பி.கே.சிவகுமார்
AIMSIndia இசைக் கச்சேரி:
அமெரிக்காவில் 1998-ல் நண்பர்களுடன் இணைந்து AIMSIndia என்ற சமூக சேவை அமைப்பைத் தொடங்கிய விஜய் ஆனந்தை நான் அறிவேன். என் நண்பர்கள் மூலம் நண்பரானவர். மேலும், இந்தியாவில் உள்ள நலிவுற்ற மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிற மக்களுக்கான திட்டங்கள் எதுவென்றாலும் விருப்பமுடன் முன்வந்து தன்னார்வப் பணிகள் செய்கிற நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்க நிறுவனர் டாக்டர் சுந்தரம், நான் அதிகம் அறிந்திராவிட்டாலும் மதிக்கிற நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சி போன்றோர் AIMSIndiaவில் இருப்பது AIMSIndia குறித்த நல்லெண்ணத்தை என்னிடம் ஏற்கனவே ஊன்றியிருந்தது. அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவில் சமூக சேவை செய்வதற்கு நிறைய திட்டமிடலும், ஒருங்கிணைப்பும், உழைப்பும், அலுப்பும் சலிப்பும் அண்டவிடாத உற்சாகமும் வேண்டும். ஆனால், AIMSIndia இந்த வருடங்களில் தன் இருப்பை உணர்த்துகிற நல்ல காரியங்களைச் செய்ததுடன் அல்லாமல், அமைப்பு ரீதியாக ஆரோக்கியமான அளவில் வளர்ந்தும் இருக்கிறது என்பதை அதன் இணையதளத்தைப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். சில ஆண்டுகளாக AIMSIndia அது தொடங்கப்பட்ட வாஷிங்டன் டி.சி. – பால்டிமோர் பகுதியைவிட்டு விரிந்து பிற இடங்களிலும் கிளை பரப்பி வருவதையும் அறியலாம்.
AIMSIndiaவின் அழைப்பின்பேரில் சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்த திரு.ப.சிதம்பரம் அவர்கள் நியூ ஜெர்ஸியில் உரையாற்றிய கூட்டமொன்றில் கலந்து கொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. AIMSIndiaவை நடத்துபவர்கள் நண்பர்கள் என்றாலும், அவர்கள் செய்கிற காரியங்களை நேரிடையாக அறிந்திராததால் அது குறித்து எந்தவிதமான கருத்தும் கொண்டிராத எனக்கு, அந்தக் கூட்டம் AIMSIndiaவின் செயல்பாடுகளை ஆதரித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.
திரு.சிதம்பரம் அந்தக் கூட்டத்தில் ஆற்றிய உரையானது அரசியல்வாதிகளிடையே நான் கேட்ட மிகவும் ஆரோக்கியமான, கருத்துச் செறிவுள்ள, எளிமையான ஆனால் அறிவுபூர்வமான உரையாகும். மக்களின் உணர்வுகளைத் தூண்டாமல் சிந்தனையைத் தூண்டுகிற இந்த மாதிரியான நடையையும் மொழியையும் அரசியல்வாதிகள் தேர்ந்தெடுத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அப்போது எனக்குத் தோன்றியது. சிதம்பரம் என்கிற அரசியல்வாதியைவிடவும் சிதம்பரம் என்கிற பண்பட்ட மனிதரையும், சிதம்பரம் என்கிற இலக்கிய ஆர்வலரையும், சிதம்பரம் என்கிற இந்தியத் தமிழ்க் குடிமகனையும் அறிந்து கொள்கிற வாய்ப்பாக நியூ ஜெர்ஸியில் AIMSIndia ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டம் அமைந்தது. அதற்கு அடுத்தபடியாக, திரு.M.S.உதயமூர்த்தியும் AIMSIndiaவின் அழைப்பின்பேரில் அமெரிக்காவுக்கு வந்தார். நியூ ஜெர்ஸியில் AIMSIndia ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் பேசினார். என்னால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திரு.வை.கோ.வைப் பேச வைத்து அழகு பார்க்கும் அமெரிக்கத் தமிழ் அமைப்புகளிடையே இப்படி பலதரப்பட்ட அறிவுஜீவிகளை அழைத்த AIMSIndiaவின் பன்முகத்தன்மையும் சமூக அக்கறையும் எனக்குப் பிடித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆண்டார்குளம் என்ற கிராமத்தில் ஏழை மக்கள் பயனடையும் வகையில் மருத்துவமனை ஒன்றைக் கட்ட AIMSIndia திட்டமிட்டிருக்கிறது என்றும், அதற்கு நிதி திரட்டும் பொருட்டு ஜீலை 11, 2004 ஞாயிறு மாலை 4 மணிக்கு நியூ ஜெர்ஸியில் திரைப்படப் பின்னணி பாடகர்கள் பங்கேற்கும் லஷ்மண் – சுருதி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெற உள்ளது என்றும் நண்பர்கள் மூலம் அறிந்தவுடனேயே அதில் கலந்து கொள்வது என்று முடிவெடுத்திருந்தேன். ஞாயிறு காலை நண்பர் விஜய் ஆனந்திடம் இருந்து தொலைபேசி. கலந்து கொள்ளச் சொல்லி நினைவூட்டி. கட்டாயம் வருகிறோம். மற்றவர்களை அழையுங்கள் என்று சொன்னேன்.
பொதுவாகவே, இங்கே எந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டி இருந்தாலும், இணையதளம், வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்வதோடு மட்டுமல்லாமல், இப்படி தெரிந்தவர்களை எல்லாம் தொலைபேசியில் அழைத்து விவரம் சொல்லியே அழைக்க வேண்டியிருக்கிறது என்பது விழா நிர்வாகிகளுக்கு உள்ள சங்கடம் ஆகும். இல்லையென்றால் என்னதான் விளம்பரம் செய்தாலும் பல நேரங்களில் பலருக்கு விவரங்கள் தெரியாமல் போகிறது அல்லது தொலைபேசியில் தனிப்பட அழைத்தால் மட்டுமே வருவது பற்றி யோசிப்பவர்களும் இருக்கக் கூடும். எனவே, எந்த விழா நடத்துபவர்களூம் இந்த மாதிரியான working the phones என்கிற காரியத்தில் நிறைய நேரம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. இந்த மாதிரியான பிரயத்தனங்கள் செய்து நல்ல நிகழ்ச்சிக்குக் கூட நம் மக்களைக் கூட்டுகிற மாதிரி இல்லாமல் (அப்படியெல்லாம் செய்தும் பல நேரங்களில் கூட்டம் வருவதில்லை என்பது சோகம்), தமிழர்கள் அவர்களாகவே நல்ல நிகழ்ச்சிகளை அறிந்தவுடன் கலந்து கொள்ள முன்வருவது எந்நாளோ என்று தோன்றுகிறது. தொலைபேசியில் இப்படித் தெரிந்தவர்களை எல்லாம் கூப்பிட்டு அழைப்பது பொருள் மற்றும் கால விரயமும் ஆகும். எனவே, இதற்கு ஏதேனும் ஒரு நல்ல தீர்வு காணப்பட வேண்டும்.
லஷ்மண் சுருதி குழுவினருக்கு முந்தைய நாள் இரவு ஹூஸ்டன், டெக்ஸாஸில் கச்சேரி இருந்தது. பின்னர் நியூ ஜெர்ஸிக்கு வருவதில் விமானத் தாமதம். எனவே, நான்கு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி மாலை 5:10க்குத்தான் தொடங்கியது. விழா தொடங்கத் தாமதம் ஆனதும், வழக்கமாக இந்தியர்/தமிழர் நடத்தும் விழாக்களுக்கு பழகிப்போன தாமதமோ என்று நினைத்திருந்தேன். தொடக்கத்திலேயே, தாமதத்துக்கான காரணம் சொல்லி விழா அறிவிப்பாளர் (master of the ceremony) திருமதி.ராணி தேவராஜனிலிருந்து ஹரீஷ் ராகவேந்திரா, லஷ்மண் என்று பலரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள். குறித்த காலத்தில் தொடங்க வேண்டும் என்கிற உள்ளுணர்வு இப்போது பலருக்கும் இங்கே வந்திருப்பதை இது காட்டுகிறது. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
மன்மத ராசா புகழ் மாலதி, தமிழுக்கு அமுதென்று பேர் என்கிற பாரதிதாசனின் பாடலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார். அடுத்ததாக ஹரீஷ் ராகவேந்திரா வந்தார். மகாகவி பாரதிக்குத் தான் மிகவும் கடமைப்பட்டிருப்பதாகவும், தன் வாழ்வில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் பாரதி என்றும் சொன்னார். பாரதி படத்தில் இளையராஜா இசையில் தான் பாடிய நிற்பதுவே நடப்பதுவே பாடலே தன்னை உலகுக்குக் காட்டியதாகவும் சொன்னார். பின்னர், அந்தப் பாடலைப் பாடினார். அடுத்தபடியாக, மனோ வந்தார். பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் என்று யேசுதாஸ் ஐயப்பன் மீது பாடிய பாடலைப் பாடினார். நிகழ்ச்சி களை கட்டிச் செல்ல ஆரம்பித்தது. மனோ நிகழ்ச்சியின் போது இளையராஜா வாய்ப்பு அளித்ததாலேயே தான் இந்த அளவுக்கு வர முடிந்தது என்று இளையராஜாவுக்கு நன்றி சொன்னார். பொதுவாகவே, ஒருவர் இருக்கும்போது முகஸ்துதி செய்வது திரைப்படத் துறையில் பழகிப்போன ஒன்று. எனவே, அப்படி ஏதும் காரணங்கள் இல்லாமல், மகாகவி பாரதி பற்றியும், இளையராஜா பற்றியும் முறையே ஹரீஷ் ராகவேந்திரா மற்றும் மனோ அவர்கள் பாராட்டிச் சொன்னதைப் பார்க்கும்போது உள்ளத்து உணர்வுகளை உண்மையாகச் சொல்கிறார்கள் என்று தோன்றியது.
ஒலிபெருக்கி அமைப்புதான் இடையிடையே தொந்தரவு தந்த வண்ணம் இருந்தது. விழா அமைப்பாளர்கள் தங்களால் முடிந்த அளவு சரிப்படுத்தப் பார்த்தார்கள். இடைஞ்சல்களூக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், இசை நிகழ்ச்சி நடைபெறுவதன் நோக்கம் சமூக சேவை என்பதால் இத்தகைய இடைஞ்சல்கள் குறித்து பார்வையாளர்கள் எவரும் பெரிதாகக் குற்றம் சொல்லவில்லை. ஆடத் தோன்றும் பாடல்கள் நிறைய பாடப்பட்டன. இளைஞர் குழாம் பாடி, ஓடி, குரலெழுப்பி மகிழ்ந்தவண்ணம் இருந்தது. ஆட்டோகிராப் படத்தில் வரும் ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ‘ என்ற பாட்டை அரங்கில் விளக்குகளை அணைத்துவிட்டுப் பாடினார்கள். பின்னர், கண்பார்வை இழந்தவர்கள் முழு இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், கொஞ்ச நேர இருட்டுக்கு நாம் அவஸ்தைப்படுகிறோம் என்பதையும் உணர்த்த அப்படிச் செய்ததாக லஷ்மண் தெரிவித்தார். கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும், இயல்பாகத் தெரிந்த அந்த நிகழ்வு பார்வையாளர்கள் லஷ்மண் சொன்னதை ஆமோதிக்க வைத்தது.
ஆண்டார்குளத்தில் மருத்துவமனை கட்ட 19,000 அமெரிக்க டாலர்கள் செலாகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முன் வேறு வழிகளில் 11,000 டாலர்கள் வசூலித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி 750 பேர் அமரக் கூடிய அரங்கில் நடைபெற்றது. 375 பேர் வந்திருந்தார்கள். ஏறக்குறைய 9,000 அமெரிக்க டாலர்கள் வசூலாகியது. நிகழ்ச்சிக்கான மொத்த செலவு ஏறக்குறைய 8,000 டாலர்கள். நிகழ்ச்சியிலிருந்து ஏறக்குறைய 1,000 டாலர்கள் நிதியாகக் கிடைத்திருக்கிறது என்று AIMSIndia நியூஜெர்ஸி பிரிவின் பொறுப்பாளர்களுள் ஒருவரான சுப்பு என்னிடம் தெரிவித்தார். அமெரிக்காவில் நிதி திரட்டுகிற எந்த அமைப்பும் இப்படி தங்கள் கணக்கு வழக்குகளை வெளிப்படையாக அறிவிப்பது மக்களிடையே நம்பகத்தன்மையை வளர்க்க உதவும். அதேபோல, Tamil Nadu Foundation அது நடத்துகிற வருடாந்திர விழாக்களில் இப்படி மேடையிலேயே திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. எனவே, இந்த மாதிரியான முன்மாதிரிகளைப் பின்பற்றிப் பிற அமைப்புகளும் செயல்பட வேண்டியது அவசியமாகும். இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்குத் தமிழர்கள் தாங்களாக முன்வந்து பெருமளவில் ஆதரவு அளிப்பது, இன்னும் நிறைய நிதியைச் சேர்க்க உதவும். உதாரணமாக, இந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு பேர் வந்தாலும் இந்த 8,000 டாலர்கள் செலவு கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும். ஆனால், நிறைய பேர் வந்திருக்கும்போது கையில் நிற்கிற நிதி சற்று அதிகமாகும். ஆனால், இங்கே நல்ல நிகழ்ச்சிகளுக்கு எதிர்பார்க்கிற கூட்டத்தை எப்படி வரவழைப்பது என்கிற மந்திரத்தை யாரும் சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. நியூ ஜெர்ஸியில் மிகக் குறைந்தது 2500 தமிழர்களாவது இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.
இடைவேளையில் நண்பர் அருண் வைத்யநாதன் பலகுரலில் பேசிப் பார்வையாளர்களை மகிழ்வித்தார். நேரமின்மையால் சற்று சுருக்கமாக முடித்துக் கொண்டதுபோல தோன்றினாலும், சரியான நேரத்தில் முத்தாய்ப்பு வைத்தார் என்று நான் நினைத்தேன். பார்வையாளர்கள் வெகுவாக ரசித்துக் கொண்டிருக்கும்போதே, நிறுத்திக் கொள்வது தேர்ந்த கலைஞர்கள் செய்வது. அதை நண்பர் அருண் அறிந்திருக்கிறார். இடைவேளையில் AIMSIndiaவின் செயற்பாடுகள் பற்றிய ஒரு விளக்கப்படம் காட்டப்பட்டது. AIMSIndiaவின் நியூ ஜெர்ஸி பொறுப்பாளர்கள் இருவரும் பேசினர். விழா அரங்கத்தை இரவு 8:30 மணிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதால் எட்டு மணியளவில் விழா நிறைவுற்றது.
இசைக்குழுவினரும் பாடகர்கள் அனைவரும், விமானத் தாமதத்தால் இப்படித் தாமதமாக ஆரம்பித்து எட்டு மணியளவில் முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று என்றும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்போது அதிக நேரம் செலவிடுகிறோம் என்றும் மீண்டும் வருத்தம் தெரிவித்தனர். என்னைப் பொறுத்தவரை, இந்த மாதிரியான நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படுகிற நிகழ்ச்சிகளில் நான் எவ்வளவு நேரம் நடக்கிறது, எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஓர் இனிய மாலைப் பொழுதை நல்ல நோக்கத்துக்காகச் செலவிட்ட நிறைவே அரங்கத்தை விட்டு வெளியே வரும்போது எனக்கு இருந்தது. என்னைப் போலவே பிறரும் உணர்ந்திருப்பார்கள் என்றும் நம்புகிறேன்.
இந்த நிகழ்ச்சியை நடத்திய AIMSIndia இயக்கத்தைச் சார்ந்த விஜய் ஆனந்த் குழுவினர், அதன் நியூ ஜெர்ஸி பிரிவைச் சார்ந்த சுப்பு, பார்த்தசாரதி, ராணி, பூர்ணா, அமுதா ஆறுமுகம், டாக்டர் சுந்தரம் (பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்) மற்றும் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் அயர்வுறாமல் தொடர்ந்து இத்தகைய சமூகப் பணிகளில் ஈடுபட இறையருள் கிடைக்கட்டும்.
**** **** ****
http://pksivakumar.blogspot.com
- கடிதம் ஜூலை 15, 2004
- பாரென்ஹீட் 9/11
- Capturing the Freidmans (2003)
- பாப்லோ நெருடா
- அரசியலும் ஆங்கில மொழியும்
- எத்தனை நூற்றாண்டு வந்தாலும்
- ஆட்டோகிராஃப் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘
- மனவெளி 11-வது வருட நாடக நடன விழா- ஜூலை 18 , 2004
- உலகத் தமிழ் சிறுகதைப் போட்டி முடிவுகள்
- கடிதம் ஜூலை 15,2004
- கடிதம் ஜூலை 15,2004
- சிம்ஃபனியில் திருவாசகம்
- கடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள்
- மெய்மையின் மயக்கம்-8
- கேள்விகளின் புத்தகத்திலிருந்து
- இந்தப் புத்தகத்தின் மீதென் காதல்
- விழிப்பு
- வேடத்தைக் கிழிப்போம் – 2
- மழை வருது
- கழிவுகள்
- அதே கனவு
- நிஜங்களாக்கு….
- சமாதானமே!
- உணர்வு
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது – 2004
- எங்கள் தாயே
- நாகூர் ஹந்திரி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28
- குண்டுமணிமாலை
- வாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்
- சீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு
- காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி
- In a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை
- பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு
- தீருமா சென்னையின் தாகம் ?
- உள் சாரல்
- நிஜங்களாக்கு….
- துணைநலம்
- கழுகுக்குத்தெரியுமா கற்பூர வாசனை ?
- சத்தியின் கவிக்கட்டு 15
- கருவறை சொர்க்கம்
- சாவோடு வாழ்தல்
- காற்றுக்கிளி
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- கணவனைக் கொல்லும் காரிகை
- பரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]
- வெந்தயக் கோழிக்கறி
- வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.
- புரட்சி வருகுது – பாரன்ஹீட் 911