரீல்கள் ‘ !
—————————————————–

vee.raj@rediffmail.com
———————————————————

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 18

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


டேக் 18

‘ இன்குலாப் ஜிந்தாபாத் ‘

தமிழ் சினிமாவில் திராவிட இயக்கத்துக்கு எதிராக பகிரங்கமாக களம் இறங்கிய முதலாவது நட்சத்திர நாயக நடிகர் சிவாஜிகணேசன் தான். ‘ தேசிய நடிகர்’ ஆன பிறகு சிவாஜியுடன், அப்போது தமிழ் சினிமாவில் தீவிர காங்கிரஸ் அபிமானிகளாக இருந்த ஏ.பி.நாகராஜன், பீம்சிங் போன்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நாடி வந்து கைக் கோர்த்துக் கொண்டனர். திமுகவில் இருந்து விலகி தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமாகியிருந்த கவிஞர் கண்ணதாசனும் இந்த வரிசையில் சேர்ந்துக் கொண்டார்.

இதுவே பின்னாளில் ஒருகட்டத்தில்… திராவிட – தேசிய (காங்கிரஸ் தான்) இயக்கங்களின் அபிமானிகள் என்ற அடிப்படையில் ‘ எம்ஜிஆர் குரூப் ‘ மற்றும் ‘ சிவாஜி குரூப்’ என இரண்டு கோஷ்டிகள் தமிழ் சினிமாவில் உருவாக அடித்தளமாக அமைந்தது .

*********
1960களின் துவக்கத்தில் காங்கிரஸ் அபிமானியாக – காமராஜரின் விசுவாசியாக ஆரம்பித்து பிரச்சார பீரங்கியாக உருவெடுத்தார் சிவாஜிகணேசன். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டு காமராஜரை முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தி பார்க்க வேண்டுமென்பது மட்டுமே சிவாஜி பிரச்சாரத்தின் ஒரே இலக்காக இருந்தது. காந்தி, நேரு வரிசையில் காமராஜரை கொண்டு சென்று திரையில் புகழ்பாடுவதே அதற்கான பிரதான வழிமுறையாக கையாண்டு வந்தார்.

சினிமாவில் படு பிஸியாக இருந்தபோதும், 1967ல் நடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்தும் காங்கிரசுக்கு ஓட்டு கேட்டார். காங்கிரஸ் கட்சி, இந்திராகாந்தி தலைமையிலான ‘இண்டிகேட்’ ( இந்திரா காங்கிரஸ் ) மற்றும் காமராஜர் தலைமையிலான ‘சிண்டிகேட்’ (ஸ்தாபன காங்கிரஸ்) என 1969ல் இரண்டாக உடைந்த போதும் சிவாஜியின் இலக்கு, திசை மாறவில்லை. 1971ல் திமுகவுடன் தோழமை வைத்து பாராளுமன்ற, சட்டமன்றப் பொதுத் தேர்தல்களை இந்திரா சந்தித்த போதும் காமராஜர் பக்கமே நின்றார் சிவாஜி.

‘காமராஜர் தான் அடுத்த முதலமைச்சர்’ என்கிற நம்பிக்கையை பரவலாக ஏற்படுத்தி விட்டு கடைசியில் காலை வாரி விட்ட 1971 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் கூட சிவாஜி சோர்ந்து விடவில்லை.

“அம்பிகையே; ஈஸ்வரியே
……………………………….
………………………………
“ஏழைகளை ஏய்ச்சதில்லை முத்துமாரி – நாங்க
ஏமாத்தி பொழச்சதில்லை முத்துசாமி
வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி- இனி
வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி ”
-1972ல் வெளியாகி சக்கைப் போடு போட்ட ‘பட்டிக்காடா பட்டணமா” என்ற படத்தில் இடம் பெற்ற இப்பாடலில், தனது தளராத நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பார்.
” சிவகாமி உமையவளே முத்துமாரி – உன்
செல்வனுக்கு காலமுண்டு முத்துமாரி.
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துக் கூறி
மக்களெல்லாம் போற்ற வேண்டும்
கோட்டையேறி…”

– என்றும் எதிர்பார்ப்புடன் நீளும் அப்பாடல்.

தமிழக அரசியலில் பெரும் சக்தியாக உருவாகி வந்த எம்ஜிஆர், 1977ல் காமராஜர் முதலமைச்சராக பெரும் இடைஞ்சலாக இருப்பார் என சிவாஜி அஞ்சியிருக்க வேண்டும். 1972க்கு பிறகு சினிமாவில் சிவாஜியின் அரசியல் பிரச்சாரம் அப்போதைய திமுக ஆட்சியாளர்களைக் காட்டிலும் எம்ஜிஆரையே பிரதானமாகக் குறி வைத்து அமில அஸ்திரங்களை ஏவத் தொடங்கின – அல்லது அப்படியானதொரு தோற்றத்தை ஏற்படுத்தின. ஏற்கனவே தொழில் முறையில் நேரடிப் போட்டியாளராகவும் எம்ஜிஆர் இருந்ததால் ஏவுகணைகளின் சூட்சமங்களை புரிந்துக் கொள்வதில் சிவாஜி ரசிகர்களுக்கு சிரமம் இருக்கவில்லை. திமுக மீதும் முக்கியமாய் அப்போது எம்ஜிஆர் மீதும் கடும் கோபத்தில் இருந்த கவிஞர் கண்ணதாசன், இந்த விஷயத்தில் சிவாஜிக்கு துணைக்கு வந்தார்.

” நான் நாட்டைத் திருத்தப் போறேன்
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்
……………………………………………………
……………………………………………………
ஊரை ஏமாத்தும் உல்லாசக்காரன்
வேஷத்தை கலைக்கப் போறேன்
உள்ளே ஒண்ணாக வெளியே ஒண்ணாக
பேசாமப் பண்ணப் போறேன்.
ஆணி அச்சாணி இல்லாத தேரை
எல்லார்க்கும் காட்டப் போறேன்
அச்சம் பண்பாடு இல்லாத ஆளை
என்னான்னு கேக்கப் போறேன்”

– ” என்னடா.. இந்த ‘ஸாங்’லே நம்ம அண்ணன் யாரை அட்டாக் பண்றார் தெரியுதா?” ; ” தெரியும், தெரியும். ‘ தொப்பி’ யை தானே..!” – 1975ல், ‘மன்னவன் வந்தானடி’ படம் ரிலீஸ் நாளன்று மேட்னிஷோவில் எங்கள் ஊர் கிருஷ்ணகிரியில் தியேட்டரில் பெஞ்ச் டிக்கட்டில் எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு ‘பிள்ளைகள்’ விசிலுடன் பரிமாறிக் கொண்ட இந்த அர்த்தமே அதற்கு சான்று. ( சிவாஜி தனது ரசிகர்களை ‘பிள்ளைகளே..’ என்று பிரியத்துடன் அழைப்பார்)
அதே பாடலில்,
” காலம் வந்தது கத்தியைத் தீட்டு
கத்தியைப் போலப் புத்தியைத் தீட்டு
வெற்றியை நான் வாங்கித் தாரேன்”

– என்று உத்தரவாதம் வேறு கொடுப்பார்.

———————————-

1974ல் வெளியான ‘என் மகன்’ படத்தில் ஒரு பாடல். “நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்..” என்று குளோசப் ஷாட்டில் சிவாஜி கை நீட்டி கேட்பது போல் பாடல் ஆரம்பிக்கும். அதில்:

” அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதைக் கண்டேன்
சதிகாரக் கூட்டமொன்று சபை ஏறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன்;
கொள்ளையடிப்போன் வள்ளலைப் போல
கோயிலை இடிப்போன் சாமியைப் போல – இங்கு
ஊழல் செய்பவன் யோக்கியன் போல
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போல காண்கின்றான்.
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இங்கு அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது ; எதிர்காலம் காட்டும்.
நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது….”

– பாடல் வரிகள், எம்ஜிஆரையும் – திமுக ஆட்சியாளர்களையும் ஒரு சேர காய்ச்சியெடுப்பதாக காங்கிரஸ் தோழர்களும், ‘பிள்ளை’களும் அர்த்தம் கொண்டு கைத்தட்டி மகிழ்ந்தனர். அதிலும், மு.க. தலைமையிலான திமுக அரசின் ஊழல்களை (அப்போதைய) பிரதமர் இந்திராகாந்தி உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறார். திடீரென ஒருநாள் அதிரடியாக நடவடிக்கை எடுக்கப் போகிறார் பார்த்துக் கொண்டேயிருங்கள் என்று சிவாஜி கோடிட்டுக் காட்டுவதாகவும் குஷிப்பட்டுக் கொண்டனர்.
——————————-

” பார்த்தாலும் பார்த்தேண்டி மதறாசுப் பட்டணத்தை
பத்துக் கண்ணு போதாதம்மா, பட்டிக்காட்டம்மா.
தெருவெங்கும் பிராந்திக் கடை தெறந்திருக்காங்க
தினந்தோறும் கண்காட்சி நடத்திக்கிறாங்க.
பணமிருந்தா கோட்டையைக் கூட வாங்கிக்கிறாங்கம்மா.
கூவத்திலே காசை அள்ளிப் போட்டிருக்காங்க
கூட ஒரு முதலையையும் விட்டிருக்காங்க;
துண்டு போட்ட மனுஷங்கெல்லாம் சுத்திக்கிறாங்கம்மா – இந்த
நாட்டைக் கூட துண்டு போட எண்ணிக்கிறாங்கம்மா..”

– அதே 1974ல் வந்த ‘தாய்’ என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். 1970களில் சென்னைக் கூவம் நதியை சுத்தப்படுத்தி படகு விட அப்போதைய திமுக அரசு நடவடிக்கையெடுத்ததையும், அந்த அரசின் மதுக் கொள்கையையும், அப்போதைய கழகக் கண்மணிகள் தெருவைப் பெருக்குமளவுக்கு தோளில் நீ..ள..மான துண்டுகளை அணிந்து திரிந்ததையும் கிண்டலடிக்கும் பாடல் இது.
——————————

ராஜபார்ட் ரங்கதுரை’ (1973) படத்தில் பகத்சிங் வேடத்தில் சிவாஜி பாடும் “இன்குலாப் ஜிந்தாபாத்; இந்துஸ்தான் ஜிந்தாபாத்..” எனத் தொடங்கும் பாடலில்
” எங்கள் பொன்னாடு எந்நாளும் எம்மோடு
கொள்ளை செய்வோரை பழி செய்வோம் கூண்டோடு
……………………………………….
……………………………………..
தாயின் கண்ணீரே வழிகாட்டும் புதுவெள்ளம்
நாய்கள் வெளியேற வழி சொல்லும் அவள் உள்ளம்.
இந்நாட்டை ஆள்கின்ற திருடர்கள் ஓயாமல்
தேசீய நெஞ்சங்கள் ஓயாது…”

– என வரிகள் வரும். பிரிட்டிஷ் அரசை சாடுவதாக பாடலின் காட்சியமைப்பு இருந்தாலும் உண்மையில் அவை அப்போதைய திமுக ஆட்சியாளர்களுக்கு எதிராக சாட்டையை சொடுக்குவதாகவே ரசிகப் பிள்ளைகளாலும், தேசீய உள்ளங்களாலும் அர்த்தம் கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்ட வரிகள். அதே பாடலில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய கட்சியினர் திரள வேண்டுமென்கிற அழைப்பையும் விடுவார் சிவாஜி.

” எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே
இந்நாட்டின் இளைஞர்கள் எழ வேண்டும்.
பகைவரை விட மாட்டோம் – வலைதனில் விழ மாட்டோம்
………………………………………………….
………………………………………………….
துணிந்திடும் மனம் உண்டு; சுதந்திரக் கொடியுண்டு
இளைஞர்கள் படை உண்டு; தலைவனின் துணை உண்டு
இங்கே ஒரு காந்தி இருக்கின்றார் அவர் வாழ்க
தெற்கே ஒரு காந்தி வருகின்றார் அவர் வாழ்க! ”

—————————–

காமராஜர் புகழ்பாடும் விதத்தில் ‘தாய்’ படத்தில் ஒரு பாடல்:

” நாடாள வந்தாரு’ நாடாள வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா.
கல்லாமை கண்டாரு; இல்லாமை கண்டாரு
கல்லூரி தந்தாரம்மா.
பாண்டிய நாட்டுச் சீமையிலே – ஒரு
பச்சைக் குழந்தை அழுததடி;
பாலுக்காக அழவில்லை – அது
படிப்புக்காக அழுததடி.
மாடு மேய்க்கும் சிறுவனைக் கண்டு
மனதும் உடலும் பதைத்ததடி
வளரும் பிள்ளை தற்குறியானால்
வாழ்வது எப்படி என்றதடி !
பெற்ற தாயையும் மறந்ததடி- அது
பிறந்த பொன்னாட்டை நினைத்ததடி.
உற்றார் உறவினர் யாரையும் மறந்து
உலகம் காக்க துணிந்ததடி.
கல்யாணம் செய்யவும் எண்ணமில்லை – ஒரு
காசுக்கும் பணத்துக்கும் ஆசையில்லை;
எல்லார்க்கும் எல்லாமும் வேண்டுமென்று…”

———————————
1975ல் வெளியான ‘டாக்ட சிவா’ படத்தில் ஒரு பாடல்:

” நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே
……………………………………………………………..
…………………………………………………………….
பறவை இனத்தில் பிறந்தவர் போல்- சிலர்
பதவிக்கு அலைவார் நாட்டிலே.
பட்டமும் பதவியும் தேடினால் கூடுமோ ?
…………………………………………..
……………………………………………
செடி மேல் படர்ந்த கொடியினைப் போல்
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம் – அவர்
மடியினில் எதையும் மறைத்ததில்லை- இந்த
மாநிலம் அவர் வசமாகலாம்.
தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம்”

– காமராஜர் முதலமைச்சராக வேண்டுமென்கிற பேரவாவை வெளிப்படுத்திய அதே சமயம் கோட்டையை நோக்கி வேகமாக நகர்ந்துக் கொண்டிருப்பதாக கருதப்பட்ட எம்ஜிஆரின் அரசியல் செல்வாக்கு மீதான கோபத்தையும் சிவாஜி வெளிப்படுத்துவதாக அர்த்தம் கொள்ளத்தக்கப் பாடல் இது.

*****************

எம்ஜிஆருக்கு ‘ அண்ணா’ போல் சிவாஜிக்கு கிடைத்தது ‘ ராஜா’. காமராஜர் என்பதின் செல்லமான சுருக்கம். ‘எங்க ஊர் ராஜா’, ‘எங்க தங்க ராஜா’, ‘தர்மராஜா’ என்று வைத்தது போதாதென ‘படிக்காத மேதை’, ‘சிவகாமியின் செல்வன்’, ‘தவப்புதல்வன்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘அவன் தான் மனிதன்’, ‘அவன் ஒரு சரித்திரம்’ … எனவும் தனது படங்களுக்கு டைட்டில் வைத்தும் காமராஜர் மீதான தனது விசுவாசத்தை காண்பித்து வந்தார் சிம்மக்குரலோன்.

” ஏழுகடல் சீமை ; அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா, தங்கமான ராஜா..”
(‘எங்க ஊர் ராஜா’ – 1968)

“கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் -பல
குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்
எங்கள் தங்க ராஜா- அவன்
என்றும் மணக்கும் ரோஜா ”
(‘எங்க தங்க ராஜா’ -1973)

***********

இப்படியெல்லாம் எந்த ‘ராஜா’வை தமிழகத்தின் ராஜாவாக அழகு பார்க்க வேண்டுமென்று சிவாஜி ஆசைப்பட்டு வந்தாரோ, அந்த நெடுநாளைய ஆசையில் 1975ம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று திடீரென்று இடி விழுந்தது.
………………………..

(வளரும்)

அடுத்து: ‘ முழுக்கு ‘ !

———————————————————————————–

vee.raj@rediffmail.com
———————————————————

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 17

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


டேக் 17

திசை மாற்றியத் திருப்பதி !

விழுப்புரம் சின்னையா கணேசன் என்கிற ஒப்பற்றக் கலைஞனை தமிழ் சினிமாவுக்கு தந்ததற்காக , திராவிட இயக்கத்திற்கு முதற்கண் நன்றி தெரிவித்து விட்டு இந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பதே சரியானதாக இருக்கும்.

*********
நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமிக்கு அடுத்து திராவிட இயக்கத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட நாயகக் கலைஞர் வி.சி.கணேசன் தான். வி.சி.க. சாதாரண நாடக
நடிகராக இருந்த போதே அவரை தத்தெடுத்துக் கொண்டது திராவிட இயக்கம்; குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம்.

சாஸ்திரீய சங்கீதப் பாடல்களில் மூழ்கிக் கிடந்த தமிழ் சினிமா மற்றும் நாடகத்தை கையை பிடித்துத் தூக்கி வசன தளத்திற்கு இழுத்துப் போட்ட திமுகவுக்கு, நவரச நடிப்பாற்றல் – தமிழைக் கடித்துக் குதறாமல் உணர்ச்சிகரமாகவும், தெளிவாகவும் வசனங்களை உச்சரிக்கும் பாங்கு – கர்ஜிக்கும் கம்பீரக் குரல்வளமும் கொண்டிருந்த வி.சி.க. சரியானத் தேர்வாக இருந்தார்.

இந்து சனாதனர்களைச் சாடி அறிஞர் அண்ணா எழுதிய ‘ சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தின் மூலமாக வி.சி.கணேசனை சிவாஜிகணேசன் ஆக்கியதும் தி. இ. தான்.

சிவாஜியும் திமுக அபிமானியாக அக்கட்சி பிரமுகர்களுடன் பழக்கம் வைத்திருந்தார். கட்சித் தலைவர் அண்ணாவிடம் சிவாஜிக்கு நெருக்கமான நட்பு இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் (நாடக காலகட்டத்தில்) அண்ணா போகும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சிவாஜியும் கூடவே போவாராம்.

நாடக நடிகராக இருந்த சிவாஜியை தங்களது போர்வாளாக சினிமாவுக்குள் கொண்டு வருவதில் திமுக ஆர்வம் காட்டியது. அதற்கு வழி வகுத்தாள் ‘பராசக்தி’.
நாடகமாக நடந்துக் கொண்டிருந்த ‘பராசக்தி’க்கு மு.க. வசனத்தில் சினிமா வடிவம் கொடுக்கப்பட்ட போது கதாநாயகன் வாய்ப்பு சிவாஜிக்கு கிடைத்தது. இதன்
பின்னணியில் அண்ணாவின் பங்கு பெருமளவில் இருந்தது.

திராவிட இயக்கத்தின் முழு முதல் சினிமா உருவமாக வர்ணிக்கப்படும் ‘பராசக்தி’ 17-10- 1952 அன்று வெளியாகி ஆங்கிலத்தில் over- night star என்பார்களே அப்படி ஒரே நாளில் சிவாஜியை நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு சென்றது. இந்த ’17’க்கு பிறகு சிவாஜி கடைசி வரை திரும்பி கீழே பார்க்கவேயில்லை.

***********

சிவாஜியின் அரசியல் ஈடுபாட்டை 1.திராவிட இயக்க காலம்; 2. தேசிய இயக்கம் அல்லது காங்கிரஸ் காலம் என இரு வகைப்படுத்தலாம். இதில் திராவிட இயக்க காலம் என்பது சிவாஜிக்கு முத்திரைக் காலமாக சொல்லிட முடியாது. காரணம், அந்த இயக்கத்தில் அவர் நீடித்திருந்த காலமும், பங்களிப்பும் சொற்பமே.

திராவிட இயக்கம், தமிழ் டாக்கியை கையகப்படுத்தியிருந்த அந்த காலகட்டத்தில் கே.ஆர்.ஆர், எஸ்.எஸ்.ஆர்., வரிசையில் அவ்வியக்கத்தின் ‘வாய்ஸ்’ ஆக மட்டுமே இருந்தார் சிவாஜி.

பராசக்தி நீங்கலாக ‘திரும்பிப் பார்’ (1953), ‘மனோகரா’ (1954), ‘இல்லறஜோதி’ (1954), ‘ராஜாராணி’ (1956), ‘புதையல்’ (1957) என்று 1950களில் ஒரு காலகட்டம் வரை பெரும்பாலும் திராவிட இயக்கத்தார் படங்களில் நடித்து மு.கருணாநிதி, கண்ணதாசன் (இவர் திராவிட முகாமில் இருந்த காலகட்டமது) போன்றோரின் வசனங்களை திரையில் உரக்க ஒலிபரப்பி வந்தார். மற்றபடி, திராவிட இயக்கத்தின் திரைப் பிரதிநிதியாக சிவாஜி அடையாளம் பதித்திடவில்லை. அதில் அவர்
நீடித்திருந்தால் ஒருவேளை அது சாத்தியப்பட்டிருக்குமோ என்னமோ தெரியாது. ஆனால், மிகச் சில ஆண்டுகளிலேயே சிவாஜி, அவ்வியக்கத்தில் இருந்து விலகிப் போகும் சந்தர்ப்பத்தை, திருப்பதி ஏற்படுத்திக் கொடுத்து விட்டது.

ஒரே படத்தில்- அதுவும் முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்து கிடைத்ததும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததும் ‘திராவிட இயக்க’ வி.சி.க.,வுக்கு கடவுளை ஞாபகப்படுத்தியிருக்க வேண்டும். இருந்தது இருந்தாற்போல், 1950களின் மத்தியில் சில ஆன்மீக நண்பர்களுடன் சேர்ந்து திடீரென திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்று ஏழுமலையானை கும்பிட்டு விட்டு வந்தார் சிவாஜி. இந்த திடீர் பக்தியை திமுகவில் இருந்த சிவாஜியின் ரசிகர்களாலும் கட்சித் தொண்டர்கள் சிலராலும்
ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ‘திருப்பதி கணேசா. நீ நடந்து வந்த பாதையை திரும்பிப் பார் ‘ என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் அடித்து ஒட்டி தங்களின் கோபத்தை காண்பித்தனர். சிவாஜி படப் போஸ்டர்களில் சாணி அபிஷேகம் ஆரம்பமானது.

இதையடுத்து, நிகழ்வுகளை பொறுமையாக கவனித்துக் கொண்டு வந்த சிவாஜி, திராவிட இயக்கத்தில் இருந்து நகர்ந்து தேசிய இயக்கத்தின் பக்கம் சாயத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ‘தேசிய நடிகர்’ ஆனார். தமிழ்நாட்டு அகராதிப்படி தேசிய இயக்கம் என்றாலே அது காங்கிரஸ் கட்சி மட்டும் தானே !

சிவாஜிகணேசனின் தேசிய அல்லது காங்கிரஸ் நீரோட்டம், 1959ல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மனில் இருந்து ஊற்றெடுத்து 1960களில் பெருக்கெடுத்து ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘ரத்தத் திலகம்’ என பிரவாகமாகியது.

(வளரும்)

அடுத்து : இன்குலாப் ஜிந்தாபாத் !


vee.raj@rediffmail.com

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 16

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


டேக் 16

பிள்ளையோ பிள்ளை

1970களில் சினிமாவிலும் கட்சியிலும் எம்ஜிஆருக்கு வளர்ந்து வந்த செல்வாக்கை கட்டுப்படுத்த அதன் உச்சந்தலையில் அடிக்க கலைஞர் கருணாநிதி முதலில் கையில் எடுத்துக் கொண்ட ஆணி தான் மு.க. முத்து. எந்த ‘பீஸ்’சை பிடுங்கினால் எந்த லைட் ஆ·ப் ஆகுமெனக் கணக்குப் போட்டு தனது மூத்த மகன் மு.க.முத்துவை சினிமாவில் இறக்கி விட்டார். மு.க.வின் குடும்பத்தைச் சேர்ந்த படத்தயாரிப்புக் கம்பெனியான மேகலா பிக்சர்ஸ் சார்பில் மு.க.முத்துவை நாயகனாக அறிமுகப்படுத்தி படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் படம் தான் ‘பிள்ளையோ பிள்ளை’.

எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் மனஸ்தாபம் சூல் கொள்ளத் தொடங்கியிருந்த 1971ல் ஆரம்பிக்கப்பட்டு, இருவருக்குமிடையே மோதல் பகிரங்கமாக வெடிப்பதற்கு சில
மாதங்களுக்கு முன் 1972ல் பரபரப்புடன் ரிலீஸ் ஆனது ‘பிள்ளையோ பிள்ளை’. படத்துக்கு மு.க. தான் வசனம். டைரக்ஷன் கிருஷ்ணன் பஞ்சு. பாடல்கள்: எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞராக கருதப்பட்ட கவிஞர் வாலி.

இப்படத்தில் கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்களெல்லாம் முழுக்க முழுக்க எம்ஜிஆர் ·பார்முலா தான். சொந்தக் குரலில் பாடியது தவிர, முத்துவின் நடை, உடை, பாவனையும் அச்சு அசலாக எம்ஜிஆரே. காட்சிக்கு காட்சி எம்ஜிஆர் பாணி. அதே அங்க அசைவுகள்- பாடிலாங்குவேஜ்.
” உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான்.. ஓய்வில்லாமல் உழைப்பவன் நான் …” என்று உரக்கப் பாடியபடியே இப்படத்தில் அறிமுகமாவார் முதலமைச்சரின் மகன் முத்து.

” துயர் வந்தாலும் சிரிப்பவன் நான்
தொடர்ந்து முன்னேற துடிப்பவன் நான்;
ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதை சொன்னான் தலைவன்
அண்ணன் அவன் சொல்லிய
நான் என்னாளும் மறந்தது இல்லை ”

………………………

இன்னொரு எம்ஜிஆராக அதாவது இளைய எம்ஜிஆராக முத்துவை தூக்கிப் பிடித்து , அப்போது வயோதிகத்தை அடைந்திருந்த சீனியர் எம்ஜிஆரை சினிமாவிலும் அதன் தொடர்ச்சியாக அரசியலிலும் ஓரம் கட்டுவதே முத்துவின் சினிமா பிரவேசத்தின் அடிப்படை நோக்கமென்கிற கருத்து இந்த முதல் படத்திலேயே வலுப்பெற்றது.

அதற்கேற்ப, நிகழ்வுகளும் அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்டன. முதல்பட ரிலீசின் போதே திமுக இளைஞர்களின் ஆர்பாட்டமான ஊர்வலங்கள். சினிமாத் தியேட்டர்களில் விழாக் கொண்டாட்டங்கள். ‘முத்து… தமிழ்த் திரையுலகின் சொத்து’ என்பது போன்ற வகையிலான கோஷங்கள்.

ஒரே படத்திலேயே அதுவும் அந்த படம் வெளியாவதற்கு முன்பே முத்துவுக்கு திடீரென்று ரசிகர் மன்றங்கள் வேறு ஏராளமாக முளைத்து விட்டன. கட்சி பேனரும் முத்துவுக்கு உடனேயே கிடைத்தது. ஊர்வலங்களின் முன்னால் வெள்ளைக் குதிரையில் உட்கார்ந்து திமுக கொடியை உயர்த்திப் பிடித்தபடி முத்து கம்பீரமாக போகுமளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

இப்படி வளர விட்ட வேகத்திலேயே ஒரு கட்டத்தில், கட்சியைச் சேர்ந்த சினிமா நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் கட்சியின் கிளை அமைப்பு போல இருக்கக் கூடாதென திடீரென அறிவித்து, முதலாவதாக முத்துவின் மன்றங்களை கலைக்க செய்தது திமுக தலைமை. இது அடுத்ததாக தனது ரசிகர் மன்றங்களை குறி வைத்து நடத்தப்படும் நாடகம் என எம்ஜிஆருக்கு மிகச் சுலபமாகப் புரிந்தது.

***********

1972 அக்டோபரில் எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலக்கப்பட்டு அவர் புதிய கட்சி ஆரம்பித்த பின்னர், சினிமாவில் அவரை கடுமையாக தாக்கி பிரச்சாரம் செய்ய மகன் முத்துவை முழுவீச்சில் பயன்படுத்திக் கொண்டார் கலைஞர். அதற்கான உத்திகள் வகுக்கப்பட்டன.

சுருங்கச் சொல்வதானால், பயாஸ்கோப்பில் திராவிட இயக்கம் தனக்குள்ளேயே மோதிக்கொள்ள முதன் முதலாக கையில் எடுக்கப்பட்ட ஆயுதம் மு.க.முத்து தான்.

முதல் படம் போக, இரண்டாவது படம் தொடங்கி எம்ஜிஆர் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் வரிந்து கட்டி இறங்கினார் முத்து. அத்துடன் அப்போதைய, கலைஞர் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை வெகுஜனங்களிடம் கொண்டு போகவும் முத்துவின் படங்கள் உபயோகிக்கப்பட்டன. சில சமயங்களில் கலைஞரின் உருவகமாகவும் முத்து உணர வைக்கப்பட்டார்.

முத்து நடித்த இரண்டாவது படமான ‘ பூக்காரி’ 1973ல் வெளியானது. இப்படத்தின் கதாநாயகி :- எம்ஜிஆரால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டு அப்போது அவருடன் அதிக படங்களில் நடித்து வந்த நடிகை மஞ்சுளா. வசனம்: – கலைஞரின் தீவிர அபிமானியாக கூறப்பட்ட டி.என்.பாலு.
” கேட்டுப் பாரேன் பாட்டை கொஞ்சம் காது கொடுத்து
அதில் கிண்டல் உண்டு; கேலி உண்டு ஊரை நினைத்து.
………………………………………………………………..
………………………………………………………………..
நானறிந்த பாடல் யாவும் காஞ்சி தந்தது.
என் தலைவன் பேசும் தமிழைத் தானே கீதம் என்பது
நான்கு கோடி மக்கள் கேட்டு மயங்கி நின்றது.
அரசு செய்த நன்மை சொல்லி ஏழைப் பாடுவான்;
அதை மறைத்து வைத்து மேடை தோறும் கோழைப் பாடுவான்.
கூடு விட்டு கூடு பாய்ந்து மூடன் பாடுவான்;
தான் கொண்ட கொள்கை மாறிடாமல் தொண்டன் பாடுவான்.
ஒளி படைத்த கண்கள் வாழ்த்தும் பாடல் கேட்குது;
வாழ வழி கிடைத்த பிச்சைக்காரர் உள்ளம் துள்ளுது.
மாடு போல மனிதன் இழுத்த காலம் மாறுது.
இங்கு ஓலை வீடும், மாளிகை போல் உயர்ந்து நிற்குது. ”

– இப்பாடலில் மு.க.அரசு கொண்டு வந்த கண்ணொளித் திட்டம், பிச்சைக்காரர்கள்
மறு வாழ்வுத் திட்டம், கைரிக்ஷா ஒழிக்கப்பட்டு அதற்கு பதில் சைக்கிள் ரிக்ஷாக்கள் அரசு சார்பில் தரப்பட்டது, குடிசைகள் மாற்றுத் திட்டம் போன்ற பொது மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்கள் பிரச்சாரம் செய்யப்பட்டது. அத்துடன் இப்பாடலில் ‘ கோழை, மூடன் ‘ என ‘அர்ச்சிக்கப்பட்டது’ யாருக்கென உங்களுக்கே தெரிந்திருக்குமே !

———————–

அடுத்தாண்டு வந்தது, ‘சமையல்காரன்’ என்ற படம். இதிலும் வசனம் டி.என்.பாலுவே. முத்துவுடன் எம்.ஆர்.ராதாவும் நடித்திருந்தார். எம்ஜிஆரை கிண்டலடித்தும், மு.க. அரசின் சாதனைகளை பிரச்சாரம் செய்தும் நிறைய வசனங்கள் , பாடல்கள்.

இதில் ஒரு காட்சி:

நாயகன் முத்து மற்றும் வி.கே.ராமசாமி கதாபாத்திரம் இடையே உரையாடல்:
வி.கே.ராமசாமி :- ” பரவாயில்லையே. நீ உலகம் சுற்றும் வாலிபன் தான்”
மு.க.முத்து :- ” உண்மையான வாலிபன்னு சொல்லுங்க ”
(சுற்றியிருக்கும் இதர கதாபாத்திரங்கள், இதை ஆமோதிக்கும் விதத்தில் சிரிக்கும்)

இன்னொரு காட்சியில் முத்து பேசும் டயலாக்:

” மனித உணர்வுகளை புரிந்து கொள்பவர் தான் கலைஞர்”

எம்ஜிஆர் பாணியில் தன்னிலை முன்னிறுத்தும் பாடல்:

” சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க – நான்
சொத்தா மதிக்கிறது உங்க அன்பைத் தானுங்க;
குடும்ப பாசம் ஊட்டி வளர்த்தது அண்ணன் அறிவுங்க – ஒரு
கோட்டையென்றாலும் குடிசையென்றாலும்
கொள்கைப் பொதுவுங்க.
………………………………………………………
……………………………………………………..
உழைக்கிற கைகளை நம்பியபடி தான்
பொழுதே விடியுதுங்க – இந்த
உண்மையை சொன்னா ஒரு சில பேருக்கு
எரிச்சல் வருகுதுங்க.
தேவையைக் கூடத் தியாகம் செய்கிற
கூட்டம் இருக்குதுங்க – தன்
தேவையை கருதி எதுவும் செய்வது
சரியா சொல்லுங்க? ”

இதே படத்தில் இன்னொரு பாடல். இதில் முத்து, சட்டையில் உதயசூரியன் பேட்ஜ் குத்திக் கொண்டபடி வந்து பாடுவார். மு.க.அரசின் புகழாரமும் திமுகவின் மாநில சுயாட்சிக் கோஷமும் இதில் உண்டு :

” நாட்டில் நடப்பது நல்லாட்சி
நாடும் வீடும் நலமாய் வாழ
வேண்டும் சுயாட்சி…”

———————————————
1975ல் வெளியான ‘அணையாவிளக்கு’ என்ற படத்தில் இது :-

” நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா – பிறர்
நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டவா!
…………………………………………………………
………………………………………………………….
ஊரார்க்கு உழைத்தவருக்கு உயர் பதவி நீ கொடுத்தாய்
யார் யாருக்கு எது கொடுத்தால் ஏற்குமென்று நீ வகுத்தாய்!
வாராதப் பதவிக்கெல்லாம் வாய் பிளக்கும் மனிதருண்டு;
ஊர்குருவி , சில நேரம் பருந்து என்று நினைப்பதுண்டு.
சொல்லாட்சி விளங்குதப்பா நீ வகுத்த ஏட்டினிலே;
நல்லாட்சி நடக்குதப்பா நீ இருக்கும் நாட்டினிலே.
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை ”

– மு.க. முத்து சொந்த குரலில் பாடிய இப்பாடலில், தந்தையின் ஆட்சிக்கு மகன் நற்சான்று பதிவு செய்யும் முயற்சி மட்டுமின்றி – எம்ஜிஆர் அமைச்சர் பதவி கேட்டதாகவும் , சில நடைமுறைச் சிக்கல்களை சொல்லி கருணாநிதி அதை நிராகரித்ததாகவும் உலவி வந்தப் பேச்சை ஊர்ஜிதப்படுத்தும் வகையிலும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளதை கவனியுங்கள். மற்றபடி பருந்தாக நினைத்துக் கொள்ளும் ஊர்குருவியாகவும், தன் முதுகை பார்த்துக் கொள்ளாத பொல்லாங்குக்காரராகவும் எம்ஜிஆருக்கு வழக்கம் போல் ‘அர்ச்சனை’ !
——————

இதைத் தொடர்ந்து, ‘இங்கேயும் மனிதர்கள்’, ‘ நம்பிக்கை நட்சத்திரம்’ , ‘எல்லாம் அவளே’ (1977) என சில படங்களில் முத்து நாயகனாக நடித்தார். ஆனால், எதிர்பார்த்தபடி அவர் பெரியளவில் அரசியலில் மட்டுமின்றி சினிமாவிலும் பிரகாசிக்கவில்¨; யாருடைய இடத்தையும் கைப்பற்றிடவுமில்லை. இந்த விஷயத்தில் மு.க.வின் கணக்கு தப்புக் கணக்காகி போனதென்றே சொல்லலாம்.

பொலிவானத் தோற்றமும், வலுவான பின்புலம் இருந்தும் முத்துவால் இன்னொரு எம்ஜிஆராக முடியவில்லை. எம்.ஜி.ஆர். மாதிரி நடிப்பதால் மட்டும் எல்லாரும் எம்ஜிஆராகி விடமுடியாது என்பதற்கு முத்துவே சரியான ஆரம்ப உதாரணம்.

(வளரும்)

அடுத்து : திசை மாற்றியத் திருப்பதி !

—————————————————————————————–

vee.raj@rediffmail.com
————————-

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 15

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்



டேக் 15

கோட்டையை பிடித்தது ‘ கோடம்பாக்கம் ‘ !

31-1-1976. அன்று தமிழகத்தில் திமுக அரசு, ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு முன்னரே திடீரெனக் கலைக்கப்பட்டது. நெருக்கடி நிலையை (மிசா) துணிச்சலுடன் எதிர்த்த கருணாநிதியின் அரசை, ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வீட்டுக்கு அனுப்பினார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி.

பின்னர், ஒருவழியாக மிசாவை வாபஸ் பெற்று, நாடு முழுவதும் 1977 மார்ச்சில் பாராளுமன்ற மக்களவைக்கு பொதுத் தேர்தலை நடத்தினார் இந்திரா. தமிழகத்தில் முதன்முறையாக அதிமுகவுடன் காங்கிரஸ் (அப்போது இண்டிகேட், சிண்டிகேட் என இரண்டு காங்கிரஸ் இல்லை. இந்திராகாந்தி தலைமையில் ஒன்றாகி விட்டிருந்தன ) கூட்டணி வைத்து பாராளுமன்றப் பொதுத்தேர்தலை சந்தித்தது. இதில் அதிமுக- 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் – 14 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றன. திமுக – ஜனதா கூட்டணியோ படுதோல்வி கண்டது. திமுகவுக்கு கிடைத்தது ஒரே ஒரு தொகுதி தான். ஆனால் பரவலாக நாடு முழுவதும் ஜனதா பெரும் வெற்றி பெற்று மத்தியில் ‘அவியல்’ அரசை அமைத்தது. காங்கிரஸ் பலத்த அடியை வாங்கி மத்தியில் ஆட்சியை பறிகொடுத்தது.

அதே ஆண்டு ஜுன் மாதம் தமிழக சட்டமன்றத்துக்கு நடந்த பொதுத்தேர்தலில் அரசியல் அரங்கில் காட்சிகள் மாறிப் போயிருந்தன. பாராளுமன்றத் தேர்தலின் போதிருந்த கூட்டணிகள் இல்லை. திமுக, அதிமுக, காங்கிரஸ், ஜனதா ஆகிய பிரதான கட்சிகள் தனித்தே நின்று சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தன.

இதனிடையே, அடுத்தடுத்த தேர்தல்களினால் அரசியல் களத்தில் ‘பிஸி’யானார் எம்ஜிஆர். அத்துடன் தனது அரசியல் எதிரியை மையப்படுத்திய இலக்கு நீர்த்துப் போகாதபடிக்கு சினிமாவிலும் பார்த்துக் கொண்டார்.

முதன்முறையாக சட்டமன்றப் பொதுத் தேர்தலை சந்திக்க கட்சியை தயார்படுத்த வேண்டிய முக்கிய கட்டம் எம்ஜிஆருக்கு ஏற்பட்டது. அக்னிப் பரிட்சைக்கு ஆயத்தமாக வேண்டிய கட்டாயம். ஊர் ஊராக அலைந்து திரிந்து நேரடிச் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதே சமயம்,சினிமாவிலும் பிரச்சாரத்தை வெகுவாக முடுக்கி விட்டார். கருணாநிதி மீதான தாக்குதலை உக்கிரப்படுத்தினார்.

” நான் பார்த்தா பைத்தியக்காரன் – உன்
பாட்டனுக்கும் வைத்தியம் பாப்பேன்
…………………………………………..
………………………………………..
ஊரே சிரிக்குது உன்னை பார்த்து – இப்போ
ஊளையிட்டு என்ன லாபம் என்னை பார்த்து?
காலம் நெருங்குது கதை முடிய – இந்த
காட்டு நரிக் கூட்டத்துக்கு விதி முடிய ! – நான்
யாருன்னு இப்போ தெரியாது – அதை
நானாக சொன்னாலும் புரியாது.
ஊருக்குள்ளே நீ செய்யும் அநியாயம் – நான்
உள்ள வரை நிச்சயமாய் நடக்காது.
செங்கோல் பிடிக்கும் ஒருவன்
கன்னக்கோல் பிடிக்கும் கள்வனென்றால்
நீதியெங்கே குடியிருக்கும் ?
நான் கேட்டு வெச்ச கேள்வியிலே பொருளிருக்கு
அதை கேளாதோர் நெஞ்சத்திலே இருளிருக்கு.
உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் – நாளை
உன்னுடைய ஆட்டமெல்லாம் முடித்து வைப்பேன் ”

– நீதிக்கு தலைவணங்கு (1976) .

முன்னதாக, 72ல் கம்யூனிஸ்ட் தலைவர் பெரியவர் கல்யாணசுந்தரத்துடன் ஊர்வலமாக சென்று அப்போதைய கவர்னரிடம் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் புகார் கொடுத்திருந்தார் எம்.ஜி.ஆர். அந்த ஊழல் பட்டியலில் விவசாயத்துக்கான பூச்சி மருந்து ஊழலும் அடங்கும். அதை 76ல் இதே ‘நீதிக்கு தலைவணங்கு’ என்ற படத்தில் பாக்க..பாக்க சிரிப்பு வருது அடக்க முடியலே…” என்ற பாடலில் நினைவுப்படுத்தியிருப்பார் சமையல்காரர் வேஷத்தில் எம்.ஜி.ஆர். :

” கண்ட கண்ட உரத்தைப் போட்டு
காய்கறியை வளக்கிறான் – அந்த
உரத்தில் கூட ஊழல் பண்ணி
எங்க பேரை கெடுக்கிறான்.
……………………………………
……………………………………
சிலர் எதுவும் செய்ய லாயக்கில்லை
பதவி ஆசை விடுவதில்லை.
கலப்படமாய் சரக்கு இருக்கு
எதிலும் இப்போ சுத்தமில்லை
அது புலப்படும் நாள் வரைக்கும்
என்னை சொல்லி குத்தமில்லை ”

————————-

” நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே..
………………………………….
…………………………………..
விடியும் வேளை வரப் போகுது
தருமம் தீர்ப்பை தரப் போகுது
வாருங்கள் தோழர்களே….
கல்விக்கு சாலை உண்டு;
நூலுக்கு ஆலை உண்டு;
நாட்டுக்குத் தேவையெல்லாம்
நாம் தேடலாம்.
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
நியாயங்கள் சாவதில்லை… ” (- உழைக்கும் கரங்கள் – 1976)

– என்று தொண்டர்களை தேர்தலுக்கு உற்சாகப்படுத்தினார்.

————————-

” நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறனிருந்தால்
…………………………………….
……………………………………….
நீதியின் தீபங்கள் ஏந்திய கைகளின்
லட்சியப் பயணமிது – இதில்
சத்திய சோதனை எத்தனை வரினும்
தாங்கிடும் இதயமிது.
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய்
நாளெல்லாம் காக்கலாம் ” – ( மீனவநண்பன் -1977)

அதே படத்தில் ” பட்டத்து ராஜாவும் பட்டாளச் சிப்பாயும் ஒன்றான காலமிது…” எனத் தொடங்கும் பாடலில்:

” கோட்டைக் கட்டி கொண்டாட்டம் போட்ட
கூட்டங்கள் என்னானது – பல ஓட்டை வந்து
தண்ணீரில் மூழ்கும் ஓடங்கள் போலானது; – மாமா
உங்க முன்னேற்றமெங்கள் கண்ணீரில் தான் வந்தது – அட ராமா
உண்மை சொன்னாலே கோபம் என் மேலே ஏன் வந்தது?
ஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு இது தான் பாடமய்யா ”

– 1969ல் அண்ணா மறைந்ததும் கட்சியில் ஏற்பட்ட பலத்த போட்டிக்கிடையே மு.க., முதலமைச்சர் பதவிக்கு வந்ததற்கு எம்.ஜி.ஆரின் உதவி பெருமளவில் இருந்ததாக கருதப்பட்ட கருத்து இங்கு கோடிடப்படுவதாக அர்த்தம் கொள்ளலாம். (ஏற்றிய ஏணி = எம்.ஜி.ஆர். ? )
———————-

இத்தனை அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும், 1977ல் தனது 136வது படமான ‘ மதுரை
மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் நடித்து வந்தார் எம்ஜிஆர். அப்படத்தில்” தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை..” என்று பிரகடனப்படுத்தியபடி ஒரு பாடல்.
அதில்:

” ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
கோட்டையிலே நமது கொடி பறந்திடவேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்.
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
…………………………………………………………………
…………………………………………………………………..
வீரமுண்டு வெற்றி உண்டு ; விளையாடும் களமும் உண்டு
வா.. வா.. என் தோழா ! ”

– தலைவன் சொன்னதெல்லாம் வேத வாக்காக போற்றிக் கொண்டிருந்த அதிமுக கட்சி தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கு இது போதாதா ! இதை விட வேறென்ன அழைப்பு வேண்டியிருக்கப் போகிறது ?

************

1977 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, 200 இடங்களில் நின்று 130 தொகுதிகளில் வென்று தனி மெஜாரிட்டியுடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. திமுகவோ வெறும் 48 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 27 இடங்களுடனும், ஜனதா 10 இடங்களுடனும் திருப்திபட்டு கொள்ள வேண்டியதாயிற்று. அருப்புக்கோட்டைத் தொகுதியில் எம்ஜிஆர், சுமார் 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.

அரசியல் சட்டம் இடம் கொடுக்காது என்பதால், தனது கடைசிப் படமாக ‘மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தை முடித்து கொடுத்து விட்டு 30-6-1977 அன்று எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

உலக வரலாற்றிலேயே, ஒரு சாதாரண சினிமா நடிகர் சொந்தமாக அரசியல் கட்சி ஆரம்பித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்த முதலாமவர் என்ற சாதனையோடு கோட்டைக்குள் நுழைந்தார் எம்ஜிஆர்.

எந்த சினிமாவில் துக்கடா வேடத்திற்கு கூட வாய்ப்புக் கிடைக்காமல் ஸ்டுடியோ
வாசல்களில் தவம் கிடந்தாரோ, அதே சினிமாவை தனது சாதுர்யத்தால் தன்வசமாக்கி அதன் மூலமாக புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே புகுந்தார் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்.

ஆம். ஒரு நாடோடி, மன்னன் ஆனார் !

‘வேஷதாரி’ என்று மட்டம் தட்டியவர்களையும், ‘அரிதாரம் பூசிகிறவனெல்லாம் அரசாள முடியுமா’ என்று நக்கலாக கேட்டவர்களையும் ‘ கோட்டையிலே இனிமேல் கூத்தாட்டம் தான் நடக்கும்’ என்று கிண்டலடித்தவர்களையெல்லாம் வாயடைக்க செய்யும் விதத்தில் மக்கள் ஆதரவுடன் 1977ல் ஆரம்பித்து 87ல் மரணமடையும் வரை மொத்தம் 10 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 25 நாட்கள் தமிழகத்தின் முதலமைச்சராக முத்திரைப் பதித்தார்.

பாலிடிக்ஸில் பயாஸ்கோப்புக்கு தனிப் பெரும் அந்தஸ்தையும் மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்த மக்கள் திலகம் 24-12-1987ல் மண்ணுலகை விட்டு மறைந்தார், தமிழக அரசியலிலும், சினிமாவிலும் மட்டுமின்றி ஏழை எளிய மக்களின் மனதிலும் நிரந்திரமாகத் தங்கி விட்டு.

(வளரும்)

அடுத்து : பிள்ளையோ பிள்ளை


vee.raj@rediffmail.com

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 14 – சாகச ‘ வாலிபன் ‘ !

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்



டேக் 14

சாகச ‘ வாலிபன் ‘ !

எம்.ஜி.ஆர். திடீரென்று கணக்கு விவகாரத்தை கிளப்பியதும் அதைத் தொடர்ந்து திமுக உடைந்ததற்குமான பின்னணியில் அப்போது மத்தியில் ஆண்ட இந்திரா காங்கிரஸ் இருந்ததாக பேச்சு அடிபட்டது.

தன்னை விட செல்வாக்கு பெருகி வந்த எம்.ஜி.ஆரை இனியும் வளர விடக்கூடாதென மு.க. கங்கணம் கட்டிக் கொண்டு அதற்காக மகனை சினிமாவில் இறக்கியும், அமைச்சர் பதவியை தர மறுத்தும் எம்ஜிஆரின் கோபத்தை கிளறி விட்டிருந்தாராம். இந்த சமயத்தைப் பயன்படுத்தி, கட்சித் தலைமை மீது அதிருப்தி கொண்டிருந்த எம்.ஜி.ஆரை கொண்டு திமுகவை உடைத்து உச்சத்தில் இருந்த அதன் செல்வாக்கை மட்டுப்படுத்த அப்போதைய இ.காங். தலைமை திட்டம் போட்டிருந்ததாம். ‘ உலகம் சுற்றும் வாலிபன் ‘ படத் தயாரிப்புத் தொடர்பான அன்னியச் செலாவணி , வருமானவரி போன்ற அஸ்திரங்களைப் பிரயோகித்து எம்.ஜி.ஆரை இந்திரா தலைமையிலான மத்திய அரசு பணிய வைத்து காரியத்தை சாதித்துக் கொண்டதாக பேச்சு நிலவியது.

இதில் உண்மை எதுவோ, எப்படியோ ! மொத்தத்தில் கட்டுக்கோப்பாக இருந்த திமுக கலகலத்து போனதென்னவோ உண்மை.

***************

சரி. இனி சினிமாவுக்கு போவோம். 1972 ல் இருந்து எம்ஜிஆரின் அரசியல், சினிமா வாழ்க்கையில் புதிய கணக்கு துவங்கியது. ஏகப்பட்ட எதிர்ப்புகளை எதிர்நோக்கி பயணமானார். ஒருபுறம் சிவாஜி- கண்ணதாசன் கூட்டணியையும் மறுபுறம் அதை விட அதிக மடங்கு மு.க.முத்து என்ற முகமூடியில் கருணாநிதியையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏற்கனவே உத்திகளை வகுப்பதில் கெட்டிக்காரரான எம்ஜிஆர், தனது சாமர்த்தியம் முழுவதையும் பயன்படுத்தி களமிறங்கினார். வாலியை தவிர புலமைபித்தன், நா.காமராசன், முத்துலிங்கம் போன்ற புதிய இளம் கவிஞர்களையும் அறிமுகப்படுத்தி தனக்கு பயன்படுத்திக் கொண்டார்.

எம்.ஜி.ஆர் – முதலமைச்சர் மு.க., மோதல் பற்றியெறிந்துக் கொண்டிருந்த போது மிகுந்த பரபரப்புக்கிடையே 1973ல் தீபாவளியின் போது ரிலீஸானது உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தை வெளியிட விடாமல் தடுக்க ஆளும் கட்சி வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியது.

உ.சு.வா., மதுரையில் ரிலீஸானால் தான் சேலை கட்டிக் கொள்வதாக திமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் சவால் விட்டு கடைசியில் தோற்றுப் போனதும், படம் ரிலீஸ் அன்று தியேட்டரில் சேலையை ரசிகர்கள் தொங்கவிட்டு அவரை சீண்டியதெல்லாம் தனியான சுவாரஸ்ய விஷயங்கள்.

அதற்கிடையில் சென்னையில் போஸ்டர்களுக்கான வரியை திமுக வசமிருந்த மாநகராட்சி திடீரென உயர்த்தியது. கடும் மின்வெட்டு வேறு. எதற்குமே அசராமல், சென்னையில் 3 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தார் எம்.ஜி.ஆர். இங்கு படத்தின் முன்பதிவுக்கு சென்னை அண்ணாசாலையில் ரசிகர்கள் நின்ற கியூ வரிசை அதற்கு முன் எந்த ஒரு படத்துக்கும் காணாத சாதனையாகும்.

வெளியூர்களுக்கு செல்லும் பிலிம் சுருள்களை கைப்பற்றி கொளுத்த விஷமிகள் சதித்
திட்டம் தீட்டியிருப்பதாக தகவலறிந்தார் எம்ஜிஆர். எனவே பிலிம் சுருள்களை சில
பெட்டிகளிலும், செங்கற்களை சில பெட்டிகளிலும் வைத்து கார், வேன் என்று மாறி மாறி அனுப்பி ஜெயித்தார்.

இப்படி பல நெருக்கடிகளை தாண்டி 25 வாரங்களையும் கடந்து ஓடி சரித்திரம் படைத்தது உ.சு.வா. எம்ஜிஆருக்கு தீவிர ரசிகர்கள் ஏராளமாக இருந்த மலேஷியாவிலும் பல நாட்கள் ‘ஹவுஸ்·புல்’லாக ஓடி சாதனைப் படைத்தான் இந்த ‘ வாலிபன் ‘.

இத்தனைக்கும் இது அரசியல் நெடி இல்லாத படம் தான். ஆனால், திடீரென ஏற்பட்ட அரசியல் பரபரப்பு மாற்றத்தால் , அதிமுக நிறத்துடன் வெளியானது. 1957ல் நாடோடி மன்னனாக திமுக கொடியுடன் அறிமுகமான ‘ எம்ஜியார் பிக்ச்சர்ஸ் ‘, இந்த உ.சு.வாலிபனில் அதிமுக கொடியாக மாறியது. படத்திலும் உணர்ச்சி பொங்கும் டைட்டில் பாடலை கூடுதலாக சேர்த்தார் எம்.ஜி.ஆர். அது, சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் முழங்கிய,

” நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் “

எனத் தொடங்கும் பாடல்.

” நீதிக்கு இது ஒரு போராட்டம் – இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாதக் கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி;
அந்த இல்லாமை நீங்கி
இந்நாட்டில் மலரும் சமநீதி
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடுமெனும் கதை மாறும் “

——————–

அப்போதிருந்து தனது கட்சித் தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கு , பொதுமக்களுக்கு எம்ஜிஆர் சொல்லும் செய்திகள், அரசுக்கு எதிரான கணைகள் திரைப்படங்களில் பாடல்கள், வசனங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் 1973 மே மாதம் 20ம் தேதி திண்டுக்கல் பாராளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. கட்சித் தொடங்கி சுமார் ஆறே மாதங்களில் இந்த தேர்தலை முதன்முறையாக அதிமுக சந்தித்தது. மாயத்தேவர் என்பவரை எம்ஜிஆர்
நிறுத்தினார். சினிமாக் கூத்தாடியின் கட்சி, மலையாளி என்றெல்லாம் திமுக எதிர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆனால் எதுவுமே மக்களிடம் எடுபடவில்லை.

மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, மத்தியில் ஆட்சிப்பீடத்தில் இருந்த இ.காங்கிரஸ், மக்களின் மதிப்பு மரியாதைப் பெற்றிருந்த காமராஜ் தலைமையிலான சிண்டிகேட் ( ஸ்தாபன காங்கிரஸ் ) என எல்லாவற்றையும் மண்ணை கவ்வ வைத்து திண்டுக்கல் இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.

எம்ஜிஆர், தமிழக அரசியலில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருவதை அடையாளம் காட்டியது இந்த திண்டுக்கல் தேர்தல். ‘சினிமா மேக்கப் தலைவன்’, ‘அரசியல் விதூஷகன்’ என்றெல்லாம் தன்னை இளக்காரம் பேசிய அரசியல் எதிரிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தார் எம்ஜிஆர்.

பின்னர் 1974 பிப்ரவரியில் கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக உறுதி செய்தது.

கட்சிக்கு கிடைத்து வரும் வெற்றிகளின் சந்தோஷத்தை ரசிகர்கள், தொண்டர்களுடன் பகிந்துக் கொள்ளவும் சினிமா ஊடகத்தை பயன்படுத்தினார் எம்ஜிஆர். 1974 ஜூலையில் வெளியான ‘ நேற்று இன்று நாளை’ படத்தில் ” தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…” எனத் தொடங்கும் பாடலில் அதிமுக கொடி சகிதம் ‘ மாயாத்தேவர் வெற்றி’ என்ற போஸ்டரை குளோசப்பில் காண்பித்து தனது தொண்டர்களை குஷிப்படுத்தினார். கருணாநிதி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சிக்கும் பாடல் அது.
” நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை- இது
அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை. (தம்பி..)
………………………………………………
……………………………………………..
மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார். (தம்பி..)
ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே – தாங்கள்
வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகரசமையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் – தாங்கள்
வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார். (தம்பி..)
ஏய்ப்பவர்க்கே காலமென்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே;
ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதலுண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தலுண்டு..”

– என்று எச்சரிக்கை விடுத்தவர், அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்ச வேண்டாமென கட்சியினரை ஊக்குவிக்கும் வகையில் அதே பாடலில் சொல்வார்:
” ஒரு சம்பவம் என்பது நேற்று
அதை சரித்திரம் என்பது இன்று
அது சாதனையாவது நாளை
வரும் சோதனை தான் இடைவேளை ”

————————

” ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே
சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே – இந்த
காட்டுக்குள்ளே உள்ள மிருகமெல்லாம்
அதை காட்டிலும் எத்தனையே தேவலே.
………………………………………..
……………………………………………
பாவம் ஓரிடம்; பழிகள் ஓரிடம்
பல பேர் வாழ்க்கையில் நடக்கும்
உண்மை என்பது ஊமையாகவே
கொஞ்ச காலம் தான் இருக்கும்
……………………………
……………………………
யாருக்கும் தீர்ப்பொன்று கிடைக்கும்
தர்மத்தின் கண்ணை அது திறக்கும். ” ( இதயவீணை – 1972)

—————————

ஆந்திரா பாணியில் வேட்டி தார்பாச்சிகட்டு. பார்டரில் கறுப்பு, வெள்ளை, சிவப்பென அதிமுக கலர். இந்த கெட்டப்பில் எம்ஜிஆர் வந்த படம் உரிமைக்குரல் (1974). இதில் ஒரு பாடல். மென்மையாக தனது மாஜி நண்பருடன் (மு.க., தான்) பேசுவதாகவே அர்த்தம் தொனிக்கும். ” ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும் … ” என்று ஆரம்பிக்கும் பாடலைக் கேட்டால் உடனே ‘என்னடா இது புது கதையா இருக்கே’ என்று குழப்பும். ஆனால் அடுத்தடுத்த வரிகளில் விஷயம் புலப்படும்:

” நல்ல மனிதனுக்கும் நன்றி மறந்தவருக்கும் – முன்பு
உறவிருந்தால் பின்பு பிரிவு வரும்.
……………………………………………….
………………………………………………..
அண்ணன் போற்றும் தம்பி என்று நீயே போற்றலாம்.
………………………………………….
…………………………………………..
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேளை என்னை சேரலாம்
கண்ணை மறைக்கின்ற காலம் வரும்போது
தருமம் வெளியேறலாம்
தருமம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்.
நல்லவன் லட்சியம்; வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அது தான் சத்தியம் ”

————————–

” உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்
…………………………………………..
…………………………………………..
சிரிக்க சிரிக்க வந்து நடிக்கும் கலையில் – ஒரு
சிந்தனை வளர்கிறது. – அதில் குறுக்கு வழியில்
பிழைப்பு நடத்துவோர் நிம்மதி கெடுகிறது
………………………………………………
……………………………………………..
சிலர் ஆடிடும் ஆட்டம் முடிவதற்கே – நான்
ஆடியும் பாடியும் நடிப்பது.
என் ஆசையும் தேவையும் நல்லவரெல்லாம்
நலமாய் வாழ்ந்திட நினைப்பது.
எண்ணியது விரைவினில் நிறைவேறும்
இங்கு சிலர் கேள்விக்கு பதில் கூறும்
………………………………………
………………………………………
நெருப்பை மடியில் கட்டி உறங்க நினைத்து
செல்லும் நெஞ்சமும் இருக்கிறது;
பெரும் கனத்தை மடியில் வைத்து
பயத்தை மனதில் வைத்து கால்களும் நடக்கிறது.
மருந்தை நினைத்துக் கொண்டு – விஷத்தை
அருந்தி விட்டு வாழ்ந்திட நினைக்கிறது ”

– (சிரித்து வாழ வேண்டும் – 1974) .
இதே படத்தில் வில்லனிடம் கிளைமாக்ஸில் எம்ஜிஆர் பேசும் டயலாக்:

” அநீதி ஆட்சி நடத்தினால், உதவிக்கு ஆயிரம் பேர் இருந்தாலும் கடைசியில் தனிமையில் தான் தவிக்க வேண்டியிருக்கும்”

—————————–

” கொள்ளையிட்டவன் நீ தான்..
…………………………………………..
…………………………………………
ஊழல் மன்னனை சட்டமென்றும்
விட்டு வைப்பதுமில்லை
உண்மை என்பது இங்கே;
ஊழல் என்பது அங்கே.
குற்றவாளியே இன்று நாட்டிலே
சட்டம் செய்திடும்போது
சட்டமென்பது குற்றவாளியை
கண்டு கொள்வது ஏது ?
நாளை யாவும் மாறும்
எந்நாளிலும் – எங்கள்
மன்னவன் கொள்கை அல்லவோ வாழும் ” (நினைத்ததை முடிப்பவன் -1975).

இதே படத்தில் அடுத்த ‘அட்டாக்’:

” கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
………………………………………….
…………………………………………..
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
கண் முன்னே தோன்றுவது சாத்தியமே
காத்திருந்து கள்வருக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்குத் தெரியாத சத்தியமே.
போடும் பொய் திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்.
……………………………………………….
…………………………………………………
பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை
உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை
பொன் பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நானறிவேன்; என் உறவை நான் மறவேன்
எதுவான போதிலும் ஆகட்டுமே.
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் “

– இப்பாடலைக் கூர்ந்து கவனித்தால் தாக்குதல் மட்டுமன்றி கட்சிக்காரர்களுக்கு அவர் சொல்ல விரும்பும் ஏதோ ஒரு செய்தியும் பொதிந்திருப்பது புரியும்.

———————————–

பிரபலமான இந்திப் படமான ‘யாதோங்கிபாரத்’ படத்தை ரீமேக் செய்து தனது கட்சித் தொண்டர்களுக்கு ‘டானிக்’ தரும் டைட்டிலாக ‘ நாளை நமதே’ (1975) என வைத்தார்.
இப்படத்தில் கிளைமாக்ஸில் உயிருக்கு பயந்தோடும் வில்லனை பார்த்து கதாநாயகன் (எம்ஜிஆர்) விடும் டயலாக்:

” ஓடு..ஓடு…யாரும் எதுவும் செய்ய முடியாதுனு இறுமாந்திருந்தியே. இப்போ ஆட்டம் கண்டு போய் பயந்து ஓடுறே. கூட இருந்தவன் கேள்வி கேட்டான் என்பதற்காக அவனை ஒழித்துக் கட்டவும் துணிஞ்சே. இப்போ மக்களே உன்னிடம் கேள்வி கேட்க துணிஞ்சிட்டாங்க. உன்னால் பாதிக்கப்பட்டவங்களெல்லாம் ஒன்னு சேர்ந்து எழுப்புற குரல் தான் நாளை நமதே. உன்னை ஆளை கொல்றதில்லை என்னோட லட்சியம். நீதி விசாரணைக்கு முன் உன்னை நிறுத்தி நீ செஞ்ச தவறுகளுக்கெல்லாம் தக்க தண்டனை வாங்கி தரணுமென்பது தான் “.

அதே படத்தில் தொண்டர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஒரு பாடல்:

” அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
நாளை நமதே – இந்த நாளும் நமதே;
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே – இந்த நாளும்
தாய் வழி வந்த தங்கங்களெல்லாம்
ஓர் வழி நின்று நேர்வழி சென்றால்
நாளை நமதே.
காலங்களென்னும் சோலைகள் மலர்ந்து
காய் கனியாக நமக்கென வளர்ந்து
……………………………………….
………………………………………….
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது “

—————————–

– பிஸியான சினிமா நடிகர்- எம்.எல்.ஏ., – அசுர வேகத்தில் வளர்ந்துக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என மூன்று நிலைகளையும் தனது சாமர்த்தியத்தால் திறம்பட கையாண்டு வந்தார். அரசியல் சதுரங்கத்தில் நகர்த்த வேண்டிய காய்களை
நகர்த்திக் கொண்டே அதே சூட்சமத்தை தனது ஆணிவேரான சினிமாவிலும் கவனத்துடன் செலுத்தி வந்தார் எம்ஜிஆர்.

(வளரும்)

அடுத்து: கோட்டையை பிடித்தது ‘ கோடம்பாக்கம் ‘!


vee.raj@rediffmail.com

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 13

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்



டேக் 13

கணக்கால் பிணக்கு !

1971. மீண்டும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை சந்திக்க தமிழகம் தயாரானது. தங்களின் ஐந்தாண்டு கால ஆட்சி மீதான மக்களின் ‘ரியாக்ஷனை’ எதிர்பார்த்து திமுகவும் – ‘ சிண்டிகேட் & இண்டிகேட் ‘ என்று இரண்டாக உடைந்த நிலையில் காங்கிரசும் தேர்தலுக்கு ஆயத்தமாயின.

அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி தலைமையிலான ‘ இண்டிகேட் ‘ என்றும் இந்திரா காங்கிரஸ் எனவும் அழைக்கப்பட்ட காங்கிரஸ் அணி , திமுகவுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துக் கொண்டது. ஆனாலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் ‘இண்டிகேட்’ போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவளித்தது. எதிர்புறம், காமராஜ் தலைமையிலான ‘சிண்டிகேட்’ காங்கிரஸ் ( இது ‘பழைய காங்கிரஸ்’ எனவும் ‘ஸ்தாபன காங்கிரஸ்’ என்றும் அழைக்கப்பட்டது) திமுகவை எதிர்த்து நின்றது.

தேர்தலையொட்டி, தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் சூடுபிடிக்கத் தொடங்கியது. சினிமாவில் இரு துருவங்களாக இருந்து வந்த எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் அரசியல் களத்திலும் மல்லுக்கு நின்றனர்.

திமுகவுக்காக எம்.ஜி.ஆரும், ‘ சிண்டிகேட்’ டுக்காக சிவாஜியும் பிரச்சாரம் செய்தனர். இருதரப்பு ரசிகர்களும் அரசியல்ரீதியாகவும் மோதிக் கொண்டனர்.

கடைசியில் தேர்தல் முடிவு , கருணாநிதி தலைமையிலான திமுகவின் செல்வாக்கை வெளிச்சமிட்டு காண்பித்தது. காமராஜர் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசுக்கு அதிர்ச்சித் தோல்வியை தந்து, 184 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. 1971 மார்ச் 15ம் தேதி கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்றார். பரங்கிமலைத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார் எம்ஜிஆர் .

அரசியல் அரங்கில் மு.க.,வின் செல்வாக்கு வளர்ந்திருந்தது போல் எம்.ஜி.ஆரின் செல்வாக்கும், எவரும் எட்டிப் பிடிக்க முடியாதபடிக்கு சினிமாவிலும் அதைச் சார்ந்து திமுக கட்சியிலும் வளர்ந்து வந்தது.

இதன் பலன்..?

வெற்றிகரமான எந்த இயக்கத்துக்கும் நேரும் கதி தான்!

திமுகவில் இரட்டைத் தளபதிகளாக கைகோர்த்திருந்த மு.க.வுக்கும் எம்.ஜி.ஆருக்கும் மத்தியில் ஈகோ தலையை நுழைத்தது. அவர்களின் கால் நூற்றாண்டு கால நெருங்கிய நட்புக்கு இடையே புகைச்சல் கசிய ஆரம்பித்தது இக்காலகட்டத்தில் தான்.

நடிக்கும் ஆர்வமும் பாடும் திறனும் கொண்டிருந்த தனது மூத்த மகன் மு.க.முத்துவை 1971ல் திடீரென சினிமாவில் இறக்கினார் கருணாநிதி. இது எம்.ஜி.ஆரின் செல்வாக்கை மட்டம் தட்ட கருணாநிதி போடும் திட்டமென ஆரம்பத்திலேயே அர்த்தம் கொள்ளப்பட்டது. ஆனாலும் இப்படத்தின் துவக்க விழாவில் எம்ஜிஆர் கலந்துக் கொண்டு முத்துவை வாழ்த்தினார்.

அதேபோல், வெளிநாடுகளுக்குச் சென்று மிகுந்தப் பொருட்செலவில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற படத்தை சொந்தமாக தயாரிக்க திட்டமிட்டிருந்த எம்.ஜி.ஆர்., அது தொடர்பாக வெளிநாடு சென்ற போது , விமான நிலையம் வரை சென்று வாய் நிறைய வாழ்த்திப் பேசி வழியனுப்பி வைத்தார் கருணாநிதி.

1972ல் ‘ரிக்ஷாகாரன்’ படத்துக்காக அகில இந்திய சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது எம்ஜிஆருக்கு கிடைத்தபோது அருமை உடன்பிறப்பான எம்ஜிஆர், இந்த பெருமைக்கு முற்றிலும் தகுதியானவர் என்றும், சிறுகுழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது இதயத்திலும் நிறைந்திருக்கும் உருவம், எம்ஜிஆரின் உருவம் எனவும் வஞ்சனையின்றி புகழ்ந்துத் தள்ளியிருந்தார் கலைஞர்.

இப்படியாக, ஆரம்பத்தில் புகைச்சல் வெளிப்பார்வைக்கு தெரியாதபடிக்கு இருவருமே சாமர்த்தியமாக நடந்துக் கொண்டாலும், 1972ம் ஆண்டில் ஒரு கட்டத்தில் பூனை வெளியே வந்து விட்டது.

அக்டோபர் மாதம் திருக்கழுகுன்றத்தில் பொதுக் கூட்டமொன்றில் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆர், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ‘ கட்சித் தலைமை உட்பட திமுக கட்சி பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் எல்லோரும் தங்களின் சொத்துக் கணக்கைப் பொதுமக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் பகிரங்கமாகக் காண்பித்து தங்களின் தூய்மையை நிரூபிக்க வேண்டும்.’ என்று குறிப்பிட்டு கட்சிக்குள் குண்டை தூக்கிப் போட்டார். பின்னர் அதைத் தொடர்ந்து சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்தப் பொதுக் கூட்டத்திலும் அதையே வலியுறுத்தினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனே கூடி காரசாரமாக விவாதித்தனர். கட்சிக்குள் பேச வேண்டியதை எப்படி பொது மேடையில் பேசலாமென கொந்தளித்தனர். இறுதியில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார்.

அப்போது ‘ இதயவீணை ‘ படப்பிடிப்பிற்காக வெளி மாநிலத்தில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரோ அதிர்ச்சி அடைந்ததாகவே காண்பித்துக் கொள்ளவில்லையாம்.

உடனே அப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘ காஷ்மீர் பியூட்டி·புல் காஷ்மீர் ‘ என்ற பாடலில் ஓரிரு வரிகளை மாற்றிப் போடச் சொன்னாராம். அந்த வரிகள்:

” எல்லோர்க்கும் வழிகாட்ட நானிருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன் ”

– செய்வதறியாது திகைத்து நிற்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு தனது அடுத்த ‘மூவ்’ எது என்பதை அவர் தெரிவிக்கும் அறிவிப்பே இது.

17-10-1072 அன்று, தனது தனிப்பட்ட செல்வாக்கையும், ‘விசிலடிச்சாஞ் குஞ்சுகள்’ என்று கேலி பேசப்பட்ட தனது லட்சக்கணக்கான ரசிகர்களையும் அபிமானிகளையும் நம்பி புதிய அரசியல் கட்சியை துணிச்சலுடன் ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர். அது தான்: ‘ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ‘ .

இதனால், திராவிட இயக்கமானது திமுக மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து 3வது பிளவை சந்தித்தது.

( தி.க.விலிருந்து பிரிந்து முதல் பிளவை ஏற்படுத்தியவர் தமிழை தாய்மொழியாக கொண்டவர் (சி.என்அண்ணாதுரை); அடுத்த பிளவு கன்னடத்தைத் தாய்மொழியாக் கொண்டவரின் (ஈ.வி.கே.சம்பத்) கைங்கரியம். மூன்றாமவரோ (எம்.ஜி.ராமச்சந்திரன்) மலையாளி. பிற்காலத்தில் 4வது பிளவாக 1990களில் திமுகவில் இருந்து பிரிந்து ‘ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ கண்டவருக்கோ (வைகோ) தாய்மொழி தெலுங்கு. சபாஷ்..! திராவிட இயக்கம், பெயருக்கு ஏற்றமாதிரி தானிருக்கிறது !! )

*********

1972 ம் ஆண்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழ் டாக்கியில், திராவிட இயக்கப் பிரச்சாரத்தின் திசையும் மாற தொடங்கியது. திராவிட இயக்கத்தார் பொது எதிரியை விட்டு விட்டு அவர்களுக்குள்ளேயே மோதிக் கொள்ளலாயினர். அந்த உரசலிலோ வேகமும் உக்கிரமும் அதிகமாகவே இருந்தது.

(வளரும்)

அடுத்து: சாகச ‘வாலிபன்’ !
————————————————————-
vee.raj@rediffmail.com
————————–

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 12

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்



டேக் 12

” சூரியன் உதிச்சதுங்க…”

1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.

வெகுஜனங்களின் உயிர்நாடிப் பிரச்னையாக அப்போது நிலவிய அரிசி பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வை திமுக கிளறி விட்டது. ‘ஒருரூபாய்க்கு மூன்று படியரிசி’ என்று அண்ணா வாக்குறுதி வேறு அள்ளி வீசினார். மேலும், உணர்வுப் பிரச்னையாக 1965ல் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் பலபேர் பலியான விவகாரத்தையும் திமுக கையில் எடுத்துக் கொண்டது.

‘ காமராஜர் அண்ணாச்சி; கடலைப் பருப்பு விலை என்னாச்சி ‘ – ‘ பக்தவச்சலம் அண்ணாச்சி ; அரிசி விலை என்னாச்சி ?’ – ‘ கூலி உயர்வு கேட்டான் அத்தான் ; குண்டடிப்பட்டு செத்தான் ‘ என்றெல்லாம் ஜனரஞ்சகமாக கோஷங்கள் வேறு.

காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.

முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
(எம்.ஜி.ஆரை சுட்டதாக நடிகர் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்த சம்பவத்துக்கு சினிமாத் தொழில் தகராறு என்று ஒரு பக்கமும்; இல்லையில்லை உண்மையில் அரசியல் பின்னணி இதில் மறைந்திருக்கிறதென்று இன்னொரு பக்கமும் காரசார வதந்திகள், ஊகங்கள் கிளம்பி ஒரு கட்டத்தில் அடங்கியது என்பது வேறு விஷயம்)

ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றி
விட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, ‘மக்கள் திலகமாக’ அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும்
·போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக. (இத் தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்).

அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார்
25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.

இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். ‘படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயே
தோற்று போகுமளவுக்கு திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.

சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்தது.

************

தேர்தல் சமயத்தில், எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் முடங்கி இருக்க வேண்டியிருந்தாலும் அதற்கு முன்பே அவர் திரையில் செய்த பிரச்சாரங்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க தவறவில்லை.

முன்னதாக, 67 தேர்தலை மனதில் கொண்டு எம்.ஜி.ஆர் ‘ அரசகட்டளை ‘ என்ற படத்தை உருவாக்கியிருந்தார். 1966 துவக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட இப்படம், ராஜா ராணி – புரட்சிக்காரன் கதை தான். இப்படத்தின் நோக்கமே மறைமுகமாக ஆட்சியாளர்களை (காங்கிரஸ் அரசை) கடுமையாக விமர்சிப்பதும் தாங்கள் (திமுக) ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ‘ தேனும் பாலும் ஓடும் ‘ என்று மக்களுக்கு சொல்வது தான். வசனங்களும்
பாடல்களுமாக படம் முழுக்க அரசியல் பிரச்சார நெடி.

குறிப்பாக, அனல் பறக்க ” ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஆடிவா..” என ஆரம்பிக்கும் பாடலை சொல்லலாம். இப்பாடலை வழக்கமான கவிஞர் வாலிக்குக் கொடுக்காமல் திராவிட இயக்க அபிமான கவிஞர் முத்துக்கூத்தன் என்பவரைக் கொண்டு எழுதி வாங்கினார் எம்.ஜி.ஆர்.

” தடை மீறி போராட சதிராடி வா
செந்தமிழே – நீ பகை வென்று
முடிசூட வா.
……………………………….
…………………………………
மயிலாட வான்கோழி தடை செய்வதோ- மாங்
குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ;
முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ- அதன்
முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ. (ஆடி வா..)
உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ – அதன்
உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ.
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாள்வதோ (ஆடி வா..) ”

– என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் ஆட்சியை கடுமையாக எதிர்த்தும், திமுக
தொண்டர்களின் கட்சி உணர்வை தட்டியெழுப்புவதுமாக இப்பாடல் வரிகள் அமைந்தன. (ஆனால், இப்படம், தாமதமாக முடிந்து ரிலீஸ் ஆவதற்குள் தேர்தல் முடிந்து திமுக ஆட்சி பொறுப்பையே ஏற்றுக் கொண்டு விட்டிருந்தது. ஆட்சி மாற்றத்தால் படத்தில் முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுதப்பட்டிருந்த வசனங்கள் திரையில் ஒலித்து
கழகக் கண்மணிகளுக்கும் ரசிகப் பெருமக்களுக்கும் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தியதாம்.).

*************

திமுக ஆட்சி அமைந்ததும் எம்.ஜி.ஆரை, அமைச்சர் அந்தஸ்துக்குச் சமமான
சிறுசேமிப்புத் துறை தலைவர் ஆக்கினார் முதலமைச்சர் அண்ணா. எம்.ஜி.ஆரின் பிரச்சார தொனியும் திமுக அரசு அமைந்ததும் மாறியது. தாக்குதல் பாணி போய், திமுக அரசின், முதலமைச்சர் அண்ணாவின் சாதனைகளை அருமைப் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் (பிரச்சாரத்தில்) ஈடுபட்டார்.

கணவன் என்ற படத்தில் (1968) ஒரு பாடல். “அடியாத்தி. யாருக்கு நீ பேத்தி…” என்று தொடங்கும். அதில்:
” அதிகாரம் செய்தவனோ ஆட்டத்தை முடித்தான்.
அன்பு வழி சென்றவனோ கோட்டையைப் பிடித்தான்.
இது உழைப்பவரின் பொற்காலம், உலக ஏட்டிலே
இதை உணராத பேர்களெல்லாம் குப்பை மேட்டிலே…”

————-

” நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை ”
……………………..
…………………………….
இளையோர் கூட்டம் தலைமைத் தாங்கும்
பூமியே புதிய பூமி ” (புதியபூமி- 1968)

இந்த புதியபூமி படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர் பெயர் கதிரவன். (உதயசூரியனை நினைவுக்கு கொண்டு வாருங்கள்). வில்லன் நம்பியாரின் பெயர் காங்கேயன்.(காங்கேயம் என்பது காளைமாடுகளுக்கு பெயர் பெற்ற ஊர். காளைமாடு சின்னம் அப்போது காங்கிரஸ்
கட்சியின் தேர்தல் சின்னம்). ஆக கிளைமாக்ஸில் நாயகனிடம் வில்லன் தோற்கும்போது உதயசூரியனிடம் காளைமாடு தோற்பதாக அர்த்தமாகிறது. கூடவே இந்த டயலாக்குகள் :

” கதிரவனுக்கு தான் இப்போதும் எப்போதுமே வெற்றி.”

” கதிரவன் போன்றோரால் தான் நாடே புதியபூமியாகும்”

—————

” நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க
…………………..
…………………….
படியரிசி கிடைக்கிற காலத்திலே – நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே – நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே – நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே..”

– ‘ ஒளிவிளக்கு ‘ (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும்
திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.

—————-

” வாங்கைய்யா வாத்தியாரய்யா
………………………………….
………………………………..
அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா
சமயம் வந்தது; தருமம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததையா!
………………………………………
……………………………………….
பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைச்சவரெல்லாம் போனாங்க.
மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்
தலை குனிவாக ஆனாங்க.
………………………………..
………………………………….
கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினாலே அழியாது.
சூரியன் உதிச்சதுங்க – இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே
சரியாப் போகுமுங்க…” ( நம்நாடு – 1969)

இந்த ‘நம்நாடு’ படம் மாமூல் எம்.ஜி.ஆர். ·பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். = சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரை. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் ‘துரை’ என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் சில சுருக் வசனங்கள்:
” பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க.”

” யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. ”

” குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு ‘ஆகட்டும் பார்க்கலாம்’னு சொல்லிட்டு
போயிடறாரு ” (‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜர் அடிக்கடி சொல்வாராம்)

**************
முதலமைச்சராக இருந்த அண்ணா, நோய்வாய்பட்டு 1969 பிப்ரவரி 3ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ‘ பதவி நாற்காலிக்காக திமுகவில் அடிபிடி நடக்கும். குழப்பம் வரும். தலைவனை பறிகொடுத்தக் கட்சி காணாமல் போய் விடும் ‘ என்றெல்லாம்
எதிர் முகாம்களில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமூகமாக கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக 10-2-1969ல் பதவியேற்றார்.

இந்த விஷயத்தில் எதிரிகளுக்கு மூக்குடைப்பு ஏற்பட்டு தனது ஆருயிர் நண்பர் மு.க. முதலமைச்சரான மகிழ்ச்சியை எம்.ஜி.ஆர். 1970ல் வெளியான ‘எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்.

எம்.ஜி.ஆர். 1967ல், தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் பிழைத்ததை சுட்டிக் காட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்தியபடி தொடங்கும் ” நான் செத்து பொழச்சவன்டா. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா…” என்ற பாடல் தான் அது.

” வாழை போல வெட்ட வெட்ட முளைச்சி
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா;
வந்தால் தெரியும் சேதியடா
………………………….
…………………………
சந்தனப் பெட்டியில் உறங்கிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளங்கிறார்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டு – அண்ணன்
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு.
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்தை
அழகுத் தமிழில் சொல்லிச் சொல்லிக் கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா; அதனால் தோல்வியில்லையடா”
ஓடும் ரயிலை வழிமறிச்சு
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது ”

( 1953ல் டால்மியாபுரத்தை கல்லக்குடி என்று பெயர் மாற்ற வலியுறுத்தி கலைஞர் கருணாநிதி நடத்திய ரயில் மறியல் போராட்டத்தின் போது அவர் தண்டவாளத்தில் ரயில் முன் படுத்த சம்பவமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது )

*********

அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி முதலமைச்சரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆருக்கு முக்கிய பங்கிருந்ததாம். முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோரை ஓரம்கட்டி மு.கருணாநிதி ஜெயிக்க எம்.ஜி.ஆர். பெரிதும் உதவி செய்தாரென கேள்விப்பட்டதுண்டு. 1970ல் எம்.ஜி.ஆரை கட்சியின் பொருளாளராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.

இவ்வாறு எம்.ஜி.ஆருக்கும் மு.கவுக்கும் இடையே தொடர்ந்து வந்த தேனிலவு, இதற்குப் பிறகு சலசலக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் பகிரங்கமாக வெடித்தது. திராவிட இயக்கத்தின் புதிய பரிமாணத்துக்கு வழி வகுத்தது.

(வளரும்)

அடுத்து: கணக்கால் பிணக்கு !


vee.raj@rediffmail.com

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 11

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்



டேக் 11

” நான் ஆணையிட்டால்…”

பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் எப்போதெப்போது குளோசப் வைப்பது; காட்சிப் பின்னணியில் என்னென்ன இருக்க வேண்டுமென்பது கூட அவர் தீர்மானித்து வைப்பாராம்.

தனது இலக்கு அதாவது Target Audience: கடுமையாக உழைத்து விட்டு ‘ போதும் போதாமலும்’ சம்பளம் வாங்கி லோல்படும் தொழிலாளர்களும், குமாஸ்தாக்களும்; விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கைவண்டி, ரிக்ஷா தொழிலாளர்களும் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மன ஏக்கங்களை, நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளை பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக திரையில் தோன்றினார். அவர்களின் ரசனை, விருப்பத்தன்மைக்கேற்ற கதை, காட்சியமைப்புகளையும், நடை உடை பாவனைகளையும் கொண்டே படங்களில் நடித்தார். கட்சி பிரச்சாரத்தையும் அதே பாணியில் மேற்கொண்டார்.

இதற்காக எழுந்த கிண்டல், கேலி விமர்சனங்களை அவர் உதாசீனம் செய்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தான் வகுத்து வைத்திருந்த உத்திகளின்படியே திமுகவின் உருவமாக, குரலாக திரையில் வலம் வந்தார்.

கறுப்பு சிவப்பு என இரு வர்ணம் கொண்ட பர்ஸை வைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே எடுத்துக் காண்பிப்பார். அதே போல் அதே இரு வர்ண பெல்ட். கறுப்பு பேன்ட், சிவப்பு சட்டை (இது இடம் மாறியும் வருவதுண்டு). காதலியுடன் டூயட் பாடும் காட்சிப் பின்னணியில் கூட ‘உதயசூரியன் ‘ சிம்பள். அவரை உதயசூரியனாக காதலியின் வர்ணிப்பு.
———-
‘ பரிசு ‘ (1963) படத்தில் படத்தில் ஒரு பாடல். ” கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு…” எனத் தொடங்கும். இது ‘அரிய’ கண்டுபிடிப்பு என அவருக்கு தெரியாமலிருக்குமா! கேலியை பற்றி கவலைப்படவில்லை. பாடலை முணுமுணுக்கும் பாமரன் மனதில் கட்சிக் கொடியின் இரு வர்ணத்தை ஆழமாக இறக்க வேண்டுமென்பதே புரட்சி நடிகரின் ஒரே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

கறுப்பு சிவப்புக்கு இன்னொரு உதாரணம் :
” கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் ;
கருதாமல் எல்லாலோரும் ஒற்றுமையாய்… ” (படம் : விவசாயி)

————

1961ல் தான் கதாநாயகனாக நடித்து அண்ணா கதை வசனத்தில் உருவான ‘ நல்லவன் வாழ்வான் ‘ படத்தில் வரும் “சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்..” என்ற காதல் பாடலிலேயே,
” உதயசூரியன் உதிக்கும் போது
உள்ளத் தாமரை மலராதோ;
எதையும் தாங்கும் இதயமிருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ ”
– என்று கட்சி சின்னமான உதயசூரியனையும் , கட்சித் தலைவர் அண்ணாவின் பிரபலமான ‘ எதையும் தாங்கும் இதயம் ‘ வாசகத்தையும் குறிப்பிட வைத்தார்
—————-

” அதிசயம் இவனது அறிவுமயம்
………………………………
ஆட்சியிலோ பெரும் புரட்சி படைத்தான்;
…………………………. – தொழும்
பகலவனை சின்னமாக கொண்டவனாம் ”
– இது விக்ரமாதித்தன் (1962) படத்தில் வரும் பாட்டு. (பகலவன் = உதயசூரியன்)

*******
இதற்கிடையில், மக்கள் மத்தியில் அதுவும் தனது இலக்கான வர்க்கத்தினர் மத்தியில் கடவுள் நம்பிக்கை அசைக்க முடியாதபடிக்கு இருப்பதை எம்.ஜி.ஆர். நன்குப் புரிந்தே வைத்திருந்தார். மற்ற தி.இ. நடிகர்கள் போல் உணர்வுப்பூர்வமான அந்த விஷயத்தில் கட்சிக்காக ‘ கை வைத்து ‘ மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ள எம்.ஜி.ஆர். தயாராக இல்லை.

” ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்”
– என பளிச்சென போட்டுடைத்தார்.

———-
” இறைவன் இருக்கின்றான்
கண்ணுக்கு தெரிகின்றதா
காற்றில் தவழுகிறான் -அதுவும்
கண்ணுக்கு தெரிகின்றதா ? ” (ஆனந்தஜோதி- 1963),
———–
” உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை ” (படகோட்டி – 1964)
———–

” ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி ” ( தொழிலாளி- 1964)

———–
” ஒருவருக்கென்றே உள்ளதையெல்லாம்
இறைவனும் தந்ததில்லை.
………………………………
……………………………
மனமென்னும் கோவில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே
தெய்வம் வந்து சேரும் ” (சந்திரோதயம்-1966)

———–
” கடவுளெனும் முதலாளி
கண்டெடுத்தத் தொழிலாளி
விவசாயி….” (விவசாயி – 1967)

———-
” இறைவன் ஒருவன் இருக்கின்றான் – இந்த
ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் ” (அடிமைப்பெண் – 1969)
———–
” நீதியும் நியாயமும் எங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் கடவுள் இருப்பார். முன்னெல்லாம் நீதியும் நேர்மையும் இருந்த ஜனங்க மனசிலே கடவுள் இருந்தார். இப்போ நீதியும் நியாயமும் இல்லாததால ஜனங்க, மனசிலே இருந்து கடவுளை வெளியே எடுத்து சிலையா வெச்சிட்டாங்க போல..”

-இது நம்நாடு படத்தில் எம்ஜிஆர் பேசும் வசனம். அதே படத்தில் அவர் தங்கியிருக்கும் குடிசையில் காந்தி, நேரு, அண்ணா படங்களுடன் முருக பெருமான் படமும் சுவாமி விவேகானந்தர் படமும் கூட தொங்கும்.
————-

– இவ்வாறு கடவுளின் இருப்பை தனது படங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எம்ஜிஆர் தெரியப்படுத்தியே வந்தார். அதற்கேற்ப, அவர் சார்ந்திருந்த திமுக கட்சியும் ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ எனவும் ‘ ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் ‘ என்றெல்லாம் கூறி தனது நாத்திகக் கொள்கையில் சமரசம் செய்துக் கொண்டிருந்ததும் எம்ஜிஆருக்கு சாதகமாக இருந்திருக்கலாம். ஆனால் உன்னிப்பாக பார்த்தால், இந்த விஷயத்திலும் அவர் தனது தனித்துவத்தை பதிவு செய்யவே முயற்சித்திருக்கிறார் என்றே தெரிகிறது.

உதாரணமாக, திராவிட இயக்கத்தார் கடுமையாக விமர்சனம் செய்து வந்த (இப்போதும் தொடர்கிறது) இந்து மதத்தின் நான்கு வேதங்களை (மறைகளை) ஒரு படத்தின் பாடலில் எம்.ஜி.ஆர். துணிந்து வெளிப்படையாகவே உயர்த்திக் காண்பித்திருந்தார். அது ‘ தர்மம் தலைகாக்கும் ‘ (1963) படத்தில் இடம் பெற்ற ” தர்மம் தலைகாக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும்” எனத் தொடங்கும் பாடல். அதில்,
” அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு – வாழ்வில்
நல்லவரென்றும் கெடுவதில்லை – இது
நான்கு மறைத் தீர்ப்பு ”

*******
எதிர்முகாமுக்குச் சென்றிருந்தாலும் கவியரசுக் கண்ணதாசனிடம் இருந்து தனக்குத் தோதான பாடல்களை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண்டு வந்தார். அதற்கு ஊடே, எம்ஜிஆர் கவியரசுக்குப் போட்டியாக அப்போது புதுக் கவிஞராக இருந்த வாலியை உருவாக்கவும் தவறவில்லை. (பின்னர் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர்- வாலி , சிவாஜிகணேசன் – கண்ணதாசன் என்று ஜோடி சேர்ந்தது வேறு விஷயம்).

1962 பொது தேர்தலில் கிடைத்த வெற்றி, அடுத்து 67 தேர்தலில் ஆட்சிக் கட்டிலை நோக்கி பயணிக்கும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் திமுகவுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். பிரச்சாரங்களிலேயே அது தொனித்தது.

‘ பணக்காரக் குடும்பம் ‘ படத்தில் ” ஒன்று எங்கள் ஜாதியே ; ஒன்று எங்கள் நீதியே…” என்று திமுகவின் சமூக நீதிக் கோட்பாடாக சொன்ன கையோடு,

” எங்களாட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
…………………………………
…………………………………
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே”

– என அச்சாரமாக 1964லிலேயே திமுகவுக்கு ஓட்டு சேகரித்தார் எம்.ஜி.ஆர்.
————

” மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்? ”

– இது 1963ல் வெளியான ‘ காஞ்சித் தலைவன் ‘ படத்தில் வரும் பாடல் வரிகள். அப்போதைய காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப மக்களை உசுப்பும் நுணுக்கம் இது . (படத்தின் தலைப்பை பாருங்கள். அறிஞர் அண்ணாவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் என்பதை நினைவில் கொள்க)
————-

‘ தெய்வத்தாய் ‘ (1964) படத்தில் ” மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…” என பாடி ‘தி.மு.க.’ வை பூடகமாக குறிப்பிட்டு கழக கண்மணிகளின் கைத்தட்டலை பெற்றார்.
” வாழைமலர் போல -பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்றுத் தோழா..!
நாளை உயிர் போகும் – இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்றுத் தோழா..! ”
– என தொண்டகளை தயார்படுத்தினார்.
————
திமுகவினர் கொண்டாடி வந்த பாரதிதாசனின் “சங்கே முழங்கு..” என்ற பாடலை கலங்கரை விளக்கத்தில் (1965) முழங்க வைத்தார். நான் ஆணையிட்டால் (1966)படத்தில் ” தாய் மேல் ஆணை; தமிழ் மேல் ஆணை…” செய்தார்.
” இருட்டினில் வாழும் இதயங்களே- கொஞ்சம்
வெளிச்சத்துக்கு வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படியிருக்கும்
என்பதைப் பாருங்கள் ”
– என அழைப்பும் விடுத்தார்.

அதே படத்தில்,
” உதயசூரியன் உன் வரவு –
உலகம் யாவையும் உன் உறவு.
………………………..
………………………..
ஆலமரம் போல நீ வாழ – அதில்
ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னை தாலாட்ட – அந்த
கருணையை நாங்கள் பாராட்ட.. ”
– என்று தன்னையும் முன்னிறுத்திக் கொண்டார்.
————–
அன்பேவா (1966) படத்தில் ” உதயசூரியனின் பார்வையிலே; உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே….” என்பார். ( ஆனால் சென்சார் காரணமாக அது ‘புதிய சூரியன்’ என்றே பாட்டு ரிக்கார்டில் வரும்) கூடவே, ” இவர் வரவேண்டும்; புகழ் பெற வேண்டும் என்று ஆசைத் துடிக்கிறது..” என்ற வரிகளும் – எம்.ஜி.ஆரின். குளோசப் ஷாட்டுடன் வரும்.

நம்நாடு படத்தில் குளோப்ஷாட்டில் ஒரு டயலாக்:
” எனது முதலே மக்களின் அன்பும், எனது நாணயமும் தான். அதுக்கு என்னைக்குமே மோசம் வராது. ”

———-

‘ திமுக என்கிற பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதன் மூலம் தான் முடிசூட்டிக் கொள்ளும் ரகசியத் திட்டம் வைத்திருக்கிறார்’ ; ‘ வெகுஜனங்களிடம் திமுகவுக்குள்ள செல்வாக்கை அட்டை போல் உறிஞ்சியெடுத்து அதில் தன்னை வளர்த்துக் கொள்ள பார்க்கிறார்’ என்றெல்லாம் எம்.ஜிஆருக்கு எதிராக திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு சாரார் மத்தியில் நீண்டகாலமாகவே விமர்சனம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் , அவர்களின் வாயில் கொஞ்சம் அவலை அள்ளி போடும் வகையில் வந்தான் ‘ எங்க வீட்டுப் பிள்ளை ‘ 1965ல்.

அப்படத்தில், ” கண்களும் காவடி சிந்தாகட்டும்..” எனத் தொடங்கும் பாடலில்,
” என்ன செய்வோமென்ற நிலை மாறட்டும்- உன்னாலே
மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்”
-என்ற வரிகள் வரும்போது எம்.ஜி.ஆர் ‘ டைட் குளோசப்’பில் தெரிவார். அதோடு நின்றதா! கூடவே ” நாடெல்லாம் உன்னைக் கண்டு புகழ் பாடட்டும்” என்ற வரிகள் வேறு.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், ” நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்..” என அவரே உரக்கச் சொல்வார். அவரே தொடர்வார்:
” ஒரு தவறு செய்தால் – அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.
…………………………………
………………………………
எதிர்காலம் வரும் ; என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
…………………………..
இங்கு ஊமைகள் ஏங்கவும் ; உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்….”

இதற்கு முன் எந்த ஒரு திராவிட இயக்க நடிகரும் நினைத்துக் கூடப் பார்க்காத துணிச்சலான பிரகடனம் இது.
————-
இவ்வாறான விமர்சனங்கள், திமுக – எம்.ஜி.ஆர்., இடையேயான பிடிமானத்தை எவ்வகையிலும் பாதித்திடவில்லை. வரலாற்றில் இடம் பெறப் போகும் முக்கியமான கட்டத்திற்குள் இருவருமே நுழைந்தனர்.

(வளரும்)

அடுத்து- ” சூரியன் உதிச்சதுங்க… ”

—————————————————————————————–

vee.raj@rediffmail.com
————————-

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்



டேக் 10

” வேட்டக்காரன் வருவான்… உஷார்” !

எம்.ஜி.ஆரோடு திமுக கட்சியும் திமுகவோடு எம்.ஜி.ஆரும் ஒருசேர படிப்படியாக வளர்ந்தனர். இந்த வளர்ச்சி 1960களில் உச்சாணிக்கு போனது.

1949ல் ஆரம்பிக்கப்பட்டு , 1957ல் முதன்முறையாக சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்து அதில் 15 இடங்களில் வென்ற திமுக, 1962 ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 50 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அதே போல் 1957ல் பாராளுமன்ற மக்களவையில் திமுகவுக்கு 2 உறுப்பினர்களாக இருந்தது , 1962ல் 7ஆக உயர்ந்தது.

பல ஆண்டுகளாக திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சு கொள்கையாக வர்ணிக்கப்பட்டு வந்த தனி திராவிட நாடு கோரிக்கையை , 1962ல் சீனப் படையெடுப்பு காரணமாக கைவிடுவதாக திடீரென அறிவித்து அகில இந்திய கவனத்தையும் ஈர்த்த அதே திமுக, 1965ல் பெரும் வாலிபர் பட்டாளத்தைக் கொண்டு மிகப் பெரியளவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி நாட்டையே அசர வைத்தது.

அதே போல், 1936ல் சினிமாவில் நுழைந்து திரையில் ஒரு ஓரமாக நின்று போகும் உதிரி வேடத்துக்கு கூட உத்தரவாதமின்றி அவதிப்பட்டு வந்த சாதாரணத் துணை நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், ‘ புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்’ ஆக ‘ மக்கள் திலகம் ‘ ஆக உயர நிமிர்ந்ததும் – ‘ எம்.ஜி.ஆரை போட்டு படமெடுத்தால் படம் எப்படி இருந்தாலும் முதலுக்கு மோசம் வராது. போட்ட பணம் நிச்சயம் வந்து விடும்’ என்ற நம்பிக்கை பெற்று சினிமா தயாரிப்பாளர்கள் அவரை மொய்த்ததும் ; MGR என்பதற்கு ‘Minimum Guarantee Ramachandran ‘ என்ற புது விளக்கமே தமிழ் சினிமா உலகில் உலாவியதும் இதே காலகட்டத்தில் தான்.

தனக்கு திமுக முக்கியம் என எம்.ஜி.ஆரும் ; தங்களுக்கு எம்.ஜி.ஆர். அவசியம் என்று திமுகவினரும் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு பரஸ்பரம் தங்களின் பங்களிப்பை பரிமாறிக் கொண்டனர்.

திமுகவில் எம்.ஜி.ஆருக்கு உரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அவர் மீது கட்சித் தலைவர் அறிஞர் அண்ணா தனி அபிமானம் காண்பித்தார். அரவணைத்து சென்றார். 1962ல் எம்.ஜி.ஆரை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி மகிழ்ந்தார்.

‘கட்சி நடத்தும் போராட்டங்களில் எம்.ஜி.ஆர். பங்கேற்காமல் படப்பிடிப்புக்கு போய் விடுகிறார் ‘ என்று அப்போதே கட்சியில் ஒருசாரார் ஆட்சேபம் தெரிவித்த
நிலையிலும், எம்.ஜி.ஆருக்கு சாதகமாகவே நின்றார் அண்ணா. நடுத்தர, ஏழை மக்கள் மத்தியில் சினிமாவிற்கிருக்கும் சக்தியையும் அதில் எம்.ஜி.ஆருக்கிருக்கும் வலுவான ஸ்தானத்தையும் நன்கு உணர்ந்திருந்த அண்ணா, எம்ஜிஆரை எந்நிலையிலும் விட்டுத் தர தயாராக இல்லை.

தனது ‘ மடியில் விழுந்த இதயக்கனி’ என்றும் ; ‘ முகத்தை காண்பித்தாலே போதும் கட்சிக்கு பல்லாயிரம் ஓட்டுகள் தானாக வந்து விழும் ‘ எனவும் அவர் எம்.ஜி.ஆரை பகிரங்கமாகவே புகழ்ந்தார். மேலும் கட்சியின் தளபதியாக தொண்டர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த கலைஞர் கருணாநிதியும் தனது தோழர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகவே இருந்தார்.

அதற்கு ஈடாக எம்.ஜி.ஆரும் தன் பங்கிற்கு திமுகவுக்காக கடுமையாக உழைத்தார். கட்சிக்காக நிதி அள்ளி வழங்கினார். சினிமாவில் மட்டுமின்றி தேர்தல் சமயங்களில் சினிமா படப்பிடிப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு இரவுப் பகல் பாராமல் ஊர் ஊராக கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டும் திமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார்.

கட்சியின் மற்ற தலைவர்கள் போல் அடுக்கு மொழிப் பேச்சுத்திறன் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சமும் இல்லையென்றாலும் அவரது கவர்ச்சியும் அவருக்கிருந்த ‘இமேஜ்’ம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது. அவரை நேரில் பார்க்கவும் பேச்சை கேட்கவும் ஆயிரக்கணக்கில் ஜனங்கள் பசி, தூக்கத்தையெல்லாம் மறந்து அங்குமிங்கும் நகராமல் மணிக்கணக்கில் பொறுமையாகக் காத்திருந்த அந்த அபிமானம், அன்றைக்கும் சரி.. இன்றைக்கும் சரி.. வேறு யாருக்குமே வாய்க்கவில்லை. (இப்போதைய 45+ வயசுக்காரர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்).

பொதுவாக சினிமாக்காரர்களையும் சினிமாவையும் லட்சியம் செய்யாதிருந்த
காங்கிரஸ் தலைவர் காமராஜரையே, சென்னையில் ஒரு தேர்தல் பிரச்சாரமொன்றில் ” ஓட்டு கேக்க வேட்டக்காரன் வருவான். உஷார். மயங்கிடாதீங்க” என்று சொல்லி ஓட்டு கேட்ட வைத்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. ( 1964ல் சாண்டோ சின்னப்பதேவர் தயாரிப்பில் எம்ஜிஆர்
நடிப்பில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட படம் ‘ வேட்டைக்காரன்’ )

**********

தமிழ் டாக்கியின் முகம் 1960களில் மாறியது. ராஜாராணி கதைகள் காலாவதியாகி சமூகப் படங்களுக்கும், மேலைநாட்டு ஜேம்ஸ்பாண்டு பாணி துப்பறியும் படங்களுக்கும் மவுசு ஏற்பட ஆரம்பித்தது.

இயல்பாகவே தனக்கு அமைந்த சுபாவத்தால் இந்த மாற்றத்தின் நாடித்துடிப்பை துல்லியமாக புரிந்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அதற்கேற்ற வியூகத்தை வகுத்துக் கொண்டார். மக்களின் இப்போதைய மனோநிலை என்ன ? அவர்களிடம் எளிதில் மாற்றி விட முடியாத நம்பிக்கைகள், அபிப்பிராயங்கள் என்னென்ன ? திமுகவின்
சித்தாந்தங்களில் எவை எவை மக்கள் மத்தியில் எடுபடும் ? எவையெல்லாம் தனது
சினிமா வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடும்? என்றெல்லாம் இக்காலகட்டத்தில் அவர் கணக்கிட்டு அதற்கேற்ப தனது சினிமா பிரச்சார உத்திகளை வடிவமைத்துக் கொண்டதாகவே தெரிகிறது.

திமுக கட்சி, அதன் தலைவர் அறிஞர் அண்ணா, கட்சிக் கொடி ‘கறுப்பு சிவப்பு’, கட்சிச் சின்னமான ‘ உதயசூரியன் ‘ , கட்சிப் பத்திரிக்கையான ‘முரசொலி’
( நண்பர் மு.க. நடத்தி வந்தது) ஆகியவற்றை மட்டுமே அவர் தனது படங்களில் முன்னிறுத்த அதிக ஆர்வம் காண்பித்தார்.

திராவிட இயக்க நடிகர் என்று அறியப்பட்டாலும் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை அவருக்கு திமுக தான் குறிப்பாக அண்ணா தான் பிரதானமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அறிஞர் அண்ணாவை எடுத்துக்காட்டியதை போல அவர் ஈ.வெ.ரா. பெரியாருக்கு செய்யவில்லை. அதாவது மற்ற திராவிட இயக்க நடிகர்கள் தங்களின் படங்களில் பெரியாருக்கு கொடுத்த அளவுக்கு முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆர். தரவில்லை எனலாம். (எம்.ஜி.ஆர். எந்த படத்தில் பெரியாரின் படத்தை காண்பித்து அவரை உயர்த்தி வசனம் பேசியிருக்கிறார் என்று ரொம்பவும் யோசித்து தான் பார்க்க வேண்டியிருக்கிறது).

அதே போல் வசனங்களின் மூலமாகவோ அல்லது காட்சிகள் வடிவிலோ கடவுள்களை மட்டம் தட்டி காட்சிகள் அமைத்ததில்லை எம்.ஜி.ஆர். மேலும், அவர் நாத்திகவாதத்தையும் மிகவும் நாசூக்காக பட்டும்படாமலும் தான் சினிமாவில் காண்பித்துக் கொள்வார். (சாம்பிள் உதாரணம்: ‘ ஒளிவிளக்கு ‘ படத்தில் செளகார் ஜானகிக்கு முருகன் சிலையை வாங்கி தரும் காட்சி).

இந்துசமய சடங்கு சம்பிரதாயங்களையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையும் கிண்டலடித்தும் இல்லை. ( 1970ல் வெளியான ‘எங்கள் தங்கம்’ படத்தில் வரும் கதாகாலட்சேபம் காட்சி மட்டும் விதிவிலக்கு. அப்படம் மு.க. குடும்பத்தை சேர்ந்தவர்கள் தயாரித்த படமென்பது குறிப்பிடத்தக்கது).

அதே போல், நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகங்கள் செய்த தலைவர்கள் மீதான பக்தியும் தேசப்பற்றும் வெகுஜனங்கள் மனதில் அழிக்க முடியாதக் கல்வெட்டாக பதிந்திருக்கும் நிதர்சனத்தைப் புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒருகட்டத்தில், மற்ற தி.இ. நடிகர்களிடமிருந்து வேறுபட்டு தேசிய முகத்தையும் சினிமாவில் காட்டத் துணிந்தார் எம்.ஜி.ஆர். தான் சார்ந்திருந்த இயக்கப் பிரச்சாரத்தின் ஊடே தேசிய உணர்வையும் கெட்டிக்காரத்தனமாக இழைத்து திரையில் ஓடவிட்டார்.

இதற்கு உதாரணமாக, நாடோடி (1966) படத்தில் இடம் பெறும்
” நாடு அதை நாடு – அதை நாடாவிட்டால் ஏது வீடு ?
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு.
…………………………………
……………………………….
பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறை மலைக் கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம் ”
-என்று தேசப் பற்றை ஊட்டி பாடிய இந்த பாடலில் ” வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம் ” என்ற வரி வரும் போது தனது முகத்தை ‘ டைட் குளோசப் ‘பில் காண்பிக்க வைத்து இந்த வரி தான் சார்ந்துள்ள திமுகவின் தொண்டர்களை உயர்த்துவதாக அர்த்தம் கொள்ள வைத்து குஷிப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.
———
இதே இணைப்பை ‘ இதயவீணை’ படத்தில் வரும் ‘காஷ்மீர் பியூட்டி·புல் காஷ்மீர்’ பாடலிலும் காண்பித்தார். அப்பாடலில்,
” என் தாய் திருநாட்டுக்கு வாசலிது
என்னாட்டவருக்கும் கலை கோவிலிது.
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமியிது ”
– என்றவர், இதே பாடலில்
” யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ ?
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ? ”
என்று காஷ்மீர் பிரச்னையையும் லேசாக தொட்டுப் போவார் எம்.ஜி.ஆர்.
———–
அடிப்படையில் மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர், தனது பக்தியை வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.

‘பணம் படைத்தவன்’ (1965) படத்தில் வரும் ” கண் போன போக்கிலே” பாடலில் ” மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ” என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்
எம்.ஜி.ஆர்.

இதே படத்தில் ” எனக்கொரு மகன் பிறப்பான்..” பாடலில்
” சாந்தி வழியென்று காந்தி வழிச் சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான் ”
– என்று ஆசைப்பட்டார்.
———–
‘ எங்க வீட்டுப் பிள்ளை’யில் (1965) ” நான் ஆணையிட்டால்…” பாடலில்,
” முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் – இந்த
மானிடர் திருந்திடப் பிறந்தார் – இவர்
திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.
அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ”
– என்று வருத்தப்பட்டார்.
———
” புத்தன் ஏசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா
ஏழை நமக்காக ”
– என்று ‘சந்திரோதயம்’ (1966) படத்தில் பாடலாக சொன்னார்.
———
நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்.ஜி.ஆர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:
” பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடியிலேயே போட்டுட்டு போயிட்டாங்க ”

அதே படத்தில் ” வாங்கையா வாத்தியாரய்யா…” பாடலில்,
” தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரமென்பதை அடைந்தோமே
ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
பலருக்கும் பயன் பெறச் செய்வோமே..”
– என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.
——
திமுகவினர் பாரதியை விட திராவிட இயக்கக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை உயர்த்திக் கொண்டாடி வந்த நிலையில், எம்.ஜி.ஆரோ அந்த தேசிய கவிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார். இவரது படங்களில் முக்காலே முழுவீசம் பாரதியார் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததே இதற்கு சான்று.
பெற்றால் தான் பிள்ளையா படத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..’ பாடலில்
” கவிதைகள் வழங்கு பாரதியைப் போல் ” என்று குழந்தைகளுக்கு அறிவுரையே செய்வார் எம்.ஜி.ஆர்.
**********
நிற்க. இனி எம்.ஜி.ஆரின் திமுக பிரச்சார முழக்கங்களில் நுழைவோம்.

(வளரும்)

அடுத்து: ” நான் ஆணையிட்டால்…”


vee.raj@rediffmail.com
————————–

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 9

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


டேக் – 9

வெச்ச குறி தப்பாது !

கதாநாயகிக்கும், வில்லனுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் வெறும் பெயருக்கு கதாநாயகனாக இருந்து வந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு 1951ல் வெளியான ‘மர்மயோகி’ முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. கதாபாத்திரத்தின் பெயர் கரிகாலன். நாட்டில் அக்கிரமக்காரர்களிடமிருந்து பொருட்களை கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும்
‘ராபின்ஹ¥ட்’ போன்ற கதாபாத்திரம்.

“கரிகாலன் இருக்கும் போது எங்களுக்கென்ன கவலை” என்று ஏழை ஜனங்கள் சொல்ல சொல்ல அறிமுகமாவார் எம்.ஜி.ஆர். அவருக்கு பின்னாளில் மிக பலமான பின்புலச் சக்தியாக அமைந்த ‘ஏழைப் பங்காளன்’ இமேஜ்க்கு பிள்ளையார்சுழி போட்ட படம் மர்மயோகி. கதை வசனம் மு.க.

“கரிகாலன் வெச்ச குறி தப்பாது. குறி தப்புமென்றால் குறியே வைக்க மாட்டான் இந்த கரிகாலன்” – என்ற இப்படத்தில் எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்லும் வசனம் மிகவும் பிரபலமானது. இன்றைய ‘பஞ்ச் டயலாக்’குகளுக்கெல்லாம் முன்னோடி.

ஆனாலும் இதற்கடுத்தும் எம்.ஜி.ஆருக்கு பெரியதாக படங்களில்லை. 1952ல் அந்தமான் கைதி, என் தங்கை, குமாரி என்று 3 படங்கள் தான். சொல்லி கொள்கிறார்போல்
கதாபாத்திரங்களுமில்லை.

அந்த சூழ்நிலையில், அறிஞர் அண்ணாவை முதன்முதலாக நேராக சந்தித்த எம்.ஜி.ஆர், 1953ல் முறைப்படி திமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்தார்.

1947லேயே கருணாநிதியின் சிநேகிதத்தால் திராவிட இயக்கத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கினாலும், அந்த இயக்கத்தில் எம்.ஜி.ஆர் தன்னை இணைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட காலம் சுமார் 6 ஆண்டுகள். அதுவும் 1949ல் தி.க.வில் இருந்து
பிரிந்து திமுக கட்சி உருவாகி 4 ஆண்டுகள் கழித்தே எம்.ஜி.ஆர். அக்கட்சியில் சேர்ந்தார்.

இதே எம்.ஜி.ராமச்சந்திரன் தான், முன்பு ஜாதிய மேலாதிக்கத்தைச் சாடியும்- வைதீக சடங்குகளை விமர்சித்தும் அறிஞர் அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ என்ற நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடிக்க மறுத்தவர்.

ஆக, நிலவரத்தை தூர இருந்தபடி கண்காணித்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் சமயோசிதமும், அதே சமயம் எந்த ஒரு நகர்த்தலும் தன்னை எவ்வகையிலும் காணாமல் செய்து விடக்கூடாதென்கிற அதீத கவனமும், முன்யோசனையும் ஆரம்பத்தில் இருந்தே எம்.ஜி.ஆருக்கு இருந்து வந்திருக்கிறதெனலாம்.

‘ மக்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும் அரசியலிலும்அவரெடுத்த முடிவுகள் சோடை போனதேயில்லை’ என்று இன்றளவுக்கும் கொண்டாடப்படும் அவரது புத்திசாலித்தனத்துக்கு , திமுகவில் சேர அவர் எடுத்த முடிவே மிகச் சரியான உதாரணம்.

வெகுஜனக் கட்சியாக செல்வாக்கு கூடிக் கொண்டிருந்த திமுகவில் இணைந்த பிறகு எம்.ஜி.ஆரை சுற்றி வலுவான அரசியல் இமேஜ் பின்னத் தொடங்கி விட்டது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒரு மலையாளி, திமுக தலைவர்கள் மேடைகளிலும் எழுத்துகள் மூலமாகவும் உருவேற்றி வந்த தமிழ் மொழி, தமிழர்களின் காதல், வீரம் ஆகியவற்றின் திரை பிம்பமாக அக்கட்சி அபிமானிகளுக்கு தோன்றலானார். எம்.ஜி.ஆரின் தோற்றப் பொலிவும், உடற்கட்டும், லாவகமான வாள்வீச்சுத் திறனும் அவரை திரையில், சேரன் செங்குட்டுவனாக, குலோத்துங்க சோழனாக, திமுக மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லி வந்த புறநானுற்று வீர இளவரசனாக ரசிகர்களால் உணரச் செய்தன. ஒரு கட்டத்தில், இல்லாதோருக்கு அள்ளித் தரும் ‘கலியுக பாரிவள்ளல்’ என்கிற ஒளிவட்டமும் அவருக்கு பின்னால் சுழன்றது.

*************

1954ல் வெளியான ‘மலைக்கள்ளன்’ படத்தில் இருந்து எம்.ஜி.ஆரின் சினிமா பரமபதத்தில் பாம்புகள் குறைந்து ஏணிகளே அதிகமாக துவங்கின. ‘திராவிட இயக்க’ எம்.ஜி.ஆரின் தனி ஆவர்த்தனம் தொடங்கியதும் இந்த படத்துக்கு பிறகு தான்.

வசனக்கர்த்தாக்களின் கிளிப்பிள்ளையாகவே இருந்து விடாமல் அவர்களின் ஆளுகைக்கு அப்பால் சென்று தனக்கென தனிப் பாதையை வகுத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தை எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு மலைக்கள்ளனின் வெற்றி விதைத்திருக்க வேண்டும். அதற்கான ·பார்முலாவை மனதில் ஊற வைக்கத் தொடங்கினார்.

மலைக்கள்ளனில் இடம் பெற்ற ‘எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடலின் ஆரம்ப வரியே அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக சுழற்றப்பட்ட சாட்டையடியாக கழகக் கண்மணிகளால் கைத்தட்டி வரவேற்கப்பட்டது.

” ஆளுக்கொரு வீடு கட்டுவோம்- அதில்
ஆயக்கலைகளை சீராக பயில்வோம்
வேடிக்கையாகவே நாளினை போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாக செய்வோம்.
…………………………..
………………………..
கூழ்கஞ்சிக்கில்லை எனும்
சொல்லினை போக்குவோம் ”

-என்று திமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நன்மைகளை செய்யும் என்று ஜனங்களுக்கு பறைசாற்றுவதாகவும் அமைந்திருந்தது அப்பாடல்.

இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பு எம்.ஜி.ஆரை யோசிக்க வைத்திருக்க வேண்டும். பாடல் வரிகளின் வலிமையை உணர்ந்த அவர் , அதற்கு பிறகு 1977ல் கடைசி படம் நடிக்கும் வரை தனது கருத்துகளை- விருப்பு வெறுப்புகளை- போதனைகளை ஜனங்களுக்கு முக்கியமாகக் கட்சியினருக்கும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் கொள்கைப் பாடலை ஒவ்வொரு படத்திலும் வைக்க தவறவே இல்லை அவர்.

பாடல் வரிகளில் இருந்து கதையமைப்பு, வசனங்கள், காட்சியமைப்பு, இசையமைப்பு, டைரக்ஷன் வரை படத்தின் எல்லா அம்சங்களிலும் தலையிட்டு தனக்கேற்ப செதுக்கி தனது தனித்துவத்தை பராமரித்துக் கொண்டார்.

கட்சிப் பிரச்சாரத்தைப் பொருத்தவரையும் கூட , யார் யாரை, எந்தெந்த விஷயங்களை மாத்திரம் திரையில் ‘ஹைலைட்’ செய்து மக்கள் முன் கொண்டு செல்வது எனவும் வகுத்துக் கொண்டார். கட்சி சம்பந்தப்பட்ட சின்னச் சின்ன விஷயங்களை பாமரர்கள் மனதில் பதியும் வகையில் முன் நிறுத்தும் உத்தியையும் கையாண்டார்.

சக்ரவர்த்தி திருமகள் (1957) படத்தில் கதாநாயகனான தனது பெயரை கட்சி சின்னமான ‘உதயசூரியன்’ என சூட்டிக் கொண்டார். படத்தில் இதர கதாபாத்திரங்கள் ” உதயசூரியன் ஏழைகளின் விடியல்; உதயசூரியன் வென்றே தீருவான்” என்பது போன்ற வசனங்களை பேச வைத்து, வளர்ந்து வரும் தனது கட்சியின் சின்னத்தையும் அதன் செல்வாக்கையும் மக்கள் மன்றத்தில் முக்கியமாக கிராம மக்கள் மத்தியில் பதிவு செய்ய முயன்றார். நெற்றியில் உதயசூரியன் சின்னத்தை திலகமாக தரித்தபடி திரையில்
தோன்றினார்.

கட்சித் தலைவர் அண்ணா அடிக்கடி குறிப்பிட்டு வந்த ‘கடமை, கண்ணியம் கட்டுப்பாடு’ என்கிற கோட்பாட்டை மதுரைவீரன் படத்தில் கிளைமாக்ஸ் பாடல் வரிகளாக வைத்தார்.

கருணாநிதி என்கிற எல்லைக் கோட்டை தாண்டி, அப்போது திராவிட இயக்க எழுத்தாளர்களில் கருணாநிதிக்கு இணையாக வசனங்களை எழுதும் திறனும் கூடுதலாக பாட்டெழுதும் ஆற்றலும் கொண்டிருந்த கண்ணதாசனையும் இழுத்துப் போட்டுக் கொண்டு மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), மன்னாதிமன்னன் (1960) என்று அடுத்தடுத்து
திராவிடப் பிரசாரம் செய்தார் எம்.ஜி.ஆர்.

இச்சூழ்நிலையில், தான் வகுத்து வைத்திருந்த ·பார்முலாபடி அதாவது கட்சியையும் அதே நேரத்தில் தன்னையும் ஒரு சேர முழுவீச்சில் முன்னிலைப்படுத்தும் வகையில் சொந்தமாக முதன் முறையாக படமெடுத்தார் எம்.ஜி.ஆர். அது தான் ‘ நாடோடி மன்னன்’.

இது ‘if i were the king’ என்ற ஆங்கில படத்தின் தழுவல். எம்.ஜி.ஆருக்கு ஏற்றவாறு தமிழில் நாடோடி மன்னன் ஆனது. இதில் எம்.ஜி.ஆருக்கு மன்னன், புரட்சிவீரன் என இரட்டை வேடம். டைரக்ஷனும் அவரே. வசனம் கண்ணதாசன். 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 22ல் ரிலீஸ் ஆன இப்படம் பெரும் வெற்றி பெற்று அவரை சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு கொண்டு போய் நிறுத்தியது. பிரேமுக்கு பிரேம் அரசியல் நெடி. துணிச்சலான அரசியல் பிரச்சாரம்.

தமிழ் டாக்கியில் முதன்முதலாக திமுக கொடியை பகிரங்கமாக ‘நாடோடி மன்னன்’ படம் வாயிலாக காண்பித்தார் எம்.ஜி.ஆர். படத்தின் டைட்டிலில் கறுப்பு- சிவப்பு கொடியுடன் ‘ எம்ஜியார் பிக்சர்ஸ்’ என்ற பேனரை திரையில் கண்ட திமுக கட்சியினருக்கு குறிப்பாக ரசிகர்களுக்கு பீறிட்டுப் பொங்கிய உணர்வை- உற்சாகத்தை இங்கு எழுத்தில் கொண்டு வர முயல்வது அத்தனை சுலபமில்லை.

வீராங்கன் என்ற பெயரில் நாடோடியாக அதாவது புரட்சி வீரனாக வரும் எம்.ஜி.ஆரின் கொள்கைச் சிறப்பை அறிந்த பிறகு , மன்னன் எம்.ஜி.ஆரின் மனைவி சொல்வாள்:

“அண்ணா.. நீங்கள் தான் அரசாள வர வேண்டும்”

———–

“எனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நிலமற்றோருக்கு நிலமளிக்கப்பட்டு உழவுக்கு ஊக்கமளித்து உணவு உற்பத்தி பெருக்கப்படும். தொழிலுக்கும் ஊக்கமும் மானியமும் தரப்படும். பெண்கள் முன்னேற அவர்களுக்கு சுயதொழில் செய்ய அரசு உதவி செய்யும். அநியாய வரிகள் இருக்காது…”

-என்ற ரீதியில் எதிர்கால செயற் திட்டங்களை அடுக்குவார் ‘நாடோடி’ எம்.ஜி.ஆர்.

————

இன்னொரு காட்சியில் மார்த்தாண்டன் என்ற பெயரில் வரும் ‘மன்னன்’ எம்.ஜி.ஆருக்கும் ‘நாடோடி’ எம்.ஜி.ஆருக்கும் நேருக்கு நேர் நடக்கும் உரையாடல்:

மன்னன்: “எதற்காகப் புரட்சி ? யாரை எதிர்த்து?”

நாடோடி: ” உங்கள் ஆட்சியை எதிர்த்து. சர்வாதிகார முறையை ஒழிக்க.
எங்கள் லட்சியம் ஆளை ஒழிப்பதல்ல. மக்களாட்சியை
ஏற்படுத்துவது.”

மன்னன்: ” ஏன் நானும் மக்களில் ஒருவன் தானே. நானே ஆண்டாலென்ன?

நாடோடி : ” நீங்கள் மக்களில் ஒருவர் தான். ஆனால் மக்களின் நிலையை
அறியாதவர். அவர்களின் நிலை உணர்ந்த ஒரு ஏழை தான்
நாட்டை ஆளவேண்டும்.”

மன்னன்: ” ஆட்சி பற்றி உனக்கென்ன தெரியும்? ”

நாடோடி : ” நீங்கள் மாளிகையில் இருந்து கீழே மக்களை பார்க்கிறீர்கள்.
ஆனால் நான் மக்களில் ஒருவனாக இருந்து மாளிகையை
பார்க்கிறவன். மக்களின் துயரமும் தேவைகளும் எனக்கு
நன்றாக தெரியும்”

– இந்த காட்சியில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சி மன்னன் மார்த்தாண்டனாகவும்,
நாடோடி வீராங்கன் திமுகவின் பிரதிநிதியாகவும் உணரப்பட்டது கழகக் கண்மணிகளால்.
—————-

அதே படத்தில் மற்றொரு கட்டத்தில் , தனக்கு பதிலாக அரசை சில நாட்கள் ஆள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் மன்னனிடம் நாடோடி சொல்வார்:

” பதவியில் அமருவது எனக்கு நோக்கமில்லை என்றாலும் மக்களுக்கு நன்மை கிடைக்குமென்பதால் ஒப்புக் கொள்கிறேன். நான் மக்களுக்காக செய்ய விரும்பும் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு அளிக்கப்பட வேண்டும். அதிகாரமில்லாத அரசாட்சியை நான் விரும்ப மாட்டேன் ”
———-

அதே படத்தில் வரும் ”காடு வெளஞ்சென்ன மச்சான் …” எனத் தொடங்கும் பாடலில்,

” இப்போ- காடு வெளயட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே.
……………………………………
……………………………………
நாளை போடப் போறேன் சட்டம் – பொதுவில்
நன்மைப் புரிந்திடும் திட்டம்.
நாடு நலம் பெறும் திட்டம். ”

——–

– இவ்வாறாக , எம்.ஜி.ஆர். தனது வருங்கால இலக்கை கோடிட்டு காண்பிக்கிறாரா அல்லது தான் சார்ந்திருந்த திமுகவையும் அதன் தலைவரையும் உயர்த்திப் பிடிக்கிறாரா என்று கணிக்க முடியாதபடிக்கு ஒருவித கெட்டிக்காரத்தனம், இப்படம் முழுவதும்
வியாபித்திருந்தது.

(வளரும்)

அடுத்து – ” வேட்டக்காரன் வருவான். உஷாரு…”

*********************

vee.raj@rediffmail.com

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை !

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


டேக் – 8

1947லில் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் , முத்துவேலர் கருணாநிதியை சந்திக்கும் வரை பக்கா காங்கிரஸ்காரர். ஆன்மீகவாதியும் கூட.

கதர் வேட்டி சட்டை. நெற்றியில் விபூதி பட்டை. கழுத்தில் உத்ராட்சக் கொட்டை. சரியான சிவப்பழம்.

நாடகத்தையே ஜீவனமாக கொண்டிருந்த மற்ற நடிகர்கள் போலவே இவரும் சினிமா வாய்ப்புக்காக அலையோ அலையென அலைந்துக் கொண்டிருந்தார். கிடைத்த வேடங்களோ போலீஸ் இன்ஸ்பெக்டர், காவலாளி போன்ற துக்கடா வேடங்கள் தான். பல படங்களின் டைட்டில்களில் இவர் பெயரே வராது. ‘இன்னும் பலர்’ என்ற பட்டியலிலேயே அடங்கி விடுவார்.

நாலு வார்த்தை சேர்ந்தாற்போல் வசனம் பேசும் வாய்ப்பு பெறக் கூட நாலு பேர் கையில் காலில் விழுந்து கெஞ்ச வேண்டிய நிலை. அபூர்வமாக கதாநாயகன் வாய்ப்பு கிடைத்த ஒரு படமும் பாதியிலேயே நின்று போனதால் ‘ராசியில்லாதவர்’ என்று அவப் பெயர் வேறு.

1936ல் சினிமா உலகில் நுழைந்து (‘சதிலீலாவதி’ முதல் படம். இன்ஸ்பெக்டர் வேடம்) சுமார் 10 ஆண்டுகள் கழித்தே அதாவது தனது 30வது வயதில் தான் ஒரு வழியாக கதாநாயகன் வேடம் ராமச்சந்திரனுக்கு தக்கியது. அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டது 1947ல் வெளியான ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘ராஜகுமாரி’ படம் தான்.

இதே ‘ராஜகுமாரி’ படத்தில் தான் முத்துவேலர் கருணாநிதிக்கும் முதன்முறையாக வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது. நாயகனும் வசனகர்த்தாவும் நண்பர்களாயினர்.

கிடைத்த வாய்ப்பை பற்றிக் கொண்டு, எப்படியாவது மேலேறி தங்களின் அடையாளத்தை பதிக்க வேண்டுமென்ற துடிப்பில் இருந்த கோபால மேனன் மகனும் முத்துவேலர் மகனும் ஒரு மையப் புள்ளியில் ஒன்று சேர்ந்தனர்.

விளைவு… ஒரு கதர் வேட்டி கரை வேட்டியாக மாறியது. உத்ராட்சக் கொட்டை தொங்கிய கழுத்தில் கருப்பு சிவப்பு துண்டு ஏறியது.

************

திராவிட இயக்கத்தின் பிரதான பிரச்சார நடிகர்களாக கருதப்பட்ட எம்.ஆர்.ராதா, கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகிய நான்கு ‘ரா’க்களில் முதல் மூவருக்கும் நான்காமவருக்கும் இடையே சில அடிப்படை
வித்தியாசங்கள் உண்டு.

மற்ற மூவரைப் போல, எம்.ஜி.ராமச்சந்திரன் பிறப்பாலோ அல்லது பூர்வீகத்தாலோ தமிழர் அல்ல. கேரளா. மலையாளக் குடும்பம். பிறந்ததும் கூட இந்நாட்டில் இல்லை; இலங்கை கண்டி நகரில். பஞ்சம் பிழைக்க இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் (கும்பகோணம்) அடைக்கலம் புகுந்து, தனது 7வது வயதிலேயே வயிற்றுப் பிழைப்புக்காக நாடகத்தில் நுழைந்தவர்.

அந்த மூவரைப் போல, பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவரோ; நாடகங்கள் மூலமாக திராவிட இயக்க கருத்துகளை பரப்பி வந்தவரோ அல்ல. இன்னும் சொல்லப் போனால், ஆரம்பத்தில் அதாவது பெரியாரிய கருத்துகள் இளைஞர்களின் மத்தியில் வசீகரமாக மையம் கொள்ள தொடங்கியிருந்த அந்த காலகட்டத்திலேயே எம்.ஜி.ராமச்சந்திரன் பழுத்த ஆஸ்திகவாதியாகத் தான் இருந்திருக்கிறார். அத்துடன், மகாத்மா காந்தி மீது அதீதமான அபிமானம் கொண்டிருந்த தீவிர காங்கிரஸ்காரராக தான் இருந்துள்ளார். 1947ல் கலைஞர் கருணாநிதியுடன் நட்பு ஏற்பட்ட பிறகே அவரது போதனைகளை கேட்டு மனம் மாறி திராவிட இயக்கத்தின் பக்கம் எம்.ஜி.ஆர். சாய்ந்ததாராம்.

திராவிட இயக்கத்தில் இணைந்தது மற்றும் ஈடுபாட்டை கணக்கில் கொண்டால் கூட சீனியாரிட்டி அடிப்படையில் எம்ஜிஆருக்கு நான்காவது இடம் தான். ( திமுகவில் இருந்த போது இவர் எந்த ஒரு போராட்டத்திலும் நேரடியாக பங்கேற்றதில்லை;
சிறைக்கு சென்றதில்லை என்ற விமர்சனம் இப்போதுமுண்டு).

எல்லாவற்றையும் விட, அந்த மும்மூர்த்திகள் போல் திரையில் இயக்கத்தின் பிரச்சார ஒலிபெருக்கிகளாக மட்டும் இருந்து விடாமல், தன்னையும் முன்னிலைப்படுத்திக் கொண்ட நான்காமவரின் சாமர்த்தியம் மிக முக்கிய வித்தியாசம்

– ஆக மொத்தம் முதல் மூன்று ‘ரா’க்களும், நாடகத்திலும் சினிமாவிலும் நாயகர்களாக திராவிட இயக்கப் பிரச்சாரத்தை ஆரம்பித்து பிறகு ஒரு கட்டத்தில் சாதாரணமாக போய் விட ; சாதாரணமாக ஆரம்பித்த எம்.ஜி.ஆரோ, நிறைவில் நாயகனாக நிலை பெற்றார். சினிமாவில் திராவிட இயக்கத்தின் ஒட்டுமொத்த திரை உருவமாகவும் அரசியலில் தவிர்க்கவே முடியாத தனிப் பெரும் சக்தியாகவும் விஸ்வரூபமெடுத்தார்.

**********

தனது திசை எது என்பதில் தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர். அவரது அணுகுமுறையும் கணக்கீடும் ஆரம்பத்தில் இருந்ததே ஒரு இலக்கு நோக்கி அமைந்திருந்தது அவரது பின்னாளைய அபார வெற்றிகள் புலப்படுத்துகின்றன.

1940-50ம் ஆண்டு. சினிமாவை அதிகம் பார்க்கும் பாமரர்கள் , நடுத்தர வகுப்பினர் குறிப்பாக இளைஞர்களை திராவிட இயக்கம் காந்தம் போல் இழுத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. ‘ நித்திய கண்டம் பூர்ணாயுசு ‘ என்ற கணக்கில் தத்தளித்துக் கொண்டிருந்த தனது சினிமா வாழ்க்கையில் கரையேற life Boat -ம், வெகுஜனங்களிடம் நெருங்கிச் செல்ல முத்திரை மோதிரமும் திராவிட இயக்கமே என்று எம்ஜிஆர் தெளிவாக புரிந்து வைத்திருந்திருக்க வேண்டும். அதே வேளையில் முழுசாய் அதில் ஐக்கியமாகி இயக்கத்தின் சினிமா பிரசங்கியாக மட்டும் இருந்தால் ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடுவோம் என்றும் அவரால் கணிக்கவும் முடிந்திருக்கிறது.

எனவே, தான் சார்ந்திருந்த இயக்கத்தின் சினிமா உருவமாக தன்னை முன்னிலைப்படுத்திய அதே வேகத்தை, அதற்கு இணையாக திரையில் தனது தனித்துவ அடையாளத்தை பதிப்பதிலும் அவர் காண்பித்தார்.

‘ திமுகவால் எம்.ஜி.ஆர். வளர்ந்தாரா? அல்லது அவரால் திமுக வளர்ந்ததா? ‘ என்கிற விடை காண முடியாத கேள்வி இன்றளவும் தமிழகத்தில் உலாவிக் கொண்டு தானிருக்கிறது.

*************

சினிமா- அரசியல் – தனிவாழ்க்கை ஆகிய மூன்றுமே ஒன்றோடு ஒன்றுப் பின்னிப் பிணைந்து பிரித்து பார்க்க முடியாதபடிக்கு அமைந்து போனது எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான்.

ஒரு படத்தில் ஒரு நடிகன் சொல்லும் கருத்துகள் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் பேசும் சாதாரண வசனங்களாக கருதாமல், திரைக்கு வெளியே தனிமனிதனாக அந்த நடிகனே அக்கறையுடன் தங்களுக்கு தெரிவிக்கும் நற்செய்தி அல்லது போதனையாக பாமர ஜனங்கள் எடுத்துக் கொண்டு கொண்டாடியது எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான். இது உள்நாட்டில் மட்டுமல்ல உலகளவிலும் கூட எந்த ஒரு சினிமா நடிகருக்கும் அமையாத தனிச் சிறப்பு என அடித்து சொல்லலாம்.

எம்.ஜி.ஆரின் சினிமாவும் அரசியலுமே பெரும்பாலும் மு.கருணாநிதியுடன் சம்பந்தப்பட்டதாகவே அமைந்தது. இவர்கள் இருவரின் இடையேயான நட்பு – பகையே தமிழ் சினிமாவையும் தமிழக அரசியலையும் சுமார் 40 ஆண்டு காலம் ஆக்கிரமித்து வந்ததெனலாம்.

எம்.ஜி.ராமச்சந்திரனின் பயாஸ்கோப் பாலிடிக்ஸை எடுத்துக் கொண்டால் அதை, இரண்டு முக்கிய காலகட்டங்களாக வகைப்படுத்தலாம் ; கி.மு- கி.பி போல.
அவை: 1) 1972க்கு முன் – 2) 1972க்கு பின்.

இதில் முதலாவது, 1947 முதல் 72 வரை கலைஞர் கருணாநிதியுடன் கூடிக்குலாவிய காலகட்டம். அடுத்தது, கடுமையாக மோதிக் கொண்ட 1972-77 வரையிலான காலகட்டம்.

இனி முதலாவதை அலசுவோம்:

ராஜகுமாரி மூலம் 1947ல் அஸ்திவாரம் போடப்பட்ட எம்.ஜி.ஆர்.- மு.க. நட்பு, அடுத்து 1950ல் வெளியான மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களின் மூலமாக வலுப்பெற்றது.

தமிழ் டாக்கியில் ராஜாராணி கதைகளே பெரும்பாலும் ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது. வஞ்சகமான மந்திரி அல்லது ராஜகுரு ; தலையாட்டி ராஜா; அவனுக்கு அழகான, சதிகார வைப்பாட்டி; பதிவிரதையான மகாராணி; அவள் வாயும் வயிறுமாக அநியாயமாக காட்டுக்கு விரட்டப்படுவாள்; அங்கு அவளுக்குப் பிறக்கும் மகன் சத்தியசீலனாக இருப்பான்; புரட்சி வீரனாகி ஏழை அப்பாவி ஜனங்களுக்காக அரண்மனைக்காரர்களிடம் கம்யூனிசம் பேசுவான் ; கெட்டிக்காரனாய் வாள் சண்டையெல்லாம் போடுவான்; கிளைமாக்ஸில் கெட்ட மந்திரி அல்லது ராஜகுரு, மேனாமினுக்கி வைப்பாட்டி ஆகியோர் பாவத்தின் சம்பளத்தை பெறுவார்கள்; அசட்டு ராஜாவும் மனம் திருந்தி மனைவி, மகனை ஏற்பான்.

– இதுவே அப்போதைய ராஜாராணி படங்களின் அடிப்படைக் கதைக் கரு. இதை மையமாக வைத்து கொண்டு அதையும் இதையும் மாற்றி மாற்றிப் போட்டு கதை பண்ணுவார்கள். இதில் திராவிட இயக்கக்காரர்கள் படமென்றாலோ உச்சந்தலை குடுமியோடு ராஜகுரு வந்து சமயச் சடங்குகள், கடவுள்கள் பெயரை சொல்லி வில்லத்தனம் செய்வார். (உதாரணம்- மு.க. கதை வசனம் எழுதிய ‘மந்திரிகுமாரி’. இது பற்றி ஏற்கனவே முந்தைய அத்தியாயங்களில் மேயப்பட்டுள்ளது). கிளைமாக்ஸில் இளவரசனாக ஏற்கப்படும் நாயகன், “முடியாட்சி முடிந்தது. இனி மக்களாட்சி தான்” என்று டயலாக் சொல்லி முடித்து வைப்பான். (உதாரணம்- ‘மருதநாட்டு இளவரசி’)

திராவிட இயக்கத்தை சேர்ந்த ஆசைத்தம்பி வசனத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து 1951ல் வெளியான ‘சர்வாதிகாரி’ படத்தில்,

” தர்மத்துக்காகவும், நீதிக்காகவும் போராட
இந்த வாள், என்றைக்கும் தயங்காது”
– என்று எம்ஜிஆர் வீரமாக வசனம் பேசுவார். ஆசைத்தம்பியின் திராவிட இயக்கப் பேனா இங்கு வாளாக குறிப்பிட்டது திராவிட இயக்கத்தை என்று அந்த இயக்கத்தாரால் உணரப்பட்டு ரசிக்கப்பட்டது.

மேலும் அதே படத்தில்,
” பச்சைத் தண்ணீருக்காக பரிதவிப்பவர்கள்
ஏராளம் அங்கே ; பழரசம் இங்கே.
கந்தல் துணி கூட இல்லை அங்கே
பட்டு பீதாம்பரம் ஜொலிக்கிறது இங்கே..”

– என்று அரண்மனைவாசியான தனது காதலியிடம் கம்யூனிசம் பேசுவார் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.

அதே ஆண்டு வந்தான் ‘ கரிகாலன் ‘ ; ஏழைப் பங்காளன் இமேஜ்க்கு பிள்ளையார்சுழி போட்டு எம்.ஜி.ராமச்சந்திரனை பின்னாளில் ‘ புரட்சி நடிகர்’ ஆக்கிடுவதற்காக.

(வளரும்)

அடுத்து: வெச்ச குறி தப்பாது !


vee.raj@rediffmail.com

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 7

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்



டேக் 7

புதிய பயணம்

திமுகவில் இருந்து பிரிந்து வந்து எந்த வேகத்தில் ‘தமிழ் தேசிய கட்சி’ என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தாரோ அதே வேகத்தில் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தும் விட்டார் ‘சொல்லின் செல்வர்’ ஈ.வி.கே.சம்பத். இந்த நிகழ்விலிருந்து புதிய திசையில் கண்ணதாசனின் பயணம் ஆரம்பமானது.

கறுப்பு சிவப்பு என்ற இரு வர்ணத்திலிருந்து சிவப்பு,வெள்ளை பச்சை என மூவர்ணத்துக்கு மாறினார் கண்ணதாசன். முன்பு ‘ திராவிட நாட்டை வென்றவர் கிடையாது ‘ என
மார்தட்டிய கவியரசின் அதே பேனா தான்,
“அடிமையாக வாழ்ந்த காலம் மறந்து போனதா
அஞ்சி அஞ்சி கிடந்த காலம் மறந்து போனதா?
கொடுமை தீர்ந்து வாழ நேர்ந்தும் ஒருமை இல்லையே -ஒரு
குலத்தை போல வாழ்வதென்ற பொறுமையில்லையே!
ஒற்றுமை காண்போம் – அதில்
வெற்றியும் காண்போம் “

-என்று தேச ஒற்றுமையை இப்போது ஆணித்தரமாக வலியுறுத்தியது. (படம் : ‘ராமன் எத்தனை ராமனடி’ )

” வந்தே மாதரம் என்னும் வார்த்தையாலே
தேசத்தை ஒன்றாக்கி வைத்தாரே
உத்தமராம காந்தியண்ணல்
அவரை மறக்காதீர்; அன்புடைய பெரியோரே !
அம்மம்மா…தம்பி என்று நம்பி….”

-என்று உருகவும் செய்தது (படம் : ராஜபார்ட் ரங்கதுரை)
——–
எந்த சிவாஜி கணேசன் நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்கு போட்டியாக 1959ல் ‘சிவகங்கை சீமை’ படத்தை தயாரித்து திராவிட இயக்க பிரச்சாரம் செய்தாரோ அதே சிவாஜியை வைத்து 1963ல் ‘ரத்தத் திலகம்’ என்ற படத்தை தயாரித்தார் கவிஞர்.
(சீனப் படையெடுப்பின் போது , தேச பக்தியை வலியுறுத்தும் வகையில் இப்படத்தை உருவாக்கினார் கண்ணதாசன்)

முன்பு சி.சீமை படத்தின் பாடலில் திமுக ஆதரவு பத்திரிகைகளின் பட்டியலிட்ட அதே கண்ணதாசன், ராஜபார்ட் ரங்கதுரை (1973) படத்தில் வரும் “இன்குலாப் ஜிந்தாபாத்..”
பாடலில்
” நல்லோர்கள் தம்நெஞ்சம் நவசக்தி பெற வேண்டும்
ஆர்ப்பாட்ட அலையோசை எழ வேண்டும்…”

-என்று காங்கிரஸ் ஆதரவுப் பத்திரிகைகளாக அப்போதிருந்த ‘ நவசக்தி ‘, ‘ அலைஓசை ‘ ஆகியவற்றிற்கு பாடலில் பப்ளிசிட்டி தந்தார்.

திராவிட இயக்கத்தின் வலுவான பிரச்சார களமாக இருந்த தமிழ் டாக்கியில், காங்கிரஸ் தேசிய அரசியல் பிரச்சாரமும் வலுவான இடத்தை பிடிக்கத் தொடங்கியது, எழுத்தாற்றலுக்கு பேர் பெற்ற திராவிட இயக்க குரு குலத்தில் பாடம் பயின்று தேறிய கண்ணதாசனின் வருகைக்கு பிறகு தான் என்றால் அது மிகையாகாது.

சினிமாவில், எம்.ஜி.ஆருடன் வலுவான கூட்டணி வைத்திருந்த நிலை மாறி அவரது நேரடி போட்டி நடிகரான சிவாஜியுடன் இறுகக் கைகோர்த்துக் கொண்டார் கண்ணதாசன்.

தி. இ. பாணியில், காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் சினிமா மூலமாக பாமரர்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியை திரையில் இக்கூட்டணி துவக்கியது. திமுகவை குறிப்பாக அக்கட்சியின் அரசியல் உருவமாக விளங்கிய கருணாநிதியையையும் திரை உருவமாக திகழ்ந்த எம்.ஜி.ஆரையும் கண்ணதாசனின் பாடல்கள் குறிவைத்து மறைமுகமாக தாக்குவதாக உணரப்பட்டது.

இந்த வரிசையில் ஆண்டவன் கட்டளை (1964) படத்தில் ‘சிரிப்பு வருது..சிரிப்பு வருது’
பாடலில்,
” மேடையேறி பேசும் போது
ஆறு போல பேச்சு.
மேடை இறங்கி கீழே வந்தா
சொன்னதெல்லாம் போச்சு”

– என்று வரும் வரிகள் மேடைப் பேச்சுக்கலையில் வல்லவர்களாக கருதப்படும் திமுக தலைவர்களை சாடுவதாக அர்த்தம் கொள்ளப்பட்டது.
——
அதேபோல், சிவாஜி நடித்த ‘என் மகன்’ (1974) படத்தில் வரும் ‘நீங்கள் அத்தனை பேரும்..’
பாடலில் வரும்
” கொள்ளையடிப்பவன் வள்ளலைப் போலே
………………………………………….
…………………………………………..
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே வாழ்கின்றான்”

-வரிகள் கருணாநிதி மற்றும் எம்ஜிஆரை ஒருசேர மறைமுகமாகத் தாக்குவதாக சிவாஜி
ரசிகர்களால் அல்லது காங்கிரஸ் தொண்டர்களால் புரிந்துக் கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டது.
———
படிக்காத மேதை படத்தில் ,
” படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரம் பேருண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”

-பாடல் வரிகள் பெருந்தலைவர் காமராஜை குறிப்பதாக கொள்ளப்பட்டது.
———
‘தாய்’ (1974) என்ற படத்தில்
” நாடாரு வந்தாரு
நாடாள வந்தாரு
ராஜாங்கம் பண்ணாரம்மா;
கல்லாமைக் கண்டாரு
இல்லாமை வென்றாரு
கல்லூரி தந்தாரம்மா”

-என்றும் காமராஜர் புகழ் பாடினார் கவியரசு (நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் காமராஜர்)
———–
1962லிலும் அதற்கு பிறகு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வென்று காமராஜர் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமென்று கண்ணதாசனுக்கு பெரும் ஆசை இருந்து வந்தது அவர் எழுத்துகளில் அடிக்கடி புலப்பட்டது.

1960களின் துவக்கத்தில் சிவாஜி நடிப்பில் வந்த ‘எல்லாம் உனக்காக’
படத்தில்,
” கடமையைச் செய்வோம் ; கவலையை மறப்போம்
கிடைப்பது கிடைக்கட்டும் தோழர்களே – நாம்
பதவியை விடுவோம்; உதவிகள் புரிவோம்
நடப்பது நடக்கட்டும் நாட்டினிலே.
அன்பு வளர்ப்பவர் ; பண்பு நிறைந்தவர்
தம்பிடி தந்தாலும்
பதவி அதிகாரம் தரும் கோடிகளை விட
அது தான் மேலாகும்
தன்னலமற்றவர் உண்மை உழைப்பினை
தாயகம் தேடுதடா
கையில் பொன் பொருளற்றவர் – ஓடி
உழைத்திட வந்தால் போதுமடா”

– என்று தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பணியாற்றிட காங்கிரஸ் தொண்டர்களை அழைப்பதாக கருதப்பட்டது.
———
” எதற்கும் ஒரு காலம் உண்டு
பொருத்திரு மகளே…
……………………………..
……………………………..
சிவகாமி பெற்றெடுத்த பிள்ளையல்லவா – நாளை
இந்த மண்ணையாளும் மன்னனல்லவா “

– இது 1974ல் வெளியான ‘சிவகாமியின் செல்வன்’ படத்தில் வரும் பாடல். (காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி)
———
சிவாஜி நடித்த படம் தானென்றில்லை. அரசியல் சாயம் பூசிக்கொள்ளாத மற்ற நடிகர்கள் நாயகர்களாக நடித்த படங்களிலும் கூட பாடல்களில் தனது காமராஜர் அபிமானத்தை வெளிப்படுத்த தயங்கவில்லை கண்ணதாசன். ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த
‘ மாணிக்கத் தொட்டில் ‘ என்ற படத்தில் “ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்” என்று தொடங்கும் பாடலில்,
” எல்லார்க்கும் கல்வி தந்தான்
சிவகாமி செல்வனடி
என் மகனும் அவர் போல
வளர்ந்து வரும் தலைவனடி…”

– என்று சுட்டிக்காட்டுவார் கவியரசு.
——–
எதிரியை தாக்குவதற்கு மாத்திரமின்றி, சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்ல வேண்டிய செய்திகளை சினிமா வசனங்கள் மற்றும் பாடல்களை பூடகமாக தெரிவிக்கும் சாமர்த்தியத்தில் கரைகண்ட திராவிட பாரம்பரியத்தில் ஊறித் திளைத்தவராயிற்றே கவியரசு. கட்சி மாறினாலும் அந்த கெட்டிக்காரத்தனம் எங்கே போய் விடும்! அந்த உத்தியை காங்கிரஸிலும் பிரயோகித்தார்.
‘பட்டணத்தில் பூதம்’ (1967) படத்தில் இடம் பெற்ற,

” சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – எனை
சேரும் நாள் பார்க்க சொல்லடி.
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி”

– என்று பாடல் நீளும். 67 பொதுத் தேர்தலின் போது தீவிர தேர்தல் பணிக்காக தன்னை அழைக்க காமராஜருக்கு கண்ணதாசன் விடுத்த விண்ணப்பமாக அப்போது இவ்வரிகள் அர்த்தம் கொள்ளப்பட்டது.
————
அழைப்புக்கு மட்டுமல்ல. ஆறுதலுக்கும் இந்த உத்தியை பயன்படுத்த தவறவில்லை கவியரசு.
திமுகவை விட்டு பிரிந்து வந்தாலும் அதன் தலைவர் அண்ணாதுரை மீது கண்ணதாசனுக்கு கடைசி வரை தனிப்பட்ட முறையில் அபிமானம் இருந்தே வந்தது. 1967ம் ஆண்டு அண்ணா தமிழக முதலமைச்சராகி சில நாட்களிலேயே அவருக்கு உடல் நலம் குன்றியது. அவர் மருத்துவ சிகிச்சை பெற்று திரும்பிய நேரத்தில், எதிர் முகாமில் இருந்தாலும் அண்ணாவின் உடல் நிலை குறித்து கவலைப்பட்ட கவியரசு, பாடல் மூலமாக உடல் நலம் விசாரித்தார்.
கத்தி காயம் பட்ட கதாநாயகனைப் பார்த்து நாயகி அக்காட்சியில் பாடினாலும் அது உண்மையில் அறிஞர் அண்ணாவை மனதில் வைத்து எழுதப்பட்டதாகவே அறியப்படுகிறது.
கவியரசின் மனித நேயத்தை வெளிப்படுத்திய அந்தப் பாடல் 1968ல் வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் இடம் பெற்ற,
” நலம் தானா, நலம் தானா ?
உடலும் உள்ளமும் நலம் தானா?
…………………………………….
……………………………………
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்;
புண் பட்ட சேதியை கேட்டவுடன் – இந்த
பெண் பட்ட பாட்டை யாரறிவார்
நலம் பெற வேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு”

– இந்த பாடலிலேயே ”இலை மறை காய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல்லின்று ” அண்ணாவுக்கு தகவலும் சொல்வார் கண்ணதாசன்.
————
இதற்கிடையே, தீவிர அரசியலில் இருந்து ஆன்மீகத்தின் பக்கம் திரும்பத் தொடங்கியது கண்ணதாசனின் கவனம். வெறும் அரசியல்வாதி மற்றும் பாடலாசிரியர் அல்லது இலக்கியவாதி என்ற நிலையை கடந்து ஆன்மீகம் என்கிற உன்னதமான திசையை நோக்கி 3வது கட்டமாக புறப்பட்டது அவரது பயணம். 10 தொகுதிகளாக எழுதிய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலிலும், ‘ஏசுகாவியம்’ நூலிலும் இன்றளவும் நிலைத்து நின்றிருக்கிறார் கவியரசு.

வெறும் 8ம் வகுப்பு மட்டுமே படித்திருந்த கண்ணதாசன், எழுதியது 20க்கும் மேற்பட்ட நாவல்கள். 4 ஆயிரத்துக்கும் அதிகமாக கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் கூடுதலாக திரை இசைப் பாடல்கள். தனது ‘ சேரமான் காதலி’ நாவலுக்காக சாகத்ய அகாடமி பரிசும் பெற்றார்.

*******************

‘ கை நீட்டி கொஞ்சுவோர் பக்கமெல்லாம் கரம் நீட்டி தாவுகின்ற குழந்தை’ என்று கலைஞர் கருணாநிதி வர்ணித்தது போல கண்ணதாசன் உணர்ச்சிமிக்க குழந்தைமனம் கொண்ட வெள்ளை உள்ளத்துக்கு சொந்தக்காரர். வேஷம் போடத் தெரியாதவர். உள்ளன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர் என்பதற்கு அவர் எழுதிய சுய சரிதையே சான்று.

எதிரிகளும் ரசிக்கும் பிள்ளை குணமும், தமிழும் கண்ணதாசனுடையது. எம்.ஜி.ஆர். முதலமைச்சரானதும் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவியளித்து கவுரவித்தார். தனது தமிழுக்கும் புலமைக்கும் கிடைத்த அந்த கவுரவுத்துடனேயே 1981ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தனது 54 வயதில் இந்த மண்ணுலகை விட்டு பறந்தது அந்த கவிக்குயில்.

(வளரும்)

அடுத்து: உருண்டது உத்ராட்ச கொட்டை !


vee.raj@rediffmail.com

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் -6

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


டேக்-6

‘ வனவாசம் ‘ ?

அண்ணாதுரை, கருணாநிதியைத் தொடர்ந்து சினிமாவுக்கு கதை வசனங்கள் எழுதிய
திராவிட இயக்க எழுத்தாளர்கள் பட்டியல் ஏ.வி.பி. ஆசைத்தம்பி, ஏ.கே.வில்வம் , திருவாரூர் தங்கராசு, முரசொலிமாறன், தென்னரசு என்று நீளுகிறது. பாவேந்தர் பாரதிதாசன், உடுமலை நாராயணகவி ஆகியோரின் பாடல்களும் சினிமாவில் தி. இ. முழக்கங்களாக முழங்கியுள்ளன.
இவ்வாறான தி. இ. எழுத்தாளர்கள் வரிசையில் முக்கிய இடம் கவியரசு கண்ணதாசனுக்கு உண்டு.
கதை, வசனங்கள், பாடல்கள் என்று முன்று துறைகளிலும் புகுந்து விளையாடியது கவியரசு கண்ணதாசனின் பேனா. இவரது தமிழ், சொக்க வைக்கும்; சாட்டையை சொடுக்கும் ; சரசமாடும்; சதிராடும். இந்த விஷயத்தில் கலைஞரின் பேனாவுடன் சரிக்கு சமமாக தோள் தட்டி நின்றது கவியரசின் பேனா. வசனங்களுக்காகவே படங்களை வெற்றி பெற வைத்த வல்லமையில் முன்னவருக்கு சளைத்தவரல்ல பின்னவர்.

கவிஞர் கண்ணதாசனுக்கு கதை, வசன கர்த்தா, பாடலாசிரியர், சினிமா தயாரிப்பாளர்,
நடிகர், பத்திரிக்கையாளர் என்று பல முகங்கள் உண்டு. சினிமா எழுத்துகள் மட்டுமின்றி
கவிதைகள், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று எழுத்தின் அனைத்து எல்லைகளையும் தொட்டவர் அவர்.

கவியரசு கண்ணதாசனின் எழுத்து வாழ்க்கையை (சினிமா மற்றும் இலக்கியம் உள்பட) மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். அவை : 1. திராவிட இயக்க காலம்; 2. காங்கிரஸ் அல்லது காமராஜர் அபிமான காலகட்டம்; 3. ஆன்மீகம்.

******

ராமநாதபுரம் அருகே சிறுகூடற்பட்டி என்கிற சிறு கிராமத்தில் 24- 6-1927ல் பிறந்த முத்தையா, 1940களின் துவக்கத்தில் கண்ணதாசனாக சினிமாத் துறையில் கால் பதித்திருந்த போது அறிமுகமானது தான் மு.கருணாநிதியுடனான நட்பு. சேலம் மாடர்ன்
தியேட்டர்ஸில் கதை வசன இலாகாவில் பணியாற்றிய போது மலர்ந்த இந்த நட்பு , கண்ணதாசனை திராவிட இயக்க கருத்துகளின் தாக்கத்துக்கு உள்ளாக்கியது.

அண்ணாதுரை தலைமையில் அணி திரண்டார் கண்ணதாசன். 1949ல் உருவான தி.மு.க.வில் சேர்ந்தார். நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டையுடன் காணப்பட்ட ஆஸ்திக முத்தையா ,
நாஸ்திக கண்ணதாசனாகி திராவிட இயக்க ‘மரபு’ப்படி, பிராமணர்களையும், கடவுள்களையும், வைதீக சமயச் சடங்குகளையும் சகட்டுமேனிக்கு திட்டியும் கிண்டலடித்தும் கட்டுரைகள் எழுதலானார். நேரு, காமராஜர் என்று காங்கிரஸ் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை.
திராவிடம், தனிநாடு என்றெல்லாம் முழங்கி வந்தார். அவற்றை பத்திரிகைகளிலும் ,
சினிமாக்களிலும் எழுதி தள்ளினார்.

புகழ்ந்தால் இமயத்துக்கு உயர்த்தி நிறுத்துவதும், இகழ்ந்தால் படு பாதாளத்துக்கு தள்ளுவது
மாகவே இருந்தது அவரது எழுத்துபாணி.

திராவிட இயக்கக் கருத்துகளை, தான் எழுதிய திரைப்பாடல்களிலும் , வசனங்களிலும் வெளிப்படுத்தினார்.

அண்ணா கதை வசனத்தில் என்.எஸ்.கே.தயாரித்த ‘பணம்’ (1952) படத்தில் “தீனா..மூனா..கானா” என்ற பாடலில் திமுக பிரச்சாரத்தை அப்பட்டமாக செய்திருந்தார் கண்ணதாசன்.

இவர் 1959ம் ஆண்டில் சொந்தமாக தயாரித்து திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதிய ‘ சிவகங்கைச் சீமை’ என்ற படத்தில் ‘வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது’ என்று கதாநாயகனை பாட வைத்தார். இந்த பாட்டில்,
” மன்றம் மலரும்; முரசொலி கேட்கும்
வாழ்ந்திடும் நம்நாடு.
……………..
………………
எக்குலத்தோரும் ஏந்தி புகழ்வது எங்கள் பெருமையடா..”
-என்று வரிகள் தொடரும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மன்றம்’, ‘ முரசொலி’ , ‘ நம்நாடு’ ஆகியவை அப்போது திமுகவின் பிரசாரப் பத்திரிகைகள். அவற்றின் முறையே நாவலர் நெடுஞ்செழியன், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் ஆசிரியர்களாக நடத்தி வந்தனர். திமுகவினர் மத்தியில் பிரபலமாக இருந்த அந்த பத்திரிகைகளைப் பற்றியும் ‘திராவிடர்’ புகழ் பாடிய அப்பாடலில் பொருத்தமாக சேர்த்து தானொரு தீவிர திமுககாரர் என்பதை காண்பித்துக் கொண்டார் கண்ணதாசன்.

அதே படத்தில் எதிரி நாட்டு தூதனிடம், “எங்கள் தென்னவர் நாடு எப்போதும் வெல்லும்” என்ற பாணியில் வாளை உயர்த்தி காண்பித்து நாயகன் வசனம் பேசுவான். (அதே 1959ம் ஆண்டு , காங்கிரஸ் அபிமானிகளான பந்துலு தயாரித்து, சிவாஜிகணேசன் நடித்து
வெளியான தேசிய உணர்வையூட்டும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்கு போட்டியாக அதே சமயத்தில் ‘சி.சீமை’யையும் வெளியிட்டார் ‘திராவிட இயக்க’ கண்ணதாசன்)

அதற்கு முன்பே , திராவிட இயக்கத்துடன் ‘ ஸ்நானப் பிராப்தி ‘ கூட இல்லாத பாட்டுக்கார
நடிகரான டி.ஆர்.மகாலிங்கத்தை கதாநாயகனாக வைத்து தான் தயாரித்த ‘மாலையிட்ட மங்கை’ (1958) படத்தில் கூட ‘திராவிடப் பொன்னாடே..’ என்ற பாடலை வைத்தார் கண்ணதாசன்.

கவிஞர் கண்ணதாசனும் திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரும் இணைந்து மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), நாடோடிமன்னன்(1958), மன்னாதி மன்னன் (1960) என்று பல படங்களை தந்து தாங்கள் சார்ந்திருந்த இயக்கத்தின் ஊதுகுழல்களாக திரையில் செயல்பட்டு வந்தனர்.

எம்ஜிஆர் நடிப்பில் கண்ணதாசன் பாடல், கதை வசனத்தில் உருவான ‘மன்னாதி மன்னன்’ படத்தில்
“அச்சம் என்பது மடமையடா;
அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்று பாடல் எழுதி தான் சார்ந்திருந்த இயக்கத்தின் தனி திராவிட நாட்டு ஆசையை வெளிப்படுத்தினார் கண்ணதாசன்.
அதே பாடலில்,
“கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே…”

– என , திமுக முன்னிறுத்தி வந்த தமிழ், தமிழர்கள், மூவேந்தர்களின் பெருமைப் பாடும் கருத்துருவை பாடல் வரிகளாகவும் வசனங்களாகவும் தந்தார் கவியரசு.

மதுரை வீரன் படத்தில் ,
“கடமையிலே உயிர் வாழ்ந்து
கண்ணியமே கொள்கையென
மடிந்த மதுரை வீரா…”
– என்று தொடரும் இப் பாடலில் ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற அண்ணாவின் பிரபல மேற்கோளை கோடிட்டு காட்டினார் கண்ணதாசன்.

அதே படத்தில் இன்னொரு பாடல்.
” செந்தமிழா எழுந்து வாராயோ – உன்
சிங்காரத் தாய்மொழியை பாராயோ”
– என்று சொல்வார்

எம்.ஜி.ஆர். தயாரித்த ‘ நாடோடிமன்னன் ‘ படத்தில், ‘செந்தமிழே வணக்கம்..” என்று
பாடலாக வணங்கிய கண்ணதாசனின் தமிழ், அதே படத்தில் ‘அண்ணா.. நீங்கள் நாடாள வர வேண்டும்” என்ற வசனத்தின் மூலம் அண்ணாதுரையை முதலமைச்சராக வர வேண்டுமென 1958லேயே தனது ஆசையை வெளியிட்டது.

************
காலமெனும் திரைப்படத்தில் எப்போது எந்தெந்த திருப்பங்கள் வருமென யாராலும்
கணிக்கவே முடியாதென்பதற்கு கவியரசரே சிறந்த உதாரணமெனலாம்.

திரையில் மட்டும் நின்றிடாது நேரடியாகவும் கட்சி நடவடிக்கைகளில் மிக மும்முரமாக ஈடுபட்டவர் கண்ணதாசன். 1953ல் கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு
போலீசாரிடம் ரத்தம் வழிய வழிய அடிபட்டு சிறையில் அடைபடுமளவுக்கு திமுக மீது கண்ணதாசன் காட்டிய தீவிரத்துக்கு 1961ல் முற்றுப்புள்ளி விழுந்தது.

திமுகவை வானளாவ உயர்த்தி ‘கழக மகாகாவியம்’ என்ற நூலையே எழுதிய அதே கைகள் தான், திமுகவில் தான் இருந்த காலத்தை வனவாசத்தில் இருந்த இருண்ட காலமாக எழுதி வசைமாரியும் பொழிந்தது.

கட்சியில் சினிமாகாரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதென ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வந்தவர் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஈ.வி.கே.சம்பத். இவர் 1961ல் உட்கட்சி பூசல் காரணமாக திமுகவில் இருந்து விலகி ‘தமிழ் தேசியக் கட்சி’ என்ற தனிக்கட்சியை கண்டபோது அவர் பின்னாலேயே கண்ணதாசனும் போனார் ; இரு வண்ணத்தை உதறி விட்டு மூவண்ணத்தை நோக்கி.

ஆம். கவியரசின் அடுத்த அவதாரம் ஆரம்பமானது !

(வளரும்)

அடுத்து: புதிய பயணம்

vee.raj@rediffmail.com

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் -5

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


அரசியலில் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் ; அரசியல் மற்றும் சினிமாவில் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி ஆகியோர் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, தமிழ் சினிமாவில் திராவிட இயக்க நடிகர்கள் பட்டாளம் உருவானது. அவர்களில் 1. எம்.ஆர். ராதா, 2. கே.ஆர். ராமசாமி, 3. எஸ்.எஸ். ராஜேந்திரன் மற்றும் 4. எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். இந்த நான்கு பேரும் காமிரா முன் வசனம் பேசி போவோர்களாக இல்லாமல், திராவிட இயக்கத்தில் இணைந்து அதன் பிரச்சார பீரங்கிகளாகவும் விளங்கியவர்கள்.

இவர்களின் இந்த பயாஸ்கோப் பாலிடிக்ஸ்சை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
அவை : 1. தான் பின்தள்ளி இருந்துக் கொண்டு தான் சார்ந்துள்ள இயக்கத்தின் கருத்துகளையும் இயக்கத் தலைவர்களின் புகழையும் மாத்திரம் முன்னிலைப்படுத்துவது;
அதாவது இயக்கத்தின் ‘ ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்’ ஆக மாத்திரம் கடைசி வரையில் இருப்பது.
2. கட்சியையும் அதே நேரத்தில் தன்னையையும் முன்னிலைப்படுத்தி சமமான இரு தண்டவாளத்தில் சாமர்த்தியமாக பயணம் செய்வது

இந்த வகையில் பார்த்தால், நாலாம் ‘ரா’ மட்டுமே 2ம் வகையை சேர்ந்தவர். இந்த வகையை புதியதாக உருவாக்கியவரென்றே கூட சொல்லலாம். திராவிட இயக்க வரலாற்றில் தனி அத்தியாயமாவே ஆகி விட்ட அவரை பற்றி பின்னர் விரிவாக காணலாம்.
முதலில், முதலாம் வகையில் வரும் மும்மூர்த்திகளை பார்ப்போம்

**********
திராவிட இயக்க கலைஞர்களில் எம்.ஆர்.ராதா மூத்தவர். முன்னோடியும் கூட. 1907ம் ஆண்டு திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ராதா, பாலகனாக இருந்த போதே நாடக கம்பெனியில் சேர்ந்தார்.

அவர் வாலிபப் பருவம் எட்டிய போது, சுயமரியாதைச் சூறாவளி மையம் கொள்ளத் தொடங்கியிருந்த காலகட்டம். வழக்கம் போல் இந்த இளைஞனையும் பெரியார் பற்று பற்றிக் கொண்டது. இந்த அபிமானம், 1943ல் ‘திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றம்’ என்ற பெயரில் தனியாக நாடக கம்பெனி ஆரம்பித்து பகுத்தறிவு, சமூக சீர்திருந்த கருத்துகளை வலியுறுத்தும் நாடகங்களை நடத்தி கலக்குமளவுக்கு போனது.

இதனிடையே, சினிமாவில் நுழையவும் முயன்று வந்தார். 1940ல் ‘சத்தியவாணி’ என்ற படத்தில் கதாநாயகன் வேடம் முதன் முறையாக கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு நாயகன் வாய்ப்பு அவருக்கு தொடர்ந்திடவில்லை.

எனினும், நாடக உலகில் அவரது ஸ்தானம் நாயகனாகவே இருந்து வந்தது. போர்வாள், தூக்குமேடை என்று ஏராளமான நாடகங்கள். மூட நம்பிக்கைகளை முகத்தில் அறைந்தாற் போல் சாடினார். பகுத்தறிவு, விதவைகள் மறுமணம் என்று பெரியாரிய கருத்துகளை அவரது ஒவ்வொரு நாடகத்தின் மூலமும் பாமரர்களிடம் கொண்டு சென்றார். அன்றைய ஆட்சியாளர்கள் கெடுபிடியையும் அடக்குமுறையையும் ஏவி விடுமளவுக்கு ராதாவின் நாடகங்களில் அனல்பறந்தது.

சினிமாவைப் பொருத்தவரை, ராதா பெரியளவில் கதாநாயகனாக பரிமளிக்கவில்லையென்றாலும், காமெடியன், வில்லன், காமெடி கலந்த வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட வேடங்களில் தனது வித்தியாசமான குரல் தன்மை, வசன உச்சரிப்பு, பாடி லேங்குவேஜ் மூலம் ஜொலித்தார். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பெரியார் கருத்துகளை வசனங்களில் வெளிப்படுத்தினார், தனது பிரத்யேக பாணியில்.

தமிழ் சினிமாவில் அரசியல் மற்றும் சமூக அங்கதம் அல்லது நையாண்டிக்கு எம்.ஆர்.ராதாவே பிதாமகர் என்று சொல்லலாம் . மூட நம்பிக்கைச் சாடலானாலும், அரசியல் குத்தலானாலும் அவர் திரையில் ஒரு டயலாக்கை சாதாரணமாக விட்டாலும் கூட அது பெரும் கைத்தட்டலை தியேட்டர்களில் எழுப்பியதை யாராலும் மறந்து விட முடியாது.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்பது போல, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பெரியாரிய பிரச்சாரத்துக்கு ‘ரத்தக் கண்ணீர்’ படமே போதும்.

திராவிட கழகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய திருவாரூர் தங்கராசுவின் கதை, வசனத்தில் உருவானது தான் ‘ ரத்தக் கண்ணீர் ‘. முதலில் நாடகமாக ஒரு கலக்கு கலக்கி விட்டு 1954ல் திரைப்படமாக வந்தது. (திரைப்படமாக வெளி வந்த பிறகும் கூட ரத்தக்கண்ணீரை தொடர்ந்து நாடகமாக நடத்தப்பட்டது).

கலைப்பித்து என்ற பெயரில் போலி நாகரீகத்தில் மூழ்கிய கதாநாயகன் மோகன், பெற்றத் தாயையும் கட்டிய மனைவியையும் உதாசீனம் செய்து விலைமாது காந்தாவின் வீடே கதியென கிடக்கிறான். ஒரு கட்டத்தில் தொழு நோய் பீடிக்கப்பட்டு விலைமாதால் விரட்டியடிக்கப்படுகிறான். கண்பார்வை இழக்கிறான். தவற்றை உணர்ந்த அவன், தன்னிடம் எந்த தாம்பத்திய சுகத்தையும் அனுபவிக்காமல் பட்டமரமாக நிற்கும் மனைவியை அவளுக்கு ஆதரவாக இருக்கும் தனது நண்பனுக்கே மணமுடித்து உயிரை விடுகிறான்.

ஸ்திரி லோலனுக்கு வாழ்க்கைப்பட்டு குறைந்தபட்ச சுகத்தைக் கூட அனுபவிக்காமல் வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் விடும் கண்ணீர் தான் ரத்தக் கண்ணீர். இவர்களின் ரத்தக்கண்ணீரை மாற்ற இது போன்ற சீர்திருத்தம் (மறுமணம்) தவறில்லை. அவசியமானதும் கூட என்பதே ‘ ரத்தக்கண்ணீர் ‘ படத்தின் கதைக் கரு.

புரட்சிகரமான கருத்து. கடும் எதிர்ப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை. பகுத்தறிவும், சீர்திருத்தமுமாக வசனங்கள் ஒவ்வொன்றும் குத்தூசி தான்.

கதாநாயகன் மோகன் பாத்திரத்தில் எம்.ஆர்.ராதா. எதிர்மறை நாயகன் (ஆன்டி-ஹீரோ) பாத்திரமானாலும் தனது அலட்சிய நடிப்பாலும் வசன உச்சரிப்பு தொனியாலும் ரசிக்க வைத்தார் ராதா. மூட நம்பிக்கைகளை அல்லது சமய சடங்குகளை தாக்கும் போது நையாண்டியும், சீர்திருத்தக் கருத்து சொல்லும் போது நெருப்புத் துண்டுகளாக வசனங்கள்.
போதாதா ராதாவுக்கு !

கதாநாயகனுக்கு திருமணம் முடித்து சாந்தி முகூர்த்ததுக்கு நாள் நட்சத்திரம் பார்ப்பார்கள். அவரிடம் சந்திரன், சூரியன் என்று கிரகங்களின் நிலையை கூறி இன்றைக்கே நல்ல நாள் என்று ஜோசிய அந்தணர் சொல்வார். அப்போது விலைமாது காந்தா வீட்டுக்கு போகும் அவசரத்தில் இருக்கும் மோகனுக்கும் (நாயகன்) ஜோசியருக்கும் இடையே நடக்கும் உரையாடல்:

மோகன்: ” ஏய் மேன். இந்த சந்திரன், சூரியன், சுக்கரனெல்லாம் யாரு ?”
ஜோசியர்: ” அவாள்லாம் கிரகங்கள்”
மோகன் : ” இன்னைக்கு எனக்கு டைமில்லே. அவங்களையெல்லாம் இன்னைக்கி லீவு எடுத்துட்டு போயிட்டு நாளைக்கு வரச் சொல்லு மேன்”
———
அதே போல், தொழு நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வையையும் இழந்து பிச்சைக்காரனாக வரும் மோகன், ஒரு வீட்டில் ” தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்” என்று பக்தி பாட்டு பாடி பிச்சை கேட்பான். அப்போது அந்த வீட்டுக்காரன், ” அப்ப ஏன்டாப்பா. உன்னோட வியாதியை கோவிந்தன் தீர்த்து வைக்கலை ? ” என்று நக்கலாக சிரித்தபடி கேட்க, அலட்டிக்காமல் ராதா பதில் சொல்வார் பாருங்கள்:
” அப்பாடா. உங்களுக்கெல்லாம் புத்தி வந்திருக்கே.” – என்று சந்தோஷமாக குறிப்பிட்டு பெரியாரின் பிரச்சாரத்தால் ஜனங்கள் மத்தியில் பகுத்தறிவு பரவத் தொடங்கியுள்ளதாக மறைமுகமாக சுட்டிக்காட்டினார் ராதா.
————
இதையடுத்தக் காட்சியில், இன்னொரு குத்தல். ராதாவுக்கும் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் தர்க்கம்:

“மனுஷன் கடவுளை ஒரு இடத்துலே கும்பிடறான். இன்னொரு இடத்துலே உதைக்கிறான். ஆமா, திருவண்ணாமலையிலே தீபமெரிஞ்சா அரோகரான்னு கன்னத்துலே போட்டுகிறீங்களே. அதேன்?” – இது மோகன் (எம்.ஆர்.ராதா)

” ஆமா. அது அக்கினி பகவான் ” – இது எதிர் கதாபாத்திரத்தின் பதில்.

” அப்படியா. சரி. வூடு எரிஞ்சா மட்டும் ‘ஐயோ அம்மா’ன்னு அலர்றீங்களே. அப்போ உங்க அக்கினி பகவான் எங்கேடா? ” என்று நையாண்டியாக கேள்வி எழுப்பி, ” அடப் போடா.போ. பெருசா கடவுளுக்கு செக்கரட்டரியாட்டம் பேச வந்துட்டான் ” என்று அந்த கதாபாத்திரத்தை விரட்டியும் விடுவார் ராதா.
—————

‘வீட்டில் அசைவம் சாப்பிட மாட்டோம். ஜீவகாருண்ய கட்சியிலே சேர்ந்துட்டோம். உயிர்களை கொல்லக் கூடாதென்பது அதன் கொள்கை ‘ என்று கூறும் நண்பனிடம் ராதா விடும் டயலாக்:

“திங்கரத்துக்கும் கூட கட்சியை வெச்சிட்டாங்கடாப்பா. ஏண்டாப்பா. ராத்திரியிலே மூட்டபூச்சி கடிச்சா என்ன செய்வீங்க. சும்மா இருந்திடுவீங்களாப்பா?”
————
அதே போல் இன்னொரு பஞ்ச்:

” கஷ்டப்படும் போது உதவாமல் அவன் செத்த பிறகு மண்டபம் கட்டுற நாடுடா இது ”
———–

படத்தின் கிளைமாக்ஸில் தனது மனைவியை நண்பனுக்கு மறுமணம் செய்து வைக்கிறான்
மோகன் (எம்.ஆர். ராதா). பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த பெரியாரிய சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் இக்காட்சியில் அனல் பறக்க பிரசார மழையாக ராதா கொட்டும் டயலாக்:

” மதத்தை காப்பாற்ற புறப்பட்டிருக்கும் மதிவாணர்களே;
சமூகத்தை காக்க முனையும் பெரியோர்களே;
இந்த மறுமணம் தவறா?
தமிழ் மண்ணில் பிறந்த எவரும் இதனை தவறென்று சொல்ல மாட்டார்கள்.
என்னைப் போன்ற கண்மூடிகளால் எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டு
தங்களின் உணர்ச்சிகளை மறைக்க முடியாமல் அவமானமாகி விடுமோ என
ஆற்றிலோ குளத்திலோ விழுந்து ஆவி போக்கி கொள்கிறார்கள்.
இந்த அவல நிலை மாறட்டும். லட்சக்கணக்கான அபலைப் பெண்கள் சிந்தும்
ரத்தக்கண்ணீர் இனியாவது நிற்கட்டும்”
————
தனது சினிமா வாழ்க்கையில் திமுக நடிகர்களான எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர், மற்றும் காங்கிரஸ் அபிமான நடிகரான சிவாஜிகணேசன் ஆகிய கதாநாயகர்களின் படங்களில் நடித்திருந்தாலும் , பின்னாளில் சில சாமி படங்களில் கூட நடித்திருந்தாலும் தனது தி.க. லேபிளை மட்டும் ராதா இழந்து விடவில்லை. பெரியார் அபிமானியாகவே 1979ம் ஆண்டு நடிகவேள் எம்.ஆர்.ராதா
காலமானார்.

***********************
கே.ஆர்.ராமசாமி. திராவிட இயக்க நடிகர் என்பதற்கும் மேலாக அறிஞர் அண்ணாவின் பரம பக்தர் என்று சொல்வதே சரியாக இருக்கும். அண்ணாவுக்காக எதையும் செய்ய தயாராக இருந்த ராமசாமி, பக்கா தி.மு.க.காரர்.

அடிப்படையில் நாடக நடிகர் கே.ஆர்.ஆர். இவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக் குழுவில் இருந்தார். பிறகு சொந்தமாகவே நாடகக் கம்பெனி நடத்துமளவுக்கு உயர்ந்தார். திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டிருந்த கே.ஆர்.ஆர், தனது நாடகங்கள் மூலமாக திராவிட இயக்கத்தின் கருத்துகளை பரப்பி வந்தார்.

நாடகங்களில் நடித்துக் கொண்டே சினிமா வாய்ப்புக்கும் முயன்றார். 1940களின் மத்தியில் வெளியான ‘பூம்பாவை’ அவருக்கு முதல் படம். தொடர்ந்து சில படங்களில் சின்ன வேடங்கள் தான் கிடைத்தன. அறிஞர் அண்ணா கதை வசனத்தில் 1950ல் வெளியான ‘ வேலைகாரி ‘ படத்தில் கே.ஆர்.ஆருக்கு கதாநாயகன் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் ராமசாமியின் சினிமா வாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.

அதற்கடுத்தாண்டு அறிஞர் அண்ணாவின் எழுத்து வண்ணத்தில் வந்த ‘ ஓர் இரவு ‘ படத்திலும் ராமசாமியே நாயகன். ‘சுகம் எங்கே’ (1954) , ‘ சொர்க்கவாசல் ‘ (1954) உட்பட மொத்தம் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் தான் இவர் நடித்தார்.

திராவிட இயக்க நடிகர்களில் கே.ஆர்.ராமசாமி தான் முதலாவது கதாநாயக நடிகர். மற்றபடி தமிழ் டாக்கியில் இவரது தனி முத்திரை என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதை விட அண்ணா எழுதிய வசனங்களை திரையில் ஒலிபரப்பும் ‘ வாய்ஸ் ‘ ஆக மட்டுமே இருந்தார் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும். திரையில் தன்னை முன்னிலைப்படுத்திக்
கொள்ளாமல் கட்சியையும் அதன் கொள்கைகளையும் தலைவரையும் முதன்மைப்படுத்தவே விரும்பிய இவரது ஆழ்ந்த கட்சி விசுவாசமே இதற்கு அடிப்படை காரணமாக இருக்கலாம்.

கே.ஆர்.ஆர்., தான் சார்ந்திருந்த தி.மு.க., மீதும் அதன் தலைவர் அண்ணா மீதும் அதிக நேசம் வைத்திருந்தார். சினிமாவில் முன்னேறி பணம், புகழ் குவிப்பதை விட கட்சிக்காக உழைக்கவே விரும்பினார். சினிமாவை விட கட்சிக்காகவே பெரும்பாலான நேரங்களை செலவிட்டாரென திமுகவினர் இன்றளவும் நினைவுகூருகின்றனர்.

1951ல் சென்னையில் நடந்த திமுகவின் முதல் மாநில மாநாடு தொடங்கி அக்கட்சியின் மாநாடுகள் பலவற்றில் கே.ஆர்.ராமசாமியின் நாடகங்கள் இடம் பெற்று வந்தன.

திமுக துவக்கப்பட்டதும் அதில் அமைக்கப்பட்ட பொதுக் குழுவில் இடம் பெறுமளவுக்கு கட்சியில் அவருக்கு ஈடுபாடிருந்தது. நடிப்பும் பாடும் திறனும் ஒருங்கே அமையப் பெற்றிருந்ததால் கே.ஆர்.ராமசாமிக்கு ‘ நடிப்பிசைப் புலவர் ‘ என்று பட்டம் கொடுத்து மகிழ்ந்தது. திமுக. மேலும், திமுக சார்பில் முதன்முறையாக அவரை எம்.எல்.சி. பதவிக்கு தேர்ந்தெடுத்தும் பெருமைப்படுத்தியது கட்சி.

பின்னாளில் 1969ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘ நம்நாடு’ படத்தில் ஒன்றிரண்டு சீன்களில் மட்டும் வந்து போகும் கவுரவ வேடத்தில் நடித்தார் கே.ஆர்.ஆர்.

கடைசி வரை, நிறம் மாறாமல் தி.மு.க.காரராகவே இருந்து 5-8-1971 ல் மறைந்தார் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி.

********************

நிமிடத்துக்கு நிமிடம் ‘பிராண நாதா’, ‘கிருஷ்ணா கோவர்த்தனா’ போன்ற ரகத்தில் பாடல்கள் என்றிருந்த தமிழ் டாக்கியை தங்களின் துள்ளல் தமிழ் வசனங்களால் கையகப்படுத்தியிருந்த திராவிட இயக்கத்தாருக்கு அதற்கேற்ற வெண்கலக் குரல் வளத்துடன் கிடைத்தவர் தான் சேடப்பட்டியை சேர்ந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

நாடக நடிகராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான் எஸ்.எஸ்.ராஜேந்திரனும். சிவாஜி கணேசனும் இவரும் ஒரே சமயத்தில் அதாவது ‘ பராசக்தி ‘ படத்தின் மூலமே சினிமாவில் பிரவேசித்தவர்கள். ஆரம்பத்தில் தி.மு.க.காரராக இருந்த சிவாஜி சீக்கிரமே எதிர் முகாமிற்கு சென்று விட்டார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை , அவரைப் போலவே உயிரோட்டமான வசன உச்சரிப்பை கொண்டிருந்த ராஜேந்திரனை கொண்டு நிரப்ப பார்த்தது திமுக. அவருக்கு ‘லட்சிய நடிகர்’ என்ற பட்டத்தையும் கொடுத்து ஊக்குவித்தது.

எஸ்.எஸ்.ஆரும் திமுகவில் தீவிரமாக செயல்பட்டார். கட்சி நடத்திய போராட்டங்களில் பங்கேற்றார். 1962ல் நடந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் எஸ்.எஸ்.ஆருக்கு சீட் தந்தார் அண்ணா. அத்தேர்தலில் தேனித் தொகுதியில் நின்று சுமார் 12 ஆயிரத்து 800
வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வென்று எம்.எல்.ஏ.வும் ஆனார் எஸ்.எஸ்.ஆர்.

இந்திய வரலாற்றிலேயே, ஒரு அரசியல் கட்சி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆன முதல் சினிமா நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான். ( இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆரையே முந்தியவர் இவர்). பின்னர், திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாகவும் ஆக்கப்பட்டார் ராஜேந்திரன்.

1950களில் தனி திராவிட நாடு கோரிக்கையை தி.மு.க. பலமாக வலியுறுத்தி வந்த நேரம். எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த படங்கள் பலவற்றில் ‘ வெல்க திராவிட நாடு ; திராவிடர்கள்’ என்று அவர் மூலமாக திரையில் பேச வைத்தது திமுக எழுத்தாளர்களின் பேனா.

வசனங்களை விடவும் பாடல்கள் கூடுதல் வலிமையானவை. வானொலி மற்றும் இசைத் தட்டுகள் மூலமாக எந்நேரமும் மக்களை சென்றடையக் கூடியவை. அவர்கள் (மக்களின்) வாயில் எளிதாக ரீங்காரமிடுபவை என்று திராவிட இயக்க சினிமாக்காரர்கள் உணர்ந்து சினிமா பாடல் வரிகள் மூலமாகவும் தங்கள் பிரசாரத்தை வலுவாக இறக்கத் தவறவில்லை.

அப்போது தீவிர தி.மு.க.காரராக இருந்த கவிஞர் கண்ணதாசன் தயாரித்த ‘ சிவகங்கைச் சீமை ‘ (1959) படத்தில் கீழ்கண்ட பாடலை பாடிக் கொண்டே எஸ்.எஸ்.ஆர்., அறிமுகமாவார்.

(பாடலாசிரியர் – கண்ணதாசன்)
” வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது
………………………………………..
…………………………………………
தன்னிகரில்லா மன்னவர் உலகில் தமிழே நீதிபதி
……………………………………
தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும் திராவிடத் திருநாடு…”

ராஜேந்திரன் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த ‘ அம்மையப்பன்’ ( 1954) படத்தில்
‘ திராவிடப் பொன்னழகை வாழ்த்திடுவாயே ‘ என்று பாடல் வரும். (கதை வசனம் :
மு.கருணாநிதி)

அதே 1954ம் ஆண்டு வெளியான ‘மனோகரா’வில் கதாநாயகன் சிவாஜிகணேசனின் தோழனாக வரும் எஸ்.எஸ்.ஆர்., படத்தின் கிளைமாக்ஸில் “கடமை கண்ணியம் கட்டுப்பாடு கடைசியில் வென்றே தீரும்” என்று அழுத்தந்திருத்தமாக டயலாக் சொல்லி படத்தை முடிப்பார் (வசனம்: மு.க).

அதே போல், எஸ்.எஸ்.ஆர். நடித்த ‘ தங்கரத்தினம் ‘ (1960) படத்தில் , “துன்பம தீராதோ..” எனத் தொடங்கும் பாடலில்,

” ஜாதி ஒழியாதோ- இந்த சஞ்சலம் தீராதோ
நீதி தழைக்காதோ- நாட்டில் நேர்மை நிலைக்காதோ..” என்று வரிகள் வரும். இந்த பாடலை எழுதியவர் வேறு யாருமில்லை எஸ்.எஸ்.ஆரே தான்.

அதே படத்தில் மற்றொரு பாடலில் , ” என் இதய வானிலே உதயசூரியன் எழுந்தது…” என்று வரிகள் வரும். ( திமுகவின் சின்னம் ‘உதயசூரியன்’ என்பதை நினைவில் கொள்க)

எஸ்.எஸ்.ஆர். நடித்த ‘தங்கதுரை’ (1972) படத்தில்
” மனிதனும் இங்கே தன்னை மறந்தான்
கடவுளைத் தேடி கண்ணை இழந்தான்
அன்பே தெய்வமென்றால் அதை யாரும் நம்பவில்லை.
…………………………….
……………………………….
பாவ புண்ணியம் பேசிப் பேசி பறந்தது காலமடா
உண்டு தெய்வமென்று சொல்ல மனமே கூசுதடா ”
– என்று கடவுள் மறுப்பு கொள்கை பிரச்சாரம் செய்யப்பட்டது.

கருணாநிதி கைவண்ணத்தில் உருவான ‘ அவன் பித்தனா’ (1966) படத்தில் பிரபலமான ‘ இறைவன் இருக்கின்றானா’… என்ற பாடலில் ” மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவனில்லை” என்று எஸ்.எஸ்.ஆர்., வாயால் சொல்ல வைக்கப்பட்டிருக்கும்.
—————————-
பின்னர், ஒரு கட்டத்தில் திமுகவிலிருந்து விலகி பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொண்டு விட்டு தற்போது தீவிர அரசியலில் இருந்தும் சினிமாவிலிருந்தும் ஒதுங்கியிருக்கிறார் லட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர்.

(வளரும்)

அடுத்து: ‘வனவாசம்’ ?

——————————————————-

vee.raj@rediffmail.com

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 3 – இரட்டைக்குழல் துப்பாக்கி

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


– டேக் 3 –

இரட்டைக்குழல் துப்பாக்கி

ஈ.வெ.ரா. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த போது காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரைக்கு முறுக்கான
வாலிபப் பருவம். பெரியாரின் கடவுள் மறுப்பும், பிராமண எதிர்ப்பும் மற்ற பிராமணர் அல்லாத இளைஞர்களைப் போலவே சி.என். அண்ணாதுரையையும் (அப்போது kancheepuram அல்ல. canjeevaram என்றே குறிப்பிடப்பட்டு வந்தததால் ‘கே.என்’. அல்ல. ‘சி.என்’. தான்) ஈர்த்தது. சற்று அதிகப்படியாகவே ஈர்த்தது எனலாம்.
படிக்கும் காலத்திலேயே பெரியாரின் கருத்துக்களில் மனதை பறிகொடுத்த சி.என்.அண்ணாதுரை, 1934ல் அவரை முதன் முறையாக நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பை பெற்றார். பின்னர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து திராவிடர் கழகத்தில் தொடர்ந்து (ஜஸ்டிஸ் கட்சி, 1944ல் திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது) 1949ல் பிரிந்து செல்லும் வரை பெரியாரின் நிழலாக தொடர்ந்தார். சி.என்.ஏ.,வுக்கு தமிழிலும் அதற்கு இணையாக ஆங்கிலத்திலும் நல்ல புலமை . விஷய ஞானத்துடன் வசீகரமான மேடைப் பேச்சு. அத்துடன் எழுத்தும் கூடப் பேசும். கேட்க வேண்டுமா, இளைஞர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்த அந்த இயக்கத்தில் வசீகர மையமாக ஆனார். ஆரம்பத்தில் ‘ தோழர் அண்ணாதுரை’யாக இருந்தவர் விரைவிலேயே ‘ தளபதி அண்ணா ‘ வாக உயர்ந்தார். பெரியாரின் போர் வாளாக கொண்டாடப்பட்டார்.

ஆனால் 1949ல் இந்த வாள், உறையிலிருந்து வெளியேறிட பெரியார்- மணியம்மை திருமண விவகாரம் காரணமாக அமைந்தது. இது
பொருந்தாத் திருமணமென எதிர்ப்பு தெரிவித்து அண்ணா தலைமையில் ஒரு பிரிவினர் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தனர். ‘ திராவிட முன்னேற்றக் கழகம் ‘ என்று பெயரிடப்பட்ட அக்கட்சி, சென்னையில் 17-9-1949ல் முறைப்படி துவக்கப்பட்டது.

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரின் குருகுலத்தில் பயின்றாலும் அண்ணாவின் பார்வை இரு விஷயங்களில் குருவிடமிருந்து மாறுபட்டதாக இருந்திருக்க வேண்டும். அவை: 1. காங்கிரஸ் இயக்கத்துக்கு போட்டியாக திராவிட இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது; 2. நாடகம், சினிமா போன்ற கலை ஊடகங்களை குறிப்பாக வெகுஜன சாதனமாக விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருந்த பேசும் சினிமாவை (Talkie – டாக்கி) பிரச்சாரச் சாதனமாக பெருமளவில் பயன்படுத்திக் கொள்வது ஆகியவை ஆகும்.

தி.க.,விலிருந்து வெளியேறிய வேகத்தில் அவ்விரு அம்சங்களையும் முழுவீச்சில் கையாளத் தொடங்கி திராவிட இயக்கத்தின் புதிய பரிமாணத்துக்கு விதை போட்டார் அண்ணா.

தி.க.,விலிருந்து அண்ணா விலகியதும், அவர் கலைவாணரின் ‘ நல்லதம்பி ‘ படத்தின் மூலமாக சினிமாவில் முதலடி வைத்ததும் ஒரே ஆண்டில் (1949) நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளாகும். தமிழ் சினிமாவில் திராவிட இயக்கத் தாக்கத்துக்கு பாதை காண்பித்தவர் கலைவாணர் என்றால், ‘ நல்லதம்பி ‘ மூலம் முதல் காலடி பதித்து, பயணத்தை துவக்கி வைத்தவர் அண்ணா.

இயல்பாகவே கலைத் துறையில் அண்ணாவுக்கு மிகுந்த ஆர்வமுண்டு. கழக மாநாடுகளின் நிகழ்ச்சி நிரல்களில் கட்சி நாடகங்களும் இடம் பெறும் அளவுக்கு முக்கியத்துவமும் ஊக்கமும் கொடுத்தார். அவ்வளவேன், அண்ணாவே ‘சந்திரோதயம்’, ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ போன்ற சில நாடகங்களை எழுதி நடித்துமுள்ளார்.

************

தி.க.விலிருந்து பிரிந்து வந்தாலும் அதன் காரம், குணம் மணத்துடனே தான் திமுகவும் பிறந்தது. ஆரம்பத்தில் நாத்திக வாதம், கடவுள் மறுப்பு (பின்னாளில் ‘ ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று பிடி தளர்ந்தது வேறு விஷயம்) பிராமணிய எதிர்ப்பு, திராவிட நாடு பிரிவினை, ஆரியர்- திராவிடர் பேதம், இந்தி எதிர்ப்பு, சமூக நீதி என்று தாய் கழகத்தின் பிரதிபிம்பமாகவே தன்னை காட்டிக் கொண்டது சேய் கழகம் (திமுக). தனது இலக்கு இளைஞர்கள், பாமர மற்றும் நடுத்தர மக்கள் குறிப்பாக பிராமணரல்லாதோர் தான் என்பதில் தெளிவாக இருந்தது.

அதற்கேற்ப பிரச்சார எந்திரத்தை தமிழ் சினிமாவில் களம் இறக்கி விட்டார் அண்ணா. ‘இந்து மத கடவுளர்கள், புராண, இதிகாசங்கள், சடங்கு சாஸ்திரங்கள் போன்றவை ஒட்டு மொத்தமாக பிராமணிய மேலாதிக்கத்தின் அடையாளங்கள்; பிராமண அல்லது மேல்ஜாதிகள் என்று அழைக்கப்பட்ட இதர பிரிவினரின் மேலாதிக்கமே ஜாதி பேத தீண்டாமைக் கொடுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட சமூக அவலங்களுக்கு காரண கர்த்தா’ என்பதே அந்த பிரசாரத்தின் மையக் கரு.

அண்ணா சினிமாவுக்கு எழுதிய கதை, வசனங்கள் இந்த கருவை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன. வைதீகத்தையும். சாஸ்திர சம்பிரதாயங்களையும், ஜாதகம் ஜோதிடம் போன்றவற்றையும் கிழித்த அவரது பேனா, கலப்பு மணம், விதவைத் திருமணம், போன்ற சீர்திருத்தங்களை வலியுறுத்தியது. அத்துடன் பிராமணியத்தின் பிம்பமாக ஆரியர்கள் என்ற கருத்துரு உருவாக்கப்பட்டு திராவிடப் பெருமையும் பிரச்சாரம் செய்யப்பட்டது. பிராமணியத்தின் முத்திரை மோதிரமாக வடமொழி அடையாளம் காட்டப்பட்டு அதனை ஓரம் கட்டும் நோக்கமாக தமிழ்மொழி, தமிழ்நாடு பெருமையைத் தூக்கி நிறுத்த முனைப்புக் காண்பிக்கப்பட்டது.
“ஒன்றல்ல இரண்டல்ல தம்பி- சொல்ல
ஒப்புமையில்லாத அற்புதம் தமிழ்நாட்டில்”
– இது அண்ணா கதை வசனத்தில் உருவான ‘தாய் மகளுக்குக் கட்டியத் தாலி’ (1959) படத்தில் வைக்கப்பட்டப் பாடல். இதை எழுதியவர் அண்ணாவின் உற்ற நண்பர் , திராவிட இயக்க அபிமானியான உடுமலை நாராயணகவி.

‘ நல்லதம்பி ‘ தவிர ‘ ஓர் இரவு’ (1951) , சமூக ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டும் ‘ வேலைக்காரி’ (1949) , சொர்க்கவாசல் (1954) , விதவை திருமணத்தை வலியுறுத்திய ‘காதல் ஜோதி’, பெண் மோகம் பிடித்த செல்வந்தரின் முகத்திரையை கிழிக்கும் ‘ நல்லவன் வாழ்வான்’, ‘ ரங்கோன் ராதா’ (1956), ஜாதி பேதம் பேசி ஏழைகளை சுரண்டும் பசுத்தோல் போர்த்திய புலியை அடையாளம் காட்டும் ‘ வண்டிக்காரன் மகன் ‘ உள்ளிட்ட திரைப்படங்கள் அண்ணாவின் கைவண்ணத்தில் உருவானவை. இவற்றில் சில அவரே கதை வசனம் எழுதியவையும் உண்டு. கதை மட்டும் அவருடையதாகவும் சில படங்களும் உண்டு.

தனது அரசியல் எதிராளிகளை சாடும் சாடலுக்குள் தங்களது இயக்க கருத்துகளை அல்லது மேன்மையையும் இழையோட செய்யும் சாமர்த்தியத்திலும்; சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லுவதற்கும், செல்லமாகக் குட்டுவதற்கும் கூட சினிமாவை பயன்படுத்திக் கொண்டதில் திராவிட இயக்க கலைஞர்களை மிஞ்ச ஆளில்லை. ‘ நல்லவன் வாழ்வான் ‘ படத்தில் கதாநாயகன் (எம்.ஜி.ஆர்) , பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு நடப்பு சேர்மனை (எம்.ஆர்.ராதா) தோற்கடிப்பார். வெற்றி மாலையுடன் நாயகன் நேராக, மாஜி சேர்மனிடமே சென்று எந்த பகையுணர்வும் இன்றி “இந்த வெற்றி உங்கள் வெற்றி ஐயா” என்ற ரீதியில் பேசி வாழ்த்து கோருவார். பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்தாலும் அவர் தான் என்றைக்கும் என் தலைவர் என்று தான் அடிக்கடி சொல்லி வருவதை இதன் மூலமும் அண்ணா வெளிப்படுத்தியிருப்பதாக கட்சியினரால் உணரப்பட்ட காட்சி இது.

பாமரர்களும் புரிந்துக் கொள்ளும் அதே நேரத்தில் புலமையான தமிழ் நடையில் வசனங்கள்; கோர்வையாய் எதுகை மோனை; கருத்துக்களையும் சாடலையும் படத்தின் பாடலில் கூட வைக்கச் செய்யும் செய் நேர்த்தி. எதிர்தரப்பை (இந்துமத கடவுளர்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், பிராமணர்கள், புராண இதிகாசங்கள் போன்றவை) நேரடியாக முகத்திலறைந்தாற் போல் பட்டவர்த்தனமாக குத்திக் குதறாமல் காட்சியமைப்பு அல்லது எழுத்து வன்மை மூலம் பார்ப்போரை புரிந்துக் கொள்ளச் செய்யும் சாதுர்யம்.

– திரையுலகில் அறிஞர் அண்ணா கையாண்ட இந்த பாணி , தொடர்ந்து திராவிட இயக்கக் கலைஞர்களால் காலச் சூழ்நிலைக்கேற்ப
பின்பற்றப்பட்டதென்றால் அது மிகையாகாது.

ஒரு கட்சியை தோற்றுவித்து அதனை வளர்த்து ஆட்சிக் கட்டிலில் ஏற்றி உட்கார வைத்த கடும் அரசியல் பணிகளுக்கிடையில் அண்ணா ஏறக்குறைய பத்து படங்களுக்கு தனது எழுத்துப் பங்களிப்பை அளித்துள்ளார். 1967ல் தமிழகத்தின் முதலமைச்சராகி 3-2-1969ல் மறைந்தார். அதற்கு பிறகும் அவர் தனது பெயர் மூலமாகவோ, புகைப்படங்கள், கருத்துகள் வாயிலாகவோ இன்றளவும் தமிழ் சினிமாவில் இடம் பிடித்துக் கொண்டு தானிருக்கிறார்.

********************************

தமிழ் டாக்கியில் முழக்கம் செய்த திராவிட இயக்க துப்பாக்கியின் ஒரு குழல் அண்ணா என்றால் இன்னொரு குழல் மு.கருணாநிதி. பயணத்தை துவக்கியவர் முதலாமவர் என்றால், காங்கிரீட் தளம் போட்டு அந்தப் பாதையை வலுவாக்கியவர் இரண்டாமவர். அரசியல் வாழ்வில் முன்னவருக்கு தளபதியாக விளங்கினாலும் சினிமாவிலோ அவருக்கு ஓரிரு ஆண்டுகள் பின்னவரே சீனியர். இவர் சினிமாவுக்குத் தந்த எழுத்துப் படைப்புகளும் அதிகம். இந்த விஷயத்தில் குருவையே மிஞ்சிய இந்த சிஷ்யன் அடுத்த அத்தியாயத்தில் வருவார்.

(வளரும்)

அடுத்து : ‘ ராஜகுமாரி ‘

—————————————————————————————

vee.raj@rediffmail.com

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 2

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


டேக்-2

‘ தீனா…மூனா..கானா ‘

வர்ணாஸ்ரம சனாதன கொள்கையை காங்கிரசும் காந்தியும் தாங்கிப் பிடிப்பதாக கோபித்துக் கொண்டு அக்கட்சியிலிருந்து வெளியேறிய ஈ.வெ.ரா.பெரியார், 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார்.

ஒத்தக் கருத்துடைய ஜஸ்டிஸ் பார்ட்டி என்றழைக்கப்பட்ட நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் 1938ல் தேர்ந்தெடுக்கப்படும் வரை சுயமரியாதை இயக்கம் நீடித்தது. இயக்கம் தான் கலைக்கப்பட்டதே தவிர, கொள்கைகள் அல்ல. தனது சித்தாந்தங்களை மக்கள் முன் வைக்க சு.ம. இயக்கத்தாருக்கு , நீதிக்கட்சி அகலமானதொரு தளமாக அமைந்ததெனலாம். மிட்டா மிராசுகளின் கட்சி என்று பரவலாக கருதப்பட்டு சாமானிய மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருந்த நீதிக்கட்சியை பாமரனிடம் கொண்டு சென்றார் பெரியார்.

அவரது சளைக்காத போராட்டத்தின் விளைவாக சமூக நீதி, பகுத்தறிவு போன்ற கருத்துகள் சாமானிய மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருந்த காலகட்டம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புதிய கவர்ச்சியை உண்டாக்கியிருந்தது. கடவுள் மறுப்பும் வைதீக எதிர்ப்பும் புதிய சிந்தனையின் அடையாளமாக அவர்கள் மத்தியில் மையம் கொள்ள ஆரம்பித்திருந்தது.

அவ்வாறு கவரப்பட்டவர்களில் நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணனும் ஒருவன். அந்த தாக்கத்தின் விளைவாக, பகுத்தறிவுச் செய்தியை தமிழ் டாக்கியில் முதன் முதலாக பதிவு செய்து புதியக் கணக்கைத் துவக்கியவனும் அந்த இளைஞனே.

நாகர்கோவில் ஒழுகினசேரியில் 29-11-1908 அன்று சுடலைமுத்து – இசக்கியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவன் கிருஷ்ணன். மிகச் சாதாரண குடும்பம். சாப்பாட்டுக்கே சிரமம். ஆரம்பப் பள்ளிப் படிப்பை கூட முழுசாக முடிக்க முடியாதபடிக்கு கஷ்ட ஜீவனம். அதனால் அக்காலத்திய நிலமைப்படி, பாய்ஸ் நாடகக் கம்பெனியொன்றில் சேர்ந்து ஒரு மாமாங்கத்துக்கு மேல் பணியாற்றினான் கிருஷ்ணன். பின்னர் பேசும் தமிழ் சினிமாவில் நுழைய முயன்றான். போராடினான். இறுதியில் வென்றும் காண்பித்தான்.
அந்த கிருஷ்ணன் தான், இறந்தும் இன்று வரை நம்முடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

*********

குட்டிக்கரணமடிப்பது, தத்துபித்தென உளறுவது, ஆட்டின் வாலை அளப்பது, ஆனைக்கு அல்வா கொடுப்பது போன்ற வகையிலான கோணங்கித்தனங்களே காமெடிகளாக இருந்து வந்த தமிழ் டாக்கியில் முதன் முறையாக நகைச்சுவைக்கு அந்தஸ்தும் அர்த்தமும் ஊட்டியவர் கலைவாணர். அரசியலையும் கூட.

கலைவாணர் நடித்து முதலாவதாக வெளி வந்த சினிமா ‘சதிலீலாவதி (1936). சமூகப் படம். ( பின்னாளில் திராவிட இயக்க வரலாற்றிலும் தமிழ் சினிமாவிலும் தவிர்க்கவே முடியாத சக்தியாக உருவெடுத்த எம்.ஜி.ஆர்., ஒரு சின்ன துக்கடா வேடத்தில் அறிமுகமானதும் இந்த படத்தில்
தான்)

நாடகக் காலத்திலேயே பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்டிருந்த என்.எஸ்.கே., சினிமாவில் பிரவேசித்ததும் அவற்றை தனது முதல் படத்திலேயே சாதுர்யமாக நுழைத்தார். ( எல்லிஸ் டங்கன் என்ற அமெரிக்கர் இயக்கிய அப்படத்தில் அதற்கான வாய்ப்பும் என்.எஸ்.கே.,வுக்கு அமைந்ததை அதிருஷ்டமென்று குறிப்பிட்டலாமா! ) ‘சதிலீலாவதி’யில் கோழி முட்டையும் சாராயத்தையும் ‘காந்தர்வ ஆகாரம்’ என பெயரிட்டு உண்ணும் ஒரு பிராமணர் கதாபாத்திரத்தில் நடித்து ஆதிகால பிராமணனின் சுபாவமாக காண்பித்து ஒரு கலக்கு கலக்கினாராம் கலைவாணர். ஏற்கனவே பெரியாரின் கைங்கரியத்தால் பிராமணிய எதிர்ப்பென்பது வசீகர விஷயமாக அப்போது இளைஞர்கள் மத்தியில் பரவி வந்த
நிலையில், புதுமுகக் காமெடியன் கிருஷ்ணனின் இந்த ‘மூவ்’ உடனடியாக ‘ஒர்க்கவுட்’ ஆனது.

அதையடுத்து பட வாய்ப்புகள் மளமளவென கிடைக்க தொடங்கின. பக்த துளசிதாஸ் (1937), திருநீலகண்டர், மாணிக்கவாசகர் (1939), சந்திரகாந்தா என அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக 1940களில் கலைவாணரின் திரை வாழ்க்கை உச்சத்துக்குப் போனது. என்.எஸ்.கே.,வின் காமெடி டிராக் இருந்தால் தான் படம் போணியாகுமென்ற நிலை உருவானது.

அவரும் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை வெறும் பணம் பண்ணும் சந்தர்ப்பங்களாக கொள்ளாமல், சமுதாயத்துக்கு உருப்படியாக பயன்படுத்திக் கொள்ளவே முயன்றார். மீனவனா.. குமாஸ்தாவா.. கோயில் பட்டரா..ஹரிகதா பாகவதரா…துப்புரவுத் தொழிலாளியா…இப்படி எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதன் மூலமாக பகுத்தறிவு சுயமரியாதைக் கருத்துக்களை வெளிப்படுத்தினார். அதையும் பாமரர்களுக்கு புரியும்படியாக பேசினார். பாடினார்.
“காசிக்கு போனால் கரு உண்டாகுமென்ற
காலம் மாறிப் போச்சு- இப்போ
ஊசியைப் போட்டா உண்டாகுமென்ற
உண்மை தெரிஞ்சி போச்சு…”

– என்று பளீரென அறைந்தார்.

“மாயவன் நாவில் அவள்
உறைவது நிஜமானால்
மலஜலம் கழிப்பதுமெங்கே ? எங்கே?”

– இது ஒரு படத்தில் கலைவாணர், பிரம்மாவையும் (மாயவன்) சரஸ்வதியையும் (அவள்) வம்புக்கிழுத்து பாடினார்.

இன்னொரு படத்திலோ “பாலில்லாமல் குழந்தைகள் அழும் போது கடவுளுக்கு பாலும் பழமும் அபிஷேகமும் அவசியம் தானா?” என்று
கேட்டார். திருஞானசம்பந்தர் குழந்தையாய் இருந்த போது அவருக்கு பார்வதி தேவியே நேரில் பிரசன்னமாகி ஞானப்பால் ஊட்டிய புராண கதையையும் அவர் விட்டு வைக்கவில்லை. பார்வதியிடம் பால் குடித்த உடனேயே அக்குழந்தை, இறைவன் மீது பதிகங்களை பாட ஆரம்பித்து விட்டதாமே என்று அப்போது சுயமரியாதை இயக்கத்தார் செய்து வந்த கிண்டல் கேலியை ‘பூம்பாவை’ என்ற படத்தில் பாடலாய் பிரதிபலித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.

மேலும், கலைவாணர் சொந்தமாக தயாரித்து நடித்த ‘மணமகள்’ படத்தில் அவரே பாடிய பாடல் வரிகள்:-
” சாத்திரங்கள் பொய்யென்ப தெதனாலே – ஏ
மாத்துகிற வார்த்தையுமிருப்பதாலே !
சாதிமதம் இல்லையென்ப தெதனாலே? – மனம்
சமத்துவம் தானடைந்த தன்மையாலே !”

அதேபோல் அவர் தயாரித்து கதாநாயகனாக நடித்து சக்கைப் போடு போட்ட படம் ‘ நல்லதம்பி’. பரோபகாரியான ஜமீன்தாராக வருவார். அப்படத்தில் மதுரத்துடன் சேர்ந்து பாடுவார்:
” மனுஷனை மனுஷன் ஏச்சு பிழைச்சது அந்தக் காலம்…” என்று ஆரம்பித்து வரும் பாடல்.
நெனைச்சதையெல்லாம் எழுதி வச்சது அந்தக்காலம் – எதையும்
நேரில் பார்த்தே நிச்சயிப்பது இந்தக் காலம்.
மழை வருமென்றே மந்திரம் ஜெபிச்சது அந்தக் காலம்- மழையை
பொழிய வைக்கவே யந்திரம் வந்தது இந்தக் காலம்.
………………………………….
…………………………………
துரோபதை தன்னை துகிலுரிஞ்சது அந்தக் காலம் – பெண்ணை
தொட்டுப் பாத்தாச் சுட்டுப்புடுவாள் இந்தக் காலம்.
………………………………..
…………………………………
சாஸ்திரம் படிச்சது அந்தக் காலம்;
சரித்திரம் படிப்பது இந்தக் காலம்
கோத்திரம் பார்த்தது அந்தக் காலம்;
குணத்தைப் பார்ப்பது இந்தக் காலம்
– என்று ஒரு பட்டியலேப் போட்டு சனாதனிகளை ஒரு வாங்கு வாங்குவதுடன் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளின் தாக்கம் சமுதாயத்தில் வேகமாக பரவி வருவதாகவும் இப்பாடல் மூலம் கோடிட்டுக் காட்டினார் கிருஷ்ணன்.

அதே படத்தில் இன்னொரு காட்சி. பத்திரிகை நிருபராக வரும் ஒரு கதாபாத்திரம் ஜமீன்தார் என்.எஸ்.கே.வை பேட்டியெடுத்து முடித்து விட்டு விடை பெறும் போது ” ராமா..ராமா..” என்று சொல்லியபடியே எழுந்து கிளம்ப, உடனே அதே வேகத்தில் ” ராவணா…ராவணா.” என்று திருப்பி (திருத்தி) சொல்லி வழியனுப்பி வைப்பார் கலைவாணர். ( புராண ஸ்ரீராமரை எதிர்த்து வீரப்போர் புரிந்த இலங்கை வேந்தன் இராவணனை, ஆக்கிரமிப்பு ஆரிய இனத்தை எதிர்த்து நின்ற திராவிட இனத்தின் குறியீடாக சித்தரித்து அப்போதிருந்தே திராவிட இயக்கத்தார் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது)

மேலும் அதே ‘ நல்லதம்பி ‘யில் கோயில் சென்று ஆண்டவனை வழிபட அனுமதி மறுக்கப்பட்ட நந்தனாரின் சரித்திரத்தை தனது கொள்கை பிரசாரத்துக்கேற்ப மாற்றியமைத்து ‘கிந்தனார்’ என்ற தலைப்பில் கதாகாலட்சேப காட்சி வைத்தார் கலைவாணர். இந்த காலட்சேபத்தில் பண்ணை வேலைக்கார பையன் கிந்தன், கல்வி பயில சென்னை பட்டணத்துக்கு செல்ல பண்ணையாரிடம் அனுமதி கேட்க, அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பண்ணையார் கிந்தனிடம் சொல்லுவார்:-
“காடுகரை உழைக்கும் பிழைப்பு- அது
கடவுள் நமக்கமைத்த அமைப்பு.
ஏடெழுத்தாணி கொள்ளும் படிப்பு- மிக
ஏற்றமான ஜாதிக்காம் அந்த பொறுப்பு”

-என்று ஜாதிய மேலாதிக்க மனோபாவத்தின் தோலுரித்துக் காட்டினார் கிருஷ்ணன்.

சிவகவி (1944) என்றொரு படம்; தியாகராஜ பாகவதர் நடித்தது. அதில் கிராமத்து ஏழைத் தொழிலாளியாக வருவார் கலைவாணர். ஒரு காட்சியில் தனது நண்பன் கதாபாத்திரத்துடன் கோயிலுக்கு போவார். கோயில் கதவு மூடியிருக்கும்.
என்.எஸ்.கே : வெளியில் இருந்தே பாட்டுப்பாடி பூஜை செய்யப் போறேன். அம்மன் கதவை திறந்து வெளியே வரமாட்டாளாயென்ன ?”
நண்பன் : அதெப்படி ? தேங்கா, பழமெல்லாமில்லாம பூஜை செய்வே?
என்.எஸ்.கே : ஏண்டா, தேங்காயும் பழத்தையும் காட்டி சாமியை ஏமாத்தவா பாக்குறீங்க?
நண்பன்: அது போகட்டும். அப்படியும் உன்னாலே பூஜை செய்ய முடியாதே.
என்.எஸ்.கே.: ஏன்?
நண்பன் : நீ தான் குளிச்சி சுத்தமாயில்லையே.
என்.எஸ்.கே : அப்போ, தவளையும், பாம்பும், மீனும் சதா சர்வகாலமும் தண்ணீக்குள்ளாரயே கிடந்து சுத்தமாயிருக்கு. அப்ப, அதுங்க
பூஜை பண்ணலாமா ? போடா. மனசு சுத்தமாயிருந்தாலே போதும்டா.

– இது நண்பன் பாத்திரத்துக்கு சொல்லப்பட்டதல்ல. உண்மையில், ‘ கோயில்களில் பூஜை செய்யும் உரிமை குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கே தான் காலம் காலமாக இருந்து வர வேண்டுமாயென்ன? ‘ என்கிற திராவிட இயக்கத்தின் கேள்வியே கலைவாணர் வாயிலாக மக்கள் மன்றத்துக்கு சொல்லப்பட்டது.

இவ்வாறாக பெரியாரியக் கருத்துகளை கலைவாணர் சினிமாவில் பிரச்சாரம் செய்து வந்த அதே நேரத்தில் காந்தி மீது தான் கொண்டிருந்த அபிமானத்தையும் அவர் வெளிப்படுத்த தவறவில்லை. உதாரணமாக ‘நல்லதம்பி’யில்,
” உலகில் முதலில் கள்ளை ஒழித்ததும் எம்தமிழ்நாடு.
உத்தமர் காந்தியின் சொல்லை நன்றாய்
உணர்ந்து நடப்பதில் எமக்கில்லை ஈடு.
……………………………………..
………………………………………
இந்தக் கள்ளுக்குடியை
நம்ம நாட்டை விட்டு
ஒழிச்ச அந்த நல்ல மனுஷங் காலுக்கு
கோடி கோடி கும்பிடு “

-என்று பாடி தனது காந்தி நேசத்தையும் வெளிப்படுத்துவார் என்.எஸ்.கே.

***************

இதற்கிடையில் கலைவாணர் புகழின் உச்சியில் இருந்தபோது, சென்னையில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் 1944ல் கைதாகி 1947ல் விடுதலையானார். சிறைக்கு போய் திரும்பிய பிறகும் என்.எஸ்.கே.வின் செல்வாக்கு குறைந்து விடவில்லை. சினிமா மார்க்கெட் சரிந்திடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதற்கு பிறகு தான் அவர் பல படங்களை சொந்தமாக தயாரித்து வெற்றியும் கண்டார்.
அப்படி அவர் தயாரித்தப் படங்களில் குறிப்பிடத்தக்கது தான் ‘ நல்லதம்பி ‘. அப்போது பெரியாரின் பிரதான சீடராகவும் (திராவிட இயக்க மொழியில் ‘தளபதி’ ) அவரது இயக்கத்தின் போர்வாளாக வர்ணிக்கப்பட்டவருமான சி.என்.அண்ணாதுரையின் பேச்சாற்றல் முக்கியமாக எழுத்தாற்றல் கலைவாணரை வெகுவாக ஈர்த்திருந்தது. அண்ணாவை சினிமாவுக்கு இழுக்க கிருஷ்ணன் விரும்பினார். அதற்கான ஆற்றலும் ஆசையும் அண்ணாவுக்கும் இருக்கவே அவரது கதை வசனத்தில் ‘ நல்லதம்பி’ படத்தை 1949ல் கலைவாணர் தயாரித்து வெளியிட்டார்.

ஆக, ‘ நல்லதம்பி’ வாயிலாக அண்ணா, சினிமாவில் காலடி எடுத்து வைக்கவும் அதன் மூலமாக திராவிட இயக்கத்தின் நங்கூரம் அசைக்க முடியாதபடிக்கு தமிழ் சினிமாவினுள் இறங்கவும் என்.எஸ்.கே., அடிகோலினார் என்றால் அது மிகையாகாது.

‘ நல்லதம்பி ‘ வெளியான அதே ஆண்டு தான் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் இயக்கம் உருவானது. பெரியாரின் கருத்துகளில் மனதை பறி கொடுத்திருந்த கலைவாணர், அதே கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்த திமுக மீதும் அபிமானம் கொண்டிருந்தார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் , அண்ணாவின் தளபதியாகவும் திமுகவின் போர்வாளாகவும் வர்ணிக்கப்பட்ட – எழுத்தாற்றல்மிக்க மு.கருணாநிதியையும் தான் தயாரித்த ‘ மணமகள்’ (1951) படத்துக்கு இழுத்துப் போட்டுக் கொண்டார். (இதற்கு முன்பே 1947லேயே ராஜ்குமாரிபடத்தின் மூலம் வசனக்கர்த்தாவாக மு.க., அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

பின்னர் 1952ல் ‘பணம்’ தயாரித்தார். இதிலும் கதை வசனம் மு.க., தான். ‘ பராசக்தி ‘ மூலம் பிரபலமாகி அப்போது திமுக நடிகராக கொண்டாடப்பட்ட சிவாஜி கணேசன் தான் கதாநாயகன்.

புதியதாக உருவாகியிருந்த தி.மு.க.வுக்கு ஊக்கம் கொடுக்கும் நோக்கிலோ அல்லது தி.க.வும், தி.மு.க.வும் அடிப்படையில் ஒன்றே என்று சொல்ல விரும்பியோ என்னவோ, ‘பணம்’ படத்தில் பரபரப்பான அரசியல் பாடல் ஒன்றை வைத்தார் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். காங்கிரஸ் அல்லாத ஒரு அரசியல் இயக்கத்தின் அதாவது திராவிட இயக்கத்தின் இருப்பு அல்லது துதி , முதன்முறையாக தமிழ் சினிமாவில் பட்டவர்த்தனமாக முகத்துக்கு நேராக தூக்கி காண்பிக்கப்பட்டது இந்த பாடல் மூலம் தான் எனலாம். அது தான் ‘ தீனா…மூனா…கானா..” . இந்த பாடலை எழுதியவரும் அப்போது தீவிர திமுககாரராக இருந்த கவிஞர் கண்ணதாசனே.

” தீனா…மூனா…கானா – எங்கள்
தீனா…மூனா…கானா.
அறிவினை பெருக்கிடும்
உறவினை வளர்த்திடும், எங்கள் (தீனா)
பகுத்தறிவோடு நாட்டினர் வாழ்
திருக்குறள் தந்தார் பெரியார்
வள்ளுவப் பெரியார்! – அந்தப்
பாதையில் நாடு சென்றிடவே- வழி
வகுப்பதும் அதன்படி நடப்பதும், எங்கள் (தீனா)
கருப்பு சிவப்பு என்ற பேதத்தை நீக்கும் – தலை
கனத்தைக் குறைத்து நல்லத்தன்மையுண்டாக்கும்.
……………………………………..
…………………………………………….
தனயன்மாருகளுக்கொரு தந்தையைப் போலே
தங்கைகளுக்கொரு தமக்கையைப் போலே
தம்பிமாருக்கொரு அண்ணா போலே
சரியும் தவறும் இதுவெனக் காட்டும்
தமிழன் பெருமையை நிலை நாட்டும்
எங்கள் தீனா..மூனா…கானா..
எங்கள் தி…மு…க…! “

இந்தப் பாடலை என்.எஸ்.கே. பாடுகையில், பெரியார், அண்ணா என்று வரும் போது அந்த வார்த்தைக்கு தரும் விசேஷ அழுத்தத்திலேயே அவரது அபிமானமும், நோக்கமும் பளிச்சென புலப்படும். அதே போல் ‘தீனா..மூனா…கானா.. வுக்கு பாடல் ஆரம்பத்தில் ‘ திருக்குறள் முன்னணிக் கழகம் ‘ என்று அர்த்தம் சொல்லி விட்டு, பாடல் கடைசியில் முடியும் போது ‘ எங்கள் தி..மு…க…’ என்று அழுத்தந் திருத்தமாக சொல்லி முடித்து வைப்பார் என்.எஸ்.கே.

இப்படியாக, தமிழ் டாக்கியில் திராவிட இயக்கத்துக்கு இடம் பிடித்துக் கொடுத்து விட்டு 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி மண்ணுலகை விட்டுப் பிரிந்தார் வள்ளல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

(வளரும்)

அடுத்து: ‘ இரட்டைக் குழல் துப்பாக்கி ‘


vee.raj@rediffmail.com

Series Navigation

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 1

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்



‘ சிவாஜி பலப்பம் ‘ ! சிலேட்டில் எழுதுகிற மாவுக் குச்சி. பல்பொடி சிவப்புக்கு அடுத்து வெள்ளை, பச்சை என்று மூவர்ணம் அப்பியிருக்கும். இதை ‘காங்கிரஸ் பலப்பம்’ என்றும் சொல்வதுண்டு.

‘ எம்ஜார் பெல்ட் ‘ ! மலிவான வழு வழு பிளாஸ்டிக்கில் சுமார் ஒரு அங்குல அகலத்துக்கு பட்டை. அதை கறுப்பு, சிவப்பு
பளிச்சென பிரிக்கும். டவுசரை சுற்றி அதை அணிந்துக் கொண்டு, அடிக்கடி சட்டையைத் தூக்கிக் காண்பிப்பதில் விசேஷப் பெருமிதம்.

இது தவிர பாம்பே மிட்டாயிலும் கூட இந்த வர்ண பேதங்களுண்டு. பரோட்டாவுக்கு பிசைந்து வைத்த மாவு போலிருக்கும் இனிப்பு வஸ்து. வானவில் கணக்காய் பல வண்ணங்கள் சேர்ந்த கலவையாக இருக்கும் அந்த இனிப்பு மாவை துணிப் பந்தைப் போலச் சுருட்டி , சுமார் நான்கடி உயரமிருக்கும் கம்பின் தலையில் சொருகி வைத்துக் கொண்டு வருவது தான் ‘பாம்பே மிட்டாய்’.

கம்பை, ஒரு குழந்தையைப் போல வாஞ்சையுடன் தோளில் சாய்த்து வைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்தை குறி வைத்து வருவான்
மிட்டாய் வியாபாரி. கம்பை இறக்கி, அதன் உச்சியில் ‘உட்கார வைத்திருக்கும்’ இனிப்பு மாவிலிருந்து கொஞ்சம் பிய்த்தெடுத்து தன் கையாலேயே அதில் தொங்கட்டான் செய்து பொண்ணு பசங்க காதில் ஒட்டி விடுவான். வாட்சு செய்து பையன்கள் கையில் கட்டி விடுவான். ‘சிவாஜி செட்’ பையன்களுக்கு காங்கிரஸ் கலர்லே வாட்சு. நாங்களெல்லாம் ‘கருப்பு சேப்பு’. தவறியும் கலர் மாறிடாது. மாறிடவும் கூடாது.

இது போதாதென, ‘தொப்பை’ என்றும் ‘ கெழவன்’ எனவும் பரஸ்பரம் கிண்டல் கணைகளை ஏவி மோதிக் கொள்வதுமுண்டு.

(கடந்த 1960-70களில், சிலேட்டு புத்தகங்களை மஞ்சத்துணிப் பையில் திணித்துக் கொண்டு ‘உஸ்கோலுக்கு’ போனவர்களுக்கு இதெல்லாம் இப்போதும் மறந்திருக்காதென சாமி சத்தியமாய் சொல்லலாம்)

முப்பத்தைந்து , நாப்பதாண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவோடு அரசியல் எந்தளவுக்குப் பின்னிப் பிணைந்து பள்ளிக்கூடங்கள் வரை வந்து விஸ்தாரமாக சம்மணமிட்டு அமர்ந்திருந்ததென்பதற்கு சின்ன சாம்பிள்கள் தான் மேலே குறிப்பிட்டவை. இது போல நிறைய…!
இன்னும் சொல்லப் போனால், மூணாம் வகுப்பு வரை நான், ‘ எம்ஜியாரின் அப்பா அறிஞர் அண்ணா ; சிவாஜியின் அப்பா கர்மவீரர் காமராஜர்’ என்று நினைத்திருந்த அளவுக்கு அந்த பிணைப்பின் இறுக்கம் இருந்தது.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாய் தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இடையே இருந்து வரும் இந்த
‘மாமன் – மச்சான்’ உறவு சரியா தப்பா என்று அடித்து துவைத்து அலசுவதல்ல இந்த தொடரின் நோக்கம். இவ்விரு துறைகளும் பரஸ்பரம் தங்களுக்குள் செய்துக் கொண்ட ‘ கொடுக்கல் வாங்கல்’ லுக்குள் கொஞ்சம் எட்டிப் பார்க்கும் முயற்சி தான் இது.

**************

” மகாத்மா காந்திகீ ஜே !”

21-10-1931. தெலுங்கோடு கலந்து ‘காளிதாஸ்’ , தமிழ் பேசிய அந்நாள் தொடங்கி கணக்குப் பார்த்தால் தமிழ் டாக்கீக்கு வயது இப்போது 75 ஆகப் போகிறது. இதர மொழிகளின் பேசும் படங்களுக்கு வயது இதை விட சற்றுக் கூடக் குறைய இருக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சியிலோ, தரத்திலோ பிரபல்யத்திலோ முந்தியும் கூட இருக்கலாம்.

ஆனால், பேசும் தமிழ் சினிமாவின் வரலாறோ அசாதாரணமானது. சினிமாக் காட்சிகளைப் போலவே சுவாரஸ்யமானது. தன் துறையையும் தாண்டிய திருப்பங்களையும் சலசலப்புகளையும் உள்ளடக்கியது. பிளாக் அண்ட் ஒயிட்டில் கட்சிகளின் கலர்களை காண்பித்தது. நீட்டி முழக்குவானேன் ! இந்த விஷயத்தில் தமிழ் டாக்கீ ஒரு ‘Trend setter’. உள்நாட்டளவில் மட்டுமல்ல உலகளவிலும் கூட.

தமிழ் டாக்கீயின் அதாவது பேசும் தமிழ் சினிமாவின் ’75’-ஐ இரண்டு காலகட்டங்களாக பிரிக்கலாம். அவை : 1. திராவிட இயக்கத் தாக்கத்துக்கு முன் ; 2. திராவிட இயக்கத் தாக்கத்துக்கு பின்.

முதலில் தி.இ.தா.மு.,-வை பார்ப்போம்.

பேசும் சினிமாவின் சக்தியை முழுமையாகப் புரிந்து வைத்துக் கொண்டு அதனை தங்களின் இயக்க வளர்ச்சிக்கு கெட்டிக்காரத்தனமாக பயன்படுத்திக் கொண்டு வளர்ந்த முதல் அரசியல் இயக்கம் உலகளவில் திராவிட இயக்கம் தான். அதற்கேற்ப, ‘விட்டகுறை தொட்டகுறை’யாக ஒன்றை பின் தொடர்ந்தே இன்னொன்றும் பிறந்தது. ஆம். திராவிட இயக்கத்தின் ஆணிவேரான ஈ.வெ.ரா.பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றி சுமார் ஆறு ஆண்டுகளுக்குள் தமிழ் சினிமாவும் பேச ஆரம்பித்து விட்டது. முன்னது நிறுவப்பட்டது 1925ல். பின்னது 1931ல்.

இதில் சுவாரஸ்யமான சங்கதி என்னவென்றால், பின்னாளில் ஈருடல் ஓருயிராகி சேர்ந்தே வளர்ந்த இந்த ‘இரு சகோதரர்’களும் ஆரம்பத்தில் கை கோர்த்திருக்கவில்லை என்பதேயாகும்.

அடித்தட்டு மக்களை தனது திசையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் , அப்போது வெகுஜன சாதனமாக உருவாகிக் கொண்டிருந்த பேசும் சினிமாவை பெரியதாகக் கருதவில்லை என்றே தெரிகிறது. நிழல்
பிம்பத்தை விட மக்களை நேருக்கு நேர் சந்திக்கும் பிரசார மேடைகளையும் எழுத்துக்களையுமே அந்த இயக்கம் அதிகம் நம்பியிருந்திருக்க வேண்டும். அல்லது அப்போது நிலவிய (நாட்டில் மட்டுமின்றி தமிழ் சினிமா துறையிலும்) அரசியல், சமூக சூழ்நிலையில், ‘கடவுள் இல்லை’ என்று சொல்லியும் வைதீகத்தை மட்டம் தட்டியும் வந்த சுயமரியாதை இயக்கத்துக்கு தனது கதவை திறக்க தமிழ் டாக்கீ தயங்கி இருந்திருக்க வேண்டும்.

எது எப்படியோ… அப்போது பக்த பிரஹலாதர்களின், சதி அனுசுயாக்களின் மகாத்மியங்களை பேசியளவுக்கு பகுத்தறிவோ, நாத்திக வாதமோ, திராவிடமோ பேசவில்லை தமிழ் சினிமா.

தமிழில் முதல் பேசும் படமான ‘ காளிதாஸ்’ (21-10-1931ல் ரிலீஸ்) தொடங்கி பட்டியலைப் பார்த்தாலே தெரியும். பாரிஜாத புஷ்பஹாரம், ராமாயணம், ஹரிச்சந்திரா (1932), பிரஹலாதன், சாவித்திரி, சீதா கல்யாணம், நந்தனார், வள்ளி (1933), கிருஷ்ண
லீலா, சக்குபாய், திரெளபதி வஸ்திராபரணம், பவளக்கொடி, தசாவதாரம், லவகுசா (1934), ராதா கல்யாணம், மார்க்கண்டேயா (1935)…. இப்படி பக்திப் பழமாக நீளும் இந்த பட்டியல்.

நடுநடுவே, ‘உஷா கல்யாணம் (அல்லது) கிழட்டு மாப்பிள்ளை’ (1936), ‘சுகுண சரஸா’ (1939) போன்ற கஷ்டங்களை மாத்திரமே சுமக்கும் பதிவிரதா சிரோமணிகளைப் பற்றிய சமூகப் படங்களும் ; ‘ மிஸ்டர் அம்மாஞ்சி’ (1937), ‘ மிஸ்டர் டைட் அண்ட் லூஸ்’ (1937), ‘ஏமாந்த சோணகிரி’ (1937) போன்ற அச்சுபிச்சு காமெடி டிராக் படங்களும் தலைகாட்டின.

இவ்வாறு புராண, இதிகாச பஜனைகள் – அழுமூஞ்சி, அம்மாஞ்சி அசட்டுத்தனங்களுக்கு மத்தியில்…அவ்வப்போது அரசியலையும் ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளவே செய்தது தமிழ் டாக்கீ. காலத்துக்கேற்ப காந்திய காங்கிரஸ் பேசி பயாஸ்கோப்பில் பாலிடிக்ஸ்க்கு துண்டை போட்டு ஆரம்பத்திலேயே ‘சீட் ரிசர்வ்’ செய்து விட்டதெனலாம்.

தமிழ் டாக்கீயின் ஆரம்ப காலமான 1930கள், நாட்டில் சுதந்திரப் போராட்டத்தின் தீவிர காலகட்டம். எம்.கே.காந்தி மகாத்மா காந்தியாக விஸ்வரூபமெடுத்து அவரது ஒற்றைச் சொல்லுக்கும் சின்ன அசைவுக்கும் கூட பெரிய ஒளிவட்டம் உருவாகியிருந்த நேரம். காந்திஜி, காங்கிரஸ், கைராட்டினம், கதராடைகள், வந்தேமாதரம், தேசாபிமானம், மதுவிலக்கு, பிரஜா சேவை போன்றவை பொது மக்கள் மத்தியில் போற்றுதலுக்குரிய அம்சங்களாக இருந்தன. இதை நன்கு உணர்ந்து வைத்திருந்த தமிழ் டாக்கீ இந்த ‘ஹாட் கேக்’குகளை சமயாசந்தர்ப்பத்துக்கு ஏற்ப கச்சா பிலிமில் சுட்டுத் தந்தது.

அந்தப் படங்கள் நிறைய காந்தியம் பேசின. காட்சிக்கு சம்பந்தமிருக்கிறதோ இல்லையோ முடிந்தளவுக்கு காந்தியை புகழ்ந்து தள்ளின. ‘வந்தேமாதரம் – காருண்ய மூர்த்தி மகாத்மாவின் தாரக மந்திரம்’ என்ற பாணியில் பாடின. கதர்சட்டை, காந்திக் குல்லாய் சகிதம் காங்கிரஸ் கெட்அப்பில் கதாபாத்திரங்கள் மதுவிலக்கு, கைராட்டினம் பற்றி நீண்ட லெக்சர்கள் அடித்தன.

முதல் தமிழ் டாக்கீயான ‘காளிதாஸ்’ படமே “ராட்டினம்; காந்தியின் கைபாணம்’ என்று பாடியதாம். தீண்டாமைக் கொடுமையைக் கதைக் கருவாகக் கொண்ட படம் ‘தேச முன்னேற்றம்’ என்ற டைட்டிலில் 1938ல் வெளி வந்தது. ‘ஹரிஜன சிங்கம் (1938), ‘மாத்ருபூமி’ (1939) என்றும் சில படங்கள் வந்தன. ஆனாலும் இது போன்று தீண்டாமைக் கொடுமையை பிரதானப்படுத்திய படங்களிலும் பெரும்பாலும் காந்தியப் பார்வையே மேலோங்கி காண்பிக்கப்பட்டதாக விமர்சனங்கள் உண்டு.

ஆக இப்படியாக… 1930கள் முழுவதும் உரக்கக் கேட்ட வைதீகப் பழம்பஞ்சாங்கச் சப்ளாக்கட்டைகளின் சத்தத்துக்கும், கதர் கோஷங்களுக்கும் மத்தியில், பேசும் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பகுத்தறிவைப் பதிவுச் செய்ய 1936ல் ஒரு குரல் சன்னமாக எழுந்தது; சுடலைமுத்து மகனின் உதட்டிலிருந்தும் உள்ளத்திலிருந்தும்.

(வளரும்)

அடுத்து : ‘தீனா..மூனா…கானா…’


vee.raj@rediffmail.com

Series Navigation