தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

கே.ஜே.ரமேஷ்


கடான்ஸ்க் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அரசாங்கம் தணிக்கைகளை வெகுவாக குறைத்தது. இதனால் பத்திரிக்கைச் சுதந்திரமும், மக்களின் பேச்சு சுதந்திரமும் ஓரளவுக்கு மீட்கப்பட்டன. சாலிடாரிடியின் வார இதழ் விற்பனை 50000 (ஐந்து லட்சம்) பிரதிகளை எட்டியது. தடை செய்யப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துகள் மீண்டும் அச்சிலிடப்பட்டன. அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் அனுமதிக்கப்பட்டன. கடவுச் சீட்டுக்கான புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் மக்கள் மற்ற நாடுகளுக்கும் உள்நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் சுலபமாக பயணிக்க முடிந்தது. லெக் வலென்சாவும் உலகத் தொழிலாளர் அமைப்பின் அழைப்பை ஏற்று இத்தாலி, ஜப்பான், ஸ்வீடன், பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். ஆனாலும் சாலிடாரிடி அமைப்பு ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அரசாங்கம் அதன் தனித்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் முட்டுக்கட்டைப் போட தன்னாலான எல்லா முயற்சிகளியும் மேற்கொண்டுதானிருந்தது. இதனால் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளும் போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருந்தன. அதே நேரம் லெக் வலென்சா நாடு முழுவதும் பயணித்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து மிதவாதத்தைக் கண்ணியத்தோடு பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார். சோவியத் யூனியனைக் கோபமூட்டாமல் போலந்து நாட்டில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டுமென்றால் மறுமலர்ச்சித் திட்டங்கள் நிதானமாகத்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் நம்பினார். அதனால் தொழிலாளர்களை இந்த விஷயத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். வலென்சாவின் இந்த மிதவாத போக்கு தீவிரவாத போக்குடைய தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருந்தாலும் 1981ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சாலிடாரிடியின் முதல் தேசிய மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராகவும் அமைப்பைப் பிரதிநிதித்து பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரம் படைத்தவராகவும் லெக் வலென்சா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையில் அந்த ஆண்டின் தொடக்கத்தில் வாடிகன் நகருக்குச் சென்ற லெக் வலென்சாவை போப்பாண்டவர் வரவேற்று கெளரவித்தார்.

அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலந்து நாட்டின் ராணுவத் தலைவரான வொய்செக் யெருசெல்ஸ்கி (Wojciech Jaruzelski) ஆட்சித் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். பின்னர் அக்டோபர் மாதம் PZPRஇன் கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மூன்று முக்கியப் பதவிகளையும் ஒருசேர வகித்த யெருசெல்ஸ்கி ஆரம்பத்தில் சாலிடாரிடியுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக் கொண்டது என்னவோ உண்மை. ஆனால் கட்சியின் நெருக்குதலும், பொருளாதார வீழ்ச்சிக்கான அறிகுறிகள் ஏற்படுத்திய பயமும், போலந்து மீதான சோவியத் யூனியனின் படையெடுப்புக்கானச் சாத்தியக் கூறுகளும் சாலிடாரிடியுடனான பேச்சு வார்த்தைகள் பற்றிய அவரது நிலைப்பாட்டை மாற்றி விட்டது. அதன் விளைவாக பேச்சு வார்த்தைகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப் பட்டன. அந்த நேரம் தீவிர கொள்கைப் பிடிப்புள்ள தொழிலாளர்கள் கம்யூனிஸ ஆட்சியின் எதிர்காலம் பற்றியும் சோவியத் நாட்டுடனான ராணுவ உடன்பாடு பற்றியும் மக்களின் கருத்தறிய தேசிய அளவில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். அரசாங்கம் சாலிடாரிடி மீது நேரடி நடவடிக்கை எடுக்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் தொழிலாளர்களின் கோரிக்கை ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது. டிசம்பர் மாதம் 13ம் தேதி யெருசெல்ஸ்கி ராணுவ ஆட்சியை அறிவித்து விட்டார். நாட்டின் எல்லா பகுதிகளிலும் ராணுவம் குவிக்கப்பட்டது. தொழிலாளர்களின் போராட்டங்கள் நசுக்கப்பட்டன. மக்களின் சுதந்திரம் குறைக்கப்பட்டு எஞ்சியவையும் கண்காணிக்கப்பட்டன. சாலிடாரிடி அமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. லெக் வலென்சா உட்பட பல தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் சிறை வைக்கப்பட்ட லெக் வலென்சா மீண்டும் கடான்ஸ்க்கில் இருக்கும் கப்பல் கட்டுமானத் தளத்தில் பழைய வேலையிலேயே சேர விண்ணப்பித்தார். அரசாங்கமும் அதற்கு இணக்கம் தெரிவித்து அவரை ஒரு சாதாரணத் தொழிலாளியைப் போல் நடத்தினாலும், உண்மையில் அவர் 1987ம் ஆண்டு வரை வீட்டுக் காவலில் தான் வைக்கப்பட்டு இருந்தார். சாலிடாரிடி மறைமுகமாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தது. தீவிர போக்குள்ள தொழிலாளர்கள் ஒரு குழுவாகவும் மித வாத போக்குடையவர்கள் லெக் வலென்சாவின் கீழ் ‘குடி மக்கள் கமிட்டி ‘ என்று மற்றுமொரு குழுவாகவும் செயல் படத் தொடங்கினர்.

1983ம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவ ஆட்சியைத் திரும்பப் பெற்றாலும், பெருவாரியான தடைகள் அமலிலிருந்து நீக்கப்படவில்லை. அந்த வருடம் அக்டோபர் மாதம் லெக் வலென்சாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கபட்டது என்ற அறிக்கை வெளியாயிற்று. ஆனால் நாட்டை விட்டு வெளியே சென்றால் மீண்டும் திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டு விடும் என்ற பயத்தில் வலென்சா நோபல் பரிசைப் பெற்றுக் கொள்ள நார்வே நாட்டில் இருக்கும் ஆஸ்லோவிற்குச் செல்லவில்லை. அவரது மனைவி தான் அவருக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். அப்பரிசை வழங்கும் போது நோபல் பரிசுக் கமிட்டியின் தலைவர் வலென்சாவின் தேர்வுக்கான அடிப்படைக் காரணங்களை மிக அழகாக எடுத்துரைத்தார் – ‘ லெக் வலென்சாவின் பங்களிப்பு போலந்து நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. அவர் தோற்றுவித்த சாலிடாரிடி போலந்து நாட்டுத் தொழிலாளர்களுக்காக இருந்தாலும் சாலிடாரிடி என்ற சொல் மனித வர்க்கத்தின் ஒருமைப்பாட்டை குறிக்கும் சொல்லாகும். அதனாலேயே அது நம் எல்லோருக்கும் உரியதாகிவிட்டது. அவர் குரலை உலகமே கேட்டது. அவர் கூற வந்த செய்தியை உலகமே புரிந்து கொண்டது. அவருக்கு அளிக்கும் இந்த அமைதிக்கான நோபல் பரிசு அதை உறுதி செய்வதாகவே அமைகிறது. லெக் வலென்சா தனது அறவழிப் போராட்டத்தினால் சாலிடாரிடி என்ற சொல்லுக்கு ‘ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுடன் போராடும் தொழிலாளர்களின் ஒருமைப்பாடு ‘ என்ற அர்த்தத்திற்கும் மேலாக ஒரு புனிதத்தன்மையை கொடுத்துவிட்டார். சாலிடாரிடி முரண்பாடுகளுக்கும் மாறுபட்ட கருத்துகளால் உண்டாகும் மோதல்களுக்கும் அமைதியான பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியும் என்ற மன உறுதியைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. லெக் வலென்சா மனித நேயத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் உலகிலுள்ள மற்ற போராளிகளுக்கு மனவெழுச்சி அளிப்பவராக, ஒரு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார் என்பதே நோபல் பரிசுக் கமிட்டியின் கருத்து. அவர் மனித நேயத்தை விட முக்கியமானது வேறொன்றுமில்லை என்பதை இன்னுமொரு முறை புரிய வைத்துள்ளார் ‘ என்று கூறினார்.

ஆனால் போலந்து அரசாங்கம் வலென்சாவிற்கு அரசியல் காரணங்களுக்காக நோபல் பரிசு கொடுத்ததாகக் கண்டித்து அறிக்கை விட்டது.

சோவியத் யூனியன் ராணுவத் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஐயமும் பயமும் 1985ல் மிக்கைல் கோர்பச்சேவ் அதிபரானப் பிறகே விலகியது எனலாம். கோர்பச்சேவ்வின் ‘க்லாஸ்நாஸ்ட் ‘ மற்றும் ‘பெரெஸ்ட்ராய்கா ‘ கொள்கைகள் போலந்து மீதான படையெடுப்பைப் பற்றிய பயத்தை நீக்கியது எனக்கூறலாம். அவரது கொள்கைகளால் போலந்து மட்டுமல்லாமல் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த எல்லா நாடுகள் விஷயத்திலும் சோவியத் தனது மூக்கை நுழைப்பதை நிறுத்திக் கொண்டது என்பது வரலாற்று உண்மை. இதனால் உற்சாகமடைந்த போலந்து மறுமலர்ச்சித் திட்டங்களை மீண்டும் கையிலெடுத்துக் கொண்டது. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகள் தோன்றுவதை அனுமதிக்குமளவுக்கு அரசின் போக்கு மாறியது. இருந்தும் சாலிடாரிடி மட்டும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட இயக்கமாகவே இருந்து வந்தது. ஆனால் தடையைப் பொருட்படுத்தாமல் வெளிப்படையாக அது தன் நடவடிக்கைகளைத் தொடர்ந்தது என்னவோ உண்மை. அடுத்து வந்த சில வருடங்கள் போலந்து நாட்டிற்கு சோதனையாகவே அமைந்தது. பொருளாதார வீழ்ச்சியும் மீண்டும் தொழிலாளர்கள் எதிர்ப்பும் அதிகரித்துக் கொண்டே போயின. அதன் விளைவாக ஆட்சியில் இருந்த PZPR வலென்சாவிடமும் மற்ற எதிர்கட்சித் தலைவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. 1989ம் ஆண்டு நடந்த அந்த வட்ட மேஜைப் பேச்சு வார்த்தை 59 நாட்கள் தொடர்ந்தது. லெக் வலென்சா எதிர்கட்சிக் கூட்டணிக்குத் தலைமை தாங்கி பேச்சு வார்த்தையை ஒரு சமரச முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அதன்படி சாலிடாரிடி மீதான தடை அகன்றது. சட்ட பூர்வமாக அந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் மேல்சபை கூடுதல் அதிகாரங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக ஜனாதிபதி பதவியையும் உருவாக்கினார்கள். சாலிடாரிடி பொதுத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அளவு இடங்களில் போட்டியிட அனுமதி பெற்றது. ஒப்பந்தப்படி PZPRம் அதன் கூட்டணி கட்சிகளும் 65% இடங்களை தக்க வைத்துக் கொண்டன. அந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த தேர்தலில் சாலிடாரிடி கீழ் சபையில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட 161 இடங்களிலும் வெற்றி பெற்றது. மேல்சபைக்கான இடங்களில் அனுமதிக்கப்பட்ட 100 இடங்களில் 99 இடங்களில் வென்றது. கூட்டணி அரசாங்கத்தில் கம்யூனிஸ கட்சியின் தலைமையில் சாலிடாரிடியை சிறுபாண்மைக் கூட்டணி கட்சியாய் பங்கு பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் லெக் வலென்சா அதற்கு மறுத்து விடவே பாராளுமன்றம் சாலிடாரிடியின் தலைமையில் அமைந்த அரசை அங்கீகரிக்கும்படி ஆயிற்று. கம்யூனிஸத்திற்குப் பதிலாக மேற்கத்திய ஜனநாயக முறையையும் திறந்து விடப்பட்ட பொருளாதாரச் சந்தையையும் கொண்டுவரும் குறிக்கோளோடு சாலிடாரிடி மஸோவீகி என்பவரை பிரதமராக நியமித்தது. 1944ம் ஆண்டுக்குப் பிறகு பதவியில் அமரும் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமராக அவர் திகழ்ந்தார். ஜெனெரல் யெருசெல்ஸ்கி போலந்தின் முதல் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். லெக் வலென்சா இந்த அரசாங்கத்தில் எந்த பதவியும் வகிக்காமல் விலகி இருந்தார்.

1990ம் ஆண்டு PZPR உத்யோகப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது. அதே சமயம் சாலிடாரிடி ஒரு அரசியல் கட்சி என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு நடந்த இரண்டாவது தேசிய மாநாட்டில் வலென்சா மீண்டும் சாலிடாரிடியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதற்கு அடுத்த மாதமே சாலிடாரிடியின் ஒருமைப்பாட்டில் விரிசல் காணத்தொடங்கியது. வலென்சா தன் பங்குக்கு மறுமலர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும், பழைய கம்யூனிஸ்ட் ஆட்சியில் நியமித்த அதிகாரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு மஸோவீகியின் நிர்வாகத்தை குறை கூறத் தொடங்கியவுடன் அந்த விரிசல் பெரியதாகி விட்டது. இவை போதாதென்று யெருசெல்ஸ்கி அந்த நேரத்தில் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். விரிசலில் விழுந்த கோடலியைப் போல் அந்த அறிவிப்பு சாலிடாரிடியை இரு குழுக்களாகப் பிளந்தது. புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் லெக் வலென்சா, மஸோவீகி இருவருமே போட்டியிட முடிவு செய்தனர். 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி நடந்த அந்த ஜனாதிபதி தேர்தலில் லெக் வலென்சா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்குப் பின் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்த முதல் தேர்தல் அது.

தேர்தலில் வென்றவுடன் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு யான் பீலெக்கி என்பவரை புதிய பிரதமராக நியமித்தார். மந்திரி சபைத் தேர்வு வலென்சாவின் அங்கீகாரத்துடன் தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டார். ஆனால் பிரதமரது நிர்வாகத்தில் தொடர்ந்த வலென்சாவின் தலையீட்டால் மனக்கசப்பு வளர்ந்தது தான் மிச்சம். மேலும் பீலெக்கி அரசு மறுமலர்ச்சி திட்டங்களையும் துரிதப்படுத்த முடியவில்லை. இதனால் லெக் வலென்சாவின் செல்வாக்கு மெதுவாகக் குறையத் தொடங்கியது. அரசின் செயற்திறனும் குறைந்து கொண்டே வந்தது. இதை உணர்ந்த லெக் வலென்சா பாராளுமன்றத்தை மீண்டும் கலைத்து விட்டு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அக்டோபர் மாதம் நடந்த அந்தத் தேர்தல் தான் போலந்து நாட்டின் சுதந்திரமாக நடத்தப்பட்ட முதல் பாராளுமன்ற தேர்தல். ஆனால் அந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பாண்மையான ஓட்டுகள் கிடைக்காததினால் அந்த அரசும் ஆட்டம் காணத்தொடங்கியது. 1993ம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்தவுடன் வலென்சா மீண்டும் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு அடுத்த தேர்தலை அறிவித்தார்.

இந்த முறை மக்கள் சீர்திருத்தக் கட்சிகளை நம்பாமல் முன்னாள் கம்யூனிஸ சித்தாந்தங்களைச் சார்ந்த கட்சிகளுக்கு ஓட்டளித்தனர். இதைத் தொடர்ந்து வலென்சாவின் பிரபலமும் செல்வாக்கும் சரியத் தொடங்கியது. மேலும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்துடன் லெக் வலென்சாவிற்கு இருந்த தொடர்பு வெளிப்படுத்தப்பட்டவுடன் அவரது புகழ் குறையத் தொடங்கியது. 1995ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் லெக் வலென்சா மீண்டும் போட்டியிட்டார். ஆனால் இம்முறை தேர்தலில் முன்னாள் கம்யூனிஸ்ட் ஒருவரிடம் சொற்ப வித்தியாசத்தில் தோற்றார். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பெயரில் (Lech Walesa Institue) என்ற மன்றம் (Foundation) ஒன்றை நிறுவினார். அதன் முக்கிய குறிக்கோள் போலந்து நாட்டில் ஜனநாயகத்தையும் திறந்து விடப்பட்ட பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவது, ஐரோப்பிய ஸ்தாபன அமைப்பில் போலந்தை நிரந்தரமாக ஒருங்கிணைப்பது போன்றவையாகும். அதே ஆண்டு லெக் வலென்சா ஒரு புதிய அரசியல் கட்சியைத் (Christian Democracy of the 3rd Polish Republic) தொடங்கி அதற்கு தலைமை தாங்கினார்.

2000ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட லெக் வலென்சா மிகப்பரிதாபமாக 1% ஓட்டுக்களை மட்டுமே பெற்று தேர்தலில் தோல்வியைத் தழுவினார். பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து கியூபாவின் மக்களுக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கியவர் கடந்த ஆண்டு (2004) நவம்பர் மாதம் உக்ரெயின் நாட்டுக்குச் சென்றார். அவரது இந்தப் பயணம் உக்ரெயின் நாட்டு அதிபர் தேர்தலில் தொடங்கிய சர்ச்சைக்குத் தீர்வு காண்பதே ஆகும். கீவ் நகரில் போராட்டக்காரர்களின் மத்தியில் உரை நிகழ்த்தும் போது ‘உயர்ந்த சிந்தனைகளுக்காகவும் கொள்கைகளுக்காகவும் மட்டுமே என் வாழ்நாள் முழுதும் போராடி வந்திருக்கிறேன். போலந்து நாட்டில் இருந்த நிலைமை இங்கிருப்பதை விட மிக மோசமானது. உங்கள் ஊக்கத்தையும் ஈடுபாட்டையும் பார்க்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்றே தோன்றுகிறது ‘ என்று கூறியவர் அதிபர் விக்டர் யனுகோவிச்சிடம் ராணுவத்தைக் கொண்டு போராட்டத்தை அடக்க முற்படவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். யனுகோவிச்சிடம் அவர் ‘நீங்கள் தோற்பது உறுதி. நீங்கள் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. இரத்த ஆறுகளின் நாடுவே தோற்பதா அல்லது இரத்தம் சிந்தாமல் தோற்பதா என்பதை மட்டும் முடிவு செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது ‘ என்று கூறியவுடன் யனுகோவிச் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு மறு தேர்தலுக்கு உத்தரவிட்டார். அந்த மறு தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளரான விக்டர் யுஷ்சென்கோ வெற்றி பெற்றார்.

‘உலகச் சந்தையில் வெறும் வார்த்தைகளின் வரவும் இருப்பும் தேவையை விட மிக அதிகமாக ஆகிவிட்டது. அதனால் இனி செயல்கள் வார்த்தைகளைத் தொடரட்டும் ‘ என்று கூறிய லெக் வலென்சாவின் பங்களிப்பு மனித குலத்திற்கு மிக மிக முக்கியமானதாகும். ஐரோப்பாவில் கம்யூனிஸத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் அவருடைய பங்கு போப்பாண்டவர் ஜான் பால் II மற்றும் சோவியத் அதிபர் மிக்கைல் கோர்பச்சேவ் ஆகியோரது பங்களிப்புக்கு இணையானது என்றே சொல்லலாம். சமீபத்தில் அவரைப் பெருமைப் படுத்தும் விதமாக கடான்ஸ்க் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள் போலந்து நாட்டினர்.

kalelno5@yahoo.com

ஒரு கொசுறுச் செய்தி : சுமார் 20 வருடங்களுக்கு முன் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ‘யேசுவின் தோழர்கள் ‘ என்ற நாவலை எழுதியுள்ளார். கதை நடக்குமிடம் போலந்து நாட்டில். அவர் 1980களில் ஐந்து வருடம் வார்சா நகரில் வசித்துவிட்டு திரும்பியவுடன் எழுதப்பட்ட நாவல் என்பதால் அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைகளையும் சாலிடாரிடி பற்றியும் எழுதியிருப்பதாக அறிகிறேன். அந்த நாவலைச் சமீபத்தில் கே.வி.ராமனாதன் ஆங்கிலத்தில் (Comrades of Jesus) மொழி பெயர்த்திருக்கிறார்.

—-

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

கே.ஜே.ரமேஷ்


ஒரு சாதாரணத் தச்சுத் தொழிலாளியின் மகன் உலகத்திலுள்ள ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் தலைவனாக, ஆதர்ஷ புருஷனாக ஏன் ஒரு கடவுளாகவே விஸ்வரூபமெடுத்த கதை தெரியுமா ? அவர் இல்லையேல் போலந்து நாட்டின் லெனின் கப்பல் கட்டுமான தொழிலகத்தில் வேலை நிறுத்தம் நடந்திருக்காது. சாலிடாரிடி (Solidarity) என்ற தொழிற்சங்கம் தோன்றியிருக்காது. போலந்து நாட்டில் இராணுவச் சட்டம் அமலுக்கு வந்திருக்காது. இராணுவச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் தொடர்ந்திருக்காது. கம்யூனிஸத்தை வீழ்த்தி ஜனநாயகம் ஆட்சி பீடம் ஏறியிருக்காது. இவ்வளவு ஏன் ? ரஷ்யாவின் கம்யூனிஸக் கோரப்பிடியிலிருந்து மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் விடுபட்டிருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கக் கூடும். அவர் தான் லெக் என்று செல்லமாக அழைக்கப்பட்ட லெக் வலென்சா. ஜனநாயக முறையில் தேர்தலில் வென்று தனது நாட்டின் அதிபராகப் பதவியேற்றதும் பின்னர் அடுத்த தேர்தலிலேயே அவரது அரசாங்க வழிமுறைகள் பிடிக்காததினால் மக்களால் தோற்கடிக்கப்பட்டவருமான லெக் ஒரு அபூர்வப் பிறவி. விடுதலைக்கானப் போராட்டத்தில் தன்னிகரற்று விளங்கிய அவர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தவுடன் பதவிக்குப் பொருந்தாத வழிமுறைகளைப் பின்பற்றி மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானார். அவசரக் காலத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அவர் போலந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பி ஜனநாயகப் பாதையில் பயணித்தபோது அதே மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். ஆனால் சரித்திரத்தில் அவருக்கு உண்டான இடத்தை யாராலும் மறுக்கவும் முடியாது அதை அவரிடமிருந்து தட்டிப்பறிக்கவும் இயலாது.

லெக் 1943ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி ஒரு ஏழைத் தச்சரின் குடும்பத்தில் பிறந்த போது போலந்து ரஷ்யாவின் பிடியில் இருந்தது. தனது தொடக்க நிலைப் பள்ளிப் படிப்பையும் தொழிற்கல்வியையும் முடித்த லெக் 1967ம் ஆண்டு லெனின் கப்பல் கட்டுமானத் தொழிற்சாலையில் எலக்ட்ரீஷனாக வேலைக்குச் சேர்ந்தார். தனுடா கோலோஸ் என்பவரை 1969ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அவர் மூலம் 8 குழந்தைகளுக்கு தந்தையானார். ரோமன் கத்தோலிக்க நம்பிக்கையில் ஊறி வளர்ந்த லெக் தொழிலாளர்களுக்கெதிரான அடக்கு முறையைக் கண்டு மிகவும் கொதிப்படைந்தார்.

1970ம் ஆண்டு போலந்து நாட்டில் ஆட்சியில் இருந்த போலிஷ் ஐக்கிய தொழிலாளர் கட்சி (போலிஷ் மொழியில் சுருக்கமாக PZPR என்றழைக்கப் பட்ட கட்சி) அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த முடிவெடுத்தபோது அதற்கெதிரான போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் போராட்ட வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியது. அதில் 44 கப்பல் கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்து போயினர். சுமார் ஆயிரம் பேர்கள் காயங்களுடனும் அதில் 200 பேர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். போராட்டத்தை அடக்க முற்பட்டாலும் PZPR அதில் தோல்வியே கண்டது. அதன் விளைவாக PZPRன் ஆட்சித்தலைவரான கொமுல்கா பதவி இழக்க நேரிட்டது. விலை உயர்வுக்கான் ஆணையும் திரும்பப் பெறப்பட்டன. போராட்டத்தை முன்னிருந்து நடத்திய கமிட்டியில் உறுப்பினராக இருந்ததாக லெக் வலென்சாவை அரசாங்கம் கைது செய்து சமூகத்திற்கெதிரான வன்முறை குற்றச்சாட்டின் கீழ் ஓராண்டு காலம் சிறையில் அடைத்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்பும் அதனால் கிடைத்த சிறைத் தண்டனையும் லெக் கப்பல் கட்டுமானத் தொழிலாளர்களின் தலைவனாக உருவெடுக்க உதவியது.

கொமுல்கா பதவி நீங்கியவுடன் PZPR புதுப்பொலிவுடன் பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு மேலை நாடுகளிடம் அதிக அளவில் கடன் பெற்றது. அவ்வாறு பெற்ற கடனைக் கொண்டு ஏற்றுமதிக்கான உற்பத்தியைப் பெருக்குவதே அதன் திட்டம். அத்திட்டம் குறுகியகால பயனை அளித்தாலும் 1970களின் மத்தியில் போலந்து நாட்டை மிகப்பெரிய கடனாளியாக ஆக்கி பொருளாதார வீழ்ச்சிக்கும் கொண்டு சென்றது. வேறு வழியின்றி 1976ம் ஆண்டு PZPR மீண்டும் விலையேற்றத்தை அறிவித்தது. இந்த முறையும் அதற்கெதிரான போராட்டங்கள் வெடித்து PZPR விலையேற்ற முடிவை திரும்பப் பெறும் கட்டாயத்திற்குள்ளானது. இந்தப் போராட்டத்தின் விளைவாக லெக் வலென்சா தனது வேலையை இழக்க நேரிட்டது. ஆனால் இந்த முறை தொழிலாளர்களுக்கு ஒரு அமைப்பு சார்ந்த ஆதரவு கிடைத்தது. படித்த அறிவாளிகள் ஒன்று சேர்ந்து தொழிலாளர் தற்காப்புக் கமிட்டி (KOR) என்ற அமைப்பை நிறுவியிருந்தனர். மாணவ சமுதாயமும் தங்கள் ஒற்றுமைக்கென மாணவர் ஒருமைப்பாட்டுக் கமிட்டி (Committee for Student Solidarity) என்ற ஒன்றை நிறுவியிருந்தார்கள். இந்த இரு அமைப்புகளும் தொழிலாளர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்ததுடன், முற்போக்கான பரந்த சீர்திருத்தங்களைக் கொண்டு வருமாறு PZPRஐயும் நிர்பந்தப்படுத்தத் தொடங்கினர். ரோமன் கத்தோலிக்க தேவாலயம் தன் பங்குக்கு அரசாங்கத்திற்கு எதிராகவும் மக்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கத் தொடங்கியது.

இதற்கிடையில் லெக் வலென்சா மற்ற தொழிலாளர் தலைவர்களைச் சேர்த்துக் கொண்டு சுதந்திரமாக இயங்கக்கூடிய விதத்தில் தொழிற்சங்கங்களை தோற்றுவித்து அதன் நடவடிக்கைகளில் தீவிரமாகக் கலந்து கொண்டிருந்தார். நிரந்தர வேலையின்றி தன்னை நம்பியிருந்த குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. அதனால் தற்காலிக வேலைகளில் இருந்து கொண்டே தொழிலாளர் நலனுக்காகவும் பாடுபட வேண்டிய சூழ்நிலை. அவரது தீவிர தொழிற்சங்க நடவடிக்கைகளினால் அரசாங்கம் அவரை சதா சர்வகாலமும் கண்காணிப்புக்கு உள்ளாக்கி இருந்தது. அதனால் அவர் பல முறை சிறை செல்ல வேண்டியதாயிற்று. அந்த காலகட்டத்தில் தான் போலந்துப் பிரஜையான கார்டினல் கரெல் வொய்டுவா (Cardinal Karol Wojtyla) போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சமூக சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளுக்கு கத்தோலிக்க தேவாலயத்தின் ஆதரவு பலப்பட்டது. 1979ம் ஆண்டு போலந்து நாட்டிற்கு விஜயம் செய்த போப்பாண்டவர் அங்குள்ள தேவாலயங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

1980ம் ஆண்டு ஜூலை மாதம் அரசாங்கம் மறுபடியும் விலையேற்றத்தை அறிவித்தது. அது போதாதென்று தொழிலாளிகளின் ஊதியக் கட்டுப்பாட்டையும் அமல் படுத்தியது. மீண்டும் தொழிலாளர் போராட்டம் – இம்முறை தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். லெக் வலென்சா லெனின் கப்பல் கட்டுமானத் தொழிற்சாலையின் ஊழியராக இல்லாததால் நிர்வாகம் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தது. இதனைப் பொருட்படுத்தாத லெக் வலென்சா வேலியேறி சுற்றுச் சுவரைக் கடந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து கொண்டார். தொழிலாளர்கள் வலென்சாவை வேலைநிறுத்தப் போராட்டக் கமிட்டியின் தலைவராக நியமித்து நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரத்தையும் அவருக்கு வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். மூன்று நாட்கள் கழித்து நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்டது. ஆனால் மற்ற தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் பொருட்டு கப்பற் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தனர். லெக் வலென்சாவின் புகழும் லெனின் கட்டுமானத் தொழிற்சாலையைக் கடந்து கடான்ஸ்க் முழுவதும் பரவியது. இதனையடுத்து லெக் வலென்சா அனைத்து தொழிற்சாலை வேலை நிறுத்தக் கமிட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் கமிட்டி பால்டிக் கடற்கரை தொடங்கி நிலக்கரி சுரங்க நகரமான சிலேசியா வரை சுமார் 50000 தொழிலாளர்களை ஒன்றிணைத்தது. புதுத் தலைவரைக் கொண்ட கமிட்டி உடனே ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்தது. இந்த பொது வேலை நிறுத்தத்தின் முக்கிய கோரிக்கைகளாக தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்த உரிமை அங்கீகரிக்கப்படவேண்டுமென்றும், சுதந்திரமான தொழிற்சங்கங்கள் நிறுவ உரிமை வழங்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று கொண்டிருக்க, கோரிக்கைகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டிருந்தது. பேச்சுரிமை, அரசியல் கைதிகளின் விடுதலை, மதச் சார்பான சுதந்திரம், எழுத்துச் சுதந்திரத்திற்கான தணிக்கை நீக்கம் போன்ற 21 அம்சங்கள் கொண்ட கோரிக்கைகள் கையால் எழுதப்பெற்று கப்பற் கட்டுமானத் தொழிற்சாலையின் முன் கதவுகளில் தொங்க விடப்பட்டது. அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி அரசாங்கம் வேறு வழியின்றி கோரிக்கைகளுக்கு நிபந்தனையற்ற ஒப்புதல் வழங்கியது. தொழிலாளர்கள் சுதந்திரமாகச் செயல்படும் விதத்தில் தொழிற்சங்கங்கள் அமைக்கவும் தங்களது உரிமைகளுக்காக போராட்டம் நடத்தவும் அனுமதித்து ‘கடான்ஸ்க் ஒப்பந்தம் ‘ கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சுமார் 10 மில்லியன் (சுமார் 1 கோடி தொழிலாளர்கள் – இது நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 25 விழுக்காடு) தொழிலாளர்கள் லெக் வலென்சாவின் தலைமையின் கீழ் அமைந்த அனைத்துத் தொழிற்சாலை வேலை நிறுத்தக் கமிட்டியில் சேர முன்வந்தனர். இந்த கமிட்டி தான் சாலிடாரிடி (Solidarity) என்ற பெயரில் ஒரு தேசிய தொழிற்சங்க சம்மேளனமாக உருமாற்றம் கண்டது.

சாலிடாரிட்டி அதிகாரப்பூர்வமாக அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு அக்டோபர் மாதம் அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்றது. அது இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏற்பட்ட அதிகாரப்பூர்வமான சுதந்திரமாகச் செயல் படக்கூடிய முதல் தொழிற்சங்கமாக நிலை பெற்றது. கத்தோலிக்க தேவாலயங்களின் ஆதரவாலும் போப்பாண்டவரின் ஆதரவாலும் சாலிடாரிடியின் நிலைப்பாடு மேலும் மேம்பட்டது.

இனி ராணுவ ஆட்சி அமல் படுத்தப்பட்டதையும், அதற்கு எதிராக லெக் வலென்சா எவ்வாறு போராடி மக்களின் உரிமைகளை மீட்டுத் தந்தார் என்பதையும், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியது பற்றியும் இன்னும் மற்ற விவரங்களையும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

தொடரும்….

கே.ஜே.ரமெஷ்

kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 7 – கோல்டா மேர்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

கே.ஜே.ரமேஷ்


‘அராபியர்கள் எங்கள் பிள்ளைகளைக் கொன்ற குற்றத்தைக் கூட எங்களால் மன்னித்து விட முடியும். ஆனால் அவர்கள் எங்கள் பிள்ளைகளை கொலையாளிகளாக ஆக்கிவிட்டதைத் தான் எங்களால் மன்னிக்கவே முடியாது ‘ என்று அதிபர் அன்வார் சதாத்திடம் அமைதிக்கான பேச்சு வார்த்தை துவங்குவதற்கு முன் தடாலடியாகக் கூறியவரை நினைவிருக்கிறதா ? ஆம் உலகத்தின் மூன்றாவது பெண் பிரதமராகப் பதவியேற்ற கோல்டா மேர் தான் அவர். ஒரு முறை அவரிடம் போப் பால் VI இஸ்ரேல் அராபியர்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொள்கிறது என்று கூறியதற்கு கோல்டா மேர் ‘புனிதமானவரே, எனக்கு சிறு வயது நினைவுகளில் இன்னும் பசுமையாக இருப்பது எது தெரியுமா ? கீவ் நகரில் ‘போக்ரோம் ‘ க்கு காத்திருந்தது தான். உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இஸ்ரேலிய மக்களுக்கு கடுமை என்றால் என்னவென்பது நன்றாகவே தெரியும், நாஸிகள் எங்களைக் கேஸ் சேம்பருக்கு இழுத்துச் சென்ற போது கருணை என்னவென்பதையும் அறிந்து கொண்டோம் ‘ என்று கூறினாராம். போக்ரோம் (Pogrom) என்ற சொல் ரஷ்ய மொழியிலிருந்து வந்தது. இச்சொல் ஒரு சிறுபாண்மையினருக்கு எதிராக அவர்களைப் பூண்டோடு அழிக்கும் நோக்கத்தில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு திட்டமிட்டுச் செயல் படுத்திக் கொடூரமான வன்முறைத் தாக்குதல் நடத்துவதைக் குறிக்கும். 19ம் நூற்றாண்டின் கடைசியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ரஷ்யாவில் யூதர்களுக்கு எதிராக நடந்த தொடர் வன்முறைத் தாக்குதல்களைக் குறிக்க இச்சொல் பயன்பட்டது. கோல்டா மேருக்கும் ரஷ்யாவுக்கும் போக்ரோமுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் எரிச்சலடைவது புரிகிறது. அதற்கு சில பிண்ணனி தகவல்களை அறிந்து கொள்வது நல்லது.

கோல்டா மேர் 1898ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி ரஷ்யாவில் உள்ள கீவ் நகரில் பிறந்தார். 1881ம் ஆண்டு அலெக்சாந்தர் II கொலையுண்ட பிறகு தான் ரஷ்யாவில் யூதர்களைக் குறி வைத்த போக்ரோம்கள் அதிகரித்தன. ஆட்சியில் இருந்த அரசின் ஆதரவுடனோ அல்லது குறைந்த பட்சம் அவர்களிடமிருந்து யூதர்களுக்கு ஆதரவான தலையீடுகளோ இல்லாமல் தான் போக்ரோம்கள் நடந்தேறின. போக்ரோம்கள் நடக்கும் போது காவல் துறை அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது சகஜமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வந்தது. 1903ம் ஆண்டு வரையில் அவ்வப்போது போக்ரோம்கள் நடந்து வந்தாலும் அந்த ஆண்டில் நடந்த 3 நாள் கோரத் தாண்டவம் தான் பின்னர் அது தொடர் நிகழ்வாக மாறியதற்கு வழிவகுத்தது. அந்த 3 நாள் தாக்குதலில் சுமார் 45 யூதர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது ஆரம்பித்த யூதர்களின் புலம் பெயர்தல் 1920ம் ஆண்டு வரை நீடித்தது. இந்தக் கால இடைவெளியில் சுமார் 2 மில்லியன் யூதர்கள் ரஷ்யாவை விட்டு அமெரிக்காவிற்குத் தப்பியோடியதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. போல்ஷெவிக் புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவில் போக்ரோம்கள் குறைந்து படிப்படியாக ஒழிந்து விட்டது. ஆனால் ஹிட்லர் பதவிக்கு வந்தவுடன், அது மீண்டும் ஜெர்மனியிலும் போலந்திலும் தலையெடுக்க ஆரம்பித்தது. அப்படிப் புலம் பெயர்ந்த யூதர்களில் ஒருவர் தான் கோல்டா மேரின் தந்தை.

தனது குடும்பத்தாருடன் 1906ம் ஆண்டு ரஷ்யாவை விட்டு அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பகுதியில் உள்ள மில்வாக்கீ என்ற இடத்திற்கு சென்று வாழத்தொடங்கிய கோல்டா மேரின் உண்மைப் பெயர் கோல்டா மாபோவிட்ஸ். அங்கிருந்த ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்ற அவர் பொதுப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியையாகப் பணி புரிந்தார். 1915ம் ஆண்டு ஸியானிஸ்ட் (Zionist) தொழிலாளர் அமைப்பில் சேர்ந்தார். 1917ம் ஆண்டு மாரிஸ் மெயர்சன் என்பவரை மணந்து கொண்டு நான்கு ஆண்டுகள் கழித்து அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த டெல் அவிவ் நகருக்குக் குடி பெயர்ந்தார். ஸியானிஸ்ட் அமைப்பில் படிப்படியாக முன்னேறி பின்னர் 1930ம் ஆண்டு தொழிலாளர் கட்சி (Labour Party) தொடங்கியவுடன் அதில் ஒரு முக்கிய அங்கத்தினராகத் திகழ்ந்தார். தொழிற்சங்க அமைப்பில் அவரது பங்கு கனிசமானது. ஹிஸ்டாத்ருத் (Histadrut) தொழிற்சங்கத்தில் ஒரு மேலாளராகவும் பணியாற்றியிருந்தார். 1946ம் ஆண்டு முக்கிய யூதத்தலைவர்கள் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவுடன் யூதர்கள் பிரதிநிதித்துவ அமைப்பில் அரசியல் கிளைக்கு தலைவராக பொறுப்பேற்றார். 1947ம் ஆண்டு ஐ.நா சபை பாலஸ்தீனப் பிரிவினையை அறிவித்ததைத் தொடர்ந்து அராபியர்கள் வன்முறையில் இறங்கினர். வன்முறையைத் தொடர்ந்து இஸ்ரேலியர்கள் தங்கள் சுதந்திரத்திற்கானப் போரைத் துவக்கினார்கள். அப்போரின் செலவுகளை ஈடுகட்ட நிதி தேவைப்படவே கோல்டா மேர் அமெரிக்காவிற்குச் சென்று நிதியைத் திரட்டினார். அதன் விளைவாக அவர் நாட்டின் ஒரு முக்கியப் பிரதிநிதியாக உருவெடுக்க முடிந்தது.

முதலாம் உலகப் போருக்குப் பிறகு லீக் ஆஃப் நேஷன்ஸ் அறிவித்த பாலஸ்தீன ஆவணங்களின் படி ஒருங்கிணைந்த பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்திலிருந்தது. அந்த ஆவணங்கள் 1948ம் ஆண்டு காலாவதியானவுடன் பிரிட்டிஷ் துருப்புகள் பாலஸ்தீனத்தை விட்டு திரும்பிச் சென்றது. இதைத் தொடர்ந்து உடனடியாக மே மாதம் 18ம் தேதி இஸ்ரேல் என்ற தனி நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தப் பிரகடனப் பத்திரத்தில் 24 பேர் கையொப்பமிட்டனர். அந்த 24 பேர்களில் இருவர் பெண்கள் – அதில் ஒருவர் கோல்டா மேர். பிரகடனத்தைப் பற்றி பின்னர் பேசிய கோல்டா மேர், ‘பத்திரத்தில் கையொப்பமிட்டவுடன் நான் அழுதேன். பள்ளிச் சிறுமியாக அமெரிக்க சரித்திரத்தைப் படிக்கும் போது அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தைப் பற்றி படித்திருக்கிறேன். அது ஒரு உண்மையான நிகழ்வு என்பதையோ உயிருள்ள மக்கள் அப்பத்திரத்தில் கையொப்பமிட்டார்கள் என்பதையோ என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் இப்போது இஸ்ரேல் நாட்டுப் பிரகடனத்தில் நானே கையொப்பமிட்டிருக்கிறேன் ‘ எனு கூறியிருக்கிறார். இஸ்ரேல் நாடு பிரகடனப்படுத்தப் பட்ட அன்று இரவே அமெரிக்க அரசு இஸ்ரேலை அங்கீகரித்தது. மூன்று நாட்கள் கழித்து சோவியத் யூனியனும் இஸ்ரேலை அங்கீகரித்து அறிக்கை விட்டது. இஸ்ரேல் என்ற தனி நாட்டைத் தோற்றுவிக்கப் போராடிப் பின்னர் அந்நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற டேவிட் பென் குரியொன் தனது தற்காலிக அரசாங்கத்தில் கோல்டா மேரை ஒரு உறுப்பினராக நியமித்தார். சுதந்திர நாட்டைப் பிரகடனப்படுத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு பென் குரியொன் கோல்டா மேரை ஜோர்டான் மன்னன் அப்துல்லாவிடம் தூது அனுப்பினார். உயிருக்கு ஆபத்தான அப்பயணத்தை கோல்டா மேர் ஒரு அராபியப் பெண்மணிபோல் மாறுவேடமணிந்து மேற்கொண்டார். இஸ்ரேலைத் தாக்க வேண்டாம் என்று மன்னன் அப்துல்லாவைக் கேட்டுக் கொள்ளவே அப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த வேண்டுகோளை நிராகரித்த மன்னன் அப்துல்லா ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின் படி இஸ்ரேலை தாக்கியது வேறு கதை. மிகுந்த துணிவுள்ள கோல்டா மேரைப் பற்றி பென் குரியொன் ஒரு முறை, ‘மந்திரி சபையில் உள்ள ஒரே ஆண் ‘ என்று குறிப்பிட்டது அவரது துணிச்சலுக்கும் கோல்டா மேரின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கைக்கும் ஒரு எடுத்துக் காட்டு. அதே ஆண்டு கோல்டா மேர் சோவியத் யூனியனுக்கான இஸ்ரேலின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

1949ம் ஆண்டு நெஸ்ஸட்டுக்கு (Knesset-இஸ்ரேலிய பாராளுமன்றம்) தேர்ந்தெடுக்கப்பட்ட கோல்டா மேர் தொடர்ந்து 1974ம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார். 1949ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை தொழிலாளர் மந்திரியாக பணியாற்றியவர், 1956ம் ஆண்டு வெளியுறவு மந்திரியாகப் பொறுப்பேற்றார். வெளியுறவு மந்திரியாகப் பொறுப்பேற்றவுடன் பிரதமரான பென் குரியொன் யோசனைப்படி ‘மேர் ‘ என்ற ஹெப்ரூ பெயரை இணைத்துக்கொண்டார். 1965ம் ஆண்டு உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி பதவி விலகினார். ஆனால் மீண்டும் 1968ம் ஆண்டு தொழிலாளர் கட்சிக்குத் தலைமையேற்குமாறு அழைப்பு வரவே சுமார் எட்டு மாத காலம் கட்சியை வழி நடத்திச் சென்றார். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஒய்வு பெற்றவரை அரசியல் வெகு நாட்கள் விட்டுவைக்கவில்லை. அப்போது பிரதமராக இருந்த லெவி எஷ்கோல் என்பவர் 1969ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறந்து விடவே கட்சி கோல்டா மேரை பிரதமராக வழி மொழிந்தது. மார்ச் 17ம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்றவர் 1974ம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார்.

கோல்டா மேர் பிரதமராக இருந்த கால கட்டத்தில் பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று. 1967ம் ஆண்டு ஆறே நாட்கள் நடந்த அராபிய இஸ்ரேல் போரில் கைப்பற்றிய இடங்களைக் குறித்த சர்ச்சை வலுத்துக் கொண்டிருந்தது. பாதுகாப்பு மந்திரியாக இருந்த மோஷே தயானும் அவரது ஆதரவாளர்களும் கைப்பற்றிய இடத்தை திரும்பக் கொடுக்கக் கூடாது என்று கூறி வந்தனர்.

மேலும் அவர்கள் கைப்பற்றிய இடங்களை குடியேற்றப் பகுதிகளாக மாற்றி விடவேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் உப பிரதம மந்திரியாக இருந்த யிகால் அலோனும் அவரது ஆதரவாளர்களும் அமைதிப் பேச்சின் ஒரு அம்சமாக கைப்பற்றிய இடங்களான சினாயை எகிப்திடமும், கோலன் ஹைட்ஸ் பகுதியை சிரியாவிடமும், மேற்குக் கரைப் பகுதியை ஜோர்டானிடமும் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். கோல்டா மேர் மோஷே தயானின் பக்கம் சாய்ந்தாலும் எப்படியோ மிதவாதிகளின் ஆதரவையும் பெற்றுக் கொண்டிருந்தார். உள்நாட்டு அதிருப்தியாளர்களை சமாளித்துக் கொண்டே அராபிய நாடுகளிடமும், அமெரிக்காவிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். எகிப்து நாட்டுடனான பேச்சு வார்த்தைகளில் அளவுக்கதிகமாக விட்டுக் கொடுத்து விட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 1971ம் ஆண்டு தனக்கெதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றையும் முறியடித்தார். பாராளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்தாலும், மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தார்.

‘அராபியர்கள் யூதர்களை வெறுப்பதைக்காட்டிலும் அதிகமாக அவர்களது குழந்தைகளை நேசித்தால் தான் அமைதி பிறக்கும் ‘ என்று கூறிய கோல்டா மேர் அராபிய நாடுகளின் உள்நோக்கத்தை அறிந்து கொள்ளாமல் எடுத்த தவறான முடிவுகளால் தனது நாடான இஸ்ரேல் போரில் தோற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதை அறிந்து அதிர்ந்தார். 1973ம் ஆண்டு கிளம்பிய போர் வதந்திகளை நம்பாமல், அராபிய நாடுகளுக்கு எதிரான தற்காப்புத் தாக்குதல் நடத்த மறுத்து விட்டார். ஆனால் சிரியாவும் எகிப்தும் வேறு திட்டங்கள் வைத்திருந்ததை கோல்டா அறியவில்லை. 1967ம் ஆண்டு நடந்த 6 நாள் போரில் இழந்த பகுதிகளை எவ்வாறேனும் மீட்டு விட வேண்டும் என்ற நோக்கத்துடன் சிரியாவும் எகிப்தும் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் மீது படையெடுப்பது என்று முடிவு செய்தார்கள். போர் பற்றிய வதந்திகள் வந்தவண்ணமிருந்த போதிலும் கோல்டா மேர் அதைப் புறக்கணித்தது அவர் செய்த முதல் தவறு. இதற்கிடையில் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஜூடாயிஸத்தின் அதி முக்கிய புண்ணிய தினமான ‘யோம் கிப்பூர் ‘ தினத்தன்று (அக்டோபர் 6ம் தேதி) சிரியாவும் எகிப்தும் சேர்ந்து இஸ்ரேலை முற்றுகையிட்டன. யூதர்களின் வருடத்தில் பத்தாவது மாதமான திஷ்ரி மாதத்தின் 10ம் நாள் யூதர்கள் பாவ மன்னிப்பு கேட்கும் நாள். அன்று உண்ணாவிரதமும் தவமும் இருந்து தங்கள் பாவங்களை மன்னிக்குமாறு வேண்டுவர். அந்த நாளன்று தான் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடங்கப்பட்டது. ஈராக், சவுதி அரேபியா, குவெய்த், லிப்யா, அல்ஜீரியா, துனிஸியா, சூடான், மொரோக்கோ போன்ற மற்ற அரபு நாடுகள் நிதி, துருப்புகள், தளவாடங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை அளித்து சிரியாவுக்கும் எகிப்திற்கும் தங்கள் ஆதரவை அளித்தன. அக்டோபர் 22ம் தேதி போர் நிறுத்தம் அறிவித்தாலும் 25ம் தேதி வரை போர் தொடர்ந்தது. இஸ்ரேல் ஒரு பேரழிவை சந்திக்காமல் காப்பாற்றியதில் அந்நாட்டின் சமீபத்தியப் பிரதமரான ஏரியல் ஷரோனுக்கு பெரிய பங்கு உள்ளது. சூயஸ் கால்வாயை எதிர் திசையில் கடந்து எகிப்திய ராணுவத்தை சுற்றி வளைத்தது அவரது படை. இதனால் கோபமடைந்த சோவியத் யூனியன் நேரடியாகக் களமிறங்கப் போவதாக மிரட்டியது. சோவியத் யூனியனின் மிரட்டலைக் கண்டு அமெரிக்க அரசும் வெகுண்டெழுந்தது. அப்போதிருந்த அதிபர் நிக்ஸனின் அரசாங்கம் முப்படைகளையும் போருக்கானத் தயார் நிலையில் இருக்குமாறு கட்டளையிட்டது. அவ்வாறு முப்படைகளையும் தயார் நிலையில் நிறுத்தும் ஆணை 1963ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் போரில் தான் பிறப்பிக்கப்பட்டது. (1963ம் ஆண்டு கியூபா ஏவுகணை நெருக்கடி தொடர்பாக அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது) சுமார் 21000 போர் வீரர்கள் மடிந்த இந்தப் போரில் இஸ்ரேலின் இழப்பு எதிரிகளை விட மிகவும் குறைவானதே. சுமார் 2700 இஸ்ரேலிய வீரர்கள் இந்தப் போரில் இறந்து போனார்கள். இருந்தும் இஸ்ரேலிய பொதுமக்களின் தன்னம்பிக்கை இந்தப் போரால் தகர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். எதிர்பாராத நேரத்தில் திடாரென்று தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராக இருக்கவில்லையென்றும் அதற்கு பாதுகாப்பு மந்திரியாக இருந்த மோஷே தயான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் மக்கள் குரலெழுப்பினார்கள். இஸ்ரேல் நாட்டின் உச்ச நீதிமன்றமும் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் முடிவில் முப்படையின் முதன்மை ராணுவ அதிகாரி பதவி விலக வேண்டும் என்று தீர்ப்பாயிற்று. மோஷே தயானைப் பற்றிய தீர்ப்பு நிலுவையில் வைக்கப்பட்டது. ஆனால் 1974ம் ஆண்டு தயான் தனது ராஜினாமாக் கடிதத்தை கோல்டா மேரிடம் சமர்ப்பித்தார்.

போரில் பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் கோல்டா மேரின் தலைமையிலான தொழிலாளர் கட்சி 1973ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் மனதாலும் உடலாலும் சோர்வுற்றிருந்த கோல்டா மேர் 1974ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து யிட்சாக் ராபின் பிரதமராவதற்கு வழி வகுத்தார். நான்கு ஆண்டுகள் கழித்து 1978 டிசம்பர் மாதம் முதல் தேதியன்று தனது 80வது வயதில் இறந்து போனார்.

இஸ்ரேல் மக்களிடையே கோல்டா மேர் ஏற்படுத்திய என்றுமழியாத தாக்கத்தை அவர் வகித்த பதவிகளும் அவரது நீண்ட நாள் பொதுச்சேவையும் முழுவதுமாக விளக்கி விடமுடியாது. மங்காப் புகழோடும் தெளிவான நினைவுகளோடும் இன்றும் அவர் இஸ்ரேல் மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மக்கள் நலனில் கொண்ட அக்கறையும் நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட விதமும் கற்பனைக்கெட்டாத உயரத்தில் அவரை வைத்துவிட்டது. ‘மகத்தான புகழ் படைத்தவர் ‘ என்ற அடைமொழிக்கு பெயர் கொடுக்க வேண்டுமென்றால் அது ‘கோல்டா மேர் ‘ என்று தான் இருக்க வேண்டும்.

கே.ஜே.ரமேஷ்

kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 3

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

கே.ஜே.ரமேஷ்


ஜூன் 9ம் தேதி வெளியான பாகத்தின் தொடர்ச்சி….

பின்னர் மார்ட்டின் லூதர் கிங் ஊர் ஊராகச் சென்று தன் பேச்சாற்றலின் திறமையால் கறுப்பின மக்களை சமுதாய மறுமலர்ச்சி மற்றும் சம உரிமைப் போராட்டங்களில் பங்கு பெறுமாறு ஊக்குவித்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய அமைதி வழி போராட்டத்தைத் தொடரும் அதே வேளையில் மாண்ட்காமெரியில் கையாண்டப் பொருளாதாரப் புறக்கணிப்புப் போராட்ட முறையையும் ஊக்கப்படுத்தினார். நாடு தழுவிய அளவில் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் சுமார் 10 விழுக்காடு இருந்தனர். அதைச் சுட்டிக்காட்டிய கிங் கறுப்பின மக்கள் தங்களிடம் உள்ள பொருளாதாரச் சக்தியை உணரவேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்ந்தெடுத்து வாங்கும் முறையால் சம உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வியாபாரிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வியாபாரமும் அதன் வழி லாபமும் பெருக வழிவகுக்க முடியும் என்பதை எடுத்துரைத்தார். அதே போல கறுப்பர்களுக்கு எதிரானவர்களின் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பதால் அவர்களின் பொருளாதார நிலையிலும் ஒரு சரிவை ஏற்படுத்த முடியும் என்பதையும் கூறினார். மேலும் கறுப்பின மக்கள் அனைவரும் ஓட்டுரிமை பெற்றுவிட்டால் கறுப்பர்கள் அரசியல் பலமும் பெற்று விடுவார்கள் என்பது கிங்கின் அசைக்க முடியாத நம்பிக்கை. கறுப்பின மக்களின் ஜனத்தொகை மொத்த ஜனத்தொகையில் குறைந்த விழுக்காடாக இருப்பினும் அவர்கள் ஒருங்கிணைந்து செயல் பட்டால் அதிபர் தேர்தல் முடிவையும் மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளையும் நிர்ணையிக்க முடியும் என்றும் நம்பினார். 1960ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அமெரிக்கக் கறுப்பின மக்கள் ஆதரவுடன் மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வென்ற ஜான் எஃப் கென்னடியின் வெற்றியே இதற்கு ஒரு உதாரணம். பதவிக்கு வந்த கென்னடி முதல் இரண்டு வருடங்களில் சம உரிமைக்காக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், 1963ம் ஆண்டு ஜூன் மாதம் அதற்கான மசோதா ஒன்று பரிசீலனைக்காக முன் வைக்கப்பட்டது. ஜூன் மாதம் 11ம் தேதி தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய அதிபர் கென்னடி அந்த மசோதாவுக்கு ஆதரவாக, ‘அமெரிக்காவில் ஒரே இடத்தில் ஒரே தினத்தில் ஒரு வெள்ளையர் குழந்தையும் ஒரு நீக்ரோ குழந்தையும் பிறந்தால், நீக்ரோ குழந்தை உயர்நிலைப் பள்ளியில் படித்து முடிக்கும் வாய்ப்பு வெள்ளையர் குழந்தையின் வாய்ப்புடன் ஒப்பிடுகையில் ஒரு பாதி தான். அதே போல் கல்லூரி படிப்பு முடிக்க அந்த நீக்ரோ குழந்தையின் வாய்ப்பு மூன்றில் ஒரு பங்கு தான். ஆனால் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருக்க இரு மடங்கு சாத்தியக் கூறுகள் உள்ளன. வருடத்திற்கு 10000 டாலர் ஈட்ட அவர்களுக்கு ஏழில் ஒரு பங்கு சாத்தியமே இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதே நேரம் அவர்களின் சராசரி வாழ்நாள் வெள்ளையர்களை விட 7 வருடங்கள் குறைவே ‘ என்று பேசினார். கென்னடி கொண்டு வந்த மசோதாவுக்கு ஆதரவாகத் தான் மார்ட்டின் லூதர் கிங் வாஷிங்டனில் அமைதி ஊர்வலம் நடத்தினார். முன்பே பார்த்தபடி சுமார் 250,000 பேர்கள் கலந்து கொண்ட இந்த அமைதி ஊர்வலம் அமெரிக்கக் காங்கிரஸ் அந்த மசோதாவை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பேசிய மார்ட்டின் லூதர் கிங்கின் உரை அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் புகழ் வாய்ந்த உரையாகக் கருதப்படுகிறது. அந்த கூட்டத்தில் தான் கிங் ‘எனக்குள் ஒரு கனவு ‘ என்ற புகழ் வாய்ந்த வரிகளைக் கூறி அவரது கனவையும் விவரித்தார். ‘ எனக்குள் ஒரு கனவு இருக்கிறது–என்றாவது ஒரு நாள் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் எல்லோரும் சமம் என்பதை இந்த நாடு உணர்ந்து செயல்படும். எனக்குள் ஒரு கனவு இருக்கிறது–என்றாவது ஒரு நாள் ஜார்ஜியாவின் சிகப்பு மலைத்தொடரில் அடிமைகளின் குழந்தைகளும் அடிமைகளின் எஜமானர்களது குழந்தைகளும் சகோதரத்துவத்துடன் ஒரே மேஜையில் அமர்ந்து கொள்வார்கள். எனக்குள் ஒரு கனவு இருக்கிறது–என்றாவது ஒரு நாள் அநீதியாலும் அடக்குமுறையாலும் தகிக்கும் பாலைவனமான மிஸ்ஸிஸிப்பி மாகாணம் விடுதலையும் நீதிநெறியும் தழைக்கும் பாலைவனச் சோலையாக மாறிவிடும். எனக்குள் ஒரு கனவு இருக்கிறது–என்றாவது ஒரு நாள் எனது நான்கு குழந்தைகளும் மறுமலர்ச்சியடைந்த இந்த நாட்டில் வாழ்வார்கள். மறுமலர்ச்சியடைந்த இந்த நாட்டில் அவர்கள் தோல் நிறத்தை வைத்து எடைப் போடப்படாமல் அவர்களது நன்னடத்தையின் உள்ளடக்கத்தை வைத்து எடைப்போடப்படுவார்கள் ‘, என்று பேசினார். அந்த பேச்சின் முத்தாய்ப்பாக கிங், ‘விடுதலை மலரும். விடுதலையின் ரீங்காரம் இந்த நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் எதிரொலிக்கும். அப்போது கடவுளின் குழந்தைகளான வெள்ளையர்களும், கறுப்பினத்தவரும், யூதர்களும், யூதரல்லாதவர்களும், கத்தோலிக்கர்களும், பிராடஸ்டண்ட்டுகளும் ஒன்றாகக் கைகோர்த்து நீக்ரோ இனத்தவரின் பழைய ஆன்மீகப் பாடலான ‘கடைசியில் விடுதலை, கடைசியில் விடுதலை கடவுளுக்கு நன்றி சொல்வோம் கடைசியில் விடுதலை ‘ என்று ஆடிப்பாடும் நாள் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் ‘ என்று பேசினார்.

வாஷிங்டன் ஊர்வலத்தை வன்முறையில்லாமல் வெற்றிகரமாக நடத்திய பிறகு மார்ட்டின் லூதர் கிங்கையும் கறுப்பின மக்களையும் கென்னடியின் மறைவு பேரிடியாகத் தாக்கியது. அமெரிக்கக் காங்கிரஸ் முன் வைத்த மசோதா பற்றிய பரிசீலனை நடந்து கொண்டிருக்கையிலேயே 1963ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். கென்னடிக்குப் பிறகு அதிபராகப் பதவியேற்றவர் லிண்டன் ஜான்ஸன். பதவிக்கு வருமுன் லிண்டன் ஜான்ஸன் அமெரிக்க மக்களின் சம உரிமைக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று சொல்லமுடியாது. ஆனால் பதவியேற்றவுடன் துடிப்புடன் செயல்பட்டு கென்னடி கொண்டு வந்த மசோதாவைச் சட்டமாக்க உதவினார். 1964 Civil Rights Act என்ற அந்தச் சட்டம் இயற்றப்பட்டதில் காங்கிரஸிடம் அவருக்கிருந்த செல்வாக்கு ஒரு முக்கியக் காரணம். அந்தச் சட்டத்தின் கீழ் இனத்தின் அடிப்படையில் பாரபட்சமாக நடந்து கொள்வது, இனத்துவேஷம், தோல் நிறத்தின் அடிப்படையில் பிரித்து ஒதுக்குதல், கறுப்பின மக்களுக்கு சமமான வேலை வாய்ப்பு வழங்காமல் இருப்பது போன்ற யாவையும் சட்டத்திற்குப் புறம்பானவை. மார்ட்டின் லூதர் கிங்குக்கும் கறுப்பின மக்களுக்கும் இது ஒரு மாபெறும் வெற்றி.

சம உரிமையைப் போராடிப் பெற்ற பிறகு, கிங் அமெரிக்காவின் ஒட்டு மொத்த கறுப்பினத்தவர்களுக்கும் ஓட்டுரிமை பெற போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்தார். 1965ம் ஆண்டு மாண்ட்காமெரியில் ஊர்வலமாகச் சென்ற கிங்கின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அதிபர் லிண்டன் ஜான்ஸன் அமெரிக்கக் காங்கிரஸிடம் தனது ‘வாக்குரிமைச் சட்டத்தை ‘ அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொண்டார். தென் அமெரிக்க அரசியல் வாதிகளின் எதிர்ப்புகளைச் சமாளித்து வாக்குரிமைச் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஹெளஸ் ஆஃப் ரெப்ரசெண்டேட்டிவில் 333 ஓட்டுகளும் (48 எதிர்ப்பு ஓட்டுகள்) செனெட்டில் 77 ஓட்டுகளும் (19 எதிர்ப்பு ஓட்டுகள்) அளித்து சட்டத்தை நிறைவேற்றினர். அந்தச் சட்டத்தின் படி மாநில அரசுகள் யாருக்கு ஓட்டுரிமை வழங்கலாம் என்று நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ரத்து செய்தது. மேலும் மாநில அரசு யாருக்கு ஓட்டுரிமை வழங்க மறுக்கின்றதோ அவருக்கு தேசிய அரசு அதே உரிமையை வழங்கலாம் என்று தேசிய அரசு கூடுதல் அதிகாரம் பெறவும் வழி செய்தது. இந்த இரு முக்கியமான சட்டங்கள் அமலாக்கம் செய்யப்பட்ட பிறகு கிங் வறுமையால் வாடுவோரின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். இனமும் பொருளாதார நிலையும் ஒன்றுகொன்று பின்னிக் கிடப்பதை கிங் உணர்ந்து கொண்டார். அதனால் செல்வத்தை பகிர்ந்து கொள்வதைப்பற்றி பேச ஆரம்பித்தார். கிங் தனது ‘நாம் ஏன் காத்திருக்க முடியாது ‘ (Why We Can ‘t Wait) என்ற புத்தகத்தை 1964ம் ஆண்டும் ‘இங்கிருந்து நாம் எங்கு செல்கிறோம்- குழப்பத்தை நோக்கியா அல்லது சமுதாயத்தை நோக்கியா ‘ (Where Do We Go from Here-Chaos or Community) என்ற புத்தகத்தை 1967ம் ஆண்டும் எழுதினார். அந்த புத்தகங்களில் அமெரிக்கக் கறுப்பினத்தவரும் ஏழையாக இருக்கும் அமெரிக்க வெள்ளையினத்தவரும் சேர்ந்து போராடினால் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளவும் சமுதாயத்தைச் சீர்திருத்தவும் முடியும் என்று எழுதினார்.

முன்பே கூறியது போல் 1966ம் ஆண்டு வியட்னாம் போருக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்த கிங் அதிபர் ஜான்ஸனுக்கும் FBIயின் தலைவர் எட்கர் ஹூவருக்கும் பெரும் தலைவலியாக உருவெடுத்துக் கொண்டிருந்தார். ஹூவரின் FBI ஏஜெண்ட்டுகள் கிங்கை அரசியலை விட்டு விரட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை முதல் பாகத்தில் பார்த்தோம். 1967-68ம் ஆண்டுகளில் மார்ட்டின் லூதர் கிங் தொழிற்சங்கப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். 1968ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுகாதாரத் துறை ஊழியர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக டென்னஸி மாநிலத்தில் உள்ள மெம்பிஸ் நகருக்குச் சென்ற கிங் ஏப்ரல் 3ம் தேதி போராட்டத் தொழிலாளர்களுக்காக ஒரு உரை நிகழ்த்தினார். ‘நான் மலையுச்சிக்குச் சென்று வந்தேன் ‘ (I have been to the Mountaintop) என்ற அந்த உரையும் அமெரிக்க வரலாற்றில் ஒரு மறக்க முடியாத உரையாகத் திகழ்ந்தது. உரையின் சாராம்சம் தவிர அவ்வுரை மறக்க முடியாததாக ஆகிவிட்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு – கிங் தன் வாழ்வில் நிகழ்த்திய கடைசி உரை அது. அவர் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியைப் பார்ப்போம் – ‘நான் மெம்பிஸுக்கு வந்தவுடன் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறினார்கள். மன விகாரமடைந்த சில வெள்ளைச் சகோதரர்களால் எனக்கு ஆபத்து ஏர்படக்கூடும் என்று கூறினார்கள். என்னவாகுமோ என்று எனக்குத் தெரியாது. அதைப் பற்றி எனக்குக் கவலையும் கிடையாது. ஏனென்றால் நான் மலையுச்சிக்குச் சென்று திரும்பி விட்டேன். மலைக்கு அந்தப்பக்கம் நாம் செல்ல வேண்டிய இடத்தைப் பார்த்து விட்டேன். அந்த இடத்திற்கு உங்களுடன் நான் செல்ல முடியாமல் போகலாம். ஆனால் உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு நிச்சயம் செல்வோம். எல்லோரையும் போல நானும் நீண்ட நாட்கள் வாழவே ஆசைப் படுகிறேன். ஆனால் அப்படி நடக்கவில்லையென்றாலும் நான் அதற்காகக் கவலைப் படவில்லை. யாருக்காகவும் எதற்காகவும் நான் பயப்படவில்லை. ஜகஜ்ஜோதியாகக் கடவுள் வருவதை என் கண்கள் பார்த்துவிட்டன. கடவுளின் அருளால் நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைவோம் ‘ என்று பேசினார். அதற்கு மறு தினம் அவர் தங்கியிருந்த மோட்டேலின் பால்கனியில் நின்று கொண்டிருந்தவரை துப்பாக்கித் தோட்டா ஒன்று மாய்த்தது. சுமார் ஒரு வருடம் கழித்து 1969ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி ஜேம்ஸ் ஏர்ல் ரே என்பவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு 99 வருட சிறை வாச தண்டனைப் பெற்றான்.

அமெரிக்க சரித்திரத்திலேயே அதிபர் வாஷிங்டன் மற்றும் யேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எந்த ஒரு தனி நபரின் நினைவாகவும் பொது விடுமுறை அறிவித்ததில்லை. 1986ம் ஆண்டு மூன்றாவதாக மார்ட்டின் லூதர் கிங்கின் நினைவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

கே.ஜே.ரமெஷ்


சென்ற வாரத் தொடர்ச்சி….

லிண்டா பிரவுன் வழக்கில் கறுப்பர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டதைப் பார்த்தோம். ஆனால் 1951ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த சட்டப்பூர்வமான போராட்டம் 1954ம் ஆண்டு மே மாதம் தான் முடிவடைந்தது. இடைப்பட்ட காலத்தில் நடந்த தார்ணாக்களும் போராட்டங்களும், கறுப்பர்கள் எதிர்கொண்ட தாக்குதல்களும் கணக்கற்றவை. இனி இரண்டாவதாக நடந்த சம்பவத்தைப் பார்ப்போம். அந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் தென் பகுதியில் கறுப்பர்களை பிரித்து ஒதுக்கி வைக்கும் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று தான் பேரூந்துகளின் பின்புறம் அவர்களுக்கென்று சில இருக்கைகள் ஒதுக்கி வைப்பது. கறுப்பர்கள் வெள்ளயர்களுடன் ஒன்றாக இருக்கவோ வெள்ளையர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் உட்காரவோ தடை விதிக்கப்பட்டிருந்தது. தேவைப்பட்டால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த சில இருக்கைகளையும் வெள்ளையர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை சட்டமும் இருந்தது. அலபாமா மாகாணத்தில் இருந்த மாண்ட்காமெரியும் இதற்கு விதிவிலக்கல்ல.

‘ரோசா பார்க்ஸ் ‘ ஒரு நடுத்தர வயதுடைய கறுப்பின மாது. ஒரு தையற் கடையில் உதவியாளராகப் பணி புரிந்துகொண்டிருந்தார். 1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி ரோசா பார்க்ஸ் மிகவும் களைத்துப் போனவராய் வேலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பேரூந்து ஒன்றில் வெள்ளையர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார். அமர்ந்தது மட்டுமல்லாமல் களைப்பு மிகுதியால் தன் இருக்கையை ஒரு வெள்ளையனுக்கு விட்டுக் கொடுக்கவும் மறுத்து விட்டார். உண்மையில் வேலை முடிந்து திரும்பும் எவருக்கும் ஏற்படும் களைப்பு தான் அது. ஆனால் ரோசா பார்க்ஸ் அவ்வாறு நடந்து கொண்டதற்கு உண்மையான காரணம் கறுப்பர்களை மிருகத்தை விட கேவலமாக நடத்துவதைப் பார்த்து ஏற்பட்ட கோபம் தான். அவர் இடத்தைவிட்டு நகர மறுத்ததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவ்வாறு கைது செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. அதற்கு முன்பும் பல முறை கறுப்பர்கள் அதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இம்முறை கைது செய்யப்பட்டது மாண்ட்காமெரியில் உள்ள கறுப்பின மக்கள் எல்லோராலும் அறியப்பட்ட பிரபலமான ஒரு பெண். ரோசா ஒரு முறை தேசிய கறுப்பின மக்களுக்கான முன்னேற்ற கழகத்தின் (National Association for the Advancement of Colored People) தலைவருக்கு உதவியாளராக இருந்தவர். அவர் கைது செய்யப்பட்ட நேரம் மார்ட்டின் லூதர் கிங் மாண்ட்காமெரியில் உள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த நேரம். கிங்கும் மற்ற கறுப்பினத் தலைவர்களும் ரோசாவின் கைதிற்கு எதிராக ஏதாவது ஒரு வகையில் போராட்டம் நடத்தியே தீருவது என்ற முடிவுக்கு வந்தனர். ரோசாவின் கைதுக்கெதிராக என்பதை விட பிரித்து ஒதுக்கி (Segregation) வைக்கும் நடைமுறைக்கெதிரான போராட்டமே அது. அந்த முடிவைத் தொடர்ந்து தேவாலயத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு கறுப்பர்கள் திரளாக வந்திருந்தனர். டாக்டர் கிங் தனது உரையில் நடைமுறை சட்டத்திற்கு எதிராக புறக்கணிப்பு என்ற ஆயுதத்தையே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பேரூந்துகளைப் பயன்படுத்தாமல் அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்று விளக்கினார். டிசம்பர் 5ம் தேதி புறக்கணிப்புப் போராட்டம் தொடங்கியது. அன்று மாண்ட்காமெரியில் உள்ள கறுப்பர்களில் மிகச்சிலரே பேரூந்துகளைப் பயன்படுத்தினர். மற்றவர்கள் தங்கள் வேலைக்கு நடந்தோ கார் வைத்திருந்தவர்களுடன் தொற்றிக் கொண்டோ தான் வேலை செய்யுமிடத்திற்கு சென்றனர். ஆனால் கார் வைத்திருந்த கறுப்பர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. அதனால் சிலர் கழுதைகளின் மேலும் சவாரி செய்ய வேண்டியதாயிற்று. ஆனாலும் கறுப்பின மக்கள் அசெளகரியங்களைப் பொருட்படுத்தாமல் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் தலைவர்கள் ஒன்று கூடி ‘மாண்ட்காமெரி மேம்பாட்டுக் கழகம் ‘ (Montgomery Improvement Association) என்ற புதிய அமைப்பு ஒன்றை துவங்கி அதற்கு மார்ட்டின் லூதர் கிங்கைத் தலைவராக நியமித்தனர்.

புறக்கணிப்பு வெற்றிகரமாக நடைபெறவும், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையவாரம்பித்தது. அநேகமாக உடல் உழைப்புத் தேவைப்படும் எல்லாத் தொழிற்சாலைகளும் உழைப்புக்குக் கறுப்பர்களையே நம்பிக் கொண்டிருந்தன. பேரூந்துகளைப் புறக்கணித்ததால் கறுப்பர்களால் நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை. அதனால் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை. இதனால் கொதிப்படைந்த வெள்ளையர்கள் கறுப்பர்களைத் துன்புறுத்துவது, அவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவது என்று வன்முறைகளில் இறங்கினர். கார் வைத்திருக்கும் சிலரை கைது செய்து போராட்டத்தை முறியடிக்க முயன்றனர். இலவசமாக மற்றவர்களின் வண்டிகளில் தொற்றிக்கொள்வதற்காக தெருவோரங்களில் காத்திருப்போரை சந்தேகத்திற்கிடமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்ற காரணத்தைக் காட்டி கைது செய்தார்கள். உச்சக்கட்ட வன்முறையாக டாக்டர் கிங்கின் வீட்டில் வெடி குண்டு வைத்துத் தாக்கினார்கள். கிங், அவரது மனைவி மற்றும் கைக்குழந்தை காயமின்றி தப்பித்தனர். வெடிகுண்டு சம்பவத்தைக் கேள்விப்பட்ட கறுப்பின மக்கள் வெகுண்டெழுந்தனர். எதிர்தாக்குதல் நடத்தும் வெறியுடன் குழுமிய கூட்டத்தை கிங் ‘வெறுப்புகளை அன்பால் எதிர்கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும் ‘ என்று சாந்தப்படுத்தி தத்தம் வீடுகளுக்கு அமைதியாகத் திரும்புமாறு அறிவுறுத்தினார். புறக்கணிப்புப் போராட்டம் ஒரு வருடமாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் புறக்கணிப்புப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் நாள் உச்ச நீதி மன்றம் அலபாமா மாகாணத்தில் கறுப்பர்களைப் பிரித்து ஒதுக்கி வைக்கும் நடைமுறை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் மாண்ட்காமெரி நகர மேயருக்கும் பேரூந்து கம்பெனி முதலாளிகளுக்கும் தடை உத்தரவைப் பிறப்பித்தது. அதற்கு அடுத்த நாள் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கும் க்லென் ஸ்மைலி என்ற வெள்ளைப் பாதிரியாரும் பொது மக்களுக்கான பேரூந்தில் முன்னால் இருக்கும் இருக்கையில் அருகருகே உட்கார்ந்து கொண்டு பயணித்தனர். 381 நாட்களாக தொடர்ந்து கொண்டிருந்த புறக்கணிப்புப் போராட்டமும் ஒரு முடிவுக்கு வந்தது. இது கறுப்பின மக்கள் தீண்டாமைக்கெதிராக அடைந்த இரண்டாவது மாபெறும் வெற்றி.

மாண்ட்காமெரியில் கிடைத்த வெற்றியால் உந்தப்பட்டு ‘ரால்ப் டேவிட் அபெர்நாதி ‘ மற்றும் ‘பாயர்ட் ரஸ்டின் ‘ ஆகியோருடன் ‘தென்னக கிறிஸ்துவ தலைமைத்துவ அமைப்பு ‘ – Southern Christian Leadership Conference (SCLC) என்ற ஒரு அமைப்பை நிறுவினார். அந்த அமைப்பு சம உரிமைப் போராட்டத்தை வன்முறையற்ற அமைதியான வழியில் நடத்த உறுதி பூண்டது. பிலிஃப் ராண்டால்ப், பாயர்ட் ரஸ்டின் ஆகியோர் தீண்டாமைக்கெதிராக அமைதிப் போராட்டத்தை ஏற்கனவே வெற்றிகரமாக நடத்தியிருப்பினும் SCLCயின் முக்கியத்துவம் அதற்கு கறுப்பினர் தேவாலயம் போன்ற அமெரிக்கத் தென் பகுதியில் இருந்த சக்தி வாய்ந்த அமைப்புகளின் ஆதரவு கிடைத்தது தான். அப்போதைய SCLCயின் ஒரே குறிக்கோள் கறுப்பின மக்களின் வாக்காளர் பதிவுக்குப் போராடுவது. வாக்காளர் பதிவுக்கான இயக்கத்தை வழிநடத்திச் செல்ல பாயர்ட் ரஸ்டின் தான் தகுதியானவர் என்று SCLC உணர்ந்திருந்தாலும், அவரது ஓரினச்சேர்க்கைப் பழக்கத்தால் விளைந்த அவப்பெயரைக் கருத்தில் கொண்டு எல்லா பேக்கரை (Ella Baker) தலைமை தாங்குமாறு அழைத்தார்கள். பேக்கர் கடினமாக உழைத்தாலும் லிங்கன் தினத்தன்று தொடங்கிய வாக்காளர் பதிவு இயக்கம் வெற்றி பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மக்களின் கவனத்தை ஈர்க்க அந்த இயக்கம் தவறிவிட்டது.

காந்திஜியால் கவரப்பட்ட கிங் ஆரம்பம் முதலே கத்தியின்றி இரத்தமின்றி அமைதி வழி போராட்டத்தில் வெற்றியடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். காந்திஜியின் போராட்ட வழிமுறைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விழைந்த மார்ட்டின் லூதர் கிங் 1959ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவுக்குப் பயணமானார். அந்தப் பயணத்தின் முக்கிய குறிக்கோள் காந்திஜியின் அறவழிப் போராட்டங்கள், சத்தியாகிரகங்கள், ஒத்துழையாமை இயக்கம், கீழ்படியாமை ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வதே. அதே சமயம் வாக்காளர் பதிவு தவிர வேறெந்த குறிக்கோளுமற்ற நிலையில், நிதி நெருக்கடியாலும் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளாலும் SCLC கறுப்பின மக்களின் மீதான அதன் தாக்கத்தை மெதுவாக இழந்து கொண்டிருந்தது. இதனை உணர்ந்த கிங் 1959ம் ஆண்டு நவம்பர் மாதம் பாப்டிஸ்ட் தேவாலயத்திலிருந்து தனது பாதிரியார் பதவியைத் துறந்து SCLCயின் முழுநேர பொறுப்பைச் சுமக்கும் நோக்கத்துடன் அட்லாண்டா நகருக்கே வந்து விட்டார்.

இதற்கிடையில் மாண்ட்காமெரியின் வெற்றிக்குப் பிறகு கிங் 1958ம் ஆண்டு ‘Stride Toward Freedom ‘ என்ற புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகத்தில் மாண்ட்காமெரியில் நடந்தவற்றை விவரமாக எழுதிய கிங் அஹிம்சா வழி போராட்டம் குறித்தும் நேரடி நடவடிக்கை குறித்தும் அவரது பார்வையில் விளக்கியுள்ளார். அந்தப் புத்தகம் பெரும் வரவேற்பு பெற்று சம உரிமைப் போராட்டத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இந்த புத்தகத்தை படித்து அதனால் ஈர்க்கப்பட்ட சில கறுப்பின மாணவர்கள் தாங்களாகவே நேரடி நடவடிக்கையை எடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர். வடக்கு கரோலினாவில் உள்ள க்ரீன்ஸ்பொரொ என்ற இடத்தில் ஒரு உணவு விடுதி இருந்தது. அங்கு வெள்ளையர்களுக்கு மட்டுமே உணவு விற்பது என்ற கொள்கை பல காலமாகவே கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த விடுதியில் கறுப்பின மாணவர்கள் சென்று அமர்ந்து கொள்ளத் தொடங்கினர். அவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லையாயினும் அதற்காக அவர்கள் கவலைப் படவில்லை. ஒவ்வொரு நாளும் அங்கு சென்று அமரத் தொடங்கினார்கள். மெதுவாக அவர்களுக்கு ஆதரவாக மற்ற கறுப்பின மாணவர்களும் அவர்களுடன் சென்று அந்த விடுதியில் இருந்த இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். சிறிது நாட்களுக்குப் பிறகு அங்கு வெள்ளையர்கள் உட்கார ஒரு இடம் கூட கிடைக்கமுடியாதவாறு எல்லா இருக்கைகளையும் ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டன. கோபம் தலைக்கேறிய வெள்ளையர் கும்பல் அந்த மாணவர்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. மாணவர்களோ கிங் அறிவுறுத்தியபடி அவர்களைத் திருப்பித் தாக்காமல் மீண்டும் அந்த இருக்கைகளில் சென்று உட்கார்ந்து கொண்டனர். இந்த புதிய போராட்ட முறை வெகு சீக்கிரமே கறுப்பர்கள் மத்தியில் மிகுந்த தைரியத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. அதன் விளைவாக அமெரிக்காவின் தென் பகுதி முழுவதும் கறுப்பர்கள் இந்த முறையில் போராடத் துவங்கினார்கள். அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே அந்த உணவு விடுதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு பிரித்து ஒதுக்கும் கொடூரம் மறையத் தொடங்கியது. இந்த அஹிம்சா வழிப் போராட்டத்தைப் பயன்படுத்தியே பொதுப்பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அரங்குகள், தேவாலயங்கள் நூலகங்கள், கடற்கரை என்று எல்லா இடங்களிலும் பிரித்து ஒதுக்கும் நடைமுறையை மாற்றி விட்டார்கள். வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக் கொள்ளும் இந்த நூதன முறை போராட்டத்தால் மற்ற இடங்களில் வெற்றியடைந்தாலும் 1963ம் ஆண்டு அலபாமாவில் உள்ள பிர்மிங்காம் நகரில் நடத்திய போராட்டம் முழு அளவில் வெற்றி பெறவில்லை. போராட்டத்தில் கலந்து கொண்ட பலரும் பதின்ம வயதினர். காவல்துறை போராட்ட வீரர்களின் மீது நாய்களை ஏவிவிட்டும் தீயணைக்கும் தண்ணீர் குழாய்களைக் கொண்டு அவர்களின் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் போராட்டத்தை முறியடித்தனர். மார்ட்டின் லூதர் கிங் கைது செய்யப்பட்டு பிர்மிங்காமில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து மார்ட்டின் எழுதிய கடிதத்தில் கறுப்பின மக்களை நீதிக்குப் புறம்பான சட்டங்களுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று அறைகூவல் விடுத்தார். ‘பிர்மிங்காம் சிறையிலிருந்து கடிதம் ‘ என்ற அந்தக் கடிதத்தில் தான் மிகவும் புகழ் வாய்ந்த, மேற்கோள் காட்டக்கூடிய சொற்றொடர்களைக் கையாண்டார். அவற்றுள் சில – ‘ஆழ்ந்த அன்பு இல்லாதவரை ஆழ்ந்த ஏமாற்றங்கள் இருப்பதில்லை ‘. ‘இந்த தலைமுறையில் நாம் கொடியவர்களின் வெறுப்பு மிக்க பேச்சுக்களையும் செயல்களையும் மட்டுமின்றி நல்லவர்களின் வாய்பேசா மெளனத்தைக் குறித்தும் வருத்தப் படவேண்டும் ‘. பிர்மிங்காம் போராட்டத்தைத் தொடர்ந்து கலிபோர்னியா முதல் நியூயார்க் வரை பத்துக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இனி ஜான் எஃப் கென்னடியின் ஆதரவும் அவரது மறைவு ஏற்படுத்திய அதிர்ச்சி பற்றியும் கிங்கின் ஒட்டு மொத்த வெற்றி மற்றும் அவரது துக்ககரமான மறைவு குறித்தும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

தொடரும்….

கே.ஜே.ரமெஷ்

kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமெஷ்

கே.ஜே.ரமெஷ்

தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

கே ஜே ரமேஷ்


ஜோர்டானிடம் தோல்வியுற்ற பின்னர் மேலும் மூர்க்கமாகத் தீவிரவாதத்தில் ஈடுபட்ட PLO 1972ம் ஆண்டு மியூனிக்கில் (Munich) நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது 11 இஸ்ரேலிய தடகள விளையாட்டு வீரர்களை கொன்று குவித்தனர். PLOவின் இந்த வெறிச்செயலால் உலகத்தின் கண்டனத்திற்கு ஆளானாலும் அவர்கள் பார்வையைத் தன் பக்கம் திருப்பி பாலஸ்தீனிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலக மக்களிடம் கொண்டு செல்லவும் முடிந்தது. பின்னர் சூடான் நாட்டுக்கான அமெரிக்க தூதுவர் க்லியோ நோயெல்லையும் மற்றுமொரு அதிகாரியான ஜார்ஜ் மூரையும் கொலை செய்த PLO போராளிகளைச் சூடான் அரசு கைது செய்து அராஃபாட் நேரடியாக அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தது. இருந்தாலும் அமெரிக்க அரசு எந்த காரணங்களையும் வெளியிடாமல் அந்த விஷயத்தை முற்றிலுமாக மறைத்து அதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளியும் விடுதலை செய்தது.

1973ம் ஆண்டு அக்டோபர் மாதம் எகிப்தும் சிரியாவும் 1967ம் ஆண்டு தாங்கள் பட்ட அவமானத்திற்குப் பழி வாங்கும் திட்டத்தோடு தெற்கே சூயஸ் கால்வாயிலும் வடக்கே கோலன் ஹைட்ஸிலும் இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்தன. அந்தப் போரிலும் இஸ்ரேலே வெற்றி பெறவே, PLO தங்கள் போராட்டத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டியதாயிற்று. பாலஸ்தீனிய விடுதலைக்கு ஆயுதமேந்திப் போராடுவது ஒன்றே வழி என்ற நிலையிலிருந்து ஆயுதப்போராட்டத்துடன் அரசியல் ராஜதந்திரத்தையும் கடைப்பிடிப்பதென்று முடிவு செய்தது. அந்த முடிவுக்குப்பிறகு அராஃபாட் தனது ராஜதந்திரத்தால் PLOவை மிகத்திறமையாகக் கையாண்டு பண்பற்ற காட்டுமிராண்டித்தனமான அமைப்பு என்ற மேற்கத்திய மக்களின் கருத்தை மாற்றி PLO நியாயமாக தனது உரிமைக்காகப் போராடும் ஒரு முறையான அமைப்பு என்று நினைக்க வைத்தார். அதனால் கிடைத்த அங்கீகாரத்தைப் பயன்படுத்தி 1974ம் ஆண்டு ஐ.நா. சபையில் தனது பக்க நியாயங்களை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பைப் பெற்றார். மேலும் அராபிய நாடுகள் யாவும் பாலஸ்தீன மக்களுக்கு ஜோர்டான் பிரதிநிதியாக முயல்வதைத் தடுத்து PLO அமைப்பு மட்டுமே பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியென்று ராபாத் மாநாட்டில் அறிவித்தன. இதனாலும் PLO ஒரு அரசியல் இயக்கமாகத் தன்னை உருமாற்றிக் கொள்ள முடிந்தது.

அராஃபாட் ஒரு பக்கம் உலக நாடுகளிடம் தனது ராஜதந்திரத்தைப் பிரயோகித்து வந்தாலும் இன்னொரு பக்கம் PLO தெற்கு லெபனானிலிருந்து தனது தீவிரவாதத்தை இஸ்ரேலின் மீது கட்டவிழ்த்து விட்டது. லெபனானை ஆண்ட அரசின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு உள்நாட்டுப் போரைத் தூண்டியது. அந்தக் கலகத்தில் பல ஆயிரம் லெபனான் மக்கள் மடிவதற்கு அராஃபாட்டும் PLOவும் காரணமாயினர். தொடர்ந்து கொண்டிருந்த தீவிரவாதத்தைத் தாங்க முடியாமல் இஸ்ரேல் 1982ம் ஆண்டு ஜூன் மாதம் தனது தக்குதலை லெபனான் மீது தொடுத்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா போரை நிறுத்தும் நோக்கத்துடன் தலையிட்டு அராஃபாட்டையும் அவரது ஆதரவாளர்களையும் துனிஸியாவிற்கு இடம் பெயர வைத்தது.

அராஃபாட் தலைமைப் பதவியில் இருக்கும் வரை PLOவுடனான எந்த வித சமாதானப் பேச்சு வார்த்தைகளும் பயனுள்ளதாக இருக்காது என்று இஸ்ரேல் நம்பியது. மேலும் PLOவில் சில மிதவாதத் தலைவர்கள் உருவாகக்கூடும், அப்போது அவர்களுடன் பேச்சு வார்த்தைகள் மூலம் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளமுடியும் என்று தீவிரமாக நம்பியது. ஆனால் மிதவாதத் தலைவர்கள் எவரையும் தலையெடுக்க விடாமல் PLO பார்த்துக் கொண்டது. அப்படியே ஒன்றிரண்டு தலைவர்கள் இஸ்ரேலுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டாலும் அவர்களை அராஃபாட்டின் ஆதரவாளர்கள் கொன்று விடுவார்கள் அன்ற அச்சமும் பரவியிருந்தது. இதனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத் தவிர்த்து மற்ற உலக நாடுகள் பாலஸ்தீனிய மக்களின் ஏகோபித்தப் பிரதிநிதி அராஃபாட் மட்டுமே என்ற உண்மையை ஒப்புக்கொண்டன. ஐரோப்பியர்கள் ஒரு படி மேலே சென்று இஸ்ரேலை அராஃபாட்டுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் அராஃபாட்டோ இஸ்ரேலை ஒழிக்கும் தனது கொள்கையை மாற்றிக் கோள்ளவோ அதை அடைவதற்காக PLO மேற்கொண்டிருக்கும் தீவிரவாதத்தைக் கைவிடுவதாகவோ எந்த வாக்குறுதியும் தருவதற்குத் தயாராக இல்லை. இதனால் இஸ்ரேலுக்கும் PLOவுக்கும் நடுவே எந்த சமரச முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

1980களில் அராஃபாட் பல உலக நாடுகளுக்கும் சென்று விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தேடிக்கொண்டிருந்ததன் பயனாக இராக்கின் ஆதரவோடு PLOவை புத்துணர்ச்சியுடன் மீண்டும் கட்டமைத்தார். இதனால் அமைப்புக்குள்ளே தனக்கு எதிராகக் கிளம்பிய எழுச்சியை வெற்றிகரமாக முறியடிக்கவும் அவரால் முடிந்தது. அந்த சமயம் அமெரிக்க அரசின் தொடர்ந்த வற்புறுத்தலினால் தனது நிலையை மாற்றிக் கொள்ளச் சம்மதித்து 1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 242வது தீர்மானத்தை ஒப்புக்கொண்டார். அதன் படி இஸ்ரேலை வருங்காலத்தில் அங்கீகரிப்பதாகவும் எல்லாவிதத் தீவிரவாதத்தையும் கைவிடுவதாகவும் உறுதியளித்தார். அதன்படி PLO இஸ்ரேல், வெஸ்ட் பாங்க் மற்றும் காஸா உட்பட்ட பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை அங்கீகரித்திருக்க வேண்டும். ஆனால் நடந்ததென்னவோ வேறாகிவிட்டது. 1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி பாலஸ்தீன தேசிய மன்றம் பிரிட்டிஷ் 1916ல் உருவாக்கிய (இஸ்ரேலை உள்ளடக்கிய) பாலஸ்தீன நாட்டை பிரகடனப்படுத்தி அதற்கு அராஃபாட்டை அதிபராகவும் தேர்ந்தெடுத்துவிட்டது. சமாதான வழிமுறைக்கு அமெரிக்கா அளித்த இன்னொரு வாய்ப்பையும் இழந்து மீண்டும் டெல் அவிவ் பகுதியில் PLO தனது தீவிரவாதத்தைத் தொடர்ந்தது. இதனால் வெறுப்புற்ற அமெரிக்கா PLOவுடனான நேரடிப் பேச்சு வார்த்தைகளைக் கைவிட்டது.

அராபிய நாடுகள் இஸ்ரேலுடன் சமாதானத்திற்கான நட்புக்கரங்களை நீட்டாத வரை இஸ்ரேல்-பாலஸ்தீனிய சமாதான உடன்படிக்கை நடைபெற சாத்தியங்களே இல்லை என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டது. இதன் விளைவாக அமெரிக்கா தனது உள்துறை அமைச்சராக இருந்த ஜேம்ஸ் பேக்கரை 1991ம் ஆண்டு மத்தியக் கிழக்கு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அனுப்பியது. அவரது முயற்சியின் பயனாக மேட்ரிட்டில் நடந்த மாநாட்டில் PLO, இஸ்ரேல் மற்றும் அராபிய நாடுகள் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால் அங்கும் ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையில் அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் தேர்தல்கள் நடந்து புதிய தலைவர்கள் பதவிக்கு வந்தனர். இஸ்ரேலின் புதிய பிரதமரான யிட்ஸாக் ராபின் PLO தரப்புடன் ஆஸ்லோவில் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியாக சமரச ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். அதன்படி முதல் கட்டமாக பாலஸ்தீனியர்களுக்கு காஸா, ஜெரிக்கோ ஆகிய பகுதிகளில் சுயாட்சிப் புரியவும் படிப்படியாக மற்ற பகுதிகளிலும் சுயாட்சியை விரிவு படுத்தவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இரு தரப்பினரும் மற்றவரை அங்கீகரிப்பதாக எழுதப்பட்ட கடிதங்களை அராஃபாட்டும் யிட்ஸாக் ராபினும் மாற்றிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து 1993ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி வாஷிங்டன் D.C.யில் இரு நாட்டிற்குமிடையே ‘Declaration of Principles ‘ கையெழுத்தானது. அதற்கு மறு வருடம் சமாதானத்திற்கான நோபல் பரிசு அராஃபாட், ஷிமோன் பெரெஸ், யிட்ஸாக் ராபின் ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டது.

1994ம் ஆண்டு அராஃபாட் தனது தலைமையகத்தை வெஸ்ட் பாங்க், காஸாவிற்கு மாற்றினார். ஆஸ்லோ ஒப்பந்தப்படி PA (Palestininan Authority) அரசு செயல்படத் தொடங்கியது. பின்னர் 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று PAவை தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். ஆஸ்லோ ஷரத்துப் படி அந்தத் தேர்தல் முடிவுகள் 1999ம் ஆண்டு வரைக்கும் தான் செல்லுபடியாகும். ஆனால் அராஃபாட் அதற்குப் பிறகு தேர்தலை நடத்தவேயில்லை. மேலும் ஆஸ்லோ ஒப்பந்தப்படி தீவிரவாதத்தை ஒழிக்கும் எவ்வித நடவடிக்கையும் அராஃபாட் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக செய்திவழிச் சாதனங்கள் மூலமாகவும், பள்ளி பாடப்புத்தகங்கள் மூலமாகவும் இஸ்ரேலுக்கு எதிராக வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிட்டதாக ஆதாரப்பூர்வமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 2000ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன் ஆஸ்லோ ஒப்பந்தத்திற்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியாக இஸ்ரேலிய பிரதமரான எஹூட் பாராக்கிற்கும் அராஃபாட்டிற்கும் இடையே கேம்ப் டேவிட் என்னுமிடத்தில் ஒரு ஒரு உச்சமாநாட்டை ஏற்பாடு செய்தார். அதில் பாராக் கிழக்கு ஜெருசலேத்தைத் தலைநகராகக் கொண்டு காஸா மற்றும் வெஸ்ட் பாங்க்கில் 92 விழுக்காட்டுப் பகுதிகளை கொண்ட பாலஸ்தீனிய நாட்டை அராஃபாட்டிற்கு அளிக்க முன்வந்தார். ஆனால் அராஃபாட் இந்த ஏற்பாட்டை ஏற்க மறுத்து விட்டார். இந்தப் பேச்சுவார்த்தை முறிவுக்குப்பின் உடனடியாக PA போர்ப்பிரசாரங்களில் ஈடுபட்டும் கலகங்களைத் தூண்டிவிட்டும் நிலைமையை மேலும் சிக்கலாக்கி விட்டது. அராஃபாட் ஆதரவுடன் இயங்கிய அல் அக்சா இண்டிஃபாடா என்ற அமைப்பு அடுத்த நான்கு ஆண்டுகளில் நடத்திய தீவிரவாத கோர தாண்டவங்களினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மனித வெடிகுண்டுகளைப் பயன்படுத்தும் வழக்கமும் அத்தகைய தற்கொலைப் படையின் உயிர்த்தியாகத்தைப் பெரிய அளவில் போற்றுவதும் பெருகி விட்டதாகக் கூறப்பட்டது. இத்தகையச் செயல்களால் இஸ்ரேலை முழுவதுமாக அழிக்கும் திட்டத்தை அராஃபாட்டும் PAவும் மாற்றிக்கொள்ளவேயில்லை என்பது புலனாயிற்று.

அல் அக்சாவின் உயிர்த்தியாகப் படையை முன்னிருத்தி அராஃபாட் 2000ம் ஆண்டு முதல் 2004 வரை பல குரூரமான தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பல செய்தி நிறுவனங்களும் பத்திரிக்கைகளும் அல் அக்ஸாவுக்கும் அராஃபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததில்லை என்று கூறினாலும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அவர்களிடையே இயக்கம் தொடங்கி நிதி வரை எல்லாவற்றிலுமே நெருங்கிய தொடர்பு இருந்ததாக நிரூபிக்கின்றன. அந்த ஆதாரங்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

1) 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் BBC துப்புத்துலக்கியதில் ஒவ்வொரு மாதமும் 50000 டாலர்கள் வரை அல் அக்சா குழுவினருக்கு ஃபாட்டா அமைப்பு கொடுத்து வந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது அராஃபாட்டின் அனுமதி இல்லாமல் நடந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

2) 2002ம் ஆண்டு இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலிருந்து அல் அக்சாவுக்கு முறையாக ஒழுங்குபடுத்தபட்டு நிறுவிய ஃபாட்டாவின் நிறுவனங்களிலிருந்து நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்திருப்பது நிரூபிக்கப்பட்டது.

3) அல் அக்சா ஆயுதம் வாங்கியதற்கான ரசீதில் பணப்பட்டுவாடாவை அனுமதித்து அராஃபாட் கையொப்பமிட்ட ஆவணம்

4) அல் அக்சாவின் தலைவர் USA Todayக்கான பேட்டியில் 2002ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி கூறியிருப்பது. அதில் அவர், ‘ உண்மையில் நாங்கள் ஃபாட்டாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஃபாட்டாவின் பெயரால் இயங்குவதில்லை. நாங்கள் ஃபாட்டாவின் ஆயுதமேந்தியப் படை. எங்களுக்கு ஃபாட்டாவிடமிருந்து தான் instructions வருகிறது. எங்களது கமாண்டர் யாஸர் அராஃபாட் தான் ‘ என்று கூறியிருந்தார்.

ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கும் அராஃபாட் ஆதரவளித்து வந்தார். இதனால் அவ்வியக்கங்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் இறந்த ஏராளமான அப்பாவி இஸ்ரேல் பொதுமக்களுக்கு அராஃபாட்டே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

மேலும் 2002ம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரேலிய கப்பற்படையினரால் பிடிக்கப்பட்ட, காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த PAவுக்குச் சொந்தமான கப்பலில் 50 டன் எடையுள்ள ஆயுதங்களும் வெடி குண்டுகளும், நிலத்திலிருந்து நிலத்திற்கு செலுத்தும் ஏவுகணைகளும் இருந்தன.

ஜூன் 2002ல் அமெரிக்க அதிபர் புஷ் தீவிரவாதத்திற்குத் துணை போகும் அராஃபாட்டை பதவியிலிருந்து விலக்கக் கோரினார். சமாதானத்திற்கு உதவும் வகையில் தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு புதிய தலைமைத் தேவைப்படுகிறது என்ற புஷ் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரசினையை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு புதிய பாதைக்கான தனது ஆதரவையும் தெரிவித்தார். இஸ்ரேல் தனது பங்குக்கு அராஃபாட்டை அவரது ரமால்லா வளாகத்திலேயே தனிமைப்படுத்தியது. இறுதியில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மஹமுட் அப்பாஸ் பாலஸ்தீனத்திற்கு பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றவுடன் சமாதனத்திற்கான புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி மற்ற நாடுகளுடனான ராஜதந்திர உறவை மேம்படுத்தத் தொடங்கினார். ஆனால் அவரது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டு அவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு அராஃபாட் காரணமாயிருந்தார். அதனால் சமாதான முயற்சிகளும் மெதுவடைந்தது.

அராஃபாட் அவரது கடைசி காலங்களில் நோய்வாய்ப் பட்டிருந்தார். அவர் ‘parkinson ‘s disease ‘ என்ற நரம்புத் தளர்ச்சி நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தார் என்ற வதந்தியில் எவ்வளவு தூரம் உண்மையிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் வதந்திகளுக்கு உரம் சேர்க்கும் வகையில் அவரது மரணத்திற்கான சரியான காரணங்கள் வெளியிடப் படவில்லை. அவருக்கு ஓரினச்சேர்க்கைப் பழக்கம் இருந்ததென்றும் அதனால் எய்ட்ஸ் நோய் தொற்றி இறந்தார் என்ற வதந்தியும் நிலவுகின்றது. 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் உடல் நலம் மிகவும் மோசமடைந்தவுடன் இஸ்ரேல் அவரை பாரீஸில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அனுமதி அளித்தது. நவம்பர் மாதம் 11ம் தேதியன்று மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது. பிறகு அவரது உடல் கெய்ரோவிற்குக் கொண்டு வரப்பட்டு, பல நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் சடங்குகள் நடந்தேறின. அவரது ஆதரவாளர்கள் அவரது உடலை ஜெருசலேம் நகரில் புதைக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் இஸ்ரேல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் ரமால்லாவில் அவரது தலைமையகத்திற்குப் பக்கத்திலேயே அவரது உடல் புதைக்கப்பட்டது.

அராஃபாட் ஒரு தீவிரவாதத் தலைவர் என்ற நிலையிலிருந்து ஒரு சுதந்திர நாட்டின் தலைவனாக மாறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் அவ்வாறான மாற்றத்திற்கு எதிராக அவரது மனத்தடையே காரணமாகி விட்டது. பாலஸ்தீனத்திற்கு ஆயுதம் கொண்டே விடுதலைப் பெற்றுவிடமுடியும் என்ற தீராத தாகம் கொண்டிருந்த அராஃபாட் தனது வழிமுறைகளை மாற்றிக் கொண்டு இஸ்ரேலுடன் சமாதானமாகச் சென்றிருந்தால் இன்று பாலஸ்தீனியர்கள் சுதந்திரக் காற்றை அனுபவித்திருப்பார்கள். மிக நீண்ட காலமாக அவர்கள் படும் துன்பங்களையும் தவிர்த்திருக்க முடியும்.

அராஃபாட்டின் தாக்கம் அவர் மேற்கொண்ட தீவிரவாதம், பயமுறுத்திப் பணியவைக்கும் குணம், பலவந்தமாகப் பணம் பறிக்கும் செயல், பாலஸ்தீனிய மக்களின் போராட்டத்திற்காக சேர்ந்த நிதியுதவியிலிருந்து கையாடல் செய்து தனக்கென்று சொத்து சேர்த்தல் போன்றவற்றையெல்லாம் கடந்து கொலைவெறியுடன் கூடிய, இஸ்ரேலுக்கு எதிராக புனிதப்போரைத் தொடரவைக்கும் மனநிலையுடன் கூடிய ஒரு தலைமுறையையே உருவாக்கி வைத்திருப்பதில் தெரிகிறது. அந்தக் கொடிய தாக்கம் நீங்க இன்னும் எத்தனைத் தலைமுறைகள் காத்திருக்க வேண்டுமோ ?

கே.ஜே.ரமேஷ்

Kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

கே ஜே ரமேஷ்


‘நான் ஒரு கையில் சமாதானத்தின் சின்னமாக ஆலிவ் கிளையும் மற்றொரு கையில் சுதந்திரப் போராட்ட வீரனின் துப்பாக்கியுடனும் வந்திருக்கிறேன். என் கையிலிருந்து ஆலிவ் கிளையை விழுந்து விடச் செய்யாதீர்கள் ‘ என்று 1974ம் ஆண்டு ஐ நா சபையில் பேசும் போது கூறியவர் சமாதானத்தை நாடும் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டதாகச் சொல்ல முடியாது. ஆலிவ் கிளையை எப்போது கீழே போடுவோம் என்று காத்திருந்தது போலவே அவரது செய்கைகள் இருந்தன. ஆனால் ஒன்றை மட்டும் யாராலும் மறுக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் பாலஸ்தீனிய விடுதலைக்காகப் போராடியவர் என்ற உண்மையை மட்டும் எவராலும் இல்லை என்று கூறிவிடமுடியாது.

சுமார் 50 ஆண்டுகளாக வாழ்க்கைக்கு மீறிய பிரம்மாண்டத்தோடு தன்னை ஆமோதித்து ஆதரித்தவர்களையும், தன்னை பரம எதிரியாக நினைத்து வெறுத்தவர்களையும் தான் ஒரு கட்டளையிட்டால் அடுத்த நிமிடமே மனித வெடிகுண்டாக மாறும் சீடர்களையும் ஒரு சேர ஆட்டிப்படைத்தவர். அராஃபட் என்றாலே பாலஸ்தீனியப் போராட்டம் நினைவுக்கு வரும் அளவுக்கு பாலஸ்தீனிய விடுதலைக்கான குறிக்கோளுடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி பாரீஸில் காலமானார். சே குவேராவைப் போலவே யாஸரது புகைப்படம் போஸ்டர்களிலும், டி-சர்ட்டுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளிலுமிருந்து பாலஸ்தீனிய விடுதலைக்கான நியாயங்களையும் உணர்ச்சிகளையும் சிக்கலான காரண காரியங்களையும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கும். பாலஸ்தீனிய விடுதலையில் அவர் கொண்டிருந்த தீவிரம் அவர் குஃபியா என்றழைக்கப்படும் தலையில் அணியும் ஸ்கார்ஃப்பை அணியும் விதத்திலேயேப் புலப்படும். அவர் அணியும் அந்த கருப்பு வெள்ளை கட்டமிட்ட ஸ்கார்ப்ஃ பாலஸ்தீனின் வரைப்பட உருவத்தையும் அதன் விகிதாச்சாரத்தையும் காட்டுவதாக அமைந்திருக்கும்.

1929ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கெய்ரோவில் பிறந்த அராஃபாட் தன் தாய் இறந்தவுடன் தன் தாய்மாமனுடன் நான்கு வருடங்கள் ஜெருசலேம் நகரில் வாழ்ந்தார். பின்னர் அவரைக் கெய்ரோவிற்கு கூட்டி வந்த அவரது தகப்பன் தன்னுடைய மூத்தப் பெண்ணின் பொறுப்பில் அராஃபாட்டை விட்டிருந்தார். தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே பாசப்பிணைப்பு இருந்தது என்று கூறிவிட முடியாது. அராஃபாட் அவரது தகப்பனைப் பற்றிப் பேசியதே கிடையாது. அவரது இறுதி சடங்குகளுக்கும் அராஃபாட் செல்லவில்லை. சிறு வயது சம்பவங்களைப்பற்றி அவர் அதிகமாகப் பேசியது கிடையாது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஜெருசலேம் நகரில் தன் தாய் மாமனுடன் இருந்த போது பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து வீட்டிலிருந்தவர்களை அடித்து, பொருட்களை உடைத்து நாசப்படுத்தியது அவருக்குத் தெளிவாக ஞாபகமிருந்தது. பிரிட்டிஷ் படைக்கெதிராகவும் யூதர்களுக்கு எதிராகவும் போரிட தனது 17வது வயதிலேயே பாலஸ்தீனத்திற்கு ஆயுதங்கள் கடத்தத் தொடங்கிவிட்டார். 1948ம் ஆண்டு அராபியர்களுக்கும் இஸ்ரேலுக்கும் நடந்த போரில் பங்கு கொள்ளும் பொருட்டு தனது பல்கலைக் கழகப் படிப்பை பாதியில் கைவிட்டு பாலஸ்தீனத்திற்குச் சென்றார். ஆனால் போர்ப் பயிற்சியிண்மையைக் காரணம் காட்டி எகிப்து ராணுவம் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டது. பின்னர் தனது சிவில் இஞ்சினியரிங் படிப்பை முடித்து விட்டு சூயஸ் நெருக்கடியின் போது எகிப்து ராணுவத்தில் செகண்ட் லெஃப்டினண்ட் ஆகச் சேர்ந்தார்.

சூயஸ் போருக்குப் பிறகு குவைத்துக்குச் சென்றவர் அங்கே இஞ்சினியர் வேலையில் சேர்ந்து பின்னர் சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார். 1957ம் ஆண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஃபாட்டா என்ற ஒரு அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் ஒரே குறிக்கோள் இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் பகுதியில் சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவுவது. அந்த காலகட்டத்தில் ஜோர்டான் அராஃபாட்டிற்கு ஆதரவாக இருக்க அதை உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை நிறுவ ஏன் முயல வேண்டும் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. இதற்கு ஒரு சிறு பிண்ணணியை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நானூறு ஆண்டுகளாக துருக்கியின் ஓட்டொமன் பேரரசு ஒரு மிகப்பெரிய அராபிய சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தது. அதன் ஒரு பகுதி இன்றைய சிரியா, லெபனான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளை உள்ளடக்கி இருந்தது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைய, அதை ஆதரித்த துருக்கியும் தோல்வியுற்றது. இதனால் 1916ம் ஆண்டு ஓட்டொமன் பேரரசின் தெற்குப் பகுதியை இரண்டாகப் பிரித்து அவற்றை ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சைக்ஸ்-பிகோட் ஒப்பந்தப்படி முடிவு செய்யப்பட்டது. இன்றைய ஜோர்டான், இஸ்ரேல், வெஸ்ட் பாங்க் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அப்போதிருந்த பாலஸ்தீனப் பகுதி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் 1923ம் ஆண்டு பிரிட்டிஷ் அப்போதிருந்த பாலஸ்தீனப் பகுதியை இரண்டாகப் பிரித்து ஜோர்டான் நதிக்கு கிழக்குப் பகுதியை அராபிய பாலஸ்தீனர்களுக்கும் நதியின் மேற்கு பகுதியை யூதர்களுக்குமாக இருக்குமாறு செய்தனர். ட்ரான்ஸ்-ஜோர்டான் என்று பெயரிடப்பட்ட கிழக்குப் பகுதி 1946ம் ஆண்டு இன்னுமொருமுறை ஜோர்டான் என்று பெயர் மாற்றம் கண்டது. இந்த வரலாற்றின் அடிப்படையில் தான் ஃபாட்டா அமைப்பு பழைய பாலஸ்தீனத்தை மீண்டும் சுதந்திர பாலஸ்தீனமாக மாற்ற உறுதி பூண்டது.

அந்த நிலையில் சிரியாவின் ஆதரவோடு ஃபாட்டா அமைப்பு இஸ்ரேலிய இலக்குகளின் மேல் தீவிரவாதத் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேல் சிரியாவின் மேல் பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஃபாட்டா ஜோர்டான், லெபனான் மற்றும் எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காஸா ஆகிய பகுதிகளிலிருந்து தனது தாக்குதல்களைத் தொடர்ந்தது. ஆனால் 1966ம் ஆண்டு சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பிற்கான ரகசிய சதி நடந்தேறிய போது ஃபாட்டா அமைப்புக்கு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு அவரும் கொலையுண்டார். அதைத் தொடர்ந்து அராஃபாட் அபு அம்மர் என்ற புனைப் பெயருடன் ஃபாட்டாவின் தலைவராகிவிட அவரை உடனடியாக சிரியா அரசு கைது செய்தது. பின்னர் விடுதலையானவுடன் தனது முக்கிய சகாக்களுடன் பெய்ரூட்டிற்கு இடம் பெயர்ந்தார்.

1964ம் ஆண்டு அராபிய நாடுகள் ஒன்றுகூடி பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் (PLO) என்ற அமைப்பை உருவாக்கி அதை இஸ்ரேலுக்கு எதிரான போரில் கருவியாகப் பயன் படுத்தத் திட்டமிட்டனர். முதலில் PLOஐ தனக்குப் போட்டியாக நினைத்த அராஃபாட்டின் ஃபாட்டா, PLO அமைப்பில் ஆதிக்கம் நிறைந்த பிரிவாக உருவெடுத்தது. இந்த நிலையில்1967ம் ஆண்டு நடந்த அராபிய இஸ்ரேல் போரில் ஆறே நாட்களில் இஸ்ரேல் மாபெறும் வெற்றி பெற்றது. எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக நடந்த மும்முனைப் போரில் அந்த மூன்று நாடுகளையும் வெற்றி கொண்டு எகிப்திடமிருந்து சினாய் பாலைவனத்தையும், சிரியாவிடமிருந்து கோலன் ஹைட்ஸ் பகுதியையும் ஜோர்டானிடமிருந்து வெஸ்ட் பாங்க் பகுதியையும் கைப்பற்றியது. அதில் யூதர்களுக்கு மிக முக்கியமான வெற்றி ஜெருசலேம் புனித நகரம் உள்ளிட்ட வெஸ்ட் பாங்க் பகுதியைக் கைப்பற்றியது தான். அதற்கு முன் 1948ம் ஆண்டு ஜோர்டான் கைப்பற்றிய பிறகு கடந்த 19 ஆண்டுகளாக ஜெருசலேம் நகருக்குள் யூதர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்திருந்தது.

இந்த மாபெறும் தோல்வியினால் அராஃபாட்டின் ஆதிக்கத்தில் இருந்த PLO, இஸ்ரேலை அழிக்கும் தனது குறிக்கோளுக்கு அராபிய நாடுகளின் துணையை நாடுவதில் அர்த்தமில்லை என்பதை புரிந்து கொண்டது. அதைத் தொடர்ந்த பத்து ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு எதிரான பிரம்மாண்டமான தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வந்தது. இதற்கிடையில் ஜோர்டானிய நகரமான ‘காராமே ‘வில் PLO தனது ஆயுதபடைத் தளத்தை நிறுவியது. 1968ம் ஆண்டு PLO பள்ளிச் சிறுவர்கள் பயணித்த வாகனத்தின் மேல் நடத்திய தாக்குதலில் 28 சிறுவர்கள் காயமடைந்தும் 2 சிறுவர்கள் இறந்தும் விட இஸ்ரேல் பழிக்குப் பழி வாங்க துடித்தது. மூன்று நாட்களுக்குப் பிறகுத் துண்டுப்பிரசுரம் மூலம் காராமேவில் தாக்குதல் தொடுக்கப் போவதாகவும் பொது மக்களை ஊரை விட்டு வெளியேறுமாறும் கேட்டுக் கொண்டது. ஆனால் இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியவுடன் அவர்கள் எதிர்ப்பார்த்ததிற்கு மாறாக போர் PLOவுடனல்லாமல் ஜோர்டானியர்களின் நிரந்தர ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. ஆயுதங்களை வினியோகம் செய்துவிட்டு அராஃபாட் தரப்பு காராமேவை விட்டுச் சென்றுவிட்டது. அந்தப் போரில் இஸ்ரேல், ஜோர்டான் இரு தரப்பினருமே தங்கள் படையை விட எதிரியின் படைக்கு சேதம் அதிகம் என்று கூறிக்கொண்டன. அப்போரைத் தொடர்ந்து PLO தனது தீவிரவாதத் தாக்குதல்களை அதிகப்படுத்தியது. அதன் விளைவாகவும் இஸ்ரேலின் பதில் தாக்குதல்களாலும் 1968ம் ஆண்டு மட்டும் 177 இஸ்ரேலியர்களும் 681 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் 700 இஸ்ரேலியர்கள் படுகாயமடைந்தனர். காராமேவில் கிடைத்த வெற்றியின் துணையோடு அராஃபாட் PLOவின் சேர்மனாக பதவியேற்றார். மற்ற தீவிரவாதக் குழுக்களையும் தன்னுடனே இணைத்துக்கொண்டு ஆயுதப்போராட்டம் மூலமாகவே பாலஸ்தீனிய விடுதலையை அடைவது என்ற குறிக்கோளையும் மறு உறுதி செய்து கொண்டார்.

1960களின் இறுதியில் பாலஸ்தீனியர்களுக்கும் ஜோர்டானியர்களுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின. ஜோர்டானுக்குள் இருந்து கொண்டு பாலஸ்தீனிய போராளிகள் அஸ் ஸார்க் என்ற இடத்தில் இருக்கும் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உட்பட பல முக்கிய இடங்களைத் தங்கள் கட்டுப்பட்டுக்குள் வைத்திருந்தனர். நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடும் என்று கருதிய ஜோர்டானிய அரசு அப்போராளிகளின் ஆயுதங்களைக் களைய முற்பட்டபோது இரு சாராருக்கும் சண்டை மூண்டது. பின்னர் 1970ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி பாலஸ்தீனிய போராளிகள் கடத்தி வந்த மூன்று விமானங்களில் ஒன்றை ஜோர்டானில் வெடி வைத்துத் தகர்த்த போது, அதற்கு மேலும் பொறுக்க முடியாத ஜோர்டானிய அரசர் ஹூசேன் ராணுவ சட்ட அமலாக்கத்தை அறிவித்தார். அதே நாளில் PLO தனது பிரத்யேக ராணுவமாகிய பாலஸ்தீனிய விடுதலைப் போர்ப்படை (PLA) ஒன்றை நிறுவி அதற்கு அராஃபாட்டைக் கமாண்டராக்கியது. அதைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரில் PLOக்கு ஆதரவாக சிரியா ஜோர்டான் மீது படையெடுத்தது. அமெரிக்கா ஜோர்டானுக்கு ஆதரவாக தனது கப்பற்படையையும் இஸ்ரேல் தனது தரைப்படையையும் அனுப்பி வைத்தன. செப்டம்பர் 24ம் தேதியன்று PLOவின் தாக்குதல்களை முறியடித்து ஜோர்டான் வெற்றி கண்டது. அராஃபாட் உட்பட பல PLO தலைவர்களும் மாறுவேடமணிந்து ஜோர்டானை விட்டு தப்பியோடி சிரியாவுக்கும் பின்னர் லெபனானுக்கும் சென்று விட்டனர்.

தொடரும்.

கே.ஜே.ரமேஷ்

Kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

தலைவர்களும் புரட்சியாளர்களும் – சுபாஷ் சந்திர போஸ்

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

கே ஜே ரமேஷ்


‘ஜெய் ஹிந்த் ‘ என்ற அந்த வீர முழக்கத்தை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய் சிலிர்த்துவிடும். அந்த முழக்கத்தை நாட்டிற்கு அளித்த மிகப்பெரும் புரட்சியாளரான சுபாஷ் சந்திர போஸ் பற்றி நினைத்தாலோ ஒவ்வொரு இந்தியனின் உடல் முறுக்கேறி இதயம் வீரத்தாலும் நாட்டுப்பற்றாலும் இந்த உலகையே வெல்லும் உறுதி படைத்ததாகிவிடும். ‘எனக்கு இரத்தம் கொடுங்கள். உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன் ‘ என்றும் ‘சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் வாழ விரும்பினால் நம்மால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது. நமக்கு முன்னால் ஒரு நீண்ட போராட்டம் இன்னும் இருக்கிறது. இந்தியாவை வாழ வைக்க வேண்டுமென்றால் நமக்கு ஒரே ஒரு விருப்பம் மட்டும் தான் இருக்க வேண்டும். அது நாட்டிற்காக நம் உயிரையே விடுவது தான் ‘ என்று எந்த வித போலித்தனமும் அரசியல் உள்நோக்கமும் தன்னலமும் இல்லாமல் நாட்டின் விடுதலையே குறிக்கோளாகக் கொண்டு அறைகூவல் விடுத்து மக்களை தட்டியெழுப்பியவராயிற்றே.

மர்மம் நிறைந்த அவரது மரணம் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இன்றைய தேதி வரை அவரது மரணம் குறித்த எந்த ஒரு ஸ்திரமான முடிவுக்கும் வர இயலாமல் இருக்கிறது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதிஅவர் பயணம் செய்த விமானம் விழுந்து நொறுங்கியபோது தீக்காயங்களுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அவருக்குச் சிகிச்சை அளித்த ஜப்பானிய டாக்டரான யோஷிமி தமயோஷி கொடுத்த வாக்குமூலத்தின் படி அன்று இரவே போஸ் இறந்து விட்டார் என்று அறியப்படுகிறது. ஆனால் அவர் இறந்து விட்டார் என்பதை பலரும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். காந்திஜியோ ‘ இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன் நேதாஜி எப்படி இறப்பார் ‘ என்ற அதீத நம்பிக்கையோடு இருந்தார். நேதாஜி ஏதோ ஒரு காரணத்திற்காக எங்கோ தலைமறைவாக இருக்கிறார் என்றும் தக்க தருணத்தில் தாய் நாட்டிற்குச் சேவை செய்ய மீண்டும் வருவார் என்றும் நம்பிக்கைக் கொண்டிருந்தார். நேதாஜியின் மரணம் குறித்த விசாரணைக் கமிஷன் அமைத்த முதல் நபர் வைஸ்ராய் வேவல். அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வெளியிடவில்லையென்றாலும் அந்த விசாரணையில் போஸ் இறந்து விட்டார் என்றே நம்பப் பட்டதாகத் தெரிகிறது.

இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான முதல் விசாரணைக் கமிஷன் அப்போது இரயில்வே மந்திரியாக இருந்த ஷா நவாஸ் கான் தலைமையில் நிறுவப்பட்டது. ஆனால் அதிக விசாரணை எதுவுமின்றி துரிதமாக நேதாஜி இறந்த செய்தியை ஷா ஊர்ஜிதப்படுத்தினார். அவசரத்தில் அள்ளித் தெளித்த இந்த கோலத்தால் ஷா INAவில் நேதாஜிக்கு அடுத்த கட்ட தலைவராக இருந்திருந்த போதும், அவர் ஒரு சிறந்த போர்வீரராக இருந்த போதும், அவருடைய விசாரணைத் திறனைப் பலரும் சந்தேகித்தனர். பிறகு இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த போது ஜி.டி.கோஸ்லாவின் தலைமையில் இன்னொரு விசாரணைக்கமிஷன் அமைத்தார். அந்த கமிஷன் சிங்கப்பூர், பேங்க்காக், ரங்கூன் ஆகிய நாடுகளுக்குச் சென்று பலரைப் பேட்டி கண்டது. ஆனால் ஜி.டி.கோஸ்லா நேதாஜி இறந்த இடமான ஃபோர்மோசா என்ற இடத்துக்குச் செல்லாமலேயே அறிக்கையை சமர்ப்பித்ததால் அவ்விசாரணைக் குழுவையும் யாரும் நம்பவில்லை. மேலும் நேதாஜிக்கும் கோஸ்லாவிற்கும் இடையில் இணக்கமான நட்பு இருந்ததில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த விசாரணைக்கமிஷனின் அறிக்கை நம்பகத் தன்மையை இழந்ததற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. அது கோஸ்லாவிற்கும் பண்டிட் நேருவின் குடும்பத்திற்குமிடையேயான மிக நெருங்கிய நட்புறவு. நேதாஜியின் கடைசிக் காலத்தில் நேதாஜியும் நேருவும் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை. இந்த விஷயத்தைப் பற்றி பின்னால் விரிவாகப் பார்ப்போம். கோஸ்லாவின் அறிக்கையும் நேதாஜி இறந்த விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தியது. ஆனால் அதற்கு முக்கிய ஆதாரமாக டாக்டர் யோஷிமி தமயோஷியின் மருத்துவ அறிக்கையே சுட்டப்பட்டது. கோஸ்லாவின் அறிக்கை மொரார்ஜி தேசாய் உட்பட பலராலும் நிராகரிக்கப்பட்டது. பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாம் முறையாக ஜஸ்டிஸ் ஜே.சி.முகர்ஜியின் தலைமையில் ஒரு விசாரணைக்கமிஷன் நிறுவப்பட்டது. இன்றைக்கும் இந்த கமிஷன் பல ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது. இந்த முறையாவது உண்மையை வெளிக்கொணர்வார்கள் என நம்புவோம்.

1897ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி பிறந்த சுபாஷ் சந்திர போஸ் இள வயதில் விளையாட்டில் ஆர்வமின்றி மிகுந்த சங்கோஜியாக இருந்தார். கட்டாக்கில் (இன்றைய ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள பகுதி) பிறந்த போஸ், பூரி என்ற புண்ணியஸ்தலத்திற்கு வரும் சாதுக்களாலும் யாத்திரிகர்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்டார். தனது பதினைந்தாவது வயதில் விவேகானந்தருடைய பேச்சுக்களையும் எழுத்துக்களையும் படித்தவர் ராமகிருஷ்ண பரமஹம்ஸராலும் மிகவும் ஈர்க்கப்பட்டார். மிகுந்த மதிநுட்பமுள்ளவரான போஸ் பள்ளியிறுதி ஆண்டில் இரண்டாவதாக வந்து கொல்கத்தாவிலுள்ள பிரெஸிடென்ஸி கல்லூரியில் சேர்ந்தார்.

1916ம் ஆண்டு ஆங்கில விரிவுரையாளரான ப்ரொஃபஸர் ஓட்டன் இந்தியர்களைத் தரக்குறைவாகப் பேசியதால் அவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டு தத்துவத்தில் முதன்மையாகத் தேர்வு பெற்றார். அவருடைய புத்தி கூர்மையைப் புரிந்து கொண்ட அவரது தந்தையார் அவரை அரசாங்க உத்யோகத்தில் உயர் பதவியில் பார்க்க ஆசைப்பட்டு சிவில் செர்விசீல் தேர்ச்சி பெற இங்கிலாந்து அனுப்பி வைத்தார். 1920ம் ஆண்டு ஆங்கிலத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று மிகச்சிறப்பாக அதில் போஸ் தேர்ச்சி பெற்றார். ஆனால் அதே சமயம் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்துவிட போஸ் மன அமைதி இழந்தார். ICSல் தேர்ச்சி பெற்றாலும் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்ய மறுத்து விட்டார். அந்த நேரம் காந்திஜி ஒரு மக்கள் தலைவராக உருவெடுத்த நேரம். சுபாஷ் சந்திர போஸ் இந்தியன் நேஷனல் காங்கிரஸில் சேர்ந்து நாட்டுக்குத் தொண்டாற்றும் பொருட்டு காந்திஜியை சந்தித்தார். போஸின் பணிவான கோரிக்கையைக் கேட்டு காந்திஜி அவரை கொல்கத்தாவிலிருந்த தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸிடம் அனுப்பி வைத்தார். 1921 முதல் 1925 வரைக்கும் இடைப்பட்டக் காலகட்டத்தில் கொல்கத்தாவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடந்த அரசியல் போராட்டங்களில் பங்கு கொண்டு பலமுறை சிறை சென்றார். 1921ல் ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸின் இந்திய வருகையை புறக்கணிக்கும் போராட்டத்தை வழிநடத்தியதால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் இன்னொரு முறை தேஷ் பந்துவுடன் சிறை சென்றார். அப்போது தேஷ் பந்துவை பிற்காலத்தில் குருவாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு நேதாஜிக்குக் கிடைத்தது. தேஷ் பந்து கொல்கத்தாவின் மேயராகியவுடன் போஸ் முதன்மை ஆட்சித்துறை அதிகாரியாக பதவியேற்றார். பதவியில் இருந்து கொண்டே பல புரட்சியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அதனால் அரசாங்கம் அவரை மறுபடியும் கைது செய்து முதலில் அலிப்பூர் ஜெயிலிலும் பின்னர் பர்மாவிலுள்ள மாண்டலே ஜெயிலிலும் அடைத்தார்கள். இந்த சிறையடைப்பு அவருக்கு, எதிர்கால நடவடிக்கைகளைப் பற்றியும் புரட்சியை நெறிப்படுத்துதலைப் பற்றியும் சிந்திக்க, வேண்டிய அவகாசம் கொடுத்தது. 1925ல் தேஷ் பந்துவின் மறைவு அவரை நிலைகுலைய வைத்தது. ஆனால் மாண்டலேயில் இருந்த இரண்டு வருடங்கள் அவருக்கு வேண்டிய ஊக்கத்தையும் மனபலத்தையும் கொடுத்தது. 1926ம் ஆண்டு முடிவில் வங்காள சட்ட சபைக்கு வேட்ப்பாளராக நியமனம் பெற்றார். மே 1927ல் அவரது உடல்நலம் கருதி அவரை சிறையிலிருந்து விடுவித்தார்கள். டிசம்பர் 1927ம் ஆண்டு ஜவஹர்லாலுடன் காங்கிரஸின் ஜெனரல் செக்ரட்டரி பதவியை ஏற்றார். பின்னர் 1928ம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த சுயாட்சி நாடாக இந்தியாவை அங்கீகரிக்க வேண்டி நிகழ்ச்சி நிரலை மோதிலால் நேரு முன் வைத்தார். இதனை இளைய தலைவர்கள் எதிர்த்தார்கள். ஜவஹர்லாலும் போஸும் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கோரிப் போராடவேண்டும் என்றும் காங்கிரஸ் கமிட்டியின் கட்டம் கட்டமாக சுதந்திரம் பெறும் பிரேரணைத்திட்டத்தை ஒத்துக்கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டார்கள். அப்போது காந்திஜி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு காலக் கெடு கொடுக்கலாம் என்று ஒரு யோசனையை முன்வைத்தார். அதன் படி ஒரு வருடத்திற்குள் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சார்ந்த சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் அப்படி வழங்கத் தவறினால் காந்திஜியே முன்னின்று முழு சுதந்திரத்திற்கான சட்ட மூலத்தை தயாரித்தளிப்பார் என்றும் யோசனை வழங்கப்பட்டது. இந்த யோசனையை எல்லோரும் அங்கீகரித்தார்கள்.

ஆனால் எவ்வளவோ முயன்றும் சுயாட்சி அந்தஸ்த்து பெறமுடியவில்லை. அதன் விளைவாக அடுத்த காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் முழு சுதந்திரம் (பூர்ண ஸ்வராஜ்) வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு நேதாஜி பல முறை சிறை சென்று வந்தார். 1930ம் ஆண்டு ஜனவரி மாதம் அவரை ஊர்வலம் நடத்திய குற்றத்திற்காக மறுபடி சிறையிலடைத்த பிறகு அந்த செப்டம்பரில் விடுவிக்கப்பட்டார். அவர் இம்முறை சிறையில் இருந்த போது கொல்கத்தாவின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு (1930 மார்ச்சில்) ஷஹீத் பகத் சிங் தூக்கிலிடப்பட்ட போது காங்கிரஸிடம் மிகுந்த வருத்தமும் கோபமும் கொண்டிருந்தார். பகத் சிங்கின் மறைவும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாத காங்கிரஸ் தலைவர்களின் கையாலாகத்தனமும் அவரை வெகுண்டெழச் செய்தது. பகத் சிங்கின் தூக்கிலிடல் முதன் முதலாக அஹிம்சா முறையிலான போராட்டத்தில் அவரை நம்பிக்கையிழக்கச் செய்து, தற்காப்புக்கு சிறந்த வழி தாக்குதலை முதலில் தொடங்குவது தான் என்று நம்ப வைத்தது. 1932ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அப்போது வியன்னாவுக்குச் சென்றவர் வித்தல்தாஸ் படேல் என்ற ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைச் சந்தித்து அவரால் மிகவும் கவரப்பட்டார். இருவரின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருந்தது. இருவருமே ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடக்கூடாது என்று கருதினர். ஆனால் அது ஆயுதமேந்திய போராட்டத்துடன் நடைபெற வேண்டும். அப்போராட்டம் எல்லா பக்கங்களிலிருந்தும் தொடுக்கப்பட வேண்டும் என்றும் நம்பினர். அதனுடன் பிரிட்டிஷுக்கு எதிரான நாடுகளுடன் ஒன்றிணைந்து போராடினால் தான் வெற்றிக்கு வழி வகுக்க முடியும் என்பதையும் புரிந்து கொண்டனர்.

1933ம் ஆண்டு வித்தல்தாஸின் மறைவுக்குப் பிறகு போஸின் ஒரே குறிக்கோள் மற்ற நாட்டவர்களிடம் இந்திய மக்கள் படும் துன்பங்களையும் சுதந்திரத்திற்கான நியாயங்களையும் பரப்புவதே. 1934ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘The Indian Struggle ‘ என்ற புத்தகத்தை எழுதி பதிப்பித்தார். 1932 முதல் 1936ம் ஆண்டுக்கு இடைப்பட்டக் காலகட்டத்தில் ஜெர்மனியின் ஃபெல்டர் (ஹிட்லரையும் சந்தித்ததாக ஒரு கூற்று இருக்கிறது), இத்தாலியின் முஸ்ஸோலினி, ஐயர்லாந்தின் டி வலேரா, ஃப்ரான்ஸின் ரோமா ரோல்லண்ட் ஆகியோரைச் சந்தித்தார். ஐயர்லாந்தின் டி வலேராவால் கவரப்பட்டு பின்னர் தன்னுடைய புரட்சியின் வடிவத்தை ஐரிஷ் புரட்சிக் குழுவான ஸின் ஃபைன் (Sinn Fein)ஐ மாதிரியாகக் கொண்டு அமைத்தார். 1936ம் ஆண்டு நாடு திரும்பியவரை மீண்டும் கைது செய்து 1937ம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலை செய்தார்கள். இதற்கிடையில் சுபாஷ் சந்திர போஸ் நாடறிந்த புகழ் வாய்ந்த தலைவராக உருவெடுத்துவிட்டார். காந்திஜியே அவரைக் காங்கிரஸுக்கு பிரெஸிடெண்ட்டாக தலைமை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார். அவ்வழைப்பை ஏற்று ஹரிப்பூர் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். அப்போது ஷாந்தி நிகேதனில் ரபீந்திரநாத் தாகூரால் ‘தேஷ் நாயக் ‘ என்று பட்டமளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

நேதாஜி முஸ்ஸோலினியை சந்தித்ததை வைஸ்ராய் விரும்பவில்லை என்பதை காந்திஜி அறிந்து கொண்டார். காந்திஜியின் எண்ணப்படி சுதந்திரம் பேச்சு வார்த்தைகள் மூலமே பெறக்கூடிய ஒன்று. அதனால் இந்தியன் நேஷனலின் அடுத்த தேர்தலில் நேதாஜி மறுபடியும் போட்டியிட்ட போது காந்திஜி அவரை ஆதரிக்காதது மட்டுமின்றி அவருக்கு எதிராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் ஜவஹர்லால் நேரு இருவரையும் போட்டியிடுமாறு பணித்தார். ஆனால் இருவருமே மறுத்துவிட்டதால் சீதாராமையாவை நிறுத்தினார். தேர்தலின் முடிவுகளோ காந்திஜிக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. அவர் மிகவும் கோபமடைந்து ‘இதை எனது தனிப்பட்ட தோல்வியாகவே நான் கருதுகிறேன் ‘ என்று அறிக்கை விட்டார். அதன் பிறகு காந்திஜி ராஜ்கோட்டுக்குச் சென்று தனது உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். கடைசியில் கொல்கத்தா கூட்டத்தில் நேதாஜியை காங்கிரஸில் இருந்து மூன்று வருடங்கள் தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. இத்தடைக்கான முடிவு நேதாஜிக்கு நேரு மற்றும் தாகூர் ஆகியோரது ஆதரவு இருந்தும் எடுக்கப்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போர் மூள, போஸ் எதிர்ப்பார்த்தபடி பிரிட்டிஷ் வைஸ்ராய் இந்தியத் தலைவர்கள் எவரையும் கலந்தாலோசிக்காமல் இந்தியாவை உலகப்போரில் பங்கு கொள்ளும் நாடு என்று அறிவித்து விட்டார். அதை எதிர்த்து ஆட்சியில் இருந்த எல்லா காங்கிரஸ் அரசுகளும் ராஜினாமா செய்துவிட்டன. இதையடுத்து 1940ம் ஆண்டு போஸ் சாவர்கரை பாம்பேயில் சந்தித்த போது அவர் போஸிடம் சிறு சிறு காரணங்களுக்காகப் போராடிச் சிறை சென்று பெருமதிப்புள்ள நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும் ஜப்பானில் இருந்த ராஷ் பெஹாரி போஸின் அறிவுரைப்படி சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவை விட்டு யாரும் அறியா வண்ணம் ஜப்பானுக்கோ அல்லது ஜெர்மனிக்கோ சென்று விடவேண்டும் என்றும் அங்கிருந்து கொண்டு இந்திய போர்க் கைதிகளை ஒருங்கிணைத்து ஒரு ராணுவத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறினார். (ராணுவத்தை அமைக்கும்படி சாவர்கர் அறிவுருத்தியதை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை). ஆனால் நேதாஜியோ இந்தியாவை விட்டுச் செல்லாமல் அப்பாவி இந்திய வீரர்களை போரில் ஈடுபடுத்துவதைக் கண்டித்தும் இந்திய மக்களின் வரிப்பணத்தையும் மற்ற செல்வங்களையும் போருக்காக செலவழிப்பதைக் கண்டித்தும் போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்திற்கு மக்களின் பேராதரவும் இருந்தது. இதனால் பயந்த ஆங்கிலேய அரசு அவரை மீண்டும் சிறையிலடைத்தது. இதை எதிர்த்து சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட நேதாஜியின் உடல்நலம் உண்ணாவிரதத்தின் 11வது நாள் அன்று மோசமடைந்தது. சிறையில் அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டால் மக்கள் பொங்கி எழுந்து விடுவார்கள் என்று உணர்ந்த பிரிட்டிஷ் அரசு அவரை வீட்டுக்காவலுக்கு மாற்றுமாறு உத்தரவு பிறப்பித்தது. போஸ் 1941ம் வருடம் ஒரு முஸ்லீம் மத போதகரைப்போல் வேடமணிந்து அவ்வீட்டுக்காவலில் இருந்து தப்பினார். பின்பு காபூலில் தென்பட்ட அவர் மீண்டும் தலைமறைவாகி, ‘ஆர்லேண்டோ மஸ்ஸோட்டா ‘ என்ற பெயரில் போலி ஆவணங்களுடன் முதலில் ரஷ்யாவிற்குச் சென்றவர் மார்ச் 28ம் தேதி பெர்லினை அடைந்தார்.

ஜெர்மனியின் உதவியோடு ஒரு ராணுவப்பிரிவை ஏற்படுத்தியவர் ஒரு வானொலி நிலையத்தையும் நிறுவி, அவ்வானொலி வழி இந்தியர்களை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு தூண்டினார். நேதாஜி தப்பியோடி பெர்லினிலிருந்து வானொலி மூலம் ஒலிபரப்பியது மக்களை மிகவும் ஆவேசத்துடன் போராட ஊக்குவித்தது. பிறகு ரோமிலும் பாரீஸிலும் இந்திய மையங்களை நிறுவினார். அப்போது ராஷ் பெஹாரி போஸ் மற்ற தேசபக்தர்களின் துணையோடு இந்தியப் போர்க்கைதிகளைக் கொண்டு ஒரு ராணுவம் அமைத்து விட்டதாகவும் அதைத் தலைமை தாங்கி இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் படையுடன் மோதுமாறும் அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று ஒரு ஜெர்மானிய கப்பலில் மிக ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்தடைந்தார். அங்கு வந்தவர் ராணுவத்திற்குத் தலைமை ஏற்றார்.

பின்னர் ஜப்பானியர்களின் உதவியோடு ஒரு தற்காலிக இந்திய அரசை அமைத்து, அந்த ராணுவத்திற்கு இந்தியன் நேஷனல் ஆர்மி என்ற பெயரையும் சூட்டினார். மந்திரி சபை ஒன்றை அமைத்துக் கிழக்கில் வாழும் இந்தியர்களிடமிருந்தும் ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்தும் நிதியுதவி பெற்று அரசாங்கத்தையும் ராணுவத்தையும் நடத்தினார். ஜப்பானிய அரசு அவருக்கு 11 இருக்கைகள் கொண்ட ஒரு விமானத்தையும் கொடுத்து உதவியது. மகளிர் ராணுவத்தையும் நிறுவி அதற்கு ராணி ஜான்ஸி ரெஜிமெண்ட் என்று பெயர் சூட்டினார். அந்த இரு ராணுவப்படைகளையும் கொண்டு இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் துருப்புகளை விரட்டியடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் அவர் விருப்பத்திற்கு பேரிடியாகப் போரில் ஜப்பான் வீழ்ச்சியடைந்தது. அதனால் INAவைச் சேர்ந்த வீரர்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானியர்கள் சரணடைவதற்கானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்த போது INAவின் எதிர்காலம் குறித்துப் பேசுவதற்காக நேதாஜி ஜப்பான் சென்றார். பேங்க்காக்கிலிருந்து கிளம்பிய விமானம் ஃபோர்மோசா என்ற இடத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு மீண்டும் கிளம்பியபோது விபத்து ஏற்பட்டது.

காந்திஜியின் அஹிம்சா வழிக்கு நேர் எதிரான வழியை நேதாஜி பின்பற்றினாலும் இருவரும் ஒருவருக்கொருவர் அதிகப் பாசத்துடன் பழகி வந்தனர். ஆனால் காங்கிரஸின் பிரெஸிடெண்ட் தேர்தலில் சீதாராமய்யா தோல்வியுற்றதில் கோபமடைந்த காந்திஜி நேதாஜி தன் பதவியைத் துறக்கக் காரணமாயிருந்து விட்டார். மாகாத்மாவும் சில நேரங்களில் சாதாரண மனிதன் தான் போலும்.

1939ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக நேதாஜி காந்திஜியிடம் ஒரு நாடு தழுவிய போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்ட போது, காந்திஜி நாட்டில் பரவலான வன்முறை வெடித்து விடும் என்று காரணம் காட்டி மறுத்து விட்டார். அப்போது நேதாஜியின் நண்பர்கள் அவரே ஏன் அந்தப் போராட்டத்தைத் தொடங்கக்கூடாது என்று வினவ அதற்கு நேதாஜி ‘நான் அழைத்தால் 20 லட்சம் மக்கள் என் பின்னே வரக்கூடும். ஆனால் காந்திஜி அழைத்தாலோ 20 கோடி மக்கள் திரண்டு வருவார்கள் ‘ என்றாராம்.

பின்னர் ஒரு முறை ‘நான் எல்லோருடைய நம்பிக்கையையும் பெற்று இந்தியாவின் தலைசிறந்த மனிதனான காந்திஜியின் நம்பிக்கையை மட்டும் பெறவில்லையென்றால் அதைவிட மிகப் பெரிய சோகம் வேறொன்றுமில்லை ‘ என்று கூறினாராம். 1939ம் ஆண்டிற்குப் பிறகு காந்திஜியும் நேதாஜியும் சந்தித்துக்கொள்ளவேயில்லை.

சமீபத்தில் (பிப்ரவரி 2005) ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷனிடம் தாய்வான் அதிகாரிகள் நேதாஜி இறந்ததாகச் சொல்லப்படும் தேதியில் எந்த ஒரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று தெரிவித்து இருக்கின்றனர். மேலும் அவர்கள் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தாய்பேயில் நிகழவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். இச்செய்தி நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் அவர் மரணத்தில் மர்மம் இருக்கக்கூடும் என்றும் அதனால் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி வருபவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்து இருக்கிறது.

ரஷ்யாவிலும் பிரிட்டனிலும் இருக்கும் ஆவணக்காப்பகத்திலிருந்து இப்போது பல திடுக்கிடும் தகவல்களைச் சேகரித்திருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் கூறி வந்துள்ளபடி நேதாஜி 1945ம் ஆண்டு விமான விபத்தில் இறக்கவில்லை என்று தெரிய வருகிறது. இத்தகவல்களைத் திரட்டியவர்கள் புராபி ரே, ஹரி வாசுதேவன் மற்றும் ஷோபன்லால் குப்தா ஆகிய மூன்று ஆராய்ச்சியாளர்கள். இந்த மர்மத்தின் முடிச்சு இன்னும் இறுகும் போலத்தான் இருக்கிறது. அடையாளம் காண முடியாத நபர்களால் இந்த மூன்று ஆராய்ச்சியாளர்களும் மிரட்டப்பட்டதால் அவர்கள் 2004ம் ஆண்டு ஜூன் மாதம் தங்கள் ஆராய்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். பின்னர் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை முகர்ஜி கமிஷனிடம் சமர்ப்பிக்கப் போவதாகவும் அதனால் பத்திரிக்கையாளர்களுக்கு இப்போதைக்கு வெளியிட முடியாது என்றும் மறுத்து விட்டனர்.

இதில் முக்கியமாக இரண்டு விஷயங்கள் வெளி வந்திருப்பதாகத் தெரிகிறது :

1. ஜோசெஃப் ஸ்டாலின் தனது பாதுகாப்பு மந்திரியுடனும் வெளியுறவுத்துறை அமைச்சருடனும் நடத்திய ஆலோசனை பற்றியது

2. இந்தியாவில் இருந்த சோவியத் உளவாளி ஒருவர் அனுப்பிய அறிக்கை.

இவை இரண்டுமே 1946ம் ஆண்டு (அதாவது நேதாஜி இறந்து விட்டார் என்று செய்தி வந்து ஒரு வருடத்திற்குப் பிறகு) நடந்திருக்கிறது. ஸ்டாலின் தன் சகாக்களுடன் இந்தியாவில் கம்யூனிசத்தை தழைக்கச் செய்வது பற்றியும் அதில் சுபாஷ் சந்திர போஸின் பங்கு பற்றியுமே ஆலோசனை நடத்தியதாகத் தெரிய வந்திருக்கிறது. மேலும் பிரிட்டிஷ் ஆவணங்கள்படி நேதாஜி சென்ற விமான விபத்து நடப்பதற்கு முதல் நாள் போஸ் சோவியத் நாட்டிற்குத் தப்பிச்செல்ல விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. இன்னுமொரு அறிக்கையில் அந்த விமான விபத்தே ஒரு சூழ்ச்சி என்றும் அது திட்டமிடப்பட்டக் கட்டுக்கதை என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு மேலும் ஆதாரமாக ஜப்பானிய நாளிதழ் ஒன்று 1945ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி இதழில் போஸ் டோக்கியோ வழியாக சோவியத் யூனியனுக்குச் செல்வதாக செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 23ம் தேதி அன்று முகர்ஜி கமிஷன் அந்த மூன்று ஆராய்ச்சியாளர்களை அவர்களிடமுள்ள எல்லா ஆவணங்களையும் அதன் மொழிபெயர்ப்புகளையும் சமர்ப்பிக்குமாறு பணித்தது. இதற்கிடையில் இந்திய உள்துறை அமைச்சு போஸ் உடலை எரித்த சாம்பலைப் பற்றிய ஃபைலையும் அவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கியது பற்றிய ஃபைலையும் கமிஷனிடம் கொடுக்க மறுத்து விட்டது. அந்த ஃபைல்களை வெளியிட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தைக் காட்டி அது மறுத்துவிட்டது. இது நேதாஜியைப் பற்றி வேறெந்த விவரமும் வெளியே வந்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு திட்டமிடப்பட்டச் செயல் என்று கூறுகின்றனர். அவரைப் பற்றிய மேல் விவரங்கள் வெளியே தெரிந்து விட்டால், நேதாஜிக்கு நேரு இழைத்த வஞ்சகச் செயல்களும் மக்களுக்குத் தெரிந்துவிடும் என்று சம்பந்தப்பட்டவர்கள் அஞ்சுவதாலேயே சூழ்ச்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முந்தைய கோஸ்லா கமிஷனிடம் விசாரணையின் போது அப்போதிருந்த இந்திரா காந்தியின் அரசு நேதாஜி-நேரு சம்பந்தப்பட்டப் பல கோப்புகள் காணாமல் போய்விட்டன என்றும் மற்ற கோப்புகளை அழித்து விட்டார்கள் என்று கூறியிருந்தது. உண்மையில் நேதாஜி சம்பந்தப்பட்ட எல்லாக் கோப்புகளுமே ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது அவரது நேர் கண்காணிப்பில் தான் இருந்தது என்றும் நேருவின் காரியதரிசியாக இருந்த மொஹமத் யூனுஸ் தான் அக்கோப்புக்களை கையாண்டு வந்தார் என்றும் அறியப்படுகிறது.

பிரிட்டிஷ் உளவுத்துறையின் அறிக்கை ஒன்று நேதாஜி ரஷ்யாவிற்குத் தப்பிச் செல்லுமுன் நேருவுக்கு ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியதாகக் கூறுகிறது. இதைக் கோஸ்லா கமிஷன் முன்பு ஷ்யாம்லால் ஜெயின் என்பவர் உறுதிபடுத்தியுள்ளார். அவர் கூற்றுப்படி நேரு தன்னை 1945ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 அல்லது 27ம் தேதியன்று கடிதங்களைத் தட்டெழுத்துச் செய்யக் கூப்பிட்டனுப்பினார் என்றும் அப்போது கையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை நான்கு நகல்கள் எடுக்குமாறு கூறினார் என்றும் சொல்லியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் போஸ் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி சைகானிலிருந்து விமானத்தில் மஞ்சூரியாவிற்குச் சென்று விட்டதாகவும் அங்கிருந்து ஒரு ஜீப்பில் மற்ற நால்வர்களுடன் ரஷ்யாவை நோக்கிச் சென்று விட்டதாகவும் இருந்தது என்று கூறியிருக்கிறார். மேலும் அந்தக் கடிதத்தில் இருந்ததாக அவர் ஞாபகப்படுத்திக் கூறிய விஷயங்கள் – ‘போஸுடன் சென்ற அந்த நால்வரில் ஒருவர் ஜப்பானியரான ஜெனரல் ஷிடை. மூன்று மணி நேரம் கழித்துத் திரும்பிய அந்த ஜீப் போஸ் வந்த விமான ஓட்டியிடம் தகவல் தெரிவித்தவுடன் விமானம் டோக்கியோவுக்குச் சென்று விட்டது ‘.

அதற்குப்பிறகு ஜெயின், நேரு சொல்லச் சொல்ல ஒரு கடிதத்தைத் தட்டெழுதியிருக்கிறார். அக்கடிதம் பிரிட்டிஷ் பிரதம மந்திரி அட்லிக்கு எழுதியது என்று அவரே கூறியிருக்கிறார். அக்கடிதத்தில் நேரு கீழ்கண்டவாறு எழுதச் சொன்னார் என்று ஜெயின் கோஸ்லா கமிஷனிடம் தெரிவித்திருந்தார் :

‘டியர் மிஸ்டர். அட்லி,

உங்கள் போர்க்கைதியான சுபாஷ் சந்திர போஸை ரஷ்ய எல்லைக்குள் நுழைய ஸ்டாலின் அனுமதித்ததாக நம்பத்தகுந்தவர்களிடமிருந்து நான் அறிகிறேன். இது ரஷ்யர்களுடைய நம்பிக்கைத் துரோகம். ரஷ்யா பிரிட்டனுக்கு நேச நாடாக இருப்பதால் இதை அவர்கள் அனுமதித்திருக்கக்கூடாது. தயவு செய்து ஆவன செய்யவும்.

இப்படிக்கு உண்மையான,

ஜவஹர்லால் நேரு ‘

இதை பாராளுமன்ற உறுப்பினர் சாமர் குஹா அவையில் வெளிப்படுத்தியபோது அவரைப் பலவாறும் ஏசினார்கள். நேருவின் குடும்பத்திற்கு களங்கம் கற்பிக்கச் செய்த சூழ்ச்சி என்று குஹாவைச் சாடினார்கள். ஆனால் பிற்பாடு சேகரித்தத் தகவல்களின் அடிப்படையில் நேருவுக்கு இந்த விஷயத்தில் இருந்த பங்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஊர்ஜிதமாகியிருக்கிறது என்று நம்பப்படுகிறது. அவ்வாறு ஊர்ஜிதமான விஷயங்கள் :

பிரிட்டிஷ் உளவுத்துறை நேதாஜியிடமிருந்து நேருவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது என்பதை உறுதி செய்துள்ளது. அதையே ஷ்யாம்லால் ஜெயினும் உறுதி படுத்தியுள்ளார்.

நேதாஜி ரஷ்யாவிற்குத் தப்பிச்செல்ல உடந்தையாக இருந்த கர்னல் தடா என்பவர் 1951ம் ஆண்டு எஸ்.ஏ ஐயரிடம் ஜப்பானியர்கள் நேதாஜி மஞ்சூரியா வழியாக ரஷ்யாவிற்குச் செல்ல ஏற்பாடுகள் செய்வதாக ஒத்துக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.

ஜெயின் கூற்றை கோஸ்லா கமிஷன் மறுக்கவோ அல்லது அவர் சொல்வது பொய் என்று கூறவோ இல்லை.

பிரதமரின் நேர் கண்காணிப்பில் இருக்கும் கோப்புகள் தொலைந்து விட்டதாகவும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் அரசு தரப்பில் கூறியது எதையோ மறைப்பதற்கான ஆயத்தமாகவே இருக்கக் கூடும்.

நேரு சிங்கப்பூருக்கு வருகை தந்த போது பிரிட்டிஷ் அட்மிரல் அவரிடம் கூறிய அறிவுரை. இதை நேருவுடன் சென்ற ஜன்மபூமி நாளிதழின் ஆசிரியர் அம்ரித்லால் சேத் சரத் சந்திர போஸிடம் கூறியுள்ளார். அந்த அறிவுரைப்படி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் சாகவில்லையென்றும், நேதாஜியைப்பற்றி தொடர்ந்து உயர்வாகப் பேசிக்கொண்டிருந்தால் அவர் திரும்பியவுடன் சுதந்திர இந்தியாவை அவருக்கே விட்டுக் கொடுக்கும்படியாகிவிடும் என்றும் அதனால் INAவை இந்திய ராணுவத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. முதல் நாள் இறந்த INA வீரர்களின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நேரு, அட்மிரலிடம் பேசிய பிறகு மறு நாள் INA சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மறுத்து விட்டதாகத் தெரிகிறது.

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பிறகு நேரு நேதாஜியைப்பற்றி எங்குமே பேசவில்லை. அடுத்த பத்து ஆண்டு காலத்தில், நேரு பிரதமர் ஆனபிறகும் கூட நேதாஜியின் பெயரைக் கூட அவர் சொன்னதில்லை.

1950 வரை ஆல் இந்தியா ரேடியோவில் நேதாஜி பற்றிய சிறப்புப் பார்வையோ அல்லது அவரது பிறந்த நாள் பற்றிய அறிவிப்போ ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருந்ததாக ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

நேரு பிரதமராக பதவியேற்ற பிறகு முந்தைய (பிரிட்டிஷ்) வேவல் அரசுக்கு பிரிட்டிஷ் உளவுத்துறை அனுப்பிய ரகசிய அறிக்கைகளின் நகல்களைப் பெற்றுக்கொண்டார். அவ்வறிக்கைகளில் நேதாஜி ரஷ்யாவிற்குச் சென்று விட்டார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் நேருவோ இந்தியாவின் பிரதமராக ரஷ்ய அரசாங்கத்திடம் அவ்வறிக்கைகளைப் பற்றி அதிகாரப்பூர்வமாகப் பேசவேயில்லை. மேலும் நேதாஜியின் மறைவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்து வந்திருக்கிறார். பின்பு அவர் அமைத்த ஷா நவாஸ் கான் கமிஷன் கூட ‘ராதா பெனோட் பால் ‘ தலைமையின் கீழ் அதிகாரப்பூர்வமற்ற விசாரணையை நடத்த விடக்கூடாது என்ற நோக்குடன் அமைக்கப்பட்ட ஒரு கண் துடைப்பே என்பது ஊர்ஜிதமாகியதாகக் கூறப்படுகிறது.

நேதாஜியின் மறைவு குறித்து நம்பவே முடியாத அளவுக்கு வெளியாகி இருக்கும் உண்மைகளும் திடுக்கிடவைக்கும் தகவல்களும், பொய்யாகப் பிரசாரப் படுத்தப்பட்ட அவரது மறைவும் இந்திய மக்களைப் பொருத்தவரை மிக மிக முக்கியமான விஷயங்கள். நேதாஜியின் மறைவு பற்றிய முகர்ஜி கமிஷனின் உண்மைக் கண்டுபிடிப்புகள் பற்றிய அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிடுவது இன்றியமையாதது. அதைப் பற்றி அறிந்து கொள்வது ஒவ்வொரு இந்தியனின் தார்மீக உரிமையும் ஆகும். இது நடக்குமா ? பொறுத்திருந்துப் பார்ப்போம். கெடுவை நீட்டிக்கவில்லையென்றால் முகர்ஜி கமிஷனின் காலக்கெடு மே மாதத்துடன் முடிவடைகிறது.

ஒரு கொசுறுச் செய்தி : ஷ்யாம் பெனெகல் இயக்கும் நேதாஜியைப் பற்றிய படம் இந்த ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

கே.ஜே.ரமேஷ்.

kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

தலைவர்களும் புரட்சியாளர்களும் – சே குவேரா

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

கே ஜே ரமேஷ்


நானறிந்த வரை புரட்சியாளர்களிலேயே பலரையும் மிக மிகக் கவர்ந்தவர் சே குவேரா. அவரைப்பற்றி நினைத்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிடும். ழீன் பால் சாத்ரே குவேராவை ‘அவர் வாழ்ந்த காலத்தில் சே ஒரு முழுமையான மனிதன் ‘ என்று கூறினார். நெல்சன் மாண்டேலாவோ ‘ சே சாதித்ததை எந்த தணிக்கையும் அல்லது எந்த ஒரு சிறையும் நம்மிடமிருந்து மறைத்து விடமுடியாது. சுதந்திரத்தை விரும்பும் எந்த ஒரு மனிதனுக்கும் அவரது வாழ்க்கை ஒரு உத்வேகத்தைத் தரவல்லது. அவரின் நினைவுகளை நாம் எப்போதும் போற்றுவோம் ‘ என்று கூறினார்.

மனித நேயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிய சே ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தான். அப்படி ஒடுக்கப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களுக்காகத் தன்னையே தியாகம் செய்ய முன் வந்தவன் அவன். எப்பேர்ப்பட்ட மனித நேயம் அது. முதன் முதலாக தன் நண்பன் ஒருவனுடன் மோட்டார் சைக்கிளில் லேட்டின் அமெரிக்காவில் பயணம் செய்யும் போது தொழு நோயாளிகளிடம் காட்டிய அவன் பரிவு அவனை மற்ற மானுடர்களிடமிருந்து பிரித்துக் காட்டியது.

சே பொலிவிய காட்டில் கொல்லப்பட்ட போது லேட்டின் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் பூராவும் அவர் ஒரு ஹீரோவாகவே மதிக்கப்பட்டார். ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய மருத்துவத் தொழிலை கைவிட்டு, தான் பிறந்த ஊரை மறந்து எங்கோ வாழும் மக்களின் துயர் துடைக்க ஃபிடல் காஸ்ட்ரோவுடனும் மற்ற சகாக்களுடனும் கியூபாவை முற்றுகையிடும் பொருட்டு கள்ளத் தோணியில் கரிப்பியனைக் கடந்தார். அப்போது கியூபாவை பாட்டிஸ்டா என்ற கொடுங்கோலன் தன் இரும்புப்பிடியில் வைத்திருந்தான். அந்நிய நாட்டில் பழக்கமில்லாத சூழ்நிலையில் தன் சகாக்கள் பலரை இழந்தான். மிஞ்சியவர்களின் துணையோடு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹவானாவிற்குள் நுழைந்து லேட்டின் அமெரிக்காவின் முதலும் கடைசியுமான சோஷலிச புரட்சியின் வெற்றிக் கொடியை நாட்டினான். ஆஸ்துமா நோயாளியான சே குவேரா மக்களினத்தை அடிமைப்படுத்துதலும் கொடுங்கோலாட்சியும் எங்கு நடந்தாலும் எதிர்த்து வந்தான். 39 வயதில் பொலிவிய வீரர்களிடம் பிடிபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது, ‘ கோழைகளா சுடுங்கள். உங்களால் சே என்ற ஒரு மனிதனைத்தான் கொல்லமுடியும் ‘ என்று கொஞ்சம் கூட கலங்காமல் கர்ஜித்தவன். அவன் கண்களின் தீட்சண்யத்தைத் தாங்கமுடியாமல் கொல்ல வந்த வீரன் பயந்து ஓட அவனை மறுபடியும் சென்று கொல்லுமாறு உத்தரவிடப்பட்டது. யேசு கிறிஸ்த்துவைப்போல் இரண்டு கைகளையும் விரித்து வைத்து அவனைச் சுட்டு கொன்ற அந்த கோழைகள் அவன் இறந்த பிறகும் பயம் நீங்காதவர்களாக அவன் கைகளிரண்டையும் வெட்டி தனியே புதைத்து விட்டார்கள். குவேராவின் இறப்பை நம்ப முடியாத மக்கள் அவன் மீண்டும் உயிர் பெற்று வருவான் என்று தீவிரமாக நம்பினர். இளையர்கள் ‘மக்கள் குவேராவை மறக்க விட மாட்டோம் ‘ என்று சத்தியப் பிரமாணமே எடுத்துக்கொண்டனர். சே இறந்து 37 வருடங்கள் கழிந்த பின்பு இன்றும் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் காணப்படுகிறான். ஆல்பெர்டோ கொர்டா 1960ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தில் சே குவேரா உலகெங்கிலுமுள்ள புரட்சியாளர்களுக்கு கடவுளாகவே காட்சியளித்தான். சே தன்னுடைய பெரெட்டுடனும் (ராணுவத்தினர் அணியும் தொப்பி) ஒரு தீர்க்கதரிசியின் பார்வையுடனும் ஒரு நினைவாஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டபோது கொர்டா எடுத்த படம் அது. இன்று காபி மக்குகள், போஸ்டர்கள், பனியன்கள் போன்ற எல்லாவித நினைவுப் பொருட்களிலிருந்தும் சே இந்த உலகைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். கொர்டா தனது 72வது வயதில் சமீபத்தில் இறந்து போனது பலருக்குத் தெரிந்திருக்கலாம்.

1928ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி பிறந்த எர்னெஸ்டோ குவேரா தனது மருத்துவப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு 1951ம் ஆண்டு தனது நண்பன் கிரானாடோவுடன் சிலி நாட்டுக்கும் பெருவிற்கும் ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் பயணமானான். பிறகு குஷ்டரோகிகளின் காலனியான ஹுவாம்போவில் சில காலம் தங்கியிருந்து அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி புரிந்தான். பின்னர் தனது பயணத்தைத் தொடர்ந்த சே பொகாட்டாவிற்கும் காரகாஸிற்கும் சென்றான். 1953ம் ஆண்டு நாடு திரும்பியவன் தனது மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து பட்டம் பெற்றான். ஃபெர்ரர் என்ற நண்பனுடன் பொலிவியாவிற்குச் சென்றவன் வெனிசுவேலா நாட்டிற்குப் போவதற்கு திட்டமிட்டான். மற்ற அர்ஜென்டைனா மக்களைச் சந்தித்தவன் மத்திய அமெரிக்காவிற்குச் செல்ல முடிவெடுத்தான். பனாமா, கோஸ்டரீகா மற்றும் க்வட்டமேலா வழியாகச் சென்றவன் அங்கு ஹில்டா கடெயா என்ற பெண்ணைச் சந்தித்தான். சில காலத்திற்குப் பின் அவளை மெக்ஸிகோவில் மணந்தான். அங்கு பெருவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் நட்பும் அவனுக்குக் கிடைத்தது.

1954ம் ஆண்டு ஜூன் மாதம் க்வாட்டமேலாவை முற்றுகையிடும்போது தப்பியோடும் நிலை ஏற்பட்டு மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்தவன் நாடு கடத்தப்பட்ட கியூபா மக்களைச் சந்தித்தான். 1955ம் ஆண்டு ஃபிடெல் காஸ்ட்ரோவைச் சந்தித்தவன் கியூபாவை முற்றுகையிடும் திட்டத்தை காஸ்ட்ரோ கூறியபோது அதற்கு ஆதரவளித்து அக்குழுவில் சேர்ந்து ராணுவப் பயிற்சி மேற்கொண்டான்.

1957ம் ஆண்டு கொரில்லாப் படைக்குக் கமாண்டராக அறிவிக்கப்பட்டு, பின்னர் 1958ம் வருடக் கடைசியில் ஸாண்டா கிளாராவைக் கைப்பற்றினான். கொடுங்கோலன் பாட்டிஸ்ட்டா ஸாண்டா டொமிங்கோவிற்குத் தப்பியோடினான்.

1959ம் வருடம் குவேராவை ஒரு கியூபன் என்று அறிவித்தபிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம் தொழில் துறை தலைவராகவும் பின்பு தேசிய வங்கியின் அதிபராகவும் ஃபிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டான். 1960ம் வருடக்கடைசியில் சோஷலிஸ்ட் நாடுகளான சீனா, ரஷ்யா மற்றும் செக்கொஸ்லொவேக்கியா ஆகிய நாடுகளுக்கு சென்றான். 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து தொழிற்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டான். அந்த வருடம் சம்பவங்கள் நிறைந்த ஆண்டாக கழிந்தது. ‘ப்லேயா கிரோன் ‘ஐ முற்றுகையிட்டது, உருகுவேயில் நடந்த CIES கூட்டத்தில் கியூபாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டது, அர்ஜெண்டைனாவின் அதிபருடன் ரகசிய ஆலோசனை, பிரேசில் அதிபரால் கெளரவிக்கப்பட்டது என்று பல சம்பவங்கள்.

1963ம் ஆண்டு ஜூன் மாதம் மாசெட்டியின் தலைமையில் ஒரு கொரில்லாப்படையை அர்ஜெண்டைனாவின் வடக்குப் பகுதிக்கு அனுப்பினான். அந்த டிசம்பர் மாதம் ஐ.நா. சபையில் பேசும்போது சோஷியலிசத்தை அடைவதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியேயில்லை என்று அறிவித்த பிறகு மாலி, கினியா, கானா, டாஹோமே மற்றும் டான்ஸானியா ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டான். 1964ம் வருடம் பீகிங், பாரீஸ், அல்ஜீரியா, மாஸ்கோ, நியூயார்க் ஆகிய நகரங்களுக்கு சென்று பென் பெல்லா போன்றவர்களைச் சந்தித்தான்.

1965ம் ஆண்டு காங்கோவிற்கு சென்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் பற்றி அதிபரிடம் விவாதித்தான். பிறகு கினியா, கானா, டாஹோமே, அல்ஜீர்ஸ், பாரீஸ் வழியாக செல்லும்போது மாசெட்டியின் தோல்வி பற்றிய செய்தி கிடைத்தது. காங்கோ புரட்சியாளர்களை மறுபடியும் சந்தித்து விட்டு பீகிங்கிற்கு ஒரு ரகசிய பயணம் முடித்துவிட்டு வந்தவன், ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னிலையில் தனது எல்லா பதவிகளையும் கியூபா நாட்டு குடியுரிமையையும் துறந்தான். அந்த வருட ஜூலை மாதம் கெய்ரோ வழியாக காங்கோவிற்கு ரகசியமாகப் பயணித்தான். அவனது பதவி மற்றும் கியூபாவின் குடியுரிமை துறப்பு பற்றி செய்தியை ஃபிடல் காஸ்ட்ரோ அக்டோபர் மாதம் கியூபன் மக்களுக்கு அறிவித்தார்.

1966ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உருகுவே, பிரேஸில், பராகுவே, அர்ஜெண்டைனா, பொலிவியா நாடுகளில் பயணம் செய்தவன் 1967ம் ஆண்டு பொலிவியாவில் நடந்த கொறில்லாப் புரட்சியின் போது பொலிவிய வீரர்களால் பிடிபட்டு கொல்லப்பட்டான்.

காஸ்ட்ரோவை விட்டு பிரிவதற்கு முன் சே எழுதிய கடிதத்தை ஒரு பொதுக் கூட்டத்தில் காஸ்ட்ரோ படித்தார். அதில் ‘ என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்புபடுத்திய கடமை முடிந்துவிட்டது. அந்தக் கடமையை நான் செவ்வனே முடித்து விட்டேன். உங்களிடமும், மற்ற காம்ரேடுகளிடமும், என்னுடைய மக்கள் ஆகிவிட்ட கீயூபன் மக்களிடமும் நான் விடை பெறுகிறேன் ‘ என்று எழுதியிருந்தான்.

அமெரிக்க உளவுத் துறையின் ஆவணங்கள் சே குவேராவின் வீழ்தலுக்குப் பல காரணங்களை அலசி ஆராய்ந்திருக்கின்றன. அதில் முக்கியமான காரணமாக குவேராவின் அதிவேக தொழில்மயமாக்கல் திட்டமும், மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் திட்டமுமே என்று சுட்டப்படுகின்றன. இத்திட்டங்களால் காஸ்ட்ரோ பதவிக்கு வந்த முதல் வருடங்களில் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டதை சுட்டுகிறார்கள். சே குவேராவின் திட்டங்கள் சோவியத் அரசின் பொருளாதார கொள்கையினின்று மாறுபட்டு சீனாவின் கொள்கைகளை ஒத்திருந்தது கருத்து வேறுபாட்டுக்கு வித்திட்டது. 1964ம் ஆண்டு ஜூலை மாதம் இரு அமைச்சர்களின் நியமன சம்பவம் பொருளாதாரக் கொள்கைகளில் அமைச்சர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஒரு வாய்ப்பாகியது. அவ்விரு நியமனங்களுமே குவேரா வெளியேறுவதற்கு ஒரு தூண்டுகோலாகியது. மற்றுமொரு காரணம் குவேராவின் எண்ணமும் விருப்பமுமான மற்ற லேட்டின் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் புரட்சி வெடிக்கச் செய்யும் திட்டம். மற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பது அதைவிட முக்கியம் என்று போர்க்கொடி தூக்கினார்கள். 1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவேரா அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு மூன்று மாத அதிகாரப்பூர்வமான சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, தனது அதிகாரப்பிடி தளர்ந்து போனதை குவேரா அறிந்து கொண்டான். அதனால் கியூபாவை விட்டு விலகி மற்ற நாடுகளில் புரட்சி ஓங்குவதற்கு உதவி புரியும் பொருட்டு அங்கிருந்து கிளம்பினான்.

சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தான். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தான் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம். இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது. மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது. பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.)

சே குவேராவை அவரது விசிறிகள் தெய்வத்துக்குச் சமமாக உயர்ந்த பீடத்தில் வைத்ததன் விளைவு அவனுடைய மறுபக்கம் வெளி வரவே வாய்ப்பில்லாமல் போனது என்ற ஒரு சாரார் கூறுகின்றனர். கியூபாவில் போராட்டம் நடத்திய ‘சே ‘ வேறு அவன் போராட்டத்திற்குப் பிறகு அதிகாரத்தைக் கையாண்ட ‘சே ‘ வேறு என்ற கூற்றில் எந்த அளவு உண்மை என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அவன் அதிகாரத்தை பெற்றிருந்த போது கியூபாவில் பல கைதிகளை முறையான விசாரணையின்றி கொல்ல உத்தரவிட்ட செயல் அவனுடைய குணாதிசயங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருந்தது. காயமடைந்த பகைவரது படையைச் சேர்ந்த வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்தவனும் தனக்கு ஏற்பட்ட காதல் உணர்வினால் போரில் தன் செயல் திறன் மங்கிவிடுமோ என்று அஞ்சி காதலையே துறக்க முன்வந்தவனுமான சே குவேராவும் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு இருந்த சே குவேராவும் முற்றிலும் மாறுபட்ட இரு வேறு மனிதர்களாகவே தோன்றினர்.

எது எப்படி ஆயினும் சே குவேராவை இன்றும் போற்றும் மக்கள் அவனைப்பற்றி இழிவாக வெளிவரும் செய்திகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்கள் என்பதே உண்மை. பிரெஞ்சு அதிபர் மிட்டராண்ட்டின் மனைவி தன்னை சே குவேராவிடம் அடையாளம் காண்பதாய்க் கூறினார். ‘சே குவேராவின் சிந்தனையும் இலட்சியங்களும் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. இன்றும் மக்களில் பலர் சுதந்திரத்திற்காகக் கதறுகின்றனர் ‘ என்று மிட்டராண்ட் கூறினார்.

குவேராவுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய ‘லா ஹிகுஏரா ‘ என்ற இடத்தில் மக்கள் எழுப்பிய குவேராவின் சிலையை ராணுவத்தினர் உடைப்பதும் மக்கள் மீண்டும் சிலையை நிறுவுவதுமாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது.

அர்ஜெண்டைனாவின் அதிபர் கார்லோஸ் மெனெம் ஃபிடெல் காஸ்ட்ரோவை கடுமையாக எதிர்த்தாலும் சே குவேராவின் உருவம் பதித்த தபால்தலையை வெளியிட்டார். அப்போது அவர் குவேராவை ஒரு உலகத்திற்கே உரிய நபர் என்று புகழ்ந்தார்.

குவேரா உண்மையில் இறந்தது அக்டோபர் மாதம் 9ம் தேதியாகயிருப்பினும், கியூபாவில் இன்றும் ஒவ்வொரு அக்டோபர் 8ம் தேதியன்று சே குவேராவின் நினைவு நாளாக அவனது பங்களிப்புக்கு தலை வணங்கி போற்றுகின்றனர். குவேராவின் நினைவாக கான்ஸெர்ட்டுகளும், கியூபாவின் அரசு தரப்பிலிருந்து வெளிவரும் நாளேடான ‘க்ரான்மா ‘வில் நினைவஞ்சலியாக பல பக்கங்கள் ஒதுக்குவதும் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் இயக்கமான ‘பயனீயர்ஸ் ‘ என்ற இயக்கத்தில் ஆறு வயது சிறுவர்கள் சேர்ந்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். அப்போது அவர்கள் சுயநலமில்லாமல் சமுதாயத்திற்கே தங்களை அர்ப்பணிக்க உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.

அலைடா குவேரா மார்ச் கூறியது போல் ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன் வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை. ஏரியேல் டோர்ஃமேன் ‘கம்யூனிஸம் என்ற தீ அதன் முழு தாக்கத்தை இழந்த போதும் புரட்சிக்கும் அதன் கவர்ச்சிக்கும் சே குவேரா ஒரு சின்னமாக விளங்கினான் ‘ என்று கூறினார். எப்பேர்ப்பட்ட உண்மை!

கே.ஜே.ரமேஷ்.

kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

தலைவர்களும் புரட்சியாளர்களும் – ஹோ சி மின்

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

கே.ஜே.ரமேஷ்


வியட்னாம் குடியரசின் விடுதலைக்கு வித்திட்ட ஹோ சி மின்னை யாரால் மறக்க முடியும். ஸ்டான்லி கர்நெள கூறியது போல் நாட்டுப்பற்றையும் கம்யூனிசத்தையும் சரியான விகிதத்தில் குழைத்து படு பயங்கரமான கொரில்லா போர் முறையை மிகச் சிறப்பாக கையாண்டவராயிற்றே. அமெரிக்க சரித்திரத்திலேயே அது தனது முதல் தோல்வியை தழுவக் காரணமாயிருந்தவரை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா ?

கிழிந்த ரப்பர் செருப்பணிந்து நைந்த மேல் கோட்டுக்குள் இருந்த அந்த ஒல்லியான உருவம் கருணையும் பணிவுமிக்க ‘அங்கிள் ஹோ ‘வாக மக்களிடம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்பதை பலரால் நம்பத்தான் முடியவில்லை. 1890ஆம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி பிறந்த ஹோவிற்கு அவரது பெற்றோரால் இடப்பட்ட பெயர் ‘ங்குயென் சின் சுங் ‘ (Nguyen Sinh Cung) என்றும் ‘ங்குயென் டாட் தான்ஹ் ‘ (Nguyen Tat Thanh) என்றும் அறியப்படுகிறது. ஹோ பல புனைப்பெயர்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் உபயோகித்ததாக தகவல் திரட்டப்பட்டுள்ளன. அதில் முக்கியமான சில பெயர்கள் ‘ங்குயென் வான் பா ‘ (Nguyen Van Ba) மற்றும் ‘ங்குயென் ஐ க்வோக் ‘ (Nguyen AI Quoc). (ஃபான் போய் செள என்ற மற்றொரு விடுதலை வீரரை 10000 ஹாங்காங் டாலருக்கு பிரெஞ்சு அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்ததிலிருந்து ‘ங்குயென் ஐ க்வோக் ‘ என்ற பெயரை உபயோகப்படுத்துவதைக் கைவிட்டார் என்ற ஒரு கூற்றும் நிலவுகிறது !!!)

பிரெஞ்சு ஆதிக்கம் வியட்னாம் நாட்டை 1860ல் கைப்பற்றி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கியது. வியட்னாமிய மக்களுக்கு பேச்சுரிமையும், எழுத்துரிமையும் மறுக்கப்பட்டது. அடையாள அட்டையின்றி அவர்கள் இருப்பிடம் விட்டு எங்கு செல்வதற்கும் அனுமதியில்லை. அடிமைகளாக நடத்தப்பட்ட அவர்களுக்கு முறையான கல்வியும் மறுக்கப்பட்டது. எல்லாவித துன்பங்களையும் அனுபவித்த வியட்னாமிய மக்கள் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்தனர். ஆனால் அக்கிளர்ச்சி பிரெஞ்சு ஆதிக்கத்தால் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டது.

இதற்கிடையில் ஹோ லண்டனிலும் பிரான்ஸிலும் தனது நாட்டு விடுதலைப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். 1919ம் ஆண்டு ஒரு அமைதி மாநாட்டுக்காக பிரான்ஸ் வந்திருந்த அமெரிக்க ஜனாதிபதியான உட்ரெள வில்சனிடம் வியட்னாமின் விடுதலைக்கான பிரேரணைத் திட்டமொன்றை சமர்ப்பித்தார். ஆனால் அத்திட்டம் நிராகரிக்கப்பட்டதுமல்லாமல் அதை அதிகாரப்பூர்வமான ஒன்றாக அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவேயில்லை. பிறகு 1920ம் ஆண்டு ஹோ பிரெஞ்சு கம்யூனிஸ்ட் பார்ட்டி என்ற ஒரு கட்சியை நிறுவி பிரான்ஸில் புலம் பெயர்ந்து வாழும் மற்ற குழுக்களின் ஆதரவோடு ‘தி பெரையா ‘ (Le Paria) என்ற பத்திரிக்கையை நடத்தினார். (ஆனால் இதற்கு மாறாக ஹோவிற்கு பிரெஞ்ச் மொழியில் போதிய ஆளுமை இல்லை என்று பிரான்ஸில் ஃபோட்டோ கடை நடத்திய ‘ங்குயென் தி த்ரூயென் ‘உம், மாஸ்கோவில் ஹோவுடன் கூடப் படித்த இந்திய கம்யூனிஸ்ட்டான J.H.ராயும் கூறியுள்ளதான தகவலும் வெளியாயின !!!)

1923ம் ஆண்டு ஹோ மாஸ்கோவிலுள்ள கம்யூனிஸ்ட் இண்டெர்நேஷனல் (கோமிண்டேர்ன்) தலைமையகத்தில் பயிற்சி பெறுவதற்காக சென்றவர் கோமிண்டேர்னின் ஐந்தாவது காங்கிரஸில் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபட்டு, பின்னர் கோமிண்டேர்னை ஆசியாவில் புரட்சி செய்யுமாறும் தூண்டினார்.

அதற்குப் பிறகு 1924ம் ஆண்டு சீனாவிலுள்ள குவாங்செள மாநிலத்தில் தங்கி, சீனாவின் கம்யூனிஸ்ட்டுக்களின் துணையோடு நாடு கடத்தப்பட்ட வியட்னாமிய மக்களுக்கு கொரில்லா சண்டைப் பயிற்சியும் புரட்சிக்கான செயல்முறைத் திட்டம் பற்றிய பயிற்சியும் அளித்தார். பயிற்சிக்குப்பின் அவர்களைக்கொண்டு RYL (Revolutionary Youth League) என்ற அமைப்பையும் அதற்குட்பட்ட CYL (Communist Youth League) என்ற அமைப்பையும் நிறுவினார். CYLன் தலையாய பணி விடுதலை எழுச்சிக்கான பத்திரிகை ஒன்றை பதிப்பித்து சட்ட விரோதமாக வியட்னாம் நாட்டிற்குள் விநியோகம் செய்வதே. 1926ம் ஆண்டு ஹோ ‘புரட்சிப் பாதை ‘ என்ற புத்தகத்தை எழுதி அதைப் பயிற்சிக்கான நூலாகப் பயன்படுத்தினார். பின்னர் 1927ம் ஆண்டு குவாங்செளவிலிருந்து கம்யூனிஸ்ட்டுக்கள் துரத்தப்பட்டதால் ஹோ சோவியத் யூனியனில் தஞ்சம் புகுந்தார்.

1928லிருந்து 1930 வரையிலான காலகட்டத்தில் ப்ரஸ்ஸெல்ஸ், பாரீஸ், சியாம் (இன்றைய தாய்லாந்து) ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து கொண்டே விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதில் கடைசி இரண்டு ஆண்டுகள் தென்கிழக்காசிய கோமிண்டேர்ன் பிரதிநிதியாக இருந்தார்.

1929ம் ஆண்டு அக்டோபர் மாதம் உலக மகா பொருளாதார வீழ்ச்சி தொடங்கிய காலகட்டத்தில் வியட்னாமிலும் அதன் தாக்கம் கடுமையாக இருந்தது. தொழிலாளர்களின் வருமானம் பாதியாகக் குறைந்தது. வேலையின்மை 33% ஆக உயர்ந்தது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் அதிகரித்தது. ICP (Indochinese Communist Party) என்ற அமைப்பு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மத்திய வியட்னாமில் கட்சிக் குழுக்களையும், தொழிலாளர் சங்கங்களையும், விவசாய சங்கங்களையும் தோற்றுவித்தது.

இந்த இயக்கங்கள் சீர்திருத்தங்கள் கோரி போராட்டம் நடத்தத் துவங்கின. கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் கலகங்கள் வெடித்தன. விவசாயிகளும் கிராமவாசிகளும் ICP துணையுடன் சில மாவட்டங்களைத் தங்கள் கைவசம் கொண்டுவந்து ‘சோவியத்ஸ் ‘ எனப்படும் கிராம நிர்வாக சங்கங்களை ஏற்படுத்தினர்.

பதிலடியாக பிரெஞ்சு அரசாங்கம் மிகப்பெரிய அளவில் போர் வீரர்களை அனுப்பி கலகங்களை ஒடுக்கின. சுமார் 1000 கம்யூனிஸ்ட்டுக்களையும் புரட்சியாளர்களையும் கைது செய்தது. சுமார் 400 கைதிகளுக்கு நீீண்ட கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டன. புரட்சியாளர்களின் தலைவர்கள் உட்பட சுமார் 80 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஹோவிற்கும் in absentiaவில் மரண தண்டனை வழங்கப்பட்டது.

இதற்கிடையில் ஹாங்காங்கில் ஹோ சி மின் ஒருங்கிணைக்கப்பட்ட ICPயின் மாநாட்டுக்குத் தலைமை தாங்கி அக்கட்சியின் குறிக்கோள் பற்றிய ஆவணத்தை வெளியிட்டார். அதில் முக்கிய குறிக்கோளாக பிரெஞ்சு ஆதிக்கத்தை ஒழிப்பது, வியட்னாமில் மக்களாட்சி மலரச் செய்வது, பொருளாதாரத்தை நாட்டுடைமை ஆக்குவது, பொதுமக்களின் கடன்களை இரத்து செய்வது, நில சீர்திருத்தங்கள் கொண்டுவருவது, 8 மணி நேர வேலை முறையை அமலாக்குவது, எல்லோருக்கும் கல்வி வழங்குவது ஆகியவற்றை முன் வைத்தார். இந்த ஆவணம் மாநாட்டால் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் தனக்கு மரண தண்டனை வழங்கியது குறித்து அறிந்த ஹோ ஹாங்காங்கிலேயே தஞ்சம் புகுந்து மீண்டும் கோமிண்டேர்னின் தென்கிழக்காசிய பிரதிநிதியாகத் தொடர்ந்தார். ஹாங்காங்கில் 1931ம் ஆண்டு பிரிட்டிஷ் போலீசாரால் ஹோ சிறை பிடிக்கப்பட்டு பின்னர் 1932ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். அதே சமயம் பிரெஞ்சு ஆதிக்கம் கிட்டத்தட்ட 10000 அரசியல் கைதிகளை வியட்னாமின் சிறைகளில் அடைத்தனர்.

விடுவிக்கப்பட்ட ஹோ அடுத்த சுமார் ஏழு ஆண்டுகள் மாஸ்கோவில் லெனின் இன்ஸ்டிட்யூடில் படித்துக் கொண்டே ஆசிரியராக பணி புரிந்தார். 1938ம் ஆண்டு சீனாவிற்குத் திரும்பிய ஹோ இரண்டாம் சீன ஜப்பானிய போரில் சீன கம்யூனிஸ்ட் போர்ப் படைக்கு ஆலோசகராக இருந்தார்.

1939ம் ஆண்டு ஜெர்மனியும் சோவியத் யூனியனும் ஆக்கிரமிப்பு தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன், பிரெஞ்சு கவர்ன்மெண்ட் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் பார்ட்டியை தடை செய்து, ICP உட்பட மற்ற வியட்னாமிய அரசியல் கட்சிகளை சட்ட விரோதமாக அறிவித்தது. இதனால் ICP பிரெஞ்சு ஆதிக்கம் பலவீனமாக இருக்கும் வியட்னாமிய கிராமப்புறப் பகுதிகளில் தன்னுடைய பார்வையை திருப்பியது. இதற்கிடையில் இரண்டாம் உலகப்போர் மூண்டு, ஃபிரான்ஸ் ஜெர்மனியிடம் தோல்வியுற்றது. இதனை ஒரு வாய்ப்பாகக் கருதிய ஹோ 1940ம் ஆண்டு மீண்டும் ICPயுடன் தொடர்பு கொண்டு தன் சகாக்களான ‘வோ ங்குயென் கியாப் ‘ மற்றும் ‘ஃபாம் வான் டுங் ‘ ஆகியவர்களுடன் சேர்ந்து வியட்னாமின் விடுதலைக்கு திட்டங்கள் தீட்டினார். ஆனால் அந்த செப்டம்பர் மாதம் ஜப்பானிய துருப்புகள் வியட்னாமை முற்றுகையிட்டு நாட்டைக் கைப்பற்றியது. ஆனால் பிரெஞ்சு ஆதிக்கம் ஜப்பானியரிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு தங்கள் நிர்வாகம் வியட்னாமில் செயல்பட அனுமதி பெற்று விட்டனர்.

1941ம் ஆண்டு கடந்த 30 வருடங்களில் முதன் முதலாக ஹோ வியட்னாமிற்குள் நுழைந்து விடுதலைப் போராளிக் குழுக்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க முயன்றார். 1945ம் ஆண்டு ஜப்பானிய துருப்புகள் திடாரென்று பிரெஞ்சு ஆதிக்கத்தினிடமிருந்து போர் தளவாடங்களையும் ஆட்சியையும் கைப்பற்றி ஜப்பானுடைய பாதுகாப்பின் கீழ் வியட்னாம் விடுதலையை அறிவித்தது. இதனால் ஊக்கமுற்ற ICP மக்களின் எழுச்சிக்கு திட்டமிட்டு மெதுவாக வடக்குப் பகுதியில் தன்னுடைய ஆட்சியை நிறுவியது. இந்த ஆட்சிக்குத் தலைமை வகித்த ஹோ சுமார் 1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பகுதியை சுதந்திரப் பிராந்தியமாக அறிவித்தார். அந்தப் பிரதேசத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திடமிருந்த நிலங்களை மக்களுக்கு மறுவிநியோகம் செய்து ஜனநாயக முறையில் சுதந்திரங்களை அளித்தார். பின்னர் ICP தென்வியட்னாமிலும் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்தது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா ஜப்பானின் மீது அணுஆயுதப் பிரயோகம் செய்த போது, ஹோ மாபெறும் மக்கள் எழுச்சிக்கு உத்தரவிட்டார். அந்த மாதக் கடைசிக்குள், சைகானைக் கைப்பற்றி, புதிய ஆட்சியை அறிவித்தார். DRV – டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆஃ வியட்னாம் என்ற அரசாங்கத்தை நிறுவி அதற்கு ஹோ தலைமை வகித்தார். பின்னர் 1969ம் ஆண்டு அவர் இறக்கும் வரை DRVன் ஜனாதிபதியாகவே ஹோ இருந்தார்.

ஆனால் ஹோவிற்கு அடுத்த தலைவலி ஆரம்பமாயிற்று. ICPன் எதிர்ப்பாளர்கள் அக்கட்சியின் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள். அதனால் அவருடைய எதிர்ப்பாளர்களுடன் சமரச முயற்சியாக கூட்டாட்சிக்கு ஒப்புதல் அளித்தார். அதே சமயம் (அக்டோபர் 1945) தெற்குப் பகுதியில் பிரெஞ்சுப் படையினர் சைகானை மீண்டும் தங்கள் வசப்படுத்தி விட்டனர். அடுத்த மூன்று மாதத்திற்குள் தென்வியட்னாமின் பெரும்பாலான இடங்களை மீட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். பின்னர் 1946ம் ஆண்டு வடக்குப் பகுதியிலும் தங்கள் கைவரிசையைக் காண்பித்த போது, ஹோ மறுபடியும் சமரச முயற்சிக்குத் தள்ளப்பட்டார். அதன்படி வடக்கில் ஒரு சிறிய பிரெஞ்சு படையினை தங்க அனுமதித்தால், பிரெஞ்சு அரசாங்கம் DRVஐ அங்கீகரிக்கும் என்பது உடன்பாடு. ஆனால் ஒட்டகத்திற்கு வீட்டைக் கொடுத்த கதையாய் அந்த சிறிய படை வெகு சீக்கிரமே 15000 துருப்புகள் கொண்ட படையாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து வந்த போரில் சுமார் 6000 வியட்னாமிய போர் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

1949ம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்தின் ஆதரவோடு தென்வியட்னாமில் ஒரு வியட்னாமிய அரசு – ASV (Associated State of Vietnam) பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த அரசுக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்தது. அமெரிக்கர்கள் தென் வியட்னாமிய வீரர்களுக்கு ஆயுதத் தளவாடங்கள் அனுப்பியதோடல்லாமல், அவர்களுக்கு அதில் பயிற்சியும் அளித்தார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் பொருட்டு சீனா DRVஐ ஆதரித்தது. வெகு விரைவில் ரஷ்யாவும் DRVக்கு தனது ஆதரவை தெரிவித்தது.

1954ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி அன்று ஜெனீவா சமாதான மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தபடி வியட்னாம் நாடு 17வது நேர்க்கோட்டில் இரண்டாக பிளவு பட்டது. மேலும் இரண்டு பிரிவுகளும் மீண்டும் இணையும் பொருட்டு ஒரு பொதுத் தேர்தல் 1956ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்தத் தேர்தல் நடைபெறவேயில்லை. அதற்குப் பிறகு அமெரிக்கா நடத்திய லீலைகளும் அதன் விளைவாக அது கற்ற பாடங்களும் நாம் அறிந்த சரித்திரமே. 1976ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி வியட்னாமின் இரு பிரிவுகளும் இணைந்து சோசியலிஸ்ட் ரிபப்ளிக் ஆஃ வியட்னாம் ஆனது.

அதீத நாட்டுப்பற்றுடன் தேர்ந்த புரட்சியாளருமான ஹோவின் ஒரே குறிக்கோள் தன் நாட்டின் விடுதலையே. 1946ம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கம் இந்தோசைனாவில் இழந்த தனது பேரரசை மீட்க எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டபோது ஹோ அவர்களிடம் ‘ நாங்கள் கொல்லும் உங்கள் படையின் ஒவ்வொரு வீரருக்கும் பதிலடியாக நீங்கள் எங்களின் 10 பேரைக் கொல்ல முடியும். அப்படியிருந்தும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் ‘ என்று முழங்கினார். அங்கிள் ஹோவின் தீராத விடுதலை தாபத்தைப் பகிர்ந்து கொண்ட அவரது கொரில்லா படை பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட முறையான போர்ப்படையாக செயல் படத்தொடங்கியவுடன் அமெரிக்காவின் தோலில் குத்திய முள்ளாகியது. ஹோவும் அவரது கம்யூனிச ஆதரவாளர்களும் வியட்னாமை ஆள்வதைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்கா தொடுத்த போரில் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். அமெரிக்கர்களுக்கு வியட்னாம் போர் மிக நீண்ட ஒன்றாகியது மட்டுமல்லாமல் அவர்கள் வரலாற்றிலேயே முதல் தோல்வியாகவும் அமைந்து விட்டது. அந்தத் தோல்வி உலகத்தில் அவர்களுடைய நிலைப்பற்றியும் அவர்களின் பங்கு பற்றியும் அமெரிக்கர்கள் கொண்ட பார்வையை அவர்களே மாற்றி சரியாக அறிந்துகொள்ள ஒரு தூண்டுகோலாகியது.

ஹோவின் மிக முக்கியமான பங்களிப்பு வியட்னாமியர்களிடம் ஆதிக்கத்திற்கெதிராக போராடும் குணாதிசயத்தை வளர்த்தது தான். 1960களில் அமெரிக்கர்களுக்கெதிரான போர் வலுவடைந்த போது அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜான்சன் வியட்னாமால் தனது பதவிக்கே ஆபத்து என்று புரிந்து கொண்டார். அதனால் 1965ம் ஆண்டு பலாத்காரத்தை விடுத்து, இராஜதந்திரத்தைக் கடைபிடிக்க விரும்பி ஹோவை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். ஹோ அவரது அழைப்பை நிராகரிக்க மாட்டார் என்று தீவிரமாக நம்பவும் செய்தார். ஆனால் எந்த வித சமரசமும் வியட்னாமை இரு கூறுகளாக நிரந்தரமாக பிரித்து விடும் என்றும் பின்னர் தன்னுடைய கனவான ஒருங்கிணைந்த நாட்டை எப்போதுமே பார்க்க இயலாது என்பதையும் ஹோ நன்றாகவே அறிந்திருந்தார். அதனால் ஜான்சனின் சமரச உடன்பாட்டிற்கு ஹோ இசையவேயில்லை.

ஹோவின் நம்பிக்கைகளையும் உறுதியையும் எந்த ஒரு சூழ்நிலையும் குலைக்க முடியவில்லை. நாடு இரண்டு பட்ட போதும், மில்லியன் கணக்கான மக்கள் மடிந்த போதும் விடுதலைக்கான குறிக்கோளிலிருந்து மாறவேயில்லை. தனது 79வது வயதில் 1969ம் ஆண்டு செப்டம்பர் 2ம் நாள் ஹோ தனது கடைசி மூச்சை விட்டார். அவரது ஆதரவாளர்கள் மாஸ்கோவில் இருக்கும் லெனின் கல்லறை போன்றே பளிங்கினால் ஆன கல்லறையில் ஹோவின் பதப்படுத்தப் பட்ட உடலை பாதுகாத்தனர். அவர் இறந்து ஆறு வருடங்கள் கழித்து அவரது வீரர்கள் வெற்றி வாகை சூடி வியட்னாமை ஒருங்கிணைந்த நாடாக அறிவித்தார்கள். அவரது நினைவாக சைகான் ‘ஹோ சி மின் ‘ சிடியென்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஹோ தனது உயிலில் தான் இறந்த பிறகு தனது உடலை எரித்து அதன் சாம்பலை ஒரு பாண்டத்தில் வியட்னாமின் மூன்று மலை உச்சியில் புதைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவரது சீடர்கள் அவருக்கு துரோகம் இழைத்துவிட்டனர்!!!

கே.ஜே.ரமேஷ்

kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 1

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

கே.ஜே.ரமேஷ்


எம்மெட் டில் (Emmet Till) ஒரு பதினான்கு வயது கருப்பினச் சிறுவன். வெறி பிடித்த வெள்ளையர் கும்பலொன்று அவனை துரத்தித் துரத்தி அடித்துக் கொன்றது. அவன் செய்த குற்றம் – ஒரு வெள்ளைப் பெண்ணினால் ஈர்க்கப்பட்டு அவளைப் பார்த்து விசில் அடித்தது தான். ரூபி பிரிட்ஜஸ் என்ற ஆறு வயது கருப்பினச் சிறுமி வெள்ளயர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே படிக்க விருப்பம் தெரிவித்ததன் விளைவு வெள்ளயர்களின் காட்டுமிராண்டிக் கும்பலால் தாக்கப்பட்டு அவர்களின் எச்சில் அபிஷேகத்திற்கு உள்ளாக்கப் பட்டாள். கருப்பின மக்கள் வெள்ளையர்களுடன் ஒரே இடத்தில் சாப்பிட முடியாது. வெள்ளையர்கள் பயன்படுத்தும் பொதுக் கழிப்பறைகளை அவர்கள் பயன் படுத்த முடியாது. அவர்கள் நினைத்த இடத்தில் வாழ முடியாது. ஒரு சில இடங்களில் வெள்ளையர்கள் நடை பாதையில் நடந்து வந்தால், கருப்பின மக்கள் நடை பாதையைத் துறந்து சாலையில் நிற்கவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். நன்கு படித்தவர்களாக இருப்பினும் கருப்பின மக்களாக இருந்தால் தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமையோ ஜூரர் குழுவில் இடம் பெறும் வாய்ப்போ மறுக்கப்பட்டன. இவ்வளவும் இனவாத அரசால் ஆளப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் நடந்தது என்று நினைத்தீர்களா ? உங்கள் ஊகம் 100% தவறு. இவை நடந்த இடம் இன்று உலகத்திற்கே காவல்துறையாகச் செயல்பட விரும்பும் அமெரிக்காவில் தான். இன்று அமெரிக்கர்கள் தாங்கள் எல்லோரும் ஏதோ தேவ தூதர்கள் போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் முந்தைய வரலாற்றை திருப்பிப் பார்த்தோமானால் அதன் கீழ்த்தரங்களும் துர்நாற்றங்களும் மூச்சு முட்ட வைக்கும். அந்த பொன்னான தேசத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் பா.ராகவன் எழுதிய டாலர் தேசம்.

நிறபேதம், தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராக சுமார் இருநூறு ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடந்து வந்திருந்தாலும், அமெரிக்க வெள்ளையர்களின் அராஜகங்களை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை பெருமளவில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரைச் சாரும். சம உரிமைக்காகப் போராடிய கிங் 1957ம் ஆண்டுக்கும் 1968ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பதினோரு ஆண்டுகளில் 2500க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை சமூக உரிமைக்கு ஆதரவாக நிகழ்த்தியுள்ளார். எங்கெங்கு அநியாயம் நடந்தாலும் அதற்கெதிரான போராட்டத்தில் கிங் இருப்பது வழக்கமாயிற்று. இந்த பதினோரு ஆண்டுகளில் அவர் அறுபது லட்சம் மைல்களுக்கும் மேலாக பயணம் செய்து அநீதிக்கெதிரான தனது போராட்டத்தை நடத்தி அதற்கான ஆதரவையும் பெற்றார். 1963ம் ஆண்டு அவர் வழி நடத்திச் சென்ற மாபெறும் ஊர்வலம் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையையே அமெரிக்காவின் பக்கம் திருப்பியது. அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் அமைதியாக அஹிம்சா வழியில் நடந்த அந்த ஊர்வலத்தில் சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் (250,000) பேர்கள் கலந்து கொண்டனர். அந்த ஊர்வலத்தின் இறுதியில் அந்த மாபெரும் கூட்டத்தின் முன்னிலையில் அவர் ஆற்றிய ‘எனக்குள் ஒரு கனவு ‘ (I have a Dream) என்ற உரை உலகப்புகழ் பெற்ற ஒன்று. அமெரிக்கச் சரித்திரத்திலேயே மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது அவ்வுரை. தனது 35வது வயதில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்று மிகச் சிறிய வயதிலே நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையையும் அடைந்தார். அவரது போராட்டத்தின் விளைவாக இன்று அமெரிக்காவில் நிறபேதமற்ற ( ?), தீண்டாமை முற்றிலும் ஒழிந்த ஒரு சமுதாயம் உருவெடுத்திருக்கிறது.

கிங் இறந்து கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஆகியும் அவரைப் பற்றி சொல்லும்போது கருப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு கருப்பினத் தலைவர் என்றே குறிப்பிடுகிறார்கள். அது உண்மையாயிருப்பினும் அவ்வாறு குறிப்பிடுவது அமெரிக்க நாட்டிற்கு அவர் செய்த மாபெரும் தொண்டை முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போலாகிவிடும். அமெரிக்கர்களின் தோள்களில் நிறவெறி ஏற்றிய பெருஞ்சுமையை கிங் இறக்கி வைக்க உதவினார். அதற்காக அமெரிக்கர்கள் அவருக்கு இன்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். அவர் செய்த அந்த தொண்டினால் தான் இன்று அமெரிக்கா தலை நிமிர்ந்து உலகத்திற்கே தலைவன் என்று மார் தட்டிக் கொள்ள முடிகிறது. நிறபேத நாடாக அமெரிக்கா இன்றும் இருந்திருந்தால் மற்ற உலக நாடுகளின் அமெரிக்கா மீதான மதிப்பு எவ்வாறிருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

கருப்பின மக்களின் உரிமைக்கானப் போராட்டத்தில் தனது உயிரை மட்டுமல்லாமல் தனது குடும்பத்தினரின் உயிர்களையும் பணயம் வைத்த மார்ட்டின் லூதர் கிங்கிற்கு அவரது இனத்திலிருந்தே எதிர்ப்பு இருந்தது என்பதை நம்புவீர்களா ? அவரது அஹிம்சா வழியில் நம்பிக்கையில்லாமல் மால்கம் எக்ஸ் போன்றோர் தற்காப்பு, கருப்பினத்தவர்களுக்கு தனி நாடு என்ற கோஷத்துடன் வட அமெரிக்காவில் வாழும் கருப்பினத்தவரின் ஆதரவைப் பெற்று கொண்டிருந்தனர். அது போதாதென்று அமெரிக்க உளவுத் துறையான FBI-யும் அவருக்கெதிரான பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்தது. வியட்னாம் போரை எதிர்த்து வந்த கிங் அமெரிக்க அரசுக்கு பெரிய தலைவலியாக வளர்ந்து வந்தார். அதனால் அவரை ஒடுக்கும் விதமாகவே FBIயின் நடவடிக்கைகள் இருந்தது. கிங் எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கு அவர் தங்கும் அறைகளில் ஒட்டுக்கேட்கும் கருவி போன்ற உளவுச் சாதனங்களைப் பொருத்தி அவரது அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்ட முனைந்தனர். FBIயின் ஏஜெண்ட்டாகச் செயல்பட்ட ஒருவர் கிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும் வாஷிங்டன் ஊர்வலத்தை அமைதியாக நடத்திக் காட்டியவருமான பாயர்ட் ரஸ்டின் என்பவர் கிங் குளிக்கும் போது அவருடன் பேசிக்கொண்டிருந்ததைப் புகைப்படம் எடுத்து விட்டார். அப்புகைப்படத்தை வெளியிட்டு கிங் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர் என்ற பொய்ப்பிரச்சாரத்தையும் முடுக்கி விட்டனர். இந்த மாதிரியான எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்து, மகாத்மா வழியில் கறுப்பர்களுக்கு சம உரிமை வாங்கித் தந்த வரலாற்றை பிறகு பார்ப்போம்.

1929ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் நாள் பிறந்த மார்டின் லூதர் கிங் அதி புத்திசாலியாக விளங்கினார். தனது 19வது வயதில் பட்டப்படிப்பை முடித்து விட்டு 22வது வயதில் கத்தோலிக்க குருமார் பயிற்சி கல்லூரியில் இறையியல் பயின்றார். பின்னர் 1955ம் ஆண்டு போஸ்டன் பல்கலைகழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றார். இவை போதாதென்று ஹார்வார்ட் பல்கலைக் கழகத்திலும் ஆராய்ச்சி மேற்கொண்டு இன்னொரு முறையும் முனைவர் பட்டம் பெற்றார். கல்வியில் அப்படியொரு ஆர்வம் அவருக்கு. அவரது மேன்மையை உணர்ந்து பல பல்கலைக் கழகங்கள் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கின. 1957ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை சுமார் 20 கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.

இளம் வயது முதற்கொண்டே இறை மார்க்கத்தால் ஈர்க்கப்பட்ட கிங் தனது 19வது வயதிலேயே ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரில் எபநேஸர் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் உதவி சமயக் குருவாக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவுடன் அலபாமா மாகாணத்தில் மாண்ட்காமெரி என்ற ஊரில் ஒரு பாப்டிஸ்ட் தேவாலயத்தில் இறையூழியம் செய்ய அழைப்பு வரவே அங்கு சென்று பாதிரியாராகப் பொறுப்பேற்றார். இதற்கிடையில் 1953ம் ஆண்டு போஸ்டனில் சந்தித்த கொரேட்டா ஸ்காட் என்ற பெண்ணையே மணந்து கொண்டார்.

தனது இள வயதில் கிங் ஒரு அன்பான குடும்பச் சூழ்நிலையில் அபரிமிதமான அன்பை அனுபவித்து வளர்ந்தவர். ஆனால் அவரது பெற்றோர்களால் நிறபேதக் கொடுமைகளிலிருந்து மகனைக் காப்பாற்றி பொத்திப் பொத்தி வளர்க்க முடியவில்லை. சிறு வயதில் தான் அனுபவித்த தீண்டாமை கொடுமைகளை எவ்வாறேனும் ஒழிக்க வேண்டும் என்று சிறுவயதிலேயே கங்கணம் கட்டிக் கொண்ட கிங்குக்கு 1955ம் ஆண்டு ஒரு நல்ல வாய்ப்பு கிட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் அமெரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடியது. கறுப்பர்களுக்கு ஆதரவாக எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் வெள்ளை இனத்தவரின் மனம் மட்டும் மாறாமலேயே இருந்தது. மாறாதது மட்டுமல்ல, கறுப்பர்களுக்கு எதிராக முன்பை விட மூர்க்கமாக வெறி கொண்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த கால கட்டத்தில் நடந்த கொடுமைகளைத்தான் ஓரிரு எடுத்துக்காட்டுகளாக முதல் பத்தியில் பார்த்தோம். அப்போது நடந்த முக்கியமான இனத்துவேஷ சம்பவங்கள் இரண்டு. அதில் இரண்டாவதாக நடந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் பங்கெடுத்த நமது கதாநாயகன் பின்னர் மிக மிக முக்கியமான கறுப்பினத் தலைவராக வளர்ச்சி பெற்றார். இனி அந்த சம்பவங்களைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பே கூறியபடி கறுப்பர்களுக்கு ஆதரவாக பதவிக்கு வந்த எல்லா அமெரிக்க அதிபர்களும் ஏதாவது அரசியல் சட்டங்கள் மாற்றிக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் அமெரிக்க மாகாணங்களில் இருந்த மாநில அரசுகள் அவை யாவற்றையும் சட்டை செய்யாமல் தத்தம் போக்கில் கறுப்பர்களுக்கு எதிரான அநீதிகளை இழைத்துக் கொண்டிருந்தார்கள். உதாரணத்திற்கு மிஸிஸிப்பி மாகாணத்தில் 1960களிலேயே மொத்த மக்கட்தொகையில் 40 சதவிகிதம் மக்கள் கருப்பின மக்களாக இருந்தனர். ஆனால் அவர்களில் வெறும் 2 விழுக்காடு மக்களே ஓட்டுரிமை பெற்றிருந்தார்கள். பள்ளிச் சிறுவர்களுக்கும் தனித்தனியாக கறுப்பர்கள் பள்ளி, வெள்ளையர்கள் பள்ளி என்று பிரித்து வைத்திருந்தனர். அப்போது நடந்த ஒரு சம்பவம் தான் பிற்காலத்தில் ‘Linda Brown versus Board of Education Case ‘ என்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இடம் பெற்றது. கான்ஸாஸ் மாகாணத்தில் இருந்த லிண்டா பிரவுன் என்ற கறுப்பினச் சிறுமியை அவளது தந்தை ஒரு உயர்தர வெள்ளையர் பள்ளியில் சேர்க்க முனைந்தார். பள்ளி நிர்வாகிகள் அச்சிறுமிக்கு இடம் கொடுக்க மறுத்ததோடல்லாமல் அவளைச் சேர்த்துக்கொண்டால் பள்ளியின் பரிசுத்தம் கெட்டுவிடும் என்றும் இழிவு படுத்தினர். இதனால் கோபமடைந்த சிறுமியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதியும் நிறவெறி கொண்டு தீர்ப்பை அச்சிறுமிக்குப் பாதகமாகவே அளித்தார். இந்த வழக்கின் முடிவை அறிவித்தவுடன் ஒட்டுமொத்த அமெரிக்க நீக்ரோக்களுக்கும் இரத்தம் கொதித்தது. இதைத் தொடர்ந்து தென் மாகாணங்களில் பல போராட்டங்களும் வன்முறையும் வெடித்தது. லிண்டாவின் தந்தை அந்த வழக்கை அத்துடன் விட்டுவிட விரும்பாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். கறுப்பர்களுக்கு ஆதரவாக கொண்டு வந்த சட்டங்களை மதிப்பதிலும் அவர்களுக்கு சம உரிமை வழங்குவதிலும் உச்ச நீதிமன்றம் பாரபட்சமின்றி நடந்து கொள்கிறது என்று நிரூபிக்கும் வகையில் சிறுமிக்கு ஆதரவாக வழக்கின் முடிவு அமைந்தது. இது கறுப்பர்களுக்குக் கிடைத்த முதல் பெரிய வெற்றி.

தொடரும்.

கே.ஜே.ரமேஷ்

kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்