சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
சுனாமித் திமிங்கலம் பிடிக்க ஏதுவலை ?
சுனாமி வரும் பின்னே!
சுதியோலம் வரும் முன்னே!
சுனாமி விரைவதைக் கூச்சலிடு!
சுனாமி தொடுமுன் மேடைக்கு ஓடிவிடு!
முடுக்கி விட்ட பம்பரக் கோளம்! அடிக்கடல்
உடுக்க டித்துப் போடுமே தாளம்!
அடுக்க டுக்காய்ச் சீறிடும் நாகம்! உயிர்களை
எடுத்துச் செல்லும் கடற்கரை வேகம்!
‘இந்து மாக்கடலில் எழுந்த அசுரச் சுனாமி மீது மக்களின் கோபம் சிறிதும் தணியாது! ஆனால் 2004 டிசம்பர், 2005 ஜனவரி மாதங்களில் நேர்ந்த பேரழிவிலும், சீரழிவிலும் மாந்தர் கற்றுக் கொள்ளும் பாடங்கள் அநேகம்! பொறிநுணுக்கப் புது முறைகளைக் கையாண்டு இந்த சுனாமிக் கொல்லியின் நடமாட்டத்தைக் கண்காணித்துக் கண்டுபிடித்தால், உலகில் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்ற முடியும்! ‘
விஞ்ஞானி பிராங்க் கன்ஸாலெஸ்
‘கடற்தள மக்கள் நிலநடுக்க அதிர்ச்சியை உணர்ந்த உடனே, கடற்பகுதியைத் தவிர்த்து உள்நாட்டுக்குள் புகுந்திட அல்லது மேட்டுத் தளங்களுக்குக் கட்டாய இடப்பெயர்ச்சி செய்ய அரசாங்கம் முன்பே அறிவுரை புகட்டி இருக்க வேண்டும். கடற்தள அடியில் பூகம்பம் ஏற்படும் போது, சுனாமி பின்பற்றி எழுந்து கடற் தளங்களைத் தாக்குவதற்கு முன்பு, மக்கள் கடற்பகுதியை விட்ட வெளியேறித் தப்பிக் கொள்ள பொதுவாக 20 நிமிடங்களிலிருந்து 2 மணி நேரம் கிடைக்கிறது! ‘
வேவர்லி பெர்ஸன் [US Geological Survey National Earthquake Information Centre]
‘இந்து மாக்கடலில் பசிபிக் கடலரங்கு சுனாமி அபாய எச்சரிக்கை போன்ற ஓர் ஏற்பாடை சுமார் 20 மில்லியன் டாலர் செலவில் (2005 நாணய மதிப்பு) ஓராண்டுக்குள் அமைத்திடலாம் ‘
பிரதம விஞ்ஞானி பிலிப்ஸ் மெக்ஃபாடன் [இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு, பூதளவியல் கூடம், ஆஸ்திரேலியா]
‘சுமாத்திரா தீவுக்கு தென்மேற்கே 90 மைல் தூரத்தில் பூகம்பம் கடலடியில் உண்டாகி, பத்து நிமிடத்தில் அலைகள் கொந்தளித்து எழும் என்று எதிர்பார்க்கலாம். அப்பகுதிக்கு அப்பால் உள்ள கடல் நாடுகளின் கரைகளுக்கு, சுனாமி தாக்கும் முன் எச்சரிக்கை அறிவிக்க நிறைய நேரம் கிடைக்கிறது.
விஞ்ஞானி பால் விட்மோர் [NOAA West Coast & Alaska Tsunami Warning Center]
முன்னுரை: கி.மு.1645 ஆம் ஆண்டில் கிரேக்க நாட்டின் தென்திசைத் தீவான ஏஜியனில் [Aegean Island of Santorini] வெடித்த எரிமலை, மத்தியதரைக் கடலில் பெரும் சுனாமியை எழுப்பிக் கிடாட் தீவில் [Crete Island] வாழ்ந்த மினோவன் என்னும் முற்போக்கான நாகரீகக் குடியினர் [Minoan Civilization] அனைவரும் மாண்டொழிந்தனர் என்று தொல்பொருள் ஆய்வாளர் கூறுகிறார்கள்! அதே போன்று 13 ஆம் நூற்றாண்டில் சிலப்பதிகாரம், மணிமேகலை நூட்களில் கூறப்பட்ட பூம்புகார் என்னும் காவிரிப் பூம்பட்டினமும் இவ்விதக் கடல் எழுச்சி அலைகளால் தகர்ப்பாகிக் கொண்டு செல்லப்பட்டது என்று மணிமேகலையில் காணப் படுகிறது! இந்த நவீன யுகத்தில் 1883 இல் சுந்தா கடற்சந்தியில் [பழைய பர்மா] கிரகடோவா என்னும் இடத்தில் எரிமலை வெடித்து இந்து மாக்கடலில் 120 அடி உயரத்தில் மிகத்தீவிர சுனாமி ஒன்று உண்டாகி, கிழக்கிந்தியத் தீவிகளின் சில பகுதிகள் பாதிப்பாகி 36,000 பேர் மாண்டு போனதாக வரலாற்றில் எழுதப் பட்டுள்ளது!
1895 ஆண்டு முதல் 2004 ஆண்டு வரை ஹவாயி தீவை 12 தீவிர சுனாமிகள் தாக்கி இருக்கின்றன. 1998 ஆம் ஆண்டில் பாப்பா நியூகினி தீவில் 7.1 ரிக்டர் அளவில் பூகம்பம் உண்டாகி 19 மைல் தூரம் அதிர்ச்சியில் ஆட்டி அசைத்து, 15 நிமிடங்களில் தட்டையாகக் கிடந்த கடல்மட்டம் உடனே 100 அடி உயர்ந்து வீங்கி எழுந்து, ஒரு பெரும் சுனாமியைக் கிளப்பி 2200 கிராம மக்களைக் கொன்றது! இப்போது 2004 ஆண்டில் கடற்தள பூகம்பக் கொந்தளிப்பால் சுனாமி ஒன்று எழுந்து, 12 தென் கிழக்காசிய நாடுகளில் 160,000 பேர் மாண்டதுடன், 500,000 பேர் காயமடைந்து, ஐந்து மில்லியன் மாந்தர் அகதிகளாய் அல்லது அனாதைகளாய்ப் பரிதவித்து, உலக நாடுகளின் உதவியை நாடி அலைமோதி வருகிறார்கள்!
இந்து மாக்கடல் அரங்கில் சுனாமியை உளவும் தீர்மானம்
அபூர்வமாக எழும் சுனாமி, அடிக்கடி வரும் பூகம்பத்தை விடக் கொடியது, கோரமானது, மக்களைக் கொன்று குவிப்பது! கண்களுக்குத் தென்படாத, வருகையை ஊகிக்க முடியாத சுனாமியை உளவுக் கருவிகள் மூலம் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்தால், சேதங்களைத் தடுக்க இயலாமல் போனாலும், நிச்சயம் பல்லாயிரம் உயிர்களைப் பாதுகாக்க முடியும்! உலகெங்கும் பொதுவாக 10 ஆண்டுகளுக்குச் சராசரி 57 சுனாமிகள் எழுந்துள்ளதாகக் கணக்கிடப் பட்டுள்ளன! 1990 ஆண்டுக்குப் பிறகு இதுவரை 82 சுனாமிகள் ஏற்பட்டுள்ள தென்று தெரிகிறது! அவற்றில் 10 சுனாமிகள் மட்டும் 4000 மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளதாக அறியப்படுகிறது! ஜப்பானிய மக்களும், காலிஃபோர்னியாவின் கடற்கரை மாந்தரும் பூகம்ப அபாய அறிவிப்பைக் கேட்டதும், கடற்பகுதியை விட்டு அப்பால் செல்ல வேண்டும் என்று பாடம் கற்பிக்கப் பட்டவர்கள். தமிழகக் கடற்கரை மாந்தர் அவ்வாறு அரசாங்கத்தால் கல்வி புகட்டப் படாததால், சுனாமியின் முதல் அலைவீச்சை வேடிக்கை பார்க்கச் சென்ற ஆயிரம் ஆயிரம் அப்பாவி மக்கள் சுனாமியின் கொடிய இரண்டாவது அல்லது மூன்றாவது பூதகரமான அலைமதில் அடித்துத் தப்பிக் கொள்ள முடியாமல் கடலுக்குள் இழுத்துச் செல்லப் பட்டதாக அறியப்படுகிறது!
சுனாமியில் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகள் 2005 ஜனவரி 6 ஆம் நாளன்று ஜகார்டாவில் நடந்த சுனாமி நிவாரணப் பேரவையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள பசிபிக் கடலரங்கு சுனாமி எச்சரிக்கை ஏற்பாடு போன்று இந்து மாக்கடல் அரங்கிலும் நிறுவ ஏகமனதாக உடன்பட்டுள்ளன. அமெரிக்காவின் நோவா-எம் துணைக்கோள் [NOAA-M Satellite] 2002 மே 21 இல் ஏவப்பட்டு, 2003 முதல் 26 பசிபிக் கடற்கரை நாடுகளுக்கு பூகம்ப, சுனாமி எழுச்சிகளை அறிவித்து வருகிறது. புதிதாக அமைக்கப் போகும் இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை உளவு மிதப்பிகளும், நோவா-எம் துணைக் கோளுடன் இணைக்கப் படலாம் என்று கருதப்படுகிறது. அடுத்த வாரம் ஜப்பானில் அனைத்துலக விஞ்ஞானிகளும் கூடி அளவளாவி பூகோள சுனாமி எச்சரிக்கை ஏற்பாடு [Global Tsunami Warning System] ஒன்றை உலகனைத்துக்கும் பொதுப்பணி செய்ய ஆரம்பித்து வைக்கப் போவதாக பியீட்ரிஸ் ஆன் பெளஸர் [Beatrice Ann Bowser] என்னும் விஞ்ஞானப் பெண்மணி ஜனவரி 11, 2005 இல் கூறினார்.
இந்தியாவில் சுனாமியின் எதிர்பாராத விளைவுகள்
சுனாமி அலை ஒன்று மட்டும் வரும் என்று நினைக்கக் கூடாது! அடுத்தடுத்துப் பெருத்து வரும் சுனாமிச் சுவர் அலைகள் குறைந்தது மூன்று அல்லது மூன்றுக்கு மேலாகவும் வரலாம். இந்தியாவைச் சேர்ந்த அந்தமான், நிகோபார் தீவுகள் சுமாத்திரா தீவுக்கருகில் இருப்பதால் முதலில் பூகம்பச் சேதமும், அடுத்து சுனாமித் தாக்குதலும் ஏற்பட்டு மிகுந்த பாதிப்பை அடைந்தன. இந்திய தளத்தில் தமிழ்நாடு, பாண்டிச் சேரி, ஆந்திரா, கேரளா ஆகியவற்றின் கரைப் பகுதிகளில் பலர் மாண்டதுடன் சேதமும் உண்டானது. அப்பகுதிகளில் மட்டும் மொத்தம் 123 நிலநடுக்கங்கள் (5.0-6.0 ரிக்டரில் 112 அதிர்வுகள், 6.0 ரிக்டருக்கு மேற்பட்ட 11 அதிர்வுகள்) உணரப்பட்டன! மொத்தம் மாண்டவர் எண்ணிக்கை: 10,151. காணாமல் போனவர்: 5628. அதில் 5542 பேர் அந்தமான், நிகோபாரைச் சேர்ந்தவர்! சுமாத்திரா தீவில் பூகம்பம் ஏற்பட்ட பிறகு அந்தமான், நிக்கோபார் தீவுகளிலும் 6.5 MW மேற்பட்ட அளவில் நிலநடுக்கங்கள் டிசம்பர் 26 2004 இல் காலையில் 09:52 மணிக்கு (இந்திய நேரம்) நேர்ந்துள்ளன! இந்தனேசியாவில் ஏற்பட்ட அசுரப் பூகம்பத்திற்கும், சென்னை, அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நேர்ந்த நிலநடுக்கங்களும் என்ன தொடர்பு உள்ளது என்று பூதளவாதிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும். அரசாங்கம் முன்னெச்சரிக்கை எதுவும் செய்யாததால், நிலநடுக்க அதிர்வுகள் முன்பே அறிகுறிகள் காட்டியும் கடற்கரையை விட்டு அப்பால் செல்லாத சென்னை வாசிகள் பலர், அதை நோக்கி விரைந்து வேடிக்கை பார்க்கப் போய்த் தமது இன்னுயிரைச் சுனாமிக்குப் பறிகொடுத்தார்கள்!
பசிபிக் கடலரங்கின் சுனாமி எச்சரிக்கை ஏற்பாடு
தவறுகளின்றித் துல்லியமாகக் கண்டுபிடிக்கும், புதிதாக மேம்படுத்தப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை ஏற்பாடை அமெரிக்காவின் தேசீயக் கடற் சூழ்வெளி உளவு ஆணையகம் [National Oceanic & Atmospheric Administration (NOAA)] டிசைன் செய்து தயாரித்தது. அந்த கண்காணிப்பு முறையில் சுனாமி உளவு செய்து சமிக்கை அனுப்பும் அடிக்கடல் அதிர்ச்சி உணரும் கருவிகள், அவற்றை நோவா-எம் துணைக்கோளுக்கு மின்னலை மூலம் அறிவிக்கும் ஆழ்கடல் மிதப்பிகள் [Deep Ocean Assessment & Reporting Sensors (DART)] ஆகியவை பயன்படுகின்றன. சுமாத்திரா அருகே நிகழ்ந்த பூகம்பத்தில் சுனாமி பொங்கி எழுந்து கடல் மட்டம் 10 மீடர் [>30 அடி] உயர்ந்ததாக அறியப்படுகிறது! ஆழ்கடல் உளவிகள் சுனாமியின் மூலாதாரமான, முக்கியமான இந்த கடல் மட்ட உயர்ச்சி அளவைக் கணித்து துணைக்கோளுக்குத் தெரிவிக்க வேண்டும். 1965 ஆண்டு முதல் பயன்பட்ட அலை உயர அளப்பு மானிகள் [Tidal Gauges] சில சமயங்களில் பொய்யான சமிக்கைகளை அனுப்பி, சுனாமி எச்சரிக்கையைத் தவறாகச் செய்து [False Alarm] மக்களை ஏமாற்றிப் பெரும் நிதி விரயத்தைக் கொடுத்தன! ஆனால் ஆழ்கடல் உளவிகளின் அழுத்த மானிகள் [Sea Water Pressure Sensors] கடல் உயரத்தில் ஏற்படும் வேறுபாடுகளைத் துல்லியமாகக் கணிப்பதால் பொய் அறிவிப்பு எதுவும் நிகழ்வதில்லை!
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையங்கள் ஹவாயி, அலாஸ்கா ஆகிய இரண்டு தளங்களில் நிறுவகம் ஆகி 26 கடற்தள நாடுகளுக்கு 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்து தகவல் அனுப்பி வருகின்றன. ஹவாயியின் எச்சரிக்கை மையம் 1948 ஆம் ஆண்டிலே நிறுவகமானது! 1965 இல் அமைக்கப்பட்ட பசிபிக் கடற்தள எச்சரிக்கை ஏற்பாட்டில் முதலில் 6 மிதப்பிகள் [Buoys] பசிபிக் கடலிலும் மற்றும் பல அலை அளப்பு மானிகள் [Tidal Gauges] கடற்தளங்களில் நிறுவப்பட்டன. இப்போது இன்னும் 14 மிதப்பிகள் பசிபிக் கடலில் வைக்கப்படலாம் என்று அறியப்படுகிறது. இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகள் பசிபிக் எச்சரிக்கை ஏற்பாட்டில் இருந்தும், பூகம்பம் ஏற்பட்டு சுனாமி தாக்கலாம் என்று அறிவிப்பு ஆஸ்திரேலியா மூலமாக முன்னறிப்பு வந்தும் மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் ஆயிரக் கணக்கான பேரை மரணமடைய விட்டது, மன்னிக்க முடியாத மாபெரும் இமாலயத் தவறாகும்!
அமெரிக்காவின் நோவா ஆணையகம், சூழ்வெளித் துணைக்கோள் இணைப்புக் பணிக்கு [NOAA-M Environmental Satellite Network] ஆண்டுக்கு 800 மில்லியன் டாலர் செலவில் கண்காணிப்பு எச்சரிக்கைப் பணிகளை மேற்பார்வை செய்து வருகிறது. அத்துடன் பசிபிக்கடல் உளவு மிதப்பிகள், அதிர்ச்சி உணரும் கருவிகள் ஆகியவற்றைப் பராமரிக்க வருடத்திற்கு 8 மில்லியன் டாலர் மேலும் தேவைப்படுகிறது. கடலடியில் பதிக்கப்படும் அதிர்ச்சி உணரும் கருவிகள், கடல் மட்ட எழுச்சி உணரும் கருவிகள் [Seafloor Bottom Sensors] நிலநடுக்கத்தை உணர்ந்து ஒரு செ.மீடர் சுனாமிக் கொந்தளிப்பு அளவையும் காணும் திறம் உடையவை! கடலடி அதிர்வுக் கருவிகள் 20,000 அடி [6000 மீடர்] கடல் ஆழத்தில் கப்பல் யந்திர இறக்கி மூலம் வைக்கப் படுகின்றன. 15 அடி [4.3 மீடர்] நீளமுள்ள மிதப்பிகள் நீர் மட்டத்துக்கு மேல் 8 அடி [2.5 மீடர்] உயரத்தில் காணப்படும். கடல் அலைகள் இழுத்துச் செல்லாதபடி, மிதப்பிகளை நாண் மூலம் கட்டிக் கடற்தளத்து மேல் ஆப்பிகளாய் [Anchors] வைக்கப்படும் கனச்சாதனம் பற்றிக் கொள்கிறது. கருவியின் சமிக்கைகள் ஒலி அலைகளாய்த் தாக்கப்பட்டு, மிதப்பியில் [Buoy] பதிவாகி, அவை பிறகு மின்னலைச் சமிக்கையாக மாற்றமாகித் துணைக் கோளுக்கு அனுப்பப் படுகின்றன. ஹவாயி, அலாஸ்கா சுனாமி எச்சரிக்கைத் தளங்களுக்கு துணைக்கோளே தொடர்ந்து தகவல் அனுப்பி வருகிறது. ஹவாயி அல்லது அலாஸ்கா பெற்ற தகவலை 26 பசிபிக் கடற்தள நாடுகளுக்கு அடுத்து அனுப்பப் படுகிறது.
சுனாமி அபாயத்துக்கு நீண்ட கால ஏற்பாடுகள்
இந்திய அரசாங்கம் அனைத்துலகு சுனாமி எச்சரிக்கை ஏற்பாடு ஆலோசனைக்கு உடன்பட்டு நிதியும், நேரமும், நிபுணரும் அளிக்க முன்வந்துள்ளது. சுனாமி, பூகம்பம், வெள்ளம் போன்ற எதிர்பாராத இயற்கை இன்னல்களைக் கையாளத் ‘தேசீயப் பேரழிவு நிர்வாக ஆணையகம் ‘ [National Disaster Management Authority (DMA)] ஒன்றை மத்திய அரசு நிறுவியுள்ளது. பாரத விஞ்ஞானப் பொறித்துறை அமைச்சகம் [Ministry of Science & Technology] முதலில் சுனாமி எச்சரிக்கை மையத்தை அமைப்பதாக இருக்கிறது. பிறகு மாநில அரசாங்கங்கள் நகராட்சி, ஊராட்சி மன்றங்களுடன் கலந்து உரையாடி உள்துறை பேரழிவு நிர்வாக மையங்களை [Local Diaster Management Centres] ஏற்படுத்தி யாரெல்லாம் அதில் நியமனமாக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட வேண்டும். உள்துறை நிர்வாகத்தில் ஊராட்சித் தலைவர், காவல் துறையினர், மருத்துவ மனை டாக்டர்கள், கல்லூரி/பள்ளிக்கூட அதிபதி, வணிகத்துறைகளின் பிரதிநிதி, போக்குவரத்து வாகனப் பிரதிநிதி, ஹோட்டல்களின் பிரதிநிதி, கோயில்/கிறித்துவ ஆலயம்/மசூதி ஆகியவற்றின் பிரதிநிதிகள், கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கு கொள்வது ஊருக்கு நல்லது.
சுனாமி வருவதற்கு முன் வேண்டிய உதவிச் சாதனங்கள், தற்காலிய கூடார அமைப்புக்குத் தார்பாலின் உபகரணங்கள், உணவுப் பண்டங்கள், படுக்கைகள், போர்வைகள், உடைகள், முதல் உதவி மற்றும் பிற மருந்துச் சாதனங்கள், மருந்துகள், சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றை ஊர் ஜனத்தொகைக்கு ஏற்றாற்போல் எங்கே, எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பவை தீர்மானிக்கப்பட்டு திரட்டி வைக்கப் பட வேண்டும். பூகம்ப, சுனாமி ஆகிய இயற்கை இன்னல்கள் எப்படி ஏற்படுகின்றன, எவ்விதப் பாதுகாப்பு முறைகளைக் கையாளுவது, காயம் பட்டோர்களுக்கு எப்படி முதல் உதவி செய்வது, யார் யார் என்ன உதவிகள் செய்வது, அபாய அறிவிப்புப் பயிற்சி முறைகளை எவ்விதம் பின்பற்றுவது என்பதைத் திரைப்படமாக எடுத்துப் பள்ளிக்கூடம், கல்லூரி, தொலைகாட்சி, சினிமா தியேட்டர், ஊராட்சி, நகராட்சி மையங்கள், பொதுப் பேச்சு மேடைகள், கண்காட்சி அரங்கங்கள், சமய/மதக் கூட்டங்கள் ஆகிய இடங்களில் காட்ட வேண்டும். இப்பணிகள் யாவும் தேசீய மக்களின் கடமை நெறிப்பாணியாக ஒவ்வொருவரும் கருதி, ஒழுக்க சிந்தனையுடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவை நீண்டகாலப் பணிகள்.
சுனாமி அபாயத்துக்குக் குறுகிய கால ஏற்பாடுகள்
சுனாமியின் கோர விளைவில் உயிர்தப்பிய சகோதர மாந்தருக்கு உதவி செய்யக் கடமைப் பட்டவர் யார் ? உடனிருக்கும் அனைவருமே விருப்பமுடன் இப்பணியை ஏற்றுக் கொள்வது சாலச் சிறந்தது. ஆன்மீகப் பக்குவமுள்ள பெரும்பாலோர், சுனாதி பாதிப்பில் ஜாதி, மதம், மொழி, இனம், நிறம், சமூகநிலை ஆகியவற்றைப் பாராது, அகதிகளுக்கும், அனாதிகளுக்கும் உதவி செய்தார்களா என்பது சரியாகத் தெரியவில்லை! மதிப்புக்குரிய நண்பர் ஜெயமோகன் கடந்த வாரத்தில் எழுதியுள்ள (ஜனவரி 6, 2005) ‘சுனாமிப் பேரழிவும், பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள் ‘ என்னும் கட்டுரைப் படித்த பின்பு, அபாய காலங்களில் எங்கு மாட்டிக் கொண்டாலும், தமிழ் நாட்டில் மட்டும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்னும் மனப்பயம் எழுகிறது. உலக மெங்கும் உதவிக் கரங்கள் தாவி வரும்போது, தமிழ்நாட்டில் சில குழுவினர் அபாய சமயங்களிலும் உதவி எதுவும் செய்யாது பதுங்கிக் கொள்வது எப்போது மாறப் போகிறது ? எதிர்பாராத அபாய விளைவுகள் ஏற்படும் போது உண்டாகாமல் ஒருமைப்பாடு, உதவி மனப்பான்மை எப்போது தமிழரிடம் உண்டாகப் போகிறது ?
சென்னைக் கடலோர மீனவர் பரிதவிப்புக் காட்சிகளைக் கனடாவின் சி.பி.சி. தொலை அறிவிப்புக் கார்பொரேஷன் [Canadian Broadcasting Corp (CBC)] காட்டி, தகவல் அளிப்போர் கூறியது: ‘இந்தியாவில் ஏழை, பணக்காரன் என்னும் மாறாத இரு பிரிவுகள், சென்னைக் கடலோரங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்டுப் பரிதவிக்கும் மீனவர்களைப் பார்த்தால் பளிச்செனத் தெரிகிறது ‘. மெய்யாகக் காட்சியில் கண்டது என்ன ? ஒரு தற்காலிய தார்பாலின் கூடாரம் கூட அமைக்கப்படாமல் மீனவ ஆடவர், பெண்டிர், சிறுவர் பலர், பாலை வனமான கடற்கரைப் பகுதியில் அங்குமிங்கும் காற்றில் பறக்கும் கிழிந்த துணிகளைக் கூரையாக வேய்ந்து கொண்டு குச்சிக்குடில் நிழலில் ஒதுங்கி அகதிகள் போல் விழித்துக் கொண்டிருந்தார்கள்! அதே சமயத்தில் சென்னை நகர வாசிகள் ஒன்றும் நிகழாதது போல் காட்டிக் கொண்டு வீதிகளில் காரிலும், ஆட்டோவிலும் பயணம் செய்து என்றும் போல் தமது வேலைகளில் மும்முரமாய் ஈடுப்பட்டிருந்தனர்! இரண்டு காட்சிகளையும் அடுத்தடுத்துப் பார்க்கும் போது ‘நெஞ்சு பொறுக்குதில்லையே ‘ என்னும் பாரதியாரின் பாட்டுதான் எனக்கு நினைவில் பலமாய் ஒலித்தது!
(கட்டுரை தொடரும்)
தகவல்கள்:
Picture Credits: AP Photos, Time, Newsweek, Toronto Star, The Hindu & The Following Web Sites.
1. Indian Ocean Tsunami Warning System Will Cost Just 1.9 Million-Dollar (Jan 4, 2005) [http://news.scotsman.com/latest.cfm]
2. UNESCO Ready to Create Tsunami Warning System in Indian Ocean (Jan 4, 2004) [www.itar-tass.com/eng]
3. Physics of Tsunamis [http://wcatwc.gov/physics.htm]
4. How a Tsunami Forms ? Toronto Star (Dec 27, 2004)
5. Asia to Seek Help on Warning System, Indonesia Death Rates 19% (Jan 4, 2005) [www.bloomberg.com/apps/news.
6. Tsunami Warning System [www.geophys.washington.edu/tsunami] (Jan 3, 2005)
7. The Tsunami Warning System in the Pacific (May 8, 1997)
8. The Global Ocean Observing System (GOOS) [http://ioc.unesco.org/goos/docs/whatis01.htm]
9. Tsunami Research Activities [www.prh.noaa.gov/pr/itic]
10 Early Warning System Could Have Saved Lives [www.ctv.ca/servlet/ArticleNews/] (Jan 5, 2005]
11 US Geological Survey ‘Warnings Could Have Saved Thousands ‘ (Dec 27, 2004)
12 CBC News ‘Hell, Highwater & Heartache ‘ [www.cbc.ca/newsbackground/asia_earthquake] (Jan 6, 2005)
13 Physics of Tsunami By: Frank Gonzalez [www.sciam.com/] (May 18, 1999)
14 Tsunami Ready Community Requirements [www.prh.noaa.gov/ptwc/tsunamiready/requirements.htm]
15 Press Information Bureau, Govt of India [www.pib.nic.in/release] (Jan 11, 2005)
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 12, 2005)]
- கடிதம் ஜனவரி 13,2005 – சுனாமி உதவி
- உயர் பாவை 4
- டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்
- விடுபட்டவைகள்-5 கவசவாகனம்
- கடிதம் ஜனவரி 13,2005 – காக்கி நிக்கர்களும் அறிவுஜீவிகளின் வதந்திகளும்
- கடிதம் janavari 13,2005 – ஞாநி, சுந்தர ராமசாமி ஆகியோரின் கவனத்துக்கு
- கடிதம் ஜனவரி 13,2005 – ஜெயமோகன் சுனாமி பதிவு பற்றி
- கடிதம் ஜனவரி 13,2005
- வட அமெரிக்க தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- சுனாமியும் ஃபெட்னாவும் (FETNA ):::
- சீமான் வரலாறுடன் ஒரு சந்திப்பு
- கடிதம் ஜனவரி 13,2005 – கே.ரவி ஸ்ரீநிவாஸ்: அரவிந்தன்: பா.ரெங்கதுரை
- சுனாமி: களப்பணியில் எம்ஸ் இந்தியா:
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005
- சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மையின் நூல்கள்
- ஓவியப் பக்கம் – பதிமூன்று- ராபர்ட் ரோஷன்பர்க் – பரீட்சார்த்த ஓவிய முயற்சிகளின் சுவாரஸிய களம்
- கடிதம் ஜனவரி 13,2005
- கடிதம் ஜனவரி 13,2005
- மன்னிக்க வேண்டுகிறோம்
- சுனாமி : மீட்சியின் இதிகாசம்
- சுனாமி பற்றிய அனாச்சாரமான சிந்தனைகள்
- தமிழர் திருநாள்….!
- சென்னை புத்தக கண்காட்சியில்….
- ஜ.ரா.சுந்தரேசன் முதல் பாக்கியம் ராமசாமி வரை (சென்னை புத்தகக் கண்காட்சி ’05)
- பின்நவீனத்துவம் ,தேசியம் ,சோசலிசம் ,கலாச்சாரச் சார்புவாதம் : இஜாஸ் அஹமது
- சுனாமியால் விளைந்த சிந்தனைகள்
- கடலின் கோபம், கடவுளின் சாபமாம்!
- சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்
- பெண்ணின் உடையும், உணர்வுகளும்
- யார் வீரன்…. ? ஜெயந்திரர் நிலை.
- சொன்னார்கள்… சொன்னார்கள்
- வந்தால் சொல்லுங்கள்
- நாலேகால் டாலர்
- நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54
- சு ன ா மி
- அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு
- தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!
- பேரலை
- சுனாமி
- பழைய மின்சாரம்
- கதவைத் தட்டிய கடலலைகள்
- காதல்
- ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா
- அவளைப் பார்த்தேன் – அன்றொரு நாள் (மூலம் :சித்தலிங்கையா-கன்னடம்)
- கல்லா இரும்பா ?
- பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்
- ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)
- பிணம் செய்த கடல்
- பெருந்துளியொன்று
- கவிதை 2
- ஐக்கூ கவிதைகள்
- நாம் நாமாக
- வேண்டாம் புத்தாண்டே..!
- வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.
- பயிர்
- வாழ்க்கை என்பது!….
- கீதாஞ்சலி (11) – என் பிரார்த்தனை (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பிணக்கு
- மரம் பேசிய மவுன மொழி !
- கவிக்கட்டு 44
- பெரியபுராணம் — 26
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை