பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 9

This entry is part of 45 in the series 20030703_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


பிரிட்டனின் தேவைகளுக்காக ஐயர்லாந்து,வட கிழக்கு அமெரிக்கா உட்பட பல பகுதிகளிலிருந்த காடுகள் அழிக்கப்பட்டன.இரும்பு உற்பத்தி, கப்பல் கட்டுதல், ராணுவத்திற்கான கப்பல் கட்டுதல் போன்றவற்றிக்கு தொடர்ந்து மரப்பொருட்கள் தேவைப்பட்டது. எனவே இங்கிலாந்தில் உள்ள காடுகள் பயன்படுத்த்ப்பட்ட பின் புதிய காலனிகளிலிருந்து மரப் பொருட்களை தருவிப்பது ஊக்குவிக்கப்பட்டது.பிரிட்டனுக்காக சூரத்திலும்,மலபார் பகுதியிலும் கப்பல்கள் கட்டப்பட்டன, தேக்கு அப்போதைய மெட்ராஸ் ராஜதானி, பர்மா பகுதிகளிலிருந்து பெறப்பட்டது. மாராத்தாக்களை வீழ்த்திய பின்னர் மேற்க்கு இந்தியப்பகுதியிலிருந்த காடுகளும் கிழக்கிந்திய கம்பெனிவசமாயின.காடுகளை அழித்து விவசாய நிலங்களாக மாற்றுவது ஆதரிக்கப்பட்டது. நில வரி பெறவும், விவசாயத்தினை ஊக்குவிக்கவும் இவ்வாறு செய்யப்பட்து. ஆனால் ரயில்வே பாதைகள் கட்டுதல் துவங்கிய பின் காடுகளின் அழிப்பு புதிய உச்சதை எட்டியது.காடுகள் தேவைக்கு அதிகமாகவே அழிக்கப்பட்டன.

கர்வால்,குமாஒன் (இமாலய மலைப்பகுதிகள்) பகுதிகளில் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டன, தேவைக்கு அதிகமாக வெட்டப்பட்ட மரங்கள் அப்படியே விடப்பட்டன. ரயில்வேக்கு தேவையான கரியும் காடுகளிலிருந்தே பெற்ப்பட்டது. நிலக்கரி சுரங்கங்கள் பெருமளவில் தோண்டப்பட்டு, நிலக்கரியே பிரதானமான எரிபொருளாகும் வரை காடுகள் இதற்காகவும் அழிக்கப்பட்டன. இருப்புபாதைகள் அமைக்க தேவையான மரக்கட்டைகளும் காடுகளை அழித்தே பெறப்பட்டன. 1860 ல் இருப்புபாதையின் நீளம் 1349 கிமீ, இது 1910 ல் 51658 கிமீ .இதிலிருந்து காடுகளின் அழிவு குறித்து நாம் புரிந்துகொள்ள முடியும். இருப்புபாதை அமைக்க பொருத்தமான மரவகைகள் தவிர பிற மரவகைகளும் பயன்படுத்த்ப்பட்டன. காடுகள் இப்படி பொறுப்பற்ற முறையில் அழிக்கப்படுவதால் அவை முற்றிலுமாக விரைவில் அழிந்துவிடும் என்று எச்சரிக்கப்படும் அளவிற்கு காடுகள் அழிக்கப்பட்டன.இருப்புபாதை அமைப்பதற்காக வடமேற்கு இமாலயப் பகுதிகளிலிருந்த தியோதர் மரக்காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டன.இவ்வாறு இந்தியாவின் பலபகுதிகளிலும், பர்மாவிலும் காடுகள் நிர்மூலமாக்கப்பட்டன.

1864ல் காடுகளுக்கென ஒரு துறை ஆரம்பிக்கப்பட்டது.அப்போது ஐரோப்பாவில் காடுகள் நிர்வாகத்தில் ஜெர்மனி முதலிடத்திலிருந்தது. எனவே டைரிஷ் பிராண்டிஸ் என்ற ஜெர்மானியர் இத்துறையின் முதல் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். காடுகள் இவ்வாறு அழிக்கப்பட்டாலும், பல பகுதிகளில் காடுகள் உழவர்கள், பழங்குடியினருது கட்டுப்பாட்டில் இருந்தது. காடுகளின் மீதான அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும்,காடுகளை நிர்வகிக்கவும் 1865 ல் இந்திய காடுகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், 1878ல் இன்னொரு விரிவான சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் நிறைவேற்றப்படுமுன் ஒரு பெரியளவிலான விவாதமே நடந்தது. காடுகளின் நிர்வாகம், காடுகளின் மீதான பாரம்பரிய உரிமமைகள் உட்பட பல அம்சங்கள் இவ்விவாதத்தில் இடம் பெற்றன. கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு பின் காடுகளும்,அரசும் குறித்த விவாதத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் மூலத்தை இதில்

காணலாம்.

1865 சட்டம், இருப்பில் உள்ள உரிமைகள் பாதிக்காதபடி, காடுகளை உடனடியாக அரசு தன்வசம் மேற்கொள்ள இயற்றப்பட்டது.இதன் முக்கிய காரணம் ரயில்வேயின் தேவைக்காக காடுகளை அரசு குறிப்பிட்டு தன்வசமாக்கிக்கொள்ள உதவவே இது கொண்டுவரப்பட்டது. இதன் பின் 1869 ல் ஒரு சட்ட முன் வடிவு பிராண்டிஸால் முன்வைக்கப்பட்டது. 1874ல் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் 1865ல் இயற்றப்பட்ட சட்டம் விரிவாக ஆராய்ப்பட்டது.பின் 1875 ல் சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு 1878ல் புதிய சட்டம் இயற்றப்பட்டது.

(வெள்ளைக்காரன் கதை என்ற நாட்டுப்புற பாடலிலும் கப்பல் கட்ட உதவும் மரங்கள் பற்றி குறிப்புகள் உள்ளன என்று நினைக்கிறேன்.கைவசம் அதன் பிரதி இல்லாததால் இது பற்றி அதிகத் தகவல்கள் தரமுடியவில்லை)

(தொடரும்)

ravisrinivas@rediffmail.com

Series Navigation