எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27 லியோ டால்ஸ்டாய்

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

வே.சபாநாயகம்


எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27 வே.சபாநாயகம் லியோ டால்ஸ்டாய்
================

1. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது.
அதற்கு அடுத்தது அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று.
கடைசியாக ‘டெக்னிக்’. முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான்
உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் ‘டெக்னிக்’
என்பது தானாக வந்துவிடும்.

2. இலக்கியம் இரண்டு வகை, நல்ல இலக்கியம், நச்சு இலக்கியம். எந்த உணர்வோடு நாம்
எழுதுகிறோமோ, அந்த உணர்வு வாசகன் மனதில் பதிந்தால் அது இலக்கியம். நல்ல உணர்வு
பதிந்தால் அது நல்ல இலக்கியம். நச்சு உணர்வு பதிந்தால் அது நச்சு இலக்கியம்.

3. ஒரு கதாநாயகனிடம் வாசகர்கள் அனுதாபம் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அந்தக்
கதாநாயகனிடம் தங்களது நல்ல குணங்களையும், பலவீனங்களையும் காணவேண்டும்.

4. ஒரு கருத்து எழுத்தாளனின் உள்ளத்துக்குள்ளே புகுந்து அவன் என்னென்ன முயற்சி
செய்தாலும் உள்ளத்தை விட்டு வெளியேற மறுத்து, உள்ளுக்குள்ளேயே இடையறாது
குடைந்து குடைந்து உறுத்திக் கொண்டிருந்தால்தான் – அந்தக் கருத்தை எவ்வளவு
சிறந்த முறையில் வெளியிட முடியுமோ அவ்வளவு சிறந்த முறையில் வெலியிட்டாலன்றி
அந்த உறுத்தலினின்றும் விடுபடமுடியாது என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால்தான் – ஒரு
எழுத்தாளன் அதனை எழுதத்துணிய வேண்டும் என்பது என் நம்பிக்கை.

(இன்னும் வரும்)

Series Navigation

‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்’- 20 – கி.ராஜநாராயணன்

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

வே.சபாநாயகம்1. கவிதையைப் போலவே, சிறுகதையிலும் வார்த்தைகள்தான் அதிமுக்கியம். “அனாவசியமாக ஒரு
வார்த்தைகூட இருக்கக் கூடாது” என்கிறான் ஆண்டன்செக்காவ்.
ஒருவார்த்தையை எடுத்தாலும், சேர்த்தாலும் கதை பாதிக்கப்பட வேண்டும் என்கிறான்.

2. சிறுகதையின் உருவம் கொஞ்சம் விசித்திரமானது. அது முதலில் வாலைத்தான் காண்பிக்கும்;
கடைசியில்த்தான் தெரியும் தலை! அதனால் ஆரம்ப வாக்கியத்தைவிட கடைசி வாக்கியம்தான் முக்கியம் –
தவில் அடியின் முத்தாய்பைப் போல. சிலை செய்கிறவன் செய்து முடித்த சிலைக்குக் கடேசியில்
கண்களைத் திறக்கிற மாதிரி!

3. கதைக்கு ஒரு கரு என்ன, இரண்டு கரு வைத்துக்கூட ஒரு கதையை எழுதலாம். கருவே இல்லாமல்கூட கதை
எழுதி விடலாம். கூந்தல் வைத்திருக்கிற பொண்ணு எப்படி வேண்டுமானாலும் கூந்தலை முடிந்து
காண்பிப்பாள். எல்லாம் சாமர்த்தியத்தினுள் அடக்கம்.

4. எழுதுகிறவனுக்கு மாத்திரமில்லை. எல்லோருக்கும்தான் கிடைக்கும் கரு. கருவுக்குப் பஞ்சமே இல்லை.
சொல்லப் போனால் எழுதப்பட்ட கருக்களைவிட, எழுதப்படாமல் கிடக்கிற கருக்கள்தான் லட்சோபலட்சம்.
இன்றைய தேதி வரை கரு கிடைக்காமல் திண்டாடினான் ஒருவன் என்று நான் கேள்விப்பட்டதே இல்லை.
ஆனால் கருவைத் தேர்ந்தெடுக்கிறவன் புதுப்புது மாதிரியானவைகளாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒருவன் புதுக்கருவை வைத்து எழுதித் தோற்றுப் போனாலும்கூட அவனுக்கு அதற்காக நான் 30 மார்க்குகள்
கொடுப்பேன்.

5. தூங்கிறபோது நம்முடைய மூளை உறுப்புகளில் சில தூங்காமல் கனவை எழுப்பிக் கொண்டிருப்பது போல,
ஒரு எழுத்தாளன் விழித்துக் கொண்டிருக்கும்போதும் அவனுள் ‘சிலது’ தூங்கிக் கொண்டு ஒருவகையான
கனவை எழுப்பிக் கொண்டே இருக்கும். அர்த்தஜாமத்திலும் தேனீக்கூட்டில் காது வைத்துக் கேட்டால் வரும்
ஓசையைப் போல் அவனுடைய உள்ளத்தில் ஒரு ஓசை உண்டாகிக் கொண்டே இருக்கும். செம்மை செய்யப்படாத,
முழுதும் பூர்த்தியடையாத ஆபரணங்கள் பொற்கொல்லனின் பட்டரையைச் சுற்றி கிடப்பதுபோல,
பூர்த்தியாகாத எண்ணற்ற கதைக்கருக்கள் அவனுடைய மன அறைக்குள் அங்கங்கே சிதறிக் கிடக்கும்.

6. கருக்களில் நாலு வகை உண்டு. கேள்விப்பட்டது, பார்த்தது, அனுபவித்தது, கற்பனை. இந்த நாலில்
எது, சம்பந்தப்பட்ட கதைக்கு நன்றாக அமையும் என்று சொல்ல முடியாது. பொதுவாக அனுபவித்தது
சிறப்பாக அமையலாம் என்பது என்னுடைய கணக்கு.

7. எழுத்தாளர்கள் ஏகலைவன் மாதிரி. அவர்கள் எந்த வாத்தியாரையும் வைத்துக் கொண்டு தங்கள்
தொழிலை கற்றுக் கொண்டதில்லை. அதேபோல எந்த ஒருவனுக்கும் அவர்கள் வாத்தியாராக இருந்து கற்றுக்
கொடுக்க விரும்புவதும் இல்லை.

8. ஒவ்வொரு மனுஷனிடமும் அவன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு நாவலுக்கான கதை நிச்சயம் இருக்கும்.
தன்னுடைய வாழ்க்கையையே சுவாரஸ்யமாக – போரடிக்காமல் – சொன்னால் அதுவே ஒரு நாவலாகி
விடும்.

9. நாவல் என்பது ஒரு பரந்த விஸ்தாரமான களம். எழுத்தாளன் அதில் ஓடியாடி இஷ்டம்போல்
‘விளையாட’லாம். சிறுகதை போல, தீ வளையத்துக்குள் பாய்ந்து தீக்காயம் படாமல் வெளியே வருவதோ,
இரும்புக் கூண்டுக்குள் மோட்டார் சைக்கிளில் பக்கவாட்டிலோ அல்லது மேலுங்கீழாகவோ வட்டமடிக்கிற
சோலியே கிடையாது.

10. நாவலில் இன்னொரு முக்கிய அம்சம், நடை; மொழிநடை.. சரித்திர நாவல் என்றால் அதில்
வருகிற அரசியும் அரசனும் தனிமையில் பேசும்போதுகூட அவர்களுக்குள் ஏட்டுத் தமிழ் நடையில்தான்
பேசுவார்கள் என்கிற மடத்தனமான ஓர் எண்ணம் இருக்கிறது! (நம்முடைய வானொலி சரித்திர நாடகங்களைக்
கேட்டிருக்கிறீர்களா?) இரண்டு புலவர்கள் சந்தித்து ஒருத்தருக்தொருத்தர் பேசிக் கொள்ளும்போதுஅப்படிப்
பேசினார்கள் என்றால், தொலைந்து போகிறது என்று விட்டுவிடலாம்.; ராஜாவும் ராணியும் படுக்கை
அறையில் ஏட்டுத் தமிழில் பேசிக் கொண்டார்கள் என்பது எனக்குச் சரியயாகத் தோன்றவில்லை.

(இன்னும் வரும்)

Series Navigation

எழுத்துக்கலை பற்றி இவர்கள் – 17 வி.ஆர்.எம்.செட்டியார்.

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

வே.சபாநாயகம்


எழுத்துக்கலை பற்றி இவர்கள் – 17
—————————–
– வே.சபாநாயகம்.

வி.ஆர்.எம்.செட்டியார்.
===================

1. சிறுகதையை யாரும் நல்ல முறையில் எழுதிவிடலாம் என்று நினைப்பது தவறு; வாழ்க்கையில் நிறைந்த அனுபவமுடையவர்கள், மொழியின் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர்கள், சம்பாஷணையின் அவசியத்தையும் வேகத்தையும் உணர்ந்தவர்கள், சமூக முரண்பாடுகளை அறிந்தவர்கள், நிறைந்த கதைநூற்பயிற்சியுடையவர்கள் இவர்கள்தான் நல்ல முறையில் சிறுகதைகளைச் சிருஷ்டிக்க முடியும்.

2. வாழ்க்கையைக் கண்டு அதைப் போட்டோ படம் பிடிப்பது சிறுகதை அல்ல;வாழ்க்கையை, இயற்கையின்
நிறைந்த நுட்பத்துடன், இயற்கையின் நிறைந்த வர்ண வளர்ச்சியுடன், பார்வை யின் கூர்மையால் சித்திரம் வரைய வேண்டும். ஒரு சிறு நிகழ்ச்சியும் சிறந்த சித்திரமாக சிறுகதை மாளிகையில் அமைந்து விடுகிறது. நிகழ்ச்சியின் நுட்பநிறைவே சொற்சித்திரமாக,பொற்சித்திரமாக, பேசும் சித்திரமாக வளர்கிறது.

3. சிறுகதையை எப்படி எழுதுவது என்று தயங்குவதில் யாது பயன்? வாழ்க்கையை நன்றாய்க் கவனிக்க
வேண்டும். மனித இயல்பு எப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் மின்சார வேகத்துடன் புரட்சியடைகிறது என்பதைக்
கவனிக்க வேண்டும்; மனித குணமும் விதியின் குணமும் எப்படிப் போரிடுகின்றன என்பதையும் நன்கு ஆராயவேண்டும்; உலகத்தின் சூழ்ச்சிகள் எப்படி உலகத்தையே யுத்த அரங்கமாக்குகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்; எழுதும்
நடைக்கும் பேசும் நடைக்கும் உள்ள வித்தியாசங்களை நுட்பமாக அறிய வேண்டும்; கதையில் வரும்
பாத்திரங்கள் எப்படி உயிர்ப் பாத்திரங்களாக, மெய்யுருவங்களாக அமைய வேண்டு மென்பதையும் ஆராய
வேண்டும்.இவைகளே நல்ல சிறுகதையின் லட்சணங்களாகும்.

4. சிறுகதை எழுதுபவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சிறு நிகழ்ச்சிகளைச் சற்று
ஞாபகப்படுத்திப் பார்த்தால் அதிலிருந்து குறைந்தது இருபது சிறுகதைகளை எழுதிவிடலாம். நல்ல ஞாபகத்துடன், நிறைந்த நுட்பத்துடன் ஞாபக டைரியைப் புரட்ட வேண்டும். பல நண்பர்களுடைய சுயசரிதையினின்றும், நியூஸ்பேப்பரில் கண்ட நிகழ்ச்சிகளிலிருந்தும், கடைத்தெருவிலும், ரயில்வே ஸ்டேஷனிலும், துறைமுகத்திலும், டிராமாக் கொட்டகைகளினின்றும், குடும்பங்களில் நிகழும் குறிப்புகளிலிருந்தும் மிகமிக அருமையான சுவைமிகுந்த சிறுகதைகள் எழுப்பலாம். ஒரு சிறுகுழந்தை அம்புலிக்கு அழுவது முதல், வறுமையால் வாடித்துடிக்கும் பிச்சைக்காரன் ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து மடிவதுவரை எதுவும் சிறுகதைச் சரக்குதான்; எம்.ஏ படித்துவிட்டு வேலைக்கு அலைந்து கதறுவது முதல் தன் சர்டிபிகேட்டை நெருப்பில் போடுவதுவரை எதுவும் சிறுகதையின் சீற்றம்தான். எல்லாம் எழுதும் சொல்வன்மையிலே சிறுகதைச் சித்திரம் இன்பமாய் வளர வேண்டும்.

5. கதையின் நடை விறுவிறுப்புடன் பாய வேண்டும். சிறுசொற்கள் காவிய வேகத்துடன் மனநிலையைச் சித்தரிக்க வேண்டும். இயற்கையின் சௌந்திரியத்தையும் மொழியின் இதயத்தில் எழுப்ப வேண்டும். சொற்கள் கதிர்களாகவும், வர்ணங்களாகம்,அழகு கூட்டங்களாகவும் மின்ன வேண்டும். இதய ஒலியும், இதய ஒளியும், உள் இயற்கையும், வெளி இயற்கையும் மொழியின் மர்மத்தில் பிரதிபலிக்க வேண்டும்.

(V.R.M Chettiar B.A ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுகளில் பிரபலமாய் இருந்த அறிஞர்;
ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய எழுதியவர்; சிறந்த விமர்சகர்; ‘My Shelly’, ‘Oscar Wilde’s de profundis – An Appreciation’,’Lyric festoons’, ‘Tagore and
Arabindo’, ‘Lucid Moments’, ‘Gems from Montaigne’ ஆகிய நூல்களை எழுதியவர். திருச்சிக்காரர். நிறைய தமிழ் நூல்களும் எழுதி தானே வெளியிட்டவர்.)

(இன்னும் வரும்)

Series Navigation

எழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

வே.சபாநாயகம்1. சுவாரஸ்யமகச் சொல்லப்படும் எந்தக் கதையும் நல்ல கதைதான். பார்த்த ஒரு சம்பவத்தை, மனதில்
நச்சரிக்கும் ஒரு உணர்வை, அல்லது அனுபவித்த ஒருஅனுபவத்தை, அதை சொல்லிவிடவேண்டும் என்று நம்முள்
தகிக்கும் ஆதங்கத்தை சுவாரஸ்யமாக வாசகர்களுக்குத் தெரிவிப்பது மட்டும் போதாது – நீங்கள்
சொல்வதை வாசகர்கள் நம்ப வேண்டும் – உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். – அவர்களிடையே
இத்தகைய பாதிப்பை உங்கள் கதை ஏற்படுத்தவில்லையானால், தவறு உங்கள் அனுபவத்தில் இல்லை – அதை
நீங்கள் சொன்ன விதத்தில்.

2. வார்த்தைகளைப் பொறுக்குவதிலும், அவற்றை வாக்கியமாய்க் கோர்ப்பதிலும் ஒரு பொற்கொல்லனின்
பொறுமையும் கவனமும் நமக்கிருக்க வேண்டும். அவன் அலுக்காமல் செய்யும் நகாசு வேலையைப்போல் நாமும்
நமக்குத் திருப்தி அளிக்கும்வரை கதையைப் பாலிஷ் செய்ய வேண்டும். வெற்றிக்குக் குறுக்கு வழிகள்
கிடையா.

3. கதையைச் சொல்லும் பாணி ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். சொல்லப் போகிற விஷயத்துக்குத்
தகுந்தமாதிரி மாறுபடும். கதையை ஆரம்பிக்கும் விதமே வாசகர்களின் கவனத்தைக் கவர வேண்டும்.
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கிரமப்படுத்தி எழுத முற்பட்டீர்களானால்,
நியூஸ் பேப்பர் ரிப்போர்ட்டைப் போல் ஆகிவிடும் – start with bang – எடுத்த எடுப்பிலேயே
வாசகரின் பார்வையைக் கட்டிப் போட வேண்டும். நேராக விஷயத்துக்கு வந்து கதையைப் பின்னுங்கள்.

4. அனாவசிய, சுவாரஸ்யமற்ற சம்பாஷணைகள் அலுப்புத் தட்டுவதுபோல். சம்பஷணையே இல்லாத கதை
ஓட்டமும் அலுப்புத் தட்டும்.

5. உங்களுடைய கருத்துக்களை, (தீர்மானமான கொள்கைகளைக் கூட) மண்டையில் அடிக்கிற மாதிரி
‘ஆகையால் வாசகர்களே’ என்று உபதேசிக்கிற தினுசில் புகுத்தாதீர்கள். அதை அப்படியே ஏற்கும்
பாமரத்தனம் இப்போது எந்த வாசகருக்கும் இல்லை. உங்களுடைய நல்ல எண்ணங்கள் கதையில் ஒரு சுகந்தம்போல்
வரவேண்டும்.
அதைக் கதாபாத்திரங்கள் மூலம் அல்லது சம்பவங்கள் மூலம் நாசூக்காகத் தெரிவிக்கலாம். அநேகம்
சிறுகதைகள் சப்பென்று போவதற்கும், லேசாக எரிச்சலூட்டுவதற்கும், இந்த நாசூக்குத் தெரியாமல்,
எழுத்தாளர்கள் தங்களைக் கதைகளுக்குள் ‘ப்ரொஜெக்ட்’ செய்வதுதான் காரணம்.

6. கதையில் ஒருஆச்சரியம் காத்திருக்க வேண்டும். நம்பும்படியான ஆச்சரியம் – அது அதிர்ச்சி
தரலாம் அல்லது சிரிக்க வைக்கலாம் – எதுவாக இருந்தாலும் ‘பூ, இவ்வளவுதானா!’ என்று வாசகர் அலுத்துக்
கொள்ளாமல் இருக்க வேண்டும்.

7. என்னைப் பொறுத்தவரை ஒரு சிறுகதையின் கடைசி பாராதான் மிகக் கடினமானது. அதிகம் கவனம்
கொடுக்கப்பட வேண்டியது. ஏனென்றால் நமது நோக்கம் வாசகரின் பார்வையை ஈர்ப்பது மட்டுமல்லை –
அவருடைய நினைவுப் பெட்டகத்தில் இடத்தைப் பிடிப்பதும்கூட – நமது கடைசிப் பாராவைப்
பொறுத்திருக்கிறது, நமது கதையின் ஆயுள்!

(இன்னும் வரும்)


Series Navigation

எழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

வே.சபாநாயகம்


1. உள்ளத்தின் நேர்மையோடு, தன்னை இழந்து , கதாபாத்திரமாக மாறி எழுதும் ஆசிரியனின் பாத்திர சிருஷ்டிகள் சரித்திரப் பிரசித்தி பெற்ற பாத்திரங்களை விட, உண்மையாக உயிர் படைத்து உலவும் நபர்களாகத் தெரிவார்கள்.

2. வாழ்க்கையின் உன்னதம் அல்லது வீழ்ச்சிகளைப் பற்றியே எழுதவேண்டும் என்பதில்லை. சாதாரண மன நெகிழ்ச்சிகளையுமே மனோதர்ம நூலில் கோர்த்து அழகிய படைப்பாக்கி விடலாம்.

3. கதைக்கு வேண்டியது – உண்மைக்கு, எதார்த்த நிலைக்குப் புறம்போகாத கதை அம்சம். அதாவது நடைமுறை விஷயங்களைப்பற்றி எழுதுவது நல்லது.

4. உருவ அமைப்பு சிறுகதைக்கு மிகவும் முக்கியமானது. இலக்கியம் என்று வந்து விட்டால் அதற்கு ஒரு வரம்பு கிழித்துக் கொள்வது நல்லது. எந்தக் கதைக்கும் ஒரு ஆரம்பம், இடையிலே சம்பவங்கள் அல்லது மனோதர்மத்தினால் ஏற்பட்ட பின்னல், ஆரோகண அவரோகண கதிகள், முடிவு முதலியவற்றை ஆசிரியன் இஷ்டம்போல் கையாண்டு ஒரு பூர்ண உருவம் கொடுக்க வெண்டும்.

5. இலக்கியம் என்பது உள்ளடக்க அம்சத்தில் சமூகத்துக்குத் தேவையான, நன்மை பயக்கக்கூடிய நல்ல பல அம்சங்களையே பிரதிபலிக்க வேண்டும். துவராடை புனைந்தவர்கள் எல்லாம் துறவிகளாவதில்லை. அது போல அழகிய கலாரூபம், உருவ அமைதி அமைந்து விட்டால் மட்டும் ஒரு சிருஷ்டி இலக்யமாகி விடுவதில்லை. மக்கள் சமுதாயத்தை மறந்து எழுதுகிறவனை மக்களும் மறந்து விடுவார்கள்.

6. எல்லா இலக்கியங்களும் வாசகர்கள் மனதில் ஒரு கருத்தையோ, பல கருத்துக் களையோ பதிய வைக்கவே எழுதப்படுகின்றன. அந்த வகையில் எல்லா இலக்கியங்களும் பிரச்சார இலக்கியம்தான். அந்தக் கருத்துக்கள் கலையழகோடு கூடிய உருவ அமைதியோடு தெரிவிக்கப்பட வேண்டியது அவசியம்தான் என்றாலும் அந்தக் கருத்து சமூகத்துக்குப் பயனளிக்கும் விதத்தில் இருக்க வேண்டியதே அவசியமானது. அழகான உருவ அமைதியும் ஆரோக்கியமற்ற உள்ளடக்கமும் ஒரு இலக்கியப் படைப்பில் இடம் பெற்றிருக்கும் என்றால் அது குஷ்டரோகிக்குப் பட்டும் பீதாம்பரங்களும் போர்த்திக் கொலு அமர்த்திய கதையாகத்தான் இருக்கும்.

7. ஆசிரியன் தான் சொல்ல வந்த கருத்தைப் பச்சையாக பிறந்தமேனியாக வெளியிட்டாலும் அது இலக்கியமாகாது; அல்லது தனது கருத்தை வலியுறுத்து வதற்காக செருப்புக்குத்தக்க காலைத்தறிக்கும் கதை போல், யதார்த்த உண்மைகளைத் திரித்தோ, மறைத்தோ, மறுத்தோ எழுதினாலும் அந்நூல் இலக்கியமாகாது.

8. ஒரு இலக்கிய ஆசிரியனுடைய கருத்து எந்த அளவுக்கு இலைமறை காய்மறையாக இணைந்து நிற்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதன் இலக்கியத் தன்மையில் மேம்படுகிறது என்பது ஒரு உண்மை; அவ்வாறு இலைமறை காய்மறையாக இணைந்து பிணைந்து நிற்கும் அக்கருத்து வலிந்து புகுத்திவிட்டது போன்று அமையாமல், அந்த நூலில் பிரதிபலிக்கப்படும் சம்பவங்கள், பாத்திரங்கள் முதலியவற்றிலிருந்தும் யதார்த்தத்துக்கு முரணற்ற வகையில் உருவாகி உரம்பெற வேண்டும் என்பது மற்றொரு உண்மை.

(இன்னும் வரும்)


E mail ID : < v.sabanayagam@gmail.com >

Website: < http://www.ninaivu.blogspot.com >

Series Navigation

‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்………….13 புதுமைப் பித்தன்

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

வே.சபாநாயகம்1. இலக்கியத்தின் ஜீவநாடி உணர்ச்சியும் சிருஷ்டி சக்தியும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் அது வெறும் குப்பை.

2. எழுத்துக்குக் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கிவிட்ட யந்திரம் மாதிரி தானே ஓரிடத்தில் வந்து நிற்கும்.

3. ஒரு தனிச் சம்பவம் அல்லது உணர்ச்சி அல்லது குணவிஸ்தாரம் அல்லது வர்ணனை எடுத்தாளப்படும் லிரிக் என்ற கவிதைப் பகுதி போல் சிறுகதை. சிறுகதையின் ரூபம் எழுதுபவனின் மனோதர்மத்தைப் பொறுத்தது.

4. சிறுகதைப் பின்னலில் ஆரம்பம், மத்திய சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகள் உண்டு. இம்மூன்றும் படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும். சமீபத்தில் எழுதப்பட்ட அமெரிக்கச் சிறுகதைகளில் பழைய சம்பிரதாயமான ஆரம்பம், முடிவு என்ற இரண்டு பகுதிகளும் கிடையவே கிடையாது. கதை திடீரென்று மத்திய சம்பவத்தின் உச்சஸ்தானத்தில் ஆரம்பிக்கிறது. அதிலேயே முடிவடைகிறது. இன்னும் வேறு விதமான கதைகளும் உண்டு. அவற்றில் முடிவு என்பதே கிடையாது. அதாவது, கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடியும் போது அதைப் பற்றிய சிந்தனை முடிவடைந்து விடாது. இப்படிப் பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகிறது என்று சொன்னால் விசித்திரமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை. கடவுள் வாழ்க்கையின் கடைசிப் பக்கத்தை எழுதி விடவில்லை. அவரால் எழுதவும் சாத்யப் படாத காரியம்……கதைகளுக்குச் சம்பவம் அவசியமா? இப்படிப்பட்ட விகற்பங்கள் இருக்கலாமா? என்று பலர் கேட்கிறார்கள். கதைகள் அவரவருடைய சுவையையும் ரசனையையும்தான் பொறுத்தது. அவரவருடைய அனுபவத்திற்கும், ரசனைக்கும் ஏற்றபடிதான் கதைகளைப் படிக்க முடியும்.

5. பலர் இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என்று ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவித சீலைப்பேன் வாழ்வு நடத்தி விட்டோம். சில விஷயங்களை நேர்நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால்தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றிப் பேசுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக் களரியையும், மனக் குரூரங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால் ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப் போகிறது? இற்றுப் போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப் போகிறதா? மேலும், இலக்கியமென்பது மன அவசத்தின் எழுச்சிதானே?

6. நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரம்மநாயகம் இத்தியாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இவர்களது வழ்க்கைக்கு இடமளிக்காமல் காதல், கத்தரிக்காய் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை.

7. பயன் கருதாது தன்மயமாகி லயித்து ஒட்டிப் புளுகுவதுதான் கதை.

8. சிறுகதை வாழ்க்கையின் சிறிய சாளரம்.வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை. சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மாணித்துக் காண்பிக்கிறது.

(இன்னும் வரும்)
E mail ID : < v.sabanaya...@gmail.com >

Website: < http://www.ninaivu.blogspot.com >

Series Navigation

எழுத்துக்கலை பற்றி இவர்கள்……….12 க.நா.சுப்ரமண்யம்

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

வே.சபாநாயகம்1. ‘கண்ணீத்துளி வர உள்ளுருக்குதல்’ கலையின் ஒரு கோடிச் செய்கை. அசைந்து கொடுக்காமல் ஒதுங்கி நிற்கச் செய்வது கலையின் மறு கோடி.

2. இரண்டாந்தரம் படிக்க முடியாத ஒரு நூல் இலக்கியத் தரமான நூல் அல்ல. இரண்டாம் தடவை படிக்கும்போது ஒரு நூலில் பல புது அம்சங்கள் கண்ணில் படவேண்டும். கருத்தில் உறைக்க வேண்டும். அப்படிப் புதிதாக எதுவும் உறைக்கா விட்டால் அது தரமான நூல் அல்ல என்பது என் இலக்கிய அபிப்பிராயங்களில் ஒன்றாகும்.

3. ஒரு அனுபவத்தை விவரிக்கிற நல்ல கவியின் வார்த்தைகள் நமது ( அதாவது வாசகனின்) உள்ளத்தில் மறைவாகக் கிடக்கிற அனுபவங்களில் எதோ ஒன்றைப் பாதாளக் கரண்டி போலப் பற்றி இழுக்கிறது. எதொ புரிகிறமாதிரி தெரிகிறது. உடனடியாகவே இந்த அனுபவ எதிரொலிப்பு நிகழ்கிறபடியால் நாம் அதைப்பற்றி அதிகமாக சிந்தித்துப் பார்ப்பதில்லை. நம்முடைய செயல்., சிந்திப்பு எதுவும் இல்லாமலே, தானாகவே, ஒரு அனுபவம் இன்னொருவரின் அனுபவத்தை தட்டி எழுப்புகிற மாதிரி இருக்கிறது. அப்படித் தட்டி எழுப்பாது போனால், ஒரு அனுபவத்தைச் சித்தரிக்கிற வார்த்தைகள் படிப்பவன் உள்ளத்தில் எதிரொலியை எழுப்பாது போனால் அதை நல்ல கலை என்று நாம் ஏற்றுக்கொள்வதில்லை.

4. கலை எனபது என்ன என்று யோசிக்கையில் அது சற்று சிரமமான விஷயந்தான். கடவுளை எடுத்துக் கொண்டு அதைச் சொல்லலாம் அல்லது கடவுளை மறுக்கிற வேதாந்தத்¨, பிரம்மவாதத்தை எடுத்துக் கொண்டு அதை நாம் தெளிவாக்கலாம். எந்த தெய்வத்தையுமே, எந்த நிர்க்குண பிரம்மத்தையுமே வார்த்தைகளில் அகப்படாதது என்று வர்ண்¢ப்பதுதான் நமது மரபு. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட என்கிற நிர்குண பிரmமத்தையும், கடவுளையும் போன்றதுதான் இலக்கியமும்.

5. ஒருவகை மொழிகடந்த பொருள்தான் இலக்கியம். எனவே இலக்கியத்தை பூனை காலால் தூரத்தில் தொட்டுப் பார்ப்பது போல் தான் செய்ய முடியும்.

6.கலைக்கும் பிரச்சாரத்துக்கும் இடையில் ஒரு மயிரிழைதான் வித்தியாசம் இருக்கிறது.

7. இலக்கியம் ஒன்றும் (ஒன்றையும்) சொல்லாமலும் இருக்கலாம்.

8. எழுத்தாளன் அவனுடைய அரசியல், பொருளாதார, சமூகப் பின்னணியைப் பிரதிபலித்தே ஆக வேண்டும் என்பதில்லை. இந்த அம்சங்களோடு ஒத்துப் போகலாம். அல்லது எதிர்த்துக் கலகம் செய்யலாம். அது ஒரு பிரக்ஞா பூர்வமான செயல்.

(இன்னும் வரும்)
E mail ID : < v.sabanayagam@gmail.com >

Website: < http://www.ninaivu.blogspot.com >

Series Navigation

எழுத்துக்கலை பற்றி இவர்கள்………(11 ) – ‘சி.சு.செல்லப்பா’

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

வே.சபாநாயகம்1. பெரிய எழுத்தாளர்களை அடியொற்றி எழுதுவதோ தனக்கு முன் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதைத் தானும் திரும்ப ஒருதடவை (அந்த அளவுக்கு இல்லாமல்) பலவீனமாக முயன்று பார்ப்பதும் வீண் உழைப்பு ஆகும். தனக்கென ஒரு புதுப் பார்வை இருந்து ஏதாவது அதில் ஒரு நோக்கம் ஏற்ற முடியுமானால்தான் பேனாவைக் கையில் பிடிக்க வேண்டும்.

2. புதுமை, தன் தனிப்பார்வை, தொனிக்காக எழுத்துக்கு இடம் கிடைக்காது பிற்கால மதிப்பீட்டில். இன்று சூடாக விலை போவதை எண்ணி மகிழ்ந்து திருப்திப் பட்டுக் கொண்டுவிடக் கூடாது இளம் படைப்பாளி.

3. ஒரு நல்ல கலைப் படைப்பில், சிந்தனை, படிமம், உணர்ச்சி இவைகள் நெருங்கிக் கலந்து ஒரு முழுமை பெற்ற உருவம் அமைய ஏதுவாக இருக்கும்.

4. சிறுகதை ஆரம்பம் திடுதிப்பென ‘காலப்’ எடுத்த மாதிரியும் நாவல் ஆரம்பம் மெதுவாக முதல் எட்டு நகர்த்த ஆரம்பித்த மாதிரியும் நம் மனதில் படும். நாவல் களுக்கு ஆரம்பம் முடிவு சம்பந்தமாக சம்பிரதாயங்கள் உண்டு. ஆனால் இன்றைய நாவல்கள் ஆரம்பமும் சிறுகதைக்கு ஏற்பட்டது போல புதிய சம்பிரதாயங்கள் பெற்று இருக்கின்றன. சிறுகதைகள் போலவே ஆரமப வரிகள் திடுதிப்பெனவும் ஆரம்பித்து இருக்கும். ஆனால் ஆரம்ப தொனி பொதுவாக சற்று சாவகாசமாகவேஇருக்கும். மந்தகதியிலே தகவல்கள் ஏறும். ஆகவே இந்த தொனியை வைத்துத்தான் வித்தியாசம்.

இன்னொரு விஷயமும் கூட. ஆரம்பம் சம்பந்தமாக வேறு சில குணங்களும் வேண்டி இருக்கிறது. சூசனையாகவும் ஊகையாகவும் தகவல்களைக் கொடுப்பது ரொம்ப முக்கியமானது. நாவல் போல களம் விஸ்தீரணமாக இல்லை சிறுகதையில். காலம், இடம், நிகழ்ச்சி சம்பந்தமாக கதையம்சம் தாராளமாக யாத்திரை செய்ய அவகாசமும் இல்லை. ஒரே தொடர்ச்சியானாலும் நடுநடுவே தகவல்களுக்கு இடம் நாவல்களில் இருப்பது போல இல்லை. ஒரே தம், ஒரே மூச்சுப் பிடித்தல்தான். பலீன் சடுகுடுவில் ஒரே மூச்சில் போய் மறிப்பை எதிர்த்து காரியத்தை முடித்து விட்டு வரவேண்டும். கிளித்தட்டுக்குத் தங்கல்கள் உண்டு. கூட்டம் கூட்டமாகத் தங்கி மறிப்பைச் சமாளித்து ஒரு முடிவை எட்டலாம். ஆகவே சூசனையாகவும் ஊகையாகவும் தகவல்களை எடுத்த எடுப்பிலேயே கொடுத்து உணரச் செய்ய வேண்டும். அறாத ஓட்டம், தொடர்பு இருக்கிற பிரமை ஏற்படச் செய்ய வேண்டும். ஆரம்பத்துக்கு முன் ஏதேதோ நிகழ்ந்திருப்பதை எல்லாம் ஆரம்ப, தொடர்கிறவர் களில் சாயல் விழச் செய்ய வேண்டும். அப்போது நமக்கு நல்ல பகைப்புலம் உருவாகி நிற்கும்.

5. ஆசிரியர் கூற்றாகக் கதை சொல்வதில் தவறு இல்லை. அதுவும் ஒரு உக்திதான். ஆனால் ஆசிரியன் கதாபாத்திரங்கள் தங்கள் உயிர்த்துடிப்பைக் காட்டிக் கொள்ளச் செய்ய வேண்டும். நாவல்கள் போல பெரும் அளவுக்கு முடியாவிட்டாலும் குணச்சித்திரத்துக்கு சிறுகதையில் இடமுண்டு. நுணுக்கமாக முழு விவரமடங்கிய விவரிப்புக்கு இடமில்லாவிட்டாலும் உள்ளதாக எண்ணவும் இட்டு நினைக்கவும் ஏதுவாக பாவனையாக எழுதப் படத்தான் வேண்டும். ‘ஸீன் ஓ பயோலின்’ சொல்வதுபோல் சவிஸ்தாரமான அதாவது முழுவிவரம் அடங்கியதாக செய்து விட்டால் பொம்மலாட்டப் பொம்மைகள் மாதிரி ஆகிவிடும். ஒரு வைக்கப்பட்ட நிலை, சம்பாஷணை, காட்டுகிற சமிக்ஞை, அவர்களது நினைப்போட்டம் இவைகளிலிருந்து அவர்களது குணவிசேஷங் களை நாம் அறியலாம். கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும். தானே விளக்கிச் சொல்லிக்கொண்டே போக வாய்ப்பு இல்லை. அதுக்கு அவகாசமும் இல்லை.

(இன்னும் வரும்)


E mail ID : < v.sabanayagam@gmail.com >

Website: < http://www.ninaivu.blogspot.com >

Series Navigation

‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்…………..(8) கு.ப.ராஜகோபாலன்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

வே.சபாநாயகம்1. ‘கண்டதை எழுதுவதுதானா கதை?’ என்று கேட்கலாம். கதை உருவாகும் பொழுது, கண்டதுமட்டுமின்றிக் காணாததும் தங்கத்துடன் செப்புச் சேருவதுபோல் சேருகின்றன. அந்த அனுபவமும், காந்தத் துண்டுபோல, தான் இழுக்கக்கூடிய பல இரும்புத் துகள்களைப்போன்ற நிகழ்ச்சிகளையும் நிலைகளையும் ஆகர்ஷித்துக் கொள்ளுகிறது. ஆசிரியனுடைய அனுபவம் என்ற நிலையில் அடிபட்டு, பல்வேறு உருக்களில் கதைகளாக மாறுகின்றன.

2. வாழ்க்கையின் உண்மையான விஷயங்களைப்பற்றித் தைரியமாக எழுதுவதே – எடுத்துக் காட்டுவதே – சிறுகதை.

3. குணச்சித்திரம் பல வகைப்பட்டது. அசாதாராண பிரகிருதிகள், வாழ்க்கை விதிக்கும் சுவட்டில் போக முடியாமல், அதை எதிர்த்து, வேறு தனிப்பாதைகளில் போக முயலும் காட்சியை வர்ணிப்பது ஒரு வகை. அலைமோதும் வாழ்க்கைக் கடலில் இறங்கி, நீந்தத் தெரியாமல் தத்தளித்து மாயும் மென்மையான மனித இயல்புகளை அனுதாபத்துடன் படம் பிடிப்பது மற்றொரு வகை. லட்சிய வீரர்கள் (ஆண்களும், பெண்களும்) வாழ்க்கத் தரையிலிருந்து கிளம்பி, சம்பாதியைப் போல மனோரத சூரியனிடம் செல்ல முயன்று, சிறகெரிந்து வீழும் வீழ்ச்சியைச் சித்தரிப்பது
மேலும் ஒருவகை. கடைசியாகக் குறிப்பிட்ட இந்த இலட்சிய வீரர்கள்தான் வாழ்க்கையின் விதிக்கும் விதியாக நிற்பவர்கள். இவர்களுடைய சித்திரங்களே எதிர்காலச் சமுகத்துக்கு வழிகாட்டிகள்.

4. எழுத எழுதத்தான் மனிதனின் ஆத்மா வெளிப்படும்.

5. இலக்கிய ஆசிரியன் என்னதான் சொல்லவேண்டும் வாசகனுக்கு?
ஒன்றுமே சொல்லக்கூடாது. சொல்லாமல் சொல்ல வேண்டும்.

(இன்னும் வரும்)


E mail ID : < v.sabanayagam@gmail.com >

Website: < http://www.ninaivu.blogspot.com >

Series Navigation

‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 6 அகிலன்

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

வே. சபாநாயகம்1. கதையைப் படித்தபின், எழுதி முடித்த கதைக்குப் பின்னேயும் முன்னேயும் உள்ள எழுதப்படாத கதைகள் படிப்போர் உள்ளத்தில் விரிய வேண்டும். இதில் வெற்றி பெற்றுவிட்டால் அது அருமையான சிறுகதைச் சித்திரம் என்பதில் ஐயமில்லை.

2. வாழ்க்கையின் ஒரே ஒரு கோணம், வாழ்க்கை வெள்ளத்தின் ஒரே ஒரு சுழிப்பு,
உணர்ச்சிப் பெருக்கின் ஒரே ஒரு திருப்பம் இவற்றில் ஒன்று போதும் சிறுகதைக்கு.

3. கற்பனை வித்துக்கள் தாமாகவே வரும் என்று காத்திருக்காமல், எப்போதும் அவற்றை வரவேற்பதற்காகப் புலன்களைக் கூர்மையாக வைத்துக் கொண்டிருப்பது எழுத்தாளர்களுக்குத் தேவையான ஒரு மனப்பழக்கமாகும். கதைக் கலைஞன் என்ற சுய உணர்வோடு நாம் இருந்தால் போதும். விழிப்போடிருக்கும் கலைஞனைத் தேடி கற்பனை ரகசியங்கள் தாமே வரத் தொடங்கி விடுகின்றன.கற்பனை உணர்ச்சி இல்லாதவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும் காட்சி, பேச்சு, அனுபவம் இவற்றிலெல்லாம் நாம் ஏதாயினும் ஒரு புதுமையைக் கண்டுவிட முடியும்.

4. ஒருவர் கதை எழுதத் தொடங்கும் ஆரம்ப காலத்தில் உணர்ச்சி மின்னல்கள் தாமாக ஏற்படத் தொடங்குவதுண்டு. கதாசிரியரின் சுய உணர்வு இன்றியே சிலகாட்சிகளோ, அனுபவங்களோ அவருடைய கற்பனையை வேகமாக இயக்குவதுண்டு. இவற்றை அவர் புரிந்து கொண்டாரானால் அவர் அந்த வித்துக்களைச் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும்.

5. கண்களால் காணும் காட்சிகளால் மட்டும் கதை பிறப்பதில்லை. செவி வழியே வரும் சொற்களாலும், பிற புலன்களின் அனுபவங்களாலும், அவ்வனுபவங்கள் எழுப்பும் உணர்ச்சிகளாலும் கதைகள் பிறக்கின்றன. உணர்ச்சியைத் தூண்டும் நிகழ்ச்சிகளிலிருந்து கதைக் கருக்கள் வெளிப்படுகிறன. காற்றில் மிதப்பது போன்ற அந்த நுண்பொருளைத் தேடிப் பெற முடியும்; சேகரிக்க முடியும். பிறகு அவசியம் வரும்போது உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.

6. உலகில் ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரம் கதைக் கரு நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கதை எழுத விரும்பும் கலைஞர்கள் கருப்பொருளைத் தேடி அதிகமாகக் கஷ்டப்பட வேண்டுமென்பதில்லை. அவற்றை உணர்ந்து ஏற்றுக் கொள்வற்கு அவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அந்தப் பழக்கம் வந்து விட்டால் பிறகு கற்பனைகளுக்குப் பஞ்சமில்லை.

7. கதைக் கலைக்கு வேண்டிய முதல் தகுதி ரசிகத்தன்மை. அதாவது கலையைப் படைப்பவன் சிறந்த ரசிகனாக இருக்க வேண்டும். வாழ்க்கையைச் சுவைத்து அனுபவிக்கத் தெரியாதவனிடமிருந்து சுவையான கலைப்படைப்புகள் தோன்றமாட்டா.

8. பிறவகை இலக்கியப் படைப்பைப் போலவே சிறுகதையும் உயிர்த்துடிப்புள்ளது. எந்த உணர்ச்சியை அல்லது கருத்தை அது தன்னகத்தே கொண்டிருக்கிறதோ அதைப் படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப் போல் பாய்ச்சும் ஆற்றல் சிறுகதைக்கு வேண்டும். கதைக்குப் பின்னே உள்ள கதாசிரியரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாக் கூறும் செய்தி, இவ்வளவும் இலக்கண வரம்புகளைவிடவும் மிகமிக முக்கியமானவை.

9. உள்ளடக்கம், உருவம், உத்தி போன்ற பொதுப்படையான இலக்கணங்கநளைத் தெரிந்து கொண்டு, பிறகு அவசியமானால் அவற்றை மீறலாம். சிறந்த எழுத்தாளர்களின் கதைத் தொகுதிகளைப் படித்தால், அவர்கள் எவ்வாறு இந்த வரம்புகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் – அல்லது மீறி இருக்கிறார்கள் – என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

10. கதைக்கலையை எந்தக் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற முடியும் என்று நான் நம்பவில்லை. சைக்கிள் விட விரும்புவோர்கூடப் பலமுறை விழுந்த பிறகுதான் அதைச் சரியாக விடுவதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். பத்திரிகை அலுவலகங்களி லிருந்து திரும்பி வரும் கதைகளை சைக்கிள் பயிற்சியாளர்கள் கீழே விழும் அனுபவங்களுக்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம். பத்திரிகை ஆசிரியர்கள் காரணம் கூற மாட்டார்கள். நாமே சொந்த அனுபவத்திலு இடைவிடாப் பயிற்சியிலும் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். திரும்பி வரும் கதைகளை சில நாட்கள் சென்று படித்துப் பார்த்தால் நமக்கே சில குறைகள் தென்படும்.

(இன்னும் வரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

வே. சபாநாயகம்1. எழுதுவது நீந்துகிறமாதிரி. தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டிருக்கிறதா என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். குதி. குதித்துவிடு.

2.கதையாம், கட்டுரையாம், சரித்திரமாம்! கதை என்னடா கதை? ஒருமுறை திறந்த கண்ணோடு உன் வீட்டுத் தெருவில் நடந்துவிட்டு வா. கதைக்கோ கட்டுரைக்கோ விஷயம் கிடைச்சாச்சு! ஊர்வலம், கருப்புக்கொடி, சட்டத்தின் தடை, எதிர்ப்பு, லத்திசார்ஜ், துப்பாக்கிச்சூடு இவை எல்லாம் தெருவில் நடக்கும் சரித்திரமன்றி வேறென்ன?

3. ஒரு கதையில் உள்ள ஓர் அம்சம் அதற்குப் பலமா, பலவீனமா என்று நிர்ணயிக்கச் சோதனை அதைப் படிப்பதில் உள்ள சுவாரஸ்யத்தின் அளவுதான்.

4. கதைகளையெல்லாம் பொதுப்படையாக இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்; ஒன்று, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரம்.; மற்றது அமானுஷ்யக் கற்பனை. மேதைகள்தாம் சுவைக்குறைவு இல்லாத அமானுஷ்யக் கற்பனைகளைப் படைக்க முடியும். என்னைப் போன்றவர்களுக்கு பத்திரமான வழி, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரங்களே. எங்கநளைச் சூழ்ந்த உலக அரங்கத்தை நாங்கள் போட்டோ எடுப்போம். எங்களுடைய வாழ்க்கை ஆதர்சங்களும் லட்சியங்களும் அந்தப் போட்டோ வுக்கு மெருகு கொடுத்திருக்கும். எங்களுக்கும் பல கனவுகள் உண்டு. ஆனால் அவற்றில் ‘மண்’ வாசனை வீசும்; சுகந்தமான வாசனைதான். அஜந்தா ஓவியங்களையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள், போட்டோ ப் படங்கள ஢ல் கலைச் சுவையைக் காண முடியாது என்று நினைப்பது சகஜம். மீனுக்கு ஒரே சொர்க்கம்தான் உண்டு – தண்ணீர். அதில் வியப்பென்ன? போட்டோ ப் படங்களிலும் ஒருவிதக் கலைச் சுவையை அனுபவிக்க முடியும் என்று நம்பும் கோஷ்டியைச் சேர்ந்தவன் நான். எனவே, என் கதைகள் அத்தனையும் பெரும்பாலும், முழுவதுமோ அல்லது பெரும் பகுதியோ பிரத்தியட்ச நிகழ்ச்சிகள்.

5. கலைஞன் நமக்கு அழகைக் காட்டுவது மாத்திரம் அல்ல, அநேக சமயங்களில் அதைக் காண நம்மைச் சித்தப் படுத்தியும் விடுகிறான். குதிரையின் கண்களில் ஒரு மறைப்பைப் போட்டு ஓட்டுகிறார்கள் பாருங்கள்; அதே மாதிரி கலைஞனும் நம் கண்களை நேர்வழியில் திருப்புகிறான். மறைக்க வேண்டியதை மறைத்து, விளக்க வேண்டியதை விளக்கி, திருத்த வேண்டியதைத் திருத்தி, மெருகு கொடுப்பது கலைஞனின் நுட்பம்.

6. கலையிலே பிரச்சாரம் இருக்கலாமா கூடாதா? இதைப் பற்றி ஒரு பெரிய விவகாரம்! இருந்தாலும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.; இருந்தாலும் இல்லாவிட்டாலும், கலை கலையாகவே இருப்பது மாத்திரம் அவசியம்.

7. நாம் எழுதும் கதை, கதையாயிருக்க வேண்டும்; அதாவது சுவாரஸ்யம் நிறைந்திருக்க வேண்டும். இப்படி எழுதப் படாததால்தான், அநேகம் கதைகளை, ஜனங்கள் ரசிக்காமல் தள்ளுகிறார்கள். கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க ரசமாக இருந்ததா என்ற ஒரே பரீட்சைதான், நல்ல கதைக்கு முக்கியமாகும். மற்ற லட்சணங்கள் எல்லாம், அதற்கு உதவுபவையே ஆகும்.

8. கதையின் ஒவ்வோர் அம்சமும், ஆரம்பம் நடு முடிவு ஒவ்வொர் அமைப்பும் , ஒவ்வொரு சொல்லும், கதையிந் சுவாரஸ்யத்துக்கு, திட்டத்துக்கு உதவ வேண்டும். கதை முழுவதையும் படித்த பின், ‘பூ! இவ்வளவுதானா? இதை ஏன் படித்தோம்?’ என்ற உணர்ச்சி, படிப்பவருக்கு ஏற்படக் கூடாது. கதையின் முடிவு ஏமாற்றமாயிருந்தால், அந்த ஏமாற்றமும் ஓர் இன்பமாயிருக்க வேண்டும். இதுதான் முக்கியம்.

(இன்னும் வரும்)


E mail ID : < v.sabanayagam@gmail.com >

Website: < http://www.ninaivu.blogspot.com >

Series Navigation