பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10

This entry is part of 57 in the series 20030717_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


காடுகள் குறித்த விவாத்ததில் மூன்று நிலைப்பாடுகள் காணப்பட்டன.காடுகள் அரசின் முழு உடைமை,அவற்றின் மீதான அதன் ஆதிக்கம் முழுமையானது, இதற்கு மாறாக உள்ள சலுகைகள்,விதிமுறைகள், நடைமுறையில் உள்ள உரிமைகள் விலக்கப்பட வேண்டும் என்று சிலர் வாதிட்டனர்.இன்னொரு பிரிவினர் முக்கியமான,மதிப்புமிக்க காடுகளின் மீதான கட்டுபாடு அரசின் வசம் இருக்கட்டும், பிற காடுகள் பழங்குடியினர்,சமூகங்கள் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்றனர்.வேறு சிலர் காடுகள் மீதான பாரம்பரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், அரசு இதில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது என்றனர்.அரசின் முழு உரிமையை ஆதரித்தோர் பயிரடப்படும் தனியார் நிலம் தவிர பிற நிலங்கள், காடுகள் அரசின் முழு உடமை, எனவே அரசு தரும் சலுககைகளாகவே பாரம்பரிய உரிமைகளை கருத வேண்டும்.அதைத் தருவதும், எவற்றை தருவது என்பதையும் தீர்மானிக்க வேண்டியது அரசுதான் என்றனர்.ஆனால் அப்போதிருந்த மதராஸ் அரசு இந்த வாதத்தை ஏற்க வில்லை.அவை சலுகைகள் அல்ல, உரிமைகள் என்றும்,காடுகள் பொதுச்சொத்து என்றே மதராஸ் ராஜதானியின் பல பகுதிகளில் கருதப்படுவதாகவும்,நடைமுறையில் உள்ள இந்த உரிமைகள் ஏற்கபடவேண்டும் எனவே அரசின் முழு உடமையாளராக அரசு இருக்க வேண்டியத்தில்லை என்று வாதிட்டது. பிராண்டிஸ் கிட்டதட்ட இந்த நிலைப்பாட்டினையே ஆதரித்தார்.பிராண்டிஸ் இதில் ஐரோப்பா/இங்கிலாந்தில் உள்ள நடைமுறையை இந்தியாவிலும் அமுலாக்கலாம்,எனவே காடுகள் மீதான அரசின் உரிமை,கட்டுப்பாடு பாரம்பரிய உரிமைகளை அங்கீகரித்து, சமூகங்களுக்கு நிர்வகிக்க உள்ள உரிமையை ஏற்பதாக இருக்க வேண்டும் என்றார்.ஆனால் அரசின் முழு உரிமை என வாதிட்ட பாடென் பெளல் இந்தியா காலனிய நாடு என்பதால் இங்கிலாந்தில் உள்ளதை இங்கும் அமுல் செய்யத்தேவையில்லை என்றார்.இந்த உரிமைகள் அரசின் மரத்தேவைகளுக்கு எதிரானவை, அரசின் முழுக்கட்டுபாட்டில் காடுகள் இருந்தால்தான் அரசு தன் தேவைகளுக்கு காடுகளை தடையேதுமின்றி பயன்படுத்த முடியும் என நம்பினார்.1874 ல் நடந்த மாநாட்டில் பிராண்டிஸ் கருத்திற்கு ஆதரவு குறைவாகவே இருந்தது.பெரும்பாலோர் அரசின் கட்டுப்பாடு,உரிமை குறித்த அவரது கருத்தினை நிராகரித்தனர்.அப்போதிருந்த விவசாயத்துறை செயலாளர் பெளல் கருத்தினையே பிரதிபலித்தார், ஆனால் மதராஸ் அரசு காடுகளில் அரசின் தலையீடு மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்று வாதிட்டது. பிராண்டிஸ் இந்த இரு முற்றிலும் எதிரான நிலைகளுக்கிடையே இடைப்பட்ட ஒரு நிலைய எடுத்த்தார்.அரசு காடுகள்,தனியார் காடுகள்,கிராமங்கள்,சமூகங்களின் காடுகள் என மூன்று வகைக்காடுகள் இருக்கட்டும்.அரசு தன் தேவைக்காக பெரிய பரப்பிலான காடுகளை மட்டும் எடுத்துக் கொள்ளட்டும்,பிறவற்றில் அதன் தலையீடு தேவையில்லை என்றார். ஆனால் இந்த சர்ச்சையில் அவரது நிலைப்பாடும்,மதராஸ் அரசின் நிலைப்பாடும் கடும் விமர்சனத்திற்குள்ளாயின. விவசாயத்துறை செயலாளர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். எனவே 1878 இயற்றப்பட்ட சட்டம் காடுகள் குறித்து ஒரு பெருமாறுதலைக் கொண்டுவந்தது.

இதன்படி மூன்று வகைக்காடுகள் ஏற்படுத்த்ப்பட்டன. ரிசர்வ் காடுகள் – இவற்றில் அரசின் கட்டுப்பாடு முழுமையானது,இவை முழுதும் அரசின் உடமை, இவற்றின் பயன் குறித்து அரசுதான் முடிவெடுக்கும்.இக்காடுகளில் தனியார் உரிமைகள்/சலுகைகள் கிடையாது.அப்படி இருந்தவையும் பிற பகுதிகளுக்கு மாற்றப்பட்டன.பாதுகாக்கப்பட்ட காடுகள்-இவற்றில் பிற(ர்) உரிமைகள் பதிவு செய்யப்பட்டாலும், ஏற்கப்படவிலலை.இக்காடுகளில் அரசு தன் தேவையைப் பொறுத்து பிற பயன்பாடுகளை(உ-ம் விறகு/சுள்ளி பொருக்குதல்,கால்ந்டை மேய்ப்பு) தடை செய்ய முடியும்.இக்காடுகளில் எவற்றை வளர்ப்பது என்பதும், எப்போது மரங்களை வெட்டுவது என்பதும் அரசின் உரிமைகள்.கிராமக் காடுகள் என்ற பிரிவினை ஏற்படுத்த சட்டம் வழிவகுத்தாலும், பல பகுதிகளில் அவை ஏற்படுத்த்ப்படவில்லை. இதன் விளைவாக இரண்டு வகைக் காடுகள் அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தன.காடுகள் அரசுடைமையாயின. அரசு தன் கட்டுப்பாட்டினை விரிவாக்க பாதுகாக்கப்பட்ட காடுகளையும் ரிசர்வ் காடுகள் என அறிவித்த்து.இதன் விளைவாக அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள ரிசர்வ் காடுகளின் பரப்பு அதிகரித்தது. 1878ல் அரசுக்காடுளின் பரப்பளவு 14000 சதுரமைல்கள், 1890 ல் ரிசர்வ் காடுகள் 56000 சதுரமைல்,பாதுகாக்கப்பட்ட காடுகள் 20,000 சதுரமைல், 1900 ல் ரிசர்வ் காடுகள் 81,400 சதுரமைல்கள், பாதுகாக்கப்பட்ட காடுகள் 3300 சதுரமைல் மட்டுமே.

இந்த சட்டத்தின் விளைவாக பல மாறுதல் ஏற்பட்டன.காடுகள் குறித்த் நிர்வாகம் அரசு வசம் வந்தபின் ‘விஞ்ஞான ‘ ரீதியான காட்டு நிர்வாகம் குறித்து அரசு கவனம் செலுத்தியது.

தொடரும்

Series Navigation