மன்னிக்க வேண்டுகிறோம்

This entry is part of 64 in the series 20050113_Issue

திண்ணை குழு


ஞாநி திண்ணைக்குழுவும், மாயவரத்தானும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

திரு. மாயவரத்தான் ஞாநியின் கோரிக்கை சம்பந்தமாக எழுதிய கடிதம் இதே திண்ணையில் வெளியாகியிருக்கிறது.

ஆனால் ஞாநியிடம் மன்னிப்புக் கேட்பதற்கு முன்னால், ஞாநியின் கட்டுரைகளால் மனம் புண்பட்ட மற்றவர்களிடமும் மன்னிப்புக்கேட்பது தான் மனசாட்சியுள்ள காரியமாய் இருக்கும்.

திண்ணை படிப்பவர்கள் திண்ணையில் ஏதேனும் தங்களைப் பற்றி தவறாக எழுதப்பட்டிருந்தால், திண்ணையில் இது போன்றதொரு கோரிக்கையை வைத்து ‘அவதூற்றை ‘ நீக்கிக்கொள்ள வாய்ப்பு பெற்று விடுகிறார்கள்.

திண்ணையை படிக்க முடியாத எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களோ, படிக்க விரும்பாத இளையராஜா அவர்களோ, இன்னும் பலருமோ அப்படிப்பட்ட வாய்ப்பு பெறாமல் இருக்கலாம்.

ஆனாலும் இளையராஜா, எம் எஸ் சுப்புலட்சுமி இன்னும் பலரது ரசிகர்களும், அனுதாபிகளும் நிச்சயமாக அப்படிப்பட்ட கட்டுரைகளால் மனம் புண்பட்டிருக்கலாம்.

எம் எஸ் அன்றாட வாழ்க்கையில் ஓர் அய்யர் மாமியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தம்முடைய பிராமணதுவேஷத்தை எம் எஸ் என்ற இசைக் கலைஞருக்குச் செலுத்தும் அஞ்சலியிலும் செருகியிருக்கும் ஞாநியின் கட்டுரையை வெளியிட்டதற்காக, சாதி மதம் கடந்து எம் எஸ் இசையை ரசித்த கோடிக்கணக்கான ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். சமூகவியல் கருத்து என்று தனக்குத் தெரியாத ஒன்றை வியாக்கியானம் செய்த ஞாநி , அதன் தவறை வாசகி ஒருவர் சுட்டிக் காட்டியும் அதைப்படித்து திருத்திக் கொள்ளும் பக்குவம் இல்லாத ஞாநி இப்போதாவது எம் எஸ்ஸின் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

எவ்வளவு ஈடுபாட்டுடன் முயன்றும் இளையராஜாவால் ராஜப்பையர் ஆக முடியவில்லை என்று திருவாய் மலர்ந்து இளையராஜாவையும் , இளையராஜாவின் ரசிகர்களையும் அவமதித்த ஞாநியின் கட்டுரையை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். சாதி மத பேதமில்லாமல் இளையராஜாவின் இசையில் லயிக்கும் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இசை பற்றியோ, சமூகவியல் பற்றியோ எதுவும் தெரியாத, பார்ப்பனீயம் என்று எல்லார் மேலும் சகட்டுமேனிக்கு ஈயம்பூசும் பேனாவை மட்டும் கைக்கொண்டு ஞாநி எழுதிய இந்த அவதூறிற்காக இளையராஜாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். ஞாநியும் மன்னிப்புக் கேட்பார் என்று நம்புகிறோம். ஒரு வேளை இளையராஜா, தான் ராஜப்பையைர் ஆகவேண்டும் என்று விருப்பம் தெரிவித்து தனிப்பட்ட முறையில் ஞாநிக்கு கடிதம் அனுப்பி, முப்புரிநூல் அணிவித்து வைக்கும்படி கேட்டிருந்தால் அந்த உண்மையை ஆதாரத்துடன் ஞாநி திண்ணை வாசகர்கள் முன்பு வைக்கத் தயங்க மாட்டார் என்று நம்புகிறோம்.

‘என் முழுப்பொறுப்பில் இருந்த எந்த இதழும் விற்பனை குறைந்து மூடப்பட்ட சரித்திரமே என் 30 ஆண்டுகால பத்திரிக்கை வரலாற்றில் இல்லை ‘ என்று ஞாநி சொல்கிறார். இதை சரிபார்க்க எங்களால் இப்போது இயலவில்லை. ஞாநி சொல்வது உண்மையாய்த் தான் இருக்க வேண்டும். விகடன் குழுமத்தின் ஆள்பலம், பணபலம், விநியோக இயந்திரத்தின் பலம் இவற்றினால் அல்லாமல் ஞாநியின் தனிமனித முயற்சியால் மட்டுமே இதழ் விற்பனை கூடியிருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

மன்னியுங்கள் ஞாநி.

நட்புடன்

திண்ணை குழு

Series Navigation