மன்னிக்க வேண்டுகிறோம்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

திண்ணை குழு


ஞாநி திண்ணைக்குழுவும், மாயவரத்தானும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

திரு. மாயவரத்தான் ஞாநியின் கோரிக்கை சம்பந்தமாக எழுதிய கடிதம் இதே திண்ணையில் வெளியாகியிருக்கிறது.

ஆனால் ஞாநியிடம் மன்னிப்புக் கேட்பதற்கு முன்னால், ஞாநியின் கட்டுரைகளால் மனம் புண்பட்ட மற்றவர்களிடமும் மன்னிப்புக்கேட்பது தான் மனசாட்சியுள்ள காரியமாய் இருக்கும்.

திண்ணை படிப்பவர்கள் திண்ணையில் ஏதேனும் தங்களைப் பற்றி தவறாக எழுதப்பட்டிருந்தால், திண்ணையில் இது போன்றதொரு கோரிக்கையை வைத்து ‘அவதூற்றை ‘ நீக்கிக்கொள்ள வாய்ப்பு பெற்று விடுகிறார்கள்.

திண்ணையை படிக்க முடியாத எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களோ, படிக்க விரும்பாத இளையராஜா அவர்களோ, இன்னும் பலருமோ அப்படிப்பட்ட வாய்ப்பு பெறாமல் இருக்கலாம்.

ஆனாலும் இளையராஜா, எம் எஸ் சுப்புலட்சுமி இன்னும் பலரது ரசிகர்களும், அனுதாபிகளும் நிச்சயமாக அப்படிப்பட்ட கட்டுரைகளால் மனம் புண்பட்டிருக்கலாம்.

எம் எஸ் அன்றாட வாழ்க்கையில் ஓர் அய்யர் மாமியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தம்முடைய பிராமணதுவேஷத்தை எம் எஸ் என்ற இசைக் கலைஞருக்குச் செலுத்தும் அஞ்சலியிலும் செருகியிருக்கும் ஞாநியின் கட்டுரையை வெளியிட்டதற்காக, சாதி மதம் கடந்து எம் எஸ் இசையை ரசித்த கோடிக்கணக்கான ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். சமூகவியல் கருத்து என்று தனக்குத் தெரியாத ஒன்றை வியாக்கியானம் செய்த ஞாநி , அதன் தவறை வாசகி ஒருவர் சுட்டிக் காட்டியும் அதைப்படித்து திருத்திக் கொள்ளும் பக்குவம் இல்லாத ஞாநி இப்போதாவது எம் எஸ்ஸின் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

எவ்வளவு ஈடுபாட்டுடன் முயன்றும் இளையராஜாவால் ராஜப்பையர் ஆக முடியவில்லை என்று திருவாய் மலர்ந்து இளையராஜாவையும் , இளையராஜாவின் ரசிகர்களையும் அவமதித்த ஞாநியின் கட்டுரையை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். சாதி மத பேதமில்லாமல் இளையராஜாவின் இசையில் லயிக்கும் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இசை பற்றியோ, சமூகவியல் பற்றியோ எதுவும் தெரியாத, பார்ப்பனீயம் என்று எல்லார் மேலும் சகட்டுமேனிக்கு ஈயம்பூசும் பேனாவை மட்டும் கைக்கொண்டு ஞாநி எழுதிய இந்த அவதூறிற்காக இளையராஜாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். ஞாநியும் மன்னிப்புக் கேட்பார் என்று நம்புகிறோம். ஒரு வேளை இளையராஜா, தான் ராஜப்பையைர் ஆகவேண்டும் என்று விருப்பம் தெரிவித்து தனிப்பட்ட முறையில் ஞாநிக்கு கடிதம் அனுப்பி, முப்புரிநூல் அணிவித்து வைக்கும்படி கேட்டிருந்தால் அந்த உண்மையை ஆதாரத்துடன் ஞாநி திண்ணை வாசகர்கள் முன்பு வைக்கத் தயங்க மாட்டார் என்று நம்புகிறோம்.

‘என் முழுப்பொறுப்பில் இருந்த எந்த இதழும் விற்பனை குறைந்து மூடப்பட்ட சரித்திரமே என் 30 ஆண்டுகால பத்திரிக்கை வரலாற்றில் இல்லை ‘ என்று ஞாநி சொல்கிறார். இதை சரிபார்க்க எங்களால் இப்போது இயலவில்லை. ஞாநி சொல்வது உண்மையாய்த் தான் இருக்க வேண்டும். விகடன் குழுமத்தின் ஆள்பலம், பணபலம், விநியோக இயந்திரத்தின் பலம் இவற்றினால் அல்லாமல் ஞாநியின் தனிமனித முயற்சியால் மட்டுமே இதழ் விற்பனை கூடியிருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

மன்னியுங்கள் ஞாநி.

நட்புடன்

திண்ணை குழு

Series Navigation

மன்னிக்க வேண்டுகிறோம்

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


அண்மைக் காலங்களில் இராமேஸ்வரம் மீனவர்கள்மீது காட்டு மிராண்டித் தனமான தாக்குதலில் மன்னாரைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள் ஈடு பட்டு வருவது அதிற்ச்சி தருகிறது. பின்னணி நிலமைகள் எதுவாக இருந்தாலும் மன்னார் மீனவர்களது வன்முறை கண்டிக்கப் படவேண்டியதும் உடனடியாகத் தடுத்து நிறுத்தப் படவேண்டியதுமாகும்.

1980 பதுகளில் இலங்கை அரச படைகளதும் கடற்படையினதும் படுகொலைகளுக்குத் தப்பி இலங்கைத் தமிழர்களும் போராளிகளும் தமிழ் நாட்டில் புகல் தேடியபோது நமக்கு காக்கும் கரமாக முந்திக் கொண்டு நம்மை அரவணைத்தவர்கள் சோழமண்டலக் கரை மீனவர்கள்தான். இதற்க்காக அவர்கள் மேற்கொண்ட தியாகம் பெரிது. இலங்கைத் தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் உதவுகிறார்கள் என்கிற குற்றச் சாட்டின் அடிப்படையில் இதுவரை நூற்றுக் கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். 1991ன் பின்னர் இதே காரணத்தால் இந்திய கடற்படையினரின் கடுமையான கண்காணிப்புக்கும் இராமேஸ்வரம் மீனவர்கள் ஆளாகியுள்ளனர். நமது கஸ்டங்கள் தீர்ந்து விட்டது என்றில்லை. மீண்டும் நாம் புகல்தேடி தமிழகக் கரைகளுக்கு ஓட நேராது என்பதற்க்கும் எந்த உத்தரவாதமுமில்லை. இத்தகைய ஒரு சூழலில் மன்னார் மீனவர்களின் வன்முறை கடுமையாக கண்டிக்கப் படவேண்டியதாகும்.

இராமேஸ்வரம் மீனவர்களது சுற்றுப் புறச் சூழலையும் சிறு மீன்பிடியாளர்களது வாழ்வாதரங்களுக்கும் சேதமேற்படுத்தும் மீன்பிடி முறைமையும் பேரளவிலான மீன்பிடி முற்றுகைகளும் காரணம்மாக மன்னார் மீனவர்களிக்கு ஏற்பட்டுள்ள விரக்திக்கு நிஞாயமான தீர்வு கான்பது அவசியம். ஆனால் ஆபத்துகளின் விளிம்பில் தொடர்ந்தும் வாழும் மன்னார் மீனவர்கள் ஆபதுக் காலங்களில் தமக்கு கைமாறு நோக்காது உதவிய – எதிர்காலதிலும் உதவப் போகிற – இராமேஸ்வரத்து சகோதர மீனவ சமூகத்துடன் மோதலில் ஈடுபடுவதனை ஒரு வகையிலும் நிஞாயப் படுத்த முடியாது. நடந்த சம்பவங்கள் தொடர்பாக இலங்கை மீனவர்கள் அமைப்புகளும் மன்னார் மாவட்ட மீனவர்கள் மீது செல்வாக்குச் செலுத்தும் மன்னார் கத்தோலிக்க திருச்சபையும் இதுவரை மவுனம் சாதிப்பது அதிற்ச்சி தருகிறது. இலங்கைத் தமிழர்களது மனச்சாட்சியாக வெளிப்படவேண்டிய கடப்பாடுள்ள கலைஞன் என்கிற வகையில் நடந்த வன்முறைகளுக்காக இராமேஸ்வரம் மீனவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நடந்த வன்முறைக்கு வருத்தம் தெரிவிப்பதோடு இத்தகைய வன்முறைகள் இனி இடம்பெறாது என்கிற வாக்குறுதியையும் மன்னார் மீனவர் சங்கங்கள் அளிக்கவேண்டும். இராமேஸ்வரம் இழுவைப் படகுகளின் பெருமளவிலான எல்லைமீறல்களால் தமது உடமைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து அல்லறுகிற இலங்கைத் தமிழ் மீனவர்களது துயரங்களை இராமேஸ்வரம் மீனவர்களும் உணர்ந்து செயல் பட முன்வருவது அவசியம். அவர்கள் தங்கள் இயல்புகளுக்கு மாறாக தமிழக மண்ணில் புகல்தேடி வந்துறையும் துயர்மிகு தமிழக அகதிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்குவதும் கண்டிக்கப் படவேண்டியவை. தொடர்ந்தும் ஈழத் தமிழ் அகதிகளை ஆதரிக்கும் தர்மீகக் கடமையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் உறுதியாகச் செயல்பட வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

2

மீனவ சமூகங்களிடையிலான மோதல்கள் நீண்ட நமது வரலாற்றின் புதிய ஒரு அத்தியாமாகும். மட்டுப் பட்ட கடல்வளத்தை, உகந்த கரையோரங்களை சிறிய சந்தை வாய்ப்புகளைக் கட்டுப் படுத்த வரலாறு முழுவதும் மீனவர் சமூகங்கள் பரஸ்பரம் மோதல்களில் ஈடு பட்டே வந்துள்ளது. எனினும் மோதல் நிலமையைத் தவிர்க்கவும் கட்டுப் படுத்தத்தவும் தக்க எழுதப் பட்டாத பாரம் பரியச் சட்டங்களும் மரபுகளும் கலாச்சாரமும் அவர்களிடம் நிலவியது. கரையாருக்கும் முக்குவர் முஸ்லிம் கூடனிக்கும் இடையிலான சாதி சமூகவாரியான மோதல்கள் இலங்கைத் தமிழர்களது சமூக வரலாற்றின் முக்கியமான அத்தியாயமாகும். பக்கு நீரிணை மற்றும் மன்னார் வழை குடாவில் மீன்பிடி முத்துக் குளிப்பில் ஈடு பட்டிருந்த இராமேஸ்வரம் மன்னார் மீனவர்களும் இத்தகைய மரபில் வந்தவர்கள்தான். தொழில் நுட்ப ரீதியாக தங்கியிருக்கும் கரையில் இருந்து குறித்த எல்லைகளுள் மட்டுமே மீன்பிடி, முத்துக்குளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியதாக இருந்த முன்னைய காலங்களில் மோதல்களுக்கான வாய்ப்புகள் கரை ஓரங்களில் அடுதடுத்திருந்த மீனவர் சமூகங்களுக் கிடையிலானதாகவே இருந்தது. இண்றைய தொழில் நுட்ப வளற்ச்சி அதனை நாடுகளுக்கிடையிலான உலகளாவிய பிரச்சினையாக மாற்றி விட்டது. இத்தகைய மோதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பகைப் பட்ட மீனவர் சமூகங்கள் சாதிவாரியாக கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மதங்களுக்கு தாவினர். ஈழத்துக் கரையோர முஸ்லிம்களின் சமூக வரலாற்று அடிப்படையில் தமிழக கரையோர முஸ்லிம்கள் மத்தியிலும் பரவலான முக்குவர் தொடர்பு உள்ளது என கருதுகிறேன்.

தமிழக தென் கிழக்குக் கரைகளில் ஏற்பட்ட இந்த மாறுதல்கள் மன்னார் உட்பட்ட ஈழத்தின் மேற்க்குக் கரைகளையும் பாதித்தது. இரு கரைகளிலும் பயணம் செய்யும் சமூக இயலாளர்கள் ஈழக் கரையோர சமூக அமைப்பு தமிழகக் கரையின் கண்ணாடிப் பிம்பமாக இருப்பதை கண்டு வியப்படைவார்கள். வெள்ளையர் ஆட்சியின் இறுதிக் காலம் வரைக்கும் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான கடல் பரப்பில் அரசும் எல்லைகளுமல்ல சாதியும் சமயமும் சார்ந்த மீனவர் அணிகளும் மரபு சார்ந்த சட்டங்களும் மட்டுமே தொழிற்பட்டது. இரு புறத்தும் பரவர்கள் (பரதவர்கள்) ஒரு அணியாக இணைந்திருந்தனர். 1536ல் முஸ்லிம்களுடனான முரண்பாட்டில் தம்மைப் பலப்படுத்திட தென் தமிழக பரவர்கள் போத்துக்கீசரின் உதவியை நாடி கதோலிக்க மததில் சேர்ந்தனர். அதன் தொடற்ச்சியாக 1544ல் மன்னாரிலும் பரவர்கள் கதோலிக்க சமயத்தில் சேர்ந்ததும் அவர்களில் 500 போர் யாழ்பாண அரசனால் கொல்லப் பட்டதும் வரலாறு. எனினும் ஈழத்து பரதவர்கள் தமது தமிழக உறவுகளின் கலாச்சாரப் பாதையிலேயே அஞ்சாமல் தொடர்ந்தும் பயணித்தனர். இது இரு கரைகளிலும் உள்ள மீன்வர்களது எதிர் காலச் சந்ததிகளின் பொதுச் சொத்து நமது மன்னார்க் குடாக் கடல். இதனை கடற்புறச் சூழல்கள் பாதிப்படையாமல் காத்து மோதல்களும் ஆக்கிரமிப்பும் இன்றி அனுபவிப்பதும் பாதிப்பின்றி அதனை நமது எதிர் காலச் சந்ததிகளிடம் ஒப்படைப்பதும் நமது கடமையாகும்.

முத்துக்குளித்தல் பருவகால மீன்பிடி வர்த்தகம் போன்ற காரனங்களால் இரு புறத்துக் கரையோரங்களிலும் வசதிபோல மாறி மாறி புலம் பெயர்ந்து வாழ்ந்தவர்கள் தமிழக, ஈழ மீனவர்கள். 1500 களில் இருந்து 1900ங்களின் நடுப்பகுதி வரையிலான வரலாற்றுப் பதிவுகளில் இன்று இடம்பெறுவதுபோன்ற மீனவர் மோதல்களைக் காண முடியாது. அக்காலங்களில் தொழில் நுட்பம் சார்ந்த முரன்பாடுகளும் இருக்கவில்லை. கடந்த அரை நூற்றாண்டுகளில் மீனவர் சமூகதின் மதியில் ஏற்பட்ட குடித்தொகைப் பெருக்கம் கரையோர மீன் பாடுகள் நகர மயமாதாலால் பறிபோகும் சூழல் யந்திரமயமான இழுவைப் படகு தொழில் நுட்பம் மற்றும் உலகளாவ விரிவடைந்த சந்தை என்பவற்றால் பாதிக்கப் பட்ட மீனவர் வாழ்வின் துயரப் பக்கம் இதுவாகும். இது ஒரு புற்றுநோய்போல வளரக்கூடிய ஆபத்தாகும். நோய் நாடி நோய்முதல் நாடி இதனை தீர்த்து வைக்க வேண்டியது இரு நாட்டுகளையும் சேர்ந்த மத்திய மாநில அரசுகளதும் அரசியலாரதும் திருச்சபைகளதும் உடனடிக் கடமையாகும். .

தமிழக இழுவைப் படகு மீனவர்கள் 1. உள்வாரியாக தமிழக நாட்டுப் படகு மீனவர்களுக்கான கடல் ஒதுக்கீட்டு எல்லை மற்றும் ஆந்திர கேரள எல்லைகைளைத் தொட்டும் 2. வெளிவாரியாக இலங்கை மாலைதீவு கடல் எல்லைகளைத் தொட்டும் மீன்பிடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் எல்லை மீறி குறித்த பிரதேச மீனவர்களது வாழ்வாதாரங்களையும் உபகரணங்களையும் சேதமாக்கும் போதெல்லாம் பதட்ட நிலமையும் மோதல்களும் உருவாகின்றன. இக் கடற்பரப்பில் ஈடு படுத்தப் முரண்பட்ட தொழில் நுட்பங்கள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகின்றன. நமது பெருகிவரும் மீனவர் சமூகத்தை சிறிய பாக்கு நீரிணை மற்றும் மன்னார் கடல்களின் வளங்களால் தொடர்ந்தும் தாங்க முடியாது என்பதனை இந்திய இலங்கை அரசுகள் இதுகாறும் உணர்ந்து செயல் படவில்லை. இரு புறத்து அரசுகளும் அரசு சாராத தொண்டு நிறுவனங்களும் இரு புறத்தும் மீனவர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருக்கும் கத்தோலிக்க திருச்சபையும் இரு புறத்தும் மீனவர்களிடையே புரிந்துணர்வையும் கடற்புறச் சூழல் பாதுகாப்பு பற்றிய பிரக்ஞையையும் கட்டி எழுப்பும் வரலாற்றுப் பணியை ஆற்றிட தவறி விட்டன. இரு புறத்தும் மத்திய மாநில அரசுகள் மீனவர் மத்தியில் கல்வி மற்றும் மாற்று தொழில் வாய்ப்புகளும் ஆழ்கடல் மீன்பிடி நோக்கிய முதலீடுகளும் தொழில் நுட்பமும் வளற்சியும் பெற வகை செய்ய வில்லை என்பது கவலை தருகிறது. மீனவர்கள் மத்தியிலான அமைதி இன்மைக்கும் வன்முறைக்கு இத்தகைய பின்னணிகளே காலாகிறது.

இந்தியாவிலும் இலங்கையிலும் மீனவர்கள் கடலோரமாக நீழ் கோட்டில் சிதறி இருப்பதால் பரந்துபட்ட தொழிற்சங்க ரீதியான அமைப்பையோ, தேர்தல் தொகுதி வாரியான அரசியல் பலத்தையோ திரட்டிக் கொள்ள இயலாதவர்களாகவும் குரல் அற்றவர்களாகவும் உள்ளனர். மேலும் ஆபத்தான கடற் தொழிலில் ஈடு பட்டிருக்கும் அவர்கள் மட்டுப் பட்ட கடல் வளங்களுக்காக தங்களுக்கு உள்ளேயே ஜீவ மரண போட்டியில் ஈடு பட்டு பிழவுறுகிறார்கள். இதனால் தமிழகதிலும்சரி இலங்கையிலும்சரி மீனவர்கள் இலகுவில் விரக்தி அடைகிறவர்களாகவும் வன்முறைக்குத் தாவி விடுகிறவர்களாகவும் உள்ளனர். மேலதிக மாக போரினால் மிக மோசமாகப் பாதிக்கப் பட்ட இலங்கை தமிழ் மீனவர்களோ பதின்நான்கு வருட வனவாசம் முடிந்து இப்போதுதான் கடன் பட்டும் எஞ்சிய தமது உடமைகளை விற்றும் மீண்டும் தொழில் செய்ய ஆரம்பித்திருப்பவர்கள். இத்தகைய பின்னணியிலேயே அண்மையில் மன்னார்க் குடாவின் இலங்கைக் கரையோரப் பகுதியில் இடம் பெற்ற மீனவர்களது மோதலை நாம் புரிந்து கொள்ள முடியும்.

3

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான குறுகிய பாக்கு மற்றும் மன்னார்க் கடலும் அதன் வளங்களும் இலங்கை இந்திய மீனவர்களது எதிர் கால சந்ததியின் சொத்து. மிக மோசமான இழுவைப் படகு நடவடிக்கைகளால் ஏற்கனவே இந்திய பகுதியின் கடல் புறச் சூழல் மிக மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது. நமது கடற்புறச் சூழலை மீண்டும் புனருத்தாரணம் செய்து மேம்பட்ட நிலையில் எமது சந்ததிகளிடம் கையளிப்பது நமது வரலாற்றுக் கடமையாகும். இந்திய கடற் பகுதியின் வளங்களையும் கடற் புறச் சூழலையும் மீழமைப்பதற்க்கும் காப்பாற்றுவதற்க்கும் இலங்கை கடற் புறச் சூழல் கட்டற்ற இழுவைப் படகு நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கப் படுவதும் முக்கியமாக உள்ளது.

இலங்கை இந்திய கடற்பகுதியில் அனைத்து தரப்பு மீனவர்கலதும் இழுவைப் படகு நடவடிக்கைகள் சர்வதேச தர மட்டத்தில் சட்டரீதியாக கட்டுப் படுத்தப் படவேண்டும். இழுவைப் படகுகள் உபயோகிக்கும் தொழில் நுட்பம், வலை அமைப்பு தொடர்பாகவும் மற்றும் மீன்பிடிக்க அனுமதிக்கப் படும் காலங்கள் தொடர்பாகவும் ஆய்வுகளையும் கோட்பாடுகளையும் மீற முடியாத சர்வ தேசத் தரத்திலான கட்டுப் பாடுகளையும் இந்திய, இலங்கை மற்றும் தமிழக, வடகிழக்குமாகாண அரச நிர்வாகங்கள் இணைந்து தெரிவு செய்து அமூலாக்க வேண்டும். மக்கள் மத்தியில் கடற் புறச் சூழல் பற்றிய பிரக்ஞையை கட்டி எழுப்புகிற பணியும் கடல் வளங்கள் பற்றிய இணைந்த ஆய்வுகளும் அவசியம். இத்தகைய பணியில் இருபுறத்தும் மீனவர் மதியில் செல்வாக்கைப் பெற்றுள்ள கிறிஸ்துவ தேவாலய அமைப்புகளினதும் மீனவர் சங்கங்களினதும் பங்கு பற்றுதல் உறுதிப் படுத்தப் படுவது மிகவும் அவசியமாகும். இந்தியாவிலும் இலங்கையிலும் ஏனைய சமூகங்களைப்போல புவியியல் ரீதியாக குவிந்திருக்காமல் கடலோரமாகச் நீழ சிதறி இருப்பதால் மீனவ சமூகங்களால் தமது அரசியல் பிரதி நிதித்துவத்தை உறுதிப் படுத்த முடிவதில்லை. உகந்த ஏற்பாடுகளின் மூலம் இரு புறத்து மீனவர்கலதும் அரசியல் பிரதி நிதித்துவம் உறுதி செய்யப் படுவதும் அவசியமாகும்.

முன்னர் நாகபட்டினம் இராமேஸ்வரம் இடைப் பட்ட கடற் புறத்தில் அடிக்கடி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் சந்தர்ப்பங்களிலும் சரி தற்போது அதிகரித்து வரும் மீனவர்களது மோதல்களின்போதும் சரி தமிழக அரசு மத்திய அரசுக்கும் மதிய அரசு இலங்கை அரசுக்கும் கடிதம் எழுதுவதையே மரபாகக் கொண்டுள்ளன. இவற்ரைத் தவிர தொடரும் இத்தகைய விசேட பிரச்சினைகள் தொடர்பாக அறிந்து கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கவும் இருதரப்பு அரசியல் வாதிகளும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளும் போதிய அக்கறை காட்டவில்லை என்பது கவலை தருகிறது. இராமேஸ்வர மீனவர்களது பற்றாக் குறைப் பிரச்சினைக்கு இரவுக்கிரவு ஏற்க்குரைய ஆயிரம் இழுவைப் படகுகளில் தடை செய்யப் பட்ட இரட்டை மடி வலைகளுடன் இலங்கை மீனவர்களது தொழில் புலத்துள் அத்துமீறல் மூலம் தீர்வு காண்டிட முடியாது. அடிப்படையில் இரு புறத்தும் கல்வி மற்றும் மரபுசாராத வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படவேண்டும். தமிழக, தென் தமிழக மீனவர்கள் மன்னார்க்குடா மற்றும் பாக்கு நீரிணை கடந்து சென்று இந்து சமுத்திர ஆழ்கடலில் மீன்பிடிக்கும் வகையிலான மாற்றுத் தொழில் நுட்பமும் அதற்கான பயிற்ச்சிகளும் முதலீடுகளும் கடற்புறச் சூழல் பற்றிய பிரக்ஞையும் உருவாக்கப் படுவது அவசியம். தமிழகறிந்திய அரசுகள் இராமேஸ்வரம் மீனவர்களது அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி உடனடிக் கவனம் எடுப்பது அவசியம். ஈழத்து மீனவர்கலது தொழில் புலத்துள் அத்துமீறுவதை இராமேஸ்வரத்து மீனவர்கள் உடனடியாகக் கைவிட வேண்டும். அதேசமயம் 1974ம் ஆண்டு ஒப்பத்ததின் பின் கச்சதீவில் இராமேஸ்வரத்து மீனவர்கள் பறிகொடுத்த மரபு உரிமைகளை மீண்டும் அவர்கள் அனுபவிக்க வசதி செய்யப் படுதல் வேண்டும். இது ஈழ தமிழக மீனவர்கள் மரபுசார்ந்த நியாயங்களின் அடிப்படையில் எல்லைகளை தபித்துக்கொள்ள உதவும்.

4

தமிழகத்தில் இழுவைப் படகு நாட்டுப் படகு மீனவர்களிடையிலான மோதல்கள் எல்லைகள் வகுக்கப் பட்டதன்மூலம் தீர்க்கப் பட்டுள்ளது. இத்தகைய எல்லை மீறல் தொடர்பான மோதல்கள் வட தமிழக, தென் ஆந்திர மீனவர்கள் மதியிலும் அடிக்கடி வெடிப்பதுண்டு. மீன்பிடி எல்லைகளை மீறும்போது குறித்த பிரதேச மீனவர்களது வாழ்வும் உடமைகளும் அச்சுறுத்தப் படுகிறது. அதிலும் குறிப்பாக எல்லை தாண்டிவரும் மீனவர்களால் மாறு பட்ட தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுகிறபோது உள்ளூர் மீனவர்களது இழப்பு அதிகமாகிறது.

பல நூற்றுக் கணக்கான திரண்டு எல்லை மீறும் ராமேஸ்வரம் மீனவர்களது இழுவைப் படகுகளால் மன்னார்க் குடா மற்றும் பாக்கு நீரிணையில் இலங்கை எல்லைகளுக்குள் மீன்பிடிக்கும் தமிழ் மீனவர்களது வலைகள் மற்றும் உபகரணங்கள் அழிக்கப் படுவதும், இந்தியாவில் தடை செய்யப் பட்ட இரட்டை மடி வலை போன்றவற்றை இராமேஸ்வரம் மீனவர்கள் பயன்படுத்துவதால் கடல் வளமும் கடலின் உயிர்ப்புள்ல சூழலும் தொடர்ந்து துடைத்து அழிக்கப் படுவதும் கடந்த அரை நூற்றாண்டுகளில் அதிகரித்தே வந்துள்ளது.

பிரச்சினைக் குரிய இக் கடல்புறத்தில் சுதந்திரதின் முன் எல்லைகள் செயல் படவில்லை. சுதந்திரத்தின் பின்னரும்கூட 1974 ஒப்பந்தம் வரை பாக்கு நீரிணையும் மன்னார்க்குடாவும் தெழிவாக எல்லைப் படுதப் படிருக்கவில்லை. எனினும் பழைய மீன்பிடித் தொழில் நுட்பம் சார்ந்து இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிப்பது பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தவில்லை. சுதந்திரதின் ஆரம்ப தசாப்ததில் இந்திய, மற்றும் வட இலங்கை மீனவர்கள் சட்டவிரோத குடியேற்றம் கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் இணைந்து ஈடுபடுவதான குற்றச் சாட்டுகளின்பேரில் துன்புறுத்த்ல்களுக்கு ஆளாகினர். இலங்கைக் கடற்படையினரால் ஒன்றாகவே தொல்லைப் படுத்தப் பட்டனர். இந்தியாவிலும் இலங்கையிலும் 1970 களின் பின்னர் ஏற்பட்ட முக்கிய தொழில் நுட்ப, சட்ட, அரசியல் மாற்றங்களால் சமூக பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப் பட்டவர்களுள் மீனவர் முக்கிய பகுதியனராவர். எனினும் கடலோரமாக சிதறிய இருப்பினால் அவர்கள் பெரிய வாக்கு வங்கியாக அமையவில்லை. வாக்கு வங்கி அடிப்படையில் மட்டுமே ஏழைகளின் குரல் அம்பலமேறும் நமது தேர்தல் முறமையில் அவர்களது குரல் இந்திய தமிழக அரசுகளினதும் இலங்கை அரசினதும் காதில் விழவில்லை.

1970பதுகளில் மீன்பிடி தொழில் நுட்பம் பாரிய மாற்றத்துக்குள்ளானது. இரு புறத்தும் மாற்றங்கள் ஒரு சீராக ஏற்படாதமையால் 1970பதுகளிலேயே தொழில் நுட்ப முரண்பாடுகள் வலுத்து மோதல் நிலமையை உருவாக்கியது. மிக முன்னேறிய தொழில் நுட்பம் ஏனைய தொழில் நுப அடிப்படையிலான மீன்பிடி முறைகளை நேரடியாகவே பாதித்தது. இழுவைப் படகுகளால் ஏனைய தொழில் நுட்பங்கலைப் பயன்படுத்தும் மீனவர்களது வலைகள் வெட்டப் படுவதும் மீன்பிடி புலத்தில் மீன்கள் அற்றுப்போவதும் தொடர்பான சிக்கல் கள் அதிகரித்தன. இரு புறத்தும் கரையோரம் சார்ந்த நகர வலற்ச்சியினால் கடல் மிக மோசமாக மாசடைந்து வலங்குண்றிப் போனது. சமகாலத்தில் இலங்கையில் வெளி மற்றும் உள் மோட்டார் பொருத்திய கண்ணாடி இழை படகுகளும் நைலோன் வலைகளும் மீன்பிடியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மீன்பிடித்தல் முறைமையிலும் வலை வகைகலிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட வில்லை. இழுவைப் படகு புகுத்தப் படுதல் ஆரம்பித்தபோது வெடித்த யுத்தநிலமை உண்மையில் தொழில் நுட்பரீதியாக இலங்கை மீனவர்களைப் பின்னே தள்ளிவிட்டது. மரபுசார்ந்த படு வலை, விடு வலை (drift net), கரை வலை (கரை வலை) முறமைகள் புதிய தொழில் நுட்பப் பின்னணியில் அபிவிருத்தி அடைந்த போதும் பெரிய அளவில் இழுவைப் படகுகள் மீன்பிடி முறைமை இலங்கைப் பக்கக் கரையில் ஏற்படவில்லை. மாறாக இராமேஸ்வரம் போன்ற இந்தியக் கரை மீன்பிடிக் கிராமங்களில் பாரிய முதலீடுகளின் அடிப்படையில் இழுவைப் படகுகள் அடிப்படையிலான மீன்பிடித்தல் பரவலாக நடைமுறைக்கு வந்தது. இது இந்திய பக்க கடல் வளத்தை மிக மோசமாகப் பாதித்து கடல் தாயை மலாடாக்கும் இரட்டை மடி வலைகள் போன்ற மிக மோசமான சர்வதேச ரீதியாக தடை செய்யப் பட்ட மீன்பிடி முறைகள் இந்திய இளுவைப் படகு மீனவர்களால் பயன் படுத்தப் பட்டது. கடலின் இந்திய பக்கம் பாலையான அதே சமயத்தில் போர்ச் சூழலில் மீன்பிடி அருகியமை கடலின் இலங்கைப் பக்கதில் கடற்புறச்சூழல் மேம்படவும் மீன் வழம் பெருக வாய்ப்பானது.

ஏற்பட்ட ஏற்றத் தாழ்வான தொழில் நுட்ப வளற்ச்சி நிலமைகளும் சமூக மற்றும் சூழல் பற்றிய பொறுப்பற்ற மீன்பிடி முறைமைகளும் உள்வாரியாக தமிழக கரைகளிலும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்காமல் இல்லை. 1970களில் தமிழக கரை நெடுக பல்நூறு தொழில் நுட்ப முரன்பாடுகள் சார்ந்த மோதல்கள் நாட்டுப் படகு மீனவர்களுக்கும் இளுவைப் படகு மீனவர்களுக்கும் மத்தியில் ஏற்பட்டது. தம்முள் மோதிக்கொண்ட தமிழக மீனவர்களது இரத்தத்தில் சிவந்த தமிழகக் கரைகளில் தீர்வாக நாட்டுப் படகு மீனவர்களுக்கான கடல் இட ஒதுக்கீடுகள் ஏற்படுத்தப் பட்டன. கடல் மடியை பாலையாக்கும் மீன்பிடி முறைகள் இரட்டை மடி போன்ற வலைகள்மீது இந்தியாவில் தடை விதிக்கப் பட்டது. மீன்பிடிக் காலங்கள் தொடர்பாக கட்டுப்பாடுத்தும் சட்டங்களும் உருவாக்கப் பட்டது. எனினும் நாம் இன்னமும் நெடுந்தூரம் போகவேண்டியுள்ளது. தமிழகத்தின் தென் கடலில் இராமேஸ்வரம் மன்னார் மீனவர்கள் மத்தியிலும் தமிழகத்தின் வட கடலில் தமிழக ஆந்திர மீனவர்கலுக்கிடையிலும் மோதல்களும் ஆட் கடத்தல்களும் மோசமடைந்துள்ளது. இன்றுவரை தீராத தலைவலியாக தொடர்கிற இப்பிரச்சினைகள் உடனடியான கவனத்துக்குரியவை.

5

மீன்பிடி பிரதேசங்கள் சுருங்கியமை, கடல் வளம் பாதிக்கப் பட்டமை புதிய இந்திய சட்டங்கள் என்பவற்றின் நெருக்கடியை சம்மாளிக்க தொடர்ந்து இழுவைப் படகு முதளாளிகள் ஏழை இராமேஸ்வரத்து மீனவர்களை இலங்கைக் கடற்பரப்புக்குள் மீன்பிடிக்கத் தூண்டினார்கள். 1981ல் நெடுந்தீவுக்குச் சென்றபோது தமிழக மீனவர்களது எல்லை மீறல்களால் நெடுந்தீவு மீனவர்கள் இடிந்துபோயிருந்தார்கள். அந்த இரவுகளில் பல நூற்றுக் கணக்கில் தீபத் திருவிழா போல இந்திய மீனவர்கள் படகுகள் நெடுந்தீவை சுற்றி வழைத்து முற்றுகை இட்டன. ஏழை நெடுந்தீவு மீனவர்கள் பலர் தமது வலைகளை இழந்தனர். அவர்கள் கடலில் இறங்கவே அஞ்சிய நிலமை என்னையும் பாதித்தது. அந்நாட்களில் மன்னாரிலும் நிலமை இதுதான். முன்னர் தமிழகக் கரைகளில் இழுவைப் படகு மீனவர்களுக்கும் நாட்டுப் படகு மீனவர்களுக்கும் ஏற்பட்ட மோதல்கள் 1980பதுகளில் இலங்கைக் கரைக்கும் தொற்றியது. இலங்கை மீனவர்களது பிழைப்பு மட்டுமல்ல வலை முதலிய மீன்பிடி உபகரனங்களும் கடல் வளமும் சீர்ரழிக்கப் பட்டன. இந்தியாவில் தடை செய்யப் பட்ட எல்லா நடவடிக்கைகளும் இலங்கைக் கரையோரங்களில் செயல் படுத்தப் பட்டது. ஆனால் பின்னர் யுத்தம் மூண்டதால் இலங்கை மீனவர்கள் மீன்பிடித்தலை கைவிடவோ சுருக்கிக் கொள்ளவோ நிர்பந்திக்கப் பட்டனர். இலங்கை கடற்படை தாக்குதல் களுக்கு ஈழத்து மீனவர்கலும் தமிழக மீனவர்கள் ஒன்றாக முகம் கொடுக்கவும் நேர்ந்தது. ஈழத்து மீனவர்களதுமட்டுமன்றி ஒட்டு மொத்தமான இலங்கைத் தமிழர்களதும் உதவும் கரங்களாக மீனவர் கரங்கள் உயர்ந்தன. யுத்த நிலமைகளில் பின்தள்ளப் பட்டு முடங்கிக் கிடந்த இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை இன்று யுத்த நிறுத்தம் ஏற்பட்டு இலங்கை மீனவர்கள் மீண்டும் தொழில் செய்ய ஆரம்பித்ததும் மீண்டும் வெடித்துள்ளது. இரண்டு தசாப்தங்களுக்குப் பின் சாம்பரில் இருந்து உயிர்த்தெழுந்து வெறும்கையோடு மீன்பிடிக்க வந்துள்ள இலங்கை மீனவர்களுக்கு ஏற்படுள்ள நெருக்கடிகள் சாதாரணமானவை அல்ல. இனி தொழில் செய்து பிழைக்கலாம் என்ற கடைசி நம்பிக்கையும் அவர்கள் கடன்பட்டு வாங்கிய வலைகளும் நாலாந்தம் இந்திய மீனவர்களது இழுவைப் படகுகளின் இரட்டை மடி வலைகளுள் சிக்கிச் சிதையத் தொடங்கியது.

மேற்படி பின்னணியில் மன்னார் மீனவர்களது விரக்தி புரிந்து கொள்ளத் தக்கதுதான். மீனவர் சமூகங்களிடையிலான மோதல்கள் புதிய விடயங்கள் அல்ல. ஆனால் அதற்க்கான அடிப்படைகல் கண்டறியப்பட்டு பிரச்சினைகள் நீண்டகால அடிப்படையில் தீர்க்கப் படவேண்டும். கட்டு மீறி வன்முரையாக தொடருவது அனுமதிக்க முடியாது.

பாக்கு நீரிணையில் தமிழக, ஈழ மீனவர்களிடை தீவிரமடைந்து வரும் முறுகல் நிலைமை கவலை தருகிறது. எனினும் இது இரு புறத்தும் கடல் வளச் சூழல் மாசடைதல் மற்றும் இலங்கை இந்திய மீனவர்கள் மத்தியில் நீண்டகாலமாகத் தீர்க்கப் பட்டாதிருந்த பல்வேறு சமூக பொருளாதார தொழில்நுட்ப அரசியல் பிரச்சினைகளின் ஆபத்தான ஒரு வெளிப்பாடுதான். எனவே இதனை உணற்ச்சி ரீதியாக அணுகாமல் அனுபவ ஞான பூர்வமாகவும் விஞான அறிவு பூர்வமாகவும் அணுகப் படுதல் அவசியமாகும். தமிழக ஈழ மீனவர்களுக்கு பரபட்சமிழைக்காமல் மரபு சார்ந்த நடைமுறைகளையும் மதித்து பாக்குநீரிணை மற்றும் மன்னார் குடா கடலின் வளங்களைப் பேணுவதும் பகிர்வதும் தொடர்பான தமிழக ஈழ மீனவர்கள் பிரச்சினை உடனடியாகப் பேசித் தீர்க்கப் படவேண்டும்.

***

visjayapalan@hotmail.com

Series Navigation