நினைவுகள்.

This entry is part of 31 in the series 20030525_Issue

நளாயினி தாமரைச்செல்வன்.


நிலையாய் இல்லை
தலை கீழாயும்
மாறி மாறியும்
குறுக்கும் நெடுக்குமாய்
நடக்கிறேன்.
சிலசமயம்
அந்தரத்தில்
தொங்கும்
வெளவாலாய்.
இன்று வெள்ளிக் கிழமை
வீட்டில் பூக்களின் நறுமணம்
ஊதுபத்தியின் வாசம்
நிதானமாய் எாியும்
சுடர் விளக்கு
தாளித்த சமையல்
எதுவும் என்
நுகர்வில் இல்லை.
நீயும், நானும்
அவரவராய் இருந்து பேசிய
அந்த ஆலமர
வயல்வெளி நினைவுகள்
ஊமைப்பட ஒளிப்பதிவு போல்
உயிரைச் சுட
நிதானமாய்
எாியும் சுடர் விளக்கை
வயல்வெளிக்காற்று வந்து
அலைக்களிக்கிறது.
இன்றும் உன் கடிதம்
வராததால்
உதிர்ந்த பூவாய்
எாிந்து முடிந்த ஊதுபத்தியாய்
காற்றில் அணைந்த விளக்காய்
பசியின்றி உணவை வாங்கும்
இரைப்பையாய் நான்.
கண்ணாடி பார்க்கிறேன்.
நெற்றியில் மட்டும்
திருநீற்றுக் கீறு மிளிர்கிறது.
உன் கடிதம்
நாளை வரும்
என்ற நம்பிக்கையில்
என் கண்களை
கடிதப் பெட்டிக்குள்
அடகு வைக்கிறேன்.

நளாயினி தாமரைச்செல்வன்.
சுவிற்சலாந்து.

thamarachselvan@hotmail.com

Series Navigation