தலைவர்களும் புரட்சியாளர்களும் – 7 – கோல்டா மேர்

This entry is part of 40 in the series 20050630_Issue

கே.ஜே.ரமேஷ்


‘அராபியர்கள் எங்கள் பிள்ளைகளைக் கொன்ற குற்றத்தைக் கூட எங்களால் மன்னித்து விட முடியும். ஆனால் அவர்கள் எங்கள் பிள்ளைகளை கொலையாளிகளாக ஆக்கிவிட்டதைத் தான் எங்களால் மன்னிக்கவே முடியாது ‘ என்று அதிபர் அன்வார் சதாத்திடம் அமைதிக்கான பேச்சு வார்த்தை துவங்குவதற்கு முன் தடாலடியாகக் கூறியவரை நினைவிருக்கிறதா ? ஆம் உலகத்தின் மூன்றாவது பெண் பிரதமராகப் பதவியேற்ற கோல்டா மேர் தான் அவர். ஒரு முறை அவரிடம் போப் பால் VI இஸ்ரேல் அராபியர்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொள்கிறது என்று கூறியதற்கு கோல்டா மேர் ‘புனிதமானவரே, எனக்கு சிறு வயது நினைவுகளில் இன்னும் பசுமையாக இருப்பது எது தெரியுமா ? கீவ் நகரில் ‘போக்ரோம் ‘ க்கு காத்திருந்தது தான். உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இஸ்ரேலிய மக்களுக்கு கடுமை என்றால் என்னவென்பது நன்றாகவே தெரியும், நாஸிகள் எங்களைக் கேஸ் சேம்பருக்கு இழுத்துச் சென்ற போது கருணை என்னவென்பதையும் அறிந்து கொண்டோம் ‘ என்று கூறினாராம். போக்ரோம் (Pogrom) என்ற சொல் ரஷ்ய மொழியிலிருந்து வந்தது. இச்சொல் ஒரு சிறுபாண்மையினருக்கு எதிராக அவர்களைப் பூண்டோடு அழிக்கும் நோக்கத்தில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு திட்டமிட்டுச் செயல் படுத்திக் கொடூரமான வன்முறைத் தாக்குதல் நடத்துவதைக் குறிக்கும். 19ம் நூற்றாண்டின் கடைசியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ரஷ்யாவில் யூதர்களுக்கு எதிராக நடந்த தொடர் வன்முறைத் தாக்குதல்களைக் குறிக்க இச்சொல் பயன்பட்டது. கோல்டா மேருக்கும் ரஷ்யாவுக்கும் போக்ரோமுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் எரிச்சலடைவது புரிகிறது. அதற்கு சில பிண்ணனி தகவல்களை அறிந்து கொள்வது நல்லது.

கோல்டா மேர் 1898ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி ரஷ்யாவில் உள்ள கீவ் நகரில் பிறந்தார். 1881ம் ஆண்டு அலெக்சாந்தர் II கொலையுண்ட பிறகு தான் ரஷ்யாவில் யூதர்களைக் குறி வைத்த போக்ரோம்கள் அதிகரித்தன. ஆட்சியில் இருந்த அரசின் ஆதரவுடனோ அல்லது குறைந்த பட்சம் அவர்களிடமிருந்து யூதர்களுக்கு ஆதரவான தலையீடுகளோ இல்லாமல் தான் போக்ரோம்கள் நடந்தேறின. போக்ரோம்கள் நடக்கும் போது காவல் துறை அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது சகஜமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வந்தது. 1903ம் ஆண்டு வரையில் அவ்வப்போது போக்ரோம்கள் நடந்து வந்தாலும் அந்த ஆண்டில் நடந்த 3 நாள் கோரத் தாண்டவம் தான் பின்னர் அது தொடர் நிகழ்வாக மாறியதற்கு வழிவகுத்தது. அந்த 3 நாள் தாக்குதலில் சுமார் 45 யூதர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது ஆரம்பித்த யூதர்களின் புலம் பெயர்தல் 1920ம் ஆண்டு வரை நீடித்தது. இந்தக் கால இடைவெளியில் சுமார் 2 மில்லியன் யூதர்கள் ரஷ்யாவை விட்டு அமெரிக்காவிற்குத் தப்பியோடியதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. போல்ஷெவிக் புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவில் போக்ரோம்கள் குறைந்து படிப்படியாக ஒழிந்து விட்டது. ஆனால் ஹிட்லர் பதவிக்கு வந்தவுடன், அது மீண்டும் ஜெர்மனியிலும் போலந்திலும் தலையெடுக்க ஆரம்பித்தது. அப்படிப் புலம் பெயர்ந்த யூதர்களில் ஒருவர் தான் கோல்டா மேரின் தந்தை.

தனது குடும்பத்தாருடன் 1906ம் ஆண்டு ரஷ்யாவை விட்டு அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பகுதியில் உள்ள மில்வாக்கீ என்ற இடத்திற்கு சென்று வாழத்தொடங்கிய கோல்டா மேரின் உண்மைப் பெயர் கோல்டா மாபோவிட்ஸ். அங்கிருந்த ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்ற அவர் பொதுப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியையாகப் பணி புரிந்தார். 1915ம் ஆண்டு ஸியானிஸ்ட் (Zionist) தொழிலாளர் அமைப்பில் சேர்ந்தார். 1917ம் ஆண்டு மாரிஸ் மெயர்சன் என்பவரை மணந்து கொண்டு நான்கு ஆண்டுகள் கழித்து அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த டெல் அவிவ் நகருக்குக் குடி பெயர்ந்தார். ஸியானிஸ்ட் அமைப்பில் படிப்படியாக முன்னேறி பின்னர் 1930ம் ஆண்டு தொழிலாளர் கட்சி (Labour Party) தொடங்கியவுடன் அதில் ஒரு முக்கிய அங்கத்தினராகத் திகழ்ந்தார். தொழிற்சங்க அமைப்பில் அவரது பங்கு கனிசமானது. ஹிஸ்டாத்ருத் (Histadrut) தொழிற்சங்கத்தில் ஒரு மேலாளராகவும் பணியாற்றியிருந்தார். 1946ம் ஆண்டு முக்கிய யூதத்தலைவர்கள் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவுடன் யூதர்கள் பிரதிநிதித்துவ அமைப்பில் அரசியல் கிளைக்கு தலைவராக பொறுப்பேற்றார். 1947ம் ஆண்டு ஐ.நா சபை பாலஸ்தீனப் பிரிவினையை அறிவித்ததைத் தொடர்ந்து அராபியர்கள் வன்முறையில் இறங்கினர். வன்முறையைத் தொடர்ந்து இஸ்ரேலியர்கள் தங்கள் சுதந்திரத்திற்கானப் போரைத் துவக்கினார்கள். அப்போரின் செலவுகளை ஈடுகட்ட நிதி தேவைப்படவே கோல்டா மேர் அமெரிக்காவிற்குச் சென்று நிதியைத் திரட்டினார். அதன் விளைவாக அவர் நாட்டின் ஒரு முக்கியப் பிரதிநிதியாக உருவெடுக்க முடிந்தது.

முதலாம் உலகப் போருக்குப் பிறகு லீக் ஆஃப் நேஷன்ஸ் அறிவித்த பாலஸ்தீன ஆவணங்களின் படி ஒருங்கிணைந்த பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்திலிருந்தது. அந்த ஆவணங்கள் 1948ம் ஆண்டு காலாவதியானவுடன் பிரிட்டிஷ் துருப்புகள் பாலஸ்தீனத்தை விட்டு திரும்பிச் சென்றது. இதைத் தொடர்ந்து உடனடியாக மே மாதம் 18ம் தேதி இஸ்ரேல் என்ற தனி நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தப் பிரகடனப் பத்திரத்தில் 24 பேர் கையொப்பமிட்டனர். அந்த 24 பேர்களில் இருவர் பெண்கள் – அதில் ஒருவர் கோல்டா மேர். பிரகடனத்தைப் பற்றி பின்னர் பேசிய கோல்டா மேர், ‘பத்திரத்தில் கையொப்பமிட்டவுடன் நான் அழுதேன். பள்ளிச் சிறுமியாக அமெரிக்க சரித்திரத்தைப் படிக்கும் போது அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தைப் பற்றி படித்திருக்கிறேன். அது ஒரு உண்மையான நிகழ்வு என்பதையோ உயிருள்ள மக்கள் அப்பத்திரத்தில் கையொப்பமிட்டார்கள் என்பதையோ என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் இப்போது இஸ்ரேல் நாட்டுப் பிரகடனத்தில் நானே கையொப்பமிட்டிருக்கிறேன் ‘ எனு கூறியிருக்கிறார். இஸ்ரேல் நாடு பிரகடனப்படுத்தப் பட்ட அன்று இரவே அமெரிக்க அரசு இஸ்ரேலை அங்கீகரித்தது. மூன்று நாட்கள் கழித்து சோவியத் யூனியனும் இஸ்ரேலை அங்கீகரித்து அறிக்கை விட்டது. இஸ்ரேல் என்ற தனி நாட்டைத் தோற்றுவிக்கப் போராடிப் பின்னர் அந்நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற டேவிட் பென் குரியொன் தனது தற்காலிக அரசாங்கத்தில் கோல்டா மேரை ஒரு உறுப்பினராக நியமித்தார். சுதந்திர நாட்டைப் பிரகடனப்படுத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு பென் குரியொன் கோல்டா மேரை ஜோர்டான் மன்னன் அப்துல்லாவிடம் தூது அனுப்பினார். உயிருக்கு ஆபத்தான அப்பயணத்தை கோல்டா மேர் ஒரு அராபியப் பெண்மணிபோல் மாறுவேடமணிந்து மேற்கொண்டார். இஸ்ரேலைத் தாக்க வேண்டாம் என்று மன்னன் அப்துல்லாவைக் கேட்டுக் கொள்ளவே அப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த வேண்டுகோளை நிராகரித்த மன்னன் அப்துல்லா ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின் படி இஸ்ரேலை தாக்கியது வேறு கதை. மிகுந்த துணிவுள்ள கோல்டா மேரைப் பற்றி பென் குரியொன் ஒரு முறை, ‘மந்திரி சபையில் உள்ள ஒரே ஆண் ‘ என்று குறிப்பிட்டது அவரது துணிச்சலுக்கும் கோல்டா மேரின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கைக்கும் ஒரு எடுத்துக் காட்டு. அதே ஆண்டு கோல்டா மேர் சோவியத் யூனியனுக்கான இஸ்ரேலின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

1949ம் ஆண்டு நெஸ்ஸட்டுக்கு (Knesset-இஸ்ரேலிய பாராளுமன்றம்) தேர்ந்தெடுக்கப்பட்ட கோல்டா மேர் தொடர்ந்து 1974ம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார். 1949ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை தொழிலாளர் மந்திரியாக பணியாற்றியவர், 1956ம் ஆண்டு வெளியுறவு மந்திரியாகப் பொறுப்பேற்றார். வெளியுறவு மந்திரியாகப் பொறுப்பேற்றவுடன் பிரதமரான பென் குரியொன் யோசனைப்படி ‘மேர் ‘ என்ற ஹெப்ரூ பெயரை இணைத்துக்கொண்டார். 1965ம் ஆண்டு உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி பதவி விலகினார். ஆனால் மீண்டும் 1968ம் ஆண்டு தொழிலாளர் கட்சிக்குத் தலைமையேற்குமாறு அழைப்பு வரவே சுமார் எட்டு மாத காலம் கட்சியை வழி நடத்திச் சென்றார். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஒய்வு பெற்றவரை அரசியல் வெகு நாட்கள் விட்டுவைக்கவில்லை. அப்போது பிரதமராக இருந்த லெவி எஷ்கோல் என்பவர் 1969ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறந்து விடவே கட்சி கோல்டா மேரை பிரதமராக வழி மொழிந்தது. மார்ச் 17ம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்றவர் 1974ம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார்.

கோல்டா மேர் பிரதமராக இருந்த கால கட்டத்தில் பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று. 1967ம் ஆண்டு ஆறே நாட்கள் நடந்த அராபிய இஸ்ரேல் போரில் கைப்பற்றிய இடங்களைக் குறித்த சர்ச்சை வலுத்துக் கொண்டிருந்தது. பாதுகாப்பு மந்திரியாக இருந்த மோஷே தயானும் அவரது ஆதரவாளர்களும் கைப்பற்றிய இடத்தை திரும்பக் கொடுக்கக் கூடாது என்று கூறி வந்தனர்.

மேலும் அவர்கள் கைப்பற்றிய இடங்களை குடியேற்றப் பகுதிகளாக மாற்றி விடவேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் உப பிரதம மந்திரியாக இருந்த யிகால் அலோனும் அவரது ஆதரவாளர்களும் அமைதிப் பேச்சின் ஒரு அம்சமாக கைப்பற்றிய இடங்களான சினாயை எகிப்திடமும், கோலன் ஹைட்ஸ் பகுதியை சிரியாவிடமும், மேற்குக் கரைப் பகுதியை ஜோர்டானிடமும் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். கோல்டா மேர் மோஷே தயானின் பக்கம் சாய்ந்தாலும் எப்படியோ மிதவாதிகளின் ஆதரவையும் பெற்றுக் கொண்டிருந்தார். உள்நாட்டு அதிருப்தியாளர்களை சமாளித்துக் கொண்டே அராபிய நாடுகளிடமும், அமெரிக்காவிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். எகிப்து நாட்டுடனான பேச்சு வார்த்தைகளில் அளவுக்கதிகமாக விட்டுக் கொடுத்து விட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 1971ம் ஆண்டு தனக்கெதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றையும் முறியடித்தார். பாராளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்தாலும், மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தார்.

‘அராபியர்கள் யூதர்களை வெறுப்பதைக்காட்டிலும் அதிகமாக அவர்களது குழந்தைகளை நேசித்தால் தான் அமைதி பிறக்கும் ‘ என்று கூறிய கோல்டா மேர் அராபிய நாடுகளின் உள்நோக்கத்தை அறிந்து கொள்ளாமல் எடுத்த தவறான முடிவுகளால் தனது நாடான இஸ்ரேல் போரில் தோற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதை அறிந்து அதிர்ந்தார். 1973ம் ஆண்டு கிளம்பிய போர் வதந்திகளை நம்பாமல், அராபிய நாடுகளுக்கு எதிரான தற்காப்புத் தாக்குதல் நடத்த மறுத்து விட்டார். ஆனால் சிரியாவும் எகிப்தும் வேறு திட்டங்கள் வைத்திருந்ததை கோல்டா அறியவில்லை. 1967ம் ஆண்டு நடந்த 6 நாள் போரில் இழந்த பகுதிகளை எவ்வாறேனும் மீட்டு விட வேண்டும் என்ற நோக்கத்துடன் சிரியாவும் எகிப்தும் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் மீது படையெடுப்பது என்று முடிவு செய்தார்கள். போர் பற்றிய வதந்திகள் வந்தவண்ணமிருந்த போதிலும் கோல்டா மேர் அதைப் புறக்கணித்தது அவர் செய்த முதல் தவறு. இதற்கிடையில் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஜூடாயிஸத்தின் அதி முக்கிய புண்ணிய தினமான ‘யோம் கிப்பூர் ‘ தினத்தன்று (அக்டோபர் 6ம் தேதி) சிரியாவும் எகிப்தும் சேர்ந்து இஸ்ரேலை முற்றுகையிட்டன. யூதர்களின் வருடத்தில் பத்தாவது மாதமான திஷ்ரி மாதத்தின் 10ம் நாள் யூதர்கள் பாவ மன்னிப்பு கேட்கும் நாள். அன்று உண்ணாவிரதமும் தவமும் இருந்து தங்கள் பாவங்களை மன்னிக்குமாறு வேண்டுவர். அந்த நாளன்று தான் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடங்கப்பட்டது. ஈராக், சவுதி அரேபியா, குவெய்த், லிப்யா, அல்ஜீரியா, துனிஸியா, சூடான், மொரோக்கோ போன்ற மற்ற அரபு நாடுகள் நிதி, துருப்புகள், தளவாடங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை அளித்து சிரியாவுக்கும் எகிப்திற்கும் தங்கள் ஆதரவை அளித்தன. அக்டோபர் 22ம் தேதி போர் நிறுத்தம் அறிவித்தாலும் 25ம் தேதி வரை போர் தொடர்ந்தது. இஸ்ரேல் ஒரு பேரழிவை சந்திக்காமல் காப்பாற்றியதில் அந்நாட்டின் சமீபத்தியப் பிரதமரான ஏரியல் ஷரோனுக்கு பெரிய பங்கு உள்ளது. சூயஸ் கால்வாயை எதிர் திசையில் கடந்து எகிப்திய ராணுவத்தை சுற்றி வளைத்தது அவரது படை. இதனால் கோபமடைந்த சோவியத் யூனியன் நேரடியாகக் களமிறங்கப் போவதாக மிரட்டியது. சோவியத் யூனியனின் மிரட்டலைக் கண்டு அமெரிக்க அரசும் வெகுண்டெழுந்தது. அப்போதிருந்த அதிபர் நிக்ஸனின் அரசாங்கம் முப்படைகளையும் போருக்கானத் தயார் நிலையில் இருக்குமாறு கட்டளையிட்டது. அவ்வாறு முப்படைகளையும் தயார் நிலையில் நிறுத்தும் ஆணை 1963ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் போரில் தான் பிறப்பிக்கப்பட்டது. (1963ம் ஆண்டு கியூபா ஏவுகணை நெருக்கடி தொடர்பாக அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது) சுமார் 21000 போர் வீரர்கள் மடிந்த இந்தப் போரில் இஸ்ரேலின் இழப்பு எதிரிகளை விட மிகவும் குறைவானதே. சுமார் 2700 இஸ்ரேலிய வீரர்கள் இந்தப் போரில் இறந்து போனார்கள். இருந்தும் இஸ்ரேலிய பொதுமக்களின் தன்னம்பிக்கை இந்தப் போரால் தகர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். எதிர்பாராத நேரத்தில் திடாரென்று தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராக இருக்கவில்லையென்றும் அதற்கு பாதுகாப்பு மந்திரியாக இருந்த மோஷே தயான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் மக்கள் குரலெழுப்பினார்கள். இஸ்ரேல் நாட்டின் உச்ச நீதிமன்றமும் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் முடிவில் முப்படையின் முதன்மை ராணுவ அதிகாரி பதவி விலக வேண்டும் என்று தீர்ப்பாயிற்று. மோஷே தயானைப் பற்றிய தீர்ப்பு நிலுவையில் வைக்கப்பட்டது. ஆனால் 1974ம் ஆண்டு தயான் தனது ராஜினாமாக் கடிதத்தை கோல்டா மேரிடம் சமர்ப்பித்தார்.

போரில் பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் கோல்டா மேரின் தலைமையிலான தொழிலாளர் கட்சி 1973ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் மனதாலும் உடலாலும் சோர்வுற்றிருந்த கோல்டா மேர் 1974ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து யிட்சாக் ராபின் பிரதமராவதற்கு வழி வகுத்தார். நான்கு ஆண்டுகள் கழித்து 1978 டிசம்பர் மாதம் முதல் தேதியன்று தனது 80வது வயதில் இறந்து போனார்.

இஸ்ரேல் மக்களிடையே கோல்டா மேர் ஏற்படுத்திய என்றுமழியாத தாக்கத்தை அவர் வகித்த பதவிகளும் அவரது நீண்ட நாள் பொதுச்சேவையும் முழுவதுமாக விளக்கி விடமுடியாது. மங்காப் புகழோடும் தெளிவான நினைவுகளோடும் இன்றும் அவர் இஸ்ரேல் மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மக்கள் நலனில் கொண்ட அக்கறையும் நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட விதமும் கற்பனைக்கெட்டாத உயரத்தில் அவரை வைத்துவிட்டது. ‘மகத்தான புகழ் படைத்தவர் ‘ என்ற அடைமொழிக்கு பெயர் கொடுக்க வேண்டுமென்றால் அது ‘கோல்டா மேர் ‘ என்று தான் இருக்க வேண்டும்.

கே.ஜே.ரமேஷ்

kalelno5@yahoo.com

Series Navigation