நினைவுகள்

This entry is part of 28 in the series 20050729_Issue

கவிநயா


அப்போது…
இன்றைக்கு மஞ்சள் தாவணியா, சிவப்புத் தாவணியா என்று
மணிக் கணக்காய் யோசித்ததுண்டு
கண்ணாடிக்கே கண் ஆடிச் சலிக்கும் வரை
ஆயிரம் கோணங்களில் அழகு பார்த்துக் கொண்டதுண்டு
ஆறடிக் கூந்தலை அழகாய்ப் பின்னி
செவ்வந்திப் பூக்களைச் செம்மையாய்த் தைத்து
முன்னும் பின்னும் தெரியும்படி ‘போட்டோ ‘ படம் பிடித்ததுண்டு
தப்பித் தவறி அம்மா சொல்லி விட்ட ஒரே ஒரு வார்த்தைக்காக
அழுது அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்ததுண்டு

இப்போது…
சிவப்பா, மஞ்சளா என்று சிந்திக்கப் பொழுதில்லை
உடை என்று ஒன்று உடம்பில் இருந்தாலே போதுமென்று இருக்கிறது
அழகு பார்க்கத் தாமதித்தால்
‘எங்கேயோ பார்த்த ஞாபகம் ‘ என்று கிண்டலடிக்கிறது கண்ணாடி
செவ்வந்திப் பூக்கள் செடி நிறையப் பூத்தாலும்
அள்ளி முடிந்து கொள்ள அரை அடிக் கூந்தலும் இல்லாத அவலம்
துன்பங்கள் துரத்துகின்ற துயரமான வேளையிலும்
கண்ணீரை உள்வாங்கி, களிப்புடனே புன்சிரித்து
பெற்றோரை உற்றோரை மகிழ வைக்கும் பண்பரசியாய்
பரிணாம வளர்ச்சி அடைந்தாயிற்று

உணர்வுகள் மரக்கின்ற, மறக்கின்ற பொழுதினிலும்,
நிஜங்கள் மெல்ல மெல்ல நிழலாகும் பொழுதினிலும்
உணர்வுகளின் சுகங்களும், நிஜங்களின் நினைவுகளும் மட்டும்
இன்னும் பசுமையாக…
எரிந்து முடிந்த பின்னும் மணம் பரப்பி மகிழச் செய்யும்
சாம்பிராணி வாசனை போல்…

–கவிநயா

meenavr@hotmail.com

Series Navigation