திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

எஸ் ஷங்கரநாராயணன்


/12/

சிறு அளவு வாழ்க்கை… எனினும் எப்பெரும் அளவு அவளை அது புரட்டி யெடுத்து விட்டது. நாம்தானா அது… அந்தச் சகதிகளில் சூழல்களில் சிக்கிகொண்டது என அவளுக்கு இப்போது நினைத்தாலும் நம்ப முடியாத அளவு பல்வேறு உலகங்களை அவள் வாழ்க்கை அறிமுகப் படுத்தி விட்டது. பிறர் அறியா… உலகில் அநேகர் அறியா உலகம்.

ஒருவேளை அநாதைகள்… அபலைகள் ஒவ்வொருத்தியும் பல்வேறு உலகங்களால் கிரகத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டவர்களாய் இருக்கலாம் என நினைத்துக் கொள்கிறாள். அப்பா இருந்தவரை சுடருக்கு நல்ல நிழல்வாசம் கிடைத்தது. கவலை தெரியாமல் வளர்கிறாப் போல இருந்தது. எல்லாம் சரியாக வந்து விடும். சராசரி மண வாழ்க்கை, சராசரி இன்பங்கள் என அமைகிற வாழ்க்கையும் சிற்றம் சிறு சிறகெடுத்த வான் பயணம். அன்பின் வளையப் பாதுகாப்பு… என்பதாய் நினைத்திருந்தாள்.

ஒன்றுமில்லை- அப்பா இல்லை. அம்மாவும் இல்லை… என்றான நிலையில் மனம் சற்று கலகலத்துத்தான் போனது. உட்பயம். ஆண்துணையின்றி இங்கே வாழ முடியாது என்கிறதான திகில். தனிமை வாட்டியது. எப்படி வாழ வேண்டும் என… வாழ்கிற வழியை நாம் தேர்வு செய்து கொள்ளலாம் என அறிகிற பக்குவம் வாய்க்கவில்லைதான்.

மாசிலாமணியுடனான முதல் வாழ்க்கை- சரி அது கெட்ட கனவு. அவன் சற்று பெரும்போக்கு ஆசாமி. ஆண்களுக்கு அப்படி வாழ்க்கை சற்று செளகர்யமானதுதான். எதைப் பற்றியும் அக்கறையற்று எத்தனையோ ஆண்கள் இப்படி அமைந்து விடுகிறார்கள். எத்தனை பெரும் மூதாட்டிகள் இப்படி பொறுப்பற்ற பிள்ளைகளைக் காலமெல்லாம் வைத்துச் சோறுபோட்டுக் கொண்டு இன்னமும் உழைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்…

ஆ தியாக மகா ஜனங்கள். பெண்ணுக்குள்ள தாய்மை மனம் தியாகங்கள் செய்ய விருப்பு காட்டுகிறது உள்ளூற. அதில் தன்னைக் கரைத்துக் கொள்கிற கற்பூர அம்சம் அது. ஆணிடம் இல்லாதது. கர்ப்பப்பை சுமந்ததில் அந்த அம்சமும் அவர்களோடு இயற்கையாய் அமைந்து விட்டதோ என்னமோ ?

தியாகமும் விட்டுக் கொடுத்தலும்… அவை ஏமாளித்தனங்களாகப் புரிந்து கொள்ளப் படாதவரை எல்லாம் சரி. ஆனால் அதற்குரிய நியாயம் அடையாளப் படாத இடத்தில் இவற்றால் பயனில்லை எனப் பெண்மை புரிந்து கொள்ள வேணாமா ?

திருமதி கோஷ் இந்த உணவகத்தைத் துவங்கி ஐந்து வருடங்கள் ஆகிறதாய்ச் சொன்னார். ஒரு மகள் அவருக்கு. ஃபிரான்சில் தன் கணவருடன் குடியமைந்து விட்டாள். அம்மாவையும் அவள் அழைத்துக் கொண்டிருந்த போதிலும் திருமதி கோஷுக்கு தமது மீதிக் காலங்கள் இங்கே இந்தியாவில் கழிய ஆசை. வங்காளி அவர். அவரும் கணவருமான எளிய வாழ்க்கை. கணவரும் இறந்தபின் அவர் ஆன்மா ஒடுங்கிவிடவில்லை என்பது எத்தனை அழகாய் இருக்கிறது.

நிகழ்காலத் தனிமை ஒருபுறம். மிச்சம் இருந்தது வாழ்க்கை. அதைப் பயனுள்ளதாகச் செலவிட அவர் விரும்பினார். அவரிடம் கொஞ்சம் பணமும் இருந்தது. இந்த முதிய வயதில் தமது பணமும் நிர்வாகத் திறமையும் பிறருக்குப் பயன்படும் விதத்தில் கழிய அவர் முடிவெடுத்தார்.

சில தோழிகளுடன் அவர் யோசித்து இந்த உணவகத்தைத் துவக்கினார். புத்துாரில் மிக ஆரோக்கியமாக இயங்கி வருகிறது உணவகம். எட்டு முதல் எட்டு வரை இயங்கியது, என்றாலும் இந்தப் பனிரெண்டு மணிநேரமும் அவர் மேற்பார்வையில் நடந்தன எல்லாம்…

கூட்ட நெரிசல் அற்ற முன்மதியச் சிறு இடைவெளியில் அவர் உள்ளே தனியறையில் கட்டிலிலோ, ஈசிசேரிலோ சற்று ஓய்வு கொள்கிறார். மற்றபடி எப்போதும் உற்சாகத்துக்குக் குறைவில்லை. சோம்பல் கொண்டாடி அவரைப் பார்க்கவே முடியாது.

வங்காளி என்ற அளவில் ஸ்ரீ அரவிந்தரின், அன்னையின் படம் அங்கே இடம் பிடித்ததைப் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லை. இந்த வங்காளிகள் அரவிந்தரையும் தாகூரையும் எத்தனை கொண்டாடுகிறார்கள்…

அறுபத்தியைந்து அறுபத்தியாறு வயதில்… கணவனை இழந்தபின் ஒரு மூதாட்டி பெருமுயற்சி செய்து இப்படியோர் நிறுவனத்தைத் துவக்கியது என்பது அழகான விஷயம் அல்லவா ? சுடருக்கு திருமதி கோஷைப் பார்க்கவே உற்சாகமாய் இருக்கும். உழைக்க அஞ்சாத சுடரை அவருக்கும் ரொம்பப் பிடிக்கும்…

ஓய்வு நேரங்கள் என அமைந்தால் சுடர் அவரது தனியறைக்குப் போய் சிறிது பேசிக் கொண்டிருப்பாள். தளர்ந்த அவரது கால் மூட்டுகளை அழுத்திக் கதகதப்பாக்குதல் போன்ற சிறு உதவிகள் செய்வாள். அவரது சிற்றறையைச் சுத்தம் செய்து தருவாள். கூஜாவில் தண்ணீர் நிரப்பி வைப்பாள். அறைச் சுவரில் மாட்டப் பட்டிருக்கும் ஸ்ரீ அன்னை படத்தைத் துடைத்து ஊதுபத்தி கொளுத்தி வைப்பாள்.

‘ ‘அருமையான விஷயம் இந்த உணவகம். எங்களைப் போன்றவர்களின் திகைத்த வாழ்க்கைக்கு எப்பெரும் மாறுதலாகவும் களிம்பாகவும் அமைந்திருக்கிறது இது ‘ ‘ என்றாள் சுடர்.

திருமதி கோஷ் தலையாட்டினார். வரியோடிய கண்கள் சிரிக்க அவளை அவர் அங்கீரிப்பது சுடருக்கு மிகவும் பிடிக்கும். ‘ ‘வாய்ப்பு கிடைத்தால் பிற ஊர்களிலும் இதைப்போல நாம் இயங்க முடியும். ஏன் முடியாது… ‘ ‘ என்றார் திருமதி கோஷ்.

‘ ‘நிச்சயம் ‘ ‘ என்றாள் சுடர். ‘ ‘சலியாத உழைப்பு காட்டுகிற, தன்னம்பிக்கை கொண்ட, திறமையான தலைமை நிர்வாகி வேணாமா ? ‘ ‘

‘ ‘உங்களைப் போன்ற ஒத்துழைக்கும் ஊழியர்கள்… அதை விட்டுவிட்டாயே அம்மா… ‘ ‘ என்று சிரித்தார் திருமதி கோஷ்.

‘ ‘இன்று வெயில் அதிகம்தான்- இல்லை ? தலையை வலிக்கிறது… ‘ ‘

‘ ‘தைலம் எதாவது வைத்திருக்கிறீர்களா ? நான் தடவி விடுகிறேன்… ‘ ‘ என்றாள் சுடர்.

திருமதி கோஷுக்குப் பணிவிடை செய்ய சுடருக்கு மிகவும் பிடிக்கும். திருமதி கோஷ் கலகலப்பாக நிறையப் பேசுகிறவர் என்று சொல்ல முடியாது. அமைதியானவர். அவர் அருகில் அவர் மனதின் வெளுமையை தரிசிக்க, உணர முடியும். அலைகள் அற்ற கடல் அது. பிரமைகள் அற்றவர் அவர்.

வருமானமோ லாபமோ சார்ந்து அவர் இந்த உணவகத்தைத் துவக்கி யிருக்கவில்லை. வெளி உணவகங்களை விட விலை குறைவு. தரம் மற்றும் சுத்த சுகாதார கவனமும் பராமரிப்பும் மேன்மையானவை. முற்றிலும் பெண்கள். நீலச் சீருடைப் பெண்கள். பல்வேறு விதமான பெண்கள்… சிலர் செவிப்புலன் குறைவு கொண்டவர்கள், பிறவி ஊமைகள் என்றெல்லாங் கூட அங்கே வேலை பார்த்தார்கள். தவிரவும் புதிதாய் ஆதரவு என்று கேட்டு வந்து வாசலில் நிற்கிற யாரையும் திருமதி கோஷ் திருப்பி யனுப்புவதில்லை என்பது அழகான விஷயம்.

பொதுமக்கள் சார்ந்து அந்த உணவகத்துக்கு ஊரிலேயே நல்ல பெயரும், அடையாளமும் இருக்கிறது. திருமதி கோஷின் சலியாத உழைப்பு அதற்குரிய பெருமை கண்டது.

வருகிற விருந்தாளிகளும் அங்கிருக்கிற ஒரு சிலரை தம் வீட்டளவில் வைத்துக் கொள்ளப் பிரியப்பட்டுக் கேட்டால், அதை தமது ஊழியரும் விரும்பினால் மகிழ்ச்சியோடு அனுப்பி வைக்கிறார் திருமதி கோஷ். ‘ ‘உன் விருப்பம்… உன் சம்மதம் முக்கியம் அம்மா. எது உனக்கு மகிழ்ச்சி தருகிறதோ அந்த முடிவினை நீ மேற்கொள்ளலாம்… ‘ ‘ என்கிறார் புன்னகையுடன்.

சுடர் தனக்கும் இப்படியோர் எதிர்காலம்… இனியும் வேறோர் இடத்தில் அமையும் என எதிர்பார்க்கவில்லை. சாப்பிட வந்த பெண்மணி நேரே திருமதி கோஷை அணுகி தன் உதவிக்கு என இங்கிருந்து பெண் யாரும் அமைவார்களா என்று கேட்டிருக்கிறார். ராசாத்தியையும் சுடரையும் சட்டென்று நினைவுக்கு வந்தது திருமதி கோஷுக்கு.

ராசாத்தி அப்போது வேலையில் இல்லை. வளர்கிற போதே வீட்டின் செல்லப் பெண்ணாய் வளர்ந்தவள் அவள். காலைகளில் சோம்பலாகப் படுக்கையை அளைந்தபடி கிடக்கப் பிரியம் கொண்டவள். மதியப் பணியை அவள் விரும்புவதில் ஆச்சரியம் இல்லை.

விசாலம் மாமி பார்த்தபோது சுடர் மாத்திரம் பணியில் இருந்தாள். சாப்பிட்டுக் கொண்டே விசாலம் மாமி அவளையே கவனித்தாள். அது சுடருக்குத் தெரியாது. சுடரின் சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் மாமிக்குப் பிடித்து விட்டன.

திடாரென்று மாமி தன்னுடன் வரும்படி அழைப்பாள் என்று சுடர் எதிர்பார்க்கவில்லை. ஆனந்தத் திகைப்பாய் இருந்தது. போவதா வேண்டாமா எனச் சிறு யோசனை. ஆனால் மாமி பாண்டிச்சேரி என்றதும் சட்டென்று தலையாட்டி விட்டாள்.

திரும்பி ஸ்ரீ அன்னையின் படத்தைப் பார்த்தாள். அந்தப் புன்னகை… அதன் பின்னணியில் இன்னும் எத்தனை ரகசியங்களோ தெரியவில்லை என்றது மனம். சட்டென ஒரு குதுாகல உணர்வு ஏற்பட்டது அவளுக்கு.

அன்னையே உன்னை தரிசிக்க வருகிறேன். உன்னருகே வருகிறேன். நான் உன் குழந்தை. எனக்கு நல்வழி காட்டு. உன்னை நம்பி வருகிறேன். பாண்டிச்சேரி வருகிறேன்…. வெறும் ஒற்றைப் படம். சுவரில் மாட்டப் பட்டிருக்கும் அன்னையின் படம். அதற்கு இத்தனை சக்தியா ? இத்தனை ஈர்ப்பா ?… எனத் திகைப்பாய் இருந்தது சுடருக்கு.

‘ ‘எங்களை மறந்துறாதே… ‘ ‘ சக தோழிகள் கலகலத்து அவளை அனுப்பி வைக்கிறார்கள்.

மாற்றுடை என்று பெரிதாய் இல்லை. சீருடை களைந்து சுடர் சுரிதார் அணிந்து கொண்டாள். இந்த சுரிதார்ப் பழக்கம்… இந்த வளாகத்தில் கற்றுக் கொண்டதுதான். கிராமத்து வளர்ப்பு அவள். எப்போதும் புடவை ரவிக்கை என்கிற அளவில்தான் உடைகள் அணிவாள். இந்த வயதிலும் திருமதி கோஷ் சுரிதார் அணிவதைப் பார்த்ததும், அதன் வசதியும் புரிந்ததும் அவளும் அணியத் துவங்கி யிருந்தாள்.

சுரிதார் அவளுக்கு அழகாய்த்தான் இருக்கிறது.

தோழிகள் விடை கொடுத்தபோது உற்சாகம் கண்ட மனம்… ஆனால் திருமதி கோஷிடம் போனபோது சட்டென இருண்டு விட்டது. அழுகை வந்தது.

அப்படியே உடல் விதிர்விதிர்க்க திருமதி கோஷை நமஸ்கரித்தாள். ‘ ‘ஐயோ என் குழந்தையே… எழுந்திரு ‘ ‘ என குனிந்தெழுப்பித் தட்டிக் கொடுக்கிறார் அவர். ‘ ‘நீ தைரியமான புத்திசாலிப் பெண். பிழைத்துக் கொள்வாய் ‘ ‘ என்று அனுப்பி வைத்தார்.

—-

—-

விசாலம் மாமியுடன் வெளியே வந்த கணம் காற்றே புதுசாய்ப் பட்டது. சிறு குழந்தையின் குதுாகலமும் துள்ளலும்… சும்மாவா பின்ன ? சாதாரணக் குழந்தையா அது ? வாத்தியாரிடம் நல்லபேர் வாங்கிய குழந்தை. அவள் ஸ்லேட்டில் வாத்தியார் பெரிசாய் நுாத்துக்கு நுாறு போட்டுத் தந்திருக்கிறாரே!…

மகிழ்ச்சியாய் உணரச் சிறந்த வழி… மனம் விட்டுச் சிரிப்பது. தன்னைக் குழந்தையாய் உணர்வது. நம்மைக் குழந்தையாய் உணர்ந்து சுற்றிப் பார்த்தால் உலகத்தில் வேடிக்கைக்குக் குறைவேயில்லை.

– அப்படியாடி குஞ்ஜு… நீ யாருடைய குழந்தை ?

சட்டென்று மனசில் பதில் வந்ததே- அதுதான் ஆச்சரியம்… நீ ஸ்ரீ அன்னையின் குழந்தை.

மனம் உள்ளுக்குள் காசு குலுங்கினாப்போல கலகலப்பாய் இருக்கிறது. இப்படி உள் உற்சாகம் பொங்கி நாட்கள், மாதங்கள், வருடங்கள் ஆகின்றன. எவ்வளவு காலம் ஆனால் என்ன ? அடகு வைத்த பொருள் போல அந்த உற்சாகம் மீளவும் அவளுக்கு இதோ கிடைத்து விட்டதே…

அவள் குழந்தை என்ற உணர்வை மேலும் வளர்த்துக் கொள்ள விரும்பினாள். சட்டென்று விசாலம் மாமியின் கைகளைப் பிடித்துக்கொண்டு கூட நடந்தாள். அம்மா… என்னைத் துாக்கிக்கோ என வேடிக்கையாய் அழ வேண்டுமாய் இருந்தது. நினைவே உள் சிலிர்ப்பாய்ச் சிரிப்பு சிரிப்பாய் வந்தது.

நொந்த மனசுக்கு ஆறுதலாய்ப் புதிய உறவுகள் வேண்டித்தான் இருக்கிறது. என்னதான் தன்னம்பிக்கை வாதம் பேசினாலும், சக மனிதனை நம்புகிறதும், அவர்களிடம் இருந்து கிடைக்கும் நிழல் பாவனையும் தேவையாய்த்தானே இருக்கிறது ?…

இதில் வேடிக்கை என்னவென்றால் நிழல் தருகிறவராக நாம் கொண்டாடுகிற நபரும், அதை அங்கீகரிக்கிற விதத்தில், அவருக்கும் நாமே நிழலாக அல்லவா ஒரு மாய-அளவில் அமைந்து விடுகிறோம்… சூப்பர்!

மாமியின் விரல்கள் குளுமையாய் இருந்தன. பெரிதும் சுருக்கமோ சொரசொரப்போ அற்ற முதிய விரல்கள் அவை. உழைத்துக் காய்த்துப்போன விரல்கள் சுடருடையவை. மாமி அந்த உள்ளங்கையைத் தடவித் தந்தபடியே புன்னகை செய்கிறாள். அவளை அப்படியே மாமி துாக்கி இடுப்பில் சுமக்க மாட்டாளா என்று திரும்பவும் தோணுகிறது.

அம்மா ஐஸ்-கிரீம் வாங்கித் தா என அழுது அடம்பிடித்துப் பார்க்கலாமா ?!

இருந்த உற்சாகத்துக்கு தன்னைப்போல நடை வேகப் பட்டிருந்தது போலும். விசாலம் மாமி ‘ ‘கொஞ்சம் நின்னு போடி… கூட மனுஷாள் வரத் தாவலையா ? ‘ ‘ என்று சிரிக்கிறாள். அந்தச் சிரிப்பு ரொம்பக் குளுமையாய் இருக்கிறது அவளுக்கு. சிரிப்பு என்பது வெளித் தெரியும் பல்வரிசை. வெளிச்சம்… ஆனால் ஏங்கிய அடுத்த மனசுக்கு அது நிழல் அல்லவா ?!

கரிய நிழல் அல்ல- வெள்ளை நிழல்!

‘ ‘நான் வேகமாப் போகல்ல அம்மா. நீங்க மெதுவா வர்றீங்க… ‘ ‘ என்று சொல்லி கலகலவென்று சிரிக்கிறாள் சுடர். உள்ளே சோழி குலுங்குகிறது. நிரம்பிய பல்லாங்குழி. காசி!

மாமியின் மார்பில் படுத்துத் துாங்க எத்தனை ஆசையாய் இருந்தது அக்கணம்…

என் வாழ்க்கை முடிந்து விட்டது என்றல்லவா நினைத்திருந்தேன் ? எங்கிருந்து எப்போ வந்தன புதுத் தளிர்கள் ?

சுடரின் தாய் பெரிய உடம்புக்காரி. நடக்கிறபோதே உடம்பு இந்தப் பக்கம் ஒரு சரி… அந்தப் பக்கம் ஒரு சரி… எனச் சரியும். அவள் கூட நடக்குமுன்னால் வாழ்க்கை வெறுத்து விடும். மிக அபூர்வமாகவே சுடரும் தந்தையும் தாயாரும் கல்யாணம் கார்த்திகை என்று கிளம்புவார்கள்.

பஸ் நிலையம் வரை நடக்கிறதற்குள் புஸ்புஸ் என்று மூச்சு பெரிதாகி விடும் அம்மாவுக்கு. புஸ் இல்லம்மா பஸ்- என்று கிண்டல் பண்ணுவாள் சுடர். அம்மாவின் அவஸ்தை புரியாமல். அம்மாவுக்கு அதில் கோபம் வராது. அவள் சற்று நின்று கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு திரும்ப சரிந்து சரிந்து நடப்பாள். சரிந்து நடப்பதால்தான் உடம்புக்கு சரீரம் என்று பெயர் வந்ததோ ?

பஸ் வந்தபின்னும் அதற்குள் ஏறவும் சீட்டுக்குள் தன்னைத் திணித்துக் கொள்ளவுமான அவஸ்தைகள் தனி ராமாயணம். ஒருபக்கம் மூன்றுபேர் அமர்கிற இருக்கைகள். மறுபக்கம் ரெண்டுபேர் அமர்கிற அளவில்… என்ற இருக்கையமைப்பில் உடம்பைத் திணித்துக் கொள்ளாமல் ரெட்டையாள் இருக்கையில் ஜன்னலோர இருக்கையை சுடருக்கு விட்டுத் தந்துவிட்டு மீதியிடத்தில் முக்கால் உடம்பை இருத்தி உட்கார நேரும்!

எப்படியோ சுடர்க் குட்டிக்கு ஜன்னலோர இருக்கைக்குப் போட்டி கிடையாது! வேடிக்கை பார்த்துக்கிட்டே போகலாம். இரவுப் பயணமானாலும் வேடிக்கை அலுக்காது. கூட ஒடிவரும் மரங்கள். மரங்கள் ஏன் இப்படி தலைதெறிக்க கூட ஓடி வருகின்றன ? அப்பா அம்மா விட்டுவிட்டு வேற்றுார் போனால், பிடிவாதக் குழந்தை பேயழுகை அழுதபடி கூட ஓடி வருமே… அது மாதிரியா ?

மரமே இங்கே உள்ளே யார் இருக்கிறார்கள் உன் சொந்தக்காரர்… காட்டித் தா நான் அவர்களைக் கட்டி வைத்து உதை கொடுக்கிறேன்!…

விசாலம் மாமியிடம் ஓர சீட் கிடைக்குமா தெரியவில்லை!

மனம் உள்ளூற இக்கணங்களுக்காய் ஏங்கிக் கிடந்திருக்கிறது… ஆ- இல்லை கில்லை என்று அறிவு கூக்குரல் இட்டுட்டா ஆச்சா ? சந்தோசமா வாழ அறிவு ஒண்ணும் அத்தனை முக்கியமில்லை. நம்பிக்கையும் உட்சிரிப்பும் நம்மிடம் இருந்து கிளைவிரிக்கும், பரவும் அன்பும்… இவை போதாதா என்ன ? அட இங்க பார்றி… குழந்தைக் கண்மணி தத்துவம்லாம் எடுத்து விடறாப்ல…

அப்போது அவளுக்கு ரெட்டைச்சடை போட்டு துள்ளித் திரிய ஆசையாய் இருந்தது. மாமி எனக்கு… என்னை உட்கார்த்தி வைத்துப் பின்னி விடறீங்களா ? தலைமுடி அவளுக்கு நல்ல நீளம் காணும். அம்மாவே ஆச்சரியப் படுவாள். நீளமான தலைமுடியே பெண்ணுக்குத் தனி அழகு அல்லவா ? தலைமுடியை கவனமாய்ப் பராமரித்தே ஏ அப்பா… யுகமாயிருக்கும் போல.

இடைப்பட்ட காலங்கள்… அலங்கரித்துக் கொள்ளவே பயந்த காலங்கள்…

தலைமுடி நீளமா உள்ள பெண்கள் வாழ்க்கையில் கஷ்டப் படுவார்கள் என கேள்விப் பட்டிருந்தாள். எவளோ பொறாமை பிடிச்ச பன்னாடை கட்டிவிட்ட கதை!

சரி- அதைப் பற்றி என்ன ?

பாண்டிச்சேரி பஸ் வரக் காத்திருந்த போது… ஐஸ் வண்டி பார்த்தாள். விசாலம் மாமியைப் பார்த்துப் புன்னகைத்தாள் சுடர். குச்சிஐஸ் சாப்பிடுவோமா என்று கேட்கக்கூட இல்லை- ‘ ‘உங்களுக்கு ஐஸ் ஒத்துக்குமா ? ‘ ‘ என்கிறாள். மாமி அந்த வேடிக்கையை உணர்ந்து கொண்டாள் என்று தெரிந்தது. ‘ ‘கல்யாண விசேஷம்னு போனால் ஒண்ணுக்கு ரெண்டா வளைச்சி மாட்டிர்றதுதான். உடம்பு சரியில்லாமப் போனால்… அது நாளையக் கதை… இன்னிக்குக் கதையப் பாப்பம்! ‘ ‘ என்றாள் மாமி.

அடிக்கிற வெயிலுக்கு ஐஸ் கரையுமுன் அவசர அவசரமாய்ச் சாப்பிட வேண்டியிருந்தது. வாயிலும் கையிலும் வழிகிறது ஐஸ். இப்படியே கண்ணாடியில் பார்த்தால் வாயோரங்கள் விநோதமான வண்ணங் காட்டி ஒரு ஆஞ்சனேய அம்சம் வந்திருக்கும் முகத்தில்!

பாண்டிச்சேரி பஸ் வந்துவிட்டது. வாயைக்கூடத் துடைத்துக் கொள்ளாமல், மாமியைக் கூடப் பார்க்காமல் ‘ ‘நான் போய் சீட் பிடிக்கிறேம்மா ‘ ‘ என்று பஸ் பின்னால் ஓடுகிறாள் சுடர். குமரிப் பருவம் திரும்புதா ?…

அவள் அம்மா அம்மா என்று கூப்பிடுவது விசாலம் மாமிக்குப் பிடித்திருக்கிறது… ஆண்டவா இந்தக் குழந்தையை சந்தோஷமா வை- என மனம் உருகுகிறது மாமிக்கு, குச்சி ஐஸ் போல.

பாண்டிச்சேரி பஸ் சுடரை விட்டுவிட்டுப் போய்விடுமோ என்று பயந்தாப் போலிருந்தது அவள் ஓடிய வேகம்!

—-

—-

பாண்டிச்சேரியில் கால்வைத்த கணம் பரவசமாய் இருந்தது. அன்னையின் ஆட்சி நடக்கிற பூமி. ஏக்கப்பட்ட மனசுக்கு பூரணி உணவகத்தில் கண்ட அந்தப் படம் தன்னைப் பேரீர்ப்புடன் தழுவிக் கொண்டிருக்கலாம்… மனசுக்கு என்னவோ இதம், வெளிக் காற்றின் ஒத்தடம் வேண்டியிராதவர் யார் ?

திருமதி கோஷ்கூட ஒரு மாதிரி அன்னையம்சம் கொண்டவராய்த் தானே மனசுக்கு இருந்தது. இப்படியோர் அழகான உணவக நிழலேகூட அவர் மனசில் பட்டதை வேறெப்படி விளங்கிக் கொள்ள முடியும் ?

கனவும் உணவும் பரிமாறுதல் தாய்மையின் இயல்பு. உலகின் முதன்மையம்சம் தாயம்சம் அல்லவா ? இயற்கையின் சுழற்சியே குறிப்பாக தாயம்சம் நிரம்பியதாக அல்லவா நாம் பார்க்கிறோம்…

நீளமான ஒழுங்கான துாசியற்ற நன்கு-பரிாமரிக்கப் படும் வீதிகள். பிரஞ்சு ஆளுமை கண்ட ஊர் அல்லவா ? சாயலே வேறு மாதிரி அவளுக்குப் புதுசாய் இருக்கிறது. புது ஊர் காணுதல் எப்போதும் உற்சாகமான விஷயந்தான். கூறியது கூறல் அலுப்பைத் தரக் கூடியது… என்பதைப் போல, புது ஊர் புதுக் காட்சிகள் புதிய நம்பிக்கைகள் என வாழ்க்கையை… இன்று புதிதாய்ப் பிறந்தோம் என வடிவமைத்துக் கொள்வது நல்ல விஷயம்.

இரவில் கிளம்பினார்கள். விசாலம் மாமிக்கு பகல் வெயிலில் கிளம்பி பஸ்சில் வர யோசனையில்லை. இரவுப் பயணத்தின் அமைதி தனி அனுபவம். காற்று குளிர ஆரம்பித்த வேளையில் வண்டியேறி, வெளிச்சம் வெளிர்வாங்க பொழுது குளிர்வாங்க தளிர் இருள் முற்றி கனத்து மணியாகி அறுவடைக்குத் தயாரானது. வெளிச்சம் கதிர்-அரிவாளால் இருளின் அறுவடை நேரம் அவர்கள் பாண்டிச்சேரி வந்திறங்குகிறார்கள்.

இரவு துாக்கம் வரும் வரை ஜன்னல் வழியே காட்சிகளைப் பதிந்தும் மனம் வழியே மிதந்துமாகக் கழித்தாள் சுடர். மாமியின் அண்மை ஆறுதலாய் இருந்தது. புதிய திசைக்கு வாழ்க்கை வந்து கொண்டிருப்பதை நம்ப முடிந்தது. துாக்க மயக்கம் உள்ளே ஆளை இழுத்த கணம் கண்களை மேலிருந்து கீழ் ‘ஷட்டர் ‘ கதவுகளைப் போல யாரோ மூடியதாய்ப் பட்டது.

அப்படியே மாமியின் தோளில் சாய்ந்தபடி துாங்க ஆரம்பித்தாள். துாக்கம் கண்ணுக்கு மையிடுகிறது. உள்ளே கனவுகள் விடியல் காண்கின்றன. வெளியிருளில் உள்ளே கோலங்கள்… கோயில் யானை போல் விடியலின் கிரணம் துதிக்கை நீட்ட மானுடத்தின் தலைதொட்டு ஆசிர்வதித்த பொழுதில் அவர்கள் பாண்டிச்சேரி வந்து இறங்கினார்கள்.

சிறு மழைத் துாறல் வேறு இதமாய்ச் சேர்ந்து கொண்டது. கிரணஸ்பரிசம் பெரியோர் ஆசி எனில் இந்த சிறு மழை… அது குழந்தையின் பிஞ்சுவிரல் வருடல் அல்லவா ?

வேடிக்கைப்பட்ட மனம் கவிதைக் கதவுகளைத் திறந்து மனசை ஓடியாடித் திரிய விதானமளிக்கிறது. இடுக்கண் வருங்கால் நகுதல் என்பது மேம்பட்ட நிலை. அல்லாமலும் காலம் மருந்திட்டு இடுக்கண் வந்தபின் சற்று பொழுதிறக்கத்தில் மனம் மீண்டும் தன்னைப்போல நகைக்க ஆரம்பித்து விடவே செய்கிறது…

அடிப்பெண்ணே… சுடர்க்குட்டி… நீ இத்தனை அறிவாளி என்று இத்தனைநாள் தெரியவே தெரியாதே… என சுடர் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டாள்.

‘ ‘மழை… ‘ ‘ என்கிறாள் விசாலம் மாமி.

‘ ‘நனையலாம்தானே ? ‘ ‘ எனக் கண் மின்னக் கேட்கிற சுடர் அவளுக்குப் புதுசாய் இருந்தது. சலனமற்ற நீர்த்தேக்கமாய்க் கிடந்தது மாமியின் வளாகம். சிறு மீன்போல அவள் உள்ளே துழாவிக் குலவி வளைய வருகிறாள் சுடர். மாமிக்கு உள்க்குறுகுறுப்பு – இத்தனை வருடம் கழித்து… மாமிக்கே நம்ப முடியவில்லை.

இனி அவள் வந்தபின் வீடே கூட தனி முகவெடுப்பு கண்டுவிடும்… அறைகள் எதிரொலி ரகசியங்களைப் புதைத்துப் புன்னகைத்துக் கொண்டிருக்கும். வெற்றிலை ஒதுக்கிக் கொண்டு உப்பிய கன்னத்துடன் புன்னகைக்கிற பெரியவர்கள் போல…

அந்தரங்க அரங்கத்தின் மெளனத் தோரணங்கள் உணர்தல் பாற்பட்டவை. அவரவரே அதை உணர முடியும். அதை விளக்க முடியாது.

விழிகளில் இல்லை காட்சி – காணும் சாமானில் அல்லவா இருந்தன விழிகள்!

அவள் மாமி. பருவக் கடல்கள் கடந்தவள். இவள் பருவம் தாண்டிக் கொண்டிருப்பவள்… இருவரது மனமும் தன்போக்கில் புதிய உணர்வுகளை உள்நரம்புகளில் மீட்டிக் கொண்டிருந்தன. யாருமற்ற மெளனம் வாள் போன்றது. இது அன்பின் வாசனைமெளனம்… யாழ் போன்றது.

நினைவின் சலனத்தில் உட்புழுதி கிளம்பி ஊதுபத்திப் புகையாய்க் கவிகிறது…

ஒருவேடிக்கை போல, தெரு திரும்புகையில் அந்த மூணாவது வீடு நம் வீடு என மனசுக்குள் சோழியைத் துாக்கியடிக்கிறாள் சுடர். அதுவேதான். மாமி அவள் எதிர்பார்த்த அதே வீட்டைத் தன் சாவி கொண்டு திறக்கக் குனிந்தவள் சற்று நிறுத்தி, புன்னகையுடன் அவள் பார்க்கத் திரும்பி சாவியைத் தந்து ‘ ‘அடியே சுடர், கதவைத் திற ‘ ‘ என்கிறாள்.

—-

மாமியும் அவளுமாய் அன்னையின் சந்நிதியை தரிசித்த கணங்கள் விவரிக்கவியலாத வசீகரக் கணங்கள். வாசலில் பூ கொண்டு வரவேற்கும் விற்பனைப் பெண்களே அழகாய் இருந்தது. அவள் அதுவரை காணாத பல்வேறு புதிய மலர்கள்… தன் ஊரில் பின்துாளி கட்டிக் கொண்டு பூபாரம் சுமந்து புதுநடை நடந்து வரப்பு தாண்டி களம் வந்து அரும்பு குவித்த அந்த வாசனைக் கணங்கள் ஞாபகம் வருகின்றன. தனித்தனியே உருண்டு கிடக்கிற அரும்புகளை… வெளியே டூர் கூட்டிப்போகிற பள்ளி வாத்தியார் போல, ரெண்டு ரெண்டாய்க் கையைப் பிடித்துக் கொண்டு வரிசையிட்டு முன்னேறுங்கள் என்கிற அவரது கட்டளை போல… அவள் நாரொன்றில் தொடுத்த நினைவுகள்…

லெச்சுமி. அவளுடன் கையைப் பிடித்தபடி ரெட்டையாய்ப் போகவே அவள் விரும்புவாள்…

லெச்சுமி நீ எங்கயிருக்கே ?

உள்வளாகத்தில்… அன்னை வளாகத்தில் நுழைகையிலேயே -ஷ் என இரகசியப்படுத்தும் சப்தமெழுப்பி அன்னையின் மெளனத்தைக் கலைத்து விட வேண்டாம்…. அன்னையின் மெளனத்தில் கலந்து கொள்ளுங்கள்… உங்களைக் கரைத்துக் கொள்ளுங்கள் என எச்சரிக்கும் நெறிப்படுத்தும் சாதகர்கள்…

ஓர் இரகசியம் பரிமாறப்படக் காத்திருக்கிறது…

மனசுக்கான அந்த முன் அறிவிப்பு கூட எத்தனை அழகாய் இருந்தது.

அவள் கைநிறைய அதுவரை கண்டிராத புத்தம் புது பூக்கள். அவற்றின் குளுமை. அன்னை நோக்கிப் போகிற அந்த உணர்வை விவரிக்க இயலவில்லை. பூரணி உணவகத்தில் புகைப்படத்திலேயே அவளை ஆளுமை செய்த அன்னை அல்லவா ?

அன்னை இங்கே மெளன சயனத்தில் இருக்கிறாள். அவள் மேலே உரிமை கொண்டாடிக் கிடக்கிற இந்த மலர்கள்தாம் அத்தனை அபூர்வமானவை. அருமையானவை. அன்னையின் தொடுகை கண்டவை. எத்தனை புனிதமானவை இவை… இதோ இந்தப் பூக்களால் நானும் அன்னையைத் தொடுகிறேன்.

அன்னைக்கு வணக்கம்.

அன்னையை இவ்வளவு நெருக்கத்தில் உணர்வேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. எத்தனை அதிர்ஷ்டக்காரி நான். அந்தரங்கத்தின் மெளனத் தோரணம். ரகசிய உள்ளொளிப் பகிர்வு. சிலிர்ப்பு. புன்னகைப் பரவல். கூட நடந்து வரும் அத்தனை பேருமே எத்தனை நம்பிக்கையை தமக்குள் உணர்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அவள் தன் நரம்புகளில் இதமானதோர் உணர்வை உணர்ந்தாள். கடல் ஆழத்தில் முத்துக் குளித்தவனின் கயிறாட்டம் அது.

வாழ்வின் மிக முக்கிய கணம். முற்றிலும் பாதுகாப்பாக உணர்ந்த கணம். தன்னை தானேயறியாமல் அன்னையிடம் முற்றிலும் ஒப்படைத்த கணம். மனசில் என்னென்னவோ ஜகஜ்ஜாலங்கள். அடாடா இதையெல்லாம் முற்றிலும் என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தால் எத்தனை அழகாய் இருக்கும். அன்னை என்கிற மகா சக்தியின் ஆளுமைக் குளுமை. நானிருக்கிறேன் பெண்ணே… என்கிற பேரணைப்பு. மனசில் அம்மா… அம்மா… என்கிற வார்த்தைகள் எதிரொலி போல முட்டி மோத, கண்கள் பனிக்கின்றன. இந்த மெளனம்… எப்போதுமே எனக்குள் குடியமர்த்திக் கொள்ள முடியுமா இதை… என ஏக்கமாய் இருந்தது.

இத்தனை வருடங்கள் காத்திருந்தது இந்தவோர் கணத்துக்கு என ஒரு பிரமிப்பான பிரமை. பூக்கள் கொட்டிக் கிடக்கிற வளாகம் அது. உலகத்தின் அநேகப் பகுதிப் பூக்களேகூட… என அவை அமையலாம் என்று தோணியது. உலகத்தைப் பூவாய்க்கட்டி அழகு பார்த்த அன்னையின் கவிதானுபவத்தை என்னென்பது…

கவிதைக்காரி என்பதா அன்னையை… தீர்க்கதரிசி என்பதா… சித்தாந்தவாதி அவள் என்பதா ?

அன்னை வாழி. யாதுமான பேருரு அவள் அல்லவா ?

உன் அறிவுத் திறனுக்குட்பட்டு அவள் தன் எல்லைகளை விரித்துப் பரத்துகிறாள். நீ உன்னில் உனக்குள் ஆழப்படப் பட அன்னை உனக்குள் மேலும் மேலும் தன்னை உருப் பெருகி தன்னை அடையாளங் காட்டிக் கொள்கிறாள்…

அவளுக்கே ஆச்சரியம்… தனக்குள் இப்படியெல்லாம் தோன்றுவது. அன்னையின் பீடத்தை கைகூப்பிச் சுற்றி வருகிறார்கள். இதோ அருகே மிக அருகே அன்னை… என் அன்னை…. ஆகா எப்பெரும் பொழுது இது… சிலிர்க்கிறது உடல் தன்னைப்போல. கைகள் தாமாகக் கூப்புகின்றன.

அன்னையின் பீடத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்கிறாள். இருட்பாறை விலகி குகை வெளிச்சப் பட்டாற்போல அவளுக்குள் ஒளி சிந்திக் கிடக்கிறது வெளி.

பிறருக்காய் வழிவிட்டு அந்தப் பிராகார வரிசையில் இருந்து விலகி சற்று தள்ளி அமர்கிறாள். மனம் அமைதியாய் நிச்சலனமாய்க் கிடக்கிறது. கண்மூடி இத்தனை அமைதியாய் அவள் உட்கார்ந்ததே இல்லை. வெளியுலகம் மாறி விடவும் இல்லை. சற்று துாரத்தில் மரத்தில் இருந்து பறவையின் குரல் எடுப்பு… ஒரு இலைச்சருகு உதிரும் சப்தம் என உலகம்… அதன் இயக்கம்… அவை அவளை பாதிக்கவில்லை என்பதுதான் விஷயம். சப்தங்களை சப்த ஒழுங்கென மனசில் பதிவு செய்கிறதே தனியனுபவம். அதுவே வாழ்வனுபவத்தின் முதல்பாடம் அல்லவா ?

நானா இத்தனை அழகோ அழகாய்ச் சிந்திக்கிறேன். அன்னையின் மெளனத்தின் ஆளுமை இத்தனை வல்லமை தருகிறதா உள்ளே. அப்படியே கைகூப்பி மெளனமாய்த் தன்னுள் தன்னை தன்நிரவலை உணர முடியுமா பார்க்கிறாள்…

அன்னை என்னை நான் உள்ளே பார்க்க எனக்குக் கற்றுத் தருகிறாளே… ஆகா.

நேரம் நழுவிக் கொண்டிருந்தது. மாமி அவள் தலையைத் தொட்ட கணம் நீண்ட தன்னனுபவத்தில் இருந்து மீள்கிறாள் சுடர். கிளம்பலாம்… எனத் தலையாட்டுகிறாள்.

அப்போதே அந்த வெளிவளாகத்தில் பூக்களை ஜனங்களுக்கு விற்கிற… விநியோகம் செய்கிற முடிவெடுத்தாள் சுடர்.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 18

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

எஸ் ஷங்கரநாராயணன்


/11/

தனுஷ்கோடிக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் வளாகம்… வெறும் பக்தி சார்ந்த இயக்கம் அல்ல. அது அறிவாளர் சரணாலயம். அரவிந்தரின் பாதை – அவரது கனவுகள் எல்லாமே பொதுநலனும் நாட்டு நலனுமாய்ப் பரவலான உட்கவனம் செலுத்தியவை என்கிறதே சிறப்பாய் இருக்கிறது.

சுதந்திரப் போராட்ட கள வீரர் அரவிந்தர். கிளைபிரிந்து உள்த் தியானத்தில் தரிசன சித்தி கண்டவர். சிறையறைகளின் தனிமை அவரது வாழ்வின் பெரும் திருப்புமுனை அல்லவா ? வான வளாகத்தில் அல்ல- அந்த மானுடப்பறவை… ‘சிறைப்பட்டு ‘ சிறகு விரிக்கக் கற்றுக் கொண்டதே!…

வெளியே இருந்தவரை தெரியாத வானம்… ஜன்னல் வழியே தரிசனப் பட்டதே…

மனிதன்.. மனிதன் தாண்டிய பொதுமனிதன்… அவனது அடுத்தகட்ட உள் வளர்ச்சி, உலகத்தின் மாறுபாடுகள். அதன் எல்லை மாறுபாடுகள், விஞ்ஞானரீதியான மானுடப் போக்கு பற்றிய சிந்தனைகளைக் கணக்கில் கொண்டு அதன் அடுத்த பரிமாணக் காலடியை கணித்தல்… பிற இசங்களை, தத்துவங்களை சகபயணி என கவனத்தில் கொள்ளுதல்… எதையும் மானுடத்தின் காலுக்குப் பொருந்தாக் காலணி என்று அவற்றை அலட்சியமாய் ஒதுக்கித் தள்ளாமை… தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசி அல்லவா அவர் ?… ராஜாதிராஜா என்கிறதைப் போல!

பொருள்மாற்று காலத்தில் இருந்து, கரன்சி கண் விழித்த மறு போதில் இருந்து உலகத்தின் மதிப்புகள்… மானுடத்தின் சராசரி மதிப்புகள் வீழ்ந்துபட ஆரம்பித்தன. இதில் மானுடம் தன்னை உள்நுழைத்துக் கொண்டு பிறகு மீண்டும் ஆன்மிகத்துக்கு மீண்டுவிடும். உலகத்தின் ஆன்மிக வல்லரசு என இந்தியா விரைவில் மீண்டும் தலைநிமிரும் என்பது அரவிந்தரின் கனவு.

அன்றியும்… ஒரு சமூகக் குற்றவாளியின் மனப்போக்கும், வழிகாட்டியின் மனப்போக்கும்… அறிவைச் செயலுாக்கப் படுத்துதல் என்கிற அளவில் ஆழ்ந்த வேலைவாங்குதல், சுயகவனத்தை மேம்படுத்துகிறவைதாம்… என ஒற்றுமை கண்ட அரவிந்தரின் சிந்தனை மாண்பு திகைக்க பிரமிக்க வைக்கிறது.

சமூகக் குற்றவாளியையும், அவன் சமூகத்தைச் சூறையாடினாலும் கூட சுக்கான்திருப்பி நடைமுறைப் பயனுக்கு மிக மிக ஆரோக்கியமான அளவில் சுலபமாக மடைதிருப்பி விட முடியும் என்கிறார் அரவிந்தர்.

ஆகா… என்றிருந்தது அரவிந்தரின் கருத்தாளுமை. எத்தனை குளுமையான நிழல் வியூகம் அது. உலகம் பிழைத்து விடும். அழிவு என்பது வெறும் சிற்றறிவின் வெருட்டலே… என்கிற அறைகூவல் அல்லவா அது ?

வெறும் மத வளாகமோ மட வளாகமோ அல்லவே அல்ல அரவிந்தர் சந்நிதி. அறிவுப்புரட்சி அது. அறிவின் திரட்சி.

தனக்குள் தானே ஊற்றாய்க் கிளம்பும் ஒளிக்கசிவை அகலப்படுத்தி மனக் கிணறைத் துாரெடுத்து உட்பிரகாசத்தை விரியச் செய்கிற பயிற்சிக் களம் அது. அறிவை அகலப் பரத்தி நடுகிற விளைநிலம் அல்லவா அது…

பெரியவர் நாறும்பூநாதன்… அவரது சிறு நுாலுக்கே இத்தனை வீர்யமா ? அரவிந்தரின் மகிமை அது அல்லவா ?

எதைப் பற்றி அரவிந்தர் பேசவில்லை ? பொருள்முதல் வாதம் பேசவில்லையா ? விஞ்ஞான ஆய்வுப் போக்குகள் பற்றிப் பேசவில்லையா ? வேதங்கள் பற்றிப் பேசவில்லையா ? உலகப்போர் பற்றி சிந்திக்கவில்லையா ? இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி கவனங் கொள்ளவில்லையா ? ஆ… அரசியலையும் மதத்தையும் ஒன்றிணைத்து ஒரு மையச் சிந்தனை என்பதே மிகப் பெரும் புரட்சி அல்லவா ? பொருள்முதல் வாதத்தை கணக்கில் கொண்ட ஆன்மிகத் தேடல்…

மதங்கள் கடுமையான உட்பயிற்சியுடன் நீ மேலேறி இறைவனைக் கண்டடை என்று சொல்ல… அரவிந்தர் இறைமை உன்னை நோக்கி இறங்கி வருகிற அளவில் உன்னை உயர்த்திக் கொள் என்று கற்றுத் தருதல் எவ்வளவு ஆரோக்கியமாய் இருக்கிறது. தன்னை உயர்த்திக் கொண்டபின் மானுடத்தின் எல்லைகள் கணக்குகள் எத்தனை படர்ந்து விரிந்து போகின்றன…

ஒருபுறம் வெகு சுலபம் போல் தோன்றும்… என்றாலும் மிகக் கடுமையான முயற்சிகள் அவை. ஆனால் அது தரும் ஆன்மிக பலம் – உற்சாகம் அன்றாட வாழ்வின் மீதான வெறுப்பின்மை… எத்தகைய மாற்றங்களை அற்புதங்களை அது சராசரி வாழ்வில் நிகழ்த்தி விடுகிறது. எட்டிய அளவு உயரம் என்பதே, அதை உணர்வதே எத்தனை பெரும் பேறு…

ஸ்ரீ அரவிந்தருக்கு வணக்கம்.

தன்மீது நம்பிக்கை கண்டவன் பிறன்மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டுவதில்லை- ஆகா!

தன்னை நம்பி வாழ்கிறவன், தன்னில் ஆனந்தம் கண்டவனை… பிற சூழல் நிர்ப்பந்தங்கள் அயர வைத்துவிட முடியாது. அவை அவனைத் தீண்டவும் முடியாது. வாழ்வின் பெரும் பேறான நிலை அல்லவா இது!

உயிரியல் ரீதியான மானுடத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி… பொருளாதார ரீதியான போக்குகள் சார்ந்த வளர்ச்சி… தனிமனிதன் வாழ்க்கை நெருக்கடிகளில் நிர்ப்பந்தகளில் சிக்கி விடுபட தானே கண்ட ‘இதிலிருந்து மீளும் வகையிலான ‘ உந்துதல்கள், மத வழிப்பட்ட மீள்தல் ஒத்துழைப்புகள், இயற்கை வழிநடத்திச் செல்கிற வளர்ச்சிப் பாதை – எதைக் கணக்கில் கொள்ளவில்லை அவர் ? எல்லாம் உள்ளடக்கி ஒரு சிந்தாந்தத்தை முன்வைக்க அவருக்கு சாத்தியப் பட்டிருக்கிறது என்பது பிரமிப்பாய் பேரொளி கண்ட பரவசமாய் இருந்தது அவனுக்கு. இத்தனை சிறப்பான ஆக்கிரமிப்பு வியூகத்தில் அவன் யாராலும் அணுகப் பட்டதே யில்லை அதுவரை…

அன்னைக்கு வணக்கம். அரவிந்தருக்கு வணக்கம்.

‘ ‘வா அப்பா… என்னுடனேயே தங்கிக் கொள்ளலாம் நீ. நான் பாண்டிச்சேரிக்காரன்தான்… ‘ ‘ என்று நாறும்பூநாதன் சிரித்தார் அன்புடன்.

—-

புத்தகம் வெளியாகி விட்டது. நாறும்பூநாதன் வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்பிப் போய்விட்டார். என்றாலும் ஒரு பன்னீர்ப்பூமரம் போல அவர் அவனில் குளமையான நிழலை வாசனையை… பூக்களை விசிறியடித்து விட்டுப் போனதாகவே அவன் உணர்ந்தான்.

பொதுவாக தனுஷ்கோடிக்கு கதைநுால்களைப் படிக்கவே பிடிக்கிறது. கருத்தாக்கக் கட்டுரைகள், குறிப்பாக கட்டுரை நுால்களில் அவனுக்கு சுவாரஸ்யமில்லை. கவிதை வாசிப்பான் என்றாலும் பிரத்யேகத் தேடல் என்றில்லை. என்ன புத்தகம் அடிக்கிறான்கள்… வங்கிப் பாஸ்புத்தகம் போல. முன்சிபல் வரிப்புத்தகம் போல. அட நாய்களா அதிலாவது முழுசா எழுதறாங்களா… பாதி கவிதை. பாதி படம் விளங்கியும் விளங்காமலும். மனுசன்னா எப்டி வேணாலும் வரையலாம்… ஆனா மனுச சாயல்ல மாத்திரம் இருந்திறப்டாது. அதுக்குப் பேர் நவீன ஓவியம்.

வங்கிகளில் கடன் வாங்குவதைப் பற்றிச் சொல்வார்கள். வங்கியில் கடன் தர ஆயிரம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கிறான்கள். ஷ்யூரிடி – என்று அசையும் சொத்து அசையாச் சொத்து பெருநோட்டுச் சம்பளக்காரர் உத்திரவாதம் என்று கேட்கிறார்கள். அதாவது உன் துட்டு தேவையில்லை, எனக்கே வசதி உண்டுன்னு நீ நிரூபிச்சா வங்கி துட்டு தரும்… என்பார்கள். அதைப்போல இந்த நவீன ஓவியம்.

கவிதை நவீன கவிதைன்னா படிச்சாப் புரிஞ்சிறாதா மாப்ளைகளா ? இது நவீனகவிதை பாத்துக்கிடுங்கன்னு சொல்ல… கூட நவீன ஓவியம். கிறுக்கலாய் அதன் தலைப்பை வேறு எழுதணும்… எத்தனை இம்சைப் படறாங்கள் பாவம். பள்ளிக் கூடத்தில் அவன் கையெழுத்து இப்பிடி இருந்தால் வாத்தியாரிடம் முட்டியில் அடி வாங்கியிருப்பான்… இப்பல்லாம் தமிழ் வாத்தியார்களே நவீன கவிதை எழுத வந்தாச்சி. தலைப்பை இப்டி தலையைப் பிச்சிக்கறா மாதிரி அவங்களே புரியாம எழுத ஆரம்பிச்சாச்சி- பிரபுதேவா டான்ஸ் ஆடறாப் போல. அவன் டான்சைப் பார்த்தால் நமக்கே உடம்பெல்லாம் வலிக்கிறது.

கட்டுரைகளில் தனி முத்திரை… ஒரிஜினல் ஐட்டம் வந்த காலம் போயே போச்சு. எல்லாம் இங்கயிருந்து கொஞ்சம் அங்கயிருந்து கொஞ்சம் கைமாத்து கேஸ்னு ஆயிட்டது. நாலு புத்தகத்தைச் சுத்தி வெச்சிக்கிட்டு ஐந்தாவது புத்தகம் எழுதறதுன்னு ஆகிவிட்டது- வாஸ்து சாஸ்திரம், நீரிழிவு, எய்ட்ஸ், சமையல்க் குறிப்பு, தன்னம்பிக்கை ஊட்டும் நுால்கள்… இதையெல்லாம் வாங்கி வாசிக்கறாங்களா, நுாலகத்தில் வெச்சி அடுக்கறாங்களான்னிருக்கும்… ஆனால் பத்திரிகை எல்லாமே இப்ப தன்னம்பிக்கைத் தொடர்ல இறங்கியாச்சி. அது வாசிக்கப் படுகிறது என்று அவர்களின் நம்பிக்கை…

யாராவது ஒரு சாமியார் சாயலில் படம் போட்டு இவர்களே எழுதிக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது – ghost writing. கொஞ்ச காலம் முன்னால் பிரபலங்களின் தொடர்கதைகள் எடுபடவில்லை என்று நடிகைகள், சினிமா ஆசாமிகள் எல்லாரும் ஒரு ரவுண்டு தொடர்கதை எழுதினார்கள். அதாவது அவர்கள் முகத்தைப் போட்டு பத்திரிகைக்குள்ளிருந்தே யாராவது எழுதுவதாய் ஏற்பாடு. ஒரு பிரபல நடிகன்… நாள்ப்பூரா படப்பிடிப்பு என்று இருந்த சமயம் மர்மத் தொடர்கதை எழுதினான் இப்படி. படப்பிடிப்பில் டைரக்டர் கேட்டாராம் அவனிடம்… அடுத்த வாரம் கதை எப்படிப் போகும் சார், உங்க மர்மத் தொடர்கதையில் ? – அவன் சொன்னான்… அதை நானும் வாசிக்க விரும்பறேன் சார். எனக்கே மர்மம் தாள முடியல்ல!

கவிதைகள் தக்கணத்துப் பொறிகள். அவை அறிவின் தீட்சணியம் சுமந்தவை, உட்கவனப் பொதிவு கண்டவை என்று அவனால் கொள்ள முடியவில்லை. அனுபவத்தின் சூடு கண்ட கணம் கையை இழுத்துக் கொள்வதைப் போல… ஆனால் கையைப் பேனாவில் வைக்கச் சொல்வது கவிதையாய் இருக்கிறது. ஆறிய கணங்கள் அத்தனை சுவாரஸ்யமானவை அல்ல- கவிதையில்.

ஆறாதது கவிதை. ஆறி அசைபோட்டு வெளியிட்டால் வார்த்தையில் வசன எடுப்பு வரும். அதைக் கதாபாத்திரங்களின் ஊடே பரிமாறிக் கொண்டால், நிதானமான பல்வேறு விளைவுகளையும் பரிமாண பரிணாம வளர்நிலை அடுக்குகளையும் அதில் சேர்த்தே பரிமாற முடியும். சூடான ரசத்தை அப்படியே குடிக்கிற சுகம் கவிதை எனில், கதை ரசஞ்சோறு, அல்லவா ?

கவிதையில் கவிஞன் பரிமாறுகிறான். வாசகன் பெற்றுக் கொள்கிறான். வழிப்போக்கன் வாசகன். தாகமாய் உணர்கையில் தெருக்கிணற்றில் நீர் சேந்துகிறவளிடம் கிணற்றுவாளித் தண்ணீரை அவள் கவிழ்த்து ஊற்றக் குடிக்கிறதைப் போல. கதை இருந்து பரிமாறும் விருந்து. வாசகனுக்கு ருசிதெரிந்து நிதானமாய்ச் சாப்பிட வாய்க்கிறதில்லையா ? தன் ருசியின் சுதந்திரம் அங்கே அதிகம் கிடைக்கிறதில்லையா ?

கவிதை ஒரு பாத்திரத்தின் உள்விஸ்தீரணத்தைப் பகிர்ந்து கொள்வதைக் காட்டிலும் கதை மேலதிகம் பகிர்ந்து கொள்கிறதே…

ஆனால் நாதன் சாரின் புத்தகம் சிறியது எனினும் உட்பனியை உருகச் செய்கிறதைப் போல உள்ளே வேலை செய்தது. வார்த்தைகள் உன்னைத் திறக்கும் மந்திரச் சாவிகள் என முதன்முறையாக உணர வைத்த அரவிந்தர்… ஆச்சரியமான மனிதர்தான். வாசிக்குந் தோறும் உட்கதவை திறக்கிற அனுபவம் அது. அது பூட்டிக் கிடக்கிறது… அங்கே கதவு இருக்கிறது என்றே அதுவரை தெரியாதிருந்ததே என அவனை ஆச்சரியப்பட வைத்தது. அல்லது கதவு தெரிந்தவர், சாவியின்றித் திகைத்திருந்தவர்… அவருக்குச் சாவியை எடுத்துத்தர வல்லதாய் இருந்தன அரவிந்தர் விவரணைகள். மதங்கள் சடங்குகள் எல்லாவற்றையும் பயிற்சிக் களமாக அவர் அறிமுகம் செய்கிற எளிமை, தைரியம் சாதாரண விஷயம் அல்ல. உரிய மரியாதை அவ்வளவே… எந்தத் தத்துவப் பின்னணியையும் சலாம் வைத்து அணுகச் சொல்கிற மாயவன்முறை அதில் இல்லை. அழுத்த நிர்ப்பந்தம் இல்லை…. அவர் பின்னணியில் வந்த அன்னையோ சடங்குகளை விசிறியடிக்கிறார் என்பது புது அனுபவமாய் இருக்கிறது. புரியாமல் கைக்கொள்கிற சடங்குகள் ஏன் ? தேவையில்லை அல்லவா ? – தன் கருத்தை முன்வைப்பதிலும் கூட அரவிந்தர் ஏற்றுக் கொள்வதில் உனக்குத் தாராளம் காட்டியது அவரது நம்பிக்கையின் சிறப்பு…

Man is Nature ‘s laboratory – என்கிறார் அரவிந்தர். அரவிந்தர் நடையின் கவிதைப் பொறிகள் பிரமிக்க வைக்கின்றன.

சட்டென்று அவன் உலகம் பரந்து விரிந்து பெரிதாகி விட்டதாய் இருந்தது. வியர்த்து வழிகிற இந்த நகரத்து வீடு, அலுப்பானதோர் பெரும் பயணம், வயிற்றைப் பிடித்துக் கொண்டு அதை நிரப்ப ஓடும் மகா அலைச்சல், அச்சக வேலையின் ஓய்வின்மை, தொடர்ச்சியான அசட்டுத்தனமான வேலைகள்… எல்லாமே சிறிய விஷயமாகி அதைவிடப் பெருந் தளத்துக்கு அவன் மனப் பயணத்துக்கு இடம் ஊக்கிக் கொடுத்தாற் போலிருந்தது. உருவாக்கிக் கொடுத்தாற் போலிருந்தது.

Lifc is too short to be spent worried – என்பார்கள். அது புரிந்தது இப்போது. மூளையின் இயங்கு தளத்தை அதன் வேகத்தை அதிகப் படுத்த… அகலப்படுத்தி ஆழப்படுத்த வல்லவை அரவிந்தரின் சிந்தனைகள் என்பதில் சந்தேகமென்ன ?

ஓய்வாய் இருக்கும்போது பாண்டிச்சேரி வாயேன் அப்பா… என்று அன்பாக பிரியமாக அழைத்தார் நாதன் சார்.

ஒரு முறை அரவிந்தரின்… அன்னையின் வளாகத்தில்… அந்தப் புனிதக் காற்றில் சஞ்சரிக்க மிக ஆர்வமாய் இருந்தது.

Yes, Bhagavan Sri Aravindhar… let me be your choice as a laboratory… எனப் புன்னகையுடன் நினைத்துக் கொண்டான்.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

எஸ் ஷங்கரநாராயணன்


/9/

தனுஷ்கோடி பெருமூச்சு விட்டான்-

நிலைமை தலைகீழாகி விட்டது. அவள் வாழ்க்கை அவளுக்குப் போதாததாய் இருக்கிறது. திருப்தியுறாததாய் இருக்கிறது. அவனால் என்ன முயன்றும் அவளைத் திருப்திமட்டத்தில் வைக்க முடியாது போயிற்று.

நிலைமை உருப்பெருகி உக்கிரமாகி வந்தது. ஆமைப்-பொழுதுகளின் முதுகில்… பாறைகள் ஏறிக்கொண்டன. சாகக்கிடக்கிற நோயாளியின் ஆக்சிஜன் குழாய்மேல் ஏறி நின்று நலம் விசாரிக்கிற உறவினர் போல ஆகியது நிலைமை.

பொறுக்க முடியாத ஒருபோதில்… வார்த்தை நெருப்புகளை அவள் அவன்மீது திராவகவீச்சு வீசிய கணத்தில்… அவன் ஆவேசத்துடன் கிளர்ந்தெழுந்தான்.

பொறுமை எப்படியோ அவன் பிடியையும் கடந்து வெளியேறியது. அவன் தன்னிலை இழந்து வார்த்தைகளை வீசியெறிந்த வேளை அது…

வார்த்தைகளுக்கும் உஷ்ணம் குளிர்ச்சி என்பதெல்லாம் உண்டுதானே ?

பொறுமையை வெளித்தள்ளிக் கொண்டு… பஸ்நிறுத்தத்தில் கூட்டநெரிசலைத் தள்ளியிறங்கும் பயணிபோல வெளிவந்து விழுந்தன வார்த்தைகள்…

அதுகூட அல்ல. அவன் எத்தகைய பிழை செய்து விட்டான்! மறக்கவே முடியாத பிழை… இதற்காக தன்னையே அவன் மன்னித்துக் கொள்ள முடியாத அளவு அதன் விளைவு ஆகிப் போனதே…

அட அவன்… அதுவும் அவன் அப்படியொரு வக்கிரமான, கைமீறிய முடிவை எடுத்திருக்கக் கூடாது.

ரயில் நிலையத்துக்கு… பயணப்பட அல்ல… வழியனுப்ப வந்தவன் அவன்… அவனே வண்டியில் ஏறிக் கொண்டிருக்கக் கூடாது.

வண்டி கிளம்பிவிட அவன் ஓடும் வண்டியில் இறங்குகிற ஆவேசத்துடன்… கீழே குதிக்கிற அவசரத்தில்… தானே விழ நேர்ந்து விட்டது.

அவன்… அவளை… கைநீட்டி அடித்து விட்டான். அவள் எதிர்பாராதது அது.

அவனே எதிர்பாராதது.

திகைப்புடன் அவள் அவனைப் பார்த்தாள். தன் கையையே நம்ப முடியாமல் அவன் பார்த்தான். அதைத் தவறு என்று அவள்முன் ஒத்துக் கொண்டான் அவன்… பெண்ணே, உன்னை நான் கைநீட்டி அடித்தது தவறு.

திரும்பத் திரும்ப ஒத்துக் கொண்டான்- தவறு. தவறு. தவறு.

கோபக்கட்டத்தை மீறி அவன் அவளிடம் மன்றாடினான்- மன்னித்து விடு.

திரும்பத் திரும்ப மன்றாடினான். ஸாரி. ஸாரி. ஸாரி.

அவனே எதிர்பாராதது அது. அவளே எதிர்பாராதது- அவள் அந்தக் கணத்தில் முடிவெடுத்தாளா அப்படி ?… தெரியாது.

தற்கொலை.

அவனுக்கு அலுவலகத்துக்கு நேரமாகி விட்டது… அவன் பிரச்னையை விவாதத்தை அப்படியே அங்கேயே கீழே போட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பினான். நேரமாகிக் கொண்டிருந்தது.

இன்று போ. நாளையும் வராதே கோபமே…

சண்டைகூட பட்டணத்தில் ஓய்வு நாட்களிலேயே அனுமதிக்கப் படுகிறது.

ஊரெல்லையில் இருந்து பட்டணத்தின் உள்முகத்துக்கு வரும் ரயில்களில் காலைக்கூட்டம் அலுவலக-வேலைக் கூட்டம் மிகுதி. எதிர்ச்சாரி ரயில்கள் காலியாய் அசைந்து நெளிந்து வரும். மாலையில் நிலைமை இதன் உல்ட்டாவாகி விடும்.

சே- அடித்திருக்கக் கூடாது.

அவன் உள்ளேயே நுழைய முடியாத அளவு பெருங்கூட்டமாய் வயிறெடுத்து வந்தது ரயில்வண்டி. பிரசவ வலி கண்ட தாய் ரயில்… அவளால் மெதுவாகத்தானே போக முடியும் ?… எல்லாரும் அவள் ‘ஓட்டமாய் ‘ ஓட விரும்புகிறார்கள்…

நீயும் சாதாரண ஆம்பிளை என நிரூபித்து விட்டாய். வன்முறை ஆண்களின் அயுதம். ‘பெண்களைக் கட்டுப்படுத்த… குப்புறக் கவிழ்த்த, கொட்டமடக்க ‘ ஆண்கள் அதைக் கையாள்கிறார்கள். சராசரி ஆண்கள்.

நேரமாகிறது. அவனால் உள்ளே நுழையவே முடியவில்லை. அத்தனை கூட்டமாய் வந்தது ரயில். ஜனங்கள் தொங்கியபடி வாசலை நிறைத்து வழிந்தார்கள்.

இரண்டு ரயில்களை விட்டாயிற்று. சட்டென அவன் முடிவெடுத்தான். எதிர்த்திசையில் போகிற காலிரயில் ஏறி… டெர்மினசில் இறங்கி காலியிடத்தைப் பிடித்துக் கொண்டு திரும்பி இதேவழியில் வர வேண்டியதுதான். வேறு வழியில்லை.

ரயிலில் அவன் உட்கார இடம் கிடைக்கவில்லை. தேடிப் பார்த்துவிட்டு அவன் பரவாயில்லை என நின்று கொண்டான். நிலையந்தோறும் நெரிசல் கூடியது. ரயில் அவனது நிலையந் தாண்டும்போது தடக்கென்று நின்றது. சக்கரம் எதன்மீதோ ஏறியிறங்கும் சத்தம்… அவர்களுக்கு… ரயில் பயண ஜனங்களுக்குப் பழகி அலுத்துப்போன சத்தம். யாரோ சின்ன வயசுப் பெண் தற்கொலை செய்து கொண்டதாகப் பேசிக் கொண்டார்கள்.

அது அவள்… அம்பிகா… அவன் மனைவிதான்… என்பது அவனுக்கே தெரியாது. யோசிக்கவே நேரமில்லை. அலுவலகத்துக்கு நேரமாகி விட்டது.

அவன் அன்றிரவு வீடு திரும்பியபோது இருட்டிக் கிடந்தது. வீடு திறந்து கிடந்தது. உள்ளே அவனுக்கு அதுவே சிறு குடைச்சலாய் இருந்தது. அவள் முகத்தை எப்படிப் பார்க்கப் போகிறேன் ? எப்படி அவளை எதிர்கொள்ளப் போகிறேன் ?…

அவள் வீட்டில் இல்லை.

அவளுக்குக் கோபம். நியாயமே…. என நினைத்துக் கொண்டான். என்றாலும் இப்படி வீட்டைத் திறந்து போட்டபடி அவள் வெளியேறியது வெறியேறியது… சரி அதிருக்கட்டும்… தவறு என் மீது… அதைப்பற்றிதான் நான் கவலைப்பட வேண்டும். அடித்திருக்கக் கூடவே கூடாது.

திரும்பி வா பெண்ணே- மன்னித்து விடு அம்பிகா. நான் உன்னைப் பூவாய் வைத்துக் கொள்வேன்…

நான் உன்னைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். உனக்கு அனுசரிக்க முயல்கிறேன். அல்லாதபட்சம் உன்னைக் குறைசொல்லவும் அப்படி நினைக்கவும் எனக்குத் தகுதியில்லாதவன் ஆகி விடுகிறேன் அல்லவா ?

ரயில் நிலையத்தில் அவளை – அம்பிகாவின் பிணத்தை அடையாளங் காட்டியவள் ரமணி. அவளது சினிமா சிநேகிதி.

அம்பிகா முகத்தை இனி எப்படிப் பார்ப்பது என திகைத்திருந்தான் அவன்…

தேவையிருக்கவில்லை.

அந்த அழகான முகம் சிதைந்திருந்தது. தற்கொலை செய்து கொண்ட அந்த நிமிடம் ரயிலாவது சிறிது நின்றது. டிரைவர் எட்டிப் பார்த்தான். அவனோ உள்ளே மாட்டிக் கொண்டிருந்தான். நேரமாகி விட்டது எனப் பல்கடித்தான் அவன்… அவளைச் சிதைத்து உதிர்த்து விட்டு ரயில் அவளுக்காக அழுதபடி ஓவெனக் கிளம்பியது.

அவள்மீது ஏறியது ரயில் அல்ல- என் வார்த்தைகள்…

ஓவெனக் கதறி அழலானான் அவன்.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்