பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10

This entry is part of 28 in the series 20070315_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்டேக் 10

” வேட்டக்காரன் வருவான்… உஷார்” !

எம்.ஜி.ஆரோடு திமுக கட்சியும் திமுகவோடு எம்.ஜி.ஆரும் ஒருசேர படிப்படியாக வளர்ந்தனர். இந்த வளர்ச்சி 1960களில் உச்சாணிக்கு போனது.

1949ல் ஆரம்பிக்கப்பட்டு , 1957ல் முதன்முறையாக சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்து அதில் 15 இடங்களில் வென்ற திமுக, 1962 ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 50 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அதே போல் 1957ல் பாராளுமன்ற மக்களவையில் திமுகவுக்கு 2 உறுப்பினர்களாக இருந்தது , 1962ல் 7ஆக உயர்ந்தது.

பல ஆண்டுகளாக திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சு கொள்கையாக வர்ணிக்கப்பட்டு வந்த தனி திராவிட நாடு கோரிக்கையை , 1962ல் சீனப் படையெடுப்பு காரணமாக கைவிடுவதாக திடீரென அறிவித்து அகில இந்திய கவனத்தையும் ஈர்த்த அதே திமுக, 1965ல் பெரும் வாலிபர் பட்டாளத்தைக் கொண்டு மிகப் பெரியளவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி நாட்டையே அசர வைத்தது.

அதே போல், 1936ல் சினிமாவில் நுழைந்து திரையில் ஒரு ஓரமாக நின்று போகும் உதிரி வேடத்துக்கு கூட உத்தரவாதமின்றி அவதிப்பட்டு வந்த சாதாரணத் துணை நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், ‘ புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்’ ஆக ‘ மக்கள் திலகம் ‘ ஆக உயர நிமிர்ந்ததும் – ‘ எம்.ஜி.ஆரை போட்டு படமெடுத்தால் படம் எப்படி இருந்தாலும் முதலுக்கு மோசம் வராது. போட்ட பணம் நிச்சயம் வந்து விடும்’ என்ற நம்பிக்கை பெற்று சினிமா தயாரிப்பாளர்கள் அவரை மொய்த்ததும் ; MGR என்பதற்கு ‘Minimum Guarantee Ramachandran ‘ என்ற புது விளக்கமே தமிழ் சினிமா உலகில் உலாவியதும் இதே காலகட்டத்தில் தான்.

தனக்கு திமுக முக்கியம் என எம்.ஜி.ஆரும் ; தங்களுக்கு எம்.ஜி.ஆர். அவசியம் என்று திமுகவினரும் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு பரஸ்பரம் தங்களின் பங்களிப்பை பரிமாறிக் கொண்டனர்.

திமுகவில் எம்.ஜி.ஆருக்கு உரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டது. அவர் மீது கட்சித் தலைவர் அறிஞர் அண்ணா தனி அபிமானம் காண்பித்தார். அரவணைத்து சென்றார். 1962ல் எம்.ஜி.ஆரை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி மகிழ்ந்தார்.

‘கட்சி நடத்தும் போராட்டங்களில் எம்.ஜி.ஆர். பங்கேற்காமல் படப்பிடிப்புக்கு போய் விடுகிறார் ‘ என்று அப்போதே கட்சியில் ஒருசாரார் ஆட்சேபம் தெரிவித்த
நிலையிலும், எம்.ஜி.ஆருக்கு சாதகமாகவே நின்றார் அண்ணா. நடுத்தர, ஏழை மக்கள் மத்தியில் சினிமாவிற்கிருக்கும் சக்தியையும் அதில் எம்.ஜி.ஆருக்கிருக்கும் வலுவான ஸ்தானத்தையும் நன்கு உணர்ந்திருந்த அண்ணா, எம்ஜிஆரை எந்நிலையிலும் விட்டுத் தர தயாராக இல்லை.

தனது ‘ மடியில் விழுந்த இதயக்கனி’ என்றும் ; ‘ முகத்தை காண்பித்தாலே போதும் கட்சிக்கு பல்லாயிரம் ஓட்டுகள் தானாக வந்து விழும் ‘ எனவும் அவர் எம்.ஜி.ஆரை பகிரங்கமாகவே புகழ்ந்தார். மேலும் கட்சியின் தளபதியாக தொண்டர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த கலைஞர் கருணாநிதியும் தனது தோழர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகவே இருந்தார்.

அதற்கு ஈடாக எம்.ஜி.ஆரும் தன் பங்கிற்கு திமுகவுக்காக கடுமையாக உழைத்தார். கட்சிக்காக நிதி அள்ளி வழங்கினார். சினிமாவில் மட்டுமின்றி தேர்தல் சமயங்களில் சினிமா படப்பிடிப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு இரவுப் பகல் பாராமல் ஊர் ஊராக கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டும் திமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார்.

கட்சியின் மற்ற தலைவர்கள் போல் அடுக்கு மொழிப் பேச்சுத்திறன் எம்.ஜி.ஆருக்கு கொஞ்சமும் இல்லையென்றாலும் அவரது கவர்ச்சியும் அவருக்கிருந்த ‘இமேஜ்’ம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது. அவரை நேரில் பார்க்கவும் பேச்சை கேட்கவும் ஆயிரக்கணக்கில் ஜனங்கள் பசி, தூக்கத்தையெல்லாம் மறந்து அங்குமிங்கும் நகராமல் மணிக்கணக்கில் பொறுமையாகக் காத்திருந்த அந்த அபிமானம், அன்றைக்கும் சரி.. இன்றைக்கும் சரி.. வேறு யாருக்குமே வாய்க்கவில்லை. (இப்போதைய 45+ வயசுக்காரர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்).

பொதுவாக சினிமாக்காரர்களையும் சினிமாவையும் லட்சியம் செய்யாதிருந்த
காங்கிரஸ் தலைவர் காமராஜரையே, சென்னையில் ஒரு தேர்தல் பிரச்சாரமொன்றில் ” ஓட்டு கேக்க வேட்டக்காரன் வருவான். உஷார். மயங்கிடாதீங்க” என்று சொல்லி ஓட்டு கேட்ட வைத்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. ( 1964ல் சாண்டோ சின்னப்பதேவர் தயாரிப்பில் எம்ஜிஆர்
நடிப்பில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட படம் ‘ வேட்டைக்காரன்’ )

**********

தமிழ் டாக்கியின் முகம் 1960களில் மாறியது. ராஜாராணி கதைகள் காலாவதியாகி சமூகப் படங்களுக்கும், மேலைநாட்டு ஜேம்ஸ்பாண்டு பாணி துப்பறியும் படங்களுக்கும் மவுசு ஏற்பட ஆரம்பித்தது.

இயல்பாகவே தனக்கு அமைந்த சுபாவத்தால் இந்த மாற்றத்தின் நாடித்துடிப்பை துல்லியமாக புரிந்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அதற்கேற்ற வியூகத்தை வகுத்துக் கொண்டார். மக்களின் இப்போதைய மனோநிலை என்ன ? அவர்களிடம் எளிதில் மாற்றி விட முடியாத நம்பிக்கைகள், அபிப்பிராயங்கள் என்னென்ன ? திமுகவின்
சித்தாந்தங்களில் எவை எவை மக்கள் மத்தியில் எடுபடும் ? எவையெல்லாம் தனது
சினிமா வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடும்? என்றெல்லாம் இக்காலகட்டத்தில் அவர் கணக்கிட்டு அதற்கேற்ப தனது சினிமா பிரச்சார உத்திகளை வடிவமைத்துக் கொண்டதாகவே தெரிகிறது.

திமுக கட்சி, அதன் தலைவர் அறிஞர் அண்ணா, கட்சிக் கொடி ‘கறுப்பு சிவப்பு’, கட்சிச் சின்னமான ‘ உதயசூரியன் ‘ , கட்சிப் பத்திரிக்கையான ‘முரசொலி’
( நண்பர் மு.க. நடத்தி வந்தது) ஆகியவற்றை மட்டுமே அவர் தனது படங்களில் முன்னிறுத்த அதிக ஆர்வம் காண்பித்தார்.

திராவிட இயக்க நடிகர் என்று அறியப்பட்டாலும் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை அவருக்கு திமுக தான் குறிப்பாக அண்ணா தான் பிரதானமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அறிஞர் அண்ணாவை எடுத்துக்காட்டியதை போல அவர் ஈ.வெ.ரா. பெரியாருக்கு செய்யவில்லை. அதாவது மற்ற திராவிட இயக்க நடிகர்கள் தங்களின் படங்களில் பெரியாருக்கு கொடுத்த அளவுக்கு முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆர். தரவில்லை எனலாம். (எம்.ஜி.ஆர். எந்த படத்தில் பெரியாரின் படத்தை காண்பித்து அவரை உயர்த்தி வசனம் பேசியிருக்கிறார் என்று ரொம்பவும் யோசித்து தான் பார்க்க வேண்டியிருக்கிறது).

அதே போல் வசனங்களின் மூலமாகவோ அல்லது காட்சிகள் வடிவிலோ கடவுள்களை மட்டம் தட்டி காட்சிகள் அமைத்ததில்லை எம்.ஜி.ஆர். மேலும், அவர் நாத்திகவாதத்தையும் மிகவும் நாசூக்காக பட்டும்படாமலும் தான் சினிமாவில் காண்பித்துக் கொள்வார். (சாம்பிள் உதாரணம்: ‘ ஒளிவிளக்கு ‘ படத்தில் செளகார் ஜானகிக்கு முருகன் சிலையை வாங்கி தரும் காட்சி).

இந்துசமய சடங்கு சம்பிரதாயங்களையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையும் கிண்டலடித்தும் இல்லை. ( 1970ல் வெளியான ‘எங்கள் தங்கம்’ படத்தில் வரும் கதாகாலட்சேபம் காட்சி மட்டும் விதிவிலக்கு. அப்படம் மு.க. குடும்பத்தை சேர்ந்தவர்கள் தயாரித்த படமென்பது குறிப்பிடத்தக்கது).

அதே போல், நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகங்கள் செய்த தலைவர்கள் மீதான பக்தியும் தேசப்பற்றும் வெகுஜனங்கள் மனதில் அழிக்க முடியாதக் கல்வெட்டாக பதிந்திருக்கும் நிதர்சனத்தைப் புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒருகட்டத்தில், மற்ற தி.இ. நடிகர்களிடமிருந்து வேறுபட்டு தேசிய முகத்தையும் சினிமாவில் காட்டத் துணிந்தார் எம்.ஜி.ஆர். தான் சார்ந்திருந்த இயக்கப் பிரச்சாரத்தின் ஊடே தேசிய உணர்வையும் கெட்டிக்காரத்தனமாக இழைத்து திரையில் ஓடவிட்டார்.

இதற்கு உதாரணமாக, நாடோடி (1966) படத்தில் இடம் பெறும்
” நாடு அதை நாடு – அதை நாடாவிட்டால் ஏது வீடு ?
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு.
…………………………………
……………………………….
பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறை மலைக் கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம் ”
-என்று தேசப் பற்றை ஊட்டி பாடிய இந்த பாடலில் ” வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம் ” என்ற வரி வரும் போது தனது முகத்தை ‘ டைட் குளோசப் ‘பில் காண்பிக்க வைத்து இந்த வரி தான் சார்ந்துள்ள திமுகவின் தொண்டர்களை உயர்த்துவதாக அர்த்தம் கொள்ள வைத்து குஷிப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.
———
இதே இணைப்பை ‘ இதயவீணை’ படத்தில் வரும் ‘காஷ்மீர் பியூட்டி·புல் காஷ்மீர்’ பாடலிலும் காண்பித்தார். அப்பாடலில்,
” என் தாய் திருநாட்டுக்கு வாசலிது
என்னாட்டவருக்கும் கலை கோவிலிது.
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமியிது ”
– என்றவர், இதே பாடலில்
” யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ ?
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ? ”
என்று காஷ்மீர் பிரச்னையையும் லேசாக தொட்டுப் போவார் எம்.ஜி.ஆர்.
———–
அடிப்படையில் மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர், தனது பக்தியை வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.

‘பணம் படைத்தவன்’ (1965) படத்தில் வரும் ” கண் போன போக்கிலே” பாடலில் ” மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ” என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்
எம்.ஜி.ஆர்.

இதே படத்தில் ” எனக்கொரு மகன் பிறப்பான்..” பாடலில்
” சாந்தி வழியென்று காந்தி வழிச் சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான் ”
– என்று ஆசைப்பட்டார்.
———–
‘ எங்க வீட்டுப் பிள்ளை’யில் (1965) ” நான் ஆணையிட்டால்…” பாடலில்,
” முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் – இந்த
மானிடர் திருந்திடப் பிறந்தார் – இவர்
திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.
அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ”
– என்று வருத்தப்பட்டார்.
———
” புத்தன் ஏசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா
ஏழை நமக்காக ”
– என்று ‘சந்திரோதயம்’ (1966) படத்தில் பாடலாக சொன்னார்.
———
நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்.ஜி.ஆர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:
” பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடியிலேயே போட்டுட்டு போயிட்டாங்க ”

அதே படத்தில் ” வாங்கையா வாத்தியாரய்யா…” பாடலில்,
” தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரமென்பதை அடைந்தோமே
ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
பலருக்கும் பயன் பெறச் செய்வோமே..”
– என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.
——
திமுகவினர் பாரதியை விட திராவிட இயக்கக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை உயர்த்திக் கொண்டாடி வந்த நிலையில், எம்.ஜி.ஆரோ அந்த தேசிய கவிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார். இவரது படங்களில் முக்காலே முழுவீசம் பாரதியார் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததே இதற்கு சான்று.
பெற்றால் தான் பிள்ளையா படத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..’ பாடலில்
” கவிதைகள் வழங்கு பாரதியைப் போல் ” என்று குழந்தைகளுக்கு அறிவுரையே செய்வார் எம்.ஜி.ஆர்.
**********
நிற்க. இனி எம்.ஜி.ஆரின் திமுக பிரச்சார முழக்கங்களில் நுழைவோம்.

(வளரும்)

அடுத்து: ” நான் ஆணையிட்டால்…”


vee.raj@rediffmail.com
————————–

Series Navigation