விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தைந்து

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

இரா.முருகன்


1915 – நவம்பர் 30 ராட்சச வருஷம் கார்த்திகை 15 திங்கள்கிழமை ,

பட்டணம் இந்தப் பத்துப் பதினைந்து வருஷத்தில் எத்தனையோ மாறிடுத்து.

எல்லோரும் எந்தக் காலத்திலும் சொல்கிற வார்த்தைதான். நாசுக்காக கப்பலில் வந்து இறங்கி குடை பிடித்துக் கொண்டு சாரட்டில் போகிற துரையானாலும் சரி, தெவசம் செய்விக்கிற விஷ்ணு இலைக்கார ஸ்மார்த்த பிராமணனாக இருந்தாலும் சரி, கொத்தவால் சாவடியில் கத்தரிக்காயை மூட்டையாகக் கொட்டி வைத்து கூவிக் கூவி விற்கிற ஆற்காடு முதலியானாலும் சரி ஏகோபித்துச் சொல்கிற சொல். தெரிசாவும் இன்னொரு தடவை தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

நாளை மறுநாள் தான் கப்பல் ஏற வேண்டும். பம்பாய் வரை போய் அங்கே இன்னொரு கப்பல். அது ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு இங்கிலாந்து போய்ச்சேர கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிடும். டோவரில் இறங்கி, லண்டன். வீட்டில் ஒரு வாரம் இருந்து விருத்தியாக்கிவிட்டு, வர்த்தமானங்கள் ஏதும் இருந்தால் கவனித்து விட்டு, எடின்பரோவுக்குக் கிளம்ப வேண்டியதுதான்.

பீட்டர் வந்திருப்பானோ? வந்திருந்தால் எப்பாடு பட்டாவது தந்தி அடித்துச் செய்தி சொல்லி இருப்பானே.

கண்ணூரில் தம்பி வேதையன் வீட்டு விலாசத்தை பீட்டருக்கு இங்கே வர ஒரு மாதம் முன்னதாகவே கடுதாசு எழுதி அறிவித்து விட்டுத்தான் வந்திருக்கிறாள் தெரிசா.

போயர் யுத்தம் முடிந்திருந்தால் எங்கேயாவது அதைப் பற்றி பிரஸ்தாபம் இருக்கும். கண்ணூரில் இருந்தபோது அங்கே கிடைத்த இங்கிலீஷ் பத்திரிகையைப் புரட்டியபோது உள்நாட்டு விஷயங்களோடு லண்டன், எடின்பரோ என்று சொந்த தேசம் போல் இங்கிலாந்து விவரமும் அச்சடியாகியிருந்தது அவளுக்குப் பிடித்திருந்தது.

அக்கா, மலையாளப் பத்திரிகை கூட இருக்கு.

துர்க்கா பட்டன் கொண்டு வந்து கொடுத்த, நாலு தாள் பழுப்பு நிறத்தில் மடக்கி, மலையாளத்தில் அச்சாகி வந்திருந்த பத்திரிகையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள்.

ஒண்ணுக்கு ரெண்டாக ரெண்டு மதத்துக் காரர்களும் பத்திரிகை அச்சுப் போட்டு இறக்குவதாகவும் யாரும் யாரையும் தூற்றுவது இல்லை என்றும் முடிந்தால் பரஸ்பரம் பாராட்டவும் செய்கிறார்கள் என்றும் அந்தப் பத்திரிகைகளைப் படித்தபோது தெரிசா புரிந்துகொண்டாள்.

அப்புறம் இன்னொரு விஷயத்தையும் தெரிசா மலையாளப் பத்திரிகைகளில் கவனிக்க மறக்கவில்லை. சரமம் என்று தலைக்கெட்டு கொடுத்து பிரதேச வாரியாக யார் எங்கே மரித்தார்கள், எத்தனை வயசு, கூடப் பிறந்தவர்கள். கட்டியோள், குழந்தை குட்டி இப்படி சகலமான விவரமும் நாலைந்து வரிக்குள் அடக்கி அந்த மரண வார்த்தைச் செய்திகள் இருந்தன.

பத்திரிகை வீட்டு வாசலில் விழுந்ததும் எல்லோரும் பரபரப்பாக அந்த சாவுத் தகவல்களைத்தான் மலையாள பூமி முழுக்க மும்முரமாகப் படிப்பதைக் கவனித்தாள் தெரிசா.

கல்யாணம் விசாரிக்க யார் யாரோ வந்து கொண்டிருக்க, வேதையன் சாய்வு நாற்காலியில் ஓய்வாக உட்கார்ந்து சாவு விவரத்தில் லயித்திருக்க, காப்பியோடு வந்த பகவதி அதை கவனித்து விட்டு இரைந்தது இப்போதும் தெரிசாவுக்கு சிரிப்பு வரும் விஷயம்.

சரியாப் போச்சு. சாருகசேரியில் குந்தி இருந்து சாவுச் செய்தி படிக்க இதான் நேரமாடா வேதையா? ஆத்துலே கல்யாணம் நடந்து குழந்தை கட்டுக் கழுத்தியா, ஆம்படையானோடு வந்திருக்கா. அவளை ஆசீர்வதிக்க எத்தனையோ பெரிய மனுஷா வந்து போயிண்டு இருக்கா. அவாளுக்கு லட்டு உருண்டையும், கை முறுக்கும், நாரிங்கா வெள்ளமும் கொடுத்து, திரிச்சு போறபோது ஒரு பையிலே தேங்காயும் பழமும் நாலு வெத்தலை, அடக்காய் முதலானதும் வச்சுக் கொடுக்க நீதானே நின்னாகணும். ஊர்லே யார் துங்கி மரிச்சா, யார் முங்கி மரிச்சா, யார் ஜீவித காலம் முடிஞ்சு போய்ச் சேர்ந்தா அப்படீன்னு தெரிஞ்சுக்காட்ட என்ன குறைஞ்சு போகும் சொல்லு. நேரம் காலம் விவஸ்தை கிடையாதோடா உனக்கு?

பகவதி அந்தப் பத்திரிகையையும் பிடுங்கி மடியில் செருகிக் கொண்டு ‘போடா, வந்தவாளைக் கவனி’ என்று வேதையனை விரட்ட, அவன் சாடி வெளியே ஓடியதைப் பார்த்து திருப்தியாகச் சிரித்ததில் பரிபூரணம் முதல் நிறையில் இருந்தாள்.

கல்யாணத்தை ஒட்டி பத்து நாள் தம்பி வீட்டில் இருந்ததில் தெரிசாவுக்கும் பத்திரிகை வந்ததும் சரம வார்த்தை படிப்பதே முதல் நித்யக் கிரமமாகி விட்டது.

மலயாளிகள் எல்லோருக்கும் சாவோடு என்னவோ அவ்வளவு சிநேகிதம். இல்லாட்ட காலமானார் சேதிக்கு இவ்வளவு பிராபல்யம் இருக்குமா?

காலேஜ் வாத்தியார்களான மருதையனும் வேதய்யனும் இதைப் பற்றி தீவிர சர்ச்சை செய்து கடைசியில் வேதய்யன் சொன்னது –

மருதையா, இதிலே இருக்கற தால்பர்யத்தை, அதாவது ருஜியை தெரிஞ்சுக்கணும்னா நீ மலையாளியா பிறந்திருந்தாத்தான் சாத்தியம்.

பகவதி அந்தப் பக்கம் வரவே அச்சானியமான பேச்சுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இதர வர்த்தமானங்கள் மட்டுமே பேசப்பட்டன பிற்பாடு.

துர்க்கா பட்டன் குதிரை வண்டியில் அழைத்துப் போக கண்ணூர்க் கடைத் தெருவில் அப்பன் ஜான் கிட்டாவய்யன் அமோகமாக ஆரம்பித்து வைத்து, இப்பவும் குடும்பப் பெயரைச் சொல்லி விருத்தியாகிற சாப்பாட்டுக் கடையில் ஒருநாள் படியேறி எல்லாம் என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்தாள் தெரிசா.

இப்படி ஒரு சாப்பாட்டுக் கடையை வெள்ளைக்காரப் பட்டணத்திலே நடத்தினா எடுபடுமா அக்கா?

துர்க்கா பட்டன் வெகு யோசனையோடு விசாரித்தபோது, லண்டன் பட்டணத்தில் அவன் இட்டலியும் தோசையும் காசுக்கு ரெண்டு என்று கூவி விற்கிற கடை போட்டதைக் கற்பனை செய்ய தெரிசாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

அப்படி ஒரு கடை இருந்தால் ஆகாரம் பற்றி அவள் ஆயுசு முழுவதுமே கவலைப்பட மாட்டாள். சின்ன வயசில் கழிக்கப் பழகியது அதன் மணம், ருசி, நிறம் இத்யாதி சமாச்சாரங்களோடு மனதில் ஆழமாகப் பதிந்து அப்புறம் மிச்ச வாழ்நாள் முழுக்க அதையெல்லாம் தேடி ஏங்க வைக்கிறது.

இந்த ரொட்டியையும், பழக்கூழையும் புளிக்குழம்பு சேர்த்துப் பிசைந்த சாதமும், உண்ணி மாங்காய் உப்பேறியும் சட்டமாகக் கழித்துப் பழகிய மனுஷி எத்தனை காலம் சாப்பிட்டு ஜீவிக்க முடியும்?

லண்டனில் பிராமணாள் சோற்றுக்கடை போட்டால் இப்படி நாலு ஆத்மாவாவது சாப்பிட வந்து நிற்காதா? துர்க்கா பட்டனை அழைத்துப் போய் ஒரு கடை.

அவளுக்கு இந்தக் கற்பனையே ரசமாக இருந்தது. பகவதி அத்தையிடம் சொல்ல அவள் திருப்பிக் கேட்டாள்.

என்னத்துக்கு இப்படி அன்ன ஆகாரத்துக்குக் கூட ஏங்கிண்டு சமுத்திரம் தாண்டி கண்காணாத தூரத்திலே இருக்கணும். நீயும் ஆத்துக்காரரும் அரசூரோடேயே வந்துடுங்கோ. அவருக்கு போர்ட் பள்ளிக்கூடத்திலே கட்டாயம் ஹெட்மாஷ் உத்யோகம் கிட்டும். இல்லேன்னா சாமாவுக்கு எஜமான ஸ்தானத்திலே டெபுடி கலெக்டர் வாய்க்காம போயிடுமா என்ன?

அத்தைக்கு ஹெட்மாஸ்டர் உத்தியோகம் இந்த காலேஜ் வாத்தியார் வேலையை விட உன்னதமானது. டெபுடி கலெக்டர் உத்யோகமோ மகாவிஷ்ணு அவதாரம்.

மருதையன் பகவதியை ரொம்பப் பாவமாகப் பார்த்துக் கொண்டு சொல்ல, வேதையனுக்கு அது ஒரு சாக்காக அத்தையை கொஞ்சம் கேலி கிண்டல் செய்து ரசிக்க அயனான சந்தர்ப்பம்.

கண்ணூரிலே சாய்ப்பன்மார் சாப்பாட்டுக்கடை வேணும்னா பீட்டர் அளியனுக்கு நான் ஏற்படுத்திக் கொடுத்துடறேன். குரிசுப் பள்ளிக்குப் போற பாதிரி, கன்யாஸ்திரிகள், அப்புறம் இங்கே சதுர்வர்ண பிரமுக மனுஷ்யர்னு அல்லோலகல்லோலப்படும். மாம்சாதி பதார்த்தங்கள்லே தால்பர்யம் பெருத்த ஊர்னா இது. அதுவும் மத்ச்யம் கழிக்கறதுன்னா கேட்கவே வேண்டாம்.

சொன்னபடி பரிபூர்ணத்தைப் பார்க்க, அவள் இல்லையில்லை என்று சக்தமாகத் தலையாட்டி மறுப்புத் தெரிவித்தாள்.

ஏதோ அறியாப் பருவத்துலே சாப்பிட்டிருப்பேன். இங்கே கல்யாணம் கழிச்சு வர்றதுக்கு வெகு நாள் முந்தியே அந்த கருமாந்திரத்தை விட்டொழிச்சாச்சு. பூண்டு மட்டும் ஜன்மவாசனையோ என்னமோ விடாம ஒட்டியிருந்து உசிரை வாங்கறது.

பகவதி அவளைப் பரிவாகப் பார்த்துச் சிரித்தாள்.

என்ன உசிதமானதுன்னு படறதோ சாப்பிடுடி பரி. இவன் கிடக்கான். தொட்டதுக்கெல்லாம் கொனஷ்டையும் கேலியும். பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து மாமனாரும் ஆயாச்சு. இன்னும் பாரு, சாருகசேரயில் சோம்பரா சாஞ்சுண்டு சரம வார்த்தையிலே நாளப்பாட்டு நம்பூதிரியோட சம்பந்தக்கார ஸ்திரியோட மாதா மரிச்ச நூதன சமாசாரத்துலே முழுகியிருக்கான்.

ஒருத்தரை ஒருத்தர் பகடி செய்து சிரித்து, கூடி இருந்து உண்டு, பருகி, பழங்கதை சொல்லி, பகிர வேண்டியதை எல்லாம் பகிர்ந்து அசந்து உறங்கி எழுந்து ஒரு பதினைந்து நாள் விறுவிறுவென்று தெரிசாவுக்கு உதிர்ந்து போனது.

இன்னும் நாலைந்து நாள் தம்பி குடும்பத்தோடு இருக்க ஆசைதான். ஆனால் பகவதி அத்தை கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

அரசூருக்கு வந்து சாமாவையும் மற்றவர்களையும் க்ஷேமலாபம் விசாரித்துவிட்டுத்தான் பம்பாய்க்கு வண்டியேறி அங்கே இருந்து சமுத்திரம் கடக்க வேண்டும்.

மருதையனும் வெகு பிரியமாக அக்கா என்று ஆதரவாக அழைத்து இன்னொரு தம்பியாக அவளை அரசூருக்கு ரயில் வண்டியில் பகவதியோடு கூட்டிப் போனான்.

சாமாவும் அவன் பெண்டாட்டியும் சுபாவமாக தெரிசாவோடு பிரியம் காட்டியது அவளுக்கு இன்னொரு இதமாக இருந்தது. அரசூரில் கோவில் கொண்ட விசாலாட்சி சமேத விசுவநாத சுவாமியோ, சருகணி மாதாவோ, கிறிஸ்து நாதரோ இவர்களின் வாத்சல்யத்துக்கு குறுக்கே போகாமல் பக்கத்தில் இருந்து பார்த்து பூர்ண ஆசீர்வாதம் நல்கினார்கள்.

என்னோட நாத்தனார். லண்டன் பட்டணத்திலே கொடிகட்டிப் பறக்கற சீமானோட ஆத்துக்காரி. கண்ணூர்லே வீட்டு விசேஷத்துக்கு வந்துட்டு அப்படியே விச்சியா இருக்கியாடின்னு என்னையும் ஜாரிச்சுட்டுப் போக எம்புட்டுத் தூரம் வந்திருக்கா.

தாசில்தார் பெண்டாட்டிக்கு விதேசி நாத்தனாரைக் கொண்டு கச்சேரி உத்யோகஸ்தர்கள், ஊர் வர்த்தகப் பிரமுகர்களின் சகதர்மிணிகளோடு கூடுதல் பெருமை ஏற்றிக் கொள்ள வெகு இஷ்டமாக இருந்தது.

அவர்களும் சரளமாக தமிழும் மலையாளமும் கூடவே திவ்ய பாஷையான இங்கிலீஷும் சரளமாக நாக்கில் புரளும் இந்த உயர்ந்து மெலிந்த துரைசானியைப் பார்த்து அதிசயப்பட்டுப் போனார்கள். வெளுப்பு கலக்காத கறுத்த துரைசானி. நாகரீகமும், பழக்க வழக்கமும் கரைகண்டவள். தோசை சாப்பிட பிரியம் காட்டுகிறவள். கொடுக்காய்ப்புளிப் பழம் கூட கேட்டு வாங்கித் தின்றாள்.

சாமா உனக்கு பட்டணத்துலே ஹைகோர்ட் உத்யோகஸ்தர், என்னாக்க, கொஞ்சம் உயர்ந்த ஸ்தானம் வகிக்கறவா யாராவது தெரியும்னா சொல்லு. ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு.

விசாலம் பெரியம்மா புகை ரூபமாக தீபஜோதி கல்யாண நேரத்தில் வந்து பேசினதோ, அல்லது பேசினதாக தனக்கு பிரமை ஏற்பட்டதோ, ஏதோ ஒரு தருணத்தில் சொன்னது தெரிசாவுக்கு நினைவு வரவே சாமாவைக் கேட்டாள்.

கோர்ட் உத்யோகஸ்தன் வீட்டுப் பரண்லே ஸ்தாலிச் சொம்புலே பிடி சாம்பலாக் கிடக்கேண்டி குழந்தை. மத்தவா எல்லாம் உசிரோடு இருந்தும் உடம்பு விலகி நடந்துண்டு இருக்கா.

விசாலம் பெரியம்மாவை மட்டுமாவது அஸ்திக் கலசம் கிடைத்தால் வாங்கி, சாமா மூலமோ பகவதி அத்தை மூலமோ காசிக்கோ ராமேஸ்வரத்துக்கோ போகச்சொல்லி கடைத்தேற்ற முடியும். மகாதேவ அய்யன் குடும்பத்தின் மிச்சப்பேர் ஸ்திதி அவள் எத்தனை பிரயத்தனப்பட்டாலும் சரியாகாது போல.

நாளைக்கோ, இன்னும் நூறு இருநூறு வருஷம் போயோ விஞ்ஞானம் முன்னேறி மனுஷன் காலத்திலும் யாத்திரை செய்ய ஒரு சூழ்நிலை வருமானால் அவர்களுக்கு ஒரு நல்ல கதி திரும்பக் கிடைக்கலாம். அதுவரை உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் அவர்களுக்குக் கிடைக்க என்ன செய்தால் முடியும்?

அவளுக்குத் தெரியவில்லை. கில்மோர் தெரு கன்யாஸ்திரிகளிடம் பேசலாம். அவர்கள் ஆவிகளோடு பேசுகிறதே கிறிஸ்து மதத்தில் தடைசெய்யப் பட்டது. இப்படிக் காலம் கடந்து ஜீவிக்கிறவர்களோடு அதே ரீதியில் பேச முயற்சி செய்து, அவர்களை நல்லடக்கம் செய்ய யூதமொழி உச்சாடனங்களை உருவேற்றியது அதைவிடப் பெரும் தவறு.

மாற்றித் தரமுடிந்தால் அது தெரிசாவுக்கு நன்மையாக இருக்கும். குட்டியம்மிணியும் பர்வதவர்த்தினியும் அவ்வப்போது கண்ணில் பட்டு, ரொட்டியும் வஸ்திரமும், ரெண்டு வார்த்தை ஆறுதலான பேச்சுமாக கூட இருந்துவிட்டுப் போகட்டும். தெரிசா ஆயுசோடு இருக்கும்வரை இதை நடத்தித்தர எந்தத் தடையும் அவளுக்கு இல்லை.

ஹைகோர்ட் உத்யோகஸ்தர் விவரம் கேட்டியே அக்கா. ராத்திரி முழுக்க உக்கார்ந்து யோஜிச்சு விடிகாலையிலே நினைவு வந்தது. நம்ம நீலகண்டன் அங்கே தான் நேவிகேஷன் ஆபீஸ்லே பெரிய உத்யோகத்துலே இருக்கான். உறவு என்னன்னு கேட்காதே. சொல்ல ஆரம்பிச்சா என் தலையும் உன் தலையும் பொடிக்கடை பொம்மை மாதிரி சுத்த ஆரம்பிச்சுடும். எனக்கு தாயாதி. அம்புட்டுத்தான். அவன் விலாசம் தரேன். கப்பலேற முந்தி போய்ப் பாரு. அவனுக்கு ஹைகோர்ட்லே ஜட்ஜ்மார் கூட அன்னியோன்யமான சிநேகிதம்னு சொல்வான்.

சாமா கொடுத்த நீலகண்டனுடைய விலாசத்துக்கு மதராசில் தெரிசா போனபோது வீட்டு வாசலில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

குழந்தைக்கு மொட்டை பிரார்த்தனை நிறைவேத்தறதுக்காக திருப்பதிக்கு குடும்பத்தோடு போயிருக்கார் துரைசானியம்மா.

பக்கத்து வீட்டுக்காரர்கள் புடவை கட்டிய துரைசானிக்கு ஏக மரியாதையாக விவரம் சொன்னார்கள்.

விசாலம் பெரியம்மா, இன்னும் கொஞ்ச நாள் பரணில் கஷ்டத்தை சகித்துக் கொண்டிரு. வேறே ஏற்பாடு செய்யமுடியுமான்னு பார்க்கிறேன்.

கப்பல் பயணமானபோது மேல்தளத்தில் நின்று சென்னைப் பட்டணத்தை வெறித்த தெரிசா தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

போடி போக்கத்தவளே. உன்னாலே ஒரு குசுவும் முடியாது.

மேலே கூவிக்கொண்டு பறந்த பறவையை அவளுக்குத் தெரியும்.

கிடக்கு போ சவமே.

கையை வீசி அதை விரட்ட, அலைகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிச் சிரித்தபடி கூடவே வந்து கரைந்து போனது.

தெரிசா மட்டும் கப்பல் மேல்தளத்தில் இன்னும் நிற்கிறாள்.

(தொடரும்)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்துநாலு

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

இரா.முருகன்


1915 – நவம்பர் 15 ராட்சச வருஷம் ஐப்பசி 30 திங்கள்கிழமை

பகவதி இந்த அறுபது வருஷ ஜீவிதத்திலேயே முதல் தடவையாக குரிசுப் பள்ளிக்குள் அடியெடுத்து வைத்தாள். அரசூர்ப் பக்கத்தில் மாதா கோவில் என்று சொல்கிற வழக்கம். கொஞ்சம்போல் விலகி நிற்கிற குரிசுப் பள்ளியை விட மாதாகோவில் பிடித்திருந்தது. அதுவும் கோவில் தான். அங்கே இருக்கப்பட்டவளும் சகல ஜீவராசிகளுக்கும் அம்மைச்சி தான்.

இதென்னடா மருதைய்யா அம்பல நடை போல் விசாலமாகத்தான் இருக்கு. ஆனா, கர்ப்பகிருஹத்தைக் காணோமேடா. நடுவிலே சிலாரூபமாத்தான் தெரியறது.

கைத்தாங்கலாகக் கூட்டி வந்த மருதையனை விசாரித்தாள் அவள்.

குரிசுப் பள்ளி ஏகப் பரபரப்பாக இருந்தது. தீபஜோதி கல்யாணத்துக்காக அதை சிரத்தையெடுத்துக் கொண்டு அலங்காரம் செய்திருந்தார்கள். குருத்துத் தோரணமும், குலைவாழை கட்டிய முகப்பும், உள்ளே வர்ணக் காகிதத்தால் பூவும் செடியும் கொடியுமாக ஏகக் கோலாகலமாக அதை சிங்காரம் செய்ததில் துர்க்கா பட்டனுக்கும் பங்கு உண்டு.

அது ஏன் நம்மாத்துக் குழந்தை கல்யாணத்தை நம் வீட்டிலேயே வைச்சு அமோகமா நடத்தாம கோவிலுக்குக் கொண்டு போகணும்?

அவள் வேதையனை வந்து சேர்ந்ததுமே விசாரித்து விட்டாள்.

கோவில்லே வச்சுத்தான் எல்லாக் கல்யாணமும் சவ அடக்கமும்னு பல நாள் பழக்கம் ஆச்சே.

வேதையன் கவனமாக விளக்க முற்பட, பரிபூரணம் அவனை உடனே கடிந்து கொண்டாள்.

கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா. நம்ம குழந்தை கல்யாணம் நல்ல படியா முடியணும்னு அத்தை ஆசையோட இத்தனை தூரம் வந்திருக்காங்க. ஒரு பாட்டித் தள்ளையா குடும்ப வீட்டுலே சுபச் சடங்கு நடக்கணும்னு அவங்க மனசு நிறைஞ்சு சொல்றபோது நீங்க அமங்கலமா ஏதோ பேசிட்டுப் போறீங்களே.

வேதையன் உடனே பேச்சை மாற்றினான்.

அதாவது நான் சொல்ல வந்தது என்னன்னா, ஏழையோ பணக்காரனோ எந்தவிதப் பட்ட மனுஷனா இருந்தாலும் வித்தியாசம் பார்க்காம, ஒரே மாதிரி கோவில்லே சடங்கு சம்பிரதாயம், பிரார்த்தனை நடக்கறது வாடிக்கை. அப்புறம் வீட்டுக்கு வந்து சௌகரியம்போல விஸ்தரிச்சு காரியங்களை நடத்திக்கத் தடையொண்ணும் இல்லை.

மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் உண்டோ இல்லியோ? அன்னப் பறவை வச்சு சாரட் வண்டியிலே வந்து ஜம்முனு மாப்பிள்ளை நம்மாத்து வாசல்லே வந்து இறங்கினா எவ்வளவு அம்சமா இருக்கும். ஏற்பாடு செஞ்சிருக்கியோ இல்லியோ?

பகவதி அம்பலப்புழை குடும்பத்துச் சடங்கை வேதத்தில் ஏறின கிட்டாவைய்யன் வீட்டில் ஒட்டி வைக்கப் பார்க்க, பரிதாபமாகத் தோற்றுத்தான் போனாள்.

ஆனால் என்ன? ஹோமம் வளர்த்து புரோகிதர் நீட்டி முழக்கி மந்திரம் சொல்லிக் கன்யாதானம் செய்து கொடுத்தால் தான் கல்யாணமா? இங்கே சந்தோஷமாக அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கிற இளசுகள் யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள்.

அவர்கள் உலகம் வேறே. அதுவும் சடங்கு, சம்பிரதாயம், மகிழ்ச்சி, துக்கம் என்று புது வருஷப் பிறப்புக்கு உண்டாக்குகிற மாங்காய்ப் பச்சடி மாதிரி எல்லாம் கலந்திருக்கும். அதிலும் கால ஓட்டத்தில் மாற்றம் ஏற்படும்.

பகவதி போல இவர்கள் வயசர்களான முத்தச்சன்மாரும் முத்தச்சிகளும் ஆகும்போது கடந்துபோன காலத்தை கற்பனையிலாவது தடுத்து நிறுத்த படாதபாடு பட்டு தோற்றுப் போய் இதேபோல் நின்று கொண்டிருப்பார்கள்.

குரிசுப் பள்ளிக்கு வெளியே வேதையன் மட்டும் நின்று கொண்டிருந்தான். உள்ளே இருக்கப்பட்ட கூட்டம் முழுக்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்களால் நிறைந்தது.

அம்மா, நீங்க உள்ளே போய் விஸ்ராந்தியா ஒரு குரிச்சி போட்டு உட்கார்ந்து எல்லாம் பாருங்க. துர்க்கா பட்டன் உள்ளே தான் இருக்கான். அவன் கவனிச்சுப்பான். ஆகாரம் செஞ்சாச்சு இல்லியோ?

வேதையன் பகவதியைக் கேட்டான்.

ஆச்சு அய்யரே. புட்டும் கடலையும் இட்டலியுமா கொதிக்கக் கொதிக்க பரிமாறித்தான் அண்ணி அனுப்பி வச்சுது. அம்மா தான் புட்டுத் தின்ன மாட்டேனுடுச்சு. கொண்டக்கடலை நவராத்திரிக்கு சுண்டல்லே போடற சமாச்சாரமாம். காலையிலே ஆகாரத்துக்கு உதவாதாம்.

மருதையன் சுகமாக வயிற்றைத் தடவியபடி சிரித்தான். சமைக்கிற எல்லாவற்றிலும் தேங்காயை அரைத்துப் போட்டு ஊரே தேங்காய் எண்ணெய் வாடை அடிக்கிறதை மட்டும் பொறுத்துக் கொண்டால் கண்ணூரும் மலையாளக் கரையும் சுவாரசியமான பிரதேசங்கள் தான்.

பழகிடுத்துன்னா புட்டும் கடலையும் இல்லாம ப்ராதல் இறங்காது தெரியுமோ?

அம்பலப்புழை தேகண்ட குடும்பத்தில் புட்டும் கடலையும் கடந்து வந்ததில்லை என்று பகவதி சொல்ல நினைத்தாள். அந்த ஆசாரம் வேறே. இது வேறே. அண்ணா கிட்டாவய்யன் ஜான் கிட்டாவய்யன் ஆகி மண்ணுக்கு உள்ளும் போய் எத்தனை மாமாங்கம் ஆகிவிட்டது.

அம்மா உட்கார்ந்துக்கட்டும். நான் என்ன செய்யணும்?

பிரின்சிபால் மாஷ் கல்யாணச் சடங்கு முடியற வரைக்கும் மண்டி போட்டு நிக்கணுமாக்கும்.

உள்ளே இருந்து ஒரு பீங்கான் பூ ஜாடியைத் தூக்கிக் கொண்டு வந்த பட்டன் சொன்னான்.

ஐயோ, ப்ரைமரி பள்ளிக்கூட வாத்தியார் கூட அத்தனை நாழிகை மண்டி போட்டு நிக்க வச்சது இல்லியே. தப்பிக்க வேறே வழியே இல்லியா?

ஆமாடா, நீ ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி. உன்னை நம்மூர்லே ஒரு பயல் முட்டி போட வச்சிருப்பானா? சேர்த்து வச்சு இங்கே போட்டுடு. தெய்வத்துக்கு முன்னாடி தெண்டனிட்டா பரம புண்ணியம்.

பகவதி தன் பங்குக்கு மருதையனை சீண்டியபடி மேரி மாதா ஸ்வரூபத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அப்படியே தரையில் விழுந்து நமஸ்கரிக்கவும் செய்தாள். அவள் வாய் லலிதா சகஸ்ரநாமத்தை உருவிட்டுக் கொண்டிருந்தது.

மருதையனும் பட்டனும் பகவதியைக் கைத்தாங்கலாக உள்ளே கூட்டிப் போனார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் முந்தின தினமே அவள் யார் என்று தெரிந்திருந்ததால் மரியாதையோடு எழுந்து வரவேற்றார்கள்.

துடிப்பான ஒரு பையன் முன்னால் வந்து, ‘அம்மா, கொஞ்சம் ஷர்பத் கொண்டு வரச் சொல்லட்டுமா? நாரிங்கா சேர்த்து அருமையா புதுசா பிழிஞ்சது.

பகவதி வேண்டாம் என்றபடி அவனைப் பார்த்தாள். ஏது, இவன் மாப்பிள்ளையா? கம்பீரமாக, உத்தியோகத்துக்குக் கிளம்பின தோதில் வஸ்திரம் தரித்து வெள்ளைக்கார துரை போல் கழுத்தில் ஒரு பட்டியையும் நேர்த்தியாக அணிந்து நிற்கிறானே.

சந்தேகத்தை வாய்விட்டே கேட்டு விட்ட்டாள் அவள்.

மாப்பிள்ளை பிரான்சிஸ் அங்கே இருக்கான் அம்மா. நான் பெஸ்ட் மேன்.

மரியாதையோடு குனிந்து சொன்னான் அந்தப் பதவிசான பையன்.

அவளுக்கும் கொஞ்சம் போல் இங்கிலீஷ் தெரியும். எழுத்துக் கூட்டிப் படிக்க சங்கரன் சொல்லிக் கொடுத்திருக்கிறான். ரெண்டு பேரும் சேர்ந்து அடிப்படை இங்கிலீஷ் புத்தகத்தை முடிக்கவில்லை. அதுக்குள் அவன் ஜீவிதப் புத்தகம் முடிந்தாகி விட்டது.

பெஸ்ட் மேன். நல்ல மனுஷனா? அப்ப மத்தவா எல்லாம்?

அந்தப் பையன் அந்தாண்டை போனபிறகு மருதையன் காதில் விசாரித்தாள்.

அது வந்து, இந்த சடங்குலே மாப்பிள்ளைத் தோழன். இவங்க சம்பிரதாயப்படி மாதாகோவில்லே முதல்லே மாப்பிள்ளை வீட்டார் வந்து பெண் வந்து சேரக் காத்திருக்கணும். காத்திருக்காங்க. அதோ பொண்ணு வீட்டு வண்டி வந்தாச்சு.

தழையத் தழைய உடுத்த வெண்பட்டுச் சேலையும் தலையை மறைத்து மூடிய முந்தானையுமாக தீபஜோதி வண்டியில் இருந்து மெல்ல இறங்கினாள். பகவதிக்குக் கண்ணை நிறைத்தது.

குழந்தைக்கு ஒரு திருஷ்டிப் பொட்டாவது இட்டிருக்கக் கூடாதோ. பட்டா நீயாவது சொல்லக் கூடாதா?

பகவதி பட்டனிடம் புகார் சொல்லத் திரும்ப அவன் போன இடம் தெரியவில்லை.

என் கண்ணே பட்டுடும்போல இருக்குடா மருதையா. அதென்னத்துக்கு வெள்ளைப் புடவை அச்சானியமா? போறது விடு. நம்பூத்ரி வீட்டுக் கல்யாணத்துலேயும் வெளுப்பு வஸ்திரம் போர்த்தித்தான் கூட்டிண்டு வருவா பொண்ணை.

தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டு அவள் நிற்க, தீபஜோதியும் அவளைத் தொடர்ந்து வந்த பரிபூரணமும் பகவதியைப் பார்த்து ஒரு வினாடி நின்றார்கள்.

தீபம் சட்டென்று குனிந்து பகவதி காலில் விழுந்து சேவித்து, ஆசீர்வாதம் செய்யுங்கோ அத்தைப் பாட்டியம்மா என்றாள் பிரியத்தோடு.

அவளை எழுப்பி அப்படியே நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் பகவதி.

என் கண்ணே. சகல சௌபாக்கியத்தோட தொங்கத் தொங்கக் கட்டிண்டு நீ ஆயுசு உள்ள வரைக்கும் ஆத்துக்காரனோடும் குழந்தை குட்டிகளோடும் அமோகமா இருக்கணும். எல்லாம் அந்த அம்பலப்புழை கிருஷ்ணன் பார்த்துப்பான்.

பகவதி கண்ணை மூடி கை குவித்து அம்பலப்புழை அம்பல முற்றத்தில் நின்றாள்.

பரிபூரணமும் அவள் பார்த்த திசை நோக்கி வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

பக்கத்தில் நின்ற பாதிரியார் குரிசு வரைந்து சகலரையும் ஆசீர்வசித்தபடி மௌனமாகப் புன்னகை செய்தார்.

பிராமண கிறிஸ்தியானிகள் கொஞ்சம் வினோதமானவர்கள். வேரோடு அறுத்து வர முடியாது தலைமுறை தலைமுறையாக நம்பிக்கைகளையும் சம்பிரதாயங்களையும் அங்கேயும் இங்கேயும் கொஞ்சம்போல் கூடவே எடுத்து வருகிறவர்கள். ரகசியமாக ஜாதகம் கூடக் கணிப்பார்கள். இந்தப் பெண்ணுக்கும் செய்திருக்கலாம். இருந்தாலும் அவருக்கு என்ன?

தோழிப் பெண்களும் இதர பெண் வீட்டுக்காரர்களும் கல்யாணப் பெண்ணைத் தொடர்ந்து வர அவர்கள் மெல்ல ஊர்வலமாக சபையைச் சுற்றினார்கள். பிள்ளை வீட்டுக்காரர்கள் எல்லோரையும் வரவேற்று உபசார வார்த்தை சொன்னார்கள்.

பகவதியும் மருதையனும் ஓரமாக காற்றோட்டமாக ஒரு பெரிய ஜன்னலுக்குக் கீழே உட்கார்ந்து நடக்கிற காரியங்களை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பகவதிக்கும் பெண் கூட நடந்து போய் வாரணம் ஆயிரம் பாட ஆசைதான். அவள் கல்யாணத்தின்போது அரசூர்க்காரி நித்திய சுமங்கலிக் கிழவி சுப்பம்மாள் பாடியது.

சுப்பம்மாள் சொர்க்கத்தில் அந்த இனிமையான கானத்தை ஆவர்த்தித்து பாடிக் கொண்டே இருக்கட்டும்.

பாதிரியார் கையை அசைத்து சமிக்ஞை காட்ட குரிசுப் பள்ளி சங்கீத கோஷ்டி வாத்திய சங்கீதத்தில் இனிமையாக ஏதோ வாசிக்க ஆரம்பித்தது. பகவதி மருதையனைப் பார்த்தாள்.

என்னம்மா, நடேச பண்டிதர் நாதசுவரம் இல்லாம கல்யாணமான்னு பார்க்கறீங்களா?

அவள் காதில் மட்டும் கேட்கிற தோதில் சொல்லி மருதையன் சிரித்தான். கள்ளன், அவன் ஜாதியைச் சொல்லவில்லை. நிஜமாகவே இந்தப் பிள்ளை மனதை அவள் எப்படியோ படித்து விட்டிருக்கிறான்.

அம்மா, அவங்க பியானோவிலேயும் பிடில்லேயும் இப்போ வாசிச்சிட்டு இருக்கறது வேக்னர்னு ஒரு இசைமேதை ஸ்வரப்படுத்தின கானம். பிரார்த்தனை இனிமே ஆரம்பமாகும்.

உனக்கு எப்படித் தெரிஞ்சுது இதெல்லாம்?

பகவதி கேட்க, சட்டைப் பையில் இருந்து நாலாக மடித்த ஒரு கடிதாசை எடுத்தான் மருதையன். பகவதி வாங்கிப் பார்த்தாள். அச்சு எழுத்தில் ராமநவமி நோட்டீசு மாதிரி வரிசையாக சடங்கு சம்பிரதாய விவரம் அதில் கண்டிருந்தது. ரெண்டு பக்கமும் றெக்கை கட்டிப் பறக்கிற கந்தர்வர்களைத்தான் காணோம்.

அத்தை, நானும் இங்கேயே நின்னுக்கட்டா?

பகவதி நிமிர்ந்து பார்த்தாள். தெரிசா புன்னகையோடு அவள் கையைப் பற்றிக் கொண்டாள்.

சாரதே நீ அங்கே போய் அவாளோட உக்கார்ந்து பிரார்த்தனையும் மத்ததும் பண்ணலியா? மண்டி போட சிரமம்னா வேணாம்.

சலுகை காட்டுகிறவளாக பகவதி சொல்ல தெரிசாவுக்கு சிரிப்பு வந்தது.

இல்லே அத்தை. இது கத்தோலிக்க சர்ச். நான் ப்ராட்டஸ்டண்ட். நெறைய வித்தியாசம் இருக்கு எல்லாத்திலேயும். அதான் இங்கேயே நின்னுக்கறேன்.

அது என்னடி, கிறிஸ்து மகரிஷிக்கு தானே நீயும் உங்காத்துக்காரனும் அஷ்டோத்ரம் சொல்றது? வேதையனும் அதே ஸ்வாமிக்குத்தானே ஆராதனை?

அம்மா, சாவகாசமா அதை எல்லாம் சொல்றேன். தெரிசா அக்கா இங்கே உக்காருங்க.

மருதையன் தான் உட்கார்ந்திருந்த குரிச்சியை தெரிசா உட்கார ஒழித்துக் கொடுத்து விட்டு, பகவதி பக்கம் நின்றபடி முன்னால் பார்த்தான்.

சங்கீர்த்தனம். பாடல் பதினெட்டு.

சின்னக் குருக்கள் மாதிரி துறுதுறுப்பான ஒரு கொச்சு பாதிரிப் பையன் சொல்ல எல்லாரும் பாட ஆரம்பித்தார்கள். அது முடிந்து பாதிரியார் தாலி எடுத்துக் கொடுக்க மாப்பிள்ளைப் பையன் தீபஜோதி கழுத்தில் முடிச்சுப் போட்டான். கூடவே தம்பதிகள் மோதிரத்தைக் கழற்றி ஒருத்தருக்கு ஒருத்தர் மாற்றிக் கொண்டதையும் பகவதி கவனித்தாள்.

தாலி கட்டும்போது மேளத்தை முழக்கி அமர்க்களப்படுத்த வேண்டாமா? என்னமோ போ. இந்த ஆசாரம் இப்படின்னா நான் என்ன சொல்ல இருக்கு?

கேட்டபடி வேகமாக முன்னால் போன பகவதி முன் வரிசைப் பெண் யாரிடமிருந்தோ ஒரு வெள்ளித்தட்டை வாங்கி அதில் இருந்த பூக்களை ஓரமாக இட்டாள்.

ஜலம். கொஞ்சம் ஜலம்.

யாரோ பன்னீர்ச் செம்பைக் கவிழ்த்தார்கள்.

பட்டா, கொல்லூர் குங்குமம் சதா மடியிலே வச்சிருப்பியே. எடு.

பக்கத்தில் நின்ற பட்டன் ஒரு வினாடி தயங்கி விட்டு எடுத்துக் கொடுத்தான்.

குங்குமத்தைக் கரைத்த ஆரத்தித் தட்டை பரிபூரணத்திடம் தரச் சொன்னாள் பகவதி.

ஏண்டியம்மா, மசமசன்னு நிக்காம மாப்பிள்ளை, பொண்ணுக்கு ஆலத்தி எடுங்கோ. வேறே யாராவது சேர்ந்துக்கலாம்.

தெரிசா முன்னால் வந்து புடவையை இழுத்துச் செருகிக் கொண்டு ஆரத்தித் தட்டை பரிபூரணத்தோடு பற்றிக் கொண்டு மெல்ல ஆல வட்டமாகச் சுற்றினாள்.

சீதா கல்யாண வைபோகமே.

பகவதியின் குரல் கணீரென்று இனிமையாக குரிசுப் பள்ளி சுவர்களில் எதிரொலிக்க ஆரம்பித்தது.

(தொடரும்)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

இரா.முருகன்


1915 நவம்பர் 14 – ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு.

ஒற்றை சுருதியில் ஒரு தம்பூரா இடைவிடாமல் தன் சோகத்தைச் சொல்லிக் கொண்டிருந்ததுபோல் தெரிசாவுக்கு குரல் கேட்டுக்கொண்டிருந்தது.

ஒரு வீணையாக, வாய் விட்டுப் பாடக்கூடிய குரலாக இருந்திருந்தால் துயரத்தை ஒற்றை இருப்பில் முழுக்கச் சொல்லி கரைந்தும் போயிருக்கலாம். அப்படி ஆக முடியாத வலியும் அந்த முணுமுணுப்பான குரலில் கோடிட்டிருந்தது.

பகவதிப் பொண்ணே, என் கரளிண்டெ கரளே, குஞ்ஞே எண்டெ சாரதே எங்ஙனெ நிங்களெ விட்டு நில்க்கான் எனிக்குப் பற்றும்? ஜீவிச்சாலும் அல்லெங்கிலும். சொல்லேண்டி குழந்தே. ரெண்டு பேருமே எனக்குப் பிறக்காத சிசுக்களாச்சே.

விசாலம் மன்னியின் வார்த்தைகள் மலையாளத்திலும் தமிழிலும் மாறிமாறி வந்தபடி இருந்தன. அவள் அழுது பகவதி கண்டதே இல்லை. இத்தனை வருடம் கழித்துப் பார்க்கும்போது அந்த முகத்தில் தேங்கி வைத்த துன்பம் எல்லா வனப்பையும் மூடி மறைத்து ஒரு பனித் திரையாக மேலே படிந்திருந்தது.

பகவதிக்கு அவள் மேல் இரக்கமும் பச்சாதமும் அவள் துக்கத்தில் பங்கு பெற முடியாமல் போன ஆற்றாமையும் தொடர்ந்து அனுபவப்பட்டுக் கொண்டிருந்தது.

அம்மா இல்லாத பகவதியை சிற்றாடை தரித்த பெண்ணாக இருந்தபோதே தத்தெடுத்த தாய் அவள். திரண்டுகுளியும், கல்யாணமும், அரசூரில் புகுந்த வீட்டுக்கு கூட வந்து கொண்டு விட்டுக் கண்ணீரோடு பிரிந்த தள்ளை அவள். கால ஓட்டத்தில் அவளும் அண்ணா குப்புசாமி அய்யனும் காலம் தப்பி அவர்களுக்குப் பிறந்த மகாதேவனும் எல்லாம் யாரோ சொல்லக் கேட்ட தகவல்களாகவும் தாமதமாக வந்து சேரும் சர்க்கார் முத்திரை குத்திய லிகிதத்தில் பாதி கலைந்த எழுத்துக்களாகவும் மாறி மறைந்தே போனார்கள்.

மகாதேவன் பிறந்து அவனுக்கு ஒரு வயது பூர்த்தியாகி அப்த பூர்த்திக்கும் காது குத்தல் வைபவத்துக்கும் கொல்லூருக்கு ஒரு தடவை பகவதியும் சங்கரனும் போயிருந்தார்கள்.

அப்புறம் ரெண்டு தடவையோ மூணு முறையோ ராமேஸ்வரத்துக்கும், குன்னக்குடியில் விருச்சிக மாத நடுவே கார்த்திகையை ஒட்டி பால் குடம் எடுக்கவும் அண்ணா குப்புசாமி வந்தபோது விசாலம் மன்னி மட்டும் மகாதேவனோடு வந்திருந்தாள்.

குப்புசாமி அய்யனுக்கு சர்க்கரை நோய் முற்றி காலில் ஏற்பட்ட பிளவை அவனை எங்கேயும் நடக்கவிடாமல் காலை முறித்து வீட்டிலேயே உட்கார்த்தி விட்டிருந்தது. அவன் காலம் முடிந்தபோது பகவதியை கர்ப்ப ரோக நிமித்தம் மதுரை ஆஸ்பத்திரியில் சேர்த்து அவசமில்லாமல் ஒரு மாதம் படுத்திருந்தாள்.

குணமாகி ரெண்டு மாசம் கழித்தே மரண வார்த்தை பகவதிக்குத் தெரியப் படுத்தப்பட்டது. சங்கரன் மட்டும் போய் வந்த பத்தாம் நாள் சடங்கைப் பற்றிக் கூட பகவதியிடம் ஒற்றை வார்த்தையில் சொல்லி நிறுத்தி விட்டான் அவன்.

அப்புறம் அவன் காலம் முடிந்ததும், அம்பலப்புழைக்கும் பகவதிக்குமான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட விதித்திருந்தது போல. மகாதேவன் கல்யாணமானது சங்கரன் காலமானதற்கு ஒரு மாதம் கழித்து என்று மட்டும் பகவதிக்கு நினைவு இருக்கிறது.

கடுதாசி வந்து வாங்கி வீட்டில் வைத்து மனசில் வாழ்த்தினது தவிர வேறே எதுவும் செய்ய முடியாத, வெளிக்கிளம்ப முடியாத நிலைமையில் இருந்தாள் அவள். கடையைக் கவனிக்க வேறே யாரும் இல்லாததால் அவள் வைதவ்யம் கூட புகுந்த வீட்டிலேயே தொடங்கியது.

அவர் போனார். எனக்கு பூமியே காணாமல் போச்சு பகவதி.

விசாலம் மன்னி விதும்பினாள்.

இங்கேயும் அதேதான் மன்னி. இவர் போய், எங்கே போனார் இருக்கார் இன்னும் என்னோடதான். நீங்களும் அண்ணாவும் தான் இல்லே. கிட்டாவண்ணா, சிநேகா மன்னி யாருமே இல்லே. சாரதை மட்டும் கிடைச்சிருக்கா அருகம்புல்லு மாதிரி.

விசாலம் சாரதையைப் பார்த்துச் சிரித்தபோது ஒரு வினாடி அவள் முகத்தில் பழைய பிரகாசத்தின் தேசலான சாயல் புலப்பட்டது.

இவளை எனக்கு மட்டுமா தெரியும், என் மருமகள் பர்வதவர்த்தினி, குழந்தை குஞ்ஞம்மிணி ரெண்டு பேருக்கும் நன்னா பழக்கம். வயிறு வாடாம அந்நிய தேசத்திலே வச்சு சாதம் விளம்பின மகாராஜி இந்தக் குட்டி. நன்னா இரும்மா.

விசாலம் வாயாற வாழ்த்தினாள். பகவதிக்கு தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. அம்பலப்புழை தேகண்ட குடும்பத்தில் வேதத்தில் ஏறி சமுத்திரம் கடந்து போன கிட்டாவண்ணாவின் பெண் குட்டிகளைப் பற்றித்தான் அவளுக்குத் தெரியும்.

மகாதேவன் குடும்பம் வெள்ளைக்கார தேசம் எப்படிப் போனது? அது கிடக்கட்டும். விசாலம் மன்னி எப்படி எங்கே இருந்து வந்தாள் இங்கே?

நான் இல்லே. ஆனா, அவா எல்லாம் இருக்கா.

மன்னி விரக்தியாகச் சிரித்தாள். பகவதிக்குக் குழப்பம்தான் அதிகமானது.

நான் போய்ச் சேர்ந்து இந்த மகரம் எட்டு வந்தா பத்து வருஷமாச்சு. வருஷாப்தி கொடுக்கக்கூட யாரும் இல்லாம, எலும்பும் புண்ய தீர்த்ததிலே கரைஞ்சு கடைத்தேறாம, பட்டணத்திலே கோர்ட் உத்தியோகஸ்தன் வீட்டுப் பரண்லே அடசலோட அடசலா கிடந்திண்டிருக்கேண்டி பகவதி. எனக்கு வந்த கஷ்டத்தைப் பார்த்தியா? இதைவிடப் பெரிசு என் குழந்தை மகாதேவனுக்கும் அவன் பாரியாள், குஞ்ஞுக்கும் ஆனது. ஏன் கேக்கறே போ. ஒரு பாட்டம் அழுதா நிறுத்த முடியாம போயிடும். கல்யாணம் ஆற வீட்டிலே எதுக்கு அழணும் சொல்லு.

விசாலம் மன்னியின் சிரிப்பு மட்டுமே பகவதிக்கு நினைவில் இருந்தது. இருக்கும். இந்த விசாலம் மன்னி உயிரோடு இருந்தாலும் ஆவி ரூபம் என்றாலும் அந்நியப்பட்டு நிற்கிறவள். அவள் குற்றம் இல்லை. விதின்னா இது விதிதான்.

தெரிசா மௌனமாக இதெல்லாம் கேட்டும் அனுபவித்தும் தீர வேண்டிய சங்கதிகள் என்ற தோரணையில் கையில் ஜப மாலையை உருட்டியபடி அரைக் கண் மூடியிருந்தாள். அவள் உதடுகள் பிரார்த்தனையிலும் காதுகள் அமானுஷ்யமாகப் படியும் வார்த்தைகளிலும் பிணைந்திருந்தன.

மகாதேவனும் பர்வதமும் குழந்தை குஞ்ஞம்மிணியும் கொல்லூர் போகும் வழியில் காணாமல் போனது, அவர்கள் காலம் கடந்த வெளியில் இன்னும் சுற்றிச் சுற்றி வருவது, தெரிசா மூலம் கிடைத்த உபகாரம் என்று மன்னி கோர்வையில்லாமல் சொல்ல பகவதிக்கு ஒரு மாதிரி எல்லாம் புரிந்த மாதிரி இருந்தது. இதுவரை ஜீவித்திருக்கும் காலத்தில் புரிந்த எல்லாம் மறந்த மாதிரியும் இருந்தது.

விசாலம் அத்தை, பர்வதத்தையும் குஞ்ஞம்மிணியையும் நான் எடின்பரோவிலே பார்த்து நாலு வருஷத்துக்கு மேலே ஆச்சு. எங்கே போனா? அவா அடங்கி.

சட்டென்று நிறுத்தினாள் தெரசா. கல்லறை வளாகத்தில் அவர்களை அடக்க அவள் உத்தேசிக்கவில்லை. வேறே மதம். உயிரோடு இருக்கப்பட்டவர்கள் என்று இத்தனை பேர் நம்புகிறார்கள். அவர்களையும் சேர்த்து.

அதை ஏன் கேக்கறே போ சாரதே. உங்க சத்சங்கம், அதான் ஏதோ லோகத்திலே இருக்கப்பட்ட கிறிஸ்தியானிகள் எல்லாம் உங்க ஊர்லே கூடிக்காழ்ச்ச நடத்த வந்தபோது உன்னோட ரெண்டு சிநேகிதிகள் அமெரிக்கை தேசத்திலே இருந்து வந்திருந்தாளே. ஓர்மை இருக்கோ?

தெரிசாவுக்கு எப்படி மறக்கும்? அதுவும் எடின்பரோவில் ஒரு ராத்திரி நேரம் பிசாசுகளைக் காண்பித்துக் கொடுக்கிற வயசனோடு நடந்தபோது அந்த சிநேகிதிகளுக்கு அனுபவபட்டது. பர்வதம் அவர்களோடு பேசினாளில்லையோ.

ஆமா, அந்த ரெண்டு ஸ்திரிகளும் அவங்க ஊருக்குத் திரும்பினதும் உங்க தேசத்து ராஜாவுக்கோ ராணிக்கோ இந்த ஏழைப்பட்ட இந்திய ஸ்திரியும், பெண்குழந்தையும் இருக்கற ஸ்திதியைப் பற்றி மனுப் போட்டாளாம். லண்டன் பட்டணத்து அரண்மனையிலே அந்த காகிதத்தை குப்பைக்கூடையிலே யாரோ சிப்பந்தி விட்டெறிஞ்சு அவன் பாட்டுலே மத்யலகரி ஏத்திக்கப் போய்ட்டானாம்.

தெரிசாவுக்கு இதெல்லாம் தெரியாத விஷயம். பகவதிக்குப் புரியாததும் கூட.

மனுப்போட்டு ஒண்ணும் ஆகப் போறதில்லேன்னு நிச்சயம் ஆனதும் அந்த அமெரிக்கையான ஸ்திரிகள் என்ன பண்ணினா தெரியுமோ? நீ கூட கொஞ்ச நாள் தங்கி இருந்து தீப்பிடிச்சு தெய்வாதீனமாப் பிழைச்சு வந்தியேடிம்மா. அது என்ன பேர், கில்மோர் தெருவோ என்னமோ. அங்கே கன்யாமாட ஸ்திரிகளுக்கு எழுதிப் போட்டிருக்கா. கிறிஸ்தியானியிலேயே ஏகப்பட்ட பிரிவு இருக்காமே. ஆனாலும் சத்சங்கத்திலே சிநேகிதமாச்சாமே. உனக்குத் தெரியுமில்லையோ.

கொஞ்சம் தெரியும், மற்றது தெரியாது. தெரிசா அமைதியாக ஜெபமாலை உருட்டிக் கொண்டிருந்தாள்.

அந்த கன்யாஸ்திரிகள் சாஸ்தாப்ரீதி தோதிலே கிறிஸ்துபகவான் ப்ரீதியோ ஏதோ நடத்த ஸ்ரமிச்சிருக்கா. உசிரோட இருக்கப்பட்டவாச்சே. ப்ரீதிப்படுத்தி சாந்தியாக்க என்னைப்போல் உசிர் போனவா இல்லையே. என்ன ஆச்சோ, உன் கிட்டே பர்வதமும் குஞ்ஞம்மிணியும் அப்புறம் நெருங்கவே முடியாம தடசமாயிடுத்து. யாரையும் குத்தம் சொல்ல மாட்டேன் நான். நல்ல நோக்கத்திலே பண்ணினது. தாறுமாறாயிடுத்துன்னா யார் என்ன பண்ண முடியும் சொல்லு.

தெரிசா நாலைந்து வருஷமாக அம்பலப்புழைக் குடும்பத்தை சந்திக்க முடியாமல் போனதுக்கான காரணம் இதுதான் என்று மனதில் பட்டதை யோசித்தபடி இருந்தாள். இந்தக் குடும்பத்துக்கு இனியும் என்ன உதவி செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை.

புரியாவிட்டாலும் பகவதிக்கு விசாலம் மன்னி படும் கஷ்டம், அவள் பிள்ளையும் குடும்பமும் படும் கஷ்டம் எல்லாம் மனசை இன்னும் அதிகம் விசனப்பட வைத்தது.

மற்ற எதுவும் செய்யாவிட்டாலும் விசாலம் அத்தையின் அஸ்தி மட்டும் எப்படியாவது பட்டணத்தில் கோர்ட் உத்தியோகஸ்தன் யாரோ சொன்னாளே அவனிடம் இருந்து கிடைத்தால் அவள் கங்கையில் கரைத்துக் கரையேற்றுவாள்.

அம்மா போன்ற, பெற்றவளை விடவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கப்பட்ட ஸ்திரிக்குச் செய்து தீரவேண்டிய அவளுடைய கடமை அதாச்சே.

‘மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாச்சு. அத்தையும் மருமகளும் நல்ல பகல் உறக்கத்திலேயா இருக்கீங்க?’

கதவைத் திறந்து வந்த வேதையன் சொன்னான். விசாலம் கலைந்து போயிருந்தாள்.

(தொடரும்)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்திரெண்டு

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

இரா.முருகன்


1915 நவம்பர் 14 – ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு

கண்ணூர் என்றால் என்ன, காசர்கோடு என்றால் என்ன, குட்டநாட்டில் ஆலப்புழை, அம்பலப்புழை என்றால் என்ன? சகலரின் மனதிலும் ஒளிந்தும் தெரிந்தும் பொங்கி வரும் குளிர்ச்சி எல்லாம் குவிந்த மாதிரி இதமும் கும்மாளம் இட்டுப் போகிற வெள்ளப் போக்குமாக இந்த மலையாளக் கரை முழுக்க தண்ணீருக்கு என்றைக்குத்தான் பஞ்சம்?

பகவதி ஆசை தீர கிணற்றடி வாய்க்காலில் சேர்ந்து பிரவகித்து வீட்டை ஒட்டிக் குளிமுறியில் சுழித்தும் நுரைத்தும் அலையடிக்கிற நீர்ப் பிரவாகத்தில் ஆனந்தமாகக் குளித்தாள்.

அவள் பார்வைக்கு எட்டாத தூரத்தில் துர்க்கா பட்டன் அரசூர் அரண்மனை ஜோசியர் வடித்து நிறுத்தின யந்திரம் போல் ஆழக் கிணற்றில் இருந்து ஜலம் இறைத்து வாய்க்காலில் வட்டித்தபடி இருந்தான். அவன் பாடுகிற கொங்கணிப் பாட்டு சத்தம் மெலிசான இழையாக குளிமுறி வரை அவ்வப்போது கேட்டது.

மரத்தில் குயில் விடாமல் பகவதி குட்டி குளிக்கிறியாடீ என்று விசாரித்த சத்தத்தில் பட்டன் பாட்டு போன இடம் தெரியவில்லை. ஆமா, குளிக்கறேன். வந்து பாரு நீ வேணும்னா. உனக்கும் அவருக்கும் லஜ்ஜைன்னா என்னன்னு தெரியுமோ?

பகவதி ஒரு கைப்பிடி தண்ணீரை விசிறி எங்கே என்று இலக்கு வைக்காமல் மேலே எறிந்து சிரிக்க அது அவள் மேலேயே முழுக்க வழிந்தது.

சீக்கிரம் குளித்து முடிக்க வேண்டும். இல்லையோ, மஞ்சள் வாசனை பிடிக்க சங்கரன் குளிமுறியின் கோடிக்குக் குடியேறி விடுவான்.

போங்கோ, பொம்மனாட்டி குளிக்கற இடத்திலே என்ன வேலை உங்களுக்கு?

இன்னொரு கைப்பிடி தண்ணீர் வெள்ளிச் சிதறலாக மேலே எழும்பி தலை நனைக்க, பகவதி உடுப்பு ஈரத்தில் படாமல் உடுபாவாடையும் மேலே கிறிஸ்தியானி குப்பாயமும், சேர்த்துப் போர்த்தின மேல் தோர்த்தும், தலைமுடியை அணைத்துக் கட்டிய நேரியலுமாக பின் வழியாக மாடிக்கு நுழைந்தாள்.

தெரிசா மண்டியிட்டு கையில் ஜபமாலை உருட்டியபடி பிரார்த்தனையில் மூழ்கி இருந்தாள். பகவதிக்கு பிரியமான காரியத்தை அவளுக்குப் பிரியமான கிட்டாவண்ணாவின் பெண் சாரதை ஆழ்ந்த சிரத்தையோடு செய்கிறது மனதுக்கு இதமாக இருந்தது. இதுவே அம்பலப்புழை கிருஷ்ணன் அம்பலம், இவள் அங்கே சீவேலி முடிந்து தொழுது நிற்கிறாள். நாமம் சொல்கிறாள். இங்கிலீஷில்.

எந்த தெய்வம் ஆனால் என்ன? அவளையும் பகவதியையும் மீண்டும் சேர்த்து வைத்த அந்தக் கடவுளுக்கு, அது பெண்ணோ, ஆணோ, அலியோ, மிருகமோ, எல்லாமோ, அந்த இருப்புக்கு அவளும் ஒரு வினாடி கைகுவித்து சேவித்தாள். நிலத்தில் விழுந்து நமஸ்கரித்தாள்.

அவள் பெட்டியைத் திறந்து மாம்பழப் பட்டுப் புடவையை உடுத்திக் கொள்ள எடுக்கும்போது தெரிசா பிரார்த்தனை முடிந்து ஜபமாலையை கையில் சுருட்டி வைத்துக் கொண்டு எழுந்திருந்தாள்.

அத்தை, ஒரு நாள் நான் எனக்கு உங்க புடவையைக் கட்டி விடறேளா?

பகவதி அவள் உச்சந்தலையில் முத்தினாள்.

உனக்கு இல்லாத புடவையாடி ராஜாத்தி? எந்த நிறம் பிடிக்கும் சொல்லு. இந்தக் கிளிப்பச்சை? புத்தம்புதுசு. பாந்தமா இருக்கும் உனக்கு.

மேலே போட்டுக்க ரவிக்கை இல்லியே அத்தை.

ஒரு விசாரமும் வேண்டாம்டீ குழந்தே. என்னுதே உனக்கு அளவெடுத்து தைச்ச மாதிரி கச்சிதமா இருக்கும். நீ வேணா பாரு.

இருந்தது. தெரிசா புடவை, ரவிக்கையில் மகாலக்ஷ்மி போல இருந்தாள். மீனாட்சியம்மன் குங்குமம் தொட்டு நெற்றியில் ஒரு திலகம் மட்டும் வைத்திருந்தால் இன்னும் களையாக இருந்திருக்கும். போறது போ.

அத்தை, நீங்க என் சீமைக் குப்பாயத்தை மாட்டிப் பார்த்துண்டா என்ன? ஏக அமர்க்களமா இருக்கும்.

தெரிசா கண்ணில் குறும்பு தெரிக்க, ஓடத் தயாராகப் போக்குக் காட்டியபடி வாசல் பக்கம் ஒரு காலும் உள்ளே மற்றதுமாக நிலைப்படியில் நின்றாள்.

பச்சைக் குழந்தையாட்டமா என்னைக் களியாக்காதேடீ சாரதே. என் கல்யாணத்தும்போது லட்டு உருண்டையோட ஓடின களியெல்லாம் மறந்து போகலியா இன்னும்?

பகவதி அவளைச் செல்லமாக அடிக்கக் கை ஓங்கியபடி ரெண்டு எட்டு ஓடி தலை சுற்ற சுவரைப் பிடித்துக் கொண்டாள்.

பதுக்கெ, பதுக்கெ.

அவளை ஆதரவாகத் தாங்கி மாடிப்படி இறங்கி தெரிசா கீழே வந்தாள்.

‘மேசையில் உட்கார்ந்து மதாம்மா ஊணு கழிக்கும் இல்லியா?

பட்டன் தெரிசாவைக் கேட்டான். அது ஒண்ணும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு தரையில் கால் மடித்து உட்கார்ந்தாள் தெரிசா. நிறைய இடம் விட்டு இன்னொரு இலை போட்டு அதுக்கு முன்னால் ஒரு மனையும் போட்டான் துர்க்கா பட்டன்.

அம்மா, நீங்க வரலாமா?

பகவதியைப் பார்த்துக் கேட்டான் அவன்.

இம்புட்டு இடம் என்னத்துக்கு நடுவிலே? நீயும் வேதையனும் சமாராதனை முடிஞ்ச மாதிரி படுத்து உருளப் போறேளா?

பகவதி இலையையும் மனையையும் கையில் எடுத்து வந்து தெரிசாவின் தோளில் இடிக்கிற மாதிரி நெருக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

என் பிள்ளையாண்டன் எங்கேடா துர்க்கா?

மருதையனை அவள் கண்கள் தேடின.

யாரு பிரின்சிபால் சாரா? அவர் காலையிலே பிராதல் கழிச்சு ஒண்ணு கெறங்கிட்டு வரேன்னு போனவர் தான் இன்னும் காணலே.

பட்டன் ரெண்டு இலையிலும் சோறும் கறியும் இதர விபவங்களும் விளம்பிக் கொண்டே சொன்னான்.

பரிபூரணம் கல்சட்டியில் கொதிக்கக் கொதிக்க புளிக்குழம்பை பிடிதுணி சுற்றித் தூக்கிக் கொண்டு சமையல்கட்டிலிருந்து வந்தாள்.

பரி, போதும். இப்படி ஒரே நாள்லே உடம்பு சக்தி எல்லாத்தையும் சமையல்லே செலவழிச்சுடாதே. கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளையும் சம்பந்திகளும் வந்து இறங்கினா விதவிதமா செஞ்சு போடணும். அதுக்கு உடம்பு ஒத்துழைக்கணும்.

பகவதி சொல்லியபடி பரிபூரணம் பரிமாறினதை ருசித்துச் சாப்பிட்டாள். அவளிடம் சொல்லி விடலாமா என்று பரிபூரணத்துக்கு ஒரு மனது.

என்னதான் அத்தை சொன்னாலும் அவளுக்கு தானே சமைத்து பகவதிக்கு உண்ணக் கொடுக்க மனசு ஒப்பாமல் துர்க்கா பட்டனை விடிகாலையிலேயே எழுப்பி எல்லாப் பதார்த்தமும் அவனைக் கொண்டு உண்டாக்கி வைத்திருந்தாள்.

இப்போது அதையெல்லாம் சூடாக்கி பரிமாறுகிறது மட்டும் தான் அவள் செய்கிறது.

அத்தை சந்தோஷத்தைக் கெடுக்க வேணாம் என்று அவள் தீர்மானித்து ஒன்றும் பேசாமல் சிரித்தபடி வாழை உப்பேறி எடுக்க திரும்ப சமையலறைக்கு நடந்தாள்.

அத்தை, இங்கே வேறே யாரோ இருக்கற மாதிரி இல்லே?

திடீரென்று தெரிசா கேட்டாள். அவள் நெற்றியில் வியர்க்க ஆரம்பித்திருந்ததை பகவதி கவனித்தாள். பயந்திருக்காளா குழந்தை?

நம்மளைத் தவிர யாருமே இல்லியேம்மா. பரிபூரணம் உள்ளே போயிருக்கா. பட்டன் தோட்டத்துலே தண்ணி எறச்சு ஊத்திண்டு இருக்கான்.

இல்லே அத்தே, சுவர் ஓரமா யாரோ. ரொம்ப வாத்சல்யமா பார்த்துண்டு உங்க மாதிரியே ஆனா இன்னும் வயசாகி. எங்கேயோ பார்த்திருக்கேன். அது அது.

தெரிசா சாப்பிட மறந்தவளாக எதிர்ச் சுவரையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

உனக்கு இன்னும் சமுத்திர வழியா வந்த யாத்ரையோட க்ஷீணம் மாறலேடி குழந்தே. சாப்பிட்டு விச்ராந்தியா சித்த நாழி படுத்து உறங்கு. தீர்ச்சையா மாறும்.

பகவதி தரையில் கையை ஊன்றி சற்று சிரமத்தோடு எழுந்தாள்.

கையலம்பப் போகட்டாடீ சாரதே? நீ மெல்லச் சாப்பிட்டு முடிச்சுட்டு வா. ஆகாரம் வேண்டாம்னு ஒதுக்கிடாதே. உனக்குத் தெரியாததில்லே.

இல்லே அத்தை. போதும். நானும் எந்திருக்கறேன்.

பாதி சாப்பாட்டில் தெரிசாவும் எழுந்து விட்டாள்.

பிடிக்கலியா தெரிசா?

பரிபூரணம் கேட்டபோது அவள் அவசரமாக மறுத்து ஆகாரம் உள்ளே எறங்க மாட்டேங்கறது மன்னிம்மா என்று சொல்லியபடி கை அலம்பப் போனாள்.

அவளுக்கு முன்னால் மாடி ஏறி இருந்த பகவதி ஒரு வினாடி ஆச்சரியப்பட்டு நின்றாள். அதெப்படி சாரதை அவளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அங்கே உட்கார்ந்திருக்கிறாள்? அவள் உடுத்தி விட்ட புடவை கூட நிறம் மாறி, இன்னும் பிரகாசமான வர்ணத்தில் மனதுக்கு நிறைவாக. அந்த புடவையில் இருந்து வருகிற வாடை, பகவதி நினைவு மறந்து போன அம்மாவின் தேக வாடையா?

சாரதே, நீ நீ சாப்பிட்டு முடிச்சுட்டியா? எப்போ?

என் பொன்னு பகவதிக் குட்டி. நான் சாரதை இல்லே. உன்னோட ஸ்வந்தம் விசாலாட்சி மன்னி.

திரும்பிப் பார்த்து சிநேகமாகச் சிரிக்கிற விசாலாட்சி மன்னி. தான் ஸ்வப்ன லோகத்தில் இருக்கிறோமா இல்லை இதெல்லாம் நிஜமாகவே நடந்து கழிந்து கொண்டிருக்கிறதா என்று பகவதிக்குத் தெரியவில்லை.

சந்தோஷமும் பயமுமாக மனதில் மாறி மாறி வருகிறது. விசாலாட்சி மன்னி, இப்போ இங்கே எப்படி? உயிரோடு இருந்தாலும் தொண்ணூறு வயசாவது காணுமே. அன்னிக்குக் கண்ட கோலத்தில் அழியாத யௌவனத்தோடு எப்படி?

தெரிசா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்ததும் சத்தம் கிளப்பாமல் பகவதியின் தோளைப் பிடித்துக் கொண்டு அவள் அருகே அமர்ந்ததும் பகவதிக்கு மனதில் போதமானது.

அவளுக்கும் அர்த்தமானதோ எல்லாம். இல்லை, பகவதி போல் அவளும் கனவுக்கும் நினைவுக்கும் நடுவே அல்லாடிக் கொண்டிருக்கிறாளோ?

விசாலம் மன்னிடீ சாரதே. இங்கே வந்திருக்காடி மன்னி. தெரிஞ்சுதா? விசாலி மன்னி வந்திருக்கா. நம்ம விசாலாட்சி மன்னி. குப்புசாமி அண்ணா ஆத்துக்காரி. வந்திருக்கா. அண்ணா சௌக்கியமா மன்னி? ஏன் இத்தனை வருஷமா பார்க்க வராம? அவர் மட்டும் இருந்தா எவ்வளவு சந்தோஷப் படுவார் தெரியுமா? சாரதே, நமஸ்காரம் பண்ணுடி மன்னிக்கு. நம்ம கிட்டாவண்ணா பொண்ணு மன்னி. எவ்வளவு பெரியவளா வளர்ந்துட்டா பார்த்தேளா? ஆசீர்வாதம் பண்ணுங்கோ.

பகவதி உரக்க முணுமுணுத்தாள். தெரிசாவுக்குச் சொல்வதை விட விசாலாட்சி மன்னி என்று மனதில் பட்ட வடிவத்தோடு பேசுவதை விட தனக்குத் தானே உறைப்பு வருத்த அவள் விடாமல் தணிந்த குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.

மன்னி நான் சாப்பிட்டுண்டு இருக்கறபோதே வந்தாச்சு.

தெரிசா பகவதி காதில் சொன்னாள்.

அய்யோ, அதுக்காக பாதியிலே எழுந்திருக்கணுமா? ஆகாரத்தை வீணாக்கலாமாடி என் தங்கம்?

வேண்டியிருக்கலே விசாலம் அத்தை.

தெரிசா தன்னையறியாமல் மாரில் குரிசு வரைந்தபடி சொன்னாள்.

குட்டியம்மிணிக்கு சாதம் போடறியா குழந்தே? பாவம் கொச்சு பெண்குட்டி. அவளும் பர்வதமும் இன்னும் அலைஞ்சுண்டு தான் இருக்கா.

விசாலம் விம்மும் சத்தம் தெரிசாவுக்கும் பகவதிக்கும் நெஞ்சுக்குள் கேட்டது.

(தொடரும்)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

இரா.முருகன்


1915 நவம்பர் 14 – ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு

என்ன எதுக்கு என்று சொல்லாமல் அழுகிற குழந்தை போல் வானம் பொத்துக் கொண்டு ஊற்றிய சாயந்திர நேரம். கண்ணூரில், ஏன், மலையாள பூமி முழுக்கவே விருச்சிக மாசத்தில் இப்படி மழை பெய்கிற வழக்கம் இல்லை என்று பகவதிக்கு அனுபவ பூர்வமாகத் தெரியும்.

விருச்சிகத்திலும் கர்க்கடகம் போல் மழை வர்ஷிக்கலாம்னு இன்னொரு அனுபவத்தைக் கூட்டிச் சேர்த்துக்கோ

சங்கரன் பகவதி தோளில் தட்டிச் சிரித்தான். அவன் இன்னும் பக்கத்திலேயே இருப்பதாக பகவதி உணர்வதும் அனுபவ பூர்வமாகத்தான். அவளுக்குத் தெரிந்தது அத்தனை பேருக்கும் தெரிந்திருக்க வேணும் என்று கட்டாயமா என்ன?

காலையில் ரயிலை விட்டு இறங்கி, துர்க்கா பட்டன் அவளையும் மருதையனையும் பத்திரமாக வேதையன் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டான். அவர்கள் வந்த மோட்டார் வழியில் நாலு இடத்தில் நின்று போய் துர்க்கா பட்டனும், மருதையனும் வண்டி தள்ள வேண்டிப் போனது தவிர வேறே புத்திமுட்டில்லை.

பட்டரே, இப்படியே போகிற இடம் வரைக்கும் தள்ளிக்கிட்டே போயிடுவோமே. உடம்பு இளைக்க கசரத்து செய்த மாதிரி எனக்கும் இருக்கும். உமக்கும் கொஞ்சம் ஊளைச்சதை கரையும். என்ன சொல்றீர்?

மருதையன் துர்க்கா பட்டனை வம்புக்கிழுக்க மறக்கவில்லை.

அது ஒண்ணும் இல்லே மாஷே. உம்ம மாதிரி பிரமுகர்கள் ஏறிண்ட பெருமையிலே அடிக்கடி இந்த மோட்டார் இது நிஜமா பிரமையான்னு நிலைச்சுப் போயிடறது.

இது எதுவும் என்னை பாதிக்கலையாக்கும் என்கிறது போல் நேர் பார்வை பார்த்துக் கொண்டு தரக்கன் வண்டியை ஓட்டித்துப் போய் ஒரு வழியாக வேதையன் வீட்டுத் தெருவில் வளைத்துத் திருப்பினான்.

முண்டும் கச்சுமாக வாழைக்குலையும் குடத்தில் தண்ணீரும் எடுத்து வந்து கொண்டிருந்த சின்ன வயசுப் பெண்கள் கூட்டம் தரக்கன் வண்டியின் ஹாரனை அடிக்கும்போதெல்லாம் உரக்கச் சிரித்தபடி கடந்து போனது. பகவதி அம்மாள் பக்கத்தில் இல்லாவிட்டால் அதைக் கட்டாயம் மருதையன் ரசித்திருப்பான்.

இதுகளுக்கு என்னமா ஒரு சிரியும் கொம்மாளியும் பாரு.

பகவதி சொல்லும் போதே அவளும் நாணிக்குட்டியும் அம்பலப்புழையில் இந்த வயசில் சேர்ந்து திரிந்த, இதே தரத்தில் சந்தோஷமாகப் பறந்த நாட்கள் நினைவில் வந்து போய்க் கொண்டே இருந்தன.

வாசலில் கார் நின்று பகவதி இறங்கியதுமே, அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்த வேதையனும் பரிபூரணமும் அவள் காலைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள்.

பரிபூரணம் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்த சிலுவையை ஒரு தடவை ஆதரவாக முத்தம் கொடுத்தபடி கண்ணில் ஒற்றிக் கொண்டாள். பகவதி அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

என் கண்ணே, உனக்கே இப்பத்தான் கல்யாணப் பிராயம் வந்த மாதிரி இருக்கு. விடிஞ்சா உன் குழந்தைக்குக் கல்யாணம். காலம் எத்தனை வேகமாப் பறக்கறது.

அத்தை, இவ ஏற்கனவே எனக்கும் சேர்த்து சதை போட்டிருக்கா. நீங்க சொன்னதைக் கேட்ட சந்தோஷத்திலே இன்னும் ஊதிட்டா, ஆலப்பாட்டுத் தாத்தன் மாதிரி பறக்கவே ஆரம்பிச்சுடுவா.

வேதையன் சிரிக்காமல் சொன்னான். பகவதி அவனை செல்லமாக கன்னத்தில் அடித்தாள்.

அட போடா அசடே உனக்கு ஆலப்பாட்டு வயசரையும் தெரியாது ஆத்துக்காரி சௌந்தர்யமும் கண்ணுலே படாது.

வயசன் எப்போ காலமானார்? சிநேகா மன்னி அப்போ எங்கே இருந்தாள்? பகவதி எத்தனை யோசித்துப் பார்த்தும் நினைவு வரவில்லை.

அத்தை நீங்க தங்க தனியா ஜாகை ஏற்பாடு செஞ்சு வச்சிருக்கேன்.

வேதையன் அவளுடைய படுக்கை சஞ்சியைத் தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தபடி சொன்னான்.

எதுக்குடா? இங்கேயே தங்கிக்கறேனே. நீங்க குடித்தனம் நடத்தற அழகை ஆற அமர இன்னிக்கு முழுக்கப் பார்த்துண்டு இருக்கலாமே.

நல்லா சொல்லுங்க அத்தை. நான் அப்போ பிடிச்சு நீங்க இங்கே தான் இருக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். உங்களுக்காக மாடியிலே இடம் கூட விருத்தியாக்கி கட்டில், கிருஷ்ணன் சாமி படம், வீபுதி, குங்குமம் எல்லாம் மேடிச்சு வச்சிருக்கு. நான் உண்டாக்கற பட்சணம் கழிக்க முடியாதுன்னா குழப்பம் ஒண்ணுமில்லே. துர்க்கா பட்டனை விட்டு பாகம் பண்ணித் தரச் சொல்லி இருக்கேன். இத்தனை செஞ்சும் இவரானா உங்களுக்குத் தனி ஜாகை வேணும்னு பிடிவாசியோட ஏற்பாடு செய்து வச்சிருக்கார்.

பரிபூரணம் நீளமாகப் பேசி நிறுத்தினாள். புகார் மாதிரியும் இருந்தது, அன்போடு வைக்கிற கோரிக்கை மாதிரியும் இருந்தது அது.

ஏண்டி அசடே, நீ பாகம் பண்ணின சாதம் நய்யும் சம்பாரமும் குத்தி நான் சாப்பிட மாட்டேன்னு என்னிக்காவது சொல்லியிருக்கேனா? ஆனா மூணு வேளையும் சாதம் போட்டுடாதேடீயம்மா. சாயந்திரம் நல்லா மொறுமொறுன்னு தோசை வார்த்துடு.

பரிபூரணம் முகத்தில் சந்தோஷம் பரிபூரணமாகப் படர, அவளை முந்திக் கொண்டு வீட்டு மாடிக்குப் படியேறிக் கொண்டிருந்தாள் பகவதி. வயசு காரணமாக வரும் ஆயாசமும் அயர்ச்சியும் போன இடம் தெரியவில்லை.

இது அவளோட வீடாக்கும். அண்ணா கிட்டாவய்யன் மேல் மச்சில் அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கான்.

அண்ணா, சௌக்கியமா இருக்கேளா? சினேகா மன்னி எங்கே? அம்பலத்துக்குப் போயிட்டாளா? கொஞ்சம் நின்னிருந்தா நானும் வந்திருப்பேனே.

மாடிப்படியின் கோடியில் அவள் நின்று உள்ளே விசாலமான மாடியறையை நோட்டமிட்டாள்.

கட்டில் ஒன்று நட்ட நடுவே கிடந்தது. வெளுத்த படுக்கை விரிப்பில் தாமரைப்பூ அடுக்கடுக்காக விரிந்து கட்டிலைச் சுற்றி நாலு பக்கமும் வழிந்தது.

அந்த இடம் முழுக்க வெள்ளைக்கார வாடை. அவளுக்குத் தெரியும். எப்படி என்றால் சொல்ல முடியாது.

சங்கரன் கப்பலில் பிறந்த மேனிக்கு வெள்ளைக்காரிகளோடு கிடந்ததை அணுஅணுவாக விவரித்துச் சொல்லி அந்த வாடை சகிக்கவொண்ணாமல் இன்னும் மூக்கில் குத்துகிறது. அவனோடு பிணங்கியும் பிணைந்தும் கிடந்த போதெல்லாம் அந்த வாடை அவளைச் சுற்றி சூழ்ந்து வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது.

சங்கரன் தப்பு செய்ததாக ஒரு வினாடி தோன்ற வைத்து அப்புறம் அதை மறக்க வைத்து செப்பிடு வித்தை செய்து கொண்டிருந்த வாடை அது. அனுபவிக்காமலேயே அதை உணர்ந்திருந்தாள் பகவதி.

சங்கரனை எரிக்கத் தூக்கிப் போனபோது கடைத்தெரு பிரமுகர்கள் ஆளுயரத்துக்கு, ஆள் நீளத்துக்குச் சார்த்தின ரோஜாப்பூ மாலையின் சாவு வாடையை மீறி அந்த வெள்ளைக்காரி வாடை ஒரு வினாடி எட்டிப் பார்த்துத் துக்கம் விசாரித்துப் போனது.

அதற்கு அப்புறம் இத்தனை வருஷம் கழித்து இப்போது தான் அது திரும்பி இருக்கிறது.

கிடக்கையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வெள்ளைக்காரி யார்? எந்தக் கப்பலில் இருந்து வந்தவள்? இல்லை இன்னும் கப்பலில் தான் இருக்கிறாளா?

அப்போ, பகவதி எப்படி சமுத்திரத்துக்கு வந்தாள்? இது கண்ணூர் இல்லையோ? பையாம்பலம் மாயானம் பக்கத்தில் இரைகிற கடல் இங்கேயும் உண்டுதான். ஆனால் கப்பல் எல்லாம் வராதே.

பகவதிக்கு ஒண்ணும் புரியவில்லை. ஏதோ பிரமையாக இருக்கணும். அசதி அசதியாக ரயிலில் தூங்கிக் கொண்டு வந்தது இன்னும் மிச்சம் இருந்து கண்ணை மறைக்கிறது. நாசியையும் அது கட்டிப் போட்டு விட்டது. மாடியை விட்டு இறங்கி வெளியே காற்றோட்டமாக உட்கார்ந்தால் சரியாகி விடும்.

கிடக்கையில் மல்லாக்கப் படுத்து நித்திரை போயிருந்த வெள்ளைக்காரி அசைந்த மாதிரி தெரிந்தது. போர்த்தியிருந்த புதைப்புக்கு வெளியே வந்த கையில் ஒரு வளையல்.

இவள் என்ன மாதிரி மதாம்மை? மதாம்மையும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. அது என்ன வளை குலுங்குகிற சத்தமா?

பகவதி கதவுப் பக்கம் அவசரமாக நகர்ந்தபோது பின்னால் வெள்ளைக்காரி எழுந்து படுக்கையில் உட்கார்வது ஒரு வினாடி கண்ணில் பட்டது.

வேதையா, அனியா. ஆரு அவிடே?

பகவதிக்குப் பழக்கமான பாஷையில் உரக்க கூப்பிடுகிற மதாம்மை.

க்ஷமிக்கணும். தவறுதலா நான் இங்கே.

பகவதி பாதி திரும்பி அவளைப் பார்த்தும் பார்க்காமலும் முணுமுணுப்பாகச் சொன்னாள்.

அத்தை. பகவதி அத்தை. இது நான் தான் அத்தை.

அந்தப் பெண் ஓடி வந்து பகவதியை இறுகக் கட்டிக் கொண்டாள்.

என் குழந்தே, நீ சாரதை இல்லையோடி?

பகவதி வியப்பும் சந்தோஷமுமாக கண்ணை அகல விரித்தபடி அவளை இன்னொரு தடவை உடம்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டு உச்சந்தலையில் முத்தினாள்.

அண்ணா வேதையனின் மூத்த பெண்குட்டி. எத்தனை வருஷத்துக்கு அப்புறம் அவளைத் திரும்பப் பார்க்க வாய்த்திருக்கு. பகவதி கல்யாணத்தில் லட்டுருண்டையை சிற்றாடையில் மறைத்து வாசலுக்கு எடுத்துப் போனதற்காக அவளுடைய அம்மா சிநேகாம்பாள் கன்னம் சிவக்க விரலால் நிமிண்டி அழ வைத்த குட்டிப் பெண். இப்போ, இத்தனை வருஷம் கழித்து மதாம்மை போல் ஆகிருதியும், வனப்பும், உடுப்பும், இருப்பும்.

நன்னா இருக்கியாடி சாரதே?

தெரசாவுக்குக் கண்ணில் நீர் நிறைந்தது. அவளை சாரதா என்று கூப்பிட இன்னும் உலகத்தில் ஒரு சொந்தம் உண்டு. பகவதி அத்தைக்கு அவள் சாரதாவாகவே இருந்துவிட்டுப் போகட்டும். தெரிசாவாக இல்லாவிட்டால் ஒரு குறைச்சலும் இல்லை.

ஏண்டி குழந்தே தனியாவா இத்தனை தூரம் வந்தே? அகத்துக்காரர் வரல்லியா? எப்படி இருப்பார்னு பார்க்க கொள்ளை ஆசைடி அம்மா. உனக்கு எத்தனை குழந்தை குட்டி? அவர் என்ன உத்தியோகம் பார்க்கிறார்? கோர்ட்டு கச்சேரியா, நேவிகேஷன் கிளார்க்கா?

பகவதிக்குத் தெரிந்த உத்தியோக உலகத்தில் இதற்கு மேல் பதவிகள் இல்லை. கரண்டி பிடித்து ஊர் ஊராக கல்யாணத்துக்கும், அடியந்திரத்துக்கும் சோறும் கூட்டானும் அடைப் பிரதமனும் உண்டாக்கிக் கொடுக்க ஒரு கும்பல் இன்னும் இந்தப் பிரதேசங்களில் திரிந்து கொண்டிருக்கலாம். பகவதி வந்த பரம்பரை அது. ஆனால் அதை எல்லாம் உத்தியோகமாக எடுத்துக்க முடியாது அவளுக்கு.

அப்ப, புகையிலைக் கடை?

சங்கரன் அவள் தோளைத் தொட்டுத் திருப்பிக் கண்ணை ஊடுருவிப் பார்த்துக் கேட்டான்.

சித்தெ சும்மா இருக்கேளா? என் குழந்தை இத்தனை வருஷம் கழிச்சு வாய் நிறைய அத்தைன்னு கூப்பிட்டுண்டு வந்திருக்கா. அவளைக் கொஞ்சிட்டுத்தான் மத்த எல்லோரும். புகையிலைக் கடைக்காரா, போய்ட்டு மத்தியானம் வா.

அவளுக்கு உற்சாகம் பொங்கி வழிந்தது. தெரிசா இழுத்த இழுப்புக்குச் சின்னப் பெண் போல குதித்து ஓடி கூடவே அவளோடு கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.

அத்தை நீங்க ஏன் இப்படி இளைச்சுப் போய்ட்டீங்க? அந்தக் கண்ணு மட்டும் இன்னும் அப்படியே சிரிக்கறது. அதுக்கு வயசாகாதா?

தெரிசா பகவதியின் இமைகளை நீவிக் கொண்டே அவள் தோளில் முகம் புதைத்தாள்.

நான் எப்பவும் இதைத்தானே சொல்றேன்.

சங்கரன் பகவதிக்கு முத்தம் கொடுக்க அடியெடுத்து வைத்தான்.

ஒரு லஜ்ஜையும் கிடையாதாடா புகையிலைக்காரா? குழந்தை வந்திருக்கான்னு சொல்றேன். கேட்டாத்தானே?

தெரிசா பகவதியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

அப்புறம் சொல்லுங்கோ அத்தை.

விட்ட இடத்திலிருந்து கதை சொல்லச் சொல்கிறாள். எத்தனை வருஷக் கதை பாக்கி இருக்கு.

(தொடரும்)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபது

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

இரா.முருகன்


1915 நவம்பர் 14 – ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு

‘அம்மா, எந்திருங்க. கண்ணூர் வந்தாச்சு’.

மருதையன் எழுப்பினான்.

அசதியோடு கண் விழித்தாள் பகவதி. அவளுக்கு எழுந்திருக்கவே மனசு வரமாட்டேன் என்றது. இந்த ஐப்பசியில் அறுபது வயசை எட்டிய முத்தச்சி பகவதி இல்லை அவள். பச்சைப் பட்டுப் பாவாடையும் கரு நீல வண்ண ரவிக்கையும் தரித்தவள். தலை கொள்ளாமல் முல்லைப்பூவும் மல்லிப்பூவும் கலந்து நெருக்கமாகத் தொடுத்த சரம். மஞ்சள் தாவணியை இழுத்துச் செருகினது எடுப்பான மார்பை இன்னும் நிமிர்த்தி சவால் விட்டு நிற்கச் சொல்கிறது. காலில் சலங்கை பாதத்து மருதாணிச் சிவப்பை புதுப் பெண்டாட்டி போல் அடிக்கொரு தடவை வருடி வருடி ஆசையோடு விசாரித்துக் கொண்டிருக்கிறது.

விடிந்தால் அவளுக்குக் கல்யாணம். அரசூர்ச் சங்கரன் என்கிற பிள்ளையாண்டான் அரசூர்ப் பட்டணத்தில் இருந்து வந்து பகவதியை வாரி எடுத்து மலையாள பூமியில் இருந்து தமிழ் புழங்குகிற பிரதேசத்துக்கு எடுத்துப் போகப் போகிறான். புகையிலைக் கடை வைத்திருக்கிற பிராமணன். மலையாளம் அறியாதவன்.

அவனுடைய கரளை கரளையான கையும் காலும் அவனுக்கு வேறே என்ன சங்கதி எல்லாமோ தெரிந்திருக்கும் என்று அவளிடம் ரகசியம் சொல்கின்றன. பகவதிக்கு மார்பு படபடக்கிறது, நெற்றியில் வியர்வை பூக்கிறது.

விசாலாட்சி மன்னி அவள் முகத்தைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்து விட்டு ‘என் கண்ணே பட்டுடும் போல இருக்குடி குழந்தே’ என்று அவள் கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைக்கிறாள்.

சிநேகாம்பாள் மன்னியின் ரெண்டு பெண்குட்டிகளும் எட்டிப் பார்க்கின்றன. கல்யாணப் புடவையும் பூமாலையும் பட்சணமும் வைத்த அம்பலப்புழை வீட்டு அறையில் இருந்து லட்டு உருண்டைகளை எடுத்துக் கடித்தபடி ரெண்டும் ஓடுகின்றன. சிநேகா மன்னி அதுகளை பிசாசி என்று இரைகிறாள். அவள் கண் ஏனோ நிறைந்து இருக்கிறது.

பொண்ணைக் கூட்டிண்டு வாங்கோ.

அரசூர் ஜோசியர் உரக்கச் சொல்கிறார். பழுத்த சுமங்கலியான ஒரு கிழவி வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து என்று தமிழில் பாடுகிறாள். யார் எழுதினது என்று தெரியவில்லை பகவதிக்கு. யாரோ பெண்தான் அது என்று மட்டும் படுகிறது.

எடி எண்டெ பொன்னு பகவதி. எழுந்நள்ளூ எண்டெ கரளின் கரளே.

அடித்தொண்டையில் கரகரவென்று குரல் மாற்றிப் பேசி எல்லாரையும் சிரிக்க வைத்து நாணிக்குட்டி அவளை கல்யாண மேடைக்கு அழைத்துப் போகிறாள்.

சங்கரன் நிமிர்ந்து பார்த்துச் சிரிக்கிற மாதிரி இருக்கிறது. சாந்தி முகூர்த்தம் நாளை ராத்திரி. யாரோ உரத்த குரலில் ரகசியம் பேசுகிறது பகவதி காதில் விழுகிறது. சங்கரனும் கேட்டிருக்க வேண்டும். கூர்ந்து அவளைப் பார்க்கிறான். பூமி பிளந்து விழுங்கி விடக்கூடாதா என்று வெட்கம் பகவதிக்கு.

ஒண்ணும் பண்ணிட மாட்டேளே.

கண்ணால் சங்கரனிடம் கேட்கிறாள். சத்தியமாக மாட்டேன் என்கிறது அவன் சிரிப்பு. கள்ளத்தனத்தைக் கண் துல்லியமாகச் சொல்லி விடுகிறது. அப்புறம்?

அம்மா, நாம் தான் கடைசி. துர்க்கா பட்டர் காத்திட்டு இருக்காரு. எழுந்திருங்க.

மருதையன் தலையில் அன்போடு கை வைத்து சொந்த அம்மாவை எழுப்புகிற வாஞ்சையோடு எழுப்புகிறான் பகவதியை. அவள் எழுந்து உட்கார்ந்தாள்.

பொலபொல என்று விடிந்து விட்டிருந்தது. ஓடி முடித்திருந்த ரயில் ஓ என்று ரீங்காரத்தோடு சத்தம் முழக்கியது.

ஐயோ, வண்டி கிளம்பிடுமே.

பகவதி பரபரப்பாக எழுந்து நிற்க முற்பட்டு கால் தடுமாற ஜன்னல் கம்பியைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். வயசாகிக் கொண்டிருக்கிறது.

வண்டி எங்கேயும் போகாதம்மே. இதுதான் கடைசி நிறுத்தம்.

துர்க்கா பட்டன் ரயில் பெட்டிக்கு உள்ளே வந்து உட்கார்ந்தபடி சொன்னான். அவன் கையில் ஒரு பித்தளை கூஜா உள்ளே ஏதோ தளும்பி வழிந்தபடிக்கு.

சூடா நம்ம சாப்பாட்டுக் கடையிலே இருந்து காப்பி போட்டு எடுத்து வந்திருக்கேன். குடிச்சுட்டு தெம்பாக் கிளம்புங்கோ.

நாம ஆர அமர காப்பி குடிச்சு முடிக்கறதுக்குள்ளே வண்டி யார்டுக்குப் போயிடப் போகுது பட்டர் சாமிகளே. வெளியே காத்தோட்டமா மர பெஞ்சுலே உட்கார்ந்து குடிச்சா என்ன குறைஞ்சுடும்?

மருதையன், பகவதி மெல்ல இறங்க ஆதரவாகக் கை கொடுத்தபடி சொன்னான்.

பகவதிக்கு ஒரு வாய்க் காப்பி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இந்தத் தேவ பானத்தைக் குடிச்சுட்டுக் கிளம்பினா ஏழு லோகத்தையும் சமுத்திரத்தையும் தாண்டி சூளாமணியைக் கொண்டு வந்து உன் காலடியிலே வைப்பேண்டி கண்ணம்மா. சங்கரன் சொல்வான்.

பகவதி கைக் காப்பிக்கு அத்தனை மணம். அவள் சங்கரனுக்காகக் காப்பி கலக்கும்போது ரெண்டு முட்டைக்கரண்டி அஸ்கா சர்க்கரை போட்டுத்தான் கண்ணை மூடுகிற காலம் வரை காலையில் சுகம் கொண்டாடிக் கொண்டிருந்தான் அவன். எந்த பூமியில், எந்த சமுத்திரத்துக்கு அடியில் சூளாமணியைத் தேடிட்டிருக்கானோ.

நல்ல வேளையாக கண்ணூர் நெருங்கி விட்டது என்று தவறாக கணக்குப் போட்டு நாலு மணிக்கே எழுந்து அவளும், மருதையனும் தந்த சுத்தி செய்து முகம் அலம்பிக் கொண்டதால் காப்பி குடிக்க தடை ஏதும் இல்லை. ஆனாலும் அவள் இப்படித் திரும்பப் படுத்துக் கண் அயர்ந்திருக்கக் கூடாதுதான். ரயிலின் ஆட்டம் தூங்கு தூங்கு என்று எல்லோரையும் பச்சைக் குழந்தையாக்கி கிடத்தி விடுகிறது.

துர்க்கா, கொஞ்சம் ஜலம் கொடேன்.

பகவதி கேட்டாள்.

இருங்கோ அம்மா, பிடிச்சுண்டு வரேன்.

துர்கா பட்டன் கூஜா மூடியாக இருந்த கிண்ணத்தை மரை திருகிக் கழற்றிக் கொண்டு ஓடினான். பக்கத்துக் குழாயில் இருந்து அருவி மாதிரி கொட்டிக் கொண்டிருந்த குளிர்ந்த தண்ணீரைப் பிடித்து வந்தான் அவன்.

வாங்கி ரெண்டு தடவை வாய் கொப்பளித்தாள் பகவதி. அந்தக் காப்பியை ஆர அமர பெஞ்சில் உட்கார்ந்தபடி வாய் எச்சில் படாமல் குவளையை உசத்தி விட்டுக் கொண்டு அதன் சூட்டையும் மணத்தையும் ஒரு வினாடி கண்ணை மூடி அனுபவித்தாள். பிரயாணக் களைப்பும் அசதியும் எல்லாம் ஓடி ஒளிந்த மாதிரி உற்சாகம்.

தெம்பாக எழுந்து தண்ணீர்க் குழாய்ப் பக்கம் போய் கையைக் குவித்து வெள்ளமாக எடுத்து முகத்தில் விசிறி அடித்துக் கொண்டாள். இதமான மலையாளக் கரைக் காற்று சிநேகிதமாக பகவதிக் குட்டீ சுகம் தன்னே என்றது.

அம்மா, பட்டர் மோட்டார் வண்டி கொண்டாந்திருக்காராம். போகலாமா.

மருதையன் குழந்தை போல் குதூகலத்தோடு சொன்னான். மோட்டார் வண்டி அரசூருக்கு வரும் முன்பே கண்ணூருக்கு வந்து சேர்ந்து விட்டது போலிருக்கு.

அதெல்லாம் எதுக்குடா மருதையா. நடந்தே போயிடலாம். எங்கேயாவது போய் முட்டி வச்சா கையோட காலோட கல்யாணத்துக்குப் போய்ச் சேர முடியாது.

பகவதி அவசரமாகச் சொன்னாள். கண்ணில் மிரட்சி தட்டுப்பட்டது.

ஏதொண்ணுக்கும் விசனப்பட வேண்டாம் அம்மே. வண்டி ஓட்டிக்கப் படிச்ச ஆள்கார்தான் இதுக்குன்னு நியமிச்சு வைச்சிருக்கறது.

பட்டன் பகவதியின் ஹோல்டாலை கையில் இடுக்கிக் கொண்டே சொன்னான்.

அதென்ன பட்டரே ஆள்கார். அய்யங்காருக்கு அண்ணன் தம்பி முறையா?

மருதையன் கடகடவென்று சிரித்தான். அவனுக்கும் இந்த இதமான சீதோஷ்ணமும், விடிகாலையில் ரயிலை விட்டு இறங்கி ஒரு அழகான ஊரில் அடியெடுத்து நடக்கிறதும் எல்லாத்துக்கும் மேலாக நாலு நாள் காலேஜ் போக வேண்டி இல்லாமல் ரஜா வாங்கி வந்ததும் எல்லாம் சேர்ந்து உற்சாகத்துக்குக் காரணம். பகவதி அம்மாளோடு பிரயாணம் செய்கிறதிலும் இப்படி ஒரு சுப காரியத்துக்காக அது நடப்பதிலும் கூடுதல் சந்தோஷம் அவனுக்கு.

சாமாவும் வந்திருக்கலாம். கல்யாணத்துக்கு அழைக்க வேதையனும் பரிபூரணமும் அரசூர் வந்து பத்திரிகை கொடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினபோது பகவதி மட்டுமில்லை, முழுக் குடும்பமுமே வருகிற திட்டம் தான் இருந்தது.

ஆக ஒரு வழியாக அரசூர்க் குடும்பம் பிரயாணம் கிளம்பியாகிவிட்டது. ஒரு நாளா ரெண்டு நாளா? நாலு வருஷமாக யோசித்து, பிரயாணத்துக்கான ஏற்பாடு செய்ய ஆரம்பித்து ஏதாவது காரணத்தால் தள்ளி வைக்க வேண்டியது.

அதென்னமோ, பகவதியம்மாளின் கல்யாணம் கூட நிச்சயம் ஆன தினத்தில் இருந்து நாலைந்து மாதத்தில் நடந்து விட்டது. அது ரயில் வண்டி ஓடாத, சாலை வசதி இத்தனை கூட இல்லாத காலம். நாற்பது வருஷம் முந்திய சங்கதி அதெல்லாம். நாற்பது கொல்லம் கழித்து பகவதி பயணமாகலாம் என்று பகவான் விதித்திருக்கிறான்.

வேதையன் பெண் தீபஜோதி திரண்டுகுளி சுபமூகூர்த்தத்துக்கு ரெண்டு வருஷம் முந்தி ஏற்பாடு செய்தபடி கிளம்ப முடியாமல், நெருங்கின சொந்தத்தில் ஒரு சாவு வந்து சேர்ந்தது.

கல்யாணச் சாவுதான். எண்பத்தெட்டு வயசு முழுசாக வாழ்ந்து எத்தனையோ பேருக்கும் அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் கூட தகனம், திவசம் என்று கிரமமாக நடத்திக் கொடுத்து விட்டு கனபாடிகள் போய்ச் சேர்ந்த தருணம் அது.

போகிறதுக்கு முந்தின தினம் கூட அரசூர் பக்கம் சாளூரில் யாருக்கோ பத்தாம் நாள் காரியம் என்று வந்து பகவதி வீட்டில் தான் ராத்தங்கினார் அவர்.

எள்ளுருண்டை பிடிக்கும்போது எள்ளைக் கொஞ்சம்போல வறுத்துட்டு வெல்லத்தைப் பாகு முத்தறதுக்கு முந்திக் கலந்து பிடிச்சா அமிர்தமா இருக்கும்னு நானும் ஆயுசு முழுக்க ஒரு பொம்மனாட்டி விடாம சொல்லி ஓஞ்சு போய்ட்டேண்டியம்மா.

எள்ளுருண்டையும், உளுந்துவடையுமாக அவர் போய்ச் சேர்ந்த சுவர்க்கம் சதா எள்ளெண்ணெய் மணத்துக் கொண்டிருக்கட்டும் என்று பகவதி வேண்டிக் கொண்டாள். ஆகாரம் மூலம் ஆத்மபோதத்துக்கு வழி கண்டவர் அந்தப் பெரியவர் என்று அவள் சொன்னபோது சாமா அடக்க முடியாமல் சிரித்தான்.

அம்மா, கனபாடிகள் ஸ்தூல சரீரத்தோட அங்கே யாருக்கு தெவசம் நடத்தப் போறார்? அதுக்கு வேண்டிய உருப்படி எல்லாம் கைலாசம் போன கேசு ஆச்சே.

போடா, பெரியவா, ஆசீர்வாதம் என்னென்னைக்கும் குடும்பத்துக்கு நல்லது. எத்தனன பேரைக் கடைத் தேத்தினவர். சாப்பாடு தவிர வேறே என்ன கண்டார்? வீட்டுக்காரி கூட எப்பவோ போய்ச் சேர்ந்துட்டா.

ஆமாமா, பூஜை பண்ணறேன் பேர்வழின்னு பகல் மூணு மணி வரை கொலைப் பட்டினி போட்டா படியளக்கிற பரமசிவன் காலடியிலே சேராம என்ன பண்ணுவா?

சாமா அம்மாவைச் சீண்டினான். அவள் ஏதாவது மனசு ஒட்டாமல் வைய வேண்டும். அதைக் கேட்டு இன்னும் கொஞ்சம் சீண்ட வேண்டும். வீட்டுக்காரி கோபித்துக் கொண்டாலும் அம்மா கையால் செல்லமாகக் குட்டு வாங்குவது சந்தோஷம்தான்.

அவளோடு நாள் முழுக்க இருந்து வார்த்தை சொல்ல முடியாமல் உத்தியோகம் குறுக்கே நின்று தொலைக்கிறது. இப்போ, இந்த கண்ணூர்க் கல்யாணத்தைச் சாக்கு வைத்தாவது ஒரு வாரம் அக்கடாவென்று அம்மாவையும் இவளையும் கூட்டிக் கொண்டு மலையாளக் கரையில் டேரா அடித்து விட வேண்டியதுதான்.

சாமா மனதில் முடிச்சுப் போட்டு வைத்தபடி ரஜா விண்ணப்பம் சப் கலெக்டர் துரைக்கு அனுப்பி வைத்தான். அது சாங்க்ஷனும் ஆனது.

ஆனாலும் என்ன செய்ய? சனியன் போல் கலெக்டர் துரையின் ஜமாபந்தி வந்து சேர்ந்தது. தாசில்தார் சாமா ஊரை விட்டு நாலடி வெளியில் எடுத்து வைக்கக் கூட ஏழெட்டு சாணித்தாள் காகிதத்தில் சகல துரைகள், அவர்களை அண்டி இருக்கிற, சிவப்புத் தோலும் நூலுமாக கித்தாய்ப்பாய்ப் பேசி நடக்கிற உள்ளூர்த் துரைகள் என்று சகலரிடமும் நூற்றுச் சில்லரை இடங்களில் கையெழுத்து போட்ட உத்திரவுகள் வாங்க வேணும்.

கொஞ்ச நாளாக ஜில்லா கஜானாவுக்கும் சாமா தான் பொறுப்பான, சாவியை அரைஞாண்கொடியில் முடிந்து வைத்துக் கொள்ளும் அதிகாரி. அப்படித்தான் தொங்க விடணும் என்கிறது சர்க்கார் மேன்யுவல்.

நான் வர முடியாத இக்கட்டுலே இருக்கேன்’மா. நீயும் அவளும் போய்ட்டு வாங்கோ. துணைக்கு வேணும்னா நம்ம ஆபீஸ் டவாலி புலியேறுத்தேவனை அனுப்பறேன், அவனுக்கு மலையாளம் அர்த்தமாகும்.

சாமா சொன்னான்.

அவன் புலியேறவும் வேண்டாம். சிங்கத்தை விட்டு இறங்கவும் வேண்டாம். என் மலையாளமே ஏழு தலைமுறைக்குப் போதும்.

பகவதி சிரித்தாள். ஆனாலும் தனியாக அவ்வளவு தூரம் போக மனசு ஒத்துழைத்தாலும் உடம்பு யோசிக்கிறது. சித்தே இரு, படபடன்னு வருது, கொஞ்சம் தலை சாஞ்சுட்டுக் கிளம்பலாம் என்று முரண்டு பிடிக்கிறது.

நானும் வரல்லே அம்மா.

சாமா வீட்டுக்காரி பகவதி காதில் சொன்னாள். அவளுக்கு தூரத்துக்கு நாள். அதுவும் இப்போதெல்லாம் உதிரப் பெருக்கு அதிகமாகி மாசத்துக்கு நாலு, அஞ்சு நாள் பிராணன் போகிற மாதிரி அந்தப் பெண் அவஸ்தைப் படுகிறதை பகவதி மௌனமாகப் பார்த்து அனுதாபப்படுவதைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லை.

இங்கிலீஷ் வைத்தியம் படித்துவிட்டு மதுரையில் ஆஸ்பத்திரி நடத்தும் எர்ஸ்கின் துரையிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் குணப்படுத்தலாம் என்று சாமா சொன்னபோது, துரை கிட்டே எல்லாம் உடம்பைக் காட்டணுமா? நாணக்கேடு. உங்களுக்கு ஏன் இப்படி அபத்தமான யோசனை எல்லாம் தோணறதோ என்று அவள் புலிப்பாய்ச்சல் பாய்ந்தாள்.

மருத்துவனிடம் போயிருக்கலாம் என்று பகவதிக்குப் பட்டது. ஆனால் ஆம்பிளை வைத்தியனிடம் இதை எப்படிச் சொல்லி, அவன் என்னத்தைப் பரிசோதித்து என்ன மருந்து கொடுப்பான்?

அம்பாளுக்கு நேர்ந்து கொள்வது, குங்குமம் கரைத்து ஆரத்தி எடுப்பது என்று அவளுக்குத் தெரிந்த பிரார்த்தனை வைத்தியம் அந்தப் பெண்ணை சுவஸ்தப் படுத்தவில்லை. கொஞ்சம் போல் நிம்மதியாவது கொடுத்திருந்தால் அவளுக்கு சந்தோஷம். இன்னும் ஒன்பது தடவை கோவில் பிரகாரத்தில் பிரதக்ஷணம் செய்வாள் மனசெல்லாம் நன்றியோடு.

அம்மாவை நான் வேணா கண்ணூர் கூட்டிப் போய் வரட்டா?

எல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டு நின்ற மருதையன் கேட்டான். வேதையனும் வீட்டுக்காரியும் அரசூர் வந்து திரும்புகிற வழியில் மதுரையில் அவனனயும் சந்தித்து கல்யாணப் பத்திரிகை வைத்திருந்தார்கள். இல்லாவிட்டாலும் அவன் பகவதி அம்மாளை பத்திரமாகக் கூட்டிப் போய்க் கொண்டு விட வந்து நிற்பான்.

ராஜ உபச்சாரம்னா இதுதான். ராஜாவே உபச்சாரம் பண்றார் பாரு உனக்கு.

சாமா அவன் பகவதி அம்மாளிடம் காட்டும் பிரியத்தை சந்தோஷத்தோடு பகடி செய்வான். ராணியம்மாவும் ராஜாவும் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களுக்கும் மனசில் எந்த வருத்தமும் இல்லாமல், அதே சந்தோஷத்தோடு அந்தக் கிண்டலில் கலந்து கொள்வார்கள். சங்கரன் மட்டும் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பான்.

ராஜா வம்சம் என்ற மரியாதை ஒரு பக்கம். எப்போதாவது நினைவில் வந்து கஷ்டப் படுத்துகிற இன்னும் குளிக்கிற கொஞ்சம் போல் இளமையான ராணி இன்னொரு பக்கம். சாமிநாதன் ஏன் வீட்டோடு எரிந்து போனான் என்று மனதில் குடைகிற விடை தெரியாத கேள்வி இன்னொரு பக்கம். ஒதுங்கி இருக்க ஒன்பது காரணம்.

அம்மா, ஒதுங்கி உட்கார வேணாம். சவுகரியமா சாய்ஞ்சு உட்காருங்கோ.

மோட்டார் வண்டியைக் கிளப்பியபடி அரைகுறை தமிழில் மாத்யூ தரக்கன் சொன்னான்.

அஸ்ஸலாயி. ஞான் அல்ப நேரம் விஸ்ரமிக்கட்டே பிள்ளேரே. நம்முடெ மனை வன்னபாடே என்னெ ஒண்ணு உணர்த்தியா மதி.

பகவதி பச்சை மலையாளத்தில் சரளமாகப் பேச ஆரம்பிக்க ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்த தரக்கன் படு குஷியாக பாம் பாம் என்று ஹாரனை அடித்தபடி வண்டி ஓட்டி போனான்.

இப்படியே போய்ச் சேர்ந்தா எப்படி இருக்கும்?

பகவதி கூடவே இருக்கும் சங்கரனைக் கேட்டாள்.

அசத்தே. என்ன அவசரம். இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு வா. எனக்கு இங்கே காப்பி கிடைக்கறது.

சங்கரன் அட்டகாசமாகச் சிரித்தான் வழக்கம் போல.

சும்மா இருங்கோ. காப்பியை இடுப்பிலே தேடுவானேன். கையை எடுங்கோ.

(தொடரும்)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்